ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –பத்தாம் பத்து –

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்-10-1-11-

ஏத்துமின்-நமர்காள் என்று தான் குடமாடு கூத்தனை-
நம் சேஷ்டிதங்களை -செயல்களை உகப்பார் எல்லாரும் கண்டு
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள் என்று தான் சொல்லி
அதற்கு விஷயமாக தான் குடக் கூத்து ஆடினவனை –

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நால் திசையும் போற்றத்
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே -சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை –

குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார் உடைய அந்தரங்க விருத்திகள் -குற்றேவல்கள் என்றது
அவன் குடக் கூத்தினை அனுசந்தித்து -நினைத்து
இவர் நாவினால் பாடுகிற அடிமையிலே அதிகரித்தனர் -மூண்டார் -என்றபடி –

—————–

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்-10-2-11-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை –
திரு வனந்த புரத்திலே-நிரவதிக – எல்லை இல்லாத நற் குணங்களை உடையனாய்
உலகத்திற்கு எல்லாம் காரணனாய் உள்ளவனை –
ஆஸ்ரயிக்கிறவர்களும் -அடைகின்றவர்களும் அந்தமில் புகழினார்கள் –
ஆஸ்ரயணீயனும்- அடையப் படுகின்றவனும் அந்தமில் புகழினான் காணும் –
பரம பதத்தை விட்டு திரு வனந்த புரத்திலே வந்து-ஆஸ்ரிதர்க்காக – அடியார்களுக்காக திருக் கண் வளர்ந்து
அருளுகையாலே புகழிற்கு ஒரு முடிவு இல்லை ஆயிற்று அவனுக்கு –
சம்சாரத்தை -பற்றினை விட்டு உகந்து அருளின நிலத்தில் அடிமை செய்கையாலே
புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு –

இவனுக்கு அடிமை கொள்ளுகையாலே புகழிற்கு எல்லை இல்லை ஆயிற்று அவனுக்கு
அவனுக்கு அடிமை செய்கையாலே புகழிற்கு அந்தம் இல்லை ஆயிற்று இவர்களுக்கு
இந்த சம்சாரத்தில் -உலகத்திலே பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிகிற இவனுக்கு புகழ் உண்டாகில் ஆயிற்று
பரம பதத்தில் இருந்தால் அவனுக்கு புகழ் உண்டாவது
இந்நிலத்தை விட விட இவனுக்கு புகழ் உண்டாமாறு போலே
அந்நிலத்தை விட விட அவனுக்குப் புகழ் உண்டாம்
இருவருக்கும் இரண்டும் அலாப்ய லாபம் -கிடைக்காத பேறு ஆம் அன்றோ –

கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைய சோலைகளால்
சூழப் பட்ட திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –

————-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்-10-3-11-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு –
அவ் வயிர உருக்கான முறுவலாலே எங்களைத் தோற்பித்தால் போலே
தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்பித்த-
சர்வ ஸ்வாமி – எல்லார்க்கும் ஒக்கத் தெய்வம் ஆனவன் திருவடிகளில் சொல்லிற்று –
செங்கனி வாய் ஆயர் தேவு –
செங்கனி-
என்கையாலே-தங்களைத் தோற்பித்த படி சொல்லிற்று –
ஆயர் தேவு –
என்கையாலே -தன் பருவத்தில் உள்ளாரை தோற்பித்த படி சொல்லிற்று –
சந்திர காந்தானனம் ராமம் அதீவ பிரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணாம்-அயோத்யா -3-27-
ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்
தாடகை என்பது அச் சழக்கி நாமமே -கம்ப நாட்டு ஆழ்வார் –

அத் திருவடி திருவடி மேல் –
சர்வ ஸ்வாமி -எல்லாருக்கும் தெய்வமான அவ் வெம்பருமான் திருவடிகளில் –
அவன் சேஷியாம் தன்மையை காட்டிக் கொடுத்தான் –
திருவடி மேல் –
என்கையாலே இவரும் சேஷத்வத்தில் -அடிமையில் நின்றார்

பொருநல் சங்கணி துறைவன் –
தாம் இருந்த இடத்தில் சத்துக்கள் -மேன்மக்கள் அடங்கலும் வந்து சேருமாறு போலே ஆயிற்று –
திருப் பொருநலில் சங்குகள் வந்து சேரும்படி –

—————-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்-10-4-11-

பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை –
பரம்பரனை-மல் திண் தோள் மாலை-பற்று என்று பற்றி-
பரம்பரனை -பிராப்யம்
மல் திண் தோள் மாலை -பிராபகம்
சர்வேஸ்வரனை -பிராப்ய பிராபகம் என்று பற்றி
இவன் பிரபத்தியைச் செய்து-அத்யவசிக்கும் – உறுதி உடையவனாய் இருக்கும் அத்தனையே வேண்டுவது –
ரக்ஷணத்தில் -காப்பாற்றுவதில் அவன் இடத்தில் ஒரு குறையும் இல்லை –
இவர்கள் விரோதிகளைப் போக்குக்கைக்கு தகுதியான மிடுக்கையும் வ்யாமோஹத்தையும் -அன்பையும்
உடையவன் -என்பார் -மல் திண் தோள் மால் -என்கிறார் –

வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் –
பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை த்ரிபி அந்விதம் -பால -4-3-
மூன்று வகையான பிரமாணங்களோடு கூடினதாயும்
பாடத்திலும் கானத்திலும் இனிமை பொருந்தியதாயும் – என்கிறபடியே
அழகிய சொற்களால் தொடுக்கப்பட்ட அந்தாதியான ஆயிரத்திலும்

————–

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்–10-5-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு பாத்திரமாகும் தன்மையரான ஆழ்வார் -என்றது
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் சேஷ்டிதங்களையும் செயல்களையும்-சாத்மிக்க சாத்மிக்க பொறுக்கப் பொறுக்க
அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை அனுசந்தித்து விஸ்மிதர் – நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி-

————

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் –
தன் கனை கழல்களைக் காட்டி
நிர்ஹேதுகமாக தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டி –இவற்றை பிரகாசிப்பிக்கிற திரு வடிவைக் காட்டி –
கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-

கடு நரகம் புகல் ஒழித்த-
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த -விரும்பியவாறே செய்தான் ஆயிற்று
அறிவுடையாருக்கு பொறுக்க ஒண்ணாத -முடியாத நரகம் இவ் உலக வாழ்க்கை அன்றோ –

வளம் குருகூர்ச் சடகோபன் –
அழகியதான திரு நகரியை -தம்மதாக உடையரான ஆழ்வார் –

—————–

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் -10-7-11-

மான் ஆங்கார மனம் கெட –
மஹான் அஹங்காரம் மனஸ்ஸூ -என்று சொல்லுகிற இவை கெடும்படியாக-
இவற்றைக் கூறியது மூல பிரக்ருதிக்கும் உப லஷணம் –

ஐவர் வன்கையர் மங்க –
வன்கையர் ஐவர் மங்க –
இவற்றைக் கூறியது
கர்மேந்த்ரியங்கட்கும்-ஐம் புலன்களுக்கும்-ஐம் பெரும் பூதங்களுக்கும் உப லஷணம் –
பின்னை அவன் இதற்கு சொல்லிற்று என் என்னில் –
இச் சரீரத்தில் செய்கிற விருப்பத்தினை -நிர்பந்தத்தை -தவிருகிறோம் என்னத் தீருமே அன்றோ –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்
பின்னைப் பெற்றதாய் இருக்கத் தட்டில்லையே –

தான் ஆங்கார மாயப் புக்கு –
தான் என்னிடத்தில் அபிமானியாய் -ஆசை உடையவனாய் புக்கு -என்னுதல்
பெரிய செருக்குடனே புக்கு -என்னுதல் –

தானே தானே ஆனானைத் –
ஆத்மாத்மீயங்களில் ஆத்மாவிலும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களிலும்
எனக்கு உண்டான அபிமானத்தை -ஆசையைத் தவிர்த்து
தானே அபிமானத்துக்கு விஷயம் ஆனவனை
அன்றிக்கே
இத்தலையில் அர்த்தித்வத்தை -இரக்கும் தன்மை ஒழிய தானே அர்த்தியுமாய்- இரப்பாளனுமாய்
இதனை அபிமானிப்பானும் -விரும்புகின்றவனும் தானே ஆனான் -என்னுதல் –

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் –
வண்டுகள் உடைய அபிமானமே -செருக்கேயான பொழில்களை உடைய
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-

—————-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-10-8-11-

துக்கங்கள் ஆனவை-இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –

நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல் ஆயிற்றுச் சொல்லிற்று

நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
விலக்ஷணர்- பெரியார் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்
இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி
ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –

———————-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள –
அவர் வந்து எதிர் கொள்ள –
வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான் தானே வந்து எதிர் கொள்ள –
அன்றிக்கே –
அப்ராக்ருதரான -இந்த பிரகிருதி சம்பந்தம் இல்லாத -நல் வேதியர் -அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள -என்னவுமாம் –

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே –

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜனத்துக்கு -எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
சம்சாரத்தில் இந்த உலக வாழ்க்கையில் ஸூகம் என்று பிரமிக்கும் -மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்
பாண்டு ஒருவன் மேல் -மான் உருக் கொண்ட மனைவி உடன் சேர்ந்த முனிவன் -மேல் அம்பை விட
சம்சாரத்தில் -இவ் உலக வாழ்க்கையில் ஆயிரம் கூற்றில் ஒரு ஷணம் ஆயிற்று ஸூகம் உள்ளது
அதனையும் புஜிக்க -அனுபவிக்க ஒட்டிற்று இல்லையே -என்றானே அன்றோ –

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நித்ய வசந்தமான -எப்பொழுதும் மலர்களை உடைத்தான சோலையாலே சூழப் பட்ட
திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த –
போக்கிலே ஒருப்பட்ட வாறே திரு நகரியே தொடங்கி போலே காணும் சோலை செய்வது –
அலர் –சந்தங்கள் ஆயிரத்து –
சந்தஸ் ஸூ -விருத்தங்களை உடைத்தான ஆயிரம் -என்னுதல்
சந்தஸ் ஸூ -வேதத்தின் உருவான ஆயிரம் -என்னுதல் –

————–

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

அவா அறச் சூழ் அரியை –
சர்வ அபேக்ஷித பிரதனனான -விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –
தம்முடைய அபிநிவேசம் -காதல் கெட வந்து கலந்த படியாலே-வேறே ஒரு விசேஷணம் -அடைவு
கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-ஆஸ்ரிதருடைய –
அடியவர்களின் விடாயை தீர ஸம்ஸ்லேஷிக்கை -கலக்கை –

அயனை அரனை அலற்றி-
ஸ்வ விபூதி பூதரான –தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை -சங்கையை -அறுக்கிறார்
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –
நிர்வாஹகத்வம் -தலைவர்களாய் இருக்கும் தன்மை கர்ம அதீனமாய் -அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-நிர்வஹிப்பதும் –
அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு
அவை
அயனை அரனை அவா அற்று–அரியை அலற்றி வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச் சூழ் அரியை அலற்றி வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் – மற்று ஒரு வகை

அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகர் -எல்லா தடைகளும் நீங்கியவர்
ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பலாத்காரத்தாலே -பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் போரும் உண்டானார்கள்
அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுகைக்கு அடி
இவருடைய பக்தி அபிநிவேசம் -காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –

நாவலம் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலம் தீவது போலவ வல்லார் குருகூர்ப் புலவன்
கேவலம் தீம் கரும்பாம் கவி போல் எங்கும்
கூவலம் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோள் இழைத்தே-சடகோபர் அந்தாதி -58-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றும் இன்றி
விரிக்கும் தொறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரிக்கின்ற நுண்மணல் ஊற்று ஒக்கும் தொண்டர் சுரத்தலினே -சடகோபர் அந்தாதி -68

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்த தாயிற்று இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –
பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே
எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –
கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே
சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடு ஒப்பர் –
பிறந்தே உயர்ந்தார் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும்-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கித்
தனியாகி நின்று தளர்ந்து –நனியாம்
பரம பக்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை உற்றுச் சேர்ந்தான் உயர்ந்து–திருவாய் மொழி நூற்றந்தாதி –100-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவி பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்ற பதிகம் பதிகமதாக இசைத்தனனே -சடகோபர் அந்தாதி

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading