கிருஷ்ணனிடம் ஆலோசித்த யுதிஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108அ-போரை நிறுத்திய கௌரவர்களும் பாண்டவர்களும்; பீஷ்மரைப் புகழ்ந்த துரியோதனன் மகன்கள்; பாண்டவர்கள் ஒன்று கூடி செய்த ஆலோசனை; கிருஷ்ணனிடம் புலம்பிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கவலைக்கு ஆறுதல் சொன்ன கிருஷ்ணன்; தானே போரிட்டு பீஷ்மரை அழிக்க உத்தரவிடுமாறு யுதிஷ்டிரனைக் கேட்ட கிருஷ்ணன்; கிருஷ்ணன் தான் முன்னர்க் கூறியிருந்தபடியே நீடிக்க வேண்டும் என்ற யுதிஷ்டிரன்; தனக்கும் பீஷ்மருக்கும் முன்பு ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தைக் குறித்துச் சொல்லும் யுதிஷ்டிரன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்கள் {அந்தக் கௌரவ மற்றும் பாண்டவ வீரர்கள்} போர் புரிந்து கொண்டிருக்கையில், சூரிய மறைவின் உதவியால் சந்திப் பொழுது அங்கே தோன்றியது, {எனவே}, அதற்கு மேலும் போரைக் காண முடியவில்லை. பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், சந்திப்பொழுது வந்ததையும், பீஷ்மரால் கொல்லப்பட்ட தன் துருப்பினர், தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்து விட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தில் இருந்து புறங்காட்டி தப்பி ஓட முயல்வதையும் கண்டு, வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டு, போரில் அனைவரையும் பீடிப்பதையும் கண்டு, சோமகர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்கள் அனைவரும் உற்சாகமிழந்திருப்பதையும் கவனித்து, சிறிது சிந்தித்த பிறகு, அந்தத் துருப்புகளைத் திரும்பும்படி ஆணையிட்டான்.
பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் படைகளைத் திரும்பப் பெற்றான். அதேபோல, உமது படைகளைத் திரும்பப் பெறுதலும் அதே நேரத்தில் நடந்தது. பிறகு, போரில் சிதைக்கப்பட்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! குருக்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்தனர். பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், போரில் அந்த வீரரின் {பீஷ்மரின்} சாதனைகளை நினைவுகூர்ந்தபடி மன அமைதியை இழந்தனர். பீஷ்மரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களையும், சிருஞ்சயர்களை வீழ்த்தியபிறகு, உமது மகன்களால் வழிபடப்பட்டு, அவர்களால் புகழவும் பட்டார். மகிழ்ச்சி மிக்கக் குருக்களோடு {கௌரவர்களோடு} அவர் {பீஷ்மர்} தன் பாசறைக்குள் நுழைந்தார்.
பிறகு உயிரினங்கள் அனைத்தின் உணர்வுகளையும் இழக்கச் செய்யும் இரவும் வந்தது. அப்போது அந்த இரவின் கடும்பொழுதில், பாண்டவர்கள், விருஷ்ணிகள், வெல்லப்படமுடியாதவர்களான சிருஞ்சயர்கள் ஆகியோர் ஒரு கலந்தாய்வுக்காக {ஆலோசனைக்காக} அமர்ந்தனர். சபையில் தீர்மானங்களை எட்டுவதில் திறம்பெற்றவர்களான அந்த வலிமைமிக்க நபர்கள் அனைவரும், தங்கள் சூழ்நிலையின் பார்வையில் எது உடனடி நன்மையை அளிக்கும் என நிதானமாகக் கலந்தாய்ந்தனர்.
பிறகு மன்னன் யுதிஷ்டிரன், நெடுநேரம் சிந்தித்தபிறகு, தன் கண்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் செலுத்தி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! கிருஷ்ணா, கடும் ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம பீஷ்மரைப் பார். கோரைப்புல் காடு ஒன்றை நசுக்கும் யானையைப் போல என் துருப்புகளை அவர் {பீஷ்மர்} நசுக்குகிறார். அந்த உயர் ஆன்ம வீரரைக் காண்பதற்கும் நாம் துணியவில்லை. மூண்டெழும் காட்டுத்தீயைப் போல அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை நக்குகிறார் {துடைத்தழிக்கிறார்}. கூரிய ஆயுதங்களைக் கொண்ட வீரப் பீஷ்மர், போரில் கோபத்தால் தூண்டப்பட்டு, கையில் வில் பிடித்துக் கணைகளை ஏவும்போது, கடும் நச்சுக் கொண்ட வலிமைமிக்க நாகன் தக்ஷகனைப் போலக் கடுமையாகிறார்.
உண்மையில், கோபக்கார யமனோ, வஜ்ரத்தைத் தரித்திருக்கும் தேவர்களின் தலைவனோ {இந்திரனோ}, கையில் சுருக்குக் கயிற்றை {பாசத்தைக்} கொண்ட வருணனோ, கதாயுதம் தரித்த யக்ஷர்களின் தலைவனோ {குபேரனோ} கூட வீழ்த்தப்பட இயன்றவர்களே. ஆனால் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், போரில் வெல்லப்பட இயலாதவராவார். வழக்கு இதுவாயிருக்கையில், ஓ! கிருஷ்ணா, என் புரிதலில் உள்ள பலவீனத்தினால், நான் போரில் பீஷ்மரை (எதிரியாக) அடைந்து துன்பக்கடலில் மூழ்கிவிட்டேன்.
ஓ! வெல்லப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, நான் காட்டுக்குள் ஓயப் போகிறேன் {காட்டிற்கே செல்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, போரை நான் இனியும் விரும்பவில்லை. பீஷ்மர் எப்போதும் நம்மைக் கொல்கிறார். சுடர்விடும் நெருப்புக்குள் விரையும் பூச்சியொன்று மரணத்தைச் சந்திப்பதைப் போல, நானும் பீஷ்மரை நோக்கி விரைந்தேன். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் அரசாட்சிக்காக {நாட்டுக்காக} ஆற்றலை முன்வைத்த நான், ஐயோ, அழிவையே அடைந்தேன்.
துணிவுமிக்க என் தம்பிகள் அனைவரும் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் அண்ணனான என் மீது அவர்கள் கொண்ட பாசத்தின் விளைவால், அவர்கள் அரசாட்சியை இழந்து காட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னாலேயே கிருஷ்ணை {திரௌபதி} இத்தகுத் துயரத்தில் மூழ்கியிருக்கிறாள். உயிரானது உயர்ந்த மதிப்பைக் கொண்டது என நான் கருதுகிறேன். உண்மையில், அந்த உயிரும் காக்கப்படுவது கடினம் என இப்போது தெரிகிறது. (என்னால் அந்த உயிரைக் காக்க முடிந்தால்), எஞ்சிய பின்னதை {வாழ்நாளை} சிறந்த அறப்பயிற்சியில் கழிக்கப் போகிறேன் {தர்மத்தை அனுஷ்டிக்கப் போகிறேன்}.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் தம்பிகளுடன் கூடிய நான், உனது உதவிக்குத் {தயவுக்குத்} தகுந்தவனானால், ஓ! கிருஷ்ணா, என் {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை மீறாமல் என் நன்மைக்கானது எது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றான் யுதிஷ்டிரன்}.
(நிலைமையை விளக்கும்) அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளை விரிவாகக் கேட்ட கிருஷ்ணன், கருணையினால், யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தர்மனின் மகனே, ஓ! உண்மையில் உறுதியாக இருப்பவரே {யுதிஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவர்களான இந்த வெல்லப்பட முடியாத வீரர்களை உமது தம்பியாகக் கொண்ட நீர் துயரடையாதீர். அர்ஜுனன், பீமசேனர் ஆகியோர் அக்னி மற்றும் வாயுவின் சக்தியைக் கொண்டவர்களாவர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரத்தைக் கொண்டவர்களாவர்.
நமக்குள் நிலவும் நல்ல புரிதலின் மூலம் நீர் என்னையும் இந்தப் பணியில் நிறுவுவீராக. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நானும் பீஷ்மருடன் போரிடுவேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மால் வழிநடத்தப்பட்டால் பெரும்போரில் என்னால் செய்ய முடியாதது அங்கே என்ன இருக்கிறது? மனிதர்களில் காளையான அந்தப் பீஷ்மரைக் கொல்லப் பல்குனன் {அர்ஜுனன்} விரும்பாவிட்டால், அவரைச் சவாலுக்கழைக்கும் நான், தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே போரில் அவரைக் {பீஷ்மரைக்} கொல்வேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, வீரப் பீஷ்மரின் படுகொலையால் வெற்றி உறுதி என நீர் கண்டால், நானே தனித்தேரில் சென்று, அந்தக் குருக்களின் முதிர்ந்த பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போரில் மகேந்திரனுக்கு இணையான என் ஆற்றலைக் காண்பீராக. எப்போதும் வலிமைமிக்க ஆயுதங்களையே ஏவும் அந்த வீரரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து நான் வீழ்த்துவேன். பாண்டுவின் மகன்களுக்கு எவன் எதிரியோ, அவன் என் எதிரியுமாவான் என்பதில் ஐயமில்லை. யாரெல்லாம் உம்முடையவர்களோ {உமது எதிரிகளோ} அவர்கள் எனதுமாவார்கள் {என்னுடைய எதிரிகளுமாவர்}, அதே போல யாரெல்லாம் என்னுடையவர்களோ {எனது எதிரிகளோ} அவர்கள் உம்முடையவர்களுமாவர்கள் {உமது எதிரிகளுமாவார்கள்} [1]. உமது தம்பி (அர்ஜுனன்}, என் நண்பனும், உறவினனும், சீடனுமாவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அர்ஜுனனுக்காக என் சதைகளையே கூட அறுத்துக் கொடுப்பேன். மனிதர்களில் புலியான இவனும் {அர்ஜுனனும்}, எனக்காகத் தன் உயிரையே விடுவான். ஓ! ஐயா {யுதிஷ்டிரரே}, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம் என்பதே நமது புரிந்துணர்வாகும் {ஒப்பந்தம்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எவ்வழியில் {எவ்வகையில்} நான் போரிட வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.
முன்னர், உபப்லாவ்யத்தில், பலரின் முன்னிலையில் பார்த்தன் {அர்ஜுனன்}, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நான் கொல்வேன்” என்று சூளுரைத்தான் {உறுதியேற்றான்}. புத்திசாலி பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளை (நடைமுறையில்) பின்பற்ற வேண்டும். உண்மையில், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வேண்டினால், அந்தச் சூளை {உறுதியை} நான் நிறைவேற்றுவேன் என்பதில் ஐயமில்லை. அல்லது, இது போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} பணியாகவே இருக்கட்டும். இஃது அவனுக்குப் {அர்ஜுனனுக்கு} பாரமானதில்லை. பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மரை அவன் கொல்வான். வேகமாகச் செயல்படும் தேவர்களையும், அவர்களோடு தைத்தியர்களையும், தானவர்களையும் போரில் அர்ஜுனனால் கொல்ல முடியும்.
எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பீஷ்மரைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும்? பெரும் சக்தி கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், நீதிநெறிபிறழ்ந்து, புத்திக் கூர்மை சிதைந்து, சிற்றறிவு படைத்தவராக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறார் என்பதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.
கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுகுலத்தோனே {கிருஷ்ணா}, நீ சொல்வது போலவே இஃது இருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்தாலும் உன் சக்தியை இவற்றால் தாங்க இயலாது. ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நான் எதை விரும்பினாலும், என் தரப்பில் நான் உன்னைக் கொண்டிருக்கிறேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, என் பாதுகாவலனாக உன்னைக் கொண்ட நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே கூட வெற்றி கொள்வேன்.
எனவே, பீஷ்மர் வலிமைமிக்கத் தேர்வீரராக இருந்தாலும், {அவரைக் குறித்து} நான் என்ன சொல்ல முடியும்? ஆனால், ஓ! கிருஷ்ணா, என் மகிமைக்காக {சுய புகழுக்காக}, நான் உன் வார்த்தைகளைப் பொய்யாக்கத் துணிய மாட்டேன். எனவே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, உன்னால் முன்பே உறுதிகூறப்பட்டபடி, எனக்காகப் போரிடாமலே எனக்கு உதவியைத் தருவாயாக.
இந்தப் போரில், பீஷ்மருடன் நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளேன். அவர் {பீஷ்மர்}, “துரியோதனனுக்காக நான் போரிட வேண்டியிருப்பதால், நான் உனக்கு ஆலோசனை வழங்குவேனேயன்றி, உனக்காக ஒருபோதும் போரிட மாட்டேன். இஃதை உண்மையென்றே அறிவாயாக” என்று சொன்னார். எனவே, ஓ! தலைவா {கிருஷ்ணா}, எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குவதால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீஷ்மரால் எனக்கு அரசாட்சியைக் {நாட்டைக்} கொடுக்க முடியும். ஆதலால், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னுடன் சேர்ந்த நாமனைவரும், மீண்டும் தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} அவரது மரணத்திற்கான வழி குறித்துக் கேட்பதற்காகச் செல்வோமாக.
பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நாமனைவரும் தாமதமில்லாமல் பீஷ்மரிடம் ஒன்றாகச் சென்று, அந்தக் குரு குலத்தோனின் {பீஷ்மரின்} அறிவுரையை விரைவாகக் கேட்போம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர் நல்ல ஆலோசனையை நமக்கு உண்மையில் தருவார்; மேலும், ஓ! கிருஷ்ணா, அவர் சொல்வதை நான் போரில் செய்வேன். தவ நோன்புகளைக் கொண்ட அவர் {பீஷ்மர்} நமக்கு ஆலோசனையையும், வெற்றியையும் தருவார்.
நாங்கள் குழந்தைகளாகவும், அநாதைகளாகவும் இருந்தோம். அவராலேயே {பீஷ்மராலேயே} நாங்கள் வளர்க்கப்பட்டோம். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் முதிர்ந்த பாட்டனான; எங்கள் தந்தைக்குத் தந்தையான அவரை {பீஷ்மரை} நான் கொல்ல விரும்புகிறேன். ஓ! க்ஷத்திரியத் தொழிலை நிந்திக்க வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்ன உபாயம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108ஆ-கிருஷ்ணனுடன் சேர்ந்து பீஷ்மரைச் சந்தித்த பாண்டவர்கள்; வெற்றி அடையவும், பீஷ்மரைக் கொல்லவும் பீஷ்மரிடமே வழி கேட்ட யுதிஷ்டிரன்; தன்னை வீழ்த்த பீஷ்மர் சொன்ன வழிமுறை…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! பெரும் ஞானங்கொண்டவரே {யுதிஷ்டிரரே}, உமது வார்த்தைகள் என் சுவைக்கேற்ற வகையில் {நான் விரும்பும் வண்ணம்} இருக்கின்றன. தேவவிரதர் என்றும் அழைக்கப்படும் பீஷ்மர் ஆயுதங்களில் திறம்பெற்றவராவார். அவர் தன் பார்வையிலேயே எதிரியை எரித்துவிடக் கூடியவராவார்.
கடலுக்குச் செல்பவளின் (கங்கையின்) மகனிடமே {பீஷ்மரிடமே}, அவரது மரணத்திற்கான வழிகளைக் கேட்கச் செல்லலாம். குறிப்பாக உம்மால் கேட்கப்பட்டால், அவர் {பீஷ்மர்} நிச்சயம் உண்மையைச் சொல்வார். எனவே, குரு பாட்டனை {பீஷ்மரைக்} கேட்க நாம் செல்வோம். சந்தனுவின் மதிப்புக்குரிய மகனிடம் {பீஷ்மரிடம்} சென்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவரது ஆலோசனைகளைப் பெறும் நாம், அவர் {பீஷ்மர்} நமக்கு அளிக்கும் அறிவுரையின்படியே எதிரியுடன் போரிடுவோம்” என்றான் {கிருஷ்ணன்}.
ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரமகன்களும், வீர வாசுதவேனும் {கிருஷ்ணனும்} இப்படித் தீர்மானித்துக் கொண்டு, அனைவருமாகச் சேர்ந்து, தங்கள் கவசங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைத் துறந்து, பீஷ்மரின் இருப்பிடத்திற்குச் சென்று, அவரது பாசறைக்குள் நுழைந்து, அனைவரும் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி அவரை {பீஷ்மரை} வணங்கினார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதர்களின் குலக்காளையை {பீஷ்மரை} வழிபட்ட பாண்டுவின் மகன்கள், தங்கள் சிரங்களால் அவரை {பீஷ்மரை} வணங்கி, அவரது பாதுகாப்பை நாடினார்கள்.
பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு பாட்டன் பீஷ்மர் அவர்களிடம், “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, உனக்கு நல்வரவு. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா உனக்கும், ஓ! பீமா உனக்கும் நல்வரவு. அசுவினிகளே {நகுல, சகாதேவர்களே} உங்களுக்கும் நல்வரவு. உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அடைவதற்கு மிகக் கடினமானதாக அஃது இருப்பினும், என் முழு ஆன்மாவுடன் அதை நான் செய்வேன்” என்றார் {பீஷ்மர்}.
மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இத்தகு பாசத்துடன் அவர்களிடம் இப்படி மீண்டும் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} அன்பாக இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! அனைத்தையும் அறிந்தவரே, நாங்கள் எவ்வாறு வெற்றியை அடைவோம்? நாங்கள் எவ்வாறு அரசுரிமையை அடைவோம்? இந்த உயிரினங்களின் அழிவை எவ்வாறு நிறுத்த முடியும்? ஓ! தலைவா {பீஷ்மரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும். உமது மரணத்திற்கான வழியையும் எங்களுக்குச் சொல்லும்.
ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உம்மை நாங்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்? ஓ! குருக்களின் பாட்டா {பீஷ்மரே}, உமது எதிரிகள் உம்மைத் தேர்ந்தெடுக்க {குறிவைக்க}, நுண்ணியத் துளையையும் கொடுக்கவில்லை [1]. நீர் போரில் எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடனே காணப்படுகிறீர். நீர் எப்போது உமது கணைகளை எடுக்கிறீர், எப்போது அவற்றைக் குறிபார்க்கிறீர், (அவற்றை ஏவ) எப்போது வில்லை வளைக்கிறீர் என்பதை ஒருவராலும் குறிக்க முடியவில்லை.
ஓ! பகைவீரர்களைக் கொல்பவரே {பீஷ்மரே}, தேர்களையும், குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் (நீர் எப்போதும் அடிப்பது போலவே) தொடர்ந்து அடித்துக் கொண்டு, இரண்டாவது சூரியனைப் போலவே உம்மை உமது தேரில் காண்கிறோம். போரில் கணைமாரியைப் பொழிந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் உம்மை வீழ்த்தத்தக்க மனிதன் அங்கே {போர்க்களத்தில்} எவன் இருக்கிறான்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, அரசாட்சி எங்களுடையதாக்குவது எவையோ, இறுதியாக இத்தகு அழிவை எனது படைக்கு நேராமல் தடுப்பது எவையோ, போரில் உம்மை வீழ்த்தக்கூடியவை எவையோ அந்த வழிகளை எனக்குச் சொல்லும்” {என்றான் யுதிஷ்டிரன்}.
ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகள் கேட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அந்தப் பாண்டு மகனிடம், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் உயிரோடு இருக்கும் வரை, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, போரில் வெற்றி உங்களுடையதாக முடியாது. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், பாண்டு மகன்களே, போராட்டத்தில் நான் வீழ்த்தப்பட்ட பிறகு, போரில் நீங்கள் வெற்றி அடையலாம்.
எனவே, போரில் வெற்றியை நீங்கள் விரும்பினால் தாமதமில்லாமல் என்னை அடிப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களே, நீங்கள் விரும்பியவாறு என்னை அடிக்க நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன். நற்பேற்றுச் சூழல் {அதிர்ஷ்டவசம்} என்று நான் எதைக் கருதுகிறேனோ, அதில் {அந்தச் சூழலில்} இப்படி {வெல்லப்பட முடியாதவன் என்று} என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [2]. நான் கொல்லப்பட்டதும், எஞ்சியவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். எனவே, நான் சொன்னதைப் போலச் செய்வீராக” என்றார் {பீஷ்மர்}.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கதாயுதம் தரித்த அந்தகனைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டுப் போரிடும் உம்மைப் போரில் வீழ்த்தச் செய்பவை எவையோ, அந்த வழிகளை எங்களுக்குச் சொல்லும். வஜ்ரதாரியோ {இந்திரனோ}, வருணனோ, யமனோ வீழ்த்தப்படலாம். எனினும், இந்திரனைத் தலைமையில் கொண்டு, ஒன்று சேர்ந்த தேவாசுரர்களாலேயே போரில் நீர் வீழ்த்தப்பட இயலாதவராவீர்” என்றான் {யுதிஷ்டிரன்}.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது உண்மையே. கையில் ஆயுதங்களுடனும், என் பெரிய வில்லுடனும் போரில் நான் கவனமாகப் போரிட்டால் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவாசுரர்களாலும் நான் வீழ்த்தப்பட முடியாதவனாவேன். எனினும், நான் என் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், இந்தத் தேர்வீரர்களாலும் என்னைக் கொல்ல முடியும்.
தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவர், கீழே விழுந்தவர், கவசம் நழுவியவர், கொடிமரம் விழுந்தவர், தப்பி ஓடுபவர், அச்சமுற்றவர், “நான் உம்மவன்” என்று சொல்பவர், பெண்ணாக இருப்பவர், பெண் பெயரைத் தாங்கியவர், இனிமேலும் தன்னைத் தானே கவனித்துக் {பாதுகாத்துக்} கொள்ளும் திறன் இல்லாதவர், ஒரே மகனைக் கொண்டவர், அருவருப்பான ஒருவர் ஆகிய இவர்களைப் போன்றோருடன் நான் போரிட விரும்புவதில்லை [3].
ஓ! மன்னா, முன்பே நான் கொண்ட தீர்மானத்தையும் கேட்பாயாக. மங்கலமற்ற சகுனத்தைக் கண்டால், நான் போரிடவே மாட்டேன். உன் படையில் இருப்பவனும், சிகண்டி என்ற பெயரில் அறியப்பட்டவனும், போரில் கோபம் நிறைந்தவனும், துணிச்சல் மிக்கவனும், எப்போதும் வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, முன்பு பெண்ணாக இருந்தவன் ஆவான், ஆனால் அதன்பின் ஆண்மையை அடைந்தான் [4]. இவை யாவும் எப்படி நடந்தன என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள்.
போரில் துணிவுள்ளவனான அர்ஜுனன், கவசம் தரித்துக் கொண்டு, சிகண்டியைத் தனக்கு முன்னே நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் என்னைத் தாக்கட்டும். மங்கலமற்ற அந்தச் சகுனம், அதிலும் குறிப்பாக முன்னர்ப் பெண்ணாக இருந்தவனின் வடிவத்தில் {அந்தச் சகுனம்} அங்கிருக்கும்போது, கையில் வில்லையும், கணையையும் கொண்டிருந்தாலும், நான் அவனைத் தாக்க ஒரு போதும் முயல மாட்டேன். ஓ! பாரதர்களின் குலக்காளையே {யுதிஷ்டிரா}, அந்த வாய்ப்பை அடையும், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் அனைத்துப் புறங்களிலும் என்னை விரைவாகத் துளைக்கட்டும்.
உயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தவிர, போரில் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை. எனவே, பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, போரில் கவனமாகப் போராடிபடி, தன் முன்னிலையில் (சிகண்டி அல்லது) வேறு எதையும் நிறுத்திக் கொண்டு, கையில் உள்ள தன் சிறந்த வில்லால் (என் தேரில் இருந்து) என்னைக் கீழே வீசி எறியட்டும். பிறகு, வெற்றி உறுதியாகும். ஓ! பெரும் மன்னா, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் சொல்லும் இதைச் செய்வாயாக. பிறகு, போரில் கூடியிருக்கும் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் உன்னால் கொல்ல இயலும்” என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரை நினைத்து வருந்திய அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 108இ-பீஷ்மரிடம் இருந்து தங்கள் பாசறைக்கு வந்த பாண்டவர்கள்; பீஷ்மரை நினைத்து வேதனையடைந்த அர்ஜுனன்; கிருஷ்ணனிடம் தன் குழந்தைப் பருவத்தைச் சொன்ன அர்ஜுனன்; பீஷ்மரைக் கொல்ல மாட்டேன் என்று சொன்ன அர்ஜுனன்; விதியை மாற்ற முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்; சிகண்டி கொல்வான் என்று சொல்லி படுக்கைக்குச் சென்ற அர்ஜுனன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவை அனைத்தையும் உறுதி செய்து கொண்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, குரு பாட்டனான உயர் ஆன்ம பீஷ்மரை வணங்கிவிட்டுத் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.
அடுத்த உலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்ன பிறகு, வேதனையில் எரிந்து, அவமானம் முகத்தில் பரவிய {அவமானம் நிறைந்த முகத்துடன்} அர்ஜுனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் குலத்தின் முதிர்ந்த உறுப்பினரும் {குருக்களில் முதிர்ந்தவரும்}, ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவரும், வயதில் எனக்கு {மிக} மூத்தவருமான பாட்டனோடு {பீஷ்மரோடு} போரில் நான் எவ்வாறு மோதுவேன்?
குழந்தைப் பருவ நாட்களில் நான் விளையாடிக் கொண்டிருக்கையில், ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, அழுக்கான உடலுடன் இவரது மடியில் ஏறி, உயர் ஆன்மா கொண்ட இந்த ஒப்பற்றவரின் {பீஷ்மரின்} உடலை நான் புழுதியால் பூசுவேன் {அழுக்காக்குவேன்}. ஓ! கதனின் அண்ணனே {கிருஷ்ணா}, அவர் {பீஷ்மர்}, என் தந்தை பாண்டுவின் தந்தையாவார். நான் குழைந்தையாயிருக்கையில், ஒரு முறை இந்த உயர் ஆன்மாவின் {பீஷ்மரின்} மடியில் ஏறி, தந்தை என்று நான் அழைத்தபோது, “ஓ! பாரதா {அர்ஜுனா}, நான் உன் தந்தையல்ல, ஆனால் உன் தந்தைக்கே தந்தையாவேன் {உன் பாட்டனாவேன்}” என்றார். இதுவே என் குழந்தைப் பருவத்தில் அவர் எனக்கு (மறுமொழியாகச்) சொன்னது.
ஓ! இப்படிச் சொன்னவர் எப்படி என்னால் கொல்லப்படலாம்? ஓ! என் படை அழியட்டும். வெற்றியோ, மரணமோ, எதை நான் அடைந்தாலும், அந்த உயர் ஆன்மாவிடம் {பீஷ்மரிடம்} நான் ஒரு போதும் போரிட மாட்டேன். (இதையே நான் நினைக்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்} [1].
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “முன்னர்ப் பீஷ்மரைக் கொல்வதாகச் சூளுரைத்த பிறகு, ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் அவரை {பீஷ்மரை} நீ எப்படிக் கொல்லாமல் இருக்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் வெல்லப்பட முடியாமல் இருக்கும் அந்த க்ஷத்திரியரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து கீழே வீசி எறிவாயாக. கங்கையின் மைந்தரைப் {பீஷ்மரைக்} கொல்லமால் ஒருபோதும் வெற்றி உனதாகாது.
இப்படியே அவர் {பீஷ்மர்} யமனின் வசிப்பிடத்தை அடைவார். இது தேவர்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகும். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே விதிக்கப்பட்டது நடக்க வேண்டும். இது வேறாக முடியாது. ஓ! வெல்லப்பட முடியாதவனே {அர்ஜுனா}, வாயைத் திறந்திருக்கும் காலனைப் போன்ற வெல்லப்பட முடியாத பீஷ்மரிடம் உன்னைத் தவிர யாராலும், ஏன் வஜ்ரபாணியால் {இந்திரனால்} கூடப் போரிட முடியாது. கவலையேதுமற்று பீஷ்மரைக் கொல்வாயாக.
பெரும்புத்திசாலியான பிருஹஸ்பதி, பழங்காலத்தில் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னவையான இந்த எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. “அனைத்துத் தகுதியும் கொண்ட, மதிக்கத்தகுந்த முதிய மனிதனேயானாலும், அவன் எதிரியாக வந்தாலோ, உண்மையில் வேறு எவனும் தன்னை அழிக்க அணுகினாலோ, அவனை ஒருவன் கொல்ல வேண்டும்” {என்பதே அவ்வார்த்தைகள்}.
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, போரிடுவது, குடிகளைக் காப்பது, வேள்விகளை நடத்துவது ஆகிய அனைத்தையும் தீமையில்லாமல் செய்வதே க்ஷத்திரியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நித்திய கடமையாகும்” என்றான் {கிருஷ்ணன்}.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சிகண்டி நிச்சயமாகப் பீஷ்மரின் மரணத்துக்குக் காரணமாவான், ஏனெனில், பாஞ்சால இளவரசனான அவனைக் {சிகண்டியைக்} கண்ட உடனேயே, பீஷ்மர் தாக்குவதை நிறுத்துகிறார். எனவே, அவருக்கு, {பீஷ்மருக்கு} எதிரில் நமக்கு முன்னிலையில் சிகண்டியை நிறுத்தும் வழிமுறையால் நாம் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வீழ்த்துவோம்.
பெரிய வில்லாளிகளான பிறரை நான் எனது கணைகளால் தடுப்பேன். சிகண்டியைப் பொறுத்தவரை, அவன், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீஷ்மருடன் தனியாகப் போரிடுவான்.
சிகண்டி முன்பு பெண்ணாகப் பிறந்து, அதன்பிறகு ஆணாக மாறியவனாதலால், அவனை {சிகண்டியை} அவர் தாக்க மாட்டார் என்று நான் அந்தக் குருக்களின் தலைவரிடம் இருந்தே {பீஷ்மரிடமிருந்தே} கேட்டிருக்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பீஷ்மரின் அனுமதியுடன் இதைத் தீர்மானித்த பாண்டவர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், மாதவனுடன் {கிருஷ்ணனுடன்} சென்றனர். பிறகு அந்த மனிதர்களில் காளையர், தங்கள் தங்கள் படுக்கைக்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.
பீஷ்மரைச் சவாலுக்கழைத்த சிகண்டி! – பீஷ்ம பர்வம் பகுதி – 109-பாண்டவ கௌரவப் படைகளில் அவரவர் நின்ற வரிசைகள்; சிகண்டியை முன்னிறுத்திச் சென்ற பாண்டவப் படை; பீமனால் கொல்லப்பட்ட கௌரவப் படையினர்; தப்பி ஓடிய கௌரவப் படை; இவற்றைப் பொறுத்துக் கொள்ளாத பீஷ்மர்; பாண்டவர்களின் முக்கியத் தேர்வீரர்களைத் தடுத்த பீஷ்மர்; பாண்டவப் படைக்கு அச்சமூட்டிய பீஷ்மர்; பீஷ்மரின் சாதனைகளைக் கண்டு ஆச்சரியமடைந்த கௌரவர்கள்; பீஷ்மரின் மார்பைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தாக்காத பீஷ்மர்; பீஷ்மரிடம் கோபத்துடன் பேசிய சிகண்டி; பீஷ்மருடன் போரிடச் சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிகண்டி போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பீஷ்மரும் பாண்டவர்களை எவ்வாறு எதிர்த்து சென்றார்? ஓ! சஞ்சயா இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தப் பாண்டவர்கள் அனைவரும், சூரிய உதயக் காலத்தின் போது, சிகண்டியைத் தங்கள் முன்னிலையில் நிறுத்தி, பேரிகைகள், மத்தளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை அடித்துக் கொண்டும், சுற்றிலும் பால்வெண்மை கொண்ட சங்குகளை ஊதிக் கொண்டும் போருக்குச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகைவர்கள் அனைவருக்கும் அழிவை உண்டாக்கும் ஒரு வியூகத்தை [1] அமைத்துக் கொண்டு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.
அவனுக்கு {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3]. தங்கள் பெரிய படையை இப்படிப்பட்ட வியூகத்தில் [4] அணிவகுத்த பாண்டவர்கள், தங்கள் உயிர்களையே விடத் துணிந்து உமது படையை எதிர்த்து விரைந்தனர்.
அதே போலக் கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படை முழுமைக்கும் தலைமையில் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மரை நிறுத்திப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர். அந்த வெல்லப்படமுடியாத வீரர் {பீஷ்மர்} உமது வலிமைமிக்க மகன்களால் பாதுகாக்கப்பட்டார். அடுத்து, அவர்களுக்குப் பின்னால் பெரும் வில்லாளியான துரோணரும், அவரது வலிமைமிக்க மகனும் (அஸ்வத்தாமனும்) இருந்தார்கள். அடுத்து, அதற்குப் பின்னால் தன் யானைப்படையால் சூழப்பட்ட பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னால் கிருபரும், கிருதவர்மனும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் காம்போஜர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் சுதக்ஷிணனும், மகதர்களின் மன்னன் ஜயத்சேனனும், சுபலனின் மகனும் {சகுனியும்}, பிருஹத்பலனும் இருந்தனர். அதேபோல, பெரும் வில்லாளிகளான பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பின்புறத்தைப் பாதுகாத்தனர்.
ஒவ்வொரு நாள் வந்தபோதும், சந்தனுவின் மகனான பீஷ்மர், சில நேரங்களில் அசுரர்களின் முறைமையின்படியும், சிலநேரங்களில் பிசாசர்கள் மற்றும் சில நேரங்களில் ராட்சசர்கள் {முறைமையின்} படியும் போரில் வியூகங்களை அணிவகுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் உமது துருப்பினர் மற்றும் அவர்களுடையவர்கள் {அவர்களது துருப்பினர்} ஆகிய இருதரப்புகளுக்கும் இடையில் யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போர் எண்ணிக்கையைப் பெருக்கும்படியான போர் தொடங்கியது. பார்த்தர்கள் {பாண்டவப் படையினர்}, அர்ஜுனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, சிகண்டியை முன்னணியில் நிறுத்தி, பல்வேறு விதங்களிலான கணைகளை இறைத்தபடி அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்துச் சென்றனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் [5] கணைகளால் பீடிக்கப்பட்ட உமது வீரர்கள் (பலர்), பீறிட்ட குருதியில் குளித்து, அடுத்த உலகத்திற்குச் சென்றனர்.
நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் உமது படையை அணுகி, பெரும் வீரத்தால் அதை {உமது படையைப்} பீடிக்கத் தொடங்கினர். போரில் இப்படிக் கொல்லப்பட்ட உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் அந்தப் பெரும்படையைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர். பிறகு, பெரும் தேர்வீரர்களால் பயங்கரமாகப் பீடிக்கப்பட்டு, இப்படி அவர்களால் எங்கும் கொல்லப்பட்டுவந்த உமது படையினர், அனைத்துப் புறங்களிலும் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், {தங்களுக்குப்} பாதுகாவலன் ஒருவனையும் கண்டடையவில்லை” {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட வீர பீஷ்மர், பார்த்தர்களால் எனது படை பீடிக்கப்படுவதைக் கண்டு என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, எதிரிகளைத் தண்டிப்பவரான அந்த வீரர் {பீஷ்மர்}, போரில் எப்படிப் பாண்டவர்களை எதிர்த்து விரைந்து, சோமகர்களை {எப்படிக்} கொன்றார் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பீடிக்கப்பட்ட போது, உமது தந்தை {பீஷ்மர்} என்ன செய்தார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரப் புதல்வர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் (தாங்கள் சந்தித்த அனைவரையும்) கொன்றபடி உமது மகனின் {துரியோதனனின்} படையினருடன் மோதினர்.
ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு நேர்ந்த அந்தப் பேரழிவையும், உமது படையின் எதிரியால் போரில் ஏற்படுத்தப்பட்ட அந்த அழிவைப் பீஷ்மரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, தம் உயிரையே விடத் துணிந்து, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மீது நாராசங்களையும் {நீண்ட கணைகளையும்}, வத்சதந்தங்களையும் {கன்றுக்குட்டியின் பல் போன்ற கணைகளையும்}, அஞ்சலிகங்களையும் {பிறை வடிவக் கணைகளையும்} பொழிந்தார்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, தாக்குதலுக்குரிய, தற்காப்புக்குரிய பிற ஆயுதங்களை சக்தியுடன் பொழிந்து, போரில் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையான ஐவரைத் தன் ஆயுதங்களாலும் கணைகளாலும் தடுத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான அவர் {பீஷ்மர்}, தேர்வீரர்கள் பலரை அவர்களது தேரில் இருந்தும், குதிரைவீரர்களை அவர்களது குதிரைகளில் இருந்தும், காலாட்படை வீரர் கூட்டத்தையும், யானைவீரர்களை அவர்கள் செலுத்திய விலங்குகளின் முதுகில் இருந்தும் கீழே தள்ளி, எதிரிக்கு அச்சமூட்டினார்.
பாண்டவ வீரர்கள் அனைவரும், ஒன்று கூடியிருக்கும் அசுரர்கள் வஜ்ரதாரியை {இந்திரனை} எதிர்த்து விரைவதைப் போல, போரில் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை நோக்கிப் பெரும் சுறுசுறுப்புடன் விரைந்தார்கள். அவர் {பீஷ்மர்}, இந்திரனின் இடிக்கு ஒத்த தீண்டலைக் கொண்ட கூர்தீட்டப்பட்ட தன் கணைகளை அனைத்துப் புறங்களிலும் ஏவியபடி பயங்கரத் தோற்றம் கொண்டவராக எதிரிக்குத் தெரிந்தார். அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்தபோது சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்த அவரது பெரிய வில் எப்போதும் வட்டமாகவே வளைக்கப்பட்டே தெரிந்தது. போரில் அந்தச் சாதனைகளைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆச்சரியத்தால் நிறைந்து பாட்டனை {பீஷ்மரை} வழிபட்டார்கள்.
பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, போரில் போராடிக் கொண்டிருக்கும் உமது வீரத்தந்தையின் {பீஷ்மரின்} மேல், தேவர்கள் (அசுரன்) விப்ரசித்தியைப் (பழங்காலத்தில்) கண்டதைப் போல மகிழ்ச்சியற்ற இதயங்களுடன், தங்கள் கண்களைச் செலுத்தினர். அவர்களால், அகலவிரித்த வாயைக் கொண்ட அந்தகனை ஒத்த அந்த வீரரை {பீஷ்மரைத்} தடுக்க முடியவில்லை. அந்தப் பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மர், , காட்டை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, சிகண்டியின் படைப்பிரிவைத் தன் கூரிய கணைகளால் எரித்தார்.
கடும்நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்பையோ, காலனால் தூண்டப்பட்ட அந்தகனையோ ஒத்த சிகண்டி, மூன்று {3} கணைகளால் அவரது {பீஷ்மரின்} நடு மார்பைத் துளைத்தார். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட பீஷ்மர் (தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பது) சிகண்டி என்பதைக் கண்டார். கோபத்தால் தூண்டப்பட்டாலும், (சிகண்டியோடு போரிட) விரும்பாத பீஷ்மர் சிரித்துக் கொண்டே, “நீ என்னைத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும், நான் உன்னுடன் ஒருபோதும் போரிட மாட்டேன். படைப்பாளனால் {பிரம்மனால்} முதலில் செய்யப்பட்டது போலவே இன்னும் இருக்கும் அந்தச் சிகண்டியே நீ [6]” என்றார் {பீஷ்மர்}.
[6] பாலினம் மாற்றப்பட்டாலும் நீ இன்னும் பெண்ணே என்று சிகண்டியிடம் பீஷ்மர் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவரது {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சிகண்டி, கோபத்தால் உணர்வுகளை இழந்து, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி {நக்கியபடி}, அந்தப் போரில் பீஷ்மரிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, க்ஷத்திரிய இனத்தை அழிப்பவர் நீர் என்பதை நான் அறிவேன் [7]. ஜமதக்னியின் மகனுடனான {பரசுராமருடனான} உமது போரையும் நான் கேட்டிருக்கிறேன். மனிதசக்திக்கு மீறிய உமது ஆற்றலைக் குறித்தும் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். உமது ஆற்றலை அறிந்தும், நான் இன்று உம்மோடு போரிடுவேன்.
[7] வேறொரு பதிப்பில் க்ஷத்திரியர்களுக்குப் பயத்தை உண்டாக்குபவர் நீர் என்பதை நான் அறிவேன் என்று சிகண்டி சொல்வதாக இருக்கிறது.
பாண்டவர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதைச் செய்ய, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, போரில் இன்று நான் உம்மோடு போரிடுவேன். நிச்சயமாக நான் உம்மைக் கொல்வேன். உமது முன்னிலையில் இதை நான் உண்மையின் {சத்தியத்தின்} மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீர் என்னைத் தாக்கினாலும், தாக்கவில்லையென்றாலும், நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது. ஓ! எப்போதும் வெல்வபரே, ஓ! பீஷ்மரே, இவ்வுலகை இறுதிமுறையாகக் காண்பீராக” என்றான் {சிகண்டி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அந்தச் சிகண்டி தன் சொற்கணைகளால் ஏற்கனவே துளைத்தது போக, அந்தப் போரில் ஐந்து {5} நேரான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், சிகண்டியின் வார்த்தைகளைக் கேட்டு, அவனே {சிகண்டியே} பீஷ்மரை அழிப்பவன் எனக் கருதி, “என் கணைகளால் எதிரியை முறியடித்தபடி உன் பின்னால் இருந்து போரிடுவேன். சினம் தூண்டப்பட்ட நீ பயங்கர ஆற்றல் படைத்த பீஷ்மரை எதிர்த்து விரைவாயாக. வலிமைமிக்கப் பீஷ்மரால் போரில் உன்னைப் பீடிக்க இயலாது. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சிகண்டி}, பீஷ்மருடன் மூர்க்கமாகப் போரிடுவாயாக. ஓ! ஐயா {சிகண்டி}, பீஷ்மரைக் கொல்லாமல் நீ இன்று திரும்புவாயானால், என்னுடன் சேர்த்து நீ இவ்வுலகில் ஒரு கேலிப்பொருளாவாய். ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பெரும்போரில் நாம் கேலிக்கு ஆளாகாதவாறு போரிட முயற்சி செய்வாயாக. பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே {சிகண்டியே}, (குரு படையின்) தேர்வீரர்கள் அனைவரையும் தடுத்து நான் இந்தப் போரில் உன்னைக் காப்பேன். நீ பாட்டனை {பீஷ்மரைக்} கொல்வாயாக.
துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சுயோதனன் {துரியோதனன்}, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், துணிச்சல்மிக்கப் பகதத்தன், மகதர்களின் வலிமைமிக்க மன்னன்{ஜெயத்சேனன்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ராட்சசர்களில் துணிச்சல்மிக்கவனான ரிஷ்யசிருங்கனின் மகன் {அலம்புசன்}, திரிகர்த்த ஆட்சியாளன் {சுசர்மன்} மற்றும் (கௌரவப்படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறர் ஆகியோரை, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாக நான் தடுப்பேன். உண்மையில், ஒன்றுகூடி நம்மோடு போர்புரியக்கூடிய குருபடையின் வலிமைமிக்க வீரர்கள் அனைவரையும் நான் தடுத்து நிறுத்துவேன். நீ பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக” என்று சொல்லி அவனை {சிகண்டியைத்} தூண்டினான் {அர்ஜுனன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
அர்ஜுனனுக்கு அஞ்சிய துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 110-பீஷ்மர் புரிந்த கடுமையான போர்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்து வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்டு சிதறி ஓடிய கௌரவப் படை; பீஷ்மரிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனுக்குப் பதில் சொன்ன பீஷ்மர்; போரில் பீஷ்மரைத் தடுத்த பாண்டவப் படையினர்; பீஷ்மரால் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பாஞ்சால இளவரசனான சிகண்டி, கோபத்தால் தூண்டப்பட்டு, நீதிமிக்க ஆன்மாவும், கட்டுப்பாடான நோன்புகளையும் கொண்ட கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} போரில் எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பெரும் செயல்வேகம் தேவைப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில், வெற்றியை விரும்பி ஆயுதங்களை உயர்த்தியவர்களும், பாண்டவப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில், செயல்வேகத்துடன் முயற்சி செய்து, சிகண்டியைப் பாதுகாத்தவர்கள் யாவர்? பெரும் சக்தியைக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மரும், அந்தப் பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? போரில் பீஷ்மருடன் சிகண்டி மோதும் கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (உண்மையில், சிகண்டி பீஷ்மரைத் தாக்கிய போது), பீஷ்மரின் தேரோ, அவரது வில்லோ முறிக்கப்பட்டதா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வில்லுக்கோ, தேருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது அவர் {பீஷ்மர்} நேரான கணைகளால் எதிரையைக் கொன்று கொண்டிருந்தார். உமது படையின் பல்லாயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களும், யானைகளும், நன்கு சேணம் பூட்டப்பட்ட குதிரைகளும் பாட்டனைப் {பீஷ்மரைத்} தங்கள் முன்னிலையில் கொண்டு போரிடச் சென்றன.
ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, எப்போதும் வெல்பவரான பீஷ்மர், தன் நோன்புக்கு ஏற்புடையவகையில், பார்த்தர்களின் துருப்புகளைக் கொல்வதில் இடையறாமல் ஈடுபட்டார். (அவர்களோடு {பாண்டவப் படைவீரர்களோடு}) போரிடுபவரும், தன் கணைகளால் தனது எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பெரும் வில்லாளியைப் {பீஷ்மரைப்} பாஞ்சாலர்களாலும், பாண்டவர்களாலும், தாங்கிக் கொள்ள இயலவில்லை. பத்தாம் நாள் வந்த போது, பீஷ்மர், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தன் கணைகளால் அந்த எதிரிப் படையைப் பிரித்துச் சிதறடித்தார்.
ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, வேல் தரித்த யமனுக்கு ஒப்பான அந்தப் பெரும் வில்லாளி பீஷ்மரைப் போரில் வீழ்த்த பாண்டுவின் மகன்களால் முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாதவனும், இடது கையாலும் வில்வளைக்க இயன்றவனுமான பீபத்சு, அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தியபடி அந்த இடத்திற்கு வந்தான். சிங்கத்தைப் போல உரக்க முழங்கி, வில்லின் நாணைத் தொடர்ச்சியாகப் பின்னிழுத்து, கணைகளின் மாரியைப் பொழிந்தபடி, காலனைப் போலவே அந்தப் போர்க்களத்தில் திரிந்தான். அவனது முழக்கங்களால் அச்சமடைந்த உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிங்கத்தின் ஒலியைக் கேட்ட சிறு விலங்குகளைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் தப்பி ஓடினர்.
இப்படி அந்தப் படையைப் பீடித்து, வெற்றிமகுடம் சூட்டிய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட துரியோதனன், தானும் அச்சத்தின் ஆதிக்கத்துக்குள்ளாகி பீஷ்மரிடம், “ஓ! ஐயா {பீஷ்மரே}, (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண் குதிரைகளையும், தன் தேரோட்டியாகக் கிருஷ்ணனையும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காட்டை எரிக்கும் தீயைப் போல என் துருப்புகள் அனைத்தையும் எரிக்கிறான். ஓ! வீரர்களில் முதன்மையானவரே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரில் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்படுவதையும், {என்} துருப்புகள் அனைத்தும் ஓடுவதையும் பாரும்.
உண்மையில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, காட்டில் மந்தையாளன் {இடையன்} தன் கால்நடைகளை நையப்புடைப்பதைப் போலவே, {அர்ஜுனனால்} என் படையும் நையப்புடைக்கப்படுகிறது. வெல்லப்பட முடியாதவனான பீமனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பிளக்கப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் எனது படையை முறியடிக்கிறான். சாத்யகி, சேகிதானன், மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, வீர அபிமன்யு ஆகியோரும் எனது துருப்புகளை முறியடிக்கின்றனர். துணிச்சல் மிக்கத் திருஷ்டத்யும்னன், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும், இந்தக் கடும் போரில் என் படையை மூர்க்கமாக உடைத்துத் துரத்துகின்றனர்.
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும் இந்தத் துருப்புகளில், ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைத்து நிற்பதிலும், களத்தில் போராடுவதிலும் தேவர்களுக்கு இணையான ஆற்றல் படைத்த உம்மைத் தவிர வேறு புகலிடத்தை நான் காணவில்லை. எனவே, தாமதமில்லாமல் அந்தப் பெரும் தேர்வீரர்களை அடைந்து, பீடிக்கப்படும் இந்தத் துருப்புகளுக்குப் புகலிடமாவீராக” என்றான் {துரியோதனன்}.
அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட உமது தந்தையும், சந்தனுவின் மகனுமான தேவவிரதர் {பீஷ்மர்}, ஒருக்கணம் சிந்தித்து, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, உமது மகனுக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துரியோதனா, நான் சொல்வதை அமைதியாகக் கேட்பாயாக. ஓ! மன்னா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {துரியோதனா}, “உயர் ஆன்மா கொண்ட பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களை ஒவ்வொரு நாளும் கொன்றுவிட்டே போரில் இருந்து திரும்புவேன்” என்று முன்பு நான் உன்னிடம் உறுதியேற்றேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்நோன்பை நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஓ! பெரும்பலம் கொண்டவனே, இன்று நான் இன்னும் பெரிய சாதனை ஒன்றை அடைவேன்.
ஒன்று இன்று நான் கொல்லப்பட்டு உறங்குவேன், அல்லது பாண்டவர்களைக் கொல்வேன். {இந்த இரண்டில் ஒன்று இன்று ஏற்படுவது உறுதி}. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, உன் படையின் தலைமையில் இருந்து எனது உயிரை விடுவதன் மூலம், நீ எனக்கு அளித்த உணவின் நிமித்தமாக நான் உனக்குப் பட்ட கடனிலிருந்து இன்று விடுபடுவேன் [1]” என்றார் {பீஷ்மர்}.
அந்த வெல்லப்பட முடியாத வீரர் {பீஷ்மர்}, இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் தன் கணைகளை இறைத்துக் கொண்டு, பாண்டவப் படையைத் தாக்கினார். பிறகு பாண்டவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டவரும், தன் படைகளுக்கு மத்தியில் இருந்தவருமான கங்கையின் மைந்தரைத் {பீஷ்மரைத்} தடுக்கத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பத்தாம் நாள் போரில் பீஷ்மர், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிப்படுத்தி, நூறாயிரக் கணக்கில் கொன்றார்.
சூரியன் தன் கதிர்களால் (பூமியின்) ஈரப்பதத்தை உறிஞ்சுவதைப் போல, பாஞ்சாலர்களில் முதன்மையான அரசத் தேர்வீரர்களின் சக்திகளை அவர் {பீஷ்மர்} வற்ற செய்தார். மனிதர்களில் சிறந்தவரான அந்தப் பீஷ்மர், பெரும் செயல்வேகத்துடன் பத்தாயிரம் {10000} யானைகளையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், அவற்றைச் செலுத்திய வீரர்களையும், இருநூறாயிரம் {2,00,000-இரண்டு லட்சம்} காலாட்படை வீரர்களையும் கொன்ற பிறகு, புகைச்சுருள் ஏதுமற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தார் [2]. எனினும் பாண்டவர்கள், போரில் அந்தப் பெரும் வில்லாளியால் {பீஷ்மரால்} பீடிக்கப்பட்டாலும், வலிமைமிக்கச் சிருஞ்சயத் தேர்வீரர்கள் துணையுடன் அவரைப் {பீஷ்மரைக்} கொல்வதற்காக மேலும் விரைந்தார்கள்.
தன்னைச் சுற்றிலும் எண்ணற்றோருடன் மேலும் மேலும் போரிட்டுக் கொண்டிருந்த சந்தனுவின் மகன் பீஷ்மர், மேகத்திரள்களால் அனைத்துப் புறங்களிலும் மறைக்கப்பட்ட மேருவின் குன்றைப் போலக் காணப்பட்டார். எனினும், உமது மகன்கள் (பீஷ்மரைப் பாதுகாப்பதற்காக) பெரும்படையுடன் அவரைப் {பீஷ்மரைச்} சூழ்ந்து நின்றனர். பிறகு (குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில்) ஒரு பயங்கப் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனன் துச்சாசனன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 111-சிகண்டியை அறிவுறுத்திய அர்ஜுனன்; ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் பட்டியல்; அர்ஜுனனைத் தடுத்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும் தேரையும் முறித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தவிர்த்துப் பீஷ்மரிடம் ஓடிய துச்சாசனன்; மயக்கம் தெளிந்த துச்சாசனன் மீண்டும் அர்ஜுனனுடன் போரிட்டது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட அர்ஜுனன், சிகண்டியிடம், “பாட்டனை {பீஷ்மரை} நோக்கிச் செல்வாயாக. இன்று நீ பீஷ்மரிடம் சிறு அச்சத்தையும் கொள்ளக்கூடாது. என் கூரிய கணைகளின் மூலம் நானே அவரது சிறந்த தேரில் இருந்து அவரைப் {பீஷ்மரைக்} கீழே வீழ்த்துவேன்” என்றான் {அர்ஜுனன்}.
பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்டு கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.
அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவும் பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்டு பீஷ்மரை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.
முதிர்ந்தவர்களான விராடன், துருபதன் ஆகியோரும் கவசம் பூண்ட குந்திபோஜனும், உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை நோக்கி விரைந்தனர்.
நகுலன், சகாதேவன், வீரமன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரும், வீரர்களில் எஞ்சியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி, பீஷ்மரை நோக்கியே விரைந்தார்கள்.
ஒன்றாகச் சேர்ந்து செல்லும் (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை எதிர்த்த உமது வீரர்களைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி எதிர்த்தார்கள். உம்மிடம் (அவர்களைக் குறித்துச்) சொல்லும் என்னை {என் வார்த்தைகளைக்} கேட்பீராக.
அந்தப் போரில், சித்திரசேனன் [1], இளம்புலியொன்று காளையைத் தாக்குவதைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரிடம் சென்று கொண்டிருந்த சேகிதானனை எதிர்த்து விரைந்தான்.
கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் செயல்வேகத்துடனும், ஆவேசத்துடனும் முயன்று பீஷ்மரை அடைந்திருந்த திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.
சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டுப் பீஷ்மரைக் கொல்ல விரும்பிய பீமசேனனைப் பெரும் செயல்வேகத்துடன் தடுத்தான்.
அதேபோலப் பீஷ்மரின் உயிரைக் (காக்க) விரும்பிய விகர்ணனும், சுற்றிலும் எண்ணற்ற கணைகளை இறைத்த துணிச்சல் மிக்க நகுலனைத் தடுத்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட சரத்வானின் மகனான கிருபரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய சகாதேவனைத் தடுத்தார்.
வலிமைமிக்கத் துர்முகன் [2], பீஷ்மரைக் கொல்ல விரும்பியவனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} நோக்கி விரைந்தான்.உமது மகன் துரியோதனன், போரில் முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான் [3].காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ந்தவர்களும், ஒன்றிணைந்திருப்பவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் தடுத்தான்.
போரில் ஆவேசத்துடன் முயன்று வந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பியவனும், பாண்டவர்களில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்தார்.
வலிமைமிக்க வில்லாளியான துச்சாசனன், அந்தப் போரில் (தன் பிரகாசமான ஆயுதங்களால்) பத்து திக்குகளுக்கும் ஒளியூட்டுபவனும், பீஷ்மரை அடைய விரும்பியவனும், சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டவனும், பெரும் வேகத்துடன் விரைந்து வந்தவனுமான அர்ஜுனனைத் தடுத்தான்.
அந்தப் பெரும்போரில் உமது படையின் பிற வீரர்கள், பீஷ்மருக்கு எதிராகச் செல்லும் பாண்டவர்களின் {பாண்டவப் படையின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்தார்கள்.
சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கத்தேர்வீரனான திருஷ்டத்யும்னன், பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்து, {தன்} துருப்புகளிடம் மீண்டும் மீண்டும் உரத்த குரலில், “அதோ, குரு குலத்தை மகிழ்விப்பவரான அர்ஜுனர், போரில் பீஷ்ரை எதிர்த்துச் செல்கிறார். கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. அஞ்சாதீர். பீஷ்ரால் போரில் உங்களைத் தாக்க இயலாது [4]. போரில் அர்ஜுனரிடம் போராட வாசவனும் {இந்திரனும்} துணியமாட்டான். எனவே, போரில் துணிச்சலைக் கொண்டிருந்தாலும், முதிர்ந்து, பலமற்றவராக இருக்கும் பீஷ்மரைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?” என்றான்.தங்கள் படைத்தலைவனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} தேரை நோக்கி விரைந்தனர். எனினும், உமது படையில் மனிதர்களில் முதன்மையான பலர், உயிரூட்டும் சக்தியின் மூர்க்கமான திரள் போலப் பீஷ்மரை எதிர்த்து விரையும் அவ்வீரர்களை மகிழ்ச்சியாக ஏற்றுத் தடுத்தனர் [5].வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், அச்சங்கள் அனைத்தையும் கைவிட்டு, பீஷ்மரின் உயிரைப் பாதுகாக்க விரும்பி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் தேர் வரை சென்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} மேலும் முன்னேற முடியாத மிக அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டோம். பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே உமது மகன் (துச்சாசனன்}, கோபம் நிறைந்த பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான்.
இருவரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவ்விருவரும் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்தனர். கோபம் தூண்டப்பட்டிருந்த அவ்விருவரும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பினர். பழங்காலத்தின் மயனும் சக்ரனும் {இந்திரனும்} போல, அந்தப் பயங்கரப் போரில் அவ்விருவரும் மோதிக் கொண்டனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன், மூன்று {3} கணைகளால் பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, இருபதால் {20 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான். விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நூறு நாராசங்களால் துச்சாசனனைத் துளைத்தான். இவை {அந்தக் கணைகள்}, பின்னவனின் {துச்சாசனனின்} கவசங்களின் ஊடாக ஊடுருவி அந்தப் போரில் அவனது குருதியைக் குடித்தன.
பிறகு துச்சாசனன், கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மீண்டும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நெடும் கொடுமுடிகளோடு கூடிய மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். பெரும் வில்லாளியான அந்தப் பார்த்தன், வில் தரித்த உமது மகனால் {துச்சாசனனால்} இப்படி ஆழத் துளைக்கப்பட்டு, அந்தப் போரில் மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்ட ராகு, வளர்பிறையின் பதினைந்தாவது {15} நாளில் முழுமையாக இருக்கும் சந்திரனைப் பீடிப்பதைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டுத் துச்சாசனனைப் பீடித்தான். அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, அந்தப் போரில், கங்கப் பறவையின் தன்மைகளைக் கொண்ட {கழுகின் இறகுகளாலான} சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பல கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, மூன்று கணைகளால் துச்சாசனனின் வில்லை அறுத்து, அவனது தேரையும் ஒடித்து, காலனின் கணைகளை ஒத்த கடுங்கணைகள் பலவற்றை அவன் {துச்சாசனன்} மீது ஏவினான் [6]. எனினும், உமது மகன், வீரியத்துடன் முயன்று பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டினான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.பிறகு, உமது மகன் மிகக் கூர்மையான கணைகள் பலவற்றால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான எண்ணற்ற கணைகளைத் தன் வில்லின் நாணில் பெருத்தி, அவற்றைக் குறி பார்த்து, தன் எதிரியின் மீது அவை அனைத்தையும் ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னப்பறைவைகளைப் போல, அவை அந்த உயர் ஆன்ம வீரனின் {துச்சாசனனின்} உடலை ஊடுருவிச் சென்றன. இப்படி உயர் ஆன்ம பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்த்துவிட்டு, பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான்.
உண்மையில், அடியற்ற ஆழமான நீரில் இப்படி மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குத் {துச்சாசனனுக்குப்} பீஷ்மர் ஒரு தீவானார். வீரமும் ஆற்றலும் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு உணர்வு மீண்டு, (அசுரன்) விருத்திரனைத் தடுத்த புரந்தரனைப் {இந்திரனைப்} போல, பார்த்தனை {அர்ஜுனனை} மீண்டும் தடுக்கத் தொடங்கினான். பெரும் வடிவம் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, அர்ஜுனனைத் துளைக்கத் தொடங்கினான், ஆனால் பின்னவனோ {அர்ஜுனனோ} (இவை அனைத்தாலும்) எள்ளளவும் வலியை உணரவில்லை” {என்றான் சஞ்சயன்}.
பகைவீரர்களின் தனிப்பட்ட மோதல்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 112-அலம்புசன் சாத்யகி, சாத்யகி பகதத்தன் ஆகியோருக்கு இடையிலான மோதல்; துரியோதனனின் உத்தரவின் பேரில் சாத்யகியைச் சூழ்ந்த கொண்ட கௌரவர்கள்; சுதக்ஷிணன் அபிமன்யு மோதல்; சிகண்டி பீஷமர் மோதல்; விராடன் மற்றும் துருபதனை எதிர்த்த அஸ்வத்தாமன்; கிருபர் சகாதேவன், விகர்ணன் நகுலன், துர்முகன் கடோத்கசன், கிருதவர்மன் திருஷ்டத்யும்னன், பீமசேனன் பூரிஸ்ரவஸ், துரோணர் யுதிஷ்டிரன், சித்திரசேனன் சேகிதானன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட போர்களின் வர்ணனை
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான ரிஷ்யசிருங்கன் மகன் (அலம்புசன்), அந்தப் போரில் கவசமணிந்து பீஷ்மரை நோக்கி முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அந்த மது குலத்தோன் {சாத்யகி}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் ராட்சசனைத் {அலம்புசனைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட ராட்சசனும் {அலம்புசனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநி வம்சக் காளையான அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} ஒன்பது கணைகளால் பீடித்தான்.
பகைவீரர்களைக் கொல்பவனான மதுகுலத்து சிநியின் பேரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்த ராட்சசன் {அலம்புசன்} மீது அபரிமிதமான கணைகளைப் பொழிந்தான். பிறகு, அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட சாத்யகியைப் பல கூரிய கணைகளால் துளைத்து, பேரொலியை எழுப்பினான். பெரும் சக்தி கொண்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, அந்தப் போரில் ராட்சசனால் ஆழத் துளைக்கப்பட்டாலும், உறுதியாகத் தன் ஆற்றலை நம்பி (தன் காயங்களைக் கண்டு) நகைத்து பெரும் முழக்கங்களைச் செய்தான்.
பிறகு பகதத்தன் சினத்தால் தூண்டப்பட்டு, அங்குசத்தால் பெரும் யானை ஒன்றை பாகன் துளைப்பதைப் போல, பல கூரிய கணைகளால் அந்தப் போரில் மதுகுலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் ராட்சசனை {அலம்புசனைக்} கைவிட்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} மீது நேரான பல கணைகளை ஏவினான். பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடி பெரும் கூர்மை கொண்ட பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றால் சாத்யகியின் பெரிய வில்லை அறுத்தான்.
பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட மற்றொரு வில்லை எடுத்து, கூரிய கணைகள் பலவற்றால் அந்தப் போரில் பகதத்தனைத் துளைத்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பகதத்தன் ஆழத்துளைக்கப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைக்கத் {நக்கத்} தொடங்கினான். பிறகு அவன் {பகதத்தன்}, அந்தப் போரில் தன் எதிரியின் {சாத்யகியின்} மேல், முழுதும் இரும்பாலானதும் தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், யமனின் தண்டத்தைப் போன்று கடுமையானதுமான ஓர் உறுதிமிக்க ஈட்டியை ஏவினான்.
பகதத்தனுடைய கரத்தின் பலத்தால் ஏவப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்த ஈட்டியைத் தன் கணைகளின் மூலம் இரண்டாக அறுத்தான் சாத்யகி. அதன் பேரில், காந்தியை இழந்த பெரும் எரி கோளைப் போல அந்த ஈட்டி திடீரெனக் கீழே விழுந்தது. ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அந்த மது குலத்தோனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டான்.
விருஷ்ணிகளில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவன் {சாத்யகி} இப்படிச் சூழப்பட்டதைக் கண்ட துரியோதனன், கோபத்துடன் தன் தம்பிகள் அனைவரிடமும், “கௌரவர்களே, உங்களிடமிருந்தோ, இந்தப் பெரும் தேர்ப்படைப்பிரிவிடம் இருந்தோ சாத்யகி உயிருடன் தப்பாதபடியான நடவடிக்கைகளை எடுப்பீராக. இவன் {சாத்யகி} கொல்லப்பட்டால், பாண்டவர்களின் பரந்த படையும் கொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றான். துரியோதனனின் வார்த்தைகளை ஏற்று “அப்படியே ஆகட்டும்” என்று பதிலுரைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பீஷ்மரின் பார்வையிலேயே சிநியின் பேரனோடு போரிட்டனர்.
வலிமைமிக்கக் காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்து முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஓ! ஏகாதிபதி, பல நேரான கணைகளால் அம்மன்னனை {சுதக்ஷிணனைத்} துளைத்து, அறுபத்துநான்கு கணைகளால் மீண்டும் அந்த ஏகாதிபதியைத் துளைத்தான். எனினும், பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி சுதக்ஷிணன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் அபிமன்யுவையும், ஒன்பதால் {9 கணைகளால்} அவனது தேரோட்டியையும் துளைத்தான். அவ்விரு வீரர்களும் சந்தித்துக் கொண்டதன் விளைவால் அங்கே உண்டான அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.
பிறகு, எதிரிகளைக் கலங்கடிப்பவனான சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரர்களும் முதிர்ந்தவர்களுமான விராடன், துருபதன் ஆகிய இருவரும் சினத்தால் தூண்டப்பட்டு, கௌரவப் படையைத் தடுத்துக் கொண்டே பீஷ்மருடன் போரிட விரைந்தனர். தேர்வீரர்களில் சிறந்தவனான அஸ்வத்தாமன், சினத்தால் தூண்டப்பட்டு, அவ்விரு வீரர்களுடன் மோதினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பிறகு விராடன், வலிமைமிக்க வில்லாளியும், போர்க்கள ரத்தினமுமான துரோண மகனை {அஸ்வத்தாமனை}, பின்னவன் {அஸ்வத்தாமன்} தங்களை எதிர்த்து முன்னேறியபோது பல்லங்களால் தாக்கினான். மூன்று கணைகளால் துருபதனும் அவனைத் துளைத்தான். பிறகு ஆசானின் நிலமான {வாரிசான} அஸ்வத்தாமன், பீஷ்மரை நோக்கிச் செல்லும் துணிச்சல்மிக்க விராடன் மற்றும் துருபதன் ஆகியோரை இப்படியே தாக்கி, கணைகள் பலவற்றால் அவ்விருவரையும் துளைத்தான். துரோணரின் மகனால் ஏவப்பட்ட கடுங்கணைகள் அனைத்தையும் தடுத்த அந்த முதிர்ந்த வீரர்கள் இருவரின் {துருபதன், விராடனின்} அற்புதமான செய்கையை நாங்கள் கண்டோம்.
காட்டில் மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மற்றொரு யானையைப் போல, சரத்வானின் மகனான கிருபர், பீஷ்மரை நோக்கி முன்னேறிய சகாதேவனை எதிர்த்துச் சென்றார். போரில் துணிச்சல்மிக்கக் கிருபர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகனைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எழுபது கணைகளால் விரைவாகத் தாக்கினார். எனினும், அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, தன் கணைகளின் மூலம் கிருபரின் வில்லை இரண்டாகத் துண்டித்தான்.
கிருபரின் வில்லை அறுத்த சகாதேவன், ஒன்பது கணைகளால் அவரையும் {கிருபரையும்} துளைத்தான். அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்து, பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி, பத்து கணைகளால் மாத்ரியின் மகனை {சகாதேவனை} மகிழ்ச்சியாகத் தாக்கினார். அதே போலப் பதிலுக்குப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பி, சினத்தால் தூண்டப்பட்டு, கோபம் நிறைந்த கிருபருடைய மார்பை (பல கணைகளால்) தாக்கினான். பிறகு அங்கே பயங்கரமான மற்றும் கடுமையான ஒரு போர் நிகழ்ந்தது.
எதிரிகளை எரிப்பவனான விகர்ணன், பாட்டன் பீஷ்மரைக் காக்க விரும்பி, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, அறுபது {60} கணைகளால் நகுலனைத் துளைத்தான். நகுலனும், உமது புத்திசாலி மகனால் ஆழத் துளைக்கப்பட்டு, பதிலுக்கு எழுபத்தேழு {70} கணைகளால் விகர்ணனைத் துளைத்தான். மனிதர்களில் புலிகளும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், பீஷ்மரின் நிமித்தமாக, மாட்டுக் கொட்டிலில் உள்ள காளைகள் இரண்டைப் போல ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் துர்முகன், போரிட முன்னேறுபவனும், தான் வந்த வழியெங்கும் உமது படையினரைக் கொன்றவனுமான கடோத்கசனை எதிர்த்துப் பீஷ்மரின் நிமித்தமாகச் சென்றான். எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, நேரான கணையொன்றால் துர்முகனை மார்பில் தாக்கினான். பிறகு வீரத் துர்முகனும், மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டபடி, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் மகனைத் {கடோத்கசனைத்} துளைத்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, பீஷ்மரைக் கொல்ல விரும்பிப் போரில் முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, முழுதும் இரும்பாலான ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்து, மீண்டும் ஐம்பது {50} கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் விரைவாகத் தாக்கினான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகன் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்}, கங்கப் பறவையின் இறகுகளாலானச் சிறகுகளைக் கொண்ட, கூரிய, சுடர்மிக்க ஒன்பது கணைகளால் கிருதவர்மனைத் தாக்கினான். பெரும் வீரத்துடன் மோதிக் கொண்ட அவ்விருவருக்கும் இடையில் பீஷ்மரின் நிமித்தமாக நேர்ந்த அந்தப் போர் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போலக் கடுமையாக இருந்தது.
வலிமைமிக்கப் பீஷ்மரை நோக்கி முன்னேறிய பீமசேனனை எதிர்த்த பூரிஸ்ரவஸ், “நில், நில்” என்று சொன்னபடி பெரும் வேகத்துடன் சென்றான். அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தப் போரில் தங்கச் சிறகுகள் கொண்டதும், மிகக் கூர்மையானதுமான கணையொன்றால் பீமனை, அவனது நடுமார்பில் தாக்கினான். மார்பில் தாங்கிய அந்தக் கணையுடன் வீர பீமசேனன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ஸ்கந்தனின் வேலால் தாக்கப்பட்ட கிரௌஞ்ச மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.
போரில் சீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும், தங்கள் கொல்லன்களால் பளபளப்பாக்கப்பட்டுப் பிரகாசமாக இருந்தவையும், சூரியனின் ஒளியைக் கொண்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். பீஷ்மரின் மரணத்திற்காக ஏங்கிய பீமன், சோமதத்தனின் வலிமைமிக்க மகனுடன் போரிட்டான், மேலும் பின்னவன் {பூரிஸ்ரவஸ்}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி முன்னவனோடு {பீமனோடு} போரிட்டான். அவ்விருவரும் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்செயலை கவனமாகச் செய்தனர்.
பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பெரும் படையின் துணையுடன் பீஷ்மரை நோக்க வந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தார். ஓ! மன்னா, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்த துரோணரின் தேர் சடசடப்பொலியைக் கேட்ட பிரபத்திரகர்கள் நடுங்கத் தொடங்கினர். பயங்கர முயற்சி செய்த பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} அந்தப் பெரும்படை, போரில் துரோணரால் தடுக்கப்பட்டு ஓர் அடிகூட முன்னேற முடியவில்லை.
உமது மகன் சித்திரசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை அடையப் பயங்கரமாக முயன்றவனும், கோபம்நிறைந்த முகத்தோற்றம் கொண்டவனுமான சேகிதானனைத் தடுத்தான். பெரும் ஆற்றலும், பெரும் கரவேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, பீஷ்மரின் நிமித்தமாக, தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி சேகிதானனுடன் போரிட்டான். சேகிதனானும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திச் சித்திரசேனனுடன் போரிட்டான். அவ்வீரர்களின் சந்திப்பின் விளைவாக நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்தது.
அர்ஜுனனைப் பொறுத்தவரை, அனைத்து வழிகளிலும் அவன் தடுக்கப்பட்டாலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் உமது மகனை {துச்சாசனனைப்} புறமுதுகிட நிர்பந்தித்து, உமது துருப்புகளை நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனினும், தன் சக்தி முழுமையையும் பயன்படுத்திய துச்சாசனன், பீஷ்மரைக் காப்பதற்காகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுக்கத் தொடங்கினான். இத்தகு படுகொலைக்கு ஆளான உமது மகனின் படை, (பாண்டவப் படையின்) தேர்வீரர்களில் முதன்மையான பலரால் அங்கேயும் இங்கேயும் கலங்கடிக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.
“அர்ஜுனன் பாதை தவிர்ப்பாயாக” என்ற துரோணர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 113-துரோணர் கண்ட சகுனங்கள்; அர்ஜுனனின் பாதையில் குறுக்கிட வேண்டாம் என்றும், எனினும் பீஷ்மரைக் காக்க வேண்டும் என்றும் அஸ்வத்தாமனிடம் அறிவுறுத்திய துரோணர்; அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன துரோணர் அஸ்வத்தாமனைப் போரிடத் தூண்டியது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மதங்கொண்ட யானையின் ஆற்றலைக் கொண்டவரும், பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவர்களுள் முதன்மையானவருமான வீரத் துரோணர், மதங்கொண்ட யானையையே தடுக்கவல்ல தனது பெரிய வில்லை எடுத்து, (தன் கைகளால்) அதை அசைத்தபடி {வில்லில் நாணிழுத்தபடி} பாண்டவப் படையணியினருக்கு மத்தியில் ஊடுருவி அவர்களைப் பீடித்துக் கொண்டிருந்தார்.
அனைத்து சகுனங்களையும் அறிந்தவரான வீரமிக்க அந்தப் போர்வீரர் {துரோணர்}, அனைத்துப் புறங்களிலும் சகுனங்களைக் கண்டு, பகையணிகளை எரித்துக் கொண்டிருந்த தன் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் பீஷ்மரைக் கொல்ல விரும்பும் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் தன் முழு வலிமையாலும் முயலப் போகும் அந்த நாள் இதுவே {இந்நாளே}.
என் கணைகள் (அம்பறாத்தூணியில் இருந்து, தாமாகவே) வெளியே வருகின்றன. என் வில் கொட்டாவி விடுவதாகத் தெரிகிறது [1]. எனது ஆயுதம் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை [2], மேலும் என் இதயமும் உற்சாகமற்றிருக்கிறது. விலங்குகளும், பறவைகளும் அச்சம் நிறைந்து இடைவிடாமல் கதறுகின்றன. பாரதத் துருப்புகளின் பாதங்களுக்குக் கீழே கழுகுகள் மறைவதாகத் தெரிகிறது [3]. சூரியனும் தன் நிறத்தை இழந்தவனாகத் தெரிகிறான். திசைகள் அனைத்தும் எரிந்து கொண்டிருக்கின்றன. பூமி அலறுவதாகவும், அஞ்சுவதாகவும் தெரிந்து எங்கும் நடுங்குகிறது. கங்கங்கள் {ஒரு வகைக் கழுகு}, கழுகுகள், நாரைகள் ஆகியன அடிக்கடி அலறுகின்றன. மங்கலமற்ற கடும் ஊளைகளை இடும் நரிகள் பெரும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன. சூரிய வட்டிலின் மத்தியில் இருந்து பெரும் எரி கோள்கள் விழுவதாகத் தெரிகிறது. பரிகம் என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டம் சூரியனைச் சுற்றி உடலற்ற வடிவில் தோன்றுகிறது. சந்திர சூரிய வட்டில்கள், க்ஷத்திரியர்களின் உடல்கள் சிதைவடையப் போவதை முன்னறிவிக்கும் வகையில் பயங்கரத்தை அடைந்திருக்கின்றன [4]. குரு மன்னனின் கோவில்களில் உள்ள அவனது சிலைகள் [5] நடுங்கவும், சிரிக்கவும், நடனமாடவும், அழவும் செய்கின்றன. சிறப்பு வாய்ந்த சந்திரன் தன் கொம்புகள் கீழ் நோக்கியவாறு எழுகிறான் [6]. குரு படையைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரின் உடல்களில் கவசங்கள் இருந்தாலும், அவை ஒளியிழந்து மங்கியிருப்பதாகத் தெரிகிறது,
பாஞ்சஜன்யத்தின் உரத்த சங்கொலியும், காண்டீவத்தின் நாணொலியும் இரு படைகளின் புறங்கள் அனைத்திலும் கேட்கப்படுகின்றன.
அர்ஜுனன் தன் பெரும் ஆயுதங்களைச் சார்ந்து, பிற வீரர்களைத் தவிர்த்துப் பாட்டனை {பீஷ்மரை} நோக்கியே முன்னேறுவான் என்பதில் ஐயமில்லை. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, பீஷ்மருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடக்க இருக்கும் மோதலை நினைத்து, என் உடலின் நுண்துளைகள் சுருங்குகின்றன, என் இதயமும் சோர்வடைகிறது. பார்த்தன் {அர்ஜுனன்}, தன் முன்னே பாவ ஆன்மாவும், வஞ்சகம் அறிந்தவனுமான பாஞ்சால இளவரசனைக் {சிகண்டியைக்} கொண்டு பீஷ்மருடன் போரிடச் செல்கிறான்.
சிகண்டியைத் தான் கொல்லப் போவதில்லை என்று பீஷ்மர் முன்பே சொல்லியிருக்கிறார். ஏதோ சந்தர்ப்பவசத்தின் தொடர்ச்சியாக அவன் {சிகண்டி} ஆணாக ஆனாலும், படைப்பாளனால் முன்பு அவன் பெண்ணாகப் படைக்கப்பட்டவனாவான். அந்த வலிமைமிக்க யக்ஞசேனன் {துருபதன்} மகனேகூட {சிகண்டியேகூட} (தன்னளவிலேயே) மங்கலமற்ற சகுனமே {அவன் அமங்கலஸ்வரூபியாவான்}. கடலுக்குச் செல்பவளின் மகன் {கங்கையின் மகன் பீஷ்மர்}, தன்னளவில் மங்கலமற்ற அவனைத் {சிகண்டியைத்} தாக்க மாட்டார்.
கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், முதிர்ந்தவரான குரு பாட்டனின் {பீஷ்மரின்} மீது பாயப் போகிறான் என்பதை நினைத்தே என் இதயம் அதீத சோர்வை அடைகிறது. யுதிஷ்டிரனின் கோபம், போரில் பீஷ்மர் அர்ஜுனனுக்கிடையிலான மோதல், இது போன்ற (ஆயுதங்களை ஏவும்) என்னுடைய முயற்சி – ஆகிய இவை (மூன்றும்), உயிரினங்களுக்குப் பெரும் தீங்கை விளைவிப்பன {அமங்கலகரமானவை} என்பது நிச்சயம்.
பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பலமிக்கவனாகவும், துணிச்சலைக் கொண்டவனாகவும், ஆயுதங்களை நன்கு அறிந்தவனாகவும், பெரும் செயல்வேகத்துடன் கூடிய வீரத்தைக் கொண்டவனாகவும் இருக்கிறான். வெகுதூரத்தில் இருந்தே தன் கணைகளால் இலக்கைத் தாக்க வல்லவனும், பலமாக அவற்றை ஏவவல்லவனுமான அவன் {அர்ஜுனன்}, அதையும் தவிர, சகுனங்களை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். பெரும் வலிமையும், புத்திக்கூர்மையும், களைப்பில்லா தன்மையும் கொண்ட அந்த வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான். பயங்கர ஆயுதங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் எப்போதும் வெற்றிகரமானவன் ஆவான்.
ஓ! கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.
ஓ! மகனே {அஸ்வத்தாமா}, சார்ந்து வாழ்பவர்கள் {வேலைக்காரர்கள்}, தங்கள் உயிர்களைக் கவனித்துக் {காப்பாற்றிக்} கொள்ள வேண்டிய நேரம் இதுவல்ல. சொர்க்கத்தை முன்னிட்டுக் கொண்டு, புகழுக்காகவும், வெற்றிக்காகவும் போரிடச் செல்வாயாக. அங்கே, குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), தேர்கள், யானைகள், குதிரைகள் எனும் நீர்ச்சுழல்களைக் கொண்டும், கடப்பதற்குக் கடினமானதுமான போரெனும் பயங்கர ஆற்றைத் தன் தேரில் கடக்கிறான்.
தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கப் பீமசேனன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைத் தங்கள் தம்பிகளாகவும், விருஷ்ணி குலத்தின் வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகவும் கொண்ட யுதிஷ்டிரனிடம் மட்டுமே அந்தணர்களுக்கு மரியாதை, தற்புலனடக்கம் {தன்னடக்கம்}, ஈகை, தவம், உன்னத நடத்தை ஆகியன காணப்படுகின்றன. தவத்தின் தழல்களால் தூய்மையான உடலைக் கொண்ட யுதிஷ்டிரனுடைய துன்பத்தில் பிறந்த {யுதிஷ்டிரனின்} கோபம், தீய ஆன்மா கொண்டவனான திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} மேல் திருப்பட்டு, இந்தப் பாரதப் படையை எரித்து வருகிறது.
அதோ, வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, (தான் வரும்போதே) இந்தத் தார்தராஷ்டிரப் படையைத் தடுத்துக் கொண்டே அங்கே வருகிறான். முகடுகளைப் போன்ற அலைகளைக் கொண்ட பரந்த கடலைக் கலங்கடிக்கும் பெரிய திமிங்கலம் ஒன்றைப் போல இந்தப் படையைக் கிரீடி {அர்ஜுனன்} கலக்குவதைப் பார். படைக்கு முன்பாகக் குசுகுசுப்பும், துன்பம் மற்றும் சோர்வின் கூச்சல்களும் கேட்கப்படுகின்றன.
போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னனுடன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.
இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்}[9], விருகோதரனையும் {பீமனையும்} எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ! மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}.
பீமசேனனின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 114-பீமசேனனுடன் போரிட்ட பத்து கௌரவ வீரர்கள்; கிருபரின் வில்லை அறுத்த பீமன்; ஜெயத்ரதனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று, அவனுடைய வில்லையும் அறுத்த பீமன்; பீமனின் தேரோட்டியான விசோகனைத் துளைத்த சல்லியன்; கிருதவர்மனனின் வில்லை அறுத்த பீமன்; பல வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனைக் கண்ட அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்தது; வெற்றியில் நம்பிக்கை இழந்த கௌரவர்கள்; பீமனையும் அர்ஜுனனையும் கொல்ல சுசர்மனை ஏவிய துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதத்தன், கிருபர், சல்லியன், கிருதவர்மன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகிய உமது படையின் பத்து வீரர்களும், இன்னும் பிறரும், பீஷ்மருக்கான போரில் உயர்ந்த புகழை வெல்ல விரும்பி, பல நாடுகளைச் சேர்ந்த பெரும் படைகளுடன் பீமசேனனுடன் போரிட்டனர்.
சல்லியன் ஒன்பது {10} கணைகளால் பீமனைத் தாக்கினான், கிருதவர்மன் மூன்றாலும் {3}, கிருபர் ஒன்பதாலும் {9} அவனைத் தாக்கினர். சித்திரசேனன், விகர்ணன் மற்றும் பகதத்தன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பத்து {10×3} கணைகளால் அவனைத் தாக்கினர். சிந்துக்களின் ஆட்சியாளன் (ஜெயத்ரதன்}, மூன்றால் {3 கணைகளால்} அவனைத் தாக்கினான், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரும் ஐந்து {5×2} கணைகளாலும் அவனைத் தாக்கினர். துரியோதனன் இருபது {20} கூரிய கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தாக்கினான்.
பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மனிதர்களில் முதன்மையானவர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மன்னர்கள் ஒவ்வொருவரையும், ஒருவர் பின் ஒருவராகப் பதிலுக்குத் தாக்கினான். பகை வீரர்களைக் கொல்பவனான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவன் {பீமன்}, சல்லியனை ஏழு {7} கணைகளாலும், கிருதவர்மனை எட்டாலும் {8 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை நடுவில் இரண்டாகப் பிளந்தான். அவன் {பீமன்}, இப்படி அவரது {கிருபரின்} வில்லை வெட்டிய பிறகு, மீண்டும் ஏழு {7} கணைகளால் கிருபரைத் துளைத்தான். விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று {3} கணைகளால் அவன் {பீமன்} தாக்கினான். துர்மர்ஷணனை இருபது {20} கணைகளாலும், சித்திரசேனனை ஐந்தாலும் {5}, விகர்ணனைப் பத்தாலும் {10}, ஜெயத்ரதனை ஐந்தாலும் {5} அவன் {பீமன்} துளைத்தான். மேலும் மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தாக்கிய அவன் {பீமன்}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்கக் கூச்சலிட்டான்.
பிறகு, தேர்வீரர்களில் முதன்மையானவரான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து {10} கூரிய கணைகளால் கோபத்துடன் பீமனைத் துளைத்தார். அங்குசத்தால் துளைக்கப்பட்ட பெரும் யானையைப் போல அந்தப் பத்து கணைகளால் துளைக்கப்பட்ட அந்த வீர பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து அந்தப் போரில் பல கணைகளால் கௌதமரைத் {கிருபரைத்} தாக்கினான்.
யுக முடிவில் தோன்றும் யமனின் காந்தியைக் கொண்ட பீமசேனன், மூன்று {3} கணைகளால் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் காலனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது, ஜெயத்ரதன்), குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, கூர்முனை கணைகள் பலவற்றை அந்தப் போரில் பீமசேனன் மேல் ஏவினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் உயர் ஆன்ம மன்னனின் {ஜெயத்ரதனின்} வில்லை நடுவில் வெட்டினான். தன் வில் அறுபட்டு, தேரிழந்து, தன் குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்ட ஜெயத்ரதன், பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான்.
உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரையும் துளைத்து, {அவர்களை} முன்னேற விடாமல் தடுத்து, படைகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} தேரை இழக்கச் செய்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தப் போரில் மிக அற்புதமான சாதனையை அடைந்தான்.
பீமசேனன் வெளிப்படுத்திய ஆற்றலைப் பொறுக்க முடியாத சல்லியன், அவனிடம் {பீமனிடம்}, “நில், நில்” என்று சொல்லி, கொல்லர்களின் கைகளால் நன்கு பளபளப்பாக்கப்பட்ட கூரிய கணைகள் பலவற்றைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு அந்தப் போரில் பீமனைத் துளைத்தான். கிருபர், கிருதவர்மன், வீர பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சித்திரசேனன், துர்மர்ஷணன், விகர்ணன், சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் அனைவரும் அந்தப் போரில் சல்லியனுக்காகப் பீமனை விரைவாகத் துளைத்தனர்.
பீமன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் துளைத்தான். அவன் {பீமன்}, சல்லியனை எழுபது {70} கணைகளாலும், பிறகு மறுபடியும் பத்தாலும் {10} துளைத்தான். சல்லியன் அவனை {பீமனை} ஒன்பது {9} கணைகளாலும், பிறகு மறுபடியும் ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்தான். மேலும் அவன் {சல்லியன்}, பல்லம் ஒன்றினால், பீமசேனனின் தேரோட்டியுடைய உயிர் நிலைகளில் ஆழமாகத் துளைத்தான். தன் தேரோட்டியான விசோகன் ஆழமாகத் துளைக்கப்பட்டதைக் கண்ட வீரப் பீமசேனன், மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} மார்பிலும் கரங்களிலும் மூன்று {3} கணைகளை ஏவினான்.
பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் அந்தப் போரில் துளைத்த அவன் {பீமன்}, பிறகு சிங்கம் போல உரக்க முழங்கினான். பிறகு, உறுதியுடன் முயன்ற அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரும், போரில் திறம் பெற்ற அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} உயிர் நிலைகளில் மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தனர். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பீமசேனன், ஆழத் துளைக்கப்பட்டாலும், மேகங்கள் பொழியும் மழைத்தாரைகளில் நனைந்த மலையைப் போல (உறுதியாக நின்றானேயன்றி) நடுங்கவில்லை.
பிறகு, பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனாகக் கொண்டாடப்படும் அந்த வீரன் {பீமன்}, கோபத்தால் நிறைந்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மூன்று கணைகளால் துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு {100} கணைகளால் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனைத் {பகதத்தனைத்} துளைத்தான். பெரும் புகழ்பெற்ற அவன் {பீமன்}, பல கணைகளால் கிருபரைத் துளைத்து, பிறகு தன் பெரும் கர வேகத்தை வெளிப்படுத்தி, கூர்முனை கொண்ட க்ஷுரப்ரத்தால், உயர் ஆன்ம கிருதவர்மனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான். பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தக் கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, நாராசம் ஒன்றினால் விருகோதரனின் {பீமனின்} புருவங்களுக்கு இடையில் தாக்கினான்.
எனினும், பீமன், அந்தப் போரில் முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் சல்லியனையும், பகதத்தனை மூன்றாலும் {3}, கிருதவர்மனை எட்டாலும் {8} துளைத்து, கௌதமரைத் {கிருபரைத்} தலைமையாகக் கொண்ட பிறர் ஒவ்வொருவரையும் இரண்டு {2×2 இரண்டு இரண்டு} கணைகளால் துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களும், கூர்முனை கணைகளால் பதிலுக்கு அவனைத் {பீமனைத்} துளைத்தனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் அனைத்து வகையிலான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் துரும்பாகக் கருதிய அவன் {பீமன்}, களத்தில் கவலையேதும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்தான். தேர்வீரர்களின் முதன்மையான அவர்களோ (மறுபுறம்), பெரும் பொறுமையுடன், பீமன் மீது நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கூர்முனை கணைகளை ஏவினர்.
பிறகு, வலிமைமிக்க வீர பகதத்தன், அந்தப் போரில், கடும் வேகம் கொண்டதும், தங்கப்பிடி கொண்டதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை அவன் {பீமன்} மீது வீசினான். வலிய கரங்களைக் கொண்ட சிந்துமன்னன் {ஜெயத்ரதன்} அவன் {பீமன்} மீது ஒரு வேலையும், ஒரு கோடரியையும் எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} மீது சதக்னி ஒன்றைக் கிருபரும், கணை ஒன்றைச் சல்லியனும் ஏவினர். பெரும் வில்லாளிகளான பிறர் ஒவ்வொருவரும், அவன் {பீமன்} மீது, பெரும் சக்தியுள்ள ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளை ஏவினர்.
அந்த வாயு தேவனின் மகன் {பீமன்}, கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் {ஜெயத்ரதனின்} அந்த வேலை இரண்டாக அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஏதோ எள்ளுச்செடியின் தண்டை வெட்டுவது போல மூன்று கணைகளால் அந்தக் கோடரியையும் வெட்டினான். கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட ஐந்து {5} கணைகளால், {கிருபரின்} அந்தச் சதக்னியை துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பீமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணையை வெட்டி, அந்தப் போரில் பகதத்தனால் ஏவப்பட்ட ஈட்டியையும் {சக்தியையும்} பலமாக வெட்டினான். பிற கணைகளைப் பொறுத்தவரை, போரில் தன் சாதனைகளால் பெருமை கொண்டவனான பீமசேனன், நேரான தன் கணைகளால் அவை ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {பீமன்}, அந்தப் பெரும் வில்லாளிகள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கினான்.
அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் (பலரை எதிர்த்துப்) போரிட்டு, எதிரியைத் தாக்கிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைக் கண்டு அவ்விடத்திற்குத் தன் தேரில் வந்தான். பிறகு, உமது படையின் அந்த மனிதர்களில் காளையர், பாண்டுவின் இரண்டு உயர் ஆன்ம மகன்களையும் ஒன்றாகக் கண்டு, வெற்றிக்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்தனர்.
பிறகு பீஷ்மரைக் கொல்ல விரும்பித் தன் முன்னே சிகண்டியை நிறுத்தி வந்த அந்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமனை அணுகி, உமது படையின் கடும் போராளிகளான அந்தப் பத்து {10} பேர் மீதும் பாய்ந்தான். பிறகு அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனுடன் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்கள் அனைவரையும் துளைத்தான்.
பிறகு, மன்னன் துரியோதனன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவரின் அழிவுக்காகச் சுசர்மனிடம், “ஓ! சுசர்மா, பெரும் படையொன்றால் ஆதரிக்கப்பட்டு விரைந்து செல்வாயாக. தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் ஆகிய பாண்டுவின் மகன்கள் இருவரையும் கொல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான். பிரஸ்தாலம் என்றழைக்கப்படும் நாட்டை ஆள்பவனான அந்தத் திரிகர்த்த மன்னன் {சுசர்மன்}, அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, பீமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரண்டு வில்லாளிகளுடன் போரிட விரைந்து, பல்லாயிரம் தேர்களால் அவர்கள் இருவரையும் {பீமன், அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டான். பிறகு அர்ஜுனனுக்கும், எதிரிக்கும் இடையில் கடும் போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.
பீமார்ஜுனர்களின் ஆற்றல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 115-கௌரவப் படையைப் பீடித்த அர்ஜுனன்; அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் கணைகளால் துளைத்த கௌரவர்கள்; பீமார்ஜுனர்களை எதிர்த்த துரோணரும், ஜெயத்சேனனும்; ஜெயத்சேனனின் தேரோட்டியை வீழ்த்திய பீமன்; பீமனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட மோதல்; சுசர்மனின் துருப்புகளை அழித்த அர்ஜுனன்; போர் பீஷ்மரை மையமாகக் கொண்டு இயங்கியது
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனைத் தன் நேரான கணைகளால் மறைத்தான். அவன் {அர்ஜுனன்}, சுசர்மன் மற்றும் கிருபர் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.-அந்தப் போரில், அதிரதனான அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன், சித்திரசேனன், விகர்ணன், கிருதவர்மன், துர்மர்ஷணன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் ஒவ்வொருவரையும் கங்க மற்றும் மயில் இறகுகளால் அமைந்த சிறகைக் கொண்ட மூன்று {மூன்று மூன்று} கணைகளால் தாக்கி உமது படையைப் பீடித்தான்.
சித்திரசேனனின் தேரில் இருந்த ஜெயத்ரதன், (பதிலுக்குப்) பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு, நேரத்தை இழக்காமல், பீமனையும் தன் கணைகளால் துளைத்தான். சல்லியன், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர் ஆகிய இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல்வேறு வகையான கணைகளால் ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} துளைத்தனர். சித்திரசேனனின் தலைமையிலான உமது மகன்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஐந்து கூரிய கணைகளால் விரைவாகத் துளைத்தனர்.
எனினும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும் பாரதக் குலக் காளைகளுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, அந்தப் போரில் திரிகர்த்தர்களின் வலிமைமிக்கப் படையைப் பீடிக்கத் தொடங்கினர். ஒன்பது {9} கணைகளால் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பதிலுக்குத் துளைத்த சுசர்மன், (பாண்டவர்களின்) அந்தப் பெரும்படையை அச்சுறுத்தும் வகையில் பெரும் கூச்சலிட்டான். வீரமிக்கத் தேர்வீரர்கள் பிறர், தங்கச் சிறகுகளைகளையும், கூர் முனைகளையும் கொண்ட நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} துளைத்தனர்.
எனினும், பாரதக் குலக்காளைகளும், பெரும் தேர்வீரர்களுமான அந்தக் குந்தியின் மகன்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, இந்தத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மிக அழகாகத் தெரிந்தனர். பசு மந்தைகளுக்கு மத்தியில் உள்ள மூர்க்கமான சிங்கங்கள் இரண்டைப் போல, அவர்களுக்கு {எதிர்த்த கௌரவ வீரர்களுக்கு} மத்தியில் அவர்கள் {பீமனும், அர்ஜுனனும்}, விளையாடுவதைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் துணிச்சல் மிக்க வீரர்கள் பலரின் விற்கள் மற்றும் கணைகளைப் பல்வேறு வழிகளில் வெட்டிய அந்த வீரர்கள் இருவரும் {பீமனும், அர்ஜுனனும்}, போராளிகளின் தலைகளை நூறு நூறாக வீழ்த்தினார்கள்.
எண்ணற்ற தேர்கள் நொறுக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான குதிரைகளும், பல யானைகளும் அவற்றைச் செலுத்துபவர்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டு, அந்தப் பயங்கரப் போர்க்களத்தில் கீழே கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைப்பாகன்கள் ஆகியோர் உயிரிழந்து துடித்துக்கொண்டே நகர்வது களமெங்கும் காணப்பட்டது. கூட்டமாகக் கொல்லப்பட்ட யானைகள் மற்றும் காலாட்படையினர், உயிரிழந்த குதிரைகள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்கள் ஆகியவற்றால் பூமி மறைக்கப்பட்டிருந்தது.
அனைத்து வீரர்களையும் தடுத்து, பெரும் படுகொலையை நிகழ்த்திய வலிமைமிக்க வீரனான அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அங்கே கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது. {இருப்பினும்}, கிருபர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் போரைக் கைவிடவில்லை. பிறகு, பெரும் வில்லாளியான பீமனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனும், கௌரவர்களின் அந்தக் கடும் படையை அந்தப் போரில் முறியடிக்கத் தொடங்கினர்.
(அந்த {கௌரவப்} படையின்) மன்னர்கள் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேர் மீது மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட லட்சக்கணக்கான எண்ணற்ற கணைகளை ஏவினர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கணை மழையால் அந்தக் கணைகளைத் தடுத்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினான்.
பிறகு, அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல இருந்த பெரும் தேர்வீரனான சல்லியன், கோபத்தால் தூண்டப்பட்டு, நேரான சில பல்லங்களால் அர்ஜுனனின் மார்பைத் தாக்கினான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, ஐந்து {5} கணைகளின் மூலம் சல்லியனின் வில்லையும், தோலுறையையும் அறுத்து, கூர் முனை கொண்ட கணைகள் பலவற்றால் பின்னவனின் {சல்லியனின்} உயிர்நிலைகளை ஆழமாகத் துளைத்தான்.
பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பிறகு, மூன்று கணைகளால் ஜிஷ்ணுவையும் {அர்ஜுனனையும்}, ஐந்தால் {5} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மூர்க்கமாகத் தாக்கினான். மேலும் ஒன்பது கணைகளால் பீமசேனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.
பிறகு, துரியோதனனின் உத்தரவுக்கிணங்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மகதர்களின் ஆட்சியாளன் {ஜெயத்சேனன்} ஆகிய இருவரும், குரு மன்னனின் வலிமைமிக்கப் படையைப் படுகொலை செய்து கொண்டிருந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் பீமசேனன் ஆகியோர் இருக்கும் இடத்தை அடைந்தனர்.
பிறகு, (மகதர்களின் மன்னன்) ஜெயத்சேனன், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பயங்கர ஆயுதங்களைத் தரித்திருக்கும் அந்தப் பீமனை எட்டு கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், பீமன் (பதிலுக்கு) பத்து கணைகளாலும், பிறகு மீண்டும் ஐந்தாலும் அவனைத் {ஜெயத்சேனனைத்} துளைத்தான். பிறகு அவன் {பீமன்}, பல்லம் ஒன்றினால் ஜெயத்சேனனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச்செய்தான். கட்டுப்பாட்டை இழந்த (அவனது {ஜெயத்சேனனது} தேரின்) குதிரைகள் திசைகள் அனைத்திலும் மூர்க்கமாக ஓடி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மகதர்களின் ஆட்சியாளனை {ஜெயத்சேனனை} (போரை விட்டு வெளியே) கொண்டு சென்றன.
அதே வேளையில், ஒரு திறப்பை {வாய்ப்பைக்} கண்ட துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தவளையின் வாய் வடிவத் தலைகளைக் கொண்ட எட்டு {8} கணைகளால் பீமசேனனைத் துளைத்தார். எனினும், போரில் எப்போதும் மகிழ்பவனான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தந்தையைப் போல மதிக்கத்தக்க ஆசானை {துரோணரை} ஐந்து பல்லங்களாலும், பிறகு மேலும் அறுபது {60} கணைகளாலும் துளைத்தான்.
அர்ஜுனன், (முழுவதும்) இரும்பாலான எண்ணற்ற கணைகளால் சுசர்மனைத் துளைத்து, வலிமைமிக்க மேகத் திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அவனது {சுசர்மனின்} துருப்புகளை அழித்தான்.
பிறகு, பீஷ்மர், {கௌரவ} மன்னன் (அதாவது துரியோதனன்), கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் ஆகியோர் சினத்தால் தூண்டப்பட்டு, பீமசேனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக, பாண்டவப் படையின் வீரமிக்கப் போர்வீரர்களும், பிருஷதன் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், வாயை அகலத்திறந்து காலனைப் போல முன்னேறி வரும் பீஷ்மரை எதிர்த்து விரைந்தான்.
சிகண்டியும், பாரதர்களின் பாட்டனைப் {பீஷ்மரைக்} கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர் {பீஷ்மர்} மீது கொண்ட அச்சத்தைக் கைவிட்டு, அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். பிறகு, யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்ட பார்த்தர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன்னணியில் கொண்டும், சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} சேர்ந்தும், போரில் பீஷ்மருடன் போரிட்டனர். அதே போல உமது படையின் வீரர்கள் அனைவரும், ஒழுங்கான நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, போரில் சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்கள் {பாண்டவர்கள்} அனைவருடன் போரிட்டனர்.
பிறகு, பீஷ்மரின் வெற்றிக்காக கௌரவர்களுக்கும், அல்லது பீஷ்மரை வெல்வதற்காகக் பாண்டுவின் மகன்களுக்கும் {பாண்டவர்களுக்கு} இடையில் தொடங்கிய அந்தப் போர் மிகப் பயங்கரமானதாக இருந்தது. உண்மையில், வெற்றிக்காக, அல்லது தோல்விக்காக விளையாடப்பட்ட அந்தப் போர் விளையாட்டில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படையின் வெற்றிக்கு யாரை நம்பியிருந்தனரோ, அந்தப் பீஷ்மர் பந்தயப் பொருளானார்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்துக்கும் ஆணையிட்ட திருஷ்டத்யும்னன், “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. தேர்வீரர்களில் சிறந்தவர்களே, அஞ்சாதீர்” என்றான். தங்கள் படைத்தலைவனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களின் படை, அந்தப் பயங்கரப் போரில் தங்கள் உயிரையும் விடத் தயாராகப் பீஷ்மரை எதிர்த்து விரைந்து முன்னேறினர்.
தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீஷ்மர், கொந்தளிக்கும் கடலை ஏற்கும் நிலத்தை {கரையைப்} போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அந்தப் பெரும்படையை ஏற்றார் {வரவேற்றார்}” {என்றான் சஞ்சயன்}.
யுதிஷ்டிரனை அறிவுறுத்திய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 116-திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமையும் சக்தியும் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? குருக்களும் போரில் பாண்டவர்களை எவ்வாறு தடுத்தனர்? போரையே ஆபரணமாகக் கொண்ட பீஷ்மர், அந்தப் பெரும்போரில் போரிட்டதை எனக்கு விவரமாகச் சொல்வயாக” என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் எவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டனர் என்றும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்றும் இப்போது நான் உமக்கு விவரிப்பேன்.
நாளுக்கு நாள், கோபத்தில் தூண்டப்பட்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், கிரீடம் தரித்தவனின் (அர்ஜுனனின்) பெரும் ஆயுதங்களால் அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். எப்போதும் வெல்லும் குரு வீரரான பீஷ்மரும், தன் நோன்புக்கு ஏற்புடைய வகையில், பார்த்தப் படைக்கு {பாண்டவபடைக்கு} மத்தியில் பெரும் அழிவையே எப்போதும் ஏற்படுத்தினார்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, குருக்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் பீஷ்மரையும், பாஞ்சாலர்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் அர்ஜுனனையும் கண்ட எங்களால், வெற்றி எத்தரப்பில் தன்னை அறிவித்துக் கொள்ளும் என்று உண்மையிலேயே சொல்ல முடியவில்லை.
பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மரும் அர்ஜுனனும் ஒருவரோடொருவர் மோதியபோது, பயங்கரப் பேரழிவு அங்கே நிகழ்ந்தது. அந்நாளில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், ஆயிரமாயிரம் வீரர்களைத் தொடர்ச்சியாகக் கொன்றார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெயர்கள் மற்றும் குடும்பங்கள் {கோத்திரங்களும்} அறியப்படாதவர்களும், போரில் பின்வாங்காதவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களுமான பலர் அந்நாளில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.
பத்து நாட்கள் பாண்டவப் படையை எரித்தவரான அற ஆன்மா கொண்ட {தர்மாத்மா} பீஷ்மர், தன் உயிரைக் காத்துக் கொள்ளும் விருப்பம் அனைத்தையும் கைவிட்டார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருந்து கொண்டு, தாம் கொல்லப்படுவதை விரும்பி, “பெரும் எண்ணிக்கையிலான வீரர்களில் முதன்மையானோரை இனியும் நான் கொல்லேன்” என்று நினைத்தார்.
அவர் {பீஷ்மர்}, தன் அருகில் இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே {பேரறிவாளனே}, ஓ! கல்வியின் அனைத்து கிளைகளையும் அறிந்தவனே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, நீதிமிக்கதும், சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதுமான நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! பாரதா, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, இந்த என் உடலை இனிமேலும் பாதுகாக்க நான் விரும்பவில்லை. பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் கொன்றே நெடுங்காலத்தை நான் கடந்திருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீ விரும்புவாயெனில், பாஞ்சாலர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கூடிய பார்த்தனை {அர்ஜுனனை} உனக்கு முன்னில்லையில் நிறுத்தி, என்னைக் கொல்ல முயல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.
மெய்ப்பார்வை கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், இஃதையே அவரது நோக்கம் என உறுதி செய்து கொண்டு, (தன் உதவிக்கு) சிருஞ்சயர்களைக் கொண்டு போரிடச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும், பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் வியூகத்தை {வியூகத்தில் இருந்த படைவீரர்களைத்} தூண்டினார்கள்.
யுதிஷ்டிரன், “முன்னேறுவீராக! போரிடுவீராக! போரில் பீஷ்மரை வீழ்த்துவீராக! எதிரிகளை வெல்பவனும், கலங்கடிக்க முடியாத நோக்கம் கொண்டவனுமான ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்} நீவிர் அனைவரும் பாதுகாக்கப்படுவீர். பெரும் வில்லாளியும், (நமது படைகளின்) தலைவனுமான இந்தப் பிருஷதன் மகனும் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனும்}, பீமனும் உங்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்கள். சிருஞ்சயர்களே, போரில் இன்று பீஷ்மரிடம் எந்த அச்சமும் கொள்ளாதீர். சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை இன்று நாம் வீழ்த்துவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.
பத்தாம் {10} நாள் போரில் இத்தகு விரதம் பூண்ட பாண்டவர்கள், (வெல்வது அல்லது) சொர்க்கத்திற்குச் செல்வது எனத் தீர்மானித்து, சினத்தால் குருடாகி, சிகண்டியையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தங்கள் முன்னிலையில் கொண்டு முன்னேறினர். மேலும், பீஷ்மரை வீழ்த்த மிகக் கடுமையான முயற்சிகளை அவர்கள் செய்தனர்.
பிறகு, பெரும் வலிமையைக் கொண்ட பல்வேறு மன்னர்கள், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் ஒரு பெரும்படையின் துணையோடும், தன் தம்பிகள் அனைவருக்கும் தலைமையில் இருந்த வலிமைமிக்கத் துச்சாசனனோடும், அந்தப் போரின் மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி {அவரைக் காப்பதற்காக} முன்னேறினர். பிறகு, உமது படையின் துணிச்சல்மிக்க வீரர்களான அவர்கள், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்களோடு {பாண்டவர்களோடுப்} போரிட்டனர்.
சேதிகள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிகண்டியை முன்னிறுத்திக் கொண்டு சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிச் சென்றான்.
சிநியின் பேரன் {சாத்யகி} துரோணரின் மகனோடு {அஸ்வத்தாமனோடு} போரிட்டான், திருஷ்டகேது பூருவின் வழித்தோன்றலுடனும் {பௌரவனுடனும்}, {சோமக [பாஞ்சால] இளவரசன்} யுதாமன்யு [1] தொண்டர்களுக்குத் தலைமையில் இருந்த உமது மகன் துரியோதனனுடனும் போரிட்டனர். விராடன், தன் படைகளுக்குத் தலைமையில் நின்று, ஜெயத்ரதனோடும், அவனை ஆதரித்த அவனது துருப்புகளோடும் போரிட்டான். வர்த்தக்ஷத்தரினின் வாரிசோ [2], ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சிறந்த வில் மற்றும் கணைகளோடு கூடிய உமது மகன் சித்திரசேனனுடன் மோதினான்
யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்றவனுமான சல்லியனை எதிர்த்து விரைந்தான். பீமசேனன், நன்கு பாதுகாத்துக் கொண்டு, (கௌரவப் படையின்) யானைப்படைப் பிரிவை எதிர்த்துச் சென்றான். தன் தம்பிகள் துணையுடன் கூடிய பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், சீற்றத்தால் தூண்டப்பட்டு, ஆயுதங்கள் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவரும், வெல்லப்பட முடியாதவரும், தடுக்கப்பட முடியாதவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.
சிங்கக் கொடியினை தன் கொடிமரத்தில் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான {கோசலர்களின்} இளவரசன் பிருஹத்பலன், கர்ணீகர {கோங்கு மரம்} மலர்க்கொடியைத் தாங்கிய கொடிமரத்துடன் கூடிய சுபத்ரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தான் [3]. மன்னர்கள் பலரின் துணையோடு கூடிய உமது மகன்கள், சிகண்டி மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்ல விரும்பி அவர்களை எதிர்த்து விரைந்தனர்.
பயங்கர ஆற்றலைக் கொண்ட இரு படைகளின் போராளிகளும் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்த போது (அவர்களது நடையால்) பூமி நடுங்கியது. போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரைக்} கொண்ட உமது படையும், எதிரியின் படையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடு ஒருவர் கலந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தில் எரிந்து, ஒருவரை ஒருவர் எதிர்த்து விரையும் அந்தப் போராளிகளால் எழுந்த மிகப் பெரிய ஆரவாரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டது. சங்கொலிகளாலும், படைவீரர்களின் சிங்க முழக்கங்களாலும் எழுந்த பேரிரைச்சல் பயங்கரமாக இருந்தது. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ இணையான காந்தியைக் கொண்ட வீரமன்னர்கள் அனைவரின் தோள்வளைகளும், கிரீடங்களும் மங்கிப் போயிற்று.
இரு படைகளைச் சேர்ந்தவர்களின் விற்களின் நாணொலிகளும், கணைகளின் “விஸ்” ஒலிகளும், சங்கொலிகளும், பேரிகைகளின் ஒலிகளும், தேர்களின் சடசடப்பொலியும் மேகங்களின் கடும் முழக்கங்களுக்கு இணையாக இருந்தன. இரு படைகளைச் சேர்ந்தவர்களின் பராசங்கள், ஈட்டிகள், ரிஷ்டிகள் மற்றும் கணைகளின் மழையால் போர்க்களத்திற்கு மேலே இருந்த ஆகாயம் இருளடைந்தது {ஒளியற்றதாகியது}. அந்தப் பயங்கரப் போரில் தேர்வீரர்களும், குதிரை வீரர்களும், குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். யானைகள், யானைகளைக் கொன்றன, காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களைக் கொன்றனர்.
பீஷ்மரின் நிமித்தமாகக் குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அப்போர், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஒரு சதைத்துண்டுக்காக மோதும் இரு பருந்துகளைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட போராளிகளுக்குள் நடைபெற்ற அந்த மோதல் மிகப் பயங்கரமானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}
பயங்கரப் போரும், பேரழிவும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 117-திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மரின் நிமித்தமாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அபிமன்யு, பெரும்படையால் ஆதரிக்கப்பட்ட உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஒன்பது {9} நேரான கணைகளால் அபிமன்யுவின் மார்பிலும், பிறகு மூன்று {3} கணைகளாலும் தாக்கினான்.
பிறகு அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மரணக்கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பான ஒரு பயங்கர ஈட்டியை துரியோதனனின் தேர் மீது ஏவினான். எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடன் தன்னை நோக்கி வரும் பயங்கர சக்தி கொண்ட அந்த ஈட்டியைப் பெரும் கூர்மையுள்ள பல்லம் ஒன்றினால் இரண்டாக வெட்டினான். தன் ஈட்டி பூமியில் விழுந்ததைக் கண்ட அர்ஜுனனின் கோபக்கார மகன் {அபிமன்யு}, மூன்று கணைகளால் துரியோதனனின் கைகளையும், மார்பையும் துளைத்தான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பாரதக் குலத்தின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, பத்து கடுங்கணைகளால் மீண்டும் ஒருமுறை, குரு மன்னனின் {துரியோதனின்} நடு மார்பைத் துளைத்தான்.
சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மற்றும் அந்தக் குரு குலக் காளை {துரியோதனன்} ஆகிய இரு வீரர்களுக்கு இடையில் நடந்ததும், முன்னவன் {அபிமன்யு} பீஷ்மரின் மரணத்திற்காகவும், பின்னவன் {துரியோதனன்} அர்ஜுனனின் தோல்விக்காகவும் போரிட்டதுமான அந்தப் போர், காண்பதற்குக் கடுமையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், புலன்களுக்கு நிறைவைத்தருவதாகவும், மன்னர்கள் அனைவராலும் மெச்சப்படுவதாகவும் இருந்தது.
அந்தணர்களில் காளையும், எதிரிகளைத் தண்டிப்பவனும், அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு கடுங்கணையால் {நாராசத்தால்} சாத்யகியின் மார்பைப் பலமாகத் தாக்கினான். அளவிலா ஆன்மா கொண்டவனும், சிநியின் பேரனுமான அந்த வீரன் {சாத்யகி}, கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட ஒன்பது {9} கணைகளால் ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினான். பிறகு, அந்தப் போரில் அஸ்வத்தாமன், ஒன்பது {9} கணைகளால் சாத்யகியை (பதிலுக்குத்) தாக்கி, மீண்டும் விரைவாக முப்பதால் {30} அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான். அப்போது, பெரும் புகழைக் கொண்டவனும், சாத்வத குலத்தோனுமான அந்தப் பெரும் வில்லாளி {சாத்யகி}, துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கப்பட்டு, (பதிலுக்கு) பின்னவனை {அஸ்வத்தாமனைக்} கணைகளால் துளைத்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன், அந்தப் போரில் {சேதி மன்னன்} திருஷ்டகேதுவைத் தன் கணைகளால் மறைத்து, அந்தப் பெரும் வில்லாளியைக் {திருஷ்டகேதுவைக்} கடுமையாகச் சிதைத்தான். பெரும் பலம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டகேது, முன்னவனை {பௌரவனை} முப்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான் பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன் திருஷ்டகேதுவின் வில்லை அறுத்து, உரக்கக் கூச்சலிட்டபடி, கூர் தீட்டப்பட்ட கணைகளால் அவனைத் {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். மற்றொரு வில்லை எடுத்த திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையுள்ள எழுபத்துமூன்று {73} கணைகளால் அந்தப் பௌரவனைத் துளைத்தான்.
பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் தோற்றம் கொண்டவர்களுமான அவ்விருவரும், கணைமாரியால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டுவதிலும், ஒருவரின் குதிரைகளை மற்றவர் கொல்வதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் வென்றனர். மேலும் அவர்கள் இருவரும் இப்படித் தங்கள் தேர்களையும் இழந்து, வாள்களால் போரிட்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். காளைத் தோலாலானவையும், நூறு நிலவுகளாலும், நூறு நட்சத்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையான அழகிய கேடயங்களை அவ்விருவரும் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் பிரகாசம் கொண்ட பளபளக்கும் வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.
இப்படித் தங்களை {ஆயுதங்களால்} தரித்துக் கொண்ட அவர்கள், ஆழ்ந்த கானகத்தில், பருவகாலமடைந்த ஒரு பெண் சிங்கத்தின் துணையை நாடும் இரண்டு சிங்கங்களைப் போல ஒருவரை நோக்கி மற்றவர் விரைந்தனர். அழகான வளையங்களில் {களத்தில் வட்டமாகச்} சுழன்ற அவர்கள், முன்னேறியும், பின்வாங்கியும் தங்கள் பிற நகர்வுகளை வெளிக்காட்டியபடியும் ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட பௌரவன், திருஷ்டகேதுவிடம், “நில், நில்” என்று சொல்லி, தன் பெரிய வாளால் அவனது நெற்றி எலும்பில் தாக்கினான்.
சேதிகளின் மன்னனும் {திருஷ்டகேதுவும்} அந்தப் போரில், கூர்முனை கொண்ட தன் பெரும் வாளால், மனிதர்களில் காளையான அந்தப் பௌரவனை அவனது தோள்ப்பூட்டில் தாக்கினான். இப்படி அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் கீழே விழுந்தனர். உமது மகன் ஜெயத்சேனன், தன் தேரில் பௌரவனைத் தூக்கிக் கொண்டு, அவ்வாகனத்தின் மூலமே அவனைப் {பௌரவனைப்} போர்க்களத்தில் இருந்து விலக்கினான். திருஷ்டகேதுவைப் பொறுத்தவரை, வீரமிக்கவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், மாத்ரியின் மகனுமான வீர சகாதேவன் களத்தில் இருந்து அவனைத் {திருஷ்டகேதுவைத்} தூக்கிச் சென்றான்.
சித்திரசேனன், முழுவதும் இரும்பாலான பல கணைகளால் சுசர்மனைத் [1] துளைத்து, மேலும் அறுபது {60} கணைகளாலும், பிறகு மேலும் ஒன்பதாலும் {9 கணைகளாலும்} அவனை {சுசர்மனைத்} துளைத்தான். எனினும், போரில் கோபத்தால் தூண்டப்பட்ட சுசர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூற்றுக்கணக்கான கணைகளால் உமது மகனை {சித்திரசேனனைத்} துளைத்தான். சித்திரசேனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிரியை நேரான முப்பது கணைகளால் துளைத்தான். எனினும், சுசர்மனும் பதிலுக்குச் சித்திரசேனனைத் துளைத்தான்.
பீஷ்மரின் அழிவுக்கான அந்தப் போரில், புகழையும் மதிப்பையும் மேம்படுத்துபவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன், (தன் தந்தையான) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உதவும் வகையில் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, இளவரசன் பிருஹத்பலனோடு போரிட்டு, பிறகு பீஷ்மரின் எதிரே சென்றான். கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, இரும்பாலான ஐந்து கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்து, மேலும் இருபது {20} நேரான கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான். பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முழுவதும் இரும்பாலான எட்டு கணைகளால் கோசலர்களின் ஆட்சியாளனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். எனினும், அவன் {அபிமன்யு}, கோசலர்களின் ஆட்சியாளனை நடுங்கச் செய்வதில் வெல்லவில்லை, எனவே, அவன் {அபிமன்யு} மீண்டும் கணைகள் பலவற்றால் அவனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். மேலும் அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிருஹத்பலனின் வில்லை அறுத்து, கங்கப் பறவையின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளைக் கொண்டு அவனை {பிருஹத்பலனை} மீண்டும் தாக்கினான். பிறகு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன், கோபத்துடன் அந்தப் போரில் பல்குனன் மகனை {அபிமன்யு} பல கணைகளால் துளைத்தான். ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டவர்களும், போரின் வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அவர்கள் இருவருக்குள்ளும் பீஷ்மரின் நிமித்தமாக நடைபெற்ற அப்போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது, பலிக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போலவே இருந்தது.
யானை படைப்பிரிவுக்கு எதிராகப் போரிட்ட பீமசேனன், பெரிய மலைகளைத் தன் வஜ்ரத்தால் பிளந்த சக்ரனைப் {இந்திரனைப்} போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், மலைகளைப் போலப் பெரிதானவையாக இருந்த யானைகள், அந்தப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, தங்கள் பிளிறல்களால் பூமியையே நிறைத்த படி பெரும் எண்ணிக்கையில் கீழே களத்தில் விழுந்தன. மலை போன்ற அளவுகளைக் கொண்டவையும், கனமான பெரும் உலோகக் குவியல் போன்றவையும், மத்தகம் பிளக்கப்பட்டுப் பூமியில் கிடந்தவையுமான அந்த யானைகள் பூமியின் பரப்பில் சிதறிக் கிடக்கும் மலைகளைப் போலத் தெரிந்தன.
ஒரு பெரும் படையால் பாதுகாக்கப்பட்ட வலிமைமிக்க வில்லாளியான யுதிஷ்டிரன், அந்தப் பயங்கரப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதியபடி அவனைப் பீடித்தான். பீஷ்மரின் நிமித்தமாகப் பதிலுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் பீடித்தான்.
சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, கூர்முனை கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விராடனைத் துளைத்து, மேலும் முப்பதால் {30 கணைகளால்} அவனை மீண்டும் தாக்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் படைப்பிரிவின் தலைவனான விராடன், கூர் முனை கொண்ட முப்பது {30} கணைகளால் ஜெயத்ரதனின் நடுமார்பைத் தாக்கினான். அழகிய விற்களையும், அழகிய வாள்களையும் தரித்துக் கொண்டு, அழகிய கவசங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய வடிங்களைக் கொண்டவர்களான மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகிய இருவரும் அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர்.
துரோணர், பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனுடன் பயங்கர போரில் மோதி, தன் நேரான கணைகளால் கடுமையாகப் போரிட்டார். பிறகு துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் {துருபதன்} மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} பெரிய வில்லை அறுத்து, ஐம்பது {50} கணைகளால் அவனை ஆழமாகத் துளைத்தார். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன்னுடன் மோதிய துரோணரின் மேல் பல கணைகளை ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணைகள் அனைத்தையும் தன் கணைகளால் தாக்கி அவற்றை வெட்டினார். பிறகு துரோணர், கடும் கணைகள் ஐந்தை {5} துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} மேல் ஏவினார்.
பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மரணக் கோலுக்கு {யம தண்டத்துக்கு} ஒப்பான ஒரு கதாயுதத்தை அந்தப் போரில் துரோணரின் மேல் ஏவினான். எனினும், துரோணர், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை ஐம்பது {50} கணைகளால் தடுத்தார். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், கீழே பூமியில் விழுந்தது. பிறகு, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு, முழுவதும் இரும்பாலான சிறந்த ஈட்டி ஒன்றைத் துரோணரின் மேல் ஏவினான். எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் அந்த ஈட்டியை வெட்டி, பெரும் வில்லாளியான பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பீடித்தார். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் நிமித்தமாகத் துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் அந்தக் கடுமையான மற்றும் பயங்கரமான போர் நடைபெற்றது.
அர்ஜுனன், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அடைந்து, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவரைப் பீடித்து, காட்டில் மற்றொரு யானையை நோக்கிச் செல்லும் மதங்கொண்ட ஒரு யானையைப் போல அவரை நோக்கி விரைந்தான். எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட மன்னன் பகதத்தன், அந்தப் போரில் கணைமாரியால் அர்ஜுனனின் வழியைத் தடுத்து, அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். பிறகு அர்ஜுனன், அந்தப் பயங்கரப் போரில், இரும்பாலானவையும், வெள்ளியைப் போலப் பிரகாசமாக இருந்தவையும், கூர்முனை கொண்டவையுமான பளபளக்கும் கணைகள் பலவற்றால் தன்னை நோக்கி யானையில் வந்து கொண்டிருந்த பகதத்தனைத் துளைத்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் குந்தியின் மகன் {அர்ஜுனன்- சிகண்டியிடம்}, “செல், பீஷ்மரை நோக்கிச் சென்று அவரைக் கொல்வாயாக” என்று சிகண்டியைத் தூண்டினான். பிறகு, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கைவிட்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் தேரை எதிர்த்துச் சென்றான்.
பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டியை முன்னணியில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைவாகச் சென்றான். பிறகு, உமது படையின் துணிவுமிக்கப் போராளிகள் அனைவரும், உரக்கக் கூச்சலிட்டபடியே பெரும் வீரியத்துடன் அர்ஜுனனை எதிர்த்து விரைந்ததால், அங்கே கடும் போர் ஒன்று நடைபெற்றது. இவை அனைத்தும் மிக அற்புதமாகக் காணப்பட்டது. கோடை காலத்தில் ஆகாயத்தின் மேகத் திரளைகளை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் பல்வேறு படைப்பிரிவுகளை அர்ஜுனன் விலகச் செய்தான். எனினும் சிகண்டி, கவலையேதும் இல்லாமல், பாரதர்களின் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்து, கணைகள் பலவற்றால் அவரைத் துளைத்தான்.
பீஷ்மரைப் பொறுத்தவரை, அப்போது அவரது தேரே அவரது நெருப்பறையானது {அக்னிகிருகமானது}. அந்நெருப்பின் தழலாக அவரது வில்லே ஆனது. வாள்களும், ஈட்டிகளும், கதாயுதங்களும் அந்நெருப்பின் எரிபொருளாகின {விறகாகின}. அந்தப் போரில் க்ஷத்திரியர்களை எரிக்க அவர் ஏவிய கணைமாரியே அந்நெருப்பின் சுடர்ப்பொறிகளாகின {தீப்பொறிகளாகின}. தொடர்ந்து ஊட்டப்படும் எரிபொருளால் பற்றி எரியும் நெருப்பானது காற்றின் உதவியோடு, உலர்ந்த புற்குவியலுக்கு மத்தியில் பரவுவதைப் போல, பீஷ்மரும் தெய்வீக ஆயுதங்களை இறைத்தபடி தழல்களுடன் சுடர்விட்டெரிந்தார்.
மேலும் அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த சோமகர்களைக் கொன்றார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கூர் தீட்டப்பட்டவையும், நேரானவையுமான தன் கணைகளின் மூலம், அர்ஜுனனின் பிற படைகளையும் தடுத்தார். அந்தப் பயங்கரப் போரில், அடிவானின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள் {திக்குகளும், துணைத்திக்குகளும்} அனைத்தையும் தன் சிங்க முழக்கங்களால் நிறைத்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல தேர்வீரர்களையும் (அவர்களது தேரில் இருந்து} வீழ்த்தினார், மேலும், பல குதிரைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களையும் வீழ்த்தினார். இலைகளாலான தங்கள் தலைகள் வெட்டப்பட்ட பனைமரக்காடுகளைப் போல அந்தத் தேர்களில் பெரும்படை தெரியும்படி செய்தார்.
ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில், தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களை இழக்கச் செய்தார். இடி முழக்கத்திற்கு ஒப்பான அவரது வில்லின் நாணொலி, உள்ளங்கைகளின் தட்டல்கள் ஆகிய இரண்டையும் கேட்டு, களமெங்கும் இருந்த துருப்புகள் நடுங்கின. ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகள் பாயும்போது அவற்றில் எவையும் பயனற்றதாக ஆகவில்லை. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவை எதிரியின் உடலை தொட்டு மட்டும் விழவில்லை (ஆனால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை அவர்களை ஊடுருவிச் சென்றன).
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் கூட்டங்கள் தங்கள் தேரோட்டிகளை இழந்து, காற்றின் வேகத்தில் அனைத்துப் பக்கங்களிலும் இழுத்துச் செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். சேதிகள், காசிகள் மற்றும் கரூசர்களைச் சேர்ந்தவர்களும், உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களும், தங்கள் உயிரையே விடத் தயாராக இருந்தவர்களும், பின்வாங்காதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் பதினாலாயிரம் {14000} பேர், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல இருந்த வீரர் பீஷ்மரை அணுகித் தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளோடு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரை அணுகிய சோமகர்களில் பெரும் தேர்வீரன் ஒருவன் கூட அம்மோதலில் இருந்து உயிருடன் திரும்பவில்லை. பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட மக்கள், (அவரை அணுகி) அந்த வீரர்கள் அனைவரும், ஏற்கனவே இறந்தோர் மன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவே கருதினர். உண்மையில், (தன் தேரில்) வெண் குதிரைகள் பூட்டப்பட்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனனையும், அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியையும் தவிர அந்தப் போரில் பீஷ்மரை அணுக எந்தத் தேர்வீரனும் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.
துச்சாசனனை முறியடித்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 118-பீஷ்மரைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்; சிகண்டியை அலட்சியம் செய்த பீஷ்மர்; துச்சாசனன் வெளிப்படுத்திய ஆற்றல்; துச்சாசனனை வீழ்த்திய அர்ஜுனன்; படைவீரர்களுடன் பேசிய துரியோதனன்; துச்சாசனனின் குதிரைகளையும், தேரோட்டியையும் வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனிடம் வீழ்ந்த கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் களத்தில் இருந்து தப்பி ஓடியது; அர்ஜுனனின் ஆற்றல்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்காதிருந்தார். எனினும், சிகண்டி அதைப் புரிந்து கொள்ளவில்லை.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் சிகண்டியிடம், “வேகமாக விரைந்து பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக. ஓ! வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது? வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சிகண்டியே}, போரில் பீஷ்மருடன் போரிடத் தகுந்த வேறெந்த வீரனையும் நான் யுதிஷ்டிரரின் படையில் காணவில்லை. இதை நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.
இப்படிப் பார்த்தனால் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால் பாட்டனை {பீஷ்மரை} விரைவாக மறைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் கணைகளைக் கொண்டு அந்தப் போரில் கோபக்கார அர்ஜுனனை மட்டுமே தடுத்தார்.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, கூர்முனை கொண்ட தன் கணைகளால் பாண்டவர்களின் மொத்த படையையும் அடுத்து உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினார். அதே போலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருந்த அந்தப் பாரத வீரர் {பீஷ்மர்}, (எண்ணற்ற மரங்களை) எரிக்கும் காட்டுத்தீயைப் போலத் துணிவுமிக்க வீரர்கள் பலரை எரித்தார்.
அந்தப் போரில் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாத்துக் கொண்டும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டும் என நாங்கள் அங்கே கண்ட உமது மகனின் (துச்சாசனனின்) ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வில்லாளியான உமது மகன் துச்சாசனனின் அந்தச் சாதனையால், மக்கள் அனைவரும் மனம் நிறைந்தனர். பாண்டவர்கள் அனைவருடனும், அவர்களுக்கு மத்தியில் இருந்த அர்ஜுனனுடனும் அவன் {துச்சாசனன்} தனியாகப் போரிட்டான்; பாண்டவர்களால் அவனைத் தடுக்க இயலாத வீரியத்துடன் அவன் {துச்சாசனன்} போரிட்டான். அந்தப் போரில் துச்சாசனனால் தேர்வீரர்கள் பலர் தங்கள் தேர்களை இழந்தனர். குதிரையின் முதுகில் இருந்த வலிமைமிக்க வில்லாளிகள் பலரும், வலிமைமிக்க வீரர்கள் பலரும், யானைகளும், துச்சாசனனின் கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துச்சாசனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட பல யானைகள் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. எரிபொருள் {விறகு} ஊட்டப்பட்ட நெருப்பின் பிரகாசமான தழல்கள் சுடர்விட்டு எரிவதைப் போலப் பாண்டவப் படையை எரித்து உமது மகன் {துச்சாசனன்} சுடர்விட்டெரிந்தான்.
வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான இந்திரனின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டவப் படையைச் சேர்ந்த எந்த வீரனும் பெரிய வடிவம் கொண்ட அந்த வீரனை {துச்சாசனனை} வீழ்த்தவோ, எதிர்க்கவோ துணியவில்லை. பிறகு விஜயன் என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துச்சாசனனை வீழ்த்தி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். உமது மகன் {துச்சாசனன்} வீழ்த்தப்பட்டாலும், பீஷ்மரின் வலிமையை ஆதரமாகக் கொண்டு, தன் தரப்புக்கு அடிக்கடி ஆறுதலளித்து, பாண்டவர்களுடன் மிகக் கடுமையாகப் போரிட்டான்.
அந்தப் போரில் தன் எதிரிகளுடன் போரிட்ட அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் தீண்டலைக் கொண்டதும், பாம்பின் நஞ்சைப் போல மரணத்தைத் தரவல்லதுமான கணைகள் பலவற்றால் பாட்டனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் உமது தந்தைக்குச் சிறு வலியையே கொடுத்தன, ஏனெனில் அவற்றை அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} சிரித்துக் கொண்டே ஏற்றார். உண்மையில், வெப்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் மழைத்தாரைகளை ஏற்பதைப் போலவே கங்கையின் மைந்தரும் {பீஷ்மரும்}, சிகண்டியின் கணைகளை ஏற்றார்.
மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் உயர் ஆன்ம பாண்டவர்களின் துருப்புகளைத் தொடர்ச்சியாக எரிக்கும் கடும் முகம் கொண்டவராகவே பீஷ்மரைக் கண்டனர். பிறகு உமது வீரர்களிடம் பேசிய உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைவீராக. படைத்தலைவர் ஒருவரின் கடமைகளை அறிந்தவரான பீஷ்மர் உங்களைக் காப்பார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட கௌரவத் துருப்புகள், அச்சமனைத்தையும் விட்டுப் பாண்டவர்களுடன் போரிட்டனர். (பிறகு துரியோதனன், மீண்டும் அவர்களிடம்), “தங்கப் பனைமர வடிவத்தைத் தாங்கிய தனது உயர்ந்த கொடிமரத்துடன் கூடிய பீஷ்மர், தார்தராஷ்டிர வீரர்கள் அனைவரின் மதிப்பையும், கவசங்களையும் பாதுகாத்தபடி நிலை கொண்டிருக்கிறார். தேவர்களே கூட மிகக் கடுமையாக முயன்றாலும், சிறப்புமிக்கவரும், வலிமைமிக்கவருமான பீஷ்மரை வீழ்த்தமுடியாது. எனவே, இறப்பவர்களான {மனிதர்களான} பார்த்தர்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? எனவே, வீரர்களே பல்குனனை {அர்ஜுனனை} எதிரியாக அடைந்து களத்தில் இருந்து ஓடாதீர்கள். பூமியின் தலைவர்களான உங்களுடன் நானும் சேர்ந்து, இன்று மிகக் கடுமையாக முயற்சியுடன் பாண்டவர்களுடன் போரிடுவேன்” என்றான் {துரியோதனன்}.
வில்லைக் கையில் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், விதேஹர்கள், கலிங்கர்கள், தாசேரகர்களின் பல்வேறு இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுமான வலிமைமிக்கப் போராளிகளில் பலர், சினத்தால் தூண்டப்பட்டுப் பல்குனன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். அதேபோல, நிஷாதர்கள், சௌவீரர்கள், பாஹ்லீகர்கள், தாரதர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபிகதர்கள், சூரசேனர்கள், சிபிகள், வசாதிகள், சால்வர்கள், சாகர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கேகயர்கள் ஆகியோரைச் சேர்ந்த போராளிகள் பலரும், நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மேல் பாய்ந்தனர்.
பீபத்சு என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை மனதில் நினைத்து, அவற்றைக் கொண்டு படைப்பிரிவுகளின் தலைமையில் நின்ற அந்தப் பெரும் தேர்வீரர்களைக் குறிபார்த்து, விட்டில் பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல, பெரும் சக்தி கொண்ட அந்த ஆயுதங்களின் மூலமாக அவர்கள் அனைவரையும் விரைவாக எரித்தான். உறுதிமிக்க அந்த வில்லாளி (தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமாக) காண்டீவத்தால் ஆயிரமாயிரம் கணைகளை உண்டாக்கிய போது, ஆகாயத்தில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.
பிறகு, அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், உயர்ந்த தங்கள் கொடிமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் குரங்குக் கொடியோனை (பார்த்தனை {அர்ஜுனனை}) அணுகவும் முடியவில்லை. கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் கொடிமரங்களுடனும், குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளுடனும், யானை வீரர்கள் தங்கள் யானைகளுடனும் கீழே விழுந்தனர். அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக முறியடிக்கப்பட்டுப் பின்வாங்கிச் செல்லும் அம்மன்னர்களின் துருப்புகளால் விரைவில் பூமியானது அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டது.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையை முறியடித்த பார்த்தன் {அர்ஜுனன்}, துச்சாசனன் மேல் பல கணைகளை ஏவினான். இரும்புத் தலைகளைக் கொண்ட அக்கணைகள் அனைத்தும், உமது மகன் துச்சாசனனைத் துளைத்து ஊடுருவி, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவி செல்லும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பிறகு அர்ஜுனன், துச்சாசனனின் குதிரைகளைக் கொன்று, பிறகு அவனது {துச்சாசனனின்} தேரோட்டியையும் வீழ்த்தினான். தலைவன் அர்ஜுனன், இருபது {20} கணைகளால் விவிம்சதியைத் தேரிழக்கச் செய்து, மேலும் ஐந்து {5} நேரான கணைகளால் அவனை {விவிம்சதியைத்} தாக்கினான். வெண்குதிரைகளைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, முழுவதும் இரும்பாலான பல கணைகளால் கிருபர், விகர்ணன், சல்லியன் ஆகியோரைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் தேரிழக்கச் செய்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படித் தங்கள் தேர்களை இழந்து, போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்ட கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் அனைவரும் தப்பி ஓடினார்கள் {போரைவிட்டு ஓடினார்கள்}.
வலிமைமிக்கத் தேர்வீரர்களை முற்பகலில் வீழ்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரில் குருதிப் புனலைக் கொண்ட பெரிய ஆறை அங்கே ஓடச் செய்தான் [1].
தேர்வீரர்களால் பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும் கொல்லப்பட்டன. யானைகளால் கொல்லப்பட்ட தேர்வீரர்கள் பலராக இருந்தனர், மேலும், காலாட்படை வீரர்களால் கொல்லப்பட்ட குதிரைகளும் பலவாக இருந்தன. யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோரின் உடலும், அவர்களது தலைகளும் நடுவில் பிளக்கப்பட்டு, போர்க்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்தன. காது குண்டலங்கள், தோள்வளைகள் ஆகியவற்றை அணிந்தவர்களும், கீழே விழுந்தவர்களும், வீழ்த்தப்படுகிறவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான (கொல்லப்பட்டுக் கிடந்த) இளவரசர்களால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது விரவி கிடந்தது. தேர்ச்சக்கரங்களால் அறுக்கப்பட்டோ, யானைகளால் மிதிக்கப்பட்டோ தேர்வீரர்கள் பலரின் உடல்கள் விரவிக் கிடந்தன.
காலாட்படை வீரர்களும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் தப்பி ஓடினார்கள். அனைத்துப் பக்கங்களிலும் பல யானைகளும் தேர்வீரர்களும் விழுந்தனர். சக்கரங்கள், நுகத்தடிகள், கொடிமரங்கள் முறிக்கப்பட்ட பல தேர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தன. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் ஆகியோரின் குருதியால் நனைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த போர்க்களம் கூதிர் கால வானின் சிவந்த மேகம் போல அழகாகத் தெரிந்தது. நாய்கள், காகங்கள், கழுகுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் பிற பயங்கர விலங்குகளும், பறவைகளும், தங்கள் முன் கிடக்கும் உணவைக் கண்டு உரக்க ஊளையிட்டன. காற்றானது அனைத்துத் திசைகளில் இருந்து பல்வேறு விதங்களில் வீசியது. உரக்க முழக்கமிடும் ராட்சசர்களும், தீய ஆவிகளும் அங்கே காணப்பட்டனர்.
தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கிலிகளும், விலையுயர்ந்த கொடிகளும் காற்றால் அசைக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான குடைகளும், கொடிமரங்களோடு இணைக்கப்பட்ட பெரும் தேர்களும் களத்தில் சிதறிக் கிடந்தது காணப்பட்டது [2].பிறகு, பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதமொன்றைத் தூண்டியெழுப்பி, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். கவசம் பூண்ட சிகண்டி, அர்ஜுனனை நோக்கி விரையும் பீஷ்மரிடம் விரைந்தான். அதன் பேரில், (பிரகாசத்திலும், சக்தியிலும்) நெருப்புக்கு ஒப்பான அந்த ஆயுதத்தைப் பீஷ்மர் திரும்பப்பெற்றார். அதேவேளையில், வெண்குதிரைகளைக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பாட்டனை {பீஷ்மரைக்} குழப்பியபடி உமது துருப்புகளைக் கொன்றான் [3].
பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு! – பீஷ்ம பர்வம் பகுதி – 119-பாண்டவப் படையை நடுங்கச் செய்த கௌரவ வீரர்களும், பீஷ்மரும்; கௌரவப் படையினருக்கு அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; பாண்டவப் படையைத் தூண்டிய திருஷ்டத்யும்னன்; பத்தாம் நாள் போரில் பீஷ்மர் உண்டாக்கிய பேரழிவு; சதாநீகனைக் கொன்ற பீஷ்மர்; பீஷ்மருக்கு எதிராக அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்த பாண்டவ வீரர்கள்; பீஷ்மரை மீண்டும் மீண்டும் துளைத்த அர்ஜுனன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எண்ணிக்கையில் வலுவான இரண்டு படைகளின் போராளிகளும், போர்வியூகத்தில் இப்படி நின்றிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான அந்த வீரர்கள் அனைவரும் பிரம்மலோகத்தில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர் [1]. தொடர்ந்து நடந்த பொதுவான மோதலில், ஒரு வகுப்பைச் சேர்ந்த போராளிகள், அதே வகுப்பைச் சேர்ந்தோருடன் போரிடவில்லை. தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், யானை வீரர்கள் யானைவீரர்களோடும் போரிடவில்லை. மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போராளிகள், பைத்தியக்காரர்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர். அந்த இருபடைகளையும் அடைந்த பேரிடர் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. அந்தக் கடும் படுகொலையில் யானைகளும், மனிதர்களும் களத்தில் தங்களைப் பரப்பிக் கொண்ட போது, அவர்கள் கண்மூடித்தனமாகப் போரிட்டதால், அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் அனைத்தும் இல்லாமல் போனது.
சல்லியன், கிருபர், சித்திரசேனன், துச்சாசனன், விகர்ணன் ஆகிய வீரர்கள் பிரகாசமான தங்கள் தேர்களில் ஏறி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையை நடுங்கச் செய்தனர். அந்த உயர் ஆன்ம போர்வீரர்களால் போரில் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் புரட்டப்படும் நீரில் உள்ள படகைப் போலப் பல்வேறு வழிகளில் சுழலத் தொடங்கியது. குளிர்காலத்தின் குளுமை விரைவாகப் பசுக்களை வெட்டுவதை {சதைகளைப் பிளப்பதைப்} போலவே, பீஷ்மரும் பாண்டுவின் மகன்களை விரைவாக வெட்டினார்.
மேலும், உமது படையைப் பொறுத்தவரை, புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த பல யானைகள், சிறப்புமிக்கப் பார்த்தனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டன. போர்வீரர்களில் முதன்மையானோர் பலரும் அந்த வீரனால் {அர்ஜுனனால்} நசுக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான கணைகளாலும், நாராசங்களாலும் தாக்கப்பட்டுப் பெரும் யானைகள் பல வலியால் பயங்கரமாகப் பிளிறிபடி கீழே விழுந்தன. சிதறிக் கிடந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான உயிரிழந்த உயர் ஆன்ம வீரர்களின் உடல்களுடனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் அந்தப் போர்க்களம் அழகாகத் தெரிந்தது.
பெரும் வீரர்களின் அழிவுக்கான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், பாண்டுவின் மகனானத் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகள் அனைத்தின் தலைமையில் நின்று கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்த பாட்டனை {பீஷ்மரைக்} கண்ட உமது மகன்கள் அவரை அணுகினர். போரில் தங்கள் உயிர்களை விட விரும்பி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்ட அவர்கள், பெரும் படுகொலைகள் நிறைந்த அந்தப் போரில் பாண்டவர்களை அணுகினர். துணிவுமிக்கப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னர் உம்மாலும், உமது மகனாலும் {துரியோதனனாலும்} தங்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விதங்களிலான தீங்குகள் பலவற்றை மனதில் தாங்கி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, உயர்ந்த சொர்க்கங்களை வெல்லும் ஆவலில் உமது மகனோடும், உமது படையின் வீரர்கள் பிறருடனும் மகிழ்ச்சியாகப் போரிட்டனர்.
பிறகு பாண்டவப் படையின் படைத்தலைவனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தன் படைவீரர்களிடம், “சிருஞ்சயர்களுடன் கூடிய சோமகர்களே, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக” என்றான். தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்களும், சிருஞ்சயர்களும், கணைகளின் மழையால் பீடிக்கப்பட்டாலும், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். இப்படித் தாக்கப்பட்ட உமது தந்தை பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுச் சிருஞ்சயர்களோடு போரிடத் தொடங்கினார்.
பழங்காலத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, புத்திசாலியான ராமர் {பரசுராமர்}, பகையணிகளுக்கு அழிவைத் தரும் ஆயுதங்களின் கல்வியைப் பெரும் சாதனைகளைக் கொண்ட பீஷ்மருக்கு அளித்தார். அந்தக் கல்வியைக் கொண்டு, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்திய, பகைவீரர்களைக் கொல்பவரான முதிர்ந்த குரு பாட்டன் பீஷ்மர் நாளுக்கு நாள் பத்தாயிரம் ரத வீரர்களை {தேர்வீரர்களைக்} கொன்றார்.
எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் {போரின்} பத்தாம் {10} நாளில், பீஷ்மர், தனியாளாகவே பத்தாயிரம் யானைகளைக் கொன்றார். பிறகு, மத்ஸ்யர்களுக்கும், பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} எழுவரையும் கொன்றார். இவை அனைத்திற்கும் மேலாக, அந்தப் பயங்கர போரில், ஐயாயிரம் {5000} காலாட்படை வீரர்களும், தந்தங்களைக் கொண்ட ஓராயிரம் {1000} யானைகளும், பத்தாயிரம் {10000} குதிரைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்வியால் அடையப்பட்ட திறமையின் மூலம் உமது தந்தையால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன [2].
மன்னர்கள் அனைவரின் படையணிகளை மெலிதாக்கிய {குறைத்த} அவர் {பீஷ்மர்}, விராடனின் அன்புக்குரிய தம்பி சதாநீகனைக் கொன்றார். அந்த வீரப் பீஷ்மர், போரில் சதாநீகனைக் கொன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பல்லங்களால் முழுமையாக ஓராயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவற்றைத் தவிர, தனஞ்சயனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த பாண்டவப் படையின் க்ஷத்திரியர்கள் அனைவரும் பீஷ்மரை அடைந்ததுமே {அவர்கள்} யமோலோகம் செல்ல வேண்டியிருந்தது. போரில் கௌரவப் படையின் தலைமையில் நின்ற பீஷ்மர், கணைகளின் மழைகளால் பாண்டவப் படையின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தார். பத்தாம் நாளில் கையில் வில்லுடன், இரு படைகளுக்கும் மத்தியில் நின்று கொண்டு மகத்தான சாதனைகளை அடைந்து, கோடை வானின் வெப்பமான நடுநாள் {மத்திய வேளை} சூரியனைப் போல இருந்ததால், அவரை {பீஷ்மரை}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் எவராலும் காணவும் முடியவில்லை. போரில் தைத்திய படையை எரிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும் பாண்டவப் படையை எரித்தார்.
தன் ஆற்றலை இப்படி வெளிப்படுத்தும் அவரை {பீஷ்மரைக்} கண்ட மதுசூதனனான தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, மகிழ்ச்சியுடன் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “{அதோ} இரு படைகளுக்கும் மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர் நிற்கிறார். உனது வலிமையை வெளிப்படுத்தி அவரை {பீஷ்மரைக்} கொன்றால், நீ வெற்றியை அடையலாம். அங்கே, அந்த இடத்தில், நமது படைகளை அவர் பிளக்கும்போது, உன் பலத்தை வெளிப்படுத்தி அவரைத் தடுப்பாயாக. ஓ! தலைவா {அர்ஜுனா}, உன்னையன்றி வேறு எவனும் பீஷ்மரின் கணைகளைத் தாங்கத் துணிய மாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.
இப்படித் தூண்டப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், அந்தக் கணத்திலேயே தன் கணைகளின் மூலம் பீஷ்மரின் தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றோடு அவரையும் {பீஷ்மரையும்} மறையச் செய்தான். எனினும், குருக்களில் முதன்மையானவரான அந்தக் காளை {பீஷ்மர்}, தன் கணை மழையின் மூலம், பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஏவிய கணைகளின் மழையைத் துளைத்தார் {தடுத்தார்}. பிறகு, பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, {சேதி மன்னனான} வீர திருஷ்டகேது, பாண்டுவின் மகனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), சேகிதானன், கைகேயச் சகோதரர்கள் ஐவர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், சிகண்டி, வீரக் குந்திபோஜன், {பாண்டவத் தரப்பைச் சேர்ந்த} சுசர்மன், விராடன் ஆகியோரும், பாண்டவப் படையின் பலமிக்கப் போர்வீரர்கள் பலரும் பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, துன்பக்கடலில் மூழ்குவதாகத் தெரிந்தது, எனினும், பல்குனன் {அர்ஜுனன்}, அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான்.
பிறகு, சிகண்டி, வலிமைமிக்க ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டு, பீஷ்மரை மட்டுமே நோக்கி மூர்க்கமாக விரைந்தான். வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, எதன் பிறகு எதைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து, பீஷ்மரைப் பின்தொடர்ந்தோர் அனைவரையும் கொன்று அதன் பிறகு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். சாத்யகி, சேகிதானன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகிய அனைவரும் உறுதிமிக்க அந்த வில்லாளியால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டு, அந்தப் போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.
அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோரும் வலிமைமிக்க ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு போரில் பீஷ்மருக்கு எதிராக விரைந்தனர். போரில் பின்வாங்காதவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகளான அனைவரும், நன்கு குறிபார்க்கப்பட்ட கணைகளால் பீஷ்மரின் உடலில் பல்வேறு பகுதிகளில் துளைத்தனர். பாண்டவப் படையைச் சேர்ந்த அந்த இளவரசர்களில் முதன்மையானோரால் ஏவப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகள் அனைத்தையும் அலட்சியம் செய்தவரும், கலக்கமில்லா ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், பாண்டவப் படையணிக்குள் ஊடுருவினார்.
ஏதோ எந்நேரமும் விளையாடுபவரைப் போல இருந்த பாட்டன் {பீஷ்மர்}, அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். பாஞ்சால இளவரசனான சிகண்டியை அடிக்கடி பார்த்துச் சிரித்து, அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த அவர் {பீஷ்மர்}, அவனை {சிகண்டியை} நோக்கி ஒரு கணையைக் கூடக் குறிப் பார்க்காமல் இருந்தார். மறுபுறம் அவர் {பீஷ்மர்}, துருபதனின் படைப்பிரிவைச் சேர்ந்த பெரும் தேர்வீரர்கள் எழுவரைக் கொன்றார்.
பிறகு, அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்த மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் ஆகியோருக்கு மத்தியில் குழப்பமான துயரக் குரல்கள் எழுந்தன. அவர்கள் {பாண்டவப் படையினர்}, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடனும், கணைகளின் மழைகளுடனும், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகலை உண்டாக்குபவனை மறைக்கும் மேகங்களைப் போலத் தனி வீரரும், எதிரிகளை எரிப்பவரும், பாகீரதியின் {கங்கையின்} மகனுமான பீஷ்மரைப் மறைத்தனர்.
பிறகு, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பான, அவருக்கும் {பீஷ்மருக்கும்}, அவர்களுக்கும் {பாண்டவப் படையினருக்கும்} இடையிலான அந்தப் போரில், கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தன் முன்னிலையில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, பீஷ்மரை (மீண்டும் மீண்டும்) துளைத்தான்” {என்றான் சஞ்சயன்}.
தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120அ-பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படியே பாண்டவர்கள் அனைவரும், சிகண்டியைத் தங்கள் முன் கொண்டு அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் அவரைத் துளைத்தனர். ஒன்றுசேர்ந்த சிருஞ்சயர்கள் அனைவரும், பயங்கரமான சதக்னிகளாலும், பரிகங்களாலும், போர்க்கோடரிகளாலும், முத்கரங்களாலும், குறுகிய தடிமனான உலக்கைகளாலும், பராசங்களாலும், க்ஷேபணீயங்களாலும் {ஏவுகணை போன்ற பிற ஆயுதங்களாலும்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளாலும், ஈட்டிகளாலும், தோமரங்களாலும், கம்பனங்களாலும், நாராசங்களாலும், வத்ஸதந்தங்களாலும், புசுண்டிகளாலும் {எறிகணைகளாலும்} அவரை {பீஷ்மரைத்} தாக்கினர். இப்படிப் பலவற்றால் பீடிக்கப்பட்ட அவரது {பீஷ்மரது} கவசம் எங்கும் துளைக்கப்பட்டிருந்தது. ஆனால், முக்கியப் பகுதிகள் அனைத்திலும் துளைக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர் வலியை உணரவில்லை.
மறுபுறம், யுகத்தின் முடிவில் (அனைத்தையும் அழிக்கும்படி) எழும் நெருப்பின் தோற்றத்தில் அவர் {பீஷ்மர்} தன் எதிரிகளுக்குக் காட்சியளித்தார். அவரது வில்லும் கணைகளும் (நெருப்பாலானவை போல) {அந்நெருப்பின்} சுடர்விடும் தழல்களைக் கொண்டிருந்தன. அவரது {பீஷ்மரது} ஆயுதங்களின் வீச்சு அதனுடன் {அந்நெருப்புத் தழலுடன்} (நட்புடன்) கூடிய தென்றலாக இருந்தன {The flight of his weapons constituted its (friendly) breeze}. அவரது {பீஷ்மரது} தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி வெப்பமாகவும், வலிமைமிக்க ஆயுதங்கள் அதன் {அந்நெருப்பின்} காந்தியாகவும் இருந்தன. அவரது அழகிய வில் அதன் {அந்நெருப்பின்} கடும் நாக்காக இருந்தது, வீரமிக்கப் போர்வீரர்களின் உடல்கள் அதன் அபரிமிதமான எரிபொருளாகின. அந்த மன்னர்களின் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் திரிபவராகவோ, அல்லது சில நேரங்களில் (அதன் நெருக்கத்தில் இருந்து) வெளியே வருபராகவும், அல்லது மீண்டும் அவர்களின் மத்தியில் திரிபவராகவும் பீஷ்மர் காணப்பட்டார்.
பாஞ்சாலர்களின் மன்னனையும் {துருபதனையும்}, திருஷ்டகேதுவையும் அலட்சியப்படுத்திய அவர் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவினார். பிறகு அவர் {பீஷ்மர்} சாத்யகி, பீமன், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துருபதன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகிய ஆறு பாண்டவ வீரர்களை, அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லவையும், பெரும் மூர்க்கத்துடன் செல்பவையும், “விஸ்” என்ற பயங்கர ஒலியுடன் செல்பவையும், பெரும் கூர் கொண்டவையுமான அற்புதக் கணைகள் பலவற்றால் துளைத்தார். எனினும், அந்தக் கூரிய கணைகளைத் தடுத்து, பெரும் சக்தியுடன் பீஷ்மரைப் பீடித்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் பத்து {பத்து பத்து} கணைகளால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர்.
பெரும் தேர்வீரனான சிகண்டியால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச்சிறகுகள் கொண்டவையுமான வலிமைமிக்க அந்தக் கணைகள் பீஷ்மரின் உடலுக்குள் விரைவாக ஊடுருவின. பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைந்து, பின்னவரின் {பீஷ்மரின்} வில்லை அறுத்தான்.
அதன் பேரில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணர், கிருதவர்மன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், பகதத்தன் ஆகியோரால் அர்ஜுனனின் அந்தச் செயலை {பீஷ்மரின் வில்லை வெட்டிய செயலைப்} பொறுக்கமுடியவில்லை. சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைத்து, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பெருங்கோபத்துடன் பாய்ந்து, தங்கள் கணைகளால் அவனை மறைத்தனர். பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி அவர்கள் விரைந்த போது, அவர்களால் உண்டான ஒலியானது, யுகத்தின் முடிவில் சினத்துடன் பொங்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்தது.
பல்குனனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி, “கொல்”, “(நம் படைகளைக்) கொண்டு வா”, “எடு”, “துளை”, “வெட்டு” என்ற இது போன்ற சீற்றமிகுந்த கூச்சல்களே கேட்டன. அந்தச் சீற்றமிக்கக் கூச்சல்களைக் கேட்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனைப் பாதுகாப்பதற்காக முன்னோக்கி விரைந்தனர்.
சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரும், ராட்சசன் கடோத்கசன், கோபக்கார அபிமன்யு ஆகியோரே அவர்கள். சினத்தால் தூண்டப்பட்ட அந்த எழுவரும் அற்புத விற்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்தனர். இவர்களுக்கும், கடுமையான கௌரவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தானவர்களுடன் நடந்த தேவர்களின் போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
தேர்வீரர்களில் முதன்மையான சிகண்டி, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்} போரில் பாதுகாக்கப்பட்டு அம்மோதலில் பீஷ்மரைத் துளைத்து, பிறகு, பத்து கணைகளால் பின்னவரின் {பீஷ்மரின்} வில்லையும் அறுத்தான். மேலும் அவன் {சிகண்டி}, பிற கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியைத் தாக்கி, ஒரு கணையால் பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தை வெட்டினான்.
பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மேலும் கடுமையான மற்றொரு வில்லை எடுத்தார். அதையும் மூன்று கணைகளால் பல்குனன் {அர்ஜுனன்} வெட்டினான். உண்மையில், இடது கையாலும் வில்லை வளைக்கவல்லவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அர்ஜுனன், சினத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர் எடுத்த அனைத்து விற்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டினான்.
பிறகு, இப்படி விற்கள் வெட்டப்பட்ட பீஷ்மர், சினத்தால் தூண்டப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்தார். சினத்தால் அவர் {பீஷ்மர்}, அதைப் பல்குனனின் தேர் மீது வீசினார். சொர்க்கத்தின் வஜ்ரத்தைப் போன்று அது தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பாண்டவர்களை மகிழ்விப்பவன் {அர்ஜுனன்}, ஐந்து கூரிய பல்லங்களை (தன் வில்லின் நாணில்) பொருத்தினான். கோபக்கார அர்ஜுனன் அவ்வைந்து பல்லங்களைக் கொண்டு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கைகளால் ஏவப்பட்ட அந்த ஈட்டியை ஐந்து துண்டுகளாக வெட்டினான். கோபம் நிறைந்த அர்ஜுனனால் இப்படி வெட்டப்பட்ட அந்த ஈட்டி மேகத்திரள்களில் இருந்து பிரிந்த மின்னலின் கீற்றுகளைப் போல விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட பீஷ்மர் சினத்தால் நிறைந்தார்.
அவர் {பீஷ்மர்}, “வலிமைமிக்க விஷ்ணு [1] {கிருஷ்ணன்} பாண்டவர்களின் பாதுகாவலனாக இல்லையெனில், ஒரே வில்லைக் கொண்டே அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் என்னால் கொல்ல முடியும். எனினும், பாண்டவர்களின் கொல்லப்படாத் தன்மை [2] மற்றும் சிகண்டியின் பெண்தன்மை ஆகிய இரண்டு காரணங்களுக்காக நான் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} போரிட மாட்டேன். முன்பு, என் தந்தை {சந்தனு} காளியை {சத்தியவதியை} மணந்த போது, (என்னிடம்) மனம் நிறைந்த அவர் {சந்தனு}, போரில் நான் கொல்லப்படாதவனாக இருப்பேன் என்றும், என் மரணமானது எனது சொந்த விருப்பத்தைச் சார்ந்தது என்றும்” இரண்டு வரங்களைக் கொடுத்தார். எனினும், இதுவே தகுந்த நேரமாதலால், நான் இப்போது என் மரணத்தை விரும்ப வேண்டும்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் {பீஷ்மர்}.
வானத்தில் நின்றிருந்த முனிவர்களும், வசுக்களும், அளவிலாத சக்தி கொண்ட பீஷ்மரின் தீர்மானம் இதுவே என்பதை உறுதி செய்து கொண்டு, “ஓ! மகனே {பீஷ்மா}, நீ எதைத் தீர்மானித்திருக்கிறாயோ, அதை நாங்களும் அங்கீகரிக்கிறோம். ஓ! மன்னா {பீஷ்மா}, உன் தீர்மானத்தின்படியே செயல்படுவாயாக. போரில் இருந்து உன் இதயத்தை விலக்குவாயாக” என்றனர். இந்த வார்த்தைகளின் முடிவில், நறுமணமிக்கதும், மங்கலகரமானதும், நீர்த்துளிகள் நிறைந்ததுமான தென்றல் இயல்பான திசையிலேயே வீசத் தொடங்கியது. தேவ துந்துபிகளும் பேரொலியோடு முழங்கத் தொடங்கின. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் மீது பூமாரியும் பொழிந்தது.
எனினும், முனிவர்களும், வசுக்களும் கூறிய வார்த்தைகள், பீஷ்மரைத் தவிர வேறு யாராலும் கேட்கப்படவில்லை. {வியாச} முனிவர் எனக்குக் கொடுத்த சக்தியால் {சஞ்சயனாகிய} நானும் அவற்றைக் கேட்டேன். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களுக்கும் பிடித்தமானவரான அந்தப் பீஷ்மர் தேரில் இருந்து விழப்போகிறார் என்ற நினைப்பாலேயே தேவர்களின் இதயங்களில் நிறைந்த துயரம் பெரிதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
வீழ்ந்தார் பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ-பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்…
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தேவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, பெரும் ஆன்மிகத் தகுதி கொண்ட சந்துனுவின் மகன் பீஷ்மர், அனைத்துக் கவசங்களையும் ஊடுருவவல்ல கூரிய கணைகளால் தானே துளைக்கப்பட்டிருந்தாலும், பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிகண்டி ஒன்பது கூரிய கணைகளால் அந்தப் பாரதர்களின் பாட்டனின் {பீஷ்மரின்} மார்பைத் தாக்கினான்.
எனினும், குரு பாட்டனான பீஷ்மர், போரில் அவனால் {சிகண்டியால்} இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பூகம்பத்திலும் அசையாமல் நீடிக்கும் ஒரு மலையைப் போலவே அவர் {பீஷ்மர்} நடுங்காதிருந்தார். பிறகு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, இருபத்தைந்து {25} கணைகளால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் வேகம் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் மீண்டும் அவரது முக்கிய அங்கங்களைத் தாக்கினான்.
பிறராலும் ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டவரான வலிமைமிக்கத் தேர்வீரர் பீஷ்மர், அந்தப் பிறரை பெரும் வேகத்துடன் பதிலுக்குத் துளைத்தார். அந்த வீரர்கள் ஏவிய கணைகளைப் பொறுத்தவரை, போராற்றலைக் கொண்ட பீஷ்மர், அந்தப் போரில் கலங்கடிக்கபட முடியாத அவை அனைத்தையும் தன் நேரான கணைகளால் தடுத்தார். எனினும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், {சாணை} கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், சிகண்டியால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீஷ்மருக்குச் சிறு வலியையேனும் ஏற்படுத்தவில்லை.
பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன் கொண்டு, பீஷ்மரை அருகில் அணுகி அவரது வில்லை மீண்டும் அறுத்தான். மேலும் பத்து {10} கணைகளால் பீஷ்மரைத் துளைத்த அவன் {அர்ஜுனன்}, பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தையும் ஒன்றால் {ஒரு கணையால்} அறுத்தான். மேலும் அர்ஜுனன், பத்து கணைகளால் பீஷ்மரின் தேரைத் தாக்கி அவரையும் {பீஷ்மரையும்} நடுங்கச் செய்தான்.
பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} வலுவான மற்றொரு வில்லை எடுத்தார். எனினும், அந்த வில் எடுக்கப்படும்போதே, அதை அர்ஜுனன் மூன்று பல்லங்களால் உண்மையில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூன்று துண்டுகளாக வெட்டினான். இப்படியே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரின் விற்கள் அனைத்தையும் வெட்டினான்.
அதன்பிறகு சந்தனுவின் மகனான பீஷ்மர், அர்ஜுனனுடன் மேலும் போரிட விரும்பவில்லை [1]. எனினும், பின்னவன் {அர்ஜுனன்} அவரை {பீஷ்மரை} இருபத்தைந்து {25} கணைகளால் {க்ஷுத்ரகம் எனும் கணைகளால்} துளைத்தான்.இப்படிப் பெரிதும் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, {தன் அருகில் இருந்த} துச்சாசனனிடம், “பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பல்லாயிரம் கணைகளால் என்னை மட்டுமே துளைப்பதைப் பார். இவன் {அர்ஜுனன்}, போரில் வஜ்ரபாணியாலும் {இந்திரனாலும்} வெல்லப்படமுடியாதவனாவான். என்னைப் பொறுத்தவரையும் கூட, ஓ! வீரா {துச்சாசனா}, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோர் இணைந்து வந்தாலும் {அவர்களால்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறேன். {இப்படி இருக்கையில்} மனிதர்களுக்கு மத்தியில் உள்ள வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்?” என்றார் [2]. பீஷ்மர் துச்சாசனனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் சிகண்டியை முன் கொண்டு, கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.பிறகு பீஷ்மர், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கூர்முனை கணைகளால் ஆழமாகவும் அதீதமாகவும் துளைக்கப்பட்டு, மீண்டும் துச்சாசனனிடம் புன்னகையுடன், “நேரானவையும், நன்றாகத் தீட்டப்பட்டவையும், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து தொடுக்கப்படுகின்றவையும், வானத்தின் இடியின் {வஜ்ரத்தின்} தீண்டலுக்கு ஒப்பானவையுமான இந்தக் கணைகள் அர்ஜுனனாலேயே ஏவப்படுகின்றன. இவை சிகண்டியுடையவை அல்ல.
என் முக்கிய அங்கங்களை வெட்டி, கடுமையான என் கவசத்தையே துளைத்து, முசலங்களின் {உலக்கைகளின்} சக்தியுடன் என்னைத் தாக்கும் இக்கணைகள் சிகண்டியுடைவையல்ல.
(தண்டனையளிக்கும்) பிராமணக் கோல் {பிரம்மதண்டம்} [3] போலக் கடுந்தீண்டல் கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தாங்கமுடியாத மூர்க்கத்தைக் கொண்டவையுமான இந்தக் கணைகள் என் முக்கியப் பகுதிகளைப் பீடிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.கதாயுதம், பரிகாயுதங்கள் போலத் தாக்குபவையும், காலனால் (அந்தக் கடும் மன்னனாலேயே) ஏவப்பட்ட தூதர்கள் {யமதூதர்கள்} போல வருபவையுமான இந்தக் கணைகள் என் உயிர் சக்திகளை அழிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.
தங்கள் நாவுகளை வெளியே விடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல இவை என் உயிர்நிலைகளை ஊடுருவுகின்றன. குளிர்காலத்தின் குளுமை பசுக்களின் முக்கிய அங்கங்களை வெட்டுவதைப் {பிளப்பதைப்} போல இவை என் முக்கிய அங்கங்களை வெட்டுகின்றன [4]. இவை சிகண்டியுடையவையல்ல-வீர காண்டீவதாரியான குரங்குக்கொடி ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} தவிர, மற்ற மன்னர்கள் அனைவரில் எவரும் எனக்கு வலியை உண்டாக்க இயன்றவர்களில்லை” என்றார் {பீஷ்மர்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன சந்தனுவின் வீர மகன் பீஷ்மர், பாண்டவர்களை எரிக்கும் நோக்கில், பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஈட்டி ஒன்றை எறிந்தார். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, உமது படையின் குருவீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, மூன்று கணைகளால் அதை மூன்று துண்டுகளாக வெட்டி கீழே விழச் செய்தான்.
பிறகு, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, மரணத்தையோ, வெற்றியையோ அடைய விரும்பி ஒரு வாளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும் எடுத்தார். எனினும், அவர் {பீஷ்மர்} தனது தேரை விட்டுக் கீழே இறங்குவதற்கு முன்பே அர்ஜுனன் தன் கணைகளின் மூலம் அந்தக் கேடயத்தை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.
பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் துருப்புகளைத் தூண்டி, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக. கிஞ்சிற்றும் அஞ்சாதீர்” என்றான். பிறகு அவர்கள் அனைவரும் {பாண்டவப் படையினர் அனைவரும்}, தோமரங்கள், வேல்கள், கணைகள், கோடரிகள் {பட்டசங்கள்}, சிறந்த வாள்கள், பெருங்கூர்மையுள்ள நாராசங்கள், வத்ஸதந்தங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அப்போது அந்தப் பாண்டவப் படைக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன. பிறகு உமது மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி அவரைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.
அந்தப் பத்தாம் {10} நாளில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், அர்ஜுனனும் சந்தித்துக் கொண்டபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாக இருந்தது. கங்கை கடலைச் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் நீர்ச்சுழலைப் போல, இரு தரப்பு படைகளின் துருப்புகளும் சந்தித்து ஒருவரை ஒருவர் தாக்கி வீழ்த்திய அந்த இடத்தில் ஒரு குறுகிய காலத்திற்குச் [5] சுழல் உண்டானது {வீரர்கள் சுழன்றனர்}. இரத்தத்தால் நனைந்த பூமியானவள் கொடும் வடிவத்தை அடைந்தாள். அவளது பரப்பில் உள்ள சமமான மற்றும் சமமற்ற இடங்களை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை.பீஷ்மரின் முக்கிய அங்கங்கள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பத்தாம் {10} நாளில், பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்ற அவர் போரில் (அமைதியாக) நின்று கொண்டிருந்தார். பிறகு, பெரும் வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்று கொண்டே குரு படையின் நடுப்பகுதியைப் பிளந்தான். தன் தேரில் வெண்குதிரைகளைக் கொண்டிருந்த குந்தியின் மகன் தனஞ்சனிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட நாங்கள், அவனது பளபளப்பான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டுப் போரில் இருந்து தப்பி ஓடினோம்.
சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வஸாதிகள், சால்வர்கள், சயர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கைகேயர்கள் [6] ஆகியோரும், இன்னும் பல சிறந்த வீரர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் காயங்களால் வலியை உணர்ந்தும், கிரீடம் தரித்தவனோடு (அர்ஜுனனோடு) அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த பீஷ்மரைக் கைவிட்டனர் {கைவிட்டு ஓடினர்}. பிறகு, பெரும் வீரர்கள் பலர், அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, (அவரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த) குருக்களை வீழ்த்தி, கணைமாரியால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “கீழே வீசு”, “பிடி”, “போரிடு”, “துண்டுகளாக வெட்டு” என்ற கடுமுழக்கங்களே பீஷ்மரின் தேரின் அருகில் கேட்கப்பட்டன.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் (எதிரிகளைக்) கொன்ற அந்தப் பீஷ்மரின் உடலில் கணைகளால் துளைக்கப்படாத இடைவெளி என்று இரண்டு விரல்களின் அகலம் அளவுக்குக் கூட இடம் இல்லை. இப்படியே உமது தந்தை {பீஷ்மர்}, அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} கூர்முனைக் கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தார். பிறகு, சூரியன் மறைவதற்குச் சற்று நேரத்திற்கு முன் உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் {பீஷ்மர்}, கிழக்குப்பக்கமாகத் தலையைக் கொண்டு {கிழக்கு முகமாக} தன் தேரில் இருந்து கீழே விழுந்தார்.
பீஷ்மர் விழுந்த போது, தேவர்களும், பூமியின் மன்னர்களும் “ஓ!” என்றும், “ஐயோ!” என்று அலறியது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. உயர் ஆன்மப் பாட்டன் {பீஷ்மர்} (தன் தேரில் இருந்து) விழுந்ததைக் கண்ட எங்கள் அனைவரின் இதயங்களும் அவரோடு சேர்ந்து விழுந்தன. வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {பீஷ்மர்}, வேரோடு சாய்ந்த இந்திரனின் கொடிமரம் {இந்திரத்வஜம்} போல, பூமியையே நடுங்கச் செய்தபடி கீழே விழுந்தார். எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவரது {பீஷ்மரது} உடல் தரையைத் தொடவில்லை.
அக்கணத்திலேயே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கணைப்படுக்கையில் {சரதல்பத்தில்} கிடந்த அந்தப் பெரும் வில்லாளியை தெய்வீக இயல்பு வந்தடைந்தது {பீஷ்மர் தெய்வீகத்தன்மையை அடைந்தார்}. மேகங்கள் அவர் மீது (குளிர்ந்த நீரைப்) பொழிந்தன, மேலும் பூமியும் நடுங்கினாள்” {என்றான் சஞ்சயன்}.
“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 120இ-உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்.
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்கவில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ! ஏன் தன் உயிரை விட வேண்டும்?” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].ஹிமவத்தின் {ஹிமவானின் – இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.
அன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்?” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.
என் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ! உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.
குரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.
கொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண்டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.
சிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.
திடீரென விழுந்த துரோணர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 121-திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ! சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்காதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழிந்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.
இதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின.
குருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.
“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர்! {பீஷ்மர்!} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கணைகளின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.
பாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.
ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
குருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.
பீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் துருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன்} சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
குரு குலத்தின் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.
அவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு! வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு! தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.
பிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.
பத்தாம் நாள் போர் முற்றும்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்