ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-அபிமன்யு வத பர்வம் –

யுதிஷ்டிரனின் புலம்பல்! – துரோண பர்வம் பகுதி – 049-அபிமன்யு இறந்ததும் போர்க்களத்தை விட்டு அகன்ற வீரர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்தல்; யுதிஷ்டிரனின் புலம்பல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்ப்படைகளின் தலைவனும், சுபத்திரையின் மகனுமான அந்த வீரன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, பாண்டவ வீரர்கள் தங்கள் தேர்களை விட்டு, தங்கள் கவசங்களைக் களைந்து, தங்கள் விற்களை ஒருபுறமாக வீசிவிட்டு மன்னன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்ந்தனர். (இறந்து போன) அபிமன்யுவின் மீது தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, தங்கள் சோகத்தையே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

உண்மையில், தன் தம்பியின் {அர்ஜுனனின்} வீரமகனான வலிமைமிக்கத் தேர்வீரன் அபிமன்யுவின் வீழ்ச்சியால் சோகத்தால் நிரம்பிய மன்னன் யுதிஷ்டிரன், (இப்படிப்பட்ட) புலம்பல்களிலேயே ஈடுபட்டான்: “ஐயோ, என் நலனை அடைய விரும்பிய அபிமன்யு, படை வீரர்களால் நிறைந்ததும், துரோணரால் அமைக்கப்பட்டதுமான அந்த வியூகத்தைப் பிளந்தானே. பெரும் துணிவுள்ளவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவர்களும், போரில் அவனுடன் {அபிமன்யுவுடன்} மோதியவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகள் முறியடிக்கப்பட்டு, புறமுதுகிடச் செய்யப்பட்டனரே. கருணையற்ற நம் எதிரியான துச்சானனுடன் போரில் மோதிய அவன் {அபிமன்யு}, அந்த வீரனின் {துச்சாசனனின்} புலன்களை இழக்கச் செய்து {மயக்கமடையச் செய்து}, களத்தில் இருந்தே அவனை ஓடச் செய்தானே.

ஐயோ, அர்ஜுனனின் வீரமகன் {அபிமன்யு}, துரோணப் படை எனும் பரந்த கடலைக் கடந்த பிறகு, துச்சாசனன் மகனுடன் மோதி யமனின் வசிப்பிடத்திற்கு விருந்தினனாகச் சென்றுவிட்டானே. அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனன் மீதும், தனக்குப் பிடித்த மகனை இழந்த அருளப்பட்ட சுபத்திரை மீதும் நான் எவ்வாறு என் கண்களைச் செலுத்துவேன். பொருளற்ற {முட்டாள் தனமான}, ஒத்திசைவற்ற, முறையற்ற எந்த வார்த்தைகளை நாம் இன்று ரிஷிகேசனிடமும் {கிருஷ்ணனிடமும்}, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} சொல்லப் போகிறோம்? நன்மையை அடைய விரும்பியும், வெற்றியை எதிர்பார்த்தும் சுபத்திரைக்கும், கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் நானே இந்தப் பெரும் தீங்கைச் செய்துவிட்டேனே.

பேராசை கொண்ட ஒருவன், தனது தவறுகளை ஒருபோதும் காணமாட்டான். தேனைச் சேகரிப்போர் தங்களுக்கு முன் இருக்கும் வீழ்ச்சியை {பெரும் பள்ளத்தைக்} காண்பதில்லை; நானும் அவர்களைப் போலவே இருக்கிறேன். எவன் பாலகனோ, எவனுக்கு (நல்ல) உணவு, வாகனங்கள், படுக்கைகள், ஆபரணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அவனையே நம் படையின் முன்னிலையில் நிறுத்தினோமே. இளம் வயதுடையவனும், போரில் தேர்ச்சி அடையாதவனுமான ஒரு பாலகனுக்குப் பெரும் ஆபத்தான இது போன்ற ஒரு சூழலில் நன்மை எப்படி விளையும்? தன் தலைவனின் ஏவலைச் செய்ய மறுக்காமல், திறமையில் {மனவுறுதியில்} செருக்குடைய ஒரு குதிரையைப் போல, அவன் {அபிமன்யு} தன்னையே தியாகம் செய்து கொண்டானே.

ஐயோ, கோபத்தால் நிறைந்திருக்கும் அர்ஜுனனின் சோகப் பார்வையில் வெடித்து, நாமும் இன்று வெறுந்தரையில் நம்மைக் கிடத்திக் கொள்ளப் போகிறோம். பரந்தமனம், நுண்ணறிவு, பணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அழகு, வலிமை, நன்கு வளர்க்கப்பட்ட அழகிய அங்கங்கள், உயர்ந்தோரிடம் மரியாதை, வீரம், அன்பு, உண்மையில் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனைகள் ஆகியவற்றைக் கொண்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருஞ்செயல்களுக்காகத் தேவர்களே கூட அவனைப் புகழ்கின்றனர். அந்த வீரன் {அர்ஜுனன்}, இந்திரனின் எதிரிகளும், ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டவர்களுமான நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கொன்றான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் {அர்ஜுனன்}, பௌலோமர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோரையும் கொன்றான். பெரும் வலிமையைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, புகலிடம் கேட்பவர்களான தீராச் சினமுடைய எதிரிகளுக்கும் புகலிடத்தை அளிப்பவன் ஆவான் [1]. ஐயோ, அப்படிப்பட்ட ஒருவனின் மகனை {அபிமன்யுவை} இன்று நம்மால் ஆபத்தில் இருந்து காக்க முடியவில்லையே.தார்தராஷ்டிரர்கள் பெரும் பலத்தைக் கொண்டவர்களாக இருப்பினும் ஒரு பெரும் அச்சம் அவர்களை நிறைக்கிறது. தன் மகனின் {அபிமன்யுவின்} கொலையால் சினமூளும் பார்த்தன் {அர்ஜுனன்}, இந்தக் கௌரவர்களை நிர்மூலமாக்கப் போகிறான். தன் சொந்த குலம் மற்றும் தன் ஆதரவாளர்களை அழிப்பவனும், தீய ஆலோசகர்கள் மற்றும் தீய மனம் கொண்டவனுமான துரியோதனன், கௌரவப்படை நிர்மூலமாக்கப்படுவதைக் கண்டு கவலையால் தன் உயிரை விடப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒப்பற்ற சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவனும், இந்திரனின் மகனுக்கு மகனுமான இவன் {அபிமன்யு} போர்க்களத்தில் கிடப்பதைக் காணும் எனக்கு, வெற்றியோ, அரசுரிமையோ, சாகாத்தன்மையோ, தேவர்களுடன் வசிப்பதோ கூடச் சிறு மகிழ்ச்சியையும் தராது” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனைத் தேற்ற வந்த வியாசர்! – துரோண பர்வம் பகுதி – 050-யுதிஷ்டிரனிடம் வந்த வியாசர்; அபிமன்யுவைக் குறித்துச் சொல்லிப் புலம்பி, மரணத்தைக் குறித்த தன் சந்தேகத்தை வியாசரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் அகம்பனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; மகனை இழந்த மன்னன் அகம்பனன்; அகம்பனனின் துயர் நீக்க வந்த நாரதர்; மரணத்தைக் குறித்து அகம்பனனுக்கு விளக்குவதற்காகப் பிரம்மன் மற்றும் சிவன் குறித்த நிகழ்வொன்றை நாரதர் சொல்ல ஆரம்பித்தது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெரும் முனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அவனிடம் வந்தார். முறையாக வணங்கி அவரை அமரச் செய்த யுதிஷ்டிரன், தன் தம்பி மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் சோகத்தில் பீடிக்கப்பட்டு, “ஐயோ, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடன் போராடிய சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அநீதியில் {மறத்தில்} பற்றுடைய பெரும் தேர்வீரர்கள் பலரால் சூழப்பட்டுக் களத்திலே கொல்லப்பட்டானே. பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, வயதால் குழந்தையாகவும் {பாலகனாகவும்}, குழந்தைத்தனமான புரிதல் கொண்டவனாகவுமே இருந்தான். வெறிகொண்ட முரண்களுக்கு {எதிரிகளுக்கு} எதிராக அவன் போரில் ஈடுபட்டான்.

போரில் எங்களுக்கு ஒரு பாதையைத் திறக்குமாறு {துரோணரின் வியூகத்தைப் பிளக்குமாறு} நானே அவனைக் கேட்டுக் கொண்டேன். பகைவரின் படையினுள் அவன் ஊடுருவினான். ஆனால், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்ட எங்களால் அவனை {அபிமன்யுவைப்} பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஐயோ, போரைத் தங்கள் தொழிலாகக் கொண்டோர், தங்களுக்கு இணையான எதிராளிகளுடனேயே எப்போதும் போரிடுவர். எனினும், பகைவர்கள் அபிமன்யுவுடன் மோதிய போரோ, மிகவும் சமமற்ற ஒன்றாக இருந்தது. அதுவே என்னைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி, என்னிடம் கண்ணீரை வரவழைக்கிறது. இதைச் சிந்திக்கும் நான், என் மன அமைதியை மீட்பதில் தோற்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறப்புமிக்க வியாசர், துன்பத்தை ஏற்று, இருப்பை இழந்து இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், இவ்வார்த்தைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே, அறிவின் கிளைகள் அனைத்திலும் தேர்ச்சியுடையவனே, உன்னைப் போன்றோர், பேரிடர்களால் மலைப்பதில்லை. இந்தத் துணிவுமிக்க இளைஞன் {அபிமன்யு}, எண்ணற்ற எதிரிகளைக் கொன்றுவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான். உண்மையில், அந்த மனிதர்களில் சிறந்தவன் {அபிமன்யு}, (குழந்தையாகவே இருப்பினும்), வயதால் முதிர்ந்தவனைப் போலவே செயல்பட்டிருக்கிறான். ஓ! யுதிஷ்டிரா, இவ்விதியானது மீறப்பட முடியாததாகும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காலனானவன், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரையும் (எந்த விதிவிலக்குமில்லாமல்) எடுத்துக் கொள்கிறான்” என்றார் {வியாசர்}.

அதற்கு யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஐயோ, உணர்வுகளை இழந்து, தங்கள் படைகளுக்கு மத்தியில் கொல்லப்பட்டு வெற்றுப் பூமியில் கிடக்கும் இந்தப் பூமியின் தலைவர்கள் பெரும் வலிமையைக் கொண்டிருந்தனரே. (இவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்த {க்ஷத்திரியர்கள்}) பிறரும் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்கு இணையான பலத்தைக் கொண்டிருந்தனரே. மேலும் பிறரோ, காற்றின் வேகத்தையும் பலத்தையும் கொண்டிருந்தனரே. அவர் அனைவரும் தங்கள் சொந்த வர்க்கத்தினராலேயே {க்ஷத்திரியர்களாலேயே} கொல்லப்பட்டுப் போரில் அழிந்தனர். (தங்கள் சொந்த வர்க்கத்தைத் தவிர) இவர்களைப் போரில் கொல்லும் வேறு எந்த மனிதனையும் நான் காணவில்லை. பெரும் ஆற்றலைக் கொண்ட இவர்கள் பெரும் சக்தியையும் பெரும் வலிமையையும் கொண்டிருந்தனர்.

ஐயோ, தாங்கள் வெல்வோம் என்று தங்கள் இதயங்களில் பொதிந்த உறுதியான நம்பிக்கையுடன் தினமும் போருக்கு வந்தவர்களான இவர்கள், ஐயோ பெரும் விவேகிகளாக இருந்திருப்பினும், (ஆயுதங்களால்) தாக்கப்பட்டு உயிரை இழந்து களத்தில் கிடக்கின்றனரே. பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் இறந்துவிட்டதால், மரணம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் இன்று புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. செருக்கிழந்து எதிரிகளுக்கு அடிபணிந்த இந்த வீரர்கள் இப்போது அசைவற்று கிடக்கின்றனர். பல இளவரசர்கள், கோபத்தால் நிறைந்து, (தங்கள் எதிரிகளின் கோபம் என்ற) நெருப்புக்கு முன்பு பலியாகினர்.

’மரணம் {மிருத்யு} எங்கே இருக்கிறது?’ என்ற பெரும் ஐயம் என்னை ஆட்கொள்கிறது. மரணம் {மிருத்யு} யாருடையது (யாருடைய வாரிசு)? மரணம்  என்பது எது? ஏன் மரணம் உயிரினங்களை எடுத்துக் கொள்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே {வியாசரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவரிடம் இப்படிக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக, அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்}, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “கையிலிருக்கும் இந்தக் காரியம் தொடர்பாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் நாரதர் அகம்பனனிடம் சொன்ன இந்தப் புராதனக் கதையே மேற்கோளாகச் சுட்டப்படுகிறது.

மன்னன் அகம்பனன் [1] இவ்வுலகில் இருந்த போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் மகனின் மரணத்தால் தாங்கமுடியாத சோகத்தில் பெரிதும் பீடிக்கப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தின் தோற்றம் குறித்த இந்த அற்புதக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன். ஓ! ஐயா, இந்தப் புராதன வரலாற்றை நான் உரைக்கையில் நீ கேட்பாயாக. இவ்வரலாறானது உண்மையில் அற்புதமானதாகும். இது வாழ்வின் காலத்தை அதிகரிக்கிறது, சோகத்தைக் கொல்கிறது, உடல் நலத்துக்கும் {ஆரோக்கியத்திற்கும்} உகந்ததாக இருக்கிறது. புனிதமான இது, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை {பாவங்களை} அழித்து, மங்கலமான பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாக இருக்கிறது. உண்மையில், இந்த வரலாறும் வேதங்களைப் படிப்பது போன்றதே ஆகும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட வாழ்நாள் கொண்ட பிள்ளைகளையும், தங்கள் நன்மையையும் விரும்பும் முதன்மையான மன்னர்களால், காலையில் தினந்தோறும் இது {இவ்வரலாறு} கேட்கப்பட வேண்டும்.(இராமாயணத்தில் வரும் அகம்பனன் என்ற அசுரனும் இந்த மன்னனும் வெவ்வேறானவர்கள் .)ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், அகம்பனன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். ஒருமுறை, போர்க்களத்தில், தன் எதிரிகளால் சூழப்பட்ட அவன் {அகம்பனன்}, கிட்டத்தட்ட அவர்களால் அடக்கப்பட்டான். அவனுக்கு, ஹரி என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். வலிமையில் நாராயணனுக்கே இணையான பின்னவன் {ஹரி}, மிக அழகானவனாகவும், ஆயுதங்களில் சாதித்தவனாகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவும், வலிமை கொண்டவனாகவும், போரில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகவும் இருந்தான் [2].(மிகுந்த காந்தியுள்ள அந்த ஹரி, போரில் அந்த நிலைமையை அடைந்திருக்கும் தன் தந்தையைக் கண்டு, மரணத்தைக் குறித்துச் சிந்தியாமல் எதிரிகளுக்கு மத்தியில் நுழைந்தான்”)

போர்க்களத்தில் எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்ட அவன் {ஹரி}, அவ்வீரர்கள் மீதும், தன்னைச் சூழ்ந்து கொண்ட யானைகளின் மீதும் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். போரில் கடினமான பல சாதனைகளை அடைந்த அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹரி}, ஓ! யுதிஷ்டிரா, படைக்கு மத்தியிலேயே இறுதியில் கொல்லப்பட்டான்.

மன்னன் அகம்பனன், தன் மகனுக்கான ஈமக்கடன்களைச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் [3]. எனினும், தன் மகனுக்காகப் பகலும் இரவும் வருந்திய அந்த மன்னன் {அகம்பனன்}, தன் மன மகிழ்ச்சியை மீண்டும் அடைவதில் தோல்வியுற்றான். தன் மகனின் மரணத்தால் அவன் அடைந்திருக்கும் துயரம் குறித்துத் தெரிந்து கொண்ட தெய்வீக முனிவர் நாரதர் அவனிடம் {அகம்பனனிடம்} வந்தார். தெய்வீக முனிவரைக் கண்ட அந்த அருளப்பட்ட மன்னன் {அகம்பனன்}, எதிரிகளிடம் தான் அடைந்த தோல்வியையும், தன் மகனின் கொலையையும், தனக்கு நேர்ந்த அனைத்தையும் பின்னவருக்கு {நாரதருக்குச்} சொன்னான்.

மன்னன் {அகம்பனன் நாரதரிடம்}, “என் மகன் பெரும் சக்தி கொண்டவனாகவும், காந்தியில் இந்திரனுக்கோ, விஷ்ணுவுக்கோ இணையானவனாகவும் இருந்தான். வலிமைமிக்க என் மகன், எண்ணற்ற எதிரிகளை எதிர்த்துக் களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்திய பிறகு இறுதியில் கொல்லப்பட்டான். ஓ! சிறப்புமிக்கவரே, இந்த மரணம் {மிருத்யு} என்பது யார்/எது? அதன் சக்தி, பலம் மற்றும் ஆற்றலின் அளவுதான் என்ன? ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே {நாரதரே}, இது குறித்த அனைத்தையும் நான் உண்மையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அகம்பனன்}.

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வரங்கொடுக்கும் தேவருமான அந்த நாரதர், மகனின் மரணத்தால் உண்டாகும் துயரை அழிப்பதற்கான பின்வரும் விரிவான வரலாற்றை உரைத்தார்.

நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, என்னால் கேட்கப்பட்டதைப் போலவே சரியாக {நான் உரைக்கப்போகும்} இந்த நீண்ட வரலாற்றைக் கேட்பாயாக. தொடக்கத்தில் பாட்டனான பிரம்மன் அனைத்து உயிர்களையும் படைத்தான். வலிய சக்தி படைத்த அவன் {பிரம்மன்}, படைப்புகளானவை அழிவின் எந்தக் குறியீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டான். எனவே, ஓ! மன்னா {அகம்பனா}, அண்டத்தின் அழிவைக் குறித்துப் படைப்பாளன் {பிரம்மன்} சிந்திக்கத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, அக்காரியம் குறித்துச் சிந்திந்த படைப்பாளன் {பிரம்மன்}, அழிவுக்கான எந்த வழியையும் கண்டுபிடிக்கத் தவறினான். அப்போது அவன் கோபமடைந்தான். அந்தக் கோபத்தின் விளைவாக வானத்தில் இருந்து ஒரு நெருப்பு எழுந்தது. அந்த நெருப்பு, அண்டத்தில் உள்ள அனைத்தையும் எரிப்பதற்காக அனைத்துத் திசைகளிலும் பரவியது. பிறகு, சொர்க்கம், வானம், பூமி ஆகிய அனைத்தும் நெருப்பால் நிறைந்தன. இப்படியே, படைப்பாளன் {பிரம்மன்}, அசைவன மற்றும் அசையான ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் முழுமையையும் எரிக்கத் தொடங்கினான். அதன்காரணமாக, அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

உண்மையில், வலிமைமிக்க அந்தப் பிரம்மன், தன் கோபத்தின் பலத்தால் அனைத்தையும் அச்சுறுத்தும்வகையில் இவை அனைத்தையும் செய்தான். பிறகு, தலையில் சடாமுடி கொண்டவனும், இரவு உலாவிகள் அனைவரின் தலைவனும், ஸ்தாணு அல்லது சிவன் என்றும் அழைக்கப்பட்டவனுமான ஹரன், தேவர்களுக்குத் தலைவனான தெய்வீகப் பிரம்மனை வேண்டினான். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிரம்மனின் காலில்) அந்த ஸ்தாணு விழுந்த போது [3], துறவிகளில் சிறந்தவர்களின் உயர்ந்த தேவனான அவன் {பிரம்மன்}, சுடர்மிக்கக் காந்தியுடன், “ஓ! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறத் தகுந்தவனே {ஸ்தாணுவே}, உன் எந்த விருப்பத்தை நாம் சாதிக்க வேண்டும்? ஓ! எம் விருப்பத்தில் பிறந்தவனே, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நாம் செய்வோம். ஓ! ஸ்தாணுவே, உன் விருப்பமென்ன? எமக்குச் சொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.

மரணதேவியான மிருத்யுவின் தோற்றம்! – துரோண பர்வம் பகுதி – 051-கோபத்தைத் தணிக்கும்படி பிரம்மனிடம் கோரிய ஸ்தாணு; பிரம்மனின் புலன்வாசல்களில் இருந்து வெளிப்பட்ட மரணதேவி; தென்திசை நோக்கிச் சென்ற மரணதேவி அழுதது; அவளது கண்ணீரைக் கைகளில் ஏந்திய பிரம்மன்…

ஸ்தாணு {சிவன் பிரம்மனிடம்}, “ஓ! தலைவா {பிரம்மனே}, பல்வேறு உயிரினங்களை நீ பெரும் கவனத்துடன் படைத்திருக்கிறாய். உண்மையில் பல்வேறு விதங்களிலான உயிரினங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டு, உன்னாலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த உயிரினங்களே இப்போது உன் நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இதைக் காணும் நான் இரக்கத்தால் {கருணையால்} நிறைகிறேன். ஓ! ஒப்பற்ற தலைவா {பிரம்மனே}, அருள் பாலிப்பாயாக” என்றான் {ஸ்தாணு-சிவன்}.

அதற்குப் பிரம்மன் {சிவனிடம்}, “அண்டத்தை அழிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் எனக்கில்லை, நான் பூமியின் நன்மையையே விரும்பினேன், அதற்காகவே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது. உயிரினங்களின் பாரத்தால் பீடிக்கப்பட்ட பூமாதேவி, தன்னில் இருக்கும் உயிரினங்களை அழிக்கும்படி என்னை எப்போதும் தூண்டிவந்தாள். எனினும், அவளால் தூண்டப்பட்ட என்னால் எல்லையற்ற படைப்பை அழிப்பதற்கான எந்த வழிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது” என்றான் {பிரம்மன்}.

ருத்ரன் {சிவன் பிரம்மனிடம்}, “அருள்பாலிப்பாயாக. ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, உயிரினங்களின் அழிவுக்காகக் கோபத்தை வளர்க்காதே. உயிர்களில் அசைவன, அசையாதன எதுவும் இனியும் அழிய வேண்டாம். ஓ! ஒப்பற்றவனே, வரப்போவது {எதிர்காலம்}, வந்தது {கடந்த காலம்}, இருப்பது {நிகழ்காலம்} ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த அண்டம் உன் கருணையால் நீடிக்கட்டும். ஓ! தலைவா {பிரம்மனே}, கோபத்தால் நீ சுடர்விட்டெரிகிறாய். அந்த உனது கோபத்தில் இருந்து நெருப்பு போன்ற ஒரு பொருள் இருப்பில் எழுந்தது {தோன்றியது}. அந்நெருப்பே இப்போது மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், அனைத்து வகை மூலிகைகளையும் {தாவரங்களையும்} புற்களையும் எரிக்கிறது. உண்மையில், அந்நெருப்பு, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தை நிர்மூலமாக்குகிறது. அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதன ஆகியவை சாம்பலாகக் குறைக்கப்படுகின்றன. ஓ! ஒப்பற்றவனே அருள்பாலிப்பாயாக. கோபப்படாதே. நான் கேட்கும் வரம் இதுவே.

ஓ! தெய்வீகமானவனே {பிரம்மனே}, உனக்குச் சொந்தமானவையும் படைக்கப்பட்டவையுமான இந்தப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. எனவே, உன் கோபம் தணியட்டும். அஃது {கோப நெருப்பு} உனக்குள்ளேயே அழிந்து போகட்டும். நன்மை செய்யும் விருப்பத்துடன் உனது கண்களை உன் உயிரினங்களின் மேல் செலுத்துவாயாக. உயிரைக் கொண்ட உயிரினங்கள் அழிந்துவிடாதபடி செயல்படுவாயாக. தங்கள் உற்பத்தி சக்திகள் பலவீனப்பட்டு இந்த உயிரினங்கள் அழிந்து போக வேண்டாம். ஓ! உலகங்களைப் படைத்தவனே {பிரம்மனே} நீயே என்னை அவர்களது பாதுகாவலனாக நியமித்தாய். ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் அழியாதிருக்கட்டும். நீ அருள்பாலிப்பவனாவே இருக்கிறாய், அதற்காகவே நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொல்கிறேன்” என்றான் {ருத்ரன்}.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “(மகாதேவனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட தெய்வீகப் பிரம்மன், உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன்னுள் எழுந்த கோபத்தைத் தனக்குள்ளேயே நிறுத்தினான். அந்த நெருப்பை அணைத்தவனும், உலகத்திற்கு நன்மை செய்யும் தெய்வீகமானவனும், பெரும் தலைவனுமான அவன் {பிரம்மன்}, உற்பத்திக்கும், விடுதலைக்கும் {முக்திக்கும்} உண்டான கடமைகளை அறிவித்தான் {சிருஷ்டிக்கும், மோக்ஷத்திற்கும் காரணமான கர்மாவை உண்டாக்கினான்}.

அந்த உயர்ந்த தேவன் {பிரம்மன்}, தன் கோபத்தினால் உண்டான நெருப்பை அணைத்த போது, அவனது பல்வேறு புலன்களின் கதவுகளில் இருந்து, கருப்பு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டவளாகவும், நாக்கு, முகம் மற்றும் கண்கள் சிவந்தவளாகவும், இரண்டு சிறந்த குண்டலங்களாலும், பல்வேறு பிரகாசமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு பெண் தோன்றினாள். அவனது {பிரம்மனின்} உடலில் இருந்து வெளிப்பட்ட அவள், அண்டத்தின் தலைவர்களான அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே, தென்பகுதியை நோக்கிச் சென்றாள். அப்போது உலகங்களின் படைப்பையும், அழிவையும் கட்டுப்படுத்துபவனான பிரம்மன், அவளை மரணம் {மிருத்யு} என்ற பெயரால் அழைத்தான்.

ஓ! மன்னா {அகம்பனா}, பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “இந்த என் உயிரினங்களைக் கொல்வாயாக. (அண்டத்தின்) அழிவுக்காக உண்டான என் கோபத்தில் இருந்தே நீ பிறந்திருக்கிறாய். எனவே என் கட்டளையின் பேரில் இதைச் செய்து, முட்டாள்களும், ஞானிகளும் அடங்கிய உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதைச் செய்வதால் நீ நன்மையை அடைவாய்” என்றான் {பிரம்மன்}.

அவனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்ட அந்தத் தாமரைப் பெண் {மிருத்யு} ஆழமாகச் சிந்தித்து, பிறகு ஆதரவற்றவளாக இனிமையான குரலில் உரக்க அழுதாள். பாட்டன் {பிரம்மன்}, அவள் உதிர்த்த கண்ணீரை உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்காகத் தன் கைகள் இரண்டால் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தைகளால் அவளிடம் மன்றாடத் தொடங்கினான்” {என்றார் நாரதர்}. 

பிரம்மன் மரணதேவி உரையாடல்! – துரோண பர்வம் பகுதி – 052-பிரம்மனிடம் உயிர்களைக் கொல்ல முடியாது என்று சொன்ன மரணதேவி; பல கோடி வருடங்களாகக் கடுந்தவம் செய்த மரணதேவி; பாவம் சேராத வரத்தை பிரம்மனிடம் பெற்ற மரணதேவி உயிரினங்களின் உயிரை எடுக்க ஒப்புக் கொண்டது; நாரதர் சொன்ன கதையைக் கேட்டு அகம்பனன் மனம் நிறைந்தது; யுதிஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்…

நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “அந்த ஆதரவற்ற பெண் {மிருத்யு}, தன் கவலையைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, கொடிபோல அடக்கத்துடன் பணிந்து, படைப்பின் தலைவனிடம் {பிரம்மனிடம்} கூப்பிய கரங்களுடன் பேசினாள். அவள் {மிருத்யு, பிரம்மனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உம்மால் படைக்கப்பட்ட பெண்ணான நான், இந்தச் செயல் குரூரமானது, தீமையானது எனத் தெரிந்திருந்தும் இத்தகு செயலை நான் எவ்வாறு செய்வேன்? அநீதிக்கு {அதர்மத்திற்கு} நான் பெரிதும் அஞ்சுகிறேன். ஓ! தெய்வீகத் தலைவரே {பிரம்மரே}, அருள்பாலிப்பீராக. மகன்கள், நண்பர்கள், சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார் ஆகியோர் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புக்குரியவர்களாக இருக்கின்றனர்; (நான் அவர்களைக் கொன்றால்), இந்த இழப்புகளால் பாதிக்கப்படுவோர் எனக்குத் தீங்கிழைக்க முயல்வர் {தீமையை நினைப்பார்கள்}. அதற்காகவே நான் அஞ்சுகிறேன். துக்கத்தால் பீடிக்கப்பட்ட கண்களில் இருந்து வடியும் கண்ணீரும், அழுது புலம்புவோரும் எனக்கு அச்சத்தையே ஊட்டுகின்றனர். ஓ! தலைவா {பிரம்மரே}, நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்ல மாட்டேன். ஓ! வரங்களை அளிப்பவரே, நான் என் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கூப்பி உமது கருணையை வேண்டுகிறேன். ஓ! உலகங்களின் பாட்டனே {பிரம்மரே}, இந்த {என்} விருப்பத்தை (சாதிக்கவே} நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஓ! படைக்கப்பட்ட பொருள்களின் தலைவரே {பிரம்மரே}, உமது அனுமதியுடன் நான் தவத்துறவுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! பெரும் தலைவா {பிரம்மரே}, இந்த வரத்தை எனக்கு அருள்வீராக. உம்மால் அனுமதிக்கப்படும் நான், தேனுகரின் அற்புத ஆசிரமத்திற்குச் செல்வேன். உம்மைத் துதிப்பதில் ஈடுபட்டு, அங்கே நான் கடுந்தவங்களை மேற்கொள்வேன். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மரே}, கவலையால் அழும் உயிரினங்களுடைய அன்புக்குரியோரின் உயிர் மூச்சை என்னால் எடுக்க இயலாது. அநீதியில் {அதர்மத்தில்} இருந்து என்னைக் காப்பீராக” என்றாள் {மரணதேவி மிருத்யு}.

பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, உயிரினங்களின் அழிவை அடைவதற்காகவே நீ கருதப்பட்டாய் {படைக்கப்பட்டாய்}. எதையும் சிந்திக்காமல் சென்று உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதுவே செய்யப்பட வேண்டும், இது வேறுவிதமாகாது. என் உத்தரவின் படியே செய்வாயாக. இவ்வுலகத்தில் எவரும் உன்னிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள்” என்றான்.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {மிருத்யு}, மிகவும் அச்சமடைந்தவளானாள். பிரம்மனின் முகத்தைப் பார்த்தவாறே அவள் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தாள். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய அவள் {மிருத்யு}, அவர்களின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. அனைத்து உயிர்களின் தலைவனுக்கும் தலைவனான அந்தத் தெய்வீகப் பிரம்மனும் அமைதியுடனே நீடித்தான். பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} தன்னிடமே மனநிறைவு கொண்டான். அவன், படைப்புகள் அனைத்தின் மீதும் தன் கண்களைச் செலுத்திப் புன்னகைத்தான். எனவே, உயிரினங்கள் அகால மரணத்தால் பாதிக்கப்படாமல் முன்பு போலவே வாழத் தொடங்கின. வெல்லப்பட முடியாத அந்தச் சிறந்த தலைவன் {பிரம்மன்}, தன் கோபத்தை விட்டதன் பேரில், அந்தக் காரிகை, விவேகமுள்ள அந்தத் தேவனின் முன்னிலையில் இருந்து சென்றாள்.

உயிரினங்களை அழிக்க ஒப்பாமல் பிரம்மனை விட்டகன்றவளும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்டவளுமான அந்தக் காரிகை {மிருத்யு}, தேனுகம் என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்திற்கு விரைவாகச் சென்றாள். அங்கே சென்ற அவள் {மிருத்யு}, சிறந்த மற்றும் உயர்ந்த தவ நோன்புகளைப் பயின்றாள். அங்கே அவள், உயிரினங்களின் மேல் கொண்ட கருணையாலும், அவற்றுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலும், தன் புலன்களுக்குப் பிடித்தமான பொருட்களில் இருந்து அவற்றை முழுதும் விலக்கி, ஆயிரத்து அறுநூறு கோடி {Sixteen Billion = 1,600,00,00,000} வருடங்களும், அதற்கு மேலும் ஐயாயிரம் கோடி {five times ten billions = 5,000,00,00,000} வருடங்களும் ஒற்றைக்காலில் நின்றாள். ஓ! மன்னா {அகம்பனா}, மேலும் அவள், இருபத்தோராயிரம் கோடி {one and twenty times ten billions = 21,000,00,00,000} வருடங்களுக்கு மீண்டும் ஒற்றைக் காலில் {மற்றொரு காலில்} நின்றாள். பிறகு அவள் {மிருத்யு}, நூறு லட்சம் கோடி வருடங்கள் {ten times ten thousand billions = 100,00,000,00,00,000} (பூமியின்) உயிரினங்களோடு உலவிக் கொண்டிருந்தாள். அடுத்ததாக, குளிர்ந்த தூய நீரைக் கொண்ட நந்தையை {நந்தை நதியை} அடைந்து, அந்நீரிலேயே எட்டாயிரம் {8,000} வருடங்களைக் கடத்தினாள். நந்தையில் கடும் நோன்புகளை நோற்ற அவள், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டாள் [1].

அடுத்ததாக அவள், நோன்புகளை நோற்பதற்காகப் புனிதமான அனைத்திலும் முதன்மையான கௌசிகிக்கு {கௌசிகி நதிக்குச்} சென்றாள். காற்றையும், நீரையும் மட்டுமே கொண்டு வாழ்ந்து, அங்கே தவம் பயின்று, பிறகு, பஞ்சகங்கைக்கும், அடுத்ததாக வேதசகத்திற்கும் சென்ற அந்தத் தூய்மையடைந்த காரிகை {மிருத்யு}, பல்வேறு விதங்களிலான கடுந்தவங்களால் தன் உடலை மெலியச் செய்தாள். அடுத்ததாகக் கங்கைக்கும், அங்கிருந்து பெரும் மேருவுக்கும் சென்ற அவள் {மிருத்யு}, தன் உயிர்மூச்சை நிறுத்தி, கல்லைப் போல அசைவற்றவளாக இருந்தாள். பிறகு, இனிமையானவளும், மங்கலமானவளுமான அந்தப் பெண், (பழங்காலத்தில்) தேவர்கள் தங்கள் வேள்வியைச் செய்த இமயத்தின் உச்சிக்குச் சென்று, நூறு கோடி {a billion = 100,00,00,000} வருடங்களுக்குத் தன் பாதத்தின் கட்டைவிரலில் நின்றிருந்தாள். அதன்பிறகு, புஷ்கரை, கோகர்ணம், நைமிசம், மலையம் ஆகியவற்றுக்குச் சென்ற அவள் {மிருத்யு}, தன் இதயத்துக்கு ஏற்புடைய தவங்களைப் பயின்று தன் உடலை மெலியச் செய்தாள். வேறு எந்தத் தேவனையும் ஏற்காமல், பாட்டனிடம் {பிரம்மனிடம்} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அவள் {மிருத்யு}, அனைத்து வழிகளிலும் பிரம்மனை நிறைவுகொள்ளச் செய்தே வாழ்ந்தாள்.

பிறகு உலகங்களின் மாறாத படைப்பாளன் {பிரம்மன்}, மனநிறைவு கொண்டு, மகிழ்ச்சியான மெல்லிய இதயத்துடன் அவளிடம் {பிரம்மன் மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யு}, இவ்வளவு கடுமையான தவங்களை நீ ஏன் மேற்கொள்கிறாய்?” என்று கேட்டான். இப்படிச்சொல்லப்பட்ட மரணதேவி {மிருத்யு}, தெய்வீகப் பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மரே}, உயிரினங்கள் உடல் நலத்துடன் வாழ்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சொற்களாலும் தீங்கிழைப்பதில்லை. அவற்றை நான் கொல்ல முடியாது. ஓ! தலைவா {பிரம்மரே}, நான் இவ்வரத்தை உம்மிடம் பெற விரும்புகிறேன். நான் பாவத்துக்கு அஞ்சுகிறேன். அதற்காகவே நான் தவத்துறவுகளில் ஈடுபடுகிறேன். ஓ! அருளப்பட்டவரே {பிரம்மரே}, எப்போதும் என் அச்சங்கள் விலகுமாறு செய்யும். துயரத்தில் இருக்கும் பெண்ணான நான், எந்தக் குற்றமும் இல்லாதிருக்கிறேன். நான் உம்மை இரந்து கேட்கிறேன் என்னைப் பாதுகாப்பீராக” என்றாள் {மிருத்யு}.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த தெய்வீகப் பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, இந்த உயிரினங்களைக் கொல்வதால் நீ எந்தப் பாவத்தையும் செய்தவள் ஆகமாட்டாய். ஓ! இனியவளே, என் வார்த்தைகள் பொய்க்காது. எனவே, ஓ! மங்கலக்காரிகையே {மிருத்யுவே}, இந்த நால்வகை உயிரினங்களையும் கொல்வாயாக. நிலைத்த அறம் எப்போதும் உனதாகட்டும். லோகபாலனான யமனும், பல்வேறு நோய்களும் உனக்கு உதவி செய்பவர்களாகட்டும். பாவத்தில் இருந்து விடுபட்டு, முற்றிலும் தூய்மையடையும் நீ மகிமை அடையும் வகையில் நானும், தேவர்களனைவரும் உனக்கு வரங்களை அளிப்போம்” என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை {மிருத்யு}, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, தன் கரங்களைக் கூப்பியபடி, தனக்கு அருள் வேண்டி, அவனிடம் {பிரம்மனிடம்} தன் சிரம் தாழ்த்தி, “ஓ! தலைவா {பிரம்மரே}, “இது நானில்லாமல் நடைபெறாது என்றால், உமது உத்தரவு என் சிரம் மேல் வைக்கப்படட்டும். எனினும், நான் சொல்வதைக் கேளும். பேராசை, கோபம், வன்மம் {தீய நோக்கம்}, பொறாமை, சண்டை, மூடத்தனம், வெட்கமின்மை ஆகியனவும் மற்றும் இன்னும் பிற கடுமையான உணர்வுகளும், உடல்கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களையும் பிளக்கட்டும்” என்றாள் {மிருத்யு} [2].பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, நீ சொன்னது போலவே இருக்கும். அதேவேளையில், உயிரினங்களை முறையாகக் கொல்வாயாக. ஓ! மங்கலமானவளே, பாவம் உனதாகாது, அது போலவே உன்னைக் காயப்படுத்த நான் முயல மாட்டேன் {உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன்}. என் கரங்களில் இருக்கும் உனது கண்ணீர்த் துளிகளே, உயிரினங்களில் நோய்களாக எழும். அவை மனிதர்களைக் கொல்லும்; மனிதர்கள் கொல்லப்பட்டால், அந்தப் பாவம் உனதாகாது. எனவே, அஞ்சாதே, உண்மையில், பாவம் உனதாகாது. நீதிக்கு {அறத்திற்கு} அர்ப்பணிப்புடன், உன் கடமையை நோற்று {செய்து}, (உயிரினங்கள்) அனைத்தையும் நீ ஆள்வாயாக. எனவே, நீ இந்த உயிரினங்களின் உயிர்களை எப்போதும் எடுப்பாயாக. ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் நீ எடுப்பாயாக. இதுவே உனது நிலைத்த {அழியா} அறமாகட்டும். தீய நடத்தை கொண்டோரை பாவமே கொல்லும். என் கட்டளையின்படி செயல்பட்டு, உன்னை நீ சுத்த படுத்திக் கொள்வாயாக. தீயோரை அவர்களது பாவங்களில் மூழ்கடிப்பவள் நீயாகவே இருப்பாய். எனவே, ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிர் கொண்ட இந்த உயிரினங்களைக் கொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “அந்தக் காரிகை {மிருத்யு}, தான் மரணம் என்ற பெயரால் (தொடர்ந்து) அழைக்கப்படுவதைக் கண்டு (வேறுவிதமாகச் செயல்பட) அஞ்சினாள். மேலும், பிரம்மனின் சாபத்துக்கும் அஞ்சிய அவள், “சரி” என்று சொன்னாள். வேறுவிதமாகச் செய்ய முடியாத அவள், ஆசை, கோபம் ஆகியவற்றைத் துறந்து, உயிரினங்களின் (அழிவுக்) காலம் வந்த போது, அவற்றின் உயிரை எடுக்கத் தொடங்கினாள். உயிரினங்களுக்கு மட்டுமே மரணம் ஏற்படுகிறது. வாழும் உயிரினங்களிலிருந்து நோய்களும் எழுகின்றன. நோய் என்பது உயிரினங்களின் இயல்பற்ற நிலையே. அதனால் {நோயால்} அவை வலியை உணர்கின்றன {துன்புறுகின்றன}. எனவே, உயிரினங்கள் இறந்த பிறகு, கனியற்ற {பலனற்ற} துயரத்தில் நீ ஈடுபடாதே. உயிரினங்கள் இறந்ததும், புலன்களும் அவற்றோடு (அடுத்த உலகத்திற்குச்) செல்கின்றன. தங்களுக்கு உரிய இயக்கங்களை அடையும் அவை (அந்த உயிரினங்கள் மீண்டும் பிறக்கும் போது) மீண்டும் வருகின்றன. இப்படியே, ஓ! உயிரினங்களில் சிங்கமே {அகம்பனா}, தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கே சென்று மனிதர்களைப் போலவே செயல்படும் [3].பயங்கர முழக்கங்களும், பெரும் பலமும் கொண்டு, அச்சுறுத்தும் வகையில் உள்ள காற்றானது, எங்கும் இருக்கிறது, எல்லையில்லா சக்தியைக் கொண்டிருக்கிறது. வாழும் உயிரினங்களின் உடல்களை இந்தக் காற்றே பிளக்கின்றது. இக்காரியத்தில் அது {காற்று}, எந்தச் செயலாற்றலையும் வெளிப்படுத்தாது, அதே போல அதன் {உடலின்} இயக்கங்களையும் நிறுத்திவிடாது; (ஆனால் அஃதை {உடலின் இயக்கத்தை நிறுத்துவதை} இயல்பாகவே செய்யும்). தேவர்கள் அனைவரும் கூட மனிதர்களின் பெயர்களைத் தங்களோடு இணைத்துள்ளனர் [4].எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அகம்பனா}, உன் மகனுக்காக வருந்தாதே! உன் மகன் {ஹரி}, வீரர்களுக்குச் சொந்தமான மகிழ்ச்சிகரமான உலகங்களை அடைந்து, நித்திய மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். சோகங்கள் அனைத்தையும் துறந்த அவன், நீதிமான்களின் {தர்மவான்களின்} தோழமையை அடைந்திருக்கிறான். மரணம் என்பது படைப்பாளனாலேயே உயிரினங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் காலம் வந்ததும், உயிரினங்கள் முறையாகக் கொல்லப்படுகின்றன. உயிரினங்களின் மரணம் என்பது அந்த உயிரினங்களிலேயே எழுகிறது. உயிரினங்கள் தங்களைத் தாங்களே கொல்கின்றன. தண்டத்தைத் தரித்து வந்து மரணதேவி யாரையும் கொல்வதில்லை. எனவே, பிரம்மனாலேயை விதிக்கப்பட்டது என்பதால் மரணம் தவிர்க்க முடியாததே என்பதை அறிந்த ஞானியர், இறந்து போன உயிரினங்களுக்காக எப்போதும் வருந்துவதில்லை. உயர்ந்த தேவனாலேயே {பிரம்மனாலேயே} இந்த மரணம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, இறந்து போன உன் மகனுக்காக வருந்துவதைத் தாமதமில்லாமல் விடுவாயாக” {என்றார் நாரதர்}.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நாரதரால் சொல்லப்பட்ட இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் அகம்பனன், தன் நண்பரிடம் {அகம்பனன், நாரதரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே {நாரதரே} என் கவலை தீர்ந்தது. நான் மனநிறைவை அடைந்தேன். இந்த வரலாற்றை உம்மிடம் இருந்து கேட்ட நான், உம்மிடம் நன்றியுள்ளவனாக உம்மை வழிபடுகிறேன்” என்றான் {அகம்பனன்}. மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், மேன்மையான முனிவர்களில் முதன்மையானவரும், அளவிலா ஆன்மாக் கொண்டவருமான அந்தத் தெய்வீகத் துறவி {நாரதர்}, பிறகு, நந்தவக் காட்டுக்குச் {அசோக வனத்திற்குச்} சென்றார்.

அடுத்தவர் கேட்பதற்காக இந்த வரலாற்றை அடிக்கடி உரைத்தலும், இந்த வரலாற்றை அடிக்கடி கேட்டலும், தூய்மைப்படுத்துவதாகவும், புகழுக்கும், சொர்க்கத்திற்கும் வழிநடத்துவதாகவும், பாராட்டத் தகுந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இது, {கேட்பவர் [அ] சொல்பவரின்} வாழ்நாளின் காலத்தையும் {ஆயுளையும்} அதிகரிக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, பொருளுள்ள இந்தக் கதையைக் கேட்டு, க்ஷத்திரியர்களின் கடமைகளையும், வீரர்களால் அடையத்தக்க உயர்ந்த (அருள்) நிலைகளையும் எண்ணி உனது துயரத்தைவிடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த அபிமன்யு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, (எண்ணிலா) எதிரிகளால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். பெரும் வில்லாளியான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, களத்தில் போராடியபடியே, வாள், கதாயுதம், ஈட்டி மற்றும் வில்லால் தாக்குண்டு வீழ்ந்தான். சோமனிலிருந்து எழுந்த அவன், தன் அசுத்தங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டதால், சந்திரனின் சாரத்தில் மறைந்துவிட்டான். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன் மனோபலம் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, உன் புலன்களைச் செயலிழக்க விடாமல், உன் தம்பிகளுடன் கூடி ஊக்கத்துடனும் விரைவாகவும் போரிடச் செல்வாயாக” {என்றார் வியாசர்}.

மரணத்திற்கு வருந்தாதே! – துரோண பர்வம் பகுதி – 053, 054, 055-மரண தேவியின் கதையைக் கேட்டு திருப்தியடையாத யுதிஷ்டிரனுக்கு வியாசர் மேலும் ஒரு நிகழ்வைச் சொல்வது; மன்னன் சிருஞ்சயனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற கள்வர்கள்; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன், சிருஞ்சயனுக்கு மன்னன் மருத்தனின் கதையைச் சொன்ன நாரதர்; மரணத்தைக் குறித்து ஏன் வருந்தக்கூடாது என்பதற்குச் சிருஞ்சயனிடம் நாரதர் சொன்ன விளக்கம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மரணத்தின் {மரணதேவியின்} பிறப்பையும், அவளது விசித்திரமான செயல்பாடுகளையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் வியாசரிடம் பணிவுடன் இந்த வார்த்தைகளைப் பேசினான்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “நற்பேறுபெற்ற நாடுகளில், நீதிமிக்கச் செயல்களைச் செய்பவர்களும், ஆற்றலில் இந்திரனுக்கே நிகரானவர்களுமாகப் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, வியாசரே}, அரசமுனிகளான அவர்கள் பாவமற்றவர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். பழங்காலத்தின் அந்த அரச முனிகளால் செய்யப்பட்ட சாதனைகளைக் கனமான வார்த்தைகளால் சொல்லி என்னை ஆறுதலடையச் செய்வீராக. அவர்களால் அளிக்கப்பட்ட வேள்விக் கொடைகள் என்ன? அதைச் செய்தவர்களான அறம்செய்யும் உயர் ஆன்ம அரச முனிகள் யாவர்? ஓ! சிறப்புமிக்கவரே {வியாசரே}, இவையாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்} [1].வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சுவித்யன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குச் சிருஞ்சயன் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். முனிவர்களான நாரதரும், பர்வதரும் அவனது நண்பர்களாக இருந்தனர். ஒருநாள், அந்தத் துறவிகள் இருவரும், சிருஞ்சயனைச் சந்திப்பதர்காக அவனது அரண்மனைக்கு வந்தனர். சிருஞ்சயனால் முறையாக வழிபடப்பட்ட அவர்கள் அவனிடம் {சிருஞ்சயனிடம்} மனம்நிறைந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம், அந்த இரு துறவிகளுடனும் சிருஞ்சயன் சுகமாக அமர்ந்திருந்த போது, இனிய புன்னகை கொண்ட அவனது அழகிய மகள் அவனிடம் வந்தாள். தன் மகளால் மரியாதையுடன் வணங்கப்பட்ட சிருஞ்சயன், அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டு அவள் விரும்பிய வகையிலேயே முறையான வாழ்த்துகளைச் சொன்னான். அந்தக் கன்னிகையைக் கண்ட பர்வதர் புன்னகையுடன் சிருஞ்சயனிடம், “துருதுரு பார்வையையும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்ட இந்தக் கன்னிகை யாருடைய மகள்? இவள் சூரியனின் ஒளியா? அல்லது அக்னியின் தழலா? அல்லது ஸ்ரீதேவி, ஹ்ரீதேவி, கீர்த்தி, த்ருதி, புஷ்டி, சித்தி ஆகியோரா? அல்லது சோமனின் ஒளியா?” என்று கேட்டார்.

அந்தத் தெய்வீக முனிவர் (பர்வதர்) இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மன்னன் சிருஞ்சயன் {பர்வத முனிவரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே {பர்வதரே}, இந்தப் பெண் எனது மகளாவாள். இவள் என் ஆசிகளை இரந்து கேட்கிறாள்” என்று பதிலுரைத்தான். அப்போது நாரதர் மன்னன் சிருஞ்சயனிடம், “ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, (உனக்கு) பெரும் நன்மையை நீ விரும்பினால், இந்த உன் மகளை மனைவியாக எனக்கு அளிப்பாயாக” என்றார். (முனிவரின் முன்மொழிவால்) மகிழ்ந்த சிருஞ்சயன், நாரதரிடம், “நான் உமக்கு அவளை அளிக்கிறேன்” என்றான்.

இதற்கு, மற்றொரு முனிவரான பர்வதர், நாரதரிடம் கோபத்துடன், “என் இதயத்துக்குள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் காரிகையை, உமது மனைவியாக நீர் கொள்கிறீர். ஓ! பிராமணரே, இதை நீர் செய்ததால், உம் விருப்பப்படி உம்மால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார். இப்படி அவரால் {பர்வதரால்} சொல்லப்பட்ட நாரதர், “கணவனின் {மணமகனின்} இதயம் {மனம்}, (அது சம்பந்தமான) பேச்சு, (கொடுப்பவரின்) சம்மதம், (இருவரின்) பேச்சுகள், நீர் தெளித்துக் கொடுக்கப்படும் உண்மையான தானம், (மணமகளின் கைப்) பற்றுவதற்கு விதிக்கப்பட்டவை (மந்திரங்களை உரைத்தல்) – ஆகிய இந்த அறிகுறிகளே ஒரு கணவனை அமைக்கின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சடங்கே கூட முழுமையாகாது. ஏழு எட்டுகள் {அடிகள்} வைத்து (ஒரு மணமகள், மணமகனை வலம் வருதல்) இவற்றில் (இவை அனைத்திற்கும் மேலாக) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையில்லாமல் (திருமணம் குறித்த) உமது காரியம் அடையப்பட்டதாகாது. {இவற்றை அறிந்தும்} நீர் சபித்திருக்கிறீர். எனவே, நீரும் என்னைவிட்டுவிட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது [2]” என்று பதிலுக்குச் சபித்தார் {நாரதர்}. இப்படி ஒருவரையொருவர் சபித்துக் கொண்ட அந்த முனிவர்கள் இருவரும் தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தனர்.

அதே வேளையில், ஒரு மகனை (அடைய) விரும்பிய மன்னன் சிருஞ்சயன், சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், தன் சக்தியால் முடிந்தவரை,  உணவும், ஆடைகளும் கவனத்துடன் வழங்கி பிராமணர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வேதங்களைப் படிப்பதில் அர்ப்பணிப்புடையவர்களும், சாத்திரங்களை அவற்றின் பிரிவுகளுடன் முழுவதும் அறிந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், மகனை அடைய விரும்பிய அந்த ஏகாதிபதியிடம் {சிருஞ்சயனிடம்} மனம் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக நாரதரிடம் வந்து, அவரிடம், “இந்த மன்னன் விரும்பியவாறு அவனுக்கு ஒரு மகனைக் கொடுப்பீராக” என்றனர். இப்படி அந்தப் பிராமணர்களால் சொல்லப்பட்ட நாரதர், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிறகு, அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்} சிருஞ்சயனிடம், “ஓ! அரசமுனியே {சிருஞ்சயா}, பிராமணர்கள் மனம் நிறைந்து உனக்கு ஒரு மகனை விரும்புகிறார்கள். நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வகையிலான மகனை வரமாகக் கேட்பாயாக” என்றார்.

இப்படி அவரால் சொல்லப்பட்ட அந்த மன்னன், கூப்பிய கரங்களுடன், அனைத்தையும் சாதிப்பவனும், புகழ்பெற்றவனும், மகிமைநிறைந்த சாதனைகளைச் செய்பவனும், பெரும் சக்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் தண்டிக்க இயன்றவனுமான ஒரு மகனைக் கேட்டான். மேலும், அவன் {சிருஞ்சயன்}, அந்தக் குழந்தையின் சிறுநீர், மலம், சளி, வியர்வை ஆகியவை தங்கமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டான். சரியான காலத்தில் அந்த மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் சுவர்ணஷ்டீவின் என்று பூமியில் பெயரிடப்பட்டான் {அழைக்கப்பட்டான்}. மேலும் அந்த வரத்தின் விளைவாக அந்தக் குழந்தை (தன் தந்தையின்) எல்லைகள் அனைத்தையும் மீறி செல்வத்தைப் பெருக்கத் தொடங்கினான். மன்னன் சிருஞ்சயன் தனக்கு விருப்பப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்கத்திலேயே செய்தான். அவனது வீடுகள், சுவர்கள், கோட்டைகள், (அவனது ஆட்சிப்பகுதிக்குள் உள்ள) பிராமணர்கள் அனைவரின் வீடுகள், அவனது படுக்கைகள், வாகனங்கள், தட்டுகள், குடங்கள், குடுவைகள், அவனுக்குச் சொந்தமான இடங்கள், மேலும் அவனது கருவிகள் அனைத்தும், அரண்மனைக்கு உள்ளும் புறமும் இருந்த பாத்திரங்கள் ஆகிய அனைத்தும் தங்கத்தாலேயே செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அவனது {தங்க} கையிருப்பும் அதிகரித்தது.

இளவரசனைக் குறித்துக் கேள்விப்பட்ட சில கள்வர்கள் ஒன்றுகூடி, அவன் அப்படி {செழிப்பாக} இருப்பதைக் கண்டு, அந்த மன்னனுக்குத் தீங்கிழைக்க முனைந்தனர். அவர்களில் சிலர், “நாம் மன்னனின் மகனையே கைப்பற்றுவோம். அவனே அவனது தந்தையின் தங்கச்சுரங்கமாவான். எனவே, அதை {அவனை} நோக்கிய நாம் முயல்வோம்.“ என்றனர். பிறகு, பேராசையால் தூண்டப்பட்ட அந்தக் கள்வர்கள் மன்னனின் அரண்மனைக்குள் ஊடுருவி, இளவரசன் சுவர்ணஷ்டீவினைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.

இப்படி அவனைக் கைப்பற்றிய பிறகு காட்டுக்குத் தூக்கிச் சென்ற அந்த அறிவற்ற மூடர்கள், பேராசையால் உந்தப்பட்டு, அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல், அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அவனை {சுவர்ணஷ்டீவினை} அங்கேயே கொன்றனர். எனினும், அவனிடம் தங்கம் எதையும் அவர்கள் காணவில்லை. இளவரசன் கொல்லப்பட்ட பிறகு, முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தங்கம் அனைத்தும் மறைந்தன. அறியாமை கொண்டவர்களும், அறிவற்றவர்களுமான அந்தக் கள்வர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அவர்கள் அழிந்தனர், அவர்களோடு சேர்ந்து பூமியில் இருந்த அந்த அற்புத இளவரசனும் அழிந்தான். தீச்செயல்களைச் செய்த அம்மனிதர்கள் கற்பனைக்கெட்டாத பயங்கர நரகத்தில் மூழ்கினர்.

முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் துறவியான மன்னன் சிருஞ்சயன், கவலையால் ஆழப் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமான குரலில் அழுது புலம்பத் தொடங்கினான். தன் மகனின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்ட மன்னன் {சிருஞ்சயன்}, இப்படி அழுவதைக் கண்ட தெய்வீக முனிவரான நாரதர், அவன் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஓ! யுதிஷ்டிரா, துயரத்தால் பீடிக்கப்பட்டு, புலன்களை இழந்து இப்படிப்பட்ட பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனை {சிருஞ்சயனை} அணுகி, அந்தச் சிருஞ்சயனிடம் நாரதர் என்ன சொன்னார் என்பதைக் கேட்பாயாக.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “சிருஞ்சயா, பிரம்மத்தை உச்சரிப்பவர்களான நாங்கள் உன் இல்லத்தில் வாழ்ந்தும், உன் விருப்பங்கள் ஈடேறாமல் இறக்கப் போகிறாய். ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகன் மருத்தனும் இறக்க வேண்டியிருந்தது என்று நாம் கேள்வி படுகிறோம். பிருஹஸ்பதியிடம் கோபம்   கொண்ட அவன் {மருத்தன்} சம்வர்த்தரைக் கொண்டு தன் பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த அரசமுனியிடம் {மருத்தனிடம்}, சிறப்பு மிக்கத் தலைவனே (மகாதேவனே), இமயத்தின் தங்கப் பீடபூமியின் வடிவில் செல்வத்தைக் கொடுத்தான். (அந்தச் செல்வத்தைக் கொண்டு) மன்னன் மருத்தன் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

இந்திரனின் துணையுடனும், பிருஹஸ்பதியின் தலைமையிலும் தேவர்களில் பல்வேறு இனங்களான அந்த அண்டப் படைப்பாளர்கள், தன் வேள்விகளை முடித்த அவனிடம் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். அவனது வேள்வி மண்டபத்தில் இருந்த விரிப்புகள் மற்றும் அறைகலன்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. உணவை விரும்பிய மறுபிறப்பாள {பிராமண} வர்க்கங்கள் அனைவரும், தங்கள் விருப்பத்துக்கு உகந்த சுத்தமான உணவை மனநிறைவுடன் அவனது வேள்விகளில் உண்டனர். அவனது வேள்விகள் அனைத்திலும், பால், தயிர், தெளிந்த நெய், தேன், பிறவகைகளிலான உணவுகள், உண்ணக்கூடியவை அனைத்திலும் சிறந்தவை, ஆடைகள், விலைமதிப்பின் காரணமாக {தவறாக} விரும்பப்படும் ஆபரணங்கள் ஆகியவை வேதங்களை முழுமையாக அறிந்த பிராமணர்களை மனம்நிறையச் செய்தன. மன்னன் மருத்தனின் அரண்மனையில் தேவர்களே உணவைப் பரிமாறுபவர்களாக இருந்தனர். அவிக்ஷித்தின் மகனான அந்த அரசமுனிக்கு {மருத்தனுக்கு}, விஸ்வதேவர்களே சேவகர்களாக இருந்தனர். தெளிந்த நெய்யால் காணிக்கையளிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் அவனிடம் மனநிறைவு கொண்டனர். (அதனால்) மனம் நிறைந்த அவர்கள், தங்கள் பங்குக்கு, அந்தப் பலமிக்க ஆட்சியாளனின் {மருத்தனின்} பயிர் செல்வத்தை அபரிமிதமான மழைப்பொழிவால் அதிகரித்தனர்.

அவன் {மருத்தன்} எப்போதும், முனிவர்கள், பிதுர்கள், தேவர்கள் ஆகியோர் நிறைவடையும் வகையில் காணிக்கைகளை அளித்தும், பிரம்மச்சரியம், வேத கல்வி, ஈமக்கடன் சடங்குகள் ஆகியவற்றை நோற்றும் அனைத்து விதமான தானங்களை அளித்தும் அவர்களை மகிழ்வூட்டினான். அவனது படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், கொடுப்பதற்குக் கடினமான அவனது பரந்த தங்கக் கிடங்குகள் ஆகியவையும், உண்மையில் சொல்லப்படாத அவனது செல்வங்களும் தன்னார்வத்துடன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டாதல் சக்ரனே {இந்திரனே} அவனுக்கு நன்மையை விரும்பினான். அவனது குடிகள் {குடிமக்கள்} (அவனால்) மகிழ்ச்சிப்படுத்தப்பட்டனர். எப்போதும் அர்ப்பணிப்போடு {பக்தியோடு} செயல்பட்ட அவன் {மருத்தன்}, (இறுதியில்) தான் அடைந்த அறத் தகுதிகளின் மூலம் அழியாமல் நிலைக்கும் அருள் உலகங்களை அடைந்தான். மன்னன் மருத்தன், தன் பிள்ளைகள், அமைச்சர்கள், மனைவியர், வழித்தோன்றல்கள், சொந்தங்கள் ஆகியோருடனும், இளமையுடனும் ஆயிரம் வருடங்களுக்குத் தன் நாட்டை ஆண்டான். ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களால் (தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றில்) உனக்கும் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீக்கும்} மிக மேன்மையான அத்தகு மன்னனே {மருத்தனே} இறந்தான் எனும்போது, ஓ! சுவைத்யா {சுவித்யனின் மகனே சிருஞ்சயா}, எந்த வேள்வியோ, எந்த வேள்விக் கொடையோ செய்யாத உன் மகனைக் குறித்து வருந்தாதே” என்றார் {நாரதர்}.

மன்னன் சுஹோத்திரன்! – துரோண பர்வம் பகுதி – 056-மன்னன் சுஹோத்திரனின் கதையைச் சொன்ன நாரதர்; சுஹோத்திரன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் நாட்டின் செழிப்பு; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் சுஹோத்ரனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {மன்னன் சுஹோத்திரன்} வீரர்களில் முதன்மையானவனாகவும், போரில் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான். அவனைக் காண தேவர்களே வந்தனர். அறத்தால் தன் அரசை அடைந்த அவன் {சுஹோத்திரன்}, தன் நன்மைக்காக ரித்விக்குகள், அரண்மனைப் புரோகிதர்கள் மற்றும் பிராமணர்களின் அறிவுரைகளை நாடி, அவர்களை விசாரித்து, அவர்களது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தான். தன் குடிகளைக் காக்கும் கடமையை நன்கு அறிந்த மன்னன் சுஹோத்திரன் அறம் மற்றும் ஈகையுடன், வேள்விகள் செய்து, எதிரிகளை அடக்கித் தன் செல்வத்தைப் பெருக்க விரும்பினான்.

அவன் சாத்திர விதிகளைப் பின்பற்றித் தேவர்களை வணங்கினான். தன் கணைகளின் மூலம் அவன் {சுஹோத்ரன்} தன் எதிரிகளை வீழ்த்தினான். தன் சிறந்த சாதனைகளின் மூலம் அவன் உயிரினங்கள் அனைத்தையும் நிறைவு கொள்ளச் செய்தான். அவன் {சுஹோத்ரன்}, மிலேச்சர்களிடம் இருந்தும், காட்டுக் கள்வர்களிடமும் இருந்தும் பூமாதேவியை விடுவித்து, அவளை ஆண்டான்.

மேகங்களின் தேவன் {இந்திரன்}, அவனிடம் {அவனது நாட்டில்} வருடா வருடம் தங்கத்தையே மழையாகப் பொழிந்தான். எனவே, அந்தப் பழங்காலத்தில், (அவனுடைய நாட்டில் உள்ள) ஆறுகளில் தங்கமே (நீராகப்) பாய்ந்தது. மேலும் அஃது {ஆறுகளில் உள்ள தங்கம்} அனைவரும் பயன்படுத்தும்படி திறந்தே இருந்தது. மேகங்களின் தேவன் {இந்திரன்} அவனது {சுஹோத்ரனின்} நாட்டில் {குருஜாங்கலத்தில்}, பெரும் எண்ணிக்கையிலான முதலைகள், நண்டுகள், பல்வேறு இனங்களிலான மீன்கள், விருப்பத்துக்குகந்த எண்ணற்ற பல்வேறு பொருட்கள் ஆகியவை அனைத்தையும் தங்கமயமாகவே பொழிந்தான்.அந்த மன்னனின் {சுஹோத்ரனின்} ஆட்சிப் பகுதிகளில் இருந்த செயற்கைத் தடாகங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மைல்கள் நீளத்திற்கு [1] இருந்தன. மன்னன் சுஹோத்திரன், ஆயிரக்கணக்கான குள்ளர்கள், கூன்முதுகர்கள் [2], முதலைகள், மகரங்கள், ஆமைகள் ஆகியவை அனைத்தும் தங்கமயமாகவே இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அரசமுனியான அந்தச் சுஹோத்ரன், குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து தங்கத்தாலான அந்த அளவற்ற செல்வத்தை, வேள்வி முடியுமுன்பே பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தான்-ஆயிரம் குதிரை வேள்விகள் {அஸ்வமேதயாகங்கள்}, நூறு ராஜசூயங்கள், பல புனிதமான க்ஷத்திரிய வேள்விகள் ஆகியவற்றைச் செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளித்து, குறிப்பிட்ட விருப்பங்களுக்காகச் செய்பவையும் கிட்டத்தட்ட எண்ணற்றவையுமானத் தன் தினச் சடங்குகளைச் செய்த அந்த மன்னன் {சஹோத்ரன்}, இறுதியில் மிகவும் விரும்பத்தக்க ஒரு முடிவை அடைந்தான்.

ஓ சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு}மிகவும் மேம்பட்டவனுமான அந்த மன்னனே {சுஹோத்திரனே} இறந்தான் எனும்போது,  எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் பௌரவன்! – துரோண பர்வம் பகுதி – 057-மன்னன் பௌரவனின் கதையைச் சொன்ன நாரதர்; பௌரவன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, வீர மன்னன் பௌரவனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {பௌரவன்}, வெண்ணிறம் கொண்ட ஆயிரம் {1000} குதிரைகளை ஆயிரம் {1000} முறை தானமளித்திருக்கிறான். அந்த அரசமுனியால் {பௌரவனால்} நடத்தப்பட்ட குதிரைவேள்வியில், சிக்ஷை மற்றும் அக்ஷரங்களின் விதிகளை நன்கறிந்தவர்களான [1] எண்ணற்ற பிராமணக் கல்விமான்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தனர். வேதங்கள், அறிவு, நோன்புகள் ஆகியவற்றால் தூய்மையடைந்து, பரந்த மனப்பான்மையும், இனிய தோற்றமும் கொண்ட இந்தப் பிராமணர்கள், மன்னனிடம் இருந்து, ஆடைகள், வீடுகள், சிறந்த படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், இழுவைக் கால்நடைகள் ஆகியவை போன்ற விலையுயர்ந்த தானங்களைப் பெற்று, தேர்ந்தவர்களும், வேடிக்கை செய்ய எப்போதும் முனைபவர்களும், (தங்களுக்குரிய கலைகளை) நன்கறிந்தவர்களுமான நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், பாடகர்கள் ஆகியோரால் எப்போதும் மகிழ்விக்கப்பட்டனர்.

அவன் {பௌரவன்}, தனது ஒவ்வொரு வேள்வியிலும், தங்கள் உடல்களில் மதநீர் ஒழுகுபவையும், பொன்மயமான பிரகாசம் கொண்டவையுமான பத்தாயிரம் {10000} யானைகளையும், கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் கூடிய தங்கத்தாலான தேர்களையும் சரியான நேரத்தில் வேள்விக்கொடைகளாகக் கொடுத்தான்.

தங்க ஆபரணங்கள் பூண்ட ஆயிரம் {1000} கன்னியர், ஏறிப்பயணிக்கத் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவை, வீடுகள், வயல்கள், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும், நூற்றுக்கணக்கான பசுக்கள், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இடையர்கள் ஆகியவற்றையும் வேள்விப் பரிசுகளாக அவன் {பௌரவன்} தானமளித்தான். கடந்த கால வரலாற்றை அறிந்தோர், “தங்கக் கொம்புகள், வெள்ளிக் குளம்புகள், வெண்கலப் பால்குடங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கன்றுகளுடன் கூடியவையுமான பசுக்கள், எண்ணற்ற வகையில், வேலைக்காரிகள், வேலைக்காரர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் ஆகியவற்றையும், பல்வேறு வகை ரத்தினங்கள், மலைபோன்ற பலவகை உணவுகளையும் மன்னன் பௌரவன் அந்த வேள்வியில் அளித்தான்” என்ற இந்தப் பாடலைப் பாடுகின்றனர் [2].வேள்விகள் செய்பவனான அந்த அங்கர்களின் மன்னன் {பௌரவன்}, விருப்பத்திற்குரிய பொருள்கள் அனைத்தையும் தரவல்லவையும், தன் சொந்த வர்க்கத்திற்குத் தகுந்தவையும், அவற்றின் தன்மையின் வரிசைப்படியும் பல மங்கல வேள்விகளைச் செய்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கும் மேம்பட்டவனான அத்தகு மன்னனே {அந்தப் பௌரவனே} இறந்தான். அவன் உனக்கும் மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனாவான். உன் மகன் {சுவர்ணஷ்டீவின்} எந்த வேள்வியையும் செய்ததில்லை, வேள்விக் கொடை எதையும் அளித்ததும் இல்லை எனும்போது, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் சிபி! – துரோண பர்வம் பகுதி – 058-உசீநரனின் மகனான மன்னன் சிபியின் கதையைச் சொன்ன நாரதர்; சிபி செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் ருத்ரனிடம் அடைந்த வரம்; அவனது மரணம்

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {சிபி}, பூமியைச் சுற்றிலும் தோல் கச்சையால் சுற்றியதைப் போல, மலைகள், தீவுகள், கடல்கள், காடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தான். எதிரிகளை வெல்பவனான மன்னன் சிபி, எப்போதும் தன் முதன்மையான எதிரிகளைக் கொன்று வந்தான். அவன் {சிபி}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை அளித்துப் பல வேள்விகளைச் செய்தான். பெரும் ஆற்றலும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அந்த ஏகாதிபதி {சிபி} மகத்தான செல்வத்தை அடைந்தான். போரிலோ அவன் க்ஷத்திரியர்கள் அனைவரின் பாராட்டுதலையும் வென்றான்.

முழுப் பூமியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன் {சிபி}, ஆயிரங்கோடி தங்க நிக்ஷங்களையும், பல யானைகள், குதிரைகள் மற்றும் பிற வகை விலங்குகளையும், மிகையான தானியங்களையும், பல மான்கள் மற்றும் ஆடுகளையும் (வேள்விக் கொடையாகக்) கொடுத்து பெரும் புண்ணியத்தை அடையச்செய்யும் குதிரை வேள்விகள் பலவற்றை எந்தத் தடங்கலுமின்றிச் செய்தான். மன்னன் சிபி, பல்வேறு வகை நிலங்களைக் கொண்ட புனிதமான பூமியை பிராமணர்களுக்குக் கொடுத்தான்.

உண்மையில் உசீநரனின் மகனான சிபி, பூமியில் விழுந்த மழைத்துளிகளின் எண்ணிக்கை அளவுக்கோ, ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவுக்கோ, மணற்துகள்களின் எண்ணிக்கையின் அளவுக்கோ, மேரு என்று அழைக்கப்படும் மலையில் அமைந்த பாறைகளின் எண்ணிக்கையின் அளவுக்கோ, ரத்தினங்களின் அளவுக்கோ, பெருங்கடலில் உள்ள (நீர்வாழ்) விலங்குகள் அளவுக்கோ பசுக்களைத் தானமளித்தான். மன்னன் சிபி சுமந்ததைப் போன்ற சுமைகளைச் சுமக்க இயன்ற வேறு எந்த மன்னனையும் படைப்பாளனே சந்தித்ததில்லை; அல்லது கடந்த காலத்திலோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கூடச் சந்திக்கமாட்டான்.

அனைத்துவகைச் சடங்குகளையும் கொண்ட வேள்விகள் பலவற்றை மன்னன் சிபி செய்தான். அவ்வேள்விகளில், யூபஸ்தம்பங்கள், விரிப்புகள், வீடுகள், சுவர்கள், வளைவுகள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. {அங்கே} இனிமையான சுவையும், முற்றான தூய்மையும் கொண்ட உணவும் நீரும் அபரிமிதமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கே சென்ற பிராமணர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாகவே எண்ணப்பட முடியும். அனைத்து வகை உணவுப் பொருட்களும் நிரம்பியிருந்த அந்த இடத்தில், தானமளிக்கப்படுகிறது, எடுத்துக் கொள்ளுங்கள் என்ற ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே கேட்கப்பட்டன. பாலும், தயிரும், பெரும் தடாகங்களில் திரட்டப்பட்டன.

“விரும்பியவாறு குளியுங்கள், குடியுங்கள், உண்ணுங்கள்” என்ற வார்த்தைகள் மட்டுமே அங்கே கேட்கப்பட்டன. அவனது நீதிமிக்கச் செயல்களால் {தர்ம செயல்களால்} மனம்நிறைந்த ருத்ரன் {சிவன்}, சிபிக்கு, “கொடுக்கக் கொடுக்க, உன் செல்வமும், உன் அர்ப்பணிப்பும், உன் புகழும், உன் அறச்செயல்களும், உயிரினங்கள் அனைத்திடமும் நீ காட்டும் அன்பும், (நீ அடையப் போகும்) சொர்க்கமும் வற்றாததாக {குறையாததாக} இருக்கட்டும்” என்ற வரத்தை அளித்தான். விரும்பக்கூடிய இந்த வரங்கள் அனைத்தையும் அடைந்த சிபியும் கூட, அவன் காலம் வந்ததும், இந்த உலகத்தைவிட்டுச் சொர்க்கம் சென்றான்.

ஓ! சிருஞ்சயா, உனக்கு மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனான அவனே {அந்தச் சிபியே} இறந்தான் எனும்போது. எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

ராமராஜ்ஜியம்! – துரோண பர்வம் பகுதி – 059-தசரதனின் மகனான ராமனின் கதையைச் சொன்ன நாரதர்; அசுரர்களையும் ராவணனையும் கொன்ற ராமன்; அவன் செய்த வேள்விகள்; அநீதியான போக்கு, பேராசை, அறியாமை, பிணி ஆகியவையற்ற ராமராஜ்ஜியத்தின் மகிமை; ராமன் சொர்க்கம் புகுந்தது…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம்.

தன் மடியில் பிறந்த மக்களிடம் {பிள்ளைகளிடம்} மகிழ்ச்சி கொள்ளும் ஒரு தந்தையைப் போல அவனது குடிமக்கள் அவனிடம் மகிழ்ச்சி கொண்டனர். அளவிலா சக்தி கொண்ட அவனிடம் {ராமனிடம்} எண்ணற்ற நற்குணங்களும் இருந்தன. லக்ஷ்மணனின் அண்ணனான அந்த மங்காப் புகழ் கொண்ட ராமன், தனது தந்தையின் கட்டளையின் பேரில், தன் மனைவியுடன் {சீதையுடன்} பதினான்கு ஆண்டுக் காலம் காட்டில் வாழ்ந்தான். அந்த மனிதர்களில் காளை {ராமன்}, துறவிகளின் பாதுகாப்புக்காக ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். அங்கே {ஜனஸ்தானத்தில்} வசித்தபோது, ராவணன் என்று அழைக்கப்பட்ட ராட்சசன், அவனையும் {ராமனையும்}, அவனது தோழனையும் (லக்ஷ்மணனையும்) வஞ்சித்து, விதேஹ இளவரசியான அவனது {ராமனது} மனைவியை {சீதாவை} அபகரித்துச் சென்றான்.

முக்கண்ணன் (மகாதேவன்), பழங்காலத்தில் (அசுரன்) அந்தகனைக் கொன்றதைப் போலக் கோபத்தில் ராமன், அதற்கு முன் எந்த எதிரியிடமும் வீழாத புலஸ்திய குலத்தின் குற்றவாளியைப் {இராவணனைப்} போரில் கொன்றான். உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமன், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தாலும் கொல்லப்பட முடியாதவனும், தேவர்கள் மற்றும் பிராமணர்களுக்கு முள்ளாக இருந்த இழிந்தவனும், புலஸ்திய குலத்தின் வழித்தோன்றலுமான அந்த ராட்சசனை {இராவணனை}, அவனது சொந்தங்கள், அவனைப் பின்தொடர்பவர்கள் ஆகியோரோடு சேர்த்துப் போரில் கொன்றான்.

தன் குடிகளைக் கருணையோடு நடத்தியதன் விளைவாக, ராமனைத் தேவர்களும் வழிபட்டனர். தன் சாதனைகளால் முழுப் பூமியையும் நிறைத்த அவன் {ராமன்} தெய்வீக முனிவர்களாலும் மிகவும் புகழப்பட்டான். அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்த அந்த மன்னன் {ராமன்}, பல்வேறு நாடுகளை அடைந்து, தன் குடிகளை அறத்தோடு பாதுகாத்து, எந்தத் தடங்கலும் இல்லாத ஒரு பெரும் வேள்வியை நடத்தினான். அந்தத் தலைவன் ராமன், நூறு குதிரை வேள்விகளையும், ஜாரூத்யம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியையும் நடத்தினான். தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகச் செலுத்தி இந்திரனை அவன் மகிழ்வித்தான் [1]. இப்படிப்பட்ட தன் செயல்களால் ராமன், உயிரினங்களுக்கு நேரும் பசி, தாகம் மற்றும் அனைத்து நோய்களையும் வென்றான். அனைத்துச் சாதனைகளையும் கொண்ட அவன் {ராமன்}, தன் சக்தியாலேயே எப்போதும் சுடர்விட்டுப் பிரகாசித்தான். உண்மையில், தசரதனின் மகனான அந்த ராமன், உயிரினங்கள் அனைத்தையும் விடப் பெரிதும் பிரகாசித்தான்.ராமன் தன் நாட்டை ஆண்டபோது, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும் பூமியில் ஒன்றாகவே வாழ்ந்தனர். உயிரினங்களின் வாழ்வும் வேறுமாதிரியாகவில்லை {பலவீனமடையவில்லை}. ராமன் தன் நாட்டை ஆண்ட போது, பிராணன், அபானன், சமானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளும், இன்னும் பிறவும் [2] தங்கள் செயல்பாடுகளை {சரியாகச்} செய்தன. ஒளிக்கோள்கள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்ந்தன. பேரிடர் ஏதும் நேரவில்லை-அவனது குடிமக்கள் நீண்ட வாழ்நாளோடு வாழ்ந்தனர். இளமையில் எவரும் மாளவில்லை. இதனால் மிக்க நிறைவு கொண்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, நான்கு வேதங்களின் {விதிகளின்} படி, மனிதர்களால் அவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படும் நெய், உணவு ஆகியவற்றை அடைந்தனர். அவனது {ராமனின்} ஆட்சிப்பகுதிகளில் ஈக்களோ, கொசுக்களோ, இரைதேடும் விலங்குகளோ, நஞ்சுமிக்க ஊர்வனவோ எதுவும் இல்லை [3]. அநீதியான போக்கு, பேராசை, அறியாமை ஆகியவற்றைக் கொண்ட எவரும் அங்கு இல்லை. அனைத்து (நான்கு) வகைக் குடிமக்களும், நீதிமிக்க இனிமையான செயல்பாடுகளிலேயே ஈடுபட்டனர்.-அதே வேளையில், ஜனஸ்தானத்தில் பிதுர்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளையும், தேவர்களை வழிபடுவதையும் தடுத்துக் கொண்டிருந்த ராட்சசர்களைக் கொன்ற தலைவன் ராமன், அந்தக் காணிக்கைகளும், வழிபாடுகளும் மீண்டும் பிதுர்களுக்கும், தேவர்களுக்கும் அளிக்கப்படும்படி ஆவன செய்தான். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைத் தங்கள் வாழ்நாளாகக் கொண்டு வாழ்ந்தனர். முதியவர்கள் தங்களின் இளையவர்களுக்கு எப்போதும் சிராத்தம் செய்ததில்லை [4].இளமையான வடிவமும், அடர்நீல நிறமும், சிவந்த கண்களும், மதயானையின் நடையும், கால் முட்டுகளை அடையும் கரங்களும் {மிக நீண்ட கைகள்}, சிங்கம் போன்ற அழகிய, பெரிய தோள்களும், பெரும் பலமும் கொண்ட ராமன், அனைத்து உயிர்களாலும் அன்புடன் விரும்பப்பட்டு, பதினோராயிரம் {11,000} ஆண்டுகளுக்குத் தன் நாட்டை ஆண்டான். அவனது {ராமனது} குடிமக்கள் எப்போதும் அவனது பெயரை உச்சரித்தனர். ராமன் தன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது உலகமே மிக அழகாக ஆனது. இறுதியாகப் பூமியில் தன் குலவழியைக் கொண்ட எட்டு வீடுகளை நிறுவிய பிறகு [5], தன் நால்வகைக் குடிகளையும் [6] தன்னுடன் அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான்.ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ராமனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் பகீரதன்! – துரோண பர்வம் பகுதி – 060-பகீரதனின் கதையைச் சொன்ன நாரதர்; கங்கையை மகளாய் அடைந்த பகீரதன்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும் இறந்ததாகவே நாம் கேட்டிருக்கிறோம். கங்கையின் கரைகளைத் தங்கத்தால் ஆன படித்துறைகளால் மறைத்து, அவற்றைத் தன் பெயரால் “பாகீரதம்” [1] என்று அழைக்கச் செய்தான்.மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரையும் விஞ்சிய அவன் {பகீரதன்}, தங்க அபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆயிரம் {1000} காரிகையரை பிராமணர்களுக்கு ஆயிரம் முறை தானமளித்தான். அந்தக் காரிகையர் அனைவரும் தேர்களில் இருந்தனர். ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருக்குப் பின்பும் நூறு {100} பசுக்கள் இருந்தன. ஒவ்வொரு பசுவுக்கு பின்பும் (பல) செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.

மன்னன் பகீரதன், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான். அந்தக் காரணத்துக்காகவே பெரும் மனிதக் கூட்டம் அங்கே கூடியது. இதனால் பீடிக்கப்பட்ட கங்கை வலியை மிகுதியாக உணர்ந்து, “என்னைக் காப்பாயாக” என்று சொல்லி அவனது {பகீரதனின்} மடியில் அமர்ந்தாள். பழங்காலத்தில் இப்படிக் கங்கை அவனது மடியில் அமர்ந்ததால், எப்படித் தெய்வீக நர்த்தகி ஊர்வசி அவனது மகளாக அறியப்பட்டாளோ, அதே போல அவளும் {கங்கையும்} அவனது {பகீரதனது} பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்பட்டாள். மன்னனின் மகளான அவள் {கங்கை}, (ஒரு மகனைப் போல அவனது மூதாதையருக்கு முக்தி அளித்ததன் விளைவாக) அவனது மகனாகவும் [2] ஆனாள்.இனிமையான பேச்சும், தெய்வீக ஒளியும் கொண்ட கந்தர்வர்கள் மனம்நிறைந்து போய், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவை யாவையும் பாடினர். இப்படியே, ஓ! சிருஞ்சயா, பெருங்கடலை அடையும் கங்கா தேவி, (பிராமணர்களுக்கு) அபரிமிதமான பரிசுகளுடன் வேள்விகளை நடத்தியவனும், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலுமான தலைவன் பகீரதனைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்தாள்.

அவனது வேள்விகள் எப்போதும் இந்திரனின் தலைமையான தேவர்களால் (அவர்களின் இருப்பால்) அருளப்பட்டிருந்தன. தேவர்கள், அந்த வேள்விகளுக்கு உதவும் பொருட்டுத் தடைகள் அனைத்தையும் அகற்றித் தங்களுக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

பெரும் தவத்தகுதியைக் கொண்ட பகீரதன், பிராமணர்கள் விரும்பிய நன்மைகளை, அவர்களை அசையவிடாமல், அவர்கள் எங்கிருந்து கேட்டனரோ அங்கேயே கொடுத்தான். பிராமணர்களுக்குக் கொடுக்கமுடியாதது என அவனிடம் ஏதும் இருக்கவில்லை. அனைவரும் தாங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவனிடம் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக அந்த மன்னன் {பகீரதன்}, பிராமணர்களின் அருள் மூலமாகப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தான். சூரியனின் கதிர்களிலேயே வாழ்ந்த முனிவர்கள் எந்நோக்கத்திற்காகச் சூரியனிடமும், சூரியனின் அதிதேவதையிடமும் {பணிவிடை செய்யக்} காத்திருந்தனரோ, அதே நோக்கத்திற்காக மூவுலகங்களின் ரத்தினமான தலைவன் பகீரதனுக்காகவும் அவர்கள் காத்திருந்தனர் [3].ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பகீரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் திலீபன்! – துரோண பர்வம் பகுதி – 061-மன்னன் திலீபனின் கதையைச் சொன்ன நாரதர்; திலீபனின் பெருமை; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, ஹபிலனின் {Havila or Hvala} மகனான திலீபனும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவனது {திலீபனின்} நூற்றுக்கணக்கான வேள்விகளில், உண்மை அறிவை உறுதியாகக் கொண்டவர்களும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், குழந்தைகளாலும், பிள்ளைகளின் குழந்தைகளாலும் அருளப்பட்டவர்களுமான பிராமணர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாக இருந்தனர்.

பல்வேறு வேள்விகளைச் செய்த மன்னன் திலீபன், புதையல்களால் {செல்வங்களால்} நிறைந்த இந்தப் பூமியைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். திலீபனின் வேள்விகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன [2]. இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட, அவனையே {திலீபனையே} தர்மனாகக் கருதி அவனிடம் வந்தனர். அவனது {திலீபனது} வேள்விக்கம்புகளின் மேல் மற்றும் கீழ் வளையங்கள் {யூபத்தின் சஷாலம் ப்ரஷாலம் என்ற இரண்டு வளையங்களும்} தங்கத்தாலானவையாக இருந்தன. அவனது வேள்விகளில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பிற உணவுகளை {ரகக் காண்டவங்களை Raga-Khandavas} உண்ட பலர் சாலையில் படுத்துக் கிடந்தனர் [3].திலீபன் நீரில் போரிடும்போது, அவனது தேர்ச்சக்கரங்கள் இரண்டும் எப்போதும் நீரில் மூழ்கியதில்லை. இது மிக ஆச்சரியமானதாகவும் வேறு எந்த மன்னர்களுக்கும் நேராததாகவும் இருந்தது. உறுதிமிக்க வில்லாளியும், எப்போதும் உண்மை பேசுபவனும், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைத் தானமளிப்பவனுமான மன்னன் திலீபனை எவரும் கண்டாலே கூட, அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்றனர் {சொர்க்கத்தையே அடைந்தனர்}. கட்வாங்கன் {Khattanga or Khattwanga என்றும் அழைக்கப்பட்ட திலீபனின் வசிப்பிடத்தில், “வேதம் ஓதும் ஒலி, விற்களின் நாணொலி, குடிப்பீர், மகிழ்வீர், உண்பீர்” என்ற இந்த ஐந்து ஒலிகள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {திலீபனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் மாந்தாதா! – துரோண பர்வம் பகுதி – 062-மன்னன் மாந்தாதாவின் கதையைச் சொன்ன நாரதர்; மாந்தாதா பிறந்த விதம்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வன் மகனான மாந்தாதாவும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கருவறையில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர்.-ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், அவனது குதிரைகளும் மிகவும் களைத்துப் போயிருந்தன. {தூரத்தில்} புகைச்சுருளைக் கண்ட அம்மன்னன் {யுவனாஸ்வன்}, (அதனைப் பின்பற்றி) ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் [2]. (இதனால் அந்த மன்னன் கருவுற்றான்). குழந்தையைக் கொண்டிருக்கும் அந்த மன்னன் யுவனாஸ்வனைக் கண்டு, தேவர்களில் சிறந்த மருத்துவர்களான அசுவினி இரட்டையர்கள்,  அவனது கருவறையில் இருந்து அந்தக் குழந்தையை வெளிக்கொணர்ந்தனர்.-தன் தந்தையின் {யுவனாஸ்வனின்} மடியில் தெய்வீகப் பிரகாசத்துடன் இருந்த அந்தக் குழந்தையை {மாந்தாதாவைக்} கண்ட தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் {எதை உண்டு} வாழும்?” என்று வினவினர். அப்போது வாசவன் {இந்திரன்}, “குழந்தை என் விரல்களை உறிஞ்சட்டும்” என்றான். அதன் பேரில், அமுதம் போன்ற இனிமையான பாலை இந்திரனின் விரல்கள் சுரந்தன. இந்திரன் தன் கருணையால், “இவன், தன் பலத்தை என்னிடமே பெற்றுக் கொள்வான்” என்று சொல்லி அவனிடம் {மந்தாதாவிடம்} அன்பு கொண்டதால் தேவர்கள் அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயரிட்டனர் [3]. பிறகு, உயர் ஆன்ம இந்திரனின் கரங்களில் இருந்து யுவனாஸ்வன் மகனுடைய {மந்தாதாவினுடைய} வாயில் தாரை தாரையாகப் பாலும், தெளிந்த நெய்யும் கொட்டின.அந்தச் சிறுவன் {மாந்தாதா}, இந்திரனின் கரத்தைத் தொடர்ச்சியாக உறிஞ்சி, அதன் மூலமே வளர்ந்தான். பனிரெண்டு {12} நாட்களிலேயே அவன் {மந்தாதா} பனிரெண்டு {12} முழ உயரத்தையும், பெரும் ஆற்றலையும் அடைந்தான் [4]. அவன் முழு உலகத்தையும் ஒரே நாளில் வென்றான். அறம் சார்ந்த ஆன்மாவும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்டு, வீரனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமாக இருந்த அந்த மாந்தாதா, தன் வில்லைக் கொண்டு, ஜனமேஜயன், சூதன்வான், ஜயன் {கயன்}, சுனன் {பூரு} [5], பிருஹத்ரதன், நிருகன் ஆகியோரை வென்றான். சூரியன் உதிக்கும் மலைக்கும் {உதய மலைக்கும்}, அவன் {சூரியன்} மறையும் மலைக்கும் {அஸ்த மலைக்கும்} இடையில் கிடக்கும் நிலம் மாந்தாதாவின் ஆட்சிப்பகுதி {மாந்தாதாக்ஷேத்ரம்} என்றே இந்நாள் வரை அறியப்படுகிறது.நூறு குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்த அவன் {மாந்தாதா}, ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, பத்து யோஜனை நீளமும், ஒரு யோஜனை அகலமும் உள்ள தங்கத்தாலான ரோகித மீன்களைக் பிராமணர்களுக்குத் தானமளித்தான் [6]. பிராமணர்களை உபசரித்த பிறகு, (அவனது வேள்விகளுக்கு வந்த) பிறர், சுவையான உணவு மற்றும் பல வகைத் தின்பண்டங்களாலான மலைகளை உண்டு, மேலும் {தங்களுக்குக் கிடைத்த} பங்களிப்புகளாலும் மனம் நிறைந்தனர். பெரும் அளவிலான உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவையும், அரிசிகளாலான {சோற்று} மலைகளும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தன. தெளிந்த நெய்யைத் தடாகங்களாகவும், பல்வேறு வகைகளிலான ரசங்களைத் தங்கள் சேறாகவும், தயிரைத் தங்கள் நுரையாகவும், பாயசங்களைத் தங்கள் நீராகவும் கொண்டு அழகாகத் தெரிந்த பல {பான} ஆறுகள், தேனையும் பாலையும் வீசிக்கொண்டு, உணவுப் பொருள்களாலான திடமான மலைகளைச் சுற்றி வளைத்தன.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் மற்றும் பறவைகளும், வேதங்களையும் அவற்றின் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்த பிராமணர்கள் பலரும், முனிவர்கள் பலரும் அவனது {மாந்தாதாவின்} வேள்விக்கு வந்தனர். அங்கே இருந்தவருள் கற்றறியாதவர்களாக எவரும் இல்லை. ஆழி சூழ் உலகையும் {கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்}, செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கு அளித்த மன்னன் மாந்தாதா, இறுதியாகத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் தன் புகழால் நிறைத்தபடி, அறவோர் உலகங்களை அடைந்து, சூரியனைப் போல மறைந்து போனான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாந்தாதாவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் யயாதி! – துரோண பர்வம் பகுதி – 063-மன்னன் யயாதின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; ஆசைகளைத் துறந்த யயாதி காட்டுக்குச் சென்றது; அவனது மரணம்

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். நூறு ராஜசூயங்களையும், நூறு குதிரை வேள்விகளையும், ஆயிரம் பௌண்டரீகங்களையும், நூறு வாஜபேயங்களையும், ஆயிரம் அதிராத்திரங்களையும், எண்ணிலடங்கா சாதுர்மாஸ்யங்களையும், பல்வேறு அக்நிஷ்டோமங்களையும், இன்னும் பலவித வேள்விகள் பிறவற்றையும் அவன் செய்தான். அவை அனைத்திலும் பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான்.மிலேச்சர்கள், பிராமணர்களை வெறுப்போர் ஆகியோரிடம் பூமியில் நிலைத்திருந்த செல்வங்கள் அனைத்தையும் முதலில் எண்ணிப் பார்த்த அவன் {யயாதி}, {அவற்றைக் கவர்ந்து} பிராமணர்களுக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்தான். தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்த போது, மன்னன் யயாதி தேவர்களுக்கு உதவி செய்தான்.

பூமியை நான்கு பகுதிகளாகப் பிரித்த அவன் {யயாதி}, அவற்றை நான்கு மனிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வேள்விகளைச் செய்து, (தன் மனைவியரான) உசனஸின் {சுக்கிரனின்} மகளான தேவயானியிடமும், சர்மிஷ்டையிடமும் சிறந்த வாரிசுகளைப் பெற்றவனும், தேவனைப் போன்றவனுமான மன்னன் யயாதி, தெய்வீகச் சோலைகளில் இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போலத் தன் விருப்பப்படித் திரிந்தான்.

வேதங்கள் அனைத்தையும் அறிந்த அவன் {யயாதி}, ஆசைகளில் ஈடுபட்டாலும் கூட நிறைவடையாத நிலையைக் கண்டு, தன் மனைவியரிடம், “இந்தப் பூமியில் நெல், கோதுமை {தானியம்}, தங்கம், விலங்குகள், பெண்கள் ஆகியவை எவ்வளவு உண்டோ, அவ்வளவும் கூட {எதுவும்} ஒரு மனிதனுக்குப் போதுமானதாக இருக்காது {நிறைவைத் தராது}. இதையெண்ணும் ஒருவன், மனநிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிக் காட்டுக்குச் சென்றான். இப்படியே தன் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து மனநிறைவை அடைந்த தலைவன் யயாதி, (தன் மகனை {பூருவை}), அரியாசனத்தில் நிறுவிவிட்டுக் காட்டுச் சென்றான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {யயாதியே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் அம்பரீஷன்! – துரோண பர்வம் பகுதி – 064-மன்னன் அம்பரீஷன் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த போர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {அம்பரீஷன்} தனி ஒருவனாகவே ஆயிரம் மன்னர்களுடன் ஆயிரம் முறை போரிட்டிருக்கிறான். வெற்றியை விரும்பியவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களுமான அந்த எதிரிகள், கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை {அம்பரீஷனை} எதிர்த்துப் போருக்கு விரைந்தனர்.

அவன் {அம்பரீஷன்}, தன் பலம், சுறுசுறுப்பு, பயிற்சியின் மூலம் தான் அடைந்த திறம் ஆகியவற்றின் துணையாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், அந்த எதிரிகளின் குடைகள், ஆயுதங்கள், கொடிமரங்கள், தேர்கள், வேல்கள் ஆகியவற்றை வெட்டித் தன் துயரைக் களைந்து கொண்டான். தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பிய அம்மனிதர்கள் {அந்த எதிரிகள்}, தங்கள் கவசங்களைக் களைந்து, (கருணைக்காக) அவனை {அம்பரீஷனை} வேண்டிக் கொண்டனர். “எங்களை நாங்கள் உம்மிடம் அளிக்கிறோம் {சரணடைகிறோம்}” என்று சொல்லி அவர்கள் அவனது பாதுகாப்பை வேண்டினர்.

அவர்களை அடக்கி, முழு உலகத்தையும் வென்ற அவன் {அம்பரீஷன்}, ஓ! பாவமற்றவனே {சிருஞ்சயா}, சிறந்த வகையிலான நூறு வேள்விகளைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி செய்தான். (அவ்வேள்விகளில்) அனைத்து வகையிலும் இனிமையான தரம் கொண்ட உணவுவகைகள், பெரும் எண்ணிக்கையிலான மக்களால் உண்ணப்பட்டது. அவ்வேள்விகளில், பிராமணர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, பெரிதும் நிறைவு செய்யப்பட்டனர். இன்பண்டங்கள் {மோதகங்கள்}, பூரிகள், அப்பளங்கள், சுவைமிகுந்த பெரிய முறுக்குகள், தேன்குழல்கள், மாக்கலந்த தயிர்ப்பச்சடிகள், பல்வேறு ருசியுள்ள தின்பண்டங்கள், பல்வேறு வகைகளிலான ரசங்கள், பல்வேறு தானியங்கள் கலந்த சோறு, சர்க்கரைப் பொங்கல், நன்கு தயாரிக்கப்பட்ட வாசனைமிகுந்த மென்மையான பணியாரங்கள், தெளிந்த நெய், தேன், பால், நீர், இனிய மோர், இனிமையான சுவை கொண்ட கனிகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை மறுபிறப்பாள {பிராமண} வர்க்கத்தினர் உண்டனர்.

மேலும் மது பழக்கம் கொண்டவர்கள், இன்பமடையவேண்டி பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டிருந்த போதையூட்டும் பானங்களை அதற்குரிய நேரத்தில் குடித்துத் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடினர். தாங்கள் குடித்தவற்றால் அதீதமாகப் போதையுண்ட சிலரைத் தவிர ஆடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அம்பரீஷனைப் புகழ்ந்து பாடிக் கொண்டுமிருந்தனர். அதேவேளையில் பிறரோ {அதீத போதையுண்டவர்கள்}, தங்களை நிலையாக நிறுத்திக் கொள்ள முடியாமல் பூமியில் விழுந்தனர் [1].அவ்வேள்விகளில் மன்னன் அம்பரீஷன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் நாடுகளை (தன்னால் வேள்விகளில் நியமிக்கப்பட்டிருந்த) நூறு லட்சம் {10 Million – 10,000,000} புரோகிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வகையான வேள்விகளைச் செய்து முடித்த அந்த மன்னன் {அம்பரீஷன்}, புனித நீராடிய மணிமுடி கொண்டவர்களும், தங்கக் கவசமணிந்திருந்தவர்களும், தங்கள் தலைக்குமேலே வெண்குடை கொண்டவர்களும், தங்கத் தேரில் அமர்ந்திருந்தவர்களும், அற்புத ஆடைகள் அணிந்திருந்தவர்களும், தொண்டர்கள் பலரைக் கொண்டவர்களும், செங்கோலைக் கொண்டவர்களும், பொக்கிஷங்களையுடையவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான இளவரசர்களையும், மன்னர்களையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.

அவன் செய்ததைக் கண்டப் பெரும் முனிவர்கள் மிகவும் மகிழ்ந்து, “தாராளக் கொடை தரும் மன்னன் அம்பரீஷன் இப்போது செய்வதைப் போல, கடந்த காலத்து மனிதர்களில் எவரும் செய்ததில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்ய முடியாது” என்றனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {அம்பரீஷனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் சசபிந்து! – துரோண பர்வம் பகுதி – 065-மன்னன் சசபிந்துவின் கதையைச் சொன்ன நாரதர்; அவனுடைய மனைவிகளும், பிள்ளைகளும்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் சசபிந்துவும் {Sasavindu} [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். பெரும் அழகும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலும் கொண்ட அவன் {சசபிந்து}, பல்வேறு வேள்விகளைச் செய்தான். அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {சசபிந்து} நூறாயிரம் {ஒரு லட்சம்- 100,000} மனைவியரைக் கொண்டிருந்தான். அந்த மனைவியர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் {1000} மகன்கள் பிறந்தனர்.அந்த இளவரசர்கள் அனைவரும் பெரும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் கோடிக்கணக்கான வேள்விகளைச் செய்தனர். வேதங்களை அறிந்தோரான அம்மன்னர்கள் {சசபிந்துவின் பிள்ளைகள்} முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தனர். (போர் நேரும் போதெல்லாம்) அவர்கள் அனைவரும் தங்கக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்தனர். சசபிந்துவுக்குப் பிறந்த இந்த இளவரசர்கள் அனைவரும் குதிரை வேள்விகளையும் செய்தனர்.

அவர்களது தந்தையான {சசபிந்து}, தான் செய்த குதிரை வேள்விகளில், தன் மகன்களான அவர்கள் அனைவரையும் (வேள்விக் கொடைகளாக) பிராமணர்களுக்குத் தானம் செய்தான். அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் நூறு நூறாகத் தேர்களும், யானைகளும், தங்க ஆபரணங்கள் பூண்ட அழகிய கன்னிகையரும் இருந்தனர். ஒவ்வொரு கன்னிகையுடன் நூறு யானைகளும்; ஒவ்வொரு யானையுடன் நூறு தேர்களும், ஒவ்வொரு தேருடன் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளும் இருந்தன. அந்தக் குதிரைகள் ஒவ்வொன்றுடனும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவுடன் ஐம்பது ஆடுகளும் இருந்தன.

உயர்வாக அருளப்பட்டிருந்த சசபிந்து, அந்தப் பெரும் குதிரை வேள்வியில் தன் அளவிலா செல்வங்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவனுடைய பிற குதிரை வேள்விகளில், மரத்தினால் எவ்வளவு வேள்விக்கம்புகள் {யூபஸ்தம்பங்கள்} இருந்தனவோ, அவற்றை விட எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அதிகமாக, தங்கத்தாலான வேள்விக்கம்புகளை அந்தப் பெரும் குதிரை வேள்வியில் ஊன்றச் செய்தான். இரண்டு மைல்கள் உயரத்திற்கு உணவுகளாலும், பானகங்களாலும் ஆன மலைகள் அங்கே இருந்தன. அவனது குதிரை வேள்வி முடிந்த போது, உணவாலும், பானகங்களாலும் ஆன அது போன்ற பதிமூன்று மலைகள் (கைப்படாமல்) மிஞ்சின [2]. அவனது நாடு, நன்கு உண்டு, மனநிறைவுடன் இருந்த மக்களால் நிறைந்திருந்தது. அது {அந்த நாடு} தீமையான அத்துமீறல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருந்தது, மக்களும் முற்றான மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். {தன் நாட்டைப்} பல நீண்ட வருடங்களுக்கு ஆட்சி செய்த சசபிந்து, இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {சசபிந்துவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் கயன்! – துரோண பர்வம் பகுதி – 066-மன்னன் கயனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, அமார்த்தரயசின் {Amartarayas} [1] மகன் கயனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {கயன்}, வேள்வி நெருப்பில் காணிக்கையாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யில் எஞ்சுவதைத் தவிர வேறு எதையும் நூறு ஆண்டுகள் உண்ணாதிருந்தான். (அவனது பெரும் அர்ப்பணிப்பின் சான்றால் மனம் நிறைந்த) அக்னி அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முன்வந்தான்.கயன், “தவத்துறவுகளாலும், பிரம்மச்சரியம் பயில்வதன் மூலமும், நோன்புகள், விதிகள் மற்றும் எனக்கு மேன்மையானவர்களின் அருளின் மூலமும் வேதங்களைக் குறித்த முற்றான அறிவை நான் அடைய விரும்புகிறேன் [3]. என் வகைக்குரிய {க்ஷத்திரியக்} கடமைகளைச் செய்து, பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் வற்றாத செல்வத்தை அடைய விரும்புகிறேன். பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் பரிசளிக்கவும் விரும்புகிறேன். என் வகையைச் சேர்ந்த {க்ஷத்திரிய} மனைவியரிடமே நான் மகன்களைப் பெற வேண்டுமே அன்றி வேறெவரிடமும் வேண்டாம். அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உணவைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும். என் இதயம் எப்போதும் அறத்திலேயே {நீதியிலேயே} மகிழ்வடைய வேண்டும். ஓ! உயர்வான தூய்மையாளனே (அக்னியே), அறத்தகுதியை {புண்ணியங்களை} ஈட்ட நான் செயல்களில் ஈடுபடும்போது எந்த இடையூறும் என்னை அணுகாதிருக்கட்டும்” என்று கேட்டான் {கயன்}. “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அக்னி அங்கேயே அப்போதே மறைந்தான்.தான் கேட்ட அனைத்தையும் அடைந்த கயன், நியாயமான போரில் தன் எதிரிகளை அடக்கினான். பிறகு மன்னன் கயன், முழுமையாக நூறு வருடங்களுக்கு, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளுடனும், சாதுர்மாஸ்யங்கள் என்று அழைக்கப்படும் நோன்புகளுடனும் இன்னும் பிறவற்றுடனும் பல்வேறு வகைகளிளான வேள்விகளைச் செய்தான்.

ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும், அந்த மன்னன் {கயன்} (தன் வேள்விகளின் முடிவில்) எழுந்து (பிராமணர்களுக்கு) நூற்று அறுபதாயிரம் {1,60,000 ஒரு லட்சத்து அறுபதாயிரம்} பசுக்களையும், பத்தாயிரம் குதிரைகளையும், ஒரு கோடி தங்கத்தையும் (நிஷ்கங்களையும்) கொடுத்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தின் போதும் அவன் {கயன்} அந்தச் சந்தர்ப்பத்திற்கு விதிக்கப்பட்ட பரிசுகளைத் தானமளித்தான். உண்மையில் அந்த மன்னன் {கயன்} மற்றொரு சோமனைப் போலவோ, மற்றுமொரு அங்கீரசைப் போலவோ பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

மன்னன் கயன், அவனது பெரும் குதிரை வேள்வியில் ஒரு தங்கப் பூமியை உண்டாக்கி அவளை {அந்தப் பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவ்வேள்வியில் மன்னன் கயனின் வேள்விக்கம்புகள் {யூபஸ்தூபங்கள்} அனைத்தும் தங்கத்தாலானவையாக, மிகுந்த விலைமதிப்புள்ளனவையாக, அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிக்கும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையாக இருந்தன. அனைத்து ஆசைகளையும் கொல்ல {அழிக்க} இயன்ற கயன், மனம் நிறைந்திருந்த பிராமணர்களுக்கும், பிற மக்களுக்கும் அந்த வேள்விக்கம்புகளை {யூபஸ்தம்பங்களைக்} கொடுத்தான்.

பெருங்கடல், காடுகள், தீவுகள், ஆறுகள், நீர்நிலைகள், நகரங்கள், மாகாணங்கள், சொர்க்கம் ஆகியவற்றில் வசித்த ஆண் மற்றும் பெண் உயிரினங்களில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்தவர் அனைவரும் கயனின் வேள்விகளில் விநியோகிக்கப்பட்ட செல்வத்தாலும் உணவாலும் மிகவும் மனம்நிறைந்தனர். அவர்கள் அனைவரும், “கயனின் இந்த வேள்வியைப் போல வேறு எந்த வேள்வியும் கிடையாது” என்றனர். கயனின் வேள்விப்பீடமானது முப்பது யோஜனைகள் நீளமும், இருபத்தாறு யோஜனைகள் அகலமும், இருபது யோஜனைகள் உயரமும் கொண்டதாக இருந்தது. மேலும் அது முற்றிலும் தங்கத்தாலானதாகவும், முத்துகள், வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவன் {கயன்} இந்த வேள்விப்பீடத்தையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

அந்த மகத்தான ஏகாதிபதி {கயன்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டுள்ள பிறவகைப் பரிசுகளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த வேள்வியின் முடிவில், ஆடைகளையும், ஆபரணங்களையும் தவிர, இருபத்தைந்து உணவு மலைகளும், பல தடாகங்களும், சுவைமிக்கச் சாறுகள் கொண்ட பானகங்களால் அழகாகப் பாய்ந்து கொண்டிருந்த பல ஓடைகளும் தொடப்படாமல் எஞ்சின. அந்த வேள்வியின் புண்ணியத்தின் விளைவாக, மூவுலகிலும் கயன் நன்றாக அறியப்பட்டான். அந்த வேள்வியின் காரணமாகவே நித்தியமான ஆலமரமும், புனிதமான பிரம்மசரசும் இருக்கின்றன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {கயனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் ரந்திதேவன்! – துரோண பர்வம் பகுதி – 067-மன்னன் ரந்திதேவனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் [1] மகன் ரந்திதேவனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த உயர் ஆன்ம மன்னன் {ரந்திதேவன்}, தன் வீட்டுக்கு {அரண்மனைக்கு} விருந்தினர்களாக வரும் பிராமணர்களுக்கு, அமிர்தத்தைப் போன்ற சிறந்த உணவை இரவிலும், பகலிலும் பரிமாறுவதற்காக இருநூறாயிரம் {இரண்டு லட்சம் 2,00,000} சமையற்கலைஞர்களைக் கொண்டிருந்தான்.அந்த மன்னன் {ரந்திதேவன்}, நியாயமான வழிகளில் ஈட்டிய தன் செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். வேதங்களைக் கற்ற அவன், தன் எதிரிகளை நியாயமான போரின் மூலம் அடக்கினான். கடும் நோன்புகளை நோற்று, முறையான வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் அவனிடம் {ரந்திதேவனிடம்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பும் எண்ணற்ற விலங்குகள் தானாக வந்து சேர்ந்தன [3]. அந்த மன்னனின் {ரந்திதேவனின்} அக்னிஹோத்ரத்தில் பலியிடப்படும் விலங்குகளின் பெரும் எண்ணிக்கையால், அவனது மடைப்பள்ளியில் {சமையலறையில்} தேக்கப்படும் தோற்குவியல்களில் இருந்து பாயும் சுரப்புகள் உண்மையான ஆறு ஒன்றையே உண்டாக்கிய காரணத்தால், அது {அந்த ஆறு} சர்மண்வதி என்று அழைக்கப்படலாயிற்று [4].“நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்”, “நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகளையே அவன் இடையறாது உச்சரித்துக் கொண்டு, பிராமணர்களுக்குப் பிரகாசமான தங்கத்தாலான நிஷ்கங்களை {பொன் நாணயங்களை} இடையறாமல் தானமளித்துக் கொண்டிருந்தான். “நான் உமக்குக் கொடுக்கிறேன்”, “நான் உமக்குக் கொடுக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே ஆயிரக்கணக்கான நிஷ்கங்களை அவன் தானமளித்தான். பிராமணர்களிடம் மென்மையான வார்த்தைகளைப் பேசும் அவன், மீண்டும் மீண்டும் நிஷ்கங்களைத் தானமளித்தான்.

ஒரே நாளில் இது போன்ற ஒரு கோடி நாணயங்களைத் தானமளித்த பிறகு, தான் மிகக் குறைவாகவே தானமளித்திருப்பதாக அவன் எண்ணினான். எனவே, மீண்டும் மீண்டும் அவன் தானமளித்துக் கொண்டிருந்தான். அவன் தானமளித்த அளவுக்குத் தானமளிக்க இயன்றவன் வேறு எவன் இருக்கிறான்? அந்த மன்னன் {ரந்திதேவன்}, “பிராமணர்களின் கைகளில் நான் செல்வத்தைக் கொடுக்கவில்லை என்றால் [5], நிலையான பெரும் துயரம் எனதாகும் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணியே செல்வத்தைத் தானமளித்தான்.-அவன் {ரந்திதேவன்}, நூறாண்டுகளில் ஒவ்வொரு அரைத்திங்களிலும் {பக்ஷத்திலும்}, ஆயிரம் பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காளையையும், அதைத் தொடர்ந்து நூறு பசுக்களையும், நிஷ்கங்களில் எண்ணூறு துண்டுகளையும் கொடுத்தான் [6]. அவனது அக்னிஹோத்ரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அவனது பிற வேள்விகளுக்குத் தேவைப்பட்டவை அனைத்தையும், காருகங்கள் {கமண்டலங்கள்}, நீர்க்குடங்கள், தட்டுகள், படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், மாளிகைகள், வீடுகள், பல்வேறு விதங்களிலான மரங்கள், பல்வேறு விதங்களிலான உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் அவன் {ரந்திதேவன்} முனிவர்களுக்குத் தானமளித்தான். ரந்திதேவன் கொண்டிருந்த உடைமைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாகவே இருந்தன.பழங்காலத்து வரலாறுகளை அறிந்தோர், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ரந்திதேவனின் செல்வாக்கைக் கண்டு, “இப்படித் திரண்டிருக்கும் செல்வத்தை நாங்கள் குபேரனின் வசிப்பிடத்திலும் கண்டதில்லை எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்ற பாடலைப் பாடினர். வியந்து போன மக்களும், “ரந்திதேவனின் நாடும் தங்கத்தாலானதுதான் ஐயமில்லை” என்று பேசிக் கொண்டனர் [7].ரந்திதேவனின் வசிப்பிடத்தில் விருந்தினர்கள் கூடியிருக்கும் அத்தகு இரவுகளில், (அவர்களுக்கு உணவிடுவதற்காக) இருபத்தோராயிரம் பசுக்கள் [8] பலியிடப்பட்டன. எனினும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரச சமயற்கலைஞர்கள், “நீங்கள் விரும்பிய அளவுக்கு ரசத்தைப் பருகுங்கள், பிற நாட்களில் உள்ளதைப் போல இன்று இறைச்சி அதிகமில்லை” என்று சொல்ல வேண்டியிருந்தது.ரந்திதேவனுக்குச் சொந்தமாக எஞ்சியிருந்த தங்கத்தையும், தன் வேள்விகளில் ஒன்று நடந்து கொண்டிருந்த போது, அந்த எஞ்சியதையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். நெருப்பில் காணிக்கையாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது, அவன் {ரந்திதேவன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவற்றைத் தேவர்களும், சிராத்தங்களில் அளிக்கப்படும் உணவைப் பிதுர்களும் பெற்றுக் கொண்டனர். மேன்மையான பிராமணர்கள் அனைவரும் அவர்களது விருப்பங்கள் அனைத்தையும் {அவற்றால் நிறைவடையும் வழிகளை} அவனிடம் அடைந்தனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ரந்திதேவனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மாமன்னன் பரதன்! – துரோண பர்வம் பகுதி – 068-துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.பெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற்றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.

பெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.உன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மாமன்னன் பிருது! – துரோண பர்வம் பகுதி – 069-வேனனின் மகனான மன்னன் பிருதுவின் கதையைச் சொன்ன நாரதர்; உழவற்ற புராதனச் சமுதாயம்; பிருது செய்த பெரும் குதிரை வேள்வி; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான மன்னன் பிருதுவும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் செய்த ராஜசூய வேள்வியில், பெரும் முனிவர்கள் அவனை (உலகின்) பேரரசனாக நிறுவினார்கள். அவன் {பிருது} அனைவரையும் வீழ்த்தினான், அவனது சாதனைகள் (உலகமெங்கிலும்) அறியப்பட்டன. இதன் காரணமாக அவன் பிருது (கொண்டாடப்படுபவன்) என்று அழைக்கப்பட்டான். மனிதர்கள் அனைவரையும் காயங்கள் மற்றும் தீங்குகளில் இருந்து காத்ததனால், அவன் உண்மையான க்ஷத்திரியனானான் [1]. வேனனின் மகனான பிருதுவைக் கண்ட அவனது குடிகள் அனைவரும், “நாங்கள் இவனிடம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றனர். தன் குடிமக்களிடம் அவன் அடைந்த இந்தப் பாசத்தின் விளைவால் அவன் “ராஜா” என்று அழைக்கப்பட்டான் [2].பிருதுவின் காலத்தில், உழாமலே பூமியானது போதுமான பயிர்களை விளைவித்தது. மேலும் பசுக்கள் அனைத்தும், அவற்றைத் தொடும்போதெல்லாம் பாலைச் சுரந்தன. தாமரைகள் அனைத்தும் தேனால் நிரம்பியிருந்தன. குசப் புற்கள் {தர்ப்பை} அனைத்தும் தங்கத்தாலானவையாக, தீண்டுதற்கு இனிமையானவையாக, பின்னும் காண்பதற்கும் இனிமையானவையாக இருந்தன. பிருதுவின் குடிகள் அனைவரும் தங்கள் ஆடைகளையும், தாங்கள் கிடக்கும் படுக்கைகளையும் அந்தப் புற்களிலேயே உண்டாக்கினர் [3]. கனிகள் அனைத்தும் மென்மையானவையாகவும், இனிமையானவையாகவும், (சுவையில்) அமுதத்துக்கு நிகரானவையாகவும் இருந்தன. இவையனைத்தும் அவனது குடிகளின் உணவாகின. அவர்களில் யாரும் பட்டினியால் வாடவில்லை.பிருதுவின் காலத்தில் மனிதர்கள் அனைவரும் {உடல்} நலம் கொண்டவர்களாகவும், இதயம் மகிழ்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றத்தில் மகுடம் சூடின {நிறைவேறின}. அவர்கள் அஞ்சுவதற்கு ஏதும் இருக்கவில்லை. மரங்களிலோ, குகைகளிலோ அவர்கள் விரும்பியபடியே வசித்தனர். அவனது {பிருதுவின்} ஆட்சிப்பகுதிகள் மாகாணங்களாகவும், நகரங்களாகவும் பிரிக்கப்படாமல் இருந்தன. மக்கள் தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பியபடி மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் வாழ்ந்தனர்.

மன்னன் பிருது கடலுக்குச் சென்ற போது, அலைகள் {கல்லைப் போலத்} திடமாகின. மலைகளும், அவன் அவற்றைக் கடந்து செல்வதற்காகத் திறப்புகளை {வழிகளை} அளித்தன. அவனது தேரின் கொடி மரம் (எதனாலும் தடுக்கப்பட்டு) எப்போதும் உடைந்ததில்லை.

ஒரு சமயம், காட்டிலுள்ள உயர்ந்த மரங்கள், மலைகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பாம்புகள், முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, அப்சரசுகள், பிதுர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து, சுகமாக வீற்றிருந்த பிருதுவிடம் வந்து, அவனிடம், “நீயே எங்கள் பேரரசன், நீயே எங்கள் மன்னன், நீயே எங்களைப் பாதுகாப்பவனும், தந்தையும் ஆவாய். நீயே எங்கள் தலைவன். எனவே, ஓ! பெரும் மன்னா {பிருதுவே}, மன நிறைவுடன் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருக்கும்படி எங்கள் இதயங்கள் விரும்பும் வரங்களை அளிப்பாயாக” என்றனர். அவர்களிடம் வேனனின் மகனான பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான் [4].

“குடிகளால் வேண்டப்பட்ட பலசாலியான பேரரசன் பிருது, தன் குடிகளுக்கு நன்மை செய்யக் கருதி வில்லையும், கணைகளையும் கையில் கொண்டு பூமியை நோக்கி ஓடி வந்தான். பிறகு பூமியானது அவனிடத்தில் உண்டான அச்சத்தால், ஒரு பசுவின் வடிவத்தைக் கொண்டு வேகமாக ஓடியது. 

பிருதுவோ, கையில் வில்லை எடுத்துக் கொண்டு பூமியைப் பின்தொடர்ந்து ஓடினான். பிரம்மலோகம் முதலான உலகங்களை அடைந்தும் விடாமல் விரட்டிய பிருதுவைக் கண்ட பூமி, பிருதுவிடமே சரண்டைந்து, அவனிடம், “மன்னா, இந்த அநீயை நீ செய்யத்தக்கவனல்ல. நானில்லாமல் உன் குடிகளை நீ எப்படிக் காக்கப் போகிறாய்?” என்று சொன்னாள். அதற்குப் பிருது, “ஒருவன் தனக்காகவோ, பிறனுக்காகவோ, ஒன்றையோ, பல உயிர்களையோ வாங்கினால் {கொன்றால்}, அதில் பாதகம் ஒன்றுமில்லை. பெண்ணே, எவன் கொல்லப்பட்டால் பலர் மகிழ்வுடன் செழிப்பார்களோ, அவன் கொல்லப்பட்டால் களங்கமில்லை. அவனைக் கொன்றவனால் பாவம் அனுபவிக்கப்பட மாட்டாது. நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால், குடிகளைக் காப்பதற்காக நான் உன்னைக் கொல்வேன். நானே குடிகளைக்காத்துக் கொள்வேன். சிறந்தவளே, நீ சக்தியுடையவள் என்றால், என் நல்ல வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு எப்போதும் குடிகள் காப்பாற்றுவாயாக. எனக்கு மகளாக இருக்கும் நிலைமையையும் நீ அடைவாயாக. இப்படி நீ செய்வாயாகில் நான் இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்” என்றான். 

பூதேவி, “ஓ! பகைவரைக் கொல்பவனே, பெரும் மன்னா, அனைத்தையும் செய்வேன். அன்புடைய நான், எந்தக் கன்றின் வழியாகப் பாலைப் பெருக்குவேனோ, அப்படிப்பட்ட கன்றை நீ பார்ப்பாயாக. ஓ! அனைத்தையும் அறிந்தவனே, எப்படி நான் என்னிடம் சுரக்கும் பாலை அனைத்து இடங்களுக்கும் பரவும்படி செய்வேனோ, அவ்வாறே என் தோற்றத்தையும் சமமாகச் செய்வாயாக” என்றாள். 

அப்போது பிருது நான்கு பக்கங்களிலும் கற்குவியல்களை விலக்கித் தள்ளினான். அதனால் மலைகள் உடைக்கப்பட்டன. ஓ! மன்னா {சிருஞ்சயா}, படைப்பின் தொடக்கத்தில் பூமண்டலம் மேடு பள்ளமாயிருக்கும் காலத்தில், நகரங்களும், கிராமங்களும் பிரிப்பு ஏற்படவில்லை. பயிர்கள், பசுகாத்தல், உழவு, வர்த்தகம் ஆகியவை இல்லை. அந்தப் பிருது ஆளும் காலத்திலேயே இவையனைத்தும் உண்டாகின. எந்த இடத்தில் பூமி சமமாகியதோ, அந்த இடத்தில் எல்லாம் குடிகள் தங்கள் முயற்சியினால் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள விரும்பின. அதனால், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன பிருது அஜகவமெனும் வில்லையும், ஒப்பற்றவையும், கோரமுமான கணைகளையும் எடுத்து ஆலோசித்துபடி பூமியைப் பார்த்து, “பூமியே! இங்கு வா; இவைகளுக்கு {இந்த என் குடிகள்} விருப்பப்பட்ட பாலைச் சீக்கிரமாகக் கறப்பாயாக. என் கட்டளையை மீறி நடந்தால், உன்னை நான் என் கணைகளால் அழிப்பேன்” என்றான். 

பூதேவி, தன் நன்மையை ஆலோசித்து, “கன்றையும், பாத்திரங்களையும், பாலைகள் நீ கட்டளையிடுவாயாக. ஐயா, எவனுக்கு எது விருப்பமோ, அஃது அனைத்தையும் பிறகு நான் கொடுப்பேன். வீரனே, நான் உனக்கு மகளாக வேண்டும்” என்று சொன்னாள். பிருதுவும், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்”

பிறகு அஜகவம் [5] என்ற தன் வில்லை எடுத்த அவன் {பிருது}, அதுவரை இல்லாத பயங்கரமான சில கணைகளை எடுத்துக் கொண்டு ஒருக்கணம் சிந்தித்தான். பிறகு அவன் பூமியிடம், “ஓ! பூமியே, விரைவாக வந்து, இவர்கள் {இந்தக் குடிகள்} விரும்பும் பாலைத் தருவாயாக. அதன் மூலம் நான் அவர்கள் கேட்கும் உணவைக் கொடுப்பேன். நீ அருளப்பட்டிருப்பாயாக.” என்று சொன்னான். அவனால் இப்படிக் கேட்கப்பட்ட பூமி, “ஓ! வீரனே, நீ என்னை உனது மகளாகக் கருதுவதே தகும்” என்றாள். பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்தப் பெரும் தவசி {பிருது}, தன் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு, (பூமியைக் கறப்பதற்கு) அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். (உயிரினங்களின் மொத்தக் கூட்டமும் பூமியைக் கறக்கத் தொடங்கின).

அனைத்திலும் முதலாக, காட்டில் உள்ள நெடும் மரங்கள் அவளைக் கறப்பதற்காக எழுந்தன. அப்போது, பூமி, ஒரு கன்றையும், கறப்பவனையும், (பாலைப் பிடிக்க) பாத்திரத்தையும் எதிர்பார்த்து முழுப் பாசத்துடன் நின்றாள். அப்போது, பூத்திருக்கும் ஆச்சா {சால} மரம் கன்றானது, ஆல {இறலி}மரம் கறப்பவரானது, பிளக்கும் மொட்டுகள் பாலானது, மங்கலமான அத்திமரம் பாத்திரமானது.

(அடுத்ததாக, மலைகள் அவளை {பூமியைக்} கறந்தன). சூரியன் உதிக்கும் கிழக்கு மலை {உதய மலை} கன்றானது; மலைகளின் இளவரசனான மேரு கறப்பவனானது; பல்வேறு ரத்தினங்களும், மூலிகைகளும் பாலாகின; கற்கள் {பாறைகள்} (அந்தப் பாலைத் தாங்கும்) பாத்திரங்களாகின.

அடுத்ததாக, தேவர்களில் ஒருவன் கறப்பவனானான். சக்தியையும், பலத்தையும் அளிக்கவல்ல அனைத்துப் பொருட்களும் ஆசைப்பட்ட பாலகின [6].

பிறகு, அசுரர்கள் பூமியைக் கறந்தனர். மதுவைத் தங்கள் பாலாகப் பெற்றனர். சுடப்படாத பானையைத் தங்கள் பாத்திரமாகப் பயன்படுத்தினர். அந்தச் செயல்பாட்டில் துவிமுர்தன் கறப்பவனானான். விரோசனன் கன்றானான் [7].மனிதர்கள், பூமியை உழவுக்காகவும் {வேளாண்மைக்காகவும்}, பயிர்களுக்காகவும் கறந்தனர். சுயம்புவான மனு அவர்களது கன்றானான், பிருதுவே கறப்பவனானான்.

அடுத்ததாகப் பாம்புகள் நஞ்சையே பாலாகப் பூமியிடம் கறந்தன. சுரைக்காயைப் பாத்திரமாகப் பயன்படுத்தின. திருதராஷ்டிரன் கறப்பவனாகவும், தக்ஷகன் கன்றாகவும் இருந்தான்.

தங்கள் ஆணையாலேயே [8] அனைத்தையும் உண்டாக்கவல்ல முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, வேதங்களையே பாலாகப் பூமியிடம் கறந்தனர். பிருஹஸ்பதி கறப்பவனானான், சந்தஸ் பாத்திரமானது, சிறப்புமிக்கச் சோமன் கன்றானான்.யக்ஷர்கள் [9], தாங்கள் விரும்பும் போது காட்சியில் இருந்து மறையும் {அந்தர்த்தான} சக்தியை சுடப்படாத பானையில் பூமியிடம் இருந்து கறந்தனர். வைஸ்ரவணன் (குபேரன்) கறப்பவனானான், விருஷத்வஜன் அவர்களது கன்றான்.கந்தர்வர்களும், அப்சரசுகள் தாமரை இலையைப் பாத்திரமாகக் கொண்டு நறுமணத் திரவியங்கள் அனைத்தையும் கறந்தனர். சித்திரரதன் அவர்களது கன்றான், வலிமைமிக்க விஸ்வருசி கறப்பவனானான்.

பிதுர்கள், வெள்ளிப்பாத்திரத்தில் சுவாகாவைத் தங்கள் பாலாகக் கறந்தனர். விவஸ்வானின் {சூரியனின்} மகன் யமன் அவர்களது கன்றானான், (அழிப்பவனான) அந்தகனே கறப்பவனானான்.

இப்படி அந்த உயிரினங்களின் கூட்டங்கள், தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பிய பாலை பூமியிடம் கறந்தனர். அவர்களால் நியமிக்கப்பட்ட கன்றுகளும், பாத்திரங்களும் எப்போதும் தெரியும் வகையில், இந்நாள் வரை அப்படியே நீடிக்கின்றன.

வேனனின் மகனான வலிமைமிக்கப் பிருது, உயிரினங்கள் அனைத்தும் தங்கள் இதயங்களால் விரும்பிய பரிசுகளைக் கொடுத்து, அவற்றை மனம் நிறையச் செய்து, பல்வேறு வேள்விகளைச் செய்தான். பூமியில் மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் தங்கமாகச் செய்து, அவைகளை ஒரு பெரும் குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது} அறுபத்தாறாயிரம் யானைகளைத் தங்கத்தால் செய்து, அவை அனைத்தையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது}, மணிகள், ரத்தினங்கள், தங்கம் ஆகியவற்றால் இந்த முழுப் பூமியையும் அலங்கரித்து, அவளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பிருதுவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

பரசுராமரும் இறப்பார்! – துரோண பர்வம் பகுதி – 070-ஜமதக்னியின் மகனான பரசுராமரின் கதையைச் சொன்ன நாரதர்; இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பரசுராமர்; அவர் செய்த வேள்விகள்; அவர் அளித்த கொடைகள்; அவரும் இறப்பார் என்று சொன்ன நாரதர்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “வீரர்கள் அனைவராலும் வழிபடப்படும் வீரரும், பெரும் புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனும், பெரும் தவசியுமான ராமரும் {பரசுராமரும்} (தன் வாழ்நாள் காலத்தில்) மனநிறைவடையாமலே உயிரை இழக்கப் போகிறார். அவர் {பரசுராமர்}, பூமியில் உள்ள தீமைகள் அனைத்தையும் வேரோடு அழித்துவிட்டு, புராதன யுகத்தை {மீண்டும்} ஏற்படச் செய்தவராவார். நிகரற்ற செழிப்பை அடைந்த அவரிடம் எந்தக் களங்கமும் காணப்படவில்லை. க்ஷத்திரியர்களால் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் கன்று திருடப்பட்ட பிறகு, அதுவரை எந்த எதிரியிடமும் தோற்காத கார்த்தவீரியனை எந்தத் தற்புகழ்ச்சியும் செய்யாமல் கொன்றார்.

ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த ஆறு லட்சத்து நாற்பதாயிரம் {6,40,000} க்ஷத்திரியர்களைத் தன் வில்லால் கொன்றார். அந்தப் படுகொலையில், பிராமணர்களை வெறுப்பவர்களான தந்தகூர நாட்டைச் சேர்ந்த பதினாலாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். உலக்கையினால் ஆயிரம் பேரையும், வாளால் ஆயிரம் பேரையும், தூக்கிட்டு {மரத்தில் சுருக்கிட்டு} ஆயிரம் பேரையும் கொன்றார் [1].

விவேகியான ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தன் தந்தையின் படுகொலையைக் கண்டு சினம் கொண்டதால், தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுடன் கூடிய வீரமிக்கப் போர்வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ராமர் {பரசுராமர்}, பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களைத் தன் கோடரியால் கொன்றார். (தன் எதிரிகள்) பேசிய மூர்க்கமான பேச்சுகளை அவரால் அமைதியாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பிராமணர்களில் முதன்மையானோரில் பலர், எப்போதெல்லாம் பிருகு குலத்தின் ராமர் பெயரைச் சொல்லித் துன்பக் குரலை எழுப்பினரோ, அப்போதெல்லாம் அந்த ஜமதக்னியின் வீர மகன் {பரசுராமர்}, ஆயிரமாயிரமாக இருந்த காஸ்மீரர்கள், தரதர்கள், குந்திகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், விதேஹர்கள், தாம்ரலிப்தகர்கள், ரக்ஷோவாஹர்கள், வீதஹோத்ரர்கள், திரிகர்த்தர்கள், மார்த்திகாவதர்கள், சிபிக்கள் ஆகியோர் அனைவரையும் தன் கூர்மையான கணைகளால் கொன்றார்.

மாகாணத்துக்கு மாகாணம் அடுத்தடுத்து சென்று க்ஷத்திரியர்களை ஆயிரக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இப்படியே கொன்றார். குருதிப்பெருவெள்ளத்தை உண்டாக்கி, இந்திரகோபங்களைப் போலவோ, பந்துஜீவம் {Vandujiva} என்ற காட்டுப்பழத்தைப் போலவோ சிவப்பான குருதியால் பல தடாகங்களை நிறைத்து [2], (பூமியின்) பதினெட்டுத் தீவுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்தப் பிருகுகுல மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் புண்ணியத்தைத் தரும் நூறு வேள்விகளைச் செய்தார்.

ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, விதிப்படி அமைக்கப்பட்டதும், முழுவதும் தங்கத்தாலானதும், பதினெட்டு நாளங்கள் உயரம் {முப்பத்திரண்டு முழம்} கொண்டதுமான வேள்விப்பீடத்தையும், பல்வேறு விதங்களிலான ரத்தினங்கள் மற்றும் கற்கள் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், வீட்டு மற்றும் காட்டு விலங்குகளால் நிறைந்ததுமான இந்தப் பூமியையும் கசியபருக்கு வேள்விக் கொடையாக அளித்தார். மேலும் ராமர் {பரசுராமர்}, அவருக்கு {கசியபருக்கு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மகத்தான யானைகளையும் அளித்தார். உண்மையில், பூமியைக் கள்வர்கள் அனைவரிடமும் இருந்து விடுவித்து, அவளை {பூமாதேவியை} அருள் நிறைந்த நேர்மையான மனிதர்களால் நிறைத்த ராமர் {பரசுராமர்}, தனது பெரும் குதிரை வேள்வியில் கசியபருக்கு அவளை {பூமியைத்} தானமாக அளித்தார்.

இருபத்தோரு முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாக்கி, நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்த அந்தப் பலங்கொண்ட வீரர் {பரசுராமர்}, அவளை {பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தார். ஏழு தீவுகளுடன் கூடிய இந்தப் பூமியை மரீசிக்குக் {மரீசியின் மகனான கசியபருக்குக்} கொடுத்தார். அப்போது கசியபர் ராமரிடம் {பரசுராமரிடம்}, “என் உத்தரவின் பேரில் இந்தப் பூமியை விட்டுப் போவாயாக” என்றார். கசியபரின் வார்த்தையின் பேரில், அந்தப் பிராமணரின் {கசியபரின்} உத்தரவுக்குக் கீழ்ப்படிய விரும்பிய அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, தன் கணைகளால் பெருங்கடலையே ஒதுங்கச் செய்து, மகேந்திரம் என்று அழைக்கப்பட்ட மலைகளில் சிறந்த மலைக்குச் சென்று அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்.

இத்தகு எண்ணிலா குணங்களைக் கொண்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவரும், பிருகுக்களின் {பிருகு குலத்தவரின்} புகழை அதிகரித்தவருமான அந்தப் புகழ்பெற்ற ஜமதக்னியின் மகனே கூட இறக்கவே செய்வார். அவர் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீவினுக்கும்} மேம்பட்டவராவார் (மேம்பட்டவரான அவரும் இறப்பார்). எனவே, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} நீ வருந்தாதே. நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானோருமான இவர்கள் யாவரும் இறந்தார்கள், ஓ! சிருஞ்சயா, இவர்களைப் போன்றோரும் இறப்பார்கள்” {என்றார் நாரதர்}.

யுதிஷ்டிரனின் கவலை! – துரோண பர்வம் பகுதி – 071-நாரதரின் விளக்கத்தால் நிறைவடைந்த சிருஞ்சயன்; சிருஞ்சயன் மகனை உயிர்மீட்டளித்த நாரதர்; அபிமன்யுவின் நற்கதியைச் சொல்லி அவனை மீட்க முடியாது என யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; தனஞ்செயனை நினைத்து வருந்திய யுதிஷ்டிரன்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “(கேட்பவரின்) வாழ்நாளை அதிகரிக்க வல்லவையான இந்தப் பதினாறு {16} மன்னர்களின் புனிதமான வரலாற்றைக் கேட்ட பிறகு, மன்னன் சிருஞ்சயன் எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறப்புமிக்க முனிவரான நாரதர், இப்படி அமைதியாக அமர்ந்திருந்த அவனிடம் {சிருஞ்சயனிடம்}, “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {சிருஞ்சயா}, என்னால் உரைக்கப்பட்ட வரலாறுகளைக் கேட்டாயா? அவற்றின் கருத்துகளை நீ புரிந்து கொண்டாயா? அல்லது சூத்திர மனைவியைக் கொண்ட மறுபிறப்பாளர் {பிராமணர்} ஒருவரால் செய்யப்பட்ட சிராத்தம் போல அவை அனைத்தும் தொலைந்தனவா?” என்று கேட்டார் {நாரதர்}.

இப்படிச் சொல்லப்பட்ட சிருஞ்சயன் கூப்பிய கரங்களுடன் {நாரதரிடம்}, “ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {நாரதரே}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் வேள்விகளைச் செய்திருக்கும் பழங்காலத்தின் இந்த அரச முனிகள் அனைவரின் புகழத்தக்க அற்புதமான வரலாறுகளையும் கேட்டுச் சூரியனின் கதிர்களால் விலகிய இருளைப் போல என் துன்பமனைத்தும் அற்புதமான வகையில் மறைந்தன. நான் இப்போது என் பாவங்களனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தேன், இப்போது நான் எந்த வலியையும் உணரவில்லை {துன்பமடையவில்லை}. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று {நாரதரிடம்} பதிலுரைத்தான் {சிருஞ்சயன்}.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “உன் துன்பம் விலகியது நற்பேறாலேயே. நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் அனைத்தையும் நீ அடைவாய். உண்மையற்ற எதையும் நாம் சொல்வதில்லை” என்றார்.

சிருஞ்சயன் {நாரதரிடம்}, “ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் என்னிடம் நிறைவுடன் இருக்கிறீர் என்பதிலேயே நான் மகிழ்கிறேன் {நிறைவடைகிறேன்}. ஓ! புனிதமானவரே, நீர் எவனுடன் நிறைவுடன் இருக்கிறீரோ, அவனால் இங்கே அடையமுடியாதது எதுவுமில்லை” என்றான்.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “வேள்வியில் கொல்லப்படும் விலங்கைப் போலக் கள்வர்களால் வீணாகக் கொல்லப்பட்ட உன் மகனைக் {சுவர்ணஷ்டீவினைக்} கடினமான நரகத்தில் இருந்து மீட்டு மீண்டும் உனக்குத் தருகிறேன்” என்று சொன்னார்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு, (துயரில் வாடும் தந்தையிடம் {சிருஞ்சயனிடம்}) மனம் நிறைந்த முனிவரால் {நாரதரால்} அளிக்கப்பட்ட பிள்ளையான அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} அற்புதமான காந்தி கொண்டவனாக, குபேரனின் மகனுக்கு ஒப்பானவனுமாகத் தோன்றினான். மன்னன் சிருஞ்சயன் மீண்டும் தன் மகனைச் சந்தித்ததால் மிகவும் மகிழ்ந்தான். மேலும் அவன் புண்ணியத்தைத் தரும் பல வேள்விகளைச் செய்து அந்த வேள்விகளின் முடிவில் அபரிமிதமான வேள்விக் கொடைகளைத் தானமளித்தான்.

அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} தான் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அவன் எந்த வேள்வியையும் செய்யவில்லை, மேலும் அவனுக்குப் பிள்ளையும் இல்லை. துணிச்சலற்ற நிலையில், போரில் அல்லாமல் இரங்கத்தக்க வகையில் அவன் அழிந்தான். இதன் காரணமாகவே அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடிந்தது. அபிமன்யுவைப் பொறுத்தவரை அவன் துணிச்சல்மிக்கவனாகவும், வீரம் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் வாழ்வின் நோக்கங்களை நிறைவு செய்த அந்தச் சுபத்திரையின் துணிச்சல் மிக்க மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, போர்க்களத்தில் விழுந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றான் [1].

{வேறு எதனாலும்} அடைவதற்கரியதும், பிரம்மச்சரியம், ஞானம், சாத்திர அறிவு, முதன்மையான வேள்விகள் ஆகியவற்றால் அடையத்தக்கதுமான உலகங்களை உன் மகன் {அபிமன்யு} அடைந்தான். தங்கள் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடையவே எப்போதும் அறிவாளிகள் விரும்புவர். சொர்க்கத்தில் வாழ்பவர்கள் இந்த உலகத்தை விரும்ப மாட்டார்கள். எனவே, விரும்பிய எந்தப் பொருளும் அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} அடையப்படாமல் இல்லை ஆகையால், போரில் கொல்லப்பட்டு இப்போது சொர்க்கத்தில் வசித்து வரும் அவனை {அபிமன்யுவை} மீண்டும் உலகத்திற்குக் கொண்டு வர முடியாது.

கண்களை மூடி ஆழமான சிந்தனையில் உள்ள யோகியரோ, பெரும் வேள்விகளைச் செய்தவர்களோ, பெரும் தவத்தகுதியைக் கொண்டோரோ அடையும் நிலையான இலக்கை உன் மகன் {அபிமன்யு} அடைந்துவிட்டான். மரணத்திற்குப் பிறகு புது உடலை அடைந்த அந்த வீரன் {அபிமன்யு}, அழியாத கதிர்களால் ஆன தன்னொளியுடன் ஒரு மன்னனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவராலும் விரும்பப்படுவதும் சந்திரனின் சாரம் கொண்டதுமான தன் சொந்த உடலையே அபிமன்யு மீண்டும் அடைந்திருக்கிறான். உன் துயரத்திற்கு அவன் தகுந்தவனல்ல. இஃதை அறிந்து, அமைதியடைந்து உன் எதிரிகளைக் கொல்வாயாக. மனோபலம் உனதாகட்டும்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே நமது துயரம் தேவைப்படுகிறது, சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கு அது தேவைப்படாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வாழ்ந்து கொண்டிருப்போர் எவனுக்காக {இறந்து போன யாருக்காக} வருந்துகிறார்களோ, அவனது பாவங்கள் அதிகரிக்கின்றன. எனவே, விவேகியான ஒருவன், வருந்துவதைக் கைவிட்டு, (இறந்து போனவரின்) நன்மைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், (இறந்தவனின்) இன்பம், மகிமை மற்றும் மகிழ்ச்சியைக் குறித்தே சிந்திக்க வேண்டும். இஃதை அறிந்த ஞானியர், துயரம் வலி மிகுந்தது என்பதால் துயருறுவதில் ஈடுபடுவதில்லை. இஃதை உண்மையென அறிந்து கொண்டு எழுவாயாக! (உன் நோக்கத்தை அடைய) முயற்சிப்பாயாக! வருந்தாதே.

மரணத்தின் {மரணதேவியின்} தோற்றத்தையும், அவளது ஒப்பற்ற நோன்புகளையும், அனைத்து உயிர்களிடமும் அவள் கொண்ட பாரபட்சமற்ற நடத்தையை நீ கேட்டாய். செழிப்பு நிலையில்லாதது என்பதை நீ கேட்டாய். சிருஞ்சயனின் இறந்த போன மகன் {சுவர்ணஷ்டீவின்} மீட்கப்பட்டான் என்பதையும் நீ கேட்டாய். ஓ! கல்விமானான மன்னா {யுதிஷ்டிரா}, வருந்தாதே. அமைதி உனதாகட்டும். நான் செல்கிறேன்!” என்று சொன்ன அந்தப் புனிதமான வியாசர், அங்கேயே அப்போதே மறைந்து போனார்.

பேச்சின் தலைவரும், மேகமூண்ட ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டவரும், புத்திமான்களுள் முதன்மையானவரும், புனிதமானவருமான அந்த வியாசர் சென்றதும், யுதிஷ்டிரன், அறவழிகளில் செல்வத்தை அடைந்தவர்களும், சக்தியில் பெரும் இந்திரனுக்கே நிகரானவர்களுமான பழங்காலத்தின் பெரும் ஏகாதிபதிகளான இவர்கள் அனைவரின் வேள்வித்தகுதி மற்றும் செழிப்பைக் கேட்டதன் விளைவாக ஆறுதலை அடைந்து, அந்த ஒப்பற்ற மனிதர்களை மனப்பூர்வமாகப் பாராட்டி துன்பத்தில் இருந்து விடுபட்டான். எனினும், துக்கம் நிறைந்த இதயத்தோடு கூடிய அவன் {யுதிஷ்டிரன்}, “தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} என்ன சொல்லப் போகிறோம்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

அபிமன்யுவத பர்வம் முற்றும்


——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading