துரியோதனனை உற்சாகப்படுத்திய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 081-: ஏழாம் நாள் போர்த் தொடக்கம்; துரியோதனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்; பீஷ்மரின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த துரியோதனன்; போருக்குப் புறப்பட்ட படை குறித்த சஞ்சயன் வர்ணனை..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவர் மேல் ஒருவர் பகையுணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், இரத்தம் தோய்ந்த மேனியுடையவர்களுமான அந்த வீரர்கள் {ஆறாம் நாள் போர் முடிவில்} ஓய்ந்திருக்கத் தங்கள் பாசறைக்குச் சென்றனர். விதிகளுக்கு ஏற்புடைய வகையில் சிறிது நேரம் {அன்றிரவு} இளைப்பாறி (அந்த நாளைய சாதனைகளுக்காக) ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட அவர்கள், மீண்டும் போர்புரியக் கருதி கவசம் தரித்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
பிறகு, துயரில் மூழ்கியவனான உமது மகன் {துரியோதனன்}, (தன் காயங்களில்) இருந்து சொட்டிய குருதியால் நனைந்தபடி, பாட்டனிடம் {பீஷ்மரிடம் துரியோதனன்} [1], “நமது துருப்புகள் மூர்க்கமானவையாகவும், பயங்கரமானவையாகவும், எண்ணிலடங்கா கொடிமரங்களைச் சுமப்பவையாகவும் இருக்கின்றன. மேலும், அவை முறையாக அணிவகுக்கப்பட்டும் இருக்கின்றன. எனினும், துணிவுமிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பாண்டவர்கள் (நமது அணிவகுப்பிற்குள்) ஊடுருவி (நமது துருப்புகளைப்} பீடித்து, படுகொலை செய்து, காயப்படாமல் தப்பிக்கிறார்கள். நம் அனைவரையும் குழப்பும் அவர்கள் போரில் பெரும் புகழை வென்றுள்ளனர்.
இடியைப் போன்ற வலிமையுடன் இருந்த நமது மகர [2] அணிவகுப்புக்குள் ஊடுருவிய பீமன், காலனின் கணை {யமதண்டங்களைப்} போன்ற பயங்கரக் கணைகளால் என்னைப் பீடித்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவனை {பீமனைக்} கண்ட நான், ஓ! மன்னா {பீஷ்மரே}, எனது புலன் உணர்வுகளை இழந்தேன் {அச்சத்தால் மயக்கமடைந்தேன்}. இப்போதும் எனது மன அமைதியை என்னால் மீட்க முடியவில்லை. உமது அருளால், ஓ! உண்மையில் {சத்தியத்தில்} உறுதியுள்ளவரே {சத்தியசந்தரே, பீஷ்மரே}, பாண்டு மகன்களைக் கொன்று வெற்றியை அடைய நான் விரும்புகிறேன் [3]” என்றான் {துரியோதனன்}.
அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவரும், ஆயுதம் தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் மனோ சக்தி கொண்டவருமான கங்கையின் உயர் ஆன்ம மகன் {பீஷ்மர்}, துரியோதனன் கொண்ட துயரைப் புரிந்து கொண்டு, உற்சாகமற்றிருந்தாலும் சிரித்தவாறே அவனிடம் {பீஷ்மர் துரியோதனனிடம்}, “விடா முயற்சியுடனும், எனது முழு ஆன்மாவுடனும் (அவர்களது) படைக்குள் ஊடுருவி, ஓ! இளவரசே {துரியோதனா}, உனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தர நான் விரும்புகிறேன். உனக்காக நான் ஒரு போதும் பாசாங்கு செய்வதில்லை. பாண்டவர்களின் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மூர்க்கமானவர்களாகவும், எண்ணிலடங்காதவர்களாகவும் இருக்கின்றனர். பெரும் புகழ்பெற்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் மிகத் துணிவுள்ளவர்களாகவும், ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
களைப்படைய இயலாத அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் கோபத்தையே கக்குகிறார்கள். ஆற்றலில் வளர்ந்து, உன் மீது பகையை வளர்த்திருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்}, எளிதில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் முழு ஆன்மாவுடனும், என் உயிரை விட்டும் நான் அந்த வீரர்களுடன் போராடுவேன். ஓ! பெரும் மகிமை கொண்டவனே {துரியோதனா}, இன்று உனக்காகவே, இந்தப் போரில் என் உயிர் துச்சமாக வெளிப்படும். {உனக்காக என்னுடைய உயிரானது இப்போது காப்பாற்றத்தக்கதன்று}. இங்கிருக்கும் உன் எதிரிகளை விடு, உன் பொருட்டுத் தேவர்களுடனும், தைத்தியர்களுடனும் கூடிய உலகங்கள் அனைத்தையும் கூட நான் எரித்துவிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, அந்தப் பாண்டவர்களுடன் போரிட்டு, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் செய்வேன்” என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் பெற்றதால், அவனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. (தனது படையின்) துருப்புகள் அனைத்தையும், மன்னர்கள் அனைவரையும் முன்னேறும்படி மகிழ்ச்சியாக அவன் {துரியோதனன்} உத்தரவிட்டான். அந்த உத்தரவின் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் யானைகளைக் கொண்ட அவனது {துரியோதனனது} படை முன்னேறத் தொடங்கியது. பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்திருந்த அந்தப் பெரும்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது.
யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் அடங்கிய அந்த உமது படை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தது. பல்வேறு விதமான ஆயுதங்கள் தரித்த அரசப் போராளிகள் பலர் உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தனர். தேர்கள், காலாட்படைவீரர்கள், யானைகள், பெரு உடல்களைக் கொண்ட குதிரைகள் ஆகியவை களத்தில் நகர்ந்ததனால் எழுப்பப்பட்ட புழுதியானது காலைச் சூரியன் போலச் சிவந்து, சூரியக் கதிர்களை மறைத்த படி மிக அழகாகத் தெரிந்தது.
காற்றில் அசைந்து, வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தவையும், தேர்கள் மற்றும் யானைகளில் இருந்தவையுமான வண்ணக் கொடிகள் பல, மேகங்களுக்கு மத்தியில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தன. கிருதயுகத்தில் தேவர்களாலும், பெரும் அசுரர்களாலும் கடையப்பட்ட கடலின் முழக்கத்தைப் போல, மன்னர்களால் வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளின் முழக்கம் கடுமையானவையாகவும், பேரொலியாகவும் இருந்தன. பல்வேறு நிறங்கள், வடிவங்ககள் ஆகியவற்றை (உடைய போராளிகளைக்) கொண்டவையும், செருக்குடன் காணப்பட்டவையும், பகை வீரர்களைக் கொல்ல இயன்றவையுமான உமது மகன்களின் அந்தப் படை, யுக முடிவின் போது ஏற்படும் மேகங்களின் திரள்களைப் போல மூர்க்கமாக இரைந்தன” {என்றான் சஞ்சயன்}.
மண்டல வஜ்ர வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 082-துரியோதனனுக்கு உறுதியளித்த பீஷ்மர்; துரியோதனனின் காயங்களுக்கு மூலிகை கொடுத்த பீஷ்மர்; பீஷ்மர் அமைத்த மண்டல வியூகம்; மண்டல வியூகத்தின் அமைப்பு; யுதிஷ்டிரன் அமைத்த வஜ்ர வியூகம்; ஏழாம் நாள் போரில் நேருக்கு நேர் மோதிய வீரர்களின் பெயர்கள்; அர்ஜுனன் ஏவிய ஐந்திர ஆயுதம்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்தனையில் ஆழ்ந்திருந்த உமது மகனிடம் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவனிடம் {துரியோதனனிடம்}, “நான், துரோணர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன், அஸ்வத்தாமன், விகர்ணன், பகதத்தன், சுபலனின் மகன் {சகுனி}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் பாஹ்லீகன், திரிகர்த்தர்களின் வலிமைமிக்க மன்னன் {சுசர்மன்}, மகதர்களின் ஒப்பற்ற ஆட்சியாளன் {ஜெயத்சேனன்}, கோசலர்களின் மன்னன் பிருஹத்பலன், சித்திரசேனன், விவிம்சதி, நெடிய கொடிமரங்களால் அருளப்பட்ட தேர்வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோர், சிறந்த குதிரைவீரர்கள் அமர்ந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான நாட்டுக் குதிரைகள், அடங்கா மதம் கொண்டவையும், மதப்பெருக்குக் கொண்ட கன்னங்களையும், வாய்களையும் கொண்டவையுமான சிறந்த யானைகள், பல்வேறு இடங்களில் பிறந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருக்கும் துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள் பலர் ஆகியோர் அனைவரும் உனக்காகப் போரிடத் தயாராக இருக்கிறார்கள். உனக்காகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாக இருக்கும் இவர்களாலும், இன்னும் பலராலும் தேவர்களையே கூடப் போரில் வீழ்த்திவிட முடியும் என நான் நினைக்கிறேன்.
எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு நன்மையானது எது என்பதையே நான் உனக்கு எப்போதும் சொல்ல வேண்டும். வாசவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்த தேவர்களாலேயே கூடப் பாண்டவர்களை வீழ்த்த முடியாது. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஆற்றலில் மகேந்திரனுக்கு இணையானவர்களாக இருக்கிறார்கள். எனினும், என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நீ சொல்வதைச் செய்வேன். ஒன்று நான் போரில் பாண்டவர்களை வீழ்த்துவேன், அல்லது அவர்கள் என்னை வீழ்த்துவார்கள்” என்றார் {பீஷ்மர்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன பாட்டன் {பீஷ்மர்}, அவனது {துரியோதனனின்} காயங்களுக்காகப் பெரும் திறங்கொண்ட அற்புத மூலிகையொன்றை அவனிடம் கொடுத்தார் [1]. அதைக் கொண்டு உமது மகன் {துரியோதனன்} தனது காயங்களை ஆற்றிக் கொண்டான்.அதிகாலையில் வானம் தெளிவாக இருந்த போது, அணிவகுப்பு வகைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களில் முதன்மையானவரும், வீரமிக்கவருமான பீஷ்மர், அடர்த்தியான ஆயுதங்களால் நெருங்கியதும், மண்டலம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் [2] தனது துருப்புகளை அணிவகுத்தார்
வீரர்களில் முதன்மையானோர், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களால் அது {அந்த மண்டல வியூகம்} நிறைந்திருந்தது. மேலும் அது, பல்லாயிரக்கணக்கான தேர்கள், வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த குதிரை வீரர்களின் பெரும்படை ஆகியவற்றால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தது, ஒவ்வொரு யானைக்கு அருகிலும் ஏழு தேர்கள் அமர்த்தப்பட்டன, மேலும் ஒவ்வொரு தேருக்கு அருகிலும் ஏழு குதிரைவீரர்கள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு குதிரைவீரனுக்குப் பின்பு ஏழு வில்லாளிகள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு வில்லாளிக்குப் பின்பும் கேடயங்களுடன் கூடிய ஏழு போராளிகள் அமர்த்தப்பட்டனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் அணிவகுக்கப்பட்டும், பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டும் இருந்த உமது படை கடும்போருக்காகக் காத்திருந்தது.
பத்தாயிரம் குதிரைகளும், அதே அளவு {பத்தாயிரம்} யானைகளும், பத்தாயிரம் தேர்களும், சித்திரசேனனுடன் சேர்ந்த கவசம் தரித்த உமது மகன்களும் பாட்டனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டார்கள். மேலும், அந்தத் துணிவுமிக்க வீரர்களாலும், கவசம் தரித்த பெரும்பலமுடைய அந்த இளவரசர்களாலும் (பதிலுக்குப்) பீஷ்மர் பாதுகாக்கப்பட்டார். அருள் அனைத்தும் கொண்டவனும், கவசம் தரித்தவனும், களத்தில் தன் தேரில் அமர்ந்திருந்தவனுமான துரியோதனன், சொர்க்கத்தில் உள்ள சக்ரனைப் {இந்திரனைப்} போல ஒளிர்ந்தான்.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்களின் சடசடப்பொலி மற்றும் இசைக்கருவிகளின் ஆரவாரம் ஆகியவற்றைக் கேட்கவிடாமல் செவிடாக்கும் பேரொலியாக உமது மகன்களின் முழக்கங்கள் இருந்தன. எதிரிகளைக் கொல்பவர்களான தார்தராஷ்டிரர்களின் மண்டலம் என்று அழைக்கப்பட்ட வலிமைமிக்க, ஊடுருவப்பட முடியாத வியூகம் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, மேற்கு முகமாக {மேற்கு நோக்கி} செல்லத் தொடங்கியது. எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத அஃது, அனைத்து இடங்களிலும் அழகாகத் தெரிந்தது. மண்டலம் என்று அழைக்கப்பட்ட மிகக் கடுமையான அந்த வியூகத்தைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், வஜ்ரம் என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்தான் [2].
படைப்பிரிவுகள் இப்படி அணிவகுக்கப்பட்டதும், முறையான இடங்களில் நின்று கொண்டிருந்த தேர்வீர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் சிங்க முழக்கமிட்டனர். தங்களுக்குரிய படைகளின் துணையோடு, துணிவுமிக்கவர்களும், தாக்குவதை நன்கறிந்தவர்களும், போரை எதிர்பார்த்திருந்தவர்களுமான இருபடையின் வீரர்களும், தங்கள் ஒவ்வொருவரின் வியூகத்தையும் பிளக்க விரும்பி முன்னேறிச் சென்றனர்.
பரத்வாஜரின் மகன் {துரோணர்} மத்ஸ்ய மன்னனை {விராடனை} எதிர்த்தும்,
அவரது மகன் (அஸ்வத்தாமன்) சிகண்டியை எதிர்த்தும் சென்றனர்.
மன்னன் துரியோதனன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்துத் தானே சென்றான்.
நகுலனும், சகாதேவனும் மத்ரர்களின் மன்னனை {சல்லியனை} எதிர்த்துச் சென்றனர்.
அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், இராவத்தை {இராவானை [அ] அரவானை எதிர்த்துச் சென்றனர்.
பல மன்னர்கள் கூடி தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட்டனர்.
விடா முயற்சி கொண்ட பீமசேனன், போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனின் மகன் (அபிமன்யு), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன், விகர்ணன் மற்றும் துர்மர்ஷணன் ஆகிய உமது மகன்களுடன் போரிட்டான்.
ஹிடிம்பையின் மகனான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, பிராக்ஜோதிஷதர்களின் ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், தன் தொண்டர்களுக்கு மத்தியில் இருந்த ஒப்பற்ற சாத்யகியை எதிர்த்துப் போரிட்டான்.
பெரிதும் முயற்சி செய்பவனான பூரிஸ்ரவஸ், {சேதி நாட்டு மன்னன்} திருஷ்டகேதுவை எதிர்த்துப் போரிட்டான்.
தர்மனின் மகனான யுதிஷ்டிரன், {அம்பஷ்டர்களின்} மன்னன் சுருதாயுஷை எதிர்த்து முன்னேறினான்.
{விருஷ்ணி குலத்தின்} சேகிதானன் அந்தப் போரில் கிருபரை எதிர்த்துப் போரிட்டான். பலத்துடன் முயற்சித்த (குரு வீரர்களில்) பிறர், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனை [2] எதிர்த்து முன்னேறினர். மேலும் ஆயிரக்கணக்கான (பிற) மன்னர்கள், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, கணைகள் {நாராசங்கள்}, கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதிக்கப்பட்ட தண்டங்கள்} ஆகியவற்றைக் கையில் கொண்டு தனஞ்சயனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனான அர்ஜுனன், விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்து வகை வியூகங்களையும் அறிந்தவரும், உயர் ஆன்மா கொண்டவருமான கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்} போருக்காக அணிவகுக்கப்பட்டிருக்கும் தார்தராஷ்டிரத் துருப்புகளைப் பார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, (என்னுடன்) போர் புரிய விரும்புபவர்களும், துணிவுமிக்கவர்களுமான எண்ணிலா வீரர்களைப் பார். ஓ! கேசவா {கிருஷ்ணா}, தன் சகோதரர்களுடன் கூடிய திரிகர்த்தர்களின் ஆட்சியாளனைப் பார். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் (என்னுடனான) போரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அனைவரையும், ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, இன்றே, உன் கண்களுக்கு எதிரிலேயே நான் கொல்லப்போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லின் நாணைத் தேய்த்து, எண்ணற்ற அந்த மன்னர்களின் மேல் தனது கணைகளை மழையாகப் பொழிந்தான். அந்தப் பெரும் வில்லாளிகளும், மழைக்காலத்தில் நீரால் தடாகத்தை நிரப்பும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணைமாரியை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தார்கள். அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான – அர்ஜுனனையும், கிருஷ்ணனையும்} அந்நிலையில் கண்ட தேவர்கள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், உரகர்கள் பெரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் ஐந்திர ஆயுதத்தை அழைத்தெழுப்பினான். பிறகு, அந்தப் போரில் தன் எதிரிகளால் ஏவப்படும் ஆயுத மழையைத் தன் கணைகளின் கூட்டத்தால் தடுத்த விஜயனின் {அர்ஜுனனின்} அற்புதப் பேராற்றலை நாங்கள் கண்டோம். ஆங்கே இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காயம்படாதவர்கள் என எவரும் இல்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு கணைகளாலும், மூன்று கணைகளாலும் அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} பிறரையும் தாக்கினான்.
இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்கள் சந்தனுவின் மகனான பீஷ்மரின் பாதுகாப்பை நாடினார்கள். அப்போது, அடியற்ற ஆழத்தில் {கடலில்} மூழ்கும் மனிதர்களைப் போன்ற அவ்வீரர்களின் {படகு போன்ற} மீட்பரானார் பீஷ்மர். இப்படிச் சிதறி ஓடும் அந்தப் போர்வீரர்கள், உமது துருப்புகளில் கலந்ததன் விளைவாக உடைந்த உமது படையணிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கொந்தளிக்கும் பெருங்கடலைப் போலக் கொந்தளித்தன” {என்றான் சஞ்சயன்}.
துரோணரால் கொல்லப்பட்ட சங்கன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 083-திரிகர்த்த மன்னன் சுசர்மனிடம் பேசிய துரியோதனன்; அர்ஜுனனைக் கண்டு நடுங்கிய திருதராஷ்டிரப் படை; சுசர்மனின் திரிகர்த்தப் படையினரால் பாதுகாக்கப்பட்ட பீஷ்மர்; துரோணருக்கும் விராடனுக்கும் இடையில் நடந்த மோதல்; விராடனின் மகன் சங்கனைக் கொன்ற துரோணர்; அச்சத்தால் ஓடிய விராடன்; சிகண்டிக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; தேரை இழந்த சிகண்டி சாத்யகியின் தேரில் ஏறியது; சாத்யகிக்கும் ராட்சசன் அலம்புசனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகிக்கு அஞ்சி ஓடிய அலம்புசன்; திருஷ்டத்யும்னனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த துரியோதனன் சகுனியின் தேரில் ஏறியது; கிருதவர்மனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கிருதவர்மன் சகுனியின் தம்பியான விருஷகனின் தேரில் ஏறியது; கௌரவப்படையை அழிக்கத் தொடங்கிய பீமன்..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படிப் போர் நடந்து, {திரிகர்த்த மன்னன்} சுசர்மன் போரிடுவதை நிறுத்திய போது, (குரு படையின்) துணிவுமிக்க வீரர்கள் {மன்னர்கள்} அனைவரும், உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} போரில் முறியடிக்கப்பட்டனர். உண்மையில், கடலைப் போன்றே இருந்த உமது படை விரைவாகக் கலங்கியது. விஜயனின் {அர்ஜுனனின்} தேரை எதிர்த்து கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விரைவாக முன்னேறினார்.
போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், {அர்ஜுனனிடம் தோற்ற} அந்த மன்னர்களிடம் விரைந்து சென்று, அவர்களிடமும், அவர்களின் முன்பு நின்ற வலிமைமிக்கவனும், துணிவுமிக்கவனுமான {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடமும் பேசி, அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “குருக்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான இந்தப் பீஷ்மர், தனது உயிரையே துச்சமாக மதித்து, தன் முழு ஆன்மாவுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிட விரும்புகிறார். உங்கள் துருப்புகளின் துணையுடன், ஒன்றுகூடி முயற்சி செய்பவர்களே, எதிரிப்படையை எதிர்த்துச் செல்லும் பாரதக் குலத்தின் பாட்டனை {பீஷ்மரை} நீங்கள் அனைவரும் காப்பீராக” என்றான் {துரியோதனன்}.
“சரி” என்று சொன்ன அந்த மன்னர்களின் படைப்பிரிவினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, (இப்படிப் போரிட விரையும்) சந்தனுவின் மகனான வலிமைமிக்கப் பீஷ்மர், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கடுமையான குரங்கைத் {அனுமனைத்} தாங்கியிருக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலி கொண்டதும், பெரும் பிரகாசத்தைக் கொண்டதுமான பெரிய தேரில், தன்னை நோக்கி வந்த பாரதக் குலத்தின் அர்ஜுனனிடம் விரைவாக வந்தார். இப்படிப் போரிட வந்து கொண்டிருந்தவனும், கிரீடம் தரித்தவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட உமது படை முழுவதும், அச்சத்தால் வியப்பின் பேரொலிகளை வெளியிட்டன.
நடுப்பகலின் {மதிய காலச்} சூரியனைப் போன்ற காந்தியுடனும், கையில் கடிவாளங்களுடனும் இருந்த கிருஷ்ணனைக் கண்ட உமது துருப்புகளால், அவனை {கிருஷ்ணனை} கண்ணெடுத்தும் பார்க்க முடியவில்லை. அதே போலவே, வெண்குதிரைகளுடனும், வெள்ளை வில்லுடனும், ஆகாயத்தில் எழுந்த சுக்கிரக் {வெள்ளிக்} கோளைப் போல இருந்த சந்தனுமகன் பீஷ்மரை நோக்கும் சக்தியற்றவர்களாகவே பாண்டவர்களும் இருந்தனர். தனது தம்பிகள், மகன்கள் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் இருந்த தங்கள் மன்னனின் {சுசர்மனின்} தலைமையில் திரிகர்த்தர்களின் உயர் ஆன்மப் போர்வீரர்களால் {பாதுகாக்கப்படும்படி} பின்னவர் {பீஷ்மர்} அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தார்.
அதேவேளையில், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சிறகு படைத்த தனது கணைகளால், போரில் மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனைத்} துளைத்தார். அம்மோதலில் அவர் {துரோணர்}, ஒரு கணையால் பின்னவனின் {விராடனின்} கொடிமரத்தை அறுத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தார். பிறகு, ஒரு பெரும் படையின் தலைவனான விராடன், இப்படி வெட்டப்பட்ட அந்த வில்லை விட்டு, பெரும் பலத்தைத் தாங்கும் திறன் கொண்டதும், வலுவானதுமான மற்றொரு வில்லை விரைவாக எடுத்தான். மேலும் அவன் {விராடன்}, கொடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கணைகள் பலவற்றையும் எடுத்தான். (அவற்றைக் கொண்டு) மூன்றால் துரோணரையும், நான்கால் அவரது (நான்கு) குதிரைகளையும் துளைத்தான். பிறகு மற்றொரு கணையை எடுத்த அவன் துரோணரின் கொடிமரத்தையும், ஐந்தால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். மேலும் ஒரு கணையால் அவன் {விராடன்} துரோணரின் வில்லைத் துளைத்தான். (இவை அனைத்தினாலும்) அந்த அந்தணர்களில் காளை {துரோணர்} மிகவும் கோபமடைந்தார்.
பிறகு துரோணர், நேரான எட்டு கணைகளால் விராடனின் குதிரைகளைக் கொன்று, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையால் அவனது {விராடனின்} தேரோட்டியையும் கொன்றார். தன் தேரோட்டி கொல்லப்பட்ட விராடன், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். அதன் பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {விராடன்}, (தனது மகன்) சங்கனின் தேரில் விரைவாக ஏறினான். ஒரே தேரில் நின்ற தந்தையும் {விராடனும்}, மகனும் {சங்கனும்}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அடர்த்தியான கணைமாரியை பெரும் வலிமையுடன் தடுக்கத் தொடங்கினர்.
அப்போது அம்மோதலில் கோபத்தால் தூண்டப்பட்ட பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, கடும்நஞ்சுமிக்கப் பாம்பை ஒத்த கணையொன்றை சங்கன் மீது விரைந்து ஏவினார். சங்கனின் மார்பைத் துளைத்த அந்தக் கணை, அவனது குருதியைக் குடித்து, இரத்தத்தில் நனைந்து ஈரத்துடன் பூமியில் விழுந்தது. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணையால் தாக்கப்பட்ட சங்கன், தன் தந்தையின் {விராடனின்} முன்னிலையிலேயே, தனது வில் மற்றும் கணைகளில் இருந்த தன் பிடி தளர, தனது தேரில் இருந்து வேகமாக விழுந்தான். தன் மகன் {சங்கன்} கொல்லப்பட்டதைக் கண்ட விராடன், திறந்த வாய்க் கொண்ட அந்தகனைப் போல இருந்த துரோணரைப் போரில் தவிர்த்து, அச்சத்தால் ஓடினான். பிறகு ஒரு கணத்தையும் இழக்காத பரத்வாஜர் மகன் {துரோணர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகளுடன் போரிட்டு வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் கூட்டத்தைத் {படையைத்} தடுத்தார் [1].
சிகண்டியோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடைந்து, வேகமாகச் செல்லும் மூன்று கணைகளால் அவனது புருவங்களுக்கு மத்தியில் பின்னவனைத் {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், மூன்று நெடிய தங்க முகடுகளைக் கொண்ட மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சிகண்டியின் தேரோட்டி, கொடிமரம், குதிரைகள், ஆயுதங்கள் ஆகியவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான தன் கணைகளால் மறைத்து, அவற்றை வீழ்த்தினான்.
எதிரிகளை எரிப்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிகண்டி, குதிரைகள் கொல்லப்பட்டத் தனது தேரில் இருந்து கீழே குதித்து, பளபளப்பான, கூரிய வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சினத்தால் தூண்டப்பட்டு, ஒரு பருந்தைப் போன்றப் பெரும் சுறுசுறுப்புடன் களத்தில் நகர்ந்தான். கையில் வாளுடனும், பெரும் சுறுசுறுப்புடன் அவன் {சிகண்டி} களத்தில் சென்றபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அவனைத் தாக்கும்) சந்தர்ப்பம் எதையும் காணத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தவறினான். இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் கோபக்காரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பல்லாயிரம் கணைகளை ஏவினான். ஆனால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சிகண்டியோ, தன்னை நோக்கி வந்தக் கடும் கணைமாரியைத் தன் கூரிய வாளால் வெட்டினான்.
பிறகு, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, அழகானதும், ஒளிமிக்கதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்துமான {சிகண்டியின்} கேடயத்தையும், சிகண்டியின் வாளையும் துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்தவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளால், பின்னவனின் {சிகண்டியின்} மேனியைத் துளைத்தான். பிறகு, சுடர்மிகும் பாம்புகளைப் போன்றவையான அஸ்வத்தாமனின் கணைகளால் வெட்டப்பட்டதும், (தன் கையில் இருந்ததுமான) உடைந்த வாளைச் சுழற்றிய சிகண்டி, அஃதை {வாளை} அவன் {அஸ்வத்தாமன்} மீது வேகமாக வீசினான். எனினும் அந்தப் போரில் தன் கர வேகத்தைக் காட்டிய துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சுடர்மிகும் நெருப்பைப் போன்றதுமான (அந்த உடைந்த வாளை) அதை வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலான எண்ணிலாக் கணைகளால் சிகண்டியைத் துளைத்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் மிகவும் துன்பப்பட்ட சிகண்டி, அந்த மது குலத்தின் உயர் ஆன்மக் கொழுந்தின் {சாத்யகியின்} தேரில் விரைந்து ஏறினான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் தன் பயங்கரக் கணைகளால் கொடிய ராட்சசன் அலம்புசனை அனைத்துப் புறங்களிலும் துளைத்தான். அப்போது, அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் {பிறைவடிவக்} கணையொன்றால் அம்மோதலில், சாத்யகியின் வில்லை அறுத்து, பல கணைகளால் சாத்யகியையும் துளைத்தான். தன் ராட்சச சக்திகளால் ஒரு மாயையை உண்டாக்கிய அவன் {அலம்புசன்}, சாத்யகியைக் கணைமாரியால் மறைத்தான். ஆனால், அந்தக் கூரிய கணைகளால் எவ்வளவுதான் தாக்குண்டாலும், அவன் {சாத்யகி} அச்சத்திற்கு ஆளாகாததை நாங்கள் கண்டோம். அந்தச் சினி பேரனின் {சாத்யகியின்} ஆற்றல் அற்புதமாக இருந்தது.
மறுபுறம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலத்தின் மகன் {சாத்யகி}, (மந்திரங்களுடன் கூடிய) ஐந்திர ஆயுதத்தை ஏவினான். மதுகுலத்தின் ஒப்பற்ற அந்த வீரன் {சாத்யகி}, விஜயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து அவ்வாயுதத்தைப் பெற்றிருந்தான் [2]. அந்த அசுர மாயையைச் சாம்பலாக்கிய அவ்வாயுதம் {ஐந்திரம்}, மழைக்காலத்தில் மழைநீரால் மலைச்சாரலை மறைக்கும் மேகங்களின் திரளைப் போல, அலம்புசனைச் சுற்றிலும் பயங்கரக் கணைகளால் மறைத்தது. இதன் பேரில், அந்த மதுகுலத்து வீரனால் {சாத்யகியால்} இப்படிப் பீடிக்கப்பட்ட ராட்சசன் {அலம்புசன்}, போரில் சாத்யகியைத் தவிர்த்துவிட்டு, அச்சத்தால் ஓடிவிட்டான்.
அப்போது அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட முடியாத அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனை} வீழ்த்திவிட்டு, உமது துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது உரத்த முழக்கத்தை வெளியிட்டான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சாத்யகி, பிறகு, எண்ணிலடங்கா கணைகளைக் கொண்டு உமது துருப்புகளைக் கொல்ல ஆரம்பித்தான். அதன் பேரில் பின்னவர்கள் {உமது துருப்பினர்} அச்சத்தால் ஓடிவிட்டனர்.
அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துருபதனின் வலிமைமிக்க மகனான திருஷ்டத்யும்னன், உமது அரச மகனைப் {துரியோதனனை} போரில் எண்ணிலடங்கா நேரான கணைகளைக் கொண்டு மறைத்தான். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திருஷ்டத்யும்னன் அவனை {துரியோதனனை} இப்படி மூடிக் கொண்டிருந்தாலும், உமது அரச மகன் {துரியோதனன்} கலக்கமடையவோ, அச்சங்கொள்ளவோ இல்லை. மறுபுறம் அவன் {துரியோதனன்}, போரில் திருஷ்டத்யும்னனை (முதலில்) அறுபது {60} கணைகளாலும், (பிறகு) முப்பது {30} கணைகளாலும் விரைவாகத் துளைத்தான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.
அப்போது அந்தப் பாண்டவப் படைத்தலைவன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, அவனது {துரியோதனனது} வில்லை அறுத்தான். மேலும் அம்மோதலில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, கூர்முனை கொண்ட ஏழு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான். அதன் பேரில் (உமது மகன்), பெரும் பலமும், வலிமையான கரங்களும் கொண்ட அந்த வீரன் {துரியோதனன்}, குதிரைகள் கொல்லப்பட்ட தன் தேரில் இருந்து கீழே குதித்து, பட்டாக்கத்தியை உயர்த்தியபடி பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி கால் ஆளாகவே ஓடினான் [3].
மன்னனிடம் {துரியோதனனிடம்} அர்ப்பணிப்புள்ளவனும், வலிமைமிக்கவனுமான சகுனி, விரைவாக அந்த இடத்திற்கு வந்து, அனைவரும் பார்க்கும்போதே, உமது அரச மகனைத் {துரியோதனனைத்} தனது தேரில் ஏறச் செய்தான். எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மன்னனை {துரியோதனனை} வீழ்த்திய பிறகு, அசுரர்களைக் கொல்லும் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.
மேலும், அந்தப் போரில் கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைத் தன் கணைகளால் மறைத்தான். உண்மையில், சூரியனை மறைக்கும் வலிமைமிக்க மேகங்களின் திரளைப் போல, பின்னவனை {பீமனை} முழுமையாக மறைத்தான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன், கோபத்தால் தூண்டப்பட்டுச் சிரித்துக் கொண்டே, கிருதவர்மன் மீது சில கணைகளை எய்தான். அதனால் தாக்குண்ட சத்வத குலத்தின் அந்த அதிரதன் {கிருதவர்மன்}, அனைவரையும் வலிமையில் விஞ்சும் வகையில் நடுங்காதிருந்தான். ஆனால் (அதற்குப் பதிலாக), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.
வலிமைமிக்கப் பீமசேனன் அப்போது, கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {கிருதவர்மனின்} தேரோட்டியையும், அதன் பிறகு அவனது அழகிய கொடிமரத்தையும் வீழ்த்தினான். மேலும், அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (பீமன்), பல்வறு வகைகளிலான பல கணைகளால் கிருதவர்மனையும் துளைத்தான். மேனியெங்கும் துளைக்கப்பட்ட கிருதவர்மனின் ஒவ்வொரு அங்கமும் மிகக் கடுமையாகச் சிதைக்கப்பட்டதைப் போலத் தோன்றியது [4].
பிறகு கிருதவர்மன், உமது மகன் {துரியோதனன்} மற்றும் சல்லியன் ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து சென்று விருஷகனின் [5] தேரில் ஏறிக் கொண்டான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். தண்டத்தைக் கையில் கொண்ட யமனைப் போலக் கோபத்தின் பாதையில் சென்று, அவர்கள் {உமது துருப்பினர்} அனைவரையும் அவன் {பீமன்} கொல்லத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.
அரவான் வீரமும்! கடோத்கசன் ஓட்டமும்!! சல்லியன் மயக்கமும்!!! – பீஷ்ம பர்வம் பகுதி – 084-திருதராஷ்டிரன் கவலை; திருதராஷ்டிரனைக் கண்டித்த சஞ்சயன்; அரவானுக்கும், அவந்தியின் விந்தானுவிந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேரோட்டியை இழந்த விந்தானுவிந்தர்களின் தேர் களத்தைவிட்டு ஓடியது; கடோத்கசனுக்கும், பகதத்தனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஞ்சி ஓடிய கடோத்கசன்; சல்லியனுக்கும், நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; சகாதேவனின் கணையால் தாக்கப்பட்ட சல்லியன் மயக்கமடைந்தது; சல்லியனை அவனது தேரோட்டி களத்தைவிட்டே கொண்டு சென்றது…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பாண்டவர்கள் மற்றும் எனது வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற பல தனிப்போர்களைக் குறித்து, நீ சொல்லி நான் கேட்டவை அற்புதம் நிறைந்தவையாக இருக்கின்றன. எனினும், ஓ! சஞ்சயா, (இத்தகு நேரங்களில்) என்தரப்பைச் சேர்ந்தவர்களில் எவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக நீ சொல்லவில்லை. பாண்டு மகன்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும், முறியடிக்கப்படாமல் இருப்பவர்களாகவும், ஓ! சூதா {சஞ்சயா}, என்னவர்கள் மகிழ்ச்சியற்று, சக்தியற்று, போரில் தொடர்ச்சியாக வீழ்த்தப்படுவதாகவுமே எப்போதும் நீ சொல்கிறாய். இவை அனைத்தும் விதியே என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உம்முடையவர்கள் வல்லமையுடன் தங்கள் பெரும் வீரத்தை வெளியிட்டு, தங்கள் சக்திக்கேற்றபடியும், ஊக்கத்திற்குத் தகுந்தபடியுமே முயற்சி செய்கிறார்கள். தெய்வீக ஓடையான கங்கையின் இனிய நீர், கடலின் தன்மைகளுடன் தொடர்பு கொண்டு, உப்பாவது போல, உமது படையில் உள்ள ஒப்பற்ற வீரர்களின் வீரமும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் வீர மகன்களை அடைந்ததும் வீணாகிறது. தங்கள் சக்திக்குத்தக்க வகையில் முயன்று, மிகக்கடுஞ்சாதனைகளை அடையும் உமது துருப்புகளிடம், ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் குறை காணக்கூடாது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யமனின் உலகத்தைப் (அதில் உள்ளவர்கள் எண்ணிக்கையைப்) பெருக்குவதும், அச்சந்தருவதுமான இந்தப் பயங்கரமான உலக அழிவு உமது சீர்கேட்டாலும், உமது மகன்களின் தவறான நடத்தையாலுமே உண்டானது. உமது தவறால் உண்டானவைக்காக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் வருந்துவது உமக்குத் தகாது. இவ்வுலகில் மன்னர்கள் தங்கள் உயிரை எப்போதுமே காத்துக் கொள்வதில்லை. பூமியின் இந்த ஆட்சியாளர்கள், அறவோரின் உலகங்களை {சொர்க்கத்தைப்} போரால் வெல்ல விரும்பி, (பகை) அணியினருக்குள் ஊடுருவி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு தினமும் போரிடுகின்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் நடந்தது போலவே, அந்நாளின் முற்பகலில் நடந்த படுகொலைகள் பெரிதாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் அதைக் கேட்பீராக.
வலிமைமிக்கவர்களும், போரில் கடுமையான அற்புதப் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அவந்தியின் இளவரசர்கள் {விந்தன், அனுவிந்தன்} இருவரும், இராவத்தைக் {இராவானைக் [அ] அரவானைக்}[1] கண்டு, அவனை எதிர்த்துச் சென்றனர். அவர்களுக்கிடையில் நடைபெற்ற கடும்போர், மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட இராவத் {அரவான்}, தெய்வீக வடிவங்களைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரையும், நேரான மற்றும் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்த அந்த இருவரும், அந்தப் போரில் பதிலுக்கு அவனை {அரவானை} துளைத்தனர். எதிரியைக் கொல்லச் சிறப்பாகப் போராடி, ஒவ்வொருவரின் அருஞ்செயலையும் எதிர்க்க விரும்பித் தங்களுக்குள் போரிட்ட அவர்களுக்குள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
பிறகு இராவத் {அரவான்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளால், அனுவிந்தனின் நான்கு குதிரைகளை யமலோகம் அனுப்பிவைத்தான். மேலும் கூரிய இரண்டு பல்லங்களால் அவன் {அரவான்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனுவிந்தனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அருஞ்செயல் அற்புதம் மிகுந்ததாக இருந்தது. பிறகு அனுவிந்தன், தன் தேரை விட்டு விட்டு விந்தனின் தேரில் ஏறிக் கொண்டான். பெரும் வலிமையைத் தாங்கவல்லதும், பலமானதும், சிறப்பானதுமான ஒரு வில்லை எடுத்த அனுவிந்தன் மற்றும் அவனது அண்ணனான விந்தன் ஆகிய அவந்தியின் தேர்வீர்களில் முதன்மையான அவர்கள், ஒரே தேரில் நின்று கொண்டு, உயரான்ம இராவத்தின் {அரவானின்} மேல் பல கணைகளை விரைவாக ஏவினார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான அவர்கள் ஏவிய கணைகள், காற்றில் சென்ற போது ஆகாயத்தையே மறைத்தன [2].
அப்போது சினம் தூண்டப்பட்ட அரவான், வலிமைமிக்கத் தேர்வீரர்களான, அந்த (அவந்தியைச் சேர்ந்த) சகோதரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்து, அவர்களின் தேரோட்டியை வீழ்த்தினான். அந்தத் தேரோட்டி உயிரிழந்து பூமியில் விழுந்த போது, கட்டுப்பாட்டை இழந்த குதிரைகள் தேருடன் {அங்கிருந்து} ஓடின. அந்த வீரர்கள் இருவரையும் வீழ்த்தியவனும், நாக மன்னனின் மகளுடைய {உலூபியின்} மகனுமான அவன் {அரவான்}, தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி, பெருஞ்சுறுசுறுப்புடன் உமது படையணியினரை எரிக்கத் தொடங்கினான். போரில் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தார்தராஷ்டிரப் படை, நஞ்சைக் குடித்த மனிதனைப் போலப் பல திசைகளிலும் ஓடத் தொடங்கியது.
அப்போது, ஹிடிம்பையின் வலிமைமிக்க மகனான ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, கொடிமரத்துடன் கூடியதும், சூரியப்பிரகாசம் கொண்டதுமானத் தனது தேரில் பகதத்தனை எதிர்த்து விரைந்தான். அந்தப் பிராக்ஜோதிஷ ஆட்சியாளன் {பகதத்தன்}, யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது அமர்ந்தபடி, பழங்காலத்தில் தாரகனை {தாராகாசுரனை} அழித்த போரில் வஜ்ரபாணி {இந்திரன்} பிரகாசித்தது போலப் பிரகாசித்தான். தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர். எனினும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} பகதத்தனுக்கும் இடையில் அவர்களால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
கோபத்தால் தூண்டப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, தானவர்களை அச்சங்கொள்ளச் செய்ததைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகதத்தனும், பாண்டவ வீரர்களை அச்சுறுத்தினான். அனைத்துப் புறங்களிலும் அவனால் அச்சுறுத்தப்பட்ட பாண்டவப்படையின் வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படையணியினருள் தங்களைக் காப்பவர் எவரையும் காணத் தவறினர்.
எனினும் அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்த பீமனின் மகனைக் {கடோத்கசனைக்} கண்டோம். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் சிதறி ஓடினர். அந்தப் போரில், பாண்டவர்களின் துருப்புகள் மீண்டும் திரும்பி வந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் அச்சந்தரும் பேரொலி எழுந்தது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில், மேருவின் {மேரு மலையின்} சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பகதத்தனைத் தன் கணைகளால் கடோத்கசன் மறைத்தான். ராட்சசனின் {கடோத்கசனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்த அந்த மன்னன் {பகதத்தன்}, பீமசேனன் மகனின் {கடோத்கசனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் விரைவாகத் தாக்கினான்.
எண்ணிலடங்கா நேரான கணைகளால் தாக்கப்பட்டாலும், அந்த ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல (அசையாமல்) நடுங்காதிருந்தான். பிறகு, அம்மோதலில், கோபத்தால் தூண்டப்பட்டவனான பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, பதினான்கு தோமரங்களை ஏவினான். எனினும், அவை அனைத்தும் அந்த ராட்சசனால் {கடோத்கசனால்} வெட்டப்பட்டன. தன் கூரிய கணைகளால் அந்தத் தோமரங்களை அறுத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, எழுபது {70} கணைகளால் பகதத்தனைத் துளைத்தான். அவை ஒவ்வொன்றும் வஜ்ரத்தின் சக்திக்கு ஒப்பானவையாக இருந்தன.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிரித்தபடியே அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பி வைத்தான். எனினும், பெரும் வீரம் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரிலேயே இருந்து கொண்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடைய {பகதத்தனின்} யானையின் மேல் பெரும் சக்தியுடன் ஓர் ஈட்டியை எறிந்தான். மன்னன் பகதத்தன், தன்னை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்ததும், தங்கப்பிடியுடன் கூடியதுமான அந்த வேகமான ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். அதன்பேரில் அது {அந்த ஈட்டி} தரையில் விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பழங்காலத்தில் இந்திரனுடன் நடந்த போரில் தைத்தியர்களில் முதன்மையான நமூசி பயந்தோடியதைப் போல {அங்கிருந்து} ஓடினான். யமனாலோ, வருணனாலோ கூடப் போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், புகழ்பெற்ற ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்த வீரனை {கடோத்கசனை} வீழ்த்திய பகதத்தன், தன் யானையுடன் சேர்ந்து (தடாகத்தில்) தன் நடையால் தாமரைத்தண்டுகளை நசுக்கும் காட்டு யானையைப் போலப் பாண்டவத் துருப்புகளை நசுக்கத் தொடங்கினான்.
அப்போது, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் தங்கையின் {மாத்ரியின்} மகன்களான இரட்டையருடன் {நகுலன் மற்றும் சகாதேவனுடன்} போரில் ஈடுபட்டு, அந்தப் பாண்டு மகன்களைக் கணைகளின் மேகங்களால் மூழ்கடித்தான். தன் தாய்மாமனை {சல்லியனைக்} கண்ட சகாதேவன், (அவனுடன் {சல்லியனுடன்}) போரில் ஈடுபட்டு, நாளை உண்டாக்கபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போலத் தன் கணைகளால் அவனை {சல்லியனை} மறைத்தான். அந்தக் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தினான். இரட்டையர்களும் தங்கள் தாயின் {மாத்ரியின்} நிமித்தமாகப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர் [3]. பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், அந்தப் போரில் திறமையுடன் போரிட்டு, சிறப்பான நான்கு கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நகுலனின் நான்கு குதிரைகளை யமனுலகிற்கு அனுப்பி வைத்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, புகழ்பெற்ற தன் தம்பியின் {சகாதேவனின்} தேரில் ஏறிக் கொண்டான். போரில் கடுமையானவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒரே தேரில் இருந்தவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், பெரும் பலத்துடன் தங்கள் விற்களை வளைத்து, (தங்கள் கணைகளால்) மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} தேரை மறைக்கத் தொடங்கினர். ஆனாலும், தன் தங்கை மகன்களின் நேரான எண்ணற்ற கணைகளால் இப்படி மூடப்பட்ட அந்த மனிதர்களில் புலி {சல்லியன்}, (அசையாது நிற்கும்) ஒரு மலையைப் போலவே கிஞ்சிற்றும் நடுங்காதிருந்து, சிரித்துக் கொண்டே (பதிலுக்குத்) தன் கணைமாரிகளால் அவர்களைத் தாக்கினான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது, கோபம் தூண்டப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சகாதேவன், (சக்திமிக்க) ஒரு கணையை எடுத்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி விரைந்து வந்து, அவன் மீது அஃதை {கணையை} ஏவினான். கருடனின் வேகத்தைக் கொண்ட அந்தக் கணை, மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்து, {அவனது உடலை} ஊடுருவி பூமியில் விழுந்தது. அதன்பேரில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கமடைந்தான். இரட்டையர்களால் (இப்படிப்) பாதிக்கப்பட்டு, உணர்விழந்து தேரில் கிடக்கும் அவனைக் {சல்லியனைக்} கண்ட அவனது தேரோட்டி, களத்தைவிட்டே தன் வாகனத்தில் அவனை {சல்லியனை} அகற்றிச் சென்றான்.
(போரில் இருந்து) பின்வாங்கும் மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைக் கண்டத் தார்தராஷ்டிரர்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றுப் போய், அவன் {சல்லியன்} அவ்வளவுதான் என நினைத்தார்கள். அப்போது, தங்கள் தாய்மாமனைப் போரில் வீழ்த்தியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மாத்ரியின் மகன்கள் இருவரும், தங்கள் சங்குகளை எடுத்து மகிழ்ச்சியாக ஊதி, சிங்க முழக்கமிட்டார்கள். பிறகு அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தைத்திய படையை நோக்கி விரையும் தேவர்களான இந்திரனையும், உபேந்திரனையும் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படைகளை நோக்கி மகிழ்ச்சியாக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.
துரியோதனன் தம்பிகளைக் கொல்லாத அபிமன்யு! – பீஷ்ம பர்வம் பகுதி – 085-யுதிஷ்டிரனுக்கும் சுருதாயுஷுக்கும் இடையில் நடைபெற்ற போர்; யுதிஷ்டிரனின் கோபத்தைக் கண்டு உலகமே நடுங்கியது; புறமுதுகிட்ட சுருதாயுஷ்; சேகிதானனுக்கும், கிருபருக்கும் இடையில் நடைபெற்ற போர்; இருவரும் மயங்கி விழுந்தது; திருஷ்டகேதுவுக்கும் பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர் இழந்த திருஷ்டகேது சதானீகனின் தேரில் ஏறியது; துரியோதனன் தம்பிகள் மூவருக்கும், அபிமன்யுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேர்களை இழந்த துரியோதனன் தம்பிகளைக் கொல்லாமல் விட்ட அபிமன்யு; சுசர்மனிடம் பேசிய அர்ஜுனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் நடுக்கோட்டை {நடுப்பகலை) அடைந்ததும், சுருதாயுஷைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது குதிரைகளைத் துரிதப்படுத்தினான். எதிரிகளைத் தண்டிக்கும் சுருதாயுஷை நோக்கி விரைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கூர்முனை கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {சுருதாயுஷை} தாக்கினான். பெரும் வில்லாளியான மன்னன் சுருதாயுஷ், அப்போரில் யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட கணைகளைத் தடுத்து, ஏழு கணைகளால் அந்தப் பாண்டு மைந்தனைத் {யுதிஷ்டிரனைத்} தாக்கினான். அப்போரில் அவனது {யுதிஷ்டிரனின்} கவசத்தை ஊடுருவிய அவை {ஏழு கணைகள்}, மிக முக்கியச் சக்திகளை உறிஞ்சிக் குடிப்பதைப் போல [1]., உயர் ஆன்மா கொண்ட அவனது {மகாத்மாவான யுதிஷ்டிரனின்} குருதியைக் குடித்தன.
அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னன் சுருதாயுஷால் ஆழமாகத் துளைக்கப்பட்டிருந்தாலும், (பதிலுக்கு) வராஹகர்ணத்தால் {பன்றியின் காது போன்ற ஒரு கணையால்} அந்த உயர் ஆன்ம மன்னின் {சுருதாயுஷின்} இதயத்தைத் துளைத்தான். தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் ஒரு பல்லத்தால், உயர் ஆன்ம சுருதாயுஷின் கொடிமரத்தை, அவனது தேரில் இருந்து விரைவாகப் பூமியில் வீழ்த்தினான். தன் கொடிமரம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட மன்னன் சுருதாயுஷ், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} ஏழு கூரிய கணைகளால் துளைத்தான்.
அப்போது, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், உயிரினங்களை எரிப்பதற்காக யுகத்தின் முடிவில் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டு மகனைக் {யுதிஷ்டிரனைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் நடுங்கினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அண்டமும் கலங்கத் தொடங்கியது. “கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்றே மூவுலகங்களையும் எரிக்கப்போகிறான்” என்பதே உயிர்கள் அனைத்தின் மனதிலும் எழுந்த சிந்தனையாக இருந்தது. உண்மையில், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கோபத்தால் இப்படித் தூண்டப்பட்ட போது, உலக அமைதிக்காக முனிவர்களும், தேவர்களும் வேண்டிக்கொண்டனர்.
கோபத்தால் நிறைந்து, கடைவாயை அடிக்கடி நாவால் நனைத்த {நக்கிய} யுதிஷ்டிரன், யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலப் பயங்கரமாகத் தோன்றினான். அப்போது, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அனைவரும் தங்கள் வாழ்வைக் குறித்த நம்பிக்கையை இழந்தனர். எனினும், பொறுமையால் கோபத்தைத் தணித்த புகழ் பெற்ற அந்தப் பெரும் வில்லாளி {யுதிஷ்டிரன்}, சுருதாயுஷின் வில்லை அதன் கைப்பிடியில் வெட்டினான். பிறகு அப்போரில், அனைத்துத் துருப்புகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வில்லறுபட்ட சுருதாயுஷை, நாராசம் {நெடுங்கணை} ஒன்றினால் நடுமார்பில் துளைத்தான்.
பிறகு, அந்த வலிமைமிக்க யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கணைகளால் சுருதாயுஷின் குதிரைகளை விரைவாகக் கொன்று, மேலும் ஒருக்கணமும் தாமதிக்காமல் அவனது தேரோட்டியையும் கொன்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட சுருதாயுஷ், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரை விட்டு விட்டு, போரில் இருந்து விரைவாக ஓடினான் [2]. தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் பெரும் வில்லாளி {சுருதாயுஷ்}, வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் துருப்புகள் அனைத்தும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன {புறமுதுகிட்டு ஓடின}. இந்தச் சாதனையை அடைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.
பிறகு, விருஷ்ணி குலத்தின் சேகிதானன், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தேர்வீரர்களின் முதன்மையான கௌதமரைத் {கிருபரைத்} தன் கணைகளால் மறைத்தான். அந்தப் போரில், அந்தக் கணைகளையெல்லாம் கலங்கடித்த சரத்வானின் மகனான கிருபர், பதிலுக்குப் பெரும்கவனத்துடன் தன் கணைகளால் சேகிதானனைத் துளைத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் ஒரு பல்லத்தைக் கொண்டு சேகிதானனின் வில்லை அறுத்த அந்தப் பெருங்கரவேகம் கொண்டவர் {கிருபர்}, மற்றுமொரு பல்லத்தினால் முன்னவனின் {சேகிதானனின்} தேரோட்டியையும் வீழ்த்தினார். பிறகு அந்தக் கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சேகிதானனின் குதிரைகளையும், பின்னவனின் {சேகிதானனின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்த இரண்டு வீரர்களையும் கொன்றார்.
பிறகு அந்தச் சத்வத குலத்தின் சேகிதானன், தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கதாயுதம் தாங்குவோர் எவரிலும் முதன்மையான சேகிதானன், வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால், கௌதமரின் {கிருபரின்} குதிரைகளைக் கொன்று, பிறகு அவரது தேரோட்டியையும் கொன்றான். அப்போது, அந்தக் கௌதமர் {கிருபர்}, தரையில் நின்றபடியே சேகிதானன் மேல் பதினாறு {16} கணைகளை ஏவினார். சத்வத குலத்தின் அந்த வீரனை {சேகிதானனைத்} துளைத்துச் சென்ற அந்தக் கணைகள், பூமியில் நுழைந்தன.
அதன்பேரில் சினம் தூண்டப்பட்ட சேகிதானன், விருத்திரனைக் கொல்ல விரும்பிய புரந்தரனை {இந்திரனைப்} போல, மீண்டும் ஒரு முறை தன் கதாயுதத்தை வீசினான். கௌதமர் {கிருபர்}, தன்னை நோக்கி வரும் அந்தத் கதாயுதத்தைக் கடினமான பலம் கொண்ட பல்லாயிரக்கணக்கான கணைகளால் தடுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உறையில் இருந்து தன் வாளை உருவிய சேகிதானன், கௌதமரை {கிருபரை} நோக்கி விரைந்தோடினான்.
அதன் பேரில், கௌதமரும் {கிருபரும்}, தன் வில்லைத் தூக்கியெறிந்துவிட்டு, பளபளக்கும் ஒரு வாளை எடுத்துக் கொண்டு, சேகிதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார். அற்புதமான வாள்களுடன் இருந்தவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான அந்த இருவரும், கூர்முனை கொண்ட தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மனிதர்களில் காளையரான அவர்கள் தங்கள் கத்திகளால் ஒருவரை ஒருவர் சக்தியுடன் தாக்கிக் கொண்டதால், உயிரினங்களின் பூதமான (உயிரினங்கள் பொதுப் பூதமான) பூமியில் விழுந்தனர்.
தாங்கள் கொண்ட முயற்சியினால் களைப்படைந்த அந்த இருவரும் மூர்ச்சையடைந்து அங்கங்கள் அசைவற்றுக் கிடைந்தனர். அப்போது, நட்பால் உந்தப்பட்ட காரகார்ஷன் {பீமன்} [3] அந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான். வெல்லப்பட முடியாத அந்த வீரன் {பீமன்}, அந்த அவல நிலையில் கிடந்த சேகிதானனைக் கண்டு, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனை {சேகிதானனைத்} தன் தேரில் ஏற்றினான். அதே போல, உமது மைத்துனனான துணிச்சல்மிகு சகுனியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கௌதமரை {கிருபரை} தன் தேரில் விரைவாக ஏறச் செய்தான்.
கோபத்தால் தூண்டப்பட்ட {சேதி மன்னன்} திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} விரைவாக மார்பில் துளைத்தான். தன் மார்பில் கொண்ட அந்தக் கணைகளோடு இருந்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனைப் போலப் பெரிதும் பிரகாசித்தான்.
எனினும் அந்தப் போரில் பூரிஸ்ரவஸ், தன் சிறந்த கணைகளால் திருஷ்டகேதுவின் தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்று, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {திருஷ்டகேதுவை}, அவனது தேரை இழக்கச் செய்தான். குதிரைகளும், தேரோட்டியும் கொல்லப்பட்டுத் தன் தேரை இழந்து நிற்கும் திருஷ்டகேதுவைக் கண்ட பூரிஸ்ரவஸ், அந்த மோதலில் அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} மறைத்தான். பிறகு, தன் தேரைக் கைவிட்ட அந்த உயர் ஆன்ம திருஷ்டகேது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனின் தேரில் ஏறிக் கொண்டான்.
தங்கக்கவசம் பூண்டிருந்த தேர்வீரர்களான சித்திரசேனன், விகர்ணன், துர்மர்ஷணன் ஆகியோர் அனைவரும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். பிறகு, காற்று {வாயு}, பித்தம், சளி {வாதம், பித்தம், கபம் [சிலேத்துமம்]} ஆகியவற்றோடு {எனும் மூன்றோடு} உடல் கொள்ளும் போரைப் போல [4], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவுக்கும், அந்த {மூன்று} வீரர்களுக்கும் இடையில் ஒரு கடுமையான போர் நடந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனினும் அந்த மனிதர்களில் புலி (அபிமன்யு), உமது மகன்களைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்து, பீமனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவர்களைக் கொல்லாமல் விட்டான் [5].
பிறகு, மோதல் தொடர்ந்து கொண்டிருந்த போது, தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவரான பீஷ்மர், உமது மகன்களை மீட்பதற்காக, வலிமைமிக்கத் தேர்வீரனாயினும் சிறுவனும், தனியனுமான அபிமன்யுவை நோக்கி முன்னேறுவதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் (அர்ஜுனன்), வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தேர்வீரர்கள் அதிகமாக இருக்கும் அந்த இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக, ஆயுதங்களை அறிந்தவர்களாக, போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதிரி நமது துருப்புகளைக் கொல்ல இயலாதவண்ணம் குதிரைகளை வழிநடத்துவாயாக” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.
அளவிலா சக்தி கொண்ட குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} இப்படித் தூண்டப்பட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரைப் போரில் செலுத்தினான். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், இப்படி உமது படையை நோக்கி முன்னேறிய போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஆரவாரமிக்கப் பேரொலி எழுந்தது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாத்தபடி நின்ற அந்த மன்னர்களிடம் வந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, (முதலில்) {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடம், “போரில் முதன்மையானவன் என்றும், ஆரம்பத்தில் {பழங்காலத்தில்} இருந்தே (எங்களுடைய) கொடிய எதிரியாக இருப்பவன் என்று உன்னை நான் அறிவேன். அந்த (உனது) தீய நடத்தையின் பயங்கரக் கனியை இன்று நீ பார். நான், இன்று உன்னை உனது முன்னோர்களின் ஆவிகளைச் சந்திக்கச் செய்வேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.
எனினும், தேர்ப்படைகளின் தலைவனான சுசர்மன், எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} சொன்ன இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டும், (பதிலுக்கு) நல்லதாகவோ, அல்லதாகவோ ஒன்றும் சொல்லவில்லை. (ஆனால்) வீர அர்ஜுனனை அணுகி, தன்னைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களுடன் அந்தப் போரில் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் துணையுடன், பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போல, முன்புறம், பின்புறம், பக்கங்கள் {விலாப்புறம்} என அனைத்துப் புறங்களிலும் கணைகளால் அவனை {அர்ஜுனனை} மூடினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படைக்கும், பாண்டவர்களின் படைக்கும் இடையில் நீரைப் போல குருதி ஓடும் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.
பீமனிடம் தப்பிய சித்திரசேனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 086-அபிமன்யுவுக்குத் துணையாக வந்த அர்ஜுனன்; பீஷ்மரைக் கொன்று சபதத்தை நிறைவேற்றும்படி சிகண்டியிடம் சொன்ன யுதிஷ்டிரன்; சிகண்டியின் ஆற்றல்; ஜெயத்ரதனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; பீமனின் கதாயுதத்துக்குத் தப்பி ஓடிய சித்திரசேனன்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{சுசர்மன் மற்றும் அவனுக்குத் துணையாக நின்ற பிற மன்னர்களின்} அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிதிபட்ட பாம்பைப் போல நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, தன் தொடர்ச்சியான கணைகளின் பெரும் சக்தியால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களின் விற்களை வெட்டினான். அந்தப் போரில் பலம் நிறைந்த ஏகாதிபதிகளின் விற்களை ஒருக்கணத்தில் வெட்டிப் போட்ட உயர் ஆன்ம அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை அழிக்க விரும்பி, ஒரே நேரத்தில் தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.
இப்படி இந்திரனின் மகனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்களில் சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தத்தில் மூழ்கி களத்தில் விழுந்தனர். சிலர் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டனர், மேலும் சிலர் தலை அறுபட்டனர். இன்னும் சிலர் கவசங்கள் பிளந்து, உடல்கள் சிதைந்து மாண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்களில் பலர், பூமியில் விழுந்து ஒன்றாக அழிந்தனர்.
போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசர்களைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, {அந்த இடத்தை நோக்கித்} தன் தேரில் முன்னேறி வந்தான். கொல்லப்பட்ட போராளிகளின் பின் பக்கத்தைப் பாதுகாத்த தேர்வீரர்களில் முப்பத்திரண்டு {32} பேரும் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். பார்த்தனை {அர்ஜுனனைச்} சூழ்ந்த அவர்கள் அனைவரும், உரத்த நாணொலி கொண்ட தங்கள் விற்களை வளைத்து, மலைச்சாரலில் நீரை பெருமளவில் பொழியும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணை மழையை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தனர்.
அந்தப் போரில், கணைமாரியால் பீடிக்கப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, எண்ணெயில் தோய்த்த {தோய்த்துக் கூராக்கப்பட்ட} அறுபது {60} கணைகளால் பின்புறத்தைப் பாதுகாத்தவர்களான அவர்கள் அனைவரையும் {யமனுலகு} அனுப்பி வைத்தான். அந்த அறுபது தேர்வீரர்களையும் வீழ்த்திய ஒப்பற்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் இதயம் நிறைந்தான் {மனக்களிப்படைந்தான்}. அம்மன்னர்களின் படைகளையும் கொன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, {அடுத்து} பீஷ்மரைக் கொல்ல விரைந்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, தனக்கு முன்னணியில் பல (பிற) மன்னர்களையும் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக அவனிடம் விரைந்து வந்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறும் அந்தப் போராளிகளைக் கண்ட, சிகண்டியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், அர்ஜுனனின் தேரைப் பாதுகாக்க விரும்பி, கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் கொண்டு முன்னேறினர்.
திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடன் {சுசர்மனுடன்} தன்னை நோக்கி முன்னேறிவரும் அந்தத் துணிச்சல்மிக்கவர்களைக் கண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அந்தப் போரில் அவர்களைச் சிதைத்தான். பிறகு, பீஷ்மரை அணுக விரும்பிய அந்தப் புகழ் பெற்ற வில்லாளி {அர்ஜுனன்}, துரியோதனனையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலைமையிலான பிற மன்னர்களையும் கண்டான். பெரும் சக்தியுடன் போரிட்டு, பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பிய அவ்வீரர்களை ஒரு கணத்தில் தடுத்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், அளவிலா ஆற்றல், மிகுந்த பலம், பெரும் மனவுறுதி ஆகியவற்றைக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், துரியோதனன், ஜெயத்ரதன் மற்றும் பிறரை தவிர்த்துவிட்டு, கையில் வில் மற்றும் அம்புடன் அந்தப் போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி இறுதியில் முன்னேறினான்.
கடும் ஆற்றல், அளவிலா புகழ் ஆகியவற்றைக் கொண்ட உயர் ஆன்ம யுதிஷ்டிரனும், கோபத்தால் தூண்டப்பட்டு, தனது பங்காக ஒதுக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனைப் {சல்லியனைப்} [1] போரில் தவிர்த்துவிட்டு, பீமன் மற்றும் மாத்ரி மகன்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} துணையுடன், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிப் போரிடுவதற்காக விரைவாகச் சென்றான். ஒன்றாகக் கூடியிருந்த பாண்டு மகன்கள் அனைவராலும் போரில் தாக்கப்பட்டாலும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவரும், கங்கை மற்றும் சந்தனுவின் உயர் ஆன்ம மகனுமான அவர் {பீஷ்மர்}, சற்றேனும் நடுங்கவில்லை.
கடும்பலமும், பெரும் சக்தியும், இலக்கில் உறுதியும் கொண்ட மன்னன் ஜெயத்ரதன், போரில் முன்னேறி, தன் சிறந்த வில்லைக் கொண்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரின் விற்களையும் [2] பலத்துடன் வெட்டி வீழ்த்தினான். கோபம் தூண்டப்பட்டவனும், ஒப்பற்றவனுமான துரியோதனன், தன் நிலை குறித்த கோபத்தில், நெருப்பின் சுடர்களுக்கு ஒப்பான கணைகளால் யுதிஷ்டிரன், பீமசேனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்}, பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தாக்கினான். மேலும், கிருபர், சலன், சித்திரசேனன் ஆகியோரின் கணைகளாலும் துளைக்கப்பட்ட பாண்டவர்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) ஒன்று சேர்ந்திருந்த தைத்தியர்களின் கணைகளால் துளைக்கப்பட்ட தேவர்களைப் போலக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தனர்.
சந்தனு மகனால் {பீஷ்மரால்} ஆயுதம் வெட்டப்பட்டு ஓடிக்கொண்டிருந்த சிகண்டியைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் கோபத்தால் நிறைந்தான் [3]. அப்போரில் சிகண்டியிடம் கோபத்துடன் பேசிய அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, “உன் தந்தையின் முன்னிலையில் என்னிடம், “உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பிரகாசமிக்கச் சூரியனின் நிறத்தைக் கொண்ட என் கணைகளால் நான் கொல்வேன். உண்மையாகவே நான் இதைச் சொல்கிறேன்” என்று அப்போது நீ சொன்னாய். அஃதே உனது உறுதிமொழியாகும். தேவவிரதரை {பீஷ்மரை} நீ போரில் கொல்லாத வரை, உனது உறுதிமொழியை நிறைவேற்றாதவனாகவே நீ இருப்பாய். ஓ! வீரா {சிகண்டியே}, நிறைவேறா உறுதிமொழியைக் கொண்டவனாக இராதே.
உனது அறம், குலம், புகழ் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்வாயாக. பயங்கர மூர்க்கம் கொண்ட பீஷ்மர், கடும் சக்தி கொண்ட தனது எண்ணற்ற கணைகளால் எனது படைகளை எரித்து, காலனைப் போல ஒரு கணத்தில் அனைத்தையும் அழிப்பதைப் பார். உனது வில்லறுபட்டு, போரைத் தவிர்த்துவிட்டு, சந்தனுவின் அரசமகனால் {பீஷ்மரால்} வீழ்த்தப்பட்டு, உனது சொந்தங்களையும் சகோதரர்களையும் கைவிட்டுவிட்டு நீ எங்கே செல்லப் போகிறாய்? இஃது உனக்குத் தகாது. அளவற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரையும், முறியடிக்கப்பட்டு ஓடும் நமது படையையும் கண்டு, ஓ துருபதன் மகனே {சிகண்டியே}, நீ அச்சப்படுகிறாய் என்பது உறுதியே. அதனாலேயே உன் முகத்தின் நிறம் மங்கியிருக்கிறது. ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பயங்கரப் போரில் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஈடுபட்டிருக்கிறான்என்பது உனக்குத் தெரியவில்லையே. ஓ! வீரா {சிகண்டியே}, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நீ, பீஷ்மரைக் கண்டு இன்று ஏன் அஞ்சுகிறாய்? [4]” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
பலமான காரணத்துடன் கூடியதாக {நியாயமானதாக} இருந்தாலும் கடுமையுடன் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம சிகண்டி, அவற்றை நல்ல ஆலோசனையாகக் கருதி, பீஷ்மரைக் கொல்வதில் தன்னை விரைவாக நிலைநிறுத்திக் கொண்டான். பீஷ்மர் மீது பாய்வதற்காக அப்போரில் பெரும் மூர்க்கத்துடன் சிகண்டி முன்னேறிக் கொண்டிருந்தபோது, கலங்கடிப்பதற்குக் கடினமான பயங்கர ஆயுதங்களால் சல்லியன் அவனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, அண்ட அழிவு நேரத்தின்போது சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்று பிரகாசத்துடன் (இப்படிக்) காட்சியளித்த அந்த ஆயுதங்களைக் (ஆக்னேயாஸ்திரங்களைக்} கண்டு கிஞ்சிற்றும் குழம்பவில்லை,.
தனது கணைகளால் அந்த அயுதங்களைத் தடுத்த வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, அசையாமல் அங்கேயே நின்றான். பிறகு, (சல்லியனின் அந்த நெருப்பு போன்ற ஆயுதங்களை [அந்த ஆக்னேயாஸ்திரங்களைக்]) கலங்கடிப்பதற்காக, மற்றொரு ஆயுதமான கடுமையான வருண ஆயுதத்தை {வருணாஸ்திரத்தை} அவன் {சிகண்டி} எடுத்தான். பின்னர், ஆகாயத்தில் நின்றிருந்த தேவர்களும், பூமியில் இருந்த மன்னர்களும் என அனைவரும், சல்லியனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கும் சிகண்டியின் வருண ஆயுதத்தைக் கண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில், உயர் ஆன்மா கொண்ட வீர பீஷ்மர், பாண்டுவின் மகனும், ஆஜமீட குலத்தவனுமான மன்னன் யுதிஷ்டிரனின் பலவண்ணங்களிலான கொடிமரத்தையும், வில்லையும் அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினார்.
அதன் பேரில், அச்சத்தில் மூழ்கியிருக்கும் யுதிஷ்டிரனைக் கண்டு, தனது வில்லையும் கணைகளையும் போட்டுவிட்டு, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமசேனன், அந்தப் போரில் கால்நடையாகவே ஜெயத்ரதனை நோக்கி விரைந்தான். பிறகு, ஜெயத்ரதன், யமதண்டம் போன்றவையும், கூர் முனை கொண்டவையுமான ஐநூறு {500} பயங்கரக் கணைகளைக் கொண்டு, தன்னை நோக்கிக் கையில் கதாயுதத்துடன் இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் பீமசேனனை அனைத்துப் புறங்களிலும் இருந்தும் துளைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்தவனும், மூர்க்கமானவனுமான விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்த இதயத்துடன், ஆரட்டாவில் [5] பிறந்தவையான சிந்துக்கள் மன்னனின் {ஜெயத்ரதனின்} குதிரைகள் அனைத்தையும் அப்போரில் கொன்றான்.
அதன்பிறகு, பீமசேனன் நடந்து வருவதைக் கண்டவனும், நிகரற்ற ஆற்றலைக் கொண்டவனும், தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான உமது மகன் (சித்திரசேனன்), அவனுக்கு {பீமனுக்கு} மரணத்தைக் கொடுப்பதற்காக உயர்த்திய ஆயுதங்களுடன் அவனை {பீமனை} நோக்கித் தன் தேரில் விரைந்தான். பீமனும், கையில் கதாயுதத்துடன் முழங்கிக் கொண்டே, உரக்கக் கத்திய படி அவனை {சித்திரசேனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். யமதண்டத்தைப் போன்றிருந்த அந்த உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்தைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், (தங்களுக்கு மத்தியில்) அது பாய்வதைத் தவிர்க்க விரும்பி, துணிச்சல் மிக்க உமது மகனை {சித்திரசேனனைக்} கைவிட்டுவிட்டு ஓடினார்கள் [6].
புலனுணர்வைக் குழப்புவதும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான (மனிதர்களின்) அந்த நொறுங்கலில் {போரில்}, தன்னை நோக்கி வரும் கதாயுதத்தைச் கண்டாலும், சித்திரசேனன் தனது புலனுணர்வுகளை இழக்கவில்லை. பளபளக்கும் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட அவன் {சித்திரசேனன்} தனது தேரைக் கைவிட்டுவிட்டு, மலைமுகட்டின் மேல் இருந்து குதிக்கும் சிங்கத்தைப் போல (தன் வாகனத்தில் இருந்து) கீழே தரையில் குதித்துக் காலாட்படை வீரனானான்.
அதே வேளையில் அந்த அழகிய தேரின் மேல் விழுந்த அந்தக் கதாயுதம், குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய அந்த வாகனத்தையே {தேரையே} அந்தப் போரில் அழித்து, ஆகாயத்தில் இருந்து பூமியில் தளர்ந்து விழும் சுடர்மிக்க ஓர் எரிநட்சத்திரத்தைப் போலப் பூமியில் விழுந்தது {கதாயுதம்}. அற்புதம் நிறைந்த அந்த உயர்ந்த சாதனையை {சித்திரசேனன் தப்பியதைக்} கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்தன. அவை {அந்தத் துருப்புகள்} அனைத்தும் ஒன்றாகக் கூடி அந்தப் போர்க்களத்தில் பெருமுழக்கம் செய்தன. மேலும் வீரர்கள் அனைவரும் (தாங்கள் என்ன கண்டார்களோ, அதற்காக) உமது மகனை {சித்திரசேனனை} பாராட்டினார்கள்” {என்றான் சஞ்சயன்}.
சிகண்டியை மீண்டும் தவிர்த்த பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 087-பீமனால் தேரிழந்த சித்திரசேனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட விகர்ணன்; பீஷ்மருக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; குதிரைகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனின் தேரில் ஏறிக் கொண்டது; நகுலசகாதேவர்களைத் தன் கணைகளால் மறைத்த பீஷ்மர்; வில்லால் விளையாடிய பீஷ்மர்; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; திருஷ்டத்யும்னனின் குதிரைகளைக் கொன்ற விந்தனும் அனுவிந்தனும்; சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; ஏழாம் நாள் போரின் முடிவிலான களநிலவரம்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படி {பீமனால்} தன் தேரை இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் சித்திரசேனனைக் கண்ட உமது {மற்றொரு} மகன் விகர்ணன், அவனை {சித்திரசேனனைத்} தன் தேரில் ஏறச் செய்தான். கடுமையாகவும், கொடூரமாகவும் நடைபெற்ற அந்தப் பொதுவான போரில், சந்தனுவின் மகனான பீஷ்மர், யுதிஷ்டிரனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்.
அப்போது, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய சிருஞ்சயர்கள் நடுங்கத் தொடங்கினார்கள். யுதிஷ்டிரன் ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டுவிட்டதாகவே அவர்கள் {சிருஞ்சயர்கள்} கருதினார்கள். எனினும், இரட்டையர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} சென்ற குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியுமான பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மறைத்தான்.
யுதிஷ்டிரனால் நன்கு அடிக்கப்பட்ட அந்த எண்ணிலா கணைகளை, நூறு நூறாகவும், ஆயிரங்களாகவும் தனித் தனித் தொகுப்புகளாக அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஏற்றுக் கொண்டார் [1]. (பதிலுக்கு) பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள், காற்றில் பறக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல எண்ணற்றவையாக இருந்தன. கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொகுப்புகளாக அடிக்கப்பட்ட எண்ணிலாக் கணைகளால் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் மறைத்தார்.
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்த உயர் ஆன்மக் கௌரவர் {பீஷ்மர்} மீது நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற ஒரு நாராசத்தை {நீண்ட கணையை} வேகமாக ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் யுதிஷ்டிரனின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்த நாராசம், தன்னை அடைவதற்கு முன்பே, ஒரு க்ஷூரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணையால்} அதனைத் துண்டாக்கினார். காலனுக்கு ஒப்பான அந்த நாராசத்தைத் துண்டித்த பீஷ்மர், குருக்களின் வழிவந்த அந்த இளவரசனுடையவையும் {யுதிஷ்டிரனுடையவையும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் குதிரைகளைக் கொன்றார்.
பிறகு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரைக் கைவிட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், உயர் ஆன்ம நகுலனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மர் கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போரில் இரட்டையரிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்} வந்து, அவர்களைக் கணைகளால் மறைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த (சகோதரர்கள்) இருவரையும் கண்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் அழிவை (நிர்ணயிக்க) விரும்பி ஊக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்த யுதிஷ்டிரன், “ஒன்றாகக் கூடி சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கொல்வீராக” என்று சொல்லி தன் நண்பர்களையும், (தன் தரப்பிலுள்ள) ஆட்சியாளர்களையும் தூண்டினான். பிருதை மகனின் {குந்தியின் மகனின் யுதிஷ்டிரனின்} இவ்வார்தைகளைக் கேட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அப்போது, அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வீழ்த்தித் தன் வில்லால் விளையாடத் தொடங்கினார்.
களத்தில் இப்படிக்கட்டுப்படுத்தப்பட முடியாமல் திரிந்து கொண்டிருந்த அந்தக் குரு குலத்தவரை {பீஷ்மரை}, காட்டில் மான் கூட்டத்திற்கு மத்தியில் திரியும் இளஞ்சிங்கத்தைப் போலப் பாண்டவர்கள் கண்டார்கள். அந்தப் போரில் பேரொலியுடன் முழங்கித் துணிவுமிக்க வீரர்களின் இதயங்களைத் தன் கணைகளால் அச்சங்கொள்ளச் செய்யும் அவரை {பீஷ்மரைக்} கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், போரில் அந்தப் பாரதக் குலச் சிங்கத்தின் {பீஷ்மரின்} அசைவுகளைக் காற்றின் உதவியால் வைக்கோலை எரிக்கும் காட்டு நெருப்புக்கு ஒப்பானதாகவே அந்த க்ஷத்திரியர்கள் கண்டார்கள்.
கனிந்த (பனம்) பழங்களைத் தாங்கும் மரங்களிலிருந்து (கல்லைக் கொண்டு) அவற்றை {கனிகளை} வீழ்த்தும் திறமைமிக்க ஒரு மனிதனைப் போல, அந்தப் போரில் தேர்வீரர்களின் தலைகளைப் பீஷ்மர் வீழ்த்தினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியின் பரப்பில் விழுந்த வீரர்களின் தலைகள், கல் மழையை ஒத்த பேரொலியை எழுப்பின. கடுமையானதும், பயங்கரமானதுமான அப்போர் நடந்து கொண்டிருந்த போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும் ஒரு பெரிய குழப்பம் தோன்றியது. அந்தக் குழப்பத்தின் விளைவால் (இரு படையின்) வியூகங்களும் {அணிவகுப்புகளும்} உடைந்தன. ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் {போருக்கு} அழைத்த க்ஷத்திரியர்கள், போரிடுவதற்காக ஒருவரையொருவர் அணுகினர்.
அப்போது, பாரதர்களின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட சிகண்டி, “நில்லும், நில்லும்” என்று சொன்னபடி அவரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். எனினும், சிகண்டியின் பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், அதன் காரணமாக அவனை {சிகண்டியை} அலட்சியம் செய்து சிருஞ்சயர்களை நோக்கி முன்னேறினார் [2]. அதன்பேரில், அந்தப் பெரும்போரில் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் {சிருஞ்சயர்கள்} தங்கள் சங்கொலிகளுடன் கலந்து, பல்வேறு விதமான உரத்த முழக்கங்களையும் செய்தனர். அதன் பிறகு தொடங்கிய கடுமையான போரில் தேர்களும் யானைகளும் ஒன்றோடொன்று கலந்தன. ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, நாளின் அந்த மணித்துளியின் போது, சூரியன் (நெடுங்கோட்டுக்கு {தீர்க்கரேகைக்கு}) அடுத்தப் பக்கத்தில் {மேற்கில்} இருந்தான்.
பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், கணைகள் மற்றும் வேல்களின் மழையால் (பாரதர்களின் அந்தப்) படையைப் பெரிதும் பீடித்தனர். அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்காக் கணைகளால் அந்தப் போரில் உமது வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். எனினும், அந்தப் போரில் மேன்மையான தீர்மானத்தை அடைத்திருந்த உமது போராளிகள், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, (இப்படிப்) போரில் கொல்லப்பட்டாலும், போரிடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. உண்மையில், உமது துருப்புகள் தங்கள் துணிச்சலின் அளவுக்குத்தக்க தாக்கத் தொடங்கினார்கள்.
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் ஒப்பற்ற மகனால் {திருஷ்டத்யும்னனால்} உமது உயர் ஆன்மப் போராளிகள் கொல்லப்பட்ட போது, அவர்களுக்கு மத்தியில் பேரொலியுடன் கூடிய துன்பக் கதறல்கள் கேட்கப்பட்டன. பேரொலியுடன் கூடிய அந்தக் கதறல்களைக் கேட்டு, உமது படையின் வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து வேகமாகச் சென்றனர். அவனது {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளை வேகமாகக் கொன்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் சேர்ந்து, அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கணைமாரியால் மறைத்தனர். அதன்பேரில், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரைவிட்டு விரைவாகக் கீழே குதித்துக் காலந்தாழ்த்தாமல் உயர் ஆன்ம சாத்யகின் தேரில் ஏறிக் கொண்டான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், பெரும்படை ஒன்றின் துணையுடன், அவந்தியின் இரு இளவரசர்களான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {விந்தானுவிந்தர்களை} எதிர்த்துச் சென்றான். அதே போல, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து விதங்களிலும் தயாராக இருந்த உமது மகனும் {துரியோதனனும்}, போரில் விந்தன் மற்றும் அனுவிந்தனைச் (அவர்களை ஆதரிப்பதற்காக) சூழ்ந்து நின்றான்.
அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட அர்ஜுனனும், அசுரர்களை எதிர்த்த வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல க்ஷத்திரியக் குலத்தின் காளைகள் பலரை எதிர்த்துப் போரிட்டான். உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதை எப்போதும் செய்யும் துரோணரும், அந்தப் போரில் கோபத்தில் எரிந்து, பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். துரியோதனனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட உமது பிற மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
பிறகு, சூரியன் சிவப்பு நிறமடைந்த போது [3], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளிடம் பேசிய மன்னன் துரியோதனன், “நேரத்தை இழக்காதீர் {விரைவாகச் செயல்படுவீர்}” என்று சொன்னான். இப்படிப் போரிட்ட அவர்கள், அடைதற்கரிய சாதனைகளை அடைந்த பின், சூரியன் மேற்கு மலையில் ஓயச் சென்றதன் விளைவால் மறைந்த போது, அந்த அந்திப் பொழுதின் தொடக்கத்தில், குருதியையே வெள்ளமாகவும், அலைகளாகவும் கொண்டதும், எண்ணிலடங்கா குள்ளநரிகளால் மொய்க்கப்பட்டதுமான பயங்கர ஆறு ஒன்று விரைவாக அங்கே பெருக்கெடுத்தது. மேலும், தீமையை முன்னறிவிக்கும் வகையில், ஆவிகளும், பயங்கரமாக ஊளையிடும் குள்ளநரிகளும் நிறைந்து அந்தப் போர்க்களமே பயங்கரமாக மாறியது. ராட்சசர்களும், பிசாசங்களும் மற்றும் மனித ஊனுண்ணிகள் பிறவும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சுற்றிலும் காணப்பட்டன.
சுசர்மன் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்களையும் {படைவீரர்களையும்} அவர்களது படைப்பிரிவின் மத்தியில் வெற்றிக் கொண்ட அர்ஜுனன், தன் பாசறையை நோக்கிச் சென்றான். இரவு தொடங்கிய போது, தன் தம்பிகளோடு கூடிய குரு குலத்தின் தலைவன் யுதிஷ்டிரனும், தன் துருப்புகள் பின் தொடர, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பாசறையை நோக்கிச் சென்றான். துரியோதனன் தலைமையிலான மன்னர்களை வெற்றிக் கொண்ட பீமசேனனும், தனது பாசறையை நோக்கிச் சென்றான்.
அந்தப் பெரும்போரில் (தனது துருப்புகளுடன்) சந்தனுவின் மகனான பீஷ்மரைச் சூழ்ந்து கொண்ட மன்னன் துரியோதனனும், தன் பாசறையை நோக்கிச் சென்றான். மொத்த (தார்தராஷ்டிரப்) படையையும் சூழ்ந்து கொண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும், தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர். அதே போல, தங்கள் படையைச் சூழ்ந்து கொண்ட சாத்யகியும், பிருஷதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.
இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவர்களான உமது துருப்பினரும், பாண்டவர்களும், இருளடைந்ததும் போரிடுவதை நிறுத்தினர். தங்கள் பாசறைகளுக்குச் ஓயச் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும், அவற்றில் {பாசறைகளில்} நுழைந்ததும், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். துணிவுமிக்கத் தங்கள் வீரர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து, விதிகளுக்கு ஏற்ப காவல்சாவடிகளை அமைத்து, (தங்கள் உடல்களில் இருந்து) கணைகளைப் பிடுங்கி, பல்வேறு விதங்களிலான நீரில் நீராடினர் {குளித்தனர்}.
பிறகு, அவர்களுக்காகச் சினமாற்றும் {அமைதிப்படுத்தும்} சடங்குகளை அந்தணர்கள் செய்தனர்; பாணர்கள் அவர்களது புகழைப் பாடினர். பிறகு அந்தப் புகழ்பெற்ற மனிதர்கள், கருவிகள் மற்றும் குரல் இசை ஆகிய இரண்டின் துணையோடும் சிறிது நேரம் களிப்பில் ஈடுபட்டனர் {உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்}. சிறிது நேரத்திற்கு {ஒரு முகூர்த்த நேரத்திற்கு} அந்த முழுக் காட்சியும் சொர்க்கத்தைப் போன்றே இருந்தது. அந்த மனிதர்களில் காளையர் சிறிது நேரம் போரைக் குறித்துப் பேசாதிருந்தனர். களைத்த மனிதர்களாலும், யானைகளாலும், குதிரைகளாலும் நிறைந்திருந்த அந்தப் படைகள் இரண்டும் அங்கே உறங்கிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காண்பதற்கு அவை அழகாகின [4]” {என்றான் சஞ்சயன்}.
ஏழாம் நாள் போர் முற்றும்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply