ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-ஸ்ரீ துரோணாபிஷேக பர்வம்-பதினோராம் நாள் போர்-

கர்ணனை நினைத்த கௌரவர்கள்! – துரோண பர்வம் பகுதி – 001-கௌரவர்களின் நிலை குறித்து வினவிய ஜனமேஜயன்; பதிலளித்த வைசம்பாயனர்; கௌரவர்களின் செயல்பாடுகளை விவரித்த சஞ்சயன்; கர்ணனின் சூளுரை; கர்ணனை அழைத்த கௌரவர்கள்; திருதராஷ்டிரன் கேள்வி…

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்} , “ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே வைசம்பாயனரே}, ஒப்பற்ற வீரமும், பலமும், வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்ட தனது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, பாஞ்சாலர்களின் இளவரசனான சிகண்டியால் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய வலிமைமிக்க மன்னன் திருதராஷ்டிரர் உண்மையில் என்ன செய்தார்? ஓ! சிறப்புமிக்கவரே {வைசம்பாயனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற பெரும் தேர்வீரர்களின் மூலம், வலிமைமிக்க வில்லாளிகளான பாண்டுவின் மகன்களை வீழ்த்தி அரசுரிமையைப் பெற விரும்பினான் அவரது மகன் (துரியோதனன்). ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, வில்லாளிகள் அனைவரின் அந்தத் தலைவர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட பிறகு, அந்தக் குரு குலத்தோன் {துரியோதனன்} செய்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் திருதராஷ்டிரன், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்து மன அமைதியை அடைந்தானில்லை. அக்கவலையால், அந்தக் குரு குலத்தோன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தபோது, தூய ஆன்மா கொண்ட {தேரோட்டி}கவல்கணன் மகன் {சஞ்சயன்} மீண்டும் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} வந்தான். பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், அவ்விரவில் {குருக்ஷேத்திர} முகாமில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பியிருந்த சஞ்சயனிடம் பேசினான். பீஷ்மரின் வீழ்ச்சியைக் கேட்டதன் விளைவால் உற்சாகமற்ற இதயத்துடனும், தன் மகன்களின் வெற்றியை விரும்பியும், பெருந்துயரத்துடனும் அவன் {திருதராஷ்டிரன்} இப்புலம்பல்களில் ஈடுபட்டான் {இவ்வாறு புலம்பினான்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பயங்கர ஆற்றலைப் படைத்த உயர் ஆன்ம பீஷ்மருக்காக அழுத பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, விதியால் உந்தப்பட்ட கௌவர்கள் அடுத்ததாக என்ன செய்தனர்? வெல்லப்பட முடியாத அந்த உயர் ஆன்ம வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்டதும், துன்பக்கடலில் மூழ்கியிருந்த அந்தக் கௌரவர்கள் உண்மையில் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, பெருகியிருந்ததும், உயர் திறம் பெற்றதுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் படை, உண்மையில் மூவுலகங்களுக்கும் கூரிய {கூர்மையான} அச்சத்தைத் தூண்டவே செய்யும். எனவே, ஓ! சஞ்சயா, அந்தக் குரு குலத்துக் காளையான தேவவிரதர் {பீஷ்மர்} வீழ்ந்ததும், ({அங்கே} கூடியிருந்த) மன்னர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தேவவிரதர் கொல்லப்பட்டதும் உமது மகன்கள் என்ன செய்தனர் என்பதை நான் சொல்லும்போதே சிதறாத கவனத்துடன் கேட்பீராக.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட பீஷ்மர் கொல்லப்பட்டதும், உமது வீரர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் (நிலைமையைக் குறித்து) தனித்தனியே சிந்திக்கலாயினர். க்ஷத்திரிய வகையின் கடமைகளை நினைவுகூர்ந்த அவர்கள் {இரு தரப்பினரும்}, ஆச்சரியத்தாலும், இன்பத்தாலும் நிறைந்தனர்; ஆனாலும், தங்கள் {க்ஷத்திரிய} வகையின் கடமைகளின் படி நடக்கும் அவர்கள் அனைவரும், அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} வணங்கினர். பிறகு அந்த மனிதர்களில் புலிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட பீஷ்மருக்காக நேரான கணைகளால் ஆன தலையணையும், படுக்கையும் அமைத்தனர். பீஷ்மரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தங்களுக்குள் (இனிய விவாதங்களால்) பேசிக்கொண்டனர். பிறகு கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} விடை பெற்றுக் கொண்டு, அவரை வலம் வந்து, கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், விதியால் உந்தப்பட்டு மீண்டும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போரிட்டனர்.

பிறகு, உமது படையின் பிரிவுகளும், பகைவருடையவையும் எக்காளங்களின் முழக்கத்தோடும், பேரிகையொலிகளோடும் வெளியே அணிவகுத்து வந்தன. கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாளின் சிறந்த பகுதி கடந்த போது, கோபத்தின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களும், விதியால் இதயம் பீடிக்கப்பட்டவர்களும், உயர் ஆன்ம பீஷ்மரின் ஏற்கத்தகுந்த வார்த்தைகளை அலட்சியம் செய்தவர்களுமான அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானோர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்தோடு வெளியே சென்றனர்.

உமது மற்றும் உமது மகனின் மூடத்தனங்களின் விளைவாலும், சந்தனு மகனின் {பீஷ்மரின்} படுகொலையாலும், மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள் காலனால் அழைக்கப்பட்டவர்கள் போலவே தெரிந்தனர். தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த கௌரவர்கள், பெரும் துயரத்தால் நிறைந்து, இரை தேடும் விலங்குகள் நிறைந்த கானகத்தில், மந்தையாளன் இல்லாத வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் மந்தைகளைப் போலத் தெரிந்தனர்.

உண்மையில், அந்தப் பாரதக் குல முதன்மையானவரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, விண்மீன்களற்ற ஆகாயம் போலவோ, காற்றில்லாத வானம் போலவோ, பயிர்களற்ற பூமி போலவோ, தூய இலக்கணமில்லாத சிதைந்த உரையைப் போலவோ [1], பழங்காலத்தில் பலிக்குப் {பலிச்சக்கரவர்த்திக்குப்} பிறகு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்ட அசுரப்படையைப் போலவோ, கணவனை இழந்த அழகிய காரிகையைப் போலவோ [2], நீர் வற்றிய ஆற்றைப் போலவோ, தன் துணையை இழந்து, காட்டில் ஓநாய்களால் சூழப்பட்ட பெண்மானைப் போலவோ, சரபத்தால் [3] கொல்லப்பட்ட சிங்கத்துடன் கூடிய பெரிய மலைக்குகையைப் போலவோ அந்தக் குரு படை தெரிந்தது. உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப்பிறகு, பாரதப் படையானது, கடலின் நடுவில் அனைத்துப் புறங்களிலும் வீசும் பெருங்காற்றால் புரட்டப்படும் சிறு படகைப் போல இருந்தது.வலிமைமிக்கவர்களும், தப்பாத குறி கொண்டவர்களுமான வீரப் பாண்டவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்ட அந்தக் கௌரவப் படை, கலங்கியிருந்த அதன் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளுடன், ஆதரவற்றுப் பீதியடைந்து மிகவும் கலக்கமுற்றிருந்தது. அச்சமடைந்திருந்த மன்னர்களும், சாதாரணப் படைவீரர்களும், தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த அந்தப் படையில், அதற்கு மேலும் ஒருவரையொருவர் நம்பாமல் உலகத்தின் பாதாள லோகத்திற்கு மூழ்குவதாகத் தெரிந்தது.

பிறகு அந்தக் கௌரவர்கள், தேவவிரதருக்கு {பீஷ்மருக்கு} இணையான கர்ணனை உண்மையில் நினைவுகூர்ந்தனர். ஆயுதங்களைத் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனும், (கல்வி மற்றும் தவத் துறவுகளில்) விருந்தினன் போல ஒளிர்பவனுமான அவனிடம் {கர்ணனிடம்} அனைவரின் இதயங்களும் திரும்பின. துயரைக் களைய இயன்ற நண்பன் ஒருவனை நோக்கித் துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதன் திரும்புவதைப் போல, அனைத்து இதயங்களும் அவனை {கர்ணனை} நோக்கித் திரும்பின.

மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள், “கர்ணா! கர்ணா!” என்று கூச்சலிட்டுக் கொண்டே, “நமது நண்பனும், சூதனின் மகனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்} போரில் உயிரை விட எப்போதும் தயாராக இருப்பவனாவான். பெரும் புகழைக் கொண்ட கர்ணன், தன் தொண்டர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து இந்தப் பத்து நாட்களும் போரிடாதிருந்தான். ஓ! அவனை விரைவாக அழைப்பீராக” என்றனர் [4].மனிதர்களில் காளையான அவன் {கர்ணன்}, இரண்டு மகாரதர்களுக்கு இணையானவனாக இருந்தாலும், க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் வீரமும் வலிமையும் மிக்கத் தேர்வீரர்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மரால் அர்த்த ரதன் {தேர்வீரர்களில் பாதித் திறன் கொண்டவன்} என்று வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்} வகுக்கப்பட்டான். (ரதர்கள் மற்றும் அதிரதர்கள் அனைவரிலும்) முதன்மையான அவன் {கர்ணன்}, வீரர்கள் அனைவராலும் மதிக்கப்படும் அவன் {கர்ணன்}, யமன், குபேரன், வருணன், இந்திரன் ஆகியோரோடும் போரிடத் துணிந்தவனான அவன் {கர்ணன்}, ரதர்கள், அதிரதர்கள் ஆகியோர் எண்ணப்பட்டபோதும் இப்படியே {பீஷ்மரால் அர்த்த ரதன் என்று} வகுக்கப்பட்டான்.

இதனால் ஏற்பட்ட கோபத்தால் அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நீர் வாழும் காலம் வரை, நான் போரிடேன்! எனினும், பெரும்போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வதில் நீர் வென்றால், ஓ! கௌரவரே {பீஷ்மரே}, துரியோதனனின் அனுமதியுடன் நான் காடுகளில் ஓயச் செல்வேன். மறுபுறம், ஓ! பீஷ்மரே, பாண்டவர்களால் கொல்லப்பட்டு நீர் சொர்க்கத்தை அடைந்தாலோ, அதன் பிறகு, தனித்தேரில் செல்லும் நான், பெரும் தேர்வீரர்களாக உம்மால் கருதப்படும் அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கொல்வேன்” {என்றான் கர்ணன்}. பெரும் புகழையும் வலிய கரங்களையும் கொண்ட கர்ணன், இதைச் சொல்லிவிட்டு, உமது மகனின் {துரியோதனனின்} அனுமதியுடன் முதல் பத்து நாட்கள் போரிடாதிருந்தான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் ஆற்றலும் அளவிலா வலிமையும் கொண்டவரான பீஷ்மர், யுதிஷ்டிரனின் படை வீரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொன்றார். எனினும், குறி தவறாதவரும், பெரும் சக்தி கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, ஆற்றைக் கடக்க விரும்புபவர்கள் படகை நினைப்பதைப் போல, உமது மகன்களும் கர்ணனை நினைத்தனர். உமது வீரர்களும், உமது மகன்களும் மன்னர்கள் அனைவருடன் சேர்ந்து கொண்டு “கர்ணா!” என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் அனைவரும், “உன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இதுவே” என்றனர்.

ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுதங்களின் அறிவைப் பெற்றவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணனை நோக்கி எங்கள் இதயங்கள் திரும்பின. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்துகளில் இருந்து தேவர்களைக் காக்கும் கோவிந்தனை {கிருஷ்ணனைப்} போலவே, பெரும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க வல்லவன் அவனே {கர்ணனே}” {என்றான் சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி மீண்டும் மீண்டும் கர்ணனைப் புகழ்ந்து கொண்டிருந்த சஞ்சயனிடம், பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நீங்கள் அனைவரும் சூத சாதியைச் சேர்ந்த வீரனான ராதையின் மகனை {கர்ணனைப்} போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்தவனாகக் கண்டதால் உங்கள் அனைவரின் இதயங்களும் விகர்த்தனன் மகனான கர்ணனை நோக்கித் திரும்பின [என்று நான் புரிந்து கொள்கிறேன்]. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, ஆபத்தில் இருந்து விடுபட விரும்பியவர்களும், அச்சம் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டவர்களுமான துரியோதனன் மற்றும் அவனது தம்பிகளின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை என நான் நம்புகிறேன். கௌரவர்களின் புகலிடமாக இருந்த பீஷ்மர் கொல்லப்பட்ட போது, வில்லாளிகளில் முதன்மையான கர்ணனால் {பீஷ்மரை இழந்ததால் ஏற்பட்ட} அந்த இடைவெளியை நிரப்புவதில் வெல்ல முடிந்ததா? அந்த இடைவெளியை நிரப்பினாலும், கர்ணனால் எதிரியை அச்சத்தால் நிரப்ப முடிந்ததா? வெற்றி குறித்த என் மகன்களின் நம்பிக்கைகளுக்குக் கனிகளை {பலன்களைக்} கொண்டு அவனால் {கர்ணனால்} மகுடம் சூட்ட முடியுமா?” {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.

கர்ணனின் புறப்பாடு! – துரோண பர்வம் பகுதி – 002-கௌரவப் படைவீரர்களுக்கு ஆறுதல் கூறிய கர்ணன்; படைவீரர்கள் மத்தியில் கர்ணன் செய்த சூளுரை; போருக்குப் புறப்படத் தயாரான கர்ணன்; வேண்டிய உபகரணங்களைத் தன் தேரோட்டியிடம் கேட்ட கர்ணன்; பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த அதிரதன் மகன் {கர்ணன்}, துயரத்தில் விழுந்திருந்ததும், அடியற்ற கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பானதுமான உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஒரு சகோதரனைப் போலக் காக்க விரும்பினான். [உண்மையில்], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வில் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரும், மனிதர்களில் முதன்மையானவரும், மங்காப் புகழ் கொண்ட வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} (அவரது தேரிலிருந்து) வீழ்த்தப்பட்டதைக் கேள்விப்பட்டு (போர்க்களத்திற்கு) விரைந்து வந்தான். தேர்வீரர்களில் சிறந்தவரான பீஷ்மர் எதிரியால் கொல்லப்பட்ட பிறகு, தன் பிள்ளைகளைக் காக்க விரும்பும் தந்தையைப் போல, கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பான அந்தப் படையைக் காக்க விரும்பி கர்ணன் அங்கே வந்தான்.

கர்ணன் (படைவீரர்களிடம்), “உறுதி, புத்திக்கூர்மை, ஆற்றல், வீரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, வீரர்களின் அனைத்து அறங்கள், தெய்வீக ஆயுதங்கள், பணிவு, அடக்கம், ஏற்புடைய பேச்சு, தீமையில் இருந்து விடுதலை ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீஷ்மர், சந்திரனில் லட்சுமி இருப்பது போல இத்தகைய குணங்களை நிரந்தரமாகப் பெற்றவரும், எப்போதும் நன்றியுடன் இருந்தவரும், பிராமணர்களின் எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பீஷ்மர், ஐயோ, பகை வீரர்களைக் கொல்பவரான அந்தப் பீஷ்மர் எப்போது தன் விடுதலையை {மரணத்தை} அடைந்தாரோ, அப்போதே பிற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

செயலுடன் (பொருள்கள் அனைத்தும்) கொண்ட நிலையான தொடர்பின் விளைவால், இவ்வுலகில் அழிவில்லாதது என எதுவும் இருப்பதில்லை. {வினைப்பயன் என்பது நிலையற்றதாகையால், ஒரு பொருளும் இவ்வுலகில் அழிவில்லாமல் இருப்பதில்லை}. உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரே கொல்லப்பட்டாரெனில், சூரியன் நாளை உதிப்பான் என எவன்தான் உறுதியாகச் சொல்வான்? வசுக்களின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவரும், வசுக்களின் சக்தியால் பிறந்தவரும், பூமியின் ஆட்சியாளருமான அவர் {பீஷ்மர்} மீண்டும் வசுக்களுடன் இணைந்துவிட்டார், எனவே, உங்கள் உடைமைகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், இந்தப் பூமிக்காவும், குருக்களுக்காகவும், இந்தப் படைக்காகவும் துயரடைவீராக [1].சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பெரும் வலிமைமிக்கவரும், வரமளிக்கும் வீரரும், உலகத்தின் தலைவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்ததும், அதன் தொடர்ச்சியாகப் பாரதர்கள் வீழ்ந்ததும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடிய கர்ணன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் (தார்தராஷ்டிரர்களுக்கு) ஆறுதல் சொல்லத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன்களும் உமது துருப்புகளும் உரக்க அழத்தொடங்கி, அந்த அழுகையின் பேரொலியால் அதிக வருத்தத்தை அடைந்து கண்ணீரை அதிகமாக வடித்தனர் [2]. எனினும், அந்தப் பயங்கரப் போர் மீண்டும் தொடங்கி, மன்னர்களால் தூண்டப்பட்ட கௌரவப் படைப்பிரிவுகள் பேரொலியோடு மீண்டும் முழங்கிய போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களில் காளையான கர்ணன், (கௌரவப் படையின்) பெரும் தேர்வீரர்களிடம் பேசி, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:

{கர்ணன்}, “நிலையற்ற இந்த உலகில் (காலனின் {மரணத்தின்} கோரப் பற்களை நோக்கியே) அனைத்தும் {அனைத்துப் பொருட்களும்} தொடர்ந்து வலம் வருகின்றன. இஃதை எண்ணி, அனைத்தையும் குறுகிய காலம் கொண்டவையே என நான் கருதுகிறேன். எனினும், நீங்கள் அனைவரும் இங்கிருந்த போதே, மலைபோல அசையாமல் நிற்கும் குருக்களில் காளையான பீஷ்மர் எவ்வாறு தனது தேரில் இருந்து வீசப்பட்டார்? வலிமைமிக்கத் தேர்வீரரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்த்தப்பட்டு, (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போல இப்போது தரையில் கிடக்கிறார் என்றால், மலைக்காற்றைத் தாங்கவொண்ணா மரங்களைப் போலவே, குரு மன்னர்கள் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கிஞ்சிற்றும் தாங்க இயன்றவர்கள் இல்லை [3].எனினும், இப்போது அந்த உயர் ஆன்மா கொண்டவர் {பீஷ்மர்} செய்ததைப் போலவே, {படையின்} முதன்மையான வீரர்கள் எதிரியால் கொல்லப்பட்டதும், உற்சாகமற்ற முகங்களைக் கொண்டதுமான ஆதரவற்ற இந்தக் குரு படையை நான் காப்பேன். இந்தச் சுமை இப்போது என் பொறுப்பாகட்டும். அந்த வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டதால் இந்த அண்டமே நிலையற்றதென நான் காண்கிறேன். {எனவே}, போருக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? ஆகவே, களத்தில் திரிந்த படியே என் நேரான கணைகளால் அந்தக் குரு குலக் காளைகளை (பாண்டவர்களை) நான் யமலோகம் அனுப்புவேன். இவ்வுலகில் புகழையே உயர்ந்த நோக்கமாகக் கருதும் நான், போரில் அவர்களை {பாண்டவர்களை} கொல்வேன், அல்லது எதிரியால் கொல்லப்பட்டுக் களத்தில் உறங்குவேன்.

யுதிஷ்டிரன், உறுதியும், புத்திக்கூர்மையும், அறமும், வலிமையும் கொண்டவனாவான். விருகோதரன் {பீமன்}, ஆற்றலில் நூறு யானைகளுக்கு இணையானவனாவான், அர்ஜுனனோ இளமையானவனாகவும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகனாகவும் இருக்கிறான். எனவே, அந்தப் பாண்டவப் படை தேவர்களாலும் எளிதாக வீழ்த்தப்பட முடியாததாகும். யமனுக்கு நிகரான இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} எந்தப் படையில் இருக்கிறார்களோ, தேவகியின் மகனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் எந்தப் படையில் இருக்கிறார்களோ, அந்தப் படை காலனின் {மரணத்தின்} கோரப் பற்களைப் போன்றதாகும். அஃதை அணுகும் எந்தக் கோழையும் உயிருடன் திரும்ப மாட்டான்.

பெருகியிருக்கும் தவச் சக்தியை தவத் துறவுகளாலேயே விவேகிகள் எதிர்கொள்வதைப் போல, படையும் {சக்தியும்} படையாலேயே {சக்தியாலேயே} எதிர்க்கப்பட வேண்டும். எதிரியை எதிர்த்து, என் தரப்பைக் காப்பதில் என் மனத்தில் உறுதியடைந்திருக்கிறேன். ஓ! தேரோட்டியே, அன்று நான் எதிரியின் வல்லமையைத் தடுத்து, போர்க்களத்தை அடைந்ததுமே அவனை வீழ்த்தப் போகிறேன். இந்த உள் {குடும்பப்} பகையை நான் பொறுக்க மாட்டேன். துருப்புகள் பிளக்கப்படும்போது, அணிவகுக்க (உதவ) முயற்சி செய்யும் ஒருவனே நண்பனாவான் {நான் அந்தச் சிறந்த நண்பனாகவே இருப்பேன்}.

ஒன்று, நான் ஒரு நேர்மையான மனிதனுக்குத் தகுந்த நீதிமிக்கச் சாதனையை அடைவேன், அல்லது என் உயிரைத் துறந்து பீஷ்மரைத் தொடர்வேன். ஒன்று, நான் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் என் எதிரிகள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களுக்குச் செல்வேன்.

ஓ! தேரோட்டியே, பெண்களும், குழந்தைகளும் உதவிக்காகக் கூச்சலிடும்போதோ, துரியோதனனின் ஆற்றல் தடுக்கப்படும்போதோ நான் இதையே செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன் [4]. எனவே, எதிரியை நான் இன்று வெல்வேன். இந்தப் பயங்கரப் போரில் என் உயிரைக் குறித்துக் கவலை கொள்ளாமல், குருக்களைப் பாதுகாக்கும் நான், பாண்டுவின் மகன்களைக் கொல்வேன். என் எதிரிகள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துப் போரில் கொல்லும் நான், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} (மறுப்பதற்கிடமில்லா) அரசுரிமையை அளிப்பேன்.தங்கத்தாலானதும், பிரகாசமானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களோடு ஒளிர்வதுமான அழகிய என் கவசம் எனக்குப் பூட்டப் படலாம்; சூரியனுக்கு இணையான பிரகாசம் கொண்ட என் தலைக்கவசமும் {கிரீடமும்}, விற்களும், நெருப்பு, நஞ்சு அல்லது பாம்புகளுக்கு ஒப்பான என் கணைகளும் தரிக்கப்படலாம். (என் தேரில்) உரிய இடங்களில் பதினாறு {16} அம்பறாத்தூணிகள் கட்டப்படட்டும், மேலும் சிறந்த விற்கள் பலவும் கொண்டு வரப்படட்டும். கணைகள், ஈட்டிகள், கனமான கதாயுதங்கள், பல்வேறு வண்ணங்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட என் சங்கு ஆகியவை தயாராகட்டும்.

பல்வேறு வண்ணங்களிலானதும், சிறந்ததும் தங்கத்தாலானதும், தாமரையின் பிரகாசத்தைக் கொண்டதும், யானை கட்டும் சங்கிலி பொறிக்கப்பட்ட {கொடியைக் கொண்டதுமான} என் அழகிய கொடிமரம், மென்மையான துணியால் துடைக்கப்பட்டு, அற்புதமான மாலைகளாலும், மெல்லிய இழைகளாலும் அலங்கரிப்பட்டு என்னிடம் கொண்டு வரப்படட்டும். ஓ! தேரோட்டியின் மகனே, பழுப்பு மேகங்களின் நிறத்தாலானவையும், மெலிதாக இல்லாதவையும் {பருத்தவையும்}, மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரில் குளித்தவையும், பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும்.

தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனையோ, சந்திரனையோ போலப் பிரகாசமானதும், ஆயுதங்கள், மற்றும் சிறந்த விலங்குகள் பூட்டப்பட்டுத் தேவையான அனைத்தையும் கொண்டதுமான சிறந்த தேர் ஒன்றும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். பெரும் தாங்கும் திறனைக் கொண்ட பல சிறந்த விற்களும், (எதிரியைத்) தாக்க வல்ல சிறந்த நாண்கயிறுகள் பலவும், பெரியதும், கணைகள் நிறைந்ததுமான அம்பறாத்தூணிகள் சிலவும், என் உடலுக்கான கவசங்கள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். தயிர்க்கடைசல்கள் நிறைந்தவையும், பித்தளை மற்றும் தங்கத்தாலானவையுமான குடங்களும், வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் (மங்கலமான) பொருட்கள் அனைத்தும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். மலர்களாலான மாலைகள் கொண்டுவரப்படட்டும், அவை என் உடலின் (தகுந்த) அங்கங்களில் சூடப்படட்டும். வெற்றிக்கான பேரிகைகள் முழங்கப்படட்டும்.

ஓ! தேரோட்டியே, கிரீடியும் (அர்ஜுனனும்), விருகோதரனும் {பீமனும்}, தர்மனின் மகனும் (யுதிஷ்டிரனும்), இரட்டையர்களும் {நகுலனும், சகாதேவனும்} எங்கிருக்கிறார்களோ, அந்த இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. அவர்களோடு போரில் மோதி, ஒன்று நான் அவர்களைக் கொல்வேன், அல்லது எதிரிகளான அவர்களால் கொல்லப்படும் நான் பீஷ்மரைப் பின்தொடர்வேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை மன்னர்களால் வெல்லப்படமுடியாதது என நான் நினைக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் காலனே, முரட்டுத்தனமான கண்காணிப்புடன் கிரீடியை {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவனுடன் மோதி அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரின் வழியில் நானும் யமனுலகு செல்வேன். அவ்வீரர்களுக்கு மத்தியில் நானே செல்வேன் என்று நிச்சயமாக நான் சொல்கிறேன். உட்பகையைத் தூண்டாதோரும், என்னிடம் பலவீனமான பற்று கொள்ளாதோரும், நீதியற்ற ஆன்மா கொள்ளாதோருமே (மன்னர்களே) எனக்குக் கூட்டாளிகளாவர்[5]” {என்றான் கர்ணன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறந்த ஏர்க்காலைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலகரமானதும், கொடிமரத்துடன் கூடியதும், காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், பெரும் பலம் கொண்டதும், விலையுயர்ந்ததுமான சிறந்த தேரைச் செலுத்திய கர்ணன் வெற்றிக்காக (போரிடச்) சென்றான்.

இந்திரனை வழிபடும் தேவர்களைப் போலக் குரு தேர்வீரர்களில் முதன்மையானோரால் வழிபடப்பட்டவனும், சூரியனைப் போல அளவிலா சக்தி கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அந்தக் கடும் வில்லாளி {கர்ணன்}, தங்கம், ரத்தினம் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த கொடிமரத்தைக் கொண்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், மேகங்களின் முழக்கத்திற்கு இணையான சடசடப்பொலி கொண்டதுமான தேரில், போர்க்களத்தின் எவ்விடத்தில் அந்தப் பாரதக் குலக்காளை (பீஷ்மர்) இயற்கைக்கான தன் கடனைச் செலுத்தினாரோ {ஆன்ம விடுதலையை விரும்பி உயிர் துறந்தாரோ} அந்த இடத்திற்குச் சென்றான். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அழகான மேனியுடன் கூடியவனும், பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தெய்வீகத் தேரைச் செலுத்தும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல, நெருப்பின் ஒளியைக் கொண்ட தன் அழகிய தேரில் ஏறி ஒளிர்ந்தான்.

அர்ஜுனனின் புகழ் சொன்ன கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 003- பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்; பீஷ்மரிடம் அர்ஜுனனின் பெருமைகளைச் சொல்லி, போரிட அனுமதி வேண்டிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்பவரும், நீதிமிக்க ஆன்மாவும், அளவிலா சக்தியும் கொண்ட வீரரும், பெரும் வில்லாளியும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} (தன் தேரில் இருந்து) வீழ்த்தப்பட்டவருமான மதிப்புக்குரிய பாட்டன் பீஷ்மர், வலிமைமிக்கக் காற்றால் வற்ற செய்யப்பட்ட பரந்த பெரும் கடலைப் போலக் கணைகளின் படுக்கையில் கிடப்பதைக் கண்டு, உமது மகன்களுக்கு வெற்றி மீதான நம்பிக்கையும், மன அமைதியும் அவர்களது கவசங்களோடு காணாமல் போனது.

அடியற்ற பெருங்கடலைக் கடக்க முயன்று அதில் மூழ்குபவர்களுக்கு ஒரு தீவாக எவர் இருந்தாரோ அவரை {பீஷ்மரை} கண்டு, யமுனையின் ஊற்று போலத் தொடர்ச்சியான கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் எவர் சூழப்பட்டிருந்தாரோ அந்த வீரரை {பீஷ்மரை} கண்டு, பெரும் இந்திரனால் பூமியில் தள்ளப்பட்ட தாங்க முடியாத சக்தி கொண்ட மைநாக மலையைப் போல எவர் இருந்தாரோ அந்த வீரரை, ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்திருக்கும் சூரியனைப் போல எவர் கிடந்தாரோ அந்த வீரரை, பழங்காலத்தில் விருத்திரனிடம் வீழ்ந்துக் காணப்படா நிலையில் இருந்த இந்திரனைப் போல எவர் இருந்தாரோ அவரை, போர் வீரர்கள் அனைவரின் புலன்களையும் எவர் மயங்கச் செய்தாரோ அவரை, போராளிகள் அனைவரிலும் முதன்மையான அவரை, வில்லாளிகள் அனைவருக்கும் அடையாளமான {கொடி போன்ற} அவரை, மனிதர்களில் காளையும், வீரரும், உமது தந்தையுமான அந்தப் பீஷ்மர், போரில் வீழ்த்தப்பட்டு, அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டு, வீரப் படுக்கையில் கிடக்கும் அந்தப் பாரதர்களின் பாட்டனைக் கண்டு, துயரால் நிறைந்து, கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையில் இருந்த அந்த அதிரதன் மகன் (கர்ணன்), பெரும் பாசத்துடன் தன் தேரில் இருந்து இறங்கினான். (சோகத்தால்) பீடிக்கப்பட்டு, கண்ணீரால் கலங்கிய கண்களுடன் இருந்த அவன் {கர்ணன்} கால்நடையாக {நடந்தே} சென்றான்.

கூப்பிய கரங்களுடன் அவரை {பீஷ்மரை} வணங்கிய அவன் {கர்ணன்}, அவரிடம் {பீஷ்மரிடம்}, “நான் கர்ணன்! நீர் அருளப்பட்டிருப்பீராக! ஓ! பாரதரே {பீஷ்மரே}, புனிதமான, மங்கலகரமான வார்த்தைகளை என்னிடம் பேசுவீராக, கண்களைத் திறந்து என்னைக் காண்பீராக. முதிர்ந்தவரும், மரியாதைக்குரியவரும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நீரே கொல்லப்பட்டுத் தரையில் கிடைப்பதால், எந்த மனிதனும் தன் நற்செயல்களின் கனிகளை {புண்ணியப் பலன்களை} இவ்வுலகில் அனுபவிக்கமாட்டான் என்பது நிச்சயமாகிறது.

ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அவர்களில் {குருக்களில்} கருவூலத்தை நிரப்புவதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும், துருப்புகளைப் போர்வியூகத்தில் அணிவகுக்கச் செய்வதிலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் (உம்மைப் போல) வேறு யாரையும் நான் காணவில்லை. ஐயோ, நீதிமிக்கப் புரிதல் கொண்ட ஒருவர், ஆபத்துகள் அனைத்திலும் குருக்களை எப்போதும் பாதுகாக்கும் ஒருவர், எண்ணற்ற போர்வீரர்களைக் கொண்ட ஒருவர் பித்ருக்களின் உலகிற்குச் செல்கிறார். இந்நாளிலிருந்து, ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, கோபத்தில் தூண்டப்படும் பாண்டவர்கள் மான்களைக் கொல்லும் புலிகளைப் போலக் குருக்களைக் கொல்லப் போகின்றனர்.

இன்று, காண்டீவ நாணொலியின் சக்தியை அறியும் கௌரவர்கள், வஜ்ரதாரியை {இந்திரனை} அச்சத்துடன் கருதும் அசுரர்களைப் போல, இன்று சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} மதிக்கப் போகின்றனர் [1]. இன்று காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் இடிக்கொப்பான ஒலி, குருக்களையும், பிற மன்னர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தப்போகிறது. இன்று, ஓ! வீரரே {பீஷ்மரே}, கொடுந்தழல்களாலான நெருப்பு ஒரு காட்டை எரிப்பது போல, கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகள் தார்தராஷ்டிரர்களை எரிக்கும்.

காற்றும் நெருப்பும் சேர்ந்து காட்டின் எந்தப் பகுதிகளிலெல்லாம் செல்லுமோ, அப்பகுதிகளிலுள்ள செடிகள், கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தையும் அவை எரிக்கின்றன. பார்த்தன் {அர்ஜுனன்}, பற்றியெரியும் நெருப்பைப் போன்றவன் என்பதில் ஐயமில்லை, ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, கிருஷ்ணன் காற்றைப் போன்றவன் என்பதிலும் ஐயமில்லை. ஓ! பாரதரே {பீஷ்மரே}, பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்கும் கௌரவத் துருப்புகள் அனைத்தும் அச்சத்தால் நிறையப் போகின்றன.

அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {அர்ஜுனன்} (மன்னர்களை நோக்கி) முன்னேறும்போது, அவனுக்குச் சொந்தமானதும், குரங்குக் கொடிக் கொண்டதுமான அந்தத் தேரின் சடசடப்பொலியை {பீஷ்மரான} நீரில்லாமல் அவர்களால் {மன்னர்களால்} தாங்கிக் கொள்ள இயலாது. விவேகிகளால் விவரிக்கப்படுவதைப் போல மனிசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனை எதிர்க்க உம்மைத் தவிர மன்னர்களில் வேறு யார் தகுந்தவர்?

உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான்.

தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான்.

போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

கௌரவர்களுக்கு ஊக்கமளித்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 004-கர்ணனுக்கு அனுமதி அளித்த பீஷ்மர்; களத்திற்கு வந்து கௌரவர்களுக்கு ஊக்கமளித்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படிப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் {கர்ணனிடம்}, முதிர்ந்தவரான குரு பாட்டன் {பீஷ்மர்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், காலம் மற்றும் இடம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர் கர்ணனிடம்}: “ஆறுகளுக்குப் பெருங்கடலும், அனைத்து ஒளிரும் கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும் {நல்லோரும்}, விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக. ஆயிரங்கண் கொண்டவனை {இந்திரனைச்} சார்ந்த தேவர்கள் போலவே உன் சொந்தங்கள் உன்னைச் சார்ந்து இருக்கட்டும் [1]. உன் எதிரிகளை அவமதிப்பவனாகவும், உன் நண்பர்களின் இன்பத்தை அதிகரிப்பவனாகவும் நீ இருப்பாயாக. சொர்க்கவாசிகளுக்கு விஷ்ணுவைப் போலவே கௌரவர்களுக்கு நீ இருப்பாயாக.

திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நீ, ஓ! கர்ணா, ராஜபுரத்திற்குச் சென்று, உன் கரங்களின் வல்லமை மற்றும் ஆற்றலினால் காம்போஜர்களை வீழ்த்தினாய். கிரிவ்ரஜத்தில் தங்கியிருந்த நக்னஜித் முதலான மன்னர்கள் பலர், அம்பஷ்டர்கள், விதேஹர்கள், கந்தர்வர்கள் [2] ஆகியோர் அனைவரும் உன்னால் வீழ்த்தப்பட்டனர். ஓ! கர்ணா, இமயத்தின் காட்டரண்களில் வசிப்போரான மூர்க்கமாகப் போரிடும் கிராதர்கள், உன்னால் முன்பொரு சமயம், துரியோதனனின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். அதே போல, உத்கலர்கள், மேகலர்கள், பௌண்ட்ரர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், நிஷாதர்கள், திரிகர்த்தர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் அனைவரும் உன்னால் போரில் வீழ்த்தப்பட்டனர்.

ஓ! கர்ணா, துரியோதனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட நீ, பிற நாடுகள் பலவற்றிலும், ஓ! வீரா, பெரும் சக்தி கொண்ட பல மன்னர்களையும், குலங்களையும் வீழ்த்தினாய். ஓ! குழந்தாய் {கர்ணா}, சொந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் துரியோதனன் எப்படியோ, அப்படியே நீயும் கௌரவர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பாயாக. மங்கலகரமான வார்த்தைகளால் நான் உனக்கு உத்தரவிடுகிறேன், போ! எதிரிகளுடன் போரிடுவாயாக. போரில் குருக்களை வழிநடத்தி வெற்றியை துரியோதனனுக்கு அளிப்பாயாக. துரியோதனனைப் போலவே நீயும் எங்களது பேரனே {எங்களுக்குப் பேரன் போன்றவனே}. விதிப்படி துரியோதனனுக்கு நாங்கள் அனைவரும் எப்படியோ அப்படியே உனக்கும் ஆகிறோம்.

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நேர்மையாளர்களிடம் நேர்மையாளர்கள் {நல்லோருடன் நல்லோர்} கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகள் சொல்கின்றனர். எனவே குருக்களுடன் நீ கொண்ட உறவை பொய்யாக்காமல், கௌரவப் படையை உனதாகவே கருதி, துரியோதனனைப் போலவே அதைப் பாதுகாப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் {சூரியன்} மகன் கர்ணன், பீஷ்மரின் பாதத்தை வணங்கி, (அவரிடம் விடைபெற்று) கௌரவ வில்லாளிகள் அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தான். பரந்திருந்த அந்தப் பெரும் படையின் ஒப்பற்ற முகாமைக் கண்ட அவன் {கர்ணன்}, நல்ல ஆயுதங்களைத் தரித்தோரும், அகன்ற மார்புகளை உடையோருமான அந்த வீரர்களை (ஊக்க வார்த்தைகளால்) உற்சாகப்படுத்தத் தொடங்கினான். துரியோதனன் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

வலிய கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட கர்ணன், போருக்காக, அந்த முழுப் படையின் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டதைக் கண்ட கௌரவர்கள் உரத்த கூச்சல்களாலும், {தங்கள்} கக்கங்களைத் {தோள்களைத்} தட்டும் ஒலிகளாலும், சிங்க முழக்கங்களாலும், விற்களின் நாணொலிகளாலும், இன்னும் பிற பல்வேறு ஒலிகளாலும் அவனை {கர்ணனை} வரவேற்றனர்” {என்றான் சஞ்சயன்}.

துரோணரை முன்மொழிந்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 005-படைத்தலைவரை நியமிப்பதில் கர்ணனின் ஆலோசனையைக் கேட்ட துரியோதனன்; துரோணரை முன்மொழிந்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களில் புலியான கர்ணன் தன் தேரில் ஏறுவதைக் கண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், “உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் படை, இப்போது உரிய தலைவனைக் கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன். எனினும், எது முறையானதோ, எது நமது சக்திக்குட்பட்டதோ, அஃது இப்போது தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, மன்னர்களில் விவேகி என்பதால் நீயே எங்களுக்கு அதைச் சொல்வாயாக. ஒருவன் எதைக் காண்கிறானோ, அந்தக் காரியத்தை, நிச்சயம் வேறு ஒருவனால் சிறப்பாகக் காண முடியாது. {தலைவன் செய்ய வேண்டிய காரியத்தை, அவனை விடச் சிறப்பாக வேறு எவனும் அறியமாட்டான்}. நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதைக் கேட்க மன்னர்கள் அனைவரும் விரும்புகின்றனர். தகாத வார்த்தைகள் எதையும் நீ உச்சரிக்க மாட்டாய் என்ற உறுதி எனக்கு இருக்கிறது” என்றான் {கர்ணன்}.

துரியோதனன் {கர்ணனிடம்}, “வயது, ஆற்றல், கல்வி ஆகியவற்றைக் கொண்ட பீஷ்மர், நம் வீரர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டு {இதுவரை} நமது படையின் தலைவராக இருந்தார். ஓ! கர்ணா, பெரும் மகிமையைக் கொண்ட அந்த உயர் ஆன்மா {பீஷ்மர்}, பெரும் எண்ணிக்கையிலான என் எதிரிகளைக் கொன்று, பத்து நாட்களாக நன்றாகப் போரிட்டு நம்மைக் காத்தார். அடைவதற்கு மிக அரிதான சாதனைகளை அவர் அடைந்தார். ஆனால் இப்போதோ அவர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்கு உயர இருக்கிறார். ஓ! கர்ணா, அவருக்குப் பிறகு நமது படைத்தலைவராக இருக்கத் தகுந்தவர் என யாரை நீ நினைக்கிறாய்?

கடலில் படகோட்டி இல்லாத படகைப் போல, ஓ! போரில் முதன்மையானவனே {கர்ணா}, போரில் படைத்தலைவனில்லாத ஒரு படை, போரில் குறுகிய காலம் கூட நிலைக்க முடியாது. உண்மையில், படகோட்டி இல்லாத படகைப் போலவோ, தேரோட்டி இல்லாத தேர் போலவோ தலைவனில்லாத படை அச்சத்தால் பீடிக்கப்பட்டு எங்கே வேண்டுமானாலும் செல்லக்கூடும் {சிதறி ஓடக்கூடும்}. தான் செல்லும் நாட்டின் வழிகளை அறியாத வணிகன் அனைத்து வகைத் துயர்களிலும் விழுவதைப் போலவே, தலைவனில்லாத படையும் அனைத்து வகைத் துயருக்கும் வெளிப்பட்டு நிற்கும்.

எனவே, நமது படையின் உயர் ஆன்ம வீரர்களுக்கு மத்தியில், சந்தனுவின் மகனுக்குப் {பீஷ்மருக்குப்} பின்பு தலைவராக இருக்கத் தகுந்த ஒருவரைக் கண்டுபிடிப்பாயாக. போரில் தகுந்த தலைவராக யாரை நீ கருதுகிறாயோ, அவரையே நாம் அனைவரும் சேர்ந்து தலைவராக்குவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “மனிதர்களில் முதன்மையான இவர்கள் அனைவரும் உயர் ஆன்மா கொண்டோரே. இவர்களில் ஒவ்வொருவரும் நமது தலைவராக இருக்கத் தகுந்தவரே. {அதில்} சிறு சோதனைக்குக் கூட இங்கு அவசியமில்லை. உன்னதமான பரம்பரைகளைச் சேர்ந்த இவர்கள், தாக்கும் கலைகளையும் அறிந்திருக்கின்றர். ஆற்றலும், புத்திக் கூர்மையும் கொண்ட இவர்கள் அனைவரும், போரில் பின்வாங்காதவர்களாகவும், விவேகம் கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தோராகவும், கவனம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

எனினும், ஒரே நேரத்தில் அனைவரும் தலைவர்களாக இருக்க முடியாது. எவரிடம் சிறப்புத் தகுதிகள் இருக்கின்றனவோ, அந்த ஒருவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களை ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே கருதுகின்றனர். எனவே இவர்களில் எவராவது ஒருவர் கௌரவிக்கப்பட்டால் {தலைவனாக்கப்பட்டால்} மற்றவர்கள் அதிருப்தி கொள்வர்; அதற்கு மேலும் அவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பி போரிட மாட்டார்கள் என்பதும் தெளிவானதாகும்.

எனினும், இந்த வீரர்கள் அனைவருக்கும் (ஆயுதங்களில்) ஆசானுமான இவர் {துரோணர்}, வயதில் முதிர்ந்தவராகவும், மரியாதைக்குத் தகுந்தவருமாக இருக்கிறார். எனவே, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான இந்தத் துரோணரே தலைவராக்கப்பட வேண்டும். பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரும், சுக்ரனுக்கோ, பிருஹஸ்பதிக்கோ இணையானவரான வெல்லப்பட முடியாத இந்தத் துரோணர் இங்கே இருக்கையில், தலைவராகத் தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?

ஓ! பாரதா {துரியோதனா}, உன் படையில் உள்ள மன்னர்கள் அனைவரிலும், துரோணரைப் பின்தொடர்ந்து போருக்குச் செல்லாத ஒரு வீரனும் இருக்க மாட்டான் [1]. படைத்தலைவர்கள் அனைவரிலும், ஆயுததாரிகள் அனைவரிலும், புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் இந்தத் துரோணர் முதன்மையானவர் ஆவார். அதையும் தவிர, ஓ! மன்னா {துரியோதனா}, இவர் (ஆயுதங்களில்) உனது ஆசானாகவும் இருக்கிறார்.எனவே, ஓ! துரியோதனா, அசுரர்களை வீழ்த்துவதற்காக, போரில் கார்த்திகேயனை {முருகனைத்} தங்கள் தலைவனாக்கிய தேவர்களைப் போல, தாமதமில்லாமல், இவரை உனது படைகளுக்குத் தலைவராகக் கொள்வாயாக” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன்}. 

துரோணரை வேண்டிய துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 006-படைத்தலைவராகும்படி துரோணரை வேண்டிய துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த கௌரவப் படையினர்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், துருப்புகளுக்கு மத்தியில் நின்றிருந்த துரோணரிடம் இதைச் சொன்னான்.

துரியோதனன் {துரோணரிடம்}, “உமது பிறப்பு வகையின் மேன்மை, நீர் பிறந்த உன்னதக் குலம், உமது கல்வி, வயது, புத்திக்கூர்மை, ஆற்றல், திறன், வெல்லப்பட இயலாத தன்மை, உலகக் காரியங்களின் உமது அறிவு, கொள்கை, தன்னை வென்ற தன்மை, உமது தவத்துறவு, உமது நன்றியறிதல், அனைத்து அறங்களிலும் மேன்மை ஆகியவற்றைக் கொண்ட உம்மைப் போல நல்ல தலைவராகத் தகுந்தவர் இம்மன்னர்களில் வேறு யாருமில்லை. எனவே, தேவர்களைக் காக்கும் வாசவனை {இந்திரனைப்} போல எங்களை நீர் காப்பீராக.

ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {துரோணரே}, உம்மைத் தலைவராகக் கொண்டு எங்கள் எதிரிகளை வீழ்த்த நாங்கள் விரும்புகிறோம். ருத்ரர்களில் காபாலி போலவும், வசுக்களில் பாவகன் போலவும், யக்ஷர்களில் குபேரன் போலவும், மருத்துக்களில் வாசவன் {இந்திரன்} போலவும், பிராமணர்களில் வசிஷ்டர் போலவும், ஒளிக்கோள்களில் சூரியன் போலவும், பித்ருக்களில் யமன் போலவும், நீர்வாழ்வனவற்றில் வருணன் போலவும், விண்மீன்களில் நிலைவைப் போலவும், திதியின் மகன்களில் உசனஸ் போலவும், படைத் தலைவர்கள் அனைவரிலும் முதன்மையானவராக நீர் இருக்கிறீர். எனவே, நீர் எங்கள் தலைவராவீராக.

ஓ! பாவமற்றவரே {துரோணரே}, இந்தப் பதினோரு {11} அக்ஷௌஹிணி படைகளும் உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படியட்டும். இத்துருப்புகளை வியூகத்தில் அணிவகுத்து, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல நம் எதிரிகளை நீர் கொல்வீராக. தேவர்களின் படைகளுக்குத் தலைமையில் செல்லும் பாவகனின் மகனை (கார்த்திகேயனைப்) போல, எங்கள் அனைவருக்கும் தலைமையில் நீர் செல்வீராக. தலைமைக் காளையைப் பின்தொடர்ந்து செல்லும் காளைகளைப் போல, போரில் நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம் [1]. கடுமையானவரும், பெரும் வில்லாளியுமான நீர், எங்களுக்குத் தலைமையில் நின்று வில்வளைப்பதைக் கண்டால் அர்ஜுனன் தாக்கமாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, நீர் எங்கள் தலைவரானால், தொண்டர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய யுதிஷ்டிரனை நான் போரில் வீழ்த்துவேன் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, (கௌரவப் படையின்) மன்னர்கள் அனைவரும் “துரோணருக்கு வெற்றி” என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் உமது மகனை {துரியோதனனை} இன்புறச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த துருப்புகளும், துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, பெரும்புகழை வெல்ல விரும்பி, அந்த அந்தணர்களில் சிறந்தவரை {துரோணரைப்} புகழத் தொடங்கினர். பிறகு, துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

படைத்தலைவரானார் துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 007-திருஷ்டத்யும்னனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்ன துரோணர்; படைத்தலைவராக நிறுவப்பட்ட துரோணர்; மகிழ்ச்சியடைந்த கௌரவப் படை; பதினோராம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் சகட வியூகமும், பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகமும் அமைத்துப் போரிட்டது; போரில் ஒருவரையொருவர் நேருக்கு நேர் கண்ட அர்ஜுனனும் கர்ணனும்; கௌரவத் தரப்பில் காணப்பட்ட தீய சகுனங்கள்; பாண்டவப் படையை நோக்கி விரைந்த துரோணர்; கௌரவப் படையைக் கலங்கடித்த திருஷ்டத்யும்னன்; பாண்டவப் படையை மீண்டும் மீண்டும் பிளந்த துரோணர்…

துரோணர் {துரியோதனனிடம்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதத்தை நானறிவேன். மனித விவகாரங்களின் அறிவியலையும் {தண்டநீதியையும்} நானறிவேன். சைப்ய ஆயுதத்தையும், பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களையும் நானறிவேன். வெற்றியில் விருப்பம் கொண்டு, என்னிடம் எந்தக் குணங்கள் இருக்கின்றன என உன்னால் கூறப்பட்டனவோ அவையனைத்தையும் உண்மையில் வெளிப்படுத்த முயற்சி செய்து பாண்டவர்களோடு நான் போர்புரிவேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் பிருஷதன் மகனை {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைக்} கொல்ல இயலாது. ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவன் {திருஷ்டத்யும்னன்},  என்னைக் கொல்லவே படைக்கப்பட்டவனாவான். நான் பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டே சோமகர்களைக் கொல்வேன். பாண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியான இதயங்களோடு என்னுடன் போரிட மாட்டார்கள்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படித் துரோணரால் அனுமதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும் சடங்குகளின் படி துரோணரைப் படைத்தலைவராகச் செய்தான். துரியோதனனால் தலைமைதாங்கப்பட்ட (கௌரவப் படையின்) மன்னர்கள், பழங்காலத்தில் இந்திரனால் தலைமை தாங்கப்பட்ட தேவர்கள், ஸ்கந்தனைப் {முருகனை தேவர்களின் படைத்தலைவனாகப்} பதவியேற்கச் {அபிஷேகம்} செய்ததைப் போல, படைகளின் தலைவராகத் துரோணரைப் பதவியேற்கச் செய்தனர். துரோணரைத் தலைமையில் நிறுவியதும், பேரிகைகளின் ஒலிகளிலும், சங்குகளின் உரத்த முழக்கத்திலும் படையின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

பிறகு, ஒரு பண்டிகை நாளில் காதுகளுக்கு இனிமையான வாழ்த்துகளைக் கேட்பது போன்ற கூச்சல்களாலும், ஜெயம் என்று சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரின் கூச்சல்களாலும், மனம் நிறைந்த பிராமணர்களின் மங்கலகரமான வழிபாட்டாலும், கோமாளிகளின் {நடிகர்களின்} நடனத்தாலும் துரோணர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார். மேலும், அந்தக் கௌரவப் போர்வீரர்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தலைமைப் பொறுப்பை அடைந்து, போருக்காகத் துருப்புகளை வியூகத்தில் அணிவகுக்கச் செய்து, எதிரியுடன் போரிட விரும்பி உமது மகன்களுடன் புறப்பட்டார். கவசம் தரித்தவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் தலைவன் {சுருதாயுதன்}, உமது மகன் விகர்ணன் ஆகியோர் (துரோணரின்) வலப்பக்கத்தில் நின்றனர். சகுனி, காந்தாரக் குலத்தைச் சேர்ந்தோரும், பளபளக்கும் வேல்களால் போரிடுவோருமான குதிரை வீரர்களில் முதன்மையானோர் பலரோடும் சேர்ந்து அவர்களுக்கு {ஜெயத்ரதன் முதலானோருக்கு} ஆதரவாகச் செயல்படச் சென்றான். கிருபர், கிருதவர்மன், சித்திரசேனன், துச்சாசனன் தலைமையிலான விவிம்சதி ஆகியோர்{துரோணரின்} இடப்பக்கத்தைப் பாதுகாக்க கடுமையாக முயன்றனர். சுதக்ஷிணன் தலைமையிலான காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் பெரும் வேகம் கொண்ட குதிரைகளோடு பின்னவர்களை {கிருபர் முதலானோரை} ஆதரிக்கச் சென்றனர்.

மத்ரர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், சூரசேனர்கள், சூத்ரர்கள், மலதர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள் ஆகியோர் உமது மகனையும் (துரியோதனனையும்), சூதனின் மகனையும் (கர்ணனையும்) தங்கள் தலைமையில் நிறுத்தி, {படையின்} பின்பக்க காவலாக அமைந்தனர் [1]. வில்லாளிகளின் தலைமையில் சென்ற விகர்த்தனன் மகன் கர்ணன் (முன்னேறும்) படைக்குப் பலத்தைக் கூட்டி, அந்தப் படையின் வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தான். சுடர்மிக்கதும், பெரியதும், உயரமானதும், யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதுமான அவனது கொடிமரம், அவனது படைப்பிரிவுகளை மகிழ்ச்சியூட்டும்படி, சூரியப்பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கர்ணனைக் கண்ட யாரும், பீஷ்மரின் மரணத்தால் ஏற்பட்ட பேரிடரைக் கருதவில்லை. குருக்களோடு சேர்ந்த மன்னர்கள் அனைவரும் துயரில் இருந்து விடுபட்டனர். பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் ஒன்றுகூடி, தங்களுக்குள், “கர்ணனைக் களத்தில் காணும் பாண்டவர்களால் போரில் நிற்க இயலாது. உண்மையில், கர்ணன், வாசவனைத் {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையே கூடப் போரில் வீழ்த்தக் கூடியவனாவான். எனவே, சக்தியும் ஆற்றலுமற்ற பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்வது? வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீஷ்மர், போரில் பார்த்தர்களைத் தப்ப விட்டார். எனினும், கர்ணன் தன் கூரிய கணைகளால் போரில் அவர்களைக் கொல்வான்” என்றனர்.

இப்படி ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டபடியும், பாராட்டியபடியும் முன்னேறிச் சென்றனர். நமது படையைப் பொறுத்தவரை, துரோணரால் அது சகட (வாகன) வடிவில் அணிவகுக்கப்பட்டது; அதே வேளையில் நம் எதிரிகளின் வியூகமோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அது கிரௌஞ்ச (நாரை) வடிவத்தில் அணிவகுக்கப்பட்டது.

அவர்களது வியூகத்தின் தலைமையில் மனிதர்களில் முதன்மையானோரான விஷ்ணு {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் குரங்கின் வடிவம் பொறிக்கப்பட்ட தங்கள் கொடியைப் பறக்கவிட்டபடி நின்றனர். படை முழுமைக்கும் திமிலைப் போன்றதும், வில்லாளிகள் அனைவருக்கும் புகலிடமானதும், அளவிலா சக்தி கொண்டதுமான பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி, வானத்தில் மிதந்த போதே, உயர் ஆன்ம யுதிஷ்டிரனின் படை முழுமைக்கும் ஒளியூட்டுவதைப் போலத் தெரிந்தது. பெரும் புத்திக் கூர்மை கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி யுக முடிவில் உலகத்தை எரிப்பதற்காக உதிக்கும் சுடர்மிக்கச் சூரியனை ஒத்திருப்பதாகத் தெரிந்தது.

வில்லாளிகளுக்கு மத்தியில் அர்ஜுனன் முதன்மையானவன்; விற்களுக்கு மத்தியில் காண்டீவம் முதன்மையானது; உயிரினங்களுக்கு மத்தியில் வாசுதேவனே முதன்மையானவன்; அனைத்து வகைச் சக்கரங்களுக்கும் மத்தியில் சுதர்சனமே முதன்மையானது. சக்தியின் பண்புருவங்களான இந்த நான்கையும் சுமந்து கொண்டு, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர், (தாக்குவதற்காக) உயர்த்தப்பட்ட மூர்க்கமான சக்கரத்தைப் போல, (எதிரி) படையின் முன்னணியில் தன் நிலையை ஏற்றது.

கர்ணன் உமது படையின் முகப்பிலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} பகையணியின் முகப்பிலும் என இப்படியே மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும் தங்கள் தங்கள் படைகளின் முகப்பில் நின்றனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பியவர்களுமான கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் அந்தப் போரில் ஒருவரையொருவர் பார்த்தனர்.

பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, பெரும் வேகத்துடன் போரில் முன்னேறியபோது, பூமியானது பேரொலியுடன் அழுது நடுங்குவதாகத் தெரிந்தது. பழுப்பு நிறத்தாலான பட்டு கவிகைக்கு ஒப்பானதும், காற்றால் எழுப்பப்பட்டதுமான அடர்த்தியான புழுதியானது வானத்தையும் சூரியனையும் மறைத்தது. ஆகாயம் மேகமற்றதாக இருப்பினும், இறைச்சித்துண்டுகள், எலும்புகள் மற்றும் இரத்தத்தாலான மழை பொழிந்தது. ஆயிரக்கணக்கான கழுகுகள் {கிருத்ரங்கள்}, பருந்துகள், கொக்குகள், கங்கங்கள் {ஸ்யேனங்கள் – ஒரு வகைக் கழுகு}, காக்கைகள் ஆகியன (கௌரவத்) துருப்புகளின் மீது தொடர்ந்து விழத் தொடங்கின. பேரொலியுடன் நரிகள் ஊளையிட்டன; மூர்க்கமானவையும் பயங்கரமானவையுமான பறவைகள் பல இறைச்சியுண்டு, இரத்தம் குடிக்கும் விருப்பத்தால் உமது படைக்கு இடதுபுறத்தில் சுற்றின [2], பேரொலியோடும், நடுக்கத்தோடும் கூடியவையும், சுடர்மிக்கவையுமான பல எரி கோள்கள், (வானத்துக்கு) ஒளியூட்டியபடி, தங்கள் வாலினால் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டு பிரகாசத்துடன் களத்தில் விழுந்தன. (கௌரவப்) படையின் தலைவர் {துரோணர்} புறப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூரியனின் அகன்ற வட்டில் இடியோசைகளுடன் கூடிய மின்னலின் கீற்றுகளை வெளியிடுவதாகத் தெரிந்தது. கடுமையானதும், வீரர்களின் அழிவைக் குறிப்பதான இவையும், இன்னும் பல சகுனங்களும் போரின் போது காணப்பட்டன.

பிறகு, ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியது. அங்கே எழுந்த ஆரவாரத்தின் பேரொலி முழுப் பூமியையும் நிறைப்பதாகத் தெரிந்தது. ஒருவரோடொருவர் சினம் கொண்டவர்களும், தாக்குவதில் திறம் கொண்டவர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் கூரிய ஆயுதங்கள் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

பிறகு, சுடர்மிக்கப் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை இறைத்தபடி பெரும் மூர்க்கத்துடன் பாண்டவத் துருப்புகளை நோக்கி விரைந்தார். துரோணர் தங்களை நோக்கி விரைவதைக் கண்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாரிக்கு மேல் மாரியாக (தனித்துவமான தொகுப்புகளாலான) கணைகளைக் கொண்டு அவரை வரவேற்றனர். துரோணரால் கலங்கடிக்கப்பட்டு, பிளக்கப்பட்ட பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் அந்தப் பெரும்படை, காற்றால் பிளக்கப்பட்ட கொக்கு வரிசைகளைப் போல உடைந்தனர். அந்தப் போரில் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைத் தூண்டி அழைத்த துரோணர், குறுகிய காலத்திற்குள்ளாகவே பாண்டவர்களையும், சிருஞ்சயர்களையும் பீடித்தார்.

திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்கள், வாசவனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட தானவர்களைப் போலத் துரோணரால் கொல்லப்பட்டு அந்தப் போரில் நடுங்கினர். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனுமான அந்த யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), துரோணரின் படைப்பிரிவில் பல இடங்களைத் தன் கணை மாரியால் பிளந்தான். அந்த வலிமைமிக்கப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கணைமாரியால் துரோணரின் கணை மாரியை கலங்கடித்துக் குருக்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தான்.

போரில் {சிதறி ஓடிய} தன் மக்களுக்குப் பின் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்தார். கோபத்தால் தூண்டப்பட்ட மகவத் {இந்திரன்}, பெரும் சக்தியுடன் தன் கணைமாரியைத் தானவர்கள் மீது பொழிந்ததைப் போல அவர் {துரோணர்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தார். துரோணரின் கணைகளால் அசைக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறு விலங்கின் கூட்டத்தைப் போல மீண்டும் மீண்டும் உடைந்தனர். வலிமைமிக்கத் துரோணர், அந்தப் பாண்டவப் படையை நெருப்பு வளையமாகச் சுற்றினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது.

வானத்தில் காணப்படும் {கந்தர்வ} நகரத்துக்கு ஒப்பானதும், (படைகளின்) அறிவியலில் {சாத்திரங்களில்} கண்டபடி தேவையான அனைத்துப் பொருட்களுடன் அமைக்கப்பட்டதும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதும், சடசடப்பொலியைக் களத்தில் எதிரொலிக்கச் செய்வதும், (நன்கு) தூண்டப்பட்ட குதிரைகளைக் கொண்டதும், ஸ்படிகம் போன்ற பிரகாசமான கொடிமரத்தைக் கொண்டதும், பகைவரின் இதயங்களில் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான தன் சிறந்த தேரில் சென்ற துரோணர் அவர்களுக்கு {எதிரி படையினரின்} மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.

துரோணர் கொல்லப்பட்டார்! – துரோண பர்வம் பகுதி – 008-துரோணர் உண்டாக்கிய அழிவு; துரோணரைத் தடுக்கும்படி பாண்டவர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப்படையைக் கலங்கடித்த துரோணர் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குதிரைகள், {அவற்றைச்} செலுத்துபவர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றை இப்படிக் கொல்லும் துரோணரைக் கண்ட பாண்டவர்கள், கவலைக்குள்ளாகாமல் அவரை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் [1]. பிறகு, திருஷ்டத்யும்னன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், அவர்களிடம், “அந்தக் குடத்தில் பிறந்தவர் (துரோணர்), நம் ஆட்களால் அனைத்துப் பக்கங்களிலும் கவனமாகச் சூழப்பட்டுத் தடுக்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அர்ஜுனனும், பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து, துரோணர் வந்ததும் அவர்கள் அனைவரும் பின்னவரை {துரோணரை} வரவேற்றனர் {எதிர்த்தனர்}.

மகிழ்ச்சியால் நிறைந்திருந்த கேகய இளவரசர்கள், பீமசேனன், சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், யுதிஷ்டிரன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {விராடன்}, துருபதன் மகன், திரௌபதியின் மகன்கள் (ஐவர்), திருஷ்டகேது, சாத்யகி, கோபம் நிறைந்த சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டு மகன்களை {பாண்டவர்களைப்} பின்தொடர்ந்த பிற மன்னர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் குலத்துக்கும் {குலப்பெருமைக்கும்} ஆற்றலுக்கும் தக்கபடி பல்வேறு சாதனைகளை அடைந்தனர். அந்தப் பாண்டவ வீரர்களால் அந்தப் போரில் காக்கப்படும் படையைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் தன் கண்களைத் திருப்பி, அதன் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.

சினத்தால் தூண்டப்பட்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான அந்த வீரர் {துரோணர்}, தன் தேரில் நின்றபடியே, பெரும் மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டவப் படையை எரித்தார். தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றின் மீது அனைத்துப் பக்கங்களிலும் விரைந்த துரோணர், வயதில் கனம் கொண்டிருந்தாலும் ஓர் இளைஞனைப் போலக் களத்தில் மூர்க்கமாகத் திரிந்தார். காற்றைப் போல வேகமானவையும், அற்புத இனத்தைச் சேர்ந்தவையும், இரத்தத்தால் நனைந்தவையுமான அவரது {துரோணரது} சிவந்த குதிரைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழகான தோற்றத்தை அடைந்தது.

முறையாக நோன்புகளை நோற்கும் அந்த வீரர் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு யமனைப் போல அவர்களை அழிப்பதைக் கண்ட யுதிஷ்டிரனின் படைவீரர்கள் அனைத்துப்பக்கங்களிலும் தப்பி ஓடினர். சிலர் தப்பி ஓடினர், சிலர் திரும்பினர், சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், மேலும் சிலர் அந்தக் களத்திலேயே நின்றனர், அவர்கள் உண்டாக்கிய ஒலி கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. வீரர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி, மருண்டவர்களிடம் அச்சத்தை உண்டாக்கிய அவ்வொலி முழு வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மீண்டும் அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், எதிரிகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி தன்னை மிகக் கடுமையானவராக அமைத்துக் கொண்டார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் துரோணர் முதிர்ந்தவராக இருப்பினும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இளைஞனைப் போலச் செயல்பட்டு, பாண்டுமகனின் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் காலனைப் போலத் திரிந்து கொண்டிருந்தார். தலைகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடங்களையும் துண்டித்த அந்தக் கடும் வீரர் {துரோணர்}, தேர்த்தட்டுகள் பலவற்றை வெறுமையானவை ஆக்கி சிங்க முழக்கமிட்டார்.

அவரது {துரோணரது} மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாகவும், அவரது கணைகளின் சக்தியாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, குளிரால் பீடிக்கப்பட்ட மாட்டு மந்தையைப் போல (எதிரிப் படையின்) வீரர்கள் நடுங்கினர். அவரது தேரின் சடசடப்பொலியின் விளைவாகவும், அவரது நாண் கயிற்றின் ஒலியாலும், அவரது வில்லின் நாணொலியாலும் மொத்த ஆகாயமே பேரொலியால் எதிரொலித்தது. அந்த வீரரின் {துரோணரின்} கணைகள், அவரது வில்லில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டு, {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடி, (எதிரியின்) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை மீது பொழிந்தன.

பிறகு, பெரும் சக்தி கொண்ட வில்லைத் தரித்திருந்தவரும், தழல்களை ஆயுதங்களாகக் கொண்ட நெருப்புக்கு ஒப்பானவருமான துரோணரைப் பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் துணிவுடன் அணுகினர். அவர் {துரோணர்}, அவர்களது யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைகளுடன் அவர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினார். அந்தத் துரோணர் பூமியை இரத்தச் சகதியாக்கினார்.

தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடி, அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான தன் கணைகளை ஏவியபடி இருந்த துரோணர், விரைவில் தன் கணைமாரியைத் தவிர வேறேதும் தெரியாதவாறு {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தார். காலாட்படைவீரர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கிடையே துரோணரின் கணைகளைத் தவிர வேறேதும் காணப்படவில்லை. தேர்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுகள் அசைவதைப் போல அவரது தேரின் கொடிமரம் மட்டுமே காணப்பட்டது [2]. தளர்வுக்கு உட்படுத்த முடியாத ஆன்மா கொண்ட {மனம் தளராத} துரோணர், வில்லையும் கணைகளையும் தரித்துக் கொண்டு, கேகய இளவரசர்கள் ஐவரையும், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்} பீடித்து, யுதிஷ்டிரனின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தார்.பிறகு, பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, துருபதன் மகன்கள், காசியின் ஆட்சியாளனான சைப்யன் மகன் [3], சிபி மகிழ்ச்சியுடனும் உரத்த முழக்கங்களுடனும் தங்கள் கணைகளால் அவரை {துரோணரை} மறைத்தனர். தங்கச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, அந்த வீரர்களின் இளம் குதிரைகள் மற்றும் யானைகளின் உடலைத் துளைத்து, தங்கள் சிறகுகளை இரத்தத்தால் பூசிக் கொண்டு பூமிக்குள் நுழைந்தன. கணைகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் போர்வீரர்களின் கூட்டங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, கார்மேகத் திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயம் போலத் தெரிந்தது.பிறகு துரோணர், உமது மகன்களின் செழிப்பை விரும்பி, சாத்யகி, பீமன், தனஞ்சயன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துருபதன், காசியின் ஆட்சியாளன் ஆகியோரின் படைப்பிரிவுகளை நசுக்கி, போரில் பல்வேறு வீரர்களைத் தரையில் வீழ்த்தினார். உண்மையில், அந்த உயர் ஆன்ம வீரர் {துரோணர்} இவற்றையும் இன்னும் பல சாதனைகளையும் அடைந்து, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} சொர்க்கத்திற்குச் சென்றார். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவரும், தங்கத் தேரைக் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, பெரும் சாதனைகளை அடைந்து, போரில் பாண்டவ வீரர்களின் கூட்டத்தை ஆயிரக்கணக்கில் கொன்று, இறுதியாகத் திருஷ்டத்யும்னனால் தானே கொல்லப்பட்டார்.

உண்மையில், துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான இரண்டு {2} அக்ஷௌஹிணிக்கு [4] மேலான படை வீரர்களைக் கொன்றவரும், புத்திக்கூர்மை மிக்கவருமான அந்த வீரர் {துரோணர்}, இறுதியாக உயர்ந்த நிலையை அடைந்தார். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவர் {துரோணர்}, இறுதியில் கொடுஞ்செயல்புரிந்த பாஞ்சாலர்களாலும் பாண்டவர்களாலும் கொல்லப்பட்டார்.போரில் ஆசான் {துரோணர்} கொல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ! இது நிந்திக்கத்தக்கது” என்ற உயிரினங்களின் கதறல் வானத்திலும், பூமியிலும், இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலும், திசைகள் மற்றும் துணைத்திசைகளிலும் எதிரொலித்துக் கேட்கப்பட்டது. தேவர்கள், பித்ருக்கள், அவரது {துரோணரின்} நண்பர்கள் ஆகிய அனைவரும் அந்த வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டனர். வெற்றி அடைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தனர். அவர்களது உரத்த கூச்சலால் பூமியே நடுங்கியது” {என்றான் சஞ்சயன்}.

உணர்வுகளை இழந்த திருதராஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 009-துரோணரின் பெருமைகளைச் சொல்லி வருந்திய திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து மயங்கியது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் அதிகமாக ஆயுதங்களை அறிந்த துரோணரைப் பாண்டவர்களும் சிருஞ்சயர்களும் போரில் எவ்வாறு கொன்றனர்? (போரிடும் சமயத்தில்) அவரது தேர் உடைந்ததா? (எதிரியைத்) தாக்கும்போது அவரது வில் ஒடிந்ததா? அல்லது, துரோணர் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் அவர் தனது மரண அடியைப் பெற்றாரா?

ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எதிரிகளால் அவமதிக்கத் தகாத வீரரும், தங்கச் சிறகுகள் கொண்ட அடர்த்தியான கணைகளின் மாரியை இறைப்பவரும், கர நளினம் {லாகவம்} கொண்டவரும், பிராமணர்களில் முதன்மையானவரும், அனைத்தையும் சாதித்தவரும், போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவரும், பெரும் தூரத்திற்குத் தன் கணைகளை ஏவவல்லவரும், தற்கட்டுப்பாடு கொண்டவரும், ஆயுதங்களின் பயன்பாட்டில் பெரும் திறம்பெற்றவரும், தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவரும், மங்காத புகழ் கொண்டவரும், எப்போதும் கவனம் நிறைந்தவரும், போரில் கடுஞ்சாதனைகளை அடைந்தவருமான அந்த வலிமைமிக்க வீரரை {துரோணரைப்} பாஞ்சால இளவரசனான அந்தப் பிருஷதன் மகன் (துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்) எவ்வாறு கொன்றான்?

நால்வகை ஆயுதங்களைக் கொண்டவரான அந்த வீரர், ஐயோ!, வில்லாளித்தன்மை கொண்ட அந்தத் துரோணர் கொல்லப்பட்டார் என்று நீ சொல்வதாலும், உயர் ஆன்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, துணிச்சல்மிக்கத் துரோணரே கொல்லப்பட்டாரென்பதாலும், முயற்சியை விட விதியே வலிமையானது என வெளிப்படையாக எனக்குத் தெரிகிறது. புலித் தோல்களால் மூடப்பட்டதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது பிரகாசமான தேரில் செல்லும் அந்த வீரர் {துரோணர்} கொல்லப்பட்டதைக் கேட்டு என்னால் துயரைப் போக்க முடியவில்லை.

ஓ! சஞ்சயா, இழிந்தவனான நான், துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்டும் உயிரோடிருப்பதால், பிறரின் துன்பத்தில் விளைந்த துயரத்தால் எவனும் இறப்பதில்லை என்பதில் ஐயமில்லை. விதியே அனைத்திலும் வலியது என்றும், முயற்சி கனியற்றது {பலனற்றது} என்றும் நான் கருதுகிறேன். துரோணரின் மரணத்தைக் கேட்டும், நூறு துண்டுகளாக என் இதயம் உடைந்து போகாததால் கடுமையாக இருக்கும் அது {என் இதயம்} நிச்சயம் இரும்பாலானதே. வேதங்கள், எதிர்காலத்தை அறியும் உளவியல், வில்லாளித்தன்மை ஆகியவற்றின் கல்வியைப் பெற விரும்பி எவருக்காகப் பிராமணர்களும், இளவரசர்களும் காத்திருந்தார்களோ, ஐயோ, அவர் {துரோணர்} எவ்வாறு காலனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்?

பெருங்கடல் வறண்டு போவதைப் போலவோ, மேரு அதன் இடத்தில் இருந்து பெயர்க்கப்படுவதைப் போலவோ, அல்லது ஆகாயத்தில் இருந்து சூரியன் வீழ்வதைப் போலவோ ஆன துரோணரின் வீழ்ச்சியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தீயோரை ஒடுக்குபவராகவும், நல்லோரைக் காப்பவராகவும் அவர் இருந்தார்.

இழிந்த துரியோதனனுக்காகத் தன் உயிரை எவர் கொடுத்தாரோ, எவருடைய ஆற்றலால் என் தீய மகன்களுக்கு வெற்றியில் விருப்பம் உண்டானதோ, எவருடைய புத்திக்கூர்மை பிருஹஸ்பதி அல்லது உசனஸுக்கு {சுக்ராச்சாரியருக்கு} இணையானதோ, ஐயோ, அந்த எதிரிகளை எரிப்பவர் {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார்? [1].

சிவப்பு நிறத்தாலானவையும், தங்க வலையால் மூடப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், போரில் எந்த ஆயுதத்தாலும் தாக்கப்பட முடியாதவையும், பெரும் பலம் கொண்டவையும், உற்சாகமாகக் கனைப்பவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அவரது {துரோணரின்} தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், அந்த வாகனத்தைச் சிறப்பாக இழுத்தவையும், போர்க்களத்தின் மத்தியில் எப்போதும் பாதுகாப்பாக இருந்தவையுமான அவரது பெரிய குதிரைகள் பலவீனமடைந்து மயக்கமுற்றனவா? போரில், சங்கொலிகள் மற்றும் பேரிகையொலிகளைக் கேட்டு முழங்கும் யானைகளின் பிளிறல்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு, விற்களின் நாணொலி, கணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் மழை ஆகியவற்றால் நடுங்காது, தங்கள் தோற்றத்தாலேயே எதிரியின் வீழ்ச்சியை முன்னறிவித்துக் கொண்டு, (கடும் உழைப்பின் விளைவால்) எப்போதும் பெருமூச்சு விடாமல், களைப்பு மற்றும் வலிகள் அனைத்திற்கும் மேலாக இருந்தவையான பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தேரை இழுத்த அந்த வேகமான குதிரைகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டன? அத்தகு குதிரைகளே அவரது தங்கத் தேரில் பூட்டப்பட்டிருந்தன. அத்தகு குதிரைகளே அந்த நரவீரர்களில் {human heroes} முதன்மையானவரால் {துரோணரால்} அதில் {அந்தத் தேரில்} பூட்டப்பட்டது.

பசுந்தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவரால் {துரோணரால்}, ஓ! மகனே {சஞ்சயா}, ஏன் பாண்டவப் படை எனும் கடலைக் கடக்க முடியவில்லை? எந்த வீரர், பிற வீரர்களிடம் எப்போதும் கண்ணீரை வரவழைப்பாரோ, எவருடைய (ஆயுத) அறிவை உலகின் வில்லாளிகள் அனைவரும் நம்பி இருந்தனரோ, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} போரில் அடைந்த சாதனை என்ன? உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்று கொண்டவரும், பெரும் வலிமை கொண்டவருமான துரோணர், உண்மையில் போரில் என்ன செய்தார்?

சொர்க்கத்தில் உள்ள சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், வீரர்களில் முதல்வரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், கடும் சாதனைகளை அடைந்தவருமான அவருடன் {துரோணருடன்} மோதிய தேர்வீரர்கள் யாவர்? தங்கத் தேரைக் கொண்டவரும், பெரும் வலிமையும் பலமும் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைப்பவருமான அவரை {துரோணரைக்} கண்டதும் பாண்டவர்கள் தப்பி ஓடினார்களா? அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் கூடி, பாஞ்சால இளவரசனை (திருஷ்டத்யும்னனைத்) தன் கட்டுக் கயிறாகக் கொண்டு [2] அனைத்துப் பக்கங்களிலும் தன் துருப்புகளால் துரோணரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கினானா?

பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் பிற தேர்வீரர்களைத் தடுத்திருக்க வேண்டும், அதன்பிறகே பாவச்செயல்களைப் புரியும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரைச் சூழ்ந்திருக்க வேண்டும். அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட மூர்க்கமான திருஷ்டத்யும்னனைத் தவிர அந்த வலிமைமிக்க வீரருக்கு {துரோணருக்கு} மரணத்தைக் கொடுக்கக்கூடிய வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. கேகயர்கள், சேதிகள், கரூசர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் பிற மன்னர்கள், பாம்பை மொய்க்கும் எறும்புகளைப் போல ஆசானை {துரோணரைச்} சூழ்ந்திருந்த போது, அவர் {துரோணர்} ஏதோ ஒரு கடுமையான சாதனையில் ஈடுபட்டிருக்கும்போதே இழிந்தவனான திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றிருப்பான் என்று தெரிகிறது. இதுவே என் எண்ணம்.

வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதான (ஐந்தாவது வேதமான) வரலாறுகளையும் {புராணங்களையும்} கற்று, ஆறுகளுக்குக் கடலைப் போலப் பிராமணர்களுக்குப் புகலிடமாக இருந்த அந்த எதிரிகளை எரிப்பவர் எவரோ, பிராமணர் மற்றும் க்ஷத்திரியர் என இருவகையில் வாழ்ந்தவர் எவரோ, ஐயோ! வயதால் முதிர்ந்த அந்தப் பிராமணர் {துரோணர்} ஆயுத முனையில் எவ்வாறு தன் முடிவைச் சந்தித்திருக்க முடியும்? பெருமைமிகுந்தவராக இருப்பினும், என் காரணமாக அவர் அவமானத்தையும், துன்பத்தையும் அடைய நேர்ந்ததே. தகாதவராக இருப்பினும் அவர் குந்தி மகனின் {அர்ஜுனனின்} கைகளால் தன் நடத்தைக்கான கனியை அடைந்தார் [3]. உலகத்தில் வில் தரிப்போர் அனைவரும் எவரது சாதனைகளை நம்பியிருக்கிறார்களோ, உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவரும், பெரும் திறன் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, ஐயோ, செல்வத்தை விரும்பும் நபர்களால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்டு சொர்க்கத்தில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போல உலகத்தில் முதன்மையான அவர் {துரோணர்}, ஐயோ, சிறுமீனால் கொல்லப்படும் திமிங்கலத்தைப் போலப் பார்த்தர்களால் {பாண்டவர்களால்} எவ்வாறு கொல்லப்பட முடியும்? வெற்றியை விரும்பும் எந்த வீரனும் எவரிடம் உயிரோடு தப்ப முடியாதோ, வேத அன்பை விரும்புவோரின் வேத ஒலி, வில்லாளித்தன்மையில் திறத்தை விரும்புவோரின் விற்களால் உண்டான நாணொலி ஆகிய இரண்டும் எவரிடம் நீங்காதிருந்ததோ, ஒருபோதும் உற்சாகமிழக்காமல் எவர் இருந்தாரோ, ஐயோ, செழிப்பைக் கொண்டவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவருமான அந்த வீரர், சிங்கத்திற்கோ, யானைக்கோ ஒப்பான ஆற்றலைக் கொண்ட அந்த வீரர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் இறந்தார் என்ற கருத்தையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை [4]. எவருடைய புகழ் மங்கவில்லையோ, எவருடைய வலிமை அவமதிக்கப்பட்டதில்லையோ அந்த வெல்லப்பட முடியாத வீரரை {துரோணரை}, மனிதர்களில் முதன்மையானோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} போரில் எவ்வாறு கொல்ல முடியும்?துரோணருக்கு முன்பும், அவருக்குப் பக்கத்திலும் நின்று அவரைப் பாதுகாத்தபடி போரிட்டவர்கள் யாவர்? அடைவதற்குக் கடினமான அந்த முடிவை அடையும்போது, அவருக்குப் பின்புறத்தில் சென்றவர்கள் யாவர்? துரோணரின் வலது மற்றும் இடது சக்கரங்களைப் பாதுகாத்த உயர் ஆன்ம வீரர்கள் யாவர்? போரில் அந்த வீரர் {துரோணர்} போராடிக்கொண்டிருந்த போது அவருக்கு முன்னிலையில் இருந்தவர் யாவர்? அந்தச் சந்தர்ப்பத்தில், தங்கள் உயிரையே விடத்துணிந்து, முகத்துக்கு முகமாக மரணத்தைச் சந்தித்தவர்கள் யாவர்? துரோணரின் போரில் இறுதிப் பயணத்தில் சென்ற வீரர்கள் யாவர்?

துரோணரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அந்த க்ஷத்திரியர்களில் எவராவது தங்களைப் பொய்யர்களாக நிரூபித்துக் கொண்டு அந்த வீரரை {துரோணரைப்} போரில் கைவிட்டனரா? அப்படிக் கைவிடப்பட்டுத் தனியாக இருந்தபோது எதிரியால் அவர் {துரோணர்} கொல்லப்பட்டாரா? பெரும் ஆபத்திலேயே இருந்தாலும் அச்சத்தால் போரில் எப்போதும் புறமுதுகிடாதவர் துரோணர். அப்படியிருக்கையில் எதிரியால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஓ! சஞ்சயா, பெரும் துன்பத்தில் இருந்தாலும் கூட, ஒரு சிறப்பு மிகுந்த மனிதன் தன் வலிமையின் அளவுக்குத் தக்க தன் ஆற்றலைப் பயன்படுத்துவான். இவையாவும் துரோணரிடம் இருந்தன. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, நான் என் புலனுணர்வை இழக்கிறேன். இந்த உரையாடல் சிறிது நேரம் நிற்கட்டும். என் உணர்வுகள் மீண்ட பிறகு, ஓ! சஞ்சயா, மீண்டும் உன்னை நான் கேட்கிறேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.

திருதராஷ்டிரனின் விசாரணை! – துரோண பர்வம் பகுதி – 010-தன் படைவீரர்களில் யார் யார், பாண்டவர்களில் யார் யாரைத் துரோணரை அணுகவிடாமல் தடுத்தனர் எனச் சஞ்சயனிடம் கேட்கும் திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூத மகனிடம் {சஞ்சயனிடம்} இப்படிப் பேசிய திருதராஷ்டிரன், அதீத துயரத்தால் இதயம் பீடிக்கப்பட்டும், தன் மகனின் {துரியோதனனின்} வெற்றியில் நம்பிக்கையிழந்தும் தரையில் விழுந்தான். உணர்வுகளை இழந்து கீழே விழுந்த அவனைக் {திருதராஷ்டிரனைக்} கண்ட அவனது பணியாட்கள் {தாதிகள்}, அவனுக்கு விசிறிவிட்டுக் கொண்டே நறுமணமிக்கக் குளிர்ந்த நீரை அவன் மீது தெளித்தனர். அவன் {திருதராஷ்டிரன்} விழுந்ததைக் கண்ட பாரதப் பெண்மணிகள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளால் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} மென்மையாகத் தடவிக் கொடுத்தனர். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், அந்த அரசப் பெண்மணிகள் தரையில் இருந்த மன்னனை மெதுவாக எழுப்பி அவனை {திருதராஷ்டிரனை} அவனது ஆசனத்தில் இருத்தினார்கள். மன்னன் {திருதராஷ்டிரன்} இருக்கையில் இருந்தாலும் மயக்கத்தின் ஆதிக்கத்திலேயே தொடர்ந்து நீடித்தான். அவனைச் சுற்றி நின்று அவர்கள் விசிறிவிட்ட போது, அவன் {திருதராஷ்டிரன்} முற்றிலும் அசைவற்று இருந்தான். பிறகு, அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு, அவன் மெல்ல தனது உணர்வுகளை மீண்டும் பெற்றான். பிறகு, அவன் {திருதராஷ்டிரன்}, சூத சாதியைச் சேர்ந்த கவல்கணன் மகனிடம் {சஞ்சயனிடம்}, போரில் நேர்ந்த சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தன் ஒளியால் இருளை விலக்கும் உதயச் சூரியனைப் போன்றவனும், கோபம் கொண்ட மதயானையைப் போல எதிரியை எதிர்த்து வேகமாக விரைபவனும், பெண் யானையோடு சேருவதற்காகப் பகை யானையை எதிர்த்துச் செல்லும் மதயானையைப் போன்றவனும், பகைக்கூட்டங்களின் படைத்தலைவர்களால் வெல்லப்பட முடியாதவனுமான அந்த அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} வந்த போது, துரோணரிடம் செல்ல விடாமல் அவனைத் தடுத்த (என் படையின்) வீரர்கள் யாவர்?

மனிதர்களில் முதன்மையானவனும், போரில் என் படையின் துணிச்சல்மிக்க வீரர்கள் பலரைக் கொன்றவனும், வலிமைமிக்கக் கரங்களையும், புத்திக்கூர்மையையும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலையும் படைத்த வீரமிக்க இளவரசனும், எவரின் துணையுமின்றித் தன் பார்வையால் மட்டுமே துரியோதனனின் மொத்த படையையும் எரிக்கவல்லவனும், வெற்றியில் விருப்பம் கொண்டவனும், வில்லாளியும், மங்காப் புகழ் கொண்ட வீரனும், முழு உலகத்திலும் தற்கட்டுப்பாடு கொண்ட ஏகாதிபதி என்று மதிக்கப்படுபவனான அந்த வீரனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து {அவனைத் தடுத்த} (என் படையின்) வீரர்கள் யாவர்?

வெல்லப்பட முடியாத இளவரசனும், மங்காப் புகழ் கொண்ட வில்லாளியும், மனிதர்களில் புலியும், குந்தியின் மகனும், எதிரியை எதிர்த்து எப்போதும் பெரும் சாதனைகளைச் செய்யும் வலிமைமிக்க வீரனும், பெரும் உடற்கட்டும், பெரும் துணிவும் கொண்ட வீரனும், பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரான பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமசேனன் பெரும் வேகத்துடன் துரோணரிடம் வந்த போது, ஓ! என் படையை நோக்கி விரைந்து வந்த அவனைச் சூழ்ந்து கொண்ட என் படையின் துணிச்சல்மிக்கப் போராளிகள் யாவர்?

மேகங்களின் திரளைப் போலத் தெரிபவனும், மேகங்களைப் போலவே இடிகளை வெளியிடுபவனும், மழை பொழியும் இந்திரனைப் போலவே கணைமாரி பொழிபவனும், தன் உள்ளங்கைகளின் தட்டல்கள் மற்றும் தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்பவனும், மின்னலின் கீற்றைப் போன்ற வில்லைக் கொண்டவனும், தன் சக்கரங்களின் சடசடப்பொலியையே முழக்கங்களாகக் கொண்ட மேகத்துக்கு ஒப்பான தேரைக் கொண்டவனும், தன் கணைகளின் “விஸ்” ஒலியாலே மிகக் கடுமையானவனாகத் தெரிபவனும், பயங்கரமான மேகத்துக்கொப்பான கோபத்தைக் கொண்டவனும், புயலைப் போன்றோ, மேகத்தைப் போன்ற வேகத்தைக் கொண்டவனும், எதிரியின் முக்கிய அங்கங்களையே எப்போதும் துளைப்பவனும், கணைகளைத் தரித்துக் கொண்டு பயங்கரமாகத் தோன்றுபவனும், காலனைப் போலவே திசைகள் அனைத்தையும் மனிதக் குருதியால் குளிக்க வைப்பவனும், கடுமுழுக்கம் செய்பவனும், பயங்கர முகத்தோற்றம் கொண்டவனும், காண்டீவத்தைத் தரித்துக் கொண்டு, துரியோதனன் தலைமையிலான என் வீரர்களின் மேல் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கழுகிறகுகளால் ஆனவையுமான கணைகளைத் தொடர்ச்சியாகப் பொழிபவனும், பெரும் புத்திக்கூர்மை கொண்ட வீரனும், பெரும் சக்தி கொண்ட தேர்வீரனுமான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} உங்களிடம் வந்த போது, ஐயோ, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பெரும் குரங்கைத் தன் கொடியில் கொண்ட அந்த வீரன், அடர்த்தியான கணை மழையால் ஆகாயத்தைத் தடுத்தபோது, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட உங்கள் மன நிலை எப்படி இருந்தது? அர்ஜுனன், தான் வரும் வழியிலேயே கடும் சாதனைகளை அடைந்து, காண்டீவத்தின் நாணொலியால் உங்கள் துருப்புகளைக் கொன்றபடி உங்களை எதிர்த்தானா? சூறாவளியானது சேர்ந்திருக்கும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலவோ, நாணற்காடுகளை அவற்றின் ஊடாகப் பாய்ந்து சாய்ப்பதைப் போலவோ தனஞ்சயன் {அர்ஜுனன்} [1] உங்கள் உயிர்களை எடுத்தானா? காண்டீவதாரியை {அர்ஜுன்னைப்} போரில் தாங்கிக் கொள்ள வல்ல மனிதன் எவன் இருக்கிறான்? (பகையணியின்) படையின் முகப்பில் இவன் {அர்ஜுனன்} இருக்கிறான் என்று கேட்டாலே, ஒவ்வொரு எதிரியின் இதயமும் இரண்டாகப் பிளந்து விடுமே!துருப்புகள் நடுங்கி, வீரர்களே கூட அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் போரில், துரோணரைக் கைவிடாமல் இருந்தோர் யாவர்? அச்சத்தால் அவரை {துரோணரைக்} கைவிட்ட கோழைகள் யாவர்? போரில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட போராளிகளையும் வீழ்த்திய தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வடிவத்தில் வந்த காலனை {மரணத்தை} உயிருக்குக் கிஞ்சிற்றும் அஞ்சாமல் முகத்துக்கு முகம் நேராகச் சந்தித்தோர் யாவர்? மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான காண்டீவ ஒலியையும், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வரும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} வேகத்தையும் என் துருப்புகள் தாங்க இயன்றவையல்ல. விஷ்ணுவை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போர் வீரனாகவும் கொண்ட அந்தத் தேர், தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்தாலும் வீழ்த்தப்பட முடியாதது என்றே நான் கருதுகிறேன்.

மென்மையானவனும், இளைஞனும், துணிச்சல்மிக்கவனும், மிக அழகிய முகத் தோற்றம் கொண்டவனும், புத்திக்கூர்மை, திறம் மற்றும் விவேகத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான நகுலன், பேரொலியுடன் பகைவீரர்கள் அனைவரையும் பீடித்து, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை {நகுலனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பானவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மெச்சத்தகுந்த நோன்புகளை நோற்பவனும், தன் காரியங்களில் கலங்கடிக்கப்பட முடியாதவனும், அடக்கத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் வீழ்த்தப்பட முடியாதவனுமான சகாதேவன் நம்மிடம் வந்தபோது, அவனை {சகாதேவனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சௌவீர மன்னனின் பெரும்படையை நொறுக்கி, சீரான அங்கங்களைக் கொண்ட அழகிய போஜக் கன்னிகையைத் தன் மனைவியாகக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், உண்மை, உறுதி, துணிச்சல் மற்றும் பிரம்மச்சரியத்தை எப்போதும் கொண்டவனும், பெரும் வலிமையைக் கொடையாகக் கொண்டவனும், எப்போதும் உண்மை பயில்பவனும், எப்போதும் உற்சாகமிழக்காதவனும், வெல்லப்பட முடியாதவனும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், அவனாலேயே {கிருஷ்ணனாலேயே} தன்னைப் போன்ற இரண்டாமவன் என்று கருதப்பட்டவனும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அளித்த கல்வியால் கணைகளைப் பயன்படுத்துவதில் முதன்மையானவனும், ஆயுதங்களில் பார்த்தனுக்கே {அர்ஜுனனுக்கே} இணையான போர்வீரனும், யுயுதானன் என்று அழைக்கப்பட்டவனுமான அந்தச் சாத்யகி, ஓ!, துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?

விருஷ்ணிகளில் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரிலும் பெரும் துணிச்சல் கொண்டவனும், ஆயுதங்களில் (அதன் பயன்பாட்டிலும், அறிவிலும்) ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனுமான அந்தச் சாத்வத குலத்தவனிடம் {சாத்யகியிடம்} ஆற்றல், புகழ், உண்மை {சத்தியம்}, உறுதி, புத்திக்கூர்மை, வீரத்தன்மை, பிரம்மஞானம், உயர்ந்த ஆயுதங்கள் ஆகியன கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} நிலைபெற்றிருக்கும் மூவுலகங்களைப் போல நிலைபெற்றிருக்கின்றன. இந்தச் சாதனைகள் அனைத்தையும் கொண்டவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

பாஞ்சாலர்களில் முதன்மையானவனும், வீரமும், உயர்பிறப்பும் கொண்டவனும், உயர் பிறப்பைக் கொண்ட வீரர்கள் அனைவருக்கும் பிடித்தமானவனும், போரில் நற்செயல்களையே செய்பவனும், அர்ஜுனனின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் இளவரசனும், என் தீமைக்காகவே பிறந்தவனும், யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ}, ஆதித்யனுக்கோ, மகேந்திரனுக்கோ, வருணனுக்கோ இணையானவனும், பெரும் தேர்வீரனாகக் {மாகரதனாகக்} கருதப்படும் இளவரசனும், போரின் களத்தில் தன் உயிரையே விடத் துணிந்தவனுமான உத்தமௌஜஸ்ஸை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சேதிகளில் தனி வீரனாக வெளிப்பட்டு, அவர்களைக் {சேதிகளைக்} கைவிட்டு பாண்டவர்களின் தரப்பை அரவணைத்த திருஷ்டகேது, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை எதிர்த்தவர்கள் (என் படைவீரர்களில்) யாவர்?

கிரிவ்ராஜத்தில் [2] பாதுகாப்பாக இருந்த இளவரசன் துர்ஜயனைக் கொன்ற துணிச்சல்மிக்கக் கேதுமான், துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?மனிதர்களில் புலியும், தன் (மேனியின்) ஆண்மை மற்றும் பெண்மையின் தகுதிகளையும், தகுதியின்மைகளையும் அறிந்தவனும் [3]யக்ஞசேனன் {துருபதன்} மகனும், போரில் உயர் ஆன்ம பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தவனுமான சிகண்டி துரோணரை நோக்கி விரைந்த போது அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்?விருஷ்ணி குலத்தின் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரின் தலைவனும், தனஞ்சயனை {அர்ஜுனனை} விடப் பெரும் அளவுக்கான சாதனைகள் அனைத்தையும் கொண்ட துணிவுமிக்க வீரனும், ஆயுதங்கள், உண்மை, பிரம்மச்சரியம் ஆகிவற்றை எப்போதும் கொண்டவனும், சக்தியில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பலத்தில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கும்} இணையானவனும், ஆதித்யனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், பிருஹஸ்பதிக்கு இணையான புத்தியைக் கொண்டவனும், வாயை அகலத் திறந்த காலனுக்கு ஒப்பானவனுமான அந்த உயர் ஆன்ம அபிமன்யு, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்? பயங்கர அறிவு கொண்ட இளைஞனும், பகையணி வீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ!, துரோணரை நோக்கி விரைந்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

மனிதர்களில் புலிகளான திரௌபதியின் மகன்கள், கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போலப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்த போது அவர்களைச் சூழ்ந்து கொண்ட வீரர்கள் யாவர்?

பனிரெண்டு வயதிலேயே (குழந்தைத்தனமான) விளையாட்டுகள் அனைத்தையும் கைவிட்ட பிள்ளைகளும், சிறப்பு மிக்க நோன்புகளை நோற்றவர்களும், ஆயுதங்களுக்காகப் பீஷ்மரிடம் காத்திருந்தவர்களும், திருஷ்டத்யும்னனின் வீர மகன்களுமான க்ஷத்ரஞ்சயன், க்ஷத்ரதேவன், கர்வத்தைப் போக்கும் க்ஷத்ரவர்மன், மனதன் ஆகியோர், ஓ, துரோணரை அணுகாதபடித் தடுத்தது யார்?

போரில் நூறு தேர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக விருஷ்ணிகளால் கருதப்படும் சேகிதானன் துரோணரை அணுகாதபடி, ஓ!, அந்தப் பெரும் வில்லாளியைத் தடுத்தது யார்? [4]அறம்சார்ந்தோரும், ஆற்றல் கொண்டோரும், தடுக்கப்பட முடியாதோரும், இந்திரகோபகம் என்றழைக்கப்படும் பூச்சிகளின் நிறத்துக்கு ஒப்பானோரும், சிவப்புக் கவசங்கள், சிவப்பு ஆயுதங்கள் மற்றும் சிவப்பு கொடிகளைக் கொண்டோரும், பாண்டவர்களுக்குத் தாய்வழி முறையில் தம்பிகளும் [5], பின்னவர்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவர்களுமான கேகயச் சகோதரர்கள் ஐவர், துரோணரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கி விரைந்த போது, அந்த வீரமிக்க இளவரசர்களை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?போரின் தலைவனும், வில்லாளிகளில் முதன்மையானவனும், குறிதவறா வீரனும், பெரும் பலம் கொண்டவனும், வாரணாவதத்தில் எவனைக் கொல்ல விரும்பி கோபம் நிறைந்த மன்னர்கள் பலர் சேர்ந்து ஆறு மாதங்கள் ஒன்றாகப் போரிட்டும் வீழ்த்தப்பட முடியாதவனான மனிதர்களில் புலியும், (சுயம்வரத்தில்) ஒரு கன்னியை மனைவியாக அடைய விரும்பி வலிமைமிக்கத் தேர்வீரனான காசியின் இளவரசனை ஒரு பல்லத்தினால் வாரணாசி போரில் வீழ்த்தியவனுமான யுயுத்சுவை, ஓ!, தடுத்த (என் படையின்) வீரன் யார்?

பாண்டவர்களின் ஆலோசகர்களின் தலைவனும், துரியோதனனுக்குத் தீமை செய்வதில் ஈடுபடுபவனும், துரோணரின் அழிவுக்காக உண்டாக்கப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன், போரில் என் வீரர்கள் அனைவரையும் எரித்து என் படையணிகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு துரோணரை நோக்கிச் சென்ற போது, அந்த வலிமைமிக்க வில்லாளியை {திருஷ்டத்யும்னனை}, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், துருபதன் மடியிலேயே வளர்க்கப்பட்டவனும், (அர்ஜுனனின்) ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்டவனுமான சிகண்டியை [6], ஓ!, துரோணரை அணுகவிடாதபடித் தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?இந்தப் பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் தோல்கச்சையாகச் சுற்றியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், எதிரிகளைக் கொல்வோர் அனைவரிலும் முதன்மையானவனும், சிறந்த உணவு, பானம் மற்றும் கொடைகளை அபரிமிதமாக அளித்துப் பத்து குதிரை வேள்விகளை {அஸ்வமேத யாகங்களைத்} தடையில்லாமல் செய்தவனும், தன் குடிமக்களைத் தன் பிள்ளைகளைப் போல எண்ணி ஆண்டவனும், கங்கையின் ஓடையில் உள்ள மணற்துகள்களைப் போல எண்ணிலாத பசுகளை வேள்விகளில் தானமாக அளித்தவனும், வேறு யாராலும் செய்யப்படாத, இனியும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தவனும், கடுமையான சாதனைகளைச் செய்த பிறகு “உசீநரன் மகனுக்கு இணையாக, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகத்திலும் வேறு இரண்டாம் உயிரினத்தை நாங்கள் காண வில்லை. மனிதர்களால் அடையப்பட முடியாத (மறுமையில்) உலகங்களை அடைந்தோரிலும் இவனைப் போல எவனும் இல்லை. இனியும் இருக்க மாட்டான்” என்று தேவர்களாலேயே சொல்லப்பட்டவனும், உசீநரன் மகனின் பேரனுமான அந்தச் சைப்யன் (துரோணரிடம்) வந்த போது, ஓ, (என் படைகளுக்கு மத்தியில்) தடுத்தவர் யார்?

மத்ஸ்யர்களின் மன்னனான விராடனின் தேர்ப் பிரிவானது போரில் துரோணரை அடைந்த போது, அதைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

என் மகன்களுக்கு முள்ளாக இருந்தவனும், பாண்டவர்களின் வெற்றியை எப்போதும் விரும்பும் வீரனும், பெரும் மாய சக்திகளையும், பெரும் பலம் மற்றும் ஆற்றலையும் கொண்ட வீர ராட்சசனும், ஒரே நாளில் பீமனுக்குப் பிறந்தவனும் [7], யாரிடம் நான் பெரும் அச்சங்களைக் கொண்டிருந்தேனோ அந்தப் பெரும் உடல் கொண்ட ராட்சசன் கடோத்கசனைத் துரோணரிடம் அணுகமுடியாதபடிச் செய்தவன் யார்?ஓ! சஞ்சயா, யாருக்காக இவர்களும் இன்னும் பலரும் போர்க்களத்தில் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களோ அவர்களால் எதைத்தான் வெல்லமுடியாது?

சார்ங்கம் {சாரங்கம்} என்று அழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் பெரியவனும் ஆனவனே {கிருஷ்ணனே} அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} புகலிடமாகவும், நன்மை செய்பவனாகவும் இருக்கும்போது, அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் தோல்வியைச் சந்திப்பது எவ்வாறு? உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} உலகங்கங்கள் அனைத்தின் பெரும் ஆசானும், அனைத்தின் தலைவனும், நிச்சயமானவனும் ஆவான். தெய்வீக ஆன்மாவும் எல்லையில்லா சக்தியும் கொண்ட {அந்த} நாராயணனே போரில் மனிதர்களுக்குப் புகலிடமாவான். விவேகிகள் அவனது தெய்வீகச் செயல்களை உரைக்கின்றனர். எனது உறுதியை மீட்பதற்காக நானும் அவை அனைத்தையும் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உரைப்பேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.

கிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 011- கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.

ஓ! சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.

பலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.பசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.

அதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.போரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.

பெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].வலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.

தன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.

அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.

அவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ! சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.

பழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.

அந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.

வலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.

வீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.மன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.

ஓ! சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்?

அர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ! சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண இயலவில்லை.

கதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.ஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.

ஓ! சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா? ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.

கௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும்? எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.

அர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்தக் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.

இந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].பீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ! சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்?

பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ! சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ அந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.அனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}. 

வரமளித்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 012-துரியோதனனுக்கு வரமொன்றை அளிப்பதாகச் சொன்ன துரோணர்; யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க வேண்டிய துரியோதனன்; வரமளித்த துரோணர்; துரோணரின் உறுதியை படையினரிடம் வெளிப்படுத்திய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சரி, என் கண்களால் அனைத்தையும் கண்டவாறே, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கொல்லப்பட்ட துரோணர் எப்படி வீழ்ந்தார் என்பதை நான் உமக்கு விவரிப்பேன்.

துருப்புகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்} துருப்புகள் அனைத்தின் மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவர்களில் காளையான கடலுக்குச்செல்பவள் (கங்கையின்) மகனுக்கு {பீஷ்மருக்குப்} பிறகு, துருப்புகளின் தலைமைப் பொறுப்பில் உடனே நிறுவி என்னை மதித்த உனது செயலுக்குத் தகுந்த கனியை {பயனை} நீ அடைவாய். உனது எந்தக் காரியத்தை நான் இப்போது அடைய வேண்டும்? நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” {என்றார் துரோணர்}.

பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் பிறரிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், வெல்லப்பட முடியாத வீரரும், வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான ஆசானிடம் {துரோணரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “நீர் எனக்கு ஒரு வரத்தை அளிப்பதாக இருந்தால், தேர்வீரர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்து, இங்கே என்னிடம் கொண்டு வருவீராக” {என்றான் துரியோதனன்}.

பிறகு, அந்தக் குருக்களின் ஆசான், உமது மகனின் {துரியோதனனின்} அவ்வார்த்தைகளைக் கேட்டுத் துருப்புகள் அனைத்தையும் மகிழ்விக்கும் வண்ணம் அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்வரும் பதிலைச் சொன்னார், “எவனைக் கைப்பற்றுவதை நீ விரும்புகிறாயோ, அந்தக் குந்தியின் மகன் (யுதிஷ்டிரன்) பாராட்டுக்குரியவன். ஓ! வீழ்த்தப்படக் கடினமானவனே {துரியோதனா}, வேறு எந்த வரத்தையோ, (உதராணமாக) அவனது கொலையையோ நீ கேட்கவில்லை. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, எக்காரணத்திற்காக நீ அவனது மரணத்தை விரும்பவில்லை? ஓ! துரியோதனா, கொள்கையில் அறியாமை கொண்டவனல்ல நீ என்பதில் ஐயமில்லை. எனவே, யுதிஷ்டிரனின் மரணத்தை ஏன் நீ வேண்டவில்லை? நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனது மரணத்தை விரும்பும் எந்த எதிரியையும் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியமானதாகும். அவன் உயிரோடிருக்க நீ விரும்புகிறாயானால், (ஒன்று) உன் குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முயல்கிறாய், அல்லது, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, போரில் பாண்டவர்களை வீழ்த்தி அவர்கள் நாட்டை அவர்களுக்கே கொடுத்து (அவர்களுடன்) சகோதர உறவை நிறுவ விரும்புகிறாய். அந்தப் புத்திசாலி இளவரசனின் {யுதிஷ்டிரனின்} பிறப்பு மங்கலகரமானது. நீயே கூட அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசம் கொண்டிருப்பதால், அவன் அஜாதசத்ரு (எதிரிகளற்றவன்) என்று உண்மையாகவே அழைக்கப்படுகிறான்” {என்றார் துரோணர்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரால் இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} நெஞ்சில் எப்போதும் இருக்கும் உணர்ச்சியானது திடீரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிருஹஸ்பதியைப் போன்றோராலும் கூடத் தங்கள் முக உணர்ச்சிகளை மூடிமறைக்க முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதனால், மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,

{துரியோதனன் துரோணரிடம்},
 “போரில் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதால், ஓ! ஆசானே {துரோணரே}, வெற்றி எனதாகாது. யுதிஷ்டிரன் கொல்லப்பட்டால், பிறகு நம் அனைவரையும் பார்த்தன் {அர்ஜுனன்} கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. மேலும், அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் தேவர்களாலும் கொல்ல முடியாது. அவ்வழக்கில், அவர்களில் பிழைக்கும் ஒருவனும் கூட நம் அனைவரையும் அழித்துவிடுவான் [1]. எனினும், யுதிஷ்டிரன் தன் உறுதிமொழிகளில் உண்மைநிறைந்தவனாவான். அவனை {யுதிஷ்டிரனை} இங்கே (உயிருடன்) கொண்டு வந்து, மீண்டும் ஒருமுறை பகடையில் வீழ்த்தினால், பாண்டவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆகையால், அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியே நீடித்த ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காகவே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கொலையை எவ்வழியிலும் நான் விரும்பவில்லை” {என்றான் துரியோதனன்}.பொருளாதாய அறிவியலின் {அர்த்த தத்துவங்களின்} உண்மைகளை அறிந்தவரும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவருமான துரோணர், துரியோதனனின் இந்தக் குறுக்குப் புத்தியை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் சிந்தித்துப் பின்வரும் வழியில் அந்த வரத்தைக் கட்டுப்படுத்தி அவனுக்கு அளித்தார்.

துரோணர் {துரியோதனிடம்}, “வீரனான அர்ஜுனன், யுதிஷ்டிரனைப் போரில் பாதுகாக்கவில்லை எனில், அந்த மூத்த பாண்டவன் {யுதிஷ்டிரன்} ஏற்கனவே உன் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நினைத்துக் கொள்வாயாக. பார்த்தனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களால் கூடப் போரில் அவனை எதிர்க்க இயலாது. இதன் காரணமாகவே, நீ செய்யச் சொல்லி என்னிடம் கேட்பதை நான் செய்யத் துணியேன்.

அர்ஜுனன் சீடன் என்பதிலும், ஆயுதங்களில் நானே அவனது முதல் ஆசான் என்பதிலும் ஐயமில்லை. எனினும், அவன் இளமையானவன், பெரும் நற்பேறைக் கொண்டவன், மேலும் (தன் நோக்கங்களைச் சாதிக்க) அதிகப்படியாக முனைபவனுமாவான். மேலும், அவன் {அர்ஜுனன்} இந்திரன் மற்றும் ருத்ரனிடமிருந்த பல ஆயுதங்களை அடைந்திருக்கிறான். {இவை} தவிரவும், அவன் உன்னால் {கோபம்} தூண்டப்பட்டவனாகவும் இருக்கிறான். எனவே, நீ என்னிடம் கேட்டதைச் செய்ய நான் துணியேன்.

செயல்படுத்தக்கூடிய எவ்வழியிலாவது அர்ஜுனன் போரில் இருந்து நீக்கப்படட்டும். பார்த்தன் {அர்ஜுனன்} விலக்கப்பட்டதும், மன்னன் யுதிஷ்டிரன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டதாக நீ கருதலாம். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் அல்ல, அவனைக் கைப்பற்றுவதிலேயே வெற்றி இருக்கிறது. தந்திரத்தால் கூட அவனைக் கைப்பற்றுவது சாதிக்கப்படலாம்.

உண்மையில், மனிதர்களில் புலியான குந்திமகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} களத்தில் இருந்து விலக்கப்பட்டால், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} போரில் என் முன்னிலையில் ஒருக்கணம் நின்றாலும் கூட அவனைக் கைப்பற்றி இன்றே அவனை உன் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பல்குனனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் கூடப் போரில் யுதிஷ்டிரன் பிடிக்க இயலாதவனாவான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வரம்புகளுக்கு உடன்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாகத் துரோணர் உறுதியளித்தாலும், உமது முட்டாள் மகன்கள், யுதிஷ்டிரன் ஏற்கனவே பிடிபட்டதாகவே கருதினர். பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட சார்பு நிலையை {பாரபட்சத்தை} உமது மகன் (துரியோதனன்) அறிவான். எனவே, துரோணரைத் தன் உறுதிமொழியில் நிலைக்கச் செய்யும் பொருட்டு, அவன் {துரியோதனன்} அந்த ஆலோசனைகளை வெளியிட்டான். பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரோணர் (மூத்த) பாண்டவனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாக வாக்குறுதி அளித்த அந்தச் செய்தி, துரியோதனனால் அவனது துருப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது {பிரகடனப்படுத்தப்பட்டது}” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனின் உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 013-துரோணரின் உறுதிமொழியை அறிந்த யுதிஷ்டிரன்; பாண்டவர்கள் ஆலோசனை; யுதிஷ்டிரனைத் தேற்றிய அர்ஜுனன்; போரின் தொடக்கமும், துரோணரின் ஆற்றலும்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வரம்புகளுக்கு உட்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைப்} பிடிக்கத் துரோணர் உறுதியளித்த பிறகு, உமது துருப்பினர், யுதிஷ்டிரன் பிடிபடபோவதைக் ({துரோணரின் அந்த உறுதிமொழியைக்) கேட்டுச் சங்கொலிகள் மற்றும் தங்கள் கணைகளின் “விஸ்” ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்து தங்கள் சிங்க முழக்கங்களைப் பலவாறு வெளியிட்டனர். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} நோக்கம் குறித்த அனைத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் ஒற்றர்கள் மூலம் விரைவில் விரிவாக அறிந்தான்.

பிறகு தன் சகோதரர்கள் அனைவரையும், தன் படையின் பிற மன்னர்கள் அனைவரையும் அழைத்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, துரோணரின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டாய். எனவே, அக்காரியம் சாதிக்கப்படுவதைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவோமாக. எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் தன் உறுதிமொழியை வரம்புகளுக்குட்பட்டுச் செய்திருக்கிறார் என்பது உண்மையே, எனினும், ஓ! பெரும் வில்லாளியே {அர்ஜுனனே}, அவை {அந்த வரம்புகள்} உன்னைச் சார்ந்தவையே. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனன், தன் விருப்பத்தின் கனியை {பலனை} துரோணரிடம் அடையாதவாறு நீ இன்று என் அருகிலேயே நின்று போரிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “எப்படி ஒருபோதும் என்னால் எனது ஆசானை {துரோணரைக்} கொல்ல முடியாதோ, அப்பட்டியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும் என்னால் விட இயலாது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, என் ஆசானை {துரோணரை} எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் நான் போரில் என் உயிரையே விட்டுவிடுவேன் [1]. இந்தத் திருதராஷ்டிர மகன் {துரியோதனன்}, போரில் உம்மைக் கைப்பற்றி, அரசுரிமையை அடைய விரும்புகிறான். இவ்வுலகில் அவன் அந்த விருப்பத்தின் கனியை {பலனை} ஒருபோதும் அடையப் போவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம் விழலாம், பூமி துண்டுகளாகச் சிதறிப் போகலாம், எனினும், நிச்சயம் நான் உயிரோடுள்ளவரை உம்மைப் பிடிப்பதில் துரோணரால் வெல்லவே முடியாது.

வஜ்ரதாரி {இந்திரன்}, அல்லது விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களே அவருக்கு {துரோணருக்குப்} போரில் உதவினாலும், களத்தில் உம்மைக் கைப்பற்றுவதில் அவரால் {துரோணரால்} வெல்லவே முடியாது. நான் உயிரோடுள்ளவரை, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் {துரோணர்} ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரே ஆனாலும், அந்தத் துரோணரிடம் நீர் அச்சங்கொள்வது உமக்குத் தகாது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, என் உறுதிமொழிகள் ஒருபோதும் நிறைவடையாமல் இருந்ததில்லை என்பதையும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

எப்போதும் நான் பொய்மை ஏதும் பேசியிருப்பதாக எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் வீழ்த்தப்பட்டதாகவும் எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் ஓர் உறுதிமொழியைச் செய்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நிறைவேற்றாமல் இருந்ததாக எனக்கு நினைவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு பாண்டவ முகாமில், சங்குகள், பேரிகைகள், படகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஒலிக்கப்பட்டு முழங்கின. உயர் ஆன்ம பாண்டவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தனர். இவையும், அவர்களது வில்லின் பயங்கர நாணொலிகளும், உள்ளங்கை தட்டல்களும் சொர்க்கத்தையே எட்டின. பாண்டுவின் வலிமைமிக்க மகன்களின் முகாமில் இருந்து எழுந்த உரத்த சங்கொலிகளைக் கேட்டு, உமது படைப்பிரிவுகளிலும் பல்வேறு கருவிகள் இசைக்கப்பட்டன. பிறகு உமது படைப்பிரிவுகளும், அவர்களுடையனவும் போருக்காக அணிவகுக்கப்பட்டன. பிறகு போரை விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து மெதுவாக முன்னேறினர். பாண்டவர்கள், குருக்கள் {கௌரவர்கள்}, துரோணர் மற்றும் பாஞ்சாலர்களுக்கு இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையான ஒரு போர் தொடங்கியது.

சிருஞ்சயர்கள் கடுமையாகப் போரிட்டாலும், துரோணரால் பாதுகாக்கப்பட்ட அந்தப் படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அதே போல, தாக்குவதில் திறம்பெற்ற உமது மகனின் {துரியோதனனின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்ட பாண்டவப் படையை வீழ்த்த முடியவில்லை. துரோணர் மற்றும் அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவ்விரு படைகளும், இரவின் அமைதியில் பூத்துக் குலுங்கும் இரு காடுகளைப் போலச் செயலற்று நிற்பதாகத் தெரிந்தது.

பிறகு, தங்கத் தேரைக் கொண்டவர் (துரோணர்), சூரியனைப் போன்ற பெரும் காந்தியைக் கொண்டு, பாண்டவர்களின் படையணிகளை நசுக்கியபடி, தான் விரும்பியவாறெல்லாம் அவர்கள் மத்தியில் திரிந்தார். பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், தாங்கள் கொண்ட அச்சத்தால், பெரும் வேகத்தோடு விரைவாக முன்னேறி வந்த அந்தத் தனி வீரரை {துரோணரை} பலராகக் கருதினர். அவரால் ஏவப்பட்ட பயங்கரக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்து பாண்டு மகனின் படையை அச்சுறுத்தின. உண்மையில் துரோணர், நூற்றுக்கணக்கான கிரணங்களுடன் கூடிய நடுநாள் சூரியனைப் போலவே தெரிந்தார்.

இந்திரனைக் காண இயலாத தானவர்களைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபம் நிறைந்த பரத்வாஜர் மகனை {துரோணரைக்) காண பாண்டவர்களில் ஒருவராலும் இயலவில்லை. பிறகு பரத்வாஜரின் வீர மகன்{துரோணர்}, (பகைவர்) துருப்புகளைக் குழப்பியபடி, கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னன் படைப்பிரைவை வேகமாக எரிக்கத் தொடங்கினார். தன் நேரான கணைகளால் திசைகள் அனைத்தையும் மறைத்துத் தடுத்த அவர், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இருந்த பாண்டவப் படையை நசுக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 014-துரோணர் செய்த போர்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; ஜெயத்ரதனால் அபிமன்யுவிடம் இருந்து உயிர்தப்பிய பௌரவன்; ஜெயத்ரதனை வீழ்த்திய அபிமன்யு; அபிமன்யுவின் ஆற்றல்; சல்லியன் அபிமன்யு மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய துரோணர், (காட்டு) மரங்களை எரிக்கும் தீயைப் போல அதனூடே {பாண்டவப்படையினூடே} திரிந்து கொண்டிருந்தார். தங்கத்தேரைக் கொண்ட அந்தக் கோபக்கார வீரர் {துரோணர்} பெருகும் காட்டுத்தீயைப் போலத் தங்கள் படையணிகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர். பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரரால் {துரோணரால்} தொடர்ந்து வளைக்கப்பட்ட வில் உண்டாக்கிய நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக அந்தப் போரில் கேட்கப்பட்டது. கர நளினம் {லாகவம்} கொண்ட துரோணரால் ஏவப்பட்ட கடுங்கணைகள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய தேர்வீரர்களையும், குதிரைவீரர்களையும், யானைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கத் தொடங்கின.

வேனிற்காலத்தின் முடிவில் முழங்கும் மேகங்கள் காற்றின் உதவியோடு ஆலங்கட்டிகளைப் பொழிவதைப் போலக் கணைகளைப் பொழிந்த அவர் {துரோணர்}, எதிரியின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தினார். (பகையணிகளின் ஊடாகத்) திரிந்து துருப்புகளைக் கலங்கடித்த வலிமைமிக்கத் துரோணர், எதிரியிடம் இயல்புக்குமீறிய அச்சத்தை அதிகமாக்கினார். வேகமாக நகரும் அவரது தேரில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில் கார்மேகத் திரளுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுக்கு ஒப்பாக அடிக்கடி தென்பட்டது.

உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவரும், விவேகம் கொண்டவரும், நீதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்} யுகத்தின் முடிவில் தென்படும் கோப ஊற்றாலான பயங்கர ஆறு ஒன்றை அங்கே பாயச் செய்தார். துரோணருடைய கோபத்தின் வேகத்தில் இருந்த அந்த ஆற்றின் ஊற்றுக் கண் ஊனுண்ணும் உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது. போராளிகள் அதன் முழுப் பரப்பிலான அலைகளாக இருந்தனர். வீரமிக்கப் போர்வீரர்கள் அதன் ஊற்றால் வேர்கள் தின்னப்பட்டு, அதன் கரைகளில் நிற்கும் மரங்களாக இருந்தனர்.

அந்தப் போரில் சிந்தப்பட்ட குருதி அதன் நீரானது, தேர்கள் அதன் நீர்ச்சுழலாகவும், யானைகளும் குதிரைகளும் அதன் கரைகளாகவும் அமைந்தன. கவசங்கள் அதன் அல்லிகளாகவும், உயிரினங்களின் இறைச்சி அதன் படுகையில் உள்ள சகதியாகவும் இருந்தன. (வீழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின்) கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் அதன் மணற்பரப்பாகவும், தலைப்பாகைகள் அதன் நுரைகளாகவும் அமைந்தன. மேலும் அங்கே நடைபெற்ற போரானது அதன் பரப்புக்கு மேலுள்ள கவிகையாகியது. வேல்கள் எனும் மீன்களால் அது நிறைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையில் (கொல்லப்பட்ட) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் விளைவால் (அதில் விழுந்ததால்) அஃது அடைவதற்கரிதானதாக இருந்தது.

ஏவப்பட்ட கணையின் வேகம் அதன் நீரூற்றாக இருந்தது. கொல்லப்பட்ட உடல்கள் அதில் மிதக்கும் மரங்களாகின. தேர்கள் அதன் ஆமைகளாகின. தலைகள், அதன் கரைகளில் சிதறிக் கிடக்கும் கற்களாகின, வாள்கள் மீன்களாக அபரிமிதமாக இருந்தன. தேர்களும், யானைகளும், அதன் தடாகங்களாகின. மேலும் அது பல்வேறு ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அதன் நூற்றுக்கணக்கான நீர்ச்சுழல்களாகினர். பூமியின் புழுதி அதன் அலைவரிசைகளாகின. பெரும் சக்தி கொண்டோரால் எளிதில் கடக்கத்தக்கதாகவும், மருண்டவர்களால் கடக்கமுடியாததாகவும் அஃது இருந்தது.

உயிரற்ற உடல்களின் குவியல்கள் அதன் ஓட்டத்தைத் தடுக்கும் மணற்படுகைகளாகின. கங்கங்கள், கழுகுகள் மற்றும் இரைதேடும் பிற பறவைகள் மொய்க்கும் இடமாக அஃது இருந்தது. ஆயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களை அது யமலோகத்திற்கு அடித்துச் சென்றது. நீண்ட ஈட்டிகள் அதன் பாம்புகளாக அதில் பரவிக் கிடந்தன. உயிருடன் இருந்த போராளிகள் அதன் நீர்களில் விளையாடும் நீர்வாழ் உயிரிகளாகினர். கிழிந்த குடைகள் அதன் பெரிய அன்னங்களாகின. கிரீடங்கள் அதை அலங்கரித்த (சிறு) பறவைகளாகின. சக்கரங்கள் அதன் ஆமைகளாகவும், கதாயுதங்கள் அதன் முதலைகளாகவும், கணைகள் அதன் சிறு மீன்களாகவும் இருந்தன. காகங்கள், கழுகுகள் மற்றும் நரிகளின் பொழுதுபோக்கிடமாக அஃது இருந்தது.

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆறு போரில் துரோணரால் கொல்லப்பட்ட உயிரினங்களை நூற்றுக்கணக்கில் பித்ருலோகத்திற்கு அழைத்துச் சென்றது. (அதில் மிதக்கும்) நூற்றுக்கணக்கான உடல்களால் தடுக்கப்பட்ட அது (கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் விலங்குகளின்) முடிகளைப் பாசிகளாகவும், புற்களாகவும் கொண்டிருந்தது. துரோணர் அங்கே ஓடச்செய்த ஆறு இப்படியே மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.

அங்கேயும் இங்கேயும் எனத் துரோணர் பகையணியை இப்படிக் கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் விரைந்து சென்றனர். அவர்கள் இப்படி (துரோணரை நோக்கி) விரைவதைக் கண்ட உறுதியான ஆற்றல் கொண்ட உமது படையின் துணிச்சல்மிகு போராளிகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அதன்பிறகு அங்கே தொடர்ந்த போரானது மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

நூறு வகைகளிலான வஞ்சனைகள் நிறைந்த சகுனி, சகாதேவனை நோக்கி விரைந்து, கூர்முனைக் கணைகள் பலவற்றால் பின்னவனின் {சகாதேவனின்} தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரினைத் துளைத்தான். எனினும், அதிகமாகத் தூண்டப்படாத சகாதேவன், கூரிய கணைகளால் சுபலனின் கொடிமரம், வில், தேரோட்டி மற்றும் தேர் ஆகியவற்றை வெட்டி, அறுபது {60} கணைகளால் சுபலனையும் {சகுனியையும்} துளைத்தான். அதன் பேரில், சுபலனின் மகன் {சகுனி}, கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தன் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சகாதேவனின் தேரோட்டியைப் பின்னவனின் {சகாதேவனின்} தேரில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேரை இழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் {சகுனியும், சகாதேவனும்} இருவரும் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மலைகளின் முகடுகள் இரண்டைப் போலப் போரில் விளையாடினர்.

துரோணர், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைப்} பத்துக் கணைகளால் துளைத்துவிட்டுப் பதிலுக்குப் பின்னவனால் {துருபதனால்} பல கணைகளால் துளைக்கப்பட்டார். பிறகு, மீண்டும் பின்னவன் {துருபதன்} துரோணரால் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் துளைக்கப்பட்டான் [1].பீமசேனன் கூரிய கணைகளால் விவிம்சதியைத் துளைத்தான். எனினும் பின்னவன் {விவிம்சதி}, இப்படித் துளைக்கப்பட்டாலும் நடுங்காதிருந்தது பெரும் ஆச்சரியமாகத் தெரிந்தது. பிறகு விவிம்சதி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திடீரெனப் பீமசேனனை அவனது குதிரைகளையும், கொடியையும், வில்லையும் இழக்கச் செய்தான். அதன்பேரில் துருப்புகள் அனைத்தும் அந்தச் சாதனைக்காக அவனை {விவிம்சதியை} வழிபட்டன. எனினும், வீரபீமசேனன், போரில் தன் எதிரி ஆற்றலை வெளிப்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. எனவே, தன் கதாயுதத்தால், விவிம்சதியின் நன்கு பயிற்சியைப் பெற்ற குதிரைகளைக் கொன்றான். பிறகு வலிமைமிக்க விவிம்சதி, (வாளோடு கூடிய) ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்து, மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மதங்கொண்ட யானையைப் போலப் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.

வீர சல்லியன், சரசம் செய்பவனைப் போலச் சிரித்துக் கொண்டே தன் அன்புக்குரிய மருமகனான நகுலனின்கோபத்தைத் தூண்டுவதற்காகப் பல கணைகளால் அவனை {நகுலனைத்} துளைத்தான். எனினும், வீர நகுலன், தன் மாமனின் {சல்லியனின்} குதிரைகள், குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் வில் ஆகியவற்றை வெட்டி தன் சங்கை முழக்கினான்.

{சேதி மன்னன்} திருஷ்டகேது, கிருபருடன் {போரில்} ஈடுபட்டு, பின்னவர் {கிருபர்} தன்னை நோக்கி ஏவிய பல்வேறு வகைகளிலான கணைகளை வெட்டி, பிறகு, எழுபது{70} கணைகளால் கிருபரைத் துளைத்தான். பிறகும், மூன்று கணைகளால் கிருபரின் கொடிமரத்திலுள்ள பொறியை {கொடியை} அவன் வெட்டினான். எனினும், கிருபர், அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்க்கத் தொடங்கினார். இவ்வழியில் திருஷ்டகேதுவைத் தடுத்த அந்தப் பிராமணர் {கிருபர்}, அவனுடன் {தொடர்ந்து} போரிட்டுக் கொண்டிருந்தார்.

சாத்யகி, சிரித்துக் கொண்டே ஒரு நாராசத்தைக் கொண்டு கிருதவர்மனின் நடு மார்பைத் துளைத்தான். மேலும் எழுபது {70} கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {சாத்யகி} மீண்டும் பிறவற்றால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். எனினும் அந்தப் போஜப் போர்வீரன் {கிருதவர்மன்}, கூர்முனைகளைக் கொண்ட எழுபது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான். வேகமாகச் செல்லும் காற்று ஒரு மலையை அசைப்பதில் தோற்பதைப் போல, கிருதவர்மனால் சாத்யகியை அசைக்கவோ, அவனை நடுங்கச் செய்யவோ இயலவில்லை.

{துரியோதனன் தம்பியான} சேனாபதி, {பாண்டவத் தரப்பின்} சுசர்மனை அவனது முக்கிய அங்கங்களில் ஆழமாகத் தாக்கினான். சுசர்மனும் ஒரு வேலால் தன் எதிராளியின் தோள்ப்பூட்டில் தாக்கினான் [2].விராடன், பெரும் சக்தி கொண்ட மத்ஸ்ய வீரர்களின் உதவியால், அந்தப் போரில் விகர்த்தனன் மகனை {கர்ணனைத்} தடுத்தான். (மத்ஸ்ய மன்னனின்) அந்தச் சாதனை மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது. சூத மகனின் {கர்ணனின்} பங்குக்கு, அவன் தனியாகவே தன் நேரான கணைகளின் மூலம் மொத்தப்படையையும் தடுத்ததால், அது பெரும் வீரச் செயலாகக் கருதப்பட்டது.

மன்னன் துருபதன், பகதத்தனோடு {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அந்த இருவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போரானது காண்பதற்கு மிக அழகாக இருந்தது [3]. மனிதர்களில் காளையான பகதத்தன், நேரான கணைகள் பலவற்றால், மன்னன் துருபதன், அவனது தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துருபதனோ, ஒரு நேரான கணையால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனின் {பகதத்தனின்} நடு மார்பைத் துளைத்தான்.

ஆயுதங்களை அறிந்த பூமியின் போர்வீரர்களில் முதன்மையான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} மற்றும் சிகண்டி ஆகியோர் இருவரும் கடும்போரில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டது உயிரினங்கள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தது. வீர பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யக்ஞசேனன் மகனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் சிகண்டியை அடர்த்தியான கணைமழையால் மறைத்தான். பிறகு, ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட சிகண்டி, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனை {பூரிஸ்ரவசை} நடுங்கச் செய்தான்.

கடும் செயல்களைப் புரியும் ராட்சசர்களான ஹிடிம்பையின் மகனும் {கடோத்கசனும்}, அலம்புசனும், ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி, மிக அற்புதமாகப் போரிட்டனர். நூறு மாயைகளை உண்டாக்கவல்லவர்களும், செருக்கு பெருகியவர்களுமான அவ்விருவரும், தங்கள் மாய சக்திகளை நம்பி ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி தங்களுக்குள் மிக அற்புதமாகப் போரிட்டனர்.

மூர்க்கமான சேகிதானன், அனுவிந்தனோடு போரிட்டான். சில நேரங்களில் மறைந்து பெரும் அற்புதங்களை ஏற்படுத்தியபடியே அவர்கள் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.

{துரியோதனன் மகன்} லக்ஷ்மணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் (அசுரன்) ஹிரண்யாக்ஷனோடு போரிட்ட விஷ்ணுவைப் போலவே , {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதேவனோடு கடுமையாகப் போரிட்டான்.

பௌரவன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான தன் குதிரைகளோடு கூடிய தேரில் வந்து, அபிமன்யுவை நோக்கி முழங்கினான். பெரும் வலிமை கொண்ட அந்தப் பௌரவன் போரிட விரும்பி அபிமன்யுவை நோக்கி விரைந்தான். பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான அபிமன்யு அந்த எதிரியோடு {பௌரவனோடு} கடுமையாகப் போரிட்டான். பௌரவன் அடர்த்தியான கணை மழையால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதன் பேரில், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின் {பௌரவனின்} கொடிமரம், குடை மற்றும் வில் ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்தினான். பிறகு ஏழு கணைகளால் பௌரவனைத் துளைத்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஐந்து கணைகளால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டி மற்றும் குதிரைகளைத் துளைத்தான். இப்படித் தன் துருப்புகளை மகிழ்ச்சியடையச் செய்த அவன் {அபிமன்யு}, சிங்கம் போல மீண்டும் மீண்டும் கர்ஜனை செய்தான்.

பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பௌரவனின் உயிரை நிச்சயம் எடுக்க வல்ல கணை ஒன்றை தன் வில்லின் நாணில் விரைவாகப் பொருத்தினான். எனினும் அபிமன்யுவின் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட அந்தக் கணையின் பயங்கரத் தோற்றத்தைக் கண்ட ஹ்ருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அந்த வில்லையும், கணையையும் அறுத்தான். பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உடைந்த வில்லை வீசியெறிந்து, பளபளக்கும் வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். பல நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கேடயத்தைப் பெரும் வேகத்தோடு சுழற்றி, அந்த வாளையும் சுழற்றியபடியே தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு அவன் {அபிமன்யு} களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

தன் முன்னே அவற்றை {கேடயத்தையும் வாளையும்} சுழற்றிக் கொண்டும், பிறகு அவற்றை உயர்த்திச் சுழற்றியும், அவற்றை அசைத்தும் {உதறியும்}, உயரக் குதித்தும் அவ்வாயுதங்களை அவன் கையாண்ட விதத்தால், தாக்கும் மற்றும் தற்காக்கும் அந்த ஆயுதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் (அவனிடம்) காண முடியவில்லை. பிறகு, திடீரெனப் பௌரவனின் தேர் ஏர்க்காலில் குதித்து ஏறிய அவன் {அபிமன்யு} உரக்க முழங்கினான். பிறகு அவனது தேரில் ஏறிய அவன் {அபிமன்யு}, பௌரவனின் தலைமயிறைப் பிடித்துக் கொண்டு, ஓர் உதையால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டியைக் கொன்று, தன் வாள் வீச்சால் அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அந்தப் பௌரவனைப் பொறுத்தவரை, நீரைக் கலக்கி கடலின் அடியில் உள்ள பாம்பை உயர்த்தும் கருடனைப் போல அபிமன்யு அவனை {பௌரவனை} உயர்த்தினான்.

அதன் பேரில், மன்னர்கள் அனைவரும், சிங்கத்தால் கொல்லப்படும் தருணத்தில் உணர்வுகளை இழந்து நிற்கும் எருதைப் போலக் கலைந்த தலைமயிறோடு கூடிய (ஆதரவற்று நின்ற) பௌரவனைக் கண்டனர். இப்படிக் கிடத்தப்பட்ட பௌரவன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} வசத்தில் அகப்பட்டு, ஆதரவற்ற நிலையில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஜெயத்ரதனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வாளையும், மயில் பொறிக்கப்பட்டு வரிசையான சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட ஜெயத்ரதன், தன் தேரில் இருந்து கீழே குதித்து உரக்க முழங்கினான். பிறகு, சுபத்திரையின் மகன் (அபிமன்யு), சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கண்டு, பௌரவனை விட்டுவிட்டு, பின்னவனின் தேரில் இருந்து ஒரு பருந்தைப் போல உயரக் குதித்து, பூமியில் விரைவாக இறங்கினான்.

அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் ஏவப்பட்ட வேல்கள், பட்டிசங்கள் மற்றும் வாள்களைத் தன் வாளினால் வெட்டவோ, தன் கேடயத்தால் விலக்கவோ செய்தான். இப்படித் தன் கரங்களின் வலிமையை வீரர்கள் அனைவருக்கும் காட்டிய அந்த வலிமைமிக்க (வீர) அபிமன்யு, மீண்டும் தன் பெரிய வாளையும், கேடயத்தையும் உயர்த்தி, தன் தந்தையின் {அர்ஜுனனின்} உறுதியான எதிரியான விருத்தக்ஷத்திரன் மகனை {ஜெயத்ரதனை} நோக்கி, யானையை எதிர்த்துச் செல்லும் புலியைப் போலச் சென்றான். புலியும் சிங்கமும் தங்கள் பற்களாலும், நகங்களாலும் தாக்கிக் கொள்வதைப் போல ஒருவரை ஒருவர் அணுகிய அவர்கள் தங்கள் வாள்களால் தாக்கிக் கொண்டனர்.

சுழன்று வீசுதல் {அபிகாதம்}, வாள்களை இறக்குதல் {ஸ்ம்பாதம்} மற்றும் கேடயங்களை இறக்குதல் {நிபாதம்} ஆகியவற்றைப் பொறுத்தவரை, அந்த மனிதர்களில் சிங்கங்களான இருவருக்குள்ளும் எந்த வேறுபாட்டையும் யாராலும் காண முடியவில்லை [4]. வெளிநோக்கியும், உள்நோக்கியும் அழகாக நகர்ந்து அந்த இரு வீரர்களும் சிறகுகள் படைத்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர். ஜெயத்ரதன், புகழ்பெற்ற அபிமன்யு அவனை நோக்கி வாளை வீசிய போது பின்னவனின் {அபிமன்யுவின்} கேடயத்தைத் தாக்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் பெரிய வாளானது, தங்கத் தகட்டால் மறைக்கப்பட்ட அபிமன்யுவின் கேடயத்தில் சிக்கிக் கொண்டு, அதைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பலமாக உருவ முயற்சித்த போது உடைந்தது.

தன் வாள் உடைந்ததைக் கண்ட ஜெயத்ரதன், விரைவாக ஆறு எட்டுகள் பின்வாங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் தன் தேரில் ஏறுவது தெரிந்தது [5]. பிறகு, வாள் போர் முடிந்ததும் அர்ஜுனனின் மகனும் {அபிமன்யுவும்} தன் சிறந்த தேரில் ஏறினான். குரு படையின் மன்னர்கள் பலர் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த வலிமைமிக்க அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனைப் பார்த்துக் கொண்டே தன் வாளையும், கேடயத்தையும் சுழற்றி உரக்க கர்ஜித்தான். சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} வீழ்த்தியவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பிறகு, உலகை எரிக்கும் சூரியனைப் போலக் கௌரவப் படையின் அந்தப் பிரிவை எரிக்கத் தொடங்கினான்.

பிறகு அந்தப் போரில் சல்லியன், முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்புத் தழலின் சுடருக்கு ஒப்பானதுமான கடும் ஈட்டி ஒன்றை அவன் {அபிமன்யு} மீது வீசினான். அதன் பேரில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மேலிருந்து விழும் வலிமைமிக்கப் பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல அந்த ஈட்டியை உயரக் குதித்துப் பிடித்தான். இப்படி அதைப் {ஈட்டியைப்} பிடித்த அபிமன்யு தன் வாளை உறையில் இருந்து எடுத்தான். அளவிலா சக்தி கொண்ட அந்தப் போர்வீரனின் {அபிமன்யுவின்} வலிமையையும் பெரும் சுறுசுறுப்பையும் சாட்சியாகக் கண்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்து சிங்க கர்ஜனை செய்தனர்.

பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கரங்களின் வலிமையைக் கொண்டு, பெரும் காந்தியுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஈட்டியைச் சல்லியன் மீதே ஏவினான். சமீபத்தில் சட்டை உரித்த பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டி, சல்லியனின் தேரை அடைந்து, பின்னவனின் {சல்லியனின்} தேரோட்டியைக் கொன்று, அவனையும் அந்த வாகனத்தின் தட்டில் இருந்து கீழே விழச் செய்தது. பிறகு, விராடன், துருபதன், திருஷ்டகேது, யுதிஷ்டிரன், சாத்யகி, கேகயன், பீமன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும், “அருமை! அருமை!” என்று சொல்லி வியந்தனர். பின்வாங்காதவனான அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மகிழ்விக்கும் வண்ணம், கணைகள் ஏவும் பல்வேறு விதங்களிலான ஒலிகளும், சிங்க முழக்கங்கள் பலவும் அங்கே எழுந்தன.

எனினும், எதிரியின் வெற்றிக்கான அறிகுறிகளை உமது மகன்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிறகு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} திடீரெனச் சூழ்ந்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைகளின் மாரியால் அவனை {அபிமன்யுவை} மறைத்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அர்தாயனி {ரிதாயனன் மகன்} (சல்லியன்), உமது மகன்களுக்கு நன்மையை விரும்பி, தன் தேரோட்டி வீழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து சினத்துடன் விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

சல்லியனை வீழ்த்திய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 015-சல்லியனை நோக்கி விரைந்த பீமனும், அபிமன்யுவும்; அபிமன்யுவை விலகி நிற்கச் செய்த பீமன்; பீமனுக்கும் சல்லியனுக்கும் இடையில் நடந்த கடும் கதாயுத்தம்; பீமனின் அடியால் மயக்கமடைந்த சல்லியன்; சல்லியனைத் தூக்கிச் சென்ற கிருதவர்மன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த தனிப்போர்கள் பலவற்றை நீ எனக்கு விவரித்தாய். அவற்றைக் கேட்கும் நான், கண் கொண்டோரிடம் பொறாமை கொள்கிறேன். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் (பழங்காலத்தில்) நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போர் மிக அற்புதமானது என மனிதர்கள் அனைவராலும் பேசப்படும். கிளர்ச்சியூட்டும் இந்தப் போரைக் குறித்த உனது விவரிப்பைக் கேட்பதால் நான் நிறைவடையவில்லை. எனவே, அர்தாயனிக்கும் (சல்லியனுக்கும்), சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனது ஓட்டுனர் {தேரோட்டி} கொல்லப்பட்டதைக் கண்ட சல்லியன், முழுவதும் இரும்பாலான கதாயுதம் ஒன்றை உயர்த்தியபடி, தன் சிறந்த தேரில் இருந்து சினத்துடன் கீழே குதித்தான். பீமன் கனமான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, யுகநெருப்புக்கோ, தண்டாயுதத்துடன் கூடிய காலனுக்கோ ஒப்பாக இருந்த சல்லியனை நோக்கி வேகமாக விரைந்தான். சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} வானத்தின் இடிக்கு {வஜ்ராயுதத்துக்கு} ஒப்பான தன் மகத்தான கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனிடம், “வாரும், வாரும்!” என்று சொன்னான். எனினும், பீமன் மிகவும் முயன்று அவனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்கச் சொல்லித் தடுத்தான். வீர பீமசேனன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்குமாறு தடுத்த பிறகு, போரில் சல்லியனை அணுகி, மலையென அசையாது நின்றான்.

மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்}, பீமசேனனைக் கண்டு, யானையை நோக்கிச் செல்லும் புலியைப் போல அவனை {பீமனை} நோக்கிச் சென்றான். பிறகு, ஆயிரக்கணக்கான எக்காள ஒலிகளும், சங்கு முழக்கங்களும், சிங்க முழக்கங்களும், பேரிகையொலிகளும் அங்கே கேட்டன. ஒருவரையொருவர் நோக்கி விரையும் நூற்றுக்கணக்கான பாண்டவ மற்றும் கௌரவ வீரர்களுக்கு மத்தியில், “நன்று, நன்று” என்ற கூக்குரல்கள் எழுந்தன.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தவிரப் போரில் பீமசேனனின் வலிமையைத் தாங்கத் துணிந்தவன் வேறு எவனும் இல்லை; அவ்வாறே சிறப்புமிக்கச் சல்லியனின் கதாயுத வேகத்தைப் போரில் தாங்கவும், விருகோதரனைத் {பீமனைத்} தவிர இவ்வுலகில் வேறு எவன் துணிவான்? தங்கக் கம்பிகள் கலந்த இழைச்சரங்களால் கட்டப்பட்டதும், தன் அழகால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வூட்டவல்லதுமான பீமனின் மகத்தான கதாயுதம், அவனால் {பீமனால்} ஏந்தப்பட்டுப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்வாறே வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த சல்லியனின் கதாயுதமும், சுடர்மிகும் மின்னலின் கீற்றைப் போலவே தெரிந்தது.

காளைகளைப் போல முழங்கிய அவ்விருவரும் {பீமனும், சல்லியனும்}, வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தனர் {மண்டல கதிகளோடு சஞ்சரித்தனர்}. சற்றே சாய்ந்த தங்கள் கதாயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சல்லியன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கொம்புகள் கொண்ட காளைகளைப் போலவே தெரிந்தனர். வட்டமாகச் சுழல்வதையோ, தங்கள் கதாயுதங்களால் தாக்குவதையோ பொறுத்தவரை மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் அனைத்து வழியிலும் சமமானதாகவே இருந்தது.

பீமசேனன் தன் கதாயுதத்தைக் கொண்டு தாக்கியதால், சல்லியனின் மகத்தான கதாயுதம், கடும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டுக் கொண்டே விரைவில் துண்டுகளாக உடைந்தது. அதே போலவே, பீமசேனனின் கதாயுதமும், எதிரியால் {சல்லியனால்} தாக்கப்பட்டு, மழைக்காலத்தின் மாலைப்பொழுதில் மின்மினிப்பூச்சிகளால் மறைக்கப்பட்ட அழகிய மரம் போலத் தெரிந்தது.

அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} வீசப்பட்ட கதாயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (சுற்றிப் பறக்கையில்) அடிக்கடி நெருப்புப் பொறிகளை வெளியிட்டபடியே ஆகாயத்தில் ஒளிவீசியது. அதே போலவே, எதிரியை நோக்கி பீமசேனன் வீசிய கதாயுதம், (ஆகாயத்தில் இருந்து) கீழே விழும் கடும் எரிக்கோளைப் போல அவனது {பீமனது} எதிரிப் படையை எரித்தது. கதாயுதங்களில் சிறந்தவையான அவை இரண்டும் ஒன்றையொன்று தாக்கியபடி, பெருமூச்சுவிடும் பெண்பாம்புகளுக்கு ஒப்பாக நெருப்பு கீற்றுகளைக் கக்கின.

வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த வலிமைமிக்க அவ்வீரர்கள் இருவரும், தங்கள் நகங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் பெரும் புலிகள் இரண்டைப் போலவோ, தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொள்ளும் வலிமைமிக்க யானைகள் இரண்டைப் போலவோ கதாயுதங்களில் முதன்மையான அவை இரண்டாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விரைவில் இரத்தத்தால் மறைக்கப்பட்ட அந்தச் சிறப்புவாய்ந்த வீரர்கள் இருவரும் மலர்ந்திருக்கும் இரண்டு பலாச மரங்களுக்கு ஒப்பாகத் தெரிந்தனர்.

மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தரிக்கப்பட்ட கதாயுதங்களின் அடிகள் {தாக்குதல்களின் ஒலி} இந்திரனின் இடியைப் போன்று அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. கதாயுதத்தைக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் தாக்கப்பட்ட பீமன், இடியால் பிளக்கப்படும் மலையைப் போலக் கிஞ்சிற்றும் அசையாது {நடுங்காது} நின்றான். அதேபோல, கதாயுதம் கொண்டு பீமனால் தாக்கப்பட்ட மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்} இடியால் தாக்கப்படும் மலையைப் போலப் பொறுமையாக நின்றான்.

பெரும் வேகம் கொண்ட அவ்விருவரும் உயர்த்தப்பட்ட தங்கள் கதாயுதங்களுடன் நெருக்கமான வட்டங்களில் சுழன்று ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்தனர். விரைவாக ஒருவரையொருவர் அணுகி, எட்டு எட்டுகள் வைத்து, யானைகள் இரண்டைப் போல ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்த அவர்கள் முழுமையாக இரும்பாலான அந்தத் தங்கள் கதாயுதங்களால் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்வீரர்கள் இருவரும், அடுத்தவரின் வேகம் மற்றும் தங்கள் கதாயுதங்களின் தாக்குதல் பலம் ஆகியவற்றின் விளைவால் ஒரே சமயத்தில் இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலக் கீழே விழுந்தனர்.

பிறகு தன் உணர்வுகளை இழந்து, பெருமூச்சுவிட்டபடி களத்தில் கிடந்த சல்லியனை வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் விரைவாக அணுகினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டு, பாம்பு போலப் புரண்டு கொண்டு, உணர்வுகளை இழந்து மயக்கத்தில் இருந்த அவனைக் {சல்லியனைக்} கண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் கிருதவர்மன், அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} தன் தேரில் ஏற்றி, களத்தை விட்டு அவனை {சல்லியனை} விரைவாகச் சுமந்து சென்றான். குடிகாரனைப் போலச் சுற்றிக் கொண்டிருந்த வலிய கரங்களைக் கொண்ட வீரப் பீமன், கண் இமைக்கும் நேரத்திற்குள், கையில் கதாயுதத்துடன் எழுந்து நின்றான்.

பிறகு, உமது மகன்கள், போரில் இருந்து விலகிய மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கண்டு தங்கள் யானைகள், காலாட்படைவீரர்கள், குதிரைப்படை மற்றும் தேர்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினர். வெற்றியை விரும்பும் பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட உமது படையின் வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போல அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினர்.

திருதராஷ்டிரர்களை வீழ்த்திய வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர். மகிழ்ச்சியால் குதூகலித்த அவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தபடியே தங்கள் சங்குகளை முழக்கினர். மேலும், அவர்கள் தங்கள் மட்டுகங்கள், பேரிகைகள், மிருதங்கங்கள் {பெரிய முரசங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள், நிர்ஜரிகள்} ஆகியவற்றையும் இன்னும் பிற இசைக்கருவிகளையும் முழக்கினர்” {என்றான் சஞ்சயன்}

துரோணரைத் தடுத்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 016-கர்ணனின் மகன் விருஷசேனனுக்கும், நகுலனின் மகன் சதானீகனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியின் மகன் யுகந்தரன் துரோணரால் வீழ்த்தப்பட்டது; வியாக்ரதத்தன், சிங்கசேனன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டது; யுதிஷ்டிரனைப் பிடிக்க முயன்ற துரோணர்; அதைத் தடுத்த அர்ஜுனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படை அதீதமாகப் பிளக்கப்பட்டதைக் கண்ட வீர விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் மாய சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டு தனியொருவனாகவே அதை {அந்தப் படையைப்} பாதுகாத்தான். அந்தப் போரில் விருஷசேனனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் அனைத்துத் திசைகளிலும் சென்று, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளைத் துளைத்தன. அவனால் ஏவப்பட்ட சுடர்மிகும் பிரகாசம் கொண்ட வலிமைமிக்கக் கணைகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் சூரியக் கதிர்களைப் போல ஆயிரக்கணக்கில் சென்றன. அவற்றால் பீடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட தேர்வீரர்கள் மற்றும் குதிரை வீரர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் முறிந்த மரங்களைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தனர்.

வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அப்போரில் ஆயிரக்கணக்கில் வீழ்த்தினான். களத்தில் அச்சமற்ற வகையில் திரியும் அந்தத் தனி வீரனைக் கண்ட (பாண்டவப் படையின்) மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். நகுலனின் மகனான சதானீகன் விருஷசேனனை நோக்கி விரைந்து, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் {விருஷசேனனைத்} துளைத்தான்.

எனினும், கர்ணனின் மகன் {விருஷசேனன்}, அவனது {சதானீகனின்} வில்லை வெட்டி, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அதன்பேரில், திரௌபதியின் பிற மகன்கள், தங்கள் சகோதரனை மீட்க விரும்பி அவனை {சதானீகனை} நோக்கி விரைந்தனர். விரைவில் அவர்கள் தங்கள் கணை மழையால் கர்ணனின் மகனை {விருஷசேனனை} மறைத்தனர். (கர்ணனின் மகனை) இப்படித் தாக்கும் அவர்களை எதிர்த்து, துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) தலைமையிலான தேர் வீரர்கள் பலர் விரைந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு வகைகளிலான கணைகளைக் கொண்டு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்களை விரைவில் மறைத்தனர். அதன் பேரில், பாண்டவர்கள், தங்கள் மகன்களின் மீது கொண்ட பாசத்தால், அப்படித் தாக்குபவர்களை விரைவாக எதிர்கொண்டனர்.

பிறகு, உமது துருப்புகளுக்கும், பாண்டவர்களின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது; மிகக் கடுமையானதாகவும், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இப்படியே, வீரர்களான கௌரவர்களும், பாண்டவர்களும், சினத்தால் தூண்டப்பட்டு (மூர்க்கமாக) ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, பழைய குற்றங்களுக்காக ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பகையுடன் போரிட்டனர். (அவர்களைத் தூண்டும்) கோபத்தின் விளைவாக அளவற்ற சக்தியுடன் தென்பட்ட அந்த வீரர்களின் உடல்கள், வானத்தில் போரிடும் கருடனுக்கும், (வலிமைமிக்க) நாகங்களுக்கும் ஒப்பானவையாக இருந்தன.

பீமன், கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்யகி ஆகியோரைக் கொண்ட அந்தப் போர்க்களம், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க உதிக்கும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வலிமைமிக்க எதிரிகளுடன் போரில் ஈடுபடும் வலிமைமிக்க மனிதர்களுக்கு இடையில் நடப்பதும், அனைவரும் மிகக் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுமான அந்தப் போர், பழங்காலத்தில் தானவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக இருந்தது. பிறகு, பொங்கும் கடலைப் போன்ற உரத்த முழக்கங்களுடன் கூடிய யுதிஷ்டிரனின் படை, உமது படையின் பெரும் தேர்வீரர்கள் தப்பி ஓடியதால், உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினர். (கௌரவப்) படை உடைந்ததையும், எதிரியால் அதீதமாகச் சிதைக்கப்பட்டதையும் கண்ட துரோணர், “வீரர்களே, நீங்கள் ஓட வேண்டாம்” என்றார் [1].

பிறகு, சிவப்புக் குதிரைகளை உடைய அவர் (துரோணர்), கோபத்தால் தூண்டப்பட்டு, நான்கு {4} தந்தங்களைக் கொண்ட (கடும்) யானையொன்றைப் போலப் பாண்டவப் படைக்குள் ஊடுருவி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரன், கங்க இறகுகள் கொண்ட கூரான கணைகள் பலவற்றால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்; எனினும், துரோணர், யுதிஷ்டிரனின் வில்லை வெட்டி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரனின் தேர் சக்கரங்களைப் பாதுகாத்தப் பாஞ்சாலர்களின் புகழ்பெற்ற இளவரசன் குமாரன், அப்படி முன்னேறி வரும் துரோணரைப் பொங்கும் கடலை வரவேற்கும் கரையைப் போல வரவேற்றான். பிராமணர்களில் காளையான அந்தத் துரோணர் குமாரனால் தடுக்கப்பட்டதைக் கண்டு, “நன்று, நன்று!” என்ற கூக்குரலுடன் கூடிய சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன.

பிறகு அந்தப் பெரும் போரில் சினத்தால் தூண்டப்பட்ட குமாரன், ஒரு கணையால் துரோணரை மார்பில் துளைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தான். வலிமைமிக்கவனும், பெரும் கர நளினம் கொண்டவனும், களைப்பை வென்றவனுமான குமாரன் இப்படியே போரில் துரோணரைத் தடுத்து, பல்லாயிரக்கணக்கான கணைகளால் அவரைத் துளைத்தான். பிறகு அந்த மனிதர்களில் காளை (துரோணர்), யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவனும், அறம்சார்ந்த நோன்புகளை நோற்பவனும், மந்திரங்களிலும், ஆயுதங்களிலும் சாதித்தவனுமான அந்த வீரன் குமாரனைக் கொன்றார் [2].

பிறகு (பாண்டவப்) படைக்கு மத்தியில் ஊடுருவி, அனைத்துப் பக்கங்களிலும் திரிந்த மனிதர்களில் காளையான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} உமது துருப்புகளைப் பாதுகாப்பவரானார். சிகண்டியைப் பனிரெண்டு {12} கணைகளாலும், உத்தமௌஜசை இருபதாலும் {20}, நகுலனை ஐந்தாலும் {5}, சகாதேவனை ஏழாலும் {7}, யுதிஷ்டிரனை பனிரெண்டாலும் {12}, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஒவ்வொருவரையும் மூன்றாலும் {3}, சாத்யகியை ஐந்தாலும் {5}, மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை பத்து {10} கணைகளாலும் துளைத்து, அந்தப் போரில் மொத்த படையையும் கலங்கடித்து, (பாண்டவ) வீரர்களில் முதன்மையானோரை எதிர்த்து ஒருவர் பின் ஒருவராக விரைந்தார். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி அவனை எதிர்த்து முன்னேறினார்.

அப்போது {சாத்யகியின் மகன்} யுகந்தரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்பட்டு ஆத்திரத்தோடு கூடிய கடலுக்கு ஒப்பாகச் சினத்தால் நிறைந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தடுத்தான். எனினும், நேரான கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் துளைத்த அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஒரு பல்லத்தினால் யுகந்தரனை அவனது தேர்த்தட்டிலிருந்து விழச் செய்தார்.

பிறகு, விராடன், துருபதன், கைகேய இளவரசர்கள், சாத்யகி, சிபி, பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், வீரமான சிங்கசேனன் ஆகியோரும் இன்னும் பிறரும், யுதிஷ்டிரனை மீட்க விரும்பி, எண்ணிலா கணைகளை இறைத்து, துரோணரின் வழியில் இடையூறு செய்த படி அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், கூர்முனை கொண்டு ஐம்பது {50} கணைகளால் துரோணரைத் துளைத்ததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் பெருங்கூச்சலிட்டன. சிங்கசேனனும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை விரைவாகத் துளைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்து மகிழ்ச்சியால் முழக்கமிட்டான்; பிறகு தன் கண்களை அகல விரித்த துரோணர், தன் வில்லின் நாணைத் தேய்த்து, தன் உள்ளங்கைகளைத் தட்டி பேரொலியை உண்டாக்கி பின்னவனை {சிங்கசேனனை} எதிர்த்து விரைந்தார். பிறகு, தன் ஆற்றலை வெளிப்படுத்திய பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, இரண்டு பல்லங்களால் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிங்கசேனன் மற்றும் வியாக்ரதத்தன் ஆகிய இருவரின் தலைகளை அவர்களது உடல்களிலிருந்து துண்டித்தார்.

தன் கணைமாரிகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரையும் பீடித்த அவர் {துரோணர்}, அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலவே யுதிஷ்டிரனின் தேருக்கு முன்பாக நின்றார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முறையான நோன்புகளைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அருகில் இப்படி நின்ற போது, “மன்னர் கொல்லப்பட்டார்” என்ற அளவுக்கு யுதிஷ்டிரனின் படை வீரர்களுக்கு மத்தியில் ஆரவாரம் கேட்கப்பட்டது. அங்கே இருந்த வீரர்கள் அனைவரும், துரோணரின் ஆற்றலைக் கண்டு, “இன்று திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்} வெற்றி மகுடம் சூட்டப்படுவான். இந்தக் கணமே யுதிஷ்டிரனைப் பிடிக்கும் துரோணர், மகிழ்ச்சியால் நிறைந்து நம்மிடமும் துரியோதனனின் முன்னிலைக்கும் வரப் போகிறார்” என்றனர்.

உமது வீரர்கள் இத்தகு பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குந்தியின் மகன் (அர்ஜுனன்), தன் தேரின் சடசடப்பொலியால் (ஆகாயத்தை) நிறைத்தபடி விரைவாக அங்கே வந்தான். அப்படி அவன் {அர்ஜுனன்} வந்த போதே, அவன் செய்த படுகொலைகளால் குருதியெனும் நீருள்ளதும், தேர்களெனும் சுழல்களுள்ளதும், துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் மற்றும் உடல்கள் நிறைந்ததும், இறந்தோரின் ஆவிகள் வசிக்கும் இடத்திற்கு உயிரினங்களைச் சுமந்து செல்வதுமான ஒரு நதியை அங்கே உண்டாக்கினான். குருக்களை முறியடித்த படி அங்கே வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கணைகளின் மாரிகளெனும் நுரை கொண்டதும், ஈட்டிகள் மற்றும் பிற ஆயுதங்களின் வடிவிலான மீன்களால் நிறைந்ததுமான அந்த நதியை வேகமாகக் கடந்தான். அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்}, அடர்த்தியான கணைகளின் வலையால் துரோணரின் படைப்பிரிவுகளை மறைத்து (துரோணரைப் பின் தொடர்வோரின்) உணர்வுகளைக் குழப்பியபடி திடீரென அங்கே வந்தான்.

இடைவிடாமல் வில்லின் நாணில் தன் கணைகளைப் பொருத்தி, விரைவாக அவற்றை ஏவிய குந்தியின் புகழ்பெற்ற மகனின் {அர்ஜுனனின்} இந்தச் செயல்கள் இரண்டுக்கும் இடையில் காலங்கழிதல் எதையும் எவனால் காண முடியவில்லை. அடர்த்தியான கணைகளின் திரள் ஒன்றாகவே அனைத்தும் தெரிந்ததால், அதற்கு மேலும் (நான்கு முக்கிய) திசைகளுக்கோ, மேலுள்ள ஆகாயத்துக்கோ, பூமிக்கோ எந்த வேறு பாட்டையும் காண முடியவில்லை. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அடர்த்தியான இருளை உண்டாக்கியபோது, அந்தப் போரில் எதையும் காண முடியவில்லை. சரியாக அப்போதே, புழுதி மேகத்தால் சூழப்பட்ட சூரியனும் மறைந்தான். அதற்கு மேலும், நண்பனுக்கும் எதிரிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண முடியவில்லை.

பிறகு, துரோணரும், துரியோதனனும் தங்கள் துருப்புகளைப் பின் வாங்கச் செய்தனர். எதிரி அச்சங்கொண்டதையும், தொடர்ந்து போரிட விரும்பாததையும் உறுதி செய்து கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, மெதுவாகத் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்தான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் சூரியனைப் புகழும் முனிவர்களைப் போலத் தங்கள் இனிய உரைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

இப்படித் தன் எதிரிகளை வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தோழனான கேசவனுடன் {கிருஷ்ணனுடன்}, மொத்த படைக்கும் பின்னே தன் பாசறைக்கு ஓயச் சென்றான். இந்திரநீலங்கள், பத்மராகங்கள், தங்கம், வெள்ளி, வைரங்கள், பவழங்கள், படிகங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய தேரில் நின்ற அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகாயத்தில் உள்ள சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

பதினோராம் நாள் போர் முற்றும்

துரோணாபிஷேக பர்வம் முற்றும்

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading