உலகளந்த வரலாற்றைப் பேசி யநுபவிக்கிறார்.
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையா ஆ காத்த கோ –41
பதவுரை
குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான்.
முதலடியில் ‘மன்னுமணிழடி‘ என் சொல் இரட்டுற மொழிதலால்
‘மணி மயமான கிரீடத்தையணிந்த திருமுடி‘ என்றும் பொருள் படலாம்.
இடையர்கள் இந்திரனுக்கிட்ட அந்த பூஜையை விலக்கித் தானே அமுது செய்ததனால் சீற்றங்கொண்டு
ஆயர்க்கும் ஆநிரைக்கும் மிக்க துன்பமுண்டாம்படியாக ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது
கோவர்த்தன மலையையே குடையாக வெடுத்துப்பிடித்துநின்று காத்தருளின பெருமான் இப்படி ஆநிரையைத் துன்பப்படுத்தின
அவ்விந்திரனுக்குப் பக்ஷபாதியாயிருந்து செய்த செயல் உலகளந்தது.
அப்போது திருமுடியானது மேலுலகமெங்கும் நீண்டு செல்ல, திருவடியானது நிலவுலக மெங்கும் நிறைந்துசெல்ல,
அந்தரிக் ஷலோகத்திலுள்ள மின்னல் திருமேனிக்குப் பீதாம்பரம் போல் விளங்க,
இந்த நிலைமையாக உலகங்களை யளந்தா னெம்பெருமான் என்றாராயிற்று.
————————————————————————————————————————————-
எம்பெருமானுக்கு அடியார்களிடத்திலுள்ள ப்ரீதி விச்வாஸங்களை எப்படி நாம் ஆபத்தனமாக நம்பியிருக்க வேணுமோ
அப்படியே அப்பெருமான் ஆச்ரித சத்ருக்களிடத்தில் கொண்டுள்ள சீற்றத்தையும் நாம் ஆபத் தனமாக நினைத்திருக்க வேண்டும்.
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் –42
பதவுரை
கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி–புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.
‘நமக்கொருவன் பகைவனாக இருந்தால் அவனிடத்தில் எம்பெருமான் சீற்றங்கொள்வன்‘ என்று நாம் அறிந்தால்
பிறகு பகைவர்க்கு நாம் அஞ்சவேண்டாவன்றோ? ஆனது பற்றியே திருமங்கையாழ்வார்
“கொண்டசீற்ற மொன்றுண்டுளதறிந்து, உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!“ என்றருளிச்செய்தார்.
இவ்வாழ்வாரும் எம்பெருமானுடைய சீற்றத்தை சிந்திக்குமாறு தம் திருவுற்றத்திற்கு உரைக்கின்றார்.
இப்பாட்டில், ‘நெஞ்சே!‘ என்னும் விளி வருவித்துக் கொள்ளவேணும்.
எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யத்திற்காட்டிலும் அவனுக்கு விரோதியாயிருந்த
இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமே நம்மால தியானிக்கத் தகுந்தது என்கிறார்.
பக்தனான ப்ரஹலாதனுடைய விரோதியைச் சீறி முடித்ததுபோலவே நம் விரோதியையும் சீறி முடித்தருள்வான்
என்று தேறியிருத்தற்கு இது உறுப்பாகுமென்க.
“அருளன்று நமக்கு உத்தேச்யம், ஆச்ரித விரோதிகள் பக்கல் அவனுக்குண்டான சினம் உத்தேச்யம்,
அச்சினத்தைத் தெரி அநுஸந்தி“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்கிகாண்க.
கோவலனாய்க் கூழலூதிக்கொண்டு ஆநிரைகள் மேய்த்தவனும்,
சதுரனாய்க் கேசியின்வாயைக் கீண்டொழித்தவனுமான எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய்த் திருவவதரித்து,
சினம் – கோபத்தையுடையனாய், தெரி உகிரால் – விளங்காநின்ற நகங்களினால்,
இரணியனது ஆகம் கீண்டான் -, என்று வினைமுற்றாக்கி உரைத்துக் கொள்ளவுமாம்.
மூன்றாமடியில், “எரியுருவமாகி“ என்ற பாடம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற்குப் பொருந்தும்,
“ஒளி யுண்டான ரூபத்தை யுடையனாய்“ என்பது வியாக்கியான வாக்கியம்.
—————————————————————————————————————————————————————-
உலகமெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் ஸத்தை பெற்றுக் கிடக்கின்ற தென்கிறார்.
சினமா மத களிற்றின் திண் மறுப்பைச் சாய்த்து
புனமேய பூமியதனை -தனமாகப்
பேரகலத்து உள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்து உள்ளது உலகு –43
பதவுரை
சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.
வில்விழவென்கிற வியாஜம்வைத்துக் கம்ஸனாலழைக்கப்பட்டு மதுரையில் அவனது அரன்மனையினுட் புகும்போது
எதிர்பார்த்துப் போர் செய்து கொல்லவந்த குவாலயபீடமென்னும் மதயானையை மருப்பொசித்து முடித்தவனும்,
பூமண்டலமெல்லாம் பிரளயப்பெருங்கடலில் அழியாதபடி நிதியைக் காப்பாற்றுவதுபோல
அவற்றைத் திருவயிற்றிலே வைத்துக்காப்பாற்றினவனும், இப்படி தன்னுடைமையானது ரக்ஷிக்கப்பட்டதென்ற மகிழ்ச்சி
காரணத்தினால் ஆபரணம் பூண்டாற்போலேயிருக்கிற திருமேனியை யுடையவனுமான எம்பெருமானுடைய
ஸங்கல்பத்தின் ஏகதேசத்திலுள்ளது இவ்வுலகமெல்லாம்.
அகலம் என்றசொல் ஸங்கல்பத்துக்கு வாசகமாவது எங்ஙனேயென்னில், இச்சொல் மார்பைச் சொல்லும்,
அதன் உட்புறமானமனத்தின் தருமமாகிய ஸங்கல்பத்தை இலக்கணையால் சொல்லுகின்றதென்க.
“பேரகலத்துள்“ என்ற விடத்து, பேர் என்றது எதிர்மறையிலக்கணையில் சிறுமையைச் சொல்லுமென்க.
———————————————————————————————————————————————————-
இப்போது காணப்படுகின்ற லோகங்களும், இவையெல்லாம் ஸம்ஹரிக்கப்பட்டுக் காலமொன்று மாத்திரம்
மிருந்திருக்கப் பெற்ற பிரளய காலமும், ஆதித்யனும் அக்நியும் ஆகிய பதார்த்தங்களை ப்ரகாரமாக வுடையனாய்
(இவற்றுக்கெல்லாம் ஆத்மாவாய்) பரமபதத்திலே பல கிரணங்களை வெளியிடுகின்ற
திருவபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளிலே
பரிபூரணமான பக்தியைக் கொண்டிருக்குமாறு நெஞ்சுக்கு உபதேசித்தாராயிற்று.
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்து என்நெஞ்சே புரி –44
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.
—————————————————————————————————————————————————
ஏழுலகும் தனிக்கோல் செல்லப் பரமபதத்தில் வீற்றிருக்க கடவனான அவன் நம்போன்றவர்க்கும் ஆச்ரயிக்க
எளியனாய்த் திருமலையிலே வந்து நித்ய ஸந்நிதி பண்ணியிராநின்றானென்கிறார். திருமலையை வருணிக்கிறார்.
புரிந்து மத வேழம் மாப்பிடியோடூடி
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை –45-
பதவுரை
மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப்பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய
மலை–திருமலையாம்.
யானை தன் பேடையுடன் கலந்திருந்தபோது பிரணயகலஹம் உண்டாயிற்று அதனால் பேடையை விட்டிட்டு
இங்குமங்குந்திரிந்து கோபத்திற்குப் போக்கு வீடாகத் தனது தர்தத்தை மணிப்பாறைகளிலே யிட்டுக் குத்துகின்றதாம்,
அப்போது அத்தந்தத்தில் நின்று வெண்முத்துக்கள் உதிர்கின்றனவாம்,
இப்படி இருக்கப் பெற்ற திருமலை முன்பு வராஹாவதாரஞ் செய்தருளின பெருமானுடைய இருப்பிடம் என்கை.
பொருது – திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு
எதிர் யானையென்று பிரமித்து அதனோடே போர்செய்கின்றதாகவுங் கொள்ளலாம்.
——————————————————————————————————————————————————–
பிரயோஜநரந்தரத்தை விரும்புவர்க்கும் உடம்பு நோவக் காரியஞ்செய்து பயனளிப்பவனெம்பெருமான் என்கிறார்.
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒருகை பற்றி அலை முகடு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –46-
பதவுரை
பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.
துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினால் தேவர்களின் செல்வம் யாவும் ஒழியவே இந்திரன் தேவர்களோடு
திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு
மந்தரமலையை மத்தாகநாட்டி வாஸுகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறாக்பூட்டிப் பாற்கடலைக் கடைகையில்
மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து
அம்மலையின்கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு
உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளிருந்து, இப்படியிருக்கையில் வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும்
தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் அதனை வலியப் பிடித்திழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க,
அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத் தரித்து தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனித்தரித்து
அசுரர்கள் பக்கத்திலும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்துவலமும் இடமுகமாக இழுத்துக்கடைந்த வரலாறு அறிக.
அப்போது கடைகிற வேத்தாலே அலைநீர்த்திவலைகள் அண்டம் போய்த் தெறித்தனவென்கிறார்.
பிண்டமாய் நின்ற பிரான் –மண்ணுண்டையானது பல காரியப் பொருள்களாக ஆகி,
பானை யென்றும் மடக்கென்றும சால் என்றும் பலவடிவுகளை அடைவதுபோல,
எம்பெருமானும் ஸகல ஜகத்துக்கும் உபாதாநகாரணமாயிருத்தல்பற்றிப் பிண்டமாய் நின்ற என்கிறார்.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டனாயிருந்தபடியைச் சொல்லிற்றென்க.
——————————————————————————————————————————————————
வாமனனாகி மாவலி பக்கல் யாசகனாயச் சென்று இரந்து உதக தானம் பெற்று நின்றபோதை யழகை என் சொல்வேன்,
உடனே திரிவிக்ரமனாய் ஓங்கி வளர்ந்து உலகெல்லாம் வியாவித்த விதத்தை என் சொல்வேன்,
ஆச்ரித பக்ஷபாதம் நன்கு விளங்கும்படி திருக்கண்ணழகு இருக்குமாற்றை என்சொல்வேன்,
கம்ஸனாலேவப்பட்டு உன்னைக்கொல்லவந்த கேசியென்னும் குதிரையுருக்கொண்ட வசுரனுடைய வாயைப்பிளந்து
அவனை முடிந்த வீரத்தை என்சொல்வேன்,
அவ்வசுரனோடு போர் செய்தவளவிலும் திருமுடியிலணிந்திருந்த திருத்துழாய் சிறிதும் வாடாதிருந்த விசித்திரத்தை என்சொல்வேன்!
எங்களுடைய நரகத்தின் வாயைக் கிழித்த வுனக்கு ஒரு கேசியின் வாயைக் கிழித்தது ஆச்சரியமோ? என்றவாறு.
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரகவாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ –47
பதவுரை
நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசினென்னுமசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்–நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?
துரகம் –வடசொல், விரைவாகச்செல்வது என்று குதிரைக்குக் காணப்பெயர்.
நரகவாய் கிண்டாய் – இனி நாங்கள் ஸம்ஸாரமாகிற நரகத்தில் புகுவதற்கு வழியில்லாதபடி செய்தருளினாயென்கை.
———————————————————————————————————————————————————————————————-
ஒன்றோடொன்று சேராத செயல்களைச் செய்தவன் நீயோ வென்கிறார்.
நீ யன்றே நீர் ஏற்று உலகமடி யளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று–48-
பதவுரை
நீர் ஏற்று–(மாவலிபக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீயன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மாங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?
மாவலி பக்கல் யாசகனாய்ச் சென்றாய் என்றும் விம்மவளர்ந்து உலகங்களையெல்லாம் அளந்தாய் என்றும் கேள்விப்படுகிறோம்,
யாசகனாய்ச்சென்ற செயலாலே அசக்தியைக் காட்டிக்கொண்டாய்,
உலகளந்த செயலாலே ஒப்பற்ற சக்தியைக் காட்டிகொண்டாய், இவை என்சொல்?
தவிரவும் நீ திருவாய்ப்பாடியில் இடையனாய்ப்பிறந்து அந்த நிலைமையிலேயே கேசியின் வாயைக் கீண்டொழித்தாயென்றும் கேள்விப்படுகிறோம்.
இவையும் அப்படியே அன்றியும், நீ கண்ணாய்ப்பிறந்து குழந்தையாயிருக்குங் காலத்தில்,
துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை உன்னை வயிற்றில் கயிற்றினால்
கட்டி உரலிலே பிணித்துவிட, அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே சென்றாய் என்றும்,
தேவாஸுரயுத்தத்தில் அசுரர்களைக்கொன்று தேவர்களை வெற்றி பெறுவித்தாயென்றும் கேள்விப்படுகிறோம்,
இவையும் அப்படியே, ஆகவிப்படி அசக்தியையும் காட்டவல்ல செயல்களைச் செய்த மஹாநுபாவன் நீயோ பிரானே! என்றாராயிற்று.
———————————————————————————————————————————————————————————-
எம்பெருமானே! நீ அடியவர் திறத்தில் அன்பு மிகுதியினால் அவர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுதற்காகவும்
அநிஷ்டங்களைப் போக்குதற்காகவும் செய்தருள்கின்ற செயல்களுக்கு எல்லை யுண்டோ?
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் முற்றல்
முரி ஏற்றின் முன்னின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து –49-
பதவுரை
பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.
பரமபக்தனான ப்ரஹ்லாதாழ்வானுடைய கருத்துக்கு இரணியன் இணங்கவில்லையென்ற காரணத்தினால்
அவனைக் கைதொட்டு முடித்துப் போட்டாய்,
இந்திரன் கண்ணீர்விட்டு அழுவதைக்கண்டு பொறுத்திருக்க மாட்டாமல் அவனுக்காகக் குறளுருவாகி
மாவலிபக்கல் சென்று எண்சாணுடம்பை இருசாணாக்கி இரப்பாளனாய்க் காரியஞ் செய்தாய்,
நப்பின்னைப் பிராட்டியின் திருமேனியிலுள்ள சாபலத்தினால் ‘இவளைப் பெறுதற்கு எவ்வளவு கடினமான செய்கை
செய்தாலும் செய்யலாம்‘ என்று கொழுத்த காளைகளேமுடனே பொருது வெற்றிபெற்றாய்,
தூரத்திலேயிருந்து உன்வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உன் வரவைத் தெரிவிக்கின்ற
சங்கினோசையைக் கேட்டு நெஞ்சு குளிர்ந்திருக்குமாறு ஒலி செய்யச் சங்கை விடாமற் கைக்கொண்டுள்ளாய்,
ஆகவே உனது பிரவ்ருத்திகளடங்கலும் பரார்த்தமாகவே யிருக்கின்றன காண் – என்றாராயிற்று.
சேராவிரணியன் –சத்துருவான இரணியன் என்றபடி.
ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்களை எம்பெருமான் தனக்கு சத்துருவாக நினைப்பிடுவன் என்க.
————————————————————————————————————————————————————————
எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும்
ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின அநுக்ரஹம் விலக்ஷணமாகையாலே, மற்ற காரியங்களெல்லாம் ஒரு தட்டும்
இது ஒரு தட்டுமாக இருப்பதுபற்றி கஜேந்த்ர மோக்ஷ வருத்தாந்தத்தைத் தனிப்பட அருளிச் செய்கிறாரிதில்.
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடை வரைவாய் ஆழ்ந்த
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் –50–
பதவுரை
சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேச்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.
இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையையருளிச் செய்து முதலடியிலும் ஈற்றடியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக்
கூறியிருப்பதன் கருத்தை உய்த்துணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும்,
திருவபிஷேகம் அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்கேயாம்,
பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு நீர்ப்புழுவின் வாயில் அகப்பட்டுக்கொண்டு மிகவும் நொந்துகிடந்த்தனால்
எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் குன்றிக்கிடந்தது, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி,
திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது. பிறகு முதலையைத் துணித்து வேழத்தை வாழ்வித்ததனால்
ரக்ஷகத்வ லக்ஷணமான திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளிமல்கப் பெற்றமையால்
அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல். ‘பக்தனுடைய விரோதி தொலைப்பெற்றோம்‘ என்று பிறந்த அளவற்ற
மகிழ்ச்சியினால் திருமேனி புகர்பெற்றபடியை ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற ஈற்றடியினால் அருளிச் செய்தார்.
கஜேந்திரவான் தாமரைப்பூபறித்த பொய்கை மலைமே லிருத்ததனால் ‘தடைவரைவாய்‘ எனப்பட்டது.
—————————————————————————————————————————————————————————
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே யணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து –51
பதவுரை
அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருதமரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒருவகைக் கலக்கமுமில்லாத பரமபதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.
இந்திரன் எம்பெருமானிடத்தில் எத்தனை யுபகாரங்கள் பெற்றான்!
எத்தனை பெற்றும் நன்றி நெறியுள்ளவனா அவன்? இடையர்கள் வழக்கமாகத் தனக்கு இடுஞ் சோற்றைக்
கண்ணபிரான் விலக்கினன் என்பதுவே காரணமாகப் பசிக்கோபங்கொண்டு மாடுகளையுங் வேணுமென்று
மேகங்களையேவிப் பெருமழை பெய்வித்தான்,
அந்த இந்திரனுடைய தலையை அறுத்தெறிய எத்தனை நிமிஷஞ்செல்லும் கண்ணபிரானுக்கு!
எளிதாகத் தலையை அறுத்தெறியலாமாயினும், அவனுணவைக் கொள்ளை கொண்ட நாம் உயிரையுங் கொள்ளை கொள்ளலாகுமோ?
என்று பரம கருணை பாராட்டி ‘நம்மவர்களை நாம் ஒழுங்காகப் பாதுகாத்துக் கொள்வோம்,
கைசலித்தால் தானே ஓய்ந்து நிற்கிறான்‘ என்று திருவுள்ளம் பற்றி இந்திரனை ஒன்றுஞ் செய்திடாது
மலையைக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரைகளையும் காத்தருளின குணத்தை என் சொல்வோம்!
மருதமரங்களின் கீழே உரலையுமிழுத்துக்கொண்டு கண்ணனாய்த் தவழ்ந்து சென்றபோது உரல் குறுக்காக இழுக்கப்பட்டதனால்
அம்மருத மரங்கள் முறிந்து விழச்செய்தேயும் அதன் கீழிருந்த தனக்கு ஒரு தீங்குமின்றியே அம்மரங்களாய் நின்ற
குபேரபுத்திரர்களைச் சாபத்தில் நின்று விடுவித்தும் அம்மரஙகளில் ஆவேசித்துக் கிடந்த அஸுரர்களைக்
கொன்றொழித்தும் காட்டின சிறுச்சேவகத்தை என்சொல்வோம்!.
கண்ணபிரானாய்த் திருவவதரித்து இப்படிப்பட்ட அருந்தொழில்கள் செய்தவனும் ஸ்ரீராமபிரானாய்த் திருவவதரித்து
ராக்ஷஸர்களுடைய குடியிருப்பை யழித்தவனுமான பெருமான் இப்படி தனது நிர்ஹேதுக கிருபையினால் தானே
இதர நிரபேக்ஷனாய் வேரோதிகளை வேரறுத்து போல அந்த நிர்ஹேதுக கிருபை கொண்டே நமக்கும்
பரமபதமளித்தால் பெறலாகுமெயன்றி. நாமாக ஒரு முயற்சி செய்து பாமபதம் பெறுவது அரிது என்கிறார்.
அவனே அவனே அவனே என்ற ஏகாரங்கள் மூன்றும்
அநிஷ்ட நிவ்யருத்தி செய்து கொள்வதற்கு நம்மாலாகாது –
இஷ்ட ப்ராப்தி பெற்றதற்கும் நம்மாலாகாது! அப்பெருமானுடைய க்ருஷி தானே யுண்டாகிப் பலித்தால் பலிக்குமுதனை என்ற
ஸித்தாந்தந்தை வலி யுறுத்துவன.
“பரமபதம் அவனே காட்டக் காணமத்தனை! ஸ்வ யத்நத்தால் காண்பார்க்குக் காணப்போகாது “ என்று
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
எவ்வகைக் கலகங்களுக்கு முள்ளது இந்நிலத்திலே யாகையாலும் பராப்பத்ததில் ஒரு வகை கலகமும் மில்லாமையாலும்
கலங்குலும மில்லாமையாலும் கலங்காப் பெருநகர மென்றுஅவ்விட கலங்காப்பெருகா அன்னிடத்தில் திருநாம்மேற்கும்.
—————————————————————————————————————————————————————————-
‘எம்பெருமான் ஸர்வ சக்தன்‘ என்று ப்ரஷித்தமாயிருக்கச் செய்தேயும் ‘இவனுக்கு சக்தியுண்டோ இல்லையோ? என்று
யாரேனும் ஸந்தேகப்பட்டால் அந்த ஸ்ந்தேஹத்தைத் தீர்க்குமாறு அரிய காரியங்களை எளிதிற் செய்து
காட்டுவானவன் என்பதற்காக மராமரமேழு மெய்த வரலாற்றைக் கூறுகின்றார்.
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய்-எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று –52
பதவுரை
இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்தஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களையுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீசமாயா மிருகக்குட்டியை
எய்தான்–பின்சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும்படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.
ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனந்தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப்
பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒரு யோஜனை தூரம்
தூக்கியெறிந்த்தையுங் குறித்துப் பாராட்டிக்கூறி, இவ்வாறு போற்றலமைந்தவனை வெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல,
அதுகேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது‘ என்ன,
ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப் போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நீனைக்கும்போது
ஸந்தேஹ முண்டாகின்றது, ஏழு மராமரங்களையும் துளைத்து இந்த துந்துபியின் எலும்பையும்
இருநூறு விரற்கடை தூரம் தூக்கு யெறிந்தால் எனக்கு நம்பிக்கை யுண்டாகும்‘ என்று சொல்ல,
ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்கும்மாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபின் உடலெழும்புக் குவியலைத்
தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக்கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பானது‘ என்று கூற,
பின்பு இராமபிரான் ஒரு பானத்தை ஏழு மராமரங்களின்மேல் ஏவ. அம்மரங்களைத் துளைதத்தோடு ஏழுலகங்களையும்
துளைத்துச்சென்று மீண்டு அம்பறாத்துணியை யடைந்த தென்ற வரலாறு இங்கு அறியத்தக்கது – மராமரம் – ஆச்சரமாம்.
ஏத்திழைக்காய் அம்மான் மறியை எய்தான் – ‘எய்தான்‘ என்னுஞ் சொல் ‘ஏய்!‘ என்னும் வினைப்பகுதியடியகவும்
‘எய்து‘ என்னும் வினைப்பகுதியடியாகவம் தேறுவதுண்டு,
முந்தினது அம்புகளைச் செலுத்தினானென்று பொருள்படும்.
பிந்தினது அடைந்தானென்று பொருள்படும்.
இப்பாசுரத்தில் வினைபகுதியாகப் பிறந்தென்றும், இரண்டாமடியிலுள்ள எய்தானென்னும் வினைமுற்று எய்து என்னும்
வினைப்பகுதியடியாகப் பிறந்ததென்றும் கொண்டு உரைக்கப்பட்டது.
‘இது மயா மிருகம்‘ என்று தனக்குத் தெரிந்திருந்தும் பிராட்டியின் கோரிக்கையைப் பின்சென்று நடக்க வேண்டிய
பிரணயாதிசயத்தினால் அம்மான் குட்டியின் பின்னே நடந்தான் என்றவாறு.
‘மறி‘ என்ற சொல் சில மிருகங்களின் குட்டிக்குப் பொதுப்பெயராயும் மானுக்குச் சிறப்பஜ பெயராயு முள்ளது,
இங்குக் குட்டியென்ற பொருளில் வந்தது. ‘மான் மறிய‘ என்றும் பாடமுண்டென்பர்,
அப்போது மாரீச மாயாமிருகம் சாகும்படி என்று பொருளாம்.
‘ஏந்திழைக்காய்‘ என்ற சொல் நடுநிலைத் தீவகமாய் இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் அந்வயிக்கத்தக்கது.
——————————————————————————————————————————————————————————–
ஆலிலையில் துயின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுமாறு தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் -பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள் –53-
பதவுரை
மூரி வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே
இயன்ற ஸ்ரீபொருந்தியுள்ள
ஆலமரத்து இலையின் மேலால்–ஆலமரத்தின் இலைமீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.
பொய்கையாழ்வார் தமது திருவந்தாதியில்
“பாலன் தனதுருவாய் ஏழுல குண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் –
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு“ என்று –
‘பிரளய காலத்தில் உனக்கு இருப்பிடமாயிருந்த ஆலமரம் பிரளய பெருங்கடலிடையே இருந்ததா? விண்ணிலிருந்ததா?
மண்ணிலிருந்ததா? எங்கிருந்தது, சொல்லு‘ என்று சமத்காரமாக எம்பெருமானை மடிபிடித்துக் கேள்வி கேட்டார்,
எம்பெருமான் தனது விசித்ர சக்தி யோகத்தால் அந்த ஆலமரத்தைப் பிரளயக் கடலினிடையே தோன்று வித்தான்
என்கிற ஸமாதானத்தை இவ்வாழ்வார் இப்பாட்டில் வெளியிடுவார் போன்று
மூரிநீர் வேலையியன்ற மரத்தாலிலையின் மேலால்“ என்கிறார்.
மூரிநீர் – ‘மூரி‘ என்ற சொல்லுக்கு ‘அநாதி‘ என்ற பொருளும் ‘பெரிது‘ என்ற பொருளும்
‘வலிமைகொண்டது‘ என்ற பொருளும் உண்டு.
அம்மூன்று பொருள்களும் இங்குப் பொருந்தும்.
———————————————————————————————————————————————————————————-
நமக்கெல்லாம் சோறு, தண்ணீர், வெற்றிலைப்பாக்கு மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம் என்னுமிப்பொருள்களே
உகப்புக்கு விஷயமாதலால் நம்முடைய வாய்வெகுவுதலும் போதுபோக்கும் இப்பொருள்களிலே மாறிமாறி
நடந்து கொண்டிருக்கும், இங்ஙனன்றியே
“கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான், பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் –
சீர்கலந்த, சொல்நினைந்து, போக்காரேல் சூழ்வினையினாழ்துயரை, என்னிணைந்து போக்குவர் இப்போது“ என்கிறபடியே
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றால் போதுபோக்கறியாத ஆழ்வார்கள் மாறிமாறி பகவத்குண சேஷ்டிதங்களைப்
பேசுமத்தனையல்லது வேறு எதனைப் பேசுவர்கள்?
உலகளந்த சரித்திரத்தை உரைப்பது, வடதளசாயியின் வ்ருத்தாந்தத்தை வாய்வெருவுவது,
கண்ணபிரான் கதைகளைக் கூறுவது, இராமபிரான் சரிதைகளை இயம்புவது,
மீண்டும் இவற்றையே வகைவகையாகப் பேசுவதாய்க் கொண்டு இவர்கள் போதுபோக்கு மழகை
நாம் என் சொல்ல வல்லோம் வாய் கொண்டு?
தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு
பெண்ணகலம் காதல் பெரிது –54-
பதவுரை
சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடைபோய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லையென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண்கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு–ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பியிருக்கின்ற திருமார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.
ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக்
கண் வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்த காலத்து, கம்ஸனா லேவப்பட்ட அஸுரனொருவன்
அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல்விழுந்து தன்னைக்கொல்ல முயன்றதை அறிந்த தான் பாலுக்கு அழுகிய
பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்து அச்சகடத்தைச் சின்ன பின்னமாக்கினான்.
கம்ஸனாலழைக்கப்பட்டு அவனது அரண்மனையினுட் புகும்போது சீறிவந்த குவலயாபீட மென்னும்
மதயானையை மோதி மருதப்பொசித்தான். இரட்டை மருத மரங்கிளினிடையே தவழ்ந்துசென்று அவற்றைக்கீண்டு தள்ளினான்,
வராஹரூபியாய்த் திருவ்வதரித்து பூமிப் பிராட்டியை ஹீநஸ்திதியிலிருந்து உத்தரிப்பித்து மார்பாரப் புல்கி உவந்தான் –
என்று சில பகவத் கதைகளைப் பேசி மகிழ்கிறார்.
பெண்ணகலம் காதல் பெரிது –கீழ் மூன்றாமடிக்குச் சேர ‘பூமிப் பிராட்டியினிடத்தில் கரைபுரண்ட காதலுடையவனதலால்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாய்ப் பிறந்து படாதன்பட்டான்‘ என்று கருத்துக் கொள்ளலாம்.
அன்றியே, ‘எம்பெருமானுக்குப் பெரிய பிராட்டியாரிடத்தில் பெரிதான காதல் உள்ளது,
அவள் நமக்குப் புருஷகார பூதையாகையாலே நமக்கொரு குறையில்லை‘ என்பதாகவுங் கருத்துக்கொள்ளலாம்.
கீளா –செய்யா என்னும் வாய்பாட்டுடன் பாட்டிறந்தகால வினையெச்சம், கீண்டு என்றபடி.
பெண்ணகலம் – பெண்ணிடத்தில் என்றுமாம்.
—————————————————————————————————————————————————————————————
எம்பெருமானுடைய ஆபரணலங்காரத்திலும் கண்ணழகிலும் ஈடுபட்டு அநுபவித்துப் பேசுகிறார்.
பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின்னல் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்றவன் தன
நீள் நெடும் கண் காட்டும் திறம் –55
பதவுரை
பெரியவரை மார்வில்–பெரிய மலைபோன்ற திருமார்பிலே
பேர் ஆரம்பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக்கண்களினுடைய
நிறம்–நிறத்தை
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.
இரண்டாமடியின் தனிச்சீர் ‘தெரியுங்கால்‘ என்றும் ‘திரியுங்கால்‘ என்றும் இரு வகைப்பாட முள்ளது.
முந்தின் பாடத்தில், எம்பெருமான் பெரிய மலைபோன்ற தனது திருமார்பில் ரத்நஹாரத்தைச் சாத்திக் கொண்டிருக்கும்படியை
அநுஸந்தித்தால் காளமேகத்திலே மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும்.
பிந்தின பாடத்தில் – எம்பெருமான் தனது திருமார்பிலே ரத்நஹாரத்தை யணிந்து கொண்டு உலாவத் தொடங்கினால்
காளமேகத்தில் மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும்.
கரிய திருமார்புக்குக் காளமேகமும் ரத்நஹாரத்திற்கு மின்னலும் ஏற்றவுவமையாம்.
(பாணொடுஙக இத்யாதி) பாண் –இசைப்பாட்டு, அது ஒடுங்கும்படியாக (அதைவிட அதிக மதுரமாக) வண்டுகள்
இசைபடப்பெற்ற தாமரைப்பூப் போலே அவனுடைய திருக்கண்கள் விளங்குகின்றன என்றவாறு.
—————————————————————————————————————————————————————————————-
பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப் புகழ யாராலாகும்? என்கிறார்.
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில்-நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு –56
பதவுரை
இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ்வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறியமாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)
“பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும் புறம்
போலுநீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம் நீல நீர்மை“ என்றும்
“நிகழ்ந்தாய் பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்“ என்றும் சொல்லுகிறபடியே
எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டிருப்பதாக நூல்கள் கூறுகின்றனவாயினும்,
“என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை“ என்று கட்புலனுக்கு இலக்காக மாட்டாததாகச் சொல்லப்படுகிற
எம்பெருமான் திருவுருவத்தின் நிறத்தை நான் ஒன்றுமறியேன்,
நானே அறியாதபோது ஸரஸ்வதி தானும் அறிந்து பேசவல்லளோ? ஏனென்னில்?
(பூமங்கை கேள்வன் பொலிவு) மாரீசன் இராவணனுக்கு ஹிதோபதேசம் பண்ணும் போது மர்மமறிந்து சொன்ன சொல் அறியீர்களோ?
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா“ என்றானே, (அதாவது)
இராமனென்பவன் பிராட்டியைக் கைப்பிடித்த பரஞ்சோதியன்றோ?
அச்சோதி நெஞ்சாலும் நினைப்பரிதன்றோ என்றானே ஆகையாலே,
பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப் புகழ யாராலாகும்? என்கிறார்.
———————————————————————————————————————————————————————————–
“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பா லின்று“ என்று
முதலடியில் தானே எல்லாங்கண்டதாகப் பேசின ஆழ்வார் திருவாக்கில்
“இறையுருவம் யாமறியோம்“ என்ற சொல் வெளிவந்தால் இஃது எம்பெருமானுக்கு ஸஹ்யமாயிருக்குமோ?
உடனே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து பெரிய திருவடியின்மேல் வீற்றிருந்து காட்சிதந்தருளினன்,
கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பேசுகிற பாசுரம்போலும் மிது.
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திரு விருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி –57-
பதவுரை
திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள்தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு
கீழ்ப்பாட்டில் “நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று இறையுருவம் யாமறியோம்“ என்று
எம்பெருமானுருவத்தைக் கனவிலுங் கண்டறியாதவர்போல ஆழ்வார் பேசினபேச்சு
எம்பெருமானது திருச்செவியில் விழாதிருக்குமோ? விழுந்ததாகில் இச்சொல்கேட்டுப் பொறுத்திருக்க வல்லனோ அவன்?
“திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பா லின்று“ என்று
முதலடியில் தானே எல்லாங்கண்டதாகப் பேசின ஆழ்வார் திருவாக்கில்
“இறையுருவம் யாமறியோம்“ என்ற சொல் வெளிவந்தால் இஃது எம்பெருமானுக்கு ஸஹ்யமாயிருக்குமோ?
உடனே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து பெரிய திருவடியின்மேல் வீற்றிருந்து காட்சிதந்தருளினன்,
கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பேசுகிற பாசுரம்போலும் மிது.
கார்காலத் தெழுகின்ற கார்முகிலில் மின் மின்னினாற்போலே கரிய திருமேனியில் பொன்னிற பெரியபிராட்டி
விளங்கப்பெற்றுக் கருடன் மீது ஸேவைஸாதிக்கின்ற பெருமானுடைய திருவடிகளிலேயே நெஞ்சே!
நீ பக்திபண்ணு என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று.
நெஞ்சே! என்னும் விளி வருவித்துக்கொள்க.
தெருள்தன் மேல்கண்டாய் –‘தெருள்‘ என்று ஜ்ஞானத்திற்குப் பெயர்,
‘கர்மஜ்ஞாந பக்திப்ரபத்திகள்‘ என்ற அடுக்கிலும் ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள்‘ என்ற அடுக்கிலும்
ஜ்ஞாநத்திற்கு மேற்படியாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே தெருள்தன்மேல் என்றது பக்தியைச் சொன்னபடியாய்,
அவனது திருவடிகளை பக்திக்கு விஷயமாக்கு என்றதாம்.
அன்றியே,
பக்தியும் ஜ்ஞாநத்தின் அவஸ்தா விசேஷமேயாதலால், தெருள் என்பதற்கே பக்தியென்று பொருள்கொண்டு,
தெருள்தன்மேல் – பக்தியினாலே, கழல்கண்டாய் –திருவடிகளை (நெஞ்சே!) காணப்பெற்றாய்,
தெளி – இனிமேல் கலக்கம் நீக்கித் தெளிந்திரு என்பதாகவும் முரைக்கலாம்.
—————————————————————————————————————————————————————————-
கீழ்ப்பாட்டில் கருடன் மேற்கொண்ட கரியானாய் ஸேவை தந்தருளினவன்
‘என்னைத் திருவேங்கடமலையிலே நித்யமாகக் கண்டுகொண்டிரும்‘ என்று சொல்லி
மறைந்திடவே திருமலையிலே மண்டுகிறார்.
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு –58-
பதவுரை
தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளித்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தான் என்றும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படிரு யிருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்
கொண்டு–(மாவலியிடத்தில் பெற்றுக்கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்
திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்றதென்ற அதிசயோக்திக்காக ஒரு வர்ணனை கூறுகின்றார்.
திருமலையில் கற்பாறையின்மீது பெண்குரங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றது,
அதனருகில் ஆண்குரங்கும் ‘நமது பேடை நம்மை ஏவிக் காரியங்கொள்வது எப்போதோ‘ என்று
அதன் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இராநின்றது,
அதனை நோக்கிப் பெண்குரங்கானது ‘முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘
என்பாரைப்போலே ‘பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்கிறதாம்.
இங்ஙனே சொல்லும்படியாக ஓங்கியிருந்துள்ள திருமலையே ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் என்றாராயிற்று.
சிலாதலம் – வடசொல். மந்தி – பெண்குரங்கு கடுவன் –ஆண் குரங்கு.
மண்மதியிற் கொண்டுகந்தான் –கேட்டான் கேட்படியே தானம் பண்ணுவதென்று விரதம்பூண்டு
மஹா தார்மிகனாயிருக்கிற மாவலியினிடத்தில் யாசதத் தொழில்கொண்டே காரியம்
ஸாதிக்க வேணுமென்ற நினைத்துச்சென்றது புத்தி சாதுரியமென்க.
—————————————————————————————————————————————————————————————-
எம்பெருமானுடைய கரிய திருமேனியிலே செந்திறமான ரத்னங்களால் அமைந்த ஹாரங்கள்
சாத்தப்பட்டிருப்பதானது அஞ்சனகிரியிலே அருவிகள் தாழ விழிந்தாற்போலே யிருக்கின்றனவாம்.
அவ்வழகிலே யீடுபட்டு அத்திருமார்பை ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாதே சூழ்ந்து கிடக்கிறாள் பெரிய பிராட்டி,
அப்படிப்பட்ட செங்கண்மாலுடைய திருவடிகளை நான் சேர பெற்றதனால் ‘இதுவே நமக்கு உஜ்ஜீவம்‘ என்று துணிந்தேன்.
இனி விஷயாந்தரங்களில் அவகாஹித்துக் கெட்டுப்போக மாட்டேன் என்றாராயிற்று.
வாழும் வகை அறிந்தேன் மைபோல் நெடுவரை வாய்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று –59-
பதவுரை
மை போல் நெடு வரை வாய்–மை போன் றிருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இருபக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவிபோலே
தார் கிடப்ப–மாலை சாத்தப்பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப்பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.
மலையருவிகள் வெண்ணிறமாகவும் பெருகுவதுண்டு, அங்குள்ள தாதுக்களுடன் கூடிச் செந்நிறமாகவும் பெருகுவதுண்டு,
இங்கே ‘அருவிபோல்தார் கிடப்ப‘ என்று பொதுப்படையாகக் கூறியிருப்பதனால் எதையேனுங் கொள்ளலாம்.
வெண்ணிறமான அருவியென்றால் அப்போது தார் என்றது முக்தாஹாரத்தைச் சொன்னபடியாம்,
செந்நிறமான அருவியென்றால் மாணிக்கங்களழுத்தின ஹாரத்தைச் சொன்னபடியாம்.
“எங்கள் பெருமானடி சேரப்பெற்ற வாழும்வகையறிந்தேன்“ என்று அந்வயம்.
—————————————————————————————————————————————————————————————-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து -கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு –60-
பதவுரை
பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறிதடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜயசீலமான சங்கை
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்
இப்பாட்டின் முன்னடிகளில், பெற்றம் முதலிய பெயர்ச் சொற்கள் ‘காத்து‘ முதலிய வினைச்சொற்களை
முறையே சென்று இயைதலால் முறைநிரனிறையாம்,
இது வடமொழியில் யாதஸங்க்யாலங்காரம் என்றும், தென்மொழியில் நிரனிறைபணி என்றும் அலங்கார சாஸ்த்ரிகள் கூறுவர்.
முதல் திருவந்தாதியிலுள்ள (54) “அரவமடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய், குரவை குடமுலை மற்குன்றம் –
கரவின்றி, விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டு கோத்தாடி, உண்ட்டெடுத்த செங்கணவன்“ என்ற பாசுரம் இத்தகையதே.
“திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவே!“ என்கிறபடியே,
நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனாயிருக்கு மிருப்பிலுங்காட்டில் பசுக்களை மேய்க்குந் தொழிலையே
பரமபோக்யமாகக் கொண்டவன், இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று வீரவிளையாட்டுச் செய்தவன்,
பேய்ச்சியின் முலையைச் சுவைத்துயிருண்டவன்,
பாலுக்கு அழுகிற பாவனையிலே அஸுராவிஷ்டமான சகடத்தை உதைத்துத் தள்ளினவன்,
கன்றாயும் விளாமரமாயும் இரண்டு அஸுரர்கள் வந்து நிற்க, முள்ளைக் கொண்டே முள்ளைக் களைவது போல
இரண்டையும் ஒருசேர முடித்தவன், திருப்பவளத்திலே ஸ்ரீபாஞச ஜந்யத்தைவைத்து ஊதி வெற்றியைத் தெரிவிப்பவன் –
என்று சில பகவத் கதைகளை அநுபவித்துப் பேசினாராயிற்று.
கண்ணபிரானையன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருந்த ருக்மிணிப்பிராட்டிக்கு சிசுபாலனோடு
விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஹித்தமாயிருந்த ஸமயத்தில் கண்ணபிரானது வரவை எதிர்கார்த்திருந்த
அப்பிராட்டியின் நெஞ்சு முறிந்துபோய் இனிநாம் உயிர்துறப்பதே நல்லபாயமென்று தீர்மானித்திருந்த க்ஷணத்தில்
கண்ணபிரான் பதறி ஓடிவந்த புறச்சோலையிலே நின்று தனது ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஊத,
அதனோசையானது அந்த ருக்மிணிப்பிராட்டியின் செவியிற் புகுந்து ஆனந்தத்தை விளைவிதத்தென்கிற கதையை
ஈற்றடிக்குப் பொருத்தமாக அநுஸந்திக்கலாம். அன்றி, பாரதப்போரில் செய்த சங்கொலியுங் கொள்ளலாம்.
பணிலம் –சங்கு.
—————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply