தில்லைச் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்கள் -என்று பர உபதேசமாகச் சென்றது முந்திய திரு மொழி –
தம்முடைய அனுபவமாகச் செல்லுகிறது இத் திருமொழி –
விபவ வவதாரத் திருக் குணங்கள் எல்லாம் இவன் இடம் நிழல் இட்டு விளங்கக் காண்கையாலே
ஒவ் வொரு பாசுரத்திலும் ஒவ் ஒரு அக் குணங்களை அனுசந்தித்து அனுபவிக்கிறார்-
—————————————
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-
ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கிறார் –
சீலைக் குதம்பை யொருகாது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் -3-3-1-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்த படியே
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமுமாகி
எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே–3-4-1-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்த படியே-
அப்படிப் பட்ட அழகை நாமும் இழவாமல் இங்கே சேவிக்க பெற்றோம் –
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை -என்றும் –
பொய் மாய மருதான அசுரரை -என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்த படியே
வாட மருதிடை போகி -பராத் பரனான ஸ்ரீ கிருஷ்ணன் கிட்டே வர அப்போதே வாட்டம் அடைந்தன
ஒக்கலித்திட்டு ஆடல் செய்த குதிரை -நடை பழகுவது போலே ஆடி அசைந்து கொண்டு வந்த குதிரை
நன்மா -விபரீத லஷணை- நல்ல பாம்பு போலே
வருகின்றான் வருவான் என்று பாடல் தோறும் அருளிச் செய்வதால்
ஆழ்வார் இங்கே வரும் பொது திரு வீதிப் புறப்பாடாக இருக்கலாம் என்பர்-
————————————————–
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-
இடைப் பிள்ளை இவன் இல்லை -திருமடந்தை மண் மடந்தை கொழுந்தன் –
சாஷாத் ஸ்ரீ மன் நாராயணன் -என்று துதித்து தொழுவார்களாம்
பரத்வ சௌலப்யம் காட்டிக் கொண்டு சேவை சாதிக்கும் இடம் –
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே -பெரியாழ்வார்
புலன் கெழு கோவியர் -கண் மனம் இந்த்ரியங்களைக் கவர்கின்ற அழகு வடிவு படைத்த இடைச்சிகள்
பொலன் கெழு -என்றும் பாடம் -பொன் மயமான ஆபரணங்களால் விளங்குகின்ற-என்றுமாம் –
——————————————————-
பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே–3-3-3-
அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான்
காணேடி -பெரிய திரு மொழி -11-5-4-பேசிப் பேசிப் போது போக்குவார்கள் சிலர்
கானமரும் கல்லதர் போய் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தஞ்சென்னி மலர்
கண்டாய் சாழலே -11-5-1- பேசி வணங்கிக் கிடப்பார்கள் –
அண்டர் இடையர்கள் -அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் -பெரியாழ்வார்-
————————————————–
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எய்ற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-
காளிய மரத்தனத்தை தலைக் கட்டி வெற்றி யுடனே வீதி யார வந்தான் –
துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன அர்த்தமாக சேவை சாதிக்கும் இடம் இது
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கை -கட்டுண்டு இருந்து பிறகு அவிழ்ந்த –
விகசித்த படி -தாமரைகள் புஷ்பிக்கக் கூடிய பொய்கை
தடம் -கரை –
—————————————————-
பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து
உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-5-
கார்காலத்து காள மேகம் போலே நடந்து வந்து
முத்து வடங்கள் பூண்டு -முத்துக்கள் பூண்ட கரும் கடலோ
அருவிகள் விளங்கும் பொன் மலைகள் பல கூடி உரு எடுத்து நடந்து வருகின்றானே
பருவம் -மாரி காலம்
பொன்மலையைச் சொன்னதால் ஆபரண சேர்த்தி
பல பலவே ஆபரணம் -திருவாய் -2-5-7-
ஆயிரம் பொன் மலை ஒத்து-என்கிறார்
————————————————–
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-
அம்பு தொடுத்த மாத்ரத்திலே இலங்கை நீறாகி ஒழிந்தது -என்பார்கள் இவன்
கருட வாகனத்தில் எழுது அருளிய வாறே –
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை யாப்புண்டு தாமுற்ற போது -நாச் -11-7- என்றபடி சிலர் சொல்ல
மற்றும் சிலர் -மலங்க வரும் மழை காப்பான் உய்யப் பருவரை தாங்கி ஆ நிரை காத்தான் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக பின்னானார் வணங்கும் சோதி பிரகாசிக்கும் இடம்
வையத்து எவரும் -சரியான பாட -வையத் தேவரும் பாட பிழை -பெரிய வாச்சான் பிள்ளை
வ்யாக்யானத்து சேராது -ஓசை இன்பமும் சிதையும் –
அணங்கு ஏழு மா மழை போல் -அணங்கு எழுதல் -தைவாவேசம் பெறுதல் –
காய்ச்சின பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார்முகில் போலே -திறவாய் -9-2-6-போலே
மா மலை போலே தெய்வப் புள் -என்கிறார்-
—————————————————-
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-
ஸ்ரீ கண்ணபிரான் அழகை நாமும் அனுபவிக்கலாம் படி இங்கே பொருந்தி சேவை சாதித்து அருளுகின்றான்
ஆவர் இவை செய்தார் அறிவார் என்று அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் –
இவை -பன்மையில் சொன்னது -வழி இடையே வண்ணானைக் கொன்றது –
ஆயுதச் சாலையில் சென்று வில்லை முறித்தது -கம்சனை முடித்தது முதலியனவும் விவஷிதம் –
——————————————————
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ
அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்
சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-8-
ஆசூர பிரக்ருதிகளுக்கு பயங்கரன் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போன்ற பக்த சிகாமணிகளுக்கு
பிரசன்னா முகனாகவும் சேவை சாதிக்கும் இடம் –
ஆயிரம் தோள் எழுந்து ஆட -பரம பக்த விரோதியைப் புடைப்பதிலே திருக் கைகளுக்கு
யுண்டான பதற்றத்தை பலமுகமாக்கி வருணித்த படி –
————————————————
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-
ஆழ்வீர் பாசுரம் தோறும் வருவான் வருவான் என்று பாரித்தீர் –
உமக்காக நாய்ச்சிமார்கள் உடன் புறப்பாடு கண்டு அருளுகிறோம் என்று
விபவம் பொலியப் புறப்பாடு எழுந்து அருளா நின்றான் –
ஆயர் மடந்தை -நப்பின்னை -நீளா தேவி-
—————————————————-
தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர்கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-
இப்பதிகத்தைப் பயின்று
பிறருக்கும் பொருள் கூற வல்லமை பெறுமவர்கள்
தீ வினைகட்கு பாத்ரமாகாமல்
நல்லவராய் வாழ்வார் என்று பலன் யுரைத்து தலைக் கட்டி அருளுகிறார் –
————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply