பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-6-நண்ணாத வாள் அவுணர் இடைப்புக்கு வானவரை-

நண்ணாத வாள் அவுணர் பிரவேசம் –

எம்பெருமானுக்கு அடிமைப் படுவதில் காட்டிலும்  பாகவதர்களுக்கு அடிமை படுதலே விசேஷம் என்கிற
சகல சாஸ்திர பொருளை ஸ்ரீ ஸ்தலசாயீ பெருமாளுடைய திருவருளால் ஸ்மரிக்கப் பெற்று –
அந்த பாகவத பக்தி நிஷ்டையிலே தாம் ஊன்றின படியை இத் திரு மொழியிலே வெளியிடுகிறார் –
கீழ் திரு மொழி போலே இதுவும் திருக் கடல் மலை திருப்பதியே விஷயம் ஆயினும் –
இப்போது இவருக்கு உத்தேச்யம் அத் திருக் கடல் மலை அன்று –
அத் திருப் பதியில் எழுந்து அருளி இருக்கிற எம்பெருமானும் உத்தேச்யன் அல்லன் –
அத் திருப்பதியையோ -அப் பெருமானையோ இடைவிடாது சிந்திக்கின்ற பாகவதர்கள் உண்டே –
அவர்கள் தாம் உத்தேச்யர் எனபது வெளியாகின்றது –

பகவத் பக்தியின் எல்லை நிலமே பாகவத பக்தி -பகவத் பக்தியின் உறைப்பையே பாகவத பக்தி வெளிப்படுத்தும் –
ஸ்வாமி யினுடைய பாதுகைகளிலே நாம் ஆதரம் வைத்து அவற்றை கண்ணில் ஒற்றிக் கொள்வதும்
தலை மேல் அணிந்து கொள்வதும் -அலம்பித் தீர்த்தம் பருகுவதும் செய்கிறோம் –
இத்தால் நமக்கு ஸ்வாமி இடத்தில் யுள்ள பக்தி அபாரமானது எனபது அன்றோ வெளியாகின்றது –
அதே போலே ஆழ்வார் உடைய பக்திப் பெரும் காதலே -பாகவதர்களே உத்தேச்யம் என்னப் பண்ணுகிறது –
மேலே திருச் சேறை திருப் பதியை மங்களா சாசனம் -கண் சோர வெங்குருதி -திரு மொழியிலும்
இந்த பாகவத நிஷ்டை அருளிச் செய்யப் படும் –

———————————————————

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே—2-6-1-

தல சயனத் துறைவாரை சிந்தை செய்யாதவர்களை ஒரு பதார்த்தமாக எண்ண மாட்டேன் –
அவனை சிந்திக்கும் மகான்களையே அநவரதம் சிந்திப்பேன் –
அவனையே பரம பிரயோஜனமாக கொள்வதே ஸ்வரூபம்
அப்படி இல்லாமல் பிரயோஜனாந்த பரர்கள் இவனைப் பற்ற –
இதற்க்காகவாவது வேறு ஒரு சூத்திர தேவதை பற்றாமல் நம்மை பற்றினார்களே
என்று உகந்து அருமையான கார்யங்கள் செய்து அவர்கள் மநோ ரதம் நிறைவேற்றி அருளுபவன்
என்பதை விளக்க -நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்-என்கிறார் –
நண்ணாத -பகவத் விஷயத்தில் பகையை இயற்கையாக யுடைய என்றபடி –
கண்ட உடனே சாதுக்களை அழிக்க கையிலே வாள் பிடித்து இருக்கும் வாள் அவுணர்
மருவி இனிய -எம்பெருமான் பொருந்தி நித்ய வாசம் பண்ணுவதற்கு ஈடான திருக் கடல் மலை –
ஆன்விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று
என் மனத்தே வைத்தேனே –என்பர் பதினோராம் பத்திலும் –

——————————————————

பார்வண்ண மட மங்கை  பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில்  இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே—2-6-2-

ஸ்தல சயன பெருமாளை சிந்திப்பவர்களே எனக்கு ஸ்வாமிகள்-
நம் அபராதங்களை பொறுப்பிக்க வல்ல ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் -குற்றங்களை நற்றங்களாக உரைக்க வல்ல
பெரிய பிராட்டியாரும் நித்ய அனபாயிநிகளாக இருக்க
அஞ்ச வேண்டிய பிரசக்தியே இல்லையே
நீர் வண்ணன் மார்வத்தில் -பிழையான பாடம் -மார்வகத்தில் -மார்விலும் அகத்திலும் —
பனி நன் மலர்க் கிழத்தியான பெரிய பிராட்டியார் திரு மார்விலும் –
பார் வண்ண மடமங்கை யாகிய பூமிப் பிராட்டி அகத்திலும் -அருகிலும் இருக்கை கண்டு
பார் வண்ணம் -பூமி  ஸ்வரூபம் திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ -பெரிய பிராட்டியார் ஸ்ரீ தேவி என்னும் உபய நாச்சியாராகவும்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே திரு மார்பு நாச்சியாராகவும்
எழுந்து அருளி இருந்து புருஷகாரம் செய்து அருளுவதால்
அவ்விருப்பை எடுத்து பேசி அருளுகிறார்
மலர்க் கிழத்தி -தாமரை மலரில் பிறந்த தலைவி -என்றபடி
நீர் வண்ணன் -திரு நீர் மலை பெருமாள் யுடைய திரு நாமம் ஆயினும் கடல் வண்ணன் என்ற பொருளைக் கொண்டு
தல சயனப் பெருமாளையும் அவ்வண்ணமே அருளுகிறார் –

————————————————————–

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே –2-6-3-

இங்கே ஞானப் பிரான் திரு நாமத்துடன் திருக் கோயில் கொண்டு இருக்கும் பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பாசி தூர்த்துக் கிடந்த  பார்மகட்கு –நாச்சியார் -11-8-எடுத்து பழைய படி நிலை நிறுத்தி அருளினான் -நில மங்கை கொண்டான்
வானத்திலவர்-நித்ய சூரிகளையும் -ஸ்வர்க்காதி லோகங்களில் யுள்ள தேவர்களையும்
வலம் கொள்ள -திரு வல எந்தை பிரான் சேவை இங்கே யுண்டே –
வரம் கொள்ள -என்றும் பாடம் -அவர்கள் தம்தம் அபிமதங்களை பெற்றுக் கொள்ள என்றபடி
கானத்தின் கடல் மலை -ஸ்ரீ வராஹ அவதாரத்தில் நெடும் காலம் காட்டிலே விளையாடினதாக புராணம் யுண்டே
வானத்து எழுந்த மழை  முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து குளித்து விளையாடி ஏனத்து யுருவாய் -பெரியாழ்வார் -2-10-9-
ஞானப் பிரான் என்பதால் ஞானத்தின் ஒளியுரு -என்கிறார் -ஞானப் பிரகாசமே உரு எடுத்து நிற்பவன் –
ஞான ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹம் யுடையவன் -என்றபடி
எறி திரை வையம் முற்றும் ஏனத்து யுருவாய் இடந்த பிரான் ஞானப் பிரான் -திரு விருத்தம் –

————————————————————–

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

பாகவதர்களே எங்கள் குல தெய்வம் –
அஹங்காரிகளான   ஆசூர பிரப்ருதிகளின் செருக்கை நீக்கி அருளி
அஹங்காரிகள் உடலை நாயும் நரியும் பிடுங்கித் தின்னும் படியாகவும்
மாதர்கள் ஏறி அனுபவித்த அவர்கள் மார்பை அக்னி பகவான் ஏறி அனுபவிக்கும் படியாகவும் செய்து அருளுபவர் –
நம் அஹங்காரங்களையும் தொலைத்து நம்மை ஆட்கொள்ள தரைக் கிடை கிடந்து  அருளுகிறான் –
எனக்கு அவர் உத்தேச்யர் அல்லர் –
அவரைக் கொண்டாடிக் கொண்டு போது போக்கும் பாகவதர்களே எனக்கும் என் குலத்துக்கும் உத்தேச்யர்-

————————————————-

பிச்சச் சிறு பீலி சமண்  குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே—2-6-5-

அவைதிக மதங்களில் சேராமல் -தேவதாந்தரங்களைப் பணியாமல் -தல சயனத் துறைவாரை பணியுமவர்களே
தமது நெஞ்சு பணியக் கடவது என்கிறார் –
சமன் குண்டர் -குண்டரான சமணர் -குண்டர் நீசர்
பிச்சச் சிறு பீலி -புச்சம் -மயில்  இறகுகள் கொண்டு செய்த குடையும் -பீலி -விசிறியையும் கொண்ட சமணர்
நிழலுக்கு ஈடாக ஒரு கையிலே பிச்சத்தைப் பிடித்து ஒரு கையிலே பீலித் தழையைப் பிடித்து –
கண்டாருக்கு இவர்களும் தார்மிகரோ என்று தோற்றும் படி
அநு கூல வேஷத்தைப் பரிகிரஹித்து-பெரியவாச்சான் பிள்ளை-

சமணர்கள் தங்கள் தெய்வமே கல்விக்கு கடல் -என்று பணிவார்களாம் –
வித்யா எனபது விச்சை என விகாரப் பட்டு கிடக்கிறது
முதலாயோர் -ஆதி சப்தத்தால் பௌத்தரையும் லோகாயுதரையும் கொள்க
கச்சிக் கிடந்தவனூர் -திரு வெக்கா யதோத்த காரி பெருமாளே இங்கே தல சயனப் பெருமாள்  –
வங்கத்தால் மா கடல்-திரு நெடும் தாண்டகம் –
பர வாசுதேவன் -சிறந்த ரத்னம் -வாச்தல்யம் என்கிற கப்பல் இங்கே தள்ள
கானத்தின் கடல் மலை என்பதால் பேணுவார் இல்லாமையாலும்
ரத்னம் விலை போவது மகா நகரங்களில் ஆகையாலும் அந்த கப்பல் காஞ்சியில்  அந்த ரத்னத்தை தள்ளிற்றாம் –
அதனால் -கச்சிக் கிடந்தவனூர் கடன் மல்லைத் தல சயனம் -என்று அருளிச் செய்கிறார்-

————————————————-

புலன் கொள் நிதிக் குவையோடு  புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனததாரவரை வல்ங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

புலன் கொள்  நிதி -கடல்கரையில் இருப்பதால் -சிறந்த வஸ்துக்களை திவீபாந்தரங்களில் இருந்து கப்பல்கள்
காணப் படுவதால் -புலன் கொள் நிதி என்று அருளிச் செய்கிறார் –
நிதி -பொன்
சிறந்த பொற் குவியல்களையும் யானைக் கூட்டங்களையும் நவ மணித் திரள்களையும் அளவு மீறித் தாங்கிக் கொண்டு
பாரம் கனந்து துவண்டு நிற்கின்றனவாம் மரக் கலங்கள் –
அப்படிப் பட்ட கப்பல்கள் யுள்ள திரு மல்லாபுரியை வழி பட நினைக்கும் பாகவதர்களே அடியேன் வழி படக் கடவேன் –
நான்று ஒசிந்த -பாட பேதம் -தொங்கலாடி தளர்ந்து -என்றபடி -கனத்தாலே தளர்ந்து என்றபடி –

——————————————————–

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழு வாய் என் தூய் நெஞ்சே—2-6-7-

பஞ்சிச் சிறு கூழை-பூதனை இடத்திலும் கண்ணபிரான் இடத்திலும் அன்வயிக்கலாம்
பஞ்சு போலே மெல்லிய சிறிய கூந்தலை -தாய் வேடம் பூண்டு வந்தாள்
பிடித்துக் கட்ட ஒண்ணாத படியான மயிர் முடியை யுடைய இளம் பிள்ளை கண்ணபிரான் என்றுமாம்
கம்ச -கஞ்ச  -என்று திரிந்து -கஞ்சிக் காய்ந்த கருவில்லி -நாச்சியாரும் -13-3-அருளிச் செய்தாரே-

——————————————————-

செழு நீர் மலர்க் கமலம் திரையுந்து வன் பகட்டால்
உழு நீர் வயல் உழவர் உழப் பின்முன் பிழைத்து எழுந்த
கழுநீர் கடி கமழும் கடன்மல்லைத் தலசயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய நெஞ்சே -2-6-8-

வல் பகட்டால் -வழிய எருதுகளைக் கொண்டு -பகடு -எருது -யானைக்கும் பெயர் –
பிழைத்து எழுந்த கழு நீர் -உழவுக்கு தப்பி எழுந்த செங்கழுநீர் மலர்களினுடைய
திரை யுந்து -என்பதை விட -திரை யுந்தி -பாடம் வ்யாக்யானத்துக்கு சேரும்
உழு நீர் -வயலுக்கும் உழவர்க்கும் அடை மொழி –
எப்பொழுதும் உழுவதே இயற்கையாக யுடையவர் உழவர்
வயலும் எப்பொழுதும் உழப் பட்டுக் கொண்டே இருக்கும் –

—————————————————–

பிணங்களடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே–2-6-9-

சௌசீல்ய திரு குணத்தை அனுசந்திக்கிறார்
தாமஸ தெய்வமான ருத்ரனும் வலப்பக்கம் இடம் கொடுத்து ஆதரித்து அருளுபவன்
வலத்தனன் திரிபுரம்   எரித்தனன் -1-3-9-என்றும் —
பஸ்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான்-மோஷ தர்ம வசனம் –
தபஸா  தோஷிதாஸ்  தேந விஷ்ணு நா ப்ரப விஷ்ணு நா -ஸ்வ பார்ஸ்வே தஷிணே சம்போர் நிவாஸ பரிகல்பித -என்றும் –
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனியுடம்பன் -என்றும்
அக்கும் புலியன தளுமுடையார் அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் -என்றும் -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமான் திரு மேனியில்  இருப்பார்களோ என்னில் –
ஆபத்துக்களில் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளும் –
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவார்கள் –
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க யுண்டாகிலும் மாளிக்கைக்கு யுள்ளே செம்பாலே நாழி யரிசியைத்
தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இறே-
அப்படியே இவர்களும் திரு மேனியிலே பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரோ   கலஹங்களிலே அடைய வளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி யிருந்து கலஹம் தெளிந்த வாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று -என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே –

பிணங்கள் இடு காடு -என்பதை விட -பிணங்கள் அடு காடு -பாடம் சிறக்கும் –
அடுதல் சுடுதல் -ஸ்மசான பூமி -அங்கெ நடமாடும் ருத்ரன் பிஞ்ஜகன்
அவனோடு இணங்குதல் ஆவது திரு மேனியில் இடம் கொடுத்து அருளி
திருச் சக்கரத்து எம்பெருமானார் -நித்ய சூரிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுவது போலே
அஹங்காரியான ருத்ரனுக்கும் இடம் கொடுப்பவன் –
சௌசீல்யம் வாய்ந்த பெருமான் உறையும் திவ்ய தேசம் -தேவதாந்தரங்களும் தங்கள் அதிகாரம் நிலை நிற்க இங்கே 
வந்து தொழுது வழிபாடு செய்யா நிற்பார்கள்
இப்படிப் பட்ட திவ்ய தேசம் வணங்கும் பாகவதர்களையே என் நெஞ்சு வணங்கக் கடவது  -என்றார் ஆயிற்று –

——————————————————-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-

பாகவத சேஷத்வமே பரம புருஷார்த்தம் என்று பரம போக்யமாக அருளிச் செய்த ஆழ்வார்
பலன் சொல்லும் இடத்து இஹ லோக ஐஸ்வர்யத்தை பலனாகச் சொல்லுவது என் -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க -ரசோக்தியாக
திரு மங்கை ஆழ்வார் திரு வவதரித்த பின்பு த்யாஜ்யமான ஐஸ்வர்யமும் பரம புருஷார்த்தமாய்விட்டது காணும் –
பணம் யுள்ள இடங்களில் சென்று கொள்ளை அடித்து பகவத் பாகவத கைங்கர்யங்கள் பண்ணுகிறவர் ஆகையால்
ஹேயமான ஐஸ்வர்யமும் இவ் வாழ்வார் திரு உள்ளத்தால் உத்தேச்யமாய் விட்டது இறே-என்றாராம்
ஆரார் எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன் இந்த அருளிச் செயல்கள் மூலமாகக் கிடைக்கும்
அன்றிக்கே
முடி கொள் நெடு மன்னவர் -ஷத்ரியர்கள் -அவர்களுக்கும் முதல்வர் -ப்ரஹ்மாதிகள்-
அவர்களுக்கும் முதல்வர் -அவர்கட்கு நிர்வாஹகரான நித்ய சூரிகள்
பரம புருஷார்த்தமே பலனாக சொல்லிற்று -இதுவே பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளமும் –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading