ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–75–சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்) —

அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)

நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார்.
லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி,
அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை.

நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு,
குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை.
நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை.

இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள்.
இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார்.

குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது.
அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர்,
மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார்.

தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும்
நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார்.

பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார்.
வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார்.
அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார்.
பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார்.

இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார்.
அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார்.

அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே,
இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன?
நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ?

ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா?
வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன?
யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா?
மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல்.

தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு,
அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading