ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–87-இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்)–

அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்)

லக்ஷ்மணன் சொல்லி முடித்தவுடன் ராமர், அதை ஆமோதித்தவராக, அப்படியே செய்வோம்.
வ்ருத்திரவதம், தொடர்ந்து வந்த தோஷம், தோஷ நிவ்ருத்தி இவைகளைப் பற்றி விவரமாக சொன்னாய் என்று பாராட்டினார்.

முன்பு ஒரு சமயம் கர்தம பிரஜாபதி என்று ஒருவர் இருந்தார். அவர் மகன் பாஹ்வீஸ்வரன்.
அனிலன் என்றும் பெயர் உடையவன். நீதி தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்து புகழோடு வாழ்ந்து வந்தான்.

பிரஜைகளை தன் சொந்த மக்கள் போல கவனமாக பாலித்தான்.
அவனை சுரர்கள், தைத்யர்கள், ராக்ஷஸ, நாக, பன்னகர்கள் அனைவரும் போற்றினர்.

தர்மமும் வீர்யமும் ஒருங்கினைந்து அவனிடம் புகழை வளர்த்தது. ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான்.
தன் வேலையாட்கள், மந்திரிகளுடன் ஒரு சைத்ர மாத ரம்யமான வேளையில் அரண்யத்தில்
பல மிருகங்களை வேட்டையாடிக் குவித்தபடி சென்றவன் மகாதேவர் பிறந்த இடம் வந்து சேர்ந்தான்.

அந்த இடத்தில், ஹரனான மகாதேவன், மனைவி பார்வதியுடன் இருந்தார்.
அவருடன் அவரைச் சார்ந்த அனைவரும் இருந்தனர். விளையாட்டாக ஹரன், ஸ்திரீ ருபம் எடுத்துக் கொண்டு,
அந்த மலையின் அருவியில் இறங்கினார்.

உடனே அந்த வனத்தில் இருந்த ஜீவராசிகளில் ஆண் வர்கம் முழுவதும் பெண் உருக் கொண்டன.
அந்த சமயம் பார்த்து, அரசனான, இலன்-கர்தமருடைய மகன் மிருகங்களை வேட்டையாடித் திருப்தியுறாமல் அங்கு வந்து சேர்ந்தான்.

காட்டு யானைகள், மான்கள், பக்ஷிகள் யாவையும் பெண் இனமாக இருக்கக் கண்டு, திகைத்தவன்,
தானும், தன்னுடன் வந்த காவலர் யாவரும் பெண் உருக் கொண்டு விட்டதையறிந்து உணர்ந்த பொழுது பெரிதும் வருந்தினான்.
பயமும் எழுந்தது. சிதிகண்டரான உமாபதியைத் துதித்தான். தன் படை வீரர்கள், அடியாட்களுடன் அவரைச் சரணடைந்தான்.

வரதனான அவரும், (எளிதில் மகிழ்ந்து வரம் தரும் இயல்பினர்) சிரித்து, தன் தேவியுடன் கர்தமர் மகனே,
எழுந்திரு, எழுந்திரு. ஆணாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு வரம் கேள் என்றார்.

மகானான அவர் சொல் மேலும் வருத்தத்தையே அளித்தது. வேறு வரம் கேட்கும் மனநிலையும் இல்லை.
பின் சைலசுதாவான உமையை வணங்கி, தேவி, நீ உலகுக்கெல்லாம் அருள் பாலிப்பவள்.
ஈசன் மனைவியே கருணை காட்டு. அமோகமாக காட்சி தருபவளே, என்னை அருள் கண் கொண்டு பார், என்று வேண்டினான்.

ஹரனும் அருகில் இருக்கத் தன்னை வேண்டியதன் பொருளை புரிந்து கொண்ட உமா தேவி,
ருத்ரனின் சம்மதத்துடன் பதில் சொன்னாள். அவரிடம், தேவனே, தாங்கள் எப்பொழுதும் வரம் தருவதில் ஈடு இணையற்றவர்,
நான் உங்கள் உடலில் பாதியல்லவா, இன்று நான் வரம் தருகிறேன் என்று சொல்லி அரசனிடம்,
பாதி ரூபம் ஸ்திரீயாகவோ, புருஷனாகவோ, நீ விரும்பும் வரை இருக்கும் என்றாள்.

அரசனும் மகிழ்ந்து, தேவி நீங்கள் அனுக்ரஹம் செய்வதானால், ஒருமாதம் ஸ்திரீ,
ஒரு மாதம் புருஷன் என்று இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டான்.
தேவியும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதித்தாள்.

ராஜன், நீ புருஷனாக இருக்கும் பொழுது ஸ்திரீயாக இருந்ததை நினைவில் கொள்ள மாட்டாய்.
அதே போல ஸ்திரீயாக இருக்கும் பொழுது, ஆண் உருவில் இருந்ததை நினைக்க மாட்டாய் என்றாள்.
இதன் பின் அந்த அரசன் இலா, ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் வளைய வந்தான்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading