ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–90-இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்)

அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்)

பரதனும், லக்ஷ்மணனும் பொறுமையை இழந்தவர்களாக ராமரிடம் வினவினர்.
ஒரு வருஷம், இலாவை தன் மனைவியாக அனுபவித்து வந்தானே, புதன், அதன் பின் அவள் என்ன ஆனாள்?

ராமர் தொடர்ந்தார். புதன் புத்திசாலி, தைரியசாலியும் கூட. சம்வர்த்தர், ஸ்யவனர், ப்ருகு புத்ரன்,
அரிஷ்டநேமி, ப்ரமோதனர், மோதகரம், துர்வாசர் இவர்கள் அனைவரையும் அழைத்து,
சபையில் தைரியமாக நடந்தவைகளை விவரித்தான்.

இதோ, இந்த இலா, கர்தமருடைய மகன், அரசனாக இருந்தான். உங்களுக்கே தெரியும் என்ன நடந்தது என்று.
இப்பொழுது இவன் நன்மைக்காக நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,
கர்தமரும் வந்து சேர்ந்தார்.

இவருடன், மற்றவர்கள் அழைத்ததின் பேரில், புலஸ்தியர், க்ரது, வஷட்காரம், ஓங்காரம் போன்ற
மகா தேஜஸ்களும் உருக் கொண்டு வந்தன. கர்தமர் தன் மகனின் க்ஷேமத்திற்காக அவர்களிடம் பேசினார். கேளுங்கள்.

இந்த அரசன் நன்மை பெற நாம் செய்யக் கூடியது ஒன்று தான். நாம் அனைவருமாகச் சென்று வ்ருஷபத்வஜனான
பரமசிவனிடம் சென்று வேண்டிக் கொள்வோம். அந்த தேவனுக்கு பிரியமான யாகம் அஸ்வமேத யாகம். அதைச் செய்வோம்.

இந்த அரசனைக் காக்க நாம் எல்லோருமாக என்ன செய்யவேண்டுமோ அதை நிச்சயமாக செய்வோம்.
உத்தமமான அந்தணர்கள் ஒத்துக் கெண்டனர். ருத்ரனைக் குறித்து பெரிய அளவில், யாகம் துவங்கியது.

சம்வர்தரின் மகன் பரபுரஞ்ஜயன் மருத் என்று பெயர் பெற்றவன். அவனை யாகத்தை நடத்தி வைக்க நியமித்தனர்.
விதிப்படி யாகம் நடந்தது. ருத்ரனும் மகிழ்ச்சி அடைந்தார். யாக முடிவில், ருத்ரன் எல்லா முனிவர்களின் எதிரிலேயே,
நான் மிகவும் திருப்தியடைந்தேன். இந்த அஸ்வமேத யாகத்தை சிரத்தையுடன் செய்தீர்கள்.

இந்த இலனுக்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
இதைக் கேட்டு ரிஷிகள் ஒரே குரலில் அவரை துதித்து, இவன் தன் இயல்பான புருஷத் தன்மையை அடைய வேண்டும் என்றனர்.

மகாதேவனும் அப்படியே என்று சொல்லி அவனை பழையபடி ஆணாக மாற்றினார்.
இந்த வரமளித்து விட்டு மறைந்து விட்டார். அஸ்வமேத யாகமும் நிறைவுற்றது.
பிராம்மணர்களும் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

அரசன் பாஹ்வீகம் என்ற தன் பழைய நகரை விட்டு மத்ய தேசத்தில் புதியதாக ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான்.
சசபிந்து தொடர்ந்து பாஹ்வீக ராஜாவாக நீதி தவறாது, ராஜ்ய பாலனம் செய்து வந்தான்.
அவன் காலம் முடிந்து அவன் மகன் ஏலன் என்பவன் அரசனானான்.
அஸ்வமேத யாகத்தின் பலன் உடனே தெரியும்.
பெண்ணாக உரு மாறிய இலா அரசன் தன் இயல்பை பெற்றது இந்த யாக பலன் தானே என்று முடித்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading