1. அழைத்து வந்த அக்ரூரர்
தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால்,
கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான்.
பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம் முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.
வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்து வந்து,
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான்.
கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும்
கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.
கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வட மதுரைக்கு அழைத்துவர வேண்டுமே?
அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.
கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர்.
எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வர வேண்டினான்.
அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர். கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர்.
நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர். அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.
கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர்.
கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி,
அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான்.
வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார். கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர்.
அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார். அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது. மேல்நோக்கிப் பார்த்தார்.
தேரில் கண்ணன் வீற்றிருந்தான். மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார்.
அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார்.
கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான். குவலயாபீடத்தைக் கொன்றான். மல்லர்களை எதிர்த்துக் கொன்றான்.
இறுதியில் கம்சனையும் வதைத்தான். பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர்.
நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர்.
இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,
“அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!” என்று குறிப்பிட்டாள்.
அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார். அதனால் கொடியவர்கள் மாண்டனர்.
நாட்டு மக்கள் மகிழ்ந்தனர். அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார்.
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை,
திருக்கோளூர்ப் பெண் பிள்ளை வியந்து போற்றினாள்.
—————–
2. மூன்றெழுத்துச் சொல்லி முத்தி பெற்றவன்
க்ஷத்திரிய பந்து என்பவன் பல கொடுஞ்செயல்களைச் செய்து வந்தான். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று
திரண்டு அவனைக் காட்டிற்கு விரட்டினர். க்ஷத்திரியபந்து காட்டில் கிடைத்த காய், கனிகளைப் புசித்து வாழத் தொடங்கினான்.
அவனிடம் சத்வகுணம் வளர்ந்தது. தான் செய்த வன்செயல்களுக்கு வருந்தினான். திருந்தி வாழத் தீர்மானித்தான்.
திருமால் அவனுக்குப் பக்தியைக் கொடுத்தார். அதனால் அவன் திருமாலடியாராக உயர்ந்தான்.
அவன் கிடைத்ததை உண்டு, மரத்தடியில் தரையில் உறங்கினான். ஒருநாள் அவனுக்கு நாவல்கனிகள் கிடைத்தன.
அவற்றைத் திருமாலுக்கு நிவேதித்து உண்டான். அன்று ஒரு முனிவரின் தொடர்பு கிடைத்தது.
அவருக்கும் நாவல்கனிகளை வழங்கினான். அவர் க்ஷத்திரியபந்துவுக்கு, திருமாலின் மூன்றெழுத்து மந்திரமாகிய,
கோவிந்த மந்திரத்தை உபதேசித்தார். க்ஷத்திரிய பந்து அந்த மந்திரத்தை இடையறாது ஜபித்தான். எளிதில் வீடுபேறும் எய்தினான்.
செய்யுளைப் போல், மந்திரங்களிலும் ஒற்றெழுத்து அதாவது, க்,ச்,ந் போன்ற எழுத்துகள் கணக்கில் சேராது.
ஆகவே, ‘கோவிந்த’ என்ற மந்திரம் மூன்றெழுத்து மந்திரம் என்று கூறப்படுகிறது.
க்ஷத்திரியபந்துவைத் தமிழில், ‘கத்திரபந்து’ என்பர்.
“மூன்றெழுத்து சொன்னேனோ கத்திரபந்துவைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, தன் ஏக்கத்தைத் தெரிவித்தார்.
கோவிந்த மந்திரத்தின் மகிமை இவ்வரலாற்றில் உட்பொருளாக அமைந்துள்ளது.
——————-
3. கவந்தன் சொன்ன அடையாளம்
இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தேடி இராமரும் இலக்குமணனும் காட்டில் நடந்தனர்.
அவர்கள் ஓரிடத்தில் ஒரு விசித்திரமான உருவத்தைக் கண்டனர். தலையும் கால்களும் இல்லாமல்
இரண்டு நீண்ட கைகளை மட்டும் பெற்றிருந்த கவந்தனே அவ்வுருவம்!
தன்னுடைய எல்லைக்குள் நுழையும் உயிர்களைப் பிடித்து இழுத்துத் தின்பவன் கவந்தன்.
இராமரும் இலக்குமணனும் கவந்தனின் எல்லைக்குள் வந்தனர். அவர்களையும் பிடித்துத் தின்ன முற்பட்டான் கவந்தன்.
இராம, லட்சுமணர்கள் கவந்தனின் கரங்களை வெட்டித் துண்டித்தனர். உடனே அவனுடைய சாபம் நீங்கியது.
தன் வரலாறு கூறினான். பிறகு, சுக்ரீவன் இருக்கும் இடத்தைக் கூறினான்.
அவனுடன் நட்புக் கொண்டு, சீதையைத் தேடவும் ஆலோசனை வழங்கினான். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரின்
சாபத்தால் கவந்தன் கோரவுருவம் பெற்றான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
இந்திரனின் சாபத்தால் கோரவுருவம் பெற்றதாகக் கம்பராமாயணம் உரைக்கிறது.
“அடையாளம் சொன்னேனோ கவந்தனைப் போலே!”
என்று, கவந்தன் இராமருக்கு அடையாளம் சொன்ன அரிய செயலைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நினைவு படுத்தினாள்.
——————–
4. மிதிலையில் தீ!
சீதையைப் பெண்ணாக அடைந்த ஜனகர் சிறந்த கல்வியாளர். தெளிவான ஞானம் பெற்றவர்.
‘எல்லாம் ஈசன் செயல்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். பேரிடர் வந்தாலும் சிறிதும் கலங்காமல்
தனக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்தவர்.
முதிர்ந்த ஞானம் பெற்ற முனிவர்கள் பலரும் ஜனகருடன் உரையாடி மகிழ்வார்கள்.
அதனால், ஜனகரை, ‘ராஜரிஷி’ என்று போற்றினர்.
அறிவுரைகளைக் கூறுவது எளிது. அவற்றைப் பின்பற்றுவது அனைவருக்கும் எளிதன்று.
அதிலும், “எல்லாம் ஈசன் செயல்’ என்றும், “இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்றும் எண்ணி,
அதன்படி நடத்தல் மிகவும் கடினமான செயலாகும். ஆனால், ஜனகர் விதிவிலக்கானவர். சொன்னதைச் செய்தவர்.
யாக்ஞவல்கியர் மிகச் சிறந்த பிரம்மஞானி. அவருடைய தலைமையில், பல முனிவர்களும் சான்றோர்களும் கூடி,
பிரம்ம வித்தை குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
மிதிலையில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கத்தில் ஜனகரும் பங்கு பெற்றார்.
யாக்ஞவல்கியர் அந்த ஆய்வரங்கத்தில் பங்கு பெற்றவர்களின் மனநிலையையும், பண்புகளையும் அறிந்துகொள்ள ஓர் ஏற்பாட்டைச் செய்தார்.
யாக்ஞவல்கியர் சில வீரர்களை அழைத்தார். ஆய்வரங்கம் காரசாரமாக நடைபெறும்பொழுது,
“மீதிலை தீப்பிடித்து எரிகிறது” என்று கூறச் சொன்னார். அந்த வீரர்களும் அவசரமாக ஓடிவந்து,
“ஜனகமகாராஜா! மிதிலை தீப்பற்றி எரிகிறது!” என்று கூறினர். முனிவர்களில் பலர் தங்கள் உயிருக்கு அஞ்சி ஓடினர்.
சான்றோர்கள் பலர் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஓடினார்கள்.
ஆனால், ஜனகர் மட்டும் சற்றும் சஞ்சலமின்றி, “எல்லாம் ஈசன் செயல்!” என்று கூறியபடி அமர்ந்திருந்தார்.
யாக்ஞவல்கியர், ஜனகரே உண்மையான பிரம்மஞானி என்று பிரகடனம் செய்தார்.
உண்மையில் மிதிலையில் தீப்பிடிக்கவில்லை என்பதை அறிந்து பிறகு அனைவரும் அரங்கிற்குத் திரும்பினர்.
அவர்கள், ஜனகரால் எவ்வாறு சிறிதும் சஞ்சலம் அடையாமல் இருக்க முடிந்தது என்று வினவினார்கள்.
“உலகங்களும், அவற்றிலுள்ள பொருள்களும் கடவுளின் உடைமைகள்! அவற்றைப் பாதுகாப்பதும், காவாமல் இருப்பதும் அவன் செயல்.
நாம் எதற்காக வீணில் கவலைப்பட வேண்டும்?” என்றார் ஜனகர்.
அவருடைய விவேகத்தையும், ஞானத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர்.
பெருமாள் சும்மா இருப்பாரா? இத்தகைய கர்மயோகியின் கலப்பையில் ஸ்ரீதேவியாகிய சீதையை அகப்படச் செய்தார்.
சீதையும் ஜனகரின் பெண்ணாகவே வளர்ந்து இராமனுக்கு மாலையிட்டாள்.
“கர்மத்தால் பெற்றேனோ சனகரைப் போலே!”
ஜனகர் பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்த கர்மயோகியாகத் திகழ்ந்தார்.
அதனால், விவேகியானார். பிரம்மஞானியாக உயர்ந்தார். அதன் பயன் ஸ்ரீதேவியை மகளாகப் பெற்றார்.
அது போன்ற கர்மயோகியாகத் தன்னால் வாழ முடியவில்லையே! என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
அதே நேரத்தில் ஜனகரின் சாதனையையும் பாராட்டினாள்.
———————-
5. திருமேனியில் புகுந்த திருப்பாணாழ்வார்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருப்பாணாழ்வார். யாழிசைக்கும் பாணர் குலத்தில் பிறந்தவர்.
அவருக்குத் திருவரங்கனிடம் பக்தி மேலிட்டது. அக்காலத்தில், அவர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
எனினும், அவர் காவிரிக்கரையில் நின்று, யாழிசைத்து அரங்கனைப் போற்றிப் பாடிவந்தார்.
திருவரங்கம் திருக்கோயிலில் அர்ச்சகர் பணியில் இருந்த லோகசாரங்கர் என்பவர், தினமும் காவிரிக்குச் சென்று,
திருமஞ்சனத்திற்காகத் தீர்த்தம் எடுத்து வருவார். அவர் சென்ற வழியில் நின்று, திருப்பாணாழ்வார் தன்னை
மறந்த நிலையில் அரங்கனுக்கு இசையால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.
லோகசாரங்கர் சிறு கல்லை எடுத்து, திருப்பாணாழ்வார் மீது வீசினார். அது அவருடைய நெற்றியில் பட்டு உதிரம் பெருக்கெடுத்தது.
அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. லோகசாரங்கரின் தொண்டுக்குத் தன்னால் தடை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்தினார்.
லோகசாரங்கர் காவிரி தீர்த்தத்துடன் திருவரங்கன் சந்நிதியில் நுழைந்தார்.
பெருமாளின் நெற்றியில் உதிரம் வழிந்ததைக் கண்டு துணுக்குற்றார்.
அதன் காரணம் புரியாது வருந்தினான். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் அரங்கன் தோன்றினார்.
“பாணர் எம் அடியவர்; அவருடைய இசையும் எமக்கு மிகவும் உகப்பானது;
நீர் அவரைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தி, பாகவத அபச்சாரம் செய்துவிட்டீர்;
நாளை நேரில் சென்று அவரை உமது தோளில் சுமந்து எமது சந்நிதிக்கு அழைத்து வாரும்!
அதுவே தக்க பரிகாரம் ஆகும்!” என்று பெருமாள் கூறி யருளினார்.
அடுத்த நாள் காலையில் லோகசாரங்கர் காவிரிக் கரைக்குச் சென்றார். பாணரிடம் மன்னிப்புக் கேட்டார்.
பெருமாள் உரைத்தபடி அவரைத் தமது தோளில் அமரச் செய்து, திருக்கோயிலுக்கு அழைத்துவந்தார்.
பெருமாளைச் சுமக்கும் பெரியதிருவடியின் (கருடாழ்வாரின்)பேறு தமக்குக் கிடைத்ததாகக் கூறி மகிழ்ந்தார்.
பாணர் அரங்கனை அருகில் கண்டார். அழியா அழகைத் தன் கண்களால் பருகினார்.
பெருமாளின் திருவடி முதல், திருமுடி வரை, கேசாதிபாத வருணனை செய்து பாடினார்.
“அமலன் ஆதிபிரான். . . . . ” என்று தொடங்கும் பாசுரத்தைத் திருப்பாணாழ்வார் பாடியருளினார்.
பெருமாள் திருப்பாணாழ்வாரைத் தம் திருமேனியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் திருவரங்கனின் திருமேனியில் ஐக்கியமான தனிச்சிறப்பைப் பெற்றவர்கள்.
திருப்பாணாழ்வார் ஐம்பதாண்டுகள் பூவுலகில் வாழ்ந்திருந்தார்.
திருவரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் பால் அழைத்துவரச் செய்து, தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இதனால் பக்தி நெறியில் குறிப்பாக, வைணவத்தில் சாதி வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
“அவன் திருமேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை திருப்பாணாழ்வார் பெற்ற பேரருளைக் குறிப்பிட்டார்.
——————–
6. மாலுக்கு உகந்த மண்மலர்
திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்துவந்தார்.
அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளியாவார்.
குருவபுரத்தைச் சேர்ந்த நம்பி என்ற பொருளில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர்.
குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார்.
அதனை வேங்கடவனுக்கு என்று ஓரிடத்தில் தனியே வைத்துவிட்டு, தனது தொழிலைத் தொடருவார்.
குருவநம்பி, அன்றாடம் மண்ணால் செய்து வைக்கும் மலரை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார்.
வேங்கடவன் திருவடியில் மண்மலர் அன்றாடம் தவறாமல் சென்று சேர்ந்து விடும்.
அவரைப் போலவே தொண்டைமான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார்.
பெருமாள் குருவநம்பி சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உகப்பானது என்று தொண்டைமானிடம் கூறிவிட்டார்!
ஏனெனில், தொண்டைமான் பொன்மலரைக் கர்வத்துடன் சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் தொண்டைமான் தனது செருக்கை மாற்றிக்கொண்டார்.
“மண்பூவை இட்டேனோ குருவ நம்பியைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்குகிறாள்.
————————
7. கண்ணனை மறைத்த ததி பாண்டன்
கோகுலத்தைச் சேர்ந்த ததிபாண்டன் என்பவன் கண்ணனின் நெருங்கிய தோழர்களில் ஒருவனாவான்.
கோகுலத்தில் கண்ணன் செய்துவந்த பிள்ளைக் குறும்புகளில் ததிபாண்டனும் தவறாது பங்கேற்பான்.
நந்தகோபரின் இல்லத்தில் தயிரும் வெண்ணெயும் நிறைந்திருந்தன.
எனினும் ஆயர்பாடியில் உள்ள அத்துணை இல்லங்களிலும் வெண்ணெய் திருடி உண்பதில் கண்ணனுக்கு அலாதியான இன்பம் இருந்தது.
கண்ணனின் கைபட்ட இடங்களிலெல்லாம் செல்வம் கொழித்தது! அதனால் கோகுலத்துப் பெண்கள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
எனினும்,அதனை வெளிக்காட்டாமல், கண்ணனைக் கடிந்துகொள்வது போல் நடிப்பார்கள்.
ஒருநாள் ததிபாண்டன் வீட்டில், தயிரும் வெண்ணெயும் விற்றுத் தீர்ந்த பிறகு, அவன் பெரிய பானையைக் கவிழ்த்துவிட்டு,
கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தான். குறும்புகள் செய்த கண்ணனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் விரும்பிய
யசோதை அவனைத் துரத்திச் சென்றாள். அவள் பிடியில் சிக்காமல் நழுவிய கண்ணன் ததிபாண்டன் இல்லத்திற்குள் நுழைந்தான்.
தன்னைத் தேடி யசோதை வந்தால், தான் அங்கு இல்லை என்று கூறும்படி,
ததிபாண்டனிடம் வேண்டிய கண்ணன், பெரிய பானைக்குள் ஒளிந்து கொண்டான்.
யசோதை கண்ணனைத் தேடி ததிபாண்டனின் இல்லத்திற்கு வந்தாள்.
ததிபாண்டன், கண்ணன் தன்வீட்டில் இல்லை என்று பொய்யுரைத்தான். யசோதை திரும்பிச் சென்றாள்.
கண்ணன் பானையைத் திறந்து தன்னை வெளியேவிட வேண்டினான்.
ஏனெனில், பானையின் மூடியின் மீது ததிபாண்டன் அமர்ந்திருந்தான்.
கண்ணன் தன்னுடன் நெருங்கிப் பழகும் தோழன் என்றாலும், அவன் பரம்பொருளே என்று ததிபாண்டன் அறிந்திருந்தான்.
உரிய நேரத்தில் அவனிடம் மோட்சத்தைக் கேட்டுப் பெறவேண்டும் என்று காத்திருந்தான்.
பானையைத் திறந்து வெளியே விடுவதற்கு ஒரு நிபந்தனை விதித்தான் ததிபாண்டன்.
தனக்கு மோட்சம் தருவதாக உறுதியளித்தால் மட்டுமே பானையின் மூடியைத் திறக்கப் போவதாகக் கூறினான்.
உற்ற நண்பனுக்குக் கண்ணன் வீடுபேறு அருளாமல் இருப்பானா?
“ததிபாண்டா! எனக்கு மூச்சு முட்டுகிறதடா! என்னை வெளியே விடு! உனக்கு மோட்சம் உறுதி!” என்று
கண்ணன் வேடிக்கையாகக் கூறி வெளியே வந்தான்!
“இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!”
“கண்ணன் இங்கில்லை என்று பொய்யுரைத்து மோட்சம் எய்திய ததிபாண்டனின் சாமர்த்தியம் கூட எனக்கு இல்லையே”
என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
——————-
8. வடுக நம்பியின் குரு பக்தி
இராமானுஜரிடம் அபாரமான குருபக்தி கொண்ட சீடர்கள் சிலர் இருந்தனர்.
அவர்களில் உறங்காவில்லி தாசர், வடுகநம்பி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
வடுகநம்பி, இராமானுஜரின் அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடைகள் செய்தார்.
ஒருநாள், திருவரங்கம் வீதிகளில் பெருமாள் உலா நடைபெற்றது. பெருமாள் சர்வாலங்காரங்களுடன் எழுந்தருளி வந்தார்.
அவரைச் சேவிக்க எம்பெருமானாராகிய இராமானுஜர் தமது திருமடத்திலிருந்து வெளியே வந்தார்.
பெருமாளைக் கண்குளிரக் கண்டார். தான் கண்ட அரங்கநாதன் உலாவைத் தன் சீடர் வடுகநம்பியும்
தரிசித்துப் பயனடைய வேண்டுமென்று அவர் விரும்பினார்.
“வடுகா! சீக்கிரம் வா! பெருமாள் எழுந்தருளுகிறார்! வெளியே வந்து சேவித்துக்கொள்!” என்றார் இராமானுஜர்.
அப்போது வடுகநம்பி, தளிகை அறையில் இராமானுஜருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
“சுவாமி! தாசானுதாசனை மன்னிக்கவேணும்; அடியேன் உம் பெருமானைச் சேவிக்க வந்தால்
எம்பெருமானுக்காகக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும்!” என்று கூறினார்.
பெருமாளைச் சேவிப்பதைவிட அவருக்கு, குருகைங்கர்யமே சாலச்சிறந்ததாகத் தோன்றியது.
“இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே!”
குருநாதருக்குப் பணிவிடைகள் செய்யும் பேறும் தமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கினார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-