ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-(விஸ்வோபாக்யானம் )-ஐந்தாம் நாள் போர்-

திருதராஷ்டிரனின் கேள்வி! – பீஷ்ம பர்வம் பகுதி – 065அ-தொடர்ந்து பாண்டவர்கள் வெல்வதற்கும், தன் மகன்கள் தோற்பதற்கும் உண்மையான காரணம் என்ன என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; காரணங்களைச் சொல்லும் சஞ்சயன்; அதே கேள்வியைப் பீஷ்மரிடம் கேட்கும் துரியோதனன்; பீஷ்மரின் அறிவுரை….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தேவர்களும் அடைய முடியாதவையான பாண்டு மகன்களின் இந்த அருஞ்செயல்களைக் கேட்டு, ஓ! சஞ்சயா, எனது இதயம் அச்சத்தாலும், வியப்பாலும் நிறைகிறது. அனைத்து வகையிலும் என் மகன்கள் பட்ட அவமானத்தைக் கேட்டு, அவற்றைத் தொடர்ந்து வரப்போகும் விளைவைக் குறித்த கவலை எனக்கு அதிகமாகிறது. விதுரன் உதிர்த்த வார்த்தைகள் என் இதயத்தை எரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நடந்தது அனைத்தும் விதியால் நடந்ததாகவே தெரிகிறது.

பாண்டவப் படையின் போராளிகள், பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டவர்களும், சிறப்பானவர்களும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான வீரர்களுடன் {கௌரவப் படையுடன்} மோதி அவர்ளைத் தாக்குகின்றார்களே. ஓ! மகனே {சஞ்சயா}, உயர் ஆன்மா கொண்டவர்களான பாண்டுவின் வலிமைமிக்க மகன்களால் என்ன ஆன்ம நோன்புகள் நோற்கப்பட்டன? என்ன வரத்தை அவர்கள் அடைந்தார்கள்? அல்லது, எந்த அறிவியலை அறிந்ததன் விளைவாக அவர்கள் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் அழிவடையால் இருக்கின்றனர்? பாண்டவர்களால் எனது படை தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகக் கடுமையான தெய்வீகத் தண்டனை என் மீது மட்டுமே விழுகிறதே.

பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} கொல்லப்படாதவர்களாகவும், எனது மகன்கள் {கௌரவர்கள்} கொல்லத்தக்கவர்களாகவும் இருப்பது ஏன் என்பது குறித்த உண்மைகள் அனைத்தையும் எனக்கு முழுமையாகச் சொல்வாயாக. இந்தத் துயரின் (துயரக்கடலின்) மறுகரையை நான் காணவில்லை. ஆழமான பரந்த கடலைத் தன் இரு கரங்களை மட்டுமே கொண்டு கடக்க விரும்பும் மனிதனைப் போல நான் இருக்கிறேன்.

என் மகன்களைப் பேரிடர் ஒன்று பீடித்திருக்கிறது என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். என் மகன்கள் அனைவரையும் பீமன் கொல்வான் என்பதில் ஐயமில்லை. போரில் என் மகன்களைக் காக்கக்கூடிய ஒரு வீரனை என்னால் காண இயலவில்லை. ஓ! சஞ்சயா, இந்தப் போரில் என் மகன்கள் இறக்கப்போவது உறுதி. எனவே, ஓ! சூதா {சஞ்சயா}, உன்னைக் கேட்கும் எனக்கு, அனைத்தின் உண்மைக் காரணங்களையும் சொல்வதே உனக்குத் தகும்.

தனது துருப்புகள் புறம்காட்டி ஓடுவதைக் கண்டு துரியோதனன் என்ன செய்தான்? முதிர்ந்த பீஷ்மர், துரோணர், கிருபர், சுபலனின் மகன் {சகுனி}, ஜெயத்ரதன், வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பெரும் பலம் கொண்ட விகர்ணன் ஆகியோர் என்ன செய்தனர்? ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே {சஞ்சயா}, போரில் எனது மகன்கள் புறமுதுக்கிட்ட போது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் என்ன தீர்மானித்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேளும். கேட்ட பிறகு, அவற்றை உமது இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும். (இஃது) எந்த மந்திரத்தின் விளைவும் இல்லை. எவ்வகை மாயையின் விளைவும் இல்லை. பாண்டுவின் மகன்கள் புதிதாக எந்தப் பயங்கரத்தையும் {அச்சத்தையும்} ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலிமையுடன் இருக்கிறார்கள்; இந்தப் போரில் அவர்கள் நியாயமான வழிகளிலேயே போரிடுகின்றனர்.

உயர்ந்த புகழை விரும்பும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதையும் {உயிர்வாழ்வதற்குத் தேவையான செயல்களையும்} சேர்த்து, அனைத்துச் செயல்களையும் அறநெறிகளுக்கு ஏற்ற வழியிலேயே செய்கின்றனர். அனைத்து வகையான செழிப்பையும், பெரும் பலத்தையும் கொண்டிருக்கும் அவர்கள், நேர்மையில் தங்கள் கண்களை வைத்துக் கொண்டே, போரில் இருந்து விலகாமல் இருக்கிறார்கள்.

எங்கே நேர்மை இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கிறது. இதனாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} போரில் கொல்லப்பட முடியாதவர்களாகவும், எப்போதும் வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள்.

தீய ஆன்மா கொண்ட உமது மகன்களோ, பாவங்களுக்கு அடிமையாக {தீய எண்ணங்களுடன்} இருக்கிறார்கள். கொடுமையான, இழிந்த செயல்களையே அவர்கள் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் போரில் பலவீனப்படுகிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெறுக்கத்தக்க மனிதர்களைப் போல, உமது மகன்கள் பல கொடுமைகளையும், வஞ்சகச் செயல்களையும் பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்குச்} செய்தார்கள்.

எனினும், ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குற்றங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்செயல்களை எப்போதும் {உலகத்தின் கண்ணிலிருந்து} மறைத்தே வந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோ எண்ணற்ற நேரங்களில் பாண்டவர்களை அவமதித்தனர்.

அந்தப் பாவ வழியின் தொடர்ச்சியாக, இப்போது, நஞ்சைப் போன்ற கொடூரக் கனியை [1] {பலனை} அவர்கள் {கௌரவர்கள்} அறுவடை செய்யட்டும். உமது நலன்விரும்பிகள் ஆலோசனை கூறியும், விழிப்படையாத நீரும், உமது மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடி அந்தக் கனியை புசிக்க வேண்டும்.(மூலத்தில் இங்கே குறிப்பிடப்படுவது “சுரைக்காய் இனத்தைச் சேர்ந்த ‘Kimpaca’ கிம்பகம் என்ற கனி ஆகும்”)

விதுரர், பீஷ்மர், உயர் ஆன்ம துரோணர் ஆகியோராலும், என்னாலும் தொடர்ந்து தடுக்கப்பட்டும், நீர் புரிந்து கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்படும் மருந்தை மறுக்கும் நோயாளியைப் போல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும், உமது நன்மைக்கானதுமான எங்கள் வார்த்தைகளை நீர் மறுத்தீர். உமது மகன்களின் கருத்துக்களை ஏற்ற நீர், பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டதாகவே கருதினீர்.

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டபடியே, பாண்டவர்களின் வெற்றிக்கான உண்மையான காரணத்தை மேலும் கேளும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் கேள்விப்பட்டதை உமக்குச் சொல்கிறேன். இதே கேள்வியைத்தான் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} துரியோதனனும் கேட்டான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான தனது தம்பிகள் போரில் வீழ்த்தப்பட்டதால், ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, துயரில் இதயம் மயங்கிய உமது மகன் துரியோதனன், பெரும் அறிவுபடைத்த பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, இரவில் பணிவுடன் சென்று, அவரிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் என்னிடம் கேட்பீராக.

துரியோதனன் {பீஷ்மரிடம்}, “துரோணர், {பீஷ்மராகிய} நீர், சல்லியன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், பூரிஸ்ரவஸ், விகர்ணன், பெரும் ஆற்றல் படைத்த பகதத்தன் ஆகியோர் அனைவரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களாகக் {மகாரதர்களாகக்} கருதப்படுகிறீர்கள். மேலும் இவர்கள் அனைவரும் உயர்ந்த பிறப்பைக் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருப்பவர்களுமாவர். (ஒன்று சேர்ந்திருக்கும்) மூன்று உலகங்களுக்கும் இணையானவர்கள் இவர்கள் என்பது எனது கருத்து. பாண்டவப் படையின் (ஒன்றிணைந்த) வீரர்கள் அனைவராலும் உங்கள் ஆற்றலைத் தாங்க முடியாது. என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கிறது. கேட்கும் எனக்கு அதை விளக்குவீராக. யாரால் இந்தப் பாண்டவர்கள் நம்மைத் தொடர்ந்து வீழ்த்துகிறார்கள்?” என்று கேட்டான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, நான் சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் கேட்பாயாக. இந்த விளைவுதான் அடிக்கடி என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படட்டும். ஓ! தலைவா {துரியோதனா}, உனக்கும், இந்த உலகத்துக்கும் இது நன்மையைப் பயக்கும் என்று நான் கருதுகிறேன். உனது நலன்விரும்பிகள் அனைவரையும் மனம் நிறையச் செய்யும்படியும், உனது சொந்தங்களுக்கு மகிழ்வூட்டும்படியும், ஓ! மன்னா {துரியோதனா}, உன் சகோதரர்களுடன் சேர்ந்து இந்தப் பூமியை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இதுகுறித்து என் தொண்டை வற்ற இதற்கு முன் நான் கதறினாலும், ஓ! ஐயா {துரியோதனா}, நீ எனக்குச் செவிமடுக்கவில்லை. பாண்டுவின் மகன்களை நீ எப்போதும் அவமதித்தே வந்திருக்கிறாய். அவற்றின் விளைவுகள் தான் இப்போது உன்னை அடைகின்றன.

ஓ! மன்னா {துரியோதனா}, சாதனைகளால் களைப்படையாதவர்களாகவும், கொல்லப்பட முடியாதவர்களாகவும் ஏன் பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை, ஓ! தலைவா {துரியோதனா}, நான் சொல்லும்போதே கேட்பயாக. சாரங்கபாணியால் {கிருஷ்ணனால்} காக்கப்படும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் வீழ்த்த வல்லவர்களோ, வீழ்த்துபவர்களோ இவ்வுலகில் யாரும் இல்லை, {இதற்கு முன்} இருந்ததுமில்லை, {இனிமேல்} இருக்கவும் முடியாது. ஓ! அறநெறிகளை அறிந்தவனே {துரியோதனா}, ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்ட முனிவர்களால் சொல்லப்பட்ட பழமையான வரலாற்றை உள்ளபடியே கேட்பாயாக” {என்றார் பீஷ்மர்}.

பிரம்மன் சொன்ன நாராயணத் துதி! – பீஷ்ம பர்வம் பகுதி – 065ஆ-பழங்காலத்தில் கந்தமாதன மலைகளில் நடந்த கதையொன்றை பீஷ்மர் துரியோதனனுக்குச் சொல்வது; தேவர்களும், முனிவர்களும், பிரம்மனும் கந்தமாதனத்தில் கூடியிருக்கையில் அவர்களுக்கு நாராயணன் காட்சியளித்தது; பிரம்மன் சொன்ன நாராயணத் துதி; பூமியில் பிறப்பெடுக்குமாறு பிரம்மன் நாராயணனை வேண்டுவது…

{பீஷ்மர் துரியோதனிடம் தொடர்ந்தார்}, “பழங்காலத்தில், கந்தமாதன மலைகளில், தேவர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும்பாட்டனுக்காக {பிரம்மனுக்காக} மரியாதையுடன் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}. அவர்களுக்கு மத்தியில் சுகமாக வீற்றிருந்த அனைத்துயிர்களின் தலைவன் {பிரம்மன்}, சுடர்மிகும் பிரகாசத்துடன் ஆகாயத்தில் நின்றிருந்த ஓர் அற்புதமான தேரை {விமானத்தைக்} கண்டான். தியானத்தால் (அது குறித்த அனைத்தையும்) உறுதி செய்து கொண்ட பிரம்மன், ஒடுங்கிய இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மகிழ்ச்சிகரமான ஆன்மாவுடனும், அந்த உயர்ந்த தெய்வத்திற்குத் {நாராயணனுக்குத்} தனது வணக்கங்களைச் செய்தான். (இப்படி அந்த வடிவத்தை) ஆகாயத்தில் கண்ட முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும், அந்த அற்புதங்களின் அற்புதம் மீது நிலைத்த கண்களுடனும், கூப்பிய கரங்களுடன் எழுந்து நின்றனர்.

பிரம்மத்தை அறிந்த அனைவரிலும் முதன்மையானவனும், அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அறத்தை அறிந்தவனுமான பிரம்மன், அவனை {நாராயணனை} முறையாக வழிபட்டு, {பின்வரும்} இந்த உயர்வான வார்த்தைகளைச் சொன்னான். அவன் {பிரம்மன்}, “ஏற்றிருக்கும் அண்ட வடிவத்தினால் மகிமையானவன் {விஸ்வாவசு} நீயே, அண்டத்தின் தலைவன் {விஸ்வேதேவன்} நீயே. ஓ! முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ! அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ! ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவனே {ஜிதேந்திரனே}, அண்டத்தின் தலைமை உரிமையாளன் {விஸ்வேஸ்வரன்} நீயே. வாசுதேவன் நீயே. எனவே, உயர்ந்த தெய்வீகத்திற்கும், யோகத்திற்கும் ஆன்மாவான {தேவனும், யோகஸ்வரூபியுமான} உன்னை நான் சரணடைந்தேன்.

அண்டத்தின் தலைமை தெய்வமான உனக்கு வெற்றி {ஜெயம்}. உலகங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் உனக்கு வெற்றி. யோகத்தின் தலைவனான {யோகீஸ்வரனான} உனக்கு வெற்றி. அனைத்து சக்திகளும் வாய்ந்தவனான உனக்கு வெற்றி. யோகத்திற்கும் முன்பும் பின்பும் ஆனவனான {யோகஸ்வரூபனான} உனக்கு வெற்றி. நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, அகன்ற கண்களை உடையவனே, அண்டத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனான {பரமேஸ்வரனான} உனக்கு வெற்றி.

ஓ! கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் தலைவா, மென்பண்பின் வடிவமான {embodiment of gentleness} உனக்கு வெற்றி. சூரியர்களின் சூரியனே, ஓ! சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தை உருவமாகக் கொண்டவனே, ஓ! எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ! பெரும்பாம்பே {ஆதிசேஷஸ்வரூபனே}, ஓ! பெரும் பன்றியே {வராகனே}, ஓ! காரணமுதல்வனே, ஓ! பழுப்புச் சடை கொண்டவனே {ஹரிகேசனே}, எல்லாம் வல்லவனான {விபுவான} உனக்கு வெற்றி.

ஓ! மஞ்சளாடை கொண்டவனே {பீதாம்பரதாரியே}, ஓ! திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ! அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ! சிதைவற்றவனே, ஓ! தோற்றம் கொண்டவனே, ஓ! தோற்றம் இல்லாதவனே, ஓ! அளவிலா இடம் {அமிதமானஸ்தானங்களைக்} கொண்டவனே, ஓ! புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ! எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ! அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ! விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ! முடிவற்றவனே, ஓ! பிரம்மமாக அறியப்படுபவனே, ஓ! நித்தியமானவனே, ஓ! உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனே, ஓ! எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ! அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ! அறநெறி அறிந்தவனே, ஓ! வெற்றியைத் தருபவனே, ஓ! புதிரே உருவமானவனே, ஓ! யோகமனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே {சர்வயோகேஸ்வரூபனே}, ஓ! இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ! உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ! உலகங்களின் தலைவா, உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனான உனக்கு வெற்றி.

ஓ! தன்னையே தோற்றமாகக் கொண்டவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே {மகாபாக்யனே}, ஓ! அனைத்தையும் அழிப்பவனே, ஓ! மன எண்ணங்கள் அனைத்தையும் ஊக்குவிப்பவனே, பிரம்மத்தை அறிந்தவர் அனைவரிலும் அன்பானவனான உனக்கு வெற்றி. ஓ! படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ! விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ! உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ! அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ! அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ! யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ! வெற்றியைக் கொடுப்பவனே, ஓ! அனைத்து உயிர்களின் தலைவனுடைய {பிரம்மனின்} தெய்வீகத் தலைவனே, ஓ! நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, ஓ! தன்னிலே எழுந்தவனே {சத்ஸ்வரூபனே}, ஓ! பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ! (அறச்} சடங்குகள் அனைத்தின் ஆன்மாவே, அனைத்தையும் கொடுப்பவனான உனக்கு வெற்றி.

பூமாதேவி உன் இரண்டு பாதங்களைப் பிரதிபலிக்கிறாள், திசைகள் மற்றும் துணை திசைகள் உனது கரங்களையும், ஆகாயம் உனது தலையையும் பிரதிபலிக்கின்றன. உன் வடிவமாக நான் இருக்கிறேன். தேவர்கள் உனது உறுப்புகள் {உடல்}, சூரியனும், சந்திரனும் உன்னிரு கண்கள். ஆன்மத் தவங்களும், அறத்தில் பிறந்த உண்மையும், (அறச்) சடங்குகளும் உனது பலம். நெருப்பே {அக்னியே} உனது சக்தி, காற்றே உனது மூச்சு, உன் வேர்வையில் இருந்து உதித்ததே நீர். அசுவினி இரட்டையர்கள் உனது காதுகள், சரஸ்வதி தேவி உனது நாக்கு. வேதங்களே உனது அறிவு, இந்த அண்டமே உன்னில்தான் நிலைநிற்கிறது.

ஓ! யோகம் மற்றும் யோகியரின் தலைவா, உனது எல்லை, அளவு, சக்தி, ஆற்றல், பலம், தோற்றம் ஆகியவற்றை நாம் அறியோம். ஓ! தெய்வமே, ஓ! விஷ்ணுவே, உன்னிடம் அர்ப்பணிப்பில் நிறைந்து, உன்னையே நம்பி நோன்புகள் மற்றும் தவங்களால் {நியமங்களால்} எப்போதும் உன்னையே உயர்ந்த தலைவனாகவும், தேவர்களின் தேவனாகவும் வணங்குகிறோம்.

முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், பிசாசங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய இவை அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது உனது கருணையே. ஓ! நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ! அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! துன்பங்கள் அனைத்தையும் விலக்குபவனே, உயிரினங்கள் அனைத்தின் புகலிடம் நீயே, அவற்றின் வழிகாட்டியும் நீயே, அண்டத்தைத் தன் வாயாகக் கொண்டவன் நீயே, ஓ! தேவர்களின் தலைவா {தேவேசனே}, தேவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பது உனது கருணையே. பயங்கரங்களில் இருந்து பூமி எப்போதும் விடுபட்டிருப்பது உனது கருணையே.

எனவே, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, யது குலத்தில் நீ பிறப்பாயாக. அறத்தை நிலைநாட்டவும், திதியின் மகன்களைக் {தைத்தியர்களைக்} கொல்லவும், அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், ஓ! தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ! வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ! தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ! கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ! தலைவா, மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாயாக.

உலகங்கள் அனைத்தின் மகிழ்ச்சிக்காக அசுரர்களைக் கொன்று, அறத்தை நிறுவி, புகழை வென்று, மீண்டும் நீ யோகத்தை அடைவாயாக. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், பூமியில் உள்ள மறுபிறப்பாள முனிவர்களும், தேவர்களும், உனக்குச் சொந்தமான பெயர்களால் அற்புதனான உன்னைப் பாடுகிறார்கள். ஓ! அற்புதக் கரங்களைக் கொண்டவனே, அனைத்து வகை உயிரினங்களும், வரங்களை அளிப்பவனான உன்னையே புகலிடமாகக் கொண்டு, உன்னிலேயே வசிக்கின்றன. உலகங்களின் பாலமானவனாகவும், முதல், இடை, கடை ஆகியவை அற்றவனாகவும், அளவிலா யோகம்படைத்தவனாகவும்  மறுபிறப்பாளர்கள் உன்னைப் பாடுகின்றனர்” என்றான் {பிரம்மன்}” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணன் மனிதனா?” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 066-பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு; வந்தது யார் என்று பிரம்மனிடம் தேவர்கள் கேள்வி; கிருஷ்ணனின் பெருமைகளைச் சொல்லும் பிரம்மன்; கிருஷ்ணனின் பெருமைகளைத் துரியோதனனுக்குச் சொல்லும் பீஷ்மர்…

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “அப்போது, உலகங்களின் தலைவனான அந்த ஒப்பற்ற தேவன் {நாராயணன்} மென்மையான மற்றும் ஆழமான குரலில், “யோகத்தின் மூலம், ஓ! ஐயா {பிரம்மனே}, உன்னால் விரும்பப்படும் அனைத்தும் என்னால் அறியப்பட்டது. நீ விரும்பியது போலவே நடக்கும்” என்று சொல்லி அங்கேயே மறைந்து போனான்.

பிறகு, பெரும் வியப்பால் நிறைந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் பிரம்மனிடம் ஆவலுடன், “ஓ! தலைவா {பிரம்மரே}, ஒப்பற்றவரான உம்மால் பணிவுடன் வணங்கப்பட்டவனும், இத்தகு உயர்ந்த வார்த்தைகளால் புகழப்பட்டவனுமான அவன் யார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} தேவர்கள், மறுபிறப்பாள முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளால் மறுமொழியாக, “தத் என்று அழைக்கப்படுபவன் எவனோ, உயர்ந்தவன் எவனோ, இப்போதும், எப்போதும் இருப்பவன் எவனோ, பரமாத்மா எவனோ, உயிரினங்களின் ஆன்மா எவனோ, பெருந்தலைவன் எவனோ, தேவர்களில் காளைகளே, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவனான அவனிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். அண்டத்தின் நன்மைக்காக, மனித குலத்தின் மத்தியில், வசுதேவன் குடும்பத்தில் பிறப்பெடுக்கும்படி, அந்த அண்டத்தின் தலைவன் {நாராயணன்} என்னால் வேண்டப்பட்டான்.

நான் அவனிடம் {பிரம்மனாகிய நான் நாராயணனிடம்}, “அசுரர்களின் படுகொலைக்காக மனிதர்களின் உலகில் உன் பிறப்பை எடுப்பாயாக” என்றேன். போரில் கொல்லப்பட்டவர்களும், கொடுமையான வடிவமும், பெரும் பலமும் கொண்டவர்களுமான அந்தத் தைத்தியர்களும், ராட்சசர்களும் மனிதர்களுக்கு மத்தியில் பிறந்திருக்கிறார்கள். உண்மையில், ஒப்பற்றவனும், வலிமைமிக்கவனுமான தலைவன் {நாராயணன்}, மனிதக் கருவறையில் பிறந்து, நரனின் துணையுடன் பூமியில் வாழ்வான். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் போரிட்டாலும் கூட, புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான அந்த நரனையும், நாராயணனையும் வீழ்த்த இயலாது.

அளவிலா பிரகாசம் கொண்ட முனிவர்களான அந்த நரனும், நாராயணனும் மனிதர்களின் உலகில் ஒன்றாகப் பிறப்பெடுக்கும்போது மூடர்கள் அவர்களை அறியமாட்டார்கள். எவனுடைய ஆன்மாவில் இருந்து, முழு அண்டத்தின் தலைவனும், பிரம்மனுமான நான் உதித்தேனோ, உலகங்கள் அனைத்தின் தலைமை தெய்வமான அந்த வாசுதேவன், உங்கள் துதிகளுக்குத் தகுந்தவனாவான். தேவர்களில் சிறந்தவர்களே, பெரும் சக்தி கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனுமான அவன், வெறும் மனிதன் என்று எப்போதும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.

தலைமையான புதிர் {பரமரகசியம்} அவனே, தலைமையான புகலிடம் அவனே, தலைமையான பிரம்மம் அவனே, தலைமையான மகிமை அவனே. சிதைவில்லாதவன், தோற்றமில்லாதவன், நித்தியமானவனும் அவனே. யாராலும் புரிந்துகொள்ளப்பட முடியாத அவனே, புருஷன் என்றும் பாடப்படுகிறான். தலைமையான சக்தி என்றும், தலைமையான மகிழ்நிலை என்றும் தேவ தச்சன் {விஸ்வகர்மா} அவனைப் பாடியிருக்கிறான்.

எனவே, இந்திரனைத் தங்கள் தலைமையாகக் கொண்ட தேவர்களோ, அசுரர்கள் அனைவருமோ, அளவிலா ஆற்றல் படைத்த தலைவன் வாசுதேவனை, அவன் ஒரு மனிதன்தானே என ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. வெறும் மனிதன்தானே ரிஷிகேசன் என்று பேசி அலட்சியம் செய்யும் மூட அறிவு கொண்டவன் இழிந்தவன் என்று அழைக்கப்படுவான்.

அந்தத் தெய்வீகமானவனை, படைக்கப்பட்டவையான அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆன்மாவானவனை, (தன் மார்பில்) மங்கலகரமான சக்கரத்தைத் {ஸ்ரீவத்சம் என்ற மறுவைத்} தாங்கியிருப்பவனை, திகைப்பூட்டும் பிரகாசம் கொண்டவனை, தன் நாபியில் (பழங்காலத்} தாமரை உதித்தவனைக் குறித்து அறியாத ஒருவன் மக்களால் இருளில் மூழ்கியவன் {தமோ குணம் கொண்டவன்} என்று சொல்லப்படுகிறான். கிரீடத்தையும், கௌஸ்துப ரத்தினத்தையும் தரித்தவனும், தன் நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அவனை அவமதிப்பவன் அடர்த்தியான இருளில் {கோரமான அந்தகாரத்தில்} மூழ்குகிறான். தேவர்களில் சிறந்தவர்களே, இந்த உண்மைகள் அனைத்தையும் முறையாக அறிந்த அனைவராலும், உலகங்களின் தலைவனான அந்த வாசுதேவன் துதிக்கப்பட வேண்டும்” என்றான் {பிரம்மன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “பழங்காலத்தில், தேவர்களிடமும், முனிவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்ன ஒப்பற்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பித் தன் வசிப்பிடம் திரும்பினார். பிரம்மனால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரசுகள் ஆகியோர் மகிழ்ச்சியால் நிறைந்து சொர்க்கத்திற்குத் திரும்பினார்கள்.

ஓ! ஐயா {துரியோதனா}, பண்பட்ட ஆன்மா கொண்ட, முனிவர்களின் சபையில் பழமையானவனான வாசுதேவனைக் குறித்த இவை என்னால் கேட்கப்பட்டன. மேலும், ஓ! சாத்திரங்களை நன்கறிந்தவனே {துரியோதனா}, ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமர்}, பெரும் அறிவு கொண்ட மார்க்கண்டேயர், வியாசர் மற்றும் நாரதர் ஆகியோரிடம் இருந்தும் நான் இதைக் கேட்டிருக்கிறேன்.

இவை யாவற்றையும் அறிந்தும், ஒப்பற்ற வாசுதேவனே நித்தியமான தலைவன் என்றும், உலகங்கள் அனைத்தின் தலைமையான தெய்வம் என்றும், பெரும் உரிமையாளன் என்றும், எவனில் இருந்து பிரம்மன் உதித்தானோ அவனே என்றும், அண்டத்தின் தகப்பன் என்றும் கேட்டும், மனிதர்களால் வாசுதேவன் ஏன் துதிக்கப்படவும், வழிபடப்படவும் கூடாது? ஓ! ஐயா {துரியோதனா}, “வில்தரித்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டவர்களிடமும் ஒருபோதும் போருக்குச் செல்லாதே” என்று பண்பட்ட ஆன்மாக்களை உடைய முனிவர்களால் முன்பே தடுக்கப்பட்டும், மடமையினால் அஃது உன்னால் புரிந்து கொள்ளப்படவில்லை.

எனவே, நான் உன்னைக் கொடிய ராட்சசன் என்றே கருதுகிறேன். இதுதவிரவும், இருளில் {தமோ குணத்தில்} நீ மூழ்கியிருக்கிறாய். இதனால் தான் நீ கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வெறுக்கிறாய். மனிதர்களின் மத்தியில் வேறு யார்தான் தெய்வீகமான நரனையும், நாராயணனையும் வெறுப்பார்கள்? இதனால் தான், ஓ! மன்னா {துரியோதனா}, அவன் {கிருஷ்ணன்} நித்தியமானவன் என்றும், மங்காதவன் என்றும், அண்டம் முழுவதும் படர்ந்தூடுருவி இருப்பவன் என்றும், மாற்றமில்லாதவன் என்றும், ஆட்சியாளன் என்றும், அனைத்தையும் படைத்துத் தாங்குபவன் {காப்பவன்} என்றும், உண்மையான இருப்பு என்றும் நான் உனக்குச் சொல்கிறேன்.

மூன்று உலகங்களையும் தாங்குபவன் அவனே, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைமைத் தேவன் அவனே, பெரும் உரிமையாளன் அவனே, போராளி அவனே, வெற்றி அவனே, வெல்பவனும் அவனே, மேலும் இயற்கை அனைத்தின் தலைவனும் அவனே. ஓ! மன்னா {துரியோதனா}, நற்குணம் {சத்வ குணம்} நிறைந்தவனும், மேலும், இருள் {தமோ} மற்றும் பேராசையின் {ராஜச} குணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டவனும் அவனே.

கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அங்கே அறம் {தர்மம்} இருக்கும்; அறம் எங்கிருக்குமோ அங்கே வெற்றியிருக்கும். அவனது {கிருஷ்ணனுடைய} யோக மகிமையாலும், அவனது ஆன்ம யோகத்தாலுமே, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் ஆதரிக்கப்படுகின்றனர். எனவே, வெற்றி என்பது, நிச்சயம் அவர்களுடையதே. நீதியுடன் கூடிய அறிவையும், போரில் பலத்தையும் பாண்டவர்களுக்கு எப்போதும் அளிப்பவன் அவனே {கிருஷ்ணனே}; மேலும், ஆபத்துகளில் இருந்து எப்போதும் அவர்களைப் பாதுகாப்பவனும் அவனே {கிருஷ்ணனே}.

அனைத்துயிர்களில் ஊடுருவியிருப்பவனும், அருளுடன் எப்போதும் இருப்பவனுமான அவனே நித்திய தேவனாவான். நீ எவனைக் குறித்துக் கேட்டாயோ, அவன், வாசுதேவன் {கிருஷ்ணன்} என்ற பெயரால் அறியப்படுகிறான். தங்களுக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும், தங்கள் தனிப்பட்ட கடமைகளை ஆற்றி, ஒடுங்கிய இதயங்களுடனும் பணிவுடனும் அவனையே சேவித்து வழிபடுகிறார்கள். துவாபர யுக முடிவின் நெருக்கத்திலும், கலி யுகத் தொடக்கத்திலும் அர்ப்பணிப்புள்ள பக்தர்களால் சங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்த்துப் பாடப்படுபவன் அவனே. யுகத்துக்குப் பின் யுகத்தையும், தேவர்கள் மற்றும் மனிதர்களின் உலகங்களையும், கடலால் சூழப்பட்ட நகரங்கள் மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் படைத்தவன் வாசுதேவனே {கிருஷ்ணனே}” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணனே பரம்பொருள்!” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 067-துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்…

துரியோதனன் {பீஷ்மரிடம்}, “அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ! பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.

நீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.

தன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அனைத்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.

அறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.

அனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ! ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்-பெரும் பன்றி {வராகம்} அவனே. பெரும் சிங்கம் {நரசிம்மம்} அவனே. மூன்று அடி தலைவன் {குள்ளன் –வாமனன்} அவனே. அனைத்து உயிர்களின் தாயும் தந்தையும் அவனே-தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவனுக்கு மேலானவன் எவனும் இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டான்.

ஓ! மன்னா {துரியோதனா}, தன் வாயிலிருந்து பிராமணர்களைப் படைத்தவன் அவனே; தன் இரு கைகளில் இருந்து க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளிலிருந்து,  வைசியர்களையும் படைத்தவன் அவனே. தன் கால்களில் இருந்து சூத்திரர்களைப் படைத்தவனும் அவனே.

கடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ! மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்(தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.)எவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.

ஓ! பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்” {என்றார் பீஷ்மர்}.

“கிருஷ்ணனிடம் அன்பு கொள்!” பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 068-முனிவர்கள் செய்த கிருஷ்ணத்துதி; கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களான பாண்டவர்களுடன் சமாதானத்துடன் இருக்கும்படி துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர்…

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, பிரம்மனாலேயே உச்சரிக்கப்பட்ட இந்தப் பாடலை என்னிடம் கேட்பாயாக. பழங்காலத்தில், இந்தப் பாடல், மறுபிறப்பாள முனிவர்களாலும், தேவர்களாலும் பூமியில் (மனிதர்களுக்குச்) சொல்லப்பட்டதாகும். {அது பின்வருமாறு}…

“தேவர்களின் தேவன் {இந்திரன்}, சாத்யர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் தலைவன் என்றும், உரிமையாளன் {ஈஸ்வரன்} என்றும், உலகங்களைப் படைத்தவனின் இயல்பை அறிந்தவரான நாரதர் உன்னை விளக்குகிறார். கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் {முன்பும், இப்போதும், எப்போதும் இருப்பவன்} என்றும், வேள்விகளின் வேள்வி என்றும், தவங்களின் தவம் என்றும் மார்க்கண்டேயர் உன்னைச் சொல்கிறார். தேவர்களின் தேவன் என்றும், உனது வடிவமே விஷ்ணுவின் புராதன {ஆதி [அ] பழங்கால} வடிவம் என்றும் ஒப்பற்ற பிருகு சொல்கிறார். சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனையும், அனைத்து உயிர்களையும் நிலைநிறுத்துபவன் வசுக்களின் வாசுதேவனே என்று துவைபாயனர் {வியாசர்} சொல்கிறார்.

பழங்காலத்தில் உயிரினங்களைப் படைக்கும் நிகழ்வின் போது, படைப்பின் தந்தை தக்ஷன் என்று முனிவர்கள் உன்னைச் சொன்னார்கள். அனைத்து உயிரினங்களையும் படைப்பவன் நீயே என்று அங்கிரஸ் சொல்கிறார். வடிவமில்லா அனைத்தும் உன் உடல் என்றும், வடிவம் படைத்தவை உன் மனம் என்றும், உனது சுவாசத்தின் விளைவே தேவர்கள் அனைவரும் என்றும் தேவலர் சொல்கிறார். ஆகாயம் உனது தலைகளால் படர்ந்திருக்கிறது, உனது கரங்களோ பூமியைத் தாங்குகின்றன. உனது வயிற்றிலே மூன்று உலகங்களும் இருக்கின்றன. தவத்தால் மேன்மையுற்ற மனிதர்கள் உன்னை இப்படியே அறிகிறார்கள்.

ஆன்மாவைத் தரிசித்து மனம் நிறைந்த முனிவர்களுடன் சத்-ன் சத்-ஆக [1] இருப்பவன் நீயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, தயாள மனம் கொண்டவர்களும், போரில் புறமுதுகிடாதவர்களும், உயர்வின் எல்லையாக அறநெறியைக் கொண்டவர்களுமான அரச முனிகளின் ஒரே புகலிடமாக இருப்பவன் நீயே.” {பிரம்மனின் துதி இங்கு முடிகிறது}.

சனத்குமாரராலும், யோகத்துடன் கூடிய பிற தவசிகளாலும் அந்த ஒப்பற்ற பரம்பொருளான ஹரி {கிருஷ்ணன்}, இப்படியே துதிக்கப்பட்டு வழிபடப்படுகிறான். ஓ! ஐயா {துரியோதனா}, கேசவனைக் {கிருஷ்ணனைக்} குறித்த உண்மை அனைத்தும், சுருக்கமாகவும், விபரமாகவும் உனக்கு இப்போது சொல்லப்பட்டது. உனது இதயத்தில் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அன்பு கொள்வாயாக” {என்றார் பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்தப் புனிதக் கதையைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனையும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்தப் பாண்டுவின் மகன்களையும் {பாண்டவர்களையும்} உயர்வாகக் கருத ஆரம்பித்தான்.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசிய சந்தனுவின் மகன் பீஷ்மர் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, நீ கேட்டவையும், உயர் ஆன்ம கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் நரனின் மகிமை ஆகியவற்றையும் உள்ளபடியே நீ இப்போது கேட்டாய். நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும்,  மனிதர்கள் மத்தியில் தங்கள் பிறப்பை எடுத்ததின் நோக்கத்தையும் நீ கேட்டாய். அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஏன் வெல்லப்பட முடியாதவர்களாகவும், போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும், ஓ! மன்னா {துரியோதனா}, அந்த வீரர்கள் ஏன் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்குமான காரணமும் உனக்குச் சொல்லப்பட்டது.

ஒப்பற்ற பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்}, கிருஷ்ணன் பெரும் அன்பைக் கொண்டிருக்கிறான். இதற்காகவே நான், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, “பாண்டவர்களிடம் சமாதானமேற்படட்டும்” என்று சொல்கிறேன். உன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, (உன்னைச் சுற்றியுள்ள) வலிமைமிக்க உனது சகோதரர்களுடன் பூமியை நீ அனுபவிப்பாயாக. தெய்வீகமான நரனையும், நாராயணனையும் அவமதித்தால், நிச்சயம் நீ அழிவையே அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது தந்தை {பீஷ்மர்} அமைதியடைந்தார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனுக்கு {துரியோதனனுக்கு} விடைகொடுத்து அனுப்பிய அவர் {பீஷ்மர்}, தனது பாசறைக்குத் திரும்பினார். ஒப்பற்ற பாட்டனை {பீஷ்மரை} வழிபட்ட மன்னனும் {துரியோதனனும்} தனது பாசறைக்குத் திரும்பினான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த இரவை உறக்கத்தில் கழிக்கத் தன்னைத் தனது வெண்படுக்கையில் கிடத்திக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர்த் தொடக்கம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 069-போரின் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் கௌரவர்கள் மகர வியூகத்தையும், பாண்டவர்கள் ஸ்யேன வியூகத்தையும் அமைத்துக் கொண்டு போரைத் துவக்கியது; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; துரோணரைத் தவிர்த்த சிகண்டி; பீஷ்மரைக் காக்க சென்ற துரியோதனன்; அவரைத் தாக்க சென்ற பாண்டவர்கள்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்து, சூரியன் உதித்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு படைகளும் போருக்காக ஒன்றையொன்று அணுகின. ஒன்றையொன்று பார்த்த அந்தப் படைகள், கோபம் தூண்டப்பட்ட மற்றொன்றை நோக்கி அதை வீழ்த்தும் விருப்பத்துடன் ஒன்றுசேர்ந்து சென்றன. உமது தீய கொள்கையின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம் பூண்ட பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க அணிவகுத்தனர்.

பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.

அதைத் தொடர்ந்து நடந்த போரில், (கௌரவர்களின்) அந்த மகர வியூகத்தை அதன் வாய் வழியாக ஊடுருவிச் சென்ற பீமன், பீஷ்மரை அடைந்து அவரைத் தன் கணைகளால் மறைத்தான். அப்போது, பெரும் ஆற்றலைக் கொண்ட பீஷ்மர், போருக்கு அணிவகுத்திருந்த பாண்டவர்களின் வீரர்களைத் தன் வலிமைமிக்க ஆயுதங்களால் அந்தப் பெரும்போரில் குழப்பினார்.

இப்படி (பாண்டவப் படையின்) அந்தப் போராளிகள் குழப்பப்பட்ட போது, விரைந்து வந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தின் முன்னணியில் இருந்த பீஷ்மரை ஓராயிரம் {1000} கணைகளால் துளைத்தான். அம்மோதலில் பீஷ்மரால் ஏவப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலடி கொடுத்த அர்ஜுனன், உற்சாகமிக்கத் தன் தனிப்பட்ட படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட மோதலுக்குத் தயாராக இருந்தான்.

அப்போது, பெருந்தேர் வீரனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் துரியோதனன், பயங்கரமாகக் கொல்லப்படும் தன் துருப்புகளைக் கண்டு, (முந்தைய நாளில்) தன் தம்பிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்து, பரத்வாஜரின் மகனை {துரோணரை} நோக்கி விரைந்து வந்து, அவரிடம், “ஓ! ஆசானே, ஓ! பாவமற்றவரே, எப்போதும் எனது நலத்தை விரும்புபவர் நீரே. உம்மையும், பாட்டனான பீஷ்மரையும் நம்பி போரில் தேவர்களையே வெற்றி கொள்வதில் ஐயமில்லை எனும் போது, சக்தியும் ஆற்றலும் அற்ற பாண்டுவின் மகன்களை வெல்வதில் என்ன இருக்கிறது?

அருளப்பட்டிருப்பீராக, பாண்டவர்கள் கொல்லப்படும் வகையில் செயல்படுவீராக. உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், சாத்யகியின் பார்வைக்கெதிரிலேயே பாண்டவ அணிவகுப்புக்குள் ஊடுருவினார். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரைச்} சாத்யகி தடுத்தான். (அதன் பேரில்), காணப் பயங்கராமன கடுமையான நிகழ்வுகளுடன் கூடிய போர் உண்டானது. இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த வரும், பெரும் ஆற்றல் படைத்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பத்து {10} கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} தோள்ப்பூட்டைத் துளைத்தார்.

கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணரிடம் இருந்து சாத்யகியைக் காக்க விரும்பி (பல கணைகளால்) பரத்வாஜரின் மகனைத் {துரோணரைத்} துளைத்தான்.

துரோணர், பீஷ்மர், சல்லியன் ஆகியோரும் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் பீமசேனனைத் தங்கள் கணைகளால் மறைத்தனர். இதனால் சினம்மூண்ட அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரையும் தங்கள் கூர்முனைக் கணைகாளல் துளைத்தனர்.

பிறகு, அந்தக் கடும்போரில் பெரும் வில்லாளியான சிகண்டி, பாண்டவர்களுக்கு (இப்படி) நேர்ந்ததை நினைத்துக் கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர், துரோணர் ஆகிய அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரையும் எதிர்த்து விரைந்தான். மேகங்களின் முழக்கங்களை ஒத்த நாணொலி கொண்ட தனது வில்லை உறுதியாகப் பிடித்திருந்த அந்த வீரன் {சிகண்டி}, சூரியனையே மறைக்கும்படி தன் கணைகளால் விரைவாகத் தனது எதிராளிகளை மறைத்தான். எனினும் சிகண்டிக்கு முன் வந்த பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனது {சிகண்டியின்}, பெண்பால் தன்மையை நினைவு கூர்ந்து அவனைத் {சிகண்டியைத்} தவிர்த்தார்.

பிறகு உனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அழுத்தத்தில் இருந்து பீஷ்மரைக் காக்க விரும்பி போருக்கு விரைந்தார். எனினும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரை அணுகிய சிகண்டி, யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அவ்வீரரின் {துரோணரின்} மீது கொண்ட அச்சத்தால் அவரைத் தவிர்த்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படையுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, பெரும்புகழை வெல்ல விரும்பி பீஷ்மரைக் காக்கச் சென்றான். வெற்றியில் தங்கள் இதயங்களை உறுதியாக நிலைக்கச் செய்திருந்த பாண்டவர்களும் அங்கே சென்றனர். பிறகு, வெற்றியையும், புகழையும் விரும்பிய அந்த இரு படைகளின் போராளிகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், தானவர்களுக்கு இடையில் நடந்த போரைப் போன்றே, கடுமையானதாகவும், உயர்ந்த அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

கடும்போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 070-கடுமையாகப் போரிட்ட பீஷ்மர்; அங்கங்களாலும், தலைகளாலும், விலங்குகளாலும், ஆயுதங்களாலும் நிரம்பியிருந்த போர்க்களத்தின் வர்ணனை; போர்க்களத்தில் ஓடிய குருதிப் புனல்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால், உமது மகன்களைக் காக்கும் பொருட்டுக் கடுமையாகப் போரிட்டார். கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போர், தீவிர அச்சத்தை உண்டாக்குவதாகவும், பெரிய வீரர்களை அழிப்பதாகவும் இருந்தது.

இவ்வளவு கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருந்த அந்தப் போரில் எழுந்த பேரொலி வானத்தையே தொட்டது. பெரும் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், சங்கொலிகள், பேரிகை ஒலிகள் ஆகியவற்றின் விளைவால் எழுந்த ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது. வெற்றிக்காகப் போரிட்டவர்களும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான வலிமைமிக்கப் போராளிகள், மாட்டுக் கொட்டகையில் {ஒன்றையொன்று நோக்கி} முழங்கும் காளைகளைப் போல ஒருவரை ஒருவர் நோக்கி முழங்கினர்.

அந்தப் போரில், கூர்முனைக் கணைகளால் வெட்டப்பட்டு தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்த தலைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காது குண்டலங்கள், தலைப்பாகைகள், ஒளிரும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற தலைகள் போர்க்களத்தில் கிடந்தன. பல்லங்களால் துண்டாக்கப்பட்ட அங்கங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களாலும் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

கவசம் பூண்ட உடல்களும், ஆபரணங்கள் தரித்த கரங்களும், சிவந்த கடைக்கண்களுடன் நிலவைப் போன்றிருந்த அழகிய முகங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அனைத்து அங்கங்களும், ஒரு கணத்தில், களம் முழுவதும் பரவிக் கிடந்தன. (போர்வீரர்களால் எழுப்பப்பட்ட) புழுதி, அடத்தியான மேகம் போலவும், அழிவுக்கான பிரகாசமான கருவிகள், மின்னலின் கீற்றுகள் போலவும் தெரிந்தன. ஆயுதங்களால் உண்டான ஒலி, இடியின் முழக்கத்தைப் பிரதிபலித்தது.

குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான அந்த ஆயுதங்களின் பாதை {போர்}, அங்கே இரத்த ஆறையே ஓட வைத்தது. பயங்கரமானதும்,, கடுமையானதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், அச்சந்தருவதுமான அந்தப் போரில், வீழ்த்தப்பட இயலாத க்ஷத்திரிய வீரர்கள் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர்.

உமது படையின் யானைகளும், எதிரிகளின் யானைகளும், அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்டு, உரக்க அலறி மூர்க்கத்துடன் இங்கேயும் அங்கேயும் ஓடின. கோபமுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள், அளவற்ற ஆற்றல் படைத்தவர்களான வீரர்களுடைய விற்களின் நாணொலிகள், விரலுறைகளின் மீது நாண்கயிறுகள் தட்டும் ஒலி ஆகியவற்றில் ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரத்தத் தடாகம் போல் காட்சியளித்த களம் முழுவதிலும், தலையில்லா உடல்கள் {முண்டங்கள்} எழுந்து நிற்கவே, மன்னர்கள், தங்கள் எதிரிகளைக் கொல்லும் முனைப்புடன் போருக்கு விரைந்து ஓடினர்.

அளவிலா சக்தி கொண்டவர்களும், கனத்த தடிகளைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளாலும், ஈட்டிகளாலும், கதாயுதங்களாலும், வளைந்த வாள்களாலும் ஒருவரை ஒருவர் கொன்றனர். அங்குசம் மூலம் தங்களை வழிநடத்தும் பாகன்களை இழந்து, கணைகளால் துளைக்கப்பட்ட யானைகளளும், குதிரையோட்டிகள் இல்லாத குதிரைகளும் எல்லாப்புறங்களிலும் மூர்க்கமாக ஓடிக்கொண்டிருந்தன. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த பல வீரர்களும், எதிரிப் படையைச் சேர்ந்த பல வீரர்களும் கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டு எம்பிக் குதித்துக் கீழே விழுந்தனர்.

பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலில், கரங்கள் மற்றும் தலைகளின் குவியல்களும், விற்கள், கதாயுதங்கள், பரிகங்கள், கைகள், தொடைகள், கால்கள், ஆபரணங்கள், கங்கணங்கள் ஆகியவற்றின் குவியல்களும் களமெங்கும் பரவிக் கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாதவையும், பெரும் உடல்படைத்தவையுமான யானைகளின் உடல்களும், குதிரைகளின் உடல்களும், தேர்களும் களம் முழுவதும் அங்கேயும், இங்கேயும் எனப் பரவிக் கிடந்தன.

விதியால் ஏவப்பட்ட க்ஷத்திரிய வீரர்கள், கதாயுதங்கள், வாள்கள், வேல்களும் மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் கொன்றனர். பெரும் வீரம் படைத்தவர்களும், போரில் சாதனை படைத்தவர்களுமான பிறர், இரும்பாலான பரிகங்களைப் {முள் பதித்த தண்டாயுதங்களைப்} போன்ற வெறுங்கரங்களால் ஒருவருடன் மற்றவர் மோதினர். உமது படையின் மற்ற பிற துணிச்சல்மிக்க வீரர்கள், பாண்டவப் படையின் போராளிகளுடன் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மடக்கப்பட்ட கைமுட்டிகளாலும் {முஷ்டிகளாலும்}, கால்முட்டிகளாலும், அறைந்து கொண்டும், குத்திக் கொண்டும் போரில் ஈடுபட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விழுந்த மற்றும் வீழ்ந்து கொண்டிருந்தவர்கள், வேதனையில் தரையில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஆகிய வீரர்களுடன் கூடிய போர்க்களம் முழுவதையும் காணப் பயங்கரமாக இருந்தது. தேர்களை இழந்த தேர்வீரர்கள், அற்புத வாள்களைப் பிடித்துக் கொண்டு, படுகொலையை விரும்பி, ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்தனர்.

கலிங்கர்களின் பெரும்படைப்பிரிவால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், பீஷ்மரைத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாண்டவர்களை நோக்கி விரைந்தான். அதே போல, விருகோதரனை {பீமனை} ஆதரித்தவர்களும், விலங்குக் கூட்டங்களைச் சொந்தமாகக் கொண்டவர்களுமான பாண்டவப் போராளிகளும், கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மரை எதிர்த்து விரைந்தனர்.

பீஷ்மரை நோக்கி விரைந்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 071-பீஷ்மரை எதிர்த்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்ட கௌரவப்படை அஞ்சியது; சகுனியைச் சூழ்ந்த நின்ற கலிங்கனும், ஜெயத்ரதனும்; ஒருவரோடு ஒருவர் மோதிய வீரர்களின் பெயர்கள்; கள நிலவர வர்ணிப்பு; போர்க்களத்தில் குதிரைகள் மற்றும் யானைகளுக்கு நேர்ந்த கதி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மருடன் போரில் ஈடுபடும் தனது சகோதரர்களையும், மற்றும் பிற மன்னர்களையும் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களை உயர்த்தியபடி கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தான். பாஞ்சஜன்யத்தின் {சங்கின்} முழக்கத்தையும், காண்டீவ வில்லின் நாணொலியையும் கேட்டும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கொடிமரத்தைக் கண்டும் எங்கள் இதயங்களில் பெரும் அச்சம் புகுந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாங்கள் கண்ட காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரம், சிங்க வால் பொறியைத் தாங்கி வானத்தில் சுடர்விடும் மலையைப் போலத் தெரிந்தது. அழகும், தெய்வீகக் கைவண்ணமும், பல்வேறு நிறங்களும் கொண்ட அது {கொடி}, மரங்களால் தடை செய்யப்படாதவாறு உதித்தெழுந்த எரிக்கோளைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில், கைப்பிடியின் பின்புறம் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், ஆகாயத்தின் மேகத்திரள்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றைப் போல அழகாகத் தெரிந்ததுமான காண்டீவத்தைப் போர்வீரர்கள் கண்டனர்.

உமது படையின் போராளிகளைக் கொல்லும்போது, அர்ஜுனன் செய்த முழக்கங்கள் இந்திரனின் முழக்கங்களுக்கு நிகரானவையாக இருந்தன. அவனது {அர்ஜுனனின்} உள்ளங்கைகளின் தட்டல்களும் அச்சத்தை ஊட்டும் வகையில் பேரொலியாக இருந்தன. பொங்கியெழும் புயலால் உதவப்பட்ட மின்னல் பொதிந்த மேகத்திரளின் முழக்கத்தைப் போலத் தனது கணை மழையைத் இடைவிடாது பொழிந்த அர்ஜுனன், திசைக்காட்டியின் பத்து புள்ளிகளையும் {பத்து திசைகளையும்} மறைத்தான்.

பயங்கர ஆயுதங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி வேகமாக விரைந்தான். அவனது ஆயுதங்களின் விளைவால் நான்கு புலன்களையும் இழந்த எங்களால் கிழக்கையும், மேற்கையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விலங்குகள் சோர்வடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, இதயங்களும் சோர்வடைந்த உமது போர்வீரர்கள் முழுமையாகக் குழம்பிப் போய் [1], ஒருவரோடு ஒருவர் நெருங்கி, உமது மகன்கள் அனைவருடன் பீஷ்மரின் பாதுகாப்பை நாடினர். அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரே அவர்களைப் பாதுகாப்பவரானார்.

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்து கீழே குதித்தும், குதிரைப்படை வீரர்கள் தங்கள் குதிரைகளின் முதுகில் இருந்து கீழே குதித்தும், காலாட்படை வீரர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயும் என அனைவரும் பூமியில் விழ ஆரம்பித்தனர். இடியின் முழக்கத்தை ஒத்திருந்த காண்டீவத்தின் நாணொலியைக் கேட்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் உருகிப் போவது {பதுங்குவது} போலத் தெரிந்தது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காம்போஜ இனத்தின் வேகமான பெரும் குதிரைகளைக் கொண்டவனும், பெரும் கோபமானப் படையுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான கோபர்களால் சூழப்பட்டவனும், மத்ரர்கள், சௌவீரர்கள், காந்தாரர்கள், திரிகர்த்தர்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டவனுமான கலிங்கர்களின் மன்னனும் {சுருதாயுதனும்} [2], மன்னர்கள் அனைவருடன் கூடியவனும், துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட பல்வேறு இனங்களின் பெரிய படையாலும், முக்கியமான குதிரைவீரர்கள் பதினாலாயிரம் {14000} பேரால் ஆதரிக்கப்பட்டவனுமான மன்னன் ஜெயத்ரதனும், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, (சகுனியை ஆதரிப்பதற்காக) அந்தச் சுபலனின் மகனை {சகுனியைச்} சூழ்ந்து கொண்டனர்.(இம்மன்னன் சுருதாயுதன் )பிறகு, அந்தப் போரில், தனித்தனி தேர்களிலும், விலங்குகளிலும் போரிட்டவர்களான பாண்டவர்கள் [3] அனைவரும் ஒன்று சேர்ந்து, உமது துருப்புகளைப் படுகொலை செய்யத் தொடங்கினர். தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரால் மேகத் திரள் போல எழுப்பப்பட்ட புழுதி, அந்தப் போர்க்களத்தை மிகப் பயங்கரமானதாக்கியது.-யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வேல்கள், நாராசங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களைக் கொண்டதுமான ஒரு பெரும்படையுடன் கூடிய பீஷ்மர், கிரீடம் தரித்தவனுடன் (கிரீடியான அர்ஜுனனுடன்} போரிட்டார் [4].(ஓ! பாரதரே, ஒன்று சேர்ந்திருப்பவர்களான உமது தரப்பினர் அனைவரும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டிருக்கின்ற தேர்களோடும், வாகனங்களோடும் அர்ஜுனனை அடித்தார்கள்.)

அவந்தியின் மன்னன், காசியின் ஆட்சியாளனுடனும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பீமசேனனுடனும் போரிட்டனர்.

தன் மகன்கள் மற்றும் ஆலோசகர்கள் {அமைச்சர்களுடன்} கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மத்ரத்தின் புகழ்மிக்கத் தலைவன் சல்லியனுடன் போரிட்டான்.

விகர்ணன் சகாதேவனுடனும், சித்திரசேனன் சிகண்டியுடனும் போரிட்டனர்.

மத்ஸ்யர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுடனும் சகுனியுடனும் போரிட்டனர்; துருபதன், சேகிதானன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் தன் மகன் {அஸ்வத்தாமன்} துணையுடன் இருந்த உயர் ஆன்மத் துரோணருடன் போரிட்டனர்.

கிருபர், கிருதவர்மன் ஆகிய இருவரும் திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்தார்கள்.

போர்க்களம் முழுவதும் இப்படியே, குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றின் படைகள் விரைந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன.

வானத்தில் மேகங்கள் ஏதும் இல்லையெனினும், மின்னலின் கீற்றுகள் தெரிந்தன. திசைக்காட்டியின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} புழுதியால் மூடப்பட்டன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியொலியுடன் கூடி விழும் கடுமையான விண்கற்களும் காணப்பட்டன. கடுங்காற்று வீசியது, மேலிருந்து புழுதி மழை பொழிந்தது. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் மூடப்பட்ட சூரியன் ஆகாயத்திலிருந்து மறைந்தான். புழுதியால் மறைக்கப்பட்டவர்களும், ஆயுதங்களுடன் போரிட்டவர்களுமான போர்வீரர்கள் அனைவரும் தங்கள் புலன்களை இழந்தனர் {மதிமயக்கம் அடைந்தனர்}.

கவசங்கள் அனைத்தையும் ஊடுருவிச் செல்பவையும், வீரர்களின் கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள் உண்டாக்கிய ஒலி அங்கே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசமிக்கவையும், சிறந்த கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள், வானத்திற்கு ஒளியூட்டின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் புடைக்கப்பட்ட காளைத்தோல்களிலானவையும், பல்வேறு நிறங்களிலானவையுமான கேடயங்கள், களமெங்கும் சிதறிக் கிடந்தன. சூரியப் பிரகாசம் கொண்ட வாள்கள், பட்டாக்கத்திகள் ஆகியவற்றால் வெண்டுண்ட தலைகளும், அங்கங்களும் எல்லாப்புறங்களிலும் விழுந்து கிடந்தன.

சக்கரங்கள், அச்சுக்கட்டைகள், நீடங்கள் [5] ஆகியவை ஒடிக்கப்பட்டும், நெடிய கொடிமரங்கள் வீழ்த்தப்பட்டும், குதிரைகள் கொல்லப்பட்டும், பெரிய தேர்வீரர்கள் தரையில் வீழ்ந்தனர். பல தேர்வீரர்கள் கொல்லப்பட்டவுடன், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், (தாங்கள் பூட்டப்பட்ட) தேர்களை இழுத்துக் கொண்டே ஓடி தரையில் விழுந்தன. களத்தின் பல இடங்களில், கணைகளால் பீடிக்கப்பட்ட அற்புதக் குதிரைகள், தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வார்களுடன் சேர்த்துத் தங்கள் நுகத்தடிகளைத் தங்களுக்குப் பின்னே இழுத்தோடின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேரோட்டிகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய பல தேர்வீரர்கள், பெரும் பலம் பொருந்திய தனி யானைகளால் நசுக்கப்பட்டிருப்பதும் அங்கே காணப்பட்டது. அந்தப் போரில், பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், தங்களை ஒத்த யானைகளின் மதநீரின் மணத்தை நுகர்ந்தபடி, மீண்டும் மீண்டும் காற்றை விட்டுவிட்டு நுகரத் தொடங்கின.(நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட இடமாகும்.)

பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட கணைகளால்} உயிர் பறிக்கப்பட்டு, தங்கள் முதுகில் மரக்கூடுகள் மற்றும் பாகன்களோடு கீழே விழுந்து கொல்லப்பட்ட யானைகள் களம் முழுவதும் பரவிக் கிடந்தன. பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், பாகன்களால் ஏவப்பட்டவையும், முதுகில் கொடிமரங்கள், போர்வீரர்கள் ஆகிவற்றைக் கொண்டவையுமான தங்களை ஒத்த பெரும் யானைகளால் நசுக்கப்பட்டுக் களத்தில் கீழே விழுந்தன. பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஐராவதம் என்றழைக்கப்படும்) யானைகளின் இளவரசனின் துதிக்கைகளை ஒத்த தங்கள் துதிக்கைகளால், பல தேர்களின் ஏர்க்கால்களைப் முறிப்பது அங்கே காணப்பட்டது.

அம்மோதலில், ஜாலர்களான பல தேர்வீரர்கள், யானைகளால் தங்கள் தேர்கள் சிதறடிக்கப்பட்டு, தங்கள் தலை மயிரில் பிடித்து இழுக்கப்பட்டு, மரத்தின் கிளைகள் போல முறித்து வடிவமற்ற திரள்களாக {பொடிகளாக} நசுக்கப்பட்டார்கள். இன்னும் பிற பெரும் யானைகளோ, பிற தேர்களோடு பிணைக்கப்பட்ட தேர்களை இழுத்துப் போட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே அனைத்துப் புறங்களிலும் ஓடின. அப்படி அந்தத் தேர்களை இழுத்துச் சென்ற யானைகள், தடாகங்களில் வளரும் தாமரைத் தண்டுகளை இழுக்கும் தங்கள் வகையைச் சேர்ந்த பிற யானைகளைப் போலவே தெரிந்தன.

இப்படியே குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும், பெரும் தேர்வீரர்களும், கொடிமரங்களும் அந்தப் போர்க்களமெங்கும் பரவிக் கிடந்தன” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியை விரட்டிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 072-போரில் ஈடுபட்ட கௌரவர்கள் மற்றும் பாண்டவத்தரப்புகளுக்கு இடையில் யார் எவருடன் மோதியது என்ற வர்ணனை; வீரர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய கடுமையான போர்; பீமனின் வில்லை இரண்டாக வெட்டிய பீஷ்ம்ர்; இடையில் குறுக்கிட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்வாங்கச் செய்த பீஷ்மர்; துரோணருடன் போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் படை பீஷ்மரை எதிர்த்து விரைந்தது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் கூடிய சிகண்டி, ஒப்பற்றவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பீஷ்மரை விரைந்து அணுகினான்.

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர் மற்றும் விகர்ணன் ஆகியோருடனும், வலிமைமிக்க வில்லாளிகளும், பெரும் பலம்வாய்ந்தவர்களும், போரில் துணிச்சல்மிக்கவர்களுமான பிற மன்னர்கள் பலருடனும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் மேற்கு, தெற்கு திசைகளைச் சேர்ந்த பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிந்துக்களின் ஆட்சியாளனுடனும் {ஜெயத்ரதனுடனும்} மோதினான்.

வலிமைமிக்க வில்லாளியும், பழிவாங்கும் வெறி கொண்டவனுமான உமது மகன் துரியோதனனையும், மேலும் துஸ்ஸகனையும் எதிர்த்து பீமசேனன் முன்னேறினான்.

பெரும் வில்லாளிகளும், ஒப்பற்ற வீரர்களும், தந்தையும் மகனுமாகிய சகுனி மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகன் ஆகியோரை எதிர்த்து சகாதேவன் முன்னேறினான்.

உமது மகனால் {துரியோதனனால்} வஞ்சமாக நடத்தப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவை எதிர்த்து முன்னேறினான்.

எதிரியைக் கண்ணீர் சிந்தவைக்க இயன்றவனும், பாண்டு மற்றும் மாத்ரியின் மகனுமான வீர நகுலன், திரிகர்த்தர்களின் அற்புதத் தேர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டான்.

ஒப்பற்ற வீரர்களான சாத்யகி, சேகிதானன் மற்றும் சுபத்திரையின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு} ஆகியோர் சல்லியனையும், கேகயர்களையும் எதிர்த்து முன்னேறினார்கள்.

போரில் வெல்லப்பட முடியாதவர்களான திருஷ்டகேது மற்றும் ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் உமது மகன்களின் தேர்ப் படைப்பிரிவுகளை எதிர்த்து முன்னேறினார்கள்.

அளவிலா ஆன்மா கொண்ட (பாண்டவப் படையின்) படைத்தலைவனும், வலிமைமிக்க வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடும் சாதனைகளை அடைந்தவரான துரோணருடன் போரில் ஈடுபட்டான்.

இப்படியே உமது படை மற்றும் பாண்டவப் படை ஆகியவற்றின் வலிமைமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சிவானத்தை – Meridian-ஐ} அடைந்து, அவனது {சூரியனின்} கதிர்களால் வானம் ஒளியூட்டப்பட்ட போது, கௌரவர்களும், பாண்டவர்களும் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கினர். அப்போது, மிதக்கும் கொடிகளை உச்சியில் கொண்ட கொடிமரங்கள் உடையவையும், தங்கத்தால் பல வண்ணமாக்கப்பட்டவையும், புலித்தோல்களால் மூடப்பட்டவையுமான தேர்கள் அந்தப் போர்க்களத்தில் நகர்ந்தது அழகாகத் தெரிந்தது. ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட வீரர்களின் முழக்கங்கள், சிங்க முழக்கங்களுக்கு இணையான பேரொலியானது. துணிச்சல் மிக்கச் சிருஞ்சயர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்றதும், நாங்கள் கண்டதுமான அந்த மோதல் மிகக் கடுமையானதாகவும், பெரும் அற்புதம் நிறைந்ததாகவும் இருந்தது.

சுற்றிலும் தொடுக்கப்பட்ட கணைகளின் விளைவால், ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, திசைக்காட்டியின் முக்கியமான மற்றும் துணைப் புள்ளிகளையும் {திசைகள் மற்றும் துணைத் திசைகளையும்}, சூரியனையும், ஆகாயத்தையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. பளபளப்பான முனைகளையுடைய ஈட்டிகள், (எதிரி மீது) வீசப்படும் தோமரங்கள், நன்கு கடினமாக்கப்பட்ட பட்டாக் கத்திகள், கூன்வாள்கள், பலவண்ணங்களிலான கவசங்கள், (வீரர்கள் மேனியில் இருந்த) ஆபரணங்கள் ஆகியவை கருநெய்தல்களுக்கு {நீலத் தாமரைகளுக்கு} ஒப்பான ஒளியுடன் திசைகள், துணைத்திசைகள் மற்றும் ஆகாயத்தைப் பிரகாசிக்கச் செய்தன.

சந்திரன் மற்றும் சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான ஏகாதிபதிகளின் உடல் காந்தியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தின் பல இடங்கள் பிரகாசித்தன. துணிச்சல்மிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள கோள்களைப் போல, அந்தப் போர்க்களத்தில் பிரகாசித்தனர்.

தேர்வீரர்களில் முதன்மையானவரான பீஷ்மர் கோபம் தூண்டப்பட்டவராக, வலிமைமிக்கப் பீமசேனனை துருப்புகளின் பார்வையிலேயே தடுத்தார். தங்கச் சிறகுகள் கொண்டவையும், சாணைக்கல்லில் தீட்டப்பட்டவையும், எண்ணெய் பூசப்பட்டவையும். பீஷ்மரால் தொடுக்கப்பட்ட வேகமான கணைகள், அந்தப் போரில் பீமனைத் துளைத்தன. பெரும் பலம் கொண்டவனான பீமசேனன் அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையானதும், வேகமானதுமான ஈட்டி ஒன்றை பெரும் பலத்துடன் அவர் {பீஷ்மர்} மீது வீசினான் {பீமன்}.

ஆனால், தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்ததும், தாங்கிக் கொள்ளக் கடினமானதும், தங்கத்தால் ஆன தண்டைக் கொண்டதுமான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் நேரான கணைகளால் அந்தப் போரில் பீஷ்மர் வெட்டினார். கூர்மையானதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு பல்லத்தினால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை நோக்கி விரைந்து வந்த சாத்யகி, காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாணில் இருந்து கடும் வேகத்துடன் ஏவப்பட்டவையும், கூர்முனை கொண்டவையும், எண்ணற்றவையுமான கணைகளால் உமது தந்தையைத் {பீஷ்மரைத்} தாக்கினான்.

அப்போது, மிகக் கடுமையான கணையொன்றைக் குறிபார்த்த பீஷ்மர், தேரின் நீடத்தில் இருந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தேரோட்டியை விழச்செய்தார். சாத்யகியுடைய தேரின் தேரோட்டி இப்படிக் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சாத்யகியின்} குதிரைகள் வெளியே விரைந்தோடின. புயல் போன்ற, அல்லது மனம் போன்ற வேகத்துடன் கூடிய அவை {அந்தக் குதிரைகள்} களத்தில் மூர்க்கமாக ஓடின. அப்போது முழுப் படையாலும் வெளியிடப்பட்ட முழக்கங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தின. “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஆச்சரிய ஒலிகள், பாண்டவப் படையின் உயர் ஆன்ம வீரர்களிடம் இருந்து எழுந்தன. அந்தக் கதறல்கள், “ஓடு”, “பிடி”, “குதிரைகளைத் தடு”, “விரைந்து செல்” என்றன. இந்த ஆரவாரம் யுயுதானனின் {சாத்யகியின்} தேரைப் பின்தொடர்ந்தே சென்றது.

அதே வேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, பாண்டவப் படைகளைக் கொல்ல ஆரம்பித்தார். இப்படிப் பீஷ்மரால் பாஞ்சாலர்களும், சோமகர்களும் கொல்லப்பட்டாலும், மெச்சத்தகுந்த தீர்மானத்தை ஏற்ற அவர்கள் {பாண்டவப் படையினர்} பீஷ்மரை நோக்கி விரைந்து சென்றார்கள். திருஷ்டத்யும்னனின் தலைமையாகக் கொண்டவர்களும், பாண்டவப் படையினருமான பிற வீரர்கள், உமது மகனின் {துரியோதனனின்} படையணிகளைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்களும், தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்து சென்றனர். அதன் பேரில் மற்றுமொரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.

லட்சுமணனை விரட்டிய அபிமன்யு! – பீஷ்ம பர்வம் பகுதி – 073-விராடனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; சித்திரசேனன், புருமித்திரன், சத்தியவிரதன் ஆகியோரோடு போரிட்ட அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த லட்சுமணன்; லட்சுமணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற அபிமன்யு; தேரிழந்த லட்சுமணனைத் தனது தேரில் சுமந்து சென்ற கிருபர்; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பீஷ்மர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மன்னன் விராடன் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை மூன்று கணைகளால் துளைத்தான். அந்தப் பெரும் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்ட மூன்று கணைகளால் அவனது {விராடனின்} குதிரைகளைத் துளைத்தார்.

பயங்கரமான வில்லாளியும், உறுதியான கரம் படைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஆறு கணைகளைக் கொண்டு காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} நடுமார்பில் துளைத்தான். அதன்பேரில், பகை வீரர்களைக் கொல்பவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அஸ்வாத்தாமனின் வில்லை அறுத்ததுடன், ஐந்து கணைகளால் அவனை {அஸ்வத்தாமனை} ஆழமாகத் துளைத்தான். கோபத்தில் புலன்களை {உணர்வுகளை} இழந்தவனும், அந்தப் போரில் தனது வில் துண்டாக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் கடினமான மற்றொரு வில்லை எடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூரிய தொண்ணூறு {90} கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்}, கடுமையான எழுபது {70} கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.

அப்போது கிருஷ்ணனோடு சேர்ந்த பல்குனன் {அர்ஜுனன்} கோபத்தில் கண்கள் சிவக்க, நீண்ட சூடான மூச்சுகளைவிட்டு ஒருகணம் சிந்தித்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், இடது கையால் வில்லை உறுதியாகப் பிடித்தவனுமான காண்டீவதாரி {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, (எதிரியின்) உயிரை எடுக்க வல்லவையும், முற்றிலும் நேராக இருப்பவையும், கூர்மையானவையுமான கடுங்கணைகள் பலவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தினான். பலம்வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைக் கொண்டு, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவாகத் தாக்கினான். அவனது {அஸ்வத்தாமனின்} கவசத்தைப் பிளந்த அந்தக் கணைகள், அவனது உயிர்க்குருதியைக் குடித்தன.

ஆனால், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} இப்படித் துளைக்கப்பட்டாலும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமல்} நடுங்கவில்லை. அந்தப் போரில் பாதிக்கப்படாதவனும், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பியவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு அதே போன்ற கணைகளைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏவினான். ஒன்றாகச் சேர்ந்திருந்த இரண்டு கிருஷ்ணர்களையும் {இரண்டு கருப்பர்களையும்_ கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனையும்} எதிர்கொண்ட அவனது {அஸ்வத்தாமனது} அந்தச் செயல், குரு படையின் முதன்மை வீரர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து ஆயுதங்களைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய முறைகளைத் துரோணரிடம் இருந்த அடைந்திருந்த அஸ்வத்தாமன், உண்மையில், படைகளுக்கு மத்தியில் அச்சமற்ற வகையிலேயே தினமும் போராடி வந்தான்.

எதிரிகளைச் சுடுபவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வீரன் பீபத்சு {அர்ஜுனன்}, “இவன் {அஸ்வத்தாமன்} எனது ஆசானின் மகன், இவன் துரோணரின் அன்புக்குரிய மகன். அதிலும் குறிப்பாக இவன் பிராமணன், எனவே, எனது மரியாதைக்குரியவன்” என்று நினைத்தே பரத்வாஜரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்குக்} கருணை காட்டினான். (தனது தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தவிர்த்துவிட்டு, தன் கரங்களின் பெரும் வேகத்தைக் காட்சிப்படுத்தியபடியும், உமது துருப்புகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியும் போரிடத் தொடங்கினான்.-அப்போது துரியோதனன், சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைச் சிறகாகக் கொண்டவையுமான பத்து {10} கணைகளைக் கொண்டு பெரும் வில்லாளியான பீமனைத் துளைத்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்ட பீமசேனன், கடினமானதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், எதிரியின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லையும், பத்து கூரிய கணைகளையும் எடுத்தான்.-கடும் சக்தியையும், மூர்க்கமான வேகத்தையும், கூர்மையான முனைகளையும் கொண்ட அந்தக் கணைகளைப் பொருத்தி, வில்லின் நாணைத் தனது காதுவரை இழுத்து, உறுதியாகக் குறிபார்த்து, குருக்களின் மன்னனுடைய {துரியோதனனுடைய} அகன்ற மார்பில் ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில் அவனது மார்பில் தங்க இழைகளில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தினம், அந்தக் கணைகளால் சூழப்பட்டு, ஆகாயத்தில் கோள்களால் சூழப்பட்ட சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தது.

பெரும் சக்தி கொண்டவனாக இருப்பினும், மனிதர்கள் அறையும் ஒலியைத் தாங்கிக் கொள்ளாத பாம்பைப் போல, பீமசேனனால் இப்படித் தாக்கப்பட்டதை உமது மகனால் {துரியோதனன்} (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்டவனும், தனது படையைக் காக்க விரும்பியவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான பல கணைகளைக் கொண்டு பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். இப்படியே போரில் போராடி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சிதைத்துக் கொண்டவர்களான வலிமைமிக்க உமது மகன்கள் இருவரும் {துரியோதனனும் – பீமனும்}, அப்போது, தேவர்கள் இருவரைப் போலத் தெரிந்தனர்.

மனிதர்களில் புலியும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சித்திரசேனனை பல [1] கூரிய கணைகளாலும், புருமித்ரனை ஏழு கணைகளாலும் துளைத்தான். போரில் இந்திரனுக்கு நிகரான வீரனாகிய அவன் {அபிமன்யு}, சத்தியவிரதனையும் எழுபது கணைகளால் அடித்து, அந்தப் போர்க்களத்தில் நடனமாடியபடியே நம்மைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினான். பிறகு, பத்து கணைகளால் சித்திரசேனனும், ஒன்பது கணைகாளல் சத்தியவிரதனும், ஏழு கணைகளால் புருமித்ரனும் பதிலுக்கு அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

இப்படித் துளைக்கப்பட்ட அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, ரத்தத்தில் நனைந்தபடியே, எதிரிகளைத் தடுக்கவல்ல சித்திரசேனனின் அழகிய பெரிய வில்லை வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {அபிமன்யு}, ஒரு கணையால் எதிராளியின் {சித்திரசேனனின்} கவசத்தைப் பிளந்து அவனது மார்பைத் துளைத்தான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது படையின் இளவரசர்கள் அம்மோதலில் ஒன்று சேர்ந்து, கூரிய கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.

வல்லமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனான அபிமன்யுவோ, அவர்கள் அனைவரையும் கூர்மையான அம்புகளால் அடித்தான். அவனது அருஞ்செயலைக் கண்ட உமது மகன்கள், கோடைக்காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போல உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்த அர்ஜுனன் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். (இப்படி) உமது துருப்புகளை அடித்துக் கொண்டிருந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு} பிரகாசத்தில் ஒளிர்வதாகத் தெரிந்தது.

அவனது {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது பேரன் {உமது பேரனும் துரியோதனன் மகனுமான} லக்ஷ்மணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அருஞ்செயல் பெரும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யு, தன் கூரிய கணைகளால் லக்ஷ்மணனின் நான்கு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் கொன்றுவிட்டு, அவனிடம் {லக்ஷ்மணனிடம்} விரைந்து சென்றான். அதன்பேரில் பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், கொல்லப்பட்ட குதிரைகளைக் கொண்ட அந்தத் தேரில் நின்றபடியே, கோபத்தால் தூண்டப்பட்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி ஒர் ஈட்டியை எறிந்தான். எனினும் அபிமன்யு, பாம்பைப் போன்றதும், தன்னை நோக்கி விரைந்து வந்ததும், கடும் தோற்றம் கொண்டதுமான அந்தத் தடுக்கப்பட முடியாத ஈட்டியைத் தன் கூரிய கணைகளால் துண்டாக்கினான். பிறகு, லக்ஷ்மணனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர், துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே, அவனை {லக்ஷ்மணனை} அம்மோதலை விட்டு அகற்றிச் சுமந்து சென்றார்.

அச்சம்தரும் அந்தப் போர் மிதமாக மாறிய போது, மற்றவர் உயிரைப் பறிக்க விரும்பிய போராளிகள் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்து சென்றனர். போர்க்களத்தில் உயிரைவிடத் தயாராக இருந்த உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றனர். தலைமுடி கலைந்தும், தங்கள் கவசங்களை இழந்தும், தேர்களை இழந்தும், விற்கள் ஒடிந்தும் இருந்த சிருஞ்சயர்கள், தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே குருக்களுடன் போரிட்டனர். அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவரும், பெரும் பலமும், வலிமையான கரமும் கொண்டவருமான பீஷ்மர். தன் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொன்றார். பாகன்களை இழந்த யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரின் வீழ்ந்த உடல்களால் பூமி மறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்! – பீஷ்ம பர்வம் பகுதி – 074-துரியோதனன் ஏவிய படைகளைக் கொன்ற சாத்யகி; சாத்யகியின் படையினரைத் தாக்கி விரட்டிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவசை சவாலுக்கழைத்த சாத்யகியின் மகன்கள்; சாத்யகியின் பத்து மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்; சாத்யகியும், பூரிஸ்ரவசும் தங்கள் தேர்களை இழந்தது; சாத்யகியைப் பீமசேனனும், பூரிஸ்ரவசைத் துரியோதனனும் தங்கள் தங்கள் தேரில் ஏற்றிச் சென்றது; இருபத்தைந்தாயிரம் கௌரவத் தேர்வீரர்களைக் கொன்ற அர்ஜுனன்; ஐந்தாம் நாள் போர் முடிவுக்கு வந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒப்பற்றவனான வலிய கரங்களைக் கொண்ட சாத்யகி, அம்மோதலில் பெரும் வலிமையைத் தாங்கக்கூடிய ஓர் அற்புத வில்லை இழுத்து, கொடும்நஞ்சு மிக்கப் பாம்புகளைப் போன்றவையும், சிறகு படைத்தவையுமான எண்ணற்ற கணைகளைத் தொடுத்து, தனது கரங்களின் அற்புத வேகத்தைக் காட்சிப்படுத்தினான். போரில் தன் எதிரிகளைக் கொன்றபோது, விரைவாக வில்லை இழுத்த அவன் {சாத்யகி}, தன் கணைகளை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, எதிரிக்கு மத்தியில் அவற்றை ஏவிய போது, கன மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தான்.

(வளரும் நெருப்பைப் போலச்) சுடர்விட்டெரியும் அவனைக் {சாத்யகியைக்} கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {சாத்யகிக்கு} எதிராகப் பத்தாயிரம் {10,000} தேர்களை அனுப்பினான். ஆனால், கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்டவனான பெரும் வில்லாளி சாத்யகி, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் தனது தெய்வீக ஆயுதங்களால் கொன்றான். கையில் வில்லுடன் அருஞ்செயலைச் செய்து கொண்டிருந்த அந்த வீரன் {சாத்யகி}, அடுத்ததாகப் போரிட பூரிஸ்ரவசை அணுகினான்.

குருக்களின் புகழைப் பெருக்குபவனான பூரிஸ்ரவசும், யுயுதானனால் {சத்யகியால்} வீழ்த்தப்படும் தார்தராஷ்டிர படையணிகளைக் கண்டு, அவனை {சாத்யகியை} நோக்கி விரைந்தான். இந்திரனை {இந்திராயுதத்தைப்} போன்ற நிறத்தில் இருந்த தனது பெரும் வில்லை இழுத்த அவன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற சாத்யகியைக் கைவிட்டுத் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கவசம் தரித்தவர்களும், பல்வேறு வகையிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், அற்புத கொடிமரங்களைக் கொண்டவர்களுமான யுயுதானனின் {சாத்யகியின்} வலிமைமிக்க மகன்கள் [1], அந்தப் போரில் பெரும் வில்லாளியான பூரிஸ்ரவசை அணுகி, வேள்விப்பீடப் {யூபஸ்தம்பப்} பொறியைத் தனது கொடிமரத்தில் தாங்கிய அந்த வீரனிடம் {பூரிஸ்ரவசிடம்} கோபத்துடன், “ஓ! கௌரவர்களின் சொந்தக்காரா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {பூரிஸ்ரவசே}, சேர்ந்திருக்கும் எங்கள் அனைவரிடமோ, எங்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாகவோ வந்து போரிடுவாயாக. ஒன்று, போரில் எங்களை வீழ்த்தி, நீ பெரும்புகழை அடைவாயாக, அல்லது உன்னை வீழ்த்தி நாங்கள் பெரும் மனநிறைவு கொள்வோம்” என்றனர்.

அவர்களால் {சாத்யகியின் மகன்களால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களைத் தன் முன்பு கண்டு, அவர்களிடம் {சாத்யகியின் மகன்களிடம்}, “வீரர்களே, நன்றாகச் சொன்னீர்கள். இப்போது உங்கள் விருப்பம் இத்தகையதே என்றால், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கவனத்துடன் போரிடுவீர்களாக. போரில் நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்” என்றான். அவனால் {பூரிஸ்ரவசால்} இப்படிச் சொல்லப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்புடைய வலிமைமிக்க வில்லாளிகளுமான அவ்வீரர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அடர்த்தியான கணைமழையால் அந்த எதிரிகளைத் தண்டிப்பவனை {பூரிஸ்ரவசை} மறைத்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபுறம் தனியனான பூரிஸ்ரவசுக்கும், மறுபுறம் ஒன்றுசேர்ந்த பலருக்கும் {சாத்யகியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போர் பிற்பகலில் நடந்தது. மழைக்காலத்தில் மலை முகட்டில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, அந்தப் பத்து வீரர்களும் {சாத்யகியின் பத்து மகன்களும்}, தனியனான வலிமைமிக்க அந்தத் தேர்வீரனைத் {பூரிஸ்ரவசை} தங்கள் கணை மழையால் மறைத்தார்கள். எனினும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களால் தொடுக்கப்பட்டவையும், மரணத்தைத் தரும் காலனின் ஈட்டிகள், அல்லது பிரகாசத்தில் இடியைப் போன்றவையான அந்தக் கணை மேகங்கள் தன்னை நெருங்கும் முன்னரே அறுத்தெறிந்தான். பிறகு, வலிய கரங்கள் கொண்ட அந்த வீரனை {பூரிஸ்ரவசைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அவனைக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தச் சோமதத்தன் மகனோ {பூரிஸ்ரவசோ}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இடியால் விழுந்த வலிமைமிக்க மரங்களைப் போலக் கீழே விழுந்தார்கள் [2].

தன் வலிமைமிக்க மகன்கள் போரில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட அந்த விருஷ்ணி வீரன் (சாத்யகி), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கியபடி பூரிஸ்ரவசை எதிர்த்து விரைந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பூரிஸ்ரவசும்}, தங்கள் தேரை மற்றவர் தேரில் நெருக்கி அழுத்தினார்கள் {மோதினார்கள்}. அம்மோதலில் அவர்கள் இருவரும், மற்றவரின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொன்றார்கள். பிறகு, தேர்களை இழந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரும் தரையில் குதித்தார்கள். பெரும் கத்திகளையும், அற்புத கேடயங்களையும் எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். {இப்படி} மோதிக் கொண்ட அம்மனிதப் புலிகள் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த கத்தியுடன் இருந்த சாத்யகியை நோக்கி விரைந்து வந்த பீமசேனன், அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். அதே போல உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வில்லாளிகள் அனைவரின் பார்வைக்கெதிராகவே பூரிஸ்ரவசைத் தனது தேரில் விரைந்து ஏற்றிக் கொண்டான்.

அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மருடன் போரிட்டார்கள். சூரியன் சிவப்பு நிறத்தை எட்டியபோது, செயலூக்கத்துடன் முயன்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} இருபத்தைந்தாயிரம் {25,000} பேரைக் கொன்றான்.

பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காகத் துரியோதனனால் ஏவப்பட்ட அவர்கள், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல, அவனை {அர்ஜுனனை} வந்தடைவதற்கு முன்பே இப்படி முற்றாக அழிந்தனர். பிறகு, ஆயுதங்களின் அறிவியலை அறிந்தவர்களான மத்ஸ்யர்கள் மற்றும் கேகயர்கள் வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது மகனையும் {அபிமன்யுவையும்} (அவர்களை ஆதரிப்பதற்காகச்) சூழ்ந்து கொண்டார்கள். சரியாக அதே நேரத்தில் சூரியனும் மறைந்தான், போராளிகள் அனைவரும் தங்கள் புலன்களை {உணர்வுகளை} இழந்ததாகவும் தெரிந்தது.

பிறகு அந்த மாலை சந்திப் பொழுதில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களைப்படைந்த விலங்குகளைக் {குதிரைகளைக்} கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, துருப்புகளைப் பின்வாங்கச் செய்தார். பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருதரப்புத் துருப்புகளும், அந்தப் பயங்கர மோதலால் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்து, தங்கள் தங்களின் பாசறைகளுக்குச் சென்றனர். கௌரவர்களும், சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்களும், (படை அறிவியலின்) விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இரவில் ஓய்ந்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர் முற்றிற்று

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading