ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-

பீஷ்மருக்குத் தலையணை அமைத்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 122-பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ! வெல்லப்படமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்?” {என்றான் அர்ஜுனன்}.

அதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ! வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.

பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.

பிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.

அங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.

பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிலர் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.

அவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது? க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.

அவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குத் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.

பிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்}! உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே! எங்கள் புகலிடம் நீயே! ஓ! கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}. 

துரியோதனனை வேண்டிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 123-பதினோராம் நாள் காலையில் பீஷ்மரைச் சந்தித்த கௌரவர்களும், பாண்டவர்களும்; மன்னர்களிடம் தண்ணீர் கேட்ட பீஷ்மர்; அருஞ்செயலால் தண்ணீர் கொணர்ந்த அர்ஜுனன்; அர்ஜுனனைப் புகழ்ந்த பீஷ்மர்; அர்ஜுனனின் மகிமை; துரியோதனனை அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரைகளை ஏற்காத துரியோதனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும், பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} சென்றனர். அந்த க்ஷத்திரியர்கள், தங்கள் வகையைச் சார்ந்த காளையும், குருக்களில் முதன்மையனவரும், வீரப்படுக்கையில் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} வணங்கி, அவர் முன்னிலையில் நின்றனர்.

அந்த இடத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கன்னியர், அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} மீது சந்தனப் பொடிகளையும், பொரிகளையும், மலர்மாலைகளையும் பொழிந்தனர். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சாதாரணப் பார்வையாளர்கள் ஆகியோர் அனைவரும், சூரியனைக் காண விரும்பும் உலக உயிரினங்களைப் போல, சந்தனுவின் மகனை {பீஷ்மரைக் காண} அணுகினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எக்காளங்கள், நர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் முதிர்ந்த குரு பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்தனர்.

குருக்களும், பாண்டவர்களும் போரை நிறுத்தி, தங்கள் கவசங்களை அகற்றி, தங்கள் ஆயுதங்களை ஒருபுறம் கிடத்திவிட்டு, எதிரிகளைத் தண்டிப்பவரும் வெல்லப்பட முடியாதவருமான தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} ஒன்று சேர்ந்து வந்தனர். பழங்காலத்தைப் போலவே ஒன்றாகக் கூடி வந்த அவர்கள், தங்கள் தங்கள் வயதுக்கேற்றபடி ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பாரத மன்னர்களால் நிறைந்த அந்தச் சபையானது, பீஷ்மரால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போலச் சுடர்விட்டபடி அழகாகத் தெரிந்தது. கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} மதிக்கும் மன்னர்களால் ஆன அந்தச் சபை, தங்கள் தலைவனான பாட்டனை (பிரம்மனை) வழிபடும் தேவர்களின் சபையைப் போல அழகாகத் தெரிந்தது.

எனினும் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (தன் மேனியில் தைத்திருந்த) கணைகளால் எரிந்து கொண்டிருந்தாலும் மனோ பலத்தால் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டு, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கணைகளால் எரிச்சலடைந்த தன் உடலுடன், ஆயுதக் காயங்களின் விளைவால், கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்த நிலையில் இருந்த பீஷ்மர், அந்த மன்னர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தி, {அவர்களிடம்} தண்ணீர் கேட்டார்.

அப்போது அந்த க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

நீதிமிக்க ஆன்மா கொண்ட பீஷ்மர், தன் முன்னிலையில் இப்படி நின்று, மரியாதை நிரம்பிய வணக்கங்களைத் தனக்குச் செலுத்திய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, மகிழ்ச்சியுடன் அந்தத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “உனது கணைகளால் முழுவதும் மறைக்கப்பட்டுள்ள என் உடல் பெரிதும் எரிகிறது! என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ! அர்ஜுனா, வேதனையால் பீடிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்ட எனக்குத் தண்ணீரைத் தருவாயாக. நீ ஒரு பெரும் வில்லாளியாவாய். முறையாக எனக்குத் தண்ணீரைத் தர நீயே இயன்றவனாவாய்” என்றார் {பீஷ்மர்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன வீர அர்ஜுனன், தன் தேரில் ஏறி, தன் காண்டீவத்தைப் பலமாகத் தட்டி, அதை வளைக்கத் தொடங்கினான். அவனது {அர்ஜுனனது} வில்லின் நாணொலியையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது உள்ளங்கைத் தட்டல்களையும் கேட்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தூண்டப்பட்டனர். பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தன் தேரில் ஏறி, படுத்துக் கிடந்தவரும், ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பாரதர்களின் தலைவரை {பீஷ்மரை} வலம் வந்தான். மந்திரங்களால் தூண்டப்பட்ட, பர்ஜன்ய ஆயுதத்தின் அடையாளத்தைக் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றைக் குறிபார்த்தப் பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, {அவ்வாயுதத்தைக் கொண்டு}, முழுப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீஷ்மர் கிடந்த இடத்திற்கும் சிறிது தெற்கில் [1] பூமியைத் துளைத்தான். பிறகு அங்கே, தூய்மையானதும், மங்கலகரமானதும், குளுமையானதும், அமுதத்துக்கு ஒப்பானதும், தேவ மணமும், சுவையும் கொண்டதுமான நீரூற்று ஒன்று எழுந்தது. பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் குளிர்ந்த நீரூற்றைக் கொண்டு, தேவர்களைப் போன்ற செயல்களும், ஆற்றலும் கொண்டவரும், குருக்களில் காளையுமான அந்தப் பீஷ்மரை மனம் நிறையச் செய்தான்.

சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான செயல்பாடுகளைக் கொண்ட பார்த்தனின் அந்த அருஞ்செயலால், பூமியின் மன்னர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான அங்கே இருந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை (காற்றில்) அசைத்தனர். சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும் களமெங்கும் உரக்கக் கேட்கப்பட்டன.

தன் தாகம் தணிந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே ஓ! குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ! அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார்! உண்மையில், வாசுதேவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்ட நீ, தேவர்கள் அனைவருடனும் கூடிய தேவர்களின் தலைவனே {இந்திரனே} அடையத் துணியாத வலிமையான அருஞ்செயல்கள் பலவற்றை அடைவாய். இது போன்ற விஷயங்களில் {தேவ ரகசியங்களில்} அறிவு கொண்டோர், க்ஷத்திரிய குலம் முழுவதையும் அழிப்பவன் நீ என்று அறிவர். உலகத்தில் உள்ள வில்லாளிகளில் நீ ஒருவனே வில்லாளியாவாய். மனிதர்களில் முதன்மையானவன் நீயே.

இவ்வுலகில், உயிரினங்களில் அனைத்திலும் முதன்மையான மனிதர்கள், சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கருடன், நீர் கொள்ளிடங்கள் அனைத்திலும் முதன்மையான கடல், நான்கு கால் உயிரினங்களில் முதன்மையான பசு, ஒளிப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையான சூரியன், மலைகள் அனைத்திலும் முதன்மையான இமயம்; சாதிகள் அனைத்திலும் முதன்மையான பிராமணன் ஆகியவற்றைப் போல வில்லாளிகள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் ஆவாய். என்னாலும், விதுரன், துரோணர், ராமர் {பரசுராமர்} [2], ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோராலும் சஞ்சயனாலும் கூட மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருதராஷ்டிரன் மகன் (துரியோதனன்) கேட்கவில்லை. ஒரு முட்டாளைப் போல அறிவற்ற துரியோதனன் அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அனைத்து வழிமுறைகளையும் மீறிய அவன் {துரியோதனன்} பீமனின் வல்லமையால் வீழ்த்தப்பட்டு எப்போதும் கிடக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி” என்றார் {பீஷ்மர்}.

அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட குரு மன்னன் துரியோதனன், இதயத்தால் மகிழ்ச்சியற்றவனானான். அவனை {துரியோதனனைக்} கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “ஓ! மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக! ஓ! துரியோதனா, அமுத மணம் கொண்ட குளுமையான அந்த நீரூற்றைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு உண்டாக்கினான் என்பதை நீ கண்டாய். இத்தகு அருஞ்செயலைச் செய்யக்கூடிய வேறு எவனும் இவ்வுலகில் இல்லை. அக்னி, வருணன், சோமன், வாயு, விஷ்ணு ஆகியோருக்கு உடையவையும், இந்திரன், பசுபதி, பரமேஷ்டி {பிரம்மன்}, பிரஜாபதி, தாத்ரி {தாதா}, தாஷ்ட்ரி {தவஷ்டா}, சாவித்ரி {ஸவிதா}, விவஸ்வான் ஆகியோருக்கு உடையவையுமான இவ்வாயுதங்கள் அனைத்தையும் மனிதர்களின் இவ்வுலகில் தனஞ்சயன் {அர்ஜுனன்} மட்டுமே அறிவான் [3]தேவகியின் மகனான கிருஷ்ணனும் அவற்றை அறிவான். ஆனால் அவற்றை அறிந்தவன் என வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா {துரியோதனா}, இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் தேவர்களும் அசுரர்களும் இணைந்து வந்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான். இந்த உயர் ஆன்மாவின் {அர்ஜுனனின்} சாதனைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும்.

உண்மையான வீரனும், போரின் ஆபரணமும், போரில் சாதித்தவனுமான அந்தப் போர்வீரனை {அர்ஜுனனைக்} கொண்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ! ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எஞ்சியிருக்கும் இந்த உனது தம்பிகள் கொல்லப்படாமல் இருக்கும்போதே,  அமைதி {சமாதானம்} ஏற்படட்டும். கோபத்தால் எரியும் கண்களுடன் கூடிய யுதிஷ்டிரன், போரில் உனது துருப்புகளை எரிக்காதிருக்கும்போதே அமைதி ஏற்படட்டும். பாண்டுவின் மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் உன் படையை நிர்மூலமாக்காமல் இருக்கும்போதே, ஓ ஏகாதிபதி {துரியோதனா} வீரப் பாண்டவர்களுக்கும், உனக்கும் இடையில் நட்புறவுகள் மீட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓ! ஐயா, இந்தப் போர் என் மரணத்தோடு முடியட்டும்! பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும்! எஞ்சிய இவர்கள் (இந்த வீரர்கள்) வாழட்டும்!

ஓ! மன்னா {துரியோதனா}, மனம் இரங்குவாயாக! பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும்! மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும்! இந்நேரத்திற்குத் தகுந்த என்னுடைய சரியான வார்த்தைகளை மூடத்தனத்தாலோ, புத்தி குறைவாலோ நீ கேளாமற்போனால் பிறகு நீ பெரிதும் வருந்த வேண்டியிருக்கும். நான் சொல்வது உண்மையேயாகும். எனவே, இப்போதே {போரில் இருந்து} விலகுவாயாக” என்றார் {பீஷ்மர்}.

கடலுக்குச் செல்வபளின் (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, மன்னர்களுக்கு மத்தியில் இருந்த துரியோதனனிடம் பாசத்தால் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியானார். கணைக்காயங்களால் தன் முக்கிய உறுப்புகள் எரிந்து கொண்டிருந்தாலும், தன் வேதனைகளை அடக்கிக் கொண்ட அவர் {பீஷ்மர்}, தன்னை யோகத்தில் ஆழ்த்தினார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நன்மையான அமைதிநிறைந்த வார்த்தைகளை உமது மகன் {துரியோதனன்} கேட்டாலும், சாகும் மனிதன் மருந்தை மறுப்பதைப் போல அவற்றை ஏற்றானில்லை” {என்றான் சஞ்சயன்}. 

கர்ணனை அனுமதித்த பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 124-பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].

இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் முதிர்ந்த தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.

ஓ! மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.

பூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ! தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.

வில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய்! ஓ! கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.

உனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ! சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடையளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ! கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ! கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.

நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}” {என்றார் வைசம்பாயனர்}.

பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று

பீஷ்ம பர்வம் முற்றிற்று

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading