“யுதிஷ்டிரன் இழிந்தவன்” என்ற வீரர்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 043அ-அர்ஜுனன் மீண்டும் வில்லை எடுத்ததும் பாண்டவர் தரப்பு ஆரவாரம் செய்ந்தது; அனைவரும் போருக்குத் தயாரான போது யுதிஷ்டிரன் தனது கவசத்தையும் ஆயுதங்களையும் துறந்து எதிரிப்படையை நோக்கி நடந்து சென்றது; கௌரவப் படை வீரர்கள் யுதிஷ்டிரனை நிந்தித்தது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் (தனது) கணைகளையும், காண்டீவத்தையும் எடுத்ததைக் கண்ட (பாண்டவத் தரப்பில் உள்ள) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உரத்த குரலில் ஆர்ப்பரித்தனர். பாண்டவர்களும், சோமகர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்தவைகளான தங்களது சங்குகளை முழங்கினர். பேரிகைகள், காகளங்கள், ஜயமங்களைகள், மாட்டுக் கொம்புகள் ஆகியன ஒன்றாக அடிக்கப்பட்டும், ஊதப்பட்டும் அங்கே எழுந்த முழக்கமானது, பெரும் ஒலியுடையதாக இருந்தது.
பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அங்கே கந்தர்வர்கள், பித்ருக்கள், சித்தர் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேவர்கள், (அக்காட்சியைச்) சாட்சியாகக் காணும் விருப்பத்தில் அங்கே வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், அந்தப் பெரும் படுகொலையைக் காண்பதற்காக, நூறுவேள்விகளைச் செய்தவனின் {இந்திரனின்} தலைமையிலான அந்தக் கூட்டத்துடன் அங்கே வந்தனர்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு கடல்களைப் போல இருந்த அந்த இரு படைகளும் மோதலுக்குத் தயாராகவும், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டும் இருப்பதைக் கண்ட நீதிமானான வீர மன்னன் யுதிஷ்டிரன், தனது கவசத்தைக் கழற்றி, தனது அற்புத ஆயுதத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு, கூப்பிய கரங்களுடன் தனது தேரில் இருந்து விரைவாக இறங்கி, கட்டுப்படுத்தப்பட்ட பேச்சுடன் {மௌனமாக}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பார்த்துக் கொண்டே, எதிரிப்படை (நின்று கொண்டு) இருந்த திசையை நோக்கி, கிழக்கு முகமாகக் கால்நடையாகச் சென்றான்.
(இப்படி) அவன் {யுதிஷ்டிரன்} செல்வதைக் கண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது தேரில் இருந்து இறங்கி, தனது (பிற) சகோதரர்களுடன் அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். தலைவன் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அவனுக்குப் பின்னே பின்தொடர்ந்து சென்றான். இதனால் பதட்டம் நிறைந்த (அவனது {யுதிஷ்டிரனின்} படையில் இருந்த) முக்கியமான மன்னர்களும், அதே பாதையில் பின்தொடர்ந்து சென்றார்கள்.
அப்போது அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளைக் கைவிட்டு, கால்நடையாக, கிழக்கு முகம் நோக்கி, எதிரிக்கூட்டத்திடம் செல்லும் உமது செயல் யாது?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.
பீமசேனன் {யுதிஷ்ட்ரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது கவத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு, கவசம் தரித்திருக்கும் எதிரி வீரர்களை நோக்கி, ஓ! பூமியின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளையும் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {பீமன்}.
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மூத்த அண்ணனான நீர் இந்த வழியில் செல்வது (கண்டு) எனது நெஞ்சம் கலங்குகிறது. (எங்களுக்குச்) சொல்லும், எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {நகுலன்}.
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “எண்ணற்றவர்களாகவும், பயங்கரமாகவும் இருக்கும் இந்த எதிரிப் படைப்பிரிவுகள் நம்மிடம் போரிடவே இங்கு வந்திருக்கின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரிகளின் திசையில் நீர் எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான் {சகாதேவன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனது தம்பிகள் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மௌனத்துடன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து சென்றான்.
பெரும் அறிவும், உயர் ஆன்மாவும் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அவர்களிடம், (அப்போது), “இவரது நோக்கத்தை நான் அறிவேன். தனக்கு மேன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன் (போன்றவர்களுக்கு) தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, எதிரியுடன் இவர் போரிடப் போகிறார். தனது ஆசான்கள், வயதில் மூத்த மரியாதைக்குரியவர்கள், தனது சொந்தங்கள் ஆகியோருக்கு விதிப்படி தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, தனக்கு மேன்மையானவர்களுடன் எவன் போரிடுவானோ, அவன், போரில் நிச்சயமாக வெற்றிபெறுவான் என்பது பழங்கால வரலாறுகளில் இருந்து கேள்விப்படப்படுகிறது. இதுவே என் எண்ணமும் கூட” என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படைப்பிரிவின் மத்தியில் “ஐயோ” என்றும் “ஓ” என்றும் பெருத்த ஆரவாரம் எழுந்தது. ஆனால் (படையில் இருந்த) பிறரோ அமைதியாக இருந்தனர். யுதிஷ்டிரனைக் கண்ட திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} போர்வீர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர், “இவன் தனது குலத்தின் இழிந்தவன். இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அச்சத்தால் பீஷ்மரை நோக்கி வருகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன் (பீஷ்மரின்) பாதுகாப்பை நாடுபவன் ஆகிவிட்டான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, பாண்டு மகனான விருகோதரன் {பீமன்}, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரின் பாதுகாப்பைக் கொண்ட இந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரனே} ஏன் அஞ்சுகிறான்? இந்த உலகத்தால் கொண்டாடப்பட்டாலும் கூட, இவன் பலமற்றவனாகவும், போரில் நெஞ்சம் நிறைந்த அச்சம் கொண்டவனாகவும் இருப்பதால், ஒரு போதும் இவன் க்ஷத்திரிய வகையில் பிறந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் கௌரவர்களைப் புகழ்ந்தனர். பிறகு இன்புற்ற அவர்கள் அனைவரும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்களது ஆடைகளை அசைத்தவண்ணம் இருந்தார்கள்.
மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே (அப்போது) தனது தம்பிகள் அனைவரோடும், கேசவனோடும் {கிருஷ்ணனோடும்} கூடிய யுதிஷ்டிரனை அந்த வீரர்கள் அனைவரும் நிந்தித்தனர். இப்படி யுதிஷ்டிரனை நிந்தித்த அந்தக் கௌரவப் படையினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விரைவில் மீண்டும் அமைதியடைந்தனர். “இந்த மன்னன் என்ன சொல்வான்? பீஷ்மர் என்ன பதில் சொல்வார்? தன் பலத்தில் தற்பெருமை நிறைந்த பீமன் என்ன சொல்வான், கிருஷ்ணனும் அர்ஜுனனும் என்ன சொல்வார்கள்? உண்மையில் யுதிஷ்டிரனுக்குச் சொல்ல வேண்டியது என்ன?” என்று யுதிஷ்டரனைக் குறித்த ஆர்வம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு படைகளிலும் பெரிதாக இருந்தது.
பாட்டனையும் ஆசானையும் வணங்கிய யுதிஷ்டிரன் – பீஷ்ம பர்வம் பகுதி – 043ஆ-தன் தேரைவிட்டு இறங்கி கைகூப்பிய படி சென்ற யுதிஷ்டிரன் நேரே பீஷ்மரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது; பிறகு துரோணரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது..
(அதே வேளையில்), அம்புகளும் வேல்களும் நிறைந்த எதிரிப்படையைத் ஊடுருவிச் சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அவரது {பீஷ்மரின்} பாதங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிய அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, போருக்குத் தயாராக இருந்த சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} (இவ்வார்த்தைகளைப்) பேசினான்.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே {பீஷ்மரே}, நான் உம்மை வணங்குகிறேன். உம்முடன் நாங்கள் போரிடப் போகிறோம். இக்காரியத்தில் (எங்களுக்கு) உமது அனுமதியை அருள்வீராக. (உமது) ஆசியையும் (எங்களுக்கு) அளிப்பீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்குப் பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் போரில் இப்படி என்னிடம் நீ வராமல் இருந்திருந்தால், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ தோல்வி அடையவே நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, போரில் நீ வேறு எதை விரும்புவாயோ அவற்றையும் அடைவாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, எங்களிடம் நீ விரும்பும் வரத்தையும் கேட்பாயாக. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இது {இந்தக் காரியம்} இப்படி நடந்திருப்பதால் தோல்வி உனதாகாது. மனிதன் செல்வத்திற்கு அடிமையானவன். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதுவே உண்மை. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, “கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?” என்று கேட்டார் {பீஷ்மர்} [1].
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே {பீஷ்மரே}, நீர் கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. எனினும், நாளுக்கு நாள் எனது நன்மையையும் விரும்பி, எனது நலன்களையும் ஆலோசிப்பீராக. எப்போதும் இதுவே (உம்மிடம்) எனது வேண்டுதலாகும்” என்றான் {யுதிஷ்டிரனிடம்}.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதில் என்னால் உனக்கு என்ன உதவ முடியும்? நிச்சயமாக, நான் (உனது) எதிரிகளுக்காகவே {துரோனாதிபதிகளுக்காகவே} போரிடுவேன். நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெல்லப்பட முடியாத உம்மை நாங்கள் எவ்வாறு போரில் வீழ்த்துவது? எனது நன்மைக்கான இதில், நீர் ஏதாவது நன்மையைக் கண்டால், உண்மையில் இஃதை எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனாகவே {இந்திரனாகவே} எவனும் இருந்தாலும் கூட, நான் போரிடும்போது, என்னைப் போரில் வீழ்த்துபவன் எவனையும் நான் காணவில்லை” என்றார் {பீஷ்மர்}.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, எனது வணக்கங்கள் உமதாகட்டும். எனவே, (இதை) நான் உம்மிடம் கேட்கிறேன். போரில் எதிரிகளால் உமது மரணத்தைப் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரனிடம்}.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் என்னை வீழ்த்த வல்ல ஒருவனையும் நான் காணவில்லை. எனது மரணத்திற்கான நேரமும் இன்னும் வரவில்லை. என்னிடம் மீண்டும் வருவாயாக” என்றார் {பீஷ்மர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடன்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மீண்டும் பீஷ்மருக்குத் தலை வணங்கிய யுதிஷ்டிரன், அவரது வார்த்தைகளை ஏற்றான். பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், தன் தம்பிகள் துணையுடன் ஆசானின் (துரோணரின்) தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை வணங்கி அவரை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது நன்மைக்கான வார்த்தைகளை அந்த வெல்லப்பட முடியாத வீரரிடம் {துரோணரிடம்} பேசினான்.
யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே, ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே_துரோணரே}, உமது அனுமதியுடன், எனது எதிரிகள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம், பாவமீட்டாமல் நான் போரிடுவது எவ்வாறு? [2]” என்று கேட்டான்.
துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்து, (இப்படி) நீ என்னிடம் வராது இருந்திருந்தால், உனது முழுமையான வீழ்ச்சிக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். எனினும், ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, உன்னிடம் மனநிறைவையும், மதிப்பையும் {கௌரவத்தையும்} அடைந்தேன். நான் உன்னை அனுமதிக்கிறேன், போரிடு, வெற்றியை அடைவாயாக. நான் உனது விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். இந்தச் சூழ்நிலையில், போரைத் தவிர்த்து, நீ என்ன விரும்புகிறாய்? மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல நான் கௌரவர்களுக்காகப் போரிட வேண்டியிருக்கிறது. மேலும், இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, “போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் கௌரவர்களுக்காகப் போரிடுவேன். ஆனால் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன்” என்றார் {துரோணர்}.
யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {துரோணரே}, எனது வெற்றிக்காக வேண்டி, எனது நன்மைக்காக ஆலோசிப்பீராக. எனினும், கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. இதையே நான் உம்மிடம் வரமாகக் கேட்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் எதுவரை போரிடுவேனோ, அதுவரை வெற்றி உனதாக முடியாது. (எனவே), ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னை விரைவாகக் கொல்ல உனது தம்பிகளுடன் முயல்வாயாக” என்றார் {துரோணர்}.
யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, “இதற்கு ஐயோ, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {துரோணரே}, உமது மரணத்திற்கான வழிமுறைகளை (எங்களுக்குச்) சொல்லும். ஓ! ஆசானே {துரோணரே}, நெடுஞ்சாண் கிடையாக என்னைக் கிடத்திக் கொண்டு நான் உம்மிடம் இதைக் கேட்கிறேன். உமக்கு (எனது) வணக்கங்கள்” என்றான்.
துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, “கோபம் தூண்டப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்டு, தொடர்ச்சியாக அம்புகளைப் பொழிந்து கொண்டு களத்தில் நிற்கும் என்னைக் கொல்லத்தக்க எதிரி எவனையும் நான் காணவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எப்போது நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு, சுற்றுப்புறத்தில் இருந்து விடுபட்டு (யோகத் தியானத்தில்) இருக்கிறேனோ, அப்போது தவிர என்னைக் கொல்ல எவனாலும் முடியாது. நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். நம்பத்தகுந்த பேச்சுக் கொண்டவனிடம் இருந்து முற்றிலும் ஏற்கத்தகாத {இனிமையற்ற} எதையாவது கேட்டால், போரில் நான் எனது ஆயுதங்களைக் கைவிடுவேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {துரோணர்}
கிருபர், சல்லியன், யுதிஷ்டிரன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 043இ-துரோணரிடம் இருந்து அகன்றதும் யுதிஷ்டிரன் கிருபரிடம் சென்று, அவரிடம் அனுமதியும் ஆசியும் பெறுவது; பிறகு சல்லியனிடம் சென்று அவனது அனுமதியையும், ஆசியையும் யுதிஷ்டிரன் பெறுவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பரத்வாஜரின் அறிவுடைய மகனின் {துரோணரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை செலுத்திவிட்டு, சரத்வானின் மகனை {கிருபரை} நோக்கி முன்னேறினான் (யுதிஷ்டிரன்). ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சில் வல்லவனான யுதிஷ்டிரன், கிருபரை வணங்கி, அவரை வலம் வந்து, பெரும் வீரம் கொண்ட அந்த வீரரிடம் {கிருபரிடம்} இவ்வார்த்தைகளைப் பேசினான்.
யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, “ஓ! ஆசானே {கிருபரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். உம்மால் அனுமதிக்கப்பட்டு, ஓ பாவமற்றவரே {கிருபரே}, நான் (என்) எதிரிகள் அனைவரையும் வீழ்த்துவேன்” என்றான்.
கிருபர் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முற்றான உனது தோல்விக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவர்கள் சார்பாகவே போரிட வேண்டும். இதுவே என் கருத்து. எனவே, “போரைத் தவிர நீ என்ன விரும்புகிறாய்?” என்று ஓர் அலியைப் போலக் கேட்கிறேன்” என்றார் {கிருபர்}.
யுதிஷ்டிரன் {கிருபரிடம்}, “ஐயோ, எனவேதான், ஓ! ஆசானே {கிருபரே} நான் உம்மைக் கேட்கிறேன். எனது வார்த்தைகளைக் கேளும்” என்றான். இதைச் சொன்ன அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மிகவும் கலங்கி உணர்வற்றுப் போய் அமைதியாக நின்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எனினும், அவன் சொல்ல நினைத்ததைப் புரிந்து கொண்ட கௌதமர் {கிருபர்} அவனிடம் மறுமொழியாக, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} நான் கொல்லப்பட முடியாதவன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. உனது வருகையால் நான் மனம் நிறைந்தேன். (படுக்கையில் இருந்து) தினமும் எழுந்ததும், நான் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {கிருபர்}.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌதமரின் {கிருபரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவருக்கு உரிய மரியாதையை வழங்கிய மன்னன் {யுதிஷ்டிரன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} இருந்த இடத்திற்கு முன்னேறினான். சல்லியனை வணங்கி அவனை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, வெல்லப்பட முடியாத அந்த வீரனிடம் {சல்லியனிடம்}, தனது நன்மைக்கான இந்த வார்த்தைகளைப் பேசினான்.
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! வெல்லப்பட முடியாதவரே {சல்லியரே}, உமது அனுமதியைப் பெற்று, பாவமீட்டாமல் நான் போரிடுவேன். ஓ! மன்னா {சல்லியரே}, உம்மால் அனுமதிக்கப்பட்டு, வீரமிக்க (என்) எதிரிகளை நான் வீழ்த்துவேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “போரிடத் தீர்மானித்த பிறகு, (இப்படி) நீ என்னிடம் வந்திருக்க மாட்டாயென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் தோல்வியுற நான் உன்னைச் சபித்திருப்பேன். நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். (உன்னால்) மதிக்கவும் பட்டேன். நீ விரும்பியவாறே நடக்கட்டும். நான் உனக்கு அனுமதியளிக்கிறேன், போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ! வீரா {யுதிஷ்டிரா}, சொல். உனது தேவை என்ன? நான் உனக்கு என்ன தர வேண்டும்? இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரைத் தவிர என்ன நீ விரும்புகிறாய்? மனிதன் செல்வத்துக்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. ஓ! மருமகனே {யுதிஷ்டிரா}, கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன். இதன் காரணமாகவே, “நீ விரும்பும் ஆசையை நான் நிறைவேற்றுவேன்” என்று ஓர் அலியைப் போலப் பேசுகிறேன். போரைத் தவிர, நீ என்ன விரும்புகிறாய்?” என்று கேட்டான் {சல்லியன்}.
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! மன்னா {சல்லியரே}, எனக்குப் பெரும் நன்மை எதுவோ அதைத் தினமும் நினைப்பீராக. உமது விருப்பப்படியே நீர் எதிரிக்காகப் போரிடுவீராக. நான் வேண்டும் வரம் இதுவே” என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நான் உனக்கு என்ன உதவியைச் செய்ய முடியும் என்பதைச் சொல்வாயாக? நான் நிச்சயமாக (உனது) எதிரிக்காகவே போரிடுவேன். ஏனெனில், கௌரவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு என்னை அவர்கள் தரப்பாக்கிக் கொண்டார்கள் [1].
யுதிஷ்டிரன் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, (போருக்கான) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது, என்னால் வேண்டப்பட்டதே, அதுவே எனது வரமாகும். சூத மகனின் (கர்ணனின்) சக்தி போரில் உம்மால் குறைக்கப்பட வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, இந்த உனது விருப்பம் நிறைவேறும். செல்வாயாக. உனது விருப்பப்படி போரிடுவாயாக. உனது வெற்றியை நான் கவனித்துக் கொள்கிறேன் [2]” என்றான்.
கௌரவர்களைக் கைவிட்ட யுயுத்சு! – பீஷ்ம பர்வம் பகுதி – 043ஈ-சல்லியனிடம் விடைபெற்ற யுதிஷ்டிரன் கௌரவப் படையை விட்டு வெளியேறுவது; கர்ணனிடம் கிருஷ்ணன் தங்கள் தரப்புக்கு வருமாறு கோருவது; கர்ணன் மறுப்பது; கௌரவப் படை வீரர்களிடம் யுதிஷ்டிரன் கோரிக்கை வைப்பது; யுயுத்சு பாண்டவர் தரப்பை அடைவது; பாண்டவர்களின் நடத்தையை அங்கிருந்த அனைவரும் மெச்சுவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனது தாய்மாமனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அனுமதியைப் பெற்ற அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ அந்தப் பரந்த படையை விட்டு வெளியே வந்தான். பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் இருந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சென்றான். பாண்டவர்களுக்காகக் கர்ணனிடம் அந்தக் கதனின் அண்ணன் {கிருஷ்ணன்} பேசினான். “ஓ! கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ எத்தரப்பையும் விரும்பவில்லையெனில், துரியோதனன் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் நீ போரில் ஈடுபடலாம் [1]” என்றான் {கிருஷ்ணன்}.
கர்ணன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்பில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன். துரியோதனனுடைய நன்மையில் அர்ப்பணிப்புள்ள நான் எனது உயிரையும் (அவனுக்காக) விடுவேன் என்பதை அறிவாயாக” என்றான். (கர்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் {பேசுவதை} நிறுத்திக் கொண்டு யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} மீண்டும் இணைந்து கொண்டான்.
பிறகு, பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், “எவன் எங்களைத் தேர்ந்தெடுப்பானோ {விரும்பி ஏற்பானோ}, அவனை எங்கள் கூட்டாளியாக நாங்களும் தேர்ந்தெடுப்போம் {விரும்பி ஏற்போம்}” என்று உரக்கச் சொன்னான்.
அவர்களின் {பாண்டவர்களின்} மீது கண்களைச் செலுத்திய யுயுத்சு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் {தர்மராஜா} யுதிஷ்டிரனிடம், “பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னை ஏற்பீரென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு {உமது தலைமையின்} கீழ் {இருந்து கொண்டு}, உங்கள் அனைவருக்காகவும் திருதராஷ்டிரர் மகன்களுடன் போரிடுவேன்” என்றான் {யுயுத்சு}.
யுதிஷ்டிரன் {யுயுத்சுவிடம்}, “வா, வருவாயாக, மூடர்களான உனது சகோதரர்களுடன் நாம் அனைவரும் போரிடுவோம். ஓ! யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், “ஓ! வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக” என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ! இளவரசே, ஓ! பெரும் காந்தியுடையவனே {யுயுத்சுவே}, உன்னை ஏற்கும் எங்களை நீயும் ஏற்பாயாக. தீய புரிதல் {புத்தி} கொண்டவனும், சினம் நிறைந்தவனுமான துரியோதனின் வாழ்வு முடியப்போகிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “குருக்களான உமது மகன்களைக் கைவிட்ட யுயுத்சு, பிறகு, துந்துபி மற்றும் பேரிகைகளின் முழக்கத்தோடு பாண்டவர்களின் படைக்குச் சென்றான். மகிழ்ச்சியால் நிறைந்தவனான வலிய கரங்களைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தங்கத்தின் ஒளி பொருந்தியதும் பளபளப்பு கொண்டதுமான தனது கவசத்தை மீண்டும் அணிந்து கொண்டான். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய தேர்களில் ஏறினர். மேலும், அவர்கள் முன்பு போலவே தங்கள் துருப்புகளின் எதிர் வியூகத்தை அமைத்துக் கொண்டனர். துந்துபிகளையும், காகளங்களையும் நூற்றுக்கணக்கில் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்களும் பல்வேறு வகைகளில் சிம்ம முழக்கமிட்டார்கள்.
மனிதப் புலிகளான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தேர்களில் ஏறுவதைக் கண்ட (அவர்களது தரப்பு) மன்னர்களும், திருஷ்டத்யும்னனும், பிறரும் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மரியாதைக்குரியவர்களுக்கு முறையான மரியாதையைச் செய்த பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} உயர்ந்த பண்பைக் கண்டவர்களும், அப்போது அங்கிருந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும் அவர்களை {பாண்டவர்களை} உயர்வாக மெச்சினார்கள். நட்பு, பரிவு, சொந்தங்களிடம் அன்பு ஆகியவற்றை உரிய காலத்தில் வெளிப்படுத்திய அந்த உயர் ஆன்ம மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்து அந்த ஏகாதிபதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தப் புகழ்மிக்க மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்த துதிபாடல்களுடன் இணைந்து “அருமை, அருமை” என்ற இனிமை வார்த்தைகளே எங்கும் வெளிப்பட்டன.
இதன் விளைவாக அனைவரின் மனங்களும், இதயங்களும் அவர்களின் {பாண்டவர்களின்} பால் ஈர்க்கப்பட்டன. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அந்த நடத்தையைச் சாட்சியாகக் கண்டவர்களும், அல்லது கேட்டவர்களும், மிலேச்சர்களும், ஆரியர்களுமான அனைவரும் தடைபட்ட {தழுதழுத்த} குரல்களுடன் அழுதனர். பெரும் சக்தி கொண்ட அந்த வீரர்கள் {மிலேச்சர்களும், ஆரியர்களும்} நூறு நூறாக பேரிகைகளையும், *புஷ்கரங்களையும் முழங்கச் செய்து, பசுவின் பாலைப் போன்று வெண்மையா்க இருந்த தங்கள் சங்குகள் அனைத்தையும் முழங்கினர்” {என்றான் சஞ்சயன்}.
முதலில் தாக்கியது யார்? – பீஷ்ம பர்வம் பகுதி – 044-துச்சாசனன் முதலான கௌரவர்கள் முழங்கிக் கொண்டு முன்னேறி வந்த பீமனின் மீது பாய்வது; அவர்களின் மீது திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பாய்வது; போர் ஆரம்பமாவது; போர்க்களத்தைக் குறித்த சஞ்சயனின் வர்ணனை…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் தரப்பு மற்றும் எதிரி தரப்பு ஆகிய இரண்டு படைப்பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட போது, யார் முதலில் அடித்தது? குருக்களா? பாண்டவர்களா?” என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் அண்ணனின் {துரியோதனனின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரைத் தங்கள் தலைவராகக் கொண்ட தனது துருப்புகளுடன் முன்னேறினான். பீஷ்மருடன் போரிட விரும்பிய பாண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முன்னேறினர். பிறகு, இரு படைகளில் இருந்தும், சிங்க முழக்கங்களும், ஆரவாரவொலிகளும், ஜயமங்களைகளின் {கிரகசங்களின் Krakachas} ஒலிகளும், மாட்டுக் கொம்புகளின் {மாட்டுக் கொம்பால் செய்யப்பட்ட இசைக்கருவிகளின்} ஒலிகளும், பேரிகைகள், மிருதங்கங்கள், மேளங்கள் ஆகியவற்றின் ஒலிகளும் எழுந்தன. எதிரிகளின் வீரர்கள் நம்மை {கௌரவர்களை} நோக்கி விரைந்தார்கள். நாமும் அவர்களை {பாண்டவர்களை} எதிர்த்துப் பேரொலிகளுடன் விரைந்தோம். இந்த (விரைவின் விளைவால் எழுந்த) ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது.
அந்த அச்சந்தரும் கொலைகார மோதலில், காற்றினால் அசைக்கப்பட்ட காடுகளைப் போல, சங்குகள் மற்றும் மிருதங்கங்களால் எழுந்த அமளியின் விளைவால் பாண்டவ மற்றும் திருதராஷ்டிரப்படைகள் நடுங்கின. அந்தத் தீய வேளையில் ஒருவருக்கு எதிர் மற்றொருவராக விரைந்த மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன நிறைந்த அந்தப் படைகள் செய்த ஆரவாரம், புயலால் கலங்கடிக்கப்படும் கடலின் பேரொலியைப் போன்று இருந்தது.
பேரொலியாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆரவாரம் எழுந்த போது, வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், காளையைப் போல உரத்து முழங்கத் தொடங்கினான். பீமசேனனின் அந்த முழக்கம், போராளிகளின் சிங்கமுழக்கங்கள், யானையின் பிளிறல்கள், சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகள் ஆகியவற்றை மீறி மேலே எழுந்தது. உண்மையில், பீமசேனனின் முழக்கங்கள் இருதரப்பு படைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான குதிரைகளின் கனைப்பொலிகளையும் விஞ்சியிருந்தது. சக்ரனின் {இந்திரனின்} இடியைப் போன்றும், மேகங்களைப் போன்றும் முழங்கிக் கொண்டிருந்த பீமசேனனின் அந்த ஒலியைக் கேட்டு, உமது வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர். அந்த வீரனின் {பீமனின்} கர்ஜனையால், சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட பிற விலங்குகளைப் போல, குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தும் சிறுநீர் மற்றும் மலத்தைக் கழித்தன. மேகங்களின் திரள்களைப் போல ஆழமான முழக்கத்தைச் செய்து, பயங்கர உருவம் ஏற்ற {பயங்கர உருவத்தை அடைந்த} அந்த வீரன் {பீமன்}, உமது மகன்களை அச்சுறுத்தி அவர்கள் மீது பாய்ந்தான்.
அதன் பேரில், சகோதரர்களும் உமது மகன்களுமான துரியோதனன், துர்முகன், துஸ்ஸஹன், சலன், வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், துர்மர்ஷணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விவிம்சதி, சித்ரசேனன், பெரும் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன், புருமித்ரன், ஜயன், போஜன் ஆகியோரும் சோமதத்தனுடைய வீரமிக்க மகனும் {பூரிஸ்ரவசும்} மேகங்களின் திரள்கள் மின்னல் கீற்றுகளை வெளிப்படுத்துவதைப் போல, தங்கள் அற்புதமான விற்களை அசைத்து, (தங்கள் அம்பறாத்தூணிகளில் இருந்து) சமீபத்தில் சட்டை உதிர்த்த பாம்புகளைப் போன்ற நீண்டிருந்த கணைகளை எடுத்தனர். (தங்களை நோக்கி) விரைந்து வந்த அந்த வலிமைமிக்க வில்லாளியை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, தங்கள் கணைகளால் அவனை {பீமனை} மறைத்தார்கள்.
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரன் {அபிமன்யு}, நகுலன், சகாதேவன் மற்றும் பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் ({பீமனை நோக்கி விரைந்த} அந்த) தார்தராஷ்டிரர்களை நோக்கி விரைந்து, சொர்க்கத்தின் மூர்க்கமான கணைகளால் {வஜ்ராயுதங்களால்} பிளக்கப்படும் மலைச்சிகரங்களைப் போல, கூர்மையான தங்கள் கணைகளால் அவர்களைக் கிழித்தார்கள். வில் நாண்களின் பயங்கர நாணொலி மற்றும் (வீரர்களின்) கையுறைகள் ஒன்றோடொன்று மோதும் ஒலியாலும் வகைப்படுத்தப்பட்ட அந்த முதல் மோதலில் உமது தரப்பிலோ, எதிரி தரப்பிலோ எந்தப் போராளியும் புறமுதுகிடவில்லை.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா கணைகளால், குறியை அடித்து எப்போதும் வெல்பவர்களாக இருந்தவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (குறிப்பாக) துரோணருடைய சீடர்களின் கை வேகத்தை {லாகவத்தை} நான் கண்டேன். வில்நாண்களின் நாணொலி ஒருக்கணமும் நிற்கவில்லை, (காற்றில்) அடிக்கப்பட்ட சுடர்மிகும் அம்புகள், வானத்தின் (வானத்திலிருந்து விழும்) விண்கற்களைப் போல வெளிப்பட்டன. பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொந்தங்களுக்கிடையில் நடந்ததும், பயங்கரம் நிறைந்ததும், கவனத்தைக் கவர்வதுமான அந்தப் போரை பார்வையாளர்களாகக் கண்டு (அமைதியாக) நின்றனர். பிறகு வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள், சினம் தூண்டப்பட்ட நிலையில், ஒருவரிடம் மற்றொருவர் அடைந்த காயங்களை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து அந்தக்களத்தில் போரிட்டனர்.
யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்தவையான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் இரு படைகளும் திரையில் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போல அந்தப் போர்க்களத்தில் மிக அழகாகத் தோற்றமளித்தன. அதன் பிறகு, (பிற) மன்னர்கள் அனைவரும் தங்கள் விற்களை எடுத்தனர். போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியினால் சூரியன் மறைந்தான். (தங்கள் தங்கள்) துருப்புகளின் தலைமையில் இருந்தவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரால் ஒருவரின் மேல் மற்றவர் பாய்ந்தனர். மோதலுக்கு விரைந்த அந்த மன்னர்களின் யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்பட்ட பேரொலிகள், போராளிகளின் சிம்ம முழக்கங்களுடனும், சங்கு முழக்கம் மற்றும் பேரிகைகளின் ஒலி ஆகியவற்றில் எழுந்த ஆரவாரத்துடனும் கலந்தது.
கணைகளை முதலைகளாகவும், விற்களைப் பாம்புகளாகவும், வாள்களை ஆமைகளாகவும், போர் வீரர்களின் சாடல்களைப் புயலாகவும் கொண்ட அந்தப் பெருங்கடலின் {படைகளின்} பேரொலி, (உண்மையான) கடல் கலங்கிய நிலையில் ஏற்படுத்தும் அமளியையே ஒத்திருந்தது. யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னர்கள், (தங்கள் தங்கள்) துருப்புகளுடன் உமது மகனின் படையணியினர் மீது பாய்ந்தனர். அந்த இருபடைகளின் போராளிகளுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது.
போரிடும்போதோ, உடைந்த அணிவகுப்பில் {வியூகத்தில்} [1] இருந்து திரும்பும்போதோ, மீண்டும் போரிடச் செல்லும்போதோ நமது தரப்பு மற்றும் எதிரி தரப்புப் போராளிகளுக்கிடையில் எந்த வேற்றுமையையும் காண முடியவில்லை. அச்சந்தரும் அந்தப் பயங்கரப் போரில், கணக்கிடமுடியாத அந்தக் கூட்டத்தை விஞ்சி உமது தந்தை (பீஷ்மர்) ஒளிர்ந்து கொண்டிருந்தார்” {என்றான் சஞ்சயன்}.
தாக்குதலும் எதிர் தாக்குதலும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 045அ-எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பயங்கர நாளின் மத்திய வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பற்பல) மன்னர்களின் உடல்களைச் சிதைத்த அந்தப் பயங்கரப் போர் தொடங்கியது. போரில் வெற்றியை விரும்பியவர்களான குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களின் பேரொலிகள் சிம்ம முழக்கங்களை ஒத்திருந்தது. அது வானத்திலும் பூமியிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தோல் கையுறைகள் ஒன்றின் மேல் ஒன்று மோதிய ஒலிகளும், சங்கொலிகளும் கலந்த அந்த அமளி, ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது. சிம்ம முழக்கங்களைச் செய்த பலர் ஒருவரை நோக்கி ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்தவையான, (கையில் பொதிந்த) கையுறைகளுடன் நீட்டி இழுக்கப்பட்ட வில் நாண்களின் ஒலிகளும், யானைப்படையின் கனமிக்க நடையின் ஒலியும், குதிரைகளின் மூர்க்கமான கனைப்பொலிகளும், அங்குசங்கள் மற்றும் தடிகள் விழும் ஒலிகளும், ஆயுதங்கள் மோதும் ஒலிகளும், ஒன்றை நோக்கி மற்றொன்றாக விரையும் யானைகளின் மணியோசைகளும் ஏற்படுத்திய ஆரவாரம் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தங்கள் உயிரையே துச்சமாகக் கருதிய குரு வீரர்கள் அனைவரும், கொடிக்கம்பங்களை உயர்த்திவயாறும், கொடிய நோக்கங்களோடும் பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர்.
சந்தனுவின் மகனும் {பீஷ்மனும்} கூட, மரணக் கோலுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில், தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைந்தார். பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு கங்கையின் மைந்தருக்கு {பீஷ்மருக்கு} எதிராகப் போர்க்களத்தில் விரைந்தான். குருக்களுக்கு மத்தியில் புலிகளான அந்த இருவரும் {பீஷ்மரும், அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் கொல்லவே விரும்பினர். வலிமைமிக்கவரான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் என்னதான் பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} துளைத்துக் கொண்டிருந்தாலும், அவரால் அவனை {பீஷ்மரால் அர்ஜுனனை} நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனாலும் {அர்ஜுனனாலும்} போரில் பீஷ்மரை நடுங்கச் செய்ய முடியவில்லை.
வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி, கிருதவர்மனை எதிர்த்து விரைந்தான். இந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போரானது (காண்போருக்கு) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும்வண்ணம் கடுமையானதாக இருந்தது. சாத்யகி, கிருதவர்மனைத் துன்புறுத்தினான். கிருதவர்மனும், சாத்யகியைத் துன்புறுத்தினான். பேரொலிகளால் ஒருவரை ஒருவர் என இருவரும் தங்களைப் பலவீனப் படுத்தினர். உடலெங்கும் அம்புகளால் துளைக்கப்பட்ட அவ்விரு வலிமைமிக்க வீரர்களும் (சாத்யகியும், கிருதவர்மனும்} வசந்த காலத்தில் பூக்கும் கின்குசக மலர்களைப் போலக் காட்சியளித்தனர்.
வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு, பிருஹத்பலனுடன் போரிட்டான். எனினும், விரைவில் அந்த மோதலில், ஓ, மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, சுபத்திரையின் மகனுடைய {அபிமன்யுவுடைய} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, அவனது தேரோட்டியையும் வீழ்த்தினான். தனது தேரோட்டியின் வீழ்ச்சியில் பெரும் கோபம் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் பிருஹத்பலனைத் துளைத்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன், மேலும் இரு கணைகளால் (பிருஹத்பலனின்) கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். (மேலும்) ஒரு கணையால், அவனது {பிருஹத்பலனின்} தேர்ச்சக்கரங்களைக் காப்பவன் ஒருவனையும், இன்னும் ஒன்றால் {ஒரு கணையால்} அவனது தேரோட்டியையும் வெட்டினான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அபிமன்யு} தனது கூரிய கணைகளால் எதிரிகள் ஒவ்வொருவரையும் பலவீனப்படுத்தினான்.
ஏற்கனவே (பாண்டு மகன்களைக்) காயப்படுத்தியவனும், செருக்குடையவனும், வீண்பெருமிதம் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனனுடன் பீமசேனன் போராடினான். குருக்களின் மத்தியில் முதன்மையான அந்த (இளவரசர்கள்) இருவரும் மனிதர்களில் புலியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருந்தனர். அந்தப் போர்க்களத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் கணை மழையால் நிறைத்தனர். பாரதரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்மா கொண்டவர்களும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், சாதித்த போர்வீரர்களுமான அவர்களை {பீமனையும், துரியோதனனையும்} அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்துடன் பார்த்தன.
வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனை எதிர்த்து விரைந்த துச்சாசனன், கூரிய பல கணைகளால் அவனது {நகுலனின்} உயிர்ப்பகுதிகளைத் துளைத்தான். அதே வேளையில் சிரித்துக் கொண்டிருந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, (தனது) எதிரியின் கொடிக்கம்பத்தையும், வில்லையும் தனது கூரிய கணைகளால் அறுத்து, இருபத்தைந்து சிறுதலைக் கணைகளால் {க்ஷூத்ரகப் பாணங்களால்} அவனை {துச்சாசனனை} அடித்தான். எனினும், வீழ்த்தப்படக் கடினமான உமது மகன் {துச்சாசனன்}, அந்தக் கடும் மோதலில் நகுலனின் குதிரைகளையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினான்.
அந்தப் பயங்கர மோதலில் வலிமைமிக்கச் சகாதேவனை எதிர்த்து விரைந்த துர்முகன், அவனை {சகாதேவனை} கணைகளின் மழையால் துளைத்தான். வீரனான சகாதேவனும், அச்சந்தரும் அந்தப் போரில், பெரும் கூர்மை வாய்ந்த ஒரு கணையால் துர்முகனின் தேரோட்டியை வீழ்த்தினான். போரில் ஒடுக்க முடியாத அவ்விருவரும் மோதலுக்காக ஒருவரை ஒருவர் அணுகித் தாக்கி, அடுத்தவரை விரட்டியடிக்க விரும்பி, கொடூரமான கணைகளால் ஒருவருக்கொருவர் தாக்கத் தொடங்கினர்.
மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதினான். பிறகு, அந்த மத்ரத் தலைவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனின் வில்லை அவன் பார்வையிலேயே இரண்டாகத் துண்டித்தான். அதன் பேரில், துண்டான அந்த வில்லை வீசி எறிந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மேலும் வலிமையானதும், வேகத்தைக் கொடுப்பதுமான ஒரு வில்லை எடுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நேரான அம்புகளைக் கொண்டு அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} மறைத்து, பெரும் கோபத்துடன், “நில்லும், நில்லும்” என்றான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்து விரைந்தான். பெரும் கோபம் கொண்ட துரோணர், எதிரிகளின் உயிரை எப்போதும் எடுக்க வல்ல அந்த உயர் ஆன்ம பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} கடினமான வில்லைத் துண்டித்தார். அதே வேளையில் மரணத்தின் இரண்டாவது கோல் போன்ற பயங்கரக் கணையையும் அந்த மோதலின் போது அவர் {துரோணர்} அடித்தார். அந்தக் கணை இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} உடலைத் துளைத்தது. பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} அந்த மோதலின் போது பதினான்கு கணைகளால் துரோணரைத் துளைத்தான். ஒருவரின் மேல் மற்றவர் எனக் கோபம் மூண்ட அவர்கள் தங்களுக்குள் கடுமையாகப் போரிட்டனர்.
ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டவர்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 045ஆ-எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது…
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்} “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகம் கொண்டவனான சங்கன் {விராடனின் மகன்}, போரில் தனக்கு நிகரான வேகம் கொண்டவனான சோமதத்தன் மகனுடன் {பாஹ்லீகரின் பேரனான பூரிஸ்ரவசுடன்} மோதி, “நில், நில்” என்று சொன்னான். பிறகு அந்த வீரன் {சங்கன்}, அவனது {எதிரியான பூரிஸ்ரவசின்} வலக்கையை அந்த மோதலில் துளைத்தான். அதன் பேரில் சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, சங்கனின் தோள்களைத் தாக்கினான். செருக்கு மிகுந்த அந்த இரு வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெகு விரைவில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலைப் போலப் பயங்கரமாக மாறியது.
கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவற்ற ஆன்மா கொண்டவனுமான திருஷ்டகேது {சிசுபாலனின் மகன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கோபத்தின் உருவமே ஆன பாஹ்லீகனுக்கு {பூரிஸ்ரவசின் பாட்டனுக்கு} எதிராகப் போரில் விரைந்தான். பிறகு சிம்ம கர்ஜனை செய்த பாஹ்லீகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த திருஷ்டகேதுவை எண்ணிலா கணைகளால் பலவீனப்படுத்தினான். எனினும், அந்த மோதலில் {கோபத்தால்} மிகவும் தூண்டப்பட்ட சேதிகளின் மன்னன் {திருஷ்டகேது}, ஒன்பது கணைகளால் பாஹ்லீகனை விரைந்து துளைத்தான். மதங்கொண்ட யானையை எதிர்த்த மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, ஒருவரை எதிர்த்து மற்றொருவர் எனத் தொடர்ச்சியாகச் சிங்க முழக்கமிட்ட இருவரும் மிகவும் கோபம் தூண்டப்பட்டவர்களாக இருந்தனர். பெரும் கோபத்துடன் மோதிக்கொண்ட அந்த இருவரும் கோள்களான அங்காரகன் மற்றும் சுக்ரனைப் போலத் தெரிந்தனர் [1].(அங்காரகன் என்பது செவ்வாய்க் கிரகமாகும். சுக்கிரன் என்பது வெள்ளி கிரகமாகும் )
கொடிய செய்கைகளையுடைய கடோத்கசன், வலனை {என்கிற அசுரனை} சக்ரன் {இந்திரன்} எதிர்த்துப் போரிட்டது போல, கொடும் செய்கைகளைச் செய்யும் ராட்சசன் அலம்புசனுடன் மோதினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினம் மிக்கவனும், பலம் நிறைந்தவனுமான அந்த ராட்சசனை {அலம்புசனை} தொண்ணூறு {90} கணைகளால் கடோத்கசன் துளைத்தான். அந்த மோதலில் அலம்புசனும் பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} (தனது) நேரான கணைகளால் பல இடங்களில் துளைத்தான். (பழங்காலத்தில்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போரிட்ட வலிமைமிக்கச் சக்ரனைப் போன்றும், பலம் நிறைந்த வலனைப் போன்றும் கணைகளால் சிதைக்கப்பட்ட அவர்கள் {கடோத்கசனும், அலம்புசனும்} ஒளிர்ந்தனர்.
பலம் நிறைந்த சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு எதிராக விரைந்தான். எனினும், அஸ்வத்தாமன், (தன் முன்) கோபத்துடன் நின்ற சிகண்டியை கூர்மையான கணையால் ஆழமாகத் துளைத்து அவனை {சிகண்டியை} நடுங்கச்செய்தான். சிகண்டியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}. சாணையில் தீட்டப்பட்டு, கடினமாக இருந்த ஒரு கணையால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடித்தான். இப்படி அவர்கள் இருவரும் அந்தப் போரில், பல்வேறு வகையான கணைகளால் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கினர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படைப் பிரிவின் தலைவனான விராடன், வீரனான {நரகனின் மகனும், பிராக்ஜோதிஷ நாட்டின் மன்னனுமான} பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அவர்களுக்கிடையான போரும் தொடங்கியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மிகவும் கோபம் தூண்டப்பட்ட விராடன், மலையின் மார்பில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, பகதத்தனின் மீது கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், பூமியின் தலைவனான பகதத்தனோ, அந்தப் போரில், உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, விராடனை வேகமாக (கணைகளால்) மறைத்தான்.
சரத்வானின் மகனான கிருபர், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரனை [2] எதிர்த்து விரைந்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபர் அவனைக் {பிருஹத்க்ஷத்திரனை} கணைமாரியால் மறைத்தார். பிருஹத்க்ஷத்திரனும் சீற்றமிகுந்த கௌதமரின் மகனைக் {கிருபரைக்} கணைமாரியால் மறைத்தான். ஒருவரின் குதிரையை மற்றவர் கொன்றும், ஒருவரின் வில்லை மற்றவர் துண்டித்தும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், தங்கள் தேரையும் இழந்தனர். பெரும் கோபத்தில் இருந்த அவர்கள் இருவரும் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அணுகினர். அதன் பிறகு, அவர்களுக்கு இடையே நடந்த போர் இணையற்றதாகவும், தன்மையில் பயங்கரமானதாகவும் இருந்தது.
எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துருபதன், (போருக்காக) மகிழ்ச்சியாகக் காத்திருந்த சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதனுக்கு எதிராகப் பெரும் கோபத்துடன் விரைந்தான். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அந்த மோதலில் துருபதனை மூன்று கணைகளால் துளைத்தான். துருபதனும் பதிலுக்கு அவனை {ஜெயத்ரதனைத்} துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர் பயங்கரமாகவும் கடுமையானதாகவும், பார்வையாளர்கள் அனைவரின் இதயங்களுக்கும் நிறைவைக் கொடுக்கும் வண்ணமும் இருந்தது. அந்த மோதல், சுக்கிரனுக்கும், அங்காரகனுக்கும் [3] இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று இருந்தது.
உமது மகன் விகர்ணன், வேகமான குதிரைகளுடன், {பீமனின் மகனான} வலிமைமிக்கச் சுதசோமனை எதிர்த்து விரைந்தான். அவர்களுக்கிடையிலான மோதலும் தொடங்கியது. விகர்ணன் பல கணைகளால் சுதசோமனைத் துளைத்தாலும், அவனால் {விகர்ணனால்} அவனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போலச் சுதசோமனாலும் விகர்ணனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அஃது (அனைவருக்கும்) ஆச்சரியமாக இருந்தது.
வலிமைமிக்கத் தேர்வீரனும், மனிதர்களில் புலியும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சேகிதானன் {சத்வத {யாதவ-விருஷ்ணி} குல மன்னன்}, பாண்டவர்களின் சார்பாகப் பெரும் கோபத்துடன், {திரிகார்த்த மன்னனான} சுசர்மனை நோக்கி விரைந்தான். சுசர்மனும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்ந்த கணைமழையால் வலிமைமிக்கத் தேர்வீரனான சேகிதானனின் முன்னேற்றத்தை தடுத்தான். அந்தப் பயங்கரப் போரில், பெரிதும் தூண்டப்பட்ட சேகிதானன், மலைகளின் மார்பில் மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலச் சுசர்மன் மேல் கணைமாரியைப் பொழிந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையை நோக்கி விரையும் சிங்கத்தைப் போலப் பெரும் ஆற்றல் கொண்ட பிரதிவிந்தியனை நோக்கி விரைந்தான். அதன் பேரில், கோபம் தூண்டப்பட்ட அந்த யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்}, தானவனைச் சிதைக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்த மோதலில், தனது கூரிய கணைகளால் சுபலனின் மகனைச் {சகுனியைச்} சிதைத்தான். பதிலுக்குச் சகுனியும், அந்தக் கடும் மோதலில், பெரும் புத்திசாலி வீரனான பிரதிவிந்தியனை, நேரான கணைகளால் துளைத்தான்.
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், காம்போஜர்களின் ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதக்ஷிணனை எதிர்த்து சுரூதகர்மன் விரைந்தான். எனினும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சகாதேவன் மகனை {சுரூதகர்மனை} சுதக்ஷிணன் துளைத்தாலும், (இந்திரனின் தாக்குதல்களை எதிர்த்து நின்ற} மைநாக மலையென நின்ற அவனை {சுரூதகர்மாவை} நடுங்கச்செய்வதில் அவன் {சுதக்ஷிணன்} தோல்வியுற்றான். இதனால் மிகவும் கோபம் தூண்டப்பட்ட சுரூதகர்மன் எண்ணிலா கணைகளைக் கொண்டு, காம்போஜர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனுடைய {சுதக்ஷிணனுடைய} உடலின் அனைத்துப் பகுதிகளைச் சிதைத்து அவனைப் பலவீனமாக்கினான்.
எதிரிகளைத் தண்டிப்பவனான இராவான் {அரவான்} [4], பெரும் கோபத்துடன் கவனமாக முயற்சி செய்து, கோபம் நிறைந்த {கலிங்க மன்னன்} ஸ்ருதாயுசை போரில் எதிர்த்து விரைந்தான். பலம் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, தனது எதிரியின் {ஸ்ருதாயுசின்} குதிரைகளைக் கொன்று சிம்ம முழக்கம் செய்தான். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்தச் செயலைக்) கண்ட போர் வீரர்கள் அனைவரும் அவனைப் {இராவானைப்} பெரிதாகப் புகழ்ந்தார்கள். கோபம் தூண்டப்படச் சுரூதாயுசும், போரில் அந்தப் பல்குனன் மகனுடைய {அர்ஜுனன் மகனான இராவானுடைய} குதிரைகளை ஒரு பலம்நிறைந்த கதாயுத்தால் அடித்துக் கொன்றான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடர்ந்தது.
அந்தப் போரில், தனது துருப்புகளின் தலைமையில் தன் மகனின் துணையுடன், நின்ற வலிமைமிக்கத் தேர் வீரனான குந்திபோஜனை, அவந்தியின் இளவரசர்களான விந்தன் அனுவிந்தன் ஆகிய இருவரும் அணுகினார்கள். அந்த இளவரசர்கள் இருவரும் அச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. ஏனெனில், அவர்கள் பெரும் அளவிலான துருப்புகளுடன் போரிடும் போதும் கவலையில்லாமல் உறுதியுடன் போரிட்டார்கள். அனுவிந்தன் குந்திபோஜனை நோக்கி ஒரு கதாயுதத்தை எறிந்தான். ஆனால் குந்திபோஜனோ விரைவில் கணைமாரியால் அவனை {அனுவிந்தனை} மறைத்தான். குந்திபோஜனின் மகன் [5] விந்தனை பல கணைகளால் துளைத்தான். பின்னவனும் {விந்தனும்} பதிலுக்கு அவனை {குந்திபோஜன் மகனைத்} துளைத்தான். (அவர்களுக்கு இடையிலான) அந்த மோதலைக் காண மிக அற்புதமாக இருந்தது.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மேலும், தங்கள் துருப்புகளின் தலைமையில் இருந்த கேகயச் சகோதரர்கள், தங்கள் துருப்புகளுடன் இருந்து ஐந்து காந்தார இளவரசர்களுடன்{?} அந்தப் போரில் மோதினார்கள். தேர்வீரர்களில் சிறந்தவனும், விராடனின் மகனுமான உத்தரனுடன் போரிட்ட உமது மகன் வீரபாகு {திருதராஷ்டிரனின் மகன் வீரபாகு}, அவனை {உத்தரனை} ஒன்பது கணைகளால் துளைத்தான். உத்தரனும் கூரிய முனை கொண்ட கணைகளால் அந்த வீரனை {வீரபாகுவைத்} துளைத்தான். சேதிகளின் ஆட்சியாளன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலூகனை எதிர்த்துப் போரில் விரைந்தான். அவன் உலூகனைத் தனது கணை மாரியால் துளைத்தான். உலூகனும் அற்புத இறகுகள் கொண்ட தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகக் கடுமையானதாக இருந்தது. ஏனெனில், ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகச் சிதைத்தனர்.
இப்படியே அந்த மோதலில் பொதுவாக, அவர்கள் தரப்பிலும், உமது தரப்பிலும், தேரில் இருந்த மனிதர்களுக்கு இடையிலும், யானைகளில் இருந்த போர்வீரர்களுக்கு இடையிலும், குதிரைவீரர்களுக்கு இடையிலும், காலாட்படை வீரர்களுக்கு இடையிலும் என ஆயிரக்கணக்கான தனி மோதல்கள் நடந்தன. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த மோதல் அழகிய காட்சியாக இருந்தது. எனினும், விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது மூர்க்கமானதாகவும், எதையும் அடையாளம் காண முடியாததாகவும் மாறியது.
(அப்படி நடந்த) அந்தப் போரில் யானைகள், யானைகளை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களை எதிர்த்தும், குதிரைகள், குதிரைகளை எதிர்த்தும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். விரைந்து வந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கு எதிராக ஒருவர் கைக்கலப்பு செய்த போது, அந்த மோதல் குழம்பியதாக மிகக் கடுமையானதாக மாறியது.
அங்கே இருந்த தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைப் போன்ற அந்தப் பயங்கரப் போரைக் கண்டனர். ஆயிரக்கணக்கான யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், பெரும் அளவிலான குதிரைப் படைகளும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் தன்மையை மாற்றிக் கொள்வதாகத் தெரிந்தது [7]. மேலும், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படையும், அதே இடங்களிலேயே மீண்டும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிட்டனர் [8]” {என்றான் சஞ்சயன்}.
வாழும் ஆசையால் ஓலமிட்ட போராளிகள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 046-இரு படைகளிலும் இருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை ஆகியோர் போரிட்டதைச் சஞ்சயன் வர்ணிப்பது; யானைகளால் ஏற்பட்ட சேதங்கள், வீரர்கள் அடைந்த துன்பங்கள், உறவினர்களையும் நண்பர்களையும் அறியாது கொன்ற வீரர்கள்; போரில் அடிபட்டு கதறியவர்கள், காயப்பட்டிருந்தாலும் கதறாதவர்கள் எனப் பல வகைப் போர்வீரர்களைச் சஞ்சயன் வர்ணிப்பது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} காலாட்படை வீரர்களின் மோதல் குறித்து நான் இப்போது உமக்கு விவரிப்பேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிற கருத்துகள் அனைத்திலும் ஏற்பட்ட முற்றான மறதியின் காரணமாக, அங்கே, மகன் தந்தையை அறியவில்லை, தந்தையும் தனக்குப்பிறந்த மகனை அறியவில்லை. சகோதரன் சகோதரனை அறியவில்லை,மருமகன் அம்மானை அறியவில்லை. தாய்மாமனும் தனது சகோதரியின் மகனை {மருமகனை} அறியவில்லை. அதே போல, நண்பனும் தனது நண்பனை அறியவில்லை.
பாண்டவர்களும், குருக்களும், தாங்கள் ஏதோ பேய்களால் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் போரிட்டனர். மனிதர்களில் புலிகளான சிலர் தேர்கள் மீது பாய்ந்து அவற்றைத் தூள் தூளாக்கினர். தேர்களின் நுகத்தடிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. தேரின் ஏர்க்கால்களும், இருப்புமுளைகளும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. ஒன்றாகக் கூடியிருந்த சிலர் (வீரர்கள்), ஒன்றாகக் கூடியிருந்த வேறு பிறருடன் மோதினர். அவர்கள் அனைவரும் ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கவே விரும்பினர். சில தேர்கள், வேறு தேர்களால் தடுக்கப்பட்டு, அசைய முடியாமல் அப்படியே நின்றிருந்தன.
பெரும் உடல் படைத்த மதங்கொண்ட யானைகள், வேறு பெரும் யானைகள் மீது பாய்ந்து, தங்கள் தந்தங்களினால் ஒன்றை ஒன்று பல இடங்களில் கிழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேலும் பிற {யானைகள்}, தங்கள் வகையில் {யானை வகையில்} வேகமுள்ளவையும், பெரியனவாகவும், முதுகில் கூண்டு பொருத்தப்பட்டவையும், கொடிக்கம்பங்கள் கொண்டவையுமாக இருப்பவற்றுடன் மோதின. போரிடும் பயிற்சி அளிப்பட்ட அவை தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொண்டு பெரும் வேதனையில் பிளிறின. பயிற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டவையும், வேணுகங்களாலும் {ஒருவகை யானை ஓட்டும் கருவி}, அங்குசங்களாலும் தூண்டப்பட்டவையும், மதப்பெருக்கிலாதவையுமான யானைகள், மதங்கொண்ட யானைகளை எதிர்த்து விரைந்தன.
அந்தப் போரில் சில பெரிய யானைகள், மதங்கொண்ட யானைகளோடு மோதி அன்றில் பறவைகளைப் போல அலறிக் கொண்டே நான்கு திசைகளிலும் ஓடின. போருக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், மதங்கொண்ட கன்னத்தையும் முகத்தையும் கொண்டவையுமான பல யானைகள் வாள்கள், ஈட்டிகள் மற்றும் கணைகளால் உயிர்நிலைகளில் அடித்துச் சிதைக்கப்பட்டு, அலறிக் கொண்டு கீழே விழுந்து உயிரிழந்தன. சிலவை பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு அனைத்து திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தன.
யானைகளைப் பாதுகாத்தவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களும், திறனுடன் தாக்குபவர்களும், வேணுகங்களையும், அங்குசங்களையும் தரித்துக் கொண்டிருந்தவர்களுமான காலாட்படை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பிரகாசமிக்கப் போர்க்கோடரிகள், கதாயுதங்கள், தண்டாயுதங்கள், குறுங்கணைகள், ஈட்டிகள், நாராசங்கள், இரும்பு முள் பதிக்கப்பட்ட பருத்த பரிகங்களையும், பளபளக்கும் வாள்களையும் எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கத் தீர்மானித்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
ஒருவரை எதிர்த்து ஒருவர் விரையும் துணிச்சல் மிக்கப் போராளிகளின் பட்டாக்கத்திகள் மனித இரத்தத்தில் மூழ்கி பிரகாசமாக ஒளிர்வதாகத் தோன்றியது. சுழலும் வாள்களின் “விஸ்” என்ற ஒலியும், எதிரிகளின் (உடல்களின்) உயிர் நிலைகளைத் தாக்கும் வீரமிக்கக் கரங்களின் ஒலிகளும் சேர்ந்து பேரொலியாக ஒலித்தது. கதாயுதங்கள், முசலங்கள் {உலக்கை போன்ற ஆயுதம்} ஆகியவற்றால் அடிக்கப்பட்டும், சிறந்த வாள்களால் வெட்டப்பட்டும், யானைகளின் தந்தங்களால் பிளக்கப்பட்டும், யானைகளால் தாக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அழைப்போரின் குரல்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நரகங்களில் வீழ்ந்தோரின் கதறல்களைப் போல இருந்தன.
பெரும் வேகம் கொண்டவையும், அன்னங்களைப் (அன்னங்களின் கொண்டையைப்) போன்ற ஓங்கிய வால்களைக் கொண்டவையுமான குதிரைகளில் சென்ற வீரர்கள் ஒருவரை எதிர்த்து மற்றவர் விரைந்தனர். பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமானவையும், பளபளப்பானவையும், கூரிய முனை கொண்டவையுமான நீண்ட ஈட்டிகளை அவர்கள் {குதிரை வீரர்கள்} வீசினர். விரைந்து செல்லும் சில குதிரை வீரர்கள், {குதிரைகளோடு} எம்பி உயர்ந்து, தேரில் இருந்த தேர்வீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். மேலும் (ஆங்காங்கே) ஒரு தேர்வீரன், அடிக்கும் தொலைவில் எதிர்ப்பட்டு வரும் குதிரைவீரர்கள் பலரை நேரான பல்லங்களால் {பிறைவடிவ முனை கொண்ட அம்புகளால்} கொன்றான்.
புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்றவையும், மதங்கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல யானைகள், குதிரைகளை வீழ்த்தி தங்கள் கால்களாலேயே அவற்றை மிதித்து நசுக்கின. மத்தகங்களிலும் {யானையின் முகம் மற்றும் நெற்றி}, விலாப்புறங்களிலும் ஈட்டிகளால் பிளக்கப்பட்ட சில யானைகள் பெருந்துன்பத்தால் வீரிட்டு உரக்கப் பிளிறின. மலைக்க வைக்கும் அந்தக் கைகலப்பில், பல பெரிய யானைகள், ஓட்டுநருடன் கூடிய குதிரைகளை வீசி எறிந்தன. சில யானைகள் தங்கள் தந்தங்களால், குதிரைகளையும் அதன் ஓட்டுநர்களையும் வீசி எறிந்து, கொடிக்கம்பத்துடன் கூடிய தேர்களை நசுக்கியபடி திரிந்து கொண்டிருந்தன. மதப்பெருக்கும், சக்தியும் கொண்ட சில பெரிய ஆண் யானைகள், தங்கள் தந்தங்களாலும் கால்களாலும் குதிரைகளையும், அதன் ஓட்டுனர்களையும் கொன்றன. கூரிய முனை கொண்டவையும், பாம்பைப் போன்றவையும், வேகமானவையுமான அம்புகள் யானைகளின் தலைகளிலும், நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், உடல்களிலும் பாய்ந்தன.
பெரிய விண்கற்களின் கீற்றுகள் போலத் தெரிந்தவையும் வீரர்களின் கைகளில் இருந்து அங்கும் இங்கும் வீசப்பட்டவையுமான பளபளப்பான பயங்கரத் தோற்றம் கொண்ட ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசங்களைப் பிளந்து கொண்டு மனிதர்களின் உடல்களையும், குதிரைகளையும் துளைத்தன. சிறுத்தை மற்றும் புலிகளின் தோல்களால் ஆன உறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பளபளக்கும் தங்கள் பட்டாக்கத்திகளைக் கொண்டு, அப்போரில் தங்களை எதிர்த்த போராளிகளைப் பலர் கொன்றனர். தாங்களே தாக்குண்டிருந்தாலும், தங்கள் உடலின் விலாப்புறங்கள் பிளக்கப்பட்டிருந்தாலும், வாள்கள், கேடயங்கள் மற்றும் போர்க்கோடரிகளைக் கொண்டு (தங்கள் எதிரிகள் மீது) கோபத்துடன் பலர் பாய்ந்தனர். சில யானைகள், தங்கள் தந்தங்களைக் கொண்டு குதிரைகளுடன் சேர்ந்த தேர்களை இழுத்துப்போட்டு, வீசி எறிந்து, தங்கள் பின்னால் கேட்ட கதறல்களால் வழிநடத்தப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் திரிய ஆரம்பித்தன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கேயும், இங்கேயும், ஈட்டிகளால் துளைக்கப்பட்ட சிலரும், போர்க்கோடரிகளால் வெட்டப்பட்ட சிலரும், யானைகளால் நசுக்கப்பட்ட சிலரும், குதிரைகளால் மிதிக்கப்பட்ட சிலரும், தேர்ச்சக்கரங்களாலும், கோடரிகளாலும் வெட்டப்பட்ட சிலரும், தங்கள் சொந்தங்களை நோக்கி உரக்க அழைத்தனர். சிலர் தங்கள் மகன்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் சகோதரர்கள் மற்றும் சொந்தக்காரர்களையும் அழைத்தனர். சிலர் தங்கள் அம்மான்களையும், சிலர் தங்கள் சகோதரிகளின் மகன்களையும் {மருமகன்களையும்} அழைத்தனர். இன்னும் சிலர் அந்தப் போர்க்களத்தில் இருந்த வேறு சிலரை அழைத்தனர். பெரும் எண்ணிக்கையிலான போராளிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆயுத்தங்களை இழந்தனர், அல்லது தங்கள் தொடைகள் உடைந்திருந்தனர். மேலும் பிறர் கரங்கள் பிளக்கப்பட்டோ, விலாப்புறங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ உயிர்வாழும் விருப்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பலமிழந்த சிலர், தாகத்தால் வதைக்கப்பட்டு, போர்க்களத்தின் வெறுந்தரையில் கிடந்து தண்ணீர் கேட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த சிலர், மிகவும் பலமிழந்த நிலையில், போருக்காக ஒன்று கூடியிருக்கும் உமது மகன்களையும் {கௌரவர்களையும்}, தங்களையே தாங்களும் பெரிதும் நிந்தித்துக் கொண்டனர்.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மறுபுறம், ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டு, தங்கள் ஆயுதங்களையும் கைவிடாமல், எந்த ஓலமும் இடாமல், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முழக்கம் செய்தபடி, கோபத்தால் தங்கள் உதடுகளை தங்கள் பற்களால் கடித்தபடி, புருவங்களைச் சுருக்கி, ஒருவரை நோக்கி மற்றவர் கடுமுகம் காட்டியபடி, கிடந்த இடத்திலேயே கிடந்த வீரமிக்க க்ஷத்திரியர்களும் அங்கே இருந்தார்கள். பெரும் பலம் கொண்ட சிலர், அம்புகளால் பாதிக்கப்பட்டு, தங்கள் காயங்களுக்காக அவமானப்பட்டு, பெரும் வலியிலும் விடாப்பிடியாக முழு அமைதியுடன் இருந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்களை இழந்து, கீழே வீசப்பட்டு, பெரும் யானைகளால் காயப்பட்டு இருந்த சில தேர்வீரர்கள், பிறரின் தேர்களில் தங்களை ஏற்றிக் கொள்ளக் கேட்டனர். பலர் தங்கள் காயங்களால் பூத்துக் குலுங்கும் பலாச {Kinsuka} மரங்களைப் போல இருந்தனர். படைப்பிரிவுகள் அனைத்திலும், கணக்கிட முடியாத அளவில் எண்ணிலா பயங்கரக் கதறல்கள் கேட்டன.
வீரர்களின் அழிவுக்கான அந்த அச்சம் நிறைந்த மோதலில், தந்தை மகனைக் கொன்றான், மகன் தந்தையைக் கொன்றான், மருமகன் அம்மானைக் கொன்றான், தாய்மாமன் சகோதரியின் மகனைக் {மருமகனைக்} கொன்றான். நண்பன் நண்பனைக் கொன்றான், உறவினர்கள் சொந்தங்களைக் கொன்றனர். பாண்டவர்களுடன் குருக்கள் மோதிய அந்தப் போரில் படுகொலைகள் இப்படியே நடந்தன.
(எவனுக்கும் எவனாலும்) கருணை காட்டப்படாத, அச்சம்நிறைந்த அந்தப் பயங்கரப் போரில், பீஷ்மரை அணுகிய பாண்டவப் படைப்பிரிவுகள் நடுங்கத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெள்ளியாலான கொடிக்கம்பத்தையும், பனைமரமும் ஐந்து நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட கொடியையும் கொண்ட வலிய கரங்களைக் கொண்ட அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் தேரில் ஏறி, மேருவின் சிகரத்தில் இருக்கும் சந்திர வட்டிலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்” {என்றான் சஞ்சயன்}.
அபிமன்யுவின் வீரம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 047அ-பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட அபிமன்யு, அவரிடம் விரைவது; ஐந்து பெரும் வீரர்களால் காக்கப்பட்ட பீஷ்மருடன் அபிமன்யு சளைக்காமல் போரிட்டது; பீஷ்மரைப் பலவீனப்படுத்தி, கிருபரின் வில்லை அபிமன்யு இரண்டாகப் பிளப்பது; பனைமரக்கொடியைக் கொண்ட பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அபிமன்யு வெட்டி வீழ்த்துவது; அபிமன்யுவின் வீரத்தைக் கண்ட பீமன் உரக்க முழக்கமிடுவது; பீஷ்மர் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த தொடங்குவது; அபிமன்யுவைக் காக்க பாண்டவத் தரப்பில் இருந்து எட்டு பேர் விரைவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அச்சம்நிறைந்த அந்த நாளின் முற்பகலில் பெரும்பகுதி கழிந்ததும், மனிதர்களில் முதன்மையானோரின் அழிவுக்கான அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துர்முகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், விவிம்சதி ஆகியோர் பீஷ்மரை அணுகி அவரைப் பாதுகாக்கத் தொடங்கினர். வலிமைமிக்க அந்த ஐந்து {5} தேர்வீரர்களால் {அதிரதர்களால்} பாதுகாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர் {மகாரதர் பீஷ்மர்} பாண்டவப் படைக்குள் ஊடுருவினார்.
சேதிகள் {சேதி நாட்டவர்}, காசிகள் {காசி நாட்டவர்}, கரூசர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோருக்கு மத்தியில் தொடர்ச்சியாகப் பீஷ்மரின் பனைமரக்கொடி இழைந்து செல்வதாகக் காணப்பட்டது. பெரும் வேகம் கொண்டவையும், நேரானவையுமான பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட அம்புகளால்}, (எதிரிகளின்) தலைகளையும், நுகத்தடிகள் மற்றும் கொடிகளுடன் கூடிய தேர்களையும் அந்த வீரர் {பீஷ்மர்} துண்டாடினார். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதன் பாதையில் ஓடிக்கொண்டிருந்த தனது தேரில், பீஷ்மர் ஆடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. (அவரால்) உயிர் நிலைகளில் {மர்மஸ்தானத்தில்} அடிக்கப்பட்ட சில யானைகள் வேதனையில் அலறின.
அப்போது, மஞ்சட்பழுப்பு நிறக் {பொன்னிறக்} குதிரைகள் பூட்டப்பட்ட தனது தேரில் இருந்த அபிமன்யு, பெரும் கோபத்துடன் பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான். கோங்கு மரத்தைப் போன்றதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கொடியுடன் அவன் {அபிமன்யு}, பீஷ்மரையும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரையும் (ஐந்து பேரையும்) அணுகினான். பனைமரக்கொடி கொண்ட வீரரின் {பீஷ்மரின்} கொடிக்கம்பத்தைக் கூரிய கணைகளால் அடித்தவண்ணம், அந்த வீரன் {அபிமன்யு}, பீஷ்மருடனும், அவரைப் பாதுகாத்து நின்ற தேர்வீரர்களுடனும் போரில் ஈடுபட்டான்.
கிருதவர்மனை ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் {5 கணைகளாலும்} துளைத்த அவன் {அபிமன்யு}, தனது பூட்டனை {தனது பாட்டனின் தந்தையான பீஷ்மரை} ஒன்பது கணைகளால் அடித்துப் பலவீனப்படுத்தினான். முழுமையாக நீட்டி இழுக்கப்பட்ட தனது வில்லில் இருந்து நன்றாக அடிக்கப்பட்ட கணையால், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டிருந்த (தனது எதிரியின்) {துர்முகனாக இருக்க வேண்டும்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். அனைத்து தடுப்புகளையும் {கவசங்களையும்} துளைக்கவல்லதும், நேரானதுமான ஓர் அகன்ற தலை கொண்ட கணையால், துர்முகனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். மற்றுமொரு கூர்முனை கணை கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிருபருடைய வில்லை இரண்டாகப் பிளந்தான்.
அவர்களும் {அந்த அறுவரும்} பல கூர்முனை கணைகளால், எப்போதும் ஆடிக்கொண்டிருப்பவனாகத் தெரிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அபிமன்யுவை} தாக்கினர். அவனது {அபிமன்யுவின்} கரங்களின் வேகத்தைக் கண்டு தேவர்களும் கூட மனம் நிறைந்தனர். இலக்கை அடிப்பதில் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} இருந்த நிச்சயத்தன்மையின் விளைவால், பீஷ்மரின் தலைமையில் இருந்த தேர்வீரர்கள் அனைவரும், அவன் {அபிமன்யு}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} திறமையைக் கொண்டிருப்பதாகவே கருதினர். காண்டீவத்தைப் போன்றே நாணொலியை எழுப்பிய அவனது வில் நீட்டி வளைக்கப்பட்ட போது, அது நெருப்பு வளையமாகச் சுழல்வதைப் போலத் தெரிந்தது.
பிறகு, எதிரிவீரர்களைக் கொல்பவரான பீஷ்மர், அவனிடம் {அபிமன்யுவிடம்} மூர்க்கமாக விரைந்து, அந்த மோதலில் ஒன்பது {9} கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} துளைத்தார். மேலும் அவர் {பீஷ்மர்}, அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால், பெரும் சக்தி கொண்ட அந்த வீரனின் {அபிமன்யுவின்} கொடிக்கம்பத்தை அறுத்தார். கடும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மர், அவனது (எதிரியான அபிமன்யுவின்) தேரோட்டியையும் தாக்கினார். கிருதவர்மன், கிருபர், சல்லியன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தாலும், மைநாக மலை போல உறுதியாக நின்ற அவனை {அபிமன்யுவை} அவர்களால் நடுங்கச் செய்ய முடியவில்லை.
தார்தராஷ்டிரப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்டாலும், அர்ஜுனனின் அந்த வீர மகன் {அபிமன்யு}, அந்த ஐந்து தேர்வீரர்கள் மேலும் இன்னும் கணைமாரியைப் பொழிந்து கொண்டே இருந்தான். தனது கணைகளின் மழையால், அவர்களது வலிமைமிக்க ஆயுதங்களைக் கலங்கடித்தும், பீஷ்மர் மீது தனது கணைகளைக் கொட்டிய வண்ணமும், அந்தப் பலம்நிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} உரத்த முழக்கத்தைச் செய்தான். போரில் இப்படிப் போராடி, (தனது) கணைகளால் பீஷ்மரைப் பீடித்த அவனது கரங்களில் நாம் கண்ட பலம் பெரிதாக இருந்தது. அவன் இத்தகு ஆற்றலைக் கொண்டிருந்தாலும், பீஷ்மரும் அவன் மீது கணைகளை அடிக்கவே செய்தார். ஆனால் பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணைகளை அந்த மோதலில் அவன் வெட்டி வீழ்த்தினான்.
பிறகு, தோற்காத கணைகளைக் கொண்ட அந்தப் போர்வீரன் {அபிமன்யு}, அந்த மோதலில், ஒன்பது {9} கணைகளைக் கொண்டு, பீஷ்மரின் கொடிக்கம்பத்தை அறுத்தான். அச்சாதனையைக் கண்ட மக்கள் பெரும் கூச்சலிட்டார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெள்ளியால் செய்யப்பட்டதும் பனைமரம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டதுமான அந்த நெடிய கொடிக்கம்பம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} வெட்டப்பட்டுப் பூமியில் வீழ்த்தப்பட்டது. ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தைக் கண்டு பெருமையடைந்த பீமன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} உற்சாகமூட்டும் பொருட்டு உரத்த முழக்கமிட்டான்.
பிறகு, வலிமைமிக்கப் பீஷ்மர், பெரும் திறம் கொண்ட தெய்வீகக் கணைகளை, அந்தக் கடும் மோதலில் தோன்றச் செய்தார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்தப் பூட்டன் {பீஷ்மர்}, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஆயிரக்கணக்கான கணைகளால் மூழ்கடித்தார். இதன்பேரில், பாண்டவத் தரப்பில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பத்து {10} பெரும் வில்லாளிகள், சுபத்திரையின் மகனைப் {அபிமன்யுவைப்} பாதுகாக்க தங்கள் தேர்களில் விரைந்து சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது மகனுடன் {உத்தரனுடன்} கூடிய விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், பீமன், கேகயச் சகோதரர்கள் ஐவர், சாத்யகி ஆகியோரே அவர்கள் {அந்த பத்து (10)பெரும் வில்லாளிகள்}.
அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கி கடும் வேகத்துடன் பாய்ந்து சென்றவர்களில், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னன்} மூன்று {3} கணைகளாலும், சாத்யகியை பத்து {10} கணைகளாலும் அவர் {பீஷ்மர்} துளைத்தார். இறகு படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டுக் கூர்மையாக இருந்ததுமான ஒரு கணையைக் கொண்டு, வில்லை முழுமையாக இழுத்து, பீமசேனனின் கொடிக்கம்பத்தை அவர் {பீஷ்மர்} அறுத்தார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலானதும், சிங்கம் பொறிக்கப்பட்ட கொடி கொண்டதுமான பீமசேனனின் கொடிக்கம்பம், பீஷ்மரால் வெட்டப்பட்டு, தேரில் இருந்து விழுந்தது. பிறகு பீமன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரை மூன்று{3} கணைகளாலும், கிருபரை ஒரு கணையாலும், கிருதவர்மனை எட்டு{8} கணைகளாலும் துளைத்தான்.
உத்தரனின் மரணமும்! ஸ்வேதனின் வெஞ்சினமும்!! – பீஷ்ம பர்வம் பகுதி – 047ஆ-அபிமன்யுவைக் காக்க யானையில் வந்த உத்தரன், சல்லியனை எதிர்த்துப் போரிட்டது; சல்லியனின் குதிரைகளை உத்தரனின் யானை கொன்றது; சல்லியன் ஒரே கணையால் உத்தரனைக் கொன்றது; இதனால் கோபம் கொண்ட உத்தரனின் தம்பி ஸ்வேதன் சல்லியனைக் கொல்ல அவனிடம் விரைந்தது; ஆபத்தில் இருந்த சல்லியனைக் காக்க கௌரவப்படையின் ஏழு பேர் விரைந்தது; அந்த எழுவரையும் திக்கு முக்காட வைத்த ஸ்வேதன்; ஸ்வேதன் சல்லியனின் மகனான ருக்மரதனைக் காயப்படுத்தி மயங்கச் செய்தது; ஸ்வேதனிடம் ஆபத்திலிருந்த சல்லியனைத் துரியோதனன் காத்தது…
விராடனின் மகனான உத்தரனும், துதிக்கை உயர்த்திய நிலையில் தந்தத்தோடு கூடிய யானையில் மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான். எனினும், சல்லியன் தன் தேரை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த யானைகளின் இளவசரனை {உத்தரனின் யானையை} இணையற்ற வேகத்துடன் தடுப்பதில் வென்றான். பெரும் கோபம் கொண்ட அந்த யானைகளின் இளவரசன் {யானை}, (சல்லியனின்) தேருடைய நுகத்தில் தனது காலை வைத்து, அற்புத வேகம் கொண்டவையும், பெரியவையுமான அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளைக் கொன்றான் {அந்த யானை கொன்றது}. குதிரைகள் கொல்லப்பட்ட தேரில் நின்ற மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முழுவதும் இரும்பால் செய்யப்பட்டதும், பாம்பு போன்றதுமான ஒரு கணையை எடுத்து, ஒரே அடியாக உத்தரனைக் கொல்வதற்காக அடித்தான். அந்தக் கணையால் கவசம் பிளப்பட்ட அவன் {உத்தரன்}, முற்றிலும் புலன் உணர்வை இழந்து, தனது பிடியில் இருந்து அங்குசத்தையும் ஈட்டியையும் விட்டு, தன் யானையின் கழுத்தில் இருந்து கீழே விழுந்தான்.
பிறகு தன் வாளை எடுத்துக் கொண்ட சல்லியன், தனது அற்புதத் தேரில் இருந்து கீழே குதித்து, தனது ஆற்றல் அனைத்தையும் செலுத்தி, அந்த யானைகளின் இளவரசனுடைய {உத்தரனின் யானையுடைய} பெரிய துதிக்கையைத் துண்டித்தான். கணைமாரியால் தனது கவசமெங்கும் துளைப்பட்டும், தனது துதிக்கை துண்டிக்கப்பட்டும் இருந்த அந்த யானை உரக்க அலறி கீழே விழுந்து இறந்தது. இத்தகு சாதனையை அடைந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனின் அற்புதத் தேரில் ஏறினான்.
தனது சகோதரனான {அண்ணனான} உத்தரன் கொல்லப்பட்டதையும், கிருதவர்மனோடு இருந்த சல்லியனையும் கண்ட விராடனின் மகன் ஸ்வேதன், தெளிந்த நெய்யின் {நெய்யினால் எரியும்) நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை நீட்டி வளைத்து, மத்ர ஆட்சியாளன் சல்லியனைக் கொல்லும் விருப்பத்துடன் விரைந்தான். வலிமைமிக்கத் தேர்களின் படைப்பிரிவுகள் அனைத்துப் புறங்களிலும் சூழ முன்னேறிய அவன் {ஸ்வேதன்}, சல்லியனின் தேர் மீது கணைமாரியைப் பொழிந்தான்.
மதங்கொண்ட யானையின் ஆற்றலுக்கு இணையாகப் போரிட விரைந்த அவனை {ஸ்வேதனைக்} கண்டவர்களும், உமது தரப்பைச் சேர்ந்தவர்களுமான ஏழு {7} தேர்வீரர்கள், ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்குள் இருந்த மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கோசலகர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன், மகதத்தின் ஜயத்சேனன், சல்லியனின் வீரமிக்க மகனான ருக்மரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன், பிருஹத்க்ஷத்ரனின் [1] இரத்தஉறவும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான ஜெயத்ரதன் ஆகியோரே அந்த ஏழு {7} போர்வீரர்களாவர்.
பல்வேறு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த உயர் ஆன்ம போர்வீரர்களின் நீட்டி வளைக்கப்பட்ட விற்கள், மேகங்களில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. அவர்கள் அனைவரும், கோடை காலம் முடிந்ததும் காற்றால் புரட்டப்படும் மேகங்கள் எப்படி மலையின் மார்பில் மழையைப் பொழியுமோ, அப்படி, ஸ்வேதனின் தலையில் தொடர்ச்சியான கணைமாரியைப் பொழிந்தனர். படைகளின் தலைவனான அந்த வலிமைமிக்க வில்லாளி {ஸ்வேதன்}, இதனால் கோபமடைந்து, அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளைத் தனது வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் அடித்து, தொடர்ச்சியாக அவர்களைக் கலங்கடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களின் {அந்த எழுவரின்} விற்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதை நாம் கண்டோம். அதன் பேரில், கண் இமைப்பதில் பாதி நேரத்திலேயே வேறு விற்களை அவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பிறகு அவர்கள் ஸ்வேதனின் மீது ஏழு கணைகளை அடித்தார்கள். அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {ஸ்வேதன்}, மிக வேகமான ஏழு கணைகளைக் கொண்டு, மீண்டும் அந்த வில்லாளிகளின் (வேறு) விற்களை{யும்} துண்டித்தான்.
தங்கள் பெரும் விற்கள் துண்டிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஏழு ரதசக்திகளை {ஈட்டி போன்ற ஆயுதம்} எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினர். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஏழு ரதசக்திகளைச் ஸ்வேதனின் தேர் மீது அவர்கள் எறிந்தனர். பெரும் விண்கற்களைப் போல, இடியின் ஒலியுடன் (காற்றில்) சென்ற அந்தச் சுடர்மிகும் ரதசக்திகள், அவனைச் {ஸ்வேதனைச்} சென்றடையும் முன்பே, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {ஸ்வேதன்}, ஏழு பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளால்} அவற்றை அறுத்தான்.
பிறகு, உடலின் அனைத்துப் பகுதியையும் துளைக்கவல்ல கணையொன்றை எடுத்த அவன் {ஸ்வேதன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதை ருக்மரதன் {சல்லியனின் மகன்} மீது எறிந்தான். வஜ்ரத்தின் சக்தியை விஞ்சிய அந்த வலிமைமிக்கக் கணை பின்னவனின் {ருக்மரதனின்} உடலைத் துளைத்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் பலமாகத் தாக்கப்பட்ட ருக்மரதன், தனது தேரில் கீழே அமர்ந்தபடி மரண மயக்கத்தில் விழுந்தான். பிறகு அவனுடைய {ருக்மரதனின்} தேரோட்டி, உணர்வற்று மயக்கத்தில் இருந்த அவனை அனைவரின் பார்வையிலேயே அச்சத்துடன் தூக்கிச் சென்றான்.
பிறகு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த வேறு ஆறு கணைகளைக் கொண்டு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஸ்வேதன், தனது ஆறு எதிரிகளின் கொடிக்கம்பங்களையும் வெட்டினான். அவர்களது குதிரைகளையும், தேரோட்டிகளையும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {ஸ்வேதன்}, தடையற்ற கணைகளால் அந்த ஆறு வீரர்களையும் மூழ்கடித்து, சல்லியனின் தேரை நோக்கி முன்னேறினான். சல்லியனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறிய அந்தப் (பாண்டவப்) படைகளின் தலைவனை {ஸ்வேதனைக்} கண்ட உமது படையினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும் “ஐயா!” என்றும் உரக்க ஒலி எழுப்பினர்.
அங்கே, பீஷ்மரின் தலைமையில் வந்த உமது மகன் {துரியோதனன்}, துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள் மற்றும் பல துருப்புகளின் ஆதரவுடன், ஸ்வேதனின் தேரை நோக்கி முன்னேறினான். ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் நுழைந்திருந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} (இப்படியே) அவன் {துரியோதனன்} மீட்டான். அதன் பிறகு, உமது துருப்புகளுக்கும், எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதும், பயங்கரமானதும், தேர்களும் யானைகளும் கலந்து குழம்பிப் போனதுமான ஒரு போர் தொடங்கியது.
சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பீமசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கேகய ஆட்சியாளன் {பிருஹத்க்ஷத்திரன்}, விராடன், பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி துருப்புகள் ஆகியோர் மீது குருக்களின் முதிர்ந்த பாட்டன் {பீஷ்மர்} கணைமாரியைப் பொழிந்தார் [2]” {என்றான் சஞ்சயன்}.
ஸ்வேதன் பீஷ்மர் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 048அ-விராடனின் மகன் ஸ்வேதனுக்குத் துணையாகச் சிகண்டி; பீஷ்மர் புரிந்த பயங்கரப் போர்; போரிட்ட போர்வீரர்களின் நிலை; ஸ்வேதனைக் கண்டு அஞ்சிய கௌரவர்கள் பீஷ்மரைக் கைவிட்டது; பீஷ்மரின் தாக்குதல்; ஸ்வேதனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் மூண்ட பயங்கரப் போர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும் வில்லாளியான ஸ்வேதன் சல்லியனின் தேரை நோக்கி முன்னேறிய போது, ஓ! சஞ்சயா, கௌரவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? சந்தனுவின் மகனான பீஷ்மர் என்ன செய்தார்? இவை அனைத்தையும் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்று கேட்டான்.
அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைவனாக ஸ்வேதனைத் தங்கள் முன்னணியில் நிறுத்தி, துணிவு மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவர்களான க்ஷத்திரியக் காளைகள் தங்கள் பலத்தை வெளிக்காட்டினார்கள். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (ஸ்வேதனை) விடுவிக்க விரும்பி, சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களும், உமது அரச மகனுக்கு {துரியோதனனுக்கு} தங்கள் வலிமையை வெளிக்காட்டினார்கள். போர்வீரர்களில் முதன்மையானவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டவருமான பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கியும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சிகண்டியின் தலைமையிலான வீரர்கள்} விரைந்தனர். அதைத் தொடர்ந்து நேரிட்ட போர் பயங்கரமானதாக இருந்தது. உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையிலான அந்த அற்புதம் நிறைந்த பயங்கரப் போர் எப்படி நடந்ததோ, அவ்வாறே நான் உமக்குச் சொல்கிறேன்.
அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} பல தேர்களின் கூடுகளை வெறுமையாக்கினார். (ஏனெனில்), அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவர் {பீஷ்மர்}, (தனது) அம்புகளால், பல தலைகளை வெட்டி வீழ்த்தினார். சூரியனுக்கு நிகரான சக்தி கொண்ட அவர் {பீஷ்மர்}, சூரியனையே தனது கணைகளால் மறைத்தார். இருளை விலக்கி எழுந்த சூரியனைப் போலத் தன்னைச் சூழ்ந்திருந்த எதிரிகளை அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} அகற்றினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்ட பலம் நிறைந்த, பெருவேகம் கொண்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள், எண்ணற்ற க்ஷத்திரியர்களின் உயிர்களை அந்த மோதலில் பறித்தன.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மோதலில் அவர் {பீஷ்மர்} நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் மற்றும் முள் கவசம் பூண்ட யானைகள் ஆகியவற்றின் தலைகளை, வஜ்ரத்தின் தாக்குதலால் மலைகளில் இருந்து விழுந்த சிகரங்களைப் போல விழச்செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்ற தேர்களோடு கலப்பது தெரிந்தது. ஒரு தேரை மற்றொரு தேரோடும், ஒரு குதிரையை மற்றொரு குதிரையோடும் அப்போது காண முடிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரிழந்தும், {அடிபட்டு, உயிருடன்} தொங்கிக் கொண்டும் இருந்த, (குதிரைகளின் சேணங்களில் இருந்த) இளம் வீரர்களை, வேகமான குதிரைகள், அங்கேயும் இங்கேயும் சுமந்து திரிந்தன.
(தம் மேனியில்) வாள்களும், அம்பறாத்தூணிகளும் பொருந்தியிருக்க, (தம் உடல்களில் இருந்து) கவசங்கள் தளர்ந்திருக்க, உயிரிழந்த வீரர்களின் உடல்கள், தரையைப் படுக்கையாக்கி உறங்கிக் கொண்டிருந்தன. ஒருவருக்கு எதிராக ஒருவர் விரையும் போது, கீழே விழுந்து, மீண்டும் எழுந்து, எழுந்த பிறகு மீண்டும் விரைந்த போராளிகள் கைக்குக் கையெனப் கைகளாலேயேப் போரிட்டனர். ஒருவரால் காயப்பட்ட மற்ற பலர் போர்க்களத்தில் உருண்டு கொண்டிருந்தனர். மதம் கொண்ட யானைகள் அங்குமிங்கும் விரைந்தன. நூற்றுக்கணக்கான தேர்வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
தேர்வீரர்கள் தங்கள் தேர்களோடு சேர்த்து அனைத்துப் புறங்களில் இருந்தும் நசுக்கப்பட்டனர். ஒருவனின் கணையால் கொல்லப்பட்ட மற்றவன், அந்தத் தேர்வீரனின் {தனது எதிரியின்} தேரிலேயே பாய்ந்து விழுந்தான். தம் தேரோட்டி கொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயரத்தில் இருந்து பாயும் காட்சியும் காணப்பட்டது. அங்கே அடர்த்தியான புழுதி எழுந்தது. அது போர்க்களத்தில் வில்லின் நாணொலியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களை {எதிரிகளை}, போராடிக் கொண்டிருந்த எதிராளிகளுக்குச் சுட்டிக் காட்டியது. தங்கள் உடல்களில் கொண்ட அழுத்தத்தின் காரணமாகப் போராளிகள் தங்கள் எதிரிகளை ஊகித்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (எதிரி) படைப்பிரிவுகளின் நாணொலிகளால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்கள், கணைகளுடன் போரிட்டனர். “ஹிஸ்” என்று போராளிகளால் அடிக்கப்பட்ட கணைகளின் ஒலி அவர்களின் எதிரிகளால் கேட்கப்பட்டது. காதுகளையே துளைக்கும் வண்ணம், பேரிகைகளின் ஒலி பேரொலியாக இருந்தது. போர்களத்தில் ஒரு போராளி தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி உச்சரித்துக் கொண்ட அவனது பெயர், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தி ஆரவாரமிக்கப் பேரொலியாக எழுந்தது, இருப்பினும் அவற்றை நம்மால் கேட்க முடியவில்லை. தனக்குப் பிறந்த மகனைத் தந்தையால் அடையாளம் காண முடியவில்லை. நேரான கணைகளின் மூலம் தேரின் சக்கரங்களில் ஒன்று உடைக்கப்பட்டோ, குதிரைகளில் ஒன்று கொல்லப்பட்டோ, தேரோட்டியுடன் கூடிய தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டனர். இப்படியே தங்கள் தேர்களை இழந்த பல போர் வீரர்கள் ஓடிக் கொண்டிருப்பது {அங்கே பரவலாகத்} தெரிந்தது.
எதிரியைப் பீஷ்மர் தாக்கிய போது, வெட்டப்பட்டவன் கொல்லப்பட்டான், கொல்லப்படாதவன் உயிர்நிலைகளில் தாக்கப்பட்டான்; ஆனால் தாக்கப்படாதவன் என்று எவனும் இல்லை. அந்தப் பயங்கரப் போரில் குருக்களைப் படுகொலை செய்த ஸ்வேதனின் செயல் பெரிதாக இருந்தது. அவன் {ஸ்வேதன்} நூற்றுக்கணக்கான உன்னத இளவரசர்களைக் கொன்றான். அவன் {ஸ்வேதன்}, தேர்வீரர்களின் தலைகளையும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, வில்லுடன் கூடிய (அவர்களது) கரங்களையும் தனது கணைகளைக் கொண்டு நூற்றுக் கணக்கில் வெட்டினான். தேர்வீரர்கள், தேர்ச்சக்கரங்கள், தேரில் இருந்த பிறர், தேர்கள், சிறிய மற்றும் விலை உயர்ந்த கொடிக்கம்பங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள், தேர்க்கூட்டங்கள், மனிதர்களின் கூட்டங்கள் ஆகியவற்றை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் அழித்தான்.
ஸ்வேதனின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அந்தத் தேர்வீரர்களில் சிறந்தவரைக் {பீஷ்மரைக்} கைவிட்டு, பின்னோக்கி புறமுதுகிட்டு நாம் ஓடினோம் {நமது படை ஓடியது}. அதனால்தான் (இப்போது) தங்களைக் காண்கிறோம். ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, கணைகள் தாக்கும் எல்லையைக் கடந்த குருக்கள் அனைவரும், அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கைவிட்டு, (பார்வையாளர்களாக மட்டுமே தாங்கள் இருந்தாலும்) மோதலுக்காகத் தங்கள் ஆயுதங்களுடன் காத்திருந்தார்கள். அந்தப் பயங்கரப் போரில், (உலகளாவிய) மகிழ்ச்சியற்ற அந்த நேரத்திலும், நமது படையில், மனிதர்களில் புலியான பீஷ்மர் மட்டுமே மேரு மலையைப் போல அசையாதிருந்து மகிழ்ச்சியாக இருந்தார். பின்பனிக் காலத்தின் {சிசிரருதுவின் – மாசி, பங்குனியின்} முடிவில் [1], சூரியன் தனது கதிர்களால் நீரை உறிஞ்சுவது போல, (எதிரிகளின்) உயிர்களைப் பறித்த பீஷ்மர், சூரியனைப் போன்ற தனது தேரின் தங்கக் கதிர்களால், அந்தச் சூரியனைப் போலவே ஒளிர்ந்தார். மேலும், அந்தப் பெரும் வில்லாளி கணை மேகங்களை அடித்து அசுரர்களைத் {???} தாக்கினார்.
அச்சம் நிறைந்த அந்த மோதலில் பீஷ்மரால் கொல்லப்படும்போது, அவ்வீரர்கள், தங்கள் படையணிகளில் இருந்து உடைந்து, விறகால் எரியும் நெருப்பிடம் இருந்து ஓடுவதைப் போல அவரிடம் {பீஷ்மரிடம்} இருந்து ஓடினர். அந்தத் தனி வீரனிடம் (ஸ்வேதனிடம்) மோதியவர்களில், எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர் மட்டுமே மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் இருந்தார். துரியோதனனின் நலத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவ வீரனை {ஸ்வேதனை} துன்புறுத்த ஆரம்பித்தார். கைவிடுவதற்குக் கடினமான தனது உயிரையே துச்சமாக மதித்து, அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தக் கடும் மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர் {பீஷ்மர்} அந்தப் பாண்டவப் படையைக் கொன்றழித்தார்.
(தார்தராஷ்டிரப்) படைப்பிரிவுகளைத் தாக்கும் படைத்தலைவனை (ஸ்வேதனைக்) கண்டவரும், தேவ விரதன் என்று அழைக்கப்பட்டவரும், உமது தந்தையுமான பீஷ்மர், அவனை {ஸ்வேதனை} நோக்கி வேகமாக விரைந்தார். அதன்பேரில், ஸ்வேதன், கணைகளால் ஆன வலையால் பீஷ்மரை மறைத்தான். பீஷ்மரும் தனது கணைகளின் தாக்குதலால் ஸ்வேதனை மறைத்தார். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலவும், மதங்கொண்ட இரண்டு பெரிய யானைகள் மோதிக் கொள்வது போலவும், ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் புலிகள் போலவும் அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விரைந்தனர். ஒருவரின் ஆயுதங்களைத் தனது ஆயுதங்களின் மூலம் கலங்கடித்த மனிதர்களில் காளைகளான பீஷ்மரும், ஸ்வேதனும், ஒருவரின் உயிரை மற்றவர் பறிக்கும் விருப்பத்துடன் ஒருவருக்கொருவர் போரிட்டனர்.
ஸ்வேதன் பாண்டவப்படையைப் பாதுகாக்கவில்லையெனில், சினத்தில் சீறும் பீஷ்மர், ஒரே நாளில் அந்தப் படை முழுவதையும் எரித்திருப்பார். ஸ்வேதனால் தடுக்கப்பட்ட தங்கள் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அதே வேளையில் உமது மகன் {துரியோதனன்} உற்சாகமிழந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பல மன்னர்கள் சூழப் பாண்டவப் படையை எதிர்த்து தனது துருப்புகளுடன் விரைந்தான்.
இதனால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கைவிட்ட ஸ்வேதன், மரங்களை வேருடன் பிடுங்கிப் போடும் பலத்த காற்று போல வேகமாக விரைந்து உமது மகனின் {துரியோதனனின்} படையைக் கொன்றழித்தான். கோபத்தில் உணர்விழந்த அந்த விராடன் மகன் {ஸ்வேதன்}, உமது படையை நிர்மூலமாக்கியபடி முன்னேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் நிலைபெற்றிருந்த இடத்திற்கு (மீண்டும்) வந்தான். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், சுடர்மிகும் தங்கள் கணைகளோடு, பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவன் {இந்திரன்} போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தங்களுக்குள் போரிட்டனர்.
ஸ்வேதனின் வீரமும், மரணமும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 048ஆ-பீஷ்மரின் வில்லைப் பலமுறை ஒடித்த ஸ்வேதன்; பீஷ்மரின் பனை மரக் கொடியை வெட்டி வீழ்த்திய ஸ்வேதன்; பீஷ்மர் ஸ்வேதனால் கொல்லப்பட்டார் எனக் கௌரவர்கள் நினைப்பது; ஸ்வேதன் தனது தேரை இழப்பது; பீஷ்மரின் தேரை ஸ்வேதன் தூள் தூளாக்குவது; பிரம்மாஸ்திரம் கொண்டு பீஷ்மர் ஸ்வேதனைக் கொல்வது; முதல் நாள் போரின் முடிவில் பாண்டவர்கள் சோகத்துடன் தங்கள் பாசறைக்குத் திரும்புவது…
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “(தனது) வில்லை முழுமையாக வளைத்த ஸ்வேதன், பீஷ்மரை ஏழு கணைகளால் துளைத்தான். பிறகு, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அந்த வீரமிக்கவர் (பீஷ்மர்), சீற்றமிகுந்த யானையொன்று, தனக்கு இணையான மற்றொரு சீற்றமிக்க யானையைத் தடுப்பதைப் போலத் தனது எதிரியின் வீரத்தைத் தடுத்தார். க்ஷத்திரியர்களை மகிழ்வு கொள்ளச் செய்யும் ஸ்வேதன் பீஷ்மரை மேலும் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, சந்தனுவின் மகனான பீஷ்மரும் பத்து கணைகளால் அவனைத் {ஸ்வேதனைத்} துளைத்தார். இப்படி அவரால் {பீஷ்மரால்} துளைக்கப்பட்டாலும், அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {ஸ்வேதன்} மலையென அசையாமல் நின்றான்.
அதன்பிறகு ஸ்வேதன், அனைவரும் வியக்கும் வகையில் இருபத்தைந்து நேரான கணைகளால் சந்தனுவின் மகனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். புன்னகைத்தபடியே தனது கடைவாயை நாவால் நக்கிய ஸ்வேதன் அந்த மோதலில் மேலும் பத்து கணைகளால் பீஷ்மரின் வில்லைப் பத்து துண்டுகளாக வெட்டினான். முழுதும் இரும்பாலானதும், இறகு படைத்ததுமான மற்றொரு கணையால் (ஸ்வேதன்), அந்த உயர் ஆன்மா கொண்டவரின் (பீஷ்மரின்) பனைமரக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் குறிபார்த்துத் தகர்த்தான்.
பீஷ்மரின் கொடிக்கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஸ்வேதனிடம் வீழ்ந்து பீஷ்மர் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சுற்றிலும் தங்கள் சங்குகளால் முழக்கம் செய்தனர். உயர் ஆன்ம பீஷ்மரின் பனைமரக் கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துரியோதனன் சினம் கொண்டு, தனது சொந்தப் படையைப் போரிடத் தூண்டினான். அவர்கள் அனைவரும், பெருந்துன்பத்தில் இருந்த பீஷ்மரை மிகக் கவனமாகப் பாதுகாத்தனர்.
(வெறுமனே) பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த அவர்களின் மன்னன் {துரியோதனன்}, “ஒன்று (இன்று) ஸ்வேதன் சாவான், அல்லது சந்தனுவின் மகனான பீஷ்மர் சாவார். இதை நான் உண்மையாகச் சொல்கிறேன்” என்றான். நால்வகைப் படைகளையும் கொண்டவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, கங்கையின் மைந்தரைப் பாதுகாக்க முன்னேறினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஹ்லீகன், கிருதவர்மன், கிருபர், சல்லியன், ஜராசந்தனின் மகன் {ஜயத்சேனன்}, விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி ஆகிய அவர்கள், வேகம் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்துடன் அனைத்துப்புறங்களில் இருந்தும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டு, ஸ்வேதனின் மேல் தடையற்ற கணைமாரியைப் பொழிந்தனர்.
அளவிலா ஆன்மா கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {ஸ்வேதன்}, கூரிய கணைகளால் அந்தச் சினம் மிகுந்த போர்வீரர்களைத் தடுத்து தனது கரங்களின் வேகத்தை வெளிக்காட்டினான். யானைக்கூட்டத்தைத் தடுத்த சிங்கத்தைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்த ஸ்வேதன், அடர்ந்த கணை மாரியால் பீஷ்மரின் வில்லை வெட்டினான். அந்தப் போரில் மீண்டும் வேறு வில்லை எடுத்த சந்தனுவின் மகனான பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் {கழுகின்} இறகு படைத்த கணைகளால் ஸ்வேதனைத் துளைத்தார்.
அந்த மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினம் தூண்டப்பட்ட அந்தத் (பாண்டவப் படையின்) தலைவன் {ஸ்வேதன்}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் பீஷ்மரைப் பல கணைகளால் துளைத்தான். உலகமனைத்திலும் உள்ள வீரர்களில் முதன்மையான பீஷ்மர், போரில் ஸ்வேதனால் தடுக்கப்பட்டதைக் கண்ட மன்னன் (துரியோதனன்) பெரிதும் துன்புற்றான். உமது படை முழுவதும் கொண்ட துன்பமும் பெரிதாக இருந்தது. வீரரான பீஷ்மரை, ஸ்வேதன் தடுத்துத் தனது கணைகளால் சிதைத்ததைக் கண்ட அனைவரும் ஸ்வேதனால் பீஷ்மர் வீழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே நினைத்தனர்.
தனது கொடிக்கம்பம் வீழ்த்தப்பட்டு, (தார்தராஷ்டிரப்) படையும் தடுக்கப்பட்டதைக் கண்டு கோபவசப்பட்ட தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதனின் மீது பல கணைகளைத் தொடுத்தார். எனினும், தேர்வீரர்களின் முதன்மையான ஸ்வேதன், பீஷ்மரின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்து, அகன்ற தலை கொண்ட கணை ஒன்றால், மீண்டும் உமது தந்தையின் {பீஷ்மரின்} வில்லை ஒடித்தான். அந்த வில்லை ஒருபுறம் தூக்கி எறிந்த கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிதானதும் அதிக வலிமையானதுமான மற்றொரு வில்லை எடுத்து, சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்ட அகன்ற தலை கொண்ட ஏழு கணைகளில் {பல்லங்களில்} நான்கு கணைகளைக் கொண்டு, படைத்தலைவன் ஸ்வேதனின் நான்கு குதிரைகளைக் கொன்றார். பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர் {பீஷ்மர்}, இரண்டால் {இரண்டு கணைகளால்} அவனது {ஸ்வேதனின்} கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தி, ஏழாவதால் {ஏழாவது கணையால்}, அவனது {ஸ்வேதனின்} தேரோட்டியின் தலையையும் கொய்தார்.
அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {ஸ்வேதன்}, தனது தேரோட்டியும், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் தன் தேரை இழந்ததைக் கண்டப் பாட்டன் {பீஷ்மர்}, தனது கணைமாரியால் அனைத்துப் புறங்களிலும் அவனை {ஸ்வேதனைத்} தாக்கினார். பீஷ்மரின் வில்லில் இருந்து தொடுக்கப்பட்ட கணைகளால் அந்த மோதலில் தாக்கப்பட்ட ஸ்வேதன், (கைவிடப்பட்ட) தனது தேரிலேயே தனது வில்லை விட்டுவிட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், கடுமையானதும், மரணக் கோலுக்கு ஒப்பானதும், மரணத்தையே கொடுக்கவல்லதுமான ஒரு பயங்கர ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்தான்.
பெருஞ்சினத்தில் இருந்த ஸ்வேதன், அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மரிடம், “ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, சற்றுப் பொறும். என்னைப் பாரும்” என்றான். போரில் பீஷ்மரிடம் இதைச் சொன்னவனும், எல்லையற்ற ஆற்றல் கொண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்}, பாண்டவர்களுக்காகத் தனது வீரத்தை வெளிப்படுத்தி, உமக்குத் தீமையை விரும்பி, பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டியை வீசினான். ஸ்வேதனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அஃது (அந்த ஈட்டி), அண்மையில் சட்டை உதிர்த்து வந்த பாம்பு போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரும் விண்கல்லைப் போலவும் பெரும் வேகத்தில் விழுந்தது.
இதனால் கிஞ்சிற்றும் அஞ்சாத உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பசும்பொன்னால் ஆனதும், ஆகாயத்தில் வரும்போதே எரிந்து தீச்சுடர்கள் நிறைந்தது போலத் தெரிந்ததுமான அந்த ஈட்டியை, இறகு படைத்த எட்டு {8} கூரிய கணைகளால் ஒன்பது {9} துண்டுகளாகத் துண்டித்தார். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் மகிழ்ச்சியால் பேரொலி எழுப்பின.
தனது ஈட்டி துண்டுகளாகத் துண்டிக்கப்பட்டதைக் கண்ட விராடனின் மகன் {ஸ்வேதன்}, காலத்தால் வெல்லப்பட்டு, கோபத்தால் உணர்விழந்து, என்ன செய்வதென்று அறியாதவனாக இருந்தான். கோபத்தால் உணர்விழந்த விராடனின் மகன் {ஸ்வேதன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்துடன் கூடிய இரண்டாவது யமனைப் போல, பீஷ்மரைக் கொல்ல கையில் கதாயுதத்தை ஏந்தி, மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, சினத்தால் கண்கள் சிவந்து பாறைகளை {மலையை} எதிர்த்து விரையும் வேகமான நீரூற்று போல, பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். பெரும் ஆற்றல் கொண்டவரும், (பிறரின்) பலத்தை அறிந்தவருமான பீஷ்மர், தடுக்கப்பட முடியாத அவனது {ஸ்வேதனின்} வேகத்தைக் கண்டு, அந்தத் தாக்குதலில் இருந்து தப்ப திடீரெனத் {தனது தேரில் இருந்து} தரையில் இறங்கினார்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமான கதாயுதத்தைக் கோபத்துடன் சுழற்றிய ஸ்வேதன், மகேஸ்வர தேவனைப் {சிவனைப்} போல, அதைப் பீஷ்மரின் தேரின் மீது வீசினான். பீஷ்மரின் அழிவைக் கருதி அந்தக் கதாயுதம் வீசப்பட்டதன் விளைவாக, கொடிக்கம்பம், குதிரைகள், கணைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தத் தேர் சாம்பலாகக் குறைக்கப்பட்டது {தூள் தூளானது}. தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் {தரையில் நின்று போரிடும்} காலாட்படை வீரராக ஆனதைக் கண்டச் சல்லியன் மற்றும் பிற தேர்வீரர்கள் பலர் (அவரது உதவிக்காக) வேகமாக விரைந்தனர். வேறொரு தேரில் ஏறிய பீஷ்மர், உற்சாகமற்ற வகையில் தனது வில்லை வளைத்துத் தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதனை நோக்கி மெதுவாக முன்னேறினார்.
அதேவேளையில், தனக்கு நன்மை நிறைந்ததும், தெய்வீகமானதுமான ஒரு வலிமையான குரல் வானத்தில் இருந்து வருவதைப் பீஷ்மர் கேட்டார். (அந்தக் குரல்), “ஓ! பீஷ்மா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, காலத்தை வீணாக்காமல் முயற்சி செய்வாயாக. இவனை {விராடனின் மகன் ஸ்வேதனை} வெல்வதற்கான காலமாக இந்தக் காலத்தையே அண்டத்தைப் படைத்தவன் {பரமாத்மா} நிர்ணயித்திருக்கிறான்” {என்றது [அந்தக் குரல்]}.
தேவ தூதனால் உதிர்க்கப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ச்சியால் நிறைந்து, ஸ்வேதனை அழிப்பதில் தனது இதயத்தை நிலைக்கச் செய்தார். தேர்வீரர்களில் முதன்மையான ஸ்வேதன் காலாட்படை வீரனானதைக் கண்ட (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வீரர்கள் பலர் (அவனது உதவிக்காக) ஒன்றாகத் திரண்டு விரைந்து வந்தனர். சாத்யகி, பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், (ஐந்து) கேகயச் சகோதரர்கள், திருஷ்டகேது மற்றும் பெரும் சக்தி கொண்ட அபிமன்யு ஆகியோரே அவர்கள் {ஸ்வேதனின் உதவிக்காக வந்த பாண்டவத் தரப்பு வீரர்கள்}.
(உதவி செய்ய) விரைந்து வரும் அவர்களைக் கண்ட அந்த அளவிலா ஆன்மா கொண்டவர் (பீஷ்மர்), துரோணர், சல்லியன், கிருபர் ஆகியோரின் உதவியோடு, காற்றின் பலத்தைத் தடுக்கும் மலையைப் போல, அவர்கள் அனைவரையும் தடுத்தார். பாண்டவத் தரப்பின் உயர் ஆன்ம வீரர்கள் அனைவரும் (இப்படித்) தடுக்கப்பட்ட போது, வாளை எடுத்த ஸ்வேதன் பீஷ்மரின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.
அந்த வில்லை ஒருபுறம் வீசிய பாட்டன் {பீஷ்மர்}, தேவ தூதனின் வார்த்தைகளைக் கேட்டு, ஸ்வேதனின் அழிவைத் தனது மனதில் விரைவாகத் தீர்மானித்தார். (ஸ்வேதனால்) கலங்கடிக்கப்பட்டிருந்தாலும், வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} பிரகாசத்தில் சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு நிகரான வேறொரு வில்லை எடுத்து, அதில் ஒரு கணத்தில் நாணேற்றினார். பிறகு, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் முதலான மனிதர்களில் புலிகளால் சூழப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரன் ஸ்வேதனைக் கண்ட உமது தந்தை கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, படைத்தலைவன் ஸ்வேதனை மட்டுமே குறிவைத்து விரைவாக முன்னேறினார்.
பீஷ்மர் முன்னேறுவதைக் கண்ட பெரும் ஆற்றல் படைத்த பீமசேனன், அறுபது {60} கணைகளால் அவரைத் {பீஷ்மரைத்} துளைத்தான். ஆனால் வலிமைமிக்கத் தேர்வீரரான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, பயங்கரக் கணைகளைக் கொண்டு பீமசேனன், அபிமன்யு ஆகிய இருவரையும் மற்றும் பிற தேர்வீரர்களையும் தடுத்து, நேரான மூன்று கணைகளால் அபிமன்யுவைத் தாக்கினார். அந்த மோதலில் பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, சாத்யகியை நூறு{100} கணைகளாலும், திருஷ்டத்யும்னனை இருபது{20} கணைகளாலும், கேகயச் சகோதரர்களை ஐந்து{5} கணைகளாலும் தாக்கினார். பயங்கரக் கணைகளைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தடுத்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஸ்வேதனை நோக்கி மட்டுமே முன்னேறிக் கொண்டிருந்தார்.
பிறகு, வலிமை நிறைந்த பீஷ்மர், பெரும் பலத்தைத் தாங்க வல்லதும், தடுக்கப்பட முடியாததும், மரணத்திற்கு ஒப்பானதுமான ஒரு கணையை எடுத்துத் தனது வில்லில் பொருத்தினார். பிரம்ம ஆயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} சக்தியை முறையாகக் கொண்டதும், இறகுகள் படைத்ததுமான அந்தக் கணை தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோரால் பார்க்கப்பட்டது. சுடர்மிகும் நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தக் கணை, வஜ்ராயுதம் மின்னுவதைப் போல மின்னி, அவனது {ஸ்வேதனின்} கவசத்தைத் துளைத்து (அவனது உடலைக் கடந்து) பூமியைத் தாக்கியது.
மேற்கில் இருக்கும் தனது மாளிகைகளுக்குள் விரைந்து ஓடும் சூரியன், தனது ஒளிக்கதிர்களையும் உடன்கொண்டு செல்வதைப் போலவே அந்தக் கணையும் ஸ்வேதனின் உயிரை எடுத்துக் கொண்டு அவனது உடலைக் கடந்து போனது. இப்படி அந்தப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {ஸ்வேதன்}, மலையில் இருந்து தளர்ந்து விழும் சிகரம் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம். பாண்டவத் தரப்பைச் சேர்ந்தவர்களும், க்ஷத்திரியக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அனைவரும் {ஸ்வேதனுக்காக} அழுது புலம்பத் தொடங்கினர். எனினும், உமது மகன்களும், குருக்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஸ்வேதன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட துச்சாசனன், சங்குகள் மற்றும் பேரிகைகளின் உரத்த இசையுடன் போர்க்களத்தில் கூத்தாடினான். போர்க்களத்தின் ரத்தினமான அந்தப் பெரும் வில்லாளி {ஸ்வேதன்} பீஷ்மரால் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், சிகண்டியைத் தலைமையாகக் கொண்டவர்களுமான (பாண்டவத் தரப்பின்) வலிமைமிக்க வில்லாளிகள் அச்சத்தால் நடுங்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படைத்தலைவன் கொல்லப்பட்டவுடன், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, விருஷ்ணி குலத்தவனும் {கிருஷ்ணனும்} மெதுவாகத் {தங்கள்} துருப்புகளைப் (இரவு ஓய்வுக்காகப்) பின்வாங்கச் செய்தனர்.
பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் படைகள் மற்றும் உமது படைகள் ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக உரத்த முழக்கமிட்டபடி பின்வாங்கினர். பார்த்தர்களின் {பாண்டவர்களின்} வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தனிப்போரில் பயங்கரமாகக் கொல்லப்பட்ட (தங்கள் படைத்தலைவனை) நினைத்தபடி, உற்சாகமற்று (தங்கள் பாசறைகளுக்குள்) நுழைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.
பெருமையுடன் நின்ற பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 049-ஸ்வேதன் கொல்லப்பட்டதும் என்ன நடந்தது என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சங்கனுக்கும் சல்லியனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சங்கனைப் பீஷ்மரிடம் இருந்து பாதுகாக்க அர்ஜுனன் பீஷ்மருடன் மோதுவது; பாண்டவப் படையைப் பீடித்த பீஷ்மர்; முதலாம் நாள் போர் முடிவுற்றது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போரில் எதிரியால் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதும், ஓ! மகனே {சஞ்சயா}, வலிமைமிக்க வில்லாளிகளான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? தங்கள் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதைக் கேட்டதும், அவனுக்காகப் போரிட்டவர்களுக்கும், அவனால் புறமுதுகிடச் செய்யப்பட்ட எதிரிகளுக்கும் இடையில் என்ன நடந்தது? ஓ! சஞ்சயா, நமது வெற்றியைக் கேட்டதால், (உனது) வார்த்தைகள் எனது இதயத்தை மகிழச் செய்கின்றன. எங்கள் அத்துமீறலை [1] நினைத்து எனது இதயம் வெட்கத்தை அடையவில்லை.
குரு குலத்தின் முதிர்ந்த தலைவர் {பீஷ்மர்} எப்போதும் உற்சாகமாகவும், (எங்களிடம்) அர்ப்பணிப்பு கொண்டவராகவும் இருக்கிறார். (துரியோதனனைப் பொறுத்த வரை) தனது சிறிய தந்தையின் அறிவார்ந்த மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} பகைமையைத் தூண்டிய பிறகும், யுதிஷ்டிரன் மீது கொண்ட பயம் மற்றும் கவலையின் காரணமாகவும் அந்தப் பாண்டுவின் மகன்களிடமே ஒரு முறை பாதுகாப்பை நாடினான். அந்த நேரத்தில் அவன் {துரியோதனன்}, அனைத்தையும் கைவிட்டுவிட்டு, துயரிலேயே வாழ்ந்தான். பாண்டு மகன்களின் ஆற்றல் மற்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தான் கண்ட தடைகள் ஆகியவற்றின் விளைவால், சிக்கல்களுக்கு மத்தியில் தன்னை இருத்திக் கொண்ட துரியோதனன் அப்போது (சில காலத்திற்கு) நல்ல நடத்தைகளைக் கொண்டிருந்தான். தீய மனம் கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்} முன்பொரு சமயம் அவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழேயே தன்னை வைத்துக் கொண்டான்.
அப்படியிருந்தும், ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஸ்வேதன் ஏன் கொல்லப்பட்டான்? உண்மையில், இந்தக் குறுகிய மனம் கொண்ட இளவரசன் {துரியோதனன்}, {நல்ல} வாய்ப்பு அனைத்தையும் தாண்டி, இழிவான பலரால் பாதாள உலகங்களுக்குள் வீசப்பட்டிருக்கிறான். பீஷ்மரோ, ஆசானோ {துரோணரோ}, கிருபரோ, காந்தாரியோ போரை விரும்பவில்லை. ஓ! சஞ்சயா, நானோ, விருஷ்ணி குலத்தின் வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, பாண்டுவின் மகனான நீதிமிக்க மன்னனோ {தர்மராஜன் யுதிஷ்டிரனோ}, பீமனோ, அர்ஜுனனோ, அந்த மனிதர்களில் காளையரான இரட்டையர்களோ {சகாதேவன் மற்றும் நகுலனோ} போரை விரும்பவில்லை [2].
என்னாலும், காந்தாரியாலும், விதுரராலும், ஜமதக்னியின் மகன் ராமராலும் {பரசுராமராலும்}, உயர் ஆன்ம வியாசராலும் எப்போதும் தடுக்கப்பட்டும், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றியவனும், துச்சாசனனுடன் கூடியவனும், தீய மனம் கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனன், பாண்டவர்களிடம் தீய நோக்குடனே நடந்து கொண்டான். ஓ! சஞ்சயா, அவன் {துரியோதனன்} கொடுந்துயரத்தில் விழுந்திருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். ஸ்வேதனின் படுகொலை, பீஷ்மரின் வெற்றி ஆகியவற்றுக்குப் பிறகு, சினம் தூண்டப்பட்டவனும், போரில் கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? உண்மையில், அர்ஜுனன் நிமித்தமாகவே எனது அச்சங்கள் எழுகின்றன. ஓ! சஞ்சயா, அந்த அச்சங்கள் விலக்கப்பட முடியாததாகவும் இருக்கின்றன.
குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வீரமிக்கவனாகவும், பெரும் செயல்களைச் செய்பவனாகவும் இருக்கிறான். தனது கணைகளைக் கொண்டு எதிரிகளின் உடல்களை அவன் {அர்ஜுனன்} சுக்கு நூறாக்குவான் என்றே நான் நினைக்கிறேன். இந்திரனின் மகனும், போரில் இந்திரனின் தம்பியான உபேந்திரனுக்கு இணையானவனும், சினமும், நோக்கங்களும் பொய்க்காதவனுமான அவனை {அர்ஜுனனைக்} கண்ட போது, உங்கள் மனநிலைகள் என்னவாகின {எப்படி மாறின}? வீரனும், வேதங்களை அறிந்தவனும், நெருப்பையும், சூரியனையும் போன்ற பிரகாசம் கொண்டவனும், ஐந்திர ஆயுதத்தை அறிந்தவனுமான அவன் {அர்ஜுனன்}, எதிரியின் மீது பாயும்போது எப்போதும் வெற்றிவாகை சூடுபவனாக அல்லவா இருக்கிறான்? அவனது ஆயுதங்கள் எதிரியின் மீது விழும்போது, வஜ்ராயுதத்தின் பலத்துடனே விழுகின்றன. வில்லின் நாணை வளைப்பதில் அற்புத வேகத்தைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனே {மகாரதனே}.
ஓ! சஞ்சயா, கடுமையானவனான துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} பெரும் அறிவுள்ளவனே. உண்மையில், போரில் ஸ்வேதன் கொல்லப்பட்ட போது அந்தத் திருஷ்டத்யும்னன் என்ன செய்தான்? பழங்காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களது படைத்தலைவனின் {ஸ்வேதனின்} படுகொலை ஆகியவற்றின் விளைவால் உயர் ஆன்ம பாண்டவர்களின் இதயங்கள் {கோபத்தால்} எரிந்து கொண்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். துரியோதனனின் நிமித்தமாக, அவர்களின் கோபத்தை நினைத்து இரவிலும் பகலிலும் நான் ஆறுதல் இல்லாமலேயே இருக்கிறேன். அந்தப் பெரும்போர் எப்படி நடைபெற்றது? ஓ சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்கு நீ சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது அத்துமீறல்களைக் குறித்து அமைதியாகக் கேளும். அதன் பலனை துரியோதனன் மீது சுமத்துவது உமக்குத் தகாது. தண்ணீர் வற்றியதும் அணைகட்டுவதைப் போல உமது புரிதல் இருக்கிறது. அல்லது, வீடு பற்றி எரியும்போது கிணறு வெட்டுவதைப் போல {உமது புரிதல்} இருக்கிறது [3].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முற்பகலைக் கடந்து நடந்த அந்தக் கடும் மோதலில் படைத்தலைவனான ஸ்வேதன் பீஷ்மரால் கொல்லப்பட்டான் [4].எதிரிப் படை அணிகளைக் கலங்கடிப்பவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், விராடனின் மகனுமான சங்கன், கிருதவர்மனோடு {அவனது தேரில்} சல்லியன் இருப்பதைக் கண்டு, தெளிந்த நெய்யால் சுடர்விடும் நெருப்பைப் போலத் திடீரெனக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். இந்திரனின் வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை வளைத்த அந்த வலிமைமிக்க வீரன் {சங்கன்}, அந்தப்போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொல்ல விரும்பி தனக்கு உதவியாகப் பெரும் தேர்ப்படையை அனைத்துப் புறங்களிலும் சூழச் செய்து கொண்டு விரைந்தான்.
கணைமாரியைப் பொழிந்த சங்கன், சல்லியனின் தேரை நோக்கி விரைந்தான். மதம் கொண்ட யானையாக முன்னேறி வரும் அவனைக் {சங்கனைக்} கண்டு, ஏற்கனவே மரணத்தின் {காலனின்} கோரப்பற்களில் {அகப்பட்டு} இருந்த மத்ரர்களின் ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, உமது தரப்பின் ஏழு வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள் [5].பிறகு, அந்தப் போரில், வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மர் மேகங்களைப் போல முழங்கியபடி, முழுமையாக ஆறு முழம் நீளம் இருந்த வில்லை எடுத்துக் கொண்டு சங்கனை எதிர்த்து விரைந்தார். வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரிய வில்லாளியுமான அவர் {பீஷ்மர்}, இப்படி விரைவதைக் கண்ட பாண்டவப் படை, புயலின் தாக்கத்தால் அடிக்கப்பட்ட படகைப் போல நடுங்கத் தொடங்கியது.
பீஷ்மரிடம் இருந்து சங்கன் காக்கப்பட வேண்டும் என்று நினைத்த அர்ஜுனன் விரைவாக முன்னேறி சங்கனுக்கு முன்பு தன்னை நிறுத்திக் கொண்டான். அதன் பிறகு, பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன. ஒரு படை மற்றொரு படையில் கலப்பதைப் போல அப்போது தெரிந்தது [6]. இப்படியே அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் கூடிய சல்லியன், தனது தேரில் இருந்து இறங்கி, சங்கனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். இப்படிக் குதிரைகளை இழந்த சங்கன், அந்தத் தேரில் இருந்து குதித்து, பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி ஓடி (அதில் ஏறிக் கொண்டு) தேறுதல் அடைந்தான். பிறகு, பீஷ்மரின் தேரில் இருந்து பாய்ந்த எண்ணற்ற கணைகள், வானத்தையும் பூமியையும் முழுமையான மறைத்தன. தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர், பாஞ்சால, மத்ஸ்ய, கேகய மற்றும் பிரபத்திரகப் படைகளைத் தனது கணைகளால் கொன்றழித்தார்.
இடது கையாலும் வில் வளைக்க இயன்றவனான பாண்டுவின் மகனுடனான (அர்ஜுனனுடனான) போரை விரைவில் கைவிட்ட பீஷ்மர், தனது படையால் சூழப்பட்டவனும், பாஞ்சாலர்களின் மன்னனுமான துருபதனை எதிர்த்து விரைந்தார். விரைவில் அவர் {பீஷ்மர்}, தனது அன்புக்குரிய உறவினனை {சம்பந்தியான துருபதனை} எண்ணற்ற கணைகளால் மறைத்தார். பின்பனிக் காலத்தில் {சிசிர ருதுவில்} நெருப்பால் எரிக்கப்படும் காட்டைப் போலத் துருபதனின் துருப்புகள் எரிக்கப்படுவதாகவே அப்போது தெரிந்தது. புகையற்ற நெருப்பு சுடர்விட்டுக் கொண்டிருப்பதைப் போலவோ, நன்பகலில் தனது வெப்பத்தால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போலவோ அந்தப் போர்க்களத்தில் பீஷ்மர் நின்றார்.
பாண்டவர்களின் போராளிகளால் பீஷ்மரைப் பார்க்கக்கூட இயலவில்லை. அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கண்களைச் சுற்றிலும் சுழல விட்டு, பாதுகாவலர் எவரும் இல்லாததைக் கண்ட அந்தப் பாண்டவப் படை, குளிரால் பீடிக்கப்பட்ட பசுக்கூட்டத்தைப் போலத் தெரிந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கொல்லப்படும்போதும், நன்கு அடிக்கப்பட்டு உற்சாகமிழந்து ஓடும்போதும், பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன.
பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தனது வில்லை எப்போதும் வட்டமாக வளைத்துக் கொண்டு, கடும் விஷத்தை ஒத்திருந்த சுடர்மிகும் கணைகளை அடிக்க ஆரம்பித்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முன்கூட்டியே பாண்டவத் தேர்வீரர்களைப் பெயர் சொல்லி அழைத்து, அவர்களைக் கொன்றவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, அனைத்துப் புறங்களிலும் கணைகளின் தொடர்ந்த வரிசைகளை உண்டாக்கினார். போர்க்களம் அனைத்திலும் பாண்டவத் துருப்புகள் நசுக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட போது, சூரியன் மறைந்ததால் ஒன்றும் புலப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பெருமையாக நின்று கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட பார்த்தர்கள் (இரவு ஓய்வுக்காகத்) தங்கள் படைகளைப் பின்வாங்கச் செய்தனர்.” {என்றான் சஞ்சயன்}.
முதல் நாள் போர் முற்றிற்று
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply