(ஏழையராவி.) எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள்.
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-
பதவுரை
| தோழியர்காள் |
– |
தோழிமார்களே! |
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ |
– |
பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை! |
| அறியேன் |
– |
அறிகின்றிலேன்; (அன்றியே) |
| ஆழி அம் கண்ணபிரான் |
– |
கடல் வண்ணனான கண்ண பிரானுடைய |
| திரு கண்கள் கொலோ |
– |
திருக்கண்கள்தானோ! |
| அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
| தாமரை நாள் மலர் போல் |
– |
அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே |
| வந்து தோன்றும் கண்டீர் |
– |
வந்து தோன்றா நின்றன காண்மின்; |
| துயராட்டியேன் என் செய்கேன் |
– |
துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்? |
கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே என்று திருப்பாணாழ்வாரைத் துடிக்கப்பண்ணின திருக்கண்கள் தம்மையும் துடிக்கப் பண்ணுகிறபடி சொல்லுகிறார்.
மற்றுமுள்ள அவயவங்கள் கிடக்க முதலிலே திருக்கண்கள் வந்து நலிவானேன்? என்னில்; ஆசார்யஹருதயத்திலே “அதுக்கு ஹேது ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண்காண வந்து ஆள்பார்க்கிறவன் உலகின தியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை கேடிக் கழலலர்ஞான முருவின முழுதுமோட்டின பெருங்கண் எங்குமிலக்கற்று அன்பொடு நோக்கான திசையிலே புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலே படப் பக்கநோக்கறப் பண்ணின விசேஷகடாஷம்” என்று பரக்கவருளிச் செய்தபடியும்,
ஆழ்வார் தாமே (திருவிருத்தத்தில்) “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்” என்றருளிச் செய்தபடியும,;
இவரை முதன்முதலாக விஷயீகரித்தவை திருக்கண்களேயாகலால் அந்த வுறவு கொண்டு அவை முதலிலே வந்து தோன்றினபோலும்.
பெண்களின் உயிரைக் கொள்ளை கொள்கின்ற இரண்டு மருத்யுக்களோ விவை!’ என்று சொல்லுவானேன்? உகந்து அநுபவிக்கலாகாதோ வென்னில்: அவயவியான அப்பெருமானதானே ஸாகூஷாத்தாக வந்து தோன்றினனாகில் உகந்து அநுபவிக்கலாம்;
அப்படியில்லையே. அவன்தான் ஒரு விநோதம் செய்வான்போன்று தனது திவ்யாவயவங்களைத் தனித்தனியே போகவிட்டுக் கூத்து பார்க்கிறானாகையாலே உகப்பின்றிக்கே நலிவேயாயிற்று; அதனால் “ஏழையராவி யுண்ணுமினைக் கூற்றங்கொலோ!” என்று அலறிப் பேசுகிறபடி ஏழையரென்று ஸ்த்ரீகளுக்குப் பொதுவான பெயர்.
ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ—எம்பெருமானுடைய திருகண்களேயிவை என்று ஆழ்வார்க்குத் தெரியாமையில்லை; அது முந்துறமுன்னம் தெரிந்திருக்கச் செய்தேயும் ‘ஏழையராவியுண்ணு மிணைக்கூற்றங்கொலோ’ என்பதும் ‘திருக்கண்கள் கொலோ அறியேன்’ என்பதும் அத்திருக்கண்கள் ஹிம்ஸிக்கிற ஹிம்ஸை சொல்லுவிக்கும் பாசுரமாயிற்று.
உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன் என்று கேட்டிருக்க, அந்தோ! இப்படி கொலை செய்யுங் கண்களாவதே! என்று திருவுள்ளம் நொந்து சொல்லுகிறபடி.
இத் திருக்கண்களுக்குத் தப்பிப் பிழைக்கலாகாதோவென்ன; ஜயோ! அவை ஏதேனுமொரு பக்கத்திலே தோன்றினால் வேறு பக்கம் நோக்கி உய்யலாமே; அப்படிக்கில்லாதபடி மூலபலத்தினன்று பார்த்த பார்த்தவிடமெல்லாம் பெருமாளேயானாப்போலே எந்தப் பக்கமாகத் திரும்பி நின்றாலும் இவையேயாய் வேறொரு பொருள் தோன்றாதபடியாயிற்றே;
தோழிமார்களே! தாய்மார்களே! உங்களுடைய ஹிம்ஸைக்கு நான் ஆற்றுவேனா? இத்திருக்கண்களின் ஹிம்ஸைக்கு ஆற்றுவேனா? என்ன செய்வேன் சொல்லுங்க ளென்கிறாளாயிற்று.
—————-
***- (ஆட்டியும் தூற்றியும்;.) கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| நீர் |
– |
நீங்கள் |
| என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று |
– |
என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று |
| நலிந்து என் |
– |
நலிகிறவிதனால் என்ன பலனுண்டு? |
| மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ |
– |
(அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ! |
| அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
| ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு |
– |
திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது |
| எனது ஆவி உள்ளே |
– |
எனது நெஞ்சினுள்ளே |
| மாட்டிய |
– |
ஏற்றிய |
| வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும் |
– |
பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது. |
பராங்குசநாயகி எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்ய லாவண்யங்களைச் சொல்லி அடிக்கடி வாய்வெருவுவதுண்டு;
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே என்றும், செக்கமலத்தலர் போலும் கண்கைளால் செங்கனிவாய் அக்கமலத்திலைபோலுந் திருமேனி என்றுமிப்படி பல காலுமலற்றுவள்.
அதுகண்ட தாயானவள் ‘சாண்ணீளச் சிறுக்கி இப்படியும் வாய்வெருவலாகுமோ?’ என்று இனைய பலவுஞ்சொல்லி முனிவதும் பழிதூற்றுவதுமாயிருப்பதுண்டு;
அங்ஙன மலர்தூற்றும் தாயை நோக்கிச் சொல்லுதிறாள்; தாய்மார்களே! நீங்கள் சிக்ஷிக்கவும் அதற்கு நான் உடன்படும் படியாகவும் விஷயமில்லையே; எம்பெருமானுடைய ஒவ்வோரவயமும் முந்தி மேல்விழுந்து நலியாநின்றதே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள்.
அந்த அவயவங்களுள் திருமூக்கைப்பற்றி இங்குச் சொல்லுமிவள் ‘மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ! என்கிறாள் கற்பகக் கொடியோ! அல்லது கற்பகக் கொழுந்தோ! என்றே சொல்லலாம் படியுள்ளது. தீர விமர்சித்துப் பார்த்தால் பிறகுதான் என்பெருமானுடைய திருமூக்கென்னலாயிருந்தது.
ஈட்டியவெண்ணெயுண்டான் திருமூக்கு என்கையாலே இதற்கிணங்க நம்பிள்ளையருளிச் செய்கிறபடி பாரீர்;- “அநுகூலஸ்பர்கமுள்ள த்ரவயத்தாலல்லது தரிக்கமாட்டாதே வெண்ணெய் களவு காணப்புக்குக் கொண்டியிலே பிடியுண்டு, பின்பு அத்தை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே; அவவெண்ணெய் முடைநாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு” என்பன ஈட்டு ஸ்ரீஸீக்திகள்
இவ்விடத்தில் யசோதாங்குல்யக்ரோந்நமித சுபுகா க்ராணமுதிதென கபோலா வத்யாபி ஹயநுபரத தத்தர்ஷகமகௌ, விராஜேதே ஞ்ஞ்ஞ்ஞ்.ஸீந்தரஹரே:”. என்ற ஆழ்வானுடைய ஸீந்தரபாஹுஸ்தவ ஸ்ரீ ஸீக்தியும் சேர்த்து அநுஸந்திக்கத்தகும்.
நங்காய்! நீ சொல்லுகிறவிது எங்களுக்குத் தெரிகிறதில்லையே!, அது எங்கேயிருக்கின்றது? காட்டாய் என்று தாய்மார் கேட்க
“என்தாவியுள்ளே மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும்;” என்கிறாள். எனது ஹருதயத்தினுள்ளே சுடர் வெட்டின பெருவிளக்கினொளியையுடைத்தாய் வலிதாய் நலியாநின்றது என்கை.
—————
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-
பதவுரை
| வாலியது ஒர் கனி கொல் |
– |
விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ? |
| வினையாட்டியேன் வல்வினை கொல் |
– |
இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ? |
| கோலம் திரள் |
– |
ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட |
| பவளம் கொழு துண்டம் கொலோ |
– |
பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ? |
| அறியேன் |
– |
அறிகின்றேனில்லை; |
| நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான் |
– |
சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது |
| தொண்டை வாய் |
– |
தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது
|
***- (இன்னுயிர்க்கு.) எம்பெருமானுடைய திருப்புருவத்தினழகு வளைந்து கொண்டுவந்து நலிகிறபடியைக் கூறுகின்றாள்.
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-
பதவுரை
| இன் உயிர்க்கு |
– |
இனிமையான உயிரைக் கவர்வதற்காக |
| ஏழையர் மேல் வளையும் |
– |
பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான |
| நீலம் இணைவில் கொல் |
– |
நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ? |
| மன்னிய சீர் மதனன் |
– |
அழியாவழகடையனான மன்மதனுடைய |
| கரும்பு சிலை கொல் |
– |
கரும்பமயமான வில்தானோ? |
| ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான் |
– |
மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய |
| புருவம் அவையே |
– |
அந்தத் திருப்புருவங்களே |
| என் உயிர் மேலன ஆய் |
– |
எனது உயிரையே கணிசித்து |
| என்றும் நின்றே அடுகின்றன் |
– |
என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன. |
“தன்கைச் சார்ங்கமதுவே போல் புரவ வட்டமழகிய” என்ற ஆண்டாள் பாசுரத்தின்படியே புருவத்திற்கு வில்லை உவமை கூறுவதுண்டாதலால், காமிநீ ஜனத்தின் பிராணனையே இலக்காகப் பெற்ற இரண்டு விற்களோவிவை! என்கிறாள்.
அல்லது மன்மதனுடைய ஸௌந்தர்ய நிகேதனமான இக்ஷூகோதண்டமோ? என்கிறாள்.
இவனும் ஸாக்ஷ்ந்மந்மத மந்மதனேயன்ளோ இவையெல்லாமல்ல; ஸாரனான் மதனனுக்கு ஜனமபூமியான கண்ணபிரானுடைய புருவங்களேயிவை, இவற்றுக்கு என்னுயிரை மாய்ப்பதொன்றே கருமம், இவற்றுக்கு எங்ஙனே தப்பிப்பிழைப்பேனென்கிறாள்.
ருக்மிணிப் பிராட்டியினிடத்து மன்மதனுடைய அம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனனாதலால், மன்மதன் கண்ணபிரானுடைய புதல்வனென்பது நூற்கொள்கை. “காமன்றன்தாதை” என்ற அருளிச் செயல்களுங் காண்க
————–
***- (இன்னுயிர்க்கு) எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள்.
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-
பதவுரை
| என்றும் நின்றே திகழும் |
– |
எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய் |
| செய்ய சுடர் ஈன் |
– |
சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான |
| வெண் மின் கொல் |
– |
வெண்ணிறமான மின்னலோ! |
| அன்றி |
– |
அல்லது |
| என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ |
– |
என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!; |
| அறியேன் |
– |
அறிகின்றிலேன்; |
| குன்றம் எடுத்த பிரான் முறுவல் |
– |
கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது |
| எனது ஆவி அடும் |
– |
என் ஆத்மாவைத் தபியாநின்றது; |
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| எனக்கு உய்வு இடம் |
– |
நான் பிழைக்கு முபாயம் |
| ஒன்றும் அறிகின்றிலேன் |
– |
சிறிதும் அறிகிறேனில்லை. |
தோன்றி மாயும் மின்னல் போலல்லாமல் எப்போதும் மாறாதே விளங்காநிற்பதாய் செய்ய சுடரை வெளிப்படுத்தாநின்ற மின்னலோவென்று முதலாடியால் உல்லேகிக்கிறபடி.
திருமுத்து நிரை வெண்ணிற முடைத்தாதலால் அது மின்னாகக் கூறப்பட்டது. திருமுத்து நிரை வெண்ணிற முன்னோடுகிறபடியால் செய்யசுடரை சேர்த்துக் கூறியபடி. என்; பிராணனை முடிக்கவந்த திருமுத்து நிரைதானேயோ என்பது இரண்டாமடி.
குன்றமெடுத்த பிரான் முறுவல் = இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்விக்க. கோவலரையும் கோநிரையையுங் காத்தருள வேண்டிக்கோவாததன மலையைக் குடையாக வெடுத்துத் தாங்கிநின்றபோது
கொடியேறுசெந்தாமரைக் கைவிரல்கள் கோலமுமழிந்தில வாடிற்றில் வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவணன மலையுமோர்சம்பிரதம் என்னும்படி அவலீலையாக நின்ற நிலையை நோக்கி
அப்பா! நீ தேவதையா? யக்ஷ்னா? கந்தர்வனா?’ என்ன இடையர்கள் கேட்க.
அஹம் வோ பாநதவோ ஜாத. என்று சொல்லிச் சிரித்த நிலைதன்னை இபபோது உருவெளிப்பாட்டில் கண்டாள் போலும்.
—————
***- (உய்விடமேழையர்க்கும்.) அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-
பதவுரை
| ஏழையாக்கும் |
– |
பெண்டுகளுக்கும் |
| அசுரர்க்கும் அரக்கர் கட்கும் |
– |
அஸூர ராக்ஷஸர்களுக்கும் |
| உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி |
– |
பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு |
| மகரம் தழைக்கும் தளிர்கொல் |
– |
மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ? |
| பை விடம் பாம்பு அணையான் |
– |
படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய |
| திரு குண்டலம் |
– |
திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே |
| கைவிடல் ஒன்றும் இன்றி |
– |
ஒய்வில்லாமல் நிரந்தரமாக |
| அடுகின்றன |
– |
நலியாநின்றன; |
| காண்மின்கள் |
– |
காணுகோள். |
அஸூர ராக்ஷஸர்களுக்கும் அபலைகளுக்கும் தப்பிச்சென்று பிழைக்கு மிடமேது! என்று சொல்லுவானபோல் விளங்கி மகராகராமாய்த் தழைத்தன சில தளிர்களோ இவை! என்கிற உல்லேகம் முன்னடிகளிற் போதரும். இதனால் திருக்காதுகள் பல்லவம்போல் திகழுமாறு சொல்லிற்றாயிற்று.
ஏழையர்க்கும் அசுரர்க்கும் – அஸூரராக்ஷ்ஸர்களையும் அபலைகளையும் சேரவெடுத்து அவயவசோபையைக் கண்டு பாதைப்படுவதில் வாசியற்றிருக்கையாலே. அசுரரும் அரக்கரும் அழகுகண்டால் பொறுக்கமாட்டாத முடிவர்கள்; அபலைகள் அநுபவிக்கப் பெறாதே முடிவர்கள்
விரோதிகளுக்குக் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உழிழ்பவானான திருவனந்தாழ்வான்மேல் சாய்ந்தருளின எம்பெருமானுடைய குண்டலக் காதுகளே இவை. அந்தோ! இவை இடையில் சிறிது விட்டு நலிகையன்றிக்கே ஓய்வின்றி நலிகின்றனவே! என் செய்வேனென்கிறாள்.
————–
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-
பதவுரை
| அன்னையர் காள காண்மின்கள் என்று |
– |
தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி |
| காட்டும் வகை அறியேன் |
– |
(உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்; |
| நாள் மன்னு வெண் திங்கள் கொல் |
– |
பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ! |
| நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல் |
– |
ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ! |
| சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன் |
– |
உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது |
| திரு நுதலே |
– |
திரு நெற்றியே |
| கோள் மன்னி |
– |
மிடுக்குப் பொருத்தி |
| கொடியேன் உயிர் கோள் இழைத்து |
– |
பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து |
| ஆவி அடும் |
– |
என் ஆத்மாவை நலியாநின்றது. |
(காண்மின்கள்.) திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது;
ஆனால் அவ்வழகு எடுத்துக் காட்டத்தக்கதாக இல்லையே; தனக்குப்போலே அவர்களுக்கும் உருவெளிப்பாடு உண்டானாலாவது காண்மின்களென்று காட்டும் வகையறியேன்” என்று தளர்கின்றாள்.
அவ்வழகு என் கைக்குப்பிடிபடவில்லை; உங்களுக்கோ உருவெளிப்பாடு உண்டாகவில்லை; எங்ஙனே காட்டுவேன்? நானேயனுபவித்து நானே நலிவுபடுவேனித்தனை என்றளாயிற்று.
நீங்கள் கண்டாலென்ன. காணாவிடிலென்ன? உங்களுக்குக் காட்டவேண்டிய அவசியந்தான் எனக்கென்ன? நான் அனுபவிக்கிறேன் போங்கள் என்று சொல்லி இரண்டாமடியினாலே அநுபவிக்கிறாள்.
(நாள்மன்னு வெண்திங்கள் கொல்! நயந்தார்கட்கு நச்சிலைகொல்!) அஷ்டமியறவான நாளோடே மன்னி அர்த்தாகாரனாகையாலே களங்கமற்று வெளுத்த சந்திரனோ? அல்லது நச்சுவடிவாயிருப்பதொரு இல்லையோ! என்கிறாள்.
இவ்விடத்து ஈட்டிலே – “மேல்காற்றிலே காட்டப் பரிஹாரமாம் மருந்தாயிற்று இது” என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது.
உலகில் வியாதிக்ரஸ்தர் மேல் மேல்காற்றுபட்டலாறே ரோகம் அபிவிருத்திடையும் என்று சொல்லுவர்கள். பகவத்விஷயமாகிற மருந்து அதற்கு எதிர்த்தட்டாயிருக்கும்; மேல்காற்றுப் பட்டால் தீரும் என்கை. அபத்த்யங்களையும் ஸஹிக்கும்படியான ஔஷதம் என்ற படி.
கீழரண்டடிகளால் பேசப்பட்ட வஸ்து இன்னதென்கிறது மூன்றாமடி திருத்தோளழகாலே என்னை யீடுபடுத்திக்கொண்ட பெருமானுடைய திருநெற்றியே என்னை யிப்பாடுபடுத்தாநின்ற தென்கிறாள்.
(கொடியேனுயிர் கோளிழைத்து – கோள்மன்னி ஆவியடும்) பாவியேனான வென்னுடைய உயிரினழகை அழித்துக் கொள்கையிலே விருப்பத்தைப் பண்ணி மிடுக்கை யவலம்பித்து என்னாத்மாவை நலியாநின்றது என்றபடி.
தோற்புரையே போகையன்றிகே ஸத்தையை யழியா நின்றதென்கை
—————
***- (கோளிழைத் தாமரையும்) கீழே ஏழு பாட்டுக்கள் கடந்தன. அவ்வேழு பாட்டுக்களிலும் ஏழு அவயவங்கள் நலிந்தன்மை சொல்லிற்று.
அவையெல்லாம் திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் சேர்ந்து
திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் பாட்டில்.
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-
பதவுரை
| கோள் இழை தாமரையும் |
– |
தன்னுடைய வொளியே தனக்கு ஆபரணமானகப் போரும்படியான தாமரையும் (திருக்கண்களும்) |
| கொடியும் |
– |
கற்பகக் கொடியும் (திருமூக்கும்) |
| பவளமும் |
– |
பவளமும் (திருவதரமும்) |
| வில்லும் |
– |
வில்லும் (திருப்புருவங்களும்) |
| கோள் இழைதண்முத்தமும் |
– |
தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்) |
| தளிரும் |
– |
தளிரும் (திருக்காதும்) |
| குளிர் வான் பிறையும் |
– |
குளிர்ந்து பெருத்த பிறையும் (நெற்றியும்) ஆகிய இவற்றோடே கூடி |
| கோள் இழையா உடைய |
– |
தன்னழகே தனக்கு ஆபரணமாயிருக்கிற |
| கொழு சோதி வட்டம் கொல் |
– |
பூர்ணமான ஜ்யோதிர் மண்டலஸீஉலீ! |
| கண்ணன் |
– |
கண்ணபிரானது |
| கோள் இழை வாள் முகம் ஆய் |
– |
தன்னொளிதானே தனக்காபரணமான அழகிய முகமென்றொரு வியாஜத்தையிட்டு |
| கொடியேன் உயிர் கொள் கின்றது |
– |
கொடியேனான வென்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ளாநின்றது |
அலங்கார சாஸ்த்ரத்தில் ரூபகாதிசயோக்தி யென்தொரு அலங்காரமுண்டு
பச்ய நீலோபலத்வந்த்வாத் நிஸ்ஸரத்தி சிதாச்சரா: என்று வடநூலார் உதாஹரணம் காட்டுவர்.
இரண்டு கருநெய்தல் பூக்களிலிருந்து கூர்மையான அம்புகள் புறம்படுகிறபடி பாராய் என்ற இதனால் சொல்லுகிறது.
இரண்டு கண்களிலிருந்து கடாக்ஷ்பாதங்கள் விழுகிறபடியைச் சொன்னவாறு.
இந்த வகையிலே இப்பாட்டில் முன்னிரண்டடிகள் அமைந்துள்ளன.
தாமரை, கொடி, பவளம், வில், முத்து, தளிர்; பிறை என்று சொல்லப்பட்டவை உபமேயத்தை மறைந்து உபமானத்தை மாத்திரம். சொன்னபடி.
முதற்பாடி;டில் “ஆழியங் கண்ணபிரான் திருக்கண்கள்-தாமரை சொல்லிற்று.
இரண்டாம் பாட்டில் “மாட்டுயர்கற்பகத்தின் வல்லி-ஈட்டிய சொல்லிற்று. வெண்ணெயுண்டான் திருமூக்கு என்றபடியே இங்;கு மூக்கைக் கொடியாகச் சொல்லிற்று.
மூன்றாம் கண்களைத் தாமரையாகச் சொல்லுகிற்று,
இரண்டாம் பாட்டில் “கோலந்திரள் பவளக் கொழுந்துண்டம்-அம்மான் தொண்டைவாய்” என்றபடியே இங்கு அதரத்தைப் பவளமாகச் சொல்லிற்று.
நாலாம் பாட்டில் “இன்னுயிர்க் கேழையர்மேல் வளையுமிணை நீலவில் – கண்ணபெருமான் புருவம்” என்றபடியே இங்கு புருவத்தை வில்லாகச் சொல்லிற்று.
ஐந்தாம் பாட்டில் “எண்னாவியடுமணிமுத்தம்-குன்றமெடுத்த பிரான் முறுவல் என்றபடியே இங்து முறுவலை முத்தாகச் சொல்லிற்று.
ஆறாம் பாட்டில் “மகரந்தழைக்குந்தளி’-திருக்குண்டலக் காதுகள்” என்றபடியே இங்குக் காதுகளைத் தளிராகச் சொல்லுற்று.
ஏழாம் பாட்டில் “நாண் மன்னு வெண்திங்கள் – பெருமான்தன் திருநுதல்” என்ற படியே இங்குத் திருநெற்றியைப் பறையாகச் சொல்லிற்று.
ஆகிய இவற்றையெல்லாம் சேர்த்துக் காணும்போது ‘சோதிகளெல்லாம் ஒன்று சேர்ந்த சேர்த்தியோ!(அதாவது, ஜ்யோதிர்மண்டலஸீஉலீ!) என்னலாம்படி யிருக்கையாலே மூன்றாமடியில் கொழுஞ்சோதி வட்டங்கொல்’ என்றாள்.
உண்மையில் இவையெல்லாம் ஒன்று சோந்த எம்பெருமானுடைய திருமுகமண்டல மென்று காண்கிறபடியால் அது ஈற்றடியால் சொல்லப்பட்டது.
—————
***- (கொள்கின்ற கோளிருளை) திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-
பதவுரை
| கொள்கின்ற கோள் இருளை |
– |
உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை |
| சுகிர்ந்திட்ட கொழு சுருளின் |
– |
பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய |
| உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல் |
– |
(கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ! |
| அன்று |
– |
அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது) |
| விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து |
– |
அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து |
| என்; உயிரை |
– |
என் ஆத்மாலை |
| கள்கின்ற ஆறு |
– |
கொள்ளை கொள்ளும் விதந்தை |
| அன்னைமீர் அறியீர் |
– |
தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை; |
| கழறா நிற்றிர் |
– |
வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே! |
இதில் முன்னடிகள் வெகு விலக்ஷ்ணமானவை.
திருக்குழலே ஒருவாறு உல்லேகம் பண்ணுவதும், அந்த உல்லேகமும் உரியதன்று என்று உதறித்தள்ளுவதும் திருக்குழலன் ஒப்பில்லாமையைக் காட்டுதற்காகவென்க.
உல்லோகம் செய்தபடி எங்ஙனே யென்னில், பிரளய காலத்தில் பிரபஞ்சத்தையெல்லாம் லிடாபியாசத்தைக் கழித்துப் பரமஸாரமான பாகத்தை நூல் நூற்பதற்காகக் கொள்ளும் ஒருபஞ்சச் சுருளே போலே சுருளையாக்கி அதில் நின்றும் நூற்கப்பட்ட தொரு நீலநன்னூல் தழையோ; என்று சொல்லாமென்று பார்த்தார்;
இந்த அபூதோபமையையும் ஸஹியாகபடியன்றோ திரக்குழலிப்பது; ஆகையால் உடனே அன்று என்று தாமே மறுத்துவிட்டார்;
பின்னை என்னவென்று சொல்லாமென்ன, மாயன் குழல்என்றிவ்வளவே (உபமேயந்தன்னையே) சொல்லுவேணுமென்று முடித்தபடி.
திருமாலிருஞ்சோலையழகருடைய திருக்குழல்கற்றையை வருணிக்கின்ற கூரத்தாழ்வான் ஸூந்தரபாஹூஸ்தவத்திலே “அந்தம தமஸ் திமிரநிர்மிதமேவ யத்ஸ்யாத் தத்ஸாரஸாதிதஸூதந்த்வத்திவ்ருத்தவார்த்தம், ஈச்ஸ்ய கேசவஹரேரலகாலிஜாலம்” என்றருளிச் செய்தது இப்பாசுரத்திற்கு ப்ரதிச்சந்தமாகவே யிருக்கும்.
அப்படிப்பட்ட திருக்குழவினழகானது திருத்துழாய் நறுமணத்தோடு கூட வந்து என்னுயிரைக் கொள்ளைகொள்ளா நின்ற விதம் அன்னைமீர்! உங்களுக்குத் தெரிந்திருந்தால் என்னை நீங்கள் கடிந்து பொடிந்து வார்த்தை சொல்லமாட்டீர்கள்:
அஃதறியாமையே இங்ஙனம் திரஸ்கரித்துப் பேசுகின்றீர்கள்; என்றாளாயிற்று.
கழறுதல்-மனம் நோகும் படி பேசுதல்.
—————
***- (நிற்றி முற்றத்துள்) திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது
இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள்.
இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-
பதவுரை
| அன்னை மீர் |
– |
தாய்மார்களே! |
| நீர் |
– |
நீங்கள் |
| என்னை |
– |
என்னைக் குறித்து |
| முற்றத்துள் |
– |
(பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி |
| நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும் |
– |
கையை நேரித்துக் கொண்டு |
| வைதிர் |
– |
நிந்திக்கின்றீர்கள்; |
| சுடர் சோதி மணி நிறம் ஆய் |
– |
சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு |
| இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற |
– |
உலகமடங்கலும் வியாபிக்கிற |
| சுடர் |
– |
தேஜஸ்ஸையுடைத்தான |
| முடிக்கே |
– |
திருவபிஷேகத்தின் பக்கலிலேயே |
| உள்ளம் ஒற்றுமை கொண்டது |
– |
எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது; |
| நுங்கட்கு நசை என் |
– |
இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான். |
முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப் புன்முறுவல செய்த என்றும் முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் என்றும் சொல்லுகிறபடியே
எம்பெருமான் முற்றத்திலே வந்து (மறுவல் செய்து நிற்கிற வழக்கமுண்டாகையாலே அதிலாசை கொண்டு பராங்குச நாயகி முற்றத்திலே வந்து நின்றாள்போலும்;
அதுகண்ட அன்னைமார் “அந்தோ! இப்படியும் ஒரு துணிவுண்டோ? நாண்மடச்சங் கொண்டு பதுங்கியடங்கி யிருக்கவேண்டிய சிறுக்கி வெட்கமின்றி வெளிப்புறப்பட்டு முற்றத்திலே வந்து நிற்கையாவதென்?;” என்று கை நெரித்து வைதார்களாம்;
இப்போது இப்படிப்பட்டட வசவுகளுக்கு இறையும பயனில்லை போமின் என்கிறாளாயிற்று.
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியிலே எனது நெஞ்சு ஐக்கியப்பட்டதான பின்பு என்னை மீட்கையிலே உங்களுக்குண்டான நசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதா மத்தனையென்று தலைக்கட்டினாள்.
—————–
(கட்கரிய பிரமன்.) இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே
நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-
பதவுரை
| கட்கு அரிய |
– |
மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத |
| பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு |
– |
பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய |
| கட்கும் அரிய |
– |
கண்ணுக்கும் காணவர்யனான |
| கண்ணனை |
– |
எம்பெருமானைக் குறித்து |
| குருகூர்சட கோபன் சொன்ன |
– |
நம்மாழ்வார் அருளிச்செய்த |
| உட்கு உடை ஆயிரத்துள் |
– |
எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே |
| இவையும் ஒரு பத்தும் வல்லார் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் |
| உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும் |
– |
ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய் |
| மாயார் |
– |
ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள் |
“மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்குந் தேவாவோ” என்றருளிச் செய்த பாசுரத்தின் படியே இதில் ஒன்றரையடிகள் அமைந்திருக்கின்றன.
பிரமன் சிவனிந்திரன் முதலானோர் நம்முடைய கட்புனுக்கு இலக்காகாதாப்போலே அவர்களுடைய கட்புலனுக்கு இலக்காகாதவன் எம்பெருமான்; அவன்றன்னைக் குறித்து ஆழ்வாரருளிச் செய்தவாயிரம்.
உட்கு உடை ஆயிரம்-உட்கு-சக்தி; எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுணவிபூதி சேஷ்டிதங்களை உள்ளபடியே யுரைக்கவல்ல சக்தி வாய்ந்த ஆயிரம் என்றபடி.
மேலே, உட்குடை வானவர்-எம்பெருமானை இடை வீடின்றி அனுபவிக்க வல்ல சக்தியுடையார் என்க.
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 12, 2022 at 10:16 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply