தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மினீரே-என்றார்
இங்கு காழிச் சீராம விண்ணகரம் சேர்மினீரே-என்கிறார் –
மேலும் -திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -என்பர்
ஆழ்வார் திரு வாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகள் எல்லாம் நாமும் நுழைந்து புறப்பட வேண்டியது ப்ராப்தம் –
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7-1-7-என்றும்
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் -திருக் குறும் தாண்டகம் -19-என்றும் -யுண்டே
நாலு கவிப் பெருமாள் வந்தார் –ஆசு கவி -மதுர கவி -சித்ர கவி -விஸ்தார கவி –
பரவாத மத்தகஜ கண்டீர் அவர் வந்தார் –ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -உமக்கு இவ் விருதுகள் தகும் என்று
வேலாயுதத்தை திருக் காணிக்கையாக சமர்ப்பித்தார்-
———————————————————
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1-
உலகளந்த பெருமாள் சேவை சாதிப்பதால் ஒரு குறளாய்-ஆரம்பித்து ஏழு வரை எண்கள் அழகாக அமைந்த பாசுரம்
ப்ரஹ்லாதன் -விரோசனன் -மா வலி-ராஜ தானி -சோணித புரம்
கஸ்யபர் அதிதி-வாமனன் –
தாடாளன் -பெருமை பொருந்தியவன் -முயற்சி யுள்ளவன் -இந்த திவ்ய தேசம் தாடாளன் சந்நிதி
சாகா பேதங்கள் பல என்பதால் திரள் நான்கும்
வேள்வி ஐந்தும் -ப்ரஹ்ம தேவ பூத பித்ரு மனுஷ்ய யஜ்ஞம்
அங்கங்கள் ஆறு -சிஷை -வியாகரணம் -சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம்
அஷரங்கள் உச்சரிக்க வேண்டிய முறைகள் -ஒன்றோடு ஓன்று சேர வேண்டிய முறைகளும் சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யயங்கள் பாகுபாடு வியாகரணம்
அவற்றின் அர்த்த விவேகம் நிருத்தம்
காயத்ரீ த்ருஷ்டுப் ஜகதீ இத்யாதி பேதங்கள் சந்தஸ்
வேத உகத கருமங்களை காலம் அறிந்து அனுஷ்டிக்க ஜ்யோதிஷம்
ஆச்வலாயனர் ஆபஸ்தம்பர் முதலியோர் செய்த கல்பங்கள் வைதிக கருமங்களை
அனுஷ்டிக்க வேண்டிய முறைகள் சொல்லும்
ஏழு ஸ்வரங்கள்
நிஷாதம் -ரிஷபம் -காந்தாரம் -ஷட்ஜம் -மத்யமம் -தைவதம் -பஞ்சமம் –
அன்றிக்கே
மயிலின் அகவுதல் -ஷட்ஜ ஸ்வரம்
மாடுகளின் கூவுதல் -ரிஷப ஸ்வரம்
ஆடுகளின் கூவுதல் -காந்தார ஸ்வரம்
அன்றில் பறவை கூவுதல் -மத்யம ஸ்வரம்
குயிலுண் கூவுதல் -பஞ்சம ஸ்வரம்
குதிரையுன் கனத்தல் தைவத ஸ்வரம்
யானையின் முழக்கம் நிஷாத ஸ்வரம்
இப்படிப் பட்ட ஒலிகள் மலிந்து இருக்கும் ஸ்தலம் என்றவாறு-
——————————————————-
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-2-
ரோமசர் என்பவர் கரடி போலே உடம்பிலே அடர்ந்த மயிர்களை யுடையவர் –
தவம் இருந்து அநேகம் ஆயிரம் பிரம்மாக்கள் ஆயுளை பிராத்திக்க
ஒரு ப்ரஹ்மா காலம் முடிந்தால் உடம்பில் ஒரு ரோமம் உதிரும் –
இனி உடம்பில் ரோமம் இல்லை அளவும் நீ ஜீவித்து இருப்பாய் என்று வரம் கொடுத்து அருளினான் –
மிகத்தருக்கை -பாடம் பிழை
மிகைத்தருக்கை -சரியான பாடம் மிகை -ஆதிக்யம் -அதனால் யுண்டான தருக்கு -செருக்கு
இருக்கு வாய்மை -ரிக் வேதங்களை சொல்லும் வாய்மை -உச்சரித்தல் –
————————————————
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-3-
கடைசிமார்கள் -உழவுத் தொழில் செய்யும் ஈன சாதி மாதர்
நெய்தல் குவளை மலர்களை கண்களாக பாவித்து
குமுத மலர்களை வாயாகப் பாவித்து
களை பரியாமல் வெளியேற -மயக்க அணி
தம்மைச் சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று –
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் -பெரியாழ்வார் -3-5-3-
வை -கூர்மை
மதங்கள் செய்து என்ற இடத்து
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து கழித்து விளையாடி -பெரியாழ்வார் அருளிச் செயல் அனுசந்தேயம்-
————————————–
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4-
ஹிரண்யன் பல ஆபரணங்கள் தரித்து -பொன்னன் பைம்பூண் நெஞ்சு
உகிர் வேலாண்ட
நின்மலன் -குற்றம் அற்றவன் -ஆஸ்ரிதர்களை வாழ்விக்கச் செய்த கார்யங்கள்
இருள் சந்தரன் சூர்யன் மூன்றும் கூடி வாழ்கின்றன
நீல மணிகள் நீலச் சுடர் இருள்
முத்துகள் வெள்ளொளி நிலவு
பவளங்கள் செஞ்சுடர் உதய சூர்யன்
இருள் மாலைப் பொழுதை பற்றுக் கோடாக கொண்டதால் மாலை தஞ்சம் அடைய இருள் என்கிறார்
தாளம் -முத்து –
—————————————————-
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்தமாதர்
அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-5-
ஸ்ரீ பரசுராம வ்ருத்தாந்தம் அனுபவிக்கிறார் –
விகிர்த மாதர் -வேறுபாடு யுடைய -வை லஷண்யம் பொருந்திய மாதர் –
குவளை போன்ற கண் அழகும்
கமலம் போன்ற முகம் அழகும்
செவ்வாம்பல் போன்ற வாய் அழகும்
யுடையவர்கள் வாழும் ஸ்தலம்-
———————————————-
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-6-
ஸ்ரீ ராமாவதாரம் அனுபவம்
சந்தர மண்டலத்து அளவும் ஓங்கிய மாடங்களில் உள்ள மாதர்கள் –
திங்கள் திரு முகத்து சேயிழையார் -கண்டு சந்தரன் வெள்கி இருந்தானாம் –
துங்கம் -உன்னதமானது
ஆயம் -தோழி தோழமை
பனி -அச்சம் துக்கம் நடுக்கம் –
————————————————–
பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த
செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே–3-4-7-
வலம் புரி -பலசாலி முதல் இரண்டு அடிகளில்
அடுத்து சங்கு -வலப்பக்கத்தில் சுழிந்த
புற்றுக்களை சிதைப்பது போலே அரக்கன் முடிகள் பத்தையும் சிதைத்து
சங்குகள் நீர் வளத்தை கண்டு கடலில் இருக்காமல் இங்கே கழிகளில் வந்து சேர்ந்து –
வயல்களிலே வந்து சேர்ந்து தெருக்களிலே சங்குகளையும் முத்துக்களையும் பிரவேசிக்கின்றனவாம்-
———————————————————
பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ
நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-8-
பாரிஜாத அபஹரணம் பண்ணி அருளியவனே இங்கே சேவை சாதிக்கிறான்
பிரவாளம் -பவளம்
பணை -மூங்கில் -பசுமை -நெய்ப்புடைமை -திரண்ட வடிவாலும் தோளுக்கு உவமை
தெட்ட பழம்-அர்த்தம் எம்பெருமானாருக்கு -கனிந்த பழம் -திசைச் சொல்லாய் இருந்ததே என்று வியந்த ஐ திஹ்யம்
குறுக்கும் வகை -திரு நாவாய் பதிகத்தில் போலே-திருவாய் -9-8-1-ஈடு வியாக்யானம்
————————————————-
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே—-3-4-9-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுபவன் இங்கே சேவை சாதிக்கிறான்
வண்டுகள் செங்கழு நீர் மலர்களிலே பேடைகளுடன் கூடி ரமித்து அதனால் உண்டான துவட்சிக்கு
பரிகாரமாக தாமரைப் பூக்களில் வந்து துயில் கொள்ள
தேனை குடித்த களைப்பு தீர
களிப்பின் மிகுதியால் இசை பாடுகின்றன
———————————————————-
செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10-
தன்னைப் புகழ்தலும் தகும் புலவற்கே –
அந்தணர்கள் அனவரதம் வேத அத்யயனம் செய்து கொண்டு இருப்பதால் –
செங்கமல அயன் அனைய மறையோர் என்கிறார்
விண்ணகரின் செங்கண் மாலை -என்பதும் பாடமாம்
குழாம் களாய் அடியோருடன் கூடி நின்று ஆடுமினே -திருவாய் -2-8-11-போலே
கூடி அனுபவிக்க வேண்டிய அருளிச் செயல் என்றது ஆயிற்று-
சங்கம் முகம் -புலவர் கூட்டம் கூடி கொண்டாடத் தக்க அருளிச் செயல்
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .