Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -61-80–திவ்யார்த்த தீபிகை —

October 6, 2014

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்கு கோயில் போல் -வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் –61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்–நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

இப்பாட்டை இரண்டுவகையாக நிர்வஹிப்பதுண்டு, அவற்றுள் முதல்வகை எங்ஙனே யெனின்,
ஸ்ரீவைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடைய எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல் திருவேங்கடம் திருக்கடிகை
முதலிய திருப்பதிகள் முன்பெல்லாம் கோயிலாக அமைந்திருந்தன,
(அதாவது –என்னுடைய நெஞ்சகம் அவனுக்குக் கோயிலாகக் கிடைப்பதற்கு முன்பு) இப்போதோ வென்னில்,
அவன் விரும்பியெழுந்தருளி யிருப்பதற்குப் பாங்காக என்னுடைய நெஞ்சகம் அவனுக்கு ஆலயமாகக் கிடைத்து விட்டதனால்
அத்திருப்பதிகளிற் பண்ணுமாதாத்தை என்னெஞசிலே பண்ணிக்கொண்டு கிடக்கிறான் என்பதாம்.

மூலத்தில் ‘பண்டெல்லாம்‘ என்றவளவுக்கு இவ்வளவு விசாலமான கருத்துக்கொள்வது சிரமமென்று தோன்றினால்,
வேறொருவகையான நிர்வாஹம் காட்டுவோம், –
ஆழ்வார் இப்பாட்டால் திருக்கடிகைக்குன்றைச் சிறப்பித்துக் கூறுவதாகக்கொள்க.
திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய திருப்பதிகளிற் காட்டிலும்
வண்டு வளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகையிலே அதிகமான ஆதாரத்தைப் பெருக்கி
அஃதொன்றையே கோயிலாகக் கொண்டிருக்கிற னென்பதாகக் கொள்க.

கடிகை – தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாய், ‘
சோளஸிம்ஹபுரம்‘ என்று ப்ரஸித்தமாக வ்யவஹரிக்கப்பட்டு வரும் திருப்பதி.

——————————————————————————————————————————————————–

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை -மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –62-

பதவுரை

விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து துலையெறிகிற நீர்வம் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர்போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்கமாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத்திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.

‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா
திருமலை, ஆளழகிய சிங்கர் ஸந்நிதி‘ என்கிற கச்சித் திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில்,
திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று
சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.

ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து –
மஹாபலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ
அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.

தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.

———————————————————————————————————————————————————————————

ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில்,
பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.
ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம் -அழகர் கபோலத்தில் யசோதை பிராட்டி முத்த தழும்பு கண்டு அனுபவித்து
கூரத் ஆழ்வான் அனுபவித்தால் போலே –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு யுருவும் ஒன்றாய் இசைந்து –63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரைநாணுமாய்க்கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

எம்பெருமான் செய்தருளின பல அவதாரங்களில் சங்கர நாராயணவதார மென்பது மொன்று,
இது ஹரிஹர அவதாரமென்றும் சொல்லப்படும்.
பாதிவடிவம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தி யாகவும் பாதிவடிவம் பரமசிவமூர்த்தியாகவும் கொண்டதாமிது,
எம்பெருமான் கொண்ட கோலங்களெல்லாம் பகவத்பக்தர்கட்கு உத்தேச்யமாகையாலே
இவ்வுருவந்தன்னையும் ஆழ்வார்கள் அநுஸந்தித்துப் பாசுரங்கள் பேசுவதுண்டு.

“திருமலைமே லுந்தைக்கு இரண்டுருவு மென்றாயிசைந்து தோன்றும்“ என்று இங்கு
ஆழ்வா ரருளிச்செய்திருப்பது கொண்டு இதற்குப் பலர் பொருள்கொள்வ தெங்ஙனேயென்னில்,
திருவேங்கடமுடையானுக்குச் சடையுமுண்டு கிரீடமுமுண்டு, மழுவுமுண்டு, சக்கரமுமுண்டு,
நாகாபரணமுமுண்டு பொன்னுணு முண்டு – என்றிங்ஙனே பொருள்கொள்வர்.
இது பொருந்தாது,

திருவேங்கடமலையில் அரச்சையாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் பக்கல் தாழ்சடையுமில்லை,
ஒண் மழுவுமில்லை, சூழரவுமில்லை, நீண்முடியும் சக்கரமும் பொன்னுணுமேயுள்ளன.
ஆகில் “திருமலைமேலெந்தைக்கு இரண்டுருவு மொன்றாயிசைந்து தோன்றும்“ என்றது எங்ஙனே சேருமென்னில், நன்கு சேரும்,
திருவேங்கடமுடையானாக ஸேவைஸாதிக்கும் திருமலையப்பன்றானே ஒரு மையத்தில் இரண்டுருவையும்
ஒன்றாயிசைத்துக்கொண்டு தோன்றினவன் – என்ற பொருளே இதிலடங்கியுள்ளதாம்.

இதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களுங் காட்டுவோம்,
திருப்பள்ளியெழுச்சியில் – “மாமுனி வேள்வியைக் காத்து அவ்விரதமாட்டிய அடுத்திறலயோத்தி யெம்மரசே!
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே“ என்கிறார்.
இதனால் திருவரங்கத்தில் சேஷசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் அழகிய மணவாளன்றனே
விச்வாமித்ர முனிவனுடன் சென்று வேள்வியைக் காத்துவந்தான் என்றதாகுமோ?
அந்த ஸ்ரீராமபிரானும் இந்த அழகிய மணவாளனும் ஏகதத்துவம் என்றபடியா மத்தனையன்றோ?

இன்னமும், பூதத்தாழ்வார் “அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்“
என்றருளிச் செய்கிறார்.
இதனால் கச்சி நகர்ப் பேர்ருளானப் பெருமான் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டிருக்கிறார் என்றதாகுமோ?
நாகத்தின்மேல் துயில்கொள்ளும் மெம்பெருமானும் அத்தியூரானும் ஏகதத்துவம் என்ற தாகுமத்தனையன்றி வேறில்லை.
ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில்,
பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.
ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவம் -அழகர் கபோலத்தில் யசோதை பிராட்டி முத்த தழும்பு கண்டு அனுபவித்து
கூரத் ஆழ்வான் அனுபவித்தால் போலே –

—————————————————————————————————————————————————————————————-

தன்னை விரும்பாதே உபயோகமற்ற க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கட்கும் எம்பெருமான்
உடம்பு நோவக் காரியஞ்செய்து பயனளிப்பவன் என்பதை, தேவர்கட்குக் கடல்கடைந்து அமுதமளித்த
வரலாறு கொண்டு அநுஸந்தித்து உள் குழைகின்றார்.

இசைந்த வரமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுதம் படுப்ப-அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தரபர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்த்தனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

பிரானே! இடமும் வலமுமாக அசைந்தசைந்து கடல்கடைந்த கனுலுண்டான ஆயாஸத்தினால்தானோ
கச்சித் திருப்பதிகளிலே கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாகப் படுகிறாய்? என்கிறார்.

கச்சிவெஃகாவில் சயளிப்பது மாத்திர முண்டேயன்றி நிற்பதுமிருப்பதும் அங்கில்லையே,
அப்படியிருக்க “கச்சிவெஃகாவில் கிடந்திருந்து நின்றதுவுமங்கு“ என்று கிடத்தலிருத்தல் நிற்றல் மூன்றும்
வெஃகாவிலே நிகழ்வனவாக அருளிச்செய்தது எங்ஙனே? என்று சங்கை பிறக்கும்,
பிரகரணத்திற்குப் பொருத்தமாக, கச்சி என்ற சொல்லால் பாடகத்தையுமூரகத்தையும் சேர்த்து
அநுஸந்தித்துக்கொள்ள வேணுமென்பதே ஆழ்வார் திருவுள்ளமாதலின் ஒரு குறையுமில்லை.
(“நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக்கிடந்தது“ என்பது திருச்சந்த விருத்தம்.

இப்பாட்டில் மற்றுமோர் சங்கை பிறக்கலாம், உலகத்தில் சிரமமுண்டானால் அதற்குப் பரிஹாரமாகச் சயனித்துக் கொள்வதுண்டு,
‘இங்ஙனே சயனித்தருள்வது இன்ன ஆயாஸந்தீரவோ? என்று கேட்பது பொருந்தும்,
திருமழிசைப்பிரான் திருச்சந்தவிருதத்தில்
“நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய், இடந்த மெய்குலுங்கவோ விலங்குமால்வரைச் சுரம்,
கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு“ என்றும்,
நம்மாழ்வார் திருவாய்மொழியில்
“கொடியார்மாடக் கோளூரகத்தும புளிங்குடியும், மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியாரல்லல் தவிர்த்தவசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவிய அசவோபணியாயே?“ என்றும் அருளிச் செய்தவை போல
இவ்வாழ்வாரும் “அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃகாவில் கிடப்பது?“ என்றருளிச் செய்வதன்றோ பொருந்தும்,
“இருந்து நின்றதுவுமங்கு“ என்றது எதுக்கு?
சிரமத்தினால் கிடத்தலுண்டேயன்றி இருத்தலும் நிற்றலும் ச்ரமகார்யமன்றே என்று சிலர் சங்கிப்பர்கள், கேண்மின்,
இங்கு “அசைந்து கடைந்த வருத்தமோ?“ என்றிருந்தலால் ஆடியாடி அசைந்தசைந்து கடைந்ததனாலுண்டான
ஆயாஸம் தீர்வதற்காக நிற்கவுமாம் இருக்கவுமாம் கிடக்கவுமாம்.

—————————————————————————————————————————————————————————————

நரஸிம்ஹாவதாரம் செய்தருளினவனும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரம் செய்தருளினவனும் ஒருவனே யென்கிறார்.

அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரி யுருவமாய் பிளந்த வம்மான் அவனே
கரி யுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப்பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்

அங்கற்கு இடரின்றி – வடமொழியில், மகனை ‘ஆத்மஜன்‘ என்று சொல்வது போலத்
தமிழில் அங்கன் என்கிறது. அங்கத்திலிருந்து தோன்றினவன் என்று பொருள்,
எனவே ஹிரண்யபுத்ரனான ப்ரஹ்லாதாழ்வானைச் சொல்லிற்றாயிற்று.
அவனுடைய இடர்தீர்வதற்காக அரியுருவமானான் என்கையாலே, எம்பெருமான் தன் திறத்திலே ஆஸுரப்ரக்ருதிகள்
எத்தனை அபசாரப்பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீறமாட்டான்,
தன்னடிவர் பக்கல் அபசாரப்படுமளவில் அவ்வபாதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் என்கிற அர்த்தம் வெளியாகிறது.

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயர் அருளிச்செய்வர்“
என்று ஸ்ரீவசநபூஷணத்தில் ஸ்ரீஸூக்தி. அதாவது –
ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னை
யழிய மாறி இதர ஸஜாதீயனாயவதரித்துக் கை தொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபமான
அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம – ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில்
அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று நஞ்சீய ரருளிச் செய்வாராம்.

அஸுர ராக்ஷஸர்களாலே தனக்கு நேரும் இடர்களைக் கணிசிக்க மாட்டான் எம்பெருமான்,
அடியார்க்கு ஓரிடர் நேர்ந்தால் அதனை உடனே பரிஹரிக்கப் பாடுபடுவன் என்க,
இது தோன்றவே இங்கு ‘அங்குகற்கு இடரின்றி‘ எனப்பட்டது.
(இடரின்றி – இடரில்லாமலிருக்கும் பொருட்டு) ஈற்றடியில், “கரியின் கொம்பொசித்தான்“ என்றாலே போதுமே,
‘கரியுருவம்‘ என்றதென்? என்னில்,
மேலெழப்பார்வைக்கு அனு யானையாயிருந்த தத்தனை, உண்மையில் அஸுரவடிவேயாம் அது – என்ற கருத்தை வெளியிடுதற்கென்க.
உருவத்தினால் கரியாயிருந்த (யானையாயிருந்த) விலங்கின்கொம்பை முறித்தவன் என்றபடி.
கரீ – வடசொல், துதிக்கை யுடையதென்று காரணக் குறி.
இனி, கரி யென்றதைத் தமிழ்ச் சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம், (பதவுரை காண்க)

——————————————————————————————————————————————————————-

தூணில் வந்து தோன்றி ப்ரஹலாத விரோதியை முடித்த வரலாற்றைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்.
எம்பெருமான் உறங்குவான் போலிருக்கும்போதே அநாயாஸமாக எதிரிகளை முடிக்க வல்லவனாயிருக்கையில்
உணர்ந்திருந்து விரோதிநிரஸநஞ் செய்த்து அவனுக்கு ஒரேற்றமோ? என்று சொல்ல நினைத்து,
மதுகைடபர்களை எளிதாக முடித்திட்டபடியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

காய்ந்து இருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு -66

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

மதுகைடபர்கள் மடிந்த வரலாறு பலவிதமாகச் சொல்லப்படுவதுண்டு,

கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் அழகருடைய திருத்துடைகளை வருணிக்குங்கால்,
“பிஷ்டதுஷ்ட மதுகைடபகீடௌ“ என்றும்,
மதுகைடபஸ்ய. .. கிமுபமிமீமஹி ரங்ககுஞ்ஜரோர்வோ. என்றும் அருளிச்செய்திருக்கையாலே
மதுகைடபர்கள் திருமாலின் திருத்துடையில் இறுதி முடிந்தனர் என்பது தெற்றென விளங்கும்.
இதிஹாஸ புராணங்கள் பலவகைப் பட்டிருத்தலால் ஆழ்வாருளிச்செய்கிற விதமாகவும் உண்டென்று கொள்க.
அரவணையில் துயில் கொள்ளும் எம்பெருமானோடு போர் புரிவதாக மதுகைடபர்கள் கிட்டவந்த மாத்திரத்திலே
திருவந்தாழ்வானுடைய உஷ்ணமான மூச்சுக்காற்று வீசினவளவிலே அவ்வசுரர்கள் வயிறுருகி மாண்டொழிந்தனர் என்கிறார்.

“மேருகிரியவுணனுடல் மிடல் கெடுத்தா யென்பர் அது, உன் வுருகிரேயறிந்ததல்லால் கோவே! நீ அறியாயால்“ என்றாற் போலே,
உண்மையில் திருத்துடைகளால் இறுக்கிக் கொல்லப்பட்ட அவ்வசுரர்களை ஆதிசேஷனுடைய வெவ்வுயிர்ப்பினால்
வயிறுருகி மாண்டனராகச் சொல்வதும் பொருந்தியதேயாம். அதிசய்யோக்தியில் ஒரு வகையென்க.

அது கேடவர்க்கிறுதியாங்கு “என்று மென்பிள்ளைக்கு தீமை செய்வார்கள் அங்ஙனமாவார்களே“ என்று
யசோதைப் பிராட்டி கைசுடுக்கி வைதாளே, அது போலக்கொள்க.
கண்ணபிரான் விஷயத்தில் தீமை செய்பவர்கள் வத்ஸாஸுரனும் கபித்தாஸுரனும் பட்டபாடு படுவர்கள் என்று
அவள் சாபமிட்டாற்போல் இவ்வாழ்வாரும் சாபமிடுகிறார் –
எம்பெருமான் விஷயத்தில் பிராதிகூல்யமுள்ளவர்கள் மதுகைடபர்கள் பட்டபாடு படுவர்கள் என்கிறார்.

அவர்க்கு என்றது – அந்த மதுகைடபர்களைப் போன்ற விரோதிகளுக்கு என்றபடி.

———————————————————————————————————————————————————————

ஆங்கு மலரும் குவியும் மால் உந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது -ஆங்கு கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து –67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(கை ஆம்)
இடத் திருக்கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.

சேஷ சயனத்தில் பள்ளிகொள்ளு மெம்பிரானுடைய திருநாபிக்கமலம் நன்றாக விகஸித்ததாகவுமிராதே
நன்றாக மூடிக்கொண்டதாகவுமிராதே மலர்வதும் மொட்டிப்பதுமா யிருக்கிற அழகை அநுபவித்துப் பேசுகிறார்.

எம்பெருமானுடைய வலத் திருக்கையில் திருவாழியாழ்வான் விளங்குகிறான்,
அனேகமாயிரம் ஸூர்யர்களுக்கு ஸமானமாக ஸுதர்சநாழ்வான் சொல்லப்பட்டிருப்பதால் அவ்வாழ்வானைக் கண்டு
ஸூர்யனென்றெண்ணி உந்திக்கமலம் மலரத் தொடங்குகின்றது,
இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வான் வெள்ளை வெளே லென்று விளங்குகிறான்,
“சந்திரமண்டலம் போல் தாமோதரன் கையில்…. வலம் புரியே!“ என்று அவன் சந்த்ர ஸமாநனாகச் சொல்லப்பட்டிருப்பதால்
அவ் வாழ்வானைக் கண்டு சந்திரனென்றெண்ணி மூடிக் கொள்ளத் தொடங்குகிறது.
இப்படி மாறி மாறி மலர்வதும் மூடுவதுமாயிருக்குமிருப்பொழிய ஸ்திரமான வொரு நிலையில்லை யென்கிறார்.

—————————————————————————————————————————————————————————-

திருமலையில் நிகழ்ச்சியைக் கூறுகின்றார்.

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு –68

பதவுரை

சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக்கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த கனங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப்பழத்தைப் பறித்துத்தா வென்று கை நீட்டப்பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொருகாலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம்பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறிகுணிலாகக் கொண்டு) வீசியெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.

ஒருசுனையின் கரையிலே களாச்செடிகளில் களாப்பழங்களைப் பறித்துத்
தின்ன தொடங்கின குரங்கானது அச்சுனை நீரை எட்டிப்பார்த்தவாறே அதில் தன் பிரதிபிம்பத்தைக் கண்டு
அங்கே வேறொரு குரங்கு இருப்பதாகவும் அது களாப்பழங்களைப் பறிப்பதாகவும் பிரமித்து
‘எனக்குக் களாப்பழம் தா‘ என்று கை நீட்டுகின்றதாம்,
இப்படிப்பட்ட திருமலையானது, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரனை முடித்த
கண்ணபிரான் திருவுள்ளம் உவந்து வாழும் திவ்யதேசமாம்.

திருமலையப்பனுடைய சேஷ்டிதங்களைப் பேசுவதோடு அங்குள்ள தீர்யக்ஜந்துக்களின் சேஷ்டிதங்களைப் பேசுவதோடு
வாசியில்லை ஆழ்வார்க்கு. திருமலையிலுள்ளது ஏதேனுமாம், எல்லாம் உத்தேச்யமாயிருக்கும்.
“எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமவனே“ என்றாரே ஸ்ரீ குலசேகரப் பெருமான்.

———————————————————————————————————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்க்
கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் -69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத்தோள்களையுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப்பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற்கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல்,
திருக்கல்யாண குணங்களைச் சொல்லியனுபவித்தல், திவ்யசேஷ்டிதங்களைச் சொல்லியனுபவித்தல்,
வடிவழகை வருணித்தநுபவித்தல், அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல்,
அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசியநுபவித்தல் –என்றிப்படி பலவகைப் பட்டிருக்கும் பகவதநுபவம்.

இவ்வகைகளில் பாமவிலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு, அதாவது –
தாமானதன்மையை (ஆண்மையை) விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பேசியநுபவித்தல்.
இப்படி யநுபவிக்குந்திறத்தில் தாய்பாசுரம், தோழிபாசுரம், மகள்பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு,
இவை நம்மாழ்வார் திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில் விசேஷமாக வரும்
முதலாழ்வார்களின் திருவந்தாதிகளில் ஸ்த்ரீபாவநையினாற் பேசும் பாசுரம் வருவதில்லை.
ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்களருளிச் செய்வர்கள் முதலாழ்வார்கள்.
ஆயினும் இப்பாசுரமொன்று தாய் வார்த்தையாகச் செல்லுகிறது.
பேயாழ்வாராகிற பெண்பிள்ளையின் நிலைமையை அவளைப்பெற்றுவளர்த்த திருத்தாயார் பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம் இது.

“என்னுடைய மகளானவள்“ என்ற எழுவாய் இதில் இல்லை யாதலால் கற்பித்துக் கொள்ளவேண்டும்.
என் மகள் ஏதேனுமொரு மலையைச் சொல்லப் புகந்து திருவேங்கட மலையைப் பாடுகின்றாள்.
திருத் துழாய் மலரைச் சூடிக்கொள்வதே தனது கற்புக்கு உரியதென்று தன் குழல் மேல் அதனைச் சூடிக் கொள்ளுகின்றாள்.
மல்ல வதம் செய்தருளின பெருமான் பள்ளிக்கொண்டருளும் திருப்பாற்கடலில் நீராடுவதே தகுதியென்று
அங்கேறப் புறப்படுகின்றாள் என்றதாயிற்று.

இப்பிபந்தத்தில் அந்யாபதேசப் பாசுரம் வேறொன்றுமில்லாதிருக்க இஃதொன்றைமாத்திரம்
இங்ஙனே தாய்பாசுரமாகக் கொள்ளுதல் சிறவாதென்றும்,
‘என்மகள்‘ என்ற எழுவாய் இல்லாமையாலும் இவ்வர்த்தம் உசிதமென்று என்றும் சிலர் நினைக்கக் கூடுமாதலால்
இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாகஹமும் பூருவர்கள் அருளிச்செய்துள்ளார்.

எங்ஙனே யெனின்? பாடும், சூடும், புகும் என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில் வந்தனவாகக் கொண்டு,
‘ஓ உலகத்தவர்களே! நீங்கள் ஏதாவதொரு மலையைப் பாடவேண்டில் திருவேங்கடமலையைப் பாடுங்கள்,
ஏதேனுமொரு மலரைக் குழலில் சூடவேண்டில் திருத்துழாய்மலரைச் சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு
உரியதென்று கொண்டு அதனைச் சூடுங்கள், நீராடுவதற்குத் திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‘ என்பதாக.

இங்கே பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்,
“இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேச மின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும் இப்படி கொள்ளுகிற
தென்னென்று நிர்வஹிப்பர்கள், திருமலையைப் படுங்கோள், திருத்துழாயைச் சூடுங்கோள்,
விரோதி நிரஸந சீலனானவன் கிடந்த திருப்பாற்படலிலே முழுகுங்கோள்.“ என்று.

நன்னூல் வினையியலில் “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில், செல்லாதாகும் செய்யுமென்முற்றே“ என்ற
சிறப்புவிதிக்கு மாறாக, பாடும், சூடும், புகும் என்ற செய்யுமென் முற்றுக்களுகு முன்னிலைப் பொருள் கொள்ளலாமோ வென்னில்,
இதனைப் புதியன புகுதலாகக் கொள்க. “நீர் உண்ணும் என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் புதியனபுகுதல்“ என்று
நன்னூலுரைகாரர்களும் சொல்லி வைத்தார்கள்.
“பழையன கழிதனும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே“ என்ற நன்னூற் சூத்திரமும் காண்க.

மற்பொனற நீண்ட தோள்மால் என்றவிடத்து அறியவேண்டும் வரலாறு வருமாறு –
கண்ணபிரான் கம்ஸனது ஸபையிற் செல்லும்போது எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட
சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய
அவர்களை யெல்லாம் கண்ணபிரான் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனன்.

கண்ணபிரான் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது
ஸபா மண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து
அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வெண்ணாதபடி
மூங்கிற் பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற்சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸநத்தின்மீது
தன்னை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே தான் அதன்மேலேறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு
ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் மிகப்பெரியதாக விச்வரூப மெடுத்துப்
பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்த்து அப்பிலவறையிலிருந்த மல்லர்களை மடிவித்தனன் என்ற வரலாறு முணர்க.

பூண்டநாளெல்லாம் – ஸூர்யனுடைய தேரிலே குதிரை பூட்டின நாளெல்லாம் என்றபடியாய்
‘விடிந்த விடிவுகள் தோறும்‘ என்று பொருள்பட்டது.

——————————————————————————————————————————————————————————————

புகுமதத்தால் வாய் பூசிக் கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு –70-

பதவுரை

களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.

திருமலையில் மதயானைகள் தாமரைப் பூக்களைப் பறித்து அப்பன் திருவடிகளில் ஸமர்ப்பித்து வணங்குகிறபடியை
ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார். எம்பெருமான் ஸந்நிதியில் தொண்டுசெய்யப் போமவர்கள்
வாயைக் கொப்பளித்துக் கைகால்களை சுத்திசெய்து கொண்டு புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு போவது வழக்கம்
இவ்வாசாரம் சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, திருமலையிலுள்ள அஃறிணைப் பொருள் கட்கும்
இவ்வாசாரம் கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்கிறார்.

மத்தகம், கன்னங்கள் ஆகிய இடங்களிலிருந்து பெருகி வாயிலே புகுகின்ற மத ஜலத்தினால் வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணினது போலும், அருவிபோலே காலளவும் பெருகுகின்ற மதஜலத்தினால் காலைக் கழுவினது போலும்.

விறல் வேங்கடவன் – இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக் ஜந்துக்களும் தன்னை வணங்குமாறு
ஜ்ஞாநத்தைக் கொடுக்க சக்தனான திருவேங்கடமுடையான் என்ப.

——————————————————————————————————————————————————————————————

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71–

பதவுரை

களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை
குத்த–(எதிரியானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.

“மதயானைபோலெழுந்த மாமுகில்காள்!“ நாச்சியார் திருமொழி -8-9–என்றும்,
“கரியமாமுகிற் படலங்கள் கிடந்தவை முழங்கிடக்களிறென்று“ -பெரியாழ்வார் 1-2-10-என்றும் சொல்லுகிறபடியே
யானைக்கும் மேகத்திற்கும் ஒப்புமை ப்ரஸித்தம்.
ஆகவே, திருமலையிலுள்ள யானையானது மலைமுகட்டில் படிந்திருந்த மேகத்தை எதிரியான தொரு யானையென்று
மயங்கிப் பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால் குத்த, இதனை ஒரு யாளி கண்டு
‘இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா‘ என்று சினந்து ஓடிவந்து அவ் யானையின்மேற் பாய்ந்து
அதன் கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு அலறிக்கொண்டு விழும்படியாகக் கொலையுஞ் செய்து,
அவ்வளவிலும் சீற்றம் தணியாமையாலே அவ்விடத்திலேயே நின்று மற்றுள்ள மிருகங்களும்
மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம் திருமலையில்.

——————————————————————————————————————————————————————————

திருமலையில் வளர்கின்ற மூங்கில்கள் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன வென்பதை
ஒரு அதிசயோக்தியினால் கூறுகின்றார்.

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை போய்–வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் –72

பதவுரை

குன்று ஒன்றினான–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதிகோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.

குன்றொன்றினாய குறமகளிர் – திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுது கீழிழிந்தாலும் குடிப்பழியாம் என்று
திருமலையை விடாதே அங்கே நித்தியவாஸம் பண்ணுகின்ற குறத்திகள் அவர்கள் ஊஞ்சலாடுகை முதலான
விளையாடல்களுக்காக மூங்கில் மரங்களிலே யேறியிருப்ப துண்டாகையாலே “
குறமகளிர் கோல்வளைக்கை சென்று விளாயாடுந் தீங்கழை“ எனப்பட்டது.
அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை கர்ஹிக்கின்ற ராஹுவைக்குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை மகிழ்விக்கின்றனவாம்.
இங்ஙனே ஒக்கமுடைத்தான திருமலை நித்ய ஸூரிநாதன் வாழுமிடம்.

இப்பாட்டுக்கு மற்றும் பலவகையாகப் பொருள்கூறுவர்,
விளையாடுகின்ற குறத்திகளின் கோல் வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி,
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் பெற்றிருந்த இடரை நீக்கும் என்றுமாம்.
அன்றியே
குறத்திகளின் வளைகளின் ஒளியானது சந்திரனொளி புகுரப்பெறாத மூங்கிலிருளை அகற்றி வெளியாக்கி,
சந்திரன் மறுவையும் போக்கும் என்றுமாம்.

மேலேயிளங்குமரர் – நித்ய ஸூரிகள் என்றும் பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பரென்க.

———————————————————————————————————————————————————————————————————-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும்–குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம் –73

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வடதிசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்யவாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக்கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

எம்பெருமானுக்கு ஸூர்யமண்டலமும் ஒரு வாஸஸ்தாநமாதலால் ‘இரவித் தேரோட்டி‘ என்றார்.
எம்பெருமானுடைய அநுப்ரவேசமின்றி எந்த தேவதையும் எக்காரியமும் செய்ய முடியாதாகையாலே
அவன்தானே ஸூர்யனுக்கு அந்தர்யாமியாயிருந்து தேரே நடத்துகின்றானென்க.

ஏழ் பூண்ட –ஏழு குதிரைகளைப் பூண்ட என்றபடி.
காயத்ரீ ப்ருஹதீ, உ ஷ்ணிக், ஜகதீ. த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி – என்கிற ஏழு சந்தஸ்ஸுக்களும்
ஏழு குதிரைகளாயக் கொண்டு வஹிக்குமென்று சாஸத்ரம் சொல்லும்.

‘ஓட்டி‘ என்பதை வினையெச்சமாகவுங் கொள்ளலாம், ‘இ‘ விகுதிபெற்ற பெயராகவுங் கொள்ளலாம்.

“குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன்… பரன்சென்று சேர் திருவேங்கடமாமலை“ என்று
கண்ணபிரான்தானே திருவேங்கடமலையில் வந்து ஸந்நிதி பண்ணிருப்பதாக அருளிச் செய்கையாலே
இங்கும் “குடநயந்த கூத்தனாய் நின்றான்“ என்று கண்ணபிரானோடு ஒற்றுமை நயம்படக் கூறப்பட்டது.

திருவேங்கடமுடையானுடைய திருவடிகளைத் துதிப்பதே நாவுக்குப் பயன் என்றதாயிற்று.

——————————————————————————————————————————————————————————–

எம்பெருமானிடத்தில் அந்தரங்கமான அன்பு பூண்டவர்களுள் தலையானவன் யசோதைப் பிராட்டி
யொருத்தி தான் என்பதை வெளியிடுகிறாரிதில்,

நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன்பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்
தன் கொங்கை வைத்தாள் சார்ந்து –74-

பதவுரை

சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனையானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்துபோய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ணபிரானை
ஆய்ச்சி–யசோதையானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!

கண்ணபிரான் இளங்குழவியாய் நந்தகோபர் திருமாளிகையில் சயனித்திருக்கும்போது வஞ்சகக் கஞ்சனாலேவப்பட்டுக்
கொல்ல வந்த பூதனையென்னும் பேய்த்தாய் மிக்க பரிவுள்ளவள்போலத் தெய்வக்குழவியை யெடுத்துத்
தனது விஷந்தடவின முலையைக்கொடுக்க, பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்டவாறே
அப்பேய்ச்சி உயர்மாண்டு பிணமாய் விழுந்தாள்,
உடனே யசோதைப்பிராட்டி ஓடிவந்து குழந்தையை வாரியெடுத்தணைத்து முலை கொடுத்தாள் – என்பதாக இதிஹாஸமுள்ளது,

ஒருத்திவந்து முலைகொடுத்துப் பட்டபாடு கண்ணெதிரே காணாநிற்கச் செய்தே இன்னொருத்தி கிட்டவரத்தான் முடியுமா?
அஞ்சாமல் கிட்டவந்து வாரியெடுத்து முலை கொடுத்தாளென்றால் இவளுடைய அன்பின் கனம் விளங்குமன்றோ
பூதனைகொடுத்த விஷத்திற்கு மாற்றான அம்ருதமாகத் தனது ஸ்தந்யத்தைக் கொடுக்க வேணுமென்னும்
அன்பு மிகுதியினால் யசோதை செய்த இக்காரியம் அன்புக்கு ஒக்குமத்தனை.

நலமே வலிதுகொல் – ஸ்த்ரீகளுக்கு அச்சமே வலிதாயிருக்கச் செய்தேயும்
யசோதைப்பிராட்டிக்கு அன்புதான் வலிது போலிருக்கின்றது! என்றவாறு.

‘***‘ என்ற வடசொல் சலமெனத் திரிந்தது.
இச்சொல் இங்கு நடுநிலைத் தீவகமாய் முன்னும் பின்னும் அந்வயிக்கும்.

————————————————————————————————————————————————————————–

திருமலையை அநுபவிக்கிறார்.

சார்ந்து அகடு தோய்ப்ப தடாவிய கோடுச்சி வாய்
ஊர்ந்து இயங்கும் வண் மதியின் ஒண் முதலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற தென்பதை
ஒரு அதிசயோக்தியினால் வெளியிடுகிறார்
சந்திரனிடையே கறுப்பாகத் தோன்றுவதைக் கவிகள் பலவிதமாகக் கூறுவதுண்டு.
மான் என்பர் சிலர், முயல் என்பர் சிலர் மற்றும் பல்வகையுங் கூறுவர்.
‘முயல்‘ என்ற கொள்கையைப் பின்பற்றி இப்பாசுரமருளிச் செய்யப்படுகிறது.
ஆகாசத்திலே திரிகின்ற சந்திரன் திருமலையின் சிகாநுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில்
ஸம்பந்தப்பட்டுக் கொண்டே செல்லுகின்றானாம்,
அப்போது அவனது மடியிலிருக்கின்ற முயலைத் திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அ
தனைத் தான் உணவாகக் கொள்ளக்கருதி, பிடித்துக்கொள்ளவும் மாட்டாமல் விட்டுப் போகவும் மாட்டாமல்
உறுத்துப் பார்த்தபடியே நிற்கின்றதாம்.
இப்படிப்பட்ட திருமலை வேங்கைமலர்களின் வாஸனை வீசப்பெற்றதாய்க் கண்ணபிரா னெழுந்தருளி
யிருக்குமிடமான திருமலையாம்.

——————————————————————————————————————————————————————–

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மொய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து –76-

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

இப்பாட்டில் விளி வருவித்துக் கொள்க. அருமையான தவங்கள் செய்து உடம்பை வருத்துகின்றவர்களே!
நீங்கள் மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும்,
வேனிற்காலத்திலே பஞ்சாக்நி மத்யத்தில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட காயக்லேசங்களுடன்
தவம் புரிவதெல்லாம் எதுக்காக? பாவங்கள் தொலைந்து நற்கதி நண்ணவேணுமென்றுதானே இங்ஙனம் தவம்புரிகின்றீர்கள்,
இனி அங்ஙனம் வருந்தவேண்டா, திருவெஃகா நாயனார் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராயப்
புஷ்பங்களைப் பணிமாறி ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.
நமக்காக எம்பெருமான் காயக்லேசங்கள் படாநிற்க நாமும் படாவேணுமோ? என்கிறார்.

பிள்ளைப்பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி திருவரங்கக் கலபகத்தில்
“காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீயிடைநின்றும் பூவலம்வந்துந் திரிவீர்காள்!
தாயிலுமன்பன் பூமகள்நண்பன் தடநாகப் பாயன் மூகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.

விரும்புடைய வெஃகா – பகவானுடையவும் பாகவதர்களுடையவும் விருப்பத்திற்குப் பாத்திரமான வெஃகா என்றபடி.

————————————————————————————————————————————————————————-

ஆய்ந்த வருமறையோன் நான் முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை முதல் திருவந்தாதியில் (45) “ஆமே யமரர்க்கறிய“ என்ற பாட்டின்
“பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியைப், பாதமத்தா வெண்ணினான்பண்பு“ என்ற பின்னடிகளிலும்,
நான்முகன் திருவந்தாதியில் “கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்டவரக்கன் தலைதாளாற் பண்டெண்ணிப் போங்குமரன் . . .“ என்ற நாற்பத்து நான்காம்பாட்டிலும்
பொய்கையாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.

முன்பு இராவணன் தனது பத்துத்தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக்கொள்ளுமளவில்
எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான்போலே கிடந்து
‘இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறான், இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீய்காக முடியும் என்று தெரிவிப்பவன்
போன்று தன் திருவடியால் அவ்விராவணனுடைய பத்துத்தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு வளங்குகின்றது.

இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ள விடம் தெரியவில்லை,
பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை
நீயெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்“ என்றும்,
“எல்லியம்போ தினிதிருத்த லிருந்த்தோ ரிடவகையில் மல்லிகை மாமாலைகொண்டு அங்கார்த்ததுமோ ரடையாளம்“ என்றும்
அருளிச்செய்த கதைகள் வியாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நீர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்ற
நம் பூருவாசாரிகள் நிர்வஹித்திருப்பதுபோலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம்
ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியொர் கூறுவர்.
இனி, இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகரமுண்டேல் கண்டுகொள்க. விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

குறங்கு –இச்சொல் துடைக்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் மடியை உணர்த்தும்.

———————————————————————————————————————————————————————

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி யேது நிலை யேது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே யோர்த்து –78-

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓநெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

எம்பெருமான் ஸர்வரக்ஷகனென்று பேர் பெற்றாலும் அவனுடைய ரக்ஷகத்வம் எல்லாவிடத்திலும் எக்காலத்தில் புகமாட்டாது,
தம்மை ரக்ஷித்துக்கொள்வதில் தாமே முயற்சிசெய்து கொள்பவர்கள் எத்தனையோ பேர்களுண்டே;
அப்படிப்பட்டவர்களிடத்தில் அவன் தனது ரக்ஷகத்வத்தைச் செலுத்தியருளான். ஏனெனில்,
இருகையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும் தன்மேலேறிட்டு, தம் தலையாலே
ஒரு முயற்சியும் செய்யகில்லாத ஸ்வரூபஜ்ஞாநிகளையேதான் ரக்ஷித்தருள்வன்.
“இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துகிலைப் பற்றிக் கொண்டு
ஸ்வ ப்ரயத்ந நிஷ்டையாயிருந்தவரையில் அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்திற்றிலன்.
ஸ்ரீகஜேந்திராழ்வான் ஸ்வரக்ஷணத்தில் ஸ்வப்ரவ்ருத்தி பண்ணிக்கொண்டிருந்த வரையில்
ஸ்ரீமந்நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தைத் திருவுள்ளம் பற்றிற்றிலன். இப்படிப்பட்ட உதாஹரணங்கள் பலபல காணலாம்.
ஆகவே நம்முடைய ரக்ஷணத்தில் நாமும் ஒரு கை பார்த்போம் என்றிருக்கும்வரையில்
எம்பெருமான் உதாஸீநனாகவே இருந்திருவான்.
இந்த ஸத்ஸம்ப்ரதாயப் பொருளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு
இப்பாசுரத்தின் கருத்தை ஊன்றிப் பார்த்ததால் நன்று விளங்கும்.

ஆழிவலவன் சரண்ஆமேல் நமக்கு என்றும் அரணாம் –எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், என்றால் இதன் கருத்து என்னவென்று நோக்க வேணும்.
நம்மை நாம் ரக்ஷித்துக்கொள்ள முயலுமளவில் அவன் நமக்கு ரக்ஷகனாக அமையான்;
ஆதலால் நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில்
அவன் “என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்கொள்ளேனோ“ என்கிறபடியே
எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனா யிருந்தருள்வன் என்றவாறு.
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி -விலகி இருந்து விலக்காமை காட்டுவதே பிரபத்தி

நம்முடைய அத்யாவசாயம் ஒன்றிலே அவன் திருக்கண் செலுத்துவான் ஒழிய
ஞானத்திலோ ஆசாரத்திலோ ஜன்மத்திலோ சிறிதும் கண் வையான்

நரகன் -ப்ராக் ஜோதிஷம் பட்டணம் இருந்து வந்து
கன்னிகைகளை சிறை வைத்து
வருணன் குடை -மந்தரகிரி சிகரம் -ரத்ன பர்வதத்தையும் –
அதிதி தேவியின் குண்டலங்களையும்
இந்த்ரன் உடைய ஐராவதி யானையையும்
சத்ய பாமை உடன் சென்று சக்ராயுதம் கொண்டு அழித்த போது
அவன் மந்த்ரியான முரனையும் அழித்து அருளியதால் எம்பெருமான் முராரி எனப்படுவான்-

ஆக மூன்றடிகளாலே சிக்ஷித்த அர்த்தத்தை நிகமித்துத் தம் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார் ஈற்றடியால்.

—————————————————————————————————————————————————————————–

ஒரத்த மனத்தராய் ஐந்து அடக்கி யாராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-கார்த்த
விரையார் நறும் துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று –79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையையுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

கீழ்ப்பாட்டில் “ஓதுகதிமாயனையே யோரத்து“ என்றாரோ, இஃது எப்படி கூடும்?
நமது பஞ்சேந்திரியங்களும் சப்தாதி விஷய க்ராமங்களிலே சென்று கொண்டிருக்கையாலே
நாம் மேன்மேலும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வழி தேடுமவர்களாயிருக்கின்றோமேயன்றி
உஜ்ஜீவிக்கும் வழி தேடுமவர்களாயிருக்கின்றிலோமோ‘ என்ன,
தோளிணைமேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடிமேலும், தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுயம்மானது
திருமேனியின் போக்யத்தையிலும் அலங்காரங்களின் அழகிலும் நாம் நெஞ்சைச் செலுத்துவோமாயின்
நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷணாநுபவத்திலே ஊன்றி சப்தாதி விஷயங்களின் வழிச் செல்லாமல்
ஸம்ஸாரத்தை யடியறுப்பதற்குப் பாங்காகும் என்கிறார்.

—————————————————————————————————————————————————————————–

தம்முடைய நெஞ்சு எம்பெருமான் திருவடிகளிற் சென்று உத்ஸாஹங் கொண்டிபடியே அருளிச் செய்கிறார்.

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞஞூருடன் துணிய வென்றிலங்கும்
ஆர் படுவான் நேமி யரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு –80-

பதவுரை

நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரைமணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.

நின்று எதிராய – தாமஸ தெய்வத்தைப் பணிந்தவனாகையாலே ஸர்வேச்வரனென்று மதியாதே எதிரிட்டு நின்றானென்ப.

‘ஆர்படு‘ என்பதற்கு ‘கூர்மையை யுடைத்தான்‘ என்றும்
அரங்களை யுடைத்தான‘ என்றும் பொருள் நின்றானென்ப.
வான் நேமி -திவ்யமான திரு வாழி ஆழ்வான் –

———————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -41-60–திவ்யார்த்த தீபிகை —

October 6, 2014

உலகளந்த வரலாற்றைப் பேசி யநுபவிக்கிறார்.

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையா ஆ காத்த கோ –41

பதவுரை

குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான்.

முதலடியில் ‘மன்னுமணிழடி‘ என் சொல் இரட்டுற மொழிதலால்
‘மணி மயமான கிரீடத்தையணிந்த திருமுடி‘ என்றும் பொருள் படலாம்.

இடையர்கள் இந்திரனுக்கிட்ட அந்த பூஜையை விலக்கித் தானே அமுது செய்ததனால் சீற்றங்கொண்டு
ஆயர்க்கும் ஆநிரைக்கும் மிக்க துன்பமுண்டாம்படியாக ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது
கோவர்த்தன மலையையே குடையாக வெடுத்துப்பிடித்துநின்று காத்தருளின பெருமான் இப்படி ஆநிரையைத் துன்பப்படுத்தின
அவ்விந்திரனுக்குப் பக்ஷபாதியாயிருந்து செய்த செயல் உலகளந்தது.
அப்போது திருமுடியானது மேலுலகமெங்கும் நீண்டு செல்ல, திருவடியானது நிலவுலக மெங்கும் நிறைந்துசெல்ல,
அந்தரிக் ஷலோகத்திலுள்ள மின்னல் திருமேனிக்குப் பீதாம்பரம் போல் விளங்க,
இந்த நிலைமையாக உலகங்களை யளந்தா னெம்பெருமான் என்றாராயிற்று.

————————————————————————————————————————————-

எம்பெருமானுக்கு அடியார்களிடத்திலுள்ள ப்ரீதி விச்வாஸங்களை எப்படி நாம் ஆபத்தனமாக நம்பியிருக்க வேணுமோ
அப்படியே அப்பெருமான் ஆச்ரித சத்ருக்களிடத்தில் கொண்டுள்ள சீற்றத்தையும் நாம் ஆபத் தனமாக நினைத்திருக்க வேண்டும்.

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் –42

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி–புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.

‘நமக்கொருவன் பகைவனாக இருந்தால் அவனிடத்தில் எம்பெருமான் சீற்றங்கொள்வன்‘ என்று நாம் அறிந்தால்
பிறகு பகைவர்க்கு நாம் அஞ்சவேண்டாவன்றோ? ஆனது பற்றியே திருமங்கையாழ்வார்
“கொண்டசீற்ற மொன்றுண்டுளதறிந்து, உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!“ என்றருளிச்செய்தார்.
இவ்வாழ்வாரும் எம்பெருமானுடைய சீற்றத்தை சிந்திக்குமாறு தம் திருவுற்றத்திற்கு உரைக்கின்றார்.
இப்பாட்டில், ‘நெஞ்சே!‘ என்னும் விளி வருவித்துக் கொள்ளவேணும்.
எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யத்திற்காட்டிலும் அவனுக்கு விரோதியாயிருந்த
இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமே நம்மால தியானிக்கத் தகுந்தது என்கிறார்.
பக்தனான ப்ரஹலாதனுடைய விரோதியைச் சீறி முடித்ததுபோலவே நம் விரோதியையும் சீறி முடித்தருள்வான்
என்று தேறியிருத்தற்கு இது உறுப்பாகுமென்க.

“அருளன்று நமக்கு உத்தேச்யம், ஆச்ரித விரோதிகள் பக்கல் அவனுக்குண்டான சினம் உத்தேச்யம்,
அச்சினத்தைத் தெரி அநுஸந்தி“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்கிகாண்க.

கோவலனாய்க் கூழலூதிக்கொண்டு ஆநிரைகள் மேய்த்தவனும்,
சதுரனாய்க் கேசியின்வாயைக் கீண்டொழித்தவனுமான எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய்த் திருவவதரித்து,
சினம் – கோபத்தையுடையனாய், தெரி உகிரால் – விளங்காநின்ற நகங்களினால்,
இரணியனது ஆகம் கீண்டான் -, என்று வினைமுற்றாக்கி உரைத்துக் கொள்ளவுமாம்.

மூன்றாமடியில், “எரியுருவமாகி“ என்ற பாடம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற்குப் பொருந்தும்,
“ஒளி யுண்டான ரூபத்தை யுடையனாய்“ என்பது வியாக்கியான வாக்கியம்.

—————————————————————————————————————————————————————-

உலகமெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் ஸத்தை பெற்றுக் கிடக்கின்ற தென்கிறார்.

சினமா மத களிற்றின் திண் மறுப்பைச் சாய்த்து
புனமேய பூமியதனை -தனமாகப்
பேரகலத்து உள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்து உள்ளது உலகு –43

பதவுரை

சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.

வில்விழவென்கிற வியாஜம்வைத்துக் கம்ஸனாலழைக்கப்பட்டு மதுரையில் அவனது அரன்மனையினுட் புகும்போது
எதிர்பார்த்துப் போர் செய்து கொல்லவந்த குவாலயபீடமென்னும் மதயானையை மருப்பொசித்து முடித்தவனும்,
பூமண்டலமெல்லாம் பிரளயப்பெருங்கடலில் அழியாதபடி நிதியைக் காப்பாற்றுவதுபோல
அவற்றைத் திருவயிற்றிலே வைத்துக்காப்பாற்றினவனும், இப்படி தன்னுடைமையானது ரக்ஷிக்கப்பட்டதென்ற மகிழ்ச்சி
காரணத்தினால் ஆபரணம் பூண்டாற்போலேயிருக்கிற திருமேனியை யுடையவனுமான எம்பெருமானுடைய
ஸங்கல்பத்தின் ஏகதேசத்திலுள்ளது இவ்வுலகமெல்லாம்.

அகலம் என்றசொல் ஸங்கல்பத்துக்கு வாசகமாவது எங்ஙனேயென்னில், இச்சொல் மார்பைச் சொல்லும்,
அதன் உட்புறமானமனத்தின் தருமமாகிய ஸங்கல்பத்தை இலக்கணையால் சொல்லுகின்றதென்க.

“பேரகலத்துள்“ என்ற விடத்து, பேர் என்றது எதிர்மறையிலக்கணையில் சிறுமையைச் சொல்லுமென்க.

———————————————————————————————————————————————————-

இப்போது காணப்படுகின்ற லோகங்களும், இவையெல்லாம் ஸம்ஹரிக்கப்பட்டுக் காலமொன்று மாத்திரம்
மிருந்திருக்கப் பெற்ற பிரளய காலமும், ஆதித்யனும் அக்நியும் ஆகிய பதார்த்தங்களை ப்ரகாரமாக வுடையனாய்
(இவற்றுக்கெல்லாம் ஆத்மாவாய்) பரமபதத்திலே பல கிரணங்களை வெளியிடுகின்ற
திருவபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளிலே
பரிபூரணமான பக்தியைக் கொண்டிருக்குமாறு நெஞ்சுக்கு உபதேசித்தாராயிற்று.

உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்து என்நெஞ்சே புரி –44

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

—————————————————————————————————————————————————

ஏழுலகும் தனிக்கோல் செல்லப் பரமபதத்தில் வீற்றிருக்க கடவனான அவன் நம்போன்றவர்க்கும் ஆச்ரயிக்க
எளியனாய்த் திருமலையிலே வந்து நித்ய ஸந்நிதி பண்ணியிராநின்றானென்கிறார். திருமலையை வருணிக்கிறார்.

புரிந்து மத வேழம் மாப்பிடியோடூடி
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை –45-

பதவுரை

மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப்பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய
மலை–திருமலையாம்.

யானை தன் பேடையுடன் கலந்திருந்தபோது பிரணயகலஹம் உண்டாயிற்று அதனால் பேடையை விட்டிட்டு
இங்குமங்குந்திரிந்து கோபத்திற்குப் போக்கு வீடாகத் தனது தர்தத்தை மணிப்பாறைகளிலே யிட்டுக் குத்துகின்றதாம்,
அப்போது அத்தந்தத்தில் நின்று வெண்முத்துக்கள் உதிர்கின்றனவாம்,
இப்படி இருக்கப் பெற்ற திருமலை முன்பு வராஹாவதாரஞ் செய்தருளின பெருமானுடைய இருப்பிடம் என்கை.

பொருது – திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு
எதிர் யானையென்று பிரமித்து அதனோடே போர்செய்கின்றதாகவுங் கொள்ளலாம்.

——————————————————————————————————————————————————–

பிரயோஜநரந்தரத்தை விரும்புவர்க்கும் உடம்பு நோவக் காரியஞ்செய்து பயனளிப்பவனெம்பெருமான் என்கிறார்.

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒருகை பற்றி அலை முகடு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –46-

பதவுரை

பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.

துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினால் தேவர்களின் செல்வம் யாவும் ஒழியவே இந்திரன் தேவர்களோடு
திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு
மந்தரமலையை மத்தாகநாட்டி வாஸுகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறாக்பூட்டிப் பாற்கடலைக் கடைகையில்
மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து
அம்மலையின்கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு
உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளிருந்து, இப்படியிருக்கையில் வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும்
தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் அதனை வலியப் பிடித்திழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க,
அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனித்தரித்து
அசுரர்கள் பக்கத்திலும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்துவலமும் இடமுகமாக இழுத்துக்கடைந்த வரலாறு அறிக.
அப்போது கடைகிற வேத்தாலே அலைநீர்த்திவலைகள் அண்டம் போய்த் தெறித்தனவென்கிறார்.

பிண்டமாய் நின்ற பிரான் –மண்ணுண்டையானது பல காரியப் பொருள்களாக ஆகி,
பானை யென்றும் மடக்கென்றும சால் என்றும் பலவடிவுகளை அடைவதுபோல,
எம்பெருமானும் ஸகல ஜகத்துக்கும் உபாதாநகாரணமாயிருத்தல்பற்றிப் பிண்டமாய் நின்ற என்கிறார்.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டனாயிருந்தபடியைச் சொல்லிற்றென்க.

——————————————————————————————————————————————————

வாமனனாகி மாவலி பக்கல் யாசகனாயச் சென்று இரந்து உதக தானம் பெற்று நின்றபோதை யழகை என் சொல்வேன்,
உடனே திரிவிக்ரமனாய் ஓங்கி வளர்ந்து உலகெல்லாம் வியாவித்த விதத்தை என் சொல்வேன்,
ஆச்ரித பக்ஷபாதம் நன்கு விளங்கும்படி திருக்கண்ணழகு இருக்குமாற்றை என்சொல்வேன்,
கம்ஸனாலேவப்பட்டு உன்னைக்கொல்லவந்த கேசியென்னும் குதிரையுருக்கொண்ட வசுரனுடைய வாயைப்பிளந்து
அவனை முடிந்த வீரத்தை என்சொல்வேன்,
அவ்வசுரனோடு போர் செய்தவளவிலும் திருமுடியிலணிந்திருந்த திருத்துழாய் சிறிதும் வாடாதிருந்த விசித்திரத்தை என்சொல்வேன்!
எங்களுடைய நரகத்தின் வாயைக் கிழித்த வுனக்கு ஒரு கேசியின் வாயைக் கிழித்தது ஆச்சரியமோ? என்றவாறு.

நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரகவாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ –47

பதவுரை

நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசினென்னுமசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்–நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?

துரகம் –வடசொல், விரைவாகச்செல்வது என்று குதிரைக்குக் காணப்பெயர்.
நரகவாய் கிண்டாய் – இனி நாங்கள் ஸம்ஸாரமாகிற நரகத்தில் புகுவதற்கு வழியில்லாதபடி செய்தருளினாயென்கை.

———————————————————————————————————————————————————————————————-

ஒன்றோடொன்று சேராத செயல்களைச் செய்தவன் நீயோ வென்கிறார்.

நீ யன்றே நீர் ஏற்று உலகமடி யளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று–48-

பதவுரை

நீர் ஏற்று–(மாவலிபக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீயன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?

மாவலி பக்கல் யாசகனாய்ச் சென்றாய் என்றும் விம்மவளர்ந்து உலகங்களையெல்லாம் அளந்தாய் என்றும் கேள்விப்படுகிறோம்,
யாசகனாய்ச்சென்ற செயலாலே அசக்தியைக் காட்டிக்கொண்டாய்,
உலகளந்த செயலாலே ஒப்பற்ற சக்தியைக் காட்டிகொண்டாய், இவை என்சொல்?
தவிரவும் நீ திருவாய்ப்பாடியில் இடையனாய்ப்பிறந்து அந்த நிலைமையிலேயே கேசியின் வாயைக் கீண்டொழித்தாயென்றும் கேள்விப்படுகிறோம்.
இவையும் அப்படியே அன்றியும், நீ கண்ணாய்ப்பிறந்து குழந்தையாயிருக்குங் காலத்தில்,
துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை உன்னை வயிற்றில் கயிற்றினால்
கட்டி உரலிலே பிணித்துவிட, அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே சென்றாய் என்றும்,
தேவாஸுரயுத்தத்தில் அசுரர்களைக்கொன்று தேவர்களை வெற்றி பெறுவித்தாயென்றும் கேள்விப்படுகிறோம்,
இவையும் அப்படியே, ஆகவிப்படி அசக்தியையும் காட்டவல்ல செயல்களைச் செய்த மஹாநுபாவன் நீயோ பிரானே! என்றாராயிற்று.

———————————————————————————————————————————————————————————-

எம்பெருமானே! நீ அடியவர் திறத்தில் அன்பு மிகுதியினால் அவர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுதற்காகவும்
அநிஷ்டங்களைப் போக்குதற்காகவும் செய்தருள்கின்ற செயல்களுக்கு எல்லை யுண்டோ?

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் முற்றல்
முரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –49-

பதவுரை

பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.

பரமபக்தனான ப்ரஹ்லாதாழ்வானுடைய கருத்துக்கு இரணியன் இணங்கவில்லையென்ற காரணத்தினால்
அவனைக் கைதொட்டு முடித்துப் போட்டாய்,
இந்திரன் கண்ணீர்விட்டு அழுவதைக்கண்டு பொறுத்திருக்க மாட்டாமல் அவனுக்காகக் குறளுருவாகி
மாவலிபக்கல் சென்று எண்சாணுடம்பை இருசாணாக்கி இரப்பாளனாய்க் காரியஞ் செய்தாய்,
நப்பின்னைப் பிராட்டியின் திருமேனியிலுள்ள சாபலத்தினால் ‘இவளைப் பெறுதற்கு எவ்வளவு கடினமான செய்கை
செய்தாலும் செய்யலாம்‘ என்று கொழுத்த காளைகளேமுடனே பொருது வெற்றிபெற்றாய்,
தூரத்திலேயிருந்து உன்வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உன் வரவைத் தெரிவிக்கின்ற
சங்கினோசையைக் கேட்டு நெஞ்சு குளிர்ந்திருக்குமாறு ஒலி செய்யச் சங்கை விடாமற் கைக்கொண்டுள்ளாய்,
ஆகவே உனது பிரவ்ருத்திகளடங்கலும் பரார்த்தமாகவே யிருக்கின்றன காண் – என்றாராயிற்று.

சேராவிரணியன் –சத்துருவான இரணியன் என்றபடி.
ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்களை எம்பெருமான் தனக்கு சத்துருவாக நினைப்பிடுவன் என்க.

————————————————————————————————————————————————————————

எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும்
ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின அநுக்ரஹம் விலக்ஷணமாகையாலே, மற்ற காரியங்களெல்லாம் ஒரு தட்டும்
இது ஒரு தட்டுமாக இருப்பதுபற்றி கஜேந்த்ர மோக்ஷ வருத்தாந்தத்தைத் தனிப்பட அருளிச் செய்கிறாரிதில்.

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடை வரைவாய் ஆழ்ந்த
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் –50–

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேச்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.

இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையையருளிச் செய்து முதலடியிலும் ஈற்றடியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக்
கூறியிருப்பதன் கருத்தை உய்த்துணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும்,
திருவபிஷேகம் அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்கேயாம்,
பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு நீர்ப்புழுவின் வாயில் அகப்பட்டுக்கொண்டு மிகவும் நொந்துகிடந்த்தனால்
எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் குன்றிக்கிடந்தது, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி,
திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது. பிறகு முதலையைத் துணித்து வேழத்தை வாழ்வித்ததனால்
ரக்ஷகத்வ லக்ஷணமான திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளிமல்கப் பெற்றமையால்
அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல். ‘பக்தனுடைய விரோதி தொலைப்பெற்றோம்‘ என்று பிறந்த அளவற்ற
மகிழ்ச்சியினால் திருமேனி புகர்பெற்றபடியை ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற ஈற்றடியினால் அருளிச் செய்தார்.

கஜேந்திரவான் தாமரைப்பூபறித்த பொய்கை மலைமே லிருத்ததனால் ‘தடைவரைவாய்‘ எனப்பட்டது.

—————————————————————————————————————————————————————————

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே யணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து –51

பதவுரை

அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.

இந்திரன் எம்பெருமானிடத்தில் எத்தனை யுபகாரங்கள் பெற்றான்!
எத்தனை பெற்றும் நன்றி நெறியுள்ளவனா அவன்? இடையர்கள் வழக்கமாகத் தனக்கு இடுஞ் சோற்றைக்
கண்ணபிரான் விலக்கினன் என்பதுவே காரணமாகப் பசிக்கோபங்கொண்டு மாடுகளையுங் வேணுமென்று
மேகங்களையேவிப் பெருமழை பெய்வித்தான்,
அந்த இந்திரனுடைய தலையை அறுத்தெறிய எத்தனை நிமிஷஞ்செல்லும் கண்ணபிரானுக்கு!
எளிதாகத் தலையை அறுத்தெறியலாமாயினும், அவனுணவைக் கொள்ளை கொண்ட நாம் உயிரையுங் கொள்ளை கொள்ளலாகுமோ?
என்று பரம கருணை பாராட்டி ‘நம்மவர்களை நாம் ஒழுங்காகப் பாதுகாத்துக் கொள்வோம்,
கைசலித்தால் தானே ஓய்ந்து நிற்கிறான்‘ என்று திருவுள்ளம் பற்றி இந்திரனை ஒன்றுஞ் செய்திடாது
மலையைக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரைகளையும் காத்தருளின குணத்தை என் சொல்வோம்!
மருதமரங்களின் கீழே உரலையுமிழுத்துக்கொண்டு கண்ணனாய்த் தவழ்ந்து சென்றபோது உரல் குறுக்காக இழுக்கப்பட்டதனால்
அம்மருத மரங்கள் முறிந்து விழச்செய்தேயும் அதன் கீழிருந்த தனக்கு ஒரு தீங்குமின்றியே அம்மரங்களாய் நின்ற
குபேரபுத்திரர்களைச் சாபத்தில் நின்று விடுவித்தும் அம்மரஙகளில் ஆவேசித்துக் கிடந்த அஸுரர்களைக்
கொன்றொழித்தும் காட்டின சிறுச்சேவகத்தை என்சொல்வோம்!.
கண்ணபிரானாய்த் திருவவதரித்து இப்படிப்பட்ட அருந்தொழில்கள் செய்தவனும் ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்து
ராக்ஷஸர்களுடைய குடியிருப்பை யழித்தவனுமான பெருமான் இப்படி தனது நிர்ஹேதுக கிருபையினால் தானே
இதர நிரபேக்ஷனாய் வேரோதிகளை வேரறுத்து போல அந்த நிர்ஹேதுக கிருபை கொண்டே நமக்கும்
பரமபதமளித்தால் பெறலாகுமெயன்றி. நாமாக ஒரு முயற்சி செய்து பாமபதம் பெறுவது அரிது என்கிறார்.

அவனே அவனே அவனே என்ற ஏகாரங்கள் மூன்றும்
அநிஷ்ட நிவ்யருத்தி செய்து கொள்வதற்கு நம்மாலாகாது –
இஷ்ட ப்ராப்தி பெற்றதற்கும் நம்மாலாகாது! அப்பெருமானுடைய க்ருஷி தானே யுண்டாகிப் பலித்தால் பலிக்குமுதனை என்ற
ஸித்தாந்தந்தை வலி யுறுத்துவன.

“பரமபதம் அவனே காட்டக் காணமத்தனை! ஸ்வ யத்நத்தால் காண்பார்க்குக் காணப்போகாது “ என்று
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

எவ்வகைக் கலகங்களுக்கு முள்ளது இந்நிலத்திலே யாகையாலும் பராப்பத்ததில் ஒரு வகை கலகமும் மில்லாமையாலும்
கலங்குலும மில்லாமையாலும் கலங்காப் பெருநகர மென்றுஅவ்விட கலங்காப்பெருகா அன்னிடத்தில் திருநாம்மேற்கும்.

—————————————————————————————————————————————————————————-

‘எம்பெருமான் ஸர்வ சக்தன்‘ என்று ப்ரஷித்தமாயிருக்கச் செய்தேயும் ‘இவனுக்கு சக்தியுண்டோ இல்லையோ? என்று
யாரேனும் ஸந்தேகப்பட்டால் அந்த ஸ்ந்தேஹத்தைத் தீர்க்குமாறு அரிய காரியங்களை எளிதிற் செய்து
காட்டுவானவன் என்பதற்காக மராமரமேழு மெய்த வரலாற்றைக் கூறுகின்றார்.

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய்-எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று –52

பதவுரை

இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்தஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை
எய்தான்–பின்சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.

ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனந்தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப்
பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒரு யோஜனை தூரம்
தூக்கியெறிந்த்தையுங் குறித்துப் பாராட்டிக்கூறி, இவ்வாறு போற்றலமைந்தவனை வெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல,
அதுகேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது‘ என்ன,
ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப் போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நீனைக்கும்போது
ஸந்தேஹ முண்டாகின்றது, ஏழு மராமரங்களையும் துளைத்து இந்த துந்துபியின் எலும்பையும்
இருநூறு விரற்கடை தூரம் தூக்கு யெறிந்தால் எனக்கு நம்பிக்கை யுண்டாகும்‘ என்று சொல்ல,
ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்கும்மாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபின் உடலெழும்புக் குவியலைத்
தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக்கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பானது‘ என்று கூற,
பின்பு இராமபிரான் ஒரு பானத்தை ஏழு மராமரங்களின்மேல் ஏவ. அம்மரங்களைத் துளைதத்தோடு ஏழுலகங்களையும்
துளைத்துச்சென்று மீண்டு அம்பறாத்துணியை யடைந்த தென்ற வரலாறு இங்கு அறியத்தக்கது – மராமரம் – ஆச்சரமாம்.

ஏத்திழைக்காய் அம்மான் மறியை எய்தான் – ‘எய்தான்‘ என்னுஞ் சொல் ‘ஏய்!‘ என்னும் வினைப்பகுதியடியகவும்
‘எய்து‘ என்னும் வினைப்பகுதியடியாகவம் தேறுவதுண்டு,
முந்தினது அம்புகளைச் செலுத்தினானென்று பொருள்படும்.
பிந்தினது அடைந்தானென்று பொருள்படும்.
இப்பாசுரத்தில் வினைபகுதியாகப் பிறந்தென்றும், இரண்டாமடியிலுள்ள எய்தானென்னும் வினைமுற்று எய்து என்னும்
வினைப்பகுதியடியாகப் பிறந்ததென்றும் கொண்டு உரைக்கப்பட்டது.
‘இது மயா மிருகம்‘ என்று தனக்குத் தெரிந்திருந்தும் பிராட்டியின் கோரிக்கையைப் பின்சென்று நடக்க வேண்டிய
பிரணயாதிசயத்தினால் அம்மான் குட்டியின் பின்னே நடந்தான் என்றவாறு.
‘மறி‘ என்ற சொல் சில மிருகங்களின் குட்டிக்குப் பொதுப்பெயராயும் மானுக்குச் சிறப்பஜ பெயராயு முள்ளது,
இங்குக் குட்டியென்ற பொருளில் வந்தது. ‘மான் மறிய‘ என்றும் பாடமுண்டென்பர்,
அப்போது மாரீச மாயாமிருகம் சாகும்படி என்று பொருளாம்.

‘ஏந்திழைக்காய்‘ என்ற சொல் நடுநிலைத் தீவகமாய் இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் அந்வயிக்கத்தக்கது.

——————————————————————————————————————————————————————————–

ஆலிலையில் துயின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுமாறு தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் -பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள் –53-

பதவுரை

மூரி வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே
இயன்ற ஸ்ரீபொருந்தியுள்ள
ஆலமரத்து இலையின் மேலால்–ஆலமரத்தின் இலைமீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.

பொய்கையாழ்வார் தமது திருவந்தாதியில்
“பாலன் தனதுருவாய் ஏழுல குண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் –
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு“ என்று –
‘பிரளய காலத்தில் உனக்கு இருப்பிடமாயிருந்த ஆலமரம் பிரளய பெருங்கடலிடையே இருந்ததா? விண்ணிலிருந்ததா?
மண்ணிலிருந்ததா? எங்கிருந்தது, சொல்லு‘ என்று சமத்காரமாக எம்பெருமானை மடிபிடித்துக் கேள்வி கேட்டார்,
எம்பெருமான் தனது விசித்ர சக்தி யோகத்தால் அந்த ஆலமரத்தைப் பிரளயக் கடலினிடையே தோன்று வித்தான்
என்கிற ஸமாதானத்தை இவ்வாழ்வார் இப்பாட்டில் வெளியிடுவார் போன்று
மூரிநீர் வேலையியன்ற மரத்தாலிலையின் மேலால்“ என்கிறார்.

மூரிநீர் – ‘மூரி‘ என்ற சொல்லுக்கு ‘அநாதி‘ என்ற பொருளும் ‘பெரிது‘ என்ற பொருளும்
‘வலிமைகொண்டது‘ என்ற பொருளும் உண்டு.
அம்மூன்று பொருள்களும் இங்குப் பொருந்தும்.

———————————————————————————————————————————————————————————-

நமக்கெல்லாம் சோறு, தண்ணீர், வெற்றிலைப்பாக்கு மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம் என்னுமிப்பொருள்களே
உகப்புக்கு விஷயமாதலால் நம்முடைய வாய்வெகுவுதலும் போதுபோக்கும் இப்பொருள்களிலே மாறிமாறி
நடந்து கொண்டிருக்கும், இங்ஙனன்றியே
“கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான், பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் –
சீர்கலந்த, சொல்நினைந்து, போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னிணைந்து போக்குவர் இப்போது“ என்கிறபடியே
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றால் போதுபோக்கறியாத ஆழ்வார்கள் மாறிமாறி பகவத்குண சேஷ்டிதங்களைப்
பேசுமத்தனையல்லது வேறு எதனைப் பேசுவர்கள்?
உலகளந்த சரித்திரத்தை உரைப்பது, வடதளசாயியின் வ்ருத்தாந்தத்தை வாய்வெருவுவது,
கண்ணபிரான் கதைகளைக் கூறுவது, இராமபிரான் சரிதைகளை இயம்புவது,
மீண்டும் இவற்றையே வகைவகையாகப் பேசுவதாய்க் கொண்டு இவர்கள் போதுபோக்கு மழகை
நாம் என் சொல்ல வல்லோம் வாய் கொண்டு?

தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு
பெண்ணகலம் காதல் பெரிது –54-

பதவுரை

சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடைபோய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண்கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு–ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.

ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக்
கண் வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்த காலத்து, கம்ஸனா லேவப்பட்ட அஸுரனொருவன்
அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல்விழுந்து தன்னைக்கொல்ல முயன்றதை அறிந்த தான் பாலுக்கு அழுகிய
பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சின்ன பின்னமாக்கினான்.
கம்ஸனாலழைக்கப்பட்டு அவனது அரண்மனையினுட் புகும்போது சீறிவந்த குவலயாபீட மென்னும்
மதயானையை மோதி மருதப்பொசித்தான். இரட்டை மருத மரங்கிளினிடையே தவழ்ந்துசென்று அவற்றைக்கீண்டு தள்ளினான்,
வராஹரூபியாய்த் திருவ்வதரித்து பூமிப் பிராட்டியை ஹீநஸ்திதியிலிருந்து உத்தரிப்பித்து மார்பாரப் புல்கி உவந்தான் –
என்று சில பகவத் கதைகளைப் பேசி மகிழ்கிறார்.

பெண்ணகலம் காதல் பெரிது –கீழ் மூன்றாமடிக்குச் சேர ‘பூமிப் பிராட்டியினிடத்தில் கரைபுரண்ட காதலுடையவனதலால்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாய்ப் பிறந்து படாதன்பட்டான்‘ என்று கருத்துக் கொள்ளலாம்.
அன்றியே, ‘எம்பெருமானுக்குப் பெரிய பிராட்டியாரிடத்தில் பெரிதான காதல் உள்ளது,
அவள் நமக்குப் புருஷகார பூதையாகையாலே நமக்கொரு குறையில்லை‘ என்பதாகவுங் கருத்துக்கொள்ளலாம்.

கீளா –செய்யா என்னும் வாய்பாட்டுடன் பாட்டிறந்தகால வினையெச்சம், கீண்டு என்றபடி.

பெண்ணகலம் – பெண்ணிடத்தில் என்றுமாம்.

—————————————————————————————————————————————————————————————

எம்பெருமானுடைய ஆபரணலங்காரத்திலும் கண்ணழகிலும் ஈடுபட்டு அநுபவித்துப் பேசுகிறார்.

பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின்னல் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்றவன் தன
நீள் நெடும் கண் காட்டும் திறம் –55

பதவுரை

பெரியவரை மார்வில்–பெரிய மலைபோன்ற திருமார்பிலே
பேர் ஆரம்பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக்கண்களினுடைய
நிறம்–நிறத்தை
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.

இரண்டாமடியின் தனிச்சீர் ‘தெரியுங்கால்‘ என்றும் ‘திரியுங்கால்‘ என்றும் இரு வகைப்பாட முள்ளது.
முந்தின் பாடத்தில், எம்பெருமான் பெரிய மலைபோன்ற தனது திருமார்பில் ரத்நஹாரத்தைச் சாத்திக் கொண்டிருக்கும்படியை
அநுஸந்தித்தால் காளமேகத்திலே மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும்.
பிந்தின பாடத்தில் – எம்பெருமான் தனது திருமார்பிலே ரத்நஹாரத்தை யணிந்து கொண்டு உலாவத் தொடங்கினால்
காளமேகத்தில் மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும்.
கரிய திருமார்புக்குக் காளமேகமும் ரத்நஹாரத்திற்கு மின்னலும் ஏற்றவுவமையாம்.

(பாணொடுஙக இத்யாதி) பாண் –இசைப்பாட்டு, அது ஒடுங்கும்படியாக (அதைவிட அதிக மதுரமாக) வண்டுகள்
இசைபடப்பெற்ற தாமரைப்பூப் போலே அவனுடைய திருக்கண்கள் விளங்குகின்றன என்றவாறு.

—————————————————————————————————————————————————————————————-

பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப் புகழ யாராலாகும்? என்கிறார்.

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில்-நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு –56

பதவுரை

இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ்வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறியமாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)

“பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும் புறம்
போலுநீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம் நீல நீர்மை“ என்றும்
“நிகழ்ந்தாய் பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்“ என்றும் சொல்லுகிறபடியே
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டிருப்பதாக நூல்கள் கூறுகின்றனவாயினும்,
“என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை“ என்று கட்புலனுக்கு இலக்காக மாட்டாததாகச் சொல்லப்படுகிற
எம்பெருமான் திருவுருவத்தின் நிறத்தை நான் ஒன்றுமறியேன்,
நானே அறியாதபோது ஸரஸ்வதி தானும் அறிந்து பேசவல்லளோ? ஏனென்னில்?
(பூமங்கை கேள்வன் பொலிவு) மாரீசன் இராவணனுக்கு ஹிதோபதேசம் பண்ணும் போது மர்மமறிந்து சொன்ன சொல் அறியீர்களோ?
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா“ என்றானே, (அதாவது)
இராமனென்பவன் பிராட்டியைக் கைப்பிடித்த பரஞ்சோதியன்றோ?
அச்சோதி நெஞ்சாலும் நினைப்பரிதன்றோ என்றானே ஆகையாலே,
பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப் புகழ யாராலாகும்? என்கிறார்.

———————————————————————————————————————————————————————————–

“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பா லின்று“ என்று
முதலடியில் தானே எல்லாங்கண்டதாகப் பேசின ஆழ்வார் திருவாக்கில்
“இறையுருவம் யாமறியோம்“ என்ற சொல் வெளிவந்தால் இஃது எம்பெருமானுக்கு ஸஹ்யமாயிருக்குமோ?
உடனே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து பெரிய திருவடியின்மேல் வீற்றிருந்து காட்சிதந்தருளினன்,
கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பேசுகிற பாசுரம்போலும் மிது.

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திரு விருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி –57-

பதவுரை

திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள்தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு

கீழ்ப்பாட்டில் “நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று இறையுருவம் யாமறியோம்“ என்று
எம்பெருமானுருவத்தைக் கனவிலுங் கண்டறியாதவர்போல ஆழ்வார் பேசினபேச்சு
எம்பெருமானது திருச்செவியில் விழாதிருக்குமோ? விழுந்ததாகில் இச்சொல்கேட்டுப் பொறுத்திருக்க வல்லனோ அவன்?
“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பா லின்று“ என்று
முதலடியில் தானே எல்லாங்கண்டதாகப் பேசின ஆழ்வார் திருவாக்கில்
“இறையுருவம் யாமறியோம்“ என்ற சொல் வெளிவந்தால் இஃது எம்பெருமானுக்கு ஸஹ்யமாயிருக்குமோ?
உடனே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து பெரிய திருவடியின்மேல் வீற்றிருந்து காட்சிதந்தருளினன்,
கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பேசுகிற பாசுரம்போலும் மிது.
கார்காலத் தெழுகின்ற கார்முகிலில் மின் மின்னினாற்போலே கரிய திருமேனியில் பொன்னிற பெரியபிராட்டி
விளங்கப்பெற்றுக் கருடன் மீது ஸேவைஸாதிக்கின்ற பெருமானுடைய திருவடிகளிலேயே நெஞ்சே!
நீ பக்திபண்ணு என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.
நெஞ்சே! என்னும் விளி வருவித்துக்கொள்க.

தெருள்தன் மேல்கண்டாய் –‘தெருள்‘ என்று ஜ்ஞானத்திற்குப் பெயர்,
‘கர்மஜ்ஞாந பக்திப்ரபத்திகள்‘ என்ற அடுக்கிலும் ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள்‘ என்ற அடுக்கிலும்
ஜ்ஞாநத்திற்கு மேற்படியாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே தெருள்தன்மேல் என்றது பக்தியைச் சொன்னபடியாய்,
அவனது திருவடிகளை பக்திக்கு விஷயமாக்கு என்றதாம்.
அன்றியே,
பக்தியும் ஜ்ஞாநத்தின் அவஸ்தா விசேஷமேயாதலால், தெருள் என்பதற்கே பக்தியென்று பொருள்கொண்டு,
தெருள்தன்மேல் – பக்தியினாலே, கழல்கண்டாய் –திருவடிகளை (நெஞ்சே!) காணப்பெற்றாய்,
தெளி – இனிமேல் கலக்கம் நீக்கித் தெளிந்திரு என்பதாகவும் முரைக்கலாம்.

—————————————————————————————————————————————————————————-

கீழ்ப்பாட்டில் கருடன் மேற்கொண்ட கரியானாய் ஸேவை தந்தருளினவன்
‘என்னைத் திருவேங்கடமலையிலே நித்யமாகக் கண்டுகொண்டிரும்‘ என்று சொல்லி
மறைந்திடவே திருமலையிலே மண்டுகிறார்.

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு –58-

பதவுரை

தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு–(மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்

திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்றதென்ற அதிசயோக்திக்காக ஒரு வர்ணனை கூறுகின்றார்.
திருமலையில் கற்பாறையின்மீது பெண்குரங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றது,
அதனருகில் ஆண்குரங்கும் ‘நமது பேடை நம்மை ஏவிக் காரியங்கொள்வது எப்போதோ‘ என்று
அதன் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இராநின்றது,
அதனை நோக்கிப் பெண்குரங்கானது ‘முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘
என்பாரைப்போலே ‘பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்கிறதாம்.
இங்ஙனே சொல்லும்படியாக ஓங்கியிருந்துள்ள திருமலையே ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் என்றாராயிற்று.

சிலாதலம் – வடசொல். மந்தி – பெண்குரங்கு கடுவன் –ஆண் குரங்கு.
மண்மதியிற் கொண்டுகந்தான் –கேட்டான் கேட்படியே தானம் பண்ணுவதென்று விரதம்பூண்டு
மஹா தார்மிகனாயிருக்கிற மாவலியினிடத்தில் யாசதத் தொழில்கொண்டே காரியம்
ஸாதிக்க வேணுமென்ற நினைத்துச்சென்றது புத்தி சாதுரியமென்க.

—————————————————————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய கரிய திருமேனியிலே செந்திறமான ரத்னங்களால் அமைந்த ஹாரங்கள்
சாத்தப்பட்டிருப்பதானது அஞ்சனகிரியிலே அருவிகள் தாழ விழிந்தாற்போலே யிருக்கின்றனவாம்.
அவ்வழகிலே யீடுபட்டு அத்திருமார்பை ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாதே சூழ்ந்து கிடக்கிறாள் பெரிய பிராட்டி,
அப்படிப்பட்ட செங்கண்மாலுடைய திருவடிகளை நான் சேர பெற்றதனால் ‘இதுவே நமக்கு உஜ்ஜீவம்‘ என்று துணிந்தேன்.
இனி விஷயாந்தரங்களில் அவகாஹித்துக் கெட்டுப்போக மாட்டேன் என்றாராயிற்று.

வாழும் வகை அறிந்தேன் மைபோல் நெடுவரை வாய்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று –59-

பதவுரை

மை போல் நெடு வரை வாய்–மை போன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவிபோலே
தார் கிடப்ப–மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

மலையருவிகள் வெண்ணிறமாகவும் பெருகுவதுண்டு, அங்குள்ள தாதுக்களுடன் கூடிச் செந்நிறமாகவும் பெருகுவதுண்டு,
இங்கே ‘அருவிபோல்தார் கிடப்ப‘ என்று பொதுப்படையாகக் கூறியிருப்பதனால் எதையேனுங் கொள்ளலாம்.
வெண்ணிறமான அருவியென்றால் அப்போது தார் என்றது முக்தாஹாரத்தைச் சொன்னபடியாம்,
செந்நிறமான அருவியென்றால் மாணிக்கங்களழுத்தின ஹாரத்தைச் சொன்னபடியாம்.

“எங்கள் பெருமானடி சேரப்பெற்ற வாழும்வகையறிந்தேன்“ என்று அந்வயம்.

—————————————————————————————————————————————————————————————-

பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து -கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு –60-

பதவுரை

பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறிதடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜயசீலமான சங்கை
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்

இப்பாட்டின் முன்னடிகளில், பெற்றம் முதலிய பெயர்ச் சொற்கள் ‘காத்து‘ முதலிய வினைச்சொற்களை
முறையே சென்று இயைதலால் முறைநிரனிறையாம்,
இது வடமொழியில் யாதஸங்க்யாலங்காரம் என்றும், தென்மொழியில் நிரனிறைபணி என்றும் அலங்கார சாஸ்த்ரிகள் கூறுவர்.
முதல் திருவந்தாதியிலுள்ள (54) “அரவமடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய், குரவை குடமுலை மற்குன்றம் –
கரவின்றி, விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டு கோத்தாடி, உண்ட்டெடுத்த செங்கணவன்“ என்ற பாசுரம் இத்தகையதே.

“திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவே!“ என்கிறபடியே,
நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாயிருக்கு மிருப்பிலுங்காட்டில் பசுக்களை மேய்க்குந் தொழிலையே
பரமபோக்யமாகக் கொண்டவன், இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று வீரவிளையாட்டுச் செய்தவன்,
பேய்ச்சியின் முலையைச் சுவைத்துயிருண்டவன்,
பாலுக்கு அழுகிற பாவனையிலே அஸுராவிஷ்டமான சகடத்தை உதைத்துத் தள்ளினவன்,
கன்றாயும் விளாமரமாயும் இரண்டு அஸுரர்கள் வந்து நிற்க, முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல
இரண்டையும் ஒருசேர முடித்தவன், திருப்பவளத்திலே ஸ்ரீபாஞச ஜந்யத்தைவைத்து ஊதி வெற்றியைத் தெரிவிப்பவன் –
என்று சில பகவத் கதைகளை அநுபவித்துப் பேசினாராயிற்று.

கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப்பிராட்டிக்கு சிசுபாலனோடு
விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஹித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணபிரானது வரவை எதிர்கார்த்திருந்த
அப்பிராட்டியின் நெஞ்சு முறிந்துபோய் இனிநாம் உயிர்துறப்பதே நல்லபாயமென்று தீர்மானித்திருந்த க்ஷணத்தில்
கண்ணபிரான் பதறி ஓடிவந்த புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஊத,
அதனோசையானது அந்த ருக்மிணிப்பிராட்டியின் செவியிற் புகுந்து ஆனந்தத்தை விளைவிதத்தென்கிற கதையை
ஈற்றடிக்குப் பொருத்தமாக அநுஸந்திக்கலாம். அன்றி, பாரதப்போரில் செய்த சங்கொலியுங் கொள்ளலாம்.

பணிலம் –சங்கு.

—————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -21-40–திவ்யார்த்த தீபிகை —

October 5, 2014

‘எம்பெருமானுடைய பெருமைகளைப் பேசுவதற்கு மாஞானிகளால்தான் ஆகும், மற்ற அற்பஞானிகளால் ஆகாது‘ என்பதில்லை,
வாய் திறந்து நான்கு சொற்களைத் தொடுத்து பேச வல்லவர்கள் எவராயிருந்தாலும் எம்பெருமான பெருமையைப் பேசலாம்.
ஆனால், நிரம்பிய ஞானமுடையார் பேசினாலன்றோ அவன் பெருமை உள்ளவளவும் பேசினதாக ஆகும்,
அற்ப ஞானிகள் பேசினால் ஒரு திவலை யளவும் ஆகமாட்டாதே என்னில், அப்படியில்லை,
ஆயிரம் வாய் படைத்த ஒன்றான திருவனந்தாழ்வான் தானே பேசினாலும் எம்பெருமான் பெருமை முழுதும் பேசினதாக
ஆகப் போகிறதில்லை யார் பேசினாலும் அவனுடைய பெருமைக் கடலிலே ஒரு திவலை மாத்திரமே பேசினதாக ஆகும்.
ஆகவே பேச வாய்ப்படைந்தவர்களெல்லாரும் பேசலாம். எம்பெருமானுடைய வைபவம் எப்படிப்பட்டதென்றால்,
ஒருவன் சுருக்கமாகப் பத்து வார்த்தை சொன்னாலும் அதற்குள்ளே அவன் பெருமை அடங்கி விட்டது என்னும் படியாயிருக்கும்.
மற்றொருவன் ஒரு மஹாபாரதமாகப் பன்னியுரைத்தாலும் அதற்குள்ளும் அவன் பெருமை அடங்கிவிட்டது.
என்னும்படியாகவேயிருக்கும் – என்று இக் கருத்தை யடக்கி இப்பாசுரமருளிச் செய்கிறார்.

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு –21-

பதவுரை

வாசம் மலர் துழாய் மாலையான்–மணம் மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேசு உடைய சக்கரத்தான்–தேஜ்ஸ்ஸை யுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான்–ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான்–சார்ங்க வில்லை யுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான்–மிக்க ஆரவாரமுடையனாய் வந்த
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமாளுடைய
வடிவு–ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)
பேசுவர்–பேசுகின்றார்களோ
அவ்வளவே–அவ்வளவேயாம்.

பேசுவார் எவ்வளவு பேசுவர் – (இது கேள்வியன்று) பேசுகிறவர்கள் மிக்க சுருக்கமாகவோ மிக்க விரிவாகவோ
நடுத்தரமானவெ எந்த அளவில் எம்பெருமான் வடிவைப் பேசுகிறார்கள்,
(அவ்வளவே வடிவு) அது அவ்வளவாகவேயிருக்கும். எல்லைக்கண்டு பேசுதல் யார்க்கும் முடியாதென்கை.
திருவரங்கத்தமுதனால் எம்பெருமானைப்பற்றிச் சொல்லும்போது
“பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்கு உரிய சொல் என்று முடையவன்“ என்று பணிந்த பாசுரம் இருந்த்தே.

பொங்கரவவக்கரனைக் கொன்றான் – வக்கரன் – தந்தவக்ரன். (தத்வக்கரன் என்பதுமுண்டு)
கண்ணபிரான் ருக்மினிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து
போர் செய்த அரசர்களில் இவனேருவன், சிசுபாலனுக்கு பரிந்து வந்தவன்.

———————————————————————————————————————————————————

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்மையே காண விரும்பு –22

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
வானவர்கள்–நித்யஸூரிகள்
வடிவு ஆர்–அழகு பொருந்திய
முடி–கிரீடங்களை
கோட்டி–தாழ்த்தி
கடி ஆர் மலர்–மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும்–நாள்தோறும்
தூவி –ஸமர்ப்பித்து
காணும் படியானை-ஸேவிக்கப்பெற்ற திருமேனியை யுடையனான எம்பெருமானை
செம்மையால்–முறைப்படியே
உள் உருகி–உருக்கங்கொண்டு
செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மெயே–உள்ளபடியே
காண–ஸேவிப்பதற்கு
விரும்பு–ஆசைப்படு

நித்ய ஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் பணிமாறி ஸேவிக்கும்படியாகவுள்ள
பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு என்கிறார்.

அவனைக் காண விரும்பினால் கண்டுவிடமுடியுமோ? என்னில், அதற்காக விசேஷித்து அருளிச் செய்கிறார்
‘செம்மையால் செவ்வனே மெய்ம்மெயே காணவிரும்பு‘ என்கிறார். அதாவது –
நம்முடைய முயற்சியால் நாமே காண விரும்பினால் அவ்விருப்பம் பழுதாய்விடும்,
அங்ஙனன்றியே ‘பிரானே! உன் வடிவை நீயே காட்டித் தந்தருளவேணும்‘ என்று அத்தலையாலே வருங்காட்சியை
வேண்டினால் பழுதுபடாமே காணப்பெறலாமிறே. இப்படி அவனை காட்டக்காண்கையே செம்மையால் செவ்வனே காண்கையாம்.

————————————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தம்முடைய திருவுள்ளம் வியாமோஹம் கொண்டிருக்கும்படியை அருளிச் செய்கிறார்.

விரும்பி விண் மண் அளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு து ளையில் சென்றூத -அரும்பும்
புனம் துழாய் மாலையான் பொன்னம் கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் –23-

பதவுரை

வண்தார்–அழகிய மாலையிலே
அம் சிறைய சுரும்பு–அழகிய சிறகுகளை யுடைய வண்டுகள்
துளையில் சென்று ஊத–ரஸ நாடியிலே படிந்து ஊத (அதனால்)
அரும்பும்–அரும்புகள் உண்டாகப் பெற்ற
புனம் துழாய் மாலையான்–நல்ல திருத் துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண்மண் அளந்த பொன் அம்கழற்கே–ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம்–எனது மனமானது
துழாய்–அவகாஹித்து
மால் ஆய் வரும்–மயங்கிக் கிடக்கின்றது.

அப்பெருமான் எப்படிப்பட்டவன்? அஞ்சிறைய சுரும்பு வண்தார் துளையில் சென்று ஊத அரும்பும் புனந்துழாய்மாலையான் –
அவன், திருவடி திருமார்பு திருத்தோள் திருமுடி முதலானவிடங்களில் திருத்துழாய்மாலைகள் அணிந்துகொண்டிருக்கிறான்,
அவற்றில் வண்டுகள் படிந்து ரஸநாடிகளைக் கண்டுபிடித்து, அங்கு ஊதுகின்றன, அதனால் அந்த மாலைகள் அரும்புகின்றனவாம்,
திருத்துழாய் தன்னிலத்தில் இருந்தால் எப்படி அரும்புமோ அப்படி தனது திருமேனியிலும் அரும்பப்பெற்றவன் எம்பெருமான்
என்று திருமேனிவளம் சொல்லிற்றாயிற்று.

முதலடியின் முடிவிலுள்ள வண்டார் என்பதை ‘வண் தார்‘ என்று பிரிக்க ‘வண்டு ஆர்‘ என்றும் பிரிப்பர்,
அப்போது, வண்டு ஆர் – பெண் வண்டுகளோடு கூடின கரும்பு – ஆண் வண்டுகள் என்று பொருள் கொள்க.

ஈற்றடியில் துழாய் –துழாவி என்றபடி
“கடலும் மலையும் விசும்புந் துழாய்“ என்ற (2-1-4) திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க.

———————————————————————————————————————————————–

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீர் உருவுமானான் -பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது –24-

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
இரு நிலனும்–விசாலமான பூமியும்
மால் விசும்பும்–அளவிறந்த ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
நெருங்கு தீ–செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான்–ஜல தத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்–பொருந்திய ஒரு சுடர்ச் சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய
சூழ் கழலே–அடியாரை அகப்படுத்திக் கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும்–மேலுள்ள காலமெல்லாம்
தொழுது–வணங்கி
தொடர்–(அவனையே) பின்பற்றியிரு.

எம்பெருமானுடைய திருவடிகளிலேயே என் மனம் வியாமோஹங்கொண்டிருக்கின்றதென்றார் கீழ்பாட்டில்,
நெஞ்சே! உனக்கு அந்த வியாமோஹம் நித்தியமாய்ச் செல்லவேணும், என்று நெஞ்சை விளித்துக் கூறுகின்றார்.

முன்னடிகளில் ஜகத்காரணமான பஞ்ச பூதங்களைச் சொல்லியிருப்பது லீலாவிபூதியைச் சொன்னபடி,
லீலாவிபூதி நிர்வாஹகன் என்கை.
மூன்றாமடியில் சுடராழியை சொல்லியிருப்பது மற்றுமுள்ள நித்யஸூரிகளுக்கெல்லாம் உபலக்ஷணமாய்
நித்ய விபூதி நிர்வாஹகன் என்றபடி.
ஆக, உபய விபூதிநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே நெஞ்சமே! நாடோறும் தொழுது தொடர் என்றாராயிற்று.

சூழ் கழல் – சூழ்ந்துக்கொள்ளும் கழல், அதாவது –அடியார்களை அகப்படுத்திக்கொள்ளும் திருவடி என்கை.

——————————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் “சூழ்கழலே நாளுந்தொடர் ஆழி நெஞ்சே! தொழுது“ என்றார்,
அதற்கு நெஞ்சு இசையாதிருப்பதுபோல் தோன்றிற்று,
நெஞ்சே! நான் உனக்குச் சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டோ?
எம்பெருமானைத் தொழும்படிதானே நான் உனக்குச் சொன்னேன்,
தொழுதால் தீமையுண்டாகுமோ? சொல்லாய் என்கிறார்.

தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி -விழுதுண்ட
வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து –25

பதவுரை

தூ நீர் உலகம்–நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது–முழுவதும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி–அழகிய கூந்தலை யுடையளான யசோதையினுடைய
விழுது–வெண்ணெயை
உண்ட வாயானை–அமுதுசெய்த வாயை யுடையவனாயும்
மால் விடை ஏழ் செற்றானை–கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை–பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே–நெஞ்சமே!
சிறந்து–சிறப்புற
தொழுதால்–வணங்கினால்
பழுது உண்டே–குற்ற மேதேனுமுண்டோ?

கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் பிரளயகாலத்தில் அமுது செய்ததற்கு மாற்றுமருந்தாகத்
திருவாய்ப்பாடியில் வெண்ணெயமுது செய்தவனும்,
அவ்வெண்ணெய் போல் மழமழவென்ற திருமேனியைக் கொண்டு முரட்டு எருதுகளோடே பொருது வெற்றி பெற்றவனும்
தேவர்கட்கும் எட்டாதவனுமான எம்பெருமானைத் தொழுதால் குற்றமுண்டோ? (தொழுதால் அது வீணாகுமோ என்றுமாம்)

———————————————————————————————————————————————–

தண்டுழாய்மாலை யணிந்துள்ள எம்பெருமான்
என் சிந்தையோடு
திரு வநந்த ஆழ்வானோடு
திரு கச்சிப் பதியோடு
திரு வேங்கட திருமலை யோடு
திரு வெக்காவோடு-திரு யதோத்தகாரி சந்நிதி
திரு வேளுக்கையோடு -காமாசிகா -ஆள் அழகிய சிங்கப் பெருமாள் சந்நிதி
வேளுக்கை பாடி என்று பிரித்து
திரு வேளுக்கையையும்
திரு ஆய்ப்பாடியையும் என்றும் கொள்ளலாம்
வாசி அற திரு உள்ளம் உகந்து நித்ய வாசம் செய்து அருளுகிறான்
மேல் விழுகைக்கு உறுப்பான சிந்தை என்பதால் -சிறந்த -அடை மொழி கொடுத்தது பொருந்தும்

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்–26-

பதவுரை

தண் துழாயார் தாம்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார்–ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க் கொண்டு
உறைந்ததுவும்–நித்ய வாஸம் பண்ணுமிடங்கள் (எவை யென்றால்)
சிறந்த என் சிந்தையும்–சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும்–சிவந்த கண்களை யுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர்–நிறைந்த செல்வத்தை யுடைய
நீள்–பெரிய
கச்சி யுள்ளும்–கச்சித் திருப்பதியும்
வேங்கடமும்–திருமலையும்
வெஃகாவும்–திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே–திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.

இப்பாசுரத்திற்கு இரண்டு மூன்று வகையாக யோஜநைகள் அருளிச் செய்வதுண்டு,
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற் காண்க.

வெஃகா – யதோக்தகாரி ஸந்நிதி,
வேளுக்கை – ‘காமாஸிகா‘ என்ற திருநாமத்தால் வழக்கப்படுகிற ஆளழகிய சிங்கப்பெருமாள் ஸந்நிதி.
இவ்விரண்டு தலங்களும் கச்சிப்பதியிலுள்ளன.
‘வேளுக்கைப்பாடி‘ என்றதை இரண்டாகப்பிரித்து, வேளுக்கையும் திருவாய்ப்பாடியும் என்று பொருள் கொள்ளவும்.

——————————————————————————————————————————————————–

எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ? ஒருவருமில்லை என்கிறார்.

ஆரே துயர் உழுந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கரும் கடலை -நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து –27-

பதவுரை

கார் மலிந்த கரு கடலே–மேகங்கள் நிறைந்த பெரிய கடலை
நேரே கடைந்தானை–தானே முன்னின்று கடைந்தவனும்
நாரணனை–ஸகல ஜகத்காரண பூதனும்
நீரு அணை மேல் பள்ளி அடைந்தானை–திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின் மேல் பள்ளிக் கொண்டிருப்பவனுமான எம்பெருமானை
நாளும் அடைந்து–நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்)
துயர் உழந்தார்–துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும்
துன்பு உற்றார் ஆர்–துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார்–எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)

துயருழந்தார் துன்பற்றார் ஆரே? – துயர் என்று துக்கத்துக்குப் பேராயினும் இங்கு இலக்கணையால்
துக்கஹேதுவான பாபத்தைச் சொல்லுகிறது. எத்தனை கொடிய பாவங்கள் செய்தவர்களாயிருந்தாலும்
அப்பாவங்களின் பலனான துன்பங்களை பகவத் பக்தர்கள் அனுபவிக்க மாட்டார்களென்கை.
“மாயனை வாயினால்பாடி மனத்தினால் சிந்திக்க, போயபிழைப்பும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்“ என்றது காண்க.

ஆண்டையார் – எவ்விடத்திலுள்ளார்? எவ்விடத்திலுமில்லை யென்றபடி.

காரேமலிந்த கருங்கடலை நேரே கடைந்தானை –சிலர் மேலெழுந்தவாரியாக வந்து அடிபணிந்தாலும் அவர்களுக்காகத்
தன்னுடம்பு நோவக் காரியம் செய்யுமவனன்றோ எம்பெருமான், அப்படிப்பட்டவனே யடைந்து துக்கப்படுவாருண்டோ?

நீரணைமேல் பள்ளியடைந்தானை – ஆர்த்தியோடே வந்து சேர்த்து நம்மைக் கூவுவாருண்டோவென்று
கடலில் துயிலும் பெருமானையடைந்து துக்கப்படுவாருண்டோ?

——————————————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய சில சரித்திரங்களை போக்யமாகப் பேசியநுபவிக்கிறார்.

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம்போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று
பேய்ச்சி பாலுண்ட பிரான் –28-

பதவுரை

வான் எயிறு–வான்போன்ற பற்களை யுடையளான
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–உண்டு அவளை முடித்தவனான
பிரான்–ஸ்வாமியானவன்
அடைந்தது–பள்ளிக்கொண்டது
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மேலாம்
அன்று–முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய்–பஞ்ச பாண்டவர்களுக்காக
மிடைந்தது–நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர்–கடுமையான பாரதயுத்தமாம்,
உடைந்ததுவும்–அஞ்சி நின்றதும்
ஆய்ச்சிபால்–இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே–மத்துக்காகவாம்,
அம்மனே–அந்தோ!

கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னே “ஏஷ நாராயண, ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந“ என்கிறபடியே
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருந்தான், பிறகு ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவ்வதரித்துப்
பஞ்சபாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதப்போர் நடத்தி வைத்தான், இவ்வளவு அபாரசக்தி வாய்ந்தவனாயிருக்கவும்,
“உழந்தாள் நறுநெய்யொரோ தடாவுண்ண, இழந்தாளெரிவினா லீர்ந்து எழில்மத்தின்,
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்“ என்கிறபடியே
யசோதைப்பிராட்டி மத்துகொண்டு அடிப்பதாகக் கைதூக்க, அசக்தரைப்போலே நடுநடுங்கிக் கிடந்தான்,
அப்படி அசக்தியை அபிநயிக்கும் பருவத்துக்கு முன்னமே முலையுண்கிற வியாஜத்தாலே
பூதனை யென்னும் பேய்ச்சியின் உயிரை உறிஞ்சி முடித்தான்.
இங்ஙனே சக்தியையும் அசக்தியையும் மாறி மாறி வெளியிடுவது எத்திறம்! என்று உள்குழைந்தவாறு.

“ஆய்ச்சிபால்“ என்றவிடத்து, பால் – ஏழனுருபு. அம்மனே –ஆச்சரியக் குறிப்பிடைச்சொல்.

—————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் யசோதைப் பிராட்டியின் ப்ரஸ்தாவம் வந்ததனால் அவளுக்குக் கண்ணபிரானிடத்திருந்த
பரிவின் மிகுதியைப் பேசுகிறாரிதில்

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருளார் திருமேனி யின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து –29-

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப்பாலை
உண்ட–அமுது செய்த
பெருமானை–ஸ்வாமியானவனும்
வாய்ந்த இருள் ஆர் திருமேனி–அமைந்த இருள் போன்ற திருமேனியை யுடையவனும்
இனம் பவளம் செம்வாய்–அழகிய பழம் போற் சிவந்த அதரத்தை யுடையவனும்
தெருளா மொழியானை–உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து–கிட்டி
ஆய்ச்சி–யசோதையானவன்
பேர்ந்து எடுத்து–வாரி யெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே–சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தான்–தன் முலையை உண்ணக் கொடுத்தான்.

யசோதைப்பிராட்டி சற்றுப்போது கண்ணுறங்கிப் போன ஸமயத்திலன்றோ பூதனை வஞ்சிக்க வந்து முலை கொடுத்து
மாண்டு பிணமாய் விழுந்தது. உடனே கண்விழித்து நோக்கின யசோதையானவள்
அப்பூதனை பெரிய வுடம்போடே பயங்கரமான பிணமாய் நிலத்தில் விழுந்திருப்பதைக்கண்டு
‘இஃது என்ன பேயோ பிசாசோ!‘ என்று அஞ்சிக் காதவழி ஓடவேண்டியிருக்க சிறிதும் அஞ்சாமல்
கண்ணபிரா னருகிற் சென்று வாரி எடுத்தணைத்து முலை கொடுத்தாளே! இஃது என்ன பரிவு! என்று ஈடுபடுகிறார்.

அஞ்சாதே – ஒருத்தி முலைகொடுத்துப் பிணமாய் விழுந்து இன்னும் பத்து நிமிஷ மாகவில்லையே,
இந்த நிலைமையில் நாம் முலை கொடுக்கத் துணியலாமோ என்று அஞ்ச வேண்டுவது ப்ராதப்தமாயிருந்தும்
பரிவின் கனத்தாலே அஞ்சிற்றிலன் என்க.
“நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்தவாறு“ என்ற
பொய்கையார் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

யசோதைப் பிராட்டி என் அஞ்சவில்லை யென்றால், பிரானுடைய வடிவழகிலே யீடுபட்டதனால் உடனே அணுகி
வாரி எடுத்தணைக்க விரும்ப முண்டாயிற்றே அஞ்சி அப்பால் செல்ல மனமுண்டாக வில்லையென்று
காட்டுகிறார் சொற்களைச் சொன்னான் போலும்.

———————————————————————————————————————————————————————————

கீழ்ப் பாசுரங்களில் அநுபவித்த திருக் குணங்களெல்லாம் குறைத்திலிட்ட விளக்கு போலே
விளங்கப் பெற்ற இடங்களை எடுத்துப் பேசி யனுபவிக்கிறார்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறை பாடி யாயவிவை –30-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலென்ன
குடந்தை–திருக்குடந்தை யென்ன
வேங்கடம்–திருமலையென்ன
நேர்ந்த என் சிந்தை–நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன
நிறை விசும்பும்–பரம்பின பரமபதமென்ன
வாய்ந்த மறை–அமைந்த வேதமென்ன
பாடகம்–திருப்பாடகமென்ன
அனந்தன்–ஆதிசேஷனென்ன
ஆய இவை–ஆகிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த–எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறை பாடி–ராஜதானிகளாம்.

திருக்குடந்தை திருவேங்கடம் முதலான திருப்பதிகளோடே கூடத் தம்முடைய சிந்தையும் சேர்த்துக் கணக்கிடுகையாலே,
எம்பெருமானுக்கு இவர் தம் சிந்தையோடு மற்ற திருப்பதிகளோடு ஒரு வாசியில்லை என்றாராயிற்று.
“வாய்ந்தமறை“ என்று வேதங்களையும் உடன் கூறினது – திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பது போலத்
தமக்கு வேதங்களிலும் ஸாக்ஷாத்தாக ஸேவைஸாதிக்கும்படியைத் தெரிவித்தவாறாம்.

இறைபாடி – ராஜதானி.

—————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்த திவ்ய ஸ்தலங்கள் ஆழ்வார் திருவுள்ளத்தைவிட்டுப் பேராமல் அநுவர்த்திக்கவே,
பின்னையும் இவையவன் கோயில் என்கிறார்.
“கடல் குடந்தை வேங்கடம் என் சிந்தை நிறைவிசும்பு வாய்ந்தமறை பாடகம் அனந்தன்“ என்று
கீழ்ப்பாட்டிற் சொன்னவற்றையே இங்கு ‘இவை‘ என்று சுட்டிக் காட்டினார்.

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்து அரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்–31-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அவை செய்து–இருபிள வாக்க
அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான்–கண்ணையே செவியாக வுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான்–நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான்–தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான்–திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன்–அப்பெருமானுடைய
கோயில் இவை–கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.

நரசிங்கவுருக்கொண்டு ஹிரண்யாஸுரனுடைய மார்பைப் பிளந்தவனும்
சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்பவனும்
நான்கு தேங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும்,
அஹங்காரியான ருத்ரனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து ஆதரிப்பவனும்
திருப்பாற்கடலி லுள்ளபவனுமான எம்பெருமானுக்குக் கீழ்ப்பாட்டிற் சொன்ன தலங்கள் உகந்து வாழுமிடமாயிருக்கின்றன – என்றாராயிற்று.

அவை செய்தல் – இருபிளவாகச் செய்தல். செய்து – எச்சத்திரிபு, செய்ய என்க.
அன்றியே, உருபு பிரித்துக்கூட்டி, ‘அரியுருவமாய் இரணியனதாகம் அவையெதான்‘ என்றும் யோஜிக்கலாம்.
செவிதெரியா நாகத்தான் – பாம்புக்கு வடமொழியில் ‘சக்ஷுச்சரவஸ்‘ என்றும்,
தென்மொழியில் ‘கட்செவி‘ என்றும் பெயர் வழங்கும்.
கண்ணைக்கொண்டே காண்பதும் கேட்பதும் செய்தல் பாம்புஜாதியின் இயல்வாம்,
ஆகவே செவிகள் தனிப்படத்தெரியா. இங்கு இந்த விசேஷணம் திருவனந்தாழ்வானுக்கு ஏதுக்கு இட்டதென்னில்,
ஒரு இந்திரியத்தாலே பல இந்திரியங்களின் காரியங்களை நிர்வஹிப்பதுபோல,
“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புலகுமணையாம் திருமாற்கரவு“ என்கிறபடியே
ஒரு திருமேனியைக் கொண்டே பல கைங்கரியங்களும் செய்பவன் திருவனந்தாழ்வான் என்று காட்டுதற்கென்க.

நறவேற்றான் – ‘நறவு‘ என்று தேனுக்குப் பெயர், உவகையாகுபெயரால் கங்கையைச் சொல்லுகிறது.
வேதத்தில் எம்பெருமான் திருவடியில் தேன்வெள்ள மிருப்பதாகச் சொல்லியிருப்பது கங்கையைக் குறித்தே என்று
நிர்வஹிப்பது முண்டாகையாலே இங்கு ‘நறவு‘ என்று சொல்லியிருப்பது கங்கையை என்னலாம்,
ஏற்றான் என்றது முடிமீது ஏற்றுக்கொண்டவன் என்றபடி.
அன்றியே,
‘ஏறு என்று எருதுக்குப் பேராகையாலே என்றான் என்பதற்கு எருதை வாஹனமாகவுடையவன் என்றும் பொருளாகலாம்.
கங்கையும் எருதையுமுடையவன் என்க. கங்கையைத் தாங்குமவனாய் எருதால் தாங்கப்படுமவனாயிருப்பவன்.
இனி, நறவு என்று கள்ளுக்கும் பெயராதலால்,
கள்ளைக்குடிப்பவனும் எருதின்மேல் ஆதரிப்பவன் என்றும் பொருள் கூறுவர் -வடசொல் பாகமெனத்திரிந்தது.

———————————————————————————————————————————————————————-

இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார்.
திருப்பாற்கடல் திருவேங்கடம் திருவனந்தாழ்வான் ஸ்ரீவைகுண்டம் வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம்
ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று.

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற்கடலும் நுண் நூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்–32–

பதவுரை

குருந்து–குருந்த மரத்தை
ஒசித்த–முறித்தொழித்த
கோபாலகன்–கண்ணபிரான்
பால் கடலும்–திருப்பாற் கடலையும்
வேங்கடமும் திருமலையையும்
பாம்பும்–திருவனந்தாழ்வானையும்
பனி விசும்பும்–(ஸம்ஸார தாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும்
நூல் கடலும்–கடல்போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும்–ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட
ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான்–வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.

பனிவிசும்பு – ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களையெல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்கை.
நூற்கடல் – கடல் போன்றிருக்கிற ச்ருதிஸ்மிருதி இதிஹாஸம் புராணம் முதலிய சாஸ்த்ரங்கள்.

(நுண்ணூல தாமரையித்யாதி) வேதத்திற் சொல்லப்பட்ட யாதொரு தாமரையுண்டு – ஹ்ருதயகமலம்,
அதிலே ஸமஸ்த கரணங்களும் ப்ரவணமாம்படி யோகத்தில் ஊன்றியிருக்கிற பரம யோகிகளுடைய மநஸ்ஸைச் சொன்னபடி.
“***“ என்ற வரதராஜஸ்தவ ஸ்ரீஸூக்தி உணர்க.
இனி நுண்ணூலதாமரை யித்யாதிக்கு வேறுவகையாகவும் பொருள் கூறலாம்.
நுட்பமான நூலையுடைத்தான் யாதொரு தாமரையுண்டு, அதன்மேல் பொருந்தியிருக்கும் பெரியபிராட்டியாருடைய,
மனம் –திருமார்பு, அதாவது திருமுலைத்தடம் என்று, பெரியபிராட்டியாருடைய நெஞ்சையே கொள்ளவுமாம்.
தாமரை நாளத்தில் நுட்பமான நூல் இருப்பது ப்ரஸித்தம். மேற்பால் – மேலிடத்தில், மேலே என்றபடி.

குருந்தொசித்த வரலாறு – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் ஒருநாள்
கண்ணபிரான் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறும் குருந்தமாமொன்றில் பிரவேசித்து அப்பெருமான் வந்து
தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதியபோது மாயவனான கண்ணபிரான்
அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்து அழித்தன்னென்பதாம்.

——————————————————————————————————————————————————————————

அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது.
இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று.

பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம்.
மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஷ்ட ப்ராபணம்.

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க்கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாற்கு ஈந்தாய் நீ அன்று –33-

பதவுரை

மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய்–சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல்–ஆலந்தளிரிலே
உலகு எல்லாம்–உலகங்களையெல்லாம்
பைய–மெல்ல
மெய்மையே–உண்மையாகவே
உண்டவனே–அமுது செய்து கிடந்தவனே!
மாலவனே–ஸர்வாதிகளே!
நீ–இப்படிப்பட்ட நீ,
அன்று–அன்றொருநாள்
மந்தரத்தால்–மந்தர மலையைக் கொண்டு
மா நீர்க் கடல் கடைந்து–மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம்–திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு–தேவர்களுக்கு
ஈந்தாய்–அளித்தாய்.

———————————————————————————————————————————————-

திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான்
ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார்.

அன்று இவ் வுலகம் அளந்த வசைவே கொல்
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர் வாய் -அன்று
கிடந்தானை கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34-

பதவுரை

நெஞ்சமே–மனமே!
அன்று–முன்பொரு காலத்தில்
நின்று–நின்று கொண்டே
இவ்வுலகம்–இவ்வுலகங்களை யெல்லாம்
அளந்த–அளந்ததனாலுண்டான
அசைவே கொல்–சிரமத்தினாலேயோ
வேளுங்கை–திருவேளுக்கையிலே
இருந்து–வீற்றிருந்து
நீள் நகர் வாய்–(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று–ஒரு காலத்தில்
கிடந்தானை-பள்ளி கொண்டவனும்–
கேடு இல் சீரானை-ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும்
முன்–முன்னொருகால் கம்ஸனை
கடந்தானை–கொன்று ஓழித்தவனுமான பெருமானை
காண்–ஸேவி

“நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில் கூட்டி உரைக்கப்பட்டது.
நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம்.

அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம்.

“கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.

————————————————————————————————————————————————————————–

உலகத்தாருடைய இந்திரியங்களிற்காட்டில் என்னுடைய இந்திரியங்கள் மிகச்சிறந்தவை யென்கிறார்.

கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் செம் பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை –35-

பதவுரை

கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலிசெய்யப்பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்

உலகத்தாருடைய இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவிப்பதிற்செல்லுகின்றன.
அங்ஙனன்றியே
என்னுடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்திலேயே ஊன்றியிருக்கின்றன வென்கிறார்.
கண்களோ திருவாபரணங்களாலும் திருமாலைகளாலும் அழகுபெற்றுள்ள எம்பெருமானது
பொன்மேனியைக் காண்பதற்கே பாரித்திருக்கின்றன.
வாயோ அவனுடைய திவ்பசரித்திரங்களைப் பாடுவதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றது,
கைகளோ அவனுடைய திருவடிகளைத் தொழவே காதல் கொண்டிருக்கின்றன என்றாராயிற்று.

———————————————————————————————————————————————————

எம்பெருமானை அநுபவிக்கிறார்.
திருவாழி திருச்சங்கு முதலிய பஞ்சாயுதாழ்வார்கள் திருக்கைகளிலே விளங்குகின்றனர்.
திருப்பாற்கடல் படுக்கையாக அமைந்திருக்கின்றது.
இவை ஆர்க்கு? என்றால், பனிநீருலக மடியளந்த மாயரவர்க்கு.

கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு –36-

பதவுரை

பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்துகொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.

———————————————————————————————————————————————

இப்பாட்டில் ‘அகத்தான் புறத்தான்‘ என்ற விசேஷணங்கள் நரம்பாயிருக்கும்.
நான் அவனை அநுபவிக்கப் பாரித்துக்கொண்டிருக்கையில் அவன் என்னை யநுபவிக்க விரும்பி
என்னை உள்ளிலும் வெளியிலும் மொய்த்துக்கொண்டிருக்கிற னென்கிறார்.

“இப்படி தாம் அவனை யநுபவிக்கப்புக்கவாறே அவனும் தன்பெருமையைப் பாராமல் தம்பக்கலிலே
அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு பலவடிவுகொண்டு தம்மையநுபவியா நின்றனென்கிறார்“ என்றும்
“நான் அடிமையிலே அந்வயிக்க, ஸௌபரியைப்போலே அவன் அனேகம் வடிவுக்கொண்டு புஜிக்க
ஆசைப்படாநின்றானென்கிறது“ என்றுமிறே பூருவர்களின் வியாக்கியான வாக்கியமும்.

அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூண் ஆரம்
திகழும் திரு மார்வன் தான் –37-

பதவுரை

உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப்பெற்ற
திருமார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.

திருவாய்மொழியில் (4-7-6) “நாடோறு மென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளு மல்லபுறத்திலுள்ளும்
நீக்கமின்றி யெங்கும் நின்றாய்“ என்ற பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால்
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“ எனப்பட்டது.
இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்,
(“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்) திருப்பாற்கடலை வாஸஸ்தாநமாக வுடையனாய்“ என்று வாக்கியமுள்ளதாக
அச்சுப்பிரதிகளிற் காண்கிறது, “திருப்பாற்கடலோபாதி உப்புக்கடலையும் வாஸஸ்தாநமாகவுடையனாய்“ என்றிருக்க
வேண்டிய வாக்கியம் அச்சுப் பிழையினால் மாறிவிட்டது போலும். உள்ளபடியே நிர்வஹிப்பாருளரேல் நிர்வஹித்தருள்க.

———————————————————————————————————————————————————–

எம்பெருமான் பலவடிவு கொண்டு தம்மை அநுபவிக்க விரும்புவதாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்.
அவன் ஒரு ஸாமாந்ய புருஷனல்லன், ஒப்புயர்வற்ற புருஷோர்த்தமன் காண்மின் என்கிறாரிப்பாட்டில்.

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவம்
தானே தவவுருவும் தாரகையும் -தானே
எரிசுடரும் மால் வரையும் எண்டிசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை–38-

பதவுரை

எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவேயிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.

உலகத்திலுள்ள ஸகலபதார்த்தங்களும் அவனுக்கு சரீரபூகங்களாய் எல்லாவற்றுக்கும் அவன் சரீரியாய்
இருப்பவனாகையாலே அவனோடு ஒப்புச் சொல்லலாவதொரு பொருள் இல்லை,
அவனுக்கு அவன்றானே உவமை என்கிறார் இது, அநந்வயாலங்காரம்.

————————————————————————————————————————————————————–

இப்படி ஜகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேயாயிருக்கும் பெருமான் திருமலையிலே வந்து ஸந்திஹிதனாய்ப்
பின்பு என்னுடைய ஹ்ருதயத்தைவிட்டுப் போகிறனில்லை யென்கிறார்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே யுளன் -39-

பதவுரை

இறை ஆய்–ஸர்வஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறைபொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்

இதில் முன்னடிகளிரண்டும் ‘கீழ்ப்பாட்டிற் பொருளின் அநுவாதம்.

பிறைவாய்ந்த –இது வேங்கடத்திற்கு விசேஷணம், அருகி வெள்ளத்திற்கு விசேஷணமாகவுமாம்.
சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கும்படியைச் சொன்னவாறு.
எங்கணும் பேரொலி செய்துகொண்டு பெருகுகின்ற அருவிகள் நிறைந்தும் ஓங்கியுயர்ந்ததுமான
திருமலையிலுள்ளவனாய்க்கொண்டு அங்கிருந்து என்னுள்ளத்தில் வந்து சேர்ந்தவனாயின னென்கிறார்.
“மலைமேல் தான் நின்று என்மனத்துளிருந்தானை“ என்ற திருவாய்மொழியுங்காண்க.

————————————————————————————————————————————————————–

இப்படி ஸர்வாதிகனான எம்பெருமான் நம்மிடத்து வந்து புகுந்த பின்பு, நெஞ்சே! நமக்கு ஒரு குறையுமில்லை காண் என்கிறார்.
நம்முடைய ஸத்தையை நோக்குவதற்காகவே தான் ஸத்தை பெற்றிருக்கின்றான்,
‘எம்பெருமானுளன்‘ என்று நாம் இசைந்தாலும் இசையாவிட்டாலும் எப்போதும் நம்முடைய ரக்ஷணத்திலே
முயன்று உளனாயிருக்கின்றான், இதற்குறுப்பாகத் திருவேங்கடமலையிலே வந்து தங்குமவன்,
இக்குணங்களையெல்லாம் த்ரிவிக்ரமாவதாரத்தில் விளங்கக் காட்டினவன்.

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்தும் உளன் கண்டாய்
விண் ஒடுங்க கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மண் –40-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -1-20–திவ்யார்த்த தீபிகை —

October 5, 2014

ஸ்ரீ யபதியினது திருக் கல்யாண குணங்களை
இரண்டு ஆழ்வார்கள் உடன் கூட இருந்து அனுபவித்து
அவனது இன்னருளாலே பரம பக்தி தலை எடுத்து வளரப் பெற்று
கடலைக் கண்டவன் அதனுள் உண்டான முத்து மணி மாணிக்கம் முதலியவற்றை
தனித் தனியே கண்டு உகக்குமா போலே
ஸ்ரீ மகா லஷ்மி
ஸ்ரீ சுதர்சன ஆழ்வான்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத் ஆழ்வான்
ஸ்ரீ கௌஸ்துபம்
முதலியவற்றுக்கு இருப்பிடமாய்
திரு அவயவ சௌந்தர்யாதிகள் அலை எறிகிற
பெரும் புறக் கடல் ஆகிய எம்பெருமானை சாஷாத் கரித்து
இன்னது கண்டேன் இன்னது கண்டேன் என்று வகுத்து உரைத்து
அக்காட்சியினாலே தனக்கு உண்டான ஞான வைசத்யத்தினால்
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களுக்கு
உரிய அர்த்த விசேஷங்களை
பன்னி உரைத்து அருளிச் செய்கிறார் –

கீழே இரண்டு ஆழ்வார்கள்
வையம் தகளி என்றும்
அன்பே தகளி என்றும்
இரண்டு திரு விளக்கு ஏற்றிக் காட்ட
இவர் கண்டேன் கண்டேன் என்கிறார் காணும்
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவர் இறே இவர் –

எம்பெருமானை உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார்
அவன் நாராயண சப்த வாச்யன் என்றார் பூதத்தார்
நாராயண சப்தத்தோடு ஸ்ரீ மத பதத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ் வாழ்வார்
என்று பூர்வர்கள் ரசமாக நிர்வஹிக்கும் படி
இது முதல் பாசுரத்துக்கு உள்ளீடான பொருளை உபஜீவித்து அருளிச் செய்யும்படி

———————————————————————————————————————————————————————————-

திரு குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு -ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து

ஓரா -நெஞ்சு என்னும் உட்கண்ணால் அனுசந்தித்து
ஓடித் திரியும் யோகிகளாய்
பதியே பரவித் தொழும் தொண்டராய் இருந்த முதல் ஆழ்வார்கள்
மூவரும் ஓன்று கூடினமையால் சீராரும் திருக் கோவலூர் அதனுள் -என்கிறார்
மழை முகில் போல்வான் தன்னை -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் -திருக் கோவலூர் ஆயனை
அதனால் இங்கும் காரார் கரு முகிலை -என்கிறார்
மழைக்காக திருக் கோவலூர் இடை கழியிலே ஒதுங்கின அந்த கரு முகிலை கண்டு களித்த பேய் ஆழ்வார் திருவடிகளே தஞ்சம்

—————————————————————————————————————————————————————————————-

முதலாழ்வார் மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் தேசஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில்,
இம்மூவரையும் ஓரிடத்திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ்விக்க வேணுமென்கிற
குதூஹலங்கொண்ட எம்பெருமானுடைய திருவுள்ளம் நிறைவேறுவதற்காக, ஒருநாள் ஸூர்யன் அஸ்தமித்தபின்பு
பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹர்ஷியின் திருமாளிகையிற்சென்று
அதன் இடைகழியிற் பள்ளிகொண்டிருக்கையில் பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர,
சாஸ்திரமுறைப்படி ஒருவரையொருவர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன்
‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்‘ என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய,
அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருக்கையில், பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்துசேர,
ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக்கொண்டபின்
‘இவ்விடம் ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்‘ என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல,
அவ்விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்வரம் பகவத் குணங்களை சொல்லுதலும் கேட்டலுஞ் செய்து களித்திருக்கையில்-
உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திருவருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளையும் கனத்தமழையையு முண்டாக்கி,
பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்றுநின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருள,
அதன்மேல் இவர்கள் ‘இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென்கொல்?
பிறரெவரேனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?‘ என்று சங்கிக்கையில் –
பொய்கையாழ்வார் பூமியாகியதகழியில் கடல்நீரையே நெய்யாகக்கொண்ட ஸூரியனை விளக்காக ஏற்ற,
பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங்கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டி னொளியாலும் இருளற்றதனால் இப்பேய்யாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவிக்கப் பெற்றமைக்கு
இப்பாசுரத்தாலே வெளியிடுகிறார்.

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று–1-

பதவுரை

இன்று–எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால்–கடல் வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு–பெரிய பிராட்டியாரை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்,
பொன் மேனி–அழகிய திருமேனியையும்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
திகழும்–விளங்குகின்ற
அருக்கன்–ஸூர்யன்போன்று
அணி–உஜ்வலமான
நிறமும்–ப்ரகாசத்தையும்
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்
செரு–யுத்த பூமியிலே
கிளரும்–பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி–அழகிய திருவாழியையும்
கை–திருக்கையில்
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்
புரி சங்கம்–வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்.

எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக
ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார்.

புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன்,
மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும்
தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன்,
இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய்
கண்டார் மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி
பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே
பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று.

நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர்.
பொன்மேனிகண்டேன் –“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான
பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும்.
அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம்.
“உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற
நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.

“புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம்.
புரி என்றது வலம்புரி என்றபடி.
அன்றியே ஸ்புரிக்கின்ற – விளங்குகின்ற சங்கமென்றுமாம்.
புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம்.
சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம்.

ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப் பொருந்தும்,
பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால்,
அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.

—————————————————————————————————————————————————–

எம்பெருமானை விசேஷணங்களுடனே கண்டேனென்றார் கீழ்ப்பாட்டில்,
அவனைக் கண்டபோதே விரோதிவர்க்கமெல்லாம் வேரற ஒழிந்தன வென்கிறார் இப்பாட்டில்.

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திரு மாலே உன்னை
மருக் கண்டு கொண்டு என்மனம் –2-

பதவுரை

பொன் தோய்–பொன் மயமான பூஷணங்கள் சேரப் பெற்றதும்
வரை–மலை போன்றதுமான
மார்பில்–திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூந்துழாய்–திருத்துழாயை
அன்று–கடல்கடைந்த வக்காலத்தில்
திரு–பெரியபிராட்டியார்
கண்டு கொண்ட–அநுபவிக்கும்படியாக பெற்ற
திருமாலே–லக்ஷமீநாதனே!
என் மனம்–அடியேனுடைய மனமானது
உன்னை–உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு–பொருத்தப்பெற்றதனால்
யான் –அடியேன்
இன்றே–இன்று
கழல்–உனது திருவடிகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ் பிறப்பும்–ஜந்ம ப்ரம்பரைகளை யெல்லாம்
அறுத்தேன்–(இனிமேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்

பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து ஏறும்படியான விலக்ஷணமான திருமார்புபடைத்த திருமாலே!
எனது மனமானது உன்னிடத்திலே பொருந்தி ஸேவிக்கப் பெற்றதனால், இதுவரையில் பாழே கழிந்த பல பிறவிகளுக்குள்ளே
இன்றே உனது திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவனானேன், உன்னுடைய அநுபவத்திற்கு விரோதியாயிருந்த
ஐந்ம பரம்பரைகளையும் இன்றோடு அறுத்துவிட்டேன்,
(அதாவது –இனிமேல் நமக்கு நித்யாநந்தமே யொழியப் பிறவியில்லையென்று நிச்சயித்துவிட்டேன் என்கை.)

கீழ்ப்பாட்டில் ‘பொன்மேனிகண்டேன்‘ என்று திருமேனியிலே வாய் வைத்தார், சிறுகுழந்தைகள் தாயின் முலையிலே வாய்
வைப்பதுபோல சேஷபூதர் இழியுந்துறை திருவடியே யாகையாலே முந்துறமுன்னம் திருமேனியில் வாய்வைத்தோமோ
யென்று அநுதபித்தவர்போல இதில் “இன்றே கழல் கண்டேன்“ என்கிறார் என்னலாம்.

பொன்தோய்வரை மார்பில் – ‘பொன்‘ என்று பிராட்டியைச் சொல்லிற்றாப், ‘பிராட்டி வந்து சேர்ந்த வரைமார்பிலே‘ என்று
பொருள் கொள்ளலாமாயிலும், இந்த வாக்கியத்திலேயே திருக்கண்டுகொண்ட“ எனவருதலால்,
‘பொன் தோய்‘ என்பதற்குப் பொன்மயமான ஆபரணங்கள் தோயப்பெற்ற எனப் பொருள்கொள்வதே பொருந்தும்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “பொன்தோய் இத்யாதி“ என்று ப்ரதீகமெடுத்து –
“பிராட்டி தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்புடைத்த ச்ரிய பதியே!“ என்று பொருளருளிச் செய்திருப்பது
‘பொன்தோய்‘ என்றதன் பொருளன்று, பொன்தோய்வரை மார்பில் பூத்துழாய் திருக்கண்டு கொண்ட திருமாலே“
என்றவளவுக்கு அருளிச்செய்த தாத்பர்யமாம் அது.
திருத்துழாயணிந்த திருமார்வையுடையனாய்த் திருப்பாற்கடல் கடைந்தபோது பிராட்டியானவன் அத்திருமார்பிலே
வந்து சேர்ந்து அத்திருத்துழாயை அநுபவிக்கப்பெற்றாளென்ற விதனால், பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து
மேல் விழும்படியான போக்ய்யை யுடையவன் என்பது பெறப்படும்.
கடல் கடைந்தகாலத்துத் திருமார்பிலே திருவாபரணங்களணிந்து கொண்டிருந்தமைபற்றிப் பொன்தோய் என்று
திருமார்புக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. மார்பிலிருந்த பூத்துழாயைத் திருவானவள் கண்டு கொண்டாளென்றால்
அவள் மார்பிலே வந்து சேர்ந்தாளென்றதொமென்கை.

மருக் கண்டு கொண்டு – மருவி கண்டுகொண்டு என்னுமிரண்டு சொற்கள் ஒரு முழுச்சொல்லாயிற்றென்ப.

———————————————————————————————————————————————————-

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானளவிலே பொருந்தினபடியைப் பேசினார்,
இப்பாட்டில், அப்பெருமான்தானே தம்முடைய மனத்தில்வந்து பொருந்தினமையைப் பேசுகிறார்.
இப்பாட்டில், மனத்துள்ளான் என்பது வினைமுற்றாக நிற்கக்கடவது.
மாகடல் நீரிலும் மலராள் தனத்திலுமிருந்தவன் அவ்விடங்களை விட்டிட்டு என்மனத்திலே வந்து புகுந்தானென்கிறார்.

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் -சினத்துச்
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓதம் வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3-

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்–பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான்–பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன்–குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர்–சத்துருக்கனானவர்கள்
உக–அழியும்படி
சினத்து–சீற்றத்தினாலே
செற்று–த்வம்ஸம்பண்ணி
உகந்த–மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம்–தேங்கின கடல் போன்ற வடிவை யுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து–தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான்–என்மனத்திலே வந்து சேர்ந்து விட்டான்

ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் திருப்பாற்கடலிலே கிடந்து அவ்விடம்போலே பெரியபிராட்டியார் திருமுலைத்தடத்தையும்
ஒரு ஸ்தானமாகவுடையனாய், அவள் மேல்விழுந்து அநுபவிக்கும்படியாகக் குளிர்ந்த திருத்துழாயாலே அலங்க்ருதமான
திருமார்பையுடையனாய், ஆச்ரிதர்களுக்கு விரோதிகளாயுள்ளவர்கள் உருவழிந்து ஒழியும்படியாகச் சீறி அவர்களைத் தொலைத்து
‘ஆச்ரிதவிரோதிகள் தொலையப் பெற்றோம்‘ என்று திருவுள்ளமுவந்தவனாய்,
அந்த உவப்பினால் புகர்பெற்று விளங்குகின்ற வடிவையுடையனாய், அநுபவித்தே தீறவேண்டும்படியான
ஸம்ஸாரநரகத்தைக் கடப்பதற்கு அருமருந்தானவன் என்னுடைய நெஞ்சிலேயுள்ளான் என்றாராயிற்று.

மற்ற விசேஷணங்களைப்போலே மனத்துள்ளான் என்பதையும் ஒரு விசேஷணமாக்கி,
இப்படிப்பட்ட எம்பெருமான் வருநரகம் தீர்க்கும் மருந்தாயிருப்பன் என்று முடிக்கவுங் கூடுமாயினும்
மனத்துள்ளானென முடிப்பதே நன்று பொருந்தும்.

செருநர் – பகைவர். ‘சினத்து‘ என்பதை செருநர்க்கு விசேஷணமாக்கவுமாம், கோபத்தையுடைய பகைவர் என்றவாறு.

———————————————————————————————————————————————————————

இடைவிடாது அநாதிகாலமாக நம்முடைய ரக்ஷணத்தொழிலிலேயே ஊன்றியிருக்கிற எம்பெருமானது திருவடிகளே
உபாயமும் உபாயமுமாம் என்கிறது இப்பாட்டு.
அன்று உலகம் தாயோடைய அடிதானே மருந்தும் பொருளும் அமுதமும் என்று இயைக்க.

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்திய
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி –4-

பதவுரை

திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண்–செந்தாமரை போன்ற திருகண்களையுடைய
மால்–ஸர்வேச்வரனாயும்
ஆங்கே–உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய–நிலை நின்று பொருந்தினவனாயும்
உலகம்–உலகங்களை
உண்டு–பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று–முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன்–மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே–திருவடிகளே
மருந்தும்–மருந்துபோலே ஸம்ஸார வியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும்–பணம் போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும்–அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன.

மருந்து என்றது – உலகத்தில் ஔஷதமானது வியாதிகளைப் போக்குவதுபோல எம்பெருமானுடைய திருவடிகளும்
நம்முடைய விரோதிகளைப் போக்கவல்லது என்றபடி.
பொருள் – என்றது உலகத்தில் பணமானது பலபல பண்டங்களை வாங்குவதற்கு ஸாதனமாகவதுபோல,
எம்பெருமானுடைய திருவடிகளும் நமக்கு இஷ்டங்களைப் பெறுக்கவல்ல உபாயம் என்றபடி.
அமுதம் என்றது – இப்படி இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும்
மாத்திரயேல்லாமல் ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கு மென்றபடி.

திருந்திய செங்கண்மால் – நாம் திருந்துவதற்குப் பாங்கான திருக்கண்களை யுடையவன் என்கை.
இவனே பரமபுருஷனென்று நாம் நிஸ்ஸம்சயமாக அறுதியிடலாம்படி, தன்னுடைய ஸர்வேச்வரத்வத்தைக்
கோட்சொல்லித் தருகின்ற திருக்கண்கள் படைத்தவன்.
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய் கண்கள்“.

‘ஆங்கே பொருந்திய‘ என்றது –எப்போதும் அடியவர்களைக் காத்தருள்வதாகிற காரியமொன்றிலேயே
எம்பெருமான் பொருந்தி யிருக்கின்றமையைச் சொன்னபடி.
இதனையே விவரிக்கிறார் உலகமுண்டுமிழ்ந்து நீரேற்று மூவடியா லன்றுலகந் தாயோன் என்று.
பிரளயம் வந்தவாறே அதில் உலகங்களெல்லாம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றிலேவைத்து நோக்கியும்,
பிறகு வெளிப்படுத்தியும், மஹாபலி போல்வாருடைய அபிமானத்தில் நின்றும் மீட்டுத் தன்னடிக் கீழ்ப்படுத்தியும்
இவை போல்வன பல காரியங்களினால் தன்னுடைய ரக்ஷகத்வத்தைப் பிரகாசப்படுத்திக் கொண்டேயிருக்கிற
எம்பெருமானுடைய திருவடிகளே உபாயோபேயங்க ளென்றதாயிற்று.

திருந்திய என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்.
“இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக் கீழாகத்
தன்னைத் திருத்திக் கொண்டிருக்கும் ஸ்ர்வேச்வரன்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயலின் அழகு காண்மின்.

————————————————————————————————————————————————————————

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.
உலகளந்த வரலாறு பிரஸ்துதமானால் அதிலே உள்குழைந்திருப்பர்கள். கீழ் “அன்றுலகந்தாயோன்“ என்று
உலகளந்த செய்தி ப்ரஸ்துமாகையாலே அதிலே தோற்று அவனழகை யநுபவிக்கிறாரிதில்.

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆராழி கொண்டாற்கு அழகு –5-

பதவுரை

அன்று உலகம் தாயோன்–முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய
அடி வண்ணம்–திருவடிகளின் நிறம்
தாமரை–தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம்–திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம்–பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம்–கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன்–ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும்–(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே–அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு–அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.

மஹாபலி தாரை வார்த்துத் தத்தம் பண்ணினவாறே உலகங்களை யளந்துகொண்ட பெருமானுடைய திருவடிகளின்
நிறமானது தாமரைபோலே சிவந்திராநின்றது, திருமேனியின் நிறா கடல் நீர்போலே இருண்டு குளிர்ந்திரா நின்றது,
திருவபிஷேகமோ “கதிராயிர மிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியன்“ என்கிறபடியே ஆதித்யன்போலே யிராநின்றது,
தேஜஸ்ஸுக்கோ ஒப்பேஇல்லை, ஒரு கால் ஒப்புச்சொல்ல வேணுமானால் அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸையே
ஒப்புச்சொல்ல வமையும். கையுந் திருவாழியுமான எம்பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாங்கண்டீர்.

————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய திருமேனி யழகையும் சில திவ்ய சேஷ்டிதங்களையுஞ் சேர்த்து அநுபவிக்கிறார்.

அழகன்றே யாழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் –6-

பதவுரை

ஆழியாற்கு–திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம்–கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே–மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல்–மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே–அழகன்றோ
அங்கை–உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு–மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான்–பிரமன்
கால் கழுவ–திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர்–கங்காதீர்த்தத்தை
கான்ற–வெளிப்படுத்திய
கழல்–அத்திருவடி
அழகு அன்றே–அழகன்றோ

ஆழியாற்கு ஆழிநீர்வண்ணம் அழகன்றே –எம்பெருமானுக்குப் பலதிருநாமங்களுண்டு,
அவற்றுள் ‘கடல் வண்ணன்‘ என்பதும் ஒன்று, இதனை யறிந்தவர்களெல்லாரும் எம்பெருமானைக் கடல் வண்ணனென்று
மாத்திரம் வாயாற் சொல்லி விடுகிறார்களேயன்றி, இதனால் எம்பெருமானுடைய அழகிய
திருநிறம் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!, எத்தனையோ நாமங்களை வாயாற் சொல்லிவிடுதல்போலக்
கடல்வண்ண னென்பதையும் வெறுமனே சொல்லி விடுகிறார்களே யன்றி
இஃது அழகுக்குடலான சிறந்த திருநாம்மென்று உள்குழைந்து நிற்பாரில்லையே!,
(இவ்வழகிய திருநிறத்துக்கு மேலே சில அலங்காரங்களும் வேணுமோ? ஸ்வயமே அழகிய வடிவன்றோ?) என்பதாக விரித்துக்கொள்க.

அழகன்றே அண்டங்கடத்தல் – எம்பெருமான் ஓங்கி உலகளந்த வரலாற்றைப் பேசுமவர்கள்
‘ஓஓ! வெகு ஸாமர்த்தியமாக அளந்தான், வருத்தம் சிறிதுமின்றி அநாயாஸமாகக் காரியஞ் செய்தான்‘ என்று
இந்த சக்தி விசேஷத்தைச் சொல்லிப் புகழ்கின்றனரேயன்றி,
‘வல்லார் ஆடினாற்போலே வெகு அழகாகச் செய்த காரியமன்றோ உலகளந்த செயல்‘ என்று
அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை.

அங்கே நீரேற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவக் கங்கைநீர் கான்ற கழல் அழகன்றே – உலகளந்த காலத்தில்
ஸத்யலோகத் தளவுஞ் சென்ற திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்தத்தினால் விளக்க,
அத்தீருவடியினின்று கங்கை பெருகிற்றென்றும் அதனைச் சங்கரன் சடையினில் தாங்கிப்
பரிசுத்தியடைந்தானென்றும் உலகர் சொல்லுகையாலே,
‘எம்பெருமானுடைய திருவடியானது பரமபரிசுத்தையான கங்கைக்குப்பிறப்பிடமாகையாலே மிகப் பரிசுத்தமானது‘ என்று
இத்தனை சொல்லுகிறார்களேயல்லது, ‘செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர்.
பெருகப்பெற்ற பரபாக சோபையாகிற அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை.
எம்பெருமானுடையவை யெல்லாம் மிகவுமழகியவையென்றே அநுஸந்திக்க வேணுமென்பது கருத்து.

——————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய அழகிலே தோற்ற ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கி
‘அவன் திருவடிகளிலே நாம் அடிமைசெய்து வாழும்படி அநுகூலிக்கப் பாராய்‘ என்கிறார்.

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் -எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம் –7

பதவுரை

நெஞ்சே-ஓ மனமே!
கார் கடல் நீர்–கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை–கரையையுடைத்தான
பொழில்–பூமியை
அளந்த–அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி–கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன்–ஐச்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை–அழகை எல்லைகண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை–எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை–(யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
நாம் தொழுதும்–நாம் வணங்குவோம்,
வா–நீயும் உடன் படுவாயாக.

கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவனும், தனது பெருமேன்மைக் குறுப்பாகப் பெரிய திருவடியை
வாஹநமாகக் கொண்டிருப்பவனும், உபய விபூதி நாயகத்வமாகிற ஐச்வரியம் மிக்கவனும்,
தன்னழகை இவ்வளவென்று பரிச்சேதித்து நெஞ்சால் நினைத்துப் பார்க்கவும் முடியாதபடி அழகு விஞ்சியிருப்பனும்,
எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச் சொல்ல வொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும்
அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவனும், எப்படிப்பட்டவர்க்கும் ஸ்வயத்நத்தால் கிட்டுகைக்கு
அருமையா யிருப்பவனுமான பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே! என்றாராயிற்று.

“எழிலளந்தும் எண்ணற்கியானை“ என்றும்
“எழிலளந்தங்கு எண்ணற்கரியானை“ என்றும் பாடபேதங்கள். (அங்கு –அசைச்சொல்).

————————————————————————————————————————————–

இந்திரியங்களெல்லாவற்றாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணு மென்கிறார்.

நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அம்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் –8-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாராயணா என்று பல நாமம் சொல்லி–நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி
அம் கையால்–அழகிய கையினாலே
நாம் தொழுதும்–நாம் தொழுவோம்
மருவி வா–இதற்கு நீயும் உடன்பட்டுவர
மண் உலகம்–பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த–ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அளையும் தண் துழாய்–வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான
கண்ணனையே–கண்ணபிரானையே
நம் கண்–நமது கண்கள்
காண்க–கண்டு களித்திடுக

நாராயணாதி ஸஹஸ்ர நாமங்களைச் சொல்லுவதிலே வாய் ஊன்றியிருக்கவேணும்,
கைகள் அஞ்சலி பண்ணுவதிலே அவகாஹித்திருக்கவேணும்,
கண்கள் அப்பெருமானையே ஸேவீத்துக் கொண்டிருக்கவேணும்.
மனத்தின் துணையின்றி ஒரு இந்திரியமும் ஒரு காரியமும் செய்யமாட்டாதாகையாலே
இவையித்தனைக்கும் நெஞ்சு உடன்பட்டிருக்கவேணும் என்றதாயிற்று.

“வண்டறையுந் தண்டுழாய்க்கண்ணனை“ என்றதனால் –
தோளிணைமேலும் நன் மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
மதுவைப்பருகி ரீங்காரம் செய்கின்ற வண்டுகளின் ஒலியே செவிக்கு விஷயமாகவேணுமென்பதும்
அந்த திருத்துழாயின் பரிமளமே மூக்குக்கு விஷயமாகவேணு மென்பதும் தொனிக்குமென்றுணர்க.
“ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும்“ என்ற முகுந்தமாலை ச்லோகம் இங்கு ஸமரக்கத்தகும்.

———————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் “கண்ணனையே காண்க நங்கள்“ என்று விரும்பிய ஆழ்வாருடைய கண்ணுக்கு
எம்பெருமான் ஸேவை ஸாதிக்க, ஸேவித்து அவனுடைய வடிவழகைப் பேசியது பவிக்கிறாரிதில்.
கார்காலத்து மேகம்போலவும் கருங்கடல் நீர்போலவும் நீலமணிபோலவும் விளங்குகின்ற நிறமுடையனான
எம்பெருமானுக்குத் திருக்கண்கள் திருக்கைத்தலம் திருவடி எல்லாம் தாமரையே என்னலாம்படியிருக்கின்றன வென்கிறார்.

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு –9-

பதவுரை

கரு மா முகில் வண்ணன்–கரிய பெரிய மேகம் போன்ற வடிவை யுடையவனும்
கார் கடல் நீர் வண்ணன்–கரியகடல் நீரின் நிறம் போன்ற நிறமுடையவனும்
திரு மா மணி வண்ணன்–அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய
தேசு–அழகை
எண்ணில்–ஆராய்ந்து நோக்குமளவில்,
கண்ணும்–திருக்கண்ணும்
கமலம்–தாமரைப் பூப் போன்றவை
கைத் தலமும்–திருக் கைத் தலங்களும்
கமலமே–அத் தாமரைப் பூப் போன்றவையே
மண் அளந்த பாதமும்–உலகளந்த திருவடிகளும்
அவையே–அத்தாமரைப் பூப் போன்றவையே.

கண்ணும் கைத்தமும் மண்ணளந்த பாதமும் கமலமே“ என்று ஏக வாக்கியமாகச் சொல்லியிருக்கலாமே,
அங்ஙனன்றி “கண்ணுங்கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே“ என்று
மூன்று வாக்கியமாகச் சொல்லுவானேன்?
மூன்று அவயங்களுக்கும் தாமரையொன்றே உபமாநமாகச் சொல்லப்படுகையாலே
ஒரேவாக்கியமாக அமைந்தால் நன்றாயிருக்குமே என்று சிலர் நினைப்பர்,
ஆநந்தமாக அநுபவம் செல்லுமளவில் சொல்லிலக்கணம் சிக்ஷிக்கப் புகுமவர்கள் அரஸிகர்களாவர் வடமொழியில் ஒரு ச்லோகமுண்டு –
(அதாவது – அநுபவ பரீவாஹமாக ஆநந்தம் தலைமண்டை கொண்டு பேசும்போது பொருளின்பத்தில் ஆழ்ந்து
அகங்குழைய வேண்டியிருக்க அதில் கரையாதே சொல்லைப் பிடித்துக்கொண்டு மன்றாடுமவர்கள் –
சிருங்கார வேளி ஸமயத்தில் ‘இந்தப் புடவை என்னவிலை? எவ்வூரில் நெய்வித்தது? என்ன எடையிருக்கும்? என்று
உப்புப் புளிப்பில்லாத விசாரங்கள் பண்ணுவாரைப்போலே அரஸிகர்களாவர் என்றபடி.

“தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்னதாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாரும்மஃதே“ என்றாற்போலே
ஒவ்வொரு அவயவத்திலும் வேறொன்றறியாதே மருண்டு நிற்குமவர்களுடைய பாசுரங்களை நாமோ சிக்ஷிப்போம்?
திருக்கண்ணழகிலே ஈடுபட்டுக் ‘கண்ணுங் கமலம்‘ என்றுபேசி நெடும் போது கழித்தபின்
திருக்கையழகிலே கண்வைத்துக் ‘கமலமே கைத்தலமும்‘ என்றார்.
அதற்குப்பிறகு நெடும்போது கழித்துத் திருவடியழகிலே தோற்று ‘மண்ணளந்த பாதமும் மற்றவையே‘ என்றார்
ஒருபோதும் அழகு குன்றாமலிக்கிற எம்பெருமானுடைய திவ்யாவயவத்திற்கு ஒருநொடிப்பொழுதில்
அழகு மாறும்படியான தாமரையை ஒப்புச்சொல்லத்தகுமோ? தகாது தகாது,
ஆனாலும் ஒப்பற்ற அவயவத்திற்கு அத்தாமரையல்லது வேறொன்றும் ஒப்பாக வாய்திறக்கவும் போராமையாலே
இந்த அஸ்வாரஸ்யந் தோற்ற “பாதமும் மற்றவையே“ என்றார்.
“கைவண்ணந்தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்ற திருநெடுந்தாண்டகமும் காண்க.

என்றருளினர் ஸுந்தரபாஹு ஸ்தவத்திலும் ஆழ்வான்.

திருமாமணி வண்ணனுடைய தேசு – தேஜஸ்ஸானது, எண் இல் – எண்ணமுடியாதது, –
இப்படிப்பட்டதென்று சிந்திக்கவும் முடியாத்து என்று பொருள் கூறுதலுமாம்.
‘தேஜஸ்‘ என்னும் வடசொல் தேசு எனத்திரிந்தது.

———————————————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற அழகை எல்லாரும் பேசி விடலாகுமோ?
பலவகை நன்மைகளைப் பெற்ற மஹான்களே யன்றோ அவ்வழகைப் பேசவுரியார் என்று சிலர் நினைக்க,
அப்பெருமானுடைய திருநாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ண நினைத்த மாத்திரத்திலே
எல்லா வகை நன்மைகளும் தன்னடையே மேல் விழுந்து வந்து சேருங்கிடீர் என்கிறார்.

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு -10-

பதவுரை

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்–வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத–திருநாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில்–சொன்ன மாத்திரத்தில்
தேசும்–தேஜஸ்ஸும்
திறலும்–பராக்ரமமும்
திருவும்–செல்வமும்
உருவமும்–அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும்–குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும்–மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும்–தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.

கண்டவர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படியான தேஜஸ்ஸும், எதிரிகளை வாய்மாளப் பண்ணவல்ல மிடுக்கும்,
கண்டார் நெஞ்சையுங் கண்ணையும் கவரும்படியான வடிவழகும், குற்றமற்ற நற்குடிப்பிறப்பும்,
மற்றும் நன்மையாகச் சொல்லப்படுமவைகளும் தானேவந்து சேரும்,
யாரிடத்திலென்னில்,
சங்குதங்கு தடங்கையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கற்கவேணுமென்பாரிடத்து.

இழிகுலத்திற் பிறந்திருந்தாலும் பகவத் பக்திவை பவத்தாலே அவ்விழிகுலம் நீங்கித் தொழுகுலம்
உண்டாகு மென்பது இரண்டாமடியில் விளங்கும்.
“பண்டைக் குலத்தைத் தவிர்த்து“ என்றார் பெரியாழ்வாரும்.

———————————————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணினால் எல்லாவகை நன்மைகளும் வந்துகூடு மென்றார் கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடியே உணருகையாகிற நன்மையும் உண்டாகுமோ என்று கேள்வி பிறக்க,
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உணர்வது மாத்திரம் அருமையான தென்கிறார் இதில்.

நன்கோதும் நால் வேதத்துள்ளான் நறவு இரியும்
பொங்கோதம் அருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற்கடலான் நுண் அறிவினான் –11-

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்–நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும்–தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல்–கடல் போலவும் அருவி நீர் போலவுமுள்ளதான
வண்ணன்–திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான்–சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான்–சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான்–ஓதி யுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால்
பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான்–(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

நால் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவனாய், ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய
விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையனாய், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்ந்தருளுமவனாய்,
மநு முதலிய மஹர்ஷிகளினால் வேதங்களுக்கு உபப்ரும்ஹண (வியாக்கியான) மாக இயற்றப்பட்ட
ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களினால் பிரதி பாதிக்கப்பட்டவனான எம்பெருமான்,
நுண்ணறிவினான் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி.

“நுண்ணறிவினான்“ என்பதற்கு – ஸூக்ஷ்மமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடியவன்,
(நம் போன்றவர்களுடைய ஸ்தூலமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடாதவன்) என்றும் பொருள் கொள்ளலாம்.
இரண்டாமடியில், ஓதம் + அருவி, ‘ஓதமருவி‘ என்றாக வேண்டுவது ‘ஓதருவி‘ என்றானது தொகுத்தல்.

—————————————————————————————————————————————————–

எம்பெருமான் ஒருவராலும் அறியக்கூடாதவன் என்றால், ‘ஆகாசத்தாமரை, மலடிபிள்ளை முதலானவை போல்
பரப்ரஹ்மமும் அடியோடு இல்லாத வஸ்து‘ என்றதாய்விடுமே என்று சிலர் சங்கிக்க,
அப்படி அடியோடு அறியக்கூடாதவனால்லன் எம்பெருமான்,
நாம் சொல்லுகிற வழியாலே அறிவார்க்கு அறியலாம் என்கிறாரிதில்.

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி -மறை என்றும்
நன்கோதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி –12

பதவுரை

மறை–வேதத்தை
என்றும்–இடைவிடாது
நன்கு ஓதி–நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும்–ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி–தாழ்ப்பாளையிட்டு
ஐம்புலனும்–பஞ்சேந்திரியங்களையும்
தம்மில் செறிவு என்னும்–(வெளிச் சொல்லாமல்) உள்ளே அடக்கி வைப்பதாகிற.
திண் கதவம் செம்மி–திடமான கதவையடைத்து
நன்கு உணர்வார்–நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன்படி–அழகிய கடலின் நிறம்போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள்தோறும்–தினந்தோறும்
காண்பர்–ஸாக்ஷித்தகரிப்பான்

வேதங்களை ஓதியுணர்ந்து அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து, வெளிவிஷயங்களில் இந்திரியங்களைப்
போகவொட்டாமல் தடுத்து அவனைக் காணப்புகுந்தால் காணலாம்.

நல்ல ஞானம் பெற்றவர்களுடைய இந்திரியங்கள் பட்டிமேயமாட்டாவாகையால் அறிவைத் தாழ்ப்பாளாக உருவகப்படுத்தினர்.
பசுமை + ஓதம் – பைங்கோதம். நன்னூலில் பண்புப் பகுதியின் விகாரங்களை யுணர்த்துகின்ற “ஈறுபோதல்“ என்னுஞ் சூத்திரத்தில்
“இனமிகல் இனையவும் பண்பிற்கியல்பே“ என்றது நோக்குக. வேறுவழிகளு முண்டு.
‘வை இங்கு ஓதம்‘ பைங் கோதம் ‘இங்கு‘ என்றது – தங்குகின்ற என்றபடி.
பசுமைதங்கிய ஓதமென்கை. சந்தியில் இகரம் கெட்டது.

————————————————————————————————————————————————————–

“நன்கோதி நன்குணர்வார் –நாடோறும் பைங்கோத வண்ணன் படிகாண்பர்“ என்றாரே கீழ்ப்பாட்டில்.
எம்பெருமான் படியை இன்ன விதமாகக் காண்பரென்பதைக் காட்டவேண்டி இப்பாசுரருமளிச் செய்கிறார்.
இறந்த காலங்களில் நடந்த எம்பெருமானுடைய சரிதங்களெல்லாம் இன்று கண்ணெதிரே தோற்றுவதாக
ஸாக்ஷாத்கரிப்பர்கள் என்று காட்டுகிறாரிப்பாட்டால்.

படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாயம் மூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு –13-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று–பூமி தானம் வாங்கிக் கொண்டு
தாமரை படி வட்டம்–தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப–திருவடியினால் அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு–பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,
நீண்ட முடி வட்டம்–நீண்ட திருவபிஷேகமானது
ஆகாயம் ஊடு அறுத்து–மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே–அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப் பெற்று எம்பெருமான் பெரிய திருவுருவாகி உலகங்களை அளக்கும் போது
அவனது திருமுடியானது மேலுலகங்களை யெல்லாம் அதிக்ரமித்துச் சென்று அண்டங்களுக்கப்பால் விளங்கிற்று என்கிறார்.
இவ்விதமாகக் காண்பர்கள் என்றவாறு.

வட்டம் – மண்டலம், படிவட்டம் –பூமண்டலம்.
எம்பெருமானுடைய ஸுகுமாரமான திருவடிபட்ட விடமென்று பூமியைத் தாமரையாக உபசரித்துச் சொல்லுகிறார்.
இப்பூமண்டலம் பெரிய தாமரைப்பூ மலர்ந்தாற்போலே வட்டவடிவிருப்பது பற்றியுமாம்.
திருவடியும் பூமண்டலத்துக்குச் சமமாகப் பரவி நின்றமையால் “அடி வட்டம்“ எனப்பட்டது.

————————————————————————————————————————————————————

கீழ் “அறிவென்னுந்தான் கொளுவி“ என்கிற பாட்டில் –இந்திரியங்களைப் பட்டி மேய வொண்ணாதபடி அடக்கி நின்று
சாஸ்த்ரங்களை அப்யஸித்தால் எம்பெருமான் படிகளைக் காணலாமென்றார்.
இது எளிதில் கைகூடாத காரியமாயிற்றே! என்று சிலர் நினைக்கக் கூடுமே, அவர்களுக்குச் சொல்லுகிறார்.
நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் திருவேங்கடமலையிலே வந்து நின்று
தேவர்கள் வணங்க நிற்கிற நிலையிலே ஆச்ரயித்து அப்பெருமானிடத்திலேயே நெஞ்சை ஊன்றவைத்தால்,
சிற்றின்பங்களிலே விருப்பம் ஒழிந்து, எம்பெருமான் படிகளை யுணர்த்துகின்ற சாஸ்த்ரங்களிலே
நெஞ்சைச் செலுத்துவதற்கு அநுகூலமாகும் என்கிறார்.

மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து–14-

பதவுரை

நாற்பால வேதத்தான்–நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்
வேங்கடத்தான்–திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளை யுடையவனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
பணிந்து–ஆச்ரயித்து
மால் பால்–அந்த ஸர்வேச்வரனிடத்திலே
மனம் சுழிப்ப–நெஞ்சு பொருந்த (அதனாலே)
மங்கையர் தோள் கைவிட்டு–ஸ்த்ரீகளின் தோளோடே அணைய வேணு மென்கிற காமத்தைக் கைவிட்டு
நூல் பால்–(வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே
மனம் வைக்க–மனம் செலுத்துவதற்கு
நொய்விது ஆம்–எளிதாகும்.

“மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு“ என்ற விதில் சிலர் சொல்லுவதொன்றுண்டு,
அதாவது சிற்றின்பங்களில் பற்று அற்றாலன்றி பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறவாது,
பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறந்தாலன்றிச் சிற்றின்பங்களில் பற்று அறாது என்று
அந்யோந்யாச்ரய தோஷம் சொல்லலாம்படி யிருக்கையாலே
‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு‘ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று.
இதற்குப் பெரியோர் பணிப்பதாவது –

நாம் சிற்றின்பங்களை விரும்பி வேசி முதலானவர்களைக் காண்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு
பலகாலும் பகவத் ஸந்நிதிகளுக்குச் செல்லுகிறோம்,
அப்போது யாத்ருச்சிகமாக எம்பெருமான் திருமேனியிலும் கண் செலுத்த நெருகின்றது,
இப்படி பலகால் நேர்ந்தால், ஒருகால் ஸுக்ருதவிசேஷத்தினால் அப்பெருமானிடத்திலேயே நம்மனம் லயித்து
‘என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே‘ என்னும்படியாக ஆகி,
சிற்றின்பங்களில் வெறுப்புபிறந்து விடுகின்றனது.
ஆகவே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கை விட்டு‘ என்றது பொருந்தும்,
அந்யோந்யாச்ரயதோஷமில்லை.
சிற்றின்பங்களில் பற்று அற்றால் தான் பகவத் விஷயத்தில் மனம் சுழிக்கும்மென்று நியதிகூறவேண்டா – என்பர்.

மாற்பால் – பால் – எழனுருபு, மாலிடத்திலே என்கை.
‘நூற்பால்‘ என்ற விடத்தும் இங்ஙனமே. நொய்விது – ஸுலபம்.

——————————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு, நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்“
என்றருளிச் செய்த ஆழ்வாரைநோக்கி சாஸ்த்ரங்களில் மனம்வைத்து அவ்வழியால்தான்
எம்பெருமான் படிகளை அறியவேணுமென்கிறீரே, நீர் அவ்விதமாகத்தான் அறிந்தீரோ? என்று சிலர் கேட்க,
எம்பெருமானுடைய நிர்ஹேதுகமான விஷயீகாரத்திற்கு இலக்கானவர்கள் சாஸ்த்ரங்களில் ச்ரமப்படவேணுமோ?
அவன் தானே ஒருவரை விஷயீகாரத்திற்கு திருவுள்ளம் பற்றினால் எல்லை கடந்த அன்பு கொண்டு
அவன் செய்யும் காரியங்களைத் தடுப்பாருண்டோ?
திருப்பாற்படலிலே பாமஸுகமாகக் கண்வளர்த்தருளுமவன் அதனை விட்டிட்டு என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானே,
இது அவனுடைய நிர்ஹேதுக கிருபையினால் வந்த்தன்றோ?
இங்ஙனமே அவன் நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க விரும்பப் பெறுமவர்களுக்கு யாதொரு சாஸ்த்ர பரிச்ரம்மும் வேண்டா,
நான் பெற்ற பேறு அவர்களும் பெறுவர்கள் என்ற கருத்தை யடக்கி இப்பாசுரமருளிச் செய்கிறார்.

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தனை அணைக் கிடக்கும் வந்து –15-

பதவுரை

பணிந்து உயர்ந்த–தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படு திரைகள்–கடலிலுண்டான அலைகளானவை
மோத–நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த–(அத் திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம்–படங்களிலுண்டான
மணிகளாலே–மாணிக்கங்களினாலே
அணிந்த–அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன்–திருவனந்தாழ்வானாகிற
அணை–திருப்பள்ளி மெத்தையிலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருளாகிற
அம்மான்–ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு–அங்கு நின்றும்
வந்து –புறப்பட்டுவந்து
அடியேன்–அடியேனுடைய
மனம் அணை–மனமாகிற படுக்கையில்
கிடக்கும்–சயனித்திரா நின்றான்

கடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது.
“அணிந்தங்கு“ என்றவிடத்துத் தொகுத்தல் விகாரம். அணிந்த அங்கு என்று பிரிக்க. அனந்தன் – வடசொல்.

—————————————————————————————————————————————–

திருப்பாற்கடலில் நின்றும் தம் திருவுள்ளத்துக்கு வரும்போது திருவல்லிக்கேணியில் தங்கி வந்தானென்கிறார் போலும்.

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
திரு வல்லிக் கேணியான் சென்று –16-

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

முதலிரண்டடிகள் திருவல்லிக்கேணிக்கு விசேஷணம், அருகிலுள்ள கடலில் அலைகள் மோதும்போது
சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன,
அவை ஸாயம்ஸந்தியா காலத்தில் ஏற்றப்படுகின்ற மங்கள தீபமோ என்னலாம்படி யிருக்கின்றனவாம்.
சில விளக்குகள் செந்நிறமான ஒளியை யுடையனவாயும். சில விளக்குகள் வெண்ணிறமான வொளியை யுடையனவாயும்
இருப்பதுண்டாகையாலே செந்நிறப் பவழங்களும் வெண்ணிற முத்துக்களும் திருவிளக்காகச் சொல்லப்பட்டன.
திருவல்லிக்கேணியில் எப்போது பார்த்தாலும் திருவிளக்கேற்றப்பெற்ற மாலப்பொழுதாகவே காணப்படுமென்று கருத்து.
இப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கின்ற திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமி – என்றாராயிற்று.

‘ப்ரவாளம்‘ என்னும் வடசொல் பவள மெனவும்,
‘முக்தா‘ என்னும் வடசொல் முத்து எனவும்
‘ஸந்த்யா‘ என்னும் வடசொல் அந்தி யெனவும் திரிந்தன.

—————————————————————————————————————————————–

எம்பெருமானை வாழ்த்தப் பெறுவதொரு நாள் உண்டானால், கீழ்க்கழிந்த காலமும் மேல்வருங்காலமும்
எல்லாம் நன்னாளாய் விடுமென்கிறார்.

சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத வெந்தை யிணையடிக்கே யாளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் –17-

பதவுரை

என்றும் இறவாத எந்தை–ஒருநாளும் அழிவில்லாதவனான எம்பெருமானுடைய
இணை அடிக்கே–உபய பாதங்களுக்கே
ஆள் அய்–ஆட்பட்டு
மறவாது–மறவாமல்
என்வாய் வாழ்த்துக–என்வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்)
சென்ற நாள்–கீழ்க் கழிந்த காலங்களும்
செல்லாத–இனிமேல் வரப்போகிற நாள்களும்
செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள்–‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘
என்று சொல்லப்பெற்ற நிகழ்காலமுமாகிய
எந்நாளும்–எல்லாக் காலங்களும்
நாள் ஆகும்–நல்ல காலமே யாகும்.

இன்று ஒருநாள் எம்பெருமானை வாழ்த்தப் பெற்றால் அந்த ஒருநாள் மாத்திரம் நல்ல நாளாகுமேயன்றி,
கீழே பழுதே கழிந்த காலமும் இனிமேல் வரப்போகிற காலமுங்கூட நன்னாளாய் விடுமோ? என்னில், கேண்மின்,
ஒருவன் நெடுங்காலமாக தரித்ரனாயிருந்து ஒருநாளில் செல்வம் மிக்கவனானால்,
அவனுக்கு சென்ற நாட்களின் கெடுதல்கள் தோற்றமாட்டா, வயிறா உண்டபின் பசித்திருந்த முற்காலம் என் செய்யும்?
அது போல, எம்பெருமானை வாழ்த்தப் பெறும் நாள் உண்டான பின்பு, அவனை வாழ்த்தாமல் பாழே கழிந்த கீழ்நாட்களும்
‘கழிந்துபோன நாட்கள்‘ என்ற காரணத்தினாலேயே நன்னாளாய் விடுமென்க.
ஒருவன் ஸந்தோஷமாயிருக்கும்போது ‘மேலுள்ள காலமெல்லாம் நாம இப்படியே ஸந்தோஷமாகவே இருப்போம்‘ என்று
நினைத்திடுவனேயன்றி‘ நாளைக்கே நாம் துயரை அநுபவிக்கப்போகிறோம்‘ என்று நினைக்கமாட்டான்,
அதுபோல, ஆழ்வாரும் ‘எம்பெருமானை வாழ்த்தப் பெறுவத்தொருநாள் வாய்த்துவிட்டால்
அந்த வாழ்த்து மேலுள்ள காலமெல்லாம் மாறாதே செல்லும்‘ என்றெண்ணி எதிர்காலமும் நன்னாளாருமென்கிறார்.
ஒருவனுக்கு நிகழ்காலமொன்று மாத்திரம் நன்றாயிருந்துவிட்டால் அவனுக்கு இறந்த காலமும் எதிர்காலமும் நன்றே என்க.

என்றுமிறவாத வெந்தையிணையடிக்கே ஆளாய் என்வபாய்மறவாது வாழ்த்தப்பெற்றால்,
சென்றநாள் சொல்லாதநாள் செங்கண்மா லெங்கண்மாலென்ற அந்நாள் ஆகிய எந்நாளும் நாளாகும் என்றதாயிற்று.

——————————————————————————————————————————————————

உலகளந்த பெருமானே! உன் திருவடிகளில் எனக்கு நித்ய கைங்கர்யத்தைத் தந்தருளி உன்னுடைய
அனுபவத்துக்கு இடையூறான ஸம்ஸாரபயத்தையும் மாற்றியருளவேணு மென்கிறார்.

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால் மூவடி மண்
நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா விணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க அருள் –18-

பதவுரை

வாமனன் ஆய்–வாமந ரூபியாகி
மாவலி பால்–மஹாபலியினிடத்தில் (சென்று)
வாய் மொழிந்து–(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண்–மூவடி நிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட–அதை அளந்து கொண்ட
நெடு மாலே–ஸர்வேச்வரனே!
எஞ்சா–கருங்குதலின்றி
தாவிய–ஸர்வ வ்யாபியான
நின் இணை அடிக்கே–உனது உபய பாதங்களுக்கே
ஏழ் பிறப்பும்–எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி–நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க–பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

‘நம்முடைய உடைமையை நாம் இழக்கலாகாது‘ என்கிற திருவுள்ளத்தினால் உலகங்களெயெல்லாம்
அடிப்படுத்திக் கொண்டது போல உன்னுடைமையாகிய அடியேனையும் அடிப்படுத்திக் கொள்ளவேணு மென்கைக்காக
இங்கு உலகளந்த சரிதையை எடுத்துக் கூறினரென்க.
வாமநனுடைய மழலைச் சொற்களிலேயே மாவலி மதிமயங்கினனாதலால் அது தோன்ற ‘வாய்மொழிந்து‘ என்கிறார்.
இரண்டாமடியிலுள்ள ‘நீ‘ என்பது ஈற்றடியில் அந்வயிக்கக்கடவது.
அஞ்சாதிருக்க – ‘நாளைக்கே‘ இந்த பகவத் கைங்கரியம் மாறிப்போய்
ஸம்ஸார தாபத்ரயமே மேலிட்டு விடுமோ? என்று அஞ்சாதிருக்க.

—————————————————————————————————————————————————-

அஞ்சாதிருக்கவருள் என்று சொல்லிவிட்டால் தவறாமல் அருள்வனோவென்ன,
‘நம் அருளை எதிர்பார்ப்பார் ஆரேனுமுண்டோ? என்று நோக்கியிருக்கு மெம்பெருமான் அருள்செய்யா தொழியமாட்டான்,
அருள்செய்தே தீருவன், ஆனால் எல்லார்க்கும் அருள்செய்தால் ஸர்வமுக்தி ப்ரஸங்க முண்டாகி
லீலாவிபூதியே அழிந்துபோக நேருமாகலால், இருளாத சிந்தையாய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது
முந்தையராய் நிற்பார் எவரோ, அவர்க்கே அருள்செய்யக் கடமைப்பட்டிருக்கிற னெம்பெருமான் என்கிறார்

அருளாது ஒழியுமே யாலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க்கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் –19-

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்–அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சை யுடையாய்க் கொண்டு
சே அடிக்கே–திருவடிகளுக்கு
செம் மலர் தூய்–நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது–அஞ்ஜலி பண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு–‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று–முன்பொரு காலத்தில்
தெருளாத பிள்ளை ஆய்–அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலை மேல் சேர்ந்தான்–ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே–கிருபை பண்ணாமற் போவனோ?

உலகமெல்லாம் பிரளயத்தில் அழிவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் வாரியெடுத்து வயிற்றினுள்ளடக்கிச்
சிறியதோர் ஆலந்தளிரிலே துயின்றவனாதலால் எம்பெருமானுக்கு அடியார்களைக் காத்தருள்வதில்
ஸாமர்த்தியமும் உத்ஸாஹமும் குறையற்றதென்று காட்டுதற்காக ஆலிலைமேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் என்றார்.

இருளாத சிந்தையாய் – ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸாத்விகராய் என்கை.
முந்தையர் – பகவத் கைங்கரியத்திற்கு முற்பட்டிருக்குமவர்கள்.

———————————————————————————————————————————————————–

கீழ்ப் பதினெட்டாம் பாட்டில் உலகளந்த சரிதமும் பத்தொன்பதாம் பாட்டில் உலகமுண்ட சரிதமும்
அநுஸந்திக்கப்பட்டன வாதலால். இவ்விரண்டு சரிதங்களையும் சேர்த்தநுபவித்து,
வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கிறார் எம்பெருமானையே நோக்கி. அதாவது –
மிகச்சிறிய வடிவுகொண்டு ஏழுலகங்களையும் உண்டும் உமிழ்ந்தும் போந்த நீ அவ்வுலகங்களை மிகப் பெரிய
இரண்டு திருவடிகளினால் அளந்துகொண்டா யென்றால் இது ஒரு வியப்போ?
இதை அரிய பெரிய காரியமாக எல்லாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, இஃது என்னோ? என்கிறார்.

முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிது ஒன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ இதனைப் பேசு –20

பதவுரை

முன்–முன்பொரு காலத்தில்
உலகம்–உலகங்களை யெல்லாம்
உண்டு–திரு வயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு–பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ் வுலகம்–அந்த வுலகங்களை
பின்–பின்பொருகாலத்தில்
ஈர் அடியால்–இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல்–அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே–பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே–திருமகள்நாதனே!
செம் கண் நெடியானே–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே–எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு–நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்லவேணும்,
என்னே–இஃது என்னோ?

———————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -100-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 15, 2014

அவதாரிகை –

எம்பெருமான் புகலிடமாவது
பெரிய பிராட்டியார் திருவடிகளை
என்றும் புகலிடமாகப்
பற்றினாருக்கு
என்கிறார் –

———————————————————————————

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

———————————————————————————

வியாக்யானம் –

சார்வு நமக்கென்றும் –
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் சார்வு –
ஆபத்து உள்ள போதும்
அல்லாத போதும்
என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –

ஆத்மை வரிபுராத்மன -கீதை -6-5-என்று
நாம் தஞ்சம் அல்லாத போது எம்பெருமான் உளன் –

அவன் ஸ்வா தந்த்ர்யத்தாலே
அழன்ற போதைக்கு
பெரிய பிராட்டியார் உண்டு –

நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்
அவனுக்கும் பிராட்டிக்கும்
நாம் அநர்த்தம் சிந்திக்கும் இத்தனை-

அவன் சீறுபவன்-
ராகவத்தி பயம் கோரம் -சுந்தர -27-45-

ஸ்வ தந்த்ரன் சீறினால்
அவள் சார்வாகை யாவது பிரணயினி ஆகையாலே –
அவள் பிரியம் செய்து அல்லது
நிற்க ஒண்ணாது –

சக்கரத்தான் –
திரு வாழியை யுடைய

சர்வேஸ்வரன் –
ரஷணத்துக்கு பரிகரமான
திரு ஆழியைக் கையிலே யுடையவன்
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் –
திருத்துழாய் மாலையைத்
தோளிலே யுடையனானவன் –

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் -தான் –
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான
திருத்துழாய் மாலையை யுடைத்தாய் –
மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –

தானே முயங்கும் –
போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் –
முயங்குகை -தழுவுகை –
அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி
அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –

தான் முயங்கும் –
இப்படி இருக்கிற தான் –
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –
அவளை -அகலகில்லேன் -என்னும் –
தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே –
இதுக்கு உபமானம் மேல் –

காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் –
மேகங்கள் செறிந்து  இருந்துள்ள ஆகாசத்திலே
மின்னினாப் போலே
கருப்புக்குப் பகைத் தொடையாக
பிரகாசியா நிற்பதும் செய்யும் –

வண்டாமரை நெடுங்கண்-
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக்
குளிர நோக்கா நின்ற
உதாரமான
தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –

பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே ஷஷ்டி –
தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக்
குளிர நோக்கினாள்-

தேனமரும் பூ மேல் திரு –
தேன் செறிந்து இருந்துள்ள
பூவின் மேலே இருக்கிற
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லாக் காலத்துக்கும்
அபாஸ்ரயம் –

தேனமரும் பூ மேல் திரு —
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –

—————————————————————————————–

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

திருக்கண்டேன் –
அவனையே உபாயமாகப் பற்றுகையாலே
சாஷாத் கரிக்கிறார் –

திருக்கண்டேன் –
அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் –
அவளுடைய
சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே
கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே

இன்று –
பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்யத்ருஷ்ணை  உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை  மிக வேண்டாவோ  –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

—————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -99-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 15, 2014

அவதாரிகை –

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும்
ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே
நமக்கு பரம பிராப்யம்
என்கிறார் –

————————————————————————-

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது
தாள் முதலே–பாதமூலமே
நங்கட்கு–எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்

————————————————————————–

வியாக்யானம் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான் –
கையிலே திவ்யாயுதங்களைப் பிடித்தால்
ஓரிடத்தில் தோலக் கடவது அன்றிக்கே
வெல்லும் ஸ்வ பாவன் ஆனவன்

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும்
புக்க போரில்
எதிரிகளுக்குத் தோலாதே
வெற்றியை யுடையவன் –
ஆண் பிள்ளை -என்றபடி –
சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –

அட்ட புயகரத்தான்  –
திரு அட்டபுயகரத்திலே எழுந்து அருளி இருக்கின்றவன் –
எட்டுத் திருத் தோள்களிலும்
எட்டுத் திவ்யாயுதம் உண்டு –
அம்மிடுக்கோடே சந்நிஹிதன் ஆனான் –

அந்நான்று-குட்டத்துக் கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த –
அனுஷ்டானமும் உண்டு –

அந்நான்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய
ஆபத் தசையிலே

குட்டத்துக் கோள் முதலை  துஞ்சக் –
மடுவிலே கிடந்தது
முடிக்கக் கடவதான
முதலை சிதிலமாம் படி –

குறித்தெறிந்த –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் திருவடிகளிலே படாமல்
முதலை பிளப்புண்ணும்   படி

எறிந்த –
அப்பதற்றத்தாலே கலங்காதே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாமே
எறிந்த –

சக்கரத்தான் –
திரு வாழியை யுடையவன் –

தாள் முதலே நங்கட்குச் சார்வு –
பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-

முதலே  –
நம்முடைய சஹாயம் வேண்டா
உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –

ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி
ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு
சஹாவ ஸ்தானம் இல்லை இறே –
ஈரரசு உண்டோ

நங்கட்கு –
ஸ்வ பலம் அற்றார்க்கு –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -98-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 15, 2014

அவதாரிகை –

தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய
விரோதிகளைப் போக்குமவன்
என்கிறார் –

நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி
சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித்
தருவான் எம்பெருமான்
என்றபடி –

———————————————————————————

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

———————————————————————————-

வியாக்யானம் –

இமம் சூழ் மலையும் –
பனி சூழ்ந்த பர்வதமும்

இருவிசும்பும் –
அவகாச பிரதானம் பண்ணுகிற
பெரிய வாகாசமும் –

காற்றும் –
வாயுவின் பக்கலிலும் –

அமஞ்சூழ்ந்து –
பரந்து வியாபித்து –

தற  விளங்கித் தோன்றும் –
இவற்றிலே வ்யாப்பிப்பதும் செய்து
அவதாரா திகளாலே மிகவும் உஜ்ஜ்வலனாய் யுள்ளவன் –
ஒளி வரும் முழு நிலம் -திருவாய் மொழி -1-3-2-என்னக் கடவது இறே –
ஜகதாகாரதையைச் சொல்லுகிறது

அன்றிக்கே
இவை குதிரைக்கு விசேஷணமான போது
இப்படி பிரகாசித்து தோற்றுகிற
துரகத்தை-

வாய் பிளந்தான் தொட்டு —-
ஆஸ்ரித விரோதி என்று
கை தொட்டுப் பிளந்து
பொகட்டான் -என்றபடி-

அவன் –
நமஞ்சூழ் நரகத்து –
நமனாலே சூழப் பட்ட நரகத்திலே –
நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட நரகத்திலே
என்றுமாம் –
யம வச்யமான சம்சாரம் -என்றுமாம் –

நம்மை நணுகாமல் காப்பான்-
நம்மைக் கிட்டாத படி
நோக்குமவன் –
பிரவேசியாதபடி பண்ணுமவன்-
துரகம் பட்டது நரகம் படும் இத்தனை –

இமம் சூழ் மலையும்
இருவிசும்பும்
காற்றும்
சூழ்ந்து   அற விளங்கித் தோற்றுவதும் செய்து
நம்மை நமம் சூழ் நரகத்து நணுகாமல்
காப்பானும் அவன்
தொட்டுத் துரகத்தை வாய் பிளந்தான் –
என்று அந்வயம் –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -97-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 15, 2014

அவதாரிகை –

கீழில் படியாய்
ஸ்ரீ யபதியாய்
அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே
அவனை ஆஸ்ரயித்துப் பெறில்
பெரும் அத்தனை -அல்லது
ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும்
அறிய முடியாது -என்கிறார் –

அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம்
ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று
என்கிறார் –

————————————————————————————–

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப்பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப்போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத்தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

——————————————————————————————

வியாக்யானம் –

அலரெடுத்த  வுந்தியான் –
அலரைக் காட்டா நின்ற்றுள்ள
திரு நாபியை யுடையவன் –
ஜகத் உத்பத்தி ஹேதுவான தாமரைப் பூவை உடையவன் –
சிருஷ்டிக்கு உத்பத்தியான தாமரை இறே-

ஆங்கு –
அவனிடை யாட்டத்திலே –

எழிலாய மலரெடுத்த மா மேனி மாயன் —
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள
மலரைக் காட்டா நின்றுள்ள
திருமேனியை   யுடைய
ஆச்சர்ய பூதன் –

அழகிய புஷ்பம் போலே இருக்கிற
கருத்த நிறத்தை யுடையவன் –
புஷ்ப ஹாச ஸூ குமாரமான திருமேனி -என்றபடி
மா மேனி மாயன் இடையாட்டத்திலே –

அலரெடுத்த வண்ணத்தான் –
நல்ல நிறத்தை யுடைய இந்த்ரன் –

மா மலரான் –
திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகன் –

வார் சடையான் –
தாழ்ந்த ஜடை யாகிற
சாதக வேஷத்தை  உடையனான ருத்ரன் –

என்று இவர்கட்கு எண்ணத்தான்   ஆமோ -இமை –
என்கிற இவர்களுக்கு
சிந்திக்கத் தான் போமோ –
இவ்வர்த்த ஸ்திதியை இவர்களால்
மநோ ரதிக்கவும் முடியாது –
என்றபடி –

இமை –
விசாரி -சற்றுப் போது
என்றுமாம் –

————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -96-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

நித்ய ஸூரிகள் உடைய
பரிமாற்றமும் பொறாதே
ஸூகுமார்யத்தை உடையவன் -என்கிறது –

அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும்
அவன் திருவடிகளிலே வணங்கித்
தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11
என்னக் கடவது இறே –

————————————————————————————-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளையுடைய
தாமரை மலர் மேல்–தாமரைப்பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்துகின்ற வராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

—————————————————————–

வியாக்யானம் –

வாழ்த்திய வாயராய் –
வாழ்துகையே ஸ்வரூபமான
வாயை   யுடையரான
நித்ய ஸூரிகள்
ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் –
வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –

வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே –
இவர்கள் மகுடம் தாழ்த்தி
வணங்குவது பொறாமல்
தழும்பாம்
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான
தலைகளைத் தாழ்த்தி
ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –
கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –
கிளர்ந்த வடித் தாமரை –
பருத்த தாளை யுடைய தாமரை

இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –
எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –

ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –

தாமரை மலர் மேல் மங்கை  –
இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே
எழுந்து அருளி இருப்பதும் செய்து
நித்ய யௌவனத்தை யுடையளான
பெரிய பிராட்டியாருக்கு –

மணாளன் –
அவளுக்கு போக்தாவானவன் –

மணாளன் அடித்தாமரை –
அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும்
கூசித் தொடும் படியான
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை

இத்தால்
நித்ய ஸூரிகளுக்கும்
ப்ரஹ்மாதிகளுக்கும்
உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –

அடித் தாமரை யாமலர் –
திருவடித் தாமரை யாகிற
அலர் தழும்பாம்
பூத் தழும்பு ஆகாதோ –

கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன்
அடித் தாமரையா மலர்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே
என்று அந்வயம் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -95-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 14, 2014

அவதாரிகை –

தம்முடைய பக்கல் அவன்
ஸூ லபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூ லபனான படியைச்
சொல்லுகிறார் –

நெஞ்சே
இப்படி உபகாரகனான எம்பெருமான்
திருவடிகளிலே வணங்கி
அவனை வாழ்த்து
என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயாக வாழ்த்து

——————————————————————————————–

வியாக்யானம் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து –
சந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறார்
அதனுடைய பிரவேச மயமான
சந்த்யாராகத்தாலே
ஒளியை யுடைத்தான-

அந்திப் பொழுதத்து –
அசூரர்களுக்கு பலம் வர்த்திக்கக் கடவதான
சந்த்யா காலத்திலே
ஆவது இவன் வரம் கொள்ளாத சந்தையையில் -என்றபடி –

அரியாய் –
அதுவும் அவன் வரம் கொள்ளப் பாத்தம் போராது என்று
கழிந்த நரசிம்ஹமாய்
அந்திப் பொழுதத்து புகுந்திலங்கும் அரியாய் -என்னவுமாம் –
ஆவது சந்த்யா காலத்திலே
ஒளியை யுடைத்தான நரசிம்ஹமாய்ப் புகுந்து
என்றபடி –

இகழ்ந்த இரணியனதாகம் –
நிர்நிபந்தனமாக தன்னையும்
பிரஹ்லாதனையும்
நிந்தித்து
அசஹ்யாபசாரத்தைப்
பண்ணின பையலு டைய
தேவர்கள் உடைய வர பலத்தாலே
வளர்ந்த உடம்பை –

சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே
கொன்றது என்ற மாதரம் இன்றிக்கே
சீற்றத்தின் உடைய மிகுத்து இருக்கிறபடி –

சுகிர்ந்து –
வகிர்ந்து

எங்கும் சிந்தப் பிளந்த –
பல கூறு செய்து
எங்கும் சிந்தும்படிக்கு ஈடாக
பிளப்பதும் செய்தான் –
சின்னம் பின்னமாக பிளந்த –

திருமால் –
இப்படி ஆஸ்ரித அபேஷிதம் செய்கைக்கு அடி யான
ஸ்ரீ யபதி யானவன் –

ஆஸ்ரிதன் பக்கல் ஓரத்துக்கு அடி
பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –

அவனை பஜிக்கும் போது
அவளுக்கும் பிரியம் செய்து
பஜிக்க வேண்டுகையைச்   சுட்டி –

திருவடியே –
ஸ்ரீ யபதி யானவனுடைய
திருவடிகளை –

வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  –
வணங்கி –
அவன் என்றால் உகக்கும் நெஞ்சமே –
ஸ்தோத்ரம் பண்ணு –

வந்திக்கைக்கும்
வாழ்த்துக்கைக்கும்
விஷயம்
அவளோடு கூடினவன் போலே –
ஆசைப் பட்டாருடைய விரோதிகள்
ஹிரண்யன் பட்டது படும் அத்தனை –

————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –