***- (ஆழியெழ.) முதன்முதலாக உலகளந்த விஜயாபதாநத்தை அநுஸந்தித்து உகக்கிறார்.
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
பதவுரை
| ஆழி எழ |
– |
திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் |
| சங்கும் வில்லும் எழ |
– |
பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும் |
| தண்டும் வாளும் எழ |
– |
கதையும் நந்தகமும் தோன்றவும் |
| திசை வாழி எழ |
– |
திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும் |
|
(உயரவளர்ந்தபடியாலே) |
||
| அண்டம் மோழைஎழ |
– |
அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும் |
| முடி பாதம் எழ |
– |
(வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும் |
| ஊழி எழ |
– |
மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும் |
| அப்பன் |
– |
ஸர்வேச்வரன் |
| உலகம் கொண்ட ஆறு ஏ |
– |
(திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |
உலகில், தலைவனான அரசனுக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தால் பரிகாரங்கள் முன்னின்று காரியஞ்செய்து தலைவனுக்கு வெற்றியை யுண்டாக்கப்பார்ப்பதென்கிற ஒரு முறை யுண்டே;
அந்த ரீதியிலே, ஆயுதங்களில் தலைவனான திருவாழியாழ்வான் முந்துற முன்னம் வியாபரித்தபடியைப் பேசுகிறார் ஆழியெழவென்று.
பெருமாள் காட்டுக் கெடுந்தருளப் புறப்படுவதற்கு முன்னே இளைய பெருமாள் தாம் முற்பட்டதுபோல,
எம்பெருமானுடைய திருவடி உலகளக்க நிமிர்வதற்கு முன்னை திருவாழியாழ்வான் தான் முன்னே உயர்ந்து தோற்றினானாயிற்று.
கருகுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்கிறபடி எம்பெருமான் நினைப்பிட்டவிடத்திலே சடக்கெனச் சென்று காரியம் தலைக்கட்டித் திரும்புமாற்றல் படைத்தவனான திருவாழியாழ்வான்
‘இந்த மாவலியின் செருக்கை யடக்க தேவரீர் வேணுமோ? அடியேனுக்கு நியமித்தருளினால் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற வேண்டிய காரியமன்றோ இது’ என்று அவலீலையாகப் பேசுவான் போலே தான் முன்னே யெழுந்தானாயிற்று.
எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் திருவாழியாழ்வான் தான் முன்னிருந்து காரியஞ் செய்பவன்.
இதை ஸீபூத்யாம்” என்கிற ஸ்ரீஸீக்தியாலே நன்குணரலாம்.
ராமாவதாரம் வராஹாவதாரம் நரஸிம் ஹவதாரம் பரசுராமாவதாரம் முதலியவற்றில் திருவாழியாழ்வானுடைய ப்ரஸதாவம் இல்லேயானாலும், ராமாவதாரத்தில் அம்பிலே ஆவேசித்தும், வாராஹாவதாரத்தில் கோரப்பல்லிலே ஆவேசித்தும், நரஸிம் ஹவதாரத்தில் திருவுகிரிலே ஆவேசித்தும், பரசுராமாவதாரத்திலே மழுவிலே ஆவேசித்தும் இப்படி ஒரோரவதாரந்தன்னிலே ஒரொருவஸ்துவாக இருந்து காரியஞ் செய்தவன் திருவாழியாழ்வானேயென்கிறது மேற்குறித்த ஸுதர்சந சதக ச்லோகம்.
வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:” என்கிற அதற்கு முந்திய பாதமானது எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமே தான் திருவாழியாழ்வனென்கிறது.
த்ரிவிக்ரமாவதாரத்திற்கு முந்தியதான வாமநாவதாரம் முதற்கொண்டே திருவாழியாழ்வான் காரியஞ் செய்து வருகிறானென்பதும் இங்கு அறியத்தக்கது. அது என்னென்னில்;
வாமன மூர்த்தியின் வடிகழகாலும் மழலைச்சொல்லாலும் மன மகிழ்ந்த மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்தனித்தவளவிலே, அவனுடைய ஆசாலீயனான சுக்கிரன் எம்பெருமானது வடிவையும் வந்த வகையையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன், தேவகார்யம் செய்யும் பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போக வந்தான்; ஆகையால் நீ இவனுக்கு ஒன்றும் தரத் தகாது’ என்று தானத்தைத் தடுக்க,
அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து தத்தம் செய்யுப்புக, ஜல பாத்திரத்தின் (திருக்காவிரியின்) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்துகொண்டு தீர்த்தம் விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீ விஷ்ணு த்வாரம் சோதிப்பவன் போல, தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால அவனது கண்ணைக் குத்திக் கலக்க, அவனும் கண்கெட்டு அங்கு நின்றும் வெளிப்பட, பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப் பெற்றனனென்பது வரலாறு.
இக்கதையை யருளிச்செய்யாநின்ற பெரியயாழ்வார் மிக்க பெரும் புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன் என்றருளிச் செய்திருத்தலால் (அதாவது, துரும்பாற் கிளறிய சக்கரம் என்ற சொல்லாற்றலால்) கருதுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்றபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையுடைய திருச்சக்கரமெ பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கியதாக ஆசிரியர் நிர்வஹிப்பதுண்டு. அஃது இங்கு அறியத்தக்கது.
ஈட்டு ஸ்ரீ ஸீக்தி;-“(ஆழியெழ.) இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்த படியைக் கண்டு, தனியாக வெண்ணாதென்று பயப்பட்டுத் திருவாழியாழ்வான் ஒரு கையிலேயேறினார்.”
சங்கும் வில்லுமெழ—தங்களுக்குள்ளே தலைவனான வொருவன் எழுந்து காரியஞ் செய்தால் மற்ற அநுசரர்கள் வாளாவிருக்க வொண்ணுமோ? அவர்களுமெழுந்து காரியஞ் செய்ய நேருமன்றோ; ஆகவே திருவாழியெழுந்தது கண்டு சங்கும் வில்லுமெழுந்தன.
இங்கே, இடங்கை வலம்புரி நின்றார்ப்ப, எரிகான்றடங்காரொடுங்குவித்ததாழி, விடங்காலுந் தீவாயரவணைமேல் தோன்றல் திசையளப்பான் பூவாரடி நிமிர்த்த போது. என்ற பூதத்தாழ்வார் பாசுரமும் அநுஸந்தேயம்,
சுக்கிரன் கண்ணை துரும்பாற்கிளறியும் மன்னுநதுமுசியை வானிற்சுழற்றியும் இப்படி எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை யளக்கப்பெற்ற ஸந்தோஷமிகுதியினால் திருச்சங்காழ்வான் இடத்திருக்கையி லிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான்.
திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்-என்று தாற்பரியம்.
திசைவாழியெழ—திசைகள் தோறும் அநுகூலருடைய வாழி வாழி யென்கிற மங்களாசாஸந த்வநி கிளர்ந்ததாயிற்று.
இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- அவனுக்கு என்வருகிறதோ வென்றாயிற்று திவ்யாயுதங்கள் கிளருகிறது; அவை தனக்கு என் வருகிறதோ வென்று வடிவார்சோதி வலத்துறையுஞ் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கு மப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்னா நிற்பர்களிறே. நின்கையில் வேல் போற்றி என்று வேல் தனக்கும் பரிய வேண்டியிருக்குமிறே.” என்று.
தண்டும் வாளுமெழ—பஞ்சாயுதங்களினுடையவும் எழுச்சியைச் சொல்ல நினைத்த ஆழ்வார் முன்னம் ‘ஆழியெழச் சங்கும் வில்லுமெழ’ என்று மூன்று ஆயுதங்களின் எழுச்சியைச் சொல்லி இப்போது மற்றை யிரண்டாதங்களின் எழுச்சியைச் சொல்லுகிறார்.
இடையில் “திசைவாழி யெழ” என்றதனால் அந்த திவ்யாயுதங்களுக்கும் மங்களாசாஸனம் பண்ணுவாருளரென்று சொன்னதாயிற்று.
அண்டம் மோழை யெழ—தாழ்வின்றி வளர்ந்தபடியாலே அண்ட கபாலம் பிளந்து ஆவரண ஜலம் குமிழி கிளம்பும் படியாக என்றபடி.
தன்னுடைய வளர்ச்சிக்கு அண்டாந்தரம் இடம் போராமையாலே விம்மி அண்டபித்தி பிளந்து ஆவரண ஜலம் உள்ளே வந்து புகும்படியாக வென்கை.
மூடி பாதமெழ—திருமுடியும் திருவடிகளும் ஒரு சேர எழ என்று இதனால் வளர்ந்தருளின் சடக்கு சொன்னபடி.
ஊழியெழ—ஆஸீரப்ரக்ருதியான மஹாபலி அஹங்கரித்திருந்த கொடிய காலம் தொலைந்து நல்லடிக்காலம் தோன்ற என்றபடி.
ஊழி என்பது பொதுவாகக் காலத்தைச் சொல்லுமதானாலும் இங்கு ப்ரகரணம் நோக்கி விலக்ஷணகாலமென்று பொருள்படும்.
ஆக இங்ஙனேயாக, அப்பன் உலகங்கொண்டவாறே—மஹோபகாரகனான ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்டபடி யென்னே! என்று ஈடுபடுகிறார்.
————-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-
பதவுரை
| அப்பன் |
– |
ஸர்வேச்வரன் |
| சாறு பட |
– |
(தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக |
| அமுதம் கொண்ட நான்று |
– |
(கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே. |
| ஆறு |
– |
கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை |
| மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி |
– |
தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும். |
| அரவு ஊறு சுலாய் |
– |
வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி |
| மலை தேய்க்கும் ஓலி |
– |
மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும் |
| கடல் மாறு சுழன்று |
– |
கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று |
| அழைக்கின்ற ஒலி |
– |
கோஷிக்கிற கோஷமும் உண்டாயின. |
***- (ஆறுமலைக்கு.) கடல் கடைந்தபடியை யநுஸந்தித்து ஈடுபடுகிறார். துர்வாஸமுனிவனுடைய சாபத்தினால் தேவர்களினுடைய செல்வம் யாவும் ஒழிய, அசுரர் வந்து பொருது அமரரை வெல்ல,
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி யென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடைந்ததாகப் புராண வரலாறு அறிக.
மஹாநதிக ளெல்லாம் மலைகளின்று பெருகிக் கடலிலே வந்து சேருமே; அப்படி சேருவதற்காக ஆறுகள் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனவாம்.
கடைகிற போது மலைகளிற் காட்டில் கடல் உயருகையாலே ஆறுகள் எதிர்வெள்ளங் கோத்து மலைகளையே நோக்கியே திரும்பியோடுகிற வோசை விலக்ஷணமாயிருந்ததென்று முதலடியாற் சொல்லுகிறது.
இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி;-‘கடலிலே மந்தரத்தை நட்டவாறே கடல் கொந்தளித்து ஸயம் போய்த்தாழ்ந்து கொடுத்தது; நீரோனது தாழ்ந்த விடத்தே ஒடக்கடவதிறே. ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டோடுகிற போதை த்வநியாயனது இவர்க்குச் செவிப்படுகிறபடி. இவர்க்குக் காலத்ரயத்திலுமுள்ள தெல்லாம் தெரியும்படியிறே அவன் வெளிச்சிறப்பித்தது.”
———-
***- (நான்றிலவேழ்.) மஹாவராஹ மூர்த்தியாகி நிலத்தை யிடந்தெடுத்த வரலாற்றை யநுஸந்திக்கிறாரிப்பாட்டில்.
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-
பதவுரை
| அப்பன் |
– |
ஸர்வேச்வரன் |
| ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் |
– |
(பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில் |
| ஏழ் மண்ணும் |
– |
ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை |
| நான்றில |
– |
நழுவாதவையாய் |
| தானத்த |
– |
தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; |
| பின்னும் |
– |
மேலும் |
| ஏழ் மலை |
– |
ஸப்த குலாசங்களும்) |
| நான்றில |
– |
சலியாதவையாகி |
| தானத்த |
– |
தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; |
| பின்னும் |
– |
மேலும் |
| ஏழ் கடல் |
– |
ஸப்த ஸாகரங்களும் |
| நானறில |
– |
உடைந்தொழுகாதவையாய் |
| தானத்த |
– |
தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன. |
| ஏ |
– |
ஆச்சரியம் |
ரஸாதலத்தில் கிடந்த பூமியை என்னப்பன் திருவெயிற்றாலே இடந்தெடுத்தருளின போது ஸப்தத்வீபங்களும் ஸப்தகுல பர்வதங்களும் ஸப்த ஸாகரங்களும் தம்தம் ஸ்தானங்களிலே நிச்சலமாயிருக்கும்படி யெடுத்தருளினான், இதென்ன ஆச்சரியம்! என்கிறார்.
ஒரு வ்யாபாரத்தாலே செய்த தாயிராமல் ஸ்வஸங்கல்பத்தாலே ஆச்சரியமாகச் செய்த வித்தனையென்று ஈடுபடுகிறபடி.
இங்கே ஈட்டு -ஸீக்தி காண்மின்;- “இவன் பெரிய வானைத்தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும் முன்பு போலே ஒரு குறையற உண்டாருடுப்பாராய்ச் செல்லுகிபடி. ஆதாரமானவன்கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறைவாராதே.”
முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனென்னுமசுரனைத் திருமால் மஹாவராஹமாகத்திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின் என்பது வராஹாவதார வரலாறு.
அந்தக் கோலாஹலத்தில், ஸப்த த்வீபரூமான பூமிபேதங்களும் குலாசலங்களும் ஏழ்கடல்களும் ஒரு மாறுபாட்டை யடையாதே நிச்சலமாகி ஸ்வஸ்வ ஸ்தானங்களிலே யிருந்தன வென்பது இங்கு ஆச்சரியம்.
—————
***- (நாளுமெழ.) மஹாப்ரளயத்தில் ரக்ஷித்தபடியை இப்பாட்டில் அருளிச்செய்கிறார்.
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-
பதவுரை
| நான் எழவும் |
– |
காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் |
| நிலம் நீர் எழவும் |
– |
நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் |
| விண்ணும் கோளும் எழ |
– |
ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் |
| எரி காலும் எழ |
– |
நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் |
| மலை தாள் எழவும் |
– |
மலைகள் அடிபெயர்ந்து போகவும் |
| சுடர்தானும் எழ |
– |
நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் |
| அப்பன் |
– |
ஸர்வேச்வரன் |
| ஊளி எழ உலகம் உண்ட ஊண் |
– |
ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |
கலை யென்றும் காஷ்டை யென்றும் முஹுர்த்தமென்றும் நாழிகையென்றும் யாமமென்றும் இரவென்றும் பகலென்றும் சொல்லுகிற காலப்பகுப்புகள் ஒன்றுமின்றியே காலவ்யவஸ்தை நிலை குலைந்து போகப்பட்டதாம் பிரளயத்தில்; அது சொல்லுகிறது நாளுமெழ என்று.
கால நிபந்தனைக்குக் காரணம் ஆதித்தியனுடைய கதியேயாதலால் பிரளயத்தில் அவ்வாதித்தியன் இலனாகவே காலவ்யவச் தேசங்களும் இல்லையாயினவென்க.
இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; “ஆண்டென்றும் மாஸமென்றும் நாளென்றும் கலை யென்றும் காஷ்டையென்றும் சொல்லுகிறவையெல்லாம் ஆதித்யனுடைய கத்யாகதியாலே வருகிறவையிறே; வ்யவச்சேதகனான ஆதித்யன் உள்ளே புக்கால் வ்யவச்சேத்யமான இவையும் போமித்தனையிறே.”
நிலம் நீரும் விண்ணும் கோளும் எரிகாலும் மலைசுடர் தானுமெழ—ப்ருதிவி முதலான பஞ்ச பூதங்களும் ஸகலகுலாசலங்களும் நக்ஷத்ர ஜ்யோதிஸ்ஸூக்களும் ஆகிய இவையெல்லாம் உள்ளே புக உண்டருளினானென்கிறது.
மலைதாளுமெழ என்ற விடத்து ‘மலையும் தாளும்’ என்று பொருளன்று; மலைகளானவை தாளோடே (அடியோடே) பறிந்து உள்ளே புக என்றபடி. வேர்க்குருத்தோடே பறிய வென்க.
ஊளியெழ—ஊளி யென்று ஓசைக்குப்பெயர்; கீழ்ச்சொன்னவற்றையெல்லாம் உறிஞ்சியுண்கிற போது ஓசை யுண்டாகுமே; அது சொன்னபடி
இனி, ஊளி யென்று பசிக்கும் பேருண்டு. அப்பொருளை முக்கியமாகக் கொண்டார் பன்னீராயிரவுரை காரர்; “பசித்துண்டானென்று தோன்றும்படியாக” என்பது உரை.
———-
(ஊணுடை மல்லர்.) கண்ணபிரான் பாரதப்போர் நிர்வஹித்தருளின சதிரைப் பேசுகிறாரிப்பாட்டில்.
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-
பதவுரை
| அப்பன் |
– |
ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான் |
| காணுடை பாரதம் கை அறை போழ்து |
– |
ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது, |
| ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி |
– |
வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும் |
| மன்னர் |
– |
அரசர்களினுடைய |
| ஆண் உடை சேனை |
– |
வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை |
| நடுங்கும் ஒலி விண்ணுள் |
– |
நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே |
| ஏண் உடை தேவர் |
– |
மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள் |
| வெளிப்பட்ட ஒலி |
– |
(யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின |
மல்லர்கள் ஒருவரோடடொருவர் பொருது நேரிந்து விழுந்த வோசை அப்போது வலிதாயிருந்தது.
வீரபுருஷர்கள் நிறைந்த ராஜஸேனைகளானவை “க்ருஷ்ணன் ஸாரதியாய் நிற்கிறேன்” என்று கேட்டவாறே குடல் குழம்பிக் கூப்பிட்ட வொலி மிகுந்திருந்தது.
விண்ணவர்கள் இந்த யுத்தத்தின் அதிசயம் காண்கைக்காக வெளிப்பட்டு நின்று ஸ்தோத்ரம் பண்ணுகிற முழக்கம் விஞ்சியிருந்தது.
ஆக இத்தகைய கோஷங்கள் நிரம்பப்பெற்று நடந்தது பாரதப்போர் என்றதாயிற்று
மல்லர்-ஆயுதமொன்றும் கையிலின்றியே உடலோடு உடல் நேரியப்பொருபவர் மல்லர் எனப்படுவர்.
யுத்தத்திற்கென்றே அவர்கட்கு அதிகப்படியான உணவுகளையிட்டு வளர்ப்பர்களாதலால் ‘ஊணுடை’ என்று சிறப்படைமொழி கொடுக்கப்பட்டது.
ஆணுடைச்சேனை—பீஷ்மர் த்ரோணர் என்னும்படியான மஹாபுருஷாகளைத் தலைவராகக்; கொண்ட சேணையாதலால் ஆணுடைச் சேனையென்றது.
கண்ணபிரான் யுத்தத்தில் ஒரு காரியமும் செய்யாமற் போனாலும் அவன் பாண்டவ பக்ஷபாதிபாயிருக்கி;ன்றானென்று கேட்டவாறே அந்த சேனையடங்கலும் நடுங்கும்படியாயிற்று.
ஏணுடைத்தேவர் என்றது ஸப்ரஹமா ஸசிவஸ்ஸேந்த்ர: என்பது முதலான பல வேதவாக்கியங்களிலே ஒரு கோவையாக எண்ணப்பட்ட தேவர்கள் என்றபடி.
காணுடைப்பாரதம்-விரும்பிக் காணவேண்டும்படியான ஆசையை விளைக்கவல்ல பாரதப்போர் என்பது கருத்து
கையறை போழ்து—தொடங்கின காலத்தில் என்பது தேர்ந்த பொருள்.
“கையுமணியும் வகுத்து அங்கோடிங்கோடுவாவிப் படை பொருத்தி நீங்களின்னபடி செய்யக் கடவிகோள் நாங்களின்படி செய்யக் கடவோமென்று கை தட்டி விட்டபோது” என்பது ஈடு.
—————-
***- (போழ்து மெலிந்த) ப்ரஹலாதாழ்வானுக்காக இரணியனை வதைக்கும் போதுண்டான அதிசயத்தைக் கூறுவதிப்பாட்டு.
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-
பதவுரை
| போழ்ந்து மெலிந்த |
– |
போதுபோனவாறே |
| புன் செக்கரில் |
– |
செக்கர் வானமிடுகிற வளவிலே |
| வான் திசை |
– |
ஆகாசமும் திக்குக்களும் |
| சூழும் எழுந்து |
– |
சூழக்கிளம்பி |
| உதிரம் புனல் ஆ |
– |
ரத்த வெள்ளமாம்படி |
| அப்பன் |
– |
ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி |
| ஆழ் துயர் செய்து |
– |
அளவிறந்த துன்பத்தை விளைந்து |
| அசுரை கொல்லும் ஆறு |
– |
இரணியாசுரனைக் கொன்ற விதமானது |
| மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது |
– |
ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது. |
| ஆல் |
– |
ஆச்சரியம். |
தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன் இரணியன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பல பல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும்படி செய்து வருகையில், அவன்மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹா விஷ்ணு பக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன் பெயரைக் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே கடுங்கோபங் கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன்பழிப் படுத்துவதற்குப் பலவாறு முயன்றும் அங்ஙனம் வழிப்படாதபபனைக் கொல்வதற்கு என்ன வுபாயம் செய்தும் அவன் பகவானுடைய அநுக்ரஹ பலத்தினால் ஒருகேடு மின்றியிருக்க, ஒரு நாள் சாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புத்திரனை நேர்க்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு’ என்ன; ‘தூணிலுமுளன், துரும்பிலுமுளன் எங்குமுளன்’ என்று அக்குமாரன் உறுதியாய்ச் சொல்லி, உடனே இரணியன் இங்கு உளனோவென்று சொல்லி எதிரில் நின்ற தூணைப் புடைக்க உடனே அதிலிருந்து திருமால் மநுபஷ்யரூபமும் சிங்கவடிவுங் கலந்த நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நகங்களால் அவன் மார்பைப் பிறந்து அழித்திட்டு ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்தானென்ற வரலாறு அறிக.
பொழுது போய் செக்கர் வானமிடுகிறவளவிலே (இரணியனது வரத்தில் அகப்படாத ஸந்த்யா காலத்திலே) பள்ளங்கண்டவிடமெங்கும் வெள்ளம் பரக்குமா போலே ஆகாசமும் திசைகளும் நிரம்பரக்த வெள்ளம் கொழித்துப் பரம்பும்படி, ஒரு மலையைக் கீழேயிட்டுக் கொண்டு மேலேயிருந்து அதை ஒரு மலை பிளக்கின்றதோ வென்னலாம்படி வியாபரித்தபடி யென்னே! என்று வியக்கிறார்.
கீழ்து—கிழித்து என்றுமாம். ஈற்றடியில் ‘அசுரரை என்பது பாடமன்று; அசுரை என்றே பாடம் தொகுத்தால் விகாரம். அசுரனை யென்றபடி.
————
***- (மாறுநிரைத்தது.) இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில்.
மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-
பதவுரை
| அப்பன் |
– |
ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் |
| இலங்கை நீறு பட செற்ற நேர் |
– |
லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்) |
| மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் |
– |
எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே |
| இனம் நூறு பிணம் |
– |
இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை |
| மலை போல் புரள |
– |
மலை மலையாகப் புரண்டு விழவும் |
| கடல் |
– |
கடலானது |
| உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து |
– |
ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது |
ஒயாதே அம்புகளைப் பொழிகையாலே அம்புகளானவை ஒன்றோடொன்று தாக்கி அதனாலெழுந்த வொலி விசைத்திருந்தது.
அரக்கர் பிணம்களானவை நூறு நூறு இனமினமாக மலைபோலே புராண்டு வீழ்ந்தன.
கடல் ரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே வரவெதிர்க்க நின்றது.
பிராட்டி அசிரேணைவ லங்கேயம் ச்மசாந ஸத்ருசீ பவேத் என்று சொன்ன படியே சுடுகாடாயிற்றென்கிறார் இலங்கை நீறு ட வென்று.
————
(நேர்சரிந்தான்) பாணாஸுரயுத்த விஜயவ்ருத்தாந்தம் கூறுவதிப் பாட்டு.
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-
பதவுரை
| அப்பன் |
– |
ஸ்வாமியான கண்ண பிரான் |
| நேர் சரி வாணன் |
– |
முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய |
| திண்தோள் கொண்ட அன்று |
– |
திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே |
| கோழி கொடி கொண்டான் |
– |
மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன் |
| நேர் சரிந்தான் |
– |
எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்; |
| பின்னும் |
– |
அதற்குமேலே |
| எரியும் அனலோன் |
– |
ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும் |
| நேர் சரிந்தான் |
– |
எதிர் நில்லாமல் சரிந்தான்; |
| பின்னும் |
– |
அதற்குமேலும் |
| முக்கண் மூர்த்தி |
– |
முக்கண்ணனான சிவ பிரானும் |
| நேர் சரிந்தான் கண்டீர் |
– |
அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர். |
பலிசக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் ஒரு நாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு அவனிடத்தில் மிகுந்த ஆசை பற்றியவளாய் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து அவள்மூலமாய் அந்தப்புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருத்தனென்று அறிந்து கொண்டு ‘அவனைப் பெறுவதற்கு உபாயஞ் செய்ய வேண்டும்’ என்று அத்தோழியை வேண்ட,
அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக் கொண்டுவந்து அந்த: புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தவ்வாணன் தன் சேனையுடன் அதிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க,
துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாருங் கலங்கியிந்த போது, நாரத முனிவனால் நடந்த வரலாறு சொல்லப் பெற்ற ஸ்ரீக்ருஷ்ண பகவான் பெரிய திருவடியை நினைத்தருளி, உடனே வந்துநின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக் கொண்டு பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்திற் கெழுந்தருளும்போதே
அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல்காத்துக் கொண்டிருந்த சிவபிரானது பிரமத கணங்கள் எதிர்த்துவர, அவர்களை யெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்பரத்தேவதை மூன்றுகால்களும் மூன்றுதலைகளு முள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டு யுத்தஞ்செய்ய,
தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி அதன் சக்தியினாலே அதனைத் தூரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுகரர்களாய்ப் பாணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நி தேவர் ஐவரும் தன்னை டெதிர்த்துவர,
அவர்களையும் நாசம் செய்து பாணாஸுரனோடு போர் செய்யத்தொடங்க, அவனுக்குப் பக்கபலமாக சிவபெருமானும் ஸுப்ரம்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட,
கண்ணன் தான் ஜ்ரும் பணாஸ்ரத்தைப் பிரயோகித்துச் சிவன் ஒன்றும் செய்யாது கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோகும்படி செய்து ஸுப்ரம்மண்யனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஓட்டி,
பின்னர்அனேகமாயிரம் ஸுர்யர்க்கு ஸமானமான தனது சக்கராயுதத்தை யெடுத்துப் பிரயோகித்து அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில்
பரமசிவன் அருகில் வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளிப் பின் அவன் தன்னைத்தொழுது அதிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க அதன் பின் மீண்டுவந்தனன் என்பது பாணாஸுரபங்க விருத்தாந்தம்.
கொடிக்கோழிகொண்டான்-கோழியென்று மயிலுக்கும் பெயர். மயூரத்வஜனான ஸுப்ரமண்யன் முந்துற முன்னம பங்கப்பட்டானென்கிறார்.
(பின்னும் எரியுமனலோன் நேர்சரிந்தான்) ஈடு—‘ அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்நிகளும் பெரிய கிளர்த்தியோடே யெரிந்து தோற்றிற்று; அவையுமெல்லாம் பின்னிட்டன.”
பரிவாரங்க ளெல்லாம் பங்கப்பட்டொழிந்த பின்பு தலைவனும் தொலைந்தானென்கிறது மூன்றாமடி.
—————–
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-
பதவுரை
| அப்பன் |
– |
ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் |
| அன்று |
– |
அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; |
| மண் நீர் எரி கால் விண் |
– |
பஞ்ச பூதங்ககளையும் |
| மலை முதல் |
– |
மலைகள் முதலானவற்றையும் |
| செய்ததும் |
– |
படைத்ததும் |
| அன்று |
– |
அந்த க்ஷ்ணத்திலேயாம்; |
| சுடர் இரண்டு |
– |
சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் |
| பிறவும் |
– |
மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் |
| உலகம் செய்ததும் |
– |
உலகங்களைப்படைத்ததும், |
| செய்ததும் |
– |
உண்டாக்கினதும் |
| அன்று |
– |
அந்த க்ஷணத்திலேயாம் |
| பின்னும் |
– |
அதுக்குமேலே |
| மழை |
– |
மேகங்களையும் |
| உயிர் |
– |
மழையினால்பிழைக்கும் உயிர்களையும் |
| தேவும் |
– |
மழைக்குக் கடவர்களான தேவர்களையும் |
| மற்றும் |
– |
மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் |
| செய்ததும் |
– |
உண்டாக்கினதும் |
|
அன்று அந்த க்ஷணத்திலே. |
||
(அன்றுமண்ணீர்). இப்பாட்டின் கருத்தை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள் பூருவாசாரியர்கள்.
ஆதிஸ்ருஷ்டியைச் சொல்லுகிறதாக ஒரு நிர்வாஹம்.
கீழே பாணாஸுரனை வென்றி கொண்டவிருத்தாந்தம் சொல்லியிருப்பதாலும் மேற்பாட்டிலும் க்ருஷ்ணாவதார சரித மொன்று சொல்லிருப்பதாலும் இப்பாட்டையும் கீழ்ப்பாட்டோடே சேஷமாக்கி பாணாஸுரனுடைய செருக்கையடக்கினவன்று தான் ஜகத்து உண்டாயிற்றென்று ஆழ்வாரருளிச் செய்கிறார் என்பதாக மற்றொரு நிர்வாஹம்.
இந்த நிர்வாஹித்தின்படி ‘அன்று’ என்று இப்பாட்டில் அடிதோறும் வருவது வாணனை வென்ற வக்காலத்திலே என்ற பொருளிலாம்.
ஆத்ய ஸ்ருஷ்டியைச் சொல்லுதிறதாக நிர்வஹக்கிற பக்ஷத்தில் அன்றே என்றது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஏக பக்ஷத்திலேயே’ என்றபடி.
“க்ரமஸ்ருஷ்டியன்று; யுகபத்ஸ்ருஷ்டியென்று கருத்து” என்பது பன்னீராயிரவுரை.
————-
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-
பதவுரை
| மேய்நிரை |
– |
மேய்கிற பசுக்களானவை |
| கீழ் புக |
– |
கீழே யொதுங்கும்படியாகவும் |
| மா புரள |
– |
(கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும் |
| சுனைவாய் நிறை நீர் |
– |
சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது |
| பிளிறி சொரிய |
– |
பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும் |
| இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க |
– |
மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும் |
| அப்பன் |
– |
கண்ணபிரான் |
| தீ மழை காத்து |
– |
விநாச ஹேதுவான மழையைத் தடுக்க |
| குன்றம் எடுத்தான் |
– |
கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான் |
(மேய்நிரை.) திருவாய்ப்பாடியில் ஆயர்கள் வழக்கப்படி இந்திரபூஜைக் கென்று சமைத்தசோறு முதலியவற்றையடங்கலும் கண்ணபிரான் அவ்விந்விந்திரனுக்கு இடவொட்டாமல் கோவர்த்தன மலைக்கு இடுவித்துப் பின்பு தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்துவிட,
பிறகு இந்திரன் பசிக்கோபத்தினால்; மேகங்களை ஏவி ஏழுநாள் விடாமழை பெய்விக்க, கண்ணபிரான் அக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிக் கோக்களையும் கோவலரையும் காத்தருளின் னென்றவரலாறு ப்ரஸித்தம். அப்போதைய நிலைமையை இப்பாட்டில் அநுபவிக்கிறார்.
மேய்கின்ற பசுக்களானவை புல்லும் உமிழாதே அசையிட்டுக் கொண்டு கீழே புகவும், மலைமேலுள்ள மிருகங்களெல்லாம் மலைகுடையாகக் கவிழ்ந்தபடியடிலே கீழே புரண்டு விழவும், சுனைகள் வாயளவும் நிறைந்த நீரைப் பெரிய கோஷத்தோடு சொரியவும், திருவாய்ப்பாடியடங்களிலும் அங்கே யொடுங்கவும் அப்பன் தீமழை காத்துக் குன்றமெடுத்தா னென்றதாயிற்று.
———-
***- (குன்றமெடுத்த.) எம்பெருமானுடைய விஜய பரம்பரைகளைத் தொடுத்த இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள்
எல்லா வகையான விஜயமும் பெறுவார்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
பதவுரை
| குன்றம் எடுத்த பிரான் |
– |
கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய |
| அடியாரொடும் |
– |
அடியார்களோடு கூட |
| ஒன்றி நின்ற |
– |
ஒருமைப்பட்டிராநின்ற |
| சடகோபன் |
– |
நம்மாழ்வாருடைய |
| உரை செயல் | – | அருளிச்செயலாய் |
| ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த |
– |
ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான |
| இவை பத்தும் |
– |
இத்திருவாய்மொழி |
| மேவி கற்பார்க்கு |
– |
தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு |
| வென்றி தரும் |
– |
பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும் |
“குன்ற மெடுத்த பிரானடியாரோடும் ஒன்றிநின்ற சடகோபன்” என்ற சொல்லமைப்பை நோக்கித் திருக்குருகைப் பிரான் பிள்ளான் ஆறாயிரப்படியில் அருளிச் செய்கிறார். “ஆழ்வார்தாமும் கோவர்த்தனத்தின் கீழே ஆயரோடே கூடி நின்று “என்று.
குன்றமெடுத்த பிரானுடைய அடியார்கள் குன்றமெடுத்தகாலத்திலுமுண்டு, பிற்காலத்திலுமுண்டு.
குன்றமெடுத்த காலத்தில் அக்குன்றத்தின் கீழே யொதுங்கி நின்றவர்களே அடியாராவர்;
அவர்களோடு ஒன்றிநின்ற சடகோபன் என்றால், கீழே பிள்ளானுரைத்ததாக எடுத்துக்காட்டினதே பொருளாம்.
பிற்காலத்திலுள்ள அடியார்களைக் கொண்டு அர்த்தமருளிச் செய்கிறார் பெரியவாச்சான் பிள்ளை; “கோவர்த்தநோத்தரணம் பண்ணின உபகாரனான க்ருஷ்ணன் திருவடிகளையே தஞ்கமாக நினைத்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களிலே தம்மையும் அந்யதமராக நினைத்திருந்த ஆழ்வார் அருளிச் செய்தவிது. மலையையெடுத்தவன்று மலைக்கீழே யொதுங்தினவர்களைப் போலே ஸம்ஸாரத்துக்கு அஞ்சி க்ருஷ்ணன் திருவடிகளிலே யொதுங்குமவர்கள் வைஷ்ணவர்கள்; அச்செயலுக்குத் தோற்று அடிமை புக்கவராயிற்று இவர்” என்பது இருபத்தினாலாயிரம்.
கீழே காட்டிய இரண்டு நிர்வாஹங்களுக்கும் பொதுவாகவுள்ளது ஈடு;-“கோவர்த்த நோத்தரணம் பண்ணின நீர்மையிலும் அப்போதை யழகிலும் ஈடுபட்டிருக்குமவர்களோடே கூடிநின்று தாமும் ப்ரீதராய் ப்ரீதிக்குப் போக்குவீடாகச் சொன்ன பாசுரமாயிற்று” என்பது ஈட்டு ஸ்ரீ ஸீக்தி.
“வென்றிதரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே” என்று ஆழ்வாரருளிய பலச்ருதிக்கேற்ப இற்றைக்கும் இத்திருவாய்மொழியை ஜபித்து விஜயஸிந்தி பெறுவது அநுபவஸித்தம்.
———————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
January 2, 2025 at 3:23 am |
Thankyou very much 😊 for this