தரையில் விழுந்துகிடந்த அரசசபை! – சல்லிய பர்வம் பகுதி – 01-கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்கள் என்ன செய்தனர் என்று கேட்ட ஜனமேஜயன்; கர்ணனின் படுகொலையால் துரியோதனன் அடைந்த துயரம்; படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சல்லியன்; நடுப்பகலில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்ட சல்லியன்; பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனன்; பாண்டவப் படையை இரவில் அழித்த மூவர்; சஞ்சயனின் சொற்களைக் கேட்டு மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; அரச மகளிரின் துயரம்; திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளித்த விதுரன்…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன், “ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, அந்தப் போரில் இவ்வாறு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, கௌரவர்களில் (கொல்லப்படாமல்) எஞ்சிய சிலர் என்ன செய்தனர்?(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே} எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் சாதனைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை” என்று கேட்டான்.(3)வைசம்பாயனர் சொன்னார், “கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகனான சுயோதனன் {துரியோதனன்}, துன்பப்பெருங்கடலில் மூழ்கியவனாக, அனைத்துப் பக்கத்திலும் நம்பிக்கை இழந்த நிலையையே கண்டான்.(4) “ஐயோ, ஓ! கர்ணா, ஐயோ, ஓ! கர்ணா” என்று இடையறாத ஒப்பாரியில் ஈடுபட்ட அவன், பெரும் சிரமத்துடனும், தன் தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய மன்னர்கள் துணையுடனும் தன் பாசறையை அடைந்தான்.(5) சாத்திரங்கள் கற்பிக்கும் அற்புதக் காரணங்களைச் சொல்லி அம்மன்னர்கள் அவனைத் {துரியோதனனைத்} தேற்றினாலும் கூட, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நினைத்து அவனது மனம் அமைதியடையவில்லை.(6) {பிறகு}, விதியும், தேவையும் அனைத்திலும் பலமிக்கவை என்று கருதிய அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போரிடுவதென உறுதியாகத் தீர்மானித்தான்.(7) தன் படைகளின் தலைவனாக முறையாகச் சல்லியனை நியமித்த அந்த மன்னர்களில் காளை {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தன் படைகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போர் துணையுடன் போரிடச் சென்றான்.(8)
அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தேவர்களுக்கும், அசுரரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது.(9) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பேரழிவை ஏற்படுத்திய சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான தன் துருப்புகளை இழந்து, இறுதியாக நடுப்பகல் வேளையில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான்.(10) அப்போது தன் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரையும் இழந்த மன்னன் துரியோதனன், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி, தன் எதிரிகள் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒரு பயங்கரமான தடாகத்தின் ஆழத்திற்குள் ஊடுருவிச் சென்றான்.(11) அந்நாளின் பிற்பகல் வேளையில், அந்தத் தடாகத்தை வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் சூழச் செய்த பீமசேனன், துரியோதனனை {தடாகத்திற்கு} வெளியே வரவைத்து, தன் பலத்தை வெளிப்படுத்தி வேகமாக அவனை {துரியோதனனைக்} கொன்றான்.(12)
துரியோதனன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (குரு தரப்பில்) கொல்லப்படாமல் எஞ்சிய மூன்று தேரவீரர்கள் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்), சினத்தால் நிறைந்து, இரவில் பாஞ்சாலத் துருப்புகளைக் கொன்றனர்.(13) அடுத்த நாள் காலையில், முகாமில் இருந்து புறப்பட்ட சஞ்சயன், சோகத்தாலும், கவலையாலும் நிறைந்து, உற்சாகமற்ற நிலையில் நகருக்குள் (குரு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்}) நுழைந்தான்.(14) நகருக்குள் நுழைந்த அந்தச் சூதன் சஞ்சயன், துயரால் தன் கரங்களை உயர்த்தியபடியும், அங்கங்கள் நடுங்கிக் கொண்டும், மன்னனின் {திருதராஷ்டிரனின்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(15)
துயரால் நிறைந்த அவன் {சஞ்சயன்}, ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, உரக்க அழுதபடியே, “ஐயோ, ஓ! மன்னா! ஐயோ, உயர் ஆன்ம ஏகாதிபதியின் {துரியோதனனின்} கொலையால் நாம் அனைவரும் அழிவையடைந்தோம்.(16) ஐயோ, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான வலிமையை உடைய நமது கூட்டாளிகள் {மன்னர்கள்} அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டதால், காலனே அனைத்திலும் பலமிக்கவனும், தன் வழியில் கோணலானவனும் ஆவான்[1].” என்றான்.(17) ஓ! மன்னா {ஜனமேஜயா}, “சஞ்சயன் அந்த அவல நிலையில் நகருக்கு திரும்பியதைக் கண்ட மக்கள் அனைவரும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பெரும் துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! மன்னா!” என்று சொல்லி உரக்க அழுதனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, துரியோதனனின் மரணத்தைக் கேட்டு, குழந்தைகள் உட்பட அனைத்துப் பக்கங்களிலும் மொத்த நகரமும் ஒப்பாரியிட்டது.(19) துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்த ஆண்களும், பெண்களும் என அனைவரும், தங்கள் புலனுணர்வை இழந்து, பைத்தியக்காரர்களுக்கு ஒப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடுவதை நாங்கள் கண்டோம்[2].(20)
மிகவும் கலங்கிப் போயிருந்த அந்தச் சூதன் சஞ்சயன், மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனும், தன் கண்களையே அறிவாகக் கொண்டவனுமான அந்த மனிதர்களின் தலைவனை {திருதராஷ்டிரனைக்} கண்டான்.(21) பாவமற்ற ஏகாதிபதியான அந்தப் பாரதக் குலத்தின் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மருமகள்கள், காந்தாரி, விதுரன் ஆகியோரும், எப்போதும் தன் நலன்விரும்பிகளாக இருந்த பிற நண்பர்களும், உறவினர்களும் சூழ அமர்ந்திருப்பதையும்,(22) கர்ணனின் மரணத்தையே நினைத்துக் கொண்டிருப்பதையும் கண்ட அந்தச் சூதன் சஞ்சயன், ஓ! ஜனமேஜயா, இதயம் நிறைந்த துயரத்துடனும், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும் அழுதுகொண்டே அவனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன் {வந்திருக்கிறேன்}. ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் உம்மை வணங்குகிறேன்.(23,24) மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன் கொல்லப்பட்டான். அதே போலச் சுபலனின் மகனான சகுனியும், அந்தச் சூதாடியின் வீர மகனான உலூகனும் கொல்லப்பட்டனர்.(25)
சம்சப்தகர்கள் அனைவரும், சகர்களோடு கூடிய காம்போஜர்களும், மிலேச்சர்களும், மலைவாசிகளும், யவனர்களும் கூடக் கொல்லப்பட்டனர்.(26) ஓ! ஏகதிபதி {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்களும், தெற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வடக்கத்தியர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, மன்னர்கள் அனைவரும், இளவரசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னன் துரியோதனனும், பாண்டுவின் மகனால் {பீமனால்}, அவனது சபத்தின்படியே கொல்லப்பட்டான்.(28) ஓ! ஏகாதிபதி, முறிந்த தொடைகளுடன், குருதியில் நனைந்து, புழுதியில் இப்போது அவன் கிடக்கிறான். ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனும், வெல்லப்பட முடியாத சிகண்டியும் கூடக் கொல்லப்பட்டனர்.(29) ஓ! மன்னா, உத்தமௌஜஸ், யுதாமன்யு, பிரபத்ரகர்கள், மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.(30)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் (ஐவரும்) கூடக் கொல்லப்பட்டனர். வீரனும், கர்ணனின் வலிமைமிக்க மகனுமான விருஷசேனனும் கொல்லப்பட்டான்.(31) (அங்கே கூடியிருந்த) மனிதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்கள் அனைவரும் போரில் வீழ்ந்தனர், குதிரைகள் அனைத்தும்கூட வீழ்ந்தன.(32) ஓ! தலைவா, உமது தரப்பில் மிகச் சிலரே உயிரோடுள்ளனர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டதன் விளைவாக,(33) காலத்தால் திகைப்படையச் செய்யப்பட்ட இந்த உலகமானது இப்போது பெண்களை மட்டுமே கொண்டிருக்கிறது. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் உயிரோடிருக்கின்றனர், தார்தராஷ்டிரர்களிலோ மூவர் அவ்வாறு {உயிரோடு} இருக்கின்றனர்.(34) ஐந்து (பாண்டவ) சகோதரர்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, கிருபர், கிருதவர்மன், வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரே அவர்கள்.(35)
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் திரட்டப்பட்ட அக்ஷௌஹிணிகள் அனைத்திலும் பிழைத்திருப்போர் இந்தத் தேர்வீரர்கள் மூவர் மட்டுமே.(36) பிழைத்திருப்போர் இவர்களே, எஞ்சியோர் {அனைவரும்} அழிந்துவிட்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனையும், (பாண்டவர்களிடம்) அவன் கொண்ட பகைமையையும் காரணமாகக் கொண்டு, காலத்தால் மொத்த உலகமும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது” என்றான் {சஞ்சயன்}.”(37)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரன், இந்தக் கொடுமொழியைக் கேட்டுத் தன் புலனுணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான்.(38) மன்னன் கீழே விழுந்ததும், ஓ! ஏகாதிபதி, மன்னனின் துயரைக் கண்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான விதுரனும் சோகத்தால் பீடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்.(39) ஓ! மன்னர்களின் சிறந்தவனே {ஜனமேஜயா}, காந்தாரியும், குரு பெண்கள் அனைவரும், இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டுத் திடீரெனத் தரையில் விழுந்தனர்.(40) பெரிய துணியில் வரையப்பட்ட வடிவங்களைப் போல, அரச மக்களின் அந்த மொத்த சபையும், தங்கள் புலனுணர்வை இழந்து, அறிவுபிறழ்ந்த நிலையில் பிதற்றிக் கொண்டே தரையில் கிடந்தது.(41) அப்போது பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களின் மரணத்தினால் உண்டான துயரில் பீடிக்கப்பட்டு, மெதுவாகவும், மிகுந்த சிரமத்துடனும் தன் உயிர் மூச்சை மீட்டெடுத்தான்.(42)
தன் புலனுணர்வை மீண்டும் அடைந்த அம்மன்னன் {திருதராஷ்டிரன்}, நடுங்கும் அங்கங்களுடனும், கவலை நிறைந்த இதயத்துடனும் தன் முகத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பியபடி, க்ஷத்ரியிடம் (விதுரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(43) “ஓ! கல்விமானான க்ஷத்ரியே {விதுரா}, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீயே இப்போது எனது புகலிடமாவாய். என் மகன்கள் அனைவரையும் இழந்த நான், {இப்போது} தலைவனற்றவனாக இருக்கிறேன்” என்றான்.(44) இதைச் சொன்ன அவன், மீண்டும் தன் புலனுணர்வுகளை இழந்து கீழே விழுந்தான். கீழே விழுந்த அவனைக் கண்டவர்களும், அங்கிருந்தவர்களுமான அவனது உறவினர்கள் அனைவரும்,(45) அவன் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து, விசிறிகளால் அவனுக்கு வீசியும்விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு தேறுதலடைந்த அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்},(46) தன் மகன்களுடைய மரணத்தின் நிமித்தமாகக் கவலையால் பீடிக்கபட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குடத்திலிட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே அமைதியாக இருந்தான்.(47) இவ்வாறு பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு சஞ்சயனும் அழுதான். மங்கையர் அனைவரும், பெரும் புகழைக் கொண்ட காந்தாரியும் கூட அவ்வாறே செய்தனர் {அழுதனர்}.(48)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன், நீண்ட நேரத்திற்குப் பிறகு, விதுரனிடம்,(49) “மகளிர் அனைவரும் செல்லட்டும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், இந்த நண்பர்கள் அனைவரும் செல்லட்டும். என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது” என்றான்.(50) இவ்வாறு சொல்லப்பட்ட விதுரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மீண்டும் மீண்டும் நடுங்கிக் கொண்டே மெதுவாக மங்கையரை அனுப்பிவைத்தான்.(51) ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஆழமாகப் பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு, அந்த மங்கையர் அனைவரும், நண்பர்கள் அனைவரும் {அங்கிருந்து} சென்றனர்.(52) அப்போது சஞ்சயன், ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, புலனுணர்வு மீண்டவனும், பெரும் துன்பத்தால் அழுது கொண்டிருந்தவனுமான மன்னனை உற்சாகமில்லாமல் கண்டான்.(53) பிறகு விதுரன், இடையறாமல் அழுது கொண்டிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனுக்கு {திருதராஷ்டிரனுக்கு}, கூப்பிய கரங்களுடனும், இனிய சொற்களுடனும் தேறுதல் கூறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)
துரியோதனனின் அன்புமொழிகளை இனி எப்போது கேட்பேன்? – சல்லிய பர்வம் பகுதி – 02-திருதராஷ்டிரன் புலம்பல்; துரியோதனனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; விதியை நொந்து கொண்டது; விதுரனின் ஆலோசனைகளைக் கேட்காமல் போனதற்காக வருந்தியது; போர் நடந்த முறையை விவரமாகச் சொல்லுமாறு சஞ்சயனைப் பணித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அங்கிருந்து} மகளிர் {அனைவரும்} அனுப்பப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், முன்பைவிடப் பெருந்துயரில் மூழ்கிப் புலம்பத் தொடங்கினான். புகைக்கு ஒப்பான பெருமூச்சுகளைவிட்டபடியே, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்துக் கொண்டு, சிறிது நேரம் சிந்தித்த அவன் {திருதராஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(2)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா}, போரில் எந்த இழப்பையும் சந்திக்காமல், பாண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று உன்னிடம் இருந்து நான் கேட்கும் செய்தி துயர் மிகுந்ததாகும்.(3) என் மகன்கள் வீழ்ந்ததைக் கேட்டும் நொறுங்காமல் இருப்பதால், கடுமையான என் இதயம் வஜ்ரத்தின் தன்மையைக் கொண்டது என்பதில் ஐயமில்லை.(4) ஓ! சஞ்சயா, அவர்களது வயது, பிள்ளைப்பருவத்தில் அவர்களின் விளையாட்டுகள் ஆகியவற்றை நினைத்தும், இன்று அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் என் இதயம் துண்டுகளாக நொறுங்குவதாகத் தெரிகிறது.(5) பார்வையற்றதன் விளைவால், நான் அவர்களின் வடிவங்களைப் பார்த்ததில்லை என்றாலும், பிள்ளைகளிடம் ஒருவன் கொள்ளும் பாசத்தின் விளைவால், அவர்களிடம் நான் பேரன்பைக் கொண்டிருந்தேன்.(6) ஓ! பாவமற்றவனே, பிள்ளைப்பருவத்தைக் கடந்து, ஆண்மையின் தொடக்கமான இளமைப் பருவத்திற்குள் அவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.(7) இன்று செழிப்பையும், சக்தியையும் இழந்த நிலையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டதும், அவர்களுக்கு நேர்ந்த துயரால் ஏற்பட்ட கவலையில் மூழ்கி, மன அமைதியை அடைய முடியாதவனாக நான் இருக்கிறேன்.(8) {இவ்வாறு சஞ்சயனிடம் பேசிக் கொண்டிருந்த திருதராஷ்டிரன், துரியோதனனை நினைத்துப் பின்வருமாறு புலம்பத் தொடங்கினான்}
வா, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது பாதுகாவலனற்றவனாக இருக்கும் என்னிடம் வருவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன்னை இழந்தவனான நான், எந்த அவல நிலையை அடைவேனோ?(9) ஓ! ஐயா, கூடியிருக்கும் மன்னர்களை விட்டுவிட்டு, சாதாரணமான ஓர் இழிந்த மன்னனைப் போல உயிரையிழந்து வெறுந்தரையில் ஏன் நீ கிடக்கிறாய்?(10) ஓ! ஏகாதிபதி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகலிடமாய் இருந்தவனே, ஓ! வீரா, குருடனும், கிழவனுமான என்னைவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) ஓ! மன்னா {துரியோதனா}, உன்னுடைய அந்தக் கருணையும், அந்த அன்பும், அந்த மரியாதையும் இப்போது எங்கே? போரில் வெல்லப்பட முடியாதவனான நீ, ஐயோ, எவ்வாறு பார்த்தர்களால் கொல்லப்பட்டாய்?(12) உறக்கத்திலிருந்து சரியான நேரத்தில் விழிக்கும் என்னை, அன்பு மற்றும் மரியாதை நிறைந்த வார்த்தைகளால், “ஓ! அப்பா, ஓ! அப்பா, ஓ! பெரும் மன்னா, ஓ! உலகத்தின் தலைவா” என்று இனி அழைக்கப்போவது எவன்?(13) கண்ணீர் நிறைந்த கண்களுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ஓ! குருகுலத்தவரே, எனக்கு ஆணையிடுவீராக” என்று இனி என்னிடம் கேட்கப் போவது எவன்?(14)
ஓ! அன்புக்குழந்தாய், உன் உதடுகளில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டேனே, “இந்தப் பரந்த உலகம் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு எவ்வளவோ, அவ்வளவு நமக்கும் இருக்கிறது[1].(15) பகதத்தர், கிருபர், சல்லியர், அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சோமதத்தர், பாஹ்லீகர்,(16) அஸ்வத்தாமர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, மகதத்தின் வலிமைமிக்க இளவரசன், பிருஹத்பலன், காசிகளின் ஆட்சியாளன், சுபலனின் மகன் சகுனி,(17) பல்லாயிரக்கணக்கான மிலேச்சர்கள், சகர்கள், யவனர்கள், கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்},(18) பாட்டன் பீஷ்மர், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் மகன் {கிருபர்}[2], சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ், பெரும் சக்தி கொண்ட சதாயுஷ்,(19) ஜலசந்தன், ரிஷ்யசிருங்கனின் மகன் {ஆர்ஷ்யஸ்ருங்கி}, ராட்சசன் அலாயுதன், வலிய கரங்களைக் கொண்ட அலம்புசன், பெரும் தேர்வீரனான சுபாகு ஆகிய இவர்களும், இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பெரும்போரில் என் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாயிருக்கிறார்கள்.(21) களத்தில் இவர்களுக்கு மத்தியில், என் தம்பிகள் சூழ நிற்கும் நான், ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள், பாஞ்சாலர்கள்,(22) சேதிகள், திரௌபதியின் மகன்கள், சாத்யகி, குந்திபோஜன், ராட்சசன் கடோத்கசன் ஆகிய அனைவருடனும் போரிடவேன்.(23) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட இவர்களில் ஒருவனே கூட, ஓ! மன்னா, போரில் தன்னை நோக்கி விரையும் பாண்டவர்களைத் தடுக்க இயன்றவனே.(24) {அப்படியிருக்கையில்}, பாண்டவர்களோடு பகை கொண்டவர்களும், வீரர்களுமான இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! ஏகாதிபதி, இவர்கள் அனைவரும் பாண்டவர்களைப் பின்தொடர்வோருடன் போரிட்டு, அவர்களைப் போரில் கொல்வார்கள்.(25) கர்ணன் மட்டுமே கூட, என்னுடன் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்றுவிடுவான். பிறகு வீர மன்னர்கள் அனைவரும் என் அதிகாரத்தின் கீழ் வாழ்வார்கள்.(26) ஓ! மன்னா, எவன் அவர்களுக்குத் தலைவனோ, அந்த வலிமைமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்}, கவசந்தரிக்கமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்”.(27) {என்று துரியோதனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து சொன்ன திருதராஷ்டிரன், சஞ்சயனிடம் திரும்பி}, இவ்வாறே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் எப்போதும் என்னிடம் பேசுவான். இதைக் கேட்டே நானும் போரில் பாண்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நம்பினேன்.(28) எனினும், என் மகன்கள் அனைவரும், அந்த வீரர்களுக்கு மத்தியில் நின்று போரில் தீவிரமாக முயன்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்கள் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(29)
உலகின் தலைவரான வீரப் பீஷ்மர், சிகண்டியோடு மோதி, நரியால் கொல்லப்படும் சிங்கமாக மரணத்தை அடைந்தார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(30) தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தின் ஆசானான பிராமணர் துரோணர், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(31) பூரிஸ்ரவஸ், சோமதத்தன், மன்னர் பாஹ்லீகர் ஆகியோரும் போரில் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(32) யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடம் திறன்பெற்ற பகதத்தன் கொல்லப்பட்டான், ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(33) சுதக்ஷிணன், பூரு குலத்தின் ஜலசந்தன், சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(34) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான பாண்டியன் {சாரங்கத்வஜன்}, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(35)
பிருஹத்பலன் கொல்லப்பட்டான், மகதர்களின் வலிமைமிக்க மன்னன், வீர உக்ராயுதன், அந்த வகை வில்லாளிகள் அனைவரும்,(36) அவந்தியின் இளவரசர்கள் இருவரும் (விந்தன் மற்றும் அனுவிந்தன்), திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, எண்ணற்ற சம்சப்தகர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(37) மன்னன் அலம்புசன், ராட்சசன் அலாயுதன், ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஷ்யசிருங்கி} ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(38) நாராயணர்கள், கோபாலர்கள் ஆகியரை உள்ளடக்கிய, போரில் வெல்லப்பட முடியாத உருப்புகளும், பல்லாயிரம் மிலேச்சர்களும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(39) சுபலனின் மகன் சகுனி, சூதாடியின் மகன் என்றழைக்கப்படுபவனும், தன் படைகளின் தலைமையில் நிற்கும் வீரனுமான வலிமைமிக்க உலூகன் ஆகியோர் கொல்லப்பட்டர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(40)
தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், ஓ! சூதா, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களுமான எண்ணிலடங்கா உயர் ஆன்ம வீரர்கள் ஆகியோரும்,(41) பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(42) பெரும் வலிமை கொண்டவர்களான என் மகன்கள், என் பேரப்பிள்ளைகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(43) விதிக்கு உட்பட்டே மனிதன் பிறப்பை எய்துகிறான் என்பதில் ஐயமில்லை. நற்பேறு பெற்ற மனிதனே நன்மையைச் சந்திக்கிறான்.(44) ஓ! சஞ்சயா, நான் நற்பேற்றை இழந்தவனாதலால், என் பிள்ளைகளை இழந்தேன். கிழவனான நான், இப்போது என் எதிரிகளின் ஆளுகைக்கு எவ்வாறு அடிபணிவது?(45)
ஓ! தலைவா {சஞ்சயா}, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர எனக்கு நன்மை வேறேதும் இல்லை என நான் நினைக்கிறேன். உறவினர்களையும், சொந்தங்களையும் இழந்தவனாக இருப்பதால், நான் காடுகளுக்கே செல்லப் போகிறேன்.(46) ஓ! சஞ்சயா, சிறகுகளை இழந்து அவல நிலையில் வீழ்ந்திருக்கும் எனக்கு, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறேதும் சிறந்ததாக இருக்க முடியாது.(47) துரியோதனன், சல்லியன், துச்சாசனன், விவிம்சன், வலிமைமிக்க விகர்ணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு,(48) போரில் ஒருவனாகவே என் நூறு மகன்களைக் கொன்ற பீமசேனனின் முழக்கங்களை நான் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறேன்?(49) அவன் {பீமன்}, நான் கேட்டுக் கொண்டிருக்கும்போதே துரியோதனனின் படுகொலையை அடிக்கடிப் பேசுவான். துயரிலும், கவலையிலும் எரிந்து கொண்டிருக்கும் என்னால் அவனது கொடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள இயலாது” என்றான் {திருதராஷ்டிரன்}.”(50)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே உறவினர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவனும், துயரில் எரிந்து கொண்டிருந்தவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரரன்}, தன் மகன்களின் மரணத்தால் உண்டான சோகத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்தான்.(51) நீண்ட நேரம் அழுத பிறகு, தன் தோல்வியை எண்ணியவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் சூடான பெருமூச்சுகளை விட்டான்.(52) கவலையில் மூழ்கி, துயரில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பாரதக் குலத்துக் காளை {திருதராஷ்டிரன்}, என்ன நடந்தது என்ற விபரங்களைக் கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் மீண்டும் கேட்டான்.(53)
திருதராஷ்டிரன், “பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, சூதன் மகனும் {கர்ணனும்} வீழ்ந்த பிறகு, என் போர்வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாகக் கொண்டனர்?(54) போரில் என் வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாக்குகிறார்களோ அவரை எந்தத் தாமதமும் இல்லாமல் பாண்டவர்கள் கொன்று வருகின்றனர்.(55) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால், போரின் முன்னணியில் பீஷ்மர் கொல்லப்பட்டார். துரோணரும் நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்.(56) அதே போலவே சூதன் மகனான வீரக் கர்ணனும், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(57)
துரியோதனனுடைய குற்றத்தின் மூலம் இந்தப் பூமியின் மக்கள்தொகை அழிக்கப்படும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே உயர் ஆன்ம விதுரன் என்னிடம் சொன்னான்.(58) காரியங்களில் தங்கள் கண்களைச் செலுத்தினாலும், அவற்றைப் பார்க்காத மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூடனான எனக்கு விதுரனின் சொற்கள் அவ்வாறே ஆகின.(59) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த நீதிமிக்க ஆன்மாவான விதுரனின் சொற்கள் உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என்பதால், அப்போது அவன் என்ன சொன்னானோ, சரியாக அதுவே நடந்திருக்கிறது.(60) விதியால் பீடிக்கப்பட்ட நான், அந்தச் சொற்களின்படி நடந்து கொள்ளவில்லை. அத்தீய வழியின் கனிகளே இப்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, மீண்டும் அவற்றை எனக்கு விவரிப்பாயாக.(61) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு எவன் நமது படையின் தலைவனானான்? அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எதிர்த்துச் சென்ற தேர்வீரன் எவன்?(62) போரில் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்? அந்த வீரன் {சல்லியன்} போரிடச் சென்ற போது, அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்?அவனது பின்புறத்தைப் பாதுகாத்தது யார்?(63)
நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தபோது, ஓ! சஞ்சயா, வலிமைமிக்க மத்ரர்களின் மன்னனையும் {சல்லியனையும்}, எனது மகனையும் {துரியோதனனையும்} பாண்டவர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(64) பாரதர்கள் பேரழிவை அடைந்த விவரங்களை எனக்குச் சொல்வாயாக. என் மகன் துரியோதனன் போரில் எவ்வாறு வீழ்ந்தான், என்பதை எனக்குச் சொல்வாயாக.(65) பாஞ்சாலர்கள், அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும் எவ்வாறு வீழ்ந்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(66) பாண்டவர்கள் (ஐவர்), சாத்வதர்கள் இருவர் (கிருஷ்ணன் மற்றும் சாத்யகி), கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் உயிருடன் தப்பியது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(67) போர் நடந்த முறை, அந்தப் போரின் தன்மை ஆகியவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, உரைப்பதில் நீ திறம் பெற்றவனாய் இருக்கிறாய். அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.”(68)
துரியோதனனின் வீர உரை! – சல்லிய பர்வம் பகுதி – 03-கர்ணன் கொல்லப்பட்ட பிறகு தப்பி ஓடிய கௌரவப்படையின் நிலை; தன் சாரதியிடம் பேசிய துரியோதனன்; இருபத்தைந்தாயிரம் பேரைத் தன் கதாயுதத்தால் கொன்ற பீமசேனன்; திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் மற்றும் சாத்யகி ஆகியோர் செய்த போர்; பாண்டவர்கள் அனைவரையும் தடுத்த துரியோதனன்; மீண்டும் தப்பி ஓடிய கௌரவப் படை; துரியோதனன் ஆற்றிய வீர உரை…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள் பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பீதியடைந்த உமது துருப்பினர், பாதுகாவலனை விரும்பும் பாதுகாப்பற்ற மனிதர்களைப் போலவோ, சிங்கத்தால் பீடிக்கப்படும் மான்கூட்டம் போலவோ இருந்தனர்.(6)
சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், கொம்புகளொடிந்த காளைகளைப் போலவோ, நச்சுப்பற்கள் உடைபட்ட பாம்புகளைப் போலவோ மாலை வேளையில் திரும்பினார்கள்.(7) அவர்களது வீரர்களில் முதன்மையானவர்கள் கொல்லப்பட்டதும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டுக் குழம்பிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள் அனைவரும், தங்கள் புலனுணர்வுகளையும் இழந்து எந்தத் திசையில் ஓடுவது என்பதை அறியாதிருந்தனர். அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே அவர்களில் பலர் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(9) பலர், “என்னைத்தான் பீபத்சு {அர்ஜுனன்} பின்தொடர்ந்து வருகிறான். என்னைத்தான் விருகோதரன் {பீமன்} பின்தொடர்ந்து வருகிறான்” என்றெண்ணி கீழே விழுந்தனர், அல்லது வாட்டமடைந்தனர்.(10)
சிலர் வேகமாகக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், சிலர் வேகமான தேர்களிலும், சிலர் வேகமான யானைகளிலும், எனப் பெரும் தேர்வீரர்கள் பலர், காலாட்படைவீரர்களைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, யானைகளால் தேர்கள் உடைக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கப்பட்டனர், குதிரைக்கூட்டங்களால் காலாட்படையினர் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, கள்வர்களும், இரைதேடும் விலங்குகளும் நிறைந்த காட்டில் வணிகர்க்கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்களைப்போல உமது துருப்பினர் இருந்தனர்.(13) பாகர்கள் கொல்லப்பட்ட சில யானைகளும், துதிக்கைகள் வெட்டப்பட்ட சில யானைகளும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொத்த உலகமும் பார்த்தனால் {அர்ஜுனனால்} நிறைந்திருப்பதைப் போலக் கண்டன.(14)
பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தப்பி ஓடும் தன் துருப்புகளைக் கண்ட துரியோதனன், ஓ! என்றும் ஐயோ! என்று கதறிக் கொண்டே தன் சாரதியிடம்,(15) “வில் தரித்துக் கொண்டு, படையின் பின்புறத்தில் நான் நிலைகொண்டால், பார்த்தனால் என்னை மீறிச் செல்ல இயலாது. எனவே, குதிரைகளை வேகமாகச் செலுத்துவாயாக.(16) போரில் நான் என் வீரத்தை வெளிப்படுத்தினால், கரைகளை ஒருபோதும் மீறத் துணியாத பெருங்கடலைப் போலவே குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்னை மீறத் துணிய மாட்டான்.(17) இன்று, அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் {பீமன்} மற்றும் எஞ்சியிருக்கும் என் எதிரிகளையும் கொன்றுவிட்டு, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) இவ்வாறு வீரனாகவும், மதிப்புமிக்க மனிதனாகவும் மாறிய குருமன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை மெதுவாகவே தூண்டினான்.(19) அந்நேரத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை இழந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலரும், இருபத்தைந்தாயிரம் {25,000} காலாட்படை வீரர்களும் (போரிடுவதற்காக) மெதுவாகச் சென்றனர்.(20)
அப்போது கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும் நால்வகைப் படைகளின் துணையுடன் அந்தத் துருப்புகளைச் சூழ்ந்து கொண்டு, கணைகளால் அவர்களை அழித்தனர்.(21) அவர்கள் அனைவரும் பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} தீவிரமாகப் போரிட்டனர். அவர்களில் பலர், அந்தப் பாண்டவ வீரர்கள் இருவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை அறைகூவியழைத்தனர்.(22) போரில் அவர்களால் சூழப்பட்ட பீமன் அவர்களிடம் சினம் கொண்டவனானான். வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கிய அவன் {பீமன்}, தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(23) தன் சொந்த கரங்களின் பலத்தைச் சார்ந்திருந்தவனும், குந்தியின் மகனுமான விருகோதரன் {பீமன்}, தேரில் இருந்தவனானாலும், நியாயமான போர்விதிகளை நோற்பவனாக, தரையில் இருந்த அந்த எதிரிகளோடு போரிடவில்லை.(24) முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், தாங்கு கயிற்றைக் கொண்டதும், யுகமுடிவின் அந்தகனுக்கு ஒப்பானதுமான அந்தக் கனத்த கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், யமன் தன் தண்டத்தால் உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதைப் போல அவர்கள் அனைவரையும் கொன்றான்.(25)
சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் காலாட்படைவீரர்கள், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இழந்த நிலையில், தங்கள் உயிர்களையும் விடத் தயாராகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை நோக்கி விரைந்தனர்.(26) உண்மையில், சினத்தால் நிறைந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பீமசேனனை அணுகி, யமனின் பார்வைபட்ட உயிரினங்களைப் போலத் திடீரென மடிந்தனர்.(27) வாளையும், கதாயுதத்தையும் எடுத்துக் கொண்ட பீமன், ஒரு பருந்தைப் போலத் தெரிந்து, உமது அந்த இருபத்தைந்தாயிரம் போர்வீரர்களையும் கொன்றான்.(28) அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவைக் கொன்ற பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், தன் முன் திருஷ்டத்யும்னனைக் கொண்டு மீண்டும் நின்றான்.(29)
அதே வேளையில் பெரும் சக்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} (குருக்களின்) தேர்ப்படைப்பிரிவை நோக்கிச் சென்றான். பெரும் பலத்தைக் கொண்டவர்களான மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன், சகாதேவன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், சகுனியைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துப் பெரும் வேகத்தில் உற்சாகமாக விரைந்து சென்றனர்.(30) சகுனியின் எண்ணற்ற குதிரைப்படையைக் கூரிய கணைகளால் கொன்ற அந்தப் பாண்டவ வீரர்கள், சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, ஒரு பயங்கரப் போரைச் செய்தனர்.(31) அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகிலும் கொண்டாடப்பட்ட தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டு, கௌரவர்களின் தேர்ப்படைப் பிரிவுக்கு மத்தியில் ஊடுருவினான்.(32) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், அர்ஜுனனை அதிலிருக்கும் போர்வீரனாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்ட உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(33) தேர்கள் மற்றும் குதிரைகளை இழந்தவர்களும், அனைத்துப் பக்கத்திலும் கணைகளால் துளைக்கப்பட்டவர்களுமான இருபத்தைந்தாயிரம் காலாட்படைவீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(34)
அப்போது பாஞ்சாலர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரனாக இருந்தவன் (திருஷ்டத்யும்னன்), தன் தலைமையில் பீமசேனனைக் கொண்டு, அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவை வேகமாகக் கொன்று, வெற்றியாளனாக நின்றான்.(35) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனும், கொண்டாடப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன் பேரழகு கொண்டவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நொறுக்கப்பவனாகவும் இருந்தான்.(36) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டவனும், உயர்ந்த கோவிதார மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டதும், உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(37) தங்களுக்கு மத்தியில் சாத்யகியைக் கொண்ட மாத்ரியின் கொண்டாடப்பட்ட மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்), ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவனான காந்தார மன்னனை {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று வேகமாக எங்கள் முன் தோன்றினர்.(38) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேகிதானன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான உமது துருப்பினரைக் கொன்று தங்கள் சங்குகளை முழங்கினர்.(39) களத்தில் இருந்து முகங்களைத் திருப்பிக் கொண்டு ஓடும் உமது துருப்பினர் அனைவரையும் கண்ட அந்த (பாண்டவ) வீரர்கள், வெல்லப்பட்ட காளைகளைத் துரத்தும் காளைகளைப் போல அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர்.(40)
அப்போது பாண்டுவின் மகனான வலிமைமிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ! ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, அசுரன் பலி, தேவர்கள் அனைவரையும் அறைகூவியழைத்ததைப் போலவே, துரியோதனன் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(45)
பிறகு சினத்தால் நிறைந்து, ஒன்று கூடிய பாண்டவர்கள், முழங்கிக் கொண்டிருக்கும் துரியோதனனை எதிர்த்து, மீண்டும் மீண்டும் அவனை நிந்தித்தபடியும், பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும் சென்றனர்.(46) எனினும் பின்னவன் {துரியோதனன்}, அச்சமில்லாமல் தன் எதிரிகளைக் கணைகளால் தாக்கினான். அப்போது உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(47) ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} மீறிச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர். இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் இருந்தவர்களும் கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தப்பி ஓடத் தயாராக இருந்தவர்களுமான தன் துருப்புகளைத் துரியோதனன் கண்டான். ஓ! ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) “இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன்?(50) பாண்டவப் படையினர் இப்போது எஞ்சியிருக்கும் சிலராகக் குறைக்கப்பட்டுள்ளனர். இரு கிருஷ்ணர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே நாம் அனைவரும் ஒரு நிலையை எடுத்தால், நாம் வெற்றியை அடைவது உறுதியே.(51)
எனினும், உங்கள் வியூகத்தைப் பிளந்து நீங்கள் தப்பி ஓடினாலோ, பாவிகளான உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் பாண்டவர்கள் கொல்வார்கள். எனவே, போரில் மரணமானது, நமக்கு நன்மையே.(52) க்ஷத்திரிய நடைமுறையின்படி, போர்க்களத்தில் போரிடுகையில் மரணித்தல் இனிமையானதாகும். அத்தகு மரணம் {மரணிப்பவனுக்கு} எந்தத் துயரையும் தராது. அத்தகு மரணத்தை அடைவதால், ஒரு மனிதன் அடுத்த உலகில் அழிவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(53) இங்கே கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்பீராக. உங்கள் மூதாதையரின் காலத்தில் இருந்து, உங்களால் பயிலப்படும் கடமைகளைத் துறப்பதைவிட, நீங்கள் கோபக்கார பீமசேனனின் சக்திக்குச் சரணடைவதே சிறந்ததாகும்.(54) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவம் நிறைந்த செயல் வேறொன்றும் இல்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை.(55) பிறரால் நெடுங்காலத்தில் அடையப்படும் (அடுத்த உலகத்தில் {மறுமையில்} உள்ள) அருள் நிறைந்த பகுதிகளை, ஒரு போர்வீரன் ஒரே நாளில் அடையலாம்” என்றான் {துரியோதனன்}[1].
மன்னனின் இந்த வார்த்தைகளை நிறைவேற்றிய பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள்,(56) தங்கள் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(57) அப்போது உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான மிகப் பயங்கரமான போர் மீண்டும் தொடங்கியது.(58) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன் துரியோதனன் தன் துருப்புகள் அனைத்துடன், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(59)
துரியோதனனுக்குக் கிருபர் உரைத்த நீதி! – சல்லிய பர்வம் பகுதி – 04-போரில் கௌரவர்கள் சந்தித்திருக்கும் வீழ்ச்சியையும், அர்ஜுனன் மற்றும் பீமசேனனின் வீரத்தையும் துரியோதனனிடம் எடுத்துரைத்த கிருபர், பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள அவனிடம் சொன்னது..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வீழ்ந்து கிடக்கும் தேர்களின் நீடங்கள், உயர் ஆன்மப் போர்வீரர்களின் தேர்கள், யானைகள் ஆகியவற்றையும், போரில் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களையும் கண்டும்,(1) போர்க்களமானது, ருத்ரனின் விளையாட்டு மைதானத்தின் தன்மையை அடைந்திருப்பதைப் பார்த்தும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் மகிமையற்ற முடிவுகளை நோக்கியும்,(2) துயரத்தால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} பின்வாங்கிய பிறகு, பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டும், கவலையால் நிறைந்த துருப்புகள் பெருந்துயரத்தில் விழுந்து,(3) அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கையில், நசுக்கப்பட்ட கௌரவப் போர்வீரர்களின் உரத்த ஓலங்களைக் கேட்டும், ஓ! பாரதரே,(4) முறையின்றி இடம்பெயர்ந்திருக்கும் பெரும் மன்னர்களின் அடையாளச்சின்னங்களைக் கண்டும், வயதையும், நன்னடத்தையையும் கொண்டவரும், கருணையால் நிறைந்தவரும், சொல்வன்மை கொண்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான குரு தலைவர் கிருபர், மன்னன் துரியோதனனை அணுகி, கோபத்துடன் இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(6)
அவர் {கிருபர்}, “ஓ! துரியோதனா, ஓ! பாரதா, நான் உன்னிடம் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. அதைக் கேட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவனே, உனக்கு விருப்பமுண்டானால் அவற்றின்படி செயல்படுவாயாக.(7) ஓ! ஏகாதிபதி, போர்க்கடமையைவிடச் சிறந்த பாதை வேறேதும் கிடையாது. ஓ! க்ஷத்திரிய ஒழுங்கின் காளையே, அப்பாதையை அடைந்த க்ஷத்திரியர்களே போரில் ஈடுபடுகிறார்கள்.(8) க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்று வாழ்பவன், தன் மகன், தந்தை, சகோதரன், சகோதரியின் மகன், தாய்மாமன், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் போரிடுகிறான்.(9) போரில் அவன் கொல்லப்பட்டால், அதில் {அவனுக்குப்} பெரும் தகுதி {புண்ணியம்} கிடைக்கிறது. அதே போல, களத்திலிருந்து அவன் ஓடினாலோ, பெரும் பாவமே கிடைக்கிறது. இதன் காரணமாகத் தான், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி வாழ விரும்பும் மனிதனின் வாழ்வு மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.(10)
இதைப் பொறுத்தவரை, உனக்கு நான் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லப் போகிறேன். பீஷ்மர், துரோணர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் ஆகியோர் வீழ்ந்த பிறகு,(11) ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, ஜெயத்ரதன், உனது சகோதரர்கள், உனது மகன் லக்ஷ்மணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?(12) யாவர் மீது சுமைகள் அனைத்தையும் வைத்து, நாம் அரசுரிமையில் இன்புற்றோமோ, அவர்கள் அனைவரும் தங்கள் உடல்களைத் துறந்து, பிரம்மத்தை அறிந்த மனிதர்களால் அடையத்தக்க அருள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர்.(13) நம்மைப் பொறுத்தவரை, எண்ணற்ற சாதனைகளைக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களை இழந்துவிட்டு, எண்ணற்ற மன்னர்களை அழிவடையச் செய்து, துன்பத்திலேயே நாம் நமது காலத்தைக் கடத்தப் போகிறோம்.(14) அந்த வீரர்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்போதுகூட, பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். கிருஷ்ணனைத் தன் கண்களாகக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, தேவர்களாலேயே கூட வீழ்த்தப்பட முடியாதவனாவான்.(15)
பரந்த (கௌரவப்) படையானது, (வசந்தகாலத்தில் நிறுவப்படும்) இந்திரத்வஜத்தைப் போல உயர்ந்திருப்பதும், இந்திரவில்லை {வானவில்லைப்} போலப் பிரகாசிப்பதும், குரங்கைத் தாங்கியிருப்பதுமான அவனது {அர்ஜுனனின்} கொடிமரத்தை அணுகி, எப்போதும் அச்சத்திலேயே நடுங்கியது.(16) பீமசேனனின் சிங்கமுழக்கம், பாஞ்சஜன்யத்தின் சங்கொலி, காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக்கேட்டே நமது இதயங்கள் நமக்குள் இறந்து விழுந்தன {நமது மனம் மயக்கமடைந்தது}.(17) மின்னலின் கீற்றுகளைப் போல அசைந்து, நம் கண்களைக் குருடாக்கிய அர்ஜுனனின் காண்டீவமானது, நெருப்பு வளையத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(18) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அந்த உறுதிமிக்க வில் {காண்டீவம்} அசைக்கப்படும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அசையும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிகிறது.(19) வெண்ணிறத்தையும், பெரும் வேகத்தையும், சந்திரன் அல்லது குசப் புல்லின் காந்தியையும் கொண்டவையும், வானத்தையே விழுங்கியபடி ஓடக்கூடியவையுமான குதிரைகள் அவனது {அர்ஜுனனின்} தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன.(20) காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போலக் கிருஷ்ணனால் தூண்டப்பட்டும், தங்கத்தால் தங்கள் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டும், போரில் அவை அர்ஜுனனைச் சுமந்து செல்கின்றன.(21)
குளிர்காலத்தில் காட்டில் உலர்ந்த புற்களை எரித்துப் பெருகும் காட்டுத்தீயைப் போலவே ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அர்ஜுனன் போரில் உமது பெரும்படையை எரித்தான்.(22) இந்திரனின் காந்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நமது படையணிகளுக்குள் நுழையும்போது, நான்கு தந்தங்களைக் கொண்ட யானையொன்றைப் போல அவன் தெரிவதை நாம் கண்டிருக்கிறோம்.(23) உமது படையைக் கலங்கடித்து மன்னர்களை அச்சுறுத்தியபோது, தாமரைகள் நிறைந்திருக்கும் தடாகத்தைக் கலங்கடிக்கும் ஒரு யானைக்கு ஒப்பாகவே தனஞ்சயனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(24) தன் வில்லின் நாணொலியால் போர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தும்போது, சிறு விலங்குகளைத் திகிலடையச் செய்யும் சிங்கத்திற்கு ஒப்பாகவே அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(25)
உலகங்கள் அனைத்திலும் உள்ள வில்லாளிகளில் முதன்மையானவர்களும், வில் தரித்தோரில் காளைகளுமான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ர்ஜுனன்}, கவசம் பூண்டபடி மிக அழகாகத் தெரிகிறார்கள்.(26) ஓ! பாரதா {துரியோதனா}, களத்தில் இன்று கொல்லப்படுவோருக்கு, இது பயங்கரமான பனினேழாவது {17வது} நாள் போராகும்.(27) காற்றால் கலைக்கப்படும் கூதிர்கால மேகங்களைப் போல உனது படையின் பல்வேறு பிரிவுகள் பிளந்துவிட்டன.(28) ஓ! ஏகாதிபதி, புயலால் கலங்கடிக்கப்பட்ட படகானது, பெருங்கடலின் மத்தியில் வெளிப்படுத்தப் படுவதைப்போல {மூழ்கடிக்கப்படுவதைப் போல}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, உனது படையை நடுங்கச் செய்தான்.(29)
(ஜெயத்ரதன் கொல்லப்பட்டபோது) சூதன் மகன் {கர்ணன்} எங்கே சென்றான்? தமது தொண்டர்களுடன் கூடிய துரோணர் எங்கே சென்றார்? நான் எங்கே சென்றேன்? நீ எங்கே சென்றாய்? ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எங்கே சென்றான்? தன் சகோதரர்களுடன் கூடிய உன் சகோதரன் துச்சாசனன் எங்கே சென்றான்?(30) ஜெயத்ரதனைக் கண்டும், அவன் தன் கணைகள் அடையும் தொலைவில் இருக்கிறான் என்பதையும் அறிந்த அர்ஜுனன், உனது உறவினர்கள், சகோதரர்கள், கூட்டாளிகள், தாய்மாமன்கள் ஆகியோர் மீது தனது காலை வைத்து, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றான். அப்போது செய்ய முடியாததை இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?(31,32) உன் துருப்பில் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல எவன் இருக்கிறான்?(33) அந்த உயர் ஆன்மப் போர்வீரன் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டுள்ளான். மேலும் காண்டீவத்தின் நாணொலியே நமது சக்திகளை அபகரித்துவிடுகிறது.(34) இப்போது தலைவனில்லாமல் இருக்கும் இந்த உனது படையானது, நிலவில்லாது ஓரிரவைப் போலவோ, யானைகளால் முறிக்கப்பட்ட மரங்களைத் தன் கரைகளில் கொண்ட நீர்வற்றிய ஓர் ஆற்றைப் போலவோ இருக்கிறது.(35)
வெண்குதிரைகளையும், வலிய கரங்களையும் கொண்ட அர்ஜுனன், உலர்ந்த புற்களுக்கிடையில் பரவும் காட்டுத்தீயைப் போல, தலைவனற்ற இந்த உன் படைக்குள் ஊடுருவி, தன் விருப்பம் போலத் திரிவான்.(36) சாத்யகி, பீமசேனன் ஆகிய இருவரின் மூர்க்கமும், மலைகள் அனைத்தையும் பிளக்கவோ, பெருங்கடல்கள் அனைத்தையும் வற்றச்செய்வோ வல்லமைபெற்றதாகும்.(37) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சபைக்கு மத்தியில் பீமன் பேசிய வார்த்தைகள்[1] அனைத்தும் கிட்டத்தட்ட அவனால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நிறைவேற்றப்படாமல் எஞ்சியிருப்பவனையும் அவனால் நிறைவேற்றப்படும்[1].(38) வீழ்த்தக் கடினமான பாண்டவர்களின் படைக்கு எதிராகக் கர்ணன் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, அது காண்டீவதாரியால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டது.(39) எக்காரணமும் இன்றி, நீதிமான்களான பாண்டவர்களுக்கு நீ இன்னல்கள் பலவற்றை விளைவித்திருக்கிறய். அச்செயல்பாடுகளின் கனிகளே இப்போது வருகின்றன.(40)
உன் நோக்கங்களுக்காகவே நீ பெருங்கவனத்துன் ஒரு பெரும் படையைத் திரட்டினாய். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பரந்த படையும், நீயும் கூட இப்போது பேராபத்தில் விழுந்துவிட்டீர்கள்.(41) சுயமே {ஆத்மாவே} அனைத்திற்கும் புகலிடம் என்பதால், இப்போது உன்னை நீ பாதுகாத்துக் கொள்வாயாக. {ஆதாரமான} அந்தப் புகலிடம் உடைந்துபோனால், ஓ! ஐயா, அதிலுள்ள அனைத்தும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறிப் போகும்[2].(42) பலவீனமடைந்தவன், சமரசத்தின் மூலம் அமைதியை நாட வேண்டும். வளர்பவனோ, போரிட வேண்டும். இதுவே பிருஹஸ்பதி கற்பித்திருக்கும் கொள்கையாகும் {நீதியாகும்}.(43) நமது படை பலத்தைப் பொறுத்தவரை நாம் இப்போது பாண்டு மகன்களைவிடக் குறைவடைந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தலைவா, பாண்டவர்களோடு அமைதியேற்படுத்திக் கொள்வதே நமக்கு நன்மையாகும் என நான் நினைக்கிறேன்.(44) எவன் தனக்கான நன்மையை அறிந்து கொள்ளவில்லையோ, தனக்கான நன்மையை (அறிந்தே) அலட்சியம் செய்வானோ, அவன் எந்த நன்மையையும் அடையமாட்டான்.(45)
மன்னன் யுதிஷ்டிரனைப் பணிந்தால், அரசுரிமை நம்மிடமே இருக்கும் என்றால், அதுவும் நமக்கு நன்மையையே உண்டாக்கும், மூடத்தனத்தின் மூலம் (பாண்டவர்களிடம்) தோற்பது நன்மையைத் தராது.(46) யுதிஷ்டிரன் கருணையுள்ளவன். விசித்திரவீரியன் மகனும் {திருதராஷ்டிரனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} வேண்டினால், அவன் உன்னையே மன்னனாகத் தொடர அனுமதிப்பான்.(47) வெற்றியாளர்களான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகியோரிடம் ரிஷிகேசன் என்ன சொன்னாலும், அதற்கு அவர்கள் அனைவரும் ஐயமறக் கீழ்ப்படிவார்கள்.(48) கிருஷ்ணன், குருகுலத்தின் திருதராஷ்டிரன் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும், அதே போல, பாண்டுவின் மகனும் கிருஷ்ணனின் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும் நான் நினைக்கிறேன்.(49) பிருதையின் {குந்தியின்} மகன்களுடனான பகைமைகள் நிறுத்தப்படுவதே உனக்கான நன்மை என நான் கருதுகிறேன். குறுகிய நோக்கங்களுக்காகவோ, என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவோ இதை நான் உனக்குச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, நன்மையெனக் கருதுவதையே நான் உனக்குச் சொல்கிறேன். (இப்போது இவற்றை நீ புறக்கணித்தால்) இவ்வார்த்தைகளை நீ உன் மரணத் தருவாயில் நினைவுகூர்வாய்” என்றார் {கிருபர்}.(50) வயதில் முதிர்ந்தவரும், சரத்வானின் மகனுமான கிருபர் அழுதுகொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னார். வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவர் கவலையடைந்தவராகக் கிட்டத்தட்ட தமது புலனுணர்வுகளை இழந்தார்” {என்றான் சஞ்சயன்}.(51)
திரௌபதியின் துகிலுரிப்பை மறப்பானோ? – சல்லிய பர்வம் பகுதி – 05-கிருபரின் வார்த்தைகள் நன்மையளிப்பனவாக இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள முடியாத நிலையைக் கிருபருக்கு எடுத்துச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுக்குத் தான் இழைத்த தீமைகளைச் சொன்னது; துரியோதனனின் பேச்சால் உற்சாகமடைந்த வீரர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌதமரின் கொண்டாடப்பட்ட மகனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் (துரியோதனன்), சூடான பெருமூச்சுகளை விட்டபடி மௌனமாக இருந்தான்.(1) சிறிது நேரம் சிந்தித்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சரத்வான் மகனான கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(2) “ஒரு நண்பன் சொல்லும் அத்தனையும் என்னிடம் நீர் சொல்லியிருக்கிறீர். மேலும், போரிடும்போதும், உமது உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைகொள்ளமால் எனக்காக அனைத்தையும் செய்திருக்கிறீர்.(3) பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் ஊடுருவி, பெரும் சக்தி கொண்டவர்களான பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் நீர் போராடியதை இந்த உலகம் கண்டிருக்கிறது.(4) ஒரு நண்பனால் சொல்லப்பட வேண்டியது எதுவோ, அஃது உம்மால் சொல்லப்பட்டது. எனினும், மரணத்தருவாயில் இருக்கும் ஒரு மனிதனுக்கு மருந்தைப் போல, உமது வார்த்தைகள் எனக்கு மகிழ்வைத் தரவில்லை.(5)
நன்மையானதும், சிறப்பானதும், காரணம் நிறைந்ததுமான நீர் சொன்ன இந்த வார்த்தைகள், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {கிருபரே}, எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.(6) (முன்பொரு சமயம்) நம்மால் நாடிழந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, எவ்வாறு நம்மீது நம்பிக்கை வைப்பான்? அந்த வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்} ஒருமுறை நம்மால் பகடையில் வீழ்த்தப்பட்டான். என் வார்த்தைகள் அவன் எவ்வாறு நம்புவான்?(7) அதேபோல, பார்த்தர்களின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடும் கிருஷ்ணன், நம்மிடம் தூதனாக வந்தபோது, நம்மால் வஞ்சிக்கப்பட்டான். நமது அந்தச் செயல்பாடு ஆய்வமைவற்றதாகும் {தவறான முடிவாகும்}. ஓ! மறுபிறப்பாளரே, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} எவ்வாறு என் வார்த்தைகளை நம்புவான்?(8) இளவரசி கிருஷ்ணை {திரௌபதி} சபையில் நின்று கொண்டிருந்தபோது, பரிதாபகரமாக அழுதாள். நமது அந்தச் செயல்பாட்டையோ, நம்மால் யுதிஷ்டிரன் நாடிழந்ததையோ ஒருபோதும் கிருஷ்ணன் மறக்கமாட்டான்.(9) இந்த இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} தங்களுக்குள் ஒரே இதயத்தைக் கொண்டவர்கள் என்றும், ஒருவர் மீதொருவர் உறுதியான பற்றுடையவர்கள் என்றும் முன்பே நாம் கேட்டிருந்தோம். ஓ! தலைவரே {கிருபரே}, இன்று அதை நம் கண்களாலேயே நாம் காண்கிறோம்.(10)
தன் தங்கை {சுபத்திரை} மகனின் {அபிமன்யுவின்} படுகொலையைக் கேட்ட கேசவன் {கிருஷ்ணன்}, தன் இரவுகளைக் கவலையிலேயே கழிக்கிறான். அவனுக்கு நாம் பெரிய தீங்கை இழைத்திருக்கிறோம். அவன் நம்மை எவ்வாறு மன்னிப்பான்?(11) அபிமன்யுவுடைய மரணத்தின் விளைவாக அர்ஜுனனும், அவலமான நிலையை அடைந்திருக்கிறான். வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் கூட, அவன் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வான்?(12) பாண்டுவின் இரண்டாவது மகனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், மிகவும் சீற்றத்துடன் இருக்கிறான். அவன் ஒரு பயங்கரமான சபதத்தைச் செய்திருக்கிறான். அவன் {பீமன்} உடைவானேயொழிய ஒருபோதும் வளையமாட்டான். {இறப்பானேயொழிய பணியமாட்டான்}.(13) நமக்கு எதிராகப் பகைமையையே சுவாசிக்கும் அந்த வீர இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, கவசம்பூட்டி, வாள் தரிக்கும்போது இரு யமன்களுக்கு ஒப்பாக இருக்கின்றனர்.(14) திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் எனக்கு எதிராகத் தங்கள் வாள்களை உருவியிருக்கிறார்கள். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கிருபரே}, அவர்கள் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்கள்?(15)
ஒற்றையாடையுடுத்தி {வீட்டுக்கு விலக்காகத்} தன் பருவ காலத்தில் இருந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் சபைக்கு மத்தியில் வைத்துத் துச்சாசனனால் கொடூரமாக நடத்தப்பட்டாள்.(16) துயரில் மூழ்கிய அந்த நிர்வாண திரௌபதியை[1] இன்னும் நினைவில் வைத்திருப்பவர்களும், எதிரிகளை எரிப்பவர்களுமான பாண்டவர்களைப் போரில் இருந்து விலக்கவே முடியாது.(17) மேலும் துருபதனின் மகளான கிருஷ்ணை {திரௌபதி}, என் அழிவுக்காகவும், தன் கணவர்களால் பேணப்படும் நோக்கங்களின் வெற்றிக்காகவும் கடும் நோன்புகளை நோற்று, அனைத்து நாட்களிலும் வெறுந்தரையில் படுத்து, பகைமைகள் முடியும் வரை அந்நிலையிலேயே தொடரவே நினைத்திருக்கிறாள்.(18) கௌரவம் மற்றும் செருக்கைக் கைவிட்டவளான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடன் பிறந்த தங்கை (சுபத்ரை), உண்மையான ஒரு பணிப்பெண்ணாகவே மாறி திரௌபதிக்கு எப்போதும் பணிவிடைகளைச் செய்கிறாள்.(19) எனவே, அனைத்தும் தழல்விட்டெரிகின்றன. அந்த நெருப்பை ஒருபோதும் தணிக்க முடியாது. அபிமன்யுவுடைய படுகொலையின் விளைவால் அவர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது.(20)
கடல் சூழ்ந்த இந்தப் பூமியின் அரசுரிமையை அனுபவித்த நான், பாண்டவர்களின் உதவியின் கீழ் ஓர் அரசை எவ்வாறு அமைதியாக அனுபவிக்க முடியும்?(21) மன்னர்கள் அனைவரின் தலைகளின் மீது, சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த நான், யுதிஷ்டிரனின் பின்னால் ஓர் அடிமையைப் போல எவ்வாறு நடந்து செல்ல முடியும்?(22) மகிழத்தக்க பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் கருணையை வெளிப்படுத்திய நான், இப்போது இரங்கத்தக்கவர்களை என் தோழர்களாக அடைந்து ஓர் இரங்கத்தக்க வாழ்வை எவ்வாறு நோற்க முடியும்?(23) நீர் பேசிய மென்மையான நன்மையான அந்த வார்த்தைகளை நான் வெறுக்கவில்லை. எனினும், அமைதிக்கான நேரம் இதுவல்ல என்றே நான் நினைக்கிறேன்.(24) ஓ! எதிரிகளை எரிப்பவரே {கிருபரே}, நேர்மையாகப் போரிடுவதே நல்ல கொள்கை என நான் கருதுகிறேன். ஓர் அலியைப் போலச் செயல்படுவதற்கு இது நேரமல்ல. மறுபுறம், இது போருக்கான நேரமாகும்.(25)
நான் பல வேள்விகளைச் செய்திருக்கிறேன். பிராமணர்களுக்குத் தக்ஷிணைகளைக் கொடுத்திருக்கிறேன். என் விருப்பங்கள் அனைத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேத உரைகளை நான் கேட்டிருக்கிறேன். என் எதிரிகளின் தலைகளின் மீது நான் நடந்திருக்கிறேன்.(26) என் பணியாட்கள் அனைவரும் என்னால் நன்கு பேணப்பட்டனர். மக்களைத் துயரில் இருந்து விடுவித்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்களிடம் இத்தகு எளிய வார்த்தைகளைப் பேச நான் ஒருபோதும் துணியமாட்டேன்.(27) வெளிநாட்டு அரசுகளை நான் கைப்பற்றியிருக்கிறேன். என் சொந்த அரசையும் நான் முறையாகவே ஆண்டிருக்கிறேன். இன்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களை நான் அனுபவித்திருக்கிறேன். பித்ருக்கள் மற்றும் க்ஷத்திரியக்கடமைக்கு நான் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தியிருக்கிறேன்.(28) நிச்சயமாக இங்கே இனி மகிழ்ச்சியில்லை. அரசாலோ, நற்பெயராலோ என்ன நேரப்போகிறது? இங்கே அடையத்தக்கது புகழ் மட்டுமே. அந்தப் புகழைப் போரின் மூலமே அடையலாம்; வேறு எவ்வழியிலும் அடையமுடியாது.(29) க்ஷத்திரியன் ஒருவன் தன் வீட்டில் மரணமடைவது நிந்திக்கத்தக்கதாகும். வீட்டிலுள்ள படுக்கையில் மரணம் என்பது ஒருவனுக்கு மிகவும் பாவம் நிறைந்ததாகும்.(30)
வேள்விகளைச் செய்த பிறகு, தன் உடலைக் காடுகளிலோ, போரிலோ துறக்கும் ஒரு மனிதன் பெரும் மகிமையை அடைகிறான்.(31) அழுதுகொண்டிருக்கும் உறவினர்களுக்கு மத்தியில், நோய் மற்றும் முதுமையால் பீடிக்கப்பட்டு, வலியில் பரிதாபமாக அழுதவாறு இறப்பவன் மனிதனே அல்ல.(32) பல்வேறு இன்பநுகர் பொருட்களைக் கைவிட்டு, நேர்மையாகப் போரிடப் போகும் நான், உயர்ந்த எல்லையை அடைந்தோரின் தோழமையை அடைந்து, சக்ரனின் {இந்திரனின்} உலகங்களுக்குச் செல்லப் போகிறேன்.(33) போரில் இருந்து பின்வாங்காதவர்களும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களும், உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், வேள்விகளைச் செய்தவர்களும், ஆயுதவேள்வியில் {போரில்} தூய்மையடைந்தவர்களும் {புனிதமடைந்தவர்களும் [இறந்தவர்களும்]}, நேர்மையான நடத்தை கொண்டவர்களுமான வீரர்களின் வசிப்பிடம் சொர்க்கமேயாகும் என்பதில் ஐயமில்லை.(34) போரில் ஈடுபடும் அத்தகு வீரர்களை, பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் இன்பமாகப் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை. அப்சரஸ்களின் தோழமையுடன், சொர்க்கத்தில் இன்புற்று, தேவர்களின் சபையில் வழிபடப்படும் அவர்களைப் பித்ருக்கள் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை.(35)
போரில் இருந்து திரும்பாதவர்களும், தேவர்களும் செல்லும் பாதையில் நாம் இப்போது உயர்வோமாக.(36) அந்தப் பாதையிலேயே நம் மதிப்பிற்குரிய பாட்டனும் {பீஷ்மரும்}, பெரும் அறிவைக் கொண்ட ஆசானும் {துரோணரும்}, ஜெயத்ரதனும், கர்ணனும், துச்சாசனனும் சென்றனர்.(37) இந்தப் போரில் எனக்காகத் தீவிரமாகப் போராடிய துணிச்சல்மிக்க மன்னர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். கணைகளால் சிதைக்கப்பட்டு, குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய அவர்கள் வெறுந்தரையில் இப்போது கிடக்கிறார்கள்.(38) பெரும் துணிச்சலைக் கொண்டவர்களும், சிறந்த ஆயுதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்தவர்களுமான அம்மன்னர்கள், தங்கள் கடமைகளைச் செய்து தங்கள் உயிர்மூச்சைத் துறந்து இப்போது இந்திரலோகவாசிகளாகிவிட்டனர்.(39) (அருள் உலகத்திற்குச் செல்ல) அவர்கள் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த அருள் இலக்கை அடைய விரைந்து செல்லும் வீரர்களுடைய கூட்டத்தின் விளைவாக மீண்டும் அவ்வழி அடைவதற்கரிதாக மாறும்[2].(40)
எனக்காக இறந்த அந்த வீரர்களின் சாதனைகளை நன்றியுடன் நினைவுகூரும் நான், என் இதயத்தை அரசில் நிலைக்கச் செய்யாமல், அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனையே அடைக்க விரும்புகிறேன்.(41) என் நண்பர்கள், தம்பிகள் மற்றும் பாட்டன்கள் கொல்லப்படக் காரணமான நான் என் உயிரைக் காத்துக் கொண்டால், உலகம் என்னை நிந்திக்கும் என்பதில் ஐயமில்லை.(42) பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனைப்} பணிந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இல்லாமல் நான் அனுபவிக்கப்போவது எத்தகைய அரசாக இருக்கக்கூடும்?(43) அண்டத்தில் அதை அடைந்து தலைவனாக இருந்த நான், இப்போது நல்ல போரின் மூலம் சொர்க்கத்தை அடையப் போகிறேன். இது வேறுவிதமாகாது” என்றான் {துரியோதனன்}.(44) துரியோதனனால் இவ்வாறு சொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்தப் பேச்சை மெச்சி, மன்னனை உற்சாகமூட்டும் வகையில், “நல்லது, நல்லது” என்றனர்.(45)
தங்கள் தோல்விக்காக எவ்வருத்தமும் கொள்ளாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், போரிடத் தீர்மானித்த பிறகு, உற்சாகத்தால் நிறைந்தனர்.(46) தங்கள் விலங்குகளைத் தேற்றிய கௌரவர்கள், போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியை அடைந்து, களத்தில் இருந்து சற்றே இரு யோஜனைகளுக்குக் குறைந்த தொலைவில் (அந்த இரவுக்கான) தங்கள் முகாமை அமைத்தனர்.(47) புனிதமான சரஸ்வதியின் {சரஸ்வதி நதியின்} சிவந்த நீரையும், இமய மலையின் அடிவாரத்தில் மேட்டுச் சமவெளியை அடைந்த அவர்கள், அந்நீரில் குளித்து, அதைக் கொண்டு தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டனர். உமது மகனால் {துரியோதனனால்} உற்காசமடைந்த அவர்கள் (அந்த ஓய்வுக் களத்தில்) காத்திருந்தனர்.(48) மீண்டும் தங்களை ஒருவரோடொருவர் அணிதிரட்டிக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், விதியால் உந்தப்பட்டு (தங்கள் முகாமில்) காத்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(49)
படைத்தலைவனானான் சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 06-இமய மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுச் சமவெளியில் பதினேழாம் நாள் இரவைக் கழித்த கௌரவர்கள்; படைத்தலைவரை நியமிக்கும்படி துரியோதனனைக் கேட்டுக் கொண்ட படை வீரர்கள்; அஸ்வத்தாமனிடம் சென்று ஆலோசனை கோரிய துரியோதனன்; சல்லியனைப் படைத்தலைவராக நியமிக்கும்படி சொன்ன அஸ்வத்தாமன்; அவ்வாறே ஆகும்படி சல்லியனை வேண்டிக் கொண்ட துரியோதனன்; அதை ஏற்றுக் கொண்ட சல்லியன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இமய மலையின் அடிவாரத்தில், அந்த மேட்டுச் சமவெளியில் இருந்த அந்த வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு அந்த இரவைக் கழித்தனர்.(1) உண்மையில், சல்லியன், சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, அஸ்வத்தாமன், கிருபர், சாத்வதகுலத்தின் கிருதவர்மன்,(2) சுஷேனன், அரிஷ்டசேனன், பெரும் சக்தி கொண்ட திருதசேனன், ஜயத்சேனன் ஆகிய இந்த மன்னர்கள் அனைவரும் அங்கேயே தங்கள் இரவைக் கழித்தனர்.(3) வீரக் கர்ணன் போரில் கொல்லப்பட்ட பிறகு, வெற்றியை விரும்பிய பாண்டவர்களிடம் அச்சம் கொண்ட உமது மகன்கள், அந்த இமய மலைகளிலும் அமைதியை அடையத் தவறினர்.(4)
போரிடத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னனை {துரியோதனனை} முறையாக வழிபட்டு, சல்லியனின் முன்னிலையில் அவனிடம் {துரியோதனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(5) அவர்கள், “உன் படைக்கு யாராவது ஒருவரைத் தலைவராக்கிய பிறகு எதிரியுடன் போரிடுவதே உனக்குத் தகும். அவரால் பாதுகாக்கப்பட்டே போரில் நாம் எதிரிகளை வெல்வோம்” என்றனர்.(6) அப்போது துரியோதனன், தன் தேரில் இருந்து இறங்காமலேயே, தேர்வீரர்களில் முதன்மையானவனும், போர்விதிகள் அனைத்தையும் அறிந்தவனும், போரில் அந்தகனுக்கு ஒப்பானவனுமாi வீரனை (அஸ்வத்தாமனை) நோக்கிச் சென்றான்[1].(7) அழகிய அங்கங்களைக் கொண்டவனும், தலையை நன்கு மறைத்திருந்தவனும், சங்கில் உள்ளதைப் போலக் கழுத்தில் மூன்று கோடுகளைக் கொண்டவனும், இனிய பேச்சைக் கொண்டவனும், முற்றாக மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், புலியைப் போன்ற முகத்தைக் கொண்டவனும், மேருவைப் போன்ற மேன்மை கொண்டவனும்,(8) மஹாதேவனின் {சிவனின்} காளைக்கு ஒப்பான கழுத்து, கண்கள், நடை மற்றும் குரலைக் கொண்டவனும், நன்கு இயைந்த, பருத்த, நீண்ட கரங்களைக் கொண்டவனும், நன்கு கட்டமைக்கப்பட்ட அகன்ற மார்பைக் கொண்டவனும்,(9) காற்றில் பறக்கும் கருடனுக்கு இணையான வேகத்தையும், பலத்தையும் கொண்டவனும், சூரியனின் கதிர்களைப் போன்ற காந்தியைக் கொடையாகக் கொண்டவனும், புத்திக்கூர்மையில் உசனசுக்கு {சுக்கிரனுக்குப்} போட்டியாளனும் {இணையானவனும்},(10) அழகு, வடிவம் மற்றும் முகத்தின் கவர்ச்சி ஆகியவற்றில் சந்திரனைப் போன்றவனும், எண்ணற்ற தங்கத் தாமரைகளால் அமைந்ததைப் போன்ற உடலைக் கொண்டவனும், இயைந்து பொருந்தும் மூட்டுகளைக் கொண்டவனும்,(11) நன்கு கட்டமைக்கப்பட்ட தொடைகள், இடை மற்றும் குறுக்கைக் கொண்டவனும், அழகிய பாதம், அழகிய விரல்கள், அழகிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, படைப்புகள் அனைத்தின் நற்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்த பிறகு, படைப்பாளனால் பெருங்கவனத்துடன் படைக்கப்பட்டவனாகத் தெரிந்தான்.(12)
நற்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, கல்வியில் பெருங்கடலாவான். எப்போதும் தன் எதிரிகளைப் பெரும் வேகத்துடன் வெற்றிக் கொண்ட அவன், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(13) நான்கு பாதங்கள் மற்றும் பத்து அங்கங்களைக் கொண்ட ஆயுத அறிவியலின் அனைத்து விவரங்களையும் அறிந்தவனாக அவன் இருந்தான்[2]. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதாக ஆக்யானங்களையும்[3] அறிந்தவனாக அவன் இருந்தான்.(14) பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், பெண்ணிடம் பிறக்காதவருமான துரோணர், பெருங்கவனத்துடனும், தவ நோன்புகளுடனும் முக்கண் தேவனை வழிபட்டு, {அவரைப் போன்றே} பெண்ணிடம் பிறக்காத தன் மனைவியிடம் {கிருபியிடம்} அவனை {அஸ்வத்தாமனைப்} பெற்றெடுத்தார்.(15)
அப்படிப்பட்ட ஒப்பற்ற சாதனைகளையும், புகழையும் கொண்டவனும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் கற்றறிந்தவனும், சாதனைகளில் பெருங்கடலும், களங்கமற்றவனுமான அஸ்வத்தாமனை அணுகிய உமது மகன் {துரியோதனன்}, அவனிடம், “ஓ! ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, நீரே இன்று எங்களது உயர்ந்த புகலிடமாக இருக்கிறீர். எனவே, இப்போது எவரை நமது படைத்தலைவராக நியமிப்பது? யாரைத் தலைமையாக்கிக் கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் நம் அனைவராலும் பாண்டவர்களை வெல்ல முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(16-18)
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, “சல்லியர் நமது படையின் தலைவராகட்டும். குலம், ஆற்றல், சக்தி, புகழ், அழகு மற்றும் பிற அனைத்து சாதனைகளிலும் அவரே மேன்மையானவராக இருக்கிறார்.(19) தமக்கு அளிக்கப்பட்ட சேவைகளால் மனம் நிறைந்த அவர் {சல்லியர்}, தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களைக் கைவிட்டுவிட்டு, நமது தரப்பை அடைந்திருக்கிறார். தாமே ஒரு பெரிய படையை வைத்திருக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், தேவர்ப்படையின் இரண்டாம் தலைவனை (கார்த்திகேயனை {முருகனைப்}) போன்றவராவார்.(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, அம்மன்னரை {சல்லியரை} நமது படைத்தலைவராக்கினால், வெல்லப்பட முடியாத ஸ்கந்தனை {முருகனைப்) படைத்தலைவனாக்கிய தேவர்களைப் போலவே நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(21)
துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், சல்லியனைச் சூழ்ந்து கொண்ட மன்னர்கள் அனைவரும், அவன் வெற்றியடைவானென {வெற்றி} முழக்கமிட்டனர். போருக்குத் தங்கள் மனத்தை ஆயத்தம் செய்து கொண்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(22) அப்போது கரங்களைக் கூப்பியபடியே தன் தேரில் இருந்து இறங்கிய துரியோதனன், போரில் துரோணர் மற்றும் பீஷ்மருக்குப் போட்டியாளனும் {இணையானவனும்}, {அப்போது} தன் தேரில் இருந்தவனுமான சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(23) “ஓ! நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரே, நண்பர்களின் வடிவத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான நண்பர்கள்தானா? இல்லையா? என ஞானியர் சோதிப்பது போன்ற அப்படிப்பட்ட நேரம் இப்போது உமது நண்பர்களுக்கு வந்திருக்கிறது.(24) துணிச்சல்மிக்க நீரே எங்கள் படைத்தலைவராகி, எங்கள் படையின் முன்னணியில் இருக்க வேண்டும். நீர் போரிடச் செல்லும்போது பாண்டவர்களும், அவர்களது நண்பர்களும் உற்சாகத்தை இழப்பார்கள், பாஞ்சாலர்களோ தளர்வடைவார்கள்” என்றான் {துரியோதனன்}.(25)
சல்லியன், “ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, நீ என்னிடம் நிறைவேற்றச் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். உயிர்மூச்சு, நாடு, செல்வம் ஆகிய நான் கொண்ட அனைத்தும் உன் சேவைக்காகவே {உனக்காகவே} இருக்கின்றன” என்று பதிலுரைத்தான்.(26)
துரியோதனன், “ஓ! அம்மானே {தாய்மாமனே}, என் படையின் தலைமைப் பொறுப்பை அடைய நான் உம்மை வேண்டி நிற்கிறேன். ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே, போரில் தேவர்களைப் பாதுகாக்கும் ஸ்கந்தனை {முருகனைப்} போலவே ஒப்பற்றவகையில் எங்களைக் காப்பீராக.(27) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, பாவகனின் {அக்னியின்} மகனான கார்த்திகேயன் {முருகன்}, தேவர்களின் (படை) தலைமையை ஏற்றதுபோலவே, நீரே உம்மைத் தலைமைப்பொறுப்பில் நிறுவிக் கொள்வீராக. ஓ! வீரரே, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, போரில் நமது எதிரிகளைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.”(28)
கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 07-துரியோதனனுக்கு உறுதிகூறிய சல்லியன்; சல்லியனைப் படைத்தலைமையில் நிறுவிய துரியோதனன்; கர்ணன் கொல்லப்பட்ட துயர் மறைந்து, மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள் சல்லியனை வாழ்த்தியது; படைத்தலைமையில் சல்லியன் நிறுவப்பட்டதை அறிந்து கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்; சல்லியனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைத் தவிர வேறு எவராலும் சல்லியனைக் கொல்ல முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த வீர ஏகாதிபதி (சல்லியன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. தேரில் இருக்கும் இரு கிருஷ்ணர்களையும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக நீ கருதுகிறாய். எனினும், அவ்விருவரும் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூடக் கரங்களின் வலிமையில் எனக்கு இணையாக மாட்டார்கள்.(2) பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல வேறு என்ன தேவை இருக்கிறது? போரின் முன்னணியில் கோபத்துடன் போரிடும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய மொத்த உலகமும் ஆயுதங்களுடன் எதிர்த்து வந்தாலும், அவர்களுடன் என்னால் போரிட முடியும்.(3) போரில் கூடியிருக்கும் பார்த்தர்களையும், சோமகர்களையும் நான் வெல்வேன். நான் உன் துருப்புகளுக்குத் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை.(4) நம் எதிரிகளால் விஞ்சமுடியாத ஒரு வியூகத்தை நான் வகுப்பேன். ஓ! துரியோதனா, இதையே நான் உனக்குச் சொல்வேன். இதில் எந்த ஐயமுமில்லை” என்றான் {சல்லியன்}.(5)
(சல்லியனால்) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காலந்தாழ்த்தாமல் மகிழ்ச்சியுடன் தன் துருப்புகளுக்கு மத்தியில் வைத்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது புனித நீரை ஊற்றினான்[1].(6) சல்லியனுக்குத் தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த சிங்க முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும் எழுந்தன.(7) கௌரவப் போர்வீரர்களும், மத்ரகர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர்க்கள ரத்தினமான அரசன் சல்லியனை இவ்வார்த்தைகளில் புகழ்ந்தனர்.(8) அவர்கள், “ஓ! மன்னா {சல்லியா}, வெற்றி உனதாகட்டும். நீ நீடூழி வாழ்வாயாக. கூடியிருக்கும் எதிரிகள் அனைவரையும் கொல்வாயாக. உனது கரங்களின் வலிமையைப் பெற்ற பிறகு, பெரும் பலம் கொண்ட தார்தராஷ்டிரர்கள், ஓர் எதிரியுமற்ற பரந்த உலகை ஆளட்டும்.(9) தேவர்களும், அசுரர்களும் அடங்கிய மூலவுலங்கங்களையும் போரில் நீ வெல்ல வல்லவன் என்பதால், அழியக்கூடியவர்களான சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றனர்.(10)
இவ்வாறு புகழப்பட்ட அந்த மத்ரகர்களின் வலிமைமிக்க மன்னன் {சல்லியன்} பண்படாத ஆன்மாக்களைக் கொண்டோரால் அடைய முடியாத பெருமகிழ்ச்சியை அடைந்தான்.(11) சல்லியன், “ஓ! மன்னா {துரியோதனா}, போரில் பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வேன்.(12) இன்று (போர்க்களத்தில்) அச்சமற்றுத் திரியப்போகும் என்னை இந்த உலகம் காணட்டும். இன்று, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வாசுதேவனும், சாத்யகியும், (13) திரௌபதியின் மகன்களும், திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், பிரபத்ரகர்கள் அனைவரும்(14) என் ஆற்றல், என் வில்லின் பெரும் வலிமை, எனது வேகம், என் ஆயுதங்களின் சக்தி, என் கரங்களின் பலம் ஆகியவற்றைப் போரில் காணப் போகிறார்கள்.(15) இன்று பார்த்தர்களும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும், என் கரங்களின் பலத்தையும், நான் கொண்டிருக்கும் ஆயுத செல்வத்தையும் காணட்டும்.(16) இன்று என் ஆற்றலைக் காணும் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், எதிர்நடவடிக்கை எடுக்க விரும்பி, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறார்கள்.(17) இன்று நான் பாண்டவர்களின் துருப்புகளை அனைத்துப் பக்கங்களிலும் முறியடிப்பேன். ஓ! தலைவா {துரியோதனா}, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோரை நான் போரில் விஞ்சுவேன். ஓ! கௌரவா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக நான் களத்தில் திரிவேன்” என்றான் {சல்லியன்}.”(18)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சல்லியன் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்ட பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் உமது துருப்புகளில் எவரும், கர்ணன் குறித்து எத்துயரும் அடையவில்லை.(19) உண்மையில், துருப்புகள் உற்சாகமும், மகிழ்ச்சியுமடைந்தனர். பார்த்தர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய பலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கருதினர்.(20) பெரும் மகிழ்ச்சியை அடைந்த உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கி, பெரும் உற்சாகம் அடைந்தனர்.(21)
உமது படையின் அந்தக் கூச்சல்களைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! மாதவா {கிருஷ்ணா}, மத்ரர்களின் ஆட்சியாளரும், போர் வீரர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவரும், பெரும் வில்லாளியுமான சல்லியரை, அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, தன் படையின் தலைவராக்கியிருக்கிறான்.(23) ஓ! மாதவா, நடந்ததை அறிந்த பிறகு, எது நன்மையோ அதைச் செய்வாயாக. நீயே எங்கள் தலைவனும், பாதுகாவலனுமாவாய். அடுத்து செய்யப்பட வேண்டியதைச் செய்வாயாக” என்றான்{யுதிஷ்டிரன்}.(24)
அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, அம்மன்னிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆர்த்தாயனியை {சல்லியரை} உண்மையாக {உள்ளபடியே} நான் அறிவேன்.(25) ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்ட அவர், மிகவும் சிறப்புமிக்கவராவார். அவர் போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவரும், பெரும் கரநளினம் கொண்டவரும் ஆவார்(26) நான் அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது கர்ணன் ஆகியோருக்கு இணையானவர், அல்லது, ஒருவேளை அவர்களுக்கும் மேம்பட்டவர் என்றே நினைக்கிறேன்.(27) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, போரிடும் சல்லியருக்கு ஒப்பான ஒரு போர்வீரனை நன்கு சிந்தித்த பிறகும் நான் காணவில்லை.(28) போரில் அவர் {சல்லியர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகண்டி, அர்ஜுனன், பீமர், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரைவிட வலிமைமிக்கமிக்கவராவார்.(29) ஓ! ஏகாதிபதி, சிங்கம், அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டவரான அந்த மத்ரர்களின் மன்னன், அண்ட அழிவின் போது உயிரினங்களுக்கு மத்தியில் கோபத்துடன் திரியும் அந்தகனைப் போலவே போரில் அச்சமில்லாமல் திரியப் போகிறார்.(30)
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, புலிக்கு இணையான அற்றலைக் கொண்ட உம்மைத் தவிர, போரில் அவருக்கு இணையான வேறு எவரையும் நான் காணவில்லை.(31) ஓ! குரு குலத்தின் மகனே, போரில் கோபத்தால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்ல இந்த மொத்த உலகத்திலோ, சொர்க்கத்திலோ கூட உம்மைத்தவிர வேறொரு மனிதன் இல்லை.(32) நாளுக்கு நாள் போரில் ஈடுபட்டு உமது துருப்புகளை அவர் கலங்கடித்து வருகிறார். இதற்காகவே, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, போரில் சல்லியரைக் கொல்வீராக.(33) திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} மதிப்புடன் நடத்தப்படும் அந்த வீரர்கள் போரில் வெல்லப்பட முடியாதவராவார். போரில் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியரே} வீழ்ந்த பிறகே, நீர் அடையப்போகும் வெற்றி உறுதியானதாகும். அவர் கொல்லப்பட்டால், பரந்த தார்தராஷ்டிரப் படையும் கொல்லப்படும்.(34) ஓ! ஏகாதிபதி, ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, இப்போது என் வார்த்தைகளைக் கேட்கும் நீர், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை எதிர்த்துச் செல்வீராக.(35)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அசுரன் நமுசியைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல அந்தப் போர்வீரரை நீர் கொல்வீராக. அவர் {சல்லியர்} உமது தாய்மாமன் என்பதை நினைத்து இங்கே எந்தக் கருணையும் காட்டப்பட வேண்டிய தேவை இல்லை. க்ஷத்திரியக் கடமைகளை உமக்கு முன் கொண்டு, அந்த மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்வீராக.(36) பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அடியற்ற பெருங்கடல்களைக் கடந்துவிட்டு, மாட்டுக்குளம்படி தடமேயான {அத்தடத்தில் உள்ள நீரேயான} சல்லியரிடம் நீரும், உம்மைப் பின்தொடர்பவர்களும் மூழ்கிவிடாதீர்.(37) உமது மொத்த தவச் சக்தியையும், உமது க்ஷத்திரிய ஆற்றலையும் போரில் வெளிப்படுத்துவீராக. அந்தத் தேர்வீரரை {சல்லியரைக்} கொல்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(38)
இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டவர்களால் வழிபடப்படுபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த மாலை வேளையில் தன் பாசறைக்குச் சென்றான்.(39) கேசவன் சென்றதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் சோமகர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, உடலில் இருந்து ஈட்டிகள் பிடுங்கப்பட்ட யானை ஒன்றைப் போல அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினான்.(40) பெரும் வில்லாளிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், கர்ணனுடைய வீழ்ச்சியின் விளைவில் திளைத்து, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினர்.(41) நோய் விலகியதும், வில்லாளிகள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் நிரம்பியதுமான அந்தப் பாண்டவர்களின் படையானது, ஓ! ஐயா, கர்ணனின் படுகொலையால் கிடைத்த வெற்றியின் விளைவால் அவ்விரவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(42)
தனியொருவனாகப் போரிட வேண்டாம்! – சல்லிய பர்வம் பகுதி – 08- எவரும் தனியொருவராகப் பாண்டவர்களுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டாம் என்று தீர்மானித்த கௌரவர்கள்; இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட வியூகங்கள்; எஞ்சியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் எண்ணிக்கை; அப்போதும் கௌரவர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது; பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கழிந்ததும், துரியோதனன், உமது படைவீரர்கள் அனைவரிடமும், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, ஆயுதம் தரிப்பீராக” என்றான்.(1) மன்னனின் ஆணையைக் கேட்ட அந்தப் போர்வீரர்கள் தங்கள் கவசங்களைப் பூட்டத் தொடங்கினர். சிலர் தங்கள் தேர்களில் வேகமாகத் தங்கள் குதிரைகளைப் பூட்டினர், வேறு சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(2) யானைகளை ஆயத்தம் செய்வது தொடங்கப்பட்டது. காலாட்படைவீரர்கள் ஆயுதங்களைத் தரிக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான வேறு சிலர், தேர்த்தட்டுகளில் தரைவிரிப்புகளைப் பரப்பத் தொடங்கினர்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இசைக்கருவிகளின் ஒலி அங்கே எழுந்தது.(4) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சரியான நிலைகளில் நிறுத்தப்பட்ட துருப்பினர் அனைவரும், கவசமணிந்து கொண்டு, மரணத்தையே தங்கள் இலக்காகத் தீர்மானித்து நிற்பதாகத் தெரிந்தது.(5)
மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைவனாக்கிக் கொண்ட கௌரவர்களின் பெரும் தேர்வீரர்கள், தங்கள் துருப்புகளைப் பிரித்துப் படைப்பிரிவுகளாக அணிவகுத்து நின்றனர்.(6) பிறகு, கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரோடு கூடிய உமது போர்வீரர்கள் அனைவரும், இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கும் பிற மன்னர்களும், உமது மகனை {துரியோதனனைச்} சந்தித்து, அவர்களில் எவரும் தனி நபராகவோ, துணையின்றியோ பாண்டவர்களுடன் போரிடுவதில்லை என்ற தீர்மானத்தை எட்டினர்.(7,8) அவர்கள், “பாண்டவர்களுடன் எவன் எந்த ஆதரவுமின்றித் தனியாகப் போரிடுவானோ, எவன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தோழனைக் கைவிடுவானோ, அவன் ஐந்து முக்கியப் பாவங்களையும் {பஞ்சமாபாதகங்களால் விளையும் பாவங்களையும்}, சிறு பாவங்கள் {உபபாதகங்களால் விளையும் பாவங்கள்} அனைத்தையும் அடைவான்” என்றனர். மேலும் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து {ஒருவரையொருவர் காத்துக் கொண்டு} எதிரியுடன் போரிடுவோமாக” என்றனர்.(9) ஒருவருக்கொருவர் இவ்வாறு ஒரு தீர்மானத்தை எட்டிய அந்தப் பெரும் தேர்வீரர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைமையில் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(10)
அதேபோல, பாண்டவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் தங்கள் துருப்புகளை அணிவகுத்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கௌரவர்களோடு போரிடுவதற்காக அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(11) ஓ! பாரதர்களின் தலைவரே, கலங்கும் பெருங்கடலுக்கு ஒப்பான ஒலியுடன் கூடியதும், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவால் அற்புதமாகத் தெரிந்ததுமான அந்தப் படையானது அலைகள் பெருகிய ஆழமான பெருங்கடலின் தன்மையை விரைவில் அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(12)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், பீஷ்மர் மற்றும் ராதையின் மகன் {கர்ணன்} ஆகியோரின் வீழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். இப்போது சல்லியன் மற்றும் என் மகனின் {துரியோதனனின்} வீழ்ச்சியை எனக்குச் சொல்வாயாக.(13) ஓ! சஞ்சயா, உண்மையில் சல்லியன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் எவ்வாறு கொல்லப்பட்டான்? மேலும் எனது மகன் துரியோதனன், பெரும் வலிமை கொண்ட பீமசேனனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?” என்று கேட்டான்.(17)
சஞ்சயன் {திடுதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் போரை (உமக்கு) விவரிக்கும்போதே, மனித உடல்களின் அழிவையும், யானைகள் மற்றும் குதிரைகள் இழப்பையும் {மனவுறுதியுடன்} பொறுமையாகக் கேட்பீராக.(15) ஓ! மன்னா, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! ஐயா, போரில் பார்த்தர்கள் அனைவரையும் சல்லியன் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கை உமது மகன்களின் இதயத்தில் பலமடைந்தது.(16) அந்நம்பிக்கையைத் தன் இதயத்தில் வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் ஆறுதலை அடைந்த உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, போரில் வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நம்பி, தன்னைப் பாதுகாவலனுள்ளவனாகக் கருதிக் கொண்டான்.(17) கர்ணனின் வீழ்ச்சியில் பார்த்தர்கள் சிங்க முழக்கங்கள் செய்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பேரச்சம் பீடித்திருந்தது.(18) முறையாக அவனுக்கு உறுதி கூறிய, மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அனைத்து வகையிலும் மங்கலகரமான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு பெரும் வியூகத்தை அமைத்து,(19) போரில் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். மத்ரர்களின் அந்த வீர மன்னன் {சல்லியன்}, மிகப் பலமானதும், பெரும் வேகத்தில் கணைகளை ஏவவல்லதுமான தன் அழகிய வில்லை அசைத்துக் கொண்டே சென்றான்.(20)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, சிந்துவில் பிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான வாகனத்தில் ஏறிச் சென்றான். அவனது தேரை ஓட்டிய சாரதி, அவ்வாகனத்தினை பிரகாசமாகத் தெரியும்படி செய்தான்.(21) எதிரிகளை நொறுக்கும் துணிச்சல்மிக்கவனான அந்த வீரன் (சல்லியன்), ஓ! ஏகாதிபதி, உமது மகன்களின் அச்சங்களை விலக்கியபடி, அத்தேரால் பாதுகாக்கப்பட்டு நின்றான்.(22) அப்படி (போருக்கு) முன்னேறிச் செல்கையில், கவசம் பூண்டிருந்த அந்த மத்ரர்களின் மன்னன், வியூகத்தின் தலைமையில் நின்று கொண்டு, துணிச்சல் மிக்க மத்ரகர்களின் மற்றும் வெல்லப்பட முடியாத கர்ணனின் மகன்கள் ஆகியோரின் துணையுடன் சென்றான் (23) இடப்பக்கத்தில், கிருதவர்மன், திரிகர்த்தர்களால் சூழப்பட்டு நின்றான். வலப்பக்கத்தில், கௌதமர் (கிருபர்), சகர்கள் மற்றும் யவனர்களுடன் கூடி நின்றார்.(24) பின்புறத்தில், அஸ்வத்தாமன், காம்போஜர்களால் சூழப்பட்டு நின்றான். நடுவில், துரியோதனன், முதன்மையான குரு போர்வீரர்களால் சூழப்பட்டு நின்றான்.(25) சுபலனின் மகனான சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும், பெரும் குதிரைப்படை மற்றும் பிற துருப்புகளுடன் முன்னேறிச் சென்றனர்.(26)
எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களில் வலிமைமிக்க வில்லாளிகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர்.(27) திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர், சல்லியனின் படையை எதிர்த்து பெரும் வேகத்தோடு சென்றனர்.(28) அப்போது தன் துருப்புகளின் துணையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, சல்லியனைக் கொல்லும் விருப்பத்தால், அவனை மட்டுமே எதிர்த்துச் சென்றான்.(29) எதிரிகளின் பெருங்கூட்டங்களைக் கொல்பவனான அர்ஜுனன், பெரும் வில்லாளியான கிருதவர்மனையும், சம்சப்தகர்களையும் எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(30) பீமசேனன் மற்றும் சோமகர்களில் பெரும் தேர்வீரர்கள் ஆகியோர், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி கிருபரை எதிர்த்து விரைந்தானர்.(31) தங்கள் துருப்புகளின் துணையுடன் கூடியவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், சகுனியையும், அவர்களது படைகளின் முன்னணியில் இருந்த பெரும் தேர்வீரனான உலூகனையும் எதிர்த்து விரைந்தனர்.(32) அதேபோலவே உமது படையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(33)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெரும் தேர்வீரனான கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் குறைந்த பிறகு, உண்மையில், பெரும் ஆற்றலைக் கொண்ட பார்த்தர்கள் போரில் மீண்டும் கோபமடைந்த போது, ஓ! சஞ்சயா, படைகள் ஒவ்வொன்றின் பலமும் என்னவாக இருந்தது?” என்று கேட்டான்.(34,35)
சஞ்சயன்{திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் நாமும், எதிரியும் போருக்காக எவ்வாறு நின்றோம்? அந்த இரண்டு படைகளின் பலமும் அப்போது என்னவாக இருந்தது என்பதைக் கேட்பீராக.(36) ஓ! பாரதக் குலத்தின் காளையே,
பதினோராயிரம் {11,000} தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு {10,700} யானைகள்,(37) இருநூறாயிரம் {2லட்சம்} குதிரைகள், முப்பது லட்சம் {3 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவையே உமது படையின் {கௌரவப்படையின்} பலமாக இருந்தது.(38)
ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)
இவ்வழியில் தங்கள் படைகளைப் பிரித்துக் கொண்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டும், வெற்றியடையும் விருப்பத்தாலும், எங்களை மத்ரர்களின் ஆட்சியாளனின் {சல்லியனின்} கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம்.(41) அதே போல, மனிதர்களில் புலிகளும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட பாஞ்சாலர்களும் {எங்களை எதிர்த்துப்} போரிட வந்தனர்.(42) இவ்வாறே, ஓ! ஏகாதிபதி, ஓ! தலைவா, அந்த மனிதப் புலிகள் அனைவரும் தங்கள் எதிரிகளைக் கொல்லும் விருப்பத்தால், நாளின் வைகறைப் பொழுதில் {விடியற்காலையில்} ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(43) அதன் பிறகு, ஒருவரையொருவர் அடிப்பதிலும், கொல்லுவதிலும் ஈடிபட்டிருந்த உமது துருப்புகளுக்கும், எதிரிகளுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(44)
பதினெட்டாம் நாள் போர்த்தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 09-பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது; இரு தரப்பிலும் நேர்ந்த பயங்கரமான அழிவு; அர்ஜுனனும், பீமசேனனும் கௌரவப் படையைப் பிளந்து தப்பி ஓடச் செய்தது; குரு தலைவர்கள் தங்கள் துருப்புகளை மீண்டும் அணிதிரட்ட முயற்சித்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன் பிறகு, தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்றதைப் போன்றதும், கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.(1) மனிதர்கள், தேர்க்கூட்டங்கள், யானைகள், யானைவீரர்கள், ஆயிரக்கணக்கான குதிரைவீரர்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட குதிரைகள் ஆகியன யாவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.(2) பயங்கர வடிவிலான யானைகள் பேரொலியுடன் விரைந்து கொண்டிருப்பது, மழைக்காலங்களில் ஆகாய மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாகக் கேட்டது.(3) யானைகளால் தாக்கப்பட்ட சில தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழந்தனர். அந்த மதங்கொண்ட விலங்குகளால் முறியடிக்கப்பட்ட சில துணிச்சல் மிக்கப் போராளிகள் களத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.(4)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், தங்கள் கணைகளுடன் கூடியவர்களுமான தேர்வீரர்கள், பெரும் குதிரைப்படையையும், யானைகளைத் தூண்டி அவற்றைப் பாதுகாத்துவந்த காலாட்படைவீரர்களையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பினர்.(5) ஓ! மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ! மன்னா, யானை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்ட தன்னந்தனி தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, கணைகளை இறைத்து அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.(9) அந்தப் போரில் யானை வீரர்களை எதிர்த்து யானை வீரர்களும், தேர்வீரர்களை எதிர்த்து தேர்வீரர்களும் எதிர்த்துச் சென்று, ஈட்டிகள், வேல்கள் மற்றும் துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} ஒருவரையொருவர் கொன்றனர்.(10)
போருக்கு மத்தியில், யானைகளும், குதிரைகளும், திகைத்துப் போயிருந்த காலாட்படைகளை மிதித்துக் கொண்டு அதிகக் குழப்பத்தைச் செய்து கொண்டிருந்தன.(11) சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைகள், இமய அடிவாரத்தின் சமவெளிகளில் காணப்படும் அன்னங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விரைந்தன. பூமியையே விழுங்கிவிட ஆயத்தமாகத் தெரியும்படி அவ்வளவு வேகத்துடன் அவை விரைந்தன.(12) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளின் குளம்படிகளால் துளைக்கப்பட்ட போர்க்களமானது, மேனியில் (தன் காதலனின்) நகக்குறிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(13) வீரர்களின் நடை, தேர்ச்சக்கரங்கள், காலாட்படை வீரர்களின் கூச்சல், யானைகளின் பிளிறல்,(14) பேரிகைகளின் முழக்கம் மற்றும் பிற இசைக்கருவிகள், சங்கொலி ஆகியவற்றால் உண்டான ஒலியானது, செவிடாக்கும் இடியின் முழக்கங்களைப் போலப் பூமியில் எதிரொலிக்கத் தொடங்கியது.(15)
விற்களின் நாணொலிகள், கத்திகளின் கீற்றுகள், போராளிகளுடைய கவசங்களின் பளபளப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து எதையும் காணமுடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்தின.(16) யானைகளின் தந்தங்களைப் போலத் தெரிந்தவையும், மனித உடல்களில் இருந்து வெட்டப்பட்ட விழுந்தவையுமான கரங்கள், உயரக்குதித்து, நடுங்கியபடியே சீற்றத்துடன் நகர்ந்தன.(17) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்மையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ! மன்னா, போர்க்களமானது முற்றும் மலர்ந்திருந்த தாமரைகள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(20)
சந்தனம் பூசப்பட்டவையும், விலைமதிப்புமிக்கக் கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான போராளிகளின் விழுந்த கரங்களால், அந்தப் பூமியானது, இந்திரனைக் கௌரவிப்பதற்காக நடப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான கம்பங்கள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(21) யானைகளின் துதிக்கைகளைப் போல வழவழப்பாகத் தெரிந்தவையும், அந்தப் போரில் வெட்டப்பட்டவையுமான மன்னர்களின் தொடைகளால் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டது.(22) நூற்றுக்கணக்கான தலையற்ற முண்டங்கள் நிறைந்ததும், குடைகளும் சாமரங்களும் விரவிக் கிடந்ததுமான அந்தப் பரந்த படையானது, மலர்ந்திருக்கும் காட்டைப் போல அழகாகத் தெரிந்தது.(23) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கங்கள் குருதியில் குளித்திருந்ததால் மலர்ந்திருக்கும் கின்சுகங்களைப் போலத் தெரிந்த போர்வீரர்கள் அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) கணைகள் மற்றும் வேல்களால் பீடிக்கப்பட்ட யானைகளும் கூட, வானத்தில் இருந்து விழும் சிதறிய மேகங்களைப் போல இங்கேயும், அங்கேயும் விழுந்து கொண்டிருந்தன.(25)
உயர் ஆன்மப் போர்வீரர்களால் கொல்லப்பட்ட யானைப்படைப்பிரிவுகள், காற்றால் கலக்கப்பட்ட மேகங்களைப் போல அனைத்துத் திசைகளிலும் பிரிந்து சென்றன.(26) மேகங்களைப் போலத் தெரிந்த அந்த யானைகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் உலகம் அழியும் தருணத்தில் இடியால் பிளக்கப்படும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(27) தரையில் சாரதிகளுடன் குவியல் குவியலாக விழுந்து கிடக்கும் குதிரைகள் மலைகளைப் போலத் தெரிந்தன.(28) அந்தப் போர்க்களத்தில், அடுத்த உலகத்தை நோக்கிப் பாயும் ஆறு ஒன்று தோன்றியது. குருதியே அதன் நீரானது, தேர்கள் அதன் சுழிநீர்களாகின. கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், எலும்புகள் அதன் கூழாங்கற்களாகவும் ஆகின.(29) (போராளிகளின்) கரங்கள் அதன் முதலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும், யானைகள் அதன் பெரும்பாறைகளாகவும், குதிரைகள் சிறிய பாறைகளாகவும் ஆகின. கொழுப்பும், ஊனீரும் அதன் சகதியாகவும், குடிகள் அதன் அன்னங்களாகவும், கதாயுதங்கள் அதன் தெப்பங்களாகவும் ஆகின.(30)
நிறைந்திருந்த கவசங்கள், தலைக்கவசங்கள், கொடிகள் ஆகியன அதன் அழகிய மரங்களாகின. அதிகமாக இருந்த சக்கரங்கள் அதன் சக்கரவாகப் பறவைகளாகின. அது திரிவேணுகளாலும், தண்டங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.(31) துணிவுள்ளோரின் மகிழ்ச்சியைத் தூண்டியும், மருண்டோரின் அச்சங்களை அதிகரித்தும், குருக்களையும், சிருஞ்சயர்களையும் தன் கரையில் அதிகமாகக் கொண்டிருந்த அந்த ஆறு சீற்றத்துடன் ஓடியது.(32) பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள், தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்படும் தங்கள் வாகனங்கள் மற்றும் விலங்குகளின் துணையுடன், இறந்தோரின் உலகத்தை நோக்கிப் பாய்ந்த அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்தனர்.(33) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போராளிகளில் சிலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் உரக்க அழைத்தனர். சிலர், அழுது கொண்டிருக்கும் உறவினர்களால் அழைக்கப்பட்டு அச்சத்தால் பீடிக்கப்பபட்டனர்.(35)
கடுமையும், பயங்கரமும் நிறைந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், பீமசேனனும் தங்கள் எதிரிகளை மலைப்படையச் செய்தனர்.(36) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தனர்.(39) ஓ! ஏகாதிபதி, அந்தப் போர்வீரர்கள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் சல்லியனுடன் போரிட்ட விதம் மிக அற்புதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(40) பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, உமது படையை எதிர்த்துப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(41)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்போது வெற்றியில் ஆவலுள்ள பாண்டவர்களின் கணைகளால் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்ட உமது படையானது, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.(42) உறுதிமிக்க வில்லாளிகளால் இவ்வாறு தாக்கப்பட்டு, பிளக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(43) ஓ! பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், “நில்லுங்கள், நில்லுங்கள்” என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் “ஓ!” என்றும் “ஐயோ!” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(44) இவை அனைத்திற்கும் பிறகு, பாண்டவர்களால் பிளக்கப்பட்ட உமது படையானது, தன் அன்பு மகன்களையும், சகோதரர்களையும், தாய்மாமன்களையும், சகோதரியின் மகன்களையும், திருமணத்தால் ஏற்பட்ட பந்தங்களையும், சில உறவினர்களையும் கைவிட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியது.((45) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயிரக் கணக்கான போர்வீரர்கள், தங்கள் குதிரைகளையும், யானைகளையும் பெரும் வேகத்தில் தூண்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(46)
கர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன்! – சல்லிய பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது….
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், “மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ! சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்” என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)
சல்லியன், வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் படை மீது திடீரெனப் பாய்ந்தான். பொங்கும் கடலை அடக்கும் கரைகளைப் போலத் தனியொருவனாகவே அவன் அதைத் தடுத்தான்.(5) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நன்றாக அணிவகுக்கப்பட்ட அந்த வியூகத்தில் தனித்தனியாகத் தங்கள் நிலைகளை எடுத்துக் கொண்டதும், நீரைப் போலக் குருதிபாயும் பயங்கரமான போர் தொடங்கியது.
வெல்லப்பட முடியாதவனான நகுலன், {கர்ணன் மகனான} சித்திரசேனனுடன் மோதினான்.(8) சிறந்த வில்லாளிகளான அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் அணுகி, ஆகாயத்தின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த இரு மேகங்கள் மழை பொழிவதைப் போல, அந்தப் போரில் தங்கள் கணைமாரியால் ஒருவரையொருவர் நனைத்தனர். பாண்டுவின் மகனுக்கும் {நகுலனுக்கும்}, எதிராளிக்கும் {சித்திரசேனனுக்கும்} இடையிலான எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.(9,10) அவர்கள் இருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும், வலிமைமிக்கவர்களாகவும், தேர்வீரர்களின் நடைமுறையை அறிந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவர்கள், அடுத்தவரின் குறைபாடுகளையும், தாமதத்தையும் கவனமாகத் தேடினர்.(11) அப்போது சித்திரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்கு கடினமாக்கப்பட்டும், கூர்மையானதுமான ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, நகுலனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(12)
அப்போது கர்ணனின் மகன் {சித்திரசேனன்}, வில்லற்றிருந்த நகுலனின் நெற்றியில், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையுமான மூன்று கணைகளால் தாக்கினான்.(13) இன்னும் சில கூரிய கணைகளால் அவன் {சித்திரசேனன்} நகுலனின் குதிரைகளை யமலோகம் அனுப்பி வைத்தான். அடுத்ததாக, அவன் தன் எதிராளியின் கொடிமரத்தையும் சாரதியையும் மும்மூன்று கணைகளால் வீழ்த்தினான்.(14) தன் எதிரியின் கரங்களால் ஏவப்பட்ட அம்மூன்று கணைகளை, தன் நெற்றியில் தைத்திருக்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போல நகுலன் மிக அழகாகத் தெரிந்தான்.(15) தன் வில்லையும், தேரையும் இழந்த நகுலன், ஒரு வாளை எடுத்துக் கொண்டு, மலைச்சிகரத்தில் இருந்து குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போலத் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(16)
எனினும் அவன் {நகுலன்} தரையில் நடந்து விரைந்து சென்ற போது, அவனுடைய எதிராளி {சித்திரசேனன்} அவன் {நகுலன்} மீது கணைமாரியைப் பொழிந்தான். சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட நகுலன், அந்தக் கணைமாரியை தன் கேடயத்தில் ஏற்றான்.(17) பிறகு சித்திரசேனனின் தேரை அடைந்தவனும், போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், உழைப்பால் களைக்காதவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனுமான அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் {அந்தத் தேரில்} ஏறினான்.(18) பிறகு அந்தப் பாண்டுவின் மகன், கிரீடத்தாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய நாசி மற்றும் அகன்ற பெரிய இரு கண்கள் ஆகியவற்றால் அருளப்பட்டதுமான சித்திரசேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். சூரியனின் காந்தியுடன் கூடிய சித்திரசேனன் இதனால் தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(19) சித்திரசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களாலும் புகழ்ச்சியாலும் உரக்கக் கதறினர்.(20)
அதேவேளையில் கர்ணன் மகன்களான சுஷேனன் மற்றும் சத்தியசேனன் ஆகிய பெரும் தேர்வீரர்கள் இருவரும், தன் சகோதரன் {சித்திரசேனன்} கொல்லப்பட்டதைக் கண்டு, கூரிய கணைமாரியை ஏவினர்.(21) தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அவர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனை} நோக்கி, இரு புலிகளைப் போல வேகமாக விரைந்தனர்.(22) அவர்கள் இருவரும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன் மீது கூரிய கணைகளைப் பொழிந்தனர். உண்மையில், அவர்கள் அந்தக் கணைகளைப் பொழிந்தபோது, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் தெரிந்தனர்.(23) மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், பாண்டுவின் அந்த வீரமகன், மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சினத்துடன் இருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(24) பிறகு அந்த இரு சகோதரர்களும் {கர்ணனின் மகன்களும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் நேரான கணைகளால் நகுலனின் தேரைத் துண்டுகளாகச் சிதறடித்தனர்.(25)
அப்போது நகுலன், அம்மோதலில் சிரித்துக் கொண்டே நான்கு கூரிய கணைகளால் சத்தியசேனனின் குதிரைகளைத் தாக்கினான்.(26) அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ! ஏகாதிபதி போரின் முன்னணியில் இருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் அச்சமில்லாமல் துளைத்தான்.(29) பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான சுஷேனன், கோபத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் பாண்டுவின் மகனுடைய உறுதிமிக்க வில்லை ஒரு கத்தி முனை கணையால் {க்ஷுரப்ரத்தால்} அறுத்தான்.(30)
அப்போது கோபத்தால் உணர்விழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சுஷேனனையும், ஒன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(31) பிறகு ஒரு கணத்தையும் இழக்காத அவன் {நகுலன்}, சத்யசேனனின் தோல் கவசத்தையும் {கையுறையையும்} அறுத்ததால், ஓ! ஐயா, துருப்புகள் அனைத்தும் உரத்த கூச்சலிட்டன.(32) எதிரியைக் கொல்லவல்லதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சத்தியசேனன், அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுவின் மகனைக் கணைகளால் மறைத்தான்.(33) அந்தக் கணைகளைக் கலங்கடித்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், தன் எதிராளிகள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் துளைத்தான்.(34) பின்னவர்களில் ஒவ்வொருவரும், நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனைப் பல கூரிய கணைகளால் துளைத்தனர்.(35)
அப்போது, பெரும் கரநளினம் கொண்ட வீர சத்தியசேனன், தன் சகோதரனின் துணையில்லாமலேயே நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும், அவனது வில்லையும் இரு கணைகளால் அறுத்தான்.(36) எனினும், அதிரதனான நகுலன், தன் தேரில் நின்று கொண்டு, தங்கக் கைப்பிடி கொண்டதும், கூர்முனை கொண்டதும், எண்ணெயில் ஊற வைத்ததும், மிகப் பிரகாசமானதுமான ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(37) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அஃது {அந்த ஈட்டி}, அடிக்கடி தன் நாவை வெளியே தள்ளும் கடும் நஞ்சுமிக்க ஒரு பெண்பாம்புக்கு ஒப்பாக இருந்தது. அவ்வாயுதத்தை உயர்த்திய அவன் {நகுலன்}, அம்மோதலில் சத்தியசேனன் மீது அதை ஏவினான்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஈட்டியானது, அந்தப் போரில் சத்தியசேனனின் இதயத்தைத் துளைத்து, அதை நூறு துண்டுகளாக்கியது. புலன் உணர்வையும், உயிரையும் இழந்த அவன் {சத்தியசேனன்}, தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(39) தன் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட சுஷேனன், சினத்தால் உணர்விழந்தவனாக அந்தப் போரில் திடீரென நகுலனைத் தேரற்றவனாகச் செய்தான்.ஒரு கணத்தையும் இழக்காத அவன், தரையில் நின்று போராடிய அந்தப் பாண்டுவின் மகன் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(40)
நகுலன் தேரற்றவனாக இருப்பதைக் கண்ட திரௌபதியின் மகன் சுதசோமன், அந்தப் போரில் தன் தந்தையைக் {நகுலனைக்} காக்க அந்த இடத்தில் விரைந்து வந்தான்.(41) சுதசோமனின் தேரில் ஏறிக் கொண்டவனும், பாரதக் குலத்தின் வீரனுமான நகுலன், மலையில் இருக்கும் ஒரு சிங்கம் போல மிக அழகாகத் தெரிந்தான்.(42) அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் கணைமாரிகளை ஏவியபடி ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரின் அழிவுக்கு முயற்சி செய்தனர்.(43)_ அப்போது சினத்தால் நிறைந்த சுஷேனன், மூன்று கணைகளால் பாண்டுவின் மகனையும் {நகுலனையும்}, இருபதால் {நகுலனின் மகன்} சுதசோமனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(44) ஓ! ஏகாதிபதி, இதனால் மூர்க்கமடைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் தன் கணைகளால் மறைத்தான்.(45)
பெரும் சக்தி கொண்டதும், அரை வட்டத் தலை கொண்டதுமான ஒரு கூரிய கணையை {அர்த்தச்சந்திர பாணத்தை} எடுத்துக் கொண்ட நகுலன், அந்தப் போரில் அதைக் கர்ணனின் மகன் {சுஷேணன்} மீது பெரும் வேகத்தோடு ஏவினான்.(46) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் துருப்புகளைப் பாதுகாத்தான்.(50)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் படையை அணிதிரட்டிய அந்தச் சல்லியன், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், தன் வில்லில் சீற்றத்துடன் நாணொலி எழுப்பியபடியும் போரில் அச்சமற்று நின்றிருந்தான்.(51) அப்போது, அந்த உறுதிமிக்க வில்லாளியால் {சல்லியனால்} அந்தப் போரில் பாதுகாக்கப்பட்ட உமது துருப்புகள், ஓ! மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் போரிட விரும்பி அந்தப் பெரும் வில்லாளியான மத்ரர்களின் ஆட்சியாளனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்றனர்.(53) அப்போது, சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த இரு பாண்டவர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோர், பணிவின் வசிப்பிடமும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான யுதிஷ்டிரனைத் தங்களுக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு,(54) போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்று உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். மேலும் அந்த வீரர்கள், தாங்கள் ஏவிய கணைகளால் “விஸ்” ஒலியை உண்டாக்கியும், பல்வேறு வகைகளில் அடிக்கடி கூச்சலிட்டபடியும் இருந்தனர்.(55) உமது வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே சினத்தால் நிறைந்து, போரிடும் விருப்பத்தால், மத்ரர்களின் ஆட்சியாளனைச் சூழ்ந்து நின்றனர்.(56)
அப்போது, மருண்டோரின் அச்சத்தைத் தூண்டும் வகையில், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்ட உமது படைவீரர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பினருக்கிடையில் ஒரு போர் தொடங்கியது.(57) யமனுடைய அரசின் மக்கள் தொகையை அதிகரித்தபடி அச்சமற்ற போராளிகளுக்கிடையில் நடந்த அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரங்குக் கொடியைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டு, கௌரவப் படையின் அந்தப் பகுதியை எதிர்த்து விரைந்து வந்தான்.(59) திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே அதே படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, கூரிய கணைமாரிகளைப் பொழிந்தனர்.(60) பாண்டவர்களால் விஞ்சப்பட்ட அந்தக் கௌரவப் படை திகைப்படைந்து மலைத்து நின்றது. உண்மையில், அப்போது அந்தப் படைப்பிரிவினால், திசைகள் மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(61)
பாண்டவர்களால் ஏவப்பட்ட கூரிய கணைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் கௌரவப் படையானது, தன் முதன்மையான வீரர்களை இழந்து, நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது. உண்மையில், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நேர்ந்தது.(62) அதேபோல, ஓ! மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் மற்றும் பாண்டவர்களின் போர்வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது” {என்றான் சஞ்சயன்}.(65)
தப்பி ஓடிய கிருதவர்மன்! – சல்லிய பர்வம் பகுதி – 11-பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)
சூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)
புழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)
அச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)
பிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ! மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)
பெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலக் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)
சல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)
அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிரைகள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)
சினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல(எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)
பயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(62)
சல்லியன் பீமன் கதாயுத்தம், – சல்லிய பர்வம் பகுதி – 12-சல்லியனுக்கும், பீமனுக்கும் இடையில் நேர்ந்த கடுமையான கதாயுதப் போர்; ஒரே நேரத்தில் கீழே விழுந்த சல்லியனும், பீமனும்; கீழே விழுந்த சல்லியனைப் போர்க்களத்தைவிட்டு வெளியே கொண்டு போன கிருபர்; நொடிப்பொழுதில் எழுந்து நின்று, மீண்டும் சல்லியனை அறைகூவியழைத்த பீமசேனன்; சேகிதானனைக் கொன்ற துரியோதனன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட சல்லியன்; சல்லியனின் தேர்ச்சக்கரப் பாதுகாவலர்களைக் கொன்று, சல்லியனின் கொடிமரத்தையும் வெட்டிய யுதிஷ்டிரன்; சல்லியனுக்கு முன்பு ஆற்றலை இழந்து நின்ற யுதிஷ்டிரன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் சாரதி வீழ்ந்துவிட்டதைக் கண்ட சல்லியன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, அசையாத மலையென நின்றான்.(1) எனினும், வலிமைமிக்கக் கதாயுதத்துடன் கூடிய பீமன், சுடர்மிக்க யுகநெருப்பையோ, பாசக்கயிற்றைக் கொண்ட யமனையோ, உறுதியான சிகரத்தைக் கொண்ட கைலாச மலையையோ, வஜ்ரத்துடன் கூடிய இந்திரனையோ, திரிசூலத்துடன் கூடிய மஹாதேவனையோ, காட்டில் உள்ள மதங்கொண்ட யானையொன்றையோ போலத் தெரிந்த சல்லியனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(2,3) அந்நேரத்தில், வீரர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்படி, ஆயிரக்கணக்கான சங்கொலிகளும், கொம்பு {எக்காள} ஒலிகளும், சிங்க முழக்கங்களும் எழுந்தன.(4) அந்த இரு முதன்மையான போர்வீரர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் இருந்த பார்த்த இரு படைகளின் போராளிகளும், “நன்று, நன்று” என்று சொல்லி அவர்கள் இருவரையும் பாராட்டினர்.(5)
மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ}, யதுக்களைத் திளைக்கச் செய்யும் ராமனையோ {பலராமனையோ} தவிர, போரில் பீமனின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்டோர் வேறு எவரும் இல்லை.(6) அதே போலவே, பீமனைத் தவிர, மத்ரர்களின் சிறப்புமிக்க மன்னனின் {சல்லியனின்} கதாயுத சக்தியைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்ட வேறு எந்தப் போர்வீரனும் அங்கே இல்லை.(7) விருகோதரன் {பீமன்} மற்றும் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகிய அந்தப் போராளிகள் இருவரும், காளைகளைப் போல முழங்கிக் கொண்டு, அடிக்கடி காற்றில் குதித்து எழுந்தவாறு, வட்டமாகச் சுழன்றனர் {மண்டகதிகளோடு சஞ்சரித்தனர்}.(8) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அம்மோதலில், வட்டமாகச் சுழல்வதிலோ {மண்டலகதிகளிலோ}, கதாயுதத்தைப் பயன்படுத்துவதிலோ அவர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(9)
பிரகாசமான தங்கத்துணியால் சுற்றிலும் கட்டப்பட்டு நெருப்புப் பட்டையாகத் தெரிந்த சல்லியனின் கதாயுதமானது, பார்வையாளர்களிடம் அச்சத்தைத் தூண்டியது.(10) அதே போலவே, உயர் ஆன்ம பீமனின் கதாயுதமும், அவன் வட்டமாகச் சுழல்கையில், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போலத் தெரிந்தது.(11) மத்ர ஆட்சியாளனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பீமனின் கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் தீப்பொறிகளை உண்டாக்கி எரிவது போலத் தெரிந்தது.(12) அதே போல, பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட சல்லியனின் கதாயுதமும், சுடர்மிக்கத் தணல் மழையைப் பொழிந்து கொண்டு அற்புதமாகத் தெரிந்தது.(13) பெரும் யானைகள் இரண்டு, தங்கள் தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ, பெரும் காளைகள் இரண்டு தங்கள் கொம்புங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ அந்த இருவீரர்களும், இரும்பால் கட்டப்பட்ட தண்டங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் இரு போராளிகளைப் போலத் தங்கள் முதன்மையான கதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(14) கதாயுதங்களால் தாக்கப்பட்ட அவர்களது அங்கங்கள், விரைவில் குருதியில் குளித்து, மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களைப் போலத் தெரிந்த விளைவால் அழகாகத் தெரிந்தன.(15)
மத்ர ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கமும், வலப்பக்கமும் தாக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் மலையொன்றைப் போல அசையாதவனாக நின்றான்.(16) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கதாயுதத்தால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டாலும், யானையின் தந்தங்களால் தாக்கப்படும் மலையொன்றைப் போலச் சல்லியன் அசையாது நின்றான்.(17) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கதாயுத வீச்சுகளால் உண்டான ஒலியானது, அடுத்தடுத்த இடியொலிகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.(18) ஒரு கணம் நின்றவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மிக நெருக்கத்தில் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர்.(19) மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் தொடங்கிய மோதலில், அவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டுகள் {நடையடிகள்} மட்டும் அடுத்தவனை நோக்கி முன்னேறி, உயர்த்தப்பட்ட இரும்பு தண்டங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(20)
அப்போது, ஒருவரையொருவர் அடைய விரும்பிய அவர்கள் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர். (கதாயுதப்பயன்பாட்டில்) சாதித்தவர்களான அவ்விருவரும் தங்கள் தங்கள் திறன்மேன்மையை வெளிக்காட்டத் தொடங்கினர்.(21) தங்கள் பயங்கர ஆயுதங்களை உயர்த்திக் கொண்ட அவர்கள், நிலநடுக்கத்தின்போது, சிகரங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் மலைகளைப் போல மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(22) அவர்களின் பலத்தின் விளைவால் ஒருவரையொருவர் அதிகமாக நொறுக்கிய அந்த வீரர்கள் இருவரும், இந்திர வழிபாட்டுக்காக நடப்பட்ட கம்புகள் இரண்டைப் போல ஒரே நேரத்தில் கீழே விழுந்தனர்.(23) அப்போது அந்தக் காட்சியைக் கண்டவர்களும், இருபடைகளைச் சேர்ந்தவர்களுமான துணிச்சல்மீக்க போராளிகள், ஓ என்றும் ஐயோ என்றும் கூச்சலிட்டனர். பெரும் பலத்தோடு முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் மிகவும் கலங்கிப் போயிருந்தனர்.(24) அப்போது வலிமைமிக்கக் கிருபர், மத்ரர்களில் காளையான சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, போர்க்களத்தில் இருந்து அவனை வேகமாகக் கொண்டு சென்றார்.(25)
எனினும், கண்ணிமைப்பதற்குள் எழுந்து நின்ற பீமசேனன், மதுவுண்டவன் போலத் தள்ளாடியபடியே உயர்த்திப்பிடித்த கதாயுதத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அறைகூவியழைத்தான்.(26) அப்போது வீரத்துடன் கூடிய உமது படையின் போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை முழக்கி இசைத்தபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(27) கரங்களையும், ஆயுதங்களையும் உயர்த்திக் கொண்டு, பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்த உமது போராளிகள், ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தலைமையில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தனர்.(28) கௌரவப் படையைக் கண்ட பாண்டுமகன்கள், துரியோதனன் தலைமையிலான அந்தப்போர்வீரர்களை எதிர்த்து சிங்க முழக்கங்களுடன் விரைந்தனர்.(29)
பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வரும் வீரர்களில் சேகிதானானைத்[1] தனிமைப்படுத்தி, ஒரு வேலால் அவனது மார்பை ஆழமாகத் துளைத்தான்.(30) இவ்வாறு உமது மகனால் தாக்கப்பட்ட சேகிதானன், குருதியால் மறைக்கப்பட்டு, ஆழ்ந்த மயக்கத்தை அடைந்து தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(31) பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்கள், சேகிதானன் கொல்லப்பட்டதைக் கண்டு, (கௌரவர்கள் மீது) இடையறாத கணைமாரியைப் பொழிந்தனர்.(32) உண்மையில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, உமது படைப்பிரிவுகளின் அனைத்துப் பக்கங்களிலும் அழகாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(33) கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கவனான சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் முன் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடன் போரிட்டனர்.(34) துரியோதனன், ஓ! ஏகாதிபதி, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொன்றவனும், அபரிமிதமான சக்தியும், ஆற்றலும் கொண்ட வீரனான திருஷ்டத்யும்னனுடன் போரிட்டான்.(35)உமது மகனால் {துரியோதனனால்} அனுப்பப்பட்ட, துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மூவாயிரம் {3000} தேர்கள் விஜயனோடு (அர்ஜுனனோடு) போரிட்டுக் கொண்டிருந்தன.(36) அந்தப் போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, உயிரின் மீது கொண்ட அச்சத்தைத் துறந்தனர். உண்மையில், ஓ! மன்னா, ஒரு தடாகத்தினுள் செல்லும் அன்னங்களைப் போலவே, உமது போர்வீரர்கள், பாண்டவப்படைக்கு மத்தியில் ஊடுருவின.(37) அப்போது, அடி கொடுப்பதிலும், வாங்குவதிலும் இன்பங்கொண்டு ஒருவரையொருவர் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட போராளிகளைக் கொண்ட குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும் போர் நடந்தது.(38) ஓ! மன்னா, வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்திய அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, காணப் பயங்கரமான பூமியின் புழுதி காற்று எழுந்தது.(39) போர் நடந்து கொண்டிருந்த போது, சொல்லப்பட்ட (பாண்டவப் போர்வீரர்களின்) பெயர்களையும், பாண்டவர்களால் சொல்லப்பட்ட (குரு போர்வீரர்களின்) பெயர்களையும் கேட்டே, அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போராளிகளை நாங்கள் அறிந்தோம்.(40)
எனினும், ஓ! மனிதர்களில் புலியே , விரைவில் அந்தப் புழுதியானது, அப்போது சிந்தப்பட்ட குருதியால் விலக்கப்பட்டு, புழுதியோடு கூடிய இருளும் விரட்டப்பட்டு, மீண்டும் திசைகளின் புள்ளிகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(41) உண்மையில், அச்சந்தருவதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களிலோ, எதிரியின் போர்வீரர்களிலோ எவரும் புறமுதுகிடவில்லை.(42) பிரம்மலோகத்தை அடையும் விருப்பத்தாலும், நியாயமாகப் போரிட்டு வெற்றியை அடையும் விருப்பத்தாலும், சொர்க்கத்தை அடையும் நம்பிக்கையாலும் தூண்டப்பட்ட போராளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.(43) தங்கள் தலைவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதரங்களின் நிமித்தமாக அவர்களுக்குப் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவோ, தங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் உறுதியான தீர்மானம் கொண்டோ, சொர்க்கத்தில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்த போர்வீரர்கள், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(44) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவியும், வீசியும் கொண்டிருந்த பெரும் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிக் கொண்டோ, தாக்கிக் கொண்டோ இருந்தனர்.(45) உமது போர்வீரர்களும், எதிரியின் போர்வீரர்களும், “கொல்வாயாக, துளைப்பாயாக, கைப்பற்றுவாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற வார்த்தைகளைச் சொல்வதே அந்தப் போர்க்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.(46)
அப்போது சல்லியன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனைக் கொல்லவிரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் துளைத்தான்.(47) எனினும், உடலின் முக்கிய அங்கங்கள் எவை என்பதை அறிந்த பிருதையின் மகனோ {யுதிஷ்டிரனோ}, ஓ! ஏகாதிபதி, மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து, பதினான்கு துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} மிக எளிதாக அவனைத் தாக்கினான்.(48) பெரும் புகழைக் கொண்ட சல்லியன், தன் கணைகளால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுத்து, சினத்தால் நிறைந்து, தன் எதிராளியைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் கங்க இறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் அவனைத் துளைத்தான்.(49) ஓ! ஏகாதிபதி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் {சல்லியன்}, நேரான கணையொன்றால் யுதிஷ்டிரனை மீண்டும் தாக்கினான்.(50)
பெரும் புகழைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான்.(51) பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்} எழுபது கணைகளால் சந்திரசேனனையும், ஒன்பதால் சல்லியனின் சாரதியையும், அறுபத்து நான்கால் துருமசேனனையும் துளைத்தான்.(52) உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} (இவ்வாறு) சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, சேதிகளுக்கு மத்தியில் இருபத்தைந்து போர்வீரர்களைக் கொன்றான்.(53) மேலும் அந்தப் போரில் அவன் {சல்லியன்}, சாத்யகியை இருபத்தைந்து கூரிய கணைகளாலும், பீமசேனனை ஏழாலும், மாத்ரியின் இரு மகன்களை {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை} நூறு கணைகளாலும் துளைத்தான்.(54) சல்லிய்ன இவ்வாறு போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் சிறந்தவனான பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பல கணைகளை அவன் மீது ஏவினான்.(55)
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் எதிராளி முன்னணியில் நின்று கொண்டிருந்தபோது, ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு அவனது தேரில் உள்ள கொடிமரநுனியை அறுத்தான்.(56) அந்தப் பெரும்போரில் பாண்டுவின் மகனால் இவ்வாறு வெட்டப்பட்ட சல்லியனின் கொடிமரம், பிளக்கப்பட்ட மலைச்சிகரத்தைப் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம்.(57) தன் கொடிமரம் கீழே விழுந்ததையும், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தன் முன் நின்று கொண்டிருப்பதையும் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சினத்தால் நிறைந்து, கணைமாரிகளை ஏவினான்.(58) க்ஷத்திரியர்களில் காளையும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல அந்தப் போரில் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(59) சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்த அவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனையும் பெரிதாகப் பீடித்தான்.(60)
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகத்திரள்கள் எழுந்ததைப் போலப் பாண்டு மகனின் மார்புக்கு முன்பு பரவியிருந்த கணைகளின் வலையொன்றை நாங்கள் கண்டோம்.(61) அந்தப் போரில் சினத்தால் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சல்லியன், நேரான கணைகளால் யுதிஷ்டிரனை மறைத்தான்.(62) அந்தக் கணை மாரிகளால் பீடிக்கப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், விருத்திரனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} முன்பு அசுரன் ஜம்பனைப் போலவே தன் ஆற்றலை இழந்தவனாக உணர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(63)
சல்லியனின் ஆற்றல்! – சல்லிய பர்வம் பகுதி – 13-சல்லியனை எதிர்த்த பாண்டவ வீரர்கள்; அனைவரையும் கலங்கடித்த சல்லியன்; பீமசேனனின் படையும், யுதிஷ்டிரனின் படையும் மட்டுமே தப்பி ஓடாமல் இருந்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} பீடிக்கப்பட்டபோது, சாத்யகி, பீமசேனன், பாண்டுவினால் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் தேர்களுடன் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அந்தப் போரில் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(1) ஆதரவற்றவனாக இருந்த சல்லியன் அந்தப் பெரும் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதை (அத்தாக்குதல்களை அவன் வெற்றிகரமாகத் தடுப்பதைக்) கண்டு, உரத்த பாராட்டொலிகள் கேட்கப்பட்டன, மேலும், (அம்மோதலைக் கண்ட) சித்தர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். (அந்தப் போரைப் பார்ப்பதற்காக) அங்கே கூடியிருந்த துறவிகள் அதை அற்புதமானதாக அறிவித்தனர்.(2) அம்மோதலில் பீமசேனன், ஆற்றலில் (அவனது பெயருக்கு ஏற்றபடியே} தடுக்கப்பட முடியாத ஈட்டியாக[1] இருந்த சல்லியனை ஒரு கணையால் துளைத்து, அடுத்ததாக ஏழால் மீண்டும் அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(3) தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய சாத்யகி, நூறு கணைகளால் சல்லியனைத் துளைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) நகுலன் ஐந்து கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்; அதன் பிறகு பின்னவன் {சகாதேவன்} அதே அளவு கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(5)
அந்தப் போரில் கவனமாகப் போராடிய மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதும், கணைகளை ஏவுவதில் பெரும் சக்தி கொண்டதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், உறுதிமிக்கதுமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு,(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியையும், எழுபத்திமூன்றால் பீமனையும், ஏழால் நகுலனையும் துளைத்தான்.(7) பிறகு ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, நாணில் கணை பொருத்தப்பட்ட சகாதேவனின் வில்லை அறுத்து, அந்தப் போரில் எழுபத்து மூன்று கணைகளால் சகாதேவனையும் துளைத்தான்.(8) அப்போது சகாதேவன், மற்றொரு வில்லில் நாண்பொருத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான ஐந்து கணைகளால் தன் தாய்மாமனை {சல்லியனைத்} துளைத்தான்.(9) பெரும் சினத்தால் நிறைந்த அவன் {சகாதேவன்}, அந்தப் போரில் தன் எதிராளியின் சாரதியை ஒரு நேரான கணையால் தாக்கி, மூன்று கணைகளால் சல்லியனையும் மீண்டும் துளைத்தான்.(10)
அப்போது பீமசேனன், எழுபது கணைகளால் அந்த மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான், சாத்யகி ஒன்பதாலும், மன்னன் யுதிஷ்டிரன் அறுபதாலும் அவனைத் துளைத்தனர்.(11) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு துளைக்கப்பட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, செஞ்சுண்ண மலையின் சாரலில் ஓடும் சிவப்பு ஓடைகளைப் போல, சல்லியனின் உடலில் குருதி வழியத் தொடங்கியது.(12) எனினும், ஓ! மன்னா, சல்லியன் விரைவாக ஐந்து கணைகளால் அந்தப் பெரும் வில்லாளிகளைப் பதிலுக்குத் துளைத்தது மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது.(13) ஓ! ஐயா, மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} எடுத்துக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, அம்மோதலில் நாண் பொருத்தப்பட்ட தர்மனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(14) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனையும், அவனது குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றையும் பல கணைகளால் மறைத்தான்.(15)
அந்தப் போரில் தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} கணைகளால் இவ்வாறு மறைக்கப்பட்ட சல்லியன், கூரிய பத்து கணைகளால் முன்னவனை {யுதிஷ்டிரனைத்} தாக்கினான்.(16) அப்போது, தர்மனின் மகன் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த சாத்யகி, கணைமேகங்களால் அந்த மத்ரர்களின் வீர ஆட்சியாளனைத் {சல்லியனைத்} தடுத்தான்.(17) சல்லியன், கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சாத்யகியின் உறுதிமிக்க வில்லை அறுத்து, பிற பாண்டவப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று கணைகளால் துளைத்தான்.(18) அப்போது, ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, தங்கக் கைப்பிடி கொண்டதும், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு வேலை சல்லியன் மீது வீசினான்.(19) பீமசேனன், சுடர்மிக்கப் பாம்பொன்றைப் போலத் தெரிந்த துணிக்கோல் கணை {நாராசம்} ஒன்றை அவன் மீது ஏவினான்; நகுலன் அவன் மீது ஈட்டி ஒன்றை வீசினான், அவனைக் கொல்லும் விருப்பம் கொண்டவர்களான சகாதேவன் ஒரு கதாயுதத்தையும், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} சதக்னி ஒன்றையும் அவன் மீது வீசினர்.(20)
எனினும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த ஐந்து போர்வீரர்களின் கரங்களால் வீசப்பட்ட அவ்வாயுதங்கள் அனைத்தும் தன் தேரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அந்தப் போரில் அவற்றைக் கலங்கடித்தான்.(21) சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, சாத்யகியால் ஏவப்பட்ட வேலை அறுத்தான். வீரமும், பெரும் கரநளினமும் கொண்ட அவன் {சல்லியன்}, பீமனால் ஏவப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையை இரு துண்டுகளாக வெட்டினான்.(22) மேலும் அவன், நகுலனால் ஏவப்பட்ட தங்கப்பிடி கொண்ட அந்தப் பயங்கரமான ஈட்டியையும், சகாதேவனால் வீசப்பட்ட கதாயுதத்தையும் கணை மேகங்களால் தடுத்தான்.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் அவன் {சல்லியன்}, மன்னனால் {யுதிஷ்டிரனால்} தன் மீது ஏவப்பட்ட சதக்னியை, பாண்டு மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரு கணைகளால் வெட்டி, உரத்த சிங்க முழக்கம் செய்தான். எனினும், அந்தப் போரில் தன் ஆயுதம் வீழ்த்தப்பட்டதைச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(24) சினத்தால் உணர்ச்சியை இழந்த சாத்யகி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, இரண்டு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனையும் {சல்லியனையும்}, மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(25)
இதனால் சினம் தூண்டப்பட்ட சல்லியன், ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்க யானைகளைக் கூரிய வேல்களால் துளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரையும் பத்து கணைகளால் ஆழத் துளைத்தான்.(26) இவ்வாறு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தடுக்கப்பட்டவர்களான அந்த எதிரிகளைக்கொல்பவர்களால், சல்லியனுக்கு முன்னிலையில் நிற்கவும் முடியவில்லை.(27) சல்லியனின் ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினான்.(28) அப்போது, ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட பீமசேனன், தன் உயிர் மூச்சை விட்டுவிட மனத்தில் தீர்மானித்துக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனுடன் மோதினான்.(29) நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் வலிமை கொண்ட சாத்யகி ஆகியோர் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவன் மீது தங்கள் கணைகளை ஏவினர்.(30)
பெரும் வில்லாளிகளும், பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களுமான அந்த நால்வரால் சூழப்பட்டாலும்கூட, மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்} தொடர்ந்து அவர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்தான்.(31) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பயங்கரப் போரில் சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களில் ஒருவனைக் கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் விரைவாக வெட்டினான்.(32) துணிச்சல்மிக்கவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சல்லியனுடைய தேர்ச்சக்கரப் பாதுகாவலன் இவ்வாறு கொல்லப்பட்டதும், பெரும் பலம் கொண்ட சல்லியன், பாண்டவத் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தான்.(33) ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் துருப்புகள் கணைகளால் மறைக்கப்படுவதைக் கண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வகையில் சிந்தித்தான்,(34) “உண்மையில், மாதவனின் {கிருஷ்ணனின்} அந்த முக்கியத்துவம்வாய்ந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாகப் போகின்றன? சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்} போரில் என் படையை அழித்துவிடமாட்டார் என நம்புகிறேன்” {என்று யுதிஷ்டிரன் சிந்தித்தான்}.(35)
அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய பாண்டவர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை அணுகி, அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(36) பெரும் மேகத்திரள்களை விலக்கும் காற்றைப் போல, அந்தப் போரில் மத்ரர்களின் மன்னன், அங்கே எழுந்த கணைமாரியையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த அபரிமிதமான ஆயுதங்களையும் விலக்கினான்.(37) பிறகு, சல்லியனால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைமழையானது, வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆகாயத்தில் செல்வதை நாங்கள் கண்டோம்.(38) உண்மையில், போரின் முன்னணியில் இருந்து மத்ரர்களின் ஆட்சியாளனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், பறவைக்கூட்டங்கள் பாய்ந்து செல்வதைப் போலக் காணப்பட்டன.(39) மத்ர மன்னனின் வில்லில் இருந்து வெளிப்பட்டவையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஓர் அங்குலம் இடம் கூட இல்லாத அளவுக்கு நிரம்பியிருந்தது.(40)
அந்தப் பயங்கரப் போரில், வலிமைமிக்கவனும், அதீத கரநளினம் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணைகளால், அடர்த்தியான இருள் உண்டானபோதும்,(41) பாண்டவர்களின் பரந்த படையானது அந்த வீரனால் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட போதும், தேவர்களும், கந்தர்வர்களும் பேராச்சரியத்தால் நிறைந்தனர்.(42) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளால் பாண்டவ வீரர்கள் அனைவரையும் சீற்றத்துடன் பீடித்த சல்லியன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(43) அந்தப் போரில் சல்லியனால் இவ்வாறு மறைக்கப்பட்ட பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்த வீரனை எதிர்த்துப் போரிட முடியாதவர்களாக ஆனார்கள்.(44) எனினும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் வழிநடத்தப்பட்டவர்களும், போர்க்கள ரத்தினமான துணிச்சல்மிக்கச் சல்லியனிடம் இருந்து தப்பி ஓடவில்லை” {என்றான் சஞ்சயன்}.(45)
அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 14-பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)
பெரும் வில்லாளிகளும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த இரு கிருஷ்ணர்களும் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்ட அந்த வெல்லப்படமுடியாத (கௌரவப்) போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(6) உண்மையில் அந்நேரத்தில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுடைய தேரின் கூபரம், சக்கரங்கள், ஏர்க்கால், கடிவாளங்கள், நுகத்தடி, அனுஷ்கரம் ஆகியவை கணைகளால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது போர்வீரர்களால் பார்த்தனுக்குச் செய்யப்பட்டவற்றைப் போன்றவை இதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேட்கப்பட்டதோ இல்லை.(8) அழகிய சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளுடன் கூடிய அந்தத் தேரானது, பூமியில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களால் சுடர்விட்டெரியும் ஒரு தெய்வீக வாகனத்தை {விமானத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(9) அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, மலைமீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல நேரான கணைகளின் மாரியால் பகைவரின் படையை மறைத்தான்.(10)
அந்தப் போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், காரியங்களின் அந்நிலையைக் கண்டு, போர்க்களம் முழுவதும் பார்த்தனால் நிரம்பியிருப்பதாகக் கருதினர்.(11) அப்போது, கணைகளைத் தழல்களாகவும், காண்டீவத்தின் உரத்த நாணொலியைக் காற்றாகவும் கொண்ட பார்த்த நெருப்பானது, உமது துருப்புகளாலான விறகை எரிக்கத் தொடங்கியது.(12) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்துவிட்ட சக்கரங்கள், நுகத்தடிகள், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள், அவற்றைச் சுமந்திருந்த தேர்கள், அனுஷ்கரங்கள், திரிவேணுக்கள், அச்சுகள், பூட்டுவார்கள், கொறடாக்கள், காதுகுண்டலங்களாலும், தலைக்கவசங்களாலும் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்களின் தலைகள், ஆயிரக்கணக்கான தொடைகள், விசிறிகளுடன் கூடிய குடைகள், கிரீடங்கள், மகுடங்கள் ஆகியவற்றின் குவியல்கள் பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும் காணப்பட்டன.(13-16) உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவரே, அந்தக் கோபக்கார பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும், குருதியால் சகதியான தரையானது, ருத்ரனின் விளையாட்டுக்களம் போலக் கடக்க முடியாததாக இருந்தது. அந்தக் காட்சியானது, கோழைகளை அச்சுறுத்தி, துணிச்சல்மிக்கோரை மகிழ்வித்தது.(17,18) எதிரிகளை எரிப்பவனான பார்த்தன், கூடுகளுடன் கூடிய இரண்டாயிரம் {2000} தேர்களை அழித்து, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்தான்.(19) உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பார்த்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றுடன் கூடிய அண்டத்தை (யுக முடிவில்) அழிப்பதற்காகச் சுடர்விட்டெரியும் சிறப்புமிக்க அக்னியைப்போலவே தெரிந்தான்.(20)
அந்தப் போரில் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டவனும், தன் தேரில் பல கொடிகளைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} அவனைத் தடுக்க முயற்சி செய்தான்.(21) வாகனங்களில் வெண்குதிரைகள் பூட்டியிருப்பவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பி விரைவில் ஒருவருடனொருவர் மோதிக் கொண்டனர்.(22) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரிகள், கோடையின் நெருக்கத்தில் இரு மேகத் திரள்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போல அடர்த்தியானவையாகவும், பயங்கரமானவையாகவும் இருந்தன.(23) ஒருவரையொருவர் அறைகூவியழைத்த அந்த இரு போர்வீரர்களும், இரு காளைகள் தங்கள் கொம்புகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்வதைப் போலவே, அந்தப் போரில் நேரான கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(24) ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நீண்ட நேரத்திற்குச் சமமான போரே நடைபெற்றது. ஆயுங்களின் மோதல் பயங்கரத்தை அடைந்தது.(25)
அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, தங்கச் சிறகுகளையும் பெரும் சக்தியையும் கொண்ட பனிரெண்டு கணைகளால் அர்ஜுனனையும், பத்தால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.(26) அந்தப் பெரும்போரில் ஆசானின் மகனுக்குச் சிறிது நேரம் கொஞ்சம் மதிப்பைக் காட்டிய பீபத்சு {அர்ஜுனன்}, பிறகு சிரித்துக் கொண்டே, தன் வில்லான காண்டீவத்தைப் பலமாக வளைத்தான்.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, விரைவில் தன் எதிராளியை குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அதிகப் பலத்தைச் செலுத்தாமலே மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான்.(28) குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டிருந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே இரும்பு முள் பதித்த கதாயுதம் {பரிகம்} ஒன்றைப் போலத் தெரிந்த ஒரு கனமான உலக்கையை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(29) தங்கத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அவ்வாயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, அதை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(30)
தன் உலக்கை வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் கோபம் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மலைச் சிகரத்தைப் போலத் தெரிந்ததும், இரும்பு முட்கள் பதிக்கப்பட்டதுமான ஒரு பயங்கரமான கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டான். போரில் சாதித்தவனான அந்தத் துரோணர் மகன் அதைப் பார்த்தன் மீது வீசினான்.(31) அந்த முட்கதாயுதம் {பரிகம்} சினம் கொண்ட அந்தகனைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பாண்டுவின் மகன் அர்ஜுனன், ஐந்து சிறந்த கணைகளால் அதை வேகமாக வெட்டினான்.(32) அந்தப் பெரும்போரில் பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அந்த ஆயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (பகை) மன்னர்களின் இதயங்களைப் பிளப்பதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(33) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் மூன்று பிற கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். வலிமைமிக்கப் பார்த்தனால் துரோணரின் மகன் பெரும்பலத்துடன் ஆழத்துளைக்கப்பட்டாலும், ஆண்மையுடன் கூடியவனாக அச்சம் அல்லது கலக்கத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.(34)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, க்ஷத்திரியர்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே சுரதனை {ஸுரதனைக்} கணைமாரியால் மறைத்தான்.(35) பாஞ்சாலர்களில் பெரும் தேர்வீரனான சுரதன் அந்தப் போரில் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரைச் செலுத்திக் கொண்டு துரோணரின் மகனை எதிர்த்து விரைந்தான்.(36) உறுதியானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான தன் முதன்மையான வில்லை வளைத்த அந்தப் பாஞ்சால வீரன், நெருப்பின் தழல்களுக்கோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ ஒப்பான கணைகளால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(37) கோபத்தில் தன்னை நோக்கி விரையும் பெரும் போர்வீரனான சுரதனைக் கண்ட துரோணரின் மகன், தடியால் தாக்கப்பட்ட பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(38) புருவத்தை மூன்று கோடுகளாகச் சுருக்கிக் கொண்டு, தன் நாவால் கடவாயை நனைத்த அவன் {அஸ்வத்தாமன்}, சினத்துடன் சுரதனைப் பார்த்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, யமனின் மரணக்கோலுக்கு {யமதண்டத்துக்கு} ஒப்பான கூரிய துணிக்கோல் கணையொன்றை {நாராசத்தை} ஏவினான்.(39) பெரும் வேகம் கொண்ட அந்தக் கணையானது, சுரதனின் இதயத்தைத் துளைத்து வெளியேறி, வானத்தில் இருந்து வீசப்பட்ட சக்ரனின் வஜ்ரத்தைப் போலப் பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது.(40)
அந்தக் கணையால் தாக்கப்பட்ட சுரதன், இடியால் பிளப்பட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(41) அந்த வீரன் வீழ்ந்த பிறகு, தேர்வீரர்களின் முதன்மையான அந்தத் துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கொல்லப்பட்ட தன் எதிரியின் {சுரதனின்} வாகனத்தில் வேகமாக ஏறிக் கொண்டான்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி, போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கவசமும், ஆயுதங்களும் தரித்துக் கொண்டு, சம்சப்தகர்களால் ஆதரிக்கப்பட்டு அர்ஜுனனோடு போரிட்டான்.(43) நடுப்பகல் வேளையில் ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் போரானது, யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பெருக்கியபடியே மிகவும் கடுமையான நிலையை அடைந்தது.(44) அப்போது அந்தப் போராளிகள் அனைவரின் ஆற்றலையும் கவனித்த அர்ஜுனன், தனியனாக, ஆதரவற்றவனாக ஒரே நேரத்தில் தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட அந்த அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம்.(45) அர்ஜுனனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலானது, பழங்காலத்தில் இந்திரனுக்கும், அசுரர்களின் பரந்த படைக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)
பாண்டவர்களோடு மோதிய சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 15-துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக் கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)
அனைத்துப் பக்கங்களிலும் அந்த அதிரதர்களால் சூழப்பட்ட அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தன் வேகத்தை வெளிப்படுத்தியபடியே அந்தப்போரில் திரிந்து கொண்டிருந்தான்.(6) சிகண்டி, பிரபத்ரகர்களால் ஆதரிக்கப்பட்டவனானக் கிருதவர்மன் மற்றும் பெரும் தேர்வீரரான கிருபர் ஆகிய இரு குரு வில்லாளிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(7) மேலும், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை விடத் தீர்மானித்துத் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்ததால், அந்தப் போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(8) சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரிகளை ஏவியபடி, சாத்யகி மற்றும் விருகோதரனோடு {பீமனோடு} கூடிய பார்த்தர்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, பொறுமையும், பெரும் பலமும் கொண்ட அந்த மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பானவர்களான இரட்டையர்களுடனும் (நகுலன் மற்றும் சகாதேவனோடும்) அதே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்தான்.(10)
அந்தப் பெரும்போரில் சல்லியனின் கணைகளால் சிதைக்கப்பட்ட பாண்டவப் பெருந்தேர்வீரர்கள், ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர்.(11) அப்போது மாத்ரியின் மகனான வீர நகுலன், பெரிதும் பீடிக்கப்படும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, தன் தாய்மாமனை {சல்லியனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) அந்தப் போரில் (பலகணைகளால்) சல்லியனை மறைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன் சிரித்துக் கொண்டே, முழுக்க இரும்பாலானவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தன் வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் ஏவப்பட்டவையுமான பத்து கணைகளால் அவனது {சல்லியனின்} நடு மார்பைத் துளைத்தான்.(13, 14) சிறப்புமிக்கத் தன் மருமகனால் பீடிக்கப்பட்ட சல்லியன், நேரான கணைகள் பலவற்றால் பதிலுக்குத் தன் மருமகனை {நகுலனைப்} பீடித்தான்.(15)
அப்போது மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், சாத்யகி, மாத்ரியின் மகனான சகாதேவன் ஆகியோர் அனைவரும் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தனர்.(16) எதிரிகளை வீழ்த்துபவனான அந்தக் குரு படையின் தலைவன் {சல்லியன்}, தேர்களின் சடசடப்பொலியால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளை நிறைத்து பூமியை நடுங்கச் செய்தபடியே தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த வீரர்கள் அனைவரையும் அந்தப் போரில் வரவேற்றான் {எதிர்த்தான்}.(17) யுதிஷ்டிரனை மூன்று கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்த சல்லியன், அந்தப் போரில் சாத்யகியை நூறு கணைகளாலும், சகாதேவனை மூன்றாலும் துளைத்தான்.(18) பிறகு அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, உயர் ஆன்ம நகுலனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான்.(19) பெரும் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகுள்ள கணைகளால் மத்ரர்கள் ஆட்சியாளனை வேகமாக மறைத்தான்.(20)
யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா, அந்த மத்ரர்களின் ஆட்சியாளனுடைய மார்பை பத்து கணைகளால் துளைத்தனர்.(21) பீமசேனன் மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், மத்ரர்களின் ஆட்சியாளனை நோக்கி விரைந்து, கங்க இறகுகளாலான சிறகுகள் படைத்த கணைகளைக் கொண்டு முன்னவன் {பீமன்} அறுபதாலும், பின்னவன் {சாத்யகி} ஒன்பதாலும் அவனைத் தாக்கினர்.(22) இதனால் சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்து மீண்டும் எழுபது நேரான கணைகளால் அவனைத் துளைத்தான்.(23) பிறகு அவன் {சல்லியன்}, ஓ! ஐயா, சாத்யகியின் கணை பொருத்தப்பட்ட வில்லின் பிடியை அறுத்து, பின்னவனின் {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.(24) சாத்யகியைத் தேரற்றவனாகச் செய்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், அனைத்துப் பக்கங்களிலும் ஒரு நூறு கணைகளால் அவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(25) அடுத்ததாக அவன் {சல்லியன்}, மாத்ரியின் இரு கோபக்கார மகன்கள், பாண்டுவின் மகனான பீமசேனன், யுதிஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(26)
பார்த்தர்கள் ஒன்று சேர்ந்தும் கூட அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை அணுக முடியாத அளவுக்கு மிக அற்புதமான அவனது ஆற்றலை அப்போது நாங்கள் கண்டோம்.(27) மற்றொரு தேரில் ஏறிக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அடங்கிப் பீடிக்கப்படும் பாண்டவர்களைக் கண்டு அவனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(28) சபைகளின் ரத்தினமான சல்லியன், மதங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையை எதிர்ப்பதைப் போலச் சாத்யகியின் தேரை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(29) சாத்யகிக்கும், மத்ரர்களின் வீர ஆட்சியாளனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் இடையில் நடைபெற்றத்தைப் போலக் காண்பதற்குப் பயங்கரமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தது.(30) அந்தப் போரில் தன் எதிரே நின்ற மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட சாத்யகி, பத்து கணைகளால் அவனைத்துளைத்து, “நில்லும், நில்லும்” என்றான்.(31)
அந்த உயர் ஆன்மப் போர்வீரனால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அழகிய இறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(32) பெரும் வில்லாளிகளான அந்தப் பார்த்தர்கள், சாத்யகியால் தாக்கப்படும் மத்ரர்களின் மன்னனைக் கண்டு, தங்கள் தாய்மாமனான அவனைக் {சல்லியனைக்} கொல்ல விரும்பி அவனை நோக்கி வேகமாக விரைந்தனர்.(33) போராடிக்கொண்டிருந்த அந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலானது, குருதியின் பெரும்பாய்ச்சலால் அடையாளங்காணப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(34) அந்தப் போராட்டமானது, ஓ! ஏகாதிபதி, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள், இறைச்சிக்காகத் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்கு ஒப்பாக இருந்தது.(35) அவர்களால் ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் பூமியானது முற்றிலும் நிறைந்து, ஆகாயமும் கணைகளின் ஒரே திரளாக ஆனது.(36)
அந்தக் கணைகளால் களத்தைச் சுற்றிலும் இருள் உண்டானது. உண்மையில், அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் ஏவப்பட்ட கணைகளால், மேகங்களால் உண்டாவதைப் போன்ற நிழல் உண்டானது.(37) அப்போது, ஓ! மன்னா, போர்வீரர்களால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், சட்டை உரித்த பாம்புகளைப் போலத் தெரிபவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் திசைப்புள்ளிகள் எதிர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(38) எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சல்லியன், தனியனாக, ஆதரவற்றவனாக அந்தப் போரில் பல கணைகளை ஏவிப் போரிட்டு அடைதற்கரிதான சாதனையை அடைந்தான்.(39) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய கரங்களில் இருந்து ஏவப்பட்டுப் பாய்ந்தவையுமான அந்தக் கடுங்கணைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(40) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரர்களின் அழிவின்போது இருந்த சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல அந்தப் பயங்கரப் போரில் சல்லியனின் தேரானது திரிந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்” {என்றான் சஞ்சயன்}.(41)
சல்லியன் யுதிஷ்டிரன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 16-குருக்களால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள்; கிருபரையும், கிருதவர்மனையும் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; சல்லியனை எதிர்த்து உறுதியாக நின்ற யுதிஷ்டிரன்; சல்லியனிடம் இருந்து தப்பி ஓடிய பாண்டவர்கள்; கிருஷ்ணனிடமும், தன் தம்பிகளிடமும் பேசி, சல்லியனைக் கொல்வதற்கு உறுதியேற்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் அருஞ்செயல்; சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; மற்றொரு தேரில் மீண்டும் சல்லியனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் மீண்டும் நடந்த போர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சல்லியனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது துருப்புகள், பெரும் மூர்க்கத்துடன் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(1) போரில் கடுமையானவர்களான உமது துருப்பினர் பார்த்தர்களை எதிர்த்து விரைந்து பீடிக்கப்பட்டாலும், எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்ததன் விளைவால் மிகவிரைவில் அவர்களை {பார்த்தர்களைக்} கலங்கடித்தனர்.(2) இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே குருக்களால் தாக்கப்பட்ட அந்தப் பாண்டவத் துருப்பினர், பீமசேனனால் தடுக்கப்பட்டாலும் களத்தில் நிற்கவில்லை.(3) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருபரையும், அவரைப் பின்தொடர்வோரையும், கிருதவர்மனையும் கணைமாரியால் மறைத்தான்.(4)
சகாதேவன் தன் படைகள் அனைத்துடன் சகுனியைத் தடுத்தான். நகுலன், அருகில் இருந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(5)
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், (குரு படையின்) பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களைத் தடுத்தனர்.
பாஞ்சால இளவரசனான சிகண்டி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(6)
கதாயுதம் தரித்திருந்த பீமசேனன், மன்னனை {துரியோதனனைத்} தடுத்தான்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், {கௌரவப்} படைகளுக்குத் தலைவனாக இருந்த சல்லியனைத் தடுத்தான்.(7)
போரில் எப்போதும் புறமுதுகிடாதவர்களான எதிரிகளுக்கும், உமது போர்வீரர்களுக்கு மத்தியிலும், அந்த இணைக்கு இடையிலும் மீண்டும் போர் தொடங்கியது.(8) மொத்த பாண்டவப் படையையும் எதிர்த்து தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த சல்லியனின் மிக அற்புதமான சாதனையை அப்போது நாங்கள் கண்டோம்.(9) அந்தப் போரில் யுதிஷ்டிரனின் அருகில் இருந்த சல்லியன், சந்திரனுக்கு அருகே இருக்கும் சனிக்கோளை {சனி கிரகத்தைப்} போலத் தெரிந்தான்.(10) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பீடித்த சல்லியன், கணைமாரியால் பீமனை மறைத்தபடி அவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(11) சல்லியனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினம், மற்றும் ஆயுதங்களில் தேர்ச்சி ஆகியவற்றைக் கண்டு இரு படைகளின் துருப்புகளும் அவனை உயர்வாக மெச்சின.(12)
சல்லியனால் பீடிக்கப்பட்டுப் பெரும் சிதைவையடைந்த பாண்டவர்கள், நிற்குமாறு கட்டளையிட்ட யுதிஷ்டிரனின் கூச்சல்களையும் அலட்சியம் செய்தபடியே போரைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்.(13) மத்ரர்களின் ஆட்சியாளனால் அவனது {யுதிஷ்டிரனின்} துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் சினத்தால் நிறைந்தான்.(14) தன் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், போரில் வெல்வது, அல்லது மரணத்தைச் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனைப் பீடிக்கத் தொடங்கினான்.(15)
அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவரையும், மதுகுலத்தின் கிருஷ்ணனையும் அழைத்து, அவர்களிடம், “கௌரவர்களுக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிற மன்னர்கள் அனைவரும் போரில் அழிந்துவிட்டனர். நீங்கள் அனைவரும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கின்படியே உங்கள் வீரத்தை வெளிப்படுத்திப் போராடிவருகிறீர்கள்.(17) வலிமைமிக்கத் தேர்வீரரான சல்லியரைக் கொண்ட என்னுடைய ஒரு பங்கு மட்டுமே மிச்சமிருக்கிறது. இன்றைய போரில் நான் மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} வெல்ல விரும்புகிறேன். அந்தப் பணி நிறைவேறுவதற்காக நான் விரும்புவதனைத்தையும் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(18) வீரர்களான மத்ராவதியின் {மாத்ரியின்} மகன்கள் இருவரும் என் {தேர்ச்} சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். அவர்கள் வாசவனாலும் {இந்திரனாலும்} வெல்லப்பட முடியாத வீரர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள்[1].(19) தங்கள் சபதங்களில் உறுதியானவர்களும், அனைத்துக் கௌரவங்களுக்குத் தகுதியானவர்களுமான அவர்கள் இருவரும், க்ஷத்திரியர்களின் கடமைகளைத் தங்கள் முன் நிறுத்தியபடியே தங்கள் தாய்மாமனுடன் {சல்லியனுடன்} போரிடுவார்கள்.(20)
ஒன்று, போரில் சல்லியர் கொல்லப்படுவார், அல்லது நான் அவரைக் கொல்வேன். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. உலக வீரர்களில் முதன்மையானவர்களே, நான் சொல்லும் இந்த உண்மையான வார்த்தைகளைக் கேட்பீராக.(21) பூமியின் தலைவர்களே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, வெற்றியடையவோ, கொல்லப்படவோ உறுதியாகத் தீர்மானத்துக் கொண்டு, என் தாய்மாமனுடன் நான் போரிடப் போகிறேன்.(22) தேரைச் செய்வோர், அறிவியலின் விதிகளின்படி செய்யப்பட்ட என் வாகனத்தையும், சல்லியரை விட அதிகமாக அளவுகளில் பிற வகைக் கருவிகள் அனைத்தையும் வேகமாக எனக்குக் கொடுக்கட்டும்.(23) சிநியின் பேரன் {சாத்யகி} எனது வலது சக்கரத்தையும், திருஷ்டத்யும்னன் இடதையும் பாதுகாக்கட்டும். பிருதையின் மகனான தனஞ்சயன் இன்று என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(24) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பீமன் என் முன்பு நின்று போரிடட்டும். இவ்வாறிருந்தால் நேரப்போகும் பெரும்போரில் நான் சல்லியரைவிட மேன்மையானவனாக இருப்பேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(25)
இவ்வாறு மன்னன் {யுதிஷ்டிரன்} சொன்னதும், அவனது நலன்விரும்பிகள் அனைவரும் தாங்கள் வேண்டிக் கொள்ளப்பட்டதைப் போலவே செய்தனர்.(26) பாண்டவத் துருப்பினர், அதிலும் குறிப்பாகப் பாஞ்சாலர்கள், சோமகர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர் மீண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(27) மன்னன் இந்தச் சபதத்தைச் செய்த பிறகு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்துச் சென்றான். அப்போது பாஞ்சாலர்கள், எண்ணற்ற சங்குகள் மற்றும் பேரிகைகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(28) பெரும் சுறுசுறுப்புடைய அவர்கள் சினத்தால் நிறைந்து, குருக்களில் காளையான மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து உரத்த மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் விரைந்து சென்றனர்.(29) மேலும் அவர்கள், யானைகளின் மணியோசையையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் உரத்த முழக்கங்கங்களையும் பூமியில் எதிரொலிக்கச் செய்தனர்.(30)
அப்போது உமது மகனும் {துரியோதனனும்}, மத்ரர்களின் வீர ஆட்சியாளனும் {சல்லியனும்}, உதய மற்றும் அஸ்த மலைகளைப் போலத் தங்களைத் தாக்குபவர்களை வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(31) போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்ட சல்லியன், மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போல, எதிரிகளைத் தண்டிக்கும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மீது கணை மாரியைப் பொழிந்தான்.(32) உயர் ஆன்மா கொண்ட குருக்களின் மன்னனும் {யுதிஷ்டிரனும்}[2], தன் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு, துரோணர் தனக்குக் கற்றுத் தந்த பல்வேறு வகைகளிலான பாடங்களை வெளிப்படுத்தினான்.(33) அவன் பெருந்திறனுடனும், வேகமாகவும் அடுத்தடுத்த கணைமாரிகளை அழகாகப் பொழிந்தான். போரில் அவன்{யுதிஷ்டிரன்} திரிந்து கொண்டிருந்தபோது, எவராலும் அவனிடம் ஒரு குறையையும் காண முடியவில்லை.(34) போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட சல்லியன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் புலிகளிரண்டைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(35)
பீமன், போரில் திளைப்பவனான உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான். பாஞ்சால இளவரசன் (திருஷ்டத்யும்னன்), சாத்யகி, பாண்டுவுக்குப் பிறந்த மாத்ரியின் இரு மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோர் சகுனியையும், சுற்றிலும் இருந்த பிற குரு வீரர்களையும் வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(36) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால், அந்த இடத்தில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டிருந்த உமது போர் வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் நிகழ்ந்தது.(37) அப்போது துரியோதனன், அந்தப் போரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் கொடிமரத்தை நேரான கணையொன்றால் குறிபார்த்து, அதை வெட்டி வீழ்த்தினான்.(38) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பல மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமசேனனின் அந்த அழகிய கொடிமரம் கீழே விழுந்தது.(39) மீண்டும் அந்த மன்னன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த பீமனின் அழகிய வில்லை, கூரிய கத்தி முனை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டினான்.(40)
பெருஞ்சக்தி கொண்டவனும், வில்லற்றவனுமான பீமன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, ஈட்டியொன்றால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் துளைத்தான். இதனால் உமது மகன் {துரியோதனன்}, தனது தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(41) {இவ்வாறு} துரியோதனன் மயங்கியதும், மீண்டும் விருகோதரன் {பீமன்}, கத்தி முனைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, அவனது சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(42) துரியோதனனின் தேரில் இருந்த குதிரைகள் தங்கள் சாரதியை இழந்து, தேரை இழுத்துக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடியதால் (குரு படையில்) உரத்த ஓலங்கள் எழுந்தன.(43) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் உமது மகனைக் {துரியோதனனைக்} காக்க விரும்பி அந்தத் தேரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(44) (இதைக் கண்ட கௌரவத்) துருப்புகள் மிகவும் கலக்கமடைந்தன. துரியோதனனைப் பின்தொடர்ந்தோர் பீதியடைந்தனர். அந்நேரத்தில், தன் வில்லை வளைத்த காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(45)
அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், மனோவேகம் கொண்டவையும், தந்தத்தைப் போன்ற வெண்மையானவையுமான தன் குதிரைகளைத் தூண்டி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான்.(46) பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் அற்புதமான ஒன்றைக் கண்டோம். இதற்கு முன்பு வரை மெதுவாகவும், மென்மையாகவும் போரிட்டு வந்த அவன் {யுதிஷ்டிரன்} {அப்போது} மிக உக்கிரமாகப் போரிட்டான்.(47) அகலத் திறந்த கண்களுடனும், சினத்தால் நடுங்கிய உடலுடனும் இருந்த அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் கூரிய கணைகளால் பகைவரின் போர்வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வெட்டி வீழ்த்தினான்.(48) மூத்த பாண்டவன் எதிர்த்துச் சென்ற அந்தப் படைவீரர்கள், ஓ! மன்னா, இடியினால் பிளக்கப்பட்ட மலைச்சிகரங்களைப் போல அவனால் வீழ்த்தப்பட்டனர்.(49) குதிரைகள், சாரதிகள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேர்களை வீழ்த்தி, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும் வீழ்த்திய யுதிஷ்டிரன், மேகத்திரள்களை அழிக்கும் வலிமைமிக்கக் காற்றைப் போல எந்தத் துணையுமின்றி அந்த இடத்தில் விளையாடத் தொடங்கினான்.(50)
சினத்தால் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, (அண்ட அழிவின்போது) வாழும் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனைப் போல, அந்தப் போரில் சாரதிகளுடன் கூடிய குதிரைகளையும், சாரதிகளற்ற குதிரைகளையும், ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களையும் அழித்தான்.(51) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவி போர்க்களத்தை வெறுமையாகச் செய்த யுதிஷ்டிரன், “நில்லும், நில்லும்” என்று சொல்லியபடியே மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தான்.(52) பயங்கரச் செயல்களைப்புரியும் அவ்வீரனின் சாதனைகளைக் கண்ட உமது வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். எனினும் சல்லியன் அவனை எதிர்த்துச் சென்றான்.(53) சினத்தால் நிறைந்த அவர்கள் இருவரும் தங்கள் சங்குகளை முழக்கினர். ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்ட அவர்கள் இருவரும் மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.(54) அப்போது சல்லியன் கணைமாரிகளால் யுதிஷ்டிரனை மறைத்தான். அதேபோல, குந்தியின் மகனும், மத்ரர்களின் ஆட்சியாளனை கணைமாரியால் மறைத்தான்.(55)
அப்போது மத்ரர்களின் ஆட்சியாளன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் கணைகளால் சிதைத்துக் கொண்டு, குருதியில் குளித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சால்மலி {இலவ மரம்} மற்றும் கின்சுக {பலாச மரம்} மரங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பெரும் காந்தியைக் கொண்டவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், சிறப்புமிக்க வீரர்களுமான அவர்கள் இருவரும் உரத்த முழக்கங்களைச் செய்தனர்.(56,57) அவ்விருவரையும் கண்ட படைவீரர்களால் அவர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொன்று பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} பூமியை அனுபவிப்பானா? அல்லது சல்லியன், பாண்டுவின் மகனைக் கொன்று துரியோதனனுக்குப் பூமியை அளிப்பானா? என்பதை அங்கிருந்த போர்வீரர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வாறு போரிட்டுக் கொண்டிருக்கும்போதே மன்னன் யுதிஷ்டிரன் எதிரிகளைத் தன் வலப்புறத்தில் நிறைத்தினான்.(58,59) பிறகு சல்லியன் நூற்றுக்கணக்கான முதன்மையான கணைகளால் யுதிஷ்டிரன் மீது ஏவினான். பெருங்கூர்மை கொண்ட மற்றொரு கணையால் அவன் {சல்லியன்}, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(60) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட யுதிஷ்டிரன், முன்னூறு {300} கணைகளால் சல்லியனைத் துளைத்து, கத்தி முகக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} பின்னவனின் {சல்லியனின்} வில்லையும் அறுத்தான்.(61)
அப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சில நேரான கணைகளால் தன் எதிராளியின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மேலும் இரண்டு மிகக் கூரிய கணைகளால் அவன், சல்லியனின் பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான்.(62) பிறகு அவன், சுடர்மிக்கதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு கூரிய கணையை எடுத்துக் கொண்டு, தன் முன்பு நின்றிருந்த சல்லியனின் கொடிமரத்தையும் அறுத்தான். அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, துரியோதனனின் படையானது பிளந்தது.(63) அந்த நேரத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி வேகமாகச் சென்று, தன் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பி ஓடினான்.(64) அவர்கள் இருவரும் சென்றபிறகு, யுதிஷ்டிரனின் உரத்த முழக்கத்தைக் கேட்டனர். அப்போது நின்ற மத்ரர்களின் ஆட்சியாளன், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிக் கொண்டான்.(65) அந்தச் சிறந்த தேரானது, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்டிருந்தது. ஆயுதங்கள் மற்றும் பிற வகைக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனமானது, எதிரிகளுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது” {என்றான் சஞ்சயன்}.(66)
சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 17-சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத் துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)
அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலத் தங்கள் துருப்புகளை இவ்வாறு கொன்றுவரும் அந்த வீரனை {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர்.(7) அந்தப் போர்வீரன் பயங்கர வலிமை கொண்ட (பாண்டவ) மன்னனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, முதன்மையான மனிதர்களான மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைப் போருக்கு அறைகூவியழைத்தனர்.(8) பிறகு அந்தப் போர்க்களத்தில், போர்வீரர்களில் முதன்மையான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அடைந்த அந்த வீரர்கள், அம்மோதலில் அந்த முதன்மையான மனிதனை {சல்லியனைத்} தடுத்து, கடும் சக்தி கொண்ட சிறகு படைத்த கணைகளால் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(9) பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள், மதுகுலத்தோன் {சாத்யகி} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டவனான தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரன்}, கடும் சக்தி கொண்ட, சிறகு படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} நடுமார்பைத் தாக்கினான்.(10) அப்போது கவசமும், ஆயுதங்களும் தரித்திருந்த உமது படையின் தேர்வீரர்கள் மற்றும் பிற போராளிகள், அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளன் கணைகளால் அதிகமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டு, துரியோதனனின் கட்டளையின் பேரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(11)
போரில் அந்நேரத்தில் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏழு கணைகளால் யுதிஷ்டிரனை வேகமாகத் துளைத்தான். அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஒன்பது கணைகளால் தன் எதிரியைப் பதிலுக்குத் துளைத்தான்.(12) பெரும் தேர்வீரர்களான மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும், எண்ணெயில் துவைக்கப்பட்டவையும், அவர்களின் காது வரை வளைக்கப்பட்ட வில்லின் நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர்.(13) பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், அடுத்தவரின் கவனக்குறைவில் கவனமாக இருப்பவர்களுமான அந்தச் சிறந்த மன்னர்கள் இருவரும், தங்கள் கணைகளால் வேகமாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(14) உயர் ஆன்மப் போர்வீரர்களான துணிச்சல்மிக்க மத்ர ஆட்சியாளனும், அந்த வீரப் பாண்டவனும் ஒருவரின் மீது ஒருவர் எண்ணற்ற கணைகளைப் பொழிந்த போது, அவர்களுடைய விற்கள், நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் உண்டான உரத்த ஒலியானது, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(15) அவர்கள், ஆழ்ந்த கானகத்தில் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இளம்புலிகள் இரண்டைப் போல அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஆற்றல் செருக்கு பெருகியவர்களான அவர்கள், பலமிக்கத் தந்தங்களுடன் கூடிய மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(16)
அப்போது, பெரும் மூர்க்கம் கொண்டவனான மத்ரர்களின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பயங்கர வலிமை கொண்ட வீரனான யுதிஷ்டிரனின் மார்பை, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட கணையொன்றால் துளைத்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்டவனும், குரு குலத்துக் காளையுமான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், நன்கு ஏவப்பட்ட கணையொன்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் தாக்கி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(18) கண்ணிமைக்கும் நேரத்தில் தன் புலனுணர்வுகள் மீண்டவனும், ஆயிரங்கண் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவனுமான அந்த மன்னர்களில் முதன்மையானவன் (சல்லியன்), கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் பிருதையின் மகனை{யுதிஷ்டிரனை} நூறு கணைகளால் வேகமாகத் தாக்கினான்.(19) இதன்காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் மார்பை வேகமாகத் துளைத்து, ஒரு கணத்தையும் இழக்காமல், ஆறு கணைகளால் அவனுடைய தங்கக் கவசத்தையும் தாக்கினான்.(20)
அப்போது, மகிழ்ச்சியால் நிறைந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வில்லை வளைத்துப் பல கணைகளை ஏவி, இறுதியாகத் தன் அரச எதிரியான அந்தக் குரு குலத்துக் காளையின் வில்லை கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் அறுத்தான்.(21) பிறகு அந்தப் போரில், புதியதும், மேலும் உறுதிமிக்கதுமான வில்லொன்றை எடுத்துக் கொண்ட சிறப்புமிக்க யுதிஷ்டிரன், அசுரன் நமுசியைத் துளைக்கும் இந்திரனைப் போலக் கூர்முனை கணைகள் பலவற்றால் சல்லியனைத் துளைத்தான்.(22) சிறப்புமிக்கச் சல்லியன், ஒன்பது கணைகளால் பீமன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் தங்கக் கவசங்களை வெட்டி, அவ்விருவரின் கரங்களையும் துளைத்தான்.(23) பிறகு, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட மற்றொரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} யுதிஷ்டிரனின் வில்லையும் அவன் அறுத்தான். இந்நேரத்தில் கிருபர், ஆறு கணைகளை ஏவி மன்னனின் {யுதிஷ்டிரனின்} சாரதியைக் கொன்றதன் காரணமாக, அவன் {அந்த சாரதி} தேருக்கு முன்பு கீழே விழுந்தான்.(24) பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் நான்கு கணைகளைக் கொண்டு யுதிஷ்டிரனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மன்னனின் குதிரைகளைக் கொன்ற உயர் ஆன்ம சல்லியன், பிறகு தர்மனின் அரச மகனுடைய துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(25)
அந்த (பாண்டவ) மன்னன் அந்த அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்டபோது, சிறப்புமிக்கப் பீமசேனன், பெரும் வேகத்தைக் கொண்ட ஒரு கணையால் மத்ர மன்னனின் {சல்லியனின்} வில்லை வேகமாக அறுத்து, மேலும் இரு கணைகளால் அம்மன்னனையும் ஆழமாகத் துளைத்தான்.(26) மற்றொரு கணையால் அவன், சல்லியனுடைய சாரதியின் கவசம் பொருந்திய உடலில் இருந்து அவனது தலையை வெட்டினான். பெருஞ்சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கணமும் தாமதியாமல் அடுத்ததாகத் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(27) பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான பீமன், பெரும் வேகம் கொண்ட நூறு கணைகளால் அவ்வீரனை மறைத்து, அந்தப் போரில் தனியொருவனாகத் திரிந்து வந்தான். மாத்ரியின் மகனான சகாதேவனும் அதையே செய்தான். அக்கணைகளால் சல்லியன் திகைப்படைந்ததைக் கண்ட பீமன், வேறு கணைகளால் அவனது கவசத்தையும் அறுத்தான்.(28) பீமசேனனால் கவசம் வெட்டப்பட்டவனான அந்த உயர் ஆன்ம மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு வாளையும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து கீழே குதித்து, குந்தியின் மகனை நோக்கி விரைந்தான். பயங்கரப் பலத்தைக் கொண்ட சல்லியன், நகுலனுடைய தேரின் ஏர்க்காலை வெட்டி, யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(29) சினத்துடன் விரையும் யமனைப் போல, மன்னனை நோக்கி மூர்க்கமாக விரையும் அவனைக் கண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் திடீரென அவனை நோக்கிச் சென்றனர்.(30)
அப்போது சிறப்புமிக்கவனான பீமன், முன்னேறிவரும் அவ்வீரனின் {சல்லியனின்} ஒப்பற்ற கேடயத்தைப் பத்து கணைகளால் அறுத்தான். மேலும் அவன் {பீமன்}, மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அந்தப் போர்வீரனின் வாளையும் கைப்பிடியில் அறுத்தான். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவன் {பீமன்}, துருப்புகளுக்கு மத்தியில் உரக்க முழங்கினான்.(31) பீமனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாண்டவத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். உரக்கச் சிரித்த அவர்கள், கடும் முழக்கங்களைச் செய்தபடியே, சந்திரனைப் போன்று வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(32) வியர்வையில் நனைந்து, குருதியில் குளித்து, மிகவும் துயருற்றிருந்த உமது படையின் வீரர்கள், அந்தப் பயங்கர ஒலியால் கிட்டத்தட்ட உயிரற்றவர்களைப் போல தங்கள் உற்சாகத்தை இழந்தனர்.(33) பீமசேனன் தலைமையிலான அந்த முதன்மையான பாண்டவ வீரர்களால் தாக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன், (அவர்களைப் பொருட்படுத்தாமல்) ஒரு மானைக் கைப்பற்றப்போகும் சிங்கத்தைப் போல யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான்.(34) அப்போது, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கோபத்தில் தூண்டப்பட்டதன் விளைவால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான். தன் எதிரே மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அந்த எதிரியை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.(35)
கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவன், சல்லியனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். உண்மையில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குதிரைகளற்ற, சாரதியற்ற தன் தேரில் நின்று கொண்டு, ஓர் ஈட்டியை எடுக்க விரும்பினான்.(36) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் அருஞ்செயலைக் கண்டும், தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்த வீரன் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதை நினைவுகூர்ந்தும், இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்} தன்னிடம் செய்யச் சொன்ன செயலை நிறைவேற்றுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான்.(37) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், தங்கத்தைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்தான். அகன்று விரிந்திருந்த தன் விழிகளை உருட்டிய அவன், சினம் நிறைந்த இதயத்துடன் தன் பார்வையை மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது செலுத்தினான்.(38) ஓ மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தூய ஆன்மா கொண்டவனும், பாவங்களனைத்தும் கழுவப்பட்டவனுமான அம்மன்னனால் பார்க்கப்பட்டும், மத்ரர்களின் அந்த ஆட்சியாளன் {சல்லியன்} சாம்பலாகக் குறையாமல் {எரிந்து சாம்பலாகாமல்} இருந்தான். இஃது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தியது.(39) பிறகு, குருக்களின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவன் {யுதிஷ்டிரன்}, கடினமான அழகிய கைப்பிடியுடன் கூடியதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்களால் பிரகாசித்ததுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது பெரும்பலத்துடன் வீசினான்.(40)
பெரும் பலத்துடன் வீசப்பட்டு, ஆகாயத்தினூடே சென்ற அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது {சக்தி ஆயுதம்}, யுகமுடிவில் வானத்தில் இருந்து விழும் எரிநட்சத்திரத்தைப் போல நெருப்புப்பொறிகளை உமிழ்வதைக் கௌரவர்கள் அனைவரும் கண்டனர்.(41) அந்தப் போரில், நீதிமானானான மன்னன் யுதிஷ்டிரன், மரணத்தைத் தரும் பாசக்கயிற்றைத் தரித்திருக்கும் கால இரவுக்கோ {காலராத்திரிக்கோ}, அச்சந்தரும் யமனின் தன்மையைக் கொண்ட வளர்ப்புத் தாய்க்கோ ஒப்பானதும், பிராமணச் சாபத்தைப் போன்றதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்த ஈட்டியை மிகக் கவனமாக வீசினான்[1].(42) பாண்டுவின் மகன்கள், நறுமணப்பொருட்கள், மாலைகள், சிறந்த இருக்கைகள், சிறந்த வகை உணவுகள் மற்றும் பானங்களுடன் எப்போதும் அவ்வாயுதத்தைக் கவனமாக வழிபட்டு வந்தனர். சம்வர்த்தக நெருப்பைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்த அவ்வாயுதம், அங்கீரசின் அதர்வணச் சடங்கைப் போலக் கடுமையானதாக இருந்தது.(43) ஈசானனின் பயன்பாட்டுக்காக (தெய்வீகத் தச்சனான) தஸ்த்ரியால் {விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அஃது, எதிரிகள் அனைவரின் உயிர் மூச்சுகளையும், உடலையும் எரிக்கவல்லதாய் இருந்தது. அது தன் சக்தியால் பூமி, ஆகாயம், அனைத்து நீர் கொள்ளிடங்கள் மற்றும் அனைத்து வகை உயிரினங்களையும் அழிக்கவல்லதாய் இருந்தது.(44) மணிகள், கொடிகள், ரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கக் கைப்பிடி கொண்டதுமான அது, பல நோன்புகளை நோற்ற பிறகு, தஸ்திரியாலேயே {விஸ்வகர்மனாலேயே} கவனமாக வடிவமைக்கப்பட்டதாகும். தவறாமல் மரணத்தைத் தரக்கூடிய அது பிரம்ம வெறுப்பாளர்கள் அனைவரையும் அழிக்கவல்லதாகும்.(45)
கடுமையான பல மந்திரங்களால் அஃதை {அந்த ஈட்டியை} ஈர்த்து, பெரும் பலம் மற்றும் பெருங்கவனத்தால் அதற்குப் பயங்கர வேகத்தை அளித்த மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அழிவுக்காக {பறவைகளின்} சிறந்த வழித்தடத்தின் ஊடாக அதை வீசினான்.(46) அந்த மன்னன் {யுதிஷ்டிரன் சல்லியனிடம்}, “ஓ! இழிந்தவரே, நீர் கொல்லப்பட்டீர்” என்ற வார்த்தைகளை உரத்த குரலில் சொல்லி, பழங்காலத்தில் அந்தகாசுரனின் அழிவுக்காகத் தன் கணையை ஏவிய ருத்ரனைப் போல, வெளிப்படையாகக் கோபத்தில் ஆடியபடியே, வலுவானதும், அழகானதுமான தன் (வலக்) கரத்தை வளைத்து அஃதை {அந்த ஈட்டியை} ஏவினான்.(47) இருப்பினும் உரக்க முழங்கிய சல்லியன், நெருப்பானது, தன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைப் பிடிக்கத் தாவுவதைப் போலவே, வலிமையனைத்தையும் பயன்படுத்தி யுதிஷ்டிரனால் ஏவப்பட்டதும், தடுக்கப்பட முடியாத சக்தி கொண்டதுமான அந்தச் சிறந்த ஈட்டியைப் பிடிக்க முயற்சித்தான்.(48) அவனது முக்கிய அங்கங்களையும், அவனது அகன்ற அழகிய மார்பையும் துளைத்த அந்த ஈட்டியானது, சிறு தடையுமில்லாமல் (மத்ரத்தைச் சார்ந்த) அம்மன்னனின் உலகம் பரந்த புகழை (தன்னோடு) கவர்ந்து சென்று, நீர் நுழைவது போலவே பூமிக்குள் எளிதாக நுழைந்தது.(49) நாசித்துளைகள், கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றில் இருந்தும், காயங்களில் வழிந்தும் வெளிப்பட்ட குருதியால் நனைக்கப்பட்ட அவன் {சல்லியன்}, ஸ்கந்தனால் துளைக்கப்பட்ட பெருவடிவ கிரௌஞ்ச மலையைப் போலத் தெரிந்தான்.(50)
குரு குல வழித்தோன்றலால் கவசம் அறுபட்டவனும், இந்திரனின் யானையைப் போன்ற பலவானுமான அந்தச் சிறப்புமிக்கச் சல்லியன், தன் கரங்களை அகல விரித்து, இடியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(51) இந்திரனை வழிபட நிறுவப்பட்ட நெரும் கொடிமரமொன்று தரையில் விழுவதைப் போல அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கரங்களை அகல விரித்தபடி நீதிமானான மன்னன் யுதிஷ்ட்டிரனை நோக்கிய முகத்துடன் கீழே பூமியில் விழுந்தான்[2].(52) தன் மார்பில் விழப்போகும் அன்புத்தலைவனை வரவேற்கும் ஓர் அன்புமனைவியைப் போலவே, சிதைந்து குருதியில் குளித்த அங்கங்களுடன் விழும் அந்த மனிதர்களில் காளையை வரவேற்பதற்காகப் பூமியானவள் பாசத்துடன் சற்றே எழுந்தது போலத் தெரிந்தது.(53) பலமிக்கச் சல்லியன், அன்பு மனைவியைப் போலப் பூமியை நீண்ட காலம் அனுபவித்த பிறகு, தன் அங்கங்கள் அனைத்தாலும் பூமியை அணைத்தபடியே, அவளது மார்பில் உறங்குவதைப் போல அப்போது தெரிந்தது.(54) நியாயமான போரில் நீதிமிக்க ஆன்மாவான தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} கொல்லப்பட்ட சல்லியன், வேள்வி மேடையில் தணிந்து கிடக்கும் நன்னெருப்பின் தன்மையை ஏற்றதாகத் தெரிந்தது.(55) ஆயுதங்களையும் கொடிமரத்தையும் இழந்து, இதயம் துளைக்கப்பட்டிருந்தாலும், உயிரற்றுக் கிடந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் தன் அழகைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.(56)
அப்போது யுதிஷ்டிரன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட தன் வில்லை எடுத்து, பாம்புகளை அழிக்கும் பறவைகளின் அரசனைப் போல, அந்தப் போரில் தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான். பிறகு தனது கூர்முனைக் கணைகளால் தன் எதிரிகளின் உடல்களைப் பெரும் வேகத்துடன் வெட்டத் தொடங்கினான்.(57) அப்போது அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} ஏவிய கணைமாரிகளால், உமது துருப்புகள் முற்றிலும் மறைக்கப்பட்டன. அச்சத்தால் தங்கள் கண்களை மூடிக் கொண்ட அவர்கள், (திகைத்துப் போய்) ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அவர்கள் தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உண்டான தங்கள் ஆயுதங்களை இழந்து, தங்கள் உயிர் மூச்சுகளையும் விட்டனர்.(58)
சல்லியன் வீழ்ந்ததும், இளமையுடன் கூடியவனும், (இறந்து போன) தன் அண்ணனுக்கு அனைத்து சாதனைகளிலும் இணையானவனும், வலிமைக்க ஒரு தேர்வீரனாகக் கருதப்பட்டவனுமான மத்ர மன்னனின் தம்பி, யுதிஷ்டிரனை எதிர்த்துச் சென்றான்.(59) போரில் வெல்லப்பட முடியாதவனும், தன் அண்ணனுக்கு இறுதி மரியாதைகளைச் செலுத்த விரும்பியவனுமான அந்த மனிதர்களில் முதன்மையானவன், பல கணைகளால் அந்தப் பாண்டவனை {யுதிஷ்டிரனை} வேகமாகத் துளைத்தான்.(60) பெரும் வேகத்துடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஆறு கணைகளால் அவனைத் துளைத்தான். அவன், கத்திமுகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் தன் எதிராளியின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான்.(61) பிறகு அவன், அகன்ற தலையும், கூர்முனையும், பெரும் சக்தியும் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றால் தன் முன் நின்றிருந்த தன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(62) காது குண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலையானது, புண்ணியங்கள் தீர்ந்து விழும் ஒரு சொர்க்கவாசியைப் போல அந்தத் தேரில் இருந்து கீழே விழுவதை நான் கண்டேன்.(63)
முழுவதும் குருதியால் குளித்திருந்த அவனது தலையற்ற உடலான தேரில் இருந்து கீழே விழுவதைக் கண்ட கௌரவத் துருப்புகள் பிளந்து ஓடின.(64) உண்மையில், அழகிய கவசம் பூட்டியிருந்தவனான மத்ரனின் அந்தத் தம்பி கொல்லப்பட்டதும், ஓ! என்றும், ஐயோ என்றும் கதறியபடியே குருக்கள் பெரும் வேகத்தோடு தப்பி ஓடினர்.(65) சல்லியனின் தம்பி கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், புழுதியால் மறைக்கப்பட்டவர்களுமான உமது துருப்பினர், பாண்டவர்களிடம் ஏற்பட்ட அச்சத்தால், தங்கள் வாழ்வில் நம்பிக்கையிழந்து தப்பி ஓடினர்.(66) பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகி, அச்சமடைந்து தப்பி ஓடும் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான்.(67) அப்போது ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, (வீழ்த்தப்பட்ட படையை எதிர்த்து) முன்னேறுபவனும், தடுக்கப்பட முடியாதவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்த வெல்லப்பட முடியாத போர்வீரனை {சாத்யகியை} அச்சமில்லாமல் வேகமாக எதிர்த்தான்.(68)
விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், சீற்றமிக்க இரு சிங்கங்களைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(69) பிரகாசத்தில் சூரியனுக்கு ஒப்பான அவர்கள் இருவரும் சூரியக் கதிர்களுக்கு ஒப்பான சுடர்மிக்கக் காந்தியைக் கொண்ட கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(70) விருஷ்ணி குலத்தின் அந்த இரு சிங்கங்கள் தங்கள் விற்களில் இருந்து ஏவிய அந்தப் பலமிக்கக் கணைகளை, ஆகாயத்தில் வேகமாகச் செல்லும் பூச்சிகளைப் போல நாங்கள் கண்டோம்.(71) சாத்யகியைப் பத்து கணைகளாலும், அவனது குதிரைகளை மூன்றாலும் துளைத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒரு நேரான கணையால் அவனது {சாத்யகியின்} வில்லையும் அறுத்தான்.(72) இவ்வாறு வெட்டப்பட்ட தனது சிறந்த வில்லை அப்பால் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, முதலில் இருந்ததைவிடக் கடினமான மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டான்.(73)
முதன்மையான வில்லை எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான வில்லாளி {சாத்யகி}, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} நடுமார்பைத் துளைத்தான்.(74) பிறகு நன்கு ஏவப்பட்ட கணைகள் பலவற்றால் அவனது தேரையும், அந்தத் தேரின் ஏர்க்காலையும் வெட்டிய சாத்யகி, பிறகு தன் எதிராளியின் குதிரைகளையும், அவனது பார்ஷினி சாரதிகள் இருவரையும் வேகமாகக் கொன்றான்.(75) அப்போது, சரத்வானின் மகனான வீரக் கிருபர், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஹிருதிகன் மகன் தேரற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்டு, அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து அவனைக் கொண்டு சென்றார்.(76) மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} கொல்லப்பட்டு, கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, துரியோதனனின் மொத்தப் படையும் அந்தப் போரில் மீண்டும் புறமுதுகிட்டது.(77) அந்நேரத்தில் அந்தப் படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டது. எங்களால் எதையும் காண முடியவில்லை. எனினும் உமது படையின் பெரும்பகுதி வீழ்ந்தது. உயிரோடு எஞ்சியவர்களும் போரில் இருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு புறமுதுகிட்டோடினர்.(78)
விரைவில், அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்த பல்வேறு குருதி ஓடைகளின் விளைவால் பூமியின் புழுதி தணிவது தெரிந்தது.(79) அப்போது தன் படை பிளப்பதை அருகில் இருந்து கண்ட துரியோதனன், முன்னேறிவரும் பார்த்தர்கள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(80) பாண்டவர்களும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், ஆனர்த்தர்களின் வெல்லப்பட முடியாத தலைவனும் (சாத்யகியும்) தங்கள் தேர்களில் இருப்பதைக் கண்ட குரு மன்னன் {துரியோதனன்}, அவர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் மறைத்தான்.(81) (அந்நேரத்தில்) தங்கள் முன் நிற்கும் யமனை அணுக அஞ்சும் உயிரினங்களைப் போல, எதிரிகள் அவனை {துரியோதனனை} நெருங்கவில்லை. அதேவேளையில், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றான்.(82) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான யுதிஷ்டிரன், நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பெரும் சக்தி கொண்ட ஆறு அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} கௌதமர் மகனையும் {கிருபரையும்} துளைத்தான்.(83)
அப்போது அஸ்வத்தாமன், (பாண்டவ) மன்னனால் குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்ட ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு, யுதிஷ்டிரனின் முன்னிலையில் இருந்து அவனை அப்பால் கொண்டு சென்றான்.(84) சரத்வான் மகன் {கிருபர்}, பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்து, மேலும் எட்டு கூரிய கணைகளால் அவனது குதிரைகளையும் துளைத்தார்.(85) ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு உமது மகன் மற்றும் உமது தீய கொள்கைகளால் அந்தப் போரின் தணல்கள் அங்குமிங்கும் எரியத் தொடங்கின.(86) அந்தப் போர்க்களத்தில், குரு குலத்துக் காளையால் {யுதிஷ்டிரனால்}, அந்த வில்லாளிகள் முதன்மையானவன் {சல்லியன்} கொல்லப்பட்ட பிறகு, சல்லியன் கொல்லப்பட்டதைக் கண்ட பார்த்தர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சங்குகள் முழக்கினர்.(87) பழங்காலத்தில் விருத்திரன் கொல்லப்பட்ட பிறகு இந்திரனை மெச்சிய தேவர்களைப் போலவே, அந்தப் போரில் அனைவராலும் யுதிஷ்டிரன் பாராட்டப்பட்டான். அவர்கள் பல்வேறு வகைகளிலான இசைக்கருவிகளை இசைத்து முழக்கி, அவ்வொலியைப் பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(88)
சல்லியனின் தொண்டர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 18-தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், “செல்லாதீர்கள், செல்லாதீர்கள்” என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)
அதேவேளையில், சல்லியன் கொல்லப்பட்டதையும், மத்ரக மன்னனின் {சல்லியனின்} நலனில் அர்ப்பணிப்புக் கொண்ட மத்ரகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் யுதிஷ்டிரன் பீடிக்கப்படுவதையும் கேட்ட பெரும் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டும், தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்துக் கொண்டும் அங்கே வந்தான்.(5,6) பிறகு, அர்ஜுனன், பீமன், பாண்டுவின் மூலமாக மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, மனிதர்களில் புலியான சாத்யகி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள்,(7) திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைக் காக்க விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(8) மன்னனை {யுதிஷ்டிரனைச்} சுற்றித் தங்கள் நிலைகளை ஏற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான அந்தப் பாண்டவர்கள், பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போலப் பகைவரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். உண்மையில், மரங்களை அசைக்கும் வலிமைமிக்கச் சூறைக்காற்றைப் போல அவர்கள் உமது படையை நடுங்கச் செய்தனர்.(9)
{ஆனாலும்} எதிர்க்காற்றால் கலங்கலடிக்கப்படும் பெரும் கங்கையாற்றைப் போல, மீண்டும் அந்தப் பாண்டவப் படை அதிகமாகக் கலக்கமடைந்தது.(10) அந்த வலிமைமிமிக்கப் படையைக் கலங்கச் செய்தவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் (மத்ரகர்கள) அனைவரும், “எங்கே அந்த மன்னன் யுதிஷ்டிரன்?(11) துணிச்சல்மிக்க அவனது சகோதரர்கள் ஏன் இங்குத் தென்படவில்லை? பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்களுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டிக்கும் என்ன ஆயிற்று? திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களான திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர் எங்கே சென்றுவிட்டனர்?” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(12) இதனால், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், அந்த வார்த்தைகளைச் சொல்லி மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்த மத்ர மன்னனின் தொண்டர்களைக் கொல்லத் தொடங்கினர்.(13) அந்தப் போரில் உமது துருப்புகளில் சிலர் தேர்ச்சக்கரங்களால் நசுக்கப்படுவதும், சிலர் உயர்ந்த கொடிமரங்களால் கொல்லப்படுவதும் அங்கே காணப்பட்டது.(14) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உமது மகனால் தடுக்கப்பட்டாலும் கூட, அந்த வீரப் பாண்டவர்களைக் கண்டதும், அவர்களை எதிர்த்து மேலும் விரைந்தனர்.(15)
மென்மையாகப் பேசிய துரியோதனன், அவ்வீரர்கள் எதிரியோடு போரிடுவதைத் தவிர்க்க முயன்றான். எனினும், பெரும் தேர்வீரர் எவரும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.(16) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காந்தார மன்னனின் மகனும், பேச்சுத்திறன் கொண்டவனுமான சகுனி, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(17) “நம் கண்களுக்கு முன்பாக மத்ரகப் படை கொல்லப்படும்போது, நாம் எவ்வாறு நின்று கொண்டிருக்கலாம்? ஓ! பாரதா {துரியோதனா}, நீ இங்கிருக்கும்போது இது {இப்படி நடப்பது} நல்லதாகத் தெரியவில்லை.(18) ஒற்றுமையுடன் நான் அனைவரும் போரிட வேண்டும் என்பதே நமது திட்டம். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு ஏன் நீ, நமது துருப்புகள் இவ்வாறு எதிரிகளால் கொல்லப்படும்போதும் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டான்.(19)
துரியோதனன் {சகுனியிடம்}, “என்னால் முன்பே தடுக்கப்பட்டாலும், அவர் என் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த மனிதர்கள் ஒன்றாக இந்தப் பாண்டவப்படைக்குள் சென்று விட்டனர்” என்றான்.(20)
சகுனி, “போரில் சினத்தால் தூண்டப்படும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. அம்மனிதர்களிடம் நீ கோபப்படுவது உனக்குத் தகாது. அக்கறையின்மைக்கு இது சமயமில்லை.(21) எனவே, மத்ர மன்னனின் தொண்டர்களான அந்தப் பெரும் வில்லாளிகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நமது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் செல்வோம்.(22) ஓ! மன்னா {துரியோதனா}, பெருங்கவனத்துடம் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்” என்றான் {சகுனி}. சகுனியின் நடத்தையைக் குறித்துச் சிந்தித்த கௌரவர்கள் அனைவரும், மத்ரர்கள் இருந்த அந்த இடத்திற்குச் சென்றனர்.(23) இவ்வாறு (தன் தாய்மாமனால்) சொல்லப்பட்ட துரியோதனனும், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், அவ்வொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியும், ஒரு பெரும் படை சூழ எதிரியை எதிர்த்துச் சென்றான்.(24) “கொல்வாயாக, துளைப்பாயாக, பிடிப்பாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற இவ்வொலிகளே அங்கே அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன.(25)
அதேவேளையில், அந்தப் போரில் மத்ர மன்னின் {சல்லியனின்} தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைத் தாக்குவதைக் கண்ட பாண்டவர்கள், மத்யமம் என்றழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களை அணிவகுத்துக் கொண்டு அவர்களை எதிர்த்துச் சென்றனர்[1].(26) கையோடு கையாகச் சிறிது நேரம் போரிட்டவர்களும், மத்ரமன்னனின் தொண்டர்களுமான அந்த வீரப் போர்வீரர்கள், அழிவைச் சந்திப்பது அங்கே காணப்பட்டது.(27) பிறகு நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ஒன்று சேர்ந்து வந்த பாண்டவர்கள், பெரும் சுறுசுறுப்புடன் மத்ரகர்களின் படுகொலையை நிறைவுசெய்து, மகிழ்ச்சியில் நிறைந்து இன்பக்கூச்சலிட்டனர்.(28) அப்போது சுற்றிலும் அங்கே தலையில்லாத வடிவங்கள் எழுவது காணப்பட்டது. சூரிய வட்டலில் இருந்து பெரும் எரிநட்சத்திரங்கள் விழுவதும் தென்பட்டது.(29) பூமியானது, தேர்கள், உடைந்த அச்சுகள், நுகத்தடிகள், கொல்லப்பட்ட போர்வீரர்கள், உயிரற்ற குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டது.(30)
காற்றின் வேகத்தைக் கொண்டவையும், (வழிநடத்த சாரதிகளில்லாமல்) தேர்களில் இன்னும் பூட்டப்பட்டிருந்தவையுமான குதிரைகள், ஓ! ஏகாதிபதி, போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் போர்வீரர்களை இழுத்துச் செல்வது காணப்பட்டது.(31) சில குதிரைகள் உடைந்த சக்கரங்களைக் கொண்ட தேர்களை இழுத்துச் சென்றன, சில உடைந்த தேர்களின் பகுதிகளைச் சுமந்து கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(32) பூட்டாங்கயிறுகளால் தணிவடைந்த சில குதிரைகளும் ஆங்காங்கே தென்பட்டன புண்ணியங்கள் தீர்ந்து சொர்க்கத்தில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து தேர்வீரர்கள் கீழே விழும்வதும் காணப்பட்டன.(33) மத்ரமன்னனின் துணிச்சல்மிக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்ட போது, தாக்குவதில் பெருந்திறன் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பார்த்தர்கள், தங்களை நோக்கி ஒரு குதிரைப்படை வருவதைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் அதை நோக்கி வேகமாக விரைந்தனர்.(34) தங்கள் கணைகளால் உரத்த விஸ் ஒலியை உண்டாக்கி, தங்கள் சங்கொலிகளுடன் கலந்து பல்வேறு வகை ஒலிகளையும் வெளியிட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமான அவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.(35)
மத்ர மன்னனின் அந்தப் பெரும்படை அழிக்கப்பட்டதைக் கண்டும், அவர்களது வீர மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதைக் கண்டும் துரியோதனனின் மொத்த படையும் மீண்டும் களத்தில் இருந்து புறமுதுகிட்டது.(36) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லாளிகளான பாண்டவர்களால் தாக்கப்பட்ட அந்தக் குரு படையானது, அச்சத்தால் தூண்டப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(37)[2]
இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 19-புறமுதுகிட்ட கௌரவப் படை; பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது; படையின் பின்புறத்தை அடைந்த துரியோதனன்; காலாட்படையினரில் இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்; துரியோதனன் தன் வீரர்களிடம் பேசிய வீர உரை; மீண்டும் அணிதிரண்ட கௌரவப்படை..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அந்தப் பெரும் மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதும், உமது துருப்புகளும், உமது மகன்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடினர்.(1) உண்மையில், சிறப்புமிக்க யுதிஷ்டிரனால் அவ்வீரன் {சல்லியன்} கொல்லப்பட்டதும், உமது துருப்புகள், ஆழ்ந்த கடலில் மரக்கலம் உடைந்து, அதைக் கடக்க ஒரு படகில்லாத வணிகர்களைப் போல இருந்தன.(2) மத்ர மன்னன் {சல்லியன்} வீழ்ந்ததும், ஓ! ஏகாதிபதி, உமது துருப்பினர், ஒரு பாதுகாவலனை விரும்பும் தலைவனற்ற மனிதர்கள் போலவோ, சிங்கம் ஒன்றால் பீடிக்கப்படும், ஒரு மான்கூட்டத்தைப் போலவோ இருந்தனர்.(3) கொம்புகளை இழந்த காளைகளைப் போலவோ, தந்தங்கள் உடைந்த யானைகளைப் போலவோ இருந்த உமது துருப்பினர், அஜாதசத்ருவால் {யுதிஷ்டிரனால்}, வீழ்த்தப்பட்டு நடுப்பகல் வேளையில் தப்பி ஓடினர்.(4) சல்லியன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரில் ஒருவனும் படையைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை.(5)
ஓ! மன்னா, பீஷ்மர், துரோணர், சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்ந்த போது இருந்த அச்சமும், துயரமும், ஓ! பாரதரே, ஓ! ஏகாதிபதி, மீண்டும் நமதானது.(6) வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனின் வீழ்ச்சியில் வெற்றியை இழந்த குரு படையானது, கொல்லப்படும் தன் வீரர்களுடன் குழப்பமடைந்து, கூரிய கணைகளால் வெட்டுப்பட்டு வீழத் தொடங்கியது. மத்ர மன்னனின் படுகொலையால், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(7) சிலர் குதிரைமுதுகிலும், சிலர் யானைகளிலும், சிலர் தேர்களிலும் எனப் பெரும் தேர்வீரர்களும், காலாட்படைவீரர்களும் அச்சத்தால் பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.(8) மலைகளைப் போலத் தெரிந்தவையும், தாக்குவதில் சாதித்தவையுமான இரண்டாயிரம் யானைகள், சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்குசங்களாலும், கட்டை விரல்களாலும் தூண்டப்பட்டுத் தப்பி ஓடின.(9) உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே, உமது படைவீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்கள், மூச்சுவாங்க ஓடுவதும் காணப்பட்டது.(10)
வீழ்ந்தவர்களாக, பிளந்து ஓடுபவர்களாக மனத்தளர்ச்சியால் ஓடும் அவர்களைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) வீரப் போர்வீரர்கள் வெளிப்படுத்திய கணைகளின் விஸ் ஒலிகளும், பிற ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும், சங்கு முழக்கங்களும் பேராற்றல்வாய்ந்ததவையாக இருந்தன.(12) அச்சத்தால் கலக்கமடைந்து ஓடும் கௌரவப்படையைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர்,(13) “உண்மையில் உறுதியுள்ள மன்னன் யுதிஷ்டிரன் இன்று தன் எதிரிகளை வென்றான். துரியோதனன் இன்று தன் காந்தியையும், அரச செழுமையையும் இழந்தான்.(14) இன்று மனிதர்களின் மன்னனான திருதராஷ்டிரன், தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு மலைப்படைந்து, பூமியில் புரண்டு, கடும் வேதனையை உணரட்டும்.(15)
குந்தியின் மகனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் பெரும் வலிமை மிக்கவன் என்பதை அவன் {திருதராஷ்டிரன்} இன்று அறியட்டும். பாவியும், தீய இதயம் கொண்டவனுமான அந்த மன்னன் இன்று தன்னைத் தானே கடிந்து கொள்ளட்டும்.(16) இன்று அவன் காலத்தையும், விதுரனின் நன்மையான வார்த்தைகளையும் நினைவுகூரட்டும். இந்த நாள் முதல் அவன் பார்த்தர்களின் அடிமையாகக் காத்திருக்கட்டும் {பணி செய்யட்டும்}. பாண்டு மகன்கள் அனுபவித்த துயரத்தை இன்று அந்த மன்னனும் அனுபவிக்கட்டும்.(17) கிருஷ்ணனின் பெருமையை இன்று அம்மன்னன் அறியட்டும். அவன் {திருதராஷ்டிரன்}, போரில் அர்ஜுனனுடைய வில்லின் பயங்கரமான நாணொலியையும், அவனது ஆயுதங்கள் அனைத்தின் பலத்தையும், போரில் அவனது கரங்களின் வலிமையையும் இன்று கேட்கட்டும்.(18) இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன் பலியைப் போலவே போரில் துரியோதனன் கொல்லப்படும்போது, உயர்ஆன்ம பீமனின் பயங்கர வலிமையை இன்று அவன் அறிந்து கொள்வான்.(19) துச்சாசனனைக் கொன்று பீமன் அடைந்த சாதனையை அடைய, வலிமையும், பலமும் கொண்ட பீமனைத் தவிர, இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(20) தேவர்களாலேயே வீழ்த்தப்பட முடியாதவனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} படுகொலையைக் கேட்டு, பாண்டுவுடைய மூத்த மகனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலை இன்று அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அறிந்து கொள்வான்.(21) சுபலனின் வீரமகனும் {சகுனியும்}, காந்தாரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, அவன் பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்களின் பலத்தை அறிந்து கொள்வான்.(22)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, சாத்யகி, பீமசேனன், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னான், திரௌபதியின் ஐந்து மகன்கள், மாத்ரியின் இரண்டு மகன்கள், வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரைத் தங்கள் போர்வீரர்களாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது?(23,24) அண்டத்தின் பாதுகாவலனும், ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படுபவனுமான கிருஷ்ணனைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது? அறத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்டோரால் ஏன் வெல்ல முடியாது?(25) அறம் மற்றும் புகழின் புகலிடமான ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரனைத் தவிர, பீஷ்மர், துரோணர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிற மன்னர்களையும் வெல்ல வேறு எவன் தகுந்தவன்?” என்று {பாண்டவ வீரர்களும், பாஞ்சால வீரர்களும் ஒருவருக்கொருவர்} பேசிக் கொண்டனர்.(26,27) இவ்வார்த்தைகளைச் சொல்லி இன்பத்தில் நிறைந்த சிருஞ்சயர்கள், அந்தப் போரில் கணைகளால் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருந்த உமது துருப்புகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.(28)
அப்போது பெரும் வீரம் கொண்ட தனஞ்சயன் பகைவரின் தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான். மாத்ரியின் இரு மகன்களும், வலிமைமிக்கப் போர்வீரனான சாத்யகியும் சகுனியை எதிர்த்துச் சென்றனர்.(29) பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமாகத் தப்பி ஓடும் அவர்கள் அனைவரையும் கண்ட துரியோதனன், சிரித்துக் கொண்டே தன் சாரதியிடம்,(30) “பார்த்தன் {அர்ஜுனன்} தன் வில்லோடு அங்கு நின்று கொண்டு, என்னை மீறுகிறான். என் குதிரைகளை மொத்த படையின் பின்புறத்திற்குக் கொண்டு செல்வாயாக.(31) கரைகளை மீற முடியாத பெருங்கடலைப் போலவே, குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பின்புறத்தில் நான் நிலைகொண்டால் என்னை மீறிச் செல்ல ஒருபோதும் துணியமாட்டான்.(32) ஓ! சாரதியே, பாண்டவர்களால் பின்தொடரப்படும் இந்தப் பரந்த படையைப் பார். துருப்புகள் நகர்வதன் விளைவால் அனைத்துப் பக்கங்களிலும் எழும் இந்தப் புழுதி மேகத்தைப் பார்.(33) பயங்கரமானவையும், பேரொலியுடன் கூடியவையுமான அந்தச் சிங்க முழக்கங்களைக் கேள். எனவே, ஓ சாரதியே, மெதுவாகச் சென்று பின்புறத்தில் நிலையெடுப்பாயாக.(34) போரில் நின்று பாண்டவர்களுடன் நான் போரிட்டால், ஓ! சாரதியே, என்படை மீண்டும் திரண்டு வந்து வீரத்துடன் போரிடும்” என்றான்.(35)
மதிப்புக்குரிய வீரன் ஒருவனுக்குத் தகுந்த உமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சாரதி, தங்க இழைகளுடன் கூடிய அந்தக் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(36) யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், தேர்வீரர்களையும் இழந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாக இருந்தவர்களுமான இருபத்தோராயிரம் {21,000} காலாட்படை வீரர்கள் இன்னும் போரிட நின்று கொண்டிருந்தனர்.(37) பல்வேறு நாடுகளில் பிறந்தவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பெரும்புகழை வெல்ல விரும்பி களத்தில் நின்று கொண்டிருந்தனர்.(38) மகிழ்ச்சியால் நிறைந்து விரைந்து செல்லும் அந்தப் போர்வீரர்களுக்கிடையிலான மோதல் பேரொலியுடன் கூடியதாகவும், மிகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.(39) அப்போது, ஓ! மன்னா, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், நால்வகைப் படைகளுடன் அவர்களைத் தடுத்தனர்.(40)
சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பிய சில காலாட்படைவீரர்கள், உரத்த கூச்சலிட்டபடியும், தங்கள் கக்கங்களை அறைந்தபடியும், பீமனை எதிர்த்துச் சென்றனர்.(41) போரில் வெல்லப்பட முடியாதவர்களான அந்தத் தார்தராஷ்டிரப் போராளிகள், சினத்தால் நிறைந்து, பீமசேனனை அடைந்து சீற்றத்துடன் கூச்சலிட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்தப் போரில் பீமனைச் சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(42) பெரும் எண்ணிக்கையிலான அந்தக் காலாட்படை வீரர்களால் சூழப்பட்டு, அந்தப் போரில் அவர்களால் தாக்கப்பட்ட பீமன், மைநாக மலையைப் போலத் தான் நின்ற இடத்திலேயே அசையாமால் நின்றிருந்தான்.(43) அதேவேளையில், ஓ! ஏகாதிபதி, அவனைத் தாக்கியவர்கள், சினத்தால் நிறைந்து, பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைப் பீடிக்க முயற்சி செய்தபடியே, (அவனை {பீமனைக்} காக்க முயன்ற) பிற போராளிகளையும் தடுத்தனர்.(44) அவ்வீரர்களுடன் மோதிய பீமன் சினத்தால் நிறைந்தவனானான். வேகமாகத் தன் தேரைவிட்டு இறங்கி அவன், காலாளாக அவர்களை எதிர்த்துச் சென்றான்.(45)
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது பெரும் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், தண்டத்துடன் கூடிய யமனைப் போலவே உமது துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(46) வலிமைமிக்கவனான பீமன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளற்றவர்களாக இருந்த அந்த இருபத்தோராயிரம் {21000} காலாட்படைவீரர்களையும் தன் கதாயுதத்தால் நொறுக்கினான்.(47) பலமான அந்தப் படைப்பிரிவினரைக் கொன்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் முன்னிலையில் திருஷ்டத்யும்னனுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(48) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தத் தார்தராஷ்டிரக் காலாட்படை வீரர்கள், மலர்க்கொத்துகளுடன் கூடிய கர்ணிகாரங்கள் சூறாவளியால் வீழ்த்தப்பட்டதைப் போலக் குருதியில் குளித்துத் தரையில் கிடந்தனர்.(49) பல்வேறு வகை மலர்களால் அமைக்கப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைக் காது குண்டலங்களை அணிந்தவர்களும், பல்வேறு குலங்களைச் சார்ந்தவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போராளிகள் உயிரையிழந்து களத்தில் கிடந்தனர்.(50)
கொடிகள் மற்றும் கொடிமரங்களால் மறைக்கப்பட்ட அந்தப் பெரும் காலாட்படையானது, இவ்வாறு வெட்டப்பட்டுக் களத்தில் கிடக்கும்போது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதுமாகக் காணப்பட்டது.(51) யுதிஷ்டிரனின் தலைமையில் தங்கள் தொண்டர்களுடன் போரிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், உமது சிறப்புமிக்க மகன் துரியோதனனை {எதிர்த்து அவனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(52) அந்தப் பெரும் வில்லாளிகள், உமது துருப்பினர் போரில் இருந்து புறமுதுகிடுவதைக் கண்டு, துரியோதனனை எதிர்த்துச் சென்று, கரைகளைக் கடக்க முடியாத பெருங்கடலைப் போலவே அவனைக் கடக்க முடியாதவர்களானார்கள்.(53) ஒன்று சேர்ந்திருந்த பார்த்தர்களால், தனியொருவனான அவனை மீற முடியாதபோது, உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(54)
அப்போது, அதிகத் தூரம் தப்பி ஓடாதவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தவர்களும், தப்பி ஓடுவதையே தங்கள் இதயங்களில் நிலைநிறுத்தியிருந்தவர்களுமான தன் படையினரிடம் பேசிய துரியோதனன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(55) “நீங்கள் ஓடினால், பாண்டவர்களால் உங்களைப் பின் தொடர முடியாது, அல்லது கொல்ல முடியாது என்று சொல்லும் அளவுக்கு, சமவெளியிலோ, மலையிலோ எந்த இடத்தையும் நான் காணவில்லை. பிறகு ஓடுவதால் என்ன பயன்?(56) பாண்டவர்களின் படையானது எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. இரு கிருஷ்ணர்களும் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நிலைத்து நின்றால், நிச்சயம் வெற்றி நமதாகும்.(57) முறையனைத்தையும் இழந்து நீங்கள் ஓடுவீர்கள் என்றால், பாவிகளான பாண்டவர்கள் பின்தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் கொள்வார்கள். மறுபுறம் நாம் நிலைத்து நின்றால், நமக்கு நல்ல விளைவு ஏற்படும்.(58) இங்கே தாக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்பீராக. வீரர்களையும், கோழைகளையும் யமன் கொல்வான் எனும்போது, க்ஷத்திரியன் என்று தன்னை அழைத்துக் கொண்டு எந்த மனிதன் போரிடாத மூடனாக இருப்பான்?(59) கோபக்கார பீமசேனனின் முன்னிலையில் நாம் நின்றால், நல்ல விளைவு நமக்கு ஏற்படும். க்ஷத்திரிய நடைமுறையின்படி போராடிக் கொண்டிருக்கும்போது போரில் மரணமேற்பட்டால் அது மகிழ்ச்சி நிறைந்ததே.(60) வெற்றியடைவதால் ஒருவன் இங்கே மகிழ்ச்சியை அடைகிறான். கொல்லப்பட்டாலோ, அவன் அடுத்த உலகில் பெரும் கனிகளை {பலன்களை} அடைகிறான். கௌரவர்களே, போர் அளிப்பதை விடச் சொர்க்கத்திற்கான சிறந்த பாதை வேறு எதுவும் கிடையாது. போரில் கொல்லப்படும் நீங்கள் எத்தாமதமும் இன்றி அருள் உலகங்கள் அனைத்தையும் அடைவீர்கள்” என்றான் {துரியோதனன்}.(61)
அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சிய (குரு) மன்னர்கள் மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.(62) வேகமாக முன்னேறிவரும் அவர்களைக் கண்டவர்களும், போருக்காக அணிவகுத்திருந்தவர்களும், தாக்குவதில் திறம்படைத்தவர்களுமான பார்த்தர்கள், சினத்தால் நிறைந்து, வெற்றியடையும் விருப்பத்தால் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(63) வீரமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்து, தன் தேரில் எதிரியை எதிர்த்துச் சென்றான்.(64) மாத்ரியின் இரு மகன்கள், சாத்யகி ஆகியோர் சகுனியை எதிர்த்து விரைந்தனர். பிற (பாண்டவ) வீரர்கள், சிரித்துக் கொண்டு, உமது படைகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(65)
எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! – சல்லிய பர்வம் பகுதி – 20-பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)
பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான பாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)
அப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)
அவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேகமாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)
சால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ! மன்னா, அந்தப் போரில் ஓ! என்றும், ஐயோ! என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ! மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றான் சஞ்சயன்}.(26)
கிருதவர்மனை வென்ற சாத்யகி! – சல்லிய பர்வம் பகுதி – 21-கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)
நண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)
பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்களும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)
நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)
அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)
அந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)
எனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்” {என்றான் சஞ்சயன்}.(36)
யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி! – சல்லிய பர்வம் பகுதி – 22-துரியோதனனின் அருஞ்செயல்; பாண்டவப்பட்டையைத் தனியொருவனாக எதிர்கொண்ட துரியோதனன்; தப்பி ஓடிய போர்வீரர்கள் துரியோதனன் போரிடுவதைக் கண்டு மீண்டும் வந்தது; அஸ்வத்தாமன் பீமனோடும், சகுனி யுதிஷ்டிரனோடும் போரிட்டது; யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி; மற்றொரு தேரில் ஏறிவந்த யுதிஷ்டிரன்; உலூகன் நகுலனோடும், துரியோதனன் திருஷ்டத்யும்னனோடும், கிருபர் திரௌபதியின் மகன்களோடும் போரிட்டது; களமெங்கும் அடர்த்தியாக எழுந்த புழுதி மேகம், போர்வீரர்களின் குருதியால் நனைந்து தணிவையடைந்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்வீரர்களில் முதன்மையானவனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தேரைச் செலுத்திக் கொண்டு, மனத்தளர்ச்சியால் ஏற்பட்ட துணிவால் நிறைந்து, பெரும் வீரத்தோடு கூடிய ருத்திரனைப் போல அந்தப் போரில் தெரிந்தான்.(1) அவனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமி முற்றிலும் மறைக்கப்பட்டது. உண்மையில் அவன் {துரியோதனன்}, மலைச்சாரல்களில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் தன் எதிரிகளை நனைத்தான்.(2) அப்போது அந்தப் பெரும்போரில் பாண்டவர்களில் எந்த ஒரு மனிதனோ, குதிரையோ, யானையோ, தேரோ, துரியோதனனின் கணைகளால் தாக்கப்படாதவர்களாகவோ, தாக்கப்படாததாகவோ இல்லை.(3) போர்வீரர்களில் யார்மீதெல்லாம் நான் கண்களைச் செலுத்தினேனோ, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே, அவர்கள் அனைவரும் உமது மகனின் {துரியோதனனின்} கணைகளால் தாக்கப்பட்டிருந்தனர்.(4) போரில் விரையும்போதோ, அணிவகுத்துச் செல்லும்போதே எழும் புழுதியால் மறைக்கப்படும் ஒரு கூட்டத்தைப் போல, அந்தப் பாண்டவப் படையானது அப்போது அந்தச் சிறப்புமிக்க வீரனின் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தது.(5)
அப்போது பூமியானது, ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பெரும் கரநளினம் கொண்ட வில்லாளியான உமது மகன் துரியோதனனின் கணைகளாலான ஒரே பரப்பாக என்னால் காணப்பட்டது.(6) உமது தரப்பையும், எதிரியின் தரப்பையும் சேர்ந்தவர்களான களத்தில் இருந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களில், அப்போது துரியோதனன் என்ற ஒரு மனிதன் மட்டுமே எனக்குத் தெரிந்தான்.(7) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பார்த்தர்களால், தனியொருவனான உமது மகனை {துரியோதனனை} அணுக முடியாததால், அப்போது அவனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(8) அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, யுதிஷ்டிரனை நூறு கணைகளாலும், பீமசேனனை எழுபதாலும், சகாதேவனை ஏழாலும் துளைத்தான்.(9) அவன், நகுலனை அறுபத்துநான்காலும், திருஷ்டத்யும்னனை ஐந்தாலும், திரௌபதியின் மகன்களை ஏழாலும், சாத்யகியை மூன்று கணைகளாலும் துளைத்தான். பிறகு அவன், ஓ! ஐயா ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} சகாதேவனின் வில்லையும் அறுத்தான்.(10)
முறிந்த வில்லை ஒருபுறம் கிடத்திய மாத்ரியின் வீரப் புதல்வன் {சகாதேவன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு மன்னன் துரியோதனனை எதிர்த்து விரைந்து, அந்தப் போரில் பத்து கணைகளால் அவனைத் துளைத்தான்.(11) பெரும் வில்லாளியும், துணிவுமிக்கவனுமான நகுலன், மேலும் பயங்கரமான ஒன்பது கணைகளால் மன்னனைத் {துரியோதனனைத்} துளைத்து உரக்க முழங்கினான்.(12) சாத்யகி நேரான ஒற்றைக் கணையால் மன்னனை {துரியோதனனைத்} தாக்கினான்; திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஐந்தாலும் அவனைத் தாக்கினர். பீமசேனன் அம்மன்னனை எண்பது கணைகளால் பீடித்தான்.(13) இவ்வாறு பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த துருப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டாலும் துரியோதனன் நடுங்கவில்லை.(14) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் வேகம், திறம், ஆற்றல் ஆகியவை அனைத்து உயிரினங்களையும் விஞ்சுவதாக மனிதர்கள் அனைவராலும் காணப்பட்டது.(15)
அதேவேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற தார்தராஷ்டிரர்கள், மன்னனைக் கண்டு மீண்டும் அணிதிரண்டு, கவசம் தரித்தவர்களாக அங்கே திரும்பி வந்தனர்.(16) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, மழைக்காலங்களில் பொங்கும் கடலைப் போல மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(17) அந்தப் போரில் வெல்லப்படாத தங்கள் மன்னனை {துரியோதனனை} அணுகிய அந்தப் பெரும் வில்லாளிகள், போரிடுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்.(18) அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பீமசேனனத் தடுத்தான். ஓ! ஏகாதிபதி, துணிச்சல்மிக்கப் போராளிகளால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு அந்தப் போரில் ஏவப்பட்ட கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் முற்றிலும் மறைக்கப்பட்டன.(19,20)
அஸ்வத்தாமன் மற்றும் பீமசேனனைப் பொறுத்தவரையில், ஓ! பாரதரே, அவர்கள் இருவரும் கொடுஞ்சாதனைகளைப் புரிபவர்களாக இருந்தனர். அவ்விருவரும் போரில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வில்லின் நாண்கயிற்றை இழுத்ததால் இருவரின் கரங்களும் பல வடுக்களைக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சாதனைகளில் பதிலடி கொடுத்து, மொத்த அண்டத்தையே அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து போரிட்டனர்.(21) வீரனான சகுனி அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்கினான். சுபலனின் வலிமைமிக்க மகன் {சகுனி}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, துருப்புகள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தபடியே உரக்க முழங்கினான்.(22) அதேவேளையில் வீரச் சகாதேவன், வீரனும், வெல்லப்பட்டவனுமான மன்னனை {யுதிஷ்டிரனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தப் போரில் இருந்து கொண்டு சென்றான்.(23) மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு (போருக்குத் திரும்பி வந்த) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், முதலில் ஒன்பது கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஐந்தால் அவனை மேலும் துளைத்தான். பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்} உரத்த முழக்கம் செய்தான்.(24) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அச்சத்தை ஏற்படுத்துவதான அந்தப் போர் இவ்வாறே காண்பதற்கு அற்புதமானதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் நிறைத்த அந்தப் போர், சித்தர்களாலும், சாரணர்களாலும் புகழப்பட்டது.(25)
அளவிலா ஆன்மா கொண்ட {சகுனியின் மகன்} உலூகன், அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவியபடியே வலிமைமிக்க வில்லாளியான நகுலனை எதிர்த்து விரைந்தான்.(26) வீர நகுலனோ, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான கணைமாரிகளை அந்தச் சகுனியின் மகனை {உலூகனைத்} தடுத்தான்}.(27) அந்தத் தேர்வீரர்கள் இருவரும் நற்பிறப்பையும், வலிமையையும் கொண்டவர்களாக இருந்தனர். பெரும் சினத்துடன் ஒருவரோடொருவர் போரிடுவதாக அவர்கள் இருவரும் காணப்பட்டனர்.(28) அதேபோலக் கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசுரன் பலனோடு போரிடும் சக்ரனை {இந்திரனைப்} போல, எதிரிகளை எரிப்பவனான சிநியின் பேரனோடு {சாத்யகியோடு} போரிட்டுப் பிரகாசமாகத் தெரிந்தான்.(29) துரியோதனன், அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் வில்லை வெட்டி, வில்லற்றிருந்த தன் எதிராளியைக் கூரிய கணைகளால் துளைத்தான்.(30) அம்மோதலில் மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட திருஷ்டத்யும்னன், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மன்னனோடு {துரியோதனனோடு} போரிட்டுக் கொண்டிருந்தான்.(31) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதநீர் பெரும் இரு காட்டு யானைகளுக்கிடையில் நடக்கும் மோதலைப் போல அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(32)
அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட வீரக்கௌதமர் {கிருபர்}, நேரான கணைகள் பலவற்றால் திரௌபதியின் வலிமைமிக்க மகன்களைத் துளைத்தார்.(33) உடல் படைத்த ஒருவன், தன் (ஐந்து) புலன்களோடு போரிடுவதற்கு ஒப்பாக அவருக்கும் அந்த ஐவருக்கும் இடையில் நடைபெற்ற போர் இருந்தது. அச்சத்தை ஏற்படுத்துவதும், மிகக் கடுமையானதாகவும் இருந்த அந்தப் போரில் எத்தரப்பும் அடுத்தவருக்கு எக்கருணையும் காட்டவில்லை.(34) திரௌபதியின் (ஐந்து) மகன்களும், மூடனைப் பீடிக்கும் (ஐம்)புலன்களைப் போலக் கிருபரைப் பீடித்தனர். மறுபுறம் அவரோ அவர்களோடு மிகத் தீவிரமாகப் போரிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்.(35) ஓ! பாரதரே, இவ்வாறே, அவருக்கும் {கிருபருக்கும்}, அவர்களுக்கும் {திரௌபதியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது மிக அற்புதமானதாக இருந்தது.(36)
மனிதர்கள் மனிதர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் அந்தப் போரானது, சாதாரணமானதாகவும், அச்சந்தருவதுமாக மாறியது.(37) ஓ! தலைவா, இங்கே ஒரு மோதல் அழகானதாக இருந்தால், அங்கே மற்றொரு மோதல் அச்சம்தருவதாகவும், வேறு இடத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் பயங்கரமான பல மோதல்கள் நடைபெற்றன.(38) (இரு படைகளையும் சார்ந்தவர்களான) அந்த எதிரிகளைத் தண்டிப்போர் ஒருவரோடொருவர் மோதி, அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் துளைத்துக் கொன்றனர்.(39) போர்வீரர்களின் வாகனங்களாலும், விலங்குகளாலும் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி மேகம் அங்க காணப்பட்டது. ஓ! மன்னா, ஓடும் குதிரைகளால் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதியும், காற்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.(40) சக்கரங்களாலும், யானைகளின் மூச்சுக்காற்றாலும் எழுப்பப்பட்ட புழுதியானது, மாலை மேகத்தைப் போல வானத்தில் அடர்த்தியாக எழுந்தது.(41)
புழுதி எழுந்து, சூரியன் ஒளியை இழந்து, பூமி மறைக்கப்பட்டபோது, வீரமும், வலிமையும் கொண்ட தேர்வீரர்களைக் காண முடியவில்லை.(42) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, வீரர்களின் குருதியால் பூமி நனைக்கப்பட்டபோது, ஒருகணத்தில் புழுதி மறைந்து அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது.(43) உண்மையில், அடர்த்தியானதும், பயங்கரமானதுமான அந்தப் புழுதி மேகம் தணிக்கப்பட்டது. அப்போது, ஓ! பாரதரே, அந்த நடுப்பகலில் போராளிகளுக்கிடையில் தங்கள் தங்கள் பலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் உண்டானவையும், மிகக் கடுமையானவையுமான பல்வேறு தனிப்போர்களை என்னால் காண முடிந்தது. அந்த அருஞ்செயல்களின் பிரகாசமான காந்தி முழுமையாகக் காட்சியில் தோன்றியது.(44,45) அந்தப் போரில் பாய்ந்த கணைகளின் ஒலியானது, அனைத்துப் பக்கங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் பரந்த மூங்கில் காட்டில் எழும் ஒலிக்கு ஒப்பான போரொலியாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)
சகுனியின் குதிரைப் படை! – சல்லிய பர்வம் பகுதி – 23- கிருதவர்மனின் குதிரைகளைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை எதிர்க்க எழுநூறு தேர்வீரர்களை அனுப்பிய துரியோதனன்; துரியோதனன் அனுப்பிய வீரர்கள் அனைவரையும் கொன்ற சிகண்டியின் பாஞ்சாலப் படை; பயங்கரச் சகுனங்கள் தோன்றின; பாண்டவர்களை எதிர்த்த சகுனி; சகுனியை எதிர்க்க சகாதேவனை அனுப்பிய யுதிஷ்டிரன்; பத்தாயிரம் குதிரைகளைக் கொண்ட சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகச் சுருங்கியது; தலையற்ற முண்டங்கள் ஒரு கையில் தலையுடனும், மறுகையில் வாளுடனும் எழுந்து நின்றது; சகுனியைச் சூழ்ந்த கொண்ட பாண்டவர்கள்; சகுனியின் உதவிக்குச் சென்ற கௌரவர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அச்சத்தையேற்படுத்தும் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பிளக்கப்பட்டது.(1) எனினும், பெரும் முயற்சி செய்து தங்கள் பெரும் தேர்வீரர்களை அணிதிரட்டிய உமது மகன்கள், பாண்டவப் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தனர்.(2) உமது மகனின் நலனை விரும்பிய (குரு) போர்வீரர்கள், திடீரென மீண்டும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும், உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான போர் மிகப் பயங்கரமாக நடந்தது.(3,4) போர்வீரர்கள், அனுமானம் மற்றும் அங்கே சொல்லப்பட்ட பெயர்களின் துணை கொண்டு போரிட்டனர். இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டபோது ஏற்பட்ட அழிவானது பெரிதானதாக இருந்தது.(5)
பெரும் கோபத்தில் நிறைந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வெல்லும் விருப்பத்தால்,(6) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சரத்வான் மகனை {கிருபரைத்} துளைத்து, அடுத்ததாக வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) அப்போது அஸ்வத்தாமன், கொண்டாடப்பட்டவனான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அங்கிருந்து கொண்டு சென்றான். சரத்வானின் மகன் {கிருபர்} பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தார்.(8) பிறகு மன்னன் துரியோதனன், மன்னன் யுதிஷ்டிரன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு எழுநூறு {700} தேர்களை அனுப்பினான்.(9) சிறந்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், காற்று அல்லது எண்ணத்தின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தத் தேர்கள், குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தன.(10)
அனைத்துப் பக்கங்களிலும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனைக் காட்சியில் இருந்து மறைக்கும் மேகங்களைப் போல, அவனைக் காட்சியில் இருந்து மறைத்தனர்.(11) அப்போது, சிகண்டியின் தலைமையிலான வீரர்கள், கௌரவர்களால் அவ்வாறு தாக்கப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, சினத்தால் நிறைந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள்.(12) குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் காக்க விரும்பிய அவர்கள், பெரும் வேகம் கொண்டவையும், மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(13) அப்போது, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில், யமனின் ஆட்சிப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், குருதியே நீராகப் பாயும் வகையிலும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(14) பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், எதிரிகளான குரு படையின் அந்த எழுநூறு தேர்வீரர்களையும் கொன்று, மீண்டும் (ஒட்டுமொத்த குரு படையையும்) தடுத்தனர்.(15)
அங்கே உமது மகனுக்கும் {துரியோதனனுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதற்குமுன் நாங்கள் அதுபோன்றதொரு போரை கேட்டதோ பார்த்ததோ கிடையாது.(16) எவராலும் யாருக்கும் கருணையே காட்டப்படாத அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது படை மற்றும் எதிரி படையின் போர்வீரர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும்போது,(17) போராளிகள் அனைவரும் கூச்சலிட்டு, தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டிருக்கும்போது, வில்லாளிகள் முழக்கம் செய்து கொண்டும், பல்வேறு வகைகளினான ஒலிகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்போது,(18) உண்மையில், அந்தப் போர் கடுமையாக நடந்து, போராளிகளின் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவர்களான துருப்புகள் வேகமாக விரைந்து கொண்டிருந்தபோது,(19) உலகில் உள்ள அனைத்தும் பயங்கரமான பேரழிவுக்கு உட்பட்டபோது, நற்பிறவியும், அழகும் கொண்ட எண்ணற்ற பெண்மணிகள் விதவைகளாக்கப்பட்டபோது,(20) உண்மையில், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் போர்வீரர்களால் எந்தக் கருணையும் காட்டப்படாமல் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, அனைத்தின் அழிவுக்கான முன்னறிவிப்பாகப் பயங்கரச் சகுனங்கள் தோன்றின.(21)
மலைகள், காடுகளுடன் கூடிய பூமியானவள், பேரொலியை உண்டாக்கியபடி நடுங்கினாள். கைப்பிடிகளுடன் கூடிய எரிப்பந்தங்களைப் போன்ற எரிநட்சத்திரங்கள், சூரிய வட்டிலில் இருந்து விழுவதைப் போல, வானத்தில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன.(22) சூறாவளி எழுந்து, கடுங்கூழாங்கற்களைச் சுமந்து கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தாழ்வாக வீசியது. யானைகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்து, அதிகமாக நடுங்கின.(23) இந்தப் பயங்கரமான கடுஞ்சகுனங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த க்ஷத்திரியர்கள், ஒருவரோடொருவர் கலந்தாலோசித்துக் கொண்டு, சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால், குருவின் பெயரால் அழைக்கப்பட்டதும், அழகானதுமான அந்தப்புனிதக் களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மீண்டும் போரிடுவதற்காக உற்சாகமாக நின்றனர்.(24)
அப்போது காந்தார மன்னனின் மகனான சகுனி, “நீங்கள் அனைவரும் முன்னால் இருந்து போரிடுங்கள். நானோ, பின்னால் இருந்து பாண்டவர்களைக் கொல்வேன்” என்றான்.(25) பிறகு, பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களான மத்ரகப் போர்வீரர்களில், நமது தரப்பில் இருந்து முன்னேறிச் சென்றவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பல்வேறு மகிழ்ச்சியான ஒலிகளை வெளியிட்டனர்.(26) எனினும், வெல்லப்பட முடியாதவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மீண்டும் நம்மை எதிர்த்து வந்து, கணைமாரியால் நம்மை மறைத்தனர்.(27) அப்போது எதிரியால் மத்ரகப் படையினர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு, துரியோதனனின் துருப்புகள் மீண்டும் போரில் இருந்து புறமுதுகிட்டன.(28) எனினும், காந்தாரர்களின் வலிமைமிக்க மன்னன் {சகுனி}, மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “பாவிகளே! நில்லுங்கள்! (எதிரியோடு) போரிடுங்கள்! போரால் என்ன பயன்?” என்றான்.(29) அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, பளபளப்பான வேல்களுடன் போரிட வல்லவர்களாகப் பத்தாயிரம் {10000} குதிரை வீரர்களை முழுமையாகத் தன்னிடம் கொண்டிருந்தான்.(30)
அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெரும்படையின் துணையுடன் கூடியவனான சகுனி, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பின்புறத்தில் இருந்து பாண்டவப்படையைத் தாக்கி, தன் கூரிய கணைகளால் அவர்களைக் கொன்றான்.(31) அப்போது பாண்டுக்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்கக் காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் கலைக்கப்படும் மேகத்திரளைப் போலவே பிளந்தது.(32) அப்போது யுதிஷ்டிரன், தன் படை முறியடிக்கப்படுவதை அருகிலிருந்து கண்டு, வலிமைமிக்கச் சகாதேவனைத் தூண்டும்வகையில் அமைதியாக, “அதோ சுபலனின் மகன் {சகுனி}, கவசம் பூண்டவனாக நமது படையின் பின்புறத்தைப் பீடித்து நிற்கிறான். அவன் நமது படைகளைப் படுகொலை செய்கிறான். ஓ! பாண்டுவின் மகனே {சகாதேவா}, பொல்லாதவனான அத்தீயவனைக் காண்பாயாக.(34) திரௌபதி மகன்களின் துணையுடன், சுபலனின் மகனான அந்தச் சகுனியை நோக்கிச் சென்று, அவனைக் கொல்வாயாக. அதேவேளையில் நான், ஓ! பாவமற்றவனே, பாஞ்சாலர்களின் ஆதரவுடன் எதிரியின் தேர்ப்படையை அழிக்கப்போகிறேன்.(35) உன்னுடன் யானைகள் அனைத்தையும், குதிரைகள் அனைத்தையும், மூவாயிரம் காலாட்படைவீரர்களையும் அழைத்துச் செல்வாயாக. இவற்றின் துணையுடன் சகுனியைக் கொல்வாயாக” என்றான்.(36)
அதன் பிறகு, வில்தரித்த போராளிகளால் செலுத்தப்பட்ட எழுநூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள், வீரனான சகாதேவன்,(37) மூவாயிரம் காலாட்படை வீரர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், போரில் வீழ்த்தக் கடினமானவனான சகுனியை எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் பெரும் வீரம் கொண்டவனான அந்தச் சுபலனின் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை விஞ்சி நின்று, வெற்றிக்கான ஏக்கத்துடன், அவர்களது படையைப் பின்புறத்தில் இருந்து கொல்லத் தொடங்கினான்.(39)
பாண்டவப் படையைச் சேர்ந்தவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், சினத்தால் மதங்கொண்டவர்களுமான குதிரைவீரர்கள், சுபலன் மகனின் தேர்வீரர்களை விஞ்சி அவனது படைக்குள் ஊடுருவினர்.(40) வீரம் கொண்டவர்களான அந்தக் குதிரைவீரர்கள், தங்கள் யானைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கணைமாரியால் சுபலன் மகனின் பெரும்படையை மறைத்தனர்.(41) உமது தீய ஆலோசனைகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, கதாயுதங்களும், வேல்களும் பயன்படுத்தப்பட்டதும், வீரர்கள் மட்டுமே பங்கேற்றதுமான அந்தப் பயங்கரப் போர் நிகழ்ந்தது.(42) அந்தப் போரில் தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றுவிட்டதால், அங்கே வில்-நாண்கயிறுகளின் நாணொலிகள் அதற்கு மேலும் கேட்கவில்லை. அந்நேரத்தில் போரிட்ட தரப்புகளுக்கு எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(43) ஓ! பாரதக் குலத்தின் காளையே, குருக்கள் மற்றும் பாண்டவர்களாகிய இரு தரப்பினரும், வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட ஈட்டிகளை ஆகாயத்தில் இருந்து வரும் எரிநட்சத்திரங்களைப் போலவே கண்டனர்.(44)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பளபளப்பைக் கொண்டவையும், விழுபவையுமான வாள்களால் மறைக்கப்பட்ட மொத்த ஆகாயமும் மிக அழகாகத் தெரிந்தது.(45) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் வீசப்பட்ட வேல்களின் தன்மையானது, ஆகாயத்தில் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆனது.(46) கணைகளால் காயமடைந்த குதிரைவீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களின் விளைவால், குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய குதிரைகள், அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விழுந்தன.(47) ஒன்றோடொன்று மோதிக் கொண்டு நொறுங்கிய அவற்றில் பல சிதைக்கப்பட்டவையாகத் தெரிந்தன, மேலும் பல தங்கள் வாய்களில் இருந்து குருதியைக் கக்கின. துருப்புகள் புழுதிமேகத்தால் மறைக்கப்பட்ட போது, அங்கே அடர்த்தியான இருள் பரவியது.(48) அந்த இருளானது அனைத்தையும் மறைத்தபோது, ஓ! மன்னா, அந்த இடத்திலிருந்து, துணிச்சல்மிக்கப் போராளிகளும், குதிரைகளும், மனிதர்களும் நகர்வதை நாங்கள் கண்டோம்.(49)
சிலர் பூமியில் விழுந்து அதிகமாகக் குருதியைக் கக்குபவர்களாகக் காணப்பட்டனர். வேறு சில போராளிகள், ஒருவரையொருவர் தலைமுடியைப் பற்றி இழுத்து, அசைய முடியாமல் இருந்தனர்.(50) பெரும் பலத்தைக் கொண்ட பலர், குதிரைகளின் முதுகுகளில் இருந்து ஒருவரையொருவர் இழுத்து, அவர்களோடு மோதி, மற்போரில் ஈடுபடும் போராளிகளைப் போல ஒருவரையொருவர் கொன்றனர்.(51) உயிரை இழந்தவர்களான பலர், தாங்கள் செலுத்தி வந்த குதிரைகளின் முதுகுகளிலேயே கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் வீரத்தில் செருக்குக் கொண்டு, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பலர், கீழே பூமியில் விழுபவர்களாகக் காணப்பட்டனர்.(52) குருதியில் குளித்து, அங்கங்களை இழந்து, தலைமயிரற்றவர்களாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகள் பூமியில் விரவிக் கிடந்தனர்.(53) யானைவீரர்கள், குதிரைவீரர்கள், கொல்லப்பட்ட குதிரைகள், போராளிகள், இரத்தக்கறைபடிந்த கவசங்கள், ஆயுதந்தரித்த பிறர், பல்வேறு வகைகளிலான பயங்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் கொல்ல முயன்ற சிலர், ஆகியோர் அனைவரும் அச்சந்தருவதும், பயங்கரப் பேரழிவை ஏற்படுத்தியதுமான அந்தப் போரில் ஒருவரையொருவர் நெருக்கமாகக் கட்டிக் கொண்டு கிடந்ததால் பூமியின் பரப்பு மறைக்கப்பட்டதன் விளைவாக, எந்தப் போர்வீரனாலும் தன் குதிரையில் வெகுதொலைவுக்குச் செல்ல முடியவில்லை.(54,55)
சிறிது நேரம் போரிட்டுக் கொண்டிருந்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, எண்ணிக்கையில் ஆறாயிரமாக {6000} எஞ்சியிருந்த தன் குதிரைப்படையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.(56) அதேபோல, பாண்டவப் படையும், குருதியில் நனைந்தும், அதன் விலங்குகள் களைப்படைந்தும், எஞ்சியிருந்தவையான ஆறாயிரம் {6000} குதிரைகளுடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.(57) இரத்தக்கறை படிந்திருந்த பாண்டவப் படையின் குதிரைவீரர்கள், போரிடும் நோக்கோடும், தங்கள் உயிரையே விடத் துணிந்தும்,(58) “இனியும் இங்கே தேர்களில் போரிடுவது இயலாது; பிறகு, இங்கே யானைகளில் போரிடுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். தேர்கள் தேர்களை எதிர்த்தும், யானைகள் யானைகளை எதிர்த்தும் செல்லட்டும்.(59) பின்வாங்கிச் சென்ற சகுனி தன் படைப்பிரிவின் உள்ளே நிற்கிறான். சுபலனின் அரச மகன் {சகுனி} போரிடுவதற்காக மீண்டும் வரமாட்டான்” என்று சொன்னார்கள்.(60)
அப்போது திரௌபதியின் {ஐந்து} மகன்களும், மதங்கொண்ட யானைகளும், பெரும் தேர்வீரனான பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.(61) சகாதேவனும் கூட, புழுதி மேகம் எழுந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தனியாகச் சென்றான்.(62) இவ்வாறு அனைவரும் சென்றுவிட்ட பிறகு, சுபலனின் மகனான சகுனி, கோபத்தால் தூண்டப்பட்டு, மீண்டும் திருஷ்டத்யும்னனுடைய படைப்பிரிவின் மேல் பாய்ந்து, அதைத் தாக்கத் தொடங்கினான்.(63) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்கள் உயிரையே துச்சமாக மதித்தவர்களுமான உமது படையின் வீரர்களுக்கும், எதிரி படையின் வீரர்களுக்கும் இடையில் அங்கே மீண்டும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(64) வீரர்களுக்கிடையிலான அம்மோதலில், ஒருவரையொருவர் நிலைத்த கண்களுடன் பார்த்த போராளிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒருவர்மீதொருவர் பாய்ந்தனர்.(65)
அழிவை ஏற்படுத்தும் அந்தப் பெரும் படுகொலையில், வாள்களால் வெட்டப்பட்ட தலைகள் கீழே விழும்போது, பனம்பழம் விழும் ஒலியை உண்டாக்கின.(66) கவசங்களை இழந்து, ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு, கீழே தரையில் விழும் உடல்கள், கரங்கள், உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தொடைகள் ஆகியன மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேரொலியை ஏற்படுத்தின.(67) சகோதரர்களையும், மகன்களையும், தந்தைமாரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய போராளிகள், இறைச்சித் துண்டுகளுக்காகப் போரிடும் பறவைகளைப் போலக் காணப்பட்டனர்.(68) சினத்தால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் ஒருவர் மீதொருவர் பாய்ந்து, அந்தப் போரில் பொறுமையில்லாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(69) நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான போராளிகள், கொல்லப்பட்டுத் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே விழும் குதிரைவீரர்களின் கனத்தால் கொல்லப்பட்டுக் கீழே களத்தில் விழுந்தனர்.(70)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால் ஒருவரையொருவர் முக்கிய அங்கங்களில் துளைக்க விரும்பிய போராளிகளின் ஈட்டிகளும், வாள்களும் கீழே விழும் ஒலிகளும், ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட குதிரைகளின் கனைப்பொலிகளும், கவசம் தரித்த மனிதர்களின் கூச்சல்களும் பேரொலியாகின.(71,72) அந்நேரத்தில் களைப்பை அடைந்து உமது படைவீரர்கள், சினம் தீர்ந்தவர்களாக, தங்கள் விலங்குகள் களைப்படைந்தவர்களாக, தாகத்தால் உலர்ந்தவர்களாக, கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டவர்களாகப் போரில் இருந்து புறமுதுகிடத் தொடங்கினர்.(73) குருதிமணத்தால் மதங்கொண்ட {இரத்த வாசனையால் வெறிகொண்ட} பலர், நண்பர்களையே எதிரிகளைப் போலக் கொல்லத்தக்கவர்களாகவும், உண்மையில், அகப்பட்ட எவரையும் கொல்லத்தக்கவர்களாகவும் மதியிழந்தவர்களானார்கள்.(74) பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, கணைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர்.(75)
ஓநாய்கள், கழுகுகள், நரிகள் ஆகியன ஊளையிடவும், மகிழ்ச்சியால் அலறவும் செய்து, பேரொலியை உண்டாக்கின. உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படை பேரிழப்பை அடைந்தது.(76) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, இரத்த ஓடைகளால் மறைக்கப்பட்டு, மருண்டோரை அச்சங்கொள்ளச் செய்தது.(77) ஓ! பாரதரே, வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள் ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைக்கப்பட்ட உமது போர்வீரர்களும், பாண்டவப் போர்வீரர்களும் ஒருவரையொருவர் அணுகுவதை நிறுத்தினர்.(78) தங்கள் தங்கள் பலத்திற்குத் தக்க ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இறுதிச் சொட்டுக் குருதியுள்ளவரை போரிட்ட போராளிகள், தங்கள் காயங்களில் இருந்து குருதி வழிய கீழே விழுந்தனர்.(79) தலையற்ற வடிவங்கள், (ஒரு கரத்தில்) தங்கள் தலைகளின் மயிரைப் பற்றியபடியும், (மறுகரத்தில்) உயர்த்தப்பட்டவையும், இரத்தம் தோய்ந்தவையுமான வாள்களோடும் காணப்பட்டன.(80)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு பல தலையற்ற வடிவங்கள் எழுந்து, குருதிமணம் போராளிகளைக் கிட்டத்தட்ட உணர்வற்றவர்களாகச் செய்து,(81) அந்தப் போரொலியானது சற்றே தணிவடைந்தபோது, சுபலனின் மகன் {சகுனி}, எஞ்சிய தனது சிறு குதிரைப்படையுடன், பாண்டவர்களின் பெரும்படையை (மீண்டும்) அணுகினான்.(82) வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்பையுடையவர்களுமான பாண்டவர்கள், காலாட்படையினர், யானைகள் மற்றும் குதிரைப்படைகளுடனும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும் சகுனியை நோக்கி விரைந்தனர்.(83) பகைமையின் எல்லையை {முடிவை} அடைய விரும்பிய பாண்டவர்கள், ஒரு சுவராக அணிவகுத்து அனைத்துப் பக்கங்களிலும் சகுனியைச் சூழ்ந்து கொண்டு, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அவனை {சகுனியைத்} தாக்கத் தொடங்கினர்.(84)
அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் உமது படையைக் கண்ட கௌரவர்களும், குதிரைகள், காலாட்படையினர், யானைகள் மற்றும் தேர்களுடன் பாண்டவர்களை நோக்கி விரைந்தனர்.(85) பெரும் துணிவுமிக்கவர்களான காலாட்படைவீரர்கள் சிலர், ஆயுதங்களே இல்லாதவர்களாக, தங்கள் கால்களாலும், முட்டிகளாலும் அந்தப் போரில் எதிரிகளைத் தாக்கி வீழ்த்தினர்.(86) தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், யானைவீரர்கள் யானைகளிலிருந்தும், புண்ணியமற்ற மனிதர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் தங்கள் தெய்வீக வாகனங்களில் இருந்து வீழ்வதைப் போல விழுந்தனர்.(87) இவ்வாறு, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்ட போராளிகள், தந்தைமாரையும், சகோதரர்களையும், நண்பர்களையும், மகன்களையும் கொன்றனர்.(88) ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, எவருக்கும் எவராலும் எந்தக் கருணையும் காட்டப்படாததும், அனைத்துப் பக்கங்களிலும் வேல்கள், வாள்கள், கணைகள் வேகமாக வீழ்த்தப்பட்டுக் காணும் காட்சியைப் பயங்கரமாக்கியதுமான அந்தப் போர் இவ்வாறே நிகழ்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(89)
துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்! – சல்லிய பர்வம் பகுதி – 24-துரியோதனனைக் குறித்து வீரர்களிடம் விசாரித்த சகுனி; துரியோதனன் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்ற சகுனி; சகுனியின் உற்சாகமிக்கப் பேச்சால் மகிழ்ந்த கௌரவவீரர்கள் பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றது; கிருஷ்ணனிடம் துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்; கௌரவப்படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு ஊக்கத்தை இழந்த கௌரவர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரின் பேரொலி ஒருவாறு தணிந்து, பாண்டவர்கள் பெரும் எண்ணிக்கையிலான தங்கள் எதிரிகளைக் கொன்ற பிறகு, எஞ்சியிருந்த தன் எழுநூறு {700} குதிரைகளுடன்[1] சுபலனின் மகன் {சகுனி} (மீண்டும்) போரிட வந்தான்.(1) தன் படைவீரர்களை வேகமாக அணுகி, அவர்களைப் போரிடத் தூண்டிய அவன், மீண்டும் மீண்டும், “எதிரிகளைத் தண்டிப்பவர்களே, கவனமாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(2) அவன் அங்கிருந்த க்ஷத்திரியர்களிடம், “பெரும் தேர்வீரனான மன்னன் {துரியோதனன்} எங்கே?” என்று கேட்டான். சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “அதோ, முழு நிலவுக்கு இணையான பெரிய குடை இருக்குமிடத்தில், கவசம் தரித்த தேர்வீரர்கள் இருக்கும் இடத்தில், மேகங்களுக்கு ஒப்பான பேரொலி கேட்கும் இடத்தில் பெரும் தேர்வீரரான குரு மன்னன் {துரியோதனன்} இருக்கிறார். ஓ! மன்னா {சகுனியே}, வேகமாக அங்கே சென்றால், உம்மால் குரு ஏகாதிபதியை {துரியோதனனைக்} காண முடியும்” என்று பதிலுரைத்தனர்.(5)துணிச்சல்மிக்க அந்தப் போர்வீரர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பின்வாங்காத வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனாக உமது மகன் இருந்த இடத்திற்குச் சென்றான்.(6) அந்தத் தேர்ப்படைக்கு மத்தியில் இருந்த துரியோதனனைக் கண்ட சகுனி, அங்கே இருந்த உமது தேர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்,(7) ஓ! மன்னா, துரியோதனனிடம் உற்சாகமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான். உண்மையில் அவன் {சகுனி}, தன் காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறிவிட்டதைக் காட்டும் வகையில் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்[2].(8) “ஓ! மன்னா {துரியோதனா}, (பாண்டவர்களின்) தேர்ப்படைப்பிரிவினரைக் கொல்வாயாக. அவர்களது குதிரைகள் அனைத்தும் என்னால் வெல்லப்பட்டன. ஒருவன் தன் உயிரைக் கொடுக்காமல் போரில் யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை.(9) பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} பாதுகாக்கப்படும் அந்தத் தேர்ப்படை அழிக்கப்பட்ட பிறகு, யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் பிறர் அனைவரையும் நாம் கொல்வோம்” என்றான்.(10)அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது போர்வீரர்கள், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பாண்டவப்படையை நோக்கி உற்சாகமாக ஓடினர்.(11) தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணிகளுடனும், கைகளில் விற்களுடனும் கூடிய அவர்கள் அனைவரும் தங்கள் விற்களை அசைத்து, சிங்க முழக்கத்தைச் செய்தனர்.(12) ஓ! மன்னா, விற்களின் கடும் நாணொலிகளும், உள்ளங்கைகளை அறையும் ஒலிகளும், பலமாக ஏவப்பட்ட கணைகளான் விஸ் ஒலிகளும் மீண்டும் கேட்கப்பட்டன.(13)
அந்தக் குரு போராளிகள் உயர்த்தப்பட்ட விற்களுடன் பாண்டவப்படையை நோக்கி வருவதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(14) “அச்சமில்லாமல் குதிரைகளைத் தூண்டி, இந்தத் துருப்புகளின் கடலுக்குள் ஊடுருவுவாயாக. என் கூரிய கணைகளின் மூலம் இன்று நான் இந்தப் பகைமைகளின் எல்லையை {முடிவை} அடைவேன்.(15) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரு தரப்புக்கிடையில் நடக்கும் இந்தப் பெரும்போரில் இது பதினெட்டாவது நாளாகும்.(16) உண்மையில் எண்ணற்றவையாக இருந்த அந்த உயர் ஆன்ம வீரர்களின் படையானது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. விதியின் வழியைப் பார்.(17) ஓ! மாதவா {கிருஷ்ணா}, பரந்த கடலைப் போல இருந்த திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} படையானது, நம்மோடு மோதிய பிறகு, பசுவின் குளம்புகளால் உண்டான தடத்தைப் போலாகிவிட்டது.(18)
பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதி ஏற்படுத்தப்பட்டிருந்தால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். எனினும், பலவீனமான அறிவைக் கொண்ட மூடனான துரியோதனன் அமைதியை ஏற்படுத்தவில்லை.(19) ஓ! மாதவா, பீஷ்மரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் நன்மை தருபவையும், பின்பற்றத் தகுந்தவையுமாகும். எனினும், அறிவை இழந்தவனான சுயோதனன், அதன்படி செயல்படவில்லை.(20) பீஷ்மர் தாக்கப்பட்டு, பூமியில் வீழ்த்தப்பட்ட பிறகும், போர் ஏன் தொடர்கிறது என்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை.(21) சந்தனு மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகும் தார்தராஷ்டிரர்கள் போரைத் தொடர்ந்ததால், அனைத்து வழிகளிலும் அவர்கள் மூடர்கள் என்றும், பலவீனமான அறிவைக் கொண்டவர்கள் என்றும் நான் கருதுகிறேன்.(22)
அதன்பிறகும், பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் வீழ்ந்த பிறகும், ராதையின் மகன் {கர்ணன்} வீழ்ந்த பிறகும், விகர்ணன் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லையே.(23) ஐயோ, மனிதர்களில் புலியான கர்ணன் தன் மகன்களுடன் வீழ்ந்து, சிறு (கௌரவப்) படை மட்டுமே எஞ்சியிருந்தபோதும் பேரழிவு நிற்கவில்லையே.(24) வீரனான சுருதாயுஷ், பூரு குலத்தின் ஜலசந்தன், மன்னன் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் கூடப் பேரழிவு நிற்கவில்லை.(25) ஓ ஜனார்த்தனா, பூரிஸ்ரவஸ், சல்லியர், சால்வன், அவந்தியின் வீரர்கள் ஆகியோர் வீழ்ந்தபிறகும் பேரழிவு நிற்கவில்லை.(26) ஜெயத்ரதன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், சோமதத்தன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(27) வீரரான பகதத்தர், காம்போஜத் தலைவன் சுதக்ஷிணன், துச்சாசனன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(28) ஓ! கிருஷ்ணா, வீரமும், பெரும் நாடுகளைச் சொந்தமாகக் கொண்டவர்களும், வலிமையும் மிக்கவர்களுமான பல்வேறு மன்னர்கள் போரில் கொல்லப்பட்ட பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(29) போரில் பீமசேனரால் முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் கொல்லப்பட்ட பிறகும், தார்தராஷ்டிரர்களின் மடமையினாலோ, பேராசையாலோதான் இந்தப்பேரழிவு நிற்கவில்லை.(30)
நிச்சயம் மூடனான துரியோதனனைத் தவிர, குரு குலத்தைப் போன்ற உன்னதக் குலத்தில் பிறந்த வேறு எந்த மன்னன்தான், கனியற்ற {பலனற்ற} இந்தக் கடும் பகைமைகளைத் தொடர்வான்?(31) அறிவும், ஞானமும் கொண்டும், தீமையிலிருந்து நன்மையைப் பகுத்துப் பார்க்க வல்லவனுமாக இருந்தும், தகுதியிலும், பலத்திலும், துணிவுலும் தன் எதிரிகள் தன்னைவிட மேம்பட்டவர்கள் என்பதை அறிந்தும் இவ்வாறு போரைத் தொடுப்பவன் இங்கே எவன் இருக்கிறான்?(32) உன்னால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கீழ்ப்படிந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள மனமில்லாத ஒருவனால் உண்மையில் பிறரின் ஆலோசனைகளை எவ்வாறு கேட்க இயலும்?(33) சந்தனுவின் மகனான பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தூண்டியபோது அவர்களை அலட்சியம் செய்த அவனுக்கு என்ன மருந்துதான் இன்று ஏற்புடையதாக இருக்கக்கூடும்?(34) ஓ! ஜனார்த்தனா, வயது முதிர்ந்த தந்தையும், நல்ல அறிவு கொண்ட அவனது தாயும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னபோது, மூடத்தனத்தால் அவர்களை அலட்சியம் செய்து அவமதித்த அவனால் நல்ல ஆலோசனைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?(35)
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் குலத்தை அழிப்பதற்காகவே துரியோதனன் பிறப்பை எடுத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! தலைவா, அவனது நடத்தையும், கொள்கையும் அதையே சுட்டுகிறது. இன்னும் கூட அவன், எங்களது நாட்டை எங்களுக்குக் கொடுக்க மாட்டான். ஓ! அச்யுதா, இதுவே என் கருத்தாகும்.(36) ஓ! ஐயா, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உயிரோடுள்ளவரை, எங்கள் பங்கான நாட்டை அவன் எங்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று உயர் ஆன்ம விதுரர் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.(37) மேலும் விதுரர், “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரர் உயிரோடுள்ளவரை, பொல்லாதவனான அந்தப் பாவி உங்களுக்குப் பாவத்தையே செய்வான்.(38) போரில்லாமல் உங்களால் துரியோதனனை வெல்லவே முடியாது” என்றார். ஓ! மாதவா, முன்னறிதிறம் கொண்டவரான விதுரர், இவ்வாறே என்னிடம் அடிக்கடி சொன்னார்.(39) தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனுமான அவன் செய்யும் செயல்கள் அனைத்தும், உயர் ஆன்ம விதுரர் சொன்னதற்கு முற்றிலும் சரியாக இருப்பதாக இப்போது நான் அறிகிறேன்.(40)
நன்மையைத் தரக்கூடியவையும், சரியானவையுமான ஜமதக்னி மகனின் {பரசுராமரின் வார்த்தைகளைக் கேட்டும், அவற்றை அலட்சியம் செய்த அந்தத் தீய புத்தியுள்ளவன், உறுதியாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வேண்டும்.(41) துரியோதனன் பிறந்ததும், அந்த இழிந்தவனின் விளைவால் மொத்த க்ஷத்திரிய வகையும் அழிவுக்குள்ளாகும் என்று தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பலர் சொன்னார்கள்.(42) துரியோதனனின் செயல்களால் க்ஷத்திரியர்கள் கிட்டத்தட்ட மொத்தமாக அழிவை அடைந்துவிட்டதால், ஓ! ஜனார்த்தனா, அம்முனிவர்களின் வார்த்தைகள் இப்போது {உண்மையென} உணரப்படுகின்றன. ஓ! மாதவா, நான் இன்று போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(43) க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, (கௌரவ) முகாம் வெறுமையான பிறகும், தன் அழிவுக்காகத் துரியோதனன் எங்களுடன் போரையே விரும்புவான்.(44) இந்தப் பகைமைகளை அதுவே {அந்தப் போரே} முடித்துவைக்கும். ஓ! மாதவா, ஓ விருஷ்ணி குலத்தோனே, விதுரரின் வார்த்தைகளை என் மனத்திற்குள்ளேயே நான் சிந்தித்துப் பார்த்தும், தீய ஆன்மா கொண்ட துரியோதனனின் செயல்களைக் கருத்தில் கொண்டும் நான் இந்தத் தீர்மானத்திற்கே வந்திருக்கிறேன். ஓ! வீரா {கிருஷ்ணா}, தீய ஆன்மா கொண்ட துரியோதனனையும், அவனது படையையும் இன்று என் கூரிய கணைகளால் நான் கொல்லப்போவதால் இந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவுவாயாக.(45,46) திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இந்தப் பலவீனமான படையைக் கொன்று, யுதிஷ்டிரருக்கு எது நன்மையோ அதை இன்று நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.”(47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சவ்யசச்சினால் {அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, கைகளில் கடிவாளத்துடன், அச்சமில்லாமல் அந்தப் பரந்த எதிரி படைக்குள் போருக்காக ஊடுருவினான்.(48) (அவ்விரு வீரர்களும் நுழைந்த) அது விற்களாலான பயங்கரமான காடாக இருந்தது. ஈட்டிகளே அதன் முட்களாக இருந்தன. கதாயுதங்கள், முள்பதித்த தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியன அதன் பாதைகளாக இருந்தன. தேர்களும், யானைகளும் அதில் இருக்கும் பெரும் மரங்களாக இருந்தன.(49) குதிரைப்படையும், காலாட்படையும் அதில் இருக்கும் கொடிகளாக இருந்தன. சிறப்புமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தக் காட்டுக்குள் நுழைந்த போது, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(50) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனனைச் சுமந்து சென்ற அந்த வெள்ளைக் குதிரைகள், தாசார்ஹ குலத்தோனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்ட நிலையில் எங்கும் திரிவதாகக் காணப்பட்டன.(51) அப்போது எதிரிகளை எரிப்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மழையைப் பொழியும் மேகத்தைப் போல நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(52)
அந்த நேரான கணைகளால் உண்டான ஒலியும், அவற்றைக் கொண்டு அந்தப் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} மறைக்கப்பட்ட அந்தப் போராளிகள் உண்டாக்கிய ஒலியும் பேரொலியாக இருந்தன. போராளிகளின் கவசத்தைத் துளைத்துச் சென்ற அந்தக் கணைமாரிகள் பூமியில் விழுந்தன.(53) இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்டவையும், காண்டீவத்திலிருந்து ஏவப்பட்டவையுமான கணைகள், ஓ! மன்னா, அந்தப் போரில் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தாக்கி, சிறகு படைத்த பூச்சிகளைப் போன்ற ஒலியுடன் போரில் விழுந்தன.(54) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டன. அந்தப் போரில் முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(55) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் துவைக்கப்பட்டவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், பார்த்தனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான கணைகளால் மொத்த உலகமும் நிறைந்திருப்பதைப் போலத் தெரிந்தது.(56) அந்தக் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, தீப்பந்தங்களால் எரிக்கப்பட்ட யானைக்கூட்டத்தைப் போலப் பார்த்தனால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், ஊக்கம் குன்றியவர்களாகத் தங்கள் பலத்தை இழந்தனர்[3].(57)விற்களும், கணைகளும் தரித்திருந்த பார்த்தன், சுடர்மிக்கச் சூரியனுக்கு ஒப்பாக, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அந்தப் போரில் பகைவரின் போராளிகளை எரித்தான்.(58) காட்டுவாசிகளால் காட்டில் விடப்பட்டதும், சுடர்மிக்கத் தழல்களும், (தணலில் இருந்து எழும்) பெரும் சக்தியும் கொண்டு முழங்குவதுமான நெருப்பானது, மரங்களும், உலர்ந்த கொடிகளின் குவியல்களையும் கொண்ட அந்தக் காட்டையே எரிப்பதைப் போலவே,(59) பெரும் சுறுசுறுப்பும், கடுஞ்சக்தியும் கொண்டவனும், கணைகளையே தன் தழல்களாகக் கொண்டவனும், ஆயுதங்களில் ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் உமது மகனின் {துரியோதனனின்} துருப்புகள் அனைத்தையும் வேகமாக எரித்தான்.(60) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், மரணபலத்தைக் கொண்டவையும், கவனமாக ஏவப்பட்டவையுமான அவனது கணைகளை எந்தக் கவசத்தாலும் கலங்கடிக்க முடியவில்லை. அவன், எந்த மனிதன் மீதும், குதிரையின் மீதும், அல்லது பெரும் வடிவம் கொண்ட யானையின் மீதும் இரண்டாம் கணையை ஏவ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.(61) வஜ்ரதாரியான இந்திரன், தைத்தியர்களைத் தாக்கி வீழ்த்தியதைப் போலவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவுக்குள் தனியொருவனாக நுழைந்த அர்ஜுனனும், பல்வேறு வடிவங்களிலான கணைகளால் அதை {அந்தப் படைப்பிரிவை} அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)
குதிரையில் தப்பி ஓடிய துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 25-துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனிடம் தோல்வியடைந்த துரியோதனன் ஒரு குதிரையில் தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனிடம் தப்பிய சஞ்சயன் சாத்யகியிடம் உயிரோடு அகப்பட்டது; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனைத் தேடிக்கொண்டு சகுனி இருக்கும் இடத்திற்குச் சென்றது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் போராடிக் கொண்டிருந்தவர்களும், பின்வாங்காதவர்களுமான அந்த வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் வீணாகும்படி செய்தான்.(1) அர்ஜுனனால் ஏவப்பட்டவையும், தடுக்கப்பட முடியாதவையும், பெரும் சக்தி கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தீண்டலைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் மேகத்தால் பொழியப்படும் மழைத்தாரைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிரீடியால் {அர்ஜுனனால்} இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(3)
சிலர் தங்கள் தந்தைமாரையும், சகோதரர்களையும் கைவிட்டனர்; வேறு சிலர், தங்கள் தோழர்களைக் கைவிட்டனர். சில தேர்வீரர்கள் தங்கள் விலங்குகளை இழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிலருடைய அச்சுகளோ, நுகத்தடிகளோ, சக்கரங்களோ உடைந்தன.(4) சிலருக்குக் கணைகள் தீர்ந்து போயின. சிலர் கணைகளால் பீடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். காயம்படாதவர்களாக இருப்பினும் சிலர், அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கூட்டமாகத் தப்பி ஓடினர்.(5) தங்கள் சொந்தங்கள் அனைவரையும், விலங்குகளையும் இழந்த சிலர், தங்கள் மகன்களைக் காக்க முயன்றனர். சிலர் தங்கள் தந்தைமாரை உரக்க அழைத்தனர், சிலர் தங்கள் தோழர்களையும், தொண்டர்களையும் அழைத்தனர்.(6) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, சிலரோ, தங்கள் உறவினர்கள, சகோதரர்கள் மற்றும் பிற சொந்தங்களைக் கைவிட்டுத் தப்பி ஓடினர்.(7)
பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாக, கடினத்துடன் மூச்சுவிடுபவர்களாகத் தென்பட்டனர்.(8) அவர்களைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்ட வேறு சிலர், சிறிது நேரம் அவர்களின் துயராற்றி, அவர்களை ஓய்வெடுக்கச் செய்து, நீர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்து, மீண்டும் போரிடச் சென்றனர்.(9) போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களான சிலர், காயம்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு, உமது மகனின் கட்டளைகளைக்குக் கீழ்ப்படிய விரும்பி மீண்டும் போரிடச் சென்றனர்.(10) தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டோ, விலங்குகளைக் களைப்பாறச் செய்தோ சிலரும், ஓ! பாரதர்களின் தலைவரே, (புதிய) கவசம் அணிந்து கொண்ட சிலரும்,(11) தங்கள் சகோதரர்கள், மகன்கள் மற்றும் தந்தைமாருக்கு ஆறுதலளித்து, அவர்களை முகாமில் விட்டுவிட்டு மீண்டும் போரிட வந்தனர்.(12) மூத்தோர், சிறியோர் வரிசையில் தங்கள் தேர்களை அணிவகுத்துக் கொண்ட சிலர், மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்.(13) (தங்கள தேர்களில்) மணிவரிசைகளால் மறைக்கப்பட்ட அந்த வீரர்கள், மூன்று உலகங்களையும் வெற்றிகொள்ளும் நோக்குடன் செல்லும் தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(14) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களில் பதற்றத்துடன் விரைந்த சிலர், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் இருந்த திருஷ்டத்யும்னனுடன் போரிட்டனர்.(15)
பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், பெரும் தேர்வீரனான சிகண்டி, நகுலனின் மகனான சதானீகன் ஆகியோர் எதிரியின் தேர்ப்படையோடு போரிட்டனர்.(16) அப்போது சினத்தால் நிறைந்தவனும், ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டம்யும்னன்}, கோபக்காரர்களான உமது துருப்பினரைக் கொல்லும் விருப்பத்தோடு அவர்களை நோக்கி விரைந்தான்.(17) பிறகு, உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, இவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வந்த அந்தப் பாஞ்சால இளவரசன் மீது கணைமாரிகள் பலவற்றை ஏவினான்.(18) அப்போது திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, வில்லைக் கொண்டு போரிட்டு வந்த உமது மகனின் {துரியோதனனின்} கணைகள் பலவற்றால் மார்பிலும், கரங்களிலும் வேகமாகத் துளைக்கப்பட்டான்.(19) கூரிய வேல்களால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல ஆழத்துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கணைகளைக் கொண்டு துரியோதனனின் நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அடுத்ததாக, மற்றோர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, அவன் தன் எதிரியுடைய {துரியோதனனுடைய} சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தெடுத்தான்.(20)
எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துரியோதனன், இவ்வாறு தன் தேரை இழந்து, ஒரு குதிரையின் முதுகில் ஏறிக்கொண்டு, ஒரு தொலைவான இடத்திற்குப் பின்வாங்கிச் சென்றான்.(21) தன் படையானது ஆற்றலை இழந்ததைக் கண்டவனும், வலிமைமிக்கவனுமான உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றான்.(22) கௌரவத் தேர்கள் நொறுக்கப்பட்டபோது, தேர்வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் மூவாயிரம் பெரும் யானைகள் சூழ்ந்து கொண்டனர்.(23) யானைப்படையால் சூழப்பட்டவர்களான அந்த ஐந்து சகோதரர்களும், ஓ! பாரதரே, ஓ! மனிதர்களில் புலியே, மேகங்களால் மறைக்கப்பட்ட கோள்களை {கிரகங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர்.(24) வலிமைமிக்கக் கரங்களையும், வெண்குதிரைகளையும், இலக்கில் துல்லியத்தையும் கொண்டவனான அர்ஜுனன், ஓ! மன்னா, கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டு தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(25)
மலைகளைப் போன்ற அந்தப் பெரும் யானைகளால் சூழப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கூரியவையும், பளபளக்கப்பட்டவையுமான தன் கணைகளால் அவ்விலங்குகளை அழிக்கத் தொடங்கினான்.(26) தனித்தனி கணைகளால் கொல்லப்பட்ட பெரும் யானைகள் ஒவ்வொன்றும், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவையாகவோ, வீழ்ந்து கொண்டிருப்பவையாகவோ, சிதைக்கப்படுபவையாகவோ இருப்பதை நாங்கள் கண்டோம்.(27) மதங்கொண்ட யானையைப் போன்றவனான பீமசேனன், அந்த ஆனைகளைக் கண்டு, உறுதிமிக்கத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தண்டந்தரித்த யமனைப் போலத் தன் தேரில் இருந்து கீழே குதித்து அவற்றை நோக்கி விரைந்து சென்றான்.(28) பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான அவன் {பீமன்}, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் வருவதைக் கண்ட உமது படைவீரர்கள் அச்சத்தால் நிரம்பியவர்களாக மலமும், சிறுநீரும் கழித்தனர்.(29) அப்போது நாங்கள், பீமனின் கதாயுதத்தால் மத்தகம் பிளக்கப்பட்டு, அங்கமெல்லாம் குருதியால் நனைக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பவையாக மலைகளைப் போன்ற அந்தப் பெரிய யானைகளைக் கண்டோம்.(30)
பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகள், வலியால் கதறிக் கொண்டே அவனிடம் இருந்து அப்பால் ஓடிச்சென்று, சிறகிழந்த மலைகளைப் போலக் கீழே விழுந்தன.(31) மத்தகம் பிளக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பவையோ, கீழே விழுந்து கொண்டிருப்பவையோவான அந்த யானைகள் எண்ணிக்கையில் பலவாக இருப்பதைக் கண்டு உமது படைவீரர்கள் அச்சத்தை அடைந்தனர்.(32) பிறகு, யுதிஷ்டிரனும், மாத்ரியின் இரு மகன்களும் {நகுல, சகாதேவன்} கோபத்தால் நிறைந்து, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட கணைகளால் அந்த யானைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(33) போரில் தோல்வியடைந்த (குரு) மன்னன் {துரியோதனன்} அவ்விடத்தில் இருந்து குதிரையின் முதுகிலேறி தப்பிச் சென்ற பிறகு, (கௌரவ) யானைகளால் பாண்டவர்கள் அனைவரும் சூழப்பட்டிருப்பதைத் திருஷ்டத்யும்னன் கண்டான்.(34) ஓ! ஏகாதிபதி, பாஞ்சால மன்னனின் மகனான திருஷ்டத்யும்னன் இதைக் கண்டு, அந்த யானைகள் அனைத்தையும் கொல்ல விரும்பி அவற்றை நோக்கிச் சென்றான்.(35)
அதேவேளையில், தேர்ப்படைக்கு மத்தியில் துரியோதனனைக் காணாதவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், “துரியோதனன் எங்குச் சென்றுவிட்டான்?” என்று அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் கேட்டனர்.(36) அந்தப் பேரழிவுக்கு மத்தியில் மன்னனை {துரியோதனனைக்} காணாதவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், உமது மகன் கொல்லப்பட்டதாக நினைத்தனர். எனவே, துன்பம் நிறைந்த முகங்களுடன் அவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர்.(37) அவனுடைய சாரதி வீழ்ந்ததும் அவன் {துரியோதனன்} சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} சென்று விட்டதாகச் சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.(38) காயங்களுடன் அங்கே மிகவும் சிதைக்கப்பட்டிருந்த சில க்ஷத்திரியர்கள், “துரியோதனனால் இங்கே என்ன தேவை இருக்கிறது? அவன் இன்னும் உயிரோடிருந்தால் பாருங்கள். ஒற்றுமையுடன் நீங்கள் அனைவரும் போரிடுவீராக. மன்னன் உங்களுக்கு என்ன செய்யப் போகிறான்?” என்று சொன்னார்கள்.(39)
மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தவர்களும், எதிரியின் கணைகளால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுமான வேறு சில க்ஷத்திரியர்கள், “நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் படைகளைக் கொல்வோம். யானைகளைக் கொன்றதும் பாண்டவர்கள் இங்கே வருகிறார்கள் பாருங்கள்” என்று தெளிவற்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(40,41) அவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், பாஞ்சால மன்னனின் தடுக்கப்படமுடியாத படையைத் துளைத்துக் கொண்டு, கிருபருடனும், கிருதவர்மனுடனும் சேர்ந்து சுபலனின் மகன் {சகுனி} இருக்குமிடத்திற்குச் சென்றான். உண்மையில், உறுதிமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் தேர்ப்படையை விட்டுவிட்டு (துரியோதனனைத் தேடி) சென்றனர்.(42,43) அவர்கள் அங்கிருந்த சென்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யுமன்ன தலைமையிலான பாண்டவர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(44) வீரமும், துணிச்சலும் கொண்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவர்களை உற்சாகமாக விரைவதைக் கண்டவர்களும், முகம் வெளிறியவர்களுமான உமது துருப்பினர், தங்கள் உயிர்களில் நம்பிக்கையிழந்தனர்.(45)
கிட்டத்தட்ட ஆயுதங்களை இழந்தவர்களும், (எதிரியால்) சூழப்பட்டவர்களுமான நமது படைவீரர்களைக் கண்டவனும், இரு வகைப் படைகளை மட்டுமே கொண்டவனுமான {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதித்து,(46) நமது படையின் ஐந்து தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, சரத்வான் மகன் {கிருபர்} நின்று கொண்டிருந்த இடத்தில் நம் மனிதர்களை நிறுத்தி, பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} படைகளோடு போரிட்டேன்.(47) கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். இருப்பினும், எங்களுக்கும், திருஷ்டத்யும்னனின் படைப்பிரிவுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. இறுதியில் பின்னவனால் {திருஷ்டத்யும்னனால்} வெல்லப்பட்ட நாங்கள் அனைவரும் அம்மோதலில் இருந்து பின்வாங்கிச் சென்றோம்.(48) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி எங்களை எதிர்த்து விரைந்து வருவதை நான் கண்டேன். அந்தப் போரில் நானூறு {400} தேர்களுடன் அந்த வீரன் எங்களைப் பின்தொடர்ந்து வந்தான்.(49) குதிரைகள் களைத்துப் போயிருந்த திருஷ்டத்யும்னனிடம் இருந்து பெருங்கடினத்துடன் தப்பித்த நான், நகரத்திற்குள் வீழும் பாவியைப் போல மாதவனின் {சாத்யகியின்} படைகளுக்கு மத்தியில் விழுந்தேன். அங்கே குறுகிய காலத்திற்குச் சீற்றமும் கடுமையும் கொண்ட ஒரு போர் நடந்தது.(50)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, என்னை உயிரோடு பிடிக்க விரும்பி என் கவசத்தை வெட்டினான். உணர்விழந்தவனாகத் தரையில் கிடந்த என்னை அவன் {சாத்யகி} கைப்பற்றினான் {உயிரோடு பிடித்தான்}.(51) அப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே பீமசேனனின் கதாயுதத்தினாலும், அர்ஜுனனின் கணைகளாலும் அந்த யானைப்படையானது அழிக்கப்பட்டது.(52) மலைகளைப் போன்று பெரியவையான அந்த வலிமைமிக்க யானைகள், நொறுங்கிய அங்கங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்ததன் விளைவால், தங்கள் வழி முற்றிலும் அடைக்கப்பட்டதைப் பாண்டவப் போர்வீரர்கள் கண்டனர்.(53) அப்போது வலிமைமிக்கப் பீமசேனன், ஓ! ஏகாதிபதி, அந்தப் பெரும் யானைகளை இழுத்துத் தள்ளி, பாண்டவர்கள் வெளியே வருவதற்கான வழியை உண்டாக்கினான்.(54) அதேவேளையில், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், தேர்ப்படைக்கு மத்தியில் எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனைக் காணாமல், உமது அரச மகனைத் தேடினர்.(55) அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்ட அவர்கள், மன்னனைக் காணும் ஆவலால் சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(56)
துரியோதனனின் தம்பிகளைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 26-எஞ்சியிருந்த துரியோதனனின் தம்பிகள் பீமனை எதிர்த்து வந்தது; பீமனைத் தாக்கிய சுருதர்வன்; துரியோதனனின் தம்பியரில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {பீமனால்} அந்த யானைப்படை கொல்லப்பட்ட பிறகு, போரில் பீமசேனனால் உமது படை இவ்வாறு கொல்லப்பட்டபோது,(1) தண்டம் தரித்தவனும், சினத்துடன் கூடியவனுமான, அனைத்தையும் அழிப்பவனுமான அந்தகனைப் போலத் தெரிந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனைக் கண்டவர்களும்,(2) உடன்பிறந்த சகோதரர்களும், கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்களுமான உமது மகன்கள், குரு குலத்தவனான உமது மகன் துரியோதனன் காணப்படாத அந்த அந்த நேரத்தில் ஒன்றுகூடி பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) அவர்கள் துர்மர்ஷணன், சுருதாந்தன், ஜைத்ரன், பூரிபலன், ரவி, ஜயத்சேனன், சுஜாதன், எதிரிகளைக் கொல்பவனான துர்விஷகன்,(4) துர்விமோசனன் என்றழைக்கப்பட்ட ஒருவன், துஷ்பிரசாதன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சுருதர்வன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போரில் சாதித்தவர்களாக இருந்தனர்.(5)
இந்த உமது மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, பீமசேனனை எதிர்த்து விரைந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை அடைத்துக் கொண்டனர்.(6) பிறகு மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே, உமது மகன்களின் முக்கிய அங்கங்களின் மேல் கூரிய கணைகளை ஏவத் தொடங்கினான்.(7) அந்தப் பயங்கரப் போரில் பீமசேனனின் கணைகளால் மறைக்கப்பட்ட உமது மகன்கள், பாதையில் குறுக்கிடும் யானையை இழுக்கும் மனிதர்களைப் போல அந்தப் போர்வீரனை {பீமனை} இழுக்கத் தொடங்கினர்.(8) சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} துர்மர்ஷணனின் தலையை வெட்டி விரைவில் அதைப் பூமியில் வீழ்த்தினான்.(9) அடுத்ததாகப் பீமன், அனைத்து கவசங்களையும் ஊடுருவவல்ல மற்றொரு அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் சுருதாந்தனைக் கொன்றான்.(10)
பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} ஜயத்சேனனை மிக எளிதாகத் துளைத்து, அந்தக் குரு குலக் கொழுந்தை அவனது தேரில் இருந்து வீழ்த்தினான். ஓ! மன்னா, கீழே விழுந்த அந்த இளவரசனும் உடனே இறந்தான்.(11) இதனால் சினம் தூண்டப்பட்ட உமது மகன் சுருதர்வன், கழுகின் இறகுகளால் சிறகமைந்த ஒரு நூறு நேரான கணைகளால் பீமனைத் துளைத்தான்.(12) அப்போது சினத்தால் எரிந்த பீமன், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான மூன்று கணைகளால் ஜைத்ரன், ரவி, பூரிபலன் ஆகிய மூவரையும் துளைத்தான்.(13) இவ்வாறு தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், வசந்தகாலத்தில் மலர்ந்திருப்பவையும், (விறகு வெட்டியால்) வெட்டப்படுபவையுமான கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர்.(14) பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவன் {பீமன்}, மிகக் கூர்மையான மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு துர்விமோசனனைத் தாக்கி, அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(15) இவ்வாறு தாக்கப்பட்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {துர்விமோசனன்}, மலைச்சிகரத்தில் ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று காற்றால் முறிவதைப் போலத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(16)
அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, படைகளின் தலைமையில் இருந்த உமது மற்ற மகன்களான துஷ்பிரசாதன் மற்றும் சுஜாதன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் அந்தப் போரில் இருகணைகளைக் கொண்டு தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.(17) அடுத்ததாக உமது மற்றொரு மகனான துர்விஷகனை நோக்கி விரைந்த பீமன், அந்தப் போரில் ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவனைத் துளைத்தான். அந்த இளவரசன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(18) அந்தப் போரில் தனியொருவனான பீமனால் தன் சகோதரர்களில் பலர் கொல்லப்படுவதைக் கண்ட சுருதர்வன், சினம் கொண்டு, உறுதியானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லை வளைத்து, சக்தியில் நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான எண்ணற்ற கணைகளை ஏவியபடியே பீமனை நோக்கி விரைந்தான்.(19,20)
அந்தப் பயங்கரப் போரில் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வெட்டிய அந்தக் குரு இளவரசன் {சுருதர்வன்}, வில்லற்றவனான பீமனை இருபது கணைகளால் துளைத்தான்.(21) அப்போது, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான பீமசேனன், “நில், நிற்பாயாக” என்று சொன்னபடியே உமது மகனை {சுருதர்வனைக்} கணைகளால் மறைத்தான்.(22) அவ்விருவருக்குள் நடைபெற்ற போரானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் வாசவனுக்கு {இந்திரனுக்கு}, அசுரன் ஜம்பனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல அழகியதாகவும், கடுமையானதாகவும் இருந்தது.(23) யமனின் மரணக் கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பானவையும், அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்டவையுமான கூரிய கணைகளால், பூமி, வானம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தும் மறைக்கப்பட்டன.(24) அப்போது சினத்தால் நிறைந்த சுருதர்வன், தன் வில்லை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனின் கரங்களையும், மார்பையும் கணைகள் பலவற்றால் தாக்கினான்.(25)
வில்தரித்த உமது மகனால் {சுருதர்வனால்} ஆழத்துழைக்கப்பட்ட பீமன், முழு நிலவிலோ {பௌர்ணமியிலோ}, புதுநிலவிலோ {அமாவசையிலோ} கலங்கும் பெருங்கடலைப் போலப் பெருங்கலக்கமடைந்தான்.(26) அப்போது கோபத்தால் நிறைந்தவனான பீமன், ஓ! ஐயா, தன் கணைகளைக் கொண்டு, உமது மகனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(27) தேரற்றவனான அவனை {சுருதர்வனைக்} கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடியே, சிறகுகள் படைத்த கணைகளால் அவனை மறைத்தான்.(28) அப்போது, தேரற்றவனான சுருதர்வன், ஒரு வாளையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். எனினும், வாளுடனும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான கேடயத்துடனும் அந்த இளவரசன் திரிந்த போது, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கத்தித் தலைக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {சுருதவர்மனது} தலையைத் தாக்கி, அதைப் பூமியில் வீழ்த்தினான்.(29) அந்தக் கத்தித் தலைக் கணையால் தலையற்றதாகச் செய்யப்பட்ட அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் உடலானது, பேரொலியோல் பூமியை நிறைத்தபடியே தேரில் இருந்து கீழே விழுந்தது[1].(30)
உமது துருப்புகள் அந்த வீரனின் வீழ்ச்சியால் அச்சமடைந்திருந்தாலும், அந்தப்போரில் பீமசேனனுடன் போரிட விரும்பி அவனை எதிர்த்து விரைந்தன.(31) வீரனும், கவசந்தரித்தவனுமான அந்தப் பீமசேனன், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த அந்தத் துருப்புகளின் பெருங்கடலுக்கு மத்தியில் இருந்து தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்தப் போர்வீரர்களை வரவேற்றான் {எதிர்த்தான்}. அவ்வீரனை அடைந்த அந்தப் போர்வீரர்கள், அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(32) இவ்வாறு உமது போர்வீரர்களால் சூழப்பட்ட பீமன், ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்}, அசுரர்களைப் பீடிப்பதைப் போல, கூரிய கணைகளால் அவர்கள் அனைவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(33) தேர்க்கூடுகளுடன் கூடிய ஐநூறு {500} பெருந்தேர்களை அழித்த அவன் {பீமன்}, அந்தப் போரில் மீண்டும் எழுநூறு {700} யானைகளைக் கொன்றான்.(34) அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன், தன் வலிமைமிக்கக் கணைகளால் பத்தாயிரம் {10000} காலாட்படைவீரர்களைக் கொன்று, மேலும் எண்ணூறு {800} குதிரைகளையும் கொன்று பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(35)
உண்மையில், குந்தியின் மகனான அந்தப் பீமசேனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்களைக் கொன்ற பிறகு, தன் நோக்கம் அடையப்பட்டதாகவும், தன் பிறப்பின் காரணம் நிறைவேறியதாகவும் கருதிக் கொண்டான்.(36) அந்நேரத்தில் உமது துருப்புகள், ஓ! பாரதரே, இவ்வகையில் போரிட்டவனும், உமது மக்களை இவ்வழியில் கொன்றவனுமான அந்தப் போர்வீரனைப் பார்க்கவும் துணியவில்லை.(37) குருக்கள் அனைவரையும் முறியடித்து, அவர்களின் தொண்டர்களையும் கொன்ற பீமன், தன் கக்கங்களை அறைந்து கொண்டதால் உண்டான ஒலியால் பெரும் யானைகளை அச்சுறுத்தினான்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை இழந்ததும், அப்போதைக்குச் சொற்பமான படைவீரர்களையே கொண்டிருந்ததுமான உமது படையானது, ஓ! மன்னா, மிகவும் உற்சாகமற்றதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(39)
மற்றுமொருவனைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) “நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ! பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ! ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)
“ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)
இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)
ஓ! கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ! விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.(25)
பெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)
அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)
பெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ! தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)
ஓ! பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)
அந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)
இவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ! மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(54)
சகுனியையும், உலூகனையும் கொன்ற சகாதேவன்! – சல்லிய பர்வம் பகுதி – 28-காதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)
அப்போது சினத்தால் நிறைந்தவனான பீமன் மற்றும் பெரும் வீரம் கொண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும், பெரும் வலிமையைக் கொண்டவர்களாக, மிகப் பெரும் பேரழிவையுண்டாக்கியபடி அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(6) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது, அவ்விரு வீரர்களால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டது. அதன் காரணமாகக் களத்தில் பல பகுதிகளில் ஆகாயமானது இருளால் மறைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, கணைகளால் மறைக்கப்பட்ட குதிரைகள், ஓடிக்கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகளை இழுத்துச் சென்று, அவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக, போர்க்களத்தில் உள்ள பல பகுதிகளின் வழித்தடங்கள் முற்றாக மறைக்கப்பட்டன.(8) சாரதிகளுடன் கொல்லப்பட்ட குதிரைகள், உடைந்த கேடயங்கள், வேல்கள், வாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றால் சுற்றிலும் மறைக்கப்பட்ட பூமியானது, மலர்களால் மூடப்பட்டுக் கிடப்பதைப் போலப் பலவண்ணங்களில் தென்பட்டது.(9) ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு, போரில் திரிந்து கொண்டிருந்த போராளிகள், ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(10)
விரைவில் அந்தப் போர்க்களமானது, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், கோபத்தில் கண்கள் புரண்டு, சினத்தால் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையில் இருந்த முகங்களால் அருளப்பட்டவையுமான தலைகளால் மறைக்கப்பட்டதாயிற்று.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளின் துதிக்கைகளுக்கு ஒப்பானவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்டவையும், வாள்களையும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் இன்னும் பிடித்துக் கொண்டிருந்தவையுமான போர்வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும்,(12) எழுந்து நின்ற நிலையில், இரத்தம் சிந்தியபடி களத்தில் ஆடிக் கொண்டிருந்த தலையற்ற உடல்களாலும் மறைக்கப்பட்டும், ஊனுண்ணும் பல்வேறு விலங்குகளால் மொய்க்கப்பட்டும், ஓ! தலைவா, பூமியானது பயங்கரத் தன்மையை வெளிப்படுத்தியது.(13) பாரதப் படையானது எஞ்சிய சிறு குழுவாகக் குறைக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள், கௌரவர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.(14)
அதே வேளையில், வீரனான சுபலன் மகனின் {சகுனியின்} வீரமகன் {உலூகன்}, ஒரு வேலால் {பராசத்தால்} சகாதேவனின் தலையை மிகப் பலமாகத் தாக்கினான்.(15) அந்த அடியின் விளைவால் மிகவும் கலக்கமடைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) சகாதேவனை அந்த அவலநிலையில் கண்ட வீரப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து மொத்த குரு படையையும் தடுத்தான்.(17) அவனது துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பகைவீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அவர்களைத் துளைத்தபிறகு சிங்க முழக்கம் செய்தான்.(18) அந்த முழக்கத்தால் அச்சமடைந்த சகுனியின் தொண்டர்கள், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகளுடன் அச்சத்தால் அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினர்.(19)
அவர்கள் பிளந்தோடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், அவர்களிடம், “அறநெறியறியா க்ஷத்திரியர்களே, நிற்பீராக. போரிடுவீராக. தப்படி ஓடுவதால் என்ன பயன்? புறமுதுகிடாமல் போரில் உயிர்மூச்சை விடும் வீரன், இங்கேயும் புகழை அடைந்து, இதன்பிறகும் அருள் உலகங்களில் மகிழ்கிறான்” என்றான்.(20) இவ்வாறு மன்னனால் உற்சாகமூட்டப்பட்ட சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வந்த போர்வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, கலங்கிய கடலுக்கு ஒப்பாகப் பயங்கரமானதாக இருந்தது.(23) ஓ! ஏகாதிபதி, போரில் இவ்வாறு முன்னேறிவரும் சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்களைக் கண்டவர்களும், வெற்றியாளர்களுமான பாண்டவர்கள் அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(24) சிறிது ஆறுதலையடைந்தவனும், வெல்லப்படமுடியாதவனுமான சகாதேவன், ஓ! ஏகாதிபதி, பத்து கணைகளால் சகுனியையும், மூன்றால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவன், பெரும் எண்ணிக்கையிலான வேறு சில கணைகளால் சுபலன் மகனின் {சகுனியின்} வில்லை மிக எளிதாக வெட்டினான்.(25) எனினும், போரில் வெல்லப்பட முடியாதவனான சகுனி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அறுபது கணைகளால் நகுலனையும், அடுத்தது ஏழால் பீமசேனனையும் துளைத்தான்.(26)
உலூகனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் தந்தையை {சகுனியைக்} காக்க விரும்பி, ஏழு கணைகளால் பீமனையும், எழுபதால் சகாதேவனையும் துளைத்தான்.(27) அம்மோதலில் பீமசேனன், பல கூரிய கணைகளால் உலூகனையும், அறுபத்துநான்கால் சகுனியையும், அவர்களைச் சுற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்றாலும் துளைத்தான்.(28) எண்ணெயில் தோய்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு பீமசேனனால் தாக்கப்பட்ட கௌரவர்கள், அந்தப் போரில் சினத்தால் நிறைந்து, மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்கள் மலைச்சாரில் மழையைப் பொழிவதைப் போலக் கணைமாரிகளால் சகாதேவனை மறைத்தனர்.(29)
அப்போது, வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த உலூகனின் தலையை ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} கொய்தான்.(30) சகாதேவனால் கொல்லப்பட்ட உலூகன், அந்தப் போரில் பாண்டவர்களை மகிழ்வித்தபடியே, தன் அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்த நிலையில், தனது தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(31) தன் மகன் {உலூகன்} கொல்லப்பட்டதைக் கண்ட சகுனி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியும் விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(32) கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒரு கணம் சிந்தித்த சகுனி, கடுமூச்சுவிட்டபடியே சகாதேவனை அணுகி, அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.(33) சுபலன் மகனால் {சகுனியால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கணைமாரிகளால் கலங்கடித்த அந்த வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் எதிராளியின் {சகுனியின்} வில்லை அறுத்தான்.(34)
தன் வில்லானது வெட்டப்பட்டதைக் கண்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா, உறுதியான ஒரு வாளை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான்.(35) எனினும் பின்னவன் {சகாதேவன்}, ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} அந்தப் பயங்கரமான வாளை மிக எளிதாக இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(36) தன் வாளானது இரண்டாக வெட்டப்பட்டதைக் கண்ட சகுனி, உறுதிமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான். அந்தக் கதாயுதமும், தன் இலக்கை அடையமுடியாமல் பூமியில் விழுந்தது.(37) இதன் பிறகு சினத்தால் நிறைந்தவனான அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எதிர்வரும் கால இரவுக்கு ஒப்பான பயங்க ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டு மகனின் {சகாதேவனின்} மீது வீசினான்.(38) அம்மோதலில் சகாதேவன், தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த ஈட்டியைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு மூன்று துண்டுகளாக மிக எளிதாக வெட்டி வீழ்த்தினான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டுகளாக வெட்டப்பட்டதுமான அந்த ஈட்டியானது ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு சுடர்மிக்க வஜ்ரத்தைப் போலப் பல கீற்றுகளாகச் சிதறியபடியே பூமியில் விழுந்தது.(40)
அந்த ஈட்டியானது கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்பட்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, உமது துருப்பினர் அனைவரும் அச்சத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.(41) அப்போது வெற்றியில் ஆவலோடு இருந்த பாண்டவர்கள் உரத்த கூச்சல்களை வெளியிட்டனர். தார்தராஷ்டிரர்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டனர்.(42) உற்சாகமற்றவர்களாக அவர்களைக் கண்ட மாத்ரியின் அந்த வீரமகன் {சகாதேவன்} அந்தப் போரில் பல்லாயிரம் கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(43) அப்போது சகாதேவன், வெற்றியடையும் எதிர்பார்ப்பில் ஓடிக் கொண்டிருந்தவனும், காந்தாரர்களின் சிறந்த குதிரைப்படையால் பாதுகாக்கப்பட்டவனுமான சுபலனின் மகனை {சகுனியை} வந்தடைந்தான்.(44) ஓ! மன்னா, தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்தச் சகுனி இன்னும் உயிரோடிருப்பதை நினைத்துப் பார்த்த சகாதேவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் அந்தப் போர்வீரனைப் பின்தொடர்ந்து சென்றான்.(45)
உறுதிமிக்கத் தன் வில்லுக்கு நாண்பொருத்திக் கொண்டு, அதை மிகப் பலமாக வளைத்த சகாதேவன், சினத்தால் நிறைந்து, அந்தச் சுபலன் மகனைப் {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று, கூர்முனை வேல்களால் வலிமைமிக்க யானையொன்றைத் தாக்கும் ஒரு மனிதனைப் போல, கழுகின் இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவனை மூர்க்கமாகத் தாக்கினான்.(46) பெரும் மனோவலிமை கொண்ட சகாதேவன், இவ்வாறு தன் எதிரியைப் பீடித்து, (அவனுடைய கடந்த காலக் கெடுசெயல்களை) அவனது மனத்திற்கு நினைவூட்டும்படி இந்த வார்த்தைகளால்: “க்ஷத்திரியக் கடமைகளை நோற்று (என்னோடு) போரிடுவீராக. ஆண்மையோடிருப்பீராக.(47) ஓ! மூடரே, சபைக்கு மத்தியில் பகடையில் சூதாடும்போது நீர் மிகவும் மகிழ்ந்தீர். ஓ! தீய அறிவைக் கொண்டவரே, அச்செயலின் கனியை இப்போது பெறுவீராக.(48) அப்போது எங்களைக் கேலிபேசிய தீய ஆன்மாக்களைக் கொண்டோர் அனைவரும் அழிந்துவிட்டனர். குலத்தில் இழிந்தவனான துரியோதனனும், அவனது தாய்மாமனான நீரும் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.(49) ஒரு தடியைக் கொண்டு மரத்தின் கனியைக் கொய்யும் ஒரு மனிதனைப் போல நான் என் கத்தித் தலைக் கணை ஒன்றைக் கொண்டு தலையைக் கொய்து இன்றும்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(50)
பெரும் வலிமை கொண்ட மனிதர்களில் புலியான அந்தச் சகாதேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சினத்தால் நிறைந்து, சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(51) போர்வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படமுடியாதவனுமான அந்தச் சகாதேவன், கோபத்தால் எரித்துவிடுபவனைப் போலத் தன் எதிரியை அணுகி, தன் வில்லைப் பலமாக வளைத்து,(52) பத்து கணைகளால் சகுனியையும், நான்கால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவனது குடை, கொடிமரம், வில் ஆகியவற்றை வெட்டி வீழ்த்திய அவன், ஒரு சிங்கத்தைப் போல முழக்கம் செய்தான்.(53) சகாதேவனால் இவ்வாறு கொடிமரம், வில் மற்றும் குடை ஆகியன வெட்டப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, தன் முக்கிய அங்கமெங்கும் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டிருந்தான்.(54) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வீரச் சகாதேவன், தடுக்கப்படமுடியாத கணைமாரியை சகுனியின் மீது மீண்டுமொருமுறை ஏவினான்.(55)
அப்போது சினத்தால் நிறைந்த அந்தச் சுபலன் மகன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் ஒன்றால் சகாதேவனைக் கொல்லும் விருப்பத்துடன் அம்மோதலில் தனியொருவனாகப் பின்னவனை {சகாதேவனை} நோக்கி விரைந்து சென்றான்.(56) எனினும் அந்த மாத்ரியின் மகனோ {சகாதேவனோ}, ஒரு கணத்தையும் இழக்காமல், மூன்று அகன்ற தலைக் கணைகளைக் கொண்டு, போரின் முன்னணியில் வைத்துத் தன் எதிரியின் உயர்த்தப்பட்ட வேலையும், நன்கு பருத்திருந்த அவனது கரங்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தி, உரத்த முழக்கம் செய்தான்.(57) பெரும் சுறுசுறுப்பை உடையவனான வீரச் சகாதேவன், கடினமான இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், கவசமனைத்தையும் ஊடுவவல்லதும், பெரும் வேகத்துடனும், கவனத்துடனும் ஏவப்பட்டதுமான ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிரியின் {சகுனியின்} தலையை அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.(58) சுபலனின் மகன் {சகுனி}, அந்தப் போரில் பாண்டுவின் மகனால் ஏவப்பட்டதும், பெருங்கூர்மை மற்றும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கணையால் தன் தலையை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(59) உண்மையில், சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, தங்கச் சிறகால் அலங்கரிக்கப்பட்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், வேகமாகச் செல்லக் கூடியதுமான அக்கணையைக் கொண்டு குருக்களின் தீய கொள்கைக்கு வேராக இருந்த அந்தத் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(60) முக்கிய அங்கமெங்கும் ஊனீராக நனைந்தபடி தரையில் கிடக்கும் தலையற்ற சகுனியைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பலவீனர்களாகி, தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(61)
அந்த நேரத்தில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய உமது மகன்கள், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்டு முற்றிலும் பிளந்தவர்களாக, நிறமற்ற முகங்களைக் கொண்டவர்களாக, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாகத் தப்பி ஓடினார்கள்.(62) சகுனியை அவனது தேரில் இருந்து வீசியெறிந்த பிறகு, ஓ! பாரதரே, அந்தப் பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். தங்களுக்கு மத்தியில் இருந்த கேசவனுடன் மகிழ்ந்த அவர்கள், அந்தப் போரில் தங்கள் துருப்புகளுக்கு மகிழ்வூட்டும்படி தங்கள் சங்குகளை முழக்கினர்.(63) மகிழ்ச்சியான இதயங்களுடன் கூடிய அவர்கள், “ஓ! வீரா, தீய ஆன்மா மற்றும் தீய வழிகளைக் கொண்டவனான சகுனி, அவனுடைய மகனுடன் சேர்த்து உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே {பாக்கியத்தினாலேயே}” என்று சொல்லி சகாதேவனை வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(64)
சல்லிய வத பர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply