மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -1-20–திவ்யார்த்த தீபிகை —

ஸ்ரீ யபதியினது திருக் கல்யாண குணங்களை
இரண்டு ஆழ்வார்கள் உடன் கூட இருந்து அனுபவித்து
அவனது இன்னருளாலே பரம பக்தி தலை எடுத்து வளரப் பெற்று
கடலைக் கண்டவன் அதனுள் உண்டான முத்து மணி மாணிக்கம் முதலியவற்றை
தனித் தனியே கண்டு உகக்குமா போலே
ஸ்ரீ மகா லஷ்மி
ஸ்ரீ சுதர்சன ஆழ்வான்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத் ஆழ்வான்
ஸ்ரீ கௌஸ்துபம்
முதலியவற்றுக்கு இருப்பிடமாய்
திரு அவயவ சௌந்தர்யாதிகள் அலை எறிகிற
பெரும் புறக் கடல் ஆகிய எம்பெருமானை சாஷாத் கரித்து
இன்னது கண்டேன் இன்னது கண்டேன் என்று வகுத்து உரைத்து
அக்காட்சியினாலே தனக்கு உண்டான ஞான வைசத்யத்தினால்
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்களுக்கு
உரிய அர்த்த விசேஷங்களை
பன்னி உரைத்து அருளிச் செய்கிறார் –

கீழே இரண்டு ஆழ்வார்கள்
வையம் தகளி என்றும்
அன்பே தகளி என்றும்
இரண்டு திரு விளக்கு ஏற்றிக் காட்ட
இவர் கண்டேன் கண்டேன் என்கிறார் காணும்
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவர் இறே இவர் –

எம்பெருமானை உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார்
அவன் நாராயண சப்த வாச்யன் என்றார் பூதத்தார்
நாராயண சப்தத்தோடு ஸ்ரீ மத பதத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ் வாழ்வார்
என்று பூர்வர்கள் ரசமாக நிர்வஹிக்கும் படி
இது முதல் பாசுரத்துக்கு உள்ளீடான பொருளை உபஜீவித்து அருளிச் செய்யும்படி

———————————————————————————————————————————————————————————-

திரு குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு -ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து

ஓரா -நெஞ்சு என்னும் உட்கண்ணால் அனுசந்தித்து
ஓடித் திரியும் யோகிகளாய்
பதியே பரவித் தொழும் தொண்டராய் இருந்த முதல் ஆழ்வார்கள்
மூவரும் ஓன்று கூடினமையால் சீராரும் திருக் கோவலூர் அதனுள் -என்கிறார்
மழை முகில் போல்வான் தன்னை -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் -திருக் கோவலூர் ஆயனை
அதனால் இங்கும் காரார் கரு முகிலை -என்கிறார்
மழைக்காக திருக் கோவலூர் இடை கழியிலே ஒதுங்கின அந்த கரு முகிலை கண்டு களித்த பேய் ஆழ்வார் திருவடிகளே தஞ்சம்

—————————————————————————————————————————————————————————————-

முதலாழ்வார் மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் தேசஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில்,
இம்மூவரையும் ஓரிடத்திலே சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை வாழ்விக்க வேணுமென்கிற
குதூஹலங்கொண்ட எம்பெருமானுடைய திருவுள்ளம் நிறைவேறுவதற்காக, ஒருநாள் ஸூர்யன் அஸ்தமித்தபின்பு
பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு ம்ருகண்டு மஹர்ஷியின் திருமாளிகையிற்சென்று
அதன் இடைகழியிற் பள்ளிகொண்டிருக்கையில் பிறகு பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர,
சாஸ்திரமுறைப்படி ஒருவரையொருவர் வந்தனை வழிபாடுகள் செய்தவுடன்
‘இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்கார்ந்திருக்கலாம்‘ என்று பொய்கையார் விண்ணப்பஞ்செய்ய,
அவ்விதமே இருவரும் அங்கு உட்கார்ந்திருக்கையில், பேயாழ்வாரும் அவ்விடத்திற்கே வந்துசேர,
ஒருவரையொருவர் தண்டன்ஸமர்ப்பித்து உபசரித்துக்கொண்டபின்
‘இவ்விடம் ஒருவர்படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்‘ என்று பொய்கை பூதத்தாரிருவரும் சொல்ல,
அவ்விதமே மூவரும் அவ்விடத்திலே நின்றுகொண்டு பரஸ்வரம் பகவத் குணங்களை சொல்லுதலும் கேட்டலுஞ் செய்து களித்திருக்கையில்-
உலகளந்த மூர்த்தி அவர்கள் திறத்திலே திருவருள் செய்யும் பொருட்டுப் பெருத்த இருளையும் கனத்தமழையையு முண்டாக்கி,
பெரிய வடிவத்தோடு அவர்களிடையே சென்றுநின்று பொறுக்க முடியாத மிக்க நெருக்கத்தைச் செய்தருள,
அதன்மேல் இவர்கள் ‘இதுவரையிலும் இல்லாத நெருக்கம் இப்போது உண்டானதற்குக் காரணமென்கொல்?
பிறரெவரேனும் இங்கு வந்து புகுந்தவருண்டோ?‘ என்று சங்கிக்கையில் –
பொய்கையாழ்வார் பூமியாகியதகழியில் கடல்நீரையே நெய்யாகக்கொண்ட ஸூரியனை விளக்காக ஏற்ற,
பூதத்தாழ்வார் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங்கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டி னொளியாலும் இருளற்றதனால் இப்பேய்யாழ்வார் எம்பெருமானைத் தாம் ஸேவிக்கப் பெற்றமைக்கு
இப்பாசுரத்தாலே வெளியிடுகிறார்.

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று–1-

பதவுரை

இன்று–எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால்–கடல் வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு–பெரிய பிராட்டியாரை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்,
பொன் மேனி–அழகிய திருமேனியையும்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
திகழும்–விளங்குகின்ற
அருக்கன்–ஸூர்யன்போன்று
அணி–உஜ்வலமான
நிறமும்–ப்ரகாசத்தையும்
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்
செரு–யுத்த பூமியிலே
கிளரும்–பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி–அழகிய திருவாழியையும்
கை–திருக்கையில்
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்
புரி சங்கம்–வலம்புரிச்சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)
கண்டேன்–ஸேவிக்கப்பெற்றேன்.

எம்பெருமானைக் கண்டேன்‘ என்று சொல்லிவிட்டால் அவனிடத்திலுள்ளவையெல்லாம் கண்டமை சொல்லப்பட்டதாக
ஆகுமாயிலும், தம்முடைய மகிழ்ச்சியின் மிகுதியினால் ‘அதுகண்டேன் இதுகண்டேன்‘ என்று சிலவற்றைப் பிரித்துப் பேசுகின்றார்.

புருஷகாரபூதையான பிராட்டியைக் கண்டேன், அவளுடைய சேர்க்கையினாலே நிறம்பெற்ற திருமேனியைக் கண்டேன்,
மரதக கிரியிலே உதித்து ஒளிவிட்டுக்கிளருகிற பாலஸூர்யனைப்போலே விளங்காநிற்பதாய் இருவருடைய ஒளியும்
தன்னிலே கலசி விளங்காநின்றுள்ளதான அழகியநிறத்தையும் கண்டேன்,
இந்தச் சேர்த்திக்கு என்னதீங்கு வருகிறதோ வென்று அஸ்தாநே பயசங்கைப்பண்ணி யுத்தஸந்நத்தனாய்
கண்டார் மேலே சீறிவிழாநின்றவனாய், ச்யாமளமான அவன்வடிவுக்குப் பரபாகமாம்படி
பொற்கென்ற நிறத்தையுடையனான திருவாழியாழ்வாணையுங் கண்டேன் கைத்தலத்திலிருந்துகொண்டே
பெருமுழக்கத்தாலே சத்துருக்களை உயிர்மாளப்பண்ணும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானையும் கண்டேன் என்றாராயிற்று.

நூல் இயற்றுவார் மங்கல மொழி முதலிலே வகுத்துக் கூறுவராதலால் ‘திரு‘ என்று தொடங்கினர்.
பொன்மேனிகண்டேன் –“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்“ என்கிற சுருதியின்படி பொன்னின் நிறம் போன்ற நிறமுடையளான
பிராட்டியின் நித்யஸம் ச்லேஷத்தாலே அப்படியே பொன்னிறமாகப் பெற்றதாம் எம்பெருமானுடைய கரிய திருமேனியும்.
அன்றியே, பொன்போல் விரும்பத்தக்க மேனி என்றுமாம்.
“உருவுகரிதாய் முகம் செய்தாய் உதய பருப்பதத்தின் மேல், விரயுங்கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே“ என்ற
நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.

“புரிசங்கம் கை கண்டேன்“ என்றும் “புரிசங்கு அம் கை கண்டேன்“ என்றும் பிரிக்கலாம்.
புரி என்றது வலம்புரி என்றபடி.
அன்றியே ஸ்புரிக்கின்ற – விளங்குகின்ற சங்கமென்றுமாம்.
புரி புரிந்துபார்க்கிற (எங்கே யெங்கேயென்று சுற்றுமுற்றும் சீறிப்பார்க்கிற) சங்கு என்றுமாம்.
சேஷத்வத்தாலே எப்போதும் வணக்கத்தையுடைய சங்கு என்றுமாம்.

ஈற்றடியில் எம்பெருமானை ஆழிவண்ணன் என்றது மிகப் பொருந்தும்,
பிராட்டி, சங்கு, கௌஸ்துபமணி முதலியவை கடலில் தோன்றினவாதலால்,
அப்படிப்பட்ட வஸ்துக்களை இன்று இக்கடலில் காணப்பெற்றே னென்கிறார் போலும்.

—————————————————————————————————————————————————–

எம்பெருமானை விசேஷணங்களுடனே கண்டேனென்றார் கீழ்ப்பாட்டில்,
அவனைக் கண்டபோதே விரோதிவர்க்கமெல்லாம் வேரற ஒழிந்தன வென்கிறார் இப்பாட்டில்.

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திரு மாலே உன்னை
மருக் கண்டு கொண்டு என்மனம் –2-

பதவுரை

பொன் தோய்–பொன் மயமான பூஷணங்கள் சேரப் பெற்றதும்
வரை–மலை போன்றதுமான
மார்பில்–திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூந்துழாய்–திருத்துழாயை
அன்று–கடல்கடைந்த வக்காலத்தில்
திரு–பெரியபிராட்டியார்
கண்டு கொண்ட–அநுபவிக்கும்படியாக பெற்ற
திருமாலே–லக்ஷமீநாதனே!
என் மனம்–அடியேனுடைய மனமானது
உன்னை–உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு–பொருத்தப்பெற்றதனால்
யான் –அடியேன்
இன்றே–இன்று
கழல்–உனது திருவடிகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ் பிறப்பும்–ஜந்ம ப்ரம்பரைகளை யெல்லாம்
அறுத்தேன்–(இனிமேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்

பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து ஏறும்படியான விலக்ஷணமான திருமார்புபடைத்த திருமாலே!
எனது மனமானது உன்னிடத்திலே பொருந்தி ஸேவிக்கப் பெற்றதனால், இதுவரையில் பாழே கழிந்த பல பிறவிகளுக்குள்ளே
இன்றே உனது திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவனானேன், உன்னுடைய அநுபவத்திற்கு விரோதியாயிருந்த
ஐந்ம பரம்பரைகளையும் இன்றோடு அறுத்துவிட்டேன்,
(அதாவது –இனிமேல் நமக்கு நித்யாநந்தமே யொழியப் பிறவியில்லையென்று நிச்சயித்துவிட்டேன் என்கை.)

கீழ்ப்பாட்டில் ‘பொன்மேனிகண்டேன்‘ என்று திருமேனியிலே வாய் வைத்தார், சிறுகுழந்தைகள் தாயின் முலையிலே வாய்
வைப்பதுபோல சேஷபூதர் இழியுந்துறை திருவடியே யாகையாலே முந்துறமுன்னம் திருமேனியில் வாய்வைத்தோமோ
யென்று அநுதபித்தவர்போல இதில் “இன்றே கழல் கண்டேன்“ என்கிறார் என்னலாம்.

பொன்தோய்வரை மார்பில் – ‘பொன்‘ என்று பிராட்டியைச் சொல்லிற்றாப், ‘பிராட்டி வந்து சேர்ந்த வரைமார்பிலே‘ என்று
பொருள் கொள்ளலாமாயிலும், இந்த வாக்கியத்திலேயே திருக்கண்டுகொண்ட“ எனவருதலால்,
‘பொன் தோய்‘ என்பதற்குப் பொன்மயமான ஆபரணங்கள் தோயப்பெற்ற எனப் பொருள்கொள்வதே பொருந்தும்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “பொன்தோய் இத்யாதி“ என்று ப்ரதீகமெடுத்து –
“பிராட்டி தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்புடைத்த ச்ரிய பதியே!“ என்று பொருளருளிச் செய்திருப்பது
‘பொன்தோய்‘ என்றதன் பொருளன்று, பொன்தோய்வரை மார்பில் பூத்துழாய் திருக்கண்டு கொண்ட திருமாலே“
என்றவளவுக்கு அருளிச்செய்த தாத்பர்யமாம் அது.
திருத்துழாயணிந்த திருமார்வையுடையனாய்த் திருப்பாற்கடல் கடைந்தபோது பிராட்டியானவன் அத்திருமார்பிலே
வந்து சேர்ந்து அத்திருத்துழாயை அநுபவிக்கப்பெற்றாளென்ற விதனால், பிராட்டிதானே ஆசைப்பட்டுவந்து
மேல் விழும்படியான போக்ய்யை யுடையவன் என்பது பெறப்படும்.
கடல் கடைந்தகாலத்துத் திருமார்பிலே திருவாபரணங்களணிந்து கொண்டிருந்தமைபற்றிப் பொன்தோய் என்று
திருமார்புக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது. மார்பிலிருந்த பூத்துழாயைத் திருவானவள் கண்டு கொண்டாளென்றால்
அவள் மார்பிலே வந்து சேர்ந்தாளென்றதொமென்கை.

மருக் கண்டு கொண்டு – மருவி கண்டுகொண்டு என்னுமிரண்டு சொற்கள் ஒரு முழுச்சொல்லாயிற்றென்ப.

———————————————————————————————————————————————————-

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானளவிலே பொருந்தினபடியைப் பேசினார்,
இப்பாட்டில், அப்பெருமான்தானே தம்முடைய மனத்தில்வந்து பொருந்தினமையைப் பேசுகிறார்.
இப்பாட்டில், மனத்துள்ளான் என்பது வினைமுற்றாக நிற்கக்கடவது.
மாகடல் நீரிலும் மலராள் தனத்திலுமிருந்தவன் அவ்விடங்களை விட்டிட்டு என்மனத்திலே வந்து புகுந்தானென்கிறார்.

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் -சினத்துச்
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓதம் வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3-

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்–பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான்–பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன்–குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர்–சத்துருக்கனானவர்கள்
உக–அழியும்படி
சினத்து–சீற்றத்தினாலே
செற்று–த்வம்ஸம்பண்ணி
உகந்த–மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம்–தேங்கின கடல் போன்ற வடிவை யுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து–தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான்–என்மனத்திலே வந்து சேர்ந்து விட்டான்

ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் திருப்பாற்கடலிலே கிடந்து அவ்விடம்போலே பெரியபிராட்டியார் திருமுலைத்தடத்தையும்
ஒரு ஸ்தானமாகவுடையனாய், அவள் மேல்விழுந்து அநுபவிக்கும்படியாகக் குளிர்ந்த திருத்துழாயாலே அலங்க்ருதமான
திருமார்பையுடையனாய், ஆச்ரிதர்களுக்கு விரோதிகளாயுள்ளவர்கள் உருவழிந்து ஒழியும்படியாகச் சீறி அவர்களைத் தொலைத்து
‘ஆச்ரிதவிரோதிகள் தொலையப் பெற்றோம்‘ என்று திருவுள்ளமுவந்தவனாய்,
அந்த உவப்பினால் புகர்பெற்று விளங்குகின்ற வடிவையுடையனாய், அநுபவித்தே தீறவேண்டும்படியான
ஸம்ஸாரநரகத்தைக் கடப்பதற்கு அருமருந்தானவன் என்னுடைய நெஞ்சிலேயுள்ளான் என்றாராயிற்று.

மற்ற விசேஷணங்களைப்போலே மனத்துள்ளான் என்பதையும் ஒரு விசேஷணமாக்கி,
இப்படிப்பட்ட எம்பெருமான் வருநரகம் தீர்க்கும் மருந்தாயிருப்பன் என்று முடிக்கவுங் கூடுமாயினும்
மனத்துள்ளானென முடிப்பதே நன்று பொருந்தும்.

செருநர் – பகைவர். ‘சினத்து‘ என்பதை செருநர்க்கு விசேஷணமாக்கவுமாம், கோபத்தையுடைய பகைவர் என்றவாறு.

———————————————————————————————————————————————————————

இடைவிடாது அநாதிகாலமாக நம்முடைய ரக்ஷணத்தொழிலிலேயே ஊன்றியிருக்கிற எம்பெருமானது திருவடிகளே
உபாயமும் உபாயமுமாம் என்கிறது இப்பாட்டு.
அன்று உலகம் தாயோடைய அடிதானே மருந்தும் பொருளும் அமுதமும் என்று இயைக்க.

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்திய
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி –4-

பதவுரை

திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண்–செந்தாமரை போன்ற திருகண்களையுடைய
மால்–ஸர்வேச்வரனாயும்
ஆங்கே–உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய–நிலை நின்று பொருந்தினவனாயும்
உலகம்–உலகங்களை
உண்டு–பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று–முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன்–மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே–திருவடிகளே
மருந்தும்–மருந்துபோலே ஸம்ஸார வியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும்–பணம் போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும்–அமிருதம்போலே போக்யமாயுமிருக்கின்றன.

மருந்து என்றது – உலகத்தில் ஔஷதமானது வியாதிகளைப் போக்குவதுபோல எம்பெருமானுடைய திருவடிகளும்
நம்முடைய விரோதிகளைப் போக்கவல்லது என்றபடி.
பொருள் – என்றது உலகத்தில் பணமானது பலபல பண்டங்களை வாங்குவதற்கு ஸாதனமாகவதுபோல,
எம்பெருமானுடைய திருவடிகளும் நமக்கு இஷ்டங்களைப் பெறுக்கவல்ல உபாயம் என்றபடி.
அமுதம் என்றது – இப்படி இஷ்டங்களைப் பெறுவிப்பதற்கும் அநிஷ்டங்களைத் தொலைப்பதற்கும் உபாயமாகநிற்கும்
மாத்திரயேல்லாமல் ஸ்வயம் போக்யமாயும், ஆனதுபற்றியே ப்ராப்யமாயுமிருக்கு மென்றபடி.

திருந்திய செங்கண்மால் – நாம் திருந்துவதற்குப் பாங்கான திருக்கண்களை யுடையவன் என்கை.
இவனே பரமபுருஷனென்று நாம் நிஸ்ஸம்சயமாக அறுதியிடலாம்படி, தன்னுடைய ஸர்வேச்வரத்வத்தைக்
கோட்சொல்லித் தருகின்ற திருக்கண்கள் படைத்தவன்.
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய் கண்கள்“.

‘ஆங்கே பொருந்திய‘ என்றது –எப்போதும் அடியவர்களைக் காத்தருள்வதாகிற காரியமொன்றிலேயே
எம்பெருமான் பொருந்தி யிருக்கின்றமையைச் சொன்னபடி.
இதனையே விவரிக்கிறார் உலகமுண்டுமிழ்ந்து நீரேற்று மூவடியா லன்றுலகந் தாயோன் என்று.
பிரளயம் வந்தவாறே அதில் உலகங்களெல்லாம் அழியாதபடி அவற்றைத் திருவயிற்றிலேவைத்து நோக்கியும்,
பிறகு வெளிப்படுத்தியும், மஹாபலி போல்வாருடைய அபிமானத்தில் நின்றும் மீட்டுத் தன்னடிக் கீழ்ப்படுத்தியும்
இவை போல்வன பல காரியங்களினால் தன்னுடைய ரக்ஷகத்வத்தைப் பிரகாசப்படுத்திக் கொண்டேயிருக்கிற
எம்பெருமானுடைய திருவடிகளே உபாயோபேயங்க ளென்றதாயிற்று.

திருந்திய என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்.
“இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக் கீழாகத்
தன்னைத் திருத்திக் கொண்டிருக்கும் ஸ்ர்வேச்வரன்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செயலின் அழகு காண்மின்.

————————————————————————————————————————————————————————

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.
உலகளந்த வரலாறு பிரஸ்துதமானால் அதிலே உள்குழைந்திருப்பர்கள். கீழ் “அன்றுலகந்தாயோன்“ என்று
உலகளந்த செய்தி ப்ரஸ்துமாகையாலே அதிலே தோற்று அவனழகை யநுபவிக்கிறாரிதில்.

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆராழி கொண்டாற்கு அழகு –5-

பதவுரை

அன்று உலகம் தாயோன்–முன்பு உலகங்களைத் தாலியளந்த பெருமானுடைய
அடி வண்ணம்–திருவடிகளின் நிறம்
தாமரை–தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம்–திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம்–பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம்–கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன்–ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும்–(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே–அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு–அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.

மஹாபலி தாரை வார்த்துத் தத்தம் பண்ணினவாறே உலகங்களை யளந்துகொண்ட பெருமானுடைய திருவடிகளின்
நிறமானது தாமரைபோலே சிவந்திராநின்றது, திருமேனியின் நிறா கடல் நீர்போலே இருண்டு குளிர்ந்திரா நின்றது,
திருவபிஷேகமோ “கதிராயிர மிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியன்“ என்கிறபடியே ஆதித்யன்போலே யிராநின்றது,
தேஜஸ்ஸுக்கோ ஒப்பேஇல்லை, ஒரு கால் ஒப்புச்சொல்ல வேணுமானால் அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸையே
ஒப்புச்சொல்ல வமையும். கையுந் திருவாழியுமான எம்பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாங்கண்டீர்.

————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய திருமேனி யழகையும் சில திவ்ய சேஷ்டிதங்களையுஞ் சேர்த்து அநுபவிக்கிறார்.

அழகன்றே யாழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் –6-

பதவுரை

ஆழியாற்கு–திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம்–கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே–மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல்–மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே–அழகன்றோ
அங்கை–உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு–மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான்–பிரமன்
கால் கழுவ–திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர்–கங்காதீர்த்தத்தை
கான்ற–வெளிப்படுத்திய
கழல்–அத்திருவடி
அழகு அன்றே–அழகன்றோ

ஆழியாற்கு ஆழிநீர்வண்ணம் அழகன்றே –எம்பெருமானுக்குப் பலதிருநாமங்களுண்டு,
அவற்றுள் ‘கடல் வண்ணன்‘ என்பதும் ஒன்று, இதனை யறிந்தவர்களெல்லாரும் எம்பெருமானைக் கடல் வண்ணனென்று
மாத்திரம் வாயாற் சொல்லி விடுகிறார்களேயன்றி, இதனால் எம்பெருமானுடைய அழகிய
திருநிறம் சொல்லப்படுகின்றதென்று ரஸித்து அநுபவிப்பாரில்லையே!, எத்தனையோ நாமங்களை வாயாற் சொல்லிவிடுதல்போலக்
கடல்வண்ண னென்பதையும் வெறுமனே சொல்லி விடுகிறார்களே யன்றி
இஃது அழகுக்குடலான சிறந்த திருநாம்மென்று உள்குழைந்து நிற்பாரில்லையே!,
(இவ்வழகிய திருநிறத்துக்கு மேலே சில அலங்காரங்களும் வேணுமோ? ஸ்வயமே அழகிய வடிவன்றோ?) என்பதாக விரித்துக்கொள்க.

அழகன்றே அண்டங்கடத்தல் – எம்பெருமான் ஓங்கி உலகளந்த வரலாற்றைப் பேசுமவர்கள்
‘ஓஓ! வெகு ஸாமர்த்தியமாக அளந்தான், வருத்தம் சிறிதுமின்றி அநாயாஸமாகக் காரியஞ் செய்தான்‘ என்று
இந்த சக்தி விசேஷத்தைச் சொல்லிப் புகழ்கின்றனரேயன்றி,
‘வல்லார் ஆடினாற்போலே வெகு அழகாகச் செய்த காரியமன்றோ உலகளந்த செயல்‘ என்று
அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை.

அங்கே நீரேற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவக் கங்கைநீர் கான்ற கழல் அழகன்றே – உலகளந்த காலத்தில்
ஸத்யலோகத் தளவுஞ் சென்ற திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்தத்தினால் விளக்க,
அத்தீருவடியினின்று கங்கை பெருகிற்றென்றும் அதனைச் சங்கரன் சடையினில் தாங்கிப்
பரிசுத்தியடைந்தானென்றும் உலகர் சொல்லுகையாலே,
‘எம்பெருமானுடைய திருவடியானது பரமபரிசுத்தையான கங்கைக்குப்பிறப்பிடமாகையாலே மிகப் பரிசுத்தமானது‘ என்று
இத்தனை சொல்லுகிறார்களேயல்லது, ‘செவ்விய திருவடியினின்று வெண்ணிறமான கங்கைநீர்.
பெருகப்பெற்ற பரபாக சோபையாகிற அழகிலே ஈடுபட்டுப் பேசுவாரில்லையே! என்கை.
எம்பெருமானுடையவை யெல்லாம் மிகவுமழகியவையென்றே அநுஸந்திக்க வேணுமென்பது கருத்து.

——————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய அழகிலே தோற்ற ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கி
‘அவன் திருவடிகளிலே நாம் அடிமைசெய்து வாழும்படி அநுகூலிக்கப் பாராய்‘ என்கிறார்.

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் -எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம் –7

பதவுரை

நெஞ்சே-ஓ மனமே!
கார் கடல் நீர்–கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை–கரையையுடைத்தான
பொழில்–பூமியை
அளந்த–அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி–கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன்–ஐச்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை–அழகை எல்லைகண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை–எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை–(யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
நாம் தொழுதும்–நாம் வணங்குவோம்,
வா–நீயும் உடன் படுவாயாக.

கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவனும், தனது பெருமேன்மைக் குறுப்பாகப் பெரிய திருவடியை
வாஹநமாகக் கொண்டிருப்பவனும், உபய விபூதி நாயகத்வமாகிற ஐச்வரியம் மிக்கவனும்,
தன்னழகை இவ்வளவென்று பரிச்சேதித்து நெஞ்சால் நினைத்துப் பார்க்கவும் முடியாதபடி அழகு விஞ்சியிருப்பனும்,
எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச் சொல்ல வொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும்
அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவனும், எப்படிப்பட்டவர்க்கும் ஸ்வயத்நத்தால் கிட்டுகைக்கு
அருமையா யிருப்பவனுமான பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே! என்றாராயிற்று.

“எழிலளந்தும் எண்ணற்கியானை“ என்றும்
“எழிலளந்தங்கு எண்ணற்கரியானை“ என்றும் பாடபேதங்கள். (அங்கு –அசைச்சொல்).

————————————————————————————————————————————–

இந்திரியங்களெல்லாவற்றாலும் எம்பெருமானை அநுபவிக்கவேணு மென்கிறார்.

நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அம்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் –8-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாராயணா என்று பல நாமம் சொல்லி–நாராயணன் முதலாகவுள்ள பல திருநாமங்களைச் சொல்லி
அம் கையால்–அழகிய கையினாலே
நாம் தொழுதும்–நாம் தொழுவோம்
மருவி வா–இதற்கு நீயும் உடன்பட்டுவர
மண் உலகம்–பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த–ஒருகால் உள்ளே அடக்கிவைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அளையும் தண் துழாய்–வண்டுகள் படித்து ஒலிசெய்யபெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனுமான
கண்ணனையே–கண்ணபிரானையே
நம் கண்–நமது கண்கள்
காண்க–கண்டு களித்திடுக

நாராயணாதி ஸஹஸ்ர நாமங்களைச் சொல்லுவதிலே வாய் ஊன்றியிருக்கவேணும்,
கைகள் அஞ்சலி பண்ணுவதிலே அவகாஹித்திருக்கவேணும்,
கண்கள் அப்பெருமானையே ஸேவீத்துக் கொண்டிருக்கவேணும்.
மனத்தின் துணையின்றி ஒரு இந்திரியமும் ஒரு காரியமும் செய்யமாட்டாதாகையாலே
இவையித்தனைக்கும் நெஞ்சு உடன்பட்டிருக்கவேணும் என்றதாயிற்று.

“வண்டறையுந் தண்டுழாய்க்கண்ணனை“ என்றதனால் –
தோளிணைமேலும் நன் மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
மதுவைப்பருகி ரீங்காரம் செய்கின்ற வண்டுகளின் ஒலியே செவிக்கு விஷயமாகவேணுமென்பதும்
அந்த திருத்துழாயின் பரிமளமே மூக்குக்கு விஷயமாகவேணு மென்பதும் தொனிக்குமென்றுணர்க.
“ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும்“ என்ற முகுந்தமாலை ச்லோகம் இங்கு ஸமரக்கத்தகும்.

———————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் “கண்ணனையே காண்க நங்கள்“ என்று விரும்பிய ஆழ்வாருடைய கண்ணுக்கு
எம்பெருமான் ஸேவை ஸாதிக்க, ஸேவித்து அவனுடைய வடிவழகைப் பேசியது பவிக்கிறாரிதில்.
கார்காலத்து மேகம்போலவும் கருங்கடல் நீர்போலவும் நீலமணிபோலவும் விளங்குகின்ற நிறமுடையனான
எம்பெருமானுக்குத் திருக்கண்கள் திருக்கைத்தலம் திருவடி எல்லாம் தாமரையே என்னலாம்படியிருக்கின்றன வென்கிறார்.

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு –9-

பதவுரை

கரு மா முகில் வண்ணன்–கரிய பெரிய மேகம் போன்ற வடிவை யுடையவனும்
கார் கடல் நீர் வண்ணன்–கரியகடல் நீரின் நிறம் போன்ற நிறமுடையவனும்
திரு மா மணி வண்ணன்–அழகிய நீலமணி போன்றவனுமான எம்பெருமானுடைய
தேசு–அழகை
எண்ணில்–ஆராய்ந்து நோக்குமளவில்,
கண்ணும்–திருக்கண்ணும்
கமலம்–தாமரைப் பூப் போன்றவை
கைத் தலமும்–திருக் கைத் தலங்களும்
கமலமே–அத் தாமரைப் பூப் போன்றவையே
மண் அளந்த பாதமும்–உலகளந்த திருவடிகளும்
அவையே–அத்தாமரைப் பூப் போன்றவையே.

கண்ணும் கைத்தமும் மண்ணளந்த பாதமும் கமலமே“ என்று ஏக வாக்கியமாகச் சொல்லியிருக்கலாமே,
அங்ஙனன்றி “கண்ணுங்கமலம் கமலமே கைத்தலமும், மண்ணளந்த பாதமும் மற்றவையே“ என்று
மூன்று வாக்கியமாகச் சொல்லுவானேன்?
மூன்று அவயங்களுக்கும் தாமரையொன்றே உபமாநமாகச் சொல்லப்படுகையாலே
ஒரேவாக்கியமாக அமைந்தால் நன்றாயிருக்குமே என்று சிலர் நினைப்பர்,
ஆநந்தமாக அநுபவம் செல்லுமளவில் சொல்லிலக்கணம் சிக்ஷிக்கப் புகுமவர்கள் அரஸிகர்களாவர் வடமொழியில் ஒரு ச்லோகமுண்டு –
(அதாவது – அநுபவ பரீவாஹமாக ஆநந்தம் தலைமண்டை கொண்டு பேசும்போது பொருளின்பத்தில் ஆழ்ந்து
அகங்குழைய வேண்டியிருக்க அதில் கரையாதே சொல்லைப் பிடித்துக்கொண்டு மன்றாடுமவர்கள் –
சிருங்கார வேளி ஸமயத்தில் ‘இந்தப் புடவை என்னவிலை? எவ்வூரில் நெய்வித்தது? என்ன எடையிருக்கும்? என்று
உப்புப் புளிப்பில்லாத விசாரங்கள் பண்ணுவாரைப்போலே அரஸிகர்களாவர் என்றபடி.

“தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்னதாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாரும்மஃதே“ என்றாற்போலே
ஒவ்வொரு அவயவத்திலும் வேறொன்றறியாதே மருண்டு நிற்குமவர்களுடைய பாசுரங்களை நாமோ சிக்ஷிப்போம்?
திருக்கண்ணழகிலே ஈடுபட்டுக் ‘கண்ணுங் கமலம்‘ என்றுபேசி நெடும் போது கழித்தபின்
திருக்கையழகிலே கண்வைத்துக் ‘கமலமே கைத்தலமும்‘ என்றார்.
அதற்குப்பிறகு நெடும்போது கழித்துத் திருவடியழகிலே தோற்று ‘மண்ணளந்த பாதமும் மற்றவையே‘ என்றார்
ஒருபோதும் அழகு குன்றாமலிக்கிற எம்பெருமானுடைய திவ்யாவயவத்திற்கு ஒருநொடிப்பொழுதில்
அழகு மாறும்படியான தாமரையை ஒப்புச்சொல்லத்தகுமோ? தகாது தகாது,
ஆனாலும் ஒப்பற்ற அவயவத்திற்கு அத்தாமரையல்லது வேறொன்றும் ஒப்பாக வாய்திறக்கவும் போராமையாலே
இந்த அஸ்வாரஸ்யந் தோற்ற “பாதமும் மற்றவையே“ என்றார்.
“கைவண்ணந்தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்ற திருநெடுந்தாண்டகமும் காண்க.

என்றருளினர் ஸுந்தரபாஹு ஸ்தவத்திலும் ஆழ்வான்.

திருமாமணி வண்ணனுடைய தேசு – தேஜஸ்ஸானது, எண் இல் – எண்ணமுடியாதது, –
இப்படிப்பட்டதென்று சிந்திக்கவும் முடியாத்து என்று பொருள் கூறுதலுமாம்.
‘தேஜஸ்‘ என்னும் வடசொல் தேசு எனத்திரிந்தது.

———————————————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற அழகை எல்லாரும் பேசி விடலாகுமோ?
பலவகை நன்மைகளைப் பெற்ற மஹான்களே யன்றோ அவ்வழகைப் பேசவுரியார் என்று சிலர் நினைக்க,
அப்பெருமானுடைய திருநாமத்தை ஸங்கீர்த்தனம் பண்ண நினைத்த மாத்திரத்திலே
எல்லா வகை நன்மைகளும் தன்னடையே மேல் விழுந்து வந்து சேருங்கிடீர் என்கிறார்.

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு -10-

பதவுரை

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்–வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத–திருநாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில்–சொன்ன மாத்திரத்தில்
தேசும்–தேஜஸ்ஸும்
திறலும்–பராக்ரமமும்
திருவும்–செல்வமும்
உருவமும்–அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும்–குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும்–மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும்–தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.

கண்டவர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படியான தேஜஸ்ஸும், எதிரிகளை வாய்மாளப் பண்ணவல்ல மிடுக்கும்,
கண்டார் நெஞ்சையுங் கண்ணையும் கவரும்படியான வடிவழகும், குற்றமற்ற நற்குடிப்பிறப்பும்,
மற்றும் நன்மையாகச் சொல்லப்படுமவைகளும் தானேவந்து சேரும்,
யாரிடத்திலென்னில்,
சங்குதங்கு தடங்கையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கற்கவேணுமென்பாரிடத்து.

இழிகுலத்திற் பிறந்திருந்தாலும் பகவத் பக்திவை பவத்தாலே அவ்விழிகுலம் நீங்கித் தொழுகுலம்
உண்டாகு மென்பது இரண்டாமடியில் விளங்கும்.
“பண்டைக் குலத்தைத் தவிர்த்து“ என்றார் பெரியாழ்வாரும்.

———————————————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணினால் எல்லாவகை நன்மைகளும் வந்துகூடு மென்றார் கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடியே உணருகையாகிற நன்மையும் உண்டாகுமோ என்று கேள்வி பிறக்க,
எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை உணர்வது மாத்திரம் அருமையான தென்கிறார் இதில்.

நன்கோதும் நால் வேதத்துள்ளான் நறவு இரியும்
பொங்கோதம் அருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற்கடலான் நுண் அறிவினான் –11-

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்–நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும்–தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல்–கடல் போலவும் அருவி நீர் போலவுமுள்ளதான
வண்ணன்–திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான்–சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான்–சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான்–ஓதி யுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால்
பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான்–(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

நால் வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டவனாய், ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய
விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையனாய், திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்ந்தருளுமவனாய்,
மநு முதலிய மஹர்ஷிகளினால் வேதங்களுக்கு உபப்ரும்ஹண (வியாக்கியான) மாக இயற்றப்பட்ட
ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களினால் பிரதி பாதிக்கப்பட்டவனான எம்பெருமான்,
நுண்ணறிவினான் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி.

“நுண்ணறிவினான்“ என்பதற்கு – ஸூக்ஷ்மமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடியவன்,
(நம் போன்றவர்களுடைய ஸ்தூலமான ஜ்ஞாநத்தாலே அறியக்கூடாதவன்) என்றும் பொருள் கொள்ளலாம்.
இரண்டாமடியில், ஓதம் + அருவி, ‘ஓதமருவி‘ என்றாக வேண்டுவது ‘ஓதருவி‘ என்றானது தொகுத்தல்.

—————————————————————————————————————————————————–

எம்பெருமான் ஒருவராலும் அறியக்கூடாதவன் என்றால், ‘ஆகாசத்தாமரை, மலடிபிள்ளை முதலானவை போல்
பரப்ரஹ்மமும் அடியோடு இல்லாத வஸ்து‘ என்றதாய்விடுமே என்று சிலர் சங்கிக்க,
அப்படி அடியோடு அறியக்கூடாதவனால்லன் எம்பெருமான்,
நாம் சொல்லுகிற வழியாலே அறிவார்க்கு அறியலாம் என்கிறாரிதில்.

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி -மறை என்றும்
நன்கோதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி –12

பதவுரை

மறை–வேதத்தை
என்றும்–இடைவிடாது
நன்கு ஓதி–நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும்–ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி–தாழ்ப்பாளையிட்டு
ஐம்புலனும்–பஞ்சேந்திரியங்களையும்
தம்மில் செறிவு என்னும்–(வெளிச் சொல்லாமல்) உள்ளே அடக்கி வைப்பதாகிற.
திண் கதவம் செம்மி–திடமான கதவையடைத்து
நன்கு உணர்வார்–நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன்படி–அழகிய கடலின் நிறம்போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள்தோறும்–தினந்தோறும்
காண்பர்–ஸாக்ஷித்தகரிப்பான்

வேதங்களை ஓதியுணர்ந்து அவற்றின் பொருள்களையும் நன்குணர்ந்து, வெளிவிஷயங்களில் இந்திரியங்களைப்
போகவொட்டாமல் தடுத்து அவனைக் காணப்புகுந்தால் காணலாம்.

நல்ல ஞானம் பெற்றவர்களுடைய இந்திரியங்கள் பட்டிமேயமாட்டாவாகையால் அறிவைத் தாழ்ப்பாளாக உருவகப்படுத்தினர்.
பசுமை + ஓதம் – பைங்கோதம். நன்னூலில் பண்புப் பகுதியின் விகாரங்களை யுணர்த்துகின்ற “ஈறுபோதல்“ என்னுஞ் சூத்திரத்தில்
“இனமிகல் இனையவும் பண்பிற்கியல்பே“ என்றது நோக்குக. வேறுவழிகளு முண்டு.
‘வை இங்கு ஓதம்‘ பைங் கோதம் ‘இங்கு‘ என்றது – தங்குகின்ற என்றபடி.
பசுமைதங்கிய ஓதமென்கை. சந்தியில் இகரம் கெட்டது.

————————————————————————————————————————————————————–

“நன்கோதி நன்குணர்வார் –நாடோறும் பைங்கோத வண்ணன் படிகாண்பர்“ என்றாரே கீழ்ப்பாட்டில்.
எம்பெருமான் படியை இன்ன விதமாகக் காண்பரென்பதைக் காட்டவேண்டி இப்பாசுரருமளிச் செய்கிறார்.
இறந்த காலங்களில் நடந்த எம்பெருமானுடைய சரிதங்களெல்லாம் இன்று கண்ணெதிரே தோற்றுவதாக
ஸாக்ஷாத்கரிப்பர்கள் என்று காட்டுகிறாரிப்பாட்டால்.

படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாயம் மூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு –13-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று–பூமி தானம் வாங்கிக் கொண்டு
தாமரை படி வட்டம்–தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப–திருவடியினால் அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு–பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,
நீண்ட முடி வட்டம்–நீண்ட திருவபிஷேகமானது
ஆகாயம் ஊடு அறுத்து–மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே–அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப் பெற்று எம்பெருமான் பெரிய திருவுருவாகி உலகங்களை அளக்கும் போது
அவனது திருமுடியானது மேலுலகங்களை யெல்லாம் அதிக்ரமித்துச் சென்று அண்டங்களுக்கப்பால் விளங்கிற்று என்கிறார்.
இவ்விதமாகக் காண்பர்கள் என்றவாறு.

வட்டம் – மண்டலம், படிவட்டம் –பூமண்டலம்.
எம்பெருமானுடைய ஸுகுமாரமான திருவடிபட்ட விடமென்று பூமியைத் தாமரையாக உபசரித்துச் சொல்லுகிறார்.
இப்பூமண்டலம் பெரிய தாமரைப்பூ மலர்ந்தாற்போலே வட்டவடிவிருப்பது பற்றியுமாம்.
திருவடியும் பூமண்டலத்துக்குச் சமமாகப் பரவி நின்றமையால் “அடி வட்டம்“ எனப்பட்டது.

————————————————————————————————————————————————————

கீழ் “அறிவென்னுந்தான் கொளுவி“ என்கிற பாட்டில் –இந்திரியங்களைப் பட்டி மேய வொண்ணாதபடி அடக்கி நின்று
சாஸ்த்ரங்களை அப்யஸித்தால் எம்பெருமான் படிகளைக் காணலாமென்றார்.
இது எளிதில் கைகூடாத காரியமாயிற்றே! என்று சிலர் நினைக்கக் கூடுமே, அவர்களுக்குச் சொல்லுகிறார்.
நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் திருவேங்கடமலையிலே வந்து நின்று
தேவர்கள் வணங்க நிற்கிற நிலையிலே ஆச்ரயித்து அப்பெருமானிடத்திலேயே நெஞ்சை ஊன்றவைத்தால்,
சிற்றின்பங்களிலே விருப்பம் ஒழிந்து, எம்பெருமான் படிகளை யுணர்த்துகின்ற சாஸ்த்ரங்களிலே
நெஞ்சைச் செலுத்துவதற்கு அநுகூலமாகும் என்கிறார்.

மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து–14-

பதவுரை

நாற்பால வேதத்தான்–நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்
வேங்கடத்தான்–திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளை யுடையவனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
பணிந்து–ஆச்ரயித்து
மால் பால்–அந்த ஸர்வேச்வரனிடத்திலே
மனம் சுழிப்ப–நெஞ்சு பொருந்த (அதனாலே)
மங்கையர் தோள் கைவிட்டு–ஸ்த்ரீகளின் தோளோடே அணைய வேணு மென்கிற காமத்தைக் கைவிட்டு
நூல் பால்–(வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே
மனம் வைக்க–மனம் செலுத்துவதற்கு
நொய்விது ஆம்–எளிதாகும்.

“மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு“ என்ற விதில் சிலர் சொல்லுவதொன்றுண்டு,
அதாவது சிற்றின்பங்களில் பற்று அற்றாலன்றி பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறவாது,
பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறந்தாலன்றிச் சிற்றின்பங்களில் பற்று அறாது என்று
அந்யோந்யாச்ரய தோஷம் சொல்லலாம்படி யிருக்கையாலே
‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு‘ என்று எங்ஙனே சொல்லலாம்? என்று.
இதற்குப் பெரியோர் பணிப்பதாவது –

நாம் சிற்றின்பங்களை விரும்பி வேசி முதலானவர்களைக் காண்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு
பலகாலும் பகவத் ஸந்நிதிகளுக்குச் செல்லுகிறோம்,
அப்போது யாத்ருச்சிகமாக எம்பெருமான் திருமேனியிலும் கண் செலுத்த நெருகின்றது,
இப்படி பலகால் நேர்ந்தால், ஒருகால் ஸுக்ருதவிசேஷத்தினால் அப்பெருமானிடத்திலேயே நம்மனம் லயித்து
‘என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே‘ என்னும்படியாக ஆகி,
சிற்றின்பங்களில் வெறுப்புபிறந்து விடுகின்றனது.
ஆகவே ‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கை விட்டு‘ என்றது பொருந்தும்,
அந்யோந்யாச்ரயதோஷமில்லை.
சிற்றின்பங்களில் பற்று அற்றால் தான் பகவத் விஷயத்தில் மனம் சுழிக்கும்மென்று நியதிகூறவேண்டா – என்பர்.

மாற்பால் – பால் – எழனுருபு, மாலிடத்திலே என்கை.
‘நூற்பால்‘ என்ற விடத்தும் இங்ஙனமே. நொய்விது – ஸுலபம்.

——————————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள்கைவிட்டு, நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்“
என்றருளிச் செய்த ஆழ்வாரைநோக்கி சாஸ்த்ரங்களில் மனம்வைத்து அவ்வழியால்தான்
எம்பெருமான் படிகளை அறியவேணுமென்கிறீரே, நீர் அவ்விதமாகத்தான் அறிந்தீரோ? என்று சிலர் கேட்க,
எம்பெருமானுடைய நிர்ஹேதுகமான விஷயீகாரத்திற்கு இலக்கானவர்கள் சாஸ்த்ரங்களில் ச்ரமப்படவேணுமோ?
அவன் தானே ஒருவரை விஷயீகாரத்திற்கு திருவுள்ளம் பற்றினால் எல்லை கடந்த அன்பு கொண்டு
அவன் செய்யும் காரியங்களைத் தடுப்பாருண்டோ?
திருப்பாற்படலிலே பாமஸுகமாகக் கண்வளர்த்தருளுமவன் அதனை விட்டிட்டு என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானே,
இது அவனுடைய நிர்ஹேதுக கிருபையினால் வந்த்தன்றோ?
இங்ஙனமே அவன் நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க விரும்பப் பெறுமவர்களுக்கு யாதொரு சாஸ்த்ர பரிச்ரம்மும் வேண்டா,
நான் பெற்ற பேறு அவர்களும் பெறுவர்கள் என்ற கருத்தை யடக்கி இப்பாசுரமருளிச் செய்கிறார்.

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தனை அணைக் கிடக்கும் வந்து –15-

பதவுரை

பணிந்து உயர்ந்த–தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படு திரைகள்–கடலிலுண்டான அலைகளானவை
மோத–நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த–(அத் திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம்–படங்களிலுண்டான
மணிகளாலே–மாணிக்கங்களினாலே
அணிந்த–அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன்–திருவனந்தாழ்வானாகிற
அணை–திருப்பள்ளி மெத்தையிலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருளாகிற
அம்மான்–ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு–அங்கு நின்றும்
வந்து –புறப்பட்டுவந்து
அடியேன்–அடியேனுடைய
மனம் அணை–மனமாகிற படுக்கையில்
கிடக்கும்–சயனித்திரா நின்றான்

கடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது.
“அணிந்தங்கு“ என்றவிடத்துத் தொகுத்தல் விகாரம். அணிந்த அங்கு என்று பிரிக்க. அனந்தன் – வடசொல்.

—————————————————————————————————————————————–

திருப்பாற்கடலில் நின்றும் தம் திருவுள்ளத்துக்கு வரும்போது திருவல்லிக்கேணியில் தங்கி வந்தானென்கிறார் போலும்.

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
திரு வல்லிக் கேணியான் சென்று –16-

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண்திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்களதீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

முதலிரண்டடிகள் திருவல்லிக்கேணிக்கு விசேஷணம், அருகிலுள்ள கடலில் அலைகள் மோதும்போது
சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும் கொழிக்கப்படுகின்றன,
அவை ஸாயம்ஸந்தியா காலத்தில் ஏற்றப்படுகின்ற மங்கள தீபமோ என்னலாம்படி யிருக்கின்றனவாம்.
சில விளக்குகள் செந்நிறமான ஒளியை யுடையனவாயும். சில விளக்குகள் வெண்ணிறமான வொளியை யுடையனவாயும்
இருப்பதுண்டாகையாலே செந்நிறப் பவழங்களும் வெண்ணிற முத்துக்களும் திருவிளக்காகச் சொல்லப்பட்டன.
திருவல்லிக்கேணியில் எப்போது பார்த்தாலும் திருவிளக்கேற்றப்பெற்ற மாலப்பொழுதாகவே காணப்படுமென்று கருத்து.
இப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருக்கின்ற திருமாமகள் கொழுநன் எனக்கு ஸ்வாமி – என்றாராயிற்று.

‘ப்ரவாளம்‘ என்னும் வடசொல் பவள மெனவும்,
‘முக்தா‘ என்னும் வடசொல் முத்து எனவும்
‘ஸந்த்யா‘ என்னும் வடசொல் அந்தி யெனவும் திரிந்தன.

—————————————————————————————————————————————–

எம்பெருமானை வாழ்த்தப் பெறுவதொரு நாள் உண்டானால், கீழ்க்கழிந்த காலமும் மேல்வருங்காலமும்
எல்லாம் நன்னாளாய் விடுமென்கிறார்.

சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத வெந்தை யிணையடிக்கே யாளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் –17-

பதவுரை

என்றும் இறவாத எந்தை–ஒருநாளும் அழிவில்லாதவனான எம்பெருமானுடைய
இணை அடிக்கே–உபய பாதங்களுக்கே
ஆள் அய்–ஆட்பட்டு
மறவாது–மறவாமல்
என்வாய் வாழ்த்துக–என்வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்)
சென்ற நாள்–கீழ்க் கழிந்த காலங்களும்
செல்லாத–இனிமேல் வரப்போகிற நாள்களும்
செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள்–‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘
என்று சொல்லப்பெற்ற நிகழ்காலமுமாகிய
எந்நாளும்–எல்லாக் காலங்களும்
நாள் ஆகும்–நல்ல காலமே யாகும்.

இன்று ஒருநாள் எம்பெருமானை வாழ்த்தப் பெற்றால் அந்த ஒருநாள் மாத்திரம் நல்ல நாளாகுமேயன்றி,
கீழே பழுதே கழிந்த காலமும் இனிமேல் வரப்போகிற காலமுங்கூட நன்னாளாய் விடுமோ? என்னில், கேண்மின்,
ஒருவன் நெடுங்காலமாக தரித்ரனாயிருந்து ஒருநாளில் செல்வம் மிக்கவனானால்,
அவனுக்கு சென்ற நாட்களின் கெடுதல்கள் தோற்றமாட்டா, வயிறா உண்டபின் பசித்திருந்த முற்காலம் என் செய்யும்?
அது போல, எம்பெருமானை வாழ்த்தப் பெறும் நாள் உண்டான பின்பு, அவனை வாழ்த்தாமல் பாழே கழிந்த கீழ்நாட்களும்
‘கழிந்துபோன நாட்கள்‘ என்ற காரணத்தினாலேயே நன்னாளாய் விடுமென்க.
ஒருவன் ஸந்தோஷமாயிருக்கும்போது ‘மேலுள்ள காலமெல்லாம் நாம இப்படியே ஸந்தோஷமாகவே இருப்போம்‘ என்று
நினைத்திடுவனேயன்றி‘ நாளைக்கே நாம் துயரை அநுபவிக்கப்போகிறோம்‘ என்று நினைக்கமாட்டான்,
அதுபோல, ஆழ்வாரும் ‘எம்பெருமானை வாழ்த்தப் பெறுவத்தொருநாள் வாய்த்துவிட்டால்
அந்த வாழ்த்து மேலுள்ள காலமெல்லாம் மாறாதே செல்லும்‘ என்றெண்ணி எதிர்காலமும் நன்னாளாருமென்கிறார்.
ஒருவனுக்கு நிகழ்காலமொன்று மாத்திரம் நன்றாயிருந்துவிட்டால் அவனுக்கு இறந்த காலமும் எதிர்காலமும் நன்றே என்க.

என்றுமிறவாத வெந்தையிணையடிக்கே ஆளாய் என்வபாய்மறவாது வாழ்த்தப்பெற்றால்,
சென்றநாள் சொல்லாதநாள் செங்கண்மா லெங்கண்மாலென்ற அந்நாள் ஆகிய எந்நாளும் நாளாகும் என்றதாயிற்று.

——————————————————————————————————————————————————

உலகளந்த பெருமானே! உன் திருவடிகளில் எனக்கு நித்ய கைங்கர்யத்தைத் தந்தருளி உன்னுடைய
அனுபவத்துக்கு இடையூறான ஸம்ஸாரபயத்தையும் மாற்றியருளவேணு மென்கிறார்.

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால் மூவடி மண்
நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா விணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க அருள் –18-

பதவுரை

வாமனன் ஆய்–வாமந ரூபியாகி
மாவலி பால்–மஹாபலியினிடத்தில் (சென்று)
வாய் மொழிந்து–(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண்–மூவடி நிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட–அதை அளந்து கொண்ட
நெடு மாலே–ஸர்வேச்வரனே!
எஞ்சா–கருங்குதலின்றி
தாவிய–ஸர்வ வ்யாபியான
நின் இணை அடிக்கே–உனது உபய பாதங்களுக்கே
ஏழ் பிறப்பும்–எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி–நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க–பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

‘நம்முடைய உடைமையை நாம் இழக்கலாகாது‘ என்கிற திருவுள்ளத்தினால் உலகங்களெயெல்லாம்
அடிப்படுத்திக் கொண்டது போல உன்னுடைமையாகிய அடியேனையும் அடிப்படுத்திக் கொள்ளவேணு மென்கைக்காக
இங்கு உலகளந்த சரிதையை எடுத்துக் கூறினரென்க.
வாமநனுடைய மழலைச் சொற்களிலேயே மாவலி மதிமயங்கினனாதலால் அது தோன்ற ‘வாய்மொழிந்து‘ என்கிறார்.
இரண்டாமடியிலுள்ள ‘நீ‘ என்பது ஈற்றடியில் அந்வயிக்கக்கடவது.
அஞ்சாதிருக்க – ‘நாளைக்கே‘ இந்த பகவத் கைங்கரியம் மாறிப்போய்
ஸம்ஸார தாபத்ரயமே மேலிட்டு விடுமோ? என்று அஞ்சாதிருக்க.

—————————————————————————————————————————————————-

அஞ்சாதிருக்கவருள் என்று சொல்லிவிட்டால் தவறாமல் அருள்வனோவென்ன,
‘நம் அருளை எதிர்பார்ப்பார் ஆரேனுமுண்டோ? என்று நோக்கியிருக்கு மெம்பெருமான் அருள்செய்யா தொழியமாட்டான்,
அருள்செய்தே தீருவன், ஆனால் எல்லார்க்கும் அருள்செய்தால் ஸர்வமுக்தி ப்ரஸங்க முண்டாகி
லீலாவிபூதியே அழிந்துபோக நேருமாகலால், இருளாத சிந்தையாய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது
முந்தையராய் நிற்பார் எவரோ, அவர்க்கே அருள்செய்யக் கடமைப்பட்டிருக்கிற னெம்பெருமான் என்கிறார்

அருளாது ஒழியுமே யாலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க்கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் –19-

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்–அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சை யுடையாய்க் கொண்டு
சே அடிக்கே–திருவடிகளுக்கு
செம் மலர் தூய்–நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது–அஞ்ஜலி பண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு–‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று–முன்பொரு காலத்தில்
தெருளாத பிள்ளை ஆய்–அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலை மேல் சேர்ந்தான்–ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே–கிருபை பண்ணாமற் போவனோ?

உலகமெல்லாம் பிரளயத்தில் அழிவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் வாரியெடுத்து வயிற்றினுள்ளடக்கிச்
சிறியதோர் ஆலந்தளிரிலே துயின்றவனாதலால் எம்பெருமானுக்கு அடியார்களைக் காத்தருள்வதில்
ஸாமர்த்தியமும் உத்ஸாஹமும் குறையற்றதென்று காட்டுதற்காக ஆலிலைமேலன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் என்றார்.

இருளாத சிந்தையாய் – ரஜஸ்தமோ குணங்கள் கலசாமல் சுத்தஸாத்விகராய் என்கை.
முந்தையர் – பகவத் கைங்கரியத்திற்கு முற்பட்டிருக்குமவர்கள்.

———————————————————————————————————————————————————–

கீழ்ப் பதினெட்டாம் பாட்டில் உலகளந்த சரிதமும் பத்தொன்பதாம் பாட்டில் உலகமுண்ட சரிதமும்
அநுஸந்திக்கப்பட்டன வாதலால். இவ்விரண்டு சரிதங்களையும் சேர்த்தநுபவித்து,
வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கிறார் எம்பெருமானையே நோக்கி. அதாவது –
மிகச்சிறிய வடிவுகொண்டு ஏழுலகங்களையும் உண்டும் உமிழ்ந்தும் போந்த நீ அவ்வுலகங்களை மிகப் பெரிய
இரண்டு திருவடிகளினால் அளந்துகொண்டா யென்றால் இது ஒரு வியப்போ?
இதை அரிய பெரிய காரியமாக எல்லாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, இஃது என்னோ? என்கிறார்.

முன் உலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிது ஒன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ இதனைப் பேசு –20

பதவுரை

முன்–முன்பொரு காலத்தில்
உலகம்–உலகங்களை யெல்லாம்
உண்டு–திரு வயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு–பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ் வுலகம்–அந்த வுலகங்களை
பின்–பின்பொருகாலத்தில்
ஈர் அடியால்–இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல்–அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே–பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே–திருமகள்நாதனே!
செம் கண் நெடியானே–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே–எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு–நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்லவேணும்,
என்னே–இஃது என்னோ?

———————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading