மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
பதவுரை
| மாயா |
– |
ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! |
| வாமனனே |
– |
வாமநாவதாரஞ் செய்தவனே! |
| மதுசூதா |
– |
மதுகைடபர்களைத் தொலைத்தவனே! |
| நீ அருளாய் |
– |
உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; |
| தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய் |
– |
பஞ்ச பூதங்களுமாய் |
| தாய் ஆய் தந்தை ஆய் |
– |
மாதா பிதாக்களாய் |
| மக்கள் ஆய் |
– |
வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் |
| மற்றும் ஆய் |
– |
அல்லாதவையுமாய் |
| முற்றும் ஆய் |
– |
சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் |
| நீ ஆய் |
– |
அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் |
| நீ நின்ற ஆறு இவை |
– |
நீ நிற்கிற இந்தச் தன்மைகள் |
| என்ன நியா யங்கள் |
– |
என்னவகைகளோ! |
***- (மாயாவாமனனே) விசித்திரமான காரியங்களையும் காரணங்களையுமெல்லாம் விபூதியாகவுடைனாயிருக்கிறபடியை யநுஸந்தித்து இவையென்ன படிககிற ஆச்சரியங்களுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக, தொடங்கும்போதே மாயா! என்று விளிக்கிறார்.
அதற்கொரு லக்ஷியங்காட்டுகிறார் வாமனனே! என்று. அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மாவலிபக்கலிலே சென்று அவன் முன்னேநின்று தான் சொன்னவையெல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை சொல்லி. சிற்றடியைக் காட்டிப் நமுசியை வானிற் சுழற்றி இப்படி செய்த செயல்களொவ்வொன்றும் ஆச்சரியமன்றோ
மதுசூதா-விரோதிநிரஸனத்தில் வந்தால் மதுகைடபர்களைக் கொன்றது ஆச்சரியமான செயலாயிருக்கும்.
ஒரு ஸமய விசேஷத்திலே மதுகைடபர்கள் எம்பெருமானை யெதிர்த்துப் பெரும்போர் புரிய, எம்பெருமான் இவர்களைத் துடையாலிடுக்கிக் கொன்றருளினானென்று ப்ரஸித்தம்.
ஆழ்வான் ஸூந்தரபாஹூ ஸ்தவத்தில் திருமாலிருஞ்சோலையழகருடைய திருத்துடைகளுக்கு விசேஷணமிடும்போது “பிஷ்ட துஷ்டமதுகைடபகிடௌ” என்றார்.
பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்வத்திலே அழகியமணவாளனுடைய திருத்துடைகளை வர்ணிக்கும்போது “மதமிவ மதுகைட ரங்ககுஞ்ஜரோர்வோ: என்றருளிச்செய்தார்.
இது வொரு ஆச்சரியமான செயலாதலால் இங்கு மதுசூதா! என்றது.
நீயருளாய் என்றது – நீ க்ருபைபண்ணவேணு மென்றபடியன்று; எனக்குக் தெளிய வருளிச்செய்யவேணு மென்றபடி.
மேலிற் பாசுரங்களிலு மிப்படியே பொருள் காண்க.
தீயாய் நீராய் நிலனாய் – தீயாயிருப்பது நீராயிருக்க முடியாது; நீராயிருப்பது தீயாயிருக்க முடியாது. அவ்வவற்றின் தன்மை வெவ்வேறுபட்டதாதலால் ஒன்று வேறென்றாயிருக்க முடியாது.
எனினும், எம்பெருமானொருவனே தீயாயும் நீராயும் நிலனாயும் விசும்பாயும் வாயுவாயுமிருப்பது ஆச்சரியமே.
இப்படியே, தாயாயிருப்பவள் தந்தையாயிருக்க முடியாது; தந்தையாயிருப்பவன் தாயாயிருக்க முடியாது இவர்கள் தாம் மக்களாயிருக்க முடியாது; எனினும் எம்பெருமானொருவனே தாயாயும் தந்தையாயும் மக்களாயும் ஸகலவித பந்துக்களாயுமிருப்பது ஆச்சரியமே.
நீ நீயாய் நின்றவாறு—தீயாயும் நீராயும் தாயாயும் தந்தையாயுமிருக்கிற விருப்பு ஸாராரணாகாரமெனப்படும்.
அஸாதாரணவிக்ரஹத்தோடு கூடியிருக்கும் திவியமான விருப்பானது நீயாய் நின்றவாறு என்ப்படுகிறது.
ஈடு—“ பாமபத்திலே ஸூரிபோக்யனாயிருக்கிற விருப்போடு ஜகதாகாரனாய் நிற்கிற நிலையோடு வாசியற போக்யமாம்படியிறே இவர்க்குப் பிறந்த ஜ்ஞாநவைசத்யம்.
இவை என்ன நியாயங்களே! இது விஸ்மயப்பட்டுச் சொல்லுகிற வார்த்தை இது இன்னபடியென்று எனக்குத் தெரிகிறதில்லையே; தெரிகிறதில்லையே; தெரியவருளிச் செய்யவேணுமென்றாராயிற்று.
—————-
***- கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் –
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-
பதவுரை
| அம் கள் மலர் தண்துழாய் முடி |
– |
அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய |
| அச்சுதனே |
– |
எம்பெருமானே! |
| அருளாய் நீ |
– |
அருளிச்செய்யவேணும்; |
| திங்களும் ஞாயிறும ஆய் |
– |
சந்திரனும் ஸூர்யனுமாயும் |
| செழு பல் சுடர் ஆய் |
– |
லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும் |
| இருள் ஆய் |
– |
இருளாயும் |
| பொங்கு பொழி மழை ஆய் |
– |
பொங்கிப் பொழியும் மழையாயும் |
| புகழ் ஆய் பழி ஆய் |
– |
கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் |
| பின்னும் |
– |
இன்னமும் |
| வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை |
– |
க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள் |
| என்ன விசித்திரம் |
– |
என்ன வேடிக்கை களோ! |
அங்கண்மலர்த்தண்டுழாய் முடியச்சுதனே! என்று திங்களும் ஞாயிறுமாய் – “யதா ப்ரஹ்லாதநாச்சந்த்ர: ப்ரதாபாத் தபநோ யதா” என்றபடியே இருவர்க்கும் இரண்டு காரியங்கள் நியதங்களாயிருக்குமே;
தாபத்தையாற்றுவதும் தாபத்தை விளைப்பதும். இவையிரண்டுமவனிட்ட வழக்கு.
செழும்பல்சுடராய்-அவரவர்களுக்கு வரக்கூடிய நன்மை தீமைகளுக்கு ஸூசகங்களாய்க் கொண்டு ஸூசகங்களாய்க் கொண்டு நக்ஷ்த்திரங்கள் க்ரஹங்கள் முதலியவற்றுக்கும் நிர்வாஹகனென்றபடி.
இருளாய்-சுடராயிருப்பவனும் தானே, சுடர்க்கு எதிரான இருளாயிருப்பனும் தானே. உலகில் ஒளியைத் தேடுவார் சில ரேயாவர்; இருளைத் தேடுமவர்களே பலராவர்; காமுகர்க்கும் கள்ளர்க்கும் இருள் தேட்டமாயிருக்குமே; அன்னவர்கட்கும் உதவியாம்படி இருளாயிருப்பன்.
பொங்குபொழிமழையாய் – ஸகல ப்ராணிகளுக்கும் ஜீவிக்கலாம்படி பயிர்களை யுண்டாக்கி வளர்க்கும் மழையும் தானாயிருக்கும்.
புகழாய்ப்பழியாய் = தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றிலில் தோன்றாமை நன்று (திருக்குறள்) என்றபடி எல்லாரும் விரும்பக் கூடிய புகழும் தானாய், வேண்டாத பழியும் தானாய்.
வெங்கண் வெங்கூற்றமுமாய் – இவ்வுலகங்கள் அதிப்ரவ்ருத்தியில் கைவளர்ந்த போது குளிர நோக்குமது தவிர்த்து வெவ்விய நோக்கையுடைய யமன்போன்று. ஸம்ஹாரகனாய் யமனுக்கும் யமனாயிருக்கிறபடியைச் சொல்லுகிறது.
உபநிஷத்தில் ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம் என்று ஓதிற்று. பகவானுக்கு யமன் ஊறுகாய் என்றது உலகி;ல் ஊறுகாயின் தன்மை எப்படிப்பட்டகென்று பார்க்கவேணும்.
ப்ரஸாதம் முதலியவற்றை உட்கொள்ளுவதற்கு பிறகு அது மிச்சப்பட்டிருந்தால் அதையுமெடுத்து உட்கொள்ளுகிறோம்.
இதுபோல ம்ருத்யுவைக் கருவியாகக் கொண்டு எல்லாவற்றையும் அந்தமடைவித்து, பிறகு ம்ருதபுதன்னையும் லய்மடைவிக்குந்தன்மை இதனால் தெரியவரும்.
இவையென்ன விசித்திரமே அருளாய் = இப்படி சேராச் சேர்ததியான பதார்த்தங்களெல்லாமுமாயிருக்கிற தன்மை மிக விசித்திரமாயிரா நின்றது. இதனைத் தெரிய வருளிச் செய்ய வேணும்.
———————–
***- கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே;
மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின
விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார்.
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
பதவுரை
| சித்திரம் |
– |
விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே! |
| தேர் வலவா திரு சக்கரத் தாய் |
– |
திருவாழிப்படையை யடையவனே! |
| அருளாய் |
– |
நீயருளிச் செய்ய வேணும்; |
| எத்தனை ஓர் உகமும் அவை ஆய் |
– |
க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய் |
| அவற்றுள் இயலும் |
– |
அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய் |
| ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய் |
– |
ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய் |
| வித்தகத்தால் நீ நிற்றி |
– |
ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்; |
| இவை என்ன விடமங்கள் |
– |
இவை யென்ன சேராச்சேர்த்திகளோ! |
தேரை நடத்தும் போது விசிக்திரமான பலபல காரியங்கள் செய்தமையுண்டு.
பெரியயாழ்வார் தமது திருமொழியில் (4 – 2 – 7.) மன்னர்மறுக மைத்துனன்மார்க்கொருதேரின்மேல். முன்னங்குநின்று மோழையெழுவித்தவன் என்கிற பாசுரத்தனைலீல் ஒரு விசித்திரமான இதிஹாஸமருளிச் செய்கிறார்:
அதாவது-அர்ஜூநனுடைய தேர்க்குதிரைகள் தண்ணீர்க்கு விடாய்த்து இளைத்தவளவில், அவன்பக்கல் பக்ஷபாதியான கண்ணபிரான், கடினமான ஸ்தலத்திலும் நீர்நிரம்பு அறியவல்லவனாதலால், அங்கு , கடினமான ஸ்தலத்திலும் கீழுள்ள நீரை வெளிக் கிளப்பிக் குதிரைகளைவிட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக்கொண்டு போந்து பூட்டிக்கொண்டுவந்து முன்னே நிறுத்த,
இதைக்கண்ட மாற்றரசரெல்லாம் ‘இக்கண்ணனுக்கு அர்ஜூனன் பக்கல் பக்ஷ்பாதமிருந்தபடியென்! இனி நாம் இவனை வெல்லுகையென்று ஒன்றுண்டோ? என்று குடல்மறுகினராம்.
இப்படியாகச் செய்த பல பல விசித்திரங்கள் காணத்தக்கன.
பாரதப்போரில் பீஷ்மாசார்யர் ஒரு அரிய பெரிய வார்த்தை சொல்லுகிறார் = நான் ஓர் அம்பினாலேயே பாண்டவர்கள் ஐவரையும் அவர்களது சேனைத் தொகையையும் அவலீலையாகச் சாடிவிடுவேன்;
ஆனால் மாயவனான கண்ணபிரான் அங்குத் தேர்ப்பாகனாய் அமைந்ததனால் என் வல்லமை சிறிதும் பயன்படாதொழிகின்றது; அவன் தேரை நடத்துகிற விதம் விசித்திரமாயன்றோ இராநின்றது என்று.
அப்படி எதிரிகளும் வியக்கும்படியான திறமையைத் திருவுள்ளமபற்றிச் சித்திரத்தேர்வலவாவென்கிறார்.
‘சித்திரத்தேர்வலவா!’ என்றதற்கு அடுத்தபடியாகத் திருச்சக்கரத்தாய்! என்கையாலே சக்கரத்தாழ்வானைக்கொண்டு செய்த விசித்திரமும் இங்கு அநுஸத்திக்கத்தக்கது.
அர்ஜூநன் பதின்மூன்றாநாட் போரில் தன்மகனான் அபிமந்யுவைக்கொன்ற ஜயத்ரதனை (துரியோதனனது உடன்பிறந்தவள் கணவனை) ‘நாளை அஸ்தமிப்பதற்குமுன்னே கொல்லாவிடின் தீக்குதித்து உயிர்விடுவேன்’ என்ற ப்ரதிஜ்ஞை பண்ண,
அதனையறிந்த பகைவர்கள் பதினென்கா நாளாகிற மறுநாட்பகல் முழுவதும் ஜயத்ரனை வெளிப்படுததாமல் ஸேனையின்நடுவே நிலவறையில் மறைத்து வைத்திருக்க,
அர்ஜூனனது சபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்த கண்ண பிரான்! ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தன் சக்கரப்படையினால் மறைத்துவிட,
அப்பொழுது எங்கும் இருளடைந்த்தனால் அர்ஜூநன் அக்நிப்ரவேசஞ் செய்யத்தொடங்க, அதனைக்களிப்போடு காணுதற்குத் துரியோதனாதிளருடனே ஜயத்ரதன் வந்து எதிர்நிற்க,
அச்சமயத்திற் கண்ணன் திருவாழியை வாங்கி விடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜூநன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்ற விசித்திர சரித்திரம் இங்கு நினைக்கத்தக்கது
இக்கதையில் ஒரு சங்கை தோன்றும். ஸூதர்நம் பாஸ்கரகாடிதுல்யம் என்கிறபடியே கோடிஸூப்யப்ரகாசமுடையவனன்றோ திருவாழியாழ்வான்; அன்னவனைக்கொண்டு ஸூப்யப்ரகாசத்தை மறைத்து இருளையுமுண்டாக்கினதும் ஒரு விசித்திரமென்று கொள்வது. மற்றும் பரிஹாரவகை வல்லார் வாய்க்கேட்டுணர்க.
எத்தனையோருகமுமவையாய்-க்ருதம் முதலிய யுகங்களுக்கெல்லாம் நிர்வாஹகனே!
த்யாயந் த்ருதே யஜந் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் திவாபரோ;ச்சயந், யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம். என்கிறபடியே நான்கு யுகங்களுக்கும் தருமங்களான த்யானம், யஜநம், அர்ச்சனம், நாமஸங்கீர்த்தனம் ஆகிய இவற்றில் ஆராதிக்கப்படுபவன் சதுர்யுகங்கள் அனேகமாயிரம் சென்றமை பெறப்படும்.
(அவற்றுள்ளியலும் இத்யாதி.) இப்படி நடக்கின்ற காலகலேகளுக்குள்ளேயுள்ள பொருள்களுக்கு அவதியில்லையே;
அவை ஓரொரு படியாலே யொத்தும் வேறொரு படியாலே வேறுபட்டுமிருக்கும்.
தேவர்கள் மநுஷ்யர்கள் விலங்குகள் என்கிற வகைகளினாலே யொத்திருக்கையும் வயக்திபேத்தாலே வேறுபட்டிருக்கையும் உணரத்தக்கன.
இப்படி பலவகைப்பட்ட பதார்த்தங்கள் எண்ணிறந்தவற்றை விபூதியாக வுடையையாய்.
“வித்தகத்தால் வித்தகத்தாய்” என்று பாடபேதங்களுள்ளனவாகக் காட்டுகி;ன்றார் சிலர்.
ஏதேனுமொரு பாடமே பூருவர்களனைவாக்ககுமுடன்பாடென்று கொள்ளலாம்.
இவையென்னவிடமங்களே!-இவை யென்ன சேராச்சேர்த்தியான செயல்கள்!.
விஷமமென்ற வடசொல் விடமமெனத் திரிந்தது. ஸமமல்லாதது விஷமம்.
————–
***- முதன் முதலிலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி இவ்வளவு அதிகாரத்திலே கொண்டு நிறுத்தினவை திருக்கண்களேயன்றோ;
“பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்ண்டரீகம் நம்மே லொருங்கே பிறழைவைத்தார் இவ்வகாலம்” (திருவிருத்தம்) என்று
தாமே யருளிச்செய்து வைத்தாரே. அப்படிப்பட்ட திருக்கண்ணழகிலே யீடுபட்டுப் பேசுகிறார்
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-
பதவுரை
| கள் அவிழ் தாமரை கண் கண்ணனே |
– |
மதுவொழுகுகின்ற கண்களையுடைய கண்ணபிரானே! |
| எனக்கு ஒன்று அருளாய் |
– |
அடியேனுக்கு இவ்விஷயமொன்று அருளிச்செய்ய வேணும்; |
| உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் விய ஆய் |
– |
நித்யமாகையாலே உள்ளதுமாய் வேறு அவஸ்தையையடைகையாலே இல்லாததுமான எண்ணிறந்தவையுமான வேறு வேறு வகைப்பட்ட சேதநாசேதநப் பொருள்களுக்கு நிர்வாஹகனாய் |
| வெள்ளம் தட கடலுள் |
– |
விசாலமான திருப்பாற்கடல் வெள்ளத்திலே |
| விடம் நாகணை மேல் மருவி |
– |
(விரோதிகள்) அணுக வொண்ணுமைக்காக, விஷத்தை உமிழ்கிற திருவனந்தாழ்வானாகிறபடுக்கையிலே பொருந்தி |
| உள்ளம் |
– |
திருவுள்ளத்திலே |
| பல் யோரு செய்தி |
– |
பலவகைப்பட்ட ரக்ஷிணோபாயங்களைச் சிந்தியாநின்றாய்; |
| இவை என்ன உபாயங்களே |
– |
இவையென்ன விரகுகள்! |
தேனொழுகும் தாமரை போன்ற திருக்கண்களையுடைய கண்ணனே!
நீ வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ளநித்திரை கொள்கின்றாயே,
இது என்னவென்று எனக்கருளிச்செய்ய வேணுமென்கிறார்.
உள்ளதும் இல்லதுமாய்-நம்முடைய ஸித்தாந்தத்தில் எல்லாம் உள்ள வஸ்துக்களேயன்றி இல்லாத வஸ்து ஒன்றுமேயில்லையே
ஸதேவநீயதே வ்யக்தி, மஸதஸம்பவ: குத: என்கிற சாஸ்த்ரார்த்தம் ப்ரஸித்தமன்றோ.
அப்படியிருக்க, இல்லது என்பதேன்? எனில்; கேண்மின்;
இங்கு இல்லது என்றதற்கு அடியோடு இல்லாதது என்றாவது பொய்யானது என்றாவது பொருளில்லே.
‘அழியுந்தன்மையுடையது’ என்று பொருள்.
உள்ளது என்றது அழியாத பொருள் என்றபடி. அசித்தையும் சித்தையும் சொன்னபடி.
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் இரண்டாவது அம்சத்தில் பன்னிரண்டாவது அத்யாயத்தில் “ஜ்யோதீம்க்ஷ் விஷ்ணுர் புவநாநி விஷ்ணு: வநாநிவிஷ்ணுர் கிரயொ திசச் ச, நத்யஸ் ஸமுத்ராச்சஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய!’ என்றுள்ள ச்லோகத்தில் அஸ்திசப்தத்தாலே சித்தையும் நாஸ்திசப்தத்தாலே அசித்தையும் சொல்லியிருக்கையாலும்,
தைத்திரீய உபநிஷத்தில் ஸத்யம் சாந்ரூதம் ச ஸத்யமபவத் என்றவிடத்து ஸத்யசப்தத்தால சித்தையும் அந்ருதசப்தத்தால் அசித்தையும் சொல்லியிருக்கையாலும்
அவற்றையடியொற்றி ஆழ்வாரும் உள்ளது இல்லது என்ற சப்தங்களினால் சித்தையும் அசித்தையும் குறித்தனரென்க.
இனி, உள்ளது – உள்ளேயிருப்பது (சரீரத்தவீனுள்ளேயிருப்பது) என்று பொருளாய் ஆத்மாவைச் சொல்லிற்றாகி,
இல்லது – இல் – வீடு) வீடாகவுள்ளது (ஆத்மாவுக்கு இருப்பட மாகவுள்ளது) என்று பொருளாகப் உடலைச் சொல்லிற்றாகி
ஆக இவ்வழியாலே சித்தையும் அசித்தையும் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.
இவ்விடத்தில் ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின்;- “நித்யமாயிருக்கையாலே உண்டென்று சொல்லலால் சேதநனும், பரிணாம ஸ்வபாவமாய்க்கொண்டு ப்ரதிக்ஷணம் அவஸ்தாந்தர பாக்காகையாலே இல்லையென்னலாம்ப்ரக்ருதியுமாய்.” என்று. சேதநாசேதந ஸகலபதார்த்த நிர்வாஹகத்வம் சொன்னபடி. ‘உலப்பில்லன்’ என்கையாலே இவை எண்ணிறந்தவை நிர்வாஹகத்வம் சொன்னபடி. ‘உலப்பில்லன்’ என்கையாலே இவை எண்ணிறந்தவை யென்பதும், ‘விய’ என்கையாலே இவை பரஸ்பரம் வேறுபாடுற்றவை யென்பதும் சொல்லிற்றாகும்.
(வெள்ளத்தடங்கடலுள் இத்யாதி) திருப்பாற்கடலிலே, ப்ரதிகூலர்க்குக் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உமிழாநின்றுள்ள திருவனந்தாழிவான்மேலே பொருந்தித் திருவுள்ளத்தில் பல ரக்ஷண சிந்தைகளைப் பண்ணா நின்றாய்; நீயும் இங்ஙனே உபாய சிந்தை பண்ணவேணுமோ! ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனாயிருக்கு மவனுக்கு உபாய சிந்தை வேணுமோ?
இவை என்னவுபாயங்களோ? இன்னமும் அவதரிக்க உபாயம் பார்க்கிற படியா? அதிஷ்ட நிவ்ருத்திக்கு உபாயம் பார்க்கிறபடியா? இஷ்டப்ராபணத்திற்கு உபாயம் பார்க்கிறபடியா? சிலரை வசப்படுத்திக் கொள்ளுவதற்கு உபாயம் பார்க்கிறபடியா? ஒன்றை நிஷ்கர்ஷித்து அருளிச்செய்யவேணு மென்கிறார் போலும்.
——————
***- இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது.
என்னை ஆதியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி வைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே
வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-
பதவுரை
| வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே |
– |
நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!, |
| நீ |
– |
இப்படிப்பட்ட நீ, |
| என்னை பாசங்கள் நீக்கி |
– |
எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து |
| உனக்கே அற கொண்டிட்டு |
– |
உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து |
| காயமும் சீவனும் |
– |
பந்தமான சரீரமும் பத்த ஜீவனும் |
| கழிவு பிறப்பு ஆய் |
– |
இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க, |
| பின்னும் |
– |
பின்னையும் |
| நீ மாயங்கள் செய்து வைத்தி |
– |
அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்; |
| இவை என்ன மயக்குக்கள் |
– |
இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன! |
| அருளாய் |
– |
அருளிச்செய்ய வேணும். |
பாசங்கள் நீக்கி யென்றது – மயர்வறமதிநலமருளியென்றபடி.
உனக்கே அறக்கொண்டிட்டு—துயரறுசுடரடிதொழுதெழு என்னும்படி பண்ணியென்றபடி.
வாசமலர்த் தண்டுழாய்முடிமாயவனே!—புறம்புண்டான பற்றுக்களை யறுத்ததும் தனக்கே யற்றுத் தீரும்படி பண்ணினதும்
திருமுடியிலே சாத்தின் திருத்துழாய் மாலையினழகைக் காட்டியன்றோ. வென்கை.
அருளாய்-என்னையிப்படி யீடுபடுத்திக்கொண்டது இங்கே வைத்து நலிவதற்காகவோ, அருளிச்செய்யவேணும்,
மூன்றாமடியின் கருத்து; – தேஹமோ ஆத்மாவோ உத்பத்தி விநாசங்களோ எல்லாம் நீயிட்ட வழக்கன்றோ.
இப்படி ஸர்வநிர்வாஹகனான நீ அவித்யாதிகளாகிற வஞசனங்களைப் பண்ணி வைக்கின்றாயே!
இவையென்ன தெரியாச் செயல்கள்!
—————-
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-
பதவுரை
| மயக்கா |
– |
எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே! |
| வாமனனே |
– |
(அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே! |
| மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் |
– |
எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்; |
| துயர்ப்பு தேற்றமும் ஆய் |
– |
மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய் |
| அழல் குளிர் ஆய் |
– |
தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய் |
| வியவு வியப்பு ஆய் |
– |
விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய் |
| வென்றிகள் ஆய் |
– |
(உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய் |
| வினை பயன் ஆய் |
– |
புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய் |
| பின்னும் |
– |
அதுக்குமேலே |
| துயக்கு நீ ஆய |
– |
இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய் |
| நீ நின்ற ஆறு இவை |
– |
நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள் |
| என்ன துயரங்கள் |
– |
என்ன கஷ்டங்களாயிருக்கின்றன! |
மயக்காவாமனனே—வடிவழகாலும் நடையழகாலும் பேச்சின் இனிமையாலும் மஹாபலியைப் பிச்சேற்றி நினைத்து முடித்துக்கொள்ளவல்ல விரகனன்றோ நீ;
தேவர்களின் காரியம் செய்யப்போந்த நீ அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன்கையிலே நீரைவார்த்துத் தானே யிசைந்து தரும்படி மயங்கப் பண்ணினாயே!;
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி “என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் மன்னாதருக” என்றவாறே’ தந்தேன் என்னப் பண்ணினாயே!;
மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-அநுகூலர் பிரதிகூலர் என்கிற வாசியின்றிக்கே எல்லாரையும் மயங்கப்பண்ணுகை உரியதோ? நான் தெளிவையுடையேனாம்படி என்னைப் பண்ணியருளவேணும் என்கிறார்.
அயர்ப்பாய்த் தேற்றமுமாய்-பகவத்கீதையில் பதினைந்தாமத்யாயத்திலே “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸம்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்கஷச” என்கிறான்.
ஒன்றையறிவதோ மறப்பதோ எல்லாம் நானிட்ட வழக்கென்கிறான்.
அழலாய்க் குளிராய்-சீதமும் உஷ்ணமும் தானிட்டவழக்கு.
வியவாய் வியப்பாய்-ஆச்சரியப்படத்தக்க பொருள்களும் ஆச்சர்ய மென்கிற தருமமும் தானிட்ட வழக்கு.
வென்றிகளாய்-வெற்றியைச் சொன்னது—பிரதிகோடியான தோல்வியையும் தெரிவிக்கும். ஜயாபஜயங்கள் தானிட்ட வழக்கென்கை,
வினையாய்ப் பயனாய்-வினையென்று புணயபாப ரூபய்களான கருமங்களிரண்டையுஞ் சொல்லுகிறது.
பயனென்று அவற்றின் பயனான ஸுகதுக்கங்களைச் சொல்லுகிறது.
பின்னும் நீ துயக்காநின்றவாறு – அதற்குமேலே, உன்னை யடிபணிந்தாகும் மதிமயங்கும்படி நீநிற்கிறவிதம் என்னே!.
இவை என்ன துயரங்களே! – இவையுனக்கு லீலையாயிருந்தாலும் உலகுக்குத் துயரமாயிருக்கின்றதே யென்கிறார்.
—————-
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-
பதவுரை
| துயரங்கள் செய்யும் கண்ணா! |
– |
துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே! |
| சுடர் நீள் முடியாய் |
– |
ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே! |
| துயரம் செய் |
– |
துக்கத்தை விளைக்கிற |
| மானங்கள் ஆய் |
– |
பலவகைப்பட்ட துரபிமானங்களாய் |
| மதன் ஆகி |
– |
செருக்குமாய் |
| உகவைகள் ஆய் |
– |
ப்ரீதிகளுமாய் |
| துயரம் செய் காமங்கள் ஆய் |
– |
துக்கங்களை விளைக்கிற காமங்களாய் |
| துலை ஆய் நிலை ஆய் நடை ஆய் |
– |
பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய் |
| துயரங்கள் செய்து வைத்தி |
– |
(இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்; |
| இவை என்ன சுண்டாயங்கள் |
– |
இவை என்ன விளையாட்டுக்களோ! |
| அருளாய் |
– |
அருளிச்செய்யவேணும். |
***- இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணா! என்று எம்பெருமானை விளிக்கின்றார்;
ஏஷஹயே வாநந்தயாதி என்று உபநிஷத்து ஓதுகின்றது;
ஆனந்தப்படுத்துகிறவனாகவே சொல்லப்பட்ட எம்பெருமானை நோக்கி ‘துயரங்கள் செய்யுங்கண்ணா! என்னலாமோவென்னில்,
ஆழ்வார்க்குக் கண்ணன் செய்யும் துயரம் இன்னதென்பது “சுடர்நீண்முடியாய்” என்ற அடுத்த வார்த்தையினால் விளக்கப்பட்டது,
ஈடு—“முடிச்சோதியிற்படியே திருவபிஷேகத்திலழகைக் காட்டியாயிற்று துக்கங்களைப் பண்ணுவது.”
ஆறாயிரப்படி—“உன்னுடைய திருவபிஷேகத்திலழகாலே நலியும் க்ருஷ்ணனே!”.
திருக்குரவையிலே ஆய்ச்சியரோடு குழைந்து கலந்து பிரிந்தபோது அவர்கள் ஏற்கெனவே பேசுகிற பேச்சாயிருக்குமிது லென்றுணர்க.
மதனாகி உதவைகளாய்-‘மதம்’ என்கிற வடசொல் மதன் என்று கிடக்கிறது; மகரகரப்போலி.
மதமாவது பொருள் முதலியவை கிடைப்பதால் வரும் களிப்பு. உகவை—ப்ரீதி.
துரயம் செய் காமம்-காமமானது ஹேயமாகவும் உத்சேயமாகவுமுண்டு.
விஷயாந்தரங்களைப் பற்றின காமம் ஹேயம்; பகவத் விஷயத்தைப் பற்றின காமம் உத்தேச்யம்.
இராமாநுச நூற்றந்தாதியில் சேமநல்வீடும் பொருளுந் தருமமும் சீரிய நற்காமமும் என்றிவை நான்கென்பர், நான்கிநுஷனுங் கண்ணனுக்கேயாமது காமம் என்றதுங் காண்க.
துலை—பதார்த்தங்களின் தாரதம்யத்தை நிரூபிக்குமதான எடை.
நிலை—நிலைத்து நிற்கும் ஸ்தாவர பதார்த்தங்கள்.
நடை—நடந்து செல்லும் ஜங்கமபதார்த்தங்கள்.
அல்லது, ஸ்தாவர ஜங்கம பதார்த்தங்களிலுள்ள ஸ்திதி கமனங்களாகிற தருமங்களைச் சொன்னதாகவுமாம்.
துயரங்கள் செய்துவைத்தி-இப்படிப்பட்ட விருத்த விபூதிகளைச் சிந்திக்கும் போது நெருககுப்படவேண்டியிருந்தலால் ‘துயரங்கள் செய்து வைத்தி’ என்கிறார்
——————
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.
பதவுரை
| என்னை ஆளும் கண்ணா, |
– |
என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே! |
| என்ன சுண்டாயங்களால் |
– |
என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்! |
| நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று |
– |
இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ |
| உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை |
– |
ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்; |
| முன்னைய மூவுலகும் அவை ஆய் |
– |
நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய் |
| அவற்றை படைத்து |
– |
அவற்றை ஸ்ருஷ்டித்து |
| பின்னும் |
– |
அதுக்குமேலே |
| உள் ஆய் புறத்தாய் |
– |
உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே! |
| இவை என்ன இயற்கைகள் |
– |
இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!, |
***- இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென் ” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் ” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.
என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார்.
இன்னதோர் தன்மையை யென்றுன்னை யாவர்க்குந் தேற்றரியை—உன்னுடைய ஸ்வபாவமின்னதென்று எப்படிப்பட்ட ஞானிகளாலும் அறுதியிட முடியாதபடியிருக்கின்றதே!!
கர்த்தும் யத்தத்த்வபோதோ ந நிசிதமதிபிர் நாரதாத்யை ச்ச சக்ய: என்ற ஸுதர்சநசதக ஸ்ரீஸீக்தி இகங்கே அநுஸந்தேயம்.
உள்ளாய் புறத்தாய்- அந்தாப்ஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்த்தித: என்கிறபடியே உள்ளும் புறமுமொக்க எங்கும் வியாபித்திரா நின்றாய்;
அப்படி வியாபிக்குமிடத்தில் அணுபதார்த்தங்களிலும் உள்ளே வியாபித்திருக்கிறாயென்றும் ஒவ்வொரு பொருளிலும் பரிஸமாப்ய வர்த்திக்கிறாயென்றும் வேதாந்தங்கள் கூறுகின்றன;
பிரானே! அணுவான பதார்த்தங்களிலே உள்ளீடாக வ்யாப்தி உனக்கு எப்படி ஸம்பவிக்கிறதென்று ஆலோசித்தால் புத்திக்கு ஒன்றுமே யெட்டவில்லை.
அன்றியும் உன்னுடைய ஸ்வரூபம் ஓரிடத்தில் பரிஸமாப்ய வர்த்திக்குமானால் அது மற்றொரிடத்தில் இருக்க ப்ரஸக்தியில்லையே;
ஒவ்வொரு வஸ்துவிலும் உன் ஸ்வரூபம் பரிஸமாப்ய வர்த்திப்பதாக சாஸ்த்ரம் ஓதுகின்றதே,
இது எப்படி ஸம்பாவிதமென்று ஆலோசித்தால் இதுவும் புத்திக்கு எட்டுகிறதில்லை பிரானே!,
ஆனால் எதையும் நீ அவலீலையாகச் செய்து போருகிறாய்; இவை எங்களுக்கு ஆச்சரியமாயிரா நின்றன என்றாராயிற்று.
—————-
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-
பதவுரை
| என் கண்ணா |
– |
எனது கண்ண பிரானே! |
| என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் |
– |
என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்; |
| துன்னு கரம் சரணம் முதல் ஆக |
– |
நெருங்கிய கரசரணாதிகளான |
| எல்லா உறுப்பும் |
– |
எல்லாக்கரணங்களும் |
| உன்னு |
– |
விரும்பத்தக்க |
| சுவை ஒளி ஊறு நாற்றம் முற்றும் நீயே |
– |
ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் இவையாகிற ஸகல விஷயங்களும் நீயே; |
| உன்னை உணர உறில் |
– |
இப்படிப்பட்ட வுன்னை நிரூபிக்க நினைக்கில் |
| நுணுக்கங்கள் உலப்பு இல்லை |
– |
உன்னுடைய நுட்பத்திற்கு முடிவில்லை. |
கைகால் முதலான வுறுப்புக்களினால் உலகில் அவரவர்கள் செய்யும் ஸகலகாரியங்களும் உன் ஸங்கல்பத்தாலாமவை. ஜலதத்வத்தின் குணமாகிய சுவையும், தேஜஸ்தத்த்வத்தின் குணமாகிய ரூபமும், வாவுதத்த்வத்தின் குணமாகிய ஸ்பர்சமும், ஆகாச தத்த்வத்தின் குணமாகிய சப்தமும், பூமிதத்த்வத்தின் குணமாகிய கந்தமும் ஆகிய இந்த ஸகல விஷயங்களும் நீயிட்ட வழக்கு.
அதாவது, இப்பொருள்களெல்லாவற்றிலும் நீயே அநுப்ரவேசித்திருந்து அவ்வக் காரியங்களை நிர்வஹித்தருளாநின்றாயென்றபடி.
உன்னுடைய பெருமையையும் சிறுமையையும் அநுஸந்திக்கப் புக்கால் உன்னுடைய வைலக்ஷண்யத்துக்கு முடிவில்லை என்றாராயிற்று.
—————
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-
பதவுரை
| இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் |
– |
இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி |
| தொல்லை நல்நூலில் சொன்ன |
– |
அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட |
| உருவும் அருவும் நீயே |
– |
அசித்தும் சித்தும் நீயே; |
| அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே |
– |
பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே! |
| வல்லது ஒர் வண்ணம் சொன்னால் |
– |
கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும் |
| உனக்கு அதுவே வண்ணம் ஆம் |
– |
சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம் |
ஸூக்ஷ்மசிதசித்விசிஷ்டப்ரஹமம், ஸ்தூலசிதசித்விசிஷ்டப்ரஹ்மம் என வேதாந்திகள் வழங்குவர்கள்.
காரணாவஸ்த ப்ரஹ்மத்திற்கு ஸூக்ஷ்மசிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமென்று பெயர்;
“ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்” என்று ஒதப்பட்ட நிலை காரணாவஸ்த ஸூக்ஷ்மநிலை
த்வா ஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமநாம் விருக்ஷ்ம பரிஷஸ்வஜாதே, த்யோரந்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி அநச்நந் அந்ய: அபிசாகசீதி இத்யாதிகளால ஓதப்பட்ட நிலை கார்யாவஸ்த ஸ்தூலநிலை
ஆக இவ்விரண்டு நிலைமைகளும் ஒரு ப்ராஹ்மத்துக்கேயாதலால் “தொல்லைநன்னூலிற் சொன்ன உருவு மருவும் நீயே” என்கிறது.
தொல்லை நன்னூலென்கிறது ப்ரமாணச்ரேஷ்டமான வேதத்தை.
ஈற்றடியை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள்; –
வேதங்களும் ஸநகாதி யோகிகளும் உன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைப் பேசப் புகுந்தால் ஏதோ சில பாகம் பேசினார்கள் என்று கொள்ளலாமே தவிர, எல்லாம் பேசி முடித்திட்டார் களென்பதில்லை;
அவர்களும் பேசாததாய் இன்;னமும் பேசவேண்டுவது அளவு கடந்திருக்குமென்கை.
அன்றிக்கே, உனக்கு நல்லராய் உன் குணங்களிலே யீடுபட்டிருக்குமவர்கள உன்னை ஏதேனுமொருபடி பேசினால் அதையே தன்படியாக நினைத்திருக்குமவன் என்றதாகவுமாம்.
அன்பர்கள் பேசுகிறபடிக்கெல்லாம் தான் இணங்கியிருக்குமவனென்பது பரம தாற்பரியம்.
——————–
(ஆம்வண்ணம்) ஒருவராலும் ஒரு வகையுமறியவொண்ணாத எம்பெருமானை உள்ளபடியே யறிந்து அவனுக்கு ஏற்றவாறு
ஆழ்வா ரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இத்திருவாய்மொழியை யதாசக்தி பயிலுமவர்கள் என்றைக்கும்
க்ருதக்ருத்யரென்று அவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறபடி. க்ருதக்ருத்யதா ப்ராப்தியே பல னென்று பயனுரைத்தவாறு.
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-
பதவுரை
| ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று |
– |
இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று |
| அறிவது அரிய அரியை |
– |
(ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை |
| குருகூர் சட கோபன் |
– |
நம்மாழ்வார் |
| ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த |
– |
உள்ளபடியறிந்து அருளிச் செய்த |
| ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள் |
– |
தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள் |
| பத்தும் |
– |
இப்பதிகத்தை |
| ஆம் வண்ணத்தால் உரைப்பார் |
– |
இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;. |
| என்றைக்கும் |
– |
ஆத்மாவுள்ளவரைக்கும் |
| தமக்கு அமைந்தார் |
– |
க்ருதக்ருத்யர்கள். |
முதலடியில், எம்பெருமானுடையபடி இன்னதென்று ஒருவராலுமறிய வொண்ணாதது என்று கூறியிருப்பது பொருந்துமோ?
அவனுடைய படிகளைப் பரக்கப் பேசுவதற்கன்றோ சாஷஸ்தரங்கள் தோன்றியுள்ளன; அவைதாம் அவனுடைய படிகளை நிஷ்கர்ஷித்துக் கூறியிருக்கவில்லையோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும்.
இஃது படிகளை உண்மையே; பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு என்னை யடிபணிவார்க்கு நான் ப்ராப்யன் என்று பல விடங்களிற் கூறுமெம்பெருமானே ஓரிடத்தில் ‘நாஸெளா புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸவேச்சயைவாஹம் ப்ரேசேஷகசித் கதாசந” என்கிறான்.
புருஷகாரபலத்தைக் கொண்டும் மற்று எந்த ஸாதனங் கொண்டும் என்னை வசப்படுத்தமுடியாது;
எனக்காகத் தோன்றுகிற போது நானாகவே ஒரு அதிகாரி விசஷேத்தைத் திருவுள்ளம்பற்றுவேனத்தனை—என்பது இந்த ச்லோகத்தின் கருத்து,
இங்ஙனமே மற்றொன்றும் காணலாம்
ச்ருதிஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸதாமுல்லங்க்ய வர்க்ததே, ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்வண. என்கிற எம்பெருமான் தானே
அபிசேத் ஸூதுராசார: பஜதேமாம் அநந்யபாக், ஸாதுரேவ ஸமந்தவய: ஸம்யக்வ்யவஸிதோஹிஸ என்றும்.
மித்ரபாவேநஸம்ப்ராபதம் என்றுமருளிச்செய்கிறான்.
தன்னுடைய கட்டளையான ச்ருதிஸம்ருதிஸரணிகளைக் கடந்து துஷ்டனானவன் தன்னளவில் எவ்வளவு பக்தி செய்யினும் பயனில்லை,
தனக்கு அவன் த்ரோஹியே ஒரிடத்தில் சொல்லிவைத்து,
மற்றும் பலவிடங்களில், எவ்வளவு துஷ்டனானவனும் தன்னைக்கபடமாகவாவது அடிபணிந்தானாயின் அவனை என்னோடொப்ப் பஹூமானிக்கக்கடவது என்று சொல்லிவைக்கிற னெம்பெருமான். எதை நம்புவது?
ஆனாலும் சாஸ்த்ரார்த்தம் இப்படி பரஸ்பரம் வ்யாஹதமாயிருக்குமோ?
சாஸ்த்ரத்தை உந்மத்த் ப்ரலபிதமதக்கவொண்ணுமோ?
ஒன்றோடொன்று முரண்படாதபடி ஸமந்வயம் செய்து பொருத்தவல்ல மஹான்களில்லையோ?
ஸமந்வயம் செய்திருக்கவில்லையோ வென்னில்; ஏன் இல்லை; ஸமந்தவயம் பெறாதது எதுவுமில்லை.
ஆனால் அல்ப ப்ரஜ்ஞர்களுக்கு ஸமந்வயம் அஸாத்யமாகையாலே அதையிட்டு “ஆம்வண்ணமின்னதொன்றென்று அறிவதரியவரியை” என்கிறது.
முதலடியிலே இப்படி சொல்லிவைத்து உடனே இரண்டாமடியிலே “குருகூர்ச் சடகோபன் ஆம்வண்ணத்தாலரறிந்துரைத்த” என்றதன்றோ.
இதனால் ஆழ்வார்போன்ற மயர்வற மதிநல மருளப் பெற்றார்க்கு அறியவரியனல்லன் என்பது காட்டப்பட்டது.
பத்துடையடியவர்க்கெளியவன் பிறார்களுக்கரிய வித்தகன் ஸமாஹிதை: ஸாது ஸநந்தநாதிபி: ஸூதுர்லபம் பக்தஜதை ரதுர்லபம் என்றாற்போல.
அமைந்தார் தமக்கு என்றைக்கும் என்றது- காலமுள்ளதனையும் தங்களுக்கு வேண்டிய அநுபவத்திற்குத் தாங்கள் குறையற்றவர்களென்றபடி.
அதாவது ஸ்வயம் த்ரதக்ருத்மர்கள் என்கை.
இங்கே நம்பிள்ளை யீடு காண்மின்;-“அவர்களுக்கு இவ்வாத்மா வுள்ளதனையும் ஈச்வரம முழங்கைத் தண்ணீர் வேண்டா, ஆழ்வார்பரிக்ரஹமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே யமைந்தார்களாயிருப்பர்கள்.”
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 13, 2022 at 3:28 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply