***- எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான
திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார்.
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
பதவுரை
| எழில் மலர் மாதரும் தானும் |
– |
அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும் |
| இன்பம் பயக்க |
– |
பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக |
| இனிது உடன் வீற்றிருந்து |
– |
இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து |
| இ ஏழ் உலகை |
– |
இவ்வுலகங்களையெல்லாம் |
| இன்பம் பயக்க ஆள்கின்ற |
– |
இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற |
| எங்கள் பிரான் |
– |
எம்பெருமான் |
| அன்புற்று அமர்ந்து உறைகின்ற |
– |
மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற |
| அணி பொழில் சூழ்திருவாறன் விளை |
– |
அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை |
| அன்புற்று அமர்ந்து |
– |
அன்போடு பொருந்தி |
| வலஞ் செய்து |
– |
ப்ரதக்ஷிணம் பண்ணி |
| கை தொழும் நாள்களும் ஆகும் கொல் |
– |
கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ? |
ஸம்ஸாரி சேதநர்கள் எம்பெருமானோடு சேர்ந்து ஆனந்தமநுபவிப்பது போல, அவ்வெம்பெருமான் தானும் பிராட்டியோடு சேர்ந்தே ஆனந்தமநுவிபவிக்கப் பெறுகின்றானென்பது முதலடியிற்போதரும்.
“இவ்வேழுலகை இன்பம் பயக்க” என்றவிடத்தில் ஈடு-; மாதாபிதாக்களிரு வரும் சேரவிருந்து பரியப்புக்கால் ப்ரஜைகளுக்கு ஒரு குறைவுகளும் பிறவாதிறே. ஆக இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தமுண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தமுண்டாக, அதுதன்னைக் கண்டு ப்ரஜை பால் குடிக்கக் கண்டுகக்கும் தாயைப்போலே இவர்களுக்குண்டான ப்ரீதியைக்கண்டு அத்தாலே தாங்கள் இனியராயிருப்பர்களாயிற்று.”
திருவாய்மொழி கேட்கைக்குப் பாங்காயிருப்பதொரு தேசம் பெற்றோமென்று பெறாப்பேறு பெற்றாப்போலே விரும்பி யெழுந்தருளியிருக்கிற தேசமென்பது தோன்ற “இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற” என்கிறார்.
இப்படிப்பட்ட பெருமான் அவ்விடத்திலிருப்பை ஸ்வயம் ப்ரயோஜநமாகக் கருதி, அவதாரங்கள் போலே தீர்த்தம் ப்ரஸாதியாதே நித்யவாஸம் பண்ணுமிடமாய், அவன் தன் விபூதியோடேயிருந்து திருவாய்மொழி திருச்செவி சாத்துகைக்கீடான பரப்பையுடைய பூம்பொழிலாலே சூழப்பட்டதான திருவாறன் விளையை ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்கரிக்கும் படியான காலம் என்றோ வென்றாராயிற்று.
————-
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-
பதவுரை
| ஜயம் ஒன்று இன்றி ஆகும் கொல் |
– |
(நமது மநோரதம்) நிஸ்ஸந்தேஹமாக ஸித்திக்குமோ? |
| அகல் இடம் முற்றவும் |
– |
விஸ்தீர்ணமான உலகங்களெல்லாம் |
| ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த |
– |
இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின |
| திரு குறள் அப்பன் |
– |
ஸ்ரீவாமனமூர்த்தி |
| அமர்ந்து உறையும் |
– |
விரும்பி வர்த்திக்குமிடமாய், |
| மாகம் திகழ் |
– |
பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற |
| கொடி மாடங்கள் நீடு மதிள் |
– |
கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான |
| திருவாறன் விளை மா கந்தம் நீர் கொண்டு தூவி |
– |
சிறந்த பரிமளம் பொருந்திய தீர்த்தத்தைக்கொண்டு தூவி |
| வலம் செய்து |
– |
ப்ரதக்ஷிணம் பண்ணி |
| கை தொழ கூடும் கொல் |
– |
அஞ்ஜலிபண்ணி நேருமோ? |
***- “ஆகும்கொல் ஜயமொன்றின்றி” என்கிறவிது ஆழ்வாருடைய மநோரதமாகவுமாம், திருக்குறளப்பனுடைய மசோரதமாகவுமாம்.
பாட்டின் முடிவிலே “கைதொழக் கூடுங்கொலோ” என்றிருப்பதனால் ‘ஆகுங்கொல் ஜயமொன்றின்றி’ என்பது புநருக்தமாகாதோ வென்னில், ஆகாது;
முதலில் ஸாமாந்யமாக மநோரசித்து, மேலே விவரிக்கிறபடியென்று கொள்ளலாம்.
வாமநமூர்த்தியின் எண்ணமாக அந்வயிக்குமிடத்தில் இந்த சங்கைக்கே ப்ரஸக்தியில்லை.
அகலிடம் முற்றவும் ஈரடியால் அளக்க ஆகுங்கொல்! என்கிற ஜயமின்றியே நிமிர்ந்து அளந்தானென்று கொள்க.
மாகந் திகழ்-மஹாகம் என்கிற வடசொல் மாகம் என்று கிடக்கிறது.
எம்பெருமான் திருவடிகளாலளந்த ஆகாசப் பரப்படங்கலும வியாபியாநின்றுள்ள கொடிகளையுடைத்தான மாடங்களையும் ஓங்கியிருந்துள்ள மதிட்களையுடைத்தான திருவாறன்விளையை சந்தந கர்ப்பூராதி ஸுகந்தத்ரவ்யவாஸிதமாய் ஹிமசீதளமான நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழும் பாக்கியம் வாய்க்குமோ! என்றாராயிற்று.
மஹாகந்த மென்ற வடசொல் மாகந்த மென்று திரிந்தது.
இந்த திவ்யதேசத்திற்கு மங்களாசாஸநார்த்தமாக எழுந்தருளும் பெரியயார்கள் ஆழ்வாருடைய இப்பாரிப்புக்கிணங்க ஸுகந்தசந்தனச் சேற்றைத் திருமதிளிலே தூவி வழிபாடு செய்வது வழக்கம்.
—————
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-
பதவுரை
| வைகலும் கூடும் கொல் |
– |
(நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ? |
| கோவிந்தனை |
– |
ஆயர்தலைவனும் |
| மதுசூதனை |
– |
மதுகைடபஹந்தாவும் |
| ஆடு பறவை மிசை கண்டு |
– |
வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு |
| கைதொழுது |
– |
அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல் |
| அவன் உறையும் |
– |
அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமாய், |
| பாடும் பெரு புகழ் நால் மறை ஜந்து வேள்வி ஆறு அங்கம் பன்னினர்வாழ் |
– |
உரக்கப்பாடப்படுகிற மிக்க புகழையுடைய நான்கு வேதங்களென்ன, பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன, சீவீக்ஷி முதலான ஆறங்கங்களென்ன இவற்றிலே மிக்க பரிசய முள்ளவர்கள் வாழுமிடமாய் |
| நீடு பொழில் |
– |
பெரிய சோலைகளையுடையதான |
| திருவாறன் விளை |
– |
திருவாறன் விளைப்பதியை |
| நிச்சலும் தொழ வாய்க்கும் கொல் |
– |
எப்போதும் தொழுது கொண்டேயிருக்கும் படியான பாக்கியம் வாய்க்குமோ? |
***- பாட்டின் முடிவிலே “வாய்க்குங்கொல் நிச்சலும்” என்றிருக்கச் செய்தேயும் தொடக்கத்தில் “கூடுங்கொல் வைகலும்” என்றது ஆதராதிகசயத்கையும் விரைவுமிகுதியையுங் காட்டும்.
அங்குறையும் பெருமான் பக்கலிலே விளங்கும் ஆச்ரித வாத்ஸல்யத்தைக் கண்டு கோவிந்தனை என்றார்;
விரோதிநிரஸனமிடுக்கைக் கண்டு ‘மதுசூதனைக் கோளரியை’ என்றார்.
“ஆடும் பறவை மிசைக்கண்டு” என்ற சொல்நயத்தை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தம்-திருவாறன்விளையை உத்தேச்யமாகக் கொண்டு எம்பெருமானை அங்கே காணவேணுமென்று நாம் அவ்விடந்தேடிச் சென்றால், அவன் திருநகரியை உத்தேச்யமாகக்கோண்டு இங்கே நம்மைக் காணவேணுமென்று ஆடும் பறவைமிசையேறி வருவனே; அன்னவனை நடுவழியிலே கண்டு—என்று.
கைதொழுதன்றி—கைதொழுவது மாத்திரமேயல்லாமல் என்றபடி
வேதாத்யயந பரர்களும் பஞ்சமஹாயஜ்ஞபராயணர்களும் வாழுமிடமென்கிறது மூன்றமடி.
—————
***- திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக;
அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார்.
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-
பதவுரை
| வாய்க்கும் கரும்பும் பெரு செந்நெலும் வயல் சூழ் |
– |
செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற |
| திருவாறன் விளை |
– |
திருவாறன் விளைப்பதியிலே, |
| வாய்க்கும் பெரு புகழ் |
– |
வாய்ந்த மிக்க கீர்த்தியையுடையவனும் |
| மூ உலகு ஈசன் |
– |
மூவுலங்களுக்கும் ஸ்வாமியும் |
| வட மதுரை பிறந்த |
– |
வடமதுரையில் அவதரித்தவனும் |
| வாய்க்கும் மணி நிறம் |
– |
அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தையுடையனுமான |
| கண்ண பிரான் தன் |
– |
ஸ்ரீ க்ருஷ்ணபகவானுடைய |
| மலர் அடி போதுகள் |
– |
விதஸிதமான திருவடித்தாமரைகளை |
| எப்பொழுதும் |
– |
இடை வீடின்றி |
| ஈங்கு மனத்து நினைக்க பெற |
– |
இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு |
| நிச்சலும் வாய்க்கும் கொல் |
– |
எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ? |
நிச்சலும் என்று சொல்லி, பின்னை எப்பொழுதும் என்கைக்குக் கருத்து என்னென்னில்;
இங்கு ஈடு காண்மின்;- “நித்யாக்நிஹோத்ரம் போலே ஒரு கால விசேஷத்திலேயாய்ப் போக வொண்ணுது; எல்லாவஸ்தைகளிலுமுண்டாகவேணும்” என்று.
ஒருவர் நித்யம் அக்நிஹோத்ரம் பண்ணுகிறாரென்றால் இரவும் பகலும் அதுவே தொழிலாக இருக்கிறாரென்பதில்லையே; ஒரு நாளைக்கு ஒரு சிறுபோது அக்நிஹோத்ரம் பண்ணினாலும் நித்யாக்நிஹோத்ரியென்று பெயர் வந்துவிடுமன்றோ. அப்படியாகாமே அநவரகமும் நினைக்கப் பெறவேணுமென்கிறது.
மனத்தீங்கு-ஈங்கு என்று பிரிக்க. உத்தேச்யமான தொன்றை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிக்க மநோரத;, யதி நாசம்நவிந்தேத தாவதாணஸ்மிக்ருதீ ஸதா-என்கிற ஜிதந்தாச்லோகம் இங்கு ரஸமயமாக வியாக்கியானிக்கப் பெற்றுள்ளது.
“நாட்டார் மநோரத மென்றும் அநுபவமென்றும் இரண்டாகவிறே சொல்லிப்போருவது; எனக்கு இதெல்லாம் வேண்டாம்; இம்மநோரத மாத்ரத்தாலே க்ருதக்ருத்யன் நான். சரீரஸம்பந்தமற்றுப் பரமபதத்திலேபோய் ஏற்றமாக அநுபவிக்கு. மதிற்காட்டில் நான் பேறாக நினைத்திருப்பது இத்தையே” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் ரஸிக்கத்தக்கன
இங்கு, இளையாற்றுக்குடி நம்பி யென்பாரொரு பரமபக்தருடைய இதிஹாஸமொன்றும் அருளிச்செய்யப்பட்டுள்ளது. அவர் திருநாட்கள்தோறும் கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவித்துப்போவராம் போனால், மீண்டும் திருநாள் வருமளவும் அதனையே போது போக்காக ஸ்மரித்துக்கொண்டிருப்பராம். அவர் நூறு வயஸ்ஸூம் புகுகையாலே பலஹாநி பிறந்த திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்ட ஷருளுகைக்கு உதவவந்து புகுரப்பெற்றிலர். பெருமாளும் தேடியருளிக்காணாமை ‘நம் இளையாற்றுக்குடியான் வந்திலன், நம் கண்ணுலமல்லவோ’ என்று திருவுள்ளமானாராம். அவர் தாம் ஆறாந்திருநாளிலே; ஸேவித்திருக்கச்செய்தே ‘நாம் உனக்குச் செய்யவேண்டுவதென்?’ என்று கேட்;டருள், ‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக்கொண்டு போர ஜாஜீத்தது’ என்ன, ‘வாராய்! மெய்யே யிளைத்தாயாகில் இங்ஙனேயிரு’ என்றருளிச் செய்தார். பெருமாள் நடுவில்திருவாசலுக்கவ்வருகே யெழுந்தருளுஙகாட்டில் திருநாட்டுக்கெழுந்தருளினார்”
————-
அடியார்கள் அநுபவிக்கைக்காக அநந்தசாயியானவன் வர்த்திக்கிற திருவாறன்; விளையினுடைய
பெரும்புகழைப்பாட, நம் பாபமொன்றும் நில்லாதே தெலைந்தொழியுமென்கிறார்.
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-
பதவுரை
| மலர் அடி போதுகள் |
– |
பரமபோக்யமான திருவடித்தாமரைகளை |
| என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி |
– |
எனது நெஞ்சிலே அநவரதமும் இருக்கும்படி பண்ணி |
| வணங்க |
– |
தன்னையே வணங்குமாறு; |
| பலர் அடியார் முன்பு அருளிய |
– |
மற்றும் பல பக்தர்கள் இருக்கச்செய்தேயும் அவர்களுக்கு முன்னே எனக்கு க்ருபை பண்ணின |
| பாம்பு அணை அப்பன் |
– |
அனந்தசாயியான எம்பெருமான் |
| அமர்ந்து உறையும் |
– |
உகந்து வர்த்திக்குமிடமாய் |
| மலாஜீல் |
– |
(தேவர்கள் வர்ஷித்த) புஷ்பங்களோடு கூடின |
| மணி நெடுமாடங்கள் |
– |
மணிமயமான ஓங்கின மாடங்களையும் |
| நீடு மதிள் |
– |
நெடிய திருமதிள்களையுமுடைத்தான |
| திருவாறன் விளை |
– |
திருவாறம்விளைப்ப தியினுடைய |
| உலகம் மலி புகழ் |
– |
உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை |
| பாட |
– |
பாடினவளவிலே |
| நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் |
– |
நம்மிடத்துள்ள பாவங்கள் ஒன்றும் மிச்சப்படாதபடி எல்லாம் தொலைந்துபோம். |
(பலரடியார் முன்பருளிய) இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமானவை;-“ஸ்ரீவேதவ்யாஸபகவான் ஸ்ரீ பராசரபகவான் இன்கவி பாடும் பரமகவிகளென்று சொல்லப்படுகிற முதலாழ்வார்களெல்லாரு முண்டாயிருக்க, என் பக்கலிலே விசேஷகடாக்ஷிம் பண்ணுவதே! முதலிகளெல்லாருமிருக்கச்செய்தே திருவடிபக்கிலிலே விசேஷகமபக்ஷம் பண்ணினாப்போலேயாயிற்று பலருமுண்டாயிருக்க இவரை விஷயீகரித்தபடி.”
இங்கு ஆழ்வானுடய அற்புதமான அதிஹாஸமொன்று (ஈட்டில்) காட்டப்பட்டுளது. கேண்மின்; அக்காலத்திலே அரசாண்டுவந்த சோழராஜன் வைஷ்ணவை த்ரோஹியாகையாலே ஆங்காங்குள்ள விஷ்ணுப்ரதிமைகளை யெடுத்து எறிந்து விடவேணுமென்று முயன்றபோது அவனுக்கு இஷ்டரானவர்கள் ‘மந்த்ரபூர்வகமாக ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணுபிம்பங்களை யழியச் செய்தால் ஊருக்குப்பெருத்த தீங்கு விளையும்’ என்று சொல்ல.
அதுகேட்ட சோழன் ‘அந்த ப்ரதிமைகளில் தெய்வசக்தியை உத்வாஸநம்பண்ணி யழியச் செய்வோம் என்று நிச்சயித்து ஒரு ப்ராஹமணனுக்குப் பணங்கள் கொடுத்து நீ அத்ருச்யாஞ்ஜநமிட்டுக் கொண்டு உத்வாஸநம் பண்ணு என்று ஆஜ்ஞாபிக்க,
அவனும் திவ்யதேசங்களிலே சென்று அப்படியே அத்ருச்யாஞ்ஜநமிட்டுக்கொண்டு உத்வாஸநம் பண்ணி பகவத் விக்ரஹங்களைக் கடலிலே யெடுத்தெறிகிற செய்தியை எம்பெருமானர் திருச்செவிசாத்தி
‘நாம் நெடுநாளாக இவ்விடத்துக்கும் அழிவுவரும்படி ஆஸூரவர்க்கம் மேலிடாநின்றது; இனிமேல் செய்யவேண்டுவதென்?’ என்று வியாகுலப்பட்டுப் பெரிய நம்பியோடே சிந்தித்திருக்க,
நான் பெருமாளுடைய திருவெல்லையிலே ஒரு ப்ருதஷிலாம் வரும்படியாக உம்முடைய சிஷயர்களில் ஒருவரை என் பின்னே அனுப்ப வேணும்; என் பின்னே வார நின்றால் ‘ஒருவன் பின்னே போகிறோம்;’ என்று தன்னெஞ்சில் படாதே நிழல் போலே என்னைப் பின்செல்பவனாக இருக்கவேணும்; அப்படிப்பட்ட ஒரு சிஷ்யனைப் பார்த்தனுப்பும்’ என்று பெரியநம்பி திருவாய்மலர்ந்தருள,
இப்படிப்பட்ட ஆத்மகுணபரிபூர்ணரான சிஷ்யர் ஆழ்வானொருவரேயென்பது உடையவர்க்கு நன்கு தெரிந்திருந்தும் இதனைப் பெரியநம்பி திருவாக்கனால் வெளியிடுவிக்க வேணுமென்றெண்ணிக்கொண்டு நம்பியை நோக்கி ‘இப்படிப்பட்ட சிஷ்யர் இவ்விடத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே’ என்று சொல்லி நிற்க,
‘நம் கூரத்தாழ்வானை அனுப்பலாகாதோ?’ என்று நம்பி நியமித்தருள,
அருகிலிருந்த ஆழ்வான் இதைக் கேட்டு ‘நம்பிகள் நம் ஸ்வரூபத்தினுண்மையை இங்ஙனேயறிந்து பல சிஷ்யர்களின் முன்னே இப்படி யருளிச்செய்யும்படியான பாக்கியம் பெற்றோமே! என்று பெருமகிழ்ச்சியடைந்து, நம்பிகளின் திருவுள்ளப்படியே பிரதக்ஷிணத்திற்குப் பின் சென்றார். “பலரடியார் முன்பருளிய” என்றவிடத்திற்கு இது மிகவும் பொருத்தமான இதிஹாஸம்.
—————
எம்பெருமான் பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும்
தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார்.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
பதவுரை
| அன்று அங்கு |
– |
முன்பொரு காலத்தில் |
| அமர் வென்று |
– |
பூசலிலே வெற்றி பெற்று |
| உருப்பிணி நங்கை |
– |
ருக்மிணிப் பிராட்டியினுடைய |
| அணி நெடுதோள் புணர்ந்தான் |
– |
அலங்காரங்களால் பரம போக்யமான திருத்தோள்களையணைந்தவனும் |
| என்றும் எப்போதும் துதிப்ப என் நெஞ்சம் உள்ளே இருக்கின்ற பிரான் |
– |
ஓய்வின்றி நான் துதிக்கும்படி எனது நெஞ்சினுள்ளேயிருப்பவனுமான பெருமான் |
| நின்ற |
– |
நித்யவாஸம் பண்ணுகிற |
| அணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அது |
– |
அழகிய திருவாறன் விளையென்கிற அந்த மஹா நகரத்தை |
| தொண்டீர் |
– |
தொண்டர்களே! |
| உள்ளிதொழுமின் |
– |
சிந்தித்துத் தொழுங்கோள்; |
| தீவினை ஒன்றும் நில்லா முற்றவும் கொடும் |
– |
கொடிய பாவங்களொன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து முழுதும் நசித்துப்போம். |
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவுனை—பாபங்களை நாமேபோக்கிக் கொள்வதாக முயலுமளவில் சிறிது கிடக்க்ச் சிறிது போகும்;
அங்ஙனன்றிக்கே ஸர்வசக்தியான அவன் தானே போக்குகையில் வாஸநையோடே போகக்கடவதாயிற்று.
ஸ்ரீ விஷ்ணுதர்மத்தில் மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி. என்று கூறினது இங்கே அநுஸந்தேயம்.
அமர்வென்று உருப்பிணிநங்கை யணிநெடுந்தோள் புணர்ந்த வரலாறு வருமாறு;-
விதர்ப்பதேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மன் முதலிய ஜந்து பிள்ளைகளும் ருக்மிணி யென்கிற ஒரு பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷித் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு யுக்தவயது வந்தவுடனே கண்ணபிரான் அங்குச் சென்று இப்பெண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்களென்று கேட்க,
ருக்மனென்பவன் அவளைச் கிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணணுக்குக் கொடுக்கலாகாதென்று தகைந்துவிட்டு, சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கலியாணத்திற்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேசத்தரசர்களையுல் வரவழைத்திட்டனன்.
இதனிடையில் ருக்மிணி “அன்றிப் பின் மற்றொருவற் கென்னைப் பேசலொட்டேள் மாலிருஞ்சோலையெம்மாய்ற்கல்லால்” என்ற துணிவையுடையளாகையால் தன்னை எவ்வகையினுலாகிலும் மணந்து செல்லும்படி கண்ணபிரானிடத்து ஓரந்தணனைத் தூதுவிட்டிருந்தாள்.
கண்ணபிரானும் அங்ஙனமே பலராமன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்திற் கெழுந்தருளிக் கல்யாண முஹீர்த்தினத்திற்கு முதனாள் அந்த ருக்மிணியைத்தான் ப்ரகாசமாக வெடுத்துத் தேரிலேற்றிக்கொண்டு ஊர்நோக்கிப் புறப்படப்புக,
சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை யெதிர்த்துப் போர் செய்யமுயல, பலராமனும் தானுமாக அவர்களை வலியடக்கி வென்று ஓட்டிவிட, பின்பு (ருக்மிணியின் தமையனான) ருக்மன் மிகவும் வெகுண்டு ஆக்ரஹப்பட்டுக் கண்ணனை முடிப்பதாக ஓங்கிவர,
அவனைக் கண்ணபிரான் ருக்மிணியின் பிரார்த்தனையின்படி உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும் குடுமியையும் சிரைத்துப் பங்கப்படுத்தினன்.
சேலேந பத்த்வா தமஸாதுகாரிணம் ஸச்மச்ருகேசம் ப்ரவபந் ச்யரூபயத் என்பது ஸ்ரீபாகவதம்.
இங்ஙனே விரோதிகளைத் தொலைத்துப்பிறகு ருக்மிணிப்பிராட்டியைத் திருமணம் புணர்ந்தானாயிற்று.
————-
***- திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே
அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில்.
இத்திருப்பதியின் சுவையை யறியாதார்க்கன்றோ பரமபதம் ப்ராப்யமாவது;
இதன் சுவையறிந்தார்க்குப் பரமபதம் ஒரு பொருளாகத் தோன்றுமோ?
இத்தலமேயன்றே பரமபதமாவது. எம்பெருமானுக்குங்கூட ப்ராப்யபூமி இதுவான பின்பு இவ்வர்த்தத்தில் ஸம்சயமுண்டோ?
விரோதிகளைப்போக்கி இத்தலத்தில் வாஸத்தை யளிப்பதற்கு உபாயபூதன் அப்பெருமானேயாவன்.
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-
பதவுரை
| மலர் சோலைகள் சூழ் |
– |
பூஞ்சோலைகள் சூழ்ந்த |
| திருவாறன் விளை அதுவே நீள் நகரம் |
– |
திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்; |
| நாள் நகரத்து |
– |
(அந்த) மஹாநாகரத்தில் |
| உறைகின்ற பிரான் |
– |
நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய் |
| நெடுமால் |
– |
வியாமோஹமுவீ;யனாய் |
| கண்ணன் |
– |
ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய் |
| விண்ணவர் கோன் |
– |
நித்யஸீரிகளுக்குத் தலைவனாய் |
| வாணபுரம் புக்கு |
– |
பாணாஸுரனுடைய நகரிலே சென்று |
| முக்கண் பிரான் தொலைய |
– |
சிலபிரான் பங்கமடையும்படி |
| வெம் போர்கள் செய்து |
– |
கொடிய யுத்தத்தை நடத்தி |
| வாணனை ஆயிரம் தோள் துணித்தான் |
– |
பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான் |
| சரண் |
– |
(அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்; |
| அன்றி மற்று ஒன்று இலம் |
– |
கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம் |
அன்றி மற்றொன்றிலமே என்றவிடத்து ஈடு—“இங்ஙனல்லது ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக்கடவோமல்லோம்” என்று. என்பெருமானை பராப்யனாகக் கொண்டு அவனைப் பெறுதற்கு உபாயமாக இத்திருப்பதியைக்கொள்வர் சிலர்;
அது தகுதியற்றதென்று ஆழ்வார் தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிட்டருளினாராயிற்று.
—————
***- திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார்.
கஜேந்திராழ்வானுடைய துயரைக் தர்ந்தவன் அங்ஙனமே நம்போல் வாருடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே
வந்து நிதான நிதி பண்ணயிராநின்றான்; அங்குச் சென்று கிட்டி நாம் வலஞ்செய்ய்க்கூடுமோ’
கூடுமாகில் கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்த மற்றவையாகிப் பாறிப்பறத்தொழியும் என்றாராயிற்று.
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-
பதவுரை
| அகல் இரு பொங்கையின் வாய் நின்று |
– |
மிகப் பெரிய பொய்கையிடத்திலே (முதலையின் வாயிலாகப்பட்டது) நின்று |
| நின் சரண் அன்றி மற்று ஒன்று இலன் என்று தன்; நீள் கழல் எத்திய ஆனையின் |
– |
‘உன் திருவடிகளை யொழிய மற்றொரு புகலுடையே னல்லேன்’ என்று தன்னுடைய திருவடிகளைத் துதித்த கஜேந்திராழ்வானுடைய |
| நெஞ்சு இடர் தீர்த்த பிரான் சென்று |
– |
செழும் நெஞ்சிலிருந்த இடரைப் போக்கின பெருமான் சென்று அங்கு இனிது உறைகின்ற பொழில் சூழ் திருவாறன் விளை (யை) |
| ஒன்றி ஸலம் செய்ய ஒன்றுமோ |
– |
கிட்டி வலஞ் செய்யக் கூடுமோ? |
|
(அப்படி கூடுமாலீகில்) |
||
| தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவே |
– |
பாவங்கள் நெஞ்சில் பொருத்த முடையன வல்லவாம். |
பொய்கையில் முதலையிலகப்பட்டு கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹே ஆகர்ஷதே ஜலே என்னும்படி முதலே நீருகிழுக்க, தான் தரைக்கிழுக்க, இப்பயாகப் பல வருஷங்கள் ஸ்வப்ரவ்ருத்தியாலே உய்யப் பார்த்த கஜேந்திராழ்வான் ‘இந்த ஸ்வப்ரவ்ருத்தியானது பகவத்ப்ரவ்ருத்திக்க விரோதியாய் நின்றது;
இதற்கு நிவ்ருத்தியுண்டானால்லது அவனருள் பெருகாது’ என்று துணிந்து “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று அத்யவஸாயங்கொண்டு எம்பெருமானது திருவடிகளை யேத்தினமை முன்னடிகளிற் கூறப்பட்டது.
ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் – ஆனைக்கு இடராவது, உயிர் தொலைகிறதே யென்கிற இடரன்று; வெகு சிரமப்பட்டுப் பறித்த செவ்விப்பூவைத் சிறுகளிலே ஸமர்ப்பித்தப்பெற தொழிகிறோமோ! என்று உண்டான எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகிறதோ! என்று தோன்றும் வுமாம்;
அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காத்தருளாவுமானம் ரக்ஷ்கனென்னத் தகுதியுடையனல்லன் என்று உலகத்தார் ஸத்தாந்கம் செய்து விடப் போகிறார்களே யென்று யானை இடர்ப்பட்டதென்கை.
————
திரு வாறன் விளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம்
அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார்
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-
பதவுரை
| தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி |
– |
பாவங்கள் நெஞ்சில் சேர்த்தியற்று ஜஹருதயம் நிர்த்தோஷமாகிஸ |
| தெளி விசும்பு ஏறல் உற்றல் |
– |
திருநாட்டிலே போக ப்ராப்தமானலும் (அங்குச் செல்ல விருப்பமற்று) |
| என் சிந்தனை |
– |
எனது நெஞ்சானது. |
| நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் |
– |
மநோ வாக்காயங்களினாலே பயின்று யாவரும் வந்து வணங்குமிடமான |
|
பொழில் திருவாறன் வினையதனை |
||
| மேலி வலம் செய்து கைதொழ கூடும் கொல் என்னும் |
– |
பொருந்தி வலஞ்செய்து கைதொழ ப்ராப்த மாகுமோ! என்று இதனையே யெண்ணை நின்றது. |
பாவங்களெல்லாம் தொலைந்து பரமபதத்திலேறப் பெறுகையாகிற ஒரு ஸமய விசேஷம் வந்து கிட்டினைலும்
என்னெஞ்சானது அதில் ருசியற்று, பரமபோக்யமான திறவாறமவிளையே கிட்டித் தொழ நேருமோ வென்று பாரியா நிற்கும் என்றராயிற்று.
————–
***- ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே ப்ராவண்யம் முற்றியிருந்தீராகிலும், பலகாலும் பரமபதமென்று
வாய்வெருவிக்கிடந்தீராதலால் எம்பெருமான் அதையே கொள்ளுமென்று நிர்ப்பந்தித்துக் கொடுத்கானானாகில்
என் செய்வீரென்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு உத்தரமுரைக்கிறார். இப்பாட்டில்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-
பதவுரை
| சிந்தையினால் சொல்லினால் செய்கையால் |
– |
மனோவாக்காயங்களாலே |
| நிலத்தேவர் குழு வணங்கும் |
– |
பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற |
| சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை |
– |
மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற |
| தீர்த்தனுக்கு அற்றபின் |
– |
பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின் |
| சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை |
– |
எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக நினைத்திராத படியை |
| தேவபிரான் அறியும் |
– |
ஸர்வஜ்ஞனான எம்பெருமான தானே அறியக்கடவன்; |
| சிந்தையினால் செய்வ |
– |
நெஞ்சால் செய்யப்படுமவற்றில் |
| தான் அறியா தன மாயங்கள் ஒன்றும் இல்லை |
– |
அவன் தானறியாத வஞ்சனாங்களொன்றுமில்லையே. |
அவன் புருஷார்த்தப்ரதன் என்று ப்ரஸித்தனல்லனோ. புருஷன் அர்த்தித்ததை யன்றோ அவன் கொடுத்தருள்வன். எனது ப்ரஸித்தனல்லனோ.
புருஷன் அர்த்தித்தைறையும் கணிசியாதிருக்கும்படியை அவன் அறிய அசக்தனல்லனே;
அறிந்து வைத்து எங்ஙனே மற்றொன்றுதன்னைக் கொடுப்பவனே என்கிறார்.
“மற்றென்கிறது பரமபதத்தின் பேர் சொல்லுகையுங்கூட அஸஹயமான படி.” என்ற ஈடு காண்க.
————–
இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-
பதவுரை
| தீர்த்தனுக்கு அற்றபின் |
– |
பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு |
| மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி |
– |
வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு |
| தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி |
– |
அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு |
|
செழு குருகூர் சடகோபன் சொன்ன; |
||
| தீர்த்தகங்கள் ஆயிரத்துள் |
– |
ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே |
| இவை பத்தும் வல்லார்களை |
– |
இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி |
| தேவர் |
– |
நித்யஸூரிகள் |
| வைகல் |
– |
எப்போதும் |
| தம் தேவியர்க்கு |
– |
தங்கள் மஹிஷிகளிடத்திலே |
| தீர்த்தங்களே |
– |
‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள். |
ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்களாயிற்று.
இந்தப் பதிகத்தை அப்யஸிக்கவல்லார்களை திருவடி திருவனநதாழ்வான் ஸேனைமுதலியார் தொடக்கமான நித்யஸுரிகள்
‘இவர்கள் பரம மவத்திரர்கள் என்று ஆதரித்துக் கொண்டு போந்து, தங்கள் மஹரிஷிகளை சொல்லிக களிப்பார்கள் என்றராயிற்று.
திருவடியின் தேவிகள் ருத்ராஸூகீர்த்திகள்; ஸேனை முதரலிகளின் தேவிகள் ஸூத்ரவதி என்றிப்படி ப்ரஸிக்தமன்றோ;
அவர்களைப் இங்குத் தம் தேவியா என்கிறது.
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-