ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  பீஷ்ம பர்வம்-ஸ்ரீ பீஷ்மவத பர்வம்-நான்காம் நாள் போர்-

கருடார்த்தச்சந்திர வியூகங்கள்! – பீஷ்ம பர்வம் பகுதி – 056-பீஷ்மர் கருட வியூகத்தை அமைத்தது; அர்ஜுனனும், திருஷ்டத்யும்னனும் அர்த்தச்சந்திர வியூகத்தை அமைத்தது; இரு படைகளிலும் முக்கியப் பகுதிகளில் நின்ற வீரர்களின் பட்டியல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த {இரண்டாம் நாள்} இரவு கடந்து {மூன்றாம் நாள்} பொழுது விடிந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், போருக்குத் தயாராகுமாறு (குரு) படைக்கு உத்தரவிட்டார். சந்தனுவின் மகனும் முதிர்ந்தவருமான குரு பாட்டன் {பீஷ்மர்}, உமது மகன்களுக்கு வெற்றியை விரும்பி, கருடனின் பெயரால் அழைக்கப்படும் வலிமைமிக்க அணிவகுப்பை {கருட வியூகத்தை} அமைத்தார்.

அந்தக் கருடனின் அலகில் உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்} நின்றார். அதன் இரு கண்களில் பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, சாத்வத குலத்தின் கிருதவர்மனும் நின்றனர். திரிகார்த்தர்கள், மத்ஸ்யர்கள் [1], கேகயர்கள், வாடதானர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர்களும், புகழ்பெற்ற போர் வீரர்களுமான அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் அதன் {கருட} வியூகத்தின் தலையில் நின்றார்கள். பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன் மற்றும் பகதத்தன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனுடன் சேர்ந்த மத்ரகர்கள், சிந்து-சௌவீரர்கள், பஞ்சநதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அதன் {கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றார்கள்

அதன் {கருட வியூகத்தின்} முதுகில் மன்னன் துரியோதனனும் அவனது தொண்டர்களும் நின்றார்கள். ஓ! ஐயா, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்கள், சகர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} வால் பகுதியில் நின்றார்கள். கவசம் பூண்டவர்களான மகதர்கள், கலிங்கர்கள், தாசேரகர்கள் ஆகியோர் அந்த {கருட வியூக} அணிவகுப்பின் வலது சிறகாக அமைந்தார்கள். பிருஹத்பலனோடு சேர்ந்த கரூஷர்கள் [2], விகுஞ்சர்கள், முண்டர்கள், குண்டீவிருஷர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} இடது சிறகில் நின்றார்கள்.

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அந்தப் படையின் போர் அணிவகுப்பைக் கண்டு, திருஷ்டத்யும்னன் துணையுடன், தனது துருப்புகளின் எதிர் அணுவகுப்பை அமைத்தான். உமது அணிவகுப்புக்கு {கருட வியூகத்திற்கு}  எதிராக அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பாதி நிலவின் {அர்த்தசந்திர} வடிவிலான கடும் அணிவகுப்பை அமைத்தான். பற்பல ஆயுதங்களை அபரிமிதமாகத் தரித்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களுமான மன்னர்களால் சூழ அதன் {அர்த்தச் சந்திர வியூகத்தின்} வலது கொம்பில் பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடன், துருபதன் ஆகியோரும்; விஷமேற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட நீலன் அவர்களுக்கு அடுத்ததாகவும் நின்று கொண்டிருந்தான். நீலனுக்கு அடுத்துச் சேதிகள், காசிகள், கரூஷர்கள், பௌரவர்கள் ஆகியோரால் சூழப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான {சிசுபாலனின் மகன்} திருஷ்டகேது நின்றான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் மற்றும் பிற துருப்புகளால் ஆதரிக்கப்பட்டு, போருக்காக அதன் {அந்த வியூகத்தின்} மத்தியில் நின்றார்கள். தன் யானைப்படையால் சூழப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அங்கேதான் இருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியும், திரௌபதியின் ஐந்து மகன்களும் நின்றார்கள். அவர்களுக்கு அடுத்து இராவான் {அரவான்} நின்றான். அவனுக்கு அடுத்து பீமசேனனின் மகனும் (கடோத்கஜனும்), வலிமைமிக்கத் தேர்வீரர்களான கேகயர்களும் [3] நின்றார்கள். அதற்கு அடுத்து (அந்த அணிவகுப்பின் {அர்த்தச் சந்திர வியூகத்தின்}) இடது கொம்பில் அண்டம் முழுமையையும் பாதுகாப்பவனான ஜனார்த்தனனைத் தனது பாதுகாவலனாகக் கொண்டவனான மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} நின்றான். இப்படியே உமது மகன்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் அழிவுக்காகப் பாண்டவர்கள் தங்கள் வலிமைமிக்க எதிரணிவகுப்பை அமைத்தார்கள்.

அதன் பிறகு, ஒருவரை ஒருவர் தாக்கியபடி உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையேயான போர் தொடங்கியது. அந்த மோதலில் தேர்களும், யானைகளும் ஒன்று கலந்தன. பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், தேர்க்கூட்டங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கோடு விரைந்து வருவது எங்கும் காணப்பட்டது. (சண்டையில் கலந்து கொள்வதற்காக) விரைந்த எண்ணிலடங்கா தேர்களின் சடசடப்பொலியும், பேரிகைகளின் ஒலியும் ஒன்றாகக் கலந்து உரத்த ஆரவாரத்தை அங்கே எழுப்பின. அந்தக் கடும் மோதலில் ஒருவரை ஒருவர் கொன்றவர்களான, உமது படையையும், அவர்களது படையையும் சேர்ந்த வீரப் போராளிகளின் முழக்கங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தையே எட்டின” {என்றான் சஞ்சயன்}. 

தாக்குதலும் படுகொலைகளும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 057-யுகமுடிவின் அந்தகனைப் போலப் போரிட்ட அர்ஜுனன்; சலிக்காமல் போரிட்ட போர்வீரர்கள்; சிதறி ஓடிய படையணியினர்; குதிரை, யானை, தேர்ப்படைகள் கலந்து போய் ஒன்றையொன்று தாக்கியது; போர்க்களமெங்கும் சிதறிக் கிடந்த ஆயுதங்களும், தளவாடங்களும்; போரால் ஏற்பட்ட புழுதி இரத்தத்தால் நனைந்து தணிந்தது; இரத்தத்தாலும், சதையாலும் சகதியான போர்க்களம்; மூன்றாம் நாளின் போர் தொடக்கத்தின் போது ஏற்பட்ட அமளியின் விவரிப்பு..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையும், அவர்களது {பாண்டவர்களின்} படையும் அணிவகுத்துப் புறப்பட்ட பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்ப்படை வீரர்களைத் தனது கணைகளால் விழச் செய்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேர்ப்படை அணிகளுக்கு மத்தியில் பெரும் அமளி செய்தான். (இப்படி) யுக முடிவின் அந்தகனைப் போல இருந்த பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} தார்தராஷ்டிரர்கள் கொல்லப்பட்டாலும் பாண்டவர்களுடன் விடாமல் {சலிக்காமல்} போரிட்டுக் கொண்டிருந்தனர்.

பிரகாசமான புகழை (வெல்ல) விரும்பியும், மரணம் மட்டுமே போரை நிறுத்தும் (நிறுத்துவதற்கான ஒரே வழி) எனக் கொண்டும், வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமலும் அவர்கள் {கௌரவப் படையினர்} பாண்டவப் படையணிகளைப் பல இடங்களில் உடைத்து, தாங்களும் உடைந்தனர் {தங்கள் படையணிகளையும் உடைத்துக் கொண்டனர்}. இப்படி உடைந்த பாண்டவ மற்றும் கௌரவத் துருப்புகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு சிதறி ஓடினர். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சூரியனையே மறைக்கும் அளவிற்க்கு புழுதி பூமியில் இருந்து எழுந்தது. அங்கே இருந்த எவராலும் திசைகளையோ, துணைத்திசைகளையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர் நடந்த இடத்தில் எல்லாம்,  நிறங்கள், ஆளறி சொற்கள் {சங்கேத வார்த்தைகள்}, பெயர்கள் மற்றும் இனத்தின் தனித்தன்மைகள் ஆகிய அறிகுறிகளால் போராளிகள் வழிநடத்தப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் அணிவகுப்பு {கருட வியூகம்}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்டதால் உடைக்க முடியாததாக இருந்தது. சவ்யசச்சினாலும் {அர்ஜுனனாலும்}, பீமனாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டதும் வல்லமைமிக்கதுமான பாண்டவ அணிவகுப்பும் உடைக்க முடியாததாகவே இருந்தது.

போரில் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிடுகின்ற தேர்களையும், யானைகளையும் கொண்ட இரண்டு படையின் போர்வீரர்களும் படை முகப்பில் இருந்து வெளிப்பட்டு நன்கு போரிட்டனர். அந்தக் கடுமையான போரில் குதிரைப்படை வீரர்களைப் பளபளப்பாக்கப்பட்ட கூரிய வாட்களாலும், நீண்ட வேல்களாலும் {எதிர்ப்படையின்} குதிரைப்படைவீரர்கள் வீழ்த்தினார்கள்.

(அருகில் உள்ள) தேர்வீரர்களை அடைந்த {எதிர்ப்படையின்} தேர்வீரர்கள் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் அவர்களை வீழ்த்தினர். உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த யானைப்படை வீரர்கள் அருகில் இருந்த {எதிர்ப்படையின்} யானைப் படைவீரர்களை, அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, அம்புகளாலும், வேல்களாலும் {தோமரங்களாலும்} பெரும் எண்ணிக்கையில் வீழ்த்தினர். பெரும் அளவிலான காலாட்படையில் ஒருவருக்கொருவர் கோபத்தை வளர்த்து, தங்கள் வர்க்கப் போராளிகளையே குறுங்கணைகளாலும் {பிண்டிபாலங்களாலும்}, போர்க்கோடரிகளாலும் மகிழ்ச்சியாக வீழ்த்தினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அருகில் இருந்த) யானை வீரர்களை {கஜபதிகளை} அடைந்த தேர்வீரர்கள்,  யானைகளோடு அந்த மோதலில் அவர்களை வீழ்த்தினார்கள். அதே போல யானை வீரர்களும் தேர்வீரர்களை வீழ்த்தினார்கள். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரை வீரன் வேலைக் கொண்டு தேர்வீரனை வீழ்த்தினான். அதே போலத் தேர்வீரனும் குதிரைவீரனை வீழ்த்தினான். காலாட்படை வீரன் தேர்வீரனை வீழ்த்தினான், தேர்வீரன் காலாடபடை வீரர்களைத் தன் கூரிய கணைகளால் வீழ்த்தினான். யானைவீரர்கள் குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். குதிரைவீரர்கள் யானைகளின் முதுகில் இருந்த வீரர்களை வீழ்த்தினார்கள். இவை அனைத்தும் மிகவும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அங்கேயும், இங்கேயும் காலாட்படை வீரர்கள், யானை வீரர்களில் முதன்மையானோரால் வீழ்த்தப்பட்டனர். காலாட்படை வீரர்களால் யானை வீரர்கள் வீழ்த்தப்படுவதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான காலாட்படை கூட்டம் குதிரை வீரர்களை வீழ்த்துவதையும், குதிரைவீரர்கள் காலாட்படை வீரர்களை வீழ்த்துவதையும் காண முடிந்தது. உடைந்த கொடிக்கம்பங்கள், விற்கள், வேல்கள், யானை மேலுள்ள கூடுகள், விலைமதிப்புமிக்கக் கம்பளங்கள், தோமரங்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, கம்பனங்கள், ஈட்டிகள், விதவிதமான கவசங்கள், கணபங்கள், அங்குசங்கள், பட்டாக்கத்திகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகள் எனக் களத்தில் சிதறிக் கிடந்த இவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மலர் படுக்கைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.

சதை மற்றும் இரத்தத்துடன் கூடிய சேறாக மாறிய பூமி, அந்தப் பயங்கரமான போரில் கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள், யானைகளின் சடலங்களால் கடக்க முடியாததாகியது. மனித இரத்தத்தால் நனைந்த பூமியின் புழுதி மறைந்து போனது {தணிந்தது}. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூமியின் அழிவைக் குறிப்பிட்டன. பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரில், தேர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடுவது தெரிந்தது.

அப்போது, போரில் ஒப்பற்றவர்களும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான பீஷ்மர், துரோணர், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், புருமித்ரன், விகர்ணன், சுபலனின் மகன் சகுனி, சல்லியன் ஆகியோர் போரில் நிலைத்தபடி பாண்டவர்களின் படையணிகளை உடைத்தனர். அதே போல, (தங்கள் தரப்பு) மன்னர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனன், ராட்சசன் கடோத்கஜன், சாத்யகி, சேகிதானன், திரௌபதின் மகன்கள் ஆகியோர் தானவர்களைக் கலங்கடிக்கும் தேவர்கள் போல, உமது துருப்புகளையும், உமது மகன்களையும் கலங்கடிக்கத் தொடங்கினர்.

க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள் அந்தப் போரில் ஒருவரை ஒருவர் தாக்கிக் காண்பதற்குப் பயங்கரர்களாக மாறி, இரத்தத்தால் நனைந்து புரச மரங்களைப் போலப் பிரகாசித்தனர். இருபடைகளையும் சேர்ந்த வீரர்களில் முதன்மையானோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்களைப் போலத் தோன்றினர்.

ஆயிரம் தேர்களால் ஆதரிக்கப்பட்ட உமது மகன் துரியோதனன், பாண்டவர்களுடனும், ராட்சசனுடனும் {கடோத்கசனுடனும்} போரிட விரைந்து வந்தான். பெரும் அளவிலான போராளிகளுடன் இருந்த பாண்டவர்கள் அனைவரும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய வீரர்களை எதிர்த்துப் போரிட விரைந்தார்கள். சினம் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவனும் (அர்ஜுனனும்) மன்னர்களில் முதன்மையானோரை எதிர்த்து விரைந்தான். அர்ஜுனனின் மகன் (அபிமன்யு) மற்றும் சாத்யகி ஆகியோர், சுபலனின் மகனுடைய {சகுனியின்} படைகளை எதிர்த்து முன்னேறிச் சென்றனர். அப்போது, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய உமது துருப்புகளுக்கும் எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையே அச்சம் நிறைந்த போர் மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

கர்ணனை நினைத்த துரியோதனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 058-அர்ஜுனனுக்கும் மன்னர்கள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; சாத்யகி மற்றும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட சகுனி; சாத்யகியின் தேரைக் காந்தார வீரர்கள் தூள் தூளாக்குவது; யுதிஷ்டிரனின் படைப்பிரிவைத் தாக்கிய துரோணரும், பீஷ்மரும்; துரியோதனனின் மார்பைத் துளைத்து, மயங்கச் செய்து களத்தை விட்டு ஓடச் செய்த பீமன்; சிதறி ஓடிய துரியோதனனின் படைப்பிரிவு; பீஷ்மர் மற்றும் துரோணரின் படைப்பிரிவுகளைச் சிதறி ஓடச் செய்த திருஷ்டத்யும்னனும், யுதிஷ்டிரனும்; கௌரவப் படையைச் சிதறி ஓடச் செய்த அர்ஜுனன்; சிதறி ஓடும் கௌரவப் படையைத் தடுத்த துரியோதனன்; பீஷ்மரைக் கண்டித்த துரியோதனன்; பீஷ்மர் ஏற்ற உறுதி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரிடும் பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பல்லாயிரம் தேர்களுடன் அவனை {அர்ஜுனனைப்} அனைத்து புறங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பெருமளவிலான தேர்ப்படைகளுடன் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் புறங்களில் இருந்தும் பல்லாயிரம் கணைகளால் அவனை மறைத்தனர். கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவத் தரப்பின் மன்னர்கள்}, கூரிய முனை கொண்ட பிரகாசமான வேல்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, தோமரங்கள் போர்க்கோடரிகள், முத்கரங்கள் {சம்மட்டி போன்றவை} மற்றும் உலக்கைகள் {கனத்த தடிகள்} ஆகிய ஆயுதங்களைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர்மீது வீசினார்கள்.

வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல, அனைத்துப் புறங்களிலும் (தன்னை நோக்கி) வரும் ஆயுதங்களின் மழையைப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு தடுத்தான். அச்சந்தர்ப்பத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கர வேகத்தை வெளிப்படுத்திய பீபத்சுவை {அர்ஜுனனைக்} கண்ட தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} “அற்புதம், அற்புதம்” என்று சொல்லி அவனைப் {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

பெரும்படையுடன் இருந்த சுபலன் மகனின் {சகுனியின்} காந்தார வீரர்கள் [1], சாத்யகியையும், அபிமன்யுவையும் சூழ்ந்து கொண்டார்கள். சுபலனின் மகனால் {சகுனியால்} தலைமை தாங்கப்பட்டவர்களும், துணிவுமிக்கவர்களும், கோபமடைந்தவர்களுமான அந்த வீரர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களுடன் இருந்த அந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} அற்புதத் தேரைத் துண்டுகளாக வெட்டினார்கள். அந்தக் கடும் மோதலில் தனது தேரைக் கைவிட்ட சாத்யகி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் தேரில் விரைந்து ஏறிக் கொண்டான். ஒரே தேரில் இருந்த அவ்விருவரும் சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கூரிய முனை கொண்ட தங்கள் நேரான கணைகளால் விரைந்து கொல்லத் தொடங்கினர்.

போரில் நிலைத்துப் போராடிக் கொண்டிருந்த துரோணரும், பீஷ்மரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் படைப்பிரிவைக் கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைக் கொண்ட கூரிய கணைகளால் படுகொலை செய்யத் தொடங்கினர். அப்போது தர்மனின் மகனும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மூலம் பிறந்தவர்களான பாண்டுவின் மற்ற இரு மகன்களும் {நகுலனும், சகாதேவனும்}, மொத்தப்படையும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, துரோணரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். அங்கே நடைபெற்ற போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரப் போரைப் போலக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

பீமசேனன் மற்றும் கடோத்கசன் ஆகிய இருவரும் பெரும் காரியங்களைச் செய்தனர். அப்போது அங்கே வந்த துரியோதனன் அவர்கள் இருவரையும் தடுத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அதுவரை தான் போரிட்டதைவிட மிக அற்புதமாகத் தன் தந்தையை விஞ்சும் அளவுக்குப் போரிட்டான்.

கோபத்தால் தூண்டப்பட்டும் புன்னகைத்தவாறே இருந்த பாண்டுவின் மகன் பீமசேனன், பழிவாங்கும் தன்மையுடன் துரியோதனனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். அந்தத் தாக்குதலின் பலத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன் தனது தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். உணர்விழந்தவனை {துரியோதனனைக்} கண்ட அவனது தேரோட்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விரைவாகக் களத்தைவிட்டு வெளியே {தேரில்} அவனைச் சுமந்து சென்றான். அப்போது துரியோதனனை ஆதரித்த துருப்புகள் சிதறி ஓடினர். இப்படி அனைத்துப் புறங்களிலும் ஓடிப்போகும் குரு படையைக் கூர்முனைக் கணைகளால் தாக்கியபடியே பீமன் துரத்திச் சென்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான பிருஷதன் மகனும் (திருஷ்டத்யும்னனும்), பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும், எதிரிப்படைகளைக் கொல்லும் கூரிய கணைகளால், துரோணர், கங்கையின் மைந்தன் {பீஷ்மர்} ஆகிய இருவரின் படையை அவர்களது கண்ணெதிரிலேயே கொன்றனர். இதனால் சிதறி ஓடிய உமது மகனின் படையைத் தடுக்க இயலாதவர்களாகவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரும் இருந்தனர். பீஷ்மரும், உயர் ஆன்மத் துரோணரும் தடுக்க முயற்சித்தும், அந்தப் படைத் துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் கண் முன்பே சிதறி ஓடினர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடிய போது, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சினி {சிநி} குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே தேரில் இருந்து கொண்டு, போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கொல்லத் தொடங்கினர். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, குரு குலத்துக் காளையும் {அபிமன்யுவும்}, தேய்பிறையின் கடைசித் திதியைக் {புதுநிலவைக் [அமாவாசைக்]} கடந்து ஆகாயத்தில் சேர்ந்திருக்கும் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனும், நீரோடைகளில் மழை பொழியும் மேகங்களைப் போல உமது படையின் மீது அம்புகளைப் பொழிந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் போரில் இப்படிக் கொல்லப்பட்ட அந்தக் கௌரவப்படை துயரத்திலும் அச்சத்திலும் நடுங்கி சிதறி ஓடினர். சிதறி ஓடும் படையைக் கண்டவர்களும், வலிமைமிக்கவர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கோபத்தால் தூண்டப்பட்டும், துரியோதனனின் நன்மையை விரும்பியும் அதை {அந்தப் படை ஓடிப்போவதைத்} தடுக்க முனைந்தனர்.

பிறகு, மன்னன் துரியோதனனே நேரடியாகப் போராளிகளைத் தேற்றி [2], அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் அந்தப் படையைத் தடுத்தான். அந்த வலிமைமிக்க க்ஷத்திரிய வீரர்கள் அனைவரும் உமது மகனை {துரியோதனனை} எங்குக் கண்டார்களோ அங்கேயே நின்றனர். அப்படி நின்றவர்களைக் கண்டு பொதுவான வேறு பல வீரர்களும் வெட்கத்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் வீரத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்ட விரும்பியும் நின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி மீண்டும் திரட்டப்பட்ட அந்தப் படையின் வேகம், நிலவு உதிக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் கடலைப் போல வேகமுடையதாயிற்று.

போரிடுவதற்காக மீண்டும் திரண்ட தனது படையைக் கண்ட மன்னன் துரியோதனன், விரைவாகச் சந்தனுவின் மகன் பீஷ்மரிடம் சென்று, “ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீரும், ஆயுதமறிந்தோரில் முதன்மையான துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, நமது நண்பர்கள் பிறரும் உயிரோடிருக்கையிலேயே, ஓ! குருவின் மகனே {பீஷ்மரே}, மேலும், வலிமைமிக்க வில்லாளியான கிருபர் உயிரோடிருக்கையிலேயே இப்படி எனது படை சிதறி ஓடுவதை நம்பத்தகுந்ததாக நான் கருத இல்லை.

போரில் பாண்டவர்களை, உமக்கோ, துரோணருக்கோ, துரோணரின் மகனுக்கோ {அஸ்வத்தாமனுக்கோ}, கிருபருக்கோ எவ்வழியிலும் இணையாக நான் கருதவில்லை. ஓ! வீரரே {பீஷ்மரே}, எனது படை கொல்லப்படுவதை மன்னிக்கும் நீர், ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டுவின் மகன்களுக்குச் சாதகமாக இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {பீஷ்மரே}, போர் நடைபெறுவதற்கு முன்னரே, பாண்டவர்களுடன் போரிட மாட்டீர் என்பதை என்னிடம் நீர் சொல்லியிருக்க வேண்டும். உம்மிடமிருந்தும், துரோணரிடமிருந்தும் அத்தகு வார்த்தைகளை நான் கேட்டிருந்தால், ஓ! பாரதரே {பீஷ்மரே}, என்ன வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கர்ணனுடன் கூடி நான் சிந்தித்திருப்பேன். உங்கள் இருவரினாலும் போரில் கைவிடத்தகாதவன் நான் எனில், ஓ! மனிதர்களில் காளையரே {பீஷ்மரே, துரோணரே}, உங்கள் ஆற்றல்களுக்குத் தக்கவாறு போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் சிரித்த பீஷ்மர், கோபத்தால் தனது கண்களைச் சுழற்றிக் கொண்டு, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதும், நன்மை நிறைந்ததுமான வார்த்தைகளை நான் பல முறை உனக்குச் சொன்னேன். வாசவனைத் {இந்திரனைத்} தங்களுடன் கொண்ட தேவர்களாலும் கூடப் பாண்டவர்களைப் போரில் வெல்ல இயலாது. எனினும், கிழவனான என்னால் என்ன செய்ய முடியுமோ, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதை என் சக்திக்குத் தக்கபடி இந்தப் போரில் நான் செய்வேன். உனது சொந்தங்களுடன் கூடி அதை இப்போது நீ சாட்சியாகக் காண்பாயாக. தனியனான நான், அனைவரின் பார்வையிலும் இன்று, தங்கள் துருப்புகளின் தலைமையில் உள்ள பாண்டுமகன்களை அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துத் தடுக்கப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, சங்குகளை முழக்கவும், பேரிகைகளை அடிக்கவும் ஏற்பாடு செய்தான். உரத்த முழக்கங்களைக் கேட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கி, பேரிகைகளையும், முரசுகளையும் அடிக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.

பீஷ்மர் நடத்திய கடும் தாக்குதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059அ- வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பும்; அவர்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகளும்; போரில் பீஷ்மர் வெளிப்படுத்திய வேகம்; பீஷ்மரைக் கண்டு பாண்டவப் படைகள் அஞ்சி ஓடுவது; நடக்கும் காரியங்களை அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கும் கிருஷ்ணன்; பீஷ்மரை நோக்கிச் செல்லும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொல்வது….

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகனின் வார்த்தைகளால் சீற்றமடைந்த பீஷ்மர் அந்தப் பயங்கர உறுதிமொழியை {சபதத்தை} ஏற்ற பிறகு, ஓ! சஞ்சயா, பாண்டுவின் மகன்களைப் பீஷ்மர் என்ன செய்தார்? அல்லது, பாட்டனை {பீஷ்மரை} அந்தப் பாஞ்சாலர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் முற்பகல் கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரியன் தனது மேற்கு நோக்கிய பாதையில் இருந்த போது, அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் வென்ற பிறகு, அறநெறியின் குறியீடுகள் அனைத்தின் வேறுபாடுகளையும் அறிந்தவரும், வேகமான குதிரைகளால் சுமந்து செல்லப்பட்டவரும், பெரும் படையாலும், உமது மகன்கள் அனைவராலும் பாதுகாக்கப்பட்டவரும் உமது தந்தையுமான தேவவிரதர் {பீஷ்மர்}, பாண்டவர்களின் படையை நோக்கி விரைந்து சென்றார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாவம் நிறைந்த உமது கொள்கையின் {அநீதியின்} விளைவால், நமக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான போர் அப்போது தொடங்கியது. விற்களின் நாணொலிகளும், (வில்லாளிகளின் கைகளில் உள்ள) தோலுறைகளும் மோதும் ஒலிகளும் ஒன்றாகக் கலந்து, மலைகள் பிளப்பதற்கு ஒப்பான பேரொலியை ஏற்படுத்தின. “நில்”, “இங்கே நான் நிற்கிறேன்”, “இவனைத் தெரிந்து கொள்”, “திரும்பு”, “எழுந்து நில்”, “உனக்காகக் காத்திருக்கிறேன்”, “அடி” என்ற வார்த்தைகளே எங்கும் கேட்கப்பட்டன.

தங்கத்தாலான கவசங்கள், கிரீடங்கள், கொடிமரங்கள் ஆகியன விழும் ஒலிகள் கற்தரையில் {மலைகளில்} விழும் கற்களின் ஒலியை ஒத்திருந்தன. ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளும், கரங்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தரையில் கீழே விழுந்து கொந்தளித்தன {துடித்தன}. உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட சில துணிவுமிக்கப் போராளிகள், ஆயுதங்களைப் பிடித்தபடியோ, அல்லது வில்லை வளைத்தபடியோ தொடர்ந்து நின்றனர். சதை மற்றும் இரத்தத்தாலான மூர்க்கமான ஓடை ஒன்று, (இறந்த) யானைகளின் உடல்களைத் தனது (குறைநீர்) பாறைகளாகக் கொண்டு ஒரு பயங்கரமான ஆறாக அங்கே ஓடத் தொடங்கியது. குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த அது {அந்த ஆறு}, கழுகுகளுக்கும், நரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து, அடுத்த உலகம் எனும் கடலை நோக்கி ஓடியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் (அப்போது) நடைபெற்ற அது போன்ற ஒரு போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இதற்கு முன்னர்ப் பார்க்கவோ, கேட்கவோ படவில்லை. அந்த மோதலில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, தேர்களால் தங்கள் பாதையில் செல்ல முடியவில்லை. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, மலைகளின் நீலச் சிகரங்கள் போர்க்களமெங்கும் பரந்து கிடப்பதாகத் தெரிந்தது.

பல்வேறு நிறங்களிலான கவசங்கள், தலைப்பாகைகள் ஆகியன சிதறிக் கிடந்த அந்தப் போர்க்களத்தைப் பார்க்க கூதிர்கால {சரத்ருது- இலையுதிர்கால} ஆகாயம் போல அழகாகத் தெரிந்தது. கடுமையான காயம்பட்டாலும் சில போராளிகள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் எதிரியை நோக்கிப் போரிட விரைந்ததைக் காண முடிந்தது. போர்க்களத்தில் வீழ்ந்த பலர், “ஓ! ஐயா”, “ஓ! சோதரா”, “ஓ! நண்பா”, “ஓ! உறவே”, “ஓ! தோழா”, “ஓ! மாமா” “என்னைக் கைவிடாதே” என்றும், மேலும் சிலர், “{போரிட} வா, இங்கே வா, ஏன் அஞ்சுகிறாய்? எங்கே செல்வாய்? போரில் நிற்கிறேன், அஞ்சாதே” என்று உரக்க கூச்சலிட்டார்கள்.

அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொடர்ந்து தனது வில்லை வட்டமாக வளைத்தபடி, கடும் விஷமிக்கப் பாம்புகளைப் போன்றதும், சுடர்மிகும் முனைகளைக் கொண்டதுமான கணைகளை அடித்துக் கொண்டிருந்தார். அனைத்துப் புறங்களிலும் கணைச்சரங்களைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவத் தேர்வீரர்களை ஒவ்வொருவரையும் முன்பே பெயர் சொல்லி அழைத்து, பின்னர் அடித்தார். தனது கரங்களின் மிகையான வேகத்தை வெளிக்காட்டியபடி, தனது தேர் சென்ற இடமெல்லாம் ஆடிக் கொண்டிருந்த (ஆடுவதைப் போலச் செயல்பட்ட) அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எங்கும் இருக்கும் நெருப்பு வளையத்தைப் போலத் தோன்றினார்.

தனது அசைவுகளின் வேகத்தின் விளைவாக, போரில் இருந்த பாண்டவர்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் அந்த வீரர் பலராகக் காட்சியளித்தார். மாயையால் பீஷ்மர் தன்னைப் பலராகப் பிரித்துக் கொண்டார் என்றே அனைவரும் கருதினார்கள். இப்போது அவரைக் கிழக்கில் பார்த்தால், அடுத்தக் கணம் மேற்கில் அவரைக் கண்டார்கள். வடக்கில் பார்த்தால் அடுத்தக் கணம் அவரைத் தெற்கில் கண்டார்கள். அந்தப் போரில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இப்படியே காணப்பட்டார்.

பாண்டவர்களில் யாராலும் அவரை {பீஷ்மரைப்} பார்க்கக்கூட முடியவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் அவரது வில்லில் இருந்து புறப்பட்ட எண்ணற்ற கணைகளை மட்டுமே. தங்கள் படையணிகளைக் கொன்று இத்தகு காரியங்களைச் செய்த அவரை {பீஷ்மரைக்} கண்ட வீரமிக்கப் போராளிகள், புலம்பல்கள் பலவற்றைச் உதிர்த்தார்கள். உமது தந்தையை {பீஷ்மரை} நோக்கி வந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் களத்தைக் கடந்து, சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் எனும் நெருப்பில், தன்னழிவுக்காகவே வரும் விட்டில் பூச்சிகளைப் போல வந்து விழுந்தார்கள்.

வேகமான கரங்களை உடைய அந்த வீரரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்டு, (அவரை எதிர்த்த) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் உடல்களில் மீது விழுந்த எண்ணிலாத கணைகளில் ஒன்று கூட இலக்கு தவறவில்லை. ஒரே நேரான கணையைக் கொண்டு, வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலையைப் போல ஒரு யானையை அவர் {பீஷ்மர்} அப்புறப்படுத்தினார். கவசம் தரித்தவர்களும், ஒன்று சேர்ந்திருந்தவர்களுமான இரண்டோ, மூன்றோ யானை வீரர்களை, கூர்முனை கொண்ட ஒரே கணையால் உமது தந்தை {பீஷ்மர்} துளைத்தார்.

அந்தப் போரில், மனிதர்களில் புலியான பீஷ்மரை அணுகிய எவரும், அடுத்தக் கணம் தரையில் கிடப்பதையே காணமுடிந்தது. இப்படி ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரால் கொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பெரும்படை ஆயிரம் திசைகளில் சிதறடிக்கப்பட்டது. கணைமாரியால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரின் முன்னிலையிலேயே நடுங்கத் தொடங்கியது. பாண்டவப் படையின் வீரத் தலைவர்கள் பெரும் முயற்சி செய்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட தங்கள் தரப்பின் பெரும் தேர்வீரர்கள் ஓடுவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்தப் பரந்த படை முறியடிக்கப்பட்டதற்குக் காரணமான அந்த ஆற்றல் தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆற்றலுக்கு நிகராக இருந்தது. இருவராக இருக்கும் மனிதர்கள் எவரையும் காண முடியாதபடி, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படை {பாண்டவப் படை} முழுமையாக முறியடிக்கப்பட்டது.

தேர்கள், யானைகள், குதிரைகள் எங்கும் துளைக்கப்பட்டிருந்தன, கொடிமரங்கள், தேர்களின் கூபரங்கள் {தேர்க்கால்கள்} ஆகியன களமெங்கும் சிதறிக் கிடந்தன. பாண்டு மகன்களின் படை “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி உணர்விழந்து போயிற்று. தந்தை மகனைத் தாக்கினான், மகன் தந்தையைத் தாக்கினான்; விதிவசத்தால் நண்பன் ஒருவன் தன் ஆருயிர் நண்பனைப் போருக்கழைத்தான். பாண்டு மகன்களின் போராளிகளில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் கவசங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கலைந்த தலைமயிருடன் தலைதெறிக்க ஓடினார்கள். உரத்த புலம்பல்களில் ஈடுபட்டவர்களான பாண்டு மகன்களின் படையின், தேர்வீரர்களில் சிறந்த தலைவர்களே கூட, பசுக்கூட்டத்தைப் போல மிகவும் குழம்பிப் போனதாகத் தெரிந்தது.

யாதவர்களை மகிழ்வூட்டுபவன் {கிருஷ்ணன்}, இப்படி முறியடிக்கப்பட்ட படையைக் கண்டு, தேர்களில் சிறந்த (தான் செலுத்திய) தேரை நிறுத்தி, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் விரும்பப்பட்ட நேரம் இதோ வந்துவிட்டது. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, பீஷ்மரைத் தாக்கு, இல்லையேல் நீ உணர்வுகளை இழப்பாய். ஓ! வீரா {அர்ஜுனா}, “பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் உள்ள திருதராஷ்டிர மகன்களின் போர்வீரர்கள் அனைவரையும், உண்மையில், என்னோடு போரிடப்போகும் அனைவரையும் நான் கொல்வேன்” என்று மன்னர்களின் கூட்டத்தில் முன்பு நீ சொன்னாய். ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, உனது அந்த வார்த்தைகளை நீ மெய்ப்பிப்பாயாக. ஓ! பீபத்சு {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் முறியடிக்கப்படும் உனது படையைப் பார். அகல விரிந்த வாயைக் கொண்ட அந்தகனைப் போல இருக்கும் பீஷ்மரைக் கண்டு, நாலாபுறமும் ஓடும் யுதிஷ்டிரப்படையின் மன்னர்களைப் பார். சிங்கத்தைக் கண்ட பலவீனமான விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களைத் தாங்களே அரிதாக்கிக் கொள்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “கடலெனும் இந்த எதிரிப்படைக்குள் மூழ்கி, பீஷ்மர் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக. ஒப்பற்ற வீரரான மரியாதைக்குரிய அந்தக் குரு பாட்டனை {பீஷ்மரை}, கீழே வீழ்த்தப்போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

பாண்டவப் படையைச் சூறையாடிய பீஷ்மர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059ஆ-போரிடுவதற்காகப் பீஷ்மரை அணுகிய அர்ஜுனன்; பீஷ்மரின் வில்லை இரு முறை அறுத்த அர்ஜுனன்; கோபம் மூண்ட பீஷ்மர் பாண்டவப் படையைச் சூறையாடியது; தலைதெறிக்க ஓடிய பாண்டவப் படை; போரின் நிலை குறித்துக் கிருஷ்ணன் கவலை கொள்வது

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது மாதவன் {கிருஷ்ணன்},  சூரியனைப் போன்றதும், காணக் கண் கூசுவதுமான பீஷ்மரின் தேரை நோக்கி, அந்த வெள்ளி நிறக் குதிரைகளைச் செலுத்தினான். பீஷ்மருடன் மோத விரையும் வலிய கரங்களைக் கொண்ட பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட, யுதிஷ்டிரனின் வலிமையான படை மீண்டும் அணிதிரண்டது.

சிங்கம் போலத் தொடர்ச்சியாக முழங்கியவரும், குரு போர்வீரர்களில் முதன்மையானவருமான பீஷ்மர், தனது கணை மாரியால் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை மறைத்தார். அந்தக் கணத்தில், கொடிமரம் மற்றும் தேரோட்டியோடு கூடிய அவனது {அர்ஜுனனின்} தேர், அந்தக் கணை மாரியால் மறைந்தது. எனினும், பெரும் வல்லமை படைத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்தக் குதிரைகளைப் பொறுமையுடனும், அச்சமில்லாமலும் வழிநடத்திச் சென்றான். அப்போது, மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தெய்வீக வில்லை எடுத்த பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் பீஷ்மரின் வில்லை அறுத்துக் கீழே தள்ளினான்.

தனது வில் அறுபட்டதைக் கண்ட குரு வீரரான உமது தந்தை {பீஷ்மர்}, மற்றொரு வில்லைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் எடுத்து நாணேற்றினார். மேகங்களின் முழக்கத்தை ஒத்திருக்கும் நாணொலி கொண்ட அந்த வில்லைத் தன் இரு கைகளாலும் வளைத்தார். ஆனால், கோபம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அர்ஜுனன், அந்த வில்லையும் அறுத்தான். அப்போது, சந்தனுவின் மகன் {பீஷ்மர் அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அற்புதம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அற்புதம். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உண்மையில், இத்தகு வல்லமைமிக்கக் காரியம் உனக்குத் தகுந்ததே. நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். ஓ! மகனே {அர்ஜுனா}, என்னோடு கடினமாக நீ போரிடுவாயாக” என்று (அர்ஜுனன் வெளிப்படுத்திய) கரவேகத்தை மெச்சினார்.

இப்படிப் பார்த்தனை {அர்ஜுனனை} மெச்சி, மற்றொரு பெரிய வில்லை எடுத்த அந்த வீரர் {பீஷ்மர்}, தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது பொழிந்தார். அந்தக் கணைகளைக் கலங்கடிக்கும் வகையில், தனது தேரை வட்டமாக விரைந்து சுழற்றிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரை வழிநடத்துவதில் தான் கொண்ட பெருந்திறனை வெளிப்படுத்தினான்.

பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், பெரும்பலத்துடன் தனது கூர்முனைக் கணைகளால் வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும்,   உடல் முழுவதும் துளைத்தார். பீஷ்மரின் அந்தக் கணைகளால் சிதைந்த அந்த இரு மனிதப்புலிகளும், கொம்புகளால் கீறப்பட்ட உடல்களுடன் முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அப்போது தோன்றினார்கள். மீண்டும் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், அந்த இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரையும்} நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கணைகளால் அனைத்துப் புறங்களிலும் மறைத்தார். கோபம் தூண்டப்பட்ட அந்தப் பீஷ்மர், தனது கூரிய கணைகளால், அந்த விருஷ்ணி குலத்தவனை {கிருஷ்ணனை} நடுங்கச் செய்தார் [1]. உரக்கச் சிரித்த அவர் {பீஷ்மர்} கிருஷ்ணனை வியப்படையச் செய்தார்.

இரு படைகளுக்கு மத்தியில் இருந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலையும், அர்ஜுனனின் மென்மையையும், அதனால் பீஷ்மர் போரில் பொழிந்த தொடர்ச்சியான கணைமாரிகளையும் கண்டு, அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல ஆனான். யுதிஷ்டிரப்படையில் உள்ள முதன்மையான போராளிகளை அவ்வீரர் {பீஷ்மர்} கொல்வதையும், அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதைப் போல அப்படையை அவர் {பீஷ்மர்} சூறையாடுவதையும் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், படைக்கூட்டங்களைக் கொல்பவனும், புகழத்தக்கவனுமான கேசவனால் {கிருஷ்ணனால்} தான் கண்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரனின் படையால் அந்தப் படுகொலையில் இருந்து மீள முடியாது என்றே நினைத்தான்.

மேலும், “ஒரே நாளில் தைத்தியர்கள் மற்றும் தானவர்களோடு கூடிய அனைவரையும் பீஷ்மரால் கொன்றுவிட முடியும் எனும்போது, பாண்டுமகன்களின் துருப்புகள் அனைத்தையும், அவர்களது தொண்டர்களையும் எவ்வளவு எளிதாகக் கொல்ல முடியும்? பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரருடைய} பரந்த படை மீண்டும் சிதறி ஓடுகிறது. சோமகர்கள் முறியடிக்கப்பட்டதைக் கண்ட கௌரவர்கள், பாட்டனை {பீஷ்மரை} மகிழ்வூட்டியபடியே உற்சாகமாகப் போரிட விரைகிறார்கள். அர்ஜுனனைப் பொறுத்தவரை, கூரிய கணைகளால் தாக்கப்பட்டாலும், பீஷ்மரின் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறான். எனவே, பாண்டவர்களுக்காகக் கவசம் தரித்து பீஷ்மரை இன்று நானே கொல்வேன். இந்த உயர் ஆன்மப் பாண்டவர்களின் சுமையை நான் குறைப்பேன்” என்றும் நினைத்தான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, கோபம் தூண்டப்பட்ட பாட்டன் {பீஷ்மர்}, மீண்டும் தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது அடித்தார். அந்தக் கணைகள் பெரும் எண்ணிக்கையிலானவையாக இருந்தமையால், அனைத்துத் திசைகளும் முழுமையாக மறைக்கப்பட்டன. ஆகாயமோ, திசைகளோ, பூமியோ, பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனோ கூடத் தெரியவில்லை. வீசிய காற்றும் புகை கலந்து இருப்பதாகத் தெரிந்தது; அனைத்துத் திசைகளும் நடுங்குவதைப் போலத் தெரிந்தது.

சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} கட்டளையின் கீழ் இருந்த துரோணர், விகர்ணன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், கிருதவர்மன், கிருபர், சுருதாயுஸ் [2], அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், விந்தன் மற்றும் அனுவிந்தன், சுதக்ஷிணன், மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், வசாதிகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோர் போரிடுவதற்காகக் கிரீடியை {அர்ஜுனனை} விரைந்து அணுகினர்.

பல்லாயிரக்கணக்கான குதிரைகள், காலாட்படை, தேர்கள், வலிமைமிக்க யானைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட கிரீடியைச் {அர்ஜுனனைச்} சிநியின் பேரன் {சாத்யகி} கண்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் இப்படிச் சூழப்பட்டவர்களான வாசுதேவனையும், அர்ஜுனனையும் கண்ட சிநிகளின் தலைவன் {சாத்யகி}, அவ்விடத்திற்கு விரைந்து சென்றான். வில்லாளிகளில் முதன்மையான சிநிகளின் தலைவன் {சாத்யகி} அந்தத் துருப்புகளை நோக்கி வேகமாக விரைந்து விருத்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} துணைக்கு வந்த விஷ்ணுவைப் போல அர்ஜுனனை அணுகினான்.

பீஷ்மரைக் கண்டு அஞ்சியவர்களும், தங்கள் யானைகள், குதிரைகள், தேர்கள், எண்ணிலடங்கா கொடிமரங்கள் ஆகியன சிதைக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டவர்களும், களத்தை விட்டுச் சிதறி ஓடியவர்களுமான யுதிஷ்டிரப் படையின் போராளிகள் அனைவரிடமும், போர்வீரர்களில் முதன்மையானவனும் உற்சாகமிக்கவனுமான அந்தச் சிநி குலத்தவன் {சாத்யகி}, “க்ஷத்திரியர்களே, எங்கே செல்வீர்கள்? நீதிமான்களின் கடமையென மூதாதையர்களால் தீர்மானிக்கப்பட்டது இதுவல்ல. வீரர்களில் முதன்மையானவர்களே, உங்கள் உறுதிமொழிகளை மீறாதீர். வீரர்களைப் போல உங்கள் தன்னறங்களை {ஸ்வதர்மத்தை = க்ஷத்ரிய அறங்களை} நோற்பீராக” என்றான் {சாத்யகி}.

“பீஷ்மரைக் கொல்வேன்!” என்ற கிருஷ்ணன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059இ-சாத்யகியை மெச்சிய கிருஷ்ணன், பீஷ்மரைத் தானே கொல்லப் போவதாகச் சொன்னது; கைகளில் சக்கரத்துடன் பீஷ்மரை எதிர்த்துச் சென்ற கிருஷ்ணன்; தன்னைக் கொல்லக் கிருஷ்ணனை வரவேற்ற பீஷ்மர்; கிருஷ்ணனின் காலைப் பிடித்துக் கெஞ்சிய அர்ஜுனன்; கோபம் தணிந்த கிருஷ்ணன் மீண்டும் தேரில் ஏறி கடிவாளத்தைப் பிடித்தது; கௌரவப் படையில் எழுந்த ஆரவாரம்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “{பாண்டவத் தரப்பின்} அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஒன்றாகப் போர்க்களத்தை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டும், பார்த்தன் {அர்ஜுனன்} மென்மையாகப் போரிட்டதைக் குறித்துக் கொண்டும், போரில் பீஷ்மர் பெரும் பலத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்ததையும், அனைத்துப் புறங்களில் இருந்து விரையும் கௌரவர்களையும் கண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தாசார்ஹர்களின் உயர் ஆன்மப் பாதுகாவலனுமான அந்த வாசவனின் {இந்திரனின்} தம்பி {கிருஷ்ணன்}, சிநியின் புகழ்பெற்ற பேரனை {சாத்யகியை} மெச்சிப் பேசியபடி, “ஓ! சிநி குலத்து வீரா {சாத்யகி}, எவர் பின்வாங்கிச் செல்கிறார்களோ, அவர்கள் புறமுதுகிடுகிறார்கள் என்பது உண்மையே. எவர் இருக்கிறார்களோ, ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, அவர்களையும் வெளியேற விடுவாயாக. விரைவில் இப்போரில் தொண்டர்களோடு கூடிய பீஷ்மரையும், துரோணரையும் அவர்களது தேரில் இருந்து நான் வீழ்த்தப் போவதைப் பார். ஓ! சாத்வத குலத்தோனே {சாத்யகி}, குரு படையில் ஒருவரும் என் கோபத்திற்குத் தப்பப்போவதில்லை. எனவே, கடுமையான எனது சக்கரத்தை எடுத்து உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரை நான் கொல்லப்போகிறேன். தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும், அவர்களின் தொண்டர்களோடு சேர்த்துப் போரில் கொன்று, ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, மன்னரையும் {யுதிஷ்டிரரையும்}, பீமனையும், அஸ்வினி இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவனையும்} மகிழ்விக்கப் போகிறேன். திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும், அவர்களின் தரப்பை அடைந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்று, மகிழ்ச்சியாக நான் மன்னன் அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரரிடம்} நாட்டைக் கொடுப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}.

இதைச் சொன்ன அந்த வசுதேவர் மகன் {கிருஷ்ணன்}, குதிரைகளைக் (குதிரைகளின் கடிவாளத்தைக்) கைவிட்டு, ஆயிரம் வஜ்ராயுதங்களுக்கு நிகரான பலத்தைக் கொண்டதும், சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், கத்தியைப் போன்று கூர்மையான முனைகளைக் கொண்டதும், அழகிய துளை கொண்டதுமான சக்கரத்தைத் தன் (வலது) கரத்தில் சுழற்றிக் கொண்டே, தேரில் இருந்து கீழே குதித்தான். தனது நடையால் பூமியை நடுங்கச் செய்த உயர் ஆன்மக் கிருஷ்ணன், பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், தேவர்களின் தலைவனுடைய {இந்திரனின்} தம்பியுமான {விஷ்ணுவுமான} அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {கிருஷ்ணன்}, சினத்தால் குருடானதும், தாக்குதலுக்காகச் செருக்குடன் நிற்பதுமான யானைகளின் இளவரசனைக் {தலைமை யானையைக்} கொல்லும் விருப்பதுடன் செல்லும் சிங்கத்தைப் போல, தனது துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி விரைந்தான்.

காற்றில் ஆடிய அவனது மஞ்சள் ஆடையின் நுனி, வானத்தில் இருக்கும் மின்னலுடன் கூடிய மேகம் போலத் தோன்றியது. சுதர்சனம் என்றழைக்கப்படும் சக்கரமான அந்தத் தாமரை, சௌரியுடைய {கிருஷ்ணனுடைய} அழகிய கரத்தைத் தனது தண்டாகக் கொண்டு, காலைச் சூரியனைப் போல {பால சூரியனைப் போல} பிரகாசமானதும், நாராயணனின் நாபிக்கமலத்தில் உதித்ததுமான ஆதிகாலத்துத் தாமரை போல அழகுடன் திகழ்ந்தது. கிருஷ்ணனின் கோபமே காலைச் சூரியனாகி அந்தத் தாமரையை மலரச் செய்தது. அந்தத் தாமரையின் அழகிய இலைகள் கத்தியின் முனை போலக் கூர்மையாக இருந்தன. கிருஷ்ணனின் உடலே அழகியத் தடாகமாக இருந்தது. அவனது (வலது) கரமே அந்தத் தாமரை உதித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் தண்டானது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், உரக்க முழங்கியவனும், சக்கரத்தை ஏந்தியவனுமான மகேந்திரனின் {இந்திரனின்} தம்பியைக் {கிருஷ்ணனைக்} கண்ட உயிரினங்கள் அனைத்தும் குருக்களின் அழிவு நெருங்கிவிட்டதென எண்ணி உரக்க ஓலமிட்டன. தனது சக்கரத்தை ஏந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்}, உலகத்தை எரிப்பதற்காக யுக முடிவின் போது தோன்றும் சம்வர்த்த நெருப்பைப் {ஊழித்தீயைப்} போலத் தோன்றினான். உயிரினங்கள் அனைத்தையும் உட்கொள்ள உதித்த,  ஒரு கடும் விண்மீன் போல அண்டத்தின் ஆசான் {கிருஷ்ணன்} சுடர்விட்டெரிந்தான்.

இரண்டு கால் படைத்த உயிரினங்களில் {மனிதர்களில்} முன்மையானவனான அந்தத் தெய்வீக மனிதன் {கிருஷ்ணன்}, கைகளில் சக்கரத்துடன் முன்னேறி வருவதைக் கண்டச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, தனது தேரில் நின்றபடியே, கையில் வில் மற்றும் கணையுடன், அச்சமற்ற வகையில், “வா, ஓ! தேவர்களின் தலைவா {தேவநாதா, கிருஷ்ணா} வா. ஓ! அண்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவனே {ஜகந்நிவாசா, கிருஷ்ணா}, ஓ! கதாயுதம், வாள் மற்றும் சாரங்கம் தரித்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {லோகநாதா, கிருஷ்ணா}, இந்தப் போரில், ஓ! உயிர்களனைத்தின் புகலிடமானவனே {சர்வசரண்யனே, கிருஷ்ணா}. இந்த அற்புதத் தேரில் இருந்து என்னைப் பலவந்தமாகத் தூக்கி எறிவாயாக. உன்னால் இங்குக் கொல்லப்பட்டால் , ஓ! கிருஷ்ணா, இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்} நான் அடையும் நற்பேறு பெரியதாக இருக்கும். ஓ! விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ எனக்குக் கொடுக்கும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். எனது கண்ணியம் மூவுலகத்தாலும் கொண்டாடப்படும்” என்றார் {பீஷ்மர்}.

சந்தனுமகனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் மூர்க்கமாக அவரிடம் விரைந்து, “பூமியில் நடைபெறும் இந்தப் பெரும் படுகொலைக்கான வேர் நீரே. துரியோதனன் கொல்லப்படுவதை இன்று நீர் காண்பீர். நீதியின் பாதையில் நடக்கும் அறிவுள்ள அமைச்சன் ஒருவன், தீமையான சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கும் மன்னனைத் தடுக்க வேண்டும். விதியால் தவறாக வழிநடத்தப்பட்ட புத்தி கொண்டவன் கைவிடப்படுவதைப் போல, தன் குலத்தில் இழிந்தவனான கடமை மீறுபவன் எவனோ, அவன் கைவிடப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}.

அரசனைப் போன்ற பீஷ்மர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, யதுக்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்}, “விதியே வலிமை நிறைந்தது. யதுக்கள், தங்கள் நன்மைக்காகக் கம்சனைக் கைவிட்டார்கள். இதை நான் மன்னனிடம் (திருதராஷ்டிரனிடம்) சொன்னேன். ஆனால், அவன் {திருதராஷ்டிரன்} அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பதில் பயனேதும் இல்லாமல் செவிகொடுப்பவன், (விதியின் ஆதிக்கத்தின்) மூலம் மாறுபட்ட புரிதலை அடைந்து, (தனது தனிப்பட்ட) துயரத்தைத் தானே ஈட்டிக் கொள்கிறான்” என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

அதேவேளையில், தனது தேரில் இருந்து குதித்தவனும், நீண்ட பருத்த கரங்களைக் கொண்டவனுமானப் பார்த்தன் {அர்ஜுனன்}, நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட யதுகுலத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} கால்நடையாகவே விரைந்தோடி, தன் இரு கரங்களாலும் அவனைப் {கிருஷ்ணனைப்} பிடித்துக் கொண்டான். தன்னில் {ஆத்மாவில்} அர்ப்பணிப்புக் கொண்ட தேவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன் அப்போது கோபத்தால் தூண்டப்பட்டிருந்தான். எனவே, இப்படிப் பிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, தனி மரத்தைச் சுமந்து செல்லும் புயலைப் போல, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தன் பின்னே இழுத்துச் சென்றான். எனினும், பீஷ்மரை நோக்கி வேகமாக நடந்த அவனது {கிருஷ்ணனின்} கால்களைப் பெரும்பலத்துடன் பற்றிய அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சிரமத்திற்குப் பிறகு பத்தாவது {10} அடியில் {எட்டில்} அவனைத் {கிருஷ்ணனைத்} தடுப்பதில் வென்றான்.

கிருஷ்ணன் நின்றதும், அழகிய பொன்மாலையைப் பூண்டவன் {அர்ஜுனன்} அவனை {கிருஷ்ணனை} மகிழ்ச்சியாக வணங்கி, “இந்த உனது கோபத்தைத் தணிப்பாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களின் புகலிடம் நீயே. ஓ கேசவா {கிருஷ்ணா}, உறுதியேற்றபடியே நான் செயல்களில் இருந்த விலக மாட்டேன் என்று எனது மகன்கள் மீதும், எனது சகோதரர்கள் மீதும் ஆணையிடுகிறேன். ஓ! இந்திரனின் தம்பியே {உபேந்திரனே, கிருஷ்ணா}, உனது கட்டளையின் பேரில், நிச்சயம் நான் குருக்களை நிர்மூலமாக்குவேன்” என்றான்.

அவனது {அர்ஜுனனின்} உறுதிமொழியையும், ஆணையையும் கேட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மனநிறைவை அடைந்தான். குருக்களில் சிறந்தவனான அர்ஜுனனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்வதில் ஈடுபடுபவனான அவன் {கிருஷ்ணன்} கைகளில் சக்கரத்துடன் மீண்டும் தனது தேரில் ஏறினான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {கிருஷ்ணன்}, (தான் கைவிட்ட) அந்தக் கடிவாளங்களை மீண்டும் பற்றினான். பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தனது சங்கை எடுத்த சௌரி {கிருஷ்ணன்}, திக்குகள் அனைத்தும், ஆகாயமும் நிறையும்படி முழக்கினான்.

ஆரம், தோள்வளை, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், வளைந்த இமைமயிர்கள் புழுதியடைந்தவனும், முற்றிலும் வெண்மையான பற்களையுடையவனுமான கிருஷ்ணன், மீண்டும் தனது சங்கை எடுத்ததைக் கண்ட குரு வீரர்கள் உரக்கக் கதறினர். மிருதங்கங்கள், பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகளும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், சிறிய வகைத் துந்துபிகளின் ஒலிகளும், குருவீரர்களின் படையணிகளுக்கு மத்தியில் இருந்து எழுந்த சிம்ம முழக்கங்களோடு கலந்து கடுமையான ஆரவாரத்தை உண்டாக்கின. இடியின் உறுமலை ஒத்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி ஆகாயத்தையும், அனைத்துத் திசைகளையும் நிறைத்தது. பாண்டு மகனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த அடிக்கப்பட்டவையும், பிரகாசமானவையும், சுடர்விடுபவையுமான கணைகள் அனைத்துப் புறங்களுக்கும் சென்றன” {என்றான் சஞ்சயன்}.

குரு படையைச் சிதறடித்த அர்ஜுனன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 059ஈ-அர்ஜுனன் செய்த போர்; மகேந்திர ஆயுதத்தைப் பயன்படுத்திய அர்ஜுனன்; களத்தில் இரத்த ஆறைப் பாய வைத்த அர்ஜுனன்; மூன்றாம் நாள் போர் முடிவு…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது பெரும் படையுடனும், பீஷ்மர் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோருடனும் கூடிய குரு மன்னன் {துரியோதனன்}, கையில் கணையுடன், நட்சத்திரத்தை எரிப்பதற்கு உதித்த எரிகல் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்து சென்றான். அர்ஜுனனை நோக்கி பூரிஸ்ரவஸ், தங்கச் சிறகுகள் கொண்ட ஏழு பல்லங்களை {எறிவேல்களை} வீசினான். சல்லியன் ஒரு கதாயுதத்தையும், சந்தனுவின் மகன் {பீஷ்மர்} ஓர் ஈட்டியையும் வீசினர். அதன் பேரில், அர்ஜுனன், கணைகளைப் போல வேகத்துடன் வந்தவையும், பூரிஸ்ரவஸால் அடிக்கப்பட்டவையுமான அந்த ஏழு பல்லங்களை ஏழு கணைகளாலும், மற்றொரு கூரிய கணையால் துரியோதனனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட வேலையும் கலங்கடித்தான். சந்தனு மகனால் {பீஷ்மரால்} வீசப்பட்டதும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் ஈட்டியையும், மத்ரர்களின் ஆட்சியாளன் கரத்தால் வீசப்பட்ட கதாயுதத்தையும் (இன்னும்) இருகணைகளால் அந்த வீரன் {அர்ஜுனன்} துண்டித்தான்.

பிறகு, அளவிலா ஆற்றலைக் கொண்ட தனது அழகிய வில்லான காண்டீவத்தைப் பெரும் பலத்துடனும், இரு கரங்களாலும் வளைத்து, உரிய மந்திரங்களால் அற்புதம் நிறைந்ததும், பயங்கரமானதுமான மகேந்திர ஆயுதத்தை {மஹேந்திராஸ்திரத்தை} வானத்தில் தோன்றச் செய்தான். உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடம் மற்றும் பொன்மாலை தரித்தவனுமான அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்}, கணைகளின் பெரும் மழையை உற்பத்தி செய்வதும், சுடர்மிகும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்த வல்லமைமிக்க ஆயுதத்தை {மகேந்திராஸ்திரத்தைக்} கொண்டு மொத்த கௌரவப் படையையும் தடுத்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லில் இருந்த வந்த அந்தக் கணைகளானது,  {எதிரிகளின்} கரங்கள், விற்கள், கொடிமர நுனிகள், தேர்கள் ஆகியவற்றை வெட்டியபடி மன்னர்களின் உடல்களையும், எதிரியின் பெரும் யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் துளைத்தன.

திசைகளையும், துணைத் திசைகளையும் கூர்மையான அந்தப் பயங்கரக் கணைகளால் நிறைத்தவனும், கிரீடம், தங்கமாலை ஆகியவற்றைத் தரித்தவனுமானப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தன் காண்டீவத்தின் நாணொலியால் எதிரிகளின் இதயங்களை நடுங்கச் செய்தான். அச்சம் நிறைந்த அந்த ஆயுத வழியில் {போர்க்களத்தில்}, சங்கொலிகளும், துந்துபி ஒலிகளும், தேர்களின் ஆழ்ந்த சடசடப்பொலிகளும் காண்டீவத்தின் நாணொலியால் அமைதிப்படுத்தப்பட்டன {பேரொலியால் மறைக்கப்பட்டன}. அந்த நாணொலியைக் காண்டீவத்தின் ஒலி என உறுதிசெய்து கொண்ட மன்னன் விராடன், மனிதர்களில் இன்னும் சில வீரர்கள், துணிவு மிக்கப் பாஞ்சால மன்னன் துருபதன் ஆகிய அனைவரும் கட்டுப்படாத இதயங்களுடன் அந்த இடத்துக்கு முன்னேறினர். உமது போராளிகள் {கௌரவர்கள்} அனைவரும் அச்சத்தால் தாக்குண்டு, காண்டீவத்தின் நாணொலியை எங்கே கேட்டார்களோ அங்கேயே நின்றனர். அவர்களில் எவரும் எங்கிருந்த அந்த ஒலி கேட்டதோ அந்த இடத்திற்குச் செல்லத் துணியவில்லை.

மன்னர்களின் அந்த மோசமான படுகொலையில், வீரப் போராளிகளும், தேர்வீரர்களும், தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். பிரகாசமான பொற்கூடுகளைக் கொண்டவையும், (தங்கள் முதுகில்) மிக அழகிய கொடிகளைக் கொண்டவையுமான யானைகள், தங்கள் மேல் விழுந்த நாராசங்களால் பீடிக்கப்பட்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு உயிரிழந்து திடீரெனக் கீழே விழுந்தன. சிறகு படைத்த பெரும் கணைகள் மற்றும் கூரிய முனைகளைக் கொண்ட பல்லங்களால், யந்திரங்கள் மற்றும் இந்திரஜாலங்களின் [1] தலைமையில் நின்றிருந்த எண்ணிலடங்கா மன்னர்களின் கொடிமரங்கள், வேகமாகவும், பலமாகவும் அர்ஜுனனால் தாக்கப்பட்டு வெட்டிவீழ்த்தப்பட்டன.

காலாட்படை கூட்டங்களும், தேர்வீரர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து களத்தில் வேகமாக விழ்ந்தன, அல்லது, விரைவாகத் தங்கள் உயிரை விட்டன. அந்தப் பயங்கரச் சண்டையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் பெயரைக் கொண்ட அந்த வலிமைமிக்க ஆயுதத்தால் {மகேந்திராஸ்திரத்தால்}, தங்கள் கவசங்களும் உடல்களும் பிளக்கப்பட்ட வீரர்கள் பலராவர். பயங்கரமாவையும், கூர்மையானவையுமான அந்தத் தனது கணைகளால், கிரீடி {அர்ஜுனன்}, போராளிகளின் சிதைந்த உடல்களில் இருந்து பாய்ந்த இரத்தத்தை நீராகவும், அவற்றின் கொழுப்பை நுரையாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறை அங்குத் தோன்றச் செய்தான். அதன் ஓடை அகலமானதாகவும் மூர்க்கமானதாகவும் பாய்ந்தது.

அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்கள் அதன் கரைகளாயின. மனிதர்களின் மஜ்ஜைகளும், சதைகளும் கரையோரத்தின் சேறாகின. இயல்புக்கு மாறான பெரும் ராட்சசர்கள் (அதன் கரைகளில் நிற்கும் உயர்ந்த) மரங்களானார்கள். அதிக அளவில் இருந்த மயிர் நிறைந்த மண்டையோடுகளை அதில் மிதக்கும் கழிவுகளாகவும், குவியல்களாகக் கிடந்த மனித உடல்கள் அதன் மணற்கரைகளாகவும் கொண்ட அந்த ஓடை ஆயிரம் திசைகளில் பாய்ந்தன. எங்கும் பரவி கிடந்த கவசங்கள் அதன் கடினமான கூழாங்கற்களாயின. அதன் கரைகள் பெரும் எண்ணிக்கையிலான நரிகள், ஓநாய்கள், நாரைகள், கழுகுகள், ராட்சசக் கூட்டங்களாலும், கழுதைப் புலிகளாலும் மொய்க்கப்பட்டன. அர்ஜுனனின் கணைமாரியால் உண்டான அந்த ஆற்றை, எவரெல்லாம் உயிரோடு இருந்தார்களோ, அவர்கள், கொழுப்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவற்றால் ஆனதும்,  கொடூரத்தின் உருவமுமான அந்தப் பயங்கர நதியைப் பெரும் வைதரணீயைப் [2] போல (தம் மனதில்) கண்டார்கள்.

பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட குருக்கள் படையின் முதன்மை வீரர்களைக் கண்டவர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கரூஷர்கள், மத்ஸ்யர்கள், பாண்டவத் தரப்பின் போராளிகள் அனைவருமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் வெற்றியால் உற்சாகமடைந்து கௌரவ வீரர்களை அச்சுறுத்தும் வகையில் உரக்க முழக்கமிட்டார்கள். சிறு விலங்குகளின் கூட்டங்களை அச்சுறுத்தும் சிங்கத்தைப் போல (குரு) படையின் முதன்மையான போராளிகளை அச்சுறித்தியவனும், எதிரிகளுக்குப் பயங்கரமானவனுமான கிரீடி {அர்ஜுனன்}, {கௌரவப்} படைப்பிரிவின் வலிமைமிக்கத் தலைவர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தத் துருப்புகளைக் கொன்றதைக் கண்டு வெற்றியைக் குறிக்கும் வகையில் முழக்கமிட்டார்கள். காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் கூட மிகவும் மகிழ்ந்து சிங்க முழக்கம் செய்தார்கள்.

(அர்ஜுனனின்) ஆயுதங்களால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களான பீஷ்மர், துரோணர், துரியோதனன், பாஹ்லீகன் ஆகியோருடன் கூடிய குருக்கள், சூரியன் தனது கதிர்களை நிறுத்துவதைக் கண்டும், இந்திரனின் பெயரால் அழைக்கப்பட்டதும், தடுக்கப்பட முடியாததும், அச்சத்தைத் தரவல்லவதும், யுகத்தின் முடிவல் தோன்றும் விளைவுகளை உண்டாக்குவதுமான அந்த ஆயுதத்தைக் கண்டும், இரவு ஓய்வுக்காகத் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். பெரும் சாதனையை அடைந்தவனும், தனது எதிரிகளை நசுக்குவதால் புகழ்பெற்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சூரியன் சிவப்பு நிறம் கொள்வதையும், மாலை சந்தி தொடங்கியதையும் கண்டு, தனது வேலையை முடித்துக் கொண்டு, இரவு ஓய்வுக்காகத் தன் சகோதரர்களுடன் பாசறைக்குச் சென்றான்.

இருள் தொடங்குவதற்குச் சற்று முன்னர், குரு துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஒலி பெரியதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அனைவரும், “இன்றைய போரில் மட்டும் அர்ஜுனன் பத்தாயிரம் {10000} தேர்வீரர்களையும், எழுநூறு {700} யானைகளையும் கொன்றிருக்கிறான். மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகிய அனைவரும் கொல்லப்பட்டவிட்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்} அடைந்திருக்கும் சாதனையானது மகத்தானதாகும். அதை அடைய யாராலும் முடியாது” என்றனர்.

உலகின் வல்லமைமிக்கத் தேர்வீரனும், கோபம் நிறைந்த பிருதையின் மகனுமான கிரீடி {குந்தியின் மகனுமான அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான பெரும் பிற வீரர்களுடன் கூடிய சுருதாயுஸ், அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், துர்மர்ஷணன், சித்ரசேனன், துரோணர், கிருபர், சிந்துக்களின் ஆட்சியாளன், பாஹ்லீகன், பூரிஸ்ரவஸ், சல்லியன், சலன் ஆகியோர் மற்றும் பீஷ்மரையும் சேர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தனிப்பட்ட கரங்களின் ஆற்றலால் இன்று வீழ்த்தியிருக்கிறான்” என்றனர்.

இப்படிப் பேசிய உமது தரப்பின் வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் இருந்து தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர். கிரீடியிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட குரு படையின் போராளிகள் அனைவரும் ஆயிரக்கணக்கான கொள்ளிகளால் ஒளியூட்டப்பட்டவையும், எண்ணிலடங்கா தீவட்டிகளால் அழகூட்டப்பட்டவையுமான தங்கள் பாசறைக்குள் நுழைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர் – பீஷ்ம பர்வம் பகுதி – 060-பீஷ்மரின் தலைமையில் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட கௌரவ வீரர்கள்; இருதரப்பும் அமைத்துக் கொண்ட வியூகங்கள்; இருதரப்பு படையணிகளுக்கு இடையில் ஏற்பட்ட கடும் போர்; இடையில் புகுந்த அபிமன்யு; அபிமன்யுவைத் தவிர்த்த பீஷ்மர்; பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரவு கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவரும், பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவரும், பாரதப் படையின் தலைமையில் நின்றிருந்தவருமான உயர் ஆன்ம பீஷ்மர் எதிரியை {அர்ஜுனனை} நோக்கி முன்னேறினார். துரோணர், துரியோதனன், பாஹ்லீகன், துர்மர்ஷணன், சித்திரசேனன், வலிமைமிக்க ஜெயத்ரதன் மற்றும் பிற அரச வீரர்கள் ஆகியோர் பெரும்படைப்பிரிவுகளால் ஆதரிக்கப்பட்டு அனைத்துப் புறங்களிலும் அவனைச் {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டார்கள்.

பெரும் ஆற்றலும், சக்தியும் படைத்தவனும், வலிமைமிக்க அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்டவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல, அந்த அரசவீரர்களில் முதன்மையானோருக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான். படையணிகளுக்கு முன்னணியில் நின்ற யானைகளின் முதுகில் இருந்தவையும், சிவப்பு, மஞ்சள், கருப்பு, பளுப்பு போன்ற பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான பிரம்மாண்டக் கொடிகள் மிக அழகாகக் காற்றில் அசைவது தெரிந்தது.

பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்ட சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} படை, மின்னல் நிறைந்த மேகக் குவியல் போலவோ, மழைக்கால மேகங்களுடன் கூடிய ஆகாயம் போலவோ இருந்தது. போரை நோக்கமாகக் கொண்டதும், சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டதுமான குருக்களின் அந்தக் கடும் படை, கடலை நோக்கிப் பாயும் கங்கையின் கடும் ஊற்றைப் போல அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தது.

குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த உயரான்மா (அர்ஜுனன்), பல்வேறு வகைகளிலான படைகளைக் கொண்டதும், எண்ணிலடங்கா யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவற்றைத் தன் சிறகில் கொண்டதும், பெரும் மேகத்திரளுக்கு ஒப்பானதுமான அந்த {கௌரவ} அணிவகுப்பை [1] {வியூகத்தைத்} {அதே கருட வியூகமாக இருக்க வேண்டும்} தூரத்தில் இருந்தே கண்டான். மனிதர்களில் காளையான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, உயர்ந்த கொடியைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமானத் தன் தேரில், தனது (தனிப்பட்ட) படைப்பிரிவின் தலைமையில் நின்று, வலிமைமிக்க {பிற} படை சூழ, எதிரிப்படை முழுவதையும் எதிர்த்து முன்னேறினான்.

அற்புதக் கொடியுடன் கூடியவனும், (விலையுயர்ந்த மூடியால்) தேர்க்கால் மறைக்கப்பட்ட தேருடன் கூடியவனும், அந்தப் போரில் தனது தேரோட்டியாக இருந்த யது குலக் காளையின் {கிருஷ்ணனின்} துணையுடன் கூடியவனுமான அந்தக் குரங்குக் கொடியோனை (வீரனை) {அர்ஜுனனைக்} கண்டு, உமது மகன்களுடன் கூடிய கௌரவர்கள் அனைவரும் திகைப்பில் நிறைந்தனர். உலகத்தின் வலிமையான தேர்வீரனால் பாதுகாக்கப்பட்டதும், ஆயுதங்களை உயர்த்தி வைத்திருந்ததும், ஒவ்வொரு மூலையிலும் நாலாயிரம் {4000} யானைகளைக் கொண்டதுமான அந்தச் சிறந்த அணிவகுப்பை {வியூகத்தை} உமது படை கண்டது.

குருக்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் முந்தைய நாள் அமைக்கப்பட்டதும், மனிதர்கள் இதற்கு முன் கேள்விப்படாததும், காணாததும் போன்ற அந்த அணிவகுப்பே இன்றும் (பாண்டவர்களால்) அமைக்கப்பட்டது. அப்போது போர்க்களத்தில் ஆயிரம் பேரிகைககள் ஓங்கி அடிக்கப்பட்டன. படைப்பிரிவுகள் அனைத்தில் இருந்தும் எழும்பிய சங்கொலிகள், தூரிய ஒலிகள் மற்றும் சிங்க முழக்கங்கள் அங்கே பேரொலியை ஏற்படுத்தின.

நாண்களில் கணைகளைப் பொருத்திய துணிவுமிக்கப் போர்வீரர்களால் வளைக்கப்பட்ட (எண்ணிலா) விற்களின் உரத்த நாணொலிகளும், சங்குகளின் முழக்கங்களும், பேரிகைகள் மற்றும் பணவங்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தின {மறைத்து ஓங்கி ஒலித்தன}. சங்கொலிகளால் நிறைந்த மொத்த ஆகாயத்திலும் பூமியின் புழுதி பரவிக் காண்பதற்கு அற்புதமாக இருந்தது. புழுதியால் நிறைந்த வானம் தலைக்கு மேல் பெரிய கூடாரம் அமைக்கப்பட்டதைப் போலத்தெரிந்தது. அந்தக் கூடாரத்தைக் கண்ட துணிவுமிக்கப் போர்வீரர்கள் அனைவரும் (போரிடுவதற்காக) வேகமாக விரைந்தனர்.

தேர்வீரர்களால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகள், குதிரைகள், தேர்கள், கொடிகளுடன் வீழ்த்தப்பட்டார்கள். யானைகளால் தாக்கப்பட்ட யானைகளும், காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட காலாட்படை வீரர்களும் அப்படியே விழுந்தனர். வேல்கள் மற்றும் வாள்களுடன் விரைந்த குதிரைவீரர்களால் தாக்கப்பட்டவர்களும், விரைந்து வந்தவர்களுமான குதிரைவீரர்கள், அச்சம்நிறைந்த முகங்களுடன் கீழே விழுந்தனர். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.

தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவையுமான அற்புதக் கேடயங்கள், போர்க்கோடரிகளாலும், வேல்களாலும், வாட்களாலும் (தாக்கப்பட்டு) களத்தில் விழுந்தன. யானைகளின் தந்தங்களாலும், {அவற்றின்} வலிய துதிக்கைகளாலும் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட பல தேர்வீரர்கள், தங்கள் தேரோட்டிகளோடு சேர்ந்து விழுந்தனர். தேர்வீரர்களில் காளைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்களில் காளைகளான பலர் தங்கள் கணைகளுடன் தரையில் விழுந்தனர்.

யானைகளின் தந்தங்களாலும், பிற அங்கங்களாலும் தாக்கப்பட்டோ, படையணிகளின் நெருக்கத்தில் விரையும் அந்தப் பெரும் உயிரினங்களின் {யானைகளின்} வேகத்தால் நசுக்கப்பட்டோ ஓலமிடும் குதிரைவீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் ஓலங்களைக் கேட்டே கூட அந்தப் போர்க்களத்தில் பல மனிதர்கள் விழுந்தனர். குதிரைப்படை மற்றும் காலாட்படைவீரர்கள் வீழ்ந்து, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியன அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் சூழ இருந்த பீஷ்மர், குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} கண்டார்.

ஐந்து {5} பனைமரங்களுடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டவரும், பனைமரக் கொடி வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, வேகமான, அற்புத சக்தி கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், தன் பலமிக்க ஆயுதங்களின் சக்தியால் மின்னலைப் போல ஒளிர்வதுமான தேரில் இருந்த அந்தக் கிரீடம் தரித்தவனை {கிரீடியை [அ] அர்ஜுனனை} எதிர்த்து விரைந்து சென்றார்.

இந்திரனைப் போன்றே இருந்த அந்த இந்திரனின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர், சல்லியன், விவிம்சதி, துரியோதனன் மற்றும் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} ஆகியோர் தலைமையிலான (பிற) வீரர்களும் விரைந்தனர். ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனும், அழகிய தங்கக் கவசம் தரித்தவனும், அர்ஜுனனின் மகனுமான வீர அபிமன்யு, படையணிகளில் இருந்து விரைந்து வெளிப்பட்டு, {அர்ஜுனனை எதிர்த்து வந்த} அவ்வீரர்களை எதிர்த்து விரைந்து முன்னேறினான். தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களைச் செய்பவனான அந்தக் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, பெரும் பலமிக்க அவ்வீரர்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, வேள்விப்பீடத்தில் இருப்பவனும், மந்திரங்களால் எழுப்பப்படுபவனும், சுடர்விடும் தழல்களைக் கொண்டவனுமான புகழத்தக்க அக்னியைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

எதிரிகளின் இரத்தத்தை நீராகக் கொண்டு பாயும் ஆறை அந்தப் போரில் உண்டாக்கிய வலிய சக்தி கொண்ட பீஷ்மர், அப்போது, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} விரைவாகத் தவிர்த்துவிட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} நேரடியாக மோதினார். கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அற்புத வடிவத்தையும், இடிமுழக்கம் போன்ற உரத்த நாணொலியையும் கொண்ட தனது காண்டீவத்தைக் கொண்டு கணைமாரியைப் பொழிந்து {பீஷ்மரால் ஏவப்பட்ட} அந்த வலிய ஆயுதமழையைக் கலங்கடித்தான்.

குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனும், தாங்கிக் கொள்ள இயலா காரியங்களைச் செய்பவனுமான அந்த உயர் ஆன்ம வீரன் {அர்ஜுனன்}, வில்லைத்தாங்கும் அனைவரிலும் சிறந்தவரான பீஷ்மர் மீது கூரிய முனை கொண்ட கணைகள் மற்றும் பளபளப்பான நாராசங்களைப் பதிலுக்குப் பொழிந்தான். குரங்குகளின் இளவரசனைத் {அனுமனைத்} தனது கொடியில் கொண்டவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்டதும், இரவின் இருளைப் போக்கி பகலை உண்டாக்குபவனைப் {சூரியனைப்} போன்ற பீஷ்மரால் எதிர்க்கப்பட்டதும், விடுக்கப்பட்டதுமான வலிமைமிக்க ஆயுத மழையை உமது துருப்புகள் கண்டன. உறுதியாக நடைபெற்றதும், பீஷ்மர் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் விற்களுடைய பயங்கர நாணொலிகளால் {அவற்றின் தனித்தன்மையால்} வேறுபட்டுத் தெரிந்ததும், மனிதர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்டதுமான அந்தத் தனிப்போரை குருக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் அங்கே இருந்த அனைவரும் கண்டனர்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனின் பத்து பெயர்கள்:அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான். -செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.

சாம்யமணியின் மகனும், திருஷ்டத்யும்னனும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 061- அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஐவர்; அபிமன்யு புரிந்த அற்புதப் போர்; தன் மகனைக் கண்டு பெருமையால் கர்ஜித்த அர்ஜுனன்; அபிமன்யுவுக்கும், அர்ஜுனனுக்கும் உதவி புரிய நடுவில் புகுந்த திருஷ்டத்யும்னன்; சாம்யமணியின் மகனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் மூண்ட போர்; சாம்யமணியின் மகனைக் கொன்ற திருஷ்டத்யும்னனன்; திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்த சாம்யமணியும், சல்யனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பூரிஸ்ரவஸ், [1], சித்திரசேனன், சாம்யமணியின் [2] மகன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்} போரிட்டனர். மனிதர்களில் புலிகளான அந்த ஐவருடன் தனியாகப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, பெரும் சக்தி கொண்ட அவனை {அபிமன்யுவை}, ஐந்து யானைகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த ஓர் இளம் சிங்கத்தைப் போல மக்கள் கண்டனர்.

இலக்கில் துல்லியம், ஆற்றல், கரத்தின் வேகம், ஆயுத அறிவு ஆகியவற்றில் அவர்களில் ஒருவரும் *கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகனுக்கு {அபிமன்யுவுக்கு} ஈடாக இல்லை. இப்படிப் போரிடுபவனும், போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான தனது மகனைக் {அபிமன்யுவைக்} கண்ட பார்த்தன் {அர்ஜுனன்} சிம்ம முழக்கம் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பேரன் {அபிமன்யு}, உமது {கௌரவப்} படையைத் துன்புறுத்துவதைக் கண்ட உமது வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டார்கள்.

எதிரிகளைத் தாக்குபவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஆற்றல் மற்றும் பலத்தை மட்டுமே நம்பி, உற்சாகமிழக்காத இதயத்துடன் தார்தராஷ்டிரப் படையை எதிர்த்து முன்னேறினான். அந்த மோதலில் எதிரியுடன் போரிட்ட போது, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அவனது {அபிமன்யுவின்} வலிமையான வில், அடிப்பதற்கான நிலையில் எப்போதும் வளைந்தே காணப்பட்டது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஒரு கணையாலும், சல்லியனை ஐந்தாலும் துளைத்த அவன் {அபிமன்யு}, எட்டு கணைகளால் சாம்யமணியின் மகனுடைய கொடியை வீழ்த்தினான். சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவசால்} தன் மீது வீசப்பட்டதும், பாம்புக்கு ஒப்பானதும், தங்கப்பிடி கொண்டதுமான வலிமைமிக்க ஈட்டியைக் கூர்முனை கொண்ட மற்றொரு கணையால் அடித்தான்.

சல்லியனின் பார்வைக்கு எதிரிலேயே, அவனது நூற்றுக்கணக்கான பயங்கரக் கணைகளையும் கலங்கடித்த அந்த அர்ஜுனனின் வாரிசு {அபிமன்யு}, அவனது {சல்லியனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். அதன்பேரில், கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு} வெளிப்படுத்திய கரப் பலத்தின் காரணமாக அச்சத்தால் பீடிக்கப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாம்யமணி மற்றும் சலன் ஆகியோரால் அவனுக்கு {அபிமன்யுவுக்கு} முன்பு நிற்க முடியவில்லை.

அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவர்களும், ஆயுதங்களின் அறிவியலை நன்கு அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட இயலாதவர்களுமான இருப்பத்தைந்தாயிரம் {25,000} எண்ணிக்கையிலான திரிகார்த்தர்கள், மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோர் கிரீடி {அர்ஜுனன்}, அவனது மகன் {அபிமன்யு} ஆகிய இருவரையும் கொல்வதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை வீழ்த்துபவனும், பாண்டவப் படையின் தலைவனுமான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, (எதிரிகளால் இப்படிச்) சூழப்பட்ட தந்தை {அர்ஜுனன்} மற்றும் மகன் {அபிமன்யு} ஆகியோரின் தேர்களைக் கண்டான்.

ஆயிரக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும், நூறாயிரம் {இலட்சக்} கணக்கான குதிரைப்படை மற்றும் காலாட்படைகளாலும் ஆதரிக்கப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கோபத்துடன் தனது வில்லை வளைத்தவாறு, மத்ரர்கள், கேகயர்கள் ஆகியோரின் படைப்பிரிவுகளை எதிர்த்துத் தனது துருப்புகளைத் தலைமைதாங்கி அழைத்துச் சென்றான். புகழ்பெற்றவனும், உறுதியான வில்லாளியுமான அவனால் {திருஷ்டத்யும்னனால்} பாதுகாக்கப்பட்டதும், தேர்கள், யானைகள், குதிரைப்படை ஆகியவற்றைக் கொண்டதுமான (பாண்டவப் படையின்) அந்தப் படைப்பிரிவு  முன்னேறிச் சென்றபோது பிரகாசமாகத் தெரிந்தது.

பாஞ்சாலக் குலத்தைத் தழைக்க வைப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்} அர்ஜுனனை நோக்கி முன்னேறிச் சென்ற போது, மூன்று கணைகளால் சரத்வானின் மகனுடைய {கிருபரின்} தோள் பூட்டில் தாக்கினான். பத்து கூரிய கணைகளால் மத்ரர்களைத் துளைத்த {கொன்ற} அவன் {திருஷ்டத்யும்னன்}, கிருதவர்மனின் பின்புறத்தைக் காத்தவனையும் விரைவாகக் கொன்றான். எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {திருஷ்டத்யும்னன்}, நாராசம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால், உயர் ஆன்ம பௌரவனுடைய வாரிசான தமனனையும் கொன்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சாம்யமணியின் மகன்,  போரில் வீழ்த்தப்பட முடியாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} பத்து கணைகளால் துளைத்து, மேலும் பத்து கணைகளால் அவனது {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியையும் துளைத்தான். (இப்படி) கடுமையாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கடைவாயை நாவால் நக்கியபடித் தன் எதிரியின் {சாம்யமணியின் மகனுடைய} வில்லை மிகக்கூரிய ஒரு பல்லத்தைக் {அகன்ற தலை கொண்ட கணை} கொண்டு அறுத்தான்.

விரைவில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தனது எதிரியை {சாம்யமணியின் மகனை} இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது குதிரைகளையும், அவனது சிறகுகளை {இருபக்கங்களைக்} காக்கும் இருவரையும் கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரைகளை இழந்த அந்தத் தேரில் நின்று கொண்டிருந்த சாம்யமணியின் மகன், புகழ்பெற்ற பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். அப்போது, எஃகினால் ஆன சிறந்த வகையிலானதும், வாள் ஒன்றை எடுத்துக் கொண்ட சாம்யமணியின் மகன் நடந்தே சென்று, தேரில் இருக்கும் துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அணுகினான்.

வானத்தில் இருந்து விழுந்த பாம்பைப் போலவும், தன்னை நோக்கி வரும் ஓர் அலையைப் போலவும் வந்து கொண்டிருந்த அவனை {சாம்யமணியின் மகனை} அந்தப் பிருஷத குலத் திருஷ்டத்யும்னனும் கண்டான்; பாண்டவர்களும், படைவீரர்களும் கண்டார்கள். சூரியனைப் போலத் தெரிந்த அவன் {சாம்யமணியின் மகன்} தனது வாளைச் சுழற்றியபடி, ஒரு மதங்கொண்ட யானையைப் போல நடந்து சென்றான். சினத்தால் தூண்டப்பட்ட பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கி முன்னேறி வருபவனும், கூர்முனை கொண்ட வாளையும், கேடயத்தையும் தரித்திருப்பவனும், தன் எதிரியுடைய தேரின் மிக அருகே வந்தவனுமான சாம்யமணியின் மகனுடைய தலையை நொறுக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் {சாம்யணியின் மகன்} உயிரற்று கீழே விழும்போது சுடர்மிகும் வாள் மற்றும் கேடயத்தில் கொண்டிருந்த பிடி தளர பூமியில் தன் உடலைச் சாய்த்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு தனது எதிரியைக் கொன்ற பாஞ்சால மன்னனின் உயர் ஆன்ம மகன் {திருஷ்டத்யும்னன்} பெரும்புகழை வென்றான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த இளவரசன் {சாம்யமணியின் மகன்} (இப்படிக்) கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் இருந்து “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறல்கள் எழுந்தன.

தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்டு சினம் தூண்டப்பட்ட சாம்யமணி, போரில் வீழ்த்தப்பட இயலாதவனான பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். குரு மற்றும் பாண்டவப் படைகளைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்த இளவரசர்கள் இருவரும் போரில் ஈடுபடுவதைக் கண்டார்கள்.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சாம்யமணி, வலிமைமிக்க யானையை அங்குசங்களால் துளைப்பது போல, மூன்று கணைகளைக் கொண்டு, அந்தப் பிருஷத மகனை {திருஷ்டத்யும்னனைத்} தாக்கினான். அதே போல, சபைகளின் ரத்தினமான சல்யனும் சினத்தால் தூண்டப்பட்டு, பிருஷதனின் வீரமகனை {திருஷ்டத்யும்னனை} மார்பில் தாக்கினான். பிறகு (மற்றுமொரு) போர் (அங்கே) தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

பீமசேனனின் ருத்ரத்தாண்டவம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 062-திருதராஷ்டிரனின் வருத்தம்; சல்லியனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நடைபெற்ற போரை வர்ணித்த சஞ்சயன்; அபிமன்யு இடையில் புகுந்தது; ஒருபுறம் பத்துப் பேரும், மறுபுறம் இன்னும் பத்துப் பேரும் இருந்து போரிட்டது; மகத யானைகளைக் கொன்ற பீமன்; அபிமன்யுவுக்கும் மகதமன்னனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மகத மன்னனின் தலையைக் கொய்த அபிமன்யு; பீமனால் யானைகள் அடைந்த துன்பம்; ஊழிக்கால ருத்திரனைப் போல இருந்த பீமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகனின் {துரியோதனனின்} படைகள் அனைத்தும், பாண்டவப்படையால் தொடர்ந்து கொல்லப்படுவதால், ஓ! சஞ்சயா, உழைப்பைவிட {முயற்சியைவிட} விதியே மேன்மையானது என நான் கருதுகிறேன். ஓ! சூதா {சஞ்சயா}, எனது துருப்புகள் கொல்லப்படுவதாகவே நீ எப்போதும் சொல்கிறாய். மேலும், பாண்டவர்களைக் கொல்லப்படாதவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் எப்போதும் சொல்கிறாய்.

உண்மையில், ஓ! சஞ்சயா, என்னுடையவர்களை ஆண்மையற்றவர்களாகவும், தங்கள் சக்தியைச் சிறப்பாகப் பயன்படுத்தினாலும், வெற்றிக்காகக் கடினமாக முயற்சித்தாலும் அவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், வீழ்த்தப்படுவதாகவும், கொல்லப்பட்டதாகவும் நீ சொல்கிறாய். பாண்டவர்கள் வெற்றி அடைவதாகவும், என்னவர்கள் மேலும் மேலும் பலவீனமடைந்ததாகவுமே எப்போதும் நீ என்னிடம் சொல்கிறாய். ஓ! குழந்தாய் {சஞ்சயா}, துரியோதனனின் செயல்களால், தாங்கிக் கொள்ள முடியாததும், எரிச்சலூட்டுவதுமான எண்ணற்ற துயரங்களை நான் இடவிடமால் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஓ! சஞ்சயா, போரில் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தவும், எனது மகன்கள் வெற்றியை அடையவும் எந்த வழியையும் நான் காணவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரும் தீமை உம்மில் இருந்தே வந்திருக்கிறது. மனிதர்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியவற்றின் படுகொலையை இப்போது பொறுமையாகக் கேட்பீராக.

சல்லியனின் ஒன்பது கணைகளால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், பதிலுக்கு எஃகால் ஆன பல கணைகளைக் கொண்டு மத்ர ஆட்சியாளனைப் {சல்லியனைப்} பீடித்தான். சபைகளின் ரத்தினமான சல்லியனை விரைவாகத் தடுத்த திருஷ்டத்யும்னனின் அற்புதமான ஆற்றலை நாங்கள் கண்டோம். அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தப் போர் குறுகிய காலமே நீடித்தது. கோபத்துடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள் ஓய்வதை ஒருக்கணம் கூட யாராலும் காணமுடியவில்லை.

அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்முனையுடனும், அற்புத திடத்துடனும் கூடிய ஒரு பல்லத்தை {அகன்ற தலை கொண்ட கணையைக்} கொண்டு திருஷ்டத்யும்னனின் வில்லைச் சல்லியன் அறுத்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, மழைக்காலங்களில் மலையின் சாரலில் தங்கள் துளிகளைப் பொழியும் மழைநிறைந்த மேகங்களைப் போல, கணை மழையால் அவனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான். இப்படித் திருஷ்டத்யும்னன் பீடிக்கப்பட்ட போது, சினம் தூண்டப்பட்ட அபிமன்யு, மத்ர ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} கோபம்நிறைந்த மகன் {அபிமன்யு} மத்ர ஆட்சியாளனின் தேரை அடைந்து (அம்பு ஏவும் தொலைவை அடைந்து} மூன்று கணைகளால் அர்த்தாயனியைத் [1] {சல்லியனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்க்க விரும்பிய உமது படையின் போர்வீரர்கள், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

துரியோதனன், விகர்ணன், துச்சாசனன், விவிம்சதி, துர்மர்ஷணன், துஸ்ஸஹன், சித்திரசேனன், துர்முகன், சத்யவிரதன், புருமித்ரன் ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைப் பாதுகாத்தபடி அங்கேயே நிலைநின்றனர். அப்போது, கோபம் தூண்டப்பட்டவனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் ஐந்து மகன்கள், அபிமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகை ஆயுதங்களால் தங்களைத் தாக்கிக் கொண்டிருந்த திருதராஷ்டிரப் படையின் அந்தப் பத்து வீரர்களை எதிர்த்தனர்.

உமது தீயக் கொள்கையின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பிய அவர்கள், மற்றவர்களை அணுகித் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அச்சந்தரும் அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பத்து தேர்வீரர்களும், பிற பத்து வீரர்களுடன் போரில் ஈடுபட்ட போது, உமது படை மற்றும் எதிரியின் படை ஆகிய இரண்டையும் சேர்ந்த மற்ற தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாகவே நின்றனர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவிக் கொண்டும், ஒருவரை நோக்கி ஒருவர் முழக்கமிட்டபடியும், மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். நெஞ்சங்களில் உதித்த கோபத்துடன் ஒருவரை ஒருவர் கொல்லவிரும்பிய அவர்கள், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்துக் கடுமையாக முழக்கமிட்டனர். தங்களுக்குள் பொறாமை கொண்ட அந்த உறவினர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் ஒன்றுகூடி வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன் அந்தப் போரில் நான்கு கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்தான் என்பதைச் சொல்ல அற்புதமாகத்தான் இருக்கிறது [2]. துர்மர்ஷணன் இருபது கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும், துர்முகன் ஒன்பதாலும், துஸ்ஸஹன் ஏழாலும், விவிம்சதி ஐந்தாலும், துச்சாசனன் மூன்று கணைகளாலும் அவனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். அப்போது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளால் துளைத்துத் தனது கர வேகத்தை வெளிப்படுத்தினான்.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியவிரதன், புருமித்திரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அபிமன்யு துளைத்தான். தங்கள் தாய்க்கு மகிழ்ச்சியை அளிப்பவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, கூரிய கணை மழையால் தங்கள் மாமனை {சல்லியனை} மறைத்தார்கள். இவை அனைத்தும் காண அற்புதமாக இருந்தன. அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், தங்கள் மாமனின் {சல்லியனின்} செயல்களுக்குப் பதிலடி கொடுக்க விரும்புபவர்களுமான தன் மருமகன்கள் இருவரையும் சல்லியன் கணைகளால் மறைத்தான். எனினும் அந்த மாத்ரியின் மகன்கள் நடுங்கவில்லை.

துரியோதனனைக் கண்டவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்கப் பீமசேனன், போருக்கு ஒரு முடிவைக் கொண்டு வர விரும்பித் தன் கதாயுதத்தை எடுத்தான். உயர்த்திப் பிடிக்கப்பட்ட கதாயுதத்துடன் கூடியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிகரங்களுடன் கூடிய கயிலாய மலையைப் போன்றவனுமான பீமசேனனைக் கண்ட உமது மகன்கள் அச்சத்தால் ஓடினார்கள். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், பெரும் சுறுசுறுப்புடையவையும், பத்தாயிரம் {10000} யானைகளைக் கொண்டவையுமான மகதப் படைப்பிரிவை ஏவினான். அந்த யானைப் படையின் துணையுடனும், மகத ஆட்சியாளனை {?} [3] தனக்கு முன்னிலையில் நிறுத்திக் கொண்டும், பீமசேனனை நோக்கி மன்னன் துரியோதனன் முன்னேறினான்.

தன்னை நோக்கி முன்னேறும் அந்த யானைப்படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் தேரில் இருந்து கீழே குதித்து, சிங்கத்தைப் போல உரக்க முழக்கமிட்டான். பெரும் கனமும், கடுமையான வலிமையும் கொண்ட அந்தப் பலமிக்கக் கதாயுதத்துடன் கூடிய அவன் {பீமன்}, வாயை அகல விரித்திருக்கும் அந்தகனைப் போல அந்த யானைப்படையை நோக்கி விரைந்தான். பெரும் பலம்பொருந்தியவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், தானவப் படைக்கு மத்தியில் விருத்திரனைக் கொன்றவனை {இந்திரனைப்} போல, தன் காதாயுதத்தால் யானைகளைக் கொன்றபடி களத்தில் திரிந்தான். மனத்தையும், இதயத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்யும் பீமனுடைய உரத்த முழக்கங்களால், வெருண்ட {நெருங்கிப் பதுங்கிய} யானைகள் தங்கள் அசையும் சக்திகள் அனைத்தையும் இழந்தன.

திரௌபதியின் மகன்கள், வலிய தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நகுலன் மற்றும் சகாதேவன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் பீமனின் பின்புறத்தைப் பாதுகாத்தபடி, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழிந்து அனைவரையும் தடுத்தனர். யானையின் முதுகில் இருந்து போரிடும் தங்கள் எதிரிகளின் தலைகளை, அந்தப் பாண்டவவீரர்கள், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூரிய முனை கொண்டவைகளும், பல்வேறு வடிவங்களிலானவையுமான கணைகளால் [4] வெட்டி வீழ்த்தினர். (யானைவீரர்களின்) தலைகளும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அங்குசங்கள் பிடித்த கைகளும் விழுவது ஒரு கல்மழையை ஒத்திருந்தது. தாங்கள் செலுத்திய விலங்குகளின் {யானைகளின்} கழுத்தில் இருந்த யானைவீரர்களின் தலையற்ற உடல்கள், மலைக்குன்றுகளில் இருக்கும் தலையற்ற மரங்களைப் போலத் தெரிந்தன.

அப்போது அந்தப் போரில் மகதர்களின் ஆட்சியாளன் {?}, ஐராவதம் போன்றிருந்த தன் யானையைச் சுபத்திரைமகனின் {அபிமன்யுவின்} தேரை நோக்கிச் செலுத்தினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க யானையைக் கண்டு, ஒரே கணையால் அதைக் கொன்றான். இப்படித் தனது யானையை மகதர்களின் ஆட்சியாளன் இழந்த போது, பகை நகரங்களை வெல்பவனான அந்தக் கிருஷ்ணனின் {அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, வெள்ளிச் சிறகுகள் கொண்ட ஒரு பல்லத்தினால் அந்த {மகத} மன்னனின் தலையைக் கொய்தான்.

அந்த யானைப் படைக்குள் ஊடுருவிய பாண்டுவின் மகனான பீமசேனன், மலைகளை நசுக்கும் இந்திரனைப் போலத் தன்னைச் சுற்றிலும் இருந்த அந்த விலங்குகளை {யானைகளை} நசுக்கியபடி களத்தில் திரியத் தொடங்கினான். இடியினால் பிளக்கப்படும் மலைகளைப் போல, (தன் கதாயுதத்தின்) ஒரே அடியில், ஒவ்வொரு யானையையும் அந்தப் போரில் பீமசேனன் கொல்வதை நாங்கள் கண்டோம். மலைகளைப் போன்று பெரிதாக இருந்த பல யானைகள், தந்தங்கள் உடைக்கப்பட்டோ, நெற்றிப்பொட்டு, எலும்புகள், முதுகுகள் அல்லது கும்பம் {முன் மண்டை} உடைக்கப்பட்டோ கொல்லப்பட்டன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் அங்கே கிடந்த பிற {யானைகள்}, வாயில் நுரை தள்ளி உயிரை விட்டன. வலிமைமிக்கப் பல யானைகள் முற்றிலும் தங்கள் கும்பம் நொறுக்கப்பட்டுப் பெருமளவில் உதிரத்தைக் கக்கின. இன்னும் சில அச்சத்தால் சிறு குன்றுகளைப் போலத் தங்களை அந்தப் பூமியில் கிடத்திக் கொண்டன. (யானைகளின்) கொழுப்பு, உதிரம் ஆகியவை பூசப்பட்டு, அவற்றின் {யானைகளின்} மஜ்ஜையில் கிட்டத்தட்ட குளித்திருந்த பீமன், அந்தகனைப் போலக் கையில் கதாயுதத்துடன் களத்தில் திரிந்தான்.

யானைகளின் உதிரத்தால் நனைத்திருந்த தனது கதாயுதத்தைச் சுழற்றிய விருகோதரன் {பீமன்}, பிநாகையைத் தரித்திருக்கும் பிநாகைதாங்கியைப் போல {சிவனைப் போல} பயங்கரமானவனாகவும், பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். கோபக்கார பீமனால் (இப்படி) நசுக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், பெரிதும் பீடிக்கப்பட்டு, தங்கள் படையணிகளையே நசுக்கிய படி திடீரென ஓடத் தொடங்கின. சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தலைமை தாங்கப்பட்ட இந்த வலிமைமிக்க வில்லாளிகளும், தேர்வீரர்களும், வஜ்ரதாங்கியைப் {இந்திரனைப்} பாதுகாக்கும் தேவர்களைப் போல, யானைகளின் உதிரத்தால் நனைந்த தன் பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த வீரனை {பீமனை} (அவ்வளவு நேரமும்) பாதுகாத்தனர். பயங்கர ஆன்மா கொண்ட பீமசேனனைக் காண அந்த அந்தகனைப் போல இருந்தான்.

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் அனைத்துப் புறங்களிலும் தன் பலத்தைச் செலுத்திய பீமசேனனை, (யுக முடிவின் போது) கூத்தாடும் சங்கரனைப் போல நாங்கள் கண்டோம். யமனின் தண்டாயுதத்தைப் போலக் கனமானதும், கடினமானதும், ஒலிபெருக்குவதுமான அவனது {பீமனது} கதாயுதம், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற ஒலியைக் கொண்டிருந்தது. மஜ்ஜைகளாலும், மயிர்களாலும் பூசப்பட்டிருந்ததும், கோரமானதுமான அவனது கதாயுதம், அனைத்து உயிர்களையும் அழிக்கும் கோபம் மிகுந்த ருத்திரனின் {சிவனின்} பிநாகையைப் போலவும் இருந்தது.

கால்நடைக்கூட்டத்தைத் தனது கோலால் தண்டிக்கும் மந்தையாளனைப் போலவே, பீமனும், தன் கதாயுதத்தால் அந்த யானைப்படையை அடித்தான். பீமனின் கதாயுதத்தாலும், (அவனுக்குப் பின்பு இருந்து பாதுகாத்தவர்கள் அடித்த) கணைகளாலும் இப்படிக் கொல்லப்பட்ட அந்த யானைகள் அனைத்துப் புறங்களிலும் ஓடி தங்கள் சொந்தப் படையையே நசுக்கின. அதன் பிறகு, மேகத்திரளை விரட்டும் வலிமைமிக்கக் காற்றைப் போல அந்தக் களத்தில் இருந்து யானைகளை விரட்டிய பீமன், சுடலையில் நிற்கும் திரிசூலந்தாங்கியைப் {சிவனைப்} போல அங்கே நின்றான்.

பகைவரைத் தடுத்த பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 063-பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த யானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.

தேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற்றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.

அச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

எல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.

காற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழுத்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.

பயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.

இப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.

பயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.

வாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.

அந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் மகன்கள் எட்டு பேரைக் கொன்ற பீமன்! – பீஷ்ம பர்வம் பகுதி – 064அ-சாத்யகிக்கும், பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடந்த மோதல்; துரியோதனன்  தலைமையிலான திருதராஷ்டிர மகன்களுடன் பீமன் செய்த போர்; திருதராஷ்டிரன் மகன்கள் எண்மரைக் கொன்ற பீமன்; பீஷ்மரின்  கட்டளை ….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட பூரிஸ்ரவஸ், பெரும் யானையை அங்குசத்தால் துளைக்கும் யானைப்பாகனைப் போல, சாத்யகியை ஒன்பது கணைகளால் துளைத்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகியும், அனைத்துத் துருப்புகளின் பார்வையிலேயே, அந்தக் கௌரவ வீரனை {பூரிஸ்ரவசை} ஒன்பது கணைகளால் துளைத்தான். அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிப் போராடிக் கொண்டிருந்த சோமதத்தன் மகனைச் {பூரிஸ்ரவசைத்} தனது தம்பிகளுடன் சேர்ந்து சூழ்ந்து கொண்டான். அதே போலப் பெரும் சக்தி வாய்ந்த பாண்டவர்களும், விரைந்து சாத்யகியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைகளை அவனைச் {சாத்யகியைச்} சுற்றி அமைத்துக் கொண்டனர்.

கோபம் தூண்டப்பட்டவனும், உயர்த்திய கதாயுதத்துடன் கூடியவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது மகன்கள் அனைவருடனும் மோதினான். பல்லாயிரம் தேர்களுடையவனும், கோபமும், பொறாமையும் கொண்டவனுமான உமது மகன் நந்தகன், கல்லில் கூர்தீட்டப்பட்டுக் கூர் முனைகளைக் கொண்டிருந்தவையும், கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைச் சிறகுகளாகக் கொண்டவையுமான {ஆறு} கணைகளால் பெரும் பலம் வாய்ந்த பீமசேனனைத் தாக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட துரியோதனன்,  ஒன்பது {9} கணைகளால் பீமசேனனை மார்பில் அடித்தான். அப்போது, வலிய கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்டவனான பீமன் தனது அற்புதத் தேரில் ஏறி (தனது தேரோட்டியான) விசோகனிடம், “துணிவுமிக்கவர்களும், வலிமையானவர்களும், பெரும் தேர் வீரர்களுமான அந்தத் திருதராஷ்டிர மகன்கள் அனைவரும் என் மீது பெருங்கோபம் கொண்டு, என்னைப் போரில் கொல்ல விரும்புகின்றனர். இவர்கள் அனைவரையும் நான் உன் பார்வைக்கு எதிராகவே கொல்வேன் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! தேரோட்டி {விசோகா}, என் குதிரைகளைக் கவனத்துடன் வழிநடத்துவாயாக” என்றான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கூர்முனைக் கணைகளால் உமது மகனைத் {துரியோதனனைத்} துளைத்தான்.

மேலும் அவன் {பீமன்}, மூன்று கணைகளால் நந்தகனை நடு மார்பில் துளைத்தான். அப்போது ஆறு கணைகளால் வலிமைமிக்கப் பீமனைத் துளைத்த துரியோதனன், வேறு மூன்று கூரிய கணைகளால் விசோகனைத் துளைத்தான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நகைத்துக் கொண்டே வேறு மூன்று கூரிய கணைகளால் {பல்லங்களால்} பீமனின் பிரகாசமிக்க வில்லை அதன் கைப்பிடியருகே வெட்டினான்.

மனிதர்களில் காளையான அந்தப் பீமன், அம்மோதலில், வில்தரித்த உமது மகனின் {துரியோதனனின்} கூரிய கணைகளால் தனது தேரோட்டியான விசோகன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல், கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனின் அழிவுக்காக மற்றொரு அற்புத வில்லை எடுத்தான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்} அற்புதச் சிறகுகளைப் படைத்த க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட அம்பு} ஒன்றை எடுத்தான். அதைக் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} அற்புத வில்லை அறுத்தான் பீமன்.

பிறகு, அதிகபட்ச கோபத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த முறிந்த வில்லை ஒரு புறமாக வீசி, மற்றொரு கடினமான வில்லை விரைவாக எடுத்தான். மரணக் கோலைப் {காலமிருத்யுவைப்} போலச் சுடர்விட்ட அந்தப் பயங்கரக் கணையைக் குறிபார்த்த அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனை நடு மார்பில் அடித்தான். அதனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {பீமன்}, தனது தேரின் தட்டில் அமர்ந்தான். அப்படித் தனது தேர்த்தட்டில் அமர்ந்த அவன் {பீமன்} அப்படியே மயக்கமடைந்தான்.

அபிமன்யுவின் தலைமையில் இருந்த ஒப்பற்றவர்களும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் பீமன் இப்படித் துன்புறுவதைக் கண்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள். பெரும் உறுதி கொண்ட அந்த வீரர்கள், உமது மகன் {துரியோதனன்} முடியின் மீது கடும் கணைகளை மழையாகப் பொழிந்தனர். அப்போது, தனது சுயநினைவை அடைந்தவனான வலிமைமிக்கப் பீமசேனன் முதலில் மூன்று [1] கணைகளாலும், பிறகு ஐந்து கணைகளாலும் துரியோதனனைத் துளைத்தான். மீண்டும், வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கச்சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் சல்லியனைத் துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட சல்லியன் களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.

பிறகு, சேனாபதி, சுஷேணன், ஜலசந்தன் [2], சுலோசனன், உக்ரன், பீமரதன், பீமன், வீரபாகு, அலோலுபன், துர்முகன், துஷ்ப்ரதர்ஷன், விவித்சு, விகடன், சமன் என்கிற உமது பதினான்கு {14} மகன்கள் அந்தப் போரில் பீமசேனனுடன் மோதினார்கள். கண்கள் சிவக்க ஒன்று சேர்ந்து பீமசேனனுக்கு எதிராக விரைந்த அவர்கள் எண்ணற்ற கணைகளைப் பொழிந்து, அவனை {பீமனை} ஆழமாகத் துளைத்தனர். அப்போது, பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனன், உமது மகன்களைக் கண்டு, சிறு விலங்குகளுக்கு மத்தியில் உள்ள ஓநாயைப் போல [3] கடைவாயை நக்கிக் கொண்டு, கருடனைப் போல அவர்கள் மீது மூர்க்கமாக விழுந்தான்.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் சேனாதிபதியின் தலையைக் கொய்தான்.

பிறகு, மகிழ்ச்சி நிறைந்த ஆன்மாவுடன் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, சிரித்துக் கொண்டே மூன்று கணைகளால் ஜலசந்தனைத் துளைத்து அவனை {ஜலசந்தனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.

அடுத்ததாகச் சுஷேணனை அடித்த அவன் {பீமன்}, அவனை {சுஷேணனைக்} காலனின் {மிருத்யுவின்} முன்னிலைக்கு அனுப்பி வைத்தான்.

பிறகு, நிலவைப் போன்று அழகானதும், தலைப்பாகையுடன் கூடியதும், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உக்கிரனின் தலையை ஒரு பல்லத்தினால் பூமியில் விழச் செய்தான்.

மேலும் அந்தப்போரில் பாண்டுவின் மகன் பீமன், எழுபது {70} கணைகளால், குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோட்டியோடும் கூடிய வீரபாகுவைப் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்தபடியே இருந்த பீமசேனன், உமது மகன்களான பீமன் மற்றும் பீமரதன் ஆகிய இரு சகோதரர்களும் யமனின் வசிப்பிடத்தை அடையும்படி செய்தான்.

பிறகு அந்தப் பெரும்போரில், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு க்ஷுரப்ரத்தால் சுலோசனனையும் மரணவாசலுக்கு அனுப்பி வைத்தான்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எஞ்சி இருந்த உமது மகன்கள் அனைவரும் அந்த ஒப்பற்ற வீரனால் {பீமனால்} தாக்கப்படும்போது, அந்தப் பீமசேனனின் ஆற்றலைக் கண்டும், அவன் {பீமன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள்.

பிறகு, நோக்கிய சந்தனுவின் மகன் (பீஷ்மர்), (தனது படையின்) பெரும் தேர்வீரர்கள் அனைவரிடமும், “போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனும், கடுமையான வில்லாளியுமான அந்தப் பீமன், திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்களையும், ஒன்றுசேர்ந்திருக்கும் வீரர்களான பிற தேர்வீரர்களையும் அவர்கள் என்ன ஆயுத அறிவைப் பெற்றிருந்தாலும், என்ன வீரத்தைக் கொண்டிருந்தாலும் கொல்கிறான். எனவே, நீங்கள் அனைவரும் அவனை {பீமனைப்} பிடிப்பீர்களாக” என்றார்.

இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரப் படையின் துருப்புகள் அனைத்தும், கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வலிமைமிக்கப் பீமசேனனை நோக்கி விரைந்தன” {என்றான் சஞ்சயன்}.

கடோத்கசன் பகதத்தன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 064ஆ-பீமனை மயக்கமடையச் செய்த பகதத்தன்; கோபமடைந்த கடோத்கசன் பகதத்தனைத் தாக்கியது; கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் கௌரவர்கள் நான்காம் நாள் போரான அன்றைய போரை நிறுத்தியது….

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  தொடர்ந்தான்}, “மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையின் மீதிருந்த பகதத்தன், பீமசேனன் எங்கே இருந்தானோ அந்த இடத்திற்குத் திடீரென விரைந்தான். அங்கே நடந்த மோதலில், அவன் {பகதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, சாணைக்கல்லில் கூர்த்தீட்டப்பட்ட தனது கணைகளைக் கொண்டு பீமனை மறைத்து கண்ணிற்குப் புலப்படாதவனாக்கினான்.

எனினும், தங்கள் கரங்களின் ஆற்றலையே நம்பியிருந்த (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் (பகதத்தனின் கணைமாரியால்) பீமன் மறைக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அனைத்துப் புறங்களிலும் பகதத்தனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள் {பாண்டவப் படையினர்}, அவன் {பகதத்தன்}  மீது கணைமாரியைப் பொழிந்தனர். மேலும் அவர்கள் அவனது {பகதத்தனின்} யானையின் மீதும் கணைமாரியைப் பொழிந்தனர்.

பிராக்ஜோதிஷதர்கள் ஆட்சியாளனின் {பகதத்தனின்} யானை, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பொழியப்பட்ட, பல்வேறு வகைகளிலான கடுங்கணைகளின் காரணமாக, உடல் முழுவதும் இரத்தஞ்சொட்டி, சூரியக் கதிர்களால் கோர்க்கப்பட்ட மேகத்திரள்களைப் போல அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு அழகாக்கியது. பகதத்தனால் தூண்டப்பட்டதும், மதநீர் பெருக்கும் தன்மை கொண்டதும், அந்தகனைப் போன்றதுமான அந்த யானை, தன் முந்தைய வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ஓடி, தனது நடையால் பூமியையே நடுங்கச் செய்தது. அவ்விலங்கின் கொடூர முகத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் அதைத் தடுக்கமுடியாததாகக் கருதி உற்சாகமிழக்கத் தொடங்கினர்.

பிறகு, கோபத்தில் தூண்டப்பட்டவனும், மன்னர்களில் புலியுமான மன்னன் பகதத்தன், நேரான தனது கணையொன்றால் பீமசேனனை நடுமார்பில் அடித்தான். மன்னனுடைய {பகதத்தனுடைய} அந்தக் கணையால் ஆழமாகத் துளைக்கப்பட்ட பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {பீமன்}, மயக்கத்தின் விளைவாகத் தன் உறுப்புகளின் உணர்வுகளை இழந்து, தனது கொடிமரத்தைப் பிடித்தபடி தனது தேரில் அமர்ந்தான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அச்சமடைந்ததையும், பீமசேனன் மயக்கமடைந்ததை கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பகதத்தன் உரக்க முழக்கமிட்டான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனை அந்த நிலையில் கண்டவனும், பயங்கரமானவனுமான ராட்சசன் கடோத்கசன், கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போதைக்கப்போது காட்சியில் இருந்து மறைந்தான். பயங்கர மாயையை உண்டாக்கி, மருண்டவர்களின் அச்சத்தை அதிகரித்துக் கொடும் வடிவத்தை ஏற்று ஒரு கணத்தில் மீண்டும் அவன் {கடோத்கஜன்} தோன்றினான். தன் மாய சக்திகளால் உண்டாக்கப்பட்ட ஐராவதத்தில் தானே பயணித்து, இன்னும் பிற திக்கஜங்களான அஞ்சனம், வாமனம், நல்லொளி பொருந்திய மகாபத்மம் ஆகியவற்றில் பிறரும் தன்னைப் பின்தொடரச் செய்தான். ராட்சசர்களால் செலுத்தப்பட்டவையும், பெரும் வடிவத்திலானவையுமான அந்த வலிமைமிக்க மூன்று யானைகளும் மும்மதங்களையும் பெருக்கியபடி, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் இருந்தன.

அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகதத்தனையும், அவனது யானையையும் கொல்ல விரும்பி கடோத்கஜன் அந்தப் போரில் தன் யானையைத் தூண்டினான். அப்போது, பெரும் பலம் மிக்க ராட்சர்களால் தூண்டப்பட்டவையும், உக்கிரமானவையும், நான்கு தந்தங்களைக் கொண்டவையுமான அந்த யானைகள், பகதத்தனின் யானை மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் பாய்ந்து, தங்கள் தந்தங்களால் அதைப் {பகதத்தனின் யானையைத்} துன்புறுத்தின. இப்படி அந்த யானைகளால் துன்புறுத்தப்பட்ட பகதத்தனின் யானை (ஏற்கனவே) அம்புகளால் அடிபட்டதாலும், பெரும் வலியை உணர்ந்து இந்திரனின் இடிக்கு ஒப்பாக உரக்கப் பிளிறியது.

முழக்கமிடும் அந்த யானையின் பயங்கரமான உரத்தக் கதறல்களைக் கேட்டுத் துரோணர், சுயோதனன் {துரியோதனன்} மற்றும் மன்னர்கள் அனைவரிடமும் பீஷ்மர், “வலிமைமிக்க வில்லாளியான பகதத்தன், கொடிய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட்டு, பெரும் துயரில் விழுந்திருக்கிறான். அந்த ராட்சசன் {கடோத்கசன்} பெரும் வடிவத்தைக் கொண்டவன். அந்த மன்னனும் {பகதத்தனும்} பெரும் கோபம் கொண்டவன். இவர்கள் இருவரும் போரிட்டால், ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள் என்பது நிச்சயம். மகிழ்ச்சி நிறைந்த பாண்டவர்களின் உரத்த ஒலிகள் கேட்கப்பட்டன. (மன்னன் பகதத்தனுடைய) யானையின் பயங்கரமான துயரக் கதறலும் கேட்டது.

நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. மன்னனை {பகதத்தனை} மீட்க நாம் அனைவரும் அங்கே செல்வோமாக. ஏனெனில் இப்போரில் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்படாவிட்டால், விரைவில் அவன் தன் உயிரை விட்டுவிடுவான். பெரும் சக்தி கொண்ட வீரர்களே, நான் சொல்வது போல இப்போது நீங்கள் கேளுங்கள். பாவமற்றவர்களே, தாமதிக்காதீர்கள். கடுமையான அந்த மோதல் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உக்கிரமடைகிறது. பெரும் வீரம்படைத்தவனும், உயர் பிறப்பைக் கொண்டவனுமான அந்தப் படைத்தளபதி {பகதத்தன்} நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனாவான். மங்காப் புகழ் கொண்ட வீரர்களே, நம்மால் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்பட வேண்டியவனாவான்” என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், பரத்வாஜமகனின் {துரோணரின்} தலைமையிலானவர்களுமான மன்னர்கள் அனைவரும் பகதத்தனை மீட்க விரும்பி, அந்தப் பிராக்ஜோதிஷர்கள் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர். எதிரி முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பாஞ்சாலர்களும், பாண்டவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பெரும் ஆற்றல் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, முன்னேறி வரும் (எதிரியின்) அந்தப் படைப்பிரிவைக் கண்டு, இடியைப் போன்று ஆழமாக உரக்க கர்ஜித்தான்.

அவனது {கடோத்கஜனின்} முழக்கத்தைக் கேட்டும், போரிடும் யானைகளையும் கண்டும், சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்}, “அந்தத் தீய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட (இன்று) நான் விரும்பவில்லை. பெரும் பலமும் சக்தியும் கொண்ட அவன் {கடோத்கசன்}, தற்போது நன்கு ஆதரிக்கப்பட்டிருக்கிறான். வஜ்ரதாங்கியாலும் {இந்திரனாலும்} கூட இப்போது அவனை {கடோத்கசனை} வீழ்த்த முடியாது. இலக்கின் துல்லியத்திலும், தாக்குவதிலும் அவன் சிறந்தவன். நம்மைப் பொறுத்தவரை, (இன்று) நமது விலங்குகள் களைப்படைந்திருக்கின்றன. பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களால் நாமும் பெரிதும் சிதைவடைந்திருக்கிறோம். வெற்றிப் பெற்றிருக்கும் பாண்டவர்களுடன் புதிய மோதலை நான் விரும்பவில்லை. எனவே, இன்றைக்கு நமது படையைத் திரும்ப அழைப்பது அறிவிக்கப்படட்டும். நாளை நாம் எதிரியுடன் போரிடலாம்” என்றார் {பீஷ்மர்}.

பாட்டனின் {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்டவர்களும், கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான கௌரவர்கள், இரவின் தொடக்கத்தை ஒரு போலிக் காரணமாகக் கொண்டு, பாட்டன் {பீஷ்மர்} சொன்னதை மகிழ்ச்சியுடன் செய்தனர்.

கௌரவர்கள் பின்வாங்கியதும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பாண்டவர்கள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையுடன் கலந்து சிங்க முழக்கங்களிட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படியே குருக்கள் மற்றும் கடோத்கசனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்த நாளின் {4ஆம் நாளின்} போர் நடந்தது.

பாண்டவர்களால் வீழ்த்தப்பட்ட கௌரவர்கள் நாணிக் குறுகி, இரவு வந்ததும் தங்கள் கூடங்களுக்குச் சென்றனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், கணைகளால் சிதைந்த தங்கள் உடல்களுடன், போரின் விளைவால் நிறைந்து {மகிழ்ந்து}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன் மற்றும் கடோத்கசனைத் தங்கள் தலைமையில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் கொட்டகையை நோக்கிச் சென்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களை {பீமனையும், கடோத்கசனையும்} கொண்டாடினார்கள். தூரிய இசையுடன் கலந்து பல்வேறு விதமான முழக்கங்களை இட்டனர். அந்த உயர் ஆன்ம வீரர்களின் முழக்கம் பூமியையே நடுங்கச் செய்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் இதயங்களையும் கலங்கடித்தது. இரவு வந்ததும், இப்படி எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.

தன் சகோதரர்களின் மரணத்தால் உற்சாகமிழந்த மன்னன் துரியோதனன், துயர் மற்றும் கண்ணீரையும் மேலிட்ட சிந்தனையில் சில மணிநேரத்தைக் கழித்தான். பிறகு, (படை அறிவியலின்) விதிகளின் படி தன் பாசறைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவன் {துரியோதனன்}, தன் தம்பிகளின் {தம்பிகளின் மரணத்தின்} நிமித்தமான சோகத்தினால் பீடிக்கப்பட்டும், துயரால் எரிக்கப்பட்டும், தியானத்தில் {ஆலோசனையில்} பல மணி நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.

நான்காம் நாள் போர் முற்றிற்று 

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading