திருதராஷ்டிரனின் பின்னிரக்கம்! – துரோண பர்வம் பகுதி – 085-அபிமன்யுவின் மறைவுக்கு இரங்கி, துரியோதனனின் நடத்தைக்காக வருந்திய திருதராஷ்டிரன் அதன்பிறகு நடந்த போர்ச்செய்திகளைச் சொல்லும்படி சஞ்சயனைத் தூண்டியது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அபிமன்யுவின் படுகொலைக்கு அடுத்த நாள், துயராலும் கவலையாலும் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் என்ன செய்தனர்? என் வீரர்களில் அவர்களோடு {பாண்டவர்களோடு போரிட்டவர் யாவர்? சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சாதனைகளை அறிந்தவர்களும், தீங்கைச் செய்தவர்களுமான அந்தக் கௌரவர்கள் எவ்வாறு அச்சமற்றிருந்தனர் என எனக்குச் சொல்வாயாக.
தன் மகன் கொல்லப்பட்டதன் காரணமாகத் துயரில் எரிந்து, அனைத்தையும் அழிக்க மூர்க்கமாக விரையும் காலனைப் போல வந்த அந்த மனிதர்களில் புலியை (அர்ஜுனனைப்) போரில் அவர்கள் எவ்வாறு பார்க்கத் துணிந்தனர்? குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த வீரன், தன் மகனின் மரணத்திற்காகத் துயருற்றுப் போரில் தன் பெரும் வில்லை அசைத்த போது, என் வீரர்கள் என்ன செய்தனர்?
ஓ! சஞ்சயா, துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? இன்று ஒரு பெரும் சோகம் எங்களைப் பீடித்திருக்கிறது. மகிழ்ச்சிக் குரல்களை நான் இப்போது கேட்கவில்லை. சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} வசிப்பிடத்தில் காதுகளுக்கு மிகவும் ஏற்புடைய எந்த உற்சாகக் குரல்கள் முன்பு கேட்கப்பட்டனவோ, ஐயோ, இன்று அவை கேட்கப்படவில்லையே. ஐயோ, என் மகன்களின் முகாமில் அவர்களது புகழைப் பாடும் எண்ணற்ற சூதர்கள் மற்றும் மாகதர்களின் பாடல்களும், ஆடல்களும் கேட்கப்படவில்லையே. முன்பெல்லாம் அத்தகு ஒலிகள் அடிக்கடி என் காதுகளை எட்டின. ஐயோ, அவர்கள் துயரில் மூழ்கியிருப்பதாலேயே (அவர்களின் முகாமில்) அத்தகு ஒலிகளை நான் கேட்கவில்லை.
முன்னர், ஓ! சஞ்சயா, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சோமதத்தனின் வசிப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது, மகழ்ச்சிகரமான ஒலிகளையே நான் கேட்பேன். ஐயோ, இன்று என் மகன்களின் வசிப்பிடம் துயர ஒலிகள், புலம்பல்கள் ஆகியவற்றை எதிரொலித்து, உயிரையும், சக்தியையும் கொண்ட அனைத்து ஒலிகளையும் இழந்திருப்பதால், நான் இழந்த (அறத்) தகுதிகள் எவ்வளவு? விவிம்சதி, துர்முகன், சித்திரசேனன், விகர்ணன் மற்றும் என் பிற மகன்களின் வீடுகளிலும் முன்பு நான் வழக்கமாகக் கேட்கும் ஒலிகள் கேட்கப்படவில்லையே.
என் மகன்களின் முக்கியப் புகலிடமும், துரோணரின் மகனுமான எந்தப் பெரும் வில்லாளியிடம் {அஸ்வத்தாமனிடம்}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சீடர்கள் காத்திருந்தார்களோ {பணி செய்தார்களோ}, சர்ச்சைக்குரிய விவாதங்கள் [1], பேச்சுகள், உரையாடல்கள் [2], கிளர்ச்சி தரும் பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான மகிழ்ச்சிகரமான பாடல்களில் இரவும் பகலும் எவன் இன்புறுவானோ, குருக்கள், பாண்டவர்கள், சாத்வதர்கள் ஆகியோர் பலரால் எவன் வழிபடப்படுகிறானோ, ஐயோ, ஓ சூதா {சஞ்சயா}, அந்தத் துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வசிப்பிடத்தில் முன்பு போல ஒலிகள் கேட்கப்படவில்லையே. பெரும் எண்ணிக்கையிலான பாடகர்களும், ஆடற்கலைஞர்களும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோண மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} நெருக்கமாகக் காத்திருப்பார்களே {பணி செய்வார்களே}. ஐயோ, அவனது வசிப்பிடத்தில் அவர்களது ஒலி கேட்கப்படவில்லையே.ஒவ்வொரு மாலைப்பொழுதிலும், விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரின் முகாமில் எழும் அந்தப் பேரொலி, ஐயோ இப்போது அங்கே கேட்கப்படவில்லையே. கைகேயர்களின் முகாம்களில் வழக்கமாக நடனம் மற்றும் களியாட்டங்களில் ஈடுபடும் அவர்களுடைய வீரர்களின் பெரிய கைத்தடல்களும், பாடலின் பேரொலியும் இன்று கேட்கப்படவில்லையே.
சாத்திரச் சடங்குகளின் புகலிடமான சோமதத்தன் மகனிடம் {பூரிஸ்ரவசிடம்} காத்திருப்போரும் {பணி செய்வோரும்}, வேள்விகளைச் செய்யத்தக்கோருமான புரோகிதர்களின் ஒலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. விற்கயிறின் நாணொலி, வேத உரைப்பொலி, ஈட்டிகள் வாள்கள் ஆகியவற்றின் ‘விஸ்’ {என்ற} ஒலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகிய ஒலிகள் துரோணரின் வசிப்பிடத்தில் இடையறாமல் கேட்கப்படுமே. ஐயோ, அவ்வொலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. வழக்கமாக அங்கே எழும் பல்வேறு நாட்டுப் பாடல்களின் பெருக்கம், இசைக்கருவிகளின் பேரொலி ஆகியவை, ஐயோ, இன்று கேட்கப்படவில்லையே.
மங்காப்புகழ் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அமைதியை விரும்பியும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டும் உபப்லாவ்யத்தில் இருந்து வந்த போது, ஓ! சூதா {சஞ்சயா}, தீய துரியோதனனிடம் நான் இதைச் சொன்னேன்: “ஓ! மகனே {துரியோதனா}, வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு, பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. ஓ! மகனே, (சமாதானம் செய்து கொள்வதற்கான) நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஓ! துரியோதனா, என் ஆணையை மீறாதே. சமாதானம் வேண்டியும், என் நன்மைக்காகவும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வாசுதவேனை {கிருஷ்ணனை} நீ ஒதுக்கினால், போரில் உனக்கு வெற்றி கிட்டாது” என்றேன்.
எனினும், துரியோதனனின் நன்மைக்காகப் பேசியவனும், வில்லாளிகள் அனைவரில் காளையுமான அந்தத் தாசார்ஹனைத் துரியோதனன் புறக்கணித்தான். இதன் மூலம், தனக்கு அழிவைத் தரக்கூடிய ஒன்றை அவனே தழுவி கொண்டான். காலனின் பிடியில் அகப்பட்ட அந்த எனது தீய மகன் {துரியோதனன்}, துச்சாசனன் மற்றும் கர்ணனைப் பின்பற்றி என் ஆலோசனைகளை நிராகரித்தான். பகடையாட்டத்தை நான் அங்கீகரிக்கவில்லை. விதுரன் அஃதை அங்கீகரிக்கவில்லை. ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, பீஷ்மரோ, சல்லியனோ, பூரிஸ்ரவசோ, புருமித்ரனோ, ஜயனோ, அஸ்வத்தாமனோ, கிருபரோ, துரோணரோ அஃதை அங்கீகரிக்கவில்லை. இம்மனிதர்களின் ஆலோசனைகளின்படி என் மகன் நடந்து கொண்டிருந்தால், அவன் தன் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்ந்திருப்பான். மகிழ்ச்சிகரமான இனிய பேச்சைத் தங்கள் சொந்தங்களுக்கும், உயர் பிறப்பாளர்களுக்கும் {நற்குலத்தில் பிறந்தோர்களுக்கும்} ஏற்புடைய வகையில் எப்போதும் பேசுபவர்களும், அனைவராலும் விரும்பப்படுபவர்களும் விவேகிகளுமான பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சியை அடையப்போவது உறுதி.
“அறத்தில் தன் கண்ணைச் செலுத்தும் ஒரு மனிதன் எங்கும் எப்போதும் மகிழ்ச்சியையே அடைவான். அப்படிப்பட்ட மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு நன்மையையும் அருளையும் வெல்வான். தேவையான வலிமையைப் பெற்றிருக்கும் பாண்டவர்கள் பாதிப் பூமியை அனுபவிக்கத் தகுந்தவர்களே. கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி (குருக்களைப் போலவே) அவர்களுக்கும் பரம்பரை உடைமையாகும். அரசுரிமையைக் கொண்ட பாண்டவர்கள் நீதியின் பாதையில் {அறவழியில்} இருந்து எப்போதும் விலகமாட்டார்கள்.
ஓ! குழந்தாய் {துரியோதனா}, பாண்டவர்கள் யாருடைய பேச்சை எப்போதும் கேட்பார்களோ அப்படிப்பட்டவர்களாக, உதாரணத்திற்குச் சல்லியன், சோமதத்தன், உயர் ஆன்ம பீஷ்மர், துரோணர், விகர்ணன், பாஹ்லீகர், கிருபர் மற்றும் வயதால் மதிக்கத்தக்க பாரதர்களில் சிறந்தவர்களான பிறரையும் நான் என் சொந்தங்களாகக் கொண்டிருக்கிறேன். உன் சார்பாகப் பாண்டவர்களிடம் இவர்கள் பேசினால், நன்மைதரும் அந்தப் பரிந்துரைகளின் படி அவர்கள் {பாண்டவர்கள்} நிச்சயம் செயல்படுவார்கள். அல்லது இவர்களில் அவர்களின் தரைப்பைச் சார்ந்து, வேறுமாதிரியாகப் பேசுகிறவர் என எவரை நினைக்கிறாய். கிருஷ்ணன் ஒருபோதும் அறவோரின் பாதையைக் கைவிடமாட்டான். பாண்டவர்கள் அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் பேசும் அறவார்த்தைகளுக்கு அவ்வீரர்கள் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள், ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அற ஆன்மாக்கள்’ என்ற இந்த வார்த்தைகளையும், ஓ! சூதா {சஞ்சயா}, இது போன்ற வார்த்தைகளையும் என் மகனிடம் பரிதாபகரமாகப் புலம்பினேன். மூடனான அவன் {துரியோதனன்} நான் சொன்னதைக் கேட்கவில்லை. இவையாவும் காலத்தின் கோலமெனவே நான் நினைக்கிறேன்.
விருகோதரன் {பீமன்}, அர்ஜுனன், விருஷ்ணி வீரனான சாத்யகி, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், வெல்லப்பட முடியாத யுதாமன்யு, தடுக்கப்படமுடியாத திருஷ்டத்யும்னன், வீழ்த்தப்படாத சிகண்டி, அஸ்மகர்கள், கேகயர்கள், சோமகர்களின் க்ஷத்ரதர்மன், சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது}, சேகிதானன், காசி ஆட்சியாளனின் மகனான விபு, திரௌபதியின் மகன்கள், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், மனிதர்களில் புலிகளான இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரும், ஆலோசனை வழங்க மதுசூதனனும் {கிருஷ்ணனும்} எங்கிருக்கிறார்களோ, அவர்களுடன் போரிட்டு உயிரோடு வாழ்வதை எதிர்பார்க்கும் எவன் இவ்வுலகில் இருக்கிறான்?
மேலும், என் எதிரிகள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துகையில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி, நான்காமவனான துச்சாசனன் ஆகியோரைத் தவிர்த்து ஐந்தாவதாக வேறு எவரையும் நான் காணாததால், அவர்களை {என் எதிரிகளைத்} தடுப்பதற்கு வேறு எவன் இருக்கிறான்? கவசம் பூண்டு, கையில் கடிவாளத்துடன் விஷ்ணுவையே தங்கள் தேரில் கொண்டவர்களும், அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகக் கொண்டவர்களும் ஒரு போதும் தோற்க முடியாது. அந்த என் புலம்பல்களைத் துரியோதனன் இப்போதும் நினைத்துப் பார்க்க மாட்டானா?
மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதாக நீ சொன்னாய். தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் சொன்ன வார்த்தைகளின் கனிகளைக் கண்டு என் மகன்கள் இப்போது புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சினியின் பேரனாலும் {சாத்யகியாலும்}, அர்ஜுனனாலும் தன் படை மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டும், தன் தேர்களின் தட்டுகள் வெறுமையாக இருப்பதைக் கண்டும் என் மகன்கள் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். பனிக்காலத்தின் முடிவில், காற்றால் உந்தப்பட்டுப் பெருகும் காட்டுத்தீயானது, உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போலவே தனஞ்சயன் {அர்ஜுனன்} என் துருப்புகளை எரிக்கப்போகிறான்.
ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ நிறைவானவனாக இருக்கிறாய். மாலையில் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} இழைத்த பெரும் தீங்குக்குப் பிறகு நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அபிமன்யு கொல்லப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? ஓ! மகனே {சஞ்சயா}, காண்டீவதாரிக்கு {அர்ஜுனனுக்குக்} பெரும் குற்றமிழைத்த என் வீரர்கள், அவனது சாதனைகளைப் போரில் தாங்க இயன்றவர்களாக இல்லை. துரியோதனனால் தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் என்ன? கர்ணனால் {தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள்} என்ன? துச்சாசனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன செய்தனர்?
ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பேராசையின் பாதையில் பயணிப்பவனும், தீய புரிதல் கொண்டவனும், கோபத்தினால் மனம் பிறழ்ந்தவனும், அரசுரிமையை இச்சிப்பவனும், மூடனும், கோபத்தால் அறிவை இழந்தவனுமான தீய துரியோதனனின் தீச்செயல்களாலேயே இந்தப் போர் என் பிள்ளைகள் அனைவரின் மேலும் விழுந்திருக்கிறது.
ஓ! சஞ்சயா, பிறகு துரியோதனனால் ஏற்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக. அவை தவறான தீர்மானங்களா? இல்லை நல்ல தீர்மானங்களா?” {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.
சஞ்சயனின் நிந்தனை! – துரோண பர்வம் பகுதி – 086(போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது…)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
அதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
அதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].(“கௌரவர்களின் நன்மையைக் கருதி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்”அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது” )
(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
இந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.
ஓ! அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].(தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது.” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, “உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்சிப்பகுதிகளும் மேலும் பெருகின. உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்” )
இப்போதோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்?
அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான்? வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக” {என்றான் சஞ்சயன்}.
துரோணர் அமைத்த கலப்பு வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 087-பதினான்காம் நாள் போர்த்தொடக்கம்; துரோணர் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தபோது இருந்த வீரர்களின் நிலை; வீரர்களும் ஜெயத்ரதனும் ஏற்க வேண்டிய நிலைகளை அவர்களுக்குச் சொன்ன துரோணர்; சகட, சக்கர, பத்ம மற்றும் சூசிமுக வியூகங்கள் கலந்த புது வியூகமொன்றை வகுத்த துரோணர்; அந்த வியூகத்தில் வீரர்கள் ஏற்றுக் கொண்ட நிலைகள்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் போருக்கு அணிவகுக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்துடன் கதறியவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான கோபக்கார வீரர்களின் பல்வேறு ஒலிகள் அங்கே கேட்கப்பட்டன. சிலர் தங்கள் விற்களை வளைத்தனர், சிலர் தங்கள் கரங்களை வில்லின் நாண்கயிறுகளில் தேய்த்தனர். அவர்களில் பலர் ஆழ்ந்த மூச்சுகளைவிட்டபடியே “அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே?” என்று கதறினர்.
சிலர் நன்கு கடினமாக்கப்பட்டவையும், வானத்தின் நிறத்தைக் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையும் அழகிய பிடிகளுள்ளவையும், உறையிலிருந்து எடுக்கப்பட்டவையுமான வாள்களை உயர வீச (உயர வீசவும், அதை மீண்டும் பிடிக்கவும்) தொடங்கினர். போரை விரும்பிய துணிச்சல்மிக்க வீரர்கள் பலர், பயிற்சியால் அடையப்பட்ட திறனுடன், வாள்வீசுவோர் மற்றும் வில்லாளிகளின் படிமுறை வளர்ச்சியை அங்கே செயல்பாட்டில் காட்டினர். சிலர், மணிகள் நிறைந்தவையும், சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் கதாயுதங்களைச் சுழற்றியபடியே பாண்டுவின் மகன்களைக் குறித்து விசாரித்தனர்.
செருக்கால் போதையுண்டவர்களும், பருத்த கரங்களைக் கொண்டவர்களுமான சிலர், இந்திரனைக் கௌரவிக்க உயர்த்தப்பட்ட கம்பங்களுக்கு ஒப்பான பரிகங்களால் (கொடிக்கம்பங்களின் காட்டைக் கொண்டு மறைப்பதைப் போல) ஆகாயத்தைத் தடுத்தனர். அழகிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், போரை விரும்பியவர்களுமான பிறர், பல்வேறு ஆயுதங்களுடன், களத்தின் பல்வேறு பகுதிகளில் நின்றனர். அவர்கள், “அர்ஜுனன் எங்கே? அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்} எங்கே? செருக்குள்ள பீமன் எங்கே? அவர்களது கூட்டாளிகள் எங்கே?” என்றபடியே அவர்களைப் போருக்கு அழைத்தனர்.
அப்போது தன் சங்கை முழக்கி, தன் குதிரைகளை மிக விரைவாகத் தூண்டிய துரோணர் தன் தருப்புகளை அணிவகுத்தபடியே பெரும் வேகத்துடன் இங்குமங்கும் திரிந்தார். போரில் களிப்புற்ற அந்தப் படைப்பிரிவுகள் அனைத்தும் தங்கள் நிலைகளை ஏற்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} ஜெயத்ரதனிடம், “நீ, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், அஸ்வத்தாமன், சல்லியன், விருஷசேனன், கிருபர் ஆகியோர், நூறாயிரம் {100,000} குதிரைகள், அறுபதாயிரம் {60,000} தேர்கள், மதங்கொண்ட பதினாலாயிரம் {14,000} யானைகள், கவசம் பூண்ட நூற்று இருபதாயிரம் {120,000} காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் எனக்குப் பின்புறத்தில் இருபது மைல்கள் {ஆறு குரோசங்கள்} தொலைவில் உங்கள் நிலைகள் ஏற்பீர்களாக. அங்கே வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட உன்னைத் தாக்க இயலாது, எனவே, பாண்டவர்களைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும். ஓ! சிந்துக்களின் ஆட்சியாளா {ஜெயத்ரதா}, ஆறுதலடைவாயாக”, என்ற வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.
சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், (துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்டதும் ஆறுதலை அடைந்தான். அவன் {ஜெயத்ரதன்}, பெரும் தேர்வீரர்களாலும், கவசம்பூண்டு, கையில் சுருக்குக் கயிறுகளைக் {பாசங்களைக்} கொண்டு மூர்க்கமாகப் போரிடத் தீர்மானித்திருந்த காலாட்படை வீரர்கள் பலராலும் சூழப்பட்டு, துரோணரால் சுட்டப்பட்ட பகுதிக்கு காந்தார வீரர்கள் பலருடன் சென்றான் [1]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாமரங்களாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயத்ரதனின் குதிரைகள் அனைத்தும் நன்றாக இழுக்கும் திறன் கொண்டவையாகவும் இருந்தன. ஏழாயிரம் {7000} அத்தகு குதிரைகளும், சிந்து இனத்தில் மூவாயிரம் {3000} குதிரைகள் பிறவும் அவனுடன் இருந்தன.(“மனத்தேறுதலையடைந்த சிந்து தேசாதிபதியான ஜயத்ரதன், அந்த மகாரதர்களாலும், கவசமணிந்தவர்களும், சன்னதர்களும் ஈட்டியைக் கையில் பிடித்துக் குதிரையின் மேல் ஏறியிருக்கின்றவர்களுமான குதிரை வீரர்களாலும் சூழப்பட்டுக் காந்தாரர்களுடன் சேர்ந்து அவ்விடம் சென்றான்)
போரிட விரும்பிய உமது மகன் துர்மர்ஷணன், கவசம் பூண்டவையும், பெரும் அளவிலானவையும், கடும் செயல்கள் செய்யக்கூடியவையும், நன்கு பயிற்சி பெற்ற பாகர்களோடு கூடியதுமான மதங்கொண்ட ஆயிரத்து ஐநூறு யானைகளுடன் {1500} துருப்புகள் அனைத்துக்கும் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். உமது மற்ற மகன்களான துச்சாசனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் இருவரும், ஜெயத்ரதனின் நோக்கங்களைச் சாதிப்பதற்காக முன்னேறிச் செல்லும் படைகளுக்கு மத்தியில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.
பரத்வாஜர் மகனால் {துரோணரால்}, {ஒரு} பகுதி சகடமாகவும், {ஒரு} பகுதி சக்கரமாகவும் அமைக்கப்பட்ட வியூகமானது, முழுமையாக நாற்பத்து எட்டு மைல்கள் நீளமும், அதன் பின்புறத்தின் இருபது மைல்கள் [2] அகலமும் கொண்டிருந்தது. அந்த வியூகத்தின் பின்புறத்தில் தாமரை வடிவித்தில் துளைக்கப்பட முடியாத மற்றொரு வியூகம் {பத்ம வியூகம்} அமைக்கப்படிருந்தது. அந்தத் தாமரைக்குள், சூசீ {ஊசி} என்று அழைக்கப்படும் மற்றுமொரு அடர்த்தியான {நெருக்கமான} வியூகம் அமைக்கப்பட்டிருந்தது. துரோணர், தன் வலிமைமிக்க வியூகத்தை இப்படி அமைத்த பிறகு, தனது நிலையை ஏற்றார்.
அந்தச் சூசியின் {ஊசியின்} வாய்ப்பகுதியில் வலிமைமிக்க வில்லாளியான கிருதவர்மன் தன் நிலையை எடுத்துக் கொண்டான். கிருதவர்மனுக்கு அடுத்ததாக, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, ஜலசந்தனும் [3] நின்றனர். இவர்களுக்கு அடுத்ததாகத் துரியோதனனும், கர்ணனும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால், அந்தச் சகட வியூகத்தில், அதன் {அந்த வியூகத்தின்} தலையைப் பாதுகாப்பதற்காகப் புறமுதுகிடாத வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அதில் {அந்த வியூகத்தில்} இருந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவருக்கும் பின்புறத்தில், ஒரு பெரும் படை சூழ மன்னன் ஜெயத்ரதன் அந்தச் சூசீ {ஊசி} வடிவ வியூகத்தின் ஒரு புறத்தில் நின்றான்.
அந்தச் சகடத்தின் {சகட வியூகத்தின்} நுழைவாயிலில் பரத்வாஜரின் மகன் {துரோணர்} இருந்தார். துரோணருக்குப் பின்னால் அவரைப்பாதுகாக்கும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} இருந்தான். வெண்கவசமும், சிறந்த தலைப்பாகையும், அகன்ற தோளும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட துரோணர் தன் பெரிய வில்லை வளைத்தபடி சினத்தில் இருக்கும் அந்தகனைப் போல நின்றார். அழகிய கொடிமரம், சிவப்பு வேள்விப்பீடம், கருப்பு மான் தோல் ஆகியவற்றுடன் அருளப்பட்டிருந்த துரோணரின் தேரைக் கண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகம் கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்ததால், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அந்த வியூகமானது, தன் மலைகள், கடல்கள், கானகங்கள் மற்றும் பல பொருட்கள் நிறைந்த முழு உலகத்தையே விழுங்கிவிடும் என அனைத்து உயிர்களும் எண்ணின. தேர்கள், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்ததும், அற்புதவடிவில் பயங்கரமாக முழங்குவதும், எதிரிகளின் இதயங்களைப் பிளக்கவல்லதும், சகட வடிவிலானதுமான [5] அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்ட மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியடையத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனன் செய்த போர்! – துரோண பர்வம் பகுதி – 088-அர்ஜுனன் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் நேர்ந்த சகுனங்கள்; அர்ஜுனனை எதிர்த்த துர்மர்ஷணன்; அர்ஜுனன் செய்த போர்; அச்சத்தால் ஓடிய கௌரவர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குரு படைப்பிரிவுகள் (இப்படி) அணிவகுக்கப்பட்டுப் பெரும் ஆரவாரம் எழுந்த பிறகு; பேரிகைகளும், மிருதங்கங்களும் இசைக்கத்தொடங்கி, வீரர்களின் கூச்சலும், இசைக்கருவிகளின் இரைச்சலும் கேட்கத் தொடங்கிய பிறகு; சங்குகள் முழங்கி, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் பயங்கர ஆரவாரம் எழுந்த பிறகு; போரிடுவதில் விருப்பமுள்ள பாரத வீரர்களால் போர்க்களம் மெதுவாக மறைக்கப்பட்ட பிறகு; ருத்ரம் என்று அழைக்கப்பட்ட காலம் தொடங்கிய பிறகு, அங்கே சவ்யசச்சின் {அர்ஜுனன்} தோன்றினான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பல்லாயிரக்கணக்கான காக்கைகளும் கருங்காக்கைகளும் அர்ஜுனனின் தேருக்கு முன்பாக விளையாடிக் கொண்டே சென்றன. போருக்கு நாம் செல்லும் போது பயங்கரமாகக் கதறும் பல்வேறு விலங்குகளும், அமங்கலமாகக் காட்சி தரும் நரிகளும் நம் வலப்பக்கத்திலிருந்து ஊளையிட்டன. ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் பேரொலியுடன் விழுந்தன. அந்தப் பயங்கர நிகழ்வின் போது, மொத்த பூமியும் குலுங்கியது. போரின் தொடக்கத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்த போது, கூழாங்கற்கள் மற்றும் சரளைக் கற்கள் ஆகியவற்றை இறைத்தபடி, திசைகள் அனைத்திலும் இடியுடன் கூடிய வறண்ட காற்று வீசியது.
பிறகு, நகுலனின் மகன் சதானீகன், பிருஷதன் மகன் திருஷ்டத்யும்னன் ஆகிய பெரும் ஞானம் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பாண்டவர்களின் பல்வேறு படைப்பிரிவுகளை அணிவகுத்தனர். அப்போது, நூறு தேர்கள், நூறு யானைகள், மூவாயிரம் வீரர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரர்கள் ஆகியோரோடு ஆயிரத்து ஐநூறு {1500} விற்களின் நீளம் அளவு கொண்ட நிலத்தை மறைத்துக் கொண்ட {தன் படைகளுக்கு எடுத்துக் கொண்ட} உமது மகன் துர்மர்ஷணன், துருப்புகள் அனைத்தின் முன்னணியில் நின்று கொண்டு, “எதிரிகளை எரிப்பவனும், போரில் தாங்கிக் கொள்ளபட முடியாத வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே இன்று நான் தடுக்கப் போகிறேன். பாறைத்திரளை எதிர்க்கும் மற்றொரு பாறைத்திரளைப் போல, சினம் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னோடு மோதுவதை இன்று மக்கள் காணட்டும். போரை விரும்பும் தேர்வீரர்களே, நீங்கள் (சாட்சியாக) இருப்பீர்களாக. என் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றாகத் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் எதிர்த்து நான் தனி ஒருவனாகவே போரிடுவேன்” என்றான் {துர்மர்ஷணன்}. உயர் ஆன்மா கொண்ட உமது உன்னத மகனான அந்தப் பெரும் வில்லாளி {துர்மர்ஷணன்} இதைச் சொல்லிவிட்டு, பெரும் வில்லாளிகள் பலரால் சூழப்பட்டு அங்கேயே நின்றான்.
சினத்தால் தூண்டப்பட்டு நிவாதகவசர்களைக் கொன்றவனும், பலம் பெருகியவனும், எப்போதும் வெல்லும் ஜயனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனும், தன் பெரும் சபதத்தை அடைய விரும்பியவனும், கவசம் பூண்டு வாள் தரித்தவனும், தங்கக் கீரடத்தை அணிந்தவனும், வெண்மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், வெள்ளுடை தரித்தவனும், அழகிய அங்கதங்களால் தோள்கள் அலங்கரிக்கப்பட்டவனும், காதுகளில் சிறந்த குண்டலங்களைக் கொண்டவனும், தன் முதன்மையான தேரில் ஏறியவனுமான நரன், நாராயணின் துணையுடன், சினங்கொண்ட அந்தகன் போலவோ, இடியுடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போலவோ, காலத்தால் உந்தப்பட்டுத் தன் தண்டாயுதத்துடன் இருக்கும் தடுக்கப்பட முடியாத யமனைப் போலவோ, கோபமூட்டப்பட இயலாதவனும், திரிசூலம் தரித்தவனுமான மகாதேவனை {சிவனைப்} போலவோ, தன் சுருக்குக் கயிற்றுடன் {பாசத்துடன்} கூடிய வருணனைப் போலவோ, யுக முடிவின் போது, படைப்புகளை எரிக்க எழுந்த சுடர்மிக்க நெருப்பைப் போலவோ போரில் தன் காண்டீவத்தை அசைத்தபடி எழுஞாயிறை {உதயச் சூரியனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரி எங்கு விழுமோ, அந்த இடமான தன் படைக்கு முன்னணியில் தன் தேரை நிறுத்தித் தன் சங்கை முழக்கினான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {தன் சங்கை} முழக்கியதும், கிருஷ்ணனும், பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் தன் முதன்மையான சங்கைப் பெரும்பலத்துடன் அச்சமற்றவகையில் முழக்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தச் சங்குகளின் முழக்கத்தினால், உமது படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்து நடுங்கினர். அவ்வொலியின் முடிவில் அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இடியினொலியைக் கேட்டு அனைத்துயிர்களும் அச்சத்தால் ஒடுங்குவதைப் போலவே, அந்தச் சங்குகளின் ஓசையால் உமது வீரர்கள் அனைவரும் அச்சத்தை அடைந்தனர். விலங்குகள் அனைத்தும் மலமும், சிறுநீரும் கழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த (இரு) சங்குகளின் முழக்கத்தால் கவலையில் நிறைந்த உமது மொத்தப் படையும், அதன் விலங்குகளுடன் சேர்த்துத் தங்கள் பலத்தை இழந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களில் சிலர் பயத்தால் தங்கள் புலன்களை இழந்தனர் {மயக்கமுற்றனர்}.
அர்ஜுனனின் கொடியில் இருந்த குரங்கு {அனுமன்} தன் வாயை அகல விரித்து, அதனுடன் {அந்தக் கொடியுடன்} கூடிய பிற உயிரினங்களுடன் பயங்கர ஒலியை உண்டாக்கி உமது துருப்புகளை அச்சுறுத்தியது {அச்சுறுத்தினான்}. பிறகு, உமது வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக மீண்டும் சங்குகள், கொம்புகள், கைத்தாளங்கள் மற்றும் அனகங்கள் ஆகியன முழக்கப்பட்டன. (பிற) இசைக்கருவிகளின் பல்வேறு ஒலிகள், வீரர்களின் கூச்சல்கள், அவர்களின் தோள்தட்டல்கள், (தங்கள் எதிரிகளைச்) சவால் விட்டு அழைத்த பெரும் தேர்வீரர்களால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்கள் ஆகியவற்றோடு அவ்வொலிகளும் கலந்தது.
மருண்டோரின் அச்சத்தை அதிகரிக்கும் அந்தப் பயங்கர ஆரவாரம் எழுந்த போது, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பகாசனன் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அர்ஜுனன், “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அந்த யானைப்படையினூடாகப் பிளந்து பகைவரின் படைக்குள் நான் ஊடுருவப் போகிறேன்” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன், துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டினான். தேர்கள், யானைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் தொடங்கியதுமான அந்த மோதல் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அப்போது, பொழியும் மேகத்திற்கு ஒப்பான பார்த்தன் {அர்ஜுனன்}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களின் திரளைப் போலக் கணைகளின் மாரியால் தன் எதிரிகளை மறைத்தான். பகைவரின் தேர்வீரர்களும், பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் விரைவாக மறைத்தனர்.
அப்போது தன் எதிரிகளால் போரில் இப்படி எதிர்க்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, தன் கணைகளால் தேர்வீரர்களின் தலைகளை அவர்களது உடல்களில் இருந்து வெட்டத் தொடங்கினான். மேல் உதடுகளால் கடிக்கப்பட்ட கீழுதடுகளுடனும், கோபத்தால் கலங்கிய கண்களுடனும் இருந்த முகங்களைக் கொண்டவையும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைப்பாகைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமாக அழகிய தலைகள் பூமியில் விரவிக் கிடந்தன. உண்மையில் அப்படிச் சிதறிக் கிடந்த வீரர்களின் தலைகளானவை, பறிக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் களத்தில் விரவிக் கிடக்கும் தாமரைக் கூட்டத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. குருதியின் நிறமேறி (களமெங்கும் அடர்த்தியாகக்) கிடந்த தங்கக் கவசங்கள், மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்டுப் பூமியில் விழும் தலைகளின் ஒலி, உரிய காலத்தில் பழுத்து விழும் பனம்பழங்களுக்கு ஒப்பானதாக இருந்தது. தலையற்ற முண்டங்கள் சில கையில் வில்லுடனும், உறையில் இருந்து உருவி உயர்த்தப்பட்ட வாள்களுடன் {தலையற்ற முண்டங்கள்} சிலவும் தாக்குவதற்காக எழுந்தன. அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அவனை வீழ்த்த விரும்பியவர்களுமான அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள், அர்ஜுனனால் எப்போது தங்கள் தலைகள் வெட்டப்பட்டன என்பதைத் தாங்கள் அறியாதிருந்தனர் [2].
குதிரைகளின் தலைகள், யானைகளின் துதிக்கைகள், துணிச்சல்மிக்க வீரர்களின் கைகள் மற்றும் கால்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது. “இவனே பார்த்தன் {அர்ஜுனன்}”, “பார்த்தன் எங்கே?”, “இதோ பார்த்தன்!” என இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் வீரர்கள் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த சிந்தனையில் மட்டுமே நிறைந்தனர். காலத்தால் புலன்களை இழந்த {மயக்கமடைந்த} அவர்கள், மொத்த உலகமும் பார்த்தனால் நிறைந்ததாகவே கருதினர். எனவே, அவர்களில் பலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், சிலர் தங்களையே தாக்கிக் கொண்டும் அழிந்தனர். துயரக் குரல் எழுப்பிய வீரர்கள் பலர், குருதியால் நனைந்து, தங்கள் புலன்களை இழந்து, பெரும் துன்பத்தால் தங்கள் நண்பர்களையும், சொந்தங்களையும் அழைத்தபடியே பூமியில் விழுந்து கிடந்தனர்.
பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள், போர்க்கோடரிகள், நிர்வியூகங்கள் {கூரான கழுமரம் போன்ற ஆயுதங்கள்}, கூன்வாள்கள், விற்கள், தோமரங்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கவசம்பூண்டு அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும்பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், பெரும் கதாயுதங்களுக்கு ஒப்பானவையும், வலிமைமிக்க ஆயுதங்களால் (உடலில் இருந்து) வெட்டப்பட்டவையுமான கரங்கள், பெரும்பலத்துடன் அசைந்து, துடித்து, சினத்தில் குதிப்பதாகத் தெரிந்தது.
அந்தப் போரில் கோபம் நிறைந்து பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றோர் ஒவ்வொருவரும், அந்த வீரனால் மரணத்துக்கு ஒப்பான சில கணைகளால் தங்கள் உடல் துளைக்கப்பட்டு அழிந்தனர். தன் தேர் சென்ற போது, தன் வில்லை வளைத்துக் கொண்டு அதில் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவனை {அர்ஜுனனைத்} தாக்குவதற்கான ஒரு சிறு வாய்ப்பையும் அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை. அவன் {அர்ஜுனன்} தன் கணைகளை எடுத்து, அவற்றை வில்லில் பொருத்தி, அவற்றை ஏவும் வேகம் அவனது எதிரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தது.
உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரையோட்டிகள், தேர்வீரர்கள், தேரோட்டிகள் ஆகியோரைத் துளைத்தான். அவனது எதிரிகளில், அவன் எதிரில் நின்றவர்களையோ, போரில் போராடியவர்களையோ, சுழன்றவர்களையோ, எவரையும் அந்தப் பாண்டுவின் மகன் கொல்லாமல் விடவில்லை. அடர்த்தியான இருளை அழித்த படி ஆகாயத்தில் எழும் சூரியனைப் போலவே, அர்ஜுனனும் கங்க இறகுகளின் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளின் மூலம் அந்த யானைப்படையை அழித்தான். யானைகள் பிளக்கப்பட்டு அதில் விழுந்ததால், உமது துருப்புகள் நின்ற அந்தக் களமானது, பிரளயத்தின் போது பெரும் மலைகளால் விரவிக்கிடக்கும் பூமியைப் போலத் தெரிந்தது.
எப்படி நடுப்பகல் சூரியனை அனைத்து உயிரினங்களாலும் காண இயலாதோ, அப்படியே கோபத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, போரில் தன் எதிரிகளால் காணப்பட முடியாதவனாக இருந்தான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் துருப்புகள் (தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால்) பீடிக்கப்பட்டு, அச்சத்தால் சிதறி ஓடின. வலிமைமிக்கக் காற்றால் மேகங்களின் திரள்கள் பிளக்கப்பட்டு விரட்டப்படுவதைப் போலவே, அந்தப் படையும், பார்த்தனால் துளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அந்த வீரன் எதிரியைக் கொன்று கொண்டிருந்த போது, யாராலும் அவனைப் பார்க்க முடியவில்லை.
{சொற்கள் மற்றும் செயல்களாலான} உந்துதல்கள், தங்கள் விற்களின் நுனிகள், ஆழமான உறுமல்கள், உத்தரவால் ஊக்குவிப்பது, கசைகள், அவர்களது விலாக்களில் வெட்டுகள், பயமுறுத்தும் பேச்சு ஆகியவற்றால் தங்கள் வீரர்களைப் பெரும் வேகம் கொள்ளச் செய்த உமது மனிதர்கள், அஃதாவது உமது குதிரைப்படை, உமது தேர்வீரர்கள், மற்றும் உமது காலாட்படை வீரர்கள் ஆகியோர், அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டுக் களத்திலிருந்து தப்பி ஓடினர்.
(யானைகளில் சென்ற) சிலர், தங்கள் அங்குசங்களால் அந்தப் பெரும் விலங்குகளின் விலாப்புறங்களைத் தூண்டிய பிறரும், பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட இன்னும் பல வீரர்களும், ஓடுகையில் பார்த்தனையே {அர்ஜுனனையே} எதிர்த்துச் சென்றனர். உண்மையில் உமது வீரர்கள் அனைவரும் உற்சாகமற்று, சிந்தனை குழம்பியவர்களாகினர்” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்! – துரோண பர்வம் பகுதி – 089-அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்; அர்ஜுனன் செய்த போர்; மனிதர்களும், யானைகளும், குதிரைகளும் கொல்லப்பட்ட விதம்; துச்சாசனனின் படைப்பிரிவு தோற்றோடி துரோணரிடம் தஞ்சத்தை அடைந்தது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட என் படையின் முன்னணியினர் பிளந்து ஓடிய போது, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற வீரர்கள் யாவர்? (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா? அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா?” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான அர்ஜுனன், தன் சிறந்த கணைகளைக் கொண்டு எங்கள் படையைப் பிளந்து தொடர்ச்சியாகக் கொல்லத் தொடங்கிய போது, வீரர்களில் பலர் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டனர், அல்லது உற்சாகமிழந்து தப்பி ஓடினர். அர்ஜுனனைப் பார்க்கத் திறனுள்ள எவனும் அந்தப் போரில் இல்லை.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளின் அந்நிலையைக் கண்ட உமது மகன் துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனை எதிர்த்துப் போரிட விரைந்தான். கடும் ஆற்றலைக் கொண்டவனும், தங்கத்தாலான அழகிய கவசம் தரித்தவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையால் தன் தலை மறைக்கப்பட்டவனுமான அந்த வீரன் {துச்சாசனன்}, மொத்த உலகையே விழுங்கவல்லது போலத் தெரிந்த பெரிய யானைப் படை ஒன்றை அர்ஜுனனைச் சூழச் செய்தான்.
யானைகளின் மணி ஒலியாலும், சங்குகளின் முழக்கத்தாலும், வில் நாண்கயிறுகளின் நாணொலியாலும், யானைகளின் பிளிறலாலும் பூமி, ஆகாயம், திசைகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிறைந்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டம் மூர்க்கமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அங்குசங்களால் தூண்டப்பட்ட சிறகுகள் கொண்ட மலைகளைப் போல, கோபத்தால் நிறைந்து, துதிக்கைகளை நீட்டியிருந்த அந்தப் பெரும் விலங்குகள் {யானைகள்} தன்னை நோக்கி வேகமாக விரைவதைக் கண்ட மனிதர்களில் சிங்கமான அந்தத் தனஞ்சயன், சிங்கமுழக்கமொன்றைச் செய்து, தன் கணைகளால் அந்த யானைப்படையைத் துளைக்கவும் கொல்லவும் தொடங்கினான்.
அந்தக் கிரீடம் தரித்தவன் (கிரீடியான அர்ஜுனன்), மலை போன்ற அலைகளைக் கொண்டவையும், பெருங்காற்றால் கொந்தளித்தவையுமான ஆழ்ந்த கடலைத் துளைத்துச் செல்லும் மகரத்தைப் போல, அந்த யானைப்படையைத் துளைத்துச் சென்றான். உண்மையில், அண்டப்பேரழிவின் நாளன்று {பிரளயத்தின் போது}, திசை மற்றும் கால விதிகளை மீறி எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனுக்கு ஒப்பாகப் பகைவரின் நகரங்களை அடக்குபவனான பார்த்தன் அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டான்.
குதிரைகளின் குளம்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, போராளிகளின் கூச்சல், வில் நாண்கயிறுகளின் நாணொலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி, பாஞ்சஜன்யம், தேவதத்தம் மற்றும் காண்டீவத்தின் முழக்கம் ஆகியவற்றின் விளைவால் மனிதர்களும் யானைகளும் உற்சாகமிழந்து, தங்கள் புலன் உணர்வுகளையும் இழந்தனர். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் மனிதர்களும், யானைகளும் பிளக்கப்பட்டனர். அந்தப் போரில் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அந்த யானைகள் தங்கள் உடலெங்கும் துளைக்கப்பட்டன. கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிச் சிதைக்கப்பட்ட போது, அவை {அந்த யானைகள்} சிறகுகளை இழந்த மலைகளைப் போலப் பூமியில் பேரொலியுடன் இடையறாமல் விழுந்து கொண்டிருந்தன. தாடை, அல்லது கும்பங்கள், அல்லது கன்னப்பொட்டு ஆகியவற்றில் நாராசங்களால் தாக்கப்பட்ட அவை, நாரைகளின் அலறலுக்கு ஒப்பாக அலறின.
அப்போது, கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), யானைகளின் கழுத்தில் நின்ற வீரர்களின் தலைகளைத் தன் நேரான கணைகளால் அறுக்கத் தொடங்கினான். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தலைகள், பார்த்தனால் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் தாமரைகளின் கூட்டத்துக்கு ஒப்பாக இடையறாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. யானைகள் களத்தில் திரிகையில், கவசமிழந்து, காயங்களால் பீடிக்கப்பட்டு, குருதியால் நனைந்து, தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் தெரிந்த பல வீரர்கள் அவற்றின் {அந்த யானைகளின்} உடல்களில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சில சந்தர்ப்பங்களில், (காண்டீவத்திலிருந்து) நன்கு ஏவப்பட்டவையும், அழகிய இறகுகளுடன் கூடிய சிறகு படைத்த ஒரே கணையால் துளைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வீரர்கள் பூமியில் விழுந்தனர்.
நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட பல யானைகள், ஏதோ சில இயற்கை மீறலினால் காடுகள் நிறைந்த மலைகள் விழுவதைப் போல, தங்கள் முதுகுகளில் இருந்த பாகர்களோடும், தங்கள் வாயில் இரத்தம் கக்கியபடியும் கீழே விழுந்தன. பார்த்தன் {அர்ஜுனன்}, தன்னை எதிர்த்த தேர்வீரர்களின் வில்லின் நாண்கயிறுகள், கொடிமரங்கள், விற்கள், ஏர்க்கால்கள், நுகத்தடிகள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் சுக்குநூறாக வெட்டினான். அர்ஜுனன் எப்போது தன் கணைகளை எடுத்தான், அவற்றை எப்போது வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது நாணை இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை யாராலும் காண முடியவில்லை. காணப்பட்டதெல்லாம், எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடன் அந்தப் பார்த்தன் தன் தேரில் ஆடுவதைப் போலத் தெரிந்ததுதான். நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட யானைகள், தாங்கள் தாக்கப்பட்ட உடனேயே, தங்கள் வாய்களில் இருந்து இரத்தத்தைக் கக்கியபடி பூமியில் விழுந்தன.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் அழிவுக்கும் மத்தியில், எண்ணிலடங்கா தலையற்ற முண்டங்கள் எழுந்து நிற்பது தெரிந்தது. விற்களைப் பிடித்திருந்தவையும், தோலுறை அணிந்த விரல்களைக் கொண்டவையும், வாள்களைப் பிடித்திருந்தவையும், அங்கதங்கள் மற்றுப் பிற தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்டுச் சிதறிக் கிடப்பது தெரிந்தது. எண்ணிலடங்கா உபஷ்கரங்கள், அதிஸ்தானங்கள், ஏர்க்கால்கள், கிரீடங்கள், உடைந்த தேர்ச்சக்கரங்கள், நொறுங்கிய அக்ஷகள் {அச்சுகள்}, நுகத்தடிகள், கேடயங்கள் ஆகியவையும், விற்களைத் தரித்திருந்த வீரர்கள், மலர்மால்களை, ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் விழுந்த கொடிமரங்கள் ஆகியவையும் அந்தப் போர்க்களத்தில் விரவிக் கிடந்தன.
கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள், க்ஷத்திரியர்களின் விழுந்த உடல்கள் ஆகியவற்றின் விளைவால் பூமியானது பயங்கரமாகக் காட்சியளித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட துச்சாசனனின் படைகள் தப்பி ஓடின. அந்தக் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட அவர்களது தலைவன் துச்சாசனனே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுச் சகட வியூகத்தில் தன் படைப்பிரிவுடன் நுழைந்து, துரோணரைத் தன்னைக் காப்பவராகக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.
நாண்கயிறு அறுபட்ட அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 090-துரோணரிடம் ஆசிகளை வேண்டி அனுமதி கோரிய அர்ஜுனன்; அர்ஜுனனின் நாண்கயிறை அறுத்த துரோணர்; துரோணருடன் போரிட்டு வியூகத்துக்குள் நுழைந்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துச்சாசனன் படையை அழித்த வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைய விரும்பி துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். வியூகத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த துரோணரை அணுகிய பார்த்தன், கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி, கரங்களைக் கூப்பியபடி துரோணரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பிராமணரே, என் நன்மையை விரும்பி, சுவஸ்தி என்று சொல்லி என்னை ஆசீர்வதிப்பீராக. உமது அருளால் நான் இந்தப் பிளக்கமுடியாத வியூகத்தைப் பிளக்க விரும்புகிறேன். நீர் எனக்குத் தந்தையைப் போன்றவர், அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரையோ, கிருஷ்ணனையோ போன்றவர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! ஐயா, ஓ! பாவமற்றவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, அஸ்வத்தாமன் எவ்வாறு உம்மால் பாதுகாக்கத் தகுந்தவரோ, அவ்வாறே நானும் உம்மால் பாதுகாக்கப்படத் தகுந்தவனே. ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {துரோணரே}, உமது அருளால் போரில் நான் சிந்து ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல விரும்புகிறேன். ஓ! தலைவரே {துரோணரே}, என் உறுதிமொழி நிறைவேறும்படி செய்வீராக” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட ஆசான் {துரோணர்} புன்னகையுடனே, “ஓ! பீபத்சு {அர்ஜுனா}, என்னை வெல்லாமல், உன்னால் ஜெயத்ரதனை வெல்ல இயலாது” என்று மறுமொழி கூறினார். இவ்வளவே சொன்ன துரோணர், புன்னகைத்தபடியே அவனது {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றையும் மற்றும் தேரோட்டியையும் {கிருஷ்ணனையும்} கூரிய கணைகளின் மழையால் மறைத்தார். துரோணரின் கணைமழையைத் தன் கணைகளால் கலங்கடித்த அர்ஜுனன், மேலும் வலிமைமிக்கப் பயங்கரக் கணைகளை ஏவியபடியே துரோணரை எதிர்த்து விரைந்தான். க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற அர்ஜுனன், அந்தப் போரில் ஒன்பது கணைகளால் துரோணரைத் துளைத்தான்.
அர்ஜுனனின் கணைகளைத் தன் கணைகளால் அறுத்த துரோணர், பிறகு, விஷத்திற்கோ, நெருப்புக்கோ ஒப்பான பல கணைகளால் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தார். பிறகு அர்ஜுனன், தன் கணைகளால் துரோணரின் வில்லை அறுக்க நினைத்துக் கொண்டிருந்த போது, பெரும் வீரம் கொண்ட பின்னவர் {துரோணர்}, சிறப்புமிக்கப் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லின் நாண்கயிற்றை அச்சமற்றவகையில் விரைவாக அறுத்தார். மேலும் பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளையும், கொடிமரத்தையும், தேரோட்டியையும் துளைத்தார். வீரமிக்கத் துரோணர் சிரித்துக் கொண்டே தன் கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்} மறைத்தார்.
அதேவேளையில், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பார்த்தன், தன் பெரிய வில்லில் புதிய நாணேற்றி, தன் ஆசானுக்கும் மேம்பட்டவனாக, ஏதோ ஒரே ஒரு கணையை ஏவுபவனைப் போல அறுநூறு {600} கணைகளை விரைவாக ஏவினான். மேலும் அவன் எழுநூறு {700} கணைகளையும், பிறகு தடுக்கப்படமுடியாத ஆயிரம் {1000} கணைகளையும் அதன் பிறகு பத்தாயிரம் {10000} பிற கணைகளையும் ஏவினான். இவை அனைத்தும் துரோணரின் வியூகத்தில் இருந்த வீரர்கள் பலரைக் கொன்றன. வலிமைமிக்கவனும், சாதித்தவனும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவனுமான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட பல மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் பலவும் உயிரிழந்து விழுந்தன.
இடியால் தளர்ந்த மலைகளின் கொடுமுடிகளைப் போலவோ, காற்றால் விரட்டப்படும் மேகங்களின் திரள்களைப் போலவோ, நெருப்பால் எரிந்துவிழும் பெரிய வீடுகளைப் போலவோ யானைகள் கீழே விழுந்தன. அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, இமயச்சாரலில் நீரூற்றின் பலத்தால் தாக்கப்பட்டு விழும் அன்னங்களைப் போலவே, ஆயிரக்கணக்கான குதிரைகள் விழுந்தன. யுக முடிவில் எழும் சூரியன் தன் கதிர்களால் பெரும் அளவு நீரை வற்ற செய்வதைப் போலவே, அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, தன் ஆயுதங்கள் மற்றும் கணைகளின் மழையால் பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொன்றான்.
பிறகு சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலவே, அந்தத் துரோண மேகம், தன் கணைகளின் மழையால், கதிர்கள் என்ற அடர்த்தியான கணை மழையால் குருக்களில் முதன்மையானோரை அந்தப் போரில் எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டவச் சூரியனை {அர்ஜுனனை} மறைத்தது. அப்போது ஆசான் {துரோணர்}, எதிரியின் உயிர்க்குருதியைக் குடிக்க வல்ல ஒரு நாராசத்தால் பெரும் பலத்துடன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பைத் தாக்கினார். பலமிழந்த அர்ஜுனன், நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மலையைப் போலவே அங்கமெல்லாம் நடுக்கமடைந்தான். எனினும், மீண்டும் துணிவை அடைந்த பீபத்சு {அர்ஜுனன்} சிறகு படைத்த கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் ஐந்து கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தாக்கினார். மேலும் அவர் எழுபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனையும், மூன்றால் அவனது கொடிமரத்தையும் தாக்கினார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரமிக்கத் துரோணர் தம் சீடனைவிட மேம்பட்டவராகக் கண்ணிமைப்பதற்குள் தம் கணைமாரியால் அர்ஜுனனைக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தார். துரோணரின் கணைகள் தொடர்ச்சியான சரமாகப் பாய்வதையும், அவரது வில்லானது தொடர்ச்சியாக வட்டமாக வளைக்கப்பட்டு அற்புதமாகக் காட்சியளிப்பதையும் நாங்கள் கண்டோம். அந்தப் போரில் துரோணரால் ஏவப்பட்டவையும், கங்க இறகுகளால் சிறகமைந்தவையுமான அந்த எண்ணற்ற கணைகள் தனஞ்சயன் மீதும், வாசுதேவன் மீதும் இடையறாமல் பாய்ந்தன. துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரைக் கண்டவனும், பெரும் புத்திசாலியுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} (முக்கியப்) பணி நிறைவேறச் சிந்திக்கத் தொடங்கினான் [1].
பிறகு வாசுதேவன் தனஞ்சயனிடம் இந்த வார்த்தைகளில், “ஓ! பார்த்தா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நாம் காலத்தை வீணடிக்கக்கூடாது. இதைவிட மிக முக்கியப் பணி நமக்காகக் காத்திருப்பதால் நாம் துரோணரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும்” என்றான். அதற்கு மறுமொழியாகப் பார்த்தன் கிருஷ்ணனிடம், “ஓ! கேசவா {கிருஷ்ணா} நீ விரும்பியவாறே ஆகட்டும்” என்றான். பிறகு அர்ஜுனன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணரைத் தங்கள் வலப்புறம் நிறுத்தி அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அப்போது துரோணர் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்கிறாய். உன் எதிரியை வெல்லும் வரை நீ (போரை) நிறுத்துவதில்லை என்பது உண்மையில்லையா?” என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன், “நீர் என் எதிரியல்ல எனது ஆசானாவீர். நான் உமது சீடன், எனவே, உமது மகனைப் போன்றவன். மேலும், போரில் உம்மை வெல்லும் மனிதன் எவனும் இந்த மொத்த உலகிலும் இல்லை” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து வேகமாகச் சென்றான். அப்படி அவன் உமது படையில் ஊடுருவிய போது, உயர் ஆன்ம பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் அவனது {அர்ஜுனனது} சக்கரங்களின் பாதுகாவலர்களாக அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்துக் கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, சுருதாயுஸ் [2] ஆகியோர் முன்னேறிச் செல்லும் தனஞ்செயனை {அர்ஜுனனை} எதிர்க்கத் தொடங்கினர். மேலும் இவர்கள் தங்களைப் பின்தொடர்ந்து வருபவர்களாகப் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொண்டிருந்தனர்.
அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் மாவேல்லகர்கள், லலித்தர்கள், கைகேயர்கள், மத்ரகர்கள், நாராயணக் கோபாலர்கள் ஆகியோரும், பெரும் துணிச்சல்மிக்கவர்கள் என்று கருதப்பட்டவர்களும், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்தவர்களும், முன்பு கர்ணனால் வெல்லப்பட்டவர்களுமான காம்போஜர்களின் பல்வேறு இனங்களும், பரத்வாஜரின் மகனை {துரோணரைத்} தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, தன் மகனின் மரணத்தால் துயரில் எரிபவனும், அனைத்தையும் அழிக்கும் யமனுக்கு ஒப்பானவனும், கவசம் பூண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், அடர்ந்த போரில் உயிரை விடத் துணிந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியும், யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனுக்கு ஒப்பானவனும், பகைவர் படை மொத்தத்தையும் விழுங்கத் தயாராக இருப்பவனாகத் தெரிந்தவனுமான அந்தக் கோபக்கார வீரனான அர்ஜுனனைத் தடுப்பதற்காக விரைந்தனர். பிறகு, ஒரு புறம் அந்தப் போராளிகள் அனைவரும், மறுபுறம் அர்ஜுனன் என அவர்களுக்கிடையில் தொடங்கிய போரானது மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஜெயத்ரதனைக் கொல்லச்செல்லும் அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை}, கடும் நோயைத் தடுக்கும் மருந்துகளைப் போல அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.
சுருதாயுதனின் வரம்! – துரோண பர்வம் பகுதி – 091-எதிரிகளின் படையை நடுங்கச் செய்த அர்ஜுனன்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியது; கிருதவர்மனுடன் மோதி வாய்ப்பிருந்தும் அவனைக் கொல்லாமல் விட்டது; மன்னன் சுருதாயுதனின் வரலாறு; சுருதாயுதன் பெற்றிருந்த வரம்; சுருதாயுதன் கொல்லப்பட்டது; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்; சுதக்ஷிணன் கொல்லப்பட்டது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவனும், பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} துரோணரால் பின்தொடரப்பட்டான். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எண்ணற்ற ஒளிக்கதிர்களை இறைக்கும் சூரியனுக்கு ஒப்பாகத் தன் கூரிய கணைகளை இறைத்து, உடலை எரிக்கும் நோய்களைப் போல அந்தப் படையைச் சிதறடித்தான். குதிரைகள் துளைக்கப்பட்டன, தேர்கள் உடைக்கப்பட்டு, தேரோட்டிகள் சிதைக்கப்பட்டு, யானைகள் வீழ்த்தப்பட்டன. குடைகள் வெட்டித் தள்ளப்பட்டன, வாகனங்கள் தங்கள் சக்கரங்களை இழந்தன. கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட போராளிகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். ஒருவரோடொருவர் மோதும்படியாக அந்த வீரர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் தன் நேரான கணைகளால் பகைவரின் படையைத் தொடர்ச்சியாக நடுங்கச் செய்தான். உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டுத் தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிவப்பு குதிரைகளைக் கொண்டவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.
அப்போது ஆசான் துரோணர், உயிர்நிலைகளையே அடையவல்ல இருபத்தைந்து நேரான கணைகளால் வலிமைமிக்க வில்லாளியான தன் சீடன் அர்ஜுனனைத் தாக்கினார். அதன்பேரில் ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான பீபத்சு {அர்ஜுனன்}, தன்னை நோக்கி ஏவப்பட்ட எதிர்க்கணைகளைக் கலங்கடிக்கவல்ல கணைகளை ஏவியபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்ட அர்ஜுனன் பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துத் துரோணரால் தன் மீது விரைவாக ஏவப்பட்ட கணைகளை {பல்லங்களைத்} தன் நேரான கணைகளால் {பல்லங்களால்} கலங்கடித்தான் [1]. அர்ஜுனன் இளமை கொண்டவனாக, மிக மூர்க்கமாகப் போராடுபவனாக இருந்தாலும், ஒரு கணையாலும் துரோணரைத் துளைக்க முடியாததால் நாங்கள் கண்ட துரோணரின் திறம் மிக அற்புதமானதாக இருந்தது. மேகங்களின் திரள்கள் மழைத்தாரைகளைப் பொழிவதைப் போலத் துரோண மேகமானது, பார்த்த மலையின் மீது மழையைப் பொழிந்தது. பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பிரம்மாயுதத்தை அழைத்து, அந்தக் கணை மழையை வரவேற்று, அந்தக் கணைகளைத் தன் கணைகளால் அறுத்தான்.
பிறகு துரோணர், வெண் குதிரைகளைக் கொண்ட பார்த்தனை இருபத்தைந்து கணைகளால் பீடித்தார். மேலும் அவர் {துரோணர்}, எழுபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} அவனது கரங்களிலும் மார்பிலும் தாக்கினார். பெரும் நுண்ணறிவு கொண்ட பார்த்தன், தொடர்ச்சியாகக் கூரிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த ஆசானை {துரோணரை} அந்தப் போரில் சிரித்துக் கொண்டே தடுத்தான். துரோணரால் இப்படித் தாக்கப்பட்ட போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்த இருவரும், பெருகும் யுக நெருப்புக்கு ஒப்பான அந்த வெல்லப்படமுடியாத வீரரை {துரோணரைத்} தவிர்த்தனர். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கூரிய கணைகளைத் தவிர்த்தவனும், மலர்மாலைகளை அணிந்தவனும், குந்தியின் மகனுமான அந்தக் கிரீடம் தரித்தவன் {கிரீடியான அர்ஜுனன்}, போஜர்களின் படையைப் படுகொலை செய்யத் தொடங்கினான். உண்மையில், அசையாத மைநாக மலையைப் போல நின்ற வெல்லப்பட முடியாத அந்தத் துரோணரைத் தவிர்த்த அர்ஜுனன், கிருதவர்மனுக்கும், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணனுக்கும் இடையில் தன் நிலையை எடுத்துக் கொண்டான்.
அப்போது மனிதர்களில் புலியான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, வெல்லப்பட முடியாதவனும், குரு வழித்தோன்றல்களில் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்} மீது கங்க இறகுகளால் சிறகு அமைந்த பத்து கணைகளால் நிதானமாகத் துளைத்தான். பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்து ஐந்து கூரிய கணைகளால் அர்ஜுனனை மார்பில் துளைத்தான். பிறகு மேலும் ஐந்து கூரிய கணைகளால் மீண்டும் பார்த்தனைத் துளைத்தான். பார்த்தனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு ஒன்பது கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் துளைத்தான்.
குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருதவர்மனின் தேருக்கு முன்பு தடுக்கப்பட்டிருப்பதைக் கண்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, காலமேதும் வீணாகக் கூடாது என்று நினைத்தான். பிறகு கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கிருதவர்மனுக்கு எந்தக் கருணையும் காட்டாதே! (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக!” என்றான். பிறகு அர்ஜுனன் தன் கணைகளால் கிருதவர்மனை மலைக்கச் செய்து, தன் வேகமான குதிரைகளால் காம்போஜ படைப்பிரிவினரிடம் சென்றான். வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் காம்போஜப் படைக்குள் ஊடுருவியதைக் கண்ட கிருதவர்மன் கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கிருதவர்மன்}, தன் வில்லை எடுத்து அதில் கணைகளைப் பொருத்திப் பாஞ்சால இளவரசர்கள் இருவருடன் மோதினான். உண்மையில் கிருதவர்மன், அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்துப் பின்தொடர்ந்த இரு பாஞ்சால இளவரசர்களையும் தன் கணைகளால் தடுத்து நிறுத்தினான்.
பிறகு, போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மன் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜசை நான்கு கணைகளாலும் அவர்கள் இருவரையும் கூரியக் கணைகளால் துளைத்தான். பதிலுக்கு அந்த இளவரசர்கள் இருவரில் ஒவ்வொருவரும் அவனைப் {கிருதவர்மனைப்} பத்து கணைகளால் துளைத்தனர். அதற்கு மேலும், யுதாமன்யு மூன்று கணைகளையும், உத்தமௌஜஸ் மூன்று கணைகளையும் ஏவி கிருதவர்மனின் கொடிமரத்தையும் வில்லையும் அறுத்தனர். அப்போது மற்றொரு வில்லை எடுத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சினத்தால் மதங்கொண்டு, அவ்விரு வீரர்களின் விற்களையும் இழக்கச் செய்து, அவர்களைக் கணைகளால் மறைத்தான். பிறகு வேறு இரு விற்களை எடுத்து நாணேற்றிய அந்த இரு வீரர்களும் கிருதவர்மனைத் துளைக்கத் தொடங்கினர்.
அதே வேளையில் பீபத்சு {அர்ஜுனன்} பகைவரின் படைக்குள் ஊடுருவினான். ஆனால் கிருதவர்மனால் தடுக்கப்பட்ட அந்த இளவரசர்கள் இருவரும் கடுமையாகப் போராடினாலும் திருதராஷ்டிரப் படைக்குள் நுழைய முடியவில்லை. வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்தப் போரில் தன்னை எதிர்த்த படைப்பிரிவுகளை விரைவாகப் பீடித்தான். எனினும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தன் அருகில் அகப்பட்டிருந்த கிருதவர்மனைக் கொல்லவில்லை.
அப்படிச் செல்லும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் சுருதாயுதன், கோபத்தால் நிறைந்து, தன் பெரிய வில்லை அசைத்துக் கொண்டு அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். அவன் {சுருதாயுதன்} பார்த்தனை மூன்று கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் துளைத்தான். மேலும் அவன் {சுருதாயுதன்} கத்தி போன்ற தலை கொண்ட மிகக் கூரிய கணை ஒன்றால் பார்த்தனின் கொடிமரத்தைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் நிறைந்த அர்ஜுனன், (பாகன் ஒருவன்) அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் தாக்குவதைப் போல, தன் எதிராளியை நேரான தொண்ணூறு {90} கணைகளால் ஆழத் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுதனால், பாண்டு மகனின் ஆற்றல்மிக்க அந்தச் செயல்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்கு அர்ஜுனனை எழுபத்தேழு கணைகளால் {நாராசங்களால்} துளைத்தான்.
அப்போது அர்ஜுனன், சுருதாயுதனனின் வில்லையும், அதன் பிறகு அவனது அம்பறாத்தூணியையும் அறுத்து, மேலும் கோபத்துடன் நேரான எழுபது கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் தன் புலன்களை இழந்த மன்னன் சுருதாயுதன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒன்பது கணைகளால் வாசவன் மகனின் {இந்திரன் மகன் அர்ஜுனனின்}} கரங்களிலும், மார்பிலும் அடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன் சிரித்துக் கொண்டே பல்லாயிரம் கணைகளால் சுருதாயுதனைப் பீடித்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, பின்னவனின் {சுருதாயுதனின்} குதிரைகளையும், தேரோட்டியையும் விரைவாகக் கொன்றான். பெரும் பலம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எழுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு வீரமன்னன் சுருதாயுதன் குதிரைகளற்ற அந்தத் தேரைக் கைவிட்டு, அம்மோதலில் தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான்.
வருணனின் மகனான வீர மன்னன் சுருதாயுதன், குளிர்ந்த நீரைக் கொண்டதும், பர்ணாசை [2] என்றழைக்கப்படுவதுமான பெரும் நதியையே தன் தாயாகக் கொண்டவனும் ஆவான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், “இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்” என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், “எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ! ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, “இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ! சிறப்புமிக்கப் பிள்ளாய், (அப்படி ஏவப்பட்டால்), அஃது எதிர்த்திசையில் சென்று, ஏவிய மனிதனையே கொல்லும்” என்றான் {வருணன்}.அவனுடைய வேளை வந்ததால், சுருதாயுதன் அந்தக் கட்டளையை மீறியதாகத் தெரிந்தது. வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால் அவன் {சுருதாயுதன்} ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தாக்கினான். வீரக் கிருஷ்ணன் அந்தக் கதாயுதத்தை நன்கு வளர்ந்த தன் பருத்த தோள்கள் ஒன்றில் ஏற்றான். விந்திய மலையை அசைக்கத் தவறிய காற்றைப் போல, அது சௌரியை {கிருஷ்ணனை} அசைக்கத் தவறியது. அந்தக் கதாயுதம் ஸ்ருதாயுதனையே நோக்கித் திரும்பி, மந்திரவாதியின் தவறான மந்திரம் அவனேயே காயப்படுத்துவதைப் போல, தன் தேரில் நின்றிருந்த அந்தத் துணிச்சல்மிக்கக் கோபக்கார மன்னனைத் தாக்கிக் கொன்றதால் அந்த வீரன் பூமியில் விழுந்தான். கதாயுதம் திரும்பி சுருதாயுதனைக் கொன்றதையும், எதிரிகளைத் தண்டிப்பவனான சுருதாயுதன் தன் ஆயுதத்தாலேயே கொல்லப்பட்டதையும் கண்ட துருப்புகளுக்கு மத்தியில் “ஐயோ” என்றும், “ஓ” என்றும் கூச்சல்கள் எழுந்தன [3].
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுருதாயுதன், போரில் ஈடுபடாத ஜனார்த்தன் மீது அந்தக் கதாயுதத்தை ஏவியதால், ஏவிய அவனையே அது கொன்றுவிட்டது. மேலும் அந்தச் சுருதாயுதன் வருணன் சொன்ன விதத்திலேயே களத்தில் அழிந்தான். உயிரை இழந்த அவன் வில்லாளிகள் அனைவரின் கண்கள் முன்பாகவே பூமியில் விழுந்தான். அப்படி விழுந்த போது, பர்ணாசையின் அன்புக்குரிய அந்த மகன் {சுருதாயுதன்}, கிளை பரப்பியிருந்த ஒரு நெடும் ஆலமரம் காற்றால் விழுந்து கிடந்ததைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சுருதாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு துருப்புகள் அனைத்தும், முக்கிய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.
அப்போது காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனான துணிச்சல்மிக்கச் சுதக்ஷிணன், தன் வேகமான குதிரைகளை எதிரிகளைக் கொல்பவனான பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைவாகச் செலுத்தினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} அவன் {சுதஷிணன்} மீது ஏழு கணைகளை ஏவினான். அந்த வீரனின் உடலைக் கடந்து சென்ற அந்தக் கணைகள் பூமியில் நுழைந்தன. போரில் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட சுதக்ஷிணன், பதிலுக்கு அர்ஜுனனைக் கங்க இறகுகளால் சிறகமைந்த பத்துக் கணைகளால் துளைத்தான். வாசுதேவனை மூன்று கணைகளால் துளைத்த அவன், மேலும் ஐந்தால் பார்த்தனைத் துளைத்தான்.
அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுதக்ஷிணனின் வில்லை அறுத்துப் பின்னவனின் {சுதக்ஷிணனின்} கொடிமரத்தையும் வெட்டி வீழ்த்தினான். பாண்டுவின் மகன், பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் இரண்டால் தன் எதிராளியைத் துளைத்தான். எனினும், சுதக்ஷிணன், மீண்டும் மூன்று கணைகளால் பார்த்தனைத் துளைத்து சிங்க முழக்கம் செய்தான். பிறகு, கோபத்தால் நிறைந்த துணிச்சல் மிக்கச் சுதக்ஷிணன், முழுக்க இரும்பாலானதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பயங்கர ஈட்டியைக் காண்டீவதாரியின் {அர்ஜுனன்} மீது ஏவினான். பெரும் எரிநட்சத்திரத்தைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு வலிமைமிக்க அந்தத் தேர்வீரனை {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்று பூமியில் விழுந்தது. அந்த ஈட்டியால் ஆழமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த அர்ஜுனன், மிக விரைவாகவே {மயக்கத்திலிருந்து} மீண்டான்.
பிறகு வலிமையும், சக்தியும், காண இயலா சாதனைகளும் கொண்ட வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, கங்க இறகுகளால் சிறகமைந்த பதினான்கு கணைகளால் தன் எதிரியை அவனது குதிரைகள், கொடிமரம், வில், தேரோட்டி ஆகியவற்றோடு துளைத்தான். மேலும் பார்த்தன், எண்ணற்ற பிற கணைகளால் சுதக்ஷிணனின் தேரைச் சுக்குநூறாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் காரியமும், ஆற்றலும் கலங்கடிக்கப்பட்டவனான காம்போஜர்களின் இளவரசனான சுதக்ஷிணனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். காம்போஜர்களின் துணிச்சல்மிக்க அந்த இளவரசன் {சுதக்ஷிணன்}, தன் கவசம் பிளக்கப்பட்டு, அங்கங்கள் பலவீனமடைந்து, தன் கிரீடமும், அங்கதங்களும் நழுவ, இயந்திரத்தில் இருந்து வீசப்பட்ட இந்திரக் கம்பம் {இந்திரத்வஜம்} போலத் தலை குப்புற பூமியில் விழுந்தான்.
வசந்தகாலத்தில், மலைமுகட்டில், அழகிய கிளைகளுடன் நன்கு வளர்ந்திருக்கும் அழகிய கர்ணிகார (கோங்கு) மரம், காற்றினால் ஒடிக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் போல, விலைமதிப்புமிக்கப் படுக்கையையும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்படத் தகுந்த அந்தக் காம்போஜர்களின் இளவரசன் {சுதக்ஷிணன்} உயிரை இழந்து வெறுந்தரையில் கிடந்தான். அழகுமிக்கவனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனும், நெருப்பின் காந்தியைக் கொண்ட தங்க மாலையைத் தலையில் சூடியவனும், காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சுதக்ஷிணன், பார்த்தனின் கணைகளால் வீழ்த்தப்பட்டு, சமமுகடு கொண்ட அழகிய மலையைப் போல உயிரையிழந்து பூமியில் கிடந்தான். சுருதாயுதனும், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணனும் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகனின் துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.
அம்பஷ்டர்களின் மன்னன் சுருதாயுஸ்! – துரோண பர்வம் பகுதி – 092-அர்ஜுனனை மயக்கமடையச் செய்த சுருதாயுசும், அச்யுதாயுசும்; சுருதாயுஸ், அச்யுதாயுஸ் அவர்களது மகன்கள் ஆகியோரை அர்ஜுனன் கொன்றது; மிலேச்சர்களைக் கொன்று விரட்டிய அர்ஜுனன்; அம்பஷடர்களின் மன்னனான மற்றொரு சுருதாயுசைக் கொன்றது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சுதக்ஷிணன் மற்றும் வீரச் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்த உமது வீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமாரியை இறைக்கத் தொடங்கினர். பிறகு பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அறுநூறு கணைகளின் மூலம் அவர்களை எரித்தான். அதன்பேரில் அந்த வீரர்கள் புலியைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர். மீண்டும் திரும்பி வந்த அவர்கள், போரில் தங்களை வீழ்த்துபவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பார்த்தனைச் சூழ்ந்து கொண்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன்னை நோக்கி இப்படி விரைந்து வந்த போராளிகளின் தலைகளையும், கரங்களையும் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விரைவாக அறுத்தான். வீழ்ந்த தலைகளால் நிரப்பப்படாத இடமென்று அந்தப் போர்க்களத்தில் ஓர் அங்குலம் கூடக் காணப்படவில்லை. களத்தில் பறந்து திரிந்த காக்கைகள், கழுகுகள், அண்டங்காக்கைகள் ஆகியவற்றின் கூட்டங்கள் ஒரு மேகத்திரையை ஏற்படுத்தின. இப்படித் தங்கள் மனிதர்கள் கொல்லப்படுவதைக் கண்ட சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் {அசுருதாயுஸ்} ஆகிய இருவரும் கோபத்தால் நிறைந்தனர். அவர்கள் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} மூர்க்கமாக மோதுவதைத் தொடர்ந்தனர்.
பெரும் வலிமையும், செருக்கும், வீரமும், நல்ல பிறப்பும், கரங்களில் பலமும் கொண்ட அந்த வில்லாளிகள் இருவரும் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் ஆகியோர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் புகழை வெல்ல விரும்பியும், உமது மகனின் {துரியோதனனின்} நிமித்தமாகவும், அர்ஜுனனின் அழிவுக்காகவும், வலது புறத்திலிருந்தும், இடது புறத்திலிருந்தும் பின்னவன் {அர்ஜுனன்} மேல் தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். இரு மேகத்திரள்கள் ஒரு தடாகத்தை நிறைப்பதைப் போல, அந்தக் கோபக்கார வீரர்கள், நேரான ஓராயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சுருதாயுஸ் கோபத்தால் நிறைந்து, நன்கு கடினமாக்கப்பட்ட வேல் ஒன்றால் தனஞ்சயனைத் தாக்கினான்.
எதிரிகளை நொறுக்குபவனான அர்ஜுனன், தன் வலிமைமிக்க எதிரியால் {சுருதாயுஸால்} அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்டு, (அதனால்) கேசவனையும் {கிருஷ்ணனையும்} மலைக்கச் செய்யும் வகையில் மயக்கமடைந்தான். அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான அச்யுதாயுஸ் கூர்முனை கொண்ட சூலமொன்றால் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பலமாகத் தாக்கினான். அதனால் ஆழத் துளைக்கப்பட்ட பார்த்தன், தன் கொடிக்கம்பத்தைப் பற்றியபடி தன்னைத் தாங்கிக் கொண்டான். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயன் {அர்ஜுனன்} உயிரிழந்தான் என்ற நம்பிக்கையில் துருப்புகள் அனைத்தும் சிங்க முழக்கமிட்டன. புலன்களை இழந்த பார்த்தனைக் கண்டு கிருஷ்ணனும் துயரத்தால் எரிந்தான். பிறகு கேசவன் ஆறுதல் வார்த்தைகளால் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தேற்றினான்.
அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அவர்கள் (சுருதாயுசும், அச்யுதாயுசும்) சரியான இலக்குடன் அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தங்கள் கணை மாரியைப் பொழிந்து, தங்கள் தேர், தேர் சக்கரங்கள், கூபரங்கள், குதிரைகள், கொடிக்கம்பம், கொடி ஆகியவற்றோடு கூடிய தனஞ்சயனையும், விருஷ்ணி குலத்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்ணுக்குப் புலப்படாமல் ஆகும்படி செய்தார்கள். இவையாவும் அற்புதமாகத்தெரிந்தன. அதேவேளையில், பீபத்சு {அர்ஜுனன்}, யமனின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பி வந்தவனைப் போல மெதுவாகத் தன்னுணர்வு மீண்டான். கணைகளால் மறைக்கப்பட்ட கேசவனோடு கூடிய தன் தேரையும், சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தன் முன் நின்ற அந்த எதிராளிகள் இருவரைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்த்தன், சக்ரனின் {இந்திரனின்} பெயரைக் கொண்ட ஆயுதத்தை {ஐந்திராயுதத்தை} இருப்புக்கு அழைத்தான். அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நேர்க்கணைகள் பாய்ந்தன. அந்தக் கணைகள் வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சுருதாயுசையும், அச்யுதாயுசையும் தாக்கின.
பார்த்தனால் துளைக்கப்பட்ட பின்னவர்களால் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுசால்} ஏவப்பட்ட கணைகளும் ஆகாயத்தில் பாய்ந்தன. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அக்கணைகளைத் தன் கணைகளின் பலத்தால் விரைவாகக் கலங்கடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் மோதியபடியே களத்தில் திரியத் தொடங்கினான். அதே வேளையில் சுருதாயுசும், அச்யுதாயுசும் அர்ஜுனனின் கணை மாரியால் தங்கள் கரங்களையும் தலைகளையும் இழந்தனர். அவர்கள், காற்றால் முறிந்து விழுந்த இரண்டு நெடுமரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர். கடல் வற்றிப் போனதைக் கண்டால் மனிதர்கள் என்ன உணர்ச்சியை அடைவார்களோ அதே போன்ற ஆச்சரியத்தைச் சுருதாயுசின் மரணமும், அச்யுதாயுசின் படுகொலையும் ஏற்படுத்தின.
பிறகு அந்த இளவரசர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்த ஐம்பது தேர்வீரர்களையும் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்ற படியே பாரதப் படையை எதிர்த்துச் சென்றான். சுருதாயுசும், அச்யுதாயுசும் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்களது மகன்களும், மனிதர்களில் முதன்மையானோருமான நியாதாயுஸ் {நியுதாயு} மற்றும் தீர்க்காயுஸ் {தீர்க்காயு} ஆகியோர், ஓ! பாரதரே, சினத்தால் நிறைந்து, தங்கள் தந்தைமாருக்கு நேர்ந்த பேரழிவால் மிகவும் துன்புற்று, பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடியே குந்தியினை மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நேரான கணைகளின் மூலம் ஒருக்கணத்தில் அவர்கள் இருவரையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.
தாமரைகள் நிறைந்த தடாகத்தின் நீரைக் கலங்கடிக்கும் ஒரு யானையைப் போலத் தார்தராஷ்டிரப் படையணிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பார்த்தனை {அர்ஜுனனை} (குரு படையில் இருந்த) க்ஷத்திரியக் காளையரால் தடுக்க முடியவில்லை. பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கர்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களான ஆயிரக்கணக்கான யானைப்பாகர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் யானைப் படையுடன் பாண்டுவின் மகனைச் சூழ்ந்து கொண்டனர். துரியோதனனால் தூண்டப்பட்ட மேற்கு மற்றும் தெற்கின் மன்னர்கள் பலரும், கலிங்கர்களின் ஆட்சியாளனால் [1] தலைமை தாங்கப்பட்ட வேறு பலரும் மலைகளைப் போன்ற தங்கள் யானைகளுடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அப்படி முன்னேறி வருபவர்களும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தப் போராளிகளின் தலைகளையும், கரங்களையும் விரைவாக அறுத்தான். அந்தத் தலைகளாலும், அங்கதங்களால் அலங்கரிக்கபட்ட கரங்களாலும் விரவிக் கிடந்த போர்க்களமானது, பாம்புகளால் பின்னிப் பிணைக்கப்பட்ட தங்கக் கற்களைப் போலத் தெரிந்தது. வீரர்களின் கரங்கள் அப்படி வெட்டப்பட்டு வீழ்ந்த போது, மரங்களில் இருந்து விழும் பறவைகளைப் போல அவை தெரிந்தன. ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்ட யானைகள், (தங்கள் காயங்களில்) குருதி பெருக்கியபடி, மழைக்காலங்களில் செம்மண் கலந்த நீர் வழியும் மலைகளைப் போலத் தெரிந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் கொல்லப்பட்ட பிறர் அந்தக் களத்தில் விழுந்து கிடந்தனர்.
பல்வேறு வகைகளிலான கோர வடிவங்களுடனும், பல்வேறு ஆடைகளை உடுத்தி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டும், யானைகளில் இருந்த மிலேச்சர்கள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான கணைகளால் உயிரை இழந்து தாங்கள் கிடந்த களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பாதங்களால் முடுக்கிய தங்கள் பாகர்களுடன் ஆயிரக்கணக்கான யானைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு இரத்தம் கக்கின, அல்லது வலியால் பிளிறின, அல்லது கீழே விழுந்தன, அல்லது அனைத்துத் திசைகளிலும் கட்டுப்பாடில்லாமல் ஓடின. பெரும் அச்சமடைந்த பல யானைகள், தங்கள் மனிதர்களையே மிதித்து நசுக்கிக் கொன்றன. கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போலக் கடுமையானவையும், அதிகப்படியாக வைக்கப்படிருந்தவையுமான இன்னும் பல யானைகளும் அதையே செய்தன.
யவனர்கள், பாரடர்கள் [2], சகர்கள், பாஹ்லிகர்கள், கடும் கண்களைக் கொண்டவர்களும், யமனின் தூதுவர்கள் போன்றவர்கள், தாக்குவதில் சாதித்தவர்களும், அசுரர்களின் மாய சக்திகளை அறிந்தவர்களும், (வசிஷ்டருடைய) பசுக்குப் பிறந்தவர்களுமான மிலேச்சர்கள், தார்வாதிசாரர்கள், தரதர்கள், புண்டரர்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாகச் சேர்ந்து எண்ணற்ற படையை அமைத்துக் கொண்டு தங்கள் கூரிய கணை மழையைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர். போர்க்கலையின் பல்வேறு முறைகளை அறிந்தவர்களான அந்த மிலேச்சர்கள் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். அர்ஜுனனும் அவர்கள் மீது தன் கணைகளை விரைவாகப் பொழிந்தான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஆகாயத்தில் சென்ற போது வெட்டுக்கிளிக் கூட்டங்களைப் போலத் தெரிந்தன. உண்மையில் தனஞ்சயன், மேகங்கள் உண்டாக்குவதைப் போன்ற ஒரு நிழலை துருப்புகளின் மீது உண்டாக்கி, தலையை முழுமையாக மழித்தவர்களும், பாதி மழித்தவர்களும், சடாமுடியால் மறைத்துக் கொண்டவர்களும், தூய்மையற்ற பழக்கங்களைக் கொண்டவர்களும், கோணல் முகம் கொண்டவர்களுமான மிலேச்சர்கள் அனைவரையும் தன் ஆயுதங்களின் பலத்தால் கொன்றான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மலைவாசிகளும், அந்த மலைக் குகை வாசிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.அண்டங்காக்கைகள், கங்கங்கள் {கழுகுகள்}, ஓநாய்கள் ஆகியன பெரும் மகிழ்ச்சியுடன் பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் களத்தில் வீழ்த்தப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் அவற்றின் மிலேச்ச சாரதிகளின் குருதியைக் குடித்தன. உண்மையில் அர்ஜுனன், குருதியை ஓடையாகக் கொண்ட ஒரு கடும் நதியை அங்கே பாயச் செய்தான். (கொல்லப்பட்ட) காலாட்படையினர், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அதன் கரைகளாக அமைந்தன. பொழியப்பட்ட கணைமாரிகள் அதன் படகுகளாகின, போராளிகளின் மயிர்கள் அதன் பாசிகளாகவும், புல்தரைகளாகவும் அமைந்தன. வீரர்களின் கரங்களில் இருந்து வெட்டப்பட்ட விரல்கள் அதன் சிறு மீன்களாக அமைந்தன. அந்த ஆறானது யுக முடிவில் உள்ள பயங்கர யமனைப் போலத் தெரிந்தது. அந்தக் குருதிப் புனல் யமலோகத்தை நோக்கியே பாய்ந்தது. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் அதில் மிதந்திருந்தபடியே அதன் ஓட்டத்தைத் தடுத்தன. இந்திரன், பெருமழையைப் பொழியும் காலத்தில் மேடு பள்ளங்களைச் சமமாக மறைப்பதைப் போலவே, க்ஷத்திரியர்கள், யானைகள், குதிரைகள், அவற்றின் சாரதிகளின் இரத்தம் பூமி முழுவதையும் மறைத்தது.
அந்த க்ஷத்திரியர்களில் காளை {அர்ஜுனன்}, ஆறாயிரம் குதிரைவீரர்களையும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் ஆயிரம் பேரையும் அப்போரில் மரணத்தின் கோரப் பற்களுக்கிடையே அனுப்பி வைத்தான். நன்கு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யானைகள் கணைகளால் துளைக்கப்பட்டு, இடியால் தாக்கப்பட்ட மலைகளைப் போலக் களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தன. மேலும் அர்ஜுனன், மதங்கொண்ட யானையொன்று காட்டுச் செடிகளை நசுக்குவதைப் போலக் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளைக் கொன்றபடியே களத்தில் திரிந்து கொண்டிருந்தான். காற்றால் உந்தப்பட்ட காட்டுத் தீயானது, மரங்கள், கொடிகள், செடிகள், விறகு, புற்கள் ஆகியவற்றுடன் கூடிய அடர்ந்த காட்டை எரிப்பதைப் போலவே, பாண்டுவின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} எனும் நெருப்பானவன், கணைகளைத் தன் {அந்நெருப்பின்} தழல்களாகக் கொண்டு, காற்றான கிருஷ்ணனால் தூண்டப்பட்டு, கோபத்துடன் உமது வீரர்கள் எனும் காட்டை எரித்தான். தேர்களின் தட்டுகளை வெறுமையாக்கி, பூமியை மனித உடல்களால் விரவச் செய்த தனஞ்சயன், பெரும் மனிதக் கூட்டத்திற்கு மத்தியில் கையில் வில்லுடன் ஆடுபவனைப் போலத் தெரிந்தான். இடியின் பலத்தைக் கொண்ட தன் கணைகளால் பூமியை இரத்தத்தால் நனைத்த தனஞ்சயன் கோபத்தால் தூண்டப்பட்டுப் பாரதப் படைக்குள் ஊடுருவினான்.
அப்படி அவன் செல்கையில் அம்பஷ்டர்களின் ஆட்சியாளனான சுருதாயுஸ் அவனைத் தடுத்தான். அப்போது அர்ஜுனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக்கொண்டிருந்த சுருதாயுசின் குதிரைகளைக் கங்க சிறகுகளைக் கொண்ட கூர்மையான கணைகளால் விரைவாக வீழ்த்தினான். மேலும் பார்த்தன், பிற கணைகளால் தன் எதிராளியின் வில்லையும் வெட்டிவிட்டுக் களத்தில் திரிந்து கொண்டிருந்தான். கோபத்தால் நிலைகுலைந்த கண்களைக் கொண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} போரில் அணுகினான். பிறகு கோபத்தால் நிறைந்த அவன் {சுருதாயுஸ்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு அதன் வீச்சுகளால் (அர்ஜுனன் செல்லும்) தேரைத் தடுத்து, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினான்.
பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், அந்தக் கதாயுதத்தால் கேசவன் தாக்கப்பட்டதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {அர்ஜுனன்}, உதயசூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் முதன்மையானவனும், கதாயுததாரியுமான அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசைத்} தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மறைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம வீரனின் கதாயுதத்தைக் கணைகள் பிறவற்றால் தூள்தூளாக வெட்டி கிட்டத்தட்ட அதைத் தூசாக்கினான். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.
அந்தக் கதாயுதம் சுக்குநூறாக வெட்டப்பட்டதைக் கண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, மற்றொரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அர்ஜுனனையும், கேசவனையும் மீண்டும் மீண்டும் தாக்கினான். அப்போது அர்ஜுனன், கதாயுதத்தை உயர்த்திப் பிடித்திருந்தவையும், இந்திரனின் கொடிமரங்களைப் போன்றவையுமான சுருதாயுசின் கரங்களைக் கூரிய அர்த்தச்சந்திர கணைகள் இரண்டால் வெட்டி, சிறகுபடைத்த மற்றொரு கணையால் அந்த வீரனின் {சுருதாயுசின்} தலையையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிக் கொல்லப்பட்ட சுருதாயுஸ் [3], இந்திரனின் நெடும் கொடிமரமானது இயந்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் நாண்கள் வெட்டப்பட்டு விழுவதைப் போலப் பேரொலியால் பூமியை நிறைத்தபடியே கீழே விழுந்தான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்க்கூட்டங்களாலும், நூற்றுக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும் சூழப்பட்ட பார்த்தன், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனானான்” {என்றான் சஞ்சயன்}.
துரியோதனனுக்கு கவசம் பூட்டிய துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 093-துரோணரை நிந்தித்த துரியோதனன்; அவனது கவலை; தன் நிலையை விளக்கிய துரோணர்; அவர் சொன்ன விருத்திரன் கதை; தான் அந்தக் கவசத்தை அடைந்த கதையைச் சொன்னது; கவசத்தை துரியோதனனுக்கு அளித்து அவனை அர்ஜுனனுக்கு எதிராக அனுப்பியது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, துரோணர் மற்றும் போஜர்களின் தடுக்கப்படமுடியாத படைப்பிரிவுகளைப் பிளந்து சென்ற பிறகு, காம்போஜ ஆட்சியாளனின் வாரிசான இளவரசன் சுதக்ஷிணன் கொல்லப்பட்ட பிறகு, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} வீர சுருதாயுதனைக் கொன்ற பிறகு, (குரு) படையணியினர் தப்பி ஓடி அனைத்துப் பக்கங்களிலும் குழப்பம் நேரிட்ட போது, அப்படிப் பிளக்கப்பட்ட தன் படையைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} துரோணரிடம் சென்றான்.
துரோணரிடம் விரைவாக வந்த துரியோதனன், “அந்த மனிதர்களில் புலி (அர்ஜுனன்), இந்தப் பரந்த படையை நொறுக்கிவிட்டு, ஏற்கனவே அதைக் கடந்து சென்றுவிட்டான். உமது அறிவின் துணை கொண்டும், {நமக்கு ஏற்பட்ட} பயங்கரமான பேரழிவைக் கருத்தில் கொண்டும், அர்ஜுனனைக் கொல்வதற்கு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பீராக. நீர் அருளபட்டிருப்பீராக, அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} ஜெயத்ரதனைக் கொல்வதில் வெல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுப்பீராக. நீரே எங்கள் ஒரே புகலிடம்.
சீற்றம் கொண்ட காட்டுத்தீயானது உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியல்களை எரிப்பது போல, தனஞ்சய நெருப்பானது, அவனது கோபம் என்ற காற்றால் உந்தப்பட்டு, புற்களையும், வைக்கோலையும் போல என் துருப்புகளை எரிக்கிறது. ஓ! எதிரிகளை எரிப்பவரே, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இந்தப் படையைப் பிளந்து அதைக் கடந்து போவதைக் கண்டு, ஜெயத்ரதனைப் பாதுகாத்துவரும் வீரர்கள் (பார்த்தனைத் தடுக்கும் தங்கள் திறனில்) ஐயமுறுகின்றனர். ஓ! பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரே {துரோணரே}, துரோணரை மீறித் தனஞ்சயனால் உயிருடன் செல்வதில் வெல்ல முடியாது என்பதே மன்னர்களின் முடிவான தீர்மானமாக இருந்தது. எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படைப்பிரிவைப் பார்த்தன் {அர்ஜுனன்} பிளந்து செல்கிறான் என்றால், நான் என் படையை மிகப் பலவீனமானதாகவே கருதுகிறேன். உண்மையில் எனக்குத் துருப்புகளே இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே {துரோணரே}, பாண்டவர்களின் நன்மையில் நீர் அர்ப்பணிப்பு கொண்டவர் என்பதை நான் அறிவேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதில் நான் என் அறிவை இழக்கிறேன். என் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி நான் உம்மை நிறைவு கொள்ளச் செய்யவும் முயல்கிறேன். எனினும், நீர் இவையாவையும் மனத்தில் தாங்கவில்லை {நினைத்துப் பார்க்கவில்லை}. ஓ! அளவிலா ஆற்றலுடையவரே, நாங்கள் உமக்கு அர்ப்பணிப்புடன் இருந்தாலும், நீர் எங்கள் நன்மையை நாட மறுக்கிறீர். நீர் எப்போதும் பாண்டவர்களிடம் மகிழ்ந்து, எப்போதும் எங்களுக்குத் தீமை செய்வதிலேயே ஈடுபடுகிறீர். உமது வாழ்வாதாரத்தை எங்களிடம் பெற்றாலும், எங்களுக்குத் தீமை செய்வதிலேயே நீர் ஈடுபடுகிறீர். தேனில் முக்கியக் கத்தி நீர் என்பதை நான் அறியாமல் இருந்துவிட்டேன்.
பாண்டவர்களை அவமதித்துத் தடுப்பதாக நீர் எனக்கு வரமளித்திருக்காவிடில், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதை நான் தடுத்திருக்கவே மாட்டேன். உமது பாதுகாப்பை எதிர்பார்த்து, சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு உறுதியளித்த நான் மூடனே, மேலும், என் மடமையால், நான் அவனை {ஜெயத்ரதனை} யமனுக்குப் பலியாகக் காணிக்கை அளித்துவிட்டேன். யமனின் கோரப்பற்களுக்கிடையே நுழைந்த மனிதன் கூடத் தப்பலாம், ஆனால் எப்போது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கரங்களுக்கு அருகில் வருகிறானோ, அப்போது ஜெயத்ரதனால் தப்ப முடியாது. ஓ! சிவப்பு குதிரைகளைக் கொண்டவரே, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} காக்கப்படத் தேவையானவற்றைச் செய்வீராக. அல்லலுற்றவனான என் பிதற்றல்களைக் கேட்டு கோபங்கொள்ளாதீர், ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.
அதற்குத் துரோணர் {துரியோதனனிடம்}, “உன் வார்த்தைகளில் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. அஸ்வத்தாமனைப் போலவே நீ எனது அன்புக்குரியவன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களின்படி இப்போது செயல்படுவாயாக. கிருஷ்ணன், தேரோட்டிகள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். அவனது குதிரைகளோ, அவ்வினத்தில் முதன்மையானவையாகும். சிறு இடைவெளி கிடைத்தாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அதன் வழியாக வெகு விரைவாகக் கடந்து விடுவான். கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) அப்படிச் செல்கையில், அவனது {அர்ஜுனனது} வில்லில் இருந்து ஏவப்படும் எண்ணற்ற கணைகள் அவனது தேரிலிருந்து முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவுக்குச் செல்வதை நீ காணவில்லையா [1]? வயது முதிர்ந்ததனால், அவ்வளவு வேகமாகச் செல்ல என்னால் முடியவில்லை.மேலும், பார்த்தர்களின் மொத்தப் படையும் இப்போது நமக்கு முன்னிலையில் நெருங்கி இருக்கிறது. யுதிஷ்டிரனும் என்னால் பிடிக்கப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அப்படியே வில்லாளிகள் அனைவருக்கு முன்னிலையிலும், க்ஷத்திரியர்கள் அனைவருக்கு மத்தியிலும் என்னால் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ! மன்னா, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கைவிடப்பட்டுத் தன் துருப்புகளின் முகப்பில் இப்போது அவன் {யுதிஷ்டிரன்} இருக்கிறான். எனவே, நான் நமது வியூகத்தின் வாயிலைக் கைவிட்டு பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். குலத்திலும், செயல்பாடுகளிலும் உனக்கு இணையானவனும், தனியனுமான அந்த உன் எதிரியுடன் {அர்ஜுனனுடன்}, முறையான உதவி பெற்றவனான நீயே போரிட வேண்டும். அஞ்சாதே. சென்று அவனுடன் போரிடுவாயாக. நீ உலகத்தின் ஆட்சியாளன். நீயே மன்னன், நீயே வீரன். புகழைக் கொண்ட நீ, (உன் எதிரிகளை) வெல்வதில் சாதித்தவனாவாய். ஓ! பகை நகரங்களை அடக்கும் துணிவுள்ளவனே, பிருதையின் மகனான தனஞ்சயன் இருக்கும் இடத்திற்கு நீயே செல்வாயாக” என்றார் {துரோணர்}.
அதற்குத் துரியோதனன் {துரோணரிடம்}, “ஓ! ஆசானே, ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையான உம்மையே மீறிச் சென்ற தனஞ்சயனை {அர்ஜுனனை} என்னால் எவ்வாறு தடுக்க முடியும்? வஜ்ரதாரியான தேவர்களின் தலைவனே {இந்திரன்} கூடப் போரில் வெல்லப்படலாமேயன்றி, பகைநகரங்களை அடக்குபவனான அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாது. போஜர்களின் ஆட்சியாளனான ஹிருதிகனின் மகன் (கிருதவர்மன்), தேவனுக்கு இணையான நீர் ஆகிய இருவரும் எவனுடைய ஆயுதங்களின் பலத்தால் வெல்லப்பட்டீர்களோ, எவனால் சுருதாயுசும், சுதக்ஷிணனும், மன்னன் சுருதாயுசும் கொல்லப்பட்டனரோ, எவனால் சுருதாயுசும் [2], அச்யுதாயுசும், மிலேச்சர்களின் கூட்டமும் கொல்லப்பட்டனரோ, அனைத்தையும் எரிக்கும் நெருப்புப் போன்றவனும், ஆயுதங்களின் தலைவனாகச் சாதித்தவனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரில் எவ்வாறு நான் மோதுவேன்? மேலும் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடத் தகுந்தவன் என்று என்னை எவ்வாறு நீர் நினைக்கிறீர்? ஓர் அடிமையைப் போல நான் உம்மையே நம்பி இருக்கிறேன். என் புகழைக் காப்பீராக [3]” என்றான் {துரியோதனன்}.துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, தனஞ்சயன் {அர்ஜுனன்} தடுக்கப்பட முடியாதவன் என்று நீ சொல்வது உண்மையே. எனினும், நீ அவனைத் தாங்க இயலும்படி நான் செய்யப் போகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குந்தியின் மகன் {அர்ஜுனன்} உன்னால் தடுக்கப்படும் அந்த அற்புத செயலை இவ்வுலகில் உள்ள வில்லாளிகள் அனைவரும் காணட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, மனிதனால் பயன்படுத்தும் எந்த ஆயுதத்தாலும் போரில் உன்னைத் தாக்க முடியாதவாறு இந்த உனது தங்கக் கவசத்தை உன் உடலில் நான் கட்டப்போகிறேன். அசுரர்கள், தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், மனிதர்கள் அனைவருடனும் கூடிய மூன்று உலகங்களும் இன்று உன்னுடன் போரிட்டாலும், உனக்கு அச்சம் தேவையில்லை. கிருஷ்ணனாலோ, குந்தியின் மகனாலோ {அர்ஜுனனாலோ}, போரில் ஆயுதம் தரித்த பிறர் எவராலோ இந்த உனது கவசத்தைக் கணைகளால் பிளக்க முடியாது. இந்தக் கவசத்தைத் தரித்துக் கொண்டு, கோபக்கார அர்ஜுனனை இன்றைய போரில் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. அவனால் உன்னைத் தாங்கிக் கொள்ள இயலாது” என்றார் {துரோணர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர், நீரைத் தொட்டு, முறையான மந்திரங்களை உச்சரித்து, அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் துரியோதனனின் வெற்றிக்காக அவனது உடலில் மிக அற்புதமான பிரகாசமான கவசத்தை விரைவாகக் கட்டி (அச்செயலால்) மனிதர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் [4].துரோணர் {துரியோதனனிடம்}, “வேதங்களும், பிரம்மனும், பிராமணர்களும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஓ! பாரதா {துரியோதனா}, ஊர்வனவற்றில் அனைத்து உயர்ந்த வகுப்புகளும் {மேன்மையான பாம்புகளும்} ஆசீர்வாதத்திற்கு ஆதாரமாக உனக்கு அமையட்டும். யயாதி, நகுஷன், துந்துமாரன், பகீரதன் மற்றும் பிற அரச முனிகளும் உனக்கு எவை நன்மையோ, அவையனைத்தையும் செய்யட்டும். ஒரு காலை மட்டுமே கொண்ட உயிரினங்களிடமிருந்தும், பல கால்களைக் கொண்டவற்றிடமிருந்து உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். கால்களே இல்லாத உயிரினங்களிடம் இருந்தும் இந்தப் பெரும்போரில் உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். சுவாஹா, சுவாதா, சச்சி ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும்.
ஓ! பாவமற்றவனே, லட்சுமியும், அருந்ததியும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். அசிதர், தேவலர், விஸ்வாமித்ரர், அங்கிரஸ், வசிஷ்டர், கசியபர் ஆகியோரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். தாத்ரி, உலகங்களின் தலைவன், திசைகள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, ஆறு முகம் கொண்ட கார்த்திகேயன் {முருகன்} ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும். தெய்வீக விவஸ்வான் உனக்கு முழுமையான நன்மையைச் செய்யட்டும். நான்கு திக்குகளின் நான்கு யானைகளும் {திக் கஜங்களும்}, பூமியும், ஆகாயமும், கோள்களும், பூமிக்கு அடியில் அவளைத் (தன் தலையில்) தாங்கும் பாம்புகளில் முதன்மையான சேஷனும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும்.
ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, முன்பொரு காலத்தில் விருத்திரன் என்ற பெயர் கொண்ட அசுரன் போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களில் சிறந்தவர்களைப் போரில் வென்றான். ஆயிரமாயிரமாக எண்ணிக்கையில் இருந்தவர்களும், சொர்க்கலோகவாசிகளுமான பின்னவர்கள் {தேவர்கள்} அனைவரும், சிதைந்த உடல்களுடன், பலத்தையும் சக்தியையும் இழந்து, பெரும் அசுரனான விருத்திரனுக்கு அஞ்சி, இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு பிரம்மனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள். அந்தத் தேவர்கள், “ஓ! தேவர்களில் சிறந்தவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, விருத்திரனால் இப்போது நொறுக்கப்படும் தேவர்களுக்கு நீர் புகலிடமாவீராக. உண்மையில் இந்தப் பெரும் அச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக” என்றனர்.
அதற்குப் பிரம்மன் தன்னருகே இருந்த விஷ்ணுவிடமும், உற்சாகமற்றிருந்தவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் இருந்தவர்களுமான அந்தத் தேவர்களில் சிறந்தவர்களிடமும் உண்மை நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினான்: “உண்மையில், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், பிராமணர்களும் எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். விருத்திரன் எதிலிருந்து உண்டாக்கப்பட்டானோ அந்தத் துவஷ்டிரியின் {த்வஷ்டாவின்} சக்தி வெல்லப்பட முடியாததாகும். தேவர்களே, முற்காலத்தில் பத்து லட்சம் வருடங்களுக்குத் தவத்துறவுகளைச் செய்த துவஷ்டிரி, மகேஸ்வரனிடம் அனுமதி பெற்று விருத்திரனை உண்டாக்கினான். உங்களுடைய அந்த வலிமைமிக்க எதிரி {விருத்திரன்}, தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} அருளினால் உங்களைத் தாக்குவதில் வென்றான். சங்கரனிருக்கும் {சிவன்} இடத்திற்குச் செல்லாமல் உங்களால் தெய்வீக ஹரனைக் காண முடியாது. அந்தத் தேவனைக் {சிவனைக்} கண்ட பிறகே உங்களால் விருத்திரனை வெல்ல முடியும். எனவே நீங்கள் தாமதிக்காமல் மந்தர மலைகளுக்குச் செல்வீராக. தவத்துறவுகளின் தோற்றமானவனும் {தவத்துறவுகைளத் தோற்றுவித்தவனும்}, தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பிநாகையைத் தாங்குபவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பகனேத்திரன் [5] என்று அழைக்கப்பட்ட அசுரனைக் கொன்றவனுமான அவன் {சிவன்} அங்கேயே இருக்கிறான்” என்றான் {பிரம்மன்}.பிரம்மனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், பிரம்மனின் துணையுடன் மந்தரத்திற்குச் சென்று, சக்தியின் குவியலும், கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவனை {ஈஸ்வரனைக்} கண்டனர். தேவர்களைக் கண்ட மகேஸ்வரன், அவர்களை வரவேற்று, தான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென விசாரித்தான். “ஜோதியானவனைக் {ray person} கண்டது ஒருபோதும் கனியற்றதாகாது. உங்கள் விருப்பங்கள் கனிவது இதிலிருந்து தொடங்கட்டும் [6]” என்றான். இப்படி அவனால் சொல்லப்பட்ட சொர்க்கவாசிகள், “விருத்திரனால் எங்கள் சக்தியை நாங்கள் இழந்தோம். நீ சொர்க்கவாசிகளின் புகலிடமாவாயாக. ஓ! தலைவா, அவனது அடிகளால் தாக்கப்பட்டு, காயம்பட்ட எங்களது உடல்களைக் காண்பாயாக. ஓ! மகேஸ்வரா, நீ எங்களது புகலிடமாவாயாக” என்றனர் {தேவர்கள்}.தேவர்களுக்குத் தேவன் என்று சொல்லப்படும் சர்வன் {சிவன்}, “தேவர்களே, பெரும் பலம் நிறைந்ததும், பயங்கரமானதும், தவத்தகுதியற்றவர்களால் தடுக்கப்படமுடியாததுமான இந்தச் செயல்பாடு {விருத்திரன்} எவ்வாறு (தேவ தச்சனான) துவஷ்டிரியின் சக்தியில் இருந்து உதித்துத் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரை, சொர்க்கவாசிகளுக்கு என் உதவியைக் கொடுப்பது நிச்சயம் என் கடமையாகும். ஓ! சக்ரா {இந்திரா}, என் உடலில் இருந்து இந்தப் பிராகசமிக்கக் கவசத்தை எடுப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, மனத்தில் இந்த மந்திரங்களைச் சொல்லி அஃதை அணிந்து கொள்வாயாக” என்றான் {சிவன்}.
துரோணர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன வரமளிப்பவன் (சிவன்), (அணிந்து கொள்பவன் உச்சரிக்க வேண்டிய) மந்திரங்களுடன் அந்தக் கவசத்தை அளித்தான். அந்தக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட சக்ரன் {இந்திரன்}, போரில் விருத்திரனை எதிர்த்துச் சென்றான். அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு விதங்களிலான ஆயுதங்கள் அவன் {இந்திரன்} மீது ஏவப்பட்டாலும், அந்தக் கவசத்தின் இணைப்புகள் பிளக்கப்படவில்லை. அதன்பிறகு, தேவர்களின் தலைவன் {இந்திரன்} விருத்திரனைக் கொன்றதும், மந்திரங்களால் அமைக்கப்பட்ட இணைப்புகளை உடைய அந்தக் கவசத்தை அங்கிரசிடம் கொடுத்தான். அங்கிரஸ், தன் மகனும், மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவருமான பிருஹஸ்பதியிடம் அந்த மந்திரங்களைக் கொடுத்தார். பிருஹஸ்பதி அந்த அறிவைப் பெரும் நுண்ணறிவு கொண்ட அக்னிவேஸ்யரிடம் அளித்தார். அக்னிவேஸ்யர் அஃதை எனக்கு அளித்தார், அந்த மந்திரங்களின் துணை கொண்டே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நான் உன் உடலைப் பாதுகாப்பதற்காக, இந்தக் கவசத்தை உன் உடலில் பூட்டுகிறேன்” {என்றார் துரோணர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், ஆசான்களில் காளையுமான துரோணர், பெரும் பிரகாசம் கொண்ட உமது மகனிடம் மீண்டும் பேசினார், “ஓ! மன்னா {துரியோதனா}, இந்தக் கவசத்தின் துண்டுகளைப் பிரம்ம நாணின் துணை கொண்டு இணைத்து, உன் உடலில் நான் பூட்டுகிறேன். பழங்காலத்தில், போரில் பிரம்மனே இதை விஷ்ணுவுக்குப் பூட்டியிருக்கிறான். தாரகையைக் கடத்தியதன் விளைவாக ஏற்பட்ட போரில் இந்திரனுக்கு இந்தக் கவசத்தைப் பூட்டிய பிரம்மனைப் போலவே, நான் இஃதை உனக்குப் பூட்டுகிறேன்” என்றார் {துரோணர்}.
இப்படியே, துரோணர் அந்தக் கவசத்தை மந்திரங்களுடன் துரியோதனன் மேல் பூட்டி, அம்மன்னனை {துரியோதனனைப்} போருக்கு அனுப்பினார். வலிமைமிக்கக் கரங்களையும், தாக்குவதில் சாதனையும் கொண்ட அம்மன்னன் {துரியோதனன்}, உயர் ஆன்ம ஆசானால் {துரோணரால்} கவசம்பூட்டப்பட்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட மதங்கொண்ட ஆயிரம் யானைகள், நூறாயிரம் குதிரைகள் மற்றும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் அர்ஜுனனின் தேரை நோக்கிச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன், பல்வேறு விதங்களிலான இசைக்கருவிகளின் ஒலியுடன், விருசோனனின் மகனைப் (பழங்காலத்தின் பலி சக்கரவர்த்தியைப்) போலத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆழங்காண இயலாத கடலைப் போலச் செல்லும் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது” {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயனும் போரிட்டான்! – துரோண பர்வம் பகுதி – 094-துரோணரின் படைக்கும் பாண்டவப்படைக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரோடு மோதிய திருஷ்டத்யும்னன் கௌரவப் படையை மூன்றாகப் பிரித்தது; போர்க்களத்தில் நடந்த நூற்றுக்கணக்கான தனிப்போர்கள்; இதை விவரித்துக் கொண்டிருந்த சஞ்சயனும், சேகிதானனுடன் தான் போரிட்டதாகச் சொல்வது; படையின் பின்புறத்தில் அஸ்வத்தாமனாலும், கர்ணனாலும் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையைப் பிளந்து சென்ற பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் விருஷ்ணிகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் மனிதர்களில் காளையான அந்தத் துரியோதனன் பின் தொடர்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் சோமகர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆரவாரத்துடன் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர். பிறகு (அவர்களுக்கும் துரோணரின் துருப்புகளுக்கும் இடையில்) போர் தொடங்கியது. குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையே வியூகத்தின் முகப்பில் நடந்த அந்தப் போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அக்காட்சி காண்போரை வியக்கச் செய்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் அப்போது உச்சிவானில் இருந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில் அம்மோதலானது இதற்கு முன்னர் நாம் காணாதவாறும், கேட்காதவாறும் இருந்தது.
திருஷ்டத்யும்னன் தலைமையிலானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களுமான பார்த்தர்கள் அனைவரும், முறையாக அணிவகுத்துச் சென்று, துரோணரின் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரை எங்களுக்கு முன்பு நிறுத்திக் கொண்ட நாங்களும், பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} திரட்டப்பட்டிருந்த அந்தப் பார்த்தர்களை எங்கள் கணைகளால் மறைத்தோம். தேர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகாகத் தெரிந்தவையுமான அந்தப் படைகள் இரண்டும், கோடைகால வானில், எதிர்க்காற்றுகளால் ஒன்றையொன்று நோக்கி ஈர்க்கப்படும் இரு பெரும் மேகத் திரள்களைப் போலத் தோன்றின. தங்களுக்குள் மோதிக் கொண்ட அவ்விரு படைகளும், மழைக்காலத்தில் நீர் பெருகும் கங்கை மற்றும் யமுனை ஆறுகளைப் போலத் தங்கள் வேகத்தை அதிகரித்தன.
தன் முன் வீசும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களைக் காற்றாகக் கொண்டதும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வீரர்கள் தரித்த கதாயுதங்களை மின்னலாகக் கொண்டதுமான குரு படையாலான அந்த வலிமைமிக்கக் கடும் மேகம், துரோணப் புயலால் உந்தப்பட்டு, இடையறாத கணைப் பொழிவெனும் தன் மழைத்தாரைகளைப் பொழிந்து, எரிந்து கொண்டிருந்த பாண்டவ நெருப்பை அணைக்க முற்பட்டது. கோடைகாலத்தில் கடலைக் கலங்கடிக்கும் ஒரு பயங்கரச் சூறாவளியைப் போலப் பிராமணர்களில் சிறந்த அந்தத் துரோணர் பாண்டவப்படையைக் கலங்கடித்தார். பெரும் ஆவேசத்துடன் தங்களை {போரில்} ஈடுபடுத்திக் கொண்ட பாண்டவர்கள், பலமான அணையைத் துடைத்தழிப்பதற்காக அதை நோக்கிப் பாயும் வலிமைமிக்க நீர்த்தாரைகளைப் போலத் துரோணரின் படையைப் பிளப்பதற்காக, அவரையே நோக்கி விரைந்தனர். எனினும் துரோணர், அந்தப் போரில் சீற்றத்துடன் {தம் படையை நோக்கி} வந்த பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கேகயர்களை மிகக் கடும் நீரோட்டத்தைத் தடுத்து நிற்கும் அசையாத மலையொன்றைப் போலத் தடுத்தார். பெரும் பலத்தையும், வீரத்தையும் கொண்ட பிற மன்னர்கள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களைத் தாக்கி, அவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.
மனிதர்களில் புலியான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவர் படையைப் பிளப்பதற்காகப் பாண்டவர்களுடன் சேர்ந்து துரோணரைத் தொடர்ச்சியாகத் தாக்கத் தொடங்கினான். உண்மையில் துரோணர், தம் கணைகளைப் பிருஷதன் மகன் மீது பொழிந்த போது, பின்னவனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரின் மேல் தன் கணைகளைப் பொழிந்தான். தன் முன் வீசும் கத்திகள் மற்றும் வாள்கள் எனும் காற்றோடு கூடியதும், ஈட்டிகள், வேல்கள், ரிஷ்டிகள் ஆகியவற்றால் சூழப்பட்டதும், நாண்கயிறு எனும் மின்னலைக் கொண்டதும், (நாணொலியாகிய) வில்லொலியைத் தன் முழக்கங்களாகக் கொண்டதுமான திருஷ்டத்யும்ன மேகமானது, அனைத்துப் பக்கங்களிலும் ஆயுதங்களின் தாரைகளெனும் கல்மழையைப் பொழிந்தது.
தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளையும் கொன்ற அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, (தன் கணைமாரியால்) பகைவீரர்களின் படைப்பிரிவுகளுக்குள் பிரளயத்தைத் தோற்றுவிப்பதாகத் தெரிந்தது. மேலும் அந்தப் பிருஷதன் மகன், தன் கணைகளால் வீரர்களைத் தாக்கி, எதன் வழியாகச் செல்ல விரும்பினானோ, பாண்டவப் படைப்பிரிவினருக்கும் மத்தியில் இருந்த அந்தப் பாதைகள் அனைத்தில் இருந்தும் துரோணரை விரட்டினான். அந்தப் போரில் துரோணர் கடுமையாக முயன்றாலும், அவரது படையானது திருஷ்டத்யும்னனோடு மோதி மூன்று வரிசைகளாகப் பிரிந்தது. அதில் ஒன்று போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மனை நோக்கியும், மற்றொன்று ஜலசந்தனை நோக்கியும், {மூன்றாவதகாப்} பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள் துரோணரை நோக்கியும் சென்றனர். தேர்வீரர்களில் முதன்மையான துரோணர் தம் துருப்புகளை மீண்டும் மீண்டும் ஒருங்கிணைத்தார். வலிமைமிக்க வீரரனான திருஷ்டத்யும்னனோ அடிக்கடி தாக்கி அவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தான்.
உண்மையில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த தார்தராஷ்டிரப் படை, மந்தையாளனால் பாதுகாக்கப்படாத பசு மந்தையானது இரை தேடும் விலங்குகளால் கொல்லப்படுவதைப் போலப் பாண்டவர்களாலும், சிருஞ்சயர்களாலும் மூர்க்கமாகக் கொல்லப்பட்டது. அந்தப் பயங்கரப் போரில், திருஷ்டத்யும்னனால் மலைக்கச் செய்யப்பட்ட வீரர்களைக் காலன் ஏற்கனவே விழுங்கிவிட்டதாகவே மக்கள் நினைத்தனர்.
தீய மன்னனின் நாட்டைப் பஞ்சம், நோய்கள் ஆகியவையும், திருடர்களும் அழிப்பதைப் போலவே, உமது படையும் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் மேல் சூரியக் கதிர்கள் விழுந்ததாலும், படைவீரர்களால் எழுப்பப்பட்ட புழுதியாலும், அனைவரின் கண்களும் துன்புற்றன. அந்தப் பயங்கரப் போரில் கௌரவப் படையானது பாண்டவர்களால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதால், கோபத்தில் நிறைந்த துரோணர், தம் கணைகளால் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். இந்தப்படையணிகளை நசுக்குவதிலும், தம் கணைகளால் {அவற்றைக்} கொல்வதிலும் ஈடுபட்டிருந்த துரோணரின் வடிவமானது சுடர்மிக்க யுகநெருப்பைப் போன்றாகியது. அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்}, அந்தப் போரில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் மட்டுமே துளைத்தார். அப்போதங்கே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தாங்கிக்கொள்ளவல்ல வீரர்கள் எவரும் பாண்டவப் படையில் இல்லை.
சூரியனின் கதிர்களால் எரிக்கப்பட்டும், துரோணரின் கணைகளால் வெடித்தும், அந்தப் பாண்டவப் படைப்பிரிவுகள் களத்திலேயே சுழலத் தொடங்கின. அதே போல உமது படையும், பிருஷதன் மகனால் கொல்லப்பட்டு நெருப்பில் இருக்கும் உலர்ந்த காட்டைப் போல அனைத்து இடங்களிலும் எரிவதாகத் தெரிந்தது. துரோணர், திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், அந்த இரு படைகளையும் கொன்று கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்த இரு படையின் வீரர்களும், தங்கள் ஆற்றலின் எல்லை வரை சென்று எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது படையிலோ, எதிரியின் படையிலோ அச்சத்தால் போரில் இருந்து ஓடிய ஒரு வீரனும் இருக்கவில்லை.
விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள், குந்தியின் மகனான பீமசேனனால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷேமதூர்த்தி ஆகியோர் (பீமசேனனுக்கு எதிராகப் போரிட்ட) உமது மகன்கள் மூவரையும் ஆதரித்தனர்.
பெரும் சக்தியும், உன்னதக் குல பிறப்பும் கொண்ட மன்னன் பாஹ்லீகன், தன் துருப்புகளுடனும், ஆலோசகர்களுடனும் {அமைச்சர்களுடனும்} சேர்ந்து திரௌபதியின் மகன்களைத் தடுத்தான். சைப்யன், கோவாசனர்களின் தலைவனான சைப்யன் [1], ஆயிரம் முதன்மையான வீரர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆற்றலைக் கொண்டவனான காசிகளின் மன்னனுடைய மகனை எதிர்த்து அவனைத் தடுத்தான். மத்ரர்களின் ஆட்சியாளனான மன்னன் சல்லியன், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவனும் குந்தியின் மகனுமான அரசன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டான்.துணிச்சலும், கோபமும் நிறைந்தவனான துச்சாசனன், தன் படைப்பிரிவுகளால் முறையாக ஆதரிக்கப்பட்டு, தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியை அந்தப் போரில் கோபத்துடன் எதிர்த்து சென்றான். என் துருப்புகளுடன் கூடிய நான், கவசம்பூண்டு கொண்டு, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நானூறு முதன்மையான வில்லாளிகளால் ஆதரிக்கப்பட்டுச் சேகிதானனைத் தடுத்தேன் [2]. சகுனியோ, விற்கள், ஈட்டிகள், வாள்கள் தரித்த எழுநூறு காந்தார வீரர்களுடன் மாத்ரியின் மகனை (சகாதேவனைத்) தடுத்தான்.இருபெரும் வில்லாளிகளான அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் தங்கள் நண்பனுக்காக (துரியோதனனுக்காகத்) தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி, மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் மோதினார்கள். மூர்க்கமாக முயன்ற மன்னன் பாஹ்லீகன் [3], எதிரிகள் அனைவரையும் தடுக்க வல்ல வீரனும், வெல்லப்படாதவனும், வலிமைமிக்கவனுமான யக்ஞசேனன் மகன் சிகண்டியைத் தடுத்தான். அவந்தியின் தலைவன் [4], சௌவீரர்களோடும், குரூரமான பிரபத்ரகர்களோடும் சேர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனான கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். அலம்புசன், குரூர செயல்களைச் செய்பவனும், துணிவுமிக்கவனும், கோபத்தோடு போரிடச் சென்றவனுமான ராட்சசன் கடோத்கசனை எதிர்த்து வேகமாக விரைந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான குந்திபோஜன், ஒரு பெரும் படையின் துணை கொண்டு, கடும் முகம் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலம்புசனைத் தடுத்தான்.இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை வீரர்களுக்கும் அவர்களது படைவீரர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப் போர்கள் நடைபெற்றன. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பொறுத்தவரை, வில்லாளிகளில் முதன்மையானோர் பலராலும், எண்ணிக்கையில் தங்களுடன் கிருபரையும் கொண்ட தேர்வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு, மொத்தப் படையின் பின்புறத்திலேயே அவன் {ஜெயத்ரதன்} தொடர்ந்து நீடித்தான். மேலும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன், முதன்மையான இருவீரர்களான துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தன் வலப்புறத்திலும், சூதனின் மகனை {கர்ணனைத்} தன் இடப்புறத்திலும் தன் சக்கரங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டிருந்தான். மேலும் தன் பின்புறத்தைப் பாதுகாப்பதற்காகச் சோமதத்தன் தலைமையிலானவர்களும், நீதி அறிந்தவர்களும், போரில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளுமான கிருபர், விருஷசேனன், சலன் மற்றும் வெல்லப்பட முடியாத சல்லியன் [5] முதலிய எண்ணற்ற வீரர்களைக் கொண்டிருந்தான். குருவீரர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்புக்காக இவ்வேற்பாடுகளைச் செய்துவிட்டு (பாண்டவர்களுடன்) போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.
புறமுதுகிட்ட சகுனி! – துரோண பர்வம் பகுதி – 095-துரோணரோடு மோதிய பாண்டவப்படையினர்; விராடனுடன் விந்தானுவிந்தர்களும், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்களோடு பாஹ்லீகனும், காசி இளவரசனோடு சைப்யனும், சாத்யகியோடு துச்சாசனனும், குந்திபோஜன் மற்றும் கடோத்கசனோடு அலம்புசனும், நகுலன் மற்றும் சகாதேவனோடு சகுனியும், யுதிஷ்டிரனோடு சல்லியனும், பீமசேனனுடன் விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் மோதியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த அற்புதமான போரை விவரமாகச் சொல்கிறேன் கேளும். தமது வியூகத்தின் வாயிலில் {முகப்பில்} நின்று கொண்டிருந்த பரத்வாஜரின் மகனை {துரோணரை} அணுகிய பார்த்தர்கள், துரோணரின் படைப்பிரிவைப் பிளப்பதற்காக மூர்க்கமாகப் போரிட்டனர். துரோணரும் தம் படைகளின் துணையுடன், தமது வியூகத்தைப் பாதுகாக்க விரும்பி, புகழடைய முயன்று கொண்டிருந்த பார்த்தர்களுடன் போரிட்டார்.
கோபத்தால் தூண்டப்பட்ட அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, பத்து கணைகளால் விராடனைத் தாக்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விராடனும், போரில் பெரும் ஆற்றலுடன் திகழ்ந்த அவ்வீரர்கள் இருவரையும் அணுகி, அவர்களுடனும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுடனும் போரிட்டான். அவர்களுக்குள் நடைபெற்றதும், எல்லைகடந்த கடுமை கொண்டதுமான அந்தப் போரில் இரத்தம் தண்ணீராக ஓடியது. காட்டில் சிங்கத்திற்கும், மதங்கொண்ட, வலிமைமிக்க இரு யானைகளுக்கு இடையில் நேரும் மோதலுக்கு ஒப்பாக அஃது இருந்தது.
யக்ஞசேனனின் {துருபதனின்} வலிமைமிக்க மகன் {சிகண்டி}, உயிர்நிலைகளையே துளைக்கவல்ல, கடுமையான, கூரிய கணைகளால் அந்தப் போரில் மன்னன் பாஹ்லீகனைப் பலமாகத் தாக்கினான். கோபத்தால் நிறைந்த பாஹ்லீகனும், தங்கச் சிறகுகளைக் கொண்டவரையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஒன்பது நேரான கணைகளால் யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} ஆழமாகத் துளைத்தான். அடர்த்தியான கணைகள் மற்றும் ஈட்டிகளின் மழையுடன் அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது மிகக் கடுமையடைந்தது. மருண்டோரின் அச்சங்களையும், வீரர்களின் இன்பத்தையும் அஃது அதிகரித்தது. அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக மறைத்து, எதுவும் தெளிவாகக் காணமுடியாதபடி ஆக்கின.
துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கோவாசனர்களின் மன்னன் சைப்பியன், அந்தப் போரில், யானையொன்று மற்றொரு யானையோடு போரிடுவதைப் போல வலிமைமிக்கத் தேர்வீரனான காசிகளின் இளவரசனோடு போரிட்டான். பாஹ்லீகர்களின் மன்னன் கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து புலன்களுக்கு எதிராகப் போராடும் மனத்தைப் போல வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள் ஐயவரை எதிர்த்துப் போரிட்டான். அந்த இளவரசர்கள் ஐவரும், ஓ! உடல்படைத்தோரில் முதன்மையானவரே, உடலோடு எப்போதும் போராடும் புலன்நுகர்பொருட்களைப் போல அனைத்துப் பங்கங்களில் இருந்தும் தங்கள் கணைகளை ஏவி, அந்த எதிரியோடு {பாஹ்லீகனோடு} போரிட்டனர்.
உமது மகன் துச்சாசனன், கூர்முனைகள் கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விருஷ்ணி குலத்து சாத்யகியைத் தாக்கினான். பெரும் வில்லாளியான அந்தப் பலவானால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சாத்யகி தன் புலனுணர்வை ஓரளவுக்கு இழந்தான் {சிறிது மயக்கமடைந்தான்}. விரைவில் தேற்றமடைந்த அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, கங்க இறகுகளிலான சிறகமைந்த பத்து கணைகளால் அந்த வலிமைமிக்க வில்லாளியான உமது மகனை {துச்சாசனனை} விரைவாகத் துளைத்தான். ஒருவரையொருவர் ஆழமாகத் துளைத்துக் கொண்டு, தங்கள் ஒவ்வொருவரின் கணைகளாலும் பீடிக்கப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அபாரமாகத் தெரிந்தனர்.
குந்திபோஜனின் கணைகளால் பீடிக்கப்பட்ட {ராட்சசன்} அலம்புசன், கோபத்தால் நிறைந்து அழகாகப் பூத்துக் குலுங்கும் கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போலத் தெரிந்தான். பிறகு அந்த ராட்சசன், பல கணைகளால் குந்திபோஜனைத் துளைத்துத் தன் படையின் தலைமையில் நின்று பயங்கரக் கூச்சல்களையிட்டான். அந்த வீரர்கள் அந்தப் போரில் தங்களுக்குள் மோதிக் கொண்ட போது, பழங்காலத்தின் சக்ரனையும் {இந்திரனையும்}, அசுரன் ஜம்பனையும் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தெரிந்தனர். மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, கோபத்தால் நிறைந்து, தங்களுக்கு எதிராகப் பெரும் குற்றமிழைத்திருந்த காந்தார இளவரசன் சகுனியைத் தங்கள் கணைகளால் கடுமையாகத் தாக்கினர்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே நடந்த படுகொலைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மால் தோற்றுவிக்கப்பட்டு, கர்ணனால் வளர்க்கப்பட்டு, உமது மகன்களால் பாதுகாக்கப்பட்டதுமான (பாண்டவர்களின்) கோப நெருப்பு இப்போது பெருகி மொத்த உலகத்தையும் எரிக்கத் தயாராக இருக்கிறது. பாண்டு மகன்கள் இருவரின் கணைகளால் களத்தைவிட்டு புறங்காட்டி ஓட நிர்பந்திப்பட்ட சகுனி தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் புறமுதுகிட்டதைக் கண்டவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுல, சகாதேவர்கள்}, பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவன் {சகுனி} மீது மீண்டும் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். எண்ணற்ற நேரான கணைகளால் தாக்கப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கி ஓடினான்.
துணிச்சல்மிக்கக் கடோத்கசன், அந்தப் போரில் ராட்சசன் அலம்புசனை நோக்கி தன்னால் இயன்றதைவிடச் சற்றே குறைவான மூர்க்கத்துடன் விரைந்தான். பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்ததைப் போல அந்த இருவருக்கிடையில் நடந்த அந்தப் போர் காண்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் ஐநூறு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்துவிட்டு, மேலும் ஏழாலும் அவனை மீண்டும் துளைத்தான். அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும் தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அவர்களுக்குள் நடந்த மிக அற்புதமான போரானது தொடங்கியது. உமது மகன்களான விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் பெரும் படை சூழ பீமசேனனுடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்} [1].
திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 096-பீமசேனன் ஜலசந்தனையும், யுதிஷ்டிரன் கிருதவர்மனையும், திருஷ்டத்யும்னன் துரோணரையும் எதிர்த்து விரைந்தது. துரோணரும் திருஷ்டத்யும்னனும் ஏற்படுத்திய பேரழிவு; போர்க்களத்தின் வர்ணனை; துரோணரின் மரணக்கணையில் இருந்து திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போர் தொடங்கிய போது, மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த கௌரவர்களை எதிர்த்துப் பாண்டவர்கள் விரைந்தனர். அந்தப் போரில் பீமசேனன் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜலசந்தனை எதிர்த்தும், யுதிஷ்டிரன் தன் துருப்புகளின் தலைமையில் நின்று கிருதவர்மனை எதிர்த்தும் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சூரியன் தன் கதிர்களை ஏவுவதைப் போலே தன் கணைகளை இறைத்தபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அப்போது, போரிடும் ஆவலுடன் கோபத்தால் நிறைந்திருந்த குருக்கள் மற்றும் பாண்டவர்களின் வில்லாளிகள் அனைவருக்கும் இடையில் அந்தப் போர் தொடங்கியது.
வீரர்கள் அனைவரும் அச்சமற்ற வகையில் ஒருவருடன் ஒருவர் போரிட்டதால் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்த போது, வலிமைமிக்கத் துரோணர் பாஞ்சாலர்களின் வலிமைமிக்க இளவரசனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} போரிட்டார். அம்மோதலில் அவர் {துரோணர்} ஏவிய கணைகளின் மேகங்கள் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தன. துரோணரும், பாஞ்சாலர்களின் இளவரசனும், தாமரைக்காட்டுக்கு ஒப்பாகத் தெரியும்படி ஆயிரக்கணக்கில் மனிதர்களின் தலைகளை வெட்டி போர்க்களத்தில் அவற்றை {தலைகளை} இறைத்தனர்.
ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியன விரைவில் தரையில் விரவிக் கிடந்தன. குருதிக் கறை படிந்த தங்கக் கவசங்கள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் பெரிய விற்களை வளைத்தபடி தங்கள் கணைகளால் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை வீழ்த்தினர். துணிவுள்ள உயர் ஆன்ம வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர ஆயுத மோதலில், வாள்கள், கேடயங்கள், விற்கள், தலைகள், கவசங்கள் ஆகியன எங்கும் விரவி கிடப்பது காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கழுகுகள், கங்கங்கள், நரிகள் ஆகியவையும், ஊனுண்ணும் விலங்குகள் பிறவும், வீழ்ந்துவிட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் சதையை உண்டு, அவற்றின் குருதியைக் குடித்து, அல்லது அவற்றின் மயிர்களைப் பிடித்து இழுத்து, அல்லது அவற்றின் மஜ்ஜையை நக்கி, அல்லது அவற்றைக் கொத்தி, அவற்றின் உடல்களையும், அறுபட்ட அங்கங்களையும் இழுத்துக் கொண்டு, அல்லது அவற்றின் தலைகளைத் தரையில் உருட்டிக் கொண்டும் அங்கே இருந்தன.
போரில் திறம்வாய்ந்தவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான போர்வீரர்கள், போரிட உறுதியாகத் தீர்மானித்து, புகழை மட்டுமே வேண்டி அந்தப் போரில் தீவிரமாகப் போரிட்டனர். களத்ததில் திரிந்த போராளிகள் பலர், வாள்வீரர்களின் பல்வேறு பரிமாணங்களைச் செய்து காட்டினர். போர்க்களத்தில் நுழைந்த மனிதர்கள் சினத்தால் நிறைந்து, கத்திகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், போர்க்கோடரிகள், கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற வகை ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், வெறுங்கைகளாலும் கூட ஒருவரையொருவர் கொன்றனர். தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், குதிரைவீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானைகள், முதன்மையான யானைகளுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படைவீரர்களுடனும் போரிட்டனர். முற்றிலும் பித்துப் பிடித்த மதங்கொண்ட யானைகள் பல உரக்கப் பிளிறிக் கொண்டு, விளையாட்டுக்களங்களில் செய்வதைப் போல ஒன்றையொன்று கொன்றன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் போராளிகளுக்குள் நடைபெற்ற அந்தப் போரில், திருஷ்டத்யும்னன் தன் குதிரைகளோடு துரோணரின் குதிரைகளைக் கலக்க {மோதச்} செய்தான். காற்றின் வேகத்தைக் கொண்டவையும், புறாக்களின் வெண்மையைக் கொண்டவையும் {திருஷ்டத்யும்னனின் குதிரைகளும்}, இரத்தச் சிவப்பானவையுமான {துரோணரின் குதிரைகளுமான} அந்தக் குதிரைகள் போரில் ஒன்றோடொன்று கலந்து மிக அழகாகத் தெரிந்தன. உண்மையில் அவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனும், பிருஷதன் மகனுமான வீர திருஷ்டத்யும்னன், மிக அருகே வந்துவிட்ட துரோணரைக் கண்டு, தன் வில்லை விட்டுவிட்டு, கடுஞ்சாதனையைச் செய்வதற்காகத் தன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவன் {திருஷ்டத்யும்னன்} துரோணருடைய தேரின் ஏற்காலைப் பிடித்து அதற்குள் {துரோணரின் தேருக்குள்} நுழைந்தான். அவன் சில வேளைகளில் நுகத்தடியின் மத்தியிலும், சில வேளைகளில் அதன் இணைப்புகளிலும், சில வேளைகளில் குதிரைகளுக்குப் பின்பும் நின்றான். அப்படி அவன் {திருஷ்டத்யும்னன்} கையில் வாளுடன், துரோணரின் சிவப்பு குதிரைகளின் முதுகில் விரைவாக ஏறி நகர்ந்து கொண்டிருந்த போது, பின்னவரால் {துரோணரால்} அவனைத் தாக்குவதற்குத் தகுந்த வாய்ப்பைக் கண்டறியமுடியவில்லை. இவை அனைத்தும் எங்களுக்கு அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தன. உண்மையில், உணவு மீது கொண்ட விருப்பத்தின் காரணமாகப் பருந்தானது காட்டுக்குள் பாய்வதைப் போலவே துரோணரின் அழிவுக்காகத் தன் தேரில் இருந்து பாய்ந்த திருஷ்டத்யும்னனின் பாய்ச்சலும் தெரிந்தது.
அப்போது துரோணர், நூறு சந்திரன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} கேடயத்தை ஒரு நூறு கணைகளால் அறுத்து, மேலும் பத்து கணைகளால் அவனது வாளையும் அறுத்தார். பிறகு அந்த வலிமைமிக்கத் துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் தம் எதிராளியின் குதிரைகளைக் கொன்றார். மேலும் இரண்டு பல்லங்களால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} கொடிமரத்தையும் குடையையும் அறுத்து, பிறகு அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மேலும் பெரும் வேகத்தோடு தம் வில்லின் நாணைத் தமது காது வரை இழுத்து, (எதிரியின் மீது) வஜ்ரத்தை வீசும் வஜ்ரதாரியைப் போல அவன் {திருஷ்டத்யும்னன்} மீது மரணக் கணையொன்றை ஏவினார்.
ஆனால், சாத்யகி, பதினான்கு கூரிய கணைகளால் துரோணரின் அந்த மரணக்கணையை அறுத்தான். இப்படியே அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டு மன்னனிடம் {சிங்கத்திடம்} அகப்பட்ட மானைப் போல, ஆசான்களில் முதன்மையான அந்த மனிதர்களில் சிங்கத்திடம் {துரோணரிடம்} அகப்பட்ட திருஷ்டத்யும்னனை மீட்டான். இப்படியே அந்தச் சிநிக்களின் காளை {சாத்யகி}, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} காத்தான். அந்தப் பயங்கரப் போரில் பாஞ்சாலர்களின் இளவரசனைக் காத்த சாத்யகியைக் கண்ட துரோணர், அவன் {சாத்யகி} மீது இருபத்தாறு கணைகளை விரைவாக ஏவினார். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, துரோணர் சிருஞ்சயர்களை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பதிலுக்கு இருபத்தாறு கணைகளால் பின்னவரின் {துரோணரின்} நடுமார்பில் துளைத்தான். அப்போது துரோணரை அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} எதிர்த்துச் சென்ற போது, வெற்றியை விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனைப் போரில் இருந்து விரைவாக விலக்கிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.
சாத்யகியின் ஆற்றலை வியந்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 097-சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய சாத்யகி; சாத்யகியின் திறனை மனத்தில் மெச்சிய துரோணர்; துரோணரும் சாத்யகியும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியது; கடுமையாக நடந்த போர்; சாத்யகியைக் காக்க பாண்டவர்களும், துரோணரைக் காக்க கௌரவர்களும் விரைந்தது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அப்படி விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனான யுயுதானனால் {சாத்யகியால்} துரோணரின் கணைகள் வெட்டப்பட்டு, திருஷ்டத்யும்னன் காக்கப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, பெரும் வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், மனிதர்களில் புலியான சிநியின் பேரனை {சாத்யகியை} என்ன செய்தார்?” என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கோபத்தைத் தன் நஞ்சாகவும், வளைக்கப்பட்ட வில்லை தன் அகன்று விரிந்த வாயாகவும், கூரிய கணைகளைத் தன் பற்களாகவும், நாராசங்களைத் தன் நச்சுப் பற்களாகவும் கொண்டு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, நீண்ட மூச்சுகளை விடும் ஒரு பெரும் பாம்பைப் போல இருந்தவரும், மனிதர்களில் வலிமைமிக்க வீரருமான துரோணர், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளை இறைத்தபடி, வானத்திலோ, பெரும் மலையொன்றின் உச்சியிலோ எழுவதைப் {பறப்பதைப்} போல பெரும் வேகம் கொண்ட தமது சிவப்புக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, யுயுதானனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார்.
பகை நகரங்களை அடக்குபவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான அந்த சிநி குலத்து வீரன் {சாத்யகி}, கணைமாரியை மழையாகவும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியை முழக்கமாகவும், நன்கு வளைக்கப்பட்ட வில்லை ஒலியாகவும், நாராசங்களை மின்னல் கீற்றுகளாகவும், ஈட்டிகளையும் வாள்களையும் இடியாகவும், கோபத்தைக் காற்றாகவும் கொண்ட அந்தத் துரோண மேகமானது, குதிரைகளெனும் புயலால் தூண்டப்பட்டுத் தன்னை நோக்கி வருவதைக் கண்டு புன்னகைத்தபடியே தன் தேரோட்டியிடம், “ஓ! சூதா, தன் {பிராமண} வகைக்கான கடமைகளில் இருந்து நழுவியவரும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} புகலிடம் ஆனவரும், (குரு) மன்னர்களின் துயரங்கள் மற்றும் அச்சங்களைப் போக்குபவரும், இளவரசர்கள் அனைவரின் ஆசானும், தன் ஆற்றலில் எப்போதும் தற்புகழ்ச்சி செய்யும் வீரருமான அந்த வீரப் பிராமணரை {துரோணரை} எதிர்த்து, குதிரைகளை மிக வேகமாக முடுக்கியபடி மகிழ்ச்சியாகவும், வேகமாகவும், செல்வாயாக” என்றான்.
அப்போது அந்த மதுகுலத்தவனுக்கு {சாத்யகிக்கு} சொந்தமானவையும், வெள்ளிநிறமும், காற்றின் வேகமும் கொண்டவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் துரோணரை நோக்கி விரைவாகச் சென்றன. பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான துரோணர் மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகிய அவ்விருவரும் ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தங்களுக்குள் போரிட்டனர். மனிதர்களில் காளையரான அவ்விருவரும் தங்கள் கணை மழையால் ஆகாயத்தை நிறைத்தனர். உண்மையில் அவ்வீரர்கள் இருவரும் தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் பத்தையும் {10} மறைத்தனர். மேலும் அவர்கள் கோடை காலத்தின் முடிவில் (பூமியில்) தங்கள் உள்ளடக்கம் முழுவதையும் பொழியும் இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைகளை ஒருவரின் மேலொருவர் பொழிந்தனர். அப்போது சூரியன் காணப்படவில்லை. காற்றும் வீசவில்லை. ஆகாயத்தை அந்தக் கணைமாரி நிறைத்ததன் விளைவாக அவ்வீரர்களால் உண்டாக்கப்பட்ட அடர்த்தியான இருள் தொடர்ந்து நீடித்தது. அவ்விருள், துரோணர் மற்றும் சிநியின் பேரனால் {சாத்யகியால்} அங்கே உண்டாக்கப்பட்ட போது, கணையேவுதலை இருவரில் எவரும் நிறுத்தியதை யாரும் காணவில்லை. ஆயுதங்களை ஏவுவதில் அவ்விருவரும் வேகம் கொண்டவர்களாக இருந்தனர், மேலும் அவ்விருவரும் மனிதர்களில் காளையராகவே காணப்பட்டனர். அந்த இருவராலும் ஏவப்பட்ட கணைத்தாரைகளால் உண்டான ஒலியானது, சக்ரனால் {இந்திரனால்} ஏவப்பட்ட வஜ்ரத்துக்கு {இடிக்கு} ஒப்பானதாகக் கேட்கப்பட்டது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நாராசங்களால் துளைக்கப்பட்ட வீரர்களின் வடிவங்களானவை, கடும் நஞ்சுமிக்க பாம்புகளால் கடிக்கப்பட்ட வேறு பாம்புகளைப் போலவே தெரிந்தன [1]. துணிச்சல்மிக்க வீரர்கள், மலை முகடுகளில் விழும் இடியின் ஒலிக்கு ஒப்பாக, விற்களின் நாணொலிகளையும், தங்கள் உள்ளங்கையின் ஒலிகளையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு வீரர்களின் தேர்களும், குதிரைகளும், தேரோட்டிகளும் தங்கச்சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டுக் காண்பதற்கு அழகாகத் தெரிந்தன. சட்டையுரித்த, கடும் நஞ்சுமிக்க பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிரகாசமாக, நேராக இருந்தவையுமான கணைகளின்மாரி கடுமையானதாக இருந்தது. அவ்விருவரின் குடைகளும், கொடிமரங்களும் வெட்டப்பட்டன. குருதியில் நனைந்த அவ்விருவரும் வெற்றியின் நம்பிக்கையால் தூண்டப்பட்டிருந்தனர். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் குருதி வழிந்த அவர்கள், உடல்களில் மதநீர் வழியும் இரு யானைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தனர். மேலும் அவர்கள் மரணக் கணைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதையும் தொடர்ந்தனர்.
எவரும் எந்த ஒலியையும் வெளியிடாததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் முழக்கங்கள், கூச்சல்கள் மற்றும் பிற ஒலிகள், சங்கொலிகள், துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை நின்றன. உண்மையில் அனைத்துப் படைப்பிரிவுகளும் அமைதியடைந்தன, வீரர்கள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர். ஆவல் கொண்ட மக்கள், அந்தத் தனிப்போரின் பார்வையாளர்களானார்கள். தேர்வீரர்கள், யானைப்பாகர்கள், குதிரைவீரர்கள், காலாட்படைவீரர்கள் ஆகியோர் மனிதர்களில் காளையரான அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டு அம்மோதலையே நிலைத்த கண்களுடன் சாட்சியாகக் கண்டனர். யானை படைப்பிரிவுகளும், குதிரைப்படைப்பிரிவுகளும், தேர்ப்பிரிவுகளும் அசையாமல் நின்றன. வியூகத்தில் நின்றிருந்தாலும் அனைவரும் அசையாமலேயே நின்றனர்.
பலவண்ணங்களிலான முத்துக்கள், பவளங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், தங்கத்தால் நிறைந்தவையும், கொடிமரங்கள், ஆபரணங்கள், தங்கத்தாலான கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெற்றிக் கொடிகளுடனும், யானைகளின் அலங்காரத்துணிகளுடனும், மெல்லிய கம்பளங்கள், தீட்டப்பட்ட பளபளப்பான ஆயுதங்கள், குதிரைகளின் தலையில் அலங்காரமாக தங்கம் மற்றும் வெள்ளியாலான சாமரங்கள், யானையின் மத்தகத்திலுள்ள மாலைகள், தந்தவளையங்கள் ஆகியவற்றுடன் இருந்தவையுமான குரு மற்றும் பாண்டவப் படைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கோடையின் நெருக்கத்தில் கொக்கு வரிசைகளாலும், விட்டில்பூச்சிக் கூட்டங்களாலும் நிறைந்து, வானவில்லோடும், மின்னல்களோடும் இருந்த மேகக்கூட்டங்களைப் போலக் காணப்பட்டன. நம் மனிதர்கள் மற்றும் யுதிஷ்டிரனுடையோர் ஆகிய இரு தரப்பினரும், யுயுதானன் {சாத்யகி} மற்றும் துரோணருக்கு இடையிலான அந்தப் போரைக் கண்டனர்; பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், சோமனும், சித்தர்களும், சாரணர்களும், வித்யாதரர்களும், பெரும்பாம்புகளும் கூட வானுலாவும் தேர்களான முதன்மையான தங்கள் தேர்களில் இருந்தபடியே அந்தப் போரைக் கண்டனர். மனிதர்களில் சிங்கங்களான அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பல்வேறு வகைகளில் முன் நகர்ந்தும், பின்நகர்ந்தும் போரிடுவதைக் கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.
பெரும் பலம் கொண்ட துரோணர் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி கணைகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அப்போது தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி} அந்தப் போரில் தன் வலிமைமிக்க கணைகளால், சிறப்புமிக்க துரோணரின் கணைகளையும், மேலும் ஒரே கணத்தில் அவரது வில்லையும் அறுத்தான். எனினும், கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக, பரத்வாஜர் மகன் {துரோணர்} மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண்பூட்டினார். அந்த வில்லும் சாத்யகியால் வெட்டப்பட்டது. துரோணர் மேலும் விரைவாக கையில் வேறொரு வில்லுடன் காத்திருந்தார். எனினும் எப்போதும் போலவே துரோணர் தன் வில்லில் நாண்பூட்டியதும் சாத்யகி அதை வெட்டினான். இப்படியே அவன் {சாத்யகி} பதினாறு முறை செய்தான் {துரோணரின் விற்களை வெட்டினான்}.
போரில் மனித செயலுக்கு அப்பாற்பட்ட யுயுதானனின் செயலைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் மனத்திற்குள், “சாத்வதர்களில் முதன்மையானவனிடம் {சாத்யகியிடம்} நான் காணும் இந்த ஆயுத பலமானது, ராமன் {பரசுராமர்?}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, கார்த்தவீரியன் மற்றும் மனிதர்களில் புலியான பீஷ்மர் ஆகியோரிடம் மட்டுமே உள்ள பலமாகும்” என்று நினைத்தார். எனவே, பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சாத்யகியின் ஆற்றலை மனத்துக்குள் மெச்சினார். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையான கர நளினத்தைக் கொண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் தலையானவருமான அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் {துரோணர்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} மிகவும் மனம் நிறைந்தார். வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும் அதனால் மனம் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சித்தர்கள் மற்றும் சாரணர்களும், என்னதான் துரோணரால் இயன்ற சாதனைகளை அறிந்திருந்தாலும் விரைவாக நகரும் யுயுதானனின் கர நளினத்தைப் போல அதற்கு முன் கண்டதே இல்லை.
பிறகு, க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரும், ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர் மற்றுமொரு வில்லை எடுத்துக் கொண்டு சில ஆயுதங்களைக் குறி பார்த்தார். எனினும், சாத்யகி, அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் மாயையாலும், சிலவற்றைத் தன் கூரிய கணைகளாலும் கலங்கடித்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன. உமது போர்வீரர்களுக்கு மத்தியில், திறனைத் தீர்மானிக்கும் வீரர்களாக இருப்போர், போரில் வேறு எவராலும் செய்ய இயலாததும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், பெரும் திறனை வெளிப்படுத்துவதுமான அவனது {சாத்யகியின்} சாதனையைக் கண்டு மெச்சினர்.
சாத்யகி, துரோணர் ஏவிய அதே கணைகளையே ஏவினான். இதைக் கண்டவரும், எதிரிகளை எரிப்பவருமான ஆசான் {துரோணர்}, எப்போதையும் விட குறைந்த துணிவுடனேயே போரிட்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படையறிவியலின் ஆசானான அவர் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, யுயுதானனின் அழிவுக்காகத் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார். எதிரியைக் கொல்லும் பயங்கரமான ஆக்நேய ஆயுதத்தைக் கண்ட வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி வருணாயுதம் என்ற மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். இருவரும் தெய்வீக ஆயுதங்களை எடுப்பதைக் கண்டு “ஓ”, என்றும் “ஐயோ” என்றும் அலறல்கள் அங்கே எழுந்தன. வானில் செல்லும் உயிரினங்களும் கூட அதன் ஊடாகச் செல்லவில்லை {பறவைகளும் வானத்தில் பறக்கவில்லை}. வாருணம் மற்றும் ஆக்நேயம் ஆகிய இரண்டு ஆயுதங்களும் கணைகளோடு ஒட்டி ஏவப்பட்டு ஒன்றையொன்று எதிர்த்து பயனற்றதாகின [2]. சரியாக அதே வேளையில் சூரியன் தன் வழியைக் கீழ்நோக்கிக் கடந்தான் {உச்சியில் இருந்து சாய்ந்தான்}.அப்போது பாண்டுவின் மகன்களான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சாத்யகியைப் பாதுகாக்க விரும்பி, மத்ஸ்யர்கள் மற்றும் சால்வேய துருப்புகளுடன் {சால்வத் துருப்புகளுடன்} சேர்ந்து துரோணரை நோக்கி வேகமாக விரைந்தனர் [3]. பிறகு துச்சாசனன் தலைமையிலான ஆயிரம் இளவரசர்கள், எதிரிகளால் சூழப்பட்ட துரோணரை நோக்கி (அவரைப் பாதுகாப்பதற்காக) வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது. பூமியானது புழுதியாலும், (இருதரப்பிலும்) ஏவப்பட்ட கணைகளின் மழையாலும் மறைந்தது. அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டதால், அதற்கு மேல் எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. உண்மையில், துருப்புகள் புழுதியில் மூழ்கியபோது, போரானது (மனிதர்களையோ, விதிகளையோ) முற்றிலும் கருதிப்பாராமல் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.
விந்தானுவிந்தர்களைக் கொன்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 098-ஜெயத்ரதன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்கள்; அர்ஜுனனின் குதிரைகள் களைப்படைந்திருப்பதைக் கண்டு அர்ஜுனனை அணுகிய விந்தனும், அனுவிந்தனும்; விந்தனையும், அனுவிந்தனையும் கொன்ற அர்ஜுனன்; குதிரைகளின் களைப்பைப் போக்கத் தேரிலிருந்து கிருஷ்ணன் அவற்றை அவிழ்த்தது; க்ஷத்திரியர்கள் பலரை எதிர்த்துத் தரையில் நின்று தனியாகப் போராடிய அர்ஜுனன், குதிரைகளுக்காக ஒரு தடாகத்தையும், அம்புகளாலான ஒரு கூடத்தையும் உண்டாக்கியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் அஸ்த மலைகளின் முகடுகளை நோக்கித் தன் கீழ்நோக்குப் பயணத்திற்குத் திரும்பிய போது, ஆகாயமே புழுதியால் மறைந்திருந்த போது, சூரியக் கதிர்களின் வெப்பம் தணிந்த போது, அந்தப் பகல் பொழுது வேகமாக மங்கத் {மறையத்} தொடங்கியது. படைவீரர்களைப் பொறுத்தவரை, வெற்றியை விரும்பிய அவர்களில் சிலர் ஓய்ந்திருந்தனர், சிலர் போரிட்டனர், சிலர் மோதலுக்குத் திரும்பினர். வெற்றி நம்பிக்கையால் தூண்டப்பட்ட துருப்புகள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.
குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம், (எதிரி படைவீரர்களின் ஊடாக) தன் தேருக்கு வேண்டிய அளவு போதுமான வழியை உண்டாக்கினான். இவ்வழியிலேயே ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} (தேரை வழிநடத்திச்) சென்றான். பாண்டுவின் உயர் ஆன்ம மகன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே உமது துருப்புகள் பிளந்து வழிவிட்டன. பெரும் சக்தியைக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} பல்வேறு வகையான சுழல் நகர்வுகளை {மண்டலகதிகளைக்} காட்டித் தன் தேரோட்டும் திறனை வெளிப்படுத்தினான்.
{அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்டவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், யுகநெருப்புக்கு ஒப்பானவையும், நரம்புகளால் {இழைகளால்} கட்டப்பட்டவையும், நேரான முட்டுகள் {அழுந்திய கணுக்கள்} கொண்டவையும், தொலைதூரம் செல்லக்கூடியவையும், மூங்கிலாலோ (மூங்கில்பிளவுகள் அல்லது அவற்றின் கிளைகளாலோ), முழுக்க இரும்பினாலோ ஆனவையுமான அர்ஜுனனின் கணைகள், அந்தப் போரில், பல்வேறு எதிரிகளின் உயிரை எடுத்து, (அங்கே இரை தேடி கூடியிருந்த) பறவைகளுடன் சேர்ந்து உயிரினங்களின் குருதியைக் குடித்தன. அர்ஜுனன் தன் தேரில் நின்று தன் கணைகளை முழுமையாக இரண்டு மைல்கள் {ஒரு குரோச} தூரம் ஏவி, அந்தக் கணைகள் தன் எதிரிகளைத் துளைத்து, {அவர்களை மேலுலகத்திற்கு} அனுப்பிய போது அந்த இடத்திற்கு அந்தத் தேரே வந்துவிட்டது [1]. கருடன், அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், நுகத்தடிகளைச் சுமந்தவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உலகமே வியக்கும் வகையில் தேரை வேகமாகச் செலுத்தினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் தேரோ, ருத்திரனுடையதோ, வைஸ்ரவணனுடையதோ {குபேரனுடைய தேரோ} கூட அவ்வளவு வேகம் சென்றதில்லை. மனம் விரும்பிய வேகத்தில் அர்ஜுனனின் தேர் சென்றதைப் போல, போரில் வேறு யாருடைய தேரும் அதற்கு முன்பு சென்றதில்லை.
ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்தப் போருக்கான தேரை எடுத்துக் கொண்டு குதிரைகளை முடுக்கி (பகைவரின்) துருப்புகளினூடாகவே சென்றான். அந்தத் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் பெரும் சிரமத்தோடு அர்ஜுனனின் தேரை இழுத்து வந்த அந்தச் சிறந்த குதிரைகள், போரில் மகிழும் பல வீரர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுப் பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தன. எனினும் அவை, இறந்த குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்கள், உடைந்த தேர்கள், ஆயிரக்கணக்கான மலைகளைப் போலத் தெரிந்த இறந்த யானைகளின் உடல்கள் ஆகியவற்றின் மேல் ஏறிச் சென்றாலும், அடிக்கடி அழகாக வளையமாகச் சுழன்றன {மண்டல கதிகளை வெடிக்காட்டின}.
அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் வீரச் சகோதரர்கள் இருவரும் (விந்தனும், அனுவிந்தனும்), தங்கள் படைகளின் தலைமையில் நின்று கொண்டு, அர்ஜுனனின் குதிரைகள் களைத்திருப்பதைக் கண்டு அவனுடன் மோதினர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், அர்ஜுனனை அறுபத்துநான்கு {64} கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் {70}, (அர்ஜுனனின் தேரிலிருந்த) நான்கு குதிரைகளை ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தனர். ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்தவனும், உடலின் முக்கியப் பகுதிகளைக் குறித்த அறிவுடையவனுமான அர்ஜனன், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையான ஒன்பது நேரான கணைகளால் அந்தப் போரில் அவ்விருவரையும் தாக்கினான். அதன்பேரில், அந்தச் சகோதரர்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, பீபத்சு {அர்ஜுனன்} மற்றும் கேசவனைக் கணைமாரியால் மறைத்து சிங்க முழக்கம் செய்தனர்.
வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அப்போது இரு பல்லங்களைக் கொண்டு, அவ்விரு சகோதரர்களின் அழகிய விற்களையும், தங்கம் போலப் பிரகாசிக்கும் அவர்களது கொடிமரங்களையும் அந்தப் போரில் விரைவாக அறுத்தான். ஓ! மன்னா, வேறு விற்களை எடுத்துக் கொண்ட விந்தனும், அனுவிந்தனும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கலங்கடிக்கத் தொடங்கினர். பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெருங்கோபத்தை அடைந்து, இரு கணைகளைக் கொண்டு தன் எதிரிகளின் இரு விற்களையும் மீண்டும் வேகமாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மேலும் சில கணைகளால் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள் மற்றும் அவர்களது பின்புறத்தைப் பாதுகாத்த போராளிகள் இருவர் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்தோர் ஆகியோரைக் கொன்றான். பிறகு, கத்தி போன்ற கூர்மையுள்ள மேலும் ஒரு பல்லத்தினால் {அவர்களில்} மூத்த சகோதரனின் {விந்தனின்} தலையை வெட்டியதால், அவன் {விந்தன்}, காற்றினால் முறிந்த மரத்தைப் போல உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அனுவிந்தன், குதிரைகளற்ற தேரில் கொல்லப்பட்டுக் கிடக்கும் விந்தனைக் கண்டு ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பிறகு, விந்தனின் தம்பியான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அனுவிந்தன்}, தன் அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குவதற்காகக் கையில் கதாயுதத்துடன் ஆடிக் கொண்டே சென்றான். சினத்தால் நிறைந்த அனுவிந்தன், அந்தக் கதாயுதத்தைக் கொண்டு வாசுதேவனின் முன் நெற்றியைத் தாக்கினான். எனினும் நடுங்காத பின்னவன் {கிருஷ்ணன்}, மைநாக மலையைப் போல அசையாதிருந்தான். அப்போது அர்ஜுனன், ஆறு கணைகளைக் கொண்டு, அவனது கழுத்து, இரு கால்கள், இரு கரங்கள் மற்றும் சிரம் ஆகியவற்றை அறுத்தான். இப்படி (துண்டுகளாக அறுபட்ட) அனுவிந்தனின் அங்கங்கள் பல மலைகளைப் போலக் கீழே விழுந்திருந்தன.
அவ்விருவரையும் பின்தொடர்ந்து வந்தவர்கள், அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, சினத்தால் நிறைந்து, நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி (அர்ஜுனனை நோக்கி) விரைந்தனர். அவர்களை விரைவாகக் கொன்ற அர்ஜுனன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பனிக்காலத்தின் முடிவில் காட்டை எரிக்கும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். சற்றே சிரமத்துடன் அத்துருப்புகளைக் கடந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மேகங்களுக்கிடையில் மறைந்திருந்து, அவற்றை மீறி வெளிவந்த உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள் அச்சத்தால் நிறைந்தனர். ஆனால் விரைவாக மீண்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவன் {அர்ஜுனன்} களைத்திருப்பதையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருப்பதையும் புரிந்து கொண்டு, அவனை நோக்கி மீண்டும் மகிழ்ச்சியாக விரைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கமிட்டனர்.கோபத்தில் நிறைந்திருந்த அவர்களைக் கண்டவனும், மனிதர்களில் காளையுமான அர்ஜுனன் புன்னகைத்தபடியே, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} மென் சொற்களில், “நம் குதிரைகள் கணைகளால் பீடிக்கப்பட்ட களைத்திருக்கின்றன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருக்கிறான். இப்போது செய்வதற்குச் சிறந்தது என நீ எதை நினைக்கிறாய்? ஓ! கிருஷ்ணா, எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மனிதர்களில் நீயே எப்போதும் விவேகியாவாய். பாண்டவர்கள் உன்னையே தங்கள் கண்களாகக் கொண்டு, போரில் தங்கள் எதிரிகளை வெல்வார்கள். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்று நான் நினைப்பதை உண்மையாக நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மாதவா, குதிரைகளை நுகத்தடியில் இருந்து அவிழ்த்து, அவற்றின் {உடல்களில் தைத்திருக்கும்} கணைகளைப் பிடுங்குவாயாக” என்றான் {அர்ஜுனன்}. பார்த்தனால் இப்படிச் சொல்லப்பட்ட கேசவன், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நானும் நீ வெளிப்படுத்திய கருத்தையே கொண்டிருக்கிறேன்” என்றான். அப்போது அர்ஜுனன், “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மொத்த படையையும் நான் தடுத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது எதுவோ, அதை நீ முறையாகச் செய்வாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கிய தனஞ்சயன், தன் வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு அசையாத மலையென அங்கே நின்றான். தனஞ்சயன் தரையில் நிற்பதைக் கண்டு, அதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதிய க்ஷத்திரியர்கள், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் உரக்க முழங்கியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். தனியாக நின்று கொண்டிருந்த அவனைப் பெரும் தேர்க்கூட்டங்களால் சூழ்ந்து கொண்ட அனைவரும், தங்கள் விற்களை வளைத்து, அவன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர். கோபத்தில் நிறைந்திருந்த அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவி சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் பார்த்தனை முழுமையாக மறைத்தனர். சிங்கத்தை நோக்கி விரையும் மதங்கொண்ட யானைகளைப் போலப் பெரும் க்ஷத்திரியர்கள் அனைவரும் மனிதர்களில் சிங்கமான அந்த க்ஷத்திரியக் காளையை {அர்ஜுனனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.
சினத்தால் நிறைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, எண்ணற்ற வீரர்களைத் தடுப்பதில் தனியாக வென்ற போது, நாங்கள் கண்ட அவனது கர வலிமை மிகப் பெரியதாக இருந்தது. பலம் நிறைந்த பார்த்தன், தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்து, எண்ணற்ற கணைகளால் அவர்கள் அனைவரையும் விரைவாக மறைத்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அடர்த்தியான கணைகள் மழையாகப் பொழிந்து மோதியதன் விளைவாக, ஆகாயத்தின் அந்தப் பகுதியில், தீப்பொறிகளை இடையறாது வெளியிடும் நெருப்பொன்று உண்டானது. போரில் வெற்றியை விரும்பியவர்களும், குருதியில் நனைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த குதிரைகள் மற்றும் பேரொலியுடன் பிளிறியபடியே எதிரிகளைக் கலங்கடிக்கும் மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், ஒரு பொதுநோக்கில் ஒன்றிணைந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்த எண்ணற்ற பகைவீரர்கள் அனைவராலும் அங்கே அந்தச் சூழல் மிகவும் வெப்பமடைந்தது [2].கணைகளை நீரோட்டமாகவும், கொடிமரங்களைச் சுழல்களாகவும், யானைகளை முதலைகளாகவும், காலாட்படை வீரர்களை எண்ணற்ற மீன்களாகவும், சங்கொலிகள் மற்றும் பேரிகை ஒலிகளை முழக்கமாகவும், தேர்களைப் பொங்கும் அலைகளாகவும், போராளிகளின் தலைக்கவசங்களை ஆமைகளாகவும், குடைகள் மற்றும் கொடிகளை நுரையாகவும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைத் தன் பாறைகளாகவும் கொண்டிருப்பதும், அகன்றதும், கடக்க முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்தத் தேர்களின் எல்லையற்ற பெருங்கடலைத் தன் கணைகளால் ஒரு கரையைப் போலத் தடுத்துக் கொண்டிருந்தான்.பிறகு, அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அன்பு நண்பனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம் அச்சமற்ற வகையில், “ஓ! அர்ஜுனா, குதிரைகள் நீரருந்த இங்கே இந்தப் போர்க்களத்தில் எந்தக் கிணறும் இல்லை. குதிரைகள் குடிப்பதற்கே நீரை விரும்புகின்றன, குளிப்பதற்காக அல்ல” என்றான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அர்ஜுனன் மகழ்ச்சியாக, “இதோ இருக்கிறது” என்று சொல்லி, ஓர் ஆயுதத்தைக் கொண்டு பூமியைத் துளைத்து, குதிரைகள் நீரருந்த ஒரு சிறந்த தடாகத்தை உண்டாக்கினான்.
சக்கரவாகங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தடாகத்தில் அன்னங்களும், வாத்துகளும், நிறைந்திருந்தன. அகலமாகவும், தெளிந்த நீர் நிறைந்திருந்ததாகவும் இருந்த அது, முழுதும் மலர்ந்த நல்ல வகைத் தாமரைகளால் நிறைந்திருந்தது. மேலும் அதில் பல்வேறு வகைகளிலான மீன்களும் இருந்தன. ஆழத்தில் அடியற்றதான அது, பல முனிவர்களால் அடையப்படுவதாக இருந்தது.ஒரு கணத்தில் அங்கே உண்டாக்கப்பட்ட அத்தடாகத்தைக் காண தெய்வீக முனிவரான நாரதர் வந்தார்.
(தெய்வீகத் தச்சனான) துவஷ்டிரியை {த்வஷ்டாவைப்} போல அற்புதச் செயல்களைச் செய்யவல்ல பார்த்தன் {அர்ஜுனன்}, கணைகளையே விட்டங்களாகவும், மச்சுகளாகவும் {கைமரங்களாகவும்}, தூண்களாகவும், மேற்கூரைகளாகவும் கொண்ட கணைமயமான ஒரு கூடத்தையும் அங்கே உண்டாக்கினான். பார்த்தனால் உண்டாக்கப்பட்ட கணைமயமான அந்தக் கூடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே, “நன்று, நன்று” என்று சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.
குதிரைகளின் களைப்பகற்றிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 099-காலாளாகத் தனியாக நின்று பகைவீரர்களைத் தடுத்த அர்ஜுனன்; குதிரைகளில் தைத்த கணைகளைப் பிடுங்கி, அவற்றின் களைப்பையும், வலியையும் போக்கி மீண்டும் தேரில் பூட்டிய கிருஷ்ணன்; வேகமாகச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்களைத் தடுக்க முடியாத கௌரவர்கள்; அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்மக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நீரை உண்டாக்கிய பிறகு, பகைவரின் படையை அவன் {அர்ஜுனன்} தடுக்கத் தொடங்கி, கணைமயமான கூடத்தைக் கட்டியதும், பெரும் காந்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரில் இருந்து இறங்கி, கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்தான். எப்போதும் கண்டிராத அக்காட்சியைக் கண்டதால், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் போர்வீரர்கள் அனைவராலும் கரவொலியுடன் எழுப்பப்பட்ட ஆரவாரப் பேரொலி அங்கே கேட்கப்பட்டது. காலாளாக நின்று போரிட்ட குந்தியின் மகனை {அர்ஜுனனை} (ஒன்றுகூடியிருந்த) வலிமைமிக்கத் தேர்வீரர்களால் எதிர்க்க இயலவில்லை. இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.
கூட்டம் கூட்டமாகத் தேர்களும், எண்ணற்ற யானைகளும், குதிரைகளும் தன்னை நோக்கி விரைந்தாலும், தன் எதிரிகள் அனைவருடன் போரில் ஈடுபட்ட பார்த்தன் {அர்ஜுனன்} எந்த அச்சத்தையும் உணரவில்லை. (பகை) மன்னர்கள், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த வாசவன் மகன் {அர்ஜுனன்} எவ்வித கவலையையும் உணரவில்லை. உண்மையில் அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலானது, தன்னில் பாயும் நூற்றுக்கணக்கான ஆறுகளை ஏற்பதைப் போலத் தன்னை நோக்கி வரும் நூற்றுக்கணக்கான கணைமாரிகளையும், கதாயுதங்களையும், வேல்களையும் ஏற்றான்.
பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த முதன்மையான மன்னர்களால் தன்னை நோக்கி ஏவப்பட்ட முதன்மையான கணைகளை மூர்க்கமான வலிமை கொண்ட தன் ஆயுதங்கள் மற்றும் தன் கரப் பலத்தின் மூலம் வரவேற்றான். அவன் {அர்ஜுனன்}, தரையில் தனியாக நின்றிருந்தாலும், பேராசை எனும் ஒரு தவறானது சாதனைகள் அனைத்தையும் அழிப்பதைப் போலத் தேர்களில் இருந்த அந்த மன்னர்கள் அனைவரையும் கலங்கடிப்பதில் வென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தன் ஆகிய இருவரின் அற்புதம் நிறைந்த ஆற்றலைக் கண்டு புகழ்ந்த கௌரவர்கள், “போரில் பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்ததைக் காட்டிலும் அற்புதம் நிறைந்த செயல் உலகில் வேறு எது இருக்கிறது? அல்லது இருக்கப் போகிறது? போரில் கடும் சக்தியையும், பெரும் நம்பிக்கையையும் காட்டும் இந்த மனிதர்களில் சிறந்தவர்கள் நம்மைப் பெரும் எண்ணங்களால் ஊக்கப்படுத்துகின்றனர்” என்றனர் [1].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் கணைகளாலான கூடத்தை அர்ஜுனன் உண்டாக்கியபிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஏதோ பெண்களின் சபையில் தான் இருப்பதைப் போல மிகுந்த நம்பிக்கையுடன் புன்னகைத்தபடியே குதிரைகளை அதற்குள் அழைத்துச் சென்றான். குதிரைகளைச் சீர்செய்வதில் நல்ல திறம்பெற்ற கிருஷ்ணன், அவற்றின் {குதிரைகளின்} களைப்பு, வலி, நுரை தள்ளுதல், நடுக்கம், காயங்கள் ஆகியவற்றை நீக்கினான். பிறகு அவற்றில் இருந்த கணைகளைப் பிடுங்கி, தன் கைகளால் அக்குதிரைகளைத் தேய்த்து, அவற்றை முறையாகத் துள்ளி நடக்கச் செய்து, அவற்றை {நீரைக்} குடிக்க வைத்தான். அவற்றைக் குடிக்கச் செய்து, அவற்றின் களைப்பு மற்றும் வலியைப் போக்கிய அவன் {கிருஷ்ணன்}, மீண்டும் அவற்றை {குதிரைகளைத்} தேர்களில் முதன்மையான அந்தத் தேரின் நுகத்தில் கவனமாகப் பூட்டினான்.
பிறகு, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு சேர்ந்து அந்தத் தேரில் ஏறி பெரும் வேகத்தில் சென்றான். தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமானதும், தாகம் தணிக்கப்பட்ட குதிரைகள் மீண்டும் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரைக் கண்ட குருபடையின் முதன்மையானவர்கள் மீண்டும் உற்சாகமிழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நச்சுப்பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புகளைப் போலவே அவர்கள் பெருமூச்சுவிட்டனர். அவர்கள், “ஓ!, ஐயோ, நமக்கு ஐயோ {நாம் கெட்டோம்}! க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கவசம் பூண்ட பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும், மரப்பாவையுடன் {பொம்மையுடன்} விளையாடும் பிள்ளையைப் போல மிக எளிதாக அதே தேரில் சென்றுவிட்டனரே. உண்மையில், எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, நம் முழக்கங்களாலும், போரிடும் போராளிகளாலும் தடுக்கப்படாமல் சென்றுவிட்டனரே” என்றனர்.
அவர்கள் சென்றுவிட்டதைக் கண்ட போர் வீரர்கள் பிறர், “கௌரவர்களே, கிருஷ்ணனையும், கிரீடம் தரித்தவனையும் ({கிரீடியான} அர்ஜுனனையும்) கொல்ல விரைவீராக. (நம்) வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குதிரைகளைத் தன் தேரில் பூட்டிய தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} போரில் நம்மைக் கொன்று ஜெயத்ரதனை நோக்கிச் செல்கிறான்” என்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களில் பூமியின் சில தலைவர்கள், போரில் இதற்கு முன் எப்போதும் கண்டிராத மிக அற்புதமான நிகழ்வைக் கண்டு, “ஐயோ, துரியோதனனின் தவறால், மன்னன் திருதராஷ்டிரரின் போர்வீரர்களான இந்த க்ஷத்திரியர்களும், மொத்த உலகமும், பெரும் துயரில் விழுந்து அழிவை அடைகின்றனரே. மன்னன் துரியோதனன் இதைப் புரிந்து கொள்ளவில்லையே” என்றனர். இப்படியே பல க்ஷத்திரியர்கள் பேசினர். ஓ! பாரதரே, இன்னும் பிறரோ, “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்கனவே யமனுலகு அனுப்பப்பட்டுவிட்டான். குறுகிய பார்வை கொண்டவனும், வழிமுறைகளை அறியாதவனுமான துரியோதனன், அந்த மன்னனுக்கு {ஜெயத்ரதனுக்கு} என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யட்டும் [2]” என்றனர்.அதே வேளையில், மேற்கு {அஸ்த} மலைகளை நோக்கி நகரும் சூரியனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரைகளில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கி பெரும் வேகத்துடன் சென்றான். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்தகனைப் போலக் கோபத்துடன் சென்ற போது, (குரு) வீரர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. எதிரிகளை எரிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை அடையச் சென்ற போது, (தன் முன்னிருந்த) வீரர்களை முறியடித்து, மான்கூட்டத்தைக் கலங்கடிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்தப் படையைக் கலங்கடித்தான்.
பகைவரின் படைக்குள் ஊடுருவிய தாசார்ஹ குலத்தோன், குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி, மேகங்களின் நிறத்தைக் கொண்ட தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் அந்தத் தேரை விரைவாக இழுத்ததால், குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} எதிரில் ஏவப்பட்ட கணைகள் அவனுக்குப் பின்னால் விழத் தொடங்கின [3]. சினத்தால் நிறைந்த மன்னர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பலரும், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பிய தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் பெரும் போரில் ஒருக்கணம் நின்ற அந்த மனிதர்களில் காளையை (அர்ஜுனனை) நோக்கி (குரு) வீரர்கள் இப்படி விரைந்தபோது, துரியோதனனும் பார்த்தனை {அர்ஜுனனும்} விரைவாகப் பின்தொடர்ந்து சென்றான். மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், குரங்கைத் தாங்கியிருக்கும் பயங்கரக் கொடி மரம் பொருத்தப்பட்டிருந்ததும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதுமான {அர்ஜுனனின்} தேரைக் கண்ட {பகை} வீரர்கள் பலரும் மிகவும் உற்சாகமிழந்தனர். (போராளிகளால் எழுப்பப்பட்ட) புழுதியால் கிட்டத்தட்ட முழுமையாகச் சூரியன் மறைக்கப்பட்ட போது, கணைகளால் பீடிக்கப்பட்ட (குரு) வீரர்களால், அந்தப் போரில் இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} பார்க்கக்கூட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.
ஜெயத்ரதனைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! – துரோண பர்வம் பகுதி – 100-அர்ஜுனனைக் கண்டு தப்பி ஓடிய கௌரவர்கள் வெட்கமடைந்து திரும்பி வந்தது; தேர்க்கூட்டத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; நம்பிக்கையிழந்த கௌரவர்கள்; ஜெயத்ரதனைக் நோக்கி கிருஷ்ணனும் அர்ஜுனனும் விரைந்தது; விரைந்து வந்த துரியோதனன் கிருஷ்ணனைத் தாண்டி சென்று திரும்பிப் பார்த்தது; கௌரவர்களின் மகிழ்ச்சி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஏற்கனவே பல படைப்பிரிவுகளைப் பிளந்துத் தங்கள் படைக்குள்ளும் ஊடுருவிவிட்டதைக் கண்ட உமது படையின் {கௌரவப்படையின்} மன்னர்கள் அச்சத்தால் தப்பி ஓடினர். எனினும் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், சிறிது நேரத்திலேயே, சினத்தாலும், வெட்கத்தாலும் நிறைந்து, தங்கள் வலிமையால் உந்தப்பட்டு, நிதானமாக குவிந்த மனத்தை அடைந்து தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர். ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிரம்பிப் போரில் பாண்டுவின் மகனை எதிர்த்துச் சென்ற அவர்கள் பெருங்கடலில் இருந்து ஆறுகள் திரும்பாததைப் போலத் திரும்பவில்லை. இதைக் கண்டு போரிலிருந்து ஓடிய இழிந்த க்ஷத்திரியர்கள் பலர், வேதங்களிடமிருந்து விலகிச் செல்லும் நாத்திகர்களைப் போலப் பாவத்துக்கும், நரகத்துக்கும் ஆட்பட்டனர் [1].தேர்களின் கூட்டத்தை மீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சூரியனையும் சந்திரனையும் போல அதை {தேர்க்கூட்டத்தை} விட்டு இறுதியாக வெளியே வந்தனர். உண்மையில், தங்கள் களைப்பு விலகி, அந்தப் பரந்த படையைப் பிளந்த அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, பலமான வலையைக் கடந்த இரு மீன்களைப் போலத் தெரிந்தனர். அடர்த்தியான ஆயுத மழையால் தடுக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததுமான துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பலத்துடன் கடந்து சென்ற அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், (ஆகாயத்தில் தோன்றும்) யுகச் சூரியன்களைப் போலத் தெரிந்தனர். ஆயுதங்களின் அடர்த்தியான மழையின் ஊடாகப் பிளந்து சென்று, உடனடி ஆபத்திலிருந்து விடுபட்ட அந்த உயர் ஆன்ம வீரர்கள், அடர்த்தியான தங்கள் ஆயுதங்களின் மேகங்களால் ஆகாயத்தை மறைத்து, காட்டுத் தீயில் இருந்து தப்பியவர்கள் போலவோ, மகரத்தின் வாயில் இருந்து தப்பிய இரு மீன்களைப் போலவோ தெரிந்தனர். மேலும் அவர்கள் பெருங்கடலைக் கலங்கடிக்கும் இரு மகரங்களைப் போல அந்த (குரு) படையைக் கலங்கடித்தனர்.
பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் துரோணரின் படைப்பிரிவுக்கு மத்தியில் இருக்கையில், உமது வீரர்களும், உமது மகன்களும் அவ்விருவராலும் அதை விட்டு வெளிவர இயலாது என்றே நினைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, பெரும் காந்தி கொண்ட அவ்விரு வீரர்களும், துரோணரின் படைப்பிரிவை விட்டு வெளிவந்ததைக் கண்ட பிறகு, ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிர்வாழ்வான் என்று} அதற்கு மேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அந்த இரு கிருஷ்ணர்களும் துரோணரிடமிருந்தும், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} இருந்தும் தப்ப முடியாது என்று அவர்கள் நம்பியதால், ஓ! மன்னா, அதுவரை அவர்களுக்கு ஜெயத்ரதனின் உயிர் மீது பலமான நம்பிக்கையிருந்தது. ஓ! ஏகாதிபதி, எதிரிகளை எரிப்பவர்களான அவ்விருவரும், கிட்டத்தட்ட கடக்கப்பட முடியாத துரோணரின் படைப்பிரிவையும், போஜர்களின் படைப்பிரிவையும் கடந்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தனர். எனவே, அந்தப் படைகளைக் கடந்து சென்று சுடர்விடும் இரு நெருப்புகளைப் போல இருந்த அவர்களைக் கண்ட உம்மவர்கள் நம்பிக்கை இழந்து, அதற்கு மேலும் ஜெயத்ரதன் உயிரின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
பிறகு, அச்சமற்ற வீரர்களும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவர்களுமான கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும், ஜெயத்ரதனைக் கொல்வது குறித்துத் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “தார்தராஷ்டிரத் தேர்வீரர்களில் முதன்மையான ஆறு பேருக்கு மத்தியில் ஜெயத்ரதன் நிறுத்தப்பட்டிருக்கிறான். எனினும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் காணப்பட்டதும், அவன் என்னிடம் இருந்து தப்பமாட்டான். தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனே {இந்திரனே} போரில் அவனுக்கு {ஜெயத்ரதனுக்குப்} பாதுகாவலனாக இருந்தாலும் நம்மால் அவன் கொல்லப்படுவான்” என்றான் {அர்ஜுனன்}. இப்படியே அந்த இரு கிருஷ்ணர்களும் பேசிக்கொண்டனர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தேடிக் கொண்டிருக்கையில் இப்படியே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். (அவர்கள் சொன்னதைக் கேட்ட) உமது மகன்கள் உரக்க ஓலமிட்டனர் [2].வேக நடை கொண்ட தாகமிக்க இரு யானைகள், பாலைவனத்தைக் கடந்து, நீர் குடித்துப் புத்துணர்ச்சியடைந்ததைப் போலவே எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் இருந்தனர். மரணத்திற்கு எட்டாதவர்களும், முதுமை தளர்ச்சிக்கு மேம்பட்டவர்களுமான {இளைஞர்களுமான} அவர்கள், புலிகள், சிங்கங்கள் மற்றும் யானைகள் நிறைந்த ஒரு மலைநாட்டைக் கடந்த இரு வணிகர்களைப் போலத் தெரிந்தனர் [3]. உண்மையில் (துரோணர் மற்றும் கிருதவர்மனிடம் இருந்து) விடுபட்ட அவர்களைக் கண்ட உமது வீரர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முக நிறத்தைப் பயங்கரமாகக் கருதினர்; உம்மவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்க ஓலமிட்டனர்.கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான துரோணரிடம் இருந்தும், பூமியின் தலைவர்களான பிறரிடமிருந்தும் விடுபட்ட பார்த்தனும், கிருஷ்ணனும், சுடர்மிக்க இரு சூரியன்களைப் போலத் தெரிந்தனர். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், பெருங்கடலுக்கு ஒப்பான துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, மிக ஆழமான கடலைக் கடந்து இன்பத்தில் நிறைந்திருக்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர். துரோணர் மற்றும் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} பாதுகாக்கப்பட்ட படைப்பிரிவுகளின் அடர்த்தியான ஆயுத மழையில் இருந்து விடுபட்ட கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், இந்திரனையோ, அக்னியையோ போலச் சுடர்மிகும் பிரகாசத்துடன் தெரிந்தனர். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும், தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, மலர்ந்திருக்கும் கர்ணிகரங்களால் {கோங்கு மரங்கள்} நிறைந்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.
துரோணரை முதலையாகவும், ஈட்டிகளைச் சீற்றமிக்கப் பாம்புகளாகவும், கணைகளை மகரங்களாகவும், க்ஷத்திரியர்களை ஆழமான நீராகவும் கொண்ட அகலமான தடாகத்தைக் கடந்து, விற்களின் நாணொலிகளையும், உள்ளங்கை ஒலிகளையும் இடிகளாகக் கொண்டதும், கதாயுதங்களையும், வாள்களையும் மின்னல்கீற்றுகளாகக் கொண்டதும், துரோணரின் ஆயுதங்களால் ஆனதுமான அந்த மேகத்தில் இருந்து வெளியே வந்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும், இருளில் இருந்து விடுபட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். வலிமைமிக்கவர்களும், புகழ்மிக்க வில்லாளிகளுமான அவ்விரு கிருஷ்ணர்களும் துரோணரின் ஆயுதங்களால் தடுக்கப்பட்ட பகுதிகளைக் கடந்ததும், மழைக்காலங்களில் நீர் நிறைந்திருப்பவையும், முதலைகள் நிறைந்தவையும், பெருங்கடலைத் தங்களில் ஆறாவதாகக் கொண்டவையுமான (சதத்ரூ, விபாசை, இரவி {இராவதீ}, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய) ஐந்து ஆறுகளைத் தங்கள் கரங்களின் உதவியால் கடந்து வந்த மனிதர்களைப் போல அனைத்து உயிர்களும் அவர்களைக் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கருதின [4].தங்களுக்கு அதிகத் தொலைவில் இல்லாத ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி {அவன் மீது} கண்களைச் செலுத்திய அவ்விரு வீரர்களும், ருரு மானின் மீது பாயும் விருப்பத்தில் காத்திருந்த புலிகளைப் போலத் தெரிந்தனர். ஓ! ஏகாதிபதி, ஜெயத்ரதரன் ஏற்கனவே கொல்லப்பட்டவன் என்று உமது வீரர்கள் கருதுமளவிற்கு அவர்களது {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடைய} முகத்தின் நிறம் இருந்தது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிவந்த கண்களைக் கொண்டவர்களும், ஒன்றாக இருந்தவர்களுமான கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} ஜெயத்ரதனைக் கண்டதும் மகிழ்ச்சியால் நிறைந்து மீண்டும் மீண்டும் முழங்கினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, கையில் கடிவாளத்துடன் நின்ற சௌரி {கிருஷ்ணன்} மற்றும் வில்லுடன் இருந்த பார்த்தன் ஆகியோரின் காந்தி சூரியனையோ, நெருப்பையோ போன்றிருந்தது. துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கண்டதால், சதைத்துண்டுகளைக் கண்ட இரு பருந்துகளைப் போல அவர்கள் இன்புற்றனர். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வெகுதொலைவில் இல்லை என்பதைக் கண்ட அவர்கள், இறைச்சித் துண்டை நோக்கிப் பாயும் பருந்துகள் இரண்டைப் போல அவனை {ஜெயத்ரதனை} நோக்கிக் கோபத்துடன் விரைந்தனர்.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் (துரோணரின் படைப்பிரிவை) மீறியதைக் கண்டவனும், துரோணரால் கவசம் பூட்டப்பட்டவனும், குதிரைகளைச் சீராக்குவதையும், அவற்றை வழிநடத்துவதையும் நன்கறிந்தவனும், உமது வீர மகனுமான மன்னன் துரியோதனன், சிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனித்தேரில் விரைந்தான். ஓ! மன்னா, வலிமைமிக்க வில்லாளிகளான கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} தாண்டிச் சென்ற உமது மகன் {துரியோதனன்}, தாமரைக் கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} நோக்கித் திரும்பினான். தனஞ்சயனை {அர்ஜுனனை} உமது மகன் {துரியோதனன்} தாண்டிச் சென்றதும், உமது துருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு இசைக்கருவிகளும் மகிழ்ச்சிகரமாக முழக்கப்பட்டன. இரு கிருஷ்ணர்களின் எதிரே நின்ற துரியோதனனைக் கண்டு சங்கொலிகளுடன் கலந்து சிங்க முழக்கங்கள் செய்யப்பட்டன. ஓ! மன்னா, சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பாக ஜெயத்ரதனின் பாதுகாவலர்களாக நின்றவர்களும், போரில் உமது மகனை {துரியோதனனைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தங்களைக் கடந்து {மீறிச்} சென்றதைக் கண்ட கிருஷ்ணன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.
துரியோதனனின் செருக்கு! – துரோண பர்வம் பகுதி – 101-துரியோதனனின் பலத்தையும், அவன் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளையும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் நினைவுப்படுத்தியது; துரியோதனனைக் கொல்ல அர்ஜுனனை ஏவிய கிருஷ்ணன்; அர்ஜுனனிடம் துரியோதனன் பேசியது…
வாசுதேவன் {கிருஷ்ணன் – அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நம்மைக் கடந்து செல்லும் இந்தச் சுயோதனனைப் {துரியோதனனைப்} பார். நான் இதை உயர்ந்த அற்புதமாகக் கருதுகிறேன். இவனுக்கு {துரியோதனனுக்கு} இணையான தேர்வீரன் எவனும் இல்லை. இவனது கணைகள் தொலைதூரம் செல்கின்றன. இவன் பெரும் வில்லாளியாக இருக்கிறான். இவன் ஆயுதங்களை அறிந்தவனென்பதால், போரில் இவனை வெல்வது மிகக் கடினமாகும். திருதராஷ்டிரரின் வலிமைமிக்க மகன் {துரியோதனன்} தாக்குவதில் கடுமை கொண்டவனாவான், மேலும் அனைத்து போர்முறைகளையும் அறிந்தவனும் ஆவான். பெரும் ஆடம்பரத்தில் வளர்ந்த இவன் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாலும் உயர்வாகக் கருதப்படுகிறான் [1].ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நன்கு சாதித்தவனான இவன் {துரியோதனன்} எப்போதும் பாண்டவர்களை வெறுக்கிறான். ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இந்தக் காரணங்களுக்காகவே நீ இவனுடன் {துரியோதனனுடன்} இப்போது போரிட வேண்டும் என நான் நினைக்கிறேன். பகடையில் பணயம் போல, {போரில்} வெற்றியோ, தோல்வியோ அஃது இவனைச் சார்ந்தே இருக்கிறது. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ நீண்ட நாட்களாகக் கொண்டிருக்கும் கோபமெனும் நஞ்சை இவன் {துரியோதனன்} மீது கக்குவாயாக. பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகள் அனைத்திற்கும் வேர் இந்த வலிமைமிக்கத் தேர்வீரனே {துரியோதனனே} ஆவான். இவன் இப்போது உன் கணைகள் அடையும் தொலைவிற்குள் இருக்கிறான். உன் வெற்றியைக் கவனிப்பாயாக.
அரசாட்சியை விரும்புபவனான மன்னன் துரியோதனன் உன்னுடன் போருக்கு ஏன் வந்தான்? இவன் உன் கணைகள் அடையும் தொலைவில் இப்போது வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எதனால் இவனது உயிரை எடுக்கமுடியுமோ அதைச் செய்வாயாக. செழிப்பில் செருக்குக் கொண்டு உணர்வுகளை இழந்திருக்கும் இவன் {துரியோதனன்}, எந்தத் துயரையும் எப்போதும் உணர்ந்ததில்லை. ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, இவன் {துரியோதன்} போரில் உன் ஆற்றலை அறியமாட்டான். உண்மையில் தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களும் போரில் உன்னை வெல்லத் துணியாது. எனவே, தனியனான துரியோதனனைக் குறித்து என்ன சொல்வது?
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன் தேரின் அருகே இவன் வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனனே} விருத்திரனைக் கொன்ற புரந்திரனை {இந்திரனைப்} போல இவனைக் {துரியோதனனைக்} கொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, இந்தத் துரியோதனனே உனக்குத் தீமை செய்ய முயன்றவன். மன்னர் யுதிஷ்டிரரை இவன் வஞ்சகத்தால் ஏமாற்றினான். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, நீங்கள் அனைவரும் பாவமற்றவர்களாக இருப்பதால், பாவ ஆன்மா கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்} எப்போதும் அவருக்கு {யுதிஷ்டிரருக்குப்} பல்வேறு தீச்செயல்களைச் செய்தான். ஓ! பார்த்தா, போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்ட நீ, பேராசையின் வடிவமானவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனும், எப்போதும் கொடூரமாக இருப்பவனுமான இந்தத் தீயவனை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் கொல்வாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வஞ்சகத்தால் உங்கள் அரசை இழந்ததையும், காடுகளுக்கு நாடு கடத்தப்பட்டதையும், கிருஷ்ணைக்கு {கருப்பியான திரௌபதிக்கு} நேர்ந்த தீங்குகளையும் நினைவுகூர்ந்து உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.
உன் நோக்கத்தைத் தடுக்க முயலும் இவன் {துரியோதனன்} உன் எதிரே நிற்பது நல்பேறாலேயே. இவன் போரில் உன்னுடன் போரிட வேண்டும் என்பதை இன்று இவன் அறிந்ததும் நற்பேறாலேயே. நீ விரும்பாமலே உன் நோக்கங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூடப்போவதும் நற்பேறாலேயே. எனவே, பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில், அசுரன் ஜம்பனை {ஜம்பாசுரனைக்} கொன்ற இந்திரனைப் போல நீ, தன் குலத்தில் இழிந்தவனான இந்தத் திருதராஷ்டிர மகனை {துரியோதனனைக்} கொல்வாயாக. இவனை {துரியோதனனை} நீ கொன்றுவிட்டால், தலைவனில்லாத இப்படையைப் பிளந்துவிடலாம். தீய ஆன்மாக் கொண்ட இழிந்தவர்களின் இந்த வேரை அறுத்துவிடுவாயாக. இந்தப் பகைமையில் அவப்ரீதம் [2] இப்போது செய்யப்படட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும். இஃது என்னால் செய்யப்பட வேண்டும். பிற அனைத்தையும் அலட்சியம் செய்துவிட்டு, துரியோதனன் எங்கிருக்கிறானோ அங்கே செல்வாயாக. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் பக்கத்தில் ஒரு முள்ளும் இல்லாமல் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அரசாட்சியை அனுபவித்த அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} தலையை நான் அறுப்பேன். ஓ! கேசவா, தலைமயிரைப் பிடித்து இழுத்து வந்த வடிவில், அந்தத் தீங்குக்குத் தகாத திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதில் நான் வெல்ல மாட்டேனா?” என்று மறுமொழி கூறினான் {அர்ஜுனன்}.
இப்படித் தங்களுக்குக்குள் பேசிக்கொண்ட இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, மன்னன் துரியோதனனைப் பிடிக்க விரும்பி, மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சிறந்த வெண்குதிரைகளைத் தூண்டினர். உமது மகனை {துரியோதனனைப்} பொறுத்த வரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துச் சூழ்நிலையிலும் அச்சத்திற்கு ஆட்படுவான் என்று கணிக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலைக்கு வந்தும் எந்த அச்சமும் கொள்ளவில்லை. அர்ஜுனனையும், ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்} தடுப்பதற்காக அவன் {துரியோதனன்} எதிர்த்துச் சென்றதால், உமது தரப்பில் அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அப்போது அவனை மெச்சினர். உண்மையில், போரில் மன்னனைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த குரு படையும் பேரொலியுடன் செய்த ஆரவாரம் அங்கே கேட்கப்பட்டது. பயங்கரமான ஆரவாரம் அங்கே எழுந்த போது, தன் எதிரியைக் கடுமையாக ஒடுக்கிய உமது மகன் {துரியோதனன்}, அவனது {அர்ஜுனனின்} முன்னேற்றத்தைத் தடுத்தான்.
வில்தரித்திருந்த உமது மகனால் தடுக்கப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தத் துரியோதனனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பெரும் கோபம் கொண்டான். ஒருவர் மேலொருவர் கோபம் கொண்ட துரியோதனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கண்டவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான க்ஷத்திரியர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களையே பார்க்கத் தொடங்கினர். ஓ! ஐயா, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் சினத்தால் நிறைந்திருப்பதைக் கண்டவனும், போரை விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்}, புன்னகைத்தபடியே அவர்களைச் சவாலுக்கழைத்தான்.
அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சியால் நிறைந்தான், மேலும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} உற்சாகமடைந்தான். பேரொலியுடன் முழங்கிய அவ்விருவரும் தங்கள் முதன்மையான சங்குகளை முழக்கினர். அவர்கள் இப்படி உற்சாகங்கொள்வதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் உமது மகனின் உயிரில் {உமது மகன் துரியோதனன் உயிர்வாழ்வான் என்பதில்} நம்பிக்கையிழந்தனர். உண்மையில் கௌரவர்கள் அனைவரும், மேலும் எதிரிகளில் பலரும், துயரத்தை அடைந்து, (புனித) நெருப்பின் வாயில் ஏற்கனவே ஊற்றப்பட்ட ஆகுதியாகவே உமது மகனைக் கருதினர். கிருஷ்ணனும், அந்தப் பாண்டவனும் {அர்ஜுனனும்} இவ்வளவு உற்சாகங்கொள்வதைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, “மன்னன் மாண்டான்”, “மன்னன் மாண்டான்” என்று உரக்கக் கதறினர். வீரர்களின் உரத்த கதறலைக் கேட்ட துரியோதனன், “உங்கள் அச்சங்கள் விலகட்டும். இவ்விரு கிருஷ்ணர்களையும் நான் மரணலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.
தன் வீரர்கள் அனைவரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வெற்றியை எதிர்பார்த்தவனுமான மன்னன் துரியோதனன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ பாண்டுவால் பெறப்பட்டவனானால், நீயும் கேசவனும் {கிருஷ்ணனும்} கொண்ட தெய்வீக மற்றும் உலகம் சார்ந்த ஆயுதங்கள் அனைத்தையும் காலந்தாழ்த்தாமல் என் மீது செலுத்துவாயாக. நான் உன் ஆண்மையைக் காண விரும்புகிறேன். நாங்கள் காணாத உன் சாதனைகள் பலவற்றைக் குறித்து மக்கள் பேசுகிறார்கள். பெரும் வீரம் கொண்ட பலரால் பாராட்டப்பட்டவையும், நீ அடைந்தவையுமான அந்தச் சாதனைகளை என்னிடம் காட்டுவாயாக” என்றான் {துரியோதனன்}.
துரியோதனனை வென்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 102-கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தாக்கிய துரியோதனன்; அர்ஜுனனின் கணைகள் துரியோதனனின் கவசத்தைத் துளைக்காதது; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; துரியோதனன் மீது தெய்வீகக் கணைகளை அர்ஜுனன் ஏவவும் அதை வெட்டிய அஸ்வத்தாமன்; துரியோதனனைத் தேரிழந்தவனாக்கி அந்தக் கூட்டத்தில் இருந்து கிருஷ்ணனும் அர்ஜுனனும் வெளிப்பட்டது; அவர்களைக் கண்டு கோபம் கொண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன மன்னன் துரியோதனன், பெரும் வேகம் கொண்டவையும், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையுமான மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான். மேலும் நான்கைக் கொண்டு {நான்கு கணைகளால்} தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} வாசுதேவனின் {கிருஷ்ணனின்} நடுமார்பைப் பத்து கணைகளால் துளைத்து, ஒரு பல்லத்தைக் [1] கொண்டு பின்னவனின் {கிருஷ்ணனின்} கையிலிருந்த சாட்டையைத் தரையில் வீழ்த்தினான். நிதானமாக இருந்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஒருக்கணத்தையும் இழக்காமல், கல்லில் கூராக்கப்பட்டவையும், அழகிய இறகுகளைக் கொண்டவையுமான பதினான்கு கணைகளை அவன் {துரியோதனன்} மீது ஏவினான். எனினும், அந்தக் கணைகள் அனைத்தையும், துரியோதனனின் கவசம் தடுத்து நிறுத்தியது. அவை கனியற்று {பலனற்றுப்} போனதைக் கண்ட பார்த்தன் கூர்முனை கொண்ட பதினான்கு கணைகளை மீண்டும் அவன் {துரியோதனன்} மீது ஏவினான். இவையும் துரியோதனனின் கவசத்தால் தடுக்கப்பட்டன.பகை வீரர்களைக் கொல்பவனான அந்தக் கிருஷ்ணன் இருபத்தெட்டு கணைகளும் பலனற்றுப் போனதைக் கண்டு, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “மலைகள் அசைவதைப் போல இதற்கு முன் காணாத ஒரு காட்சியை நான் காண்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஏவப்படும் கணைகள் பலனற்றுப் போகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, உன் காண்டீவம் சக்தியை இழந்துவிட்டதா? உனது {கைப்} பிடியின் வலிமையும், உனது கரங்களின் பலமும் எப்போதையும் விடக் குறைந்துவிட்டதா? இது துரியோதனனுடனான இறுதிச் சந்திப்பாக ஆகாதா? ஓ! பார்த்தா, நான் உன்னிடம் கேட்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பார்த்தா, ஒரு சிறு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் துரியோதனனின் தேர் முன்பு விழும் உன் கணைகள் அனைத்தையும் கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுகிறேன். ஐயோ, இடியின் வலிமையைக் கொண்டவையும், எதிரிகளின் உடல்களை எப்போதும் துளைப்பவையுமான இந்த உன் பயங்கரக் கணைகள் அனைத்தும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறுகின்றன என்றால் என்ன பேறின்மையாக {துரதிர்ஷ்டமாக} இஃது இருக்கும்?” {என்றான் கிருஷ்ணன்}.
அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, துரியோதனன் உடலில் உள்ள இந்தக் கவசம் துரோணரால் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது போலப் பூட்டப்பட்டிருக்கும் கவசத்தை என் ஆயுதங்களால் ஊடுருவ முடியாது. ஓ! கிருஷ்ணா, இந்தக் கவசத்தில், மூன்று உலகங்களின் வலிமையும் உட்பொதிந்திருக்கிறது {மறைந்திருக்கிறது}. இதைத் துரோணர் மட்டுமே அறிவார், மனிதர்களில் சிறந்த அவரிடம் இருந்தே நானும் அதைக் கற்றேன். இந்தக் கவசமானது என் ஆயுதங்களால் துளைக்கப்படக்கூடியதல்ல. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} தன் இடியைக் {வஜ்ரத்தைக்} கொண்டு இதைப் பிளந்துவிட முடியாது. ஓ! கிருஷ்ணா, இவை அனைத்தையும் அறிந்தவனான நீ, என்னை ஏன் குழப்ப முயல்கிறாய்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, மூவுலகங்களிலும் நேர்ந்தவை, {அவற்றில்} இப்போது இருப்பவை, எதிர்காலத்தின் கருவறையில் இருப்பவை ஆகிய அனைத்தையும் நீ அறிவாய். உண்மையில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவற்றை உன்னைவிடச் சிறப்பாக அறிந்தவன் வேறு எவனும் இல்லை.
ஓ! கிருஷ்ணா, துரோணரால் பூட்டப்பட்ட கவசத்துடன் இருக்கும் இந்தத் துரியோதனன், இந்தக் கவசத்தை அணிந்திருப்பதாலேயே போரில் அச்சமற்றவனாக நிற்கிறான். எனினும், ஓ! மாதவா, இந்தக் கவசத்தை அணிந்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் அறியவில்லை. ஒரு பெண்ணைப் போலவே இவன் அஃதை அணிந்திருக்கிறான். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என் கரங்களின் வலிமையையும், என் வில்லின் வலிமையையும் இப்போது பார். அத்தகு கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குரு இளவரசனை {துரியோதனனை} நான் வெல்வேன்.
தேவர்களின் தலைவர் {பிரம்மன்}, இந்தப் பிரகாசமிக்கக் கவசத்தை அங்கிரசுக்குக் கொடுத்தார். பின்னவரிடம் இருந்து பிருஹஸ்பதி அதை அடைந்தார். பிருஹஸ்பதியிடமிருந்து அதைப் புரந்தரன் {இந்திரன்} அடைந்தான் [2]. தேவர்களின் தலைவன், அஃதை அணியும்போது சொல்லப்பட்ட வேண்டிய மந்திரங்களுடன் என்னிடம் கொடுத்தான். பிரம்மரால் உண்டாக்கப்பட்ட இந்தக் கவசம் தெய்வீகமானதாக இருந்தாலும், என் கணைகளால் தாக்கப்படும் இந்த இழிந்த துரியோதனன் அதனால் {அந்தக் கவசத்தால்} பாதுகாக்கப்படமாட்டான்” என்றான் {அர்ஜுனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன் {மானவாயுத} மந்திரங்களால் சில கணைகளை ஊக்கப்படுத்தி அவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தி {வில்லை} வளைக்கத் தொடங்கினான். அப்படி அவன் {அர்ஜுனன்} வில்லின் நாணை இழுத்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அனைத்து ஆயுதங்களையும் கலங்கடிக்கவல்ல ஓர் ஆயுதத்தால் அவற்றை வெட்டினான் [3]. பிரம்மத்தை உச்சரிப்பவனால் (அஸ்வத்தாமனால்} அந்தக் கணைகள் தொலைவிலிருந்து இப்படிச் செயலிழக்கச் செய்யப்பட்டதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், ஆச்சரியத்தால் நிறைந்து, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} “ஓ! ஜனார்த்தனா, இந்த ஆயுதத்தை இருமுறை என்னால் பயன்படுத்த முடியாது, ஏனெனில், என்னையும், என் துருப்புகளையுமே அது கொல்லும்” என்றான்.அதே வேளையில் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான ஒன்பது கணைகளால் அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} ஒவ்வொருவரையும் துளைத்தான். மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது கணைகளைக் கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது மழையாகப் பொழிந்தான். (தங்கள் மன்னனால் ஏவப்பட்ட) கணைமாரியைக் கண்ட உமது வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தனர்.
அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தான். தன் கண்களைத் தன் எதிரியின் உடல் மீது செலுத்தியும், அந்த ஊடுருவப்பட முடியாத கவசத்தில் நன்கு மறைக்கப்படாத எந்த ஒரு பகுதியையும் அவன் காணவில்லை. பிறகு, மரணத்திற்கு ஒப்பானவையும் கூர்முனை கொண்டவையுமான சில கணைகளைத் தன் வில்லில் இருந்து நன்கு ஏவிய அர்ஜுனன், தன் எதிராளியின் {துரியோதனனின்} குதிரைகளையும், அதற்கடுத்த அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். அதன் பிறகு வீரப் பார்த்தன், துரியோதனனின் வில்லையும், அவனது விரல்களில் உள்ள தோலுறைகளையும் அறுத்தான். பிறகு அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரியின் தேரைத் துண்டு துண்டாக வெட்டத் தொடங்கினான். மேலும் அவன் {அர்ஜுனன்}, கூரிய கணைகள் இரண்டால் துரியோதனனைத் தேரற்றவனாக்கினான். பிறகு அர்ஜனன், அந்தக் குருமன்னனின் உள்ளங்கைகள் இரண்டையும் துளைத்தான்.
அந்தப் பெரும் வில்லாளியானவன் {துரியோதனன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் துயரில் விழுவதைக் கண்ட வீரர்கள் பலர், அவனை மீட்க விரும்பி அந்த இடத்திற்கு விரைந்தனர். பல்லாயிரம் தேர்கள், ஆயுதங்களுடன் கூடிய யானைகள் மற்றும் குதிரைகள், கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான காலாட்படை வீரர்கள் எனப் பெரும் கூட்டத்தால் சூழப்பட்டதால், அவர்களின் தேரோ, அர்ஜுனன் மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருந்த தேரோ அதற்கு மேலும் காணப்படவில்லை.
அப்போது அர்ஜுனன், தன் ஆயுதங்களின் வலிமையால் அந்தக் கூட்டத்தைக் கொல்லத் தொடங்கினான். நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும், யானைகளும் அங்கங்களை இழந்து களத்தில் வெகு விரைவாக விழுந்தனர். கொல்லப்பட்டோ, கொல்லப்படுவதாலோ அந்தச் சிறந்த தேரை அடைய அவர்கள் தவறினர். உண்மையில், அர்ஜுனன் சென்ற தேரானது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இரண்டு மைல்கள் நீளத்திற்குப் படைகளால் முற்றுகையிடப்பட்டதால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த விருஷ்ணி வீரன் (கிருஷ்ணன்), நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “நான் என் சங்கை முழக்கப் போகிறேன்; நீ விரைவாக உனது வில்லைப் பெரும்பலத்துடன் வளைப்பாயாக” {என்றான் கிருஷ்ணன்}. அப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைப் பெரும்பலத்துடன் வளைத்து, தன் விரல்களால் வில்லின் நாணை இழுத்து பேரோலியை உண்டாக்கி, அடர்த்தியான கணை மழைகளைப் பொழிந்து எதிரிகளைக் கொல்லத் தொடங்கினான். அதேவேளையில், புழுதியால் முகம் மறைக்கப்பட்டிருந்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தைப் பேரொலியுடன் மிகப் பலமாக முழக்கினான். பலமாகவோ, பலவீனமாகவோ இருந்த குருவீரர்கள் அனைவரும், அந்தச் சங்கொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் கீழே தரையில் விழுந்தனர்.
அந்த மோதலில் இருந்து விடுபட்ட அர்ஜுனனின் தேரானது, காற்றால் இயக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. ஜெயத்ரதனின் பாதுகாவலர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும் (அர்ஜுனனைக் கண்டு) சினத்தால் நிறைந்தனர். உண்மையில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள், பார்த்தனைத் திடீரெனக் கண்டதால், பேரொலியை எழுப்பி அவ்வொலியால் பூமியை நிறைத்தனர். அவர்களது கணைகளின் “விஸ்” என்ற ஒலி கடும் ஒலிகள் பிறவற்றோடும், அவர்களது சங்கொலிகளோடும் கலந்து ஒலித்தன. மேலும் அந்த உயர் ஆன்ம வீரர்கள் சிங்க முழக்கங்களையும் செய்தனர்.
உமது துருப்புகளால் எழுப்பப்பட்ட பயங்கர ஆரவாரத்தைக் கேட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளை முழக்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள், தீவுகள், பாதாள உலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பூமாதேவி அவர்களது (சங்குகளின்) பேரொலியால் நிறைந்ததாகக் காணப்பட்டது. உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலியானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, இருபடைகளிலும் எதிரொலித்தது. பிறகு, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் கண்ட உமது தேர்வீரர்கள் மிகவும் அச்சமடைந்தனர். எனினும் விரைவாக மீண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். உண்மையில், உமது படையின் பெரும் தேர்வீரர்கள், மிகவும் அருளப்பட்ட மனிதர்களான அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} கண்டு, கவசம் பூண்டவர்களான அவர்கள் விரைந்தனர். இப்படி முன்வந்த காட்சி மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
ஜெயத்ரதனின் பாதுகாவலர்களுடன் கடும்போர்! – துரோண பர்வம் பகுதி – 103-அர்ஜுனனை எதிர்த்த எட்டு மகாரதர்கள்; பயங்கரச் சங்கொலிகள்; கிருஷ்ணார்ஜுனர்களின் சங்கொலிகள் கௌரவர்களை அச்சுறுத்தியது; காயம்பட்ட கிருஷ்ணனைக் கண்டு கோபமூண்ட அர்ஜுனன் கௌரவர்களைத் துளைத்தது; கௌரவர்களைப் பந்தாடிய அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விருஷ்ணி மற்றும் அந்தகருள் முதன்மையானவனையும் {கிருஷ்ணனையும்}, குரு குலத்தவரில் முதன்மையானவையும் {அர்ஜுனனையும்} கண்ட உடனேயே, உமது வீரர்களில் முதன்மையடைய முயன்ற ஒவ்வொருவரும் நேரத்தை இழக்கமால், அவர்களைக் கொல்லும் விருப்பத்தில் எதிர்த்துச் சென்றனர்.
விஜயனும் {அர்ஜுனனும்} அந்தத் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவையுமான தங்கள் பெரும் தேர்களில் சென்ற அவர்கள், தங்கப்பிடி கொண்டவையும், பிரகாசத்தால் பார்க்கப்பட முடியாதவையுமான விற்களை ஏந்தி, உரக்க கூச்சலிட்டுக் கொண்டு, கோபக்கார குதிரைகளால் இழுக்கப்பட்டுத் திசைகளின் பத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி விரைந்தனர்.
பூரிஸ்ரவஸ், சலன், கர்ணன், விருஷசேனன், ஜெயத்ரதன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய அந்தப் பெரும் தேர்வீரர்களான எட்டு பேரும், ஏதோ வானத்தை விழுங்கிவிடுவதைப் போல, புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், தங்கச் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அற்புதத் தேர்களால் திசைகளில் பத்து புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடிய சென்றனர்.
கவசம் பூண்டு, கோபத்தால் நிறைந்து, மேகங்களின் திரள்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறி, கூரிய கணைகளின் மழையால் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனை மறைத்தனர். பெரும் வேகம் கொண்டவையும், சிறந்த இனத்தைச் சேர்ந்தவையுமான அழகிய குதிரைகளால் தாங்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், திசைப்புள்ளிகளை ஒளியூட்டியபோது பிரகாசமாகத் தெரிந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மலைப்பகுதிகளைச் சேர்ந்த சிலவும், நதிகளைச் சேர்ந்த சிலவும், சிந்துக்களின் நாட்டைச் சேர்ந்த சிலவும் எனப் பல்வேறு நாடுகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவையும், பெரும் வேகம் கொண்டவையுமான முதன்மையான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களைக் கொண்ட குருக்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலர், உமது மகனை {துரியோதனனை} மீட்க விரும்பி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி விரைந்தனர். ஓ! மன்னா, மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் சங்குகளை எடுத்து முழக்கி, ஆகாயத்தையும், கடல்களுடன் கூடிய பூமாதேவியையும் {அவற்றின் ஒலியால்} நிறைத்தனர்.
அப்போது தேவர்களில் முதன்மையானோரான அந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூடப் பூமியில் முதன்மையான தங்கள் சங்குகளை முழக்கினர். குந்தியின் மகன் {அர்ஜுனன்} தேவதத்தத்தையும், கேசவன் பாஞ்சஜன்யத்தையும் முழக்கினர். தனஞ்சயனால் {அர்ஜுனனால்} வெளியிடப்பட்ட தேவதத்தத்தின் வெடிப்பொலியானது, பூமியையும், ஆகாயத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தது. வாசுதேவனால் முழக்கப்பட்ட பாஞ்சஜன்யமும் அனைத்து ஒலிகளையும் விஞ்சி வானத்தையும் பூமியையும் நிறைத்தது.
மருண்டோருக்கு அச்சத்தையும், துணிவுள்ளோருக்கு உற்சாகத்தையும் தூண்டிய அந்தக் கடுமையான பயங்கரமான ஒலி தொடர்ந்த போது, பேரிகைகள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஆயிரக்கணக்கில் முழக்கப்பட்ட போது, ஓ! பெரும் மன்னா, குரு தரப்பால் அழைக்கப்பட்டவர்களும், தனஞ்சயனின் நன்மையில் அக்கரையுள்ளவர்களும், சினத்தால் நிறைந்தவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளாலேயே கூட அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சங்குகளின் உரத்த வெடிப்பொலிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தங்கள் தங்கள் துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மன்னர்களும், கேசவன் மற்றும் அர்ஜுனனின் வெடிப்பொலிகளுக்குத் தங்கள் வெடிப்பொலிகளால் பதில் சொல்ல விரும்பி, சினத்தால் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர். அந்தச் சங்கொலிகளால் தூண்டப்பட்டு முன் நகர்ந்த குரு படையின் தேர் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்திருந்தன. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் இருந்தோர் ஏதோ நோயுற்றவர்களைப் போலவே {மந்தமாகக்} காணப்பட்டனர்.
துணிவுமிக்க அந்த வீரர்களால் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனால்} முழக்கப்பட்ட அந்தச் சங்கொலியின் எதிரொலியால் கலங்கடிக்கப்பட்ட குரு படையானது, இடியொலியின் எதிரொலியால் (ஏதோ ஓர் இயற்கையான நடுக்கத்தின் மூலம்) கீழே விழுந்த ஆகாயம் போல இருந்தது [1]. ஓ! ஏகாதிபதி, அந்த உரத்த ஆரவாரமானது, பத்து புள்ளிகளிலும் எதிரொலித்து, யுக முடிவின் போது அனைத்துயிர்களையும் அச்சுறுத்தும் முக்கிய நிகழ்வுகளைப் போல அந்த {கௌரவப்} படையை அச்சுறுத்தியது.பிறகு துரியோதனன், ஜெயத்ரதனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த எட்டு பெரும் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எழுபத்துமூன்று கணைகளால் வாசுதேவனையும், மூன்று பல்லங்களால் அர்ஜுனனையும், மேலும் ஐந்து பிற கணைகளால் அவனது கொடிமரத்தையும், (நான்கு) குதிரைகளையும் தாக்கினான்.
ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} துளைக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, நூறு கணைகளால் அஸ்வத்தாமனைத் தாக்கினான். பிறகு கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சல்லியனுக்குச் சொந்தமானதும், நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் கூடியதுமான வில்லையும் கைப்பிடிக்கும் இடத்தில் அறுத்தான். பிறகு சல்லியன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.
பூரிஸ்ரவஸ், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான். கர்ணன், இருபத்துமூன்று கணைகளாலும், விருஷசேனன் ஏழு கணைகளாலும் அவனைத் துளைத்தனர். ஜெயத்ரதன் எழுபத்து மூன்று கணைகளாலும், கிருபர் பத்தாலும் அர்ஜுனனைத் துளைத்தனர். அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனும் {சல்லியனும்} பத்துக் கணைகளால் பல்குனனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது கணைகளால் அவனைத் துளைத்தான். அவன் மீண்டும் ஒரு முறை பார்த்தனை ஐந்து கணைகளாலும், வாசுதேவனை இருபது கணைகளாலும் துளைத்தான்.
மனிதர்களில் புலியும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிக்காட்டும்படி அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்குத் துளைத்தான். கர்ணனை பனிரெண்டு கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த பார்த்தன், சல்லியனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான். மேலும் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} மூன்று கணைகளாலும், சல்லியனைப் பத்தாலும் துளைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, கிருபரை இருபத்தைந்து கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நூறாலும் துளைத்தான், மேலும் அவன் எழுபது கணைகளால் துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} தாக்கினான்.
அப்போது சினத்தால் நிறைந்த பூரிஸ்ரவஸ், கிருஷ்ணனின் கையில் இருந்த சாட்டையை அறுத்து, இருபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, வலிமைமிக்கச் சூறாவளியொன்று மேகத்திரள்களைக் கிழிப்பதைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் தன் எதிரிகளான அவர்களைச் சிதைத்தான்” {என்றான் சஞ்சயன்}.
பத்துக் கொடிமரங்கள்! – துரோண பர்வம் பகுதி – 104-அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகிய பத்து வீரர்களின் கொடிமரங்கள் குறித்த வர்ணனை; அவர்களுக்கிடையில் மூண்ட போர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பெரும் அழகுடன் பிரகாசித்தவையும், (அந்தப் போரில்) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நமது வீரர்களுக்குச் சொந்தமானவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்து எனக்கு விவரிப்பாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்ம வீரர்களின் பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்துக் கேளும். அவற்றின் வடிவங்களையும், பெயர்களையும் நான் விவரிப்பதைக் கேளும். உண்மையில், ஓ! மன்னா, அந்த முதன்மையான தேர்வீரர்களின் தேர்களில் நெருப்புத் தழல்களைப் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்த பல்வேறு வகைகளிலான கொடிமரங்கள் காணப்பட்டன. தங்கத்தால் ஆனவையாகவோ, தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவையாகவோ, தங்க இழைகளால் இழைக்கப்பட்டவையாகவோ இருந்தவையும், தங்க மலையை (மேருவைப்) போலத் தெரிந்தவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமங்கள் அங்கே உயர்ந்த அழகுடன் காணப்பட்டன.
வீரர்களுடைய அந்தக் கொடிமரங்கள் அனைத்திலும் சிறந்த கொடிகளும் இணைக்கப்பட்டிருந்தன. உண்மையில், சுற்றிலும் பல்வேறு வண்ணங்களிலான கொடிகளைக் கொண்ட கொடிமரங்களான அவை, மிகவும் அழகாகத் தெரிந்தன. மேலும், காற்றால் அசைந்த அந்தக் கொடிகள், விளையாட்டரங்கில் ஆடும் அழகிய பெண்களைப் போலத் தெரிந்தன. வானவில்லின் காந்தியைக் கொண்டவையும், அந்தத் தேர்வீரர்களுக்குச் சொந்தமானவையுமான கொடிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தென்றலில் அசைந்தபடியே அவர்களின் தேர்களை அலங்கரித்தன.
சிங்கத்தைப் போலக் கடுமுகமுடைய குரங்கின் அடையாளத்தைக் தாங்கிய அர்ஜுனனின் கொடிமரமானது, அந்தப் போரில் அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. ஓ! மன்னா, முதன்மையான குரங்கைத் தாங்கியதும், பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} அந்தக் கொடிமரம் குரு படையை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
அதே போல, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்கவாலை உச்சியில் கொண்டதும், உதயச் சூரியனின் பிரகாசத்துடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வானவில்லின் காந்தியைக் கொண்டதுமான துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கொடிமரமானது, தென்றலில் மிதந்தபடியும், குரு வீரர்களில் முதன்மையானோரின் மகிழ்ச்சியைத் தூண்டியபடியும் உயரத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்.
அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரமானது, தங்கத்தாலான யானை வடத்தை அடையாளமாக {கொடியாகத்} தாங்கியிருந்தது. ஓ! மன்னா, அந்தப் போரில் அஃது {அந்தக் கொடியானது} ஆகாயம் முழுமையையும் நிறைப்பதாகத் தெரிந்தது. தங்கத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கொடியானது, போரில் கர்ணனின் கொடிமரத்தில் இணைக்கப்பட்டு, காற்றால் அசைக்கப்பட்டு, அவனது தேரில் நடனமாடுவதைப் போலத் தெரிந்தது.
பாண்டவர்களின் ஆசானும், தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்த பிராமணரும், கௌதமரின் மகனுமான கிருபர், சிறந்த காளைமாடு ஒன்றைத் தம் அடையாளமாகக் {கொடியாகக்} கொண்டிருந்தார். ஓ! மன்னா, மூன்று நகரங்களை அழித்தவன் [1] தன் காளையுடன் பிரகாசிப்பதைப் போலக் காளைமாட்டுடன் கூடிய அந்த உயர் ஆன்மா {கிருபர்} பிரகாசமாகத் தெரிந்தார்.
விருஷசேனன், {தன் தேரில் உள்ள கொடிமரத்தில்} தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மயிலைக் கொண்டிருந்தான். அது {அந்த மயில்} எப்போதும் படையின் முகப்பை அலங்கரித்துக் கரைந்து கொண்டிருப்பதைப் போல அவனது {விருஷசேனனது} கொடிமரத்தில் இருந்தது. அந்த மயிலோடு கூடிய உயர் ஆன்ம விருஷசேனனின் தேரானது, ஓ! மன்னா, ஒப்பற்ற மயிலோடு கூடியதும், தங்கத்தாலான அழகிய கலப்பை முனையோடு {கொழுவோடு} கூடியதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான(தேவர்களின் படைத்தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} தேரைப் போல ஒளிர்ந்தது. ஓ! ஐயா, அந்த உழுமுனையானது {கலப்பை முனையானது} அவனது தேரில் பிரகாசமாகத் தெரிந்தது.
மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், தன் கொடிமர உச்சியில் அழகுடன் கூடியவளும், அனைத்து வித்துகளையும் உண்டாக்கவல்லவளுமான சோளத்தின் தலைமைத் தேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம் [2].சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கொடிமரத்தின் உச்சியை ஒரு வெள்ளிப் பன்றி அலங்கரித்திருந்தது. தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, வெண்மையான ஸ்படிகத்தின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடியில் அந்த வெள்ளி அடையாளத்தைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஈடுபட்டிருந்த சூரியனைப் போலப் பிரகாசித்தான் [3].வேள்விகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த சோமதத்தன் மகனுடைய {பூரிஸ்ரவஸின்} கொடிமரமானது, வேள்வி மரத்தை {யூபத்தை} அடையாளமாகத் தாங்கியிருந்தது. அது சூரியனைப் போறோ, சந்திரனைப் போன்ற ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஓ! மன்னா, தங்கத்தாலான சோமதத்த மகனின் வேள்விமரமானது, ராஜசூயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியின் போது எழுப்பப்படும் உயரமான மரத்தைப் {யூபத்தைப்} போன்றே பிரகாசமாகத் தெரிந்தது.
ஓ! ஏகாதிபதி, சலனின் கொடிமரமானது [4], தங்கத்தாலான மயில்களால் அனைத்துப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரும் வெள்ளி யானையைத் தாங்கியிருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் கொடிமரமானது, தேவமன்னனின் {இந்திரனின்} படையை அலங்கரிக்கும் பெரிய வெள்ளை யானையை {ஐராவதத்தைப்} போல உமது துருப்புகளை அலங்கரித்தது.தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்னன் துரியோதனனின் கொடிமரத்தில், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று இருந்தது. அவ்வீரனின் {துரியோதனனின்} சிறந்த தேரில் ஓ! மன்னா, ஒரு நூறு மணிகளின் கிண்கிணி ஒலியுடன் கூடிய அந்தக் கொடிமரம் இருந்தது. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, குருக்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, உயரமான அந்தக் கொடிமரத்துடன் போரில் பிரகாசமாகத் தெரிந்தான். உமது படைப்பிரிவுகளில் இந்த ஒன்பது கொடிமரங்களே [5] உயர நின்றன. அங்கே தெரிந்த பத்தாவது கொடிமரமானது, பெரும் குரங்கால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கொடிமரமே ஆகும். அந்தக் கொடிமரத்தைக் கொண்ட அர்ஜுனன், (தன் சிகரத்தில்) சுடர்மிக்க நெருப்பைக் கொண்ட இமயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அர்ஜுனனைத் தடுப்பதற்காகத் தங்கள் அழகிய, பிரகாசமான, பெரிய விற்களை எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஓ! மன்னா, தெய்வீக சாதனைகளைச் செய்தவனான பார்த்தனும் {அர்ஜுனன்}, உமது தீய கொள்கையின் விளைவால் எதிரிகளை அழிக்கும் வில்லான தன் காண்டீவத்தை எடுத்துக் கொண்டான். உமது குற்றத்தின் காரணமாக, ஓ! மன்னா, அரசவீரர்கள் பலர் அந்தப் போரில் கொல்லப்பட்டனர். (உமது மகனின்) அழைப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களின் ஆட்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களோடு சேர்த்து பல குதிரைகளும், பல யானைகளும் அழிந்தன.
(ஒரு புறத்தில்) துரியோதனனின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மறுபுறத்தில் அந்தப் பாண்டவர்களில் காளையும் {அர்ஜுனனும்} உரக்க முழங்கியபடி மோதலைத் தொடங்கினர். ஒன்றாகச் சேர்ந்திருந்த அந்த வீரர்கள் அனைவருடன், அச்சமற்ற வகையில் தனியாக மோதியவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தக் குந்தி மகனால் அங்கே அடையப்பட்ட சாதனை மிக அற்புதமானதாக இருந்தது. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்காக, மனிதர்களில் புலிகளான அவர்கள் அனைவரையும் வீழ்த்த விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அவ்வீரன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த போது பிரகாசமாகத் தெரிந்தான்.
ஆயிரக்கணக்கில் கணைகளை ஏவியவனும், எதிரிகளை எரிப்பவனும், மனிதர்களில் புலியுமான அந்த அர்ஜுனன், (தன் கணைமாரியின் மூலம்) அந்த வீரர்கள் அனைவரையும் மறையச் செய்தான். மனிதர்களில் புலிகளான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பங்குக்கு, அனைத்துப் பக்கங்களில் இருந்து ஏவப்பட்ட தங்கள் கணைகளின் மேகங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} மறையச் செய்தனர். குருகுலத்துக் காளையான அர்ஜுனன், மனிதர்களில் சிங்கங்களான அவர்களின் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்டு, உமது துருப்புகளால் ஆரவாரப் பேரொலி எழுப்பப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.
பின்வாங்கிய யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 105-துரோணரை எதிர்த்த பாஞ்சாலர்கள்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற துரோணர்; களத்தைவிட்டுப் பின்வாங்கிய யுதிஷ்டிரன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்}, தன் பார்வை படும் தொலைவில் அர்ஜுனன் அடைந்த பிறகு, குருக்களுடன் மோதிய பாஞ்சாலர்கள், பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தாக்கினார்களா?” என்று கேட்டான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரில் {அந்தப் போர் எனும் சூதாட்டத்தில்}, (ஒவ்வொருவரும் போரிட்டு வெல்வதற்கோ, தோற்பதற்கோ ஏற்ற வகையில்) துரோணரே பந்தயப் பொருளானார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்கள் உற்சாகத்துடன் உரக்க முழங்கியபடியே அடர்த்தியான கணை மழைகளை ஏவினர். உண்மையில், பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதலானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாகவும், கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது. பாண்டவர்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைப் பிளக்க விரும்பி, அவரது தேரை அடைந்து, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் நின்றபடியே, தங்களுக்கு அடியில் இருந்த பூமியை நடுங்கச் செய்து, கணை மழையைப் பொழிந்து, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.
கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன், இடிக்கு ஒப்பான பலத்தைக் கொண்ட கூரிய கணைகளை இடையறாமல் இறைத்தபடியே துரோணரை நோக்கிச் சென்றான். பெரும் புகழைக் கொண்ட க்ஷேமதூர்த்தி [1], ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே பிருஹத்க்ஷத்ரனை எதிர்த்து வேகமாக விரைந்தான். இதைக் கண்டவனும், பெரும் வலிமை கொண்டவனும், சேதிக்களில் காளையுமான திருஷ்டகேது, அசுரன் சம்பரனை எதிர்த்துச் செல்லும் மகேந்திரனைப் போல க்ஷேமதூர்த்தியை எதிர்த்து விரைந்தான். வாயை அகல விரித்த யமனைப் போல, பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனை {திருஷ்டகேதுவைக்} கண்ட வலிமைமிக்க வில்லாளியான வீரதன்வான் [2] பெரும் வேகத்துடன் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்த்துச் சென்றான்.வெற்றியில் உள்ள விருப்பத்தால், தன் படைப்பிரிவின் தலைமையில் நின்ற மன்னன் யுதிஷ்டிரன், வீரத் துரோணரால் தடுக்கப்பட்டான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் விகர்ணன், போரில் சாதித்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வீரனுமான நகுலனை எதிர்த்து விரைந்தான். எதிரிகளை எரிப்பவனான துர்முகன், முன்னேறி வரும் சகாதேவனை வேகமாகச் செல்லும் பல்லாயிரம் கணைகளால் மறைத்தான். வீர வியாக்ரதத்தன் [3], மனிதர்களில் புலியான சாத்யகியைத் தன் கூர்முனைக் கணைகளால் மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான். கோபத்துடன் கூடிய சோமதத்தன் மகன் {சலன்} [4], மனிதர்களில் புலிகளும், பெரும் தேர்வீரர்களுமான திரௌபதியின் மகன்களை (ஐவரை) வலிமைமிக்கக் கணைகளை ஏவி தடுத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பயங்கர முகத் தோற்றம் கொண்டவனுமான ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஸ்யசிருங்கியின் மகனான} (ராட்சசன் அலம்புசன்), கோபத்தால் நிறைந்து முன்னேறிவரும் பீமசேனனைத் தடுத்தான். மனிதனுக்கும், ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலானது, பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கு இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரன், தொண்ணூறு நேரான கணைகளால் துரோணரின் முக்கிய அங்கங்கள் அனைத்திலும் தாக்கினான். குந்தியின் புகழ்பெற்ற மகனால் {யுதிஷ்டிரனால்} சினமூட்டப்பட்ட துரோணர், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு, இருபத்தைந்து கணைகளால் அவனது நடுமார்பைத் தாக்கினார். துரோணர், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனது {யுதிஷ்டிரனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றை இருபது கணைகளால் மீண்டும் தாக்கினார்.
பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தியவனும், அற ஆன்மா கொண்டவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, துரோணரால் ஏவப்பட்ட கணைமாரியைத் தன் கணைமாரியால் கலங்கடித்தான். அப்போது பெரும் வில்லாளியான துரோணர், சினத்தால் நிறைந்து, உயர் ஆன்மா கொண்டவனும் நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை வெட்டினார். பிறகு அந்தப் பெரும் வில்லாளி (பரத்வாஜரின் மகன் {துரோணர்}), வில்லற்ற யுதிஷ்டிரனை பல்லாயிரம் கணைகளால் விரைவாக மறைத்தார். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் மன்னன் {யுதிஷ்டிரன்} மறைக்கப்பட்டதைக் கண்ட அனைவரும், யுதிஷ்டிரன் இறந்தான் என்று நினைத்தனர், சிலரோ துரோணருக்கு முன்னிலையில் மன்னன் {யுதிஷ்டிரன்} தப்பிவிட்டான் என்று நினைத்தனர். ஓ! மன்னா, பலர், “ஐயோ, அந்த உயர் ஆன்ம பிராமணரால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்” என்று கதறினர்.
அப்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் துயரத்தில் வீழ்ந்து, அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட அந்த வில்லை எறிந்துவிட்டு, சிறந்ததும், பிரகாசமானதும், கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். மேலும் அந்த வீரன் {யுதிஷ்டிரன்}, ஆயிரக்கணக்கில் துரோணரால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அம்மோதலில் அறுத்தான். இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன. அந்தக் கணைகளை வெட்டிய யுதிஷ்டிரன், ஓ! மன்னா, கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் போரில் மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான். தங்கப்பிடி கொண்டதும், அச்சந்தரும் தோற்றத்தைக் கொண்டதும், தன்னுடன் எட்டு மணிகள் இணைக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதுமான அஃதை {அந்த ஈட்டியை} யுதிஷ்டிரன் எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான். ஓ! பாரதரே, அந்த முழக்கத்தால், அந்தப் பாண்டுவின் மகன் அனைத்து உயிரினங்களையும் அச்சமடையச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஒரே மனத்துடன், “துரோணருக்கு நன்மை விளையட்டும்” என்றன.
மன்னனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கணையானது, சட்டையுரித்து விடுபடும் பாம்புக்கு ஒப்பாக, ஆகாயத்தையும், திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்துக்கும் ஒளியூட்டியபடியே கடும் வாய்க் கொண்ட ஒரு பெண்பாம்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்றது. தன்னை நோக்கி மூர்க்கமாக வரும் அதைக் கண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், ஓ! மன்னா, பிரம்மம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இருப்புக்கு அழைத்தார். பயங்கரத் தோற்றம் கொண்ட அந்த ஈட்டியைத் தூசியாகப் பொடி செய்த அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்}, பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரனின்} தேரை நோக்கிச் சென்றது. அப்போது, ஓ! ஐயா, பெரும் விவேகம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும் {மற்றொரு} பிரம்மாயுதத்தை அழைத்துத் தன்னை நோக்கி வரும் அவ்வாயுதத்தை {துரோணரின் பிரம்மாயுதத்தைக்} கலங்கடித்தான்.
பிறகு அந்தப் போரில் துரோணரை ஐந்து நேரான கணைகளால் துளைத்த அவன் {யுதிஷ்டிரன்}, கத்தி முனை கொண்ட கணை ஒன்றால், துரோணரின் பெரும் வில்லையும் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்த உடைந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} நோக்கி கதாயுதம் ஒன்றைப் பெரும் சக்தியுடன் வீசினார். தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட யுதிஷ்டிரன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து தானும் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பெரும் சக்தியுடன் வீசப்பட்ட அவ்விரு கதாயுதங்களும் நடுவானில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, தங்கள் மோதலால் தீப்பொறிகளை உண்டாக்கியபடி கீழே பூமியில் விழுந்தன.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது சீற்றத்தால் நிறைந்த துரோணர், கூர்முனை கொண்ட நான்கு சிறந்த கணைகளால் யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்றார். இந்திரன் மீது கொண்ட மதிப்பால் நடப்பட்ட மரத்திற்கு {இந்திரத்வஜத்திற்கு} இணையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} வில்லையும் மற்றொரு பல்லத்தால் அறுத்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்த மன்னன் யுதிஷ்டிரன், கைகளை உயர்த்தியபடி ஆயுதமேதும் இல்லாமல் நின்றான். தேரற்றவனாகவும், குறிப்பாக ஆயுதங்களற்றவனாகவும் இருந்த அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், ஓ! தலைவா, தமது எதிரிகளையும், மொத்த படையையும் மலைக்கச் செய்தார். தன் வாக்குறுதியில் உறுதியானவரும், பெரும் கரநளினம் கொண்டவருமான துரோணர், மானை நோக்கிச் செல்லும் சீற்றமிக்கச் சிங்கத்தைப் போலக் கூரிய கணைமாரியை ஏவியபடி மன்னனை நோக்கி விரைந்தார்.
எதிரிகளைக் கொல்பவரான துரோணர், அவனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைவதைக் கண்டு, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் பாண்டவப் படையில் கூச்சல்கள் எழுந்தன. பலர், “பரத்வாஜர் மகனால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்” என்று கதறினர். ஓ! பாரதரே, இவ்வகையான உரத்த ஓலங்களே பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன. அதே வேளையில், குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்டு, வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தைவிட்டுப் பின்வாங்கினான்” {என்றான் சஞ்சயன்}.
சாத்யகிக்கு அஞ்சிய வீரர்கள்! – துரோண பர்வம் பகுதி – 106-க்ஷேமதூர்த்தியைக் கொன்ற கைகேயப் பிருஹத்க்ஷத்ரன்; திரிகர்த்த வீரதன்வானைக் கொன்ற திருஷ்டகேது; துரியோதனனின் தம்பியான துர்முகனைத் தேரிழக்கச் செய்த சகாதேவன், திரிகர்த்த மன்னன் சுசர்மனின் மகனான நிரமித்ரனைக் கொன்றது; விகர்ணனை வென்ற நகுலன்; மகத வியாக்ரதத்தனைக் கொன்ற சாத்யகி, மகத வீரர்கள் அனைவரையும் கொன்றது; சாத்யகியுடன் போரிட அஞ்சிய வீரர்கள்; சாத்யகியை நோக்கி விரைந்த துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, க்ஷேமதூர்த்தி [1], {தன்னை நோக்கி} முன்னேறி வருபவனும், பெரும் வீரம் கொண்டவனும், கைகேகயர்களின் இளவரசனுமான பிருஹத்க்ஷத்ரனைப் பல கணைகளால் மார்பில் துளைத்தான். அப்போது மன்னன் பிருஹத்க்ஷத்ரன், ஓ! ஏகாதிபதி, துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பிளந்து செல்ல விரும்பி, தொண்ணூறு நேரான கணைகளால் தன் எதிராளியை {க்ஷேமதூர்த்தியை} வேகமாகத் தாக்கினான். எனினும், சினத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி நன்கு கடினமாக்கப்பட்ட கூரிய பல்லம் ஒன்றால் கைகேயர்களின் இளவரசனுடைய {பிருஹத்க்ஷத்ரனின்} வில்லை அறுத்தான். அப்படி அவனது வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, அம்மோதலில், நேரான கூரிய கணை ஒன்றால் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவனை {பிருஹத்க்ஷத்ரனை} வேகமாகத் துளைத்தான்.அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (தன் எதிரியைப் பார்த்துப்) புன்னகைத்த பிருஹத்க்ஷத்ரன், விரைவில், வலிமைமிக்கத் தேர்வீரனான க்ஷேமதூர்த்தியைக் குதிரைகளற்றவனாகவும், தேரோட்டியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான். மேலும் அவன் {பிருஹத்க்ஷத்ரன்}, நன்கு கடினமாக்கப்பட்டதும், கூர்மையானதுமான மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காது குண்டலங்களால் சுடர்விட்ட தன் அரசெதிராளியின் {க்ஷேமதூர்த்தியின்} தலையை உடலில் இருந்து வெட்டினான். கேசத்தாலும், கிரீடத்தாலும் அருளப்பட்ட அந்தத் தலை திடீரென வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்த போது, வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன் தன் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியால் நிறைந்து, பார்த்தர்களின் நிமித்தமாக உமது துருப்புகளின் மேல் பெரும் சக்தியுடன் பாய்ந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான வீரதன்வான் [2] துரோணரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த திருஷ்டகேதுவைத் தடுத்தான். கணைகளையே தங்கள் நச்சுப் பற்களாகக் கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பெரும் சுறுசுறுப்புடன் பல்லாயிரம் கணைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையில், மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், ஆழ்ந்த காடுகளுக்குள் இரு தலைமை யானைகள் சீற்றத்துடன் மோதிக்கொள்வதைப் போலத் தங்களுக்குள் போரிட்டனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் இருவரும், மலைக்குகையொன்றில் மோதிக் கொள்ளும் கோபம்கொண்ட இரு புலிகளைப் போல மற்றவனைக் கொல்ல விரும்பத்துடனே போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. காணத்தகுந்த அது {அம்மோதல்} மிக அற்புதமானதாக இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சித்தர்களும், சாரணர்களுமே கூட அற்புதத்திற்காகக் காத்திருக்கும் கண்களுடன் அதைக் கண்டனர்.அப்போது வீரதன்வான், ஓ! பாரதரே, சினத்துடன் சிரித்தவாறே, பல்லங்களைக் கொண்டு திருஷ்டகேதுவின் வில்லை இரண்டாக அறுத்தான். சேதிகளின் ஆட்சியாளனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டகேது}, உடைந்த வில்லை எறிந்துவிட்டு, இரும்பாலானதும், தங்கப் பிடியைக் கொண்டதுமான கடும் ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டான். ஓ! பாரதரே, கடும் சக்தி கொண்ட அந்த ஈட்டியைத் தன் கரங்களால் வீரதன்வானின் தேரை நோக்கிச் சாய்த்த திருஷ்டகேது அதைக் கவனமாகவும், பெரும் பலத்துடனும் ஏவினான். வீரர்களைக் கொல்லும் அந்த ஈட்டியால் பெரும்பலத்துடன் தாக்கப்பட்டு, இதயம் துளைக்கப்பட்ட வீரதன்வான், வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவ்வீரன் {வீரதன்வான்} வீழ்ந்ததும், ஓ! தலைவா, பாண்டவர்களால் உமது படை பிளக்கப்பட்டது.
(உமது மகன்) துர்முகன், அறுபது கணைகளைச் சகாதேவன் மீது ஏவி, அந்தப் போரில் பாண்டுவின் மகனை {சகாதேவனைச்} சவாலுக்கழைப்பதற்காக உரக்க முழங்கினான். அப்போது, சினத்தால் நிறைந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, சிரித்துக் கொண்டே சகோதரனைத் தாக்கும் சகோதரனாகக் கூரிய கணைகள் பலவற்றால் துர்முகனைத் துளைத்தான். வலிமைமிக்கத் துர்முகன், மூர்க்கத்துடன் போரிடுவதைக் கண்ட சகாதேவன், ஓ! பாரதரே, ஒன்பது கணைகளால் மீண்டும் அவனைத் {துர்முகனைத்} தாக்கினான். பெரும்பலம் கொண்ட சகாதேவன், ஒரு பல்லத்தால் துர்முகனின் கொடிமரத்தை வெட்டி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் தாக்கி வீழ்த்தினான். மேலும் நன்கு கடினமாக்கப்பட்ட, கூரிய மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காதுகுண்டலங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்த துர்முகனின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். மேலும் ஒரு க்ஷுரப்ரத்தால் துர்முகனின் பெரிய வில்லை அறுத்த சகாதேவன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் துர்முகனையும் துளைத்தான்.
குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து அச்சமற்றவகையில் கீழே குதித்த துர்முகன், ஓ! பாரதரே, நிரமித்ரனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு சினத்தால் நிறைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சகாதேவன், அந்தப் பெரும்போரில் தன் படைக்கு மத்தியில் இருந்த நிரமித்ரனை ஒரு பல்லத்தால் கொன்றான். அதன்பேரில், திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடைய {சுசர்மனின்} மகனான நிரமித்ரன், உமது படையைப் பெரும் துயரத்தில் பீடிக்கச் செய்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். அவனைக் {நிரமித்ரனைக்} கொன்றதும், வலிமைமிக்க (ராட்சசன்) கரனைக் கொன்ற தசரதன் மகன் ராமனைப் போல வலிமைமிக்கச் சகாதேவன் பிரகாசமாகத் தெரிந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இளவரசன் நிரமித்ரன் கொல்லப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, திர்கர்த்த வீரர்களுக்கு மத்தியில் “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் உரத்த கதறல்கள் எழுந்தன.
நகுலன், ஓ! மன்னா, பெரிய கண்களைக் கொண்ட உமது மகன் விகர்ணனை ஒருக்கணத்தில் வென்றான். இது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.
வியாக்ரதத்தன் [3], தன் படைப்பிரிவுக்கு மத்தியில் இருந்த சாத்யகியின் குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரம் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் கண்ணுக்குப் புலப்படாதபடி மறைத்தான். சிநியின் துணிச்சல்மிக்கப் பேரன், பெரும் கரநளினத்துடன் அக்கணைகளைக் கலங்கடித்துத் தன் கணைகளின் மூலம் வியாக்ரதத்தனை, அவனது குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்தோடு சேர்த்து வீழ்த்தினான். ஓ!தலைவா {திருதராஷ்டிரா}, அந்த மகதர்களின் இளவரசனுடைய {வியாக்ரதத்தனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தீவிரத்துடன் போராடிக் கொண்டிருந்த மகதர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர்.அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளையும், வேல்களையும் ஆயிரக்கணக்கில் இறைத்தபடியும், அந்தப் போரில் பிண்டிபாலங்கள், பராசங்கள், முத்கரங்கள், உலக்கைகள் ஆகியவற்றைக் கொண்டும், சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத அந்த வீரனுடன் {சாத்யகியுடன்} போரிட்டனர். பெரும் வலிமையைக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், வெல்லப்படமுடியாதவனுமான சாத்யகி, சிரித்துக் கொண்டே மிக எளிமையாக அவர்கள் அனைவரையும் வென்றான். மகதர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். எஞ்சிய மிகச் சிலரும் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.
ஓ! தலைவா, ஏற்கனவே யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த உமது படையானது, இதைக் கண்டு பிளந்து ஓடியது. மது குலத்தில் முதன்மையானவனும், சிறந்த வீரனுமான அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் உமது துருப்பினரைக் கொன்று, தன் வில்லை அசைத்தபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, இப்படியே அந்தப் படை, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்மாவால் {சாத்யகியால்} முறியடிக்கப்பட்டது. உண்மையில், நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரன் {சாத்யகியின்} மீது கொண்ட அச்சத்தால், போரிடுவதற்காக எவனும் அவனை அணுகவில்லை. அப்போது சினத்தால் நிறைந்த துரோணர், தன் கண்களை உருட்டியபடி, கலங்கடிக்கப்பட முடியாத சாதனைகளைக் கொண்ட சாத்யகியை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.
அலம்புசனை விரட்டிய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 107-சோமதத்தன் மகன் சலனுக்கும், திரௌபதியின் மகன்கள் ஐவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சலனைக் கொன்ற சகாதேவன் மகன் சுருதசேனன்; பீமனைத் தாக்கி மயக்கமடையச் செய்த ராட்சசன் அலம்புசன்; சேதிகள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொன்ற அலம்புசன்; பீமன் பயன்படுத்திய த்வஷ்டாஸ்த்திரம்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன்; மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவப் படை…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, பெரும் வில்லாளிகளான திரௌபதி மகன்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், மீண்டும் ஏழு கணைகளாலும் துளைத்தான். ஓ! தலைவா, அந்தக் கடும் வீரனினால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள், என்ன செய்வதென்று அறியாமல் சிறிது நேரம் மலைத்தனர். பிறகு எதிரிகளை நசுக்குபவனும், நகுலனின் மகனுமான சதானீகன், மனிதர்களில் காளையான அந்தச் சோமதத்தன் மகனை {சலனை} இரண்டு கணைகளால் துளைத்து, மகிழ்ச்சியால் உரக்க முழக்கமிட்டான். தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த பிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் மூன்று {மும்மூன்று} நேரான கணைகளால் அந்தக் கோபக்கார சோமதத்தன் மகனை {சலனை} வேகமாகத் துளைத்தனர்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, அவர்கள் மீது ஐந்து கணைகளை ஏவி, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணையால் மார்பில் துளைத்தான். பிறகு, இப்படி அந்த உயர் ஆன்ம வீரனின் {சலனின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்தச் சகோதரர்கள் ஐவரும் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சலனைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் அவனை ஆழமாகத் துளைக்கத் தொடங்கினர்.
சினத்தால் நிறைந்த அர்ஜுனனின் மகன் {சுருதகர்மன்}, கூரிய கணைகளால், சௌமதத்தியின் {சலனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பினான். பீமசேனனின் மகன் {சுதசோமன்}, சிறப்புமிக்கச் சோமதத்த மகனின் {சலனின்} வில்லை அறுத்து உரக்க முழங்கியபடியே, தன் எதிரியைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்} சௌமதத்தியின் {சலனின்} கொடிமரத்தை அறுத்து, பூமியில் வீழ்த்திய அதே நேரத்தில், நகுலனின் மகன் {சதானீகன்}, எதிரியின் தேரோட்டியை அவனது {சலனது} இருக்கையில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, சகாதேவன் மகன் {சுருதசேனன்}, தன் சகோதரர்களின் விளைவால் எதிரி களத்தை விட்டு நகரப்போவதை உறுதிசெய்து கொண்டு, க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சலனின்} தலையை அறுத்தான். தங்கத்தாலான காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை, பூமியில் விழுந்து, யுக முடிவின் போது எழும் பிரகாசமான சூரியனைப் போல அந்தக் களத்தை அலங்கரித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம சோமதத்தன் மகனுடைய {சலனின்} தலை இப்படித் தரையில் விழுந்ததைக் கண்ட உமது துருப்புகள் அச்சமடைந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.
அந்தப் போரில், சினத்தால் நிறைந்திருந்த ராட்சசன் அலம்புசன், (ராமனின் தம்பியான) லக்ஷ்மணனுடன் போரிட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல, வலிமைமிக்கப் பீமசேனனுடன் போரிட்டான். ராட்சசனும் {அலம்புசனும்}, மனித வீரனும் {பீமசேனனும்} போரில் ஈடுபடுவதைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் ஆகிய இரண்டையும் அடைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டிருந்த பீமன், கோபம் நிறைந்த ராட்சச இளவரசனான அந்த ரிஷ்யசிருங்கன் மகனை (அலம்புசனை) ஒன்பது கூரிய கணைகளால் துளைத்தான். இப்படிப் போரில் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன், உரத்த பயங்கர ஒலியை எழுப்பி, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து பீமனை எதிர்த்து விரைந்தான்.
நேரான ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {அலம்புசன்}, அந்தப் போரில் பீமனை ஆதரித்த முப்பது தேர்களை வேகமாக அழித்தான். மேலும் பீமசேனனின் நானாறு {400} தேர்களை அழித்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, சிறகுகள் கொண்ட கணைகளால் பீமசேனனையும் துளைத்தான். அந்த ராட்சசனால் ஆழத்துளைக்கப்பட்டவனான வலிமைமிக்கப் பீமன், மயக்கமடைந்து கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்தக் காற்று தேவனின் மகன் {வாயுவின் மகனான பீமன்}, சினத்தால் நிறைந்தான். மிகக் கடியதையும் தாங்கவல்லதும், சிறப்பானதும், பயங்கரமானதுமான தன் வில்லை வளைத்த அவன் {பீமன்}, கூரிய கணைகளால் அலம்புசனின் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பீடித்தான். அதன்பேரில், கறுத்த பெரும் மைக்குவியலுக்கு ஒப்பான அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகத்தைப் {பலாச மரத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
அந்தப் போரில் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்படும்போது, சிறப்புமிக்கப் பாண்டவனால் {பீமனால்} தன் சகோதரன் (பகன்) கொல்லப்பட்டதை அந்த ராட்சசன் {அலம்புசன்} நினைவுகூர்ந்தான். பிறகு பயங்கர வடிவத்தை ஏற்ற அவன் {அலம்புசன்}, பீமனிடம், “ஓ! பார்த்தா {பீமா}, இந்தப் போரில் சிறிது நேரம் காத்திரு {நிற்பாயாக}. என் ஆற்றலை இன்று பார்ப்பாயாக. ஓ! தீய புரிதல் {கெட்ட புத்தி} கொண்டவனே, ராட்சசர்களில் முதன்மையான வலிமைமிக்கப் பகன் என் சகோதரனாவான். அவன் உன்னால் கொல்லப்பட்டான் என்பது உண்மையே. ஆனால், அஃது என் கண்களுக்கு அப்பால் நடந்தது” என்றான். பீமனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அலம்புசன், கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, அடர்த்தியான கணைமாரியால் பீமசேனனை மறைக்கத் தொடங்கினான். இப்படி ராட்சசன் {அலம்புசன்} மறைந்து போனதால், ஓ! ஏகாதிபதி, நேரான கணைகளால் ஆகாயத்தையே மறைத்தான் பீமன்.
இப்படிப் பீமனால் பீடிக்கப்பட்ட அலம்புசன், விரைவில் தன் தேருக்குத் திரும்பினான். மீண்டும் விரைவில் பூமியின் குடல்களுக்குள் நுழைந்த அவன் {அலம்புசன்}, மீண்டுமொருமுறை சிறுத்து {வடிவம் சுருங்கி} திடீரென வானத்தில் பறந்தான். கணக்கிலடங்கா வடிவங்களை அலம்புசன் ஏற்றான். இதோ நுட்பமானவனாக {சிறிய உருவம் கொண்டவனாக}, இதோ பெரியவனாக, இதோ ஒட்டுமொத்தமான திரளாக என மாறிய அவன் {ராட்சசன் அலம்புசன்} மேகங்களைப் போல முழங்கத் தொடங்கினான். மேலும் அவன் பல்வேறு வகைகளான வார்த்தைகளையும், பேச்சுகளையும் சுற்றிலும் உதிர்த்தான். ஆகாயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கணைத்தாரைகள், ஈட்டிகள், குணபங்கள், வேல்கள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், பட்டசங்கள், வாள்கள், இடிகள் {வஜ்ரங்கள்} ஆகியவையும் விழுந்தன.
ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணை மழையானது, போர்க்களத்தில் பாண்டு மகனின் {பீமனின்} துருப்புகளைக் கொன்றது. அந்தக் கணை மழையின் விளைவால் யானைகள் பலவும், குதிரைகள் பலவும் கொல்லப்பட்டன, ஓ! மன்னா, காலாட்படை வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். குருதியை நீராகவும், தேர்களை நீர்ச்சுழல்களாகவும் கொண்ட ஆறு ஒன்று அங்கே உண்டானது. அதில் நிறைந்திருந்த யானைகள் அதன் முதலைகளாகின. தேர்வீரர்களின் குடைகள் அதன் அன்னங்களாகின, விலங்குகளின் சதையும், ஊனீரும் அதன் சகதிகளாகின. (வெட்டப்பட்டு) அங்கே நிறைந்திருந்த மனிதர்களின் கரங்கள் அதன் பாம்புகளாகின. பல ராட்சசர்களாலும், பிற மனித உன்னிகளாலும் அது மொய்க்கப்பட்டது. ஓ! மன்னா, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அது {அந்த ஆறு} அடித்துக் கொண்டு போனது.
ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் அச்சமற்று உலவும் அவனையும் {அலம்புசனையும்}, அவனது ஆற்றலையும் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்தனர்; அப்போது உமது துருப்புகளின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த இசைக்கருவிகளின் பயங்கரமான உரத்த ஒலிகள் மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதாக இருந்தன. மனிதர்களின் உள்ளங்கை ஒலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பாம்பைப் போல, உமது துருப்புகளின் அந்த ஆரவாரப் பேரொலியை பாண்டுவின் மகனால் {பீமனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, அனைத்தையும் எரித்துவிடும் நெருப்பு போன்ற பார்வையுடன் கூடிய அந்தக் காற்று தேவனின் மகன் {பீமன்}, துவஷ்ட்ரி என்ற பெயர் கொண்ட ஆயுதத்தைத் துவஷ்ட்ரியைப் போலவே குறி பார்த்தான் [1]. அவ்வாயுதத்தின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கணைகள் உண்டாகின. அக்கணைகளின் விளைவாக, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஓர் உலகளாவிய அழிவு தென்பட்டது. போரில் பீமசேனனால் ஏவப்பட்ட அவ்வாயுதம், ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட திறன்மிக்க மாயையை அழித்து, அந்த ராட்சசனையும் பெரிதும் பீடித்தது. பீமசேனனால் தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பீமசேனனைக் கைவிட்டுவிட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கித் தப்பி ஓடினான். அந்த ராட்சச இளவரசன் {அலம்புசன்}, உயர் ஆன்ம பீமனால் தோற்கடிக்கப்பட்டதும், பாண்டவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், போரில் பிரகலாதன் தோற்றதும், சக்ரனை {இந்திரனை} வழிபட்ட மருத்துக்களைப் போல, மருத்தனின் வலிமைமிக்க மகனை {பீமனை} வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.
அலம்புசனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 108-கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள்; அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள்; தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன்; அலம்புசன் கொல்லப்பட்டது
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன், களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான். இப்படி அவன் {அலம்புசன்} போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது. (பழங்காலத்தின்) சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர்.
சினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், கடோத்கசனைத் தாக்கினான். உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ! மன்னா, சிரித்துக் கொண்டே அலம்புசனும், வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான்.
பிறகு, பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர். தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர். மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில், ஓ! மன்னா, கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில், அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன. மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன், அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து, அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிற்கச் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிறர் அனைவரும், அவனை {அலம்புசனை} எதிர்த்துச் சினத்துடன் விரைந்தனர். ஓ! ஐயா, எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள், காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர். அவனோ {அலம்புசனோ}, தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல, அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
அப்போது, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் {அலம்புசன்}, வாயுத் தேவனின் மகனை {பீமனை} இருபத்தைந்து கணைகளாலும், பீமனின் மகனை {கடோத்கசனை} ஐந்தாலும், யுதிஷ்டிரனை மூன்றாலும், சகாதேவனை ஏழாலும், நகுலனை எழுபத்துமூன்றாலும், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான். பிறகு, பீமசேனன் ஒன்பது கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை {அலம்புசனை} ஒரு நூறு கணைகளால் துளைத்தான். நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.
ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, ஐநூறு கணைகளால் அவனை {அலம்புசனைத்} துளைத்தான். அந்த வலிமைமிக்க வீரன் {கடோத்கசன்}, எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான். ஓ மன்னா, கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால், மலைகள், காடுகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன், பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான். அப்போது, ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை {அலம்புசனை} பல கணைகளால் துளைத்தான். ஆழத் துளைக்கப்பட்டவனும், ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான். முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும், மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன.
அப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும், ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும், ஓ! மன்னா, தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர். வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே, ஆகையால் அவனுக்கு {அலம்புசனுக்கு} என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அலம்புசனின் அந்நிலையைக் கண்டு, அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான். அவன் {கடோத்கசன்}, எரிந்த மலைச்சிகரத்திற்கோ, சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய {அலம்புசனுடைய} தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.
கோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று, பின்னவனை {அலம்புசனைப்} பிடித்தான். பிறகு அவன் {கடோத்சகசன்}, கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை {அலம்புசனைத்} தேரில் இருந்து தூக்கினான். இப்படித் தன் கரங்களால் அவனை {அலம்புசனை} இழுத்த அவன் {கடோத்கசன்}, மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி, ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல, அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான். பலம், சுறுசுறுப்பு, பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான்.
இவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன், அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது, நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது. அந்த இரவு உலாவியின் {அலம்புசனின்} படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறினர்.
ஆவல் கொண்ட மனிதர்கள், (மேலும் எரிய முடியாத) கரித்துண்டைப் போல, பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர். அப்போது, வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும், ராட்சசனுமான கடோத்கசன், இப்படித் தன் எதிரியைக் கொன்றதும், (அசுரன்) வலனைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல உரக்க முழங்கினான். மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன், தன் தந்தைமாராலும், தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான். உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் {கடோத்கசன்} தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான். அங்கே (பாண்டவப் படையில்), பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும், சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது. அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து, அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர்” {என்றான் சஞ்சயன்} [1].
சாத்யகியின் பெருமையைச் சொன்ன யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 109-சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியை மீட்க திருஷ்டத்யும்னனையும், தன் படை வீரர்களையும் ஏவிய யுதிஷ்டிரன்; துரோணரின் பராக்கிரமம்; பாஞ்சஜன்யத்தின் ஒலியைக் கேட்டும், காண்டீவத்தின் ஒலியைக் கேட்காததால் அர்ஜுனனின் நிலையறியாது கலக்கமுற்ற யுதிஷ்டிரன்; சாத்யகியின் பெருமைகளைப் பட்டியலிட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனின் உதவிக்குச் செல்லுமாறு அவனைப் பணித்தது..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, போரில் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து யுயுதானன் {சாத்யகி} எவ்வாறு விரைந்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்பதற்கு நான் பெரும் ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பேரறிவாளரே {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், யுயுதானன் {சாத்யகி} தலைமையிலான பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்றதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான போரைக் குறித்துக் கேட்பீராக.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யுயுதானனால் (குரு) படையினர் கொல்லப்படுவதைக் கண்ட துரோணர், சாத்யகி என்ற பெயராலும் அழைக்கப்படும் அந்த வீரனை நோக்கி விரைந்தார். சாத்யகி, இப்படித் தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரை} இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {சிறு கணைகளால்} துளைத்தான். போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணரும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூரானவையுமான ஐந்து கணைகளால் தீர்மானமான குறியோடு யுயுதானனை விரைவாகத் துளைத்தார். பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, சினத்தால் நிறைந்து, நேரான கணைகள் பலவற்றால் அந்தச் சாத்வத குல வீரனை {சாத்யகியை} மீண்டும் பீடித்தார்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} தாக்கப்பட்ட சாத்யகி, {அடுத்ததாக} தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணக்கற்ற கூர்முனை கணைகளை ஏவிய பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கண்டு யுயுதானனின் முகம் மகிழ்ச்சியற்றதாக ஆனது. ஓ! மன்னா, சாத்யகி அந்நிலையிலிருப்பதைக் கண்ட உமது மகன்களும், {உமது} துருப்பினரும், மிகவும் மகிழ்ச்சியடைந்து மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும், இப்படிப் பீடிக்கப்படும் மதுகுலத்து வீரனை {சாத்யகியைக்} கண்டும், மன்னன் யுதிஷ்டிரன், தன் படைவீரர்களிடம், “விருஷ்ணிகளுள் முதன்மையானவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், துணிச்சல் மிக்கவனுமான சாத்யகியைச் சூரியனை விழுங்கும் ராகுவைப் போல வீரத் துரோணர் விழுங்கப் போகிறார். சாத்யகி போரிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்து செல்வீராக” என்றான்.
பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சால குலத்துத் திருஷ்டத்யும்னனிடம், “துரோணரை நோக்கி வேகமாக விரைவாயாக. ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, ஏன் நிற்கிறாய்? துரோணரிடமிருந்து நமக்கு எழுந்திருக்கும் பெரும் ஆபத்தை நீ காணவில்லையா? துரோணர் பெரும் வில்லாளியாவார். கயிற்றில் கட்டப்பட்ட பறவையுடன் விளையாடும் ஒரு சிறுவனைப் போல அவர் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} போரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். பீமசேனன் தலைமையிலான நீங்கள் அனைவரும், பிறரின் துணையுடன் சாத்யகியின் தேர் எங்கிருக்கிறதோ அங்கே செல்வீராக. உனக்குப் பின்னால் நான் என் துருப்புகளுடன் பின்தொடர்ந்து வருவேன். யமனின் கோரப்பற்களுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சாத்யகியை இன்று மீட்பாயாக” என்றான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் யுதிஷ்டிரன், யுயுதானனுக்காகத் துரோணரை நோக்கி தன் அனைத்துத் துருப்புகளுடன் விரைந்தான். {திருதராஷ்டிரரே} நீர் அருளப்பட்டிருப்பீராக, துரோணருடன் மட்டுமே போரிட்ட பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவராலும் அங்கே உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது பெரிதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, ஒன்றாகச் சேர்ந்து அணுகிய அவர்கள், கங்கங்கள் மற்றும் மயில்களில் இறகுகளைக் கொண்டவையும், கூர்முனையைக் கொண்டவையுமான கணைகளின் மழையால் {அவரை} மறைத்தனர்.
எனினும் துரோணர், ஓர் இல்லறத்தான், தங்கள் சுயவிருப்பத்துடன் வரும் விருந்தினரை ஆசனத்துடனும், நீருடனும் வரவேற்பதைப் போலவே புன்னகையுடன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே], (விருந்து கொடுக்கும் நல்லோரின்) வீடுகளில் விருந்தோம்பலுடன் வரவேற்கப்படும் விருந்தினரைப் போலவே, வில் தரித்திருக்கும் பரத்வாஜர்மகனின் {துரோணரின்} கணைகளால் அவ்வீரர்கள் நிறைவுற்றனர்.
ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆயிரம் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, அவர்களில் எவராலும் பார்க்கக்கூட முடியவில்லை. உண்மையில், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர், எரியும் கதிர்களால் (கீழே உள்ள அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வில்லாளிகள் அனைவரையும் தமது கணைகளின் மாரியால் எரித்தார். இப்படித் துரோணரால் தாக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா, புதைக் குழியில் மூழ்கும் யானைகளைப் போல எந்தப் பாதுகாவலரையும் காணவில்லை.
துரோணரின் வலிமைமிக்கக் கணைகள் (ஆகாயத்தின் ஊடாகச்) செல்லும்போது, சுற்றிலும் உள்ள அனைத்தையும் வெடிக்கச் செய்யும் சூரியனின் கதிர்களைப் போலத் தெரிந்தன. அந்த மோதலில், பாஞ்சாலர்களில் மகாரதர்களாக அறியப்பட்டவர்களும், திருஷ்டத்யும்னனால் (அவ்வாறே) அங்கீகரிக்கப் பட்டவர்களுமான இருபத்தைந்து போர்வீரர்கள் துரோணரால் கொல்லப்பட்டனர். துணிச்சல்மிக்கத் துரோணர், அந்த முதன்மையான வீரர்களை அடுத்தடுத்துக் கொல்வதைப் பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் துருப்புகளில் இருந்த மனிதர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கேகயர்களில் போர்வீரர்கள் நூறு பேரைக் கொன்று, அனைத்துப் பக்கங்களிலும் அவர்களை முறியடித்த துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாயை அகலமாக விரித்திருக்கும் யமனைப் போல நின்றார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கேகயர்கள் ஆகியோரை வென்றார். துரோணரின் கணைகளின் மூலம் துளைக்கப்பட்ட அவர்களால் உண்டான ஆரவாரமானது, காட்டுத்தீயால் சூழப்பட்ட காட்டுவாசிகள் உண்டாக்கும் ஆரவாரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர், “பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் தங்கள் அனைத்துத் துருப்புகளுடனும் தப்பி ஓடுவதைப் பாருங்கள்” என்று சொன்னார்கள். உண்மையில், போரில் துரோணர் சோமகர்களைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவரை எதிர்த்துச் செல்ல எவனும் துணியவில்லை, அவரைத் {துரோணரைத்} துளைப்பதில் எவனும் வெல்லவில்லை.
பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் பயங்கர மோதல் தொடர்ந்த போது, பிருதையின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சஜன்யத்தின் ஒலியைத் திடீரெனக் கேட்டான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} முழக்கப்பட்ட அந்தச் சிறந்த சங்கு {பாஞ்சஜன்யம்} உரத்த வெடிப்பொலிகளை வெளியிட்டது. உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்போர் {அனைவரும்} போரிட்டுக் கொண்டிருந்த போது, அர்ஜுனனின் தேருக்கு முன்பாகத் தார்தராஷ்டிரர்கள் முழங்கிக் கொண்டிருந்த போது, காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படவில்லை. பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மீண்டும் மயங்கி, “சங்குகளின் இளவரசன் (பாஞ்சஜன்யம்) இத்தகு வெடிப்பொலிகளை வெளியிடுவதாலும், மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவர்களும் இடையறாமல் இத்தகு கூச்சல்களில் ஈடுபடுவதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} முற்றிலும் நலமாக இல்லை என்பதில் ஐயமில்லை” என்று நினைத்தான்.
கவலையான இதயத்துடன் இப்படி நினைத்த குந்தியின் மகன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன், சாத்வத குலத்தோனிடம் (சாத்யகியிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான். மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் மீண்டும் மலைப்படைந்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் பார்வையை {அறிவை} இழக்கவில்லை. சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} பேசிய அந்தக் குலக்காளை (யுதிஷ்டிரன்), “ஓ! சிநியின் பேரனே {சைநேய, சாத்யகி}, துயரில் இருக்கும் நண்பர்களுக்கு எது நித்திய கடமையென்று {அறமென்று} பழங்காலத்தில் நல்லோர் (நண்பர்களுக்குக்) குறிப்பிட்டனரோ, அதற்கான காலம் இப்போது வந்திருக்கிறது. ஓ! சினிக்களில் காளையே {சிநிபுங்கவ}, ஓ! சாத்யகி, என்னுள் நினைத்துப் பார்க்கையில், என் போர்வீரர்கள் அனைவருக்கு மத்தியிலும், எங்களுக்கு நன்மையை விரும்புவதில் உன்னைவிடப் பெரியவன் எவனையும் நான் காணவில்லை.
எவன் எப்போதும் பாசத்துடன் இருக்கிறானோ, எவன் எப்போதும் கீழ்ப்படிகிறானோ, அவனே துயர காலங்களில் முக்கியமான காரியங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். பாண்டவர்களின் புகலிடமாக எப்போதும் இருக்கும் கேசவன் {கிருஷ்ணன்} எப்படியோ, ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, ஆற்றலில் கேசவனைப் போல இருக்கும் நீயும் {எங்களுக்கு} அப்படியே. எனவே, {இப்போது} உன் மீது சுமை ஒன்றைக் கிடத்தப் போகிறேன். என் நோக்கத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. அர்ஜுனன், உனக்குச் சகோதரனும், நண்பனும், ஆசானுமாவான், ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, இந்தப் போரில், துயரமான இந்தக் காலத்தில், அவனுக்கு {அர்ஜுனனுக்கு} {உன்} உதவியைக் கொடுப்பாயாக.
நீ உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புள்ளவன். நீ ஒரு வீரன். நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் நீ இருக்கிறாய். ஓ! வீரா, உன் செயல்களின் விளைவால், நீ பேச்சில் உண்மை நிறைந்தவனாக இவ்வுலகில் கொண்டாடப்படுகிறாய். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, போரில் நண்பர்களுக்காகப் போரிட்டுத் தன் உடலைத் துறப்பவன் எவனோ, அவன் முழு உலகையும் பிராமணர்களுக்குத் தானமளித்தவனுக்கு இணையானவன் ஆவான். முறையான சடங்குகளுடன் முழுப் பூமியையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்துச் சொர்க்கத்திற்குச் சென்ற பல்வேறு மன்னர்களைக் குறித்து நாம் கேட்டிருக்கிறோம். ஓ! நல்லான்மா கொண்டோனே, ஓ! தலைவா {சாத்யகி}, நீ அர்ஜுனனுக்கு உதவி உன் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதால், முழுப் பூமியையும் (பிராமணர்களுக்குத்) தானமளித்தவனோ, அதைவிட உயர்ந்ததைச் செய்தவனோ அடையும் கனியை {பலனை} அடைவாயாக எனக் கரங்கள் கூப்பி உன்னை இரந்து கேட்கிறேன்.
(நண்பர்களுக்காக) எப்போதும் போரில் தன் உயிரை விட விரும்புபவனான கிருஷ்ணன் ஒருவனே, நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனாக இருக்கிறான். {அவ்வகையில்}, ஓ! சாத்யகி, நீயே இரண்டாமவன். புகழில் கொண்ட விருப்பத்தால் போரில் வீரமாக முயலும் வீரனுக்கு, மற்றொரு வீரனாலேயே உதவ முடியும். சாதாரண மனிதனால் அப்படிச் செய்ய முடியாது. இக்காரியத்தில், உன்னைத்தவிர வேறு யார் அர்ஜுனனைக் காக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில், உனது எண்ணிலடங்கா சாதனைகளை மெச்சிய அர்ஜுனன், மீண்டும் மீண்டும் அவற்றை உரைத்து எனக்குப் பெரும் இன்பத்தை அளித்தான். பெரும் கரநளினம் கொண்டவன் நீ என்றும், போர்க்கலையின் வகைகள் அனைத்தையும் அறிந்தவன் நீ என்றும், பெரும் சுறுசுறுப்பையும், பெரும் ஆற்றலையும் கொண்டவன் நீ என்றும் உன்னைக் குறித்து அவன் {அர்ஜுனன்} சொல்லியிருக்கிறான்.
அவன் {அர்ஜுனன்}, “சாத்யகி பெரும் ஞானம் கொண்டவனாவான், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான், ஒரு வீரனாவான், போரில் எப்போதும் அவன் மலைக்கமாட்டான். அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும், வலிமைமிக்கக் கரங்களையும், அகன்ற தாடைகளையும் {மோவாய்களையும்}, பெரும் பலத்தையும், பெரும் ஆற்றலையும் கொண்டவனான சாத்யகி ஓர் உயர் ஆன்ம மகாரதனாவான். அவன் {சாத்யகி} எனது சீடனும், நண்பனுமாவான்; நான் அவனது அன்புக்குரியவனாகவும், அவன் எனது அன்புக்குரியவனாகவும் இருக்கிறோம். என் கூட்டாளியாகும் அந்த யுயுதானன் {சாத்யகி}, கௌரவர்களை நொறுக்கப் போகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் நமக்குத் துணையாகக் கவசம்பூண்டவர்களான கேசவன் {கிருஷ்ணன்}, ராமர் {பரசுராமர்}, அநிருத்தன், வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன், கதன், சாரணன், சாம்பன் ஆகியோரும், விருஷ்ணிகள் அனைவரும் இருந்தாலும், நான், தனக்கு இணையில்லாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்தச் சாத்யகியையே நமக்குத் துணையாக நியமிப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.
துவைத வனத்தில், நீ இல்லாத நிலையில், உன்னுடைய தகுதிகளை நல்லோரின் சபையில் உண்மையாக விவரித்தபோது, இதையே தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னிடம் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, தனஞ்சயன், நான் மற்றும் பீமன் ஆகியோரின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிப்பது உனக்குத் தகாது. பல்வேறு தீர்த்தங்களுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, நான் துவாரகைக்குச் சென்றேன்; அங்கே அர்ஜுனனிடம் நீ கொண்டிருக்கும் மரியாதையைக் கண்டேன். ஓ! சிநியின் பேரனே, உபப்லாவ்யத்தில் நாங்கள் இருந்த போது, உன்னைப் போல எங்களிடம் அத்தகு பாசம் காட்டியவர் வேறு எவரையும் நான் காணவில்லை. நீ நற்குலத்தில் பிறந்தவனாகவும், எங்களிடம் மரியாதை கொண்டவனாகவும் இருக்கிறாய். எனவே, எவன் உனக்கு நண்பனாகவும், ஆசானாகவும் இருக்கிறானோ அவனுக்கு அன்பு காட்டுதற்கு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் வில்லாளியே, உனது நட்பாலும், ஆற்றலாலும், உயர்குடி பிறப்பாலும், உண்மையாலும் தகுந்த வழியில் செயல்படுவதே உனக்குத் தகும்.
ஓ! மது குலத்தோனே {சாத்யகியே}, துரோணரால் கவசம் அணிவிக்கப்பட்ட துரியோதனன், திடீரென அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். அதற்கு முன்னரே, கௌரவர்களில் பெரும் தேர்வீரர்கள் பிறரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அர்ஜுனனின் தேருக்கு எதிராக உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது. ஓ! சிநியின் பேரனே, ஓ! மரியாதைகளை அளிப்பவனே, விரைவாக அங்கே செல்வதே உனக்குத் தகும்.
துரோணர் உன்னை எதிர்த்து வந்தால், நன்கு ஆயுதம் தரித்திருக்கும் பீமசேனனும் நாங்களும், எங்கள் அனைத்துப் படைகளும் சேர்ந்து அவரைத் தடுப்போம். ஓ! சிநியின் பேரனே, போரில் பாரதத் துருப்புகள் ஓடுவதையும், அப்படி அவர்கள் ஓடுகையில், உரத்த ஓலங்களிடுவதையும் காண்பாயாக. அலைகள் நிறைந்த பெருங்கடலையே கலங்கடிக்கும் வலிமைமிக்கச் சூறாவளியைப் போல, ஓ! ஐயா, அந்தத் தார்தராஷ்டிரப் படை சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்படுகிறது. எண்ணற்ற தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகள் ஆகியவை வேகமாக நகர்வதால், (களமெங்கும்) தூசிப்படலம் படிப்படியாக எழுவதைப் பார். பகைவர்களின் கூட்டத்தைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பரிகங்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களும், தங்கள் படையணிகளில் பல குதிரைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான சிந்து-சௌவீரர்களால் சூழப்படுவதைப் பார். இந்தப் படையை வெல்லாமல், ஜெயத்ரதனை வெல்வது முடியாது. இந்த வீரர்கள், சிந்துக்களின் அட்சியாளனுக்காகத் {ஜெயத்ரதனுக்காகத்} தங்கள் உயிரை விடவும் தயாராக இருக்கின்றனர். கணைகள், ஈட்டிகள், நெடிய கொடிமரங்கள் ஆகியவற்றால் தடித்து, குதிரைகளும், யானைகளும் நிறைந்திருப்பதுமான வெல்லப்பட முடியாத தார்தராஷ்டிரப்படை அங்கே நிற்பதைப் பார்.
அவர்களது பேரிகைகளின் ஒலிகளையும், அவர்களது சங்குகளின் உரத்த முழக்கத்தையும், அவர்களால் முழங்கப்படும் பேராற்றல்மிக்கச் சிங்க முழக்கத்தையும், அவர்களது தேர்ச்சக்கர்களின் சடசடப்பொலிகளையும் கேட்பாயாக. அவர்களது யானைகளின் பிளிறல்களையும், அவர்களது காலாட்படை வீரர்களின் கனமான நடையொலிகளையும், பூமியையைக் குலுக்குவதாகத் தெரியுமளவுக்கு விரைந்து வரும் அவர்களது குதிரைப்படையின் நடையொலிகளையும் கேட்பாயாக. அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்னால் ஜெயத்ரதனின் படைப்பிரிவும், பின்னால் துரோணரின் படைப்பிரிவும் நிற்கின்றன. தேவர்களின் தலைவனையே பீடிக்க வல்ல அவனது {அர்ஜுனனது} எதிரிகளின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறது. அடியற்ற ஆழம் கொண்ட அந்தப் படையில் மூழ்கும் அர்ஜுனன், தன் உயிரையே இழக்கக்கூடும். போரில் அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டால், என்னைப் போன்ற ஒருவனால் எப்படி வாழ முடியும்? நீ உயிரோடிருக்கையில் இத்தகு பேரிடர் எனக்கு வரலாமா?
கருநீல நிறமும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மிக அழகானவனாவான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களின் பயன்பாட்டில் சுறுசுறுப்பானவனும், போர்க்கலையின் ஒவ்வொரு வகையை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், சூரிய உதயத்தின் போது அந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். இதோ பகல் முடியப் போகிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை நான் அறியவில்லை. பரந்த குருப் படை பெருங்கடலைப் போல இருக்கிறது. ஓ! ஐயா, பீபத்சு {அர்ஜுனன்} அதற்குள் தன்னந்தனியாகவே நுழைந்தான். அந்தப் படையானது, போரில் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாததாக இருக்கிறது. இன்றைய போரில், என் தீர்மானத்தைத் தெளிவாகக் கொள்வதில் நான் தவறுகிறேன் {போரில் எனக்குப் புத்தி செல்லவில்லை}. பெரும் வலிமை கொண்ட துரோணரும் எனது படைகளைப் பீடிக்கிறார். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த மறுபிறப்பாளர் {பிராமணரான துரோணர்} எவ்வாறு போரில் உலவுகிறார் என்பதை நீயே பார்க்கிறாய்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் பல பணிகளில், எதை முதலில் கவனிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் நீ நல்ல திறம்பெற்றவனாகவும் இருக்கிறாய். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {சாத்யகி}, அனைத்திலும் எது முக்கியமான பணியோ, அதைச் சுறுசுறுப்புடன் சாதிப்பதே உனக்குத் தகும். இந்தப் பணிகள் அனைத்திலும், நம் கவனத்தைக் கோரும் இதுவே (அர்ஜுனனுக்கு உதவும் பணியே) முதன்மையானது என நான் நினைகிறேன். போரில் அர்ஜுனனை மீட்பதையே முதலில் மேற்கொள்ள வேண்டும். தாசார்ஹ குலோத்தனை {கிருஷ்ணனைக்} குறித்து நான் வருந்தவில்லை. இந்த அண்டத்தின் தலைவனும், பாதுகாவலனும் அவனே {கிருஷ்ணனே}. ஓ! ஐயா, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் மூன்று உலகங்களையும், அந்த மனிதர்களில் புலியால் {கிருஷ்ணனால்} வெல்ல முடியும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனவே, பலவீனமான இந்தத் திருதராஷ்டிரப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?
எனினும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {வார்ஷ்ணேய, சாத்யகி}, அர்ஜுனன் இந்தப் போரில் கணக்கிலடங்காதவர்களால் பீடிக்கப்படுகிறான். அவன் உயிரை விடக்கூடும். அதற்காகவே நான் இவ்வளவு உற்சாகமற்றவனாக இருக்கிறேன். ஓ!, உன்னைப் போன்ற மனிதர்கள், அவனைப் போன்றவனைப் பின் தொடர வேண்டும் என்பதால், இத்தகு காலத்தில் என்னைப் போன்ற ஒருவனால் தூண்டப்பட்டு, அவன் {அர்ஜுனன்} சென்ற பாதையிலேயே செல்வாயாக. விருஷ்ணி குலத்தின் முதன்மையானோரில் இருவர் அதிரதர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள், ஓ! சாத்வதா {சாத்யகி}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிரத்யும்னனும், இவ்வளவு புகழைப் பெற்ற நீயுமே ஆவீர்கள். ஆயுதங்களில் நாராயணனுக்கும், பலத்தில் சங்கர்ஷணருக்கும் {பலராமருக்கும்} நீ இணையானவனாவாய். துணிச்சலில், ஓ! மனிதர்களில் புலியே, நீ பீஷ்மரையும், துரோணரையும், போரில் சாதித்த அனைவரையும் விஞ்சி, தனஞ்சயனுக்கு இணையானவனாக இருக்கிறாய். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மாதவா {சாத்யகி}, ஞானிகள், “சாத்யகியால் அடையப்பட முடியாதது எதுவுமில்லை” என்று உன்னைக் குறித்துப் பேசுகின்றனர்.
எனவே, ஓ! பெரும்பலம் கொண்டவனே {சாத்யகி}, அர்ஜுனன், நான் மற்றும் இங்கே இருக்கும் அனைவரது விருப்பங்களுக்குக் கீழ்ப்படிந்து, நான் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ !வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த விருப்பத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. உன் உயிரையே துச்சமாக மதித்து, போரில் ஒரு வீரனைப் போல நீ உலவுவாயாக. ஓ! சிநியின் பேரனே, தாசார்ஹ குலத்தின் கொழுந்துகள் போரில் உயிர்களைக் குறித்து எப்போதும் கவலைப் பட்டதில்லை. கோழைகள் மற்றும் இழிந்தவர்களின் நடைமுறைகளான போரைத் தவிர்ப்பது, அல்லது மண்மதில்களுக்குப் பின்னாலிருந்து போரிடுவது, அல்லது போரில் இருந்து ஓடுவது {புறங்காட்டுவது} ஆகியவற்றைத் தாசார்ஹர்கள் ஒருபோதும் செய்ததில்லை.
ஓ! சிநிக்களில் காளையே, நல்லான்மா {அற ஆன்மா} கொண்ட அர்ஜுனன் உனக்கு மூத்தவனாவான். வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, உனக்கும், புத்திசாலியான அர்ஜுனனுக்கும் மூத்தவனாவான். இவ்விரு காரணங்களில் என் கண்களைச் செலுத்தியே நான் உன்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் சொல்லும் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே, நான், உனக்கு மூத்தோருக்கெல்லாம் மூத்தவனாவேன். நான் உன்னிடம் எதைச் சொல்கிறேனோ, அர்ஜுனனாலும் அஃது அங்கீகரிக்கப்பட்டதே ஆகும். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கே செல்வாயாக. ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, இந்த என் வார்த்தைகளைக் கேட்டு, திருதராஷ்டிரரின் தீய மகனுடைய {துரியோதனனின்} இந்தப் படைக்குள் ஊடுருவுவாயாக. முறையாக இதனுள் ஊடுருவி, ஓ! சாத்வதா {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களுடன் மோதி, உனக்குத் தகுந்த அருஞ்செயல்களை வெளிப்படுத்துவாயாக” என்று {யுதிஷ்டிரன்} சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.
சாத்யகி, யுதிஷ்டிரன் உரையாடல்! – துரோண பர்வம் பகுதி – 110-யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்காகவே அர்ஜுனனால் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; யுதிஷ்டிரனின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அர்ஜுனனை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற சாத்யகி; யுதிஷ்டிரன் சொன்ன சமாதானம்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முழுப் பாசத்தைக் கொண்டதும், ஏற்புடையதும், இனியவொலிகளால் நிரம்பியதும், மனத்திற்கு உகந்ததும், மகிழ்ச்சிகராமனதும், நியாயமானதுமான இவ்வார்தைகளை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னதும், ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மறுமொழியாக, சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, “ஓ! மங்கா மகிமை கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நீதி நிறைந்ததும் {நியாயமானதும்}, மகிழ்ச்சிகரமானதும், பல்குனரின் {அர்ஜுனரின்} புகழுக்கு ஏற்றதுமான நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கேட்டேன். உண்மையில் இத்தகு நேரத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, (உமக்கு) அர்ப்பணிப்புள்ள என்னைப் போன்ற ஒருவனைக் காண்கையில், பார்த்தருக்கு நீர் கட்டளையிடுவதைப் போலவே அவனுக்கும் கட்டளையிடுவதே உமக்குத் தகும். என்னைப் பொறுத்தவரை, தனஞ்சயருக்காக {அர்ஜுனருக்காக} என் உயிரையும் விட நான் தயாராக இருக்கிறேன். மேலும், நீர் கட்டளையிட்டால், இந்தப் போரில் எந்தக் காரியைத்தைத் தான் நான் செய்யமாட்டேன்? இந்தப் பலவீனமான (திருதராஷ்டிரப்) படையைக் குறித்து நான் என்ன சொல்வேன்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் தூண்டப்பட்டால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களோடும் போரிட நான் தயாராக இருக்கிறேன்.
இன்று நான் சுயோதனனின் மொத்தப் படையுடனும் போரிட்டுப் போரில் அதை வெல்வேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். பாதுகாப்புடன் இருக்கும் தனஞ்சயரை {அர்ஜுனரை}, பாதுகாப்பாக அடையும் நான், ஓ! மன்னா, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட பிறகே உமது முன்னிலைக்குத் திரும்புவேன். எனினும், ஓ! மன்னா, வாசுதேவர் {கிருஷ்ணர்} மற்றும் புத்திசாலியான அர்ஜுனர் ஆகியோர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து நான் உமக்குச் சொல்ல வேண்டும். நமது போர்வீரர்கள் அனைவரின் மத்தியிலும், வாசுதேவர் {கிருஷ்ணர்} கேட்டுக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனர் என்னை உறுதியுடன் (உறுதிமிக்க இவ்வார்த்தைகளால்) மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டோர்.
{அர்ஜுனர்}, “ஓ! மாதவா {சாத்யகி}, இன்று நான் ஜெயத்ரதனைக் கொல்லும் வரை, போரில் மேன்மையான தீர்மானத்துடன் மன்னரை {யுதிஷ்டிரரைக்} கவனமாகப் பாதுகாப்பாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, உன்னிடமோ, பெரும் தேர்வீரனான பிரத்யும்னனிடமோ ஏகாதிபதியை {யுதிஷ்டிரரின் பாதுகாப்பை} ஒப்படைத்தால், கவலையற்ற இதயத்துடன் ஜெயத்ரதனை நோக்கிச் செல்வேன். குருக்களில் முதன்மையானவராகக் கருதப்படும் போர்வீரரானத் துரோணர் எவ்வாறு போரிடுவார் என்பதை நீ அறிவாய். ஓ! தலைவா {சாத்யகி}, அனைவருக்கு முன்னிலையிலும் அவர் ஏற்ற உறுதிமொழியையும் நீ அறிவாய். அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} கைப்பற்ற எப்போதும் ஆவலாக இருக்கிறார். போரில் அவர் {துரோணர்}, மன்னர் யுதிஷ்டிரரைப் பீடிக்கத் தகுந்தவராவார்.
மனிதர்களில் சிறந்தவரும், நீதிமானுமான மன்னர் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் உன்னை நியமித்துவிட்டு, நான் இன்று ஜெயத்ரதனை அழிக்கச் செல்வேன். ஓ! மாதவா {சாத்யகி}, ஜெயத்ரதனைக் கொன்றுவிட்டு நான் விரைவில் திரும்புவேன். நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில் துரோணர் வெல்லாதவாறு நீ பார்த்துக் கொள்வாயாக. ஓ! மாதவா, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்டால், ஜெயத்ரதனைக் கொல்வதில் என்னால் வெல்ல முடியாது, என் துயரமும் அதிகமாகும். மனிதர்களில் சிறந்தவரும், பாண்டுவின் உண்மை நிறைந்த மகனுமான அவர் {யுதிஷ்டிரர்} கைப்பற்றப்பட்டால், நான் மீண்டும் காட்டுக்கே செல்வேன் என்பது தெளிவானதாகும் {நிச்சயமாகும்}. எனவே, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், போரில் யுதிஷ்டிரரைப் பிடிப்பதில் வென்றுவிட்டால், ஜெயத்ரதனை நான் வென்றாலும், அஃது எந்தப் பலனையும் உண்டாக்காது என்பது வெளிப்படையானது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா {சாத்யகி}, எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், எனது வெற்றி மற்றும் புகழுக்காவும், போரில் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காப்பாயாக” என்றார் {அர்ஜுனர்}.
எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} மூலம் தொடரும் அச்சத்தின் விளைவாக, சவ்யசச்சின் {அர்ஜுனர்} உம்மை {பாதுகாப்பதை} என்னிடம் நம்பிக்கையின் பேரில் ஒப்படைத்தார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, ருக்மினியின் மகனை (பிரத்யும்னனைத்) தவிரப் போரில் துரோணருக்குப் பொருத்தமான வேறு எவனும் இல்லை என்பதை நானே தினமும் பார்க்கிறேன். புத்திசாலியான பரத்வாஜரின் மகனுக்குப் போரில் நானும் பொருத்தமானவனாகவே கருதப்படுகிறேன். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் மதிப்பை நானே பொய்த்துக் கொள்வதோ, எனது ஆசான் (அர்ஜுனரின்) கட்டளைகளை அலட்சியம் செய்வதோ, உம்மை விட்டு அகல்வதோ கூடாது என்பது தெளிவாகிறது. ஊடுருவமுடியாத கவசம்பூண்டிருக்கும் ஆசான் (துரோணர்), தன் கரநளினத்தின் விளைவால் போரில் உம்மை அடைந்து, சிறு பறவையுடன் {விளையாடும்} சிறுவனைப் போல உம்முடன் விளையாடுவார்.
மகரக் கொடி தாங்கிய கிருஷ்ணரின் மகன் {பிரத்யும்னன்} இங்கே இருந்தால், அர்ஜுனரைப் போலவே அவன் உம்மைப் பாதுகாப்பான் என்பதால், அவனிடம் {உம்மை பாதுகாக்கும் பணியை} ஒப்படைத்திருக்க முடியும். {ஆனால் இப்போதோ}, நீரே உம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நான் சென்றுவிட்டால், உம்மைப் பாதுகாப்பது யார்? நான் அர்ஜுனரிடம் செல்லும்போது, துரோணரை எதிர்த்துச் செல்லக்கூடியவர் யார்? ஓ! மன்னா, அர்ஜுனனைக் குறித்த அச்சமேதும் இன்று உமதாக வேண்டாம். எந்தச் சுமை எவ்வளவு கனமானதாக இருந்தாலும் அவர் ஒருபோதும் {அர்ஜுனர்} உற்சாகமிழப்பதில்லை.
அவருக்கு {அர்ஜுனருக்கு} எதிரான போர்வீரர்களான சௌவீரகர்கள், சிந்தவப் பௌரவர்கள், வடக்கத்தியர், தெற்கத்தியர், கர்ணனின் தலைமையிலானோர் ஆகியோரின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் அர்ஜுனருக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் அவர்கள் ஈடாகமாட்டார்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து ராட்சச இனங்கள், கின்னரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அவருக்கு எதிராக ஒன்றாகத் திரண்டு எழுந்தாலும், போரில் அர்ஜுனருக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள். ஓ! மன்னா, இஃதை அறிந்து கொண்டு தனஞ்சயர் நிமித்தமான உமது அச்சத்தை விலக்குவீராக. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான வீரக் கிருஷ்ணர்கள் {வீர கருப்பர்கள்} இருவரும் எங்கிருக்கிறார்களோ, அங்கே அவர்களது நோக்கத்திற்குச் சிறு தடங்கலும் ஏற்பட முடியாது.
உமது தம்பியின் {அர்ஜுனரின்} தெய்வீக வலிமை, ஆயுதங்களில் சாதனை, வளம், போரில் கோபம், நன்றியுணர்வு மற்றும் கருணையை நினைத்துப் பாரும். ஓ! மன்னா, அர்ஜுனரிடம் செல்வதற்காக நான் இந்த இடத்தைவிட்டு அகன்றால், போரில் துரோணர் வெளிக்காட்டப் போகும் ஆயுதங்களின் அற்புத அறிவையும் நினைத்துப் பாரும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} உம்மைக் கைப்பற்றுவதில் பேராவல் கொண்டிருக்கிறார். மேலும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, தன் உறுதிமொழிக்கு நன்மை செய்வதையும் ஆவலுடன் விரும்புகிறார். ஓ! மன்னா, உமது பாதுகாப்பில் கவனமாக இருப்பீராக. நான் சென்ற பிறகு உம்மைப் பாதுகாப்பவர் யார்? யாரிடம் நம்பிக்கை வைத்து, பிருதையின் மகனான பல்குனரை {குந்தியின் மகன் அர்ஜுனரை} நோக்கி நான் செல்வது? {அந்த நம்பிக்கைக்குரிய} அவர் யார்? ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்போரில் உம்மை எவரிடமாவது ஒப்படைக்காமல், நிச்சயம் நான் அர்ஜுனரிடம் செல்ல மாட்டேன் என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! மன்னா, உமது நுண்ணறிவின் துணை கொண்டு, அனைத்துக் கண்ணோட்டங்களில் இருந்தும் சிந்தித்து, உயர்ந்த நன்மையைத் தரவல்லது எது என்பதை உறுதி செய்த பிறகு எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான் {சாத்யகி}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {சாத்யகியிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா, நீ சொன்னது போலவே தான் இருக்கிறது. எனினும், ஓ! ஐயா, இவையனைத்தாலும் கூட, என் இதயம் அர்ஜுனன் நிமித்தமாக அமைதியை அடையவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் முன்னெச்சரிக்கைகளை நான் எடுத்துக் கொள்வேன். என்னால் ஆணையிடப்படும் நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ அங்கே செல்வாயாக. போரில், என் பாதுகாப்புடன், அர்ஜுனனை நோக்கி நீ செல்ல வேண்டிய அவசியத்தை {ஒப்பிட்டு} என் புத்தியால் ஆராய்ந்தால் பின்னதே எனக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. எனவே, தனஞ்சயன் எங்குச் சென்றானோ அங்கே செல்ல நீ தயாராவாயாக.
வலிமைமிக்கப் பீமன் என்னைப் பாதுகாப்பான். தன் உடன் பிறந்த தம்பிகளுடன் கூடிய பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் என்னைப் பாதுகாப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஓ! ஐயா, கேகயச் சகோதரர்கள் ஐவர், ராட்சசன் கடோத்கசன், விராடன், துருபதன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பெரும் பலத்தைக் கொண்ட திருஷ்டகேது, குந்திபோஜன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் என்னை மிகக் கவனமாகப் பாதுகாப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருக்கும் துரோணராலும், கிருதவர்மனாலும் கூட, போரில் நம்மைத் தாக்குவதிலோ, என்னைப் பீடிப்பதிலோ வெல்ல முடியாது.
எதிரிகளை எரிப்பவனான திருஷ்டத்யும்னன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கடலைத் தடுக்கும் கரையைப் போலக் கோபக்காரத் துரோணரைத் தடுப்பான். பகைவர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் எங்கிருக்கிறானோ, அங்கே துரோணரால் நமது துருப்புகளைப் பலவந்தமாக மீறிச் செல்ல முடியாது. இந்தத் திருஷ்டத்யும்னன், கவசம் பூண்டவரும், வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தரித்தவரும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான துரோணரின் அழிவுக்காகவே நெருப்பில் இருந்து உதித்தவனாவான். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, என்னைக் குறித்து வருத்தப்படாமல், கவலையற்ற இதயத்துடன் செல்வாயாக. போரில் திருஷ்டத்யுமனன், கோபக்காரத் துரோணரைத் தடுப்பான்” {என்றான் சஞ்சயன்}.
கைராதகமது உண்ட சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 111-யுதிஷ்டிரனின் வார்த்தைகளை ஏற்ற சாத்யகி; தான் கடக்க வேண்டிய தொலைவையும், வீரர்களையும், படைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது; தனக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் ஏற்பாடுகளை யுதிஷ்டிரனிடம் கேட்டது; நீராடி, மங்கலச் சடங்குகளைச் செய்து, கைராதகம் மற்றும் தேன் குடித்து ஸ்நாதக பிராமணர்களின் ஆசிகளைப் பெற்றுப் புறப்பட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்தொடர்ந்து சென்ற பீமன்; பீமனைத் தடுத்து யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கு நிற்குமாறு சாத்யகி வேண்டியது; பீமன் திரும்பியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, மன்னனை {யுதிஷ்டிரனை} விட்டு தான் நீங்கிச் சென்றால் அர்ஜுனன் செய்யப்போகும் கண்டனத்திற்கு அஞ்சினான். எனினும், (யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படியாவிட்டால்) மக்கள் நிச்சயம் அதைக் கோழைத்தனமெனச் சுட்டிக்காட்டுவார்கள், என்பதைக் கண்ட அவன் {சாத்யகி}, தனக்குள்ளேயே, “அர்ஜுனரிடம் செல்வதற்கு நான் அஞ்சுகிறேன் என மக்கள் சொல்ல வேண்டாம்” என்று சொன்னான்.
இதைக் குறித்து மீண்டும் மீண்டும் சிந்தித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உமது பாதுகாப்பிற்கு இவ்வேற்பாடுகள் போதுமானது எனத் தாம் கருதினால், உமது உத்தரவை ஏற்று நான் பீபத்சுவிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். ஓ! மன்னா, எனக்குப் பல்குனரை {அர்ஜுனரை} விட அன்புக்குரிய வேறு எவரும் இந்த மூன்று உலகத்தில் இல்லை என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மதிப்பு அளிப்பவரே, {உமது} உத்தரவின் பேரில், நான் அவரது பாதையைத் தொடர்ந்து செல்வேன். உமக்காக என்னால் செய்யத்தகாதது என்று எதுவுமில்லை. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் ஆசானின் {அர்ஜுனரின்} கட்டளைகள் எனக்கு எப்போதும் கனமானதே.
ஆனால், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, உமது கட்டளைகளோ, எனக்கு அதைவிடக் கனமாதே {மேன்மையானதே}. உமது சகோதரர்களான [1] கிருஷ்ணரும், தனஞ்சயரும் {அர்ஜுனரும்}, உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்கின்றனர். ஓ! தலைவா, அர்ஜுனருக்காக உமது உத்தரவுகளை என் சிரம் மேல் கொண்டு, ஓ! மனிதர்களில் காளையே, ஊடுருவமுடியாத இந்தப் படையை நான் பிளந்து செல்வேன். கடலுக்குள் உலாவும் மீனைப் போல, துரோணரின் இந்தப் படைக்குள் கோபத்துடன் உலவும் நான், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய முதன்மையான தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, தன் துருப்புகளை நம்பிக்கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனர்} மீது கொண்ட அச்சத்துடன் ஜெயத்ரதன் எங்கே நிற்கிறானோ அங்கே நான் செல்வேன்.ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கிருந்து செல்லும் தொலைவு மூன்று யோஜனைகளாகும் [2]. பார்த்தர் {அர்ஜுனர்}, ஜெயத்ரதனைக் கொல்லத் தயாராக இருக்கும் அந்த இடத்தை நினைத்துப் பார்க்கிறேன். பார்த்தர் மூன்று யோஜனைகள் தொலைவில் இருந்தாலும், அவரது பாதையை நான் நெஞ்சுரத்துடன் தொடர்ந்து சென்று, ஜெயத்ரதன் கொல்லப்படும் வரை அவருடனேயே {அர்ஜுனருடனேயே} இருப்பேன். மூத்தவர்களின் கட்டளைகள் இல்லாமல் போரிடச் செல்பவன் எவன் இருக்கிறான்? மேலும் உம்மால் கட்டளையிடப்பட்டதைப் போலக் கட்டளையிடப்பட்டும், போரிடமால் இருக்க என்னைப் போன்ற ஒருவனால் எப்படி முடியும்?ஓ! தலைவா, நான் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். பெருங்கடலைப் போன்றதும், கலப்பைகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பராசங்கள், கேடயங்கள், வாள்கள், ரிஷ்டிகள், வேல்கள், முதன்மையான கணைகள் ஆகியவற்றால் நிறைந்த இந்தப் படை எனும் பெருங்கடலை நான் இன்று கலங்கடிப்பேன். இதோ நீர் காணும் இந்த யானைப்படை, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அஞ்சனம் என்ற இனப்பெயரைக் கொண்டவையும், பெரும் ஆற்றலைக் கொண்டவையும், பெரும் எண்ணிக்கையிலான மிலேச்சர்களால் நடத்தப்படுபவையும் {மிலேச்ச பாகர்களைக் கொண்டவையும்}, தாக்குவதில் சிறந்தவையும், போரில் மகிழ்ச்சி கொள்பவையும், மேகங்களில் இருந்து பொழியும் மழையைப் போலத் தங்கள் மதநீரை பெருக்குபவையும், தங்கள் முதுகில் இருப்போரால் தூண்டப்பட்டாலும் எப்போதும் பின்வாங்காதவையுமான ஆயிரம் யானைகளைக் கொண்டதாகும். ஓ! மன்னா, கொல்லப்படாமல் இவற்றை வெல்ல முடியாது.
மேலும், இதோ நீர் காணும் ஆயிரக்கணக்கான தேர் வீரர்கள் அனைவரும், அரசப் பரம்பரையில் பிறந்தவர்களும், மகாரதர்களுமாவர். இவர்கள் ருக்மரதர்கள் [3] என்று அழைக்கப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, ஆயுதங்களிலும், தேரில் இருந்து போரிடுவதிலும், யானைகளின் முதுகில் இருந்து போரிடுவதிலும் இவர்கள் சாதித்தவர்களாவர். ஆயுத அறிவியலில் மேன்மையான தேர்ச்சி பெற்ற இவர்கள், தங்கள் முஷ்டிகளால் போரிடுவதிலும் சாதித்தவர்களாவர். கதாயுதம் கொண்டு போரிடுவதில் திறம்பெற்ற இவர்கள், கைச்சண்டைக் கலையிலும் மேன்மையான தேர்ச்சி பெற்றவர்களாவர். மேலும் இவர்கள் கத்தியைக் கொண்டு தாக்குவதிலும், வாள் மற்றும் கேடயத்தோடு எதிரியின் மீது பாய்வதிலும் இணையான சாதுர்யம் கொண்டவர்களாவர்.துணிச்சலும், கல்வியும் கொண்ட இவர்கள் பகைமையால் தூண்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஓ! மன்னா, ஒவ்வொரு நாளும் இவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் வெல்கின்றனர். கர்ணனால் ஆணையிடப்படும் இவர்கள், துச்சாசனனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வாசுதேவரே {கிருஷ்ணரே} கூட இவர்களைப் பெரும் தேர்வீரர்களென மெச்சுகிறார். எப்போதும் கர்ணனின் நன்மையை வேண்டும் இவர்கள், அவனுக்குக் {கர்ணனுக்குக்} கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஓ! மன்னா, கர்ணனின் உத்தரவின் பேரால், அர்ஜுனருடன் போரிடுவதில் இருந்து இவர்கள் திரும்பியிருப்பதால், களைப்பில்லாதவர்களாக, சிரமத்தை அடையாதவர்களாக, ஊடுருவ முடியாத கவசங்களைப் பூண்டு, வலுவான விற்களைத் தரித்துக் கொண்டு, துரியோதனனாலும் ஆணையிடப்பட்டு வந்திருக்கும் இந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், நிச்சயம் எனக்காகவே காத்திருக்கிறார்கள். ஓ! கௌரவரே, உமது நன்மைக்காக இவர்களை நொறுக்கிய பிறகு, சவ்யசச்சினுடைய {அர்ஜுனருடைய} பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.
கவசம்பூண்டவையும், கிராதர்களால் செலுத்தப்படுபவையும், ஆபரணங்கள் பூண்டவையுமாக அதோ நீர் காணும் எழுநூறு {700} பிற யானைகளும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு சமயம், தன் உயிரை விரும்பிய கிராதர்களின் மன்னனால் {சுமணனால்} [4], பல வேலைக்காரர்களையும் அவற்றின் வரிசையில் சேர்த்துச் சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்} கொடுக்கப்பட்டவையாகும். ஓ! மன்னா, முன்னர் இவை உமது பணியில் ஈடுபட நியமிக்கப்படிருந்தன. உமக்கு எதிராக இவை இப்போது போரிடுவதால், காலம் கொண்டுவரும் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பீராக. போரில் வீழ்த்துவதற்குக் கடினமான கிராதர்களால் இந்த யானைகள் செலுத்தப்படுகின்றன. அக்னி குலத்தில் உதித்த இவர்கள் அனைவரும் யானைகளில் இருந்து போரிடுவதில் சாதித்தவர்களாவர். முன்னர் இவர்கள் அனைவரும் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்டவர்களுமாவர். இப்போது அவர்கள், துரியோதனனின் உத்தரவுகளின் பேரில் எனக்காகக் கவனமாகக் காத்திருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் வீழ்த்தக் கடினமான இந்தக் கிராதர்களை என் கணைகளால் கொன்ற பிறகு, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் நோக்கோடு உள்ள அர்ஜுனரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.அஞ்சனம் [5] என்ற குலத்தில் உதித்தவையும், ஊடுருவ முடியாத தோலைக் கொண்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், அலங்கரிக்கப்பட்டவையும், வாயில் மத நீர் ஒழுகுபவையும், முழுதாகத் தங்கக்கவசத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஐராவதத்திற்கே ஒப்பானவையுமான அந்தப் பெரும் யானைகள் (வேறு யானைகள்), போரில் பெரும் வல்லமைமிக்கவையாகும். வடக்கு மலைகளில் இருந்து வந்திருக்கும் இவை, உறுதியான அங்கங்களைக் கொண்டவர்களும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், எஃகு கவசங்களை அணிந்தவர்களும், சீற்றமிக்கவர்களுமான கள்வர்களால் செலுத்தப்படுகின்றன. அங்கே அவர்களில், பசுவுக்குப் பிறந்தவர்களும், குரங்குக்குப் பிறந்தவர்களும், பல்வேறு பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பாவம்நிறைந்தவர்களான மிலேச்சர்களாலான அந்தப் படைப்பிரிவு, புகையின் நிறத்தைக் கொண்டதாகத் தூரத்தில் தெரிகிறது.இவர்களையும், எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களையும், கிருபரையும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, கர்ணனையும் அடைந்த அவன் {துரியோதனன்}, பாண்டவர்களை மிக எளிதாக நினைக்கிறான். விதியால் உந்தப்பட்ட அவன் {துரியோதனன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக {கிருதார்த்தனாகத்} தன்னைக் கருதிக் கொள்கிறான். எனினும், என்னால் பெயர் குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் இன்று எனது கணைகள் அடையும் தொலைவிலேயே இருப்பார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் மனோவேகம் கொண்டவர்களாகவே இருந்தாலும் என்னிடம் இருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள். பிறரின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கும் இளவரசனான அந்தத் துரியோதனனால் எப்போதும் மதிக்கப்படும் இந்த வீரர்கள், என் கணை மேகங்களால் பீடிக்கப்பட்டு அழிவைச் சந்திப்பார்கள்.
ஓ! மன்னா, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களாக, தடுப்பதற்குக் கடினமானவர்களாக அதோ நீர் காணும் அந்தத் தேர்வீரர்கள் பிறர் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள், துணிச்சல்மிக்கவர்களாகவும், சாதித்தவர்களாகவும், ஆயுதங்களின் அறிவியலில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நன்மையை விரும்பும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள். ஓ! பாரதரே, முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருக்கும் அந்தக் கோபக்காரப் போர்வீரர்கள், குருவீரர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு, எனக்காகவே கவனமாக நிற்கின்றனர் {காத்திருக்கின்றனர்}. ஓ! மன்னா, அவர்கள் தங்கள் கண்களை என்மேல் கொண்டு விழிப்புடனே இருக்கின்றனர். வைக்கோல் குவியலை அழிக்கும் நெருப்பைப் போலவே அவர்கள் அனைவரையும் நான் நிச்சயம் அழிப்பேன்.
எனவே, ஓ! மன்னா, தேர்களைத் தயார் செய்வோர், என் தேரில் உரிய இடங்களில் அம்பறாத்தூணிகளையும், தேவையான அனைத்தையும் வைப்பார்களாக. உண்மையில், இத்தகு பயங்கரப் போரில் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டும். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான காம்போஜர்களுடன் நான் மோதப் போவதால், படை அறிவியலின் பேராசிரியர்கள் அறிவுறுத்துவதை விட ஐந்து மடங்கு அளவுக்கு (தேவையான ஆயுதங்களால்) தேர் நிரப்பப்பட வேண்டும். போர்க்கலையின் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டவர்களும், கடும் நஞ்சுக்கு ஒப்பானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களும், துரியோதனனால் எப்போதும் நன்கு நடத்தப்படுபவர்களும், துரியோதனனின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவர்களுமான கிராதர்களுடன் நான் மோத வேண்டும். சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், நெருப்பைப் போன்ற கொடூரம் கொண்டவர்களும் சுடர்மிக்கக் காட்டுநெருப்பைப் போல அணைப்பதற்குக் கடினமானவர்களுமான சகர்களோடும் நான் மோத வேண்டும். உண்மையில், தடுப்பதற்குக் கடினமான பல போர்வீரர்களுடன் இந்தப் போரில் நான் மோத வேண்டும். இதனால், நல்ல இனத்தைச் சேர்ந்தவையும், மங்கலக் குறிகளைக் கொண்டவையும், நன்கு அறியப்பட்டவையுமான குதிரைகள், அவற்றின் தாகம் தணிக்கப்பட்டு, முறையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு என் தேரில் பூட்டப்பட வேண்டும்” என்றான் {சாத்யகி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இதன் பிறகு யுதிஷ்டிரன், கணைகளாலும், பல்வேறு வகையான ஆயுதங்களாலும் நிறைந்த அம்பறாத்தூணிகளையும், உண்மையில், தேவையான அனைத்தையும், சாத்யகியின் தேரில் இடம்பெறச் செய்தான். பிறகு, நன்கு சேணம்பூட்டப்பட்ட அவனது சிறந்த குதிரைகள் நான்கையும், நுகத்தில் இருந்து விடுவித்த மனிதர்கள், தங்க நிறம் கொண்டவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையும், உற்சாகமானவையும், நன்கு அடிபணிபவையுமான அவ்விலங்குகளைக் {நீர்} குடிக்கவும், நடக்கவும், குளிக்கவும், உண்ணவும் செய்து, தங்க ஆரங்களால் அவற்றை அலங்கரித்து, அவற்றின் {உடல்களிலிருந்த} கணைகளைப் பிடுங்கி மீண்டும் அவனது தேரின் நுகத்தில் முறையாகப் பூட்டினர். அந்தத் தேரில் தங்கப் பிடரிமயிர்களைக் கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்ட ஒரு நெடிய கொடிமரம் நிறுவப்பட்டது. ஆயுதங்களின் அதிக எடையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த வாகனத்தில் அந்தக் கொடிமரத்தைச் சுற்றி வெண்மேகங்களைப் போன்ற நிறத்தில் கொடிகளும் பொருத்தப்பட்டன. தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை அந்தத் தேரின் நுகத்தில் பூட்டிய பிறகு, தேரோட்டியும், சாத்யகியின் அன்புக்குரிய {உயிர்} நண்பனுமான தாருகன் தம்பி {முகுந்தன்} [6] வந்து, வாசவனிடம் {இந்திரன்} தேர் தயாராக இருப்பதாகச் சொல்லவந்த மாதலி போலப் பின்னவனிடம் {சாத்யகியிடம்} தேர் தயாராக இருப்பதாகச் சொன்னான்.பிறகு நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்த சாத்யகி, தனக்கு ஆசிகள் கூறிய ஸ்நாதகப் பிராமணர்கள் ஆயிரம்பேருக்கு தங்க நிஷ்கங்களைக் கொடுத்தான். அந்த ஆசிகளால் அருளப்பட்டவனும், அழகர்களில் முதன்மையானவனும், வழிபடத்தகுந்த வீரனுமான அந்தச் சாத்யகி, கைராதம் {கைராதகம்} [7] மற்றும் தேனைக் குடித்து, போதையால் சிவந்த கண்கள் உருளப் பிரகாசமாக ஒளிர்ந்தான். பிறகு, வெண்கலக் கண்ணாடியை [8] தொட்டு, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் சக்தி இரட்டிப்படைந்தவனான அவன் {சாத்யகி} சுடர்மிக்க நெருப்பாகத் தெரிந்தான். தன் தோள்களில் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான தேர்வீரன் {சாத்யகி}, கவசம்பூண்டு, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, மறுபிறப்பாளர்களைக் {பிராமணர்களைக்} கொண்டு நிவர்த்திச் சடங்குகளையும் செய்து கொண்டான். அழகான கன்னியர் அவன் {சாத்யகி} மீது பொரிகளையும் நறுமணப் பொருட்களையும், மலர் மாலைகளையும் பொழிந்து அவனைக் கௌரவித்தனர். பிறகு அந்த வீரன், தன் கரங்களைக் கூப்பி யுதிஷ்டிரனின் பாதங்களை வணங்கினான், பின்னவனும் {யுதிஷ்டிரனும்} அவனை உச்சி முகர்ந்தான். இந்த முறைமைகள் அனைத்தையும் செய்த அவன் {சாத்யகி} தன் முதன்மையான தேரில் ஏறினான்.அப்போது, உற்சாகமானவையும், வலுவானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், வெல்லப்பட முடியாதவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், அவனை {சாத்யகியை} அந்த வெற்றித் தேரில் சுமந்து சென்றன. அதேபோலப் பீமசேனனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனை} மரியாதையாக வணங்கிய பிறகு சாத்யகியுடன் புறப்பட்டான். எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் உமது படைக்குள் ஊடுருவப் போகும் வேளையில், அவர்களது எதிரிகளான உமது துருப்புகள், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்டு அசையாதிருந்தன.
அப்போது சாத்யகி, கவசம்பூண்டு தன்னைப் பின்தொடர்ந்து வரும் பீமனைக் கண்டு, அந்த வீரனை {பீமனை} வணங்கி, அவனிடம் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினான். உண்மையில், வீரச் சாத்யகி ஒவ்வொரு அங்கத்திலும் இன்பத்தால் நிறைந்து பீமனிடம், “ஓ! பீமரே, மன்னரை நீர் பாதுகாக்க வேண்டும். அனைத்தையும் விட இதுவே உமது மேலான கடமையாகும். காலம் வந்துவிட்ட படையான இதை {இந்த எதிரிப் படையை} நான் பிளந்து செல்லப் போகிறேன். இப்போதும், எப்போதும் மன்னரின் பாதுகாப்பே உமது மேலான கடமையாகும். ஓ! பீமரே, நீர் எனது ஆற்றலை அறிவீர், {எனவே} எனது நன்மையை விரும்பித் திரும்புவீராக” என்றான் {சாத்யகி}. சாத்யகி இப்படிச் சொன்னதைக் கேட்ட பீமன், “{அப்படியெனில்} உன் நோக்கத்தின் வெற்றிக்காக நீ செல்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {சாத்யகியே}, நான் மன்னரைப் பாதுகாப்பேன்” என்று மறுமொழி கூறினான். இப்படிச் சொல்லப்பட்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பீமனிடம், “ஓ! பிருதையின் மகனே {பீமரே}, திரும்பிச் செல்வீராக. இப்படி என் தகுதிகளால் {புண்ணியங்களால்} வெல்லப்பட்ட நீர் இன்று என் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவதால் எனது வெற்றி உறுதியானதாகும். உண்மையில், ஓ! பீமரே, இந்த மங்கலச் சகுனங்கள் அனைத்தும் என் வெற்றியை உறுதி செய்கின்றன. பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனரால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்ட பிறகு நான் அற ஆன்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரைத் தழுவுவேன்” என்று பதில் கூறினான் {சாத்யகி}.
பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, அந்தச் சிறந்த போர்வீரனைத் தழுவி விடைபெற்றுக் கொண்ட அவன் {சாத்யகி}, மான்கூட்டத்தைக் காணும் ஒரு புலியைப் போல உமது துருப்புகளின் மேல் கண்களைச் செலுத்தினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையை இப்படிப் பார்த்த அவனைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மலைப்படைந்து, பயங்கரமாக நடுங்கத் தொடங்கின. பிறகு, ஓ! மன்னா, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க அர்ஜுனனைக் காண விரும்பிய சாத்யகி, தீடீரென உமது துருப்புகளை எதிர்த்து மோதினான்” {என்றான் சஞ்சயன்}.
கிருதவர்மனைக் கடந்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 112-சாத்யகிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வீரர்கள்; சாத்யகியைக் கண்டு ஓடிய கௌரவ வீரர்கள்; சாத்யகியுடன் மோதிய துரோணர்; துரோணரைத் தவிர்த்துச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கிருதவர்மனின் தேரோட்டியைக் கொன்று போஜர்களின் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய சாத்யகி; துரோணர் சாத்யகியைப் பின்தொடர்ந்தது; காம்போஜர்களை அடைந்த சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுதானன் {சாத்யகி}, போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளை எதிர்த்துச் சென்றபோது, மன்னன் யுதிஷ்டிரன், துரோணரின் தேரை அடைவதற்காக, யுயுதானனைத் தன் படை சூழப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு, பாஞ்சலர்களின் மன்னனுடைய மகனும் வெல்லப்பட முடியாத வீரனுமான திருஷ்டத்யும்னனும், மன்னன் வசுதானனும் [1], பாண்டவப் படையிடம் பேரொலியுடன், “போரில் வெல்லப்பட முடியாத வீரனான சாத்யகி (கௌரவப் படையின் ஊடாக) எளிமையாகக் கடந்து செல்வதற்கு ஏதுவாக {உதவிட} வாருங்கள், விரைவாகத் தாக்குங்கள், எதிரியை எதிர்த்து விரையுங்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் அவனை வெல்லப் போராடுவார்கள்” என்று சொன்னார்கள். இதைச் சொன்ன (பாண்டவப் படையின்) பெரும் தேர்வீரர்கள், தங்கள் எதிரிகளின் மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர். உண்மையில் அவர்கள் அனைவரும், “சாத்யகியை வெல்ல முயல்வோரை நாங்கள் வெல்வோம்” என்று சொல்லிக் கொண்டே விரைந்தனர்.அப்போது சாத்யகியின் தேரருகே உரத்த ஆரவாரம் கேட்டது. எனினும், உமது மகனின் {துரியோதனனின்} படையானது சாத்யகியின் கணைகளால் மறைக்கப்பட்டுத் தப்பி ஓடியது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} அந்தப் படை, போராடும் நூறு குழுக்களாகப் பிளக்கப்பட்டது. அந்தப் படை அப்படிப் பிளந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சிநி (சிநியின் பேரன் {சாத்யகி}), எதிரியின் படைப்பிரிவின் முகப்பில் இருந்த வீரமிக்கப் பெரும் வில்லாளிகள் எழுவரை நொறுக்கினான். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான தன் கணைகளால் அவன் {சாத்யகி} பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களையும், பிற வீரர்கள் பலரையும் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிலநேரங்களில் அவன் {சாத்யகி}, ஒரே கணையால் நூறு வீரர்களையும், சில நேரங்களில் நூறு கணைகளால் ஒரே ஒரு வீரனையும் துளைத்தான்.
உயிரினங்களை அழிக்கும் பெரும் ருத்ரனைப் போல அவன் {சாத்யகி} யானைப் பாகர்களையும், குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் கூடிய தேர்வீரர்களையும் கொன்றான். இத்தகு கரநளினத்தை வெளிக்காட்டி, இத்தகு கணை மேகங்களைப் பொழிந்த சாத்யகியை எதிர்த்துச் செல்ல உமது துருப்புகளில் எவரும் துணியவில்லை. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} தரையில் நசுக்கப்பட்டுப் பீதியடைந்திருந்த அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் அனைவரும், செருக்கு மிக்க அந்த வீரன் {சாத்யகி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே களத்தைவிட்டுச் சென்றனர். அவன் {சாத்யகி} தனி ஒருவனாக இருந்தாலும், பலராகக் கண்ட அவர்கள், அவனது சக்தியால் மலைப்படைந்தனர்.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பரவிக்கிடந்தவையான நொறுங்கிய தேர்கள், உடைந்த நீடங்கள் [2] மற்றும் சக்கரங்கள், விழுந்த குடைகள், கொடிமரங்கள், இருசுக்கட்டைகள், கொடிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம் பூசப்பட்டவையுமான கரங்கள், ஓ! மன்னா, யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், பாம்புகளின் ஒடுங்கிய உடலைப் போன்றவையுமான மனிதத் தொடைகள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களையும் சந்திரனுக்கு ஒப்பான அழகையும் கொண்ட வீரர்களின் முகங்கள் ஆகியவற்றால் பூமி மிக அழகாகத் தெரிந்தது. பல்வேறு முறைகளில் அறுக்கப்பட்டு விழுந்து கிடக்கும் பெரும் உடல் கொண்ட யானைகளுடன், மலைகளால் பரவியிருக்கும் ஒரு பெரிய சமவெளியைப் போன்று அந்தத் தரையானது மிக அழகாகத் தெரிந்தது. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, தரையில் விழுந்து கிடக்கும் குதிரைகள், தங்கத்தால் மெருகூட்டப்பட்டவையும், முத்துக்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அழகிய கடிவாளங்களோடும், அழகிய வடிவம் மற்றும் அமைப்புடன் கூடிய தங்கள் கவசங்களோடும் மிக அழகாகத் தெரிந்தன. பல்வேறு வகைகளிலான உமது துருப்பினரைக் கொன்ற அந்தச் சாத்வத குலத்தோன் {சாத்யகி}, உமது படையைக் கலங்கடித்து முறியடித்த படியே உமது படைக்குள் நுழைந்தான்.சாத்யகி, முன்பு தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற அதே வழியில் தானும் செல்ல விரும்பினான். அப்போது துரோணர் வந்து அவனைத் {சாத்யகியைத்} தடுத்தார். பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} மோதிய யுயுதானன் {சாத்யகி}, சினத்தால் நிறைந்து, கரையில் மோதியும் நிற்காத பெரும் வெள்ளமென நிற்காமல் சென்றான். எனினும் துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை அந்தப் போரில் தடுத்து, உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல ஐந்து கூரிய கணைகளால் அவனைத் துளைத்தார். இருப்பினும், அந்தப் போரில் சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயிலின் இறகுகளைக் கொண்டவையும், தங்கச் சிறகுகளைத் தரித்தவையுமான ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர், சாத்யகியையும், அவனது குதிரைகளையும், தேரோட்டிகளையும் ஆறு கணைகளால் பீடித்தார்.
வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனால் துரோணரின் அந்தச் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிங்க முழக்கமிட்ட அவன் {சாத்யகி}, பத்துக் கணைகளாலும், பிறகு ஆறாலும், பிறகும் வேறு எட்டு கணைகளாலும் துரோணரைத் துளைத்தான். மேலும் யுயுதானன், மீண்டும் துரோணரைப் பத்துக் கணைகளாலும், அவரது தேரோட்டியை ஒன்றாலும், அவரது நான்கு குதிரைகளை நான்கு கணைகளாலும் துளைத்தான். மேலும் சாத்யகி, மற்றுமொரு கணையால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பிறகு துரோணர், வேகமாகச் செல்பவையும், விட்டில் பூச்சிகளைப் போல எண்ணிக்கையில் கணக்கற்றவையுமான கணைகளால் சாத்யகியையும், அவனது தேர், குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றையும் விரைவாக மறைத்தார். அதே போல யுயுதானனும், பெரும் வேகம் கொண்ட கணக்கற்ற கணைகளால் அச்சமற்ற வகையில் துரோணரை மறைத்தான்.
அப்போது துரோணர், யுயுதானனிடம், “உன் ஆசான் (அர்ஜுனன்), அவனுடன் போரிட்டுக் கொண்டிருந்த என்னைத் தவிர்த்துவிட்டு, என் பக்கவாட்டின் வழியாக ஒரு கோழையைப் [3] போலப் போரை விட்டுச் சென்றுவிட்டான். ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, உன் ஆசானைப் போலவே நீயும் இந்தப் போரில் என்னை விரைவாகத் தவிர்க்கவில்லையெனில், என்னுடன் போரிடும் நீ இன்று உயிருடன் தப்ப முடியாது” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சாத்யகி {துரோணரிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில் தனஞ்சயரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்கிறேன். ஓ! பிராமணரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, (நான் உம்முடன் போரிட்டால்) நான் நேரத்தை இழக்க நேரிடும். ஒரு சீடனானவன் தன் ஆசான் நடந்த வழியிலேயே எப்போதும் நடக்க வேண்டும். எனவே, நான் என் ஆசான் நடந்த பாதையையே பின்பற்றிச் செல்வேன்” என்றான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வளவே சொன்ன அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, ஆசானை {துரோணரைத்} தவிர்த்துவிட்டுத் திடீரென முன்னேறிச் சென்றான். அவன் {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, துரோணர் அனைத்து வகைகளிலும் எனது முன்னேற்றத்தைத் தடுக்கவே முனைவார். ஓ! சூதா, இந்த என் முக்கியமான வார்த்தைகளைக் கேட்டுப் போரில் கவனமாகச் செல்வாயாக. அங்கே பெரும் காந்திமிக்க அவந்திகளின் படை தெரிகிறது. அதற்கு அடுத்ததாகத் தெற்கத்தியரின் வலிமைமிக்கப் படை இருக்கிறது. அதற்கு அடுத்து, பாஹ்லீகர்களின் பெரும்படை இருக்கிறது. பாஹ்லீகர்களுக்குப் பக்கத்தில், கர்ணனின் உத்தரவின் பேரில் போரிடும் தீர்மானத்துடன் இருக்கும் வலிமைமிக்கப் படை இருக்கிறது.
ஓ! தேரோட்டியே இந்தப் படைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் வேறுபாடுகளைக் கொண்டவை, ஆனால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அவை போர்க்களத்தில் ஒன்றையொன்று காத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்தப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை அடைந்து குதிரைகளை உற்சாகமாகச் செலுத்துவாயாக. உண்மையில், குதிரைகள் சகித்துக்கொள்ளக்கூடிய வேகத்தில் அவற்றைச் செலுத்தி, ஓ! தேரோட்டியே, ஆயுதங்களை உயர்த்திய கரங்களுடன் கூடிய பாஹ்லீகர்களும், பலவேறு நாடுகளைச் சேர்ந்த காலாட்படை வீரர்கள், வரிசையாக நிற்கும் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களுடன் கூடிய படைப்பிரிவுகளுடன், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையில் நிற்கும் எண்ணற்ற தெற்கத்தியர்களும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே என்னைக் கொண்டு செல்வாயாக” என்றான் {சாத்யகி}.
தன் தேரோட்டியிடம் இவ்வளவே சொல்லி, அந்தப் பிராமணரை (துரோணரைத்) தவிர்த்துவிட்டுச் சென்ற அவன் {சாத்யகி}, கடுமையானதும், வலிமையானதுமான கர்ணனின் இரு படைப்பிரிவுகளுக்கு ஊடான திறந்தவெளியின் வழியே கடந்து செல்லும்படி தன் தேரோட்டியிடம் சொன்னான். எனினும் கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், எண்ணற்ற கணைகளை அவன் {சாத்யகி} மீது ஏவிபடியே பின்னால் இருந்து அவனைத் தொடர்ந்து சென்றார். உண்மையில் அந்த ஆசான் {துரோணர்}, திரும்பிப் பார்க்கும் விருப்பம் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான யுயுதானனை நெருக்கமாகவே பின்தொடர்ந்தார்.
கர்ணனின் பெரும்படையைத் தன் கூரிய கணைகளால் தாக்கிய சாத்யகி, அளவில்லாததும், பரந்திருந்ததுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவினான். எனினும் யுயுதானன் {சாத்யகி}, அந்தப் படைக்குள் நுழைந்த போது (அவனை எதிர்த்து நின்ற) துருப்புகள் தப்பி ஓடின. இதன்காரணமாகக் கோபம் நிறைந்த கிருதவர்மன், சாத்யகியைத் தடுப்பதற்காக முன்வந்தான். முன்னேறிவரும் கிருதவர்மனை ஆறு கணைகளால் தாக்கிய வீரச் சாத்யகி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் விரைவாகக் கொன்றான் [4]. மீண்டும் அவன் {சாத்யகி}, வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான். அவன், பெரும் வேகம் கொண்ட, நேரான பதினாறு கணைகளால் மீண்டும் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான்.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரர்ரே}, இப்படி அந்தச் சாத்வத குலத்தோனின் {சாத்யகியின்} கடும் சக்தி கொண்ட பல கணைகளால் மோதப்பட்ட கிருதவர்மனால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்தைக் கொண்டதுமான வத்ஸதந்தத்தை {கன்றின் பல்லுக்கு ஒப்பான முனை கொண்ட கணையைக்} குறி பார்த்த அவன் {கிருதவர்மன்}, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து சாத்யகியின் மார்பைத் துளைத்தான். அழகிய சிறகுகளைக் கொண்ட அந்தக் கணை, அவனது கவசத்தையும், உடலையும் ஊடுருவிச் சென்று இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரர்ரே}, உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட வீரனான அந்தக் கிருதவர்மன், கணைகள் பலவற்றை ஏவி, கணைகள் பொருத்தப்பட்ட சாத்யகியின் வில்லை அறுத்தான். அந்தப் போரில், சினத்தால் நிறைந்த அவன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையைக் கொண்ட பத்து கணைகளால் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் நடுமார்பைத் துளைத்தான்-தன் வில் உடைந்த காரணத்தால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சாத்யகி, கிருதவர்மனின் வலது கை மீது ஓர் ஈட்டியை ஏவினான். வலுவான {வேறொரு} வில்லொன்றை எடுத்து வளைத்த யுயுதானன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளைத் தன் எதிரியின் மீது விரைவாக ஏவி, அந்தக் கணை மழையால் கிருதவர்மனையும், அவனது தேரையும் முழுமையாக மறைத்தான். இப்படி ஹிருதிகனின் மகனை {கிருதவர்மனை} மறைத்த சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தால் எதிரியின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். இப்படிக் கொல்லப்பட்ட அந்த ஹிருதிகன் மகனுடைய தேரோட்டி அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே விழுந்தான். இதன் காரணமாக, தேரோட்டியை இழந்த கிருதவர்மனின் குதிரைகள் [5] பெரும் வேகத்துடன் தப்பி ஓடின.பெரும் கலக்கமடைந்த அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்} தானே அக்குதிரைகளைத் தடுத்தான். வீரம் கொண்ட அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, கையில் வில்லுடன் தன் தேரில் (போருக்குத் தயாராக) நின்றான். இந்தச் சாதனையைக் கண்ட அவனது {கிருதவர்மனது} துருப்புகள் அஃதை உயர்வாகப் பாராட்டின. குறுகிய காலத்திற்கு ஓய்ந்திருந்த கிருதவர்மன், பிறகு தன் நல்ல குதிரைகளைத் தூண்டினான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் எதிரிகளைப் பெரும் அச்சங்கொள்ளச் செய்தான். எனினும், அந்நேரத்தில் சாத்யகி அவனைத் தாண்டிச் சென்றுவிட்டான். எனவே இப்போது கிருதவர்மன், சாத்யகியைத் தொடர்ந்து செல்லாமல் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.
இப்படியே போஜர்களின் படைப்பிரிவை விட்டு வெளியேறிய சாத்யகி, காம்போஜர்களின் வலிமைமிக்கப் படைப்பிரிவை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றான். அங்கே துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தத் தேர்வீரர்களால் தடுக்கப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான யுயுதானனால் ஓர் அடியும் நகர முடியவில்லை. அதேவேளையில், தன் துருப்புகளை உரிய இடங்களில் நிறுத்திய துரோணர், அவர்களைப் பாதுகாக்கும் சுமையைப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} ஒப்படைத்துவிட்டு, போரிடும் ஆசையால் உறுதியான தீர்மானத்தைச் செய்து கொண்டு, யுயுதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார்.
இப்படித் யுயுதானனைப் பின்னாலிருந்து தொடர்ந்து செல்லும் துரோணரைக் கண்ட பாண்டவப் படையின் முதன்மையான வீரர்கள் உற்சாகத்துடன் அவரைத் தடுக்கத் தொடங்கினர். எனினும் பீமசேனனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அணுகி மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். ஓ! மன்னா, தன் ஆற்றலை வெளிப்படுத்திய வீரக் கிருதவர்மன், சிறிது உற்சாகமற்றவர்களாக இருந்தாலும், பெரும் வீரியத்துடனேயே போரிட்டு வந்த அந்த வீரர்கள் அனைவரையும் தடுத்தான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் கணைமழையின் மூலம் தன் எதிரிகளின் விலங்குகளைப் பலவீனமடையச் செய்தான். எனினும், (பாண்டவப் படையின்) துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், போஜர்களின் ஆட்சியாளனால் {கிருதவர்மனால்} இப்படிப் பீடிக்கப்பட்டாலும், பெரும்புகழுக்காகப் போராடும் உயர் பிறப்புக் கொண்ட படைவீரர்களைப் போல அந்தப் போஜப்படையை எதிர்த்துப் போரிடத் தீர்மானித்தனர்” {என்றான் சஞ்சயன்}.
கிருதவர்மனைக் கடக்க முடியாத பாண்டவர்கள்! – துரோண பர்வம் பகுதி – 113-தன் படைகளின் தோல்வியைக் கேட்டுத் துயரடைந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; பாண்டவர்கள் அனைவரையும் தனி ஒருவனாகவே தடுத்த கிருதவர்மனின் ஆற்றல்; பீமனின் வில்லையும் கொடிமரத்தையும் வெட்டி அவனைத் தாக்கி நடுங்கச் செய்த கிருதவர்மன்; சிகண்டியின் வில்லை அறுத்து, அவனைத் தாக்கி மயக்கமடையச் செய்து களத்தைவிட்டே விரட்டியது; பாண்டவப் படை சிதறி ஓடியது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நமது படையும் தலையாயச் சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. மேன்மையானதாகவும் அது கருதப்படுகிறது. ஓ! சஞ்சயா, அறிவியலின் விதிகளின் படி சமமாக அணிவகுக்கப்பட்டுள்ள அதுவும் {படையும்} எண்ணற்றவர்களைக் கொண்டதாகவே இருக்கிறது [1]. எப்போதும் நம்மால் நன்றாக நடத்தப்படும் அது, நமக்கு அர்ப்பணிப்புள்ளதாகவே எப்போதும் இருக்கிறது. பரந்த எண்ணிக்கையின் பலம், அதற்கு ஓர் அற்புதத் தன்மையை அளிக்கிறது. முன்பே அதன் ஆற்றல் சோதிக்கப்பட்டுள்ளது.
படைவீரர்கள் மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிவாகவோ, பருமனாகவோ இல்லை. நன்கு வளர்க்கப்பட்ட பலமான உடற்கட்டுகளையும், சுறுசுறுப்பையும் கொண்ட அவர்கள், நோயிலிருந்து விடுபட்டவர்களாகவே இருக்கின்றனர். கவசம் பூண்டிருக்கும் அவர்கள், நன்கு ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். அனைத்து வகையான ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள், யானைகளின் முதுகுகளில் ஏறவும், இறங்கவும், முன் நகரவும், பின்நகரவும், திறனுடன் தாக்கவும், அணிவகுக்கவும், பின்வாங்கவும் திறன்மிக்கவர்களாகவே இருக்கின்றனர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நடத்துவதில் அவர்கள் அடிக்கடி சோதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், பரம்பரைக்காவோ {பிறப்பின் அடிப்படையிலோ}, உதவிசெய்வதற்காகவோ, உறவுமுறைக்காகவோ இல்லாமல் {தேர்ந்தெடுக்கப்படாமல்}, முறையாக ஆய்வு செய்யப்பட்ட {தேர்ந்தெடுக்கப்பட்ட} பிறகே ஊதியத்தால் மகிழ்விக்கப்படுகின்றனர். அவர்கள், தானாக வந்த கும்பலல்ல, ஊதியமில்லாமல் என் படைக்குள் அனுமதிக்கப்பட்டவர்களுமல்ல. நல்ல பிறப்பு கொண்டவர்களையும், மரியாதைக்குரிய மனிதர்களையும் கொண்டிருக்கும் எனது படை, நன்கு உண்டு, மனநிறைவுடனும், பணிவுடனும் இருக்கிறது. அவர்களுக்குப் போதுமான அளவுக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அனைவரும் புகழ்பெற்றவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் அவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான நமது முதன்மையான ஆலோசகர்கள் மற்றும் நியாயமான செயல்களைச் செய்யும் பிறரால் பாதுகாக்கப்படுகின்றனர். நமக்கு ஏற்புடையதைச் செய்ய முயலும் எண்ணற்ற பூமியின் ஆட்சியாளர்களும், தங்கள் படைகள் மற்றும் தொண்டர்களுடன் நமது தரப்பை அடைந்தவர்களும் அவர்களைப் பாதுகாக்கின்றனர்.
உண்மையில், நமது படையானது, அனைத்துத் திசைகளில் இருந்து பாயும் எண்ணற்ற ஆறுகளின் நீரால் நிறைந்த பரந்த பெருங்கடலுக்கு ஒப்பானதாகும். குதிரைகள், தேர்கள் நிறைந்த அது {நமது படை}, சிறகுகளற்றதாக இருப்பினும், சிறகு படைத்த காற்று வாசிகளுக்கு {பறவைகளுக்கு} ஒப்பாகவே இருக்கிறது. குமடுகளில் மதநீர் ஒழுகும் யானைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிகிறது. எனவே, இத்தகு படையே கொல்லப்படுகிறதெனில், விதியைத் தவிர இது வேறு என்னவாக இருக்க முடியும்?
(பெருங்கடலைப் போன்ற அதற்கு) பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் ஓயாமால் பாயும் அதன் நீராகவும், குதிரைகளும், பிற விலங்குகளும் அதன் பயங்கர அலைகளாவும் ஆகின்றன. எண்ணற்ற வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள் மற்றும் வேல்கள், அதன் (அந்தப் பெருங்கடலில் செயல்படும்) துடுப்புகளாகின்றன. (போர்வீரர்களின்) கொடிமரங்கள், ஆபரணங்கள், முத்துக்கள், இரத்தினங்கள் ஆகியன அதை அலங்கரிக்கும் தாமரைகளாகின்றன. விரைந்து செல்லும் குதிரைகளும், யானைகளும், மூர்க்கத்துடன் அதைக் கலங்கடிக்கும் காற்றாகின்றன. துரோணர் அந்தப் பெருங்கடலின் அடியற்ற குகையாகவும் {ஆழமான பாதாளமாகவும்}, கிருதவர்மன் அதன் சுழலாகவும் ஆகின்றனர். ஜலசந்தன் அதன் வலிமைமிக்க முதலையாகிறான், கர்ணன் சக்தியாலும் செருக்காலும் அதைப் பெருக வைக்கும் சந்திரோதயம் ஆகிறான்.
அந்தப் பாண்டவக் காளை {அர்ஜுனன்}, பெருங்கடலைப் போலப் பரந்திருக்கும் எனது படையின் ஊடாக அதைப் பிளந்து தனது தனித்தேரில் வேகமாகச் சென்றான், யுயுதானனும் {சாத்யகியும்} அவனைப் பின்தொடர்ந்து சென்றான் எனும்போது, ஓ! சஞ்சயா, சவ்யசச்சினும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் அந்த முதன்மையான தேர்வீரனும் {சாத்யகியும்}, எஞ்சியிருக்கும் என் துருப்புகளைக்கூட உயிரோடு விடும் எந்த வாய்ப்பையும் நான் காணவில்லை. மிகவும் சுறுசுறுப்பான அந்த வீரர்கள் இருவரும் (முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்த படைப்பிரிவுகளைப்) பிளந்து சென்றதைக் கண்டும், காண்டீவத்தின் கணைகள் அடையும் தொலைவுக்குள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருப்பதைப் பார்த்தும், விதியால் உந்தப்பட்ட கௌரவனால் {துரியோதனனால்} உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்நேரத்தில், அனைவரும் தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} என்ன நேர்ந்தது?
ஓ! ஐயா {சஞ்சயா}, கூடியிருக்கும் குருக்களைக் காலனால் விழுங்கப்பட்டவர்களாகவே நான் கருதுகிறேன். உண்மையில், போரில் அவர்களது ஆற்றலானது, முன்பொருகாலத்தில் இருந்ததைப் போல இப்போது காணப்படவே இல்லை. கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {ஆர்ஜுனன்} ஆகிய இருவரும் காயம்படாமலே (குரு) படைக்குள் நுழைந்துவிட்டனர். ஓ! சஞ்சயா, அவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவனும் அந்தப் படையில் இல்லை. பெரும் தேர்வீரர்களாக இருக்கும் போராளிகள் பலரும், ஆய்வுக்குப் பிறகே எங்களால் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அவரவருக்குத் தகுந்த ஊதியத்தாலும், மற்றும் பிறர் இனிய பேச்சாலும் (எங்களால்) கௌரவிக்கப்பட்டனர். ஓ! மகனே, என் துருப்புகளில் நல்ல பதவிகளால் (அவனுக்குக் கொடுக்கப்பட்டு) கௌரவிக்கப்படாதவன் எவனும் இல்லை. ஒவ்வொருவனும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையும், அவனது சேவைகளின் தன்மைக்கேற்ற பங்கீடுகளையும் பெறுகிறான்.
என் படையில், ஓ! சஞ்சயா, போரில் திறமையற்ற எவனும் இல்லை, {அவனுக்குத்} தகுந்த ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுபவன் எவனும் இல்லை, அல்லது எந்த ஊதியமும் பெறாதவன் என எவனும் இல்லை. படைவீரர்கள், என் சக்திக்குத் தக்கபடி பரிசுகளாலும், கௌரவங்களாலும், ஆசனங்களாலும் எப்போதும் வணங்கப்படுகின்றனர். என் மகன்களாலும், என் உறவினர்களாலும், என் நண்பர்களாலும் இதே நடத்தையே அவர்களிடம் பின்பற்றப்படுகின்றன. எனினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} வந்த உடனேயே, அவனாலும், சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} அவர்கள் வெல்லப்படுகின்றனரெனில் விதியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அவர்களைப் பாதுகாப்பவர்களும், பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுபவர்களும் அதே வழியில் பின்தொடர்ந்து செல்கின்றனர். ஜெயத்ரதனுக்கு முன்பாக அர்ஜுனன் வந்ததைக் கண்டு, மூடனான என் மகனால் {துரியோதனனால்} என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? சாத்யகியும் படைக்குள் நுழைவதைக் கண்ட துரியோதனன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது என எந்த நடவடிக்கையைச் சிந்தித்தான்? உண்மையில், அனைத்து ஆயுதங்களின் தீண்டலுக்கும் அப்பாற்பட்டவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் என் படைக்குள் நுழைவதைக் கண்டு, போரில் என் போர்வீரர்களால் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது?
தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணன், சிநி குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் அர்ஜுனனின் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் ஆகிய இருவரும் என் படையின் ஊடாகக் கடந்து செல்வதையும், குருக்கள் தப்பி ஓடுவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
தங்கள் தேர்வீரர்கள் எதிரியை அடக்குவதில் நம்பிக்கை இழந்து திரும்புவதையும், களத்தில் இருந்து ஓடுவதற்கு அவர்களது இதயத்தை நிலைநிறுத்துவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
தங்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியனவும், வீரப் போராளிகளும் களத்தைவிட்டுக் கவலையுடன் ஓடுவதால் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடும் பெரும் யானைகள் பலவற்றையும், வீழ்ந்தவை மற்றும் விழுபவை ஆகிய பிறவற்றையும் பார்த்து என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
சாத்யகி மற்றும் பார்த்தனால் சாரதிகளை இழுந்த குதிரைகளையும், தேர்களை இழந்த போர்வீரர்களையும் கண்டு, என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனால் {அர்ஜுனன்} பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் கொல்லப்படுவதாலும், முறியடிக்கப்படுவதாலும் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடுவதைக் கண்டு, வெற்றியில் நம்பிக்கையிழந்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
ஒருக்கணமும் வெல்லப்படாமல், துரோணரின் படைப்பிரிவின் ஊடாகக் கடந்து சென்ற அவ்விரு வீரர்களையும் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
ஓ மகனே {சஞ்சயா}, மங்கா மகிமை கொண்ட இரு வீரர்களான அந்தக் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் சாத்வதனும் {சாத்யகியும்} சேர்ந்து என் படைக்குள் ஊடுருவியதைக் கேட்டு நான் மலைத்திருக்கிறேன்.
சிநிக்களில் முதன்மையான அந்தத் தேர்வீரன் {சாத்யகி}, என் படைக்குள் நுழைந்து, போஜர்களின் படைப்பிரிவைக் கடந்து சென்றதும் கௌரவர்கள் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, களத்தில் பாண்டவர்களைப் பீடித்த துரோணர் எங்கே இருந்தாரோ, அவ்விடத்தில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. வலிமைமிக்கத் துரோணர், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், ஆயுதங்களில் சாதித்தவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவரும் ஆவார். போரில் அந்தப் பெரும் வில்லாளியைப் பாஞ்சாலர்களால் எவ்வாறு துளைக்க முடிந்தது? தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பும் பாஞ்சாலர்கள், துரோணரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரிகளாவர். வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் [2] அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரியாவான். ஓ! சஞ்சயா, விவரித்துக் கூறுவதில் நீ திறமைமிக்கவனாக இருக்கிறாய். எனவே, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்கு அர்ஜுனன் என்ன செய்தான் என்பதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது குற்றத்தின் விளைவாகவே இந்தத் துயரத்தை அடைந்திருக்கும் நீர், ஓ! வீரரே, அற்ப மனிதனைப் போல இத்தகு புலம்பல்களில் ஈடுபடக்கூடாது. முன்னர், விதுரருடன் சேர்த்து, உமது நலன்விரும்பிகள் பலரும், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களைக் கைவிடாதீர்” என்று உம்மிடம் சொன்னார்கள். அவர்களின் வார்த்தைகளை நீர் கருதிப் பார்க்கவில்லை {கேட்கவில்லை}. நலன் விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மனிதன், பெரும் துயரத்தில் விழுந்து உம்மைப் போலவே அழுவான். முன்னர்த் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சமாதானத்தை உம்மிடம் இரந்து வேண்டினான். இவையனைத்துக்குப் பிறகும், உலகப்புகழ்பெற்ற கிருஷ்ணன் தனது வேண்டுதலை அடையவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களின் பலமிக்கத் தலைவனும் {இறைவனும்}, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தின் உண்மையை அறிந்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, உமது மதிப்பற்ற தன்மையையும், பாண்டவர்களிடம் நீர் கொண்ட பொறாமையையும் உறுதி செய்து கொண்டு, பாண்டவர்களிடம் நீர் கொண்ட தீய நோக்கங்களைப் புரிந்து கொண்டு, மனக்குழப்பத்துடன் கூடிய உமது புலம்பல்களையும் கேட்டு, குருக்களுக்கு மத்தியில் போரின் தழலைச் சுடர்விட்டு எரியச் செய்தான். உமது குற்றத்தாலேயே {முற்றாக அனைத்தையும் அழிக்கும்} இந்தப் பேரழிவு உம்மை அடைந்திருக்கிறது.
ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் மேல் குற்றத்தை சுமத்துவது உமக்குத் தகாது. இந்த நிகழ்வுகளின் வளர்ச்சியில், தொடக்கத்திலோ, நடுவிலோ, முடிவிலோ உமது நல்ல தகுதிகள் {உம்முடைய நல்ல செய்கைகள் என்று} ஏதும் காணப்படவில்லை. இந்தத் தோல்வி முற்றிலும் உம்மால் ஏற்பட்டதே ஆகும். எனவே, இவ்வுலகின் உண்மையை அறியும் நீர் அமைதியை அடைந்து, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்டதற்கு ஒப்பான இந்தக் கடும்போர் எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக.
கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} உமது படைக்குள் நுழைந்ததும், பீமசேனனின் தலைமையிலான பார்த்தர்களும் உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர். எனினும், அந்தப் போரில் பாண்டவர்கள் சீற்றத்துடனும், கோபத்துடனும், தங்களைப் பின்தொடர்வோருடன் சேர்ந்து உமது படையை இப்படி எதிர்த்தபோது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் அவர்களைத் தனி ஒருவனாகவே தடுத்தான். துள்ளும் அலைகளைத் தடுக்கும் கரையைப் போலவே ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} அந்தப் போரில் பாண்டவர்களின் துருப்புகளைத் தடுத்தான். ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பார்த்தர்களால், தனி ஒருவனான தன்னைக் கடக்க முடியாமல் செய்த அந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} ஆற்றலை அற்புதமானதாக நாங்கள் கண்டோம்.
அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், மூன்று கணைகளால் கிருதவர்மனைத் துளைத்துத் தன் சங்கை முழக்கி பாண்டவர்கள் அனைவரையும் மகிழச் செய்தான். பிறகு சகாதேவன், இருபது கணைகளாலும், நீதிமானான யுதிஷ்டிரன் ஐந்தாலும், நகுலன் நூறாலும் அந்த ஹிருதிகன் மகனைத் துளைத்தனர். திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்று கணைகளாலும், கடோத்கசன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். விராடன், துருபதன், துருபதன் மகன் (திருஷ்டத்யும்னன்) ஆகியோர் ஒவ்வொருவரும் அவனை ஐந்து கணைகளால் துளைத்தனர். சிகண்டி ஐந்தால் ஒரு முறையும், மீண்டும் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் ஒரு முறையும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான்.
அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்தான். மேலும் அந்த ஹிருதிகன் மகன் பீமனின் தேரில் இருந்து பின்னவனின் {பீமனின்} கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வீழ்த்தினான். பிறகு, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, வில்லறுபட்ட பீமனை எழுபது கூரிய கணைகளால் கோபத்துடன் அவனது மார்பைத் தாக்கினான். வலிமைமிக்கப் பீமன், ஹிருதிகன் மகனின் {ஹார்த்திக்யனான கிருதவர்மனின்} சிறப்புமிக்கக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலை ஒன்றைப் போலத் தன் தேரில் நடுங்கினான். பீமசேனனை அந்நிலையில் கண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பார்த்தர்கள், ஓ! மன்னா, கிருதவர்மனின் மீது பல கணைகளை ஏவி அவனைப் பீடித்தனர். தேர்க்கூட்டங்களால் அந்தப் போர்வீரனை {கிருதவர்மனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா, அந்தப் போரில் வாயுத் தேவனின் மகனை {பீமனைக்} காக்க விரும்பி மகிழ்ச்சியாகத் தங்கள் கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைக்கத் தொடங்கினர்.
சுயநினைவு மீண்ட வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் எஃகால் ஆனதும், தங்கப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டி எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து, கிருதவர்மனின் தேர் மீது பெரும் வேகத்துடன் வீசினான். சட்டை உரிந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையாகத் தெரிந்ததுமான அந்த ஈட்டி, பீமனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், அது கிருதவர்மனை நோக்கிச் சுடரொளியுடன் சென்றது. யுகநெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த ஈட்டி, தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அதை இரண்டாகத் துண்டித்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஈட்டி, இப்படித் துண்டிக்கப்பட்டதும், ஓ! மன்னா, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கல்லைப் போலப் பத்துத் திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி கீழே பூமியில் அது விழுந்தது. தன் ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பீமன் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான்.
பிறகு மேலும் கடினமானதும், உரத்த நாணொலி கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்த பீமசேனன், கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கினான். பிறகு, ஓ! மன்னா, பயங்கர வலிமை கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி, உமது தீய கொள்கையின் {ஆலோசனையின்} விளைவால், ஐந்து கணைகளைக் கொண்டு கிருதவர்மனின் நடுமார்பைத் தாக்கினான். பிறகு, பீமசேனனால் அங்கங்களெங்கும் சிதைக்கப்பட்ட அந்தப் போஜ ஆட்சியாளன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா, மலர்களால் நிறைந்த சிவப்பு அசோகத்தை {அசோக மரத்தைப்} போல அந்தக் களத்தில் ஒளிர்ந்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தக் கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, புன்னகைத்துக் கொண்டே, மூன்று கணைகளால் பீமசேனனை வலுவாகத் தாக்கிய பிறகு, போரில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்கு மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பின்னவர்களில் ஒவ்வொருவரும் அவனை {கிருதவர்மனைப்} பதிலுக்கு ஏழு {ஏழு ஏழு} கணைகளால் துளைத்தனர்.
அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சாத்வத குலத்தோன் {கிருதவர்மன்}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் புன்னகைத்துக் கொண்டே ஒரு க்ஷுரப்ரத்தினால் சிகண்டியின் வில்லை அறுத்தான். பிறகு சிகண்டி, வெட்டப்பட்ட தன் வில்லைக் கண்டு, ஒரு வாளையும், நாறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பிரகாசமான கேடயத்தையும் விரைவாக எடுத்துக் கொண்டான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய கேடயத்தைச் சுழற்றிய சிகண்டி, அந்த வாளை கிருதவர்மனின் தேரை நோக்கி எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணை பொருத்தப்பட்ட கிருதவர்மனின் வில்லை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்திலிருந்து தளர்ந்து விழுந்த பிரகாசமான ஒளிக்கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. அதேவேளையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அந்தப் போரில் கிருதவர்மனைத் தங்கள் கணைகளால் விரைவாகவும் ஆழமாகவும் துளைத்தனர். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒடிந்த வில்லை வீசி எறிந்துவிட்டு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் துளைத்தான். அவன், சிகண்டியை முதலில் மூன்று கணைகளாலும், பிறகு ஐந்தாலும் துளைத்தான். பிறகு சிறப்புமிக்கச் சிகண்டி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகச் செல்லக் கூடியவையும், ஆமையின் நகங்களைப் போன்ற [3] தலைகளைக் கொண்டவையுமான பல கணைகளால் ஹிருதிகன் மகனைத் தடுத்தான்.அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் சிறப்புமிக்கப் பீஷ்மரின் வீழ்ச்சிக்குக் காரணமானவனுமான அந்த யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். உண்மையில், வீரக் கிருதவர்மன் தன் வலிமையை வெளிக்காட்டியபடி ஒரு புலியானது யானை ஒன்றை நோக்கிச் செல்வதைப் போலச் சிகண்டியை நோக்கி விரைந்தான். பிறகு, பெரும் யானைகள் இரண்டிற்கோ, சுடர்மிக்க நெருப்புகள் இரண்டிற்கோ ஒப்பானவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரும் கணைகளின் மேகங்களால் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அவர்கள் தங்கள் விற்களில் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, தங்கள் கணைகளைக் குறிபார்த்து, கதிர்களைப் பொழியும் இரு சூரியன்களைப் போல நூற்றுக்கணக்கானவற்றை {கணைகளை} ஏவினர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் எரித்து, யுக முடிவில் தோன்றும் இரு சூரியன்களைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தனர்.
கிருதவர்மன் அந்தப் போரில், வலிமைமிக்கத் தேர்வீரனான யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} எழுபத்துமூன்று கணைகளாலும், பிறகும் ஏழு கணைகளாலும் துளைத்தான். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட சிகண்டி, தன் வில்லையும், கணைகளையும் வீசிவிட்டு, மயக்கத்துக்கு ஆட்பட்டு, கீழே தன் தேர்த்தட்டில் வலியுடன் அமர்ந்தான். அந்த வீரன் {சிகண்டி} மயங்கியதைக் கண்ட உமது துருப்பினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட அவனது தேரோட்டி, விரைவாக அவனைக் களத்திற்கு வெளியே {தேரில்} சுமந்து சென்றான். சிகண்டி தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பார்த்தர்கள், அந்தப் போரில் கிருதவர்மனை தேர்க்கூட்டங்களால் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.
வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தனியொருவனாகப் பார்த்தர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் தடுத்து மிக அற்புதமான சாதனையை அடைந்தான். இப்படியே பார்த்தர்களை வென்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, அதன் பிறகு, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும், கேகயர்களையும் எனப் பெரும் ஆற்றலைக் கொண்ட அனைவரையும் வென்றான். இப்படி ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படைகள், போரில் நிதானமாக நிற்க இயலாமல் அனைத்துத் திசைகளிலும் ஓடத் தொடங்கின. பீமசேனன் தலைமையிலான பாண்டுவின் மகன்களை வென்ற ஹிருதிகன் மகன், போரில் சுடர்மிக்க நெருப்பைப் போல நின்றான். கணைத்தாரைகளால் பீடிக்கப்பட்டவர்களும், போரில் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {கிருதவர்மனை} நேரில் சந்திக்கத் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.
ஜலசந்தனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 114-பாண்டவர்களைப் பீடித்த கிருதவர்மனைக் கண்டு திரும்பி வந்த சாத்யகி கிருதவர்மனை வீழ்த்தியது; யானைப்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட ஜலசந்தன்; ஜலசந்தனின் கரங்களையும் தலையையும் வெட்டிக் கொன்ற சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் கேட்பீராக. அந்தப்படை உயர் ஆன்ம ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} முறியடிக்கப்பட்டு, பார்த்தர்கள் வெட்கத்தால் அவமானமடைந்து, உமது துருப்புகள் மகிழ்ச்சியில் குதூகலித்த போது, அடியற்றத் துன்பக் கடலில் மூழ்கிப் பாதுகாப்பை வேண்டிக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு எவன் பாதுகாவலனாவானோ அந்த வீரனான சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பயங்கரப் போரில் உமது படையால் உண்டாக்கப்பட்ட அந்தக் கடும் ஆரவாரத்தைக் கேட்டு விரைவாகத் திரும்பி கிருதவர்மனை எதிர்த்து வந்தான்.
ஹிருதிகன் மகனான கிருதவர்மன், கோபத்தால் தூண்டப்பட்டுக் கூரிய கணை மேகங்களால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான். இதனால் சாத்யகியும் சினத்தால் தூண்டப்பட்டான். பிறகு அந்தச் சிநியின் பேரன் அம்மோதலில் ஒரு கூரிய பல்லத்தையும், நான்கு பிற கணைகளையும் கிருதவர்மனின் மீது விரைவாக ஏவினான். அந்த நான்கு கணைகள் கிருதவர்மனின் குதிரைகளைக் [1] கொன்றன. மற்றொன்று {பல்லம்} கிருதவர்மனின் வில்லை அறுத்தது. பிறகு சாத்யகி தன் எதிரியின் தேரோட்டியைத் துளைத்து, தன் எதிராளியின் படைகளைப் பீடிப்பதற்காகப் பின்னவனின் {கிருதவர்மனின்} பின்புறத்தைக் காத்தவர்களைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பகைவரின் படைப்பிரிவுகள் சிதறின. அதன்பேரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி தன் வழியே விரைவாகச் சென்றான்.ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்ட அந்த வீரன் {சாத்யகி} உமது துருப்புகளை என்ன செய்தான் என்பதைக் கேட்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் படைப்பிரிவாலான பெருங்கடலைக் கடந்து, போரில் கிருதவர்மனை வென்றதால் மகிழ்ச்சியால் நிறைந்த அந்த வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம், “அச்சமில்லாமல் மெதுவாகச் செல்வாயாக” என்றான். எனினும், தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த அந்த உமது படையைக் கண்ட சாத்யகி, மீண்டும் தன் தேரோட்டியிடம், “துரோணரின் படைக்கு இடது பக்கத்தில் நீ காண்பதும், மேகங்களைப் போன்ற கரிய நிறத்தில் தெரிவதுமான பெரிய படைப்பிரிவானது (எதிரியின்) யானைகளைக் கொண்டிருக்கிறது. ருக்மரதன் [2] அதன் தலைவனாக இருக்கிறான். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, அதிகம் இருக்கும் அந்த யானைகள் போரில் தடுப்பதற்கு மிகக் கடினமானவையாகும். துரியோதனனால் தூண்டப்பட்ட அவர்கள், தங்கள் உயிரையும் விடத் துணிந்து எனக்காகக் காத்திருக்கின்றனர். திரிகர்த்தர்களின் நாட்டைச் சேர்ந்த அந்தப் போராளிகள் அனைவரும், அரச பிறவி கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்த வல்லவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களையுடைய சிறப்புமிக்கத் தேர்வீரர்களுமாவர். துணிச்சல்மிக்க அந்தவீரர்கள் என்னுடன் போரிடும் விருப்பத்தால் காத்திருக்கின்றனர். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, விரைவாகக் குதிரைகளைத் தூண்டி, என்னை அங்கே கொண்டு செல்வாயாக. பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரிகர்த்தர்களுடன் நான் போரிடுவேன்” என்றான் {சாத்யகி}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டியானவன் {முகுந்தன்}, சாத்வதனின் {சாத்யகியின்} விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து மெதுவாகச் சென்றான். கொடிமரம் பொருத்தப்பட்டதும், சூரியனின் காந்தியைக் கொண்டதுமான அந்தப் பிரகாசமான தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், சாரதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், குந்த {குருக்கத்தி} மலர், அல்லது நிலவு, அல்லது வெள்ளியைப் போன்று வெண்மையாக இருந்தவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் அவனை {சாத்யகியை} (அந்த இடத்திற்குச்) சுமந்து சென்றன. சங்கின் நிறத்திலான அந்த அற்புதக் குதிரைகளால் இழுக்கப்பட்டு அவன் போரிட முன்னேறிய போது, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், எளிதாக அனைத்தையும் துளைக்கவல்லவையும், பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடி தங்கள் யானைகளுடன் அவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.
கோடையின் முடிவில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் பெரிய மேகங்களைப் போல அந்தச் சாத்வதனும் {சாத்யகியும்}, தன் கூரிய கணைகளை ஏவியபடி அந்த யானைப் படைப்பிரிவுடன் போரிட்டான். சிநிக்களில் முதன்மையானவனால் {சாத்யகியால்} ஏவப்பட்டவையும், இடியின் தீண்டலுக்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகளால் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் தந்தங்கள் முறிந்து, உடல்கள் குருதியால் நனைந்து, தலைகளும், மத்தகங்களும் பிளக்கப்பட்டு, காதுகள், முகங்கள் மற்றும் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு, பாகர்களை இழந்து களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கின. அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள் வெட்டப்பட்டு, பாகர்கள் கொல்லப்பட்டு, கம்பளங்கள் தளர்ந்து அனைத்துத் திசைகளிலும் ஓடிச்சென்றன. அவற்றில் பல, ஓ! ஏகாதிபதி, சாத்வதனின் {சாத்யகியின்} நாராசங்கள் [3], வத்சதந்தங்கள் [4], பல்லங்கள் [5], அஞ்சலிகங்கள், க்ஷுரப்ரங்கள் [6], அர்த்தச்சந்திரக்கணைகள் [7] ஆகியவற்றால் சிதைக்கப்பட்டுத் தங்கள் உடல்களில் குருதி பாய, மலமும் சிறுநீரும் கழித்து, பலவிதமாகக் கதறி, மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்தைப் போலப் பேரொலிகளை வெளியிட்டபடியே ஓடின. அவற்றில் சில சுழன்றன, சில நொண்டின {தடுமாறின}, சில கீழே விழுந்தன, சில உற்சாகமற்று வாட்டமடைந்தன. சூரியன், அல்லது நெருப்புக்கு ஒப்பான யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த யானைப்படைப்பிரிவு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது.அந்த யானைப்படைப்பிரிவு அழிக்கப்பட்ட பிறகு, வலிமைமிக்க ஜலசந்தன், நிதானமாக முயன்று, வெண்குதிரைகளால் இழுக்கப்பட்ட யுயுதானனின் தேரின் முன்பு தன் யானையை வழிநடத்திச் சென்றான். தங்க அங்கதங்கள், காது குண்டலங்கள், கிரீடம் ஆகியவற்றைச் சூடியவனும், சிவந்த சந்தனக் குழம்பை {மேனியில்} பூசியிருந்தவனும், சுடர்மிக்கத் தங்க ஆரத்தைத் தன் தலையில் சூடியிருந்தவனும், மார்புக் கவசத்தால் மார்பு மறைக்கப்பட்டவனும், தன் கழுத்தில் (பிரகாசமான) தங்க ஆரத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், பாவமற்ற ஆன்மா கொண்டவனுமான அந்த வீரன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா, தன் யானையின் தலையில் அமர்ந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை அசைத்துக் கொண்டு, மின்னலின் சக்தி ஊட்டப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
துள்ளும் கடலைத் தடுக்கும் கரையைப் போலச் சாத்யகி, இத்தகு சீற்றத்துடன் தன்னை அணுகிய அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய {ஜலசந்தனுடைய} சிறந்த யானையைத் தடுத்தான். வலிமைமிக்க ஜலசந்தன், யுயுதானனின் சிறந்த கணைகளால் யானை தடுக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்தான். அப்போது, ஓ மன்னா, கோபமூட்டப்பட்ட அந்த ஜலசந்தன், சில கணைகளால் சிநியின் பேரனுடைய அகன்ற மார்பைப் பெரும்பலத்துடன் துளைத்தான். அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி} வில்லை வளைத்துக் கொண்டிருந்த போது, அவன் {ஜலசந்தன்} நன்கு கடினமாக்கப்பட்ட மற்றொரு கூரிய பல்லத்தால் அதை அறுத்தான். பிறகு, ஓ! பாரதரே, சிரித்துக் கொண்டே இருந்த மகதர்களின் வீர ஆட்சியாளன் {ஜலசந்தன்}, வில்லற்ற சாத்யகியை ஐந்து கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், வீரத்தையும், வலிமைமிக்கக் கரத்தையும் கொண்ட சாத்யகி, ஜலசந்தனின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டாலும், கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன.
அப்போது வலிமைமிக்க யுயுதானன் எவ்வித அச்சமுமின்றி (தான் பயன்படுத்த வேண்டிய) கணைகளைக் குறித்துச் சிந்தித்தான். மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அவன் {சாத்யகி}, ஜலசந்தனிடம், “நில், நிற்பாயாக!” என்றான். இவ்வளவே சொன்ன சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே அறுபது {60} கணகளால் அவனது {ஜலசந்தனின்} அகன்ற மார்பை ஆழத் துளைத்தான். மேலும் பெருங்கூர்மை கொண்ட மற்றொரு க்ஷுரப்ரத்தால் ஜலசந்தனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, மேலும் மூன்று கணைகளால் அவன் ஜலசந்தனையும் துளைத்தான். பிறகு ஜலசந்தன் கணை பொருத்தப்பட்ட அந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, சாத்யகியின் மீது வேல் ஒன்றை வீசினான். அந்தக் கடும்போரில் மாதவனின் {சாத்யகியின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்ற அந்தப் பயங்கர வேலானது, சீறும் பெரும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. இப்படி இடது கரத்தில் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, முப்பது கூரிய கணைகளால் ஜலசந்தனைத் தாக்கினான். பிறகு வலிமைமிக்க ஜலசந்தன் தன் கத்தியையும், காளைத் தோலாலானதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான பெரிய கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, கத்தியைச் சிறிது நேரம் சுழற்றிய பிறகு அந்தச் சாத்வதனின் மேல் அதை வீசினான். சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} வில்லை அறுத்த அந்தக் கத்தி, நெருப்புக்கோளத்தின் பிரகாசத்துடன் கீழே பூமியில் விழுந்து கிடப்பது தெரிந்தது.
பிறகு அந்த யுயுதானன் {சாத்யகி}, எவரையும் துளைக்கவல்லதும், சாலமரத்தின் கிளையைப் போலப் பெரிதானதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்து வளைத்து, சினத்தால் நிறைந்து, ஜலசந்தனை ஒற்றைக் கணையால் துளைத்தான். மது குலத்தில் முதன்மையானவனான அந்தச் சாத்யகி, சிரித்துக் கொண்டே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜலசந்தனின் கரங்களிரண்டையும் இரு க்ஷுரப்ரங்களால் அறுத்தான். அதன்பேரில், இரு பரிகங்களைப் {முள் பதித்த கதாயுதங்கள்} போலத் தெரிந்த அந்தக் கரங்கள் இரண்டும், மலையில் இருந்து விழும் ஐந்து தலை பாம்புகளைப் போல அந்த முதன்மையான யானையிலிருந்து கீழே விழுந்தன. பிறகு சாத்யகி, அழகிய பற்களைக் கொண்டதும், அழகிய காதுகுண்டலகள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் எதிராளியின் {ஜலசந்தனின்} பெரிய தலையை மூன்றாவது க்ஷுரப்ரத்தால் அறுத்தான். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரம் மற்றும் கரங்களற்ற உடல் ஜலசந்தனின் யானையைக் குருதியில் நனைய செய்தது.
ஓ! மன்னா, போரில் ஜலசந்தனைக் கொன்ற அந்தச் சாத்வதன் {சாத்யகி}, விரைவாக அந்த யானையின் முதுகில் இருந்த மர அமைப்பை {அம்பாரியைக்} கீழே தள்ளினான். குருதியில் குளித்த ஜலசந்தனின் யானை, தன் முதுகில் தொங்கும் அந்த விலைமதிப்புமிக்க ஆசனத்தைச் சுமந்து சென்றது. சாத்வதனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும் விலங்கு, வலியால் கடுமையாகப் பிளிறிக் கொண்டே மூர்க்கமாக ஓடி நட்புப் படைப்பிரிவுகளை நசுக்கியது. பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணிகளில் காளையால் {சாத்யகியால்} ஜலசந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகளுக்குள் ஓலங்கள் எழுந்தன. உமது வீரர்கள் புறமுதுகிட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினர். உண்மையில் எதிரியின் வெற்றியால் கவலையடைந்த அவர்கள் தங்கள் இதயங்களைத் தப்பி ஓடுவதில் நிலைநிறுத்தினர். அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை {சாத்யகியை} அணுகினார். குருக்களில் காளையர் {கௌரவர்கள்} பலர், (சினத்திலும் செருக்கிலும்) பெருகும் சிநிக்களின் காளையைக் {சாத்யகியைக்} கண்டு துரோணருடன் சேர்ந்து சீற்றத்துடன் அவனை நோக்கி விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போருக்கு ஒப்பாக, (ஒரு புறத்தில்) குருக்களையும், துரோணரையும், மற்றும் (மறுபுறத்தில்) யுயுதானனையும் கொண்ட ஒரு போர் {அங்கே} தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.
கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 115-சாத்யகியைத் தாக்கிய கௌரவ வீரர்கள்; அனைவரையும் பதிலுக்குத் துளைத்த சாத்யகி; துரியோதனனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; துரியோதனனின் வில்லை இருமுறை வெட்டி, கொடிமரத்தையும் வெட்டி, குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்று அவனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கிருதவர்மனை வீழ்த்தி முன்னேறிச் சென்ற சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} கணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ! மன்னா, துரியோதனனும், பிற வீரர்கள் பலரும் அந்த வலிமைமிக்க வில்லாளியை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் துளைத்தனர்.-வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டாலும், அந்த விருஷ்ணி குலத்து யுயுதானன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது நேரான கணைகளால் துளைத்தான். உண்மையில் அவன் {சாத்யகி}, பரத்வாஜர் மகனை {துரோணரை} மூன்று கணைகளாலும், துஸ்ஸஹனை [2] ஒன்பதாலும், விகர்ணனை இருபத்தைந்தாலும், சித்திரசேனனை ஏழாலும், துர்மர்ஷணனை பனிரெண்டாலும், விவிம்சதியை எட்டாலும், சத்தியவிரதனை ஒன்பதாலும், விஜயனைப் பத்துக் கணைகளாலும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்மாங்கதனையும் துளைத்த சாத்யகி, தன் வில்லை அசைத்துக் கொண்டே உமது மகனை (துரியோதனனை) எதிர்த்து வேகமாகச் சென்றான். யுயுதானன், மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொத்த உலகிலும் உள்ள தேர்வீரர்களில் பெரியவனான அந்த மன்னனை {துரியோதனனைத்} தன் கணைகளால் ஆழத் துளைத்தான். பிறகு அவ்விருவருக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களில் {இருவரில்} ஒவ்வொருவனும் அந்தப் போரில் எண்ணற்ற கணைகளைக் குறி பார்த்தும், கூரிய கணைகளை ஏவியும், மற்றவனை மறைத்தனர். குரு மன்னனால் {துரியோதனனால்} துளைக்கப்பட்ட சாத்யகி, சந்தன மரம் ஒன்று பாலைச் சுரப்பது போல, தன் மேனியெங்கும் குருதி பெருகியோட மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உமது மகனும் {துரியோதனனும்}, அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} கணைமேகங்களால் துளைக்கப்பட்டு, தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, (வேள்வியில்) நிறுவப்பட்ட ஒரு வேள்விக் கம்பை {யூபஸ்தம்பத்தைப்} போலவே அழகாகத் தெரிந்தான்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மாதவன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே குரு மன்னனின் {துரியோதனனின்} வில்லை ஒரு க்ஷுரப்ரத்தினால் வெட்டினான். அதன் பிறகு அவன் {சாத்யகி}, வில்லற்ற அம்மன்னனை எண்ணற்ற கணைகளால் துளைத்தான். பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த எதிரியின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மன்னனால் {துரியோதனனால்}, எதிரியின் இந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது துரியோதனன், தங்கப் பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, சாத்யகியை ஒரு நூறு கணைகளால் வேகமாகத் துளைத்தான். வில்தரித்த உமது வலிமைமிக்க மகனால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட யுயுதானன், கோபத்தால் தூண்டப்பட்டு உமது மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.
மன்னன் {துரியோதனன்} இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், பெரும் பலத்துடன் அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடியே சாத்யகியை மறைத்தனர். அந்த வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களின் கூட்டத்தால் யுயுதானன் {சாத்யகி} இப்படி மூழ்கடிக்கப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்துகணைகளாலும், மீண்டுமொருமுறை ஏழு கணைகளாலும் அவன் {சாத்யகி} துளைத்தான். அவன், எட்டு வேகமானக் கணைகளால் துரியோதனனைத் துளைத்த பிறகு, சிரித்துக் கொண்டே, எதிரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பின்னவனின் {துரியோதனனின்} வில்லை அறுத்தான். மேலும் சில கணைகளால் அவன் {சாத்யகி}, ஆபரணங்களோடு கூடிய யானையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு, நான்கு கணைகளால் துரியோதனனின் குதிரைகள் நான்கையும் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்த சாத்யகி, மன்னனின் தேரோட்டியையும் ஒரு க்ஷுரப்ரத்தால் வீழ்த்தினான். யுயுதானன், இன்பத்தில் நிறைந்த அதேவேளையில், உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல கணைகளைக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான குரு மன்னனை {துரியோதனனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா, உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போரில் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} அந்தச் சிறந்த கணைகளால் இப்படித் தாக்கப்பட்ட போது திடீரெனத் தப்பி ஓடினான். அம்மன்னன் {துரியோதனன்}, வில்தரித்த சித்திரசேனனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான். போரில் சாத்யகியால் இப்படித் தாக்கப்பட்டு, ராகுவால் விழுங்கப்படும்போது ஆகாயத்தில் சிறுக்கும் சோமனை {சந்திரனை} போன்றநிலையை அடைந்த மன்னனைக் கண்டு குரு படையின் அனைத்துப் பகுதிகளிலும் துயரக் குரல்கள் எழுந்தன.
அந்த ஆரவாரத்தைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், பலமிக்க மாதவன் {சாத்யகி} போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான். கிருதவர்மன், தன் வில்லை அசைத்துக் கொண்டும், தன் குதிரைகளைத் தூண்டிக் கொண்டும், தன் தேரோட்டியை, “வேகமாகச் செல்வாயாக, வேகமாகச் செல்வாயாக” என்று சொல்லி தூண்டிக் கொண்டும் சென்றான். வாயை அகல விரித்த யமனைப் போலத் தன்னை நோக்கி விரையும் கிருதவர்மனைக் கண்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “கணைகளைத் தரித்திருக்கும் அந்தக் கிருதவர்மன், என்னை நோக்கியே தன் தேரில் வேகமாக விரைந்து வருகிறான்” என்றான் [3]. பிறகு, மிக வேகமாகத் தூண்டப்பட்ட தன் குதிரைகளுடன் முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த தன் தேரில் சென்ற சாத்யகி, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்தப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} வந்தான்.அப்போது, மனிதர்களில் புலிகளும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், நெருப்புக்குக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும், பெரும் சுறுசுறுப்பைக்கொண்ட இரு புலிகளைப் போல ஒருவரோடொருவர் மோதினர். கிருதவர்மன், சிநியின் பேரனை {சாத்யகியைக்} கூர் தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான இருபத்தாறு கணைகளாலும், பின்னவனின் தேரோட்டியை {முகுந்தனை} ஐந்து கணைகளாலும் துளைத்தான். போரில் திறம்வாய்ந்தவனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சிறந்தவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பழக்கப்பட்டவையுமான சாத்யகியின் நான்கு குதிரைகளையும் வலிமைமிக்க நான்கு கணைகளால் துளைத்தான்.
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடி கொண்ட தன் உறுதியான வில்லை அசைத்துக் கொண்டு, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் யுயுதானனைத் தடுத்தான். அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, தனஞ்சயனைக் காணவிரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் கிருதவர்மன் மீது எட்டுக் கணைகளை ஏவினான். எதிரிகளை எரிப்பவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அவன் {கிருதவர்மன்}. வலிமைமிக்க அந்த எதிரியால் {சாத்யகியால்} ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கினான். இதன்பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, அறுபத்துமூன்று கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும், ஏழால் அவனது தேரோட்டியையும் விரைவாகத் துளைத்தான். பிறகு சாத்யகி, யமதண்டத்திற்கோ, கோபம் கொண்ட பாம்புக்கோ ஒப்பானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையைக் குறிபார்த்துக் கிருதவர்மனைத் துளைத்தான். அந்தப் பயங்கரக் கணையானது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிரியின் பிரகாசமான கவசத்தைத் துளைத்து ஊடுருவி, இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது.
சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, அந்தப் போரில் குருதியில் குளித்த கிருதவர்மன், கணையோடு கூடிய தன் வில்லை எறிந்துவிட்டுத் தன் தேரிலேயே விழுந்தான். அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சிங்கப் பல் வீரன் {கிருதவர்மன்}, சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு, முழங்காலால் மண்டியிட்டு கீழே தன் தேர்த்தட்டில் விழுந்தான். சாத்யகி, பழங்காலத்தின் ஆயிரங்கை அர்ஜுனனுக்கோ {கார்த்தவீரியார்ஜுனனுக்கோ}, அளவிலா வல்லமை கொண்ட பெருங்கடலுக்கோ ஒப்பான அந்தக் கிருதவர்மனைத் தடுத்துவிட்டு முன்னேறிச் சென்றான்.
வாள்கள், ஈட்டிகள், விற்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவற்றால் நிறைந்த கிருதவர்மனின் படைப்பிரிவைக் கடந்து, நூற்றுக்கணக்கிலான முதன்மையான க்ஷத்திரியர்களின் குருதி சிந்திய விளைவால் பயங்கரமாக இருந்த அந்தக் களத்தைவிட்டு வெளியேறிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, அசுரவியூகத்தினூடாகச் செல்லும் விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னேறிச் சென்றான். அதேவேளையில், வலிமைமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு பெரிய வில்லை எடுத்துப் போரில் பாண்டவர்களைத் தடுத்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.
துரோணரை வென்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 116-துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்டியை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.
{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள், எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.
அதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோணரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ! மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக்கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ! ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச்சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.
பிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், “ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்” என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.
அதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்த அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது” {என்றான் சஞ்சயன்}.
சுதர்சனனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 117-கௌரவர்கள் எவராலும் தடுக்கப்பட முடியாமல் களத்தில் முன்னேறிய சாத்யகி; இடையில் வந்த மன்னன் சுதர்சனன்; சுதர்சனனின் தேரோட்டியையும், சுதர்சனனையும் கொன்ற சாத்யகி; வீரர்களின் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணரையும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} தலைமையிலான உமது படையின் போர்வீரர்கள் பிறரையும் வென்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, சிரித்துக் கொண்டே தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “ஓ! சூதா {முகுந்தா}, கேசவராலும் {கிருஷ்ணராலும்}, பல்குனராலும் {அர்ஜுனராலும்} ஏற்கனவே நமது எதிரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றனர். (மீண்டும்) அவர்களை வெல்வதற்கான (மேம்போக்கான) ஒரு வழியாக மட்டுமே நாம் இருக்கிறோம். தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} மகனான அந்த மனிதர்களில் காளையால் {அர்ஜுனரால்} ஏற்கனவே கொல்லப்பட்டு மாண்டவர்களையே நாம் கொல்கிறோம்” என்றான்.
சிநிக்களில் காளையும், வில்லாளிகளில் முதன்மையானவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சுற்றிலும் தன் கணைகளைப் பெரும்பலத்துடன் இறைத்து, அந்தப் பயங்கரப் போரில் இரைதேடிச் செல்லும் பருந்தைப் போலவே சென்றான். குரு வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினாலும், சந்திரன் அல்லது சங்கின் வெண்மையைக் கொண்ட அந்தச் சிறந்த குதிரைகளால் தாங்கப்பட்டு, கௌரவப்படைப்பிரிவுகளைத் துளைத்துச் சென்றவனும், ஆயிரங்கதிரோனான சூரியனுக்கு ஒப்பானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தடுப்பதில் அவர்களால் {குரு வீரர்களால்} வெல்ல முடியவில்லை. உண்மையில், குறையற்ற வலிமை கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான வீரம் கொண்டவனும், கூதிர் காலச் சூரியனைப் போல ஆகாயத்தில் தெரிபவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் போரிட்டவர்களில் ஒருவனாலும் தடுக்க முடியவில்லை.
அப்போது, போர்க்கலையின் அனைத்து முறைகளை அறிந்தவனும், தங்கக் கவசம் அணிந்திருந்தவனும், வில் மற்றும் கணைகளைத் தரித்திருந்தவனும், சினத்தால் நிறைந்தவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான சுதர்சனன் [1], விரைந்து வரும் சாத்யகியை எதிர்த்து, அவன் {சாத்யகி} செல்வதைத் தடுக்க முயன்றான். பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட மோதலானது மிகக் கடுமையானதாக இருந்தது. உமது வீரர்கள் மற்றும் சோமகர்கள் ஆகிய இருதரப்பினரும் அந்த மோதலை விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையிலான மோதலைப் போலப் புகழ்ந்தனர். அந்தப் போரில் சுதர்சனன், நூற்றுக்கணக்கான கூர்மையான கணைகளால் அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} துளைக்க முயன்றான். அவை சாத்யகியை அடைவதற்கு முன்பே {சாத்யகியால்} வெட்டப்பட்டன. அதே போலத் தன் முதன்மையான தேரில் நின்ற சுதர்சனனும், இந்திரனுக்கு ஒப்பான சாத்யகியால் அவன் மீது ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் தன் சிறந்த கணைகளால் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டினான்.சாத்யகியுடைய கணைகளின் சக்தியால் தன் கணைகள் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கடும் சக்தி கொண்டவனுமான சுதர்சனன், (தன் எதிரியை) எரித்துவிடுபவனைப் போலக் கோபத்துடன், தங்கச் சிறகுகள் கொண்ட அழகிய கணைகளை எவினான். பிறகும் அவன் {சுதர்சனன்}, நெருப்புக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், தன் வில்லின் நாணைக் காதுவரை இழுத்து ஏவப்பட்டவையுமான மூன்று அழகிய கணைகளால் தன் எதிரியை மீண்டும் துளைத்தான். சாத்யகியின் கவசத்தைப் பிளந்த அவை, பின்னவனின் {சாத்யகியின்} உடலுக்குள் ஊடுருவின.
அதே போலவே அவன் (இளவரசனான சுதர்சனன்), சுடர்மிக்க நான்கு பிற கணைகளைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு, வெள்ளிநிறம் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் நான்கு குதிரைகளைத் தாக்கினான். அவனால் {சுதர்சனனால்} இப்படிப் பீடிக்கப்பட்டவனும், இந்திரனுக்கு இணையான ஆற்றலையும் பெரும் சுறுசுறுப்பையும் கொண்டவனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய கணைகளால் சுதர்சனனின் குதிரைகளைக் கொன்று உரக்க முழங்கினான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்துக்கு ஒப்பான ஒரு பல்லத்தால் சுதர்சனனின் தேரோட்டியுடைய தலையை வெட்டிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, யுக நெருப்புக்கு ஒப்பான க்ஷுரப்ரம் ஒன்றால், ஓ! மன்னா, பழங்காலத்தில் போரில் வலிமைமிக்கப் பலனின் தலையைப் பலவந்தமாக வெட்டிய வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போலக் காது குண்டலங்களைக் கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், மிகப் பிரகாசமான முகத்தால் அலங்கரிக்கப்பட்டதும் சுதர்சனனின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான். பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த யது குலத்து உயர் ஆன்மக் காளை {சாத்யகி}, இப்படி அந்த அரசபேரனை {சுதர்சனனைக்} கொன்று, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பிறகு, மனிதர்களில் வீரனான அந்த யுயுதானன் {சாத்யகி}, தனக்கு முன் சென்ற அர்ஜுனனின் பாதையிலேயே சென்று, (அப்படிச் செல்கையில்) உமது துருப்புகள் அனைத்தையும் தன் கணைகளின் மேகங்களால் தடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தச் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அதே தேரில் சென்றான். அவன் {சாத்யகி}, தன் வழியில் உள்ள அனைத்தையும் எரித்துச் செல்லும் காட்டுத் தீயைப் போலத் தன் கணைகள் அடையும் தொலைவில் இருந்த எதிரிகள் அனைவரையும் எரித்ததால், அங்கே இருந்த முதன்மையான வீரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, அவனால் {சாத்யகியால்} அடையப்பட்ட முதன்மையான அதிசய சாதனைகளைப் பாராட்டினர்” {என்றான் சஞ்சயன்}.
யவனர்களை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 118-அச்சமில்லாமல் முன்னேறுமாறு தேரோட்டியை அறிவுறுத்திய சாத்யகி; சாத்யகியின் பெருமைகளைச் சொன்ன தேரோட்டி; யவனர்களின் தோற்றம் பற்றிய குறிப்புகள்; யவனர்கள், காம்போஜர்கள் முதலியோரை வீழ்த்திய சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “[1] விருஷ்ணி குலத்துவீரனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான உயர் ஆன்ம சாத்யகி, சுதர்சனனைக் கொன்ற பிறகு மீண்டும் தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், கணைகள் மற்றும் ஈட்டிகளாலான அலைகளைக் கொண்டதும், வாள்கள், கத்திகளாலான மீன்களைக் கொண்டதும், கதாயுதங்களாலான முதலைகளைக் கொண்டதும், கணைகளின் ‘விஸ்’ ஒலிகளையும், பல்வேறு ஆயுதங்களின் மோதலையும் முழக்கமாகக் கொண்டதும், உயிரை அழிக்கக்கூடிய கடுமையான பெருங்கடலானதும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளால் எதிரொலிக்கப்படுவதும், வெற்றிவீரர்களுக்கு இனிமையற்றதும் தாங்க முடியாததுமான தீண்டலைக் கொடுப்பதும், ஜலசந்தனின் படையைச் சேர்ந்த கடுமையான மனித ஊனுண்ணிகளால் [2] பாதுகாக்கப்பட்ட வரம்புகளைக் கொண்டதும், கிட்டத்தட்ட கடக்க முடியாத பெருங்கடலுமான துரோணரின் படைப்பிரிவையே கடந்த பிறகு, ஆழமற்ற நீரைக் கொண்ட சிறு ஓடையைப் போல வியூகத்தில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கடப்பது எளிதானது என்றே நான் நினைக்கிறேன்.எனவே, அச்சமில்லாமல் குதிரைகளைச் செலுத்துவாயாக. நான் சவ்யசச்சினுக்கு {அர்ஜுனருக்கு} மிக அருகில் இருப்பதாகவே நினைக்கிறேன். வெல்லப்பட முடியாத துரோணரையும், அவரைப் பின்தொடர்பவர்களையும், போர்வீரர்களில் முதன்மையான அந்த ஹிருதிகன் மகனையும் {கிருதவர்மனையும்} வென்ற பிறகு தனஞ்சயரிடம் {அர்ஜுனரிடம்} இருந்து நான் தொலைவில் இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். எண்ணற்ற எதிரிகளை என் எதிரில் கண்டாலும் என் இதயத்திற்கு அச்சமேற்படுவதில்லை. எனக்கு இவர்கள் சுடர்மிகும் காட்டுத்தீயில் உள்ள வைக்கோல், அல்லது புற்குவியலைப் போன்றவர்களே.
பாண்டவர்களில் முதன்மையான அந்தக் கிரீடம் தரித்தவர் (அர்ஜுனர்) சென்ற பாதையானது, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன கொல்லப்பட்டு கிடப்பதால் சமமற்றிருப்பதைக் காண்பாயாக. அந்த உயர் ஆன்மப் போர்வீரரால் {அர்ஜுனரால்} முறியடிக்கப்பட்ட கௌரவப் படையானது ஓடுவதைக் காண்பாயாக. ஓ! தேரோட்டியே, புறமுதுக்கிட்டோடும் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்படும் கரும்பழுப்புப் புழுதியைக் காண்பாயாக. கிருஷ்ணரைத் தன் தேரோட்டியாகக் கொண்டவரும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான அர்ஜுனர் எனக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அளவற்ற சக்தியைக் கொண்டதும், புகழ்பெற்றதுமான காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படுவதை உற்றுக் கேட்பாயாக. என் பார்வையில் தோன்றும் சகுனங்களின் தன்மைகளால், சூரியன் மறைவதற்குள் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அர்ஜுனர் கொல்வார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
எங்கே பகைவர்களின் படையணிகள் இருக்கின்றனவோ, எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் இருக்கின்றனரோ, எங்கே, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் இருக்கின்றனரோ அங்கே, (மீண்டும் சொல்கிறேன்) எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் என்னுடன் போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனரோ அங்கே {அவ்விடத்திற்கு} குதிரைகளின் வலிமையைக் குன்றச் செய்யாதபடிக்கு மெதுவாக அவற்றை {குதிரைகளைத்} தூண்டுவாயாக. ஓ! சூதா, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரில் உள்ள இந்தப் போராளிகள் அனைவரையும் நான் போரில் கொன்றதும், இந்தக் கடுங்காட்டை ஏற்கனவே கடந்துவிட்டதாகக் கருதுவாயாக” என்றான் {சாத்யகி}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி {முகுந்தன்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {சாத்யகியே}, நான் அச்சமேதும் கொள்ளவில்லை. நீ கடுங்கோபத்தைக் கொண்ட ஜமதக்னியின் மகனையோ {பரசுராமரையோ}, தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையோ, மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ} உன்னெதிரில் கொண்டிருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உனது பாதுகாப்பு நிழலின் கீழ் இருக்கும்வரை என் இதயத்துக்குள் அச்சம் நுழையாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {சாத்யகி}, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் உன்னால் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டனர். எந்தப் போரிலும் இதற்கு முன்னர் நான் ஒருபோதும் அச்சத்தை உணர்ந்ததில்லை. எனவே, ஓ! பெரும் துணிவு கொண்டவனே, துயர்மிகுந்த இப்பிணக்கில் [3] நான் ஏன் அச்சமெதையும் அடையப் போகிறேன்? நீண்ட {வாழ்} நாட்களால் அருளப்பட்டவனே {சாத்யகி}, நான் உன்னைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இருக்குமிடத்திற்கு எவ்வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்? ஓ! விருஷ்ணி குலத்தோனே, யாவரின் மேல் நீ கோபம் கொண்டிருக்கிறாய்? (எதிரியை எதிர்த்து) உனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், யுகத்தின் முடிவில் தோன்றும் அந்தகனுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவனுமான உன்னைக் கண்டு இந்தப்போரில் இருந்து ஓடப்போகிறவர்கள் யாவர்? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, மன்னன் வைவஸ்வதன் இன்று யாவரை நினைக்கிறான்?” என்று கேட்டான் {தேரோட்டி முகுந்தன்}.சாத்யகி {தேரோட்டி முகுந்தனிடம்}, “தானவர்களை அழிக்கும் வாசவனை {இந்திரனைப்} போல, நான் சிரங்கள் மழிக்கப்பட்ட {மொட்டைத் தலையர்களான} இந்தப் போர்வீரர்களைக் கொல்வேன். இந்தக் காம்போஜர்களைக் கொல்வதால் நான் எனது உறுதிமொழியை நிறைவேற்றுவேன். அங்கே {யவனர்களிடமும், காம்போஜர்களிடமும்} என்னை அழைத்துச் செல்வாயாக. இவர்களுக்கு மத்தியில் ஒரு பேரழிவை உண்டாக்கிவிட்டு, இன்று நான் பாண்டுவின் அன்பு மகனிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். மழிக்கப்பட்ட சிரங்களைக் கொண்ட {மொட்டையர்களான} இந்த மிலேச்சர்களின் படைப்பிரிவை முற்றாக அழித்து, மொத்த கௌரவப்படையையும் நான் இன்று பெரும் துன்பத்தில் ஆழ்த்தும்போது, சுயோதனனைத் {துரியோதனனைத்} தங்கள் தலைமையில் கொண்ட கௌரவர்கள் எனது ஆற்றலை காண்பார்கள். போரில் என்னால் சிதைக்கப்பட்டு, பிளக்கப்படும் கௌரவப்படையின் உரத்த ஓலங்களைக் கேட்டு சுயோதனன் {துரியோதனன்} இன்று வருந்துவான். எனது ஆசானும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான உயர் ஆன்ம பாண்டவரிடம் {அர்ஜுனரிடம்}, அவரிடமிருந்து நான் அடைந்த ஆயுதத் திறனை இன்று காட்டுவேன். என் கணைகளால் இன்று கொல்லப்படும் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களைக் கண்டு மன்னன் துரியோதனன் பெரும் துயரில் மூழ்குவான்.
என் எதிரிகளின் மீது கணைகளை ஏவுவதற்காக நாணை நான் இழுக்கும்போது, என் கரங்களில் நெருப்புக்கோளத்திற்கு {கொள்ளிவட்டத்திற்கு} ஒப்பான வில்லைக் கௌரவர்கள் இன்று காண்பார்கள். கோபத்துடன் கூடிய நான், முதன்மையான குரு வீரர்களைக் கொல்லும்போது, சுயோதனன் இரண்டு அர்ஜுனர்களை இன்று காண்பான். இன்றைய பெரும்போரில் என்னால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கண்டு, மன்னன் துரியோதனன் துயரால் நிறையப் போகிறான். இன்று ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்று, உயர் ஆன்மாக்களான பாண்டுவின் அரச மகன்கள் {பாண்டவர்கள்} மீது கொண்ட என் அன்பையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நான் காட்டப் போகிறேன். எனது வலிமை, சக்தி, (பாண்டவர்களிடம்) நான் கொண்ட நன்றியுணர்வு ஆகியவற்றின் அளவை இன்று கௌரவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்றான் {சாத்யகி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, இனிய நடையையும், சந்திரனின் நிறத்தையும் கொண்ட அந்த நன்கு பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை அவற்றின் உச்சபட்ச வேகத்திற்குத் தூண்டினான். காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்ட அந்தச் சிறந்த விலங்குகள் வானத்தையே விழுங்கிவிடுவதைப் போல அந்த யவனர்கள் இருந்த இடத்திற்கு யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன. பெரும் எண்ணிக்கையிலானவர்களும், கரநளினம் கொண்டவர்களுமான யவனர்கள், புறமுதுகிடாதவனான சாத்யகியை அணுகி கணைமாரியால் அவனை மறைத்தனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகச் சென்ற சாத்யகி, யவனர்களின் அந்தக் கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் தன் நேரான கணைகளால் வெட்டினான்.
பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, பெருங்கூர்மையும், தங்கச் சிறகுகளும், கழுகின் இறகுகளும் கொண்டவையுமான தன் நேரான கணைகளால் யவனர்களின் கரங்களையும், சிரங்களையும் அறுத்தான். மேலும் அக்கணைகளில் பல, இரும்பு மற்றும் பித்தளையால் ஆன அவர்களின் கவசங்களைத் துளைத்துச்சென்று பூமிக்குள் நுழைந்தன. அந்தப் போரில் துணிச்சல்மிக்கச் சாத்யகியால் தாக்கப்பட்ட மிலேச்சர்கள், உயிரை இழந்து நூற்றுக்கணக்கில் கீழே பூமியில் விழத் தொடங்கினர். தன் வில்லை முழுமையாக வளைத்த அந்த வீரன் {சாத்யகி}, தொடர்ச்சியான சரமாகத் தன் கணைகளை ஏவி, ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு யவனர்களை ஒரே நேரத்தில் கொல்லத் தொடங்கினான். ஆயிரக்கணக்கான காம்போஜர்களும், சகர்களும், பர்ப்பரர்களும் அதே போலவே சாத்யகியால் கொல்லப்பட்டனர். உண்மையில் உமது துருப்புகளில் பேரழிவை உண்டாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, சதையாலும் குருதியாலும் சேறாக்கியபடி பூமியைக் கடக்கமுடியாததாகச் செய்தான்.
அந்தக் கள்வர்களின் தலைப்பாகைளும், நீண்ட தாடிகளின் விளைவால் இறகுகளற்ற பறவையைப் போலத் தெரிந்த அவர்களின் மழிக்கப்பட்ட தலைகளும், போர்க்களமெங்கும் விரவிக் கிடந்தன. உண்மையில், எங்கும் குருதிக் கறைகளைக் கொண்ட தலையற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களமானது, தாமிர மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது. இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட அந்த யவனர்கள் பூமியின் பரப்பையே மறைத்தனர். சாத்வதனால் போரில் வெல்லப்பட்டவர்களும் கவசம் தரித்தவர்களுமான துருப்பினரில் எஞ்சியிருந்தோர் சிலர், தங்கள் உயிர்கள் பறிக்கப்படும் சமயத்தில் உற்சாகமற்றவர்களாகி, பிளந்து, சவுக்குகளாலும், சாட்டைகளாலும் தங்கள் குதிரைகளை உச்சபட்ச வேகத்தில் தூண்டி அச்சத்துடன் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாத காம்போஜப் படையையும், யவனர்களின் படையையும், சகர்களின் பெரும்படையையும் முறியடித்து உமது படைக்குள் ஊடுருவியவனும், மனிதர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, “{விரைந்து} செல்வாயாக” என்று சொல்லி தன் தேரோட்டியைத் தூண்டினான். வேறு எவராலும் இதற்கு முன்னர் அடையமுடியாத அவனது சாதனையை அந்தப் போரில் கண்ட சாரணர்களும், கந்தர்வர்களும் அவனை மிகவும் பாராட்டினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரணர்களும், ஏன் உமது போர்வீரர்களே கூட அர்ஜுனனுக்கு உதவி செய்ய முன்னேறிச் செல்லும் யுயுதானனைக் (அவனது வீரத்தைக்) கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.
துரியோதனனை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 119-கௌரவத் துருப்புகளை அச்சுறுத்திய சாத்யகி; சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கௌரவர்கள்; தன் தேரோட்டியிடம் மீண்டும் பேசிய சாத்யகி; பயங்கரப் போர்; அர்ஜுனனே ஏற்படுத்தாத பேரழிவை ஏற்படுத்திய சாத்யகி; துரியோதனனின் தேரோட்டியைக் கொன்றது; துரியோதனனின் தேர் களத்தைவிட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது; சாத்யகியை வழிபட்ட கௌரவத் துருப்புகள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யவனர்கள் மற்றும் காம்போஜர்களை வீழ்த்தியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான யுயுதானன் {சாத்யகி}, நேராக உமது துருப்புகளுக்கு மத்தியில் அர்ஜுனனை நோக்கிச் சென்றான். அழகிய பற்களைக் கொண்டவனும், சிறந்த கவசத்தைப் பூண்டிருந்தவனும், அழகிய கொடிமரத்தைக் கொண்டிருந்தவனுமான அந்த மனிதர்களில் புலி (சாத்யகி), மான்களைக் கொல்லும் வேடுவனைப் போலக் கௌரவத் துருப்புகளைக் கொன்று அவர்களை அச்சங்கொள்ளச் செய்தான்.
தன் தேரில் சென்ற அவன் {சாத்யகி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், மிகக் கடினமானதும், தங்க நிலவுகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லைப் பெரும் பலத்துடன் அசைத்தான். தங்க அங்கதங்களைக் கொண்ட தன் கரங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தலைப்பாகையுடனும், தங்கக் கவசம் அணிந்த தன் உடலுடனும், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட தன் கொடிமரம் மற்றும் வில்லுடனும் மேருவின் சிகரத்தைப் போல அவன் ஒளிர்ந்தான். இப்படி ஒளிர்ந்த அவன், தன் கையில் அந்த வட்டமான வில்லுடன் கூதிர் காலத்தில் தோன்றிய மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்தான். காளையின் கண்கள், நடை மற்றும் தோள்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, மாட்டுக் கொட்டகையில் உள்ள ஒரு காளையைப் போல உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தான்.
தன் மந்தையின் மத்தியில் செருக்குடன் நிற்கும் மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனும், அதன் நடையைக் கொண்டவனுமான அவனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனை {தலைமை யானையை} அணுகும் ஒரு புலியைப் போல உமது போர்வீரர்கள் அவனை அணுகினர். உண்மையில், அவன் {சாத்யகி} துரோணரின் படைப்பிரிவையும், கடக்க முடியாத போஜர்களின் படைப்பிரிவையும் கடந்த பிறகு, ஜலசந்தனின் துருப்புகள், காம்போஜர்கள் படை ஆகியவற்றைக் கொண்ட கடலை அவன் {சாத்யகி} கடந்த பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எனும் முதலையிடமிருந்து அவன் தப்பிய பிறகு, பெருங்கடலைப் போன்ற அந்தப் படையை அவன் கடந்த பிறகு, உமது படையின் தேர்வீரர்கள் பலர் கோபத்தால் தூண்டப்பட்டு அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.
சாத்யகி முன்னேறிச் செல்கையில், துரியோதனன், சித்திரசேனன், துச்சாசனன், விவிம்சதி, சகுனி, துஸ்ஸஹன், இளமை நிறைந்த துர்த்தர்ஷணன், கிராதன் மற்றும் ஆயுதங்களை நன்கறிந்தவர்களும், வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான பிற துணிச்சல் மிக்கவர்கள் பலரும் அவனைப் {சாத்யகியைப்} பின்னால் இருந்து தொடர்ந்து சென்றனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஆரவாரமானது, பெருங்காற்றால் சீறும் முழு அலைகளைக் கொண்ட பெருங்கடலைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.
தன்னை நோக்கி விரையும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கண்ட அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “மெதுவாகச் செல்வாயாக. ஓ! சாரதியே, பௌர்ணமியில் உச்சபட்ச உயரத்தை அடைந்து பெருகி வரும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, ஓ! தேரோட்டியே, இந்தப் பெரும்போரில் (சினமும், செருக்கும்) பெருகியதும், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் நிறைந்ததும், தன் தேர்களின் ஆழ்ந்த முழக்கத்தால் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடி என்னை நோக்கி வேகமாக விரைவதும், பூமி, வானம், ஏன் கடல்களையே நடுங்கச் செய்வதுமான இந்தத் துருப்புகளின் கடலை நான் தடுப்பேன். ஓ! தேரோட்டியே, இந்திரனுக்கு இணையான என் ஆற்றலை இந்தப் பெரும்போரில் நீ காண்பாயாக. என் கூரிய கணைகளால் இந்தப் பகைவரின் படையை நான் எரிக்கப் போகிறேன். இந்தக் காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன ஆயிரக்கணக்கில் என்னால் கொல்லப்படுவதையும், சீற்றமிக்க என் கணைகளால் அவர்களது உடல்கள் துளைக்கப்படுவதையும் காண்பாயாக” என்றான் {சாத்யகி}.
இவ்வார்த்தைகளைச் சாத்யகி (தன் தேரோட்டியிடம்) சொன்ன போது, போரிட விரும்பிய அந்தப் போராளிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட அவனுக்கு முன்பாக வேகமாக வந்தனர். அவர்கள், “கொல்வீர், விரைவீர், நிற்பீர், காண்பீர், காண்பீர்” என்று சொல்லிக் கொண்டே பேரொலியை உண்டாக்கினர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களில், சாத்யகி, தன் கூரிய கணைகளின் மூலம் முன்னூறு {300} குதிரைவீரர்களையும், நானூறு {400} யானை வீரர்களையும் கொன்றான். (ஒரு பக்கத்தில்) ஒன்று சேர்ந்திருந்த வில்லாளிகள், (மறு பக்கத்தில்) சாத்யகி ஆகியோருக்கிடையில் இருந்த ஆயுதங்களின் பாதையானது {போரானது}, (பழங்காலதில்) தேவர்களுக்கு அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாக மிகவும் மூர்க்கமானதாக இருந்தது. {அப்போது} ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.
சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்த உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் வரவேற்றான். அந்தப் போரில் தன் கணை மழையால் அனைத்துப் பக்கங்களையும் நிறைந்தவனும், வீரமிக்கவனுமான அந்த வீரன் {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்றவகையில் பெரும் எண்ணிக்கையில் உமது துருப்புகளைக் கொன்றான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் எந்தக் கணையும் {இலக்கை} தவறவில்லை, ஓ! மன்னா, அங்கே நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், காலாட்படை வீரர்கள் என்ற முழு அலைகளால் ஆனதுமான அந்தத் துருப்புகளின் கடலானது, சாத்யகி என்ற அந்தக் கரையைத் தொட்டதும் அசையாமல் நின்றது.
சாத்யகியின் கணைகளால் மீண்டும் மீண்டும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கொல்லப்பட்டதும், பீதியடைந்திருந்த போராளிகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் படையானது, குளிர்காலத்தின் உறைய வைக்கும் வெடிப்புகளால் பீடிக்கப்பட்டதைப் போல அங்கேயும், இங்கேயும் திரிந்தது. யுயுதானனால் தாக்கப்படாத காலாட்படை வீரர்களையோ, தேர்வீரர்களையோ, யானைகளையோ, குதிரைவீரர்களையோ, குதிரைகளையோ நாங்கள் காணவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்குச் சாத்யகி ஏற்படுத்திய பேரழிவைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்குனன் {அர்ஜுனன்} கூட ஏற்படுத்தவில்லை. பெரும் கரநளினம் கொண்டவனும், மனிதர்களில் காளையும், களங்கமற்றவனுமான அந்தச் சிநியின் பேரன், தன் உச்சபட்ச திறனை வெளிப்படுத்திபடி அர்ஜுனனையே விஞ்சிப் போரிட்டான்.
அப்போது மன்னன் துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} தேரோட்டியையும் {முகுந்தனையும்}, நான்கு கணைகளால் அவனது {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} மூன்று கணைகளாலும், மீண்டும் எட்டு கணைகளாலும் சாத்யகியையும் துளைத்தான். துச்சாசனன், பதினாறு கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையைத் துளைத்தான். சகுனி, இருபத்தைந்து கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும் சாத்யகியைத் துளைத்தனர். துஸ்ஸஹன், பதினைந்து கணைகளால் சாத்யகியின் மார்பைத் துளைத்தான். பிறகு, இப்படி அவர்களின் கணைகளால் தாக்கப்பட்ட அந்த விருஷ்ணிகளில் காளை {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி, அவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் செருக்குடன் துளைத்தான்.
பெரும் சக்தி கொண்ட கணைகளால் தன் எதிரிகள் அனைவரையும் ஆழத் துளைத்தனும், பெரும் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒரு பருந்தின் வேகத்துடன் அந்தக் களத்தில் திரிந்தான். சுபலன் மகனின் {சகுனியின்} வில்லையும், அவனது கையை மறைத்த தோலுறையையும் அவன் வெட்டினான். யுயுதானன் {சாத்யகி}, மூன்று கணைகளால் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். மேலும், அவன் {சாத்யகி} சித்திரசேனனை நூறு கணைகாளலும், துஸ்ஸஹனை பத்தாலும் துளைத்தான். பிறகு அந்தச் சிநி குலத்துக் காளை இருபது கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட உமது மைத்துனன் (சகுனி), எட்டு கணைகளாலும், ஐந்தால் மீண்டுமொரு முறையும் சாத்யகியைத் துளைத்தான். துச்சாசனன் மூன்று கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தான். ஓ! மன்னா, துர்முகன் பனிரெண்டு கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்., எழுபத்துமூன்று கணைகளால் மாதவனை {சாத்யகியைத்} துளைத்த துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அவனது தேரோட்டியை {முகுந்தனைத்} துளைத்தான். அப்போது சாத்யகி, போரில் ஒன்றாக மூர்க்கத்துடன் போரிட்ட அந்தத் துணிச்சல்மிக்க, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.
பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (யுயுதானன் {சாத்யகி}) ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} தேரோட்டியை விரைவாகத் தாக்கினான், அதன் பேரில், பின்னவன் {தேரோட்டி} உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேரோட்டி வீழ்ந்ததும், உமது மகனின் {துரியோதனனின்} தேரானது அதில் பூட்டப்பட்டிருந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகளால் போர்க்களத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், பிற வீரர்களும், மன்னனின் {துரியோதனனின்} தேரில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்து, நூற்றுக்கணக்கில் தப்பி ஓடினர். உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டு, கூர்முனை கொண்ட கணைகளின் மழையால் அந்தப் படையை மறைத்தான்.
எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த உமது போராளிகள் அனைவரையும் முறியடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தேரை நோக்கி முன்னேறிச் சென்றான். உண்மையில், யுயுதானன் {சாத்யகி} கணைகளை ஏவுவதையும், தனது தேரோட்டியைப் பாதுகாப்பதையும், போரில் தானே போரிடுவதையும் கண்ட உமது துருப்புகள் அவனை {சாத்யகியை} வழிபட்டன” {என்றான் சஞ்சயன்}.
மலைவாசிகளை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 120-சாத்யகியின் திறனை வியந்த திருதராஷ்டிரன்; சாத்யகிக்கு எதிராக மலைநாட்டினரைத் தூண்டிய துச்சாசனன்; சாத்யகியால் கொல்லப்பட்ட யானைகளும், குதிரைகளும், வீரர்களும்; கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளின் போர்முறை; சாத்யகியால் கொல்லப்பட்ட மலைவாசிகள்; துரோணரும் அவரது தேரோட்டியும் பேசிக்கொண்டது; சாத்யகிக்கு அஞ்சி துரோணரை நோக்கி ஓடி வந்த கௌரவர்கள்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பெரும்படையைக் கலங்கடித்தபடியே அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்டு, ஓ! சஞ்சயா, உண்மையில் வெட்கங்கெட்டவர்களான என் மகன்கள் என்ன செய்தனர்? சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனான அந்த யுயுதானன் {சாத்யகி} தங்கள் எதிரில் இருந்த போது, உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த இழிந்தவர்களால் போரில் எப்படித் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய முடிந்தது? போரில் வெல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன செய்தனர்? உலகம் பரந்த புகழைக் கொண்ட சாத்யகியால், உண்மையில், போரில் எப்படி அவர்களைக் கடந்து செல்ல முடிந்தது? ஓ! சஞ்சயா, என் மகன்கள் உயிரோடிருக்கையிலேயே அந்தச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} எப்படிப் போரிட முடிந்தது? இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக. ஓ! ஐயா {சஞ்சயா}, உன்னிடமிருந்து கேட்டவாறே, ஒருவனுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல் மிக அற்புதமானாதாகவே இருக்கிறது.
ஓ! சூதா {சஞ்சயா}, சாத்வத குல வீரனான தனி ஒருவனால் {சாத்யகியால்}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் விதியானது இப்போது என் மகன்களுக்குச் சாதமானதாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஐயோ, ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி} என்ற ஒற்றை வீரனுக்குக்கூட என் படை இணையானதாக இல்லையே. {அப்படியிருக்கையில்} பாண்டவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆயுதங்களில் திறன்மிக்கவரும், போர்க்கலையின் முறைகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணரையே போரில் வென்ற சாத்யகி, சிறு {அற்ப} விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல என் மகன்களைக் கொன்றுவிடுவான். போரில் மூர்க்கமாகப் போரிட்டும் கிருதவர்மன் முதலிய எண்ணற்ற வீரர்களால் யுயுதானனைக் கொல்ல முடியவில்லையே. பின்னவன் {சாத்யகி} என் மகன்களைக் கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. சிநியின் புகழ்பெற்ற பேரன் போரிட்டது போலப் பல்குனனேகூட {அர்ஜுனனேகூட} போரிடவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலும், துரியோதனனின் செயல்களாலுமே இவை யாவும் வந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பீராக.
உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சம்சப்தகர்கள் அனைவரும் கடுமையாகப் போரிடத் தீர்மானித்து மீண்டும் திரண்டனர். துரியோதனன் தலைமையில் மூவாயிரம் {3000} வில்லாளிகளும், சகர்கள், காம்போஜர்கள், பாஹ்லீகர்கள், யவனர்கள், பாரடர்கள் [1], கலிங்கர்கள், தங்கணர்கள், அம்பஷ்டர்கள், பிசாசர்கள் {பைசாசர்கள்}, பர்ப்பரர்கள், சினத்தால் தூண்டப்பட்டு, கற்களை ஆயுதமாக ஏந்திய மலை நாட்டினர் ஆகியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பை எதிர்க்கும் விட்டிற்பூச்சிகளைப் போல அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர். அதே போல, ஓ! மன்னா, ஐநூறு {500} வீரர்களான பிறரும் சாத்யகியை எதிர்த்து விரைந்தனர். ஆயிரம் {1000} தேர்களையும், பெரும் தேர்வீரர்களான நூறு பேரையும், ஆயிரம் {1000} யானைகளையும், இரண்டாயிரம் {2000} வீரர்களையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொண்ட மற்றொரு பெரிய படையும் சிநியின் பேரனை எதிர்த்து விரைந்தது.ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், “அவனை {சாத்யகியைக்} கொல்வீராக” என்று சொல்லி அந்த வீரர்கள் அனைவரையும் தூண்டியபடியே சாத்யகியைச் சூழ்ந்து கொண்டான். அந்த எண்ணிலடங்கா எதிரிகளுடன், தனி ஒருவனாக அச்சமற்றவகையில் போராடிய சிநியின் பேரனுடைய நடத்தை மகத்தானதாகவும், அற்புதமானதாகவும் இருப்பதை நாங்கள் கண்டோம். அவன் {சாத்யகி}, தேர்வீரர்கள் அடங்கிய அந்த மொத்த படையையும், அந்த யானைப் படையையும், அந்தக் குதிரைவீரர்கள் அனைவரையும், கள்வர்களின் அந்தப் படை முழுவதையும் கொன்றான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போல, அந்தப் போர்க்களமானது, உடைந்த தேர்ச்சக்கரங்கள், அவனது {சாத்யகியின்} வலிமைமிக்க ஆயுதங்களால் நொறுக்கப்பட்ட எண்ணற்ற அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, துண்டுகளாகக் குறைக்கப்பட்ட அழகிய தேர் அச்சுக்கள், நசுங்கிய யானைகள், வீழ்ந்த கொடிமரங்கள், சிதறிக் கிடக்கும் கவசங்கள் மற்றும் கேடயங்கள், மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், அனுஷ்கரங்கள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றால் விரவி கிடந்தது [2].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யானைகளில் முதன்மையானவை பலவும், ஓ! மன்னா, மலைகளைப் போலப் பெரியவையும், அஞ்சனம், வாமனம், மற்றும் பிற இனங்களில் பிறந்த முதன்மையான யானைகள் பலவும், உயிரையிழந்து தரையில் கிடந்தன [3]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாத்யகியால், வனாயு, மலைநாடு, காம்போஜம், பாஹ்லீக இனங்களைச் சேர்ந்த முதன்மையான பல குதிரைகள் கொல்லப்பட்டன. அந்தச் சிநியின் பேரன், பல்வேறு மாநிலங்களில் பிறந்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுமான காலாட்படை வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.அந்தப் படைவீரர்கள் இப்படிக் கொல்லப்பட்டு வருகையில் கள்வர்களிடம் பேசிய துச்சாசனன், “அறநெறியறியா வீரர்களே போரிடுவீராக! ஏன் பின்வாங்குகிறீர்?” என்றான். தன் வார்த்தைகளைக் கேளாமல் ஓடிச் செல்லும் அவர்களைக் கண்டவனும், உமது மகனுமான துச்சாசனன், கற்களைக் கொண்டு போரிடுவதில் திறம்பெற்றவர்களான துணிச்சல் மிக்க அந்த மலைவாசிகளிடம், “கற்களைக் கொண்டு போரிடுவதில் நீங்கள் சாதித்தவர்களாக இருக்கிறீர்கள். எனவே நிற்பீராக. அந்த வீரன் {சாத்யகி} போரிடும் விருப்பத்துடன் இருப்பினும், அவன் {சாத்யகி} உங்கள் போர் முறையை அறியாதவனாவான். கௌரவர்கள் அனைவரும் இந்தப் போர்முறையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சாத்யகியை நோக்கி விரைவீர். அஞ்சாதீர். சாத்யகியால் உங்களை அணுக இயலாது” என்று சொல்லி அவர்களைத் {மலைவாசிகளைத்} தூண்டினான்.
இப்படித் தூண்டப்பட்டவர்களும், கற்களைக் கொண்டு போரிடும் முறையை அறிந்தவர்களும், மலைவாசிகளுமான அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், மன்னனை நோக்கி விரையும் அமைச்சர்களைப் போலவே அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தனர். பிறகு அந்த மலைவாசிகள், யானைகளின் தலையைப் போன்று பெரிய அளவிலான கற்களைத் தங்கள் கரங்களில் உயர்த்தியபடியே அந்தப் போரில் யுயுதானனுக்கு எதிராக நின்றனர். உமது மகனால் {துச்சாசனனால்} தூண்டப்பட்ட பிறரும், ஏவுகணைகளைத் தரித்துக் கொண்டு அந்தச் சாத்வதனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தில், பின்னவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது சாத்யகி, கற்களைக் கொண்டு போரிடும் விருப்பத்தால் தன்னை நோக்கி விரைந்து வரும் அவ்வீரர்களைக் குறிபார்த்து, அவர்கள் மேல் கூரிய கணைகளை ஏவினான். அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, பாம்புகளைப் போன்று தெரிந்த அந்தக் கணைகளால், அந்த மலைவாசிகள் வீசிய கற்களின் அடர்த்தியான மழையைத் துண்டுகளாக வெட்டினான். சுடர்மிக்க விட்டிற்பூச்சிகளைப் போலத் தெரிந்த அந்தக் கற்களின் துண்டுகள், பல போராளிகளைக் கொன்றன. அதன்பேரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும், “ஐயோ” என்றும் அந்தக் களத்தில் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கரங்களில் பெரும் கற்களை உயர்த்திப் பிடித்திருந்த துணிச்சல் மிக்க ஐநூறு {500} போர் வீரர்களின் கரங்களும் வெட்டப்பட்டுக் கீழே தரையில் கிடந்தன. மேலும் முழுமையாக ஆயிரம் {1000} பேரும், அதன் பிறகு ஒரு நூறாயிரம் {1,00,000} பேரும், கற்களைப் பிடித்திருந்த நிலையிலேயே தங்கள் கரங்கள் வெட்டப்பட்டுச் சாத்யகியை அணுகமுடியாமல் கீழே விழுந்தனர். உண்மையில் சாத்யகி, கற்களைக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.
பிறகு அவர்களில் பலர் மீண்டும் போரிடத் திரும்பி கற்களின் மாரியைச் சாத்யகியின் மீது பொழிந்தனர். வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த தரதர்கள், தங்கணர்கள், கசர்கள், லம்பகர்கள், புளிந்தர்கள் ஆகியோரில் பலர் அவன் {சாத்யகியின்} மீது தங்கள் ஆயுதங்களை வீசினர். எனினும், ஆயுதப் பயன்பாடுகளை நன்கறிவந்தனான சாத்யகி, அந்தக் கற்களையும், ஆயுதங்களையும் தன் கணைகளால் வெட்டினான். சாத்யகியின் கூரிய கணைகள் துளைத்து, ஆகாயத்தில் உடைக்கப்பட்ட அந்தக் கற்கள் உண்டாக்கிய அந்தக் கடும் ஒலியால் அச்சமடைந்த பல தேர்வீரர்களும், குதிரைகளும், யானைகளும் போரில் இருந்து ஓடின. அந்தக் கற்களின் துண்டுகளால் தாக்கப்பட்ட மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன, குளவிகளால் கடிபட்டதைப் போல உணர்ந்து போரில் நிற்க முடியாதவர்களாக ஆனார்கள். (சாத்யகியைத் தாக்கிய) யானைகளில் எஞ்சியவை சில குருதியால் நனைந்து, தங்கள் தலைகளும், கும்பங்களும் பிளக்கப்பட்டு யுயுதானனுடைய தேரின் அருகில் இருந்து தப்பி ஓடின. அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாதவனால் {சாத்யகியால்} இப்படிக் கலங்கடிக்கப்பட்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் அலைகள் நிரம்பிய பெருங்கடலைப் போல ஆரவாரம் எழுந்தது.
அந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்ட துரோணர், தன் தேரோட்டியிடம், “ஓ! சூதா, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்தப் பெரும் தேர்வீரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு நம் படையைப் பல்வேறு துண்டுகளாகச் சிதறடித்து, அந்தகனைப் போலவே களத்தில் திரிந்து கொண்டிருக்கிறான். இந்தச் சீற்றமிகு ஆரவாரம் வரும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக. யுயுதானன், கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளுடன் போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. நமது தேர்வீரர்களும், மூர்க்கமாக ஓடும் குதிரைகளால் சுமந்து செல்லப்படுவது காணப்படுகிறது. ஆயுதங்களற்றவர்களாகவும், கவசமற்றவர்களாகவும் காயமடைந்தவர்களாகவும் இருக்கும் அவர்களில் பலர் கீழே விழுகின்றனர். இந்தக் குதிரைகள் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதால் தேரோட்டிகள் அவற்றைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்” என்றார் {துரோணர்}.
பரத்வாஜர் மகனின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரிடம், “ஓ! நீண்ட நாட்களால் {ஆயுளால்} அருளப்பட்டவரே, கௌரவத் துருப்புகள் ஓடுகின்றன. (எதிரியால்) முறியடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் நமது போர்வீரர்களைக் காண்பீராக. மேலும், ஒன்று கூடியிருப்பவர்களான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் உம்மைக் கொல்லும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வருகின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இப்பணிகளில் {இவ்விரு பணிகளில்}, கவனத்தைக் கோரும் முதன்மையான பணி யாது என்பதை நீர் தீர்மானிப்பீராக. (முன்னேறி வரும்) பாண்டவப் படையைச் சந்திக்க நாம் இங்கே நிற்க வேண்டுமா? அல்லது (சாத்யகியை நோக்கிச்) நாம் செல்ல வேண்டுமா? சாத்யகியைப் பொறுத்தவரை, இப்போது அவன் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறான்” என்றான் {துரோணரின் தேரோட்டி}.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரோட்டி இப்படிப் பரத்வாஜர் மகனிடம் {துரோணரிடம்} பேசிக் கொண்டிருக்கையில், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களைக் கொன்றபடி சிநியின் பேரன் {சாத்யகி} அங்கே திடீரெனத் தோன்றினான். அந்தப் போரில் உமது துருப்புகள் இப்படி யுயுதானனால் கொல்லப்படுகையில், யுயுதானனுடைய தேரின் அருகே இருந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கி அவை ஓடின. அதேபோலவே, எந்தப் (பிற) தேர்வீரர்களோடு சேர்ந்து துச்சாசனன் சென்றானோ, அவர்கள் அனைவரும், துரோணரின் தேர் காணப்பட்ட அந்த இடத்திற்கே பீதியடைந்து விரைந்து வந்தனர்” {என்றான் சஞ்சயன்}.
துரோணரின் தலையைச் சீவப் பாய்ந்த திருஷ்டத்யும்னன்! – துரோண பர்வம் பகுதி – 121-துச்சாசனன் செய்த தீமைகளைச் சொல்லி அவனை நிந்தித்த துரோணர்; சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; பாஞ்சால இளவரசன் வீரகேதுவைக் கொன்ற துரோணர்; பாஞ்சால இளவரசர்களான மேலும் நால்வரை கொன்ற துரோணர்; துரோணரை மயக்கமடையச் செய்த திருஷ்டத்யும்னன்; துரோணரின் தலையை வெட்டி வீழ்த்த எண்ணியது; மயக்கத்தில் இருந்து மீண்ட துரோணர் வைதஸ்திகக் கணைகளால் திருஷ்டத்யும்னனைப் பீடித்தது; திருஷ்டத்யும்னனின் தேரோட்டியைக் கொன்று, அவனைக் களத்தைவிட்டே விரட்டிய துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துச்சாசனனின் தேர் தன்னருகே நிற்பதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துச்சாசனா, இந்தத் தேர்கள் அனைத்தும் ஏன் {தப்பி} ஓடுகின்றன? மன்னன் {துரியோதனன்} நலமாக இருக்கிறானா? சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} உயிருடன் இருக்கிறானா? நீயோ ஓர் இளவரசன். நீ மன்னனின் தம்பியுமாவாய். மேலும் நீ ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனும் ஆவாய். {அப்படியிருக்க} போரில் இருந்து ஏன் நீ ஓடுகிறாய்? (உன் அண்ணனின் அரியணையைப் பாதுகாத்து) பட்டத்து இளவரசனாவாயாக. {உன் அண்ணனை ராஜனாக்கி, நீ யுவராஜனாவாயாக}.
திரௌபதியிடம் நீ முன்னர், “பகடையில் எங்களால் வெல்லப்பட்ட நீ எங்களின் அடிமையாவாய். உன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டிராமல் கற்பை நீ ஒதுக்கித் தள்ளுவாயாக. என் அண்ணனான மன்னனின் {துரியோதனனின்} ஆடைகளைச் சுமப்பவளாக இருப்பாயாக. உன் கணவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் எள்ளுப்பதர்களைப் போலப் பயனற்றவர்களேயாவர்” என்று சொன்னாய். துச்சாசனா, இவ்வார்த்தைகளைச் சொன்ன நீ, இப்போது போரில் இருந்து ஏன் ஓடுகிறாய்? பாஞ்சாலர்களுடனும், பாண்டவர்களுடனும் கடும் பகைமையை நீயே தூண்டிவிட்டு, தனி ஒருவனான சாத்யகியின் முன்னால் போரிட ஏன் அஞ்சுகிறாய்? சூதாட்ட நிகழ்வில் பகடையை எடுத்த போது, உன்னால் கையாளப்பட்ட பகடையானது விரைவில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கடுங்கணைகளாக மாறும் என்பதை நீ உணரவில்லையா? தூற்றும் அடைமொழிகள் பலவற்றை முன்னர்ப் பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியவன் நீயே. திரௌபதியின் துயரங்கள் உன்னையே வேராகக் {வேர்} கொண்டிருக்கின்றன {திரௌபதியின் துயரங்களுக்குக் காரணமானவன் நீயே}.
உனது செருக்கும், திமிரும், தற்பெருமையும் இப்போது எங்கே? கடும் நஞ்சுமிக்கப் பயங்கரப் பாம்புகளான அந்தப் பாண்டவர்களைச் சினமூட்டிவிட்டு ஏன் நீ ஓடுகிறாய்? சுயோதனனின் {துரியோதனனின்} துணிச்சல்மிக்கத் தம்பியான நீ ஓடுவதில் தீவிரமாய் இருக்கிறாய் என்பதில் ஐயமேயில்லை. ஓ! வீரா {துச்சாசனா}, முறியடிக்கப்பட்டுப் பீதியடைந்திருக்கும் இந்தக் கௌரவப் படையை உன் சொந்தக் கரங்களின் சக்தியை நம்பி நீயே இன்று பாதுகாக்க வேண்டும் [1]. எனினும், இதைச் செய்யாமல் அச்சத்தால் போரைக் கைவிட்டு உன் எதிரிகளின் இன்பத்தையே நீ அதிகரிக்கிறாய். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் படைக்குத் தலைவனான நீயே இப்படி ஓடும்போது, வேறு யார்தான் போரில் நிலைப்பார்கள்? புகலிடமாக இருக்க வேண்டிய நீயே அஞ்சினால், யார்தான் அஞ்சாமலிருப்பார்கள்?சாத்வத குலத்தின் தனியொரு போர்வீரனுடன் {சாத்யகியிடம்} போரிட்ட பிறகு, போரில் இருந்து ஓடுவதற்கே உன் இதயம் விரும்புகிறது. எனினும், ஓ! கௌரவா {துச்சாசனா}, போரில் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, அல்லது பீமசேனனை, அல்லது இரட்டையர்களை (நகுலன் மற்றும் சகாதேவனை) நீ காண நேர்ந்தால் என்ன செய்வாய்? எதற்கு அஞ்சி நீ ஓடுவதில் பாதுகாப்பைத் தேடுகிறாயோ, அந்தச் சாத்யகியின் கணைகள், சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான காந்தி கொண்ட பல்குனனுடையவைக்கு {அர்ஜுனனின் கணைகளுக்கு} போரில் ஒருபோதும் ஈடானவையல்ல. ஓடுவதில் உன் இதயம் உறுதியாக இருக்கிறது என்றால், சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இந்தப் பூமியின் அரசுரிமை கொடுக்கப்படட்டும்.
தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளுக்கு ஒப்பான பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் உன் உடலுக்குள் நுழையும் முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. உயர் ஆன்ம பார்த்தர்கள், போரில் உன் நூறு சகோதரர்களைக் கொன்று பலவந்தமாகப் பூமியைப் பறிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சாமாதானத்தை அடைவாயாக. மன்னன் யுதிஷ்டிரனும், போரில் மகிழ்பவனான கிருஷ்ணனும் கோபமடைவதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன் இந்தப் பரந்த படைக்குள் ஊடுருவி, உன் சகோதரர்களைப் பிடிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக.
முன்னர்ப் பீஷ்மர் உன் அண்ணனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “பாண்டவர்கள் போரில் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஓ! இனியவனே, அவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக” என்றார் [2]. எனினும், தீயவனான உன் அண்ணன் சுயோதனன் அதைச் செய்யவில்லை [3]. எனவே, உன் இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து பாண்டவர்களுடன் கடுமையாகப் போரிடுவாயாக. சாத்யகி இருக்கும் இடத்திற்கு உன் தேரில் விரைந்து செல்வாயாக. ஓ! பாரதா {துச்சாசனா}, நீ இல்லாமல் இந்தப் படை ஓடிவிடும். போரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியுடன் உனக்காக {உன் நலனுக்காகப்} போரிடுவாயாக” என்றார் {துரோணர்}.(துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} மறுமொழியாக ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. துச்சாசனன், (பரத்வாஜர் மகனின் {துரோணரின்}) வார்த்தைகளைக் கேட்காதது போலப் போலியாகக் காட்டிக் கொண்டு, சாத்யகி இருக்கும் இடத்திற்குச் சென்றான். புறமுதுகிடாத மிலேச்சர்களின் பெரும்படையுடன் போரில் சாத்யகியிடம் வந்த துச்சாசனன், அவ்வீரனுடன் கடுமையாகப் போரிட்டான்.
தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் எதிர்த்து மிதமான வேகத்துடன் விரைந்தார். அந்தப் போரில் பாண்டவப்படையின் மத்தியில் ஊடுருவிய துரோணர், அவர்களது போர்வீரர்களை, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நசுக்கினார். அந்தப் போரில் துரோணர், தன் பெயரை அறிவித்துக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யர்களுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தினார்.
பாஞ்சாலர்களின் ஆட்சியாளனுடைய {துருபதனின்} மகனான சிறப்புமிக்க வீரகேது, பாண்டவப் படையணிகளை வெல்வதில் ஈடுபட்டிருந்த பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். துரோணரை ஐந்து கணைகளால் துளைத்த அவ்விளவரசன் {வீரகேது}, ஒரு கணையால் துரோணரின் கொடிமரத்தையும், ஏழால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். துரோணர் மிகக் கடுமையாக முயன்றாலும், பாஞ்சாலர்களின் இளவரசனை {வீரகேதுவை} அணுக முடியாதபடிக்கு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போரில் நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. பிறகு, ஓ! ஐயா, பாஞ்சாலர்கள், போரில் துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்டு, மன்னன் யுதிஷ்டிரனின் வெற்றியை விரும்பி, அவரை {துரோணரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா, நெருப்பு போன்ற கணைகள், பலமான வேல்கள் மற்றும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களின் மழையால் அந்தப் போர்வீரர்கள் துரோணரை மறைத்தனர். ஆகாயத்தில் மேகத்திரள்களை விரட்டும் காற்றைப் போன்ற தன் எண்ணற்ற கணைகளால் அந்த அடர்த்தியான ஆயுத மழையைக் கலங்கடித்த துரோணர் மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.
பிறகு பகைவீரர்களைக் கொல்பவரான அவர் (பரத்வாஜரின் மகன்), சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட கடுங்கணை ஒன்றை வீரகேதுவின் தேரை நோக்கிக் குறிவைத்தார். அந்தக் கணையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை {வீரகேதுவைத்} துளைத்துச் சென்று, குருதியில் குளித்து, நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு வேகமாகப் பூமிக்குள் நுழைந்தது. பாஞ்சாலர்களின் இளவரசன் {வீரகேது}, காற்றால் வேரோடு முறிந்து மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் சண்பக மரத்தைப் போலத் தனது தேரில் இருந்து கீழே வேகமாக விழுந்தான். பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவனுமான அந்த இளவரசனின் {வீரகேதுவின்} வீழ்ச்சியை அடுத்து, துரோணரை அனைத்துப் பக்கங்களிலும் பாஞ்சாலர்கள் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.
சித்திரகேது, சூதன்வான், சித்திரவர்மன், சித்திரரதன் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கொல்லப்பட்ட) தங்கள் சகோதரனின் {வீரகேதுவின்} நிமித்தமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, கோடையின் முடிவில் (பொழியும்) மேகங்களைப் போல (அவரை நோக்கி) கணைகளை ஏவியபடி, அந்தப் பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} போரிடும் விருப்பத்தால் ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர். அரச பரம்பரையைச் சேர்ந்த வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தன் சக்தி மற்றும் கோபம் அனைத்தையும், அவர்களின் அழிவுக்காக ஒன்றாகத் திரட்டினார். பிறகு துரோணர் அவர்கள் மீது கணைகளின் மாரியை ஏவினார். முற்றாக வளைந்திருந்த துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவரது கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசர்கள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, குழம்பிப் போய் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தார்கள்.
ஓ! பாரதரே, கோபக்காரத் துரோணர், அந்த இளவரசர்கள் மலைத்துப் போயிருப்பதைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டே அந்தப் போரில் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், தேர்கள் ஆகியவற்றை அவர்களை இழக்கச் செய்தார். பிறகு பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, தமது கூரிய கணைகளாலும், பல்லங்களாலும், மரத்தில் இருந்து கொய்யப்படும் மலர்களைப் போல அவர்களது தலைகளைக் கொய்தார். உயிரை இழந்த அந்த இளவரசர்கள், ஓ! பெருங்காந்தி கொண்ட மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டு விழுந்த தைத்தியர்களையும், தானவர்களையும் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் அந்த வீரமகன் {துரோணர்} போரில் அவர்களைக் கொன்ற பிறகு வெல்லப்பட முடியாததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதுமான தமது வில்லை அசைத்தார்.
பாஞ்சாலர்களில் தேவர்களுக்கே ஒப்பானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்கள் {சகோதரர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னன் சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் கண்ணீரைச் சிந்தினான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்} அம்மோதலில் துரோணரின் தேரை எதிர்த்து விரைந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாஞ்சால இளவரசனின் கணைகளால் மறைக்கப்பட்ட துரோணரைக் கண்டு அங்கே திடீரெனத் துன்பக் கதறல்கள் எழுந்தன. உயரான்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} முற்றாக மறைக்கப்பட்டாலும், துரோணர் எந்த வலியையும் உணரவில்லை. மறுபுறம் சிரித்துக் கொண்டே போரிடுவதையே அவர் தொடர்ந்தார். பிறகு சினத்தால் சீறிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நேரான கணைகள் பலவற்றால் துரோணரின் மார்பைத் தாக்கினான்.
அந்த வலிமைமிக்க வீரனால் {திருஷ்டத்யும்னனால்} ஆழத் துளைக்கப்பட்ட பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கத்தில் வீழ்ந்தார். அவரை {துரோணரை} அந்நிலையில் கண்டவனும், பெரும் ஆற்றலையும், சக்தியையும் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன் தன் வில்லை வைத்துவிட்டு, விரைவாக ஒரு வாளை எடுத்துக் கொண்டான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, கோபத்தில் கண்கள் சிவந்து, துரோணரின் தலையை அவரது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} தேரில் ஏறினான். அதேவேளையில் தன் புலனுணர்வு மீண்டு, தமது வில்லை எடுத்துக் கொண்ட வீரத் துரோணர், கொல்லும் விருப்பத்தால் தமக்கு வெகு அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கத்தில் உள்ளோரிடம் போரிடத் தகுந்தவையுமான கணைகளால் {வைதஸ்திகம் என்ற கணைகளால்} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைத் துளைக்கத் தொடங்கினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கமான போருக்குத் தகுந்தவையுமான அந்தக் கணைகளைத் துரோணர் அறிந்திருந்தார். அவற்றைக் கொண்டு திருஷ்டத்யும்னனை பலவீனமடையச் செய்வதிலும் வென்றார்.
வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுத் துரோணரின் தேரில் இருந்து கீழே விரைவாகக் குதித்தான். பிறகு தன் வேகம் கலங்கடிக்கப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரில் ஏறிக்கொண்டு மீண்டும் தன் பெரிய வில்லை எடுத்துக் கொண்டான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மீண்டும் அந்தப் போரில் துரோணரைத் துளைக்கத் தொடங்கினான். துரோணரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தமது கணைகளால் பிருஷதன் மகனைத் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைத்} துளைக்கத் தொடங்கினார்.
போர் வழிமுறைகளை அறிந்த அந்த இருவரும், தங்கள் தேர்களில் பல்வேறு அசைவுகளை வெளிக்காட்டியபடியும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்தபடியும் களத்தில் திரிந்தனர். போர்வீரர்களின் மனங்களை மலைக்கச் செய்த துரோணரும், பிருஷதன் மகனும் மழைக்காலத்தில் (மழைத்தாரைகளைப் பொழியும்) வலிமைமிக்க இரு மேகங்களைப் போலத் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். மேலும் அந்தச் சிறப்புமிக்க வீரர்கள் தங்கள் கணைகளால் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகளையும், பூமியையும் நிறைத்தனர். அனைத்து உயிரினங்களும், க்ஷத்திரியர்களும், அங்கே இருந்த பிற போராளிகள் அனைவரும், ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரை உயர்வாகப் பாராட்டினர்.
ஓ! மன்னா, பாஞ்சாலர்கள், “துரோணர் போரில் திருஷ்டத்யும்னனுடன் மோதி நமக்கு அடிபணியப் போகிறார் என்பதில் ஐயமில்லை” என்று உரக்கப் பேசினர். அப்போது துரோணர், கனிந்த கனியொன்றை மரத்தில் இருந்து கொய்யும் ஒரு மனிதனைப் போல அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் தேரோட்டியின் தலையை வேகமாகக் கொய்தார். பிறகு, ஓ! மன்னா, உயர் ஆன்ம திருஷ்டத்யும்னனின் குதிரைகள் {களத்தைவிட்டு} ஓடிச் சென்றன. அந்தக் குதிரைகள் திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டு சுமந்து சென்றதும், பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணர், அந்தப் போரில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் முறியடிக்கத் தொடங்கினார். பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் வென்றவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும், எதிரிகளைத் தண்டிப்பவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} மீண்டும் வியூகத்தின் மத்தியில் தன் நிலையையே ஏற்று நின்றார். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் போரில் அவரை {துரோணரை} வெல்லத் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.
துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 122-சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; சாத்யகிக்கும் துச்சாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கடும்போர்; திரிகர்த்தர்களைச் சாத்யகிக்கு எதிராகத் தூண்டிய துரியோதனன்; பீமசேனனின் சபதத்தை நினைவுகூர்ந்து துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத்தைப் போல ஆயிரக்கணக்கான கணைகளை இறைத்தபடி சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான். அறுபது கணைகளாலும், பிறகு பதினாறு கணைகளாலும் சாத்யகியைத் துளைத்த அவன் {துச்சாசனன்}, போரில் மைநாக மலையைப் போல அசையாமல் நின்ற அந்த வீரனை {சாத்யகியை} நடுங்கச் செய்வதில் தவறினான். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெரும் தேர்க்கூட்டங்களின் துணையுடன் சென்ற அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானவன் {துச்சாசனன்}, எண்ணற்ற கணைகளை ஏவியபடி மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்தான்.
போரிட வரும் அந்தக் கௌரவனை {துச்சாசனனைக்} கண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகி, அவனை {துச்சாசனனை} நோக்கி விரைந்து, தன் கணைகளால் அவனை மறைத்தான். துச்சாசனனுக்கு முன்னணியில் இருந்தோர் அனைவரும் இப்படி அந்தக் கணை மழையால் மறைக்கப்பட்டு உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துச்சாசனன், போரில் அச்சமற்று நீடித்தபடியே கணைகளால் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான். அந்தப் போரில் துச்சாசனன், நான்கு கணைகளால் சாத்யகியின் நான்கு குதிரைகளையும், மூன்றால் அவனது தேரோட்டியையும், ஒரு நூறு கணைகளால் சாத்யகியையும் துளைத்து முழக்கம் செய்தான்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட மாதவன் {சாத்யகி}, தன் நேரான கணைகளின் மூலமாகத் துச்சாசனனின் தேரையும், சாரதியையும், கொடிமரத்தையும், துச்சாசனனையும் விரைவாகக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தான். உண்மையில் சாத்யகி, துணிச்சல்மிக்கத் துச்சாசனனை கணைகளாலேயே மறைத்துவிட்டான். ஒரு சிலந்தியானது தன் இழைகளின் மூலம் ஒரு கொசுவைத், தான் அடையும் தொலைவிற்குள் சிக்கச் செய்வதைப் போலவே அந்த எதிரிகளை வெல்பவனும் {சாத்யகியும்} தன் கணைகளால் துச்சாசனனை வேகமாக மறைத்தான்.
அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்ட துச்சாசனனைக் கண்டு, யுயுதானனின் {சாத்யகியின்} தேரை நோக்கித் திரிகர்த்தர்களின் படை ஒன்றைத் தூண்டினான். கடுஞ்செயல் புரிபவர்களும், போரில் சாதித்தவர்களும், எண்ணிக்கையில் மூவாயிரமாக இருந்தவர்களுமான அந்தத் திரிகர்த்த தேர்வீரர்கள் யுயுதானனை நோக்கிச் சென்றனர். போரிட உறுதியாகத் தீர்மானித்தவர்களும், புறமுதுகிடுவதில்லை என்று உறுதியேற்றவர்களுமான அவர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களுடன் யுயுதானனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், யுயுதானன், தன்னை நோக்கிப் போரிட வந்த அந்தப் படையின் முன்னணியில் இருந்தவர்களும், தன் மீது கணைமாரிகளை ஏவியவர்களுமான ஐநூறு முதன்மையான வீரர்களைத் தாக்கி வீழ்த்தினான். சிநிக்களில் முதன்மையானவனின் {சாத்யகியின்} கணைகளால் விரைவாகக் கொல்லப்பட்ட அவர்கள் {திரிகர்த்தர்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டு மலையுச்சியில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.
ஓ! ஏகாதிபதி, சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகளாலும், வீழ்ந்த கொடிமரங்களாலும், கிழிக்கப்பட்டு, குதறப்பட்டு, குருதியில் புரண்டு கொண்டிருந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளாலும் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகங்களால் {பலாச மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு சமவெளியைப் போல அழகாகத் தெரிந்தது. இப்படி யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், சேற்றில் {புதைகுழியில்} மூழ்கும் யானைகளைப் போல ஒரு பாதுகாவலனை அறியத் தவறின. பிறகு அவர்களில் அனைவரும், பறவைகளின் இளவரசன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் பொந்துகளை நோக்கித் திரும்பும் பெரும்பாம்புகளைப் போலத் துரோணரின் தேர் இருந்த இடத்தை நோக்கித் திரும்பினர். கடும் விஷமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் அந்த ஐநூறு {500} துணிச்சல்மிக்க வீரர்களைக் கொன்ற பிறகு, அந்த வீரன் {சாத்யகி}, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தை நோக்கி மெதுவாகச் சென்றான்.
அந்த மனிதர்களில் முதன்மையானவன் {சாத்யகி} இப்படிச் சென்ற போது, உமது மகன் துச்சாசனன் ஒன்பது நேரான கணைகளால் அவனை {சாத்யகியை} வேகமாகத் துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்க வில்லாளி (யுயுதானன்) கழுகின் இறகையும், தங்கச் சிறகுகளையும், கொண்ட ஐந்து நேரான கூரிய கணைகளால் துச்சாசனனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் சிரித்துக் கொண்டே மூன்று கணைகளாலும், மீண்டும் ஐந்து கணைகளாலும் சாத்யகியைத் துளைத்தான். ஐந்து கணைகளால் உமது மகனைத் {துச்சாசனனைத்} தாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அவனது வில்லையும் வெட்டிவிட்டு அர்ஜுனனை நோக்கிச் சிரித்துக் கொண்டே சென்றான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், அப்படிச் சென்று கொண்டிருந்த அந்த விருஷ்ணி வீரனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான ஓர் ஈட்டியை அவன் மீது வீசினான். எனினும் சாத்யகி, கங்க இறகுகளைக் கொண்ட தன் கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்} அந்தக் கடும் ஈட்டியை வெட்டினான்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பிறகு மற்றொரு வில்லை எடுத்த உமது மகன் {துச்சாசனன்}, சில கணைகளால் சாத்யகியைத் துளைத்து விட்டு உரத்த முழக்கம் செய்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் உமது மகனை மலைக்கச்செய்து, நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான சில கணைகளால் அவனது {துச்சாசனனின்} நடு மார்பைத் துளைத்தான். மேலும் முழுக்க இரும்பாலானவையும், கூர்முனை கொண்டவையுமான எட்டு கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான். எனினும் துச்சாசனன், பதிலுக்கு இருபது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.
அப்போது, உயர்ந்த அருளைக் கொண்ட சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூன்று நேரான கணைகளால் துச்சானனின் நடுமார்பை {மீண்டும்} துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் சில நேரான கணைகளால் துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான்; கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சாத்யகி} மேலும் சில நேரான கணைகால் பின்னவனின் {துச்சாசனனின்} தேரோட்டியையும் கொன்றான். பிறகு அவன் {சாத்யகி} ஒரு பல்லத்தைக் கொண்டு உமது மகனின் வில்லை வெட்டி, ஐந்து கணைகளைக் கொண்டு தோலாலான அவனது {துச்சாசனனின்} கையுறைகளையும் அறுத்தான். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான சாத்யகி, இரு பல்லங்களைக் கொண்டு துச்சாசனனின் கொடிமரத்தையும், அவனது தேரில் உள்ள மரத்தாலான சுழல்தண்டுகளையும் {ரதசக்திகளையும்} வெட்டினான். பிறகு அவன் எண்ணற்ற கூரிய கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்}பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான்.
அப்போது, வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதிகளற்று இருந்த பின்னவன் {துச்சாசனன்}, திரிகர்த்தப் போர்வீரர்களின் தலைவனால் அவனது தேரில் ஏற்றிக் கொள்ளப்பட்டான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒருக்கணம் அவனைப் {துச்சாசனனைப்} பின்தொடர்ந்து சென்று, பின்னர்ப் பீமசேனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவனைக் {துச்சாசனனைக்} கொல்லாமல் நின்றான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் உமது மகன்கள் அனைவரையும் அழிப்பதாகச் சபைக்கு மத்தியில் பீமசேனன் உறுதியேற்றிருந்தான். பிறகு, ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இப்படித் துச்சாசனனை வென்ற சாத்யகி, ஓ! மன்னா, தனக்கு முன்பே தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற பாதையின் வழியே விரைவாகச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.
துரியோதனனின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 123-கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்த பாண்டவ வீரர்கள்; பாண்டவப் படைக்குள் ஊடுருவி, அப்படையைக் கலங்கடித்த துரியோதனன்; துரியோதனனின் வில்லை அறுத்த யுதிஷ்டிரன்; பாஞ்சாலர்களுடன் மோதிய துரோணர்; அர்ஜுனன் இருந்த இடத்தில் எழுந்த ஆரவாரம்..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா? கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா? ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே! ஓ! சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், “இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்” என்றனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், “வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், “சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக” என்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.
அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.
துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ! சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.
துரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.பிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், “நில், நிற்பாயாக” என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூறாவளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது” {என்றான் சஞ்சயன்}.
துரோணரின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 124-துரோணரைத் தாக்கிய கேகய இளவரசன் பிருஹத்க்ஷத்திரன் கொல்லப்பட்டது; துரோணரை எதிர்த்துத் தாக்கிய சிசுபாலன் மகனான திருஷ்டகேதுவும், திருஷ்டத்யும்னன் மகனான க்ஷத்திரதர்மனும் கொல்லப்பட்டது; தேரோட்டியை இழந்த சேகிதானன் குதிரைகளால் களத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது; துரோணரின் வயது மற்றும் நிறம் பற்றிய குறிப்பு; துரியோதனனை நிந்தித்த துருபதன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நாளின் பிற்பகலில் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் வகைப்படுத்தபட்ட ஒரு பயங்கரப்போரானது துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மீண்டும் நடந்தது. மனிதர்களில் முதன்மையான துரோணர், சிவப்புக் குதிரைகளுடன் கூடிய தமது தேரில் ஏறிப் போரிடும் நோக்கோடு பாண்டவர்களை எதிர்த்து மிதமான வேகத்தில் விரைந்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமையும், பலமும் கொண்டவரும், சிறப்புமிக்கக் குடம் ஒன்றில் பிறந்த வீரரும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடுபவருமான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அழகிய சிறகுகளைக் கொண்ட தமது கூரிய கணைகளால், முதன்மையான தேர்வீரர்கள் பலரைத் தாக்கி வீழ்த்தியபடி அந்தப் போரில் விளையாடுவதாகவே தெரிந்தது.
அப்போது, கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், ஐந்து சகோதரர்களில் மூத்தவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான பிருஹத்க்ஷத்திரன் அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். கூரிய கணைகள் பலவற்றை ஏவிய அவன் {பிருஹத்க்ஷத்திரன்}, கந்தமாதன மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத் திரள்களைப் போல ஆசானை {துரோணரைப்} பெரிதும் பீடித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதினைந்து கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். எனினும், அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போன்றவையும், துரோணரால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் தன் ஐந்து கணைகளால் மகிழ்ச்சியாக வெட்டினான். அவனால் {பிருஹத்க்ஷத்திரனால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, எட்டு நேரான கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட பிருஹத்க்ஷத்திரன், அந்தப் போரில் தன் கூரிய கணைகள் பலவற்றால் அவற்றைத் தடுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரனால் மிகக் கடினமான காரியம் அடையப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள் ஆச்சரியத்தில் நிறைந்தன.
அப்போது பிருஹத்க்ஷத்திரனை மெச்சிய துரோணர், அந்தப் போரில், தடுக்கப்பட முடியாத, பிரம்மம் என்று அழைக்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்} போரில் துரோணரால் பிரம்மாயுதம் ஏவப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, அதைத் தன் பிரம்மாயுதத்தால் கலங்கடித்தான். இப்படி அவ்வாயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} துளைத்தான். அப்போது, மனிதர்களில் முதன்மையானவரான துரோணர், பலமிக்கக் கணையொன்றால் கேகயர்களின் இளவரசனை துளைத்ததில், அது பின்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} கவசத்தை ஊடுருவி (அவனது உடலைக்கடந்து) பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கருநாகமொன்று எறும்புப் புற்றைத் துளைத்துச் செல்வதைப் போலவே, அந்தக் கணை கேகய இளவரசனின் உடலைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, சினத்தால் நிறைந்து, தன் அழகிய கண்களை உருட்டியபடி, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் துரோணரைத் துளைத்தான். மற்றொரு கணையால் துரோணரின் தேரோட்டியுடைய முக்கியப் பகுதிகளைப் பெரிதும் பீடித்தான். ஓ! ஐயா, பிருஹத்க்ஷத்திரனின் கணைகளால் துளைக்கப்பட்ட துரோணர், கேகயர்களின் இளவரசனுடைய தேரின் மீது கூரிய கணைகளின் மழையைப் பொழிந்தார். வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்திரனை நிதானத்தை இழக்கச் செய்த துரோணர், பிறகு சிறகுகள் படைத்த நான்கு கணைகளால் முன்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} நான்கு குதிரைகளைக் கொன்றார். மற்றொரு கணையால் அவர், பிருஹத்க்ஷத்திரனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச் செய்தார். மேலும் இரு கணைகளால் தம் எதிரியின் கொடிமரம், குடை ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்திய அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தமது வில்லில் இருந்து நன்கு ஏவப்பட்ட மூன்றாவது கணையொன்றால் பிருஹத்க்ஷத்திரனையும் மார்பில் துளைத்தார். அதன்பேரில், இப்படி மார்பில் தாக்கப்பட்ட பின்னவன் {பிருஹத்க்ஷத்திரன்} தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.
பிருஹத்க்ஷத்திரனின் படுகொலையின் பேரில் சினத்தால் நிறைந்த கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம், “ஓ! தேரோட்டியே, கவசம் தரித்தவரும், கைகேய மற்றும் பாஞ்சாலப் படைகளைக் கொல்வதில் ஈடுபடுபவருமான துரோணர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்றான். அவனது {திருஷ்டகேதுவின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேரோட்டி, விரைவில் அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனைக் காம்போஜ இனத்தைச் சேர்ந்த வேகமான குதிரைகளில் துரோணரிடம் அழைத்துச் சென்றான். அப்போது சேதிகளில் காளையான அந்தத் திருஷ்டகேது, வலிமையில் பெருகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சியைப் போலவே தன் அழிவுக்காகத் துரோணரை நோக்கி விரைந்தான். விரைவில் அவன் துரோணரையும், அவரது குதிரைகளையும், தேரையும், கொடிமரத்தையும் அறுபது கணைகளால் துளைத்தான். உறங்கும் புலியை எழுப்பும் ஒருவனைப் போல மீண்டும் அவன் {திருஷ்டகேது}, பிற கூரிய கணைகள் பலவற்றால் அவரை மீண்டும் தாக்கினான். பிறகு துரோணர், கழுகின் இறகுகளைக் கொண்ட கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்த அந்தப் போர்வீரனின் {திருஷ்டகேதுவின்} வில்லை நடுவில் அறுத்தார். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான அந்தச் சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் நான்கு கணைகளால் திருஷ்டகேதுவின் நான்கு குதிரைகளைக் கொன்று, சிரித்துக் கொண்டே பின்னவனின் {திருஷ்டகேதுவின்} தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார். பிறகும் அவர் இருபத்தைந்து கணைகளால் திருஷ்டகேதுவையும் துளைத்தார்.
அப்போது, அந்தச் சேதிகளின் இளவரசன் {திருஷ்டகேது}, விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கோபக்காரப் பாம்பைப் போல அதைப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது வீசினான். இரும்பின் பலத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கனமான கதாயுதம், மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, பல்லாயிரம் கூரிய கணைகளால் அதை வெட்டினார். பல கணைகளைக் கொண்டு பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், ஓ! ஐயா, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, தன்னொலியால் பூமியில் எதிரொலித்தபடி கீழே விழுந்தது. தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், துணிச்சல்காரனுமான திருஷ்டகேது ஒரு வேலையும் {வேல்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியையும் ஏவினான். அந்த வேலை ஐந்து கணைகளால் வெட்டிய துரோணர், மேலும் ஐந்து கணைகளால் அந்த ஈட்டியையும் வெட்டினார். அந்த ஏவுகணைகள் இரண்டும் இப்படி வெட்டப்பட்டு, கருடனால் கிழித்துச் சிதைக்கப்பட்ட இரு பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.
அப்போது பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, அந்தப் போரில், பரத்வாஜரின் அழிவுக்காகவே போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டகேதுவை அழிப்பதற்காக அவன் மேல் கூரிய கணை ஒன்றை ஏவினார். அந்தக் கணையானது, அளவிலா சக்தி கொண்ட திருஷ்டகேதுவின் கவசத்தையும், மார்பையும் துளைத்துக் கடந்து, தாமரைகள் நிறைந்த தடாகத்தில் பாயும் ஓர் அன்னத்தைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. பசியுடன் கூடிய காடையானது சிறு பூச்சி ஒன்றை விழுங்குவதைப் போலவே வீரத் துரோணரும் அந்தப் போரில் திருஷ்டகேதுவை விழுங்கினார் {கொன்றார்}. சேதிகளின் ஆட்சியாளனுடைய {திருஷ்டகேதுவின்} கொலையை அடுத்து, உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அவனது மகன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தந்தையின் சுமையைச் சுமக்க முனைந்தான். துரோணர் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கப் பெரிய புலியொன்று ஆழ்ந்த கானகத்தில் ஒரு மான்குட்டியைக் கொல்வதைப் போலத் தன் கணைகளால் அவனையும் யமலோகம் அனுப்பி வைத்தார்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பாண்டவர்கள் {அளவில்} குறைக்கப்பட்டபோது, ஜராசந்தனின் வீர மகன் {சகாதேவன்} துரோணரை நோக்கி விரைந்தான். சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல அவன் தன் கணைகளின் மாரியால் விரைவாக வலிமைமிக்கத் துரோணரை கண்ணுக்குப் புலப்படமுடியாதவராகச் செய்தான். அவனது கரநளினத்தைக் கண்டவரும், க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவருமான துரோணர், தம் கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினார். அந்தப் போரில் தனது தேரில் நின்றிருந்த, அந்த முதன்மையான தேர்வீரனை {ஜராசந்தன் மகனான சகாதேவனை} (தமது கணைகளால்) மறைத்த அந்தத் துரோணர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜராசந்தன் மகனை {சகாதேவனை} விரைவாகக் கொன்றார். உண்மையில், யமனுக்கு ஒப்பான அந்தத் துரோணர், உயிரினங்களுக்கு நேரம் நேர்கையில் அவற்றை விழுங்கும் அந்தகனைப் போலவே தன்னை அணுகிய அனைவரையும் விழுங்கினார் {கொன்றார்}.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், பல்லாயிரம் கணைகளால் பாண்டவர்களை மறைத்தார். துரோணரால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவரையும், அவரது பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், போரில் நூற்றுக்கணக்கான மனிதர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றன. சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட அசுரர்களைப் போலத் துரோணரால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், குளிரால் பீடிக்கப்பட்ட பசுமந்தையைப் போல நடுங்கத் தொடங்கின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படை இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட போது, மிகப் பரிதாபகரமான துயர ஓலம் அங்கிருந்து எழுந்தது. சூரியனால் சுட்டெரிக்கப்பட்டும், அந்தக் கணைகளால் கொல்லப்பட்டும் பாஞ்சாலர்கள் கவலையில் நிறைந்தனர். அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைமழையால் மலைத்துப்போன பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், முதலைகளால் தொடை கவ்வப்பட்டவர்களைப் போலவே தங்களை உணர்ந்தனர்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சேதிகள், சிருஞ்சயர்கள், காசிகள், கோசலர்கள் ஆகியோர் போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை எதிர்த்து மகிழ்ச்சியாக விரைந்தனர். சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “துரோணர் கொல்லப்படுகிறார், துரோணர் கொல்லப்படுகிறார்” என்றனர். இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே அவர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கத் துரோணரை யமனுலகுக்கு அனுப்ப விரும்பிய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் தங்கள் உச்சபட்ச வலிமையை அவர் {துரோணரின்} மேல் செலுத்தினர். அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, போரில் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க வீரர்களை, அதிலும் குறிப்பாகச் சேதிகளில் முதன்மையானோரைத் தமது கணைகளால் இறந்தோருடைய மன்னனின் {யமனின்} முன்னிலைக்கு அனுப்பினார்.
சேதிகளில் முதன்மையானோர் அழிக்கப்பட்ட பிறகு, துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள் நடுங்கத் தொடங்கினர். துரோணரின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனையும், திருஷ்டத்யும்னனையும் உரக்க அழைத்து, “இந்தப் பிராமணர் {துரோணர்} கடுமையான தவங்களைப் பயின்று, பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. போரில் சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கிறார். ஒரு க்ஷத்திரியனின் கடமை போராகும்; ஒரு பிராமணருக்கு {அந்தக் கடமையானது} உயர்ந்த தவமாகும். தவத்தகுதியும், கல்வியும் கொண்ட ஒரு பிராமணர், தன் பார்வையாலேயே அனைத்தையும் எரிக்கும் வல்லமை பெற்றவராவார். க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடக்க முடியாதவையும், கடுமையான நெருப்பைப் போன்றவையுமான துரோணரின் ஆயுதங்களை அடைந்து வெடித்து எரிகின்றனர். சிறப்புமிக்கத் துரோணர், தமதளவிலான வலிமை, துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் அனைத்து உயிரினங்களையும் மலைக்கச் செய்து, நமது துருப்புகளைக் கொன்று வருகிறார்” என்றனர் {பாஞ்சால வீரர்கள்}.
அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை முறையாகப் பின்பற்றுபவனுமான வலிமைமிக்க க்ஷத்திரதர்மன், அம்பு பொருத்தப்பட்ட துரோணரின் வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், மேலும் கோபமடைந்து, தாம் எறிந்த {முறிந்த} வில்லை விடக் கடினமானதும், பிரகாசமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். பகைவரின் படையணிகளை அழிக்கும் கூர்முனைக் கணையொன்றை அதில் பொருத்திய ஆசான் {துரோணர்}, பெரும்பலத்துடன் தமது வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அந்த இளவரசனின் மீது ஏவினார். அந்தக் கணையானது க்ஷத்திரதர்மனைக் கொன்றுவிட்டு பூமிக்குள் நுழைந்தது. மார்பு பிளக்கப்பட்ட அவன் {க்ஷத்திரதர்மன்} தனது வாகனத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திருஷ்டத்யும்னனுடைய மகனின் கொலையை அடுத்து (பாண்டவத்) துருப்புகள் நடுங்கத் தொடங்கின.
அப்போது வலிமைமிக்கச் சேகிதானன் துரோணரின் மீது பாய்ந்தான். பத்து கணைகளால் துரோணரைத் துளைத்த அவன், மேலும் ஒரு கணையால் அவரது நடுமார்பைத் துளைத்தான். மேலும் அவன் {சேகிதானன்} நான்கு கணைகளால் துரோணரின் தேரோட்டியையும், மேலும் நான்கால் அவரது நான்கு குதிரைகளையும் துளைத்தான். பிறகு ஆசான் {துரோணர்} பதினாறு கணைகளால் சேகிதானனின் வலக்கரத்தைத் துளைத்து, பதினாறால் அவனது கொடிமரத்தையும், ஏழால் அவனது தேரோட்டியையும் துளைத்தார். தேரோட்டி கொல்லப்பட்டதும், சேகிதானனின் குதிரைகள் அந்தத் தேரைத் தங்களுக்கும் பின்னால் இழுத்துக் கொண்டு தப்பி ஓடின. சேகிதானனின் குதிரைகள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் துளைக்கப்பட்டதையும், சாரதியை இழந்த அவனது தேரையும் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர். பிறகு துரோணர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் ஒன்றுசேர்ந்திருந்த பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் முறியடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.
முழுதாக எண்பத்தைந்து வயதும், கரிய நிற மேனியும், காது வரை தொங்கிய வெண்மயிரும் கொண்டவரான மதிப்புக்குரிய துரோணர், தன் தேரில் ஏறி பதினாறு வயது இளைஞனைப் போலப் போரில் திரிந்து கொண்டிருந்தார் [1]. உண்மையில் எதிரிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அச்சமற்று திரிந்து எதிரியைக் கொல்லும் துரோணரை, வஜ்ரதாரியான இந்திரனேயன்றி வேறு யாருமில்லை என்றே கருதினர். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான துருபதன், “பசியுடன் கூடிய புலியொன்று சிறு விலங்குகளைக் கொல்வதைப் போல இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களைக் கொன்றுவருகிறார். பாவியும், தீய ஆன்மா கொண்டவனுமான துரியோதனன், (தனது அடுத்த உலகாக) மிக மோசமான உலகங்களையே அடைவான் என்பது உறுதியானதாகும். அவனது பேராசையின் காரணமாகவே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், போரில் கொல்லப்பட்டுக் குருதியில் புரண்டு, நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகிச் சிதைந்த காளைகளைப் போலக் களத்தில் கிடக்கின்றனர்” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனுமான துருபதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களைத் தனக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, துரோணரை நோக்கி வேகமாக விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.
“நான் உன் அண்ணன்!” என்ற யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 125-போரின் நிலை கண்டு கலங்கிய யுதிஷ்டிரன் சிந்திக்கத் தொடங்கியது; அர்ஜுனனையும், சாத்யகியையும் காணாமல் கவலையடைந்த யுதிஷ்டிரன் பீமனின் பெருமைகளை நினைத்துப் பார்த்தது; யுதிஷ்டிரனைக் கண்டு கலங்கிய பீமன்; அர்ஜுனனையும், சாத்யகியையும் தேடிச் செல்லுமாறு பீமனைப் பணித்த யுதிஷ்டிரன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவர்களின் படை இப்படி அனைத்துப் பக்கங்களிலும் கலங்கடிக்கப்பட்ட போது, பார்த்தர்களும், பாஞ்சாலர்களும் வெகு தொலைவுக்குத் திரும்பி ஓடினர். மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், யுக முடிவில் ஏற்படுவதைப் போல உலகளாவிய பேரழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உண்மையில் துரோணர் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கங்களிட்ட போது, பாஞ்சாலர்கள் பலவீனப்படுத்தப்பட்டுப் பாண்டவர்கள் கொல்லப்பட்ட போது, அந்தப் போரில் ஏற்படும் துயருக்கு எந்தப் புகலிடத்தையும் காணத்தவறிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காரியம் எப்படி முடியப்போகிறது எனச் சிந்திக்கத் தொடங்கினான்.
சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} காண எதிர்பார்த்துச் சுற்றிலும் கண்களைச் செலுத்தினாலும், யுதிஷ்டிரன், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனையோ {அர்ஜுனனையோ}, மாதவனையோ {சாத்யகியையோ} காணவில்லை. மனிதர்களில் புலியும், குரங்குக் கொடியோனுமான அந்த அர்ஜுனனைக் காணாமல், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காமல் அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} கவலையில் நிறைந்தான். மேலும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியையும் காணாமல், மன்னன் யுதிஷ்டிரன் அதே போன்ற கவலையையே அடைந்தான். உண்மையில், மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் காணாத யுதிஷ்டிரன் அமைதி எதையும் அடையவில்லை. உயர் ஆன்மாவும், வலிமைமிமிக்கக் கரங்களையும் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், உலகின் தீச்சொல்லிற்கு அஞ்சி சாத்யகியின் தேரை நினைக்கத் தொடங்கினான்.
‘உண்மையான ஆற்றலைக் கொண்டவனும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், சிநியின் பேரனுமான சாத்யகி, என்னால் அர்ஜுனனின் பாதையில் {அவனைப் பின்தொடர்ந்து} அனுப்பப்பட்டான். முன்பு எனக்கு ஒரு கவலையே இருந்தது, இப்போது இரண்டைக் கொண்டிருக்கிறேன். சாத்யகி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரைக் குறித்த செய்திகளையும் நான் பெற வேண்டும். அர்ஜுனனின் பாதையில் பின்தொடர்ந்து செல்ல சாத்யகியை அனுப்பிய பிறகு, இப்போது சாத்யகியின் பாதையில் யாரை அனுப்புவேன்? நான் யுயுதானனை {சாத்யகியைக்} குறித்து விசாரிக்காமல் {தேடாமல்}, என் தம்பி {அர்ஜுனன்} குறித்து மட்டுமே அனைத்து வழிகளிலும் அறிய முயன்றால் {தேடினால்} உலகத்தோர் என்னை நிந்திப்பர்.
அவர்கள், “தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தம்பியை {அர்ஜுனனை மட்டும்} விசாரித்தான், தவறாத ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்து வீரனுமான சாத்யகியை விதியின் வசத்தில் விட்டுவிட்டான்” என்பார்கள். எனவே, உலக்கத்தோர் நிந்தனைக்கு அஞ்சும் நான், பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரனை {பீமனை} உயர் ஆன்ம சாத்யகியின் பாதையில் அனுப்ப வேண்டும். சாத்வத குலத்தின் வெல்லப்படாத விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} மேல் நான் கொண்ட அன்பு, எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் மேல் கொண்ட என் அன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. மேலும் சிநிக்களை மகிழ்விப்பவனான அவன், பெரும் பணியில் என்னால் ஈடுபடுத்தப்பட்டான். எனினும் அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, ஒரு நண்பனின் வேண்டுகோளுக்காகவோ, கௌரவத்திற்காகவோ பெருங்கடலுக்குள் புகும் ஒரு மகரத்தைப் போலப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். பெரும் நுண்ணறிவு கொண்ட அந்த விருஷ்ணி வீரனை எதிர்த்து ஒன்றுகூடிப் போரிடும் பின்வாங்காத வீரர்களின் ஒலி பெரிதாக இருப்பதை நான் கேட்கிறேன். அவனுக்கு அவர்கள் அதிகமானவர்களே என்பதில் ஐயமில்லை. எனவே, அவனைக் காக்க நான் நினைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
வலிமைமிக்கவர்களான அவ்விரு தேர் வீரர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கே வில்தரித்தவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன் செல்ல வேண்டும் என்றே எனக்குத் தெரிகிறது. பீமனால் தாங்கிக் கொள்ள முடியாதது என இவ்வுலகில் ஏதும் இல்லை. தீர்மானத்துடன் அவன் {பீமன்} போராடினால், உலகில் உள்ள வில்லாளிகள் அனைவருக்கும் போரில் அவன் இணையானவனாவான். தன் கரத்தின் பலத்தை நம்பியே அவனால் {பீமனால்} அனைத்து எதிரிகளையும் எதிர்த்து நிற்க முடியும். அந்த உயர்ஆன்ம போர்வீரனுடைய {பீமனுடைய} கரங்களின் பலத்தைக் கொண்டே நாம் வனவாசத்தில் இருந்து மீண்டு வந்தோம். போரில் நாம் எப்போதும் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறோம். எனவே, பாண்டுவின் மகனான பீமசேனன் சாத்யகியிடம் சென்றால், சாத்யகி மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உண்மையான உதவியைப் பெறுவார்கள். சாத்யகி மற்றும் பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நான் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை என்பதிலும் ஐயமில்லை. அவ்விருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாவர், மேலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} அவர்களைப் பாதுகாக்கிறான். (இவ்வளவு இருந்தும், அவர்கள் குறித்து நான் கவலையையடைகிறேன்). நிச்சயம் நான் என் கவலையை விலக்க முயலவேண்டும். எனவே, சாத்யகியைப் பின்தொடர்ந்து செல்லும்படி பீமனை நான் அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகே, சாத்யகியைக் காக்கும் என் ஏற்பாடுகள் முழுமையடைந்ததாக என்னால் கருத முடியும்” என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.
மனதில் இதைத் தீர்மானித்துக் கொண்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தேரோட்டியிடம், “பீமனிடம் என்னை அழைத்துச் செல்வாயாக” என்றான். குதிரைகளின் தன்மைகள் நன்கறிந்தவனான அந்தத் தேரோட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணையைக் கேட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரை பீமன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றான். பீமனின் முன்னிலையை அடைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அத்தருணத்தை நினைத்து துயரால் நிலையழிந்து, பல்வேறு கோரிக்கைகளால் பீமனை நெருக்கினான். உண்மையில், துயரில் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} பீமனிடம் பேசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளையே அவனிடம் {பீமனிடம் சொன்னான்}, “ஓ! பீமா, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரையும் எதிர்த்து ஒரே தேரில் சென்று வென்ற அர்ஜுனனின் கொடிமரத்தை நான் காணவில்லை” என்றான்.
அப்போது பீமசேனன், இத்தகு பரிதாப நிலையில் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், “இப்படி உற்சாகமற்றதன்மையால் பீடிக்கப்பட்ட உமது வார்த்தைகளை இதற்கு முன்னர் எப்போதுமே நான் கேட்டதோ, கண்டதோ இல்லை. உண்மையில், முன்னர் நாம் துயரால் பீடிக்கப்பட்ட போது, நீரே எங்களுக்கு ஆறுதலளித்தீர். எழுவீர், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, எழுவீராக, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? ஓ! கௌரவங்களை அளிப்பவரே, என்னால் செய்ய முடியாததென ஏதுமில்லை. ஓ! குருகுலத்தின் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உமது ஆணைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வீராக. உமது இதயத்தைத் துயரில் நிலைக்கச் செய்யாதீர்” என்றான்.
கவலை நிறைந்த முகத்துடனும், கண்ணீரில் குளித்த கண்களுடனும் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்}, கருநாகமொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே பீமசேனனிடம், “உலகம் பரந்த புகழைக் கொண்ட வாசுதேவனால் கோபத்துடன் முழக்கப்படும் சங்கான பாஞ்சஜன்யத்தின் வெடிப்பொலிகள் கேட்கப்படுகின்றன. இதன் மூலம், உன் தம்பியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, களத்தில் உயிரையிழந்து கிடக்கிறான் என்றே தெரிகிறது. அர்ஜுனன் கொல்லப்பட்டதும் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. எவனுடைய ஆற்றலால் பாண்டவர்கள் உயிரோடிருக்கிறார்களோ, தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனை {இந்திரனை} நோக்கித் திரும்புவதைப் போல, நமக்கு அச்சம் நேரும் காலங்களிலெல்லாம் நாம் எவனை நோக்கித் திரும்புவோமோ அந்தப் பெரும் வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தேடி பாரதப் படைக்குள் ஊடுருவினான்.
அவன் {அர்ஜுனன்} சென்றான் என்பதை நான் அறிவேன், ஓ! பீமா, ஆனால் அவன் {அர்ஜுனன்} இன்னும் திரும்பவில்லை. நிறத்தால் கறுமையும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்டவனும், வலிமைமிக்க மிக அழகிய தேர்வீரனும், அகன்ற மார்பு, நீண்ட கரங்கள், மதயானைக்கு ஒப்பான நடை ஆகியவற்றைக் கொண்டவனும், சக்கரத்தைப் போன்றவையும், புடம்போட்ட தாமிரத்தின் நிறத்தாலானவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த உன் தம்பி {அர்ஜுனன்} எதிரிகளின் அச்சங்களை அதிகரித்தான். நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இதுவே என் துயரின் காரணம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அர்ஜுனனுக்காகவும், சாத்வதனுக்காகவும், தெளிந்த நெய் காணிக்கையால் ஊட்டப்படும் சுடர்மிக்க நெருப்பைப் போல என் துன்பம் அதிகரிக்கிறது. நான் அவனது {அர்ஜுனனது} கொடிமரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் கவலையால் மலைத்துப் போகிறேன். அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும், போரில் திறன்மிக்கக் கிருஷ்ணன் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மனிதர்களில் புலியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்வதனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும் ஐயமில்லை. ஐயோ, சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான உன் தம்பியைப் பின்தொடர்ந்தே சென்றான். சாத்யகியைக் காணாமலும் துயரால் நான் மலைத்துப் போகிறேன்.
எனவே, ஓ! குந்தியின் மகனே {பீமா}, உண்மையில், என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது உன் கடமை என நீ நினைத்தால், வலிமையும், சக்தியும் கொண்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, சாத்யகியும் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக. நான் உன் அண்ணன் என்பதை நினைவில் கொள்வாயாக. அர்ஜுனனை விடச் சாத்யகியே உனக்கு அன்புக்குரியவன் என நீ நினைப்பாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, சாத்யகி எனக்கு நன்மை செய்ய விரும்பி இழிந்தோரால் நடக்க முடியாத அர்ஜுனனின் பாதையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். இரு கிருஷ்ணர்களையும் {அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இரு கருப்பர்களையும்} சாத்வத குலத்தின் சாத்யகியையும் நலமாகவும், முழுமையாகவும் கண்டதும், ஓ! பாண்டுவின் மகனே {பீமா} சிங்க முழக்கம் எழுப்பிச் செய்தியை எனக்கு அனுப்புவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
தம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 126-யுதிஷ்டிரனின் பாதுகாப்பை திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்த பீமன்; வெற்றிக் குறிக்கும் சகுனங்களைக் கண்ட பீமன்; துரோணரை அடைந்த பீமன் அவரை அவமதித்த பீமன்; பீமனை எதிர்த்த கௌரவச் சகோதரர்கள்; துரியோதனன் தம்பிகளில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்; துரோணரின் படைப்பிரிவை மீண்டும் அடைந்த பீமன்…
பீமன் {யுதிஷ்டிரனிடம்}, “முன்னர் எந்தத் தேர் பிரம்மன், ஈசானன், இந்திரன், வருணன் ஆகியோரை (போருக்குத்) தாங்கிச்சென்றதோ, அதே தேரில் ஏறியே இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களான, அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன்} சென்றிருக்கின்றனர். {எனவே} அவர்களுக்கு எந்த ஆபத்திலும் அச்சமேற்படாது. எனினும், உமது ஆணையை என் சிரம் மேல் கொண்டு இதோ நான் செல்கிறேன். வருந்தாதீர். அந்த மனிதர்களில் புலிகளைச் சந்தித்ததும், உமக்குத் தகவலை அனுப்புகிறேன்” என்றான் {பீமன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கப் பீமன், திருஷ்டத்யும்னனிடமும், (பாண்டவக் காரியத்திற்காகப் போராடும்) இன்னும் பிற நண்பர்களிடமும் மீண்டும் மீண்டும் {சொல்லி} யுதிஷ்டிரனை {யுதிஷ்டிரனின் பாதுகாப்பை} ஒப்படைத்துவிட்டுப் புறப்படத் தொடங்கினான். உண்மையில், வலிமையும் பலமும் கொண்ட அந்தப் பீமசேனன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, மன்னரைக் {யுதிஷ்டிரரைக்} காக்கும் என் கடமைக்கு மேலாக (அர்ஜுனன் மற்றும் சாத்யகியிடம்) நான் செல்லவே கூடாது. எனினும், மன்னர் யுதிஷ்டிரரே என்னைப் போகுமாறு உத்தரவிட்டிருக்கிறார், {எனவே} நான் அவருடன் {யுதிஷ்டிரருடன்} முரண்படத் துணிய மாட்டேன். மரணத்தின் விளிம்பில் உள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன். முழுமையான வாய்மையுடன் {மனநேர்மையுடன்} [1] என் தம்பி (அர்ஜுனன்) மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட சாத்யகி ஆகியோரின் வார்த்தைகளின் படியே நான் செயல்பட வேண்டும். எனவே, இன்று நீ பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரரைப் பாதுகாக்க கடுந்தீர்மானத்துடன் போரிட வேண்டும். அனைத்துப் பணிகளை விடவும் போரில் இதுவே உனது உயர்ந்த கடமையாகும்” என்றான் {பீமன்}ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருகோதரனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன், “உமது விருப்பத்தை நான் செய்வேன். ஓ! பிருதையின் மகனே {பீமரே}, எவ்வகையிலான கவலையுமில்லாமல் செல்வீராக. போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல், துரோணரால் மன்னர் யுதிஷ்டிரரைப் போரில் அவமதிக்க {கீழ்ப்படுத்த} முடியாது” என்றான்.
இப்படியே பாண்டுவின் அரச மகனை {யுதிஷ்டிரனை} திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அண்ணனை வணங்கிய பீமசேனன், பல்குனன் {அர்ஜுனன்} எங்கிருந்தானோ அவ்விடத்தை நோக்கிச் சென்றான். எனினும், அவனை {பீமனை} அனுப்புவதற்கு முன்னர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனனைக் கட்டித்தழுவி, அவனது உச்சியை முகர்ந்து, அவனுக்கு நல்லாசிகளை வழங்கினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, பிராமணர்கள் பலரை வலம் வந்து, வழிபாட்டாலும், தானங்களாலும் {பிராமணர்களை} மனநிறைவு செய்து, எட்டு மங்கலப் பொருட்களைத் [2] தொட்டு, கைராதகத் தேனைப் பருகியதால், போதையால் கடைக்கண்கள் சிவந்து, தன் வலிமை இரட்டிப்பானதை உணர்ந்தான் [3]. பிராமணர்கள் அவனுக்குப் {பீமனுக்குப்} பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். வெற்றியைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் அவனை {பீமனை} வரவேற்றன. அவற்றைக் கண்ட அவன் {பீமன்} தான் எதிர்பார்க்கும் வெற்றியால் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனது வெற்றியைக் குறிக்கும்படி சாதகமான காற்றும் வீசத் தொடங்கியது.தேர்வீரர்களில் முதன்மையானவனும், கவசந்தரித்தவனும், காதுகுண்டலங்கள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தோலுரைகளால் தன் கைகள் மறைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் தன் அற்புதத் தேரில் ஏறினான். எஃகால் ஆனதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அவனது {பீமனது} விலையுயர்ந்த கவசமானது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்தைப் போலவே தெரிந்தது. மஞ்சள், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளால் அவனது {பீமனது} உடல் அழகாக மறைக்கப்பட்டிருந்தது. கழுத்தையும் பாதுகாத்த வண்ணமயமான மார்புக்கவத்தை {கண்டஸூத்திரத்தை} அணிந்திருந்த பீமசேனன், வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளுக்கு எதிராகப் பீமசேனன் புறப்படும் சமயத்தில், {கிருஷ்ணனின் சங்கான} பாஞ்சஜன்யத்தின் கடும் வெடிப்பொலிகள் மீண்டும் கேட்கப்பட்டன.
மூவுலகங்களையும் அச்சத்தில் நிறைக்க வல்ல பயங்கரமான வெடிப்பொலிகளை உரக்கக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பீமசேனனிடம், “அங்கே, விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்} தன் சங்கைக் கடுமையாக முழங்குகிறான். உண்மையில் அந்தச் சங்குகளின் இளவரசன் {பாஞ்சஜன்யம்} தன்னொலியால் பூமியையும் ஆகாயத்தையும் நிறைக்கிறான். சவ்யசச்சின் {அர்ஜுனன்} பெரும் துயரில் வீழ்ந்திருக்கிறான் என்பதிலும், சங்கு மற்றும் கதாயுதம் தரித்தவன் {கிருஷ்ணன்} குருக்கள் அனைவருடனும் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மதிப்புக்குரிய குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்று மங்கலமற்ற சகுனங்களையே அதிகமாகக் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ! பார்த்தா {பீமா}, திசைகளின் புள்ளிகள் அனைத்தும் என் கண்களுக்கு வெறுமையாகத் தெரிகின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}.
தனக்கு மூத்தவனால் {யுதிஷ்டிரனால்} மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டவனும், பாண்டுவின் வீர மகனுமான பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கைகளில் தோலுறையை அணிந்து கொண்டு தன் வில்லை எடுத்துக் கொண்டான். தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தன் அண்ணனால் தூண்டப்பட்ட தம்பியுமான பீமசேனன் துந்துபிகளை முழக்கச் செய்தான். தன் சங்கையும் பலமாக ஊதிய பீமன், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தன் வில்லில் நாணொலியை எழுப்பத் தொடங்கினான். அந்தச் சிங்க முழக்கங்களால் பகை வீரர்களுடைய இதயங்களின் ஊக்கத்தைக் கெடுத்த அவன் {பீமன்}, பயங்கரமான வடிவத்தை ஏற்றுத் தன் எதிரிகளை நோக்கி விரைந்தான். வேகமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், கடுமையான கனைப்பொலிகளைக் கொண்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள் அவனைச் {பீமனைச்} சுமந்து சென்றன. காற்று அல்லது மனோ வேகத்தைக் கொண்ட அவற்றின் கடிவாளங்கள் {பீமனின் தேரோட்டியான} விசோகனால் பற்றப்பட்டிருந்தன. அப்போது அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தன் வில்லின் நாணை பெரும் பலத்துடன் இழுத்து, அங்கே இருந்த போராளிகளைத் துளைத்தும், சிதைத்தும், பகைவருடைய வியூகத்தின் தலையை {முகப்பை} நசுக்கத் தொடங்கினான். அப்படி அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்} சென்ற போது, மகவத்தை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலத் துணிச்சல்மிக்கவர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் அவனுக்குப் {பீமனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றனர்.
அப்போது சகோதரர்களான துச்சாசனன், சித்திரசேனன், குண்டபேதி, விவிம்சதி, துர்முகன், துஸ்ஸஹன், {விகர்ணன்}, சலன், விந்தன், அனுவிந்தன், சுமுகன், தீர்க்கபாகு, சுதர்சனன், {பிருந்தாரகன் [மந்துரகஸ்]}, சுஹஸ்தன், சுஷேணன், தீர்க்கலோசனன், அபயன், ரௌத்ரகர்மன், சுவர்மன், துர்விமோசனன் ஆகியோர் {21 இருபத்தொருவரும்} [4] பீமசேனனைச் சூழ்ந்து கொண்டனர். முதன்மையான தேர்வீரர்களும், பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான இந்த வீரர்கள் அனைவரும், உறுதியுடன் போரிடும் தீர்மானத்துடன், தங்கள் துருப்புகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான அந்த வீரப் பீமசேனன் இப்படிச் சூழப்பட்டதும், அவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, சிறு விலங்குகளை எதிர்க்கும் சிங்கத்தின் வேகத்துடன் அவர்களை எதிர்த்து விரைந்தான். அவ்வீரர்கள், வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தி உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலக் கணைகளால் பீமனை மறைத்தனர். வேகத்துடன் அவ்வீரர்கள் அனைவரையும் கடந்த பீமசேனன், துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, தன் எதிரே இருந்த யானைப் படையைக் கணைமாரியால் மறைத்தான். வாயு தேவனின் மகன் {பீமன்} தன் கணைகளால் சிதைத்ததும், அந்த யானை படைப்பிரிவு கிட்டத்தட்ட நேரமேதும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. உண்மையில், காட்டில் சரபத்தின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் விலங்குகளைப் போல, அந்த யானைகள் அனைத்தும் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டே தப்பி ஓடின. அந்தக் களத்தை வேகமாகக் கடந்த அவன் {பீமன்} துரோணரின் படைப்பிரிவை அடைந்தான்.
அப்போது அந்த ஆசான் {துரோணர்}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போல அவனது {பீமனது} வழியைத் தடுத்தார். சிரித்துக் கொண்டே அவர் {துரோணர்}, ஒரு கணையால் பாண்டுவின் மகனுடைய முன்நெற்றியைத் தாக்கினார். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் மேல்நோக்குக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். அந்த ஆசான் {துரோணர்}, முன்னர்ப் பல்குனன் {அர்ஜுனன்} செய்ததைப் போலப் பீமனும் தன்னிடம் மரியாதை காட்டுவான் என்று நினைத்தார். விருகோதரனிடம் {பீமனிடம்} பேசிய அவர் {துரோணர்}, “ஓ! பீமசேனா, போரில் உன் எதிரியான என்னை வெல்லாமல், பகைவரின் படைக்குள் நுழைவது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனுடன் கூடிய உன் தம்பி {அர்ஜுனன்} என் அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழைந்தாலும், அப்படிச் செய்வதில் உன்னால் வெல்ல முடியாது” என்றார்.
ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அச்சமற்ற பீமன், கோபத்தால் தூண்டப்பட்டு, ரத்தம், அல்லது புடம்போட்ட தாமிரத்தைப் போன்ற சிவந்த கண்களுடன் துரோணரிடம் மறுமொழியாக, “ஓ! இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ! துரோணரே, நான் அர்ஜுனனைப் போன்று கருணையுள்ளவன் அல்ல என நீர் என்னை அறிவீராக. மறுபுறம் நான் உமது எதிரியான பீமசேனன் ஆவேன். நாங்கள் உம்மைத் தந்தையாகவும், ஆசானாகவும், நண்பராகவும் கருதுகிறோம். எங்களை நாங்கள் உமது மகன்களாகவே காண்கிறோம். அப்படி நினைத்தே நாங்கள் உம்மிடம் எப்போதும் பணிவாக நடக்கிறோம். எனினும், இன்று இத்தகு வார்த்தைகளை நீர் எங்களிடம் பயன்படுத்தும்போது, அவை அனைத்தும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. நீர் உம்மை எங்களது எதிரியாகக் கருதிக் கொண்டால், நீர் நினைப்பது போல அப்படியே ஆகட்டும். பீமனைத் தவிர வேறு எவனுமாக இல்லாத நான், ஓர் எதிரியிடம் எப்படி நான் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே தற்போது உம்மிடம் நடந்து கொள்வேன்” என்றான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு, மரணக்கோலைச் சுழற்றும் யமனைப் போல அதைத் துரோணரின் மீது வீசினான். எனினும், துரோணர் (தன் பாதுகாப்பை நிச்சயித்துக் கொள்ளும் வகையில்) விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்தார். அந்தக் கதாயுதமோ குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடிய துரோணரின் தேரைப் பூமியில் நசுக்கித் தரைமட்டமாக்கியது. பிறகு மரங்களைப் பலத்துடன் நசுக்கும் சூறாவளியைப் போல அந்தப் பீமன் எண்ணற்ற போர்வீரர்களை நசுக்கினான். அப்போது உமது மகன்கள், அந்த முதன்மையான தேர்வீரனை {பீமனை} மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அதேவேளையில், தாக்குபவர்களில் முதன்மையான துரோணர் மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, வியூகத்தின் வாயிலுக்குச் சென்று போரில் அங்கேயே நிலைகொண்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட கோபக்கார பீமன், தன் முன்னே இருந்த தேர்ப்படையைத் தன் கணை மாரியால் மறைத்தான். பிறகு, போரில் இப்படித் தாக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள் வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் பீமனுடன் போரிட்டனர்.
அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், பீமசேனனைக் கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான கூரிய ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது வீசினான். எனினும் பீமன், உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்த அந்தக் கடும் ஈட்டியை இரண்டாக வெட்டினான். இச்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்}, மூன்று கூரிய கணைகள் பிறவற்றால் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைக் கொன்றான். மேலும் அவனுடன் {பீமனுடன்} போரிட்ட உமது வீர மகன்களுக்கு மத்தியில், குருக்களின் புகழை அதிகரிப்பவனான வீரப் பிருந்தாரகனைப் பீமன் கொன்றான். பிறகு பீமன், மேலும் மூன்று கணைகள் பிறவற்றால், அபயன், ரௌத்ரகர்மன் மற்றும் துர்விமோசனன் ஆகிய உமது மூன்று மகன்களைக் கொன்றான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்க வீரனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள், எதிரிகளைத் தாக்குபவனான பீமனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள், கோடையின் முடிவில் மலைச் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். படைகளைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் வாரிசு {பீமன்}, கல்மழையை ஏற்கும் ஒரு மலையைப் போல அந்தக் கணை மாரியை ஏற்றான். உண்மையில் அந்த வீரப் பீமன் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்} சிரித்துக் கொண்டே, உமது மகன்களான விந்தன், அனுவிந்தன், சுவர்மன் ஆகியோரைத் தன் கணைகளின் மூலம் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} உமது வீர மகன் சுதர்சனை அந்தப் போரில் விரைவாகத் துளைத்தான். அதன்பேரில் பின்னவன் கீழே விழுந்து இறந்தான் [5].குறுகிய காலத்திற்குள் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பார்வைகளை அந்தத் தேர்படையின் மீது செலுத்தி, தன் கணைகளின் மூலம் அஃதை அனைத்துத் திசைகளிலும் ஓடச் செய்தான். தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியையோ, உரத்த முழக்கத்தையோ கேட்டு அஞ்சும் மான்கூட்டத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் கௌரவர்களைத் துளைக்கத் தொடங்கினான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது படைவீரர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தவிர்த்துவிட்டுத் தங்கள் சிறந்த குதிரைகளை மிக வேகமாகத் தூண்டி போரைவிட்டுத் தப்பி ஓடினர். பிறகு, வலிமைமிக்கப் பீமசேனன், போரில் அவர்களை வென்று சிங்க முழக்கங்கள் செய்து, தன் அக்குள்களை {தோள்களைத்} தட்டி பேரொலியை உண்டாக்கினான். மேலும் வலிமைமிக்கப் பீமசேனன், தன் உள்ளங்கைகளாலும் கடும் ஒலியை உண்டாக்கி, அதனால் தேர்ப்படையையும், அதிலிருந்த முதன்மையான தேர்வீரர்களையும் அச்சுறுத்தி (அவனால் வெல்லப்பட்ட) அந்தத் தேர்ப்படையைக் கடந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனனைக் கண்ட பீமன்! – துரோண பர்வம் பகுதி – 127-துரோணரின் கணைமாரியைக் கலங்கடித்துக் கௌரவப் படையினரை அழித்த பீமன்; துரோணரின் தேரை வீசியெறிந்து உடைத்தது; கிருதவர்மனின் படையைக் கலங்கடித்துக் கடந்து சென்றது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாத்யகியைக் கண்டது; அர்ஜுனன் போர்புரிந்து கொண்டிருப்பதைக் கண்ட பீமன் மாமுழக்கம் செய்தது; பீமன் மற்றும் அர்ஜுனனின் முழக்கங்களைக் கேட்டுச் செய்தியை உணர்ந்து கொண்ட யுதிஷ்டிரன் பீமனை மெச்சி சிந்தனையில் ஆழ்ந்து அந்த எண்ணங்களை வார்த்தைகளாக்கியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டுவின் மகன் {பீமன்} அந்தத் தேர்ப்படையைக் கடந்ததும், அவனது வழியைத் தடுக்க விரும்பிய ஆசான் துரோணர், சிரித்துக் கொண்டே கணை மாரிகளால் அவனை {பீமனை} மறைத்தார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் குடித்து விடுபவனைப் போலத் தன் மாய சக்திகளால் மலைக்கச் செய்த பீமசேனன், தன் தம்பியரை (உமது மகன்களை) எதிர்த்து விரைந்தான். பிறகு, உமது மகன்களால் தூண்டப்பட்ட பெரும் வில்லாளிகளான மன்னர்கள் பலர் மூர்க்கமாக விரைந்து அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் சூழப்பட்ட பீமன் சிரித்துக் கொண்டும், சிங்க முழக்கம் செய்து கொண்டும், படையணிகளை அழிக்கவல்ல ஒரு கடும் கதாயுதத்தை எடுத்து அவர்கள் மீது வீசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனால் வீசப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தை {இடியைப்} போலவே கடினமான பலத்தைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, போரில் உமது படைவீரர்களை நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது பேரொலியால் மொத்த உலகையும் நிறைப்பதாகத் தெரிந்தது. காந்தியால் சுடர்விட்ட அந்தக் கடும் கதாயுதமானது உமது மகன்களை அச்சுறுத்தியது. மூர்க்கமாகச் செல்வதும், மின்னலின் கீற்றுகளைக் கொண்டதுமான அந்தக் கதாயுதம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது வீரர்கள் பயங்கரமாகக் கதறியபடியே தப்பி ஓடினர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடும் கதாயுதத்தின் பொறுத்துக் கொள்ள முடியாத ஒலியால் மனிதர்கள் பலர் தாங்கள் எங்கே நின்றனரோ அங்கேயே விழுந்தனர், தேர்வீரர்கள் பலரும் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். கதாயுதம் தரித்த பீமசேனனால் கொல்லப்பட்ட உமது வீரர்கள், புலியால் தாக்கப்பட்ட மான்களைப் போல அச்சங்கொண்டு போரிடுவதில் இருந்து தப்பி ஓடினர்.
குந்தியின் மகன் {பீமன்}, வீரமிக்கத் தன் எதிரிகளைப் போரில் முறியடித்து, அழகிய இறகுகளைக் கொண்ட கருடனைப் போல அந்தப் படையை வேகமாகக் கடந்து சென்றான். தேர்ப்படைத் தலைவர்களின் தலைவனான அந்தப் பீமசேனன், இத்தகு பேரழிவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} அவனை {பீமனை} நோக்கி விரைந்தார். துரோணர் தன் கணை மாரிகளால் பீமனைத் தடுத்து, பாண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் திடீரெனச் சிங்க முழக்கம் செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது உக்கிரமானதாகவும், பயங்கரமானதாகவும், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பானதாகவும் இருந்தது. துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால், அந்தப் போரில் வீரமிக்கப் போர்வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டனர்.
தன் தேரில் இருந்து கீழே குதித்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கண்களை மூடிக் கொண்டு, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் காலாளாகவே விரைந்தான். உண்மையில், ஒரு காளையானது கடும் மழைப்பொழிவை எளிதாகத் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்த மனிதர்களில் புலியான பீமனும், துரோணரின வில்லில் இருந்து வந்த அந்தக் கணை மழையைப் பொறுத்துக் கொண்டான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரால் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் பீமன், துரோணருடைய தேரின் ஏர்க்காலைப் பிடித்துப் பெரும் பலத்துடன் கீழே வீசி எறிந்தான். ஓ! மன்னா, போரில் துரோணர் இப்படிக் கீழே தூக்கி வீசப்பட்டாலும் மற்றொரு தேரில் விரைவாக ஏறிக் கொண்டு, அந்நேரத்தில் தன் தேரோட்டியைப் பெரும் வேகத்துடன் தன் குதிரைகளைத் தூண்டச்செய்து, வியூகத்தின் வாயிலை நோக்கிச் சென்றார். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது [2].
பிறகு, அந்த வலிமைமிக்கப் பீமன் தன் தேரில் ஏறிக் கொண்டு, உமது மகனின் படையை நோக்கி வேகமாக விரைந்தான். வரிசையான மரங்களை நசுக்கும் சூறாவளியைப் போலவே அவன் {பீமன்} போரில் க்ஷத்திரியர்களை நசுக்கினான். உண்மையில் பீமன், பொங்கும் கடலைத் தடுக்கும் மலையைப் போலவே பகைவரின் போர்வீரர்களைத் தடுத்தான். ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} காக்கப்பட்ட போஜத் துருப்புகளிடம் வந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதைப் பெரிதும் தரைமட்டமாக்கிவிட்டு அதைக் கடந்து சென்றான். பகைவரின் படைவீரர்களைத் தன் உள்ளங்கைகளின் தட்டொலிகளால் அச்சுறுத்திய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காளைக்கூட்டத்தை வெல்லும் ஒரு புலியைப் போல அவர்கள் அனைவரையும் வென்றான். போஜப்படைப் பிரிவையும், காம்போஜர்களுடையவையையும், போரில் சாதித்தவர்களான எண்ணற்ற மிலேச்ச இனங்களையும் கடந்து சென்று, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி போரில் ஈடுபடுவதைக் கண்ட அந்தக் குந்தியின் மகனான பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காணும் விருப்பத்தால் பெரும் வேகத்துடனும், தீர்மானத்துடனும் முன்னேறிச் சென்றான்.
அந்தப் போரில் உமது வீரர்கள் அனைவரையும் மீறிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். மனிதர்களில் புலியான அந்த வீரப் பீமன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லத் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலங்களில் முழங்கும் மேகங்களைப்போல மாமுழக்கம் செய்தான். முழங்கிக் கொண்டிருந்த அந்தப் பீமசேனனின் பேரொலியானது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போருக்கு மத்தியில் இருந்த அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவராலும் கேட்கப்பட்டது. வலிமைமிக்கப் பீமனின் அந்த முழக்கங்களை அடுத்தடுத்துக் கேட்ட அந்த வீரர்கள் இருவரும், விருகோதரனை {பீமனைக்} காணும் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் முழங்கினர். பிறகு, அர்ஜுனனும், மாதவனும் {கிருஷ்ணனும்}, முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலப் பெருமுழக்கம் செய்தபடியே போரில் திரிந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் அம்முழக்கத்தையும், வில் தரித்த பல்குனனின் {அர்ஜுனனின்} முழக்கத்தையும் கேட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும் மனநிறைவை அடைந்தான். பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் இவ்வொலிகளைக் கேட்டு மன்னன் யுதிஷ்டிரன் தன் துயரத்தில் இருந்து விடுபட்டான். மேலும் அந்தத் தலைவனான யுதிஷ்டிரன், போரில் தனஞ்சயன் வெற்றியடைய மீண்டும் மீண்டும் வாழ்த்தினான். மூர்க்கமான பீமன் இப்படி முழங்கிக் கொண்டிருந்த போது, வலிய கரங்களைக் கொண்டவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், சிறிது நேரம் புன்னகைத்தபடியே சிந்தித்து, தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களுக்கு {பின்வரும்} இந்த வார்த்தைகளைக் கொடுத்தான், “ஓ! பீமா, நீ எனக்கு உண்மையாகவே செய்தியை அனுப்பிவிட்டாய். உனக்கு மூத்தவனின் {உன் அண்ணனின்} கட்டளைகளுக்கு உண்மையில் நீ கீழ்ப்படிருந்திருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமனே}, உன்னை எதிரியாகக் கொண்டோர் வெற்றியை அடையவே முடியாது.
இடது கையாலும் வில் ஏவவல்ல தனஞ்சயன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட வீரச் சாத்யகியும் நற்பேறாலேயே பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறான். வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரின் இந்த முழக்கங்களை நற்பேறாலேயே நான் கேட்கிறேன். போரில் சக்ரனையே {இந்திரனையே} வென்று, வேள்விக் காணிக்கைகளைத் தாங்கிச் செல்பவனை {அக்னியை} மனம் நிறையச் செய்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே இந்தப் போரில் உயிருடன் இருக்கிறான். எவனுடைய கரங்களின் வலிமையால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எதிரிப் படைகளைக் கொல்பவனான அந்தப் பல்குனன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். ஒரே வில்லின் துணையைக் கொண்ட எவனால் தேவர்களாலும் வீழ்தப்பட முடியாத தானவர்களான நிவாதகவசர்கள் வெல்லப்பட்டனரோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். விராடனின் பசுக்களைப் பிடித்துச் செல்ல மத்ஸ்ய நகரத்தில் ஒன்று கூடிய கௌரவர்கள் அனைவரையும் எவன் வென்றோனோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். பதினாலாயிரம் {14000} காலகேயர்களைத் தன் கரங்களின் வலிமையால் எவன் கொன்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். துரியோதனனுக்காகக் கந்தர்வர்களின் வலிமைமிக்க மன்னனை {சித்திரசேனனைத்} தன் ஆயுதங்களின் சக்தியால் எவன் வென்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கிரீடத்தாலும், (தங்க) மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனும், (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனையே தன் தேரோட்டியாகக் கொண்டவனும், எப்போதும் எனது அன்புக்குரியவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான்.
தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் எரிபவனும், மிகக் கடினமான சாதனையைச் செய்து கொண்டிருப்பவனும், ஐயோ, செய்த சபதத்தால் ஜெயத்ரதனைக் கொல்ல எவன் இப்போதும் முயல்கிறானோ, அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் வெல்வானா? வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, சூரியன் மறைவதற்குள் தன் சபதத்தை நிறைவேற்றப் போகும் அர்ஜுனனை நான் மீண்டும் காண்பேனா? துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுத் தன் எதிரிகளை மகிழ்விப்பானா? போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் கொல்லப்படுவதைக் காணும் மன்னன் துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? போரில் பீமசேனனால் தன் தம்பிகள் கொல்லப்படுவதைக் காணும் தீய துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? பெரும் போர் வீரர்கள் பிறர் பூமியின் பரப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டு தீய துரியோதனன் வருத்தத்தை அடைவானா? பீஷ்மர் ஒருவரின் தியாகத்தோடு நமது பகைமைகள் ஒழியாதா? (அவனிடமும், நம்மிடமும் இன்னும் மீந்து) எஞ்சியிருப்பவர்களைக் காப்பதற்காகச் சுயோதனன் {துரியோதனன்} நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா?” {என்றான் யுதிஷ்டிரன்}. கருணையால் நிறைந்திருந்த மன்னன் யுதிஷ்டிரனின் மனதை இவ்வகையான பல்வேறு எண்ணங்களே கடந்து சென்றன. அதே வேளையில், (பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்) இடையில் கடுஞ்சீற்றத்துடனும், உக்கிரமாகவும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.
கர்ணனை வென்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 128-அனைவரையும்விடப் பீமனுக்கே அதிகம் அஞ்சிய திருதராஷ்டிரன்; பீமனை எதிர்த்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்றது; விருஷசேனனின் தேரில் ஏறிக்கொண்ட கர்ணன்; பீமனால் வெல்லப்பட்ட கர்ணன் மீண்டும் பீமனிடம் மோதியது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மேகங்கள், அல்லது இடியின் முழக்கத்தைப் போல, வலிமைமிக்கப் பீமசேனன் ஆழமாக முழங்கியபோது, (நமது தரப்பில்) எந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்? போரில் சீற்றமுள்ள பீமசேனனின் முன்பு நிற்கவல்ல எந்தப் போர்வீரனையும் மூவுலகங்களிலும் நான் காணவில்லை. ஓ! மகனே {சஞ்சயா}, காலனுக்கு ஒப்பாகக் கதாயுதத்தைத் தரித்து நிற்கும் பீமசேனனுக்கு எதிரில் போர்க்களத்தில் நிலைக்கவல்ல எவனையும் நான் காணவில்லை. தேரைத் தேராலும், யானையை யானையாலும் [1] அழிக்கும் அந்தப் பீமனை எதிர்த்துச் சக்ரனை {இந்திரனைத்} தவிர வேறு எவனால் நிற்க முடியும்? சினத்தால் தூண்டப்பட்டு, என் மகன்களைக் கொல்வதில் ஈடுபடும் பீமசேனனை எதிர்த்துத் துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளோரில் எவனால் போரில் நிற்க முடியும்? உலர்ந்த இலைகளையும், வைக்கோலையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போல என் மகன்களை எரிப்பதில் ஈடுபடும் பீமசேனனின் முன்பு நின்ற மனிதர்கள் யாவர்? அனைத்து உயிரினங்களையும் வெட்டி வீழ்த்தும் மற்றொரு காலனைப் போலப் பீமன் என் மகன்களை ஒருவர் பின் ஒருவராகக் கொல்வதைக் கண்டு அவனைப் போரில் சூழ்ந்து கொண்டவர் யாவர்? நான் பீமனிடம் கொள்ளும் அச்சத்தைப் போல அர்ஜுனனிடமோ, கிருஷ்ணனிடமோ, சாத்யகியிடமோ, அல்லது வேள்வி நெருப்பில் பிறந்தவனிடமோ (திருஷ்டத்யும்னனிடமோ) பெரும் அச்சத்தைக் கொள்ளவில்லை. ஓ! சஞ்சயா, என் மகன்களை எரிக்கும் பீமனெனும் சுடர்மிகும் நெருப்பை எதிர்த்து விரைந்த அந்த வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன் இப்படி முழக்கங்களை வெளியிட்டபோது, அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத வலிமைமிக்கக் கர்ணன், தன் வில்லைப் பெரும் பலத்துடன் வளைத்து, பெருங்கூச்சலிட்டபடி அவனை {பீமனை} நோக்கி விரைந்தான். உண்மையில், போரை விரும்பிய வலிமைமிக்கக் கர்ணன், தன் பலத்தை வெளிப்படுத்திச் சூறாவளியைத் தாக்குப்பிடிக்கும் நெடிய மரமொன்றைப் போலப் பீமனின் வழியைத் தடை செய்தான். வீரப் பீமனும், தன் முன்னிலையில் விகர்த்தனன் மகனை {கர்ணனைக்} கண்டு திடீரெனக் கோபத்தில் சுடர்விட்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைப் பெரும்பலத்துடன் அவன் {கர்ணன்} மீது ஏவினான். அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்ற கர்ணன் பதிலுக்குப் பலவற்றையும் ஏவினான். பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அம்மோதலில், அவர்களது உள்ளங்கைகளின் தட்டல் ஒலிகளைக் கேட்ட போராளிகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் அனைவரின் அங்கங்களும் நடுங்கத் தொடங்கின. உண்மையில், அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் பயங்கர முழக்கங்களைக் கேட்டு, அவ்வொலிகள் மொத்த பூமியையும், ஆகாயத்தையும் நிறைப்பதாக க்ஷத்திரியர்களில் முதன்மையான அனைவரும் கருதினர்.
உயர் ஆன்ம பாண்டு மகனால் {பீமனால்} வெளியிடப்பட்ட கடுமுழக்கங்களால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரின் விற்களும் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சலையிழந்த குதிரைகளும், யானைகளும் சிறுநீரும், மலமும் கழித்தன [2]. அச்சம்நிறைந்த பல்வேறு தீய சகுனங்கள் அப்போது தோன்றின. பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அந்தப் பயங்கர மோதலின் போது, கழுகுகள் மற்றும் கங்கங்களின் {பருந்துகளின்} கூட்டங்களால் ஆகாயம் மறைக்கப்பட்டது. கர்ணன் இருபது கணைகளால் பீமனைத் தாக்கி, ஐந்தால் பின்னவனின் தேரோட்டியை {விசோகனை} வேகமாகத் துளைத்தான். வலிமைமிக்கவனும், சுறுசுறுப்பானவனுமான பீமன் அந்தப் போரில் புன்னகைத்தபடியே, கர்ணனின் மீது அறுபத்துநான்கு {64} கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு கர்ணன் அவன் மீது நான்கு கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமன் அவற்றைத் தன் நேரான கணைகளால் பல துண்டுகளாக வெட்டித் தன் கரநளினத்தை வெளிக்காட்டினான். பிறகு கர்ணன் அடர்த்தியான கணைகளின் மாரியால் அவனை {பீமனை} மறைத்தான். எனினும், இப்படிக் கர்ணனால் மறைக்கப்பட்ட வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, பிறகு பத்து நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.
பயங்கரச் செய்கைகளைச் செய்யும் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூத மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதில் விரைவாக நாணேற்றி அந்தப் போரில் பீமனை (பல கணைகளால்) துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பீமன், மூன்று நேரான கணைகளால் சூத மகனின் {கர்ணனின்} மார்பை பெரும்பலத்துடன் தாக்கினான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மூன்று நெடிய சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போலக் கர்ணன், தன் மார்பில் ஒட்டிய அந்தக் கணைகளுடன் அழகாகத் தெரிந்தான். வலிமைமிக்கக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்டதும், மலையின் சாரலில் வழியும் செஞ்சுண்ணாம்பின் நீர்த்தாரைகளைப் போல அவனது {கர்ணனது} காயங்களில் இருந்து குருதி பாயத் தொடங்கியது. பெரும்பலத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட கர்ணன் சற்றே கலக்கமடைந்தான். தன் வில்லில் ஒரு கணையைப் பொருத்திய அவன் {கர்ணன்}, ஓ! ஐயா, மீண்டும் பீமனைத் துளைத்தான். பிறகு மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளையும் அவன் ஏவத் தொடங்கினான்.
அந்த உறுதிமிக்க வில்லாளியான கர்ணனின் கணைகளால் திடீரென மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சிரித்துக் கொண்டே கர்ணனுடைய வில்லின் நாணை அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஒரு பல்லத்தால், கர்ணனின் தேரோட்டியை யமனுலகு அனுப்பினான். வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், கர்ணனின் நான்கு குதிரைகளையும் உயிரிழக்கச் செய்தான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகளற்ற தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்து, விருஷசேனனின் தேரில் ஏறிக் கொண்டான்.
அப்போது, வீரப் பீமசேனன், போரில் கர்ணனை வென்ற பிறகு, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழமான பெருங்கூச்சலையிட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்முழக்கத்தைக் கேட்ட யுதிஷ்டிரன், பீமசேனனால் கர்ணன் வெல்லப்பட்டதை அறிந்து மிகவும் மனம் நிறைந்தான். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவப் படையின் போராளிகள் தங்கள் சங்குகளை ஊதினர். அவர்களது எதிரிகளான உமது போர்வீரர்கள் அவ்வொலியைக் கேட்டு உரக்க முழங்கினர். அர்ஜுனன் காண்டீவத்தை வளைத்தான், கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். எனினும் இவ்வொலிகள் அனைத்தையும் மூழ்கடித்த பீமனின் முழக்கம், ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவராலும் கேட்கப்பட்டது. பிறகு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய அந்தப் போர்வீரர்கள் இருவரும் நேரான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எனினும் ராதையின் மகன் {கர்ணன்} மென்மையாகக் கணைகளை ஏவினான், பாண்டுவின் மகனோ {பீமனோ}, பெரும்பலத்துடன் ஏவினான்” {என்றான் சஞ்சயன்} [3].
“மகாராஜரே, அசுரர்களுடைய பெரிய சேனையிலிருந்த தாரகாசுரனை நோக்கி சுப்ரம்மண்யர் எதிர்த்தது போலப் பீமனும் சூரியகுமாரனான கர்ணனை எதிர்த்தான். பயங்கரமான செய்கையுள்ளவர்களான அவ்விருவருக்கும் இவ்வாறான பெரும்போர் நடந்தது. பீமசேனன் பெரிதான அம்புமழையினால் அவனைத் தடுத்துக் கொண்டு அம்புகளால் அவனுடைய சாரதியையும், நான்கு குதிரைகளையும் அடித்தான். ஐயா, பீமன் கணுக்கள் படிந்துள்ள பல்லங்களால் அவனுடைய துவசத்தையும், கொடிச்சீலையையும் அறுத்து ரதத்தையும் சக்ரரக்ஷகர்களையும் நாசஞ்செய்தான். அரசரே, ரதிகர்களுள் சிறந்தவனும், பலசாலியுமான கர்ணனும், பீமசேனனால் நடுங்கும்படி செய்யப்பட்டவனாகக் கத்தியும் கேடகத்தையும் கையிற்பிடித்துப் பீமனை எதிர்த்தான். ஐயா, பீமன் அந்தக் கத்தியைக் கேடகத்தோடு வெட்டினான். மகாராஜரே, துரியோதனன், பீமனால் கர்ணன் அனேக அம்புகளாலே பீடிக்கப்பட்டதைக் கண்டு துச்சலனைப் பார்த்து, “கர்ணன் கஷ்டமான நிலைமையை அடைந்துவிட்டதைப் பார். சீக்கிரமாக அவனுக்கு ரதத்தைக் கொடு” என்று சொன்னான். இவ்வாறு அரசன் சொல்லியதைக் கேட்ட துச்சலன், பிறகு, கர்ணனுடைய சமீபத்தில் ஓடிவந்தான். மகாரதனான கர்ணனும், துச்சலனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டான். அவ்விருவரையும் பிருதையின் புத்ரனான பீமன் விரைவாக நெருங்கிப் பத்துப் பாணங்களாலடித்து மறுபடியும் கர்ணனை அடித்துத் துச்சலனுடைய தலையையுமறுத்தான். ஐயா, பீமசேனனால் துச்சலன் கொல்லப்பட்டதைப் பார்த்துக் கர்ணன் அவனுடைய வில்லை எடுத்துப் பாண்டவனையடித்தான். வீரர்களும் மகாபலசாலிகளும், சத்துருக்களுடைய மத்தியில் பலனும் இந்திரனும் போலப் பரஸ்பரம் போர்புரிந்தார்கள். மகாபலசாலியும் பிருதா புத்திரனுமான பீமன் அட்டகாசஞ்செய்து கொண்டு குதிரைகளையும் சாரதியையுமடித்த அடிக்கடி கர்ணனையெதிர்த்தான். பிறகு, யுத்த பூமியில் பீமன் போர் புரிகையில் அச்சேனை குழப்பமுற்றது. யாதொன்றும் அறியப்படவில்லை”
துரியோதனனும், பாஞ்சால இளவரசர்களும்! – துரோண பர்வம் பகுதி – 129-துரோணரை நோக்கிச் சென்ற துரியோதனன், அவரிடம் வைத்த கோரிக்கை; ஜெயத்ரதனைப் பாதுகாக்கத் துரியோதனனை ஏவிய துரோணர்; துரியோதனனுக்கும், பாஞ்சால இளவரசர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பாஞ்சால இளவரசர்களின் தேரைத் தன் கதாயுதத்தால் நொறுக்கிய துரியோதனன், சல்லியனின் தேரில் ஏறிச் சென்றது; பாஞ்சால இளவரசர்கள் அர்ஜுனனை நோக்கிச் சென்றது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(இப்படி) அந்தப் படை முறியடிக்கப்பட்டு, அர்ஜுனன், பீமசேனன் ஆகிய அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கிச் சென்ற பிறகு, உமது மகன் (துரியோதனன்) துரோணரை நோக்கிச் சென்றான். தனி ஒருவனாகத் தன் தேரில் ஆசானிடம் {துரோணரிடம்} சென்ற துரியோதனன், வழியெங்கும் பல்வேறு கடமைகளைக் குறித்துச் சிந்தித்தபடியே சென்றான். காற்று அல்லது மனோ வேகம் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} தேரானது, துரோணரை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றது.
கோபத்தால் சிவந்த கண்களுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, ஆசானிடம் {துரோணரிடம்}, “ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவரே {துரோணரே}, அர்ஜுனன், பீமசேனன் மற்றும் வெல்லப்படாத சாத்யகி ஆகியோரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அணுகுவதில் வென்றுவிட்டனர். உண்மையில், வெல்லப்படாதவர்களாகவே இருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் துருப்புகள் அனைத்தையும் வென்ற பிறகு அங்கேயும் போரிடுகின்றனர். ஓ! கௌரவங்களை அளிப்பவரே {துரோணரே}, சாத்யகி மற்றும் பீமன் ஆகிய இருவராலும் உம்மை எப்படிக் கடக்க முடிந்தது? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {துரோணரே}, சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் மற்றும் பீமசேனனிடம் நீர் அடைந்த தோல்வியானது இவ்வுலகில் கடல் வறண்டு போவதைப் போல மிக ஆச்சரியமானதாகும். மக்கள், “ஆயுத அறிவியலில் கரைகண்டவரான துரோணர் உண்மையில் எவ்வாறு வெல்லப்பட முடியும்?” என்று உரக்கக் கேட்கின்றனர். இவ்வாறே வீரர்கள் அனைவரும் உம்மை மதிப்பு குறைவாகப் பேசுகின்றனர்.
ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, தொடர்ச்சியாக மூன்று வீரர்கள் உம்மைக் கடந்து சென்றனர் என்றால், நல்லூழற்ற எனக்குப் போரில் அழிவு நிச்சயமே. எனினும், இவையாவும் நடந்தும், இக்காரியத்தில் எங்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதில் நீர் சொல்லவேண்டியதை எங்களுக்குச் சொல்வீராக. எது நடந்ததோ அது கடந்து போனதாகும் {கடந்த காலமாகும்}. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, எஞ்சியிருப்பது {இனி செய்ய வேண்டியது} என்ன என்பதை இப்போது சிந்திப்பீராக. அடுத்ததாக, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காக {ஜெயத்ரதனுக்காகத்} தற்சமயம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாகச் சொல்வீராக, நீர் எதைச் சொல்வீரோ, அது வேகமாகவும், முறையாகவும் செய்யப்படும்” என்றான் {துரியோதனன்}.
துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இப்போது எது செய்யப்பட வேண்டும் என்பதை மிகவும் சிந்தித்து, நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக. இப்போது வரை பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்களில் மூவர் மட்டுமே நம்மைக் கடந்து சென்றிருக்கின்றனர். அந்த மூவருக்கு முன்னால் நமக்கு எவ்வளவு அச்சமிருந்ததோ, அவர்களுக்குப் பின்னாலும் நாம் அவ்வளவு அஞ்சவேண்டியிருக்கிறது [1]. எனினும், எங்கே கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருக்கின்றனரோ, அங்கே நமது அச்சம் பெரிதாக இருக்க வேண்டும். பாரதப் படையானது முன்னாலும், பின்னாலும் என இருபுறமும் தாக்கப்படுகிறது. இந்நேரத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} பாதுகாப்பே நமது முதல் கடமை என நான் நினைக்கிறேன். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} அஞ்சுபவனான ஜெயத்ரதன் நம்மால் பாதுகாக்கப்படுவதே அனைத்தையும் விடத் தகுந்ததாகும்.
வீர யுயுதானன் {சாத்யகி} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} எதிர்த்துச் சென்றிருக்கின்றனர். இவையாவும் சகுனியின் புத்தியில் தோன்றிய பகடையாட்டத்தாலேயே வந்திருக்கின்றன. (சூதாட்ட) சபையில் வெற்றியோ, தோல்வியோ ஏற்படவில்லை. இப்போது நாம் ஈடுபடும் இவ்விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும். சகுனி, குற்றமில்லாத எந்தப் பொருட்களைக் கொண்டு குருக்களின் சபையில் முன்பு விளையாடினானோ, எதை அவன் {சகுனி} பகடையே என்று கருதினானோ, அவையே உண்மையில் வெல்லப்பட முடியாதவையான கணைகளாக இருக்கின்றன. உண்மையில், ஓ! ஐயா {துரியோதனா}, கௌரவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இருந்தது பகடையல்ல, ஆனால் அஃது உங்கள் உடல்களைச் சிதைக்கவல்ல பயங்கரமான கணைகளாகும்.
எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, தற்போது இந்தப் போர் விளையாட்டில், போராளிகளே சூதாடிகள் என்றும், இந்தக் கணைகளே பகடையென்றும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனே பணயம் என்றும் ஐயமில்லாமல் அறிவாயாக. உண்மையில் எதிரியுடனான நமது இன்றைய விளையாட்டில், ஜெயத்ரதனே பெரும்பணயமாவான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் நம் உயிரையே துச்சமாக மதித்து, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய பாதுகாப்புக்கான முறையான ஏற்பாடுகளைச் செய்வோமாக. தற்போது நாம் ஈடுபடும் விளையாட்டில், எங்குச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படுகிறானோ, அங்கேயே நாம் வெற்றியையோ, தோல்வியையோ அடைவோம். எனவே, வேகமாக அங்கே சென்று (ஜெயத்ரதனின்) பாதுகாவலர்களைக் காப்பாயாக. என்னைப் பொறுத்தவரை, பிறரை (ஜெயத்ரதனின் முன்னிலைக்கு) அனுப்பவும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைத் தடுக்கவும் நான் இங்கேயே நிற்பேன்” என்றார் {துரோணர்}.
ஆசானால் {துரோணரால்} இப்படி ஆணையிடப்பட்ட துரியோதனன், கடும் பணிக்கான (சாதனைக்காக) உறுதியான தீர்மானத்தை எடுத்து, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் ({துரோணரால்} சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு) வேகமாகச் சென்றான். அர்ஜுனனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களும், பாஞ்சால இளவரசர்களுமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், அந்நேரத்தில் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி குரு அணிவகுப்பின் ஓரங்களில் முன்னேறிச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்பு போரிடும் விருப்பத்தால் அர்ஜுனன் உமது படைக்குள் ஊடுருவிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இளவரசர்களான அந்த இருவரின் முன்னேற்றத்தைக் கிருதவர்மன் தடுத்தான் என்பதை நீர் நினைவில் கொண்டிருக்கலாம். இப்போதோ குரு மன்னன் {துரியோதனன்} தன் படையின் ஓரங்களில் செல்லும் அவர்களைக் கண்டான். பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் துரியோதனன், இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் அவ்விரு சகோதரர்களுடனும் கடும்போரில் ஈடுபடச் சற்றும் தாமதிக்கவில்லை.
க்ஷத்திரியர்களில் முதன்மையானோரும், புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவ்விருவரும், வளைக்கப்பட்ட தங்கள் விற்களுடன் அந்தப் போரில் துரியோதனனை எதிர்த்து விரைந்தனர். யுதாமன்யு இருபது {20} கணைகளால் துரியோதனனையும், நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான். எனினும், துரியோதனன் ஒரே கணையால் யுதாமன்யுவின் கொடிமரத்தை அறுத்தான். பிறகு உமது மகன் {துரியோதனன்} மற்றொரு கணையால் முன்னவனின் {யுதாமன்யுவின்} வில்லையும் அறுத்தான். அதன் பிறகும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு யுதாமன்யுவின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகும் அவன் நான்கு கணைகளால் பின்னவனின் {யுதாமன்யுவின்} நான்கு குதிரைகளைத் துளைத்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதாமன்யு, அந்தப் போரில் உமது மகனின் {துரியோதனனின்} நடு மார்பில் முப்பது {30} கணைகளை வேகமாக ஏவினான்.
கோபத்தால் தூண்டப்பட்ட உத்தமௌஜஸும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளைக் கொண்டு துரியோதனனின் தேரோட்டியைத் துளைத்து, அவனை {தேரோட்டியை} யமனுலகு அனுப்பி வைத்தான். பிறகு துரியோதனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் இளவரசனான உத்தமௌஜஸின் நான்கு குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் கொன்றான். அப்போது அந்தப் போரில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆன உத்தமௌஜஸ் தன் சகோதரனான யுதாமன்யுவின் தேரில் வேகமாக ஏறினான். தன் சகோதரனின் தேரில் ஏறிய அவன் {உத்தமௌஜஸ்}, கணைகள் பலவற்றால் துரியோதனனின் குதிரைகளைத் தாக்கினான். இதனால் கொல்லப்பட்ட அக்குதிரைகள் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துரியோதனனின்} குதிரைகள் விழுந்ததும், வீர யுதாமன்யு ஒரு வலிமைமிக்க ஆயுதத்தால் துரியோதனனின் வில்லை விரைவாக அறுத்து, மேலும் (மற்றொரு கணையால்) தோலாலான அவனது கையுறைகளையும் அறுத்தான்.
மனிதர்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, குதிரைகளற்ற, சாரதியற்ற தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பாஞ்சால இளவரசர்கள் இருவரையும் எதிர்த்துச் சென்றான். இப்படிக் கோபத்தில் முன்னேறி வரும் பகை நகரங்களை அழிப்பவனை {துரியோதனனைக்} கண்டு, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் தங்கள் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்தனர். அப்போது கதாயுதம் தரித்த துரியோதனன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடியதுமான அந்தத் தேரை அக்கதாயுதத்தால் பூமிக்குள் அழுத்தினான். எதிரிகளை எரிப்பவனான உமது மகன் {துரியோதனன்}, அந்தத் தேரை நொறுக்கிய பிறகு, குதிரைகளும், சாரதியுமற்ற அவன், மத்ரர்களின் மன்னனுடைய {சல்லியனின்} தேரில் விரைவாக ஏறினான். அதே வேளையில், வலிமைமிக்க இரு தேர்வீரர்களான, அந்தப் பாஞ்சால இளவசர்களில் முதன்மையான இருவரும் வேறு இரு தேர்களில் ஏறிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.
மீண்டும் பீமனிடம் தோற்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 130-கர்ணனுக்கு அஞ்சி உறங்காமல் தவித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் சென்ற பீமனை மீண்டும் தடுத்து, அவனுக்கு அறைகூவல் விடுத்த கர்ணன்; கர்ணனின் அலட்சியம்; மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கர்ணனின் வில்லை மீண்டும் அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று அவனையும் மார்பில் துளைத்தது; மற்றொரு தேரை அடைந்த கர்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதான அந்தப் போரில் போராளிகள் அனைவரும் கவலையில் நிறைந்து, பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, காட்டில் மதங்கொண்ட யானையை எதிர்த்துச் செல்லும் மற்றொரு யானையைப் போலப் பீமனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும்பலம் கொண்டவர்களான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவருக்கிடையில் அர்ஜுனனின் தேருக்கு அருகில் நடந்த அந்தப் போர் எவ்வாறு நடந்தது? இதற்கு முன்பு ஒரு முறை கர்ணன் போரில் பீமசேனனால் வெல்லப்பட்டான். எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனால் மீண்டும் பீமனை எதிர்த்து எவ்வாறு செல்ல முடிந்தது? பூமியின் தேர்வீரர்களில் மிகப் பெரியவனாக அறியப்படும் வலிமைமிக்கப் போர் வீரனான சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து பீமனாலும் எவ்வாறு செல்ல முடியும்? தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரையும், துரோணரையும் வெற்றிகொண்ட நிலையில், வில்லாளியான கர்ணனிடம் கொண்ட அச்சத்தினளவிற்கு வேறு எவரிடமும் அச்சம்கொள்ளவில்லை. உண்மையில், அவன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை நினைத்துக் கொண்டே, அச்சத்தால் தன் இரவுகளை உறக்கமில்லாமல் கழிக்கிறான். பிறகு, போரில் அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பீமனால் எவ்வாறு மோத முடியும்? உண்மையில், ஓ! சஞ்சயா, போரில் பின்வாங்காதவனும், சக்தியுடன் கூடிய பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ள வீரனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கர்ணனோடு பீமனால் எவ்வாறு போரிட முடியும்?
உண்மையில், அர்ஜுனனின் தேரருகே நடந்த அம்மோதலில் சூதனின் மகன் {கர்ணன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய அவ்விரு வீரர்களும், எவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டனர்? மேலும், (பாண்டவர்களுடனான) தன் சகோதரநிலை குறித்து முன்பே தெரிவிக்கப்பட்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} கருணையுள்ளவனுமாவான். குந்தியிடம் தான் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தால் [1], அவனால் {கர்ணனால்} எவ்வாறு பீமனுடன் போரிட முடியும்? பீமனைப் பொறுத்தவரையும் கூட, முன்பு சூதனின் மகனால் {கர்ணனால்} தன் மீது திணிக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்த அந்த வீரன் {பீமன்}, போரில் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சூதா {சஞ்சயா}, என் மகன் துரியோதனன், கர்ணன் பாண்டவர்கள் அனைவரையும் போரில் வென்று விடுவான் என நம்புகிறான். இழிந்தவனான என் மகன் போரில் எவனிடம் வெற்றி இருக்கிறது என நம்புகிறானோ அவன் {கர்ணன்}, பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனுடன் எவ்வாறு போரிட்டான்? என் மகன்கள் எவனை நம்பி அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் (பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்}) பகைமை கொண்டனரோ, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமன் எவ்வாறு போரிட்டான்? உண்மையில் அவனால் {கர்ணனால்} செய்யப்பட்ட பல்வேறு தீங்குகள் மற்றும் காயங்களை நினைவுகூர்ந்த பீமன் அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} எவ்வாறு போரிட்டான்? உண்மையில், முன்னர் ஒரே தேரில் தனியாகச் சென்று மொத்த உலகை அடக்கியவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமனால் எவ்வாறு போரிட முடிந்தது? (இயற்கையான) இரு காதுகுண்டலங்களுடன் பிறந்தவனான அந்தச் சூதனின் மகனுடன் பீமன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். எனவே, அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரையும், அவர்களில் வெற்றி அடைந்தவர் யார் என்பதையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமசேனன், ராதையின் மகனை {கர்ணனை} விட்டுவிட்டு, கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் எங்குள்ளனரோ அங்கே செல்ல விரும்பினான். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்ற போதே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அடர்த்தியான கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான்.
முழுதும் மலர்ந்த முளரியை {தாமரையைப்} போல அழகிய முகமுடையவனும், முறுவலால் மிளிர்ந்தவனுமான {சிரிப்பால் பிரகாசித்தவனுமான} வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் சென்றபோது பின்னவனை {பீமனை} அறைகூவி அழைத்தான். கர்ணன், “ஓ! பீமா, போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பிறகு, அர்ஜுனனைச் சந்திக்கும் விருப்பத்தால் ஏன் எனக்கு நீ முதுகைக் காட்டுகிறாய்? ஓ! பாண்டவர்களை மகிழ்விப்பவனே, குந்தியின் மகன் ஒருவனுக்கு இது சற்றும் பொருந்தாது. எனவே, நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நின்று உன் கணைகளால் என்னை மறைப்பாயாக” என்றான் {கர்ணன்}.
கர்ணனின் அந்த அறைகூவலைக் கேட்ட பீமசேனன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் தேரை சற்றே நகர்த்தி, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} {மீண்டும்} போரிடத் தொடங்கினான். சிறப்புமிக்கப் பீமசேனன் நேரான கணைமேகங்களைப் பொழிந்தான். கர்ணனைக் கொல்வதால் அந்தப் பகைமைகளுக்கு முடிவைக் கொண்டு வர விரும்பிய பீமன், கவசம் பூண்டவனும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், தனக்கு எதிரில் நின்று தனிப்போரில் ஈடுபடுபவனுமான அந்த வீரனை {கர்ணனை} பலவீனமடையச் செய்யத் தொடங்கினான். எண்ணற்ற கௌரவர்களைக் கொன்ற பிறகு, ஓ! ஐயா, எதிரிகளை எரிப்பவனும், பாண்டுவின் கோபக்கார மகனும், வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் மீது பல்வேறு கடும் கணைமாரிகளைப் பொழிந்தான். பெரும்பலம் கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, மதயானையின் நடையைக் கொண்ட அந்ந வீரனால் {பீமனால்} தொடுக்கப்பட்ட கணைமாரிகள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் சக்தியால் விழுங்கினான்.
அறிவின் உதவியைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (படை அறிவியலின்) ஆசானைப் போல அந்தப் போரில் திரியத் தொடங்கினான். ராதையின் கோபக்கார மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே இருந்தது, பெரும் சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனுக்குத் தன்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது. தங்களுக்கிடையிலான அந்தப் போரை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்த துணிச்சல்மிக்க வீரர்கள் பலருக்கு மத்தியில் குந்தியின் மகனால் {பீமனால்} கர்ணனின் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலச் சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கப் பீமன், அடையும் தொலைவுக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட கர்ணனின் நடுமார்பை வத்சதந்தங்கள் {கன்றின் பற்களைப் போன்ற தலை கொண்ட கணைகள்} பலவற்றால் துளைத்தான்.
மீண்டும் பீமசேனன், தங்கமயமானவையும், அழகிய சிறகுகளுடையவையும், கூர்முனை கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று [?] கணைகளால் சூத மகனின் வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். {பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள்} ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் {துளைத்தான்} [2]. விரைவில் கண்ணிமைப்பதற்குள் கர்ணனால் உண்டாக்கப்பட்ட கணைகளின் வலை பீமனின் தேரில் காணப்பட்டது. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளானவை, கொடிமரம், தேரோட்டி மற்றும் அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} கூடிய அந்தத் தேரை முழுமையாக மறைத்தது. பிறகு கர்ணன், பீமனின் ஊடுருவமுடியாத கவசத்தை அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான். சினத்தால் தூண்டப்பட்ட அவன் {கர்ணன்}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல நேரான கணைகள் பலவற்றால் பார்த்தனையே {பீமனையே} துளைத்தான்.
எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்தபடியே அச்சமில்லாமல் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} தாக்கினான். கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால் துளைக்கப்பட்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்த வீரப் பீமன், அம்மோதலில் கடும் சக்தி கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான முப்பத்திரண்டு பல்லங்களால் கர்ணனைத் துளைத்தான். எனினும், கர்ணன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனனைத் தன் கணைகளால் பதிலுக்குப் பெரும் அலட்சியத்துடனேயே மறைத்தான். உண்மையில் அம்மோதலில், ராதையின் மகன் {கர்ணன்}, பீமனுடன் மென்மையாகவே போரிட்டான், அதே வேளையில் பீமனோ, அவனது {கர்ணனின்} முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்து அவனுடன் மூர்க்கமாகப் போரிட்டான்.
கோபக்கார பீமனால் கர்ணனின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, ராதையின் மகன் மீது கணை மாரிகளை விரைவாக ஏவினான். அம்மோதலில் பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், கொஞ்சும் பறவைகளைப் போலக் கர்ணனின் அங்கங்கள் யாவிலும் பாய்ந்தன. பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கூர்முனை மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், சுடர்மிக்க நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தன. எனினும் கர்ணன், ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பதிலுக்குக் கடுங்கணைகளின் மாரியைப் பொழிந்தான். அப்போது விருகோதரன் {பீமன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தால் {கர்ணனால்} ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகள் தன்னை அடைவதற்கு முன்பே பல்லங்கள் பலவற்றால் அவற்றை வெட்டினான். எதிரிகளைத் தண்டிப்பவனும், விகர்த்தனன் {சூரியன்} மகனுமான கர்ணன், ஓ! பாரதரே, மீண்டும் பீமசேனனைத் தன் கணைமாரியால் மறைத்தான்.
அப்போது ஓ! பாரதரே, அம்மோதலில் கணைகளால் துளைக்கப்பட்ட பீமனை, தன் உடலில் நிமிர்ந்து நிற்கும் முட்களுடன் கூடிய முள்ளம்பன்றிக்கு ஒப்பாக நாங்கள் கண்டோம். தன் கதிர்களைப் பிடித்திருக்கும் சூரியனைப் போலவே அந்தப் போரில் வீரப் பீமன், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அக்கணைகளைப் பிடித்திருந்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடிய பீமசேனன், வசந்தகாலத்தில் மலர்களின் சுமையால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அசோக மரத்தைப் போலப் பிரகாசத்துடன் தெரிந்தான். அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனின் அந்த நடத்தையை வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கோபத்தில் சுழன்ற கண்களுடன் கூடிய அவன் {பீமன்} இருபத்தைந்து நாராசங்களால் கர்ணனைத் துளைத்தான். அதன்பேரில் கர்ணன், (தன் பக்கங்களில் தொங்கும்) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றுடன் கூடிய ஒரு வெண்மலையைப் போலத் தெரிந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்ட பீமசேனன், அப்போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்த சூதனின் மகனை {கர்ணனை} ஆறு கணைகளாலும், பிறகு எட்டு கணைகளாலும் துளைத்தான். பிறகு வீரப் பீமசேனன் சிரித்துக் கொண்டே மற்றொரு கணையால் கர்ணனின் வில்லை மீண்டும் விரைவாக அறுத்தான். மேலும் அவன் {பீமன்} தன் கணைகளால் கர்ணனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது தேரோட்டியையும் கொன்று, அதன் பிறகு, சூரியப்பிரகாசம் கொண்ட எண்ணற்ற நாராசங்களால் கர்ணனின் மார்பையும் துளைத்தான். சிறகுகள் படைத்த அக்கணைகள் கர்ணனின் உடலினூடாக ஊடுருவி, மேகங்களின் ஊடாகத் துளைத்துச் செல்லும் சூரியனின் கதிர்களைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தன் ஆண்மையில் செருக்குக் கொண்டிருந்தாலும், கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் வில்லும் அறுபட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து மற்றொரு தேருக்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.
கர்ணன் பீமனுக்கிடையில் பயங்கரப் போர்! – துரோண பர்வம் பகுதி – 131-மற்றொரு தேரில் ஏறி பீமனை எதிர்த்து மீண்டும் விரைந்த கர்ணன்; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கர்ணனாலும், திருதராஷ்டிரன் மகன்களாலும் பாண்டவர்கள் இதுவரை அடைந்த துன்பங்களை எண்ணிப் பார்த்து மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கௌரவப் படையில் ஏற்பட்ட பேரழிவு…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, என் மகன்கள் எவனிடம் வெற்றிக்கான தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளனரோ அந்தக் கர்ணன் களத்தில் இருந்து புறங்காட்டிச் செல்வதைக் கண்டு, உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் சக்தியில் பெருமை கொண்ட பீமன் எவ்வாறு போரிட்டான்? கர்ணனும் இதன் பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, அந்தப் போரில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பீமசேனனைக் கண்டு என்ன செய்தான்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முறையாக அமைக்கப்பட்ட மற்றொரு தேரில் ஏறிய கர்ணன், சூறாவளியால் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்துடன் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான்.(3) சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (கர்ண) நெருப்பில் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே {ஆகுதியாகவே) பீமசேனனைக் கருதினர்.(4) வில்நாண் கயிற்றின் சீற்றமிக்க நாணொலி மற்றும் தன் உள்ளங்கைகளின் பயங்கர ஒலிகள் ஆகியவற்றுடன் கூடிய ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனின் தேரை நோக்கி அடர்த்தியான கணைமாரியை ஏவினான்.(5)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வீரக் கர்ணனுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் மீண்டும் ஒரு பயங்கரமான மோதல் நடந்தது.(6) கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு போர் வீரர்களும், (கோபம்நிறைந்த) தங்கள் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரித்துவிடத் தீர்மானித்தவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(7) கோபத்தால் சிவந்திருந்த கண்களுடன் கூடிய அவ்விருவரும், இரண்டு பாம்புகளைப் போலச் சீற்றத்துடன் மூச்சுவிட்டனர். எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி சிதைத்தனர்.(8) உண்மையில் அவர்கள், பெரும் சுறுசுறுப்புக் கொண்ட இரு பருந்துகளைப் போல, அல்லது கோபத்தால் தூண்டப்பட்ட இரு சரபங்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர்.(9)
அப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், பகடையாட்டத்தின் போதும், நாடுகடத்தப்பட்டுக் காட்டில் இருந்தபோதும், விராடனின் நகரத்தில் வசித்த போதும் தான் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தும்,(10) செழிப்பிலும், ரத்தினங்களிலும் பெருகியிருந்த தங்கள் அரசு உமது மகன்களால் களவாடப்பட்டது, உம்மாலும், சூதனின் மகனாலும் {கர்ணனாலும்} பாண்டவர்களுக்கு எண்ணற்ற தீங்குகள் இழைக்கப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டும்,(11) அப்பாவியான குந்தியை நீர் அவளது மகன்களுடன் சேர்த்து எரிக்கச் சதி செய்த உண்மையை நினைத்தும், சபைக்கு மத்தியில் அந்த இழிந்தவர்களின் {திருதராஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் கர்ணன் ஆகியோரின்} கைகளில் கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த இன்னல்கள்,(12) துச்சாசனனால் அவளது குழல்கள் பற்றப்பட்டது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன், “உன் கணவர்கள் இறந்துவிட்டதால் {கணவனற்றவளானதால்}, நீ மற்றொரு கணவனைக் கொள்வாயாக; நரகத்தில் மூழ்கிவிட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் எள்ளுப்பதர்களைப் போன்றவர்களாவர்” என்ற அளவுக்குப் பேசிய பேச்சு ஆகியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டும்,(13, 14) ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது முன்னிலையில் கௌரவர்கள் உதிர்த்த பிற வார்த்தைகள், உமது மகன்கள் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தங்கள் அடிமையாய் அடைந்து அனுபவிக்க விரும்பிய உண்மை,(15) பாண்டுவின் மகன்கள் மான் தோலுடுத்தி காட்டுக்குச் செல்ல முற்படுகையில், கர்ணன் அவர்களிடம் பேசிய கடுஞ்சொற்கள்,(16) கோபம் நிறைந்தவனும், செழிப்பாக இருந்தவனும், மூடனுமான உமது மகன் {துரியோதனன்}, வருந்திக்கொண்டிருந்த பிருதையின் {குந்தியின்} மகன்களை வெறும் புற்களாக நினைத்து மகிழ்ச்சியோடு தற்புகழ்ச்சியில் ஈடுபட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்தும்,(17) உண்மையில் அறம்சார்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பீமன் இவற்றையும், குழந்தை பருவத்தில் இருந்து தானடைந்த இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, தன் உயிரையே துச்சமாக மதித்தான்.(18)
பாரதக் குலத்தின் புலியான அந்த விருகோதரன் {பீமன்}, தங்கமயமான கைப்பிடி கொண்டதும், வெல்லமுடியாததும், வல்லமைமிக்கதுமான தனது வில்லை வளைத்து, தன் உயிரை முற்றிலும் துச்சமாக மதித்து, கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) அந்தப் பீமன், கல்லில் கூராக்கப்பட்ட பிரகாசமான கணைமாரியை ஏவி சூரியனின் ஒளியையே மறைத்தான்.(20) எனினும் அந்த அதிரதன் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே, கல்லில் கூராக்கப்பட்டவையும், சிறகுபடைத்தவையுமான தன் கணைகளால், பீமசேனனின் அந்தக் கணைமாரியை விரைவாகக் கலங்கடித்தான்.(21) பிறகு, பெரும் பலமும், வலிமைமிக்கக் கரங்களும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான அதிரதன் மகன் {கர்ணன்}, ஒன்பது கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.(22) அங்குசத்தால் தாக்கப்பட்ட யானையைப் போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, அச்சமற்ற வகையில் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(23) எனினும் கோபத்துடன் கூடிய கர்ணன், மதம் கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, வேகமாகவும், சக்தியுடனும் தன்னை நோக்கி இப்படி விரைந்துவரும் அந்தப் பாண்டவக் காளையை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(24)
நூறு பேரிகைகளின் ஒலிக்கு ஒப்பான வெடிப்பொலி கொண்ட தன் சங்கை முழங்கிய கர்ணன், ஆர்ப்பரிக்கும் கடலைப் போலப் பீமனை ஆதரித்து வந்த படையை மகிழ்ச்சியாகக் கலங்கடித்தான்.(25) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொண்ட தனது படை கர்ணனால் இப்படிக் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட பீமன், முன்னவனை {கர்ணனை} அணுகி தன் கணைகளால் அவனை மறைத்தான்.(26) பிறகு கர்ணன் அன்னங்களின் நிறங்கொண்ட தன் குதிரைகளை, கரடிகளின் நிறங்கொண்ட பீமனுடையவையுடன் {பீமனின் குதிரைகளுடன்} கலக்கச் செய்து, தன் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) கரடிகளின் நிறத்தையும், காற்றின் வேகத்தையும் கொண்ட அக்குதிரைகள், அன்னங்களின் நிறத்தைக் கொண்ட கர்ணனுடையவையுடன் {கர்ணனின் குதிரைகளுடன்} கலந்ததைக் கண்டு உமது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(28) காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இப்படி ஒன்றாகக் கலந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஒன்று கலந்திருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(29)
கர்ணன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட உமது படையின் பெரும் தேர்வீரர்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கினர்.(30) அவர்கள் போரிட்ட போர்க்களமானது விரைவில் யமனின் கொற்றங்களைப் போலப் பயங்கரமாக மாறியது. உண்மையில் அஃது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} நகரத்தைப் போலக் காண்பதற்கு மிகப் பயங்கரமாக மாறியது.(31) உமது படையின் பெரும் தேர்வீரர்கள், ஏதோ விளையாட்டுக் களத்தின் பார்வையாளர்களைப் போல அக்காட்சியைப் பார்த்தும், அந்தப் பயங்கர மோதலில் அந்த இருவரில் எவரும் மற்றவர் மேல் ஆதிக்கம் பெறுவதைக் காணவில்லை.(32) ஓ! மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள், உம்முடைய மற்றும் உமது மகன்களின் தீய கொள்கையின் விளைவால் அவ்விரு வீரர்களின் வலிமைமிக்க ஆயுதங்களின் மோதல்களையும், அந்தக் கலப்பையும் மட்டுமே கண்டனர்.(33) எதிரிகளைக் கொல்பவர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் மறைப்பதையே தொடர்ந்தனர். அற்புத ஆற்றலைக் கொண்ட அவ்விருவரும் தங்கள் கணைமாரியால் ஆகாயத்தையே நிறைத்தனர்.(34)
வலிமைமிக்க அவ்விரு தேர்வீரர்களும் ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பி ஒருவரின் மேல் ஒருவர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்ப்பதற்கு மிக அழகாக மாறினர்.(35) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க விண்கற்களைக் கொண்டுள்ளதைப் போல ஆகாயத்தைப் பிரகாசமாக்கினர்.(36) அவ்விரு வீரர்களாலும் ஏவப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், கூதிர்காலத்து வானில் திரியும் உற்சாகமான நாரைகளின் வரிசைகளைப் போலத் தெரிந்தன.(37)
அதேவேளையில், , கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} போரில் ஈடுபடுவதைக் கண்டு, அந்தச் சுமையானது பீமன் தாங்கிக் கொள்வதற்கு மிகப் பெரியது எனக் கருதினர்.(38) ஒருவரின் கணைகளை மற்றவர் கலங்கடிப்பதற்காகக் கர்ணனும், பீமனும் ஒருவர் மேல் ஒருவர் இக்கணைகளை ஏவியபோது, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்கள் பலர் இதனால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(39) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் அப்படி விழுந்ததன் விளைவாலும், விழுந்த உயிரினங்கள் உயிரை இழந்ததாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் படையில் ஒரு பேரழிவு ஏற்பட்டது.(40) விரைவில் அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களால் மறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(41)
பீமனால் மலைத்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 132-பீமனைப் புகழ்ந்த திருதராஷ்டிரன்; கர்ணனை மீண்டும் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆக்கிய பீமன்; கர்ணனைக் காக்கத் தன் தம்பி துர்ஜயனை அனுப்பிய துரியோதனன்; கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துர்ஜயனைக் கொன்ற பீமன்; துயரால் அழுத கர்ணன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமசேனன், கர்ணனுடன் போரிடுவதில் செயல்பாட்டு ஒருமையுடனும், சக்தியுடனும் வென்றதால், நான் அவனது ஆற்றலை மிக அற்புதமானதாகக் கருதுகிறேன்.(1) உண்மையில், ஓ! சஞ்சயா, யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய தேவர்களையே தடுக்க வல்லவனும், அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவனுமான அந்தக் கர்ணனால், சுடர்மிகு பிரகாசத்துடன் கூடியவனும், பாண்டுவின் மகனுமான பீமனைப் போரில் ஏன் வெல்ல முடியவில்லை என்பதை எனக்குச் சொல்வாயாக.(2,3) உயிரையே பணயமாக வைத்த அவர்களுக்குள் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்வாயாக. அவ்விருவருக்குள்ளான மோதலில், உண்மையில், இருவருக்கும் வெற்றி அடையத்தக்க தொலைவிலேயே இருக்கிறது, அதே போல இருவரும் தோற்கவும் வாய்ப்பிருக்கிறது [1].(4)ஓ! சூதா {சஞ்சயா}, போரில் கர்ணனை அடைந்த என் மகன் சுயோதனன் {துரியோதனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்களை எப்போதும் வெல்லத் துணிகிறான்.(5) எனினும், பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனால் போரில் கர்ணன் அடையும் தொடர் தோல்விகளைக் கேட்டு, எனக்கு மயக்கமே வருவதாகத் தெரிகிறது.(6) என் மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் விளைவால் கௌரவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வலிமைமிக்க வில்லாளிகளான பிருதையின் {குந்தியின்} மகன்களை வெல்வதில் கர்ணன் வெற்றி அடையவே மாட்டான்.(7) கர்ணன், பாண்டுவின் மகன்களுடன் போரிட்ட அனைத்துப் போர்களிலும், பின்னவர்களே {பாண்டவர்களே} அவனை {கர்ணனை} எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.(8) உண்மையில் அந்தப் பாண்டவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஐயோ, என் தீய மகன் துரியோதனன் இஃதை அறியவில்லையே.(9) கருவூலங்களின் தலைவனை {குபேரனைப்} போல இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} செல்வத்தைக் களவாடிய சிறுமதி கொண்ட என் மகன் {துரியோதனன்}, (மலைகளில்) தேனைத் தேடுபவனைப் போல வீழ்ச்சியைக் காணாதிருக்கிறான்.(10) வஞ்சகம் அறிந்த அவன் {துரியோதனன்}, அதைத் திரும்பப் பெற இயலாத அளவுக்குத் தன்னுடையது எனக் கருதி, எபோதும் பாண்டவர்களை அவமதிக்கிறான் [2].(11) தூய்மையற்ற ஆன்மா கொண்ட நானும், உயர் ஆன்ம பாண்டுவின் மகன்கள் அறநெறி நோற்பவர்களாக இருப்பினும், என் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் மனவுறுத்தல் கொள்ளவில்லை.(12)பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரன், சமாதானத்தை விரும்புபவனாகவே தன்னை எப்போதும் காட்டிக் கொண்டான். எனினும் என் மகன்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} திறனற்றவனாகக் கருதி, அவனை இகழ்ந்தனர்.(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், அந்தத் துயரங்கள் அனைத்தையும் (பாண்டவர்களால் தாக்குப்பிடிக்கப்பட்ட) தீங்குகள் அனைத்தையும் மனத்தில் கொண்டு, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டான்.(14) எனவே, ஓ! சஞ்சயா, போர்வீரர்களில் முதன்மையான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரும், ஒருவர் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று கொல்லவிரும்பிய இரண்டு காட்டு யானைகளுக்கு ஒப்பாகக் கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையிலான போர் எவ்வாறு நடந்தது என்பதைக் கேட்பீராக.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன் ஆற்றலை முன்னெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கோபக்கார பீமனை முப்பது கணைகளால் துளைத்தான்.(17) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கூர்முனை கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் பீமனைத் தாக்கினான்.(18) எனினும், பீமன், தன்னைத் தாக்குவதில் கர்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான். மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து கீழே பூமியில் விழ வைத்தான்.(19)
அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய விகர்த்தனன் மகன், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை ஏந்தினான்.(20) காலனின் இரண்டாவது ஈட்டியைப் போல இருந்த அந்தக் கடும் ஈட்டியைப் பிடித்து உயர்த்திக் குறி பார்த்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமனின் உயிரை எடுக்கப் போதுமான பலத்துடன் அதைப் பீமசேனன் மீது ஏவினான். பெரும்பலம் கொண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, வஜ்ரத்தை {இடியை} ஏவும் இந்திரனைப் போல அந்த ஈட்டியை ஏவி பெருமுழக்கம் செய்தான். அம்முழக்கத்தைக் கேட்ட உமது மகன்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(21-23) எனினும் பீமன், கர்ணனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அவ்வீட்டியை ஏழு கணைகளைக் கொண்டு ஆகாயத்திலேயே வெட்டினான்.(24) அப்போதுதான் சட்டையுரிந்து வந்த பாம்புக்கு ஒப்பான அவ்வீட்டியை வெட்டிய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடைய உயிரை எடுக்கப் பார்ப்பவனைப் போலப் பெரும் கோபத்துடன் அந்தப் போரில், மயிலின் இறகுகள் மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், ஒவ்வொன்றும் யமனின் கோலுக்கு ஒப்பானவையுமான பல கணைகளை ஏவினான்.(25, 26)
பெரும் சக்தியைக் கொண்ட கர்ணனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, அதைப் பலத்துடன் வளைத்துக் கணைகள் பலவற்றை ஏவினான்.(27) எனினும், பாண்டுவின் மகன் {பீமன்}, ஒன்பது நேரான கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் வெட்டினான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, வசுசேனனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளை வெட்டிய பீமன், ஓ! ஏகாதிபதி, ஒரு சிங்கத்தைப் போலப் பெருமுழக்கம் செய்தான். பருவ காலத்தில் பசுவுக்காக முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளைப் போல, அல்லது ஒரே இறைச்சித் துண்டுக்காக முழங்கும் இரு புலிகளைப் போல, அடுத்தவனின் மட்டுமீறிய தாமதத்தைக் காண விரும்பி அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(28-30) சில நேரங்களில் அவர்கள் மாட்டுக் கொட்டகையிலுள்ள இரு வலிமைமிக்கக் காளைகளைப் போல ஒருவரையொருவர் கோபக் கண்களால் பார்த்துக் கொண்டனர். பிறகு இரு பெரும் யானைகள் தங்கள் தந்தங்களின் கூர்முனைகளைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போல, முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து கணைகளை ஏவி ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணை மாரியால் ஒருவரையொருவர் எரித்த அவர்கள், பெரும் கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒருவரின் மேலொருவர் தங்கள் ஆற்றலைச் செலுத்தினர். (31,32) சிலநேரங்களில் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்டும், சில நேரங்களில் தங்கள் சங்குகளை முழங்கிக் கொண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர்.(33)
அப்போது பீமன், கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, சங்கு போன்ற வெண்மையாக இருந்த பின்னவனின் {கர்ணனின்} குதிரைகளைத் தன் கணைகளின் மூலம் யமனுலகு அனுப்பினான்.(34) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியையும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகு, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கப்பட்டு, அந்தப் போரில் (கணைகளால்) மறைக்கப்பட்டிருந்த விகர்த்தனன் மகன் கர்ணன், பெரும் துன்பத்தில் மூழ்கினான். பீமனின் கணைமாரியால் மலைத்துப் போன அவன் {கர்ணன்}, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(35, 36)
துன்பம் நிறைந்த அவல நிலையில் கர்ணன் நிறுத்தப்பட்டதைக் கண்ட மன்னன் துரியோதனன், கோபத்தால் நடுங்கி, (தன் தம்பியான) துர்ஜயனிடம், “ஓ! துர்ஜயா, செல்வாயாக. அங்கே அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனை {கர்ணனை} விழுங்கப் போகிறான். அந்தத் தாடியற்ற அலியை {பீமனை} விரைவாகக் கொன்று, கர்ணனை வலுப்படுத்துவாயாக” என்றான்.(37, 38) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் துர்ஜயன், துரியோதனனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி (கர்ணனுடன்) போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்து கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(39) அந்தத் துர்ஜயன், பீமனை ஒன்பது கணைகளாலும், அவனது குதிரைகளை எட்டாலும், அவனது சாரதியை ஆறாலும், அவனது கொடிமரத்தை மூன்றாலும் தாக்கி, மீண்டும் பீமனை ஏழாலும் {ஏழு கணைகளாலும்} தாக்கினான்.(40)
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், தன் கணைகளால் துர்ஜயனின் உயிர் நிலைகளையும், அவனது குதிரைகளையும், சாரதியையும் துளைத்து, அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தான் [3].(41) அப்போது துயரால் அழுத கர்ணன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், பாம்பைப் போல நெளிந்தபடி பூமியில் கிடந்த அந்த உமது மகனை {துர்ஜயனை} வலம்வந்தான்.(42) பீமன், தனது கொடிய எதிரியான கர்ணனைத் தேரற்றவனாகச் செய்த பிறகு, சிரித்துக் கொண்டே கணைகளால் அவனை மறைத்து, எண்ணற்ற கூர்முனைகளைக் கொண்ட சதாக்னியைப் போல அவனை ஆக்கினான்.(43) எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த அதிரதன் கர்ணன், இப்படிக் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போரில் தன்னுடன் போரிடும் பீமனைத் தவிர்க்கவில்லை” {என்றான் சஞ்சயன்}.(44)
போரை விட்டோடிய கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 133-பீமனால் தோற்கடிக்கப்பட்டுத் தேரை இழந்த கர்ணன், மற்றொரு தேரில் ஏறி வந்து மீண்டும் பீமனுடன் மோதியது; மீண்டும் தேரையிழந்த கர்ணன்; துரியோதனன் தன் தம்பி துர்முகனிடம் கர்ணனுக்குத் தேரளிக்கும்படி அனுப்பியது; துர்முகனைக் கொன்ற பீமன்; கர்ணனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; பீமனின் வலிமையால் பீடிக்கப்பட்டுப் போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமனால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனான தேரற்ற கர்ணன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, பாண்டுவின் மகனை {பீமனை} வேகமாகத் துளைக்க ஆரம்பித்தான். (1) தங்கள் தந்தங்களால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு பெரும் யானைகளைப் போல அவர்கள், முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) அப்போது கணைப்பொழிவால் பீமனைத் தாக்கி பெருமுழக்கம் செய்த கர்ணன், மீண்டும் அவனை {பீமனை} மார்பில் தாக்கினான்.(3) எனினும் பதிலுக்குப் பீமன், பத்து நேரான கணைகளால் கர்ணனைத் தாக்கி, மீண்டும் அவனை {கர்ணனை} இருபது நேரான கணைகளால் தாக்கினான்.(4) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஒன்பது கணைகளால் பீமனின் நடுமார்பைத் துளைத்து, ஒரு கூரிய கணையால் பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தையும் தாக்கினான்.(5) பதிலுக்குப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, வலிமைமிக்க யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போல, அல்லது குதிரையைச் சாட்டையால் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணனை அறுபத்து மூன்று {63} கணைகளால் துளைத்தான்.(6)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட வீரக் கர்ணன், நாவால் தன் கடைவாயை நனைத்து, சினத்தால் கண்கள் சிவந்தான்.(7) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணன், வஜ்ரத்தை ஏவும் இந்திரனைப் போல, பீமசேனனின் அழிவுக்காக அனைத்தையும் துளைக்கவல்ல ஒரு கணையை அவன் {பீமன்} மீது ஏவினான்.(8) அழகிய இறகுகளைக் கொண்டதும், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்டதுமான அந்தக் கணை, அந்தப் போரில் பார்த்தனை {பீமனைத்} துளைத்துச் சென்று பூமிக்குள் ஆழ மூழ்கியது.(9)
அப்போது கோபத்தால் கண்கள் சிவந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முழுதாக நான்கு முழம் நீளம் கொண்டதும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானதும், ஆறு பக்கங்களைக் கொண்டதுமான கனமிக்க ஒரு கதாயுதத்தை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான். உண்மையில், இந்திரன் தன் வஜ்ரத்தால் அசுரர்களைக் கொல்வதைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாரதக் குலத்துக் காளை {பீமன்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} குதிரைகளை அக்கதாயுதத்தாலேயே கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், க்ஷுரப்ரங்கள் இரண்டைக் கொண்டு கர்ணனின் கொடிமரத்தை அறுத்தான்.(10-12) பிறகு அவன் {பீமன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளைக் கொண்டு தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியைக் கொன்றான். குதிரைகளற்ற, சாரதியற்ற, கொடிமரமற்ற அந்தத் தேரைக் கைவிட்ட கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற நிலையிலேயே தன் வில்லை வளைத்தபடி பூமியில் நின்றான். தேரை இழந்தாலும் தொடர்ந்து எதிரியைத் தடுத்த அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(13-14)
மனிதர்களில் முதன்மையான அந்த அதிரதன் மகன் {கர்ணன்} தேரிழந்து இருப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் தம்பியான) துர்முகனிடம், “ஓ! துர்முகா, ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனால் தன் தேரை இழந்திருக்கிறான்.(15-16) ஓ! பாரதா {துர்முகா} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனுக்கு {கர்ணனுக்கு} ஒரு தேரை அளிப்பாயாக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துர்முகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}(17), கர்ணனை நோக்கி வேகமாக விரைந்து, தன் கணைகளால் பீமனை மறைத்தான். அந்தப் போரில் துர்முகன், சூதனின் மகனை ஆதரிக்க விரும்புவதைக் கண்ட(18) வாயு தேவனின் மகன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்து தன் கடைவாயை {நாவால்} நனைக்கத் தொடங்கினான். பிறகு தன் கணைகளால் சிறிது நேரம் கர்ணனைத் தடுத்த(19) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, விரைவாகத் துர்முகனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். அக்கணத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் முனை கொண்ட ஒன்பது நேரான(20) கணைகளால் பீமன் துர்முகனை யமலோகம் அனுப்பிவைத்தான் [1].துர்முகன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இளவரசனின் {துர்முகனின்} தேரில் ஏறிய அதிரதன் மகன் {கர்ணன்} சூரியனைப் போலச் சுடர்விட்டபடி பிரகாசமாகத் தெரிந்தான். (கணைகளால்) தன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, குருதியால் குளித்த மேனியுடன் களத்தில் கிடக்கும் துர்முகனைக் கண்ட கர்ணன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் போரிடுவதிலிருந்து ஒருக்கணம் விலகினான். வீழ்ந்த அந்த இளவரசனை {துர்முகனை} வலம்வந்து, அவனை {துர்முகனை} அங்கேயே விட்ட(21-23) வீரக் கர்ணன், நீண்ட நெடிய அனல்மூச்சுகளை விட்டு {அடுத்து} என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கழுகின் இறகுகளைக் கொண்ட பதினான்கு {14} நாராசங்களைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கச் சிறகுள் மற்றும் பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டனவும், குருதியைக் குடிப்பனவுமான அக்கணைகள், பத்து திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே ஆகாயத்தில் பறந்து சென்று சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தைத் துளைத்து அவனது உயிர்க்குருதியைக் குடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(24-26) காலனால் ஏவப்பட்டுப் பொந்துக்குள் தங்கள் பாதி உடல்கள் நுழைந்த நிலையிலிருக்கும் கோபக்காரப் பாம்புகளைப் போல, ஓ! ஏகாதிபதி, அவை {அந்தக் கணைகள்} அவனது உடலை ஊடுருவி பூமிக்குள் மூழ்கிப் பிரகாசமாகத் தெரிந்தன.(27)
அப்போது அந்த ராதையின் மகன் {கர்ணன்} ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பதினான்கு கடுங்கணைகளால் பதிலுக்குப் பீமனைத் துளைத்தான். கடும் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் பீமனின் வலக்கரத்தைத் துளைத்தபடி(28, 29) மரத்தோப்புக்குள் நுழையும் பறவைகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பூமியைத் அக்கணைகள், அஸ்த மலைகளுக்குச் செல்லும் சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(30) அந்தப் போரில் அனைத்தையும் துளைக்கவல்ல அக்கணைகளால் துளைக்கப்பட்ட பீமன்(31), நீரோடைகளை வெளியிடும் ஒரு மலையைப் போல அபரிமிதமான இரத்த ஓடைகளைச் சிந்தத் தொடங்கினான். பிறகு பீமன் கருடனின் வேகத்தைக் கொண்ட மூன்று கணைகளால் சூதன் மகனை {கர்ணனைப்} பதிலுக்குத் துளைத்து, மேலும் பின்னவனின் {கர்ணனின்} தேரோட்டியையும் ஏழு கணைகளால் துளைத்தான்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் வலிமையால் இப்படிப் பீடிக்கப்பட்ட கர்ணன், மிகவும் துன்புற்றவனானான்.(32-33) பிறகு அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, போரைக் கைவிட்டு, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் தப்பி ஓடினான் [2]. எனினும், அதிரதனான பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை வளைத்தபடியே அந்தப் போரில் நிலைத்து, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}(34)
கௌரவர்கள் ஐவரைக் கொன்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 134-கர்ணன் மற்றும் அவனை நம்பிய துரியோதனன் ஆகியோரைக் குறித்து சஞ்சயனிடம் புலம்பி, பீமனின் ஆற்றலை வியந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; கர்ணனின் தோல்வியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத துரியோதனின் தம்பிகள் ஐவர் பீமனை எதிர்த்துச் சென்றது; அவர்களைக் கண்ட கர்ணன் மீண்டும் திரும்பிப் பீமனுடன் போரிட்டது; கர்ணனைத் தடுத்துக் கொண்டே அந்தக் கௌரவர்கள் ஐவரையும் கொன்ற பீமன்; கர்ணனைக் கோபத்துடன் வெறித்துப் பார்த்த பீமன்..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன். அதிரதன் மகன் {கர்ணன்} தீர்மானத்துடன் போரிட்டாலும், பாண்டுவின் மகனை {பீமனை} வெல்ல முடியாததால், அந்தப் பயனற்ற முயற்சிக்கு ஐயோ.(1) கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்கள் அனைவரையும் போரில் வெல்லத்தக்கவனாகக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்கிறான். “கர்ணனைப் போன்ற மற்றொரு போர்வீரனை இவ்வுலகில் நான் கண்டதில்லை” என்று துரியோதனன் பேசுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (2)
உண்மையில், ஓ! சூதா {சஞ்சயா}, முன்னர்த் துரியோதனன் என்னிடம், “கர்ணன், வலிமைமிக்க வீரனும், உறுதிமிக்க வில்லாளியும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனுமாவான். அந்த வசுசேனனை {கர்ணனை} நான் என் கூட்டாளியாகக் கொண்டால், தேவர்களே எனக்கு ஈடாகமாட்டார்கள் எனும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பலவீனமானவர்களும், கொடூரர்களுமான பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?” என்று {துரியோதனன்} சொல்வது வழக்கம். எனவே, ஓ! சஞ்சயா, தோற்கடிக்கப்பட்டு, விஷத்தை இழந்த பாம்பைப் போலத் தெரிந்த கர்ணன், போரில் இருந்து ஓடியதைக் கண்ட துரியோதனன் என்ன சொன்னான் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உணர்வுகளை இழந்தவனான துரியோதனன், சுடர்மிக்க நெருப்புக்குள் அனுப்பப்படும் ஒரு பூச்சியைப் போல, போரை அதிகம் அறியாதவனும், உதவியற்றவனுமான துர்முகனை அந்தப் பயங்கர மோதலுக்குள் அனுப்பினானே.
ஓ! சஞ்சயா, அஸ்வத்தாமன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோர் ஒன்றுசேர்ந்தாலும், பீமசேனனின் எதிரே நிற்க முடியாதே. பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான பயங்கர வலிமை மற்றும் மருத்தனின் சக்தி ஆகியவற்றைக் கொண்ட பீமனையும், அவனது கொடூர நோக்கங்களையும் அவர்களும் {அஸ்வத்தாமன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகியோரும்} அறிவார்கள். பீமனின் வலிமை, கோபம், சக்தி ஆகியவற்றை அறிந்த அந்தப் போர் வீரர்கள், யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பானவனும், கொடூர செயல்களைச் செய்பவனுமான அந்த வீரனின் {பீமனின்} கோபத்தைத் தூண்டுவார்களா? சூதனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கர்ணன் மட்டுமே, தன் கரங்களின் ஆற்றலை நம்பி, பீமசேனனை அலட்சியமாகக் கருதி அவனுடன் போரிட்டதாகத் தெரிகிறது.(3-10)
புரந்தரன் {இந்திரன்} ஓர் அசுரனை வென்றதைப் போலக் கர்ணனைப் போரில் வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, போரில் வேறு எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவே இருக்கிறான். துரோணரையே கலங்கடித்து, அர்ஜுனனைத் தேடி என் படைக்குள் தனியாக நுழைந்த அந்தப் பீமனை, உயிர்வாழும் நம்பிக்கை கொண்ட எவன் அணுகுவான்? உண்மையில், ஓ! சஞ்சயா, பீமனின் முகத்துக்கு நேராக நிற்கும் துணிவு கொண்ட வேறு எவன் இருக்கிறான்?(11-13) கையில் உயர்த்தப்பட்ட வஜ்ரத்துடன் கூடிய பெரும் இந்திரனின் முன்பு நிற்க அசுரர்களில் எவன் துணிவான்? [1] ஒரு மனிதன், இறந்தவர்களின் மன்னனுடைய {யமனின்} வசிப்பிடத்தில் நுழைந்த பிறகும் திரும்பலாம்.(14) ஆயினும், எவனாலும் பீமசேனனிடம் மோதிவிட்டு திரும்ப முடியாது. பலவீனமான ஆற்றலுடனும், அறிவில்லாமலும், கோபக்கார பீமசேனனை எதிர்த்துச் செல்வோர் சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போன்றவராவர்.-கோபமும், மூர்க்கமும் கொண்ட பீமன், என் மகன்களைக் கொல்வது குறித்துக் குருக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சபையில் சொன்னதை நினைவுகூர்ந்தும், கர்ணனின் தோல்வியைக் கண்டும், அச்சத்தாலேயே துச்சாசனனும், அவனது தம்பிகளும் பீமனுடன் மோதவில்லை என்பதில் ஐயமில்லை.(15-17) ஓ! சஞ்சயா, “கர்ணனும், துச்சாசனனும், நானும் போரில் பாண்டவர்களை வெல்வோம்” என்று (இவ்வார்த்தைகளை) மீண்டும் மீண்டும் சபையில் சொன்ன அந்த என் தீய மகன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்குப் பொருத்தமானதை [2] மறுத்ததன் விளைவால், பீமனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதையும், அவனது தேரை இழக்கச் செய்ததையும் கண்டு துயரால் எரிக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை.(18, 19) கவசம்பூண்ட தனது தம்பிகள், தன் குற்றத்தின் விளைவால் போரில் பீமசேனனால் கொல்லப்படுவதைக் கண்டு, என் மகன் {துரியோதனன்} துயரால் எரிகிறான் என்பதில் ஐயமில்லை.(20)கோபத்தால் தூண்டப்பட்டவனும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவனும், போரில் காலனைப் போலவே நிற்பவனும், பாண்டுவின் மகனுமான பீமனை உயிரில் விருப்பமுள்ள எவன்தான் பகைமையுடன் எதிர்த்துச் செல்வான்?(21) வடவாக்னியின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து ஒரு மனிதன் தப்பிவிடலாம், ஆனால், பீமனின் முகத்துக்கு எதிரில் இருந்து எவனாலும் தப்ப முடியாது என்றே நான் நம்புகிறேன்.(23) உண்மையில், பார்த்தனோ, பாஞ்சாலர்களோ, கேசவனோ, சாத்யகியோ போரில் கோபத்தால் தூண்டப்படும்போது, அவர்கள் (தங்கள்) உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா} என் மகன்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றவே” என்றான் {திருதராஷ்டிரன்}.(24)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, தற்போதைய பேரழிவைக் கருத்தில் கொண்டு இப்படித் துயருறும் நீரே இவ்வுலகத்தின் அழிவுக்கான வேர் {காரணம்} என்பதில் ஐயமில்லை.(25) உமது மகன்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த நீரே இந்தக் கடும் பகைமையைத் தூண்டியவராவீர். (நலம் விரும்பும் நண்பர்களால்) தூண்டப்பட்டாலும், மரணமடைய விதிக்கப்பட்ட மனிதனைப் போல உகந்த மருந்தை நீர் ஏற்க மறுத்தீர்.(26) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, செரிக்கப்பட முடியாத மிகக் கடுமையான நஞ்சைப் பருகிய நீர், இப்போது அதன் விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீராக.(27) போராளிகள் தங்களால் முடிந்த வரை சக்தியுடன் போரிடுகின்றனர்; இருப்பினும் அவர்களை நீர் நிந்திக்கிறீரே. எனினும், போர் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் சொல்கிறேன் கேளும்.(28)
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், உடன் பிறந்தவர்களுமான உமது ஐந்து மகன்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(29) அவர்கள், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆவர். அழகிய கவசங்களைப் பூண்டிருந்த அவர்கள் அனைவரும் பாண்டுவின் மகனை எதிர்த்து விரைந்தனர்.(30) அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலத் தெரிந்த தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தனர்.(31) எனினும், பீமன் அந்தப் போரில் இப்படித் திடீரெனத் தன்னை எதிர்த்து விரைபவர்களும், தெய்வீக அழகுடையவர்களுமான அந்த இளவரசர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.(32)
பீமசேனனை எதிர்த்து முன்னேறும் உமது மகன்களைக் கண்டவனும், ராதையின் மகனுமான கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், கூர் முனை கொண்டவையுமான கணைகளை ஏவியபடியே அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(33) பீமன், உமது மகன்களால் தடுக்கப்பட்டாலும் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(34) பிறகு கர்ணனைச் சூழ்ந்து கொண்ட குருக்கள் {கௌரவர்கள்}, நேரான கணைகளின் மழையால் பீமசேனனை மறைத்தனர்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்த பீமன், மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரையும், அவர்களது, குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் சேர்த்து இருபத்தைந்து {25} கணைகளால் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான் [3].(36) தங்கள் தேரோட்டிகளுடன் தங்கள் தேர்களில் இருந்து விழுந்த அவர்களது உயிரற்ற வடிவங்கள் {உடல்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான கனமான மலர்களுடன் கூடியவையுமான பெரிய மரங்களைப் போலத் தெரிந்தன.(37)அதிரதன் மகனை {கர்ணனைத்} தடுத்துக் கொண்டே உமது மகன்களைக் கொன்ற பீமசேனனின் ஆற்றலை நாங்கள் மிக அற்புதமானதாகக் கண்டோம்.(38) கூரிய கணைகளைக் கொண்டு பீமனால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைப் பார்க்க மட்டுமே செய்தான்.(39) கோபத்தால் கண்கள் சிவந்த பீமசேனனும், உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே கர்ணனின் மீது தன் கோபப் பார்வைகளைச் செலுத்தத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(40)
பீமனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 135-தன்னையே குற்றவாளியாகக் கருதிய கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்து, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற பீமன்; மீண்டும் கர்ணனின் வில்லை அறுத்தது; பீமனின் கவசத்தை அறுத்த கர்ணன்; பீமசேனனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்; பீமன் மீது தன் தம்பிகளை ஏவிய துரியோதனன்; அவர்களில் எழுவரைக் கொன்ற பீமன்; விதுரனின் வார்த்தைகளை நினைத்த கர்ணன்; கர்ணனின் கவசத்தை அறுத்த பீமன்;பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்ட கடும் மோதல்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்கள் (களத்தில்) நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட கர்ணன், பெரும் கோபத்தால் நிறைந்து, தன் உயிரில் நம்பிக்கையற்றவனானான்.(1) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமனால் தன் கண்களுக்கு எதிரிலேயே போரில் கொல்லப்பட்ட உமது மகன்களைக் கண்டு தன்னையே குற்றவாளியாகக் கருதினான்.(2) அப்போது பீமசேனன், முன்னர்க் கர்ணனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைவுகூர்ந்து, சினத்தால் நிறைந்து, திட்டமிட்ட கவனத்தோடு {பாதுகாப்போடு} கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைக்கத் தொடங்கினான்.(3)
பிறகு கர்ணன், சிரித்துக் கொண்டே ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான்.(4) கர்ணனால் ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்த விருகோதரன் {பீமன்}, நேரான ஒரு நூறு {100} கணைகளால் அந்தப் போரில் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(5) மீண்டும் ஐந்து கூரிய கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்த பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தச் சூத மகனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான்.(6) பிறகு மகிழ்ச்சியற்றவனான கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் பீமசேனனை மறைத்தான்.(7)
அப்போது பீமன், கர்ணனின் குதிரைகள் மற்றும் தேரோட்டியைக் கொன்று, இப்படியே கர்ணனின் அருஞ்செயல்களுக்கு எதிர்வினையாற்றி உரத்த சிரிப்பொன்றைச் சிரித்தான்.(8) பிறகு மனிதர்களில் காளையான அந்தப் பீமன், தன் கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரத்த நாணொலி கொண்டதும், கைப்பிடியில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வில்லானது (அவனது {கர்ணனின்} கரங்களில் இருந்து) கீழே விழுந்தது.(9) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் தன் தேரில் இருந்து இறங்கி அந்தப் போரில் ஒரு கதாயுதத்தை எடுத்து, அதைப் பீமனின் மீது கோபத்துடன் வீசினான்.(10) ஓ மன்னா, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்தக் கதாயுதத்தைக் கண்ட விருகோதரன் {பீமன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைத் தன் கணைகளால் தடுத்தான்.(11)
பிறகு, பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சூதன் மகனின் {கர்ணனின்} உயிரை எடுக்க விரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் முயன்று, பின்னவன் {கர்ணன்} மீது ஓராயிரம் கணைகளை ஏவினான்.(12) எனினும் கர்ணன், அந்தப் போரில், அந்தக் கணைகள் அனைத்தையும் தடுத்து, தன் கணைகளால் பீமனின் கவசத்தை அறுத்தான்.(13) பிறகு அவன் {கர்ணன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபத்தைந்து குறுங்கணைகளால் பீமனைத் துளைத்தான். இவை யாவும் காண மிக அற்புதமாக இருந்தன.(14) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், ஒன்பது நேரான கணைகளை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(15) கர்ணனின் கவசத்தையும், வலக்கரத்தையும் துளைத்துச் சென்ற அந்தக் கூரிய கணைகள், எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. (16) பீமசேனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைமாரியால் மறைக்கப்பட்ட கர்ணன், மீண்டும் பீமசேனனிடம் புறமுதுகிட்டான்.(17)
சூதனின் மகன் {கர்ணன்} புறமுதுகிடுவதையும், குந்தியின் மகனுடைய {பீமனின்} கணைகளால் எங்கும் மறைக்கப்பட்டுக் காலாளாக ஓடுவதையும் கண்ட துரியோதனன்,(18) {தன் தம்பிகளிடம்} “ராதையின் மகனுடைய {கர்ணனின்} தேரை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்து விரைந்து செல்வீராக” என்றான். பிறகு, ஓ! மன்னா, தங்கள் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமது மகன்கள், கணை மாரியை ஏவியபடியே போரில் பாண்டுவின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தனர்.(19) அவர்கள் {துரியோதனனின் அந்தத் தம்பிகள்}, சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன் [1], சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன், இப்படித் தன்னை எதிர்த்து விரைந்து வரும் அந்த உமது மகன்கள் ஒவ்வொருவரையும் ஒரே கணையால் {ஒவ்வொரு கணைகளால்} வீழ்த்தினான். உயிரை இழந்த அவர்கள், சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர் [2].(20-22)வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த உமது மகன்கள் அனைவரும் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுகை நிறைந்த முகத்துடன், விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(23) முறையான சாதனங்களுடன் கூடிய மற்றொரு தேரில் ஏறியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணன், போரில் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து வேகமாகச் சென்றான்.(24) தங்கச் சிறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்ட அவ்விரு வீரர்களும், சூரியனின் கதிர்கள் ஊடுருவிய இரு மேகத் திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)
அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {பீமன்}, பெரும் கூர்மை மற்றும் கடும் சக்தியைக் கொண்ட முப்பத்தாறு {36} பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தை அறுத்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சூதனின் மகனும் {கர்ணனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐம்பது நேரான கணைகளால் குந்தியின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(27) செஞ்சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசியிருந்த அவ்விரு வீரர்களும், கணைகளால் ஒருவருக்கொருவர் பல காயங்களை உண்டாக்கி சிந்திய குருதியால் மறைக்கப்பட்டு, உதயச் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) கணைகளால் அறுக்கப்பட்ட கவசங்களுடன் தங்கள் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டிருந்த கர்ணனும், பீமனும், தங்கள் சட்டைகளில் இருந்து அப்போதுதான் விடுபட்ட இரு பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(29) உண்மையில், தங்கள் பற்களால் ஒன்றையொன்று சிதைத்துக் கொள்ளும் இரு புலிகளைப் போல மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவ்விரு வீரர்களும் தங்கள் கணைகளை இடையறாமல் பொழிந்தனர்.(30)
எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கள் தந்த முனைகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்ளும் இரு யானைகளைப் போலத் தங்கள் கணைகளால் தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் கிழித்துக் கொண்டனர்.(31) ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி தங்கள் கணைகளை ஒருவர் மேல் ஒருவர் பொழிந்த முதன்மையான அவ்விரு தேர்வீரர்களும், தங்கள் தேர்களைக் கொண்டு வட்டங்களாலான அழகிய தடங்களை உண்டாக்கச் செய்து ஒருவரோடொருவர் விளையாடுவதாகத் தெரிந்தது.(32) அவர்கள், பருவகாலத்தில் உள்ள பசுவின் முன்னிலையில் ஒன்றை நோக்கி ஒன்று முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர். உண்மையில், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க இரு சிங்களைப் போலவே தெரிந்தனர்.(33) கோபத்தால் சிவந்த தங்கள் கண்களால் ஒருவரையொருவர் நோக்கியவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், சக்ரனையும் {இந்திரனையும்}, விரோசனன் மகனையும் {பிரகலாதனையும்} போலப் போரிட்டனர்.(34)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், வில்லைத் தன்னிரு கரங்களால் வளைத்தபோது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் ஒன்றைப் போலவே தெரிந்தான்.(35) பிறகு வில்லின் நாணொலியைத் தன் இடியொலியாகவும், இடையறாத கணை மாரியைத் தன் மழைப்பொழிவாகவும் கொண்ட அந்த வலிமைமிக்கப் பீம மேகம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ண மலையை மறைத்தது.(36) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும் பாண்டுவின் மகனுமான அந்தப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு முறை தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஓராயிரம் கணைகளால் கர்ணனை மறைத்தான்.(37) கங்க இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட கணைகளைக் கொண்டு அவன் {பீமன்} கர்ணனை மறைத்த போது, உமது மகன்கள் இயல்புக்கு மீறிய அவனது ஆற்றலைக் கண்டனர்.(38)
பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, சிறப்புமிக்கக் கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, சாத்யகிக்கும், (அர்ஜுனன் தேருடைய இரண்டு) சக்கரங்களைப் பாதுகாப்பவர்களான இருவருக்கும் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோருக்கும்) மகிழ்ச்சியை ஊட்டியபடி, இப்படியே பீமன் கர்ணனுடன் போரிட்டான்.(39) பீமனின் ஆற்றல், கரங்களின் வலிமை, விடாமுயற்சி ஆகியவற்றை அறிந்தவர்களான உமது மகன்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களானார்கள்” {என்றான் சஞ்சயன்}.(40)
விகர்ணனுக்காக மிகவும் வருந்திய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 136-கடுமையாகப் போரிட்ட பீமனும், கர்ணனும்; பீமனின் ஆற்றலைக் கண்டு கௌரவர்களும், பாண்டவர்களும் மெச்சியது; கர்ணனைக் காக்க தன் தம்பிகளில் எழுவரை அனுப்பிய துரியோதனன்; அந்த எழுவரையும் கொன்ற பீமன், விகர்ணனுக்காக வருந்தியது; பீமனின் முழக்கத்தைக் கேட்டு செய்தியை அறிந்து மகிழ்ந்த யுதிஷ்டிரன்; விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த துரியோதனன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனனுடைய வில்லின் நாணொலியையும், அவனது உள்ளங்கையொலிகளையும் கேட்டு, மதங்கொண்ட எதிராளியின் முழக்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு மதங்கொண்ட யானையைப்போல ராதையின் மகனால் {கர்ணனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(1) பீமசேனனின் முன்னிலையில் இருந்து ஒரு கணம் அகன்ற கர்ணன், பீமசேனனால் கொல்லப்பட்ட உமது மகன்களின் மீது கண்களைச் செலுத்தினான்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே} அவர்களைக் கண்ட கர்ணன் உற்சாகத்தை இழந்து துயரில் மூழ்கினான். நெடிய பெரும் அனல் மூச்சுகளைவிட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான்.(3)
தாமிரம் போன்ற சிவந்த கண்களுடன், வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தில் பெருமூச்சுவிட்ட கர்ணன் தன் கணைகளை ஏவிய போது, கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(4) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியனில் இருந்து பரவும் கதிர்களுக்கு ஒப்பாகக் கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விருகோதரன் {பீமன்} மறைக்கப்பட்டான்.(5) மயிலின் இறகுகளைக் கொண்ட அந்த அழகிய கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, உறங்குவதற்காக மரத்திற்குள் நுழையும் பறவைகளைப் போல, பீமனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவின.(6)
உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, நாரைகளின் தொடர்ச்சியான வரிசைகளுக்கு ஒப்பாக இடையறாமல் பாய்ந்தன.(7) அதிரதன் மகனால் ஏவப்பட்ட கணைகள் ஒரு வில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாகத் தெரியாமல், கொடிமரம், குடை, ஏர்க்கால், நுகத்தடி மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றில் இருந்தும் பாய்வதைப் போலத் தெரியும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.(8) உண்மையில், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மூர்க்கமான சக்தி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமானத் தன் வானுலாவும் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும் வகையில் அவற்றை ஏவினான்.(9)
(இப்படி) வெறியால் தூண்டப்பட்டு, காலனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அவனை {கர்ணனைக்} கண்ட விருகோதரன் {பீமன்}, தன் உயிரைக் குறித்து முற்றிலும் கவலைப்படாமல், தன் எதிரியிலும் மேன்மையடைந்து ஒன்பது கணைகளால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(10) கர்ணனின் தடுக்கப்பட முடியாத மூர்க்கத்தையும், அந்த அடர்த்தியான கணைமழையையும் கண்ட பீமன், பெரும் ஆற்றலைக் கொண்டவனாதலால், அச்சத்தால் நடுங்கவில்லை.(11)
பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைப்பொழிவுக்கு எதிர்வினையாக, இருபது கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(12) உண்மையில், பிருதையின் மகன் {பீமன்} முன்னர்ச் சூதனின் மகனால் {கர்ணனால்} எப்படி மறைக்கப்பட்டானோ, அதே போலவே பின்னவன் {கர்ணன்} இப்போது அந்தப் போரில் முன்னவனால் {பீமனால்} மறைக்கப்பட்டான்.(13) போரில் பீமசேனனின் ஆற்றலைக் கண்ட உமது போர்வீரர்களும், சாரணர்களும் கூட மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் புகழ்ந்தனர்.(14) கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும், பூரிஸ்ரவஸ், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஜெயத்ரதன், உத்தமௌஜஸ், யுதாமன்யு, சாத்யகி, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன்(15) ஆகிய இந்தப் பெரும் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்று சொல்லி சிங்க முழக்கம் செய்தனர்.(16)
மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் அந்தக் கடுமுழுக்கம் எழுந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனான துரியோதனன், மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரிடமும், குறிப்பாகத் தன்னுடன் பிறந்த தம்பிகளிடம் இவ்வார்த்தைகளை விரைவாகச் சொன்னான். “அருளப்பட்டிருப்பீராக, விருகோதரனிடம் {பீமனிடமிருந்து} இருந்து கர்ணனைக் காப்பதற்காக அவனிடம் {கர்ணனிடம்} விரைவீராக, இல்லையெனில், பீமனின் வில்லில் இருந்து ஏவப்படும் கணைகளே ராதையின் மகனை {கர்ணனைக்} கொன்றுவிடும். வலிமைமிக்க வில்லாளிகளே சூதனின் மகனை {கர்ணனைக்} காக்க முயல்வீராக” {என்றான் துரியோதனன்}.(17-19).
இப்படித் துரியோதனனால் கட்டளையிடப்பட்டதும், அவனது {துரியோதனனின்} தம்பியரில் எழுவர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் பீமசேனனை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(20) குந்தியின் மகனை அணுகிய அவர்கள், மழைக்காலங்களில் மலையின் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் அவனை {பீமனை} மறைத்தனர்.(21) கோபத்தில் தூண்டப்பட்டவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் எழுவரும், ஓ! மன்னா, பிரளயத்தின் போது சந்திரனைப் பீடிக்கும் ஏழு கோள்களைப் போலப் பீமசேனனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22)
அப்போது குந்தியின் மகன் {பீமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் அழகிய வில்லைப் பெரும்பலத்துடன் வளைத்து, அதை உறுதியாகப் பிடித்து,(23) தன் எதிரிகளும் மனிதர்கள்தான் என்பதை அறிந்து, ஏழு கணைகளைக் குறி பார்த்தான். பெருஞ்சினத்துடன் கூடிய அந்தத் தலைவன் பீமன், சூரியக் கதிர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(24) உண்மையில், முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்த பீமசேனன், உமது மகன்களான அவர்களின் உடல்களில் இருந்து உயிரைப் பிரித்தெடுக்கும் வகையில் அந்தக் கணைகளை ஏவினான்.(25)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், பீமசேனனால் ஏவப்பட்டு, அந்தப் பாரத இளவரசர்களின் உடல்களைத் துளைத்து வானத்தில் பறந்து சென்றன.(26) உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், உமது மகன்களின் இதயங்களைத் துளைத்து ஆகாயத்தில் சென்ற போது, சிறந்த இறகுகளைக் கொண்ட பறவைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குருதியால் எங்கும் நனைந்திருந்த அக்கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குருதியைக் குடித்த பிறகு, அவர்களின் உடலைக் கடந்து சென்றன.(28) அந்தக் கணைகளால் முக்கிய உறுப்புகள் துளைக்கப்பட்ட அவர்கள், மலைகளின் செங்குத்துப் பாறைகளில் வளரும் நெடிய மரங்கள் யானைகளால் முறிக்கப்பட்டதைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர்.(29) இப்படிக் கொல்லப்பட்ட உமது ஏழு மகன்கள், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகியோராவர் [1].(30)
பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள் அனைவரிலும், தன் அன்புக்குரிய விகர்ணனுக்காக வருந்தி, கடும் துக்கத்தை அடைந்தான்.(31) அந்தப் பீமன், “போரில் என்னால் நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று இப்படியே என்னால் சபதமேற்கப்பட்டது. ஓ! விகர்ணா, அதற்காகவே, நீயும் கொல்லப்படலாயிற்று. {இங்கே} என் சபதமே நிறைவேற்றப்பட்டதாயிற்று.(32) ஓ! வீரா {விகர்ணா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை மனதில் தாங்கியே நீ போரிட வந்தாய். எங்களுக்கு, அதிலும் குறிப்பாக மன்னனுக்கு (எங்கள் அண்ணனுக்கு) {யுதிஷ்டிரனுக்கு} நன்மை செய்வதில் நீ எப்போதும் ஈடுபட்டு வந்தாய்.(33) எனவே, ஒப்பற்றவனான உனக்காக நான் வருந்துவது முறையாதல் அரிதே {முறையாகாது}” என்றான் {பீமன்} [2].அவ்விளவரசர்களைக் கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} பயங்கரமான சிங்கமுழக்கம் ஒன்றைச் செய்தான்.(34) வீரப் பீமனின் அந்தப் பெருங்கூச்சலானது, ஓ! பாரதரே, அந்தப் போரில் அவனது வெற்றியை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தது. உண்மையில், வில் தரித்த அந்தப் பீமனின் மகத்தான கூச்சலைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போருக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(35, 36) மகிழ்ச்சியடைந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} பிறகு, ஓ! மன்னா, தன் தம்பியின் சிங்க முழக்கத்தை, துந்துபிகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளோடு வரவேற்றான். ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டடின்படி விருகோதரன் {பீமன்} அந்தச் செய்தியை அனுப்பிய பிறகு, ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையான அந்த யுதிஷ்டிரன், மகிழ்ச்சியால் நிறைந்து போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.
மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் முப்பத்தொருவர் [3] கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், “விதுரர் பேசிய நன்மையான வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன” என்று விதுரரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(37-40) இப்படி நினைத்த மன்னன் துரியோதனனால் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. பகடையாட்டத்தின் போது, மூடனும், தீயவனுமான உமது மகன் {துரியோதனன்}, (தன் பக்கத்தில் இருந்த) கர்ணனுடன் சேர்ந்து, பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்கு அழைத்துவரச் செய்து, அவளிடம் பேசியதும், அதே இடத்தில் உமது முன்னிலையில்(41, 42) கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் தொலைந்தனர், அவர்கள் நிலையான நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். எனவே நீ வேறு கணவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக” என்ற அளவுக்குக் கர்ணனால் பேசப்பட்ட கடும் வார்த்தைகளும், ஐயோ, அவை அனைத்தின் கனியும் {பலனும்} இப்போது வெளிப்படுகின்றன.(43, 44)
மேலும், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த உமது மகன்கள், அந்த உயர் ஆன்மா கொண்டோரான பாண்டுவின் மகன்களிடம் எள்ளுப்பதர்கள் போன்ற பல்வேறு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினர். (இப்படி விளைந்த) கோப நெருப்பைப் பதிமூன்று {13} வருடங்கள் தடுத்திருந்த பீமசேனன் இப்போது அதை {கோப நெருப்பைக்} கக்கியபடியே, உமது மகன்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறான்.(45-46) ஏராளமாகப் புலம்பிய விதுரர், சமாதானத்தை நோக்கி உம்மை இட்டுச் செல்வதில் தவறினார். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தின் கனியையும் உமது மகன்களுடன் சேர்ந்து அனுபவிப்பீராக.(47) நீர் முதியவராகவும், பொறுமையுள்ளவராகவும், அனைத்துச் செயல்களின் விளைவுகளை முன்னறியவல்லவராகவும் இருக்கிறீர். அப்படியிருந்தும், நீர் உமது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற மறுத்ததால், இவையாவும் விதியின் பயன் என்றே தெரிகிறது.(48) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே} வருந்தாதீர். இவையாவும் உமது பெரும் தவறால் விளைந்தவையே. உமது மகன்களின் அழிவுக்கு நீரே காரணமாவீர் என்பதே எனது கருத்தாகும்.(49)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விகர்ணனும், பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திரசேனனும் வீழ்ந்துவிட்டனர். உமது மகன்களில் முதன்மையான பல வலிமைமிக்கத் தேர்வீரர்களும் கூட வீழ்ந்துவிட்டனர்.(50) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பீமன், தன் பார்வை செல்லும் தொலைவில் வந்த உமது பிற மகன்களையும் விரைவாகக் கொன்றான்.(51) பாண்டுவின் மகனான பீமனாலும், விருஷனாலும் (கர்ணனாலும்) ஏவப்பட்ட கணைகளால் நமது படையில் ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்படுவதை உம்மால் மட்டுமே நான் காண நேர்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(52)
கர்ணனும் பீமனும் ஏற்படுத்திய பேரழிவு! – துரோண பர்வம் பகுதி – 137-பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இருவராலும் உண்டாக்கப்பட்ட பேரழிவு; சாரணர்களும் சித்தர்களும் அவ்விரு போர்வீரர்களின் வீரத்தையும், திறனையும் வியந்து பாராட்டியது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, ஓ! சஞ்சயா, இந்தத் துன்பகரமான விளைவு, நிச்சயமாக என் தீய கொள்கையின் காரணமாக எங்களை அடைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(1) நடந்தது நடந்ததுதான் என்றே இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?[1](2) ஓ சஞ்சயா, நான் மீண்டும் அமைதியை அடைகிறேன். எனவே, என் தீய கொள்கைகளைக் காரணமாகக் கொண்ட இந்த வீரர்களின் படுகொலை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் மழை நிறைந்த இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தனர்(4) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் கர்ணனை அணுகி, அவனது உயிரையே துளைத்துவிடுவன போல, அவனது உடலுக்குள் ஊடுருவின.(5) அதே போல அந்தப் போரில் பீமனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவையுமான கர்ணனின் கணைகளால் மறைக்கப்பட்டான்.(6) அவர்களது கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் பாயும் வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கடலுக்கு ஒப்பாகத் துருப்புகளுக்கு மத்தியில் கலக்கம் உண்டானது.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பாகப் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் உமது படையின் போராளிகளில் பலர் உயிரை இழந்தனர்.(8)
மனிதர்களின் உடல்களோடு கலந்து விழுந்து கிடந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் பரவிக் கிடந்த போர்க்களமானது, சூறாவளியால் முறிக்கப்பட்ட மரங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு பாதையைப் போலத் தெரிந்தது.(9) பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், “இஃது என்ன?” என்று சொன்னபடியே தப்பி ஓடினர்.(10) உண்மையில், சிந்துக்கள், சௌவீரர்கள், கௌரவர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் மூர்க்கமான கணைகளாலும் பீடிக்கப்பட்டு, பெரும் தொலைவிற்கு அகற்றப்பட்டனர்.(11) துணிச்சல்மிக்க அந்தப் படைவீரர்களில் எஞ்சியோரும், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகள் கொல்லப்பட்டு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அருகாமையை விட்டகன்று, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(12) (மேலும் அவர்கள்), “பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரால் ஏவப்பட்ட கணைகளும் நம் படைகளையே கொல்வதால், உண்மையில், பார்த்தர்களுக்காகத் தேவர்களே நம்மை மலைக்கச் செய்கின்றனர்” என்றனர்.(13) இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது துருப்பினர், அச்சத்தால் பீடிக்கப்பட்டு (கர்ணன் மற்றும் பீமன் ஆகியோரின்) கணைகள் அடையும் தொலைவைத் தவிர்த்து, வெகுதொலைவில் இருந்து அந்த மோதலைக் கண்டனர்.(14)
அப்போது, வீரர்களின் மகிழ்ச்சியையும், மருண்டோரின் அச்சத்தையும் அதிகரிக்கும் வகையில் அந்தப் போர்க்களத்தில் ஒரு பயங்கர ஆறு பாயத் தொடங்கியது.(15) மேலும் அது யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதியால் உண்டானதாக இருந்தது. மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிரற்ற உடல்கள்,(16) கொடிக்கம்பங்கள், தேர்த்தட்டுகள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றாலும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் அலங்காரப் பொருட்கள், உடைந்து போன தேர்கள், சக்கரங்கள், அக்ஷங்கள் {அச்சுகள்}, கூபரங்கள் {ஏர்க்கால்கள்}(17) ஆகியவற்றாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் நாணொலி கொண்டவையுமான விற்கள், கர்ணன் மற்றும் பீமனால் ஏவப்பட்டவையும், சட்டையுதிர்த்த பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகள், நாராசங்கள், எண்ணற்ற வேல்கள், ஈட்டிகள், கத்திகள், போர்க்கோடரிகள்,(18,19) கதாயுதங்கள், தண்டங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோடரிகள், பல்வேறு வடிவங்களிலான தண்டங்கள், ஈட்டிகள், பரிகங்கள்,(20), அழகிய சதாக்னிகள் ஆகியவற்றாலும் மறைக்கப்பட்டுப் பூமியானது பிரகாசமாகத் தெரிந்தது. தங்கத்தாலான காது குண்டலங்கள், ஆரங்கள், (மணிக்கட்டுகளில் இருந்து) தளர்ந்து விழுந்த கைவளைகள், வளையங்கள், கிரீடங்களில் அணியப்படும் மதிப்புமிக்க ரத்தினங்கள், தலைப்பாகைகள், தலைக்கவசங்கள், பல்வேறு வகைகளிலான தங்க ஆபரணங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கவசங்கள், தோலுறைகள், யானைகளின் கயிறுகள், (தங்கள் நிலைகளில் இருந்து தவறிய) குடைகள், சாமரங்கள், விசிறிகள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் துளைக்கப்பட்ட உடல்கள், குருதிக் கறையுடன் கூடிய கணைகள், தங்கள் நிலைகளில் இருந்து தளர்ந்து விழுந்து கிடந்த பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.
அற்புதம் நிறைந்தவையும், நினைத்துப் பார்க்க முடியாதவையும், மனித சக்திக்கு அப்பாற்பட்டவையுமான அவ்விரு வீரர்களின் சாதனைகளைக் கண்டு சாரணர்களும், சித்தர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காற்றைத் தன் கூட்டாளியாகக் கொண்ட சுடர்மிக்கக் காட்டுத் தீயானது (பரந்து கிடக்கும்) உலர்ந்த புற்குவியலின் ஊடாகச் செல்வதைப் போலவே பீமனிடம் சினம் கொண்ட அதிரதன் மகனும் {கர்ணனும்}, அந்தப் போரில் சீற்றத்துடன் திரிந்தான் [2]. அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தபோது, நாணற்காடுகளை நசுக்கும் இரு யானைகளைப் போல எண்ணற்ற கொடிமரங்களையும், தேர்களையும் வீழ்த்தி, குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றைக் கொன்றனர்.(21-27) ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையானது மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது, மேலும், கர்ணன் மற்றும் பீமனால் அந்தப் போரில் விளைந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(28)
தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 138அ-பீமனின் குதிரைகளைக் கொன்ற கர்ணன், கர்ணனால் துளைக்கப்பட்டு யுதாமன்யுவின் தேரில் தஞ்சமடைந்த பீமனின் தேரோட்டி; பீமனின் ஆயுதங்களை அறுத்த கர்ணன்; கர்ணனைப் பிடிப்பதற்காக அவனது தேர் மீது பாய்ந்து ஏறிய பீமன்; தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்; அனைவராலும் பீமனின் சாதனை மெச்சப்படுவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் பீமனைத் துளைத்து, அவன் மீது எண்ணற்ற அழகிய கணைகளைப் பொழிந்தான்.(1) பாண்டுவின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} தாக்கப்பட்டாலும், வலிக்கு உண்டான எந்த அறிகுறிகளையும் காட்டாமல், (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல அசையாதிருந்தான்.(2) பதிலுக்கு அந்தப் போரில் அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணெய் தேய்க்கப்பட்டதும், பெரும் கூர்மை கொண்டதும், சிறப்பான கடினத்தன்மை கொண்டதுமான ஒரு கர்ணியை {முட்கள் பதிக்கப்பட்ட கணை} கர்ணனின் காதில் ஆழத் துளைத்தான்.(3) (அக்கணையால்) அவன் {பீமன்}, அழகியதும் பெரியதுமான கர்ணனின் காதுகுண்டலங்களைப் பூமியில் வீழ்த்தினான். அது {காது குண்டலம்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசம் கொண்ட நட்சத்திரம் ஒன்று ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலக் கீழே விழுந்தது.(4)
கோபத்தால் தூண்டப்பட்ட விருகோதரன் {பீமன்}, பிறகு சிரித்துக் கொண்டே, மற்றொரு பல்லத்தால் சூதன் மகனின் {கர்ணனின்} நடுமார்பை ஆழத் துளைத்தான்.(5) மீண்டும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், அந்தப் போரில், சற்று முன்பே சட்டையுரித்த கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையான பத்து நாராசங்களை விரைவாக ஏவினான்.(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமனால் ஏவப்பட்ட அக்கணைகள், கர்ணனின் நெற்றியைத் தாக்கி, எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போல அதற்குள் {நெற்றிக்குள்} நுழைந்தன.(7) நெற்றில் ஒட்டிக் கொண்ட {தைத்திருந்த} கணைகளால் அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, முன்பு கருநெய்தல்மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புருவங்களோடு கூடியவனாக இருந்ததைப் போலவே அழகாகத் தெரிந்தான் [1].(8)சுறுசுறுப்பான குந்தியின் மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட கர்ணன், தேரின் ஏர்க்காலைப் பிடித்துக் கொண்டு தன் கண்களை மூடினான் {மயங்கினான்}.(9) எனினும், விரைவில் சுயநினைவு மீண்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், குருதியில் குளித்த தன் உடலுடன், சினத்தால் வெறிபிடித்தவனானான்.(10) அந்த உறுதிமிக்க வில்லாளியால் {பீமனால்} இப்படிப் பீடிக்கப்பட்டதன் விளைவால் சினத்தால் மதங்கொண்டவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், பீமசேனனின் தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(11)
பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனும், கோபம் நிறைந்தவனுமான கர்ணன், சினத்தால் மதங்கொண்டு, கழுகின் இறகுகளால் சிறகமைந்த நூறு கணைகளைப் பீமசேனனின் மீது ஏவினான்.(12) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியை {கர்ணனை} அலட்சியம் செய்து, அவனது சக்தியை வெறுமையாக்கி, அவன் மீது கடுங்கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(13) அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! எதிரிகளை எரிப்பவரே, கோபத்தின் வடிவமாக இருந்த அந்தப் பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} மார்பில் ஒன்பது கணைகளால் தாக்கினான்.(14) கொடூரப் பற்களைக் கொண்ட இரு புலிகளுக்கு ஒப்பாக (கணைகள் தரித்திருந்த) மனிதர்களில் புலிகளான அவ்விருவரும் அப்போரில் வலிமைமிக்க இரு மேகத் திரள்களைப் போலத் தங்கள் கணைமாரியை ஒருவரின் மேல் மற்றவர் பொழிந்தனர்.(15) அவர்கள், தங்கள் உள்ளங்கை ஒலிகளாலும், பல்வேறு வகைகளிலான கணைமாரிகளாலும் ஒருவரையொருவர் அச்சுறுத்த முயன்றனர்.(16) சினத்தால் தூண்டப்பட்ட அவ்விருவரும், அந்தப் போரில் அடுத்தவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற முனைந்தனர். அப்போது பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு க்ஷுரப்ரத்தைக் கொண்டு சூதன் மகனின் வில்லை அறுத்துப் பெருங்கூச்சல் செய்தான் [2]. உடைந்த அவ்வில்லை எறிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, இன்னும் பலமான, கடினமான மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டான்.(17, 18)குரு, சௌவீர மற்றும் சிந்து வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், சிதறிக் கிடக்கும் கவசங்கள், கொடிமரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அந்தப் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைக் குறித்துக் கொண்டும், அனைத்துப் பக்கங்களிலும், யானைகள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்களின் உயிரற்ற உடல்களையும் கண்டும் அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலானது கோபத்தால் பிரகாசத்துடன் சுடர்விட்டு எரிந்தது.(19,20) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதியான வில்லை வளைத்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் மீது தன் கோபப் பார்வைகளை வீசினான்.(21) சினத்தால் மதங்கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தன் கணைகளை ஏவிய போது, நடுப்பகலில் பளபளக்கும் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(22) தன் கரங்களால் கணையை எடுக்கும்போதும், அதை வில்லின் நாணில் பொருத்தும்போதும், நாண்கயிற்றை இழுக்கும்போதும், அதை {கணையை} விடுக்கும்போதும், அந்தச் செயல்களுக்கு இடையில் எவராலும் எந்த இடைவெளியையும் காண முடியவில்லை. இப்படிக் கர்ணன் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் கணைகளை ஏவுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது வில்லானது ஒரு பயங்கர நெருப்பு வளையத்தைப் போல இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்டிருந்தது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் மறைத்து சூரியனின் ஒளியையே இருளச் செய்தன.(23-26)
கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகளின் எண்ணற்ற கூட்டங்கள் ஆகாயத்தில் காணப்பட்டன. உண்மையில், அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் நாரைகளின் வரிசைகளைப் போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன.(27-28) அந்த அதிரதன் மகன் ஏவிய கணைகள் அனைத்தும், கழுகின் இறகுகளைக் கொண்டவையாகவும், கல்லில் கூராக்கப்பட்டவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையாகவும் இருந்தன. அவனது வில்லின் சக்தியால் உந்தப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீமனின் தேரை நோக்கி இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தன.(29-30) உண்மையில், கர்ணனால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் ஆயிரக்கணக்கில் பாய்ந்த போது, அடுத்தடுத்துச் செல்லும் வெட்டுக் கிளிகளின் {விட்டிற்பூச்சிக்} கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன. அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள், ஆகாயத்தில் சென்றபோது, தொடர்ந்து செல்லும் ஒரே நீண்ட கணை ஒன்றைப் போல வானத்தில் தெரிந்தன. மழைத்தாரைகளால் மலையை மறைக்கும் மேகமொன்றைப் போல, சினத்தால் தூண்டப்பட்ட கர்ணன், கணைமாரியால் பீமனை மறைத்தான்.(31-33)
அப்போது பொங்கும் கடலுக்கு ஒப்பான அந்தக் கணைமாரியை அலட்சியம் செய்துவிட்டுக் கர்ணனை எதிர்த்து பீமன் விரைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகளுடன் கூடிய உமது மகன்கள், பின்னவனின் {பீமனின்} வலிமை, சக்தி, ஆற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைக் கண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்தான்.(34-36)
அவன் {பீமன்}, தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட இந்திரனின் வில்லைப் போலத் தெரியும்படி அதை {வில்லை} விரைவாக வளைத்தான். அதிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த கணைகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பனவாகத் தெரிந்தன.(37)
பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்த நேரான கணைகள், வானத்தில் ஒரு தொடர்ச்சியான கோடு ஒன்றை உண்டாக்கியதால் அவை தங்க மாலையொன்றைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(38)
ஆகாயத்தில் பரவியிருந்த (கர்ணனின்) கணைமாரியானது, பீமசேனனின் கணைகளால் தாக்கப்பட்டு, துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டுக் கீழே பூமியில் வீழ்ந்தன.(39) அப்போது, தங்கச் சிறகுகள் கொண்டவையும், வேகமாகச் செல்பவையும், ஒன்றோடு ஒன்று மோதி நெருப்புப் பொறிகளை உண்டாக்குபவையும், கர்ணன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவருடையவையுமான அந்தக் கணை மாரிகளால் வானம் மறைக்கப்பட்டது. அப்போது சூரியன் மறைக்கப்பட்டது, காற்றும் வீசாமல் நின்றது.(40,41) உண்மையில், இப்படி அந்தக் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, எதையுமே காணமுடியவில்லை. பிறகு அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மப் பீமனின் சக்தியை அலட்சியம் செய்து, பிற கணைகளைக் கொண்டு பீமனை முழுமையாக மறைத்து, அவனிலும் மேன்மையடைய முயன்றான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவ்விருவரால் ஏவப்பட்ட கணைமாரிகள் எதிர் காற்றுகள் இரண்டைப் போல ஒன்றோடொன்று மோதுவதாகத் தெரிந்தன.(42,43) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கணைமாரிகளும் மோதிக் கொண்டதன் விளைவால், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வானத்தில் ஒரு காட்டுத் தீ உண்டானதாகத் தெரிந்தது.(44)
அப்போது கர்ணன், பீமனைக் கொல்லவிரும்பி, கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கொல்லனின் கரங்களால் பளபளப்பாக்கப் பட்டவையுமான பல கணைகளைச் சினத்தால் அவன் {பீமன்} மீது ஏவினான். எனினும் பீமன், அக்கணைகள் ஒவ்வொன்றையும் தன் கணைகளால் மூன்று துண்டுகளாக அறுத்து, கர்ணனினும் மேன்மையடைந்து, “நில், நில்!” என்று கூச்சலிட்டான்.(45,46) கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, அனைத்தையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போலச் சினத்தால் மீண்டும் கடும் கணைகளை ஏவினான். அவர்களது தோல் கையுறைகளின் மீது வில்லின் நாண்கயிறுகள் தாக்கியதன் விளைவாகப் பேரொலிகள் உண்டாகின.(47,48) அவர்களது உள்ளங்கை ஒலிகளும் பேரொலிகளாகின, அவர்களது சிங்க முழக்கங்கள் பயங்கரமாகின, அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், அவர்களது வில்லின் நாணொலிகளும் கடுமையாகின.(49) ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} ஆகியோரது ஆற்றல்களைக் காணவிரும்பிய போராளிகள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர்.(50) தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர், “நன்று, நன்று!” என்று சொல்லி பாராட்டினர். வித்யாதரர்களின் இனக்குழுக்கள் அவர்கள் மீது மலர்மாரியைச் சொரிந்தனர்.(51)
அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கடும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் ஆயுதங்களால், எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்துப் பல கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(52) பெரும் வலிமையைக் கொண்ட கர்ணனும், பீமசேனனின் கணைகளைக் கலங்கடித்து, அந்தப் போரில் அவன் {பீமன்} மீது ஒன்பது நாராசங்களை ஏவினான்.(53) எனினும் பீமன், அதே அளவிலான பல கணைகளால் அக்கணைகளை ஆகாயத்தில் வெட்டி, அவனிடம் {கர்ணனிடம்}, “நில், நில்” என்றான்.(54)
பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரப் பீமன், சினத்தால் தூண்டப்பட்டு, யமன் அல்லது காலனின் தண்டத்திற்கு ஒப்பான கணையொன்றை அதிரதன் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(55) எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே பாண்டுமகனின் அந்தக்கணை ஆகாயத்தில் வரும்போதே அதை மூன்று கணைகளால் வெட்டினான்.(56) பாண்டுவின் மகன் {பீமன்}, கடுங்கணைகளின் மழையை மீண்டும் பொழிந்தான். எனினும் கர்ணன், பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் ஏற்றான்.(57)
சினத்தால் தூண்டப்பட்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன் நேரான கணைகளைக் கொண்டும் அம்மோதலில் போரிட்டுக் கொண்டிருந்த பீமனின் அம்பறாத்தூணிகள் இரண்டையும், வில்லின் நாண்கயிற்றையும், அவனது {பீமனது} குதிரைகளின் கடிவாளங்களையும் அறுத்தான். பிறகு அவனது {பீமனது} குதிரைகளையும் கொன்ற கர்ணன், ஐந்து கணைகளைக் கொண்டு பீமனின் தேரோட்டியையும் துளைத்தான்.(58,59) அந்தத் தேரோட்டி வேகமாக யுதாமன்யுவின் தேரை நோக்கி ஓடிச் சென்றான். அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், யுக நெருப்பின் காந்திக்கு ஒப்பானவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே பீமனின் கொடிக்கம்பத்தையும், அவனது கொடியையையும் வீழ்த்தினான்.
தன் வில்லை இழந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் தேர்வீரர்கள் பயன்படுத்தும் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(60,61) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்}, அதைத் தன் கரங்களில் சுழற்றியபடியே பெரும் பலத்துடன் கர்ணனின் தேர் மீது எறிந்தான். பிறகு, இப்படி அவ்வீட்டி {பீமனால்} வீசப்பட்டதும், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விண்கோளைப் போலப் பிரகாசத்துடன் தன்னை நோக்கி வந்ததுமான அதைப் பத்து கணைகளால் அறுத்தான். அதன்பேரில் அவ்வீட்டி, போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், தன் நண்பர்களுக்காகப் போரிடுபவனும், சூதனின் மகனுமான கர்ணனின் அந்தக் கூரிய கணைகளால் பத்து துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.
பிறகு மரணம் அல்லது வெற்றியை அடைய விரும்பிய குந்தியின் மகன் {பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கேடயம் ஒன்றையும், வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டான்.(62-64) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பீமனின் அந்தப் பிரகாசமான கேடயத்தைக் கடும் கணைகள் பலவற்றால் வெட்டினான். தேரிழந்த பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேடயத்தையும் இழந்து, சினத்தால் வெறிபிடித்தவனானான்.(65,66) வேகமாக அவன் {பீமன்}, வலிமையான தன் வாளைக் கர்ணனின் தேர் மீது ஏறிந்தான். அந்தப் பெரிய வாளானது, நாண் பொருத்தப்பட்ட சூதன் மகனின் வில்லை அறுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து விழும் கோபக்காரப் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(67)
அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே, எதிரியை அழிப்பதும், வலுவான நாண்கயிறு கொண்டதும், தான் இழந்ததை {முந்தைய வில்லை} விடக் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். குந்தியின் மகனை {பீமனைக்} கொல்ல விரும்பிய கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளையும், பெரும் சக்தியையும் கொண்ட ஆயிரக்கணக்கான கணைகளை ஏவத் தொடங்கினான்.(68,69)
கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(73,74)
கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 138ஆ-ஆயுதங்கள் தீர்ந்து போனதால் கர்ணனிடம் இருந்து பின்வாங்கிய பீமன்; கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைக் கொண்டு கர்ணனிடம் தன்னைத் தற்காத்துக் கொண்ட பீமன்; அர்ஜுனனின் சபதத்திற்காகப் பீமனும், குந்தியின் வார்த்தைகளுக்காகக் கர்ணனும் ஒருவரையொருவர் கொல்லாமல் விட்டது; வில்லின் நுனியால் பீமனைத் தீண்டிய கர்ணன்; பீமனை நிந்தித்த கர்ணன்; பீமனின் மறுமொழி; கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்..
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “பிறகு ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் அம்மோதலில் போருக்காகக் காத்திருந்த பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான். பிறகு, அறைகூவி அழைத்து ஒருவரையொருவர் அணுகிய அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த மனிதர்களில் காளையரான இருவரும், கோடையின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல ஒருவரையொருவர் நோக்கி முழங்கினர்.(75,76) மேலும் போரில் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், அங்கே அந்தச் சினங்கொண்ட சிங்கங்கள் இருவருக்கும் மத்தியில் தோன்றிய ஆயுதப் பாதையானது {போரானது}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக இருந்தது.
எனினும் ஆயுதக் கையிருப்புத் தீர்ந்து போன குந்தியின் மகன் {பீமன்}, (பின்வாங்க வேண்டிய கட்டாயமேற்பட்டதால்) கர்ணனால் தொடரப்பட்டான். அர்ஜுனனால் கொல்லப்பட்டுப் பெரும் மலைகளைப் போல (அருகில்) கிடக்கும் யானைகளைக் கண்ட ஆயுதங்களற்ற பீமசேனன், கர்ணனின் தேருடைய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவற்றின் {கொல்லப்பட்ட யானைகளின்} மத்தியில் நுழைந்தான்.(79) அந்த யானைத் திரளை அணுகி, தேர் அணுக முடியாத வகையில் அவற்றுக்கு மத்தியில் சென்று தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பிய பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்குவதிலிருந்து விலகினான் (80). உறைவிடத்தை விரும்பியவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட ஒரு யானையைக் கந்தமாதன சிகரத்தைத் தூக்கிய ஹனுமனைப் போல உயரத் தூக்கி அங்கேயே காத்திருந்தான்.(81) எனினும் கர்ணன், பீமன் பிடித்திருந்த அந்த யானையைத் தன் கணைகளால் வெட்டினான்.(82) அதன்பேரில் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்த யானையின் பிணத்துடைய துண்டுகளையும், தேர்ச்சக்கரங்களையும், குதிரைகளையும் கர்ணனின் மீது வீசினான். உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, களத்தில் கிடப்பவற்றில் தான் கண்ட அனைத்தையும் எடுத்து கர்ணனின் மீது வீசினான்.(83) எனினும் கர்ணன், இப்படித் தன் மீது வீசப்பட்ட அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(84)
பீமனும், இடியின் பலத்தைக் கொண்ட தன் கடும் கைமுட்டிகளை உயர்த்திக் கொண்டு சூதனின் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பினான். எனினும் விரைவில் அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்தான்.(85) எனவே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, திறன்கொண்டவனாகவே இருப்பினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழியைப் பொய்ப்பிக்காதிருக்க விரும்பி கர்ணனை உயிரை எடுக்காமல் இருந்தான். எனினும், சூதனின் மகன் {கர்ணன்}, துன்புற்றுக் கொண்டிருந்த பீமனைத் தன் கூரிய கணைகளால் மீண்டும் மீண்டும் உணர்வை இழக்கச் செய்தான்.(87) ஆனால், குந்தியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த கர்ணன், ஆயுதமற்ற பீமனின் உயிரை எடுக்காமல் இருந்தான். வேகமாக {பீமனை} அணுகிய கர்ணன், தன் வில்லின் நுனியால் அவனை {பீமனைத்} தீண்டினான் {தொட்டான்}.(88) எனினும் வில்லால் தீண்டப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட அவன் {பீமன்}, கர்ணனின் வில்லைப் பறித்து, அதைக் கொண்டே அவனது {கர்ணனின்} தலையைத் தாக்கினான்.(89)
பீமசேனனால் தாக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, சிரித்துக் கொண்டே, “தாடியற்ற அலியே”, “அறியாமை கொண்ட மூடா”, பெருந்தீனிக்காரா” என்ற இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(90) மேலும் கர்ணன், “ஆயுதங்களில் திறனில்லாமல் என்னுடன் போரிடாதே. போரில் பின்தங்கியிருக்கும் நீ ஒரு குழந்தையே.(92) ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, எங்கே உணவும், பானமும் அதிகம் இருக்கிறதோ, ஓ! இழிந்தவனே, அங்கே நீ இருக்க வேண்டுமேயன்றி போரில் ஒருக்காலும் இல்லை.(92) நீ போரில் திறனற்றவனாக இருப்பதால், ஓ! பீமா, கிழங்குகள், மலர்கள் மற்றும் கனிகளை உண்டு, நோன்புகளையும், தவங்களையும், பயின்று காடுகளிலேயே உன் வாழ்வைக் கழிப்பாயாக.(93) போருக்கும், முனி வாழ்வின் தவத்தன்மைக்கு இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. எனவே, ஓ! விருகோதரா {பீமா}, காட்டுக்குச் செல்வாயாக. ஓ! குழந்தாய், போரில் ஈடுபடும் தகுதி உனக்கில்லை. காடுகளில் வாழ்வதற்கான இயல்பான திறனே உனக்கு இருக்கிறது.(94) ஓ! விருகோதரா, வீட்டிலுள்ள சமையற்கலைஞர்கள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை வேகமாகத் தூண்டி, உன் விருந்துக்காகக் கோபத்துடன் அவர்களை நிந்திக்க மட்டுமே நீ தகுந்தவனாவாய்.(95) அல்லது, ஓ! பீமா, ஓ! மூட அறிவு கொண்டவனே, முனிவர்களின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டு, (உன் உணவுக்காக) உன் கனிகளைச் சேகரிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே {பீமா}, போரில் நீ திறனற்றவனாக இருப்பதால் காடுகளுக்குச் செல்வாயாக.(96) கனிகளையும், கிழங்குகளையும் தேர்ந்தெடுத்தல் {உண்பது}, அல்லது, விருந்தினருக்குப் பணிவிடை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவனான நீ, ஓ! விருகோதரா {பீமா}, எந்த ஆயுத வழியிலும் {எந்தப் போரிலும்} பங்கெடுப்பதற்குத் திறனற்றவனாவாய் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(97)
மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனின்} இளவயதில் அவனுக்கு {பீமனுக்கு} இழைக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் கடுஞ்சொற்களால் கர்ணன் நினைவுப்படுத்தினான்.(98) மேலும் அவன் {பீமன்} அங்கே பலவீனமாக நிற்கையில், கர்ணன் மீண்டும் அவனை {பீமனை} வில்லால் தீண்டினான். விருஷன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே மீண்டும் பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(99) “ஓ! ஐயா {பீமா}, நீ பிறரிடம் போரிடலாம், ஆனால் என் போன்றவனிடம் ஒருபோதும் முடியாது. எங்களைப் போன்றோரிடம் போரிட நேருவோர் இதையும், இன்னும் பிறவற்றையும் சந்திக்க வேண்டிவரும்.(100) கிருஷ்ணர்கள் {கருப்பர்களான அர்ஜுனனும், கிருஷ்ணனும்} இருவரும் எங்கிருக்கிறார்களோ அங்கே செல்வாயாக. போரில் அவர்கள் உன்னைக் காப்பார்கள். அல்லது, ஓ! குந்தியின் மகனே {பீமா}, வீட்டுக்குச் செல்வாயாக. உன்னைப் போன்ற ஒரு குழந்தைக்குப் போரில் என்ன வேலை இருக்கிறது?” {என்றான் கர்ணன்}.(101)
கர்ணனின் கடுஞ்சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்த பீமசேனன், அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளை அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(102) “ஓ! பொல்லாதவனே {கர்ணா}, என்னால் நீ மீண்டும் மீண்டும் வெல்லப்பட்டாய். இத்தகு வீணான தற்புகழ்ச்சியில் உன்னால் எவ்வாறு ஈடுபட முடிகிறது? பழங்காலத்தவர்கள் இவ்வுலகில் பெரும் இந்திரனின் வெற்றியையும் தோல்வியையும் கூடக் கண்டிருக்கின்றனர்.(103) ஓ! இழி பிறப்பு கொண்டவனே, வெறுங்கையால் தடகள {உடல்திறன்} மோதலில் {மல்யுத்தத்தில்} என்னுடன் ஈடுபடுவாயாக. பெரும் உடற்கட்டைக் கொண்ட வலிமைமிக்கக் கீசகனைக் கொன்றவாறே, மன்னர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் உன்னையும் கொல்வேன்” {என்றான் பீமன்}. (104)
பீமனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனும், நுண்ணறிவு கொண்ட மனிதர்களில் முதன்மையானவனுமான கர்ணன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மோதலில் இருந்து விலகினான்.(105) உண்மையில், பீமனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளில் சிங்கம் (கிருஷ்ணன்) மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இத்தகு தற்புகழ்ச்சி மொழியில் அவனை {பீமனை} நிந்தித்தான்.(106)
அப்போது அந்தக் குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), கேசவனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்டவையுமான அக்கணைகள், கிரௌஞ்ச மலைகளுக்குள் செல்லும் நாரைகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தன. காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், பல பாம்புகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தவையுமான அக்கணைகளுடன்கூடிய அந்தச் சூதனின் மகனை {கர்ணனைப்} பீமசேனனின் அருகில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} விரட்டினான்.(107-109) பீமனால் வில் வெட்டப்பட்டவனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான கர்ணன், பீமனிடமிருந்து தன் பெரும் தேரில் தப்பி ஓடினான்.(110) பீமசேனனும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்டு, தன் தம்பியும், பாண்டுவின் மகனுமான சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆற்றலை நினைத்து அந்தப் போரில் முன்னேறிச் சென்றான்.(111)
அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறி பார்த்து, மரணத்தைத்தூண்டும் காலனைப் போன்ற ஒரு கணையை வேகமாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை, பெரும்பாம்பைத் தேடி ஆகாயத்தில் செல்லும் கருடனைப் போலக் கர்ணனை நோக்கி வேகமாகச் சென்றது. எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தில் இருந்து கர்ணனைக் காக்க விரும்பி அதை நடுவானிலேயே வெட்டினான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அறுபத்து நான்கு {64} கணைகளால் துரோண மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்து, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, ஒருக்கணம் நிற்பீராக. தப்பி ஓடாதீர்” என்றான்.(112-115) எனினும், அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானைகளும், தேர்க்கூட்டங்களும் நிறைந்த கௌரவப் படைப்பிரிவுக்குள் வேகமாக நுழைந்தான்.
அப்போது அந்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட மற்ற விற்களின் நாணொலிகளை மூழ்கடித்தான். பிறகு வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெகு தொலைவுக்குப் பின்வாங்கிச் சென்றிராத துரோண மகனை {அஸ்வத்தாமனைப்} பின்னாலே தொடர்ந்து சென்று, வழியெங்கும் தன் கணைகளால் அவனை அச்சுறுத்தினான். கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களைத் துளைத்த அர்ஜுனன், அந்தப் படையையே கலங்கடிக்கத் தொடங்கினான். உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான பார்த்தன் {அர்ஜுனன்}, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தப் படையை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(116-120)
மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 139-திருதராஷ்டிரன் கவலை; சாத்யகிக்கும் அலம்புசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற சாத்யகி; துச்சாசனன் தலைமையிலான திருதராஷ்டிர மகன்கள் சாத்யகியை எதிர்த்து விரைந்தது; அவர்கள் அனைவரையும் தடுத்த சாத்யகி, துச்சாசனனைக் குதிரைகளற்றவனாக ஆக்கியது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுடர்மிக்க என்புகழ் நாளுக்கு நாள் மங்குகிறது. என் போர்வீரர்களில் மிகப் பலர் வீழ்ந்துவிட்டனர். இவையாவும் காலத்தால் கொண்டுவரப்பட்ட எதிர்வினைகளால் ஏற்படுகின்றன என நான் நினைக்கிறேன்.(1) துரோணராலும், கர்ணனாலும் பாதுகாக்கப்படுவதும், அதன் காரணமாகத் தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாததுமான என் படைக்குள் சினத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நுழைந்துவிட்டான்.(2) கிருஷ்ணன் மற்றும் பீமன் என்ற சுடர்மிக்க இரு சக்திகளுடனும், சிநிக்களின் காளையுடனும் {சாத்யகியுடனும்} இணைந்ததால், அவனது {அர்ஜுனனின்} ஆற்றல் பெருகியிருக்கிறது.(3) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நுழைவைக் கேட்டதில் இருந்து, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் துயரம் என் இதயத்தை எரிக்கிறது.
இந்தப் பூமியின் மன்னர்கள் அனைவரும், அவர்களோடு கூடிய சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} பொல்லாத விதியால் {தீயூழால்} பாதிக்கப்படுவதை நான் காண்கிறேன்.(4) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுக்கு (அர்ஜுனனுக்குத்) தீங்கிழைத்துவிட்டு, அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனின் பார்வையில் படும்போது, தன் உயிரை {அவனால்} எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?(5) இந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவே நான் ஊகிக்கிறேன். எனினும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. விவரிப்பதில் நீ திறன்கொண்டவனாக இருக்கிறாய், ஓ! சஞ்சயா, தாமரைகள் நிறைந்த தடாகத்துக்குள் பாயும் ஒரு யானையைப் போலத் திடமான தீர்மானத்துடன் தனஞ்சயனுக்காகப் {அர்ஜுனனுக்காக} போராட, அந்தப் பரந்த படைக்குள் மீண்டும் மீண்டும் அதனைக் கலங்கடித்தபடி நுழைந்தவனும், விருஷ்ணி வீரனுமான சாத்யகி எவ்வாறு போரிட்டான் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(7,8)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பீமன், பல வீரர்களுக்கு மத்தியில் கர்ணனின் கணைகளால் பீடிக்கப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அந்தச் சிநிக்களில் முதன்மையான போர்வீரன் {சாத்யகி}, தன் தேரில் அவனைப் {பீமனைப்} பின் தொடர்ந்து சென்றான்.(9) கோடையின் முடிவில் {தோன்றும்} கார்முகில்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டும், கூதிர்காலத்துக் கதிரவனைப் போலக் கதிரொளி வீசிக் கொண்டும் சென்ற அவன் {சாத்யகி}, தன் உறுதிமிக்க வில்லால் உமது மகனின் {துரியோதனனின்} படையைத் கொல்லத் தொடங்கி, அதை {அந்தப் படையை} மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான்.(10) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்த மதுகுலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, வெள்ளி நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில், முழங்கிக் கொண்டே களத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களில் எவராலும் அவனது {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.(11)
அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், போரில் எப்போதும் பின்வாங்கதவனும், வில் தரித்துத் தங்கக் கவசம் பூண்டவனுமான அலம்புசன் [1], சினத்தால் தூண்டப்பட்டு, மதுகுலத்தின் முதன்மையான போர்வீரனான அந்தச் சாத்யகியின் முன்னேற்றத்தை விரைந்து சென்று தடுத்தான்.(12) பிறகு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலானது, ஓ! பாரதே {திருதராஷ்டிரரே}, இது வரை எப்போதும் நடக்காததைப் போல இருந்தது. போரிடுவதை நிறுத்திய எதிரிகளும், உமது வீரர்கள் அனைவரும், போரின் ரத்தினங்களான அவ்விருவரின் மோதலைக் காணும் பார்வையாளர்கள் ஆனார்கள்.(13)அப்போது மன்னர்களில் முதன்மையானவனான அந்த அலம்புசன், பத்து கணைகளால் மிகப் பலமாகச் சாத்யகியைத் துளைத்தான். எனினும், அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, அந்தக் கணைகள் யாவும் தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான்.(14) மீண்டும் அலம்புசன், அழகிய சிறகுகளைக் கொண்டவையும், நெருப்பு போலச் சுடர்விடுபவையும், காதுவரை இழுக்கப்பட்டுத் தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான மூன்று கூரிய கணைகளால் சாத்யகியைத் தாக்கினான். இவை சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலுக்குள் ஊடுருவின.(15) நெருப்பு அல்லது காற்றின் சக்தியுடன் கூடிய அந்தச் சுடர்மிக்கக் கூரிய கணைகளால் சாத்யகியைத் துளைத்த பிறகு, அந்த அலம்புசன், வெள்ளியைப் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் குதிரைகளை நான்கு கணைகளால் மிகப்பலமாகத் தாக்கினான்.
அவனால் {அலம்புசனால்} இப்படித் தாக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், சக்கரதாரியை (கேசவனை {கிருஷ்ணனைப்}) போன்றவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட நான்கு கணைகளால் அலம்புசனின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(17) அலம்புசனது தேரோட்டியின் தலையை வெட்டிய பிறகு, அவன் {சாத்யகி}, யுக நெருப்பைப் போன்ற கடுமையான ஒரு பல்லத்தால், முழு நிலவைப் போல அழகானதும், சிறந்த காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அலம்புசனின் தலையைப் அவனின் உடலில் இருந்து வெட்டினான்.(18) பல மன்னர்களின் வழித்தோன்றலான {ராஜவம்சத்தில் பிறந்தவனான} அவனை {அலம்புசனைக்} கொன்ற பிறகு, பகைவரின் படைகளைக் கலங்கடிக்கவல்ல வீரனான அந்த யதுக்களின் காளை {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் துருப்புகளைத் தடுத்தபடியே அர்ஜுனனை நோக்கிச் சென்றான்.(19)
உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, அர்ஜுனனை அடுத்து எதிரியின் மத்தியில் சென்ற போது, சேர்ந்திருக்கும் மேகத் திரள்களைச் சிதறடிக்கும் சூறாவளியைப் போலத் தன் கணைகளால் குரு படையை மீண்டும் மீண்டும் அழித்தபடியே காணப்பட்டான்.(20) அந்த மனிதர்களில் காளை {சாத்யகி} எங்கெல்லாம் செல்ல விரும்பினானோ அங்கெல்லாம், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், வசப்படுத்தப்பட்டவையும், பசுவின் பால், அல்லது குருக்கத்தி மலர், அல்லது நிலவு, அல்லது பனியைப் போன்ற வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் அவன் {சாத்யகி} சுமந்து செல்லப்பட்டான்.(21)
அப்போது, ஓ! ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற வீரர்களோடு ஒன்று சேர்ந்த உமது மகன்கள், போர்வீரர்களில் முதன்மையான அந்தத் துச்சாசனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, சாத்யகியை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(22) படைப்பிரிவுகளின் தலைவர்களான அவர்கள், அந்தப் போரில் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். சாத்வதர்களில் முதன்மையான அந்த வீரச் சாத்யகியும், கணை மாரிகளால் அவர்கள் யாவரையும் தடுத்தான்.(23) தன் கடுங்கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சிநியின் பேரன், ஓ! ஆஜமீடரே {திருதராஷ்டிரரே}, தன் வில்லைப் பலமாக உயர்த்தி, துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான். அப்போது அந்தப் போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும், அந்த மனிதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(24)
சாத்யகியைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! – துரோண பர்வம் பகுதி – 140-சாத்யகியிடம் இருந்து தப்பி ஓடிய திரிகர்த்தர்கள்; சூரசேனர்கள், கலிங்கர்கள் ஆகியோரைக் கடந்து அர்ஜுனனை நோக்கிச் சென்ற சாத்யகி; சாத்யகியைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் மீது கொண்ட கவலையின் நிமித்தமாகச் சாத்யகியின் வருகையால் மகிழாத அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களான திரிகர்த்த நாட்டின் பெரும் வில்லாளிகள், சாதனைக்குத் தகுந்த அனைத்து பெரும் செயல்களையும் சாதித்த போர்வீரனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பி, கடல் போன்று எல்லையற்ற அந்தப் படைக்குள் ஊடுருவி, துச்சாசனனின் தேரை எதிர்த்து விரைந்து வருபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் .(1, 2)
தேர்களின் பெருங்கூட்டத்தால் அனைத்துப் பக்கங்களிலும் அவனது {சாத்யகியினது} வழியைத் தடுத்த அந்தப் பெரும் வில்லாளிகள், சினத்தால் தூண்டப்பட்டுக் கணைமாரியால் அவனை {சாத்யகியை} மறைத்தனர்.(3)
கரைகளற்ற கடலுக்கு ஒப்பானதும், உள்ளங்கையொலிகளால் நிறைக்கப்பட்டதும், வாள்கள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவை நிரம்பியதுமான அந்தப் பாரதப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், தன் எதிரிகளுமான அந்த ஐம்பது {50} (திரிகர்த்த) இளவரசர்களையும் தனியாகவே வென்றான்.(4,5)
போரில், அந்நிகழ்வின் போது, சிநியின் பேரனுடைய {சத்யகியின்} நடத்தை மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். மேற்கில் அவனைக் {சாத்யகியைக்} கண்டவுடனேயே கிழக்கிலும் அவனைக் கண்டோம் என்ற அளவுக்கு அவனது (நகர்வுகளின்) நளினம் மிகச் சிறப்பாக இருந்தது.(6)
நூறு போர்வீர்களைத் தனக்குள் கொண்டவனைப் போல, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும், இன்னும் பிற துணைத் திசைகளிலும் ஆடிக்கொண்டே திரிபவனாக அந்த வீரன் {சாத்யகி} தெரிந்தான்.(7)
சிங்கத்தின் விளையாட்டு நடையுடன் கூடிய சாத்யகியைக் கண்ட திரிகர்த்த வீரர்கள், அவனது ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் படையை (தங்கள் நாட்டினரின் படைப்பிரிவுகளை) நோக்கி தப்பி ஓடினர்.(8)
அப்போது சூரசேனர்களில் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலத் தங்கள் கணைமாரிகளால் சாத்யகியைத் தாக்கி அவனைத் தடுக்க முயன்றனர்.(9)
நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆற்றலைக் கொண்ட வீரனான அந்த உயர் ஆன்ம சாத்யகி, அவர்களுடன் குறுகிய காலம் போராடிய பிறகு, கலிங்கர்களுடன் போரிடத் தொடங்கினான்.(10)
பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, கடக்கப்பட முடியாத அந்தக் கலிங்கப் படைப்பிரிவைக் கடந்து, பிருதையின் {குந்தியிப்} மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகே சென்றான்.(11) நீரில் நீந்திக் களைத்தவன் நிலத்தை அடைவதைப் போல யுயுதானன் {சாத்யகி}, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு ஆறுதல் அடைந்தான்.(12)
அவன் {சாத்யகி} வருவதைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ சிநியின் பேரன் {சாத்யகி} உன்னைத் தேடி வருகிறான்.(13)
ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி} உன் சீடனும், நண்பனுமாவான். அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, போர் வீரர்கள் அனைவரையும் துரும்பாகக் கருதி அவர்களை வென்றிருக்கிறான்.(14)
உன் உயிரைப் போல உன் அன்புக்குரியவனான அந்தச் சாத்யகி, ஓ! கிரீடி {அர்ஜுனா}, கௌரவப் போர்வீரர்களுக்குப் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியபடியே உன்னிடம் வருகிறான்.(15)
இந்தச் சாத்யகி, ஓ! பல்குனா {அர்ஜுனா}, தன் கணைகளால் துரோணரையும், போஜ குலத்தின் கிருதவர்மனையும் நசுக்கிய பிறகு உன்னிடம் வருகிறான்.(16)
ஓ! பல்குனா {அர்ஜுனா}, ஆயுதங்களில் திறன் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான இந்தச் சாத்யகி, யுதிஷ்டிரரின் நன்மையைக் கருதி, போர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்றுவிட்டு உன்னிடம் வருகிறான்.(17)
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கச் சாத்யகி, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிக அரிய சாதனைகளைச் செய்துவிட்டு, உன்னைக் காணவிரும்பி இதோ உன்னிடம் வருகிறான்.(18)
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் தனித்தேரில் {தனியாக} வந்த சாத்யகி, ஆசானின் {துரோணரின்} தலைமையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டுவிட்டு உன்னிடம் வருகிறான்.(19)
ஓ! பார்த்தா, தர்மனின் மகனால் {யுதிஷ்டிரரால்} அனுப்பப்பட்ட இந்தச் சாத்யகி, தன் சொந்த கரங்களின் வலிமையை நம்பி கௌரவப் படையைப் பிளந்து கொண்டு உன்னிடம் வருகிறான்.(20)
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எவனுக்கு ஒப்பாகக் கௌரவர்களில் எந்தப் போர்வீரனும் இல்லையோ, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்யகி உன்னிடம் வருகிறான்.(21)
இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கணக்கற்ற போர்வீரர்களைக் கொன்றுவிட்டு, பசுக்கூட்டத்தின் மத்தியில் இருந்து வரும் சிங்கத்தைப் போல, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து விடுபட்டு உன்னிடம் வருகிறான்(22).
இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா{அர்ஜுனா}, ஆயிரக்கணக்கான மன்னர்களின் தாமரை மலர்களைப் போன்ற அழகான முகங்களைப் பூமியில் பரவச் செய்தபடி உன்னிடம் வருகிறான்.(23)
தம்பிகளுடன் கூடிய துரியோதனனைப் போரில் வென்ற சாத்யகி, ஜலசந்தனைக் கொன்றுவிட்டு விரைவாக வருகிறான்.(24) கௌரவர்களைத் துரும்பாகக் கருதிய சாத்யகி, குருதியைச் சேறாகக் கொண்ட இரத்த ஆற்றை உண்டாக்கிவிட்டு உன்னிடம் வருகிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(25)
மகிழ்ச்சியற்ற அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சாத்யகியின் வருகை எனக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.(26)
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவில்லை. இப்போது அவர் {யுதிஷ்டிரர்} சாத்வதனிடம் {சாத்யகியிடம்} இருந்து பிரிந்திருப்பதால், அவர் {யுதிஷ்டிரர்} உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று நான் ஐயுறுகிறேன்.(27)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்தச் சாத்யகி மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாத்திருக்க வேண்டும். ஓ! கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான்?(28)
ஆகவே, மன்னர் {யுதிஷ்டிரர்} துரோணரிடம் கைவிடப்பட்டிருக்கிறார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் கொல்லப்படவில்லை. அதோ, பூரிஸ்ரவஸ் சாத்யகியை எதிர்த்துப் போரிடச் செல்கிறான்.(29)
ஜெயத்ரதன் நிமித்தமாக என்மீது கனமான சுமை உள்ளது. மன்னர் {யுதிஷ்டிரர்} எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவேண்டும், சாத்யகியையும் நான் பாதுகாக்க வேண்டும்.(30)
மேலும், ஜெயத்ரதனையும் நான் கொல்ல வேண்டும். சூரியனோ கீழே சாய்கிறான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் களைத்திருக்கிறான், அவனது ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.(31)
ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனது குதிரைகளும், அவற்றின் சாரதியும் கூடக் களைத்துப் போயிருக்கின்றனர். மறுபுறம், பூரிஸ்ரவசோ களைப்பற்றவனாக இருக்கிறான். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவன் {பூரிஸ்ரவஸ்} தனக்குப் பின்னால் அவனை ஆதரிப்பவர்களையும் கொண்டிருக்கிறான்.(32)
இம்மோதலில் சாத்யகிக்கு வெற்றி அடைவானா? கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா?(33)குருக்களில் முதன்மையானவனும், ஆயுதங்களில் திறம் கொண்டவனுமான அந்தப் பூரிஸ்ரவசுடன் மோதி, சாத்யகி நற்பேறை அடைவானா? ஓ! கேசவா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் செய்த பிழை என்றே இதை நான் கருதுகிறேன்.(34, 35)
அவர் {யுதிஷ்டிரர்}, ஆசானை {துரோணரைக்} குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு (தன் பக்கத்தில் இருந்த) சாத்யகியை அனுப்பியிருக்கிறார். வானுலாவும் பருந்தொன்று இறைச்சித் துண்டை நோக்கி செல்வதைப் போலவே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பிடிக்கவே துரோணர் எப்போதும் முயல்வார். ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் மன்னர் {யுதிஷ்டிரர்} விடுபட்டிருப்பாரா?” {என்றான் அர்ஜுனன்}.(36)
பூரிஸ்ரவஸின் கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 141-சாத்யகியை எதிர்த்த பூரிஸ்ரவஸ்; சாத்யகியிடம் பேசிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு சாத்யகியின் மறுமொழி; பூரிஸ்ரவஸுக்கும், சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; களைத்துப் போயிருந்தவனும், புத்துணர்வுடன் கூடிய பூரிஸ்ரவஸை எதிர்த்துப் போரிட்டவனுமானச் சாத்யகியைக் காக்க அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பூரிஸ்ரவஸிடம் அடங்கிய சாத்யகி; பூரிஸ்ரவஸின் ஒரு கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வெல்லப்பட முடியாத அந்தச் சாத்வதன் {சாத்யகி} (அர்ஜுனனை நோக்கி) வருவதைக் கண்டவனும், சினமடைந்தவனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(1) பிறகு அந்தக் குரு குலத்தோன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையிடம் {சாத்யகியிடம்}, “நற்பேறின் நிமித்தமாகவே இன்று நீ என் பார்வை அடையும் தொலைவுக்குள் வந்திருக்கிறாய்.(2) எப்போதும் என் மனதில் கொண்டிருந்த விருப்பத்தை இந்தப் போரில் நான் இன்று அடையப் போகிறேன். நீ போரில் இருந்து ஓடாமலிருந்தால், நீ உயிருடன் தப்ப மாட்டாய்.(3) {நீ கொண்ட} வீரத்தில் எப்போதும் செருக்குடையவனான உன்னை இன்று போரில் கொன்று, ஓ! தாசார்ஹ குலத்தோனே {சாத்யகி}, குரு மன்னன் சுயோதனனை {துரியோதனனை} நான் மகிழச் செய்யப் போகிறேன்.(4)
என் கணைகளால் எரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் உன்னை வீரர்களான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் இன்று சேர்ந்திருந்து காண்பார்கள்.(5) உன்னை இந்தப் படைக்குள் ஊடுருவச் செய்தவனான தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, என்னால் நீ கொல்லப்பட்டதைக் கேட்டு, வெட்கத்தில் மூழ்கப் போகிறான்.(6) இன்று நீ கொல்லப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு, பூமியில் கிடப்பதைப் பார்க்கையில், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என் ஆற்றலை அறிந்து கொள்வான்.(7) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில், சக்ரன் மற்றும் பலியின் மோதலைப் போலவே உன்னுடன் {இப்போது} நேரப்போகும் இந்த மோதலை எப்போதுமே நான் விரும்பி வந்தேன்.(8) ஓ! சாத்வதா {சாத்யகி} இன்று நான் உனக்குப் பயங்கரப் போரைத் தருவேன். அப்போதுதான், உண்மையில் என் சக்தி, வலிமை மற்றும் ஆண்மை ஆகியவற்றை நீ புரிந்து கொள்வாய்.(9)
போரில் என்னால் கொல்லப்படும் நீ, ராமனின் தம்பியான லட்சுமணனால் கொல்லப்பட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல இன்று யமனுலகை அடையப் போகிறாய்.(10) இன்று உன் கொலையைப் பார்க்கும் கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, மனத்தளர்ச்சியடைந்து போரைக் கைவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.(11) கூரிய கணைகளால் இன்று உனக்கு மரணத்தை ஏற்படுத்தி, ஓ! மாதவா {சாத்யகி}, போரில் உன்னால் கொல்லப்பட்டோர் அனைவரின் மனைவிமாரையும் மகிழச் செய்யப் போகிறேன்.(12) என் பார்வையின் இலக்குக்குள் வந்த நீ, சிங்கத்தின் பார்வை தொலைவுக்குள் வந்த சிறு மானைப் போல என்னிடம் இருந்து தப்ப மாட்டாய்” என்றான் {பூரிஸ்ரவஸ்}.(13)
அவனது {பூரிஸ்ரவஸ்ஸின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே அவனுக்குப் {பூரிஸ்ரவஸ்ஸுக்குப்} பதிலளிக்கும் வகையில், “ஓ! குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்ஸே}, போரில் நான் எப்போதும் அச்சங்கொண்டதில்லை.(14) உன் வார்த்தைகளால் மட்டுமே என்னை அச்சுறுத்துவதில் உன்னால் வெல்ல முடியாது. எவன் என்னை ஆயுதங்களை இழக்கச் செய்வதில் வெல்வானோ, அவனாலேயே போரில் என்னைக் கொல்ல முடியும்.(15) எவன் போரில் என்னைக் கொல்வானோ, அவன் இனி வரப்போகும் காலம் முழுவதும் (எதிரிகளைக்) கொன்று கொண்டிருப்பான் [1]. வீணான வார்த்தைகளைக் கொண்டு நீண்ட மூச்சுடன் தற்பெருமை பேசுபவது எதற்குப் பயன்படும்? நீ சொல்வதைச் செயலில் சாதிப்பாயாக.(16) கூதிர்காலத்துக் கார்முகில்களின் கர்ஜனையைப் போலவே உன் சொற்களும் கனியற்றவையாகவே தெரிகின்றன. ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன் முழக்கங்களைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.(17) ஓ குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்} நீண்ட நாட்களாக உன்னால் விரும்பப்பட்ட அந்த மோதல் இன்று நடக்கட்டும். ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்} உன்னுடனான மோதலை விரும்பும் என் இதயத்தால், தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! இழிந்தவனே, உன்னைக் கொல்லாமல் நான் போரில் இருந்து திரும்பேன்” என்றான் {சாத்யகி}. இத்தகு வார்த்தைகளால் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்ட மனிதர்களில் காளையரான அவ்விருவரும், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டு, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, ஒருவரையொருவர் போரில் தாக்கிக் கொண்டனர்.(19)பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காக மதங்கொண்ட இரண்டு கோபக்கார யானைகள் மோதுவதைப் போலப் போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(20) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பூரிஸ்ரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், மேகத்திரள்கள் இரண்டைப் போல ஒருவர் மீதொருவர் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.(21) அப்போது, அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வேகமாகச் செல்லும் கணைகளால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்து, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் மீண்டும் அவனைப் {சாத்யகியைப்} பல கணைகளால் துளைத்தான்.(22)
பத்து கணைகளால் சாத்யகியைத் துளைத்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தச் சிநிக்களின் காளைக்கு {சாத்யகிக்கு} அழிவை ஏற்படுத்தும் விருப்பத்தால் அவன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான். எனினும் சாத்யகி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் சக்தியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் பூரிஸ்ரவஸின் கணைகளில் எவையும் தன்னை அடையும் முன்பே அவை அனைத்தையும் ஆகாயத்திலேயே அறுத்தான். நற்குலத்தில் பிறந்தவர்களும், முறையே குருக்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரின் புகழை அதிகரித்தவர்களுமான அவ்விரு போர்வீரர்களும் இப்படியே ஒருவர் மீதொருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். தங்கள் நகங்களைக் கொண்டு போரிடும் இரு புலிகள், அல்லது தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடும் இரு பெரும் யானைகளைப் போன்றே அவர்கள், தேர்வீரர்கள் பயன்படுத்துபவையான கணைகளாலும், ஈட்டிகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(23-26) ஒருவரையொருவர் அங்கங்களைச் சிதைத்துக் கொண்டு, தங்கள் காயங்களில் குருதிப் பெருக்கெடுத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உயிரையே பணயம் வைத்து சூதாடி, ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டும், ஒருவரையொருவர் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.(27)
சிறந்த சாதனைகளைக் கொண்டவர்களும், முறையாகக் குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவர்களுமான அந்த வீரர்கள், யானைக் கூட்டங்களின் தலைமையானைகளில் இரண்டைப் போல இப்படியே ஒருவருடனொருவர் போரிட்டனர்.(28) உண்மையில், உயர்ந்த உலகங்களை அடைய ஆசைப்பட்ட போர்வீரர்களான அவ்விருவரும், பிரம்ம லோகத்தை விரைவில் அடைய விரும்பி ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கினர். உண்மையில் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த சாத்யகியும், சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர். அங்கே இருந்த மக்கள், அவ்விரு போர்வீரர்களுக்கு இடையில் நடந்த அந்த மோதல், பருவ காலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு தலைமை யானைகள் போரிடுவதைப் போலவே இருப்பதைக் கண்டனர் [2].(29-31)பிறகு அந்தத் தேரற்ற போராளிகள் ஒவ்வொருவரும் மற்றவரின் குதிரைகளைக் கொன்று, மற்றவரின் விற்களை அறுத்த பிறகு, வாள்களைக் கொண்டு அந்தப் பயங்கரப்போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(32) அவர்கள், அழகியவையும், பெரியவையும், பிரகாசமானவையும், காளையின் தோலால் செய்யப்பட்டவையுமான இரண்டு அழகிய கேடயங்களை எடுத்துக் கொண்டும், உறையிலிருந்து இரு வாள்களை உருவிக் கொண்டும் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(33) எதிரிகளைக் கலங்கடிப்பவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களுமான அவர்கள், மண்டலகதிகளைப் பின்பற்றியும், பிறவகைகளிலான முறையான நகர்வுகளைச் செய்தும், தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(34) வாள்களை ஏந்தி, பிரகாசமான கவசம் பூண்டு, மார்புக்கவசங்கள் மற்றும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களான புகழ்பெற்ற அந்தப் போர்வீரர்கள் இருவரும், பல்வேறு வகைகளிலான நகர்வுகளை வெளிப்படுத்தினர்.(35) அவர்கள் சக்கரமாகச் சுழன்று, உயரக் குதித்து, பக்கவாட்டில் உந்தித் தள்ளி, முந்தித் தாவி, முன்னோக்கியும் மேல்நோக்கியும் விரைந்தனர் [3].(36) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள், தங்கள் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மற்றவனின் தவறுகளுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். அழகாகத் தாவிய அவ்வீரர்கள் இருவரும், தங்கள் பயிற்சி, நகர்வு நளினம் மற்றும் திறம் ஆகியவற்றை வெளிக்காட்டினர்.(37) போர்வீரர்களில் முதன்மையான அவர்கள், அந்தப் போரில் திறம்பட ஒருவரையொருவர் குத்தத் தொடங்கினர்.(38) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருக்கணம் ஓய்வெடுத்தனர்.(39)அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் ஒவ்வொருவரின் கேடயங்களையும் தங்கள் வாள்களால் துண்டு துண்டாக வெட்டி மற்போரில் ஈடுபட்டனர்.(40) அகன்ற மார்புகள் மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், மற்போரில் திறம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், பரிகாயுதங்களுக்கு ஒப்பான இரும்பு போன்ற தங்கள் கரங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(41) தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டும் இருந்த அவர்கள் தங்கள் கரங்களால் மற்றவரின் கழுத்தையும் பிடித்தனர்.(42) அப்படி அந்த வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் விழும் இடிக்கு ஒப்பாக அந்தப் போரில் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலி பயங்கரமான பேரொலியாக இருந்தது.(43)
முறைப்படி குருக்கள் மற்றும் சாத்வத குலங்களின் போர்வீரர்களில் முதன்மையானவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அவ்விருவரும், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு ஒன்றோடொன்று மோதும் இரு யானைகள், அல்லது தங்கள் கொம்புகளைக் கொண்டு மோதும் இரு காளைகளைப் போலவே, சில நேரங்களில் ஒருவரையொருவர் கரங்களால் கட்டியும், சில நேரங்களில் தங்கள் தலைகளால் ஒருவரையொருவர் தாக்கியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் ஒருவரையொருவர் பின்னியும், சில நேங்களில் தங்கள் நகங்களால் ஒருவரையொருவர் கிள்ளியும், சில நேரங்களில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் மற்றவரின் இடுப்பைச் சுற்றிப் பின்னியும், சில நேரங்களில் தரையில் உருண்டும், சில நேரங்களில் முன்னேறியும், சில நேரங்களில் பின்வாங்கியும், சிலநேரங்களில் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தும், சில நேரங்களில் ஒருவரையொருவர் கீழே தூக்கி வீசியும், சில நேரங்களில் எழுந்து கொண்டும், சில நேரங்களில் உயரத் தாவிக் கொண்டும் இருந்தனர்.(44-46) உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் போராளிகளான அவ்விருவரும் அவ்வகை மோதல்களின் இயல்புக்குத் தகுந்த முப்பத்திரண்டு விதமான தனிப்பட்ட திறன்கள் மற்றும் செயல்கள் ஆகிய {செயல்திறன்கள்} அனைத்தையும் அந்தப் போரில் வெளிக்காட்டினர்.(47)
பூரிஸ்ரவஸுடனான மோதலில் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} ஆயுதங்கள் தீர்ந்து போன போது, அர்ஜுனனிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தேரை இழந்தவனுமான சாத்யகி போரில் ஈடுபடுவதைப் பார்.(48) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி}, உன்னைத் தேடியே பாரதப் படைகளைப் பிளந்து அதற்குள் நுழைந்தான். பெரும் சக்தி கொண்ட பாரத வீரர்கள் அனைவருடனும் அவன் போரிட்டான்.(49) வேள்விக்கொடைகளைப் பெருமளவில் அளிப்பவனான பூரிஸ்ரவஸ், அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி} சோர்வும், களைப்பும் அடைந்திருக்கும்போது மோதுகிறான். போரிடும் விருப்பம் கொண்ட பூரிஸ்ரவஸ், முன்னேறி வரும் சாத்யகியோடு [4] மோதப் போகிறான் {பீமனோடும் என்றிருக்கிறது}. ஓ! அர்ஜுனா, இம்மோதல் சமமற்றதாவே {நியாயமற்றதாகவே} இருக்கும்” என்றான் {கிருஷ்ணன்}.(50)அப்போது போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட எதிராளியைத் தாக்கும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலச் சாத்யகியை மூர்க்கமாகத் தாக்கினான் [5].(51) கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் தேர்களிலிருந்த அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் மோதலைக் கண்டு கொண்டிருந்த போதே போரிட்டனர் [6].(52)அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனிடம், “விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியானவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்குவதைப் பார்.(53) மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவன் {சாத்யகி}, முயற்சியால் களைத்துப்போய்த் தன் தேரை இழந்தான். ஓ! அர்ஜுனா, உன் வீரச் சீடன் சாத்யகியைக் காப்பாயாக.(54) ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மனிதர்களில் முதன்மையான அவன் {சாத்யகி}, வேள்விகளில் அர்ப்பணிப்புள்ள பூரிஸ்ரவஸுக்கு உன் நிமித்தமாக அடிபணியாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக. ஓ !பலம் வாய்ந்தவனே {அர்ஜுனா}, தேவையானதை விரைந்து செய்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(55)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “காட்டில் மதங்கொண்ட யானையொன்று வலிமைமிக்கச் சிங்கத்துடன் விளையாடுவதைப் போல அந்தக் குருக்களில் காளையும் {பூரிஸ்ரவஸும்}, அந்த விருஷ்ணிகளில் முதன்மையானவனும் {சாத்யகியும்} ஒருவருடனொருவர் விளையாடுவதைப் பார்” என்றான்.(56) பாண்டுவின் மகனான தனஞ்சயன் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பூரிஸ்ரவஸ் தீவிரமாக முயன்று, சாத்யகியைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தியதால், துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(57,58) யானையை இழுத்துச் செல்லும் சிங்கத்தைப் போல, குரு குலத்தில் முதன்மையானவனும், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளிப்பவனுமான அந்தப் பூரிஸ்ரவஸ், அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியை} இழுத்துச் சென்ற போது, அந்தப் போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(59)
பிறகு அம்மோதலில் தன் உறையில் இருந்து வாளை உருவிய பூரிஸ்ரவஸ், சாத்யகியின் தலைமுடியைப் பிடித்திழுத்து, தன் காலால் அவனது மார்பைத் தாக்கினான்.(60) பிறகு பூரிஸ்ரவஸ், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சாத்யகியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க எத்தனித்தான். அப்போது அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} தலையானது, அதன் முடியை {குடுமியைப்} பிடித்திருந்த பூரிஸ்ரவஸின் கரத்தோடு சேர்ந்து கழியைச் சுற்றும் குயவனின் {மண் பாண்டம் செய்பவரின்} சக்கரம் போலச் சிறிது நேரம் வேகமாகச் சுழன்றது.(61,62)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சாத்வதன் {சாத்யகி}, போரில் பூரிஸ்ரவஸால் இப்படி இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் அர்ஜுனனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியும், உன் சீடனும், வில்லாளித்தன்மையில் {விற்திறமையில்} உனக்குச் சற்றும் குறைவில்லாதவனுமான அவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்கிவிட்டான்.(64) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இந்தப் பூரிஸ்ரவஸ், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட விருஷ்ணி வீரன் சாத்யகியை இப்படி மீறியிருப்பதால், பின்னவனின் {சாத்யகியின்} பெயரே பொய்யாகப் போகிறது [7]” என்றான் {கிருஷ்ணன்}.(65)வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் பூரிஸ்ரவஸை மனதினால் வழிபட்டான்.(66) அவன் {அர்ஜுனன்} “குருக்களின் புகழை அதிகரிப்பவனான பூரிஸ்ரவஸ், விளையாட்டில் இழுப்பதைப் போலப் போரில் சாத்யகியை இழுக்கிறான் என்பதில் நான் மகிழ்கிறேன்.(67) விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையானவனான சாத்யகியைக் கொல்லாமல், பெரும் யானையை இழுத்துச் செல்லும் வலிமைமிக்கச் சிங்கத்தைப் போல இந்தக் குரு போர்வீரன் {பூரிஸ்ரவஸ்} அவனை {சாத்யகியை} இழுத்துச்செல்ல மட்டுமே செய்கிறான்” என்று நினைத்தான் {அர்ஜுனன்}.(68)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தக் குரு {கௌரவப்} போர்வீரனை {பூரிஸ்ரவஸை} இப்படியே மனதால் பாராட்டிவிட்டு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}(69), “ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் கண்கள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மீது நிலைத்திருந்ததால், என்னால் சாத்யகியைக் காண முடியவில்லை. எனினும், அந்த யாதவப் போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நான் மிகக் கடினமான சாதனையையும் செய்வேன்” என்று மறுமொழி கூறினான்.(70)
வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பணிந்து இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய க்ஷுரப்ரம் {கத்தி போன்ற தலை கொண்ட கணை} ஒன்றைக் காண்டீவத்தில் பொருத்தினான்.(71) பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டதும், ஆகாயத்தில் இருந்து சுடர்விட்டபடி விழும் கண்கவரும் விண்கல்லுக்கு ஒப்பானதுமான அந்தக் கணை, வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததும், அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் குரு போர்வீரனின் {பூரிஸ்ரவஸின்} கரத்தைத் துண்டித்தது” என்றான் {சஞ்சயன்}.(72)
பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 142-நியாயமற்ற காரியத்தைச் செய்ததாக அர்ஜுனனைக் கடிந்து கொண்ட பூரிஸ்ரவஸ்; தன் செயல்பாட்டை நியாயப்படுத்திய அர்ஜுனன்; அர்ஜுனனின் நியாயத்தைக் கேட்டு அமைதியடைந்த பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு அருள் வழங்கிய கிருஷ்ணன்; பிராயோபவேசத்தில் அமர்ந்திருந்த பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி; தன் செய்கையை நியாயப்படுத்திய சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததுமான (பூரிஸ்ரவஸின்) அந்தக் கரம் (இப்படி வெட்டப்பட்டு), அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துயரத்தை அளிக்கும் வகையில் கீழே பூமியில் விழுந்தது.(1) உண்மையில், சாத்யகியின் தலையை வெட்ட இருந்த {பூரிஸ்ரவஸின்} அந்தக் கரம், {பூரிஸ்ரவஸின் கண்களுக்குக்} காணப்படாத அர்ஜுனனால் வெட்டப்பட்டு, ஐந்து தலை கொண்ட பாம்பொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(2) பார்த்தனால் {அர்ஜுனனால்} தான் திறனறுபட்டதைக் கண்ட அந்தக் குரு {கௌரவப்} போர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, சாத்யகியிடம் இருந்த பிடியைக் கைவிட்டுக் கோபத்தால் நிறைந்து பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கடிந்து பேசினான்.(3)
பூரிஸ்ரவஸ் {அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னால் காணப்படாதவனாகவும், என்னுடன் (போரில்) ஈடுபடாதவனுமாக இருந்த நீ, என் கரத்தை வெட்டியதால் ஈவிரக்கமற்ற கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்.(4) தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரனிடம், “பூரிஸ்ரவஸ், போரில் வேறொருவனுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் என்னால் கொல்லப்பட்டான்” என்று நீ சொல்ல வேண்டியிருக்காதா?(5) உயர் ஆன்ம இந்திரனாலோ, ருத்ரனாலோ, துரோணராலோ, கிருபராலோ உனக்கு இப்படிப்பட்ட ஆயுதப் பயன்பாடு கற்றுக் கொடுக்கப்பட்டதா?(6) இவ்வுலகில் யாவரையும் விட ஆயுதங்களின் பயன்பாடு குறித்த விதிகளை நன்கறிந்தவன் நீயே. அப்படியிருக்கையில், போரில் உன்னுடன் ஈடுபடாத ஒரு போர்வீரனின் கரத்தை ஏன் நீ வெட்டினாய்?(7) கவனிக்காதவனையோ, பயந்தவனையோ, தேரற்றவனாக ஆக்கப்பட்டவனையோ, உயிரை, அல்லது பாதுகாப்பை இரந்து {கெஞ்சிக்} கேட்பவனையோ, துயரில் வீழ்ந்தவனையோ நீதிமான்கள் ஒரு போதும் தாக்குவதில்லை.(8) அப்படியிருக்கையில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இழிந்தவனுக்கே தகுந்ததும், பொல்லாதவனால் மட்டுமே செய்யப்படுவதுமான இந்தப் பாவம் நிறைந்த, மிகவும் தகுதியற்ற செயலை ஏன் நீ செய்தாய்?(9) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, மரியாதைக்குரிய ஒருவன், மரியாதைக்குரிய செயலை எளிதாகச் செய்துவிடுவான். எனினும், மதிப்பற்ற ஒரு செயலைச் செய்வது மதிப்புமிக்க ஒருவனுக்கு மிகக் கடினமாகும்.(10) யாருடன் ஒரு மனிதன் திரிகிறானோ, அவனது நடத்தையையே அவன் விரைவில் பிடித்துக் கொள்வான். ஓ! பார்த்தா, இதுவே உன்னில் காணப்படுகிறது.(11) நல்ல நடத்தையைக் கொண்டவனாக, சிறந்த நோன்புகளை நோற்றவனாக, அரசபரம்பரையைச் சேர்ந்தவனாக, அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்தவனாக இருப்பினும், க்ஷத்திரிய கடமைகளில் இருந்து எவ்வாறு நீ விலகினாய்?(12) விருஷ்ணி போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நீ செய்த இந்த அற்பச் செயல் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஆலோசனைகளுக்கு இணக்கமாகவே செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. உன்னைப் போன்ற ஒருவனுக்கு இத்தகு செயல் பொருந்தாது.(13) வேறொருவனுடன் போரில் ஈடுபட்டுக் கவனமற்று இருக்கும் ஒருவனுக்கு, கிருஷ்ணனின் நண்பனைத் தவிர வேறு எவனால் இத்தகு குற்றத்தை இழைக்க முடியும்?(14) பாவச்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், நிந்திக்கத்தக்க நடத்தைக்கு இயல்பிலேயே அடிமையான தீய க்ஷத்திரியர்களாவர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனக்கு முன்மாதிரியாக அவர்களை ஏன் நீ கொண்டாய்? [1] [2]” என்றான் {பூரிஸ்ரவஸ்}.15-போரில் இப்படிக் கேட்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பூரிஸ்ரவஸுக்கு மறுமொழியாக, “ஓ! தலைவா {பூரிஸ்ரவஸ்}, மூடத்தனமான இவ்வார்த்தைகள் யாவும் உன்னால் சொல்லப்படுவதால், உடல் பலவீனத்தினால் ஒருவனது அறிவும் சிதைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது [3].(16) ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்}, என்னையும் நீ நன்றாக அறிந்தாலும், உன்னால் எவ்வாறு எங்களை இப்படிக் கடிந்து கொள்ள முடிகிறது? போர்விதிகளையும், சாத்திரங்களின் பொருள் அனைத்தையும் அறிந்த நான், பாவச்செயல் எதையும் செய்ய மாட்டேன்.(17) இதை நன்றாக அறிந்தும், என்னை நீ நிந்திக்கிறாய். தொண்டர்கள், சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், உறவினர்கள், சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் ஆகியோரால் சூழப்பட்டவர்களாகவே க்ஷத்திரியர்கள் பகைவரோடு போரிடச் செல்வார்கள்.(18) அப்படித் தங்களைப் பின்தொடர்வோரை (பின்தொடர்வோரின் பலத்தை) நம்பியே அவர்கள் போரிடவும் செய்வார்கள்.(19) அப்படியிருக்கையில், என் சீடனும், அன்புக்குரிய சொந்தக்காரனும், விடுவதற்கு அரிதான உயிரையே துச்சமாக மதித்து எங்களுக்காகப் போரிடுபவனுமான சாத்யகியை நான் ஏன் காக்கக் கூடாது? [4](20) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, போரில் வெல்லப்பட முடியாதவனான சாத்யகி என் வலக்கரமாவான்.-போருக்குச் செல்லும் ஒருவன் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்வது தகாது.(21) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, வேறொருவனின் காரியத்தில் ஈடுபடும் ஒருவன், (அந்த வேறொருவனால்) பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் பாதுகாக்கப்படுவதால், போரின் தொடர்ச்சியில் மன்னனும் பாதுகாக்கப்படுகிறான்.(22) பெரும்போரில், சாத்யகி கொல்லப்படப்போகும் தருணத்தில், (அவனைக் காக்க முயற்சி செய்யாமல்) நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய அத்தகைய புறக்கணிப்பின் காரணமாக ஏற்படும் சாத்யகியின் மரணத்தால் நான் பாவத்தையே அடைவேன்.(23) நான் சாத்யகியைக் காத்ததற்காக என்னிடம் ஏன் நீ கோபம் கொள்கிறாய்? ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, “வேறொருவனிடம் போரிட்டுக் கொண்டிருந்தாலும், உன்னால் நான் அங்கம் சிதைக்கப்பட்டேன்” என்று நீ என்னைக் கடிந்து கொள்கிறாய். அக்காரியத்தில் தவறாகத் தீர்மானித்தேன் என்றே நான் பதிலளிப்பேன்.
தேர்கள் மற்றும் யானைகள் நிரம்பியதும், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் மிகுந்ததும், கடும் சிங்க முழக்கங்களை எதிரொலிப்பதும், அகன்ற கடலுக்கு ஒப்பானதுமான படைக்கு மத்தியில், சில நேரங்களில் என் கவசத்தை அசைத்துக் கொண்டும், சில நேரங்களில் என் தேரில் ஏறிச் சென்றும், சில நேரங்களில் வில்லின் நாணை இழுத்துக் கொண்டும், நான் என் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} ஒரே ஒருவனுடன் மட்டுமே போரில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியம் [5]?பலருடன் போரிட்ட அந்தச் சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வென்று களைத்துப் போயிருந்தான்.(24-28) அவனது விலங்குகளும் {குதிரைகளும்} களைத்திருந்தன. ஆயுதங்களால் பீடிக்கப்பட்டிருந்த அவனும் {சாத்யகியும்} உற்சாகமற்றவனாகவே இருந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியை அப்படிப்பட்ட சூழ்நிலையில் வென்று, அவனை உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உனது மேன்மையை நீ வெளிக்காட்ட முனைந்தாய்.(29) அந்தப் போரில் உன் வாளால் சாத்யகியின் தலையை வெட்டவும் நீ விரும்பினாய்.(30) அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை என்னால் அலட்சியமாகப் பார்க்க முடியாது [6]. (அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கையில்) உன்னைக் குறித்துக் {உன் பாதுகாப்பில்} கவனமில்லாமல் இருந்ததால், உன்னையே நீ நிந்தித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன்னைச் சார்ந்த ஒருவனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(31)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி (அர்ஜுனனால்) சொல்லப்பட்டவனும், வலிய கரங்கொண்டவனும், சிறப்பானவனும், வேள்விக்கம்பத்தை {யூபத்தைத்} தன் கொடியில் பொறித்திருந்தவனுமான பூரிஸ்ரவஸ், யுயுதானனை {சாத்யகியைக்} கைவிட்டு, பிராயம் என்ற நோன்பின்படி {பிராயோபவேசம் செய்து} [7] இறக்க விரும்பினான்.(32) பல நற்செயல்களால் புகழ்பெற்றவனான அவன் {பூரிஸ்ரவஸ்}, பிரம்ம லோகத்தை அடைய விரும்பி தன் இடக்கையால் அம்புப்படுக்கையைப் {கணைகளாலான ஆசனத்தைப்} பரப்பி, அவற்றைப் {அம்புகளைப்} பாதுகாக்கும் தெய்வத்தின் மீது கவனமாகத் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்தான்.(33) தன் பார்வையைச் சூரியனிலும், தூய்மையான தன் இதயத்தைச் சந்திரனிலும் நிலைக்கச் செய்து, பெரும் உபநிஷதத்தை (மஹா உபநிஷத் மந்திரங்களை) நினைத்த பூரிஸ்ரவஸ் யோகத்தை மேற்கொண்டு பேசுவதை நிறுத்தினான் [8].(34)அப்போது படைகள் அனைத்திலும் இருந்த மனிதர்கள் யாவரும் கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} நிந்தித்து, மனிதர்களில் காளையான அந்தப் பூரிஸ்ரவஸைப் பாராட்டினர்.(35) நிந்திக்கப்பட்டாலும், அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் (இறந்து கொண்டிருக்கும் அந்த வீரனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு}) ஏற்பில்லாத எந்த ஒரு வார்த்தையையும் பேசவில்லை. யூபக்கொடி கொண்ட பூரிஸ்ரவஸும், தான் இப்படிப் புகழப்படுவதால் எந்த இன்பத்தையும் உணரவில்லை.(36) அப்போது, பல்குனன் என்றும் அழைக்கப்படும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உமது மகன்கள் இவ்வகையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாகவும், அவர்களின் வார்த்தைகளையும், பூரிஸ்ரவஸின் வார்த்தைகளையும் மனத்தில் கொண்டும், துயரத்துடனும், கோபமற்ற இதயத்துடனும், அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டும்படி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.{37, 38) அவன் {அர்ஜுனன்}, “மன்னர்கள் அனைவரும், என் பெருநோன்பான {மகாவிரதமான} ‘எங்கள் தரப்பினர் எவரும் என் கணைகளின் எல்லைக்குள் உள்ள வரையில், அவர்களைக் கொல்வதில் எவராலும் வெல்ல முடியாது’ என்பதை {என்ற என் சபதத்தை} அறிவர்.(39) ஓ யூபக் கொடியோனே {பூரிஸ்ரவஸ்}, இதை நினைவுகூரும் நீ என்னை நிந்தித்தல் தகாது. அறநெறி எதுவென அறியாத ஒருவன், பிறரை நிந்திப்பது முறையாகாது.(40) போரில் நன்கு ஆயுதம் தரித்திருந்த நீ, (ஆயுதமற்ற) சாத்யகியை கொல்லப்போகும் தருணத்தில், நான் உனது கரத்தை வெட்டியது அறநெறிக்கு முரணானதல்ல.(41) ஆனால், ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்}, ஆயுதமற்றவனும், தேரை இழந்தவனும், கவசம் நழுவியவனும், வெறும் பாலகனே ஆனவனுமான அபிமன்யுவின் கொலையை நேர்மையான எந்த மனிதன்தான் பாராட்டுவான்?” என்றான் {அர்ஜுனன்}.(42)
இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட பூரிஸ்ரவஸ் தன் தலையால் தரையைத் தொட்டு, (வெட்டப்பட்டிருந்த தன் வலக்கரத்தை) தன் இடக்கரத்தால் காணிக்கையளித்தான் {அர்ஜுனன் எதிரில் போட்டான்}.(43) கண்கவரும் பிரகாசத்தைக் கொண்டவனும், யூபக் கொடியோனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தலையைத் தொங்கப் போட்டவாறே அமைதியாக இருந்தான்.(44) அப்போது அர்ஜுனன், “ஓ! சலனின் அண்ணனே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரிடமோ, வலிமைமிக்கோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீமரிடமோ, நகுலனிடமோ, சகாதேவனிடமோ நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாகவே நான் உன்னிடமும் {அன்பு} கொண்டுள்ளேன்.(45) என்னாலும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனாலும் கட்டளையிடப்படும் நீ, உசீநரனின் மகனான சிபி எங்கே இருக்கிறானோ, அந்த நல்லோரின் உலகங்களுக்குச் செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(46) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, “வேள்விகளையும், அக்னிஹோத்திரங்களையும் நீ தொடர்ச்சியாகச் செய்திருக்கிறாய். எனவே, காந்தியால் எப்போதும் சுடர்விடுவதும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட முதன்மையான தேவர்களாலும் விரும்பப்படுவதுமான என் தூய உலகங்களுக்குத் தாமதமில்லாமல் சென்று, எனக்கு இணையானவனாகி, கருடனால் சுமக்கப்படுவாயாக” என்றான்.(47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவஸால்} விடுவிக்கப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, எழுந்திருந்து, தன் வாளை உருவி கொண்டு, பூரிஸ்ரவஸின் சிரத்தைக் கொய்ய விரும்பினான்.(48) உண்மையில், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளித்தவனும், போரில் உணர்வுகள் அற்றுப் போனவனும், பாண்டுவின் மகனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனும், வெட்டப்பட்ட கையுடன் அமர்ந்திருந்தவனும், துதிக்கையற்ற யானைக்கு ஒப்பாக இருந்தவனும், சலனின் அண்ணனுமான பாவமற்ற அந்தப் பூரிஸ்ரவஸைச் சாத்யகி கொல்ல விரும்பினான்.(49) போர்வீரர்கள் அனைவரும் (அவனது நோக்கத்திற்காகப்) அவனை உரக்க நிந்தித்தனர். படைவீரர்கள் மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதும், கிருஷ்ணன், உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்}, பீமன், (அர்ஜுனனுடைய தேரின்) இருசக்கரங்களையும் பாதுகாத்தவர்கள் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ்), அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், விருஷசேனன் ஆகியோராலும், சிந்துக்களின் ஆட்சியாளனாலும் {ஜெயத்ரதனாலும்} கூடத் தடுக்கப்பட்ட போதிலும், அறிவை இழந்தவனான சாத்யகி, நோன்பை நோற்றுக் கொண்டிருந்த பூரிஸ்ரவஸைக் கொன்றான்.(50-52) உண்மையில், பார்த்தனால் {அர்ஜுனனால்} கை அறுபட்டவனும், தன் ஆன்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் பிராயத்தில் {பிராயம் என்ற நோன்பில்} அமர்ந்திருந்தவனுமான அந்தக் குரு போர்வீரனின் தலையைத் தன் வாளால் அறுத்தான் சாத்யகி.(53)
பார்த்தனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனான அந்தக் குருகுலத்தைத் தழைக்க வைத்தவனை {பூரிஸ்ரவஸைக்} கொன்றதற்காகச் சாத்யகியைப் போர்வீரர்கள் மெச்சவில்லை.(54) அந்தப் போரில் சக்ரனை {இந்திரனைப்} போன்ற பூரிஸ்ரவஸ், பிராய நோன்பை நோற்று அமர்ந்திருக்கையில் கொல்லப்பட்டதைக் கண்டும், அவனால் சாதிக்கப்பட்ட செயல்களால் வியப்படைந்தும், சித்தர்கள், சாரணர்கள், அங்கே இருந்த மனிதர்கள், ஏன் தேவர்களும் கூட அவனை {பூரிஸ்ரவஸைப்} புகழத் தொடங்கினர்.(55) உமது வீரர்களும் இக்காரியத்தை வாதிட்டுக் கொண்டே, “இது விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தவறன்று. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. எனவே, நாம் கோபமடைய வேண்டாம். கோபமே மனிதர்களின் கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.(56,57) விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பூரிஸ்ரவஸ் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இது {இக்குற்றம்} யாருடையது, அல்லது யாருடையதில்லை என்று ஆராய்வது பயனற்றதாகும். சாத்யகியே போரில் பூரிஸ்ரவஸின் மரணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்” என்றனர்.(58)
சாத்யகி, “பாவிகளான கௌரவர்களே, நீதி {அறம் / தர்மம்} என்ற ஆடையை மேலுக்குப் போர்த்திக் கொண்டு, இந்தப் பூரிஸ்ரவஸ் கொல்லப்படத்தகாதவன் என்று என்னிடம் நீங்கள் அறச்சொற்களில் {தர்ம வாதங்கள்} பேசுகிறீர்கள்.(59) எனினும், ஆயுதங்களை இழந்திருந்த பாலகனான சுபத்திரையின் மைந்தனை {அபிமன்யுவை} நீங்கள் கொன்ற போது உங்கள் நீதி {அறம்} எங்கே சென்றது?(60) ‘போரில், உயிரோடு என்னைக் கீழே தூக்கிப் போட்டுச் சினத்துடன் தன் காலால் எவன் என்னைத் தாக்குவானோ, அவன் தவத்தைச் செய்பவனாகவே இருப்பினும், அந்தப் பகைவன் என்னால் கொல்லப்படுவான்’ என நான் ஒரு குறிப்பிட்ட அளவு அகந்தையோடு சபதம் செய்திருக்கிறேன்.(61) கைகளோடும், கண்களோடும், முழுவதும் நலமாக மோதலில் போராடிக் கொண்டிருந்த என்னை இறந்தவன் என்றே நீங்கள் கருதினீர்கள். அஃது உங்கள் மூடத்தனமே. குருக்களில் காளையரே, என்னால் சாதிக்கப்பட்ட பூரிஸ்ரவஸின் படுகொலை முற்றிலும் முறையானதே. எனினும் பார்த்தர் {அர்ஜுனர்}, என் மீது கொண்ட பற்றாலும், (தன் தரப்பில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும்படி) தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றும்பொருட்டும் வாளைப் பிடித்திருந்த இவனது {பூரிஸ்ரவஸின்} கரத்தை வெட்டி என் புகழைக் களவாடிவிட்டார்.(64) எது விதிக்கப்பட்டுள்ளதோ அது நடக்கவே வேண்டும். இங்கே விதியே வேலை செய்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டிருக்கிறான். {இதில்} நான் என்ன பாவத்தை இழைத்துவிட்டேன்?(65) பழங்காலத்தில் பூமியில் வால்மிகி “ஓ! குரங்கே, பெண்கள் கொல்லப்படக்கூடாது என நீ சொல்கிறாய்.(66) எனினும், மனிதர்கள் எப்போதும் எதிரிகளுக்கு வலியை {துன்பத்தைக்} கொடுப்பதை உறுதியான கவனத்துடன் {பாதுகாப்புடன்} எக்காலத்திலும் சாதிக்க வேண்டும்” என இவ்வரிகளைப் பாடியுள்ளார்” என்றான் {சாத்யகி} [9].(67)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சாத்யகி இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களிலோ, கௌரவர்களிலோ எவரும் எதையும் பேசவில்லை. மறுபுறம் அவர்கள் பூரிஸ்ரவஸை மனத்தால் புகழ்ந்தனர்.(68) காட்டில் வாழும் தவசிக்கோ, பெரும் வேள்வியில் மந்திரங்களால் தூய்மையடைந்த ஒருவனுக்கோ ஒப்பானவனும், ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடையாக அளித்தவனுமான சிறப்புமிக்கச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} படுகொலையை எவரும் மெச்சவில்லை.(69) அழகிய நீலக் குழல்களால் அருளப்பட்டதும், புறாக்களைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டதுமான அவ்வீரனின் {பூரிஸ்ரவஸின்} தலையானது, குதிரை வேள்வியில் {அஸ்வமேதயாகத்தில்} அறுக்கப்பட்டு வேள்விப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குதிரையின் தலையைப் போலத் தெரிந்தது [10].(70) தன் ஆற்றலாலும், ஆயுத முனையில் தான் அடைந்த மரணத்தாலும் புனிதமடைந்தவனும், எவ்வரத்துக்கும் தகுந்தவனும், வரங்களை அளிப்பவனுமான பூரிஸ்ரவஸ், அந்தப் பெரும்போரில் தன் உடலைத் துறந்து, தன் அறங்களால் {நற்பண்புகளால்} ஆகாயத்தை நிறைத்தபடியே உயர்ந்த உலகங்களுக்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(71)
தேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை! – துரோண பர்வம் பகுதி – 143-பூரிஸ்ரவஸிடம் சாத்யகி அடைந்த தோல்வியின் காரணத்தை விசாரித்த திருதராஷ்டிரன்; தேவகியின் சுயம்வரத்தில் சிநியால் அவமதிக்கப்பட்ட சோமதத்தன்; சிநியின் வழித்தோன்றலைத் தன் வழித்தோன்றல் அவமதிக்க மகாதேவனிடம் வரம் பெற்ற சோமதத்தன்; விருஷ்ணி வீரர்களின் புகழைச் சொன்ன சஞ்சயன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்?” என்று கேட்டான்.(1, 2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)அந்த நேரத்தில்தான், ஓ! மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது முடியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, “பிழைப்பாயாக” என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)
சிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ! தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)
உண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.
தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன சொல்லப்படமுடியும்?(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள்,செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26)
பலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ! குருக்களின் மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன” {என்றான் சஞ்சயன்}.(29)
கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 144-ஜெயத்ரதனின் தேரை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; ஜெயத்ரதனைப் பாதுகாக்கக் கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட ஜெயத்ரதன் உள்ளிட்ட கௌரவர்கள்; அர்ஜுனனுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான கடும் மோதல்; கர்ணனைக் குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்; தன் எதிரிகள் அனைவரையும் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய அர்ஜுனன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தச் சூழ்நிலையில் குரு போர்வீரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூரிஸ்ரவஸ் மறு உலகத்திற்குச் சென்ற பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) “ஓ! கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ! கிருஷ்ணா, சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டி, என் சபதத்தை உண்மையாக்குவாயாக” என்று சொல்லி {கிருஷ்ணனைத்} தூண்டினான்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் போன்ற குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் பலர், எவனுடைய கணைகள் எப்போதும் கலங்கடிக்கப்பட்டதில்லையோ, எவன் பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் செல்கிறானோ அந்த அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தனர். எனினும் பீபத்சு {அர்ஜுனன்}, தன் எதிரில் நின்று கொண்டிருந்த சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைந்து, அவன் மீது தன் பார்வையைச் செலுத்தி, கோபத்தால் சுடர்விட்ட தனது கண்களால் அவனை எரிக்கப்போவது போலத் தெரிந்தான்.(4-9)
அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} விரைவாகப் பேசினான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) “ஓ! விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ! உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ! கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ! கர்ணா, நிச்சயம் வெற்றி நமதே.(13) சூரியன் மறைவது வரை சிந்துக்களின் ஆட்சியாளன் பாதுகாக்கப்பட்டால், பிறகு சபதம் பொய்யாக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} சுடர்மிக்க நெருப்பில் நுழைவான்.(14)
பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, அர்ஜுனனின் சகோதரர்களால், அர்ஜுனன் இல்லாத உலகில் ஒருக்கணமும் வாழ இயலாது.(15) பாண்டுவின் மகன்கள் இறந்ததும், ஓ! கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ! கர்ணா, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் அழிவுக்காகவே ஜெயத்ரதனைக் கொல்வது குறித்த இந்தச் சபதத்தைச் செய்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(18)
ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ உயிரோடிருக்கையில், சிந்துக்களின் ஆட்சியாளனைச் சூரியன் அஸ்த மலைகளை அடைவதற்கு முன் பல்குனனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(19)
மத்ர மன்னனாலும், சிறப்புமிக்கக் கிருபராலும் ஜெயத்ரதன் பாதுகாக்கப்படும்போது, பின்னவனை {ஜெயத்ரதனைத்} தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(20)
துரோணராலும், என்னாலும், துச்சாசனனாலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனை அடைய விதியால் தூண்டப்பட்டவனாகத் தெரியும் பீபத்சுவால் {அர்ஜுனனால்} எவ்வாறு முடியும்?(21)
போரில் ஈடுபடும் வீரர்கள் பலராவர். சூரியனோ வானத்தின் கீழே சாய்கிறான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் ஜெயத்ரதனை நெருங்கக்கூட முடியாது.(22)
எனவே, ஓ! கர்ணா, என்னோடும், துணிவும், வலிமையும் மிக்கப் பிற தேர்வீரர்களோடும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோரோடும் சேர்ந்து, பெரும் உறுதியோடும், தீர்மானத்தோடும் முயற்சி செய்து போரில் பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிடுவாயாக” என்றான் {துரியோதனன்}.(23)
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் சொல்லப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, குருக்களில் முதன்மையான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்:(24) “மூர்க்கமாகத் தாக்கவல்லவனும், துணிவுமிக்க வில்லாளியுமான பீமசேனனின் தொடர்ச்சியான கணைமாரியால் போரில் எனது உடல் ஆழமாகத் துளைக்கப்பட்டிருக்கிறது. ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ! மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, என் ஆண்மையைச் சார்ந்து உனக்காக நான் இன்று அர்ஜுனனுடன் போரிடுவேன்.(31) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறப்போகும் கடும்போரை இன்று துருப்புகள் அனைத்தும் காணட்டும்” என்றான் {கர்ணன்}.
இப்படிப் போரில் கர்ணனும், குரு மன்னனும் {துரியோதனனும்} ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன், தன் கூரிய கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(32, 33) பெருங்கூர்மை கொண்ட தன் பல்லங்களால் அவன் {அர்ஜுனன்}, பரிகங்கள் {முள் பதித்த தண்டாயுதங்கள்}, அல்லது யானைகளின் துதிக்கைகளைப் போலிருக்கும் பின்வாங்காத வீரர்களின் கரங்களை அந்தப் போரில் வெட்டத் தொடங்கினான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் அவர்களது சிரங்களையும் அறுத்தான்.(34, 35) மேலும் அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, யானைகளின் துதிக்கைகளையும், குதிரைகளின் கழுத்துகளையும், சுற்றிலும் உள்ள தேர்களின் அக்ஷங்களையும் {ஏர்க்கால்களையும்}, ஈட்டிகள் மற்றும் வேல்களை ஏந்திய இரத்தக் கறை கொண்ட குதிரைவீரர்களையும் க்ஷுரப்ரங்களால் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக அறுத்தான். குதிரைகள், முதன்மையான யானைகள், கொடிமரங்கள், குடைகள், விற்கள், சாமரங்கள், தலைகள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் வேகமாக விழத்தொடங்கின.(36, 37) வைக்கோல் பொதியை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல உமது படையை எரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, விரைவில் பூமியைக் குருதியால் மறைத்தான்.(38) வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்து விரைவில் சிந்துக்களின் ஆட்சியாளனை அடைந்தான்.
பீமசேனன் மற்றும் சாத்வதனால் {சாத்யகியால்} பாதுகாக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(39, 40) பல்குனனை {அர்ஜுனனை} அந்நிலையில் கண்ட மனிதர்களில் காளையரான உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளால் அவனை {அர்ஜுனனைப்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், சிந்து மன்னனுக்காக {ஜெயத்ரதனுக்காகப்} போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோரும், ஏன் சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} கூடக் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(41-43) போரில் திறன்வாய்ந்த அந்தப் போர்வீரர்கள் அனைவரும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தங்கள் பின்னால் நிறுத்திக் கொண்டு, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கொல்ல விரும்பி, போரை நன்கறிந்த வீரனும், தன் தேர் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்து கொண்டிருந்தவனும், வில்லின் நாணொலியாலும், தன் உள்ளங்கையாலும் கடும் ஒலிகளை உண்டாக்கியவனும், வாயை அகல விரித்திருக்கும் யமனுக்கு ஒப்பானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அச்சமற்ற வகையில் சூழ்ந்து கொண்டனர்.(44, 45)
அப்போது வானத்தில் சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்றான். அவன் {சூரியன்} (வேகமாக) மறைய விரும்பிய கௌரவ வீரர்கள், பாம்பின் உடல்களுக்கு ஒப்பான (கூம்பு போன்ற) கரங்களால் தங்கள் விற்களை வளைத்து, சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தங்கள் நூற்றுக்கணக்கான கணைகளைப் பல்குனனை {அர்ஜுனனை} நோக்கி ஏவினர்.(46) இப்படித் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும், இரண்டு, மூன்று அல்லது எட்டு துண்டுகளாக வெட்டியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், போரில் வெல்லப்படாதவனுமான அர்ஜுனன், அம்மோதலில் அவர்கள் அனைவரையும் துளைத்தான். சிங்கத்தின் வாலைத் தன் கொடியில் அடையாளமாகப் பொறித்திருக்கும் அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிக்காட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினான்.(47, 48) உண்மையில் அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பார்த்தனைப் பத்து கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏழாலும் துளைத்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தபடியே, அர்ஜுனனின் பாதையில் நின்றான்.
பிறகு, குருக்களில் முதன்மையானவர்கள் பலரும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் விற்களை வளைத்து, கணக்கிலடங்கா கணைகளை ஏவிய அவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காக்கத் தொடங்கினர்.(50, 51) அப்போது நாங்கள் துணிச்சல்மிக்கப் பார்த்தனின் கர வலிமையையும், அவனது கணைகளின் வற்றாத தன்மையையும், அவனது காண்டீவத்தின் வலிமையையும் கண்டோம்.(52) தன் ஆயுதங்களால் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருபரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அந்தப் போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் ஒன்பது கணைகளால் துளைத்தான்.(53)
அப்போது அவனைத் {அர்ஜுனனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இருபத்தைந்து கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும், துரியோதனன் இருபதாலும், கர்ணனும் சால்வனும் {சல்லியனும்} மூன்றாலும் துளைத்தனர்.(54) அவர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனை} நோக்கி முழங்கி, அடிக்கடி அவனைத் துளப்பதைத் தொடர்ந்தனர்.(55) தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே அவர்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். விரைவில் அவர்கள் தங்கள் தேர்களை அர்ஜுனனைச் சுற்றி வரிசையாக நிறுத்தினர்.(56) சூரியன் (வேகமாக) மறைய விரும்பியவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான கௌரவப் படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனை நோக்கி முழங்கத் தொடங்கி, தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைமாரியால் அவனை மறைத்தனர்.(57) கனமான தண்டாயுதங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பீமசேனனும், சாத்வதனும் {சாத்யகியும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் தன் கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(60)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் போர்க்களத்தில் சூதன் மகனை {கர்ணனைப்} பத்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். அப்போது சாத்வதன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஒரு புறத்தில்) கர்ணன் தனியாகவும், (மறுபுறத்தில்) பலருக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது. அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டு மூன்று பெரும் தேர்வீரர்களையும் தனியாக அவன் {கர்ணன்} தடுத்ததால், அப்போது நாங்கள் கண்ட சூதன் மகனின் {கர்ணனின்} ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(64)
அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில், ஒரு நூறு {100} கணைகளால், விகர்த்தனன் மகனான கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடியவனும், பெரும் ஆற்றலும், துணிச்சலும் கொண்டவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பதிலுக்கு ஐம்பது {50} கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(65, 66) அந்தப் போரில் அவனால் {கர்ணனால்} வெளிக்காட்டப்பட்ட கர நளினத்தைக் கண்டு அதை அர்ஜுனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(67) அவனது வில்லை அறுத்த வீரனான பிருதையின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனின் நடு மார்பில் ஒன்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் வேகம் தேவைப்பட்ட நேரத்தில் சூரியப் பிரகாசம் கொண்ட கணையொன்றைப் பெரும் வேகத்தோடு கர்ணனின் அழிவுக்காக ஏவினான்.(68, 69) எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை (கர்ணனை நோக்கி) மூர்க்கமாகச் சென்ற போது, அர்த்தச்சந்திரக்கணை ஒன்றால் அதை வெட்டினான். இப்படி அஸ்வத்தாமனால் வெட்டப்பட்ட அந்தக் கணை கீழே பூமியில் விழுந்தது.(70)
பிறகு பெரும் ஆற்றலைக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பல்லாயிரம் கணைகளால் பாண்டுவின் மகன் {அர்ஜுனனை} மறைத்தான்.(71) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, விட்டிற்பூச்சிகளை விரட்டும் காற்றைப் போலக் கர்ணனின் வில்லில் இருந்து வந்த அந்த அசாதாரணக் கணை மாரியைத் தன் கணைகளால் விலக்கினான்(72). அப்போது அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிப்படுத்தித் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கணைகளால் அந்தப் போரில் கர்ணனை மறைத்தான்.(73) படைகளைக் கொல்பவனான கர்ணனும், அர்ஜுனனின் அருஞ்செயலுக்கு எதிர்வினையாற்ற விரும்பி, பல்லாயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.(74) ஒன்றையொன்று நோக்கி முழங்கும் இரு காளைகளைப் போல மனிதர்களில் சிங்கங்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரான கணைகளின் மேகங்களால் ஆகாயத்தையே மறைத்தனர்.(75) அடுத்தவர் கணை மாரியால் கண்ணுக்குப் புலப்படாமல் போன அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். ஒருவரையொருவர் நோக்கி முழங்கி, “நான் பார்த்தன், காத்திருப்பாயாக”, அல்லது “நான் கர்ணன், ஓ! பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக” என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி, ஒருவரோடொருவர் போரிட்டனர்.(78)
அப்போது துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களிடம், “ராதையின் மகனை {கர்ணனைக்} கவனமாகப் பாதுகாப்பீராக. அர்ஜுனனைக் கொல்லாமல் அவன் போரில் இருந்து விலக மாட்டான். இது விருஷனே {கர்ணனே} என்னிடம் சொன்னதாகும்” என்றான்.(79, 80) அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்ட நான்கு கணைகளால், கர்ணனின் நான்கு குதிரைகளை யமனின் ஆட்சிப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். மேலும் அவன், ஒரு பல்லத்தால் கர்ணனின் தேரோட்டியையும் அவனது தேரில் இருந்து வீழ்த்தினான்.(81, 82) உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணைகளின் மேகங்களால் அவன் கர்ணனை மறைத்தான். இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்டு, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன கர்ணன், அந்தக் கணைமாரியால் மலைப்படைந்து, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(83)
அவன் {கர்ணன்} தேரற்றவனாக்கப்பட்டதைக் கண்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏழு கணைகளாலும் துளைத்தனர்.(87) குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்கள் அனைவரையும் பதிலுக்குத் துளைத்தான். உண்மையில் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு {64} கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நூறாலும் {100}, சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} பத்து பல்லங்களாலும், விருஷசேனனை மூன்று கணைகளாலும், சரத்வானின் மகனை {கிருபரை} இருபதாலும் {20} துளைத்துப் பெருங்கூச்சலிட்டான்.(88, 89) சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சபதத்தைக் கலங்கடிக்க விரும்பிய உமது போர்வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர்.(90)
அப்போது அர்ஜுனன், தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வாருண ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும், விலைமதிப்புமிக்கத் தேர்களில் இருந்த கௌரவர்கள், கணைமாரிகளைப் பொழிந்து கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர்.(91) ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தாலும், தங்க மாலையாலும் அலங்கரிக்கப்பட்ட இளவரசனான அந்த அர்ஜுனன், பெரும் குழப்பத்துடன் கூடியதும், மலைக்கச் செய்வதுமான அந்தக் கடுமையான போரின் போது ஒரு போதும் தன் உணர்வுகளை இழக்கவில்லை. மறுபுறம், அவன் {அர்ஜுனன்} தொடர்ந்து தன் கணைகளின் மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான்.(92) அரசாங்கத்தை மீட்க விரும்பி, குருக்களின் விளைவாகப் பனிரெண்டு {12} வருடங்கள் அனுபவித்த தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தவனும், உயர் ஆன்மா கொண்டவனும், அளவிட முடியாதவனுமான அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் இருளச் செய்தான்.(93) ஆகாயம் எரிகற்களால் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வானத்தில் இருந்து இறங்கிய எண்ணற்ற காகங்கள் (இறந்து போன போராளிகளின்) உடல்களைக் கொத்தின. அதே வேளையில் அர்ஜுனன், பழுப்பு நிற நாண் கொண்டு பினாகையால் அசுரர்களைக் கொன்ற மகாதேவனை {சிவனைப்} போலக் காண்டீவத்தால் எதிர்களைக் கொல்வதைத் தொடர்ந்தான்.(94)
அப்போது எதிரிகளை அடக்குபவனான சிறப்புமிக்கக் கிரீடி {அர்ஜுனன்}, தன் உறுதிமிக்க வில்லால் எதிரியின் கணைகளை விலக்கி, முதன்மையான தங்கள் குதிரைகளிலும், யானைகளிலும் ஏறியிருந்த குருக்களில் முதன்மையானோர் பலரைத் தன் கணைகளால் கொன்றான்.(95) பிறகு, கனமான கதாயுதங்கள், இரும்பாலான தண்டாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான பிற பலமிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மன்னர்கள் பலர், பயங்கரத் தோற்றங்களை ஏற்று, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துத் திடீரென விரைந்தனர்.(96) பிறகு அர்ஜுனன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், யுக முடிவின் போது திரளும் மேகங்களின் முழக்கங்களைப் போல உரத்த நாணொலி கொண்டதும், தன் உறுதிமிக்க வில்லுமான காண்டீவத்தைத் தன் கரங்களால் வளைத்துச் சிரித்துக் கொண்டே உமது துருப்புகளை எரித்தபடியே யமனுடைய அரசாங்கத்தின் மக்கள் தொகையை அதிகரித்தான்.(97) உண்மையில் அந்த வீரன் {அர்ஜுனன்}, அப்படிக் கோபத்துடன் வந்த அந்தப் போர்வீரர்களை, அவர்களது தேர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த வில்லாளிகளோடு சேர்த்து கரங்களற்றவர்களாகவும், உயிரற்றவர்களாகவும் செய்து, இப்படியே யமனின் ஆட்சிப் பகுதிகளுடைய மக்கள் தொகையை அதிகரித்தான்” {என்றான் சஞ்சயன்} [1].(98)
ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 145-அர்ஜுனனுடன் துணிச்சலோடு போரிட்ட ஜெயத்ரதன்; ஜெயத்ரதனின் கொடிமரத்தை வெட்டி, அவனது சாரதியைக் கொன்ற அர்ஜுனன்; வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட ஜெயத்ரதன்; யோக சக்தியால் சூரியனை மறைத்த கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்ட அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; மனித சக்திக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனின் வீரம்; விருத்தக்ஷத்திரனின் கதையை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்டிய அர்ஜுனன்; விருத்தக்ஷத்திரனின் தலை சுக்குநூறாகச் சிதறியது; இருளை விலக்கியக் கிருஷ்ணன்; பயங்கரக் கூச்சலால் யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்பிய பீமசேனன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் வில்லை வளைத்தபோது யமனின் உரத்த அழைப்புக்கோ, இந்திரனுடைய வஜ்ரத்தின் பயங்கர முழக்கத்துக்கோ ஒப்பான நாணொலியைக் கேட்ட அந்த உமது படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீன்கள் மற்றும் மகரங்களுடன் கூடிய கடல் நீரானது, யுக முடிவில் எழும் சூறாவளியால் சீற்றத்துடன் அடிக்கப்பட்டு, மலை போன்ற அலைகளாக உடைவதைப் போல மிகவும் கலங்கியது. அப்போது பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரே நேரத்தில் திசைகள் அனைத்திலும் இருப்பவனைப் போலத் தன் அற்புத ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(1-3) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுக்கிறான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்துகிறான், எப்போது வில்லை வளைக்கிறான், எப்போது அவற்றை விடுகிறான் என்பதை நாங்கள் காண முடியாத அளவுக்கு அவனது கரநளினம் {கரலாகவம்} இருந்தது. பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, வெல்லப்பட முடியாத ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்துப் பாரதர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். தெய்வீக ஆயுதங்களின் சக்தியுள்ள மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, நெருப்பு போன்ற வாய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுடர்மிக்கக் கணைகள் அதிலிருந்து {அந்த ஐந்திராஸ்திரத்தில் இருந்து} பாய்ந்தன. நெருப்புக்கோ, சூரியனின் கதிர்களுக்கோ ஒப்பான அந்தக் கணைகள், கடும் மூர்க்கத்துடன் விரைந்ததால், மின்னும் எரிக்கோள்களால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் காண முடியாததாக ஆனது.(4-7)
கௌவர்களின் கணைகளால் உண்டானதும், மற்றவரால் கற்பனையிலும் கூட அகற்றப்பட முடியாததுமான அந்த இருளை {சஸ்திராந்தகாரத்தை}, களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியபடி திரிந்து கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அதிகாலையில் சூரியன் இரவின் இருளைத் தன் கதிர்களால் விரைவாக அகற்றுவதைப் போலத் தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தன் கணைகளால் {அந்த இருளை} அழித்தான்.(8, 9) , சூரியன் தன் வெப்பக் கதிர்களால் குளங்கள் மற்றும் தடாகங்களில் உள்ள நீரை உறிஞ்சுவதைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன், சுடர்மிக்கத் தன் கணைகளால் உமது போர்வீரர்களின் உயிர்களை உறிஞ்சினான்.(10) உண்மையில், சூரியனின் கதிர்கள் பூமியை மறைப்பதைப் போல (அர்ஜுனனால் ஏவப்பட்ட) தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய அந்தக் கணைகளின் மாரி அந்தப் பகைவரின் படையை மறைத்தன.(11) (தனஞ்சயனால்) ஏவப்பட்ட கடுஞ்சக்தி கொண்ட பிற கணைகள் உயிர் நண்பர்களைப் போல (பகை) வீரர்களின் இதயங்களுக்குள் வேகமாக நுழைந்தன.(12) உண்மையில், அந்தப் போரில் அர்ஜுனனுக்கு எதிரில் வந்த அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அனைவரும், சுடர்மிக்க நெருப்பை அணுகிய பூச்சிகளைப் போல அழிந்தனர்.(13) இப்படித் தன் எதிரிகளின் உயிர்களையும், அவர்களது புகழையும் நசுக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, உடல் கொண்டு வந்த யமனைப் போலவே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(14)
பார்த்தன் {அர்ஜுனன்}, கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரிகளின் தலைகள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் பருத்த கரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் ஆகியவற்றைத் தன் கணைகளால் அறுத்தான்.(15) யானைப்பாகர்களின் ஈட்டிகளுடன் கூடியவையும், குதிரைவீரர்களின் வேல்களுடன் கூடியவையும், காலாட்படைவீரர்களின் கேடயங்களுடன் கூடியவையும், தேர்வீர்களின் விற்களுடன் கூடியவையும், தேரோட்டிகளின் சவுக்கு மற்றும் சாட்டைகளுடன் கூடியவையுமான கரங்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(16, 17) உண்மையில், தன்னொளியுடன் சுடர்விடும் முனை கொண்ட கணைகளுடன் கூடிய அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இடையறாத பொறிகள் மற்றும் எழுதழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18) ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} இணையான வீரனும், மனிதர்களில் காளையும், ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடியே தன் தேரில் தான் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடி காணப்படுபவனும், தன் வில்லின் நாண்கயிறாலும் உள்ளங்கைகளாலும் செவிடாகும்படி ஒலியெழுப்பக்கூடியவனும், எரிக்கும் கதிர்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பானவனுமான அந்தத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைத்} தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்ட பகை மன்னர்கள் அனைவராலும் பார்க்ககூட முடியவில்லை.(19-21)
சுடர்மிக்க முனைகளைக் கொண்ட தன் கணைகளுடன் கூடியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மழைக்காலங்களில் வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மழைநிறைந்த மேகங்களின் வலிமைமிக்கத் திரளைப் போல அழகாகத் தெரிந்தான்.(22) வலிமைமிக்க ஆயுதங்களின் அந்தப் பலமான வெள்ளத்தை ஜிஷ்ணு {அர்ஜுனன்} பாயச் செய்த போது, போர்வீரர்களின் காளையரான பலர் தாங்க முடியாத அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் மூழ்கினர்.(23) துதிக்கைகளோ, தந்தங்களோ வெட்டப்பட்ட மதங்கொண்ட யானைகள், குளம்புகளையோ, கழுத்துகளையோ இழந்த குதிரைகள், துண்டு துண்டாகக் குறைந்து போன தேர்கள், குடல்கள் வெளியேறிய போர்வீரர்கள், கால்களோ, பிற அங்கங்களோ வெட்டப்பட்ட பிறர், முற்றிலும் அசையாமலோ, சுயநினைவின்றி அசைந்து கொண்டோ கிடந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உடல்கள் ஆகியவை விரவி கிடந்ததும், பார்த்தன் {அர்ஜுனன்} போரிட்டுக் கொண்டிருந்ததும், யமனே ஆசைப்படும் இடத்துக்கு ஒப்பானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், பழங்காலத்தில் ருத்ரன் {சிவன்} உயிரினங்களை அழித்த போது, அவன் {சிவன்} விளையாடிய மைதானம் போன்றதுமான அந்தப் பரந்த களத்தை நாங்கள் கண்டோம்.(24-27) க்ஷுரப்ரங்களில் {கத்தி போன்ற முனை கொண்ட கணைகளில்} வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக் கிடந்த அந்தக் களத்தில் சில பகுதிகள், பாம்புகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. அதே போல வெட்டப்பட்ட போர்வீரர்களின் தலைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள், தாமரை மலர் மாலைகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. பல வண்ணங்களிலான அழகிய தலைக்கவசங்கள், மகுடங்கள், கேயூரங்கள், அங்கதங்கள், காது குண்டலங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டட கவசங்களுடனும், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் {தங்க} இழைகள், பிற ஆபரணங்களுடனும், அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான கிரீடங்களுடனும் பூமியானவள் புதுமணப்பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தாள்.
அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, அச்சமிக்கப் பொருள்களால் நிறைந்து, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் வைதரணீக்கு ஒப்பாகப் பாய்வதும், சீற்றமிக்கதுமான ஒரு பயங்கர ஆற்றை {நதியை} அங்கே உண்டாக்கினான். (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மஜ்ஜையும் கொழுப்பும் அதன் சகதியாகின. குருதி அதன் ஓடையாகியது. உறுப்புகளாலும், எலும்புகளாலும் நிறைந்திருந்த அஃது அடியற்ற ஆழம் கொண்டதாக இருந்தது. உயிரினங்களின் மயிர்கள் அதன் பாசிகளும், புற்களுமாகின. சிரங்களும், கரங்களும் அதன் கரைகளில் உள்ள கற்களாகின. கொடிமரங்கள், பலவண்ணங்களிலான கொடிகள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடைகளும், விற்களும் அதன் அலைகளாகின. உயிரிழந்த பெரும் யானைகளின் உடல்களால் அது நிறைந்திருந்தது. தேர்க்கூட்டங்கள் அதன் பரப்பில் மிதக்கும் நூற்றுக்கணக்கான தெப்பங்களாகின. கணக்கிலடங்கா குதிரைகளின் சடலங்கள் அதன் கரைகளாகின. பாம்புகளைப் போலத் தெரிந்த தேர்களின் அக்ஷங்கள், கூபரங்கள், தோமரங்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகள், கணைகள் ஆகியவற்றின் விளைவால் அது கடப்பதற்குக் கடினமானதாக இருந்தது. அண்டங்காக்கைகளும், கங்கப் பறவைகளும் அதன் முதலைகளாகின. நரிகள் அதன் மகரங்களாக அமைந்து அதைப் பயங்கரமாக்கின. கடும் கழுகுகள் அதன் சுறாக்களாகின. துள்ளித் திரியும் பேய்களாலும், பிசாசங்களாலும், ஆயிரக்கணக்கான பிறவகை ஆவிகளாலும் அது நிறைந்திருந்தது [1]. மேலும் அதில் உயிரற்ற போர்வீரர்களின் கணக்கிலடங்கா உடல்கள் மிதந்தன. யமனுக்கு ஒப்பான முகத்தோற்றம் கொண்ட அந்த அர்ஜுனனின் ஆற்றலைக் கண்டு, அந்தப் போர்க்களத்தில் இதற்கு முன் எப்போதும் நேராத அளவுக்குக் குருக்கள் பீதியை அடைந்தனர்.(28-38)பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களால் பகைவீரர்களைக் கலங்கடித்துக் கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டு, அவன் {அர்ஜுனன்} கடுஞ்சாதனைகளைச் செய்யும் போர்வீரன் என அனைவரையும் உணரச் செய்தான்.(39) அப்போது, அர்ஜுனன் தேர்வீரர்களில் முதன்மையான அனைவரையும் விஞ்சி நின்றான்.(40) ஆகாயத்தில் எரிக்கும் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல, உயிரினங்கள் ஏதாலும் அவனைப் பார்க்கக்கூட முடியவில்லை.(41) அந்தப் போரில் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} வில்லான காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகள், ஆகாயத்தில் நாரைகளின் வரிசைக்கு ஒப்பாக எங்களுக்குத் தெரிந்தன.(42) அந்த வீரர்கள் அனைவரின் ஆயுதங்களையும் தன் ஆயுதங்களால் கலங்கடித்து, தான் ஈடுபட்ட பயங்கரச் சாதனைகளால் தன்னைக் கடுஞ்சாதனைகள் கொண்ட போர்வீரனாகக் காட்டிக் கொண்ட அர்ஜுனன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் விஞ்சி அவர்கள் அனைவரையும் தன் கணைகளால் மலைக்கச் செய்தான்.(44) கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடி, அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் திரிந்து அழகாகக் காட்சியளித்தான்.(45) அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் வானத்தினூடாகத் தொடர்ந்து செல்வது ஆகாயத்தில் காணப்பட்டது.(46) அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், உண்மையில் அந்தப் பாண்டுவின் மகன் எப்போது அதைக் குறிபார்த்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை எங்களால் கவனிக்கவே முடியவில்லை.(47)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்து, போரில் தேர்வீரர்கள் அனைவரையும் பீடித்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை நோக்கிச் சென்று, அவனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு {64} நேரான கணைகளால் துளைத்தான்.(48) பிறகு, ஜெயத்ரதனை நோக்கிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட குருவீரர்கள் அனைவரும் போரில் இருந்து விலகினர்.(49) உண்மையில், அந்த வீரர்கள் ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிருடன் தப்புவான் என்ற} நம்பிக்கையற்றுப் போனார்கள். அந்தக் கடும்போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்த உமது வீரர்களில் ஒவ்வொருவரும், ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் கணையால் தங்கள் உடலில் ஆழத் துளைக்கப்பட்டனர்.(50) வலிமைமிக்கத் தேர்வீரனும், வெற்றியாளர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், நெருப்பு போலச் சுடர்விட்ட தன் கணைகளால், உமது படையைத் தலைகளற்ற உடல்களின் {கபந்தங்களின்} [2] கூட்டமாக மாற்றினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படியே நால்வகைப் படைப்பிரிவுகளுடன் கூடிய உமது படையில் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஜெயத்ரதனை நோக்கி முன்னேறினான். மேலும் அவன் {அர்ஜுனன்} துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஐம்பது கணைகளாலும், விருஷசேனனை {கர்ணனின் மகனை} மூன்றாலும் துளைத்தான்.(51-53) அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஒன்பது கணைகளால் கிருபரை மென்மையாகத் தாக்கினான். மேலும் அவன், சல்லியனைப் பதினாறு கணைகளாலும், கர்ணனை முப்பத்திரண்டாலும் துளைத்தான்.(54) அதற்கு மேலும் அவன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.எனினும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சினத்தால் நிறைந்தான்.(55) பன்றிக் கொடியைத் தாங்கிய அவன் {ஜெயத்ரதன்}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கழுகின் சிறகுகளைக் கொண்டவையுமான நேரான கணைகள் பலவற்றைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர் மீது விரைவாக ஏவினான்.(56, 57) பிறகு கோவிந்தனை {கிருஷ்ணனை} மூன்று கணைகளால் துளைத்த அவன் {ஜெயத்ரதன்}, அர்ஜுனனை ஆறால் {6 கணைகளால்} தாக்கினான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} எட்டு கணைகளால் அர்ஜுனனின் குதிரைகளையும், மற்றொன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(58) அப்போது அர்ஜுனன், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} ஏவப்பட்ட கூரிய கணைகளைக் கலங்கடித்த அதே வேளையில், இரண்டு கணைகளால் ஜெயத்ரதனுடைய தேரோட்டியின் தலையையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தையும் அறுத்தான். வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கொடிமரம், நெருப்பின் தழல் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது. அதே வேளையில் சூரியனும் வேகமாகக் கீழே இறங்கினான்.(59-61)
அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைவாக, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வலிமையும், வீரமும் மிக்க ஆறு தேர்வீரர்களுக்கு மத்தியில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்.(62) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்த ஜெயத்ரதனும், அங்கே அச்சத்துடன் காத்திருக்கிறான். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, தடையின்றி நீ முயன்றாலும், அந்த ஆறு தேர்வீரர்களையும் போரில் வெல்லாமல் உன்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லவே முடியாது. எனவே, நான் யோகத்தை {யோக சக்தியைப்} பயன்படுத்திச் சூரியனை மறைக்கப் போகிறேன். (அதன் விளைவாக) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியன் மறைவதைக் காண்பான். ஓ! தலைவா {அர்ஜுனா}, உயிரை விரும்புபவனான அந்தப் பொல்லாதவன், தன் அழிவுக்காகவே மகிழ்ச்சியை அடைந்து, அதற்கு மேலும் தன்னை மறைத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஓ! குருக்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நீ அவனைத் {ஜெயத்ரதனைத்} தாக்க வேண்டும்.(65-66)
சூரியன் உண்மையாகவே மறைந்துவிட்டான் என்று எண்ணி நீ உன் ஊக்கமான முயற்சியைக் கைவிட்டுவிடாதே” என்றான் {கிருஷ்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.(67)
அப்போது ஹரி என்றும் அழைக்கப்படுபவனும், தவச் சக்திகளைக் கொண்டவனும், தவசிகள் அனைவரின் தலைவனுமான கிருஷ்ணன், யோகத்தைப் பயன்படுத்தி, சூரியனை மறைப்பதற்காக இருளை உண்டாக்கினான் [3].(68)
கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள், சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பார்த்தன் {அர்ஜுனன்} தன் உயிரை விடப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(69)
உண்மையில், உமது போர்வீரர்கள், சூரியனைக் காணாது மகிழ்ச்சியிலேயே நிறைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைத் திருப்பிக் கொண்டு நின்றனர். மன்னன் ஜெயத்ரதனும் அதே மனநிலையில்தான் இருந்தான். இப்படி அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மீண்டும் தனஞ்சயனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, உன் மீது கொண்ட அச்சத்தை விட்டு, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(72) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பொல்லாத ஆன்மா கொண்ட அவனை {ஜெயத்ரதனைக் கொல்ல} இதுவே தகுந்த நேரம். விரைவாக அவனது தலையை அறுத்து உனது சபதத்தை உண்மையாக்குவாயாக” என்றான் [4].(73)இப்படிக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட அந்தப் பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்}, காந்தியில் சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான தன் கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(74) மேலும் அவன் {அர்ஜுனன்} கிருபரை இருபது கணைகளாலும், கர்ணனை ஐம்பதாலும் துளைத்தான். சல்லியன், துரியோதனன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறு கணைகளால் அவன் தாக்கினான்.(75) மேலும் அவன் {அர்ஜுனன்} விருஷசேனனை எட்டு கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபது {60} கணைகளாலும் துளைத்தான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற போர்வீரர்களைத் தன் கணைகளால் தாக்கியபடியே ஜெயத்ரதனை எதிர்த்து விரைந்தான். தழல் நாக்கை விரித்துப் பரவும் நெருப்பைப் போலத் தங்கள் முன்னிலையில் அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள் மிகவும் குழம்பினர்.(76, 77) பிறகு வெற்றியை விரும்பிய உமது போர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இந்திரனின் மகனை {அர்ஜுனனைக்} கணைத்தாரைகளால் குளிப்பாட்டினர்.(78) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், குருவின் வெற்றிகொள்ளப்படாத வழித்தோன்றலுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இடைவிடாத கணை மழையால் மறைக்கப்பட்டுச் சினத்தால் நிறைந்தான்.(79)
அப்போது, மனிதர்களில் புலியான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, உமது படையைக் கொல்ல விரும்பி, அடர்த்தியான கணை வலைகளை உண்டாக்கினான். பிறகு, அவ்வீரனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.(80, 81)
இரு மனிதர்களாகச் சேர்ந்து ஓடும் எவரையும் காண முடியாத வகையில் அவர்கள் அப்படி {தனித்தனியாகத்} தப்பி ஓடினர். குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அப்போது கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(82) உண்மையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {அர்ஜுனன்} அப்போது செய்ததைப் போல இதுவரை செய்யப்பட்டதும் இல்லை, இனி செய்யப்படப் போவதும் இல்லை. உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனைப் போலத் தனஞ்சயன், யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரை சாரதிகள், (தேர்வீரர்கள்) மற்றும் தேரோட்டிகள் ஆகியோரைக் கொன்றான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்படாத எந்த ஒரு யானையையோ, குதிரையையோ, மனிதப் போர்வீரனையோ நான் அந்தப் போரில் காணவில்லை.(83-84)
புழுதியாலும், இருளாலும் பார்வை தடைபட்ட உமது வீரர்களால் ஒருவரையொருவர் வேறுபடுத்திக்காண முடியாமல் முற்றிலும் உற்சாகத்தை இழந்தனர்.(85)
விதியால் உந்தப்பட்டும், கணைகளால் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் இருந்த உமது படை வீரர்கள், விழவோ, நொண்டித் திரியவோ தொடங்கினர்.(86) அவர்களில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, செயல் இழந்தனர், சிலரோ மரணம் ஏற்பட்டதைப் போல இருண்டனர் {நிறம் மங்கினர்}. யுக முடிவில் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு ஒப்பாக நடந்த அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, வெகுசிலரே தப்ப முடிந்த மூர்க்கமான அந்தக் கொடூரப் போரில் சிந்திய குருதி பூமியை நனைத்தது, பூமியில் எழுந்த புழுதியானது அப்படிச் சிந்திய குருதி மழை மற்றும் களத்தில் வீசிய வேகமான காற்று ஆகியவற்றின் விளைவால் மறைந்து போனது. தேர்ச்சக்கரங்களின் மத்திய பகுதி வரை மூழ்கும் அளவுக்கு அந்த இரத்த மழை ஆழமாக இருந்தது.(88, 89)
பெரும் வேகத்தைக் கொண்டவையும், மதங்கொண்டவையுமான உமது படையின் ஆயிரக்கணக்கான யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகர்கள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வலியால் கதறிக்கொண்டு நட்புப் படையணிகளைத் தங்கள் நடையால் நசுக்கியபடியே தப்பி ஓடின.(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரதிகளை இழந்த குதிரைகளும், காலாட்படை வீரர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு, அச்சத்துடன் தப்பி ஓடினர்.(91) உண்மையில் உமது படைவீரர்கள், கலைந்த கேசங்களுடன், தங்கள் கவசங்களை இழந்து, தங்கள் காயங்களில் இரத்தப் பெருக்கெடுத்து, அச்சத்தால் போர்க்களத்தை விட்டே தப்பி ஓடினர். ஒரு சிலர், ஏதோ தங்கள் கீழ் உறுப்புகள் {கால்கள்} முதலைகளால் பற்றப்பட்டதைப் போல அசையும் சக்தியை இழந்து களத்தில் கிடந்தனர்.(92, 93) வேறு சிலரோ, கொல்லப்பட்ட யானைகளின் உடல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.
இப்படி உமது படையை முறியடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தோரைப் பயங்கரக் கணைகளால் தாக்கத் தொடங்கினான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} தன் கணை மாரியால் கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், விருஷசேனன், துரியோதனன் ஆகியோரை மறைத்தான். எப்போது அர்ஜுனன் தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது வில்லை வளைத்தான், எப்போது அவற்றைத் தொடுத்தான் என்பதை எவராலும் கவனிக்க முடியாத அளவுக்கு அவனுடைய {அர்ஜுனனின்} வேகம் இருந்தது. உண்மையில் எதிரியைத் தாக்கும்போது, அவனது வில்லானது இடைவிடாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.(95-97) அவனது கணைகளும் இடைவிடாமல் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டு அனைத்துத் திசைகளிலும் இறைக்கப்படுவதும் காணப்பட்டது.
அப்போது கர்ணனின் வில்லையும், விருஷசேனனுடையதையும் வெட்டிய அர்ஜுனன், ஒரு பல்லத்தால் சல்லியனின் தேரோட்டியும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(98) பிறகு வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாமனும் மைத்துனனுமாக உறவுமுறை கொண்ட கிருபரையும், அஸ்வத்தாமனையும் பல கணைகளால் ஆழமாகத் துளைத்தான். இப்படி உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை மிகவும் பீடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நெருப்பு போன்ற காந்தி கொண்ட பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(99, 100) இந்திரனின் வஜ்ரத்தைப் போலத் தெரிந்ததும், தெய்வீக மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதுமான அந்த உறுதி மிக்கக் கணை, எந்தக் கடுமையையும் தாங்கவல்லதாக இருந்தது.(101) மேலும் அது நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் எப்போதும் வழிபடப்பட்டதாக இருந்தது. (மந்திரங்களின் துணையுடன்) வஜ்ரத்தின் சக்தியால் அதை ஈர்த்தவனும், குருவின் வழித்தோன்றலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன், காண்டீவத்தில் அதைப் பொருத்தினான்.(102) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தக் கணை வில்லின் நாணில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் உரத்த கூச்சல்கள் கேட்கப்பட்டன.(103)அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மீண்டும் அர்ஜுனனிடம் விரைவாகப் பேசினான், “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தீய ஆன்மா கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலையை விரைவாக அறுப்பாயாக. சூரியன் அஸ்த மலைகளை அடையப் போகிறான். எனினும், ஜெயத்ரதனின் கொலை குறித்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. உலகம் அனைத்திலும் அறியப்படும் விருத்தக்ஷத்திரன் ஜெயத்ரதனின் தந்தையாவான்.(105) நெடுங்காலத்திற்குப் பிறகே அவன் {விருத்தக்ஷத்திரன்}, எதிரிகளைக் கொல்பவனான ஜெயத்ரதனைத் தன் மகனாக அடைந்தான். (அந்த மகன் பிறந்த போது) வடிவமற்ற கண்ணுக்குத் தெரியாத குரல் ஒன்று, மேகங்கள் அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த ஒலியுடன் விருத்தக்ஷத்திரனிடம், “இந்த உனது மகன் {ஜெயத்ரதன்}, ஓ! தலைவா {விருத்தக்ஷத்திரா}, குருதியாலும், நடத்தையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும், இன்னும் பிற குணங்களாலும், இவ்வுலகின் இரு குலங்களுக்கு (சூரியன் மற்றும் சந்திர குலங்களுக்குத்) தகுந்தவனாவான். க்ஷத்திரியர்களில் முதன்மையடையும் அவன் {ஜெயத்ரதன்}, வீரர்களால் எப்போதும் வழிபடப்படுபவனாக இருப்பான்.(107-109) ஆனால் போரில் போராடிக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்களில் காளையும், உலகில் பகட்டானவனுமான ஒருவன், கோபத்தால் தூண்டப்பட்டு இவனது தலையை அறுப்பான்” என்றது.(110) பகைவர்களைத் தண்டிப்பவனான அந்தச் சிந்துக்களின் (பழைய) ஆட்சியாளன் {விருத்தக்ஷத்திரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டுச் சில காலம் சிந்தித்தான். தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவன் {விருத்தக்ஷத்திரன்} தன் சொந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம்,(111) “எந்த மனிதன் போரில் போராடிக் கொண்டிருக்கும் என் மகனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பூமியில் விழச் செய்வானோ, அவன் பெரும் சுமையைச் சுமப்பான், அந்த மனிதனின் தலை நிச்சயம் நூறு துண்டுகளாகச் சிதறும் என நான் சொல்கிறேன்” என்றான்.(12)
இவ்வார்த்தைகளைச் சொல்லி, ஜெயத்ரதனை அரியணையில் நிறுவிய விருத்தக்ஷத்திரன் காடுகளுக்குச் சென்று தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(113) ஓ! குரங்குக் கொடியோனே {அர்ஜுனா}, பெரும் சக்தி கொண்ட அவன் {விருத்தக்ஷத்திரன்} இப்போதும் கூட இதே சமந்தபஞ்சகத்துக்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே கடுந்தவத்தைச் செய்து கொண்டிருக்கிறான். எனவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் போரில் ஜெயத்ரதனின் தலையை வெட்டும் நீ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அற்புதச் செயல்களைச் செய்யும் உனது கடுமையான தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு, ஓ! வாயு தேவன் மகனின் {பீமனின்} தம்பியே {அர்ஜுனா}, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை {ஜெயத்ரதனின் தலையை} விரைவாக அந்த விருத்தக்ஷத்திரனின் மடியிலேயே விழச் செய்வாயாக. ஜெயத்ரதனின் தலையை நீ பூமியில் வீழ்த்தினால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும் என்பதில் ஐயமில்லை.(116, 117) தெய்வீக ஆயுதத்தின் துணை கொண்டு, பூமியின் தலைவனான அந்த முதிய சித்து மன்னன் {விருத்தக்ஷத்திரன்} அறியாத வண்ணம் இச்செயலைச் செய்வாயாக. உண்மையில், ஓ! வாசவனின் {இந்திரனின்} மகனே, ஓ! அர்ஜுனா, மூன்று உலகங்களிலும் உன்னால் அடைய முடியாததோ, செய்ய முடியாததோ எதுவுமில்லை” என்றான் {கிருஷ்ணன்}.
(கிருஷ்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்டத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான தீண்டலைக் கொண்டதும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும், தெய்வீக ஆயுதமாக {அஸ்திரமாக} மாற்றப்பட்டதும், கடினங்கள் எதையும் தாங்கவல்லதும், நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் கொண்டு எப்போதும் வழிபடப்பட்டதும் ஜெயத்ரதனைக் கொல்லத் தன்னால் எடுக்கப்பட்டதுமான அந்தக் கணையை விரைவாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை வேகமாகச் சென்று, மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு பறவையைக் கவர்ந்து செல்லும் ஒரு பருந்தைப் போல ஜெயத்ரதனின் தலையைக் கவர்ந்து சென்றது. அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் கணைகளைக் கொண்டு அந்தத் தலையை (கீழே விழாதபடிக்கு) ஆகாயத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தான்.(118-123) தன் எதிரிகள் கவலையையும், தன் நண்பர்கள் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை மீண்டும் மீண்டும் அந்தத் தலையின் மீது ஏவி அதை {அந்தத் தலையைச்} சமந்தபஞ்சகத்தின் எல்லைகளுக்கு அப்பால் செலுத்தினான்.(124)
அதேவேளையில் உமது மருமகனின் {ஜெயத்ரதனின்} தந்தையும், பெரும் சக்தியைக் கொண்டவனுமான மன்னன் விருத்தக்ஷத்திரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் மாலைவேளை வேண்டுதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(125) அமர்ந்த நிலையில் தன் வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த விருத்தக்ஷத்திரனின் மடியில் கருங்குழல்களாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஜெயத்ரதனின் தலை விழுந்தது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை தன் மடியில் வீசப்பட்டது மன்னன் விருத்தக்ஷத்திரனால் காணப்படவில்லை. எனினும், பின்னவன் {விருத்தக்ஷத்திரன்} தன் வேண்டுதலைகள் முடித்து எழுந்த போது, திடீரென அது கீழே பூமியில் விழுந்தது. ஜெயத்ரதனின் தலையானது கீழே பூமியில் விழுந்தபோது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த முதிய விருத்தக்ஷத்திரனின் தலை நூறு துண்டுகளாகச் சிதறியது. இந்தக் காட்சியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன.(126-130). அவர்கள் அனைவரும் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, வலிமைமிக்கப் பீபத்சுவையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அந்த இருள் விலக்கிக் கொள்ளப்பட்டது.(131) அதன் பிறகே தொண்டர்களோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் கண்ட அந்த இருள் வாசுதேவனால் உண்டாக்கப்பட்ட மாயையே என்பதை அறியவந்தனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மருமகனான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, எட்டு அக்ஷௌஹிணிகளைக் கொல்லச் செய்து {கொல்லப்பட காரணமாக அமைந்து}, நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைக் கொண்ட பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான். சிந்துக்களின் ஆட்சியாளனான ஜெயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையடைந்த உமது மகன்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.(132-134) பார்த்தனால் {அர்ஜுனனால்} ஜெயத்ரதன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவன் {கிருஷ்ணன்} தன் சங்கை முழக்கினான், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனும் தனது சங்கை முழக்கினான்.(135) பீமசேனனும், அந்தப் போரில் யுதிஷ்டிரனுக்குச் செய்தியை அனுப்புபவனைப் போல, பேராற்றலுடன் கூடிய சிங்க முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(136) அந்தப் பிரம்மாண்டமான கூச்சலைக் கேட்டவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைப் புரிந்து கொண்டான்.(137) துந்துபி ஒலிகளாலும், பிற கருவிகளாலும் தன் படையின் போர்வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டிய அவன் {யுதிஷ்டிரன்} போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(138)
அதன் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததும், துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சோமகர்கள்}, ஜெயத்ரதன் வீழ்ந்த பிறகு, முடிந்த மட்டும் முயன்று அவருடன் {துரோணருடன்} போரிட்டனர். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று வெற்றியடைந்த பிறகு, அந்த வெற்றியால் போதை கொண்டு துரோணருடன் போரிட்டனர்.(139-141) அர்ஜுனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் ஜெயத்ரதனைக் கொன்ற பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டான்.(142) உண்மையில், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தன் முந்தைய சபதத்தைச் சாதித்த பிறகு, தானவர்களை அழிக்கும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவோ, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.143
கர்ணனை வென்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 146-அர்ஜுனனுடன் கோபத்தோடு மோதிய கிருபர்; இறந்ததைப் போலத் தேரில் மயங்கிக் கிடந்த கிருபரைக் கண்டு வருந்திய அர்ஜனன்; அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன்; கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையிலான மோதல்; கர்ணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்ற சாத்யகி; கர்ணனைக் காக்க விரைந்தோர் அனைவரையும் வென்ற சாத்யகி, அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்து கர்ணனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு எனது போர் வீரர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கண்ட சரத்வானின் மகன் கிருபர், கோபவசப்பட்டு, அடர்த்தியான கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தார்.(2) துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(3) தேர்வீரர்களில் முதன்மையான அவ்விருவரும், தங்கள் தேர்களில் எதிர்த்திசையில் இருந்து தங்கள் கூரிய கணைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர்.(4) தேர்வீரர்களில் முதன்மையான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், (கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரின்) கணை மழைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்தான்.(5) எனினும், தன் ஆசானையும் (கிருபரையும்), (மற்றொரு ஆசானான) துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} கொல்ல விரும்பாதவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தானே ஆயுதங்களின் ஆசானைப் போலச் செயல்படத் தொடங்கினான்.(6)
தன் ஆயுதங்களால் அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகிய இருவரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைக் கொல்ல விரும்பாமல் மெதுவாகச் செல்லும் கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(7) எனினும், ஜெயனால் {அர்ஜுனால்} (மெதுவாகவே) ஏவப்பட்ட அக்கணைகள், கிருபரையும், அவரது மருமகனையும் {அஸ்வத்தாமனையும்} பெரும்பலத்துடன் தாக்கித் தங்கள் எண்ணிக்கையில் விளைவாக அவ்விருவருக்கும் பெரும் வலியை உண்டு பண்ணின.(8) பிறகு, சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பலம் அனைத்தையும் இழந்து, தன் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தார்.(9) கணைகளால் பீடிக்கப்பட்ட தன் தலைவர் உணர்வுகளை இழந்ததைப் புரிந்து கொண்டு, அவர் {கிருபர்} இறந்துவிட்டார் என்று நம்பிய கிருபரின் தேரோட்டி, கிருபரை போருக்கு {போர்க்களத்திற்கு} வெளியே தேரில் கொண்டு சென்றான்.(10) சரத்வானின் மகனான கிருபர் இப்படிப் போருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட பிறகு, அஸ்வத்தாமனும், பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால் அவனிடம் இருந்து தப்பி ஓடினான்.(11)
அப்போது வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகன் {கிருபர்} கணைகளால் பீடிக்கப்பட்டு மயங்கியதைக் கண்டு, தன் தேரில் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினான்.(12) கண்ணீர் நிறைந்த முகத்துடனும், இரக்கம் கொண்ட இதயத்துடனும் கூடிய அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “பெரும் ஞானம் கொண்ட விதுரர், இழிந்தவனும், தன் குலத்தை அழிப்பவனுமான சுயோதனன் {துரியோதனன்} பிறந்த போது, திருதராஷ்டிரரிடம், “தன் குலத்தின் இழிந்தவனான இவன் {துரியோதனன்} விரைவில் கொல்லப்பட வேண்டும்.(13, 14) இவனால் குருகுலத்தில் முதன்மையானோருக்கு பேரிடர் நேரப்போகிறது” என்றார். ஐயோ, உண்மையைப் பேசும் விதுரரின் வார்த்தைகள் உண்மையாகிவிட்டனவே.(15) அவனது {துரியோதனின்} நிமித்தமாகவே என் ஆசான் {பீஷ்மர்} அம்புப்படுக்கையில் கிடப்பதை நான் காண்கிறேன். க்ஷத்திரிய நடைமுறைக்கு ஐயோ. என் வலிமைக்கும், ஆற்றலுக்கும் ஐயோ.(16) என்னைப் போல வேறு எவன் தான் ஒரு பிராமணரிடம், அதுவும் தன் ஆசானிடமே போரிடுவான்? கிருபர் ஒரு முனிவரின் மகனாவார்; அவர் எனது ஆசானுமாவர்; மேலும் அவர் துரோணரின் அன்பு நண்பருமாவார்.(17) ஐயோ, அவர் என் கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் தேர்த்தட்டில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறாரே. விரும்பாமலே நான் என் கணைகளால் அவரை நசுக்கிவிட்டேனே.(18) தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடக்கும் அவர் {கிருபர்} {கிருபர்}, என் இதயத்தை மிகவும் வலிக்கச் செய்கிறார். கணைகளால் அவர் என்னைப் பீடித்திருந்தாலும், பளபளக்கும் காந்தி கொண்ட அந்தப் போர் வீரரை (பதிலுக்குத் தாக்காமல், அவரை) நான் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும்.(19) எண்ணற்ற என் கணைகளால் தாக்கப்பட்ட அவர் {கிருபர்}, அனைத்து உயிரினங்களின் வழியிலேயே சென்றுவிட்டார். அதனால் என் மகனின் {அபிமன்யுவின்} கொலையைவிட எனக்கு அதிக வலியைத் தந்துவிட்டார்.(20)
ஓ! கிருஷ்ணா, இப்படிப் பரிதாபகரமாகத் தன் தேரில் உணர்வற்று கிடக்கும் அவர் எந்நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டார் என்பதைப் பார். தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்த பிறகு விருப்பத்திற்குரிய பொருட்களை அவர்களுக்குக் கொடுக்கும் மனிதர்களில் காளையர் தெய்வீகத் தன்மையை அடைகின்றனர். மறுபுறம், தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்துவிட்டு, அவர்களைத் தாக்கும் மனிதர்களில் இழிந்தோரான அந்தத் தீய மனிதர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.(21, 22) நான் செய்திருக்கும் இச்செயல் என்னை நரகத்திற்கே வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.(23) கிருபரின் பாதங்களில் ஆயுத அறிவியலை நான் படித்துக் கொண்டிருந்த அந்நாட்களில், அவர் {கிருபர்} என்னிடம்,(24) “ஓ! குரு குலத்தோனே {அர்ஜுனா}, உன் ஆசானை ஒரு போதும் தாக்காதே” என்று சொன்னார். என் கணைகளால் கிருபரை நான் தாக்கியதால், நீதிமானும், உயர் ஆன்மா கொண்டவருமான என் ஆசானின் {கிருபரின்} அந்தக் கட்டளைக்கு நான் கீழ் படியவில்லை.(25) பின்வாங்காதவரும், கௌதமரின் வழிபடத்தகுந்த மகனுமான அந்த வீரரை {கிருபரை} நான் வணங்குகிறேன்.(26) ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நான் அவரைத் தாக்கியதால் எனக்கு ஐயோ {என்னை இகழவே வேண்டும்}” என்றான் {அர்ஜுனன்}.
இப்படிச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, கிருபருக்காகப் புலம்பிக் கொண்டிருந்த போது, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்} அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான்.(27) இப்படி ராதையின் மகன் {கர்ணன்}, அர்ஜுனனின் தேரை நோக்கி விரைவதைக் கண்ட பாஞ்சால இளவரசர்களும், சாத்யகியும் திடீரென அவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(28) வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, ராதையின் மகன் {கர்ணன்} முன்னேறி வருவதைக் கண்டு, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} புன்னகைத்துக் கொண்டே,(29) “அதோ அதிரதன் மகன் {கர்ணன்}, சாத்யகியின் தேரை எதிர்த்து வருகிறான்.(30) போரில் பூரிஸ்ரவஸின் கொலையை அவனால் {கர்ணனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை [1]. ஓ! ஜனார்த்தனா, கர்ணன் எங்கே வருகிறானோ, அங்கே என் குதிரைகளைத் தூண்டுவாயாக.(31) அந்த விருஷன் (கர்ணன்), சாத்வத வீரனை {சாத்யகியைப்} பூரிஸ்ரவஸின் வழியை அடையச் செய்ய வேண்டாம்” என்றான் {அர்ஜுனன்}.சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும் வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்} சந்தர்ப்பத்திற்கு ஏற்ற இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்(32): “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியானவன், தனியாகவே கர்ணனுக்கு இணையானவனாவான்.(33) அப்படியிருக்கையில் துருபதனின் இரு மகன்களுடன் சேர்ந்திருக்கும் இந்தச் சாத்வதர்களில் காளை {சாத்யகி} எவ்வளவு மேன்மையாக இருப்பான்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தற்போது நீ கர்ணனுடன் போரிடுவது முறையாகாது.(34) பின்னவன் {கர்ணன்}, வாசவன் {இந்திரன்} அவனுக்குக் கொடுத்த கடும் எரிக்கோளைப் போன்ற சுடர்மிக்க ஈட்டி {சக்தி} ஒன்றைத் தன்னிடம் வைத்திருக்கிறான். ஓ! பகைவீரர்களைக் கொல்பவனே {அர்ஜுனா}, அவன் {கர்ணன்} அதை மரியாதையுடன் வழிபட்டு உனக்காகவே அதைத் தன்னிடம் வைத்திருக்கிறான்.(35) எனவே கர்ணன் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்துச் சுதந்திரமாகச்செல்லட்டும். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போது நீ உன் கூரிய கணைகளால் அவனை {கர்ணனை} அவனது தேரில் இருந்து தள்ள வேண்டுமோ அந்தக் காலத்தை, அந்தப் பொல்லாதவனின் நேரத்தை நான் அறிவேன்” என்றான் {கிருஷ்ணன்} [2]” {என்றான் சஞ்சயன்}.(36)திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ சஞ்சயா, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, வீரக் கர்ணனுக்கும், விருஷ்ணி குலத்தோனான சாத்யகிக்கும் இடையில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வயாக. சாத்யகியோ {பூரிஸ்ரவஸால்} தேரற்றவனாக்கப்பட்டான். {அப்படியிருக்கையில்} அவன் எந்தத் தேரில் ஏறிச் சென்றான்? (அர்ஜுனனின் தேர்ச்) சக்கரங்களைப் பாதுகாப்போரான அந்தப் பாஞ்சால இளவரசர்கள் இருவரும் (யுதாமன்யுவும், உத்தமௌஜஸும்} எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான்.(37, 38)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்தப் பயங்கரப் போரில் நடைபெற்ற யாவையும் உமக்கு விளக்கிச் சொல்கிறேன். உமது தீய நடத்தையை (தீய நடத்தையின் விளைகளைப்) பொறுமையாகக் கேட்பீராக.(39) மோதல் நடைபெறுவதற்கு வெகு முன்பே, யூபக் கொடியோனால் (பூரிஸ்ரவஸால்) வீரச் சாத்யகி வெல்லப்படுவான் என்பதைக் கிருஷ்ணன் தன் இதயத்தில் அறிந்திருந்தான்.(40)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடந்ததையும், நடக்கப்போவதையும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அறிவான். அதன் காரணமாக, தன் தேரோட்டியான தாருகனை அழைத்த அவன் {கிருஷ்ணன்}, அவனிடம் {தாருகனிடம்}, “நாளை என் தேர் தயாராக இருக்கட்டும்” என்றான்.(41) இதையே அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்} கட்டளையிட்டான். தேவர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, மனிதர்களோ அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} வெல்லத் தகுந்தவர்கள் அல்ல.(42) பாட்டனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், சித்தர்களும், இவ்விருவரின் ஒப்பிலா ஆற்றலை அறிவார்கள்.(43) எனினும், போரை நடந்தவாறே இப்போது கேட்பீராக.
தேரற்ற சாத்யகியையும், போருக்குத் தயாராக இருக்கும் கர்ணனையும் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, ரிஷப ஸ்வரத்தில் [3] பேரொலியுடன் சங்கை முழக்கினான்.(44) (கேசவனின்) சங்கொலியைக் கேட்டுப் பொருளைப் புரிந்து கொண்ட தாருகன், பெரிய கொடிமரத்தைக் கொண்ட அந்தத் தேரைக் கேசவனிடம் கொண்டு சென்றான்.(45)
சிநியின் பேரன் {சாத்யகி}, கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியுடன், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பானதும், தாருகனால் வழிநடத்தப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறினான்.(46) தெய்வீக வாகனத்திற்கு ஒப்பானதும், விரும்பிய இடத்திற்குச் செல்லவல்லதும், சைப்யம், சுக்ரீவம், மேகபுஸ்பம் மற்றும் வலாஹகம் ஆகிய முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறிய சாத்யகி, கணக்கிலடங்கா கணைகளை இறைத்தபடி ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(47, 48) (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜஸும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரைக் கைவிட்டு, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(49) ராதையின் மகனும் {கர்ணனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கணைமாரியை ஏவியபடி, வெல்லப்படாத சிநியின் பேரனை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தான்.(50)அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரானது இதற்கு முன்னர்ப் பூமியிலோ, சொர்க்கத்திலோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள் அல்லது ராட்சசர்களுக்கு மத்தியிலோ கூட நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதில்லை என்ற அளவக்கு இருந்தது. தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்ட மொத்த படையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரு போர்வீரர்களின் மலைக்கத்தக்க செயல்களைக் கண்டு போரிடுவதைக் கைவிட்டது.(51, 52) அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு மானுட வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் போரையும், தேரை வழிநடத்தும் தாருகனின் திறனையும் கண்டு அமைதியான பார்வையாளர்களாக இருந்தனர்.(53) உண்மையில் தாருகன், தேரில் நின்று கொண்டு, அந்த வாகனத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும், பக்கவாட்டில் சென்றும், வட்டமாகச் சுழன்றும், ஒரே அடியாக நிறுத்தியும் வழிநடத்திய போது, அவனது திறனைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர். ஆகாயத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், கர்ணனுக்கும் சிநியின் பேரனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடைபெற்ற போரை ஊன்றிக் கவனித்து வந்தனர்.(54, 55) பெரும் வலிமை கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, தங்கள் ஒவ்வொருவரின் நண்பர்களுக்காகவும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.(56)
தேவனைப் போலத் தெரிந்த கர்ணனும், யுயுதானனும் {சாத்யகியும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின்மேல் ஒருவர் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(57) உண்மையில், தன் கணைப்பொழிவால் சிநியின் பேரனை {சாத்யகியைக்} கலங்கடித்த கர்ணனால், (சாத்யகியால்} குரு வீரன் ஜலசந்தனின் [4] கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(58) துயரால் நிறைந்து, பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரன் {சாத்யகி} மீது கோபப் பார்வைகளை வீசிக்கொண்டு, அதனாலேயே அவனை எரித்து விடுபவனைப் போல அவனை நோக்கி மூர்க்கமாக மீண்டும் மீண்டும் விரைந்தான்.(59) சினத்தால் நிறைந்திருந்த அவனை {கர்ணனைக்} கண்ட சாத்யகி, (பகை யானையைத்) தன் தந்தங்களால் துளைக்கும் யானையொன்றைப் போல, அடர்த்தியான கணைமாரிகளை ஏவி பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(60) புலிகளின் சுறுசுறுப்பையும், ஒப்பற்ற ஆற்றலையும் கொண்ட மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், அந்தப் போரில் ஒருவரையொருவர் மூர்க்கமாகச் சிதைத்துக் கொண்டனர்.(61)அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான கணைகளால், எதிரிகளைத் தண்டிப்பவனான கர்ணனின் அங்கங்களனைத்திலும் மீண்டும் மீண்டும் துளைத்தான். மேலும் ஒரு பல்லத்தால் அவன் கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(62, 63) மேலும் அவன் {சாத்யகி} தன் கூரிய கணைகளால், வெண்ணிறத்தைக் கொண்ட அதிரதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். மேலும் ஒரு நூறு கணைகளால் கர்ணனின் கொடிமரத்தை நூறு துண்டுகளாக அறுத்த அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர்.(64, 65)
அப்போது கர்ணனின் மகனான விருஷசேனன், மத்ர ஆட்சியாளனான சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(66) பிறகு எதையும் காண முடியாத ஒரு குழப்பம் தோன்றியது. உண்மையில், வீரக் கர்ணன், சாத்யகியால் தேரற்றவனாக்கப்பட்ட போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன(67).
சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குழந்தை பருவத்தில் இருந்து உமது மகனுடன் கொண்ட தன் நட்பை நினைவு கூர்ந்து, துரியோதனனுக்கு அரசுரிமையை அளிப்பதாகத் தான் செய்த உறுதிமொழியை உண்மையாக்க முயன்று, மிகவும் பலவீனமடைந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டே துரியோதனனின் தேரில் ஏறினான்.(68, 69)
கர்ணன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, ஓ! மன்னா, சுயக்கட்டுப்பாடு கொண்டவனும், பீமசேனனின் சபதத்தைப் பொய்யாக்க விரும்பாதவனுமான சாத்யகியால், துச்சாசனன் தலைமையிலான உமது துணிச்சல்மிக்க மகன்கள் கொல்லப்படாதிருந்தனர். முன்னர்ப் பார்த்தனால் {அர்ஜுனனால்} (கர்ணனைக் கொல்வது குறித்து) செய்யப்பட்ட சபதத்தையும் பொய்யாக்க விரும்பாத சாத்யகி, வெறுமனே அவர்களைத் தேரற்றவர்களாக்கி மிகவும் பலவீனர்களாக்கினானே ஒழிய அவர்களைக் கொல்லவில்லை.(70, 71) உண்மையில், உமது மகன்களைக் கொல்வதாகப் பீமன் சபதம் செய்திருந்தான், மேலும் இரண்டாம் பகடையாட்டத்தின் போது கர்ணனைக் கொல்வதாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} சபதம் செய்திருந்தான்.(72) கர்ணனின் தலைமையிலான அந்தப் போர் வீரர்கள் அனைவரும், சாத்யகியைக் கொல்லப் பலமான முயற்சிகளைச் செய்தாலும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அவனைக் {சாத்யகியைக்} கொல்வதில் தோற்றனர்.(73) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், நூற்றக்கணக்கான க்ஷத்திரியர்களின் முதன்மையானோர் ஆகியோர் அனைவரையும் தன் ஒரே வில்லைக் கொண்டு சாத்யகி வெற்றி கொண்டான்.(74) அந்த வீரன் {சாத்யகி}, நீதிமனான மன்னன் யுதிஷ்டிரனின் நலனையும், சொர்க்கத்தையும் அடைய விரும்பியே போரிட்டான்.(75) உண்மையில், எதிரிகளை நசுக்குபவனான அந்தச் சாத்யகி, சக்தியில் இரு கிருஷ்ணர்களுக்கும் {இரு கருப்பர்களுக்கும்} இணையானவனாக இருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே உமது துருப்புகள் அனைத்தையும் வெற்றி கொண்டான்.(76) இவ்வுலகில், கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்}, சாத்யகி ஆகிய மூவர் மட்டுமே வலிமைமிக்க வில்லாளிகளாவர். நான்காவதாக ஒருவன் காணப்படவில்லை” {என்றான் சஞ்சயன்}.(77)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தாருகனைச் சாரதியாகக் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேரில் ஏறியவனும், தன் கரவலிமையில் செருக்குடையவனும், போரில் வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனுமான சாத்யகி கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். சாத்யகி (கர்ணனனுடனான மோதல் முடிந்த பிறகு) வேறு ஏதேனும் தேரில் ஏறினானா?(78, 79) ஓ! சஞ்சயா, நான் இதைக் கேட்க விரும்புகிறேன். உரைப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். தாங்கிக் கொள்ளப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாகச் சாத்யகியை நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(80)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஃது எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக. நுண்ணறிவு கொண்ட தாருகனின் தம்பி, தேவைக்குரிய அனைத்தையும் கொண்ட மற்றொரு தேரைச் சாத்யகியிடம் கொண்டு வந்தான்.(81) இரும்பு, தங்கம் மற்றும் பட்டுப் பட்டைகளில் இணைக்கப்பட்ட ஏர்க்காலைக் கொண்டதும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், சிங்க வடிவம் பொறிக்கப்பட்ட கொடிமரம் கொண்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும் காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், மேக முழக்கத்தைப் போல ஆழமான சடசடப்பொலி கொண்டதுமான தேர் அவனிடம் {சாத்யகியிடம்} கொண்டு வரப்பட்டது.(82, 83) அதில் ஏறிய சிநியின் பேரன் {சாத்யகி}, உமது துருப்புகளுக்கு எதிராக விரைந்தான். அதே வேளையில் தாருகன் முன்பைப் போலவே கேசவன் {கிருஷ்ணன்} பக்கத்தில் சென்றான்.(84)
கர்ணனுக்கும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சிறந்த இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சங்கு, அல்லது பசுவின் பால் போன்ற வெண் நிறத்தைக் கொண்டவையுமான வேகமானக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு புதிய தேர் கொண்டு வரப்பட்டது. அதன் காக்ஷமும், கொடிமரமும் தங்கத்தாலானவையாக இருந்தன. கொடிகள், இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அந்த முதன்மையான தேர் ஒரு சிறந்த சாரதியையும் கொண்டிருந்தது. மேலும் அஃது அனைத்து வகை ஆயுதங்களையும் தன்னகத்தே அபரிமிதமாகக் கொண்டிருந்தது. அந்தத் தேரில் ஏறி, கர்ணனும் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். நீர் கேட்ட அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டனே.(85-87)
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையால் விளைந்த அழிவை (அழிவின் அளவை) அறிந்து கொள்வீராக. உமது மகன்களில் முப்பத்தோரு {31} பேர் பீமசேனனால் கொல்லப்பட்டனர் [5].(88) துர்முகனை முதன்மையாகக் கொண்ட அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். சாத்யகியும், அர்ஜுனனும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} பீஷ்மர் மற்றும் பகதத்தன் முதலான நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றிருக்கின்றனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} உமது தீய ஆலோசனைகளின் காரணமாக அழிவு தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(89, 90)
அர்ஜுனன் ஏற்ற மற்றொரு சபதம்! – துரோண பர்வம் பகுதி – 147-கர்ணனால் அவமதிக்கப்பட்ட பீமன், அவனைக் கொல்ல வேண்டி அர்ஜுனனிடம் கேட்டது; ஆண்மை நிறைந்த வார்த்தைகளால் கர்ணனை நிந்தித்த அர்ஜுனன்; கர்ணனின் முன்னிலையில் கர்ணனின் மகனைக் கொல்வதாகச் சபதமேற்ற அர்ஜுனன்; ஜெயத்ரதன் கொலைக்காக அர்ஜுனனை வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் மகிமைக்கு தன் வெற்றியை அர்ப்பணித்த அர்ஜுனன்; அந்த நாளின் விளைவுகளை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போரில், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும், என் தரப்பிலும் {கௌரவர்கள் தரப்பிலும்} உள்ள வீரர்களின் நிலை இவ்வாறு இருந்த போது, பீமன் என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, கர்ணனின் வார்த்தைகளால் பீடிக்கப்பட்ட அந்த வீரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணன் என்னிடம் மீண்டும் மீண்டும், “அலியே, மூடனே, பெருந்தீனிக்காரா, ஆயுதங்களில் திறனற்றவனே, குழந்தாய், போரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத நீ போரிடாதே” என்று சொன்னான். என்னிடம் அப்படிச் சொல்பவன் என்னால் கொல்லப்பட வேண்டும். ஓ! பாரதா {அர்ஜுனா}, கர்ணன் அந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறான்.(2-4) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உன்னுடன் சேர்ந்து ஏற்ற உறுதிமொழியை {சபதத்தை} நீ அறிவாய். என்னால் அப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூர்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன் சபதத்தைப் போலவே என் சபதமும் பொய்யாக்கப்படாதவாறு நடந்து கொள்வாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} எதனால் என் சபதம் உண்மையாகுமோ அதைச் செய்வாயாக.(5, 6)
பீமனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தப் போரில் கர்ணனின் அருகில் சென்று,(7) “ஓ! கர்ணா, நீ தவறான பார்வையைக் கொண்டிருக்கிறாய். ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய். தீய புரிதல் கொண்டவனே, இப்போது நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக.(8) வீரர்கள் போரில் வெற்றி, அல்லது தோல்வி என்ற இரண்டையே அடைகிறார்கள். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இவைகளில் இரண்டும் நிச்சயமற்றவையே. போரில் ஈடுபடும் இந்திரனுக்கே வேறு கதி கிடையாது. யுயுதானனால் {சாத்யகியால்} தேரற்றவனாக்கப்பட்டு, உணர்வுகளை இழந்த நீ கிட்டத்தட்ட மருணத்தருவாயில் இருந்தாய். எனினும், உன்னைக் கொல்வதாக நான் ஏற்றிருந்த சபதத்தை நினைவுகூர்ந்த அந்த வீரன் {சாத்யகி}, உன் உயிரை எடுக்காமலேயே உன்னை விட்டான்.(10) பீமசேனரை தேரற்றவனாக்குவதில் நீ வென்றாய் என்பது உண்மையே. எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்வீரரை {பீமரை} நீ இகழ்ந்தது பாவச் செயலாகும்.(11) உண்மையான நேர்மையும், துணிச்சலும் கொண்ட மனிதர்களில் காளையர், ஓர் எதிரியை வெற்றிக் கொண்டால், தற்புகழ்ந்து கொள்ளவோ, எவரையும் இகழ்ந்து பேசவோ மாட்டார்கள்.(12) எனினும், உன் அறிவு அற்பமானதே. இதன் காரணமாகவே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ இத்தகு பேச்சுகளில் ஈடுபடுகிறாய். மேலும், பெரும் ஆற்றல் மற்றும் வீரம் கொண்டவரும், நேர்மையான செயல்பாடுகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவரும், போராடிக் கொண்டிருந்தவருமான பீமசேனர் குறித்த உன் தூற்றும் அடைமொழிகள் எதுவுமே உண்மைக்கு இயைந்தவையாக இல்லை. கேசவனும் {கிருஷ்ணனும்}, நானும், இந்தத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பீமசேனரால் போரில் நீ பல முறை தேரற்றவனாகச் செய்யப்பட்டாய்.(13, 14) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமர்}, உன்னிடம் கடுமையான வார்த்தை ஒன்றைக் கூடச் சொல்லவில்லை.(15)
எனினும், விருகோதரிடம் {பீமரிடம்} நீ கடுமையான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னதாலும், என் பார்வைக்கு அப்பால் பிறருடன் சேர்ந்து சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றதாலும், அந்த உன் குற்றங்களுக்கான கனியை {பலனை} நீ இன்றே அடையப் போகிறாய்.(16)
ஓ! பொல்லாதவனே {கர்ணா}, உன் அழிவுக்காகத்தான் நீ அபிமன்யுவின் வில்லை அறுத்தாய்.(17) ஓ! அற்ப அறிவைக் கொண்டவனே {கர்ணா}, அதற்காகவே நீ, உன் தொண்டர்கள், படைகள், விலங்குகள் அனைத்துடன் சேர்த்து என்னால் கொல்லப்படுவாய். பேரிடர் உனக்கு நேரப்போவதால், நீ செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் இப்போதே செய்து கொள்வாயாக.(18) போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷசேனனை {உன் மகனை} நான் கொல்வேன். மூடத்தனத்தால் என்னை எதிர்க்கப்போகும் மன்னர்கள் அனைவரையும் நான் யமனுலகுக்கு அனுப்பி வைப்பேன்.(19) என் ஆயுதத்தின் மீது கையைவைத்து இதை நான் உண்மையாகவே {சத்தியமாகச்} சொல்கிறேன். ஞானமற்றவனும், அகங்காரம் நிறைந்தவனும், மூடனுமான நீ போர்க்களத்தில் {வீழ்ந்து} கிடக்கும் போது, உன்னைக் கண்டு, மனங்கசந்து தீயத் துரியோதனன் புலம்பல்களில் ஈடுபடுவான் என்று நான் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
கர்ணனின் மகனை {விருஷசேனனைக்} கொல்வதாக அர்ஜுனன் சபதமேற்றபோது, தேர்வீரர்களுக்கு மத்தியில் பேரோலியுடன் கூடிய மிகப் பெரிய ஆரவராம் எழுந்தது.(20, 21) அச்சம் நிறைந்த அவ்வேளையில் எங்கும் குழப்பம் நிலவியபோது, ஆயிரம் கதிர்களைக் கொண்ட சூரியன், ஒளியிழந்த கதிர்களுடன் அஸ்த மலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரின் முன்னணியில் நின்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, சபதத்தை நிறைவேற்றிய அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு,(23) அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, உன் பெரும் சபதம் நிறைவேற்றப்பட்டது நற்பேறாலேயே.(24) பொல்லாதவனான விருத்தக்ஷத்திரனும், அவனது மகனும் {ஜெயத்ரதனும்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. ஓ! பாரதா {அர்ஜுனா}, இந்தத் தார்தராஷ்டிரப் படையுடன் தேவர்களின் படைத்தலைவனே {முருகனே} போரிட்டாலும், ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அவன் தன் உணர்வுகளை இழந்திருப்பான்.(25) இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மூவுலகிலும் இந்தப் படையுடன் போரிடக்கூடியவனாக உன்னைத் தவிர வேறு எவனையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
உனக்கு இணையாகவோ, மேன்மையாகவோ பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான அரசப் போர்வீரர்கள் பலர், துரியோதனனின் கட்டளையின் பேரில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். கவசம் பூண்டவர்களான அவர்களாலும் போரில் கோபம் நிறைந்த உன்னை அணுகவே முடியாது.(26-28) உன் சக்தியும், வலிமையும், ருத்ரனுக்கோ, சக்ரனுக்கோ {இந்திரனுக்கோ}, யமனுக்கோ நிகரானவை. ஓ! ஏதிரிகளை எரிப்பவனே, யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகப் போரில் இன்று நீ வெளிப்படுத்திய இத்தகு ஆற்றலை வெளிப்படுத்த இயன்றவன் வேறு எவனும் இல்லை.(29) தீய ஆன்மா கொண்ட கர்ணன் தன் தொண்டர்களுடன் கொல்லப்படும்போது மீண்டும் உன்னை நான் இப்படிப் பாராட்டுவேன். உன் எதிரி வெல்லப்பட்டுக் கொல்லப்படும்போது, நான் இப்படியே உன்னைப் போற்றுவேன்” என்றான் {கிருஷ்ணன்}.
அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக அர்ஜுனன், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, தேவர்களும் சாதிக்கக் கடினமான இந்தச் சபதமானது, உன் அருளாலேயே என்னால் நிறைவேற்றப்பட்டது.(30, 31) ஓ! கேசவா {கிருஷ்ணா}, உன்னைத் தலைவனாகக் கொண்டோரின் வெற்றியானது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே அல்ல.(32) உன் அருளால் யுதிஷ்டிரர் முழுப் பூமியையும் அடைவார். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இவை யாவும் உன் சக்தியாலேயே நடக்கின்றன. ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த வெற்றி உனதாகும்.(33) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கள் செழிப்பு உனது பொறுப்பு, நாங்கள் உன் பணியாட்களே” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் மெல்லப் புன்னகைத்தபடியே மெதுவாகக் குதிரைகளைத் தூண்டினான். மேலும் அவன் சென்ற வழியெங்கும் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடூரக் காட்சிகள் நிறைந்த போர்க்களத்தைக் காட்டிக் கொண்டே வந்தான்.(34)
அப்போது கிருஷ்ணன் {அர்ஜுனனிடம்}, “போரில் வெற்றியையோ, உலகப்புகழையோ விரும்பிய வீர மன்னர்கள் பலர் கணைகளால் தாக்கப்பட்டுப் பூமியில் கிடக்கின்றனர்.(35) அவர்களது ஆயுதங்களும், ஆபரணங்களும் சிதறடிக்கப்பட்டும், அவர்களது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் கிடக்கின்றன. கவசங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ அவர்கள் பெரும் துன்பத்தை அடைந்தனர்.(36) அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர், சிலரோ இறந்து விட்டனர். எனினும் அப்படி மாண்டோரும் கூடத் தங்கள் காந்தியின் விளைவால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைப் போலவே தெரிகின்றனர்.(37) தங்கச் சிறகுகளைக் கொண்ட அவர்களது கணைகளாலும், தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படும் அவர்களது எண்ணற்ற பிற ஆயுதங்களாலும், (உயிரை இழந்த) அவர்களது விலங்குகளாலும் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(38) உண்மையில், கவசங்கள், ரத்தின ஆரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளாலும், தலைக்கவசங்கள், கிரீடங்கள், மலர் மாலைகள், மகுடங்களில் உள்ள கற்கள், கண்டசூத்ரங்கள் {கழுத்தணிகள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்}, தங்கப்பட்டைகள் மற்றும் பல்வேறு பிற அழகிய ஆபரணங்களாலும் பூமியானது பிரகாசமாகத் தெரிகிறது.(39, 40)
அனுகர்ஷங்கள் {இருசுக்கட்டைகள்}, அம்பறாத்தூணிகள், கொடிமரங்கள், கொடிகள், உபஷ்கரங்கள் {தேரிலுள்ள பிற பொருட்கள்}, அதிஷ்தானங்கள் {பீடங்கள்}, கணைகள், தேர்களின் {கோபுர} முகடுகள், உடைந்த சக்கரங்கள், பெரும் எண்ணிக்கையிலான அழகிய அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, நுகத்தடிகள், குதிரைகளின் கடிவாளங்கள், கச்சைகள், விற்கள், அம்புகள், யானைகளின் அம்பாரிகள், பரிங்கங்கள், அங்குசங்கள், ஈட்டிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, தோமரங்கள், சூலங்கள், குந்தங்கள், தண்டாயுதங்கள், சதாக்னிகள், புசுண்டிகள், வாள்கள், கோடரிகள், குறுகிய கனமானத் தண்டாயுதங்கள், உலக்கைகள், கதாயுதங்கள், குணபங்கள் {ஒரு வகை ஈட்டிகள்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சாட்டைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மணிகள், பெரும் யானைகளின் பல்வேறு விதமான ஆபரணங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் இருந்து நுழுவிய மலர்மாலைகள், விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் ஆகிவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக்கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. பூமிக்காகக் கொல்லப்பட்ட பூமியின் தலைவர்கள், அன்புக்குரிய மனைவியை அணைத்துக் கொள்வதைப் போலப் பூமியைத் தங்கள் அங்கங்களால் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.
மலைகள் தங்கள் குகைகள் மற்றும் பிளவுகளில் சுண்ணாம்பை உதிர்ப்பதைப் போல, ஐராவதத்திற்கு ஒப்பானவையும், மலைகளைப் போலப் பெரியவையுமான இந்த யானைகள், ஆயுதங்களால் தங்கள் உடல்களில் உண்டான பிளவுகளில் அபரிமிதமாகக் குருதியைச் சிந்துகின்றன.(41-49) ஓ! வீரா {அர்ஜுனா}, கணைகளால் பீடிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தப் பெரும் உயிரினங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார். தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தக் குதிரைகளையும் பார்.(50) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சாரதியற்றவையும், தேரோட்டியற்றவையும், ஒரு காலத்தில் தெய்வீக வாகனங்களுக்கோ, மாலை வானில் தோன்றும் ஆவி வடிவங்களுக்கோ {கந்தர்வ மாளிகைகளுக்கோ} ஒப்பாக இருந்தவையுமான அந்தத் தேர்கள், ஓ! தலைவா {அர்ஜுனா}, துண்டுகளாக வெட்டப்பட்ட கொடிமரங்கள், கொடிகள், அக்ஷங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றுடனும், உடைந்த ஏர்க்கால்கள் மற்றும் முகடுகளுடனும் இப்போது தரையில் கிடப்பதைப் பார்.(51, 52) ஓ! வீரா {அர்ஜுனா}, விற்கள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய காலாட்படை வீரர்களும், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுக் குருதியில் குளித்துப் புழுதி படிந்த தங்கள் குழல்களுடன் {கேசங்களுடன்}, தங்கள் அனைத்து அங்கங்களாலும் பூமியைத் தழுவியபடி பூமியில் கிடப்பதைப் பார்.(53)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்தப் போர்வீரர்களின் உடல்கள் உன் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்.(54) சாமரங்கள், விசிறிகள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், யானைகள், பல்வேறு வகையான விரிப்புகள், குதிரைகளின் கடிவாளங்கள், அழகிய ஆடைகள், விலைமதிப்புமிக்க (தேர்களின்) வரூதங்கள், சித்திர வேலைப்பாடுகளுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(55, 56) இடியால் தாக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் சிங்கங்களைப் போல, போர்வீரர்கள் பலர், நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்து, தாங்கள் ஏறி வந்த அந்த விலங்குகளுடனேயே கிடப்பதைப் பார்.(57) (தாங்கள் ஏறி வந்த) குதிரைகள், (தாங்கள் பிடித்திருந்து) விற்கள் ஆகியவற்றோடு கலந்து பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும், காலாட்படை வீரர்கள், குருதியால் மறைக்கப்பட்டுக் களத்தில் விழுந்து கிடப்பதைப் பார்.(58)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களால் மறைக்கப்பட்டதும், அபரிமிதமான இரத்தம், கொழுப்பு மற்றும் அழுகிய இறைச்சியினால் உண்டான சேறில் மகிழும் நாய்கள், ஓநாய்கள், பிசாசங்கள் மற்றும் பல்வேறு இரவு உலாவிகள் திரிவதுமான பூமியின் பரப்புப் பயங்கரமாக இருப்பதைப் பார்.(59) ஓ! பலமிக்கவனே {அர்ஜுனா}, புகழை அதிகரிப்பதான இந்தப் போர்க்கள அருஞ்செயலானது உன்னாலோ, பெரும் போரில் தைத்தியர்களையும், தானவர்களையும் கொல்லும் தேவர்களின் தலைவனான இந்திரனாலோ மட்டுமே அடையத்தக்கதாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(60)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனுக்கு இப்படியே போர்க்களத்தைக் காட்டிவந்த கிருஷ்ணன், தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கி, (பதிலுக்குத் தங்கள் தங்கள் சங்குகளை முழக்கிய) பாண்டவப்படையின் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.(61) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டியதும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்று, ஜெயத்ரதனின் கொலையைக் குறித்து அவனுக்குத் தெரிவித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)
யுதிஷ்டிரனின் ஆனந்தக் கண்ணீர்! – துரோண பர்வம் பகுதி – 148-யுதிஷ்டிரனிடம் திரும்பி வந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும்; யுதிஷ்டிரனின் வெற்றிக்காக வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் அருளால் வெற்றி கிட்டியதாகக் கூறிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கிருஷ்ணத் துதி; பீமனையும், சாத்யகியையும் ஆரத்தழுவி, வாழ்த்தி, ஆனந்தக் கண்ணீரை வடித்த யுதிஷ்டிரன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட பிறகு, கிருஷ்ணன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, மகிழ்ச்சியான இதயத்துடன் பின்னவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டான்.(1) மேலும் அவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது வளம் அதிகரிப்பது நற்பேறாலேயே. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது எதிரி {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டான். உமது தம்பி {அர்ஜுனன்} அவனது சபத்தை நிறைவேற்றியது நற்பேறாலேயே” என்றான்.(2)
பகை நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(3) ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனனையும்} தழுவி கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, பிரகாசமானதும், தாமரை போன்றதுமான தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு,(4) வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பணியை நிறைவேற்றிய உங்கள் இருவரையும் நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(5) பாவம் நிறைந்த இழிந்தவனான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. கிருஷ்ணர்களே, பெரும் மகிழ்ச்சியால் என்னை நிறைய வைக்கும் செயலை நற்பேறாலேயே நீங்கள் செய்தீர்கள்.(6)
நம் எதிரிகள் துன்பக்கடலில் மூழ்கியிருப்பது நற்பேறாலேயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அனைத்து உலகங்களின் தலைவன் {இறைவன்} நீயே. உன்னைத் தங்கள் பாதுகாவலராகக் கொண்டோரால் இந்த மூவுலகிலும் அடைய முடியாத சாதனை எதுவும் இல்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பழங்காலத்தில் தானவர்களை வென்ற இந்திரனைப் போல, உன் அருளால் நாங்கள் எங்கள் எதிரிகளை வெல்வோம்.(7, 8)
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீ எவரிடம் மனநிறைவு கொள்கிறாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் உலகத்தை வெல்வதோ, மூவுலகங்களை வெல்வதோ நிச்சயம் சாத்தியமே.(9) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ யாரிடம் மனநிறைவு கொண்டுள்ளாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் போரில் தோல்வியையோ எந்தப் பாவத்தையோ அடைய மாட்டார்கள்.(10)
ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனானது உன் அருளாலேயே.(11) அந்த அருளப்பட்டவன் {இந்திரன்}, போர்க்களத்தில் மூவுலகங்களின் அரசுரிமையையும் அடைந்தது உன் அருளாலேயே. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, பின்னவன் {இந்திரன்} இறவா நிலையை அடைந்ததும், ஓ! கிருஷ்ணா, நித்தியமான (அருள்) உலகங்களை அனுபவிப்பதும் உன் அருளாலேயே (12) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் அருளால் உண்டான ஆற்றலைக் கொண்டு ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்ற சக்ரன் {இந்திரன்}, தேவர்களின் தலைமைப் பொறுப்பை அடைந்தான்.(13) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம், ஓ! வீரா {கிருஷ்ணா} அதன் பாதையில் இருந்து நழுவாமல் வேண்டுதல்களிலும், ஹோமங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பது உன் அருளாலேயே.(14) தொடக்கத்தில் இருளில் முழ்கியிருந்த இந்த அண்டம் முழுவதும ஒரே நீர்ப்பரப்பே இருந்தது.(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்த அண்டம் உன் அருளாலேயே வெளிப்பட்டது.
உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே, பரமாத்மா நீயே, மாற்றமில்லாதவன் நீயே.(16) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன்னைக் கண்டவர் எவரும் ஒருபோதும் குழம்புவதில்லை. பரம்பொருள் நீயே, தேவர்களின் தேவன் நீயே, அழிவற்றவன் நீயே.(17) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, உன்னைப் புகலிடமாகக் கொண்டோர் ஒரு போதும் குழம்புவதில்லை. அனைத்து உலகங்களையும் படைப்பவனும், மாற்றமில்லாதவனும், ஆதி அந்தம் இல்லாதவனுமான தெய்வீகமானவன் நீயே.(18) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் அனைத்துச் சிரமங்களையும் கடப்பார்கள். பரமனும் {ஆதி முதல்வனும்}, பழமையானவனும், தெய்வீகமானவனும் {தெய்வீகப் புருஷனும்}, உயர்ந்தவையனைத்திலும் உயர்ந்தவனும் நீயே.(19) பரமனான உன்னை அடைந்தவன் எவனோ, அவன் உயர்ந்த வளத்தை அடைய விதிக்கப்பட்டிருக்கிறான். நான்கு வேதங்களிலும் பாடப்படுபவன் நீயே. நான்கு வேதங்களும் உன்னையே பாடுகின்றன.(20)
ஓ! உயர் ஆன்மா கொண்டோனே {கிருஷ்ணா}, உன் உறைவிடத்தை நாடி ஒப்பற்ற வளத்தை நான் அடைவேன். பரம்பொருள் நீயே, உயர்ந்த தேவர்களின் தேவன் நீயே, சிறகு படைத்த உயிரினங்களின் தலைவன் நீயே, மனிதர்கள் அனைவரின் தலைவன் நீயே.(21)
அனைத்தினுக்கும் உயர்ந்த தலைவன் நீயே. ஓ! இருப்போரில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, தலைவனும், தலைவர்களுக்குத் தலைவன் நீயே. ஓ! மாதவா {கிருஷ்ணா}, வளமே உனதாகட்டும்.(22)
ஓ! அகன்ற கண்களை உடையவனே, ஓ! அண்ட ஆன்மாவே, அனைத்துப் பொருட்களின் தொடக்கம் நீயே. எவன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நண்பனோ, எவன் தனஞ்சயனின் நன்மையில் ஈடுபடுபவனோ அவன், தனஞ்சயனின் பாதுகாவலனான உன்னையே அடைந்து மகிழ்ச்சியை அடைவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)
இப்படி அவனால் சொல்லப்பட்டவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், பூமியின் தலைவனான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக,(24) “பாவம் நிறைந்த மன்னனான ஜெயத்ரதன், உமது கோபம் எனும் நெருப்பாலேயே எரிக்கப்பட்டான்.(25) ஓ! பலமிக்கவரே, தார்தராஷ்டிரப் படையானது பெரியதாகவும், செருக்கு நிறைந்ததாகவும் இருப்பினும், ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தாக்குதலுக்குள்ளாகியும், கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உமது கோபத்தின் விளைவாலேயே கௌரவர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஓ! வீரரே, கண்களால் மட்டுமே கொன்றுவிடக்கூடியவரான உம்மைக் கோபமூட்டிய தீய மனம் கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, தன் நண்பர்களுடனும், தன் சொந்தங்களுடனும் சேர்ந்து போரில் உயிரை விடப் போகிறான்.
உமது கோபத்தின் விளைவால் முன்பே கொல்லப்பட்டவரும், தேவர்களலேயே தாக்கப்பட்டவரும், குருக்களின் பாட்டனுமான வெல்லப்பட முடியாத பீஷ்மர், இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(27, 28) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உம்மை எதிரியாகக் கொண்டோரால் போரில் வெற்றியடையமுடியாது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, மரணமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.(29) ஓ! எதிரிகளை எரிப்பவரே {யுதிஷ்டிரரே}, எவனிடம் நீர் கோபம் கொள்கிறீரோ, அவன் தன் உயிர், அன்புக்குரியோர், பிள்ளைகள், பல்வேறு வகையான அருள்நிலைகள் ஆகியவற்றை விரைவில் இழப்பான்.(30) ஓ! எதிரிகளை எரிப்பவரே, மன்னர்களின் கடமைகளை நோற்பவரான நீர் கௌரவர்களிடம் கோபம் கொண்டிருக்கிறீர் எனும்போது, அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் மகன்கள், விலங்குகள் மற்றும் சொந்தங்களோடு ஏற்கனவே வீழ்ந்து விட்டனர் என்றே நான் கருதுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(31)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் சிதைக்கப்பட்டவர்களான பீமன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகிய இருவரும் தங்களுக்கு மூத்தவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். வலிமைமிக்க வில்லாளிகளான அவ்விருவரும், பாஞ்சாலர்கள் சூழ கீழே தரையில் அமர்ந்தனர்.(32, 33) அவ்விரு வீரர்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும், வந்திருந்து கூப்பிய கரங்களுடன் இருப்பதையும் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்கள் இருவரையும் வாழ்த்தி,(34) “வீரர்களே, துரோணரே வெல்லப்பட முடியாத முதலையாகவும், ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே} கடும் சுறாவாகவும் உள்ள கடலெனும் (பகைவரின்) துருப்புகளில் இருந்து நீங்கள் இருவரும் உயிரோடு தப்பி வந்தது நற்பேறாலேயே. பூமியின் மன்னர்கள் அனைவரும் (உங்கள் இருவராலும்) வெல்லப்பட்டது நற்பேறாலேயே.(35) வெற்றிகரமானவர்களாக உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே. துரோணரும், வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} போரில் வெல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(36)
விகர்ணிகளால் {முள் பதிக்கப்பட்ட கணைகளால்} போரில் கர்ணன் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. மனிதர்களில் காளையரே, உங்கள் இருவராலும் போரில் இருந்து சல்லியன் புறமுதுகிடச் செய்யப்பட்டது நற்பேறாலேயே. (37) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், போரில் நல்ல திறம் கொண்டவர்களுமான நீங்கள் இருவரும், போரில் இருந்து பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வந்ததை நான் காண்பது நற்பேறாலேயே.(38) வீரர்களே, என்னைக் கௌரவிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, போருக்குச் சென்றவர்களான நீங்கள், என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, கடலெனும் துருப்புகளைக் கடந்து வந்திருப்பதை நான் காண்பது நற்பேறாலேயே.(39) போரில் மகிழ்பவர்கள் நீங்கள். போரில் புறமுதுகிடாதவர்கள் நீங்கள். எனக்கு உயிரைப் போன்றவர்கள் நீங்கள். உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே” என்றான் {யுதிஷ்டிரன்}.(40)
இதைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் புலிகளான அந்த யுயுதானன் {சாத்யகி}, மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் ஆரத் தழுவி கொண்டு ஆனந்தக் கண்ணீரை உதிர்த்தான்.(41) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த பாண்டவப் படையும் உற்சாகமடைந்து மகிழ்ச்சியில் நிறைந்தன. மேலும் அவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்” {என்றான் சஞ்சயன்}.(42)
துரியோதனனின் கண்ணீர்! – துரோண பர்வம் பகுதி – 149-ஜெயத்ரதன் கொலையால் துரியோதனன் அடைந்த மனச்சோர்வு; அர்ஜுனனுக்கு ஒப்பான வீரன் ஒருவனும் இவ்வுலகில் இல்லை என்று கருதிய துரியோதனன் கர்ணனிடம் நம்பிக்கை இழந்தது; உற்சாகமற்றவனாகக் கண்ணீருடன் துரோணரிடம் பேசிய துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வீழ்ந்த பிறகு, கண்ணீர்த்துளிகளால் நனைந்த தன் முகத்துடன், உற்சாகத்தை இழந்த உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, தன் எதிரிகளை வெல்வதில் நம்பிக்கையிழந்தான்.(1) துயரால் நிறைந்து, பற்கள் உடைந்த பாம்பொன்றைப் போல வெப்பப் பெருமூச்சுகளை விட்டவனும், உலகம் முழுமைக்கும் குற்றமிழைத்தவனுமான உமது மகன் {துரியோதனன்}, மனங்கசந்து சிறுமையை அனுபவித்தான்.(2) அந்தப் போரில், ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பீமசேனன், சாத்வதன் {சாத்யகி} ஆகியோர் செய்த பயங்கரமான பெரிய படுகொலைகளைக் கண்டு, நிறம் மங்கியவனும், இளைத்தவனும், மனந்தளர்ந்தவனுமான அவனது {துரியோதனனின்} கண்கள் கண்ணீரால் நிறைந்தன.(3) அப்போது அவன் {துரியோதனன்} அர்ஜுனனுக்கு ஒப்பாக இவ்வுலகில் எந்த வீரனும் இல்லை என்று நினைத்தான்.(4) கோபமடைந்திருக்கும் அர்ஜுனனுக்கு எதிரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரோ, ராதையின் மகனோ {கர்ணனோ}, அஸ்வத்தாமனோ, கிருபரோ நிற்கத்தகுந்தவர்கள் அல்ல.(5)
சுயோதனன் {துரியோதனன்} தனக்குள்ளேயே, “பார்த்தன் {அர்ஜுனன்}, என் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் வென்று, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். அவனை {அர்ஜுனனை} எவராலும் தடுக்க முடியவில்லை.(6) இந்த எனது பரந்த படையானது, பாண்டவர்களால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. எவராலும், ஏன் புரந்தரனாலும் {இந்திரனாலும்} கூட என் படையைக் காக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.(7) எவனை நம்பி நான் இந்தப் போர்ப்பாதையில் ஈடுபட்டேனோ, ஐயோ, அந்தக் கர்ணன் போரில் வீழ்த்தப்பட்டு ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(8) என்னிடம் சமாதானம் பேச வந்த கிருஷ்ணனை, நான் எவனுடைய சக்தியை நம்பி துரும்பாகக் கருதினேனோ அந்தக் கர்ணன், ஐயோ அந்தக் கர்ணன் போரில் வெல்லப்பட்டான்” என்று நினைத்தான்.(9)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் இதயத்துக்குள்ளேயே இப்படி வருந்தியவனும், மொத்த உலகத்திற்கும் எதிராகக் குற்றமிழைத்தவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் காண்பதற்காக அவரிடம் சென்றான்.(10) துரோணரிடம் சென்ற அவன் {துரியோதனன்}, குருக்களின் பேரழிவையும், தன் எதிரிகளின் வெற்றியையும், தார்தராஷ்டிரர்கள் அடைந்திருக்கும் படுபயங்கர ஆபத்தையும் அவரிடம் சொன்னான்.(11)
சுயோதனன் {துரியோதனன்}, “ஓ! ஆசானே {துரோணரே}, இந்த மன்னர்களின் மாபெரும் அழிவைக் காண்பீராக. என் பாட்டனான வீரப் பீஷ்மரை நமது தலைமையில் நிறுத்தி நான் போரிட வந்தேன்.(12) அவரைக் {பீஷ்மரைக்} கொன்ற சிகண்டி, தனது ஆசை நிறைவடைந்து, மற்றொரு வெற்றிக்கான பேராசையில் துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறான் [1].(13) உமது மற்றொரு சீடனும், வெல்லப்பட முடியாதவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளைக் [2] கொன்று, மன்னன் ஜெயத்ரதனையும் யமனுலகுக்கு அனுப்பிவிட்டான்.(14) ஓ! ஆசானே {திருதராஷ்டிரரே}, எனக்கு வெற்றியை விரும்பி, எனக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டு, யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற என் கூட்டாளிகளுக்கு நான் பட்ட கடனில் இருந்து எப்படி நான் மீளப்போகிறேன்?(15) தங்கள் உலக வளத்தையெல்லாம் கைவிட்டு, பூமியின் அரசுரிமையை எனக்களிக்க விரும்பிய அந்தப் பூமியின் தலைவர்கள், இப்போது பூமியில் கிடக்கின்றனர்.(16) உண்மையில், நானொரு கோழையே. நண்பர்களின் இத்தகு படுகொலைக்குக் காரணமான நான், நூறு குதிரை வேள்விகளைச் செய்தாலும் புனிதமடைவேன் என்று நினைக்கவும் துணிய மாட்டேன்.(17) நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், மேலும் நீதிக்கு எதிராக நடந்தவனுமாவேன். வெற்றியடையும் விருப்பம் கொண்டிருந்த இந்தப் பூமியின் தலைவர்கள், என் செயல்களால் மட்டுமே யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(18) நடத்தையில் பாவியும், உட்பகையைத் தோற்றுவித்தவனுமான எனக்கு, பூமியானவள் இந்த மன்னர்களுக்கு முன்னிலையில் (மூழ்கும் வகையில்) ஏன் ஒரு துளையைத் தர மறுக்கிறாள் [3].(19)ஐயோ, இரத்தச்சிவப்புடைய கண்களைக் கொண்டவரும், மறு உலகை வெற்றிக் கொண்ட வெல்லப்பட முடியாத வீரருமான பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சந்திக்கும்போது, மன்னர்களுக்கு மத்தியில் என்னிடம் என்ன சொல்வார்.(20) வலிமைமிக்க வில்லாளியான அந்த ஜலசந்தன், சாத்யகியால் கொல்லப்பட்டதைப் பாரும். அந்தப் பெரும் தேர்வீரன் {ஜலசந்தன்}, தன் உயிரை விடத் தயாராக, என் நிமித்தமாகப் போருக்குச் செருக்குடன் வந்தான்.(21) காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, அலம்புசனும், என்னுடைய இன்னும் பல கூட்டாளிகளும் கொல்லப்பட்டதைக் கண்டும் என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதால் எதை நான் அடையப் போகிறேன்?(22)
அந்தப் புறமுதுகிடாத வீரர்கள், என் நிமித்தமாகப் போரிட்டு, என் எதிரிகளை வெல்வதற்காகத் தங்களால் முடிந்த அளவு சக்தியுடன் போராடி தங்கள் உயிரையே விட்டனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே {துரோணரே}, நான் இன்று என் முழு வலிமையைப் பயன்படுத்தி அவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபட்டு, யமுனைக்குச் சென்று நீர்க்காணிக்கைகள் செலுத்தி அவர்களை நிறைவு செய்யப் போகிறேன்.(24) ஓ! ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரே {துரோணரே}, ஒன்று பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொன்று மன அமைதியை அடைவேன், அல்லது போரில் அவர்களால் கொல்லப்பட்டு, என் கூட்டாளிகள் சென்ற உலகங்களுக்கே நானும் செல்வேன் என்று நான் செய்திருக்கும் நற்செயல்கள் மீதும், நான் கொண்டிருக்கும் ஆற்றலின் மீதும், என் மகன்களின் மீதும் ஆணையிட்டு உமக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்.(25, 26) என் பொருட்டுப் போரில் ஈடுபட்ட அந்த மனிதர்களில் காளையர், அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்கே சென்றார்களோ அங்கே நிச்சயம் நானும் செல்வேன்.(27) நாம் நமது கூட்டாளிகளை நன்கு பாதுகாக்கவில்லை என்பதைக் கண்டு, நம்மோடு நீடித்திருக்க அவர்கள் {நமது கூட்டாளிகள்} விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, இப்போது அவர்கள் நம்மைவிடப் பாண்டவர்களையே உகந்தவர்களாகக் கருதுகின்றனர் [4].(28) அர்ஜுனன் உமது சீடன் என்பதாலும், அவனிடம் நீர் கனிவுடன் நடந்து கொள்வதாலும், துல்லிய இலக்கைக் கொண்ட நீரே போரில் நமக்கு அழிவை விதித்திருக்கிறீர்.(29) இதன் காரணமாகவே, நமக்கு வெற்றியைப் பெற்றுத் தர முயன்றோர் அனைவரும் கொல்லப்பட்டனர். இப்போது நமது வெற்றியைக் கர்ணன் மட்டுமே விரும்புவதாகத் தெரிகிறது.(30)முறையாகச் சோதிக்காமல் ஒருவனை நண்பனாக ஏற்று, நண்பர்களால் சாதிக்கப்பட வேண்டிய காரியங்களில் அவனை ஈடுபடுத்தும் பலவீனமான {மந்த} அறிவைக் கொண்ட மனிதன் தீங்கை அடைவது நிச்சயம்.(31) இப்படியே எனது இந்த விவகாரமும் என் நண்பர்களில் சிறந்தோரால் நிர்வகிக்கப்பட்டது [5]. நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், கோணல் புத்தி கொண்டவன் மற்றும் தணிக்க முடியாத பொருளாசை கொண்டவனுமானவேன்.(32) ஐயோ, மன்னன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான், மேலும் பெரும் சக்தி கொண்ட சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, அபிஷாஹர்களும், சூரசேனர்களும், சிபிக்களும், வசாதிகளும் கொல்லப்பட்டனர்.(33) அந்த மனிதர்களில் காளையர் எனக்காகப் போரில் ஈடுபட்டிருந்த போது அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்குச் சென்றார்களோ அங்கேயே நானும் இன்று செல்லப் போகிறேன்.(34) அந்த மனிதர்களில் காளையர் இல்லாத நிலையில் உயிர்வாழும் தேவையேதும் எனக்கு இல்லை. ஓ! பாண்டு மகன்களின் ஆசானே {துரோணரே}, எனக்கு இதில் {இக்காரியத்தில்} அனுமதி அளிப்பீராக” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(35)
துரோணரின் மறுமொழி! – துரோண பர்வம் பகுதி – 150-துரியோதனனுக்குத் துரோணர் சொன்ன மறுமொழி; கவசத்தைக் களையும் முன் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற துரோணர்; அஸ்வத்தாமனுக்குத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லுமாறு துரியோதனனைப் பணித்த துரோணர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} போரில் கொல்லப்பட்ட பிறகு, பூரிஸ்ரவஸ் வீழ்ச்சிக்குப் பிறகு, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?(1) குருக்களின் மத்தியில் துரியோதனன் இப்படித் துரோணரிடம் பேசியபிறகு, ஆசான் {துரோணர்} அவனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? ஓ! சஞ்சயா இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த ஓலம் எழுந்தது(3).
எந்த ஆலோசனைகளின் விளைவால் நூற்றுக்கணக்கான மனிதத் தலைவர்கள் கொல்லப்பட்டனரோ, உமது மகனின் {துரியோதனனின்} அந்த ஆலோசனைகளை அவர்கள் அனைவரும் அலட்சியம் செய்தனர்.(4) துரோணரைப் பொறுத்தவரை, அவர் உமது மகனின் அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துயரால் நிறைந்தார். சிறிது நேரம் சிந்தித்த அவர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் துன்பத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)
துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? அர்ஜுனனைப் போரில் வீழ்த்துவது இயலாது என முன்பே நான் உன்னிடம் சொன்னேன்.(6) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்ட சிகண்டி பீஷ்மரைக் கொன்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, அந்த அருஞ்செயலால் போரில் அர்ஜுனனின் ஆற்றல் நன்கு சோதிக்கப்பட்டது.(7) தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாத பீஷ்மர் உண்மையில் போரில் எப்போது கொல்லப்பட்டாரோ, அப்போதே பாரதப் படை அழிந்து விட்டது என்பதை நான் அறிவேன்.(8) மூவுலகில் உள்ளோர் அனைவரிலும் மிக முதன்மையான வீரர் என நாம் கருதிய அவரே {பீஷ்மரே} வீழ்ந்த பிறகு, வேறு யாரை நாம் நம்ப முடியும்?
ஓ! ஐயா {துரியோதனா}, முன்னர்க் குருக்களின் சபையில் சகுனி விளையாடியது பகடைகளல்ல, அவை எதிரிகளைக் கொல்லவல்ல கூரிய கணைகள்.(10) ஓ! ஐயா, ஜெயனால் {அர்ஜுனனால்} ஏவப்படும் அந்தக் கணைகளே {பகடைக் கணைகளே} இப்போது நம்மைக் கொல்கின்றன. அவற்றை அப்படியே விதுரன் உருவகப்படுத்தியிருந்தாலும், நீ இன்னும் அவற்றை அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை.(11) ஞானியும், உயர் ஆன்மா கொண்டவனுமான விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் உன்னிடம் சொன்ன அந்த வார்த்தைகளை, அமைதியைப் பரிந்துரைத்த அந்த நன்மையான வார்த்தைகளை அப்போது நீ கேட்கவில்லை.(12) அவன் {விதுரன்} முன்னறிவித்த அந்தப் பேரிடர் இப்போது வந்திருக்கிறது. ஓ! துரியோதனா, விதுரனின் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாததன் விளைவாலேயே, {அவன் முன்னறிவித்த} அந்தப் பயங்கரமான படுகொலைகள் இப்போது நேருகின்றன.(13) மூட புத்தி கொண்ட எந்த மனிதன், நம்பிக்கைக்குரிய நண்பர்களின் வணங்கத்தக்க சொற்களை அலட்சியம் செய்து, தன் சொந்தக் கருத்தைப் பின்பற்றுவானோ, அவன் விரைவில் இழிந்த பரிதாப நிலையில் வீழ்வான்.(14)
ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்குலத்தில் பிறந்தவளும், அனைத்து அறங்களையும் பயில்பவளுமான கிருஷ்ணையை {திரௌபதியை} எங்கள் கண்களுக்கு முன்பாகவே குருக்களின் சபைக்கு இழுத்து வந்த உனது அந்தப் பாவகரச் செயலின் கனியே உனக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பெருந்தீமையாகும். கிருஷ்ணை {திரௌபதி} அப்படி நடத்தப்படத் தகாதவளாவாள்.(15-16) வஞ்சகத்தால் பகடையில் பாண்டவர்களை வென்ற நீ, அவர்களை மான் தோல் உடுத்தச் செய்து காடுகளுக்குள் அனுப்பினாய்.(17) எப்போதும் அறப்பயிற்சிகளில் {நல்ல செயல்களில்} ஈடுபடுபவர்களும், என் சொந்த மகன்களையே போன்றவர்களுமான அந்த இளவரசர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என்னைத்தவிர இவ்வுலகில் வேறு எந்தப் பிராமணன் தீங்கிழைக்க முனைவான்?(18)
திருதராஷ்டிரன் சம்மதத்துடன், குரு சபையின் மத்தியில் சகுனியை உன் உதவியாளனாகக் கொண்ட நீ, பாண்டவர்களின் கடுஞ்சினத்தைத் தூண்டினாய்.(19) துச்சாசனனுடன் சேர்ந்து கொண்டு கர்ணனும் அந்தக் கோபத்தை அதிகரிக்கச் செய்தான். விதுரனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து நீயேகூட மீண்டும் மீண்டும் அதை அதிகரிக்கச் செய்தாய்.(20) நீங்கள் அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனின் அருகில் நிற்கத் தீர்மானித்து உறுதியான பாதுகாப்புடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டீர்கள். பிறகு ஏன் நீங்கள் அனைவரும் வெல்லப்பட்டீர்கள்? மேலும் ஏன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(21) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், கர்ணன், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமன் ஆகியோரும் உயிருடன் இருக்கையில் சிந்துக்களின் ஆட்சியாளன் எவ்வாறு கொல்லப்பட்டான்.(22) (உன் தரப்பில் உள்ள) மன்னர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காப்பதற்காகச் சீற்றத்துடன் தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தினர். பிறகு ஏன் அவர்களுக்கு மத்தியிலேயே ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(23) அர்ஜுனனின் கைகளில் இருந்து தன்னைப் பாதுகாக்க ஜெயத்ரதன் என்னை நம்பி எதிர்பார்த்தான்.(24) எனினும், அவன் எதிர்பார்த்த பாதுகாப்பை அவன் அடையவில்லை. எனக்கே எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(25)
சிகண்டியோடு கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வதில் வெல்லாதவரை, திருஷ்டத்யும்னப் புழுதியில் மூழ்குபவனைப் போலவே என்னை நான் உணர்கிறேன்.(26) {இப்படி} நானும் துயரில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டும், ஓ! பாரதா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} காப்பதில் தவறி விட்டு, உன் வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் நீ துளைக்கிறாய்?(27) போரில் களைக்காதவரும், துல்லியமான இலக்கைக் கொண்டவருமான பீஷ்மரின் தங்கக் கொடிமரத்தை இனி உன்னால் காண முடியாது. அப்படியிருக்கையில் எப்படி நீ வெற்றியில் நம்பிக்கைக் கொள்கிறாய்?(28) இந்த அளவுக்கு நிறைய வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில், சிந்துக்களின் ஆட்சியாளனும், பூரிஸ்ரவஸும் கொல்லப்பட்டிருக்கும் போது, முடிவு எவ்வாறு இருக்கும் என நீ நினைக்கிறாய்?(29) ஓ! மன்னா {துரியோதனா}, வெல்லப்படக் கடினமான கிருபர் இன்னும் உயிரோடிருக்கிறார். ஜெயத்ரதனின் பாதையைப் பின்பற்றாமல் இருந்ததற்காக நான் அவரை உயர்வாகப் போற்றுகிறேன்.(30) (போரில்) மிகக் கடினமான சாதனைகளை அடையும் வீரரும், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலேயே போரில் கொல்லப்பட முடியாதவருமான பீஷ்மர், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், உன் தம்பி துச்சாசனனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {துரியோதனா}, பூமியே உன்னைக் கைவிட்டதாக நான் நினைத்தேன்.(31, 32)
ஓ! திருதராஷ்டிரன் மகனே {துரியோதனா}, போரில் உன் நன்மையை அடைவதற்காகவே, பாஞ்சாலர்கள் அனைவரையும கொல்லாமல் நான் என் கவசத்தைக் களைய மாட்டேன்.(34) ஓ! மன்னா {துரியோதனா}, போரிட்டுக் கொண்டிருக்கும் என் மகன் அஸ்வத்தாமனிடம் சென்று, அவனது உயிரே ஆபத்துக்குள்ளானாலும், சோமகர்களை மட்டும் அவன் விட்டு விடக்கூடாது என்று சொல்வாயாக [2].(35) மேலும் அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “உன் தந்தையிடம் பெற்ற ஆணைகள் அனைத்தையும் நீ கடைப்பிடிப்பாயாக. பணிவு, சுயக்கட்டுப்பாடு, உண்மை மற்றும் {கபடமற்ற} நேர்மை ஆகிய செயல்களில் நீ உறுதியாக இருப்பாயாக.(36) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில், அறத்தையும், பொருளையும் புறக்கணிக்காமல், அற ஆதிக்கம் கொண்ட செய்களையே எப்போதும் நீ செய்வாயாக.(37) பிராமணர்களை எப்போதும் பரிசுகளால் நிறைவு செய்வாயாக. அவர்கள் அனைவரும் உன் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாவர். அவர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் நீ செய்யாதிருப்பாயாக. அவர்கள் நெருப்பின் தழல்களைப் போன்றவர்களாவர்” என்றும் {அஸ்வத்தாமனிடம் நீ} சொல்ல வேண்டும்.(38)
என்னைப் பொறுத்தவரை, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, வார்த்தைக் கணைகளால் உன்னால் துளைக்கப்படும் நான், பெரும்போர் புரிவதற்காகப் பகைவரின் படைக்குள் ஊடுருவுவேன்.(39) உன்னால் முடியுமென்றால், ஓ! துரியோதனா, போய் அந்தத் துருப்புகளைக் காப்பாயாக. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் இரவிலும் போர்புரிவார்கள்” என்றார் {துரோணர்}.(40) இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர், விண்மீன்களின் ஒளியைத் தன் ஒளியால் மீறி மறைக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் சக்தியைத் தன் சக்தியால் மீறுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றார்” என்றான் {சஞ்சயன்}.(41)
“விதி வலியது!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 151-துரோணரின் நேர்மையைச் சந்தேகித்துக் கர்ணனிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனின் சந்தேகங்களை நீக்கிய கர்ணன்; குருக்களின் தோல்விக்கு விதியே காரணம் என்று சொன்ன கர்ணன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இப்படித் துரோணரால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டுப் போரில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) பிறகு உமது மகன் துரியோதனன் கர்ணனிடம், “போரில் போராடிக் கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், இன்னும் பல முதன்மையான போர்வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணனை மட்டுமே உதவிக்குக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் {கிரீடியான அர்ஜுனன்}, தேவர்களாலும் ஊடுருவமுடியாத அளவுக்கு, ஆசானால் {துரோணரால்} அமைக்கப்பட்ட வியூகத்தைப் பிளந்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றுவிட்டதைக் காண்பாயாக.(2, 3)
ஓ! ராதையின் மகனே {கர்ணா}, மூர்க்கமாக முயன்று கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறு விலங்குகளின் கூட்டத்தைப் போல, எவருடைய உதவியுமில்லாத பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, பூமியில் கிடக்கும் பல முதன்மையான மன்னர்களைப் பார்ப்பாயாக.(4, 5) சக்ரனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} என் படையைச் சிறிதே எஞ்சியிருக்கும் அளவுக்குக் குறைத்துவிட்டான். உண்மையில், போரில் துரோணரால் தடுக்கப்பட்டும், சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொன்று பல்குனனால் {அர்ஜுனனால்} தன் சபதத்தை எப்படி நிறைவேற்ற முடிந்தது?(6) துரோணர் விரும்பவில்லையெனில், ஓ! வீரா {கர்ணா}, போராடிக் கொண்டிருக்கும் தன் ஆசானை {துரோணரை} மீறி, ஊடுருவ முடியாத அந்த வியூகத்தைப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எவ்வாறு பிளக்க முடியும்?
உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, சிறப்பு மிக்க ஆசானின் {துரோணரின்} பெரும் அன்புக்குரியவனாவான்.(7,8) இதன் காரணமாகவே பின்னவர் {துரோணர்}, அவனுடன் போரிடாமலேயே அவனை நுழைய அனுமதித்திருக்கிறார். என் பேறின்மையைப் பார். எதிரிகளை எரிப்பவரான துரோணர், முதலில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனை வியூகத்துக்குள் நுழைய அனுமதித்துவிட்டார். தொடக்கத்திலேயே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அவனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி அளித்திருந்தால், இத்தகு பயங்கரப் பேரழிவு நடந்திருக்காது {ஜெயத்ரதன் அழிந்திருக்க மாட்டான்}. ஐயோ, தன் உயிரைக் காத்துக் கொள்ளும் நம்பிக்கையில் ஜெயத்ரதன் வீடு திரும்ப விரும்பினான்.(9-11) போரில் பாதுகாப்பதாகத் துரோணரிடம் வாக்குறுதி பெற்ற மூடனான நானே அவன் {ஜெயத்ரதன்} செல்வதைத் தடுத்தேன் [1]. ஐயோ, இன்று சித்திரசேனனின் தலைமையிலான என் சகோதரர்கள் அனைவரும், இழிந்தவர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து விட்டனர்” என்றான் {துரியோதனன்}.(12)
அதற்குக் கர்ணன் {துரியோதனனிடம்}, “ஆசானை {துரோணரைப்} பழிக்காதே. அந்தப் பிராமணர் தன் சக்தி, பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தித் தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிவருகிறார்.(13) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் ஆசானை {துரோணரை} மீறி நம் வியூகத்தைப் பிளந்ததில் அவரிடம் {துரோணரிடம்} சிறு குற்றமும் இருக்க முடியாது.(14) ஆயுதங்களை {அஸ்திரங்களை} அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்} இளமையுடன் கூடியவன்; அவன் ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியுடைய வீரன்; அவன் தன் வேகமான இயக்கத்துக்காகத் தனித்தன்மையுடன் அறியப்படுபவனுமாவான். தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவனும், கிருஷ்ணனின் கைகளில் இருக்கும் கடிவாளங்களுடன் கூடிய குதிரைகள் பூட்டப்பட்டதும், குரங்குக் கொடி கொண்டதுமான தன் தேரில் ஏறியவனும், ஊடுவமுடியாத கவசம் பூண்டவனும், மங்கா வலிமை கொண்ட தன் தெய்வீக வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், தன் கரங்களின் வலிமையில் உண்டான செருக்குடன், கூரிய கணைகளை இறைத்தபடியே துரோணரை மீறினான். இஃதில் எந்த ஆச்சரியமுமில்லை.(15-17)
மறுபுறம் ஆசானோ {துரோணரோ}, ஓ! மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ! மன்னா {துரியோதனா}, நீண்ட நேரம் கரங்களைப் பயன்படுத்த முடியாதவராவார்.(18) இதனாலேயே, வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, ஆசானை மீறிச் செல்வதில் வென்றான். இந்தக் காரணத்திற்காகவே, துரோணரிடம் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(19) இவை யாவையும் பார்த்தால், வெண் குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், நமது வியூகத்தைப் பிளந்து துரோணரை மீறிச் சென்றதில், பின்னவர் {துரோணர்} என்னதான் ஆயுதங்களில் திறன் பெற்றவராக இருப்பினும், போரில் பாண்டவர்களை வெல்ல இயலாதவர் என்பது தெரிகிறது.(20)
விதியால் நிர்ணயிக்கப்பட்டது எதுவும் மாறாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஓ! சுயோதனா {துரியோதனா}, நமது சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாம் போரிட்டிருந்தாலும், போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதால் விதியே அனைத்திலும் வலியது என்பது தெரிகிறது.(21) உன்னோடு சேர்ந்து நாம் அனைவரும் நம்மால் முடிந்த அளவு சக்தியைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் முயன்றோம்.(22) எனினும் நம் முயற்சிகளைக் கலங்கடித்த விதியானது நம்மிடம் புன்னகைக்கவில்லை.
வஞ்சகம், ஆற்றல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க நாம் எப்போதும் முயன்றிருக்கிறோம்.(23) விதியால் பீடிக்கப்பட்ட மனிதன் எந்தக் காரியத்தைச் செய்தாலும், ஓ! மன்னா {துரியோதனா}, அம்மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் விதியால் அது {அக்காரியம்} கலங்கடிக்கப்படும்.(24) உண்மையில், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அஃது அனைத்தையும் எப்போதும் அச்சமற்ற வகையில் செய்ய வேண்டும். வெற்றி விதியைச் சார்ந்தே இருக்கும்.(25)
ஓ பாரதா {துரியோதனா}, வஞ்சகதைக் கொண்டும், நஞ்சைப் பயன்படுத்தியும் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் பகடையில் வெல்லப்பட்டார்கள்.(26) ஆட்சிக்கலைகளின் ஆணைகளுக்கிணங்க {ராஜநீதிக்கிணங்க} அவர்கள் காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டார்கள். இவை யாவையும் நம்மால் கவனமாகச் செய்யப்பட்டாலும், விதியால் அவை கலங்கடிக்கப்படுகின்றன.(27) ஓ! மன்னா {துரியோதனா}. விதியை ஒன்றுமில்லாததாக்கி உறுதியான தீர்மானத்துடன் போரிடுவாயாக.
சிறந்த ஆற்றலுடன் போராடும் உனக்கும் அவர்களுக்கும் இடையில், எத்தரப்பு மற்றதை விஞ்சுகிறதோ அதற்கு விதி அனுகூலமாகலாம்.(28) மேன்மையான அறிவின் உதவியுடன் பாண்டவர்களால் எந்த விவேகமான வழிகளும் பின்பற்றப்படவில்லை. அல்லது, ஓ! வீரா {துரியோதனா}, அறிவில்லாத எந்தக் காரியத்தையும் விவேகமில்லாமல் நீயும் செய்யவில்லை. (29)
செயல்களின் விளைவுகளை விவேகமானது, அல்லது விவேகமற்றது என்று விதியே நிர்ணயிக்கிறது. தன் காரியங்களையே நோக்கமாகக் கொண்ட விதியானது, அனைத்தும் உறங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.(30)
உன் படை பெரியது, உனது போர்வீரர்களும் பலராவர். இப்படியே போர் தொடங்கியது.(31) அவர்களது படை சிறியதாக இருந்தும், நன்கு தாக்கக்கூடிய மனிதர்களுடன் கூடிய உனது பெரிய படை மிகவும் குறைக்கப்பட்டது. நம் முயற்சிகள் அனைத்தையும் கலங்கடிப்பது விதியின் செயலே என நான் அஞ்சுகிறேன்” என்றான் {கர்ணன்}.(32)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையினாலேயே நடந்தன” {என்றான் சஞ்சயன்}.(34)
ஜயத்ரதவத பர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்