படைகளை உறங்க அனுமதித்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 184-துரோணரைத் தடுக்க, திருஷ்டத்யும்னனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; துரோணரை எதிர்த்து பாண்டவத் தலைவர்கள் அனைவரும் விரைவது; துரியோதனனும், பிறரும் துரோணரைக் காக்க வருவது; இரு படைகளுக்கும் இடையிலான கடும் போர்; போர்வீரர்களைத் தூங்க அனுமதித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் இந்தக் கருணைக்கு அவனை வாழ்த்திய கௌரவத் துருப்புகள்; போராளிகள் அனைவரும் போர்க்களத்திலேயே உறங்குவது; சந்திரன் உதித்து இருளை விலக்கியது; உறக்கத்தில் இருந்து எழுந்த இரு படைகளும் போருக்குத் தயாராவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியாசரால் இப்படிச் சொல்லப்பட்டவனும், நீதிமானுமான வீர மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தானே சென்று கொல்லும் முயற்சியில் இருந்து விலகினான்.(1) எனினும், அவ்விரவில் சூதன் மகனால் {கர்ணனால்} கடோத்கசன் கொல்லப்பட்டதன் விளைவால், துயராலும், கோபத்தாலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} நிறைந்தான்.(2)
உமது பரந்த படையானது பீமனால் தடுக்கப்பட்டதைக் கண்ட யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், “குடத்தில் பிறந்தவரை {துரோணரைத்} தடுப்பாயாக.(3) ஓ! எதிரிகளை எரிப்பவனே, கவசம்பூண்டவனாக, வில், கணைகள் மற்றும் வாள் தரித்தவனாகத் துரோணரின் அழிவுக்காகவே நீ நெருப்பில் இருந்து உதித்தாய்.(4) உற்சாகத்துடன் போரிட விரைவாயாக, உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஜனமேஜயன்[1], சிகண்டி, துர்முகனின் மகன், யசோதரன்[2] ஆகியோர்(5) குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து அனைத்துப்பக்கங்களிலும் விரையட்டும். நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(6) மகன்கள் மற்றும் சகோதரர்களுடன் கூடிய துருபதரும், விராடரும், சாத்யகி, கைகேயர்கள், பாண்டவர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்},(7) ஆகியோர் அனைவரும் பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்லும் விருப்பத்தோடு அவரை எதிர்த்து வேகமாக விரையட்டும். நமது தேர்வீரர்கள் அனைவரும், நாம் கொண்டுள்ள யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், நமது காலாட்படைவீரர்கள் அனைவரும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் வீழ்த்தட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.இப்படிப் பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அவர்கள் அனைவரும்,(9) குடத்தில் பிறந்தவரை {துரோணரைக்} கொல்ல விரும்பி, அவரை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர். எனினும் ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன்னை நோக்கித் திடீரெனப் பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் விரைந்து வந்த அந்தப் பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் போரில் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது துரோணரின் உயிரைக் காக்க விரும்பியவனும், கோபத்தால் நிறைந்தவனுமான மன்னன் துரியோதனன், பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கிய குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. இரு படைகளின் விலங்குகளும், போர்வீரர்களும் மிகவும் களைத்திருந்தனர். போர் முயற்சியால் களைத்துப் போய் உறக்கத்தால் கண்கள் மூடும் நிலையில் இருந்த பெரும் தேர்வீரர்களும் கூட, அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். ஒன்பது மணி நேரம்[3] கொண்ட அந்த இரவானது மிகப் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும், உயிரினங்களுக்கு அழிவைத் தருவதாகவும், நீடித்துக் கொண்டே[4] இருந்தது.(10-14)இப்படி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொன்று வருகையில்,(15) அவர்களது கண்களில் உறக்கம் கனமாக குடிகொண்ட போது நடு இரவு ஆகிவிட்டது. க்ஷத்திரியர்கள் அனைவரும் உற்சாகமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் {இரக்கமற்றவர்களாகவும்} ஆகிவிட்டனர்.(16) உமது துருப்புகளிடமும், எதிரியுடையவைகளிடமும் மேலும் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பணிவும், சக்தியும் கொண்டு, தங்கள் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்று வந்த (இரு படைகளின் பெரும்பாலான) போர்வீரர்களும், இப்படியே தங்கள் நேரத்தைக் கடத்தினாலும் தங்கள் படைப்பிரிவுகளைக் கைவிடவில்லை. உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கத்தில் இருந்த} பிறர், தங்கள் ஆயுதங்களைக் எறிந்துவிட்டு படுத்துக் கொண்டனர்.(17,18) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} சிலர் யானைகளின் முதுகிலும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளின் முதுகிலும் படுத்தனர். உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கமடைந்த} அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்றிலும் அசைவற்றவர்கள் ஆனார்கள்.(19) அந்தப் போரில் (விழித்திருந்த) பிற போர்வீரர்கள், அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிறர், தங்கள் புலனுணர்வுகளை இழந்து, குறை தூக்க நிலையில் கனவு கண்டு, அனைவரையும் தங்கள் எதிரிகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எதிரிகளைப் போலவே தங்கள் சொந்த தோழர்களையே கொல்லத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு கூச்சல்களை எழுப்பிக் கொண்டே போரிட்டனர்.(20,21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது படையின் வீரர்கள் பலர், எதிரியோடு தொடர்ந்து போரிட விரும்பி, உறக்கத்தால் மயங்கிய கண்களுடனேயே நின்றிருந்தனர்.(22) கருக்கிருட்டான அந்தப் பயங்கர வேளையில், சில துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உறக்கத்தால் குருடாகியிருந்தாலும், அந்தப்போரில் களத்தில் திரிந்து ஒருவரையொருவர் கொன்று வந்தனர்.(23) எதிரிக்கு மத்தியில் பலர், உறக்க மயக்கத்தால் முழுதாக மலைப்படைந்து (தங்களை நித்தியத்திற்குள் அழைத்துச் சென்ற ஆயுத வெட்டுக்களை உணராமல்) சுயநினைவில்லாத நிலையிலேயே கொல்லப்பட்டனர்.(24)
படைவீரர்களின் இந்நிலையைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உரத்த குரலில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “உங்கள் விலங்குகளுடன் சேர்த்து நீங்கள் அனைவரும், களைத்துப் போய் உறக்கத்தால் குருடாகியிருக்கிறீர்கள் {தூக்க மயக்கத்தை அடைந்திருக்கிறீர்கள்}. வீரர்களே, நீங்கள் இருட்டாலும், புழுதியாலும் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்.(26) எனவே, உங்களுக்கு விருப்பமுண்டானால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இங்கே இந்தப் போர்க்களத்திலேயே சற்று நேரம் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.(27) குருக்களே {கௌரவர்களே}, பாண்டவர்களே, உறங்கி ஓய்வெடுத்த பிறகு, சந்திரன் உதயமாகையில் சொர்க்கத்தை அடையும் பொருட்டு நீங்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளலாம்” என்றான் {அர்ஜுனன்}.(28)
அறம் சார்ந்த அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அறம் சார்ந்த அந்தப் போர்வீரர்கள், அந்தப் பரிந்துரையை ஏற்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு,(29) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! துரியோதன மன்னா, போரை நிறுத்துவீர். பாண்டவப் படை நம்மைத் தாக்குவதை நிறுத்திவிட்டது” என்று உரக்கச் சொன்னார்கள்.(30) பிறகு பல்குனனால் {அர்ஜுனனால்} உரக்கச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையும், உமது படையும், போரில் இருந்து விலகின.(31) உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த உன்னத வார்த்தைகள், தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், மகிழ்ச்சி அடைந்த படைவீரர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டன.(32) அந்த அன்பான வார்த்தைகளைப் பாராட்டிய அனைத்துத் துருப்புகளும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, களைத்துப் போய் {அங்கேயே} படுத்து உறங்கினார்கள்.(33)
அப்போது உமது அந்தப் படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிடைக்கப்போகும் ஓய்வு மற்றும் உறக்கத்தால் மகிழ்ந்து, {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் வேதங்களும், அனைத்து ஆயுதங்களும் உள்ளன. உன்னிடம் நுண்ணறிவும், ஆற்றலும் உள்ளன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, உன்னிடம் நீதியும் {அறமும்}, அனைத்து உயிர்களிடம் கருணையும் உள்ளன. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஆறுதலளிக்கப்பட்டதால், நாங்கள் உனக்கு நன்மையை விரும்புகிறோம். செழுமை உனதாகட்டும். ஓ! வீரா, உன் இதயத்துக்கு விருப்பமான பொருள்கள் {நீ விரும்பும் நோக்கங்கள்} அனைத்தும் உனக்கு விரைவில் கிடைக்கட்டும்” என்று சொல்லி அர்ஜுனனை உண்மையாக வாழ்த்தினர்.(34-36) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அவனை {அர்ஜுனனை} வாழ்த்திய அந்தப் பெரும் தேர்வீரர்கள், உறக்கத்தால் மயக்கமடைந்து அமைதியடைந்தனர்.(37) சிலர் குதிரைகளின் முதுகுகளிலும், சிலர் தேர்க்கூடுகளிலும், சிலர் யானைகளின் கழுத்துகளிலும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டனர்.(38) தங்கள் ஆயுதங்கள், கதாயுதங்கள், வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள், ஆகியவற்றுடனும், தங்கள் கவசங்களுடனும் கூடிய பல மனிதர்கள் உறங்குவதற்காக அங்கே தனித்தனியாகப் படுத்துக் கிடந்தனர்.(39)
ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த யானைகள், புழுதி படிந்தவையும், பாம்பு போன்றவையுமான தங்கள் துதிக்கை நாசித்துளைகளின் மூச்சுக்காற்றால் பூமியைக் குளிரச் செய்தன.(40) உண்மையில், தரையில் மூச்சுவிட்டுக்கிடந்த அந்த யானைகள், சீறுகின்ற பெரும் பாம்புகளோடு கீழே சிதறிக் கிடக்கும் மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(41) தங்கப் பூட்டாங்கயிறுகளைக் கொண்டவையும், நுகத்தடிகளோடு தங்கள் பிடரி மயிர் கலந்தவையுமான குதிரைகள், சமமான தரையைத் தங்கள் குளம்படிகளால் சமமற்றவையாகச் செய்தன.(42) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொருவனும் தான் ஏறி வந்த விலங்குடனே அங்கே உறங்கினான். இப்படியே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிகவும் களைத்துப் போயிருந்த குதிரைகள், யானைகள் ஆகியனவும், போர்வீரர்களும் போரைத் தவிர்த்து உறங்கத் தொடங்கினர். (43) அப்படி உறங்கிக் கிடந்த படையானது, புலனுணர்வை இழந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி, ஓவியம் தீட்டும் திரைச்சீலையில் திறன்மிக்க ஓவியர்களால் வரையப்பட்ட அற்புதமான ஓவியத்தைப் போலத் தெரிந்தது.(44) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், இளமையுடன் கூடியவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடையவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், அழகிய மங்கையரின் பருத்த முலைகளில் கிடப்பதைப் போல, யானைகளின் மத்தகங்களில் படுத்து உறக்கத்தில் மூழ்கினர்.(45)
கண்களுக்கு இனியவனும், அழகிய மங்கையின் கன்னங்களைப் போன்ற வெண்ணல்லிமலர்களின் {ஆம்பல் மலர்களின்} தலைவனுமான சந்திரன், இந்திரனால் ஆளப்படும் திசையை {கிழக்கை} அலங்கரித்தபடியே உதித்தான்[4].(46) உண்மையில், உதய மலைகளின் சிங்கம் ஒன்றைப் போல, பிரகாசமான மஞ்சள் பிடரிமயிர்களுடன் கூடிய தன் கதிர்களை, கிழக்கில் உள்ள தன் குகையில் இருந்து வெளியிட்ட அவன் {சந்திரன்}, யானைகளின் பெருங்கூட்டத்திற்கு ஒப்பான அந்த இரவின் அடர்த்தியான இருளைத் துண்டுகளாகக் கிழித்தெறிந்தான்[5].(47) மகாதேவனுடைய {சிவனுடைய} சிறப்புமிக்கக் காளையின் உடலைப் போன்ற பிரகாசமானவையும், காமனின் வில்லைப் போன்ற ஒளி பொருந்தியவையும், நாணமிக்க மணப்பெண்ணின் உதட்டுப் புன்னகையைப் போல அழகானவையுமான (உலகில் உள்ள) அல்லிக்கூட்டங்கள் அனைத்திற்கும் தலைவன் {சந்திரன்} ஆகாயத்தில் அப்போது மலர்ந்தான்.(48)அப்போது, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தெய்வீகத் தலைவன் {சந்திரன்}, தன் பிரகாசமான கதிர்களைச் சுற்றிலும் பொழிந்தபடி சிவப்பாகத் தன்னை வெளிக்காட்டினான்.(49) உண்மையில், அதன் பிறகு சந்திரன், தங்கத்தின் காந்திக்கு ஒப்பானதும் நெடுந்தொலைவை அடைவதுமான பிரகாசமான ஒளிவட்டத்தைப் படிப்படியாக வெளியிட்டான்.(50) அப்போது அந்த ஒளிக்கோளின் கதிர்கள் தங்கள் காந்தியால் இருளை விலக்கி, மெதுவாக ஆகாயத்திலும், பூமியிலும், திசைப்பகுதிகள் அனைத்திலும் தங்களை மெதுவாகப் பரப்பிக் கொண்டன.(51) எனவே விரைவில் உலகம் ஒளியூட்டப்பட்டது. அனைத்தையும் மறைத்துவைத்திருந்த சொல்லப்பட முடியாத இருள் வேகமாக விலகியது.(52)
இப்படிக் கிட்டத்தட்ட பகல்வெளிச்சத்தைப் போலச் சந்திரனால் உலகம் ஒளியூட்டப்பட்டபோது [6], (போர் அமாவாசையில் தொடங்கியது… 14 நாளாயிற்று…. இவ்விரவு பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும்.)இரவில் உலவும் விலங்குகளில் சில தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தன; சில ஒதுங்கிச் சென்றன.(53) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரனின் கதிர்களால் விழிப்படைந்த அந்தப் படையினர், சூரியனின் கதிர்களால் விரிந்த தாமரைக்கூட்டங்களைப் போல (உயிர்ப்புடன்) மலர்ந்தனர்.(54) உண்மையில், சந்திரன் உதிக்கும்போது, ஆர்ப்பரிக்கும் அலைகளால் பொங்கும் கடலைப் போல அந்த ஒளிக்கோளின் {சந்திரனின்} உதயத்தால் அந்தக் கடல் போன்ற துருப்புகள் விழிப்பையடைந்தன.(55) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மக்கள் தொகையை அழிப்பதற்காகச் சொர்க்கத்தை அடைய விரும்பிய மனிதர்களுக்கு இடையில் பூமியில் மீண்டும் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(56)
“அர்ஜுனன் களைத்தான் என நினைத்தாயோ?” என்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 185-துரோணரை அணுகிய துரியோதனன், தகாத நேரத்தில் பாண்டவப் படையிடம் அவர் காட்டும் கருணையைக் கோபத்துடன் கண்டிப்பது; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகத் துரோணர் உறுதி கூறுவது; அர்ஜுனனின் வலிமையையும், ஆற்றலின் அளவையும் துரியோதனனுக்கு விளக்கிய துரோணர்; கோபமுற்ற துரியோதனன் அர்ஜுனனைத் தானே கொல்லப்போவதாகச் சொல்வது; துரியோதனனைப் பரிகசித்து, சகுனியைக் கேலி செய்த துரோணர், அஞ்சாமல் அர்ஜுனனுடன் மோதி அவனால் கொல்லப்பட்டுப் புகழை அடையும்படி துரியோதனனிடம் சொன்னது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நேரத்தில், கோபத்தின் ஆதிக்கத்தில் இருந்த துரியோதனன், துரோணரை அணுகி அவரது மகிழ்ச்சியை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், அவரது கோபத்தைத் தூண்டவும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1) துரியோதனன், “இலக்கில் துல்லியமான நம் எதிரிகள் உற்சாகமற்றவர்களாக, கடுமையான உழைப்பால் களைத்தவர்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் கருணையும் காட்டப்பட்டிருக்கக்கூடாது.(2) உமக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியதால், அவர்களை அப்படியே விட்டு நாம் அவர்களுக்குக் கருணை காட்டினோம். எனினும், களைத்துப் போயிருந்த பாண்டவர்கள் (ஓய்வெடுத்த பிறகு) இப்போது வலிமையடைந்திருக்கின்றனர்.(3) நம்மைப் பொறுத்தவரை, அனைத்து வகையிலும் நம் சக்தியையும், பலத்தையும் தற்போது நாம் இழந்து வருகிறோம். பாண்டவர்களோ, உம்மால் பாதுகாக்கப்பட்டு இடையூறின்றிச் செழிப்பை ஈட்டுகிறார்கள்.(4) தெய்வீகமான ஆயுதங்கள் அனைத்தும், பிரம்மனுக்கு உரியவை {ஆயுதங்கள்} அனைத்தும் உம்மிடம் இருக்கின்றன.(5) பாண்டவர்களோ, நாங்களோ, உலகின் வேறு எந்த வில்லாளியோ போரில் ஈடுபடும் உமக்கு ஈடாகமாட்டார்கள் என்று நான் உண்மையாகச் சொல்கிறேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {துரோணரே}, நீர் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவராவீர். உமது தெய்வீக ஆயுதங்களின் மூலம் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் அடங்கிய (மூன்று) உலகங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவர் நீர் என்பதில் ஐயமில்லை.(7) பாண்டவர்கள் அனைவரும் உம்மைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், அவர்களை உமது சீடர்களாக நினைவுகூர்ந்தோ, ஒரு வேளை என் தீப்பேற்றாலோ அவர்களை நீர் மன்னிக்கிறீர் {பொறுத்துக் கொள்கிறீர்}” என்றான் {துரியோதனன்}.(8)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி உமது மகனால் {துரியோதனனால்} கண்டிக்கப்பட்டுக் கோபப்படுத்தப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(9) “கிழவனே என்றாலும், ஓ! துரியோதனா, நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தி இன்னும் போரில் முயன்று கொண்டே இருக்கிறேன். இம்மனிதர்கள் அனைவரும் ஆயுதங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானோ அவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறேன். வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், இம்மனிதர்களை நான் கொன்றேன் என்றால், {அதைவிட} நான் செய்வதற்கு வேறு எந்த இழிசெயலும் இருக்காது. எனினும், என் மனத்தில் எது இருக்கிறதோ, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, அது நல்லதோ, அல்லதோ உன் ஆணையின் பேரில் அதை நான் சாதிப்பேன்.(10,11) அது வேறுவகையாகாது. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றபிறகே நான் என் கவசத்தைக் களைவேன். இதை நான் உனக்கு உண்மையாகவே உறுதியளிக்கிறேன்.
குந்தியின் மகனான அர்ஜுனன் போரில் களைப்படைந்துவிட்டான் என்றா நீ நினைக்கிறாய்?(12,13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கௌரவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} உண்மையான ஆற்றலை என்னிடம் கேட்பாயாக. சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கோபம் தூண்டப்பட்டால், கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, ராட்சசர்களாலோ கூட அவனை {அவனது சக்தியைத்} தாங்கிக் கொள்ள முடியாது. காண்டவத்தில் {காண்டவன் என்ற காட்டில்} அவன் தேவர்களின் தெய்வீகத் தலைவனிடமே {இந்திரனிடமே} மோதியிருக்கிறான்.(14,15) அந்தச் சிறப்புமிக்க அர்ஜுனன், ஆயுதங்களைப் பொழிந்து கொண்டிருந்தவனான இந்திரனையே தன் கணைகளால் கலங்கடித்திருக்கிறான். யக்ஷர்களும், நாகர்களும், தைத்தியர்களும், தங்கள் வலிமையில் செருக்குமிக்கோர் பிறர் அனைவரும் அந்த மனிதர்களில் முதன்மையானவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர்.(16) அதுவும் நீ அறிந்ததே.
பசுக்களைக் கணக்கெடுக்கும் நிகழ்வின் {கோஷ யாத்திரையின்} போது, சித்திரசேனனின் தலைமையிலான கந்தர்வர்களும், பிறரும் அவனால் வெல்லப்பட்டனர்.(17) கந்தர்வர்களால் நீ கடத்தப்பட்ட போதும், அந்த உறுதிமிக்க வில்லாளியே {அர்ஜுனனே} உன்னை மீட்டான். தேவர்களின் எதிரிகளும், போரில் தேவர்களாலேயே கொல்லப்பட முடியாதவர்களுமான நிவாதகவசர்களும், அந்த வீரனால் வெல்லப்பட்டனர். ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரக்கணக்கான தானவர்களும், அந்த மனிதப் புலியால் வெல்லப்பட்டனர். அப்படியிருக்கையில் மனிதர்களால் எவ்வாறு அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நிற்க முடியும்? ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் படைகள் எவ்வளவுதான் வீரமாக முயன்றாலும் அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அழிவடைந்ததை உன் கண்களாலேயே நீயும் கண்டிருக்கிறாய்” என்றார் {துரோணர்}.(18-20)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்த துரோணரிடம் கோபம் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை மீண்டும் சொன்னான்:(21) “நானும், துச்சாசனன், கர்ணன், என் தாய்மாமன் சகுனி ஆகியோரும் சேர்ந்து இந்தப் பாரதப் படையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு (அதில் ஒன்றை எங்களுடன் வைத்துக் கொண்டு), இன்றைய போரில் அர்ஜுனனைக் கொல்வோம்” என்றான் {துரியோதனன்}.(22)
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} சிரித்துக் கொண்டே அந்த மன்னனின் {துரியோதனனின்} பேச்சை அங்கீகரித்து, “உனக்கு என் ஆசிகள்.(23) க்ஷத்திரியர்களில் காளையும், கொல்லப்பட முடியாதவனும், சக்தியால் சுடர்விட்டெரியும் வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்லவல்ல க்ஷத்திரியன் எவன் இருக்கிறான்?(24) கருவூலங்களின் தலைவனோ {குபேரனோ}, இந்திரனோ, யமனோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ கூட ஆயுதம்தரித்த அர்ஜுனனைக் கொல்ல முடியாது.(25) ஓ! பாரதா {துரியோதனா}, மூடர்கள் மட்டுமே நீ சொன்னது போன்ற வார்த்தைகளைச் சொல்வார்கள். போரில் அர்ஜுனனுடன் மோதிய பிறகு வீட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்பக்கூடியவன் எவன் இருக்கிறான்?(26)
உன்னைப் பொருத்தவரை, நீயொரு பாவி, கொடூரன் மற்றும் அனைவரையும் சந்தேகப்படுபவன். உன் நன்மையில் ஈடுபடுவோரையும் இது போல நிந்திக்க எப்போதும் நீ தயாராகவே இருக்கிறாய்.(27) உன் பொருட்டுக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} எதிர்கொள்ள, நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக. நீயோ நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியன். போரிடவும் முயல்கிறாய்.(28) குற்றமிழைக்காத இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் நீ ஏன் கொல்லச் செய்கிறாய்? இந்தப் பகைமைக்கு நீயே ஆணிவேராவாய். எனவே, நீயே அர்ஜுனனை எதிர்த்துச் செல்வாயாக.(29)
இந்த உனது தாய்மாமனோ {சகுனியோ}, ஞானம் கொண்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமாவான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, சூதுக்கு அடிமையான இவன் {சகுனி} போரில் அர்ஜுனனை எதிர்த்துச் செல்லட்டும்.(30) பகடையில் வல்லவனும், வஞ்சகம் கொண்டவனும், சூதுக்கு அடிமையானவனும், தந்திரம் மற்றும் வஞ்சங்களை நன்கு பழகியவனும், வஞ்சிக்கும் வழிகளை நன்கறிந்தவனுமான இந்தச் சூதாடிதான் {சகுனிதான்} போரில் பாண்டவர்களை வெல்லப் போகிறான்.(31)
கர்ணனை உன் துணையாகக் கொண்ட நீ, மூடத்தனத்தாலும், வெற்று அறிவினாலும் மகிழ்ச்சியாக அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொண்டே, திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வோம்” என்று சொன்னாய். இந்த உனது தற்புகழ்ச்சி ஒவ்வொரு சபைக்கூட்டத்திலும் கேட்கப்பட்டது. உன் சபதத்துக்கு உண்மையாக இருந்து அதை இப்போது சாதிப்பாயாக.(34)
அதோ உன் மரண எதிரியான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உன் எதிரிலேயே நிற்கிறான். ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பாயாக. ஜயனின் {அர்ஜுனனின்} கைகளால் நீ கொல்லப்பட்டால், அனைத்துப் புகழுக்கும் நீ தகுந்தவனாவாய்.(35) நீ ஈகை பயின்றவனாவாய். (நீ விரும்பிய அனைத்தையும் எப்போதும்) உண்ணவும் செய்திருக்கிறாய். நீ விரும்பிய அளவிற்குச் செல்வத்தையும் அடைந்திருக்கிறாய். உனக்குக் கடன்கள் ஏதுமில்லை. ஒருவன் {ஒரு மனிதன்} செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்திருக்கிறாய். அஞ்சாதே. பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} இப்போதே போரிடுவாயாக”[1] என்றார் {துரோணர்}.(36) அந்தப் போரில் துரோணர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். (பாரதப்) படையானது இரண்டாகப் பகுக்கப்பட்டது, போரும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(37)
துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 186-முழு ஆற்றலையும் பயன்படுத்தும்படி அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; துரோணர் போர்க்களத்தின் வடக்குத் திசைக்குச் செல்வது; துருபதனின் மூன்று பேரர்களைக் கொன்ற துரோணர்; துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்; துரோணரை அன்றே கொல்லச் சபதம் ஏற்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் கடுமையாகத் தாக்கிய பாஞ்சாலர்கள்; திருஷ்டத்யும்னனிடம் கோபத்துடன் பேசிய பீமசேனன்; துரோணரின் படைப்பிரிவைத் தாக்கிய பீமனும், திருஷ்டத்யும்னனும்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவின் நான்கில் மூன்று {முக்கால்} பாகம் கழிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது. இரு தரப்பினரும் மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்தவர்களாக இருந்தனர்.(1) விரைவில், சந்திரனின் காந்தியைக் குறைத்து, ஆகாயத்தைத் தாமிர வண்ணம் ஏற்கச் செய்தபடியே சூரியனின் தேரோட்டியான அருணன் தோன்றினான்.(2) வட்டமான தங்கத் தட்டுக்கு ஒப்பான சூரியனின் செங்கதிர்களால் கிழக்கு சிவப்பானது. பிறகு குரு மற்றும் பாண்டவப் படைகளின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் சுமக்கப்பட்டும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து கீழே இறங்கி, சூரியனை நோக்கிக் குவிந்த கரங்களுடன் நின்று (நாளின் முதல்) சந்திப்பொழுதுக்கான தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர்[1].(4) இரண்டாகப் பகுக்கப்பட்ட குருபடையானது, துரோணருடனும், அவருக்கு முன்பு நின்ற துரியோதனனுடனும், சோமகர்கள், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்றது.(5)குரு படையானது இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “உன் எதிரிகளை உனக்கு இடப்பக்கமாகக் கொண்டு, (துரோணரால் தலைமை தாங்கப்பட்ட) இந்தப் படைப்பிரிவை உனக்கு வலப்பக்கத்தில் கொள்வாயாக” {என்றான்}.(6) குருக்களைக் குறித்த மாதவனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அந்த இரு வலிமைமிக்க வில்லாளிகளின் இடது பக்கமாக நகர்ந்து சென்றான்[2].(7) கிருஷ்ணனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பீமசேனன், போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8) பீமசேனன், “ஓ! அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, இந்த என் வார்த்தைகளைக் கேட்பாயாக. எந்த நோக்கத்திற்காக க்ஷத்திரியப் பெண்கள் மகன்களை ஈன்றெடுக்கிறார்களோ, அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது.(9) இத்தகு நேரத்தில் நீ செழிப்பை வெல்ல முயலவில்லையெனில், மெய்யான பாதகனைப் போலவே அற்பமாகச் செயல்பட்டவனாவாய்.(10) உன் ஆற்றலை வெளிப்படுத்தி, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, செழிப்புக்கும், அறத்திற்கும், புகழுக்கும் நீ பட்டிருக்கும் கடனைச் செலுத்துவாயாக. ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, இந்தப் படைப்பிரிவை உனது வலப்பக்கத்தில் கொண்டு பிளப்பாயாக” என்றான்.(11)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப் பீமனாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, துரோணரையும், கர்ணனையும் விஞ்சி சுற்றிலும் இருந்த எதிரிகளைத் தடுக்கத் தொடங்கினான்.(12) (குருக்கள் மத்தியில் உள்ள) க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தினாலும், காட்டுத்தீயைப் போலத் தன் எதிரிகளில் முதன்மையானோரை எரித்தபடியே முன்னேறி வந்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்குப்பிடிப்பதில் தவறினார்கள். அப்போது, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர்,(13,14) குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கணைமாரியால் மறைத்தனர். அவ்வீரர்கள் அனைவரின் ஆயுதங்களைக் கலங்கடித்தவனும், ஆயுதங்களில் நன்கு திறன் பெற்றவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பதிலுக்குத்) தன் கணைகளால் அவர்களை மறைத்தான். தன் ஆயுதங்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைக் குறி பார்த்தவனும், (அவை யாவையும் இப்படிக் கலங்கடித்தவனும்), பெரும் கரநளினம் கொண்டவனும், தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான அர்ஜுனன்,(15,16) பத்துக் கூர்முனைக் கணைகளால் அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.
அப்போது ஆகாயமானது புழுதியால் மறைக்கப்பட்டது. அடர்த்தியான கணைமாரி பொழிந்தது. இருள் சூழ்ந்தது, உரத்த பயங்கர ஆரவாரமும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலை இருக்கையில், ஆகாயத்தையோ, பூமியையோ, திசைகளின் புள்ளிகளையோ அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை.(17,18) புழுதியால் மலைப்படைந்த துருப்புகள் அனைத்தும் குருடாகின. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியாலோ, நம்மாலோ, ஒருவரையொருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(19) இக்காரணத்தால் அந்த மன்னர்கள் ஊகத்தையும், அவர்கள் உச்சரித்த பெயர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு போரிடத் தொடங்கினர். தங்கள் தேர்களை இழந்த தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதி, ஒழுங்குகள் அனைத்தையும் இழந்து, குழம்பிய திரளாக மாறினர். தங்கள் குதிரைகளும், சாரதிகளும் கொல்லப்பட்ட அவர்களில் பலர், செயலின்மையை அடைந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு மிகவும் அச்சத்திலிருப்பவர்களாகத் தெரிந்தனர். உயிரையிழந்த சாரதிகளோடு கூடிய கொல்லப்பட்ட குதிரைகள், மலைச்சாரல்களில் படர்ந்து கிடப்பன போலக் கொல்லப்பட்ட யானைகளின் மீது கிடப்பது காணப்பட்டது.
அப்போது துரோணர், அந்தப் போரில் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கேயே தன் நிலையை ஏற்று, புகையற்ற நெருப்புக்கு ஒப்பாகக் காணப்பட்டார். அந்தப் போரில் அவர் வடக்கு நோக்கி நகர்ந்ததைக் கண்ட பாண்டவத் துருப்புகள்,(20-24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கின. உண்மையில், பிரகாசமானவரும், அழகானவரும், சக்தியால் சுடர்விடுபவருமான துரோணரைக் கண்டு அஞ்சிய எதிரிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒளியிழந்து களத்தில் நடுங்கத் தொடங்கினர். எதிரிப் படையைப் போருக்கு அழைக்கையில், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த அவரைக் கண்ட எதிரிகள்(25,26) வாசவனை {இந்திரனை} வெல்வதில் நம்பிக்கையற்ற தானவர்களைப் போல அவரை வெல்வதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களில் சிலர் முற்றாக உற்சாகமிழந்தனர், சக்தி கொண்ட சிலர் கோபத்தால் தூண்டப்பட்டனர்.(27) சிலர் ஆச்சரியத்தால் நிறைந்தனர், சிலரோ (அந்த அறைகூவலை) பொறுத்துக் கொள்ள முடியாதவர்களானார்கள். சில மன்னர்கள் தங்கள் கைகளைப் பிசைந்தனர்,(28) சினத்தால் புலனுணர்வை இழந்த சிலரோ தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களைச் சுழற்றினர், சிலரோ தங்கள் கரங்களை {தோள்களைத்} தேய்த்துக் கொண்டனர்.(29) பெரும் சக்தியும், முழுதும் கட்டுப்பட்ட ஆன்மாவும் கொண்ட சிலர் துரோணரை எதிர்த்து விரைந்தனர். குறிப்பாகத் துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வலியால் துன்புற்றாலும், போரில் மோதுவதைத் தொடர்ந்தனர்.
அப்போது அந்தப் போரில், களத்தில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவரும், வெல்லப்பட முடியாத போர்வீரரருமான துரோணரை எதிர்த்து, துருபதனும், விராடனும் முன்னேறினர். பிறகு ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் மூன்று பேரர்களும்,(31,32) வலிமைமிக்க வில்லாளிகளான சேதிகளும், அம்மோதலில் துரோணரை எதிர்த்து முன்னேறினர். துரோணர், மூன்று கூரிய கணைகளைக் கொண்டு துருபதனின் மூன்று பேரர்களுடைய உயிரை எடுத்தார். அந்த இளவரசர்களும் உயிரை இழந்து பூமியில் விழுந்தனர். அடுத்ததாக அந்தப் போரில் சேதிகள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களையும் துரோணர் வென்றார்.(33,34) பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மத்ஸ்யர்கள் அனைவரையும் வென்றார். அப்போது கோபத்தால் நிறைந்த துருபதனும், விராடனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மீது கணைமாரியை ஏவினர். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்தக் கணைமாரியைக் கலங்கடித்து,(35,36) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தார்.
துரோணரால் மறைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், சினத்தால் வெறிகொண்டு, அந்தப் போர்க்களத்தில் தங்கள் கணைகளால் அவரைத் துளைக்கத் தொடங்கினர். பிறகு துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து, பழிதீர்க்க விரும்பி,(37,38) அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள்} இரண்டைக் கொண்டு, தன் எதிராளிகள் இருவரின் விற்களையும் வெட்டினார். அப்போது கோபத்தால் நிறைந்த விராடன், அம்மோதலில் துரோணரைக் கொல்ல விரும்பி, பத்து வேல்களையும் {தோமரங்களையும்}, பத்து கணைகளையும் ஏவினான். கோபத்தில் இருந்த துருபதனும், இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான ஒரு பயங்கர ஈட்டியை துரோணரின் தேர்மீது வீசினான். பெரும் எண்ணிக்கையிலானவையும், கூரியவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகள் {பல்லங்கள்} பலவற்றால் (விராடனின்) அந்தப் பத்து வேல்களை வெட்டிய துரோணர்,(39-41) தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த (துருபதனின்) அந்த ஈட்டியைக் குறிப்பிட்ட சில கணைகளைக் கொண்டு வெட்டினார். பிறகு எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு,(42) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் யமனுலகு அனுப்பினார்.
விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் வீழ்ந்து, கைகேயர்கள்,(43) சேதிகள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டு, துருபதனின் பேரர்களான அந்த மூன்று வீரர்களும் வீழ்ந்ததும்,(44) துரோணரின் அந்தச் சாதனைகளைக் கண்ட உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், சினத்தாலும், துயரால் நிறைந்து, தேர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்படிச் சொல்லி உறுதியேற்றான்.(45) அவன் {திருஷ்டத்யும்னன்}, “துரோணர் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்பித்தாலோ, என்னை வீழ்த்துவதில் அவர் வென்றாலோ, என் அறச் செயல்கள் அனைத்தின் தகுதிகளையும், என் க்ஷத்திரிய மற்றும் பிரம்ம சக்திகளையும் நான் இழப்பேனாக” என்றான்[3].(46) வில்லாளிகள் அனைவருக்கு மத்தியிலும் இந்தச் சபதத்தைச் செய்தவனும், பகைவர்களைக் கொல்லும் வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் சொந்தப் படையால் ஆதரிக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்து முன்னேறினான்.(47). பிறகு ஒரு பக்கத்தில் இருந்து பாஞ்சாலர்களும், மறு பக்கத்தில் இருந்து அர்ஜுனனும் துரோணரைத் தாக்கத் தொடங்கினர். (அங்கிருந்த) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரும்,(48) துரியோதனனுடன் பிறந்த அவனது தம்பிகளும் தங்கள் தேர்வுக்கேற்ப போரில் துரோணரைப் பாதுகாக்கத் தொடங்கினர். இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் போரில் இப்படித் துரோணர் பாதுகாக்கப்பட்டபோது,(49) மிகத் தீவிரமாகப் போராடினாலும் பாஞ்சாலர்களால் அவரைப் {துரோணரைப்} பார்க்கக்கூட முடியவில்லை.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனிடம் மிகவும் கோபமடைந்த அந்தப் பாண்டுவின் மகன் பீமசேனன், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனை இந்தக் கடும் வார்த்தைகளால் துளைத்தான்.(50) பீமசேனன், “க்ஷத்திரியன் என்று கருதப்படுபவனும், துருபதன் குலத்தில் பிறந்தவனும், ஆயுதங்களின் அறிவைக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான எந்த மனிதன்தான் தன் எதிரே நிலைகொண்டிருக்கும் தன் எதிரியை இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்?(51) தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்டவனும், மன்னர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சபதத்தை ஏற்றவனுமான எந்த மனிதன்தான் இப்படித் தன் எதிரியை அலட்சியம் செய்வான்?(52) தன் சக்தியால் பெருகும் நெருப்பைப் போல அதோ துரோணர் நின்று கொண்டிருக்கிறார். உண்மையில், வில்லையும் கணைகளையும் எரிபொருளாக {விறகாகக்} கொண்ட அவர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கிறார்.(53) விரைவில் அவர் பாண்டவப் படையை அழித்துவிடுவார். (பார்வையாளனாக மட்டும்) நீ நின்று கொண்டே, என் அருஞ்செயலைப் பார்ப்பாயாக. துரோணரை எதிர்த்து நானே செல்வேன்” என்றான் {பீமன்}.(54)
இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, துரோணரின் படைப்பிரிவுக்குள் ஊடுருவி, தன் வில்லை முழுதாக வளைத்து, கணைகளை ஏவி, அந்தப் படையைப் பீடித்து, முறியடிக்கத் தொடங்கினான்.(55) பிறகு பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும், அந்தப் பெரும்படைக்குள் ஊடுருவி துரோணருடன் போரில் ஈடுபட்டான். அந்தப் போர் மூர்க்கமடைந்தது.(56) அந்த நாளின் சூரிய உதயத்தின் போது நடந்த இந்த மோதலானது, இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு, கேள்விப்படாத அளவுக்குக் கடுமையானதாக இருந்தது.(57) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தன. உடல்கொண்ட உயிரினங்கள் உயிரை இழந்து களமெங்கும் சிதறிக் கிடந்தன.(58) களத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்ற சிலர், வழியிலேயே பிறரால் தாக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடும்போது, அவர்களது முதுகுகளும் சிலரின் விலாப்புறங்களும் தாக்கப்பட்டன.(59) இயல்பான அம்மோதல் இப்படிக் கடுமையாகவே தொடர்ந்தது. எனினும், விரைவில் காலைச் சூரியன் உதித்தான் [4]” {என்றான் சஞ்சயன்}.(60)
நகுலனைப் புறமுதுகிடச் செய்த துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 187-துரோணரும், அர்ஜுனனும் தங்கள் தங்கள் படைகளின் பாதுகாவலர்களாகத் திகழ்வது; துரியோதனன் நகுலனுடனும், கர்ணன் பீமனுடனும், துரோணர் அர்ஜுனனுடனும், துச்சாசனன் சகாதேவனுடனும் மோதுவது; நகுலனை வீழ்த்திய துரியோதனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் கவசம்பூண்ட போர்வீரர்கள், காலையில் உதித்த ஆயிரங்கதிரோனான ஆதித்யனை {சூரியனை} வணங்கினார்கள்.(1) புடம்போட்ட தங்கம்போலப் பிரகாசமான காந்தியுடன் கூடிய அந்த ஆயிரங்கதிர் ஒளிக்கோள் உதித்த போது, உலகம் ஒளியூட்டப்பட்டு, மீண்டும் போர் தொடங்கியது.(2) சூரிய உதயத்திற்கு முன்னர், ஒருவரோடொருவர் மோதிய அதே படைவீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருவரோடொருவர் போரிட்டனர்.(3) குதிரைவீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் குதிரைவீரர்களோடும், காலாட்படைவீரர்கள் யானைகளோடும், குதிரை வீரர்கள் குதிரைவீரர்களோடும், காலாட்படையினர், காலாட்படையினரோடும் போரிட்டனர்.(4) மேலும் ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும் போரிட்டனர். சில நேரங்களில் சேர்ந்தும், சில நேரங்களில் தனித்தனியாகவும் அந்தப் போரில் போர்வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர்.(5)
இரவில் மூர்க்கமாகப் போரிட்ட பலர், உழைப்பால் களைத்து, பசியாலும், தாகத்தாலும் பலவீனமடைந்து தங்கள் புலன்களை இழந்தவர்களானார்கள்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சங்குகள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்களாலும், யானைகளின் பிளிறலாலும், பலமாக வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளாலும் உண்டான ஆரவாரமானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கங்களையே எட்டின. விரைந்து செல்லும் காலாட்படை, ஆயுதங்களின் பாய்ச்சல், குதிரைகளின் கனைப்பொலிகள், உருளும் தேர்கள், கூச்சலிட்டு முழங்கும் போர்வீரர்கள் ஆகியோரால் உண்டாக்கப்பட்ட ஒலியானது மகத்தானதாக இருந்தது.(7-9) ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்த அந்தப் பேரொலி, சொர்க்கங்களையே எட்டின. விழுந்து கொண்டிருப்பவர்களும், விழுந்துவிட்டவர்களுமான காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியோரின் முனகல்களும், வலியால் உண்டான ஓலங்களும், அக்களத்தில் கேட்பதற்குப் பரிதாபமாகவும், பெரும் ஒலியோடும் இருந்தது.(10,11) அந்த மோதல் இயல்பானதாக இருந்த போதே, ஒருவரையொருவர் கொன்று கொண்ட இரு தரப்பும் தங்கள் சொந்த மனிதர்களையும், விலங்குகளையும் கூடக் கொன்றன.(12)
வீரர்களின் கைகளில் இருந்து போர்வீரர்கள் மற்றும் யானைகளின் மீது வீசப்பட்ட வாள்களின் குவியலானது, சலவை செய்யும் இடத்தில் குவிந்து கிடக்கும் துணிகளுக்கு ஒப்பாகக் களத்தில் காட்சியளித்தது.(13) வீரர்களின் கைகளில் உயர்த்தி வீசப்பட்ட வாள்களின் ஒலியானது துணிகளைச் சலவை செய்ய அடித்துத் துவைக்கும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது.(14) வாள்கள், கத்திகள், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிய அந்த மோதலின் இயல்பு பயங்கரத்தை அடைந்தது.(15) பிறகு வீரப்போராளிகள் இறந்தோரின் உலகங்களை நோக்கிப் பாயும் ஆறு ஒன்றை அங்கே உண்டாக்கினார்கள். யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதிகள் அதன் நீரோட்டமாக அமைந்தன. ஆயுதங்கள் அதன் அபரிமிதமான மீன்களாகின. குருதியாலும், சதையாலும் அது சகதியாக இருந்தது. துயர் மற்றும் வலி ஆகியவற்றால் எழுந்த ஓலங்கள் அதன் முழக்கங்களாக அமைந்தன. கொடிகளும், துணிகளும் அதன் {அந்த ஆற்றின்} நுரைகளாகின.(16,17) கணைகள் மற்றும் ஈட்டிகளால் பீடிக்கப்பட்டு, (முந்தைய) இரவைக் கடின உழைப்பில் கழித்ததால் களைப்படைந்து, மிகவும் பலவீனமடைந்த யானைகளும், குதிரைகளும், முற்றிலும் அங்கங்கள் அசையாத நிலையில் களத்தில் நின்று கொண்டிருந்தன.(18)
(அழகான தன்மைகள் கொண்ட) தங்கள் கரங்களுடனும், தங்கள் அழகிய கவசங்களுடனும், அழகிய காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் கூடியவர்களான போர்வீரர்கள், போர்க்கருவிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்[1].(19) அந்நேரத்தில், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியவை, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர் ஆகியோரின் விளைவால் களமெங்கும் தேர் செல்வதற்கான பாதையேதும் இருக்கவில்லை. கணைகளால் பீடிக்கப்பட்டவையும், நல்ல இனத்தில் பிறந்தவையும், திறன் மிகுந்தவையும், (அளவு மற்றும் பலத்தில்) யானைகளுக்கு ஒப்பானவையுமான குதிரைகள், பெரும் முயற்சியோடு உழைத்துக் களைத்ததால் பூமியில் புதைந்த சக்கரங்களைக் கொண்ட தங்கள் வாகனங்களை {தேர்களை} நடுக்கத்துடன் இழுத்துக் கொண்டிருந்தன. துரோணரையும், அர்ஜுனனையும் தவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடலுக்கு ஒப்பான அந்தப் பரந்த படை முழுவதும் கலக்கமடைந்து, பீடிக்கப்பட்டு, பயங்கரத்தை அடைந்திருந்தது. இந்த இருவரே தங்கள் தங்கள் தரப்புகளின் போர்வீரர்களுக்குப் புகலிடமாகவும், பாதுகாவலர்களாகவும் திகழ்ந்தனர்.(20-23) இவ்விருவருடன் மோதிய பிறர் யமலோகம் சென்றனர். அப்போது குருக்களின் அந்தப் பரந்த படை மிகவும் கலக்கமடைந்து, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாஞ்சாலர்களுடன் ஒன்றாகக் கலந்திருந்திருந்தன.
பூமியில் க்ஷத்திரியர்களின் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், சுடலையை {சுடுகாட்டைப்} போலத் தெரிந்ததுமான அந்தப் போர்க்களத்தில், ஒவ்வொருவரும் துருப்புகளுடன் கலந்து புழுதிமேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், ஓ !மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனோ, துரோணரோ அர்ஜுனனோ, யுதிஷ்டிரனோ,(24-26) பீமசேனனோ, இரட்டையரோ {நகுலன் மற்றும் சகாதேவனோ}, பாஞ்சால இளவரசனோ {திருஷ்டத்யும்னனோ}, சாத்யகியோ, துச்சாசனனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துரியோதனனோ, சுபலனின் மகனோ {சகுனியோ},(27) கிருபரோ, மத்ர ஆட்சியாளனோ {சல்லியனோ}, கிருதவர்மனோ, பிறரோ, நானோ, பூமியோ, திசைகளின் புள்ளிகளோ(28) அங்கே காணப்படவில்லை. கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடக்கையில் புழுதி மேகம் எழுந்த போது,(29) மீண்டும் இரவே வந்துவிட்டதென அனைவரும் நினைத்தனர். கௌரவர்களையோ, பாஞ்சாலர்களையோ, பாண்டவர்களையோ,(30) திசைப்புள்ளிகளையோ, ஆகாயத்தையோ பூமியையோ, சமமான, சமமற்ற பூமியையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை விரும்பிய போர்வீரர்கள், எதிரிகளையும், நண்பர்களையும், உண்மையில், தங்கள் கரங்களின் தீண்டலால் தாங்கள் காணக்கூடிய அனைவரையும் கொன்றனர். பூமியில் எழுந்த அந்தப் புழுதியானது, விரைவில் வந்த காற்றாலும், சிந்தப்பட்ட குருதியால் நனைந்ததாலும் விலகியது. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படைவீரர்கள் ஆகியோர்,(31-33) குருதியில் குளித்திருந்ததால், (தேவர்களின்) பாரிஜாத காட்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.
அப்போது, துரியோதனன், கர்ணன், துரோணர், துச்சாசனன்(34) ஆகிய நான்கு (கௌரவப்) போர்வீரர்களும், நான்கு பாண்டவப் போர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துரியோதனனும், அவனது தம்பிமாரும் இரட்டையருடன் (நகுலன் மற்றும் சகாதேவனுடன்) மோதினர்.(35) ராதையின் மகன் {கர்ணன்} விருகோதரனோடும் {பீமனோடும்}, அர்ஜுனன் பரத்வாஜர் மகனோடும் {துரோணரோடும்} போரிட்டுக் கொண்டிருந்தனர். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அனைத்துத் துருப்புகளும் அந்தப் பயங்கர மோதல்களைக் கண்டு கொண்டிருந்தன.(36) பல்வேறு இனிய பரிணாமங்களைச் செய்து காட்டிய தங்கள் அழகிய தேரில் ஏறி வந்தவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், கடுமையானவர்களுமான அந்த முதன்மையான தேர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட மோதலான அந்த அழகிய போரை (அமைதியாக இருந்த இரு படையின்) தேர்வீரர்கள் கண்டனர். பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், மிகத் தீவிரமாகப் போராடுபவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும்,(37,38) கோடையின் முடிவில் வரும் (மழைத்தாரைகளைப் பொழியும்) மேகங்களைப் போலக் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர். சூரியப் பிரகாசம் கொண்ட தங்கள் தேர்களில் ஏறி வந்த அந்த மனிதர்களில் காளையர்,(39) கூதிர்கால வானத்தில் கூடித் திரண்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து பழிதீர்க்க விரும்பிய போர்வீரர்களான(40) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், யானைக்கூட்டங்களின் மதங்கொண்ட தலைமை யானைகளைப் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் அறைகூவி அழைத்தபடியே விரைந்தனர்.(41)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அந்தப் போரில் அழியாததால், நேரம் வரும்வரை மரணம் நேராது என்பது உண்மையே[2].(42) வெட்டப்பட்ட கரங்கள், கால்கள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள், விற்கள், கணைகள், வேல்கள் {பராசங்கள்}, கத்திகள், போர்க்கோடரிகள், (பிற வகையிலான) கோடரிகள், நாளீகங்கள், கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, ஈட்டிகள், சூலங்கள், பல்வேறுவிதங்களிலான அழகிய கவசங்கள், உடைந்து போன அழகிய தேர்கள், கொல்லப்பட்ட யானைகள், நகரங்களைப் போலத் தெரியும் கொடிகளற்ற தேர்கள், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சாரதியற்றவையும், பெரும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவையுமான குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிவுமிக்கவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள், வீழ்ந்து கிடந்த சாமரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமணமிக்க மலர்மாலைகள், தங்கச் சங்கிலிகள், மகுடங்கள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், மார்பிலணியும் நகைகள், மார்புக்கவசங்கள், கழுத்துப்பட்டைகள், தலைப்பாகைகளை அலங்கரித்த ரத்தினங்கள் ஆகியன இறைந்து கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(43-49)
அப்போது, கோபத்தால் நிறைந்தவனும், பழிதீர்க்க விரும்பியவனுமான துரியோதனனுக்கும், அதே போன்ற உணர்ச்சிகளால் நிறைந்திருந்த நகுலனுக்கும் இடையில் மோதல் நேர்ந்தது.(50) அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடி உமது மகனை {துரியோதனனைத்} தனக்கு வலப்புறத்தில் நிறுத்தினான்[3]. அதன் பேரில் அவனுக்காக {நகுலனுக்காக} உரத்த ஆரவாரம் எழுந்தது.(51) கோபத்தில் இருந்த தன் தம்பியால் {நகுலனால்} வலப்புறத்தில் நிறுத்தப்பட்டவனும், உமது மகனுமான மன்னன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, அந்தப் பக்கத்தில் இருந்தே நகுலனை எதிர்த்து அற்புதமாகப் போரிட்டான்.(52) அதன்பேரில், பெரும் சக்தி கொண்டவனும், (தேரை நடத்திச் செல்வதில்) பல்வேறு வழிமுறைகளை அறிந்தவனுமான நகுலன், தன் வலப்புறத்தில் இருந்து, தன்னை எதிர்த்துக் கொண்டிருக்கும் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், கணைமாரிகளால் நகுலனைப் பீடித்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தடுத்த துரியோதனன், அவனை {நகுலனைப்} புறமுதுகிடச் செய்தான்.(53,54) (உமது மகனின்) அந்தச் சாதனையைத் துருப்புகள் அனைத்தும் மெச்சின. அப்போது நகுலன், உமது தீய ஆலோசனைகளால் உண்டான தன் துன்பங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து, “நில்லும், நிற்பீராக” என்று உமது மகனிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)
துரோணார்ஜுனப் போர்! – துரோண பர்வம் பகுதி – 188, 189-துச்சாசனனின் சாரதியைக் கொன்ற சகாதேவன்; சகாதேவனிடம் வீழும் நிலையை அடைந்த துச்சாசனன்; கர்ணன் குறுக்கிட்டது; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; நகுலனின் தேரில் ஏறிக் கொண்ட பீமன்; துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்தர்களும் முனிவர்களும் அந்த இரு போர்வீரர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் இயல்பு நிலையை அடைந்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, தன் தேரின் கடும் வேகத்தால் பூமியை நடுங்கச் செய்தபடி சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) எனினும், எதிரிகளை நசுக்குபவனான மாத்ரியின் மகன் {நகுலன்}, தன்னை எதிர்த்து வரும் எதிராளியின் சாரதியுடைய தலைப்பாகையுடன் கூடிய தலையை அகன்ற தலை கொண்ட கணை யொன்றால் {பல்லத்தால்} விரைவாக வெட்டினான்.(2) சகாதேவனால் சாதிக்கப்பட்ட இந்தச் செயல் வேகத்தால் துச்சாசனனோ, துருப்புகளில் ஏதுமோ சாரதியின் தலை வெட்டப்பட்டதை அறியவில்லை.(3) கடிவாளங்கள் எவராலும் இழுத்துப் பிடிக்கப்படாததால் குதிரைகள் தங்கள் விருப்பப்படி ஓடின. அப்போதுதான் துச்சாசனன் தன் சாரதி கொல்லப்பட்டதை அறியவந்தான்.(4) குதிரைகளை நடத்த அறிந்தவனான அந்த முதன்மையான தேர்வீரன் {துச்சாசனன்}, தானே அந்தப் போரில் தன் குதிரைகளை நடத்திக்கொண்டு, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டான்.(5) சாரதியற்ற தேரில் அந்தப் போரில் அச்சமில்லாமல் சென்ற அந்த அவனது {துச்சாசனனது} செயலை நண்பர்களும், எதிரிகளும் பாராட்டினர்.(6)
அப்போது சகாதேவன், அந்தக் குதிரைகளைக் கூரிய கணைகளால் துளைத்தான். அக்கணைகளால் பீடிக்கப்பட்ட அவை அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடின.(7) அவன் {துச்சாசனன்} கடிவாளங்களைப் பிடிப்பதற்காக வில்லைக் கீழே வைக்கவும், பிறகு வில்லைப் பயன்படுத்துவதற்காகக் கடிவாளத்தைக் கீழே வைக்கவும் செய்தான்.(8) அந்தச் சந்தர்ப்பங்களில் மாத்ரியின் மகன் {சகாதேவன்} கணைகளால் அவனை {துச்சாசனனை} மறைத்தான். அப்போது கர்ணன், உமது மகனை {துச்சாசனனைக்} காக்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான்.(9) அதன்பேரில் விருகோதரன் {பீமன்}, பெரும் கவனத்தோடு முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கர்ணனின் மார்பையும் கரங்களையும் துளைத்தான்.(10) தடியால் அடிபட்ட பாம்பு போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன், கூரிய கணைகளை ஏவியபடி பீமசேனனைத் தடுத்து நின்றான்.(11) அதன்பேரில், பீமனுக்கும், ராதையின் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு கடும்போர் நடைபெற்றது. அந்த இருவரும் காளைகளைப் போல முழங்கினர். அவ்விருவரின் கண்களும் (சினத்தால்) விரிந்திருந்தன.(12)
கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்துடன் ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே அவர்கள் விரைந்து சென்றனர். போரில் திளைப்பவர்களான அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நிலையை அடைந்தனர். ஒருவரை நோக்கி மற்றவர் கணைகளை எளிதாக ஏவமுடியாத அளவுக்கு அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். அதன்பேரில், கதாயுதப் போர் நிகழ்ந்தது. பீமசேனன் வேகமாகக் கர்ணனுடைய தேரின் கூபரத்தைத் தன் கதாயுதத்தால் நொறுக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனது} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனுடைய தேரின் மீது வீசினான். எனினும், அதைப் பீமன், தனது கதாயுதத்தால் நொறுக்கினான். பிறகு மீண்டும் ஒரு கனமான கதாயுத்தை எடுத்துக் கொண்ட பீமன், அஃதை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(13-16) கர்ணன், அழகிய சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு அந்தக் கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் தாக்கி, மீண்டும் இன்னும் பிற கணைகளால் தாக்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கதாயுதமானது, மந்திரங்களால் பீடிக்கப்பட்ட பாம்பைப் போலப் பீமனை நோக்கித் திரும்பியது. அந்தக் கதாயுதத்தின் எதிர்வீச்சால் பீமனின் பெரும் கொடிமரம் ஒடிந்து விழுந்தது.(17,18) அதே கதாயுதத்தினால் தாக்கப்பட்ட பீமனின் சாரதியும் உணர்வுகளை இழந்தான்.
பிறகு சினத்தால் வெறிக் கொண்ட பீமன், கர்ணன் மீதும்,(19) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {கர்ணனின்} கொடிமரம், வில் மற்றும் தோலுறை ஆகியவற்றின் மீதும் எட்டு கணைகளை ஏவினான். பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் கர்ணனின் கொடிமரம், வில் மற்றும் தோலுறைகளைப் பெரும் கவனத்தோடு அறுத்தான். பிறகு வெல்லப்படமுடியாததும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கரடியின் நிறத்தில் இருந்த பீமனின் குதிரைகளையும், அவனது {பீமனது} பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் வேகமாகக் கொன்றான்.(20-22) இப்படித் தனது தேருக்குத் தீங்கேற்பட்டதும், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், மலைச்சிகரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிங்கத்தைப் போல, நகுலனின் தேரில் வேகமமாகக் குதித்தான்.(23)
அதே வேளையில், தேர்வீரர்களில் முதன்மையானோரும், ஆசான் சீடனுமானோரும், ஆயுதங்களில் திறம் பெற்றோருமான துரோணரும், அர்ஜுனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்டு,(24) ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் நளினம், இலக்கில் உறுதி, தேர்களின் நகர்வுகள் ஆகியவற்றால் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் மலைப்படையச் செய்தனர்.(25) இதுவரை என்றும் நடக்காததைப் போல ஆசானுக்கும் {துரோணருக்கும்}, சீடனுக்குமிடையில் {அர்ஜுனனுக்கும்} நடந்த இதுபோன்றதொரு போரைக் கண்ட போர்வீரர்கள் பிறர், ஒருவரோடொருவர் போரிடுவதை நிறுத்தி நடுக்கத்தை அடைந்தனர்.(26) அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தேர்களின் அழகிய பரிணாமங்களை வெளிக்காட்டியபடியே அடுத்தவரைத் தன் வலப்புறத்தில் நிறுத்த விரும்பினர்[1].(27)
அங்கே இருந்த போர்வீரர்கள், அவர்களது ஆற்றலைக் கண்டு ஆச்சரியத்தால் நிரம்பினர். உண்மையில், துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் பெரும்போரானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓர் இறைச்சித் துண்டுக்காக வானில் மோதிக் கொள்ளும் இரண்டு பருந்துகளுக்கு ஒப்பாக இருந்தது. குந்தியின் மகனை {அர்ஜுனனை} வெல்வதற்காகத் துரோணரால் செய்யப்பட்ட சாதனைகள் அனைத்தும்,(28,29) அதே போன்ற சாதனைகளைச் செய்த அர்ஜுனனால் எதிர்க்கப்பட்டது. துரோணர், பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விஞ்சுவதில் தவறியபோது, ஆயுதங்கள் அனைத்தின் வழிமுறைகளை அறிந்த போர்வீரரான அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, ஐந்திரம், பாசுபதம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(30,31) அந்த ஆயுதங்கள் துரோணரின் வில்லில் இருந்து வெளிப்பட்டதும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை வேகமாக அழித்தான். இப்படித் தன் ஆயுதங்களை முறையாகத் தன் ஆயுதங்களால் அர்ஜுனன் அழித்தபோது,(32) தெய்வீக ஆயுதங்களில் வலிமைமிக்க ஓர் ஆயுதத்தைக் கொண்டு, துரோணர் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மறைத்தார். பார்த்தனை {அர்ஜுனனை} வெல்லும் விருப்பத்தால் பார்த்தன் மீது அதைத் துரோணர் ஏவினாலும், அவன் பதிலுக்குத் தாக்கி அதைக் கலங்கடித்தான். தன் ஆயுதங்கள் அனைத்தும், குறிப்பாக தெய்வீக ஆயுதங்களும் கூட அர்ஜுனனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், பின்னவனைத் {அர்ஜுனனைத்} தன் இதயத்தால் பாராட்டினார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, அர்ஜுனனைத் தன் சீடனாகக் கொண்டதன் விளைவால், இவ்வுலகில் ஆயுதங்களை அறிந்தோர் அனைவரைக் காட்டிலும் தம்மை மேன்மையானவராகக் கருதிக் கொண்டார். அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தடுக்கப்பட்ட துரோணர்,(33-36) தீவிரமாகப் போராடி, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாக (பதிலுக்கு) அர்ஜுனனைத் தடுத்தார்.
அப்போது, ஆயிரக்கணக்கான தேவர்களும், கந்தர்வர்களும்,(37) முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்களும் அனைத்துப் பக்கங்களிலும் தென்பட்டனர். (அவர்களும், அவர்களோடு கூடிய) அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோராலும்(38) நிறைந்திருந்த அந்த ஆகாயமானது, மேகங்கள் திரண்டு மீண்டும் இருண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. துரோணரையும், உயர் ஆன்ம பார்த்தனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத குரல் ஒன்று ஆகாயமெங்கும் மீண்டும் மீண்டும் கேட்டது. துரோணர் மற்றும் பார்த்தன் ஆகியோரால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக அனைத்துப் பக்கங்களும் ஒளியால் சுடர்விட்டு எரிந்த போது,(39,40) அங்கே இருந்த சித்தர்களும் முனிவர்களும், “இது மனிதப் போரோ, அசுரப்போரோ, ராட்சசப் போரோ, தெய்வீகப் போரோ, கந்தர்வப் போரோ அல்ல. உயர்வான பிரம்ம மோதலே இஃது என்பதில் ஐயமில்லை. இந்தப்போர் மிக அழகானது; ஆச்சரியகரமானது. இதைப் போன்ற ஒன்றை நாம் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(41-42) சில நேரங்களில் ஆசான் {துரோணர்} பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, சில நேரங்களில் பாண்டுவின் மகன் துரோணரையும் விஞ்சி நிற்கின்றனர். அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் எவனாலும் காண முடியாது.(43) ருத்ரன் தன்னையே இரு பாகங்களாகப் பகுத்துக் கொண்டு, தானே தன்னுடன் போரிட்டால், அஃது இது போன்ற நிகழ்வுக்கு ஒப்பாகலாம். இதற்கு ஒப்பாக வேறொரு நிகழ்வை வேறு எங்கும் காண முடியாது.(44) அறிவியலானது, ஒன்றாகத் திரண்டு ஆசானிடம் {துரோணரிடம்} இருக்கிறது. அறிவியலும், வழிமுறைகளும் {தொழில்நுட்பமும்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} உள்ளது.(45) இந்தப் போர்வீரர்களில் எவரையும் எந்த எதிரிகளாலும் போரில் எதிர்க்க முடியாது. இவ்விருவரும் விரும்பினால் தேவர்களுடன் கூடிய அண்டத்தையே இவர்களால் அழித்துவிட முடியும்” என்றனர்.(46) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் உயிரினங்கள் அனைத்தும், மனிதர்களில் காளையரான இவ்விருவரையும் கண்டு இவ்வார்த்தைகளைச் சொல்லின.(47)
அந்தப் போரில் உயர் ஆன்மத் துரோணர், பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள் அனைத்தையும் பீடித்தபடியே பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார்.(48) அதன் பேரில் மலைகள், நீர்நிலைகள், மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். கடுமையான காற்று வீசத்தொடங்கியது. கடல்கள் ஆர்ப்பரித்துப் பொங்கின.(49) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர் {துரோணர்}, ஆயுதத்தை உயர்த்திய போது, குரு மற்றும் பாண்டவப் படைகளின் போராளிகளும் அச்சமடைந்தனர்; இன்னும் பிற உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்தன.(50) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்ற வகையில் தனது பிரம்மாயுதத்தைக் கொண்டு அந்த ஆயுதத்தைக் கலங்கடித்ததால், இயற்கையின் கலக்கம் விரைவாகத் தணிந்தது.(51) இறுதியாக அவர்களில் எவராலும் தன் எதிராளியைத் தனிப்போரில் வெல்ல இயலாத போது, களத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தால் இரு படைகளுக்கும் இடையில் இயல்பான மோதலே நடந்தது.(52) துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் அந்தப் பயங்கரப் போர் (மேலும் இருபடைகளின் இயல்பான போரும்) நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(53) மேகத் திரள்களால் மறைக்கப்பட்டதைப்போல அடர்த்தியான கணை மழையால் ஆகாயம் மறைக்கப்பட்டது, வானுலாவும் உயிரினத்தாலும், அந்தப் பூதத்தின் {வானத்தின்} ஊடாக ஒரு பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. {ஆகாயத்தில் பறவையேதும் பறக்கவில்லை}” {என்றான் சஞ்சயன்}.(54)
சாத்யகி துரியோதன நட்பு! – துரோண பர்வம் பகுதி – 190-துச்சாசனனை வென்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட கிருதவர்மனும், அவனது மூன்று தம்பியரும்; துரோணரை நோக்கிச் சென்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் காக்க விரைந்த துரியோதனன்; துரியோதனனை நோக்கி விரைந்த சாத்யகி; சாத்யகியிடம் பேசிய துரியோதனன், தன்னைத்தானே பழித்துக் கொண்டது; சாத்யகியின் பதில்; துரியோதனனைப் பாதுகாக்க விரைந்த கர்ணன்; தேர்வீரர்களைக் காக்க தன் போர்வீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களும், குதிரைகள், யானைகள் ஆகியவையும் பயங்கரமாகக் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனுடன் துச்சாசனன் மோதினான்.(1) தன் தங்கத் தேரில் ஏறிவந்தவனும், துச்சாசனனின் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்டவனும், கோபத்துடன் கூடியவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துச்சாசனனின்} குதிரைகள் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} கணைகளால் மறைக்கப்பட்டதும், கொடியுடனும், சாரதியுடனும் கூடிய துச்சாசனனின் தேரானது விரைவில் கண்ணுக்குப் புலப்படாததாகியது.(3) அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்க அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} முன்பு நிற்க இயலாதவனானான்.(4) தன் கணைகளின் மூலம் துச்சாசனனைப் புறமுதுகிடச் செய்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மேலும் தன் கணைகளை இறைத்தபடியே அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.(5)
அந்த நேரத்தில், ஹிருதிகன் மகனான கிருதவர்மன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து காட்சியில் தோன்றி, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முயன்றான்.(6) எனினும், மனிதர்களில் காளையரான இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), சுடர்மிக்க நெருப்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்து சென்று, அவனைப் பாதுகாக்கத் தொடங்கினர்.(7) பிறகு வலிமையுடன் கூடிய அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சினத்தால் தூண்டப்பட்டு, மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(8) தூய ஆன்மாவும், தூய நடத்தையும் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, நேர்மையான வழிமுறைகளில் போரிட்டனர்.(9) களங்கமற்ற குலத்தில் தோன்றியவர்களும், களங்கமற்ற செயல்கள் மற்றும் பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள், சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரோடொருவர் நேர்மையாகப் போரிட்டனர்.(10)
அந்தப் போரில் நியாயமற்றதென்று ஏதுமில்லை, மேலும் நியாயமற்றதாகக் கருதப்பட்ட ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவுமில்லை. முள்பதித்த கணைகளையோ {கர்ணிகளையோ}, நாளீகங்கள் என்று அழைக்கப்பட்டவற்றையோ, நஞ்சூட்டப்பட்டவற்றையோ {லிப்தகங்களோ}, கொம்புகளால் செய்யபட்ட தலைகளைக் கொண்டவையோ {பஸ்திகமங்களையோ}, கூரிய பல தலைகள் கொண்டவற்றையோ {சூசிகளையோ, கபிசங்களையோ}, காளைகள் மற்றும் யானைகளின் எலும்புகளாலானவையோ {சூளிகளையோ}, இரு தலைகள் கொண்டவையோ {பலிசங்களையோ}, துருப்பிடித்த தலை கொண்டவையோ {யமிகளையோ}, நேராகச் செல்லாதவையோ {பாசகங்களையோ}, என இவற்றில் எதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை[1].(11,12) புகழையும், நேர்மையாகப் போரிடுவதால் கிடைக்கும் பேரருள் உலகங்களையும் வெல்ல விரும்பிய அவர்கள் யாவரும் எளிமையான, நியாயமான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.(13) உமது படையின் அந்த நான்கு போர்வீரர்களுக்கும் {கிருதவர்மன், அவனது மூன்று தம்பியர் ஆகியோருக்கும்}, பாண்டவத்தரப்பின் அந்த மூன்று பேருக்கும் {திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, நியாயமற்ற எதையும் கொண்டிருக்காவிடினும் மிகப் பயங்கரமானதாகவே இருந்தது[2].(14)அப்போது, ஆயுதப் பயன்பாட்டில் மிகுந்த வேகம் கொண்ட திருஷ்டத்யும்னன், துணிச்சல்மிக்கவர்களான உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இரட்டையரால் (நகுலனாலும், சகாதேவனாலும்) தடுக்கப்படுவதைக் கண்டு துரோணரை நோக்கிச் சென்றான்.(15) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தடுக்கப்பட்ட அந்த நான்கு போர்வீரர்களும், (தங்கள் வழியில் நிற்கும்) இரு மலைகளைத் தாக்கும் காற்றைப் போல முன்னவர்களுடன் மோதினார்கள்.(16) பெரும் தேர்வீரர்களான அந்த இரட்டையரில் ஒவ்வொருவரும், இரண்டு எதிராளிகளுடன் போரிட்டனர். அதே வேளையில், திருஷ்டத்யும்னன் துரோணரின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(17) வெல்லப்பட முடியாதவனான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரை எதிர்த்துச் செல்வதையும், (தன் படையின்) நான்கு வீரர்கள் இரட்டையருடன் போரிடுவதையும் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரனிடம்}, குருதியைக் குடிக்கும் கணைமாரியை இறைத்தபடியே அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். இதைக் கண்ட சாத்யகி, குரு மன்னனை {துரியோதனனை} வேகமாக அணுகினான்.(18,19) குரு மற்றும் மது குலங்களின் வழித்தோன்றல்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி, போரில் ஒருவரையொருவர் தாக்க விரும்பினர்.(20) குழந்தைப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் நடந்து கொண்ட விதங்களை மனதில் நினைத்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாகச் சிந்தித்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் புன்னகைத்தனர்.(21)
தன் நடத்தையை (மனதில்) பழித்துக் கொண்ட மன்னன் துரியோதனன், எப்போதும் தனது அன்புக்குரிய நண்பனான சாத்யகியிடம்,(22) “ஓ! நண்பா, கோபத்திற்கு ஐயோ!, பழிவுணர்ச்சிக்கு ஐயோ! {கோபத்தையும், பழி உணர்ச்சியையும் நிந்திக்க வேண்டும்}. நீ என் மீது உன் ஆயுதங்களைக் குறிவைப்பதாலும், நான் உன் மீது குறி வைப்பதாலும், ஓ! சிநி குலத்துக் காளையே {சாத்யகி}, க்ஷத்திரியத் தொழிலுக்கு ஐயோ!, வலிமை மற்றும் ஆற்றலுக்கும் ஐயோ! அந்நாட்களில் நீ எனக்கு உயிரினும் அன்புக்குரியவனாக இருந்தாய், நானும் உனக்கு அவ்வாறே இருந்தேன்.(23,24) ஐயோ, குழந்தைப் பருவத்தில் நீயும், நானும் நடந்து கொண்ட விதங்களும், செய்த செயல்களும் என் நினைவில் இருக்கின்றன. அவையாவும் போர்க்களத்தில் ஒன்றுமில்லாதவை ஆகினவே.(25) ஐயோ, ஓ !சாத்வத குலத்தோனே, இங்கே கோபம் மற்றும் பேராசையால் உந்தப்பட்டு, இன்று நாம் ஒருவரோடு ஒருவர் போரிட இருக்கிறோமே” என்றான் {துரியோதனன்}.
இந்த வார்த்தைகளைச் சொன்ன அவனிடம் {துரியோதனனிடம்}, சில கூரிய கணைகளை எடுத்துக் கொண்டே புன்னகைத்தவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனுமான சாத்யகி, “ஓ! இளவரசே {துரியோதனா}, முன்னர் நாம் ஒன்றாகக் கூடி விளையாடிய இடங்களைப் போல, ஓ! இளவரசே, இது சபையோ, நமது ஆசானின் வசிப்பிடமோ அல்ல” என்றான்.(26,27) துரியோதனன், “ஓ! சிநி குலத்தோனே {சாத்யகியே}, நம் குழந்தைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் எங்கே போயின? ஐயோ, இப்போதைய இந்தப் போரானது நம் மீது எவ்வாறு விழுந்தது? காலத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட முடியாதது என்பதாகவே தெரிகிறது.(28) (நாம் உந்தப்பட்டிருப்பதைப் போல) செல்வத்தின் மீது கொண்ட ஆசை என்ன பயனைத் தரப்போகிறது? எவ்வளவுதான் நாம் செல்வத்தைக் கொண்டிருந்தாலும், செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலேயே போரிடுவதற்கு நாம் இப்போது ஒன்று கூடியிருக்கிறோம்” என்றான்.{துரியோதனன்}.(29)
சஞ்சயன் சொன்னான், “இவ்வாறு சொன்ன மன்னன் துரியோதனனிடம் சாத்யகி, “இதுவே க்ஷத்திரியத் தொழில், அவர்கள் தங்கள் ஆசானுடன் கூடப் போரிட வேண்டியிருக்கிறது.(30) நான் உனது அன்புக்குரியவனாக இருந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, தாமதமேதும் செய்யாமல் என்னைக் கொல்வாயாக. ஓ! பாரத் குலத்தின் காளையே, உன் மூலமாக நான் நல்லோரின் உலகங்களை அடைவேன்.(31) உன் வலிமை மற்றும் ஆற்றல் அனைத்தையும் தாமதியாமல் வெளிப்படுத்துவாயாக. நண்பர்களுக்கிடையேயான இந்தப் பெரும் துயரைக் காண நான் விரும்பவில்லை” என்றான் {சாத்யகி}.(32)
இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)
அப்போது கோபத்தால் நிறைந்த துரியோதனன், தன் வில்லை முற்று முழுதாக வளைத்து, கூரிய கணைகளை ஏவி, வெல்லப்பட முடியாத சாத்யகியைத் துளைத்தான்.(36) சாத்யகியும், குரு இளவரசனை {துரியோதனனை} அந்தப் போரில் ஐம்பது கூரிய கணைகளால் விரைவில் துளைத்து, மீண்டும் இருபதாலும், பிறகு மீண்டும் பத்து கணைகளாலும் துளைத்தான்.(37) பிறகு அம்மோதலில் உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா, புன்னகைத்துக் கொண்டே, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து, முப்பது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான்.(38) பிறகு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தை} ஏவிய அவன் {துரியோதனன்}, கணை பொருத்தப்பட்டிருந்த சாத்யகியின் வில்லை இரண்டாக அறுத்தான். பெரும் கரநளினம் கொண்ட பின்னவன் {சாத்யகி} மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, உமது மகனின் மீது கணை மாரியை ஏவினான். துரியோதனனைக் கொல்லச் சென்ற அந்தக் கணைகளின் சரத்தைப் பின்னவன் {துரியோதனன்},(39,40) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் உரக்க முழங்கச் செய்யும்படி துண்டுகளாக வெட்டினான். பெரும் வேகத்தைக் கொண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் ஊறவைத்தவையும், முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று கணைகளால் சாத்யகியைப் பீடித்தான்.
அப்போது, துரியோதனனின் கணைகள் யாவற்றையும், அவற்றுடன் சேர்த்துக் கணை பொருத்தப்பட்ட அவனது {துரியோதனனின்} வில்லையும் சாத்யகி வேகமாக வெட்டினான்.(41,42) பிறகு அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தன் எதிராளியின் மீது கணைமாரியைப் பொழிந்தான். சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த துரியோதனன், ஓ! மன்னா, பெரும் துயரத்துடன் மற்றொரு தேரில் அடைக்கலம் தேடினான். சிறிது நேரம் இளைப்பாறி புத்துணர்வை அடைந்த உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் சாத்யகியை எதிர்த்துச் சென்று,(43,44) பின்னவனுடைய தேரின் மீது கணைமாரியை ஏவினான். ஓ! மன்னா, சாத்யகியோ சிரித்துக் கொண்டே, துரியோதனனின் தேரின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இடையறாமல் ஏவினான். இருவரின் கணைகளும் ஆகாயத்தில் ஒன்றோடொன்று கலந்தன. இப்படி ஏவப்பட்ட அந்தக் கணைகளின் அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பாய்ந்ததன் விளைவால், பெரும் காட்டை எரிக்கும்போது நெருப்பினால் உண்டாகும் ஒலியைப் போன்றே அங்கே பேரொலி எழுந்தது. இருவராலும் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமியானது அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(45-47) ஆகாயமும் அப்படியே நிறைந்தது.
தேர்வீரர்களில் முதன்மையான அந்த மதுகுலத்து வீரன் {சாத்யகி}, துரியோதனனை விட வலிமைமிக்கவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், (48) உமது மகனை மீட்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான். எனினும், வலிமைமிக்கப் பீமசேனனால் கர்ணனின் அம்முயற்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) எனவே, அவன் கர்ணனை எதிர்த்து வேகமாகமாகச் சென்று, எண்ணற்ற கணைகளை ஏவினான். பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் மிக எளிதாக வெட்டிய கர்ணன்,(50) தன் கணைகளால் பீமனின் வில், கணைகள் ஆகியவற்றையும் மற்றும் அவனது சாரதியையும் வெட்டினான். பாண்டுவின் மகனான பீமன், சினத்தால் நிறைந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு,(51) தன் எதிராளியின் வில், கொடிமரம் மற்றும் சாரதியை அம்மோதலில் நொறுக்கினான். அந்த வலிமைமிக்கப் பீமன், கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றையும் நொறுக்கினான்.(52) எனினும் கர்ணன், ஒரு சக்கரம் உடைந்த அந்தத் தேரிலேயே மலைகளின் அரசனை (மேருவைப்) போல அசையாமல் நின்றான். ஒரு சக்கரத்தை மட்டுமே கொண்ட அவனது அழகிய தேரானது, ஒரு சக்கரத்தையே உடைய சூரியனின் தேர் ஏழு தெய்வீகக் குதிரைகளால் இழுக்கப்படுவதைப் போல அவனது குதிரைகளால் இழுக்கப்பட்டது. பீமசேனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத கர்ணன், பல்வேறு வகைகளிலான கணைகளையும், பிற ஆயுதங்களையும் அம்மோதலில் அபரிமிதமாகப் பயன்படுத்தியபடியே பின்னவனுடன் {பீமனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான். பீமசேனனும், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான்.(53-55)
அந்தப் போரானது இயல்பையடைந்து குழம்பியபோது, அந்தத் தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யப் போர்வீரர்களில் முதன்மையானோர் யாவரிடமும்,(56) “யாவர் நமக்கு உயிரோ, யாவர் நமக்குத் தலைவர்களோ, யாவர் நம்மில் பெரும்பலம் கொண்டவர்களோ, அப்படிப்பட்ட மனிதர்களில் காளையர் அனைவரும், தார்தராஷ்டிரர்களிடம் போர்புரிகின்றனர்.(57) உணர்வுகளை இழந்து மலைப்படைந்தவர்களைப் போல நீங்கள் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என் படையின் அந்தத் தேர்வீரர்கள் போரிடும் இடத்திற்குச் செல்வீராக.(58) வெற்றி அடைவது, அல்லது கொல்லப்படுவது ஆகியவற்றால் நீங்கள் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள் என்பதால், உங்கள் அச்சங்களை விரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொள்வீராக (போரில் ஈடுபடுவீராக).(59) நீங்கள் வெற்றியாளர்கள் என நிரூபித்தால், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளை நீங்கள் செய்யலாம். மறுபுறம் நீங்கள் கொல்லப்பட்டாலோ, தேவர்களுக்கு இணையானவர்களாகி, அருள் உலகங்கள் பலவற்றை நீங்கள் வெல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(60)
இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கவர்களும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவர்களுமான அந்த வீரத் தேர்வீரர்கள், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்து போரில் ஈடுபட்டனர்.(61) அப்போது ஒரு புறத்தில இருந்து பாஞ்சாலர்கள் எண்ணற்ற கணைகளால் துரோணரைத் தாக்கினர், அதே வேளையில் பீமசேனனின் தலைமையிலான பிறர் மற்றொரு புறத்தில் இருந்து அவரைத் தடுத்தனர்.(62) பாண்டவர்கள் தங்களுக்கு மத்தியில், நேர்மையற்ற மனம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான மூவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் பீமசேனனும், இரட்டையரும் (நகுலனும், சகாதேவனும்) ஆவர் [3]. இவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(63) “ஓ! அர்ஜுனா, வேகமாக விரைந்து சென்று துரோணரின் அருகில் உள்ள குருக்களை விரட்டுவாயாக. ஆசானின் {துரோணரின்} பாதுகாவலர்களை அவர் இழந்தால், பாஞ்சாலர்களால் அவரை எளிதில் கொல்ல முடியும்” என்று உரக்கச் சொன்னார்கள்.(64) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கௌரவர்களை எதிர்த்து திடீரென விரைந்தான், அதே வேளையில் திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் துரோணரை எதிர்த்து விரைந்தனர். உண்மையில், (துரோணரின் தலைமையிலான) அந்த ஐந்தாம் நாளில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரப் போராளிகள் கலங்கடிக்கப்பட்டு, பெரும் வேகத்துடன் (அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்}) நொறுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(65)
மண்ணைத் தொட்ட யுதிஷ்டிரத் தேர்! – துரோண பர்வம் பகுதி – 191-துரோணரால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு; துரோணரைக் கொல்வதில் அறத்தைக் கைவிடுமாறு பாண்டவர்களைத் தூண்டிய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் ஆலோசனையைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; அர்ஜுனன் அஃதை ஏற்காதது; அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைப் பீமன் கொல்வது; அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகத் துரோணரிடம் சொன்ன பீமன்; பீமனை நம்பாத துரோணர், பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது; துரோணரை நிந்தித்த முனிவர்கள்; அஸ்வத்தாமனைக் குறித்து யுதிஷ்டிரனிடம் விசாரித்த துரோணர்; யுதிஷ்டிரன் சொன்ன பொய்; யுதிஷ்டிரனின் தேர் மண்ணைத் தொட்டது; கவலையில் மூழ்கிய துரோணர்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பழங்காலத்தில் தானவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கிய சக்ரனை {இந்திரனைப்} போலப் பாஞ்சாலர்களுக்கு மத்தியில் துரோணர் பேரழிவை ஏற்படுத்தினார்.(1) வலிமையும், சக்தியும் கொண்ட பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்கள், துரோணரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரைக் கண்டு அஞ்சவில்லை.(2) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரும் துரோணருடன் போரிடுவதற்காக, அவரை எதிர்த்து விரைந்தனர்.(3) துரோணரைச் சூழ்ந்து கொள்வதற்காக அவரை நோக்கி விரைந்து, அவரது கணைகளாலும், ஈட்டிகளாலும் கொல்லப்பட்ட அவர்களது ஓலங்களின் பேரொலி கடுமையானதாக இருந்தது.(4) அந்தப் போரில் சிறப்புமிக்கத் துரோணரால் பாஞ்சாலர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், அவரது ஆயுதங்கள் அனைத்துப் பக்கங்களையும் நிறைப்பதைப் பார்த்தும், பாண்டவர்களின் இதயத்துக்குள் அச்சம் நுழைந்தது.(5) அந்தப் போரில் குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பயங்கரமான பேரழிவைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் வெற்றியில் நம்பிக்கையற்றவர்களானார்கள்.(6)
அவர்கள் (தங்களுக்குள் ஒருவருக்கொருவர்), “வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த போர்வீரரான இந்தத் துரோணர், இளவேனில் காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் காட்டுத் தீயைப் போல நம் அனைவரையும் எரித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?(7) போரில் அவரைப் பார்ப்பதற்குக் கூட எவரும் தகுந்தவரல்லர். அறநெறிகளின் வழிகளை அறிந்த அர்ஜுனனோ, (அவன் மட்டுமே அவருக்கு இணையானவன் என்றாலும்) அவருடன் போரிட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டனர்.(8) துரோணரின் கணைகளால் பீடிக்கப்படும் குந்தியின் மகன்களைக் கண்டு அச்சத்தால் ஈர்க்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், அவர்களின் நலத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(9) “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான இவரை, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களால் கூடப் போரில் பலத்தால் வெல்ல முடியாது.(10) எனினும், இவர் {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், மனிதர்களால் கொல்லப்படத்தக்கவர் ஆவார். பாண்டுவின் மகன்களே, தங்கத்தேரைக் கொண்ட துரோணர், போரில் நம் அனைவரையும் கொல்ல முடியாத வகையில், வெற்றியை ஈட்டுவதற்காக அறத்தை விட்டு, இப்போது சிறு சூழ்ச்சியை நீங்கள் பின்பற்ற வேண்டும்[1]. (தம் மகனான) அஸ்வத்தாமனின் வீழ்ச்சியில் அவர் போரிடுவதை நிறுத்துவார் என நான் நினைக்கிறேன்.(11,12) எனவே, ஏதாவதொரு மனிதன், போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக அவரிடம் {துரோணரிடம்} சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}. எனினும், ஓ! மன்னா, இந்த அறிவுரையைக் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏற்கவில்லை.(13) பிறர் இஃதை ஏற்றனர். ஆனால், யுதிஷ்டிரனோ பெருங்கடினத்துடன் {பெரும் தயக்கத்துடனே} இஃதை ஏற்றுக் கொண்டான்[2].
பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்லும் பயங்கரமான கதாயுதம் ஒன்றால், தன் படையைச் சேர்ந்ததும், மாலவர்களின் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்டதுமான பெரும் யானையைக் கொன்றான்[3].(14,15) பிறகு அந்தப் போரில் சற்றே நாணத்தோடு துரோணரை அணுகிய பீமசேனன், “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்று உரக்கக் கூவினான்.(16) அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட அந்த யானை இப்படிக் கொல்லப்பட்டிருந்தாலும், பீமன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொன்னான். உண்மைச் செய்தியைத் தன் மனத்தில் கொண்டு, உண்மையற்றதையே அவன் {பீமன்} சொன்னான்.(17) ஏற்றுக் கொள்ள முடியாத பீமனின் அந்த வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்த துரோணரின் அங்கங்கள் நீரில் கரையும் மண்ணைப் போல் கரைவதாகத் தெரிந்தது.(18) எனினும், விரைவில் தன் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலை நினைவுகூர்ந்த அவர் {துரோணர்}, அதைத் தவறான செய்தி என்று கருதினார். எனவே அவனது கொலையைக் கேட்ட அவர் தைரியத்தை இழக்காதவராக இருந்தார்.(19) உண்மையில், விரைவாக உணர்வுகள் மீண்ட அவர் {துரோணர்}, எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவன் தமது மகன் {அஸ்வத்தாமன்} என்பதை நினைவுகூர்ந்து ஆறுதலை அடைந்தார்.(20)பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்து, தம்மைக் கொல்வதற்காக விதிக்கப்பட்ட அந்த வீரனைக் கொல்ல விரும்பிய அவர் {துரோணர்}, கங்க இறகுகளைக் கொண்ட ஆயிரம் கூரிய கணைகளால் அவனை மறைத்தார்.(21) பிறகு, பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலத் தேர்வீரர்கள் இருபதாயிரம் {20,000} பேர், போரில் இப்படித் திரிந்து கொண்டிருந்த அவரைத் தங்கள் கணைகளால் மறைத்தனர்.(22) மழைக்காலங்களில் மேகங்களால் மறைக்கப்படும் சூரியனுக்கு ஒப்பாக, ஓ! ஏகாதிபதி, அந்தக் கணைகளால் முழுமையாக மறைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரரை அதற்கு மேலும் எங்களால் காண முடியவில்லை.(23) கோபத்தால் நிறைந்தவரும், அந்தத் துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்களுக்கு அழிவை உண்டாக்க விரும்பியவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தத் துரோணர் பாஞ்சாலர்களின் அந்தக் கணைகள் யாவையும் விலக்கி, பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். அந்நேரத்தில் துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தார்.(24,25) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சோமகர்கள் அனைவரையும் கொன்று, பெரும் காந்தியுடன் கூடியவராகத் தெரிந்தார்.(26)
அச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கரப் போரில், பாஞ்சாலர்களின் தலைகளை வீழ்த்திய அவர் {துரோணர்}, முள்பதித்த கதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அவர்களின் பருத்த கரங்களையும் அறுத்தார்.(27) உண்மையில் அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} போரில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைப் போல விழுந்து பூமியில் சிதறிக் கிடந்தனர்.(28) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்து கிடந்த குதிரைகள் மற்றும் யானைகளால், குருதியும், சதையும் கலந்து சேறாக இருந்த பூமியானது கடக்கமுடியாததாக இருந்தது.(29) அந்தப் போரில் இருபதாயிரம் பாஞ்சாலத் தேர்வீரர்களைக் கொன்ற துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(30) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன், அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால், வசுதானனின் [4] தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார்.(31) மீண்டும் அவர், ஐநூறு {500} மத்ஸ்யர்களையும், ஆறாயிரம் {6,000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} குதிரைகளையும் கொன்றார்.(32)க்ஷத்திரிய குலத்தை முற்றாக அழிப்பதற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்த துரோணரைக் கண்ட முனிவர்கள் விஸ்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், கசியபர், அத்ரி, ஸிகதர்கள் {லிகதர்கள்}, பிருஸ்னிகள், கர்க்கர் {கர்க்கர்கள்}, வாலகில்யர்கள், மரீசிபர்கள், பிருகுவின் வழித்தோன்றல்கள், அங்கிரஸ் {அங்கிரசர்கள்} ஆகியோரும், நுண்ணிய வடிவங்களைக் கொண்ட {மெலிந்த உடலைக் கொண்ட} இன்னும் பிற முனிவர்களும், துரோணரை பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பி, வேள்விக்காணிக்கைகளைச் சுமப்பவனை {அக்னியைத்} தங்கள் தலைமையில் கொண்டு அங்கே விரைந்து வந்து,(33-35) போர்க்கள இரத்திமானத் துரோணரிடம், “நீ நேர்மையற்ற வகையில் {அநீதியாகப்} போரிடுகிறாய். உன் மரணத்திற்கான நேரம் வந்துவிட்டது.(36) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஓ! துரோணா, இங்கே நிற்கும் எங்களைக் காண்பாயாக. இதற்கு மேலும், இது போன்ற மிகக் கொடூரமான செயல்களைச் செய்வது உனக்குத் தகாது.(37) வேதங்களையும், அதன் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்தவன் நீ. உண்மைக்குக் கட்டுப்படும் கடமைகளில் {செயல்களில்} அர்ப்பணிப்புள்ளவன் நீ. குறிப்பாக, நீ ஒரு பிராமணனுமாவாய். இது போன்ற செயல்கள் உனக்குத் தகாது.(38) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் குற்றத்திரையை விலக்குவாயாக. அழிவற்ற பாதையை இப்போது பின்பற்றுவாயாக. மனிதர்களின் உலகில் நீ வசிக்க வேண்டிய காலம் இப்போது முழுமையடைந்துவிட்டது.(39) இப்பூமியின் ஆயுதங்கள் குறித்து அறியாத மனிதர்களைப் பிரம்மாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு நீ எரித்துவிட்டாய். ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, நீ செய்த இந்தச் செயல் நேர்மையானதல்ல {நீதிக்குக் கட்டப்பட்டது அல்ல}.(40) ஓ! துரோணா, தாமதமில்லாமல் போரில் ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக. பூமியில் நீண்ட காலம் காத்திருக்காதே. ஓ! மறுபிறப்பாளா, இது போன்ற பாவச்செயலை மீண்டும் செய்யாதே” என்றனர்.(41)
அவர்களது இந்த வார்த்தைகளையும், பீமசேனனின் வார்த்தைகளையும் கேட்ட, துரோணர், தன் எதிரே திருஷ்டத்யும்னன் நிற்பதைக் கண்டு, போரில் உற்சாகத்தை மிகவும் இழந்தார்.(42) துயரால் எரிந்து, மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {துரோணர்} குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் தன் மகன் (அஸ்வத்தாமன்) கொல்லப்பட்டானா, இல்லையா என்பது குறித்து விசாரித்தார்.(43) மூவுலகங்களின் அரசுரிமைக்காகக் கூட யுதிஷ்டிரன் பொய்யேதும் பேச மாட்டான் என்று துரோணர் உறுதியாக நம்பினார்.(44) இக்காரணத்திற்காகவே, அந்தப் பிராமணக் காளை {துரோணர்} வேறு யாரிடமும் கேட்காமல் யுதிஷ்டிரனிடம் கேட்டார். அவர், யுதிஷ்டிரனின் குழந்தைப் பருவத்திலிருந்தே, பின்னவனிடமே உண்மையை எதிர்பார்த்திருந்தார்.(45)
அதே வேளையில், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாண்டவர்கள் அனைவரையும் பூமியின் பரப்பில் இருந்து துடைத்து விடக்கூடியவர் என்பதை அறிந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} பெரும் கவலை கொண்டான். யுதிஷ்டிரனிடம் பேசிய அவன் {கிருஷ்ணன்},(46) “துரோணர், சினத்தால் நிறைந்த நிலையில் அரை நாள் போரிட்டாலும் உமது படை நிர்மூலமாக்கப்படும் என்பதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்.(47) துரோணரிடம் இருந்து எங்களைப் பாதுகாப்பீராக. இத்தகு சூழ்நிலையில், உண்மையை விடப் பொய்மையே சிறந்தது. ஒருவனின் உயிரைக் காப்பதற்காக உண்மையற்றதைச் சொல்வதால், பாவம் அவனைத் தீண்டாது.(48) பெண்களிடமோ, திருமணங்களிலோ, பசுவைக் காப்பதற்கோ, ஒரு பிராமணரைக் காப்பதற்கோ உண்மையற்றதைச் சொல்வதில் எந்தப் பாவமும் இல்லை[5]” என்றான்.(49) கோவிந்தனும் யுதிஷ்டிரனும் இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது (மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசிய) பீமசேனன், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம துரோணர் கொல்லப்படத்தக்க வழிமுறைகளைக் கேட்ட உடனேயே,(50) போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, சக்ரனின் யானைக்கு {ஐராவதத்துக்கு} ஒப்பானதும், மாலவர்களின் தலைவனான இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், உமது படைக்குள் இருந்ததுமான ஒரு வலிமைமிக்க யானையைக் கொன்றேன். பிறகு துரோணரிடம் சென்ற நான், அவரிடம், “ஓ! பிராமணரே, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான். போரிடுவதை நிறுத்துவீராக” என்று சொன்னேன்.(51,52) ஓ! மனிதர்களில் காளையே, என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆசான் நம்பவில்லை. வெற்றியில் விருப்பமுள்ள நீர், கோவிந்தனின் அறிவுரையை ஏற்பீராக.(53) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சரத்வான் மகளுடைய மகன் {அஸ்வத்தாமன்} மாண்டான் என்று துரோணரிடம் சொல்வீராக. உம்மால் {இப்படிச்} சொல்லப்பட்டால், அந்தப் பிராமணர்களில் காளை ஒருபோதும் போரிடமாட்டார்.(54) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, மூவுலகங்களில் உண்மை நிறைந்தவரென்ற மதிப்பை நீர் பெற்றிருக்கிறீர்” என்றான் {பீமன்}.(55)பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டும், கிருஷ்ணனின் ஆலோசனைகளால் தூண்டப்பட்டும், தவிர்க்கப்பட முடியாத விதியின் காரணத்தாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தான் என்ன சொல்ல வேண்டும் என்று {தன் தரப்பால்} விரும்பப்படுகிறதோ அதை யுதிஷ்டிரன் மனத்தால் ஏற்றான். உண்மையற்ற ஒன்றைச் சொல்ல அஞ்சியவனும், வெற்றியடையும் விருப்பத்தாலான ஆர்வத்தோடு கூடியவனுமான யுதிஷ்டிரன்,(56) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்பதைத் துல்லியமாகவும், யானை என்ற வார்த்தையைத் துல்லியமில்லாமலும் (பெயருக்குப் பின்னால்) சேர்த்துச் சொன்னான்[6]. அதுவரை பூமியின் பரப்பில் இருந்து நான்கு விரல்கட்டை அளவு உயரத்தில் யுதிஷ்டிரனின் தேர் நின்றிருந்தது.(57) எனினும், அவன் {யுதிஷ்டிரன்} அந்த உண்மையற்றதை {பொய்யைச்} சொன்ன பிறகு, அவனது (வாகனம் மற்றும்) விலங்குகள் பூமியைத் தொட்டன. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், யுதிஷ்டிரனிடம் இருந்து அவ்வார்த்தைகளைக் கேட்டதும்,(58) தன் மகன் {அஸ்வத்தாமன்} மாண்ட ({மாண்டான் என்ற} நம்பிக்கையில்) துயரால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்வின் வசமடைந்தார். முனிவர்களின் வார்த்தைகளை மீண்டும் நினைத்த அவர், உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராகப் பெரிய குற்றத்தைச் செய்தவராகத் தன்னைக் கருதினார். தன் மகனின் மரணத்தைக் குறித்து இப்போது கேட்டதும், அவர் முற்றிலும் உற்சாகமற்றவராக ஆனார்; திருஷ்டத்யும்னனைக் கண்டதால் கவலையில் நிறைந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவரால் {துரோணரால்} அதற்கு மேலும் முன்பு போலப் போரிட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.(59-60)(“அஸ்வத்தாமாஹத: குஞ்சர:” என்பது மூலம். இங்கே “அஸ்வத்தாமாஹத: {அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்} என்ற வார்த்தைகளை உரக்கச் சொன்ன யுதிஷ்டிரன், குஞ்சரம் {யானை} என்ற சொல்லை மெல்ல {மென்மையாகச்} சொன்னான்“ என்பது பொருள். கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் என்ற யானை; அல்லது அஸ்வத்தாமனே கொல்லப்பட்ட யானை என்ற தொனியில் யுதிஷ்டிரன் சொல்லியிருக்க வேண்டும்.)
திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 192-துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.
நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)
அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)
அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)
தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)
கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)
துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்! – துரோண பர்வம் பகுதி – 193-துரியோதனன், கர்ணன் மற்றும் கிருபரோடு மோதிய சாத்யகி; துரோணரை எதிர்த்து விரையுமாறு தன் துருப்புகளைத் தூண்டிய யுதிஷ்டிரன்; தன்னைத் தாக்குபவர்களைப் பெரும் வீரத்தோடு எதிர்கொண்ட துரோணர், பிரம்மாஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தியது; அஸ்வத்தாமனின் மரணம் குறித்துத் துரோணரிடம் மீண்டும் நினைவூட்டிய பீமன்; துயரடைந்த துரோணர், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்தில் கரைவது; சொர்க்கத்திலுள்ள சுடர்மிக்க ஒளிக்குள் நுழையும் துரோணர்; உயிரற்ற துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்; ஆசானை உயிருடன் அழைத்துவருமாறு கதறிய அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} சாதனைகளைக் கண்ட துரியோதனனும், பிறரும், சினத்தால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(1) கிருபர், கர்ணன் மற்றும் உமது மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரனை வேகமாக அணுகி, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(2) பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், பிற பாண்டவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், பெரும் வலிமை கொண்ட பீமசேனனும், (பாதுகாப்பதற்காக) சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(3) கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர், துரியோதனன் மற்றும் பிறர் அனைவரும் சாத்யகியின் மீது கணை மாரியைப் பொழிந்து அவனைத் தடுத்தனர்.(4) எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தத் தேர்வீரர்கள் அனைவரோடும் போரிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் திடீரென உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணைப் பொழிவைக் கலங்கடித்தான்.(5) உண்மையில் சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் தன்னை நோக்கிக் குறி வைக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமே முறையாகத் தடுத்தான்.(6)
அரசப் போராளிகளுக்குள்ளான மோதலில் அந்தப் போர்க்களமானது, பழங்காலத்தில் சினத்தால் நிறைந்த ருத்ரன், உயிரினங்கள் அனைத்தையும் அழித்த காட்சிக்கு ஒப்பாகப் பல கொடூரக் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதக் கரங்கள் மற்றும் தலைகள், (தேர்களில்) விழுந்த குடைகள், சாமரங்கள் ஆகியன,(8) அந்தப் போர்க்களத்தில் குவியலாகக் கிடப்பது காணப்பட்டது. உடைந்த தேர்கள் மற்றும் சக்கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்ட பெருங்கரங்கள் ஆகியவையும், உயிரையிழந்தவர்களான துணிச்சல்மிக்கக் குதிரை வீரர்களும் அந்தப் பூமியில் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில், கணைகளின் பாய்ச்சலில் சிதைந்து போன பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள்,(9,10) உருளுவதோ, வலியால் தரையில் புரளுவதோ, மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருப்பதோ காணப்பட்டது.
பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் போர்வீரர்களுடன் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், “பெரும் தேர்வீரர்களே, உங்கள் திறன் அனைத்தையும் வெளிப்படுத்தியபடியே குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து விரைவீராக.(12) அதோ பிருஷதனின் வீரமகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரிடம் போரிடுகிறான். தன் வலிமையால் இயன்ற அளவுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல முயல்கிறான்.(13) இந்தப் பெரும்போரில் அவன் வெளிப்படுத்தும் தன்மைகளைக் கண்டால், சினத்தால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்}, இன்று துரோணரை வீழ்த்துவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) அனைவரும் ஒன்று சேர்ந்து குடத்தில் பிறந்தவரோடு {துரோணரோடு} போரிடுவீராக” என்றான். யுதிஷ்டிரனால் இப்படி ஆணையிடப்பட்ட சிருஞ்சயர்கள் அனைவரும்,(15) அந்தப் பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கொல்வதற்காகப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.
வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தாம் இறக்கப் போகிறோம் என்பதை உறுதியாக அறிந்தாலும், முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களை எதிர்த்து வேகமாக விரைந்தார். துல்லிய இலக்கைக் கொண்ட அந்தத் துரோணர் இப்படிச் சென்ற போது பூமியானது பயங்கரமாக நடுங்கியது.(16,17) (பகைவரின்) படையணிகளுக்குள் அச்சத்தைத் தூண்டும் வகையில் கடுங்காற்று வீசத் தொடங்கியது. சூரியனில் இருந்து வெளியே வருவதாகத் தெரிந்த பெரும் விண்கற்கள்,(18) பெரும் பயங்கரங்களை முன்னறிவித்துக் கொண்டு கடுமையாகச் சுடர்விட்டபடியே கீழே விழுந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன.(19) தேர்கள் உரத்த சடசடப்பொலியை உண்டாக்குவதும், குதிரைகள் கண்ணீரை உதிர்ப்பதும் காணப்பட்டது. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் தன் சக்திகளை இழந்தவராகவே காணப்பட்டார்.(20) அவரது இடது கண்ணும், இடது கையும் துடிக்கத் தொடங்கின. தம் முன்னே நிற்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீண்டும் கண்டும், தாம் உலகத்தை விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன முனிவர்களின் வார்த்தைகளை மனத்தில் கொண்டும் அவர் {துரோணர்} உற்சாகமிழந்தவரானார். பிறகு அவர் {துரோணர்}, நேர்மையாகப் போரிட்டு உயிரை விட விரும்பினார்.(21,22)
துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களைக் கொன்றபடியே அந்தப் போரில் திரியத் தொடங்கினார்.(23) இருபத்துநாலாயிரம் {24,000} க்ஷத்திரியர்களைக் கொன்றவரான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர், தமது கூர்முனைக் கணைகளால் பத்து மடங்களவு பத்தாயிரம் பேரை {ஒரு லட்சம் பேரை} யமனுலகுக்கு அனுப்பிவைத்தார்[1].(24) கவனத்துடன் முயற்சி செய்த அவர், புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் நின்று கொண்டிருந்தார். பிறகு அவர் {துரோணர்}, க்ஷத்திரிய குலத்தையே முற்றாக அழிப்பதற்காகப் பிரம்மாயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} உதவியை நாடினார்.(25) அப்போது வலிமைமிக்கப் பீமன், சிறப்புமிக்கவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியாதவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் இருப்பதைக் கண்டு, அவனை நோக்கி வேகமாகச் சென்றான்.(26) துரோணருக்கு மிக அருகில் இருந்து தாக்கிக் கொண்டிருந்த அவனைக் {திருஷ்டத்யும்னனைக்} கண்ட அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, அந்தத் திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, அவனிடம்,(27) “உன்னைத் தவிர ஆசானுடன் {துரோணருடன்} போரிட வேறு எந்த மனிதனும் துணியமாட்டான். அவரைக் கொல்வதைத் துரிதப்படுத்துவாயாக. அவரைக் கொல்லும் சுமை {பொறுப்பு} உன்னிடமே இருக்கிறது” என்றான்.(28)பீமனால் இப்படிச் சொல்லப்பட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருஷ்டத்யும்னன், வலியதும், புதியதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான ஒரு மேன்மையான வில்லை விரைவாக எடுத்துக் கொண்டான்.(29) சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவரான துரோணரின் மீது தன் கணைகளை ஏவிய திருஷ்டத்யும்னன், ஆசானை {துரோணரை} எதிர்த்து நிற்க விரும்பி அவரை மறைத்தான்.(30) போர்க்கள ரத்தினங்களும், போராளிகளில் முதன்மையானோருமான அவ்விருவரும், சினத்தால் நிறைந்து பிரம்மாயுதத்தையும், பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் இருப்புக்கு அழைத்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் திருஷ்டத்யும்னன் வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் துரோணரை மறைத்தான். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அனைத்து ஆயுதங்களையும் அழித்தவனும், மங்காப் புகழ் கொண்ட போர்வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்},(32) துரோணரைப் பாதுகாத்தவர்களான வஸாதிகள், சிபிக்கள், பாஹ்லீகர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோரைக் கொல்லத் தொடங்கினான்.(33) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவிய திருஷ்டத்யும்னன், அந்த நேரத்தில் ஆயிரங்கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(34) எனினும், அந்த இளவரசனின் வில்லை மீண்டும் அறுத்த துரோணர், கணைகள் பலவற்றால் அவ்விளவரசனின் முக்கிய அங்கங்களையும் துளைத்தார். இப்படித் துளைக்கப்பட்ட அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்} பெரும் வலியை உணர்ந்தான்.(35)
அப்போது பெரும் கோபம் கொண்ட பீமன், துரோணரின் தேரைப் பிடித்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவரிடம் இந்த வார்த்தைகளை மெதுவாகச் சொன்னான்,(36) “{ஓ! பிராமணரே}, தங்கள் வகைக்கான தொழில்களில் நிறைவடையாதவர்களும், ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்களில் இழிந்தவர்கள் {ப்ரஷ்டப் பிராம்மணர்கள்} போரிடாமல் இருந்திருந்தால், க்ஷத்திரிய வகையினர் இப்படி அழிய மாட்டார்கள்.(37) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமல் இருப்பதே அறங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிராமணனே அவ்வறத்தின் ஆணிவேராவான். உம்மைப் பொறுத்தவரை, பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவர் நீர்.(38) ஓ! பிராமணரே {துரோணரே}, தங்கள் மகன்களுக்கும், மனைவியருக்கும் நன்மை செய்வதற்காகச் செல்வத்தை விரும்பி, தங்களுக்குரிய முறையான {க்ஷத்திரிய} தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்த மிலேச்சர்கள் அனைவரையும், பிற வீரர்களையும், உமது மகன் {அஸ்வத்தாமன்} ஒருவனுக்காக மட்டுமே, அறியாமையிலும், மடமையிலும் உந்தப்பட்டுக் கொல்லும் நீர் வெட்கத்தை ஏன் உணரவில்லை[2]?(39,40) எவனுக்காக நீர் ஆயுதங்களை எடுத்தீரோ, எவனுக்காக நீர் வாழ்கிறீரோ, அவன் {அஸ்வத்தாமன்} இன்று உயிரையிழந்து, நீர் அறியாதவாறு உமது முதுகுக்குப் பின்னால் போர்க்களத்தில் கிடக்கிறான்.(41) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இஃதை உமக்குச் சொன்னார். இந்த உண்மையில் ஐயங்கொள்வது உமக்குத் தகாது” என்றான் {பீமன்}. பீமனால் இப்படிச் சொல்லப்பட்டதும், துரோணர் தன் வில்லைக் கீழே வைத்தார்.(42)தமது ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வைக்க விரும்பியவரும், அற ஆன்மா கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! கிருபரே, ஓ! துரியோதனா,(43) போரில் கவனமாக முயற்சி செய்ய நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். பாண்டவர்களால் நீங்கள் எந்தக் காயமும் அடைய வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, நான் என் ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன்” என்று உரக்கச் சொன்னார்.(44) இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் அஸ்வத்தாமனின் பெயரைச் சொல்லி உரக்க அலறினார். அந்தப் போரில் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, தமது தேர்த்தட்டில் அமர்ந்து கொண்டு,(45) யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவர் {துரோணர்}, அனைத்து உயிரினங்களின் அச்சங்களை விலக்கி அவற்றுக்கு உறுதியை அளித்தார்.
அந்த வாய்ப்பைக் கண்ட திருஷ்டத்யும்னன் தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கொண்டான்.(46) வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் இருந்த தன் உறுதிமிக்க வில்லைத் தன் தேரில் வைத்த அவன் {திருஷ்டத்யும்னன்}, ஒரு வாளை எடுத்துக் கொண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(47) மனிதர்களும், மனிதர் அல்லாதவர்களுமான உயிரினங்கள் அனைத்தும், திருஷ்டத்யும்னனின் ஆளுகைக்குள் இப்படிக் கொண்டுவரப்பட்ட துரோணரைக் கண்டு துன்பக் குரலுடன் அலறினர்.(48) “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும், “ச்சீச்சீ!” என்றும் உரத்த அலறல்கள் அங்கே எழுந்தன. துரோணரைப் பொறுத்தவரை, தன் ஆயுதங்களைக் கைவிட்ட அவர் {துரோணர்}, உயர்ந்த அமைதியான நிலையை அப்போது அடைந்தார்.(49) பெரும் பிரகாசமும், உயர்ந்த தவத்தகுதியும் கொண்ட அவர் {துரோணர்}, உயர்ந்தவனும், பழமையானவனுமான விஷ்ணுவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்[3].(50)சற்றே தம் முகத்தைக் கீழே சாய்த்து, தமது மார்பை முன்நிமிர்த்தி, கண்களை மூடி, நற்குணத்தில் நிலைத்து, ஆழ்ந்த சிந்தனையில் தமது இதயத்தை ஆழ்த்தி,(51) பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் ஓம் என்ற ஓரசைச் சொல்லை நினைத்து, வல்லமையும், உயர்வும், அழியாத் தன்மையும் கொண்ட தேவர்களின் தேவனை நினைவுகூர்ந்தவரும், (குருக்கள் மற்றும் பாண்டவர்களின்) ஆசானுமான ஒளிமிக்கத் துரோணர், இறையுணர்வுமிக்கோராலும் அடைவதற்கு மிகக் கடினமான சொர்க்கத்தை அடைந்தார். உண்மையில், துரோணர் இப்படிச் சொர்க்கத்திற்குச் சென்ற போது, ஆகாயத்தில் இரு சூரியன்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது.(52,53) சூரியப் பிரகாசம் கொண்டவரும், சூரியனைப் போன்றவருமான பரத்வாஜர் {துரோணர்} வானத்திற்கு உயர்ந்த போது, சீரான ஒளியுடன் கூடிய ஒரே பெரிய பரப்பான மொத்த ஆகாயமும் எரிவது போலத் தெரிந்தது.(54) எனினும் கண்ணிமைப்பதற்குள்ளாக அந்த மொத்த பிரகாசமும் மறைந்து போனது. இப்படித் துரோணர் பிரம்மலோகத்திற்குச் சென்ற போது, அதை முற்றிலும் உணராதவனாக அவருக்கு அருகில் திருஷ்டத்யும்னன் நின்று கொண்டிருந்தபோது, மகிழ்ச்சி அடைந்த தேவர்களால் உதிர்க்கப்படும் குழப்பமான {கிலா கிலா என்ற} மகழ்ச்சியொலிகள் கேட்கப்பட்டன.
யோகத்தில் ஆழ்ந்த உயர் ஆன்மத் துரோணர் உயர்ந்த அருளுலகத்தை அடைவதை மனிதர்களில் நாங்கள் ஐவர் மட்டுமே கண்டோம்.(54-56) நானும் {சஞ்சயனான நானும்} , பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனான அஸ்வத்தாமன், விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோருமே அந்த ஐவர். உண்மையில் மனிதர்கள் அனைவரும், அனைத்திலும் உயர்ந்ததும், தேவர்களுக்கே புதிரானதும், மிக உயர்ந்த உலகமுமான பிரம்ம லோகத்தை ஆசான் அடைந்ததை அறியாதவர்களாகவே இருந்தனர். உண்மையில், கணைகளால் தமது உடல் சிதைக்கப்பட்டவரும், குருதியில் குளித்தவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்து, முனிவர்களில் முதன்மையானோர் துணையுடன் பிரம்ம லோகத்திற்குச் சென்றதை அவர்களில் ஒருவராலும் காண முடியவில்லை.(57-61)பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்தவரை, அனைவரும் அவனை நோக்கி நிந்தித்தாலும், துரோணரின் உயிரற்ற தலையில் தன் பார்வையைச் செலுத்தி அஃதை இழுக்கத் தொடங்கினான்.(62) பிறகு, இவ்வளவு நேரமும் பேச்சற்றவராக இருந்த தன் எதிரியின் {துரோணரின்} உடலில் இருந்து அந்தத் தலையைத் தன் வாளால் வெட்டினான். பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொன்று பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த திருஷ்டத்யும்னன்,(63) தன் வாளைச் சுழற்றியபடியே சிங்க முழக்கமிட்டடான். கரிய நிறத்தவரும், தமது காதுகள் வரை தொங்கும் வெண்குழல்களைக் கொண்டவரும், எண்பத்தைந்து {85} வயதையுடைவருமான[4] அந்தக் கிழவர் {துரோணர்}, உமக்காக மட்டுமே போர்க்களத்தில் பதினாறு வயது இளைஞனின் சுறுசுறுப்புடன் திரிந்து வந்தார். (துரோணரின் தலை வெட்டப்படுவதற்கு முன்) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்},(64,65) “ஓ! துருபதர் மகனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை {துரோணரை} உயிருடன் கொண்டு வா, அவரைக் கொல்லாதே” என்றான். துருப்புகள் அனைத்தும் கூட “அவர் கொல்லப்படலாகாது” என்றே கதறின.(66) அதிலும் குறிப்பாக அர்ஜுனன், பரிதாபகரமாக உருகியபடி மீண்டும் மீண்டும் அலறினான்.எனினும், அர்ஜுனனின் அலறல்களையும், அந்த மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்த திருஷ்டத்யும்னன்,(67) மனிதர்களில் காளையான அந்தத் துரோணரை அவரது தேர்த்தட்டில் கொன்றான். துரோணரின் குருதியில் நனைந்த திருஷ்டத்யும்னன், பிறகு அந்தத் தேரில் இருந்து கீழே தரையில் குதித்தான்.(68) அப்போது அவன் மிகக் கடுமையானவனாகச் சூரியனைப் போலச் சிவப்பாகத் தெரிந்தான். இப்படியே அந்தப் போரில் துரோணர் கொல்லப்படுவதைத் துருப்புகள் கண்டன.(69) அப்போது, பெரும் வில்லாளியான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அந்தப் பெரிய தலையை உமது படையின் போர்வீரர்கள் முன்பு கீழே வீசினான்.(70) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் தலையைக் கண்ட உமது படைவீரர்கள், தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, அனைத்துத் திசைகளிலும் ஓடினர்.(71)
அதே வேளையில் வானத்திற்கு உயர்ந்த துரோணர், நட்சத்திரங்களின் பாதைக்குள் நுழைந்தார். சத்தியவதியின் மகனான முனிவர் கிருஷ்ணரின் (துவைபாயனரின்) {கிருஷ்ண துவைபாயனரின்_வியாசரின்} அருளால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மரணத்தை (அது குறித்த உண்மையான சூழ்நிலைகளைச்) நான் சாட்சியாகக் கண்டேன். அந்தச் சிறப்புமிக்கவர் வானத்திற்கு உயர்ந்த பிறகு, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய புகையற்ற தீப்பந்தத்தைப் போலச் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகத்தை இழந்த குருக்கள், பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் அனைவரும் பெரும் வேகத்துடன் ஓடினர்.(72-74) பிறகு உமது படை பிளந்தது. கூரிய கணைகளால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் காயம்பட்டனர்.(75) துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு (குறிப்பாக) உமது போர்வீரர்கள் உயிரை இழந்தவர்களைப் போலக் காணப்பட்டனர். தோல்வியடைந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தால் ஈர்க்கப்பட்ட குருக்கள்,(76) இரண்டு உலகங்களையும் இழந்தவர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர்[5]. உண்மையில் அவர்கள் தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழந்தனர்.
தலையற்ற ஆயிரக்கணக்கான உடல்களால் நிறைந்த களத்தில் பரத்வாஜர் மகனுடைய {துரோணருடைய} உடலைத் தேடிய மன்னர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றியையும், எதிர்காலத்தில் புகழைத்தரும் பெரும் சிறப்புகளையும் ஈட்டிய பாண்டவர்கள்,(77,78) தங்கள் கணைகளாலும், சங்குகளாலும் பேரொலிகளை உண்டாக்கத் தொடங்கி, சிங்க முழக்கங்களைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும்,(79) ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்ட நிலையில் (பாண்டவப்) படைக்கு மத்தியில் காணப்பட்டனர். பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய எதிரிகளை எரிப்பவனான பீமன்,(80) “இழிந்தவனான சூதன் மகனும் {கர்ணனும்}, மற்றொரு இழிந்தவனான துரியோதனனும் போரில் கொல்லப்படும் போது, வெற்றி மகுடம் சூடுபவனாக மீண்டும் நான் உன்னைத் தழுவிக் கொள்வேன்” என்றான்.(81) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், மகிழ்ச்சிப்போக்கில் நிறைந்து தன் தோள்களைத் தட்டியபடியே பூமியை நடுங்கச் செய்தான்.(82) அவ்வொலியால் அஞ்சிய உமது துருப்பினர் தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, க்ஷத்திரியக் கடமைகளை மறந்து போரில் இருந்து ஓடினர்.(83) வெற்றியாளர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் தங்கள் எதிரிகளின் அழிவால் கிடைத்த பெரும் இன்பத்தை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியையடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(84)
துரோணவத பர்வம் முற்றும்[6]
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply