அவதாரிகை –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
சர்வேஸ்வரனை
கண்டு அனுபவிக்கலாவது
திருமலையிலே
கிடீர் -என்கிறார் –
————————————————————————————
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-
பதவுரை
குன்று ஒன்றினான–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதிகோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.
————————————————————————————-
வியாக்யானம் –
குன்று ஒன்றினாய குற மகளிர் –
ராம பக்தியாலே திருவடி
பரம பதத்தை விட்டு
சம்சாரத்தைப் பற்றினான் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே
நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு
பரம பதத்தைப் பற்றினார்கள்
இவர்கள் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –
குன்று ஓன்று இத்யாதி –
குன்று ஒன்றையுமே யுடையரான குற மகளிர்
திருமலை அல்லது அறியாத குறவர்கள் பெண் பிள்ளைகள் –
திருமலைக்கு கீழே இழயில் குடிப் பழி இறே –
சென்று விளையாடும் கோல் வளைக்கை –
இப்பெண் பிள்ளைகள் சென்று
விளையாடுகிற போது
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது –
திங்கழை -வென்று –
சுற்று உடைமையாலும்
பசுமையாலும்
செவ்வையாலும் ஆக
மூங்கில்களை வென்று –
போய் விளங்குமதி கோள் விடுக்கும்-
அதுக்கு மேலே போய்
உஜ்ஜ்வலமாகா நின்ற சந்த்ரனுக்கு
ராஹூ வானவன் க்ரஹிக்க ஒண்ணாது என்று
அவனால் வந்த வ்யசனத்தைப் போக்கும் –
கோல் வளைக்கை யானது மூங்கிலையும் வென்று
சந்திர வ்யசனத்தையும் வென்றது என்றபடி –
அவ்வளவு அன்றிக்கே
சென்று விளையாடுகிற குற மகளிர் கோல் வளைக் கையிலே தீங்கழை யுண்டு –
அவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கில் ஆனது போய்
விளங்கு மதி கோள் வென்று கொடுக்கும் -என்னவுமாம் –
அன்றிக்கே
இவர்கள் வளையின் ஒளி சந்தரன் ஒளி
புகுரப் பெறாத மூங்கில் இருட்டை வெளியாக்கி அருகில்
சந்தரன் மறுவையும் போக்கும் -என்றுமாம் –
முற்பட்ட பொருளில் கைக்கு எட்டுகையாலே மறுவைத் துடைப்பர்கள் -என்றுமாம் –
இத்தால் –
திருமலையினுடைய ஒக்கம் சொன்னபடி
அங்கன் இன்றிக்கே
இவர்கள் கையாலே சென்று விளையாடுகிற தீங்கழை யுண்டு
குழலானது போய்ச் சந்தரன் வ்யசனத்தைப் போக்கும் என்றுமாம் —
வேங்கடமே –
இப்படிப் பட்ட திருமலையே கிடீர் –
மேலை இளங்குமரர் கோமான் இடம் –
எல்லோருக்கும் மேலாய் இருப்பாருமாய்
நிரந்தர அனுபவத்தாலே
நித்ய யுவாக்க்களுமாய் இருந்துள்ள
அயர்வறும் அமரர்களுக்கு ஸ்வாமி யானவனுடைய ஸ்தானம் –
பரம பதத்தில் தன்னோடு ஒக்க
எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –
—————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply