பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 3-2-ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து-

சோழ நாட்டில் தில்லைத் திருச் சித்ர கூடம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
பரம புருஷார்த்தம் இங்கே சேர்ந்த மாத்ரத்திலே கிடைக்கும்
அங்கே சென்று சேருங்கோள்  என்று உபதேசிக்கிறார் –

——————————————–

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

ஒரு தொன் நெறியை   வேண்டுவார் வீழ்  கனியு மூழிலையும் என்னுமிவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பை துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னதோர் தன்மையார் ஈங்குடலம் விட்டு எழுந்து தொன் நெறிக் கண் சென்றார் -பெரிய திருமடல் –
மயில்கள் ஆடுவது சோலைகளே ஆடுவது போலே தோற்ற
மது வெள்ளத்தால் ஈக்கள் வண்டோடு மொய்ப்ப -கம்பர் –
தில்லை மரங்கள் அடர்ந்த காடு -சித்ரகூடம் போலே எம்பெருமானுக்கு உகந்து அருளி நிற்க பாங்கான திவ்ய தேசம் –
உத்சவர் வீற்று இருந்த திருக் கோலம் இங்கே -மூல மூர்த்தி ஷீராப்தி நாதன் திருக் கோலம்
திருச் சித்ர கூடம் -சரியான பாடம் -திருச் சித்திர கூடம் -சரியானது இல்லை -ஓசை குன்றாமைக்காக
நிகமத்தில் குன்றா ஒலி மாலை என்பர்-

————————————————-

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

உயிர் காவல் இட்டு -என்று முதல் பாசுரத்தில் அருளியதை விளக்குகிறார்
காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதி தேடித் தீயிடை நின்றும் பூ வலம் வந்தும் திரிவீர்காள்
தாயிலும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகப் பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் -திருவரங்க கலம்பகம் –
வாயோது வேதம் -உச்சாரண அனுச்சாராண ரூபமான அத்யயன பரம்பரை -ஒலைப்படா பிரமாணம் -எழுதா மறை என்றபடி-

——————————————————-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

பல்லவ ராஜன் சபரிவாரமாய் வந்து நவ ரத்னங்களையும் கொணர்ந்து சமர்ப்பித்து கைங்கர்யங்கள் செய்த ஸ்தலம்
மகா வராஹமாகி திருவவதாரம் செய்து அருளின பெருமான் பாதார விந்தங்களை பணிய  இங்கே வாருங்கோள்-

—————————————————–

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

வாமன மூர்த்தியாய் வந்து  தன் பெருமையைப்  பிரகாசப் படுத்தி அருளியவனே
திருப் பாற் கடல் நாதனாக திரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளும் திவ்ய தேசம் வந்து சேருங்கோள்
கவை நா வரவு -கவை -பிளவு-

———————————————————

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-

ஸ்ரீ பரசுராமன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் -கைலாச கிரியை வேரோடு பெயர்த்த இராவணனை வேரோடு பெயர்த்த
கார்த்த வீர்ய ரார்ஜூனனை  வேரோடு பெயர்த்த மிடுக்கர் –
ஆவேச விஷ்ணு சக்தி ஸ்ரீ ராமபிரானால் பெறப் பெற்றது
விரோதி நிரசன ஸ்வாபாவத்துக்காக துதிப்பர் -மன்னடங்க மழு  வலங்கை கொண்ட இராம நம்பி என்றும்
வென்று மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கொன்ற தேவா -என்றும்
கோக்குல மன்னரை மூ வெழு கால் போக்கிய தேவன் -என்றும் -துதிப்பர்
-உபாசனதுக்கு அல்ல
அது போலே இங்கும்-வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்-

வங்கம் -கப்பல் -பங்கம் -திரிந்து வங்கம் அழைக்கும் பெயர்
ஸ்ரீ தேவி பூ தேவி -இரு அருகிலும் இருக்க மூன்றாவதாக கீர்த்தி தேவி உலகம் முழுவதும் வியாபித்து -சமத்கார அருளிச் செயல்

———————————————————–

நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய்  இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

கடலிலே அணை கட்டிய பெருமானே இங்கே சேவை சாதித்து அருளுகிறான் –
வைதிக பிராமணர்கள் விசேஷமாக வர்த்திக்கும் தேசம் –
மூவாயிர நான் மறையாளர் நாளும் முறையால் வணங்க -இவர் மேலே அருளிச் செய்வார்
தில்லை நகர் திருச் சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி யாசனத்து
இருந்த அம்மான் தானே -பெருமாள் திருமொழி -10-2-
நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் -வகல்லச் சொல் உண்டே
அநவரதம் வேதம் ஓதுவதால் பெண் பிள்ளைகளும் காதில் பட்ட உறைப்பின் மிகுதியால் வேதங்களைச் சொல்ல
அவர்கள் கையில் இருந்து வளர்கிற பேசிற்றே பேசும் கிளிப் பிள்ளைகளும் நான்மறைகள் பாடுகின்றனவாம்
அவ் வாயிள மங்கையர் -கிளிகளின் வாய் போலே பழுத்த வாயை யுடைய வர்கள்
அந்தணர் சிந்தை புக –
அத்யயனத்துக்கு இட்டுப் பிறவாத இப் பஷிகளும் வேதம் ஓதுகிற விசித்ரம் என்னே -என்று மனம் உருகும்படி –

————————————————————–

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தை யுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-7-

நிவா என்னும் நதி புடை சூழ -மற்றும் பல புண்ய தீர்த்தங்களும் நிறைந்த திவ்ய தேசம்
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து-நப்பின்னைப் பிராட்டி மணாளனாய் இருக்குமாற்றைச் சொன்னபடி
நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை-பாற்கடல் கடையும் பொழுது தோன்றினவள் –

கௌவை–கவ்வை -பேரொலி என்னும் பொருள் -மத நீர் என்றும் சொல்வர்
சந்து -சந்தானம்
நிவா -வெள்ளாறு-

——————————————————

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-8-

கேசி நிரசனன்-கோவர்த்தன கிரி தாரி -இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடினவன் இவனே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளினவனும் இவனே
அணங்காய சோதி -அணங்கு -தெய்வம் -திவ்யமான சோதியை யுடைய என்றபடி-

————————————————————

செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-9-

திருச் சித்ர கூடம் சிலகாலம் வாழ்ந்தால் பரமபத பிராப்தி யுண்டாகும் -அவ்விருப்பே பரமபதம் என்றுமாம்
செரு நீல வேல் கண் -செருச் செய்யும் வேலையையும் நீல மலரையும் போன்ற கண்களை யுடைய மடவார்
அரு நீல பாவம் அகல -அருமையாயும் நீலமாயும் இருக்கும் பாவம் –
பிராயச் சித்தத்தாலும் போக்க ஒண்ணாத அருமை -நெஞ்கை இருளைப் பண்ணுவதால் நீலம் –
வித்தும் வயல் -விதைக்கப் பெற்ற வயல்
வெள்ளாறு பெரு வெள்ளமாக பெருகி வர
முத்துக்களை கொழித்துக் கொண்டு கழனிகளிலே தள்ள –
அந்த முத்துக்கள் விதை  விதைத்தது போலே விளங்க
அவற்றை மீன்கள் கண்டு இவை என்னவோ என்று வெருவித் தாவித் திரிகிற -என்றவாறு  –

—————————————————–

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-

பரம உதாரரான பரகாலர் பாடின இப்பாடல்கள் பகவத் பக்தி மிகுந்த ஸ்ரீ வைஷ்ணவர்கட்கு கர்ணாம்ருதம் ஆனவை
இப்படிப் பட்ட பாடல்களை ஓத வல்லவர்கள் எம்பெருமான் திருவடி நிழலில் ஒதுங்கி வாழப் பெறுவார் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading