அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)
சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி,
தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன.
ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு
ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார்.
பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார்.
முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன்.
இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார்.
நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று.
உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே.
எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது,
தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே.
இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.?
ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும்.
அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான்.
இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்?
ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா?
நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம்.
ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு.
உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம்.
உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது?
அனாதைகள் போல தவிக்கப் போகிறோம்.
இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள்.
ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். முதிர்ச்சியடையாதவனோ இவன்?
பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள்.
அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர்.
நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும்.
இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம்.
இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply