அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)
இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார்.
பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும்,
நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார்.
வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு,
மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர்
முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பின்,
ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம்,
நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது.
எனவே, ஆறுதலாக பேசலானார்.
ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.
என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன்.
முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை.
அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு,
அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை.
பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள்.
வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின.
இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர்.
நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர்.
தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது,
அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது.
அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது.
அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம்,
இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது.
ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று.
இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள்,
பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள்
இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர் வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர்.
மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர்.
இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன.
இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது.
த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில்,
இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன.
இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர்.
மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று.
இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும்,
பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது.
அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம்.
செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது,
அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும்.
இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான்.
தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும்.
தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு,
பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்?
அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி.
முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply