கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -7-1-11-
குணங்கள் கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்-
சத்வம் முதலான குணங்களுக்குத் தகுதியான வடிவை யுடைய மூவராய்.
குணங்கட்குத் தகுதியான படைத்தல் முதலிய தொழில்கள் அந்த அந்த
வ்யக்தி -உருவம் தோறும் பர்யவசிக்கும் -நிறைந்திருக்கு மன்றோ?
பிரமன் சிவன் என்னும் இரண்டு உருவங்களிலும் ஜீவனுக்குள் அந்தர்யாமியாய் நின்று,
விஷ்ணு உருவத்தில் ஸ்வரூபேண – தானே நின்றபடி.
படைத்து அளித்துக் கெடுக்கும் –
ரஜோ குணத்தை யுடையனாய்க் கொண்டு படைத்து,
தமோ குணத்தை யுடையனாய்க் கொண்டு அழித்து,
சத்வ குணத்தை யுடையனாய்க் கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி.
அப் புண்டரிகக் கொப்புழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கு-
இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே திருக் கண் வளர்ந்தருளின படியைச் சொல்லுகிறது.
உலகம் தோன்றுவதற்குக் காரணாமாயிருத்தலின், பிரசித்தமான திரு நாபிக் கமலத்தை யுடையனாய்க் கொண்டு,
படைத்தலின் நோக்குள்ளவனாய் ஏகார்ணவத்திலே திருக் கண் வளர்ந்தருளின உபகாரகனான வனுக்கே.
அப் புண்டரிகக் கொப்பூழ்’ என்கையாலே,
பிரமன் சிவன் முதலாயினோர் காரியம் என்னுமிடமும்,
அவன் காரணன் என்னமிடமும் சொல்லிற்று.
ஒருவனுடைய பிறப்பை -உத்பத்தியை -அன்றோ சொல்ல வேண்டவது? ‘
ப்ராஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -பிரமனுடைய ஜ்யேஷ்ட புத்திரனுக்கு, சிறந்தவனுக்கு’ என்கிறபடியே,
மற்றையோனான சிவனுடைய பிறப்பு, தன்னடையே வரும் இறே
நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்றால், மற்றையவன் பிறப்பும் உடனே சொல்லப்படும் அன்றோ?
இப்படி வேத வைதிகங்கள் சொல்லாநின்றான அன்றோ?
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் –
விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர,
சேஷத்வத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்;
தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.
—————-
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்–7-2-11-
முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –
பெரிய பெருமாள் திரு வடிகளைக் கிட்டி அங்குத்தைத் திரு வருளைப் பெற்றுத் தரித்தர்.
பூர்வ அவஸ்தையில் -முன்னைய நிலையில் சத்தையும் அழியும் படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறது .
மொய் புனல் பொருநல் துகில் வண்ணம் தூ நீர்ச் சேர்ப்பன் –
வலியை யுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தை யுடைத்தான தூ நீர்த் துறைவன்.
‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம்.
இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது.
சேர்ப்பன் –
துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன்.
மொய்ப்புனல்’ என்னா நிற்கவும், ‘தூநீர்’என்கிறது,
பெரு வெள்ளமாய் இருக்கச் செய்தே தெளிந்திருக்கும் படியைப் பற்ற.
‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’- பால. 2:5.
‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரை யுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.
சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி யெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்’-கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9
வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் –
காண்பதற்கு இனியதான பொழிலை யுடைத்தாய் வண்மையை யுடைய திருநகரிக்கு நாதன்.
—————-
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன–7-3-11-
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-
அடியார்களைக் காப்பாற்றும் பொருட்டுக் கல்பம் தோறும் கல்பம் தோறும் திரு மேனியும் திருப் பெயரும்
சேஷ்டிதங்களும் -செயல்களும் வேறுபடக் கொள்ளமவன்.
இதற்குப் பயன்-பிரயோஜனம் – என்?’ என்னில்,
வையம் காக்கும்-
உலகத்தைக் காப்பாற்றுதல். அப்படியே காத்திலனாகில்
இப்படி விஸ்வசிப்பார் -நம்புவார் இல்லையே, இவனை ‘ரஷகன்’ என்று,
ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு.
வேறு படாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது.
அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.
அணி குருகூர் –
ஆபரணமான திருநகரி.
————–
குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை-7-4-11-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் –
கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு
இருக்குமவர்களோடே கூடி நின்று தாமும் பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று.
——————-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்–7-5-11-
தெளிவுற்ற கண்ணனை –
இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்யமான கைங்கரியத்தைக் கொடுக்கையிலே
தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை.
ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே சரீரே ஸதி யோநர:
தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட பாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்’- வராஹ சரம ஸ்லோகம்.
அஹம் ஸ்மராமி-நான் நினைக்கிறேன்’ என்பது போலே.
தெளிவுற்ற ஆயிரம் –
ஸஹ்யத்திலே -மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து
உபயோகத்திற்குத் தகுதியாமாறு போலே
மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக்
காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ஆசார்யஹ்ருதயம், சூத். 71.
அந்த மிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமி ழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே.’- சடகோபரந்தாதி 14.
ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப் பசினும் போலே
ஒன்றே அறுதி யிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடி யாயிருக்கிற வேதார்த்தாமானது,
எல்லாரும் படிக்கத் தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.
———————-
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன–7-6-11-
புக்கு அ அரி உருவாய் –
அந்த அரி உருவாய்ப் புக்கு.
அவ் வரி யுரு என்னு மித்தனை யாயிற்றுச் சொல்லலாவது.
நரசிங்கமான வேஷத்தைக் கொண்டு விரோதி சந்நிதியில் -பகைவன் அண்மையிலே கிட்டி.
அன்றிக்கே, ஹிரண்யனின் உடலைப் பிளந்து கொடு புறப்பட்ட போதைக் கடுமை,
புறம்பு இட்டு ஒருவன் வந்து செய்தானாகை அன்றிக்கே, உள்ளு நின்றும் ஒரு சிங்கம் பிளந்து கொண்டு
புறப்பட்டால் போலே யாயிற்று அதனைச் சொல்லுதல்.
அவுணன் உடல் கீண்டு உகந்த –
ஹிரண்யனின் உடலைப் பிளந்து பொகட்டு, ‘சிறுக்கன் விரோதி போகப் பெற்றோம்!’
என்று உகந்தனாயிற்று.
சக்கரச் செல்வன் தன்னை –
ஹிரணியனுடைய உடலும் கூடத் திரு உகிருக்கு அரை வயிறாகப் போகையாலே,
பின்னை அழகுக்குப் பத்திரம் கட்டின இத்தனை யாயிற்று.
அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பான திருவாழியை யுடையவனை
குருகூர்ச் சடகோபன் சொன்ன –
ஆழ்வார் அருளிச் செய்த.
—————–
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-7-7-11-
கண்ணனை –
மக்களுடைய கண்களுக்குப் புலப்படாதபடி -அவிஷயமாம் படி -இருக்கிற பிரமன் சிவன் இந்திரன் என்னும்
இவர்களுக்கும் கண்களுக்குப் புலப்படாதபடி -அவிஷயமாம் படி-இருக்கிற கிருஷ்ணனை.
பிரமன் முதலானோர்களுடைய கண்களுக்குக் காண முடியாதவனாய் இருக்கிற கிருஷ்ணன்,
மறக்க ஒண்ணாதபடி உருவு வெளிப்பாடாய்த் தோன்ற,
அதனாலே நலிவு பட்டு,
போன போன இடம் எங்கும் சூழ்ந்து கொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி.
அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனால் போலே ஆயிற்று,
இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி.
குருக்கூர்ச் சடகோபன் சொன்ன-
ஆழ்வார் அருளிச் செய்த
—————
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-7-8-11-
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை –
இன்னபடிப் பட்டது ஒரு தன்மையை யுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-தைத்திரீய. ஆனந். 9 : 1.
அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,
வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-
அவனுக்குத் தகுதி யாம்படி ஆழ்வார் அருளிச் செய்த.
அறிவது அரிய அரியை’ என்றதாகில், ‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்?
வ்யாஹதம் -முரண் அன்றோ?’ என்னில்,
அறிந்து உரைத்த’ –
என்கிறார்; என்றது, அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று.
தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?
நெறிவாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சார்த்தி
அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?
——————
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்-7-9-11-
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு –
சாதனத்தைச் செய்கின்ற காலத்தோடு ப்ராப்ய வஸ்துவை ப்ராபித்த -பேற்றினை அடைந்த சமயத்தோடு வாசி அற,
இஹ லோக பர லோகங்கள் -இந்த உலகம் பரம பதம் என்ற இரண்டிலும் திருமகள் கேள்வன் அல்லது போக்கி,
இவ் வாத்ம வஸ்துவுக்குத் தஞ்சமாக இருப்பார் வேறு இலர் என்னுமதனை அனுசந்தித்து – சொல்லி;
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து’ திருவாய் 9. 2 : 1.
என்கிறபடியே, கைங்கரியம் செய்யுமிடத்திலும் அவள் முன்னாகச் செய்ய வேணுமன்றோ?
ஆஸ்ரயண -அவனைப் பற்றுகிற வேளையிலும் அவள் முன்னாக வேணுமன்றோ? ஆதலின் ‘திருமால்’ என்கிறது.
ஹதே தஸ்மிந் நகுர்யு: ஹி தர்ஜநம் வாநரோத்தம!’-யுத். 116 : 41.
ஹதே தஸ்மிந் ந குர்யு: – அவன் கொல்லப்பட்ட பின் செய்ய மாட்டார்கள்’ என்கிறபடியே,
இராவணன் சொல்லுகையாலே அன்று இருந்து நலிந்தார்களாகில்,
இராவணன் பட்டுப் போன இப்போதும் நலிவார்களோ?’ என்று அவர்கள் பக்கலிலும்
குணத்தை ஏறிட்டுச் சொல்லும் நீர்மையை யுடையவளாயிற்று.
அன்னை அஞ்சன்மின் அஞ்சன்மின் நீரெனா
மன்னு மாருதி மா முகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத் தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய்!’-கம்பராமாயணம்.
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன் –
நமக்கும் நல்லாசிரியன் அருகே இருந்து ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஒழிய
இவ் வாத்மாவுக்குத் தஞ்சமாய் இருப்பார் இலர்,’ என்று உபதேசித்தால், அத்தனை போதும் அப்படியே’ என்று
இருக்குமது உண்டே அன்றோ?
இவர் அங்ஙனம் அன்றிக்கே, அந் நினைவுக்கு அனுரூபமான பரிமாற்றத்தை – தகுதியான
செயலை யுமுடையவராய் இருப்பாராயிற்று.
————
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன-7-10-11-
தீர்த்தன் –
இன்னார்க்குத் தீர்த்தன் என்னாமையாலே ஸ்வ வ்யதிரிக்த -தன்னினின்றும் வேறுபட்டவர்க்கு
எல்லாம் தீர்த்தன் ஆயிற்று.
தீர்த்தமாவது, தான் பரிசுத்தமுமாய், தன்னைத் தீண்டினாரையும் பரிசுத்தராம்படி செய்யுமதாயிற்று.
தீர்த்தன் உலகளந்த சேவடியைப் பிரமன் விளக்க.
அந்தத் தீர்த்தத்தை பாவன அர்த்தமாக – பரிசுத்தத்தின் பொருட்டு ஜடா மத்யே – ஜடையின் மத்தியில் தரித்தான் சிவன்.
ஆறு பொதி சடையோன்’ –திரு வெழு கூற்றிருக்கை.-என்னக் கடவது அன்றோ?
கங்காதரன்’ என்றே பெயர் அவனுக்கு.
அந்தக் கங்கைக்கு அடியை ஆராய்ந்து கொள்ளுகை அன்றோ இனி உள்ளது?
ஆராய்ந்தவாறே அது அடிப் பட்டு இருக்குமே;
கங்கை போதரக் கால் நிமிர்த் தருளிய கண்ணன் அன்றோ?
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
அலர் கொடு தொழுதேத்தக்
கங்கை போதரக் கால் நிமிர்த் தருளிய
கண்ணன் வந்துறை கோயில்’-பெரிய திருமொழி, 4. 2 : 6.
அண்ட கோளகைப் புறத்ததாய் அகில மன்றளந்த
புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன் கொளப் பகிரதன் கொணர
மண்டலத்து வந்தடைந்த திம் மாநதி மைந்த!’- கம்பராமாயணம், அகலிகைப்படலம் . 60.
அன்றிக்கே, தீர்த்தனுக்கு அற்ற பின் –
தன்னுடைய போக்யதா அதிசயத்தாலே இனிமையின் மிகுதியாலே தன்னை ஒழிந்த விஷயங்களில்
உண்டான ருசியைக் கழித்தவனுக்கு அற்ற பின்’ என்றுமாம்.
மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி –
அவனை ஒழிய ரஷகர் இலர் என்று தெளிந்தார் ஆயிற்று.
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி –
பாஹ்ய -புறம்பு உண்டான விஷயங்களிலே ருசியைப் போக்கினவனுக்கே அறுதியாக எழுதிக் கொடுத்த
நெஞ்சினை யுடையராய்.
உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்’ –திருவாய். 2. 6 : 4.-என்றாரே கீழ்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ –மூன்றாந்திருவந். 14.என்றும், –
பரமாத்மநி யோரக்த: விரக்த; அபரமாத்மநி’ பார்ஹஸ் பத்ய ஸ்மிருதி.-
பரமாத்மா விஷயத்தில் அன்புடையர் அன்னிய விஷயத்தில் அன்பிலர் ஆவர்,’என்றும் சொல்லுகிறபடியே,
தன் பக்கல நெஞ்சினை வைத்தால் பின்பு புறம் போக ஒட்டாதே அழகு;
மனைப்பால், பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார்
அத் தோள்–இரண்டாந்திருவந். 42.என்கிறபடியே,
மனைப்பால் பேரின்பத்திலே கை கழிய ஒட்டாதே.
செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
அதற்கு அடியான ஜன்ம பூமியையுடைய ஆழ்வார் அருளிச்செய்த.
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply