Archive for October, 2020

ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -1-10-

October 16, 2020

ஸ்ரீ மணவாள மா முனிகள் திருவடிகளில் ஆஸ்ரயித்து
அவரால் ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபி ஷிக்தராய்
அவருக்கு ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த பிரவர்த்தந கைங்கர்யங்களில் உசாத் துணையாய்
அவருடைய கருணா கடாக்ஷ விசேஷ லஷ்ய பூந்தராய்
யதீந்த்ர ப்ரவணரான அவர் திறத்தில் ப்ராவண்ய அதிசயத்தை உடையராய்
மா முனிகளுடைய ஸ்வரூப ரூப குண விபாவங்களையும் ஸ்ரீ ஸூக்தாதிகளையும் அனுபவித்து
அவ்வநுப ஜெனித ப்ரீதிக்கு போக்கு வீடாக சத முகமாக அவரது வைபவங்களை
இந்த ஸ்தோத்ர முகமாக வெளியிட்டு அருளுகிறார் –
ஆச்சார்ய வைபவ கீர்த்தனம் ஸச் சிஷ்ய காலஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேது
மா முனிவர்கள் அடியோங்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக உல்லாசத்துக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஹேது ஆகும்-

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணை ரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால் வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் -குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

———

நமஸ்கார ரூபமான மங்களா சாசன ஸ்லோகம் இது –

மூலே அவதீர்ணமிஹ மூலம் அநு உதிதார்த்த தத்வ
அவபோத ஸூகி தாம் வஸூ தாம் விதா தும்
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ரு யமிநம் சரணம் ப்ரபத்யே – 1-

வஸூ தாம்-பூமியில் உள்ளவர்களை
மூலம் அநு உதிதார்த்த தத்வ அவபோத -மூல மந்திரமான திருமந்த்ரார்த்தத்தை உள்ளது உள்ளபடியான ஞானத்தால்
ஸூகி தாம் விதா தும்-ஸூ கத்தை உடையவர்களாகச் செய்வதற்காக
மூலே அவதீர்ணமிஹ -இந்த உலகில் திரு மூல நக்ஷத்திரத்தில் அவதரித்தவரும்
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம் -நம் ஸ்வாமியான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்
சஞ்சரிக்கும் வண்டு போன்றவருமான
ரம்யோ பயந்த்ருயமி நம் சரணம் ப்ரபத்யே – ஸ்ரீ மணவாள மா முனிகளை சரணமாகப் பற்றுகிறேன் –

ஆலம்பனம் -ச துலம் -துலா மாச மூலம் –சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் –
அனைத்துக்கும் மூலம் –
சடாரி முக -தொடக்கமான ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் அறியும் மூலம் –
பிறவி பயன் பெற மூலம்-
ஸ்ரீ எறும்பி அப்பாவும் இதே போல் அருளிச் செய்கிறார் அன்றோ

————

யத் அவதரண மூலம் முக்தி மூலம் ப்ரஜா நாம்
ஸடரிபு முனி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷ மூலோந் மூலநே மூலமிந்தே ச
பவது வர யோகீ நஸ் ஸமஸ்த அர்த்த மூலம் –2-

யத் அவதரண மூலம் -எந்த ஸ்ரீ மணவாள மா முனிகள் திரு அவதரித்த திரு மூல நக்ஷத்ரம்
செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
முக்தி மூலம் ப்ரஜா நாம் -மக்களுடைய மோக்ஷத்துக்குக் காரணமாக இருக்கிறதோ
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்ந்திடும் நாள்
ஸடரிபு முனி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் -ஸ்ரீ நம்மாழ்வாரால் பார்க்கப்பட்ட -வெளியிடப்பட்ட –
வேத ஸாம்ராஜ்யத்துக்குக் காரணமாக இருக்கிறதோ
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
சகல வேதாந்த ரஹஸ்யங்கள் அர்த்தங்கள் சித்திக்க மூல ஹேதுவே மா முனிகள் என்றவாறு
கலி கலுஷ மூலோந் மூலநே மூலமிந்தே –கலியினுடைய தோஷங்களை வேரோடு அழிக்கும்
நெருப்பின் காரணமான அந்த
ச பவது வர யோகீ நஸ் ஸமஸ்த அர்த்த மூலம்-வர வர முனிகள் நம்முடைய சகல
புருஷார்த்தங்களுக்கும் காரணமாக இருக்க வேணும் –

—————-

ஜனி விபத பவாதவ் யஸ்ய பாதவ் விதந்த
ஸததமபி மஹாந்த ஸ்வாந்த ஏவோத் வஹந்தி
ச ஜயதி பஜ தந்தர்த் வாந்த கல்பாந்த பாநு
நிரவதி குண காந்தோ ஹந்த காந்தோ பயந்தா –3-

ஜனி விபத பவாதவ் யஸ்ய பாதவ் விதந்த -எவருடைய திருவடிகளை பிறப்பு இறப்பு சூழலாகிற
சம்சாரத்துக்கு எதிர் தட்டானவையாக
ஸததமபி மஹாந்த ஸ்வாந்த ஏவோத் வஹந்தி -அறிகின்ற பெரியோர்கள் அவற்றை எப்போதும்
தங்கள் திரு உள்ளத்தில் தரித்து இருக்கிறார்களோ
ச ஜயதி பஜ தந்தர்த் வாந்த கல்பாந்த பாநு -ஆஸ்ரிதர்களுடைய அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் போக்கும்
பிரளய காலத்து ஸூர்யன் போன்றவரும்
நிரவதி குண காந்தோ ஹந்த காந்தோ பயந்தா –எல்லையற்ற கல்யாண குணங்களால் விரும்பப்படுவராக
இருக்கும் அழகிய மா முனிகள் சிறந்து விளங்குகிறார் -அத்புதம் –

————————–

இந்தே வாக்ய விபூஷணஸ்ய மஹதோ யத் பாஷணம் பூஷணம்
யத் பதாம்புருஹ த்வயம் ஸூ மனஸாம் மூர்த்நஸ் ஸதா பூஷணம்
யத் பக்த அங்க்ரி ரஜஸ் கண அவிதநுதே துக்கோ ததேஸ் சோஷணம்
வந்தே காந்த வரம் முனிம் தம நகம் நித்யம் கலேர் பீஷணம் –4-

இந்தே வாக்ய விபூஷணஸ்ய மஹதோ யத் பாஷணம் பூஷணம் -ஒளி மிக்கதும் சிறந்ததுமான
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு எவருடைய வியாக்யானம் அணிகலனாக அமைந்ததோ
ஸ்ரீ வசன பூஷணத்துக்கே இவரது வியாக்யானம் மஹித பூஷணம் என்பது சாலப் பொருந்தும் –
யத் பதாம்புருஹ த்வயம் ஸூ மனஸாம் மூர்த்நஸ் ஸதா பூஷணம் -எவருடைய திருவடித் தாமரைகள்
பெரியோர்களுடைய சிற்பங்களுக்கு எப்போதும் ஆபரணமாகத் திகழ்கின்றதோ
யத் பக்த அங்க்ரி ரஜஸ் கண அவிதநுதே துக்கோ ததேஸ் சோஷணம் -எவருடைய பக்தர்களின்
திருவடித் தூளியின் துகள்கள் லேசமே சம்சார சாகரத்தை வற்றச் செய்கின்றதோ
வந்தே காந்த வரம் முனிம் தம நகம் நித்யம் கலேர் பீஷணம்–பாபம் அற்றதும் —எப்பொழுதும்
கலி புருஷனுக்கு பயங்கரமாக இருப்பவருமான அந்த மணவாள மா முனிகளை வணங்குகிறேன் –

———————

யத் பதாம் புஜ ஸம்ஸ்ர யேண விமலா யல் லப்த போத உஜ்ஜ்வலா
யத் சேவ ஏக ரஸாஸ் ஸ்வ சிஷ்ய நிவஹ வ்யாப்த அகிலா சாந்தரா
ப்ரக்யாதா ஹி வர ப்ரத ப்ரப்ருத யஸ்தே நித்ய ஸித்தோபமா
தஸ்மாத் காந்த வராந் முநேரநு பமாத் தைவம் பரம் நாத்ரியே –5-

யத் பதாம் புஜ ஸம்ஸ்ர யேண விமலா -எந்த மா முனிகளுடைய திருவடித் தாமரைகளை ஆஸ்ரயித்து தூய்மை பெற்றவர்களாய் –
யல் லப்த போத உஜ்ஜ்வலா -எந்த மா முனிகளால் பெட்ரா ஞானத்தால் பிரகாசிக்கிறவர்களாய்
யத் சேவ ஏக ரஸாஸ் –எந்த மா முனிகளுடைய கைங்கர்யத்தில் மட்டுமே ருசியை உடையவர்களாய் –
ஸ்வ சிஷ்ய நிவஹ வ்யாப்த அகிலா சாந்தரா ப்ரக்யாதா ஹி வர ப்ரத ப்ரப்ருத யஸ்தே நித்ய ஸித்தோபமா –எல்லா திக்குகளிலும்
பரவி இருக்கும் தங்கள் சிஷ்ய கணங்களை உடையவர்களாக அந்த வரத நாராயண குரு என்னும் கோயில் கந்தாடை அண்ணன்
முதலானவர்கள் நித்ய ஸூரிகளையும் சித்தர்களையும் ஒத்த ப்ரஸித்தர்களாக விளங்குகிறார்கள் –
தஸ்மாத் காந்த வராந் முநேரநு பமாத் தைவம் பரம் நாத்ரியே –ஒப்பற்ற இந்த மணவாள மா முனிகளைக் காட்டிலும்
மேலான தெய்வத்தை மதியேன் -அவரே சரம பர்வமாய் -ப்ராப்யமாகவும் பிராபகமாகவும் இருப்பர் என்கிறார் –

———-

யத் ஸூக்தி ஏக ரஸா யத் அங்க்ரி யுகலீ ஸேவ ஏக அவகாஹிநோ
யத் வாத்சல்ய தயாதி ஸத் குண கணா கூபார மக்நாசயா
மந் யந்தே ந பரம் வி முக்தி கரணம் ஸந்தோ யதா லோக நாத்
தந்யாந் நஸ்ஸ ஸூப அந்ய வேல மஹிமா காந்தோ பயந்தா முனி –6-

யத் ஸூக்தி ஏக ரஸா யத் -எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகளிலேயே ருசி உடையவர்களாயும்
அங்க்ரி யுகலீ ஸேவ ஏக அவகாஹிநோ -எந்த மா முனிகளின் திருவடிகளிலே கைங்கர்யங்களிலேயே
ஆழ்ந்து இருப்பவர்களாயும்
யத் வாத்சல்ய தயாதி ஸத் குண கணா கூபார மக்நாசயா -எந்த மா முனிகளுடைய வாத்சல்யம் தயை முதலிய
நற் குணங்கள் ஆகிற கடலிலே மூழ்கி இருக்கும் திரு உள்ளம் கொண்டவர்களாகவும் உள்ள ஸத் புருஷர்கள்
மந் யந்தே ந பரம் வி முக்தி கரணம் ஸந்தோ யதா லோக நாத் -எந்த மா முனிகளுடைய கடாக்ஷத்தைக் காட்டிலும்
மற்ற வேறு ஒன்றை மோக்ஷம் தருவதாக எண்ணுவது இல்லையோ
தந்யாந் நஸ்ஸ ஸூப அந்ய வேல மஹிமா காந்தோ பயந்தா முனி –எல்லை அற்ற மேன்மையை உடைய
அந்த அழகிய மணவாள மா முனிகள் நமக்கு எல்லா நன்மைகளையும் கொடுத்து அருள வேணும் –

—————

யத் வாணீ சட வைரி ஸூக்தி தருணீ மாங்கல்ய தீபா வளி
யத் வீஷா ஸ்வ ஸரவ்ய ஸர்வ ஐநதா ஸர்வார்த்த சிந்தா மணி
யந் மூர்த்திர் பஜதார்தி பஞ்ஜந சணம் ஸூ க்திம் வி வக்த்யஞ்ஐஸா
பூயாந் நஸ் சததம் ச மே ஹ்ருதி குரு காந்தோ பயாந்தா முனி –7-

யத் வாணீ சட வைரி ஸூக்தி தருணீ மாங்கல்ய தீபா வளி -எந்த மா முனிகளுடைய ஸ்ரீ ஸூ க்திகள்
நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற யுவதிக்கு மங்களத்தைத் தரும் தீப வரிசையாக உள்ளதோ
யத் வீஷா ஸ்வ ஸரவ்ய ஸர்வ ஐநதா ஸர்வார்த்த சிந்தா மணி -எவருடைய கடாக்ஷமானது
தனக்கு இலக்கண ஸமஸ்த ஜனங்களுக்கும் சகலார்த்த பிரதனமான சிந்தா மணியோ
யந் மூர்த்திர் பஜதார்தி பஞ்ஜந சணம் ஸூ க்திம் வி வக்த்யஞ்ஐஸா -எவருடைய திரு மேனியானது
ஆஸ்ரயித்தவர்களுடைய துக்கங்களை அப்போதைக்கு அப்போது அழிக்க வல்லதான ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்கிறதோ
ம்ருத மதுர ஸ்ரீ ஸூ க்திகளால் யதார்த்தமாக திருவாய் மலர்ந்து அருளி போக்கி அருளுகிறார் என்றபடி –
பூயாந் நஸ் சததம் ச மே ஹ்ருதி குரு காந்தோ பயாந்தா முனி –அடியேனுடைய ஆச்சார்யரான மணவாள மா முனிகள்
அடியேனுடையஹ்ருதயத்தில் இடைவிடாமல் எழுந்து அருளி அருள் பாலிக்க வேண்டும் –

————-

அ வாக் பூஷா ஜூஷ்டைர் அ புவந குரு ப்ரேம பரிதை
அ மூலர்ஷ உத்பூதைர் அ வரத குரு உபாசிதபதை
க்ருதம் தைஸ் தைஸ் ஸர்வைர் குருபிர் அ மஹா யோகி பிரீதி
வ்யவஸ் யந்தஸ் ஸந்தோ ஹ்ருதி மமல சந்து ப்ரதி கலம் -8-

அ வாக் பூஷா ஜூஷ்டைர் -ஸ்ரீ வசன பூஷணம் அல்லாதவற்றில் திருப்தி அடையாதவர்களாயும்
அ புவந குரு ப்ரேம பரிதை -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் அல்லாத ஆச்சார்யர்கள் இடம் ப்ரீதி நிறைந்தவர்களாயும்
அ மூலர்ஷ உத்பூதைர் -திரு மூலம் அல்லாத நக்ஷத்திரத்தில் தோன்றினவர்களாயும்
அ வரத குரு உபாசிதபதை -ஸ்ரீ வரத குரு அல்லாத வர்களால் உபாசிக்கப்பட்ட திருவடிகளை உடையவர்களாயும்
க்ருதம் தைஸ் தைஸ் ஸர்வைர் குருபிர் அ மஹா யோகி பிரீதி -ஸ்ரீ வர வர முனியைத் தவிர மற்ற –
மஹா யோகிகள் அல்லாத -ஆச்சார்யர்களாகவும் உள்ள அந்த அந்த ஆச்சார்யர்களால் செய்யப்பட்டவை
போதும் என்று மணவாள மா முனிகளையே –
மஹா யோகிகள் அல்லாத -பெரிய ஜீயர் அல்லாத அவர யோகிகள் -என்றவாறு –
வ்யவஸ் யந்தஸ் ஸந்தோ ஹ்ருதி மமல சந்து ப்ரதி கலம் -அத்யவசித்து இருக்கும் ஸத் புருஷர்கள் அடியேனுடைய
உள்ளத்தில் ஒவ் ஒரு வினாடியில் சிறு பகுதியிலும் -இடை விடாது – ஒளி வீசட்டும் –
கீழே மா முனிகள் திரு உள்ளத்தில் ஒளி வீச பிரார்த்தனை –
இதில் மா முலைகளின் அடியார்கள் திரு உள்ளத்தில் ஒளி வீச பிரார்த்தனை –

————-

ந கல்வ வர யோகி நாம் பஜத பல ஸ்யோத் பவ
ததன்ய வி முகாஸ் ஸதா வர முனிம் பஜத்வம் ஐநா
தத் அங்க்ரி பஜநம் ஸக்ருத் க்ருதம் அசேஷதோ துஷ் க்ருதம்
நிவாரயதி பூய ஸீம் ஸ்ரீயம் அநுத்தமாம் புஷ்யதி –9-

ந கல்வ வர யோகி நாம் பஜத பல ஸ்யோத் பவ –தாழ்ந்த ஆச்சார்யர்களை ஆஸ்ரயிப்பதால்
பிரயோஜனம் ஏற்படாது –
ததன்ய வி முகாஸ் ஸதா வர முனிம் பஜத்வம் ஐநா –ஜனங்களே -மற்ற ஆச்சார்யர்களை விட்டு
மணவாள மா முனிகளையே ஆஸ்ரயியுங்கோள் –
தத் அங்க்ரி பஜநம் ஸக்ருத் க்ருதம் அசேஷதோ துஷ் க்ருதம்–அவரது திருவடிகளை ஒரு முறை
ஆஸ்ரயித்தாலும்-அது பின்று விடாமல் அனைத்து கெட்ட செயல்களையும் போக்கி அருளுகிறது –
நிவாரயதி பூய ஸீம் ஸ்ரீயம் அநுத்தமாம் புஷ்யதி –தனக்கு மேம்பட்டது இல்லாததும் நிறைந்ததுமான ஸ்ரீயை வளர்க்கிறது –
ஸக்ருத்தே அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை அளிக்கும் என்றாலும்
ஸ்வயம் போக்யமாக எப்பொழுதும் சேவிக்க வேணும் -என்று உபதேசித்து அருளுகிறார் –

——————-

ஸூர ஆஹாரா சாரீ கரண சணயத் ஸூ க்தி லஹரீ
கரீ யஸ்தாம் ஸ்தோ தும் ப்ரபவதி ந வாஸஸ்பதி ரபி
ஸ நஸ்தந் யாதந் யாத்ருஸ மஹிம ஸா லீ வர வரோ
முனீந்த்ரோ நிஸ்தந்த்ர குசல மநு வேலம் குரு வர -10-

ஸூர ஆஹாரா சாரீ கரண சணயத் ஸூ க்தி லஹரீ –மாதுர்யாதி குண யோகத்தால் -தேவர்களுடைய உணவான
அம்ருதத்தையும் -சாரம் அற்றதாகச் செய்யும் பெருமை யுடைய ஸ்ரீ ஸூ க்தி ப்ரவாஹம் புகழை உடையது –
கரீ யஸ்தாம் ஸ்தோ தும் ப்ரபவதி ந வாஸஸ்பதி ரபி -அத்தை ஸ்தோத்ரம் செய்வதற்கு தேவ குருவான ப்ருஹஸ்பதியும் சக்தி அற்றவர்
ஸ நஸ்தந் யாதந் யாத்ருஸ மஹிம ஸாலீ வர வரோ -வேறே எங்கும் காணாத மேன்மையை யுடைய குரு ஸ்ரேஷ்டரான அந்த மணவாள மா முனிகள்
முனீந்த்ரோ நிஸ்தந்த்ர குசல மநு வேலம் குரு வர – சோம்பல் இன்றி ஒவ் ஒரு சமயத்திலும் நம்முடைய க்ஷேமத்தை உண்டு பண்ண வேணும் –
தந்த்ரை-ஆலஸ்யம் -சோம்பேறித் தனம் -சோம்பல் இல்லாமல் கர்தவ்யமான தர்மங்களைப் பண்ணுபவர் –
ஞானம் இருந்தாலும் அனுஷ்டானம் இல்லாமல் இருந்தால் பயன் இல்லையே
இப்படிப்பட்ட இவரது திருவடி சம்பந்தத்தால் நமக்கு பரமபதம் நிச்சயம்
மன்னுயிர் காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன் -ஸ்ரீ எறும்பி அப்பா

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவள்ளுவ மாலை-சங்க நூல்களில் புகழாரம்-

October 16, 2020

ஸ்ரீ திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், ஸ்ரீ திருவள்ளுவரின் பெருமைகளையும்
புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
ஒரு நூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது,
திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.
திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள்.
இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும்,
ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், ஸ்ரீ வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த
பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன–

காலம்
இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை.
இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.

சான்றுகள்
சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.
இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.
ஒருவர் பாடிப் பிறர் மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)
பிற்காலப் புகழாரம்
இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார்,
கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து
பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறா.

திருவள்ளுவ மாலையிலுள்ள பாடல்கள்
கற்பனைப் படைப்புகளின் பாடல்கள்
1 அசரீரி– சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு உருத்திரசன்மன் புலவரும் வீற்றிருக்கலாம்.
2 நா மகள் — முன்பு நான்கு வேதங்களைப் பிரமன் வாயிலிருந்து சொன்னேன். அடுத்து பாரதம் சொன்னேன்.
இப்போது திருவள்ளுவர் வாயிலிருந்து திருக்குறள் சொல்கிறேன்.
3 இறையனார் – திருக்குறள் வாடாத கற்பக மலர் போன்றது.

புலவர் பாடல்கள்
திருக்குறளுக்குப் பெருமை சேர்க்க விரும்பிய ஒரு சிறந்த புலவர் சங்க காலப் புலவர்கள் சிலரது பெயரில்
பாடல்கள் எழுதித் தொகுத்துத் தந்த நூலே திருவள்ளுவ மாலை எனபதை ஊன்றெண்ணிப் பார்த்துப்
படிப்போர் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் திருக்குறளைப் பெரிதும் மதித்துப் போற்றிச் சூட்டியுள்ள புகழாரங்களைத்
திருக்குறளுக்குப் புகழாரம் என்னும் பகுதியில் காணலாம்.

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள்
16 நத்தத்தனார் – ‘ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பயின்றபின்’
வேறு நூலைக் கேட்க வேண்டியதில்லை என்னும் போது பாயிரம் பாடல் 1330-ல் அடங்க வில்லை.
இதன் விரிவை திருக்குறள் பகுப்புக்கள் என்னும் பகுதியில் காணலாம்.

அசரீரி
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க
உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்–1-

உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து.

நாமகள்
நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு–2-

பாண்டிய வேந்தே!நான் படைப்புக் காலத்தில் நான்முகன் நாவிலிருந்து நான்மறை பாடினேன்;
இடைக்காலத்திற் பாரதம் பாடினேன்;இன்று வள்ளுவன் வாயது என் பாட்டு.

இறையனார்
என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்–3-

திருவள்ளுவரின் திருக்குறள் நெடுங்காலஞ்செல்லினும் தேன் சொரியுந் தன்மையதான விண்ணக மலர்போலும்.

உக்கிரப் பெருவழுதியார்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி–4-

நான்முகன் வள்ளுவனாகத் தோன்றிக் கூறிய முப்பால் நூலை , என்தலை வணங்குக;
வாய்வழுத்துக; மனம் ஊழ்குக (தியானிக்க) செவி கேட்க.

கபிலர்
தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி–5-

வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப்
பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும்.

பரணர்
மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து–6-

திருமால் குறளாய்த் தோன்றித் தன் இரு பேரடியால் உலகனைத்தையும் அளந்தான்;
ஆனால் திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.

நக்கீரர்
தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று–7-

தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த
திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்ய வல்லதாம் ?

மாமூலனார்
அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்–8-

அறமுதலிய நான்கையும் உள்ளவா றுலகிற் குணர்த்திய தெய்வப் புலவரை, மறந்தேனும்
மாந்தனாகக் கொள்ளும் அறிவிலியின் கூற்றை அறிவுடையோர் கொள்ளார்.

கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி-9-

அறுவகை மதத்தாரும் ஒரு பொருளின் இயல்பை இன்னதென்று ஒரு மதத்தார் கூறின், அதை மறுத்து
வேறாகக் காட்டுவர் ஏனை மதத்தாரெல்லாரும் , ஆனால் திருவள்ளுவர் தம் முப்பாலிற் சொன்ன வற்றையோ
உண்மை யென்று எல்லாரும் ஒத்துக்கொள்வர்.

சீத்தலைச் சாத்தனார்
மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்–10-

திருவள்ளுவரின் முப்பால் , மலை , நாடு ஆறு நகர் , முரசு, கொடி , குதிரை, தமிழ்
ஆகியவற்றை மும்மூன்றாகக் கொண்ட மூவேந்தரின் முடிமாலை போல்வதாம்.

மருத்துவன் தாமோதரனார்
சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு–11-

மலையப் பகையென்று குத்தும் யானை போலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்
கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும்.
திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்த பின் சீத்தலைச் சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.

நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்-12-

தாமரைக்குளத்திற் குளிப்பார் பிறகுளத்தை விரும்பார்.
அதுபோல் திருவள்ளுவரின் திருக்குறளைக் கற்றார் பிற நூல்களை விரும்பார்.

அரிசில் கிழார்
பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்–13-

விரிவு பட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களை யெல்லாம் ஒழுங்காகக் கூறு படுத்திச்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?

பொன்முடியார்
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம் நின்று அளந்த குறள்–14-

மாலை யணிந்த அரசே! முன்பு காசிபன் தந்த குறள் மண்ணில் நின்று உலகத்தை அளந்தது;
இன்று திருவள்ளுவர் தந்த குறள் மண்ணிலும் விண்ணிலும் நின்று உலகத்தை யளந்தது.

கோதமனார்
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று–15-

பிராமணர் நால் வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே
சொல்லிக் காத்து வருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும்
எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

நத்தத்தனார்
ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்–16-

ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம்.
ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப் பகர்வார்
எப்பா வலரினும் இல்–17-

திருக்குறளினுஞ் சிறந்த நூல் ஒன்றுண்டென்று எப் புலவருஞ் சொல்லார்.
ஆதலால் நாம் செய்ய வேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்–18-

எல்லாக் கலை நூற் பொருள்களையும் எடுத்துக் கூறும் திருக்குறளை யியற்றிய,
திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்
தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம் மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்–19-

பாண்டியன் மன மகிழ நாற் பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர்
தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை–20-

திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று;
ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

நல்கூர் வேள்வியார்
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு–21-

வட மதுரைக்குக் கண்ணனை நிலைக் களமாகக் கூறுவர்;
வைகை மதுரையான தென் மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக் களமாவார்.

உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு),
உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன்.
(கண்ணன்.)கேசி என்பது ஆயர் குலத்தில் சரளமான ஒன்றோ என்றும் தோன்றுகிறது.
கேசி என்றால் கேசம் (கூந்தல் அல்லது தலை முடி) என்று பொருள். ஆயர் மகளிருக்கு கூந்தல் பற்றிய முக்கியத்துவம் உண்டு.
அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும்
திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

(1) மணமுடித்த உபகேசி பற்றிக் கூறுவதால், மூன்றாவது அடியை, மாதானுபங்கி என்னும் பெண்ணை மணந்தவர்
என்றும் பொருள் கொள்ளலாம். மாதானுபங்கி என்பது பெண்பால் சொல். அது திருவள்ளுவரின் இயற் பெயர் ஆகாது.
உபகேசி என்பது, நப்பின்னையின் இயற் பெயர்.
(2) திருவள்ளுவர் தென் மதுரைக்கு அச்சு என்றதன் மூலம், அவர் தென் மதுரையைச் சேர்ந்தவர் என்றும்,
அல்லது முதல் சங்கம் நடந்த தென் மதுரையில் தான் அவரது குறள் அரங்கேறியது என்றும் கொள்ளலாம்.
இதன படி, திருவள்ளுவர் கி.மு. 31 -இல் தோன்றினவர் என்பதும், அதன அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு
என்று கொண்டு வந்ததும் தவறு எனத் தெரிகிறது.
திருவள்ளுவர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று இந்த செய்யுள் தெரிவிக்கிறது.)

தொடித்தலை விழுத்தண்டினார்
அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்–22-

அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும்,
பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும்,
இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து,
நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேரு பொருளிருப்பினும் அதை யறிவார் போலும்!
நாடு அரணுள் அடக்கப்பட்டது.

வெள்ளி வீதியார்
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்–23-

ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே.
இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

மாங்குடி மருதனார்
ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு-24-

திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள
மந்திர நூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்
பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து–25-

திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல்
பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப் பாலை நால் வகையாக வகுத்துரைத்தார்.

போத்தியார்
அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை–26-

திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும்,
அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும்,
படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்;
குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.

மோசிகீரனார்
ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய
காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு–27-

திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும்
இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப் பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்–28-

நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.

மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
சுரந்தபா வையத் துணை–29-

பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்–30-

எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை.
ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.

உருத்திர சன்மகண்ணர்
மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு–31-

நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும்.
குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும்.
அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.

பெருஞ்சித்திரனார்
ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன–32-

மாலை யணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்த பொருளை யெல்லாம்
குறள் வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

நரிவெரூஉத் தலையார்
இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந் நான்கும்
முன்பு அறியச் சொன்ன முதுமொழி நூல் – மன்பதைகட்கு
உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
கொள்ள மொழிந்தார் குறள்-33-

நாற் பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால்,
அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச்செப்பல் – நிலவு
பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்குஇருள் மாலைக்கும் பெயர்–34-

திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல்,
முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ – அன்பொழியாது
உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து–35-

மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்ப துன்பக் கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு,
திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார். வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும்
பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

கவிசாகரப் பெருந்தேவனார்
பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா–36-

பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும்,
தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம்.

மதுரைப்பெருமருதனார்
அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு–37-

திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும்
இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து,
வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது.

கோவூர்க் கிழார்
அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி–38-

நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய
திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

உறையூர் முதுகூற்றனார்
தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் – நாவிற்கு
உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு–39-

தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை;
உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

இழிகண் பெருங்கண்ணனார்
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்
வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடினர் இன்குறள்வெண் பா-40-

இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும்,
திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்
திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம் பூண்டார்–41-

மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு,
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு–42-

திருவள்ளுவர் ஆரிய வேதப் பொருளைத் தமிழுலகம் அறிதற் பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார்.
ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும் பொருள்களெல்லாம் உள்ளன.

வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து–43-

வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது.
வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.

களத்தூர்க் கிழார்
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தர்மம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்–44-

இருக்கு முதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேத வழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்;
ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த
முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.

நச்சுமனார்
எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பு அணிவண்ணம் – இழுக்கின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா–45-

எழுத்து முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாம் அழகாக எவ்வெக்காலத்தில் எவ்வெவராற் சொல்லப் பட்டனவோ,
அவையெல்லாம் இக்காலத்து இத் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இனிய குறள் வெண்பாக்களிற் சொல்லப் பட்டுள்ளன.

அக்காரக்கனி நச்சுமனார்
கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பால்நூல் நயத்தின் பயன்–46-

மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறு கலைகளாலும் அறுபத்து நான்கு கலைகளாலும்
நிறைந்து காண்பதற்கும் ஆராய்தற்கும் இனிதாகி, புறக் கண்ணிற்குத் தண்மையும்
அகக் கண்ணிற்குப் பண்பும் உடைத்தாயினும், முப்பால் நூலால் விளையும் பயன் மதியினிடத்துண்டோ?

நப்பாலத்தனார்
அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு – குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு–47-

திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும்,
சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு,
உலகத்தோரின் அகவிருளை நீக்கும் விளக்கேற்றினார்.

குலபதி நயனார்
உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு–48-

நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக் குறளும்,
நீர்த் தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத் தகும்.

தேனிக்குடிக் கீரனார்
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
மெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து–49-

தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால்,
மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும்
பொய்த் தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.

கொடிஞாழல் மாணிபூதனார்
அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் – மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு–50-

பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்கு முன் கேட்டிராதவை யெல்லாம் கேட்டு
நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.

கவுணியனார்
சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா–51-

நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய
இனிய குறள் வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந் தருவன;
தொன்று தொட்டு வரும் இரு வினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.

மதுரைப் பாலாசிரியனார்
வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
பொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்இருள் நீக்கும் ஒளி–52-

வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம்.
அவை போலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம்.

ஆலங்குடி வங்கனார்
வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து–53-

திருவள்ளுவர் பாட்டின் தீஞ்சுவைக்குத் தெள்ளமுதமும் ஒவ்வாது.
தெள்ளமுதைத் தேவர் மட்டும் உண்டு சுவைப்பர்;
முப்பாலமுதையோ உலகத்தாரனைவரும் உண்டு சுவைப்பர்.

இடைக்காடர்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்–54-

திருக் குறளின் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் நோக்கின், ஒவ்வொரு குறளும், கடுகின் நடுவில் துளை செய்து
அதில் எழு கடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

ஔவையார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்–55-

திருக்குறளின் சொற்சுருக்கத்தையும் பொருட்பெருக்கத்தையும் நோக்கின்,
ஒவ்வொரு குறளும், கடுகினும் மிக நுண்ணிய அணுவைத் துளையிட்டு அதில்
எழுகடல் நீரையும் பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

(திருவள்ளுவமாலை நிறைவு)

—————

திருவள்ளுவ மாலையில் புகழாரம்

வள்ளுவர் கடவுள் எனல்
28 காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் \ பிரமன் வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான்.
4 உக்கிரப் பொருவழுதியார் \ நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.
21 நல்கூர் வேள்வியார் \ வடமதுரைக்கு அச்சு நப்பின்னையை மணந்த கண்ணன்.
தென்மதுரைக்கு அச்சு சிவபெருமான் போன்ற, ஆனால் தொண்டையில் மறு இல்லாத
செந்நாப்போதார். வள்ளுவர் கடவுளின் மேலானவர் எனல்
6 பரணர் \ திருமால் தன் இரண்டு தப்படிகளால் மூவுலகப் பரப்பைதான் அளந்தான்.
திருவள்ளுவரோ தன் பாவடிகள் இரண்டால் உலகத்தார் உள்ளத்தையெல்லாம் அளந்தார். \ வேற்றுமை அணி \
14 பொன்முடியார் \ அன்று குறள் உருவம் (திருமால்) காசிபன் (வாமணன்) என்னும் பெயரோடு உலகை அளந்ததாம்.
இன்று குறள் பாடல் உலகை அளக்கிறது.
39 உறையூர் முதுகூத்தனார் \ திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர். நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.
8 மாமூலனார் \ வள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் சொன்ன தேவர்.
அவரை வள்ளுவன் குடியில் பிறந்தவன் என்பவன் ஒன்றும் அறியாத முட்டாள்.
53 ஆலங்குடி வங்கனார் \ அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர்.
எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.

திருக்குறள் வேதம் எனல்
32 பெருஞ்சித்திரனார் \ வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது.
43 வண்ணக்கஞ் சாத்தனார் \ ஆரியத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் திருக்குறள் இருக்கிறது. எனவே இரண்டும் சமம்.
15 கோதமனார் \ ஏட்டில் எழுதினால் நான்மறையின் ஆற்றல் போய்விடும் என்று எழுதாமல் விட்டுவிட்டனர்.
திருக்குறள் ஏட்டில் எழுதியபின் ஆற்றல் கூடுகிறது.
24 மாங்குடி மருதனார் \ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது,
உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.
30 பாரதம் பாடிய பெருந்தேவனார் \ பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா.

இயற்கையோடு ஒப்பிட்டு மேன்மை கூறல்
52 மதுரைப் பாலாசிரியனார் \ வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.
46 அக்காரக் கனி நச்சுமனார் \ கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம்
என்றாலும் திருக்குறளீன் நயம் திங்களுக்கு இல்லை. வேற்றுமை அணி
47 நப்பாலத்தனார் \ திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு.
அறம் – அகல். பொருள் – திரி. இன்பம் – நெய். செஞ்சொல் – தீ. குறட்பா – விளக்குத் தண்டு. உருவக அணி
48 குலபதி நாயனார் \ ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும்.
திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது. வேற்றுமை அணி
7 நக்கீரர் \ திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.

பொதுநூல் எனல்
9 கல்லாடனார் \ ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.
23 வெள்ளி வீதியார் \ செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே.
பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.

திருக்குறள் மருந்து எனல்
11 மருத்துவன் தாமோதரனார் \ :சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரு பெயரைச் சீ ஒழுகும் தலையை உடைய
சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி
திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது என்கிறார் இந்தப் புலவர்.
35 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் \ இவர் திருக்குறளை ‘வாயுறை வாழ்த்து’ என்கிறார்.
இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது
51 கவுணியனார் \ இருவினை தீர்க்கும் மாமருந்து.

திருக்குறள் இலக்கணச் செப்பம்
45 நச்சுமனார் \ எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம் அமைய
வழு இல்லாமல் திருக்குறள் அமைந்திள்ளது.

திருக்குறளில் எல்லாம் உண்டு எனல்
42 செயலூர்க் கொடுஞ்செங் கண்ணனார் \ உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.
29 மதுரைத் தமிழ்நாகனார் \ எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.
33 நரிவெரூஉத்தலையார் \ இன்பம், பொருள், அறம், வீடு வள்ளுவர் சொன்னார்.
40 இழிகட் பெருங்கண்ணனார் \ இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.

தனிச் சிறப்புகள்
13 அரிசில் கிழார் \ வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.
17 முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் \ உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற
முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

அணிநலத்துடன் பாராட்டு
5 கபிலர் \ பனித்துளி பனைமரத்தைக் காட்டுவது போல்த் திருக்குறளில் பொருள் செறிந்துள்ளது.
10 சீத்தலைச்சாத்தனார் \ 3 வேந்தர், 3 மலை, 3 நாடு, 3 ந்தி, 3 பது, 3 முரசு, 3 தமிழ், 3 கொடி, 3 மா, – போல 3 பால்
கொண்ட நூல் முப்பால் மூவேந்தர்களும் தலையில் சூடிக்கொள்ளும் மணிமுடியாகும். | விரிவு காண்க; மூவேந்தர்களின் தனியுடைமை
12 நாகன் தேவனார் \ நன்னீர்ப் பொய்கையில் நீராடுவோர் பருகும் நீருக்காக வேறு குறத்துக்குச் செல்லார்.
அதுபோல வள்ளுவரின் முப்பால் படிப்படிப்பவர் வேறு நூல் தேடி அலைய வேண்டுவதில்லை.
18 ஆசிரியர் நல்லந்துவனார் \ மக்களின் கலையையும், வேதப் பொருளையும் இணைத்துப் பாடியுள்ளார்.
19 கீரந்தையார் \ திருக்குறளின் முதல் பாடலிலேயே மூன்று பால்களில் சொல்லப்பட்ட செய்திகளும், நாற்பொருள் செய்திகளும் அடக்கம்.
31 உருத்திர சன்ம கண்ணர் \ கடல் மணல் தோண்டத் தோண்ட நீர் ஊறும்.
குழந்தை சுவைக்கச் சுவைக்கத் தாய்க்குப் பால் ஊறும். திருக்குறள் ஆய ஆய அறிவு ஊறும்.
34 மதுரைத் தமிழாசிரியர் செங்கஃன்றார் கிழார் \ வள்ளுவர் புலவர். அவர் காலைப்பொழுது. மற்றவர்களும் புலவர். அவர்கள் மாலைப் பொழுது.
36 கவிசாகரப் பெருந்தேவனார் \ சிறந்தது எது? பூக்களில் தாமரை. பொன்னில் சாம்புந்தம். ஆவில் காமதேனு.
யானைகளில் ஐராவதம். பாவில் வள்ளுவர் வெண்பா.
38 காவூர் கிழார் \ முன்னையோர் முதுமொழி திருக்குறளுக்கு ஈடாகாது.
41 செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார் \ செய்க, செய்யற்க என்று வள்ளுவர் கூறுவனவே மேலானவை.
44 களத்தூர் கிழார் \ வள்ளுவர் ஒருவர். குறள் 2 அடி. சொன்னது 3 பால். அளித்தது 4 பொருள். அடக்கம் 5 வேதம். 6 சமையம்.
49 தேனீக்குடிக் கீரனார் \ திருக்குறளால் மக்கள் மனத்தில் பொய் போயிற்று. மெய் நிலவிற்று.
50 கொடிஞாழல் மாணி பூதனார் \ அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இதுவரையில் கேளாதனவற்றை யெல்லாம் திருக்குறளில் கேட்டறிந்தோம்.

———————–

சங்க நூல்களில் புகழாரம்

ஆலத்தூர் கிழார்
‘நிலம் புடைப் பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு
உய்தி இல் என அறம் பாடின்று’ என்னும் பாடல் அடிகள் (புறம் 34)
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ என்னும்
திருக்குறள் பாடலைப் பதிவு செய்கின்றன.
‘அறம்’ என்று புறநானூறு குறிப்பிடுவது வாழ்க்கையின் அறநெறி காட்டும் திருக்குறளைத் தான் என்பது தெளிவு.

மணிமேகலை நூல்
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப்
பெய்யும் பெருமழை என்ற பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய் (22-61)

சங்கநூல்களில் திருக்குறள் நினைவோட்டம்
‘பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு நாடார் ஒட்டியோர் திறத்தே’ (நற்றிணை 32) என வரும்
கபிலரின் பாடல் அடிகளில் ‘நாடாது நட்டலிற் கேடு இல்லை’ (குறள் 791) என்னும் நினைவு பாய்கிறது.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும் December 28, 2009 By ஸ்ரீ ஜெயஸ்ரீ சாரநாதன்–

October 16, 2020

வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில்
அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும்.

ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை),
மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன.
புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன.
இவற்றுள் ஸ்ரீ ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.

(1) அரிப்பறை :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும்
சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று,
அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.

(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர்.
சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.

(3) ஆகுளிப் பறை மற்றும் (4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை.
அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.

(5) சல்லிப்பறை :- இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.

6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.

(7) செருப் பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.

(8) போர்ப் பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.

(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.

(10) தடாரிப் பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.

(11) ஒரு கண் பறை:- அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும்.
அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க் களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.

(12) மணப் பறை :- திருமணங்களில் கொட்டப்படுவது.

புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும்,
பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால்,
ஸ்ரீ ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.

இனி, பறை என்று ஸ்ரீ ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில் ஸ்ரீ ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.

ஸ்ரீ ஆண்டாள் கூறும் பறை

1. பறை தருவான் (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
4. அறை பறை – (பாசுரம் -16)
5–என்று என்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் –(பாசுரம் -24)
6. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
7. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
8. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
9. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
10. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
11.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)

அவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது.
சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப் புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று
ஸ்ரீ ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் ஸ்ரீ பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு,
பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும்
செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீ திருமால் வீதி வலம் வரும்
ஸ்ரீ கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை
ஸ்ரீ ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.

மார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது.
மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது.
அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர்.
அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.
திருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.
அது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி,
அந்தப் பாவைக்குப் பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.

இதையே ஸ்ரீ ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை அடைவது என்னும் வழக்கப்படி
ஸ்ரீ கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஸ்ரீ ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள்.
பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது.
அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும் வானத்தைச் சொல்கிறது.
பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.
அன்று காலை நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதை தான் ஸ்ரீ ஆண்டாள்,
மதி நிறைந்த நன்னாள் என்று சொல்லி இருக்கிறாள்.

நாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை
‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறு தினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம்.
வளர் பிறையின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது.
அப்படி கணக்கு பார்த்தால் ‘மாலே மணி வண்ணா’ பாசுரம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி என்றாகிறது .
அன்று தான், எல்லா ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது ஸ்ரீ திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார்.
ஸ்ரீ ஆண்டாளின் தந்தையான ஸ்ரீ பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு,
பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு ஸ்ரீ கருட வாகனத்தின் மீது காட்சி தந்த ஸ்ரீ திருமாலைப் பார்த்து,
‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப் பாடினார்.
சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும்,
அது வீதி வலம் வரும் ஸ்ரீ கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகவும் இருந்திருக்கலாம்.
மறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று, நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து
அதிக பட்சத் தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது
நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும்.
தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் –
சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம்.
இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து
கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம்.
இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும். இது நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம்.
பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம்.
அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள்,
மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது.
பிரபஞ்ச இயலும், அதன் வழி ஆன்மீக நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.

அத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று,
சாலப் பெரும் பறை கொட்டினர் என்று ஸ்ரீ ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.

பறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஸ்ரீ ஆண்டாள், தனக்கு ஸ்ரீ நாராயணன் பறை தருவான் என்கிறாள்.
மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது
ஸ்ரீ நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது, தட்டும் பறை அல்ல.
அவள் பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில்
அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.

அவள் ஸ்ரீ நாராயணன் திருக்கோவிலின் வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம்
‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே.
அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.

இங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல.
ஸ்ரீ மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி
அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.

அப்படி என்ன அறை பறை அறிவித்து ஸ்ரீ மாயவன் சொன்னான்?

அறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது.
‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய
விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர்.
ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான்.
அதை உண்மை என்று நம்பி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக் கோயில் தேடி வந்திருக்கிறாள்.

அபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாக ஸ்ரீ கண்ணன் சொல்லி விட்டான் என்றால்,
அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி!

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச

எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு
விடுதலை அளிக்கிறேன் என்று ஸ்ரீ கண்ணன் கூறுவது, பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம்.
இது என்றுமே உள்ள பிரமாணம் தான். ஆனால் அந்நாளில் மக்கள், கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு
அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை,
எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் ஸ்ரீ கண்ணன்.
அறை பறை என அறிவித்து விட்டான்.

அன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை கொட்டியது போல் அறிவித்தது,
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி,
அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம்.
நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஸ்ரீ ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.

அறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’.
அன்றே வாய் விட்டு விட்டான். அதை நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள்.
எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஸ்ரீ ஆண்டாள் சொல்லுவதிலிருந்து,
ஸ்ரீ நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.

இந்த ஸ்ரீ மாயன் உரையை (ஸ்ரீ பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), ஸ்ரீ திருப்பாவையில் பறை என்று
வரும் மற்ற இடங்களில் சேர்த்துப் பார்த்தால், இதுவே உள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.

இப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.

1. பறை தருவான் – (பாசுரம் – 1)

“நாராயணனே நமக்கே பறை தருவான்”.

அன்று அர்ஜுனனுக்குப் பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை அடைவோம்.
நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.

2. பாடிப் பறை கொண்டு (பாசுரம் -8)

“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”

அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘
இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால்,
‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘

அவன் ஸ்ரீ சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப் போல் அல்ல. ஒருவனிடம் தவறு இருந்தாலும்,
அவன் தன்னைப் பணிந்தால் ஸ்ரீ இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான்.
இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று ஸ்ரீ சீதை சொல்கிறாள்.
அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான்.
ஆனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே, அவன் அப்படி அல்லன்.

பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் ஸ்ரீ இராமன்.
ஆனால் புண்ணியத்தையும் விட்டு விட்டு வா என்பவன் ஸ்ரீ கிருஷ்ணன்.
அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள் இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.”
என்று கூறுபவன் ஸ்ரீ கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு –
இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஸ்ரீ ஆண்டாள் இந்த இடத்தில் பறை என்னும்
சொல்லைக் கையாண்டு உள்ளாள்.

3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)

“போற்றப் பறை தரும் புண்ணியன்”

அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் –
அர்ஜுனன இவ்வாறு தான், அவனைத் தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதி கொடுக்கவில்லையா?

4. அறை பறை – (பாசுரம் -16)

‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.

இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை,
அறைந்து பறை அறிவித்தாற் போல் அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே.
அதை நம்பித் தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.

5-என்று என்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் –29-
இங்கு பறை என்று பரம புருஷார்த்தம் -அனுபவ ஜெனித
ப்ரீதி காரித கைங்கர்யத்தைச் சொன்னவாறு

6. பறை தருதியாகில் – (பாசுரம் -25)

“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்”

அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும்
உன்னைக் கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும் அந்த உறுதி மொழி கொடுத்து விடு.

7. சாலப் பெரும் பறை – (பாசுரம் -26)

“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”

இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை கொட்டி, பல்லாண்டு இசைத்து
அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.

8. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)

இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்த பின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.
“கோவிந்தா உன்றன்னை பாடிப் பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால்,
கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.

அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே.
அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே.
அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக் கேட்பது.

9. நீ தாராய் பறை – (பாசுரம் -28)

“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.

உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே.
அன்று அர்ஜுனன் உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள் விரிந்து இருக்கும் உன்னை,
நண்பனை ஏசிப் பேசி பரிகாசம் செய்வது போல், உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா? இல்லையே.
அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசி யுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு
பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை எங்களுக்குத் தர வேண்டும்.

10. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)

“இற்றை பறை கொள்வான் அன்று காண்”

ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.
அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா?
அது போல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது.
என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.

11.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)

இவ் வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.
அங்கு, அன்று அப் பறை கொண்ட விதத்தை, ஸ்ரீ பட்டர் பிரான் மகளான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன கருத்தை
ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர்
என்று ஸ்ரீ திருப்பாவை முடிகிறது.

ஸ்ரீ மாயன் தந்த இந்த உரையை ஸ்ரீ நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார்.
ஸ்ரீ மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (ஸ்ரீ திருவாய் மொழி 7-5-10)
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.

ஸ்ரீ நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “ஸ்ரீ மாயன் உரை” என்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.

“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி- 10)

அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை உணரும் போது,
‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’ என்று கவலைப் பட வேண்டாம்.
ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான்.
பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா?
தூங்கிக் கொண்டிருப்பவனை ஸ்ரீ ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில்,
பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு.
‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.

அதனால் தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – ஸ்ரீ பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம்
ஆற்றங்கரை தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.

இப்படி எல்லாம் அந்தப் பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஸ்ரீ ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும்,
சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஸ்ரீ ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள்.
பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும்,
அவனாகவே நம் மனத்தில் உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.

’ஸ்ரீ நாராயணனே, என்றவிடத்து ஏகாரம் பிரி நிலைப் பொருளதாய் ஸ்ரீ நாராயணன் அடியார்க்குக் காரியஞ் செய்யுமிடத்துச்
சாதனங்களை யெதிர் பாராது செய்து தலைக் கட்டுபவன் என்பதை உணர்த்தும்.
நமக்கே என்றவிடத்து ஏகாரமும் அப்பொருட்டாய், ஸ்ரீ நாராயணன் ஸர்வ ஸாதாரண ஸ்வாமியாயினும்,
‘ஆகிஞ்சன்யம், அநந்யகதித்வம் என்னு மத்காரங்களமைந்த நமக்கன்றி மற்றயோர்க்குக் காரியம் செய்யான் என்பதைத் தெரிவிக்கும்.

பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம்.
இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேஷித்த படி ஸ்ரீ கண்ணபிரான் பறை தரப்புக,
அதுகண்டு இவர்கள் “சின்னஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில்,
“இற்றைப் பறை கொள்வானன்று காண் கோவிந்தா, எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோமுனக்கு நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால்,
பறை, பறை என்று சொல்லிக் கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜ மாத்திரமேயாய்,
அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும்.

“ஏவ மற்றமராட் செய்வார்” என்றபடி எதிர்த் தலையின் நியமனங்கொண்டு செய்வதே
ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம், “பறை தருவான்’ என்பதனாற் போதரும்.

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வைணவமும் வள்ளுவமும்-January 3, 2011 By ஆர்.சௌந்தர்

October 15, 2020

வள்ளுவர் உலகிற்கு என்ன செய்தி சொல்கிறார் என்பதைவிட, குறட்களை மனப்பாடம் செய்து எழுதுவதே
திறமையென நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் அது. ‘பிற’ என்று முடியும் குறளை எழுதுக, அல்லது
‘உலகு’ என்று முடியும் குறளை எழுதுக என்று எல்லா வினாத்தாள்களிலும் ஒரே மாதிரியான கேள்விகளே கேட்கப்படும்.
திருவள்ளுவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒருவேளை அதற்கு உரை எழுதியவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்
என்று பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் பரிமேலழகர் பெயர்தான் நினைவுக்கு வந்தது.
இந்தப்பெயரை நினைத்தவுடன் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை வேண்டிக்கொண்டேன். நீங்கள்தான் காப்பாத்தணும் என்று.

திருக்குறள் ஒருபொது நூல். இது எந்த சமயத்தையும் சார்ந்தது இல்லை. மாலுடன் சம்பந்தப் படுத்த வேண்டுமென்றால்,
மாலைத் தான் கேட்கவேண்டும், சரி,அது என்ன மாலை? அதுதான் திருவள்ளுவ மாலை.

மாலும் குறளாய் வந்தான். இரண்டடியால் உலகை அளந்தான். எனவே மாலும் வள்ளுவமும் ஒன்றாய் இருக்குமோ?
இந்த சந்தேகம் முன்னர் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கும் வந்ததாம்.
அதை அவர் அப்படியே ஒரு வெண்பாவாகப் பாடி வைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து

இதே கருத்தைப் பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்–என்று பாடியுள்ளார்.

வள்ளுவர் என்பது அவரது இயற்பெயரா? புத்தகத்தைத் தேடினேன்; நாயனார், தேவர், நான்முகனார் என்பன பல.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், என் தம்பி முகுந்தமாலையை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.
” ஸ்ரீ வல்லபேதி,வரதேதி, தயாபரேதி . . ” அட. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே!
ஸ்ரீவல்லபா (லட்சுமிக்குப் பிரியமானவனே) என்பதைத் தமிழ்ப்படுத்தினால் திருவல்லபா அல்லது திருவள்ளுவா என்று
திரிபுடன் சொல்லி விடலாமே என்று தோன்றியது. முதல் கட்டம் வெற்றி! திருவள்ளுவரைத் திருமாலுடன் இணைத்தாகி விட்டது.
இனி அடுத்த கட்டம்.

முதல் குறளிலேயே வெற்றி. அகர முதல எழுத்தெல்லாம்- ஆஹா இது அப்படியே கீதா வாக்கியம் –
அக்ஷராணாம் அகாரோஸ்மி. எழுத்துக்களில் நான் அகாரமாய் இருக்கிறேன்.
எனவே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால் தான்.

அடுத்த குறளிலே வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’
அல்லது முற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’ என்று குறிப்பிடுமிடத்தே, ஐம்புலன்களை வென்றவன் அதாவது
ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும் திருமாலின் ஒரு திவ்யநாமம்.
ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே தனக்கு உவமை இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்;
ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9));
ஒப்பார் மிக்காரை இலையாய மாமாயன் (திருவாய்மொழி 2-3-2);
வடமொழியில் அதுல: என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு
உரை சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன்.
இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

சோம்பலை வெறுக்கும் அதிகாரம் மடியின்மை. இங்கே போய் தேடினால்,
குறள்எண் 610 பளிச்சென்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

மடியிலா மன்னவன் எய்தும்; அடி யளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை நேராகவே குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர்.
திருவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்ய நாமம்,

உடனே நிலையாமை என்கிற அதிகாரத்தைப் புரட்டினேன்.

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் எண்: 339)

இறப்பு துக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது
இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
. . நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
. . அன்யானி ஸன்யாதி நவானி தேஹி (2-22)

குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத் தழுவிக் கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை
என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார்.
தாமரைக் கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர் என்பாருண்டு’. நீ என்ன சொல்கிறாய்? என்றார்.
‘ஐயா!, நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்று தானே சுட்டுகிறார்.
எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

திருக்குறளில் இலக்குமியைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுக்கமுயன்றேன்.
ஸ்ரீ, பூ, நீளா தேவி ஸமேத விஷ்ணுவான படியாலே, தேடுதல் இம்மூவரையும் பற்றியதாக
இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
பூமாதேவியின் முக்கிய குணம் பொறுமை அல்லவா? முதலில் இந்தக் குணம் தேவை.
க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல்,
பொறையுடைமை அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார்.
பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை நாட்டுகிறார்.
இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா தொடர்ந்து வருவது நியாயந்தானே!
அதற்கும் விடை தருகிறார் ஸ்ரீ வல்லபர்.

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள்
அவர் தகுதியை அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு

முயற்சி திருவினை ஆக்குமே! மேலும் தேடிப்பார்க்கலாம் என்று புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடி கொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

அடுத்து நீளாதேவியைப் பற்றி எங்கே குறிப்பிடுகிறார்?
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார்.
நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) இணைந்து, இம்மூவரும்,
திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும்.
அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது.
இதனால் தானோ நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவ மாலையில் கிடைக்கிறது?

நீளாதேவியைப் பற்றி வள்ளுவத்தில் ஏதானும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கையில்,
திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைத்தது.
இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு),
உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.)
அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார்,
திருக் குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்; பசுவில் சிறந்தது காமதேனு;
ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார்.
திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார்
கொப்பூழ் எழுகமலத்தே அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும், நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா மரைமேல் அயன்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பழந்தமிழர் கண்ட ஸ்ரீ வேதாந்தக் கருமணி – February 15, 2011 By ஸ்ரீ கந்தர்வன்–

October 15, 2020

முன்னுரை:

நம் உள்ளம் கவர் திருவமர் மார்பனைத் தொன்றுதொட்டு தமிழர்கள் பாடி வணங்கி வரும் முறை பற்றியும்
திருமால் சமய மரபின் தொன்மையைப் பற்றியும் விளக்க எழுந்த முயற்சி இது.
சங்க கால இலக்கியம் தொட்டு, ஆழ்வார் பாசுரங்கள், இடைக்காலக் காப்பிய நூல்கள் ஆகியவற்றைத் துணை கொண்டு
பல செய்திகளைக் காண்போம். இக்கட்டுரைத் தொடரில் வேதாந்த/பக்தி ரீதியிலான அனுபவ/அறிவு பூர்வமான
விளக்கங்களுடன் பல அரிய செய்திகளை அலசுவதையும் ஒரு இலக்காகக் கொள்வோம்.
சில உதாரணங்கள்:

உபநிடதங்களில் வரும் பல தத்துவங்களை விளக்கும் களஞ்சியமாக இப்பாடல்கள் அமைந்தமை.
பழந்தமிழர் சமயம் வேத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே என்பது.
வேதத்தின் கர்ம காண்டமாகிய பூர்வ பாகம், ஞான காண்டமாகிய உத்தர பாகம் (உபநிடதங்கள்), இதிகாசம், புராணம், கீதை
ஆகியவற்றிலிருந்து பல செய்திகள் மாறாமல் சங்க இலக்கியங்களில் வருகின்றன.
ஆகையால், இந்தியர்களுக்குப் பொதுவான இந்து மதநம்பிக்கைகளும் பழந்தமிழர் மரபுடன் சுருதி சேர்ந்து
வேதாந்த-பக்தி மார்க்கம் எனும் இன்னிசைப் பிரவாகமாக வருவதையும் காணலாம்.

ஆழ்வார்கள் செய்தருளிய பாசுரங்களுக்கும், பிறகு கம்பர், புகழேந்திப் புலவர், வில்லிப்புத்தூராழ்வார் முதலானோர்
காவியங்களுக்கும் சங்கப் பாடல்களில் பல முன்னோடியாக இருந்தமையையும் காணலாம்.
இவற்றிலிருந்து நம் பண்டைய தமிழர் பண்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்ச்சியாகப்
பேணப்பட்டு வந்தமையும் தெளிவாகிறது.

சமய நம்பிக்கைகள் குறித்த வரலாற்றாராய்ச்சிச் செய்திகள்.
இன்று வடமொழியிலுள்ள சாஸ்திர-பாஷ்ய நூல்களில் தேர்ச்சி பெற்று ஈடுபாடு உடையவர்கள் தமிழிலக்கியங்களைப் பற்றி ஆராய்வதில்லை.
அதே போல், தமிழ்மொழியில் அமைந்த சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், சமயப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்ட
தமிழறிஞர்களுக்குப் பொதுவாகப் பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஈடுபாடு காணப்படுவதில்லை.
ஆங்காங்கு விதிவிலக்குகள் காணப்படினும், இன்று பொது மேடைகளில் பரவலாக நாம் காணும் நிலை இது.
பாண்டித்யத்தில் கதிரவனுக்கெதிர் மின்மினி போன்ற நிலையில் இருந்தாலும் எனக்குத் தமிழ், சமஸ்கிருத இலக்கியம்
இரண்டிலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. இத் தகு ஆர்வத்தின் வெளிப்பாடே இச் சிறு முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இத்தொடரின் முதற்பகுதியாகிய இக்கட்டுரைக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடலானது,
பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

இப்பாடலில், உலகத்திற்குக் காரணப் பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக,
சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும்,
ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும்,
கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.

இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது.
அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே
நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன”
என்னும் செய்தி விளக்கப்படுகிறது. அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும்,
அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:

“அக்னிர் மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்விவ்ருதாச்’ச வேதா:
வாயு: ப்ராணோ ஹ்ருதயம் விச்’வம் அஸ்ய பத்ப்யாம் ப்ருதிவீ ஹி ஏஷ ஸர்வபூத-அந்தராத்மா”[முண்டக உபநிடதம், 2.1.4]

இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும்,
திசைகளைச் செவிகளாகவும், வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும்,
பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது.
தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது.
ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு,
“இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன். சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர்.
மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர். அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்”
[“ஏஷ தேவோ விஷ்ணுர் அனந்த: ப்ரதம ச’ரீரீ த்ரைலோக்ய தேஹோபாதி: ஸர்வேஷாம் பூதானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.

ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார்
(சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25). “வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது
பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய, உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று
சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார்.
“ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால்,
ப்ரஹ்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி,
முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம்
(‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி ப்ரஹ்ம சூத்திரம் விசாரத்திற்குப்
பல சுருதி வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி
வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர்.
அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.

பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும்,
சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய
ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலானோர் கொள்கை.
“சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள்.
“உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
“பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.

இவ்விடத்தில் இரண்டு சந்தேகங்கள் எழக்கூடும்:
(1) முதல் சந்தேகமானது — உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டும் ஒரே பொருளாக இருக்க முடியுமா?
அப்படி இருப்பதைப் பார்ப்பதில்லையே? குயவன் பானை செய்வதைப் பார்க்கின்றோம்.
ஆனால், குயவனே பானை ஆவதில்லை; களிமண் குயவன் உதவி இல்லாமல் தானாகவே பானை ஆவதில்லை.
(2) இரண்டாவதாக — பரம்பொருள் பிரபஞ்சமாகவே பரிணமித்தது என்று கூறிவிட்டால், பரம்பொருளை மாறுதல் அடைந்து
அழியும் தத்துவம் போலக் கூற வேண்டுமே? அப்படி இல்லாமல் அதை
“என்றென்றும் இருப்பது”, “காலத்தால் மாறுபடாதது”, “காலத்திற்கு அப்பாற்பட்டது” என்று மறையாகிய வேதம் கூறுகிறதே?

இச் சந்தேகங்களுக்கான தீர்ப்பை எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால், மயிலை உதாரணமாகக் கொள்ளலாம்.
மயில் கார்மேகத்தைக் கண்டவுடன் தோகை விரித்தாடுகிறது.
இந்தத் தோகை விரித்தாடும் நடனத்தையும் அதே மயில் தான் உருவாக்குகிறது. அக்காட்சியை உருவாக்க அம்மயிலானது,
பானை செய்ய குயவன் உபயோகிக்கும் களிமண் போலவோ, நாற்காலி-மேசை செய்ய தச்சர் உபயோகிக்கும் மரம் போலவோ
தனக்கு வெளியே கிடக்கும் எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதில்லை;
மயில் தன்னையே அந்நிலைக்கு மாற்றிக் கொள்ளுகிறது என்று கூறுகிறோம்.
இவ்வாறு, பரம்பொருளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை “மயிலுக்கும் தோகைக்கும் உள்ள தொடர்பு போல”
என்று விளகினால், பரம்பொருளே பிரபஞ்சத்தின் உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டுமே என்று கூறுவதில் பிழை இல்லை.

மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் ஸ்தூல நிலை.
நாட்டியம் முடிந்த பின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை.
தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ
“மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ, “மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ,
அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம் நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில்
“பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ,
பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.

இதைப் போன்றே திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார் கடலுக்கும் அலைக்கும் உள்ள தொடர்பை வைத்து
ப்ரஹ்மத்திற்கும் பிரபஞ்சத்தில் சராசரங்களுக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் பாசுரத்தில் விளக்குகிறார்:
“தன்னுளே திரைத்தெழுந் தரங்க வெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மை நின் கணின்றதே.”–[திருச்சந்த விருத்தம், 10]

இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம் பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும்
தத்துவமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர்.
பொன் ஆபரணத்திற்குக் காரணப் பொருள். ஆபரணம் பொன்னைக் காரணப் பொருளாக உடையதால்
அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது.
ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை.
அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப் பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம் பொருள் விகாரமடைவதில்லை.

இத் தத்துவத்தைக் ஸ்ரீ கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார்.
அவ்விடத்தில் நரசிங்கப் பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:

“நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற் கலனே போல்கின்றேன்.”-[ஸ்ரீ கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]

இது பின்வரும் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது.
இதுவும் ஸ்ரீ நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:

“தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள் வாங்கி நீயே
அரு நான்கு மானா யறி”–[நான்முகன் திருவந்தாதி, 5]

இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில்,
“தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற”
(அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற)
என்று காணப்படுகிறது.

முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,

“அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” –[பரிபாடல், 3]

“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,”–[பரிபாடல், 13]

என்று ஜகத் காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.

நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம்- என்று
மற்றொரு விதமாக வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான்.
நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.

ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும்,
திக்குகளைச் செவியாகவும், அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம்
“பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி,
விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:

“யஸ்ய-அக்னிர்-ஆஸ்யம் த்யௌர்-மூர்தா4 கம் நாபிச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: திச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”

[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும்,
திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]

இது ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தின் பனிரண்டாம் பருவமான சாந்தி பருவத்தின் தொடக்கத்தில் வருகிறது.
இவ்வத்தியாயத்தில் ஸ்ரீ பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கையில் ஸ்ரீ கண்ணனை நோக்கி நீண்ட ஸ்துதி ஒன்று பாடுகிறார்.
ஸ்ரீ பீஷ்மர் தன்னைக் கூவி அழைத்ததைத் தன் ஒப்பற்ற ஞானத்தின் மூலம் அறிந்த பகவானாகிய ஹரி,
பாண்டவர்களை அழைத்துக்கொண்டு போர்க்களம் செல்கிறார். அதன் பிறகே ஸ்ரீ பீஷ்மர் நாரணனுடைய அருளால்
அம்புப்படுக்கையில் கிடந்த நிலையிலும் அயர்ச்சியடையாமல் ஸ்ரீ தருமனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும்
ராஜ தர்மம் முதலியன பற்றிய பல அறிவுரைகளைச் செய்கிறார். இப்படி ஸ்ரீ கண்ணன் பாண்டவர்களுடன் ஸ்ரீ பீஷ்மரைக்
காணச் செல்லக் காரணமாய் இருந்த ஸ்ரீ பீஷ்மர் ஸ்துதியிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வரிகளே மேற்கண்டவை.
வெறும் மிகைப்படுத்தப்பட்ட வாழ்த்தாக அமையாமல், இதிகாச-புராணங்களில் வரும் மற்ற ஸ்துதிகளைப் போலவே
இப்பகுதி முழுதும் தத்துவ ஆழம் மிக்க வரிகளாக அமைந்துள்ளன.

இவ்வரிகள் இன்னொரு முக்கியமான செய்தியிக்கு எடுத்துக்காட்டாக சங்கரர் நமக்கு அறிவிக்கிறார்
(ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை
ஆதாரமாகக் கொண்டவையாக இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது.
இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர்.
ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.

சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:

“த்யாம் மூர்தானம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபிம் சந்த்ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூதப்ரணேதா ||”

[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும்,
சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ,
அந்த அறிவுக்கெட்டாத பரமாத்மா அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம், 1.5.107]

ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும்.
ஸ்ரீ சங்கரரால் ஸ்ரீ கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட
“நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும் இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு
மிக அண்மையில் காணப்படுகின்றன. இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில்
காணப்படும் வேறொரு வரியை ஸ்ரீ சங்கரர் மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து
இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.

திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து
மேலும் பல அரிய மேற்கோள்களையும் காணலாம்.
உதாரணமாக ஆதிகவி ஸ்ரீ வால்மீகி முனிவரின் ஸ்ரீ இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஸ்ரீ சீதையை மீட்டு வரும்
தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் ஸ்ரீ இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது.
இப்பகுதியும் பரம் பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை
அடியொற்றிய வண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,

“அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜகத் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தைர்யம் தே வஸுதா தலம்”[ஸ்ரீ இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]
என்று ஸ்ரீ பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும்,
அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும் பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் ஸ்ரீ பிரம்மா.

இம்மரபை ஒட்டியே அமர கோசத்திலும் ஸ்ரீ விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது.
இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.

நாம் எடுத்துக் கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட
வடமொழிச் சுலோகம் ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது.
“தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின்
“ச்’ருதி ஸார ஸமுத்தரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–

“பூ: பாதௌ யஸ்ய கம் சோதரமஸுரநில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்யௌர்முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்தி: |
அந்த:ஸ்தம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-கக-கோ-போகி-கந்தர்வ-தைத்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபுவனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||”

[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும்,
சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும்,
அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ,
எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ,
மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட ஸ்ரீ விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]

இஸ் ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது.
நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில்
“பூ: பாதௌ” என்றும், “விசும்பு மெய்யாக” என்பது “கம் சோதரம்” என்றும்,
“பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது “சந்த்ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.

“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக
“யஸ்ய விச்’வம் ஸுர-நர-கக-கோ-போகி-கந்தர்வ-தைத்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.

இது “ஸர்வம் கலு இதம் ப்ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள)
“சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது.
அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும் “புருஷ ஏவேதம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது.

தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,

“யச் ச கிஞ்சிஜ் ஜகத் ஸர்வம் த்ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் பஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:”

[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும்
சூழ்ந்து ஸ்ரீ நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]என்று இயம்பிற்று.

இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன.
இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு.
இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:

“மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர் பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.” [ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 12.13]

இப்படி ஸ்ரீ கீதாச்சாரியனாகிய ஸ்ரீ கண்ணன் சொல்லுமிடத்தே, “இவரை நினைவில் வைத்துக் கொண்டுத்
தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகலாதாழ்வான்.
தன்னுடைய ஸ்ரீ விஷ்ணு பக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும் ஸ்ரீ பிரகலாதன் இத்தகைய
துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக,
மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார்.
“தூய ஸ்ரீ விஷ்ணு பக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றி யிருந்தார்.

உலகனைத்தும் ஸ்ரீ திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன்.
ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர்.
ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம்.
இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.”

“அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்”
[விஷ்ணு புராணம், 1.17.82-90]என்னும் ஸ்ரீ பிரகலாதன் கூற்றைக் காணலாம்.
இக்காரணத்தால் ஸ்ரீ கம்பர்,
“தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82]என்று
பிரகலாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார்.
“வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம்.
“பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் அந்தராத்மா அச்சுதனே, அனைத்தும் அவன் சரீரமே” என்று பார்க்கையில்,
“ஒரு சிலர் மாத்திரம் வேண்டியவர்கள், ஏனையோர் வேண்டாதவர்கள்” என்றோ,
“இவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நம் ஜாதிக்காரன் ஒழுங்காக இருந்தால் போதும்”
முதலான பாகுபாடுகளுக்கும் சுயநல புத்திக்கும் இடமில்லை.

நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,பாடலின் கடைசி இரண்டு வரிகளான
“வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”
இவை முகில்வண்ணனை வேத முதற் பொருளாக அறிவித்து, அவனைச் சக்கரப்படை ஏந்தியவனாக
அடையாளம் காட்டும் வரிகளாம்.
“வேத முதல்வன்” என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும்,
புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும்.
இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே,
இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு
தகுந்த இடத்தில் சமஸ்கிருத நூல்களிலும் மூலத்தைக் காணலாம்.

(1) “வேதம் கூறும் முழு முதற் பொருள்”:

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரைநூலில் “வேத முதல்வன்” என்ற இடத்திற்கு,
“வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியை யுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறா நிற்பர்;
ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு” என்னும் விளக்கம் காணப்படுகிறது.

இக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் திருமால் பிரபஞ்சத்தின் காரணப் பொருளாக அறிவிக்கப்பட்டார்.
பின்பு வேதத்தில் கூறப்பட்ட பரப்ப்ரஹ்மம் என்று அறிவிக்கப்பட்டார்.
ப்ரஹ்ம சூத்திரமும் இங்ஙனமே பரம்பொருளை அறிவிக்கின்றது.
முதல் சூத்திரத்தில், “இனி பரம்பொருளை அறிவோம்” (“அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ:”) என்று அறிவித்து
இரண்டாம் சூத்திரத்தில், “எதனிடமிருந்து பிரபஞ்சத்தின் தோற்றம் முதலானவை ஏற்படுகின்றனவோ” (“ஜன்மாதி3 அஸ்ய யத:”) என்றும்,
மூன்றாவது சூத்திரத்தில், “மறை மூலம் அறியப்படுகிறது” (“சா’ஸ்த்ர யோனித்வாத்”) என்றும் இலக்கணம் கூறிற்று.

நான்மறைகளின் முடிவாகத் திருமால் அறியப்படுவதால் “வேதாந்த வேத்யன்” என்று அவனை அழைப்பதுண்டு
(வேத்3ய: = அறியப்படுபவன்). இப்படி அவனை “மறைவழியாக அறியப்படுபவன்” என்று அறிவிக்கக் காரணமென்?
“இதிகாச-புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் அறியப்படுபவன்” என்று கூறலாமெனின்,
அந்நூற்கள் பொய்யா மறையாகிய வேதத்தை, அதாவது “சுருதிகளைச்” சார்ந்தே நிற்பவையேயன்றி,
தனித்து நிற்பவையாகா. சுருதியாகிய வேதம் ஒன்றே எதையும் சாராமல் தனித்து நிற்கும் பிரமாணமாகும்.

அத்துடன், வேதமென்பது பரமனுடைய வாய்மொழியே என்று வேதமே அறைகிறது.
அயல் நாட்டவர் ஒருவர் நம் தாய்மொழியிலேயே நமக்கு வணக்கம் கூறினால் மகிழ்கின்றோமே,
அது போல வேதத்தின் வழி அவனை அறிவதால் பரமனுக்கு உகப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு தாய் தன்னுடைய குழந்தை “அம்மா”” என்று தான் பேசும் மொழியிலேயே என்று
அழைப்பதைக் கேட்பதால் எவ்வளவு ஆனந்தப்படுகிறாள்? அதுபோலவே,

“புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;”[– பரிபாடல், 13]

“‘அன்னை நீ; அத்தன் நீயே;அல்லவை எல்லாம் நீயே;”[– கம்பராமாயணம், IV, வருணனை வழி வேண்டு படலம், 72]

“தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாயாகின், ஐய!”[—- கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 54]

என்று அனைவரும் இசைந்தபடி, பிரபஞ்சம் அனைத்துக்கும் தாயாகக் கூறப்படும் பரமனுடைய குழந்தைகள்
அவன் சொந்த மொழியாகிய வேதத்தின் வழியிலேயே அறிந்து வணங்குவதில் அவனுக்குப் பேரானந்தம். ஆகையால்,
“வேத முதல்வன்” என்று கூறுதலின் சிறப்பு விளங்கிற்று.
இதைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோரும் நன்கறிந்தனர் என்பதை,

“மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து”

“பதினாயிரம் கை முது மொழி முதல்வ”

“முன்னை மரபின் முது மொழி முதல்வ”[– பரிபாடல், 3] என்று பாடியதிலிருந்து காணலாம்.
இதிலிருந்து, நற்றிணைப் பாயிரப்பாடலானது சங்க காலத்திற்குச் சற்று பின்பே எட்டுத் தொகை நூற்கள் தொகுக்கப்பட்ட
காலத்தில் தான் சேர்க்கப்பட்டது எனினும், பழந்தமிழர் மரபைக் காட்டும் சங்கநூல் கூறும் செய்தியையே
எதிரொலிக்கின்றது என்னும் கருத்துடன் இசைவதற்கு இடமுள்ளது.

ஸ்ரீ கீதாச்சாரியனாகிய ஸ்ரீ கண்ணனும், “வேதைச்’ ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்3ய:”
[அனைத்து வேதங்களாலும் அறிவிக்கப்படுபவன் யானே — ஸ்ரீ பகவத் கீதை 15.15] என்று கூறுகிறான்.
“அனைத்து வேதங்களும் இவனையே கூறுகின்றன என்று எப்படி சொல்ல முடியும்?
இந்திரனும், அக்னியும், வருணனும், வாயுவும் கூட தான் வேதத்தில் படிக்கப்படுகின்றனரே?” என்ற கேள்வியை எழுப்ப,
வங்கதேசத்து அத்வைத தத்துவ ஞானியும், பரம பக்தருமாகிய மதுசூதன சரஸ்வதியின் உரையில் பதில் கிடைக்கிறது:

“(ஸ்ரீ கண்ணன் கூறுகிறான்) வேதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் படிக்கப்படுகின்றனராயினும்,
உண்மையில் மறையானது அவர்களுக்கு உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கும் என்னையே கூறுகின்றது. ஏனெனில்,
‘இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிம் ஆஹுரதோ2 திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மாந்.
ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி அக்நிம் யமம் மாதரிச்’வாநமாஹு:’ என்று மந்திரமும்,
’ஏஷ உஹ்யேவ ஸர்வே தேவா:’ என்று உபநிடதமும் கூறுகிறது” [– கூடார்த்த தீபிகை, ஸ்ரீ கீதை 15.15-க்கு உரை].

ஸ்ரீ திருமாலின் ஆயிரம் பெயர்களுக்குச் சங்கரர் உரையில், “ச’ப்தச’:” (#912), “கதித:” (#848), “மந்த்ர:” (#280)
என்ற நாமங்களுக்கான விளக்கங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.
இவையனைத்தும் பரம்பொருளுக்கு மறை கூறும் இலக்கணமாகும்.
சங்கரருடைய கீதையுரைக்கு ‘டீகை’ இட்ட ஆனந்தகிரியும் மேலெடுக்கப்பட்ட 15.15-ஆம் சுலோகத்தின் கீழ்
“வேதத்தால் அறியப்படும் பரம்பொருள் பகவான் அன்றி வேறா என்ற சந்தேகம் தீரும்படி ஸ்ரீ கண்ணன் உரைக்கின்றான்”
என்று விளக்கியுள்ளார்.

மறைமுடிவாகிய உபநிடதம் பரமனையே சொல்ல வருகின்றது என்ற செய்தியை ஸ்ரீ கம்பரும்,
“சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை;”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 98]

“‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன்பெருந் தன்மை தான் தெரி
மறைகளின் தலைகள், “மன்பெரும் பரமார்த்தம்” என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. “[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 100]
என்று பல இடங்களில் பாடியுள்ளார். இவ்விளக்கம் தொடர்பாகவே, பரமனுடைய
“கோவிந்தன்” (#539) என்ற நாமத்திற்குச் சங்கரர் சஹஸ்ரநாம உரையில் “‘கோ’ என்பதை ‘மொழி/பதம்’ என்ற
பொருளுடையதாய் எடுக்கலாம். ஆகையால, ‘கோவிந்தன்’ என்பதற்கு ‘பதங்களால் அறியப்படுபவன்’,
அதாவது வேதாந்த வார்த்தைகளால் அறியப்படுபவன் என்று பொருள் கொள்ளலாம்.” என்று விளக்கம் கூறியுள்ளார்.
இக் கருத்தையே “அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம்” என்று திரு நெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வாரும்,
அதைப் பின்பற்றி வருவதைப் போல,
“அன்னவூர்தியை முதலாம் அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறி நின்றார் நினையாரோ.”[– ஸ்ரீ கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 55]
என்று கம்பரும் பாடியுள்ளதைக் காண்க
(அந்தணர் மாடு = அந்தணர்களுடைய ஒரே செல்வமாகிய வேதம், அந்தணர் மாட்டு அந்தி = வேதாந்தம்).

(2) “வேதத்தின் முதலில் ஓதப்படும் ஓங்காரத்தின் உட்பொருள்”:
வேதத்திற்கும் மூலமாய் அமைந்துள்ள ஓங்கார அட்சரமே திருமாலின் வடிவம் என்று மறைகள் அறிவிக்கின்றன.
அத்துடன், வேதம் ஓதும்போது முதலிலும் முடிவிலும், “அரி ஓம்” என்று பரமனின் பெயரை ஓம்காரத்தோடு
ஒரே வேற்றுமையில் படிப்பது உலகவழக்கு. ஆகையால், வேதத்திற்கு முதலில் ஓதப்படுவதால்
‘வேத முதல்வன்’ என்று முகில் வண்ணனைப் பாடுவதாகவும் கொள்ளலாம்.

இச்செய்தியைக் கம்பரும்,
‘ஓங்காரப் பொருள் தேருவோர் தாம் உன்னை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம்”, “அன்று” என்று,ஊழி கண்டாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கிலா உரவோர்.’[– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 110]
என்று பாடியுள்ளார்.
ஆதியிலும் அந்தத்திலும் ஓதப்படும் ஓங்காரத்திற்கு உயிராய் நிற்பவன் பரமனே என்று
ஸ்ரீ நாராயணீய உபநிஷதத்தில்,
“யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித: |
தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய ய: பர: ஸ மஹேச்’வர: ||”[– தைத்திரீய ஆரண்யகம், 10.10.6]
எனும் மந்திரம் செப்புகிறது.

இம்மந்திரத்தை ‘ஸ்ரீதரர்’ என்பவர் தாம் எழுதிய பிராசீனமான பாகவத வியாக்கியானத்தில் பின்வரும் சுலோகத்திற்கு
மூல வேதப் பிரமாணமாகவும் எடுத்துள்ளார். இச்சுலோகமும் நாம் கூறும் கருத்தைக் கூறுகின்றது:
“பிண்டே வாயு-அக்னி-ஸம்சு’த்தே ஹ்ருத்-பத்ம-ஸ்தம் பராம் மம |
அண்வீம் ஜீவ-கலாம் த்4யாயேன் நாதாந்தே ஸித்த பாவிதாம் ||”
[என்னுடைய சூட்சும ரூபத்தை பக்தன் தன்னுடைய சுத்தீகரிக்கப்பட்ட உடலின் நடுவில், இதயத்தில்,
உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாகத் தியானிக்க வேண்டும். பரமனது இந்த வடிவத்தை ஆன்ம ஞானம் பெற்ற
முனிவர்கள் ஓங்காரத்தின் அசைவின் இறுதியில் தியானிப்பர் — ஸ்ரீமத் பாகவதம், 11.27.23]

ஸ்ரீ கீதையிலும் ஸ்ரீ கண்ணன் இவ்வர்த்தத்தை எட்டாவது அத்தியாயத்தில் (8.13) உரைத்தான்.
மேலெடுக்கப்பட்ட ஸ்ரீ நாராயணீய மந்திரம் கூறும் பொருளையே ஸ்ரீ கம்பர் பிரகலாதன் வாய் மொழியாகக் கூறியுள்ளார்:

“‘சுருதி ஆதியில் தொடங்கு உறும் எல்லையில் சொன்ன ஒருவன், யாவர்க்கும் நாயகன்,
திருப்பெயர், உணரக் கருதக் கேட்டிடக் கட்டுரைத்து இடர்க் கடல் கடக்க உரிய மற்று இதின் நல்லது ஒன்று
இல்’ என உரைத்தான்.”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, இரணியன் வதைப் படலம், 40]
“ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால், தூமமும் கனலும் போல்
தொடர்ந்த தோற்றத்தான்.”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76]

ஸ்ரீ திவ்யகவி பிள்ளை பெருமாள் ஐயங்காரும்,
“பூங்கா விரிப்புனற் கோவில் உள்ளே மிக்க போகமெலாம்
யாங்காண யோகத்துயில் கொள்வார் மெல்லெயும் போய்
நீங்காதுலகத் துயிர்க் குயிராகி நீயாமகனாய்
ஓங்கார மாயமாய் நின்ற ஒண் சுடரே.”[– ஸ்ரீ திருவரங்க மாலை] என்று ஸ்ரீ அஷ்டபிரபந்த நூலொன்றில் பாடியுள்ளார்.

(3) “வேதத்தை அருளிய முதல்வன்”:
இது புராணக்கதை கூறும் செய்தியின் அடிப்படையில் எழுந்த விளக்கம்.
கல்பத்தின் தொடக்கத்தில் ‘மது’ ‘கைடபன்’ என்று இரு அரக்கர்கள் வேதத்தைப் பிரமனிடமிருந்து அபகரித்து மறைத்தனர் என்பதும், பெருமாள் பரிமுகனாக (ஹயக்ரீவ) அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார் என்பதும், அன்னமாக உருவெடுத்து (ஹம்ஸாவதாரம்) சிறகடித்து பிரளய நீர் வரண்டு போக, நான்முகனாருக்கு அதை ஓதுவித்தார் என்பதும் புராணங்கள் கூறுபவை. ஆக, வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பதாலும், “வேத முதல்வன்” என்னும் அடைமொழி பொருந்தும். இதனாலேயே மணிவண்ணனை “வாய்மொழிப் புலவ” என்றும் “தொல் இயல் புலவ” என்றும் பரிபாடலில் (முதல், மூன்றாம் பாடல்களில்) பழந்தமிழர் பாடினர். இவைகளில் வரும் “புலவ” என்ற பதத்தை இரண்டு விதமாகப் பொருள் கொண்டு “வேதத்தைப் புலப்படுத்துகிறவன்” என்றும் “வேதத்தாற் புலப்படுபவன்” என்றும் விளக்கம் கூற இடமிருக்கிறது. அன்னமாய் அவதரித்து உயிர்கள் உய்யும்பொருட்டு மறைகளை வெளிப்படுத்திய இப் புராணக்கதையை ஒட்டி,

“‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்’ எனவும்,”[– பரிபாடல், 2]
என்று சங்ககாலத்தவரும்,

”அன்னமாய் நூல் பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே”,
“அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த”[– ஸ்ரீ பெரிய திருமொழி, 9.4.2, 11.4.8]
“புள்ளதாகி வேத நான்கு மோதினாய தன்றியும்”[– ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 19]என்று ஆழ்வார்களும்,

“அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ, அவை உன்னை முன்னம் ஆர் ஓதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்றாதல்,பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை ஏனமாய் மண் இடந்தாய்! ”
[– ஸ்ரீ கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், விராதன் வதைப் படலம், 59]என்று கம்பரும் பாடியுள்ளனர்.

இச்செய்தி வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதத்திலும்–
“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்’ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தேவம்-ஆத்மபுத்தி-ப்ரகாச’ம் முமுக்ஷுர்வை ச’ரணமஹம் ப்ரபத்யே ||”
[எவன் ஆதியில் பிரமனைப் படைத்து அவனுக்கு வேதத்தை ஓதுவித்தானோ, அந்தத் தேவனை, ஆன்மாவிற்கும்
அறிவிற்கும் ஒளிதருபவனாய்த் திகழும் அவனை வீடுபேற்றினை விரும்பும் நான் சரணடைகிறேன் — சுவேதாச்வதார உபநிடதம், 6.18.]
என்னும் இடத்தில் விளக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான சாங்கர பாடியத்தில்,
“குருதம:” (#210) மற்றும் “ஸுமுக” (#456) என்ற இடங்களில் வருகிறது.

இக்கட்டுரையில் இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து இன்னொரு செய்தியும் புலப்படுகிறது.
“வாய்மொழிப் புலவ”, “தொல் இயல் புலவ”, “முதுமொழி முதல்வ”, “மாயா வாய்மொழி” என்று
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதிலிருந்து, அக்காலத் தமிழ் மக்கள்
“வேதமானது காலத்தால் வரையறுக்கப்படாதது” என்றும்,
“ஒருவராலும் புதிதாகப் படைக்கப்படாதது” என்றும் அதனுடைய “அபௌருஷேய” நிலையின் மீது அசையாத நம்பிக்கை
வைத்திருந்த ஆத்திகர்களே என்று தெரிகிறது.
இன்று வரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்துப் பண்பாட்டின் தத்துவவியலைச் சேர்ந்த துல்லியமான விவரங்களிலும்
ஊறியிருந்த விப்ரர்களாக அக்காலத்துத் தமிழ்ச் சான்றோர்கள் விளங்கியிருந்தனர் என்றால் மிகையாகாது.

(4) “உற்சவத்தில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவன்”:
இது அனுபவபூர்வமான, லௌகீகமான, உலக வழக்கு விஷயமான விளக்கமாகும்.
திவ்ய தேசமாகட்டும், வேறெந்த பெருமாள் கோயிலாகட்டும், கருவறைமுன் சென்று அருள்பெற சக்தி இல்லாத மக்களுக்கும்
அவனருள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடக்கும் திருவிழாக்களில் உற்சவர் ரூபமாக
எழுந்தருளச் செய்து பெருமாளை ஊர்வலமாகக் கொண்டு வருவது அனைவருமறிந்த வழக்காகும்.
அப்போது உற்சவருக்குப் பின் வேத முழக்கம் செய்யும் அந்தணர்கள் அவரைத் தொடர்ந்து வருவதுண்டு.
இவ்வழக்கை வைத்தும் “வேத முதல்வன்” என்று திருமாலைக் கூறலாம்.

இதற்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு எனில், இத்தகைய உற்சவங்கள் மிகப் பழமையான காலத்திலிருந்து
நடந்து வந்திருக்கிறது என்று எண்ணுமளவிற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு என்பதே.
அகநானூற்றில் (137-ஆம் பாடல்) “பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்…தீயில் அடுப்பின் அரங்கம் போல” என்று
அரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த புலவரும்,
“விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (61-ஆம் பாடல்) என்று வேறொரு புலவர் கூறுவதிலிருந்தும்,
திருவரங்கத்தில் பங்குனி உத்திரம் மற்றும் திருமலையில் பெரிய விழாக்களும் அந்நாளில்
சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன.
திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா பற்றிய மிகத்தெளிவான குறிப்பும் ‘இறையனார்’ என்னும் சங்கம்
மறுவிய காலப் புலவருடைய ‘அகப்பொருளில்’ காணலாம்:
“ஊர் துஞ்சாமை என்பது — ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது;
அவை மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்,
இவை போல்வன பிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுது இடையீடாம் என்பது”[– களவியல், 16-ஆம் சூத்திரம்].

இப்படிப்பட்ட திருவிழாக்களில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவனாகப் பல தமிழ்ப்புலவர்கள் தொன்று தொட்டு
மாயவனை வாழ்த்தி யுள்ளனர். அவை அனைத்தும் கற்பனை வளம் மிக்கதாயும் காணப்படுகின்றன.
இவர்கள் வரிசையில் முதலில் வருபவர் புகழேந்திப் புலவர்:
“மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயும் காணலாம் – மால்யானை
முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப
வந்தருளும் செந்தா மரை.”[– நளவெண்பா, 334 (கலிநீங்கு காண்டம்)]என்ற பாடலில்,
“கண்ணனை வேத முழக்கத்திற்கு முன் செல்பவனாயும், ஆநிறைகளைப் பின்தொடர்பவனாயும் காணலாம்” என்று
அழகு கொஞ்சும் வரிகளில் பாடியுள்ளார். (காலி = ஆநிறை).

அடுத்ததாக வில்லி புத்தூராழ்வார்,

“உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை கண்டு உருக, வாழ்வு கூர்
தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து வைத்து, ஆடும் மாயனார்,
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத் தவழ்ந்தருளி, மீளவும்
புரியும் நீள் கடைக் கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே. “[– ஸ்ரீ வில்லிபாரதம், ஏழாம் போர்ச் சருக்கம், கடவுள் வாழ்த்து]
எனும் கற்பனை வளம் மிக்க வரிகளில்,
“யசோதை கட்டிய உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் செல்ல அவ்வுரலும் வேதமும்
அவனைப் பின்தொடர்ந்து சென்றன” என்று பாடியுள்ளார்.

மேலும்,
“படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக,
கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல் இணை சிவப்பு ஏற,
தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக துவசன் மா நகர்த் தூது
நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே.”[– ஸ்ரீ வில்லிபாரதம் : படை எழுச்சிச் சருக்கம் : கடவுள் வாழ்த்து]
என்னும் வரிகளில்,
“கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது நடந்த பொழுது வேத முழக்கம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது” என்று
பாடுவது இளங்கோவடிகளுடைய ஆய்ச்சியர்கள் பாடிய முறையைப் பின்பற்றி வருகிறது:
“தொடர்ந் தாரண முழங்கப் பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நா வென்ன நாவே!
நாராயணா வென்னா நா வென்ன நாவே!!”[– சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை]

இறுதியாக, இதில் மற்றொரு வியக்கவைக்கும் தகவல் உண்டு. இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது
வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்!
நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு
தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்!
அவ்வாசாரியார்கள், “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி யாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு
முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி” என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.

————————

வேதங்களின் சிகரங்களாகிய உபநிடதங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை விளக்கும் இடங்களில்,
அச் சிருஷ்டிக்கு முதற்காரணமாகிய ’அவ்யக்தம்’, ‘மூலப் பிரகிருதி’, ‘தமஸ்’ எனப் பலவாகக் கூறப்படும் மாயையானது
ஆதியில் பரம்பொருளுடன் ஒன்றியிருந்த நிலையைக் கூறுகின்றன.
சிருஷ்டிக் காலம் தொடங்கிய பின் ஜடப் பொருளாகிய அம்மாயையிலிருந்து ’மகான்’, ’அகங்காரம்’ என்னும்
தத்துவங்கள் தோன்றின என்றும், அகங்காரத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு,
நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து மண் என்னும் பஞ்சபூதங்களாகப் பரிணமித்தன என்றும் கூறும்.
உபநிடதங்கள் கூறிய வழி பிரபஞ்சம் விரிவதற்கு முன் இருந்த நிலையையும், முறையே பஞ்ச பூதங்கள் தோன்றிய வரிசையையும்
’கீரந்தையார்’ என்னும் சங்கப் புலவர் பாடிய இரண்டாம் பரிபாடலில் கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன:

“தொல் முறை இயற்கையின் மதியொ. … … … … … … … மரபிற்று ஆக,பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,கரு வளர் வானத்து இசையின் தோன்றி,உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” [— பரிபாடல், 2:1-12]
என்பன அவை. இதில் முதலிரண்டு வரிகள் இப்பொழுது உள்ள தொகுப்பில் முழுமையாகக் கிடைக்கவில்லை யெனிலும்,
“மண்ணுலகமும் பசும் பொன்னுலகமும் பாழ்பட, ஒன்றுக்கொன்று மாறி வருதலாகிய பழைய இயல்பினையுடைய
மதியமும் ஞாயிறுங்கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாக விசும்புகெட்ட ஊழிகள் முறைமையாகக் கழிந்தனவாக” என்னும்
பரிமேலழகர் உரையிலிருந்து இவ்வரிகளின் செய்தி நமக்குக் கிடைக்கிறது
(விசும்பு = வானம், ஆகாயம்).

ஊழி கழிந்த இந்நிலையை கேரள தேசப் பண்டிதராகிய ஸ்ரீ நாராயண பட்டரும் ஸ்ரீ நாராயணீயத்தில்,
“வ்யக்தாவ்யக்தம் ந கிஞ்சித்-அபவத்-ப்ராக்-ப்ராக்ருத-ப்ரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்யருத்த விக்ருதௌ த்வய்-யாகதாயாம் லயம் |
நோ ம்ருத்யுச்’ச ததா(அ)ம்ருதம் ச ஸமபூன்னாஹ்னோ ந ராத்ரே: ஸ்திதி:
தத்ரைக: த்வம் அசி’ஷ்யதா கில பரானந்த ப்ரகாசா’த்மனா ||”– — ஸ்ரீமத் நாராயணீயம், 5.1]
[பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது.
அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக் கொண்டு நேராகவோ,
அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை.
பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய். — ]என்னும் பாடலால் குறிப்பிடுகிறார்.
(இங்கு ’மாயை’ என்றும், வேறு சில நூற்களில் ’தமஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள மூலப் பிரக்ருதியின்
இலக்கணமும் பெயரும் நவீன விஞானிகளால் கூறப்படும் “Dark matter” என்பதன் இலக்கணத்தோடும் பெயரோடும்
ஓரளவு உடன்படுவது சிலருக்கு ஆர்வமூட்டலாம். தமஸ் என்பதற்கு இருள் என்றும் பொருள் உண்டு.)

————–

ஸ்ரீ வராகக் கற்பம்
இனி அடுத்து வரும் வரிகளில் கீரந்தையார் சிருஷ்டி குறித்துப் புராணங்களில்
கூறப்படும் செய்தி யொன்றைச் சுருக்கமாக எடுத்துள்ளார். ஊழியின் தொடக்கத்தில் படிப்படியாகப் பஞ்ச பூதங்கள்
முறையாகத் தோன்றிய பிறகு, நான்முகக் கடவுளை நாரணன் பிறப்பித்தான். அதன் பிறகு, நான்முகக் கடவுள்
நாரணன் துணை கொண்டு மரீசி முதலான பிரஜாபதிகளையும் சுயம்பு மனுவையும் (ஸ்வாயம்புவ மநு) படைத்தார்.
காச்யப பிரஜாபதியின் ஒரு மனைவியாகிய அதிதிக்குத் தேவர்களும், மற்றொரு மனைவியாகிய திதிக்கு அசுரர்களும் பிறந்தனர்.
சுயம்பு மனுவும் பிரஜாபதிகளும் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடரும் வேளையில் அசுரர்களுள் ஒருவனாகிய
இரணியாட்சன் பூமியைக் கடலுக்குள் ஆழ்த்தி ஒளித்து வைத்தான்.
நிலம் மறைந்ததால் மேற்கொண்டு பிராணிகளின் சிருஷ்டி தடுக்கப்பட்டது. கல்பத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில்
ஸ்ரீ வாசுதேவன் வெண்ணிற வராகமாய் அவதரித்து அசுரனை வென்று மூழ்கியிருந்த நிலத்தைத் தன் கொம்பிலே
உயர்த்தி மீட்டான் என்பது பல புராணங்களில் வரும் செய்தி.
ஸ்ரீ வராக அவதாரம் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு ஸ்ரீ யஜுர் வேதத்திலும் காணப்படுகிறது.

ஒரு கல்பமானது நான்முகனாகிய பிரம்மாவுடைய ஒரு நாள். இது பத்தாயிரம் கலியுகக் காலங்களுக்குச் சமமாகும்.
கல்பத்தின் தொடக்கத்தில் திருமால் வெண்ணிற ஸ்ரீ வராக வுருக் கொண்டவதரித்து உலகம் காத்ததால்
இக்கல்பத்திற்குச் “ஸ்ரீ சுவேத வராக கல்பம்” என்று பெயர். வைதீக ஒழுக்கத்தில் சங்கல்பம் செய்யும்பொழுது
“ச்’வேத வராஹ கல்பே” என்று கூறும் வழக்கும் இன்றுவரை கடைபிடித்து வரப்படுகிறது.
சங்க காலமாகிய அந்நாளிலேயே இப்பெயர் வழங்கப்பட்டு வந்திருப்பதைப் பரிபாடல்
கீழ்க்கண்ட வரிகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளது:

“நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ் வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின்,
முதுமைக்கு ஊழி யாவரும் உணரா;ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.”[— பரிபாடல், 2:13-19]

“மகா பிரளயம் முடிந்தபிறகு ‘நெய்தல்’, ‘குவளை’, ‘ஆம்பல்’, ‘சங்கு’, ‘கமலம்’, ‘வெள்ளம்’ என்றெல்லாம்
கல்ப காலங்களுக்குப் பெயரிடப்பட்ட வண்ணமே, இப்பொழுது நிகழும் கல்பத்தின் பெயரானது நீ ஸ்ரீவராக வுருவெடுத்து
ஸ்ரீ மண் மடந்தையை மீட்டு வந்த ஒரே ஒரு செயலைக் குறிக்கும் எனப் பார்க்கும்போது,
எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்துள்ள உனது காலத்தை எத்தனை கல்ப காலங்களாலும் அளவிட முடியாது எனத் தெரிகிறது.
ஆகையால் உன் முதுமையை எவராலும் உணர இயலாது.” என்பது இவ்வரிகளின் பொருள்.

இதன் மூலம் மாயோன் அழிவற்று விளங்கி நிற்கும் பரம்பொருளே என்னும் கொள்கையையும்
அவன் அவதாரச் சிறப்பையும் காட்டுகிறார் சங்கப்புலவர்.
இக்கருத்தையே ஸ்ரீ ஆதி சங்கரருடைய சீடரான ஸ்ரீ சுரேஷ்வரர் ஸ்ரீ பிருகதாரண்யக வார்த்திகத்தில்
“முதியவனாகவும் அழிவற்றவனாகவும் விளங்கும் திருமால்”
(“புராண: சா’ச்’வதோ விஷ்ணு:” — 1.4.135, 2.1.268;
“புராண: சா’ச்’வதோ அசிந்த்ய:” — 4.4.1288-1289) என்று கூறியுள்ளார்.

கம்பரின் புலமையும் ஞானமும்
இங்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிபாடலில், தத்துவ விளக்கங்களுக்கு இடையே
கீரந்தையார் நகைச் சுவையாகப் பாடும் பாடற் பகுதி ஒன்று வருகிறது:

“ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும் பூணணி கவைஇய வாரணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதிமறுச் செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண் வைவான் மருப்பின் களிறுமணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று”-— பரிபாடல், 2:28-35

[திருமாலே! மிக உயர்ந்த விசும்பிடத்தே இடப்பட்ட வளைந்த இந்திர வில்லையொத்த பல்வேறுநிற ஔிகளையுடையதும்,
பூணப்படுவனவாகிய பிற அணிகலன்களாலே அகத்திடப்பட்டதுமாகிய உன் மார்பானது, நெடிய அழகிய
முத்துமாலைகளாலே இயற்றப்பட்ட ‘நித்தில மதாணி’ என்னும் அழகிய திங்களுக்குற்ற மறுவைப் போன்று
இலத்சுமிப் பிராட்டியைக் கொண்ட உன் குற்றமற்ற மார்பானது,
‘ஆதி வராகமாகப் பூமியை நீ மணந்தாய்’ என்று கூறுவோர் கூற்றுடன் தகுமோ? தகாது. ]

‘திருமகள் உன் மார்பில் இருக்க, நீ பூமிப் பிராட்டியை மணந்தாய் என்னும் கூற்று தகாது’ என்று நகைச்சுவையாக,
வஞ்சிப்புகழ்ச்சியணியில் பாடியுள்ளார். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரோ,
‘(வாமன அவதாரத்தில்) அளந்தும், (வராக அவதாரத்தில்) நீரிலிருந்து தூக்கி எடுத்தும்,
(பிரளய காலத்தில்) தன்னுள்ளே மறைத்து வைத்தும், (சிருஷ்டிக் காலத்தில் மீண்டும்) வெளிப்படுத்தியும்,
மிகப் பெரிய திருத் தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய்’ பூதேவியிடம் பெருமாள் கொண்டுள்ள அன்பை வருணிக்கிறார்:

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ் புக்
கிடந்திடும், தன்னுள் கரக்குமுமிழும்,
தடம் பெருந்தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால் செய்கின்ற மாலார்க் காண்பாரே.[— ஸ்ரீ திருவாய்மொழி, 2.8.7]

பரிபாடலில் உள்ள விளையாட்டான புகழ்ச்சியை ஸ்ரீ திருவாய்மொழியில் ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய விதத்துடன்
இணைத்து ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் பின்வரும் பாடலில் பாடுகிறார்:

“அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்
ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்
திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!
மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்”
[பாதாள லோகத்தில் அனந்தன் என்னும் பெயருடன் பாம்பு உருவம் கொண்டு பூமியைத் தாங்கி நிற்கிறாய்.
ஸ்ரீ வராக மூர்த்தியாகிக் கொம்பிலே உலகத்தைத் தாங்குகிறாய். பிரளய காலத்தில் விழுங்கி ’ஞாலமுண்டவன்’ எனப் புகழ் பெற்றாய்.
ஸ்ரீ வாமன அவதாரத்தில் ஒரே அடியால் பூமியை உன் திருவடிக்கீழ் ஒளியச் செய்தாய்.
நீ பூமிப் பிராட்டி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை உன் திருமார்பில் வீற்றிருக்கும்
ஸ்ரீ திருமகள் அறிந்தால் சினம் கொள்ள மாட்டாளோ? — ஸ்ரீ கம்பராமாயணம்: III, விராதன் வதைப் படலம், 58]

இவ்வாறு பலவிடங்களில் கவிச் சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ கம்பர் சங்கத் தமிழர் மரபையும்,
ஆழ்வார்கள் வழி மொழிந்ததையும், வேத வேதாந்த இதிகாச-புராண செய்திகளையும் இணைத்தே
தம் காவியத்தில் பல பாடல்களைப் படைத்துள்ளார்.
ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீ கம்பருக்கு இருந்த ஈடுபாட்டினையும் இவற்றிலிருந்து நாம் அறிகின்றோம்.
மேலும் பல உதாரணங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.

———–

வேள்விகளுக்கு நாயகன்
ஸ்ரீ ராகவப் பெருமானின் வீரச் செயலைக் கண்டு மகிழ்ந்த யோகிகளும் முனிவர்களும்,
வேதத்தில் பூர்வ பாகத்தில் கூறப்பட்ட வேள்விகளெல்லாம் திருமால் சொரூபமே என்றும்,
வேள்விகளை வியாபித்து நின்று பலன்களை அளிப்பவனும் அவனே என்றும் பாடுவதாக
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் காட்டுகிறார் [ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.4.31-34].
இவ்வாழ்த்து ஸ்ரீ மகாபாரதப் பகுதியாகக் கருதப்படும் ஸ்ரீ ஹரி வம்சத்திலும் ஸ்ரீ வராக அவதாரம் படிக்கப்படும் இடத்தில் உள்ளது.
ஸ்ரீ ‘யக்ஞ வராகப் பெருமாள்’, ’ஸ்ரீ யக்ஞ மூர்த்தி’ என்ற பெயர்களும் திருமாலுக்கு இதனால் ஏற்படுகின்றன.
உலகவழக்கிலும் ’யக்ஞ நாராயணன்’ என்ற பெயரையும் சிலர் சூட்டிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
சுருதிகளின் சாரமாகிய ஸ்ரீ பகவத் கீதையிலும் கண்ணனும்,
“அதியஜ்ஞோ அஹம் ஏவ” [அதியக்ஞம் எனப்படுவதும் நானே — பகவத் கீதை, 8.4] என்றான்.
இவ்விடத்திற்கு ஸ்ரீ சங்கரர் பாஷ்யத்தில் “யஜ்ஞோ வை விஷ்ணு:”
[வேள்வியைக் குறிக்கும் யக்ஞ சப்தம் விஷ்ணுவே — யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதை, 1.7.4] என்ற
வேத வாக்கைச் சான்றாக எடுத்துள்ளார்.
பல இடங்களில் ஸ்ரீ கண்ணன் இதை மேலும் வலியுறுத்துகிறான் (4.24, 9.16).

ஸ்ரீ கேழலாய் உருவெடுத்து ஊழிக் காலத்தில் உலகம் காத்தவனை வேள்வி நாயகனாகச் சங்கப் புலவரும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வருவதைப் போல ஸ்ரீ வராக வவதாரத்தை விளக்கும் பகுதியிலேயே பாடுகிறார்:
“செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஔி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,நின் உருபுடன் உண்டி;பிறர் உடம்படுவாரா நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.”
[சிவந்த வாயை உடைய கருடனைக் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! வேள்வியாசிரியன் கூறும்
மறைமொழி நினது உருவமாகும்; வேள்வித் தூண் நீயே ஆகலான், அதன்கட் பிணிக்கப்படும் விலங்கு நினது உணவாகும்;
அவ் வேள்வியின் கண் வேத முறைப்படி அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீ நீ அவ் வந்தணர்
கண்கூடாகக் காணும் பொருட்டுத் தோன்றும் வெளிப்பாடாகும் — பரிபாடல், 2:60-68]

இச் செய்தியையே ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும்,

“வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே.”[ — ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 34]என்றும்,
ஸ்ரீ வால்மிகி முனிவர்,
“த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓம்கார: பராத்பர: |
ப்ரபவம் நிதனம் வா தே நோ விது: கோ பவானிதி ||”
[“நீயே யக்ஞமூர்த்தி. ’வஷட்’ என்னும் (வேள்வி நடத்துபவரால் உச்சரிக்கப்படும்) சொல் நீயே. நீயே ஓங்காரம்.
மேலானவைகளுக்கும் மேலானவன் நீயே. உன்னுடைய முதலும் முடிவும் எவரும் அறியார்.” — ஸ்ரீ வால்மிகி இராமாயணம், 6.117.20]
என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்ரீ கம்பரும்
‘மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத, எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ;இரண்டும் ஒக்கின்ற பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி!
[— ஸ்ரீ கம்பராமாயணம்: III, கவந்தன் வதைப் படலம், 47]
என்னும் விருத்தத்தில் வேள்விகளெல்லாம் ஸ்ரீ திருமால் சொரூபம் என்று பாடுகிறார்
(பரமேட்டி = பரம்பொருள்; ’பரமேஷ்டி’ எனும் வடமொழிச் சொல் திரிபு).

திருமாலின் ஆயிரம் பெயர்களை அறிவிக்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அத்தியாயத்திலும்,
வேள்வி முதல்வனாக ஸ்ரீ பரந்தாமனைப் பல நாமங்களில் படிக்கப்பட்டது.
இந்நாமங்களுக்கு ஸ்ரீ சங்கரர் எழுதியுள்ள உரையிலிருந்து சுருக்கமான விளக்கங்கள் பின்வருபவை.
பரிபாடல் வரிகளுக்கும் இவ்வுரைப்பகுதிகளுக்கும் உள்ள ஒற்றுமை தெளிவாக விளங்குகிறது:
இஷ்ட: (308-வது நாமம்) — வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.
ஹவிர்ஹரி: (359) — யாகத்தில் அக்கினியில் இடப்படும் அவிப்பாகத்தை (ஹவிர்பாகத்தை) எடுத்துக் கொள்பவன்.
யஜ்ஞ (445, 971) — வேள்விகளின் சொரூபமாக இருப்பவன்; வேள்வி ரூபத்தில் எல்லா தேவர்களையும் போஷிப்பவன்.
யஜ்ஞபுக் (979) — வேள்விகளில் வழங்கப்படும் அவியுணவை நுகர்பவன்.
யஜ்ஞாங்க: (974) — வராகமூர்த்தி ரூபத்தில் வேள்விகளை அங்கமாகக் கொண்டவன்.

இத்தகைய விளக்கங்களுக்கெல்லாம் அடித்தளமாக விளங்கும் தத்துவம் என்னவென்றால்,
ஸ்ரீ நாரணனே அனைத்துயிர்களுக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவனே என்பதாம்.
அங்ஙனமே, அந்தந்த தேவதைகளைக் குறித்துச் செய்யப்படும் யாகங்கள் எல்லாம் எல்லா தேவர்களுக்கும் உயிராய்,
அவர்களுக்கு உள்ளிருந்து நியமிப்பவனாக விளங்கும் ஸ்ரீ மாயவனைக் குறித்ததே என்பதாகும்.
ஸ்ரீ கண்ணன் இதை ஸ்ரீ கீதையில் தெளிவாக விளக்குகிறான். இதை,

“ஆங்கனைத்து வேள்விகளுக்கு மாராத் தியனானே
பாங்கதனி னானே பலங்கொடுப்பே — னீங்கென்னை
யிவ்வா றறியா ரிதனாலத் தத்துவத்தின்
அவ்வா நழுவுவர்சார் வற்று.”[ — ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 9.24]
என்ற ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரின் தமிழ் வெண்பாவிலிருந்து அறியலாம் (ஆராத்தியன் = வணங்கப்படுபவன்).
மிகவும் கடினப்பட்டுப் பொருளீட்டி யாகங்களைச் செய்தே கண்ணனை வழிபடவேண்டும் என்பதும் இல்லை;
அவன் எளிதில் அடையக்கூடியவன். அவரவர்களுக்கு இயன்ற ஒரு இலையையோ, மலரையோ, கனியையோ,
அல்லது மிஞ்சிப் போனால் சிறிது தண்ணீரையோ பக்தர்கள் தூய மனத்துடன் அவனுக்குச் சமர்ப்பித்தால்
மிகப்பெரிய பேறாகிய வீட்டின்பத்தைக் கண்ணன் தருகிறான் என்பதை,

“பத்ரேஷு புஷ்பேஷு பலேஷு தோயேஷு அக்ரீத லப்யேஷு ஸதைவ ஸத்ஸு
பக்தி-ஏக லப்யே புருஷே புராணே முக்த்யை கிமர்தம் க்ரியதே ந யத்ன”
[பத்திரம் (இலை), புஷ்பம், பழம், தண்ணீர் முதலானவைகளைக் கொண்டு பக்தி செய்வதாலேயே எளிதில்
அடையப்படுபவனாக அந்த புராண புருஷன் இருக்க, மோட்சத்தைப் பெறும் முயற்சியில் ஏனோ இறங்குவதில்லை!]
என்ற ஸ்ரீ மகாபாரத வசனம் கூறுகிறது.

ஸ்ரீ கீதையிலேயே ஸ்ரீ கண்ணனும்,

“பத்திரமும் பூவும் பழமும் புனலுமெனக்
கொத்தியலும் பத்தி யுடனுதவி — சுத்திய
தூமனத்தான் றன்ததனைத் துய்ப்பனவ னப்பத்தி
யாமனத்த தென்றுநா னார்ந்து.”[ — ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 9.26]என்று உரைத்துள்ளான்.

இன்னுமொரு செய்தி இங்கு நோக்கத்தக்கதாகும். விஷ்ணுவுக்கும் வேள்விக்கும் உள்ள தொடர்பை வைத்து
சில அதிசயமான விளக்கங்களை வேதாந்த ஆச்சாரியர்கள் அளித்துள்ளனர்.
ஸ்ரீ கீதையில் (3.9), “யக்ஞத்திற்காகச் (வேள்விக்காகச்) செய்யப்படும் வினைகளைத் தவிர மற்ற கர்மங்கள்
ஒருவனைப் பிறவிக்கடலில் ஆழ்த்துபவை” என்று உள்ளது.
இங்கு ஸ்ரீ ஆதி சங்கரர், “யக்ஞம் என்று இங்கு சொல்லுவது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணுவையே.
’யஜ்ஞோ வை விஷ்ணு:’ என்று வேதம் கூறுகின்றதன்றோ. ஆகையால், பகவானை அடையும்/ஆராதிக்கும் பொருட்டு
செய்யப்படும் கர்மங்களைத் தவிர மற்றவை சம்சாரத்தில் ஆழ்த்தும்.” என்றே வியாக்கியானம் செய்துள்ளார்!
பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆனந்தகிரி என்னும் பண்டைய அத்வைத சம்பிரதாய ஆசாரியாரும்
“யக்ஞம் முழுமை பெறுவதன் பொருட்டு செய்யப்படும் கன்ம வினைகள் ஞானியைச் சம்சாரக் கடலில் ஆழ்த்துவதில்லை”
என்று தொடங்கும் 4.23-ஆம் ஸ்ரீ கீதை வாக்கியத்திற்கு,
“யக்ஞம் என்ற பதத்தால் குறிக்கப்படும் பகவான் ஸ்ரீ நாராயணனை, ஸ்ரீ விஷ்ணுவை, உகப்பிக்கச் செய்யப்படும் வினைகள்”
என்று தமது பாஷ்ய டீகையில் வழங்கியிருப்பதும் நோக்கத் தக்கது.
‘இறைவனை உகப்பிப்பதைத் தவிர தாழ்ந்த மற்ற பலன்களில் ஈடுபடாமல் கடமைகளை செய்து
மக்கள் நற்கதி ஏந்தவேண்டும்’ என்பதே அவர்கள் நோக்கம்.

———————-

“மா நிலம் இயலா முதல் முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய் மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!”[– பரிபாடல், 3]

சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களின் மேற்கண்ட கூற்றில், நம் ஹிந்து சனாதன தருமத்தில் சிருஷ்டி குறித்த
முக்கிய நம்பிக்கை ஒன்று இடம்பெறுகிறது. “மகா பிரளயம் முடிந்த பிறகு ஆதிக் கல்பத்திலே
பெரிய அளவதாகிய பூமி தோன்றுவதற்கு முன் பிரளய நீரின் நடுவே, வாய்மொழியாகிய வேதத்தை
உரைக்கும் பிரம்ம தேவருடன் ஒரு தாமரை மலர் தோன்றியது. மகரந்தப் பொகுட்டை உடைய அப் பெரிய தாமரை மலரை
உந்தியில் கொண்ட திருமாலது திருச் சக்கரப் படையே (இந்த உலகனைத்திற்கும்) நிழலாகிறது” என்பது இவ்வரிகள் வரையும் படிமம்.

திருமகள் கொழுநனுடைய திருநாபியிலிருந்து ஊழிக் காலங்களின் தொடக்கத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியதென்பதும்
அதில் நான்முகனாராகிய பிரம்ம தேவர் படைக்கப்பட்டார் என்பதும் தொன்றுதொட்டு நம் வேதங்களிலும் இதிகாச-புராணங்களிலும்
வழங்கப்பட்டு வரும் செய்தியாகும். கலையுலகம் ஓங்கியிருந்த காலங்களில் பாரதநாடெங்கிலும்,
தென்கிழக்காசிய நாடுகளிலும், சிற்பிகளும் ஓவியக் கலைஞர்களும் இப் படிமத்தைத் தம் ஆக்கங்களில் பதித்துள்ளனர்.
மேலும், இவ்விதிகாசத்தைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களும் அறிந்திருந்தனர் என்பது மேற்கண்ட பாடல் வரிகள் காட்டும் செய்தி.

திருவுந்தித் தாமரையை நினைவுப்படுத்தவே ‘பத்மனாபன்’ முதலான நாமங்களும் அவனுக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் ’பத்மனாப சுவாமி’ என்ற பெயருடன், “கிடந்த திருக்கோலத்துடன்” கோயில் கொண்டுள்ள
திருவுருவைப் பற்றிச் சேர வேந்தர்களைக் குறித்த ’பதிற்றுப்பத்து’ என்ற சங்கநூலிலேயே உள்ளது;
விரிவாக வேறொரு கட்டுரையில் காண்போம். இப்பொழுது பொதுவாகத் திருநாபிக் கமலம் கூறும் தத்துவத்தைச்
சங்க இலக்கியம் விளக்கும் விதத்தையும், அது வடமொழி நூல்களோடும் ஒத்திருப்பதையும் காண்போம்.

வேதப்பகுதியிலேயே நான்முகன் உட்பட உலகமெல்லாம் ஸ்ரீ நாரணனின் திருநாபிக் கமலத்தில் உண்டாயிற்று
என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளதாக ஆசாரியார்களும் உரைகளில் குறிப்பிடுகின்றனர்:

“அஜஸ்ய நாபாவத்யேகம் அர்பிதம் யஸ்மின் விச்’வானி புவனானி தஸ்து:”
என்பது ரிக்வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் (10-வது மண்டலம், 82-வது சூக்தம்) வரும் மந்திரம்.
“பிறப்பில்லாதவனுடைய நாபியிலே ஒன்று உண்டானது. அதில் உலகனைத்தும் நிலைபெற்றன.” என்பது இதன் பொருள்.
சிருஷ்டியை விளக்கும் மிக முக்கியமான சூக்தத்தில் இம்மந்திரம் வருகிறது.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் தாம் பண்ணிய ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், அத்தியாயத்தின் மூலப்பகுதியில்
“அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்மநாபோ (அ)மரப்ரபு:”
எனுமிடத்தில் வரும் ’பத்மனாபன்’ என்ற நாமத்திற்கு, “சர்வ ஜகத் காரணமாகிய தாமரை மலர் எவன் நாபியில் இருக்கிறதோ,
அவன் பத்மனாபன்” என்ற விளக்கத்தைக் கூறி அங்கேயே மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தைப் பிரமாணமாக எடுத்துள்ளார்.

ஆதி சங்கரரின் இவ் வேத விளக்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் ஸ்ரீ மகாபாரதத்தில் ஒரு சுலோகம் வருகிறது.
அம்புப் படுக்கையில் கிடந்த வண்ணம் ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம்.
அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக)
வருவதைப் பற்றியும் பார்த்தோம். நாம் எடுக்கப்போகும் இச்சுலோகமும் அப்படித்தான் —
மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தின் பொருளை விளக்குகிறது:

“அஜஸ்ய நாபாவத்யேகம் யஸ்மின் விச்’வம் ப்ரதிஷ்டிதம் |
புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்மாத்மனே நம: ||”[– ஸ்ரீ மகாபாரதம், 12.47.40]

“பிறப்பில்லாத தாமரைக்கண்ணனுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரை உலகத்திற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிற்று.
அந்தத் தாமரை வடிவில் உள்ள அவனுக்கு வணக்கங்கள்” என்பது இதன் பொருள்.
இச் சுலோகம் சொல் அமைப்பிலேயே வேத மந்திரத்துடன் ஒத்திருப்பதும் நோக்கத்தக்கது.

அதே வேதமந்திரத்தை விளக்கும் பின்வரும் ஸ்கந்த புராணச் சுலோகமானது,
த்வைத மத ஆசாரியாராகிய மத்வரால் ப்ரஹ்ம சூத்திர விளக்கவுரையில் பிரமாணமாக எடுக்கப்பட்டுள்ளது:

“அஜஸ்ய நாபா4விதி யஸ்ய நாபேர்பூச்ச்ருதே: புஷ்கரம் லோகஸாரம் |
தஸ்மை நமோ விஸ்தஸஸ்த விச்’வபூதயே விஷ்ணவே லோககர்த்ரே ||”

[பிரபஞ்சத்தை உள்ளடக்கிய தாமரையானது, ’அஜஸ்ய நாபௌ’ (பிறப்பற்ற பெருமான் திருவுந்தியிலே)
எனத் தொடங்கும் வேத வாக்கியத்தாலே எவனுடைய நாபியிலிருந்து உண்டானதாக அறியப்படுகிறதோ,
வெளிக் காணும் எல்லா உலகையும் செல்வமாகக் கொண்ட உலகங்களுக்குக் காரணமான
அந்த ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம். — ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திர மாத்வ பாஷ்யம் 1.1.1]

இவ்விளக்கங்களுடன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்கள் பாடும் பின்வரும் வரிகளையும் ஒப்பிட்டுப் படிக்கலாம்:

“பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரி கமல வுந்தியுடை விண்ணவனை”[– சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை]

இவ்வாறு பிரமனையும் படைத்த திருமாலின் உந்தித் தாமரை மலர் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகிப் பெரிதாகக் காணப்பட்டது.
இந் நினைவாலேயே, இவ்வுலகில் பிரம்மாண்டமாக அழகுடன் விரிந்து காணப்படுவனவற்றிற்கும்
அம் மலரையே உவமையாகக் கூறினர் சங்கப் புலவர்கள்:

1) பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில், ஸ்ரீ காஞ்சி நகரத்திற்கு
ஸ்ரீ திருமாலின் உந்தித் தாமரை உவமையாகக் கூறப்பட்டது:

“நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்,
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்,
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி”[– பெரும்பாணாற்றுப்படை, 401-405]

(நெடியோன் = திருமால், கொப்பூழ் = வயிறு, பொகுட்டு = பூவின் இடையில் காணப்படும் மகரந்தக் கூட்டம்)

2) இதுபோலவே, மதுரையைப் பற்றிய பரிபாடல் திரட்டுப் பகுதியும் இதே உவமையைக் கூறிற்று:

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.”[– பரிபாடல் திரட்டு, 7]

இப்பாடலைப் பாடிய புலவர், தாம் வாழும் ஊரான மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி
மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும்
அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய
அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம்.
அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம்.
அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும்
பருகப் பறந்து வரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம்.

அத்துடன், அத் தாமரை மலரின் கண் தோன்றிய பிரமனது வாயில் பிறந்த நான்கு வேதங்களையும்,
அவ்வூரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் அதிகாலையில் பாராயணம் பண்ணுகிறார்களென்று
மேற் கண்ட சங்கநூற் பாடல் வரிகள் கூறுகின்றன.
இவ்விடத்தில், “பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்து நான்கு வேதங்கள் பிறந்தன” எனும்
புராணச் செய்தியையும் காணலாம் [ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.5.48; ஸ்ரீ பாகவத புராணம், 3.12.34-37].

இப்படி உவமைகள் போய்க் கொண்டிருக்க, ஸ்ரீ திருமாலின் அவயவங்களுக்கு எதை அளவையாகச் சொல்ல?
வேறிடத்தில் புலவர்கள்,

“‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;”
[மாயக்கண்ணனே! ’இவரைப் போல நீ இருக்கிறாய், இத்தகைய தொழில்களை உடையாய்’ என்று கூறும்
வண்ணம் வேறு ஒன்றைக் காணாமையால், உயிர்கட்கு முதல்வனாகிய – பீதாம்பரம் அணிந்த –
வலக்கையில் சக்கரம் கொண்ட உன்னையே, உனக்கு உவமையாகக் கூறுவோம். — பரிபாடல், 1]
என்று “அவனுக்கு அவனே உவமையாவான்” கூறுகையால்,
“நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை
அன்ன நாட்டத்து அளப்பரியவை;”
[பெருமானே! உன்னிடத்தே தோன்றிய அடர்த்தியான இதழ்களைக் கொண்டுள்ள தாமரையைப் போன்ற
அழகிய கண்களை உடையாய் — பரிபாடல், 4] என்றனர்.

விஸ்வகர்மா சூக்தம் தவிர இன்னும் சில வேத வாக்கியங்கள்
நான்முகனைப் படைத்த உந்தித் தாமரையின் தத்துவத்தைக் கூறுகின்றன.
விரிவிற்கந்சி ஒரு உதாரணத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
கொப்பூழ்த் தாமரை பற்றிய குறிப்பு மூல மறைநூலாகிய வடமொழி வேதத்திலேயே உள்ளமையால்,
“வேதமாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரை” என்றும் பழந்தமிழ்ப் பெரும்புலவர் பாடியுள்ளனர்:

“‘வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும்
நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.”
[திருமாலே! வேத/உபநிடதங்களாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரைப்பூவினுள் பிறந்தவனும்,
அவன் தந்தையும் நீயே என்று அந்தணர்கள் ஓதும் மறை மொழிகிறது — பரிபாடல், 3]
மேற்கண்ட வரிகளில் நான்முகக் கடவுளாகிய பிரமனைத் திருமாலுடன் அபேதமாகப் படிக்கப்படுவதும் நோக்கத்தக்கது.
முதற் பரிபாடலிலும் இதே பொருளையுடைய வரியொன்று உள்ளது.
’உலகத்தில் காணப்படும் காரியப் பொருள்களனைத்தும் திருமாலே.
நிகழ்வதெல்லாம் அவ் விறைவனின் லீலைகளே’ என்று படித்துவிட்டு இறுதியில்,
“நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ”
[நன்மை முழுதும் பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும்,
மலரின் மேலிருப்பவனாகிய பிரமனும், அப் பிரமனுடைய தொழிலாகிய படைப்புத்தொழிலும் நீயே — பரிபாடல், 1:45-46]
என்று சங்கப் புலவர்கள் பாடுகிறார்கள்.

ஸ்ரீ கம்பரும்,

“‘ஆதிப் பிரமனும் நீ!
ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு
அப்பால் உண்டாகிலும் நீ!
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘
என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ
வேறு உள்ளார்?”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம், 45]என்றார்.
இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கண்ட வரிகள் பிரபஞ்ச சிருஷ்டியில்
காரியப் பொருளுக்கும் காரணப் பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.
திருமால் காரண நிலை; நான்முகன் முதலான சித்துக்களாகிய ஆத்மாக்களையும், அசித்துக்களாகிய ஜடப்பொருள்களையும்
அடக்கியுள்ள பிரபஞ்சமானது காரிய நிலை. பொதுவாகப் பார்த்தால் காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருப்பதாலும்,
குறிப்பாகப் பார்த்தால் நாரணனே பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உயிருக்கு உயிராய் இருப்பதாலும்
காரியமாகிய பிரமனைக் காரணமாகிய திருமாலோடு அபேதமாக,
“தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும் நீ” என்று பரிபாடல் வரிகள் இயம்பின.
இப்படிப் பொருள் கொள்ளாமல் நேரிடையாக திருமாலும் பிரமனும் எல்லா வகையிலும் ஐக்கியம் என்று கொண்டால்,
பரம்பொருளின் அருளுக்கு உட்பட்டவராகவும், காரியநிலையிலுள்ள ஒருவராகவும் பிரமனைக் குறித்து வரும்
பற்பல வேத வாக்கியங்கள் அர்த்தமற்றுப் போய்விடும்;
காரணப் பொருளுக்கே உண்டான தனிப்பட்ட குணங்கள் பரம் பொருளுக்கு உண்டு எனும்
வேத வாக்கியங்கள் கேள்விக் குறிகளாகி விடும்.

நான்முகனைப் படைக்கும் திருமாலது தனிப் பெருமையை,
“பிரமனையும் படைத்த ஆதி கர்த்தாவே!”, “’பிதாமஹ’ என்று சொல்லப்படும் பிரமனுக்கும்
தந்தையாகிய உன்னை ’பிரபிதாமஹ’ என்று சொல்லலாம்” [– கீதை, 11.37,11.39]
என்று அர்ஜுனனும் கீதையில் கண்ணனைத் துதிக்கையில் செப்பினான்.
ஸ்ரீ கௌசல்யா தேவியை வர்ணிக்கும் பொழுது ஸ்ரீ கம்பர்,
“இருந்த அந்தணனோடு எல்லாம் ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை”[– ஸ்ரீ கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம், 62]
என்று பாடுகிறார் (இருந்த அந்தணன் = நான்முகக் கடவுள்).

ஸ்ரீ திராவிட வேதமாகிய பிரபந்தத்திலும்,

தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக”[– ஸ்ரீ திருவாசிரியம், 1] என்று ஸ்ரீ நம்மாழ்வாரும்,

“பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற,
கோவலர் கோவிந்தனை” [– ஸ்ரீ பெரிய திருமொழி, 9.9.1 ]என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்,

“என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்”[– ஸ்ரீ நாச்சியார் திருமொழி, 102]
என்று ஸ்ரீ ஆண்டாளும்,
இன்னும் பல ஆழ்வார்களும், இப்பெருமையைப் பாடியுள்ளனர்.

படைக்கும் கடவுளாக பிரமனையும் படைத்தவனாகக் காணப்படுவதால் ஸ்ரீ திருமால் சகல காரணங்களுக்கும்
காரணனாகிறான். இக்காரணத்தால்,

“நமோ நமஸ்தே அகில காரணாய
நிஷ்காரணாய அத்புத காரணாய”[– ஸ்ரீமத் பாகவதம், 8.3.15]

என்று ஸ்ரீ கஜேந்திராழ்வான் முதலைப் பிடியிலிருந்து விடுபட “ஆதி மூலமே” என்று ஸ்ரீ கண்ணனை அழைக்கும் போது கூறுகிறான்.
உலகத்திலுள்ள காரணப் பொருள்கள் எல்லாவற்றுக்கும், அந்தந்த பொருட்களுக்கு மேலான ஒரு காரணப்பொருள் காணப்படுகிறது:
குடத்துக்குக் காரணம் மண்ணும் குயவனும், ஆனால் அம்மண்ணுக்கும் குயவனுக்கும் வேறு காரணப்பொருள் இருக்கிறது.
இப்படி காரிய-காரண தொடர்ச்சி போய்க்கொண்டிருக்க, ஒரே ஒரு காரணப்பொருள் மாத்திரம் தனக்கு மேல்
ஒரு காரணம் இல்லாதபடி தனித்து நிற்கிறார் (‘நிஷ்காரணாய’).
அவர் எல்லாவற்றுக்கும் மூல காரணமாகிறார் (‘அகில காரண காரணாய’).
இப்பெருமைகள் வேறெந்த காரணப் பொருளுக்கும் காணப் படாமையால்,
அவரே ’அற்புத காரணன்’ (‘அத்புத காரணாய’) என்று ஸ்ரீ கஜேந்திரனால் அழைக்கப்படும் ஸ்ரீ திருமால்.

——————-

தெய்வ வடிவத்தை ஆலயங்களில் வழிபடுவது நம் பாரத நாடெங்கிலும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரப்படும் வழக்கமாகும்.
அங்கு பிரதிட்டையான விக்கிரகத்தை ‘வெறும் கல்’ என்றோ, ‘எண்ணங்களைச் சீர்ப்படுத்திக் குவிக்கத் தேவையானால்
உபயோகிக்கத்தகதொரு வெறும் கருவி’ என்றோ, ‘பக்குவமடையாத ஆன்மாக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட படிநிலை’ என்றோ பார்க்காமல்,
‘தெய்வம் தன் அடியவர்களுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் எளிய வடிவம்’ என்ற கண்ணோட்டத்துடன் அணுகுவதே
சான்றோர்களால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.
ஸ்ரீ ஆதி சங்கரரும் ப்ரஹ்ம சூத்திர உரையில் ஸ்ரீ பாஞ்சராத்திர அதிகரணத்தில் (2.2.42-2.2.45 சூத்திரங்கள்)
“இறைவனை அபிகமனம் (கோயிலுக்குச் செல்லுதல்) முதலான வழிமுறைகளால் ஆராதனம் செய்வது
அனைவர்க்கும் ஏற்கத்தக்கதே; இது சுருதி-ஸ்மிருதி சித்தமாகும்” என்று கூறியுள்ளார்.

இசுலாமியக் கொடுங்கோல் மன்னர்கள் நம் கோயில்களைச் சூறையாடுவதையும், நம் சனாதன தருமத்தை அழிப்பதையும்
நோக்கமாகக் கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தியது அனைவரும் அறிந்த வரலாறு.
அத் தருணங்களில் சான்றோர்கள் பலர் மூல மூர்த்திகளையும் உற்சவ மூர்த்திகளையும் காப்பாற்ற உயிரையே பணயம் வைத்தனர்;
பெரும் அல்லல்களையும் சந்தித்தனர். “வெறும் கற் சிலை. இது போனால் வேறு செய்து கொள்ளலாம்” என்ற
கொள்கையை உடையவர்களாக இருந்திருந்தால், அப் பெரியோர்கள் அத் தியாகங்களைச் செய்திருப்பார்களா
என்பது அனைவரும் சிந்திக்கத்தக்கது.

தத்துவ ஆழம் மிக்கதும் மிகுந்த இன்பம் தரக்கூடியதுமாகிய உருவ வழிபாட்டின் அருமை பெருமைகள்
அன்னிய மதத்தவர்கள் மனதிற்கு எட்டாக்கனி; கருத்துச் செறிவும், பிரமிக்கத்தக்க அழகும், பண்பட்ட கலையுணர்வும் சேர்ந்த
இந்நம்பிக்கையின் மேன்மையை உணர வாய்ப்பும் இல்லாமல்,
அதனை ‘அறிவற்ற பழங்குடிக் கலாச்சாரம்’ என்றெல்லாம் தூற்றுகின்றனர் அந்தோ! இத்தகைய சாரமற்ற, கலாரசனையற்ற,
தூற்றுதல்களுக்கெல்லாம் மாறாக, வேத, வேதாந்த, இதிகாச-புராணங்களில் வல்லவர்களாக விளங்கிய
நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஆலயங்கள் மீது எத்தகைய உயர்ந்த அபிமானத்தை வைத்திருந்தனர் என்பதைக்
காட்டுவது இக் கட்டுரையின் ஒரு நோக்கம். இத் தொடரின் மற்ற பகுதிகளைப் போல,
சங்க காலம் தொட்டு ஸ்ரீ திருமால் சமயம் சார்ந்த செய்திகளை இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ திருமால் கோயில் கொண்டுள்ள திருமேனிகளை ‘அர்ச்சாவதாரங்கள்’ என்றே அழைக்கின்றனர்.
ஸ்ரீ திருமாலின் ஐந்து நிலைகளாகிய ‘பரம்’, ‘வியூகம்’, ‘விபவம்’, ‘அந்தர்யாமி’, ‘அர்ச்சை’ என்பனவற்றில்
ஐந்தாவதாகச் சொல்லப்படுவது. இவ்வைந்து நிலைகளையும் சுவாமி ஸ்ரீ நம்மாழ்வார்,

“விண் மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!”[ஸ்ரீ திருவாய்மொழி, 6.9.5] எனும் பாசுர வரிகளில் காட்டியுள்ளார்.
இதில் ‘விண்மீதிருப்பாய்’ என்பது பர வாசுதேவனாக ஸ்ரீ வைகுண்டத்தில் கோயில் கொண்டுள்ள பர நிலையைக் குறிக்கிறது;
‘மலைமேல் நிற்பாய்’ என்பது திருவேங்கடம் முதலான திருத்தலங்களில் அர்ச்சை நிலையைக் குறிக்கிறது;
‘கடல் சேர்ப்பாய்’ என்பது திருப்பாற்கடலில் அனந்த சயனக் கோலத்தில் உள்ள வியூக நிலையைக் குறிக்கிறது;
‘மண்மீதுழல்வாய்’ என்பது இராமன் கண்ணன் முதலான வடிவங்களைக் குறிக்கிறது; இதுவே விபவ அவதார நிலையாகும்.
‘இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்’ என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து, உயிருக்குயிராய் அனைத்தையும்
ஆள்பவனாக விளங்கும் அந்தர்யாமி நிலையைக் குறிக்கிறது.

மேற்கண்ட பாசுரமும் வடமொழி வேதவாக்கியம் ஒன்றை ஒட்டியே வருகிறது. அது தைத்திரீய உபநிடதத்தின்
ஸ்ரீ நாராயணீய அனுவாகத்தில்
(சிலர் இதை ‘ஸ்ரீ மகா நாராயண உபநிஷத்’ என்றும், சிலர் ‘ஸ்ரீ யாக்ஞிக உபநிஷத்’ என்றும் அழைக்கின்றனர்) உள்ள,
“அம்பஸ்ய பாரே பு₄வனஸ்ய மத்₄யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் |
சு’க்ரேண ஜ்யோதீஹும்ஷி ஸமனுப்ரவிஷ்ட: ப்ரஜாபதிச்’ சரதி க₃ர்பே₄ அந்த: ||”–என்னும் முதல் மந்திரம்.
இம்மந்திரமானது பதத்திற்குப் பதம் மேற்கண்ட ஸ்ரீ திருவாய்மொழிப் பாசுரவரிகளுடன் உடன்படுகிறது.
ஸ்ரீ நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அழைப்பது வெறும் மிகைப்படுத்திப் புகழ்வதற்காக ஏற்பட்ட அடைமொழியன்று;
இவ்வாறு நூற்றுக் கணக்கான பாசுரங்களில் வடமொழி வேதாந்தத்தின் உட்பொருளை உண்மையிலேயே தமிழில் செய்திருக்கிறார் என்பதற்காக.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும்
சிறப்பானவை, முழுமையானவை. எனினும், அர்ச்சை நிலையானது அனைவராலும் எளிதில்
அடையத்தக்கதாக – எளிமையின் சிகரமாக இருப்பதனால் மற்ற நான்கிற்கும் இல்லாத
தனிப்பெரும் பெருமை உள்ளதாகப் பெரியோர்கள் பகர்வர். அனுபவத்திற்காகச் சில பெரியோர்கள் இப்படி விளக்கம் கூறுவர்:
(1) பிறவிப் பிணி நீங்கப் பெற்று முக்தி நிலையை ஏந்தியவர்கள் வாழும் ஸ்ரீ பரம பதத்தில், பிறவி நோய்க்கு மருந்தாகிய
ஸ்ரீ திருமால் ஸ்ரீ பர வாசுதேவனாகக் கோயில் கொண்டிருப்பது, வற்றாத கடலுக்கு நீர்ப்பாசனம் செய்வதைப் போன்றதாம்.
(2) ஸ்ரீ பாற்கடலில் வியூக மூர்த்தியாகப் பள்ளி கொண்டிருக்கும் வடிவமானது நல்வினைப் பயன்களால்
உயர்பதவி ஏந்தியுள்ள தேவர்கள், முனிவர்கள் முதலானோர்க்கு மட்டும் அடையக்கூடியது.
(3) அந்தர்யாமி நிலையானது எங்கும் வியாபித்திருக்கும் தன்மையாகும். இந்நிலையானது நமக்கு மிக அருகில் –
ஏன், நமது இதயத்திலேயே – இருந்தாலும், அதுவும் யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்குமே எட்டக் கூடியது.
“முழுமதி முகத்தவனின் வடிவழகையும் கம்பீரத்தையும் தம் இதயத்தாமரை தன்னில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும்
மகானுபாவர்களுக்கு எனது வணக்கங்கள்” என்று தியாகப் பிரம்மம் பாடுவதிலிருந்து
அந்த அந்தர்யாமி நிலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்றே விளங்குகிறது.
(4) விபவ அவதாரம் என்பது ஸ்ரீ இராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைக் குறிக்கும்.
என்றைக்கோ பெருக்கெடுத்து ஓடியிருந்தாலும் இன்றைக்கு நாம் நேரிடையாகப் பயனடையாதபடி வற்றியுள்ள காட்டாறு போன்று,
வேறு யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு மாத்திரமன்றோ விபவாவதாரத்தை நேரில் கண்டு கூடிக் குலாவும் அனுபவமும் கிட்டியது!
(5) அர்ச்சை நிலை என்பது இன்று வரையிலும் என்றென்றும் அனைவருக்கும் காட்சி தரும் மிக எளிய நிலையாகும்.
ஸ்ரீ இராமன், ஸ்ரீ கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால்,
பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில்
இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில்
குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும்.
ஆகையால், பரப் ப்ரஹ்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு.

“எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளைக் கோயில் கருவறையில் ஒரு சிறிய உருவமாகக் காண நினைப்பது சரியா?”
என்ற ஐயம் பலருக்கு எழக் கூடும். பரம் பொருள் தன் சொரூபத்திற்கு – இலக்கணத்திற்கு ஏற்றவாறு எங்கும் நீக்கமற
முழுமையுடன் நிறைந்திருப்பதற்கு “பொதுப் படர்தல்” என்று பெயர்.
எங்கும் நிறைந்துள்ள பொழுதும் மெய்யடியவர்கள் கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் தாம் விரும்பும் மூர்த்தியை
அமைத்து வழிபட விரும்பும் பொழுது அவ்வுருவில் இறைவன் மறுபடியும் தன் கலியாண குணங்களுடன் இறங்கி வந்து,
அதை சுத்த சத்துவமாக மாற்றித் திருமேனியாகவும் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு “சிறப்புப் படர்தல்” என்ற பெயருண்டு.
“பொதுப் படர்தல்” வகையைச் சேர்ந்தவைகளுக்கு முக் குணங்களின் தாக்கமும் அதனால் விளையும் குறைபாடுகளும் உண்டு;
ஆயினும் “அங்கும் பரம் பொருள் உள்ளது” என்ற மனோபாவத்துடன் அவ்வப் பொருள்களுக்கு ஏற்றவாறு
தக்க மரியாதையைத் தருவது அவசியமே. ஆயினும், வழிபடத்தக்க – பூஜிக்கத்தக்க உருவங்கள் என்பது
“சிறப்புப் படர்தல்” வகையைச் சேர்ந்தவையே; அவற்றிற்கு முக் குணங்களின் சம்பந்தமில்லை.
(வட மொழியில் இவ்விரண்டு வகையான படர்தலுக்கும் “சாமானிய வியாப்தி“, “விசிஷ்ட வியாப்தி” என்று பெயர்.
இவ்விளக்கம் இக்குறும்படத்திலுள்ள சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்டது.)

ஸ்ரீ கோயில்களில் உள்ள அர்ச்சை வடிவங்கள் சுத்த சத்துவ மயமானவையே என்ற நம்பிக்கை
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டும் அல்ல.
ஸ்ரீ நாராயண பட்டரும் ஸ்ரீ நாராயணீயத்தின் முதலிரண்டு சுலோகங்களில் இதை வலியுறுத்தியுள்ளார்:

“ஸாந்த்₃ரானந்தா₃வபோ₃தா₄த்மகம் அனுபமிதம் காலதே₃சா’வதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃ம-ச’த-ஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமானம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்த்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்-தாவத்₃-பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவனபுரே ஹந்த பா₄க்யம் ஜனானாம் ||”–ஸ்ரீ நாராயணீயம், 1.1-

[நிறைந்த ஆனந்த மயமானதும், ஞான மயமானதும், ஒப்பில்லாததும், இடம், காலம் முதலிய வரையறை களுக்குள் உட்படாததும்,
இரு வினைகளால் விளையும் களங்கங்களிலிருந்து என்றைக்கும் விடுபட்டதும், நூறாயிரம் வேத வாக்கியங்களாலும் தெளிந்து
அறிய வொண்ணாததும், வீட்டின்பத்தை அளிக்க வல்லதுமாகிய ஸ்ரீ ப்ரஹ்ம தத்துவமானது எளியோர்க்கும் கிட்டும்படியாக,
கண் கூடாக, ஸ்ரீ குருவாயூரில் நின்று மிளிர்கிறது. என்ன பாக்கியம் செய்தோம் ஜனங்களாகிய நாம்! — ]

ஸ்ரீ நாராயணீயத்திற்கு உரை எழுதிய ‘ஸ்ரீ தேச மங்கள வாரியார்’ என்பவர் முதல் சுலோகத்திற்கு விளக்கம் எழுதும் பொழுது
ஸ்ரீ குருவாயூரில் உள்ள அர்ச்சை விக்கிரகத்தைப் “ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய,
ஸ்ரீ குருவாயூரில் மிகத் தெளிந்த சுத்த சத்துவ மயமான திருமேனியுடன், சகல ஜனங்களின் கண்களுக்கும் எட்டும்படியாக
இறங்கி வந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய அபிமானத்துடன் ஸ்ரீ திருமாலை ஸ்ரீ கோயில்களில் பிரதிட்டை செய்து பழந்தமிழர்கள் ஆராதித்து
வந்துள்ளமை சங்க இலக்கியங்கள் கூறும் செய்தி.

“அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே”[– பரிபாடல், 4:66-71] என்பன சங்க இலக்கியத்தில் உள்ள வரிகள்.
ஸ்ரீ திருமால் வெவ்வேறு பெயர்களுடன் அடியவர்கள் விரும்பும் வண்ணம் ஸ்ரீ கோயில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

இதில் “நல் யாற்று நடுவும்” என்னும் பகுதி ஸ்ரீ ரங்கத்தையும்,
“கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பது ஸ்ரீ திருவேங்கடத்தையும் (ஸ்ரீ திருப்பதி) குறிப்பதாகச் சில அறிஞர்கள் கொள்வர்.
பரிமேலழகர் உரையில் “ஆற்றிடைக் குறையும்” என்று காணப்படுகிறது (குறை = சிறிய தீவு).
“கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பதற்கு “காலத்தால் சேர்க்கப்பட்ட முன்வினைகளை அறுத்து
முக்தி நிலையை அளிக்கும் குன்றம்” என்று பொருள் கொண்டால் திருவேங்கடத்தையும் குறிக்கிறது எனலாம்.

ஸ்ரீ கம்பரும்,
‘கோடு உறு மால் வரை யதனைக் குறுகுதிரேல், உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்;’[– ஸ்ரீ கிட்கிந்தா காண்டம், நாட விட்ட படலம், 29]
என்ற பாடலில் ஸ்ரீ சுக்கிரீவன் வானரர்களைச் சீதையைத் தேடுமாறு அனுப்பும் பொழுது,
“நீங்கள் ஸ்ரீ திருவேங்கட மலைக்கு மாத்திரம் போகாதீர்கள். அங்கு சென்றால் முக்தி நிலை கிடைத்து விடும்.
நீங்கள் அந்நிலையைப் பெற்று விட்டால் ஸ்ரீ சீதையை யார் தேடுவது?” என்று நகைச்சுவையாகப் பாடுகிறாரன்றோ.

மேலும், ‘பனம்பாரனார்’ என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில்
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும்,

“நிலங் கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை”
என்று விளக்கியுள்ளமையும் நோக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீ திருமால் ஸ்ரீ வாமன அவதாரத்தில் மகாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை
“நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்.

இத்தொடரின் இரண்டாம் பகுதியில் ஸ்ரீ உறையூரில் பங்குனி உத்திர விழா நடந்து வந்ததைப் பற்றியும்
சங்க நூல் குறிப்புகள் இரண்டைக் கண்டோம். இத்தகைய சான்றுகளில் சற்றே ஊகித்துத் தான் ஸ்ரீ திருமால் ஸ்ரீ கோயில்
கொண்டுள்ள தலங்களைக் குறிப்பதாக அறிகிறோம். ஆகையால் இது பற்றி நியாயமான கருத்து வேற்றுமையும் ஐயங்களும் எழலாம்.
எனினும் சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாக இவ்விரு தலங்களில் வழிபாடு சிறப்புற்று இருந்தமைக்குச் சான்று கிடைக்கிறது.

மதுரைக் காண்டத்தின் காடு காண் காதையில் கோவலன் மாங்காடு சென்றிருந்த பொழுது அங்கு வடநாட்டைச் சேர்ந்த
முதிய வைதிகர் ஒருவரைக் கோவலன் சந்திக்கிறான். அவரை “எதற்குத் தென்னகம் வந்தீர்?” என்று கோவலன் வினவ, அதற்கவர்:

“‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்” [ — சிலப்பதிகாரம், 11.35-41]

(துருத்தி = ஆற்றின் நடுவில் உள்ள தீவு; திரு அமர் மார்பன் = இலக்குமி தேவியார் அமர்ந்திருக்கும் திருமார்பை உடையவன்;
கிடந்த = சயனித்த)என்ற வரிகளில் தான் ஸ்ரீ திருவரங்கத்தில் ஸ்ரீ திருமால் பள்ளி கொண்ட கோலத்தையும்,

“வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடை நிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்” [ — சிலப்பதிகாரம், 11.42-55]
(பகை அணங்கு ஆழி = பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் சக்கரப்படை; மின்னுக் கோடி = மின்னல்)
என்ற வரிகளில் ஸ்ரீ திருவேங்கடத்தில் அவன் நின்ற கோலத்தையும் கண்குளிரக் காண்பதற்காகவே தமிழகம் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

“மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல” என்னும் வரிகளில்,

“நீல தோயத₃ மத்₄யஸ்த₂ வித்₃யுல்லேகைவ பா₄ஸ்வர:” [ — ஸ்ரீ நாராயண சூக்தம்]
என்று வேதம் ஸ்ரீ திருமாலுக்குக் கூறும் உவமையைத் தமிழாக்கம் செய்கிறார் இளங்கோ.

மேற்கண்ட சிலப்பதிகாரப் பாடல் வரிகளிலிருந்து ஆலய வழிபாடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கும்
முன்பிருந்தே பெரிதாகச் சிதறல் சிதைவுகள் ஏதுமில்லாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளமைக்குத்
தெளிவான சான்று கிடைக்கிறது. இத்தகைய சங்க கால / சங்கம் மருவிய கால இலக்கியச் சான்றுகள் மேலும்
சிலவற்றை விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.

———————-

ஸ்ரீ திருவரங்கம், ஸ்ரீ திருமலை ஆகிய இரண்டு தலங்களோடு மாத்திரம் அல்லாமல், தமிழகத்தில் மேலும் பல
ஸ்ரீ வைணவத் திருத்தலங்கள் சங்ககாலத்திலேயே பிரபலமான வழிபாட்டுத் தலங்களாக விளங்கியிருந்தன. அத் தலங்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை (மாலிருங்குன்றம்):
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை–பேச்சு வழக்கில் “ஸ்ரீ அழகர் கோயில்” எனும் புகழ் பெற்ற ஸ்ரீ திருமாலிருஞ்சோலையானது,
பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் பழமையிலும் பெருமையிலும் குறைவிலாத் தலமாகும்.
சங்ககாலத்தில் இத்தலத்தில் ஸ்ரீ பலராமனுக்கும் கோயில் இருந்ததாகப் பரிபாடலிலிருந்து அறிகிறோம்.
இம்மலையும் அதைச் சார்ந்த கோயிலும் தொன்றூதொட்டு இன்றுவரை மக்களை ஈர்த்திருக்கிறது.
இது பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து புலனாகிறது. டாக்டர். வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் அவர்கள் எழுதிய
“108 ஸ்ரீ வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் உள்ள குறிப்புகளின் மூலம் இதை அறியலாம்-
இது தவிர ஸ்ரீ இராமானுஜரின் பிரதான சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வானும் 132 சுலோகங்களைக் கொண்ட பெரிய நூலாகிய
“ஸ்ரீ சுந்தர பாஹு ஸ்தவம்” என்ற வடமொழி ஸ்தோத்திரத்தையும் படைத்திருக்கிறார்.

இக் கோயிலைப் பற்றிச் சங்கப் புலவர்களும் பாடியுள்ளனர். பதினைந்தாம் பரிபாடல் இத்தலத்தைப் பற்றிப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது.
இப்பகுதியில்,
“மலைகளிலே புகழ் வாய்ந்த, பழம் புலவர்களால் பாடப்பெற்ற மலைகள் பல உள்ளன.
அவற்றுள் மனிதர்களுக்குப் பல பயன்களைத் தரும் மலைகள் சிலவே உள்ளன.
அவற்றுள் தெய்வங்கள் விரும்பும் மலைகள் இன்னும் சில. அச் சிலவற்றுள், பலதேவனையும் திருமாலையும் தாங்கி
நிற்கின்ற மாலிருங்குன்றம் சிறந்ததாகும்” [– பரிபாடல், 15:1-14] என்று இத் தலத்தின் சிறப்பு பாடப்படுகிறது.

தமிழகத்தின் வட எல்லையின் தலையாய திருத்தலம் ஸ்ரீ திருவேங்கட மலை என்றால்,
அதற்கு ஈடாகத் தெற்கே ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை உள்ளது.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்“
என்று ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் ஸ்ரீ திருவரங்கத்தமுதனாரும் அருளிச் செய்தார்.
பண்டைய தமிழிலக்கியங்களின்படி இவ்விரு மலைகளுக்கும் வேறொரு ஒற்றுமையுமுண்டு:

“வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.“புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம், 42
முறைமை கொண்ட வேடத்தை உடையோய்! நீயும் நறுமணைத்தை உடையதாகிய – ஒலிக்கும் அருவிகளால்
பொலிவு பெற்ற ஸ்ரீ திருவேங்கடத்திற்குப் போவாயானால், ஐம்பொறிகளால் உண்டாகும் தீவினைகளெல்லாம்
நீங்கப்பெற்று ஸ்ரீ திருவாழியாகிய சக்கரப்படையை ஏந்தும் ஸ்ரீ திருமாலின் அருளைப் பெறுவாய் —
என்று தீவினைகளையெல்லாம் நீக்கி வீடு பேறு அளிப்பதாகப் பாடப்பட்ட ஸ்ரீ வடவேங்கடத்திற்கு இணையாக,
ஸ்ரீ திருமாலிருங்குன்றமும் முக்தியளிக்கும் குன்றமாகத் தெற்கே விளங்கியிருப்பதை,

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.” [ — பரிபாடல், 15:15-18] என்னும் சங்கப்பாடல் வரிகள் காட்டுகின்றன.
இம்மாலிருங்குன்றமானது, திருமால் அருளாலன்றி பெறுதற்கரிய வீடுபேற்றினை, எளிதில் கிடைக்கக் கூடியதாகச் செய்யும்
சிறப்பினை உடையது என்று மேற்கண்ட வரிகளில் புலவர்கள் பாடுகின்றனர்.

“ஏவம் துர்லப்ய வஸ்துனி-அபி ஸுலபதயா ஹஸ்தலப்தே யதன்யத்
தன்வா வாசா தியா வா பஜதி பத ஜன: க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் |
ஏதே தாவத்-வயம் து ஸ்திரதரமனஸா விச்’வபீடாபஹத்யை:
நிச்’-சே’ஷாத்மானமேனம் குருபவனபுர-அதீச’ம்-ஏவ-ஆச்’ரயாம: ||“

[இத்தகைய பெறுதற்கரிய (முக்தி நிலை என்னும்) பொருளானது (அனைவரும் வந்து அருள் பெறும்படி)
எளிதில் கைக்கு எட்டும்பொழுது, அதை விட்டு (பொன்னும், பொருளும், புகழும், பதவியும் போன்ற) யாதொன்றை
உடலாலோ வாக்காலோ புத்தியாலோ மக்கள் அடைய விரும்புகிறார்களோ, அப்பொருள் கீழானதென்று விளங்குகிறது.
ஆகையால், நாம் உறுதி பூண்ட உள்ளத்துடன் அனைத்து பிறவித் துன்பங்களையும் நீக்க வல்ல
ஸ்ரீ குருவாயூர்க் கோமானாகிய ஸ்ரீ கண்ணனையே தஞ்சமாகக் கொள்வோம். — ஸ்ரீமந் நாராயணீயம், 1.2]
என்று ஸ்ரீ குருவாயூரைக் குறித்து ஸ்ரீ நாராயணபட்டர் பாடிய சுலோகத்தின் பொருளும் இங்கு ஒப்பிடத் தக்கது.

இத்தகைய பழம்பெருஞ் சிறப்பு வாய்ந்த இத் தலத்தில் “நூபுர கங்கை” என்ற புண்ணிய நதி இன்றும் உள்ளது.
முத்துசுவாமி தீட்சிதர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ள “ஸ்ரீ ஸுந்தரராஜம் பஜேஹம்” என்ற காசீராமக்ரியா (பந்துவராளி) இராகத்தில்
அமைந்துள்ள கீர்த்தனையிலும் “நூபுர கங்கா தீர்த்த ப்ரபாவ மாதவம்” என்ற வரிகள் உள்ளன.
தமிழில் இது “சிலம்பாறு” என்று வழங்கப்பெறும். “நூபுரம்” என்பதற்கு வடமொழியில் “சிலம்பு” என்று பொருள்.
ஸ்ரீ திருமால் அண்டமனைத்தையும் ஈரடியால் அளந்த பொழுது பிரம்மாவின் லோகத்தை ஒரு பாதம் வருட,
அப்பொழுது நான்முகக் கடவுள் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமாலின் அப் பாதத்தைக் கழுவ,
அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது.
ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. இச்சிலம்பாற்றின் பெருமையும் சங்க இலக்கியமாகிய பரிபாடலிலேயே
திருமாலிருஞ்சோலைமலை குறித்த பாடலிலேயே வருகிறது. அதில்,
“ஆதிசேடனின் அவதாரமாகவும், கண்ணனுக்கு அண்ணனாகவும் விளங்கும் பலராமனுடைய
வெண்கடம்பு மாலையைப் போல விளங்கி நின்ற சிலம்பாறு” என்று பின்வரும் வரிகள் கூறும்:

“அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்” [— பரிபாடல், 15:19-23]

சிலப்பதிகாரமும் மதுரைக்காண்டம் காடு காண் காதையில் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை விளக்குகிறது. அதில்,

“நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை“ என்ற வரியில் “நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரை” என்று
இளங்கோவும் பாடியுள்ளார். சிலம்பாற்றின் சிறப்பை இப்படிப் பல இலக்கியங்கள் பேசுகின்றன.

கள்ளழகர்
இம்மலையைப் பற்றிய மேலும் பல செய்திகளையும் கூறுகின்றது.
“108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” புத்தகம் இதை நன்றாக விவரிக்கிறது:
“ஸ்ரீ திருமாலைத் தரிசித்துவிட்டு ஸ்ரீதிருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள
மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான்.
‘இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் ஸ்ரீ திருமால் குன்றத்தை அடைவீர்கள்.
அங்கே ஒரு சுரங்க வழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம்.
அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன.
புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள்.
பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும்.
இட்ட சித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கை கூடும்.’”

ஸ்ரீ மாலிருங்குன்றத்தின் சிறப்பைப் பரிபாடல் மேலும் பாடுகிறது. அவ்வரிகளின் பொருள் பின்வருமாறு:
“நீர் நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும்
வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை ஸ்ரீ திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும்.
ஆகையால், ஸ்ரீ கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே
அம் மலையையாவது கண்டு தொழுங்கள்.
“அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்.
மயில்கள் அகவ, குருக்கத்தி மரங்கள் இலையுதிர அதனின்றும் குயில்கள் கூவும்.
அம்மலையின் குகைகளிலே எழுகின்ற எதிரொலி நிற்காது.”

“கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலை”
“தண்டலை ஆர் திருமாலிருஞ் சோலை” ,
“பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலை” என்று திவ்யகவி ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய
ஸ்ரீ அழகர் அந்தாதியில் உள்ள வருணிப்பு இங்கு ஒப்பிடத்தக்கது. இங்ஙனம் பரிபாடல் அம்மலையின் இயற்கை எழிலையும் வருணிக்கிறது.
“ஸர்வகந்த” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்வதால் வெறும் “நீல மலர்கள்” என்று அல்லாமல்,
“நறுமணம் கமழும் நீல மலர்களே” இவ்வரிகளில் திருமாலின் திருமேனிக்கு ஒப்பாகிறது.

“புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ இருங்குன் றத்தான்“

[தன் உந்தியிலே தோன்றிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையும், நீரைத் தாங்கிச் செல்லும் மேகத்தையும்
நீல மணியையும் ஒத்த திருமேனியையும் உடையவனாய், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு, உயிர்க்கூட்டங்களின்
பிறவித் துன்பத்தை அறுக்கும் திருமால், அக்குன்றத்தே ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான் — பரிபாடல், 49-53]

இவ்விடத்தில் கண்களை வருணிக்கும்பொழுது “தஸ்ய யத: கப்யாஸம் புண்டரீகம் இவ அக்ஷிணீ” என்ற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியமும்,
திருமேனியை வருணிக்கும்பொழுது “நீல தோயத மத்யஸ்த வித்யுல்லேகைவ பாஸ்வர:” என்ற தைத்திரீய உபநிஷத் வாக்கியமும்
புலவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது.
“அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (உயிர்க் கூட்டங்கள் பிறவித்துன்பம் களையப்பெற தஞ்சம் புகும் இடம்)”
என்பது “ஸ்ரீ நாராயணன்” என்ற திரு நாமத்தின் பொருளை உணர்த்துகிறது.
அங்ஙனம் பிறவியறுக்கும் ஸ்ரீ திருமாலே அம்மலையில் எழுந்தருளியுள்ளான் என்று கூறியிருப்பதும் பழந்தமிழர்கள்
‘ஸ்ரீ கோயிலில் எழுந்தருளியிருப்பவன் தெய்வமே வெறும் கற்சிலை அன்று’ என்ற கொள்கையை உடையவர்களாயிருந்ததைக் காட்டுகிறது.
“அன்பது மேஎ இருங்குன் றத்தான (ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான்)” என்பது மற்ற இடங்களில் பொதுவாக வியாபித்திருப்பது
போல் அல்லாமல், தன் திருக்கல்யாண குணங்களுடன் சிறப்பாக எழுந்தருளியிருப்பதைக் காட்டுகிறது.

—————-

ஸ்ரீ கூடல்/இருந்தையூர் (மதுரை):-ஸ்ரீ கூடல் அழகர்

“ஸ்ரீ திருக்கூடல்” என்று அழைக்கப்பெறும் ஸ்ரீ மதுரைக் கூடலழகர் கோயிலைப் பற்றிய செய்தியும்
சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது:

“வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர் கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வா நின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே” [— பரிபாடல் திரட்டு, 1] என்று பரிபாடல் இத்தலம் பற்றிக் கூறும்.
இங்கு ஸ்ரீ திருமால் இருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில் காட்சியளிப்பதால் அந்நகரத்திற்கு “இருந்தையூர்” என்ற பெயரும்,
“இருந்தையூர் அமர்ந்த செல்வன்” என்று அவ் விறைவனுக்குப் பெயரும் ஏற்பட்டது.
இந்நகர் வாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், இயற்கை எழில், முதலிய ஸ்ரீ கூடல் மாநகரின் பல சிறப்புகளைப் பாடும்
இதே பரிபாடல், அங்கு ஆதி சேடனுக்கும் கருடனுக்கும் தனியாகக் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது.

மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில்
ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும்
தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

“ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவுவதாகும்.
வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.
“தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர்.
மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் எனவும்
இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர்.
தொண்டை நாட்டில் பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர்.
நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று.
முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.
“இஃதே போன்று ‘கிருதமாலா’ என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து
இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.”

வைகையாற்றால் சூழப்பட்ட மதுரையில் எழுந்தருளியிருப்பதால் இப்பெருமானை,
“நீடுநீர் வையை நெடுமால்” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இக்குறிப்பு, ஆய்ச்சியர் குரவை முடிந்தவுடன் மாதரி என்ற ஆயர் மகள் புஷ்பம், தூபம், சந்தனம், மாலை
முதலானவற்றால் இத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவதாக உள்ளது:

“ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்.“
[— சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், துன்ப மாலை:2-7]
மேற்கண்ட பகுதியில், “நெடுமால்” எனும் இடத்திற்கு, “இருந்த வளமுடையான்” என்று அரும்பத உரையாசிரியர்
இட்டிருப்பதிலிருந்து ஸ்ரீ கூடல் மாநகரில் உள்ள ஸ்ரீ அழகர் எழுந்தருளிய கோயிலே இங்கு குறிக்கப்படுவதற்குச் சான்றாகிறது.

ஸ்ரீ மதுரைக் காஞ்சியிலும்,

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,” [590-591] எனும் வரிகள் ஆவணி மாதத் திருவோணத்தில்
ஸ்ரீ கூடல் அழகருக்கு விழா நடந்திருப்பதைக் கூறுவதாக அறிஞர் கொள்வர்.

———————

ஸ்ரீ திருவிதாங்கோடு (திருவனந்தபுரம்):-ஸ்ரீ பத்மநாபன்

இன்று ஸ்ரீ பத்மனாப சுவாமி கோயில் என்று வழங்கப்படும் திருத்தலம் குறித்த செய்தி சங்க இலக்கியத்தில்,
எட்டுத் தொகை நூல்களுள், மலைநாட்டு-சேர-அரசர்கள் பற்றிய பதிற்றுப் பத்தில் காணப்படுகிறது.
இவ்வாலயத்திற்கு, மக்கள் தலைமேல் கைகூப்பி நான்கு திசைகளிலிருந்தும் திறள் திறளாக வந்து
வணங்குவதாகக் கூறிவிட்டு, கோயில் கொண்டுள்ள திருமால் விக்கிரகத்தை வருணிக்கிறது:

“வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண் பொரு திகிரிக் கமழ் குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி” [— பதிற்றுப்பத்து, 31:7-12]
(திருஞெமர் அகலம் = இலக்குமிப் பிராட்டி விரும்பும் மார்பு; திகிரி = சக்கரம்)
திருவிதாங்கோட்டு மன்னர்கள் ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ பத்மனாபனின் திருவடிகளைத் தொழுபவர்களாக
இருந்து வருவது சிலப்பதிகாரத்திலுள்ள சில வரிகள் காட்டுகின்றன.
“108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” கூறும் சிலப்பதிகாரச் செய்தி:

“சிலப்பதிகாரம் ஸ்ரீ திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது.
சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன்
அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று
‘தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற
ஸ்ரீ பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,
” ‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’–என்கிறார் இளங்கோவடிகள். ஆடக மாடம் – திருவனந்தபுரம் சேடம் – மலர்மாலை.”

——————

ஸ்ரீ கச்சி மூதூர் (ஸ்ரீ திருவெஃகா/ஸ்ரீ காஞ்சிபுரம்):-ஸ்ரீ திருவெஃகா

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய ‘பெரும்பானராற்றுப்படை’ என்னும் பத்துப்பாட்டு நூலில்,
ஸ்ரீ கச்சி மூதூரில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றி தெளிவாக உள்ளது.
இவ்வரிகள், ஸ்ரீ திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதற்குக் குன்றுதனில்
யானை படுத்திருப்பதை உவமையாகக் கூறுகிறது:

“நீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறு படிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி
அருந்திறற் கடவுள் வாழ்த்தி…“ [– பெரும்பாணாற்றுப்படை, 372-391]

இங்ஙனம் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் ஆலயங்களில் ஸ்ரீ திருமால் வழிபாட்டின் தொன்மை வெளிப்படுகிறது.
வேதாந்தம், சிருஷ்டி, பிரபஞ்சவியல் தத்துவங்களைப் பல இடங்களில் பாடிய பண்டைத் தமிழ்ச் சான்றோர்
உருவ வழிபாட்டையும் விரும்பிக் கடைப் பிடித்திருந்தது இச் சான்றுகளிலிருந்து தெரிகிறது.

——————

பாரத தேசம் உலகிற்குத் தந்த மாமேதைகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவர் ஆரியபடர் என்பவர்.
இவர் இயற்றிய கணித-வானசாஸ்திர நூல்களுள் ஒன்றான சூரிய சித்தாந்தத்தின் பன்னிரண்டாம் அத்தியாயத்தில்
அத்யாத்ம வித்தை என்ற பகுதி வருகிறது. இப்பகுதியில் தன்னை வைதிகராகவும் வேதாந்தியாகவும் காட்டிக் கொள்ளுகிறார்.
“வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர்.
ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று
நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் இவ்வுண்மையைக் கவனிக்க வேண்டும்.
அத்யாத்ம வித்தையில் உள்ள சுலோகங்கள் வேதத்தில் காணப்படும் புருஷ சூக்த மந்திரங்களை விவரிப்பதாக அமைந்துள்ளன.
வியூக மூர்த்திகளாகிய சங்கர்ஷணனும் அனிருத்தனும் பிரபஞ்சத் தோற்றத்தில் பங்கு வகிப்பதைப்
புருஷ சூக்தம் முதலான வேதப்பகுதிகள் கூறுவதாக ஆரியபடர் கூறுகிறார்

(“இங்கு காணப்படும் ஜீவராசிகளெல்லாம் பரமபுருஷனுடைய ஒரு கால் பகுதி மாத்திரமே.
அவனுடைய முக்கால் பகுதி மரணமற்ற ஒளிமயமான இடத்தில் உள்ளது” என்று

“ஏதாவாநஸ்ய மஹிமாதோ ஜ்யாயாம்ச்’ச பூருஷ:
பாதோ (அ)ஸ்யவிச்’வா பூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் தி3வி” எனும் மந்திரமும்,

“அந்தப் பரமனிடதே பிரம்மாண்டம் உண்டாயிற்று. அந்த பிரம்மாண்டத்தே நான் முகக் கடவுளாகிய பிரம்மா உண்டானார்” என்று

“தஸ்மாத் விராட் அஜாயத விராஜோ அதி பூருஷ:
ஸ ஜாதோ(அ)த்யரிச்யத பச்’சாத் பூமிமதோ புர:”எனும் மந்திரமும் கூறுவதாக
வேதத்திற்கு உரை எழுதிய உரைக்காரர்கள் கூறுவர். இவ்வர்த்தத்தையே ஆரியபடரும் இவ் அத்யாத்ம வித்தையிலும்

“ததண்டம் அபவத் தைமம் ஸர்வத்ர தமஸாவ்ருதம் |
தத்ராநிருத்த: ப்ரதமம் வ்யக்தீபூத: ஸநாதந: ||”

“த்ரிபாதம் அம்ருதம் குஹ்யம் பாதோ(அ)யம் ப்ரகடோ(அ)பவத் |
ஸோ(அ)ஹங்காரம் ஜகத்ஸ்ருஷ்ட்யை ப்ரஹ்மாணம் அஸ்ருஜத் ப்ரபு: ||”

சூரிய சித்தாந்தத்தின் இப்பகுதியின் முதல் சுலோகம் பின்வருமாறு.
“பரம்பொருளாகிய, பரம தத்துவமாகிய, பரமபுருஷனாகிய வாசுதேவன் புலன்களுக்கு எட்டாத வண்ணம்
குணங்களற்றவனாய், சாந்த சொரூபனாய், இருபத்தைந்து தத்துவங்களுக்கும் மேலானவனாக,
அழிவற்றவனாக எழுந்தருளியிருப்பவன்” என்பது இவ்வரிகளின் பொருள்:

வாஸுதேவ: பரம் ப்ரஹ்ம தந்மூர்தி: புருஷ: பர: |
அவ்யக்தோ நிர்குண: சா’ந்த: பஞ்சவிம்சா’த் பரோ(அ)வ்யய: || [– ஸூர்ய ஸித்தாந்தம், 12.12]

இச்சுலோகத்தில் வரும் “பரம்பொருளுக்குக் கீழே உள்ள இருபத்தைந்து தத்துவங்கள்” யாவை என்பதைச் சற்று விளக்குவோம்.
பிரபஞ்சத்தில் ஐம்புலன்களாலும் அறிவினாலும் அறியப்படுவன அனைத்தும் மாயையின் சம்பந்தம் உடையவை என்று வேதாந்தம் கூறுகிறது.
ஜடப்பொருள் யாவும் பஞ்சபூதங்களின் கலவையால் உருவானவை.
இப் பஞ்சபூதங்களுடன் தொடர்புள்ள உணர்வுகள் ஐந்து. அவையாவன –
ஒலி, ஊறு (அல்லது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு), ஒளி, சுவை, மற்றும் நாற்றம் என்பவை.
வடமொழியில் இவை ‘தன்மாத்திரங்கள்’ என்று கூறப்படுவன. இப்பதத்திற்குச் ‘சுவடு’ என்று பொருள்.
இவற்றோடு ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் இயங்குவதற்குக் காரணமாகிய விசைகளைக் கூட்டினால் இருபது தத்துவங்களாகின்றன.
மனதை இருபத்தோராவது தத்துவமாக எண்ணுவது வழக்கு. இவற்றுடன் பிரபஞ்சத்துக்கெல்லாம் கருப்பொருளாகிய
மூலப்பகுதியையும் (மூலப் ப்ரக்ருதியையும்), அதிலிருந்து வெளிப்படும் ‘மஹான்’ என்ற தத்துவமும்,
அதிலிருந்து வெளிப்படும் ‘அஹங்காரம்’ என்ற தத்துவமும் சேர, மொத்தம் இருபத்தி நான்கு ஜட தத்துவங்கள்.
ஜீவான்மா இருபத்தைந்தாக, இவ்விருபத்தைந்துக்கும் மேலாக
ஸ்ரீ திருமால் இருபத்தாறாவது தத்துவமாக பரமனாக விளங்குகிறான் என்பது மரபு.

பரம்பொருள் வியாபித்துள்ள இவ் விருபத்தைந்து தத்துவங்களையும்,

“பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” [– பரிபாடல், 3:77-80]

என்று சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கண்ட வரிகளில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைப் பரிமேலழகர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

‘பாழ்’ என்பது சாங்கியர்களால் ‘புருடன்’ என்று வழங்கப்படும் சீவனைக் குறிக்கும்.
‘கால் என’ என்பது ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களையும் குறிக்கும்.
‘பாகு என’ என்பது தொழிலால் பாகுபடும் வாக்கு, பாதம், கை, மல-ஜல துவாரங்கள் ஆகிய ஐந்து பொறிகளைக் குறிக்கும்.
இவை வடமொழியில் ’கர்மேந்திரியங்கள்’ எனப்படுபவை.­
‘ஒன்று என’ எனத் தொடங்கி ’ஐந்து என’ என்பவை ஒலி, தொடு உணர்வு, ஒளி/உருவம், சுவை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்வுகளைக் குறிக்கும்.
‘ஆறு என’ என்பது கண், நா, செவி, மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களையும் (ஜ்ஞானேந்த்ரியம்), ஆறாவதாக மனத்தையும் குறிக்கும்.
‘ஏழு என’, ‘எட்டு என’, ‘தொண்டு என’ என்பவை முறையே அகங்காரம், மகான், மற்றும் மூலப் பிரகிருதியை உணர்த்தும்.
“மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே” [– ஸ்ரீ திருவாய்மொழி, 10.7.10] என்ற ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
இவ்விருபத்தாறு தத்துவங்களையும் இங்ஙனமே பட்டியலிட்டது.

“எண்ணிலும் வரும்” (திருவாய்மொழி, 1.10.2) என்ற இடத்திற்கு
“மனதில் நினைத்தால் வந்து நிற்பான்” என்ற விளக்கத்தோடு,
“‘ஒன்று, இரண்டு, …’ என்று எண்ணும்பொழுது ‘இருபத்தாறு’ என்று கூறுகையில்
தன்னைத் தான் பக்தன் கூப்பிடுகிறான் எனக் கருதி இறைவன் வந்து நிற்பானாம்” என்பது ஆச்சாரியார்கள் கண்ட உரை.

இவ்வாறு அனைத்துக்கும் மேலான தத்துவமாக, முழுப் பிரபஞ்சத்தையே தாங்கும் நிலையில் இருக்கும் போதிலும்,
அவனே அனைத்தின் உள்ளும் கரந்து அவற்றை ஆளும் அந்தர்யாமிப் பொருளாகவும் இருக்கிறான். இச்செய்தியை,

“திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.” [ — ஸ்ரீ திருவாய்மொழி, 1.1.7]என்ற ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய பாசுரத்தாலே அறியலாம்.
ஆதலால், காண்பதெல்லாம் ஸ்ரீ பரம்பொருளின் தோற்றமே என்று வேதாந்தம் உரைக்கும்.
’ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்று வைதிகச் சடங்குகளின் தொடக்கத்தில் ஸ்மார்த்தர்கள் முதலானோர் ஓதுவதை நினைவூட்டுகிறது.
இச் செய்திகளை விரிவாக முதற்பகுதியிலும் கண்டோம்.
இங்ஙனம் மேற்படிக்கப்பட்ட இருபத்தைந்து தத்துவங்களிலும் அந்தர்யாமிப் பொருளுமாகி இருப்பதால்,

“பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.” [— ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 1] என்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் பாடியுள்ளார்.
இப்பாசுரத்தில் மற்றொரு செய்தியும் வெளிப்படுகிறது.
ஐந்து உணர்வுகளுள் ஒலி, தொடு உணர்வு, ஒளி, சுவை, நாற்றம் இவ்வைந்தும் நிலத்திற்கு உண்டு.
நாற்றத்தைத் தவிர மற்ற நான்கும் நீருக்கு உண்டு. ஐந்தில் முதல் மூன்று மாத்திரம் அக்னிக்கு உண்டு.
காற்றுக்கு ஒலி, தொடு உணர்வு மாத்திரம். ஆகாயத்திற்கு ஒலி ஒன்றோடு மாத்திரமே தொடர்புண்டு.
ஸ்ரீமத் பாகவதம், மார்க்கண்டேயம், வாயவ்யம் முதலான புராணங்களில் காணப்படும் இச்செய்தியே
ஸ்ரீ திருமழிசையாழ்வாரின் பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. சங்கத் தமிழர் வாக்கிலும்

“சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே” [– பரிபாடல், 13:14-22] என்னும் பரிபாடல் வரிகளில் இதைக் காணலாம்.

இவ்வாறு கண்ணுக்கெட்டிய பொருட்களிலும் காணாத பொருட்களிலும் உள்ளுறையும் பொருளாக இருத்தலின்,

“வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”–பரிபாடல், 2:24-25
[நல்ல கொள்கைகளையே கொண்ட உயர்ந்தோராகிய ரிஷிகள் ஆராய்ந்த குற்றமற்ற வேதத்தின் அந்தரியாமிப் பொருளும் நீயே — ]
என்று ஸ்ரீ கண்ணனை “வேதத்தில் கூறப்பட்ட அந்தரியாமிப் பொருள்” என்றும் பழந்தமிழ்ச் சான்றோர்கள் கூறினர்.

——————-

முத்தொழிலுக்கும் அதிபதி ஸ்ரீ முகுந்தன்

சர்வ வியாபகனாக அனைத்தினுள்ளும் கரந்துறையும் அந்தரியாமிப் பொருளாக விளங்கும் இயல்புடையவனே
முத்தொழிலுக்கும் காரணமாகிய ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் ஆவார் என்பது வேதாந்தம்.
“இந்த சுருக்கமான உபதேசத்தைக் கேளுங்கள்: முக்காலத்திலுமுள்ள அந்த ஸ்ரீ நாராயணன் இவை யாவற்றையும்
சிருஷ்டிக் காலத்தில் படைக்கிறார். சம்கார காலத்தில் அவை யாவற்றையும் தன்னிடம் திரும்பவும் ஒடுங்கச் செய்கிறார்”
என்பது ஸ்ரீ ஆதி சங்கரரால் ப்ரஹ் சூத்திர பாஷ்யத்தில் (இரண்டாம் அத்தியாயத்தின் முதற் சூத்திர பாஷ்யத்தில்)
காட்டப்பட்ட புராண வசனம்.

இச் செய்தியைக் கூறும் பின்வரும் ஸ்ரீ கம்பராமாயணச் செய்யுள் ஸ்மார்த்தர்கள் ஆவணியவிட்டத்தில் உரைக்கும்
‘மகாசங்கல்பத்தை’
இம் மகாசங்கல்பமானது,

“ஸ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ: ஆதி நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா ச’க்த்யா,
அப்ரியமாணஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதம் அநேக கோடி ப்ரஹ்மாண்டாநாம் மத்யே…”–என்று தொடங்குகிறது.
“ஆதி விஷ்ணுவாகிய ஆதி நாராயணனின் அறிதற்கரிய ஒப்பில்லாத சக்தியால் பிரளய மகா கடலின் நடுவில்
சுழன்று கொண்டிருக்கும் பல கோடி பேரண்டங்களின் நடுவில்” என்று பொருள்.

“நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்,
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே!” [— ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம்]

முத் தொழில்களுக்கும் அதிபதி ஸ்ரீ முகுந்தனே எனும் செய்தியும் சங்க இலக்கியமாகிய பரிபாடலில் பல இடங்களில் இடம்பெறுகிறது.
இதனால், ஸ்ரீ நான்முகக் கடவுளும் ஸ்ரீ உருத்திர மூர்த்தியும் ஸ்ரீ திருமாலின் அம்சங்கள் என்றும்,
முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும்,

“ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;” [— பரிபாடல், 1:46-49] என்னும் வரிகளில் பெறப்படுகிறது.
(அணங்குடை அருந் திறல் மைந்துடை ஒருவன் = பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பேராற்றலையும் சங்கரிக்கும் தொழிலையும் உடையவன்;
மடங்கல் = உயிர்களின் ஒடுக்கம்; பூவன் = பூவின் மேலிருப்பவனாகிய பிரமன்; நாற்றம் = படைப்புத் தொழில்)

இச் செய்தியைப் புராணங்களும் ஸ்ரீ வைஷ்ணவ இலக்கியமும் கூறும்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “பூதக்ருத் பூதப்ருத்”, “ஸம்ப்ரமர்தன:”, “சதுராத்மா” என்ற நாமங்களுக்கு
ஸ்ரீ ஆதி சங்கரர் இட்ட பாஷ்யமும் இச்செய்தியையே கூறும்.
“சதுராத்மா” என்றவிடத்தில் சங்கரர் காட்டும் புராண வசனம் ஒன்று:

“ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ் ததைவாகிலஜந்தவ: |
விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஷ்டிஹேதவ: ||
விஷ்ணுர்மந்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ |
ஸ்திதேர்நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய: ||
ருத்ர: காலோ(அ)ந்தகாதயாச்’ச ஸமஸ்தாச்’சைவ ஜந்தவ: |
சதுர்தா ப்ரலயாயைதா ஜனார்தனவிபூதய: ||”–ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.22.31-33

ஸ்ரீ பிரமனும், ஸ்ரீ தக்ஷனும் படைத்தல் தொழிலில் ஸ்ரீ அரியின் விபூதிகள். ஸ்ரீ விஷ்ணுவும், ஸ்ரீ மனுவும் காத்தல் தொழிலில்
ஸ்ரீ விஷ்ணுவின் விபூதிகள். ஸ்ரீ உருத்திரனும், ஸ்ரீ அக்னியும் அழித்தல் தொழிலில் ஸ்ரீ ஜனார்தனனின் விபூதிகள்.
அனைத்துயிர்களும் கால தத்துவமும் முத்தொழிலிலும் ஸ்ரீ விஷ்ணுவின் விபூதிகள். இவ்வாறு முத்தொழில்களிலும்
நான்கு விபூதிகளை உடையவன் ஸ்ரீ அரி. (இங்கு ’விபூதி’ என்பது ’செல்வம், உடைமை’ என்னும் பொருளில் வருகிறது). —

ஸ்ரீ அதர்வண வேதத்தின் ‘ஸ்கம்ப ஸூக்தம்’ என்ற பகுதியில் வரும் வேத மந்திரங்கள் பிரபஞ்சத்தின்
தோற்றத்திற்கு ஆதாரமாகப் பரம்பொருளை வினாக்களின் வடிவத்தில் அழகாக வருணிக்கும்:

“எவரிடத்தில் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களிலே அக்னியும், சூரியனும், சந்திரனும், காற்றும் நிலைபெறுகின்றன?”
“எவருடைய திருமேனியில் முப்பத்தி மூன்று தேவர்களும் அடங்கியுள்ளனர்?”
“எவரிடத்தில் ஆதித்தியர்களும், உருத்திரர்களும், வசுக்களும் உறைகின்றன?” என்பன அவ் வினாக்களுட் சில.

இங்ஙனம் வேதப்பகுதி கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தையே சங்கத் தமிழர்களின் வாக்கிலும் காண்கிறோம்.
ஸ்கம்ப ஸூக்தத்தையே ஆதாரமாக வைத்துப் பழந்தமிழர்கள் இதைப் பாடியுள்ளார்களோ என்று வியக்க வைக்கின்றன இவ்வரிகள்:

“தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து” [— பரிபாடல், 3:4-11]

(ஐவர் = செவ்வாய் முதலான ஐந்து கோள்கள்; திதியின் சிறார் = தைத்யர்கள் அல்லது அசுரர்கள்.
‘திதி’ என்பவள் காசிப பிரஜாபதியின் ஒரு மனைவி; விதியின் மக்கள் = காசிப பிரஜாபதியின் மற்றொரு மனைவியாகிய
அதிதியிடம் பிறந்த பன்னிரு ஆதித்யர்கள்; மாசு இல் எண்மர் = எட்டு வசுக்கள்; பதினொரு கபிலர் = பதினொரு உருத்திரர்கள்;
தா மா இருவர் = இரண்டு அசுவினி தேவர்கள். ‘தா மா’ என்பது தாவும் மாவாகிய குதிரையைக் குறிக்கும்.
குதிரையின் சம்பந்தம் அவர்களுக்கு இருப்பதால் ‘அசுவினி தேவர்கள்’ என்று பெயர். ‘அசுவம்’ என்பது குதிரை;
மூ ஏழ் உலகம் = ‘பூ:, பு4வ:, ஸுவ:, மஹ:, ஜன:, தப:, ஸத்யம்’ எனப்படும் ஏழு மேல் உலகங்களும்,
‘அதல, விதல, ஸுதல, மஹாதல, ரஸாதல, தலாதல, பாதால’ என்னும் ஏழு கீழ் உலகங்களும்,
‘ஸப்த த்வீபங்கள்’ எனப்படும் ஏழு தீவுகளும் ஆக மொத்தம் இருபத்தோரு லோகங்களைக் குறிக்கும்.)

எங்கோ வானத்திலிருந்து கொண்டு இல்லாத ஒன்றைப் புதிதாக ஒருவர் உருவாக்குவது போன்ற
சிருஷ்டி விளக்கத்தை வேதம் ஒத்துக் கொள்வதில்லை.
“சிருஷ்டிக் காலத்தில் பரம்பொருளே பிரபஞ்சமாக விரிகிறது; ஊழிக் காலத்தின் முடிவில் பிரளயத்தில்
அப் பிரபஞ்சமும் அவனிடத்திலேயே ஒடுங்கிய நிலையை அடைகிறது” என்பதே ஸ்ரீ வேதாந்த மதம்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமக் கிரமத்தில் 54-ஆம் சுலோகம்:
“உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேச்’வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||”)). ஆனால் அது மட்டும் அல்ல,
“கரணம்” (படைக்க உதவும் கருவி), “காரணம்” (முதற் பொருள் மற்றும் கருப் பொருள்) என்ற பெயர்களும்
அவனுக்கு உண்டு. ஆபிரகாமியத்திற்கும் வேதாந்த மதத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இது.

“ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி,
உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி,
திறத்து உலகம்தான் ஆகி,செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே!” என்று சரபங்கன் பிறப்பு நீங்குப் படலத்தில் இந்திரன்
வாய்மொழியாக ஸ்ரீ கம்பர் பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காரணம் பற்றியே, மூல நூற்களில் எங்கெல்லாம் பரம்பொருளைப் பற்றிய விசாரம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம்
“உலகத்தை யார் படைத்தார்” என்றோ “யார் உலகத்தை சம்கரிக்கிறார்” என்றோ கேள்வியை எழுப்பாமல்,
“எதனிடமிருந்து உயிரினங்கள் தோன்றின?” என்றும், “எதனிடத்தே அவ்வுயிர்கள் இலயமடைகின்றன?” என்றும்,
“இவ்வுலகம் எதை மூலப்பொருளாகக் கொண்டது?” என்றும் கேள்விகளை முனிவர்கள் எழுப்புகின்றனர்.
ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ பராசர மகரிஷியிடம் இக் கேள்விகளையே கேட்கிறார்.

உதாரணமாக, ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அத்யாயத்தின் தொடக்கத்தில்

“யத: ஸர்வாணி பூதாநி பவந்தி ஆதி யுகாகமே |
யஸ்மின்ச்’ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே ||

தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே: |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாப பயாபஹம்||”

[எவரிடமிருந்து அனைத்துயிர்களும் ஊழிக்காலத்தின் தொடக்கத்தில் உண்டாகின்றனவோ,
எதனிடத்தில் ஊழிக்காலத்தின் முடிவில் அவை ஒடுங்குகின்றனவோ அந்த ஸ்ரீ ஜகன்னாதனாகிய
ஸ்ரீ விஷ்ணுவின் நாமங்களைக் கேட்பாயாக.]
என்றே ஸ்ரீ பீஷ்மாசாரியார் கூறினார். இம் மரபை ஒட்டியே,
“மாயனே! நின்னால் இவை ஆக்கப்பட்டன” என்று உரைக்காமல்
“மாயனே! நின்னில் தோன்றிப் பரந்தவையே இவை” என்று பொருள் படும்படி
“மாயோய்! நின்வயின் பரந்தவை” என்று இங்கு சற்று முன் சுட்டிய பரிபாடல் வரிகளில் சங்க இலக்கியமும் உரைத்தது.

“தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே.” [—ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 10]
என்று ஸ்ரீ திருமழிசையாழ்வார் அறுதியிட்டுக் கூறியிருப்பதும் இக்கருத்தையே.

————–

பொதுவாகப் புகழ்மொழிகள் இருவகைப் படுவனவாகக் கூறுவதுண்டு.
பாடல் பெறுபவரது இயல்பான நற்குணங்களோடு நில்லாமல், அவருடைய குணங்களை மிகைப்படுத்தியும்
இயல்பிற்கும் அப்பாலான பல உயர் பண்புகளை அவர் மீது ஏற்றிப் பாடுவதும் ஒரு வகை.
இது கவிதை நயம் சிறக்கவோ, அல்லது பாடப்படுபவரை மகிழ்வித்துப் பொன்னும் பொருளும் பெறுவது போன்ற
வேறு நன்மை கருதியோ செய்யப்படும் வெற்றுப் புகழ்ச்சியே. இதற்கு மாறாக, ஒருவரிடம் இயல்பாகவே உள்ள உயர் குணங்களை
உள்ளபடியே மிகைப்படுத்தாமல் பாடுவதும் உண்டு. இத்தகைய மெய்யான புகழ்ச்சியை யதார்த்தம் அல்லது வாஸ்தவம் என்பர்.
“உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” எனும் கவியின் கூற்றையும் நன்கறிவோம்.

“திருமகள் கேள்வனைக் குறித்து யாம் பாடியிருப்பதெல்லாம் யதார்த்தமே, அவையெல்லாம் வேதத்தாலும்,
வேதத்தால் உணர்த்தப்படும் தத்துவத்தை நன்கறிந்த ஞானியராலும் அவனுக்கு இயல்பாய் உள்ளனவாகப் பாடப்பட்ட குணங்களே;
இவற்றுள் எதுவும் எமது கற்பனைப் புனைவுகளன்று” என்று பல இடங்களில் சங்கப் புலவர் தம் பாடல்களிலேயே
என்பதனைப் பின்வரும் சங்க நூல் மேற்கோள்களில் காணலாம். அப்புலவர்களின் இவ்வகைக் கூற்றுகள்
வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதை, அவர்கள் பாடியிருப்பதை
வேத, இதிகாச, புராண வாக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அறியலாம்.

“ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல் தாம் அப்
பாடுவார் பாடும் வகை.”-பரிபாடல், 3
[மண்ணுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களும், வானுலகத் தேவர்களும் உன்னைப் பரம்பொருளாகப்
பலவாறு விரும்பிப் பாடுகின்றனர். எமது பாடலும் அவர்களது வழியைப் பின்பற்றியே வந்தவை—]

“மூவே ழுலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்
மாயா வாய் மொழி உரை தர வலந்து”–பரிபாடல், 3
[பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில் உள்ள அசைவனவும் அசையாதனவும் உன்னிடமிருந்து தோன்றிப்
பரந்தவை என்று வேதம் கூறுவதால் நாங்களும் அவ்வாறே கூறினோம். — ]

“சேவலங் கொடியோய் நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே.”பரிபாடல், 1
[கருடக்கொடியை உடையவனே! உயிர்கள் அனைத்தும் உன் அருள் தழுவுதலுள்ளே
அமர்ந்து நின்னைப் பணிந்தமையை வேதமானது விரித்துக் கூறும். — ]

“ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்” -பரிபாடல், 3
[‘ஏ…எ…’ என்று இசையமைத்துப் பாடப்படும் சாம வேதம் கூறுவதனாலே
நாம் இவற்றை (திருமாலின் சிறப்புகளை) விளங்க அறிந்தோம் — ]-எனும் இடங்களில் இதைக் காணலாம்.

“இறைவன் உள்ளான் என்பதற்கு வேதமொன்றே பிரமாணம் (சாட்சி). பிரபஞ்சத்தின் வியப்பளிக்கும்
தோற்றத்தைப் பார்த்துவிட்டு, ‘உறுதியாக இது ஒருவனால் படைக்கப்பட்டதேயாகும்’ என்று அனுமானிப்பது சரியல்ல.”
என்பது வேதாந்தக் கொள்கை. இது ப்ரஹம ஸூத்திரங்களை இயற்றிய ஸ்ரீ பாதராயணரால் “சா’ஸ்த்ர யோநித்வாத்” (1.1.3)
எனும் ஸூத்திரத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கப் புலவர்களும் இதனோடு இசைந்திருன்தனர் என்பது
“திருமாலே உலகனைத்தையும் படைத்தளித்து ஆள்பவன் என்பதனை வேதம் கூறுவதாலே அறிந்தோம்” என்று
அவர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது.

சங்கத் தமிழ்ப் புலவர்கள் அனைவரும் பிறப்பால் அந்தணர்களல்லர் என்பது பெரும்பாலும் அனைவரும் இசைந்த கருத்து.
எனினும், அவர்கள் ஆழ்ந்த மறைப்பொருளை நன்கு அறிந்திருந்தனர் என்பதனைப் பரிபாடல்களில் நாம் காண முடிகிறது.
மேலும், தத்துவத்தை நிர்ணயிப்பதில் வேதமானது தனித்து நிற்கும் சாட்சி என்று அக்காலப் புலவர்கள் ஏற்றிருந்தனர்
என்பதையும் இங்கு காணலாம். (இதனை ‘ஸ்வத: ப்ராமாண்யம்’ என்பர். ஸ்வத: = எதையும் சார்ந்து நிற்காமல் தானாகவே இயங்குதல்,
ப்ராமாண்யம் = உண்மைத் தன்மை பெற்றிருத்தல்.)
இனி, வேதத்தில் உலகளந்த உத்தமனுக்குக் கூறப்பட்ட யதார்த்தப் புகழ்மொழிகளையே சங்கப் புலவர்கள்
திருமாலுக்குப் பாடியுள்ளனர் என்பதனை, அப்புலவர்கள் மொழிந்தவற்றோடு, வேதமறிந்த ரிஷிகளின் வாக்கியங்களாகிய
இதிகாச-புராணங்கள், தமிழ்ப் பிரபந்தங்கள், வேத மார்க்கத்தின் மீட்சிக்குப் பிற்காலத்தில் வழிவகுத்த வேதாந்த விளக்க நூல்கள்
ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் உணரலாம்.
இவ்வாராய்ச்சியில் ஒரு சில சான்றுகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புருடோத்தமனின் தனிச்சிறப்புகளாகப் பரவலாகப் பேசப்படுவது அவனுடைய அவதாரச் சிறப்புகள், திருமேனியழகு முதலானவை.
சங்க நூல்களில் இவை பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இவை அனைத்தும் அவனுடைய ‘ரூப-வைபவங்களுள்’ அடங்கும்.
இவற்றோடு மட்டுமல்லாமல், அவனுடைய இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’
விவரிக்கும் பகுதிகள் பல சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன.
பரம்பொருள் இன்னதென்று ரிஷிகளாலும், மும்மத (அத்வைத, துவைத, விசிஷ்டாத்வைத) ஆச்சாரியார்களாலும் கூறப்பட்ட இலக்கணமும்,
அதற்கு அவர்கள் கையாண்ட உவமை, உருவகம், முதலான அணிகளும் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்றிய அவ்வரிகளுடன்
ஒத்து வருவது அனுபவித்து இன்புறத்தக்கதொரு உண்மை. இனி, ஒவ்வொன்றாக இச்செய்திகளைக் காண்போம்.

நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படும் வழிபாட்டு முறைகளும், அவ்வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தூபம், சந்தனம் முதலான
திரவியங்களும் நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பான அடையாளங்களாகும். அன்றாடம் நம் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும்
திரவியங்களில் முக்கியமானவை மலர்களாகும். விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் மலர்கள் யாவை?
எந்தெந்த பூக்களால் பக்தர்களில் உத்தமர்கள் அவனை வழிபடுகின்றனர்?
அப் பூக்களை நாம் வெளியில் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை!
அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. ஏனெனில்,
“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம்,
வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் ஸ்ரீ விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று
பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது:

“அஹிம்ஸா ப்ரத2மம் புஷ்பம்
புஷ்பம் இந்த்3ரிய நிக்3ரஹ:
ஸர்வபூ4த த3யா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசே’ஷத: |
ஜ்ஞானம் புஷ்பம் தப: புஷ்பம்
த்4யானம் புஷ்பம் ததை2வ ச
ஸத்யம் அஷ்டவித4ம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதிகரம் ப4வேத் ||” [–ஸ்ரீ பாத்ம புராணம்]

ஸ்ரீ பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்குப் பாடிய பூச்சூட்டல் பாசுரவரி ஒன்றும் இங்கு நிலைவில் நிறுத்த வேண்டியது:

“எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று” [– ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி, 1.7.10]

இவ்வரிகளில் ‘எண் பகர் பூவும்’ என்பதற்கு, மேற்கண்ட புராண சுலோகத்தின் பொருளை நினைவிற்கொண்டு
‘அகிம்சை முதலான எட்டு புஷ்பங்கள்’ என்று உபன்யாசங்களில் சுவைபட விளக்குவதும் வழக்கில் உள்ளது.

மேற்கண்ட கருத்து சங்க நூல்களிலும் உண்டு. சங்கத் தமிழ்ச் சான்றோர்கள்
‘பரமனின் இயல்புகளை ரிஷிகளும் மற்ற ஞானியரும் எப்படி அறிந்து கொண்டனர்?’ என்ற கேள்விக்கு,
‘ஐம்பொறிகளை அடக்கி, நான்கு உயர் பண்புகளை வளர்த்து, மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதனால்
ஏற்படும் எண்ணக் குவியலாலே அவர்கள் அப்பரமனின் இயல்புகளை விரித்துரைத்தனர்’ என்று கூறினர்:

“ஐந்திருள் அறநீக்கி நான்கின் உள்துடைத்துத்தம்
ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரித்தனர்”பரிபாடல், 4-

[செவி முதலிய ஐம்பொறிகளாலே உண்டாகும் மயக்கமாகிய இருளைக் களைந்து, மைத்திரி முதலிய நான்கின் பயிற்சியால்
உள்ளத்தை சுத்தமாக்கி, சமாதி என்னும் ஒரே நெறியின் கண் தம்மைச் செலுத்திய அன்பர்கள்
உன்னைத் தொழுது உன் புகழை எமக்கு விரித்தனர்.]

இவ்வரிகளில் ’நான்கு’ என்று சொல்லப்பட்டதற்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம்:

(1) மைத்திரி – எவ்வுயிர்க்கும் நன்மையையே விரும்புதல்.
(2) கருணை – எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையவராய் இருத்தல்.
(3) முதிதை – இன்பதுன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்போதும் மகிழ்ந்திருத்தல்.
(4) இகழ்ச்சி – ஆன்ம நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருட்களில் பற்றில்லாது அவற்றை இகழ்தல்.

இப் பரிபாடல் வரிகளும் மேற்கண்ட புராணச் சுலோகத்தில் கூறப்பட்ட எட்டு நற்பண்புகளையும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வரிகளை, ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் உரைநூல்களிலிருந்து ஒரு குறிப்புடன் சேர்த்து அனுபவிக்கலாம்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரையில் அவர் ‘தாமோதரன்’ என்ற பெயருக்குக் கூறும் விளக்கங்கள் மூன்று.
இவற்றுள் ஒரு விளக்கம் நாம் அனைவரும் அறிந்தது –
ஸ்ரீ யசோதை தாம்புக் கயிற்றால் கண்ணன் உதரத்தோடு (வயிற்றோடு) சேர்த்து உரலில் கட்டியதால் ‘தாம + உதரன் = தாமோதரன்’
என்ற பெயர் அவனுக்கு உண்டாயிற்று. அவர் கூறும் மற்றொரு விளக்கம் தற்பொழுது நாம் கவனித்துக் கொண்டிருக்கும்
செய்தியோடு தொடர்புடையது. அதாவது, புலனடக்கம் முதலிய நெறிகளின் பயனால் (‘தமம்’ முதலானவற்றால்)
சுத்தீகரிக்கப்பட்ட (‘உதரமாக்கப்பட்ட’) மனதின் மூலம் அறியத்தக்கவன் ஆதலால் ‘ஸ்ரீ தாமோதரன்’ என்பது.
மகாபாரத சுலோகமொன்றும் இவ்விளக்கத்தை ஆதரிப்பதாக அவர் காட்டியுள்ளார்.
ஸ்ரீ பரந்தாமனை அறியாமல் அவன் புகழை விரித்துப்பாடுவது எங்ஙனம்? ஆகையால்,
“ஐந்திருள் அறநீக்கி … நின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்” என்ற பரிபாடல் வரிகளுடன்
ஸ்ரீ சங்கரர் கூறும் விளக்கம் முழுதும் உடன்படுகிறது.

ஒரு நாட்டின் அரசன் செங்கோலாட்சி புரிவதென்றால் தனது பிரஜைகளில் நல்லோரைக் காப்பதுடன்
தீயோரைத் தண்டித்துத் திருத்துவதும் அவசியமாகிறது.
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்று தெய்வப்புலவராகிய திருவள்ளுவரும் கூறுகிறார்.
படியளந்த பரமனாகிய திருமாலோ அண்ட கோடிகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன்.
அவன் நல்லோரிடம் காட்டும் அருளும் தீயோரிடம் காட்டும் சினமும் அவனது எண்ணற்ற நற்குணங்களில் இரண்டு.
இதனை முறையே “சிஷ்ட பரிபாலனம்” என்றும் “துஷ்ட நிக்ரஹம்” என்றும் கூறுவர்.
இதனை மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அவனுக்குச் சிலர் மற்றோரைக் காட்டிலும் அதிகம் வேண்டப்பட்டவர் என்றும்,
வேறு சிலரைக் கைவிடத்தக்கவராக அவன் உள்ளங்கொண்டதாகவும் சிலர் நினைக்கக் கூடும். இவ்வையத்தை நீக்க,

“ஸமோ(அ)ஹம் ஸர்வ பூ4தேஷு ந மே த்3வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:”
[அனைத்துயிர்களுக்கும் எனக்குச் சமமே. எனக்கு வேண்டப்படாதவர் என்றும்
வேண்டப்பட்டவர் என்றும் எவரும் இல்லை — பகவத் கீதை, 9.29]என்று கண்ணபிரானே கீதையில் செப்பினான்.
இவ்விடத்தில் ஆதி சங்கரர் தமது உரையில் பரந்தாமனை நெருப்புடன் ஒப்பிடுகிறார் —
நெருப்பானது தன்னருகிலிருப்போருக்கு குளிரிலிருந்து அடைக்கலம் தருகிறது, தொலைவில் உள்ளவருக்குத் தருவதில்லை.
அதற்காக நெருப்பை ஒருதலைச்சார்பு உடையதாகக் கருத இயலாதது; அருகில் வராதவர்கள் வராமையாலேயே அவதிப்படுகின்றனர்.
இறைவனின் அருளும் அத்தகையதே. இதனையே தமிழில் சங்கப் புலவர்களும்,

“கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை; இல்வழி இலையே:
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே: ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:”–பரிபாடல், 4:49-55

[நீ கொடுமையுடையாரிடத்தே கொடுமையும் செம்மையுடையார்பால் செம்மையும் வெம்மையுடையாரிடத்து வெம்மையும்
தண்மையுடையாரிடத்துத் தண்மையும் உடையை, அவை இல்லாரிடத்தே நீயும் அப் பண்பிலையாவாய்.
இங்ஙனமன்றி, உனக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. ]

இவ்விடத்தில் பரிமேலழகர், “உயிர்களது இயல்பாலே நினக்குப் பகையும் நட்பும் உள்ளது போலத் தோன்றுகிறதே அன்றி,
உனது இயல்பாலே பகையும் நட்பும் நினக்கு இல்லை.” என்று பொருள்பட உரையாற்றினார்.
“தேவர்களுக்கு முதல்வன் நீ; அசுரர்களுக்கும் நீயே முதல்வன்; அதனால், நினக்குப் பகைவரும் நண்பரும் உளரோ”
என்று பின்வரும் பாடலில் மற்றொரு புலவர் கூறுகிறார்

அமரர்க்கு முதல்வன் நீ;
அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”: [ — பரிபாடல், 3:53-58]

ஆகையால், திருமால் காட்டும் அருளும் சினமும் அந்தந்த ஆன்மா தமக்குத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட
நிலையையே காட்டுவதன்றி ஒருபொழுதும் அவனிடத்து ஒருதலைச் சார்பைக் காட்டாது.

நிற்க. திருவின் மணாளனுக்குச் சினம் வருமெனில்,

“காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோ கு3ண ஸமுத்3ப4வ: |”
[காமமும் சினமும் ரஜோ குணத்தால் உண்டாகின்றன — ஸ்ரீ பகவத் கீதை, என்றும்,

“லோப4: ப்ரவருத்திராரம்ப4: கர்மணாமச’ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதருஷப4 ||”
[அர்ஜுனா! ராஜச குணம் அதிகரிக்கும்பொழுது பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும் பேராசையும், பல (பயனற்ற)
காரியங்களைச் செய்ய வைக்கும் தூண்டுதலும், அமைதியின்மையும்,
பல பொருட்களின் மீது ஆசையும் பிறக்கிறது — ஸ்ரீ பகவத் கீதை, 14.12]என்றும் கீதை கூறுவதனால்,
திருமால் தீயோரிடத்துக் காட்டும் சினம் ராஜச குணத்தால் விளைகிறது என்பது தேறுமா?
முக்குணங்களின் தாக்கம் அவனுக்கும் உண்டோ?

இல்லை. பரமனுக்கு ராஜச தாமச குணங்களின் தாக்கம் அறவே இல்லை என்பது
அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத விபாகமற அனைத்து வேதாந்த தரிசனங்களும் ஏற்பது.
அவன் ஏற்கும் திவ்ய மூர்த்திகள் அனைத்துமே உயர்ந்த பண்புகளை உடைய சுத்த சத்துவ மய மூர்த்திகளே என்பதை
ஸ்ரீ ஆதி சங்கரர் பிரம்ம சூத்திர உரை (2.3.45), சாந்தோக்ய உபநிடத உரை (8.1.5),
பகவத் கீதை (15-ஆம் அத்தியாயத்தின்) உரைகளில் கூறியுள்ளார்.
இதற்குப் பின்னணியாகப் பல வேத, இதிகாச, புராண வாக்கியங்களும் உண்டு.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில்,
திருமாலுக்குத் தீயோர்கள் மீது ஏற்படும் சினம் ராஜச குணத்தின் வசத்தால் அல்ல, அதுவும் சத்துவ குணத்தின் காரியமே என்பது.
கோபமானது நல்லோர்களிடம் ஏற்பட்டாலோ தீயோர்களிடம் ஏற்படாமற் போனாலோ அது மாசு;
அதுவே தீயோர்களிடம் ஏற்பட்டு, நல்லோர்களிடம் காட்டாமல் இருந்தால் தேசு.
ஆகவே, பரமன் காட்டும் கோபமும் சுத்த சத்துவகுணத்தின் விளைவே.

ஸ்ரீ நாரதமுனியிடம் ஸ்ரீ வான்மிகி முனிவர் ஸ்ரீ இராமனின் கல்யாணகுணங்களைக் கேட்கும்பொழுது,
“ஆத்மவான் கோ ஜித க்ரோதோ த்யுதிமான் க: அநஸூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ஜாத ரோச’ஸ்ய ஸம்யுகே ||”
[வீரமுள்ளவன் எவன்? சினத்தைக் கட்டுப்படுத்தி வென்றவனும் பிரகாசமானவனும் பொறாமையற்றவனும்
தேவர்களும் அஞ்சி ஓடும்படி சினந்து போர் புரிபவனும் எவன்? — ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், 1:1.4]என்றே வினவினார்.
இங்கும், “சினத்தை வென்றவன் எவன்” என்று கேட்ட இடத்திலேயே,
“தேவர்களும் அஞ்சும்படியான சினத்தைக் கொண்டிருப்பவன் எவன்?” என்று கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ நாரத முனியும்,
“காலாக்னி ஸத்ருச’: க்ரோதே க்ஷமயா ப்ருத்வீ ஸம:”
[சினத்தில் அவன் பிரளய காலத்தில் எழும் கால அக்னியை ஒத்தவன்.
பொறுமையில் அவன் பூமிக்குச் சமமானவன் — ஸ்ரீ பால காண்டம், 1.18]என்றல்லவோ விடையளித்தார் !

இவ்வாறே சங்கப் புலவர்களும்
“அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;” [– பரிபாடல், 3]
முதலான வரிகளின் மூலம் திருமாலின் அருள், சினம் இரண்டையும் உயர்பண்புகளாகப் பாடியுள்ளனர்
(மறம் = வீரம், மைந்து = வன்மை).

ஸ்ரீ திருவமர் மார்பன் உயிர்களிடத்துக் காட்டும் பொறுமையை ஸ்ரீ நாரதமுனி பூமியுடன் ஒப்பிடுவதை மேற்கண்ட
ஸ்ரீ இராமாயண சுலோகத்தில் கண்டோம். யுத்த காண்டத்தில் ஸ்ரீ நான்முகக் கடவுளும்,
“ஜகத் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தைர்யம் தே வஸுதாதலம் |
அக்னி: கோப: ப்ரஸாதஸ்தே ஸோம: ஸ்ரீவத்ஸலக்ஷண ||”
[திருமரு மார்பனே! உலகனைத்தும் உனக்குச் சரீரம். பூமியானது உனது பொறுமையையும் வழுவாமையையும்
கொண்டிருக்கிறது. அக்னியே உனது சினம்; உனதருள் நிலவு. — ஸ்ரீ யுத்த காண்டம், 117.26]என்று ஸ்ரீ இராமனைத் துதித்தார்.

இதனையே தமிழ்ப்படுத்தியது போல் சங்கப் புலவர்களும்,

“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள”–பரிபாடல், 4
[உனது அழிப்புப் பண்பும் தெளிவும் சூரியனிடமும், அருளும் மென்மையும் சந்திரனிடமும்,
தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடமும் உள்ளதைக் காண்கிறோம் — ]என்று ஸ்ரீ திருமாலைப் பாடினர்.

சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல,
சர்வேசுவரனாகிய ஸ்ரீ வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும்
அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம். எனவே,

“விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;”–
(ஆர்வலர் = நல்லோர், மாற்றலர் = அற வழியிலிருந்து தவறியவர்கள், அணங்கு = துன்பம்)
என்று ஸ்ரீ மாயவனைப் பாடிய சங்கப் புலவர்கள் அடுத்தபடியாக,
“அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;” [பரிபாடல், 1 ]என்றனர்.

நிற்க. முதற் பரிபாடலில் “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும்… நீ;” என்பது,

“யே ச வேதவிதோ விப்ரா: யே ச அத்யாத்மவிதோ ஜனா: |
தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம் ||”

[வேதத்தை அறிந்த சான்றோர்களும் அத்யாத்ம வித்தையாகிய பிரம்மஞானம் அறிந்த நல்லோர்களும்,
மகாத்மாவாகிய கண்ணனே அழியாத தருமம் என்றுரைப்பர் — ஸ்ரீ மகாபாரதம், 3.86.22]
எனும் அழகிய ஸ்ரீ மகாபாரத சுலோகத்தின் தமிழாக்கம் போல அமைந்துள்ளது.
வேத வேதாந்தங்களின் ஆழ்பொருளை அறிபவர்கள், ஸ்ரீ கண்ணனைச் சரணடைவதையே உயர்ந்த தருமமாகப் பற்றுவர் அன்றோ.

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:” [– ஸ்ரீமத் ராமாயணம், 3.37.13]
என்று ஸ்ரீ தசரத புத்திரனும் தருமத்தின் வடிவாகவே கூறப்பட்டனனன்றோ?
“ஸ்ரீ கண்ணனைத் தவிர வேறொரு பலனை அடைய விரும்புவோர், அப்பலனை அடைவதற்குச் சாதகமாக அக்னி ஹோத்திரம்,
தவம், தானம் முதலானவற்றைக் கடைபிடிப்பர். சிறந்த யோகி என்று சொல்லப்படுபவன்
ஸ்ரீ கண்ணனை அடைவதற்கு ஸ்ரீ கண்ணனிடம் சரணடைவதைத் தவிர வேறு உபாயங்களைக் கைவிடுவன்.”[– ஸ்ரீ சாங்கர கீதா பாஷ்யம், 7.1]
என்னும் ஸ்ரீ ஆதி சங்கரரின் பகவத் கீதை உரை வரிகளிலிருந்தும் இதை அறிகிறோம்.

ஸ்ரீ கம்பரும்
“ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார்.”–கம்பராமாயணம், பாயிரம், 3
[அளவில்லாதவையும், அழிவில்லாதனவுமாகிய வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும்
‘ஸ்ரீ ஹரி ஓம்’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய
பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்கள். —
என்று பாடியுள்ளதும் இங்கு நினைவில் நிறுத்தத் தக்கது.

—————-

காவேரீ விரஜாதோயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ரங்கநாதோ வாஸுதேவ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே
தமஹம் சிரஸா வந்தே ராஜானம் குலசேகரம்

ஆராதவருளமுதம் பொதிந்த கோவில்
அம்புயத்தோன் அயோத்திமன்னர்க்கீந்த கோவில்
தோளாத தனிவீரன் தொழுத கோவில்
துணையான வீடணர்க்குத் துணையாங்கோயில்
சேராத பயனையெல்லாம் சேர்க்கும் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழும் கோயில்தானே.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸீதையின் மஹாசரித்ரமும் ஸ்ரீ அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 1 July 19, 2017 By ஸ்ரீ துளசிராமன்

October 14, 2020

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயாஶ்சரிதம் மஹத்”– ஸ்ரீ வால்மீகி ராமாயணம், பாலகாண்டம் 4-7.

ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது ராமாயண காவியத்திற்கு ஸ்ரீ ஸீதையின் மஹாசரித்ரம் என்றும் பெயரிட்டார்.
ஸ்ரீ வால்மீகி ராமாயணமானது – ஸ்ரீ ஸீதையை ராவணன் அபகரித்தது, அவளை ஸ்ரீ ராமர் சந்தேகித்தது,
அவளை அக்நி பரீக்ஷை செய்வித்தது, ஒரு வண்ணான் சொன்ன அபவாதம் கேட்டு அவளை காட்டுக்கு அனுப்பியது,
இறுதியில் அவள் பூமி ப்ரவேசம் செய்தது முடிய இவ்வாறாக தொடர்ந்து ஸ்ரீ ஸீதையின் துயரங்களை சொல்லும்
ஒரு காவிய நூல் என்று தத்துவம் அறியாமல் சிலர் சொல்கின்றனர். ஸ்ரீராமரையும் ஆணாதிக்கவாதி என்று சாடுகின்றனர்.
மேற்படி அபத்தங்களை மறுத்து, அவற்றை ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகளின் படியே விளக்கி,
அவள் சரித்திரமே திருவஷ்டாக்ஷரத்தின் தத்துவ விளக்கம் என்பதை அறுதியிடவே இந்த வ்யாஸம் எழுதப்பட்டது.

ஸ்ரீ ஸ்வாமி பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம் என்னும் நூலிலிருந்து சில ஸ்ரீஸூக்தி ப்ரமாணங்கள்.

ஸ்ரீஸூக்தி #5:-இதிஹாஸ ஶ்ரேஷ்டமான ஶ்ரீராமாயணத்தாலே சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது.
பாரதத்தாலே தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது.

ஸ்ரீஸூக்தி #6:இவை இரண்டாலும் புருஷகார வைபவமும், உபாய வைபவமும் சொல்லிற்றாயிற்று.

ஸ்ரீஸூக்தி #7:புருஷகாரமாம் போது க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.

ஸ்ரீஸூக்தி #8:பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக,
நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக,
அநந்தரம் பிரிந்தது அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.

———-

முன்னுரை:

யத்யபி ஏஷ பவேத் பர்த்தா மமார்யே வ்ருத்த வர்ஜித: |
அத்வைத முபசர்தவ்யஸ் ததாப்யேஷ மயா பவேத் ||– அயோத்யா காண்டம் 117 ஆம் ஸர்கம்.

எனது கணவர் ஸ்ரீராமரான இவர் ,ஒரு கொடுங்கோலன் (SADIST/PSYCHO) ஆக இருப்பாரே ஆனாலும்கூட,
என் மனத்தில் எவ்வித சஞ்சலமும் இன்றி,நான் அவருக்கு பணிவிடை கொண்டுதானிருப்பேன்.

கிம் புநர்யோ குணஶ்லாக்ய: ஸாநுக்ரோஶோ ஜிதேந்த்ரிய: |
ஸ்திராநுராகோ தர்மாத்மா மாத்ருவத் பித்ருவத் ப்ரிய: ||

ஆனால் இவரோ எல்லோராலும் புகழத் தக்க குணங்கள் உடையவர் ! கருணை மிக்கவர்! புலன்களை வென்றவர் !
என்மீது நிலையான அன்பு வைத்திருப்பவர் ! தர்மாத்மா !
ஒரு தாயைப் போலும்,ஒரு தந்தையைப் போலும் என்மீது மனப்பூர்வமான நேசமுள்ளவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும்,அவரை அனுசரித்துப் போவதிலும்
(காட்டிற்கு உடன் வந்ததிலும்) ஆச்சரியம் தான் என்ன?

இவ்வாறு ஸ்ரீ ஸீதையின் ஏக்கமானது “என் கணவர் ஸ்ரீராமர் சகல கல்யாண குணங்கள் நிரம்பியவர். உலகம் நிறைந்த புகழாளர்.
அதனால் தான், நான் என்னதான் கற்புக்கரசியாய் இருப்பினும், எவ்வளவு தான் தர்மங்கள் அனுஷ்டித்தாலும்
எனக்கு என்று ஒரு தனிப்புகழ் கிட்டுவதில்லை. என் கீர்த்தியானது குடத்திலிட்ட விளக்கு போலுள்ளது.
எனவே ஒரு கொடூரனுக்கு வாழ்க்கைப்பட்டு, இதேபோல் தர்மங்கள் அனுஷ்டித்து, கற்புக்கரசியாய் இருந்தால் தான்
என்னுடைய க்யாதியும் குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிக்கும்.
ஆனால் ஸ்ரீ ராமரோவெனில் மிகவும் நல்லவர். எனவே இப்பிறவியில் நான் விரும்பும் இந்த வாய்ப்பு கிட்டாது” என்று இருந்தது.

இனி வ்யாசத்திற்கு வருவோம்.

அயோத்தியா காண்டத்தின் இறுதி சர்க்கங்களில் தான் ஸ்ரீ ஸீதையின் சரிதம் தொடங்குகின்றது. 117ஆம் சர்க்கத்தில்
ஸ்ரீ ஸீதையும் அநசூயையும் உரையாடுகின்றனர். அப்பொழுது மஹரிஷி ஸ்ரீ அத்ரியானவர் கூறுகிறார்:

தஶ வர்ஷஸஹஸ்ராணி யயா தப்தம் மஹத் தப: |
அநஸூயா வ்ரதை: ஸ்நாத்வா ப்ரத்யூஹாஶ்ச நிவர்திதா: ||
தாம் இமாம் ஸர்வ பூதாநாம் நமஸ்கார்யாம் தபஸ்விநீம் |
அநஸூயேதி யா லோகே கர்மபி: க்யாதிமாகதா: ||– அயோத்யா காண்டம் -117, 11 &13

அநஸூயை என்னும் இவள் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றியிருக்கின்றாள்.
எல்லாவித இடையூறுகளையும் விலக்கி,வ்ரதங்களை முழுமையாக செய்து முடித்தவள்.
எல்லா பிராணிகளாலும் வணங்கத்தக்கவள். கீர்த்தி பெற்றவள்! முதியவள்! கோபம் என்பதே ஒருபொழுதும் அறியாதவள் !
தன் அன்பு நிறைந்த நற்கர்மங்களால் “அநஸூயா” என்று உலகில் புகழ் பெற்றவள்.

இவ்வாறு தன் மனைவியை பலவாறு புகழ்கின்றார். அநஸூயை என்றால் பொறாமை இல்லாதவள் என்று ஒரு பொருளுண்டு.
பிறரால் பொறாமைப்படக் கூட முடியாத இடத்தை அடைந்தவள் என்று மற்றோரு பொருளும் உண்டு.
ஸ்ரீ ஸீதை “தாயே! நானும் உன்னைப் போல் புகழ்பெற விரும்புகின்றேன்” என்றாள்.

அப்பொழுது அநஸூயை, “பேரழகியும், குணவதியும், சௌபாக்யவதியுமானயான ஸ்ரீ ஸீதா! புகழ்பெற்ற ஸ்ரீ ராமனால்,
சுயம்வரத்தில் நீ அடையப்பட்டாய் என்று கேள்விப்பட்டேன். எது,எப்படி நிகழ்ந்ததோ, அவற்றை அப்படியே விஸ்தாரமாக கூறுவாய்”
என்று பூர்வ வ்ருத்தாந்தங்களை கேட்கின்றார்.

ஸ்ரீ ஸீதையும் தனது அயோநிஜ பிறப்பு தொடக்கமான வ்ருத்தாந்தங்களை ரஸமாக சொல்கின்றார்.
கலப்பை உழுத மண்ணில், புழுதியும் தூசுகளும் பட தன்னை ஸ்ரீ ஜனகர் கண்டெடுத்தது
(பாம்ஸு குண்டித ஸர்வாங்கீம் ஜநகோ விஸ்மய: அபவத்). “இவள் உன்திருமகள் ! சாதாரண மானுட பெண்ணன்று ” என்ற
அசரீரி வாக்கினை கேட்டு ஸ்ரீ ஜனகர் மகிழ்ந்தது, தாய் ஸுநயநா அரவணைப்பில், தர்ம சூக்ஷ்மமான நல்லுரைகளுடன் வளர்ந்தது,
சாவித்திரி – சத்தியவான், அத்ரி – அநஸூயா, ரோஹிணீ – சந்திரன்,அருந்ததி – வசிஷ்டர் போன்ற
உதாரண தம்பதியர் பற்றிய கதைகள் கேட்டது, பின்பு திருமணம் நடந்தது,
வனவாஸம் செல்லும் முன்னர் மாமியார் கூறிய அறிவுரைகள் என்று விஸ்தரித்து வர்ணனம் செய்கிறாள்.

முடிவில் ஸ்ரீ அநசூயை சீதையைப் பாராட்டுகின்றார். தன்னுடைய திவ்யமான மாலை, என்றுமே கசங்காத / அழுக்கடையாத வஸ்த்ரம்,
வாசனை த்ரவ்யம், அணிகலன் இவற்றை ஆசீர்வாதமாகக் கொடுக்கின்றார்.
ஸீதையை அணிகலன்களால் பலவிதமாக அலங்காரம் செய்கின்றார். வாசனைத் திரவியங்களை பூசி,
“ஸீதா ! நீ உற்றார் உறவினர்களையும், கௌரவத்தையும், சுக போகங்களையும் துறந்து உன் கணவனுடன்
வனவாஸம் செய்ய வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. கற்புக்கரசிகள் இப்படித்தான் நடக்க வேண்டும்”.

அதற்கு ஸ்ரீ ஸீதை -“தாயே! என் தந்தை ஜனகர், எனக்கு சிவ தனுஸை கன்யா சுல்கமாக வைத்தார்.
எந்த வீரன் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றுகிறானோ, அவனுக்கே என் பெண் மாலை இடுவாள் என்று அறிவித்திருந்தார்.
ஸ்ரீ ராமனும் சிவ தனுஸை வளைத்து நாண் ஏற்றினார். இதனால் மகிழ்ந்து போன என் தந்தை என்னைத் கன்யாதானம் கொடுக்க சித்தமானார்.
ஸ்ரீ ராமரோ என் தந்தையின் உத்திரவின்றி நான் எதுவுமே செய்வதில்லை என்று மறுத்துவிட்டார்.
பிறகு தூதுவர்கள் சென்று ஸ்ரீ தசரதரை அழைத்து வந்து, அவர் சம்மதித்த பிறகே என்னை மணந்தார்.

தீயமாநம் ந து ததா ப்ரதிஜக்ராஹ ராகவ: |
அவிக்ஞாய பிது: சந்தம் அயோத்யாதிபதே: ப்ரபோ: ||– அயோத்யா காண்டம்- 118-51

தன் தந்தையார் பார்த்து நிச்சயித்த பெண்ணான என்னை மணந்தார்.
“என் அழகில் மயங்காமல், பித்ரு வாக்ய பரிபாலனம் என்னும் தர்மத்தை அனுஷ்டித்தார்.
எனக்கு காதல் திருமணத்தில் விருப்பமில்லை. தர்மத்தில்தான் பெரு விருப்பம்.
ஏனெனில் இன்று ஒரு அழகியை விரும்புபவன், நாளை அவளினும் அழகியாக தன் பார்வைக்கு படும்
வேறு ஒருத்தியை விரும்பலாம். எனவே இது அவர் மீது இருந்த அன்பினை இருமடங்கு பெருக்கியது.

ப்ரியா து ஸீதா ராமஸ்ய தாரா: பித்ருக்ருதா இதி |
குணாத் ரூபகுணஶ்சாபி ப்ரீதிர் பூயோ அப்யவர்ததா ||
தஸ்யாஶ்ச பர்தா த்விகுணம் ஹ்ருதயே பரிவர்ததே |– பாலகாண்டம்-77-28

எனது ஸ்ரீ ராமர் – பித்ரு வாக்ய பரிபாலனம், மாத்ரு பக்தி,ஏக பத்னி வ்ரதம், சரணாகத ரக்ஷணம்,
ப்ராத்ரு ஸ்நேஹம் போன்ற தர்மங்களும், தயை, க்ஷமை, பக்தி, தவம், த்யானம், ஸத்யம், இந்திரிய நிக்ரஹம்
போன்ற ஆத்ம குணங்களும், தன் அன்பர்கள் மீது வாத்சல்யம்,ஸௌசீலம், ஸௌலப்யம், ஆர்ஜவம் போன்ற குணங்களும்,
சிறந்த லாவண்யம், சவுந்தர்யம், ப்ரம்ம தேஜஸ் என்னும் ரூப லக்ஷணங்களும், புகழும்,
ஸ்ரீ விஷ்ணுவுக்கு நிகரான வீரதீர பராக்கிரமங்களும், த்ரிலோக ஐச்வர்யமும் (வ்யாப்தா, நியந்தா) ,
குபேரனுக்கு நிகரான செல்வமும், ப்ருஹஸ்பதியைப் போன்று சகல சாஸ்திர நிபுணத்வமும் ,வாய்மை,
பெரியோர்கள் / அன்பர் சொல் கேட்டல் என்னும் பல குணங்களும் கூடியவர்.

எனவே இப்படிப்பட்ட உத்தம புருஷருக்கு நான் பணிவிடை செய்வதிலும், அவரை அனுசரித்துப் போவதிலும் ஆச்சரியம் என்ன?
இத் துணை கல்யாண குணங்கள் படைத்த ராமனை வேறு எந்தப் பெண் மணந்திருந்தாலும் இப்படித் தான்,
சந்திரனைப் பிரியாத ரோஹிணியை போன்று கூடவே இருப்பாள்.
என்றிவ்வாறெல்லாம் ஓடிய அவளது உள்ளக்கிடக்கை தனை பெருமாளும் அறிந்தான்.

“உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறியும்” பெருமாள், அவளுடைய குணாதிசயங்களை வெளியிட சங்கல்பித்தார்.

———————–

பிராட்டியானவள் நாமெல்லாம் பெருமாளை அடைய புருஷகாரம் ஆகின்றாள் (சிபாரிசு).

இதனை தர்க்க பூர்வமாக நிறுவுவோம். (உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்பன தர்க்க பாஷையின் அங்கங்கள்
அதாவது உறுப்புக்கள் ஆகும். எனவே நீங்களும் என்னுடன் கொஞ்சம் தர்க்கம்- ந்யாயம் பயிலுங்கள்).

உத்தேசம்: (பெயரிடல்)
அதற்கு அவளிடம் 1)க்ருபை, 2)பாரதந்த்ர்யம், 3)அநந்யார்ஹத்வம் என்னும் மூன்று குணங்கள் வேண்டும்.

லக்ஷணம்: (விளக்குதல்)
1) க்ருபையாவது பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை.
ஜீவர்கள் ஸம்ஸாரத்தில் படும் துக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல் எம்பெருமானோடு
இவர்களை சேர்ப்பதற்கு உறுப்பான முயற்சி செய்வதற்கு க்ருபை வேணும்.
2) பாரதந்தர்யமாவது பரமபுருஷனுக்கு உரிமைப் படுகை. ஸ்வதந்த்ரனான அவனை அனுவர்த்தித்து
(அவன் சொன்னபடியெல்லாம் நடந்து) அவனை வசப்படுத்த வேண்டியிருப்பதால் பாரதந்தர்யம் வேணும்.
3) அநந்யார்ஹ சேஷத்வமாவது அவனுக்கன்றி மற்றவனுக்கு உரிமைப் படாதொழிகை.
பிராட்டி எம்பெருமானிடத்தில் சென்று “இந்த ஜீவனை நீ அங்கீகரிக்க வேணும்!” என்றால்
“இவள் நம்மைத் தவிர வேறொரு விஷயத்திற்கு சேஷப்படாமல் (அடிமைப்படாமல்) நமக்கே அதிசயத்தை (நன்மை)
விளைவிக்குமவள் ஆகையாலே நம்முடைய காரியத்தையன்றோ இவள் சொல்லுகிறாள்” என்று பரமன் நினைத்து,
அவள் சொன்னபடி செய்கைக்கு உறுப்பாக அநந்யார்ஹத்வமும் வேணும்.

பரீக்ஷை: (சரி பார்த்தல்)
அவளுக்கு இம் மூன்று லக்ஷணங்களும் இருக்கும் படியை நாம் எங்ஙனே அறியலாம் என்னில் –
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஜனகராஜன் திருமகளாராய்த் தோன்றி அப்பெருமாளை மூன்று தரம் பிரிந்து
இம்மூன்று குணங்களை வெளிப்படுத்தினாள். நாம் அதுகொண்டு அறியலாம்.
எப்பிரிவில் எக்குணம் வெளியாயிற்று என்னில்:

ராவணன் பிரித்தான் என்னும் சாக்கிலே முதலில் ஸ்ரீ பெருமாளைப் பிரிந்து இலங்கைக்கு எழுந்தருளின
சமயத்தில் “க்ருபா குணம்” வெளியாயிற்று.
முற்பட பிரிவு – க்ருபையை காட்டியது (க்ருபை – பிறர் படும் துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமை).

தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காகத் தான் சிறையிருந்தமையாலும்;
அச்சிறையிலே தன்னை இரவும் பகலும் ஹிம்சித்த ராக்ஷஸிகள், ஒருநாள் திரிஜடையின் கனவு வ்ருத்தாந்தம் கேட்டார்கள்.
அக்கனவிலே ராவணன் தோல்வியுற்று, தெற்கு – எம திக்கிலே கழுதைமீது, அழைத்துச் செல்லப்பட்டதாகவும் (மாண்டுபோதல்),
ஸ்ரீ பெருமாள் வெற்றி பெற்று ஸ்ரீ அயோத்தியில் ஸ்ரீ ஸீதையுடன் முடிசூடியதாகவும் கண்டமை கேட்டு மிகவுமஞ்சி நடுங்கினார்கள்.
ஸ்ரீ பிராட்டி அவர்களை நோக்கி “நானிருக்க நீங்கள் அஞ்சுவதென் ? அஞ்சவேண்டா !! என்று அபய ப்ரதானம் செய்தமையாலும்;
இந்த அபய ப்ரதானம், வெறும் வாய்ச் சொல்லாய் ஒழியாமல் ,ராவண சம்ஹாரத்திற்குப் பின் தனக்கு ஸோபனம் (நற்செய்தி)
சொல்ல வந்த அனுமன், அந்த ராக்ஷஸிகளை சித்திரவதை (கொடிய முறையில் கொலை) செய்ய எத்தனித்தார்.
அப்பொழுது அவரோடே மன்றாடி, பிறர் படும் ஹிம்ஸையைக் கண்டு பொறுத்திருக்கும் படியான
மனக்கொடுமை எனக்கில்லை என்று அறிவுறுத்தியும்,
அவ்வரக்கிகளின் குற்றங்களை நற்றங்களாக உபபாதித்தும் அவர்களைக் காத்து அருளியமையாலும், க்ருபா குணம் விளங்கிற்று.
இக்குணம் வெளியிடுவதற்கேயாம் ஸ்ரீ பிராட்டிக்கு நேர்ந்த முதற் பிரிவு.

ஸ்ரீ பிராட்டியே எல்லா ஜீவாத்மாக்களுக்கும் அன்னையாதலால், தாய் ஸ்தானத்தில் நின்று ராவணனுக்கு
சொன்ன உபதேசங்களுள் சிலவற்றை இங்கே காணலாம்.

ஸுந்தரகாண்டம் 21ஆம் சர்கம்:
இஹ ஸந்தோ ந வா ஸந்தி ஸதோ வா நாநுவர்தஸே ||
இங்கே,இலங்கையில் சான்றோர்கள் யாரும் இருக்கவில்லையா? அல்லது அவர்கள் இருந்தும்,
நீ அவர்களை பின்பற்றவில்லையா? ஏன் இப்படி அதர்ம வழியில் இழிந்து அழிவைத் தேடுகின்றாய் ?

மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம: ஸ்தானம் பரீப்ஸதா
வதே ச அநிச்சதா கோரம் த்வயாஸௌ புருஷர்ஷப ||
உனக்கு கோரமான அழிவு வேண்டாம் என்று எண்ணினால், புருஷ ச்ரேஷ்டரான ஸ்ரீராமனுடன் நட்புக்கொள்
(காலைப் பிடிக்கத் தேவை இல்லை, கையையாவது பிடி. அதாவது நட்புறவு கொள்வதே போதுமானது)

விதித ஸ ஹி தர்மக்ஞ: ஶரணாகதி வத்ஸல:
தேந மைத்ரீ பவத் தே யதி ஜீவிதும் இச்சஸி ||
அறம் அறிந்த ஸ்ரீ ராமர் சரணடைந்தவர்களிடம் பேரன்பு கொண்டவர். நீ உயிருடன் இருக்க விரும்பினால்
அவருடன் நட்புக்கொள். அவர் நீ செய்த அனைத்து அபசாரங்களையும் மன்னிப்பார்.

ஆயினும் ராவணன் திருந்தவில்லை. அநாதி துர்வாசனையினால், எவ்வளவு உபதேசித்தும் இவன் திருந்தவில்லையே
என்று பரிதபித்தாள். ஐயோ ! இவனுடைய துர்புத்தி நீங்கி அனுகூலபுத்தி உண்டாக வேணும் என்று
ஜீவாத்மா திறத்தில் தான் செய்யும் பரமகிருபையாலே அவனை தீ மனங்கெடுத்து வழிப் படுத்தப் பார்த்தாள்.

பிரிவு என்றால் என்ன ?
நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ |
யதா ஸர்வகதோ விஷ்ணுஸ்தவையேதம் த்விஜோத்தம ||– விஷ்ணுபுராணம் 1-8-17

உலகிற்கெல்லாம் தந்தை பகவான் என்றால், மஹாலக்ஷ்மீ ஜகன்மாதாவாய், கருணைக்கடலாய் நிற்கின்றாள்.
பகவானை விட்டு ஒருபோதும் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவன் விஷ்ணு. அதுபோல் இவளும் எங்கும் நிறைந்திருப்பவள்.
ஆக மிதுனமாய் நிற்கும் இவர்களே நமக்கு பெருந்தெய்வம்.

பராசர ரிஷி, தன்னுடைய விஷ்ணு புராணத்தில் – பிராட்டியானவள் பகவானை விட்டுப் பிரியாதவள்.
அவளுடன் நித்ய சம்பந்தம் உள்ளவன் எம்பெருமான் என்று முதலில் பொதுவாகக் கூறியவர் பின்னர்
அந்த நித்ய சம்பந்தத்தை பல பிரகாரங்களால் விளக்குகின்றார்.

அர்த்தோ விஷ்ணு இயம் வாணீ ||
அர்த்த: என்னும் பொருள் ஆண்பாலினத்தைச் சார்ந்து ஸ்ரீ பகவானது விபூதியாக அதாவது ஸ்ரீ பகவானாக கூறப்படுகின்றது.
வாணீ என்னும் சொல் பெண்பாலினத்தைச் சார்ந்து ஸ்ரீ லக்ஷ்மியின் விபூதியாக அதாவது ஸ்ரீ பிராட்டியாக கூறப்படுகின்றது.

சொல் மற்றும் பொருளின் சம்பந்தமும் நித்தியம் என்பது சாஸ்திரங்களால் வலியுறுத்தப்படுகின்றது.
இதனால் சொல்லும் பொருளும் போல் இணைந்து நிற்பவர் ஸ்ரீ விஷ்ணு ஸ்ரீ லக்ஷ்மீ என்னும்
திவ்ய தம்பதிகள் என்பதும் சொல்லப்பட்டதாகின்றது.

நீதி பிராட்டி என்றால் நியமம் பெருமாள்;
புத்தி பிராட்டி என்றால் போதம் பெருமாள்;
சத்க்ரியா பிராட்டி என்றால் தர்மம் பெருமாள்;
ஸ்ருஷ்டி பிராட்டி என்றால் ஸ்ரஷ்டா பெருமாள்;
பிராட்டி பூமி என்றால் ஹரியே பூ-தரன் (பர்வதம் (அ) ராஜா);
பிராட்டி துஷ்டி என்றால் ஹரியே சந்தோஷம்;
பிராட்டி இச்சை என்றால் ஹரியே காமம்;
பிராட்டி ஆஜ்யாஹுதி (நெய்) என்றால் ஜனார்தனனே புரோடாஸம்.

கிம் சாதி பஹுநோக்தேந ஸங்க்ஷேபேண இதமுச்யதே ||

பலவாறு சொல்லி பயன் என்ன ? சுருங்கச் சொல்கிறேன் ஒன்றை.

தேவ திர்யங் மநுஷ்யாதௌ புந் நாமா பகவாந் ஹரி: |
ஸ்த்ரீநாம்நீ ஶ்ரீ: ச விக்ஞேயா நாநயோர் வித்யதே பரம் ||

தேவ ஜாதி, திர்யக் ஜாதி, மனுஷ்ய ஜாதி மற்றும் உள்ளவை இவைகளில் ஆண் பாலினத்தைச் சார்ந்தவை
அனைத்தும் பெருமாள் விபூதியாய் ஸ்ரீ விஷ்ணு என்றே சொல்லப்படும்.
பெண் பாலினத்தைச் சார்ந்தவை அனைத்தும் ஸ்ரீ லக்ஷ்மியினுடைய விபூதியாய் ஸ்ரீ லக்ஷ்மி என்றே சொல்லப்படும்.
விபூதியென்றால் செல்வம் என்று பொருளாகும்). பல விபூதிகளைச் சொல்ல வேண்டும் என்று தொடங்கிய ரிஷி,
பல படிகளையும் காட்டி, முழுதும் சொல்ல முடியாமல் போய் “இவ்வாறே மேலும் கண்டு கொள்க ” என்று தலைக் கட்டுகின்றார்.

ஸ்ரத்தயா அதேவோ தேவத்வம் அஶ்நுதே ||

அதாவது தேவன் அல்லாதவன் ஸ்ரத்தையாகிற ஸ்ரீ லக்ஷ்மியினால் தான் தேவனாகும் தன்மையை அடைகிறான் –
என்று வேதமும் சொல்லுகின்றது.

இப்படி ஸ்ரீ லக்ஷ்மியானவள் நொடிப்பொழுதும் பிரியாது வாழும் மார்பனே என ஸ்ரீ நம்மாழ்வாரும்,
’அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்றும்,
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும் இதையே, ’திருவுக்கும் திருவாகிய செல்வா’ என்றும் கூறுகின்றனர்.

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்யையானவள். பகவானைப் போல் ஆதியும் அந்தமும் இல்லாதவள்.
ஸ்ரீ பகவானைப் போல் எங்கிருந்தாவது தோன்றுகின்றாள், மறைகின்றாள்.
மறுபடி வேண்டும்போது மற்றோரிடத்திலிருந்து ஆவிர்பவிக்கின்றாள்.
ஸ்ரீ பகவான் அதிதி மகனாக அவதரித்தபோது இவள் பத்மையானாள்.
ஸ்ரீ பரசுராமனாக அவதரித்த போது இவள் தரணியாகத் தோன்றினாள்.
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீ ஸீதையாகவும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ ருக்மிணியாகவும் இவளே அவதரித்தாள்.
அவன் தேவனாக அவதரித்தால் தேவப் பிறவியை மேற்கொள்கிறாள்.
அவன் மனித பிறவியை எடுத்தால், இவளும் மனிதப் பிறவியை ஏற்கிறாள்.
இப்படி எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானுக்கு ஏற்ப அவதரிக்கின்றாள். பிரிவதே இல்லை.

அனுமனும் இதைக் கூறுகின்றான்:

அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் |
தேந அயம் ஸ ச தர்மாத்மா முஹூர்தம் அபி ஜேவதி ||– ஸுந்தரகாண்டம் 15-52

இந்தத் தேவியின் மனம் ஸ்ரீ ராமனிடத்திலும், ஸ்ரீ ராமனின் மனம் இந்த தேவியிடத்திலும் நிலைத்திருக்கின்றது.
அதனால்தான் இந்த ஸ்ரீ தேவியும், தர்மாத்மாவான ஸ்ரீ ராமரும், இது நாள் வரையிலும் உயிரோடு இருக்கின்றனர்.

நாட்டைப் படை என்று அயன் முதலாத்தந்த நளிர் மாமலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே– ஸ்ரீ நாச்சியார் திருமொழி

குளிர்ந்த பெரிய மலர் உந்தி வீட்டை உண்டாக்கி, அதில் உலகங்களை படையென்று நான்முகன் முதலியவர்களை உண்டாக்கியவன்.
அதையே திருவிளையாடல்களாகச் செய்யும் மாசற்றவனைக் கண்டீரோ? என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்.
விமலன் – அவ்விளையாட்டுக்களால் தனக்கொரு பாவமோ கர்மமோ அண்டாதவன்.

திருவிண்ணகர் சேர்ந்தபிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.

ஸ்ரீ ஒப்பிலியப்பனால் படைத்து, பேணப்பட்டு, அழிக்கப்படும் சோலையே இந்த மூவுலகங்களும் என்று ஸ்ரீ நம்மாழ்வாரும் பாடினார்.

இங்கே ஸ்ரீ பெருமாளை சொன்னது ஸ்ரீ பிராட்டிக்கும் உபலக்ஷணம் ஆகும்.

அவதாரத்தில் பிரிவு என்பது ஒரு நாடகம், அவ்வளவே.

பிறர் சமையல் செய்யக் காணும்,நாம் அதைக் கற்பது போலவும்,
ஆசிரியர் பரிசோதனைச் சாலையில் செய்யக் காணும் நாம் அதைக் கற்பது போலவும் தான் அவை.
JUNIOR LAWYER, HOUSE SURGEON போல நாமும் SENIORS செய்யக் கண்டு PRACTICALS கற்கின்றோம்.
இதிஹாச புராணங்களில் ஸ்ரீ பெருமாளும், ஸ்ரீ பிராட்டியும், நித்யர்களும், பக்தர்களும், ரிஷிகளுமாக உபநிஷத்,
ஸ்ம்ருதிகளில் காணும் விதி, நிஷேத தர்மங்களை அனுஷ்டித்தும், த்யஜித்தும் காட்டுகின்றனர்.
நாமும் விதி, நிஷேதங்களை அறிந்து கைக்கொள்ளவே அல்லது விடவே தான் அவை நடத்தப்படுகின்றன.

———–

ஸ்ரீ பத்ம புராணமானது ஸ்ரீ புலஸ்த்ய ப்ரஜாபதி ,ஸ்ரீ பீஷ்மருக்கு உபதேசித்தது ஆகும்.
இது 1)ஸ்ருஷ்டி கண்டம், 2)பூமி கண்டம், 3)ஸ்வர்க கண்டம், 4)பாதாள கண்டம் மற்றும் 5)உத்தர கண்டம்
என்று ஐந்து பாகங்களால் ஆனது.

நாம் அன்றாடம் சேவிக்கும்

பார்வத்யுவாச
கேநோபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்|
பட்யதே பண்டிதைர் நித்யம் ஶ்ரோதும் இச்சாம் அஹம் ப்ரபோ|| -பத்ம புராணம் -5-72-334
ஈஶ்வர உவாச
ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே|
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராந்நே|| பத்ம புராணம்- 5-72-335
என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பலஶ்ருதி ஸ்லோகங்கள் ஸ்ரீ பத்ம புராணம் உத்தர கண்டத்தை சேர்ந்தவை.

ஶ்ரீராமோ ராமபத்ரஶ்ச ராமசந்த்ரஶ்ச ஶாஶ்வத: |
ராஜீவலோசந ஶ்ரீமாந் ராஜேந்த்ரோ ரகுபுங்கவ: || என்று தொடங்கும்
ஶ்ரீராம அஷ்டோத்தர ஶதநாம ஸ்லோகமும் இக் கண்டத்தை சேர்ந்தது.

மேலும் இப்புராணத்தில் பரம ஶிவனார் பார்வதி அம்மைக்கு உபதேசித்த ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகத்தினை,
தான் கேட்டு, பிறகு CUSTOMIZE செய்த, ஸ்ரீ பீஷ்மர், பின்னர் அதனை மஹாபாரதத்தில்
அநுஶாஸநிக பர்வத்தில் ஸ்ரீ யுதிஷ்டிரருக்கு உபதேசிக்கின்றார்.

பகவத் கீதையின் 18 அத்யாயங்கள் பற்றி 18 கதைகள் இங்கு உண்டு.
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் மாஹாத்மியமான – ஆத்மதேவர் – துந்துலி கதை,
கோகர்ணன் 7 நாள்களில் செய்த பாகவத ஸப்தாஹம்,
அதன் ஶ்ரவண பலனாக துந்துகாரி மோக்ஷம் பெறுதல் போன்றனவும் இப்புராணத்தில் உள்ளன.
உத்தர ராமாயணத்தில் விரிவாக சொல்லப்படாத லவகுஶா வரலாறு, ராமர் செய்த அஶ்வமேத யாகம், அனுமனின் திக்விஜயம் ,
யாகக்குதிரையை லவகுஶர்கள் கைப்பற்றுவது, ஶத்ருக்நருடன் அவர்களின் யுத்தம்,
மற்றும் பாலகாண்டம் ராம சகோதரர்களின் நாமகரணம் ,
பெயர்க்காரணம் போன்றன சுவாரஸ்யமாக சொல்லப்படுகின்றன.
மஹாபாரதத்தின் ஸ்த்ரீபர்வம் , அநுஶாஸநிக பர்வம், போன்றவைகளுக்கும் இதுவே மூலம் ஆகும்.

———

ஸ்ரீ வால்மீகி ராமாயணமானது 24,000 ஸ்லோகங்களாலானது.
இது உத்தரகாண்ட ஸ்லோகங்களையும் கூட்டி வரும் தொகையாகும்.
ஸ்ரீ கம்ப ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களுக்கு, ஒருமுறை சடையப்ப வள்ளலை புகழ்ந்து ஒரு வரி அமைந்துள்ளது.
அவ்வாறே ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ஒவ்வொரு 1000 பாக்களும் ஸ்ரீ காயத்ரி மந்த்ரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்தினை கொண்டு தொடங்கும்.
அவ்வாறு தொடங்கும் 24 ஸ்லோகங்களை கொண்டு விளங்கும் ஸ்ரீ காயத்ரி ராமாயணம் என்னும் ஸ்தோத்ரமும் உளது.
அதில் இறுதி மூன்று பாக்களும் உத்தரகாண்டத்தைச் சேர்ந்தவை. அவை பின்வருமாறு ….

22.)சாலநாத் பர்வதஶ்சைவ கணா தேவஸ்ய கம்பிதா:| 7-16-26
சசால பார்வதி சாபி தட ஸ்லிஷ்ட மஹேஶ்வரம்||

23.)தாரா புத்ரா புரம் ராஷ்ட்ரம் போகாச் சாதந போஜநம்| 7-34-39
ஸர்வமேவா விபக்தம் நௌ பவிஷ்யதி ஹரீஶ்வர||

24.)யாமேவ ராத்ரிம் ஶத்ருக்ந பர்ணஶாலாம் ஸமாவிஶத்| 7-66-1
தமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூத தாரகாத்வயம்

உத்தரகாண்டம் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்லோகங்களாலும், 111 ஸர்கங்களாலும் ஆனது.
ஸ்ரீ ராமாயணம் தொடங்கும் பொழுதே உத்தரகாண்ட கதாபாத்திரங்களான ஸ்ரீ லவ குஶர்கள்,
அதனை ஶ்ரீராமருடைய திருவோலக்கத்தில் (அஶ்வமேத யாகஶாலையில்) அரங்கேற்றுவதாக அமைந்துளது.

உத்தரகாண்டத்தினைப் பற்றி பாலகாண்டத்தில் பின்வருமாறு விவரணம் கூறப்பட்டுள்ளது.

ராமாபிஷேக அப்யுதயம் சர்வ ஸைந்ய விஸர்ஜநம்|
ஸ்வராஷ்ட்ர ரஞ்சநம் சைவ வைதேஹ்யா ச விஸர்ஜநம்|| ராமாயணம் -1-3-38
இங்கு ஸ்ரீ பிராட்டியை காட்டிற்கு அனுப்பியது(வைதேஹ்யா ச விஸர்ஜநம்) என்று
பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாயண முன்னுரையில் கூறப்படுகின்றது.

அநாகதம் ச யத் கிஞ்சித் ராமஸ்ய வஸுதா தலே|
தத் சகார உத்தரே காவ்யே வால்மீகி: பகவாந் ரிஷி: || ராமாயணம் -1-3-39
பொருள்: இவைகளை எழுதிய பின்னர், மண்ணுலகில், இதற்கு பிறகும் , ஸ்ரீ ராமர் செய்யபோகும் பற்பல
நற் செயல்கள் பற்றியும் ,பிற விவரங்களையும் தெய்வாம்ஶம் பொருந்திய முனிவர் ஸ்ரீ வால்மீகி,
அடுத்த பகுதியான உத்தர காண்டத்தில் வரைந்து நிறைவு செய்தார்.

சதுர்விஶ்மஸஹஸ்ராணி ஶ்லோகாநாம் உக்தவாந் ரிஷி: |
ததா ஸர்கஶதாந் பஞ்ச ஷட்காண்டாநி ததோத்தரம்|| ராமாயணம்-1-4-2
பொருள்: முனிவர் அந்தக் காவ்யத்தில் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்க்களும், ஐந்நூறு ஸர்கங்களும்
ஆறு காண்டங்களும் மேலும் ஒரு காண்டமும் உள்ளதாக இயற்றினார்.

ஸ்ரீ ராமாயணத்தின் மொத்த காண்டங்கள், ஸ்லோகங்கள், ஸர்கங்கள், பாராயண முறைகள்-விளக்கங்கள்,
இன்னின்ன சர்கத்திற்கு வெவ்வேறு பாராயண பலன்கள் என்று வாயு புராணம் உமா-பரமேஶ்வர சம்ஹிதை,
மற்றும் ஸ்ரீ ராமாயணத்தின் மாஹாத்மியம் ஸ்காந்த புராணத்தில்
ஸ்ரீ நாரத-ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதைகளில் விரிவாகக் காணலாம்.

———-

தப: ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிப்ப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| – பாலகாண்டம்-1-1

இதுவே ஸ்ரீ ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் ஆகும். முதன் முதலில் தொடுக்கும் பாசுரத்தில்
திருமகளை வழிபட்டு தொடங்குவதானது ஒருவித மங்கல வழக்கு என்பர் .
ரிஷிகளுக்கு தவமே தனம்(செல்வம்) ஆகும். தபோதனம் என்பதற்கு இலக்கண குறிப்பாக
இருபெயரொட்டு பண்புத்தொகை அல்லது கர்மதாரய ஸமாஸம் என்கிறது வீரசோழியம்.
இதைத்தான் மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று வைத்து ஸ்ரீ பிராட்டியை வணங்கியே ,
தன் காவியத்தை, “ஸீதையின் மஹாசரித்ரமாகத்” தொடங்குகின்றார்.

முதல்பாகத்தில் “பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக” என்று
ஸ்ரீ ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிய ஸ்ரீவசனபூஷண வரிகளை கண்டோம்.
இவ்விரண்டாம் பாகத்திலே “நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக” என்னும்
வரிகளை விளக்கமாகக் காண்போம்.

பிராட்டி நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக.

ஒரு ஜீவாத்மாவுக்கு அவன் இச்சிக்கும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பனவாற்றை,
ஸ்ரீ பரமன் அருள்செய்ய, ஸ்ரீ பிராட்டியின் சிபாரிசு(புருஷகாரம்) அவசியமாகிறது என்று பார்த்தோம்.
அங்ஙணம் சிபாரிசு செய்ய ஸ்ரீ பிராட்டியிடம் காணப்படும் இன்றியமையாத குணங்களாக
1) க்ருபை ,2)பாரதந்த்ர்யம் மற்றும் 3) அநந்யார்ஹத்வம் என்றும் பார்த்தோம்.
அக்குணங்களில் க்ருபையை முற்பாகத்தில் கண்ட நாம் பாரதந்த்ர்யம் என்னும் குணத்தை இங்கே பரக்கக் காணலாம்.

பாரதந்த்ர்யம் என்றால் என்ன?

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும்.
“நான்” என்னும் சொல்-ஸ்தூலமாக ஜீவனையும்,
ஸூக்ஷ்மமாக –அவ்வாத்மாவினுள் உறையும், அந்தர்யாமியான பரமனையும் குறிக்கும்.
நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு.
அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி)
மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு.
அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும்.
(இங்கே மனஸை அர்பணித்தல் என்பது உடலுக்கும் பொருந்தும்).
நம் உடலை கரணகலேவரம் என்பர் வடநூலார் (கரணம்=புலன்(6), கலேவரம்=உடல்).
அவற்றை தனக்காகக் கொள்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும்.
பாரதந்த்ர்யம் சாத்வீகமானது. ஆனால் ஸ்வாதந்த்ர்யமோ ராஜஸமானதாம்.

தனக்கு கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்றனை தேர்வு செய்ய பயன்படும் மனதின் செயல்பாடு “புத்தி” எனப்படும்.
எடுத்துக்காட்டாக பெண்டிர் பதின்மரிடம் 1000 சேலைகளை, அவர்களின் பார்வைக்கு வையுங்கள்.
அவர்கள், தமக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும்.
அவ்வாறன்றி தன் கணவனுக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது பாரதந்த்ர்யம் ஆகும்.
[புத்தியின் ந்யாசம்/(அவனிடத்தில் வைத்தல்) பாரதந்த்ர்யம் என்பர்.]

1. தயரதரும் கௌசல்யையும்

அயோத்யா காண்டம் 12 ஆம், ஸர்கத்தில் சக்கரவர்த்திக்கும் ,கைகேயிக்கும் நடக்கும் பேச்சு வார்த்தை பின்வருமாறு.
கைகேயி “ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம், பரதனுக்கு பட்டாபிஷேகம்” என்று இரண்டு வரங்கள் கேட்டு,
பிடிவாதம் செய்கின்றாள். சக்கரவர்த்தியாரோ அனலில் இட்ட புழுவாகத் துடிகின்றார்.
மந்திரத்தால் கட்டுப்பட்ட நாகம்போல சீறுகின்றார். அப்பொழுது கௌசல்யா தேவியார் பற்றிய நினைவு வந்து
அவளை, கைகேயிக்கு ஒப்பிட்டு –
“ஹே ந்ருஸம்ஶே ! நீயோ ஹிம்சையே இயல்பாகக் கொண்டவள் ! அஹிம்ஸா தேவியான அவளோவெனில்,

யதா யதா ச கௌசல்யா தாஸீவச்ச ஸகீவ ச |
பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவத் ச உபதிஶ்டதி ||
ந மயா ஸத்க்ருதா தேவீ ஸத்காரார்ஹா க்ருதே தவ | -12-68

பொருள்: அந்தந்த சமயத்திற்கேற்றபடி ஒரு வேலைக்காரியைப் போல, ஒரு தோழியைப் போல, மனைவியாக,
ஒரு சகோதரியைப் போல ,தாயைப் போல கௌசல்யை நடந்து வந்திருக்கின்றாள். என்னுடைய பாராட்டுக்குரிய அவளை,
உன்னிடமிருந்த பயம் காரணமாக பகிரங்கமாக நான் பாராட்டியதே இல்லை – என்று புகழ் பாடுகின்றார்.

சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது.
இதற்கு ஆசார்யர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு –“தயரதன் இரண்டாம் தாரமாக சுமித்ரா தேவியையும்,
பிறகு மூன்றாம் தாரமாக கைகேயி தேவியையும் மணம் முடித்து இல்லம் திரும்பும்பொழுது கௌசல்யை
அவனுக்கு கற்பூர ஆலத்தி காட்டினாள். இது ஒரு இளைய சகோதரி ,அத்தம்பதியரின் நல்வாழ்வு, ஆயுள், ஒற்றுமை
வேண்டி செய்யும் மங்கல சம்ஸ்காரம் ஆகும். இதுகண்டே தயரதர் அவளை “பகிநீவச்ச” என்று பாராட்டினார்.

இதுவே கைகேயியானவள், தனக்குப் பிறகு ,மேலும் நான்காவது தாரமாக ஒருத்தியை, தயரதன் கொண்டு வந்திருந்தால்
அங்கு பூரிக்கட்டை, தட்டு, பாத்திரம் பறந்திருக்கும். எனவே கௌசல்யை தன் புத்திக்கு அனுசரித்து நடக்காமல்,
தன் கணவனுடைய புத்திக்கு அனுசரித்து நடந்தாள். சம்பராசுர யுத்தத்தில் தயரதனை காப்பாற்றிய கைகேயி ,
அவன் கொடுத்த இரண்டு வரங்களையும் ஸ்வீகரித்தாள். இதுவே கௌசல்யைக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருந்தால்,
அவ்விரு வரங்களையும் நிராகரித்திருப்பாள். ஏனெனில் ஒரு மனைவிக்கு தன் கணவனின் “புத்திக்கு அனுசரித்து நடத்தல்”
என்பதற்கு மேம்பட்ட வரம்/சிறப்பு என்று ஒன்று கிடயாது. வரம் என்றால் கணவன் என்றும் ஒரு பொருளுண்டு.
“நான் பெண்ணல்ல! “நான்” –இந்த பெண் உடம்பு- என்னும் கூட்டில் வாழும் ஒரு ஆத்மா ஆவேன்!
இப்பிறப்பில் என் கணவனுக்கு அனுசரித்து நடத்தலே எனது வரம் (சிறந்த தர்மம்)!
சுகம்-துக்கம் ,குளிர்-வெயில்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி என இவையெல்லாம் மனோ வ்யாபாரங்களேயன்றி
ஆத்ம குணங்கள் அல்ல” என்றும் தெரிந்து வைத்திருந்தாள்.

“கடமையை செய்! பலனில் விருப்பம் கொள்பவனாய் இராதே!” – என்னும் கீதை வசனம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.
இங்கு கௌசல்யையுடைய இயல்பாக ரிஷி காட்டியது பாரதந்த்ர்யம்.
கைகேயியுடைய இயல்பாக காட்டியது ஸ்வாதந்த்ர்யம். இம்மஹா குணத்திற்கு வசப்பட்டே அன்றோ,
எம்பெருமானும் அவளுடைய திருவயிற்றில் 12 திங்கள் கர்ப்பவாசம் செய்தது.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” -பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய்
(அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம்.
அதைத் தான்

“மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்”-என்றும்

“ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்” என்றும்–உருகுகின்றார் சடகோபர்.

மேலும் பாரதந்த்ர்யத்திற்கு, ஒரு தலையாய உதாரணம் காண்போம்.

2. ஶத்ருக்னரும் பரதரும்

“கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக: |
ஶத்ருக்நோ நித்யஶத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:” -அயோத்யா காண்டம்-1-1

பொருள்: தன் தாய்மாமன் யுதாஜித்தின் கேகயநாட்டிற்கு செல்லும் பரதனால், பாபமில்லாதவனும்,
நித்ய சத்ருக்களாம் ஐம்புலன்களை வென்ற ஶத்ருக்நன், மகிழ்ச்சி பொங்க, அழைத்துச் செல்லப்பட்டான் என்கிறார்
கவிக் குயில் வால்மீகி. 23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால்,
இது வைக்கப்பட்ட தட்டானது தாழும்.
ஒரு உடைவாளோ, வில்லோ எடுத்துச் செல்லப்பட்டது போலே ஶத்ருக்நன் எடுத்துச் செல்லப்பட்டான்”—என்பது செயப்பாட்டு வினை.
அதற்கும் மேலாக, “ப்ரீதி புரஸ்க்ருத:”-அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் ஆதிகவி.
(அதாவது கடகராசியில் நாலாம் பாதத்தில் குரு உச்சம் பெற்று மகிழ்வது போன்றதாம் இதுவும்.)
இங்கு செய்வினை ஏன் வரவில்லை ? செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன பெரிய வாசியென்று கேட்கலாம் !
செய்வினையில் பரதன் எழுவாய்(கர்தா காரகம்), ஶத்ருக்நன் பயனிலை (கர்ம காரகம்) ஆயிருப்பர்.
செயப்பாட்டு வினையால் ஶத்ருக்நன் எழுவாய், பரதன் கரணகாரகம் ஆகின்றனர்.
இங்கு ஶத்ருக்நனுக்கு முதன்மை இடத்தை கொடுக்கின்றார் மஹரிஷி.

ஏனெனில், ராமாயண காவியத்தில் ராமர் –“பெரியோர் சொல் கேட்டல்” என்னும் சாமான்ய தர்மத்தை(ORDINARY) அனுஷ்டித்துக் காட்டினார்.
லக்ஷ்மணன் “தன் புத்திக்கு அனுசரித்து, ராமனை விட்டுப் பிரியாது அணுக்கத் தொண்டாற்றினார் / பகவத் கைங்கர்யம்”.
இது விஶேஷ(GOOD) தர்மம் ஆகும். இதனை ஶேஷத்வம் என்பர். இதில் சிறிது ஸ்வாதந்த்ர்யம் கலந்திருக்கும்.
ஆனால் லக்ஷ்மணன் அயோத்தியில், பெற்றொருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பது தான் ராமரின் திருவுள்ளம் ஆகும்.
மேலே, பரதன் 14 ஆண்டுகள் ராமரை பிரிந்தும் அவருடைய திருப்பாதுகைகள் வைத்து ராஜ்யபரிபாலனத்தை செய்தார்.
இதனை பாரதந்த்ர்யம் என்பர். ராமருடைய திருவுள்ளம் உகக்க, ராமருடைய புத்திக்கு அனுசரித்து தொண்டாற்றினார்.
இந்த தர்மம் விஶேஷதரம்(BETTER) ஆகும். ஆனால் ஶத்ருக்நன் பரதனின்(ராமபக்தனின்) திருவுள்ளம் உகக்க தொண்டாற்றினார்.
இந்த தர்மம் விஶேஷதமம்(BEST) ஆகும். பகவத் பக்தியை விட பாகவத பக்தியே சிறந்தது என்று காட்டவே
மேற்படி ஸ்லோகத்தில் செயப்பாட்டு வினை எடுத்தாளப்பட்டது.
நீத:-அழைத்துச் செல்லப்பட்டவன் ,ப்ரீதிபுரஸ்க்ருத: -கௌரவிக்கப்பட்டவன்/”
தனக்கு எது இயல்போ அவ்வாறே இருக்குமாறு விடப்பட்டவன்” என்பன வினையாலணையும் பெயர்கள்.
இரண்டும் செயப்பாட்டு வினையில் வந்து பாரதந்த்ர்யம் காட்டுகின்றன.
p(பரதனுக்கு அடிமைப்பட்டு கிடப்பதே அவனது இயல்பு/ஆநந்தம் ஆகும்.)

3.ஸ்ரீ ராமானுஜரும் ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரமும்

ஸ்ரீ ராமானுஜர் தம்முடைய ஶ்ரீபாஷ்ய நூலில் கடவுள் வாழ்த்து/ ஆசார்யர்கள் வாழ்த்துப் பகுதியில்

“பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மசூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸங்க்ஷிபுஹு:|
தந்மதாநுஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே ||” – ஶ்ரீபாஷ்யம்-3

பொருள்: போதாயந பகவானால் செய்யப்பட்டுள்ளதும், மிக விரிவாகவுமுள்ள ஸ்ரீப்ரஹ்மஸுத்ர வ்ருத்தியை
நம் பூர்வாசார்யர்கள் மிகச் சுருக்கமாக எழுதினார்கள்.
அவர்களுடைய திருவுள்ளத்தை அனுஸரித்தே ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன.
என்று எழுதுகின்றார். இங்கு யாப்பு/சந்தஸ் கருதி “என்னால்(மயா)” என்னும் சொல் விடப்பட்டது.
எனவே அதையும் (அத்யாஸம்) சேர்த்துக் கொண்டு “என்னால் ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன”
என்று பொருள் கொள்ள வேண்டும். இதுவும் செயப்பாட்டு வினை ஆகும். இங்கு ராமானுஜரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.
பாஷ்யத்தினை தன் புத்திக்கு ஏற்றவாறு எழுதாமல், பூர்வாசார்யர்கள் (குஹதேவர், டங்கர், த்ரமிடர், நாதமுனிகள், ஆளவந்தார் முதலியோர்)
திருவுள்ளத்திற்கேற்ப எழுதுகின்றார். இந்தப் பண்பு

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாது – தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்.–என்ற உபதேச ரத்தினமாலை-71 ஆம் வெண்பாவுக்கேற்ப அமைகின்றது.

4. ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ எம்பெருமானும்

“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”
என்று தன்னை ஒரு கருவியாக்கி ,தனது ப்ரபந்தங்களை ஸ்ரீ எம்பெருமான் தானே எழுதிக்கொண்டான் என
ஸ்ரீ திருவாய்மொழியில் ஸ்ரீ நம்மாழ்வாரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.

5. ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பிகளும்

ஒருமுறை ஶ்ரீரங்கத்திற்கு பகைவர்களால் கேடு விளையுமென்று, எல்லோரும் அஞ்சியிருந்த சமயம்
ஸ்ரீ பெரியநம்பிகள் ஸ்ரீ ராமாநுஜரிடம்,-“நான் இத்திருத்தல நன்மை வேண்டி, வேத சம்ஹிதைகள்,ப்ரபந்தங்கள் ஓதிக்கொண்டே,
இத்திருவரங்கத்தை வலம் வரப் போகின்றேன். ஆனால் என்னுடன் மற்றொருவர், எனக்கு பின்னால் வர வேண்டும்.
அப்படி என்னுடன் வலம் வருபவர் –“ஒருவர் பின்னால் நான் செல்கிறேன்”- என்ற எண்ணம் கொள்ளாதவராக
இருத்தல் வேண்டும் என்றார். “அப்படி ஒருவர் கிடைப்பது அரிது”- என்றார் ஸ்ரீ ராமாநுஜர்.
”ஏன் !நம் ஸ்ரீ ஆழ்வானை அனுப்பலாகாதோ?“-என்றார் ஸ்ரீ நம்பிகள். சரியென ஸ்ரீ கூரத்தாழ்வாரை அனுப்பினார் ஸ்ரீ ராமானுஜர்.
ஸ்ரீ நம்பிகள் முன்னே செல்ல, பாரதந்த்ர்யத்தில் மூழ்கி முக்குளித்த ஸ்ரீ ஆழ்வானும் “தன் சித்தம், புத்தி, அபிமாநம் என ”
அனைத்திலும் ஸ்ரீ பெரியநம்பிகளே தன்னுடைய ஆத்மா என்ற நிஷ்டையுடன், அவர் பின்னே செல்ல ,திருவலமும் இனிதே முடிந்தது.
இந்த நிகழ்ச்சி திருவாய்மொழி -ஈடு முப்பத்தாறாயிரப்படி -7-10-5 ஆம் பாசுர ஐதிஹ்யத்தில் காணலாம்.

6. ஸ்ரீ மதுரகவிகளும் ஸ்ரீ நம்மாழ்வாரும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. – ஸ்ரீ கண்ணிநுண்சிறுத்தாம்பு- 2

ஸ்ரீ நம்மாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளும் பொழுது ,அவர் சீடரான ஸ்ரீ மதுரகவிகள், பிரிவாற்றாமையால் தானும்
உடனே வைகுந்தம் செல்ல விழையாமல், தன் ஆசார்யன் திருவுள்ளத்திற்கு உகப்பாக
“அவர் அருளிய திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களை
உலகில் ப்ரசாரம் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார்.
இவர் “ஆசார்யர் சடகோபருக்கு மேலாக தேவு மற்று அறியேன்” என்று வாழ்ந்தவர்.

———–

இனி விஷயத்திற்கு (பிராட்டி நடுவில் பிரிந்தது) வருவோம்.
உத்தரகாண்டத்தில் 42 ஆம் ஸர்கத்தில் ஸீதை கர்ப்பம் தரிக்கின்றாள்.
அப்படியான நாளில் ஶ்ரீராமர் அவளிடம் “அழகான முகமுடையவளே ! வைதேஹீ! எனக்கு புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டிற்று.
நீ ஆசையாக ஏதாவது எண்ணியிருந்தால்,அவையனைத்தையும் என்னிடம் கூறு” –என்றார்.
அதற்கு ஸ்ரீ ஸீதை – ராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும் ,பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை மட்டும்
உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகின்றேன்.
கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளுமான அவர்களின் பர்ணசாலைகளை நான் விரும்புகின்றேன்.
மேற்கூறிய ஒழுக்கமுள்ள முனிவர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகின்றேன்.
இப்படியாக எனது ஆசைகள் உள்ளன” -என்றாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக ,
உலகினர் ஸீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளை ஸ்ரீ ராமர் காட்டுக்கு அனுப்பினார்.
இந்தப் பிரிவிற்கு பலன் என்ன கிட்டியது என்றால் –ஸ்ரீ ராமர் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும் ,
கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல் -அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி ஸ்ரீ ஸீதை இருந்தாள்.
இப்படியாகத் தன் பத்தினித்தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே ஸ்ரீ ராமனைப் பிரிந்த பயனாகும்.
ஸ்ரீ மஹரிஷி இதனை மேலும் விளக்குகின்றார்.

உத்தரகாண்டம் 48 ஆம் ஸர்கம் –ஸ்ரீ லக்ஷ்மணன் அவளை கங்கை கரையில் ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்திற்கு அருகில் இறக்கி விட்டான்.
ஸ்ரீ ராமர் அவளை கானகத்தில் விட்டு வர சொன்ன காரணத்தையும் கூறினான்.

ந கலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே |
த்யஜேயம் ராகவம் வம்ஶே பர்துர் மா பரிஹாஸ்யதி || -8

பொருள்: சுமித்திரையின் மகனே ! ஸ்ரீ ராமன் மூலமாக உண்டான இந்த கர்ப்பம், இக்ஷ்வாகு குலத்திற்கு இல்லாமல்
போய்விடக் கூடாது என்ற காரணத்தால் அல்லவோ நான் இன்னமும் கங்கையில் விழுந்து உயிர் துறக்காமல் உள்ளேன் என்றாள்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் –“மாயும் வகையறியேன் வல்வினையேன்” என்கிறார்.
இங்கு பிரிவாற்றாமை காரணமாக ,தன் புத்திக்கு அனுசரித்து தற்கொலை செய்துகொள்ளாமல்,
ஸ்ரீ ராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்ப, அவன் குலம் தழைக்கவும், கர்ப்பம் வாழவும், தன் உயிரை பிடித்திருந்தாள்.

பதிர் ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து பதிர்கதி:|
ப்ராணைர் அபி ப்ரியம் தஸ்மாத் பர்து கார்யம் விஶேஷத: || – 17

பொருள்: எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், உறவினனாகவும்,மோக்ஷமாகவும் உள்ளானோ ,
அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது இருந்தால்
அதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.- என்றாள்.
இப்படியாக நடுவிலே பிரிந்து பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள்.
தன் மாமியார் கௌசல்யா தேவியின் வழியிலே அச்சு பிசகாமல் நின்றாள்.
ஸ்ரீ மஹரிஷியும் தன்னுடைய மஹாகாவியத்திற்கு “ஸீதாயா: சரிதம் மஹத்” என்று பத்திரம் /பட்டா எழுதி கொடுத்துள்ளார்.
வழிபாட்டில் மக்களும், ஸ்ரீ பெருமாளை விட ஸ்ரீ பிராட்டிக்கே முதன்மை இடம் கொடுக்கின்றனர்.

ஸ்ரீ தைத்தீரிய உபநிஷத்தில் “தபஸா ப்ரம்ஹ விஜிக்ஞாஸஸ்வ, தபோ ப்ரம்ஹ இதி”
(தவத்தினால் பரமனை அறியவேண்டும், தவமே பரமனாவான்” என்று காண்கிறோம்.
மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொன்னபடி, தப: என்பது ஆண்பால் சொல். இது ஸ்ரீ திருமாலைக் குறிக்கும்.
அதன் பொருளான சிந்தா(சிந்திக்கும் செயல்) என்பது பெண்பால் சொல். இது ஸ்ரீ திருமகளைக் குறிக்கும்.
எனவே ஸ்ரீ பிராட்டியும் தவசீலர்களின் இருப்பிடத்தில் வாழ விரும்பினாள்.
ஶ்ரீ: என்பது “ஶ்ரிங் ஸேவாயாம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்படும். ஶ்ரீ: – ஶ்ரயதே இதி ஶ்ரீ: என்பது வ்யுத்பத்தி.
இதற்கு நாராயணனை இருப்பிடமாக உடையவள்/ வணங்குபவள் / தொண்டு புரிபவள் என்பது பொருள்
(பாரதந்த்ர்ய, அந்ந்யார்ஹங்களுக்கு விளக்கம்).
ஶ்ரீ: ஶ்ரீயதே இதி ஶ்ரீ: என்று கொண்டால் பிற ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடம், வணங்கத்தக்கவள் ,
தொண்டினை ஏற்பவள் என்றும் பொருள்(க்ருபைக்கு விளக்கம்).
இதையே மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று “சிறையிருந்தவள் ஏற்றமாக” காவியத்தை தொடங்குகின்றார்.

ஸ்ரீ பிராட்டி, தான் திருவயிறு வாய்த்திருந்த தகவலை ,ஒருநாள் பூங்காவில் ஸ்ரீ பெருமாளோடு இருந்த சமயத்தில் தெரிவிக்கின்றாள்.
“என்ன வரம் வேண்டும்” என்று கேட்கிறார் ஸ்ரீ பெருமாள். நாட்டில் தன் மீது அபவாதம் கிளம்பியது என்று முன்னமே அறிந்தவள்,
ஸ்ரீ பெருமாளுக்கு எவ்விதத்திலும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே தபோவனம் செல்ல விருப்பம் தெரிவிகின்றாள்.
இதை அறியாத ஸ்ரீ பெருமாளும், மறுநாள் காலையில் ஸ்ரீ லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கின்றார்.
அதன் பிறகு நடக்கும் ஆலோசனையில் தான் பத்ரன் என்னும் ஒற்றன் மூலம் நாட்டில் நிலவும் அபவாதம் தெரிய வருகின்றது.
அவளை ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தருகே விட்டு வரும்படி ஸ்ரீ இளையாழ்வாரை பணிக்கின்றார் பெருமாள்.
பிறகு தொண்ணூற்று ஐந்தாம் ஸர்கத்தில் ,ஸ்ரீ லவகுசர்கள் மூலம் ஸ்ரீ ஸீதா விருத்தாந்தம் அறிகின்றார்.
அவளை திரும்ப அழைக்கின்றார்.
48 ஆம் ஸர்கம் முதல் 97 ஆம் ஸர்கம் வரையில் நடந்த பிரிவில் பாரதந்த்ர்யம் வெளியாகின்றது.
“சிறையிருந்தவள்” என்று க்ருபையும்,
“ஏற்றம்” என்று பாரதந்த்ர்யமும் மற்றும் அநந்யார்ஹத்வமும் பொருள் தருகின்றன.

——————-

கட்டுரையின் மங்கல வாழ்த்து:

அபிரதிபந்தக பாரதந்தர்யம் என்னும் தடையற்ற, நிபந்தனைகளற்ற பக்திநிலைக்கு எடுத்துக்காட்டாக
ஸ்ரீ குலசேகராழ்வார் மேலும் சில பாசுரங்களை காட்டுகின்றார். அவை பின் வருமாறு:

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
பால்நோக்காய் ஆகிலும் உன்பற்றல்லால் பற்றிலேன்
தான்நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே–பெருமாள் திருமொழி -5-3

பொருள்: மீன்கள் வாழ்வதற்கேற்ற நீர்வளமிக்க, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருவிற்றுவக்கோடு என்னும்
திருத்தலத்து எம்பெருமானே! அடியேனாகிய என்பால் நீ கருணை காட்டாவிடினும்,
உன்னையன்றி எனக்கு, வேறு ஒரு புகலில்லை. மக்களை காப்பதற்காக! என்று மாலையணிந்த மன்னவன்,
தான் செய்யவேண்டிய காவல் பணியிலிருந்து தவறி, தன்குடிகளைக் காக்காமல், தானே முனைந்து எப்படிப்பட்ட
துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே பார்த்துவாழும் மக்களைப்போல,
உன் திருவடிகளையே எப்பொழுதும் எண்ணியுள்ளேன்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக் கோட்டம்மானே
ஆளாவுனதருளே பார்ப்பன் அடியேனே-பெருமாள் திருமொழி -5-4

பொருள்: [பாலக்காடு ஜில்லாவில், பட்டாம்பி நகருக்கு அருகில்,] திருவிற்றுவக்கோடு என்னும் திவ்யதேசத்தில்
எழுந்தருளியுள்ள பெருமாளே! வைத்தியன் சிகிச்சைக்காக கத்தியாலே அறுப்பதுவும், பழுக்கக் காய்ச்சிய ஊசியினால்
சூடுபோதுவதும் செய்தாலும், அவனிடத்தில் நீங்காத அன்புடைய நோயாளியைப்போல, நீ உன் மாயையினால் நீங்காத
துயரத்தை எனக்குத் தந்தாலும், நான் உன்னுடைய அடிமையாக இருந்து, உனது அருள்நோக்கிக் காத்திருப்பேன்.

[குறிப்பு: ஸ்ரீ பெருமாள் திருமொழியினை அருளியவர் ஸ்ரீ குலசேகர ஆழ்வாராவார்.
வைணவ உரை நூல்களில், கண்ணனை அவன், இவன் என்று ஏக வசனத்தில் அழைப்பார்.
ஆனால் சக்கரவர்த்தித் திருமகனை பெருமாள் என்று மரியாதை கொடுத்து விளிப்பார்.
பெருமாள் என்றாலே அது சக்கரவர்த்தி திருமகன்தான். குலசேகர ஆழ்வாரும் மாசிமாதம், ஸ்ரீராமபிரானுடைய
புனர்பூசம் திருநக்ஷத்திரத்தில் அவதரித்தார். தினமும் தன் அரண்மனையில் இராமாயண பாராயணம் செய்விப்பார்.
அவருக்கு திருவாராதன மூர்த்தியும் ஸ்ரீராமபிரானாவார்.
இவ்வாழ்வார்
1.)“திருத்தாலாட்டு” (மன்னுபுகழ் கௌசலை-எட்டாம் திருமொழி),
2.)“தயரதர் புலம்பல்” (வன்தாளிணை வணங்கி-ஒன்பதாம் திருமொழி),
3.)“சம்பூர்ண ராமாயணம்” (அங்கணெடு மதிள்-பத்தாம் திருமொழி)
என்று ஸ்ரீ பெருமாளைப் பாடினார்; அந்த ஸ்ரீ பெருமாள் தானே தன் திருக் கரத்தால் ஆராதித்து வந்த
ஶ்ரீரங்கநாதராகிய ஸ்ரீ பெரியபெருமாளை உகந்து
4.)“மங்களாஶாசனம்” (இருளிரியச் சுடர்மணிகள்-முதல் திருமொழி),
5.)“அடியார் குழாம்” (தேட்டரும்திறல் தேனினை- இரண்டாம் திருமொழி),
6.)“அரங்கனின் மீதான காதல்” (மெய்யில் வாழ்க்கையை-மூன்றாம் திருமொழி)
என்று பாடினார்.
எனவே அவரது நூலில் மிகுதியான பாகம் ஸ்ரீ பெருமாளைப் பற்றியே இருந்தலால்,
அதற்கு “ஸ்ரீ பெருமாள் திருமொழி” என்றே திருநாமம் சூட்டினர் பெரியோர்.

இப்பாசுரங்களுக்கும் மேற்குறித்த முதல் குறட்பாவிற்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டினாள் ஸ்ரீ பிராட்டி.

ஸ்ரீ ராமாயணத்தின் தோற்றுவாய் கூறும் சிறையிருந்தவள் ஏற்றம்:

ஒருநாள் தமஸா நதிக்கரையில், சிஷ்யர் பரத்வாஜருடன் மகரிஷி ஸ்ரீ வால்மீகி சென்றார்.
அப்பொழுது ஒருவேடன், பனைமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் ஜோடியில் ஆண்பறவையை அம்பெய்திக் கொன்றான்.
ஆண்பறவையின் உடலின்மிது விழுந்து பெண்பறவையானது பிரிவால் கதறித் துடித்தது.
பறவைகளின்மீது இரக்கமும், அவற்றின்மீது பகைகொண்ட வேடன்மீது கோபமும்கொண்டு, பொறுக்காமல் ஸ்ரீ மகரிஷி, வேடனை

மா நிஷாத பிரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீ ஸமா |
யத் கிரௌஞ்ச மிதுனாத் ஏகம் அவதீ காம மோஹிதம் ||

-“ஏ வேடனே! காமத்தில் விளையாடிக்கொண்டிருந்த அன்றில் பறவைகளில் ஒன்றினை கொன்ற நீ,
பலகாலம் நிம்மதியின்றி அலைவாய்(உனக்கு அமங்கலம் உண்டாகுக)” என்று சபித்தார்.

அவர் வெகுண்டு சொன்ன அவ்வார்த்தைகள், மேற்கூறிய சுலோகமாக அனுஷ்டுப் சந்தஸில்,
வீணையில் இசையமைத்து பாடத்தக்கவகையில் அமைந்து, மஹரிஷி வாயில் சாபமாக, அவரையும் அறியாமல் வெளிப்பட்டது.
சினத்தின் வயப்பட்டு சாபம் கொடுத்து விட்டோமே என்ற கவலையும், அது எப்படி சாபம், சுலோகமாகப் பிறந்தது என்ற
பிரமிப்புமாக ஸ்ரீ மகரிஷி, பின்னர் ஆஸ்ரமம் திரும்பினார். நீண்டநேரம் சிந்தித்தும் அதற்கு விடைகிட்டவில்லை.
அப்பொழுது, சுயம்புவான பிதாமகர் பிரம்மா அங்கு தோன்றினார்.

“கோபதாபங்கள் ஆகிய உணர்ச்சிகளுக்கு வசப்பட்டோமே!” என்ற கவலைகொண்ட ரிஷியை சமாதானம் செய்து,
அந்த சுலோகத்தில் மா = இல்லை, நிஷாத = வேடன் என்னும் சொற்களை மா = திருமகள், நிஷாத = கேள்வன்;
அதாவது மாநிஷாத = திருமகளுக்குக் கேள்வன் என்னும் வேற்றுமைத் தொகை தத்புருஷ சமாசமாக மாற்றி
“ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனான திருமாலே! காமத்தால் வெறி கொண்ட அரக்கனான ராவணனை கொன்றாய்!
உனக்கு பல்லாண்டு மங்கலம் உண்டாகுக” என்னும்படியாக பொருளை மங்களசரணமாக மாற்றி உரைத்தார்.

அநுபந்த சதுஷ்டயம்:

எந்த ஒரு நூலையும் எழுதுமுன், அந்நூலானது தடையின்றி எழுதி முடிக்கப்பட வேண்டியும்,
அந்நூலானது உலகில் நன்கு பரவப்பட்டு புகழ் படைக்க வேண்டியும்,
1) இஷ்டதேவதையௌ நமஸ்கரித்து ஒரு சுலோகம் எழுதுவது வழக்கம்.
மேலும் அக்கலையினை கற்பவர்களுக்கு அந்நூலில் ஈடுபாடு(பிரவ்ருத்தி) உண்டாகும் வண்ணம்
2) விஷயம் அல்லது அந்நூலில் கூறப்படும் கருப்பொருள்,
3) அதிகாரி அல்லது அந்நூலைக் கற்க தகுதியுள்ளவர் யாவர்,
4) மற்றும் அந்நூலைக் கற்பதனால் கிடைக்கும் பலன் என்னும் இந்த நான்கினை அநுபந்த சதுஷ்டயமாக அந்த சுலோகத்தில் தெரிவிப்பர்.

மேலும், சரஸ்வதியை மஹரிஷியினுடைய வாக்கில் அமரவைத்து தான் பயிலும் சதகோடி ராமாயணம் என்னும்
நூறுகோடி சுலோகங்களுள்ள நூலிலிருந்து மேற்கண்ட சுலோகத்தின் மூலம் இவ்வாறு
அநுபந்த-சதுஷ்டய சுலோகம் பாட வைத்ததாக பிரம்மா மருள் நீக்கினார்.

அது சாபமல்ல! இலக்கண யாப்பு, தளை கொண்டு, அடிக்கு 16 அக்ஷரங்களாய், இரண்டடி கொண்ட
அனுஷ்டுப் சந்தஸில் அமைந்த அனுபந்தம் என்று தெரிவித்தார்.
மேலும் மகரிஷியை அந்த சுலோகத்தையே முன்னுதாரணமாக- இதிகாச்ச-சுருக்கமாக வைத்து, அந்த முறையிலேயே,
விஸ்தாரமாக, தன்னைப் படைத்த ஸ்ரீமந் நாராயணனுடைய, ராமாவதாரத்தை, ஒரு முழுக் காவியமாகப் பாடப் பணித்தார்.

ஆகவே இதுவே ஸ்ரீ ராமாயணத்தின் முதலடி என்பர்.

ஸ்ரீ ராமாயணம் (ராமன் சொன்ன வழியில்) = “சிறையிருந்தவள் ஏற்றம்” என்று
ஸ்ரீ சீதை நடந்து காட்டியது” என்றும் பெரியோர் பணிப்பர்.

இதில்,
1) “பிரம்மனானவர் – திருவுடன் கூடிய திருமாலைப் பல்லாண்டு பாடுவது” என்பது இஷ்ட தேவதா நமஸ்காரமாகும்.
2) “திருமாலானவர் இவ்வுலகை நலிக்கச்செய்யும் ராவணனை ஒழிக்க அவதாரம் செய்த வரலாறு” என்பது நூலின் விஷயமாகும்.
3) ஶ்ரீமந்நாராயணன் சேதன, அசேதனங்களுக்கு இருப்பிடமாதலால், அவனுக்கு பல்லாண்டு பாடியமை என்னும் வியாஜத்தினால்,
இந்நூலினைக் கற்கும் தகுதி, “நமக்கும் அவனுக்குமான அயனசம்பந்தம் கருதி,
அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பது” அதிகாரி சம்பந்தமாகும்.
4) இந்நூலினை கற்பதனால் –“அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும்
அனைத்து வித மங்கலங்களும் உண்டாகும்” என்பது பலனாகும்.

பாரதந்த்ர்யத்தின் வகைகள்:
முற்பட்ட பாகங்களில், பாரதந்தர்யம் என்றால் என்னவென்று பார்த்தோம்.
இனி அதன் வகைகளை இக்கட்டுரையில், தர்க்கத்தின் துணைகொண்டு காணலாம்.

ஸோபாதிகம் (அ ) ஒருகாரணம் பற்றியது:
கிஷ்கிந்தா காண்டத்தில் ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் ஸ்ரீ அனுமனைச் சந்திக்கின்றனர். அவர்களை யாரென்று வினவிய
ஸ்ரீ அனுமனிடம், ஸ்ரீ லக்ஷ்மணர் தன்னை, “ஸ்ரீ ராமருடைய வாத்சல்யம், சௌசீல்யம், சௌலப்யம், ஆர்ஜவம் போன்ற
எண்ணிறந்த குணங்களால் கவரப்பட்டு, அவருடைய அடிமையானவன். அவருடைய இளைய சகோதரனுமாவேன்.” என்று
தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் இங்கு உபாதி என்னும் சூக்ஷ்மத்தினை ஆதி கவி நமக்குக் காட்டுகின்றார்.
அதாவது ஸ்ரீ லக்ஷ்மணன் தான் ஸ்ரீ ராம பிரானுக்கு அடிமையாக இருப்பதற்கு காரணம் அவரிடமுள்ள எண்ணிறந்த
குணங்களே என்று சொல்கிறார். இது ஒரு காரணம் பற்றி வந்த தொண்டு மனப்பான்மை / அடிமைத்தனம்/ பக்தி நிலை ஆகும்.

நிரூபாதிகம் (அ ) காரணம் பற்றாதது (அ ) இயற்கையானது:
இதுவே அயோத்யா காண்டத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தியாரும் துஞ்சி, ஸ்ரீ ராமபிரானும் வனம் சென்ற பின்னர்,
ஸ்ரீ வசிஷ்டர் தன்னை முடிசூடுமாறு நிர்பந்திக்கும் பொழுது ஸ்ரீ பரதன்,
“இந்த ராஜ்யமும் நானும் ஸ்ரீ ராம பிரானுக்கு உடைமைகள்,” என்று தான் ஸ்ரீ ராமபிரானுக்கு எவ்வித காரணமுமின்றி
[பாரதந்த்ர்யமாக]பணியாளனாக இருப்பதைத் தெரிவிக்கிறார். ஶ்ரீராமபிரானுக்கு அடிமைப்பொருளான நான்,
அவருடைய இன்னொரு அடிமைப்பொருளான ராஜ்யத்தை எங்ஙனம் ஆளுவேன் என்று ஸ்ரீ வசிஷ்டரைக் கேட்கிறார்.
அதாவது இந்த ராஜ்யம் எப்படி ஒரு உயிரற்றதான, மற்றும் ஶ்ரீராமருக்கே உரியதான பொருளோ,
அவ்வாறே நானும் உயிருள்ளவனாயினும் ஶ்ரீராமருக்கே அற்றுத் தீர்ந்த பொருள் என்கிறார்.

அப்பொழுது ஸ்ரீ வசிஷ்டர் ஒரு உதாரணம் காட்டுகின்றார். அணிகலன் ஒரு சுதந்திரமற்ற /பாரதந்த்ர்ய வஸ்துவாகும்.
அதை காக்கும் கஜானாபெட்டியும் ஒரு பாரதந்த்ர்ய வஸ்துவாகும். ஆனால் அந்தப் பாரதந்த்ர்ய பொருளான- கஜானாபெட்டியானது,
மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அணிகலனை உள்ளே வைத்துக்கொண்டு காப்பதுபோல,
ஸ்ரீராமருக்கு பாரதந்த்ர்ய பொருளான நீயும், மற்றொரு பாரதந்த்ர்ய பொருளான அவனது ராஜ்ஜியத்தை காப்பாற்று என்கிறார்.

அதற்கு பரதன், “நீர் சொல்வது மிகவும் சரிதான்! ஆனால் அவ்விரண்டு பாரதந்த்ர்ய வஸ்துக்களுக்கு(பெட்டி+ஆணிகலன்)
எஜமானனானவன், பத்திரமாக அணிகலனை பெட்டியில் வைத்துச் சென்றால் தானே, அணிகலனை பெட்டியானது காக்கும்?
எனக்கு எஜமானரான ஸ்ரீ ராமர் அவருடைய, ராஜ்யத்தினை காக்க, அங்ஙனம் எனக்குக் கட்டளை யிடவில்லை.
எனவே நானும் காட்டிற்கு சென்று ஸ்ரீ ராமரை சந்தித்து; அவர் எனக்கு நேரே கட்டளையிட்ட பின்னரே,
ஆட்சியா அல்லது வனவாசமா என்பதுபற்றி மேலே சிந்திப்பேன்” என்றார்.

அவ்வாறே ஸ்ரீ சித்திரகூட வனத்தில் ஸ்ரீ ராமபிரானைச் சந்தித்து; அவரும் பலவாறு நிர்பந்தித்த பின்னர் தான்,
அவருடைய பாதுகைகளைப் பெற்றுத் திரும்பி, ஸ்ரீ அயோத்திக்கு வெளியே ஸ்ரீ நந்தி கிராமத்திலிருந்து அரசாட்சி புரிந்தார்.

அவர் நிரூபாதிகமாக,(அ) இயற்கையாக, எவ்வித காரணமுமின்றி பாரதந்த்ர்யப்பட்டுள்ளார்.
ஆனால் ஸ்ரீ லக்ஷ்மணனோ தான் ஸ்ரீ ராமபிரானுக்கு பாரதந்த்ர்யமாக/பணியாளனாக இருப்பதற்கு
ஸ்ரீ ராமனின் குணங்களே காரணம் என்று காட்டுகிறார். இதற்கு உபாதி என்று பெயர்.
உபாதை என்றால் வியாதி என்றும் சொல்லுவார்கள். அதாவது
புகை உருவாக ஈரவிறகினை எரிப்பது காரணம் ஆகும். இங்கு விறகு பக்ஷம்; நெருப்பு ஹேது; புகை சாத்தியம்;
ஆனால் ஈரம் உபாதி ஆகிறது.
அவ்வாறே ஸ்ரீ லக்ஷ்மணனிடம் ஸ்ரீ ராம பக்தி ஏற்பட ஸ்ரீ ராமனின் குணங்களே உபாதியாகின்றன.
இதைவிட ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யம் மேலானது, நிரூபாதிகமானது (உபாதி அற்றது/இயற்கையானது) என்று காட்டுகின்றார் ஸ்ரீ ஆதிகவி.

அபிரதிபந்தகம் (அ ) தடையற்றது :
இனி ஸ்ரீ பிராட்டியினுடைய விஷயத்திற்கு வருவோம். உத்தர காண்டத்தில், தான் கர்ப்பம் தரித்ததை ஸ்ரீ பெருமாளிடம் சொல்கின்றாள்.
மேலும் கங்கைக்கரையில் ரிஷிகளின் ஆஶ்ரமத்தில் தங்க விருப்பமும் தெரிவிக்கின்றாள்.
மறுநாள் ஸ்ரீ லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக ஸ்ரீ ராமபிரானும் அனுமதி தந்து, மந்திராலோசனை காரணமாக,
அவளிடமிருந்து விடைபெறுகிறார். அன்று இரவு பத்ரன் மூலமாக அபவாதம் தெரிய வந்து, ஸ்ரீ சீதையை
ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தருகில் விட்டுவருமாறு ஸ்ரீ லக்ஷ்மணனைப் பணிக்கின்றார்.
கங்கைக்கரையில் இறக்கிவிடும் ஸ்ரீ இளையாழ்வாரும் அவளிடம், நடந்ததை விளக்குகின்றான்.

அபவாதம் பொறுக்காத ஸ்ரீ பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள்.
ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, ஸ்ரீ வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள்.
தானும் ஸ்ரீ பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு,
பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன்!
ம்ம்! ஸ்ரீ லக்ஷ்மணரே! ரதம் அயோத்திக்குத் திரும்பட்டும்!!” என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்யவில்லை.
ஸ்ரீ ராமபிரானின் திருவுள்ளத்தினைத் துல்லியமாக அறிந்து அவ்வண்ணமே வாழ்ந்து காட்டினார்.
இதற்கு தர்க்கத்தில் அபிரதிபந்தகம் என்று பெயர்.

ஸோபாதிகத்துக்கு உதாரணம்:
நீரிலே மின்சாரம் கடத்த முடியாது. ஆனால் அந்நீரில் சில சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்தால் மின்சாரத்தை எளிதாகக் கடத்தலாம்.
நீர் என்பது ஹேது அல்லது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம் அல்லது சாத்தியம்; எலுமிச்சைச் சாறு என்பது உபாதி.
இதனை வினையூக்கி அல்லது செயலூக்கி என்னலாம். அதாவது இயற்கையாகவே மின்கடத்தும் திறன் இல்லாத நீரினை
அவ்வாறு ஆக்குவது உபாதி. எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு தான் வியாப்தி ஆகும்.
இங்கே வியாப்திக்கு உபாதி உதவுகின்றது. இதனை ஸ+உபாதிக+வியாப்தி == ஸோபாதிக வியாப்தி என்பர்.
இதுவே ஸ்ரீ லக்ஷ்மணரின் பக்தி நிலையாகும்.

நிரூபாதிகத்திற்கு உதாரணம்:
உலோக கம்பிகளுக்கு இடையே மின்சாரத்தை கடத்தலாம்.
இங்கும் உலோகக் கம்பி என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்; உலோகத்தில் மின்சாரம் பாயும் என்னும் அறிவு வியாப்தியாகும்.
இதனை நிர்+உபாதிக+வியாப்தி == நிரூபாதிக வியாப்தி என்பர் (உபாதி இல்லாதது). இது ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யமாகும்.

தடைக்கு உதாரணம்:
ஆனால் அக்கம்பிகளுக்கு இடையில் அதற்குத் தடையாக ஒரு கட்டையோ, பிளாஸ்டிக் டேப்போ, வெற்றிடமோ இருந்தால்
மின்சாரம் பாயாது. இதற்கு பிரதிபந்தகம் என்பர்.
இங்கே உலோகக்கம்பி என்பது ஹேது; மின்சாரம் என்பது சாத்தியம்; பிளாஸ்டிக் டேப்(INSULATION TAPE) என்பது பிரதிபந்தகம்.
அதாவது இயற்கையாக மின்சாரம் பாயக்கூடிய உலோக கம்பிகளுக்கு இடையே அதற்கு தடையாக வருவது பிரதிபந்தகம் ஆகும்.
இங்கு ஶ்ரீராமபிரான் பிராட்டிக்குத் தன்னை ஒரு கொடுங்கோலனாக காட்டிக்கொண்டதை,
ஸீதையின் பாரதந்த்ர்யத்திற்கு பிரதிபந்தகமாக உதாரணம் கொள்ளலாம்.

அப்பிரதிபந்தகத்துக்கு உதாரணம்:
மின்காந்த சுற்றுக்களில் மின்சாரம் கடத்தலாம். அதற்கு தடையாகக் கட்டையோ, வெற்றிடமோ இருந்தாலும் கூட மின்சாரம் கடத்தலாம்.
ஏனெனில் மின்சாரமும் காந்தப்புலனும் பரஸ்பர சம்பந்தம் கொண்டவை. இதற்கு சமவாய சம்பந்தம் என்பர் தார்க்கிகர்கள்.
அவை மின்காந்த அயனிகளால் ஆனவை. அவற்றைப் பிரிக்கவே முடியாது. அவற்றுக்குத் தடையே கிடையாது.
இங்கே மின்காந்த சுற்று என்பது வியாப்யம்; மின்சாரம் என்பது வியாபகம்;
மின்சாரமும் காந்தப்புலனும் சமவாய சம்பந்தம்கொண்டவை என்னும் அறிவே வியாப்தியாகும்.
இதுபோன்று ஸ்ரீராமரும் சீதையும் இணை பிரியாதவர்கள் ஆவர்.
“அகர முதல எழுத்தெல்லாம்,” என்னும் முன்னடியில் வரும் அகாரமானது ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது.
அகாரமானது “காக்கும் இயல்வினன் கண்ண பெருமானான,” ஶ்ரீராமரையும் சீதையையும் சேர்ந்தே சுட்டுகின்றது.
“ஆதிபகவன் முதற்றே உலகு,” என்னும் பின்னடியும் இந்தத் தம்பதியரையே சுட்டுகின்றது.

சிறந்தது எது:
ஸ்ரீ லக்ஷ்மணனின் பக்தி நிலை ஸோபாதிகம். ஸ்ரீ பரதனின் பாரதந்த்ர்யம் நிரூபாதிகம்.
ஆனால் பிராட்டியின் ஸ்ரீ பாரதந்த்ர்யம் தான் அபிரதிபந்தகம் என்பது மஹரிஷியின் தீர்ப்பு ஆகும்.

பின்குறிப்பு:
மேற்கண்ட அனுபந்த-சதுஷ்டயம் திருக்குறளிலும் மற்றும் கம்பராமாயணத்திலும் உண்டு. திருக்குறளில்,
1) ஆதிபகவன் என்பது இஷ்டதேவதா,
2) தர்மார்த்த உபதேசம் என்பது விஷயம்,
3) தமிழரனைவரும் அதிகாரிகள் மற்றும்
4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பது பலன்.

குறட்பாவில் பயின்ற “உலகு” என்னும் வியாப்யத்தினை வைத்துக் கம்பநாடரும்,
“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”–என்று தொடங்குகின்றார்.
தலைவர், முதல்வர் என்பன [பர்யாய சொற்கள்] ஒருபொருட் பன்மொழிகள்.
குறட்பாவில் வியாபகமான “ஆதிபகவனை” கம்பர் “தலைவர்” என்று கொண்டார்.

கம்பனிலும்,
1) ஸ்ரீ திருமால் இஷ்ட தேவதா,
2) ஸ்ரீ ராமாவதாரம் விஷயம்,
3) தமிழர்களனைவரும் அதிகாரிகள் மற்றும்
4) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் பிரயோஜனங்களை சரணாகதி மூலம் அடைவது பலன்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சங்கரரின் ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன் —

October 14, 2020

இடையறாத தியானத்தால்
வசப்பட்ட மனத்தினால்,
குணங்களும் செய்கைகளுமற்ற
பரஞ்சோதி ஒன்று உள்ளதாமே,
அதனை யோகிகள் காண்பார்களாகில்,
காணட்டும்.
ஆனால் நமக்கோ
காளிந்தியின் மணல் திட்டுகளில் ஓடுகிறானே
நீலச் சிறுவன்
அவனே என்றென்றும்
விழிகளுக்கு அதிசயமாய்
விளங்கட்டும்.

– ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி (பகவத்கீதை உரையின் இடையில் வரும் பாடல்)

த்யாநாப்யாஸவஶீக்ருʼதேந மநஸா தந்நிர்கு³ணம்ʼ நிஷ்க்ரியம்ʼ
ஜ்யோதி​: கிஞ்சந யோகி³நோ யதி பரம்ʼ பஶ்யந்தி பஶ்யந்து தே |
அஸ்மாகம்ʼ து ததேவ லோசநசமத்காராய பூயாச்சிரம்ʼ
காலிந்தீபுலிநோத³ரே கிமபி யந்நீலம்ʼ மஹோ தா⁴வதி ||

வடநாட்டில் அத்வைதமும் கிருஷ்ண பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியைக் கடைப்பிடித்த இவரைப் போலவே,
தென்னாட்டில் அத்வைதமும் சிவ பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியை அப்பய்ய தீட்சிதர் கடைப் பிடித்தார் என்று கூறுவார்கள்.

ஸ்ரீ சங்கரரின் உரைகளிலும் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் போன்ற அழகிய துதிப்பாடல்களிலும்
இந்த இணைவை நாம் காண முடியும். அதன் நீட்சியே மதுசூதன சரஸ்வதியின் நெறியாகும்.

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோஷ்டப்ராங்கண-ரிங்கணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ புவனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாதமநாதம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்
இடைவெளியற்றது (அனாகாசம்)
இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)
எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில்
ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்
மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்
உருவமின்றியும்
உலகே உருவாகவும்
திகழ்வோன்.
ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்
தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை
வணங்குவீர்.

————————-

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா-தாடந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதித-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்தஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்பம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமாநந்தம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என
யசோதை அடிக்க வருகையில்
குழந்தைப் பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில்
லோகாலோக பர்வதங்களுடன் கூடிய
பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன்.
உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும்
பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை
வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய,
அஸ்தமன பர்வதங்கள் உண்டு. அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால்,
அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன.
பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல்,
அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது –
உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி தன்னொளியால் தானே பிரகாசிப்பவன்
(லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது
சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே
அதனிடம் கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன.
கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை
நிலவு நட்சத்திரங்கள் இல்லை
இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம்
அவன் ஒளிர்கையில்
அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே
இவையனைத்தும் ஒளிர்கின்றன.– கட உபநிஷதம் 2.5.9

——————

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்நம்ʼ பவ-ரோகக்நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ புவனாஹாரம் |
வைமல்ய-ஸ்புட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபாஸ-மநாபாஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–3-

அமரர் பகையாம் அரக்க வீரரை அழிப்பவன்
புவியின் பாரத்தை அழிப்பவன்
பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்)
வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)
உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த
மனவெளியில் தோன்றுபவன்
தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் (சைவம்)
தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி
ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.
அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை.
தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன்.
ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும் அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில்
சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும்.
இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம்
(யோகஶ்சித்தவ்ருத்தி நிரோத:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம். இப்படி அனைத்து எண்ண அலைகளும்
அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும் என்பதே
பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு.
அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு
வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது.
வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய
பிறகு சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி
வேறேதும் இல்லை என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை.
‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது.
அத் தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

—————–

கோபாலம்ʼ பூலீலா-விக்ரஹ-கோபாலம்ʼ குல-கோபாலம்ʼ
கோபீகேலந-கோவர்தநத்ருʼதி-லீலாலாலித-கோபாலம் |
கோபிர்நிகதித கோவிந்த-ஸ்புட-நாமாநம்ʼ பஹுநாமாநம்ʼ
கோ-தீ-கோசர-தூரம்ʼ ப்ரணமத கோவிந்த³ம்ʼ பரமானந்தம் ||–4-

கோபாலன்
விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன்
கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி
கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும்
கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்
மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

கோ என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.
கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.
கோவிந்தன் – வேத வாக்குகளால் அறியப்படுவன். வேத வாக்குகளை அருளியவன்.
வராகாவதாரத்தில் பூமியையும், கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன்.
இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர் குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸ குண பிரம்மம் (உருவமான பரம்பொருள்)
இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும் மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ-தீ-கோசர-தூரம் என்பதில்
முதல் கோ புலன்களையும், அடுத்து வரும் கோசர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

——————

கோபீ-மண்டல-கோஷ்டீ-பேதம்ʼ பேதாவஸ்தமபேதாபம்ʼ
ஶஶ்வத்கோகுர-நிர்தூதோத்கத-தூலீ-தூஸர-ஸௌபாக்யம் |
ஶ்ரத்தா-பக்தி-க்ருʼஹீதாநந்தமசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்பாவம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன்.
வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமை யற்றவன்.
பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து
மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன்.
அறிய வொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன்.
சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன்.
விழிப்பு, உறக்கம், கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும்
தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.
பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.
சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.
மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன்.
ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே
வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம்.
ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது
நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய முழுமையான அறிதலே (ஞானம்).
“பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதாதோ ப்ரஹ்மஜிக்ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்க வேண்டும்,
தன்னில் நிலைக்க வேண்டும்”
(ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)
– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை
ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும்
அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும்
அறிவுடையோனது ஆத்மா
பிரம்மத்தின் இருப்பிடத்தில்
சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா
மேதமையால் அல்ல
கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை
வெளிப்படுத்துகிறது
ஆத்மா– முண்டக உபநிஷதம்

————————————–

ஸ்னான-வ்யாகுல-யோஷித்-வஸ்த்ரமுபாதாயாகமுபாரூடம்ʼ
வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாதுமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூதத்வயஶோகவிமோஹம்ʼ புத்தம்ʼ புத்தேரந்தஸ்தம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்
ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு
பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை
அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன்.
[வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்)
அறிவின் அகத்துள் இருப்பவன்
உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர்.

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும்,
அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது.
இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன.
நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம்.
அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம்.
‘நிர்தூத-த்வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று
இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது
வேதாந்தத்தில் முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும்.
ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள்.
உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே.
பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல.
உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை
ஆதாரமாகக் கொண்டு பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான்.
பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (புத்தேரந்த: ஸ்தம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது?
அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல,
அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம்.
அறிவோனை அறிவது எங்ஙனம்? (விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே
இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்:
நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும்.
அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது, அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது.
இப் பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது, அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது.
(ஒருமையை) அடைந்த பின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி:
என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்:
நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான்.
ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான், எவ்வாறு வேறொன்றைக் காண்பான்,
எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான், எவ்வாறு வேறொன்றை உணர்வான்,
எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ, அவனை அறிவது எங்ஙனம்?
அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

—————————————-

காந்தம்ʼ காரணகாரணமாதிமநாதிம்ʼ காலகநாபாஸம்ʼ
காலிந்தீ-கத-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோஷக்நம்ʼ
காலத்ரயகதிஹேதும்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமாநந்தம் ||–7-

காந்தன்
காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்
முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர்
காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்
மீளமீள அழகு நடனம் புரிபவன்
காலமானவன்
காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்
அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன்
காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.
காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக,
சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது.
இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reaity) என்று கொண்டால்,
பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது.
இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற
உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல,
மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது.
இதன் பொருள் கயிறு, பாம்பு என இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல.
உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல,
பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது.
அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார்.
பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான
உருவங்களும் பெயர்களும் கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன.
அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட
சிருஷ்டியின் இயக்கம் இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம்
இவை யனைத்தும் வேறுவேறாக அல்லாமல் பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே
இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம்.
காலம் (காலமானவன்), காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்),
கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்), கால-த்ரய-கதி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்)
ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும்
ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது.
நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக
இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்
(வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது,
ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோஷக்னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின்
நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது.
அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

———————–

ப்ருʼந்தாவனபுவி-ப்ருʼந்தாரககண-ப்ருʼந்தாராதித-வந்த்யாங்க்ரிம்ʼ
குந்தாபாமல-மந்தஸ்மேர-ஸுதானந்தம்ʼ ஸுமஹானந்தம் |
வந்த்யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்யாநந்த-பதத்வந்த்வம்ʼ
நந்த்யாஶேஷ-குணாப்தி⁴ம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–8-

பிருந்தாவன நிலத்தில்
தேவர்களின் கூட்டங்களும்
பிருந்தா முதலான கோபியரும்
வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின்
அமுதத்தால் மகிழ்விப்பவன்.
சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள்
மனதில் போற்றி ஆனந்தமடையும்
இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின்
கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.
பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.
மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

——————————–

गोविन्दाष्टकमेतदधीते गोविन्दार्पितचेता यो
गोविन्दाच्युत माधव विष्णो गोकुलनायक कृष्णेति ।
गोविन्दाङ्घ्रिसरोजध्यानसुधाजलधौतसमस्ताघो
गोविन्दं परमानन्दामृतमन्तःस्थं स तमभ्येति ॥–9-

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து
கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ
கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர்
கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும்
அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும்
பரமானந்த அமுதமான
அந்த கோவிந்தனை
அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பல சுருதியாக இப் பாடல் அமைந்துள்ளது.
தோத்திரங்களின் வழக்கமான பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

சிறுவயதில் ஸ்ரீசங்கரர் வழிபட்ட ஸ்ரீகிருஷ்ணன் ஆலயம், காலடி.
வெறுமனே பாடுபவர் என்று இல்லாமல் கற்பவர் (அதீதே) என்று கூறியது, இந்தத் தோத்திரம் கூறும்
வேதாந்தப் பொருளின் அர்த்த ஞானத்துடன் இதைப் பாடி தியானிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது
ஆத்ம ஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய
அக்ஞானத்தில் பிறப்பவை. எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால்,
பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி.
ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும் பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்?
பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள்.
கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः। सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥३६॥

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய் (4.36)

तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः। गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः॥१७॥

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். (5.17)

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும்
உண்டு என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.
பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுல நாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச் சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.
இது நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறித்து நிற்கிறது.

—————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சங்கராச்சாரியார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமநுச கதி-TAMIL HINDU May 26, 2017 By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி-

October 14, 2020

ஸ்ரீ உடையவர் இராமாநுசர் மண்ணுலகில் அவதரித்து மானுடரின் மேம்பாட்டுக்குப் பெருமாளின் அருளோடு
ஆற்றிய புண்ணிய கைகங்கரியங்களைப் பற்றிய பல அரிய செய்திகள்
இவ்வாண்டு முழுதும் ஊடகங்களில் வெளியாயின. வாசித்து உய்ந்தோர் பலர்.

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும்
தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது.
இம் மொழிபெயர்ப்புக் காப்பியத்தின் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப் புலவர்களால் போற்றப் பெறும் பெரும் புலவர்,
சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்.
சுவாமிகள் அருளிய பக்த மான்மியம் எனும் இக்காப்பியம் 7367 விருத்தப் பாக்களில்
அரி பத்தர்களின் பெருமையினை விளக்குகின்றது.

பத்தியை உடையவர்கள் பத்தர். அவர்களுடைய மகத்தாகிய பெருமையைக் கூறுவது பக்த மான்மியம்.
பத்தியாவது யாது? அன்பு பத்தி காதல் என்னுஞ் சொற்கள் இச்சையின் மிகுதிப்பாட்டைக் குறிப்பன.
இம்மை வாழ்வில் பரம்பொருளாகிய இறைவனொடு உணர்விற் கலந்து நிற்கும் உணர்வே பத்தி.
இறைவனை நெஞ்சிற் பதித்தலால் எழும் இன்ப உணர்வே பத்தி.
இதனை முழுமையாகப் பெற்றவர்கள் சீவன் முத்தர்கள்.

இந்த நூல் 104 அரி பத்தர்களின் அற்புதமான வாழ்வை விவரிக்கின்றது.
பத்தி என்பது சாமானிய அன்பினைப் போலத் தோற்றமளித்தாலும் பயிலுதற்கரிய தொன்றாம்.
இறைவன் “எற்பணி யாளாய் எனைப் பிரியாதே, ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு, என்வழி நின்றனன்” எனத் தமிழாகமமும் ,
‘பத்திவலையிற் படுவோன்’ எனத் தமிழ் மறையும்,
ஓதினும் அந்நிலை சாமானியத்தில் அடையப்படுவ தொன்றன்று என்னும் உண்மை அரிபத்தர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றது.
அரியின் பத்தர்களாயினும் அவர்களுக்கும் துன்பமுண்டு. அத்துன்பம் உலக வாழ்வில் மயங்கி
மண் பெண் பொன் ஏனும் மூவேடணையில் உழலுவோரின் துன்பம் போன்றதன்று.
சுடச்சுட ஒளிரும் பொன் போன்று, அரைக்குந்தோறும் மணக்கும் சந்தனம் போன்று, அரிபத்தர்களின்
பத்திப் பெருமையைச் சுடர்விடச் செய்வன. அன்னோர் எதிர்கொள்ளும் சோதனைகளும் துன்பங்களும்
உண்மையில் அவைசோதனைகளும் அல்ல; துன்பங்களும் அல்ல.
அவை பத்தர்களின் மகத்துவத்தை உலக வாழ்வில் உழலும் மாந்தருக்கு உணர்த்த அரி மேற்கொளும் உபாயங்களேயாம்.
அவற்றைக் காப்பியமாக எடுத்துரைப்பதே பக்தமான்மியம்.

சந்திரதத்தர் பத்தமான்மியம் மூல நூலின் ஆசிரியர்; மிதிலையிலே பிறந்தவர்.
கொடுங்கோல் வேந்தனின் ஏவலால் சிறையினில் வருந்தினார். அரியின் மந்திரத்தை ஓதிய வலிமையினால் சிறை நீங்கினார்.
தன் அறிவில் தெளிந்து நாரணனைத் தொழுது, நாரணனை போன்ற குரு சொன்ன உபதேசத்தில் மூழ்கி
யமபயம் அகல, பகவனது அருளினைப் பெற்று, பரந்தாமனின் சொற்படி,
வடமொழியில் பக்தர்களின் பெருமையைச் சாற்றும் பக்தமான்மியம் எனும் காவியத்தை இயற்றினார்.

திருமாலின் பழவடியார்களின் பத்தி ததும்பும் வாழ்க்கையினையும் அடியவர் திருத்தொண்டினையும் எடுத்தியம்பும்
அருமையான காவியம் பக்தமான்மியம். இக்காப்பியதில் இருபதாவது கதியாக அமைந்தது இராமாநுச கதி.
இக்கதியில் கூறப்பட்டுள்ளவாறு இராமானுஜரின் வரலாற்றைக் காண்போம்.

ஆதிசேடன் மீது அறி துயில் கொள்ளும் அச்சுதனின் பொன்னடித் துணைகளைப் பரவுகின்ற அடியார்கள்
தம் சென்னிமிசை பதிதருளும் திருப்பதம் வாய்ந்தோன்;
உயர்ந்த பிராமணக் குலத்தினர் செய்த பெருந்தவம் ஒரு வடிவெடுத்து வதது போன்ற திருமேனி உடையவன்;
இராமானுஜன் எனும் திருநாமம் வாய்ந்த ஆச்சாரியன்.
அன்னவனை ஈன்றருளும் அன்னை தந்தை ஆகியோர் பெயர் இன்னவென முன்னூலினிடை விளங்கவில்லை.
இருப்பினும் பாம்பணைத் துயில்பவனின் ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவர் தந்தை;
அவனுடைய திருமார்பில் உறைகின்ற திருவின் பெயர்களில் ஒன்று கொண்டவர் அன்னை எனலாம்.

நுண்ணிய அறிவுடையார் ஏத்தும் இராமானுஜப் பேர் ஒண்மையன் தன்னுடைய அறிவாகிய அளவுகோல் கொண்டு
வேத சாத்திரங்கள் கூறும் வளமான பொருள்களை யெல்லாம் அளவிட்டு ஆராய்ந்து பூரண சந்திரன் போல ஒளி திகழ்ந்தான்.
தன் தற்போதம் அறத் தன்னைத் தடுத்தாளும் சற்குரவன் வருதல் எந்நாளோ எனக் காதலனை
வேட்டுருகும் காதலியைப் போல மனம் ஏங்கியிருந்தான்.
வரம்பில் கருணை நாரணன் தன் பத்தன் உளம் நலியச் சகிப்பானோ?
இராமானுஜனின் அதிதீவிர பக்குவந் தெரிந்து, உள்ளங் கையில் நெல்லிக் கனி போன்று
முத்தியை அளிக்கும் மந்திரத்தை அருளினன்.
அழல் நெய்யைப் பற்றுதல் போல இராமானுஜன் அருமந்திரத்தை நெஞ்சிற் பற்றினன்.

பாம்பின் மேல் பரதம் பயிலும் நாரணக் குரவன்,
“ ஒருகணத்திற் பலித்து இன்பத்தைக் காட்டும் இம்மந்திரத்தை விண்ணிற் பொலியும் தேவர்களும் அறியார்கள்.
பத்தியிற் சிறந்த நீ இம்மத்திரத்தைக் கைக்கொண்டு இன்பநிலை எய்துவாயாக” என அருளினான்.

அந்த அரிய மந்திரத்தை இராமானுசன் சிந்தையிற் பதித்து ஏத்திடவே,
மந்த புத்தி உடைய உலகவர்களின் உள்ளத்தில் காண முடியாத பேரானந்தம் விளைந்தது.

“நாம் பெற்ற இப்பேரானந்தத்தை இந்த உலகில் ஆள்வாரிலி மாடெனத் திரிந்து சற்றும் இறையறிவு இலாத
ஆணவ இருளால் சிமிழ்ப்புண்டு உழல்பவர்களும் பெற்று உய்யச் செய்வேன்” என உறுதி பூண்டார்

கீழ்மக்கள் நெஞ்சம்போல் இருண்ட இரவில், பேய்களும் கண்ணுறக்கம் கொளும் யாமத்தில்
அறிவு சூனியரும் தெளியுமாறு குரவன் அருளிய மந்திரத்தை பலமுறை உரக்கக் கூவினான் ,
அந்த இணையற்ற அருளாளன்.

அந்த ஒலி கேட்டு உறக்கம் ஒழிந்து ‘இஃது என்ன ஒலியோ’ என மருண்டவர்களும்
இராமானுசன் சொன்ன மறையொலி நெஞ்சிற் பதியப் பெற்று, ஒருகணத்தில் ஞான சம்பன்னர்களானார்கள்.
ஞானவான்களாகிய அவர்கள், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின்” எனும்
ஆன்றோர் நவின்றதை மெய்ப்பிக்குங் கருணையாளனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்து தொழுதனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின் வழி நின்றவர்கட்கே
குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான்,
அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் ,
உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்.

அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,
‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்.
ஜகந்நாதரின் பொற்பாதங்களைத் தொழுது வீற்றிருக்கும் நாளில் ஜகந்நாதரைப் பூசிக்கும்
அருச்சகர்களின் செயல்களை முற்றும் ஆராய்ந்தார்.

ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்கள் செயல்கள் காண்போர் உள்ளத்தில் அருவருக்கத் தக்க
அநாச்சாரம் கொண்டனவாக இருந்தன; அவர்கள் எச்சாதியினரொடுங் கூடிக் கலந்து உணவருந்துவாராகி இருந்தனர்.
அந்த அபேதப் பண்பைக் கண்டு இராமானுஜர் ஆச்சரியமுற்றார்.

ஜகந்நாத நகரில் வாழ்வோர் தாம் தாம் அந்நிய சாதியர் என்ற நினைவின்றி அனைவரும் ஒன்றாகக்கூடி
உணவு உண்ணல் ஆகிய கருமங்களைச் செய்கின்றனர். இவர்களை நல்ல ஆசார நியமத்தராக நான் இயற்றுவேன்;
அரிய வேதங்கள் புகல்கின்ற சதாசாரத்தினை (சத்+ ஆசாரம். உயர்ந்தோரின் நல்லொழுக்கம்)
இங்கு நிலைநாட்டாமல் இப்பதியை விட்டு அகலேன் என்று மனதில் உறுதி கொண்டார்.

சீடர்கள் சூழப் பூசா திரவியங்களொடு, அறக்கருணை ஒரு சற்றுமின்றி, அதிபலாத்காரமாய், அருச்சகர்களைப்
புறக்கணித்து விட்டுத் தாமே சகந்நாதத் திருக்கோவிலைத் திறந்து ஜகந்நாதருக்கு ஆசார நியமங்களுடன்
அன்பாற் பூசனை சிறக்கச் செய்து நைவேத்தியம் நிகழ்வித்தார்.
தம் சீடருடன் தாமும் அந்நிவேத்தியத்தை உண்டு உறக்கம் கொண்டார்.

அவ்வுறக்கத்தின்போது இராமானுசர் ஒரு கனவு கண்டார்.
அச்சொப்பனத்தில் திரு ஜகந்நாத மூர்த்தி தன் மெய்யுருவை இராமானுஜருக்குக் காட்டிப் புகன்றிடுவார்.

“என்பால் மெத்த அன்பு பூண்ட இராமானுஜப் பேர் கொண்ட அன்பனே! உனக்கு யான் பகர்வதொன்றுண்டு.
இத்தலத்து அநாசாரத்தில் எனக்கு மிக்க பெருவிருப்பம். அதோடு மட்டுமன்றிச் சித்தத்தில் பத்தியுடையார்
செயல்களெல்லாம் எனக்குத் திருப்தி அளிப்பனவே. பத்திக் கடலில் நெஞ்சம் பதிந்தவர் எவரானாலும்
எதனை அவர் எனக்குத் தந்தாலும் எனக்கு அதில் இச்சையே.
எனவே, என்னை விரும்பிப் பூசை செய்யும் பூசகர்களை கணத்தில் இங்கு வர அழைப்பாயாக.
என்னைப் பிரிந்திருக்க அரைக்கணமும் அவர் ஆற்றார். யானும் அவரை விட்டு அரைக்கணமும் நீங்கேன்.
அதனால் நீ இங்கு அமைத்துள்ள பூசாசாதனங்க ளெல்லாங் கொண்டு அமைத்த நியமங்கள் எனக்கு ஒவ்வாதாம்.

நம் மீது பத்தி சிறிதும் நெஞ்சில் இன்றி உலக போகங்களாகிய பித்தம் மேவிப் பொய்யான உடலை
மெய்யென எண்ணி அதற்கு உழலும் வம்பர்களுக்கு வைத்தாய் உன் ஆசாரத்தை.
அந்த ஆசாரக் கதையை வானோர்க்கும் மேலாய் நம் ஜகந்நாதத்து வாழ்வார்க்குச் சிறிதும் ஓதாதே.

பலவடிவோடுப் படிகம் ஒத்து எவற்றையும் பற்றும் கன்ம மயமான மனத்தவர்களுக்கு உன்னுடைய ஆசாரக் கதைகள் மிக இனிக்கும்.
அதல்லாமல், தற்போத மனம் கழன்று என்னைப் பூசித்து என் மயமாகி நிற்போர்க்கு இனிது யாது? தீது யாது?
பேயாற் பிடிப்புண்டோர் செயல்களெல்லாம் பேயின் செயலேயாக நிகழ்தல் போல்,
என் பத்தராவார் இவர்கள் இயற்றிடுகின்றவெல்லாம் என் செயல்களேயாகி எனக்கு உவப்பளித்திடும்”
என்று அளப்பரும் போதமிக்கவரும் இணையற்ற கருணை வள்ளலுமாகிய இராமானுஜருடைய
நற்கனவில் ஜகந்தாதன் நவின்றருளினான்.

இவ்வாறு ஜகந்நாதன் நவின்றும், வேதங்கள் ஓதும் தூய ஆசாரசீலங்களில் ஒன்றையும் அகன்றிடற்குத் தன்னுள்ளம்
இசையாத இராமானுசர் , “ மாயவன் அநாசார பத்தர்களிடம் அருள் மிகுந்து அவர் தம்மை வாஞ்சித்து,
என் மீது கோபம் கொள்ளுவது மிகவும் வியப்பைத் தருகிறது. இத்தேயத்தில் நாற்குலத்தோரும் சேர்ந்து ஒன்றாக உணவு நுகர்கின்றார்.
இத் தீங்கைக் கண்டும் யான் எவ்வணம் உளம் சகிப்பேன். மேக வண்ணனுக்கு வேதாசாரக் கடப்பாட்டில் நின்று செய்யும்
உயர்ந்த ஆசார பத்தி ஒப்பாதது என்னே! பத்திக்குப் பெருமை அநாசாரமே போலும்.
நம்மைப் போல ஆசாரம் மிக்கவர்களாக இருந்தால் ஜகந்நாதன் கோபம் கொள்வானென்று தான்
இப்பதியில் வாழ்வார் இத்தனை அநாசாரமாக இருக்கிறார்கள் போலும்.
என்னவானாலும் நான் என் உடல் கழியுங்காறும் வேதோக்தமான சதாசாரத்தைக் கைவிடேன்;
இவரோடு ஒன்றாக இருந்து உண்ணுதற்கோர் சற்றும் சம்மதம் கொள்ளேன்” என்று கூறி
விரக்தியுடன் அங்குத் தங்கி இருந்தார்.

இவ்வாறு இராமானுஜர் ஜகந்நாதத்தில் தங்கியிருக்கும்போது, அரவணையில் துஞ்சும் பக்தவத்சலன்
கருடாழ்வரை நோக்கிச் சொல்லுவன், இராமானுஜன்பாற் சென்று,
“இத்தலத்து உனது ஆசாரமெல்லாம் எனக்கு அவசியமில்லை. இங்குள்ள எனது அருச்சகரை எனக்குப் பூசை இயற்றிடச்
செய்யில் என் மனம் உவப்புறும். அவர்கள் மனம் வாடில் ஒருகணமும் யான் சகியேன்.
யான், நினது ஒரு ஆசாரச் சீல பத்தி முதலிய நற்குணங்களைக் கண்டு அளவில்லாத இன்பம் அமைந்தேன், அது மெய்யே.
உன்னுடைய மந்திரம் தியானம் முதலியவற்றால் நான் உன் வசம் ஆனேனென்றாலும், இங்கு வாழ்பவருக்கு என் மீதில்
இணையில்லாத மெய்ப்பத்தி உண்டு. இயல்பான பத்தி உணர்வு உந்துதலால் அநாசாரம் என்று சொல்லப்படுகின்ற
இவர்களுடைய பண்பு என்னுடைய உள்ளத்துக்கு இன்பமே அடையச் செய்கின்றது.

திருமகளை மார்பிற் பதித்து வைத்துள்ள என்னைப் போல, இந்நகருளார்பால் அன்பு அதிகரித்து வாழும் ஆசை
உன் நெஞ்சில் இருக்குமாகில் , இப்பதியில் வாழ்வாயாக.
இவர்கள் பண்பு அநாசாரம் , குற்றம் என உனக்குத் தோன்றினால் உடனே இப்பதிவிட்டு நீங்கி உன் பதிக்குச் சென்று
உன் ஆசாரத்துடன் அங்கு வாழ்வாயாக
அங்கு தூய நல் சதாசாரத்தின் துறை பிழையாமல் என்னைப் பேரன்பினோடு பூசனை புரிந்து வாழ்தி.
என்னுடைய நாமந்தன்னைச் செபித்தல் ஒன்றாலேயே நினக்குச் சர்வாபீஷ்டங்களையும் ஈகுவன், உண்மை. என்று
இனையவை பலவும் யாம் இயம்பியவாகச் சொல்லி இராமானுஜனையும் அவனைத் துதிக்கும் மாணாக்கரையும்
உவகையுறப் புரிந்து அரைக்கணத்தில் அவர்தம் பதியேகப் புரிதி” என்றனன்.

நாராயணப் பகவன் உத்திரவிட்டு ஏவக் கருடன் விரைந்து அகமகிழ்வோடு இராமானுசரை அடைந்து,
நிகழ்ந்த செய்தியை ஓதினான். அதைக் கேட்டு இராமானுஜர் நெஞ்சமிக்குவந்து,
‘எந்தப்பொருளை அடையும் பொருட்டு இங்கு வந்தேனோ அந்தப் பொருள் கதுமென என் கைவரக் கடைக்கண் பாலித்தான்.
பழமறைகள் இன்னும் கண்டு தேறா மூர்த்தி பொது நீக்கி என்னை ஆண்ட கருணக்குக் கைம்மாறு ஏது?
கருமணி வண்ணத்தெம்மான் கரையில்லாத பேரருள் பெற்றமைந்த எனக்கு இந்நகரம் யான் வாழும் தேயம்
இருள் நகராகிய நரகம் சொர்க்கம் எதுவாயினும் எனக்கினிதே.
விரைவில் என்னுடைய நகருக்கு செல்கின்றேன் என்று இராமானுஜர் , பிரம சொரூபியாக விளங்கிய
கருடனிடத்துப் புகன்று தன்னுடைய சீடர்களுடன் உறக்கங் கொண்டார்.

கருடமூர்த்தி, உறக்கம் கொள்ளும் அவர்களை ஒருமாத்திரைப் பொழுதுக்குள்ளே அவர்கள் தம்பதியில்
அன்னவர்தம் மனைகளில் கொண்டு சேர்த்தார். அதன்பின் ஜகந்நாதம் வந்தார்.
இராமானுஜர் ஜகந்நாதத்தை விட்டு அகன்றார் என்னும் செய்தியை அறிந்த அவ்வூர் மக்கள்
குற்றமில்லாத அன்பு ஓங்க அருச்சகன் தனை அழைத்து எல்லை யில்லாத அன்பும் இன்பமும் பொங்க, வாசத் துளபமாலையும்
‘மலர்மின்(திரு) செம்பொற் குசயுகளமும் தோய் மார்பின’னாகிய கார்நிற அண்ணலின் அருட்பதம் பணிந்தர்.

அவ்வேளையில், இராமானுஜர் தம் பதியில் துயிலுணர்ந்தார்.
ஜகந்நாதத்திலிருந்த தான் தன் பதிக்கு வந்து சேர்ந்த காரணத்தை நாடி அளப்பிலா வியப்பும் உவகையும்
மிக்கோங்கும் உளத்தராகி, விட்டுணு அன்புடன் தம் கனவில் கூறியது பலிதமானதைத் தெளிந்தார்.
“ இத்தகைய திருவிளையாடலை மாயன் இயற்றிடற்கு ஏது தன் தாமரை மலரிதழ் போன்ற தன் திருவடி மேல்
மெய் பத்தி கொண்ட பத்தர்கள் மிது வைத்திருக்கும் வாத்சல்லியமே யன்றி வேறென்ன என்று கூறுவது.
உத்தம பத்திக்கு ஒப்பது வேறொன்றுளது எனலாமோ?

ஜகந்நாதத்தில் பொருந்தியிருந்த அநாசாரங்களைப் போக்கி, மக்களை நல் நெறிப்படுத்த யான் மேற் கொண்ட சிரமமும்,
அதனால் அங்குள்ளவர் வருத்தம் கொண்ட செயலையும் தன் உயரிய மனத்திடைச் சகிக்க ஆற்றானாகி
இத்திருவிளையாடலைப் புரிந்த கரும்புயன்மேனி வள்ளலின் கருணையை என்ன என்பது?

வேத நெறியில் பலதுறைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பொருந்துகின்ற அதிகாரம் அதாவது
தகுதி, பக்குவம் சற்றும் அமைந்திடாதவர்களும் தாமோதரனது திருவடியைச் சிந்தையில் சற்றும் பிரியாத
பத்தியுற்ற பண்பினால் நாரணனுக்கு உவப்பானவராக உள்ளனர். அதனால் பத்தியின் மான்மியத்தைப் பேசவும் படுமோ”
என எண்ணிய இராமானுஜர், பின்னர்,
பத்தியின் மாண்பினை மிகவும் கொண்டாடித் திட சித்தங்கொண்ட தம் சீடர்களும் மற்றும் இவ்வுலகத்தில்
பிறந்தவர்களும் நாரணன் பதஞ் சேர்ந்து உய்யும் வண்ணம் பகவனை அடையப் பத்திமார்க்கத்தைத் தாபித்தார்.

புறச் சமயத்தவரும் நாரணனின் பொற்றாளில் பத்தி எய்தச் செம்மையான பாடியம் சொன்ன
அப்புகழோன் அறநெறி வழுவாச் சீடர் கூட்டத்துடன் உலகவர் அடைதற்கு அரியதாகிய
மாயனின் பொன்னடியாகிய சின்மயத்தை அணைந்தார்.

மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின்
அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது,
எனவே பத்தர்களின் அநாசாரத்தைப் பழித்து அவர்களை இகழ்தல் முறையன்று .
இது ஸ்ரீவைணவத்தின் சீரிய கொள்கை.

“அற்ற முரைக்கிலடைந்தவர் பாலம்புயைக் கோன்
குற்ற முணந் திகழும் கொள்கையனோ- எற்றே தன்
கன்றி னுடம்பின் வழுவன்றோ காதலிப்ப(து)
அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25)

கன்றினைச் சமீபத்தில் ஈன்ற பசு, வாஞ்சையுடன் கன்றின் மேலுள்ள வழும்பாகிய அழுக்கை நக்கி நக்கித் துடைக்கும்.
அது போல புத்தடியார்களின் புன்மையைக் கண்டு நாரணன் அவர்களை இகழான்;
அவர்கள் பால் அவன் கொள்ளும் வாஞ்சையால் அப்புன்மைகளை இன்பமாகவே ஏற்றுக் கொள்வன்.

————–

ஆழ்வார் விக்கிரஹங்களிலிருந்து சில சான்றுகள்
a)சீர்காழி அருகிலுள்ள -திருநகரி கோயிலில் -திருமங்கையாழ்வார் திருமேனி/ விக்ரஹம் சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது.

b)திருச்சி -உறையூர் கோயிலில் திருப்பாணாழ்வார் திருமேனி யினை சேவிக்கலாம் –
அவர் பாதத்திலும் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .

c)திருச்சி -திருவெள்ளறை கோயிலில் -குலசேகர ஆழ்வார் திருமேனியினை சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .
இவர் இரண்டாம் வருணமான க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்தவர்.
இங்கு அனைத்து ஆழ்வார்களையும் அவர்களது பாதங்களில் தவறாமல் ராமானுஜர் திருவுருவத்தினையும் சேவிக்கலாம் .

d)திருநெல்வேலிக்கு அருகில் , ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் சடாரியினை சேவிக்கலாம் .
அதிலும் ராமானுஜர் திருவுருவம் காணப்படுகின்றது .

ராமானுஜருக்கு அந்தரங்க சீடராயிருந்து அவருக்கு பால் காய்ச்சுதல் ,திருவாராதன பொருட்களை சித்தம் செய்தல் என்று
அணுக்க தொண்டராய் இருந்தவர் வடுக நம்பி ஆவார் .இவர் ப்ராஹ்மணர் அல்லர் .

b) திருக்கச்சி நம்பிகளுக்கு சீடனாயிருந்து வைணவ சித்தாந்தம் கற்க ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் அமுது செய்து மீதமாகும் சேஷதத்தினை(போனகம் செய்த சேடம் ) உண்ண ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் மூன்றாம் வர்ணமாம் வைஸ்ய குலத்தைச் சேர்ந்தவர் ஆவார் .

c) ராமானுஜர் தனது நித்தியகால பூஜைக்காக சிறிய வரதராஜர் விக்ரஹம் ஒன்றை வைத்திருந்தார் .
அவருக்கு திருவாராதனம் செய்யும் முன்னர் பூதசுத்தி ,ஸ்தலசுத்தி செய்வார் .இவற்றால் திருப்தி அடையாது ,
தனது அந்தரங்க சீடரான உறங்கா வில்லி தாசரது கரஸ்பர்சம் பெற்ற பின்னரே முழு சுத்தியானதாக திருப்தி அடைந்து ,
அதன்பிறகு ஆராதனை-ஷோடச அங்க பூஜைகளை செய்வார் .இந்த உறங்கா வில்லி தாசரும் ஐந்தாம் வர்ணத்தவர்தான்.
முன்பு அகளங்க சோழனிடம் மெய்காப்பாளனாயும்- மல்லராகவும் இருந்தவர் .
பின்னர் ராமாநுஜரிடம் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரானார்.

அவரது சாதி மறுப்பு புரட்சியினால் வெறுப்புற்ற சாதி அந்தணர் அவருக்கு பிக்ஷை உணவில் விஷமிட்டனர் .
இச் செய்திகள் “ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்” என்னும் நூலில் காணலாம் .

“ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாது ஸத்ய பராக்ரம:” – என்பது ராமாயணம்.( மாரீசன் ராவணனுக்கு சொன்னது .)
ராமன் என்பவன் , தர்மமே ஒரு உருவமாகி வந்தவன் .அவன் என்றுமே மாறாத உண்மை உருவன் ,நல்லவன் ,வீண் போகாத வீரன்.
அதே ராமனை -“அதாதோ தர்ம ஜிஞ்சாஸ: ” என்று கூறி பூர்வ மீமாம்ஸை தொடங்குகின்றது .

யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர:|
தத்ர ஸ்ரீ : விஜயோ பூதி : த்ருவா நீதிர் மாதிரி மம || – மஹாபாரதம் .

எந்தப் பக்கத்தில் ப்ரஹ்மமான கண்ணன் உளனோ, அங்கே தான் நிலைத்த தர்மம் என்கிறார் சஞ்சயன் த்ருதராஷ்டிரரிடம் .
அந்த கண்ணனை பிரம்மமாக துதித்து -“அதாதோ ப்ரம்ம ஜிஞ்சாஸ: “ என்று கூறி உத்தர மீமாம்ஸை தொடங்குகின்றது .

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்பன் பாடிய குறள்-தமிழ் ஹிந்து – July 22, 2011 -By ஸ்ரீ ஜடாயு-

October 14, 2020

ஸ்ரீ கம்பராமாயணம் எனும் மகா காவியத்தில், பாலகாண்டத்தில் உள்ள வேள்விப் படலம் எனும் படலத்தில்,
ஒரு குட்டிக் கதை போல சுருக்கமாக ஸ்ரீ வாமனாவதாரம் வருகிறது.
இந்த சிறிய பிரசங்கத்தையும் கவித்துவம் மிளிரும் அழகிய பாடல்களில் ஸ்ரீ கம்பன் விவரிக்கிறான்.

ஸ்ரீ விசுவாமித்திர முனிவனை நிழல் போலத் தொடர்ந்து ஸ்ரீ ராம ஸ்ரீ லட்சுமணர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர்.
தாடகை வதம் முடிந்த பின்னர், மூவரும் ஒரு அழகிய சோலையை அடைகின்றனர்.
அச் சோலையின் பெயர் ஸ்ரீ சித்தாசிரமம். முன்னாளில் ஸ்ரீ திருமால் தன்னை யோகத்தில் நிறுத்தித் தவம் புரிந்த இடம் அது.
ஸ்ரீ வாமனனாக அவதரித்து மகாபலியை அடக்கிய இடமும் அதுவே என்று தொடங்கி,
அந்த சரிதத்தை முனிவன் ஸ்ரீ இராம லட்சுமணர்களுக்குக் கூறுகிறான்.

ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள் வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்.

[ஆனவன் – அந்தத் திருமால்; ஞாலம் – உலகம்; எயிற்று – பற்களை உடைய;
ஆண் ஏனம் – ஆண் பன்றி வடிவுடைய ஆதி வராக மூர்த்தி; திறல் – வல்லமை உடைய;
வவ்வுதல் செய்தான் – பறித்துத் தன் வசப்படுத்தினான்]

ஆதி ஸ்ரீ வராக மூர்த்தி தன் கோரைப் பற்களால் அனாயாசமாக பூமியைத் தாங்கினார்.
அது போல, வானம் பூமி இரண்டையுமே தன் வீரத்தால் அனாயாசமாக மாவலி வெற்றி கொண்டு தன் வசமாக்கினான்.
மாவலி அசுரனாக இருப்பினும் தெய்வ சம்பத்துடையவன் என்று குறிப்பிட்டு உணர்த்துவதற்காக,
ஸ்ரீ வராக மூர்த்தி போல என்று இங்கு கம்பன் உவமை கூறுகிறான்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான்.

[நுனித்து உணர் – சூட்சுமமாக ஆராய்ந்து அறிகின்ற; காசிபன் – காசியபன்;
வால்-அறிவற்கு – தூய அறிவை உடைய முனிவருக்கு; மகவு – மகன்;
நெடுந்தகை – பெருமைக் குணங்களை உடைய திருமால்; அருங் குறள் – அரிய வாமன வடிவம்]

அப்போது தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி, காசியபன் என்ற நல்லறிவு கொண்ட முனிவனுக்கும்,
தேவமாதா அதிதிக்கும் மகனாக, ஆலமரம் முழுவதையும் தன் உள்ளே அடக்கிய விதை போல,
நெடியோனாகிய திருமால் வாமனனாக அவதரித்தான்.

மிகப் பெரியோனாகிய விஷ்ணு அந்தச் சிறிய குள்ள வடிவத்தில் அடங்கியது பற்றியதும்,
இந்தக் குள்ள வாமனன் பின்னர் திரிவிக்ரமனாக ஓங்கி வளரப் போவது பற்றியும்,
இந்த இரண்டையும் உணர்த்தும் விதமாக ’ஆல் அமர் வித்தின் அருங் குறள்’ என்று அழகுறக் கவி கூறுகிறான்.

வாமனனைக் குறிக்க “குறள்” என்னும் சொல் கம்பன் உண்டாக்கியதன்று.
திவ்வியப் பிரபந்தத்திலும், அதற்கு முன்பும் கூட அச்சொல் அவ்வாறே தமிழிலக்கியத்தில் பயின்று வந்திருக்கிறது.

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்–என்றும்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ -என்றும் ஸ்ரீ பெரியாழ்வார் பாடி இன்புறுவது காணலாம்.

முப்புரி நூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பதோர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன் – அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க் கொடு – சென்றான்.

[முஞ்சியன் – முஞ்சிப் புல்லால் ஆன அரை ஞாண் கயிற்றை அணிந்தவன்; விஞ்சை – வேத மந்திரம்;
நாவன் – நாவை உடையவன்; சிற்பதம் – ஞான சொரூபம்; மெய்க் கொடு – உடல் கொண்டு;]

வாமன பிரம்மசாரி பூணூல் அணிந்து, முஞ்சைப் புல்லை அரை ஞாணாகக் கட்டி யிருக்கிறான்.
காலையும் மாலையும் சமித்துக்களைத் தன் கைகளால் தீயில் இட்டு அக்னியை வழிபடுவதால்
‘அனல் படு கையன்’ ஆக இருக்கிறான். வேதமாகவும், வேதத்தின் பயனாகவும், சகல ஞான சொரூபமாகவும்
விளங்கும் சர்வேஸ்வரன் கற்பதற்கு என்ன உள்ளது?
ஆயினும் பிரமசரிய விரதப் படி வேத மந்திரங்களை நாவால் உச்சரிக்கிறான்.
எனவே, “கற்பதோர் நாவன்” என்கிறார் கவி.

”அற்புதரே அறியும் தன் சிற்பதம்” என்ற தொடரால்,
இங்கு ஞானவான்களுடைய ஞானமே அற்புதமாகக் கூறப் பட்டது என்பது விளங்கும்.
வியப்புக்குரிய ஞானிகள் மட்டுமே அறியும்
தன் ஞான சொரூபம் போல, எவர்க்கும் எளிதில் அறியமுடியாத சிறிய வடிவம் கொண்டு
வாமனன் சென்றான் என்பது கருத்து.
அதனால் தான், உயர் ஞான நிலை அடைந்த காரைக் காலம்மையார் பாடிய ஒரு பிரபந்தம்
அற்புதத் திருவந்தாதி என்று சைவத் திருமுறைகளில் வழங்கப் பெறுகிறது.

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி, அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புற நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி!-என்று சேக்கிழார் சிவ சொரூபத்தைப்
போற்றுவதனையும் இதனுடன் ஒப்பிட்டு மகிழலாம்.

சிந்தை உவந்து எதிர், “என் செய” என்றான்;
அந்தணன், “மூவடி மண், அருள் உண்டேல்,
வெந்திறலாய்! இது வேண்டும்” எனாமுன்
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்.

[சிந்தை உவந்து – மனம் மகிழ்ந்து; வெந் திறலாய் – பகைவரை அழிக்கும் கொடிய வலிமை உடையவனே;
எனா முன் – என்று சொல்வதற்கு முன்னமே; தந்தனென் – தந்தேன்; வெள்ளி – அசுர குரு சுக்கிராச்சாரியார்]

வேள்விச் சாலையை அடைந்த வாமனனை, மனம் மகிழ்ந்து எதிர் கொண்டழைக்கிறான் மாவலி.
”அருள் உண்டானால், மூவடி மண் இது வேண்டும்” என்று வாமனன் யாசிக்கிறான்.
அவன் கேட்டு முடிப்பதற்கு முன்னமேயே தந்தேன் என்று மாவலி சொல்லி விட்டானாம்!
அப்பேர்ப்பட்ட ஈகைக் குணம் மாவலியுடையது.

வந்தவன் சாதாரண பிரமசாரி அல்ல, திருமாலே என்று பக்கத்திலிருந்த வெள்ளிக்குத் தெரிந்து விட்டது.
உடனே மாவலியைத் தடுக்கிறான்.

“கண்ட திறத்து இது கை தவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல் நாள்
உண்டவன் ஆம்; இது உணர்ந்து கொள்” என்றான்.

[கண்ட திறத்து இது – நாம் காணும் தன்மையை உடைய இவ்வடிவம்; கைதவம் – வஞ்சனை உடையது;
கொண்டல் – மேகம்; அகண்டமும் – எல்லாமும்; மேல் நாள் – முன்னொரு காலத்தில்]

இந்தக் கார் மேக நிறக் குள்ளனைப் பார்த்து ஏமாந்து விடாதே. இது வஞ்சனையான வடிவம்.
பிரளய காலத்தில் அண்ட சராசரங்களையும், அவற்றில் உள்ள அத்தனை உயிர்களையும்
தன் வயிற்றில் அடக்குபவன் இவன். தெரிந்து கொள்!

”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட, வந்து
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னில்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” என்றான்.

[நினைக்கிலை – இதை நீ நினைக்கவில்லையே;
தாழ்வு இல் கனக் கரியானது – குறைவில்லாத, நீர்கொண்ட மேகம் போல கரிய திருமாலுடைய;
இதன் மேல் – இதை விடப் பெரிய; யாது கொல்? – என்ன இருக்கிறது?]

அதைக் கேட்ட மாவலி கலக்கமடைய வில்லை. மாறாக, அவனது மகிழ்வு பல மடங்காகி விட்டது.

”என் கை கொடுக்குமாறு நிமிர்ந்திருக்க, யாசிக்குமாறு தனக்கு இயலாத வகை தாழ்ந்திருப்பது
தாழ்வில்லாத திருமாலின் கை என்றால், அதை விட பெரிய பெருமை வேறு என்ன உள்ளது?
இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே வெள்ளி!” என்கிறான்.

தனக்கு இயலா வகை தாழ்வது – என்பது அடியார்களுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கீழிறங்கி
வந்து அருள் செய்யும் இறைவனது எளி வந்த தன்மை (சௌசீல்யம்) என்னும கல்யாண குணத்தைக் குறித்தது.
அது அவனுடைய இயல்பாகவே ஆகிவிட்டது.

வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

[விளம்பினை – கூறினாய்; வள்ளியர் ஆகில் – வள்ளல் தன்மை கொண்டவர்களாக இருந்தால்;
எள்ளுவ என் சில? – விலக்கப் பட்டவை என்று சில பொருட்கள் உள்ளதா என்ன?
கொள்ளுதல் – யாசித்துப் பெறுதல்; நன்றால் – நன்று + ஆல், ஆல் என்பது அசைச் சொல்].

ஈகையின் சிறப்பை மேலும் விரித்து வெள்ளியிடம் மாவலி பேசுகிறான் –
உண்மையான வள்ளல் தன்மை என்பது பலனை எதிர்ப்பார்த்து செயல்படுவதில்லை;
கணக்குப் பார்த்து, இவருக்குக் கொடுக்கலாம், இவருக்குக் கொடுக்கக் கூடாது, இதைக் கொடுக்கலாம்,
இதைக் கொடுக்கக் கூடாது என்றும் யோசிப்பதில்லை. உயிரே போவதானாலும், இரத்தல் தீயது. கொடுப்பதே நல்லது.

இப்பாடலில்,
நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.–என்ற திருக்குறளின் கருத்து உள்ளுறை பொருளாக வருகிறது.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கையொடு இரந்தவர்; எந்தாய்!
வீந்தவர் என்பவர் வீந்தவரேனும்
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே?

[வீந்தவர் – இறந்தவர்கள்; இரந்தவர் – யாசித்தவர்கள்; ஈந்தவர் – கொடுத்தவர்கள்]

இறந்தவர்கள் உண்மையில் இறந்தவர்கள் அல்லர். யாசித்து வாழவேண்டிய நிலை வந்தும் உயிர்விடாது,
ஏந்திய கையோடு இரந்தவர்களே உண்மையில் இறந்தோர்.
அதே போல, வெறும் உடம்போடு உயிர் வாழ்வோர் வாழ்பவர்கள் அல்லர்.
யாசிப்பவர்க்கு ஈந்து, தம் மரணத்திற்குப் பின்னும் புகழுடம்போடு வாழ்பவர்களே உண்மையில் வாழ்ந்தோர்.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்; பரந்து
கெடுக உலகியற்றியான்.—என்று வள்ளுவர் இட்ட சாபமும்,

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.–என்று வள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறியும் இப்பாடலைப்
படிக்கையில் நினைவில் எழுகின்றன.

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

[அழகிதோ – அழகாகுமா; தகவு இல் – நற்குணம் இல்லாத;
கொடுப்பது விலக்கு கொடியோய் – தானத்தைத் தடுக்கின்ற கொடியவனே;
விடுகின்றாய் – ஆகி விடுகின்றாய்]

ஈகையின் பெருமைகளைக் கூறிய பிறகு, தனது தானத்தைத் தடுப்பது சுக்கிராசாரியாரிக்குப் பாவத்தையே
விளைவிக்கும் என்றும் அவருக்கு அறிவுறுத்துகிறான் மாவலி. தானம் தருவதைத் தடுப்பவனது சுற்றம் உண்ணவும்,
உடுக்கவும் கூட முடியாத தரித்திரத்தை அனுபவிக்கும் என்ற தர்ம சாஸ்திரத்தை
மகாபலி வாய் மொழியாகக் கம்பன் கூறுகிறான். அசுர ராஜன் அசுர குருவுக்கு அளிக்கும் உபதேசம் இது!

இப் பாடலில் திருக் குறளின் சொல்லாட்சியை அப்படியே நேரடியாகக் கம்பன் எடுத்தாள்கிறான்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

’பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும்’
என்பார் உரையாசிரியர் பரிமேலழகர்.
சுற்றமும் கெடும் என்று கூறியதால் அவன் கேடு சொல்லாமையே பெறப் பட்டது.

முடிய, இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
”கொடியன்” என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
”அடி ஒரு மூன்றும் நீ, அளந்து கொள்க” என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்.

[கொண்டிலன் – கொள்ளவில்லை; நெடியவன் – நீண்ட திருமால்; குறிய கை – சிறிய கை]

இவ்வாறு, மந்திரியாகிய சுக்கிரன் சொன்னது எதையும் மனதில் கொள்ளாமல், நீ கேட்ட மூன்று அடியை
அளந்து எடுத்துக் கொள் என்று தண்ணீரை எடுத்து தாரை வார்த்தான் மகாபலி.
தனது சின்னஞ்சிறிய கைகளை நீட்டி மாயவன் அதை வாங்கிக் கொண்டான்.

கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

[கயம் தரு நறும்புனல் – குளத்திலுள்ள நல்ல நீர்; பயந்தவர்களும் – பெற்றவர்களும்;
குறளன் – குள்ளனான வாமனன்; வெருக்கொள – ஆச்சரியப் பட; விசும்பின் – ஆகாயத்தில்]

அடுத்த கணம், வாமனனாக வந்தவன் ஓங்கி உயர்ந்து திரிவிக்கிரமாக வளர்ந்தான்.

பயந்தவர்களும் இகழ் குறளன் – காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா?
பெற்றவர்கள் யாராவது தங்கள் குழந்தையை இழிவாக நினைப்பார்களா? என்னில்,
இங்கு இகழ்தல் என்ற சொல் அவமதித்தல் என்ற பொருளில் அல்ல,
வடிவச் சிறுமை பற்றிக் கேலி பேசுதல் என்ற பொருளில் வந்தது.
குள்ளா, குள்ளி என்று இன்று கூட நாம் குழந்தைகளைக் கொஞ்சுகிறோமே
அது போல. “சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்” என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும்
ஒப்பு நோக்கி இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

குள்ளனான வாமனன் ஓங்கி உயர்ந்து நின்றதற்கு அபாரமான ஒரு உவமை சொல்கிறார்,
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல என்று.
நல்லோர்களுக்குச் செய்யும் சிறிய உதவியைக் கூட அவர்கள் மிகப் பெரிதாக எண்ணுவது போல,
சிறியவன் பெரிதாக வளர்ந்தான் என்பது நேரடிப் பொருள்.

ஆனால், இங்கும் திருக்குறளை மனதில் வைத்துக் கம்பன் எழுதியிருக்கிறான் என்பது கண் கூடு.

உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மகாபலி மகா விஷ்ணுவுக்குச் செய்த உதவி மூன்று அடி மண் அளித்தது. அது சிறியது.
ஆனால் அவ்வுதவிப் பயன் மகாவிஷ்ணுவின் சால்பு போல, மூவுலகத்தையும், சிரஞ்சீவித் துவத்தையும்,
பாகவத உத்தமர்களில் ஒருவன் என்னும் பெரும் பதவியையும், என்றென்றும் உலகத்தாரால் போற்றிக் கொண்டாடி
வணங்கப் படக் கூடிய பெருமையையும் எல்லாம் மகாபலிக்கு அளித்தது.
அது தான் உயர்ந்தவர்க்கு உதவிய உதவியின் பயன்!

இப்போது அந்த உவமையின் முழுப் பொருள் நமக்குப் புரிய வருகிறது.

நின்ற தாள் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே.

[நின்ற தாள் – ஊன்றிய கால்; பாவிற்றிலை – பரவியதில்லை; சிறிது பார் எனா – பூமி சிறியது என்பதால்;
ஒன்ற – ஒருசேர; உம்பரை – மேலுலகை; வெளி பெறாமையே – வேறு இடம் இல்லாததால்]

நிலத்திலே ஊன்றிய ஒரு கால் மண்ணுலகம் முழுதையும் நிரப்பி, பூமி சிறியது என்ற காரணத்தினால்
அதற்கு அப்புறம் சென்று பாவவில்லை. ஆகாயம் அனைத்தையும் ஒருசேர தன்னுள் ஒடுக்கி,
வானுலகத்தை வென்ற மற்றொரு கால், அதற்கு மேலும் வேறு இடம் இல்லாமல் திரும்பி விட்டது.

எம்பெருமானது பாதங்கள் எல்லையேதும் இன்றி இன்னும் பெரிதாக வளரக் கூடியன.
ஆனால் மேலே செல்வதற்கு இடமில்லையாகையால், மண்ணையும் வானையும் அளக்கையில் ஓரளவோடு நின்று விட்டன.

சர்வேஸ்வரன் மூவுகலங்களையும் அளந்தது என்பது மிகவும் சாதாரண விஷயம் என்பது கருத்து.
”தாள் பரப்பி மண் தாவிய ஈசனை” என்ற நம்மாழ்வார் வாக்கை (திருவாய்மொழி, 3.3:11)
இங்கு அழகாக எடுத்தாண்டிருக்கிறான் கம்பன்.

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ்வடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் –
சிலை குலாம் தோளினாய்! – சிறியன் சாலவே!

[அலகு உலாது – அளப்பதற்கு இடம் இல்லாது; அன்பன் மெய்யதாம் – அன்பனான மாவலியின் சிரம் இடமாயிற்று;
இலை குலாம் துழாய் முடி – இலைகள் விளங்குகின்ற துளசி மாலையை அணிந்த திருமுடியை உடைய;
சிலை குலாம் தோளினாய் – வில் குலாவுகின்ற தோளை உடைய இராமனே; சிறியன் சாலவே – மிகவும் சிறியவன் தான்]

உலகமெல்லாம் இரண்டடிக்குள் அடங்கி விட்டதால் மூன்றாம் அடிக்கு இடம் இல்லாது போகவே,
அன்பனான மகாபலியின் சிரம் அதற்கு இடமாயிற்று.
அதன் சிறப்புப் பற்றி சிரத்தை “அன்பன் மெய்யதாம்” என்று கவி உரைத்தார்.

கீழுலகமாகிய பாதாளமும் பூமிக்குள் அடங்கும் என்பதால் அதைத் தனியாகக் குறிப்பிடவில்லை.
உலகெங்களை எல்லாம் தன் பாதம் கொண்டு அளந்தபோதும் அங்குள்ள ஜீவராசிகள் எதற்கும்
சிறிதும் துன்பம் ஏற்படாத வகையிலேயே தன் திருவடிகளை வைத்தான் என்பது
“உள்ளடி அடக்கி” என்ற சொல்லாட்சியால் விளங்கும்.

சிறியன் சாலவே – ”இப்பேர்ப்பட்ட வாமன மூர்த்தி உண்மையில் ஒரு சின்னப் பையன் தானே?” என்று
இவ்வளவு நேரம் சமர்த்தாகக் கதை கேட்டுக் கொண்டு வந்த ராமனைப் பார்த்து விசுவாமித்திர முனிவர் சொல்லி முடிக்கிறார்.
வேள்வி காக்க சின்னப் பையனான உன்னைக் கூட்டி வந்திருக்கிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்திப் பேசும் பேச்சு.
வாமன பிரமசாரி கையில் ஒன்றுமில்லாமல் போய் யாசகம் கேட்டு மாவலியை அடக்கி விட்டான்.
ஆனால் உன் தோளில் அப்பேர்ப் பட்ட வில்லும் இருக்கிறது, பார்த்துக் கொள் – சிலை குலாம் தோளினாய்!

உரியது இந்திரர்க்கு இது என்று உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!

[ஈந்து போய் – கொடுத்து விட்டுச் சென்று; விரி திரை – அலைகள் பரவும்;
பள்ளி மேவினான் – படுக்கையைச் சென்றடைந்தான்; கரியவன் – கரிய நிறம் கொண்ட திருமால்;
தாள் இணை – இரு திருப்பாதங்களும்]

இப்படி மாவலியின் ஈகைத் திறத்தால் கிடைத்த உலகைத் தான் வைத்துக் கொண்டானா? இல்லை.
இந்திரனுக்குரிய உலகம் என்று அவனுக்கு தானம் செய்து விட்டு,
தான் மறுபடி பாற்கடலில் பாம்பணையில் படுக்கப் போய் விட்டானாம்.

பக்கத்தில் திருமகள். இப்படி உலகமெலாம் அளந்த திருவடியை அவளது மென்மலர்க் கரம் வருட,
அது சிவந்து போய்விட்டது என்று கூறி மங்களகரமாக வாமனாவதாரக் கதையைக் கம்பன் முடிக்கிறான்.

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்ப

என்று கம்பனுக்கு முன்னமேயே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவும்
திருமாலின் திருவடித் தாமரைகள் குறித்து இவ்விதம் பாடியிக்கிறார்.

எனவே, வாமனர் பற்றிய தொன்மம் தமிழ் மரபில் மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டே
பிரபலமாக இருந்திருக்கிறது என்று புலனாகிறது.

திருக்குறளிலும் மடியின்மை என்ற அதிகாரத்தில் வருகிறது.
மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு.

தன் அடி அளவாலே எல்லா உலகங்களையும் அளந்து இறைவன் கடந்த பரப்பு முழுவதையும்,
சோம்பல் இல்லாத மன்னவன் ஒருசேர அடைவான்.

திருவள்ளுவரைப் புகழ்ந்து பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவ மாலை என்று அழைக்கப் படுகிறது.
இந்நூலில் இரண்டு பாடல்கள் வாமன அவதாரத்தை உவமையாக்கி திருக்குறளின் பெருமையை அழகுறப் பேசுகின்றன.

பரணர் பாடியது:

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் – வால் அறிவின்
வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து.

[மாண் அடியால் – பெரிய அடிகளால்; நயந்து – விரும்பி; வால் அறிவின் – தூய அறிவுடைய;
உள்ளுவது எல்லாம் – நினைக்கப் பட்டவை எல்லாம்; ஓர்ந்து – ஆராய்ந்து]

திருமால் குறளாக வளர்ந்து தனது பெரிய இரண்டடிகளால் உலகம் முழுவதையும் விரும்பி அளந்தான்.
அறிவாற்றல் பெற்ற வள்ளுவரும் தனது சிறிய குறள் வெண்பாவின் இரண்டடிகளால்
உலகத்தார் நினைப்பவை எல்லாவற்றையும் ஆராய்ந்து அளந்து விட்டார்!

பொன்முடியார் பாடியது:

கான் நின்ற தொங்கலாய்! காசிபனார் தந்தது முன்
கூ நின்று அளந்த குறள் என்ப – நூன்முறையான்
வான் நின்று மண் நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம் நின்று அளந்த குறள்.

[கான் நின்ற தொங்கலாய் – மணம் வீசும் மாலை சூடிய பாண்டியனே; காசிபனார் – காசியப முனிவர்;
கூ நின்று – மண்ணில் நின்று; நூன்முறையான் – தரும நூல்களின் முறையோடு கூடி]

மண்ணில் நின்று உலகம் அளந்தது வாமனக் குறள்.
வானிலும் மண்ணிலும் நின்று உலகம் அளந்தது வள்ளுவர் குறள் என்று இந்தப் புலவர் சமத்காரமாகப் பாடுகிறார்.

திருத்தணிகை சரவணப் பெருமாளையர் இப்பாடலுக்கு அருமையாகக் கீழ்க்கண்டவாறு உரை தருகிறார்:

”அக்குறள் வஞ்சித்துப் பெற்று அளத்தலால், நூன்முறையோடு கூடாததாயிற்று.
இக்குறளுக்கு, ஒலிவடிவும் வரிவடிவம் என இரண்டு வடிவு உள்ளமையால்,
ஒலி வடிவுக்கு இடம் வான் ஆகலின் வான் நின்று என்றும், வரி வடிவுக்கு இடம் மண் ஆகலின்
மண் நின்று என்றும் கூறினார்.
இக் குறளுக்கு நூன்முறையோடு கூடலும் வான் நிற்றலும் மிகுத்துச் சொல்லி வேற்றுமை செய்யப் பட்டது.”

கம்பன் பாலகாண்டத்தில் வாமனாவதாரக் கதையைப் பாடியதை மேலே பார்த்தோம்.
ஆனால் அத்தோடு மட்டும் அவன் நிற்கவில்லை.
காவியத்தில் பல இடங்களில் உலகளந்த பான்மையைப் பாடிக் கொண்டே இருக்கிறான்.

ராமனைத் தேடி படை பரிவாரங்களோடு பரதன் கானகத்திற்கு வருகிறான். வழியில் முதலில் குகனைச் சந்திக்கிறான்.
இரு தரப்பிலும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள்.
கனத்த முகத்துடன் நின்று கொண்டிருக்கிறாள் கைகேயி.
அவளை அறிமுகப் படுத்தி வைக்க வேண்டிய கட்டத்தில், கவிக் கூற்றாக இப் பாடல் –

சுடு மயானத்திடை தன் துணை ஏக,
தோன்றல் துயர் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
ஏக, கழற்கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை, “ஆர் இவர்?”
என்று உரை, என்ன; குரிசில் கூறும்:– அயோத்தியா காண்டம், கங்கை காண் படலம்

துணைவனான தசரதன் மயானத்து நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறான்.
மகன் பரதன் சோகக் கடலில் மூழ்கி விட்டான். கருணைக் கடலான ராமனோ கானகத்தைப் பார்த்துப் போய்விட்டான்.
இவ்வளவுக்கும் காரணமானவள் இந்தக் கைகேயி. அன்று தன் நெடுமையால் மாயன் அளந்த உலகை எல்லாம்,
தன் மனத்தில் நினைந்து செய்யும் கொடுமையாள் அளந்தவள் இவள்!
அவளைப் பார்த்து யார் இவள் என்று குகன் கேட்க, பரதன் அறிமுகம் செய்கிறானாம்.

இன்னொரு காட்சி. தன் ஆற்றல் உணர்ந்த அனுமன் கடலைத் தாண்டுவதற்காக,
வானத்தைத் தொடும் பேருருவம் எடுக்கிறான்.

பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல்
உருவு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்.– கிட்கிந்தா காண்டம், மயேந்திரப் படலம்

[பொருவு அரு வேலை – ஒப்பற்ற கடல்; புந்தியான் – எண்ணம் கொண்ட அனுமன்;
தாய – அளந்த; மேக்கு உறப் பெயர்ந்த – மேற்சென்று பொருந்துமாறு உயர்ந்த;
உருவு அறி வடிவின் – தனது உருவத்தை யாவரும் அறிவதற்கு உரிய வடிவத்தோடு;
உம்பர் ஓங்கினன் – வானளாவ வளர்ந்தான்]

உலகளந்த நாளில் வான முகட்டைச் சென்று தீண்டிய மாயோனின் திருவடி போல, அனுமன் வளர்ந்தான்.
அதனால், பின்னாளில் யுத்தத்தின் போது ராமனைத் தோளில் சுமந்து தான் பெறப் போகும் சிறிய திருவடி
என்ற திருநாமத்தின் பெயருக்குப் பொருள் சேர்க்குமாறு இப்போதே விளங்கினான் என்கிறது கம்பன் கவி.

தேவரும் திசைகளும் கலங்க, வானில் ஒளிமயமாகப் பறந்து, கடலைத் தாண்டிச் செல்கிறான் அனுமன்.

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்குற, அடுக்கி நாகர்
மேலின் மேல் நின்றகாறும் சென்ற கூலத்தின், ‘விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்’ என்று வானவர் மருள, சென்றான்.– சுந்தர காண்டம், கடல் தாவு படலம்

[நாகர் மேலின் மேல் அடுக்கி நின்ற காறும் சென்ற கூலத்தின் – தேவர்களுடையனவாய் ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கப் பட்டு இருக்கின்ற உலகங்களின் மேல் கரையிலும்
(கூலம் – கரை); கால வாலினால் – கால பாசம் போன்ற வாலினால்]

அண்ட கடாகங்களின் மேற்கரையைத் தொட்டு விட்டானோ? அன்று திருமால் காலினால் அளந்ததை இவன்
தன் வாலினால் அளந்தானோ? என்று தேவர்கள் மருளும் படி பறந்து செல்கிறான்.
பரமனை விட அவன் பக்தனின் ஆற்றல் அதிகம் என்பது தோன்ற இந்தப் பாட்டு அமைந்துள்ளது.

யுத்தத்தின் போது, ராவணன் தேரேறி வந்து போர்தொடுக்க, இராமன் அனுமனின் தோள்களில் ஏறும் காட்சி.
அங்கேயும் உலகளந்த திருவடிவைச் சேர்த்துப் பாடுகிறான் கம்பன்.

மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான்.– யுத்த காண்டம், முதற் போர் புரி படலம்

[மாணி – மாணவன், வாமன பிரமசாரி; ஆணியாய் – ஆதாரமாய்; காணி – தனக்கே உரிய பொருள்;
பண்டு – பழைய காலத்தில்; கலுழன் – கருடன்; அனந்தன் – ஆதி சேடன்)

உலகளந்த பேருருவுடையவனை, மாணவனான சின்னப் பிள்ளையைத் தூக்குவது போல தூக்கி விட்ட
அனுமனுக்கு ஒரே ஆச்சரியம். பண்டைக் காலம் முதல் திருமாலின் திருவடியைத் தனக்கே உரியதாகத்
தாங்கும் பேறு பெற்ற கருடனே இதைப் பார்த்து வெட்கமடைந்தான்.
ஆயிரம் தலைகளால் உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கும் தலை நடுங்கியது!

இவ்வாறு, கம்பன் காவியத்தில் பல இடங்களில் வாமனாவதாரம் பேசப் படுகிறது.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்பதான ஆண்டாள் பாசுரங்களிலும்,
காஞ்சியிலும், திருக்கோவிலூரிலும் வேறு பல தலங்களிலும் சிற்பங்களாவும் உலகளந்த பெருமாள் வாழ்ந்து வரம் அருளி வருகிறார்.
ஓணத்திலும், கார்த்திகையிலும், இன்னும் இந்தியாவின் பல பகுதிகளில் வழங்கும் பல பண்டிகைகளிலும்
வாமனனுக்கு யாசகம் ஈந்து அழியாப் புகழ் கொண்ட மகாபலியின் வருகையை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
வெகு ஜன பத்திரிகையில் ஜப்பான் நாட்டின் அசுர வளர்ச்சி பற்றி எழுதும் போது ‘வாமனர்களின் விஸ்வரூபம்’ என்று
அந்த எழுத்தாளர் தலைப்பு வைக்கிறார்.

எல்லையற்றுப் பரந்து விரிந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு சிறு உயிராக மனிதன் தன்னை உணரும் கணங்கள் உண்டு.
அக்கணங்களில், இந்த சிற்றுயிரும் தனது உணர்வால், அறிவின் விசாலத்தால், மாண்புகளால், பேருருக் கொள்ளக் கூடும்;
உலகத்தையே அளந்துவிடக் கூடும் என்ற எண்ணம் பெரும் நம்பிக்கையையும், ஆற்றலையும், ஊக்கத்தையும் தருகிறது.
சிறு குள்ளன் பேருருவம் கொண்டு ஓங்கி உலகளந்து நிற்பது என்பது மிகுந்த மன எழுச்சியூட்டும் ஒரு படிமம்.
இந்திய பிரக்ஞையில் வாமனாவதாரம் அப்படித் தான் ஒரு படிமமாக நிலை கொண்டுள்ளது.
கம்பன் காவியத்திலும் அவ்வாறே பிரதிபலிக்கிறது எனலாம்.

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரஹஸ்ய வார்த்தைகள் – பருத்தியூர் டாக்டர் ஸ்ரீ கே. சந்தான ராமன்–

October 14, 2020

ஸ்ரீ திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
அத்தலத்திற்கு அருகில் உள்ள-கூப்பிடு தூரம்-ஒரு நாள் கூவுதல் வருதல் பாசுர படி–
ஸ்ரீ திருக்கோளூரில் ஸ்ரீ மதுரகவியாழ்வார் தோன்றினார்.
சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய ஸ்ரீ திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த
ஸ்ரீ அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார்.
அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்,
வேளாளர் குலத்தில் தோன்றிய ஸ்ரீநம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார்.
ஸ்ரீ திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் ஸ்ரீ திருமால் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீ உடையவராகிய ஸ்ரீ இராமானுஜர் ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்க ஸ்ரீ திருக்கோளூருக்கு எழுந்தருளினார்.

ஸ்ரீ இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி ஸ்ரீ திருக்கோளூரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட ஸ்ரீ இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும் பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார்.
“சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி.

காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும்,
அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள்.
அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள்.
ஸ்ரீ இராமாயணம், ஸ்ரீ மகாபாரதம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும்
சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.

அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை
அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய ஸ்ரீ திருக்கோளூரில்,
தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி,
அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள்.
வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் ஸ்ரீ திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.

ஸ்ரீ இராமானுஜரும் ஸ்ரீ திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர்.
அப்பெண்மணியை ஸ்ரீ இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார்.
அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார்.

ஸ்ரீ கிடாம்பி ஆசான் கையால் அமுது செய்த ஸ்ரீ எம்பெருமானார் இவளது கை பட அமுது செய்தார்
ஒருவருக்கு ஒருவர் பேசி அனுபவிக்கணும்
எல்லாருக்கும் புகும் வூர் வுனக்கு புறப் படும் ஊர் ஆயிற்று-ஸ்ரீ எம்பெருமானார்
மோஷம் தரும் வார்த்தைகள்–81 வார்த்தைகள் பொறுமையாக கேட்டார்

அப் பெண்மணியை, ‘ஸ்ரீ திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர்.
அவள் இயற்றிய நூலை, ‘ஸ்ரீ திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர்.
திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன.

————————-

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

பிருந்தாவனம் ஒரு வழி பாதை
அனுகூலரும் பிரதி கூலரும் புகுந்து திரும்ப மாட்டார்கள்
பாரிப்புடன் வந்தார் அக்ரூரர்
அர்ச்சிராதி கதி /திரு வேங்கட யாத்திரை /அகரூர்/
போவான் போகின்றாரை 0போவதற்கு என்று போவார் பயன் கருதி இல்லை-அவனது முக மலர்ச்சிக்கு என்று

——————-

2. அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே

அகம் =வீடு /அகங்காரம்– அடியேனுடைய குடிசை என்று கூட சொல்ல வில்லை
சுவாமி திரு மாளிகை/ தேவரீர் திரு மாளிகை என்று சொன்னவன்
அடியேன் உடைய ஹிருதயமே -நெஞ்சமே நீள் நகரமாக கொண்ட தஞ்சன்-
அரவந்த. . அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தன்
இளம் கோவில் கை விடேல் என்றும்
புல் என்று ஒழிந்தன கொல்
நீர் நுமது என்பவை வேர் முதல் விட வேணும்

——————–

3. தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே

அமுது உண்ட சரித்ரம்- கண்ணன் கைங்கர்யமே பிரயோஜனம் என்று தெரியாத ரிஷிகள்-
வமான மூர்த்தியாக இரந்த சரித்ரம்–ரிஷி பத்னி
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது— நெடு நோக்கு கொள்ளும்
பக்த விலோசனனுக்கு உய்த்திடுமின்-
போகும் போது ஒருத்தி தன்னை சமர்ப்பித்து – பாவ சுத்தி-
கேசவ சோமயாஜி யாஹ்த்தால் -கண்ணனே எம்பெருமானார் –

——————

4. தச முகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

சொல்லினால் சுடுவேன் -கம்பர் -சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது –
திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும்–
நம சப்தத்தின் அர்த்தம்- எனக்கு நான் அல்லேன்- பர தந்த்ரராக இருக்கணும்- பழம் போல அவன் இட்ட வழக்கு
அசித் போல- கேள்வி கேட்க்க கூடாது- விலக்காமை தான் வேணும்-
உயர் பிறப்பு சாமை கற்பு மூன்றும் சேர்ந்த சீதை
சக்தி இருந்தாலும் சுவ சக்தி விட்டாள்–உன்னால் அல்லால் யாவராலும் பாசுரம்–
பிராட்டி யின் சக்தி விசேஷம் தெரியாத சூதரர் ராவணம் சிறை பிடித்தான் என்பர்
கிணற்றில் விழுந்து காத்தாள்-கருடனை சேர்த்து அவன் தூக்கி திரிவது போல–

———————-

5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

திரு அரங்க பதிகத்தில்-திரு மங்கை ஆழ்வார் -தொண்டைமான் சக்கரவர்த்தி கதை சொல்கிறார்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே– கூர்மர் பிராமணர் காசி செல்ல ஆசை –
கிருஷ்ண சர்மா புதல்வர் ராஜா இடம் விட்டு விட்டு போக-பத்தினி பிள்ளைகள் -சேஷா சலம் போனார்கள் என்று சொல்ல
பிணத்தை எடுத்து கொண்டு வர சொல்ல -நம்பிக்கை- கண்ணார் வேங்கடம் வெர்ப்பே-
தனி மாதெய்வம்-பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற மகா விசுவாசம்
வேதம் உண்மையாய் இருக்குமானால் என்று சொல்ல அடி பட்டது–ஆல் என்ற சங்கை யால்

——————

6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

கண்டா கர்ணன் சிவ- பக்தன்-விஷ்ணு நாமம் கேட்காமல் இருக்க மண்ணி கட்டி கொண்டு இருந்தான்-
ஜனார்த்தனன் மோட்ஷம் தருவான்- ஜனங்களை ஹிம்சிகிறவன்-பிறப்பை அறுத்து- சமர்பிக்க
பிராமண பிணம் உபகாரமாக கொடுக்க-அதையும் அங்கீ கரித்து முக்தி தந்தான் –
பதினெட்டு நாடார் பெரும் வீடு ஆச்சார்ய ஹ்ருதயம் பட்சி – சராசரம் இதிலும் இவனை சேர்த்தார்

————-

7. தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே

அத்ரி முனிவர்-அனுசூயை-பொறாமை அற்று இருத்தல்
வாத்சல்யம் தீய குணத்தை நன்றாக கொள்வது–அசூயை குணத்தை குற்றமாக கொள்வது-
குற்றம் இன்றி குணத்தை பெருக வேணும்- அவளை பார்த்து ஒருவரும் பொறாமை பட முடியாது-
சிறந்த குண சாலி- ராமன் போக வழி கேட்டது முனிவர் இடம் தான்
முதல் ஸ்தானம் சித்ர கூடத்தில் இருந்து போனது இங்கே
அனுசூயைக்கு சீதை கல்யாணம் நடந்த விஷயம் கேட்க்க ஆசை-அலங்காரம் பண்ணி விட்டாள்-
காட்டில் கிடைத்த பொருள்களை கொண்டு-வேடர்கள் விற்கும் பொருள்களை இன்றும் அங்கு பார்க்கலாம்-
பத்து மாசம் குளிக்காமலும் இருக்கலாம்-கொடுத்த வஸ்து கெட்டு போகாது
தாய் போல –வைத்த மா நிதி/நடாதூர் அம்மாள் வாத்சல்ய வரதாசார்யர்-நீர் நமக்கு அம்மாவோ-
பெரிய ஆழ்வாரும் தாய் பாசுரங்கள் பல அருளி இருக்கிறார்.

———————

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

பரம புருஷன் மடி கிடைக்க தபம் இருந்தான்-துவாதாச மந்த்ரம் சொல்லி துருவ பதவி அடைந்தான்-
உலகத்துக்கு தந்தை அவன் -தேவ தேவோ ஹரி பிதா- பிதா நாராயண-6 மாதத்திலே அடைந்தான்-அகலில் அகலும்-

———————

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ர பந்துவைப் போலே

மொய்த்த வல்-திரு மாலை பாசுரம். . மூன்று வார்த்தை ஷத்ரியர்களில் தாழ்ந்தவன்
அர்த்தம் சொல்ல வில்லை–கோவிந்தா–மூன்றெழுத்து பேரால் பராம் கதி பெற்றான்
ஏன் வாயால் சொல்ல வில்லையே –புள் கவ்வ கிடகின்றோம் -உண்ணத் தகாத உடல் திரு நாமம் சொல்லா விடில்-

———————-

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

முதல் அடி-மிதிலா தேசம் நுழையும் முன் முதல் அடி அகல்யை -கௌதம முனிவர்
அம்மி மிதிக்க கனா கண்டேன்-கண்ணன் கை பட்டு போட்டிக்கு பெண்ண வருவாள் என்று வியாக்யானம்-
சாப விமோசனம்- சம்சாரத்தில் இருந்து விடு பட- முதல்வன் சர்வேஸ்வரன்
பாற் கடலில் பையத் துயின்ற பரமன் அடி-கடைசியிலும் அடி பாசுரம் பாடி- அடி விடாத சம்ப்ரதாயம்-
திரு அடிகளில் சரணா கதி–மாம் அஹம் சரணம் என்றான்
காலில் விழு என்று சொல்லும் அதம புருஷன் இல்லை-புருஷோத்தமன் -கை குலுக்கி போகாமல்- மித்ர பாவம்-

—————–

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் விஞ்சி நிற்கும் 10 ஆழ்வார்களுக்கு ஒரே குழந்தை
ஆடிப் பூரம் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-வயசாகாமல் பழுத்து-

—————

12. எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே

பெண்ணை சொல்லி தந்தையை சொல்கிறாள் -வல்லப தேவ பாண்டியன்-வேதம் எடுத்து உரைத்து
பட்டார்-வித்வான் -பெருமான் இவன் என்று காட்டி கொடுத்தார்
பூ தொடுப்பதும் -கர்த்தாவும் அவன் தான் -கிரியைகள் யானே என்னும்-

——————-

13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே

அது போல இருக்க ஆசை வேண்டாம்–4700வருஷம் இருந்தவர்–விடுவது தான் முக்கியம்-
உள்ளி இரு பசை அறுத்து-விடுகை பற்றுதலுக்கு முதல் படி-உறையில் இடாதவர் திரு மழிசை பிரான் –
கடை தேற வழி பார்க்கணும் –

————————

14. நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே

புவியும் இரு விசும்பும் நின் அகத்தே-யான் பெரியன் -நீ பெரியன் என்பதை யார் அறிவர் சித்தாந்தம் யான் பெரியன்-
பஞ்சாயுத ஆழ்வார்களும் ஆழ்வார் கோஷ்ட்டி கேட்டு ஆனந்த பட்டான்
பிரணய கலகத்தின் போது பெரியவர் சொல் படி பிராட்டி கேட்ப்பாள்
அவளே ஒத்து கொண்டு அருளிய வார்த்தை நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்
இருப்பிடம் வேங்கடம் -ராமானுஜரை விட அமுதனார் பெரியவர் என்பதை போல-
நாமும் அவரை உள்ளத்தில் வைத்தால் நாமும் மிக பெரியவர் ஆவோம்-
மனசில் இருக்கிறான் என்று ஏற்றுக் கொள்ளணும்-
பிரகலாதன் நெஞ்சை பிடித்து கொண்டான் மலையில் இருந்து உருளும் பொழுது-

—————–

15. ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே

ராஜா கூட்டத்தார் உடன் இருக்க ஆசை -பாகவதராக இருக்க ஆசை-எளிமை உடன் இருக்க-
உடல் பிறவி வேண்டாம்-அணைய ஊர புணைய– ஆச்சார்ய ஹ்ருதயம்–
பகவத் சம்பந்தத்தில் வூற்று–தயிர் சாத கட்டில் எறும்பு கதை–நிச்சய புத்தி

—————-

16. யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே

பரிஷித் கற் கட்டை-திரௌபதி-ஹிமாசலம் பொடி ஆனாலும் கடல் வற்றினாலும்-தான் பேசுவது சத்யம் என்றான்
பச்சை பசும் பொய் -ஏலா பொய் பேசுபவன்-திரு வடி கட்டை விரலால் தீண்டி உயிர் பெற்று எழ வைத்தான்
ஆத்ம ராமன் -சரீர சம்பந்தம் இல்லை -ப்ரமசாரி உண்மை யாய் இருக்குமானால்-சத்யம் ஆனால் என்றவன்-
கிருஷ்ண அவதாரம் சுருக்க கேட்டு பத்தாவது அத்யாயத்தில் விரித்து சுகரை சொல்ல வைத்தான்-
சித்திர தேர் வலவன்-கண்ணன் பொய்யே சொல்லி சத்யம் ஆக்கினவன் -அவன் சத்ய சங்கல்பன்.

———————-

17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே

விராதன் முதலில் எதிர்த்தான் – விராத குண்டம் காட்டுக்குள் இருக்கு – புலியும் சிங்கமும் உண்டு –
அதற்க்கு அப்புறம் எதிர் பட்டவன் கபந்தன் – தலை இல்லாத உடல் – சாப விமோசனம் ஏற்பட்டதும் வழி சொல்லி –
பம்பா சரஸ் சுக்ரீவன தோழமை கொள்ள சொன்னான் – சீதையை தேட அடையாளம் சொன்னான்-

————

18. அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே

நல்ல எண்ணம் படைத்தவள் விபீஷணன் போல – ஜனஹன் போல
அரக்கன் மாயா சிரஸ் காட்டும் போதும் – மூன்றாம் முறை கனவு – ஆண்டாள் தானே கண்டாள்-
ச்வபனத்தில் லக்ஷ்மணன் ராமனை சந்தித்தானா என்று தெரிந்தால் போதும் –
அவன் இருந்தால் ராமனுக்கு உயிர் போல் – மீன் தண்ணீர் விட்டு உயிர் வாழாது போல –
ராவணனுக்கு தலை மொட்டை – யம பட்டர்கள் இழுத்து போவதையும் பட்டாபிஷேகதையும் கண் கொண்டு சொன்னாள்
வெட்க புன்னகை பூத்து நான் உங்களை ரஷிப்பேன் என்கிறாள் பிராட்டி –
அது போல நடந்தது சிறிய திருவடி கேட்டதும் பாபானாம் ச்லோஹம்- தாய் போல பரிவுடன் திரிசடை சொன்னாள் –

————————

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

இந்தரியங்களுக்க்கு தோற்றாய்– 8அடி உயரம் ராமன் – நான்கு ச்லோஹம் –
வ்யக்தம் மகா யோகி பரமாத்மா – தெரிந்து கொண்டாள் –
வசவு பாட வந்தவள் சேவித்த உடன் அவனே தெய்வம் என்று வெளி இட்டாள்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அறிவன் -திரு மங்கை கட்டுவிச்சி – மகா பூதம் அவன்
ஊரார் உமக்கு அறிய கூறுவேன் சிறிய திரு மடல்

————————

20. அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே

அஹம் வேத்மி மகாத்மானாம் ராமம் சத்ய பராக்கிரமம் ச்லோஹம்
கல்யாணம் பண்ண பிரகஸ்பதி வந்தார் – என்ன வேணுமோ கொடுக்கிறேன்
தசரதன் வாக்கு- சந்தோஷத்தில் வாக்கு தராமல் யோசித்து சொல்லணும்
நடு நிலையில் யோசித்து செயல் படனும். ரிஷியை பார்த்ததும் சந்தோசம்
கரிய செம்மல் ஒருவனை தந்திடுதீ சாபம் இட்டு கொல்ல முடியாது தீஷை எடுத்து கொண்டு இருந்ததால்
ஆதலால் – உசர கருப்பு பிள்ளை – சிறுவர் நால்வரிலும் . . இடி இடித்தால் போல திகைத்து போனான்
வூன சோடச வருஷ -12 வயசு – சிறு பிள்ளை – நீ அறிய மாட்டாய் என்று தருவித்து கொள்ளனும்-
ஆசனத்தில் மேல் இருந்து கிரீடம் தரித்த முடியுடன் ராமனை பார்க்க ஆசை பட்ட உனக்கு
அர்த்தத்தில் உனக்கு ஆசை வில் பிடித்து இருகிறாய் புல் பிடித்து இருகிறேன் – கர்பத்தில் அனைத்தும் என்று தெரிந்து –
வசிச்டோபி –அவருக்கும் தெரியும் ஏற்று கொள்வார் . உண்டு என்றால் இல்லை என்று சொல்பவர்
இதை மட்டும் மாற்றி சொல்ல முடியாது -அபி -என்பதால் குறிக்கிறார் –
மனுஷ்ய தேஹதில் இருந்தாலும் மயங்க வில்லை

————————

21. தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே

திரு கோளூர் . சித்திரை சித்திரை அனந்த் ஆழ்வானுக்கும். அடியேன் மதுர கவி தாசன்
ஸ்ரீனிவாச தாசன் -தொட்டாச்சர்யர் சிஷ்யர் -ஸ்ரீ வைஷ்ணவ தாசன் பிரதி வாத பயங்கர சிஷ்யர்
நாதனுக்கு நால் ஆயிரம் சொன்னவரே தேவு – ஆச்சர்ய நிஷ்டை தெரியாது என்கிறாள்
ஆச்சார்யர் திருவடி பற்றனும்- தானே வைகுந்தம் தரும்- இது இல்லா விடில் மோஷம் கிட்டாது-
நேராக போனால் எப்போதாவது தான் கிட்டும்– அருள் பெறுவார் அடியார் தம் அடியவராக இருக்கணும்-
பகவத் சேஷ பூதர் ஜீவாத்மா – ஒரே ஜாதி- ஆத்மா எல்லாரும் சமம்- பரமாத்மா வேற ஜாதி- நமது கஷ்டம் தெரியாது-
எஜமானன்- தொழிலாளி வர்க்கம்- குருகூர் நம்பி — திரு குறுங்குடி நம்பி இல்லை என்பதால்-
வடுக நம்பி சத்ருக்னன் போல- பால் காய்ச்ச அரங்கன் எழுந்து அருள –
இரு கரையர் என்பர் ஆழ்வானையும் முதலி ஆண்டானையும்…அந்த நிஷ்டை இல்லை என்கிறாள் –

———————

22. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே

தெய்வம் இல்லை-மதுரகவி- இப்போ தேவகி பிறவாத எம்பெருமானை தன கர்பத்தில் வைத்தாளே-
மூன்று தடவை. பிரிச்னி சுடபா முதலில்-அதிதி-காச்யபர் வாமன மூர்த்தி -இப்போ தேவகி -வசுதேவர்
இருட்டுக்குள் விளக்கு போல -ஆயர் குலம் இருட்டு- இருட்டையும் போக்கினான் தம் பிறப்பால்
வேண்டி தேவர் இரங்கி பிறந்ததும்- தெய்வ தேவகி தனி சிறப்பு– பாவ சுத்தி இல்லை என்கிறாள் தனக்கு–

————————–

23. ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே

ஆழியை மறைத்து கொள் என்கிறார்–அற்புதம் பாலகம்-ஆயுதம் ஆபரணங்கள் உடன் கண்டார்
லோக குழந்தை போல் இருக்க சொன்னார்– பட்டர் ராமன் பக்கம் பஷ பாதம்- தந்தை சொல் கேட்டது பிறந்த குழந்தை
அதே இரவில் – ஒருத்தி மகன் இருவருக்கும்- மகன் என்றால் தகப்பன் சொல் கேட்பவன் தானே –
வளர்ப்பது -வளர்த்த இதத் தாய் ராமாநுஜர்0 தெய்வ நங்கை யசோதை பெற்றாளே0 பால் குடித்த இடம் இங்கே தான்
தேவகிக்கு மகன் சொல்லலாமா -பட்டர்- ஜீவதோ வாக்ய -புத்திரன்- சக்ர ஆயுதம் மறைக்க சொன்னார் கம்சனால் தொல்லை என்பதால்-

————————–

24. ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே

மூவரையும் சொன்னாள் இத்தால். . தாயினால் கடைசி என்கிறாள். . நந்தன் பெற்றான் வாசு தேவன் பெற்றிலன் . .
செம் விரலால் காட்டினான் . . நந்த-ஆனந்தன். . வாசுதேவன்-செல்வம் உடையவன். . இது இருந்தால் அது இருக்காது. .
நிதி எடுத்தால் போல் நந்தன் எடுத்தான் …. மிச்சம் எடுத்து சாப்பிட்டால். . அனைத்தையும் சிறை சாலையில் காட்டினான்.
தேவகிக்கும் பால் சுரக்க கண்ணனும் சாப்பிட்டான். . வைதிக காமம். . தெய்வ த்ருஷ்டியால் பார்க்கணும். .
ஒழித்து வளர்த்தது மிக ஆச்சர்யம். . பேர்த்து முலை கொடுத்தாள் அஞ்சாதே . . கொழு மோர் காய்ச்சி கொடுத்தாள். .
பராத் பரத்தை காக்க இது ! . . ஆனை முடி புலி நகம் ஆமை நகம் தாயத்து. . வடக்கே குபரன் . . தேவ தாந்த்ரம்
பசு மாட்டு வால் வீசி ரஷிக்க வைத்தாள்

—————————

25. அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே

அணில்கள் . தொடர்ந்து போனவை. . சலமிலா அணில்கள். . கட்டட கலை தெரிய வில்லை.
வேகமாக வேலை பண்ண தெரிய வில்லை. சாந்து பூசின. . குளித்து தாம் புரண்டிட்டு ஓடி. .
கல் வைகிறவர் சிற்றாள் . . பூசுபவர் கொத்தனார். . ஓடி வரும் வேகத்தில் மணல் உதிர்ந்தது. .
அந்த அணில் பாணின கைங்கர்யம் -ஓடி -அனு யாத்ரை. . நூறு யோசனை தூரம் போக முடிய வில்லை

———————-

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

இருவரும் சாந்தீபன் இடம் சிஷ்யர். . இருவரும் கைங்கர்யம். . நன்றாக இருக்க ஆசீர்வாதம் . .
சேவிக்கிற பாக்யதுக்கு வந்தார். . இரண்டு பிடி அவல். . மூடி கொண்டு. குசேல- கிழிந்த துணி . .
திருவடி வருடினான். . ருக்மிணியை விசிற சொன்னான். . உள்ள பரிசோதனை. . மறைத்தால் சுருக்கு பை இழுத்து. .
முஷ்டி சாப்பிட்டார். இரண்டாம் பிடி சாப்பிட்டால் நானும் அடிமை ஆவேன் கூடாது என்றால் ருக்மிணி தேவியார். .
பக்தி கேட்டால் செல்வம் கிட்டும். . நெல் குத்தினால் வேர்வை வருவது போல. .
வெண்ணெய் சாபிட்டது விட இது போக்கியம் கண்ணனுக்கு. .
சாம பேத தானம் தண்டம் செய்து தாயார் குழந்தைக்கு ஊட்டுவது போல அவன் ரஷிகிறான். .

—————

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே

சரபங்க நதி. . ஆஸ்ரமம். . அகஸ்தியர் ஆஸ்ரமம். . ரம்யமான இடம். . ஜோதிஸ் வடிவுடன் போக . .
சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமம். . மண்டலம் பல . . பாத்து வருஷம் இருந்தான். . அகஸ்தியர் பிராதா . .
மாமான் மகள் இது போல. . உறவை சொல்லி பெயர். . திரு ஆபரணங்களையும் ஆயதங்களையும் கொடுத்தார்

——————

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே

சஞ்சயன்-வேத வியாசர் அனுக்ரகதால் கீதை கேட்டார். . யுத்த பூமி நிகழ்வை கண் முன் கண்டார். .
அந்தரங்கமாக சொன்னதை கேட்டார். . நல்லது எடுத்து சொன்னார். . த்ருதராஷ்டனுக்கு வஞ்சனை தெரியாது
கிருஷ்ணனை தெரிந்து கொண்டேன். . கௌரவர் தூதனாக வர. .
இருவரும்-அர்ஜுனனும் கண்ணனும் – மனைவிகள் உடன் இருக்கும் போது-உள்ளே வந்தார். பொறாமை கிடையாது. .
பேச்சு சாமர்த்தியம். . நன்றாக சொல்வான். . அந்தரங்கத்தில் போய் பார்த்தவர். . இரண்டையும் சொல்கிறாள். .

———————-

29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே

கர்ம யோகத்தால் ஜனகரும் -ஜான யோகத்தால் ஜடபரதர்-பிரகலாதன் -பக்தி-யோகத்தால் சாஷாத் கரிதார்கள். .
யாகச வர்கர். . எரிவது போல காட்ட-இருந்த இடத்தில அசையாமல் இருந்தார். ஆத்மா நசிக்காது. .சொத்து அவன் இது. .
ரஷிப்பான். . கீதையில் மனுஷ்யர் பெயர் குறைவு. விவஸ்வான்-இஷ்வாகு பரம்பரை சொன்னார். .
மாமனாரை கொண்டாட காத்து இருந்து சொன்னான். .

————————-

30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே

கடித்து -திரு மங்கை நான்கு பேர் உடன்…நீர் மேல் நடப்பான்-நிழலில் ஒதுங்குவான். தாள் ஊதுவான்/தோலா வழககன்.
பர காலன். . பரனுகே காலன் போல வந்து . . வாள் வழியால் மந்த்ரம் பெற்றார். .
மந்திர அரசு பெற்றார் அரச மரத்தின் அடியில். . நானும் சொன்னேன் நமரும் உரைமின் என்று உபதேசித்தார். .
பகல் கண்டேன் நாரணனை கண்டேன். .

——————–

31. குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

ஆதி சேஷன் போல-சென்றால் குடையாம்-இருந்தால் சிங்கா சனமாம். . சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்
லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல. . குடை முதலானது. .
பட்டர். . குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும். .
குடையும் ஆடும். ஆரியரும் தாளத்துடன் ஆடுவார். . முத்து குடை சுவர்ண கோடி பல. .

—————————-

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

முதுகில் ஆரோகணம் பண்ணி /தாச சக/வேதாத்மா /பெரிய திருவடி நாயனார்/ஆனந்தத்தால் சிறகு அடித்து கொண்டு இருக்கிறார். .
கழுத்து திரும்பி மேல் பக்கம் பார்த்து நியமனம் அடுத்து என்ன என்று கேட்பது போல. . ஏவி பண்ணி கொள்ள வேணும். .
யுத்தம் போது ராமன் லக்ஷ்மணனை தோள்களில் கொண்டார். .
ஒரு குரங்கின் மேல் கொண்டு காற்று நெருப்பு போல வந்தார்கள்-கம்பன்

————————

33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே

திரு குறுங்குடி/கைசிக ஏகாதசி/பாணர் குலம்/திரு பாண் ஆழ்வார் போல/
சத்யம் பண்ணி விட்டு பாடி பின்பு வந்தார்/சோம சர்மா சாபத்தால். . பாசுர பலன் கொடுத்து-பலத்துக்கு பாட வில்லை. .
கைசிக பண் பலன் கேட்க/ இலைப்பு-பசி தாகம் பிறப்பு போல்வன தீர்த்தான் /
வராக பெருமான் அபிமானத்தால் நம் பாடுவான் என்ற பெயர்

——————–

34. இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே

ஒரு இரவில் நடந்தது ஒரு இடை . ஒருவர் படுக்கலாம். . நெரிசல் /
விளக்கு ஏற்ற/இடர் நீங்க/ஜான தமிழ்/திரு கண்டேன் /பகல் கண்டேன் நாரணனை கண்டேன். .
பக்தி இல்லை தனக்கு என்கிறாள். புலவர் நெருக்கு உகந்த பெருமான். . கண் வளரும். .
கரும்பு போல . . மூன்று சகரம். . கரும்பு ஆலை. . சக்கை கண்ணன். . கரும்பு ரசம் போல மூன்று திரு அந்தாதிகள். .

——————-

35. இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே

லவன் குசன் இரு மன்னர்கள்/தர்ப்பம் கீழ் பாகம் இலவம் பெயர்/ மேல் பாகம் குசம் . .
ரஷை இட்டார் இத்தால் /முதலில் பரதன் பார்க்க/32 நாள்களில் மிதிலை செல்வி உலகு உய்ய . தன சரிதை கேட்டான். .

———————-

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே

இரு இரண்டு/பெருமை . . புஷ்ப மாலையும் திரு மாலையும் -இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் –
ஆண்டாளும் பெரிய ஆழ்வாரும் இவரும் பூ மாலையும் பா மாலையும். -திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார்
அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் -துளசி கொண்டே கைங்கர்யம். -தோஷம் வராத கைங்கர்யம்-மாலா காரர் போல்
தர்ம வர்மா திரு சுற்று-திரு மங்கை மதில் ரஷை அல்ல -பட்டர்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க வில்லை

——————-

37. அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே

திரு கச்சி நம்பி-வைசிய குலத்தில் திரு அவதாரம். . திரு ஆல வட்டம் /தேவ பெருமாளுக்கு தேவை. .
அரங்கனுக்கு இரண்டு பக்கமும் காவேரி/ குளிர் அருவி வேங்கடம்/கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் –
உத்சவர் நித்ய படி எழுந்து இருப்பார் இங்கே /புஷ்ப/த்யாக போக மண்டபம். . அந்தரங்கர்கள் மூவரும்
பிராமணர் அல்லர் /குலம் முக்கியம் இல்லை/ஸ்ரீ வைகுண்டத்துக்கு சொத்து . . விதை இங்கு பலம் அங்கே. .
மண்ணை எடுத்து தலையில் ஒத்துக்க–பேசுவதால் /முக்தி எப்படி கேட்டு சொல்லும் /ஸ்ரீ பாத தூளியால் பதில்/
தனக்கும் –சரம கைங்கர்யத்துக்கு . . தேவரீர் எப்போ எழுந்து அருள போகிறீர்/நம்மை பற்றி இருக்கிறீர் தெரியாது என்ற பதில். .
பெரிய நம்பி மாட்டுகளை ஒட்டி -வேஷம் கண்டு . ஆளவந்தார் சிஷ்யர் இருவரும். . திரு முடி சம்பந்தத்தால் மோஷம். .
வீசினீர் பேசினோம். . நமட்டு சிரிப்புடன் /ஆறு வார்த்தை . . பாகவத வைபவம் . . அர்ச்சா சமாதி குலைத்து மூவர் உடன் –
திரு கச்சி நம்பி திரு விளக்கு பிச்சன் தொண்டைமான் சக்கரவர்த்தி -பிராமணர்கள் இல்லை பேசினார்கள். .
அஹமேவ பரம் தத்வம்–தானே பரன்–ஆதி ராஜ்ஜியம் . . உதய கிரி மேல் சூர்யன் உதிப்பது போல-
திரு அபிஷேகம் அவன் மேல் – தரிசனம் பேத ஏவச -உபாயம் பிரபத்தி-அந்திம ஸ்மிர்த்தி வர்ஜனம்-
சரீரத்திலே முக்தி-மரணமானால் வைகுந்தம் தரும் பெருமான்-பூர்ணா சாராரை சரணம் புகணும்

———————

38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணார் போலே

திருவடி தொடக்கம் அனுபவித்தார் . . நம் பாடுவான் போல பாணர் குலத்தில் அவதாரம். .
கண்ணனையே கண்டு உரைத்த காதல் பாசுரம்/முனி வாகனத்வம் இவருக்கு மட்டும் /அவன் மேனியுடன் கலந்தார் /
திரு பிரம்பு உண்டு முன்பு /கணை வாங்கி சேவை /விஷமி -கம்பியில் தடுப்பு /இக் கரை லீலா விபூதி/உள்ளே நித்ய விபூதி /
கொண்டல் வண்ணனை . . காணா என்று முடித்தார் –

——————-

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே

அஹம் வேத்மி- முன்பு பார்த்தோம் . . வசிச்டோபி . . அவர் கூட என்றார்
அவர் கண் சாடை கண்டதும் தாம்பாளத்தில் வைத்து கடுத்தார் தசரதன்
எல்லாம் சீதா பிராட்டி திரு கல்யாணத்துக்கு

——————-

40. அடி வாங்கினேனோ கொங்கிற்பிராட்டியைப் போலே

அடி-திருவடி. . ராம பாதிகை போல ராமானுஜர் பாதுகை–சுமதி என்ற பெயர் இந்த பெண்ணுக்கு –
உஞ்ச விருத்தி வரும் பொழுது – ஏழு வீட்டில் பெற்று காவேரி ஜலத்தில் அலசி உப்பு காரம் போக்கி –
பின்பு கிடம்பி ஆச்சான் கைங்கர்யம் -மடப் பள்ளி மணம் இருக்கும் தேசிகன் தம் ஸ்ரீ சுக்தியில் -அந்தரங்க கிங்கரர் –
தயிர் உண்ட பொன் வயிறு -உலகம் உண்ட பெரும் வாயனுக்கு -அலங்கார தளிகை எப்போது தான் –
சுமதி மச்சில் வீட்டில் இருந்து பார்த்து சுவாமி இடம் நேராக மறித்து போய் கேட்டாள்-
வாழ்க்கைக்கு நல்லது சொல்வதாக நினைத்து சேவிகிறார்கள்-த்வயம் உபதேசம்-கொங்கு பிராட்டி நாமம்-
சொல்லிண்டு போகும் பொது மறந்து மீண்டும் கேட்டாள் -சுலபர் சுவாமி-மறக்காமல் இருக்க ஸ்ரீ பாதுகையும் தந்தார்-
திரு ஆராதன தெய்வம் அதை கொண்டாள்-வடுக நம்பி பெருமாள் பொட்டியும் பாதுகை பொட்டியும் சேர்த்து வைக்க-
மேல் வைத்து இருக்கணும்- நிஷ்டை -கூரத் ஆழ்வான்-வெள்ளை சாதத்துடன் ராமானுஜர் வர -சம்பந்தம் உண்டு
கருப்பு பார்த்து சிஷ்யர்கள் வர -திருவடி நிலை -சுவாமி திருவடி பார்த்து இதை பெற்றேன் என்றாள்-
வெள்ளை சாத்தி இருந்ததால் அடையாளம் தெரிய வில்லை-

—————-

41. மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே

குருவ நம்பி /குறும்பு அறுத்த நம்பி /குயவன் -மண் புஷ்பம் சமர்பித்தான் /தொண்டை மன்னன் சமர்ப்பித்த ஸ்வர்ணம் கீழே /
இந்த மண் புஷ்பம் தலை மேல் /வெளி இட்டால் மோஷம் வேணும்/ அகங்காரம் கூடாது என்று பேசி வைத்து இருந்தான் /
புஷ்ப த்யாக போக -பணி பூ கையுமான அந்தரங்கரை /முடி மன்னவன் /ஆல வட்டமான கை திரு கச்சி நம்பி –
வைதிகோதமர்/வீணையும் கையும் – மகா முனி /முக் குறும்பு-தனம் படிப்பு குலம்/வஞ்ச முக் குறும்பாம் –

—————-

42. மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே

ஆதி மூலமே/ஆனையின் துயரம் தீர /திரி கூட மலை கீழ் பொற்றாமரை குளம்–
கூகு கந்தர்வன் -முதலை /நிலம் ஜலம்/கைமா -யானை/ஆயிரம் காலம் யுத்தம் /காரணமே கிடையாதவன் ஆதி மூலம் /
கூப்பிட உடன் போனது அகில காரண அத் புத்த காரண நிஷ் காரணம் /கஜம் -க அங்கெ ஜம் இங்கே /
வேகத்துக்கு வணக்கம் -பட்டார் /வாரணம் காரணம் நாரணம் /நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்/
வெள்கி நிரப்ப /மூல பேர் இட்டளித்த – கேட்டதும் -நீல மேகத்துடன் வந்தான் /
நின்று தன கழல் ஏத்த /சரீரம் ரஷிக்க இல்லை -புஷ்பத்தை சமர்ப்பிக்க /
தானே வந்து தன் திருவடியில் சேர்த்து கொண்டான் /ஆதரம்-

————–

43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

மாலகாரர் முதலில் அடுத்து /கூனி/சுகந்த சந்தானம்-அழகிய முகம் கொண்டவளே என்று கேட்டதும் தன்னையே கொடுத்தாள் /
பூசும் சாந்தும் . . பாசுரமே புஷ்பம் போல /மடி தடவாத சோறு-விதுரர் போல/பிரத் உபகாரம் எதிர் பார்க்காத /
சுருள் நாறாத பூ / சுண்ணாம்பு கலவாத சந்தனம்-அகங்காரம் இல்லாத கைங்கர்யம் /நைக வக்ரா -ஒரு கூன் இல்லை பல கூன்

———————

44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே

திகைப்பு பெரியவர் வந்ததும் /வண்ணான் இடம் முதலில் வஸ்த்ரம் -கேட்டு தராமல் அபசாரம் பட்டான். .
ராமானுஜர் பெருமாள் திரு முகத்தில் புன் சிரிப்பு கண்டதும் – பாட்டனாரை ஷமிக்கணும் /கார் ஏர் கருணை இராமனுசன்-

——————-

45. வைத்து இடத்து இருந்தேனோ பரதனைப் போலே

ராமன் வைத்த இடத்தில் -அசித் பதார்த்தம் போல/கேள்வி கேட்க்காமல்/கட்டிலே வைத்தாலும் காட்டிலே வைத்தாலும் –
ராஜா போலவும் சேவகன் போலவும்/தர்ம உபதேசம் லக்ஷ்மணன்-சீதை பிராட்டி உடன்/வன வாசம் இருக்கும் என்று ஜாதகம்
மூட்டை தயார் ஒரு வயசிலே தெரியும். . கச்ச ராம மா சகா –முன் போகிறேன்-நீ பின் வரணுமா முடிவு பண்ணிக்கோ
பகு வசனம் ஆசீர்வாதம் கேட்க்கும் பொது மூன்று பெயர் இருக்கணும் பாம்பு செவி-
சீதை இடம் பரதனை தம்பி போலவும் சத்ருக்னனை பிள்ளை போலவும் என்று சொல்லி என் பெயரை சொல்ல வில்லை -லக்ஷ்மணன்
பாரதந்த்ரத்தில் இருந்தவன் பரதன்–தம்பிக்கு லக்ஷணம் சொல்லும் போது பரதனை சொன்னான்-
நந்தி கிராமத்திலே இருந்தான். . இள அரசு பட்டமும் வேண்டாம் என்றான் லக்ஷ்மணன்
பரதன் சரி என்று ஒத்து கொண்டு பட்டம் பெற்றான்

———————-

46. வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே . . கூட்டமே சென்று செய்யும் அனைத்து கைங்கர்யம்/
பிராப்யதுக்கு இளைய பெருமாள்/ஜடாயு/ பிள்ளை திரு நறையூர் அரையர்/ சிந்தயந்தி . .
அஹம் சர்வம் கரிஷ்யாமி/சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை கைங்கர்யம்/
பரண சாலை கட்டும் பொழுதும் தனி அறை கட்டி தகப்பன் போன்று இருந்தார் /நினைத்ததை செய்தான் /தண்ணீர் பந்தல் போல. .

——————–

47. அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே

உயர்ந்தது தேன் தேன் தாழ்ந்தது மீன். . ஏழை எதலன் . . திரு மங்கை ஆழ்வார். .
குகன் பிரிய மனம் இல்லை தேன் உள தினை மாவு உளது . . நாய் அடிமையோம் உளோம். .
பிரிவு உளது எனில் அன்றோ சுகம் உளது . . பரிசில் கட்டும் கைங்கர்யம் . . பத்தி உடை குகன் கடக்க . .
சுமந்த்ரன் இக் கரையில் காத்து இருக்கிறார். . ஆசையாக ராமன் கூப்பிடுவார் என்று . .
இக் கரை -சம்சாரம். அக் கரை மோஷம் பகவான் செலுத்த இருக்க . பகவானையே அக் கரைக்கு கொண்டு போனவன் . .
வைகுந்தன் என்பதோர் தோணி . . பெறாது உழல்கிறேன் . . சோதித்து ஏக குலம் ஆன பெருமை. .

—————-

48. அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

பெரிய உடையார் ஜடாயு /கச்சா லோகம் அனுப்பி வைத்தார். . சந்திர காசம் வாளால்-சிவன் கொடுத்தது சிறகு அறுக்க பட்டார் . .
தாகேத்-ஏகாந்தமான இடம். . ஜடாயு தீர்த்தம் இருக்கு . . பெரிய தகப்பனார் சிறகு வின் கீழ் வசிக்க ஆசை பட்டார். .
ஆயுஷ்மான் என்று பல்லாண்டு பாடினார் . . தேவாதிக செயல் குட்டு வெளி பட்டது -ஆழ்வான். .
நால்வரில் முற் பட்டவன். . தர்ம புத்திரன் -விதுரன். . மூவரில் முற்பட்டவர் மரநேர் நம்பிக்கு . .

——————-

49. இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே

ராவண கால சோதிகா. . நால்வருடன் புறப்பட்டான். . ஆஜகாம முகூர்த்தம். நிவேதா. . சர்வ லோகைய சரணம். .
இக் கரைக்கு வந்தேனோ இல்லை/அக் கரைக்கு சென்றேனோ இல்லை/ ஆபாச சம்பந்தம் விட்டான்-சென்றான்.
ராமன் இருக்கிற இடம் -இக் கரை. . தள்ளி இருப்பது. . அக் கரை சம்சாரம்/வைகுண்டம் -இக் கரை. .
நெருக்கமான இடம் அவர் திரு உள்ளத்தில் . . திரு கோளூர் கிளம்பற இடம் ஆனது எனக்கு என்கிறாள்

——————

50. இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே

ஹம்பி பக்கம் . . கிஷ்கிந்தை . . பம்பா நதி கரை. . மதங்கர் . . வேடுவச்சி . . கண் பார்வை பட்டு மோஷம்.
நாவுக்கு இனிமையான பழம் எடுத்து வைத்தால். . வாங்கி சாப்பிடுகிறார். . ஆச்சர்யர் முகேனே கொடுத்தால் . .
சபரிக்கு ஆச்சார்யர் நியமனம் படி வைகுந்தம். . தானே வைகுந்தம் தரும். . கொடுத்து தான் ஆகணும். . சமயக் போஜனம்

——————

51. இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே

இந்தளத்தில்-குமிட்டியில் தாமரை பூத்தால் போல பிரகலாதன் . . எங்கும் உளன். . யார் தூண்டுகிறார் ?
உன்னை கேள்வி கேட்க்க தூண்டுபவன் சாஸ்தா நாராயணன் ஒருவனே . . இந்த தூணில் உளனோ ?
எங்கும் உளன் என்ற மகனை காய்ந்து . . ஓர் ஆயிரம் நாமம் சமம். . பிளந்திட்ட கைகள் சப்பாணி . .
இங்கு உண்டு இல்லை என்றாலும் மோஷம்

——————

52. இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே

இங்கு இல்லை என்றாலும் மோஷம் ததி பாண்டம். மோர் பானை வைத்து இருப்பவர் . . யசோதை கேட்க இல்லை என்றார். .
தட்டி திறந்து விட சொல்ல கூலியாக முக்தி கேட்டான். . தயிர் பானைக்கும் கேட்டு பெற்றான். .
இன்னும் மூலையில் அங்கு போய் பார்த்தல் இருக்கும். .

——————–

53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே

பித்ரு வாக்ய பரிபாலனம். என்னையும் என் வார்த்தையும் மெய்யாக கொண்டு. . சிற்றவை சொல் கேட்டு . .
ஸ்ரீ ராமன் தாலேலோ. இது மன்னவன் பணி நும் பணி மறுப்பனோ. . கூற்றுத்தாய். .

——————–

54. கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே

கண்டேன் சீதையை . . அனைத்து குரங்குகளும் சொன்னன . . ஆனந்தத்தால் –மது வனம். ததி முகன். . துவம்சம். .
உயிர் போல சுக்ரீவனுக்கு வாலை தூக்கி அடிக்க. . சீதை கிடைத்தாள் என்றான் சுக்ரீவன். எங்கள் ராமன் முதுகு பிழைத்தது . .
திருஷ்டா சீதா மயா. . பரிவு . . ஆரம்பித்தார் கண்டேன். . காண்கை முக்கியம் . . இது அவன் கை மோதிரமே

————————-

55. இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே

இரண்டு கையாலும் தூக்கி சரணம். புடவை சுரந்தது திரு நாமம் இறே . . நானும் நீயும் பாதி இல்லை. .
அவனே என்று இருக்கணும். . கடன் கொடுத்தவனுக்கு வட்டியும் முதலும் கொடுக்காதவன் போல வருந்தினான். .
கோவிந்தா என்றது . உத்தமன் வாக்கியம்

————————-

56. இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே

வடுக நம்பி ஆச்சார்யர் நிஷ்டை. சத்ருக்னன் மதுர கவி போல. .
அதரதுக்கு பொருந்தும் பால் என்று . . அடியார் அடியே கூடும் இது அல்லால் . .

—————-

57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே

செல்வ பிள்ளை எதிராஜ சம்பத் குமாரர். . ராம பிரியர் . . செல்ல பிள்ளை இங்கே போதராய் . .
மிடறு -கழுத்து. . தழுவி கொண்டு . . அணைத்து கொண்டார் . . கழுத்தை சிநேகத்தோடு பற்றினார். .
நவ ரத்னம் அதனால் தான் பிறந்தது . . நவ க்ரந்தம். .
பகவான் பண்ணின பாகவத கைங்கர்யம் தாம் பண்ண வில்லை என்கிறாள்

—————-

58. நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே

புறப்பாடு உத்சவம் விடாமல் சேவிப்பார் . . அவர் இருக்கும் இடத்துக்கு போய் சேவிக்கணும்.
வீதியார வருவானை. . பங்குனி சித்திரை வைகாசி மாதங்களில் நடக்கும் . .
கருவிலே திரு இலாதவர் கதவை மூடி கொண்டு எங்கோ செல்வார்கள். . சின்ன கைங்கர்யதுக்கும் மயங்குவான். .
ஒரு சமயம் இவர் நோவு சாத்தி கொண்டார். . ஆறாம் திரு நாள் காலையில் தூணை பிடித்து கொண்டு நிற்கிறார். .
இவர் நிற்கும் இடத்தில நம் பெருமாள் நிற்க-இதுவே கடைசியோ என்று சொல்ல சேவித்து கொண்டு இரும். .
ஸ்வ தேகத்தை விட்டு மோஷம் அடைந்தார். . நில்-என்று வார்த்தை பெற்றவர். .

——————

59. நெடுந்தூரம் போனேனோ நாத முனியைப் போலே

யோக பிரபாவம் உடையவர் நாத முனிகள். . நடுவில் நாத யாமுன முனிகள் குரு பரம்பரை. . அசமத் ஆச்சார்யர் வரை. .
கூரத் ஆள்வான் அபிப்ராயம் படி ராமானுஜர் . . சத்யா பாமா -சுருங்கி பாமா -ரெங்க நாத முனி -நாத முனி. .
பெற்று கொடுத்த தொட்டில் காட்டு மன்னார் கோவில். . நாலாயிரம் பெற்று கொடுத்தவர்….
ஈஸ்வர முனி திரு குமரர் . . அவர் திரு குமரர் ஆளவந்தார் . .
யோஹம்-த்யான மார்க்கம் . . உய்ய கொண்டார் பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ. .
சம்சாரிகள் தவிக்கும் போது யோக மார்கதால் தான் மட்டும் கல்யாணம் பண்ணிகவா ? நாம் தான் பிணம்.
குருகை காவலப்பன் கங்கை கொண்ட சோழ புரம். . வீர நாராயண பெருமாள் . . பிருந்தாவனம் வரை யோக மார்க்கத்தால் வந்தார். .
வில் பிடித்து வந்தார்கள் பெண் உடனும் வானரத்துடனும். . யோகத்தில் அனுபவித்து கொண்டு இருந்தார் ராமனை. .
போக்கு காட்டி போக்கி காட்டி அழைத்து போக . . தேடி கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டம் புக்கார். .
காள மேகம் . . ஆள் இட்டு அழைத்து போக வில்லை. நெடும் தூரம் . . அர்ச்சிராதி மார்க்கம் போனவர். .

——————-

60. அவன் போனான் என்றேனோ மாருதி யாண்டான் போலே

மாருதி சிறி ஆண்டான்-ராமானுஜர் சம காலம். குலோத்துங்க சோழன்-கிரிமி கண்ட சோழன். . பிள்ளை பரம பாகவதன்–
பேர் இட்டு சொல்ல படாதவன் அவன். . ராமாயணம் திரு வாய் மொழி இருக்கும் வரை வைஷ்ணவத்தை அழிக்க முடியாது. .
அவன் போனான்- என்றது அந்த கிரிமி கண்ட சோழன்– திரும்பி வரலாம் என்று ராமானுஜர் இடம் மேல் கோட்டை போய் சொன்னான் . .
ஆழ்வானும் கண்கள் வேணும். . வும்மையும் ஆச்சர்யரையும் தவிர வர யாரையும் பார்க்க கூடாது . .
திரு மால் இரும் சோலை பெருமாள் இடம் ஸ்ரீ ரெங்கம் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் இருக்க கேட்டு பெற்றார் ஆழ்வானும். .
இப்போதே அனுக்ரஹிக்கிறோம் என்று சொல்ல நடந்த விஷயம். . மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான் . .

————————

61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

அவன்-திரு அரங்கத்து எம்பெருமானையும் கண்ணை பிடுங்க வந்தவனையும் . . துரோணம் அஸ்தி. .
அபாகவதன் நாஸ்திகன் தொட கூடாது என்று தானே பிடிங்கி கொண்டார். .
ராமானுஜர் மேல் கோட்டையில் இருக்க அவர் சம்பந்திகளை கோவிலில் விட கூடாது. .
ஆழ்வான் வர இவர் சம்பந்தி தான் ஆத்ம குணம் உள்ளவர் சேவிக்க விடலாம். .
ஏன் ஆத்ம குணத்துக்கு சேவிக்க வேண்டாம் ஆச்சார்யர் சம்பந்தத்தால் தான் எது.
சேவை வேண்டாம் என்றார் சாமான்ய வைராக்கியம் இல்லை இது. . ஆச்சார்யர் நிஷ்டை. .
இரு கரையர் என்பார் வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் பார்த்து . .
ராமானுஜரும் அரங்கன் வேண்டாம் என்று ஆளவந்தார் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது சொன்னார்

———————

62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே

உம்மை போல என்று சொல்லாமல் . . எமக்கு பெருமான் என்று எம்பெருமானார் என்று சொல்கிறாள். .
மாதவனுக்கு கேசவனுக்கு இது பிடிக்கும் என்று தம்மையே சொல்வது போல. . பேதம் சித்தாந்தம் இல்லை. .
கானல் நீர் ஜகத். . சைவமும் பிரமமும் ஓன்று என்று வேதாந்தம் சொல்கிறது என்பர் அத்வைதிகள். .
தன் நெஞ்சில் தோத்தினது சொல்லி இது சுத்த உபதேசம் என்பர். . பாஷ்யம் மங்கள ஸ்லோகத்தில் –
நன்றாக பூர்வாச்சரயர்களால் –வியாசர்-சூத்ரம் /போதாயனர் -விருத்தி குறிப்பு உரை /விளக்க உரை பாஷ்யம் /மூன்றும் . .
சங்கர பாஷ்யம் இது சித்தாந்தம் இதை வேதாந்தில் எப்படி இருக்கு காட்டுகிறேன் என்று ஆரம்பித்தார். .
நீயந்தே –நான் இழுத்து கொண்டு வருகிறேன். . இதில் இருந்து வேறு பாடு தெரிந்து கொள்ளலாம். .
தங்கள் மதம் சாய் உற . . சங்கர பாஸ்கர யாதவர். . பிராபகர தங்கள்-உம மதம் சேர்த்து கண்டித்தார். . காஞ்சி ஸ்வாமிகள் . .
சங்கராதி கர்வக அடகினவர். . யாதவ பிரகாசரை தூக்கி அடித்தவர். . யது குலத்தை பிரகாசிக்க பண்ணினார் பார்த்த சாரதி பெருமாள் . .
தேசிக ஸ்லோகம் ச்லேடை. . அப்ருதக் சித்த விசேஷணம் பிரகாரமும் சரீர சம்பந்தம். .
விட்டு பிரியாமல் சார்ந்து இருக்கும். . . அது போல சித்தும் அசித்தும் . . பிரமத்தை சார்ந்தே விட்டு பிரியாமல் இருக்கும். .
குணம் வேற குணி வர. . ஓன்று இல்லை. கோபம் பட்டு கொண்டே இருந்தாலும் நானும் கோபமும் ஓன்று இல்லை அது போல. .
பரம் திறம் அன்றி மற்று இல்லை -ஆழ்வார் . . சரீரம் பாவனையும் உண்டு. .
சரீரம் எனபது ஆத்மாவுக்கு எந்த த்ரவ்யம்-அவனால் தாங்க பட்டு நியமிக்க பட்டு அதற்கே சேஷமாக இருக்கும். .
அந்த ஆத்மாவும் பகவானுக்கு த்ரவ்யம் போல . . சரீரம் பிரகாரமாக இருக்கும். பிரகாரம் சரீரமாக இருக்க வேண்டியது இல்லை. .
யாதவ பிரகசரையும் யக்ஜா மூர்த்தி இருவரையும் வென்றார். . ஏக தண்டம் இவர். . கிரந்த சன்யாசம் . . பதினாறு நாள் விவாதம் . .
இரவில் தேவ பெருமான் உதவ வந்தார் சம்ப்ராயததை ரஷிக்க . குறிப்பு எடுத்து கொடுத்தார். . பார்த்ததும் பயந்து தெண்டம் சமர்பித்தார். .
சப்த வித அனுபபதி விளக்கி . . அவித்யை பொய்/இருட்டு சூரியனை மறைக்குமா ?. நீ அவித்யை யால் மூட பட்டு இருகிறாய். .
ஏக தண்டம் உடைத்து அருளாள பெருமாள் எம்பெருமானார் என்ற திரு நாமம் கொடுத்தார் . .
தன் திரு ஆராதன -அந்தரங்க -கைங்கர்யம் கொடுத்தார்

—————–

63. அருளாழி கண்டேனோ நல்லானைப் போலே

நல்லான் சக்கரவர்த்தி. . பிணம் ஓன்று ஆற்றில் இருக்க அதன் தோள்களில் திரு இலச்சினை பார்த்து -சம்ஸ்காரம் பண்ணினார். .
பொல்லான் என்று ஒதுக்க . . நமக்கு நல்லான் என்று அருளினார் எம்பெருமானார். . ஜன்ம நிரூபணம் பாகவத அபசாரம். .
அருள் ஆழம் -கண்டார். . ஆழ்ந்த நிலை -எச் சாதியில் பிறந்தாலும் மோஷம் தரும் அருள். . அந்த ஆழத்தை கண்டவர் நல்லான்

———————

64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே

10-2-அரையர் தாளத்துடன்-கெடும் இடர் ஆயின எல்லாம் பதிகம் . . அனந்த புர நகர் புகுதும் . .
கடை தலை சீயக்க பெற்றால் கடு வினை களையலாமே . . ஆழ்வார் நம்மை விதிக்கிறார் என்று பிரயாணம். .
நமக்கு இட பட்ட பணி. . நாறு நறும் -ஆண்டாள் பாசுரம் கேட்டு அக்கார அடிசில் சமர்ப்பித்தது போல. .
விளாஞ்சோலை பிள்ளை நிறைய கைங்கர்யம் பண்ணி இருக்கிறார் அனந்த புரத்துக்கு
குருகை காவல் அப்பனை சேவிக்க போகும் பொழுது. . சொட்டை குலத்தில் உதித்தார் யாரேனும் வந்தார் உண்டோ ?. .
நாச்சியார் அணைக்கும் போதும் என்னையே அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது இப்போ முதுகை அழுத்தி கொண்டு
எட்டி எட்டி பார்த்தான். . வைபவம்–நாதமுனியால். . தேதி குறித்து கொடுத்தார். . பெரியோரின் கருது அறிந்து வாழ்வதே சிறந்தது

—————-

65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரியாண்டான் போலே

தெய்வ வாரி ஆண்டான் மட கைங்கர்யம்–நோவு சாத்தி கொள்ள/ தாய் மாட்டை பிரிந்த கன்று குட்டி போல. .
இரு -பரதன் கேட்டான். . லக்ஷ்மணன் போல வந்தீரே–சேவிக்கும் பொழுது . . ஸ்வதந்த்ரன் ஆக்கினால் தான் –
எழுத்து இரு என்று சொலும் வரை சேவிக்க- அடியேன் திரு அனந்த புரம் எதிரில் இருக்கும் போது. . ஆரியன்-ஆளவந்தார். .

————————–

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே

பெரிய கோவில் நம்பி-அமுதனார் . . மூங்கில் குடி. . ப்ரோகிதர் கைங்கர்யமும் இருந்தது . .
சாவி வாங்க -திரு தாயார் ஏகாகம் கைங்கர்யம்-பிரேதம் போல . . ஆண்டு முழுவதுக்கும் போதும் படி சம்பாவனை பண்ணனும். .
அப்போது சிந்தனை செய்து–கண் பார்வை ஆழ்வான் இடம் வர. . காதில் சொல்லி அனுப்பினார். .
திருப்தோசீ–சாவி பெற்றார். . நாச்சியார் எம் பரிகிரங்களை தொட கூடாது -சீதை கை விட மாட்டாள். .
பெரிய பிராட்டியார் மடியில் ஒதுங்கணும். . ஆழ்வானை காட்டி கொடுத்தார் . .
புகழ் பாடி -கிழித்து போட்டார். . ஆழ்வார்/ஆச்சார்யர்கள் வைபவம் சொலி அவர் திரு வடி சம்பந்தம் ராமானுஜர்–
தூக்கி போட முடியாத பிரபந்தம்…. சாத்விக அபிமானம். பிரபன்ன சாவித்திரி/காயத்ரி . . மூன்று சாத்துமுறை பாசுரங்கள்.
காட்டு அழகிய சிங்கர் சன்னதி. பிர பன்னனுக்கு . இன்றியமையாதது . .
நம் பெருமாளுக்கும் திரு வேங்கடதானுக்கும் இதை கேட்க ஆசை. . சப்த ஆவரண கோஷ்டி-இதை வீதி ஆற சேவிப்பார்கள். .
ஒலி ஒன்றும் இல்லை வாத்தியம் கிடையாது. . சந்தியில் நின்று வாத்தியம்– அப்போ சேவை கிடையாது. .
அனந்தாழ்வான் வரம் கேட்டு 21 நாள்கள் அத்யயன உத்சவம். . சுவாமி சந்நிதி ஏற்படுத்தி. .
தனித்து ஒரு நாள் 23 . . இயற்பா உடன் சேர்ந்து சாதிக்காமல் தனித்து -22 தண்ணீர் அமுது உத்சவம். .

—————-

67. அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

மால்யவான் அபசாரம் படாதே –காலில் விழ வேண்டாம் கையை பிடி என்று தாயார். முன்பே சொன்னாள்.
நண்பன் இடித்து உரிக்கணும். . கொடியவனையும் திருத்தணும். . அநாதி கால உறவு பெருமாள் நமக்கு என்ற எண்ணம் வேணும். .
இதர தெய்வம் போல என்ன பண்ணுமோ என்ற பயம் . . தாய் போல. . நீளமான கயிறு கொடுப்பான். .
திருத்தும் பொழுது அவமானம் என்ற நினைவு கூடாது-

———————-

68. கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே

லோக குரு-சுக்ராச்சர்யாராய் சொல்கிறாள் . . ஆத்ம அபகாரம்-பெரிய கள்ள தனம். . குறள் மாணியாய். .
கொள்வன் நான் முதலில் . கொண்டாடாமல் . பழக்கம் இல்லை. . மாவலி-அடுத்து–சுருக்கி சொன்னான்.
மூவடி–அடுத்த சொல். . கமண்டல தண்ணீர் விடும் போது இவன் கள்வன் என்றார். .
பூச்சி வடிவம்– சுவாமி வரம் கொடுத்தாலும் சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ. .
ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம். . லோக குரு-நம் ஆழ்வார்-கள்வா -என்று வெள்ளேறன் -சிவன் -கூப்பிடுகிறார். .
தாத்தா பேரன் இடம் பிள்ளை பேரு கேட்ப்பாரா ?

———————

69. கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே

மாறேநேர் நம்பி-தேவருக்கு பிரோடசம் நாய் கொள்ள கூடாது. . ராமன்/தர்ம புத்திரன் விட நான் உயர்ந்தவன் இல்லை. .
ஜடாயு/விதுரன் விட தாழ்ந்தவர் இவர் இல்லை. . கண் சோர . . நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர்ஒளி-கடல் ஓசையோ என்றார். .
திரு இலச்சினை பெற்றவர். . இருவருக்கும் பசி. . சேற்றை சாப்பிட மண் சுவருக்கு மண் இட்டேன். . என்றார். . நிஷ்டை

——————–

70. சுற்றி கடந்தேனோ திரு மாலை ஆண்டானை போல

——————–

71. சூளுறவு கொண்டேனோ கோட்டியூரைப் போலே

துரோணர் ஏகலைவன் –ராமானுஜர் ஆளவந்தார் …போல தேசிகன்-எம்பெருமானார் இடம். .
பெரிய நம்பி த்வய அர்த்தம் பெற்றார். . பாரா முகம் கொண்டு நம்பி சொன்னார் . . யாருக்கு என் சொல்கிறேன். .
பெரிய பெருமாள் சொல்லி உபதேசம் பண்ணினார். . கைங்கர்யம் பண்ணி தான் பேரனும் அன்று நியமனம் . .
பதி னெட்டு முறை . . சூழ் -ஒருவரும் வராமல் அந்தரங்கமாக பெற்றார். . திரு மந்தரம் சரம ச்லோஹம் பெற்றார். .
ராமாயணம் திரு மலை நம்பி இடமும் -திரு மாலை ஆண்டான் இடம் திரு வாய் மொழி சாரம் –
பெரிய அரையர் இடம் மற்றைய பிரபந்த சாரம்

—————-

72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே

வூமை . . உயிர் . . இன்றியமையாதது ராமானுஜர் திரு வடி பெற்றான் . .
தன் சரண் தந்திலன் தான் அது தந்து . . இதை பெற்றால் தான் மோஷம் . .
ஏதும் இல்லை ஊமை இடம் . . இல்லை எனக்கு எதிர் எம்பார் சாதித்தார் இதை பெற்றதால்

——————

73. உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே

தொட்டியம் திரு நாராயண பெருமாளை அணைத்து ரஷித்தார். . பற்றின பத்தினி பிள்ளைகளுக்கும் உடம் மோஷம் . .
ஆத்ம ஹத்தி தெரிந்து பண்ணினால் குற்றம். . அவனுக்கு பண்ணினதால் பாபம் இல்லை-

————————-

74. என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே

வசு நிஜ பெயர் ஆகாசத்தில் போவதால் இந்த பெயர். . தேவர் ரிஷிகளுக்கும் சண்டை . .
தேவர்களுக்கு பஷ பதாத்தால் பொய் சொல்ல நரகம் போய் அங்கு –
என்னை போல அபாகவதர்களையும் மாற்றி விடுவேன் என்றான்

——————-

75. யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே

பூர்ண கும்பம் கொடுத்து இவர் வர வேற்க -என்னை விட சிறியவர் இல்லை. .
தாத -அப்பா என்கிறான் வேங்கடத்தானே இவரை

————————-

76. நீரில் குதித்தேனோ கண புரத்தாளைப் போலே

ராமானுஜர் காலத்தில் முன் உள்ளவர். . திரு வெள்ளறை போய. . நீர் நூறு வயசு புகுவீர் . . ஆச்சர்ய நிஷ்டியால். .
மணல் திட்டாக தேவரீர் இருந்து ரட்ஷிதீர் என்கிறாள். .
இது போல நஞ்சீயர் சிஷ்யை ஒருத்தி பின்பு சொன்னாள் என்ற இதிகமும் உண்டு

—————-

77. நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே

காசி தேசத்தில் -சிங்கம் ஒருவன் இருந்தான். . அகங்காரத்தில் குதித்து சிக்கி கொண்டான். .
கஜேந்திரனுக்கு உதவினால் போல வந்து ரஷிக்க காற்று தூக்கி . .
ஊகம்-யுக்தி நீர் ஊகம்-தாமரை பறித்தான் சமர்பிக்க . யானை போல . .
ஆபத்தில் சிக்கும் பொழுதாவது அவனை நிக்க வேணும்

—————–

78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

ஸர்வஞ்ஞ பட்டர் -சின்ன குழந்தை பட்டர். . காவேரி மணல் கை எடுத்து எவ் வளவு. .
பிடி மணல் சொல்ல தெரிய வில்லை. . திருஷ்டி சுத்தி போட்டார்கள். .
மாத வச்சர்யர்-தந்தி யாக -யானை போல செருக்குடன்-ஜெயித்து . திரு நெடும் தாண்டக சாஸ்திரம் தெரியும் சொல்லி அனுப்ப-
இலை முன் நின்று இருக்க தர்க்க பிச்சை வேணுமோ கேட்க
நீர் தான் திரு நெடும் தாண்டக சாஸ்திர வல்லீரோ என்று சொல்லி சன்யாசி ஆச்ரமதுடன் நஞ்சீயர் ஆனார்

—————

79. வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே

ஒரு வருஷம் ராமாயணம் கேட்டார். . கோவிந்த பெருமாள் -எம்பார் பத சாயை . .
பாம்பு வாயில் முள் இருக்க கை விட்டு எடுத்து தீர்த்தம் ஆடி விட்டு வந்தார். .
பல்லில் விஷம் இருப்பது பாம்பின் செயல் இல்லை. திருஷ்டிதது அவன் தானே -ரஷிக்க பண்ணினேன். .

80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே

ஸ்ரீ பாதம் தாங்குபவர்கள் . . ஒருவன் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண வில்லை. .
அந்தரங்கன் ஒருவன் இடம் இடம் சொல்ல யம தூதர் பயம். .
திமில் கண்ட இடம் சக்கரம் சங்கு பதில் என்று சொல்ல சொன்னார் கைங்கர்ய பல நாள் மோஷம் பெற்றான்

——————–

81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே

வில்லி புதூர் பகவர் இருந்தார். . திரு வகீந்த்ர புரத்தில்–வரண தர்மம் –தாச விருத்திகள் –வேற இடம் குளிக்க. .
துறை வேறு . . சரீர தர்மம் ஆத்ம தர்மம் என்ற இரண்டு துறை காட்டினவர்
இவற்றில் ஒன்றுமே இல்லை தனக்கு . . அவள் கையால் அமுது செய்து. தீர்த்தம் பிரசாதம் அவளுக்கு அருளினார் . .
ஒருவரின் ஒரு அம்சம் கூட இல்லை . . உத்சவம் குறை இன்றி நடக்கும் நீர் புகுந்தால். .
திரு வாய் மொழி பிள்ளை அருளிச் செய்ததாக வான மா மலை ஜீயர் அருளி செய்தார்

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-