***- (உலகமுண்டபெருவாயா) ஸகல ஜகத்தையும் ரக்ஷிக்குமியல்வை யுடைபையாய்க் கொண்டு திருமலையிலே
நித்யஸந்நதி பண்ணியிருக்கிறவுன்னை நான் கிட்டியநுபவிக்கும் விரகு அருளிச் செய்ய வேணுமென்கிறார்.
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-
பதவுரை
| உலகம் உண்ட பெரு வாயா |
– |
(பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே! |
| உலப்பு இல் கீர்த்தி அம்மானே |
– |
முடிவில்லாத புகழுடைய பெருமானே |
| நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி |
– |
அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! |
| நெடியாய் |
– |
மிகப்பெரியோனே! |
| அடியேன் ஆர் உயிரே |
– |
அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே! |
| உலகுக்கு திலதம் ஆய் நின்ற |
– |
உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற |
| எம்பெருமானே |
– |
அஸ்மத்ஸ்வாமியே! |
| குலம் தொல் அடியேன் |
– |
குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன் |
| உன பாதம் |
– |
உனது திருவடிகளை |
| கூடும் ஆறு |
– |
வந்து சேறும்படியை |
| கூறாய் |
– |
அருளிச் செய்யவேணும். |
உன்னுடைய திருவடியை நான் கிட்டப்பெறாமல் கிலேசிப்பது பிரளயாபத்தோடொக்கும்,
இந்த ஆபத்தை நீ போக்கினால்லது பிரளயாபத்தைப் போக்கினாயென்கிற புகழ் உனக்கு நிலைநிற்கமாட்டா தென்கிற கருத்துப்பட “உலகமுண்ட பெருமுண்டது,
அந்த ஆபத்ரக்ஷகத்வம் மெய்யானால் என்னையும் ஆபத்தில் நின்று மெடுத்தருளித் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டாவோவென்றவாறு.
இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின் – “ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது, விபூதிக்காகவுண்டான ஆபத்து எனக்கொருவனுக்கு முண்டானால் நோக்கலாகாதோ? ப்ரளயார்ணவத்திலே யழுந்துவாரையோ நோக்கலாவது, ஸம்ஸாரவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? அபேக்ஷியாதாரையோ நோக்கலாவது, அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? சரீரத்துக்கு வரும் ஆபத்தோ நோக்கலாவது, ஆத்மாவுக்கு வரும் ஆபத்து நோக்கலாகாதோ? ஜல ப்ரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது, விரஹ ப்ரளயத்துக்கு உதவலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தோ நோக்கலாவது, உன்னால் வருமாபத்து நோக்கலாகாதோ? சரணம் புகாதாரை ரக்ஷிக்க வேணமென்றொரு நியதியுண்டோ, சரணம் புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? இத்யாதி.
பெருவாயா! என்று இங்கே வாயின் பெருமை சொன்னது அவனுடைய பாரிப்லின் பெருமையைச் சொன்னபடி.
எவ்வளவு ரக்ஷணங்கள் செய்தும் “என்ன ரக்ஷித்தோம், என்றே நெஞ்சில் குறைவாளனா யிருக்குமவனன்றோ எம்பெருமான்.
த்ரௌபதிக்காக எத்தனையோ காரியங்கள் செய்தும் (அதாவது – ஸதஸ்ஸில் அவள் பட்ட மகாபரிபவத்தைப் போக்கியும் துரியோதநாதிகளை நிரசித்தும் தருமபுத்திரன் தலையில் முடியை வைத்தும் அவள் குழலை முடிப்பித்தும்) * ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நாபஸர்ப்பதி * என்று குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் * நாதிஸ்வஸ்தமநா யயௌ * என்னும்படி திருவுள்ளத்தில் புண்ணோடே யெழுந்தருளினனென்றால் அவனுடைய ரக்ஷணப் பாரிப்பு பேச்சுக்கு நிலமாகுமோ?
உலப்பில் கீர்த்தியம்மானே – உலப்பாவது முடிவு, முடிவில்லாத புகழுடைமையாவது திருக்குணங்களைத் தனித்தனியாகவும் ஒரு ராசியாகவும் எண்ண முடியாமை.
அல்லது சத்ருக்கள் கோஷ்டியிலும் ப்ரஸித்தமாயிருக்கை யென்னவுமாம்.
வைவ வந்தவர்கள் வாயினாலும் வாழ்த்த வேண்டும்படினறோ எம்பெருமானுடைய திருக்குணங்களிருப்பது.
ஸ்ரீராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மந்தோதரி ஆகிய மூன்று கைம்பெண்டாட்டிகளும் நிந்திக்கவேண்டிய பிரகரணத்திலும் வாயாரவாழ்த்தினபடி கண்டால் பின்னை என்சொல்லவேணும்?
காதும் மூக்கு மறுப்புண்டு காதூடணர் பக்கலில் கதறிக்கொண்டு ஓடாநின்ற சூர்ப்பணகை நெஞ்சைப் பறிகொடுத்து * தருணௌ ரூபஸம்பந்நௌ * என்று தொடங்கி ஆச்சரியமாக வாழ்த்துகிறாள் இங்ஙனமே மற்றுங்காண்க.
நிலவுஞ் சுடர் சூழொளிமூர்த்தி –ரக்ஷிக்குமவனல்லனாயினும் குணமுடையவனல்லனாயினும் விடமுடியாத வடிவழகு படைத்தவனென்கிறது.
நிலவும் என்றது எப்போதுமுள்ள தென்றபடி.
ஒரு கருமமடியாக வருவதும் பிறகு கழிந்து போவதுமன்றிக்கே நித்யஸித்தமான சுடர்மிக்கதாய் ஒளிமயமான மூர்த்தியாயிருக்கை.
ரஜஸ் தமோ குணங்கள் கலசாமல் சுத்த ஸத்வமயமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் நெய்திணுங்கினாப்போலே உள்ளும் புறம்மொக்க ஒளியே யாயிருக்கை.
நெடியாய்! –தொட்ட தொட்ட துறைதோறும் தரை காணவொண்ணாதபடி பெருகிச் செல்பவனே! என்கை.
ச்ருதியானது ••• மேதம் புருஷம் மஹாந்தம் என்று ஓதிற்று. அவ்வர்த்தமே நெடியானென்பது விளியுருபு ஏற்று நெடியாய்! என்றாகும்.
அடியேன் ஆருயிரே – வடிவழகையும் திருக்குணங்களையுங் காட்டிப் பிரிந்து பிழைக்க வொண்ணாதபடி என்னைப்பண்ணினவனே! என்றவாறு.
“திருவேங்கடத்தெம்பெருமானே அடியேனாருயிரே!“ என்று கூட்டுவது. திருமலையிலே நின்று என்னுடைய சேஷத்வ முறையை யறிவித்து உன்னாலல்லது செல்லாதபடி பண்ணினவனே! என்கை.
அந்தத் திருமலைதான் எப்படிப்பட்ட தென்றால், திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடம், மாதர்கட்கு ஆபரணம் அழகு பெறுவிக்குமாபோலே பூமிப்பிராட்டிக்குத் திலகமென்னுமா பரணமாயிருந்து அழகு பெறுவிக்குமதென்கை.
ஆக மூன்றடிகளாலே எம்பெருமான் படிகளைப் பரக்கச் சொல்லி மேலே குலதொலடியேன் என்று ஸ்வ ஸ்வரூபத்தைச் சுருங்கச் சொல்லுகிறார்.
பிரானே! குலபலம்பரையாக நான் உனக்கே அடிமைப் பட்டவனன்றோ, வேறொருவர் கடைத்தலைபுகுந்து கிடந்துழல்பவனோ நான்,
என்னை நீ நோக்காவிடில் வேறு நோக்குவாருண்டா?
என் ஸ்வரூபம் இதுவான பின்பு ஸ்வரூபாநுரூபமான பேற்றைப் பெறும்படிபண்ணி யருளவேண்டுவது உன் கடமையன்றோ.
அடியானுக்கு அடியோடேயன்றோ சேர்த்தி தருவது, அடியைப் பிரிந்திருந்து அடியேனென்றால் தகுதியாமோ?
அடியேன் உன் திருவடி சேரும் வகையைப் பற்றி ஒரு வார்த்தை யருளிற் செய்ய வேணும் என்றாயிற்று.
———
***- (கூறாய் நீறாய்) விரோதிகளையெல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ
எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேரும் படி க்ருபை பண்ண வேணுமென்கிறார்.
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
பதவுரை
| கொடு வல அசுரர் குலம் எல்லாம் |
– |
மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் |
| கூறு ஆய் |
– |
பலபல கண்டங்களாகி |
| நீறு ஆய் |
– |
சாம்பலாகி |
| நிலன் ஆகி |
– |
தரைப்பட்டிருக்கச் செய்தேயும் |
| சீறா |
– |
பின்னையும் சீறி |
| எறியும் |
– |
ஜ்வலியா நிற்கிற |
| திரு நேமி வலவா |
– |
திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே! |
|
தெய்வம் கோமானே நித்ய ஸூரிநாதனே! |
||
| சேறு ஆர் சுனை |
– |
சேறு நிரம்பிய கனைகளிலே |
| தாமரை |
– |
செந்தாமரை மலர்கள் |
| செம் தீ மலரும் |
– |
சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள |
| திருவேங்கடத்தானே |
– |
அளவுபடாத அன்பையுடையேனான நான் |
| உன் அடி சேர் வண்ணம் |
– |
உன் திருவடிகளைச் சேறும்படி |
| அருளாய் |
– |
அருள்புரிய வேணும். |
“கொடுவல்லசுரர் குலமெல்லாம் கூறாய் நீறாய நிலனாகி“ என்று அந்வயிப்பது.
சத்ருக்களை முதலில் இரு துண்டமாக்கிப் பிறகு நீறாக்கிப் பின்பு அதுவுங்காண வொண்ணாதபடி வெறுந்தாரையாக்குமென்று திருவாழியாழ்வானுடைய விக்கிரமம் சொல்லுகிறது.
மூலத்தில் ஆகி என்றிருந்தாலும் “ஆக்கி“ என்று பிறவினையாகவுங் கொள்ளலாம்.
“சீறா“ என்பது செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம், சீறியென்றபடி.
வலவா – வல்லவன் என்ற சொல் வலவன் என்று தொகுத்தலாய் விளியுருபு ஏற்றதாகக் கொண்டால் “திருவாழியை அடக்கியாள வல்லவனே!“ என்று பொருளாம்.
தெய்வக் கோமானே! – “யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ யென்றால் அஃதுனக்கு வியப்பாமோ“ (திருவரங்கக் கலம்பகம் –க) என்று ஐயங்கார் பணித்தபடியே
ஸகல தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம் நானே யென்பதைத் திருமலையில் விளங்கக் காட்டிக்கொண்டு நிற்பவனே! என்றபடி.
(சேறார் சுனைத்தாமரை யித்யாதி) தாமரைக்கு பங்கஜ மென்று பெயராதலால் சேறு நிரம்பிய சுனைகளில் அவை சிவந்த தீப் போலே தோன்றி மலர்கின்றனவாம் திருமலையில்
இங்கே ஈட்டில் ரஸோக்தி காண்மின், – “எண்ணெயாலே எரியும் விளக்கொழிய நீராலே யெரியும் விளக்கு கண்டு அநுபவிக்கக் காணும் இவராசைப் படுகிறது, நீரிலே நெருப்பெழுந்தாற்போலேயிறே யிருக்கிறது.“
ஆறாவன்பிலடியேன் –ஆழ்வார்க்கு இதுவொரு நிரூபகமான திருநாமம் போலும்
“ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்“ என்றாப்போலே ஆறாதவன்பையே நிரூபகமாகவுடைய அடியேன் என்கிறார்.
கீழ் மூன்றாமடியில் சுனைகளைப் பற்றி ப்ரஸ்தாவம் செய்தாரே, அந்தச் சுனைகளில் நீர் வற்றினாலும் வற்றும், தம்முடைய அன்பு வற்றாதென்கிறார் போலும்.
இப்படிப்பட்ட அடியேன் உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி என் பக்கலிலே க்ருபை பண்ணி யருள வேணும்,
நீ திருமலையிலே நிற்கிற நிலைக்குப் பயன் பெற வேணும், எனது அன்புக்கு இரையிடவேணும் என்கிறாராயிற்று.
—————–
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-
பதவுரை
| வண்ணம் அருள் கொள் |
– |
அருளே வடிவெடுத்த வண்ணமாய் |
| அணி பேகம் வண்ணா |
– |
அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே! |
| மாயம் அம்மானே |
– |
ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! |
| எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே |
– |
நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே! |
| இமையோர் அதிபதியே |
– |
தேவாதிதேவனே! |
| தெள் நல் அருவி |
– |
தெளிந்தழகிய அருவிகள் |
| மணி பொன் முத்து |
– |
மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் |
| அலைக்கும் |
– |
கொழிக்குமிடமான |
| திருவேங்கடத்தானே |
– |
திருமலையிலே விளங்குபவனே! |
| அண்ணலே |
– |
ஸ்வாமியே! |
| உன் அடி சோ |
– |
உன் திருவடிகளில் வந்து சேரும்படி |
| அடியேற்கு |
– |
அடியேன் விஷயத்திலே |
| ஆ ஆ என்னாய் |
– |
ஐயோ வென்றிரங்கியருள வேணும். |
***- (வண்ணமருள் கொள்) கீழ்ப்பாட்டில் “உன்னடிசேர் வண்ணமருளாய்“ என்ற ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் “ஆழ்வீர்! நீர் கேட்டபோதே நாம் அருளமுடியுமோ? அதற்கு ஸமயமில்லையோ? என்ன,
இதர விஷயங்களில் போகாதபடியான ஜ்ஞான லாபத்தைப் பண்ணித் தந்தவுனக்கு ப்ராப்தி பண்ணித் தருகை அரிய பெரிய காரியமோ வென்கிறார்.
வண்ணமருள்கொள் அணிமேகவண்ணா! – அருள் வண்ணங்கொள், அணி மேக வண்ணா என்று அந்வயிக்கலாம்.
அருள் வண்ணங்கொள் – அருள் தானே வடிவெடுத்த என்றபடி. அருளே திருவேங்கடமுடையானாக மூர்த்திகரித்த தென்றவாறு.
அருள் என்னாமல் “மருள்“ என்றும் சொல் பிரிக்கலாம்.
வண்ணம்-வடிவானது, மருள்கொள் – கண்டார் நெஞ்சை இருளப்பண்ணக் கடவதாயிருக்கிற என்றபடி.
மாயவம்மானே! வெறும் வடிவழகு மாத்திரமேயல்லாமல் ஆச்சரியமான குணசேஷ்டிதங்களாலும் பெரியனானவனே!
எண்ணம் புகுந்து தித்துக்குமமுதே-தேவர்களுடைய அம்ருதத்திற் காட்டில் விலக்ஷணமான அம்ருதமென்கிறது.
அவ்வமுகத்தைப் புஜிக்கவேணுமானால் தேவயோநியிலே பிறக்கவேணும்,
பிறந்தாலும் அமிருதத்தை புஜிக்குங்காலத்திலே ஸாதநாநுஷ்டாநங்களுக்கு யோக்யதையுண்டாம்படி ஆகாச கங்கையிலே ஸ்நானம்பண்ணி ஜபம் முதலியன செய்து வருந்தவேணும்,
இவ்வமுதம் அப்படியன்றே இன்னாரினையாரென்கிற அதிகாரிநியதயில்லை,
சிந்தித்தமாத்திரத்திலே எண்ணம் புகுந்து “ஆராவமுதாயடியேனாவியகமே தித்திப்பாய்“ என்று தித்திக்கும். * உளங்கனிந்திருக்குமடியவர்தங்களுள்ளத்துளூறிய தேனாகையாலே எண்ணம் புகுந்து திக்திக்கச் சொல்லவேணுமோ?
இமையோரதிபதியே! மது தவிர வேறொன்றைக் கண்ணெடுத்தும் பாராத வண்டுக்கு “மதுவ்ரத“ மென்று பெயர்,
அப்படியே எம்பெருமானை இமை கொட்டாமல் * ஸதாபச்யந்தி * என்கிறபடியே இடைவீடின்றி ஸேவித்துக் கொண்டிருக்கும் நித்ய முக்தர்களுக்கு இமையோரென்று பெயர், அவர்களுக்கு அதிபதியே!.
அந்த இமையவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிற விருப்பு மீனுக்குத் தண்ணீர் வார்க்குமாபோலே யிருப்பதொன்று என்று கருதி எம்போலியர்க்குக் காட்சி தருதற்கென்றே வந்து நிற்கிற விடமன்றோ திருமலை.
அவ்விடத்து அருவிகளுக்குள்ள ஔதார்யமும் உனக்கு அருமைப்படவேணுமோ?
அவை மணிகளையும் பொன்களையும் ஸர்வஸ்வதானம் பண்ணுகிறபடி கண்டால் நாமும் அங்ஙனே ஸர்வஸ்வதானம் பண்ணவேணுமென்றிருக்க வேண்டாவோ நீ?
எனக்கு நீ ஒன்றும் கொடுக்க வேண்டா, திருவுள்ளத்திலே என்னைப் பற்றி ஐயோவென்று சிறிது இரங்கி யருள வமையும் என்கிறார்.
ஹா ஹா என்கிற வடசொற்கள் ஆ ஆ வெனத் திரியும், இரக்கக் குறிப்பிடைச்சொல்.
————–
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-
பதவுரை
| ஆ ஆ என்னாது |
– |
இரக்கமில்லாமல் |
| உலகத்தை அலைக்கும் |
– |
உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான |
| அசுரர் |
– |
ஆஸுரப்ரக்ருதிகளினுடைய |
| வாழ்நாள் மேல் |
– |
ஆயுளை முடிப்பதற்காக |
| தீ வாய் வாளி |
– |
நெருப்பை உமிழ்கிற அம்புகளை |
| மழை பொழிந்த சிலையா |
– |
மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே! |
| திரு மா மகள் கேள்வா |
– |
திருமகள் கொழுநனே! |
| தேவா |
– |
தேவனே! |
| சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் |
– |
தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான |
| திரு வேங்கடத்தானே |
– |
திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! |
| பூ ஆர் கழல்கள் |
– |
(உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை |
| அரு வினையேன் |
– |
மஹாபாபியான நான் |
| பொருந்தும் ஆறு |
– |
கிட்டும்படி |
| புணராய் |
– |
கற்பித்தருளவேணும் |
***- (ஆவா வென்னாது) பிரானே! உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாஸ்த்ரங்களில் காட்டிக்கொடுத்த ஸாதனங்களொன்றும் எனக்கு உபயோகப்படவில்லை,
ஆனபின்பு எனக்கென்று தனியேயொரு ஸாதனம் கண்டு தரவேணுமென்கிறார்.
இக்கருத்துக்கொண்ட அவதாரிகை நம்பிள்ளை இட்டருளுகிறார், எனக்கென்று தனியேயொரு ஸாதனம் கண்டு தரவேணுமென்று பிரார்த்திக்கிறவிதற்குக் கருத்து என்ன? என்று ஆராயவேண்டும்.
“நான் பண்ணின பாவங்களுக்கு நீ ஸ்ருஷ்டித்திருக்கிற நரகங்கள் போராது, எனக்கென்ன ஒரு நரகம் கல்பிக்க வேணும்“ என்று ஒருவர் சொன்னால், நரகம் கல்பிக்க வேணுமென்பது இங்கு விவக்ஷிதமன்றே, பரமதயாளுவாய் சக்திமானான நீ அத்தைப் போக்கியருளவேணும் என்பதே கருத்தாகும்,
அதுபோலே இங்கும் வித்தோபாயமான நீயே ரக்ஷித்தருள வேணுமென்பதுதான் தாற்பரியமாகத் தேறி நிற்கும்.
இந்த ப்ரஸங்கத்திலே ஈட்டில் ஒரு ஐதிஹ்யம் அருளிச் செய்யப்படுகிறது,
“நம்பிள்ளை ஜீயரை ஒருநாள், பஞ்சமோபாயமென்றுகொண்டு ஒன்றுண்டு என்று சொல்லாநின்றார்கள், நாட்டிலேயும் அங்ஙனேயிருப்பதொன்றுண்டோ? என்று கேட்டருள,
நான் அறிகிலேன், இனி சதுர்த்தோபாய்ந்தான் பகவானேயாயிருக்க, வ்யோமாதீதம் சொல்லுவாரைப்போலே அவனுக்குமவ்வருகே யொன்றுண்டு என்கையை நான் கேட்டறியேன் என்றருளிச் செய்தார்“ என்று.
இந்த ஸ்ரீஸூக்திகளைக் காணுமவர்களுக்கு ஒரு சங்கை தோன்றும், ஆசார்யாபிமாநம் ஐந்தாவத உபாயமென்று ஸ்ரீவசநபூஷணாதிகளில் ப்ரஸித்தமாயிருக்க, அதற்கு மாறாக நஞ்சீயர் அருளிச் செய்தாப்போலே தெரியவருகின்றதே, இது என்ன? என்று.
(இதற்கு ஸமாதானம்) ஆசார்யாபிமாநம் ஸ்வதந்த்ரோபாயமானாலும் அது ஸித்தோபாயத்திற்குள்ளேயே அந்தர்ப்பூதமாக நினைக்கத்தக்கது.
“ஈச்வரனைப் பற்றுகை கையைபிடித்துக் கார்யங்கொள்ளுமோ பாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி“ என்கிற ஸ்ரீவசநபூஷண திவ்யஸூக்தியை நன்கு நோக்குமளவில் இவ்விஷயம் அவகாஹிக்கும்.
ஆகவே ஆசார்யாபிமாந மென்பது ஸித்தோபாயத்திலேயே சொருகி நிற்கும். இதை ஐந்தாவது உபாயமென்று சொல்லியிருந்தாலும் “காரியஞ் செய்யும் விஷயத்தில் இது அமோகமானது“ என்பதைத் தெரிவிப்பதிலேயே அது பர்யவஸித்து நிற்குமத்தனை.
மேலே சொன்னவிதமாக நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச் செய்தபோது பின்னையும் நம்பிள்ளை கேட்டாராம் “இப்படியானால் * ஆவா வென்னாதென்கிற பாட்டு அருளிச் செய்யும் போது “எனக்குத் தனியேயொரு ஸாதனங்கண்டு தரவேணுமென்கிறார்“ என்று தேவரீர் அருளிச் செய்வதுண்டே, அது எங்ஙனம்“ என்று.
அதற்கு நஞ்சீயர் உத்தரமருளிச் செய்ததாவது – நான் அங்ஙனே சொன்னதற்குத் தாற்பரியம் கேளாய், எம்பெருமானே! நீ இருக்கும் போது நான் இங்ஙனே இழக்கலாகுமோ? ஸித்தோபாயமும் தட்டுப்படலாகுமோ? என்று வெறுத்துச் சொல்வது மாத்திரமே தாற்பரியம் – என்று.
ஆவா வென்னாது உலகத்தையலைக்குமசுரர் – உலகில் யாரேனும் வருத்தப்படுவாருண்டாகில் அவர்களைக் கண்டு ஹா ஹா! (ஐயோ ஐயா) என்று இரங்க ப்ராப்தம், அதற்கு மாறாக உலகத்தைக் கொடிதாக வதை செய்யுமவர்கள் ஆஸுர ப்ரக்ருதிகள்,
அப்படிப்பட்டவர்களுடைய வாழ்நாளைத் தொலைக்கவேண்டி நெருப்பையுமிழ்கின்ற மிகக்கொடிய அம்புகைளப் பிரயோகித்த கோதண்டராமா! என்றவாறே ஆழ்வார்க்குக் கரதூஷணாதிவத் ப்ரகரணம் நினைவுக்கு வந்த்து,
அப்போதைய வெற்றியைக் கண்ட பிராட்டி * தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே * என்கிறபடியே அன்றுதான் பெருமானை பார்த்தாவாக நினைத்து அணைத்துக்கொண்டாள் எனகிற இதிஹாஸத்திற்கு ப்ரத்யபிஜ்யாபகமாக “திருமாமகள் கேள்வா!“ என்று விளிக்கிறார்.
“தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமாமகள் கேள்வா“ என்கிற சேர்த்தியழகு மிகவும் ரஸிக்கத் தக்கது.
தேவா! – “திருமாமகள் கேள்வா தேவா!“ என்கிற சேர்த்தியை நோக்குங்கால் * ச்ரத்தயாதேவா தேவத்வமச்நுதே * ச்ருதியின் பொருள் நன்கு பொருந்தும்.
ச்ரத்தா என்று பிராட்டியின் திருநாமம், பிராட்டியோட்டைச் சேர்த்தியினால் தான் எம்பெருமான் வேனாகிறனென்றபடி.
இங்கே நம்பிள்ளையீடு, (தேவா!) இவள் அணைத்த பின்பு திருமேனியிற் பிறந்த புகர். அன்றியே, விரோதிகளைப் போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியைச் சொல்லவுமாம்.
“ இதில் “அன்றியே“ என்கிற இரண்டாவது நிர்வாஹம் “தீவாய்வாளி மழை பொழிந்த சிலையாதேவா“ என்று யோஜித்து அருளிச்செய்தபடி.
(சுரர்களித்யாதி) பிரமன் சிவனிந்திரன் முதலான தேவர்களும் ஸநக ஸந்நதநாதி மஹர்ஷிகளும் இதுவே நமக்குப்ராப்யஸ்தானமென்று விரும்பி யிறைஞ்சியேத்துமிடமான திருமலைக்கு இறைவனே!
கிட்டி யநுபவிக்கப்பெறாத பாபத்தைப் பண்ணின நான் உன்னுடைய பூவார் கழல்களைப் பொருந்தும்படியான ஒரு உபாயத்தைக் கல்பித்தருளவேணுமென்றாராயிற்று.
பூ ஆர் கழல் – புஷ்பங்களை நிரம்பிய திருவடி, அல்லது பூப்போன்ற திருவடி. திருவேங்கடமுடையானுடைய திருவடிக்குப் பூவார் கழல்களென்றும், அழகியமணவாளனுடைய திருவடிக்குத் திருப்பொலிந்த சேவடியென்றும், கச்சிநகர்த் தேவப்பெருமாளுடைய திருவடிக்குத் துயரறுசுடரடியென்றும் ஸம்பிரதாயத் திருநாம்மென வழங்குவர் பெரியோர்.
—————–
***- (புணராநின்ற) ஆழ்வீர்! நீர் இங்ஙனே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் செய்வதாகவே நினைத்திருக்கிறோமென்று திருவேங்கடமுடையான் திருவுள்ளமாக, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டு தரலாகாதோ வென்கிறார்.
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-
பதவுரை
| அன்று |
– |
ராமாவதாரத்திலே |
| புணரா நின்ற மரம் ஏழ் |
– |
ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை |
| எய்த |
– |
துளைபடுத்தின |
| ஒரு வில் வலவா ஓ |
– |
ஓ தனிவீரனே! |
| புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே |
– |
சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே |
| போன் |
– |
தவழ்ந்து சென்ற |
| முதல்வா ஓ |
– |
ஓ மூலபுருஷனே! |
| திணர் ஆர் மேகம் என |
– |
தின்மை மிக்க மேகங்களென்னும்படி |
| களிறு சேரும் |
– |
யானைகள் சேருமிடமான |
| திருவேங்கடத் தானே |
– |
திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே |
| திணர் ஆர் சார்ங்கத்து |
– |
திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய |
| உன பாதம் |
– |
உனது திருவடிகளை |
| அடியேன் சேர்வது எந்நாள் |
– |
அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ? |
ஸுக்ரீவன் இராமபிரானால் அபயப்ரதானம் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப் பலவாறு சொல்லி வாலி மராமரங்களைத் துளைத்ததையும் துந்துபியின் உடலெலும்பை ஒரு யோஜநை தூரம் தூக்கியெறிந்த்தையுங் குறித்துப் பாராட்டிக்கூறி இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது கூடுமோ? என்று சொல்ல,
அதுகேட்ட லக்ஷ்மணன், உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது என்னசெய்ய வேண்டுவது? என்ன,
ஸுக்ரீவன், இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும் போது சங்கையுண்டாகின்றது, ஏழு மராமரங்களைத் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும் என்று சொல்ல,
ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாகுமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்துயோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக்கண்ட ஸுக்ரீவன் “முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைக் தூக்கியெறிந்தான், இப்போது உலர்ந்துவிட்ட இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று“ என்று கூற,
பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின்மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு அம்பறாத் தூணியை யடைந்த்து என்கிற வரலாறு இப்பாட்டின் முதலடியில் அறியத்தக்கது.
இந்தச் சரிதையை ஆழ்வார் இங்கு எடுத்துக் கூறியது, உன்னுடைய ஆற்றலில் நம்புதலில்லாமல் அதிசங்கை கொண்ட குரக்கரசனுக்கு சங்கையைப் போக்கியும் காரியம் செய்த நீ, உன் பக்கலில் அதிசங்கை சிறிதுமின்றிக்கே உன் ஆற்றலை உள்ளபடியறிந்திருக்குமென் திறத்திலே காரியஞ் செய்யலாகாதோ? என்கைக்காக.
கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கிருஷ்ணனைத் திருவயிற்றில் தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில் முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களைக் கிடந்த குபேரபுத்திரரிருவரும் சாபம் தீர்ந்து சென்றனர் என்கிற வரலாறு இரண்டாமடியில் அநுஸந்திக் கத்தக்கது.
இன்னாருடைய சாபத்தைத் தீர்ப்பது, இன்னாருடைய சாபத்தைத் தீர்க்கலாகாது என்று ஒரு நியதி வைத்துக்கொண்டிருக்கிறாய் போலும் என்று கேட்கிற பாவனை.
(திணரார்மேகமித்யாதி) களிறென மேகஞ்சேரும், மேகமெனக் களிறுசேரும் என்று இரண்டுபடியும் அந்வயிக்கப்பொருந்தும்.
யானைபோன்ற மேகங்களும், மேகம்போன்ற யானைகளும் திருமலையிலே வர்த்திப்பது இயல்பு.
* தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் * என்றும் * சோலை மழகளிறே * என்றும் யானை தானாகச் சொல்லலாம்படியும் எம்பெருமானிருக்கிற இருப்புக்கு ஸ்மாரகமானபடி.
திணரார் சார்ங்கத்து உன-உன்கையில் வில் இருக்க நான் இழக்க வேண்டுவதில்லை, இழக்கமாட்டேன், இனி உன்னைப் பெறும் நாளைச் சொல்லியருளினால் போதுமென்கிறார்.
—————
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-
பதவுரை
| மண் அளந்த தாமரைகள் இணை |
– |
உலகமளந்த உபயபாதங்களை |
| நாம் காண்பதற்கு எந்நாள் என்று |
– |
நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று |
| இமையோர்கள் |
– |
நித்யஸூரிகள் |
| எந்நாளும் நின்று ஏத்தி |
– |
நிரந்தரமாக நின்று துதித்து |
| இறைஞ்சி |
– |
வணங்கி |
| இனம் இனம் ஆய் |
– |
திரள் திரளாக |
| மெய் நா மனத்தால் |
– |
த்ரிகரணங்களாலும் |
| வழிபாடு செய்யும் |
– |
ஆராதனை செய்யுமிடமான |
| திருவேங்கடத்தானே |
– |
திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! |
| அடியேன் நான் |
– |
அடியேனாகிய நான் |
| மெய் எய்தி |
– |
(கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து |
| உன் அடிக்கள் மேவுவது |
– |
உன் திருவடிகளிலே பொருந்துவது |
| எந்நாள் |
– |
என்றைக்கோ? |
***- (எந்நாளே நாம்.) கீழ்ப்பாட்டில் “உனபாதம் சேர்வதடியே னெந்நாளே“ என்றதற்கு உன் திருவடிகளே நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா? அது எது? என்று ஸந்தேஹித்துச் சொல்வதாகவும் பொருளாகக்கூடுமே,
எம்பெருமான் “ஆழ்வீர்! எந்நாளேயென்று நீர் ஸந்தேஹிப்பதென்? அது ஒரு தேசவிசேஷத்திலே நியதமாயிருக்குமே“ என்றரு மாத்திரம் தேசவிசேஷமா? என்கிறார்.
இப்பாட்டின் இரண்டாமடியில் இமையோர்கள் என்றது நித்யஸூரிகளைச் சொல்லிற்றாகக் கொண்டால் இங்ஙனே ஸங்கதியாகக் கடவது
இனி, ஸர்வர்க்கலோகத்திலுள்ள தேவர்களைச் சொல்லிற்றாகக் கொண்டால், ப்ரயோஜநாந்தரநான் இழந்துபோவதே! என்கிறாராகக் கொள்க.
பன்னீராயிரவுரைகாரர் “எந்நாளேம்“ என்று பதம் பிரித்து உரையிட்டார், “எந்நாளேம் என்றது எந்நாளையுடையோமென்றபடி“ என்பது உரையில் முடிவிலுள்ளது.
எந்நாளேம் நாம், என்று சந்தியாகும். மவ்வீறொற்றெழிந்து உயிரீறொப்பவும்“ என்பது நன்னூல் மகரவீற்றதல்லாமல் “எந்நாளே“ என்றே சொல் வடிவமானாலும் அந்வயிக்கக் குறையில்லை, மண்ணளந்த இணைத்தாமரைகளை நாம் காண்பதற்காகும் நாள் எந்நாள் என்றதாகக் கொள்க.
இவ் விபூதியிலுள்ளார் அவ்விபூதியிலே சென்று அங்குள்ள பரவத்வத்தைக்கண்டு உகந்து அங்கே அடிமை செய்ய ஆசைப்படுமாபோலே அங்குள்ளாரும் இவ்விபூதயிலே வந்து ஸௌலப்ய “ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவதன்றோ“ என்ற பாரிப்போடே வந்து இவ்விடம் விட்டுப் பெயர்ந்து போகமாட்டாதே நியதமாக நிலைநின்றிருந்து திரள்திரளாய் மநோவாக் காயங்களினால் ஆச்ரயிக்கும்படியான திருமலையில் உறையும் பெருமானே!
மெய் நா மனத்தால் வழிபாடு – மெய்யினால் செய்யும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள், நாவினால் செய்யும் வழிபாடு –தோத்திரம் மனத்தால் செய்யும் வழிபாடு –சிந்தித்தல்.
மெய் என்பதை நாவிலும் மனத்திலும் அடைமொழியாகவும் கூட்டலாம், மெய்யான நா, மெய்யான மனம் என்க. இங்கு மெய்ம்மை ப்ரயோஜநாந்தரத்தை விரும்பாமை.
ஈற்றடிக்கு ஈடு காண்மின், – “குணாவிஷ்காரத்தாலே மாநஸாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட வொண்ணாது, நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாகக் கிட்டி பின்னை விச்லேஷத்தோடே வ்யாப்தமாகாதபடி பொருந்தப் பெறுவது என்றோ வென்கிறார். ஓரடி விடில் சத்தை யற்றிறே இவர்க்கிருக்கிறது.“
முதலடியில் “இணைத்தாமரையடிகள்“ என்ன வேண்டுமிடத்து “இணைத்தாமரைகள்“ என்றது முற்றுவமை. * தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே * என்ற விடத்திற்போல.
பவிஷ்யத் புராணத்தில் சரணாபதியநுஷ்டானத்தைக் காட்டுமிடத்தில் * லோகவிக்ராந்த சரணௌ சரணம் தேவ்ரஜம் விபோ * என்று உலகளந்த திருவடிகளை ப்ரஸ்தாவித்து அந்தத் திருவடிகளிலே சரணாகதியநுஷ்டானம் செய்வதாகக் காட்டியிருத்தாலும்,
கத்ய முகத்தாலே சரணாகதி செய்தருளின எம்பெருமானார் தாமும் அந்த ச்லோகத்தை முன்னிட்டே உலகளந்த திருத் தாளிணையில் சரணாகதி செய்த்தாகக் காட்டியிருக்கையாலும்
சரணாகதி ப்ரகரணத்தில் உலகளந்த திருவடிக்கு ஒரு விசேஷமுண்டென்று தெரிகிறது.
இங்கு மேலே * அகலகில்லே னென்கிற பாசுரம் சரணாகதி யாகையாலே இவ்வாறாம்பத்து முழுவதும் சரணாகதி ஸாரமாயிருக்குமென்று நம் முதலிகள் திருவுள்ளம் பற்றுவர்கள்.
அதற்கு ஏற்ப இவ்வாறம்பத்தில் உலகளந்த திருவடி ப்ரஸ்தாவம் மலிந்திருக்கும்,
* மின்கொள்சேர் புரிநூல் குறளாயகன் ஞாலங்கொண்ட வன்மளந்த மாயனென்னப்பன்
* திசைஞாலம் தாவியளந்தும்
* மாலுக்கு வையமளந்த மணாளற்கு
* மண்ணும் விண்ணுங்கொண்ட மாணவம்மான்
* ஓரடியா லெல்லாவுலகுந் தட வந்த மாயோன். தாவி வையங்கொண்ட தடந்தாமரைகள்
* (இங்கு) * மண்ணளந்த இணைத்தாமரைகள்.
இதனால், ஆழ்வாருடைய சரணாகதிக்கு இலக்கான திருவேங்கடமுடையானது திருவடிகள் உலகமளந்த திருவடிகளேயென்று காட்டப்பட்டதாயிற்று அதாவது, அத்தகைய ஸௌலப்ய ஸௌசீல்யம் வாய்ந்தவை என்கை.
————-
***- (அடியேன் மேவி) பேறு தப்பாதென்று துணிந்திருத்தல் ஸ்வரூபமாயினும் அத்தலையில் போக்யதை நெஞ்சுக்கு விஷயமாக ஆக,
தரித்திருக்க முடியாதபடி பதற வேண்டியிருக்குமே, அந்தப் பதற்றத்தை யருளிச் செய்கிறாரிப்பாட்டில்.
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-
பதவுரை
| அடியேன் மேவி அமர்கின்ற அமுதே |
– |
அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே! |
| இமையோர் அதிபதியே |
– |
தேவாதி தேவனே! |
| அடு புள் கொடி ஆ உடையானே |
– |
(பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே! |
| கோலம் கனிவாய் பெருமானே |
– |
அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே! |
| செடி ஆர் வினைகள் தீர் மருந்தே |
– |
செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! |
| உன பாதம் காண |
– |
உனது திருவடிகளைக் காண்கைக்கு |
| நோலாது |
– |
நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே) |
| நொடி ஆர் பொழுதும் |
– |
ஒரு க்ஷண மாத்திரமும் |
| ஆற்றேன் |
– |
தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன் |
அடியேன், மேவியமர்கின்ற அமுதே! எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம்போலே யிரா நின்றது இது.
தேவஜாதிகள் உப்புச்சாற்றைப் பருகிக் களிப்பர்கள், அதுவோ இது? இங்குள்ள மற்றையோகள் அநுபவிக்கும் போலேயா நான் அநுபவிப்பது? அடியேனுடைய அநுபவம் அஸாதாரணமன்றோ வென்கிறார்.
உடனே இமையோரதிபதியே! என்றது – அங்குத் திருநாட்டிலே நித்ய ஸூரிகள் உன்னை எப்படி யநுபவிக்கிறார்களோ அப்படி இங்கு அடியேன் அநுபவிப்பவனல்லேனோ? என்று காட்டினபடி.
ஆழ்வீர்! திருமலைக்கு வந்து நீர் ஸேவித்துப் போகலாகாதோ? இங்ஙனே கிடந்து துடிப்பானேன்? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, கொடியாவடு புள்ளுடையானே! என்கிறார்.
* ஆகர்ஷந் த்விஜராஜமப்யதிஜவாத் * என்று பெரிய திருவடியையும் யிடுக்கிக் கொண்டு விரைந்தோடிவந்து அருள் செய்வதென்பது சிலர்க்கேயோ? அவ்வருளுக்கு அடியேன் தகுந்தவனல்லேனோ? அந்தப் புள்ளரையனை என்னளவிலே சிறிது செலுத்தினாலாகாதோ? என்கிறார் போலும்.
கோலக் கனிவாய்ப் பெருமானே! – அழகியதாய்க் கனிந்திருந்துள்ள திருவதரத்தின் பழுப்பைக் காட்டி என்னையடிமை கொண்டவுனக்கு மீண்டும் அத் திருவதரத்தைக் காட்டுதல் அரிதாயிற்றே! என்று திருவுள்ளம் நொந்து சொல்லுகிறபடி
“கோலக்கனிவாய்ப் பெருமானே கொடியாவடு புள்ளுடையானே“ என்று சேர்ந்து அந்வயித்து “ஆச்ரிதரை இவ்வழகை அநுபவிப்பிக்கைக்கு கொடி கட்டிக் கொண்டிருக்கிறவனே! என்றருளிச் செய்வர் நம்பிள்ளை.
செடியார்வினைகள் தீர்மருந்தே! நிலத்தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்த மிகச் சிறக்குமே,
திருமலைமருந்து காணும், * ஆர்மருந்தினியாகுவார் * என்கிற இவ்வாழ்வார்க்கு அசேதநமான மருந்து பிடிக்காதே.
எது மருந்து? என்னாதே “ஆர்மருந்து“ என்பவராகையாலே இவருடைய மருந்து சேதமாகவே யிருக்கவேணுமே.
நோய்களைத் தீர்க்கும் மருந்து உலகில் இருந்தாலும் நோய்கட்கு மூலகாரணமான வினைகளைத் தீர்க்கும் மருந்து இல்லையே,
மருத்துவனாயும் மருந்தாயுமுள்ளவன் மலையப்பனே காணும்.
“அடியேன் மேவியமர்கின்றவமுதே மருந்தே திருவேங்கடத்தெம்பெருமானே“ என்று சேர்த்து அந்வயித்து “அவ்வம்ருதம் புஜிப்பார்க்கு மலைமேல் மருந்திறே, அவ்வம்ருதம், புஸிப்பார்க்குச் சாய்கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி“ என்றருளிச் செய்வர் நம்பிள்ளை.
(நொடியார் பொழுதுமித்யாதி) உனபாதம் காண நொடியார் பொழுதும் நோலாது ஆற்றேனே, என்றாவது, உனபாதம் காணநோலாது நொடியார்பொழுதும் ஆற்றேனே என்றாவது அன்வயித்து அப்படியிருந்தும், விசேஷமாக ஸாதநாநுஷ்டநம் பண்ணினவர்கள் பலன் தாமதித்தால் துடிக்குமாபோலே நான் துடிக்கின்றேனே யென்கிறார்.
இங்கே நம்பிள்ளையீடு “தனியே ஒரு ஸாதனமநுஷ்டிக்குமவனுக்கு அது தலைக்கட்டினவாறே பெறுகிறோ மென்றாதல், அவனே சில வைகல்யம் பிறக்கப்பட்டிறே பலன் தாழ்த்தது என்றாதல் ஆறியிருக்கலாம், அவனே ஸாதனமான விவர்க்கு விளம்பித்தால் அவன் க்ருபையும் ஏறிப் பாயாதபடி யானேனோ! என்னும் பயமிறே அநுவர்த்திப்பது“.
திருவாராதனத்தில் பெருமாளுக்கு அமுது செய்தருளப் பண்ணும்போது * அடியேன் மேவியமர்கின்றவமுதே யென்கிற விப்பாசுரத்தை யநுஸந்திப்பதென்று பட்டர் நியமனம்.
—————
***- (நோலாதாற்றேன்) ஸாதநாநுஷ்டானம் என் பக்கலில் ஒன்றுமில்லையென்று சொல்லிக்கொண்டே ஆசைப்பட்டு
நாக்கு நீட்டினால் கிடைக்குமோ? என்று எம்பெருமான் திருவுள்ள மாகக்கொண்டு
தங்களுடைய உபாய தாரித்ரியத்தைச் சொல்லிக் கொண்டன்றோ வந்து உன்னைக் காணப்பெறுகிறது என்கிறார்.
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-
பதவுரை
| நுண் உணர்வின் |
– |
(ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான |
| நீலார் கண்டத்து அம்மானும் |
– |
சிவபிரானும் |
| நிறை நான்முகனும் |
– |
(ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும் |
| இந்திரனும் |
– |
தேவேந்திரனும் |
| உன பாதம் காண வோது ஆற்றேன் என்று |
– |
“உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு |
| சேல் எய் கண்ணார் பலர் சூழ |
– |
கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து |
| விரும்பும் |
– |
விரும்பிப்பணியுமிடமான |
| மால் ஆய் மயக்கி வந்தாய் போலே |
– |
மயக்கிக்கொண்டு வந்தாப்போலே |
| அடியேன் பால் வராய் |
– |
அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும். |
நோலா தாற்றேன் நுன பாதம் காண “ என்பது –நீலார் கண்டத்தம்மானும் நிறைநான்முகனுமிந்திரனும் சொல்லும் பாசுரமாயிற்று.
“பிரானே! உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதநாநுஷ்டானம் பண்ணாதே யிருந்து வைத்து உன்னையொழிய ஆற்றமாட்டேன்“ என்பதாம்
அந்தத் தேவர்களின் வார்த்தை. இங்கே நம்பிள்ளை ஆச்சரியமாக அருளிச் செய்கிறார், “ஒரு பாணாஸுர யுத்தத்திலே தோற்றுப் போக்கடி யற்றாவாறே இங்ஙனே வந்து விழுவர்கள், ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலையெடுத்தபோது “ஈஸ்வரோஹம்“ என்றிருப்பார்கள். முட்டினவாறே * க்ருஷ்ண மஹாபாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம் * என்று ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்வர்கள்“.
நுண்ணுணர்வின் – * ஈசாநாத் ஜ்ஞாமந்விச்சேத் * என்று சாஸ்தரம் சொன்னபடி பிறர்க்கு ஞானமளிக்க வல்லனாம்படி ஸூக்ஷ்ம ஜ்ஞாநம் நிரம்பியவனாம் நீலகண்டன்.
நீலார் கண்டத்தம்மான் – விஷத்தைக் கண்டத்திலே தரித்த சக்தியை யுடையனாய் அத்தாலே உலகுக்கு தலைவனாகத் தன்மை யபிமானித்திருக்குமவனென்கை.
இங்கே ப்ராஸங்கிகமாக ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்,
“அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலே இவர்களுடைய வாக்யங்களை ப்ரமாணமாகக் கொண்டு போராநின்றோமே யென்னில், ஸத்வம் தலையெடுத்தபோது சொல்லுமவையெல்லாம் கொள்ளக்கடவோம். இவை கைக்கொண்டோமென்னா இவர்கள் தாங்கள் உத்தேச்யராகார்கள், * காக்கை வாயிலுங்கட்டுரை கொள்வர் என்றுண்டே – என்று பட்டரருளிச் செய்வர்.
சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் – கயல்போன்ற கண்களையுடையவர்களென்று ஸ்த்ரீகளைச் சொல்லுகிறது ப்ரக்ருதத்தில் அவரவர்களுடைய பத்நிகளைச் சொல்லிற்றாகிறது,
தேவர்கள் வந்து சரணம் புகும்போது தாங்கள் தனித்து வருகையன்றிக்கே மணாட்டிமார்களோடு கூடி வருவர்களாம்.
(ஈடு) “ஆபத்து வந்தவாறே மணாட்டிமார் கழுத்தலும் தங்கள் கழுத்திலும் கப்படங் கட்டிக்கொண்டு வந்து விழத் தொடங்குவர்கள்.“
மாலாய் மயக்கி அடியேன்பால் வாராய் – மாலாய் மயக்கி வந்தாப்போலே அடியேன் பால் வாராய் என்று அந்வயிப்பது.
மால் என்று கண்ண பிரானைச் சொல்லுகிறது. கண்ண பிரானாய் பிறந்து வியாமோஹ சேஷ்டிதங்களைச் செய்து வஸுதேவாதிகள் முன்னே வந்து நின்றாப்போலே என் முன்னே வந்து நிற்க வேணுமென்று பிரார்த்தித்தபடி. (ஈடு) “க்ருஷ்ணனாய்க் கொண்டு உன் குண சேஷ்டிதங்களாலே அவ்வதாரத்திலுள்ளாரைப் பிச்சேற்றிக் கொண்டு வந்தாப் போலே எனக்காகவும் ஒரு வரத்து வரவேணும்.“
————-
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-
பதவுரை
| வந்தாய் போலே வாராதாய் |
– |
கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே! |
| வாராதாய் போல் வருவானே |
– |
எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே! |
| செம் தாமரை கண் |
– |
செந்தாமரைபோன்ற திருக்கண்களையும் |
| செம் கனி வாய் |
– |
செங்கனி போன்ற திருப்பவளத்தையும் |
| நால் தோள் |
– |
நான்கு திருத்தோள்களையுமுடைய |
| அமுதே |
– |
பரமபோக்யனே! |
| எனது உயிரே |
– |
எனக்கு உயிரானவனே! |
| சிந்தாமணிகள் பகர் |
– |
சிறந்த ரத்னங்களின் ஒளியான |
| அல்லை பகல் செய் |
– |
இரவையும் பகலாக்குமிடமானது |
| திருவேங்கடத்தானே |
– |
திருமலையில் வாழ்பவனே! |
| அந்தோ |
– |
ஐயோ! |
| உன பாதம் |
– |
உனது திருவடிகளே |
| அடியேன் |
– |
அடிமைச்சுவடறிந்த நான் |
| இறையும் அகல கில்லேன் |
– |
ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன் |
***- (வந்தாய்போலே) தம்முடைய விச்லேஷ வ்யஸநத்தைக் கனக்க அருளிச் செய்கிறார்.
வந்தாய்போலே வாராதாய் – மாநஸாநுபவம் கரைபுரண்டு போகும்போது நோக்கினால் பாஹ்ய ஸம்ச்லேஷமும் பெற்றோம் என்றெண்ணி த்ருப்தி பிறக்கும்படியாயிருக்குமே, அத்தை அதைச் சொல்லுகிறது இங்கு.
வாராதாய் போல் வருவானே! – வந்து தோற்றுகைக்கு ப்ரஸக்தி யில்லையென்று நிச்சயித்து ஆசையற்றுக் கிடக்குங்கால், கேட்பாரற்ற ஸ்வாதந்தரியத்தாலும் அப்ரதிஹத ஸங்கல்பத்தாலும் ஆகஸ்மிகமாக வந்து நிற்பதுமுண்டே பகவானிடத்தில், அதைச் சொல்லுகிறது.
வேறுவகையாகவும் நிர்வஹிக்கலாம், இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காணமின் – அன்றிக்கே அநாச்ரித விஷயத்தில் , கைபுகுந்தானென்று தோற்றியிருக்கக் செய்தே புறம்பாய் ஆச்ரிதர்க்கு இவன் கிட்ட வரியன் என்றிருக்கச் செய்தே உட்புகுந்திருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்“
(இதன் கருத்தாவது) விபவாவதாரங்களிலே சத்ருக்களாதவுள்ளவர்கள் கைப்படாதே யிருப்பன், அடியவர்களாயிருப்பார் இவனுடைய பரத்வத்தை யெண்ணி இவன் நமக்கு எளியனாகப் போகிறானோ என்றிருக்கவும் அவர்களிடத்தே தனது ஸௌலப்யத்தைக் காட்டிக் கொண்டு வந்து நிற்பன் என்கை.
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால்தோளமுதே – கண்டாருடைய ஸகல தாபங்களும் ஆறும்படி குளிர்ந்த திருக்கண்களை யுடையையாய், சிவந்து கனித்திருந்துள்ள திருவதரத்தையு முடையையாய், கற்பகத்தரு பணைத்தாற்போலே யிருக்கிற நான்கு திருத்தோகளை யுடையையாய் எனக்கு பரம போக்யனாயிருப்பவனே!
இங்ஙனே வடிவழகின் மிகுதியைப் பேசினவுடனே எனதுயிரே! என்றது – இப்படி விலக்ஷணமான வடிவழகை நான் அநுபவிக்கும்படி பண்ணி, பிரிவில் நான் உளனாகாதபடி பண்ணிவனே! என்றவாறு.
(சிந்தாமணிகள் இத்யாதி) நெஞ்சால் நினைத்தவாறே எதையும் அளிக்கவல்ல ரத்னத்திற்குச் சிந்தாமணி யென்று பெயர்.
அதுபோற் சிறந்த ரத்னங்களை இங்குச் சிந்தாமணிகளென்கிறது. திருமலையிலுள்ள ரத்னங்களைச் சொன்னதாகவுமாம்,
திருவேங்கடமுடையானுடைய திருமேனியிலணிந்துள்ள ரத்னங்களைச் சொன்னதாகவுமாம்.
அவற்றினுடைய பகர் – ஒளியானது-* படியானது, அல்லைப் பகல் செய்யா நின்றதாம், எப்போதும் பகலாகவே காண்கிறதாயிற்று.
* படியிடை மாடத்தடியிடைத் தூணில் பதித்த பன்மணிகளினொளியால், விடிபகலிரவென்ற்றிவரிதாய திருவெற்றியங்குடியதுவே * என்ற திருமங்கையாழ்வார்ருளிச் செயல் இங்கு நினைக்கத்தக்கது.
பரமபதம் போலே எப்போதும் பகலேயாயிருக்கின்ற திருமலையிலே யெழுந்தருளியிருப்பவனே! என்று சொன்னவுடனே அந்தோ! என்றதன் கருத்தை நம்பிள்ளை யெடுத்துக் காட்டுகின்றார் காண்மின்
(அந்தோ) போக்யமும் குறைவற்று அவன் தானும் ஸந்நிஹிதனாய் எனக்கு ஆசையும் மிகுந்திருக்கக் கிட்டி யநுபவிக்கப்பெறாதொழிவதே என்கிறார்.
அடியேன் உனபாதம் இறையும் அகிலகில்லேன் திருவடிகளை விட்டு நீங்காதவன் என்கிற காரணத்தினாலன்றோ அடியேனென்று பேர் பெற்றது,
ஆகவே அடியேனாயிருந்துவைத்து உன் திருவடிகளை விட்டு அகல்வேனோ நான்?
இங்கு இறையும் என்றதற்கு அந்தரங்கமான கருத்தை நம்பிள்ளை வெளியிடுகிறார் – “தர்சியா நிற்கச் செய்தே அதுக்கு வர்த்த கமாகக் கண்ணை மாற வைக்கிலும் பொறுக்கமாட்டேன்“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
அகன்றிராமே கலந்திருக்கச் செய்தே அக்கலவிக்கு உத்தேசகமாக அந்ய பரத்வம் காட்டுவதுண்டு அதுவும் பொறுக்க முடியாதது என்றவாறு.
————-
***- (அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார்,
இப்பாட்டில், தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும்
தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-
பதவுரை
| அவர் மேல் மங்கை |
– |
பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார் |
| இறையும் அகல கில்லேன் என்று |
– |
ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு |
| இறையும் அகல கில்லேன் என்று |
– |
ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு |
| உறை மார்பா |
– |
நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே! |
| நிகர் இல் புகழாய் |
– |
ஒப்பற்றதான புகழை யுடைய வனே! |
| உலகம் மூன்று உடையாய் |
– |
சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே! |
| என்னை ஆள் |
– |
நீசனே என்னையுமடிமை கொள்பவனே! |
| வானே |
– |
பவனே! |
| அமரர் |
– |
தேவர்களும் |
| முனி கணங்கள் |
– |
மஹர்ஷி ஸமூஹங்களும் |
| விரும்பும் |
– |
விரும்பிவந்து பணியுமிடமான |
| திருவேங்கடத்தானே |
– |
திருமலையில் வாழ்பவனே! |
| புகல் ஒன்று இல்லா அடியேன் |
– |
அநந்யகதியான நான் |
| உன் அடி கீழ் |
– |
உனது திருவடி வாரத்திலே |
| அமர்ந்து புகுந்தேன் |
– |
மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன் |
எம்பெருமானுடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணாநின்ற பெரியபிராட்டியார் இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்” (ஒரு கணப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன்) என்று இதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறாளாம்.
ஒரு நிமிஷமும் பிரியாதே நித்ய ஸம்ச்லேஷத்துடனிருக்கும்போது அகலுகைக்கு ப்ரஸக்தி தானுமில்லையாயிருக்க இந்த வார்த்தை எதற்காகச் சொல்லவேணுமென்னில்,
போக்யதையின் கனத்தைப் பார்த்தவாறே ஐயோ! அகல நேர்ந்துவிடுமோ என்னவோ வென்று அதிசங்கை யுண்டாக்ககூடியது, அவ்வதி சங்கை சொல்லுவிக்கச் சொல்லுகிறபடி யென்ப.
அலர்மேல் மங்கை – புஷ்பத்தின் பரிமளங் தானே ஒரு வடிவு கொண்டாப்போலே தோன்றினவளான –ஸ்ரீ மஹாலக்ஷ்மி
அந்தப் பூவில் வஸிக்க ருசியாதே அதைவிட்டுத் திருமார்பிலே வந்து சேர்ந்த்து அப்பூவிற் காட்டிலும் ஸௌகுமார்யாதிசயமுள்ள விடம இத்திருமார்பேயென்று.
அவ்வளவு சிறந்த்தான ஸ்தானம் கிடைத்தும் இது நமக்கு நிலைக்குமோ நிலைக்காதோவென்று அதிசங்கை தோன்றுவது விஷய வைலக்ஷண்யப்ரயுக்தம்.
உறை மார்பா! – அப்படிப்பட்ட பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணும்படான திருமார்பை யுடையவனே! என்றபடி.
எம்பெருமானுக்கு உபாயத்வமும் உபேயத்வமுமாகிற இரண்டு தன்மைகளுணைடானாப்போலே
பிராட்டிக்குப் புருஷகாரத்வமும் உபேயத்வமுமாகிற பிராட்டியின் புரஸ்காரமென்று அறியக்கடவது,
எம்பெருமானது நாராயணத்வ ப்ரயுக்தமான ஸ்வாபாவிக ஸம்பந்தத்தைத் தெரிந்துக்கொண்டு அவனை ஆச்ரயிக்கும்போது இவளைப் புருஷகாரமாக மன்னிடவேண்டிய அவசியம் என்ன? என்னில்,
குளிர்ந்த ஜலத்திலுங்கூடக் கொடிதான நெருப்பு கிளருமாபோலே ஸர்வபூத ஸுஹ்ருத்தான அவன் திருவுள்ளத்திலே, சேதநன் அளவுகடந்து பண்ணும் அபராத மடியாகச் சீற்றம் பிறப்பதுமுண்டே,
அங்ஙனே சீற்றம் பிறந்தால் அவ்வபராதத்தைப் பொறுப்பது இப்பிராட்டிக்கா வென்க.
தன்னுடைய உபதேசாதிகளாலே அச்சீற்றத்தை யாற்றி தயையை ஜனிப்பிக்குமவள் பிராட்டி. ஆகையாலே ஸம்பந்த வுணர்ச்சி யுள்ளவனுக்கும் அபராத பயத்தாலே புருஷகார புரஸ்கரணம் அவசியமேயாகும்.
பிராட்டியின் புருஷகாரம் அவ்வளவு காரியம் செய்யுமோவென்னில், * அகில ஜகந்மாதரம் * என்கிறபடியே
சேதனனுக்கு இவள் மாதாவாய் அந்த ஸம்பந்தமடியாக இவர்களது வருத்தங் கண்டு பொறுத்திருக்கமாட்டாதேயிருக்கிற வொரு தன்மையும், எம்பெருமானுக்குப் பத்னியாய் * பித்தர் பனிமலர்மேல் பாவைக்கு * என்கிறபடியே அவன் தன் வைக்ஷண்யத்தைக் கண்டு பிச்சேறித் தன் சொற்படி நடக்கும்படி அபிமத விஷயமாயிருக்கிற வொரு தன்மையும் உடையளாகையாலே இவளுடைய புருஷகாரம் ஒருவகையாலும் விபலமாக மாட்டாது.
உலகில் புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும், எவர் விஷயத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்கவேண்டியது ஒன்று, யாரிடத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவரிடத்தில் தம் வாக்கு வெற்றிபெற்றே தீரும்படியான வால்லப்யமிருக்கவேண்டியது மற்றொன்று. இவ்விரண்டும் பிராட்டியிடத்தே புஷ்கலமென்று சொல்லிற்றாயிற்று.
இதெல்லாம் உண்மையே ஈச்சரனோ கேட்பாரற்ற ஸ்வத்திரன் அன்னவன் சேதநருடைய குற்றங்களை நிறுத்து அவற்றுக்குத் தக்கபடி தண்டனை செலுத்தியே தீர்வேன் என்று நிற்குமளவில் பிராட்டி தான் என்ன செய்யமுடியும்? என்னில்,
இது இவளுடைய செய்தியறியாதார் செய்யும் இடைவிடாது படாத பாடுகளும் படுத்தின ராக்ஷஸிகளின் கொடுமையை முன்னம் மரத்தின் மேல் மறைந்திருந்து கண்ட அனுமான் பெருமாள் வெற்றி பெற்ற பின்பு இவர்களைப் பார்த்துக்கொள்வோம் என்று ஆறியிருந்து ராவண வதமான பின்பு ஓடிவந்து
“இவ்வரக்கிகளின் அபராதங்களைக் கணக்கிட்டு சித்திரவதம் பண்ண நினைத்திருக்கு மெனக்கு இடமளிக்க வேணும்“ என்ற (பிராட்டியை நோக்கிக்) கேட்டவளவிலே, அவ்வனுமானையும் உட் பட திருத்தும் இவள்
* அல்லி மலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்கும்மமான் * என்கிறபடியே தன் போக்யதையிலே மிகவும் ஈடுபட்டிருப்பவனாய்
* நின்னன்பின் வழிநின்று சிலைபிடித்தெம்பிரானேக * என்கிறபடியே மாயா மிருகத்தின் பின்னே போ“ என்றாலும் விளைவதறியாதே அதன் பின்னே தொடர்ந்து போமவனாய் இப்படி தனக்கு விதேயனாய் ரஸிகனாயிருக்குமவனைப் பொறுப்பிக்க வல்லளென்பதுபற்றிக் கேட்கவேணுமோ?
உறை மார்பா என்பதனால் புருஷகார பூதையான பிராட்டியும் ஈச்வரனுமான இருவருடையயவும் சேர்த்தியானது எப்போது முண்டென்று காட்டப்பட்டதாகும்.
ஞானம் ஆனந்தம் முதலியவை எப்படி எம்பெருமானுக்கு ஸ்வரூப நிரூபகங்களோ அப்படி ஸ்ரீபதித்வமும் நிரூபகமாகையாலே இவளோடே கூடியே ஈச்வர ஸத்பாவமென்று கொள்கை.
சேதனர்களின் அபராதங்களைக் கணக்கிட்டு தண்டிக்க வல்லவனாய் எம்பெருமானுடைய ஸ்வாதந்தரியத்தையும், சேதநர் செய்யும் குற்றங்களின் மிகுதியையுங் கண்டு “ஐயோ! என்னாகுமோ” என்கிற பயத்தாலே எம்பெருமானை விட்டு ஒரு நொடிப்பொழுதும் அகலமாட்டாள்.
இப்படி இவளிருந்து நோக்குகையாலே ஈச்வரனுடைய ஸ்வதந்திரியத்தைக் கண்டோ தன்னுடைய அபராதங்களை நினைத்தோ சேதநன் அஞ்சவேண்டிய ப்ரஸக்தியில்லை.
அன்றியும், பிராட்டியானவள் எப்போதும் எம்பெருமானோடு கூடியே யிருக்கின்றாளென்று தெரிந்துகொள்ளுமளவில் எந்த ஸமயத்திலும் எம்பெருமானை ஆச்ரயிக்கலாமென்பது தேறி நிற்கும்.
புருஷகாரம் செய்பவள் அருகே யிருக்குங்காலம் பார்த்து ஆச்ரயிக்கவேணும்“ என்று ஸமய ப்ரதீக்ஷை வேண்டியதில்லை“ ஆச்ரயிக்க வேணுமென்கிற ருசி பிறக்கவேணுடுவதத்தனையே.
பிராட்டியின் புருஷகாரம் அவசியம் வேண்டியதேயென்பதை விபவாவதார காலத்துச் செய்தியாலும் தெரிந்துக்கொள்ளலாம்.
ராமாவதாரத்தில் அளவு கடந்த அபராதத்தைச் செய்து ப்ரஹமாஸ்த்ரத்திற்கு இலக்காய் தலையறுப்புண்ண வேண்டிய காகம் க்ருபைக்கு இலக்காய்த் தலைபெற்றுப்போனது பிராட்டி அருகிருந்த்தனாலேயாம்.
அவ்வளவு அபராதி யல்லாத ராவணன் ராமசரத்துக்கு இலக்காய் முடிந்துபோனது இவளுடைய ஸந்நிதி யில்லாமையினாலேயாம்.
இவ்வர்த்த விசேஷங்களெல்லாம் ஈட்டில் மிக அருமையாக அருளிச்செய்யப்பட்டவை “ஒருநாள் பட்டர் பிள்ளை யழகியமணவாள அரையர்க்கு திவ்ய மருளிச்செய்கைக்காக “எல்லாரும் போங்கோள்“ என்ன நஞ்சீயருமெழுந்திருந்துபோய் நம்மை இராய் என்று அருளிச்செய்திலர் என்று வெறுத்திருக்க அப்போதே ஜீயர் எங்குற்றார்? என்று கேட்டருளித் தேடியழைத்துக் கூட வைத்துக்கொண்டிருந்து த்வயத்தை யருளிச் செய்யா நிற்கச்செய்தே அப்போதருளிச்செய்த வார்த்தை“ என்று தொடங்கி ஈட்டு ஸ்ரீஸூக்திகள் ஸேவிக்க.
நிகரில் புகழாய்! இத்யாதி. கீழ் முதலடியில் புருஷகாரவரணம் பண்ணினவாறே அந்த புருஷகார பலத்தாலே எம்பெருமானுடைய ஸ்வாத்ந்திரியமானது தலைமடிந்து தலையெடுக்கும் குணங்கள் சிலவுண்டு
அந்த குணங்கள் ஆச்ரயண ஸௌகர்யாபாதகங்களென்றும் ஆச்ரிதகார்பாபதகங்களென்றும் இரண்டு வகுப்பாயிருக்கும்.
அஞ்சாமல் கூசாமல் நாம் ஆச்ரயிக்கும்படி அநுகூலப்படுத்துகின்ற குணங்கள் ஆச்ரயண ஸௌகர்யாபாதகங்களெனப்படும்.
ஆச்ரயித்தபிறகு காரியம் தலைக்கட்டும்படி செய்யுங் குணங்கள் ஆச்ரித கார்யாபாதகங்களெனப்படும்.
வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம் ஸௌலப்யம் என்கிற குணங்கள் ஆச்ரயண ஸௌகர்யா பாதங்களாம்.
ஆச்ரயணோந்முகனான இச்சேதநன் தன் தோஷங்களைப் பார்த்து அஞ்சும்போது செய்வனோ செய்யானோ என்கிற சங்கை யுண்டாகுமளவில் இழவு பேறு தன்னதாம்படியானமைக்கு ப்ரகாசமான ஸ்வாமித்வத்தைக் கண்டு தன்னுடைய தண்மையை யநுஸந்தித்து அஞ்சாமல் நினைத்துத் தெளிவு பெறலாம்.
இந்திரயங்களுக்கு எட்டாதவனான அவனை நாம் எப்படி ஆச்ரயிப்பதென்று பிற்காலிக்க நினைக்குமளவில், தன் வடிவை சக்ஷுர் விஷயமாக்குகையாகிற ஸௌலப்யத்தை நினைத்து தெளியலாம்.
ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயன ஸௌகர்யா பாதங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுஸந்திக்கபடுகின்றன. எங்ஙனேவென்னில்.
1. நிகரில் புகழாய் என்று வாத்ஸல்யத்தைச் சொன்னபடி. 2. உலகம் மூன்றுடையாய் ஸ்வாமித்வத்தைச் சொன்னபடி. 3. என்னை யாள்வானே என்று ஸௌசீல்யத்தைச் சொன்னபடி. 4. நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே என்று ஸௌலப்யத்தை சொன்னபடி.
பக்தர்களில் கைங்கர்ய நிஷ்டர்கள் என்று குணாநுபவ நிஷ்டர்கள் என்றும் இரண்டு வகுப்புண்டு எங்கும், அப்பாகுபாட்டைத் திருவுள்ளம் பற்றியே “அமரர் முனிக்கணங்கள்“ என்றதென்று அருளிச்செய்வர்
* வைகுந்தத்தமரரும் முனிவரும் வியந்தனர் * என்று பரம பத்திலும் இங்ஙனே பாகுபாடு உள்ளதாகச் சொல்லிற்று.
புகலொன்றில்லாவடியேன் – ஆகிஞ்சந்யமும் அநந்ய கதித்வமும் ப்ரபத்திக்கு அதிகாரமாகையாலே அவையிரண்டையும் சொல்லுகிறதிங்கு.
கர்மஜ்ஞாந பக்திகளிலும் அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் அந்வயமின்றிக்கே அவற்றுக்கு விபரீதங்களானவற்றாலே தான் பரிபூர்ணனாயிருக்கிற விருப்பையும்,
தன்னுடய ஸ்வரூபம் ஸர்வப்ரகாரத்தாலும் ஈச்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாயிருக்கிற அநுஸந்தித்து நம் கார்யத்துக்கு நாம் கடவோமல்லோ மென்றிருக்கை – ஆகிஞ்சந்யம்.
மாதா பிதாக்கள் புத்ரர்கள் ப்ராதாக்கள் ப்ரஹ்மருத்ராதிகள் யாரும் ரக்ஷகர்களல்லர், ஸர்வேச்வரனே ரக்ஷகண் என்றிருக்கை அநந்யகதித்வம். இவையிரண்டுமுடைமை சொல்லிற்று “புகலொன்றில்லாவடியே“ னென்பதனால்.
உன்னடிக் கிழமர்ந்து புகுந்தேன் – ஆக இவ்வளவாலும் த்வயத்தில் பூரவ கண்டம் அநுஸந்திக்கப்பட்டதாயிற்று
ப்ரபத்தியானது வாசிகமாகவும் காயிகமாகவும் மாநஸிகமாகவும் உண்டு.
“என்னை நீ ரக்ஷிக்கவேணும்“ என்று வாயினல் பிரார்த்திக்கை வாசகமாகும்.
அஞ்சலியை ப்ரயோகித்தல், காகாசுரன் முதலானரைப்போலே ரக்ஷகவஸ்து இருந்தவிடத்தே வருதல் செய்கை காயிகமாகும்.
திண்ணிய அத்யவஸாயங் கொள்ளுதல் மாநஸிகமாகுமட.
* ஜ்ஞாநாத் மோக்ஷ மென்ற சொல்லுகையாலே மாநஸிகமே சிறந்ததாகும். அதுவே இங்கு உற்றது.
அஸ்மதாதிகளுடய உஜ்ஜீவநார்த்தமாக ஆழ்வார் பாசுரமிட்டு அருளிச் செய்த வித்தனை, இதனால் ஆழ்வாருடைய ப்ரபக்தி வாசிகமென்று கொள்ளக் கடவதன்று
————–
***- (அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-
பதவுரை
| அடியீர் |
– |
அடியவர்களே! |
| அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று |
– |
நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து, |
| அருள் கொடுக்கும் |
– |
க்ருபை பண்ணுகிறவனும் |
| படி கேழ் இல்லா பெருமானை |
– |
சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து |
| முடிப்பான் சொன்ன |
– |
ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த |
| ஆயிரத்து |
– |
ஆயிரத்தினுள்ளும் |
| திருவேங்கடத்துக்கு இவைபத்தும் |
– |
திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை |
| பிடித்தார்பிடித்தார் |
– |
ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள் |
| பெரிய வானுள் |
– |
பாமாகாசமென்கிற பரமபதத்திலே |
| வீற்றிருந்து நிலாவுலர் |
– |
நிலை நின்று வீற்றிருப்பர்கள். |
எம்பெருமானுடைய திருக்கையானது திருவடியை நோக்குமாபோலே யிருப்பதுண்டே,
அதற்கொரு கருத்துக்காணலாம். “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்துயில் காட்டியருளுகிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * கீரிடம் ஸ்ரீரங்கே சயிது என்கிற ச்லோகத்தில் * நிஹீநாநாம் முக்க்யம் சரணமிதி பாஹுஸ் த்திதர ஸ்புடம் பரூதே பாதாம்புஜயுகளம் ஆஜாநுநிஹித என்றருளிச் செய்த்தும் இங்கே அநுஸந்தேயம்.
படிக் கேழ் இல்லாப் பெருமானை – படியென்று ஒன்பு கேழ் என்று உயர்வு ஒப்புமுயர்வு மில்லாத பெருமான் .
அன்றிக்கே “அருள் கொடுக்கும்படிக்கு, கேழ் இல்லாப் பெருமானை“ என்றுங் கொள்ளலாம்
“ஆச்ரித விஷயத்தில் அருள்கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பில்லாத ஸர்வேச்சரனை“ என்பது ஈடு.
முடிப்பான் சொன்னவாயிரம் – தம்முடைய மநோ ரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அருளிச் செய்த ஆயிரமென்று உரைத்தார்கள் சில ஆசாரியர்கள், * பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த வாயிரம்“ என்பர் நம்பிள்ளை.
திருவேங்கடத்துக்கு இவைபத்தும் * வான் திகழுஞ சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் * என்ற திருவாய்மொழி தனியன்படியே ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸங்கல்பிக்கப்பட்டு
அதில் இத்திருவாய்மொழி திருவேங்கடத்துக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டதென்பது நன்கு அறியக்கிடக்கின்றது.
இப்பாட்டின் ஈற்றடியின் சுவைக்கு ஏற்ப ஈட்டில் நம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்திகள் காண்மின்– இவர் பண்ணின ப்ரபத்தியே நம்க்கு மெல்லாம் தனித்து வேண்டா இப்பாசுரத்தை சொல்லி பலத்திலே அந்வயிக்குமத்தனை.
நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாபோலே இவரை நினைத்து இப்பத்தும் கற்றார் பக்கலிலும் ஈச்வன் ப்ரஸந்நனாம்
ஸ்ரீ விஷ்ணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் பண்ணின ப்ரபத்தியே அமைந்ததிறே –இவனுடையவன் என்று எதிர்த் தலைக்குத் தோற்றவிருக்கு மத்தனை வேண்டுவது.
பிடித்தார் பிடித்தார் என்ற இரட்டிப்புக்கு இரண்டு வகையாக பொருள் கூறுவர் (1) சொல்லைப் பற்றினவர்கள். (2) பொருளைப் பற்றினவர்கள் என்று ஒரு நிர்வாஹம்.
பிடித்தாரைப் பிடித்தவர்கள் என்றபடியாய் ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளைச் சொன்னதாக மற்றொரு நிர்வாஹம்.
———————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-