அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்)
எல்லா முன்னேற்பாடுகளையும் குறைவற செய்து விட்டு, பரதனின் தமையனான ராமர்,
க்ருஷ்ண ஸாரமான-கறுப்புக் குதிரையை விட்டார்.
ரித்விக்குகளும், லக்ஷ்மணனும் குதிரையை பாதுகாத்துக் கொண்டு உடன் சென்றனர்.
தான் சைன்யத்தோடு நைமிச க்ஷேத்ரம் சென்று யாகசாலையை பார்வையிட்டார்.
நல்ல முறையில் யாக சாலை தயாராக ஆவதைக் கண்டு திருப்தியடைந்தார்.
நைமிச க்ஷேத்திரத்தில் இருக்கும் பொழுது பல அரசர்களும் வந்து காணிக்கை சமர்ப்பித்தனர்.
ராமரும் அவர்களுக்கு பதில் மரியாதைகள் செய்தார். தகுதி வாய்ந்த உயர் குலத்து அரசர்கள்,
அவரவர் தகுதிக்கேற்ப அன்பளிப்புகள் கொடுத்தார்.
உடன் வந்த ஏவல், காவல் வேலை செய்பவர்களுக்கும் அன்ன, பானாதிகள், வஸ்திரங்கள் இவைகளை
பரதன், சத்ருக்னனுமாக தந்தனர். வானரங்களும், சுக்ரீவனும், மற்றவர்கள் போலவே ஆடையலங்காரங்களை அணிந்து கொண்டனர்.
விபீஷணன், தன் உற்றாரான ராக்ஷஸர்களுடன் ஆபரணங்கள் அணிந்தவனாக, மகரிஷிகளுக்கு மரியாதைகள் செய்தான்.
அஸ்வமேத யாகம் நடந்து கொண்டிருக்கையிலேயே, லக்ஷ்மணன் நடத்திச் சென்ற குதிரையைப் பற்றியும்
விமரிசனம் செய்து பேசிக் கொண்டனர்.
இப்படிப்பட்ட ராஜ சிங்கத்தின் யாகம், உத்தமம் என்பது தவிர வேறு பேச்சேயில்லை.
யாசகர்கள் தேஹி என்று கேட்கும் முன் அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கப் பட்டது.
யாக மத்தியில் தான தர்மமும் நிறைய நடந்தது.
பலவிதமான கௌடர்கள், காண்டவர்கள், (கௌடர்கள்- வங்காளப் பகுதியைச் சேர்ந்தவர்கள், காண்டர்கள்,
மேற்குப் பகுதியைச் சேர்ந்த குருக்ஷேத்திரம் அருகில் உள்ள ஊர்.).
இவர்கள் வாயிலிருந்து இன்ன பொருள் வேண்டும் என்ற சொல் வெளி வரும் முன் வானர,
ராக்ஷஸர்கள் அவர்கள் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டதை உணர்ந்தார்கள்.
யாருமே அழுக்கு வஸ்திரங்களுடனோ, பசி தாகம் வருத்தவோ காணப்படவில்லை.
எங்கும் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்யமாகவே காணப்பட்டனர்.
சிரஞ்ஜீவிகளான சில மகான்கள்,இது போல யாகத்தைக் கண்டதுமில்லை, கேட்டதும் இல்லை என்று பாராட்டினார்கள்.
யாருக்கு என்னத் தேவையோ, கிடைத்தது. தங்கம் விரும்பியவன் தங்கம், ரத்னம் கேட்டவன் ரத்னம் என்று கிடைக்கப் பெற்றார்கள்.
வெள்ளியும், தங்கமும், வஸ்திரங்களும் கொடுக்க கொடுக்க குறையாமல் இருக்கக் கண்டனர்.
இந்திரன் செல்வமோ, குபேரன் செல்வமோ, யம, வருணன் இவர்களின் செல்வமோ, இங்குள்ள செல்வத்துக்கு
ஈடாகாது என்று பேசிக் கொண்டனர். எங்கும் வானரங்கள், எங்கும் ராக்ஷஸர்கள், கை நிறைய அள்ளி, அள்ளிக் கொடுத்தனர்.
உணவும், ஆடைகளும் வேண்டிய அளவு தானம் செய்தபடி யாகம் ஒரு வருஷ காலம் வளர்ந்து கொண்டு சென்றது.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply