அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி)
வெகு சிறப்பாக யாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
பரம பாவனமாக யாகத்தின் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதைப் பார்த்து வியந்தார்.
தனியாக ரிஷி ஜனங்கள் மத்தியில் தனக்கும் இருப்பிடம் அமைத்துக் கொண்டார்.
அரசனும் வந்து அவர் தங்கும் இடத்தில் வசதிகள் சரிவர இருக்கின்றனவா,
உணவுக்கான பழங்கள், காய் கிழங்குகள் கிடைக்கிறதா என்றும், என்று விசாரித்து தெரிந்து கொண்டு,
முனிவரை வணங்கி ஆசிகள் பெற்றுச் சென்றான்.
வால்மீகி தன் பிரதான சிஷ்யர்கள் இருவரிடம், நீங்கள் சென்று ராமாயண கதை முழுவதும் ஆனந்தமாக பாடுங்கள்.
சேர்ந்து பாடுங்கள். எங்கெல்லாம் ஜனங்கள் நடமாட்டம் உள்ளதோ, கடை வீதிகளிலும், ராஜ வீதிகளிலும்,
ரிஷிகள் வசிக்கும் இடங்களிலும், ராஜ பவன வாசலிலும், குறிப்பாக வேதம் அறிந்தவர்கள் கூடும் இடங்களிலும் பாடுங்கள்.
இதோ இந்த பழங்கள். இவைகளை எடுத்துச் செல்லுங்கள். மலைகளில் விளையும் ருசியான பழங்கள்.
கையோடு வைத்துக் கொள்ளுங்கள். பசித்த பொழுது சாப்பிட. யாரிடமும் எதையும் யாசிக்காதீர்கள்.
ராகத்தை கவனித்து பாடுங்கள். யாரும் குறை சொல்ல முடியாதபடி, கவனமாக பாடுங்கள்.
ஒரு வேளை மாகாராஜா, ராமர் கேட்க விரும்பி அழைத்தால், ரிஷிகளும் அமர்ந்திருக்கும் சபையில் பாடுங்கள்.
மதுரமான குரலில், ஒரு நாளில், இருபது அத்தியாயங்கள் பாடுங்கள். நான் சொல்லிக் கொடுத்துள்ளபடி,
பிரமாணம், தாளக் கட்டுடன் பாடுங்கள். தனம், செல்வம் இவற்றில் சற்றும் மோகம் கொள்ளாதீர்கள்.
எதற்கும் ஆசைப் பட வேண்டாம். நமக்கு எதற்கு தனம், ஆசிரம வாசிகள் நாம்.
நமக்குத் தேவையானவை பழங்களும், காய் கிழங்குகளுமே. அவை தான் ஆசிரமத்தில் நிறைய கிடைக்கின்றனவே.
காகுத்ஸன் ஒரு வேளை நீங்கள் யார் என்று கேட்டால், வால்மீகி முனிவரின் சிஷ்யர்கள் என்று மட்டும் சொல்லுங்கள்.
இதோ தந்தி வாத்யங்கள். நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டு சுருதி சேர்த்துக் கொண்டு லயத்துடன் பாடுங்கள்.
பயப்பட வேண்டாம். அரசனை அவமதித்ததாகவும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்த விஸ்தாரமாக பாடுங்கள்.
உலகில் உள்ள ஜீவன்களுக்கு, அரசன் தந்தைக்கு சமமானவனே. தார்மீகமான உறவு இது.
அதனால் நீங்கள் இருவரும் நாளைக் காலை, மன மகிழ்ச்சியுடன், சுருதி, தாளம், இவற்றுடன் இணைந்து பாடுங்கள்.
இப்படி பல விதமாக அவர்களுக்கு உபதேசித்து, ப்ராசேதஸ் (நுண்ணிய அறிவுடையவர்) என்று பெயர் பெற்ற வால்மீகி முனிவர்,
சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
மைதிலியின் குமாரர்கள், குருவான வால்மீகி சொன்னதைக் கேட்டு அப்படியே செய்கிறோம், என்று சொல்லிக் கிளம்பினர்.
ரிஷி சொன்ன வார்த்தைகளை ஒன்று விடாமல் மனதில் ஏற்றுக் கொண்டவர்களாக, உற்சாகமாக பொழுது விடிவதை
எதிர் நோக்கியபடி படுக்கச் சென்றனர். அஸ்வினி குமாரர்கள் இருவரும், பார்கவரிடம், நீதி ஸம்ஹிதை கேட்டு விட்டு வந்தது போல.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply