ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-ஆறாம் நாள் போர்-

மகரக்கிரௌஞ்ச வியூகத்துடன் ஆறாம் நாள் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 075-டைகள் இரண்டிலும் எழுந்த பேராரவாரம்; பாண்டவர்கள் மகர வியூகம் அமைத்தது; கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகம் அமைத்தது; இருதரப்பிலும் ஒவ்வொரும் ஏற்ற நிலைகள்; ஆறாம் நாள் போர் தொடங்கியது; துரோணரின் தேரோட்டியைக் கொன்ற பீமசேனன்; பீஷ்மராலும், துரோணராலும் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட அழிவு; பீமனாலும், அர்ஜுனனாலும் கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிறிது ஓய்வுக்குப் பிறகு அந்த இரவு கடந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பும் மீண்டும் போருக்குப் புறப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் யானைகளையும், குதிரைகளையும் மோதலுக்குத் தயார்ப்படுத்தும்போதும், காலாட்படை வீரர்கள் தங்கள் கவசங்களைத் தரிக்கும்போதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போருக்குத் தயாரான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது. களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சங்குகள் மற்றும் துந்துபிகளின் முழக்கங்கள் {அங்கிருந்தவர்களைச்} செவிடாக்குவதாக இருந்தன.

அப்போது, மன்னன் யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, எதிரியைச் சுடுவதும், மகரம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் துருப்புகளை அணிவகுப்பாயாக” என்றான். பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், தேர்ப்போராளிகளில் முதன்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (மகர வியூகத்தில் அணிவகுக்கும்படி) தேர்வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் வாயாக {முகமாக} அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது விலாவானார்கள். மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது விலாவில் அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரும் அணிவகுப்பை அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவசம் தரித்தப்படி அதிகாலையிலேயே மீண்டும் போருக்காக நின்றார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையுடனும், உயர்த்திப் பிடிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றுடனும், கூர் தீட்டப்படு பிரகாசமாக இருந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு கௌரவர்களை எதிர்த்து விரைவாகச் சென்றனர்.

பிறகு உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, இப்படி அணிவகுப்பட்ட (பாண்டவப்) படையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் நாரையின் வடிவத்திலான {கிரௌஞ்ச வியூகத்தை} [1] எதிரணியாக வகுத்தார். அதன் அலகாகப் பரத்வாஜரின் மகன் (துரோணர்) இருந்தார். அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் கண்களாயிருந்தனர். வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான கிருதரவர்மன், அங்கே நின்ற காம்போஜர்களின் ஆட்சியாளனோடும் {சுதக்ஷிணனோடும்}, பாஹ்லீகர்களோடும் அதன் தலையாக அமைந்தான். அதன் கழுத்தாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரசேனன் மற்றும் உமது மகன் துரியோதனன் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல மன்னர்களால் சூழப்பட்டபடி நின்றார்கள்.மத்ரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகியோரோடு ஒன்றிணைந்த பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, ஒரு பெரும்படையால் சூழப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் மார்பில் நின்றான். கவசம் தரித்துக் கொண்டு, தன் தனிப்பட்ட துருப்புகளின் துணையோடு இருந்த பிரஸ்தலையின் மன்னன் சுசர்மன் இடது சிறகில் நின்றான். துஷாரர்கள், யவனர்கள், சகர்கள் ஆகியோர் சூளிகர்களுடன் {சூசுபர்களுடன்} சேர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அணிவகுப்பின் வலது சிறகில் நின்றார்கள். சுருதாயுஷ், சதாயுஷ் {சதாயிஷ்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த அணிவகுப்பின் பின்பகுதியில் ஒருவரை ஒருவர் பாதுகாத்தபடி நின்றனர் [2].பிறகு அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போருக்காகக் கௌரவர்களை எதிர்த்து விரைந்தார்கள். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய போது சூரியன் எழுந்திருந்தான் {உதயமாகியிருந்தது}. யானைகள், யானைகளை எதிர்த்து விரைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  குதிரைவீரர்கள், குதிரைவீரர்களை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களையும், யானைகளையும் அச்சந்தரும் அந்தப் போரில் எதிர்த்தனர். தேர்வீரர்கள் யானைப் பாகன்களை எதிர்த்தும், யானைப் பாகன்கள் குதிரைவீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், காலாட்படை குதிரைப்படையோடும் மோதின. கோபத்தால் தூண்டப்பட்ட வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட விரைந்தனர்.

பீமசேனன், அர்ஜுனன், இரட்டையர்கள் {சகாதேவன் மற்றும் நகுலன்} ஆகியோரால் பாதுகாகப்பட்ட அந்தப் பாண்டவப்படை, விண்மீன்களால் {நட்சத்திரங்களால்} அலங்கரிக்கப்பட்ட இரவைப் போல அழகானதாக இருந்தது. பீஷ்மர், கிருபர், துரோணர், சல்லியன், துரியோதனன் மற்றும் பிறருடன் கூடிய உமது படையும் {கௌரவப்படை}, கோள்களால் {கிரகங்களால்} நிறம்பெற்ற ஆகாயவிரிவைப் போல ஒளிர்ந்தது.

பெரும் ஆற்றலைக் கொண்டவனான குந்தியின் மகன் பீமசேனன், துரோணரைக் கண்டு, பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் சுமக்கப்பட்ட பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். அந்த மோதலில் கோபம் தூண்டப்பட்டவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், பீமனின் முக்கிய உறுப்புகளைக் குறி வைத்து, முழுக்க முழுக்க இரும்பாலான ஒன்பது {9} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தார். அந்தப் போரில் பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட பீமன், துரோணரின் தேரோட்டியை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அதன்பேரில் பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தானே குதிரைகளைக் கட்டுப்படுத்தியபடி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் பாண்டவப்படையை எரிக்க ஆரம்பித்தார்.

இப்படித் துரோணராலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டவர்களான சிருஞ்சயர்கள், கேகயர்களுடன் சேர்ந்து சிதறி ஓடினார்கள். அதேபோல, பீமனாலும், அர்ஜுனனாலும் சிதைக்கப்பட்ட உமது துருப்புகளும், செருக்குடன் நிற்கும் அழகிய பெண் போல, உணர்விழந்து நின்றார்கள். வீரர்களுக்கு அழிவை உண்டாக்கும் அந்த மோதலில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டுக்கும் ஏற்பட்ட வேதனை பெரிதாக இருந்தது. தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து, ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிடும் துருப்புகளின் அற்புதக் காட்சியை நாங்கள் கண்டோம். அம்மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும், ஒருவரின் ஆயுதங்களுக்கு மற்றவர் பதிலடி கொடுத்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

படை திறன் சொன்ன திருதராஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 076-தன் படையின் திறனை சஞ்சயனுக்கு எடுத்துரைக்கும் திருதராஷ்டிரன்; இப்படிப்பட்ட வலுவான படையும் பாண்டவர்களால் கொல்லப்படுவது விதிவசத்தாலேயே என்று புலம்புவது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “பல மகத்துவங்களைக் கொண்டதும், பல்வேறு சக்திகளைக் கொண்டதுமான நமது படையின் திறன் பெரிதாகும். அறிவியல் {சாத்திர} விதிகளின் படி அணிவகுக்கப்படுவதால் அது தடுக்கப்பட முடியாததாகும். நம்மிடம் எப்போதும் பற்றுதலையும், அர்ப்பணிப்பையும் அது {நமது படை} கொண்டிருக்கிறது. ஒழுக்கக்கேடுகள் மற்றும் குடிவெறி ஆகிய களங்கங்களில் இருந்து விடுபட்ட அஃது {கௌரவப்படை} ஒழுக்கமானதாக இருக்கிறது.

அதன் ஆற்றல் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்கள், மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிந்தோ, பருத்தோ இல்லை. சுறுசுறுப்பான பழக்கவழக்கம், நன்கு வளர்க்கப்பட்ட, பலமான உடற்கட்டுகளைக் கொண்ட அவர்கள் நோயில்லாதவர்களாவர். கவசம் தரித்த அவர்கள், நல்ல தயாரிப்புடன் ஆயுதங்களோடு இருக்கிறார்கள். அனைத்து வகை ஆயுதங்களையும் பயின்றவர்கள் அவர்கள். வாள்கள், வெறுங்கைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு போரிடுவதில் அவர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேல்கள் {lances}, ரிஷ்டிகள் {பட்டாக்கத்திகள் Sabres}, தோமரங்கள் {darts}, இரும்புமயமான பரிகங்கள் {iron clubs}, பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள் Short arrows}, ஈட்டிகள் {Javelins}, உலக்கைகள் {mallets} ஆகியவற்றை அவர்கள் நன்கு பயின்றவர்களாவர்,

{கம்பனங்கள், விற்கள், கணபங்கள், க்ஷேபணீயங்கள் உள்ளிட்ட} அனைத்து வகை ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள். யானைகளின் முதுகில் ஏறுதல் மற்றும் இறங்குதல், முன்னேறுதல், திரும்புதல், சிறப்பாக அடித்தல், அணிவகுத்தல், பின்வாங்குதல் ஆகியவற்றில் அவர்கள் திறமைமிக்கவர்களாவர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நிர்வகிப்பதில் அவர்கள் பல முறை சோதிக்கப்பட்டவர்கள். முறையாகச் சோதிக்கப்பட்ட அவர்கள், குலவழிக்காக, உறவு நிலைக்காக, பற்றுறுதிக்காக அல்லாமல், பிறப்பு மற்றும் குருதியின் அடிப்படையில் அல்லாமல் ஊதியங்களால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர் [1].

அவர்கள் அனைவரும் மரியாதைக்கு உரியவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது உறவினர்கள் நம்மால் நன்றாக நடத்தப்பட்டு, மனநிறைவு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் பல நன்மைகளைப் புரிகின்றோம். இது தவிர, அவர்கள் புகழ்பெற்ற மனிதர்களாகவும், பெரும் மன ஆற்றல் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், ஓ! மகனே {சஞ்சயா}, பெரும் சுறுசுறுப்பு கொண்டவர்களும், சாதனைகளால் புகழ்வாய்ந்தவர்களும், லோகபாலர்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான பலரால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்களும், தங்கள் விருப்பத்தால் தங்கள் படையுடன் நம் தரப்பை அடைந்தவர்களுமான எண்ணிலா க்ஷத்திரியர்களும், அவர்களது தொண்டர்களும் அவர்களைப் {நமது படையினரைப்} பாதுகாக்கின்றனர்.

உண்மையில், அனைத்துத் திசைகளில் இருந்தும் ஓடிவரும் எண்ணற்ற நதிகளின் நீரால் நிறையும் பரந்த கடலைப் போன்றதே நமது படையாகும். சிறகில்லாவிட்டாலும், காற்றில் பறக்கும் பறவைகளைப் போன்ற யானைகள் மற்றும் தேர்கள் அதில் நிறைந்திருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் அந்தக் கடலின் நீராக இருக்கின்றர். குதிரைகள், பிற விலங்குகள் ஆகியன அதன் பயங்கர அலைகளாக இருக்கின்றன. (அந்தக் கடலில் குவிந்துள்ள) எண்ணிலா வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள், வேல்கள் ஆகியவை துடுப்புகளாக இருக்கின்றன. கொடிமரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றால் நிறைந்து, தங்கம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட துணிகளால் அலங்கரிக்கப்பட்டு விரைந்து வரும் குதிரைகளும், யானைகளும், அதை {கடலை} மூர்க்கமாகக் கலங்கடிக்கும் காற்றாக இருக்கின்றன.

துரோணர், பீஷ்மர், கிருதவர்மன், கிருபர், துச்சாசனன் ஆகியோராலும், ஜெயத்ரதன் தலைமையிலான பிறராலும் அந்தப் படை பாதுகாக்கப்படுகிறது. பகதத்தன், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் {சகுனி}, பாஹ்லீகன், மற்றும் உலகத்தின் உயர்ஆன்ம வலிமைமிக்க வீரர்கள் பலராலும் அது பாதுகாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட நமது படை, ஓ! சஞ்சயா, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதியின் காரணமாகவே போரில் இப்படிக் கொல்லப்படுகிறது. மனிதர்களோ, பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்களோகூட (போருக்கான) இத்தகு தயாரிப்புகளை இதற்கு முன் பூமியில் கண்டிருக்க மாட்டார்கள். செல்வத்தால் (நம்மிடம்) பற்றுதல் கொண்டவையும், அறிவியலின் {சாத்திரங்களின்} படி திரட்டப்பட்டவையுமான இப்படிப்பட்ட பெரும்படையே போரில் கொல்லப்படுகிறது என்றால், ஐயோ, இது விதியின் விளைவு என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, இவை யாவும் இயற்கைக்கு மாறானதாகவே தெரிகிறது [2].உண்மையில் நன்மையானது, ஏற்கத்தக்கது ஆகிய இரண்டையும் அடிக்கடி விதுரன் சொன்னான். ஆனால், என் தீய மகன் துரியோதனனோ, அஃதை ஏற்கவில்லை. உயர் ஆன்மா கொண்டவனும், நல்லறிவு கொண்டவனுமான அவன் {விதுரன்}, இப்போது நடப்பவற்றை முன்னரே அறிந்தே எங்களுக்கு ஆலோசனை வழங்கினான் என நான் நம்புகிறேன். அல்லது, ஓ! சஞ்சயா, இவை யாவும், அதன் முழுமையுடன், படைப்பவனால் முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவனால் {படைத்தவனால்} விதிக்கப்பட்டவை விதிக்கப்பட்டபடியே நடந்தே தீரும், வேறுவிதமாகாது” {என்றான் திருதராஷ்டிரன்}. 

பீமன் மீது திருஷ்டத்யும்னன் கொண்ட பாசம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 077அ-திருதராஷ்டிரனை இடித்துரைத்த சஞ்சயன்; போர் வர்ணனைகளை மீண்டும் சொல்ல ஆரம்பித்த சஞ்சயன்; கௌரவர்களின் வியூகத்தைப் பிளந்த பீமன், தன்னந்தனியாகத் துரியோதனன் தம்பிகளை எதிர்த்து வியூகத்திற்குள் புகுந்தது; அவ்வழி வந்த திருஷ்டத்யும்னன் பீமனின் தேர் வெறுமையாக இருப்பதைக் காண்பது; நடந்ததைத் தேரோட்டி விசோகன் திருஷ்டத்யும்னனுக்குச் சொல்வது; வருத்தமடைந்த திருஷ்டத்யும்னன்; பீமன் சென்ற பாதையிலேயே சென்று பீமனை அடைந்த திருஷ்டத்யும்னன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது தவறுகளின் விளைவாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை இந்தப் பேரிடர் அண்டியிருக்கிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பாண்டவர்கள் மீதான) அநீதி வழியான நடத்தையில் நீர் கண்ட தவறுகளைத் துரியோதனன் காணவில்லை.

உமது தவறாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையாட்டம் நடைபெற்றது. மேலும், உமது தவறாலேயே பாண்டவர்களுடனான இந்தப் போரும் நடக்கிறது. பாவம் செய்தது நீர், எனவே, உமது அந்தப் பாவத்தின் கனியை அறுவடை செய்கிறீர். தன்னால் இழைக்கப்பட்ட செயல்களின் கனியை ஒருவன் தானே அறுவடை செய்வான். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இங்கும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} உமது செயல்களின் கனிகளை நீர் அறுவடை செய்வீர். எனவே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்தப் பேரிடரை அடைந்த நீர், உறுதியாக இருந்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர் குறித்து நான் உரைப்பதைக் கேட்பீராக.

வீரன் பீமசேனன் தனது கூரிய கணைகளால் வலிமைமிக்க உமது வியூகத்தைப் {அணிவகுப்பைப்} பிளந்து கொண்டு, துரியோதனனின் தம்பிகள் அனைவரையும் அணுகினான். துச்சாசனன், துர்விஷஹன், துஸ்ஸஹன், துர்மதன், ஜயன், ஜெயத்சேனன், விகர்ணன், சித்திரசேனன், சுதர்சனன், சாருசித்திரன், சுவர்மா, துஷ்கர்ணன், கர்ணன் [1] மற்றும் தன் அருகில் இருந்த தார்தராஷ்டிரப் படையின் இன்னும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கண்டவனான வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு,  பீஷ்மரால் பாதுகாக்கப்பட்ட (உமது) வலிமைமிக்க வியூகத்திற்குள் ஊடுருவினான் {புகுந்தான்}. அவனை {பீமனைத்} தங்கள் மத்தியில் கண்ட அந்த வீரர்கள் அனைவரும், “மன்னர்களே, இவனது உயிரை எடுப்போமாக!” என்றனர். அதன் பேரில், அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, (தன் உயிரை எடுக்க) உறுதியாகத் தீர்மானித்திருந்த தன் சகோதரர்களால் {தன் பெரியப்பன் மகன்களால்} சூழப்பட்டான்.

அண்ட அழிவின் போது, தீய இயல்பு கொண்ட வலிமைமிக்கக் கோள்களால் சூழப்பட்டவனும் கடும் பிரகாசம் கொண்டவனுமான சூரியனைப் போல, அப்போது அந்தப் பீமன் இருந்தான். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் நடந்த கடும்போரில், தானவர்களால் சூழப்பட்ட இந்திரனைப் போலவே, (கௌரவ) வியூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தப் பாண்டு மகனின் {பீமனின்} இதயத்தில் அச்சம் நுழையவில்லை.

ஆயுதங்கள் அனைத்தையும் தரித்தவர்களும், போருக்கு முழுமையாகத் தயாராக இருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள், தனியனான அவனைப் {பீமனைப்} பீடித்தார்கள். அதன்பேரில் திருதராஷ்டிரன் மகன்களை அலட்சியம் செய்த அந்த வீர பீமன், யானைகள் மற்றும் குதிரைகளின் முதுகிலோ, தேரிலோ இருந்து போரிட்ட (கௌரவப் படையின்) வீரர்களில் முதன்மையான பலரை அந்தப் போரில் கொன்றான். தனது அழிவுக்காக முயன்று கொண்டிருந்த தனது சகோதரர்களின் {திருதராஷ்டிரன் மகன்களின்} நோக்கங்களை உறுதியாக அறிந்து கொண்ட அந்த வலிமைமிக்கப் பீமன், அவர்கள் அனைவரையும் கொல்வதில் தனது இதயத்தை நிலைநிறுத்தினான். தனது தேரை விட்டுவிட்டு, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடல் போன்ற அந்தத் தார்தராஷ்டிரத் துருப்புகளைத் தாக்கத் தொடங்கினான்.

இப்படித் தார்தராஷ்டிரப் படைக்குள் பீமசேனன் நுழைந்த பிறகு, (தான் போரிட்டுக் கொண்டிருந்த) துரோணரைக் கைவிட்ட பிருஷதனின் மகன் திருஷ்டத்யுமனன், விரைவாகச் சுபலனின் மகன் {சகுனி} இருந்த இடத்திற்கு வந்தான். உமது படையின் எண்ணற்ற வீரர்களைக் கலங்கடித்த அந்த மனிதர்களில் காளை {திருஷ்டத்யும்னன்}, பீமசேனனன் இல்லாத வெறும் தேர் இருந்த இடத்திற்கு வந்தான்.

அந்தப் போரில் பீமசேனனின் தேரோட்டியான விசோகனைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகவும் துயருற்று கிட்டத்தட்ட உணர்வுகளை {நினைவு} இழந்தான். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரத்தால் பெருமூச்சுவிட்டபடியே விசோகனிடம், “என் உயிரைப் போன்றே அன்புக்குரிய பீமர் எங்கே?” என்று கேட்டான். கூப்பிய கரங்களுடன் திருஷ்டத்யும்னனுக்கு மறுமொழி கூறிய விசோகன், “பெரும் பலத்தையுடைய வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, இங்கேயே தனக்காகக் காத்திருக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, கடல் போன்ற இந்தத் தார்தராஷ்டிரப் படைக்குள் தனியாக ஊடுருவினார். அந்த மனிதர்களில் புலி {பீமன்}, மிக உற்சாகமாக என்னிடம், “ஓ! தேரோட்டியே {சூதா; விசோகா}, என்னை அழிக்கும் நோக்கம் கொண்டவர்களை நான் கொல்லும் அந்தக் குறுகிய காலம் வரை குதிரைகளை நிறுத்தி எனக்காகக் காத்திருப்பாயாக” என்றார். கையில் கதாயுதத்துடன் விரைந்த அந்த வலிமைமிக்கப் பீமரைக் கண்டு, (அவரை ஆதரித்த) நமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் நிறைந்தன. பிறகு, கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில், ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னரே}, உமது நண்பர் {பீமர்}. (எதிரியின்) வலிமைமிக்க வியூகத்தைப் பிளந்து கொண்டு அதற்குள் ஊடுருவினார் {புகுந்தார்}” என்றான் {விசோகன்}.

விசோகனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் பலம்படைத்தவனும், பிருஷதனின் மகனுமான திருஷ்டத்யும்னன்,  அந்தத் தேரோட்டியிடம் {விசோகனிடம்} அந்தப் போர்க்களத்தில் இவ்வார்த்தைகளை சொன்னான். “பாண்டவர்களிடம் நான் கொண்ட பற்றை மறந்து, பீமரை இந்தப் போரில் நான் கைவிட்டேன் எனில், இன்று இந்த உயிர்தான் எனக்கு எதற்கு? பீமரில்லாமல் இன்று நான் திரும்புவேன் எனில், என்னைக் குறித்து க்ஷத்திரியர்கள் என்ன சொல்வார்கள்? நான் களத்தில் இருக்கும்போதே, பகைவரின் வியூகத்தில் ஒரு திறப்பை ஏற்படுத்தித் தனியாகப் பீமர் ஊடுருவினார் என்று அறியும்போது என்னைக் குறித்து அவர்கள் {க்ஷத்திரியர்கள்} என்ன சொல்வார்கள்? போரில் தன் தோழர்களைக் கைவிட்டு, காயமில்லாமல் வீடு திரும்புவனை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் தீமையோடே அணுகுவார்கள் {அப்படித் திரும்புபவனுக்கு நல்லதைச் செய்யாமல் தீமையையே தேவர்கள் செய்வார்கள்}. வலிமைமிக்கப் பீமர், எனது நண்பரும், உறவினரும் ஆவார். அவர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர், எதிரிகளைக் கொல்லும் அவருக்கு நானும் அர்ப்பணிப்புடையவனே. எனவே, பீமர் எங்கே சென்றிருக்கிறாரோ, அங்கே நானும் செல்வேன். தானவர்களைக் கொல்லும் வாசவனை {இந்திரனைப்} போல, எதிரிகளைக் கொல்லும் என்னைப் பார்ப்பாயாக” {என்றான் திருஷ்டத்யும்னன்}.

இதைச் சொன்ன வீர திருஷ்டத்யும்னன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் தன் கதையால் நசுக்கிய யானைகளால் குறிக்கப்பட்டதும், அவனால் {பீமனால்} திறக்கப்பட்டதுமான பாதையின் வழியாக எதிரியின் மத்தியில் நுழைந்தான். அப்போது, மரங்களின் வரிசைகளை அழிக்கும் புயலைப் போலப் பகையணிகளை எரித்து, க்ஷத்திரிய வீரர்களை வீழ்த்திக் கொண்டிருக்கும் பீமசேனனைப் பார்வையில் {தன் கண்களில்} கண்டான். அவனால் {பீமனால்} இப்படிக் கொல்லப்படும் போது, தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படையினர், யானை வீரர்கள் ஆகியோர் துயரத்தால் உரக்கக் கதறினார்கள். போர்க்கலையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்த வெற்றியாளன் பீமனால் கொல்லப்படும்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஆயுதங்களை அறிந்தவர்களான கௌரவ வீரர்கள் அனைவரும் விருகோதரனை {பீமனை} அனைத்துப் புறங்களில் சூழ்ந்து கொண்டு, அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} மீது ஒரே நேரத்தில் கணை மாரிகளைப் பொழிந்தார்கள்.

அப்போது, அந்த வலிமைமிக்கப் பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுடைய கடும் படையணிகளின் நெருக்கமான அணிவகுப்பால் அனைத்துப் புறங்களிலும் இருந்து இப்படித் தாக்கப்படவனும், ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கணைகளால் சிதைக்கப்பட்டவனும், களத்தில் நடந்து சென்றவனும், தன் கோபத்தின் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்தவனும், கையில் கதாயுதம் கொண்டவனும், அண்ட அழிவில் வரும் காலன் போலத் தெரிந்தவனும், கொண்டாடப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைக்} கண்டு, விரைந்து அவனை அணுகி, தன் இருப்பால் அவனுக்கு ஆறுதலளித்தான். பிறகு தன் தேரில் அவனை {பீமனை} ஏற்றிக் கொண்டு, அவனது {பீமனது} அங்கங்கள் அனைத்தில் இருந்தும் கணைகளைப் பிடுங்கி, அவனை ஆரத் தழுவிக் கொண்ட உயர் ஆன்ம பிருஷத மகன் {திருஷ்டத்யும்னன்}, எதிரிகளுக்கு மத்தியிலேயே பீமசேனனுக்கு ஆறுதலை அளித்தான்.

பிரமோகனப் பிரக்ஞாயுதங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 077ஆ-திருஷ்டத்யும்னனைக் கொல்லத் தன் தம்பிகளைத் தூண்டிய துரியோதனன்; திருஷ்டத்யும்னன் பயன்படுத்திய பிரமோகனாயுதம்; துருபதனை விரட்டிய துரோணர்; பிரக்ஞாயுதத்தைப் பயன்படுத்திக் கௌரவரின் மயக்கத்தைத் தெளிவித்த துரோணர்; பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் நிலை குறித்து அஞ்சிய யுதிஷ்டிரன்; சூசீமுக வியூகம்; திருஷ்டத்யும்னன் விற்களை ஒடித்த துரோணர்; திருஷ்டத்யும்னன் குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்ற துரோணர்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} அப்போது அந்தப் பயங்கரப் போரில் தன் தம்பிகளிடம் வந்த உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “தீய ஆன்மா கொண்ட இந்தத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இப்போது பீமசேனனுடன் சேர்ந்திருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து அவனைக் கொல்வதற்கு அணுகுவோம். (போருக்காக) எதிரி நமது படையணிகளை அணுகாதிருக்கட்டும்”, என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்ட தார்தராஷ்டிரர்கள், தங்கள் அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவால் உந்தப்பட்டு, (எதிரியைச்) சந்திக்க இயலாமல், அண்ட அழிவுகாலத்தின் கடுமையான எரிக்கோள்களைப் போல, திருஷ்டத்யும்னனைக் கொல்வதற்காக வேகமாக விரைந்தனர்.

தங்கள் அழகிய விற்களை எடுத்த அந்த வீரர்கள், தங்கள் வில்லின் நாணொலியாலும், தங்கள் தேர்களின் சடசடப்பொலியாலும், இந்தப் பூமியை நடுங்கச் செய்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது கணைகளைப் பொழிந்தார்கள்.

மறுபுறம், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனின் இளமையான மகன் {திருஷ்டத்யும்னன்}, போரில் தன் முன் நின்ற உமது வீரமகன்களைக் கண்டான். போரில் தன்னைக் கொல்வதற்காக இயன்ற வரை முயன்று வரும் அவர்களைப் பிரமோகனம் {மோகனாஸ்திரம்} என்று அழைக்கப்படும் கடும் ஆயுதத்தால் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, தானவர்களுடன் மோதும் இந்திரனைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் மீது அஃதை {மோகனாஸ்திரத்தை} ஏவினான்.

பிரமோகன ஆயுதத்தால் புத்தியும், பலமும் பீடிக்கப்பட்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். தங்கள் {அழிவு} காலம் வந்ததைப் போல உணர்வுகளை இழந்து மயக்கத்தில் ஆழ்ந்த உமது மகன்களைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளோடும், யானைகளோடும், தேர்களோடும் அனைத்துப் புறங்களிலும் ஓடினார்கள் [1].

அதேவேளையில், ஆயுதங்கள் தரித்த அனைவரிலும் முதன்மையான துரோணர், துருபதனை அணுகி, மூன்று கடுங்கணைகளால் அவனைத் துளைத்தார். துரோணரால் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த ஏகாதிபதி துருபதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்}) ஏற்பட்ட தனது பழம்பகையை நினைவுகூர்ந்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தை விட்டு விலகினான். அதன்பேரில், துருபதனை இப்படி வீழ்த்தியவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான துரோணர் தனது சங்கை முழக்கினார். அவரது {துரோணரின்} சங்கொலியைக் கேட்ட சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். பிறகு, பெரும் சக்தி கொண்டவரும், ஆயுதங்கள் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், பிரமோகன ஆயுதத்தால் போரில் உணர்விழந்திருக்கும் உமது மகன்களைக் குறித்துக் கேள்விப்பட்டார்.

பிறகு, அந்த இளவரசர்களை மீட்க விரும்பிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, களத்தின் அந்தப் பகுதியை விட்டகன்று உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். வலிமைமிக்க வில்லாளியும், பெரும் ஆற்றலைக் கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அந்தப் பெரும்போரில் திரிந்து கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்டார். மேலும், தங்கள் உணர்வை இழந்திருக்கும் உமது மகன்களையும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கண்டார். பிறகு துரோணர் பிரக்ஞம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதத்தை எடுத்து, (திருதஷ்டத்யும்னனால் ஏவப்பட்ட) பிரமோகன ஆயுதத்தைச் சமன் செய்தார் {பிரமோகனாயுதத்தின் உக்கிரத்தைத் தணித்தார்}. தங்கள் உணர்வுகளை மீண்டும் அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் மீண்டும் பீமனோடும், பிருஷதன் மகனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} போரிடத் தொடங்கினர்.

பிறகு யுதிஷ்டிரன், தனது தனிப்பட்ட துருப்புகளிடம், “கவசம் தரித்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பனிரெண்டு {12} தேர்வீரர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} தலைமையாகக் கொண்டு, தங்களால் வலிமை முழுவதையும் பயன்படுத்தி, பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் சென்ற வழியில் பின்தொடர்ந்து செல்லட்டும். (அவ்விரண்டு வீரர்களைக் குறித்து அறியப்படட்டும். என் இதயம் கலக்கமுறுகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னனால் {யுதிஷ்டிரனால்} இப்படி உத்தரவிடப்பட்டவர்களும், போரில் பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான அவ்வீரர்கள், தங்கள் ஆண்மையில் செருக்குடன், “சரி” என்று சொல்லி, நடுவானைச் சூரியன் அடைந்ததும் அங்கு சென்றார்கள். எதிரிகளைத் தண்டிப்பவர்களான கைகேயர்கள் {கேகயர்கள்}, திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றல்படைத்த திருஷ்டகேது ஆகியோர், சூசிமுகம் [2] என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களைத் தாங்களே அணிவகுத்துக் கொண்டு, அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களின் தேர்பிரிவுக்குள் ஊடுருவினர்.

பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும், திருஷ்டத்யும்னனால் உணர்வுகள் இழுந்தும் இருந்த உமது துருப்புகளால், அபிமன்யு தலைமையில் (விரைந்து) வந்த வலிமைமிக்க வில்லாளிகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தெருக்களில் உள்ள மங்கையரைப் போல அவர்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். தங்க வேலைப்பாடுகள் கொண்ட, பல்வேறு நிறத்திலான கொடிமரங்களைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகள், திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் {பீமனையும்} மீட்பதற்காகப் (கௌரவப் படையணிகளைப்) பிளந்து கொண்டு பெரும் வேகத்துடன் சென்றனர்.

அபிமன்யுவின் தலைமையிலான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட பின்னவர்கள் {திருஷ்டத்யும்னனும், பீமனும்}, மகிழ்ச்சியால் நிறைந்து, உமது படையணிகளை அடிப்பதைத் தொடர்ந்தனர். அதேவேளையில், பாஞ்சாலத்தின் வீர இளவரசனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன்னை நோக்கிப் பெரும் வேகத்துடன் வரும் தனது ஆசானைக் {துரோணரைக்} கண்டதும், உமது மகன்களைக் கொல்ல அதற்கு மேலும் விரும்பவில்லை. பிறகு, கைகேயர்களின் {கேகயர்களின்} மன்னன் தேரில் விருகோதரனை {பீமனை} ஏறச் செய்த அவன் {திருஷ்டத்யும்னன்}, கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த துரோணரை எதிர்த்து பெருங்கோபத்துடன் விரைந்தான்.

எதிரிகளைக் கொல்பவரான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஒரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லைத் துண்டித்தார். தன் தலைவனிடம் {துரியோதனனிடம்} தான் உண்ட சோற்றை நினைவுகூர்ந்தும் {செஞ்சோற்றுக் கடனுக்காகவும்}, துரியோதனனுக்கு நல்லது செய்ய விரும்பியும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அவர் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினார்.

அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு கணையை எடுத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான எழுபது {70} கணைகளால் துரோணரைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் மீண்டும் ஒருமுறை அவனது வில்லைத் துண்டித்து, நான்கு அற்புதக் கணைகளால், அவனது {திருஷ்டத்யும்னனின்} நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பி, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தினால் அவனது தேரோட்டியையும் கொன்றார்.

வலிய கரங்களைக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து இறங்கி, அபிமன்யுவின் பெருந்தேரில் ஏறினான். பிறகு, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டவப் படையைப் பீமசேனன் மற்றும் பிருஷதனின் புத்திசாலி மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்வைக்கெதிரிலேயே நடுங்கச் செய்தார்.

அளவிலா சக்தி கொண்ட துரோணரால், இப்படிப் பிளக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவராலும் அஃது ஓடுவதைத் {அந்தப் படை ஓடுவதைத்} தடுக்க முடியவில்லை. துரோணரின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படை {பாண்டவப் படை}, கலங்கிய கடலைப் போல அங்கே சுழலத் தொடங்கியது. அந்தப் (பாண்டவப்) படையை அப்படிப்பட்ட நிலையில் கண்ட உமது துருப்பினர் மகிழ்ச்சியால் நிறைந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டு, எதிரியின் படையணிகளை இப்படி எரித்துக் கொண்டிருந்த ஆசானை {துரோணரைக்} கண்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உரக்க முழக்கமிட்டபடி, துரோணரைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனாதிகளுடன் மோதிய பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 078-பீமனும் துரியோதனனும் மோதிக்கொண்டது; பீமனால் தாக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட அவனது தம்பிகள் பீமனை எதிர்க்க விரைந்தது; அவர்கள் அனைவரையும் தாக்கிய பீமன்; அபிமன்யு தலைமையில் பனிரெண்டு வீரர்களை அனுப்பிய யுதிஷ்டிரன்; இதைக் கண்ட துரியோதனன் தம்பிகள் பீமனைக் கைவிட்டு அவர்களுடன் மோதியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு தன் புலனுணர்வுகள் மீண்ட மன்னன் துரியோதனன், மீண்டும் தன் கணை மழைகளால் பீமனைத் தடுக்கத் தொடங்கினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் பீமசேனனிடன் வீரத்துடன் போரிடத் தொடங்கினார்கள். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனும், தன் தேரை அடைந்து, அஃதில் ஏறி, உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வலிமையானதும், கடினமானதும், எதிரிகளின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லை எடுத்த அவன் {பீமன்}, அம்மோதலில் உமது மகன்களைத் தனது கணைகளால் துளைத்தான்.

மன்னன் துரியோதனன் மிகக்கூரிய நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் வலிமைமிக்கப் பீமசேனனின் முக்கிய உறுப்புகளைத் தாக்கினான். இப்படி உமது மகனால் {துரியோதனனால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {பீமன்}, கோபத்தினால் கண்கள் சிவந்து, துரியோதனனின் இரு கரங்களையும், மார்பையும் மூன்று கணைகளால் தாக்கினான். ஆனால் இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்காத அவன் {துரியோதனன்} மலைகளின் இளவரசனைப் போல நின்றான்.

கோபத்தால் தூண்டப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்த அந்த இரு வீரர்களையும் கண்டவர்களும், வீரர்களுமான துரியோதனனின் தம்பிகள் அனைவரும், தங்கள் உயிரைவிடத் துணிந்து, பயங்கரச் செயல் புரியும் விருகோதரனைத் {பீமனைத்} தாக்க முன்பே திட்டமிட்டிருந்தபடி, உறுதியான தீர்மானத்துடன் அவனைத் தாக்கச் சென்றனர்.

அப்படி அவர்கள் அந்தப் போரில் அவன் {பீமன்} மீது பாய்ந்த போது, பெரும்பலம்படைத்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்கு இணையான எதிரியைத் தாக்க விரையும் யானையைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். சினத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் சக்தியைக் கொண்டவனும், கொண்டாடப்படும் வீரனுமான அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் உமது மகன் சித்திரசேனனைத் பீடித்தான். அந்தப் போரில் உமது {மற்ற} மகன்களைப் பொறுத்தவரை, பரதனின் வழித்தோன்றலான அவன் {பீமன்}, தங்கச்சிறகுகள் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான பல்வேறு வகையான கணைகளால் அவர்கள் அனைவரையும் தாக்கினான்.

தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் முறையாகச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அபிமன்யுவையும், பிறரையும் சேர்த்து வலிமைமிக்கப் பனிரெண்டு {12} தேர்வீரர்களைப் பீமசேனனைப் பின் தொடந்து செல்லும்படி அனுப்பினான். அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களை எதிர்த்துச் சென்றனர். சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ தங்கள் தேர்களில் பிரகாசித்தவர்களும், சுடர்மிகும் ஒளியுடன் திகழ்ந்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அந்தப் பயங்கரப்போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட வல்லமை மிக்க உமது மகன்கள் (தாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த) பீமனைக் கைவிட்டனர். எனினும், தன்னைக் கைவிட்டு உயிரோடு போகும் {தப்பிச் செல்லும்} அவர்களைக் கண்ட குந்தியின் மகனால் {பீமனால்} [1] அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை [2]” {என்றான் சஞ்சயன்}.

பிற்பகலில் நடந்த பயங்கரப் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 079- துரியோதனன் தம்பிகளுடன் போரிட்ட பீமனும், அபிமன்யுவும்; விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; சித்திரசேனனையும், விகர்ணனையும் தாக்கிய அபிமன்யு; துரியோதனனுடன் மோதிய திரௌபதியின் மகன்கள்; பீஷ்மரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; போர் வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்களைத் தொடர்ந்து சென்ற பீமசேனனுடன் சேர்ந்த அபிமன்யு, அவர்கள் {உமது மகன்கள்} அனைவரையும் பீடித்தான். துரியோதனனுடன் சேர்த்து, உமது படையைச் சார்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பிறரும், (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பிருஷதன் மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} அபிமன்யுவும், பீமசேனனும் சேர்ந்ததைக் கண்டு, தங்கள் விற்களை எடுத்து, அந்த வீரர்கள் இருந்த இடத்திற்கு வேகமான தங்கள் குதிரைகளில் சென்றனர். அந்தப் பிற்பகலில் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பயங்கரம் நிறைந்த ஒரு மோதல் நடைபெற்றது.( இஃது அபராண்ணகாலம் என்று குறிக்கப்படுகிறது. 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள்ளான 6 நாழிகைக் காலமே அபராண்ணகாலமாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்றால், 18 நாழிகை என்பது 7 மணிநேரம் 12 நிமிடங்களாகும். 24 நாழிகை என்பது 9 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். 60 நாழிகையைக் கொண்டது ஒரு நாள். காலை 6 மணியில் இருந்து நாள் தொடங்குவதாக இருந்தால் 18வது நாழிகை என்பது மதியம் 1 மணி 12 நிமிடத்தையும், 24 நாழிகை என்பது மாலை 3 மணி 36 நிமிடத்தையும் குறிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்திலேயே மேற்கண்ட போர் நடைபெற்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.)

அந்தக் கடும்போரில் விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு, அவனை {விகர்ணனை} இருபத்தைந்து {25} குறுங்கணைகளால் துளைத்தான். குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைக் கைவிட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விகர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தது.சினம் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் அந்தப் போரில் துரியோதனனைத் தடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திரௌபதியின் மகன்களைக் கூரிய கணைகளால் துளைத்தான். (பதிலுக்கு) அவர்களால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அவன் {துரியோதனன்}, (தன் சாரலில் வழுக்கிச் செல்லும்) பாண்டரங் {சிவப்பு சுண்ணாம்பு} கலந்த நீர் அருவியுடன் கூடிய ஒரு மலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

வலிமைமிக்கப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் மந்தையை நையப்புடைக்கும் மந்தையாளனை {இடையனைப்} போல, அந்தப் போரில் பாண்டவப் படையைப் பீடித்தார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளிலும் ஆயிரக்கணக்கில் தலையில்லா முண்டங்கள் எழுந்தன.

குருதியே நீராக, (போராளிகளால் ஏவப்பட்ட) கணைகளே எதிர்ச்சுழிகளாக அந்தப் போர்க்களமே ஒரு கடலைப் போல இருந்தது. அந்தக் கடலில் யானைகள் தீவுகளாகவும், குதிரைகள் அலைகளாகவும் இருந்தன. துணிச்சல் மிக்க வீரர்கள் அதை {அந்தக் கடலைக்} கடக்கத் தேர்களே படகுகளாக இருந்தன. கரங்கள் வெட்டப்பட்டு, கவசம் இழந்து, அருவருக்கத்தக்க வகையில் சிதைக்கப்பட்டிருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலர், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அங்கே கிடப்பது தெரிந்தது. இரத்தத்தில் குளித்திருந்த உயிரிழந்த மதங்கொண்ட யானைகளின் உடல்களுடன் கூடிய அந்தப் போர்க்களத்தைக் காண, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் போரிட விரும்பாத ஒரு மனிதனும் இல்லாத அந்த அற்புதக் காட்சியை அந்தப் போரில் நாங்கள் கண்டோம்.

இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} உமது படை மற்றும் பாண்டவர்களின் படை ஆகிய இரண்டையும் சார்ந்த அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் புகழ் வேண்டியும், வெற்றியை விரும்பியும் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 080-துரியோதனனை எச்சரித்த பீமன்; பீமனால் கொடிமரம் வீழ்த்தப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்ட துரியோதனன்; துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர்; பீமனைத் தேர்களால் சூழ்ந்த ஜெயத்ரதன்; விகர்ணனின் மார்பைத் துளைத்த அபிமன்யு; துர்முகனின் கவசத்தை ஈட்டியால் பிளந்து தாக்கிய சுருதகர்மன்; தேரிழந்த சுருதகர்மனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சுதசோமன்; ஜெயத்சேனனின் மார்பைத் துளைத்த சதானீகன்; சதானீகனின் வில்லை அறுத்த துஷ்கர்ணன்; துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்; பாஞ்சாலர்களை அழித்த பீஷ்மர் அன்றைய நாள் போரை நிறுத்திக் கொண்டது; திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்ட யுதிஷ்டிரன் மகிழ்ந்து, ஓய்வெடுக்கத் தனது கொட்டகைக்குச் சென்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் சிவப்பு நிறம் ஏற்றதும், போர்விருப்பம் கொண்ட மன்னன் துரியோதனன், பீமனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி விரைந்தான். (இப்படி) ஆழ்ந்த பகையைக் கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரன் {துரியோதனன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட பீமசேனன் , கோபத்தால் தூண்டப்பட்டு, “பல வருடங்களாக நான் விரும்பிக் கொண்டிருந்த அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. போரைவிட்டு நீ விலகாதிருந்தால் இன்றே நான் உன்னைக் கொல்வேன். உன்னைக் கொன்று குந்தி மற்றும் திரௌபதியின் துயரத்தையும், வனவாசத்தின் போது ஏற்பட்ட எங்கள் துன்பங்களையும் இன்று நான் போக்கிக் கொள்வேன்.

செருக்கு நிறைந்த நீ, பாண்டு மகன்களை முன்னர் அவமதித்திருக்கிறாய். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அந்தப் பாவம் நிறைந்த நடத்தையின் கொடிய கனியைப் பார். கர்ணன் மற்றும் சுபலன் மகனின் {சகுனியின்} ஆலோசனைகளைப் பின்பற்றி, பாண்டவர்களைச் சிறுமை படுத்திய நீ, உன் விருப்பப்படியே முன்னர் நடந்து கொண்டாய். (அமைதியை) இரந்து கேட்ட கிருஷ்ணனையும் நீ அவமதித்தாய். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், உனது செய்திகளுடனும் உலூகனை (எங்களிடம்) அனுப்பி வைத்தாய். இவை அனைத்திற்காகவும், உனது சொந்தங்களுடன் கூடிய உன்னை இன்று கொன்று, முந்தைய நாட்களில் நீ செய்த அந்தக் குற்றங்கள் அனைத்திற்காகவும் பழிதீர்த்துக் கொள்வேன்” என்றான் {பீமன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன் தனது வில்லை வளைத்து, மீண்டும் மீண்டும் இழுத்து, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற பயங்கரமான கணைகளை எடுத்து, சினத்தால் நிறைந்து, முப்பத்தாறு {36} கணைகளைத் துரியோதனன் மீது விரைவாக ஏவினான். சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போன்ற அக்கணைகள் இடி போன்ற சக்தியுடன் நேராகச் சென்றன.

அதன் பிறகு, இரு கணைகளைக் கொண்டு துரியோதனனையும், இன்னும் இரு கணைகளைக் கொண்டு அவனது {துரியோதனனின்} தேரோட்டியையும் துளைத்தான். மேலும் நான்கு கணைகளைக் கொண்டு துரியோதனனின் (நான்கு) குதிரைகளை எமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, பெரும் சக்தியுடைய இரு கணைகளைக் கொண்டு, மன்னனின் {துரியோதனனின்} அற்புதத் தேரில் இருந்த குடையை அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினான். மேலும் மூன்று கணைகளைக் கொண்டு அவனது அழகிய சுடர்மிகும் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான். அதை வெட்டி வீழ்த்திய அவன் {பீமன்}, உமது மகனின் {துரியோதனனின்} பார்வைக்கு முன்பாகவே பேரொலியுடன் முழங்கினான் {உரக்க கர்ஜித்தான்}.

பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பின்னவனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரம், மேகங்களில் இருந்து விழும் மின்னலின் கீற்றைப் போல, அவனது தேரில் இருந்து திடீரெனப் பூமியில் விழுந்தது. ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனைப் போலப் பிரகாசிப்பதும், யானைப் பொறியைத் தாங்கியதுமான குருமன்னனின் {துரியோதனனின்} அந்த அழகிய கொடிமரம் (பீமசேனனால்) வெட்டப்பட்டு வீழ்வதை மன்னர்கள் அனைவரும் கண்டார்கள் [1]. வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், புன்னகைத்துக் கொண்டே, அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் துளைக்கும் வழிகாட்டியைப் {பாகனைப்} போல, அந்தப் போரில் பத்து {10} கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான சிந்துக்களின் வலிமைமிக்க மன்னன் {ஜெயத்ரதன்}, துணிவுமிக்க வீரர்கள் பலரால் ஆதரிக்கப்பட்டு, துரியோதனன் பக்கத்தில் தன்னை நிறுத்திக் கொண்டான். பெரும் தேர்வீரரான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அளவிலா சக்தி கொண்டவனும், குரு குலத்தின் மகனும், பழிவாங்கும் குணம் கொண்டவனுமான துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டார். பீமசேனனால் ஆழமாகத் துளைக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பெரும் வலியை உணர்ந்து, {மயக்கமடைந்து} அந்தத் தேரின் தட்டில் அமர்ந்தான் [2].

அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய ஜெயத்ரதன், பல்லாயிரக் கணக்கான தேர்களுடன் அனைத்துப் புறங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டான். பிறகு, திருஷ்டகேது, பெரும் சக்தி கொண்ட அபிமன்யு, கேகயர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுடன் போரிட்டனர்.

உயர் ஆன்மா கொண்ட அபிமன்யு, தன் அற்புத வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், இடியைப் போன்றோ, காலனைப் போன்றோ தாக்குபவையும் நேரானவையுமான ஐந்து கணைகளால் ஒவ்வொருவரையும் துளைத்து, அவர்கள் அனைவரையும் தாக்கினான். இதன் பேரில் (பொறுமையாக) அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது, மேரு மலைகளின் சாரலில் மழையைப் பொழியும் நீர் நிறைந்த மேகங்களைப் போல, இலக்குத் தவறாமல் கூரிய கணைமாரியை அடித்தார்கள்.

ஆனால், அவர்களால் போரில் இப்படிப் பீடிக்கப்பட்டாலும், ஆயுதங்களை நன்கறிந்த ஒப்பற்ற வீரனான அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவாசுரப் போரில் வலிமைமிக்க அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல, உமது மகன்கள் அனைவரையும் நடுங்கச் செய்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற கடுமையான பதினான்கு {14} பல்லங்களை {அகன்ற தலை கொண்ட கணைகளை} விகர்ணன் மீது ஏவினான்.

பெரும் ஆற்றல் கொண்ட அவன் {அபிமன்யு}, போரில் நடனமாடுபவனைப் போலச் சென்று, அக்கணைகளால் {14 பல்லங்களால்} விகர்ணனின் கொடிமரத்தை அவனது தேரில் இருந்து விழச் செய்தான். மேலும் அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்றான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், நேராகச் செல்லக்கூடியவையும், கவசங்கள் அத்தனையையும் ஊடுருவக்கூடியவையுமான பிற கணைகள் பலவற்றை விகர்ணன் மீது மீண்டும் ஏவினான். கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக்கணைகள், விகர்ணனை அடைந்து, அவனது உடலின் ஊடாகக் கடந்து சென்று, {இஸ் என} இரையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறகுகளும் முனைகளும் கொண்ட அந்தக் கணைகள், விகர்ணனின் குருதியில் குளித்து, பூமியில் இரத்தத்தைக் கக்குவதைப் போலத் தோன்றின.

இப்படி விகர்ணன் துளைக்கப்பட்டதைக் கண்ட அவனது இரத்தச் சகோதரர்கள், சுபத்திரையின் மகனின் {அபமன்யுவின்} தலைமையிலான தேர்வீரர்களுக்கு எதிராக விரைந்தார்கள். தங்கள் (தனிப்பட்ட) தேர்களில் இருந்த அந்த ஒப்பற்ற வீரர்கள், பல சூரியன்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த (பாண்டவப் படையின்) போராளிகளிடம் வந்து ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.

ஏழு {7} கணைகளால் ஸ்ருதகர்மாவைத் துளைத்த துர்முகன் [3], ஒரு கணையால் அவனது {ஸ்ருதகர்மாவின்} கொடிமரத்தை வெட்டிவீழ்த்தி, ஏழு கணைகளால் அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியைத் துளைத்தான். மேலும் நெருங்கிய அவன் {துர்முகன்}, தங்கக் கவசம் பூண்டவையும், காற்று போன்ற வேகத்தைக் கொண்டவையுமான அவனது {ஸ்ருதகர்மாவின்} குதிரைகளை ஆறு கணைகளால் கொன்று, பிறகு அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியையும் கொன்றான். எனினும், குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரிலேயே நின்ற ஸ்ருதகர்மன், பெரும் கோபம் கொண்டு, சுடர்மிகும் கடும் எரி கோள் ஒன்றைப் {தூமகேதுவைப்} போன்ற ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} வீசினான். பிரகாசத்துடன் சுடர்விட்ட அந்த ஈட்டி புகழ்பெற்ற துர்முகனின் கடினமான கவசத்தின் ஊடாகக் கடந்து, பூமியைத் துளைத்தது.(ஸ்ருதகர்மன் – சகாதேவனின் மகன், துர்முகன் – துரியோதனனின் தம்பி)

அதே வேளையில், தேரை இழந்த சுருதகர்மனைக் கண்ட சுதசோமன் [4] துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே அவனை {ஸ்ருதகர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டான். வீரனான சுருதகீர்த்தி உமது மகனான ஜெயத்சேனனைக் கொல்ல விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் புகழ்மிக்கப் போர்வீரனைப் போரில் எதிர்த்து விரைந்தான். அப்போது, உமது மகன் ஜெயத்சேனன், புன்னகைத்தவாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கரங்களை நீட்டி வளைத்தபடி, கூரிய க்ஷுரப்ரத்தம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் உயர் ஆன்ம சுருதகீர்த்தியின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.(பீமனின் மகன் சுதசோமன், அர்ஜுனனின் மகன் சுருதகீர்த்தி)தன் இரத்தச் சகோதரனின் வில் வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான சதானீகன் [5], சிங்கம் போல அடிக்கடி முழக்கமிட்டபடி அந்த இடத்திற்கு வந்தான். அந்தப் போரில் பெரும் சக்தியுடன் தனது வில்லை இழுத்த சதானீகன், பத்து {10} கணைகளால் ஜெயத்சேனனைத் துளைத்துவிட்டு, மதங்கொண்ட யானையைப் போல முழங்கினான். கவசம் அனைத்தையும் துளைக்கவல்லதும், கூரிய முனை கொண்டதுமான மற்றொரு கணையை எடுத்த அவன் {சதானீகன்}, ஜெயத்சேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.(நகுலனின் மகன் சதானீகன்)

சரியாக அதே நேரத்தில், தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணன், கோபத்தால் தூண்டப்பட்டு, சதானீகனின் வில்லையும் கணையையும் அறுத்தான். அப்போது பெரும் சக்தியைத் தாங்க வல்ல மற்றொரு அற்புத வில்லை எடுத்த வலிமைமிக்கச் சதானீகன், பல கூரிய கணைகளைக் குறிபார்த்தான். தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணனிடம், “நில்லும்”, “நில்லும்” என்று சொன்ன அவன் {சதானீகன்}, பல பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கூரிய கணைகளை அவன் {துஷ்கர்ணன்} மீது ஏவினான். ஒரு கணையால் துஷ்கர்ணனின் வில்லை விரைந்து வெட்டிய அவன் {சதானீகன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரு கணைகளால் அவனது தேரோட்டியைக் கொன்று, ஏழு கணைகளால் துஷ்கர்ணனையும் துளைத்தான்.

களங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான்.பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.

துஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுக் கேகயச் சகோதரர்களை (கேகயச் சகோதரர்கள் ஐவரை) எதிர்த்துச் சென்றனர்.

(அரண் அமைக்கப்பட்ட) நகரங்களைப் போன்றவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களிலான அழகிய கொடிமரங்களால் அருளப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அற்புத விற்களைத் தாங்கியபடியும், அழகிய கவசங்களைத் தரித்தபடியும், அற்புத கொடிமரங்களைக் கொண்டபடியும் இருந்த அந்த வீரர்கள், ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டுக்குள் நுழையும் சிங்கங்களைப் போலப் பகைவரின் படைக்குள் நுழைந்தனர். தேர்களும், யானைகளும் ஒன்றோடொன்று கலந்து போனதும், அவர்களுக்கும் எதிரிக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

சூரியன் மறையும் அந்தக் குறுகிய காலத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டி யமலோகத்தைப் பெருக்கும் {அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையைப் பெருக்கும்} அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வீரர்களும் குதிரைவீரர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தனர்.

கோபத்தால் தூண்டப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், தன் நேரான கணைகளால் உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொல்லத் தொடங்கினார். அவரது கணைகள் பாஞ்சாலப் போராளிகளை யமனுலகு அனுப்பி வைத்தன. பாண்டவர்களின் படையணிகளை இப்படி உடைத்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, {அந்த நாளின்} இறுதியில் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓய்வெடுக்கத் தனது பாசறைக்குச் சென்றார். திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரனும், அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்து, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது கொட்டகைக்கு ஓய்வெடுக்கச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

ஆறாம் நாள் போர் முற்றும்

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading