ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-சம்சப்தகவத பர்வம் -பன்னிரெண்டாம் நாள் போர்-

திரிகர்த்தர்களின் உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 017-யுதிஷ்டிரனைப் பிடிக்கும் வழி கூறிய துரோணர்; அர்ஜுனனைத் தானே எதிர்ப்பதாகச் சபதமேற்ற திரிகர்த்த மன்னன் சுசர்மன்; திரிகர்த்தர்களின் உறுதிமொழி; அர்ஜுனனைப் போருக்கழைத்த திரிகர்த்தர்கள்; யுதிஷ்டிரனைக் காக்க சத்தியஜித்தை நிறுத்திவிட்டு ஸம்சப்தகர்களை எதிர்த்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரண்டு படைகளின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அங்கம் வகித்த படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளுக்குத் தக்கபடி முறையாகத் தங்கள் தங்கள் இடங்களை அடைந்தனர். துருப்புகளைப் பின்வாங்கச் செய்த பிறகு, உற்சாகமற்ற மனத்துடன் கூடிய துரோணர், துரியோதனனைக் கண்டு வெட்கத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “தனஞ்சயன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனிடம் இருக்கையில், தேவர்களாலும் கூடப் போரில் அவன் {யுதிஷ்டிரன்} பிடிக்கப்பட முடியாதவனாவான் என்று நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன். போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீது நீங்கள் அனைவரும் பாய்ந்தீர்கள், இருப்பினும் அவன் உங்கள் முயற்சிகளை அனைத்தையும் சலிக்கச் செய்தான். நான் சொல்வதில் ஐயங்கொள்ளாதே, கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் (அர்ஜுனனும்) வெல்லப்பட முடியாதவர்களே. எனினும், வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனை எவ்வழியிலாவது (யுதிஷ்டிரனின் பக்கத்தில் இருந்து) விலக்க முடியுமென்றால், ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு யுதிஷ்டிரன் விரைவில் உன் கட்டுப்பாட்டின் கீழ் வருவான்.

யாரேனும் ஒருவர் அவனை (அர்ஜுனனைப்) போரில் சவாலுக்கழைத்து, களத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். குந்தியின் மகன் {அர்ஜுனன்} அவனை வீழ்த்தாமல் திரும்ப மாட்டான். அதே வேளையில், அர்ஜுனன் இல்லாத அந்தப் பொழுதில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரனையும், அவனது தொண்டர்களையும் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் ஒருக்கணமாவது என் முன்னிலையில் நின்றானானால், களத்தில் இருந்து அவனை நான் சிறைப்பிடித்துக் கொண்டுவருவேன். (பாண்டவப் படையை வீழ்த்தி அடையும்) வெற்றியை விட அந்த அருஞ்செயல் மிகவும் நன்மை தருவதாக இருக்கும் [1]” என்றார் {துரோணர்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணரின் அவ்வார்த்தைகளைக் கேட்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ! பாரதக் குலத்தில் காளையே {துரியோதனா}, நாங்கள் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாதிருப்பினும், அவன் எப்போதும் எங்களைக் காயப்படுத்தியே வந்தான். அந்தப் பல்வேறு அவமதிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து நினைத்து கோபத்தால் எரியும் நாங்கள் இரவில் தூங்க முடியாமல் இருக்கிறோம்.

நற்பேறினால், அந்த அர்ஜுனன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு எங்கள் முன்னிலையில் நிற்பான். எனவே, எது எங்கள் இதயத்தில் இருக்கிறதோ, எதைச் சாதிக்க நாங்கள் முயல்கிறோமோ; எது உனக்கு ஏற்புடையதாக இருக்குமோ, எது எங்களுக்குப் புகழைக் கொண்டு வருமோ, அதை இப்போதே அடைய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். களத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவனைக் {அர்ஜுனனைக்} கொல்வோம். இன்றே இந்தப் பூமி அர்ஜுனன் இல்லாததாகவோ, அல்லது திரிகர்த்தர்கள் இல்லாததாகவோ போகட்டும். உன் முன்னிலையில் இந்த உறுதிமொழியை நாங்கள் உண்மையாக ஏற்கிறோம். இந்த எங்கள் சபதம் பொய்க்கப்போவதில்லை” என்றான் {சுசர்மன்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியவிரதன், சத்தியேஷு, சத்தியகர்மன்ஆகிய ஐந்து சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இது போலவே சொல்லிப் போர்க்களத்தில் உறுதியேற்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} தேர்களோடு (துரியோதனன் முன்னிலையில்) வந்தனர். மாலவர்களும், ஆயிரம் தேர்களோடு கூடிய துண்டிகேரர்களும், மாவேல்லகர்கள், லலித்தர்கள், மத்திரகர்கள் மற்றும் தன் சகோதரர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் தேர்கள் ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களில் புலியான பிரஸ்தல ஆட்சியாளன் சுசர்மனும் உறுதியேற்க முன்வந்தனர். பிறகு நெருப்பைக் கொண்டு வந்த அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கென்று ஒன்றைப் பற்ற வைத்து, குசப்புல்லாலான ஆடைகளையும், அழகிய கவசங்களையும் அணிந்தனர்.

கவசந்தரித்து, தெளிந்த நெய்யில் குளித்து, குசப்புல் ஆடைகளை அணிந்து, தங்கள் வில்லின் நாண்கயிறுகளைக் கச்சையாகப் {அரைஞாணாகப்} பயன்படுத்தியவர்களும், பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கில் தானங்களை வழங்கியவர்களும், பல வேள்விகளைச் செய்தவர்களும், குழந்தைகளால் அருளப்பட்டவர்களும், மறுமையில் அருளப்பட்ட உலகங்களுக்குத் தகுந்தவர்களும், இவ்வுலகில் செய்ய வேண்டியவை ஏதுமில்லாதவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களும், புகழையும், வெற்றியையும் அடையத் தங்கள் ஆன்மாக்களை அர்ப்பணித்தவர்களும், வேள்விகளாலும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடை அளிப்பதாலும், சடங்குகளாலும், இவற்றுக்கெல்லாம் தலைமையாகப் பிரம்மச்சரியம் மற்றும் வேத கல்வியாலும் மட்டுமே அடைய முடிந்த (மறுமையின்) உலகங்களை நல்ல போரின் மூலம் விரைவில் அடைய விரும்புபவர்களும், தங்கம், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்துப் பிராமணர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர்களுமான அவ்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பாகப் பேசிக் கொண்டு நெருப்பை மூட்டி, போரில் அந்தச் சபதத்தை ஏற்றனர். அந்த நெருப்புகளின் முன்னிலையில், உறுதியான தீர்மானத்துடன் அந்தச் சபதத்தை அவர்கள் ஏற்றனர்.

தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வதாகச் சபதம் செய்த அவர்கள் {திரிகர்த்தர்கள் [சம்சப்தகர்கள்]}, பேரொலியுடன், “தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் களத்தில் இருந்து நாங்கள் திரும்பினாலோ, அவனால் வீழ்த்தப்பட்டு, அச்சத்தால் நாங்கள் புறமுதுக்கிட்டாலோ, எந்த நோன்பையும் எப்போதும் நோற்காதோர், மது குடிப்பவன், ஆசானின் மனைவியிடம் ஒழுக்கங்கெட்ட தொடர்பு கொண்டோர், பிராமணனின் உடைமையைத் திருடுவோர், மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றாமல் அவன் தந்த பரிசை அனுபவிப்பவன், பாதுகாப்பு நாடியவனைக் கைவிட்டவன், தன்னிடம் உதவி கேட்டவனைக் கொல்பவன், வீட்டைக் கொளுத்துவோர், பசுவைக் கொல்வோர், அடுத்தவருக்குத் தீங்கிழைப்போர், பிராமணர்களிடம் பகைமை பாராட்டுவோர், தன் மனைவியின் பருவ காலத்தில் மூடத்தனத்தால் அவளது துணையை நாடாதோர், தங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த தினத்தில் பெண்ணின் துணையை நாடுவோர், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வோர், நம்பிக்கையுடன் அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளை அபகரிப்போர், கல்வியை அழிப்போர், அலிகளோடு {ஆண்மையற்றோரோடு} போர்புரிவோர், இழிந்தோரை அண்டுவோர், நாத்திகர்கள், (புனித) நெருப்பையும், தாயையும், தந்தையையும் கைவிடுவோர், பாவங்கள் நிறைந்தோர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள் எங்களுடையவையாகும். அதேபோல, உலகில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைப் போரில் அடைந்தோமாகில் மிகவும் விருப்பத்திற்குரிய உலகங்களை நாங்கள் அடைவோம் என்பதில் ஐயமில்லை” என்றனர்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தின் தென்பகுதியை நோக்கி அர்ஜுனனை அழைத்தபடி, போருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

மனிதர்களில் புலியும், பகை நகரங்களை அடக்குபவனுமான அர்ஜுனன், இப்படி அவர்களால் சவாலுக்கழைக்கப்பட்டதும், சற்றும் தாமதிக்காமல் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “அழைக்கப்பட்டால், நான் எப்போதும் புறமுதுகிடுவதில்லை. இஃது என் உறுதியான நோன்பாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, இந்தச் சவாலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எதிரிகள் போரில் (ஏற்கனவே) கொல்லப்பட்டதாக அறிவீராக என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துரோணர் எதை அடையத் தீர்மானித்திருக்கிறார் என்ற விபரத்தை நீ கேட்டிருக்கிறாய். அந்த அவரது தீர்மானம் பயனற்றதாகும் வகையில் நீ செயல்படுவாயாக. துரோணர் பெரும் வலிமைகொண்டவராவார். ஆயுதங்களை நன்கறிந்த அவர், களைப்புக்கு மேலான {களைப்படையாத} வீரராவார். ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {அர்ஜுனா}, அவரே {துரோணரே} என்னைப் பிடிக்கச் சபதமேற்றிருக்கிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்று இந்த {பாஞ்சால இளவரசன்} சத்தியஜித் போரில் உமது பாதுகாவலனாவான். சத்தியஜித் உயிரோடிருக்கும்வரை, ஆசானால் {துரோணரால்} ஒருபோதும் தன் விருப்பத்தை அடைய முடியாது. எனினும், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியான இந்தச் சத்தியஜித் போரில் கொல்லப்பட்டால், நமது வீரர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்தாலும் களத்தில் நீர் நீடித்திருக்கக் கூடாது [2]” என்றான் {அர்ஜுனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன் (அர்ஜுனன் வேண்டிய) விடுப்பை (அவனுக்கு) அளித்தான். மேலும் அவன் {யுதிஷ்டிரனிடம்}, அர்ஜுனனைத் தழுவிக்கொண்டு பாசத்துடன் அவனைப் பார்த்தான். மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல்வேறு வாழ்த்துகளை {ஆசீர்வாதங்களை} அவனுக்குத் தெரிவித்தான். (யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கான) இந்த ஏற்பாட்டைச் செய்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, பசி கொண்ட சிங்கம் தன் பசியைப் போக்குவதற்காக மான் கூட்டத்தை நோக்கிச் செல்வதைப் போல, திரிகர்த்தர்களை எதிர்த்து வெளியே சென்றான். அப்போது (யுதிஷ்டிரனின் பக்கத்தில்) அர்ஜுனன் இல்லாததால் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனனின் துருப்புகள், யுதிஷ்டிரனைப் பிடிப்பதில் தீவிரமடைந்தன. பிறகு இரு படைகளும், மழைக்காலத்தில் நீர் நிறைந்த இரு நதிகளான கங்கையும் சரயுவும் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன” {என்றான் சஞ்சயன்}.

சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 018-சம்சப்தகர்களை அணுகிய அர்ஜுனன்; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய திரிகர்த்தர்கள்; சுதன்வானைக் கொன்ற அர்ஜுனன்; பீதியடைந்த திரிகர்த்தர்கள் துரியோதனின் படையை நோக்கி ஓடியது; ஓடியவர்களைத் தடுத்து அவர்களைப் போருக்குத் திருப்பிய சுசர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த சம்சப்தகர்கள் [1], அர்த்தச்சந்திர வடிவத்தில் தங்கள் வியூகத்தை அமைத்து, சமமான நிலத்தில் தங்கள் தேர்களுடன் நின்றனர். அந்த மனிதர்களில் புலிகள் {சம்சப்தகர்கள்}, தங்களை நோக்கி கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) வருவதைக் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, உரக்கக் கூச்சலிட்டனர். அவ்வொலி வானத்தையும், முக்கியத் திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் நிறைத்தது. மனிதர்களால் மட்டும் மறைக்கப்பட்ட களமாக இருந்ததால், அஃது எதிரொலிகள் எதையும் உண்டாக்கவில்லை.

அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை உறுதிசெய்து கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிறு புன்னகையுடன், கிருஷ்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {தேவகீநந்தனா, கிருஷ்ணா}, போரில் அழியப் போகும் அந்தத் திரிகர்த்தர்கள், தாங்கள் அழ வேண்டிய இந்த நேரத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார். அல்லது, கோழைகளால் அடையவே முடியாத சிறந்த உலகங்களை இவர்கள் அடையப் போவதால் இஃது அவர்கள் மகிழ வேண்டிய காலமே என்பதிலும் ஐயமில்லைதான்” {என்றான் அர்ஜுனன்}.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், போரில் அணிவகுத்து நிற்கும் திரிகர்த்தர்களின் படையணிகளிடம் வந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தேவதத்தம் என்று அழைக்கப்பட்டதுமான தன் சங்கை எடுத்து பெரும்பலத்துடன் ஊதி, அதன் ஒலியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தான். அவ்வொலியால் பீதியடைந்த அந்தச் சம்சப்தகர்களின் தேர்ப்படை செயலிழந்து போய், போரில் அசைவற்று நின்றது. அவர்களது விலங்குகள் {குதிரைகள்} அனைத்தும் கண்களை அகலவிரித்துக் கொண்டு, காதுகள், கழுத்துகள் மற்றும் உதடுகள் செயலற்று, கால்கள் அசைவற்று நின்றன. மேலும் அவை சிறுநீர் கழித்தன, குருதியையும் கக்கின.

பிறகு சுயநினைவு மீண்ட பிறகு, தங்கள் படையணிகளை முறையான வரிசையில் நிறுத்திய அவர்கள், ஒரே சமயத்தில் தங்கள் கணைகள் அனைத்தையும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது ஏவினர். பெரும் வேகத்துடன் தன் ஆற்றலை வெளிக்காட்டவல்ல அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான கணைகளும் தன்னை வந்து அடையும் முன்பே பதினைந்து [2] கணைகளால் அவற்றை வெட்டினான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், அர்ஜுனனைப் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தனர். பார்த்தன் {அர்ஜுனன்} அவர்களை மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} ஐந்து {ஐந்தைந்து} கணைகளால் துளைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டு {இரண்டிரண்டு} கணைகளால் துளைத்தான்.

மீண்டும் கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தடாகத்தில் மேகங்கள் தடையில்லாமல் பொழிவதைப் போல அர்ஜுனன் மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} மீது எண்ணற்ற கணைகளை விரைவாகப் பொழிந்தனர். பிறகு அந்த ஆயிரக்கணக்கான கணைகளும், காட்டில் பூத்திருக்கும் மரங்களில் வண்டுக்கூட்டங்கள் விழுவதைப் போல அர்ஜுனன் மீது விழுந்தன. கடினமானதும், பலமானதுமான அர்ஜுனனின் கிரீடம் முப்பது கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டது. தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் அவனது கிரீடத்தில் இருந்ததால், அர்ஜுனன், ஏதோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனைப் போலவும், (புதிதாக) உதித்த சூரியனைப் போலவும் ஒளிர்ந்தான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு அந்தப் போரில், சுபாகுவின் கையுறையை ஒரு பல்லத்தால் அறுத்து, சுதர்மன் மற்றும் சுதன்வானையும் மறைத்தான். சுபாகுவோ பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான் [3]. தன் கொடியில் சிறந்த குரங்கு வடிவத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பதிலுக்குப் பல கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்து, மேலும் சில பல்லங்களால் தங்கத்தாலான அவர்களது கொடிமரங்களையும் வெட்டினான். சுதன்வானின் வில்லையும் அறுத்த அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பின்னவனின் {சுதன்வானின்} குதிரைகளையும் கொன்றான். பிறகு, தலைப்பாகையால் அருளப்பட்ட பின்னவனின் {சுதன்வானின்} தலையையும் அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.

அந்த வீரனின் {சுதன்வானின்} வீழ்ச்சியில், அவனது தொண்டர்கள் {அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்} பீதியடைந்தனர். பீதியால் தாக்குண்ட அவர்கள் அனைவரும், துரியோதனனின் படைகள் இருந்த இடத்திற்குத் தப்பி ஓடினர். பிறகு வாசவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் நிறைந்து, சூரியன் தன் தடையற்ற கதிர்களால் இருளை அழிப்பதைப் போலத் தன் இடைவிடாத கணைகளின் மழையால் அந்த வலிமைமிக்கப்படையைத் தாக்கத் {அழிக்கத்} தொடங்கினான். பிறகு, அந்தப் படை உடைந்து அனைத்துப் பக்கங்களிலும் உருகி ஓட, அர்ஜுனன் கோபத்தால் நிறைந்தபோது, திரிகர்த்தர்கள் அச்சத்தால் தாக்குண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட போது, பீதியடைந்த மான்கூட்டத்தைப் போலத் தங்கள் உணர்வுகளை இழந்த அவர்கள், தாங்கள் நின்ற இடத்திலேயே நீடித்தனர்.

பிறகு சினத்தால் நிறைந்த திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம், “வீரர்களே, தப்பி ஓடாதீர்! அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? எனவே, அனைவரும் நிற்பீராக. உங்கள் பலத்துக்குத் தக்கபடி போரிடுவீராக” என்றான் {சுசர்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் மகிழ்ச்சியுறச் செய்தபடி, மீண்டும் மீண்டும் உரத்த கூச்சலிட்டுக் கொண்டு தங்கள் சங்குகளை முழங்கினர். பிறகு அந்தச் சம்சப்தகர்கள், காலனையே மங்கச் செய்யத் தீர்மானித்திருந்த நாராயணக் கோபாலர்களுடன் மீண்டும் களத்திற்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.

“பார்த்தா! நீ உயிரோடிருக்கிறாயா?” என்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 019-களத்திற்குத் திரும்பிய சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கணைகளால் மறைத்த நாராயணர்கள்; கிருஷ்ணார்ஜுனர்கள் மாண்டார்கள் என்று கொண்டாடிய நாராயணர்கள்; அர்ஜுனனைக் காணாத கிருஷ்ணன் அவன் உயிரோடிருக்கிறானா என வினவியது; களத்தில் அர்ஜுனன் ஆடிய ருத்ரதாண்டவம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “களத்திற்கு மீண்டும் திரும்பி வந்த சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், உயர் ஆன்ம வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் சம்சப்தகர்களை நோக்கித் தூண்டுவாயாக. இவர்கள் உயிரோடுள்ளவரை போரைக் கைவிடமாட்டார்கள். இதையே {என்றே} நான் நினைக்கிறேன். இன்று என் கரங்களின் பயங்கர வலிமையையும், எனது வில்லின் வலிமையையும் நீ சாட்சியாகக் காண்பாயாக. (யுக முடிவில்) உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போல, நான் இவர்கள் அனைவரையும் இன்று கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.

வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணன், இவ்வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்து, மங்கலகரமான பேச்சுகளால் அர்ஜுனனுக்கு மகிழ்வூட்டி, அவன் {அர்ஜுனன்} செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவனை இட்டுச் சென்றான். அந்தத் தேரானது, வெண்குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட போது, ஆகாயத்தில் செல்லும் தெய்வீகத் தேரைப் {விமானம்} போலவே மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அது {அந்தத் தேர்}, பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரில் சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல வட்டமான நகர்வுகளையும், முன்னோக்கியும், பின்னோக்கியும் எனப் பல்வேறு வகைகளிலான பிற நகர்வுகளையும் வெளிப்படுத்தியது.

பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட நாராயணர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கணை மழையால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மறைத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விரைவில் அவர்கள் குந்தியின் மகனையும் {அர்ஜுனனையும்}, கிருஷ்ணனையும் சேர்த்து அந்தப் போரில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் முழுமையாக மறைத்துவிட்டனர். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, தன் சக்தியை இரட்டிப்பாக்கி, (காண்டீவத்தின்) நாணை விரைவாகத் தேய்த்துப் போரில் காண்டீவத்தைப் (உறுதியாகப்) பற்றினான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, உறுதியான கோபக்குறியீடான சுருக்கங்களைத் தன் புருவத்தில் தோன்றச் செய்து {புருவங்களை நெறித்து}, தேவதத்தம் என்று அழைக்கப்படும் தன் மகத்தான சங்கை ஊதி, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொல்லவல்ல துவஷ்டிரா {துவஷ்டா} [1] என்று அழைக்கப்படும் ஆயுதத்தை ஏவினான். அதன் பேரில், ஆயிரக்கணக்கான தனித்தனி வடிவங்கள் (அர்ஜுனனாகவும், வாசுதேவனாகவும் {கிருஷ்ணனாகவும்} அங்கே தோன்றத் தொடங்கின. அர்ஜுனன் வடிவிலான அந்தப் பல்வேறு வடிவங்களால் குழம்பிய துருப்புகள், ஒவ்வொருவரையும் அர்ஜுனனாகவே கருதி தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

“இவன் அர்ஜுனன்!”, “இவன் கோவிந்தன்!”, “இவர்கள் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, யது குலத்தோனும் {கிருஷ்ணனும்} ஆவர்!” இப்படியே சொல்லிக் கொண்டு, தங்கள் புலன்களை இழந்த அவர்கள் {நாராயணர்கள்}, அந்தப் போரில் ஒருவரை ஒருவர் கொன்றனர். உண்மையில் அந்த வீரர்கள் (ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது) பூத்திருக்கும் கின்சுகங்களைப் {பலாச மரங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர் [2]. அவர்களால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளையும் எரித்த அந்த (வலிமைமிக்க ஆயுதம்) அவ்வீரர்களை யமலோகம் அனுப்பியது.

பிறகு பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே தன் கணைகளால், லலித்தர்களையும், மாலவர்களையும், மாவேல்லகர்களையும், திரிகர்த்த வீரர்களையும் நசுக்கினான். விதியால் தூண்டப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அந்த வீரனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அவர்கள் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பல்வேறு விதங்களிலான கணை மழைகளைப் பொழிந்தனர். அந்தப் பயங்கரக் கணைகளின் மழைகளில் மூழ்கியதால் அர்ஜுனனையோ, அவனது தேரையோ, கேசவனையோ {கிருஷ்ணனையோ} அதற்கு மேலும் காண முடியவில்லை.

இலக்கைத் தாக்கும் தங்கள் கணைகளைக் கண்ட அவர்கள் {நாராயணர்கள்} மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இரு கிருஷ்ணர்களும் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதிய அவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், மிருதங்கங்களையும் அடித்துத் தங்கள் சங்குகளையும் ஊதி சிங்க முழக்கங்களிட்டனர்.

பிறகு கிருஷ்ணன், வியர்வையில் நனைந்து, மிகவும் பலவீனமடைந்து அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எங்கிருக்கிறாய்? உன்னை நான் காணவில்லை. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, நீ உயிரோடிருக்கிறாயா?” என்றான் {கிருஷ்ணன்}.

அவனது {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளால் பொழியப்பட்ட அந்தக் கணை மழையை, வாயவ்ய ஆயுதத்தின் {வாயவ்யாஸ்திரத்தின்} மூலம் மிக வேகமாக விலக்கினான். பிறகு (அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் அதி தேவதையான} சிறப்புமிக்க வாயு, ஏதோ அந்தச் சம்சப்தகர்கள் மரங்களின் உலர்ந்த இலைகளைப் போலக் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய அவர்களின் கூட்டங்களை அடித்துச் சென்றான். காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரங்களில் இருந்து பறந்து செல்லும் பறவை கூட்டங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.

இப்படி அவர்களைப் பீடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அவர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பெரும் வேகத்தோடு தாக்கினான். தன் பல்லங்களின் மூலம் அவன் {அர்ஜுனன்}, அவர்களது தலைகளையும், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்களது கரங்களையும் வெட்டினான். அவன் {அர்ஜுனன்} தன் கணைகளால் யானைத் துதிக்கைகளுக்கு ஒப்பான அவர்களது தொடைகளைத் தரையில் வீழ்த்தினான். சிலர் தங்கள் முதுகுகளிலும், கரங்களிலும், கண்களிலும் காயம்பட்டனர்.

இப்படியே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் பல்வேறு அங்கங்களையும், வானத்தில் இருக்கும் நீர் மாளிகைகளைப் {கந்தர்வ நகரங்களைப் [மேகங்களைப்]} போலத் தெரிபவையும், விதிப்படி தயாரித்து அலங்கரிக்கப்பட்டவையுமான {அவர்களின்} தேர்களையும் இழக்கச் செய்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அவர்களது சாரதிகளையும் {தேரோட்டிகளையும்}, குதிரைகளையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டினான். பல இடங்களில் கொடிமரங்கள் வெட்டப்பட்ட தேர்க்கூட்டங்கள் தலையற்ற பனைமரக் காடுகளைப் போலத் தெரிந்தன. சிறந்த ஆயுதங்கள், கொடிகள், அங்குசங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய யானைகள், சக்ரனின் {இந்திரனின்} இடியால் பிளக்கப்பட்ட காடுகள் நிறைந்த மலைகளைப் போல விழுந்தன. சாமரங்கள் போலத் தெரியும் வால்கள் கொண்டவையும், கவசங்களால் மறைக்கப்பட்டவையும், நரம்புகளும், கண்களும் வெளியே புடைத்தவையுமான குதிரைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டுத் தங்கள் சாரதிகளுடன் சேர்ந்து தரையில் உருண்டன.

அர்ஜுனனின் கணைகள் மூலம் கொல்லப்பட்டு, {இதுவரை} தங்கள் நகங்களாகவே இருந்த வாள்களை அதற்கு மேலும் பிடிக்க முடியாமல், தங்கள் கவசங்கள் கிழிபட்டு, எலும்புகளின் இணைப்புகள் உடைபட்டு, முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டிருந்த காலாட்படை வீரர்கள், போர்க்களத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்தனர். அந்த வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவால், அல்லது அவர்கள் கொல்லப்படும்போது, வீழ்த்தப்படும்போது, வீழும்போது, நிற்கும்போது, அல்லது அவர்கள் சுழற்றப்படும்போது அந்தப் போர்க்களம் பயங்கர வடிவத்தை ஏற்றது. (அர்ஜுனனின் கணைகள் உண்டாக்கிய) உதிர மழையின் மூலம் காற்றில் எழுந்த புழுதி தணிந்தது. நூற்றுக்கணக்கான தலையற்ற உடல்களால் விரவிக்கிடந்த பூமி கடக்க முடியாததானது.

அந்தப் போரில் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில் ஈடுபடும் ருத்திரனின் தேரைப் போலக் கடுமையாக ஒளிர்ந்தது. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்படும்போதும், அவ்வீரர்கள், தங்கள் குதிரைகள், தேர்கள், பெரும் துன்பத்தில் இருந்த தங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அவனை {அர்ஜுனனை} எதிர்ப்பதை நிறுத்தவில்லை; ஒருவர் பின் ஒருவராக உயிரை இழந்தாலும், அவர்கள் சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்கள் ஆனார்கள். உயிரிழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இறந்த உயிரினங்களின் ஆவிகளால் நிறைந்த யமலோகம் போலப் பயங்கரமானதாகத் தெரிந்தது.

அர்ஜுனன் (சம்சப்தகர்களுடன்) சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் படைகளின் தலைமையில் நின்றபடி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். தாக்குவதில் சிறந்தவர்களும், முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான பல வீரர்கள், யுதிஷ்டிரனைப் பிடிக்கும் விருப்பத்தால், செயலூக்கத்துடன் அவரைப் {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றனர். அதன் பிறகு நேர்ந்த போரானது, மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 020-பனிரெண்டாம் நாள் போரில் கருட வியூகம் அமைத்த துரோணர்; அர்த்தச்சந்திர வியூகம் அமைத்த யுதிஷ்டிரன்; கௌரவப்படையின் அந்த வியூகத்தில் எந்தெந்த நிலைகளில் யார் யார் நின்றனர் என்ற குறிப்பு; கௌரவ வியூகத்தில் பகதத்தன் ஏற்ற நிலை; திருஷ்டத்யும்னனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் உறுதி கூறிய திருஷ்டத்யும்னன் துரோணரைத் தடுத்தது; திருஷ்டத்யும்னனுக்கும் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; களத்தின் பயங்கர நிலவரம்; யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இரவைக் கழித்ததும், சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “நான் உன்னவன் [1]சம்சப்தகர்களுடன் பார்த்தன் {அர்ஜுனன்} மோதுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் [2]” என்றார்.

பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களைக் கொல்வதற்காக வெளியே சென்ற பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் துருப்புகளின் தலைமையில் நின்றபடி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிக்க முன்னேறினார். துரோணர் தன் படைகளைக் கருட வடிவில் {கருட வியூகத்தில்} அணிவகுத்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், தன் துருப்புகளை அரை வட்ட வடிவில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} எதிரணிவகுத்தான்.

அந்தக் கருடனின் வாய்ப்பகுதியில் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரே நின்றார். தன் உடன் பிறந்த தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன் அதன் தலையாக அமைந்தான். கிருதவர்மனும், சிறப்புமிக்கக் கிருபரும் அந்தக் கருடனின் இரு கண்களாக அமைந்தனர். பூதசர்மன், க்ஷேமசர்மன், வீரமிக்கக் கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்தியர்கள், சூத்திரர்கள், ஆபிரர்கள், தசேரகர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், ஹம்சபதர்கள், சூரசேனர்கள், தரதர்கள், மத்திரர்கள், காலிகேயர்கள் ஆகியோரும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் கூடி அதன் {அந்தக் கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றனர்.

ஒரு முழு அக்ஷௌஹிணியால் சூழப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், சோமதத்தன், பாஹ்லிகன் ஆகிய இந்த வீரர்கள் வலது சிறகில் தங்கள் நிலைகளை எடுத்தனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு முன்பு இடது சிறகில் நின்றனர். (அந்தக் கருடனின்) பின்புறத்தில் கலிங்கர்கள், அம்பஷ்டர்கள், மகதர்கள், பௌண்டரர்கள், மத்ரகர்கள், காந்தாரர்கள், சகுனர்கள், கிழக்கத்தியர்கள், மலைவாசிகள் மற்றும் வசாதிகள் ஆகியோர் இருந்தனர்.

{கருட வியூகத்தின்} வாலில், விகர்த்தனன் மகன் கர்ணன், தன் மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளால் உண்டான ஒரு பெரிய படையால் சூழப்பட்டு நின்றான். போரில் சாதித்தவர்களான ஜெயத்ரதன், பீமரதன், சம்பாதி, ரிஷபன், ஜயன், போஜர்கள், பூமிஞ்சயன், விருஷன், கிராதன், நிஷாதர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் ஆகியோர் ஆனைவரும் பெரிய படை ஒன்றால் சூழப்பட்டவர்களாகப் பிரம்மலோகத்தைத் தங்கள் கண்களின் முன் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் இதயப்பகுதியில் நின்றனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகமானது அதன் காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவாக (போருக்கு அது முன்னேறியபோது) புயலால் கொந்தளிக்கும் கடல் போல நிலையற்றதாக இருந்தது. கோடை காலத்தில் {கோடை காலத்தின் முடிவில்} மின்னலுடன் முழங்கும் மேகங்கள் அனைத்துப் புறங்களில் இருந்தும் (வானத்தில்) விரைவதைப் போல, போரை விரும்பிய வீரர்கள், அந்த வியூகத்தின் சிறகுகளிலிருந்தும் பக்கங்களிலிருந்தும் போரிடத் தொடங்கினர்.

பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட தன் யானையின் மீதேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தன் தலைக்கு மேலே வெண்குடை கொண்ட அவன் {பகதத்தன்} கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்துடன் கூடிய முழு நிலவைப் போலத் தெரிந்தான். மது போன்ற கசிவினால் குருடானதும், கறுமாக்கல் திரளைப் போலத் தெரிந்ததுமான அந்த யானை பெரும் மேகங்களால் (மேகங்கள் மழை பொழிவதால்) துவைக்கப்பட்ட பெரும் மலையைப் போலப் பிரகாசித்தது. அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தேவர்களால் சூழப்பட்ட சக்ரனை {இந்திரனைப்} போலவே, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த மலை நாடுகளைச் சேர்ந்த வீர மன்னர்கள் பலரால் சூழப்பட்டிருந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத மனித சக்திக்கு மீறிய வியூகத்தைக் கண்டு பிருஷதன் மகனிடம் {யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம்}, “ஓ! தலைவா, ஓ! புறாக்களைப் போன்ற வெண்ணிற குதிரைகளைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, அந்தப் பிராமணரால் {துரோணரால்} நான் சிறைபடாதிருக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றான்.

திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, துரோணர் எவ்வளவுதான் முயன்றாலும் நீர் அவர் வசத்தை அடைய மாட்டீர். நான் உயிரோடுள்ளவரை, ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் எந்தக் கவலையையும் உணர்வது தகாது. எந்தச் சூழ்நிலையிலும் போரில் என்னைத் துரோணரால் வீழ்த்த இயலாது” என்றான் {திருஷ்டத்யும்னன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “புறாக்களின் நிறத்திலான குதிரைகளையுடைய வலிமைமிக்கத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தன் கணைகளை இறைத்தபடி துரோணரை நோக்கி விரைந்தான். தனக்கு முன்பு திருஷ்டத்யும்னன் வடிவில் நின்ற அந்தத் தீய சகுனத்தைக் கண்ட துரோணர் மகிழ்ச்சியற்றவரானார் [3].எதிரிகளை நசுக்குபவனான உமது மகன் துர்முகன் இதைக் கண்டு, துரோணருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, திருஷ்டத்யும்னனைத் தடுக்கத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்}, உமது மகன் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. அப்போது பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கணைகளின் மழையால் துர்முகனை விரைவாக மறைத்து அடர்த்தியான கணை மழையால் பரத்வாஜரின் மகனையும் {துரோணரையும்} தடுத்தான். துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துர்முகன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி வேகமாக விரைந்து பல்வேறு விதங்களிலான கணைகளின் மழையால் அவனைக் குழப்பினான்.

பாஞ்சால இளவரசனும் {திருஷ்டத்யும்னனும்}, குருகுலத்தில் முதன்மையானவனும் {துர்முகனும்} போரிட்டுக் கொண்டிருக்கையில், துரோணர், யுதிஷ்டிரனுடைய படையின் பல பகுதிகளை எரித்தார். காற்றினால் மேகங்களின் திரள் பல்வேறு திசைகளில் சிதறிப் போவதைப் போலவே, யுதிஷ்டிரனின் படையும் துரோணரால் களத்தின் பல பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் ஒரு இயல்பான மோதலைப் போலத் தெரிந்தது.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருக்கும் எந்தக் கருணையும் காட்டாத மதங்கொண்ட இரு மனிதர்களுக்கு இடையிலான மோதலாக அது மாறியது. அதற்கு மேலும் போராளிகளால் தங்கள் மனிதர்களுக்கும், எதிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை. அனுமானங்கள் மற்றும் குறிச்சொற்களால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்களால் அந்தப் போர் தொடர்ந்து நடந்தது. அவர்களின் {அந்த வீரர்களின்} தலைப்பாகைகள், கழுத்தணிகள் மற்றும் பிற ஆபரணங்களில் உள்ள ரத்தினங்கள் {சூடாரத்தினங்கள்}, கவசங்கள் ஆகியவற்றில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுந்து விளையாடுவதாகத் தெரிந்தது. படபடக்கும் கொடிகளுடன் கூடிய தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன கொக்குகளுடன் கூடிய மேகங்களின் திரள்களுக்கு ஒப்பானவையாக அந்தப் போரில் தெரிந்தன.

மனிதர்கள் மனிதர்களைக் கொன்றனர், கடும் உலோகம் கொண்ட குதிரைகள் குதிரைகளைக் கொன்றன, தேர்வீரர்கள் தேர்வீரர்களைக் கொன்றனர், யானைகள் யானைகளையே கொன்றன.

விரைவில், உயர்ந்த கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகளுக்கும் , (அவற்றை நோக்கி விரையும்) வலிமையான எதிராளிகளுக்கும் {யானைகளுக்கும்} இடையில் பயங்கரமானதும், கடுமையானதுமான மோதல் நடந்தது. அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் உடல்களோடு எதிராளிகளின் உடலைத் தேய்த்தது, (தங்கள் தந்தங்களால்) ஒன்றை மற்றொன்று கிழித்தது, எண்ணற்ற தந்தங்கள் {பிற} தந்தங்களோடு உராய்ந்தது ஆகிய அனைத்தின் விளைவால் புகையுடன் கூடிய நெருப்பு உண்டாயிற்று. (தங்கள் முதுகில் இருந்த) கொடிமரங்கள் வெட்டப்பட்ட அந்த யானைகள், அவற்றின் தந்தங்களில் உண்டான நெருப்புகளின் விளைவால், ஆகாயத்தில் மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன.

(பகை யானைகளால்) இழுக்கப்படுபவை, முழங்குபவை, கீழே விழுபவை ஆகிய யானைகளால் விரவிக் கிடந்த பூமியானது, மேகங்களால் நிறைந்த கூதிர்கால வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது. கணைகள் மற்றும் வேல்களின் மழையால் கொல்லப்படும்போது அந்த யானைகளின் முழக்கம், மழைக்காலத்தின் மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாக ஒலித்தன. வேல்கள் மற்றும் கணைகளால் காயம் அடைந்த பெரும் யானைகள் சில பீதியடைந்திருந்தன.

அந்த உயிரினங்களில் சில பெரும் அலறலோடு களத்தை விட்டு ஓடின. பிற யானைகளின் தந்தங்களால் தாக்கப்பட்ட சில, யுக முடிவில் அனைத்தையும் அழிக்கும் மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாகத் துன்பத்தில் அலறின. பெரும் எதிராளிகளிடம் புறமுதுகிட்ட சில, கூரிய அங்குசங்கள் மூலம் தூண்டப்பட்டு மீண்டும் களத்திற்குத் திரும்பின. பகையணிகளை நசுக்கிய அவை தங்கள் வழியில் வந்த எவரையும் கொல்லத் தொடங்கின. யானைப்பாகர்களின் கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்ட {மற்ற} யானைப்பாகர்கள், தங்கள் கரங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அங்குசங்கள் நழுவத் தங்கள் விலங்குகளின் முதுகுகளில் இருந்து கீழே விழுந்தனர்.

தங்கள் முதுகில் பாகர்கள் இல்லாத பல யானைகள் பெரும் திரள்களில் இருந்து பிரிந்த மேகங்களைப் போல அங்கேயும் இங்கேயும் திரிந்து ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. பெரும் யானைகள் சில தங்கள் முதுகில் கொல்லப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட வீரர்களை, அல்லது ஆயுதங்களை நழுவவிட்டோரைச் சுமந்து கொண்டு தனியாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன [4]. அந்தப் படுகொலைகளுக்கு மத்தியில், தாக்கப்பட்டோ, வேல்கள், வாள்கள் அல்லது போர்க்கோடரிகளால் தாக்கப்படும்போதோ துன்பப் பேரொலிகளை வெளியிட்டபடியே அந்தப் பயங்கரப் படுகொலையில் சில யானைகள் வீழ்ந்தன.

மலைகளைப் போன்ற பெரும் உடல்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் திடீரெனச் சுற்றிலும் விழுவதால் தாக்கப்பட்ட பூமியானது நடுங்கிக் கொண்டே ஒலிகளை வெளியிட்டது. பாகன்களோடு சேர்த்துக் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் முதுகுகளில் கொடிமரங்களுடன் கிடந்த போது, பூமியானது மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. நீண்ட கணைகளால் {நாராசங்களால்} தாக்கப்பட்ட சில யானைகள் கொக்குகளைப் போல அலறியபடியும், நண்பர்கள் மற்றும் எதிரிகளைத் தங்கள் நடையால் நசுக்கிக் கொன்றபடியும் அனைத்துத் திசைகளிலும் ஓடின.

யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரின் எண்ணற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தமும் சதையும் சேர்ந்த சேறானது. சக்கரங்களுடன் கூடிய தேர்களும், சக்கரங்களற்ற பலவும், யானைகளின் தந்த முனைகளால் நசுக்கப்பட்டு, அவற்றில் {அந்தத் தேர்களில்} இருந்த வீரர்களோடு சேர்த்து அவற்றால் {அந்த யானைகளால்} தூக்கி வீசப்பட்டன. வீரர்களை இழந்த தேர்கள் காணப்பட்டன. ஓட்டுநர்கள் இல்லாத குதிரைகளும், யானைகளும் காயங்களால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.

எந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு அங்கே நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்ததால் அங்கே தந்தை தனது மகனைக் கொன்றான், மகன் தனது தந்தையைக் கொன்றான். கணுக்கால் ஆழம் கொண்ட இரத்தச் சேற்றில் மூழ்கிய மனிதர்கள், சுடர்மிகும் காட்டுத்தீயால் விழுங்கப்பட்ட அடிப்பாகங்களைக் கொண்ட உயர்ந்த மரங்களைப் போலத் தெரிந்தனர். ஆடைகள், கவசங்கள், குடைகள், கொடிமரங்கள் ஆகியவை குருதியால் நனைந்திருந்தன. களத்தில் இருந்த அனைத்தும் இரத்தம் கலந்தவையாகவே தெரிந்தன. பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட குதிரைகள், தேர்கள், மனிதர்கள் ஆகியவை தேர்ச்சக்கரங்கள் உருள்வதால் மீண்டும் மீண்டும் துண்டுகளாக வெட்டப்பட்டன.

யானைகளை ஓடையாகக் கொண்டதும், கொல்லப்பட்ட மனிதர்களை மிதக்கும் பாசிகளாகக் கொண்டதும், தேர்களைச் சுழல்களாகக் கொண்டதுமான அந்தத் துருப்புகள் எனும் கடல் மிகக் கடுமையானதாகவும் பயங்கரமானதாவும் தெரிந்தது. குதிரைகள், யானைகள் என்ற பெரிய மரக்கலங்களைக் கொண்ட வீரர்கள், தங்கள் செல்வமாக வெற்றியை விரும்பி, அந்தக் கடலில் குதித்து, மூழ்குவதற்குப் பதிலாக, தங்கள் எதிரிகளின் உணர்வுகளை இழக்கச் செய்தனர். தனிப்பட்ட அடையாளங்களைக் {கொடிகளைக்} கொண்ட அந்த வீரர்கள் அனைவரும், கணை மழைகளால் மறைக்கப்பட்ட போது, அவர்களில் எவரும் தங்கள் அடையாளங்களை {கொடிகளை} இழந்தாலும் உற்சாகத்தை இழக்கவில்லை.

அந்தப் பயங்கரப் போரில் தனது எதிரிகளின் அறிவைக் குழப்பிய துரோணர் (இறுதியாக) யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.

பாஞ்சால இளவரசர்களைக் கொன்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 021-கணை மழையால் யுதிஷ்டிரனை வரவேற்ற துரோணர்; துரோணரைத் தடுத்த சத்யஜித்தும் விருகனும்; விருகனையும், சத்தியஜித்தையும் கொன்ற துரோணர்; விராடனின் தம்பியான சதானீகனைக் கொன்ற துரோணர்; துரோணர் உண்டாக்கிய குருதிப்புனல்; திருடசேனன் க்ஷேமன், வசுதேவன் {வசுதானன்}, பாஞ்சாலன்; {சுசித்ரன்}, ஆகியோரைக் கொன்ற துரோணர்; துரோணரிடமிருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு துரோணர், அச்சமற்ற வகையில் யுதிஷ்டிரன் தன்னை நெருங்குவதைக் கண்டு, அடர்த்தியான கணைகளின் மழையால் அவனை {யுதிஷ்டிரனை} வரவேற்றார். யானைக்கூட்டத்தின் தலைவன் வலிமைமிக்கச் சிங்கத்தால் தாக்கப்படும்போது, {மற்ற} யானைகள் அலறுவதைப் போல யுதிஷ்டிரப்படையின் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.

துரோணரைக் கண்டவனும், துணிச்சல்மிக்கவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சத்தியஜித், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பிய ஆசானை {துரோணரை} நோக்கி விரைந்தான். பெரும் வலிமைமிக்க ஆசானும் {துரோணரும்}, பாஞ்சால இளவரசனும் {சத்தியஜித்தும்}, இந்திரனையும், பலியையும் போல அடுத்தவர் துருப்புகளை கலங்கடித்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர். பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சத்தியஜித் வலிமைமிக்க ஆயுதம் {அஸ்திரம்} ஒன்றைத் தூண்டிக் கூர்முனைக் கணைகளால் துரோணரைத் துளைத்தான். மேலும் சத்தியஜித் துரோணரின் தேரோட்டியின் மீது, பாம்பின் விஷத்தைப் போல மரணத்தைத் தரக்கூடியவையும், காலனைப் போலத் தெரிபவையுமான ஐந்து கணைகளை ஏவினான். இப்படித் தாக்கப்பட்ட தேரோட்டி தன் உணர்வுகளை இழந்தான்.

உடனே சத்தியஜித், துரோணரின் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான்; மேலும் சினத்தால் நிறைந்த அவன் {சத்தியஜித்} அவரது {துரோணரின்} பார்ஷினி ஓட்டுநர்கள் [1] {இருவரையும்} ஒவ்வொருவரையும் பத்து {பத்துப் பத்து} கணைகளால் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சத்தியஜித்}, எதிரிகளை நசுக்குபவரான துரோணரின் கொடிமரத்தை வெட்டினான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவரான துரோணர், போரில் தன் எதிரியின் இந்த அருஞ்செயல்களைக் கண்டு, அவனை {சத்தியஜித்யை} அடுத்த உலகத்திற்கு அனுப்ப மனத்தில் தீர்மானித்தார் [2]. பிறகு தனது துருப்புகளின் தலைமையில் இருந்த அவன் {சத்தியஜித்} தன் தேரில் {அந்தக் களத்தை} வட்டமாகச் சுழன்றான். சத்தியஜித்தின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்த ஆசான் {துரோணர்}, விரைவாக உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் துளைத்தார். அதன்பேரில், மற்றொரு வில்லை எடுத்த வீரமிக்கச் சத்தியஜித், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் இறகுகளால் சிறகமைந்த முப்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான் [3].சத்தியஜித்தால் போரில் (இப்படி) எதிர்க்கப்பட்ட துரோணரைக் கண்ட பாண்டவர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துத் தங்கள் ஆடைகளை அசைத்தனர். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க விருகன், அறுபது {60} கணைகளால் துரோணரை நடுமார்பில் துளைத்தான். அந்த அருஞ்செயல் பெரும் அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, பெரும் வேகமுடையவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், (தன் எதிரிகளின்) கணை மழைகளால் மறைக்கப்பட்டவருமான துரோணர், தன் கண்களை அகல விரித்துத் தன் சக்தி அனைத்தையும் திரட்டினார். பிறகு, சத்தியஜித் மற்றும் விருகன் ஆகிய இருவரின் விற்களையும் அறுத்த துரோணர், ஆறு கணைகளால் விருகனை அவனது தேரோட்டி மற்றும் குதிரைகளுடன் சேர்த்துக் கொன்றார். கடினமான மற்றொரு வில்லை எடுத்த சத்தியஜித், துரோணரை அவரது குதிரைகள், அவரது தேரோட்டி மற்றும் அவரது கொடிமரம் ஆகியவற்றோடு சேர்த்துத் துளைத்தான்.

பாஞ்சாலர்களின் இளவரசனால் {சத்தியஜித்தால்} போரில் இப்படிப் பீடிக்கப்பட்ட துரோணரால் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் {துரோணர்}, தன் எதிரியின் அழிவுக்காக (அவன் மீது) தன் கணைகளை விரைவாக ஏவினார். பிறகு துரோணர் தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரங்கள், அவனது வில்லின் கைப்பிடி மற்றும் அவனது பார்ஷினி ஓட்டுநர்கள் இருவர் ஆகியோரை இடையறாத கணைகளால் மறைத்தார். ஆனால் (இப்படி) மீண்டும் மீண்டும் அவனது வில் வெட்டப்பட்டாலும், உயர்வான ஆயுதங்களை அறிந்த அந்தப் பாஞ்சால இளவரசன் {சத்தியஜித்}, சிவப்பு குதிரைகளைக் கொண்டவரிடம் {துரோணரிடம்} தொடர்ந்து போரிட்டான். அந்தப் பயங்கரப் போரில் சத்யஜித் சக்தியில் பெருகுவதைக் கண்ட துரோணர், அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சத்தியஜித்தின்} தலையை அர்த்தச்சந்திரக் கணை ஒன்றினால் வெட்டி வீழ்த்தினார்.

போராளிகளில் முதன்மையானவனும், பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {சத்தியஜித்} படுகொலை செய்யப்பட்டதும், துரோணர் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமான குதிரைகளின் மூலம் (சுமக்கப்பட்ட) யுதிஷ்டிரன் தப்பி ஓடினான் [4].பிறகு, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காரூஷர்கள், கோசலர்கள் ஆகியோர் துரோணரைக் கண்டு, யுதிஷ்டிரனை மீட்க விரும்பி , அவரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். எனினும், பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்பவரான துரோணர், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் படைப்பிரிவுகளை எரிக்கத் தொடங்கினார்.

பிறகு, மத்ஸ்யர்கள் ஆட்சியாளனுடைய {விராடனின்} தம்பியான சதானீகன், அந்தப் (பாண்டவப் படை) பிரிவுகளை இப்படி இடையறாமல் அழிப்பதில் ஈடுபடும் துரோணரை நோக்கி விரைந்தான். சதானீகன், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டுச் சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்த ஆறு கணைகளால் துரோணருடன் சேர்த்து அவரது தேரோட்டியையும், குதிரைகளையும் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான்.

அந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டு [5], அடைவதற்கு அரிதானதைச் சாதிக்க முயன்ற அவன் {சதானீகன்}, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜரின் மகனை {துரோரணை} கணைகளின் மழைகளால் மறைத்தான். பிறகு துரோணர், தன்னை நோக்கி ஆர்ப்பரிப்பவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான சதானீகனின் தலையைக் கத்தி போன்ற கூர்மையானதொரு கணையால் அவனது உடலிலிருந்து விரைவாக அறுத்தார். அதன்பேரில், மத்ஸ்ய வீரர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.மத்ஸ்யர்களை வீழ்த்திய பிறகு, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, சேதிகள், காரூசர்கள், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தினார். தங்கத்தேரைக் கொண்டவரும், சினத்தால் தூண்டப்பட்டவருமான அந்த வீரர் {துரோணர்}, காட்டை எரிக்கும் நெருப்பைப் போலத் தங்கள் படைப்பிரிவுகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர்.

பெரும் சுறுசுறுப்புக் கொண்டு எதிரியை இடையறாமல் கொல்லும் அவர் {துரோணர்} தன் வில்லை வளைக்கும்போது உண்டாகும் நாணொலி திசைகள் அனைத்திலும் கேட்கப்பட்டன. பெரும் கர நளினம் {லாவகம்} கொண்ட அந்த வீரரால் {துரோணரால்} ஏவப்பட்ட கடுங்கணைகள் யானைகளையும், குதிரைகளையும், காலாட்படை வீரர்களையும், தேர்வீரர்களையும், யானைப் பாகன்களையும் நசுக்கின. கோடை காலத்தில் கடும் காற்றுடன் கூடிய வலிமைமிக்க மேகத் திரள்கள் முழக்கத்துடன் கல்மாரியைப் பொழிவதைப் போலவே, துரோணரும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கணைமாரியைப் பொழிந்தார். வலிமைமிக்க வீரரும், பெரும் வில்லாளியும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவருமான அவர் {துரோணர்}, (பகை) கூட்டத்தைக் (களத்தில்) கலங்கடித்தபடியே திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார். அளக்க இயலாத சக்தி கொண்ட துரோணரின் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லானது, மேகங்களுடன் கூடிய மின்னலின் கீற்றுகள் போலத் திசைகள் அனைத்திலும் காணப்பட்டது. போரில் அவர் திரிந்து கொண்டிருந்த போது, அவரது கொடியில் உள்ள அழகிய பீடமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்திற்கோ, இமயத்திற்கோ ஒப்பானதாகத் தெரிந்தது.

பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் துரோணர் உண்டாக்கிய படுகொலையானது, தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் புகழப்படும் விஷ்ணுவால் தைத்திய படைக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டதைப் போலவே பெரிதானதாக இருந்தது. வீரரும், பேச்சில் உண்மையுடையவரும், பெரும் விவேகமும், வலிமையும் கொண்டவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையுடையவருமான துரோணர், கடுமையானதும், மருண்டோரை அஞ்சச் செய்வதுமான நதி ஒன்றை அங்கே பாயச் செய்தார்.

கவசங்களே அதன் அலைகளாகின, கொடிமரங்கள் அதன் சுழல்களாகின. (அது பாய்கையில்) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைச் சுமந்து சென்றது. யானைகளும், குதிரைகளும் அதன் பெரும் முதலைகளாகின, வாள்கள் அதன் மீன்களாகின. அது {அந்த ஆறு} கடக்கப்பட முடியாததாக இருந்தது. துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் அதன் கூழாங்கற்களாகின, பேரிகைகளும், முரசங்களும் அதன் ஆமைகளாகின. கேடயங்களும், கவசங்களும் அதன் படகுகளாகின, வீரர்களின் தலைமயிர் பாசியும் புற்களுமாகின. அம்புகள் அதன் சிற்றலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும் அமைந்தன. போராளிகளின் கரங்கள் அதன் பாம்புகளாகின. கடும் நீரோட்டத்தைக் கொண்ட ஆறு அந்தப் போர்க்களமெங்கும் ஓடி குருக்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இருவரையும் அடித்துச் சென்றது. மனிதர்களின் தலைகள் அதன் கற்களாகின, அவர்களின் தொடைகள் அதன் மீன்களாகின. கதாயுதங்கள் (பலர் கடக்க முயன்ற) தெப்பங்களாகின. தலைப்பாகைகள் அதன் பரப்பை மறைத்த நுரைகளாகின, (விலங்குகளின்) குடல்கள் அதன் பாம்புகளாகின. கடுமையான (தோற்றத்தைக் கொண்ட) அது வீரர்களை (அடுத்த உலகத்திற்கு) அடித்துச் சென்றது. குருதியும், சதையும் அதன் சகதிகளாகின. யானைகள் அதன் முதலைகளாகவும், கொடிமரங்கள் (அதன் கரைகளில் நிற்கும்) மரங்களாகின. ஆயிரக்கணக்கான க்ஷத்திரியர்கள் அதில் மூழ்கினர். குதிரைவீரர்கள், யானை வீரர்கள் ஆகியோர் அதன் சுறாக்களாகினர், கடுமையான (இறந்தோரின்) உடல்கள் அடைத்துக் கொண்டிருக்க அது கடப்பதற்கு மிகக் கடினமானதாக ஆனது. அந்த ஆறு யமலோகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ராட்சசர்கள், நாய்கள் மற்றும் நரிகளால் அது நிறைந்திருந்தது. சுற்றிலும் கடுமையான மனித ஊனுண்ணிகளால் அது மொய்க்கப்பட்டிருந்தது.

பிறகு, குந்தி மகனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் பலர், காலனைப் போலவே தங்கள் படைப்பிரிவுகளை எரித்துக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். உண்மையில், சூரியன் தன் கதிர்களால் உலகை எரிப்பதைப் போலத் தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் எரித்துக் கொண்டிருந்த துரோணரை அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் முழுமையாகச் சூழ்ந்து கொண்டனர்.

பிறகு, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட உமது படையின் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும் பெரும் வில்லாளியான அந்த வீரரை {துரோணரை} ஆதரிப்பதற்காக அவரை நோக்கி விரைந்தனர்.

சிகண்டி, ஐந்து நேரான கணைகளால் துரோணரைத் துளைத்தான். க்ஷத்ரதர்மன் இருபது கணைகளாலும், வசுதேவன் [6] ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். உத்தமௌஜஸ் மூன்று கணைகளாலும், க்ஷத்ரதேவன் ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். அந்தப் போரில் சாத்யகி நூறு கணைகளாலும், யுதாமன்யு எட்டாலும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் பனிரெண்டு கணைகளாலும், திருஷ்டத்யும்னன் பத்தாலும், சேகிதானன் மூன்றாலும் துரோணரைத் துளைத்தனர்.மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவரும், கலங்கடிக்கப்பட முடியாத நோக்கைக் கொண்டவருமான துரோணர் (பாண்டவர்களின்) தேர்ப்படையை அணுகி திருடசேனனை வீழ்த்தினார். பிறகு, அச்சமற்ற வகையில் போரிட்டுக் கொண்டிருந்த மன்னன் க்ஷேமனை அணுகி ஒன்பது கணைகளால் அவனைத் தாக்கினார். அதன் பேரில், உயிரிழந்த க்ஷேமன் தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். (பகை) துருப்புகளின் மத்தியில் சென்ற அவர் {துரோணர்}, அனைத்துத் திசைகளிலும் திரிந்து தானே பாதுகாப்பில்லாதபோது, மற்றவரைப் பாதுகாத்தார். பிறகு அவர் {துரோணர்} பனிரெண்டு கணைகளால் சிகண்டியையும், இருபதால் உத்தமௌஜஸையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் வசுதேவனை {வசுதானனாக இருக்க வேண்டும்} யமனுலகிற்கு அனுப்பினார். மேலும் அவர் {துரோணர்}, எண்பது கணைகளால் க்ஷேமவர்மனையும், இருபத்தாறால் சுதக்ஷிணனையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் க்ஷத்ரதேவனை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினார். தங்கத் தேர் கொண்ட துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் யுதாமன்யுவையும், முப்பதால் சாத்யகியையும் துளைத்து, யுதிஷ்டிரனை விரைவாக அணுகினார். அப்போது, மன்னர்களில் சிறந்த யுதிஷ்டிரன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டபடி ஆசானிடம் இருந்து விரைவாகத் தப்பி ஓடினான் [7].பிறகு, பாஞ்சாலன் துரோணரை நோக்கி விரைந்தான். அந்த இளவரசனின் வில்லை வெட்டிய துரோணர், அவனது குதிரைகளுடனும், தேரோட்டியுடனும் சேர்த்து அவனைக் {பாஞ்சாலனைக்} கொன்றார். உயிரிழந்த அந்த இளவரசன் ஆகாயத்தில் இருந்து தளர்ந்து விழும் ஒளிக்கோளைப் போலத் தன் தேரில் இருந்து பூமியில் விழுந்தான் [8].அந்தப் பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசன் விழுந்ததன் பேரில், “துரோணரைக் கொல்லுங்கள், துரோணரைக் கொல்லுங்கள்” என்ற உரத்த அலறல் அங்கே கேட்டது. வலிமைமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டிருந்த பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரையும் நசுக்கத் தொடங்கினார். பிறகு குருக்களால் ஆதரிக்கப்பட்ட துரோணர், சாத்யகியையும், சேகிதானன் மகனையும், சேனாபிந்துவையும், சுவர்ச்சஸையும் இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களையும் வீழ்த்தினார்.

ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் வெற்றியை அடைந்த உமது வீரர்கள், திசைகள் அனைத்திலும் தப்பி ஓடிய பாண்டவர்களைக் {பாண்டவ வீரர்களைக்} கொன்றனர். இந்திரனால் கொல்லப்பட்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள் ஆகியோர் (அச்சத்தால்) நடுங்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனைத் திருத்திய கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 022-துரோணரின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்த துரியோதனன் பாண்டவர்களை அவமதித்துப் பேசியது; பாண்டவர்களை அவமதிப்பது தகாது என்று சொல்லி அவர்களைப் புகழ்ந்த கர்ணன்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கரப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பிளக்கப்பட்டபோது, யாரேனும் ஒருவனாவது போரில் துரோணரை அணுகினானா? ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் முதன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா? ஓ! சஞ்சயா, தன் படைகளின் தலைமையில் நிற்கும் பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கண்டு, அவரை அணுகிய அந்த வீரர்கள் யாவர் என்று எனக்குச் சொல்வாயாக [1]” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், சேதிகள், கேகயர்கள் ஆகியோர் துரோணரின் கணைகளால் போரில் பிளக்கப்பட்டு, இப்படி முறியடிக்கப்பட்டதைக் கண்டும், புயலால் கலங்கடிக்கப்பட்ட பெருங்கடலின் பயங்கரமான அலைகளால் நிலை தடுமாறும் மரக்கலங்களைப் போலத் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட வேகமான கணைகளின் மழையால் களத்தில் இருந்து இப்படி விரட்டப்பட்ட அவர்களைக் கண்டும் சிங்க முழக்கங்களாலும், பல்வேறு கருவிகளால் உண்டாக்கப்பட்ட ஒலிகளாலும், (பகைவரின் {பாண்டவப்} படையில் உள்ள) தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கௌரவர்கள் தாக்கத் தொடங்கினர்.

(வேகமாக ஓடும் பாண்டவ வீரர்களான) அவர்களைக் கண்ட மன்னன் துரியோதனன், தன் உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, சிரித்துக் கொண்டே கர்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

துரியோதனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, “சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட காட்டுமான்கூட்டத்தைப் போல, அந்த உறுதி மிக்க வில்லாளியின் (துரோணரின்) கணைகளால் பிளக்கப்பட்ட பாஞ்சாலர்களைப் பார். இவர்கள் மீண்டும் போருக்கு வர மாட்டார்கள் என நினைக்கிறேன். புயலால் பிளக்கப்பட்ட வலிமைமிக்க மரங்களைப் போலத் துரோணரால் இவர்கள் பிளக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உயர் ஆன்ம வீரரின் {துரோணரின்} தங்கச் சிறகுள்ள கணைகளால் பீடிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இவர்களில் இருவராகச் சேர்ந்திருப்பவர் எவரும் இல்லை. உண்மையில், அவர்கள் சுழல்களால் களமெங்கும் இழுத்துச் செல்லப்படுவது போலத் தெரிகிறது.

கௌரவர்களாலும், உயர் ஆன்ம துரோணரால் தடுக்கப்படும் அவர்கள், காட்டுத் தீக்கு மத்தியில் உள்ள யானைகளைப் (யானைக்கூட்டத்தைப்) போல ஒருவருடன் ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். மலர்ந்திருக்கும் மரங்கள் வண்டுக்கூட்டங்களால் ஊடுருவப்படுவதைப் போலத் துரோணரின் கணைகளால் துளைக்கப்பட்ட இந்த வீரர்கள் களத்தை விட்டுத் தப்பி ஓடுகையில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். {அதோ} கோபம் நிறைந்த பீமன், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கைவிடப்பட்டு, அங்கே என் வீரர்களால் சூழப்பட்டிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓ! கர்ணா, அந்தத் தீயவன் {பீமன்}, இன்று உலகத்தைத் துரோணர் நிறைந்ததாகவே காண்பான். அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயிர் மற்றும் அரசாட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {பீமன்}, தான் உயிரோடிருக்கும்வரை போரை நிச்சயம் கைவிட மாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, இந்த (நமது) சிங்க முழக்கங்களையும் அவன் {பீமன்} பொறுக்க மாட்டான். அதே போல, பாண்டவர்களும் போரில் தோற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் துணிவுள்ளவர்களும், பெரும்கோபங்கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களும் ஆவர்.

அவர்களை நஞ்சூட்டவும், எரிக்கவும் நாம் செய்த முயற்சிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும், பகடை விளையாட்டால் எழுந்த துயரங்களையும் நினைவுகூர்ந்தும், அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டில் இருந்ததை மனத்தில் கொண்டும், பாண்டவர்கள் போரைக் கைவிடமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} (போரிடுவதற்காக) ஏற்கனவே திரும்பிவிட்டான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, நம் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிச்சயம் கொல்வான். வாளாலும், வில்லாலும், ஈட்டியாலும், குதிரைகளாலும், யானைகளாலும், மனிதர்களாலும், தேர்களாலும் [2], முழுக்க இரும்பாலான அவனது கதாயுதத்தாலும், (நம் படைவீரர்களைக்) கூட்டம் கூட்டமாக அவன் {பீமன்} கொல்வான்.

சத்தியஜித்தால் [3] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்கள் பிறர், பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், குறிப்பாகப் பாண்டவர்கள் அவனை {பீமனைப்} பின்தொடர்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சல்மிக்கவர்களும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களுமாவர். மேலும், கோபத்துடன் பீமனால் வழிநடத்தப்படும் அவர்கள் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமாவர். குலத்தின் காளைகளான அவர்கள், சூரியனைச் சூழ்ந்திருக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனைச் {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரை அணுகத் தொடங்குகின்றனர் [4].

மரணத் தருவாயிலுள்ள விட்டிற்பூச்சிகள், சுடர்மிக்க விளக்கைத் தாக்குவதைப் போல, ஒரே பொருளைக் கவனமாக நோக்கும் இவர்கள் {ஒரே வழியில் செல்லும் இந்தப் பாண்டவர்கள்} பாதுகாப்பில்லாத துரோணரை நிச்சயம் பீடிப்பார்கள். ஆயுதங்களை நன்கறிந்தவர்களான அவர்கள் துரோணரைத் தடுக்க நிச்சயம் தகுந்தவர்களே. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மேல் இப்போது இருப்பது கனமான சுமை என்றே நான் நினைக்கிறேன். துரோணர் இருக்கும் இடத்திற்கு நாம் வேகமாகச் செல்வோமாக. வலிமைமிக்க யானையைக் கொல்லும் ஓநாய்களைப் போல முறையான நோன்புகளைக் கொண்ட அவரை {துரோணரை} அவர்கள் {பாண்டவர்கள்} கொல்லாதிருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ராதேயனின் {கர்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், பிறகு, தன் தம்பிகளுடன் சேர்ந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணருடைய தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை மட்டுமே கொல்லும் விருப்பத்தால் செயலூக்கத்துடன் வந்த பாண்டவ வீரர்கள் அனைவரும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கள் தேர்களில் போருக்குத் திரும்பும் ஒலி அங்கே செவிடாக்குவதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

பாண்டிய மன்னன் சாரங்கத்வஜன்! – துரோண பர்வம் பகுதி – 023அ-துரோணரை எதிர்த்துச் சென்றோர் கொண்ட குதிரைகளைக் குறித்துச் சஞ்சயன் விளக்கிச் சொன்னது; பாண்டிய மன்னன் சாரங்கத்வஜனின் வரலாறு சுருக்கம்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனின் தலைமையில் துரோணரை எதிர்த்துச் சென்றோர் அனைவருடைய தேர்களின் தனிப்பட்ட குறியீடுகளை எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(மான் போன்ற) புள்ளிகளாலான நிறத்தைக் கொண்ட குதிரைகளால் [1] (இழுக்கப்பட்ட தேரில்) விருகோதரன் {பீமன்} முன்னேறுவதைக் கண்ட துணிச்சல் மிக்கச் சிநியின் பேரன் (சாத்யகி) வெள்ளிநிறத்தாலான குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறினான்.

எதிர்க்கப்பட முடியாதவனும், சினத்தால் தூண்டப்பட்டவனுமான யுதாமன்யு {வெண்மை, நீலம் சிவப்பு நிறங்கள் எனப்} பல வண்ண வேறுபாடுகளைக் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்துச் சென்றான்.

பாஞ்சால மன்னன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், புறாக்களின் நிறத்தையும் {வெண்மை மற்றும் கருமை நிறம்}, தங்க ஒப்பனைகளைக் கொண்டவையும் மிக வேகமானவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

தன் தந்தையைக் காக்க விரும்பியவனும், அவனுக்கு முழுமையான வெற்றியை விரும்பியவனும், முறையான நோன்புகளைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனின் மகன் க்ஷத்ரதர்மன் சிவப்பு குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் தாமரை இதழ்களின் நிறத்தைக் கொண்டவையும், தூய வெண் கண்களைக் கொண்டவையுமான குதிரைகளைத் தூண்டியபடி (துரோணரை எதிர்த்துச்) சென்றான் [2].காம்போஜ இனத்தைச் சேர்ந்தவையும், பச்சைக்கிளியின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அழகிய குதிரைகள் நகுலனைச் சுமந்தபடியே உமது படையை நோக்கி வேகமாக ஓடின.

மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட கோபக்காரக் குதிரைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளால் குறிபார்த்தபடி நிற்கும் வெல்லப்பட முடியாத துரோணரை எதிர்த்து உத்தமௌஜஸைச் சுமந்து சென்றன.

காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், {தித்திரி என்ற பறவையைப் போன்ற} பலவண்ண வேறுபாடுகளைக் கொண்டவையுமான குதிரைகள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட சகாதேவனை அந்தக் கடும்போருக்குச் சுமந்து சென்றன.

பெரும் மூர்க்கம் கொண்டவையும், காற்றைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், தந்த நிறத்தாலானவையும், கழுத்தில் கருப்பு நிற பிடரி மயிர் கொண்டவையுமான குதிரைகள் அந்த மனிதர்களில் புலியான யுதிஷ்டிரனைச் சுமந்து சென்றன. காற்றின் வேகம் கொண்டவையும், தங்க ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் குதிரைகளில் சுமக்கப்பட்ட வீரர்கள் பலர் யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தன் தலைக்குப் பின் தங்கக் குடை ஏந்தப்பட்டவனும், (யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்த) படைவீரர்கள் அனைவராலும் சூழப்பட்டவனுமான பாஞ்சாலர்களின் அரசத் தலைவன் துருபதன் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னே இருந்தான். மன்னர்கள் அனைவரிலும் சிறந்த வில்லாளியான சௌதாபி {துருபதன்}, அனைத்து ஒலிகளையும் தாங்கிக் கொள்ளவல்ல அழகிய குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான் [3].பெரும் தேர்வீரர்கள் அனைவருடன் விராடன் முன்னவனை {துருபதனைத்} தொடர்ந்தான்.

தங்கள் தங்கள் துருப்புகளால் சூழப்பட்ட கைகேயர்கள், சிகண்டி, திருஷ்டகேது ஆகியோர் மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை {விராடனைப்} பின் தொடர்ந்து வந்தனர்.

விராடனைச் சுமந்து கொண்டிருந்தவையும், பாதிரி மலர்களின் (வெளிர் சிவப்பு) வண்ணத்திலானவையுமான சிறந்த குதிரைகள் மிக அழகாகத் தெரிந்தன.

மஞ்சள் நிறத்திலானவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் மத்ஸ்யர்களின் அரசத் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனுமான விராடனின் மகனை (உத்தரனை) மிக வேகமாகச் சுமந்து சென்றன [4].ஐந்து கேகயச் சகோதரர்களும் அடர் சிவப்பு {இந்திர கோபக பூச்சியின்} நிறத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டனர். தங்கம் போன்ற காந்தியைக் கொண்டவர்களும், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டவர்களும், தங்க ஆரமணிந்தவர்களும், போரில் சாதித்தவர்களுமான அந்த வீரர்கள் {கேகயச் சகோதரர்கள்} அனைவரும், கவசங்களை அணிந்து கொண்டு மேகங்களைப் போலவே கணைகளின் மழையைப் பொழிந்து கொண்டு சென்றனர்.

தும்புருவால் கொடையாக அளிக்கப்பட்டவையும், சுடப்படாத மண்பானையின் நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியைச் சுமந்தன. மொத்தமாக, பாஞ்சால குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பனிரெண்டாயிரம் {12000} பேர் போருக்குச் சென்றனர். அவற்றில், ஆறாயிரம் {6000} பேர் சிகண்டியைப் பின்தொடர்ந்தனர்.

மான் போலப் பலவித நிறங்களைக் கொண்ட உற்சாகமான குதிரைகள் மனிதர்களில் புலியான சிசுபாலனின் மகனை {திருஷ்டகேதுவைச்} சுமந்தன. பெரும் பலம் கொண்டவனும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேது பல்வேறு வண்ணங்களைக் கொண்ட காம்போஜக் குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அழகிய அங்கங்களைக் கொண்டவையும் வைக்கோலும், புகையும் கலந்த நிறமுள்ளவையுமான சிறந்த குதிரைகள் கைகேய இளவரசனான பிருஹத்க்ஷத்ரனை வேகமாகச் சுமந்து சென்றன.

தூய வெண்கண்களைக் கொண்டவையும், தாமரையின் நிறத்தைக் கொண்டவையும், பால்ஹீகர்களின் நாட்டில் பிறந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள் சிகண்டியின் மகனான துணிச்சல்மிக்க க்ஷத்ரதேவனைச் சுமந்து சென்றன [5].தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்புப் பட்டின் வண்ணம் கொண்ட அமைதியான குதிரைகள் போரில் எதிரிகளைக் கொல்பவனான சேனாபிந்துவைச் சுமந்தன.

கொக்குகளின் நிறம் கொண்ட சிறந்த குதிரைகள், இளமை நிறைந்தவனும், மென்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான காசிகள் மன்னனின் {அபிபூவின்} மகனைப் {விபுவைப்} போரில் சுமந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனோ வேகம் கொண்டவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையும், கருப்புக் கழுத்துகள் கொண்டவையுமான வெண்ணிறக் குதிரைகள் இளவரசன் பிரதிவிந்தியனைச் சுமந்தன.

அர்ஜுனன் மகனான சுதசோமனை [6] {உளுந்துப் பூ போன்ற} வெளிர்மஞ்சள் நிறம் கொண்ட குதிரைகள் சுமந்தன. சுதசோமனை அர்ஜுனன் சோமனிடம் {சந்திரனிடம்} இருந்து அடைந்தான். உதயேந்து என்ற பெயரில் அழைக்கப்படும் குருக்களின் நகரத்தில் அவன் {சுதசோமன்} பிறந்தான். ஆயிரம் சந்திரன்களின் காந்தியைக் கொண்ட அவன் சோமகர்களின் சபையில் பெரும் புகழை வென்றதால் சுதசோமன் என்று அழைக்கப்படலானான்.சால மலர்களைப் போன்றோ, காலைச் சூரியனைப் போன்றோ நிறம் கொண்ட குதிரைகள், அனைத்துப் புகழுக்கும் தகுந்த நகுலனின் மகன் சதானீகனைச் சுமந்தன.

தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மயில் கழுத்தின் நிறத்திலானவையுமான குதிரைகள் மனிதர்களில் புலியும், (பீமனின் மூலமான) [7] திரௌபதியின் மகனுமான சுருதகர்மனைச் சுமந்தன.மீன்கொத்திகளின் {காடையுடைய சிறகின்} நிறத்திலான சிறந்த குதிரைகள், கல்விக்கடலான பார்த்தனைப் போன்றவனான திரௌபதியின் மகன் சுருதகீர்த்தியை [8] அந்தப் போரில் சுமந்தன.போரில் கிருஷ்ணனுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} ஒன்றரை மடங்கு மேலானவன் என்று கருதப்பட்ட இளைஞனான அபிமன்யுவைப் மஞ்சள்பழுப்பு நிறக் குதிரைகள் சுமந்தன.

திருதராஷ்டிர மகன்களுக்கு மத்தியில் (தன் சகோதரர்களைக் கைவிட்டு) பாண்டவர்களின் தரப்பை அடைந்த ஒரே வீரனான யுயுத்சுவைப் போரில் {தாமரை நிறத்தாலான} பெரும் குதிரைகள் சுமந்தன.

பருத்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் (உலர்ந்த) நெற்கதிரின் நிறத்தாலானவையுமான குதிரைகள் அந்தப் பயங்கரப் போரில் பெரும் சுறுசுறுப்புடன் இருந்த வார்த்தக்ஷேமியைச் சுமந்தன.

கருப்புக் கால்களைக் கொண்டவையும், தங்கத்தாலான மார்புக் கவசங்கள் தரித்தவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிபவையுமான குதிரைகள் இளமை நிரம்பிய சௌசித்தியைப் போரில் சுமந்தன.

தங்கக் கவசங்களால் முதுகு மறைக்கப்பட்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சிவப்புப் பட்டின் நிறத்தாலானவையுமான குதிரைகள் ஸ்ரேணிமானைச் சுமந்தன [9].சிவப்பு நிறத்தாலான குதிரைகள், தெய்வீக வேதங்களையும், ஆயுத அறிவியலிலும் சாதித்து முன்னேறும் சத்யத்ருதியைச் சுமந்தன.

(பாண்டவப் படையின்) படைத்தலைவனும், துரோணரைத் தன் பங்காகக் கொண்ட பாஞ்சாலனுமான திருஷ்டத்யுமனன், புறாக்களின் வண்ணத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சத்யத்ருதி, சௌசித்தி, ஸ்ரேணிமான், வசுதானன் [10], காசி ஆட்சியாளனின் {அபிபூவின்} மகன் விபு ஆகியோர் அவனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர். இவர்கள் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தில் சிறந்தவையுமான வேகமான குதிரைகளைக் கொண்டிருந்தனர்.யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ} ஒப்பான இவர்கள் ஒவ்வொருவரும், பகையணியின் வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடித்தப்படி போரில் முன்னேறிச் சென்றனர்.

காம்போஜ நாட்டைச் சேர்ந்தவர்களும், எண்ணிக்கையில் ஆறாயிரம் {6000} கொண்டவர்களுமான பிரபத்ரகர்கள், ஒன்றாகவே சாகத் தீர்மானித்து ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளைக் கொண்டவையுமான தேர்களில், விற்களை வளைத்துத் தங்கள் கணைகளின் மழைகளால் எதிரிகளை நடுங்கச் செய்தபடி திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்தனர்.

அழகிய தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பழுப்புப் பட்டு நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் சேகிதானனை உற்சாகமாகச் சுமந்தன.

அர்ஜுனனின் தாய்மாமனும், குந்தி போஜன் [11] என்றும் அழைக்கப்பட்டவனுமான புருஜித் வானவில்லின் நிறைத்தாலான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு வந்தான்.நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தின் நிறம் கொண்ட குதிரைகள் போரில் மன்னன் ரோசமானனைச் சுமந்தன [12].சிவப்பு மானின் {முயல் இரத்த} நிறத்தாலானவையும், தங்கள் உடல்களில் வெள்ளை இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள், கோபதியின் மகனான பாஞ்சால இளவரசன் சிங்கசேனனைச் சுமந்தன.

பாஞ்சாலர்களில் புலியான ஜனமேஜயன் என்ற பெயரால் அறியப்பட்டவன், எள்ளு மலர்களின் நிறத்தாலான சிறந்த குதிரைகளைக் கொண்டிருந்தான்.

வேகமுள்ளவையும், பெரியவையும், அடர்நீல நிறம் கொண்டவையும் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தயிர் நிறத்தாலான முதுகைக் கொண்டவையும், சந்திரனின் நிறத்தாலான முகங்களைக் கொண்டவையுமான குதிரைகள் பெரும் வேகத்துடன் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைச்} சுமந்து சென்றன.

அழகிய தலைகளைக் கொண்டவையும், துணிச்சல்மிக்கவையும், நாணல் தண்டுகளைப் போன்றவையும் (வெண்மையானவையும்), ஆகாயத்துக்கோ, தாமரைக்கோ ஒப்பான காந்தியைக் கொண்டவையுமான குதிரைகள் தண்டதாரனைச் சுமந்தன.

வெளிர் பழுப்பு நிறம் கொண்டவையும், எலியைப் போன்ற நிறத்தை முதுகில் கொண்டவையும், செருக்கால் கழுத்துகள் உயர்த்தப்பட்டவையுமான குதிரைகள் போரில் வியாக்கிரதத்தனைச் சுமந்தன.

கருப்புப் புள்ளிகளைக் கொண்ட குதிரைகள் மனிதர்களில் புலியும், பாஞ்சால இளவரசனுமான சுதன்வானைச் சுமந்தன.

இந்திரனின் இடிக்கு {வஜ்ரத்துக்கு} ஒப்பாகப் பெரும் மூர்க்கம் {வேகம்} கொண்டவையும், இந்திரகோபகங்களின் நிறம் கொண்டவையும், பலவண்ணங்களில் திட்டுக்களைக் கொண்டவையுமான அழகிய குதிரைகள் சித்திராயுதனைச் சுமந்தன.

தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சக்கரவாகப் பறவையின் நிறம் கொண்ட வயிறுகளைக் கொண்டவையுமான குதிரைகள் கோசலர்கள் மன்னனின் மகன் சுக்ஷத்திரனைச் சுமந்தன.

அழகியவையும், பெரும் உடல்படைத்தவையும், பலவண்ணங்களைக் கொண்டவையும், மிகுந்த பணிவுள்ளவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான உயரமான குதிரைகள் போரில் சாதித்தவனான சத்யதிருதியைச் சுமந்தன.

சுக்லன், ஒரே வெள்ளி நிறத்தாலான கொடிமரம், கவசம், வில் மற்றும் குதிரைகளுடன் போரில் முன்னேறினான்.

கடற்கரைப் பகுதிகளில் பிறந்தவையும், சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையுமான குதிரைகள், கடும் சக்தி கொண்டவனான சமுத்ரசேனன் மகன் சந்திரசேனனைச் சுமந்தன.

நீலத் தாமரையின் நிறம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய மலர்மாலைகள் தரித்தவையுமான மேன்மையான குதிரைகள் போரில் அழகிய தேரைக் கொண்ட சைப்யனைச் {சிபியின் மகனான சித்திரரதனைச்} சுமந்தன.

கலாய மலரின் நிறம் கொண்டவையும், வெள்ளை மற்றும் சிவப்பு இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள் போரில் தடுப்பதற்குக் கடினமான ரதசேனனைச் சுமந்தன.

மனிதர்களில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்படுபவனும் படச்சரர்களை {அசுரர்களைக்} கொன்றவனுமான அந்த மன்னனை {?} வெள்ளைக் குதிரைகள் சுமந்தன.

கின்சுக {பலாச மர} மலர்களின் நிறம் கொண்ட குதிரைகள், அழகிய மாலைகள் தரித்தவனும், அழகிய கவசம், ஆயுதங்கள் மற்றும் கொடிமரத்தைக் கொண்டவனுமான சித்திராயுதனைச் சுமந்தன.

ஒரே நீல நிறம் கொண்ட குதிரைகள், கொடி, வில், கவசம் மற்றும் கொடிமரத்துடன் மன்னன் நீலன் போரில் முன்னேறினான்.

பல்வேறு விதமான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வரூதம் {தேர்க்கூடு}, கொடிமரம் ஆகியவற்றைக் கொண்டவனும் அழகிய குதிரைகளையும், கொடியையும் கொண்ட சித்திரன் போரில் முன்னேறினான்.

தாமரை நிறத்தாலான சிறந்த குதிரைகள், ரோசமானனின் மகன் ஹேமவர்ணனைச் சுமந்தன.

அனைத்து வகை ஆயுதங்களைத் தாங்கவல்லவையும், போரில் துணிச்சல்மிக்கச் சாதனைகளைச் செய்தவையும், நாணலின் நிறத்தாலான முதுகெலும்பு பத்திகள் கொண்டவையும், வெண்ணிற விறைப்பைகள் கொண்டவையும், கோழி முட்டையின் நிறம் கொண்டவையுமான குதிரைகள் தண்டகேதுவைச் சுமந்தன.

வலிமைமிக்கவனும், சக்தியைச் செல்வமாகக் கொண்டவனுமான பாண்டியர்களின் மன்னன் சாரங்கத்வஜன், வைடூரியக் கற்களாலான கவசத்தைத் தரித்துக் கொண்டு, தன் சிறந்த வில்லை வளைத்தபடி, சந்திரக் கதிர்களின் நிறத்தாலான குதிரைகளில் துரோணரை நோக்கி முன்னேறினான். அவனது நாடு {பாண்டிய நாடு} படையெடுக்கப்பட்டு, அவனது சொந்தங்கள் தப்பி ஓடிய போது, அந்தப்போரில் கிருஷ்ணனால் அவனது {சாரங்கத்வஜனின்} தந்தை கொல்லப்பட்டான். பிறகு, பீஷ்மர், துரோணர், ராமர் {பரசுராமர்}, கிருபர் ஆகியோரிடம் இருந்து ஆயுதங்களை {அஸ்திரங்களை} அடைந்த இளவரசன் சாரங்கத்வஜன், ஆயுதங்களில் {அஸ்திரங்களில்}ருக்மி, கர்ணன், அர்ஜுனன் மற்றும் அச்யுதனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனாக ஆனான். பிறகு அவன் துவாரகை நகரத்தை அழித்து, முழு உலகத்தையும் {தனக்கு} அடிபணியச் செய்ய விரும்பினான். எனினும், அவனுக்கு நன்மை செய்ய விரும்பிய விவேகமுள்ள அவனது நண்பர்கள், அவ்வழிக்கு எதிராக அவனுக்கு ஆலோசனை வழங்கினர். அவன் {சாரங்கத்வஜன்}, பழியெண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டுத் தன் ஆட்சிப்பகுதிகளை இப்போது ஆண்டுவருகிறான். பாண்டியர்களின் மன்னனான அந்தச் சாரங்கத்வஜனைப் பின்தொடர்ந்த முக்கியத் தேர்வீரர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் {1,40,000} பேரை அட்ரூஸ மலரின் {Atrusa flower}{?} நிறம் {பித்தளையின் நிறமாக இருக்க வேண்டும்} கொண்ட குதிரைகள் சுமந்தன [13].பல்வேறு வண்ணங்களிலானவையும், பல்வேறு விதங்களிலான சக்திகளைக் கொண்டவையுமான குதிரைகள், வீரனான கடோத்கசனைச் சுமந்தன.

பெரும் அளவிலானவையும், வலிமைமிக்கவையும், அரட்டா இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், பாரதர்கள் அனைவரின் கருத்துகளையும் ஒதுக்கி, யுதிஷ்டிரன் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தன் விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சென்றவனும், தங்கத் தேரில் இருந்தவனும், கண்கள் சிவந்தவனுமான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிருஹந்தனைச் சுமந்தன.

தங்க நிறத்திலான மேன்மையான குதிரைகள் மன்னர்களில் முதன்மையான அறம் சார்ந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றன. 

மன்னர்களின் கொடிமரங்கள்! – துரோண பர்வம் பகுதி – 023ஆ-வீரர்கள் ஒவ்வொருவரும் கொண்ட கொடிமரங்களின் தன்மைகள் குறித்து விவரித்துச் சொன்ன சஞ்சயன்; பாண்டவர்கள் கொண்டிருந்த விற்களின் பெயர்கள்; களத்தில் ஆங்காங்கே நடைபெற்ற தனிப்போர்கள் குறித்த வர்ணனை: நகுலனின் மகன் சதானீகனால் கொல்லப்பட்ட பூதகர்மன்; துரியோதனனின் தம்பி பீமரதனால் கொல்லப்பட்ட சால்வன்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தெய்வீக வடிவங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிரபத்ரகர்கள், பல்வேறு சிறந்த நிறங்களிலான குதிரைகளில் போரிட முன்னேறினர். தங்கக் கொடிமரங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூர்க்கமாகப் போராடத் தயாராக இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகளின் அம்சங்களை அணிந்து பீமசேனனுடன் முன்னேறினர். ஒன்று கூடியிருந்த அந்தப் பிரபத்ரகர்களின் கூட்டம் திருஷ்டத்யும்னனால் மிகவும் விரும்பப்பட்டது.

எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்}, வீரர்கள் அனைவரையும் காந்தியில் விஞ்சினார். அவரது கொடிமரமானது, மேலே கருப்பு மானின் தோல் {கிருஷ்ணாஜினம் கொடி} படபடக்க, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதில் இருந்த அழகிய நீர்க்குடத்துடன் {கமண்டலத்துடன்} மிக அழகாகத் தெரிந்தது.

பீமசேனனின் கொடிமரமானது, வைடூரியத்தாலான கண்களைக் கொண்டதும், வெள்ளியாலானதுமான பெரிய சிங்கத்தைக் கொடியில் கொண்டு மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.

பெரும் சக்தியுடைய யுதிஷ்டிரனின் கொடிமரமானது, கோள்கள் சூழ இருக்கும் தங்கச் சந்திரனைக் கொடியில் கொண்டு மிக அழகாகத் தெரிந்தது. நந்தம் மற்றும் உபநந்தம் என்று அழைக்கப்பட்ட அழகிய இரண்டு பெரிய மிருதங்கங்கள் அதனுடன் கட்டப்பட்டிருந்தன. இயந்திரங்களால் இயக்கப்பட்ட இவை [1] கேட்பவர் அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் சிறந்த இசையை உண்டாக்கின.எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் உயரமானதும் கடுமையானதுமான நகுலனின் தேரில் பொருத்தப்பட்டிருந்த கொடிமரமானது, தங்கத்தாலான முதுகைக் கொண்ட சரபத்தைக் கொடியில் தாங்கியிருந்தது.

மணிகளுடன் கூடிய அழகிய வெள்ளி அன்னப்பறவையும், எதிரியின் துயரத்தை அதிகரிக்கும் பயங்கரமான கொடியும் சகாதேவனின் கொடிமரத்தில் காணப்பட்டது.

திரௌபதியின் மகன்கள் ஐவரின் கொடிமரங்களும் தர்மன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர்கள் ஆகியோரின் அற்புதமான வடிவங்களைக் கொண்ட கொடியைச் சுமந்திருந்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இளைஞனான அபிமன்யுவின் தேரில் புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசிக்கும் தங்க மயிலைத் தாங்கிய கொடியைக் கொண்ட அற்புதக் கொடிமரம் ஒன்று இருந்தது.

கடோத்கசனின் கொடிமரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒரு கழுகு பிரகாசமாக மின்னியது, அவனது குதிரைகள், பழங்காலத்தின் ராவணனுடைய குதிரைகளைப் போல நினைத்த இடங்களுக்குச் செல்ல வல்லவையாக இருந்தன.

யுதிஷ்டிரனின் கரங்களில் மஹேந்திரம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது, பீமசேனனின் கைகளிலோ, ஓ! மன்னா வாயவ்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது. மூன்று உலகங்களின் பாதுகாப்புக்காகப் பிரம்மன் ஒரு வில்லைப் படைத்தான். அந்த அழிக்கமுடியாத தெய்வீக வில்லை {காண்டீவத்தைப்} பல்குனன் {அர்ஜுனன்} கொண்டிருந்தான். வைஷ்ணவ வில்லை நகுலன் கொண்டிருந்தான், அஸ்வினம் என்றழைக்கப்படும் வில்லைச் சகாதேவன் கொண்டிருந்தான்.

பௌலஸ்தியம் என்றழைக்கப்படும் பயங்கரமான தெய்வீக வில்லைக் கடோத்கசன் கொண்டிருந்தான்.

திரௌபதியின் மகன்கள் ஐவரால் கொள்ளப்பட்ட விற்களில் ரத்தினங்களான ஐந்து விற்களும் முறையே, ரௌத்ரம் {ருத்திரன்}, ஆக்னேயம் {அக்னி}, கௌபேரயம் {குபேரன்}, யமயம் {யமன்}, கிரிசம் {கிரிசன்} என்று அழைக்கப்பட்டன. ரௌத்ரம் என்று அழைக்கப்பட்டதும், விற்களில் சிறந்ததுமான அற்புதமான வில்லானது ரோஹிணியின் மகனால் {பலராமனால்} பெறப்பட்டது, பின்னவன் {பலராமன்}, உயர் ஆன்ம சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} மனநிறைவு கொண்டு அவனுக்கே {அபிமன்யுவுக்கே} அஃதை அளித்தான்.

துணிச்சல் மிக்க வீரர்களுக்குச் சொந்தமான இவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இன்னும் பல கொடிமரங்கள் அனைத்தும் அவர்களது எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பனவாகவே இருந்தன.

துரோணரால் தலைமைதாங்கப்பட்ட படையானது, எண்ணிக்கையில் ஒரு கோழையையேனும் கொள்ளாமல், ஓ! ஏகாதபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தைத் தடுக்கும் வகையில் ஒன்றாக உயர்ந்த எண்ணற்ற கொடிமரங்களுடன் இருந்ததைக் காண, ஓவியம் தீட்டும் துணியில் உள்ள படங்களைப் போலவே இருந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரை நோக்கி விரையும் துணிச்சல் மிக்க வீரர்களின் பெயர்களையும், அவர்களது வம்சாவளியையும் {கோத்திரங்களையும்}, ஒரு சுயம்வரத்தில் கேட்கப்படுவதைப் போலவே நாங்கள் அங்கே கேட்டோம் [2] [3].

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, விருகோதரனை {பீமனைத்} தலைமையாகக் கொண்டு போரிட வந்த இந்த மன்னர்கள் தேவர்களுடைய படையையும் துன்பமடையச் செய்வார்கள். மனிதன் அதிர்ஷ்டங்களுடன் கூடியவனாகப் பிறக்கிறான். அந்த அதிர்ஷ்டத்திலேயே பற்பலவிதமான எல்லாப் பயன்பாடுகளும் காணப்படுகின்றன. யுதிஷ்டிரன் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு நீண்ட காலம் சடையும், மான்தோலும் தரித்து வனத்தில் திரிந்து கொண்டிருந்தான்; பின்பு உலகத்தாலறியப்படவும் இல்லை. அந்த யுதிஷ்டிரனே என் பிள்ளைகளின் அழிவின் பொருட்டுப் பெரிய படையையும் போர்க்களத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்துவிட்டான். இது தெய்வ செயலேயன்றி வேறென்ன?

மனிதன் புண்ணியத்தோடு சேர்ந்தே பிறக்கிறானென்பது நிச்சயம். அந்த மனிதன் தான் விரும்பாமலே அந்தப் புண்ணியத்தினால் இழுக்கப்படுகிறான். சூதாட்டமாகிய துயரத்தை அடைந்து யுதிஷ்டிரன் துன்பப்படுத்தப்பட்டானல்லவா? அந்த யுதிஷ்டிரனே மறுபடியும் அதிர்ஷ்டத்தினால் நண்பர்களைப் பெற்றான். ஓ! சூதா {சஞ்சயா}, முற்காலத்தில் புத்தியில்லாதவனான துரியோதனன் என்னை நோக்கி, “ஐயா, கேகயர்களிற்பாதியும், காசிகளில் பாதியும், கோசல நாட்டவரும், சேதி நாட்டவரில் பாதியும் இன்னும் மற்றுள்ள நாட்டவர்களும் என்னையே அடைந்துவிட்டனர். எனக்கு மிகுதியான பூமியிருக்கிறது. தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவ்வளவு இல்லை” என்று சொன்னான். அந்தப் படையால் நன்றாகக் காக்கப்பட்ட துரோணர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். அதிர்ஷ்டத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது.

பெரும் கைவன்மையுள்ளவரும், போரைக் கொண்டாடுபவரும், அஸ்திரவித்தைகளின் கரைகள் அனைத்தையும் கண்டவருமான துரோணரை மன்னர்களுக்கிடையில் எவ்விதமான எதிரி அடைந்தான்? மிகுந்த துயரத்தை அடைந்த நான் மிக்க மோசத்தை அடைந்தேன். பீஷ்மரும் துரோணரும் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கேட்டு நான் உயிரோடிருப்பதற்கு விரும்பவில்லை.

அப்பா! சூத! என்னை மகனிடம் பேராசையுள்ளவன் என்று நன்கு அறிந்த விதுரன் சொன்னவையெல்லாம் என்னாலும், துரியோதனனாலும் அடையப்பட்டன. அப்பா! கொடூரனான துரியோதனனை மட்டும் இழந்து மற்ற மகன்களை மிச்சமாக்க விரும்புவேனாகில் அனைவரும் மரணத்தை அடைய மாட்டார்கள். எந்த மனிதன் தர்மத்தைவிட்டுப் பொருளைப் பிரதானமாகக் கொள்வானோ அவன் இவ்வுலகத்தில் குறைவை அடைகிறான்; அற்பத்தன்மையையும் அடைகிறான்.

இப்போதும் அழிவடைந்த இந்த நாடு, துரோணர் கொல்லப்பட்டும் கூட மிகுந்திருக்கப் போவதாக நான் எண்ணவில்லை. பொறுமையுடையவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான எவர்களை எப்பொழுதும் அண்டிப் பிழைக்கிறோமோ அப்படிப்பட்ட பொறுப்புள்ள துரோணரும் பீஷ்மரும் காலம் சென்ற பிறகு, (நம்மவர்கள்) எவ்விதமாக மிகுந்திருப்பார்கள்? எவ்வாறு போர் நடந்ததென்பதை விளக்கமாகவே எனக்குச் சொல். எவர்கள் போரிட்டார்கள்? எவர்கள் தடுத்தனர்? எந்த அற்பர்கள் பயத்தால் ஓடினர்? வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} எதை எதைச் செய்தானோ அதை அதையும் எனக்குச் சொல். எதிரியாய் இருக்கும் அந்த அர்ஜுனனிடத்திலும் அந்த விருகோதரனிடத்திலும் {பீமனிடத்திலும்} நமக்கு அதிகப் பயமுண்டு. சஞ்சயா! பாண்டவர்கள் (போரிடத்} திரும்பியவந்தவுடன் மிகுந்திருக்கிற என்னுடைய படையை மிகவும் பயங்கரமாகக் கேடு எவ்விதம் விளைந்ததோ அதையும் எனக்குச் சொல். அப்பா, அப்பொழுது (பகைவர்கள்) திரும்பி வந்திருக்கும் காலத்தில் உங்களுடைய மனம் எவ்விதமிருந்தது? நம்மைச் சேர்ந்தவர்களுள் வீரர்களான எவர்கள், அங்கே அவர்களை எதிர்த்தனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டவர்கள் போருக்குத் திரும்பி வந்தவுடன், மேகங்களால் சூரியன் மறைக்கப்படுவது போல அந்தப் பாண்டவ வீரர்களால் துரோணர் மறைக்கப்படுவது கண்டு எங்களுக்குப் பெரிய அச்சமுண்டாயிற்று. மேலும், அவர்களால் மேலே எழுப்பிவிடப்பட்ட அதிகமான தூசியானது உம்முடைய படையை மறைத்துவிட்டது. பிறகு, பார்வையானது தடைப்பட்ட பொழுது துரோணரை மாண்டவராகவே நாங்கள் எண்ணினோம். கொடூரமான காரியத்தைச் செய்ய எண்ணங்கொண்டவர்களும், பெரிய வில்லையுடையவர்களும், வீரர்களுமான அந்தப் பாண்டவ வீரர்களைக் கண்டு துரியோதனன், “மன்னர்களே, நீங்கள் உங்களுடைய ஆற்றலுக்கும், ஊக்கத்துக்கும், ஆண்மைக்கும் தக்கபடி, பாண்டவர்களுடைய சேனையைத் தகுந்த உபாயத்தோடு தடுத்து யுத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி விரைவாகத் தன் படையை ஏவினான்.

பிறகு, உம்முடைய குமாரனான துர்மர்ஷணன், தூரத்தில் பீமசேனனைக் கண்டு துரோணருடைய உயிரைக் காப்பாற்ற விரும்பியவனாக (அவன் மீது) அம்புகளை இறைத்துக் கொண்டு எதிர்த்து வந்து போர்க்களத்தில் யமன் போலக் கோபங்கொண்டு அம்புகளாலே அவனையும் {பீமனையும்} மூடினான். அந்தத் துர்மர்ஷணனையும் பீமன் அம்புகளால் துன்பமடையும்படி செய்தான். அப்போது கைகலந்த பெரிய போர் நடந்தது. கற்றறிந்தவர்களும் அடிக்கும் திறமையுள்ளவர்களுமான அந்தச் சூரர்கள் அரசனான துரியோதனனால் கட்டளையிடப்பட்டு நாட்டையும், மரணப் பயத்தையும் விட்டுப் போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து நின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனாவன், துரோணரை எதிர்க்க எண்ணங்கொண்டு வருகின்றவனும், போரில் பிரகாசிப்பவனும், சினியின் பேரனுமான சாத்யகியைத் தடுத்தான். கோபங்கொண்டவனும், சினியின் பேரனுமான சாத்யகி, கோபங்கொண்ட அந்தக் கிருதவர்மனை கணைமாரியால் தடுத்தான். மதங்கொண்ட யானை மதங்கொண்ட யானையை எதிர்ப்பது போல, கிருதவர்மனும் சாத்யகியை எதிர்த்தான்.

பயங்கரமான வில்லையுடைய சிந்து மன்னனான ஜெயத்ரதன், முயற்சியுள்ளவனாக வருகின்ற மகாவில்லாளியான க்ஷத்ரவர்மனைக் கூர்மையான அம்புகளாலே துரோணரிடத்தில் செல்லவொட்டாமல் தடுத்தான். க்ஷத்ரவர்மனோ, சிந்துக்களின் மன்னுடைய {ஜெயத்ரதனுடைய} கொடியையும், வில்லையும் அறுத்துக் கோபங்கொண்டு பத்துக் கணைகளாலே உயிர்நிலைகள் அனைத்தையும் அடித்தான். பிறகு அந்தச் சைந்தவன் {ஜெயத்ரதன்} கைத்தேர்ச்சியுள்ளவன் போல வேறு வில்லை எடுத்துப் போர்க்களத்தில் முழுவதும் இரும்பினாற் செய்த அம்புகளாலே க்ஷத்ரவர்மாவை அடித்தான்

பாண்டவர்களின் நன்மைக்காக முயற்சி செய்பவனும், பெரும் தேர்வீரனும், பரதக் குலத்தில் தோன்றியவனும், வீரனுமான யுயுத்சுவை,  சுபாகு முயற்சியோடு துரோணரிடத்தினின்று தடுத்தான். யுயுத்சு, பிரயோகம் செய்கின்ற சுபாகுவின் வில்லோடும், அம்புகளோடுக் கூடியவைகளும் பரிகாயுதம் போன்றவைகளுமான இரண்டு கைகளையும் அராவித் துவைந்தவைகளான இரண்டு பாணங்களால் வெட்டினான்.

பாண்டவர்களுள் சிறந்தவனும், தர்மாத்மாவுமான மன்னன் யுதிஷ்டிரனை மத்ர மன்னன் சல்லியன், பொங்கிவரும் பெருங்கடலைக் கரை தடுப்பது போலத் தடுத்தான். யுதிஷ்டிரனோ உயிர்நிலைகளைப் பிளக்கின்ற பல கணைகளை அவன் மீது இறைத்தான். மத்ர மன்னனானவன் அறுபத்து நான்கு {64} கணைகளால் அந்தத் தர்மனின் மகனை அடித்து அதிகமாகச் சிம்மநாதம் செய்தான். பாண்டவர்களுள் மூத்தவனான யுதிஷ்டிரன் அடிக்கடி சிம்மநாதம் செய்யும் மத்ர நாட்டு மன்னனின் {சல்லியனின்} கொடிமரத்தையும், வில்லையும் இரண்டு கணைகளே அறுத்தான். பிறகு மக்கள் பேரொலி எழுப்பினர்.

அவ்வாறே, பாஹ்லிக நாட்டு மன்னன், படையோடு சேர்ந்து, படையோடு கூடி ஓடி வரும் மன்னன் துருபதனை அம்புகளால் தடுத்தான். படையை உடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமான அவ்விருவருக்கும் மதப்பெருக்குள்ளவைகளும் பெரிய யூதபதிகளுமான இரண்டு யானைகளுக்கு யுத்தம் நேருவது போலக் கோரமான அவ்வித யுத்தம் நடந்தது” பிறகு அரசனான துருபதன், ஒரு வலிமைமிக்கப் படைப்பிரிவின் தலைமையில் இருந்த அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். தங்கள் தங்கள் படைகளின் தலைமையில் இருந்த அந்த இரண்டு கிழவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, இரண்டு யானைக்கூட்டங்களில் உள்ள மதப்பெருக்குடைய வலிமைமிக்கத் தலைமையானைகள் இரண்டுக்கு இடையில் ஏற்படும் மோதலைப் போலப் பயங்கரமாக இருந்தது.

அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பழங்காலத்தில் இந்திரனும், அக்னியும், (அசுரன்) பலியுடன் மோதியதைப் போலத் தன் படைகளுக்குத் தலைமையில் இருந்த மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் விராடனுடன் மோதினர். குதிரைகளும், தேர்வீரர்களும், யானைகளும் மிகவும் அச்சமற்ற வகையில் ஈடுபட்ட மோதலான மத்ஸ்யர்களுக்கும், கேகயர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பானதாக இருந்தது.

நகுலனின் மகனான சதானீகன் கணைமாரியை இறைத்தபடி முன்னேறியபோது, சபாபதி என்றும் அழைக்கப்பட்ட பூதகர்மன் {!} [4] துரோணரிடம் இருந்து அவனை {சதானீகனை} விலக்கியே வைத்தான். பிறகு அந்த நகுலனின் வாரிசானவன் {சதானீகன்}, பெரும் கூர்மையுள்ள மூன்று பல்லங்களால் அந்தப் போரில் பூதகர்மனின் இரு கரங்களையும் அவனது தலையையும் இழக்கச் செய்தான்.பெரும் ஆற்றலைக் கொண்ட {பீமனின் மகன்} சுதசோமன் கணைகளின் மாரியை இறைத்தபடி துரோணரை நோக்கி முன்னேறியபோது, விவிம்சதி அவனைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட சுதசோமன், தனது சிற்றப்பன் விவிம்சதியை நேரான கணைகளால் துளைத்து, கவசம் பூண்டு மோதலுக்குத் தயாராக நின்றான்.

(துரியோதனனின் தம்பியான) பீமரதன், முழுவதும் இரும்பாலான மிக வேகமான ஆறு கூரிய கணைகளால் சால்வனை {!} [5] அவனது குதிரைகளோடும், தேரோட்டியோடும் யமனுலகு அனுப்பிவைத்தான்.{துரியோதனனின் தம்பி} சித்திரசேனனின் மகன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் தாங்கப்பட்ட உமது பேரன் சுருதகர்மனை எதிர்த்தான். போரில் வீழ்ப்பட்ட கடினமானவர்களான உமது பேரர்கள் இருவரும், தங்கள் தங்கள் தந்தையரின் நோக்கங்களின் வெற்றிக்காக ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தீவிரமாகப் போரிட்டனர்.

[6] இங்கே உமது மகன் சித்திரசேனன் என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறொரு பதிப்பில் அப்படியே இருக்கிறது.

அந்தப் பயங்கரப்போரில் முன்னணியில் நின்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைக் கண்ட துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), தன் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, முன்னவனை {பிரதிவிந்தியனைத்} தன் கணைகளால் தடுத்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பிரதிவிந்தியன், சிங்க வால் கொடியைச் சுமந்த கொடிமரத்தைக் கொண்டவனும், தன் தந்தைக்காகப் போரிடுபவனுமான அஸ்வத்தாமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். திரௌபதியின் (மூத்த) மகன் {பிரதிவிந்தியன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, விதைக்கும் காலத்தில் மண்ணில் விதைகளைத் தூவும் உழவனைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது கணைகளின் மாரியை இறைத்தான்.

துச்சாசனனின் மகன் {துர்மர்ஷனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனும், திரௌபதியின் மூலமான அர்ஜுனன் மகனுமான சுருதகீர்த்தித் துரோணரை நோக்கி விரைந்த போது, பின்னவனை {சுருதகீர்த்தியைத்} தடுத்தான். எனினும் அர்ஜுனனுக்கே இணையானவனான அந்த அர்ஜுனன் மகன் {சுருதகீர்த்தி}, பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் மூன்றினால் முன்னவனின் {துச்சாசனன் மகனின்} வில், கொடிமரம் மற்றும் தேரோட்டியை வெட்டி துரோணரை எதிர்த்து விரைந்தான்.

துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரண்டு படைகளாலும் துணிச்சல் மிக்கோரில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்பட்ட படச்சரர்களைக் கொன்றவனைத் {!} [7] தடுத்தான். எனினும், பின்னவன், லக்ஷ்மணனின் வில் மற்றும் கொடி மரம் ஆகிய இரண்டையும் அறுத்து, அவன் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்து காந்தியுடன் சுடர்விட்டான்.பெரும் விவேகியான இளமைநிறைந்த விகர்ணன், அந்தப் போரில் யக்ஞசேனனின் {துருபதனின்} இளமை நிறைந்த மகன் சிகண்டி முன்னேறிய போது பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தான். யக்ஞசேனன் மகனோ கணைகளின் மழையால் முன்னவனை {விகர்ணனை} மறைத்தான்.

{துரியோதனன் தம்பியான} அங்கதன், அந்தப் போரில் துரோணரை நோக்கி விரைந்த {பாஞ்சால} வீரன் உத்தமௌஜஸ்சை கணைமாரியால் தடுத்தான். மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடந்த மோதலானது அச்சம்நிறைந்ததாக இருந்தது, அது {அம்மோதல்} அவ்விருவரையும், துருப்புகளையும் பேரார்வத்தால் நிரப்பியது.

பெரும் வில்லாளியும், பெரும் வலிமைகொண்டவனுமான {துரியோதனன் தம்பி} துர்முகன், துரோணரை நோக்கிப் புருஜித் {குந்திபோஜன்} முன்னேறியபோது, தன் கணைகளால் பின்னவனை {புருஜித்தைத்} தடுத்தான். புருஜித் ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} துர்முகனை அவனது புருவங்களுக்கு இடையில் தாக்கினான். அதன்பேரில், துர்முகனின் முகமானது தண்டுடன் கூடிய தாமரையைப் போல அழகாகத் தெரிந்தது.

கர்ணன், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டோரும், துரோணரை நோக்கிச் சென்றோருமான, கேகயச் சகோதரர்கள் ஐவரைத் தன் கணைகளின் மாரியால் தடுத்தான். கர்ணனின் கணை மாரியால் எரிக்கப்பட்ட அந்த ஐந்து சகோதரர்களும் தங்கள் கணைகளால் கர்ணனை மறைத்தனர். பதிலுக்குக் கர்ணனோ கணை மாரியால் அவர்களை மீண்டும் மீண்டும் மறைத்தான். கணைகளால் மறைக்கப்பட்ட கர்ணனோ, அந்த ஐந்து சகோதரர்களோ அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள் மற்றும் தேர்கள் ஆகியவையோ காணப்படவில்லை {கணைகளால் மறைக்கப்பட்டதால் கண்களுக்குப் புலனாகவில்லை}.

உமது மகன்களான துர்ஜயன், ஜயன் மற்றும் விஜயன் ஆகியோர், {மகிஷ்மதியின் ஆட்சியாளன்} நீலன், காசிகளின் ஆட்சியாளன் {அபிபூ}, {மகத மன்னன்} ஜெயத்சேனன் ஆகிய மூவரை எதிர்த்துத் தடுத்தனர். அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்து, சிங்கம், புலி மற்றும் ஓநாய் ஒருபுறத்திலும், கரடி, எருமைக்கடா, காளை ஆகியன மறுபுறத்திலும் இருந்து போரிட்டது போலப் பார்ப்பவர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.

சகோதரர்களான க்ஷேமதூர்த்தி மற்றும் பிருஹந்தன் ஆகியோர், துரோணரை எதிர்த்துச் சாத்வத குலத்தின் சாத்யகி சென்ற போது, தங்கள் கூரிய கணைகளால் பின்னவனை {சாத்யகியைச்} சிதைத்தனர். அவர்கள் இருவர் ஒரு புறத்திலும், சாத்யகி மறுபுறத்திலும் நின்று அவர்களுக்குள் நடைபெற்ற போரானது காட்டில் ஒரு சிங்கத்திற்கும், இரண்டு வலிமைமிக்க யானைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதலைப் போலக் காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பல வீரர்களைத் துளைத்துக் கொண்டிருந்தவனுமான சேதிகளின் மன்னனை {திருஷ்டகேதுவை}, போரில் எப்போதும் மகிழ்பவனான மன்னன் அம்பஷ்டன் துரோணரிடம் இருந்து விலக்கி வைத்தான். பிறகு மன்னன் அம்பஷ்டன், எலும்புகளையே ஊடுருவவல்ல ஒரு நீண்ட கணையால் தன் எதிராளியை {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {திருஷ்டகேது}, வில் மற்றும் கணையில் இருந்த தன் பிடி தளரத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.

சரத்வானின் மகனான உன்னதமான கிருபர், (போரில்) கோபத்தின் வடிவமான விருஷ்ணி குலத்தின் வார்த்தக்ஷேமியை குறுங்கணைகள் பலவற்றால் அடித்தார். போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்த வீரர்களான கிருபரும் வார்த்தக்ஷேமியும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்வதைக் கண்டவர்கள் அதிலேயே தங்கள் கவனம் குவிந்ததால் வேறு எதையும் கவனிக்க முடியாதவர்கள் ஆனார்கள்.

துரோணரின் மகிமையை மேம்படுத்துபவனான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் சுறுசுறுப்புடைய மன்னன் மணிமான் போரிட வந்த போது பின்னவனை {மணிமானைத்} தடுத்தான். பிறகு மணிமான், அந்தச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவசின்} நாண்கயிறு, கொடிமரம், கொடி, தேரோட்டி, குடை ஆகியவற்றை அறுத்து, அவற்றைப் பின்னவனின் {பூரிஸ்ரவசின்} தேரில் இருந்து விழச் செய்தான். தன் கொடிமரத்தில் வேள்விப்பீடக் கொடியைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்துத் தன் பெரும் வாள்களைக் கொண்டு தன் எதிராளியின் {மணிமானின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரை வெட்டி வீழ்த்தினான். பிறகு தன் தேரில் மீண்டும் ஏறிய அவன் {பூரிஸ்ரவஸ்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் குதிரைகளைத் தானே செலுத்திக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினான்.

சாதிக்கத் தகுதிவாய்ந்த (கர்ணனின் மகன்) விருஷசேனன், அசுரர்களை அடிக்க அவர்களைப் பின்தொடரும் இந்திரனைப் போலப் போரிட விரையும் மன்னன் பாண்டவனை {?} [8] கணைகளின் மழையால் தடுத்தான்.கதாயுதங்கள், பரிகங்கள், வாள்கள், கோடரிகள், கற்கள், குறுந்தடிகள், உலக்கைகள், சக்கரங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, போர்க்கோடரிகள் [9] ஆகியவற்றையும், புழுதி, காற்று, நெருப்பு, நீர், சாம்பல், செங்கற்கட்டிகள், வைக்கோல், மரங்கள் ஆகியவற்றையும் கொண்டு பீடித்து, அடித்து, உடைத்து, கொன்று, எதிரியை முறியடித்து, பகையணிகளின் மீது அவற்றை {மேற்கண்ட ஆயுதங்கள்} வீசிக் கொண்டும், அவர்களை அச்சுறுத்திக் கொண்டும், துரோணரைப் பிடிக்கும் விருப்பத்தோடு அங்கே கடோத்கசன் வந்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், பல்வேறு ஆயுதங்களாலும், பல்வேறு போர்க்கருவிகளாலும் அவனை {கடோத்கசனை} எதிர்கொண்டான். ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் நடந்த போரானது பழங்காலத்தில் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.நீர் அருளப்பட்டிருப்பீராக, இப்படியே அந்தப் பயங்கரப் போருக்கு மத்தியில் உமது படையைச் சேர்ந்த தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோருக்கும் அவர்களுடையவர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப்போர்கள் நடந்தன. துரோணரை அழிப்பது, {துரோணரை} பாதுகாப்பது என்பதைக் குறியாகக் கொண்ட அந்த வீரர்களுக்கு இடையில் அப்போது நடந்த இது போன்ற ஒரு போரானது, உண்மையில், அதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேள்விப்படப்பட்டதோ கிடையாது. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, களத்தின் பகுதிகள் அனைத்திலும் காணப்பட்ட மோதல்கள் பலவாகும், அவற்றில் சில பயங்கரமானதாகவும், சில அழகானதாகவும், சில மிகக் கடுமையானதாகவும் இருந்தன” {என்றான் சஞ்சயன்}.

கிழவன் பகதத்தனும்! யானை சுப்ரதீகமும்!! – துரோண பர்வம் பகுதி – 024-துரியோதனன் யானைப்படையுடன் சேர்ந்து பீமனை எதிர்த்தது; துரியோதனனின் வில்லையும், கொடியையும் அறுத்த பீமன்; அங்க மன்னனைக் கொன்ற பீமன்; பீமனைத் தடுத்த பகதத்தன்; சுப்ரதீகத்தின் துதிக்கைகளில் சிக்கிய பீமன், அதனிடம் இருந்து தப்பித்தது; பீமன் கொல்லப்பட்டதாக நினைத்த யுதிஷ்டிரன்; தசார்ணனைக் கொன்ற பகதத்தன்; சாத்யகியின் தேரைத் தூக்கி வீசி பீமனின் குதிரைகளை விரட்டிய சுப்ரதீகம்; ருசிபர்வனைக் கொன்ற பகதத்தன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “இப்படித் துருப்புகள் போரிட்டுக் கொண்டு, தனித்தனிப் பிரிவுகளில் ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, எனது படையின் போர்வீரர்களும் எவ்வாறு போரிட்டனர்? மேலும் அர்ஜுனன், தேர்வீரர்களான சம்சப்தகர்களை என்ன செய்தான்? மேலும், ஓ! சஞ்சயா, சம்சப்தகர்கள் பதிலுக்கு அர்ஜுனனை என்ன செய்தனர்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருப்புகள் இப்படிப் போரில் ஈடுபட்டு ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, உமது மகன் துரியோதனன் தன் யானைப் படையை வழிநடத்திக் கொண்டு பீமசேனனைத் தானே எதிர்த்து விரைந்தான். யானையொன்று மற்றொரு யானையை அழைப்பது போலவும், காளையொன்று மற்றொரு காளையை அழைப்பது போலவும், மன்னனாலேயே {துரியோதனனாலேயே} அழைக்கப்பட்ட பீமசேனன், கௌரவப் படையின் அந்த யானைப்பிரிவை எதிர்த்து விரைந்தான்.

போரில் திறம் பெற்றவனும், வலிமைமிக்கப் பெரும் கரங்களைக் கொண்டவனுமான பிருதையின் மகன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யானைப்பிரிவை விரைவாகப் பிளந்தான். தங்கள் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள புண்களில் ஊனீர் வடிபவையும், மலை போன்றவையுமான அந்தப் பெரும் யானைகள் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் புறமுதுகிடச் செய்யப்பட்டன.

உண்மையில், காற்று எழும்போது மேகத்திரள்களை விரட்டுவதைப் போலவே, அந்தப் பவனன் மகன் {பீமன்} கௌரவர்களின் அந்த யானைப் படையை முறியடித்தான். அந்த யானைகளின் மீது தன் கணைகளை ஏவிய பீமன், தன் கதிர்களால் உலகத்தில் உள்ள அனைத்தையும் தாக்கும் உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். பீமனின் கணைகளால் பீடிக்கப்பட்ட யானைகள் குருதியால் மறைக்கப்பட்டு, ஆகாயத்தில் சூரியக்கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகத்திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், தன் யானைகளுக்கு மத்தியில் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த வாயுத்தேவன் மகனை {பீமனைக்} கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு, கோபத்தால் கண்கள் சிவந்த பீமன், மன்னனை {துரியோதனனை} யமலோகத்திற்கு அனுப்ப விரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனை விரைவாகத் துளைத்தான். மேனியெங்கும் கணைகளால் சிதைக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, சூரியக் கதிர்களின் பிரகாசத்தை உடைய கணைகள் பலவற்றால் பாண்டுவின் மகனான பீமனைத் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகன் {பீமன்}, பல்லங்கள் இரண்டால் துரியோதனனின் வில்லையும், பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், யானை ஆபரணத்தைக் [1] கொண்டதுமான கொடிமரத்தையும் விரைவாக வெட்டிவீழ்த்தினான்.

பீமனால் துரியோதனன் இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்டு, ஓ! ஐயா, அங்கர்களின் ஆட்சியாளன் [2] பாண்டுவின் மகனை {பீமனைப்} பீடிப்பதற்காக அங்கே வந்தான். அதன் பேரில் பீமசேனன் அப்படி உரத்த முழக்கங்களுடன் முன்னேறி வரும் அந்த யானைகளின் இளவரசனை ஒரு நாராசத்தால் அதன் கும்பங்கள் இரண்டுக்கு இடையில் ஆழமாகத் துளைத்தான். அதன் உடலினூடாக ஊடுருவிச் சென்ற அந்தக் கணை பூமியில் ஆழமாக மூழ்கியது. இதன் பேரில் இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல அந்த யானை கீழே விழுந்தது. அந்த யானை அப்படி விழுந்த போது, அதனுடன் சேர்ந்து அந்த மிலேச்ச மன்னனும் விழுந்தான். ஆனால் பெரும் சுறுசுறுப்புடைய விருகோதரனோ {பீமனோ}, தன் எதிராளி கீழே விழுவதற்கு முன்னரே ஒரு பல்லத்தால் அவனது தலையை அறுத்தான். அங்கர்களின் வீர ஆட்சியாளன் விழுந்த போது, அவனது படைப்பிரிவுகள் தப்பி ஓடின. பீதியால் தாக்குண்ட குதிரைகள், யானைகள், தேர்வீரர்கள் ஆகியோர் அப்படித் தப்பி ஓடுகையில் காலாட்படை வீரர்களை நசுக்கினர்.இப்படிப் பிளக்கப்பட்ட அந்தத் துருப்புகள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடிய போது, பீமனை எதிர்த்து பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையின் மேல் ஏறி வந்தான். துதிக்கை மற்றும் (முன்னங்) கால்கள் இரண்டும் சுருக்கப்பட்டு, சினத்தால் நிறைந்து, கண்களை உருட்டிக் கொண்டு வந்த அந்த யானை அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} (சுடர்மிகும் நெருப்பைப் போல) எரிப்பதாகத் தெரிந்தது. குதிரை பூட்டப்பட்ட விருகோதரனின் {பீமனின்} தேரை அது தூசியாகப் பொடி செய்தது.

பிறகு அஞ்சலிகாபேதம் {அஞ்சலிகா வேதம்} என்ற அறிவியலை அறிந்ததால், பீமன் முன்னோக்கி ஓடி அந்த யானையின் உடலுக்கு அடியில் பதுங்கினான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} தப்பி ஓடவில்லை. யானையின் உடலுக்குக் கீழே பதுங்கிய அவன் {பீமன்}, தன் வெறுங்கைகளால் அதை {யானையை} அடிக்கடி தாக்கத் தொடங்கினான். தன்னைக் கொல்ல முனையும் அந்த வெல்லப்பட முடியாத யானையை அவன் அடித்தான். அதன் பேரில் பின்னது {அந்த யானை} குயவனின் சக்கரத்தைப் போல விரைவாகச் சுழலத் தொடங்கியது.

பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்ட அருளப்பட்ட விருகோதரன் {பீமன்} இப்படி அந்த யானையைத் தாக்கிய பிறகு, அந்தச் சுப்ரதீகத்தின் உடலை விட்டு வெளியே வந்து, பின்னதை {சுப்ரதீகம் என்ற அந்த யானையை} எதிர்த்து நின்றான். பிறகு {அந்த யானை} சுப்ரதீகம் பீமனைத் தன் துதிக்கைகளால் பிடித்துத் தன் முட்டிக்கால்களால் அவனைக் கீழே வீசி எறிந்தது. உண்மையில், அவனைக் கழுத்தோடு சேர்த்துப் பிடித்த அந்த யானை அவனைக் கொல்ல விரும்பியது. அந்த யானையின் துதிக்கையைத் திருகிய பீமன், அதன் கட்டில் {பிடியில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் அந்தப் பெரும் உயிரினத்துடைய உடலின் அடியில் பதுங்கினான். தன் படையைச் சேர்ந்த பகையானையின் வருகையை எதிர்பார்த்த அவன் {பீமன்} அங்கேயே காத்திருந்தான். பிறகு அந்த விலங்கின் உடலுக்கு அடியில் இருந்து வெளிப்பட்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றான்.

“ஐயோ, அந்த யானையால் பீமன் கொல்லப்பட்டான்” என்று துருப்புகள் அனைத்தும் பேரொலியை உண்டாக்கின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் பீதியடைந்த பாண்டவப் படை விருகோதரன் எங்குக் காத்திருந்தானோ அங்கே திடீரென ஓடின. அதே வேளையில் பீமன் கொல்லப்பட்டான் என்று நினைத்த மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலர்களின் உதவியுடன் பகதத்தனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். எண்ணற்ற தேர்களால் அவனைச் சூழ்ந்து கொண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கூரிய கணைகளால் பகதத்தனை மறைத்தான். பிறகு, மலையகப் பகுதிகளின் மன்னனான அந்தப் பகதத்தன், தன் இரும்பு அங்குசத்தால் அந்தக் கணைமாரியைத் தடுத்து, தன் யானையின் மூலம் பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகிய இருவரையும் எரிக்கத் தொடங்கினான்.

உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கிழவனான பகதத்தன் தன் யானையைக் கொண்டு அடைந்த அந்தச் சாதனை மிக அற்புதமானதாக நாங்கள் கண்டோம். பிறகு, மதப்பெருக்குடைய வேகமான யானையின் மீது வந்த தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, சுப்ரதீகத்தின் விலாவைத் தாக்குவதற்காகப் பிராக்ஜோதிஷ மன்னனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான். பயங்கர வடிவிலான அந்த இரு யானைகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பழங்காலத்தில் காடுகள் அடர்ந்த சிறகு படைத்த மலைகள் இரண்டுக்கு இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது. பகதத்தனின் யானையானது {சுப்ரதீகம்} சுழன்று விலகி, தசார்ணர்களின் மன்னனுடைய யானையைத் தாக்கி, பின்னதன் விலாவைப் பிளந்து அதைக் கொன்றது. அப்போது பகதத்தன் சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசமான ஏழு வேல்களை எடுத்து, யானையில் இருந்து விழப்போகின்ற தனது (மனித) எதிரியை {தசார்ண மன்னன் சுதர்மனைக்} கொன்றான்.

(பல கணைகளால்) மன்னன் பகதத்தனைத் துளைத்த யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். அந்தத் தேர்வீரர்கள் அனைவரும் தன்னைச் சூழத் தன் யானையில் இருந்த அவன் {பகதத்தன்}, அடர்ந்த காட்டுக்கு மத்தியில் மலை முகட்டில் உள்ள சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தன் மீது கணைகளை மழையாகப் பொழிந்த கடும் வில்லாளிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் அணிவகுப்பின் மத்தியில் அவன் {பகதத்தன்} அச்சமில்லாமல் நின்றான்.

பிறகு அந்தப் பிராக்ஜோதிஷ மன்னன் {பகதத்தன்}, (தன் கட்டைவிரலால்) தனது யானையை அழுத்தி, யுயுதானனுடைய {சாத்யகியின்} தேரை நோக்கி அதைத் தூண்டினான் [3]. அந்த மகத்தான யானை {சுப்ரதீகம்}, சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரைப் பற்றிப் பெரும் வேகத்துடன் தூரமாக வீசி எறிந்தது. எனினும், யுயுதானன் சரியான நேரத்தில் விலகித் தப்பினான். அவனது தேரோட்டியும், அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த சிந்து இனத்தைச் சேர்ந்த பெரிய குதிரைகளைக் கைவிட்டுச் சாத்யகியை விரைவாகப் பின்தொடர்ந்து, பின்னவன் {சாத்யகி} எங்கு நின்றானோ அங்கேயே நின்றான்.

அதே வேளையில் அந்த யானை அந்தத் தேர்களின் வளையத்திற்குள் இருந்து வெளியே வந்து (தன் வழியைத் தடுக்க முயன்ற) மன்னர்கள் அனைவரையும் கீழே வீசத் தொடங்கியது. அதிவேகமாகச் செல்லும் அந்த யானையினால் அச்சமடைந்த அந்த மனிதர்களில் காளையர், போர்க்களத்தில் அந்த ஒரு யானையே பலவாகப் பெருகிவிட்டதாகக் கருதினர். உண்மையில், அந்தத் தனது யானையின் மீதிருந்த பகதத்தன், ஐராவதத்தின் மேலிருக்கும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} (பழங்காலத்தில்) தானவர்களை அடித்து வீழ்த்தியதைப் போலப் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} அடித்து வீழ்த்தத் தொடங்கினான். பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிய போது அவர்களாலும், அவர்களின் யானைகள் மற்றும் குதிரைகளாலும் எழுந்த பயங்கரமான ஒலி அச்சம் நிறைந்த பேரொலியாக இருந்தது.

அந்தப் பாண்டவத் துருப்புகள் இப்படிப் பகதத்தனால் அழிக்கப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், பிராக்ஜோதிஷ ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான். பிறகு, பின்னவனின் {பகதத்தனின்} யானை {சுப்ரதீகம்}, முன்னேறி வரும் பீமனின் குதிரைகளைத் தன் துதிக்கையால் நீரைப் பீய்ச்சி நனைத்து அச்சுறுத்தியது. அதன்பேரில் அந்த விலங்குகள் {குதிரைகள்} பீமனைக் களத்தைவிட்டு வெளியே சுமந்து சென்றன.

பிறகு, கிருதியின் மகனான ருசிபர்வன் {?}, தன் தேரில் ஏறி, கணைமழையை இறைத்தபடி காலனைப் போல முன்னேறி பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அப்போது மலைப்பகுதிகளின் ஆட்சியாளனும், அழகிய அங்கங்களைக் கொண்டவனுமான அந்தப் பகதத்தன், நேரான கணையொன்றால் ருசிபர்வனை யமனுலகிற்கு அனுப்பினான். வீரனான ருசிபர்வன் வீழ்ந்த பிறகு, சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், சேகிதானான், திருஷ்டகேது, யுயுத்சு ஆகியோர் அந்த யானையை {சுப்ரதீகத்தைப்} பீடிக்கத் தொடங்கினர்.

அந்த யானையைக் கொல்ல விரும்பிய அந்த வீரர்கள் அனைவரும், பேரொலியை எழுப்பிக் கொண்டு, மேகங்கள் மழையைப் பொழிந்து பூமியை நனைப்பதைப் போலத் தங்கள் கணை மழையை அந்த விலங்கின் {யானையின்} மீது பொழிந்தனர். திறமைமிக்கப் பாகனான பகதத்தனால் குதிகாலாலும், மாவெட்டியாலும் {அங்குசத்தாலும்}, கால்கட்டைவிரலாலும் தூண்டப்பட்ட அந்த விலங்கு {யானை} தன் துதிக்கையை நீட்டிக் கொண்டு நிலைத்த {அசைவற்றிருக்கும்} காதுகளோடும், கண்களோடும் விரைவாக ஓடியது.

யுயுத்சுவின் குதிரைகளை மிதித்துக் கீழே தள்ளிய அந்த விலங்கு {யானை சுப்தரதீகம்} {அவனது} தேரோட்டியையும் கொன்றது. அதன்பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுத்சு தன் தேரைக் கைவிட்டு விரைவாகத் தப்பி ஓடினான். பிறகு அந்த யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பிய பாண்டவ வீரர்கள் பேரொலியை எழுப்பிக் கொண்டு கணைகளின் மழையால் அதை விரைவாக மறைத்தனர். அந்த நேரத்தில் சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} தேரை எதிர்த்து விரைந்தான். அதேவேளையில், தன் யானையில் இருந்த மன்னன் பகதத்தன் எதிரி மீது கணைகளை ஏவி கொண்டு, பூமியை நோக்கித் தன் கதிர்களை இறைக்கும் சூரியைனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு} பனிரெண்டு கணைகளாலும், யுயுத்சு பத்தாலும், திரௌபதியின் மகன்கள் ஒவ்வொருவரும் மூன்று {மூன்று மூன்று} கணைகளாலும் அவனை {பகதத்தனைத்} துளைத்தனர், திருஷ்டகேது மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான் [4]. பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட பெரும் மேகத் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. எதிரியின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அதன் பாகனால் {பகதத்தனால்} திறமையுடனும், வீரத்துடனும் தூண்டப்பட்டு, தன் விலாக்களின் பக்கம் உள்ள பகை வீரர்களை வீசத் தொடங்கியது.காட்டில் தன் மந்தையைத் தடியால் ஓட்டும் மாட்டிடையனைப் போல, பகதத்தன் மீண்டும் மீண்டும் பாண்டவப் படையைத் தாக்கினான். பருந்துகளால் தாக்கப்பட்டுக் கரைந்து கொண்டே விரைவாகப் பின்வாங்கும் காக்கைகளைப் போல, பெரும் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த பாண்டவத்துருப்புகளுக்கு மத்தியில் குழப்பமான உரத்த ஒலி கேட்கப்பட்டது. தன் பாகனின் {பகதத்தனின்} அங்குசத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, முற்காலத்தில் இருந்த சிறகுகள் படைத்த மலைக்கு ஒப்பானதாக இருந்தது. கொந்தளிக்கும் பெருங்கடலைக் கண்டு அஞ்சும் வணிகர்களைப் போல, அப்போது அது {அந்த யானை} எதிரியின் இதயங்களை அச்சத்தால் நிரப்பியது.

அச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள் ஆகியோர் அப்படி ஓடிக் கொண்டிருந்தபோதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஏற்படுத்திய பயங்கரமான ஆரவாரம், அந்தப் போரில், பூமி, வானம், சொர்க்கம், திசைகள் மற்றும் துணைத்திசைகள் ஆகியவற்றை நிறைத்தது. யானைகளில் முதன்மையான அந்த யானையில் அமர்ந்திருந்த மன்னன் பகதத்தன், தேவர்களால் நன்கு பாதுகாக்கப்பட்ட போரில், தேவர்களின் படைக்குள் பழங்காலத்தில் ஊடுருவிய அசுரன் விரோசனனைப் போலப் பகைவர்களின் படைக்குள் ஊடுருவினான். பயங்கரக் காற்று வீசத் தொடங்கியது; புழுதி மேகம் வானத்தையும் துருப்புகளையும் மறைத்தன; களமெங்கும் திரிந்த அந்தத் தனி யானைப் பலவாகப் பெருகிவிட்டதாக மக்கள் கருதினர்” {என்றான் சஞ்சயன்}.

பார்த்தனின் செயலை வியந்த மாதவன்! – துரோண பர்வம் பகுதி – 025-பகதத்தனைக் கொல்வதாக உறுதியேற்று அவனிடம் விரைந்த அர்ஜுனனை சம்சப்தகர்கள் போருக்கு அழைப்பது; பகதத்தனை விட்டுச் சம்சப்தகர்களிடம் திரும்பிய அர்ஜுனன்; போரில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணன்; பிரம்மாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனின் செயலை எண்ணி வியந்த கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் அர்ஜுனனின் அருஞ்செயல்களைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையில் பெரும் வேகத்தோடு போருக்கு முன்னேறுவதாகத் தெரிகிறது. நாம் கேட்கும் இந்த உரத்த ஆரவாரம் அவனால் {பகதத்தனால்} ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். யானையின் முதுகில் இருந்து போரிட்டு {பகையணியைக்} கலங்கடிக்கும் கலையை நன்கறிந்தவனும், போரில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனுமான அவன் {பகதத்தன்} உலகில் உள்ள யானை வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் என நான் நினைக்கிறேன்.

மேலும் அவனது யானையும் {சுப்ரதீகமும்} போரில் மோதுவதற்கு எதிரியற்ற முதன்மையான யானையாகும். பெரும் திறமை கொண்டதும், களைப்பனைத்துக்கும் மேலானதுமான அது {அந்த யானை}, ஆயுதங்கள் எதையும் பொருட்படுத்தாது. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணனா}, அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லதும், நெருப்பின் தீண்டலைக் கொண்டதுமான அஃது {அந்த யானை} ஒன்றே தனியாக இன்று பாண்டவப் படையை அழித்துவிடும். நம்மிருவரைத் தவிர அந்த உயிரினத்தைத் தடுக்கவல்லவர் வேறு யாருமில்லை. எனவே, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. தன் யானையுடைய பலத்தின் விளைவால் போரில் செருக்குடையவனும், தன் வயதின் விளைவால் ஆணவம் கொண்டவனுமான அவனை {பகதத்தனை} பலனைக் {பலாசுரனைக்} கொன்றவனிடம் {இந்திரனிடம்} விருந்தினனாக இன்றே அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளால் கிருஷ்ணன், பாண்டவப் படையணிகளைப் பிளந்து கொண்டிருக்கும் பகதத்தன் இருக்கும் இடத்திற்கு முன்னேறத் தொடங்கினான். அர்ஜுனன், பகதத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பதினாலாயிரம் {14000} எண்ணிக்கையிலான வலிமைமிக்கச் சம்சப்தகத் தேர்வீரர்களும், வாசுதேவனை {கிருஷ்ணனை} வழக்கமாகப் பின்தொடரும் பத்தாயிரம் கோபாலர்கள் அல்லது நாராயணர்களும், களத்ததிற்குத் திரும்பி அவனைப் போருக்கு அழைத்தனர் [1].

{ஒருபுறம்} பகதத்தனால் பிளக்கப்படும் பாண்டவப் படையைக் கண்டும், மறுபுறம் சம்சப்தகர்களால் அழைக்கப்பட்டும், அர்ஜுனனின் இதயம் இரண்டாகப் பிரிந்தது. அவன் {அர்ஜுனன்}, “சம்சப்தகர்களுடன் போரிட இந்த இடத்திற்குத் திரும்புவது, அல்லது யுதிஷ்டிரரிடம் செல்வது ஆகிய இந்த இரண்டு செயல்களில் இன்று எது எனக்குச் சிறந்தது?” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இறுதியாக, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, சம்சப்தகர்களைக் கொல்வதில் உறுதியாக நிலைத்தது.

குரங்குகளில் முதன்மையானதைத் தன் கொடியில் கொண்ட அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்), தனியாகப் போரில் ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொல்ல விரும்பித் திடீரெனத் திரும்பினான். அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரும் நினைத்ததும் இதுவே. இதற்காகவே அவர்கள் இந்த இரட்டை மோதலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பாண்டுவின் மகனும் தன் இதயத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைபாயவிட்டான், ஆனால், இறுதியில், போர்வீரர்களில் முதன்மையான சம்சப்தகர்களைக் கொல்லத் தீர்மானித்துத் தன் எதிரிகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களான வலிமைமிக்கச் சம்சப்தகர்கள் ஆயிரக்கணக்கான நேரான கணைகளை அர்ஜுனன் மீது ஏவினர். அந்தக் கணைகளால் மறைக்கப்பட்ட குந்தியின் மகனான பார்த்தனோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனோ, குதிரைகளோ, அந்தத் தேரோ காணப்படவில்லை {கண்ணுக்குப் புலப்படவில்லை}. அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் புலன்களை இழந்து, பெரிதும் வியர்த்தான். அதன் பேரில் பிரம்மாயுதத்தை ஏவிய பார்த்தன் {அர்ஜுனன்}, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரையும் அழித்தான்.

வில்லின் நாண்கயிறுகளைப் பிடித்துக் கொண்டும், விற்களையும், கணைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான கரங்களும், நூறு நூறான கொடிமரங்களும், குதிரைகளும் கீழே தரையில் விழுந்தன, மேலும், தேரோட்டிகளும், தேர்வீரர்களும் விழுந்தனர். காடுகள் அடர்ந்து வளர்ந்த முதன்மையான மலைகளுக்கும், மேகத் திரள்களுக்கும் ஒப்பானவையும், நன்றாகப் பழக்கப்பட்டவையுமான பெரும் யானைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் பாகன்களை இழந்தும் பூமியில் விழுந்தன. பாகர்களைத் தங்கள் முதுகுகளில் கொண்ட பல யானைகள், அர்ஜுனனின் கணைகளால் நசுக்கப்பட்டு, தங்கள் முதுகில் உள்ள சித்திரவேலைப்பாடுகளைக் கொண்ட துணிகள் வெட்டப்பட்டு, தங்கள் அம்பாரிகள் உடைக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தன.

கிரீடியின் {அர்ஜுனனின்} பல்லங்களால் வெட்டப்பட்ட மனிதர்களுடைய கரங்கள், வாள்கள், வேல்கள், கத்திகள், நகங்கள், முத்கரம், போர்க்கோடரி ஆகியவற்றைப் பிடித்த நிலையிலேயே கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலைச்சூரியனைப் போன்றோ, தாமரையைப் போன்றோ, சந்திரனைப் போன்றோ இருந்த அழகிய தலைகள் அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தன. சினத்தில் இப்படிப் பல்வேறு வகைகளிலான மரணக் கணைகளால் எதிரியைக் கொல்வதில் பல்குனன் {அர்ஜுனன்} ஈடுபட்டபோது, அந்தப் படை எரிவது போலத் தெரிந்தது. தண்டுகளுடன் கூடிய தாமரைகளை நசுக்கும் யானையைப் போல அந்தப் படையை நசுக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அனைத்து உயிரினங்களும், “நன்று, நன்று” என்று சொல்லி அவனை மெச்சின.

வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான பார்த்தனின் அந்தச் சாதனையைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} மிகவும் ஆச்சரியமடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ அடைந்திருக்கும் சாதனையைச் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, பொக்கிஷங்களின் தலைவனாலோ {குபேரனாலோ} செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று வலிமைமிக்கச் சம்சப்தக வீரர்கள் அனைவரையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தியதை நான் கண்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.

பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்ட சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, கிருஷ்ணனிடம், “பகதத்தனிடம் செல்வாயாக” என்றான்” {என்றான் சஞ்சயன்}.

வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 026-அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சுசர்மன்; சுசர்மனின் தம்பிகளைக் கொன்ற அர்ஜுனன்; சுசர்மனை மயக்கமடையச் செய்து கௌரவர்களை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; பகதத்தன் அர்ஜுனன் மோதல்; தேரைத் திருப்பி சுப்ரதீகத்தைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணன்; நியாயமான போரைக் கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனின் {அர்ஜுனனின்} விருப்பத்தின் பேரில் கிருஷ்ணன், தங்கக் கவசத்தால் மறைக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையுமான அவனது வெண்குதிரைகளைத் துரோணரின் படைப்பிரிவுகளை நோக்கித் தூண்டினான். இப்படி அந்தக் குருக்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரோணரால் அதீதமாகப் பீடிகப்பட்ட தன் சகோதரர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, {அர்ஜுனனோடு} போரிட விரும்பிய சுசர்மன் தன் தம்பிகளோடு அவனைப் பின்தொடர்ந்தான்.

பிறகு எப்போதும் வெல்பவனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம், “ஓ! மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா? அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா? நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது?’ என்றே நினைக்கிறேன் என அறிவாயாக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, தேரைத் திருப்பிக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்} இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது அர்ஜுனன் ஏழு கணைகளால் சுசர்மனைத் துளைத்து, மேலும் இரண்டு கூரிய கணைகளால் அவனது வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, ஆறு கணைகளைக் கொண்டு திரிகர்த்த மன்னனின் {சுசர்மனின்} தம்பிகளை விரைவாக யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

பிறகு சுசர்மன், அர்ஜுனனைக் குறிபார்த்து முழுக்க இரும்பாலானதும், பாம்பு போலத் தெரிந்ததுமான ஈட்டி ஒன்றை அவன் {அர்ஜுனன்} மீது எறிந்தான், வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} குறி பார்த்து, அவன் மீது வேல் ஒன்றை எறிந்தான். மூன்று கணைகளால் அந்த ஈட்டியையும், மேலும் மூன்று கணைகளால் அந்த வேலையும் அறுத்த அர்ஜுனன், தன் கணைகளின் மாரியால் இருந்த சுசர்மனை, அவனைத் தேரிலேயே புலன்களை இழக்கச் செய்தான்.

பிறகு, மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மாரியை இறைத்தபடி (உமது படைப்பிரிவை நோக்கி) மூர்க்கமாக அவன் {அர்ஜுனன்} முன்னேறியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் எவரும் எதிர்க்கத் துணியவில்லை. முன்னேறிச் செல்லும்போதே வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் தன் கணைகளால் கௌரவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் எரித்தபடி தனஞ்சயன் {அர்ஜுனன்} முன்னேறினான். உயிர்வாழும் உயிரினமொன்று நெருப்பின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, புத்திசாலியான அந்தக் குந்தியின் மகனுடைய {அர்ஜுனனின்} தடுக்கப்பட முடியாத வேகத்தை உமது துருப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பகைவரின் படையை மூழ்கடித்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை அடைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {பாவமற்ற} அப்பாவிப் பாண்டவர்களுக்குப் போரில் நன்மையைச் செய்வதும், எதிரிகள் அனைவருக்கும் கேடுவிளைவிப்பதுமான காண்டீவத்தைத் தன் கைகளில் பிடித்தான்.

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்பட்ட உமது படை, ஓ !மன்னா, பாறையின் மீது மோதிய படகைப் போலப் பிளந்தது. பிறகு, துணிச்சல்மிக்கவர்களும், வெற்றியைக் கைப்பற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடியவர்களுமான பத்தாயிரம் {10000} வில்லாளிகள் (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) முன்னேறினர். அச்சமற்ற இதயங்களைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். போரில் எவ்வளவு கனமான எந்தச் சுமையையும் தாங்க வல்ல பார்த்தன் {அர்ஜுனன்} அந்தக் கனமான சுமையை அடைந்தான். மதங்கொண்ட அறுபது வயது கோபக்கார யானை ஒன்று தாமரைக்கூட்டங்களை நசுக்குவதைப் போலவே, பார்த்தனும் {அர்ஜுனனும்} அந்த உமது படைப்பிரிவை நசுக்கினான்.

அந்தப் படைப்பிரிவு இப்படி நசுக்கப்பட்டபோது, மன்னன் பகதத்தன், அதே யானையில் {சுப்ரதீகத்தில்} அர்ஜுனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதன் பேரில் மனிதர்களில் புலியான தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் தேரில் இருந்த படியே பகதத்தனை வரவேற்றான். அர்ஜுனன் தேருக்கும், பகதத்தன் யானைக்கும் இடையில் நடந்த மோதலானது அதீத கடுமையும் தீவிரமும் கொண்டதாக இருந்தது. அறிவியல் விதிகளின்படி {சாத்திர விதிப்படி} தயாரிக்கப்பட்ட தன் தேரில் ஒருவனும், தன் யானையில் மற்றவனும் என, வீரர்களான பகதத்தன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் களத்தில் திரிந்தனர்.

அப்போது பகதத்தன், மேகத்திரள்களைப் போலத் தெரிந்த தன் யானையில் இருந்து கொண்டு, தலைவன் இந்திரனைப் போலத் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணை மாரியைப் பொழிந்தான். எனினும் வாசவனின் {இந்திரனின்} வீரமகன் {அர்ஜுனன்}, பகதத்தனின் அந்தக் கணை மாரி தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான். பிறகு பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {பகதத்தன்} அர்ஜுனனின் கணைமாரியைக் கலங்கடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கணைகள் பலவற்றால் தாக்கினான். கணைகளின் அடர்த்தியான மழையால் அவர்கள் இருவரையும் மூழ்கடித்த பகதத்தன், கிருஷ்ணனையும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} அழிப்பதற்காகத் தன் யானையைத் தூண்டினான்.

அந்தகனைப் போல முன்னேறி வரும் அந்தக் கோபக்கார யானையைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த யானை தன் இடப்பக்கத்தில் இருக்குமாறு தன் தேரை விரைவாக நகர்த்தினான். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு}, அந்தப் பெரும் யானையை, அதன் முதுகில் உள்ள பாகனோடு {பகதத்தனோடு} சேர்த்துக் கொல்ல இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், நியாயமான {நல்ல} போரின் விதிகளை நினைவுகூர்ந்த அவன் {அர்ஜுனன்}, அதை {அந்த வாய்ப்பைப்} பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை [2]. எனினும், அந்த யானை {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் அடைந்து, அவையனைத்தையும் யமலோகத்திற்கு அனுப்பியது. இதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} சினத்தால் நிறைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

கொல்லப்பட்டான் பகதத்தன்! – துரோண பர்வம் பகுதி – 027-கிருஷ்ணனைத் தாக்கிய பகதத்தன்; சுப்ரதீகத்தின் கவசத்தைப் பிளந்த அர்ஜுனன்; வைஷ்ணவாஸ்திரத்தை ஏவிய பகதத்தன்; அர்ஜுனனை மறைத்து வைஷ்ணவாஸ்திரத்தை மார்பில் தாங்கிய கிருஷ்ணன்; அந்த ஆயுதம் பகதத்தனுக்குக் கிடைத்த வரலாற்றைச் சொன்ன கிருஷ்ணன்; சுப்ரதீகத்தைக் கொன்ற அர்ஜுனன்; பகதத்தனைக் கொன்ற அர்ஜுனன்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, பகதத்தனை என்ன செய்தான்? அதே போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனும் {பகதத்தனும்} பார்த்தனை என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் இப்படிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் காலனின் கோரப் பற்களுக்கிடையே இருப்பதாகவே உயிரினங்கள் அனைத்தும் கருதின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் யானையின் கழுத்தில் இருந்த பகதத்தன், தங்கள் தேரில் இருந்த கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவர் மீதும் கணைகளின் மாரியை இறைத்தான்.

கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், முழுவதும் இரும்பாலானவையும், முழுவதும் வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவன் {பகதத்தன்}, தேவகியின் மைந்தனை {கிருஷ்ணனைத்} துளைத்தான். நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், அழகிய இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பகதத்தனால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் தேவகியின் மகனை {கிருஷ்ணனை} ஊடுருவி பூமிக்குள் நுழைந்தன.

அப்போது, பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தப் பகதத்தனின் வில்லை அறுத்து, அடுத்ததாக அவனது யானையைப் பக்கத்தில் இருந்து {விலாப்புறத்தில்} பாதுகாத்த வீரனையும் கொன்று, ஏதோ விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவனோடு {பகதத்தனோடு} போரிட்டான். பிறகு பகதத்தன், சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசித்தவையும், கூர்முனை கொண்டவையுமான பதினான்கு வேல்களை அவன் {அர்ஜுனன்} மீது ஏவினான். எனினும், அர்ஜுனன் அந்த வேல்கள் ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டிப் போட்டான்.

பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அந்த யானையின் கவசத்தைப் பிளந்து தளர்த்தினான். இப்படி வெட்டப்பட்ட அந்தக் கவசம் கீழே பூமியில் விழுந்தது. கவசம் பிளக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அர்ஜுனன் ஏவிய கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டு, மார்பில் பாயும் நீர்க்கோடுகளுடன், மேகங்கள் எனும் ஆடையை இழந்த மலைகளின் இளவரசனைப் போலத் தெரிந்தது [1].

பிறகு பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் முழுதும் இரும்பாலானதுமான ஈட்டி ஒன்றை வாசுதேவன் மீது ஏவினான். அந்த ஈட்டியை அர்ஜுனன் இரண்டாக வெட்டினான். பிறகு அந்த மன்னனின் {பகதத்தனின்} கொடிமரத்தையும், குடையையும் தன் கணைகளால் அறுத்த அர்ஜுனன், சிரித்துக் கொண்டே விரைவாக அந்த மலைப்பகுதிகளின் ஆட்சியாளனை {[பர்வதேசுவரன்] பகதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். கங்கப்பறவையின் இறகுகளாலான அழகிய சிறகுகளைக் கொண்ட அர்ஜுனனின் அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட பகதத்தன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} அதிகக் கோபம் கொண்டான்.

பிறகு அவன் {பகதத்தன்}, அர்ஜுனன் மீது சில வேல்களை ஏவிவிட்டு உரக்கக் கர்ஜித்தான். அந்த வேல்களின் விளைவால் அர்ஜுனனின் கிரீடம் {பின்புறமாகத்} திருப்பப்பட்டது. தன் கிரீடத்தைச் சரியாகப் பொருத்திய அர்ஜுனன், அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் {பகதத்தனிடம்}, “இந்த உலகத்தை நன்றாகப் பார்த்துக் கொள்” என்றான். அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட பகதத்தன் சினத்தால் நிறைந்து, பிரகாசமான வில்லொன்றை எடுத்து, அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகிய இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.

பிறகு அவனது {பகதத்தனின்} வில்லையும், அம்பறாத்தூணிகளையும் வெட்டிய பார்த்தன் {அர்ஜுனன்}, எழுபத்திரண்டு கணைகளால் விரைவாக அவனைத் தாக்கி, {அவற்றால்} அவனது முக்கிய அங்கங்களைப் பீடிக்கச் செய்தான். இப்படித் துளைக்கப்பட்ட அவன் {பகதத்தன்} அதீதமான வலியை உணர்ந்தான். சினத்தால் நிறைந்த அவன் {பகதத்தன்}, தன் அங்குசத்தை மந்திரங்களால் வைஷ்ணவ ஆயுதமாக மாற்றி, அதை அர்ஜுனன் மார்பின் மீது ஏவினான் [2]. கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனை மறைத்துக் கொண்டு, பகதத்தனால் ஏவப்பட்ட அந்த அனைத்தையும் கொல்லும் ஆயுதத்தை {வைஷ்ணவாஸ்திரத்தைத்} தன் மார்பிலே ஏற்றான். அதன் பேரில் அந்த ஆயுதமானது கேசவனின் {கிருஷ்ணனின்} மார்பில் வெற்றி மாலையாக விழுந்தது.பிறகு உற்சாகமற்ற அர்ஜுனன், கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! பாவமற்றவனே, ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, போரிடாமல் என் குதிரைகளை மட்டுமே வழிநடத்தப் போவதாக நீ சொல்லியிருக்கிறாய். பிறகு, ஏன் நீ உன் வாக்குறுதியை மீறுகிறாய்? நான் துயரத்தில் மூழ்கினாலோ, கலங்கடிக்க முடியாதவனானாலோ, எதிரியைத் தடுக்கவோ, ஆயுதத்தைத் தடுக்கவோ முடியாதவனானாலோ, நீ அவ்வாறு செயல்படலாமே அன்றி நான் இப்படி நிற்கும்போதல்ல. வில்லுடனும், கணைகளுடனும் இருக்கும் நான், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியவர்களுடன் கூடிய இந்த உலகங்களையே வெல்லத்தகுந்தவன் என்பதை நீ அறிவாயே” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தா, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரகசியமும், பழைய வரலாறுமான இதை உள்ளபடியே கேட்பாயாக. உலகங்களைப் பாதுகாப்பதில் நித்தியமாக ஈடுபடும் எனக்கு நான்கு வடிவங்கள் இருக்கின்றன. என்னையே பிரித்துக் கொண்டு நான் உலகங்களுக்கு நன்மையைச் செய்கிறேன். பூமியில் தங்கி தவத்துறவுப் பயிற்சிகளில் ஈடுபடுவது எனது வடிவத்தில் {மூர்த்திகளில்} ஒன்றாகும் [3]. உலகத்தில் ஏற்படும் நல்ல மற்றும் தீயச் செயல்களை {சாட்சியாக இருந்து} காண்பது {காணும் வடிவம்} மற்றொன்றாகும். மனிதர்களில் உலகத்திற்கு வந்து செயலில் ஈடுபடுவது எனது மூன்றாவது வடிவமாகும் [4]. எனது நான்காவது வடிவம் ஆயிரம் வருடங்கள் உறங்கிக் கிடப்பதாகும் [5]. ஆயிர வருட முடிவில் உறக்கத்தில் இருந்து விழிக்கும் எனது வடிவம், அப்படி விழித்த உடனேயே தகுந்தோருக்கு சிறந்த வரங்களை அருள்கிறது.(ஒரு சமயத்தில்) காலம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூமாதேவி (அவளது மகன்) நரகனுக்காக என்னிடம் வரமொன்றைக் கேட்டாள். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த வரம் யாது என்பதைக் கேட்பாயாக. “வைஷ்ணவ ஆயுதத்தை அடையும் எனது மகன் {நரகன்} தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லத்தகாதவன் ஆக வேண்டும். அந்த ஆயுதத்தை எனக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டாள். பழங்காலத்தில் அவளது வேண்டுதலைக் கேட்ட நானும், தலைமையானதும், தவறிழைக்காததுமான {தவறாததுமான} வைஷ்ணவாயுதத்தைப் பூமியின் மகனுக்கு {நரகனுக்குக்} கொடுத்தேன். அந்த நேரத்தில் நான் இவ்வார்த்தைகளையும் சொன்னேன், “ஓ! பூமியே {பூமாதேவியே}, நரகனைப் பாதுகாப்பதில் இந்த ஆயுதம் தவறாததாக இருக்கட்டும். அவனை யாராலும் கொல்ல இயலாது. இந்த ஆயுதத்தால் பாதுகாக்கப்படும் உனது மகன் {நரகன்}, அனைத்து உலகங்களிலும் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருந்து கொண்டு, எதிரிப்படைகள் அனைத்தையும் நசுக்குவான்” {என்றேன்}. தன் விருப்பம் ஈடேறிய அந்தப் புத்திசாலி தேவியும் {பூமாதேவியும்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள். நரகனும் வெல்லப்படமுடியாதவனாக, எப்போதும் தன் எதிரிகளை எரித்தான் [6].

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த நரகனிடம் இருந்தே இந்த எனது ஆயுதத்தைப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} அடைந்திருக்கிறான். ஓ! ஐயா {அர்ஜுனா}, இந்திரன், ருத்ரன் ஆகியோரையும் சேர்த்து இவ்வுலகில் இந்த ஆயுதத்தால் கொல்லத்தகாதவர் எவரும் இல்லை. எனவே, உனக்காகவே நான் என் வாக்குறுதியை மீறி அதைக் {வைஷ்ணவாஸ்திரத்தைக்} கலங்கடித்தேன். அந்தப் பெரும் அசுரன் {பகத்தன்} இப்போது அந்தத் தலைமையான ஆயுதத்தை இழந்திருக்கிறான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பு, உலகங்களின் நன்மையைக் கருதி அசுரன் நரகனை நான் கொன்றது போலவே, தேவர்களுக்குப் பகைவனும், வெல்லப்பட முடியாத உனது எதிரியுமான பகதத்தனை இப்போது நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்ட கணைகளாலான மேகத்தில் திடீரெனப் பகதத்தனை மூழ்கடித்தான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களையும், உயர் ஆன்மாவையும் கொண்ட அர்ஜுனன், தன் எதிரியின் யானையுடைய முன்நெற்றிக் கும்பங்களுக்கு இடையில் நாராசமொன்றை அச்சமற்றவகையில் அடித்தான். மலையைப் பிளக்கும் இடியைப் போல யானையைப் பிளந்த அந்தக் கணை, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அதன் உடலில் ஊடருவி விலாப்புறம் வரை சென்றது. பகதத்தனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், ஓர் ஏழை மனிதனின் {தரித்திரனின்} மனைவியானவள், அவளது தலைவனுக்குக் கீழ்ப்படியாதது போலவே அந்த யானையும் கீழ்ப்படிய மறுத்தது. அங்கங்கள் செயலிழந்த அது {அந்த யானை}, தன் தந்தங்களால் பூமியை முட்டியபடி கீழே விழுந்தது. துன்பக்குரலில் அலறிய அந்தப் பெரும் யானை தன் ஆவியையும் விட்டது [7].

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் பிறைவடிவத் தலைக் கொண்ட நேரான கணை {அர்த்தச்சந்திரக் கணை} ஒன்றால் மன்னன் பகதத்தனின் மார்பைத் துளைத்தான். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) தன் மார்பில் துளைக்கப்பட்ட மன்னன் பகதத்தன் உயிரை இழந்து தன் வில்லையும், கணைகளையும் நழுவவிட்டான். அவனுக்கு {பகதத்தனுக்குத்} தலைப்பாகையாக இருந்த மதிப்பு மிக்கத் துணியானது, தண்டைப் பலமாகத் தாக்கியதும், தாமரையில் இருந்து விழும் {தாமரை} இதழ் ஒன்றைப் போல அவனது தலையில் இருந்து தளர்ந்து விழுந்தது. பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவனும் {பகதத்தனும்}, மலர்ந்திருக்கும் கின்சுகமானது {பலாச மரமானது}, காற்றின் வேகத்தில் முறிந்து மலையின் உச்சியில் இருந்து விழுவதைப் போலத் தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் யானையில் இருந்து கீழே விழுந்தான். ஆற்றலில் இந்திரனுக்கு ஒப்பானவனும், இந்திரனின் நண்பனுமான அந்த ஏகாதிபதியை {பகதத்தனைக்} கொன்ற இந்திரனின் மகன், வலிமைமிக்கக் காற்றானது வரிசையான மரங்களை முறிப்பதைப் போல வெற்றியடையும் நம்பிக்கையில் இருந்து உமது படையின் பிற வீரர்களையும் பிளந்தான்” {என்றான் சஞ்சயன்}.

சகுனியின் மாயைகளை அகற்றிய அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 028-பகதத்தனை வலம் வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய சகுனியின் தம்பிகளான விருஷகனும், அசலனும்; விருஷகனையும் அசலனையும் கொன்ற அர்ஜுனன்; சகுனி செய்த மாயைகள்; மாயைகளை அழித்த அர்ஜுனன்; பின்வாங்கிய சகுனி; காந்தாரர்களை அழித்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் சக்தி கொண்டவனும், இந்திரனுக்கு எப்போதும் பிடித்தமானவனும், அவனது {இந்திரனின்} நண்பனுமான பகதத்தனைக் கொன்ற பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} அவனை வலம் வந்தான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவர்களும், காந்தார மன்னனின் {சுபலனின்} மகன்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய சகோதரர்கள் இருவரும் போரில் அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கினர். அந்த வீர வில்லாளிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, பெரும் வேகம் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அர்ஜுனனைப் பின்னாலிருந்தும் முன்னாலிருந்தும் ஆழமாகத் துளைக்க ஆரம்பித்தனர்.

அப்போது அர்ஜுனன், கூரிய கணைகளால் சுபலனின் மகனான விருஷகனின் குதிரைகள், தேரோட்டி, வில், குடை, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கணைகளின் மேகத்தாலும், பல்வேறு ஆயுதங்கள் பிறவற்றாலும் சுபலனின் மகனுடைய {விருஷகனின்} தலைமையில் இருந்த காந்தாரத் துருப்புகளை மீண்டும் கடுமையாகப் பீடித்தான். பிறகு சினத்தால் நிறைந்த அர்ஜுனன், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட வீரக் காந்தாரர்கள் ஐநூறு {500} பேரைத் தன் கணைகளின் மூலம் யமலோகம் அனுப்பினான். அப்போது அந்த வலிமைமிக்க வீரன் {விருஷகன்}, குதிரைகள் கொல்லப்பட்ட {தன்} தேரில் இருந்து விரைவாகக் கீழிறங்கி, தன் சகோதரனின் {அசலனின்} தேரில் ஏறி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.

பிறகு, சகோதரர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய இருவரும் ஒரே தேரில் ஏறிக் கணைகளின் மழையால் பீபத்சுவை {அர்ஜுனனை} இடையறாமல் துளைக்கத் தொடங்கினர். திருமணப் பந்தத்தால் {உமது மனைவி காந்தாரியால்} உமக்கு உறவினர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், பழங்காலத்தில் விருத்திரனோ, பலனோ இந்திரனைத் தாக்கியது போல மிகக் கடுமையாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தாக்கினர். குறி தவறாத அந்தக் காந்தார இளவரசர்கள் இருவரும் காயமடையாமலேயே, வியர்வையை உண்டாக்கும் {சூரியக்} கதிர்களால் உலகைப் பீடிக்கும் கோடை காலத்தின் இரண்டு மாதங்களைப் போலப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மீண்டும் தாக்கத் தொடங்கினர். அப்போது அர்ஜுனன், மனிதர்களில் புலிகளும், ஒரே தேரில் அருகருகில் இருந்தவர்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த இளவரசர்களை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஒரே கணையால் கொன்றான். பிறகு, கண்கள் சிவந்தவர்களும், சிங்கத்தைப் போன்றவர்களும், வலிமைமிக்கக் கரங்களையும், ஒரே குணங்களையும் கொண்ட இரத்தச் சகோதரர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அந்தத் தேரில் இருந்து ஒன்றாகவே கீழே விழுந்தனர். நண்பர்களின் அன்புக்குரிய அவர்களது உடல்கள், கீழே பூமியின் மீது விழுந்து, சுற்றிலும் புனிதமான புகழைப் பரப்பியபடி அங்கே கிடந்தன. துணிச்சல்மிக்கவர்களும் புறமுதுகிடாதவர்களுமான தங்கள் தாய்மாமன்கள் இப்படி அர்ஜுனனால் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி, அவன் {அர்ஜுனன்} மீது பல ஆயுதங்களை மழையாகப் பொழிந்தனர் [1].

பல்வேறு விதங்களிலான நூறு மாயைகளை அறிந்தவனான சகுனியும், தன் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} குழப்புவதற்காக மாயைகளை உண்டாக்கினான். அர்ஜுனன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தடிகள், இரும்பு குண்டுகள் {பந்துகள்}, கற்கள், சதக்னிகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பரிகங்கள், நீண்ட கத்திகள், வேல்கள், முத்கரங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, கம்பனங்கள், வாள்கள், ஆணிகள் {நகரங்கள்}, குறும் உலக்கைகள், போர்க்கோடரிகள், க்ஷுரங்கள் {கத்தி போன்றவை}, கூரிய பல்லங்கள் {க்ஷுரப்ரங்கள்}, நாளீகங்கள், வத்ஸதந்தங்கள், அஸ்திஸந்திகள் {எலும்பு போன்ற தலைகளைக் கண்ட கணைகள்}, சக்கரங்கள், பாம்புத் தலை கொண்ட கணைகள், பராசங்கள் ஆகியவையும் இன்னும் பல ஆயுதங்களும் விழுந்தன. கழுதைகள், ஒட்டகங்கள், எருமைக்கடாக்கள், புலிகள், சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், ஓநாய்கள், கழுகுகள், குரங்குகள், பல்வேறு விதங்களிலான பாம்புகள், பலவிதமான ராட்சசர்கள், காக்கை கூட்டங்கள் ஆகியன அனைத்தும் பசியுடனும், சினத்தால் தூண்டப்பட்டும் அர்ஜுனனை நோக்கி ஓடின.

அப்போது, தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கணை மேகங்களை ஏவி அவை அனைத்தையும் எதிர்த்தடித்தான். சிறந்த பலமான கணைகளின் மூலம் அந்த வீரனால் {அர்ஜுனனால்} எதிர்த்தடிக்கப்பட்ட அவர்கள் {காந்தாரர்கள்}, உரக்கக் கதறிய படியே உயிரிழந்து கீழே விழுந்தனர். பிறகு அடர்த்தியான இருள் தோன்றி அர்ஜுனனின் தேரை மறைத்தது, அந்த இருளுக்குள் இருந்து கடும் குரல்கள் அர்ஜுனனை நிந்தித்தன. எனினும், பின்னவன் {அர்ஜுனன்}, ஜியோதிஷ்கம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் அந்த அடர்த்தியான பயங்கரமான இருளை விலக்கினான். அந்த இருள் விலக்கப்பட்ட போது, பயங்கரமான நீரலைகள் தோன்றின. அந்த நீரை வற்ற செய்வதற்காக அர்ஜுனன் ஆதித்யம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அந்த ஆயுதத்தின் விளைவாக அந்த நீர் அனைத்தும் கிட்டத்தட்ட வற்ற செய்யப்பட்டது. சுபலனால் {சகுனியால்} மீண்டும் மீண்டும் உண்டாக்கப்பட்ட பல்வேறு மாயைகளை அர்ஜுனன் சிரித்துக் கொண்டே தன் ஆயுதங்களின் பலத்தால் அழித்தான் [2]. அவனது {சகுனியின்} மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, அச்சங்கொண்ட சகுனி தன் வேகமான குதிரைகளின் உதவியோடு இழிந்த பாவியைப் போலத் தப்பி ஓடினான்.

அப்போது, ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், தன் கரங்களின் அதீத நளினத்தை {லாகவத்தை} எதிரிகளுக்கு எடுத்துக் காட்டியபடி, அந்தக் கௌரவப் படையின் மீது அம்புகளின் மேகங்களைப் பொழிந்தான். இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட உமது மகனின் படை, மலையால் தடுக்கப்பட்ட கங்கையின் நீரூற்று இரண்டு ஓடைகளாகப் பிரிவதைப் போலப் பிரிந்தது. அந்த ஓடைகளில் ஒன்று, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே} துரோணரை நோக்கிச் சென்றது, மற்றொன்றோ உரத்த கதறலுடன் துரியோதனனை நோக்கிச் சென்றது. அப்போது அடர்த்தியாக எழுந்த புழுதியானது துருப்புகள் அனைத்தையும் மறைத்தது. எங்களால் அர்ஜுனனைக் காண முடியவில்லை. காண்டீவத்தின் நாணொலி மட்டுமே களத்திற்கு வெளியே {வடக்குப் பகுதியில்} எங்களால் கேட்கப்பட்டது. உண்மையில், அந்தக் காண்டீவ நாணொலியானது, சங்கொலிகள், பேரிகைகளின் ஒலிகள் மற்றும் பிற கருவிகளின் ஒலிகள் ஆகியவற்றுக்கும் மேலெழுந்து எங்களுக்குக் கேட்டது.

பிறகு களத்தின் தென்பகுதியில் போர் வீரர்களில் முதன்மையானோர் ஒரு புறமும், அர்ஜுனன் மறுபுறமும் நிற்க ஒரு கடும்போர் அங்கே நடந்தது. எனினும், நான் துரோணரைப் பின்தொடர்ந்து சென்றேன். யுதிஷ்டிரனின் பல்வேறு படைப்பிரிவுகள் களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரியை அடித்தன. உமது படையின் பல்வேறு பிரிவுகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோடைகாலக் காற்றானது, ஆகாயத்தின் மேகத்திரள்களை அழிப்பதைப் போல அர்ஜுனனைத் தாக்கின. உண்மையில் அடர்த்தியான மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மேகங்களை இறைத்தபடி அர்ஜுனன் வந்த போது, மனிதர்களில் புலியான அந்தக் கடும் வில்லாளியை {அர்ஜுனனைத்} தடுப்பதற்கு உமது படையில் எவரும் இல்லை. பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட உமது வீரர்கள் பெரும் வலியை உணர்ந்தனர். {அப்படி வலியை உணர்ந்த} அவர்கள் தப்பி ஓடினர். அப்படித் தப்பி ஓடும்போது தங்கள் எண்ணிக்கையிலேயே {தங்கள் படையினரிலேயே} அவர்கள் பலரைக் கொன்றனர்.

கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்டவையும், அனைத்து உடல்களையும் ஊடுருவவல்லவையுமான கணைகள் அர்ஜுனனால் ஏவப்பட்டு, விட்டிற்பூச்சிக்கூட்டங்களைப் போல அனைத்துப் பக்கங்களையும் மறைத்தபடி பாய்ந்தன. குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைத் துளைத்த அந்தக் கணைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {அவற்றை ஊடுருவி} எறும்புப் புற்றுக்களுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் புகுந்தன. {அதன்பிறகு} அர்ஜுனன், யானை, குதிரை அல்லது மனிதன் என எவர் மீதும் {இரண்டாவது முறையாக} கணைகளை ஏவவில்லை. ஒரே ஒரு கணையால் {மட்டும்} தாக்கப்பட்ட இவை ஒவ்வொன்றும் கடுமையாகப் பீடிக்கப்பட்டு உயிரிழந்து கீழே விழுந்தன.

கொல்லப்பட்ட மனிதர்கள், யானைகள், கணைகளால் அடிக்கப்பட்ட குதிரைகள் என அனைத்தாலும் விரவி கிடந்ததும், நாய்கள், நரிகள் ஆகியவற்றின் ஊளைகளால் எதிரொலித்ததுமான அந்தப் போர்க்களம் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் காட்சியளித்தது. அந்தக் கணைகளால் வலியை உணர்ந்தவனான தந்தை {தன்} மகனைக் கைவிட்டான், நண்பன் மற்றொரு நண்பனையும், மகன் தந்தையையும் கைவிட்டனர். உண்மையில், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வீரர்கள் பலர், தங்களைச் சுமந்த விலங்குகளையே கூடக் கைவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 029-அணிபிளந்து ஓடிய கௌரவப் படை; துரோணரை மையமாகக் கொண்டு நடைபெற்ற போர்; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான பயங்கரப் போர்; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையிலான போர்; நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, (என்னுடைய) அந்தப் படைப்பிரிவுகள் பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, நீங்கள் அனைவரும் களத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கியபோது, உங்கள் மனங்களின் நிலை எப்படி இருந்தது? {இப்படி} பிளக்கப்பட்டு, நிற்பதற்குக் கூட ஓர் இடத்தைக் காணாமல் ஓடும் படையணியினரை மீண்டும் அணிதிரட்டுவது எப்போதும் மிகக் கடினமானதே. ஓ! சஞ்சயா, அது குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, [உமது துருப்புகள் பிளக்கப்பட்டாலும்], உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் முதன்மையான வீரர்கள் பலர், தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் துரோணரைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பயங்கர நகர்வில் உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பாண்டவத் துருப்புகளை எதிர்த்த அவர்கள், நல்ல சாதனைகளை அடைந்து, யுதிஷ்டிரனை அணுகக்கூடிய தூரத்திலேயே வைத்துக் கொண்டு, அச்சமற்ற வகையில் தங்கள் படைத்தலைவரைத் {துரோணரைத்} தொடர்ந்தனர்.

பெரும் சக்தி கொண்ட பீமசேனன், வீர சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரின் ஒரு பிழையைக் கூடத் {தங்களுக்குச்} சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கௌரவத் தலைவர்கள் பாண்டவப் படையின் மீது பாய்ந்தனர். “துரோணர், துரோணர்!” என்று சொல்லிப் பாஞ்சாலர்கள் தங்கள் துருப்புகளைத் தூண்டினர். எனினும், உமது மகன்களோ, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி குருக்கள் அனைவரையும் தூண்டினர்.

“துரோணரைக் கொல்வீர்”, “துரோணரைக் கொல்வீர்” என்று சொல்லி ஒரு தரப்பும், “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்”, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி அடுத்ததும் {அடுத்த தரப்பும்} எனத் துரோணரைத் தங்கள் பந்தயப் பொருளாகக் கொண்டு குருக்களும், பாண்டவர்களும் சூதாடுவதாகத் தெரிந்தது. பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், துரோணர் யாரை நசுக்க முயன்றாரோ, அந்தப் பாஞ்சாலர் தேர்வீரர்கள் அனைவரும் இருந்த தரப்புக்குச் சென்றான்.

இப்படியே, போரிடுதவற்காக ஒருவன் {தன்} எதிரிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதியும் அனுசரிக்கப்படவில்லை. அந்தப் போர் பயங்கரமாக மாறியது. வீரர்களை எதிர் கொண்ட வீரர்கள் உரத்த முழக்கங்களைச் செய்தனர். பாண்டவர்களை அவர்களது எதிரிகளால் நடுங்கச் செய்ய இயலவில்லை. மறுபுறம், தங்கள் துயரங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்த பின்னவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் எதிரிகளின் படையணியினரை நடுங்கச் செய்தனர். தன்மானம் கொண்டவர்களாக இருப்பினும், சினத்தாலும், பழிவாங்கும் உணர்ச்சியாலும் உற்சாகங்கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, பலத்தாலும் சக்தியாலும் தூண்டப்பட்டுத் துரோணரைக் கொல்வதற்காகத் தங்கள் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பயங்கரப் போரை அணுகினர்.

உயிரையே பணயமாகக் கொண்டு கடும்போரில் விளையாடிய அளவில்லா சக்தி படைத்த அவ்வீரர்களுக்குள் நடந்த அந்த மோதலானது, வச்சிரத்திற்கு எதிரான இரும்பின் மோதலை ஒத்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெறும் கடும்போரைப் போல இதற்கு முன்னர்த் தாங்கள் பார்த்ததாகவோ, கேட்டதாகவோ வயதில் மிக முதிர்ந்த மனிதர்களாலும் எண்ண முடிவில்லை. பெரும் படுகொலைகளைக் கண்ட அம்மோதலில், அந்தப் பெரும்படையின் எடையால் பீடிக்கப்பட்ட பூமியானது நடுங்கத் தொடங்கியது. எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, தூக்கிவீசப்பட்ட அந்தக் குரு படை உண்டாக்கிய பயங்கர ஒலி, ஆகாயத்தையே முடக்கிப் பாண்டவப்படைக்குள்ளும் ஊடுருவியது.

போர்க்களத்தில் திரிந்த துரோணர், பாண்டவப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம் வந்து, கூர்மையான தன் கணைகளால் அவர்களைப் பிளந்தார். அற்புதமான சாதனைகளைக் கொண்ட துரோணரால் இப்படி அவர்கள் நசுக்கப்பட்ட போது, பாண்டவப்படையின் தலைவன் திருஷ்டத்யும்னன், சினத்தால் நிறைந்து துரோணரைத் தானே தடுத்தான். துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிக அற்புதமானதாக இருந்ததை நாங்கள் கண்டோம். அஃது {அம்மோதல்} ஈடு இணையற்றது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

அப்போது, நெருப்புக்கு ஒப்பானவனாகத் தன் கணைகளையே தீப்பொறிகளாகவும், தன் வில்லையே தீச்சுடராகவும் கொண்ட {அநூப நாட்டு ஆட்சியாளன்} நீலன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, குரு படைகளை எரிக்கத் தொடங்கினான். துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, நீலனோடு ஒரு மோதலை முன்பிலிருந்தே விரும்பியதால், துருப்புகளை எரித்தபடியே பின்னவன் {நீலன்} வந்த போது, அவனிடம் சிரித்துக் கொண்டே, கண்ணியமான வார்த்தைகளால், “ஓ! நீலா, சாதாரணப் படைவீரர்கள் பலரை உன் கணைகளின் தீச்சுடர்களால் எரிப்பதால் நீ ஈட்டப் போவது {ஈட்டப்போகும் பயன்} என்ன? உதவியற்ற என்னிடம் நீ போரிடுவாயாக, சினத்தால் நிறைந்து என்னைத் தாக்குவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், முற்றாக மலர்ந்த தாமரையின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகத்தைக் கொண்ட நீலன், தாமரைக் கூட்டங்களுக்கு ஒப்பான உடலையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்ட அஸ்வத்தாமனைத் தன் கணைகளால் துளைத்தான். திடீரென நீலனால் ஆழத் துளைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மூன்று பல்லங்களைக் கொண்டு தன் எதிராளியின் {நீலனின்} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். அப்போது, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்த நீலன், ஒரு சிறந்த வாளையும் கேடயத்தையும் கொண்டு, (தன் நகங்களால், தன் இரையைத் தூக்கிச் செல்லும்) ஒரு பறவையைப் போல, அஸ்வத்தாமனின் உடலில் இருந்து அவனது தலையைத் துண்டிக்க விரும்பினான். எனினும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இறகுகள் கொண்ட கணை ஒன்றின் மூலமாக, அழகான மூக்கால் அருளப்பட்டதும், சிறந்த குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உயர்ந்த தோள்களில் இருந்ததுமான தன் எதிராளியின் {நீலனின்} தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.

அப்போது, முழு நிலவின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகமும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களும், தாமரைக்கு ஒப்பான நிறமும் கொண்ட அந்த உயரமான வீரன் {நீலன்} இப்படியே கொல்லப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான். சுடர்மிகு சக்தி கொண்ட நீலன், ஆசானின் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவப் படை, பெரும் துயரத்தால் நிறைந்து நடுங்கத் தொடங்கியது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், “ஐயோ, போர்க்களத்தின் தென்பகுதியில், இந்திரனின் மகன் (அர்ஜுனன்), எஞ்சியுள்ள சம்சப்தகர்களையும், நாராயணப் படையையும் கொல்வதில் ஈடுபட்டு வரும்போது, எதிரியிடம் இருந்து நம்மைக் காக்க அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} எப்படி இயலும்?” என்று நினைத்தனர்” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியிடம் இருந்து மீட்கப்பட்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 030-கௌரவர்களோடு போராடிய பீமன்; பீமனுக்குக் கிடைத்த உதவி; சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பி, கர்ணனின் தம்பிகளான சத்ருஞ்சயன் விபாடன் ஆகியோரைக் கொன்ற அர்ஜுனன்; கர்ணனை ஆதரித்த போராளிகளைக் கொன்ற பீமன்; சர்மவர்மன் மற்றும் பிருஹத்க்ஷத்ரன் ஆகியோரைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியிடம் இருந்து காக்கப்பட்ட கர்ணன்; கௌரவர்களிடம் இருந்து காக்கப்பட்ட சாத்யகி; பனிரெண்டாம் நாள் போர் முடிவு..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எனினும், தன் படை கொல்லப்படுவதை விருகோதரனால் {பீமனால்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் {பீமன்}, பாஹ்லீகனை அறுபது {60} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். பிறகு துரோணர், பீமனைக் கொல்ல விரும்பி, கூர்முனை கொண்ட நேரான கணைகள் பலவற்றால் பின்னவனை {பீமனை} அவனது உயிர் நிலைகளில் தாக்கினார். நேரத்தை மேலும் கொடுக்க விரும்பாத அவர் {துரோணர்}, தீயின் தீண்டலுக்கு ஒப்பானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையுமான இருபத்தாறு {26} கணைகளால் அவனை {பீமனை} மீண்டும் தாக்கினார். பிறகு, கர்ணன் பனிரெண்டு {12} கணைகளாலும் அஸ்வத்தாமன் ஏழாலும் {7}, மன்னன் துரியோதனன் ஆறாலும் {6} அவனைத் {பீமனைத்} துளைத்தனர். வலிமைமிக்கப் பீமசேனனும் பதிலுக்கு அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவன் {பீமன்}, துரோணரை ஐம்பது {50} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். துரியோதனனைப் பனிரெண்டு {12} கணைகளாலும், துரோணரை எட்டாலும் {8} துளைத்த அவன் {பீமன்}, உரக்க முழங்கியபடியே அந்தப்போரில் ஈடுபட்டான்.

தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் வீரர்கள் எதில் போரிட்டார்களோ, மரணம் என்பது அடைவதற்கு எளிதானதாக எதில் இருந்ததோ, அந்த மோதலில், அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, பீமனைக் காக்கத் தூண்டி பல வீரர்களை அனுப்பினான். அவளவிலா சக்தி கொண்ட வீரர்களான மாத்ரி மற்றும் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, யுயுதானன் தலைமையிலான பிறரும், பீமசேனனின் பக்கத்தை விரைவாக அடைந்தனர். சினத்தால் நிறைந்து ஒன்றாகச் சேர்ந்த அந்த மனிதர்களில் காளையர், வில்லாளிகளில் முதன்மையானோர் பலரால் பாதுகாக்கப்பட்ட துரோணரின் படையைப் பிளக்க விரும்பி போருக்கு முன்னேறினர். உண்மையில், வலிமைமிக்க சக்தி கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான பீமனும், பிறரும், துரோணரின் படை மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரோ, போரில் சாதித்தவர்களும், பெரும்பலங்கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த வீரர்கள் அனைவரையும் எந்தக் கவலையுமின்றி வரவேற்றார் {எதிர்த்தார்}. தங்கள் நாடுகளைக் கருதிப் பாராமல், மரணத்தைக் குறித்த அச்சங்களை அனைத்தையும் கைவிட்ட உமது படையின் வீரர்களும் பாண்டவர்களை எதிர்த்து முன்னேறினர். குதிரைவீரர்கள் குதிரைவீரர்களுடன் மோதினர், தேர்வீரர்கள் தேர்வீரர்களுடன் மோதினர். அந்தப் போரில் ஈட்டிகளுக்கு எதிராக ஈட்டிகளும், வாள்களுக்கு எதிராக வாள்களும், கோடரிகளுக்கு எதிராகக் கோடரிகளும் மோதின. வாள்களுக்கு இடையில் அங்கே நடைபெற்ற கடும் மோதல் பயங்கரப் படுகொலைகளை {பேரழிகளை} உண்டாக்கியது. யானைகளோடு யானைகள் மோதியதன் விளைவாக அந்தப் போரானது மிகவும் உக்கிரமடைந்தது.

சிலர் யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்தனர், சிலர் குதிரைகளின் முதுகுகளில் இருந்து தலை குப்புற விழுந்தனர். கணைகளால் துளைக்கப்பட்ட வேறு சிலர், தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். அந்தக் கடும் மோதலில், கவசமிழந்த ஒருவன் கீழே விழுகையில், யானையொன்று அவனது மார்பில் தாக்குவதையோ, அவனது தலையை நசுக்குவதையோ காண முடிந்தது. களத்தில் விழும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் யானைகளால் நசுக்கப்படுவது களமெங்கும் காணப்பட்டது. பல யானைகள் (தாங்கள் விழுகையில்) தங்கள் தந்தங்களால் பூமியைத் துளைத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அதனால் கிழிக்கப்படுவதும் காணப்பட்டது. கணைகளால் தங்கள் துதிக்கைகள் தாக்கப்பட்ட பல யானைகள், நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கிழித்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் களமெங்கும் திரிந்தன. சில யானைகள், கீழே விழுந்த வீரர்கள், குதிரைகள், கருப்பு இரும்புக் கவசங்களால் மறைக்கப்பட்ட யானைகள் ஆகியவற்றை, ஏதோ அவை அடர்த்தியான கோரைப்புற்கள் மட்டுமே என்பதைப் போல நசுக்குவதும் காணப்பட்டது.

பணிவால் அலங்கரிக்கப்பட்ட மன்னர்கள் பலர், தங்கள் காலம் வந்ததும், கழுகின் இறகுகளை மேல்விரிப்பாகக் கொண்ட வலிநிறைந்த படுக்கைகளில் (இறுதி உறக்கத்திற்காகத்) தங்களைக் கிடத்திக் கொண்டனர். போருக்குத் தன் தேரில் முன்னேறிய தந்தை தன் மகனைக் கொன்றான்; மகனும், வெறியால் மரியாதை அனைத்தையும் இழந்து போரில் தன் தந்தையை அணுகினான். தேர்களின் சக்கரங்கள் உடைக்கப்பட்டன; கொடிகள் கிழிக்கப்பட்டன; குடைகள் கீழே பூமியில் விழுந்தன. உடைந்த ஏர்க்கால்களை இழுத்துக் கொண்டே குதிரைகள் ஓடின. வாள்களைப் பிடித்த கரங்களும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் கீழே விழுந்தன. வலிமைமிக்க யானைகளால் இழுத்துச் செல்லப்பட்ட தேர்கள் தரையில் வீசி எறியப்பட்டுத் தூள்தூளாக மாறின. யானைகளால் கடுமையாகக் காயம் பட்ட குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுந்தன. எவனும் எவனுக்கும் எந்த மரியாதையையும் காட்டாதபடியே அந்தக் கடும்போர் தொடர்ந்தது.

“ஓ! தந்தையே!…, ஓ! மகனே!…. நண்பா நீ எங்கிருக்கிறாய்?… நில்!….. நீ எங்கே செல்கிறாய்?…. தாக்குவாயாக!…. கொண்டுவா… இவனைக் கொல்வாயாக” இவ்விதமானவையும், பலவிதமானவையுமான அலறல்கள், சிரிப்போடும், கூச்சலோடும், முழக்கங்களோடும் அங்கே கேட்கப்பட்டன. மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியோரின் இரத்தங்கள் ஒன்று கலந்தன. {அதனால்} பூமியின் புழுதி மறைந்தது. மருண்டோர் அனைவரின் இதயங்களும் உற்சாகமிழந்தன {அச்சம் கொண்டோர் மயக்கமடைந்தனர்}.

இங்கே ஒரு வீரன் தன் தேர்ச்சக்கரத்தை மற்றொரு வீரரனின் தேர்ச்சக்கரத்தோடு சிக்கச் செய்து, மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் மிக அருகில் சென்று, தன் கதாயுதத்தின் மூலமாக அடுத்தவனின் தலையைச் நொறுக்கினான். பாதுகாப்பற்ற இடத்தில் பாதுகாப்பை விரும்பிய துணிச்சல்மிக்கப் போராளிகளோ, ஒருவரையொருவர் மயிர் பிடித்திழுத்து, கைமுட்டிகள், பற்கள் மற்றும் நகங்களால் மூர்க்கமாகப் போரிட்டனர். இங்கே வாளை உயர்த்திப் பிடித்த ஒரு வீரனின் கரம் வெட்டப்பட்டது, அங்கே வில் அல்லது கணை, அல்லது அங்குசத்தைப் பிடித்திருந்த மற்றொரு வீரனின் கரம் வெட்டப்பட்டது. இங்கே ஒருவன் மற்றொருவனை உரக்க அழைத்தான். அங்கே மற்றொருவன் களத்திற்குத் தன் புறம் காட்டினான். இங்கே ஒருவன் தன் அருகில் மற்றவனை வர வைத்து அவனது உடலில் இருந்த தலையை வெட்டினான். அங்கே மற்றொருவன் எதிரியை நோக்கி உரத்த கூச்சலிட்டபடி விரைந்தான். இங்கே ஒருவன் மற்றவனின் முழக்கத்தால் அச்சத்தால் நிறைந்தான். அங்கே மற்றொருவன் நண்பனையோ, எதிரியையோ கூரிய கணைகளால் கொன்றான். இங்கே மலை போன்ற பெரிய யானை ஒன்று, நாராசத்தால் கொல்லப்பட்டுக் கோடை காலத்தில் நதியில் இருக்கும் சமமான தீவொன்றைப் போலக் களத்தில் விழுந்து கிடந்தது. அங்கே யானை ஒன்று, தன் சாரலில் சிற்றோடை பாயும் மலை ஒன்றைப் போலத் தன் மேனியில் வியர்வை வழிய குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய தேர்விரனைக் களத்தில் மிதித்து நசுக்கியது.

ஆயுதங்களில் சாதித்த துணிச்சல்மிக்க வீரர்கள் இரத்தத்தால் நனைந்த படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதைக் கண்டு, மருண்டவர்களும், பலவீனமான இதயங்களைக் கொண்டவர்களும் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். உண்மையில் அனைவரும் உற்சாகம் இழந்தனர். அதற்கு மேலும் எதையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியில் மூழ்கி அந்தப் போர் உக்கிரமடைந்தது.

அப்போது, பாண்டவப்படைகளின் தலைவன் {திருஷ்டத்யும்னன்}, “இதுவே நேரம்” என்று சொல்லி, எப்போதும் பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களிடம் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} விரைவாக வழிநடத்திச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டவர்கள் அவனது கட்டளைகளுக்குப் பணிந்து, (கௌரவப் படையை) அடித்தபடியே, தடாகத்தை நோக்கிச் செல்லும் அன்னங்களைப் போலத் துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர். “அவரைப் பிடிப்பீராக”, “ஓடாதீர்”, “அஞ்சாதீர்”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்று ஆர்ப்பரித்த குரல்களே துரோணரின் தேர் அருகில் கேட்கப்பட்டன. துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சல்லியன் ஆகியோர் அந்த வீரர்களை {எதிர்த்தனர்} வரவேற்றனர். எனினும், தடுக்கப்பட, வெல்லப்பட முடியாத வீரர்களும், உன்னதமான உணர்வுகளால் ஈர்க்கப்பட்டவர்களுமான {அறப்போரில் நாட்டம் கொண்டவர்களுமான} பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டாலும் கூட, துரோணரைத் தவிர்க்காதிருந்தனர் {துரோணரை விடவில்லை}. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பெரும் அழிவை உண்டாக்கினார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவரது நாணொலியும், அவரது உள்ளங்கை தட்டல் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்த அவை அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடித்தன.

அதேவேளையில், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வீழ்த்திய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணர் எங்கே பாண்டவத் துருப்புகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைவாக வந்தான். சம்சப்தகர்களைக் கொன்ற பல்குனன் {அர்ஜுனன்}, குருதியையே நீராகவும், கணைகளையே சுழல்களாகவும் அலைகளாகவும் கொண்ட பெரும் தடாகங்களைக் கடந்தபடியே அங்கே வந்தான். சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அர்ஜுனனின் அடையாளமும், பிரகாசத்தால் சுடர்விடுவதுமான அவனது குரங்குக் கொடியை நாங்கள் கண்டோம். யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலவே, தன் ஆயுதங்கள் எனும் கதிர்களின் மூலம் சம்சப்தகர்கள் எனும் கடலை வற்ற செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு குருக்களையும் {கௌரவர்களையும்} தகர்த்தான். உண்மையில், யுகமுடிவில் தோன்றி அனைத்து உயிர்களையும் எரிக்கும் நெருப்பைப் போலவே தன் ஆயுதங்களால் குருக்கள் அனைவரையும் அர்ஜுனன் எரித்தான்.

ஆயிரக்கணக்கான கணைகளின் மூலம் அவனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட யானை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் கலைந்த கேசங்களுடன் கீழே பூமியில் விழுந்தனர். அந்தக் கணை மாரியால் அதீதமாகப் பீடிக்கப்பட்ட சிலர் துன்பக் குரலை வெளியிட்டனர். வேறு சிலர் பெருமுழக்கம் செய்தனர். பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட சிலரோ உயிரையிழந்து கீழே விழுந்தனர். (நல்ல வீரர்களின் நடத்தைகளை) நினைவில் கொண்ட அர்ஜுனன், எதிரிகளில் கீழே விழுந்த போராளியையோ, பின்வாங்குபவரையோ {புறமுதுகிடுபவரையோ}, போரிட விரும்பாதவரையோ தாக்காதிருந்தான். தங்கள் தேர்களை இழந்து ஆச்சரியத்தில் நிறைந்த கௌரவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், களத்தில் இருந்து பின்வாங்கி, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறிக்கொண்டு, (பாதுகாப்புக்காகக்) கர்ணனை அழைத்தனர்.

குருக்களால் உண்டாக்கப்பட்ட அந்த ஆரவாரத்தைக் கேட்டு {அவர்களைப்} பாதுகாக்க விரும்பிய அதிரதன் மகன் (கர்ணன்), “அஞ்சாதீர்” என்ற வார்த்தைகளை உரக்கச் சொல்லித் துருப்புகளுக்கு உறுதிகூறியபடி அர்ஜுனனை எதிர்கொள்ளச் சென்றான். பிறகு, பாரதர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனும், பாரதத் தேர்வீரர்களிலும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் (கர்ணன்), ஆக்னேய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான் {மந்திரத்தால் தூண்டினான்}. எனினும் அர்ஜுனன், தன் கணை மழையின் மூலமாக, சுடர்மிக்க வில்லையும், பிரகாசமான கணைகளையும் கொண்ட வீரனான ராதையின் மகன் {கர்ணன்} ஏவிய கணைகளின் கூட்டத்தைக் கலங்கடித்தான் [1]. அதேபோல, அதிரதனின் மகனும் {கர்ணனும்}, உயர்ந்த சக்தியைக் கொண்ட அர்ஜுனனின் கணைகளைக் கலங்கடித்தான். இப்படி, அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் தடுத்த கர்ணன், பெருமுழக்கங்கள் செய்தபடியே தன் எதிராளியின் {அர்ஜுனனின்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

அப்போது, திருஷ்டத்யும்னன், பீமன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கர்ணனை அணுகி, மூன்று {மூன்று மூன்று} நேரான கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனைத்} துளைத்தனர். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, தன் கணை மழையால் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தடுத்துவிட்டு, மூன்று கூரிய கணைகளால் அந்த மூன்று வீரர்களின் {திருஷ்டத்யும்னன், பீமன் மற்றும் சாத்யகி ஆகியோரின்} விற்களை அறுத்தான். தங்கள் விற்கள் அறுபட்ட அவர்கள் நஞ்சற்ற பாம்புகளைப் போலத் தெரிந்தனர். தங்கள் தங்கள் தேர்களில் இருந்து எதிரியை நோக்கி ஈட்டிகளை வீசிய அவர்கள் {மூவரும்} சிங்க முழக்கமிட்டனர். பெரும் காந்தியும், மூர்க்கமும் கொண்டவையும், பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தக் கடும் ஈட்டிகள், அவர்களின் வலிய கரங்களால் வீசப்பட்டு, கர்ணனின் தேரை நோக்கி மூர்க்கமாகச் சென்றன. மூன்று நேரான கணைகளால் அந்த ஈட்டிகள் ஒவ்வொன்றையும் வெட்டிய அந்த வலிமைமிக்கக் கர்ணன், அதே நேரத்தில் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீதும் பல கணைகளை விரைந்து ஏவி உரத்த முழக்கத்தைச் செய்தான்.

அப்போது அர்ஜுனன், ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்துத் தன் கூரிய கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} தம்பியைக் கொன்றான். இப்படியே, ஆறு கணைகளால் சத்ருஞ்சயனைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, மேலும் ஒரு பல்லத்தினால், தன் தேரில் நின்று கொண்டிருந்த விபாடனின் தலையை வெட்டினான். திருதராஷ்டிரர்களும், சூதனின் மகனும் {கர்ணனும்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, எவருடைய உதவியும் இல்லாத {தனி ஒருவனான} அர்ஜுனனால் பின்னவனின் {கர்ணனின்} தம்பிகள் மூவர் [2] கொல்லப்பட்டனர்.-அப்போது, இரண்டாவது கருடனைப் போலத் தன் தேரில் இருந்து குதித்த பீமன், கர்ணனை ஆதரித்தோரில் பதினைந்து போராளிகளைத் தன் சிறந்த வாளால் கொன்றான். மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு வேறு வில்லை எடுத்த பீமன், பத்து {10} கணைகளால் கர்ணனையும் ஐந்தால் அவனது தேரோட்டியையும் குதிரைகளையும் துளைத்தான்.

திருஷ்டத்யும்னனும் ஒரு வாளையும், பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சர்மவர்மனையும் [3], நிஷாதர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்ரனையும் கொன்றான். பிறகு, தன் தேரில் ஏறிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} வேறு வில்லை எடுத்துக் கொண்டு எழுபத்து மூன்று {73} கணைகளால் கர்ணனைத் துளைத்து உரக்க முழங்கினான்.

இந்திரனுக்கு இணையான சிநியின் பேரனும் {சாத்யகியும்}, வேறு வில்லை எடுத்துக் கொண்டு அறுபத்துநான்கு {64} கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்து சிங்கம்போலக் கர்ஜித்தான். மேலும், நன்கு ஏவப்பட்ட இரண்டு கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்த அவன் {சாத்யகி}, மீண்டும் மூன்று கணைகளால் கர்ணனின் கரங்களையும் மார்பையும் துளைத்தான். மன்னன் துரியோதனன், துரோணர் மற்றும் ஜெயத்ரதன் ஆகியோர், சாத்யகி எனும் பெருங்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கர்ணனைக் காப்பாற்றினர். எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களும், அடிப்பதில் சாதித்தவர்களுமான உமது படையின் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகிய அனைத்தும், (தன்னைத் தாக்குபவர்களை) கர்ணன் அச்சுறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்தனர் [4]. பிறகு, திருஷ்டத்யும்னன், பீமன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அந்தப் போரில் சாத்யகியைக் காக்கத் தொடங்கினர்.உமது படை, எதிரியின் படை ஆகியவற்றைச் சேர்ந்த வில்லாளிகளின் அழிவுக்கான அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. போராளிகள் அனைவரும் தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் போரிட்டனர். காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன தேர்களுடனும், காலாட்படையுடனும் போரிட்டன. தேர்வீரர்கள், யானைகளோடும், காலாட்படைவீரர்களோடும், குதிரைகளோடும், தேர்களோடும் போரிட்டனர், காலாட்படை வீரர்களோ தேர்களோடும் யானைகளோடும் போரிட்டனர். மேலும் குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படைவீரர்களோடும் போரிடுவதும் காணப்பட்டது [5]. இப்படியே, மனித ஊனுண்ணிகள் மற்றும் இறைச்சியுண்ணும் விலங்குகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில், ஒருவரையொருவர் அச்சமற்ற வகையில் எதிர்த்த உயர் ஆன்ம மனிதர்களுக்கு இடையில் பெரும் குழப்பத்தால் குறிக்கப்பட்ட அந்தப் போர் நடைபெற்றது. உண்மையில் அது யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் எண்ணிக்கையைப் பெருக்கிற்று.

பெரும் எண்ணிக்கையிலான யானைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் குதிரைகள் ஆகியன, மனிதர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் அழிக்கப்பட்டன. யானைகள் யானைகளால் கொல்லப்பட்டன, தேர் வீரர்கள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட தேர்வீரர்களாலும், குதிரைகள் குதிரைகளாலும், பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்களாலும் கொல்லப்பட்டனர். யானைகள் தேர்களாலும், பெரும் குதிரைகள் பெரும் யானைகளாலும், மனிதர்கள் குதிரைகளாலும், குதிரைகள் தேர்வீரர்களில் முதன்மையானோராலும் கொல்லப்பட்டன. நாக்குகள் வெளியே தள்ளியபடியும், பற்களும், கண்களும் தங்கள் இடங்களில் இருந்து பெயர்ந்த நிலையிலும், கவசங்களும், ஆபரணங்களும் தூசியாக நசுக்கப்பட்ட நிலையிலும் கொல்லப்பட்ட உயிரினங்கள் கீழே களத்தில் விழுந்தன. மேலும், பயங்கர முகத்தோற்றம் கொண்ட சிலர், பல்வேறு சிறந்த ஆயுதங்களைக் கொண்ட வேறு சிலரால் தாக்கபட்டும், பூமியில் வீசப்பட்டும், குதிரைகள் மற்றும் யானைகளின் மிதியால் பூமியில் அழுத்தப்பட்டும், கனமான தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களால் சிதைக்கப்பட்டும் சித்திரவதையை அடைந்தனர்.

இரைதேடும் விலங்குகள், இறைச்சியுண்ணும் பறவைகள், மனித ஊணுண்ணிகள் ஆகியோருக்கு மகிழ்வதைத் தரும் அந்தக் கடும் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, கோபத்தால் நிறைந்த வலிமைமிக்கப் போராளிகள், தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தியபடியும், ஒருவரையொருவர் கொன்றபடியும் களமெங்கும் திரிந்தனர். பிறகு, அந்த இரண்டு படைகளும் பிளக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டதும், குருதியில் நனைந்த போர்வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மேற்கு {அஸ்த} மலைகளில் உள்ள தன் அறைகளுக்குச் சூரியன் சென்ற அதே வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படைகள் இரண்டும் தங்களுக்குரிய பாசறைகளில் ஓய மெதுவாகச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.

பன்னிரெண்டாம் நாள் போர் முற்றிற்று

சம்சப்தகவத பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading