ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-அபிமன்யு வத பர்வம் -பதிமூன்றாம் நாள் போர்-

தேவர்களே ஊடுருவ முடியாத வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 031-பனிரெண்டாம் நாளை தோற்றதாகக் கருதிய கௌரவ வீரர்கள்; எரிச்சலும் கோபமும் கொண்ட துரியோதனன் துரோணரிடம் பேசியது; பாண்டவர்களின் வீரர்களில் முதன்மையான ஒருவரைக் கொல்வதாகத் துரியோதனனிடம் சூளுரைத்த துரோணர்; பதிமூன்றாம் நாள் போரில் சக்கர வியூகம் அமைத்த துரோணர்; நாளின் இறுதியில் அபிமன்யு கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் சொல்லும் சஞ்சயன்; திருதராஷ்டிரன் அடைந்த துயரம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முதலில் அளவிலா ஆற்றல் கொண்ட அர்ஜுனனால் {தாங்கள்} பிளக்கப்பட்டதாலும், யுதிஷ்டிரன் நன்கு பாதுகாக்கப்பட்டதால், துரோணர் செய்திருந்த சபதம் தோல்வி அடைந்த காரணத்தாலும் உமது வீரர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட்டனர். புழுதி படிந்தும் பிளந்திருந்த கவசங்களுடனுமிருந்த  அவர்கள் அனைவரும் சுற்றிலும் தங்கள் கண்களை ஆவலாகச் சுழலவிட்டனர். உறுதியான இலக்கைக் கொண்ட தங்கள் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, போரில் அவர்களால் {எதிரிகளால்} அவமதிக்கப்பட்ட அவர்கள் {கௌரவ வீரர்கள்}, துரோணரின் சம்மதத்தின் பேரில் களத்தில் இருந்து திரும்பினர். அப்படித் திரும்பிக் கொண்டிருக்கையில், உயிர்களனைத்தும் பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணற்ற தகுதிகளைப் புகழ்வதையும், அனைவரும் அர்ஜுனனிடம் கேசவன் {கிருஷ்ணன்} கொண்ட நட்பைப் பேசுவதையும் அவர்கள் கேட்டனர். சம்பவங்களின் கோர்வையை நினைவு கூர்ந்த அவர்கள், சாபத்தில் வீழ்ந்த மனிதரைப் போல முற்றான அமைதி கொண்டு அந்த இரவைக் கழித்தனர் [1].அடுத்த நாள் காலையில், துரியோதனன், தங்கள் எதிரியின் செழிப்பைக் கண்டு இதய உற்சாகத்தைப் பெரிதும் இழந்து, எரிச்சலாலும், கோபத்தாலும் இந்த வார்த்தைகளைத் துரோணரிடம் சொன்னான். பேச்சில் திறமையுள்ள அந்த மன்னன் {துரியோதனன்}, எதிரி அடைந்த வெற்றியை எண்ணி சினத்தால் நிறைந்து, துருப்புகள் அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {பிராமணோத்தமரே}, உம்மால் அழிக்கப்பட வேண்டிய மனிதர்களால் இன்று நீர் எங்களைத் தாழ்த்திவிட்டீர் {கீழான நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்} என்பதில் ஐயமில்லை. அடையத்தக்க தூரத்தில் யுதிஷ்டிரனைக் கொண்டிருந்தும், இன்று அவனை நீர் பிடிக்கவில்லை. போரில் உம்மால் பிடிக்கத்தக்க அந்த எதிரி, உமது பார்வையில் ஒரு முறை பட்டாலே, தேவர்களாலேயே உதவப்பட்டு, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டாலும் கூட அவன் உம்மிடம் இருந்து தப்புவது இயலாதே. மனம் நிறைந்திருந்த நீர் எனக்கு ஒரு வரத்தை அளித்தீர்; எனினும், இப்போதோ அதன் படி செயல்படாமலிருக்கிறீர். (உம்மைப் போன்ற) உன்னதர்கள், தங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவனின் நம்பிக்கைகளை ஒருபோதும் பொய்யாக்குவதில்லை” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} நாணிக் குறுகினார். மன்னனிடம் {துரியோதனனிடம்} அவர் {துரோணர்}, “என்னை நீ இப்படி நினைப்பது உனக்குத் தகாது. உனக்கு ஏற்புடையதைச் சாதிக்கவே நான் எப்போதும் முயல்கிறேன். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் படையைத் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களாலும் வீழ்த்த இயலாது. அண்டத்தை உண்டாக்கிய கோவிந்தன் எங்கிருக்கிறானோ, அர்ஜுனன் தலைவனாக எங்கிருக்கிறானோ, அங்கே முக்கண் மகாதேவனைத் தவிர வேறு எவனுடைய பலம் செல்லுபடியாகும்? ஓ! ஐயா {துரியோதனா}, நான் இஃதை இன்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், இது வேறுவகையிலாகாது.

இன்று நான், பாண்டவ வீரர்களில் முதன்மையான ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனைக் கொல்வேன். இன்று நான், தேவர்களாலும் ஊடுருவமுடியாத ஒரு வியூகத்தை அமைப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, எவ்வழிகளிலாவது அர்ஜுனனை களத்திலிருந்து {வெளியே} கொண்டு செல்வாயாக. அவன் அறியாததோ, போரில் அடையமுடியாததோ யாதொன்றும் இல்லை. {உலகத்தாரால்} போரைக் குறித்து {இதுவரை} அறியப்பட்ட அனைத்தையும் அவன் பல்வேறு இடங்களில் இருந்து அடைந்திருக்கிறான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மீண்டும் போரிடுவதற்காக அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சம்சப்தகர்கள், களத்தின் தென் பகுதிக்கு அவனை {அர்ஜுனனைக்} கொண்டு சென்றனர். பிறகு, எப்போதும் பார்க்கப்படாத, கேள்விப்படாத வகையில் அர்ஜுனனுக்கும், அவனுடைய எதிரிகளுக்கும் {சம்சப்தகர்களுக்கும்} இடையிலான அந்த மோதல் இருந்தது.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் அமைத்த வியூகமானது பிரகாசிப்பதாகத் தெரிந்தது. உண்மையில், உச்சியை அடைந்து, (கீழிருக்கும் அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வியூகமானது பார்க்கப்பட முடியாததாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யு, தன் தந்தையுடைய மூத்த அண்ணனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், போரில் ஊடுருவ முடியாத அந்தச் சக்கர வியூகத்தின் பல இடங்களைத் துளைத்தான். மிகக் கடினமான அருஞ்செயல்களைச் செய்து, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்ற அவன் {அபிமன்யு}, (இறுதியில்) ஒன்று சேர்ந்திருந்த ஆறு வீரர்களால் {ஒரே நேரத்தில்} எதிர்க்கப்பட்டான். ஓ! பூமியின் தலைவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே} இறுதியாக அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துச்சாசனன் மகனிடம் [2] பலியாகி தன் உயிரை விட்டான். இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தோம், பாண்டவர்களோ பெரும் துன்பத்தில் நிறைந்தனர். சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, நம் துருப்புகள் இரவு ஓய்வுக்காகப் பின்வாங்கப்பட்டன {திரும்ப அழைக்கப்பட்டன}” {என்றான் சஞ்சயன்} [3].திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இளமையை அடையாதவனும், மனிதர்களில் சிங்கத்தின் {அர்ஜுனனின்} மகனுமான அவன் (அபிமன்யு) கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் தூள் தூளாக நொறுங்குகிறது. உண்மையில், ஆட்சி உரிமையை விரும்பும் துணிச்சல்மிக்க மனிதர்கள், மனவுறுத்தல் ஏதுமின்றி ஒரு குழந்தையின் மீது ஆயுதங்களை ஏவத்தக்க வகையில் சட்டம் இயற்றுபவர்களால் {தர்மகர்த்தாக்களால்} ஏற்படுத்தப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமைகள் கொடூரமானவையே. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் அச்சமற்ற வகையில் களத்தில் திரிந்த அந்தக் குழந்தையை {அபிமன்யுவை}, ஆயுதங்களில் சாதித்தவர்களான இத்தனை பல வீரர்கள் சேர்ந்து எவ்வாறு கொன்றார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! சஞ்சயா, போரில் நம் தேர் அணிவகுப்பினுள் ஊடுருவிய அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} நம் வீரர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்கும் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} படுகொலையை {வதத்தை} விரிவாகச் சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேட்பீராக. நம் படையணிகளுக்குள் ஊடுருவிய அந்த இளைஞன் {அபிமன்யு}, தன் ஆயுதங்களுடன் எவ்வாறு விளையாடினான் என்பதையும், வெற்றி பெறும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நமது படையின் தடுக்கப்பட முடியாத வீரர்கள் அனைவரும் அவனால் {அபின்யுவால்} எவ்வாறு பீடிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நான் உமக்குச் சொல்கிறேன். செடிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியன நிறைந்த காட்டில், {காட்டுத்} தீயால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட காட்டுவாசிகள் அனைவரையும்போல, உமது படையின் வீரர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}. 

சக்கர வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 032-பாண்டவர்கள் ஒவ்வொருவரின் தகுதிகளையும், கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துச் சொல்லும் சஞ்சயன்; துரோணர் அமைத்த சக்கர {பத்ம} வியூகம்; அந்த வியூகத்தில் கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் நின்ற நிலைகளைக் குறித்த வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் கடுஞ்செயல்களைச் செய்பவர்களும், களைப்பனைத்துக்கும் மேம்பட்டவர்களும், சாதனைகளால் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஐவரும், கிருஷ்ணனுடன் கூடி தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்.

நீதி, செயல்கள், பரம்பரை, நுண்ணறிவு {புத்திக்கூர்மை}, சாதனைகள், புகழ், செழிப்பு ஆகியவற்றில் யுதிஷ்டிரனைப் போன்ற வேறொரு மனிதன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. உண்மைக்கும் {சத்தியத்துக்கும்}, நீதிக்கும் அர்ப்பணிப்புடன், ஆசைகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பிராமணர்களை வழிபடுவதன் விளைவாலும், அது போன்ற இயல்புடைய பிற அறங்களாலும் {சிறப்பு குணங்களாலும்} எப்போதும் சொர்க்கத்தில் இன்புறுகிறான்.

யுக முடிவின் {ஊழிக்காலத்து} அந்தகன், ஜமதக்னியின் வீர மகன் (ராமர்) {பரசுராமர்}, தன் தேரிலுள்ள பீமசேனன் ஆகிய மூவரும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இணையானவர்களாகவே சொல்லப்படுகின்றனர்.

போரில் தன் உறுதிமொழிகளை எப்போதும் அடையும் காண்டீவதாரியான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} பூமியில் சரியான இணை {ஒப்புவமை} ஒன்றையும் நான் காணவில்லை.

மேன்மையானவர்களிடம் மதிப்பு {குருபக்தி}, ஆலோசனைகளை வெளியிடாமை, பணிவு, சுயக்கட்டுப்பாடு, மெய்ந்நலம் {மேனியழகு}, துணிச்சல் ஆகிய ஆறும் எப்போதும் நகுலனிடம் இருக்கின்றன.

சாத்திரங்களில் அறிவு, ஈர்க்கும் தன்மை {இனிமை}, பண்பில் இனிமை {கம்பீரம்}, நீதி, ஆற்றல் ஆகிவற்றில் அசுவினிகளுக்கே இணையானவனாக வீர சகாதேவன் இருக்கிறான்.

கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடம் உள்ள உன்னதக் குணங்கள் அனைத்தின் கூட்டும் அபிமன்யுவிடம் மட்டுமே காணப்படுகிறது. உறுதியில் யுதிஷ்டிரனுக்கு இணையானவனாக, நடத்தையில் கிருஷ்ணனுக்கும், சாதனைகளில் பயங்கரச் செயல் புரியும் பீமசேனனுக்கும் இணையானவனாக இருந்த அவன் {அபிமன்யு}, மேனி அழகு, ஆற்றல், சாத்திர அறிவு ஆகியவற்றில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாக இருந்தான். பணிவிலோ, அவன் சகாதேவன் மற்றும் நகுலனுக்கு இணையானவனாக இருந்தான்” என்றான் {சஞ்சயன்} [1].திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, வெல்லப்பட முடியாத சுபத்திரையின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதியுடனிருப்பீராக. தாங்க முடியாத உமது சோகத்தைத் தாங்கிக் கொள்வீராக. உமது சொந்தங்களின் பெரும்படுகொலைகளைக் குறித்து உம்மிடம் நான் சொல்லப் போகிறேன்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} பெரும் சக்கர வியூகத்தை [2] அமைத்தார். அதில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான (நமது தரப்பின்) மன்னர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டனர். சூரியப் பிரகாசத்தைக் கொண்ட இளவரசர்கள் அனைவரும் {அந்த வியூகத்தின்} நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர் [3]. (ஒருவரோடொருவர் சேர்ந்து நிற்போம் என்று) அவர்கள் அனைவரும் உறுதி மொழிகளை ஏற்றிருந்தனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களை அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர். சிவப்பு ஆடைகளையும், சிவப்பு ஆபரணங்களையும் அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். சிவப்பு கொடிகளையும் அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர், மேலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சந்தனக் குழம்பையும், நறுமணமிக்க வேறு தைலங்களையும் {காரகில் சாந்துகளையும்} பூசிக் கொண்டு பூமாலை அணிந்தவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர். போரிட விரும்பிய அவர்கள் ஒரே அமைப்பாகச் செயல்பட்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். உறுதியான வில்லாளிகளான அவர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பத்தாயிரம் பேராக இருந்தனர். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரோடொருவர் இரக்கம் கொண்டு, வீரச்செயல்களில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் விஞ்ச விரும்பி, ஒருவருக்கொருவர் நன்மை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்கள் அனைவரும் உமது அழகிய பேரன் லக்ஷ்மணனைத் {துரியோதனன் மகனைத்} தலைமையில் கொண்டு போரிடச் சென்றனர்.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தன் படைகளுக்கு மத்தியில் நின்றிருந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான கர்ணன், துச்சாசனன், கிருபர் ஆகியோரால் சூழப்பட்டுத் தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைக் கொண்டிருந்தான். காட்டெருதின் வாலால் {சாமரம்} வீசப்பட்ட அவன் {துரியோதனன்} தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போலப் பிரகாசித்தான்.

அந்தப் படையின் தலைமையில் இருந்த படைத்தலைவரான துரோணர் உதயசூரியனைப் போலத் தெரிந்தார். அங்கே பெரும் மேனி அழகைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மேருவின் முகட்டைப் போல அசையாதவனாக நின்றான். அஸ்வத்தாமனின் தலைமையில் நின்றவர்களும், தேவர்களுக்கு ஒப்பானவர்களுமான உமது மகன்கள் முப்பது {30} பேர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} பக்கத்தில் நின்றனர். பிறகு, ஜெயத்ரதனின் விலாப்புறத்தில், சூதாடியான காந்தார ஆட்சியாளன் (சகுனி), சல்லியன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் நின்றனர். பிறகு, உமது படைவீரர்களுக்கும், எதிரிகளுடையவர்களுக்கும் இடையில் கடுமையானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான போர் தொடங்கியது. மரணத்தையே இலக்காகக் கொண்டு இரு தரப்பும் போரிட்டன” {என்றான் சஞ்சயன்}. 

வியூகத்தைப் பிளப்பாய் அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 033-சக்கர வியூகத்தை எதிர்த்து விரைந்து துரோணரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; அந்த வியூகத்தைப் பிளக்குமாறு அபிமன்யுவை ஏவிய யுதிஷ்டிரன்; வியூகத்தை விட்டு வெளியே வரத்தெரியாது என்ற அபிமன்யு; யுதிஷ்டிரனும், பீமனும் கூறிய உறுதிமொழிகள்; துரோணரின் படையை நோக்கி விரைந்த அபிமன்யு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட அந்த வெல்லப்பட முடியாத வியூகத்தை {சக்கரவியூகத்தைப்}பீமசேனனின் தலைமையில் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} அணுகினார்கள். சாத்யகி, சேகிதானன், பிருஷதன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், பெரும் ஆற்றலைக் கொண்ட குந்திபோஜன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், அர்ஜுனன் மகன் (அபிமன்யு), {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதர்மன், {கைகேய இளவரசனனான} வீர பிருஹத்ஷத்ரன், சேதிகளின் ஆட்சியாளன் திருஷ்டகேது, மாத்ரியின் இரட்டை மகன்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), கடோத்கசன், பலம்நிறைந்த {பாஞ்சால இளவரசன்} யுதாமன்யு, வெல்லப்படாத சிகண்டி, தடுக்கப்பட முடியாத {பாஞ்சால இளவரசன்} உத்தமௌஜஸ், வலிமைமிக்கத் தேர்வீரனான விராடன், கோபத்தால் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் ஐவர், சிசுபாலனின் வீரமகன் {சுகேது}, வலிமையும் சக்தியும் கொண்ட கைகேயர்கள், ஆயிரக்கணக்கான சிருஞ்சயர்கள் ஆகிய இவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களுமான இன்னும் பிறரும், போரிட விரும்பி தங்களைப் பின்தொடர்வோருக்குத் தலைமையேற்றுப் பரத்வாஜரின் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர்.

எனினும், பரத்வாஜரின் வீரமகனோ {துரோணரோ}, அவ்வீரர்கள் தன்னருகே வந்ததும் அடர்த்தியான கணைகளின் மழையால் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரையும் தடுத்தார். நீரின் வலிமைமிக்க அலைகள், ஊடுருவமுடியாத மலையை எதிர்த்துச் செல்வதைப் போலவோ, பொங்கி வரும் கடலானது கரைகளை அணுகுவதைப் போலவோ சென்ற அந்த வீரர்கள் துரோணரால் தடுக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், அவரின் முன்னிலையில் நிற்க முடியாதவர்களானார்கள். நாங்கள் கண்ட துரோணரின் பலமானது மிக அற்புதமாக இருந்தது, பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அவரை {துரோணரை} அணுகுவதில் தோல்வியை அடைந்தனர்.

சினத்தால் முன்னேறும் துரோணரைக் கண்ட யுதிஷ்டிரன், அவரது முன்னேற்றத்தைத் தடுக்கப் பல்வேறு வழிகளைச் சிந்தித்தான். இறுதியாக, துரோணர் யாராலும் தடுப்பட முடியாதவர் என்று கருதிய யுதிஷ்டிரன், தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கனமான சுமையைச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது வைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} குறையாதவனும், அர்ஜுனனின் சக்திக்கு மேம்பட்டவனுமான அபிமன்யுவிடம் பேசிய மன்னன் {யுதிஷ்டிரன்}, “ஓ! குழந்தாய் {அபிமன்யு}, (சம்சப்தகர்களிடம் இருந்து) திரும்பி வரும் அர்ஜுனன் நம்மை நிந்திக்காத வகையில் செயல்படுவாயாக. சக்கரவியூகத்தைப் பிளப்பது எவ்வாறு என்பதை நாங்கள் அறியோம். அவ்வியூகத்தை நீயோ, அர்ஜுனனோ, கிருஷ்ணனோ, பிரத்யும்னனோதான் பிளக்க முடியும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அபிமன்யு}, (அந்த அருஞ்செயலைச் செய்ய) ஐந்தாவதாக வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஓ! குழந்தாய், ஓ! அபிமன்யு, உனது தந்தைமாரும், உனது மாமன்மாரும், இந்தத் துருப்புகள் அனைத்தும் உன்னிடம் இருந்து கேட்பது எதுவோ, அந்த வரத்தை அளிப்பதே உனக்குத் தகும். உனது ஆயுதங்களை விரைவாக எடுத்துக் கொண்டு, துரோணரின் இந்த வியூகத்தை அழிப்பாயாக, இல்லையெனில், {சம்சப்தகர்களுடனான} போரில் இருந்து திரும்பி வரும் அர்ஜுனன் நம் அனைவரையும் நிந்திப்பான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அபிமன்யு, “என் தந்தைமாருக்கு வெற்றியை விரும்பும் நான், போரில் துரோணரால் அமைக்கப்பட்ட அந்த உறுதியான, கடுமையான, முதன்மையான வியூகத்தினுள் {சக்கரவியூகத்தினுள்} விரைவில் ஊடுருவுவேன். இவ்வகை வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} தாக்கும் (அதற்குள் ஊடுருவும்) முறை என் தந்தையால் எனக்குக் கற்றுத்தரப்பட்டிருக்கிறது. எனினும், {அங்கே} எவ்வித ஆபத்தாவது எனக்கு நேர்ந்தால், என்னால் அதை {வியூகத்தை} விட்டு வெளியே வர இயலாது [1]” என்றான் {அபிமன்யு}.

யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {அபிமன்யு} இந்த வியூகத்தை ஒரு முறை பிளந்து, எங்களுக்கு வழியை ஏற்படுத்திவிடுவாயாக. நீ செல்லும் பாதையிலேயே நாங்கள் அனைவரும் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம். போரில் நீ தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாவாய். நீ உள்ளே நுழைவதைக் காணும் நாங்கள், உன்னைப் பின்தொடர்ந்து வந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைப் பாதுகாப்போம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீமன் {அபிமன்யுவிடம்}, “நானும் உன்னைப் பின்தொடர்வேன். மேலும், திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் ஆகியோரும் பின்தொடர்ந்து வருவார்கள். உன்னால் ஒரு முறை வியூகம் பிளக்கப்பட்ட பிறகு, மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து, அதனுள் இருக்கும் போர்வீரர்களில் முதன்மையானோரை நாங்கள் கொல்வோம்” என்றான் {பீமன்}.

அபிமன்யு, “சுடர்மிகும் நெருப்புக்குள் நுழையும் கோபம் நிறைந்த பூச்சியைப் போல, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தை நான் ஊடுருவுவேன். (என் தந்தையின் குலம் மற்றும் தாயின் குலம் ஆகிய) இரண்டு குலங்களுக்கும் நன்மையைத் தரும் செயலை நான் இன்று செய்வேன். என் தாய்க்கும் {சுபத்திரைக்கும்}, என் தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இனிமையானதை நான் செய்வேன் [2]. உதவியற்ற {தன்னந்தனி} சிறுவனான என்னால் தொடர்ந்து கொல்லப்படும் பெரும் எண்ணிக்கையிலான பகை வீரர் கூட்டங்களை இன்று அனைத்து உயிர்களும் காணும். இன்று என்னுடன் மோதி, எவராவது உயிருடன் தப்பினால், பார்த்தருக்கும் {அர்ஜுனருக்கும்}, சுபத்திரைக்கும் பிறந்தவன் என என்னை நான் கருத மாட்டேன். தனி ஒருவனாகத் தேரில் செல்லும் என்னால், க்ஷத்திரிய குலத்தைப் போரில் எட்டு துண்டுகளாக வெட்ட முடியாமல் போனால் அர்ஜுனனின் மகனாக என்னை நான் கருத மாட்டேன்” என்றான் {அபிமன்யு} [3].யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “மனிதர்களில் புலிகளும், கடும் வலிமை கொண்ட பெரும் வில்லாளிகளும், சாத்யர்கள், ருத்திரர்கள், மருத்துக்கள் ஆகியோருக்கு ஒப்பானவர்களும், ஆற்றலில் வசுக்களையோ, அக்னியையோ, ஆதித்தியனையோ போன்றவர்களால் பாதுகாக்கப்படும் நீ, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தைத் துளைக்கத் துணிவாயாக. மேலும், ஓ! சுபத்திரையின் மைந்தா {அபிமன்யு}, நீ இவ்வாறு பேசுவதால் உனது பலமும் பெருகட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியான சுமித்திரனிடம் “துரோணரின் படையை நோக்கி விரைவாகக் குதிரைகளைத் தூண்டுவாயாக” என்று ஆணையிட்டான்” {என்றான் சஞ்சயன்}.

வியூகத்தைப் பிளந்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 034-அபிமன்யுவைப் போரிட வேண்டாம் என்று தடுத்த தேரோட்டி சுமித்ரன்; துரோணரின் தலைமையிலான வீரர்களுடன் மோதிய அபிமன்யு; துரோணரின் கண்ணெதிரிலேயே வியூகத்தைப் பிளந்த அபிமன்யு; கௌரவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அபிமன்யு; களத்தைவிட்டு ஓடிய கௌரவப் படையின் போர்வீரர்கள்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புத்திக்கூர்மை கொண்ட யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் வியூகத்தை நோக்கித் தன் தேரோட்டியைத் தூண்டினான். “செல்வீர், செல்வீர்” என்று அபிமன்யுவால் தூண்டப்பட்ட அந்தத் தேரோட்டி {சுமித்ரன்}, அவனிடம் {அபிமன்யுவிடம்}, “ஓ! நீண்ட ஆயுளைக் கொண்டவனே, பாண்டவர்களால் உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் சுமையானது மிகக் கனமானதாகும். அஃதை உன்னால் தாங்க முடியுமா? முடியாதா? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே நீ போரில் ஈடுபட வேண்டும். ஆசான் துரோணரோ மேன்மையான ஆயுதங்களை ஆழப் புரிந்தவரும், (போரில்) சாதித்தவருமாவார். நீயோ, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டு, போருக்கு பழக்கமில்லாதவனாக இருக்கிறாய்” என்றான் {தேரோட்டி சுமித்ரன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியிடம் சிரித்துக் கொண்டே, “ஓ! தேரோட்டியே, யார் இந்தத் துரோணர்? மேலும், க்ஷத்திரியர்களின் இந்தப் பரந்த கூட்டம்தான் என்ன? தேவர்கள் அனைவரின் உதவியோடு, சக்ரனே {இந்திரனே} தன் ஐராவதத்தில் வந்தாலும், போரில் நான் மோதுவேன். நான் இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் குறித்துச் சிறு கவலையும் கொள்ளவில்லை. பகைவரின் இந்தப் படை என்னில் பதினாறில் ஒரு பங்குக்கும் சமமாகாது. ஓ! சூதரின் மகனே {சுமித்திரரே}, விஷ்ணுவையே {கிருஷ்ணரையே} தாய்மாமனாகவும், அண்டத்தை வெல்லும் அர்ஜுனரை என் தந்தையாகவும் கொண்டு, போரில் ஒரு பகைவனாக இருக்கும் என் இதயத்தில் அச்சம் நுழைய முடியாது” என்றான்.

பிறகும் அபிமன்யு, அந்தத் தேரோட்டியின் {சுமித்ரனின்} வார்த்தைகளை அலட்சியம் செய்து, பின்னவனைத் {தேரோட்டியைத்} தூண்டும் வகையில், “துரோணரை நோக்கி வேகமாகச் செல்வீராக” என்றான். இப்படி ஆணையிடப்பட்ட தேரோட்டி, சிறிதும் உற்சாகமற்ற இதயத்துடன், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் மூன்று வயதான குதிரைகளைத் தூண்டினான். துரோணரின் படையை நோக்கி சுமித்ரனால் தூண்டப்பட்ட அந்தப் புரவிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் துரோணரையே நோக்கி விரைந்தன.

(தங்களை நோக்கி) அவ்வழியில் அவன் {அபிமன்யு} வருவதைக் கண்ட துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துச் சென்றனர். மேலும், பாண்டவர்களும் அவனைப் {அபிமன்யுவைப்} பின்னால் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனனுக்கும் மேம்பட்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், கோங்கு மரம் பொறித்த சிறந்த கொடிரமரத்தைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, யானைகளின் மந்தையைத் தாக்கும் சிங்கக் குட்டியைப் போலப் போரிட விரும்பி, துரோணரின் தலைமையிலான போர்வீரர்களுடன் அச்சமற்றவகையில் மோதினான். மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் போர் வீரர்கள், அபிமன்யு தங்கள் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற அந்த வேளையில் அவனை {அபிமன்யுவைத்} தாக்கத் தொடங்கினர். கங்கையின் நீரோட்டம் பெருங்கடலில் கலக்கும் இடத்தில் நீர்ச்சுழி காணப்படுவதைப் போல, அங்கே {போர்க்களத்தில்} ஒரு கணம் கொந்தளிப்பு உண்டானது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு போராடும் வீரர்களிடையில் அங்கே தொடங்கிய போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் மாறியது.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கையில், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வியூகத்தைப் {சக்கரவியுகத்தைப்} பிளந்து அதற்குள் ஊடுருவினான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த {உமது படையின்} பெரும் எண்ணிக்கையிலான யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையினர், இப்படி எதிரியின் மத்தியில் ஊடுருவி வந்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகள், கொக்கரிப்புகள், அக்குள் தட்டல்கள், முழக்கங்கள், கூச்சல்கள், சிம்ம கர்ஜனைகள், “நில், காத்திரு” என்ற ஒலிகள், குழப்பமான கடுங்குரல்கள், “போகாதே, நில், என்னிடம் வா” என்ற அலறல்கள், “இவன், இதோ நான், பகைவன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட ஒலிகள், யானைகளின் பிளிறல்கள், மணிகள் மற்றும் ஆபரணங்களின் கிங்கிணியோசைகள், வெடித்த சிரிப்புகள், குதிரைக் குளம்பு மற்றும் தேரின் {தேர்ச்சக்கரங்களின்} சடசடப்பொலிகள் ஆகியவற்றுடன் [பூமியை எதிரொலிக்கும்படி செய்து கொண்டு], அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி அந்த (கௌரவப்) போர்வீரர்கள் விரைந்தனர்.

எனினும், பெரும் கர நளினமும் {லாவகமும்}, உடலின் முக்கிய அங்கங்களின் அறிவையும் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {அபிமன்யு}, முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல ஆயுதங்களை வேகமாக ஏவி, முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான். பல்வேறு விதங்களிலான கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அந்தப் போர் வீரர்கள் முற்றிலும் ஆதரவற்றவர்களாகி சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போலப் போர்க்களத்தில் அபிமன்யுவிடம் தொடர்ச்சியாக விழுந்தனர்.

பிறகு, வேள்வி ஒன்றில், புரோகிதர்கள் வேள்வி மேடையைக் குசப்புற்களால் {தர்ப்பைகளால்} பரப்புவதைப் போல, அபிமன்யு, அவர்களுடைய உடல்களையும், உடலின் உறுப்புகளையும் போர்க்களத்தில் பரப்பினான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவ்வீரர்களின் கரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தினான். அவற்றில் {அந்தக் கரங்களில்} சில உடும்புத்தோலாலான கையுறைகளையும், சில விற்களையும் கணைகளையும் கொண்டிருந்தன, சில {கரங்கள்} வாள்களையோ, கேடயங்களையோ, அங்குசங்களையோ, கடிவாளங்களையோ கொண்டிருந்தன; மேலும் சில வேல்களையும், போர்க்கோடரிகளையும் கொண்டிருந்தன. சில கதாயுதங்களையோ, இரும்பு குண்டுகளையோ {பந்துகளையோ}, ஈட்டிகளையோ கொண்டிருந்தன; சில ரிஷ்டிகளையும், கவைக்கோல்களையும், கோடரிகளையும் கொண்டிருந்தன. சில பிண்டிபாலங்களையோ {குறுங்கணைகளையோ}, பரிகங்களையோ {முள் பதிக்கப்பட்ட தண்டாயுதங்களையோ}, கணைகளையோ, கம்பனங்களையோ பிடித்திருந்தன. சில சாட்டைகளையும், மகத்தான சங்குகளையும், பராசங்களையும், கசகிரகங்களையும் கொண்டிருந்தன. சில முத்கரங்களையும், சில பிறவகை ஏவுகணைகளையும் கொண்டிருந்தன. சில சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்}, சில கனமான தண்டங்களையும், சில கற்களையும் கொண்டிருந்தன. அந்தக் கரங்கள் அனைத்தும் கைவளையங்களால் அலங்கரிக்கபட்டும், இனிமையான நறுமணப் பொருட்கள் மற்றும் தைலங்களால் பூசப்பட்டுமிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை நாகங்களைப் போலக் குருதி பூசப்பட்டிருந்த அந்தக் கரங்களின் பிரகாசத்தால் அந்தப் போர்க்களமே அழகானது.

அழகிய மூக்குகள், முகங்கள், மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பருக்களில்லாமல் அழகிய குண்டலங்களைக் கொண்ட எதிரிகளின் எண்ணற்ற தலைகளைப் பல்குனன் மகன் {அபிமன்யு} போர்க்களத்தில் பரப்பினான். கோபத்துடன் பற்களால் உதடுகளைக் கடித்திருந்ததால், அவை {அந்தத் தலைகள்} அனைத்திலும் அதிகமாக இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய மாலைகள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுச் சூரியச்சந்திரர்களுக்கு இணையான காந்தியைக் கொண்டு, தண்டை இழந்த தாமரைப் மலரைப் போல அவை {அந்தத் தலைகள்} தெரிந்தன. பல நறுமணப்பொருட்களால் மணத்துடன் இருந்த அவை, உயிரோடிருந்தவரை ஏற்புடைய நன்மையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆகாயத்தின் நீர் மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு தயாரிக்கப்பட்டவையும், முன்னிலையில் ஏர்க்கால்களையும், சிறந்த மூங்கில் சட்டங்களையும் கொண்டவையும், கொடிமரங்கள் நிறுவப்பட்டு அழகாகத் தெரிந்தவையுமான பல்வேறு தேர்கள், தங்கள் ஜங்கங்கள் {ஏர்க்காலைத் தாங்கும் அண்டை மரங்கள்}, குபரங்கள் {சக்கரங்களின் விளிம்புகள்}, நேமிகள் {ஆரக்கால்}, தசனங்கள் {சக்கரங்களில் உள்ள குடம்}, சக்கரங்கள், கொடிமரங்கள் மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றை இழந்தன. அவற்றில் இருந்த போருக்கான கருவிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. அவற்றை மறைத்த விலையுயர்ந்த விரிப்புகள் பறந்து சென்றன, அவற்றில் இருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

{இப்படி} தன் முன் வந்த அனைத்தையும் தன் கணைகளால் சிதைத்த அபிமன்யு அனைத்துப் பக்கங்களிலும் திரிவதாகத் தெரிந்தது. தன் கூரிய கணைகளால் யானை வீரர்களையும், கொடிமரங்கள், அங்குசங்கள், கொடிகள், அம்பறாத்தூணிகள், கவசங்கள், கச்சைகள், கழுத்தணிகள், விரிப்புகள், மணிகள், துதிக்கைகள், தந்தங்கள் ஆகியவற்றோடு கூடிய யானைகளையும், யானைகளைப் பின்பக்கத்தில் இருந்து பாதுகாத்த காலாட்படை வீரர்களையும் அவன் {அபிமன்யு} துண்டுகளாக வெட்டினான்.

வனாயு, மலைநாடுகள், காம்போஜம், பாஹ்லீகம் ஆகியவற்றில் பிறந்தவையும், அசைவற்ற வால்கள், காதுகள், கண்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், உறுதியானவையும், பெரும் வேகமுடையவையும், நன்கு பழக்கப்பட்டவையும், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்த சாதனைவீரர்களால் செலுத்தப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் அழகிய வால்களில் உள்ள சிறந்த ஆபரணங்களை இழந்தவையாகத் தெரிந்தன. அவை பலவற்றில் நாக்குகள் மற்றும் கண்கள் அவற்றின் இடத்தில் இருந்து தெறித்து, வெளியில் நரம்புகள் புடைத்து, ஈரல்கள் பிதுங்கியிருந்தன. அவற்றின் முதுகில் இருந்த சாரதிகள் உயிரற்று அவற்றின் பக்கத்திலேயே கிடந்தனர். அவற்றை அலங்கரித்த மணி வரிசைகள் அனைத்தும் நொறுங்கிக் கிடந்தன. இப்படிக் களத்தில் பரவிக் கிடந்த அவை {குதிரைகள்}, ராட்சசர்களுக்கும், இரைதேடும் விலங்குகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தன. கவசங்களும், (தங்கள் உடல்களை மறைக்கும்) தோலுறைகளும் பிளக்கப்பட்ட அவை கழித்த மலஜலங்களால் நனைந்திருந்தன. இப்படியே உமது படையின் குதிரைகளில் முதன்மையானவை பலவற்றைக் கொன்ற அபிமன்யு பிரகாசமாகத் தெரிந்தான்.

நினைத்தும் பார்க்க முடியாத பழங்காலத்தின் விபுவை {விஷ்ணுவைப்} போல மிகக் கடினமான சாதனையைத் தனியாக அடைந்த அபிமன்யு, பயங்கரமான அசுரப் படையை நசுக்கிய அளவிலா சக்தி கொண்ட முக்கண்ணனை (மகாதேவனைப்) போல, உமது படையின் மூன்று வகை (தேர்கள், யானைகள், குதிரைகள்) படையை நசுக்கினான். உண்மையில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியாத சாதனைகளைப் போரில் அடைந்து, உமது படையின் காலாட்படை வீரர்களின் பெரும்பிரிவை எங்கும் சிதைத்தான்.

(தேவர்ப்படைத்தலைவன்) ஸ்கந்தனால் {முருகனால்} அழிக்கப்பட்ட அசுரப்படையைப் போல, தனி ஒருவனான சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} கூரிய கணைகளால் இப்படிப் பேரழிவுக்கு உள்ளான உமது சேனையைக் கண்ட உமது வீரர்களும், உமது மகன்களும் அனைத்துப் பக்கங்களையும் வெறித்துப் பார்த்தனர். அவர்கள் வாய்கள் வரண்டன; அவர்களின் கண்கள் ஓய்வற்றவையாகின; அவர்களின் உடல்கள் வியர்வையால் மறைந்தன; அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாயிற்று. எதிரியை வீழ்த்தும் நம்பிக்கையை இழந்த அவர்கள், களத்தை விட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநாட்டினர். தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அவர்கள், ஒருவரையொருவர் பேர் சொல்லியும், குடும்பப் பெயர்களைச் சொல்லியும் அழைத்து, காயம்பட்டுக் களத்தில் கிடந்த தங்கள் மகன்கள், தந்தைமார், சகோதரர்கள், சொந்தங்கள், திருமணத்தால் உண்டான உறவினர்கள் ஆகியோரைக் கைவிட்டு, தங்கள் குதிரைகளையும், யானைகளையும் (மிக வேகமாகத்) தூண்டி தப்பி ஓட முயற்சித்தனர்” {என்றான் சஞ்சயன்}.

சல்லியனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 035-அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைக் காத்த கௌரவப் படை; அஸ்மகன் மகனைக் கொன்ற அபிமன்யு; கர்ணனை நடுங்கச்செய்தல்; மேலும் மூவரைக் கொல்வது; மற்றும் சல்லியனோடு மோதி, அவனை மயக்கமடையச் செய்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட துரியோதனன், சினத்தால் நிறைந்து, முன்னவனை {அபிமன்யுவை} எதிர்த்துத் தானே சென்றான். போரில் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி மன்னன் {துரியோதனன்} திரும்புவதைக் கண்ட துரோணர், (கௌரவப்) போர்வீரர்கள் அனைவரிடமும், “மன்னனைக் காப்பீராக. வீர அபிமன்யு, நமக்கு முன்னிலையில், தான் குறிவைக்கும் அனைவரையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்று வருகிறான். எனவே, அவனை {அபிமன்யுவை} எதிர்த்து, அச்சமில்லாமல் வேகமாக விரைந்து, குரு மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக” என்றார் {துரோணர்}.

எப்போதும் வெற்றியால் அருளப்பட்டவர்களும், நன்றியுணர்வும், வலிமையும் மிக்கவர்களுமான போர்வீரர்கள் பலர், துரியோதனனின் நன்மையைத் தங்கள் இதயத்தில் கொண்டு, அச்சத்துடன் உமது மகனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகனான பிருஹத்பலன் {சகுனியின் சகோதரன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, {சோமதத்தன் மகன்களான} பூரி மற்றும் பூரிஸ்ரவஸ், {பாஹ்லீக நாட்டு} சலன், பௌரவன், {கர்ணனின் மகன்} விருஷசேனன் ஆகியோர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அந்தக் கணை மழையின் மூலம் தடுத்தனர். அந்தக் கணை மழையின் மூலம் அவனை {அபிமன்யுவைக்} குழப்பிய அவர்கள் துரியோதனனை மீட்டனர்.

எனினும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {உணவுக்} கவளத்தைத் தன் வாயிலிருந்து பறித்தது போன்ற அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களையும், அவர்களது தேரோட்டிகள் மற்றும் குதிரைகளையும் அடர்த்தியான கணை மழையால் மறைத்து, அவர்களைப் புறமுதுகிடச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இரையைத் தேடி பசியுடன் செல்லும் சிங்கத்தைப் போன்ற அவனது {அபிமன்யுவின்} கர்ஜனையைக் கேட்டு, துரோணரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், கோபத்துடன் அதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை {அபிமன்யுவை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவன் மீது பல்வேறு விதங்களிலான கணைகளை மழையாகப் பொழிந்தனர். எனினும் உமது பேரன் {அபிமன்யு}, கூரிய கணைகளின் மூலம் அவற்றை (அவற்றில் எதுவும் தன்னை அடையும் முன்பே) ஆகாயத்திலேயே வெட்டிய பிறகு, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயலைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனின் {அபிமன்யுவின்} கணைகளின் மூலம் அவனால் இப்படித் தூண்டப்பட்ட அவர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} கொல்லவிரும்பி, புறமுதுகிடாத அவனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாகவே, அந்த (கௌரவத்) துருப்புகளெனும் கடலைத் தன் கணைகளின் மூலம் தடுத்தான். அபிமன்யுவும் அவனைச் சார்ந்தவர்களும் ஒரு புறமும், அந்த வீரர்கள் அனைவரும் ஒரு புறமும் என ஒருவரையொருவர் தாக்கி இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்களில் ஒருவரும் களத்தில் புறங்காட்டவில்லை.

கடுமையான அந்தப் பயங்கரப் போரில் துஸ்ஸகன் ஒன்பது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். துச்சாசனன் பனிரெண்டு கணைகளால் அவனைத் துளைத்தான்; சரத்வானின் மகனான கிருபர் மூன்றால் அவனைத் துளைத்தார். துரோணர், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான பதினேழு கணைகளால் அவனைத் துளைத்தார். விவிம்சதி எழுபது கணைகளாலும், கிருதவர்மன் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தனர். பூரிஸ்ரவஸ் மூன்று கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆறாலும் அவனைத் துளைத்தனர். சகுனி இரண்டாலும், மன்னன் துரியோதனன் மூன்று கணைகளாலும் அவனைத் துளைத்தனர்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்த வீர அபிமன்யு, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அபிமன்யு, அவனை அச்சுறுத்த முயன்ற உமது மகன்களின் விளைவால், சினத்தால் நிறைந்து, பண்பாலும் பயிற்சியாலும் அவன் அடைந்த அற்புத பலத்தை வெளிப்படுத்தினான். கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், கடிவாளம் பிடித்தவரின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிபவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையுமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, விரைவாக அஸ்மகனின் வாரிசைத் [1] தடுத்தான் [2]. பெரும் பலம் கொண்ட அந்த அழகிய அஸ்மகன் மகன், அவன் {அபிமன்யுவின்} முன்னிலையிலேயே நின்று, பத்து கணைகளால் அவனைத் துளைத்து, “நில், நில்” என்று சொன்னான். அபிமன்யுவோ, சிரித்துக் கொண்டே, பத்து கணைகளைக் கொண்டு, முன்னவனின் {அஸ்மகன் மகனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம், இரண்டு கரங்கள், வில், தலை ஆகியவை கீழே பூமியில் விழும்படி செய்தான். அஸ்மகர்களின் வீர அட்சியாளன் இப்படிச் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்ட பிறகு, நடுக்கமுற்ற அவனது {அஸ்மகன் மகனின்} படை களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.

பிறகு, கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, சலன், சல்லியன், பூரிஸ்ரவஸ், {துரியோதனன் தம்பி} கிராதன், சோமதத்தன், {துரியோதனன் தம்பி} விவிம்சதி, {கர்ணனின் மகன்} விருஷசேனன், சுஷேனன், குண்டபேதி, பிரதர்த்தனன், பிருந்தாரகன், லலித்தன், பிரபாகு, தீர்க்கலோசனன் {தாருக்கலோசனன்} [3], கோபம் கொண்ட துரியோதனன் ஆகியோர் அவன் {அபிமன்யு} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.அந்தப் பெரும் வில்லாளிகளின் நேரான கணைகளால் அதீதமாகத் துளைக்கப்பட்ட அபிமன்யு, கவசமனைத்தையும், உடலையும் துளைக்கவல்ல கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். கர்ணனின் கவசத்தைத் துளைத்து, பிறகு அவனது உடலையும் துளைத்த அந்தக் கணை, பிறகு எறும்புப்புற்றைத் துளைத்துச் செல்லும் பாம்பைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து முற்றிலும் ஆதரவற்றவனாக ஆனான் {மனத்தளர்ச்சியடைந்தான்}. உண்மையில் கர்ணன், நிலநடுக்கத்தின் போதான மலை ஒன்றைப் போல நடுங்கத் தொடங்கினான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு}, பெரும் கூர்மையைக் கொண்ட வேறு மூன்று கணைகளால் சுஷேனன், தீர்க்கலோசனன், குண்டபேதி ஆகிய மூன்று வீரர்களைக் கொன்றான். அதே வேளையில், (அதிர்ச்சியில் இருந்து மீண்ட) கர்ணன், இருபத்தைந்து கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அஸ்வத்தாமன் இருபதாலும், கிருதவர்மன் ஏழாலும் அவனைத் தாக்கினர். சினத்தால் நிறைந்த அந்தச் சக்ரன்மகனின் {இந்திரன் மகனான அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, கணைகளையே எங்கும் நிறைத்தபடி களத்தில் திரிந்து கொண்டிருந்தான். சுருக்குக் கயிற்றைத் {பாசத்தைத்} தரித்த யமனைப் போலவே துருப்புகள் அனைத்தும் அவனை {அபிமன்யுவை} கருதின.

பிறகு அவன் {அபிமன்யு}, தன் அருகே வர நேர்ந்த சல்லியனின் மேல் தன் கணை மழையை இறைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {அபிமன்யு} பெருமுழக்கம் முழங்கி, அதனால் உமது துருப்புகளை அச்சுறுத்தினான். அதேவேளையில், ஆயுதங்களில் சாதித்த அபிமன்யுவால் துளைக்கப்பட்டு, தன் முக்கிய அங்கங்களில் ஊடுருவிய அந்த நேரான கணைகளோடு கூடிய சல்லியன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயக்கமடைந்தான்.

சுபத்திரையின் கொண்டாடப்படும் மகனால் {அபிமன்யுவால்} இப்படித் துளைக்கப்பட்ட சல்லியனைக் கண்ட துருப்புகள் அனைத்தும், பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடின. வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் இப்படி மறைக்கப்பட்டதைக் கண்ட உமது படையினர், சிங்கத்தால் தாக்கப்பட்ட மான்கூட்டத்தை {விலங்குகளைப்} போலத் தப்பி ஓடின. போரில் (தனது வீரம் மற்றும் திறமை ஆகியவற்றுக்காகப்} புகழப்பட்டு, பிதுர்கள், தேவர்கள், சாரணர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பூமியிலுள்ள பல்வேறு வகையிலான உயிரினங்களின் கூட்டங்களால் கொண்டாடப்பட்டு, தெளிந்த நெய்யினால் ஊட்டப்பட்ட நெருப்பு {ஹோமம் செய்யப்பட்ட அக்னி} போல அந்த அபிமன்யு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

தேர்ப்படையைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 036-சல்லியனின் தம்பியைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவை அச்சுறுத்திய மத்ரர்களின் படை; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் அளித்த ஆயுதங்களை ஏவிய அபிமன்யு; புறமுதுகிட்டோடிய கௌரவர்களின் தேர்ப்படை..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, நம் வில்லாளிகளில் முதன்மையானோரை இப்படித் தன் நேரான கணைகளால் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, அவனைத் தடுக்க முயன்ற எனது படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட (கௌரவத்) தேர்ப்படைகளைப் பிளப்பதில் ஈடுபட்டவனும் இளமை நிறைந்தவனுமான {பாலகனுமான} அபிமன்யுவின் போராற்றல் குறித்துக் கேளும். சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} முடக்கப்பட்டதைக் கண்ட சல்லியனின் தம்பி, கோபத்தால் நிறைந்து, தன் கணைகளை இறைத்தபடி அபிமன்யுவை எதிர்த்து முன்னேறினான். எனினும், பெரும் கரநளினம் கொண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின்{சல்லியன் தம்பியின்} தலை, தேரோட்டி, அவனது திரிவேணு, (தேரில் உள்ள) இருக்கை, அவனது தேர்ச்சக்கரங்கள், அவனது ஏர்க்கால்கள், கணைகள், அம்பறாத்தூணி, தேர்த்தட்டு, அவனது கொடி மற்றும் அவனது தேரில் இருந்த போருக்கான பிற பொருட்கள் அனைத்தையும் தன் கணைகளின் மூலம் வெட்டினான். அவனைக் {அபிமன்யுவைக்} காண முடியாத அளவுக்கு அவனது இயக்கங்கள் மிக வேகமாக இருந்தன. போர்க்களத்தின் ரத்தினங்கள் அனைவரின் தலைவனும், முதன்மையானவனுமான அவன் {சல்லியனின் தம்பி}, வலிமைமிக்கப் புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட பெரும் மலையென உயிரை இழந்து கீழே தரையில் விழுந்தான். அவனைப் பின்தொடர்ந்தவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.

அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ந்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்ற பேரொலிகளால் அவனை உற்சாகப்படுத்தின.

சல்லியனின் தம்பி இப்படிக் கொல்லப்பட்டதும், அவனைப் பின்தொடர்ந்தவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} பலர், தங்கள் குடும்பப் பெயர்கள், வசிப்பிடங்கள் மற்றும் பெயர்களை உரக்க அறிவித்து, சினத்தால் நிறைந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தனர். சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், இன்னும் சிலர் கால்களாலும் {காலாட்படையாகவும்} சென்றனர். அவர்கள் அனைவரும் கடும்பலம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் {மத்ரப் படையினர்}, தங்கள் கணைகளின் “விஸ்” ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஆழ்ந்த முழக்கங்கள், கடுங்கூக்குரல்கள், கதறல்கள், கூச்சல்கள், சிங்க முழக்கங்கள், நாண்கயிற்றின் உரத்த நாணொலிகள், தங்கள் உள்ளங்கைத் தட்டொலிகள் ஆகியவற்றால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அச்சுறுத்தியபடியே {அவனை நோக்கி} விரைந்தனர். அவர்கள் {அபிமன்யுவிடம்}, “நீ எங்களிடம் இருந்து இன்று உயிருடன் தப்ப மாட்டாய்” என்றனர். இப்படி அவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} சொன்னதைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சிரித்துக் கொண்டே, அவர்களில் தன்னை முதலில் துளைத்தவனைத் தன் கணைகளால் துளைத்தான்.

அர்ஜுனனின் வீர மகன் {அபிமன்யு}, அழகும், பெரும் வேகமும் கொண்ட பல்வேறு ஆயுதங்களை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், வாசுதேவனும், தனஞ்சயனும் பயன்படுத்தும் அதே வழியில் வெளிப்படுத்தினான். தான் சுமக்கும் கனமான சுமையை அலட்சியம் செய்த அவன் {அபிமன்யு}, அச்சமனைத்தையும் விட்டுத் தன் கணைகளை மீண்டும் மீண்டும் ஏவினான். குறிபார்ப்பதற்கும், கணையொன்றை விடுவதற்கும் இடையில் எந்த இடைவெளியையும் {அவனிடம்} காண முடியவில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும் அவனது வில், கூதிர்காலச் சூரியனின் சுடர்மிக்க வட்டிலைப் போல வட்டமாக வளைக்கப்படுவது மட்டுமே அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {அபிமன்யுவனது} வில்லின் நாணொலி மற்றும் அவனது உள்ளங்கைத் தட்டொலி ஆகியவற்றை, இடியுடன் கூடிய மேகங்கள் முழங்கி எதிரொலிப்பதைப் போல நாங்கள் கேட்டோம். பணிவு, கோபம், மேன்மையானவர்களுக்கு மரியாதை, மிகுந்த அழகு ஆகியவற்றைக் கொண்ட அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பகைவீரர்கள் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலம் முடிந்ததும் வரும் கூதிர்காலத்தின் பகலை உண்டாக்குபவனைப் போல அவன் {அபிமன்யு}, மென்மையாகத் தொடங்கிப் பின் படிப்படியாகக் கடுமையடைந்தான். சூரியன் தன் கதிர்களை வெளியிடுவதைப் போலக் கோபத்தால் நிறைந்த அபிமன்யு, தங்கச்சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கொண்டாடப்படும் வீரன் {அபிமன்யு}, கௌரவப்படையின் தேர்ப்பிரிவை பல்வேறு விதங்களிலான கணைகளால் மறைத்தான். அதன்பேரில், இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப்படை , அபிமன்யுவின் கணைகளால் களத்தில் புறமுதுக்கிட்டோடின” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவைக் கண்டு மகிழ்ந்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 037-அபிமன்யு செய்த கடும்போர்; அபிமன்யுவைக் கண்டு கிருபரிடம் மெச்சிய துரோணர்; அபிமன்யுவைக் கொல்ல கௌரவர்களைத் தூண்டிய துரியோதனன்; அபிமன்யுவைக் கொல்லப் போவதாகச் சொன்ன துச்சாசனன்; அபிமன்யுவுக்கும் துச்சாசனனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என் மகனின் படை முழுவதையும் தனியாளாகத் தடுத்ததைக் கேட்டு, வெட்கம், மனநிறைவு ஆகிய பல்வேறு உணர்வுகளால் என் இதயம் கலங்குகிறது. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, அசுரப்படையுடன் மோதிய ஸ்கந்தனைப் {முருகனைப்} போலத் தெரியும் இளமைநிறைந்த அபிமன்யுவின் மோதலைக் குறித்து விவரமாக மீண்டும் எனக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதலை, அந்தக் கடும்போரை அது நடந்தது போலவே நான் உமக்கு உரைக்கிறேன்.

தன் தேரில் ஏறிய அபிமன்யு, எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களும், தங்கள் தேர்களில் இருந்தவர்களுமான உமது படையின் போர்வீரர்கள் மீது தன் கணைகளைப் பெரும் துணிச்சலுடன் பொழிந்தான். அவன் {அபிமன்யு}, நெருப்பு வளையம் போல வேகமாகச் சுழன்று, துரோணர், கர்ணன், கிருபர், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போஜகுலத்தின் கிருதவர்மன், பிருஹத்பலன், துரியோதனன், சோமதத்தன், வலிமைமிக்கச் சகுனி, பல்வேறு மன்னர்கள், பல்வேறு இளவரசர்கள், பல்வேறு அணிகளிலான துருப்பினர் ஆகியோரைத் {தன் கணைகளால்} துளைத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேன்மையான ஆயுதங்களின் மூலம் தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான சுபத்திரையின் வீரமகன் {அபிமன்யு}, எங்கும் இருப்பவனாகத் தெரிந்தான். அளவிலா சக்தி கொண்ட சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மீண்டும் நடுங்கின.

அப்போது பெரும் ஞானியான பரத்வாஜர் மகன் {துரோணர்}, போரில் பெரும் திறம் கொண்ட அந்தப் போர்வீரனைக் {அபிமன்யுவைக்} கண்டு, மகிழ்ச்சியால் தன் கண்களை அகல விரித்து, கிருபரிடம் வந்து, {தன் பேச்சால்} உமது மகனின் {துரியோதனனின்} உயிரையே நசுக்கத்தக்க வகையில் அவரிடம் {கிருபரிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார், “பார்த்தர்களுக்குத் தலைமையில் நிற்கும் இளமை நிறைந்த சுபத்திரை மகன் {அபிமன்யு}, தன் நண்பர்கள் அனைவருக்கும், மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோருக்கும், தன் சொந்தங்கள் அனைவருக்கும், திருமணத்தால் உண்டான உறவினர்களுக்கும், போரில் கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டும் இந்தப் போரைக் கண்டு வருபவர்களுக்கும் மகிழ்வூட்டியபடியே அதோ வருகிறான். இந்தப் போரில் அவனுக்கு {அபிமன்யுவிற்கு} நிகராக எந்த வில்லாளியையும் நான் கருதவில்லை. அவன் {அபிமன்யு} மட்டும் விரும்பினானென்றால், இந்தப் பரந்த படையையே அவனால் கொல்ல முடியும். வேறு ஏதோ காரணத்திற்காக அவன் அதை விரும்பவில்லை என்றே தெரிகிறது” என்றார் {துரோணர்}.

துரோணர், அவர் உணர்ந்த மனநிறைவை நன்கு வெளிப்படுத்தும்படி சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அபிமன்யுவிடம் கொண்ட கோபத்துடனும் லேசாகச் சிரித்தபடியும் துரோணரைப் பார்த்தான். உண்மையில் துரியோதனன், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துச்சாசனன், மத்ரர்களின் ஆட்சியாளன், உமது படையின் வலிமைமிக்கத்தேர்வீரர்கள் வேறு பலர் ஆகியோரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரான க்ஷத்திரிய குலத்தினர் அனைவரின் ஆசான் {துரோணர்}, உணர்வு மழுக்கத்தால் இந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பவில்லை. போரில் ஆசானிடம் {துரோணரிடம்} எவனும் உயிரோடு தப்ப முடியாது. ஆசானை {துரோணரை} எதிர்த்து யமனே அவரது எதிரியாக வந்தாலும் அவனும் {எமனும்} அவரிடம் தப்ப முடியாது. ஓ! நண்பர்களே, வேறு எந்த மனிதனையும் குறித்து நான் என்ன சொல்வேன்? இதை நான் உண்மையாகவே சொல்கிறேன். இவனோ அர்ஜுனன் மகனாக இருக்கிறான், அர்ஜுனனோ ஆசானின் {துரோணரின்} சீடனாக இருக்கிறான். இதற்காகவே ஆசான் {துரோணர்} இந்த இளைஞனை {சிறுவனைக்} காக்க விரும்புகிறார். சீடர்கள், மகன்கள், அவர்களது மகன்கள் {பேரர்கள்} ஆகியோர் அறம் சார்ந்தோரின் {நல்லோரின்} அன்புக்குரியவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். துரோணரால் பாதுகாக்கப்படும் இந்த இளமைநிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன்னைப் பேராண்மை கொண்டவனாகக் கருதிக் கொள்கிறான். தன்னைத் தானே உயர்வாக மதித்துக் கொள்ளும் அவன் {அபிமன்யு} மூடன் மட்டுமே. எனவே, தாமதமில்லாமல் அவனை நசுக்குவீர்களாக” என்றான் {துரியோதனன்}.

குரு மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தங்கள் எதிரியைக் கொல்ல விரும்பி, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாத்வத குலமகள் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.

குறிப்பாக, குருக்களில் புலியான துச்சாசனன், துரியோதனனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, பின்னவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலர்களின் கண்களுக்கு முன்பாகவே நான் அவனைக் கொல்வேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். சூரியனை விழுங்கும் ராகுவைப் போல, நான் இன்று சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நிச்சயமாக விழுங்குவேன்” என்று பதிலுரைத்தான் {துச்சாசனன்}.

குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} மீண்டும் உரக்கப் பேசிய துச்சாசனன், “பெரும் வீணர்களான இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான வாசுதேவனும், அர்ஜுனனும்}, என்னால் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டு, மனிதர்களின் உலகை விட்டு இறந்தோருடைய ஆவிகளின் உலகத்திற்குச் {யமலோகத்திற்குச்} செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிற மகன்களும், இரண்டு கிருஷ்ணர்களின் மரணத்தைக் கேட்டுத் தங்கள் நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து துக்கத்தால் தங்கள் உயிரை ஒரே நாளில் விடுவார்கள் என்பதும் தெளிவு. எனவே, இந்த உமது ஒரு பகைவன் {அபிமன்யு} கொல்லப்பட்டால், உமது எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. ஓ! மன்னா {துரியோதனரே}, எனக்கு நன்மையை விரும்புவீராக, இதோ நான் உமது எதிரியைக் கொல்லப் போகிறேன்” என்றான் {துச்சாசனன்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துச்சாசனன், சினத்தால் நிறைந்து, உரக்க முழங்கியபடியே சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்து கணை மழையால் அவனை {அபிமன்யுவை} மறைத்தான். பிறகு அபிமன்யு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி கோபத்துடன் முன்னேறும் உமது மகனை கூர் முனைகளைக் கொண்ட இருப்பத்தாறு கணைகளால் வரவேற்றான். எனினும், சினத்தால் நிறைந்து, மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த துச்சாசனன், அந்தப் போரில் சுபத்திரையின் மகனான அபிமன்யுவுடன் தீவிரமாகப் போரிட்டான். தேர்ப்போரில் நிபுணர்களான அவ்விருவரும், இடப்புறம் ஒருவரும், வலப்புறம் மற்றவரும் எனத் தங்கள் தேர்களில் வட்டமாகச் சுழன்று போரிட்டனர். பிறகு அந்தப் போர்வீரர்கள், தங்கள் பணவங்கள், மிருதங்கங்கள், துந்துபிக்கள், கிரகசங்கள், பெரும் ஆனகங்கள், பேரிகைகள் மற்றும் ஜர்ஜரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் சிங்க முழக்கங்களையும் கலந்து, உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலில் இருந்து எழும் ஒலியைப் போலச் செவிடாக்கும்படி ஒலியை எழுப்பினர்” {என்றான் சஞ்சயன்}.

துச்சாசனனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 038-துச்சாசனனை நிந்தித்த அபிமன்யு; துச்சாசனனைத் தாக்கி மயக்கமடையச் செய்தது; கர்ணனிடம் பேசிய துரியோதனன்; கர்ணனுக்கு அபிமன்யுவுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கர்ணனின் வில்லை அறுத்த அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த கர்ணனின் தம்பி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன் கூடியவனும், நுண்ணறிவு கொண்டவனுமான அபிமன்யு, தன் முன்பு நின்று கொண்டிருந்த தன் எதிரியான துச்சாசனனிடம் சிரித்துக் கொண்டே, “தற்புகழ்ச்சிகளை மோகத்துடன் சச்சரவு செய்பவர் எவரோ, நீதிகள் அனைத்தையும் எப்போதும் கைவிடுபர் எவரோ, குரூரருமானவர் எவரோ, அந்த வீண் வீரர் போரில் என் முன்பு நிற்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன். (குருக்களின்) சபையில், மன்னர் திருதராஷ்டிரர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, உமது கடுமுரையால் மன்னர் யுதிஷ்டிரரை நீர் கோபப்படுத்தினீர். பகடையில் மோசடியையும், சுபலன் மகனின் {சகுனியின்} திறனையும் நம்பிய நீர், வெற்றியால் பித்துப் பிடித்து, பீமரிடம் பலவாறு பிதற்றினீர். அந்தச் சிறப்புமிக்கோரின் கோபத்தினால், இறுதியாக நீர் உமது நடத்தையின் கனியை அடையப்போகிறீர். ஓ! தீய புரிதல் கொண்டவரே {துச்சாசனரே}, பிறர் உடைமைகளைத் திருடியது, கோபம், அமைதியை வெறுத்தது, பேராசை, அறியாமை, (சொந்தங்களுடன்) பகை, அநீதி, துன்புறுத்தல், கடும் வில்லாளிகளான என் தந்தைமாரின் அரசை அவர்களை இழக்கச் செய்தது மற்றும் உமது கடும் மனோ நிலை ஆகியவற்றிற்கான கனியை {பலனைத்} தாமதமில்லாமல் பெறுவீராக. 

மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்று என் கணைகளால் நான் உம்மைத் தண்டிக்கப் போகிறேன். உமக்கெதிராகக் கொண்டிருக்கும் கோபச்சுமையை இன்று நான் இறக்கி வைக்கப் போகிறேன். கோபம் கொண்ட கிருஷ்ணைக்கும் {அன்னை திரௌபதிக்கும்}, உம்மைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்திற்காக எப்போதும் ஏங்கும் என் தந்தைக்கும் {அர்ஜுனருக்கும்} நான் பட்ட கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன். ஓ! கௌரவரே {துச்சாசனரே}, பீமருக்கு நான் பட்ட கடனிலிருந்தும் இன்று நான் விடுபடுவேன். உண்மையில் போரை நீர் கைவிடவில்லையெனில், உயிரோடு என்னிடம் இருந்து தப்ப மாட்டீர்” என்றான் {அபிமன்யு}.

இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, துச்சாசனனை அடுத்த உலகத்திற்கு அனுப்பவல்லதும், யமன், அல்லது அக்னி, அல்லது வாயுத்தேவனின் காந்தியைக் கொண்டதுமான கணையொன்றை குறிபார்த்தான். துச்சாசனனின் மார்பை விரைவாக அணுகிய அந்தக் கணை, அவனது தோள்ப்பூட்டில் பாய்ந்து, எறும்புப் புற்றுக்குள் செல்லும் பாம்பைப் போல, {கணையின்} சிறகுகள் வரை அவனது உடலுக்குள் ஊடுருவியது. மேலும் விரைவாக அபிமன்யு நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், முழுமையாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான இருபத்தைந்து கணைகளால் மீண்டும் அவனைத் தாக்கினான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். இப்படிச் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் உணர்வுகளை இழந்த துச்சாசனன், அவனது தேரோட்டியால் போருக்கு மத்தியில் இருந்து வேகமாக வெளியே சுமந்து செல்லப்பட்டான்.

இதைக் கண்டவர்களான பாண்டவர்கள், திரௌபதியின் மகன்கள் ஐவர், விராடன், பாஞ்சாலர்கள், கேகயர்கள் ஆகியோர் சிங்க முழக்கம் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவத் துருப்புகள் பல்வேறு இசைக்கருவிகளை அடிக்கவும் முழக்கவும் செய்தனர். சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தனர். யமன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர் ஆகியோரின் உருவங்களைத் தங்கள் கொடிகளில் கொண்ட (ஐந்து) திரௌபதி மகன்கள், சாத்யகி, சேகிதானன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, கேகயர்கள், திருஷ்டகேது, மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் ஆகிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தீராச்சினமும், செருக்குமுடைய தங்கள் எதிரி {துச்சாசனன்} இப்படி வீழ்த்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைத் துளைக்கும் விருப்பத்துடன் வேகமாக விரைந்தனர். பிறகு, வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், புறமுதுகிடாதவர்களுமான அந்தப் போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது.

அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} பேசிய துரியோதனன், “எரிக்கும் சூரியனுக்கு ஓப்பான வீரத் துச்சாசனன், போரில் எதிரியைக் கொல்ல முயன்று இறுதியில் அபிமன்யுவுக்கு அடிபணிந்ததைப் பார். சினத்தால் தூண்டப்பட்டு வலிமைமிக்கக் கடுஞ்சிங்கங்களாகத் தெரியும் பாண்டவர்களும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பி நம்மை நோக்கி விரைகின்றனர்” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் சினங்கொண்டு, உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் மேல் கூரிய கணைகளை மழையாகப் பொழிந்தான். வீரக் கர்ணன், தன் எதிரியை {அபிமன்யுவை} அவமதிக்கும் வகையில், போர்க்களத்தில் பின்னவனை {எதிரியான அபிமன்யுவைப்} பின் தொடர்ந்து வருவரையும் பெரும் கூர்மை கொண்ட சிறந்த கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்துச் செல்ல விரும்பிய உயர் ஆன்ம அபிமன்யு, எழுபத்துமூன்று கணைகளால் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.

கௌரவப் படையின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் பீடித்துக் கொண்டிருந்தவனும், இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மகனுமான அபிமன்யு, துரோணரிடம் செல்வதைத் தடுப்பதில் உமது படையில் எந்தத் தேர்வீரனும் அந்நேரத்தில் வெல்லவில்லை. வில்லாளிகள் அனைவரிலும் பெருமதிப்புக்கு உரியவனான கர்ணன், வெற்றியடைய விரும்பி, தன் சிறந்த ஆயுதங்களை எடுத்து நூற்றுக்கணக்கான கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், {பரசு} ராமரின் வீரச் சீடனுமான அவன் {கர்ணன்}, எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாத அபிமன்யுவைத் தன் ஆயுதங்களின் மூலம் இப்படிப் பீடித்தான்.

ஆயுத மழையால் ராதையின் மகனால் {கர்ணனால்} போரில் பீடிக்கப்பட்டாலும், (ஆற்றலில்) தேவர்களையே ஒத்திருந்த அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எந்த வலியையும் உணரவில்லை. அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான தன் கணைகளைக் கொண்டு வீரப் போர்வீரர்கள் பலரின் விற்களை வெட்டி, பதிலுக்குக் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான். அபிமன்யு சிரித்துக் கொண்டே, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் கர்ணனின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளை விரைவாக வெட்டினான்.

பிறகு கர்ணன் அபிமன்யுவின் மேல் ஐந்து நேரான கணைகளை ஏவினான். எனினும், பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} அவற்றை அச்சமற்றவகையில் வரவேற்றான். பெரும் வீரமும் தீரமும் கொண்ட பின்னவன் {அபிமன்யு}, ஒரே ஒரு கணையால் கர்ணனின் வில் மற்றும் கொடிமரத்தை வெட்டி ஒரு கணத்தில் அவற்றைக் கீழே தரையில் விழச் செய்தான். இத்தகு துயரில் இருக்கும் கர்ணனைக் கண்ட அவனது தம்பி {கர்ணனின் தம்பி}, பெரும் பலத்துடன் வில்லை வளைத்துக் கொண்டு, சுபத்திரையின் மகனை எதிர்த்து வேகமாகச் சென்றான். பிறகு பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், உரக்க கர்ஜித்துத் தங்கள் இசைக்கருவிகளை முழக்கி சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} (அவனது வீரத்திற்காக} மெச்சினார்கள்” {என்றான் சஞ்சயன்}.

கர்ணனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 039-கர்ணனின் தம்பியைக் கொன்று, கர்ணனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; அபிமன்யு செய்த கடும்போர்; போர்க்களத்தின் நிலவரம் …

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உரக்க முழங்கி வந்த கர்ணனின் தம்பி [1], கையில் வில்லுடன், மீண்டும் மீண்டும் நாண் கயிற்றை இழுத்த படியே விரைவாகத் தன்னை அந்தச் சிறந்த இரு வீரர்களுக்கு மத்தியில் நிறுத்திக் கொண்டான். மேலும் அந்தக் கர்ணனின் தம்பி, சிரித்துக் கொண்டே, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அபிமன்யு தன் தந்தையை {அர்ஜுனனைப்} போலவும், பாட்டனைப் போலவும் ஏற்கெனவே அடைந்திருந்தாலும், அந்தக் கணைகளால் அவன் {அபிமன்யு} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்ட உமது படையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.-அப்போது, வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தைப் போலவோ, அடர்த்தியான மழைப்பொழிவைப் போலவோ இருந்த அபிமன்யுவின் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {யாராலும்} எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட உமது போர்வீரர்களில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தவிரப் போர்க்களத்தில் வேறு எவனும் நீடிக்கவில்லை.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் சங்கை முழக்கியபடி பாரதப் படையின் மீது வேகமாகப் பாய்ந்தான். உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் வீசப்பட்ட எரியும் கொள்ளியைப் போல, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கௌரவப் படையினூடாக விரைவாகத் திரிந்து தன் எதிரிகளை எரிக்க ஆரம்பித்தான். அவர்களின் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்}  துளைத்த அவன் {அபிமன்யு}, தன் கூரிய கணைகளால் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும், மனிதர்களையும் சிதைத்து, போர்க்களத்தைத் தலையற்ற முண்டங்களால் நிறைத்தான்.

சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட சிறந்த கணைகளால் வெட்டப்பட்ட கௌரவப் போர்வீரர்கள் தப்பி ஓடினர், அப்படி ஓடுகையில், தங்கள் முன்பு நின்ற தங்கள் தோழர்களைக் கொன்றபடியே ஓடினர். கல்லில் கூராக்கப்பட்டவையும், பயங்கர விளைவுகளை ஏற்படுத்துபவையுமான அந்த எண்ணற்றக் கடுங்கணைகள், தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றபடி களத்தில் வேகமாகப் பாய்ந்தன.

அங்கதங்களுடனும், தங்க ஆபரணங்கள் பிறவற்றுடனும் இருந்த தோள்களும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட கரங்களும், கணைகளும், விற்களும், உடல்களும், குண்டலங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் களத்தில் ஆயிரக்கணக்கில் கிடந்தன. ஆயிரக்கணக்கான உபஷ்கரங்கள் {கருவிகள்}, அதிஸ்தானங்கள் {இருக்கைப் பீடங்கள்}, நீண்ட ஏர்க்கால்கள், முறிந்த அக்ஷங்கள் {அச்சுகள்}, உடைந்த சக்கரங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றால் தடுக்கப்பட்டு, ஈட்டிகள், விற்கள், வாள்கள், விழுந்த கொடிமரங்கள், கேடயங்கள், விற்கள் ஆகியவை எங்கும் கிடக்க, கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களுடன் மிகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தப் போர்களமானது விரைவில் கடக்கப்பட முடியாததாக மாறியது.

ஒருவரை ஒருவர் அழைத்த இளவரசர்கள், அபிமன்யுவால் கொல்லப்பட்ட போது உண்டாகிய ஒலி செவிடாக்குவதாகவும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதாகவும் இருந்தது. ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகள் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தன. (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து விரைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முதன்மையான தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்றான். தன் எதிரிகளை விரைவாக எரித்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் விளையாடும் நெருப்பைப் போலப் பாரதப் படைக்கு மத்தியில் திரிவது தெரிந்தது.

நம் துருப்புகளால் சூழப்பட்டுப் புழுதியால் மறைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, களத்தில் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} எங்களில் எவராலும் அந்தப் போர் வீரனை {அபிமன்யுவைப்} பார்க்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, கிட்டத்தட்ட தொடர்ச்சியாகக் குதிரைகள், யானைகள் மற்றும் மனிதப் போர்வீரர்கள் ஆகியோரின் உயிரை எடுத்தான். அதன் பிறகு உடனே (அங்கிருந்து வெளிப்படும்) அவனை நாங்கள் கண்டோம். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும்) உச்சிவானத்துச் சூரியனைப் போல அவன் {அபிமன்யு} தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனும், வாசவனின் மகனுக்கு மகனுமான அபிமன்யு (பகைவரின்) படைக்கு மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன் ! – துரோண பர்வம் பகுதி – 040-அபிமன்யுவைப் பின்தொடர்ந்து சென்ற பாண்டவ வீரர்கள்; பாண்டவர்களைத் தடுத்த ஜெயத்ரதன்; முற்காலத்தில் ஜெயத்ரதன் செய்த தவம்; ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன்; முந்தைய வரத்தின் பலனாகப் பாண்டவர்களைப் போர்க்களத்தில் தடுத்த ஜெயத்ரதன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வயதால் வெறும் குழந்தையும் {பாலனும்}, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டவனும், தன் கரங்களின் வலிமையில் செருக்குடையவனும், போரில் சாதித்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், தன் குலத்தைத் தழைக்க வைப்பவனும், தன் உயிரைவிடத் தயாராக இருந்தவனுமான அந்த அபிமன்யு, உற்சாகமும் தீரமும் கொண்ட அவனது மூன்று வயது குதிரைகளால் சுமக்கப்பட்டுக் கௌரவப் படைக்குள் ஊடுருவிய போது, அந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} யுதிஷ்டிரப் படையின் பெரும் தேர்வீரர்கள் எவரேனும் பின்தொடர்ந்து சென்றனரா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரன், பீமசேனன், சிகண்டி, சாத்யகி, இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவன், திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், கேகயன்{ர்கள்}, திருஷ்டகேது ஆகியோர் அனைவரும், மத்ஸ்ய வீரர்களும் கோபத்தால் நிறைந்து போருக்கு விரைந்தனர். உண்மையில், எதிரிகளைத் தாக்குபவர்களான அபிமன்யுவின் தந்தைமாரும், தாய்மாமன்களும், அபிமன்யுவைக் காக்க விரும்பி, போருக்காக அணிவகுத்து, அவன் {அபிமன்யு, வியூகத்தைப் பிளந்து} உண்டாக்கிய அதே பாதையில் சென்றனர். அவ்வீரர்கள் விரைந்து வருவதைக் கண்ட உமது துருப்புகள் போரில் இருந்து பின்வாங்கின.

அப்போது, பெரும் சக்தி கொண்ட உமது மருமகன் {ஜெயத்ரதன்}, போரில் இருந்து உமது அந்தப் பெரும்படை திரும்புவதைக் கண்டு, அவர்களை அணிதிரட்டுவதற்காக விரைந்தான். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தங்கள் மகனைக் காக்க விரும்பிய பார்த்தர்களையும், அவர்களைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான். கடுமையானவனும், பெரும் வில்லாளியுமான அந்த விருத்தக்ஷத்திரன் மகன் {ஜெயத்ரதன்}, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்து, பள்ளத்தாக்கில் விளையாடும் யானையைப் போலப் பாண்டவர்களைத் தடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, தங்கள் மகனைக் காக்க விரும்பிய கோபக்காரப் பாண்டவர்களைத் தனி ஒருவனாகத் தடுத்து நின்ற சிந்துக்களின் ஆட்சியாளன் மீது கனமான சுமை ஏற்றப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சிந்துக்கள் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} வலிமையும், வீரமும் மிக அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றலையும், அவன் அந்த முதன்மையான அருஞ்செயல்களை எப்படிச் சாதித்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக. அவன் {ஜெயத்ரதன்}, கோபத்தால் தூண்டப்பட்டிருந்த பாண்டவர்களைத் தடுப்பதில் வென்றது எதன் விளைவாக? அவன் என்ன தானங்களைச் செய்தான்? என்ன நீர்க்காணிக்கைகளை ஊற்றினான் {என்ன ஆகுதி செய்தான்}? என்ன வேள்விகளைச் செய்தான்? என்ன தவத்துறவுகளை மேற்கொண்டான்? [1]” என்று கேட்டான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஜெயத்ரதன், திரௌபதியை அவமதித்த நிகழ்வின் போது, பீமசேனனால் அவன் வீழ்த்தப்பட்டான். தான் பட்ட அவமானத்தை ஆழமாக உணர்ந்த அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, ஒரு வரத்தை விரும்பி கடும் தவத்தைச் செய்தான். புலன்களுக்கு விருப்பமான பொருட்களில் இருந்து அவற்றை {புலன்களை} விலக்கி, பசி, தாகம் மற்றும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்ட அவன் {ஜெயத்ரதன்}, புடைக்கும் நரம்புகள் தெரியும்வண்ணம் தன் உடலைக் குறைத்தான். வேதங்களின் அழியாத வார்த்தைகளை உச்சரித்த அவன் {ஜெயத்ரதன்}, தெய்வமான மகாதேவனுக்கு {சிவனுக்குத்} தன் வழிபாட்டைச் செலுத்தினான். தன்னை வழிபடுவோரிடம் {தன் பக்தர்களிடம்} எப்போதும் கருணை கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, இறுதியாக அவனிடம் {ஜெயத்ரதனிடம்} அன்புகூர்ந்தான்.

உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கனவில் தோன்றிய ஹரன் {சிவன்}, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ! ஜெயத்ரதா, நான் உன்னிடம் மனம்நிறைந்தேன். நீ எதை விரும்புகிறாய்?” என்று கேட்டான். மஹாதேவனால் {சிவனால்} இப்படிக் கேட்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், கூப்பிய கரங்களுடனும், ஒடுங்கிய ஆன்மாவுடனும் அவனை {சிவனைப்} பணிந்து, “தனித்தேரில் ஒருவனாக இருக்கும் நான், பயங்கர சக்தியும் ஆற்றலும் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் போரில் தடுக்க வேண்டும்” என்று கேட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவன் கேட்ட வரம் இதுவேயாகும்.

இப்படி வேண்டப்பட்டதும், ஜெயத்ரதனிடம் அந்த முதன்மையான தேவன் {சிவன்}, “ஓ! இனியவனே, நான் {அந்த} வரத்தை அளிக்கிறேன். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் போரில் நீ தடுப்பாய் [2]” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} சொன்ன ஜெயத்ரதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு தன் குறைத்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.தான் பெற்ற வரம் மற்றும் தன் தெய்வீக ஆயுதங்களின் பலம் ஆகியவற்றின் விளைவாக, அந்த ஜெயத்ரதன், தனியொருவனாகவே, பாண்டவர்களின் மொத்தப்படையையும் தடுத்து நிறுத்தினான். அவனது நாண்கயிற்றின் நாணொலியும், உள்ளங்கைகளின் தட்டொலியும் {தலத்வனியும்} பகைவரின் படையில் அச்சத்தைத் தோற்றுவித்த அதே வேளையில், உமது துருப்புகளை மகிழ்ச்சியில் நிறைத்தன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்றுக் கொண்ட சுமையைக் கண்ட (குரு படையின்) க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் யுதிஷ்டிரனின் படை இருந்த இடத்திற்கு உரத்த ஆரவாரத்துடன் விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}. 

உடைந்த வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்! – துரோண பர்வம் பகுதி – 041-ஜெயத்ரதனின் அற்றல் குறித்து விவரித்த சஞ்சயன்; ஜெயத்ரதனோடு மோதிய யுதிஷ்டிரனும் பீமனும்; அபிமன்யுவால் பிளக்கப்பட்ட வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} ஆற்றலைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். அவன் {ஜெயத்ரதன்} பாண்டவர்களோடு எவ்வாறு போரிட்டான் என்பதை விவரிக்கிறேன் கேளும். நன்கு பழக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையும், தேரோட்டியின் கட்டளைகளுக்குக் கீழ்படிபவையும் சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான பெரிய குதிரைகள் (அச்சந்தர்ப்பத்தில்} அவனைச் சுமந்தன. முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த அவனது தேர், ஆகாயத்தின் நீர் மாளிகையை {மேகத்தைப்} போலத் தெரிந்தது. வெள்ளியிலான பெரிய பன்றியின் உருவத்தைத் தாங்கியிருந்த அவனது கொடிமரம் மிக அழகாகத் தெரிந்தது. அரசக் குறியீடுகளான வெண் குடை, கொடிகள், அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} விசிறுவதற்காகப் பயன்பட்ட காட்டெருதின் வால்கள் {சாமரங்கள்} ஆகியவற்றோடு அவன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான அவனது தேர்க்கூடு முத்துக்களாலும், வைரங்களாலும், ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் ஒளிக்கோள்கள் போல அது பிரகாசாமாகத் தெரிந்தது.

தன் பெரிய வில்லை வளைத்து எண்ணற்ற கணைகளை இறைத்த அவன் {ஜெயத்ரதன்}, எங்கெல்லாம் அர்ஜுனன் மகன் {அபிமன்யு} அந்த வியூகத்தில் {சக்கரவியூகத்தில்} பிளவுகளை {திறப்புகளை} உண்டாக்கினானோ, அந்த இடங்களை மீண்டும் அடைத்தான். அவன் {ஜெயத்ரதன்}, மூன்று கணைகளால் சாத்யகியையும், விருகோதரனை {பீமனை} எட்டாலும் துளைத்தான்; திருஷ்டத்யும்னனை அறுபது கணைகளால் துளைத்த அவன், கூரிய கணைகள் ஐந்தால் துருபதனையும், பத்தால் சிகண்டியையும் துளைத்தான். இருபது கணைகளால் கைகேயர்களைத் துளைத்த ஜெயத்ரதன், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான். மேலும் எழுபது கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அடர்த்தியான கணை மழையால் பாண்டவப் படையின் பிற வீரர்களைத் துளைத்தான். அவனது {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் வில்லைக் குறிபார்த்த தர்மனின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, நன்கு கடினமாகப்பட்ட பளபளக்கும் கணையொன்றால் அஃதை அறுத்தான். எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பார்த்தனை (யுதிஷ்டிரனைப்) பத்து கணைகளால் துளைத்து, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.

ஜெயத்ரன் வெளிப்படுத்திய கரநளினத்தைக் குறித்துக் கொண்ட பீமன், மூன்று பல்லங்களால் அவனது {ஜெயத்ரதனது} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். பிறகு மற்றொரு வில்லை எடுத்த வலிமைமிக்க ஜெயத்ரதன், அதில் நாணேற்றி பீமனின் கொடிமரம், வில் மற்றும் குதிரைகளை வீழ்த்தினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வில்லறுந்த பீமசேனன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, மலையின் உச்சிக்குக் குதித்து ஏறும் சிங்கத்தைப் போல, சாத்யகியின் தேரில் ஏறினான்.

இதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சியால் நிறைந்தன. அவர்கள், “நன்று! நன்று” என்று உரக்க முழங்கினார்கள். மேலும் அவர்கள் சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயலை மீண்டும் மீண்டும் மெச்சினார்கள். உண்மையில், சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தனி ஒருவனாகத் தடுத்த அவனது அந்த அருஞ்செயலை உயிர்களனைத்தும் உயர்வாக மெச்சின.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எண்ணற்ற போர்வீரர்களையும் யானைகளையும் கொன்று பாண்டவர்களுக்காக ஏற்படுத்திய பாதை, சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} நிரப்பப்பட்டது {அடைக்கப்பட்டது}. உண்மையில், வீரர்களான மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், பாண்டவர்கள் ஆகியோர் தீவிரமாக முயன்று ஜெயத்ரதனின் முன்னிலையை அடைந்தாலும், அவர்கள் ஒருவராலும் அவனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற உமது எதிரிகளில் ஒவ்வொருவரும், (மகாதேவனிடம்) பெற்ற வரத்தின் விளைவால் சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

வசாதீயனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 042-தேரோட்டியைக் கொன்று விருஷசேனனைக் களத்தை விட்டு விரட்டிய அபிமன்யு; வசாதீயனைக் கொன்றது; கௌரவ வீரர்களை மூர்க்கமாகத் தாக்கி களத்தை உயிரற்ற சடலங்களாலும் போர்க்கருவிகளாலும் நிறைத்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெற்றியை விரும்பிய பாண்டவர்களைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தடுத்தபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது அச்சந்தரும் வகையில் இருந்தது. வெல்லப்பட முடியாதவனும், இலக்கில் துல்லியம், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்டவனுமான அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரத்தைப் போலக் (கௌரவ) வியூகத்திற்குள் {சக்கரவியூகத்திற்குள} ஊடுருவி அதைக் கலங்கடித்தான். எதிரிகளைத் தண்டிப்பவனும், தன் கணை மழையால் இப்படிப் பகைவரின் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்தவனுமான சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை}, கௌரவப் படையின் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தரத்துக்கும், முன்னுரிமைக்கும் தக்கபடி {வரிசை முறைப்படி} எதிர்த்து விரைந்தனர்.

பெரும் பலத்துடன் தங்கள் கணை மழையை இறைத்த அந்த அளவிலா சக்தி கொண்டவர்கள் ஒரு புறமும், தனியனான அபிமன்யு ஒருபுறமும் என நடந்த அந்த மோதல் அச்சந்தருவதாகவே இருந்தது. தேர்க்கூட்டங்களுடன் கூடிய அவ்வெதிரிகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {கர்ணன் மகனான} விருஷசேனனின் தேரோட்டியைக் கொன்று, அவனது வில்லையும் அறுத்தான். பிறகு, வலிமைமிக்க அந்த அபிமன்யு தன் நேரான கணைகளால் விருஷசேனனின்  குதிரைகளைத் துளைத்தான். காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், இதனால், போர்க்களத்திற்கு வெளியே விருஷசேனனைச் சுமந்து சென்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அபிமன்யுவின் தேரோட்டி, அந்த நெருக்கமான போரில் இருந்து, களத்தின் வேறு பகுதிக்குக் கொண்டு சென்று அவனது தேரை விடுவித்துக் கொண்டான். (இந்த அருஞ்செயலைக்) கண்ட எண்ணற்ற தேர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து “நன்று! நன்று!” என்றனர்.

சிங்கத்தைப் போன்ற அபிமன்யு, தன் கணைகளால் எதிரிகளைக் கோபத்துடன் கொல்வதைக் கண்ட வசாதீயன் {வஸாதீயன்} [1], தூரத்தில் இருந்து முன்னேறி வந்து, பெரும்பலத்துடன் அவன் மீது வேகமாகப் பாய்ந்தான். பின்னவன் {வசாதீயன்}, தங்கச் சிறகுகள் கொண்ட அறுபது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்து, அவனிடம் {வசாதீயன் அபிமன்யுவிடம்}, “நான் உயிரோடு உள்ளவரை, உன்னால் உயிருடன் தப்ப முடியாது” என்றான். அவன் {வசாதீயன்} இரும்புக் கவசத்தை அணிந்திருந்தாலும், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}  நீண்ட தூரம் செல்லும் கணை ஒன்றால் அவனது மார்பைத் துளைத்தான். அதன் பேரில் வசாதீயன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} வசாதீயன் கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியக் காளையர் பலர், கோபத்தால் நிறைந்து, உமது பேரனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், பல்வேறு விதங்களிலான தங்கள் எண்ணற்ற விற்களை வளைத்தபடியே அவனை அணுகினர். அதன் பிறகு, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.

கோபத்தால் நிறைந்த பல்குனன் மகன் {அபிமன்யு}, அவர்களின் விற்கள், கணைகள், அவர்களது உடலின் பல்வேறு அங்கங்கள், குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தலைகள் ஆகியவற்றை வெட்டி வீழ்த்தினான்.

பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், வாள்கள், பரிகங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டவையும், தோல் கையுறைகள் அணிந்த விரல்களுடன் கூடியவையுமான {வீரர்களின்} கரங்கள் வெட்டப்பட்டு அங்கே காணப்பட்டது. மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், விழுந்திருக்கும் கொடிமரங்கள், கவசங்கள், கேடயங்கள, தங்க ஆரங்கள், கிரீடங்கள், குடைகள், சாமரங்கள், உபஷ்கரங்கள் {பிற கருவிகள்}, அதிஸ்தானங்கள் {தேர்வீரர் அமரும் பீடங்கள்}, தண்டகங்கள் {ஏர்க்கால்கள்}, வந்தூரங்கள் {தேரோட்டி அமரும் பீடங்கள்}, நொறுக்கப்பட்ட அக்ஷங்கள் {அச்சுக்கள்}, ஆயிரக்கணக்கில் உடைந்து கிடந்த சக்கரங்கள் மற்றும் நுகத்தடிகள், அனுகரஷங்கள் {அண்டைமரங்கள்}, கொடிகள், தேரோட்டிகள், குதிரைகள், உடைக்கப்பட்ட தேர்கள், கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை பூமியில் பரவிக் கிடந்தன.

வெற்றியில் உள்ள விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவர்களும், (உயிரோடு இருந்த போது) வீரத்துடன் கூடிய க்ஷத்திரியர்களுமான பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு {அவர்களின் உடல்களால்} பரவிக் கிடந்த போர்க்களமானது அச்சந்தரும் காட்சியை அளித்தது.

அபிமன்யு கோபத்துடன் போர்க்களத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்த போது, அவனது வடிவமே காணப்படாமல் போனது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது கவசம், அவனது ஆபரணங்கள், வில், கணைகள் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. உண்மையில், அவன் தன் கணைகளால் பகை வீரர்களைக் கொன்று வருகையில், அவர்களுக்கு மத்தியில் சூரியனைப் போலச் சுடர்மிகும் பிரகாசத்துட்ன இருந்த அவனை, எவராலும் தங்கள் கண்களால் காண முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}

அபிமன்யுவிடம் புறமுதுகிட்ட துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 043-சத்தியசிரசைப் பீடித்த அபிமன்யு; அபிமன்யுவை நோக்கி விரைந்த ருக்மரதன்; அபிமன்யுவைப் பீடித்த ருக்மரதனின் நண்பர்கள்; நூற்றுக்கணக்கான இளவரசர்களைக் கொன்ற அபிமன்யு; அச்சத்தால் நிறைந்து அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன் புறமுதுகிட வேண்டிவந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துணிவுமிக்க வீரர்களின் உயிரை எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அண்ட அழிவின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களின் உயிரையும் எடுக்கும் யமனுக்கு ஒப்பானவனாக இருந்தான். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்ட சக்ரனின் மகனுக்கு மகனான அந்த வலிமைமிக்க அபிமன்யு, கௌரவப் படையைக் கலங்கடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படைக்குள் ஊடுருவியவனும், யமனுக்கு ஒப்பானவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை அழிப்பவனுமான அவன் {அபிமன்யு}, சீற்றமிக்கப் புலியொன்று மானொன்றைப் பிடிப்பதைப் போலச் சத்தியசிரவசைப் பிடித்தான். சத்தியசிரவஸ் [1] அவனால் {அபிமன்யுவால்} பிடிக்கப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.உண்மையில், க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள், பகையுணர்வின் காரணமாக, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, “நான் முதலில் செல்கிறேன், நான் முதலில் செல்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை நோக்கி விரைந்தனர். கடலில் உள்ள திமிங்கலம் ஒன்று சிறுமீன்களின் கூட்டத்தை மிக எளிமையாகப் பிடிப்பதைப் போலவே, அபிமன்யுவும் விரைந்துவரும் அந்த க்ஷத்திரியர்களின் மொத்த படையணியையும் வரவேற்றான் {எதிர்த்தான்}. கடலை அடையும் நதிகள் திரும்பாததைப் போலவே, பின்வாங்காத அந்த க்ஷத்திரியர்களில் எவரும் அபிமன்யுவை அடைந்த பிறகு திரும்பவில்லை. வலிமைமிக்கச் சூறாவளியில் அகப்பட்டு, பலமான காற்றால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் தூக்கி வீசப்படும் (படகு குழுவினருடன்) படகைப் போல அந்தப் படை சுழன்றது.

அப்போது, மத்ரர்கள் ஆட்சியாளனுடைய {சல்லியனின்} மகனான வலிமைமிக்க ருக்மரதன், பீதியடைந்த துருப்புகளுக்கு நம்பிக்கையளிப்பதற்காக அச்சமற்ற வகையில், “வீரர்களே, அஞ்சாதீர்! நான் இங்கிருக்கும்போது, அபிமன்யுவினால் என்ன {செய்ய முடியும்}? இவனை நான் உயிருடன் பிடிப்பேன் என்பதில் ஐயங்கொள்ளாதீர்” என்றான். இவ்வார்த்தைகளைக் சொன்ன அந்த வீர இளவரசன் {ருக்மரதன்}, நன்கு தயாரிக்கப்பட்ட தன் அழகான தேரால் சுமக்கப்பட்டு அபிமன்யுவை நோக்கி விரைந்தான். மூன்று கணைகளால் அபிமன்யுவின் மார்பையும், மூன்றால் வலது கரத்தையும், மேலும் மூன்றால் இடது கரத்தையும் துளைத்த அவன் பெருமுழக்கம் முழங்கினான். எனினும் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ}, அவனது {ருக்மரதனின்} வில்லையும், அவனது வலது மற்றும் இடது கரங்களையும், அழகான கண்களும், புருவங்களும் கூடிய அவனது {ருக்மரதனது} தலையையும் விரைவாகப் பூமியில் வீழ்த்தினான்.

தன் எதிரியை {அபிமன்யுவை} எரிக்கவோ, உயிருடன் பிடிக்கவோ சபதம் செய்திருந்தவனும், சல்லியனின் மதிப்பு மிக்க மகனுமான அந்த ருக்மரதன், சுபத்திரையின் சிறப்புமிக்க மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டதைக் கண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களும் போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களும், சல்லியன் மகனின் {ருக்மரதனின்} நண்பர்களுமான இளவரசர்கள் பலர் {அபிமன்யுவை எதிர்த்துப்} போரிட வந்தனர். முழுதாக ஆறு முழம் நீளமுள்ள தங்கள் விற்களை வளைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்த படி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

தனியாக இருப்பவனும், துணிவுமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்}, இளமையும், பலமும், பயிற்சியால் அடையப்பட்ட திறனும், வீரமும் கொண்ட அந்தக் கோபக்கார இளவரசர்கள் அனைவரும் மோதி கணைகளின் மழையால் அவனை மறைப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற ஒரு விருந்தினன் என்றே அபிமன்யுவைக் கருதினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே, அந்த இளவரசர்கள், பல்வேறு வடிவங்களும், பெரும் வேகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட தங்கள் கணைகளின் மூலம் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} காண முடியாதபடி செய்தனர் {மறைத்தனர்}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனையும் {அபிமன்யுவையும்}, அவனது கொடிமரத்தையும், அவனது தேரையும் வெட்டுக்கிளிகள் நிறைந்த மரங்களைப் போலக் கண்டோம் [2].ஆழத்துளைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, அங்குசத்தால் தாக்கப்பட்ட யானை ஒன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு அவன் {அபிமன்யு}, காந்தர்வ ஆயுதத்தையும், அதன் தொடர்ச்சியான மாயையையும் {காந்தர்வாஸ்திரத்தையும், ரதம் சம்பந்தமான மாயையையும்} பயன்படுத்தினான். தவத்துறவுகள் பயின்ற அர்ஜுனன், அந்த ஆயுதத்தைக் கந்தர்வனான தும்புருவிடம் இருந்தும், {கந்தர்வர்கள்} பிறரிடம் இருந்தும் {தும்புரு முதலான கந்தர்வர்களிடம் இருந்து} அடைந்திருந்தான். அபிமன்யு, இப்போது அந்த ஆயுதத்தைக் கொண்டே தன் எதிரிகளைக் குழப்பினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களை விரைவாக வெளிப்படுத்திய அவன் {அபிமன்யு}, அந்தப் போரில் நெருப்பு வளையம் போலச் சுழன்று, சில நேரங்களில் தனி நபராகவும், சில நேரங்களில் நூற்றுக்கணக்கானோராகவும், சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோராகவும் காட்சியளித்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களுடைய விளைவின் மூலம் உண்டான மாயைக் கொண்டு வழிநடத்தப்பட்ட தன் தேரின் திறமையால் தன் எதிரிகளைக் குழப்பிய அவன் {அபிமன்யு}, (தன்னை எதிர்த்த) மன்னர்களின் உடல்களை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனது {அபிமன்யுவனது} கூரிய கணைகளின் விளைவால், உயிரினங்களின் உயிர்கள் வாங்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் உடல்கள் கீழே பூமியில் விழுகையில், அவை {உயிர்கள்} மறு உலகத்தை அடைந்தன.

அவர்களின் விற்கள், குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், தலைகள் ஆகியவற்றைப் பல்குனன் மகன் {அபிமன்யு} தன் கூரிய கணைகளால் அறுத்தான். ஐந்து வயதான மாமரங்களைக் கொண்ட {மாமரத்} தோப்பு ஒன்று, சரியாகக் கனி தாங்கும் சமயத்தில் (புயலால்) வீழ்த்தப்படுவதைப் போல, அந்த நூறு இளவரசர்களும் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொன்று வீழ்த்தப்பட்டனர்.

அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டவர்களும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவர்களும் இளமைநிறைந்தவர்களுமான அவ்விளவரசர்கள் அனைவரும் தனி ஒருவனான அபிமன்யுவால் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன் அச்சத்தால் நிறைந்தான். (தன்) தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் நொறுக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்துடன் அபிமன்யுவை எதிர்த்து வேகமாகச் சென்றான். அவர்களுக்கிடையில் குறுகிய காலமே நீடித்த அந்த முடிக்கப்படாத போர் மிக உக்கிரமடைந்தது. பிறகு, அபிமன்யுவின் கணைகளால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} போரில் இருந்து புறமுதுகிட வேண்டியிருந்தது” {என்றான் சஞ்சயன்} [3].

லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 044-அபிமன்யுவை எதிர்த்த எட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிய அபிமன்யு; துரியோதனனையும், துரியோதனன் மகனையும் சேர்த்து பத்து வீரர்களாக அபிமன்யுவைத் தாக்கிய கௌரவர்கள்; துரியோதனன் மகன் லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவைச் சூழ்ந்த கொண்ட ஆறு வீரர்கள்; அவர்களை வீழ்த்தி ஜெயத்ரதனிடம் சென்ற அபிமன்யு; அபிமன்யுவைத் தடுத்த கிராதன்; அபிமன்யுவால் கொல்லப்பட்ட கிராதனின் மகன்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, {தனி} ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரமான கடும்போரைக் குறித்தும், சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} ஆற்றலைச் சொல்லும் நிகழ்வான அந்தச் சிறப்புமிக்கவனின் வெற்றியைக் குறித்தும் நீ எவற்றைச் சொல்கிறாயோ, அவை மிக அற்புதமானதெனவும், கிட்டத்தட்ட நம்பமுடியாததெனவும் நீ எனக்குச் சொல்கிறாய். எனினும், நீதியை {அறத்தைத்} தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வழக்கில், அவற்றை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக நான் கருதவில்லை. நூறு இளவரசர்கள் கொல்லப்பட்டு, துரியோதனன் அடித்து விரட்டப்பட்ட பிறகு, சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்கு} எதிராக என் படையைச் சேர்ந்த போர்வீரர்கள் என்ன வழியை மேற்கொண்டனர்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் வாய்கள் உலர்ந்தன; கண்கள் ஓய்வற்றதாகின {சஞ்சலமடைந்தன}; அவர்களது உடலை வியர்வை மூடியது; அவர்களின் மயிர்கள் சில்லிட்டு நின்றன {அவர்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது}. தங்கள் எதிரியை வீழ்த்துவதில் நம்பிக்கையிழந்த அவர்கள் களத்தை விட்டு ஓடத் தயாரானார்கள். காயம்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், நண்பர்கள், திருமணத்தால் ஏற்பட்ட உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரைக் கைவிட்டுத் தங்கள் குதிரைகளையும் யானைகளையும் மிக வேகமாகச் செலுத்தி தப்பி ஓடினர்.

அவர்கள் பிளக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், கிருபர், துரியோதனன், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகன் (சகுனி) ஆகியோர் வெற்றி கொள்ளப்பட முடியாத சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து பெரும் கோபத்துடன் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே உமது பேரனால் {அபிமன்யுவால்} தாக்கப்பட்டு, விரட்டப்பட்டனர்.

ஆடம்பரத்தில் வளர்ந்தவனும், கணைகளில் சாதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனுபவமின்மை மற்றும் செருக்கின் விளைவால் அச்சமற்றவனாக இருந்தவனுமான லக்ஷ்மணன் மட்டுமே, தனி ஒரு வீரனாக அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அப்போது எதிர்த்துச் சென்றான். தன் மகனைக் {லக்ஷ்மணனைக்} குறித்துக் கவலைப்பட்ட அவனது தந்தை (துரியோதனன்) அவனைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் திரும்பினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிறரும் துரியோதனனைப் பின்தொடர்வதற்காகத் திரும்பினர். பிறகு, அவர்கள் அனைவரும், மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையால் அபிமன்யுவை நனைத்தனர். எனினும், அபிமன்யு, தன்னந்தனியாகவே, அனைத்துத் திசைகளிலும் வீசும் உலர்ந்த காற்று, கூடியிருக்கும் மேகங்களின் திரள்களை அழிப்பதைப் போல அவர்களை நசுக்கத் தொடங்கினான்.

சினங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையோடு மோதுவதைப் போலவே அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் அழகு கொண்டவனும், பெரும் துணிவு கொண்டவனும், தன் தந்தையின் அருகே வளைக்கப்பட்ட வில்லுடன் நின்றவனும், அனைத்து ஆடம்பரங்களுடனும் வளர்க்கப்பட்டவனும், யக்ஷர்களின் இரண்டாவது இளவரசனுக்கு {குபேரனின் மகனுக்கு} ஒப்பானவனும், வெல்லப்பட முடியாதவனுமான உமது பேரன் லக்ஷ்மணனுடன் மோதினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, லக்ஷ்மணனோடு மோதித் தன் கூரிய கணைகளால் அவனது கரங்கள் இரண்டையும் மார்பையும் தாக்கினான்.

உமது பேரனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தடியால்) தாக்கப்பட்ட பாம்பைப் போலச் சினத்தால் நிறைந்து, உமது (மற்றொரு) பேரனிடம் {லக்ஷ்மணனிடம்} “விரைவில் அடுத்த உலகத்திற்குச் செல்லவிருப்பதால், நீ இவ்வுலகை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. உன் சொந்தங்களின் பார்வைக்கு முன்பாகவே, நான் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, இப்படிச் சொல்லிவிட்டு, அப்போதுதான் சட்டை உரித்து வந்த பாம்புக்கு ஒப்பான ஒரு பல்லத்தை எடுத்தான். அபிமன்யுவின் கரங்களால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, அழகிய மூக்கு, அழகிய புருவங்கள், அழகாகத் தெரியும் சுருள் முடி ஆகியவற்றைக் கொண்டவனும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுவனுமான லக்ஷ்மணனின் அழகிய தலையைத் துண்டித்தது. லக்ஷ்மணன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சலிட்டன.

தன் அன்புக்குரிய மகன் கொல்லப்பட்டதால் துரியோதனன் சினத்தால் நிறைந்தான். க்ஷத்திரியர்களில் காளையான அவன் {துரியோதனன்}, “இவனைக் கொல்வீர்” என உரக்கச் சொல்லி, தனக்குக் கீழிருந்த க்ஷத்திரியர்களைத் தூண்டினான். பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் ஆகிய ஆறு வீரர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைக் கூரிய கணைகளால் துளைத்துத் தன்னிடம் இருந்து விரட்டிய {அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்த} அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனின் பரந்த படையின் மேல் பெரும் வேகத்துடனும் மூர்க்கத்துடனும் பாய்ந்தான்.

அதன்பேரில், கவசமணிந்தவர்களான கலிங்கர்கள், நிஷாதர்கள், கிராதனின் வீர மகன் [1] ஆகியோர் தங்கள் யானைப் படையின் மூலம் அவனது பாதையைத் தடுத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அதன்பிறகு, பல்குனன் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அந்த வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மூர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஆகாயத்தில் திரண்டிருக்கும் மேகக்கூட்டங்களை அனைத்துத் திசையிலும் செல்லும் காற்றானது அழிப்பதைப் போல அந்த யானைப் படையை அழிக்கத் தொடங்கினான்.அப்போது அந்தக் கிராதன் {கிராதன் மகன்}, கணைகளின் மழையால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதேவேளையில், துரோணர் தலைமையிலான பிற தேர்வீரர்களும் களத்திற்குத் திரும்பி கூர்மையும் வலிமையும் மிக்க ஆயுதங்களை இறைத்தபடி அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் கணைகளால் தடுத்த அர்ஜுனன் மகன், தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்தோடு ஏவப்பட்ட தடையற்ற கணைகளின் மழையால் கிராதனின் மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

பின்னவனின் {கிராதன் மகனின்} வில், கணைகள், தோள்வளைகள், ஆயுதங்கள், கிரீடத்துடன் கூடிய தலை, குடை, கொடிமரம், தேரோட்டி, குதிரைகள் ஆகிய அனைத்தையும் அபிமன்யு வெட்டி வீழ்த்தினான். உன்னதப் பரம்பரை, நன்னடத்தை, சாத்திர அறிவு, பெரும் பலம், புகழ், ஆயுத பலம் ஆகியவற்றைக் கொண்ட அந்தக் கிராதனின் மகன் கொல்லப்பட்ட போது, வீரப் போராளிகள் பிறரில் கிட்டத்தட்ட அனைவரும் போரைவிட்டுத் திரும்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.

பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 045-அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஆறுவீரர்கள்; ஜெயத்ரதன் தலைமையில் யுதிஷ்டிரனை எதிர்த்த கௌரவவீரர்கள்; பிருந்தாரகனைக் கொன்ற அபிமன்யு; தன்னைச் சூழ்ந்து கொண்ட ஆறு வீரர்களையும் தாக்கியது; கோசல மன்னன் பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவனும், போரில் புறமுதுகிடாதவனுமான அந்த இளமைநிறைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மூன்று வயதே ஆன பெரும் பலம் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, நமது வியூகத்தைப் பிளந்த பின்பு, வெளிப்படையாக ஆகாயத்தில் நடப்பவன் போலத் தன் பரம்பரைக்குத் தகுந்த சாதனைகளை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்ட என்படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டு குலத்தின் அபிமன்யு, நம் வியூகத்தில் ஊடுருவிய பிறகு, தன் கூரிய கணைகளால் மன்னர்கள் அனைவரையும் போரில் இருந்து புறமுதுகிடச் செய்தான். அப்போது, துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், கர்ணன் ஆகிய ஆறு வீரர்களும் அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். உமது படையின் மற்ற போராளிகளைப் பொறுத்தவரை, (பாண்டவர்களைத் தடுக்கும்) கனமான சுமையை ஏற்றுக் கொண்ட ஜெயத்ரதனைக் கண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை ஆதரிப்பதற்காக யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்களில் பலர், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்ட தங்கள் விற்களை வளைத்தபடி, மழைத்தாரைகளைக் கொட்டுவதைப் போலச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணை மழையைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கல்வியின் அனைத்துக்கிளைகளையும் அறிந்த அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தன் கணைகளாலேயே முடக்கினான்.

அவன் {அபிமன்யு}, ஐம்பது கணைகளால் துரோணரையும், இருபதால் பிருஹத்பலனையும் துளைத்தான். எண்பது கணைகளால் கிருதவர்மனையும், அறுபதால் கிருபரையும் அவன் துளைத்தான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளும், பெரும் வேகமும் கொண்டவையுமான பத்து கணைகளால் அஸ்வத்தாமனைத் துளைத்தான். மேலும், அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிரகாசமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், பெரும் சக்தி கொண்டதுமான கர்ணி {சிறகுகளைக் கொண்ட கணை} ஒன்றால் தன் எதிரிகளின் மத்தியில் இருந்த கர்ணனுடைய காதுகளில் ஒன்றைத் [1] துளைத்தான். கிருபரின் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளையும், அவரது பார்ஷினி தேரோட்டிகளையும் வீழ்த்திய அபிமன்யு, பத்து கணைகளால் கிருபரின் நடுமார்பைத் துளைத்தான்.பிறகு வலிமைமிக்க அந்த அபிமன்யு, உமது வீர மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் புகழை அதிகரிப்பவனும், துணிவுமிக்கவனுமான பிருந்தாரகனைக் [2] கொன்றான். இப்படி அபிமன்யு, அவனது எதிரிகளில் முதன்மையான வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அச்சமற்ற வகையில் கொன்று வரும்போது, துரோணரின் மகனான அஸ்வத்தாமன் இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {குறுங்கணைகளால்} அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தார்தராஷ்டிரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கூர்மையாக்கப்பட்ட கணைகளால் அஸ்வத்தாமனை பதிலுக்கு விரைவாகத் துளைத்தான். எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பெரும் வேகமுடைய மிகக் கூர்மையான அறுபது கடுங்கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தாலும், பின்னவன் {அபிமன்யு} மைநாக மலையைப் போல அசையாமல் நின்றதால் அவனை நடுங்கச் செய்வதில் தோல்வியுற்றான். பெரும் சக்தியும் வலிமையும் கொண்ட அபிமன்யு, தங்கச் சிறகுகளைக் கொண்ட நேரான எழுபத்து மூன்று கணைகளால் தன் எதிராளியை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான்.அப்போது, தன் மகனைக் காக்கவிரும்பிய துரோணர், நூறு கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தார். அஸ்வத்தாமன், தன் தந்தையைக் காக்க விரும்பி அறுபது கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். இருபத்திரண்டு பல்லங்களால் கர்ணன் அவனைத் துளைத்தான். பதினான்கால் கிருதவர்மன் அவனைத் துளைத்தான். அது போன்ற ஐம்பது கணைகளால் பிருஹத்பலன் அவனைத் துளைத்தான். சரத்வானின் மகனான கிருபரோ பத்து கணைகளால் துளைத்தார். எனினும், அபிமன்யு, அவர்கள் ஒவ்வொரையும் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தான்.

கோசலத்தின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்} ஒரு கர்ணியால் அபிமன்யுவை அவனது மார்பில் அடித்தான். எனினும் அபிமன்யுவோ, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம், வில் மற்றும் தேரோட்டியை விரைவாகப் பூமியில் சாய்த்தான். இப்படித் தன் தேரை இழந்த அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அபிமன்யுவின் அழகிய தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க விரும்பி ஒரு வாளை எடுத்தான். அப்போது அபிமன்யு, கோசலர்களின் ஆட்சியாளனான மன்னன் பிருஹத்பலனின் மார்பை ஒரு பலமான கணையால் துளைத்தான். இதனால் பின்னவன் {பிருஹத்பலன்} இதயம் பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். இதைக் கண்டு, அணிவகுப்புப் பிளக்கப்பட்ட சிறப்புமிக்க மன்னர்கள் பத்தாயிரம் பேர் தப்பி ஓடினர். வாள்கள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த அம்மன்னர்கள், (மன்னன் துரியோதனனின் விருப்பத்திற்கு) மாறான {அமங்கலமான} வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடினர். இப்படிப் பிருஹத்பலனைக் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மழையைப் போன்ற அடர்த்தியான தன் கணை மழையால் உமது வீரர்களான அந்தப் பெரும் வில்லாளிகளை முடக்கியபடி போரில் திரிந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.

தேரை இழந்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 046-கௌரவ வீரர்கள் பலரைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவிடம் இருந்து துச்சாசனன் மகனைக் காத்த அஸ்வத்தாமன்; துரோணருடன் கர்ணன் செய்த ஆலோசனை; வில், தேர், வாள், கேடயம் ஆகியவற்றை இழந்த அபிமன்யு, தேர்ச்சக்கரத்துடன் துரோணரிடம் விரைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பல்குனன் மகன் {அபிமன்யு}, கர்ணனின் காதை [1] மீண்டும் ஒரு கர்ணியால் துளைத்து, மேலும் அவனைக் {கர்ணனைக்} கோபமூட்டும் வகையில் ஐம்பது பிற கணைகளால் அவனைத் துளைத்தான். ராதையின் மகனும் {கர்ணனும்} பதிலுக்குப் பல கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அம்புகளால் முழுவதும் மறைக்கப்பட்ட அபிமன்யு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மிக அழகாகத் தெரிந்தான். சினத்தால் நிறைந்த அவன் {அபிமன்யு} கர்ணனைக் குருதியில் குளிக்க வைத்தான். கணைகளால் சிதைக்கப்பட்டுக் குருதியால் மறைக்கப்பட்டிருந்த துணிவுமிக்கக் கர்ணனும் மிகவும் பிரகாசித்தான். கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்திருந்த அவ்விரு சிறப்புமிக்க வீரர்களும், மலர்ந்திருக்கும் இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல இருந்தனர்.

பிறகு, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவர்களான கர்ணனின் துணிச்சல் மிக்க ஆலோசகர்கள் அறுவரை, அவர்களது குதிரைகள், தேரோட்டி மற்றும் தேர்கள் ஆகியவற்றோடு சேர்த்துக் கொன்றான். பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அபிமன்யு, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அச்சமற்றவகையில் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

அடுத்ததாக மகதர்களின் ஆட்சியாளனுடைய மகனைக் கொன்ற அபிமன்யு, நேரான ஆறு கணைகளால் இளமைநிறைந்த அஸ்வகேதுவை அவனது நான்கு குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு சேர்த்துக் கொன்றான் [2]. பிறகு, யானைப் பொறிக்கப்பட்ட கொடி கொண்டவனும், போஜ இளவரசனுமான மார்த்திகாவதனை {மார்த்திகாவதகனை} க்ஷுரப்ரம் ஒன்றினால் கொன்ற அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை இறைத்தபடியே உரத்த ஆரவாரம் செய்தான். அப்போது துச்சாசனன் மகன் [3], நான்கு கணைகளால் அபிமன்யுவின் நான்கு குதிரைகளையும், ஒன்றால் தேரோட்டியையும், பத்து கணைகளால் அபிமன்யுவையும் துளைத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வேகமான பத்து கணைகளால் துச்சாசனன் மகனைத் துளைத்து, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனிடம் உரத்த குரலில், “உன் தந்தை {துச்சாசனன்} போரைக் கைவிட்டு கோழையைப் போல ஓடினார். போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிந்திருப்பது நன்றே. எனினும், நீ இன்று உயிருடன் தப்பமாட்டாய்” என்றான் {அபிமன்யு}.இதைச் சொன்ன அபிமன்யு, கொல்லன் கையால் பளபளப்பாக்கப்பட்ட நாராசம் {நீண்ட கணை} ஒன்றை, எதிரியின் {துச்சாசனன் மகன்} மீது ஏவினான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அந்தக் கணையைத் தன் கணைகள் மூன்றைக் கொண்டு அறுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அஸ்வத்தாமனை விட்டுவிட்டுச் சல்லியனைத் தாக்கினான். அவனோ {சல்லியனோ} பதிலுக்கு அச்சமற்றவகையில், கழுகிறகுகள் கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {அபிமன்யுவை} மார்பில் துளைத்தான் [4]. இந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, சல்லியனின் வில்லை அறுத்து, அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். மேலும் அபிமன்யு, முழுவதும் இரும்பாலான அறுபது கணைகளால் சல்லியனையும் துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {சல்லியன்}, குதிரைகளற்ற தன் தேரைவிட்டுவிட்டு மற்றொரு தேரில் ஏறினான்.பிறகு அபிமன்யு, போர்வீரர்களான சத்ருஞ்சயன், சந்திரகேது, மகாமேகன் {மேகவேகன்}, சுவர்ச்சஸ், சூர்யபாசன் ஆகிய ஐவரைக் கொன்றான். பிறகு அவன் சுபலனின் மகனையும் {சகுனியையும்} துளைத்தான். அபிமன்யுவை மூன்று கணைகளால் துளைத்த பின்னவன் {சகுனி}, துரியோதனனிடம், “நாம் அனைவரும் சேர்ந்து இவனை நொறுக்குவோம், இல்லையெனில், தனியாகவே இவன் நம் அனைவரையும் கொன்றுவிடுவான். ஓ! மன்னா {துரியோதனா}, துரோணர், கிருபர் மற்றும் பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு இவனைக் கொல்லும் வழி குறித்துச் சிந்திப்பாயாக” என்றான் {சகுனி}.

விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன், துரோணரிடம், “அபிமன்யு எங்கள் அனைவரையும் நொறுக்குகிறான். அவனைக் கொல்லும் வழியை எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணர், அவர்கள் அனைவரிடமும், “விழிப்புணர்வுடன் அவனைக் கவனித்ததில், உங்களில் எவராலும் அந்த இளைஞனிடம் {அபிமன்யுவிடம்} எந்தக் குறையையும் {தவறையும்} கண்டுபிடிக்க முடிந்ததா? அவன் {அபிமன்யு} அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருக்கிறான். இருப்பினும், உங்களில் எவராலும் அவனிடம் ஒரு சின்ன ஓட்டையையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? மனிதர்களில் சிங்கமான இந்த அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கர நளினத்தையும், நகர்வு வேகத்தையும் பாருங்கள். அவனது தேர்த்தடத்தில், வட்டமாக வளைக்கப்பட்ட அவனுடைய வில்லை மட்டுமே காண முடிகிறது, அவ்வளவு விரைவாக அவன் தன் கணைகளைக் குறிப் பார்க்கிறான், அவ்வளவு வேகமாக அவன் அவற்றை ஏவுகிறான்.

பகைவீரர்களைக் கொல்பவனான இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் என் உயிர் மூச்சையே பீடித்துப் பிரம்மிக்கச் செய்தாலும், உண்மையில், அவன் என்னை மனம்நிறையச் செய்கிறான். கோபத்தால் நிறைந்தவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கூட, அவனிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, போர்க்களத்தில் திரிந்து கொண்டிருக்கும் இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என்னைப் பெரிதும் மனம் நிறையச் செய்கிறான். காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்}, போரில் தன் வலிமைமிக்கக் கணைகளால் அடிவானத்தின் புள்ளிகள் அனைத்தையும் நிரப்பிப் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தும் இவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை” என்றார் {துரோணர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் துரோணரிடம் மீண்டும் ஒருமுறை, “அபிமன்யுவின் கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் நான், (ஒரு போர் வீரனாக) இங்கு நிற்க வேண்டும் என்பதற்காகவே போரில் நிற்கிறேன். உண்மையில், பெரும் சக்தி கொண்ட இவனது கணைகள் மிக மூர்க்கமானவையாக இருக்கின்றன. நெருப்பின் சக்தியைக் கொண்ட இந்தப் பயங்கரமான கணைகள் என் இதயத்தைப் பலவீனப்படுத்துகின்றன” என்றான் {கர்ணன்}.

பிறகு ஆசான் {துரோணர்}, புன்னகையுடன், மெதுவாகக் கர்ணனிடம், “அபிமன்யு இளைஞன், அவன் ஆற்றல் பெரியதே. அவனது கவசமோ ஊடுருவப்பட முடியாததாக {பிளக்கப்பட முடியாததாக} இருக்கிறது. தற்காப்புக்காகக் கவசம் அணியும் முறையை, இவனது தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} நான் புகட்டியிருக்கிறேன். பகை நகரங்களை அடிபணியச் செய்யும் இவன் {அபிமன்யு}, (கவசமணியும்) மொத்த அறிவியலையும் {சாத்திரத்தையும்} நிச்சயமாக அறிந்திருக்கிறான். எனினும், நன்றாக ஏவப்படும் கணைகளால், அவனது வில்லையும், நாண்கயிற்றையும், குதிரைகளின் கடிவாளங்களையும், குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் நீ வெட்டலாம். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னால் முடியும் என்றால் நீ இதைச் செய்யலாம். (இவ்வழிகளால்) அவனைப் போரிலிருந்து புறங்காட்டச் செய்த பிறகு {பின்னாலிருந்து} [5] அவனைத் தாக்கலாம். கையில் வில்லுடன் கூடிய அவனைத் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் வீழ்த்த முடியாது. நீ விரும்பினால் அவனைத் தேரையும், வில்லையும் இழக்கச் செய்வாயாக” என்றார் {துரோணர்}.ஆசானின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, பெரும் சுறுசுறுப்புடன் {கணைகளை} ஏவிக் கொண்டிருந்த அபிமன்யுவின் வில்லை {அவன் பார்க்காத போது பின்புறத்தில் இருந்து} [6], தன் கணைகளால் விரைவாக வெட்டினான். போஜ குலத்தைச் சேர்ந்தவன் (கிருதவர்மன்} [7], அவனது குதிரைகளைக் கொன்றான், கிருபரோ அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரைக் கொன்றார். பிறரோ, அவன் {அபிமன்யு} தன் வில்லை இழந்த பிறகு, அவன் மேல் தங்கள் கணை மழையைப் பொழிந்தனர்.வேகம் மிக அவசியமாகத் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்தோடு போரிட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள் அறுவரும், அவர்களோடு தனி ஒருவனாகப் போராடிக் கொண்டு, கவனமற்று இருந்த அந்த இளைஞனை {அபிமன்யுவைத்} தங்கள் கணை மாரியால் விரைவாக மறைத்தனர். வில்லற்றவனாக, தேரற்றவனாக இருப்பினும், (போர்வீரனாகத்) தன் கடமையில் கண்கொண்ட அழகிய அபிமன்யு, ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு வானத்தில் குதித்தான். அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் பலத்தையும், பெரும் சுறுசுறுப்பையும் காட்டிக் கொண்டு, கௌசிகம் என்று அழைக்கப்பட்ட நடையையும், பிறவற்றையும் {பிற நடைகளையும்} விளக்கிக் கொண்டு, சிறகு படைத்த உயிரினங்களின் இளவரசனை {கருடனைப்} போல வானத்தில் மூர்க்கமாகத் திரிந்தான் [8].அபிமன்யுவின் {சிறு} தாமதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த வலிமைமிக்க வில்லாளிகள், “கையில் வாளோடு என் மீது இவன் பாயப் போகிறான்” என்ற எண்ணத்தோடு, தங்கள் பார்வையை மேலே செலுத்தியபடியே, அந்தப் போரில் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.

வலிமையும், சக்தியும் கொண்டவரும், எதிரிகளை வெல்பவருமான துரோணர் ஒரு கூரிய கணையைக் கொண்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் வாள் கைப்பிடியை விரைவாக அறுத்தார். ராதையின் மகனான கர்ணன், கூரிய கணைகளால் அவனது அற்புத கேடயத்தை அறுத்தான். இப்படித் தன் வாளையும் கேடயத்தையும் இழந்த அவன், பலமான உடல் உறுப்புகளுடனே ஆகாயத்தில் இருந்து கீழே பூமிக்கு வந்தான். பிறகு ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்ட அவன் {அபிமன்யு}, கோபத்துடன் துரோணரை எதிர்த்து விரைந்தான். தேர்ச்சக்கரங்களில் உள்ள புழுதியால் பிரகாசித்த உடலுடன், உயர்த்தப்பட்ட தன் கரங்களில் தேர்ச்சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, (சக்கரத்துன் கூடிய) வாசுதேவனைப் போலவே மிக அழகாகத் தெரிந்த அந்த அபிமன்யு, சிறிது நேரத்திலேயே அந்தப் போரில் பயங்கர மூர்க்கமாக மாறினான். (அவனது காயங்களில் இருந்து) வடிந்த குருதியால் நனைந்த தன் ஆடைகளுடன், சுருக்கமற்ற புருவங்களுடன், சிங்க முழக்கம் முழங்கியவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான தலைவன் அபிமன்யு, அந்தப் போர்க்களத்தில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

அதர்மமாகக் கொல்லப்பட்ட வீர அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 047-அபிமன்யு கொண்டிருந்த சக்கரம் உடைக்கப்பட்டது; கதாயுதத்துடன் போராடிய அபிமன்யு; அஸ்வத்தாமனின் குதிரைகளையும், தேரோட்டிகளையும் கொன்ற அபிமன்யு; சகுனியின் மகன் காளிகேயனைக் கொன்ற அபிமன்யு; துச்சாசனன் மகனின் தேரை நொறுக்கி குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவுக்கும், துச்சாசனன் மகனுக்கும் இடையில் நடைபெற்ற கதாயுத்தம்; களைத்துப் போயிருந்த அபிமன்யுவைக் கொன்ற துச்சாசனன் மகன்; அநீதியை உணர்த்திய அசரீரி; படையைத் தூண்டிய யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விஷ்ணுவின் தங்கைக்கு {சுபத்திரைக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனும், விஷ்ணுவின் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவனுமான {விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தைப் போன்று, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனுமான} அந்த அதிரதன் {பெரும் தேர் வீரன் அபிமன்யு}, போர்க்களத்தில் மிக அழகாகத் தெரிந்தான், மேலும் அவன் இரண்டாவது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} போலவே தெரிந்தான். மயிர் நுனிகள் காற்றில் ஆட, அந்த உயர்ந்த ஆயுதத்தைக் {தேர்ச்சக்கரத்தைக்} கையில் உயர்த்தியபடி இருந்த அவனது {அபிமன்யுவின்} உடல், தேவர்களே கூடப் பார்க்க முடியாததாக {பிரகாசமாக} இருந்தது. கையில் சக்கரத்துடன் கூடிய அவனைக் கண்ட மன்னர்கள், கவலையால் நிறைந்து அந்தச் சக்கரத்தை நூறு துண்டுகளாக வெட்டிப் போட்டனர் [1].பிறகு, பெரும் தேர்வீரனான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான். எதிரிகளால், தன் வில், தேர், வாள் ஆகியவற்றை இழந்து, அவர்களாலேயே தனது சக்கரத்தையும் இழந்தவனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு (கையில் கதாயுதத்துடன்) அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தான்.

சுடர்மிக்க வஜ்ரத்தைப் போன்று தெரிந்த அந்த உயர்த்தப்பட்ட கதாயுதத்தைக் கண்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், தன் தேரில் இருந்து வேகமாக இறங்கி, (அபிமன்யுவைத் தவிர்ப்பதற்காக) மூன்று (நீண்ட) எட்டுகளை {நடை அடிகளை} வைத்தான். அஸ்வத்தாமனின் குதிரைகளையும், பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் அந்தக் கதாயுதத்தால் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, ஒரு முள்ளம்பன்றியைப் போலக் காட்சியளித்தான். பிறகு அந்த வீரன் {அபிமன்யு}, சுபலனின் மகனான காளிகேயனை பூமியில் அழுத்தி {கொன்று}, அவனைப் பின்தொடர்ந்து வந்த எழுபத்தேழு காந்தார வீரர்களையும் கொன்றான். அடுத்ததாக அவன் {அபிமன்யு}, பிரம்ம வசாதீய குலத்தைச் சேர்ந்த பத்து தேர்வீரர்களையும், அதன் பிறகு பத்து பெரிய யானைகளையும் கொன்றான்.

அடுத்ததாகத் துச்சாசனன் மகனின் தேரை நோக்கிச் சென்ற அவன் {அபிமன்யு}, அவனது தேரை நொறுக்கி, குதிரைகளையும் பூமியில் நசுக்கினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் அந்த வெல்லப்பட முடியாத மகன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்யுவை நோக்கி “நில், நில்” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும் உயர்த்தப்பட்ட கதாயுதங்களுடன், பழங்காலத்தின் முக்கண்ணனையும் (மகாதேவனையும்), (அசுரன்) அந்தகனையும் போல, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், தங்கள் கதாயுத நுனிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இந்திரனை மகிழ்விக்க எழுப்பட்ட இரண்டு கொடிமரங்கள் விழுவதைப் போலப் பூமியில் விழுந்தனர்.

குருக்களின் புகழை மேம்படுத்துபவனான அந்தத் துச்சாசனன் மகன்[2], முதலில் எழுந்து, எழும்பும் நிலையில் இருந்த அபிமன்யுவின் உச்சந்தலையில் தன் கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியின் பலத்தால் நிலை குலைந்ததாலும், இதுவரை அவன் அடைந்திருந்த களைப்பினாலும், பகைவரின் படையினரைக் கொல்லும் அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான். தடாகத்தில் உள்ள தாமரைத் தண்டுகளை யானையொன்று கலங்கடிப்பது போல, மொத்த படையையும் கலங்கடித்த ஒருவன் {அபிமன்யு}, இப்படியே, அந்தப் போரில் பலரால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டுக் களத்தில் கிடந்த அந்த வீர அபிமன்யு, வேடர்களால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலத் தெரிந்தான். பிறகு, உமது துருப்பினர் விழுந்த அந்த வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர்.கோடை காலத்தில் முழுக் காட்டையும் எரித்துவிட்டுத் வெப்பம் தணிந்த நெருப்பைப் போலவோ, மலையின் முகடுகளை நொறுக்கிவிட்டுச் சீற்றம் தணிந்த புயலைப் போலவோ, பாரதப் படையை வெப்பத்தால் எரித்துவிட்டு, மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்திருக்கும் சூரியனைப் போலவோ, ராகுவால் விழுங்கப்பட்ட சோமனை {சந்திரனைப்} போலவோ, நீர் வற்றிப் போன பெருங்கடலைப் போலவோ அவன் {அபிமன்யு} தெரிந்தான். முழு நிலவின் காந்தியுடன் கூடிய முகத்தைக் கொண்டவனும், அண்டங்காக்கையின் இறகுகளைப் போன்ற கருப்புநிற இமை மயிர்களின் விளைவால் அழகிய கண்களைக் கொண்டவனுமான அபிமன்யு, வெறுந்தரையில் விழுந்து கிடப்பதைக் கண்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் முழங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவ வீரர்களின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்த அதே வேளையில், உமது துருப்பினர் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைந்தனர்.

ஆகாயத்தில் இருந்து விழுந்த நிலவைப் போலக் களத்தில் கிடக்கும் வீர அபிமன்யுவைக் கண்ட பல்வேறு உயிரினங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்தபடியே, “ஐயோ, இவன் {அபிமன்யு} தனி ஒருவனாகப் போரிடுகையில், துரோணராலும், கர்ணனாலும் தலைமை தாங்கப்பட்ட தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரால் கொல்லப்பட்டுக் களத்தில் கிடக்கிறானே. நாங்கள் காணும் இந்தச் செயல் அநீதியானதே {அறமன்று}” என்றன. அவ்வீரன் கொல்லப்பட்டதும், நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயம் நிலவுடன் இருப்பதைப் போலப் பூமியானது மிகப் பிரகாசமாக இருந்தது. உண்மையில், பூமியானது இரத்த அலைகளால் மறைக்கப்பட்டுத் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் விரவி கிடந்தது.

குண்டலங்களாலும், பெரும் மதிப்புமிக்கப் பல்வேறு தலைப்பாகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட வீரர்களின் அழகிய தலைகள், கொடிகள், சாமரங்கள், அழகிய விரிப்புகள், ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட பெரும் திறன்வாய்ந்த ஆயுதங்கள், தேர்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளின் பிரகாசமான ஆபரணங்கள், சட்டையுரிந்த பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான கூரிய வாள்கள், விற்கள், உடைந்த ஈட்டிகள், ரிஷ்டிகள், வேல்கள், கம்பனங்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் பரவிக் கிடந்த அவள் {பூமி} அழகிய வடிவத்தை ஏற்றாள்.

சுபத்திரையின் மகனால் வீழ்த்தப்பட்டு, உயிரையிழந்தோ, உயிரையிழக்கும் தருவாயிலோ தங்கள் சாரதிகளுடன் இரத்தத்தில் புரண்டு கிடந்த குதிரைகளின் விளைவாகப் பல இடங்களில் பூமி கடக்க முடியாததாக இருந்தது. கவசங்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்கள் தரித்தவையும், மலைகளைப் போன்றவையுமான யானைகள், இரும்பு அங்குசங்களாலும், கணைகளாலும் நொறுக்கப்பட்டுக் கிடக்க, குதிரைகள், தேரோட்டிகள், தேர்வீரர்கள் ஆகியோரை இழந்த சிறந்த தேர்கள், யானைகளால் நசுக்கப்பட்டுப் பரவிக் கிடக்க, பூமியானது கலக்கப்பட்ட தடாகங்களைப் போலத் தெரிய, பல்வேறு ஆயுதங்களைத் தரித்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் தரையில் இறந்து கிடக்க, அந்தப் போர்க்களமானது பயங்கரத் தோற்றத்தை ஏற்று, மருண்டோரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது. சூரியனைப் போன்றோ, நிலவைப் போன்றோ பிரகாசமான அபிமன்யு தரையில் கிடப்பதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைத்தன, அதே வேளையில் பாண்டவர்கள் துயரால் நிறைந்தனர்.

பாலகனே ஆன இளமை நிறைந்த அபிமன்யு வீழ்ந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படையணிகள் தப்பி ஓடின. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வீழ்ந்ததும் பிளந்து ஓடிய தன் படையைக் கண்ட யுதிஷ்டிரன், துணிவுமிக்கத் தன் வீரர்களிடம், “போரில் பின்வாங்காது உயிரை இழந்த வீர அபிமன்யு நிச்சயம் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். எனவே நில்லுங்கள், அஞ்சாதீர், நாம் நம் எதிரிகளை வீழ்த்துவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பெரும் சக்தியும், பெரும் காந்தியும் கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், துயரில் இருந்த தன் வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களது திகைப்பை அகற்ற முயன்றான். மன்னன் {யுதிஷ்டிரன் தொடர்ந்தான்}, “போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பகை இளவரசர்களை முதலில் கொன்று, அதன் பிறகே அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன் உயிரை விட்டான். கோசல மன்னனின் பத்தாயிரம் வீரர்களைக் கொன்றவனும், கிருஷ்ணனையோ, அர்ஜுனனையோ போன்றவனுமான அபிமன்யு நிச்சயம் இந்திரனின் உலகத்திற்குச் சென்றிருப்பான். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகளை ஆயிரக்கணக்கில் கொன்ற அவன் {அபிமன்யு}, தான் செய்ததில் மனம் நிறையவேயில்லை. எனவே, அவனைப் போலவே புண்ணியமிக்கச் செயல்களை நாம் செய்ய வேண்டுமேயன்றி, நிச்சயம் அவனுக்காக வருந்தக் கூடாது. நீதிமான்களின் பிரகாசமான உலகங்களுக்கும், புண்ணியச் செயல்களால் மனிதர்கள் அடையும் உலகங்களுக்குமே அவன் சென்றிருக்கிறான்” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.

பயங்கரப் போர்க்களம்! – துரோண பர்வம் பகுதி – 048-அபிமன்யு இறந்ததும் படைகள் பாசறைக்குத் திரும்பியது; போர்க்களத்தின் வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் {பாண்டவர்களின்} முதன்மையான வீரர்களில் ஒருவனை {அபிமன்யுவை} இப்படிக் கொன்ற பிறகு, அவர்களின் கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த நாங்கள், குருதியில் நனைந்தபடியே மாலை வேளையில் எங்கள் பாசறைக்குத் திரும்பினோம். எதிரியால் உறுதியாக வெறித்துப் பார்க்கப்பட்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் இழப்பை அடைந்து, கிட்டத்தட்ட நினைவுகளை இழக்கும் தருவாயில் போர்க்களத்தைவிட்டு மெல்ல வெளியேறினோம். அப்போது பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட அற்புதமான நேரமும் வந்தது. நரிகளின் அமங்கலமான ஊளைகளையும் நாங்கள் கேட்டோம்.

மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்த சூரியன், தாமரை இதழ்களைப் போன்ற வெளிர் சிவப்பு நிறத்தில் கீழே அடிவானத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவன் {சூரியன்}, எங்கள் வாள்கள், கணைகள், ரிஷ்டிகள், தேரின் வரூதங்கள், கேடயங்கள் மற்றும் ஆபரணங்களில் இருந்த காந்தியையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டான். ஆகாயத்தையும், பூமியையும் ஒரே நிறம் கொள்ளச் செய்த சூரியன் தனக்குப் பிடித்தமான நெருப்பின் வடிவத்தை ஏற்றான் {அக்னி ஸ்வரூபமான சரீரத்தை அடைந்தான்}.

தங்கள் முதுகில் இருந்த கொடிமரங்கள், அங்குசங்கள் மற்றும் பாகர்கள் விழுந்து கிடக்க, இடியால் பிளக்கப்பட்ட மேகமுடி கொண்ட மலைமுகடுகளைப் போல, உயிரை இழந்து கிடந்த எண்ணற்ற யானைகளின் அசைவற்ற உடல்கள் போர்களமெங்கும் பரவிக் கிடந்தன. தங்கள் வீரர்கள், தேரோட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவை நசுங்கி, உடைந்து, கிழிந்து போய்த் துண்டுகளாக நொறுங்கிக் கிடக்கும் பெருந்தேர்களுடன் பூமியானது அழகாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெருந்தேர்கள், எதிரியின் கணைகளால் தங்கள் உயிர்களை இழந்த உயிரினங்களைப் போலத் தெரிந்தன.

விலையுயர்ந்த பொறிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான விரிப்புகளுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் மற்றும் சாரதிகள் தங்கள் கண்கள், பற்கள், நரம்புகள், நாக்கு ஆகியன தங்கள் இடங்களில் இருந்து பிதுங்கி உயிரற்றுக் கிடந்ததால் அந்தப் போர்க்களம் கொடூரமான பயங்கரத் தன்மையை அடைந்தது. விலையுயர்ந்த கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த மனிதர்கள், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் விரிப்புகளுக்குத் தாங்கள் தகுந்தோரெனினும், கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் உடைந்த தேர்களுடன் முற்றிலும் ஆதரவற்றோராக வெறுந்தரையில் கிடந்தனர்.

அந்தப் போர்க்களத்தில் நாய்கள், நரிகள், காக்கைகள், கொக்குகள், ஊனுண்ணும் பிற பறவைகள், ஓநாய்கள், கழுதைப்புலிகள், அண்டங்காக்கைகள், உணவைக் குடிக்கும் பிற உயிரினங்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து ராட்சசர்கள், பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள் ஆகியன, பிணங்களின் தோலைக் கிழித்து, அவற்றின் கொழுப்பையும், இரத்தத்தையும், மஜ்ஜையையும் குடித்து, அவற்றின் இறைச்சியை உண்ணத் தொடங்கின. மேலும் அவை, அழுகிய பிணங்களின் சுரப்புகளை உறிஞ்சத் தொடங்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான சடலங்களை இழுத்துச் சென்ற ராட்சசர்கள் கொடூரமாகச் சிரித்துக் கொண்டே உரக்கப் பாடினர்.

முதன்மையான தேர்வீரர்களால், வைதரணீயைப் போலக் கடப்பதற்குக் கடினமான பயங்கர நதியொன்று அங்கே உண்டாக்கப்பட்டது. அதன் நீர் (விழுந்த உயிரினங்களின்) குருதியால் அமைந்தது. தேர்கள் அதன் தெப்பங்களாகின, யானைகள் அதன் பாறைகளாகின, மனிதர்களின் தலைகள் அதன் சிறு கற்களாகின. (கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள், மனிதர்கள் ஆகியோரின்) சதைகள் அதன் சேறானது. பல்வேறு விதங்களிலான விலையுயர்ந்த ஆயுதங்கள் (அந்த ஆற்றில் மிதக்கவோ, அதன் கரைகளில் கிடக்கவோ செய்யும்) மலர் மாலைகளாகின. இறந்தோரின் உலங்கங்களுக்கு உயிரினங்களை இழுத்துச் செல்லும் அந்தப் பயங்கர ஆறானது போர்க்களத்தின் நடுவில் மூர்க்கமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

வெறுப்பூட்டும் பயங்கரத் தோற்றங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள், அந்த ஓடையில் குடித்தும், உண்டும் மகிழ்ந்தன. அதே உணவை உண்ட நாய்கள், நரிகள் மற்றும் ஊனுண்ணும் பறவைகள் ஆகியன, {மற்ற} உயிரினங்களின் அச்சத்தைத் தூண்டும் வகையில் தங்கள் பெரும் களியாட்டத்தை அங்கே நிகழ்த்தின.

மனிதச் சடலங்கள் எழுந்து நடனமாடத் தொடங்கும் இடமும், யமனுடைய ஆட்சிப்பகுதியைப் பெருகச் செய்வதும், இப்படிப் பயங்கரமாகக் காட்சயளிப்பதுமான அந்தப் போர்க்களத்தை வெறித்துப் பார்த்தப் போர்வீரர்கள், விலையுயர்ந்த தன் ஆபரணங்கள் சிதறிக்கிடக்க, தெளிந்த நெய்யால் மேலும் நனைக்கப்படாத பீடத்தில் உள்ள வேள்வி நெருப்பைப் போலக் களத்தில் கிடப்பவனும், சக்ரனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யுவைக் கண்டவாறே அதைவிட்டு {போர்க்களத்தைவிட்டு} மெதுவாக வெளியேறினர்” {என்றான் சஞ்சயன்}.

பதிமூன்றாம் நாள் போர் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading