‘எம்பெருமானுடைய பெருமைகளைப் பேசுவதற்கு மாஞானிகளால்தான் ஆகும், மற்ற அற்பஞானிகளால் ஆகாது‘ என்பதில்லை,
வாய் திறந்து நான்கு சொற்களைத் தொடுத்து பேச வல்லவர்கள் எவராயிருந்தாலும் எம்பெருமான பெருமையைப் பேசலாம்.
ஆனால், நிரம்பிய ஞானமுடையார் பேசினாலன்றோ அவன் பெருமை உள்ளவளவும் பேசினதாக ஆகும்,
அற்ப ஞானிகள் பேசினால் ஒரு திவலை யளவும் ஆகமாட்டாதே என்னில், அப்படியில்லை,
ஆயிரம் வாய் படைத்த ஒன்றான திருவனந்தாழ்வான் தானே பேசினாலும் எம்பெருமான் பெருமை முழுதும் பேசினதாக
ஆகப் போகிறதில்லை யார் பேசினாலும் அவனுடைய பெருமைக் கடலிலே ஒரு திவலை மாத்திரமே பேசினதாக ஆகும்.
ஆகவே பேச வாய்ப்படைந்தவர்களெல்லாரும் பேசலாம். எம்பெருமானுடைய வைபவம் எப்படிப்பட்டதென்றால்,
ஒருவன் சுருக்கமாகப் பத்து வார்த்தை சொன்னாலும் அதற்குள்ளே அவன் பெருமை அடங்கி விட்டது என்னும் படியாயிருக்கும்.
மற்றொருவன் ஒரு மஹாபாரதமாகப் பன்னியுரைத்தாலும் அதற்குள்ளும் அவன் பெருமை அடங்கிவிட்டது.
என்னும்படியாகவேயிருக்கும் – என்று இக் கருத்தை யடக்கி இப்பாசுரமருளிச் செய்கிறார்.
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு –21-
பதவுரை
வாசம் மலர் துழாய் மாலையான்–மணம் மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேசு உடைய சக்கரத்தான்–தேஜ்ஸ்ஸை யுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான்–ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான்–சார்ங்க வில்லை யுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான்–மிக்க ஆரவாரமுடையனாய் வந்த
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமாளுடைய
வடிவு–ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)
பேசுவர்–பேசுகின்றார்களோ
அவ்வளவே–அவ்வளவேயாம்.
பேசுவார் எவ்வளவு பேசுவர் – (இது கேள்வியன்று) பேசுகிறவர்கள் மிக்க சுருக்கமாகவோ மிக்க விரிவாகவோ
நடுத்தரமானவெ எந்த அளவில் எம்பெருமான் வடிவைப் பேசுகிறார்கள்,
(அவ்வளவே வடிவு) அது அவ்வளவாகவேயிருக்கும். எல்லைக்கண்டு பேசுதல் யார்க்கும் முடியாதென்கை.
திருவரங்கத்தமுதனால் எம்பெருமானைப்பற்றிச் சொல்லும்போது
“பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன்குணங்கட்கு உரிய சொல் என்று முடையவன்“ என்று பணிந்த பாசுரம் இருந்த்தே.
பொங்கரவவக்கரனைக் கொன்றான் – வக்கரன் – தந்தவக்ரன். (தத்வக்கரன் என்பதுமுண்டு)
கண்ணபிரான் ருக்மினிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து
போர் செய்த அரசர்களில் இவனேருவன், சிசுபாலனுக்கு பரிந்து வந்தவன்.
———————————————————————————————————————————————————
வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்மையே காண விரும்பு –22
பதவுரை
நெஞ்சமே–ஓ மனமே!
வானவர்கள்–நித்யஸூரிகள்
வடிவு ஆர்–அழகு பொருந்திய
முடி–கிரீடங்களை
கோட்டி–தாழ்த்தி
கடி ஆர் மலர்–மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும்–நாள்தோறும்
தூவி –ஸமர்ப்பித்து
காணும் படியானை-ஸேவிக்கப்பெற்ற திருமேனியை யுடையனான எம்பெருமானை
செம்மையால்–முறைப்படியே
உள் உருகி–உருக்கங்கொண்டு
செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மெயே–உள்ளபடியே
காண–ஸேவிப்பதற்கு
விரும்பு–ஆசைப்படு
நித்ய ஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் பணிமாறி ஸேவிக்கும்படியாகவுள்ள
பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு என்கிறார்.
அவனைக் காண விரும்பினால் கண்டுவிடமுடியுமோ? என்னில், அதற்காக விசேஷித்து அருளிச் செய்கிறார்
‘செம்மையால் செவ்வனே மெய்ம்மெயே காணவிரும்பு‘ என்கிறார். அதாவது –
நம்முடைய முயற்சியால் நாமே காண விரும்பினால் அவ்விருப்பம் பழுதாய்விடும்,
அங்ஙனன்றியே ‘பிரானே! உன் வடிவை நீயே காட்டித் தந்தருளவேணும்‘ என்று அத்தலையாலே வருங்காட்சியை
வேண்டினால் பழுதுபடாமே காணப்பெறலாமிறே. இப்படி அவனை காட்டக்காண்கையே செம்மையால் செவ்வனே காண்கையாம்.
————————————————————————————————————————————————————-
எம்பெருமானுடைய திருவடிகளிலேயே தம்முடைய திருவுள்ளம் வியாமோஹம் கொண்டிருக்கும்படியை அருளிச் செய்கிறார்.
விரும்பி விண் மண் அளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு து ளையில் சென்றூத -அரும்பும்
புனம் துழாய் மாலையான் பொன்னம் கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் –23-
பதவுரை
வண்தார்–அழகிய மாலையிலே
அம் சிறைய சுரும்பு–அழகிய சிறகுகளை யுடைய வண்டுகள்
துளையில் சென்று ஊத–ரஸ நாடியிலே படிந்து ஊத (அதனால்)
அரும்பும்–அரும்புகள் உண்டாகப் பெற்ற
புனம் துழாய் மாலையான்–நல்ல திருத் துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண்மண் அளந்த பொன் அம்கழற்கே–ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம்–எனது மனமானது
துழாய்–அவகாஹித்து
மால் ஆய் வரும்–மயங்கிக் கிடக்கின்றது.
அப்பெருமான் எப்படிப்பட்டவன்? அஞ்சிறைய சுரும்பு வண்தார் துளையில் சென்று ஊத அரும்பும் புனந்துழாய்மாலையான் –
அவன், திருவடி திருமார்பு திருத்தோள் திருமுடி முதலானவிடங்களில் திருத்துழாய்மாலைகள் அணிந்துகொண்டிருக்கிறான்,
அவற்றில் வண்டுகள் படிந்து ரஸநாடிகளைக் கண்டுபிடித்து, அங்கு ஊதுகின்றன, அதனால் அந்த மாலைகள் அரும்புகின்றனவாம்,
திருத்துழாய் தன்னிலத்தில் இருந்தால் எப்படி அரும்புமோ அப்படி தனது திருமேனியிலும் அரும்பப்பெற்றவன் எம்பெருமான்
என்று திருமேனிவளம் சொல்லிற்றாயிற்று.
முதலடியின் முடிவிலுள்ள வண்டார் என்பதை ‘வண் தார்‘ என்று பிரிக்க ‘வண்டு ஆர்‘ என்றும் பிரிப்பர்,
அப்போது, வண்டு ஆர் – பெண் வண்டுகளோடு கூடின கரும்பு – ஆண் வண்டுகள் என்று பொருள் கொள்க.
ஈற்றடியில் துழாய் –துழாவி என்றபடி
“கடலும் மலையும் விசும்புந் துழாய்“ என்ற (2-1-4) திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க.
———————————————————————————————————————————————–
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீர் உருவுமானான் -பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது –24-
பதவுரை
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
இரு நிலனும்–விசாலமான பூமியும்
மால் விசும்பும்–அளவிறந்த ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
நெருங்கு தீ–செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான்–ஜல தத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்–பொருந்திய ஒரு சுடர்ச் சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய
சூழ் கழலே–அடியாரை அகப்படுத்திக் கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும்–மேலுள்ள காலமெல்லாம்
தொழுது–வணங்கி
தொடர்–(அவனையே) பின்பற்றியிரு.
எம்பெருமானுடைய திருவடிகளிலேயே என் மனம் வியாமோஹங்கொண்டிருக்கின்றதென்றார் கீழ்பாட்டில்,
நெஞ்சே! உனக்கு அந்த வியாமோஹம் நித்தியமாய்ச் செல்லவேணும், என்று நெஞ்சை விளித்துக் கூறுகின்றார்.
முன்னடிகளில் ஜகத்காரணமான பஞ்ச பூதங்களைச் சொல்லியிருப்பது லீலாவிபூதியைச் சொன்னபடி,
லீலாவிபூதி நிர்வாஹகன் என்கை.
மூன்றாமடியில் சுடராழியை சொல்லியிருப்பது மற்றுமுள்ள நித்யஸூரிகளுக்கெல்லாம் உபலக்ஷணமாய்
நித்ய விபூதி நிர்வாஹகன் என்றபடி.
ஆக, உபய விபூதிநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே நெஞ்சமே! நாடோறும் தொழுது தொடர் என்றாராயிற்று.
சூழ் கழல் – சூழ்ந்துக்கொள்ளும் கழல், அதாவது –அடியார்களை அகப்படுத்திக்கொள்ளும் திருவடி என்கை.
——————————————————————————————————————————————–
கீழ்ப்பாட்டில் “சூழ்கழலே நாளுந்தொடர் ஆழி நெஞ்சே! தொழுது“ என்றார்,
அதற்கு நெஞ்சு இசையாதிருப்பதுபோல் தோன்றிற்று,
நெஞ்சே! நான் உனக்குச் சொன்னதில் ஏதேனும் தப்பு உண்டோ?
எம்பெருமானைத் தொழும்படிதானே நான் உனக்குச் சொன்னேன்,
தொழுதால் தீமையுண்டாகுமோ? சொல்லாய் என்கிறார்.
தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி -விழுதுண்ட
வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து –25
பதவுரை
தூ நீர் உலகம்–நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது–முழுவதும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி–அழகிய கூந்தலை யுடையளான யசோதையினுடைய
விழுது–வெண்ணெயை
உண்ட வாயானை–அமுதுசெய்த வாயை யுடையவனாயும்
மால் விடை ஏழ் செற்றானை–கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை–பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே–நெஞ்சமே!
சிறந்து–சிறப்புற
தொழுதால்–வணங்கினால்
பழுது உண்டே–குற்ற மேதேனுமுண்டோ?
கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் பிரளயகாலத்தில் அமுது செய்ததற்கு மாற்றுமருந்தாகத்
திருவாய்ப்பாடியில் வெண்ணெயமுது செய்தவனும்,
அவ்வெண்ணெய் போல் மழமழவென்ற திருமேனியைக் கொண்டு முரட்டு எருதுகளோடே பொருது வெற்றி பெற்றவனும்
தேவர்கட்கும் எட்டாதவனுமான எம்பெருமானைத் தொழுதால் குற்றமுண்டோ? (தொழுதால் அது வீணாகுமோ என்றுமாம்)
———————————————————————————————————————————————–
தண்டுழாய்மாலை யணிந்துள்ள எம்பெருமான்
என் சிந்தையோடு
திரு வநந்த ஆழ்வானோடு
திரு கச்சிப் பதியோடு
திரு வேங்கட திருமலை யோடு
திரு வெக்காவோடு-திரு யதோத்தகாரி சந்நிதி
திரு வேளுக்கையோடு -காமாசிகா -ஆள் அழகிய சிங்கப் பெருமாள் சந்நிதி
வேளுக்கை பாடி என்று பிரித்து
திரு வேளுக்கையையும்
திரு ஆய்ப்பாடியையும் என்றும் கொள்ளலாம்
வாசி அற திரு உள்ளம் உகந்து நித்ய வாசம் செய்து அருளுகிறான்
மேல் விழுகைக்கு உறுப்பான சிந்தை என்பதால் -சிறந்த -அடை மொழி கொடுத்தது பொருந்தும்
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார்–26-
பதவுரை
தண் துழாயார் தாம்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார்–ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க் கொண்டு
உறைந்ததுவும்–நித்ய வாஸம் பண்ணுமிடங்கள் (எவை யென்றால்)
சிறந்த என் சிந்தையும்–சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும்–சிவந்த கண்களை யுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர்–நிறைந்த செல்வத்தை யுடைய
நீள்–பெரிய
கச்சி யுள்ளும்–கச்சித் திருப்பதியும்
வேங்கடமும்–திருமலையும்
வெஃகாவும்–திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே–திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.
இப்பாசுரத்திற்கு இரண்டு மூன்று வகையாக யோஜநைகள் அருளிச் செய்வதுண்டு,
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திற் காண்க.
வெஃகா – யதோக்தகாரி ஸந்நிதி,
வேளுக்கை – ‘காமாஸிகா‘ என்ற திருநாமத்தால் வழக்கப்படுகிற ஆளழகிய சிங்கப்பெருமாள் ஸந்நிதி.
இவ்விரண்டு தலங்களும் கச்சிப்பதியிலுள்ளன.
‘வேளுக்கைப்பாடி‘ என்றதை இரண்டாகப்பிரித்து, வேளுக்கையும் திருவாய்ப்பாடியும் என்று பொருள் கொள்ளவும்.
——————————————————————————————————————————————————–
எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ? ஒருவருமில்லை என்கிறார்.
ஆரே துயர் உழுந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கரும் கடலை -நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து –27-
பதவுரை
கார் மலிந்த கரு கடலே–மேகங்கள் நிறைந்த பெரிய கடலை
நேரே கடைந்தானை–தானே முன்னின்று கடைந்தவனும்
நாரணனை–ஸகல ஜகத்காரண பூதனும்
நீரு அணை மேல் பள்ளி அடைந்தானை–திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின் மேல் பள்ளிக் கொண்டிருப்பவனுமான எம்பெருமானை
நாளும் அடைந்து–நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்)
துயர் உழந்தார்–துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும்
துன்பு உற்றார் ஆர்–துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார்–எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)
துயருழந்தார் துன்பற்றார் ஆரே? – துயர் என்று துக்கத்துக்குப் பேராயினும் இங்கு இலக்கணையால்
துக்கஹேதுவான பாபத்தைச் சொல்லுகிறது. எத்தனை கொடிய பாவங்கள் செய்தவர்களாயிருந்தாலும்
அப்பாவங்களின் பலனான துன்பங்களை பகவத் பக்தர்கள் அனுபவிக்க மாட்டார்களென்கை.
“மாயனை வாயினால்பாடி மனத்தினால் சிந்திக்க, போயபிழைப்பும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்“ என்றது காண்க.
ஆண்டையார் – எவ்விடத்திலுள்ளார்? எவ்விடத்திலுமில்லை யென்றபடி.
காரேமலிந்த கருங்கடலை நேரே கடைந்தானை –சிலர் மேலெழுந்தவாரியாக வந்து அடிபணிந்தாலும் அவர்களுக்காகத்
தன்னுடம்பு நோவக் காரியம் செய்யுமவனன்றோ எம்பெருமான், அப்படிப்பட்டவனே யடைந்து துக்கப்படுவாருண்டோ?
நீரணைமேல் பள்ளியடைந்தானை – ஆர்த்தியோடே வந்து சேர்த்து நம்மைக் கூவுவாருண்டோவென்று
கடலில் துயிலும் பெருமானையடைந்து துக்கப்படுவாருண்டோ?
——————————————————————————————————————————————————————-
எம்பெருமானுடைய சில சரித்திரங்களை போக்யமாகப் பேசியநுபவிக்கிறார்.
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம்போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று
பேய்ச்சி பாலுண்ட பிரான் –28-
பதவுரை
வான் எயிறு–வான்போன்ற பற்களை யுடையளான
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–உண்டு அவளை முடித்தவனான
பிரான்–ஸ்வாமியானவன்
அடைந்தது–பள்ளிக்கொண்டது
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மேலாம்
அன்று–முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய்–பஞ்ச பாண்டவர்களுக்காக
மிடைந்தது–நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர்–கடுமையான பாரதயுத்தமாம்,
உடைந்ததுவும்–அஞ்சி நின்றதும்
ஆய்ச்சிபால்–இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே–மத்துக்காகவாம்,
அம்மனே–அந்தோ!
கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னே “ஏஷ நாராயண, ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந“ என்கிறபடியே
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருந்தான், பிறகு ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவ்வதரித்துப்
பஞ்சபாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதப்போர் நடத்தி வைத்தான், இவ்வளவு அபாரசக்தி வாய்ந்தவனாயிருக்கவும்,
“உழந்தாள் நறுநெய்யொரோ தடாவுண்ண, இழந்தாளெரிவினா லீர்ந்து எழில்மத்தின்,
பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்“ என்கிறபடியே
யசோதைப்பிராட்டி மத்துகொண்டு அடிப்பதாகக் கைதூக்க, அசக்தரைப்போலே நடுநடுங்கிக் கிடந்தான்,
அப்படி அசக்தியை அபிநயிக்கும் பருவத்துக்கு முன்னமே முலையுண்கிற வியாஜத்தாலே
பூதனை யென்னும் பேய்ச்சியின் உயிரை உறிஞ்சி முடித்தான்.
இங்ஙனே சக்தியையும் அசக்தியையும் மாறி மாறி வெளியிடுவது எத்திறம்! என்று உள்குழைந்தவாறு.
“ஆய்ச்சிபால்“ என்றவிடத்து, பால் – ஏழனுருபு. அம்மனே –ஆச்சரியக் குறிப்பிடைச்சொல்.
—————————————————————————————————————————————————————————
கீழ்ப்பாட்டில் யசோதைப் பிராட்டியின் ப்ரஸ்தாவம் வந்ததனால் அவளுக்குக் கண்ணபிரானிடத்திருந்த
பரிவின் மிகுதியைப் பேசுகிறாரிதில்
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருளார் திருமேனி யின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து –29-
பதவுரை
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப்பாலை
உண்ட–அமுது செய்த
பெருமானை–ஸ்வாமியானவனும்
வாய்ந்த இருள் ஆர் திருமேனி–அமைந்த இருள் போன்ற திருமேனியை யுடையவனும்
இனம் பவளம் செம்வாய்–அழகிய பழம் போற் சிவந்த அதரத்தை யுடையவனும்
தெருளா மொழியானை–உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து–கிட்டி
ஆய்ச்சி–யசோதையானவன்
பேர்ந்து எடுத்து–வாரி யெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே–சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தான்–தன் முலையை உண்ணக் கொடுத்தான்.
யசோதைப்பிராட்டி சற்றுப்போது கண்ணுறங்கிப் போன ஸமயத்திலன்றோ பூதனை வஞ்சிக்க வந்து முலை கொடுத்து
மாண்டு பிணமாய் விழுந்தது. உடனே கண்விழித்து நோக்கின யசோதையானவள்
அப்பூதனை பெரிய வுடம்போடே பயங்கரமான பிணமாய் நிலத்தில் விழுந்திருப்பதைக்கண்டு
‘இஃது என்ன பேயோ பிசாசோ!‘ என்று அஞ்சிக் காதவழி ஓடவேண்டியிருக்க சிறிதும் அஞ்சாமல்
கண்ணபிரா னருகிற் சென்று வாரி எடுத்தணைத்து முலை கொடுத்தாளே! இஃது என்ன பரிவு! என்று ஈடுபடுகிறார்.
அஞ்சாதே – ஒருத்தி முலைகொடுத்துப் பிணமாய் விழுந்து இன்னும் பத்து நிமிஷ மாகவில்லையே,
இந்த நிலைமையில் நாம் முலை கொடுக்கத் துணியலாமோ என்று அஞ்ச வேண்டுவது ப்ராதப்தமாயிருந்தும்
பரிவின் கனத்தாலே அஞ்சிற்றிலன் என்க.
“நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்தவாறு“ என்ற
பொய்கையார் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத் தகும்.
யசோதைப் பிராட்டி என் அஞ்சவில்லை யென்றால், பிரானுடைய வடிவழகிலே யீடுபட்டதனால் உடனே அணுகி
வாரி எடுத்தணைக்க விரும்ப முண்டாயிற்றே அஞ்சி அப்பால் செல்ல மனமுண்டாக வில்லையென்று
காட்டுகிறார் சொற்களைச் சொன்னான் போலும்.
———————————————————————————————————————————————————————————
கீழ்ப் பாசுரங்களில் அநுபவித்த திருக் குணங்களெல்லாம் குறைத்திலிட்ட விளக்கு போலே
விளங்கப் பெற்ற இடங்களை எடுத்துப் பேசி யனுபவிக்கிறார்.
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறை பாடி யாயவிவை –30-
பதவுரை
கடல்–திருப்பாற் கடலென்ன
குடந்தை–திருக்குடந்தை யென்ன
வேங்கடம்–திருமலையென்ன
நேர்ந்த என் சிந்தை–நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன
நிறை விசும்பும்–பரம்பின பரமபதமென்ன
வாய்ந்த மறை–அமைந்த வேதமென்ன
பாடகம்–திருப்பாடகமென்ன
அனந்தன்–ஆதிசேஷனென்ன
ஆய இவை–ஆகிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த–எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறை பாடி–ராஜதானிகளாம்.
திருக்குடந்தை திருவேங்கடம் முதலான திருப்பதிகளோடே கூடத் தம்முடைய சிந்தையும் சேர்த்துக் கணக்கிடுகையாலே,
எம்பெருமானுக்கு இவர் தம் சிந்தையோடு மற்ற திருப்பதிகளோடு ஒரு வாசியில்லை என்றாராயிற்று.
“வாய்ந்தமறை“ என்று வேதங்களையும் உடன் கூறினது – திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பது போலத்
தமக்கு வேதங்களிலும் ஸாக்ஷாத்தாக ஸேவைஸாதிக்கும்படியைத் தெரிவித்தவாறாம்.
இறைபாடி – ராஜதானி.
—————————————————————————————————————————–
கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்த திவ்ய ஸ்தலங்கள் ஆழ்வார் திருவுள்ளத்தைவிட்டுப் பேராமல் அநுவர்த்திக்கவே,
பின்னையும் இவையவன் கோயில் என்கிறார்.
“கடல் குடந்தை வேங்கடம் என் சிந்தை நிறைவிசும்பு வாய்ந்தமறை பாடகம் அனந்தன்“ என்று
கீழ்ப்பாட்டிற் சொன்னவற்றையே இங்கு ‘இவை‘ என்று சுட்டிக் காட்டினார்.
இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்து அரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்–31-
பதவுரை
இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அவை செய்து–இருபிள வாக்க
அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான்–கண்ணையே செவியாக வுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான்–நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான்–தேன்போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான்–திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன்–அப்பெருமானுடைய
கோயில் இவை–கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.
நரசிங்கவுருக்கொண்டு ஹிரண்யாஸுரனுடைய மார்பைப் பிளந்தவனும்
சேஷசயனத்தில் திருக்கண் வளர்ந்தருள்பவனும்
நான்கு தேங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும்,
அஹங்காரியான ருத்ரனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து ஆதரிப்பவனும்
திருப்பாற்கடலி லுள்ளபவனுமான எம்பெருமானுக்குக் கீழ்ப்பாட்டிற் சொன்ன தலங்கள் உகந்து வாழுமிடமாயிருக்கின்றன – என்றாராயிற்று.
அவை செய்தல் – இருபிளவாகச் செய்தல். செய்து – எச்சத்திரிபு, செய்ய என்க.
அன்றியே, உருபு பிரித்துக்கூட்டி, ‘அரியுருவமாய் இரணியனதாகம் அவையெதான்‘ என்றும் யோஜிக்கலாம்.
செவிதெரியா நாகத்தான் – பாம்புக்கு வடமொழியில் ‘சக்ஷுச்சரவஸ்‘ என்றும்,
தென்மொழியில் ‘கட்செவி‘ என்றும் பெயர் வழங்கும்.
கண்ணைக்கொண்டே காண்பதும் கேட்பதும் செய்தல் பாம்புஜாதியின் இயல்வாம்,
ஆகவே செவிகள் தனிப்படத்தெரியா. இங்கு இந்த விசேஷணம் திருவனந்தாழ்வானுக்கு ஏதுக்கு இட்டதென்னில்,
ஒரு இந்திரியத்தாலே பல இந்திரியங்களின் காரியங்களை நிர்வஹிப்பதுபோல,
“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புலகுமணையாம் திருமாற்கரவு“ என்கிறபடியே
ஒரு திருமேனியைக் கொண்டே பல கைங்கரியங்களும் செய்பவன் திருவனந்தாழ்வான் என்று காட்டுதற்கென்க.
நறவேற்றான் – ‘நறவு‘ என்று தேனுக்குப் பெயர், உவகையாகுபெயரால் கங்கையைச் சொல்லுகிறது.
வேதத்தில் எம்பெருமான் திருவடியில் தேன்வெள்ள மிருப்பதாகச் சொல்லியிருப்பது கங்கையைக் குறித்தே என்று
நிர்வஹிப்பது முண்டாகையாலே இங்கு ‘நறவு‘ என்று சொல்லியிருப்பது கங்கையை என்னலாம்,
ஏற்றான் என்றது முடிமீது ஏற்றுக்கொண்டவன் என்றபடி.
அன்றியே,
‘ஏறு என்று எருதுக்குப் பேராகையாலே என்றான் என்பதற்கு எருதை வாஹனமாகவுடையவன் என்றும் பொருளாகலாம்.
கங்கையும் எருதையுமுடையவன் என்க. கங்கையைத் தாங்குமவனாய் எருதால் தாங்கப்படுமவனாயிருப்பவன்.
இனி, நறவு என்று கள்ளுக்கும் பெயராதலால்,
கள்ளைக்குடிப்பவனும் எருதின்மேல் ஆதரிப்பவன் என்றும் பொருள் கூறுவர் -வடசொல் பாகமெனத்திரிந்தது.
———————————————————————————————————————————————————————-
இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார்.
திருப்பாற்கடல் திருவேங்கடம் திருவனந்தாழ்வான் ஸ்ரீவைகுண்டம் வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம்
ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று.
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற்கடலும் நுண் நூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன்–32–
பதவுரை
குருந்து–குருந்த மரத்தை
ஒசித்த–முறித்தொழித்த
கோபாலகன்–கண்ணபிரான்
பால் கடலும்–திருப்பாற் கடலையும்
வேங்கடமும் திருமலையையும்
பாம்பும்–திருவனந்தாழ்வானையும்
பனி விசும்பும்–(ஸம்ஸார தாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும்
நூல் கடலும்–கடல்போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல்பால்பட்டிருந்தார் மனமும்–ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட
ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான்–வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.
பனிவிசும்பு – ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களையெல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்கை.
நூற்கடல் – கடல் போன்றிருக்கிற ச்ருதிஸ்மிருதி இதிஹாஸம் புராணம் முதலிய சாஸ்த்ரங்கள்.
(நுண்ணூல தாமரையித்யாதி) வேதத்திற் சொல்லப்பட்ட யாதொரு தாமரையுண்டு – ஹ்ருதயகமலம்,
அதிலே ஸமஸ்த கரணங்களும் ப்ரவணமாம்படி யோகத்தில் ஊன்றியிருக்கிற பரம யோகிகளுடைய மநஸ்ஸைச் சொன்னபடி.
“***“ என்ற வரதராஜஸ்தவ ஸ்ரீஸூக்தி உணர்க.
இனி நுண்ணூலதாமரை யித்யாதிக்கு வேறுவகையாகவும் பொருள் கூறலாம்.
நுட்பமான நூலையுடைத்தான் யாதொரு தாமரையுண்டு, அதன்மேல் பொருந்தியிருக்கும் பெரியபிராட்டியாருடைய,
மனம் –திருமார்பு, அதாவது திருமுலைத்தடம் என்று, பெரியபிராட்டியாருடைய நெஞ்சையே கொள்ளவுமாம்.
தாமரை நாளத்தில் நுட்பமான நூல் இருப்பது ப்ரஸித்தம். மேற்பால் – மேலிடத்தில், மேலே என்றபடி.
குருந்தொசித்த வரலாறு – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் ஒருநாள்
கண்ணபிரான் மலர் கொய்தற்பொருட்டு விரும்பியேறும் குருந்தமாமொன்றில் பிரவேசித்து அப்பெருமான் வந்து
தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதியபோது மாயவனான கண்ணபிரான்
அம்மரத்தைக் கைகளாற்பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்து அழித்தன்னென்பதாம்.
——————————————————————————————————————————————————————————
அநிஷ்டங்களைத் தவிர்ப்பதும் இஷ்டங்களை அளிப்பதுமாகி ரக்ஷணத்தைச் செய்யவல்லவன் எம்பெருமானே என்கிறது.
இதில் மூன்னடிகளால் அநிஷ்டத்தைத் தவிர்த்தமையும் பின்னடிகளால் இஷ்டங்களை அளித்தமையும் சொல்லிற்று.
பிரளயம் கொள்ளை கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றில் வைத்தது – அநிஷ்ட நிவாரணம்.
மந்தரத்தால் கடல்கடைந்து வானவர்க்கு அமுதளித்தது இஷ்ட ப்ராபணம்.
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க்கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாற்கு ஈந்தாய் நீ அன்று –33-
பதவுரை
மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய்–சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல்–ஆலந்தளிரிலே
உலகு எல்லாம்–உலகங்களையெல்லாம்
பைய–மெல்ல
மெய்மையே–உண்மையாகவே
உண்டவனே–அமுது செய்து கிடந்தவனே!
மாலவனே–ஸர்வாதிகளே!
நீ–இப்படிப்பட்ட நீ,
அன்று–அன்றொருநாள்
மந்தரத்தால்–மந்தர மலையைக் கொண்டு
மா நீர்க் கடல் கடைந்து–மிக்க நீரையுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம்–திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு–தேவர்களுக்கு
ஈந்தாய்–அளித்தாய்.
———————————————————————————————————————————————-
திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான்
ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார்.
அன்று இவ் வுலகம் அளந்த வசைவே கொல்
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர் வாய் -அன்று
கிடந்தானை கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34-
பதவுரை
நெஞ்சமே–மனமே!
அன்று–முன்பொரு காலத்தில்
நின்று–நின்று கொண்டே
இவ்வுலகம்–இவ்வுலகங்களை யெல்லாம்
அளந்த–அளந்ததனாலுண்டான
அசைவே கொல்–சிரமத்தினாலேயோ
வேளுங்கை–திருவேளுக்கையிலே
இருந்து–வீற்றிருந்து
நீள் நகர் வாய்–(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று–ஒரு காலத்தில்
கிடந்தானை-பள்ளி கொண்டவனும்–
கேடு இல் சீரானை-ஒரு காலு மழிவில்லாத திருக்குணங்களையுடையவனும்
முன்–முன்னொருகால் கம்ஸனை
கடந்தானை–கொன்று ஓழித்தவனுமான பெருமானை
காண்–ஸேவி
“நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில் கூட்டி உரைக்கப்பட்டது.
நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம்.
அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம்.
“கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.
————————————————————————————————————————————————————————–
உலகத்தாருடைய இந்திரியங்களிற்காட்டில் என்னுடைய இந்திரியங்கள் மிகச்சிறந்தவை யென்கிறார்.
கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் செம் பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை –35-
பதவுரை
கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலிசெய்யப்பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்
உலகத்தாருடைய இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவிப்பதிற்செல்லுகின்றன.
அங்ஙனன்றியே
என்னுடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்திலேயே ஊன்றியிருக்கின்றன வென்கிறார்.
கண்களோ திருவாபரணங்களாலும் திருமாலைகளாலும் அழகுபெற்றுள்ள எம்பெருமானது
பொன்மேனியைக் காண்பதற்கே பாரித்திருக்கின்றன.
வாயோ அவனுடைய திவ்பசரித்திரங்களைப் பாடுவதிலேயே ஊற்றமுற்றிருக்கின்றது,
கைகளோ அவனுடைய திருவடிகளைத் தொழவே காதல் கொண்டிருக்கின்றன என்றாராயிற்று.
———————————————————————————————————————————————————
எம்பெருமானை அநுபவிக்கிறார்.
திருவாழி திருச்சங்கு முதலிய பஞ்சாயுதாழ்வார்கள் திருக்கைகளிலே விளங்குகின்றனர்.
திருப்பாற்கடல் படுக்கையாக அமைந்திருக்கின்றது.
இவை ஆர்க்கு? என்றால், பனிநீருலக மடியளந்த மாயரவர்க்கு.
கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு –36-
பதவுரை
பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்துகொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.
———————————————————————————————————————————————
இப்பாட்டில் ‘அகத்தான் புறத்தான்‘ என்ற விசேஷணங்கள் நரம்பாயிருக்கும்.
நான் அவனை அநுபவிக்கப் பாரித்துக்கொண்டிருக்கையில் அவன் என்னை யநுபவிக்க விரும்பி
என்னை உள்ளிலும் வெளியிலும் மொய்த்துக்கொண்டிருக்கிற னென்கிறார்.
“இப்படி தாம் அவனை யநுபவிக்கப்புக்கவாறே அவனும் தன்பெருமையைப் பாராமல் தம்பக்கலிலே
அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு பலவடிவுகொண்டு தம்மையநுபவியா நின்றனென்கிறார்“ என்றும்
“நான் அடிமையிலே அந்வயிக்க, ஸௌபரியைப்போலே அவன் அனேகம் வடிவுக்கொண்டு புஜிக்க
ஆசைப்படாநின்றானென்கிறது“ என்றுமிறே பூருவர்களின் வியாக்கியான வாக்கியமும்.
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கரும் கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூண் ஆரம்
திகழும் திரு மார்வன் தான் –37-
பதவுரை
உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப்பெற்ற
திருமார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.
திருவாய்மொழியில் (4-7-6) “நாடோறு மென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளு மல்லபுறத்திலுள்ளும்
நீக்கமின்றி யெங்கும் நின்றாய்“ என்ற பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.
எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால்
“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“ எனப்பட்டது.
இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்,
(“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்) திருப்பாற்கடலை வாஸஸ்தாநமாக வுடையனாய்“ என்று வாக்கியமுள்ளதாக
அச்சுப்பிரதிகளிற் காண்கிறது, “திருப்பாற்கடலோபாதி உப்புக்கடலையும் வாஸஸ்தாநமாகவுடையனாய்“ என்றிருக்க
வேண்டிய வாக்கியம் அச்சுப் பிழையினால் மாறிவிட்டது போலும். உள்ளபடியே நிர்வஹிப்பாருளரேல் நிர்வஹித்தருள்க.
———————————————————————————————————————————————————–
எம்பெருமான் பலவடிவு கொண்டு தம்மை அநுபவிக்க விரும்புவதாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்.
அவன் ஒரு ஸாமாந்ய புருஷனல்லன், ஒப்புயர்வற்ற புருஷோர்த்தமன் காண்மின் என்கிறாரிப்பாட்டில்.
தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவம்
தானே தவவுருவும் தாரகையும் -தானே
எரிசுடரும் மால் வரையும் எண்டிசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை–38-
பதவுரை
எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவேயிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.
உலகத்திலுள்ள ஸகலபதார்த்தங்களும் அவனுக்கு சரீரபூகங்களாய் எல்லாவற்றுக்கும் அவன் சரீரியாய்
இருப்பவனாகையாலே அவனோடு ஒப்புச் சொல்லலாவதொரு பொருள் இல்லை,
அவனுக்கு அவன்றானே உவமை என்கிறார் இது, அநந்வயாலங்காரம்.
————————————————————————————————————————————————————–
இப்படி ஜகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேயாயிருக்கும் பெருமான் திருமலையிலே வந்து ஸந்திஹிதனாய்ப்
பின்பு என்னுடைய ஹ்ருதயத்தைவிட்டுப் போகிறனில்லை யென்கிறார்.
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே யுளன் -39-
பதவுரை
இறை ஆய்–ஸர்வஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறைபொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்
இதில் முன்னடிகளிரண்டும் ‘கீழ்ப்பாட்டிற் பொருளின் அநுவாதம்.
பிறைவாய்ந்த –இது வேங்கடத்திற்கு விசேஷணம், அருகி வெள்ளத்திற்கு விசேஷணமாகவுமாம்.
சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கும்படியைச் சொன்னவாறு.
எங்கணும் பேரொலி செய்துகொண்டு பெருகுகின்ற அருவிகள் நிறைந்தும் ஓங்கியுயர்ந்ததுமான
திருமலையிலுள்ளவனாய்க்கொண்டு அங்கிருந்து என்னுள்ளத்தில் வந்து சேர்ந்தவனாயின னென்கிறார்.
“மலைமேல் தான் நின்று என்மனத்துளிருந்தானை“ என்ற திருவாய்மொழியுங்காண்க.
————————————————————————————————————————————————————–
இப்படி ஸர்வாதிகனான எம்பெருமான் நம்மிடத்து வந்து புகுந்த பின்பு, நெஞ்சே! நமக்கு ஒரு குறையுமில்லை காண் என்கிறார்.
நம்முடைய ஸத்தையை நோக்குவதற்காகவே தான் ஸத்தை பெற்றிருக்கின்றான்,
‘எம்பெருமானுளன்‘ என்று நாம் இசைந்தாலும் இசையாவிட்டாலும் எப்போதும் நம்முடைய ரக்ஷணத்திலே
முயன்று உளனாயிருக்கின்றான், இதற்குறுப்பாகத் திருவேங்கடமலையிலே வந்து தங்குமவன்,
இக்குணங்களையெல்லாம் த்ரிவிக்ரமாவதாரத்தில் விளங்கக் காட்டினவன்.
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்தும் உளன் கண்டாய்
விண் ஒடுங்க கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மண் –40-
பதவுரை
நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்
————————————————————————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply