(கங்குலும் பகலும்.) பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கிற நிலைமையைப் பெரியபெருமானுக்கு அறிவித்து
இவள் விஷயமாக நீர் செய்தருள் நினைக்கிறது என்னோ? என்று கேட்கிறாள் ஸ்ரீபராங்குச நாயகியின் திருத்தாய்.
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
பதவுரை
| செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய் |
– |
அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே! |
|
(இம்பெண்பிள்ளை யானவள்) |
||
| கங்குலும் பகலும் |
– |
இரவும் பகலும் |
| கண் துயில் அறியாள் |
– |
கண்ணுறங்கப் பெறுகின்றிலள்; |
| கண்ண நீர் கைகளால் இறைக்கும் |
– |
கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்; |
| சங்கு சக்கரங்கள் |
– |
திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன |
| என்று கை கூப்பும் |
– |
என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்; |
| தாமரை கண் என்றே தளரும் |
– |
(என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்; |
| உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும் |
– |
(பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்; |
| இரு நிலம் |
– |
விஸ்தீர்ணமான பூதலத்தை |
| கை துழவிருக்கும் |
– |
கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!) |
| இவள் திறந்து |
– |
இப் பெண்பிள்ளை விஷயத்தில் |
| என் செய்கின்றாய் |
– |
ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்? |
கங்குலும் பகலும் கண்துயிலறியாள்- கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று (திருவித்தத்தில்) அருளிச் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வாசியறக் கண்துயிலாதே இவர்க்கு.
ஸம்ஸாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பர்கள். ஆழ்வார் இந்நிலத்திலிருந்து வைத்தே இமையோர் படியாயிருப்பர்.
விசாரமுள்ளவர்கட்குக் கண்ணுறங்குமோ? என்றுகொல் சேர்வாந்தோ என்றும்
எந்நாள்யானுங்னையினிந்து கூடுவனே என்றும்
இடையறாத விசாரங்கொண்ட விவர்க்குக் கண்ணாறங்க விரகில்லையன்றோ.
“கண்துயில் அறியாள்’ என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருளுகின்றார் -“ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷத்தில் விரஹ வ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.”
கண்ணநீர் கைகளாலிறைக்கும்-தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாங் குழுமித் திருப்புதழ்கள் பலவும்பாடி ஆராத மனக்களிப்போடழுத கண்ணீர் மழைசோர எனறும்,
ஏறாடர்த்ததும் ஏனமாய் நிலங்கீண்டதும் முன்னிராமானய் மாறடாத்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடி வண்பொன்னிப் பேராறு போல்வருங் கண்ணநீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றஞ் சேறு செய் தொண்டர் என்றும் சொல்லுகிறபடியே
எம்பெருமானுடைய ஒவ்வொரு குண சேஷ்டிதங்களை நினைத்துத் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக விடுவது பக்தர்களுக்கு ஒரு நித்ய க்ருத்யமாதலால் அதனைச் சொல்லுகிறது.
கைளாலிறைக்கு மென்றது கண்ணீரின் மிகுதி சொன்னபடி.
சங்கு சக்கரங்கனென்று சைகூப்பும் – கண்ணீர்; பெருகாநிற்கச்செய்தே சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் நம்பெருமாள் ஸேவை ஸாதிக்கிற அழகு காண்மின் காண்மின்! காண வாரீர்! என்று சொல்லி பாவநாப்ரகர்ஷத்தாலே சங்கு சக்சரங்களை நோக்கிக் கை கூப்புகின்றாள்.
இன்னாரென்றறியேன் என்று பரகாலநாயகி அஸாதாரண லக்ஷ்ணங்களைக் காணநிற்கச் செய்தேயும் இன்னாரென்று அறுதியிடமாட்டாதே பேசுகிறாள்;
இப்பராங்குச நாயகி திருவாழி திருச்சங்குகளைச் காணாதவளவிலும் கண்டதாக நினைத்து வாயால் மொழிந்து அஞ்ஜலி பந்தம் பண்ணாநின்றாள்.
தாமரைக்கண்ணென்றே தளரும்- “தாமரைக் கண்களால் நோக்காய்” என்று சொல்ல வேணுமென நினைத்துத் தொடங்கினாள்; தாமரைக்கண் என்ற வளவிலே விகாரப்பட்டு மேலே சொல் எழமாட்டாமல் தளர்கின்றாள்.
(திருவிருத்தத்தில்) பெருங்கேழலார் தம்பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் என்று அத்தலையில் திருக்கண்ணோக்மடியாகவே தாம் ஒரு பொருளாகப் பெற்றதாக அருளிச் செய்தாராகையாலே அந்தத் திருக்கண்களை நினைத்து என்னை இவ்வளவனாக ஆக்கின திருக்கண்களுக்கு இப்போது உபேக்ஷிக்கை பணியாயிற்றோ!” என்கிறளாகவுமாம்.
உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும்- உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவரிலே என்னையும் ஒருத்தியாக (-ஸம்ஸாரியாக) வைத்திருந்தால் நான் சூது சதுரங்கமாடியும் விஷயாந்தரங்களிலே மண்டியம் உறங்கியும் ஓடிய முழன்றும் ஒருவாறு போதுபோக்கி;த் தரித்திருக்கமாட்டேனோ?
வேறொன்றால் தரிக்கவொண்ணாதபடி என்னை இப்படியாக்கி இப்போது கைவாங்கிநிற்கிறயே! பிரானே! இது தகுதியோ வென்கிறாள்.
கார்கலந்தமேனியான் கைகலந்தவாழியான் பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையினாழ்; துயரை என்னினைந்து போக்குவரிப்போது என்று அடியிலே பேசினளரன்றோ இவர்.
கார்கலந்த சொல்லும், பார்கலந்த வல்வயிற்றான் சீர்கலந்த சொல்லும, பாம்பணையான் சீர்கலந்த சொல்லும், நினைந்து போதுபோக்கலாமேயன்றி வெறொன்றால் போதுபோக்கலாகாது என்று அறுதியிட்டார்.
எப்போதும் சீர்கலந்த சொல்நினைத்த போதுபோக்க வொண்ணுமோ? இடையிடையே காட்சியும் வேண்டாவோ? காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் என்று பேசுவதற்கும் இலக்குக் கிடைத்தாலன்றோ தரிக்கலாவது என்றிருக்கிறாள் போலும்.
எங்ஙனே தரிக்கே னென்றவுடனே வரக்காணாமையாலே இருநிலம் கைதுழா விருக்கும். “மஹாப்ருதிவி ஒரு பீங்கானுக்குட்பட்ட சத்தனபங்கம்பட்டது படாநின்றது” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி
‘துழாவியிருக்கும்’ என்பது தொக்கு ‘துழாவிருக்கும்’ என்று கிடக்கிறது. நிலத்தைத் துழாவியிருத்தல் ஒருவகையான உந்மாத க்ருத்யம்.
செங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய்!-இங்கே கயலை நினைப்பூட்டுவது ஒரு கருத்தாலேயாம்.
ந ச ஸீதா த்வயா ஹீ நு ஹீநா ந சாஹமபி ராகவ!, முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத்த்ருதௌ என்று பண்டே சொல்லிக் கேட்டிருக்கின்றயே, நீரை விட்டுப் பிரிந்த மீன் பட்டது படுமிவள் என்பதை யறிந்து வைத்தும் இங்ஙனே பிரிந்திருத்தல் தகுதியோ வென்று காட்டுகிறபடி.
என் செய்கின்றாயென்றது-என்ன செய்வதாக ஸங்கல்பித்திருக்கிறாய் என்றபடி.
“உன்மனத்தால் என்னினைந்திருந்தாயென்கிறபடியே ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு என்கிற ஸ்ரீவசந பூஷண திவ்யஸூக்தி இங்கே அநுஸந்தேயம்.
——————
***- (என் செய்கின்றாய்.) கீழ்ப்பாட்டில் “இவள் திறத்து என் செய்கின்றாயே” என்று தாய்பாசுரமாகச் சென்றது;
அதுதானே இப்பொழுது தலைவி பாசுரமாகச் செல்லுகிறது.
“என் தாமரைக்கண்ணா! என் செய்கின்றாய்” என்று கேட்கிறாளாயிற்று பராங்குச நாயகி.
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
பதவுரை
|
(இப் பெண்பிள்ளையானவள்) |
||
| என் தாமரை கண்ணா |
– |
என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே! |
| என் செய்கின்றாய் என்னும் |
– |
என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்; |
| கண் நீர் மல்க இருக்கும் |
– |
கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்; |
| எறி நீர் திரு அரங்கத்தாய் |
– |
அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே! |
| என் செய்கேன் என்னும் |
– |
(உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்; |
| வெவ்வு யிர்த்து உயிர்த்து |
– |
வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு |
| உருகும் |
– |
கரைகின்றாள்; |
| முன் செய்த வினையே |
– |
முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே! |
| முகப்படாய் என்னும் |
– |
என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்; |
| முகில் வண்ணா |
– |
காளமேகவண்ணனான எம்பெருமானே! |
| இது தகவோ என்னும் |
– |
இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்; |
| இவ்உலகம் |
– |
இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம் |
| முன் செய்து |
– |
முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து |
| உண்டு உமிழ்ந்து |
– |
(காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து |
| அளந்தாய் |
– |
அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே! |
| இவட்கு |
– |
இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு |
| முடிகின்றது என் கொலோ |
– |
இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ? |
முந்துற முன்னம் என்னைத் தோற்பித்து ஈடுபடுத்திக் கொண்ட திருக்கண்கள் இப்போது எங்கே போயின? மீண்டும் அத்திருக்கண்களாலே குளிரநோக்க நினைத்திருக்கிறயோ? அன்றி நெறிகாட்டி நீக்கப் பார்த்திருக்கிறயோ வென்று கேட்கின்றாள்.
கண்ணீர் மல்கவிருக்கும் எங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே என்னும்படி பிராட்டிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பாராதே ஏகாக்ரமாக அன்று கடாக்ஷித்தருளின திருக்கண்கள் இன்று எங்கே போயினவோவென்று உள்குழைந்துருகிக் கண்ணீர் நிரம்பப்பெற்றாள்.
எறிநீர்த் திருவரங்கத்தாய் என்செய்கேன் என்னும்-என்னுடைய தாபம் தீரும்வழி எனக்கொன்றும் தெரியவில்லையே; இன்னது செய்வதென்று தோன்றவில்லையே; பொன்னி சூழரங்கமேய பூவைவண்ணா! நான் என்ன செய்தால் என் தாபமாறும்? நீயே சொல்லப் என்கிறாள்.
இங்கே திருவரங்கத்திற்கு ‘எறிநீர்’ என்று விசேஷணமிட்டிருந்தலால் ‘என்னைக் கொண்டுசென்று திருக்காவேரியிலே போடவல்லார் ஆரேனுமுண்டோ!’ என்று அலைபாய்வதாகத் கருத்துத் தோன்றும்.
திருக்காவேரியிலே கொண்டுவந்து போடுவானேன்? தம் கண்ணெதிரே தாமிரபர்ணி இல்லையோ? அதில் விழலாகாதோவென்று சிலர் கேட்கக்கூடுமே; அதற்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார்-“திருப்பொருநலில் நீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே உபதப்தமாயிரா நின்றதுபோலே.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. தம்முடைய தாபம் தாமிரபர்ணயிலும் எறிப் பாய்ந்து அதிலே அடிவைக்கவும் அணுகவும் போகாமையாலே திருக்காவேரியிலே திருவுள்ளம் சென்றதென்கை.
வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் – பிரிந்தவர்கள் பூவும் பல்லமுமான செடிகொடி மரங்களை அருகே கண்டால் ஆறியிருக்க மாட்டார்களே;
தஹந்தீவமிவ நிச்ச்வாஸை: வ்ருகூஷாந் பல்லவதாரிகை: என்று பிராட்டியானவள் பல்லவந் திகழ் பூஞ்செடிகளைப் பஸீரு ழுச்சசெறிந்து அழிக்க நினைத்தாப் போலே இப்பாராங்குச நாயகியும் நீள்பொழில்குருகூரை உஷ்ணோஷ்ணமான பெருமூச்செறிதலாலே பங்கம் செய்யப்பார்த்தாள் போலும்,
உருகும் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “உருகுகிறபடியே நிற்குமத்தனை; இனி நெடுமுச்செறிகைக்கு தர்மியுமில்லையோ வென்னும்படி யுருகும்; வெவ்விடதாகப் பலகால் நெடுமூச்செறிந்து அவ்வுஷ்ணத்தாலே உருகாநிற்கும்.”
முன்செய்தவினையே முகப்டாயென்னும்-எம்பெருமான் என்னை இப்படி உபேக்ஷிக்கும்படி நான் என்ன பாவம் பண்ணிவிட்டேன்? அப்படி நான்செய்த பாவம் ஏதேனுமுண்டாகில் அது என்னெதிரே வந்து நிற்கட்டுமே என்கிறாள்.
நாம் முன்செய்த முழுவினையால் இழக்கிறோமேயல்லது அவன்மேலே பழிசொல்லிப் பயனென்? என்று திருவுள்ளம் போலும்.
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: என்று பிராட்டி தான் செய்த பாபத்தின் பலனைத் தான் அநுபவிப்பதாகச் சொன்னாளன்றோ.
அப்படி நான் பாபம் செய்திருந்தால் தானென்ன? பாபமென்று ஒரு பெருமூட்டை ஏதேனுமுண்டோ? உன் திருவுள்ளத்தில் உதிக்கின்ற நிக்ரஹ ஸங்கல்பம் குலையாதோ? உன் இரக்கம் எங்கே போயிற்று? என்கிறாளாயிற்று
முகில்வண்ணாதகவு இதோ’ என்னும. நீ முகில்வண்ணனல்லையோ? மேகத்திற்குண்டான தன்மையெல்லாம் உனக்குமுண்டே; பெய்ய நினைத்த இடமளவும் சென்று பெய்யமதன்றோ மேகம்; அது கைம்மாறு கருதுவது முண்டோ? புண்ய பாபங்களைப் பார்த்துப் பின் வாங்குவது தானுமுண்டோ? என்கிறாள்.
‘தகவு இதோ’ ‘தகுவதோ’ என்பன பாடபேதங்கள்.
இவட்கு முடிகின்றது என்கொலோ? -இவள் விஷயத்தில் என்ன செய்வதாகத் திருவுள்ளத்தில் முடித்திருக்கிறீர்?
இவளுடைய நிலைமை என்னாய் முடியுமோ? என்றுமாம்.
————
(வட்கிலளிறையும்) இப்பெண்பிள்ளை இப்படிப்பட்ட நிலைமையை அடைந்தவளாம்படி இவளிடத்தில் நீர் செய்திட்டது என்னோ வென்கிறாள்.
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-
பதவுரை
|
(இப் பெண்பிள்ளை) |
||
| இறையும் வட்கு இலள் |
– |
சிறிதும் வெட்கமில்லா தவளாகி |
| மணிவண்ணா என்னும் |
– |
நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்! |
| வானமே நோக்கும் |
– |
(யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்; |
| மையாக்கும் |
– |
(எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்; |
| உட்கு உடை அசுரர் |
– |
வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய |
| உயிர் எல்லாம் உண்ட |
– |
பிராணன்களை யெல்லாம் கவர்ந்த |
| ஒருவனே என்னும் |
– |
அத்விதீயனே! என்கின்றாள்; |
| உள் உருகும் |
– |
உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்; |
| கட்கு இலீ |
– |
கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே! |
| காகுத்தா கண்ணனே |
– |
ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே! |
| உன்னை காணும் ஆறு அருளாய் என்னும் |
– |
உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்; |
|
– |
||
| திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய் |
– |
திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே! |
| இவள் திறந்து |
– |
இப் பெண்பிள்ளை விஷயமாக |
| என்செய்திட்டாய் |
– |
நீ செய்தது என்னே! |
இறையும் வட்கிலன் – ‘நாண்மடம அச்சம் பயிர்ப்பு’ என்னுமிவை நான்கும் மாதர்கட்கு நிரூபகம்; இவற்றுள், நாண் (வெட்கம்) முந்துறமுன்னம் சொல்லப்பட்டதாதலால் அது மிக முக்கியமாகும்; அந்தோ! அது சிறிது மில்லையாயிற்றே யென்கிறாள்.
வட்கு-வெட்கம்; லஜ்ஜை. நாணமற்றுப் போயிற்றென்பது எங்ஙனே தெரிந்ததென்ன,
(மணிவண்ணாவென்னும்) நான்முடையவளாயிருந்தால் கணவனுடைய நாமத்தைச் சொல்லியழைப்பாளோ?
பெற்றதாய் முன்னே வடிவழைகைச் சொல்லுகின்றாளே. காமிநி ஆசைப்படுவது வடிவழகையன்றோ. தான் அகப்பட்ட துறையைச் சொல்லிக் கூப்பிடுகின்றாள்.
மணிவண்ணாவென்று ஸாமாம்யமாகவா கூப்பிடுகின்றாள்; திருநாடாளவும் கேட்கும்படியாக கவன்றோ கூப்பிடுகிறாள்.
கூப்பிட்டவாறே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு உதவ மென்றெண்ணி (வானமே நோக்கும்) ஆகாசத்தையே பாராநின்றாள்.
பார்த்தவளவிலும் வந்து தோன்றுக் காணாமையாலே (மையாக்கும்) மயங்குகின்றாள், அறிவு கெடுகின்றாளென்கை.
சிறிது மயக்கம் தெளிந்தவாறே உட்குடையசுரருயிரெல்லாமுண்ட வொருவனே! யென்கின்றாள்.
தேவர்களுக்காக உடம்பு நோவக் காரியஞ்செய்து அசுரர்களோடே பொருது வெற்றிபெற்று வருவமனே! என்கிறாள்.
ஆண்புலிகளுக்கோ காரியஞ் செய்வது! பெண்பிறந்தார்க்குக் காரியம் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? பிரயோஜநாத் பரர்களுக்கேயா காரியஞ்செய்வது? அநந்ய ப்ரயோஜநர்களுக்குக் காரியம் செய்யலாககாதென்று திருவுள்ளமோ? பெருமிடுக்கர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அபலைகளுக்குக் காரியஞ் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? காரியமாகுமளவும் திருவடியைப் பற்றிக்கிடந்து, காரியம் தலைக்கட்டினவாறே மார்பு நெறித்து எதிரிடுமவர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அருளினபோதோடு அருளாத போதோடு வாசியற உன் திருவடிகளே தஞ்சமென்றிருப்பார்க்குத் காரியஞ் செய்யலாகாதோ? என்கிற நிர்வேதங்கள் இந்த விளியிலே தோன்றும் உட்கு-மிடுக்கு.
உள் உருகும் – அத்தலையிலுள்ள திருக்குணங்களை நினைத்தும், தன்னுடைய மநோரதம் நிறைவேறப்பெறாமை பற்றியும் நீர்ப்பண்டம்போலே யுருகின்றாள்.
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் என்னும்-ஒருநாளும் கண்ணுக்கும் இல்க்காதவனென்று சாஸ்த்ரங்களில பேசப்பட்டிருக்குமவனே! உன்னை நான் காணும் வகை அருள் வேணுமென்கிறாள்.
நஸந்த்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய ந க்ஷிஷா பச்யதி கச்சநை நம் என்றும் நமாம்ஸசக்ஷூ அபிவீக்ஷ்தே தம் என்றும் ஒருவருடைய கண்ணுக்கும் இலக்காகாதவனென்று ஓதியிருக்கையாலே கட்கிலி யென்றது. கட்கு-கண்ணுக்கு, இலி-விஷயமாகாதவன் என்றவாறு.
கண்ணுக்கு இலக்காகப் பெறதவனென்று அறிந்துவைத்து ‘காணுமாறருளாய்’ என்றால் இது அஸங்கதமன்றோ வென்னில்,
நசக்ஷூஷா பச்யதி கச்சநைநம் என்று ஓதின உபநிஷத்தே தஸ்யைஷ ஆத்மா விவிருணுதே தநூம் ஸ்வாம் என் என்று ஓதி வைத்திருக்கையாலே அப்பெருமான் தானே பரகதஸ்வீகாரமாகக் காட்டியருள்வது உண்டாகையாலும்,
அவன் தானே கீதையிலே -திவ்யம் ததாமி தேக்ஷூபச்ய மே யோகமைச்வரம் என்று திவ்ய சக்ஷூஸ்ஸைக் கொடுத்துக் காட்டி யருளினமை பரஸித்தமாகையாலும்
அது பற்றசாகக் காணு மாறருளாய் என்னக்குறையில்லை.
காகுத்தானாயும் திருவவதரித்து அப்படி காட்டிக் கொடுத்ததில்லையோ என்பது ‘காகுத்தா கண்ணனேயென்னும்’ என்பதில் உறையும்.
ஆமாம்; கட்கிலியானவென்னைக் காட்டிக்கொடுப்பதற்கென்றே விபவாவதாரங்கள் செய்தேன்; அப்போது வந்து தோன்றாமல் இப்போது காணுமாறருளாய் என்றால் எங்ஙனேயருளமம்படி? என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! என்கிறாள் திருத்தாய். அவதாரகாலத்தில் இழந்தொருடையவும் இழவு தீர்க்கவன்றோ இங்கே வந்து சாய்ந்தருளிற்று. ‘வருவாரெல்லாரும் வாருங்கோள்’ என்று கொடிகட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது.
இவள் திறந்து என் செய்திட்டாய்-இவள் இங்ஙனே பிச்சேறுவதற்கு என்ன மருந்திட்டாய்?
——————
***- அம்புகள் செய்யும் காரியமும் குணங்கள் செய்யும் காரியமும் ஒருபடியும் பட்டிருக்கு மென்பர்கள்.
ஸ்ரீ ராமசரங்களானவை சிலரை மூர்ச்சிக்கப்பண்ணும்; சிலரைத் துடிக்கப்பண்ணும்;
சிலரை ஓரிடத்தில் தரித்திருக்கமாட்டாதே அங்குமிங்கும் பதறியோடப் பண்ணும். அங்ஙனேயாயிற்று பகவத்குணங்களும் படுத்துகிறபடி
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-
பதவுரை
|
(இப்பெண்பிள்ளையானவள்) |
||
| இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும் |
– |
(சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்; |
|
(மற்றும் சில சமயங்களிலே) |
||
| எழுந்து உலாம் |
– |
எழுந்து உலாவுகின்றாள்; |
| மயங்கும் |
– |
மயங்கா நின்றாள்; |
| கை கூப்பும் |
– |
(அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்; |
| காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும் |
– |
(பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்; |
| கடல்வண்ணா கடியை காண் என்னும் |
– |
கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்; |
| வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும் |
– |
வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்; |
| வந்திடாய் என்று என்றே மயங்கும் |
– |
வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்; |
|
சி;ட்டனே! – பரமபவித்திரனே! |
||
| செழு நீர் திரு அரங்கத்தாய் |
– |
நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே! |
| இவள் திறத்து |
– |
இப்பெண்பிள்ளை விஷயமாக |
| என்சிந்தித் தாய் |
– |
நீ சிந்தித்திருப்பது என்ன? |
இட்ட கால் இட்ட கையாளாயிருக்குமென்றது ஸ்தம்பித்திருக்கும்படியைச் சொன்னவாறு.
“கைகளாயிருக்கும்” என்கிற பாடத்திற்காட்டிலும் ‘கையளாயிருக்கும் என்கிற பாடம் பொருந்தும்.
எழுந்து உலாம் – ஸ்தம்பித்திருக்கிற நிலைமை நீங்கினவாறே எழுந்து உலாவுகின்றாள். உலாம் என்றது ‘உலாவும் என்றபடி.
“உலாய் மயங்கும்” என்று சில பிரதினில் பதிப்பித்திருப்பது அச்சுப்பிழையென்பர்.
மயங்கும்- உலாவி அங்குமிங்கும் பார்த்து வந்து தோன்றக்காணாமையாலே மயங்கும் படியாயிற்று.
மயங்குமனவிலும் கைகூப்புகை தவிராமையாலே ‘கைகூப்பும்) உணர்த்தியின் றிக்யேயிருக்க, பூர்வவாஸநையாலே கைகூப்பும்.
மோஹித்தசையிலும் தவிருகிறிலள். மயங்கா நிற்கச் செய்தே உணர்த்தியுடைவரைப் போலேயாயிற்று அஞ்ஜலி பண்ணுகிறது” என்று.
ஈட்டு ஸ்ரீஸூக்தியோவென்னில்; “(கைகூப்பும்) உணர்த்தியில் தொழுமவளல்லள்; மயங்கினால் தொழாதிருக்கவல்லளல்லள்.” என்றுள்து.
தொழுதால் அதனை ஸாதநகோடியில் கணக்கிட்டுக் கொள்வானோ! என்கிற அச்சத்தாலே தொழுகையி;ல் கூச்சமேயாயிருக்கும் ஸம்ஸம்பிரதாய நிஷ்டர்களுக்கு.
காதல் கட்டமேயென்று மூர்ச்சிக்கும்-பகவத் விஷயத்தில் காதலைத் தாங்குவது மிகவும் கஷ்டமென்கிறாள்.
பசியனுக்குச் சோறு கிடையாதொழிந்தால் பசிக்கு ஆற்றமாட்டாமே பரிதபிக்குமமாபோலே ஆழ்வார் தமது காதலுக்குப் பரிதபிக்கிறார் காணும்.
அடியிலே மயர் வற மதிநல மருளினன் என்று பக்தியைக் கொடுத்தருளினமைக்கு உகந்து பேசினார்;
இப்போது அந்த பக்திக்குத் தக்க இரை கடைக்காமையினாலே ‘அந்தோ! கஷ்டத்தையன்றோ அவன் கொடுத்தது’ என்று வெறுத்துப் பேசுகிறார்.
‘பகவத் விஷயத்தில் காதலே புருஷார்த்தம்’ என்று பலகாலும் அறுதியிடுகின்ற ஆழ்வார், இப்போது ‘காதலுக்கு மேற்பட்ட ஆபத்து இல்லை’ என்று பேசுகிறபடி என்னே!.
இந்த கஷ்டத்துக்குப் பரிஹாரமில்லாமையாலே (மூர்ச்சிக்கும்) ஆத்மா உள்ளவரையில் இப்படி கஷ்டமே அநுபவிக்க வேண்டியன்றோ நம் கதியாயிற்று! என்று சொல்லி மோஹியா நின்றாள்.
கடல்வண்ணா! கடியை காண் என்னும்-கடலானது ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யடக்கி ஒன்றையொன்று நலியாதபடி நோக்குமாபோலே நீயும் நோக்குமவன் என்பது பற்றிப் பிரானே! உன்னைக் கடல்வண்ண னென்கிறார்கள்:
அப்படி நோக்குவாயல்லையே நீ; கண்ணற்றவனாயிருக்கின்றாயே! என்கிறாள். கடியை -கடியன் என்பதன் முன்னில்: நிர்க்ருணனாயிருக்கின்றாய் என்றபடி.
வட்டவாய் நேமி வலங்கையாவென்னும்-கையுந் திருவாழியுமான அழகைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு அதைப் பூர்த்தியாகச் சொல்லமாட்டாதே நடுவேயிளைத்து அரைகுறையான சொல்லோடே முடித்து, வந்திடாயென்றென்றே மயங்குகின்றாள்.
ஒருகால் ‘வந்திடாய்’ என்று சொல்லி ஆறியிருக்கமாட்டாமையாலே, விடாய்த்தவன் தாஹம் தீருமளவும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்றே வாய் வெருவுமாபோலே ‘வந்திடாய் வந்திடாய் என்றே ஊடுருவச் சொல்லுகின்றாள்;
அங்ஙனம் சொல்லிக்கொண்டே மயங்குகின்றாள்; மயங்கினாலும் வாஸநையாலே வாய்ச்சொல் அநுவர்த்தியாநிற்கும்.
சிட்டனே-சிஷ்டனென்று ஆசாரசீலனுக்குப் பெயர். இங்கு, சிஷ்ட பாவதை பண்ணியிருப்பவனே! என்று விபரீத லக்ஷ்ணையாகப் பொருள் கொள்ளவேணும். உம்மைப்போலே நாலு சிஷ்டர்கள் இருந்தால் பெண்கள் நன்றாகக் குடிவாழலாம்! என்று பரிஹஸித்துச் சொல்லுகிறபடி
‘ப்ரஹ்மஹத்யைகளைப் பண்ணிப் பூணுலீலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்ரத்தையுமிட்டு ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே யிருந்ததீ! உம்முடையபடி.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
செழுநீர்த்திரவரங்கத்தாய்!-நீர்வாய்ப்பும் நிழல்வாய்ப்புங்கண்டு அழகிதாகக் கண்ணுறங்கவோ நீர் இங்கே வந்து சாய்ந்தது?
இவள் திறத்திலே நீர் செய்தருளப் பார்த்தது என்கொல்?
———-
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-
பதவுரை
| அந்தி போது |
– |
மாலைபொழுதிலே |
| அவுணன் உடல் இடந்தானே |
– |
(நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே! |
| அலை கடல் கடைந்த ஆர் அமுதே |
– |
அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே! |
| சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே |
– |
உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! |
|
(இப் பெண்பிள்ளையானவள்) |
||
| சிந்திக்கும் |
– |
(ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்; |
| திசைக்கும் |
– |
அறிவு அழியா நின்றாள்; |
| தேறும் |
– |
(திடீரென்று) தெளிவு பெறுகின்றாள் |
| கைகூப்பும் |
– |
அஞ்சலி பண்ணாநின்றாள்; |
| திரு அரங்கத்து உள்ளாய் என்னும் |
– |
கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்; |
| வந்திக்கும் |
– |
தலைவணங்கா நின்றாள்; |
| ஆங்கே |
– |
அவ்வளவிலே |
| மழை கண் நீர் மல்க |
– |
கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று |
| வந்திடாய் என்று என்றே மயங்கும் |
– |
(எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள். |
***- (சிந்திக்கும்) பழைய விஷயீகாரங்களை நினைக்கத் தொடங்கிவிட்டாள்; அதாவது- மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளிலே ஒருவனாய்க் கை கழிந்து போய்க்கொண்டிருந்த வென்னை பெருங்கெழலார் தம் பெருங்கண்மலர்ப் புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழ வைத்தார்.
இவ்வகாலம் என்று பேசும்படியாகத் தன்னாகவே மேல்விழுந்து வந்து கடாக்ஷித்துப் பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யடிமைகொண்டு ஸகலாவயவ ஸௌந்தர்யத்தையுங்காட்டி யீடுபடுத்திக்கொண்டு போந்தவன் இப்போது உபேக்ஷித்திருப்பது என்னோடுவென்று சிந்திக்கிறபடி.
திசைக்கும்-பழைய பரிமாற்றங்களை நினைத்தவாறே, ‘அந்தோ! அப்போதைய நிலைமை என்ன, இப்படியாயிற்றே!’ என்று அறிவு கலங்கா நின்றாள்.
தேறும் -“இன்றாக நாளையேயாக, இனிச்சிறிது நின்றாக நின்னாருளென்பாலதே” என்னுமாபோலே என்றேனுமொருநாள் அருள் பலித்தே தீருமன்றோ வென்று தனக்குத் தானே தேறி நின்கின்றாள்.
கைகூப்பும்-கீழ்ப்பாட்டில் “மயங்கும் கைகூப்பும்” என்றது; இப்பாட்டில் “தேறும் கைகூப்பும்” என்கிறது. மயங்கியிருக்கும் போதோடு தேறிநிற்கும் போதோடு வாசியற எப்போதும் அஞ்ஜலிபந்தம் மாறாதேயிருப்பது ஸ்வரூப மென்றதாயிற்று.
திருவரங்கத்துள்ளாய்! என்னும்-பரமபத்தில் நின்றும் போந்து திருப்பாற்கடலில்; நின்றும் போந்து, ராமக்ருஷ்ணாதி அவதாரங்கள் போலே காதாலே கேட்டிருக்கையன்றிக்கே, அந்தர்யாமியாய்க் கண்ணுக்குத் தோற்றாதிருக்கையுமன்றிக்கே மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்யத் துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச் சுகம் வளர அகமகிழுந் தொண்டர்வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளுகைக்கு ஒரு ப்ரயோஜனம் ஸித்தித்தாக வேண்டாவோ வென்கிறாள்.
வந்திக்கும்-வந்தித்தலென்று ஸ்தோத்ரம் பண்ணுகைக்கும் தொழுகைக்கும் பெயர்.
திருவரங்கத்துள்ளாய்! என்று சொல்லிக்கொண்டு முகம் முறுவல் முதலாவனற்றைத் துதியா நின்றாள்;
(அல்லது) திருவடிகளிலே விழுந்து கிடக்கின்றாள் என்கை.
ஆங்கே – அப்படிப்பட்ட நிலைமைதன்னிலே. மழைக்கண்ணீர் மல்க—குளிர்ந்த கண்ணீர் ததும்ப; வந்திடாய் என்றென்றே மயங்கும்-தன் ஆற்றாமை தோற்ற ‘பிரானே! வாராய்; பெருமானே வந்தருளாய்’ என்று பலகாலும் சொல்லி, வந்தருளிக் காணாமையாலே அறிவு கெடா நின்றாள்.
வந்திடாய் என்றால் வருகைதான எனக்குப் பணியோ? என்று அவனுக்குத் திருவுள்ளமாக, அரு சிறுக்கனுக்ரு உதவத் தூணிலே வந்து தோன்றினவனல்லையோ நீ யென்று நரஸிம்ஹாவதார கதையையெடுத்துப் பாடத் தொடங்கினாளென்கிறாள்.
(அந்திப்போதணனுடலிந்தாணனெ!) இது தாயின் சொந்தப் பேச்சேயல்லது மகள் பேச்சின் அநுபவாதமன்றெனிலும், மகள் பேச்சே தாயின் உள்ளத்துள் ஊறியிருந்து சொல்லுகிறதாகையாலே இதை மகள் பேச்சின் அநுவாதமாகவும் கொள்ளலாம். தாய் தானே சொல்லுகிறதாகக் கொண்டாலுங் குறையில்லை.
அந்திப் போதவுணனுடலிடந்த வரலாறு;-
இரணியனாகிறான் – தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியில் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பல பல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும்படி செய்து வருகையில், அவன் மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின கட்டளைப்டி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி பக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயண நாமம் சொல்லிலரவே கடுங்கோபங்கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன் வழிப்படுத்துவதற்குப் பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்வதற்கு என்ன வுபாயஞ் செய்தும் அவன் பகவானுடைய அனுக்ரஹ பலத்தினால் ஒரு கேடுமின்றி யிருக்க, ஒருநாள் சாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புந்திரனை நோக்கி, = சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு; என்ன, தூணிலுமுளன், துரும்பிலுமுளன் எங்குமுளன்” என்று உறுதியாகச் சொல்ல, உடனே அதிலிருந்து திருமால் மனுஷ்ய ரூபமும் சிங்க வடிவுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்;த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியிர் தன் மடிமீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நயங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு ப்ரஹைலாதனுக்கு அருள் செய்தானென்பது பிரஸித்தம்.
வேறொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடச் கூடுமாகையாலே அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நாசிங்கமாய்த் தோன்றினானென்பதும் வேறு யாரேனும் கையால் தட்ட அத்தட்டியவிடத்திரலிருந்து தோன்றினால் அவர் தற்கையில நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினானர் என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டின வளவில் திருமால் தோன்றினானென்பலும்,-அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோஜீடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்னஞ் தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்குமாகையாலே அதற்கு இடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும், -அவன் தட்டின பிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றியனால் ‘நான் தட்டினபொழுதும் எல்லாப் பொள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மைநிலையை மறுக்கக்கூடுமாகையாலே, அதற்கு இடமறும்படி கர்ப்பம், கருமுதிர்தல், ப்ரஸவித்தல் முதலியனவும் குழந்தையாய் ஜனித்தல் பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும்-அங்ஙன தோன்றியவிடத்தும் ஹமிரண்யன ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால் ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியமாமற் போய்விடுதல் பற்றி அதைவிடத் தோன்றிமலிருப்பதே நலமென்னும் படியிருக்குமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாவது அழித்தன னென்பதும், -தேவர், மனிதர், விலங்குகள் தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக் களிலள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் தனித்தனி சாகாதபடியும், ப்ரஹ்மஸருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடியும அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற பெற்ற வரம் பழுதுபடாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட் படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினனென்பதும்,- அஸ்த்ரசஸ்த்ரங்களொன்றினாலும சாகாதபடியும்; ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்ற வரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும், பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி அப்பசுலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,- பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்றவரம் மெய்யாகும்படி தம் மடிமீது வைத்துக் கொன்றனனென்பதும்,-வீட்டின் அகத்திலும் புறத்திலும் அறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொன்றானென்பதும் இவைபோன்ற பல விசேஷங்கள் இவ்வதாரத்திலே அருமையாக நோக்கத் தக்கவிஷயங்களாம்.
கடல் சடைந்த ஆரமுதே-உன்னை அமுதமாக நினையாதே உப்புச் சாற்றை அமுதமதாக நினைத்து அகற்காக உன் திருமேனியை நோவுப்படுத்துமார் களுக்கோ நீ உதவலாவது? ஆராவமுதாயடியேனாவியமே தித்திப்பாய் என்றும், அமுதிலுமாற்றவினியன் என்றும இருப்பார்க்கு உகவலாகாதோ?
உன்னைகிட்டி உன் சரணம் சாவதே வலித்த தையலை மையல் செய்தானே!-உன்னைக்கிட்டி உனிஸன்னிதியிலே முடியவேணுமென்று திண்ணிதான அத்யவஸாங் கொண்டிருக்கிற இவளை இப்படி அறிவு கெடுப்பதே! என்கிறாள்.
இங்கு ஆறாயிரப்படியருளிச்செயல்; -“உன் திருவடிகளை ஒருகால் கண்டு ஸமச்லேஷிக்க வேணுமென்னு மாசையாலே தன்னை தரித்துக் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளையை இப்பாடு படுத்த வேணுமோ?”
————–
‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-
பதவுரை
|
(இப்பெண்பிள்ளையானவள்) |
||
| என்னை மையல் செய்து |
– |
என்னை வியாமோஹப்படுத்தி |
| மனம் கவர்ந்தானே யென்னும் |
– |
மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்; |
| மா மாயனே என்னும் |
– |
மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்; |
| செய்யவாய் மணியே என்னும் |
– |
சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்; |
| தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும் |
– |
குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்; |
| வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும் |
– |
(ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற |
| விண்ணோர் முதல் என்னும்; |
– |
நிதயஸூரிநாதனே! என்கிறாள்; |
| பை கொள் பாம்பு அணையாய் |
– |
படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே! |
| இவள் திறத்து |
– |
இப்பெண்பிள்ளை விஷயமாக |
| பாவியேன் செயல் பாலது |
– |
பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை |
| அருளாய் |
– |
அருளிச்செய்யவேணும் |
***- (மையல்செய்து.) என் பக்கலிலே அளவுகடந்த வியாமோஹத்தைப் பண்ணி என்னை அறிவழித்து எனது மணத்தைக் கொள்ளை கொண்டவனே! என்கிறாள்.
அப்படி ஸம்ச்லஷிக்குமளவில் வார்த்தையருளிச் செய்யுமளவில் திருப்பவளத்திலும் திருவுடன்பிலும் பிறக்கும அழகை நினைத்துச் செய்யவாய் மணியே! என்கிறாள்;
கோயிலில் கண்வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இக்கிடைதனக்கு உபயுக்தமாகிறதில்லையே! என்கிற பரிதாபம் தோற்ற விளிக்கின்றாள்.
அடியார்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காகக் கொடியவையான திவ்யாயு தங்களை ஏந்தியிருக்கின்ற நீ என்னுடைய பிரதிபந்தகங்களை நீக்கி என்னோடே ஸம்ச்லேக்ஷிக்கிறாயல்லையே என்று இன்னாப்புத் தோற்றச் சொல்லுகிறாள்.
பிரானே அரவணையை விட்டு நீ பரியாதிருக்கிறாப்போலே இவளையும் விட்டும பிரியாதிருக்க படாநிற்க, இந்த கிலேசத்தைப் போக்க வழிதேடாதே படுக்கை விரித்துக் கிடந்து றங்குவதே! இஃது என்னே; இவளை இப்படி காணவைத்த பாபத்தையுடைய நான் இவள் திறத்துச் செய்யக்கூடியதை அருளிச் செய்யவேணும் என்கிறாள் தாய்.
“மையல் செய்தென்னை மனங் கவர்ந்தானே!” என்றவிடத்திற்குப் பிள்ளான் அருளிச் செய்வது பாரீர்;- “அதிக்ஷூத்ரமான காகத்தின் பக்கலிலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளின உன்னுடைய ஸர்வவசீகரணமான ப்ரணயித்வகுணத்தாலே என்னுடைய மநஸ்ஸை அபஹரித்தவனே!” என்று. ஒரு காகம் பிராட்டி திருமேனியிலே சிறிது நலிவை உண்டுபண்ணிற்றென்று அதன்மேலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளினமை ஸ்ரீராமாயண ப்ரஸித்தம். அல்பமான அபராதத்திற்காக இப்படிப்பட்ட மஹத்ரமான செயலைச் செய்யுமளவில் “அந்தோ! நம் மீது இப்படியும் ஒரு மையல் உண்டாவதே!” நமக்காகவன்றோ இவ்வரிய பெரிய செயல் செய்தது!” என்று நெஞ்சை பறிகொடுக்க வேண்டும்படியாகுமென்றவாறு.
கலக்கிற ஸமயத்தில் தாழநின்று கையைக் காலைப் பிடித்த பரிமாற்றங்களை நினைத்து மாமாயனே! என்றது.
—————-
‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-
பதவுரை
| என்னுடை கோமளம் கொழுந்து |
– |
மிக மெல்லியலாளான என்மகள் |
| பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும் |
– |
அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்: |
| பற்று இலார் பற்ற நின்றானே என்னும் |
– |
அசரண்ய சரண்யனே! என்கிறாள்; |
| கால சக்கரத்தாய் என்னும் |
– |
காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்; |
| கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும் |
– |
திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்; |
| கண்ணனே என்னும் |
– |
ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்; |
| சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும் |
– |
மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்; |
| என்தர்த்தானே என்னும் |
– |
என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்; |
| கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும் |
– |
அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள். |
***- (பாலதுன்பங்கள்.) எம்பெருமானுடைய ஸ்ருஷ்டி க்ரமத்தை நோக்குமிடத்த இன்பதுன்பங்களை அந்தந்த ஆச்ரயங்களுக்குத் தகுதியாக அமைக்கின்றபடியைக் காணாநின்றோம்.
அனுகூலர்கள் இன்பங்கள் யநுபவிப்பதென்றும். பிரதிகூலர்கள் துன்பங்களை யநுபவிப்பதென்றும் வரம்புகட்டி வைத்திருப்பதுண்டே; அந்த வரம்புக்கு நான் பஹிர்ப்பூதையோ என்கிறா ளென்மகள். இரண்டாமடியில் முடிவிலுள்ள என்னும் என்பது விளிதோறும் அந்வயிக்கக் கடவது.
பால-பால் என்று இடத்திற்குப் பயர்; பால என்பது அந்தந்த இடத்திற்குத் தகுதியாக என்றபடி. அந்தந்த பதார்தத்தங்கள் பொறுக்குமாளவுகளிலே யன்றோ நீ ஸூகதுக்கங்களைச சுமத்துவது; ‘தன் காய்பொறாத கொம்பு என்னும்படி யான ஸ்ருஷ்டி இல்லையே, அதற்கு மாறாக இப்படி என்னைப் படுத்தலுலீமோ? என்கிறாள்.
பற்றிலார் பற்றநின்றானே!-அசரண்ய சரண்யன் என்று விருதூதித்திரி கிறாயே!; என்னைத் துடிக்க விட்டிருக்கு முனக்கு இந்த விருது தகுமோ? கள்ளிச் செடியை மஹாவிருக்ஷ்மென்னுமாபோல யாகுமென்றோ வென்கிறாள்.
காலசக்கரத்தாய்!-இதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர். கால சக்ரத்துக்கு நியாமகனானவனே! என்பது ஒரு பொருள். ‘உமக்கு அருள் செய்கைக்கு ஒரு கால நியமுண்டு’ என்பாயாகில், பிரானே! காலமென்று அப்படியொன்றுண்டோ? நீ ஸங்கல்பிக்கு மதுவே காலமன்றோ? காலசக்ரத்தைத் தன்னிஷ்டப்படி நடத்தவல்லவுனக்கு இதுவொரு வார்த்தையோ? என்பதாகக் கொள்க. காலன் என்று யமனுக்குப் பேராகையாலே, விரோதிக்கு மிருத்யுவான திருவாழியை யுடையவனே! என்பதும் ஒருபொருள்.
கடலிடங்கொண்ட கடல்வண்ணா கண்ணனே! – ஏஷ நாராயண: ஸ்ரீமாந்க்ஷுரார்ணவ நிகேதந: – நாகபாயங்க முத்ஸ்ருஜ்ய மதுராம் புரீம் என்கிற பிரமானத்தை விரித்து அதன் மேலே கள்ளநித்திரை கொள்கின்றபடியை விட்டு அடையனாய் வந்து பிறந்தாய்; அவ்விருப்பையும் விட்டுக் கோயிலே வந்து சாய்ந்தருளிநாய்; இதலெல்லாம் பழுதே போகா நின்றதே யென்கிறான் மூன்றாமடியால்.
சேல்கொள் தண்புனல்சூழ் என்றது ஸாபிப்ராயம். பிரானே! மீன்களில் படியை நீ ப்ரத்யக்ஷுகரிக்கவல்லையே; மீன் நீரைவிட்டுப் பிரிந்தால் துடிக்கும்படியை அறிவாயே. அப்படியே காண் என்படியும் என்று சொல்லுமாபோலே யிருந்தது. இவன் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது; அவ்வூரிலே வர்த்திக்கிவுமக்குப் போருமோ இவளுக்கு முகங்காட்டாதொழிகிறவிடம்.”
என் தீர்த்தனே என்னும்! என்னளவில் மிக்க பரிசுத்தியை யுண்டாக்கினவனே! என்கிறாள். அதாவது நீ முகம் காட்டாதொழிந்தாலும் உன்னையொழிய வேறிடம் நெஞ்சாலும் நினைக்கமாட்டாதபடி செய்திருப்பவனே’ என்றபடி திர்த்த மென்று இழிந்தாடுந் துறைக்குப் பேராதலால் நான் இழிந்தாடும் துறையாயிருப்பவனே! என்றதாகவுமாம். மகரனகரப் போலி.
என்னுடைக் கோமளக் கொழுந்து கோலமாமழைக்கண்பனிமல்கவிருக்கும். கொள் கொம்பிலே சோந்து தரிக்கவேண்டுங் கொடிபோலே உன்னோடே சேர்ந்தா லல்லது தரிக்கமாட்டாதவளான இப்பெண்பிள்ளை கண்ணுங்கண்ணீரமாயிருக்கிற படி கண்டாயே; இவ்விருப்புக்கு க்ருஷி பண்ணிண நீ பலித்தவளவிலே இதையநுப விக்கவாகிலும வரலாகாதோ? என்று கருத்து.
———————–
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-
பதவுரை
|
(இப்பெண் பிள்ளையானவள்) |
||
| வானவர்கட்கு கொழுந்து என்னும் |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்; |
| குன்று ஏந்தி |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று |
| கோ நிரை காத்தவன் என்னும் |
– |
பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்; |
| ஆழும் |
– |
கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்; |
| தொழும் |
– |
அஞ்ஜலி பண்ணா நின்றான்; |
| ஆவி அனல் வெவ்வுயிர்க்கும் |
– |
ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்; |
| அஞ்சனம் வண்ணனே என்னும் |
– |
அஞ்சனனேமனியனே! என்கிறாள்! |
|
(இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) |
||
| மேல் எழுந்து நோக்கி |
– |
மேலே தலையெடுத்துப் பார்த்து |
| இமைப்பு இலள் இருக்கும் |
– |
இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்; |
| எங்ஙனே நோக்கு கேன் என்னும் |
– |
எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்; |
| செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய் |
– |
மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே! |
| என் திருமகட்கு |
– |
– பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே |
|
என் செய்கேன் எதைச் செய்வனே? |
||
(கொழுந்து) பிரானே! உன்னுடைய பரத்வ்தையும ஸௌலப்யத்தையும் மாறிமாறி யநுஸந்தியா நின்றாளென்மகள்;
வானவர்கட்குக் கொழுந்தே! என்று பரத்வத்தைப் பேசினவாறே கோநிரை காத்தவனே என்று ஸௌலப்யத்தைப பேசுகின்றாள்;
குன்றேந்தினவனே! என்ற பின்னையும் ஒரு பரத்வத்தைப் பேசுகின்றாள்.
பரத்வத்தைக்கண்டு இகழாமைக்காகப் பரத்வத்தைப் பேசுவதும் மாறிமாறிச் செல்லுமே மெய்யன்பர்களுக்கு.
அழும் தொழும்-பக்தி பரவசரைப்போலே கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற படியும். ப்ரபந்நரைப்போலே அஞஜலிபந்தம் பண்ணாநிற்கிறபடியும் சொல்லிற்றாயிற்று.
ஆவியானல் வெவ்வுயிர்க்கும்-கீதையிலே ஆத்மஸ்வரூபத்தைப் பேசும் போது அச்சேத்யோயம் என்று சொல்லிற்று. ஆவியானது தஹிக்கவொண்ணாதது என்றபடி. அப்படிப்பட்ட ஆவியும் தஹித்தகாம்படி வெப்பமாகப் பெருமூச்சு விடுகின்றாள்.
தன்னை இப்படியாக்கின்றது அஞ்சனமேனி யாகையாலே அதைச் சொல்லிக் கூப்பிடுகின்றார்-அஞ்சனவண்ணனே! என்கின்றாள்.
அங்ஙனம் கூப்பிட்டவாறே நீ வரக்கூடுமென்று எண்ணி எழுந்து மேல் நோக்குகின்றாள்; ஒரு க்ஷ்ணம் தோற்றி மறைந்து விடுவாயோவென்று இமையாதே யிருக்கின்றாள். (எங்ஙனே நோக்ககேனென்னும்)
ஈடு;- “தான் பார்த்த திக்கில் வரக் காணாமையாலே பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளுமென்று புரிந்து பாராநிற்கும்.”
என் திருமகட்கு என் செய்கேன் -இவளுக்காக நான் ஏதேனும் உபாயக் அனுட்டிக்கலாகுமோ? என்னவுபாயத்தை யனுட்டிப்பேன்.
பிராட்டி உம்முடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறாப்போலே இவளும் உம்மை அகலகில்லாதே உம்மோடே பொருந்தியிருக்க வேண்டியவளன்றோ?
—————
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
பதவுரை
| என் திருமகள் சேர்மார்பனே என்னும் |
– |
எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்; |
| என்னுடை ஆவியே என்னும் |
– |
எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்; |
| நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட |
– |
உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட |
| நிலம் மகள் கேள்வனே என்னும் |
– |
பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்; |
| அன்று |
– |
முன் பொருகால் |
| உரு ஏழும் |
– |
இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும் |
| தழுவி – |
– |
மதமொழித்து |
| நீ கொண்ட |
– |
மணந்து கொண்ட |
| ஆய் மகள் |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்; |
| தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே |
– |
ஸ்ரீ ரங்கநாதனே! |
| இவள் தனக்கு |
– |
இவளுக்கு |
| முடிவு தெளிகிலேன் |
– |
ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன். |
(என் திருமகள் சேர்) பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டவர் களுக்குப் பலனில் வியபிசாரமில்லாமையாலே, அந்தோ! நான் பெரிய பிராட்டியாரைப் புஐஷகாரமாகக் கொண்டு பற்றியிருக்கு என்கதி இங்ஙனேயாவதே! என்கிறாள்.
என் என்பதைத் திருமகள் சேர்மார்வனில் அந்வயித்துப் பொருள் கொள்ளவுங் கூடுமானாலும் இங்குத் திருமகளில் அந்வயமே விவக்ஷிதம். என்னுடைய திருமகள் என்றபடி.
“அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை என் திருமகளென்று திருநாமம் சாத்தினான்” என்பது ஈடு.
“என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்று ஒரு வாக்கியமாகவும் “என்னுடையாவியே யென்னும்” என்று மற்றொரு வாக்கியமாகவும் யோஜிப்பது தவிர, முதலடி முழுவதையும் ஒரே வாக்கியமாக யோஜிப்பதுமுண்டு.
இங்கே ஈட்டில் ஆச்சரியமானதோர் ஐதிஹ்யம் காண்மின்; -“பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்நோ இத்திருவாய்மொழியியலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவிலே வந்த வாறே என் திருமகள் சேர்மார்பனே யென்னுமென்னுடையாவியே னென்னும் என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அத்தைக் கேட்டுக் கையையுதறி ‘ஸ்ரீரங்கநாத!’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்” என்று அருளிச் செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியைக் கண்டு இவர்க்கு பகவத் ப்ராப்தி அணித்தாகிறதோ வென்று அஞ்சியிருந்தெனென்று ஜீயரருளிச் செய்வர்.”
பட்டர் ஸ்ரீரங்கேச புரோஹிதராகையாலே அடிக்கடி பகவத் ஸன்னிதியிலே உபந்யாஸங்கள் செய்தருள் நேரும். அதற்காக நஞ்சீயரையழைத்து அருளிச்செயல் பாசுரங்களைச் சொல்லவிட்டுச் செவிக்கினிதாகக் கேட்பது வழக்கம்.
அமுது செய்து கொண்டே ஒருநாள் கேட்டருளா நின்றார். அப்போது இயல் ஸேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தை ஸேவிக்கும் போது “என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்றவிடத்தில் நிறுத்தாமல் ஏக வாஸகமாகவே முதவடியை முழுதுஞ்; சொல்லி நிறுத்தினாராம்.
என்னும் என்பதற்கு ‘என்று சொல்லுகிறாள்’ என்கிற அர்த்தம் தவிர, என்று சொல்லப்படுகிற என்கிற அர்த்தமும் உண்டாதலால் என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுகிற என்னுடைய ஆவியே எனிகிறாள்’ என்று விவக்ஷித்து நஞ்சீயர் நிறுத்தினபடி.
பட்டர் அந்த இன் சுவையை யறித்து திருவுள்ளமுமடகுலைப்பட்டா ரென்றதாயிற்று. “இவர்க்கு ப்ராணன் ஒருவாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று திருமகள் சேர்மார்பனாய்க்கொண்டு எனக்கு தாரகனானவனே! என்னும்.”
என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுமதான என்னுவியே! என்று பொருள் விவஸ்தமானபடி ஆனதுபற்றியே “இவர்க்கு ப்ராணன் ஒரு வாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று” என்றருளிச் செய்தது.
இரண்டாமடியில் வராஹாவதாரத்தை ப்ரஸ்தாவித்தது-நீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறவேணுமானால் அவள் பரிகரமான எங்களை நோக்கியேயாக வேணுங்காண் என்ற கருத்தினாலாம்.
அன்றியே பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள். மாசுடம்பில் நீர் வாராமானமிலாப்பலறஙாந், தேசுடைய தேவா திருவரங்கச் செல்வனார், பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (நாச்சியார் திருமொழி 11-8) என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே, பூமிப்பிராட்டிக்கு நீ அருளிச் செய்த திருவாக்கு வெறுமனேயோ? என்று கேட்கிற கருத்தாகவுமாம்.
மூன்றாமடியில் நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொண்ட வரலாறு அநுஸந் திக்கப்படுகிறது. கும்பர் மகளான நப்பின்னையை மணந்து கொள்வதற்காக ஒருவர்க்கு மடங்காத ஏழுரிஷபங்களை; வலியடங்கின வரலாறு காண்க.
உரு என்றாலும் உரும் என்றாலும் இடிக்குப் பெயர். இடியென்றே சென்னவிது அந்த ரிஷபங்களின் பயரங்கரத் தன்மையைக் காட்டும்,
தழுவி யென்றது மங்கலவழக்கு; வதைசெய்து என்பது தாற்பரியம்.
அங்ஙனம் எருதேழடர்த்த சிரமம் தீருகைக்காகத் தென்திருவரங்கம் கோயில் கொண்டானே, இவளைப்பற்றி நீர் ஸித்தாந்தம் செய்திருக்குமது இன்னதென்று அறிகின்றிலேன் என்றாளாயிற்று.
—————
‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-
பதவுரை
| இவள் |
– |
இப்பெண்பிள்ளையானவள், |
| தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் |
– |
தனது ஆர்த்திக்கு முடிவு ஒன்றும் தெரியவில்லையே! என்கிறாள்; |
| கடி கமழ் கொன்றை சடையனே என்னும் |
– |
பரிமளம் மிக்க கொன்றைமாலையைச் சடையிலணித்த சிவனுக்கு அந்தர்யாமியே என்கிறாள்; |
| நான்முகக்கடவுளே என்னும் |
– |
தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்; |
| வண் திருஅரங்கனே என்னும் |
– |
ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்: |
| அடி அடையாதாள் போல் இவள் |
– |
திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள் |
| முகில் வண்ணன் அடி |
– |
மேகவண்ணனான அவனது திருவடிகளை |
| அணுகி அடைந்தனள் |
– |
கிட்டியடையப்பெற்றாள். |
(முடிவிவள் தனக்கு.) இவள்-இப்பராங்குச நாயகியானவன், தனக்கொரு முடிவு காண்கிறிலே னென்கிறார். என்று தாய் சொல்லுகிறபடி.
தனக்கு முடிவாவது – தான் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு முடிவு. நான் ஆத்மாவுள்ளதனையும் இங்ஙனே கஷ்டப்பட வேண்டியதுதானோ? இதற்கொருநாளும் பரிஹாரமில்லையோ லென்கிறாள். தனக்கு முடியும்நாள் இல்லையோ வென்கிறாள் என்றுமாம்.
(மூவுலகாளியே யென்னும்) மூவுலகாளியென்று இங்கு தேவேந்திரனைச் சொன்னபடிவாய், அவனுக்கு அந்தர்யானியானவனே! என்றதாகிறது.
(கடிகமழ கொன்றைச் சடையனே!) கொன்றைமாமையை அணியுமவன் பரமசிவன்; அவனுக்கு அந்தர் யாமியானவனே! என்றவாறு.
(நான்முகக் கடவுளே!) என்றதும் அப்படியே.
(வடிவுடை வானோர் தலைவனே!) எம்பெருமானே இடைவீடின்றி அனுபவிப்பதனாலுண்டான மகிழ்ச்சி வடிவிலே தோன்றும்படியிருக்கிற நித்யஸூரிகளுக்கு நாதனானவனே! என்கிறாள்.
(வண் திருவரங்கனே! என்னும்) நித்ய ஸூரிகளே அனு வித்திப்போகையன்றிக்கே நித்யஸம்ஸாரிகளும் இழவாமைக்கன்றோ திருவரங்கத்திலே வந்து திருக் கண் வளர்ந்திருளுகிறது; இங்குச் சாய்ந்தருளினதின் பலன் நான் பெற்ற வேண்டாவோ வென்கிறாள்.
ஈற்றடியின் கருத்து:-“இனிப் பெருமாள் திருவடிகளைச் சேர்ந்து முடியமாட்டாள், போய் முடிந்தாள் என்னும்படி துர்த்தசாபந்நையானனவிவள். இந்த துக்கமெல்லாம் விஸ்ம்ருதமாம்ப தான் ஆசைப்பட்டபடியே பெரிய பெருமான் திருவடிகளையே ஸம்ச்லேக்ஷிக்கப்பெற்றளென்று இவளுடைய திருத்தாயார் ப்ரீதையாகிறாள்” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
————–
***- (முகில்வண்ணனடியை.) பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே
உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள்
இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ் ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக் கட்டினாராயிற்று.
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-
பதவுரை
| முகில் வண்ணன் அடியை அடைந்து |
– |
மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து |
| அருள் சூடி உயந்தவன் |
– |
அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும், |
| மொய் புனல் பொருநல் |
– |
உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய |
| துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன் |
– |
துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும் |
| வண் பொழில் சூழ் வண் குருகூர் |
– |
வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான் |
| முகில் வண்ணன் அடிமேல் சொன்ன |
– |
மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த |
| சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் |
– |
சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள் |
| முகில் வண்ணம் வானத்து |
– |
முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே |
| இமையவர் சூழ |
– |
நித்தியசூரிகள் புடைசூழ |
| பேர் இன்பம் வெள்ளத்தே |
– |
ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில் |
| இருப்பர் |
– |
மூழ்கியிருக்கப்பெறுவர்கள். |
முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிர மென்றவிதனால்-திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாகவே அருளிச்செய்த தென்பது விளங்குமென்பர்.
ஆனது பற்றியே வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும் என்று திருவாய்மொழித் தனியன் அவதரித்தபடி.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தியுங் காண்மின்;- “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழியாயிரமுஞ் சொல்லிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்து திருவேங்கடத்துக் கிவைபத்து என்று பிரித்துக் கொடுத்துவித்தனை பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாபோலே என்று பிள்ளையருளிச் செய்வர்”
முகில்வண்ணவானத்து-முகில்வண்ணனான எம்பெருமானுடைய திருநாட்டிலே யென்று பொருள் கொள்ளலாமாயினும், அங்கு இருக்கிறனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கற வானம் என்று பொருள் கொள்வது சிறக்கும்.
ஸ்ரீரங்க விமானத்தை அநுபவியாநின்ற பட்டர்:-அபி பணிபதிபாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரதகஸூகுமாரை: ரங்கபர்த்துர் மயூகை:, ஸகலஜலதிபாநச்யாம ஜீமூதஜைத்ரம் புலகயதி விமாநம் பாவநம் லோசநே ந: என்றருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கவுரியது.
ஆதிசேஷனுடைய அவதாரமான ஸ்ரீரங்கவிமானம் வெண்ணிறத்ததாயினும் உள்ளுக்கிடக்கிற பச்சைமாமலை போல் மேனியனுடைய திருமேனி நிழலீட்டாலே சாமளமாகவே தமக்கு ஸேவை ஸாதிப்பதாக அருளிச்செய்தவாறு.
———————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply