Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -74-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில்
யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர்
என்கிறார் –

நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே
கலக்கமே கார்யகரமாய்த்து
என்கிறார் –

————————————————————————————–

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

பதவுரை

சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனையானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ணபிரானை
ஆய்ச்சி–யசோதையானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!

—————————————————————————————-

வியாக்யானம் –

நலமே வலிது கொல் –
அறிவில் காட்டிலும்
பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –

ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில்
ஸ்நேஹமே வலிதாகாதே –

சலமே தான் நஞ்சூட்டுவன் பேய் நிலமே புரண்டு போய் வீழ  –
சலத்தாலே -க்ரித்ரிமத்தாலே
தாய் வேஷத்தைக் கொண்டு
நஞ்சை யூட்டுவதாக
விஷ பானத்தைப் பண்ணுவிப்பதான
திண்ணிய நெஞ்சை யுடையாளான பூதனை
பூமியிலே மறிந்து போய் விழும்படிக்கு ஈடாக  –

வெங்கொங்கை   யுண்டான் –
வெவ்விய முலையை
உண்டவனை –

மீட்டாய்ச்சி யூட்டுவான் –
பூதனை பக்கல் நின்றும் பிள்ளையை மீட்டு
அதுக்குப் பரிகாரமாக
அம்ருதத்தை புஜிப்பிக்கைக்காக –

யூட்டுவான் –
யூட்டுகைக்கா –

சார்ந்து -தங்கொங்கை வாய் வைத்தாள் –
விஷ முலை யுண்டதுக்குப் பரிகாரமாக
அம்ருதத்தை யுடைத்தான தன் கொங்கையை  –
கேட்ட விடத்தே மோஹித்து விழாதே
அவ்வளவு கால் நடை தந்து
தன்னுடைய முலையை
அவன் வாயிலே கொடுத்தாள் –
ஆன பின்பு
நலமே வலிது கொல் –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -73-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இவனுடைய திருவடிகளை
ஏத்தும் இதுவே கிடீர்
வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

———————————————————————————-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப் பக்கமாகவும் வலப் பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வடதிசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

————————————————————————————-
வியாக்யானம் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி –
மேருவுக்கு இடமாயும்
வளமையும்
சஞ்சரிப்பதாய்
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதுமான
ஏழு குதிரைகள் பூண்ட ஆதித்ய ரதத்தை நடத்தி –

அன்றிக்கே
இடத்திலும் வளத்திலும் ஏழாகப் பூண்ட
ஆதித்ய ரதத்தை நடத்து -என்றுமாம் –

இவற்றால்
பீஷோதேதி சூரிய -என்கிறபடியே
ஆதித்ய அந்தர்யாமியாய்க் கொண்டு இருந்து
அத்தை நடத்தின படி

அன்றிக்கே
பாரத சமரத்திலே
ஆதித்ய ரதம் என்ற ரதத்தை
இடமாகவும் வலமாகவும் ஒட்டி
பிரதிபஷத்தை முடித்த படியாகவுமாம் –
ஆதித்ய பிரகாசமான தேரை -என்றுமாம் –

முதல் சொன்ன பொருள்
ஜகன் நிர்வஹணத்துக்கு உபலஷணம் –

வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்குக்குப் பிரதானமாய் யுள்ள
திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நிற்பானுமாய்-

குட நயந்த கூத்தனாய் நின்றான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து  குடக்கூத்தை
விரும்பி யாடின முக்தன் ஆனவனுடைய –
தன் அழகை
மன்றிலே பிறர்க்கு இடுமவன் –

குரை கழலே கூறுவதே நாத் தன்னால் உள்ள  நலம் –
ஆபரண ஒலியை உடைத்தான திருவடியை ஏத்தும் அதுவே
நாவால் உள்ள பிரயோஜனம்
என்கிறார் –

நாத் தன்னால் உள்ள  நலம் –
நாவால் படைக்கும் சம்பத்து –
குடக் கூத்தாடின
இளைப்பாலே
திருமலையிலே வந்து நின்றான் போலே –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -72-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அயர்வறும் அமரர்கள் அதிபதியான
சர்வேஸ்வரனை
கண்டு அனுபவிக்கலாவது
திருமலையிலே
கிடீர் -என்கிறார் –

————————————————————————————

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை  போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-

பதவுரை

குன்று ஒன்றினான–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதிகோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.

————————————————————————————-

வியாக்யானம் –

குன்று ஒன்றினாய குற மகளிர் –
ராம பக்தியாலே திருவடி
பரம பதத்தை விட்டு
சம்சாரத்தைப் பற்றினான் –

அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே
நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு
பரம பதத்தைப் பற்றினார்கள்
இவர்கள் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –

குன்று ஓன்று  இத்யாதி –
குன்று ஒன்றையுமே யுடையரான குற மகளிர்
திருமலை அல்லது அறியாத குறவர்கள் பெண் பிள்ளைகள் –
திருமலைக்கு கீழே இழயில் குடிப் பழி  இறே –

சென்று விளையாடும் கோல் வளைக்கை –
இப்பெண் பிள்ளைகள் சென்று
விளையாடுகிற போது
தர்ச நீயமான  வளையை உடைத்தான கையானது –

திங்கழை  -வென்று –
சுற்று உடைமையாலும்
பசுமையாலும்
செவ்வையாலும் ஆக
மூங்கில்களை வென்று –

போய் விளங்குமதி கோள் விடுக்கும்-
அதுக்கு மேலே போய்
உஜ்ஜ்வலமாகா நின்ற சந்த்ரனுக்கு
ராஹூ வானவன் க்ரஹிக்க ஒண்ணாது என்று
அவனால் வந்த வ்யசனத்தைப் போக்கும் –

கோல் வளைக்கை யானது மூங்கிலையும் வென்று
சந்திர வ்யசனத்தையும் வென்றது என்றபடி –

அவ்வளவு அன்றிக்கே
சென்று  விளையாடுகிற குற மகளிர் கோல் வளைக் கையிலே தீங்கழை  யுண்டு –
அவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கில் ஆனது போய்
விளங்கு மதி கோள் வென்று கொடுக்கும் -என்னவுமாம் –

அன்றிக்கே
இவர்கள் வளையின் ஒளி சந்தரன் ஒளி
புகுரப் பெறாத மூங்கில் இருட்டை வெளியாக்கி அருகில்
சந்தரன் மறுவையும் போக்கும் -என்றுமாம்  –
முற்பட்ட பொருளில் கைக்கு எட்டுகையாலே மறுவைத் துடைப்பர்கள் -என்றுமாம் –

இத்தால் –
திருமலையினுடைய ஒக்கம் சொன்னபடி

அங்கன் இன்றிக்கே
இவர்கள் கையாலே சென்று விளையாடுகிற தீங்கழை யுண்டு
குழலானது போய்ச் சந்தரன் வ்யசனத்தைப் போக்கும் என்றுமாம் —

வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலையே கிடீர் –

மேலை இளங்குமரர்   கோமான் இடம் –
எல்லோருக்கும் மேலாய் இருப்பாருமாய்
நிரந்தர அனுபவத்தாலே
நித்ய யுவாக்க்களுமாய் இருந்துள்ள
அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யானவனுடைய ஸ்தானம் –

பரம பதத்தில் தன்னோடு ஒக்க
எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -71-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபமான
திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை
வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து
இனியர் ஆகிறார் –

————————————————————————————

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

பதவுரை

களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை
குத்த–(எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.

—————————————————————————————

வியாக்யானம் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி –
முகில் குத்த -தனது துதிக்கையை
எடுத்துக் கொண்டு
பெரிய வேகத்தோடு சென்று
ஆனையானது மேகத்தைக் கண்டு
பிரதிகஜம் என்று கொண்டு புத்தி பண்ணிக் குத்த –

ஒளிறு மருப்பொசிகை யாளி –
இது இங்கனே செய்யா நிற்கச் செய்தே –
நடுவே நின்ற யாளியானது –
இந்த யானையினுடைய வெளுத்த  நிறத்தை உடைத்தான
கொம்பை முறியா நின்ற கையை உடைத்தாய்க் கொண்டு
கை எடுத்தோடி –
ஒளிறு மருப்பொசிகை யாளி -என்று
யாளிக்கு விசேஷணம் ஆகவுமாம்-

மருப்பொசிகை யாளி –
மருப்பை ஒசிக்கை
ஸ்வ பாவமான யாளி –

பிளிறி விழக் கொன்று நின்றதிரும் –
ஆனையானது சப்தித்துக் கொண்டு
விழும்படிக்கு ஈடாகக் கொன்று –
பின்னையும்
தன் சீற்றம் மாறாமையாலே-அவ்விடம் தன்னிலே சென்று
ஷூத்ர மிருகங்கள் மண்ணுன்னும் படி
கர்ஜியா நிற்கும்  –

விழக் கொன்று பிளிறி நின்ற -என்றாக்கிச்
சினத்தாலே நின்று
முழங்கா நின்றது ஆய்த்து-
கொன்ற விஜயத்தாலே சப்தித்திக்கும் -என்றபடி –

வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலை -கிடீர் –

மேனாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –
பண்டு குழக் கன்றைக் கொண்டு விளங்கனிக்கு
எறிந்தவனுடைய திருமலை –

சஹஜ சத்ருக்களை முடித்து
விரோதி போகப் பெற்றோம் என்று
உகந்து நிற்கிறவன் வந்து
வர்த்திக்கிற தேசம் –

அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே
இருப்பது ஓன்று ஆய்த்து
இவனுடைய மௌக்த்யமும்-

திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று
பாதகமாமோ என்னில்
அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -70-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை-

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது
சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா
திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி
இருப்பான் ஒருவன் -என்கிறார் –

இனி
ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை –
செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை –
என்கிறது –

அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம்
தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக்
கொள்ளும் -என்கிறது –

—————————————————————————-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

பதவுரை

களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.

——————————————————————————

வியாக்யானம் –

புகு மதத்தால் –
மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும்
பாய்த்து வாயிலே
புகுகிற மத ஜலத்தாலே –

வாய் பூசிக் –
மதம் மிகைத்துக் கொண்டு
வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே –
அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் –

கீழ்த் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவிக் –
கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற
மத ஜலத்தைக் கொண்டு
கால் கழுவி

கையால் -மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு –
தன் செருக்காலே பொய்கைகளிலே புக்குப்
பூக்களை பறிக்கக் கடவதாய் இருக்கும் இறே –
அதாய்த்து சமாராதன உபகரணம்

மிக்க மதத்தை உண்டாக்கக் கடவதான தேனை உடைத்தான
அலர்ந்த பூக்களைக் கொண்டு –
மதம் என்று கந்தமாய்
மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு -என்னவுமாம் –

விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் –
திருமலையில்
திரியக்குகளும்
தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல
சக்தியை யுடையவன் என்கிறது

ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை
தேச வாசத்தாலே பண்ண விருக்கும்

வேங்கடவனையே –
ஸ்ரீ வைகுண்ட நாதனையோ
வேங்கடவனை அன்றோ –

கண்டு வணங்கும் களிறு –
ஓர் ஆனை சென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து
திரு வேங்கடமுடையானை
ஆஸ்ரயிக்கலாம் படி –

களிறு –
ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள்
அப்ரயோஜகம் –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -68-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது
திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர்
என்கிறார் –

———————————————————————————-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

பதவுரை

சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொருகாலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.

———————————————————————————–
வியாக்யானம் –

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு –
சுனையிலே நீரைப் பார்த்த கடுவன்
தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண வறியாதே-

பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து –
வேறே ஒரு கடுவன் என்று
பிரதிபத்தி பண்ணி
தன் நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே
தனக்கு எதிரியான கடுவன் என்று நினைத்து –
வேறு ஒரு களாவும் கடுவனுமாக புத்தி பண்ணி –

கார்த்த கள்ங்கனிக்கிக் கை நீட்டும்-
கருத்த நிறத்தை உடைத்தான
களாப் பழத்துக்கு கையை நீட்டா நிற்கும்

ஒரு சுனையின்   கரையிலே களாவின் மேல் தான் நிற்குமே  –
அது தன்னிலே நிழலைக் கண்டால் -அத்தப் படியே தோற்றுமே-
அது தன் நிழல் என்று புத்தி பண்ணாதே
தான் இருந்த களாவில்   இது தன் கை படாததே
அதில் உள்ளதுவும் பெற வேணும் என்னும் சாபல்யத்தாலே
தா என்று கை நீட்டா   நிற்கும் –

கார்த்த –
கையில் சிவப்புக்குப் பகைத் தொடை –

வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலையே –

மேனாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு –
பண்டு ஒரு நாள் விளாவினுடைய பழத்துக்கு
கன்று எரிந்தவனுடைய வெற்பு –

இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து
அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே
அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை  –

————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -67-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு
அலருவது
மொட்டிப்பது
ஆகிற படியை அனுபவிக்கிறார் –

ஹிரண்யனும் பட்டு
மதுகைடபர்களும் முடிந்த பின்பு
கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

————————————————————————————

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(கை ஆம்)
இடத் திருக்கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.

————————————————————————————–

வியாக்யானம் —

ஆங்கு மலரும் குவியும் மால் –
ஓர் அவஸ்தையிலே
அலருவது குவிவதாக நிற்கும் –

ஆங்கு –
அப்பொழுது அதாவது
ஏக காலத்திலே –

உந்தி வாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது –
திரு நாபியிலே ஓங்கின
தாமரையிலே உண்டான
செவ்வி குன்றாத வழகிய பூவானது –

ஆங்கைத் திகிரி சுடர் என்றும்-
அவன் கையில் உண்டான
திரு ஆழியை -ஆதித்யன் -என்றும் –

வெண் சங்கம் வானில் பகருமதி என்றும் –
மற்றைத் திருக்கையில் உண்டான
வெளுத்த நிறத்தை யுடைத்தான
சந்தரன் என்று பார்த்து –
இப்படி
உத்ப்ரேஷித்துக் கொண்டு –

ஓங்கு கமலத்தின் ஒண் போது -ஆங்கு மலரும் குவியுமால் –
சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே  இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும்  செய்யக் கடவ கார்யத்தை
ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –

திகிரி மொட்டிக்க ஒட்டாது
வெண் சங்கு மலர ஒட்டாது
நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -66-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 13, 2014

அவதாரிகை –

தானொரு வடிவு கொண்டு வந்து
விரோதியைப் போக்கினான் என்னுமது
ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின
விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு
என்கிறார் –

உணர்த்தி உண்டான போது
விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே
விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு
என்கிறார் –

————————————————————————————

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

————————————————————————————–

வியாக்யானம்

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள் –
திரு வநந்த வாழ்வான் உடைய
பணங்களில் உண்டான ரத்னங்களின் உடைய
ஒளிகளானவை
இருளைப் போக்கும் போது
காய்ந்து போக்கா நிற்கும் ஆயத்து —

தன் சினம் கொண்டு போக்கா நிற்கும் ஆயத்து –
சஹாவ ஸ்தானம் இல்லாத மாத்திரமே அன்றிக்கே
வேணும் என்று போக்குகிறாப் போலே இருக்கை

ஏய்ந்த பணக் கதிர் –
தனக்குத் தகுதியான பணங்களில் உண்டான
ரத்னங்களின் உடைய
விளங்கா நின்றுள்ள ஒளியானது
காய்ந்து கொண்டு இருளை மாற்ற –

கதிர் மேல்-
அவ் ஒளிக்கு மேலே –

வெவ்வுயிர்ப்ப-
நெடு மூச்சு விட –
காய்ந்து இருளை மாற்றுகிற
கதிரோடு கூட –

வெவ்வுயிர்ப்ப-
பகவத் அனுபவத்தாலே வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக
உஸ்வாச நிச்வாசங்களைப் பண்ண –

வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்-
இவ்வளவிலே வந்து
விரோதிகளாய்க் கிட்டின
மதுகைடபரும் குடல் அழுகி முடிந்தார்கள் –

அதுகேடவர்கு இறுதி யாங்கு-
அதுவே அவர்களுக்குக் கேடுமாய்-விநாசமுமாய்-ஆயத்து –
அச்சோ -அத்தனையும் வேணும் -என்கிறார் –
என்றும் என் பிள்ளைகளுக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவர்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

ஆங்கு –
தாம் வாழவும் ஜீவிக்கவும் பெற்ற இடமே
அவர்களுக்கு
அபிசந்தி பேதத்தாலே மற்றைப்படி யாய்த்து –

அங்கே கிடக்குமது நாட்டாருக்கு ஸ்வரூப சித்திக்கு உடலாய் இருக்க
இவர்களுக்கு -அது தானே
விநாச்யமாய் விட்டது –

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்
ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -65-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 12, 2014

அவதாரிகை –

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே
மற்றுள்ள அவதாரங்களிலும்
ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை
யருளிச் செய்கிறார் –

——————————————————————————

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப்பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்

————————————————————————————
வியாக்யானம் –

அங்கற்கு இடரின்றி –
பிள்ளைக்கு ஓர் இடர் வாராத படி
சிறுக்கனான  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
ஒரு துக்கம் வாராத படி
அங்கற் கிடர் இன்றி   -என்ற பாடமாய்த்தாகில் –
அவ்விடத்தில் இடர் தீர -எனபது –

அந்திப் பொழுதத்து –
தேவர்களுக்கு பலம் ஷயித்து
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும்
காலத்திலே-

மங்க விரணியன தாகத்தை –
அவனுக்கு பலம் விஞ்சி இருக்கிற போதிலே
ஆசூர பிரக்ருதியான
ஹிரண்யன் உடைய உடலை
மங்கும் படிக்கு  ஈடாக –

இரணியனதாகம் –
வர பலத்தாலே பூண் கட்டின உடம்பு –
அவனுடைய ஆகமுண்டு -ஹிருதயம் –
அது மங்கும் படி –

பொங்கி –
மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு

அரியுருவமாய்ப் –
ஜ்வலந்தம் -என்கிறபடியே
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

பிளந்த அம்மான் –
பிளந்து பொகட்ட சர்வேஸ்வரன் ஆனவனே
பிறை எயிற்றன் அடல் அரியாய் பெருகினானை -பெரிய திருமொழி -2-5-8-என்னும்படியே –

அவனே -கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து –
ஒருவர் அளவன்றிக்கே
அனுகூல வர்க்கத்துக்காக வந்த நலிவைப் போக்கினான் –
சினந்து கொண்டு
குவலயா   பீடத்தின் உடைய
கொம்பை முறித்தான் –

காய்ந்து –
சீற்றம் இல்லாதவன் சீறி
அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் -என்கையாலே
ஒருவனுக்கே
இரண்டு உபகாரம் பண்ணினான் -என்னவுமாம் –
இதுவும் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்குச் செய்தது போலே காணும் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –