அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்)
இப்படி பழைய கதைகளைப் பேசிக் கொண்டும், வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையுடனும் அந்த இரவு கழிந்தது.
விடியற்காலையில் ராக்ஷஸன் கோட்டைக்கு வெளியே வந்தான். வேட்டையாட கிளம்பினான். பாதி நாள் கடந்தது.
பல மிருகங்களைக் கொன்று பாரமாக தூக்கிக் கொண்டு திரும்பி வரும் பொழுது,
இடையில் யமுனையை நீந்தி கடந்து வந்து விட்ட சத்ருக்னனை எதிரில் கண்டு நின்றான்.
அவனையும் அவன் கையில் ஆயுதத்தையும் பார்த்து அலட்சியமாக, நராதமனே,
இதைக் கொண்டு என்ன செய்வாய், என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய் என்று சிரித்தான்.
ஆயிரக் கணக்கானவர் ஆயுதங்களுடன் வந்து என்னுடன் மோதி இறந்திருக்கிறார்கள்.
பலரை நான் விழுங்கியிருக்கிறேன். உனக்கும் மரண ஆசை வந்து விட்டதா?
இன்று எனக்கு ஆகாரமும் பூரணமாக ஆகி விட்டது. நீயாகவே வந்து என் வாயில் விழ காத்திருக்கிறாய்,
என்று சிரித்துக் கொண்டு சொல்ல
சத்ருக்னன் ரோஷத்துடன் எழுந்தான். உடல் நடுங்கியது, கண்களில் நீர் மல்கியது.
ரோஷத்தின் காரணமாக, அவன் உடலிலிருந்து கோபாக்னி கிரணங்களாக வெளிப் படுவது போல இருந்தது.
நிசாசரனைப் பார்த்து மகா கோபத்துடன் சொன்னான். துர்புத்தியே,
உன்னுடன் த்வந்த யுத்தம் செய்யத் தான் வந்திருக்கிறேன்.
நான் தசரதன் மகன். ராமனின் இளைய சகோதரன். நித்ய சத்ருக்னன் என்று புகழ் பெற்ற சத்ருக்னன்.
உன்னை வதம் செய்யவே வந்திருக்கிறேன். நான் போருக்கு அழைக்கும் பொழுது நீ மறுக்க முடியாது.
த்வந்த யுத்தம் செய்ய வா. நீ என் சத்ரு. என்னிடமிருந்து உயிருடன் தப்ப முடியாது. என்றான்.
ராக்ஷஸன் சிரித்தான். அட, என் அதிர்ஷ்டம், நீயாகவே வந்து மாட்டிக் கொண்டாய்.
ராவணன் என் தாயின் சகோதரி மகன். ராக்ஷஸாதிபன்.
ஒரு பெண்ணின் காரணமாக அவனை குலத்தோடு அழித்தான் உன் சகோதரன்.
அது என் மனதை வருத்திக் கொண்டே இருந்தது. நானும் சரியான நேரத்தை தான் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.
உன் குலத்தினரை, அடியோடு அழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன்.
நீயாக வந்து சேர்ந்தாய். வரப் போகும் சந்ததிகளையும் சேர்த்து அழிக்கிறேன் வா, வா என்றான்.
யுத்தம் செய்வோம், நான் தயார். சற்று நில். நான் என் ஆயுதத்தை கொண்டு வருகிறேன் என்றான்.
உடனே சத்ருக்னன், என்னைத் தாண்டி நீ எப்படி உள்ளே போவாய். எதேச்சையாக எதிர் பட்ட சத்ருவை விடவே கூடாது.
அப்படி யார் எதிரியை கை நழுவ விடுகிறானோ அவன் மந்த புத்தி உடையவனே. அவனால் எதையும் சாதிக்க முடியாது.
அதனால் உன்னைக் கண்ட நேரம் எனக்கு நல்ல நேரமாக இருக்கட்டும். யமனுடைய வீடு தான் நீ போக வேண்டிய இடம்.
அம்புகளால் துளைத்த உன் உடலை உன் வீட்டில் சேர்க்கிறேன். ராமனுக்கு விரோதி மூவுலகுக்கும் விரோதியே என்றான்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply