பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-
பதவுரை
| நல் நலன் புள் இனங்காள் |
– |
சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே! |
| விளையாட்டியேன் நான் இரந்தேன் |
– |
பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்) |
| முன் உலகங்கள் எல்லாம் படைத்த |
– |
முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின |
| முகில் வண்ணன் |
– |
காளமேக நிறத்தனாயும் |
| கண்ணன் |
– |
அடியார்க்கு எளியனாயும் |
| என் நலம் கொண்ட |
– |
எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற |
| பிரான் தனக்கு |
– |
எம்பெருமானுக்கு |
| என் நிலைமை உரைத்து |
– |
எனது அவஸ்தையைச் சொல்லி |
| பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர் |
– |
உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்) |
***- (பொன்னுலகாளீரோ) எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது.
ஸ்ரீவசநபூஷணத்தில் “ஆசார்யனுக்கு ஸத்ருசப்ரத்புபகாரம் பண்ணலாவது விபூதிசதுஷ்டயமும் உண்டாகில்“ * என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தி – “உபய விபூதியையும் விபூதிமானான ஈச்வரனையும் தானிட்ட வழக்காம்படி பண்ணிக்கொடுத்த ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருசமான ப்ரத்யுபகாரம் பண்ணலாவது இப்படியே இரண்டு விபூதியும் விபுதிமானுயிருப்பான் ஈச்வரனும் வேறே யுண்டாகிலென்கை“ என்பதாம்.
* பொன்னுலகாளீரோ புவனி முழுதாளீரோ * என்று சொல்லுகிற ஆழ்வாருடைய உக்தி ஸாம்ராஜ்யத்தை நோக்குங்கால் உபய விபூதியும் ஆழ்வார் கையிலே ஸ்வாதீநமாகவுள்ள தென்னுமிடம் நன்கு தெரிகின்றதன்றோ.
எம்பெருமான் தன்னுடையதான சரக்கையும் தன்னடியார்க்கு இஷ்டவிநியோக யோக்யமாகவன்றோ ஆக்க வைத்திருக்கிறான்.
பரமபதமதாண்டாநி ஆத்மதேஹஸ் த்தாத்மா வரத! கைலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த * என்று கூரத்தாழ்வானு மருளிச்செய்தார்.
வேதாந்ததேசிகனும் *** தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்க்ஷீ * என்கிறார்.
எம்பெருமான் அடியார்களுக்குத் தன் விபூதியைக்கொடுக்க நினைத்தால் ஆசாரியர்களின் ஆஜ்ஞையை எதிர்பார்த்தே கொடுக்கிறானென்று இந்த ச்லோகத்தின் தாற்பரியம்.
ஸர்வேச்வரன் ஆசார்யர்களின் ஆணையை எதற்காக எதிர்பார்க்க வேணும்?
இது அதிசயொக்தியன்றோ என்று நினைக்கவேண்டா, உண்மையில் * ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் * என்றிருக்கிற எம்பெருமான் தனது விபூதிகளையெல்லாம் ஞானிகளுடையதாக இலச்சினைபடுத்தி வைத்திருக்கையாலே அந்த ஞானிகளின் ஆணையின்றி ஒருவர்க்கும் ஒன்றுங் கொடுக்கில்லான்.
இவ்வர்த்தங்களையெல்லாம் ஆழ்வார் இங்குமெய்ப்பிக்கிறார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ“ என்ற கம்பீரமான பாசுரத்தினால்.
பக்ஷிகளே! நீங்கள் எம்பெருமான் பக்கலிற்சென்று எனது நிலைமையை உரைத்து வந்தால் அதற்குக் கைம்மாறாக நான் உங்களுக்கு உபய விபூதிகளையும் பரிசளிப்பேன் என்பது முதலடியின் கருத்து.
இங்கே சிலர் சங்கிக்கக் கூடியதுண்டு, ஆழ்வார் பரமபதம் பெறுகைக்குத் தைரியமாகச் சொல்லும் படியாய்ப் பரமபதம் இவர் கைப்பட்டதாயிருக்குமாகில் இந்த சிரமம் வேண்டாவன்றோ – என்பதாக. இது அரஸிக சங்கையேயாகும்.
* தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுகைக்காகவன்றோ எம்பெருமான் ஆழ்வாரை இங்கு வைத்துத் துவளப்பண்ணுவது.
இவ்வளவால், உபய விபூதியையும் தாமிட்ட வழக்காம்படி பெற்றிருக்கிற ஆழ்வாருடைய ப்ரபாவத்திற்கு ஒரு குறையுண்டோ?
ஸ்ரீவசநபூஷணத்தில் “சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது“ என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் “பிராட்டியென்னாதே சிறையிருந்தவளென்றருளிச் செய்தது அவளுடைய தயாதிசயத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக“ என்று தொடங்கி விரிவாக அருளிச்செய்துள்ளவை இங்கே அநுஸந்தேயம்.
நன்னலப் புள்ளிங்காள்! – நன்னலமென்பதனாலே தேஹகுணங்களும் ஆத்மகுணங்களும் விவக்ஷிதங்கள்.
ஆசார்யனிடத்தில் இரண்டும் உத்தேச்யமாகும். சமதமாதி குண ஸம்பத்திகள் போலவே திருமேனி நலமும் உபஜீவ்யமாகையாலே இவற்றால் நிறைந்த ஆசாரியர்களை ஸ்வாபதேசத்தில் விவக்ஷிக்கிறது.
வினையாட்டியேன் நானிரந்தேன் – தூது செல்லவேணுமென்று இரக்கிறாளல்லள் உபய விபூதியையும் உங்களுக்கு நான் கொடுக்க நீங்கள் அவற்றை ஆளவேணும் என்றிரக்கிறாள்.
எம்பெருமானார் கோஷ்டியிலே சிஷ்யர்கள் ஒரு சர்ச்சை பண்ணினார்களாய், இவள் உபய விபூதியையுங்கொடுத்து விட்டாளாகில் அவன் வந்தால் தானுமவனும் எங்கேயிருப்பது? என்று.
அப்போது அனந்தாழ்வான் பணித்தாராம் இக்குருவி காட்டினவிடத்தே என்று. ரஸிக ஸார்வ பௌமர்களின் சங்கையும் ஸமாதானமும் பரமபோக்யமாயிருக்கும்.
இங்கே மற்றொரு சங்கையு முண்டு, “பொன்னுலகாளீரோ“ என்று சொன்னது பொருந்தும்,
அது சொன்னவாயாலே “புவனிமுழுதாளீரோ“ என்னவும் தகுமோ?
உத்தேச்யமான நித்யவிபூதியைக் கொடுத்தவள் த்யாஜ்யமான லீலாவிபூதியையும் கொடுக்கத் தேடவேணுமா? என்று.
இவை பண்ணுகிற உபகாரத்தை நினைத்து இன்னது கொடுப்போமென்றறியாமல் கலங்கி சொன்னபடி.
உபய விபூதியையும் ஆளுங்கோள் என்றவாறே, “ஆளத் தடையுண்டோ? கொடுத்தால் ஆளுகிறோம்“ என்று புள்ளினங்கள் நெருங்கி வர, என்காரியத்தை நான் செய்யும்போது உங்கள் காரியத்தை நீங்கள் செய்யவேண்டாவோ? அது செய்து வந்து உபயவிபூதியையும் ஆளுங்கோளென்கிறாள் பின்னடிகளால்.
எம்பிரான் திறத்து என்நிலையை யுரைக்க வேணும். எம்பெருமானுக்கு நான்கு விசேஷணமிடுகிறாளிங்கு.
1.பிரானே! நீ உலகங்களெல்லாம் படைத்தவனன்றோ? “செடிவைத்தவன் தண்ணீர் வார்ப்பது“ என்ற கணக்கிலே படைத்த நீ அளிக்கவும் வேண்டாவோ என்று சொல்லுங்கோள்.
2. பிரானே! நீ முகில்வண்ணனல்லையோ? உன்வடிவழகைக்காட்டி யீடுபடுத்திக்கொண்டாயானபின்பு மேன்மேலும் அவ்வடிவழகை உபகரிக்க வேண்டாவோ? என்று சொல்லுங்கோள்.
3. பிரானே! நீ கண்ணனாக அவதரித்த காலத்து ஒவ்வொருவர்க்கும் கையாளாயிருந்து வைத்து இப்போது ஒருத்திக்கு அருமைப்படுவது தகுதியோ? என்று சொல்லுங்கோள்.
4. ஒருத்தியை இங்ஙனே ஸர்வஸ்வாபஹாரம் பண்ணிப்படுகொலையடிப்பது பாங்கோ? என்று சொல்லுங்கோள் என்றவாறு.
“என்னிலைமையுரைத்தே“ என்றவிடத்து என்னிலைமை என்பதற்கு நம்பிள்ளை யருளிச்செய்யும் பொருள் மிக அற்புதம்.
“ஜகத் காரணத்வம் அவதாரம் தன் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் இவையெல்லாம் கண்ணழிவறச் சொன்னாள்,
அவன் குணங்களிலே அவகாஹித்த தன்படி தன்னுலும் பேசப்போகிறதில்லை“ என்று. எம்பெருமான் படிகளை விரிவாப்பாசுரமிட்டுப் பேசுமிவர் தம் நிலைமையைப் பற்றிச் சிறிது பேசலாகாதா? என்று சங்கை. பேச்சுக்கு நிலமில்லாத்தை எங்ஙனே பேசுவது என்று ஸமாதானம்.
தன் வடிவைக்காட்டி “என்னைக்கண்ட நீங்களே பாசுரமிட்டுச் சொல்லுங்கோள்“ என்றாளென்க.
—————-
மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-
பதவுரை
| கிளிகாள் |
– |
கிளிகளே! |
| கை அமர் சக்கரம் |
– |
திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும் |
| கனி வாய் |
– |
கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான |
| என் பெருமானைகண்டு |
– |
எம்பெருமானைச் சேவித்து |
| மெய் அமர் காதல் சொல்லி |
– |
உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து |
| விரைந்து ஓடி வந்து |
– |
உடனே இவ்விடம் வந்து சேர்ந்து |
| மை அமர் வாள் நெடு கண் |
– |
மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய |
| மங்கைமார் முன்பு |
– |
தோழிமார் முன்னிலையிலே |
| என் கை இருந்து |
– |
என் கையிலே வீற்றிருந்து |
| நெய் அமர் இன் அடிசில் |
– |
நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை |
| பாலோடு |
– |
பாலோடுங்கூட |
| நிச்சல் மேலீர் |
– |
நித்யமாக ஸ்லீகரிக்க வேணும். |
***- (மையமர்வாள்) என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள்.
தலைவிதான் செய்ய நினைத்திருக்கும் கைம்மாறுதன்னை முந்துற முன்பாகவத ஸத்காரமே தனக்குப் பரமோத்தேச்யமென்னுமிடம் காட்டப்பட்டது.
கீழ்ப்பாட்டிலே உபயவிபூதியையும் கொடுப்பதாகச் சொல்லியற்ற பிறகு இனிமேல் கொடுக்கக்கூடியது என்ன இருக்கிறது? என்று சிலர் சங்கிக்க நேரும்.
அதற்குப் பரிஹாரமாக நம்பிள்ளை பதம் தேடிக்கொடுக்கிறாள் இப்பாட்டில்.
அவன் பதமாகிறது உபயவிபூதியுமிறே. அதுக்கு மேலான பதமாகிறது அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை.
தன்னைக் கொடுக்குமிடத்திலும் பின்னை முன்னே யென்னாதே எல்லாருங் காணக் கைமேலேயிறே கொடுக்கப்புகுகிறது.“
மையமர்வாள் நெடுங்கண் மங்கைமார்முன்பு –இவ்வாக்கியம் அவசியம் வேணுமோ?
“என் கையிருந்து“ என்றால் போராதோ? என்னில், பரிஜனங்களோடே கூடிக்குலாவி ஸத்கரிக்க வேணுமென்று ஆசையாகையாலே அது தன்னைக் காட்டுகிறபடி. மையணிந்த நெடுங்கண்களையுடைய மங்கைமார்களென்றதற்கு அழகிய ஸ்வாபதேசார்த்தம் குறிக்கொள்க.
* மநஸி விலஸதாக்ஷ்ணா பக்திஸித்தாஞ்ஸநேந * என்று பட்டரும்,
* ஸித்தாஞ்ஜநேந பவதைவ விபூஷி தாக்ஷா * என்று தேசிகனும் பணித்தபடியே
பக்தியை மையென்கிறது. கண் என்கிறது ஞானத்தை பக்தி பரிகார்மிதமான ஞானத்தையுடையார் என்றபடி.
நெய்யமரின்னடிசில் நிச்சல்பாலோடுமேவீரோ? நெய் அடிசில் பால் என்று மூன்றைச் சொன்னது தத்வ ஹித புருஷார்த்தங்களைச் சொன்னபடி.
* போதயந்த பரஸ்பரம் * என்ற கணக்கிலே இவற்றை உபகரிக்க நினைத்தபடி.
பகவத்வைபவம், பாகவத வைபவம், ஆசார்ய வைபவம் என்ற மூன்றையும் சொல்லிற்றாகவுமாம்.
இப் பேற்றுக்கு நாங்கள் என்ன செய்ய வேணுமென்ன, அவை செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுவன பின்னடிகள்.
கிளிகளே! ஒரு தாமரையிலே ஒரு தாமரை பூத்தாற்போலே திருக்கையும் திருவாழியும் சேர்ந்திருக்கிற வழகாலும், திருவாழியைக் கண்ட வுகப்பாலே புதுக்கணித்த திருப்பவளத்தினழகாலும் என்னை யடிமை கொண்டவனுடைய அழகைக் கண்டு
நீங்கள் உள்ளம் பூரித்து என்னுடைய காதலை அவனுக்கு வெளியிட்டு, அவனருளிச்செய்யும் வார்த்தைகளை விரைந்தோடிவந்து எனக்குச் சொல்லி என்னைத் தரிப்பித்து நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவிரோ.
மெய்யமர் காதல் – “அவளுக்கு உன்பக்கலுள்ள ஸ்நேஹம் மெய்யான ஸ்நேஹமென்று அவனுக்குச் சொல்லி“ என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
“திருமேனியிலே அனையவேண்டும் படியான காதலென்னுதல், என்னுடம்போடே யணையவேண்டும் படியான காதலென்னவுமாம்.“ என்பது ஈட்டு ஸ்ரீஸூத்தி.
கிளிகாள்! – கிளி வலையில் அகப்படுமாபோலே * மாதார்கயற்கணென்னும் வலையுள்படாதே * தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப்படுப்பான் * என்றபடியே எம்பெருமானது திருக்கண்ணோக்கவலையில் அகப்பட்டும், கிளி வளர்த்தெடுப்பாருடைய கைவசமாயிருப்பதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை * என்கிறப்படியே கிளி கற்பித்ததையே சொல்லுமா போலே * முன்னோர் மொழிந்த முறைதப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்களாயுமுள்ளவர்கள் கிளியாக விவக்ஷிதர்கள்.
————-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3-
பதவுரை
| கூடிய வண்டு இனங்காள் |
– |
கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே! |
| குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய் |
– |
குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக |
| ஆடிய மா நெடு தேர்படை |
– |
ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும் |
| நீறு எழ சென்ற |
– |
பொடியாம்படி முடித்த |
| பிரான் |
– |
எம்பெருமான் |
| சூடிய |
– |
திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற |
| தண் துளபம் உண்ட |
– |
குளிர்ந்த திருத்துழாயிலேயிருந்து மதுபானம் பண்ணின |
| தூ மது வாய்கள் கொண்டு |
– |
தெளிந்த மதுவையுடைத்தான வாயையுடையீர்களாய்க் கொண்டு |
| ஓடி வந்து |
– |
விரைந்து வந்துசேர்ந்து |
| என் குழல் மேல் |
– |
என் கூந்தலிலுள்ள |
| ஒளி மர் மலர் |
– |
ஒளி பொருந்திய சிறந்த பூவிலே |
| ஊதீர் |
– |
உங்களுடைய உத்ஸாஹச் செயல்களைச் செய்யுங்கள். |
***- (ஓடிவந்து) எம்பெருமான் பக்கலிற்சென்று என் நிலைமையை அறிவித்து வந்து என் தலைமேலே வ்த்தியுங்கோளென்று சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள்.
நீங்கள் தூது சென்றால் உங்களைத் தலைமேலே வைத்துக் கொண்டாடுவேனென்கை.
கூடிய வண்டினங்காள் எம்பெருமான் பக்கலிலே ஒருவரிருவராய்ச் சென்று தூது சொன்னால் அவன் செவிகொடுத்துக் கேளான், ஒரு கூட்டமாகச் சென்று சொல்லவேணும், அதற்கு, இனிமேல் கூட்டம் திரட்டவேண்டாமல் ஏற்கனவே திரண்டிருக்கின்றீர்களே, இது என்னுடைய பாக்கியம் என்கிறாள் போலும்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “மஹாராஜரைப் போலே படைதிரட்ட வேண்டாவிறே உங்களுக்கு, என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றதீரே இளையபெருமாள் கிஷ்கிந்தாத்வாரத்திலே சென்று குண கீர்த்தநம் பண்ணின பின்பிறே படை திரட்டிற்று.
இப்பாட்டின் ஆறாயிரப்படி யருளிச்செயல் பரமபோக்யதையே வடிவெடுத்ததாயிருக்கும். “ராஜ்யப்ராப்தராய் ஸமாச்ரிதருமான பாண்டவர்கள் பக்கலுள்ள வாத்ஸல்யத்தாலே த்ரைலோக்ய விஜயோபகரண பூதமாய் அத்யுந்நதமாயிருந்த திருத்தேரிலே நின்று அவர்களுக்கு ஸாரத்யம் பண்ணித் தத்விரோதிகளை நிரஸித்தருளின மையத்திலே பமபக்தி யுக்தரான திவ்ய ஜனங்கள் சிசிரோபசாரமாகச்சாத்தியருளப் பண்ணின திவ்யகந்தமான திருத்துழாய் மதுவை பானம்பண்ணி அத் தூமதுவாய்களைக் கொண்டு ஓடிவந்து அம்மதுவையும் அதிசீதளமான திவ்யகந்தத்தையும் என் குழல்மேல் ஒளிமாமல்களிலே வர்ஷிக்கவேணும் வர்ஷிக்கவே அம்மலர்களு மலர்ந்து புதுக்கணிக்கும், என்னிறம் பண்டு பண்டுபோலொக்கும், கெண்டை யொண்கணும் துயிலுமென்று வண்டுகளை நோக்கிச் சொல்லுகிறாள் “ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
பரமபுருஷனிடம் நாங்கள் செல்லக்கூடுமோ! ஒருவாறு சென்று விண்ணப்பஞ் செய்தாலும் முகங்கொடுத்துக் கேட்கும்படியாயிருக்குமோ? காரியம் செய்யப் பெறுமோ? என்று வண்டுகட்கு நினைவாக, அவன் பரமஸுலபனாயிற்றே.
* பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் * என்கிறபடியே ஒருத்தி விரித்த கூந்தலை முடிப்பிக்கப் பாண்டவர்ளுக்குப் பக்ஷபதியாயிருந்து கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்று விரோதிகளைப் பிணம் படுத்த பெருமானன்றோ வென்று ப்ரக்ருதத்திற்கு உபயுக்தமான குணங்களை விளக்கினபடி.
ஸாரக்ராஹிகளான ஆசார்யர்களையோ சிஷ்யர்களையோ வண்டென்கிறது.
தேனையே தாரகமாகக்கொண்டிருக்கும் வண்டு,
* உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளுக்கிறதேன். * என்னப்பட்ட பகவத் விஷயமாகிற தேனையே தாரகமாகக் கொண்டிருப்பர்கள் இவர்கள்.
——————–
தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-
பதவுரை
| முல்லைகள் மேல் |
– |
முல்லைப்பூக்களிலே வாழ்கிற |
| என் தும்பிகாள் |
– |
எனக்கு இனிய தும்பிகளே! |
| தூ மது வாய்கள் |
– |
தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து |
| பூ மது உண்ண செல்லில் |
– |
அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்) |
| வினையெனை |
– |
பிரிந்து வருந்தவேண்டிய பாவத்தைப் பண்ணின என்னோடே |
| பொய் செய்து |
– |
க்ருத்ரிமமான கலவியைப்பண்ணி |
| அகன்ற |
– |
பிரிந்துபோன |
| மா மது வார் தண் துழாய் முடி |
– |
பெருவெள்ளமான மது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை முடியிலணிந்துள்ள |
| வானவர்கொனை |
– |
நித்யஸூரிநாதனை |
| கண்டு |
– |
நேரில் ஸேவித்து |
| யாம் இதுவோ தக்க ஆறு என்ன வேண்டும் நுங்கட்கு |
– |
“நாம் இப்படி மேன்மை கொண்டாடியிருப்பதோ தகுதி?“ என்று நீங்கள் சொல்லவேண்டும். |
***- (தூமதுவாய்கள்) என்னை நோவுபடுத்திப்போய் எட்டா நிலத்திலே ஒலக்கமிரூக்கை தான் ஒரு ஸ்ரீமத் காம்பீர்யமோவேன்று கேளுங்கோளென்று திருநாட்டிலே சில தும்பிகளைத் தூது விடுகிறாள்.
பூமதுவுண்ணச் செல்லில் தும்பிகள் எங்கேனும் தேடிப்பருகுவதற்கு ஆசையோடே எங்கும் திரியும், பரமபதாநாதனுடைய திருமுடியிலே மதுநிரம்பிய செவ்வியதுழயா மலர் மிகமிகவுள்ளதென்று தெரிந்துகொண்டு அங்கும் செல்லக் கூடுமென்றெண்ணிச் சொல்லுகிற வார்த்தை இது.
வினையேனைப் பொய் செய்து அகன்ற – “பரக்யஹீநையான வெனக்கு ஸம்ச்லேஷமென்று ஓர் இந்த்ரஜாலத்தைக்காட்டி“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
மாமதுவார் தண்டுழாய் முடிவானவர்கோனைக் கண்டு – இது பரிதாபம் தோற்றச் சொல்லுகிற வார்த்தை.
என் தலையிற் பூ சருகாய் வாடியுலர்ந்து கிடக்க, அவர் மாமதுவார் தண்டுழாய் முடியராய் விளங்கா நின்றார் பிரிவாற்றாமையாலே நான் ஒரு மூலையிலே முகத்தை மூடிக்கொண்டு உறாவிக்கிடக்க,
அவர் நித்யஸூரிகளுக்கு ஒலக்கங கொடுத்துக்கொண்டு வானவர்கோனாக வீற்றிராநின்றார்! என்று காட்டுகிறபடி.
அன்னவரைக்கண்டு “யாமிதுவோ தக்கவாறு“ என்னுமிவ்வளவே நீங்கள் சொல்லகிறபடி. அன்னவரைக்கண்டு“ யாமிதுவோ தக்கவாறு“ என்னுமவ்வளவே நீங்ள் சொல்ல வேண்டிய வார்த்தை.
இங்கு யாம் என்றது நீர் என்றபடி, எம்பெருமானே! நீர் பராங்குசநாகியின் துடிப்பறியாதே இங்ஙனே போது போக்குகை தகுதியோ? என்ன வேண்டுமென்றபடி.
இப்பாட்டில் * வானவர் கோனைக்கொண்டு * என்றபடி உயிராகக்கொண்டு இது பரத்வத்தில் விடுகிற தூது என்பர்.
——————
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-
பதவுரை
| யான் வளர்த்த கிளிகாள் |
– |
நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே! |
| வம்மின் |
– |
இப்படி வாருங்கள் |
| நுங்கட்கு யான் உரைக்கேன் |
– |
உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன். |
| வெம் கண் புள் |
– |
வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை |
| ஊர்ந்து வந்து |
– |
நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து |
| வினையேனை நெஞ்சம் கவர்ந்த |
– |
பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட |
| செம் கண் |
– |
புண்டரீகாஷனும் |
| கரு முகிலை |
– |
காளமேகச்யாமனும் |
| செய்யவாய் |
– |
சிவந்த அதரத்தை வுடையவனும் |
| செழு கற்பகத்தை |
– |
விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை |
| எங்கு ஆகிலும் சென்று கண்டு |
– |
எவ்விடத்திலாவது சென்று சேவித்து |
| இதுவோ தக்க ஆறு என்மின் |
– |
இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள். |
***- (நுங்கட்கு யான்) மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள்.
சொல்ல நினைத்த வார்த்தையை ஆரம்பித்துச் சொல்லலாமே, “நுங்கட்கு யானுரைக்கேன் விம்மின்“ என்றவிது அவசியமோ? என்று சங்கை தோன்றக்கூடும்,
இதற்குப் பரிஹாரமாக நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர், “தனக்கு முன்னே ஆற்றாம்மையோடேயிறே அவையிருக்கிறது, ஆருக்குச் செல்லும் வார்த்தையை ஆருக்குச் சொல்லுகிறது, ஆற்றாமை சொல்லுவியாத்தில்லையிறே.“ என்று
(இதன் கருத்தாவது) எனது நிலைமையை நான் வாய்விட்டுச் சொல்லாமலே நீங்கள் தாமாகவே அறிந்துகொள்ள வல்லி கோள், தூதுபோக வேண்டுந்தசை இவளுக்குள்ளதென்று நீங்களே உணர்ந்து தூதுபோகக் கடமைப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு நான் சொல்ல வேண்டிதேயில்லை, ஆனாலும் என்னாற்றமையாலே சொல்லா திருக்க முடியவில்லை, சொல்லுகிறேன் வாருங்கள் என்கிறாள் என்பதாம்.
தூதுபோகைக்காகவன்றோ உங்களை நான் வளர்த்தது என்கிற கருத்துத்தோன்ற யான் வளர்த்த கிளிகாள்! என்கிறாள்.
* வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே * என்கிறாள் எங்கள் தோழிமார்களிலே பொருத்தி,
அப்படியே நானும் கைகூப்பி வணங்குபடியாகக் காரியம் செய்யுங்கோளென்கிறாள்.
நாங்கள் யாரிடம் செல்லவேணும்? எங்கே செல்லவேணும்? யாது சொல்லவேணும்? என்று கிளிகள் கேட்க, மூன்றுக்கும் விடை கூறுகின்றாள் பின்னடிகளால்.
* அருளாழிப்புள் * என்று முன்பு சொன்ன வாயாலே இப்போது “வெங்கட்புள்“ என்கிறாள்,
என் பக்கலிலேயே தங்கியிருக்க வேண்டிய தலைவனை கண்பாராதே பிரித்துக்கொண்டுபோன புண்ணியனன்றோ அப்புள்ளரையன் என்று வயிறெரிந்து சொல்லுகிறபடி.
அப்பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வந்து என்னுடைய நெஞ்சைக் கவர்ந்துசென்றவன் இன்னானென்று உங்களுக்குத் தெரியுமே அவனைத் தான் காளமேகமென்றும் கற்பகமென்றும் கவி பாடித்திரிவர்கள், அவன் என்னைப் போலே இன்னும் பலரையும் துடிக்கவிட்டு ஒருவர்க்கும் அகப்படாமே எங்கேனு மிருப்பன், எங்கிருந்தாலும் கண்டுபிடிக்க உங்களால் முடியுமே, எங்குச் சென்றாகிலும் காணங்கோள், கண்டு அதிகமான பேச்சுக்கள் பேசவேண்டா, “இதுவோதக்கவாறு“ என்றிவ்வளவே சொன்னாற் போதுமானது என்கிறாள்.
இப்பாட்டில் “எங்குச்சென்றாகிலுங்கண்டு“ என்றதை உயிராகக்கொண்டு இத்திருவாய்மொழி அந்தர்யாமித்வத்திலும் தூதுவிடுகிறதாக நிர்வஹிப்பர்கள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி “என்றொளித்திருக்குமிடமெங்கும் புக்கு.“ என்றாம்.
—————-
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-
பதவுரை
| தீ வினையேன் வளர்த்த |
– |
கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த |
| சிறு பூவைகளே |
– |
சிறு பூவைப்பறவைகளே! |
| என் மின்னு நூல் மார்வன் |
– |
மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும் |
| என் கரும் பெருமான் |
– |
தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும். |
| என் கண்ணன் |
– |
எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான் |
| தன் நீற் கழல் மேல் மன்னு தண் துழாய் |
– |
தனது நெடிய திருவடிகளின்மீது பொருந்தியுள்ள திருத்துழாயை |
| நமக்கு அன்றி நல்கான் |
– |
நமக்குத் தவிர வேறொருவர்க்கும் கொடுக்ககில்லான், |
| கன்மின்கள் என்று |
– |
“நான் சொல்லிக்கொடுப்பதை அப்யஸியுங்கோள்“ என்று சொல்லி |
| யான் உம்மை கற்பியா வைத்த |
– |
நான் உங்களுக்குக் கற்பித்து வைத்த |
| மாற்றம் சொல்லி |
– |
பாசுரங்களைச் சொல்லிக்கொண்டு |
| சென்மின்கள் |
– |
அப்பெருமானிடம செல்லுங்கோள் |
***- (என்மின்னுநூல்) சில பூவைகளைத் தூது விடுகிறாள். பூவைகளை இவள் அழைக்கும்போதே அவை சிறிது பராமுகமாயிருந்தன,
பராத்பரனிடத்தில் நம்மை இவன் தூது போகச்சொல்லுவன், அவன் நம் வார்த்தையைக் கவனிப்பானோ? ஒன்று கொடுப்பானோ?
இதெல்லாம் வீண் ப்ரயாஸந்தானே என்றிருந்தனவாகக் கொண்டு அவற்றுக்கு உத்ஸாஹம பிறக்குமாறு உரைக்கின்றாள்.
இப்பாட்டில் இரண்டாமடி உயிரானது. அலங்காரத்தாலும் வடிவழகாலும் ஸௌலப்த்தாலும் என்னை யீடுபடுத்திக்கொண்டவன்,
தன்மன்னுநீள்கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான் – * தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடல்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் * என்னும்படி திருத்தோள் முதலான பல அவ்யங்களில் அவர் திருத்துழாய் அணிந்துகொள்வர்,
எதை ஆர்க்குக் கொடுத்தாலும் அடிமேல் புனையுமது அடியார்களுக்கே யாகையாலே திருவடிகளில் சாத்தின திருத்துழாயை நமக்கன்றி மற்றையோர்க்குத் தந்திடமாட்டார், ஆகையாலே நீங்கள் சங்கையின்றிச் செல்லலாம் என்றவாறு.
நெடுந்தூரம் செல்லவேணுமே, பாதேயம் (வழிச்சாதம்) ஏதேனுமுண்டோவென்று கேட்க, * பாதேயம் புண்டரீகாக்ஷநாமஸங்கீர்த்தநாம்ருதம் என்பது உங்களுக்குத் தெரியாமையில்லையே, உங்களுக்கு நான் கற்பித்துவைத்த வார்த்தைகள் பலவுமுண்டே,
* தயிர்ப்பழஞ் சோற்றொடு பாலடிசிலும் தந்து பயிற்றிய சொற்கள் இல்லையோ? அவற்றைச் சொல்லிக் கொண்டே செல்லுங்கோளென்கிறாள். த்வயாநுஸந்தானம் பண்ணிக்கொண்டே செல்லுங்கோளென்பது
கற்பியா – செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்து காலை வினையெச்சம். கற்பித்து என்றபடி.
தீ வினையேன் வளர்த்த என்பதற்கு மர்ம ஸ்பர்சியான பொருளை நம்பிள்ளை வெளியிட்டருளுகிறார், “என்னுடைய பாபமிருந்தபடி பாருங்கோள், அவனும் நானும் கூடவிருந்து உங்களைக் கொண்டாடுகை யன்றிக்கே உங்களைக்கொண்டு காரியங் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். வயிற்றில் பிறந்தாரை யிடுவித்து அபிமதனை அழைத்துக்கொள்ளுகையோபாதி புன்மையில்லயே”
—————
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-
பதவுரை
| பாவைகள் |
– |
எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே! |
| பூவைகள் போல நிறத்தன் |
– |
பூவைப்பூவண்ணனும் |
| புண்டரீகங்கள் போலும் கண்ணன் |
– |
புண்டரீகாக்ஷனும் |
| யாவையும் யாவரம ஆய்நின்ற |
– |
ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும் |
| மாயன் |
– |
ஆச்சர்ய சக்தியுக்தனும் |
| என் ஆழி பிரான் |
– |
கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும் |
| மாவை வல் வாய் பிளந்த |
– |
குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான |
| மதுசூதற்கு |
– |
மதுஸூதநனுக்கு |
| வினையாட்டியேன் பாசறவு |
– |
பாலியான என்னுடைய நிறக்கேட்டை |
| தீர்க்கிற்றிரே |
– |
தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி) |
***- (பூவைகள் போல்) இப்பாட்டுக்கு விளி ஈற்றடியிலேயுள்ளது. “பாவைகள்“ என்றது அண்மைவிளியாகையாலே பாவைகாள்! என்றபடி.
பாவையாவது மரப்பாச்சி, அறிவில்லாமைக்கு எல்லைநிலமான பாவைகளையும் பார்த்து இரக்கிறாள்.
பரம சேதநனான ஸர்வேச்வரனோ உபேக்ஷித்துக் கைவாங்கி நின்றான், சிறிது சைதந்யமுள்ள பக்ஷிகளோ பறந்து போவனவும் அந்யவரங்களுமாயிருந்தன, இனி அசேத்னங்களைக்கொண்டு காரியம் பார்க்கையே உற்றதென்று நினைத்தாள் போலும்.
“அசேதநமுங்கூட வெழுந்திருந்து காரியஞ் செய்ய வேண்டும்படி காணும் இவளவஸ்தை“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
எம்பெருமான் உபேக்ஷித்திருந்தால் இவள் வாளா கிடக்கலாகாதோ என்று நாட்டார் சொல்லுவர்கள்,
அந்தோ! அப்படி என்னாலிருக்கப் போகிறதில்லையே! அவனுடைய திருமேனி நிறமும் திருக்கண்ணழகும் மற்றுமுள்ள ப்ரபாவமும் குணசேஷ்டிதங்களும் நினைக்க நினைக்க வாளா விருக்க வொண்ணுமோ? என்கிறாள்.
பூவைகள்போல் நிறத்தன் – “ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன்“ என்பர் நம்பிள்ளை.
வால்மீகி பகவான் ஸ்ரீராமபிரானைப் பற்றிப் பேசுமிடத்தில் “ஸர்வேஷாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்“ என்னலாமாயிருக்க,
அங்ஙனம் சொல்லாது “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்“ என்றான். ஆண்களையுங்கூட ஆகர்ஷிக்கும் வடிவு படைத்தவன் என்றபடி.
பாஞ்சாலியைக் கண்ட பெண்டிர்கள் * பும்பாவம மநஸா யயு, * என்னும்படி ஆண்மையை விரும்பினது போல,
என் திருமாலைக் காணுமவர்கள் ஆண்களாயிருந்தாலும் பெண்ணுடையுடுக்கும்படியாகு மென்கிறாளென்க.
புண்டரீகங்கள் போலுங்கண்ணன் – ஒரு பூவின்மேலே மற்றொரு பூ உண்டாகுமதிசயம் எங்குங்கண்டதில்லை, திருமேனியோ பூவைப்பூ, திருக்கண்களோ அந்தப்பூவில் தோன்றிய புண்டரீகங்கள் என்று வியந்து சொல்லுகிறபடி. “காயாம்பூவிலே தாமரை பூத்தாற்போலே யிராநின்றது“ என்பது ஈடு.
யாவை யாவருமாய் நின்றமாயன் – எந்த வஸ்துவோடு அவன் கலக்கப்புகுந்தாலும் வேறுபாடு தோற்றாமே ஏகவஸ்து வென்னலாம்படி கலக்கவல்லவன் என்பது இங்கு விவக்ஷிதம்.
என்னாழிப்பிரான் – சக்கரம் வந்தவிடத்தே சங்கும் வருமாகையாலே, இங்கு ஆழயைச் சொன்னது சங்குக்கும் உபலக்ஷணமாகி, திவ்யாயுதச் சேர்த்தி யழகைக் காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனென்றவாறு.
எவ்வளவு பேசினாலும் அவதார சேஷ்டிதங்களையும் கூடவே பேசினாலல்லது தரிப்பில்லாமையாலே கேசி நிரஸந, மதுகைடப ஸம்ஹார வ்ருத்தாந்தங்களை மூன்றாமடியிற் பேசுகிறபடி.
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு என் வார்த்தைகளைத் தெரிவித்து என் துக்கத்தைத் தீர்க்கமாட்டீர்களா? என்றாளாயிற்று.
————-
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-
பதவுரை
| ஆக அறு தூவி |
– |
பழிப்பற்ற சிறகையுடைய |
| வெள்ளை குருகே |
– |
பரிசுத்தமான குருகே! |
| வினையேன் |
– |
பாலியான நான் |
| பாசறவு எய்தி |
– |
நிறமழிந்து |
| இன்னே |
– |
இவ்வண்ணமாகவே |
| எனை ஊழி |
– |
எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்! |
| ஒரு நாள் அருள் செய்து |
– |
ஒருநாள் க்ருபை பண்ணி, |
| மாசு அறு நீலம் சுடர் முடி |
– |
மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான |
| வானவர் கோனை கண்டு |
– |
தேவாதிதேவனைக் கண்டு |
| ஏக அறும் தும்மை அல்லால் |
– |
“பழிப்பற்ற உம்மை யொழிய |
| பேர்த்து மற்று மறுநோக்கு இவள் |
– |
பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.) |
***- (பாசறவெய்தி) முன்னே நின்றதொரு குருகைத் தூதுவிடுகிறாள். உலகில் துக்கப்பட்டவர்கள் இஷ்ட ஜனங்களைக் கண்டவாறே துக்கம் மேலிடப்பெற்றுக் கதறியழுமாபோலே, குருகேயென்று விளிப்பதற்கு முன்னமே தன் துக்கமேலிட்டை வெளியிடுகிறாள் முதலடியல்
பாசறவு எய்தி – பாசு என்று பசுமையைச் சொல்லிற்றாய், அதன் அறவு –நிறவேறுபாடு என்க. பசலை நிறங்கொண்டு என்றபடி.
அதைப் பாசுரமிட்டுச் சொல்லமாட்டாமல் இன்னே என்று படியெடுத்துக் காட்டுகிறாள். என்னுடைய வைவர்ணியமிருக்கும்படியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கோ ளென்கிறாள்.
எந்த விஷயத்திலீடுபட்டு இந்த நிறவேறுபாடு உண்டாயிற்றே அந்த விஷயம் பேச்சுக்கு நிலமானாலன்றோ இதுவும் பேச்சுக்கு நிலமாவது.
வினையேன் –உலகத்தில் ஒரு விஷயம் அருமைப்பட்டதென்று அறியப்பெற்றல் அதைவிட்டுக் கைவாங்கி நிற்கிறோமன்றோ,
அப்படியே இந்த எம்பெருமான் அருமைப்படுகிறானென்று அறிந்தவாறே நான் இவனை மறந்து பிழைக்கலாமே,
அப்படி மறக்கமாட்டாமல் நீச்சலும் நினைந்து உருகியலற்றும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்றபடி.
எனையூழிகைவேன் ஸம்ச்லேஷம் அல்பகாலத்தளவாக இருப்பதுபோல விச்லேஷமும் அப்படியே யிரக்கலாகாதா?
ஸம்ச்லேஷம் ஒரு நொடிப்பொழுதா யிருக்கவேணும், விச்லேஷம் பல பல வூழிகளாயிருக்க வேணும் என்று இப்படியும் ஒரு ஸங்கல்பா?
எத்தனை யூழிகாலம் இப்படி நைவேன் என்கிறாள்.
ஆசறுதூவி வெள்ளைக்குருகே – தூவியென்று இறகுக்குப் பெயர் –
இறகுகள் நிஷ்கல்மஷமாயிருக்கையாவது ஞானமும் அனுட்டானமுமாகிற இரண்டும் களங்கமற்றிருக்கை.
“வெள்ளை“ என்று சுத்தியைச் சொல்லுகிறது. உள்ளும் புறமும் ஒரு படியாக நிர்மலமாயிருக்கப் பெற்ற சுத்தியைச் சொன்னவாறு.
* மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம் * என்கிறபடியன்றியே
* மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் * என்கிறபடி மன மொழி மெய்கள் ஒன்றியிருக்கப் பெற்றவர்கள் இங்கு விவக்ஷிதர்கள்.
“அருள் செய்து ஒருநாள்“ என்கிற பாடமே நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் காலத்தில் வழங்கிவந்த்து.
இப்பாடத்தில் இப்பாட்டுக்கு வினைமுற்று (க்ரியாபதம்) இல்லையாகிறது.
“நீ போய்ச் சொல்லவேணும்“ என்கிற ப்ரார்த்தனை இருக்கவேணுமே, அது இப்பாட்டில் இல்லை,
ஆனாலும் வருவித்துக் கொள்ளலாமென்று நம்பிள்ளை திருவுள்ளம் பற்றுகிறார்.
“அருள் செய்து என்று பாடமானபோது “என்று சொல்” என்று வாக்யசேக்ஷமாகக் கடவது“ என்றும் எழுதியுள்ளார்.
“அருள் செய்து“ என்று வினையெச்சமான பாடமே ப்ரஸித்தம்.
ஈற்றடியின் முதலிலுள்ள “ஏசறு“ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டியருளுகிறார்.
ஏசறு – துக்கப்பட்டு என்றபடி. நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு என்று தாற்பரியம்.
“மாசறுநீலச்சுடர்முடி“ என்றவிடத்து நீலச்சுடர் என்ற விசேஷண ஸ்வாரஸ்யத்தினால் முடியென்பது மயிர் முடியையே காட்டுமென்று கொண்டு பிள்ளான் நம்பிள்ளை முதலானார் அப்படியே வியாக்கியானம் செய்தருளுகிறார்கள்.
“நீலஜ்யோதிர்மய குந்தலபாராலங்க்ருதனாய்“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
தேசிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இப் பாசுரத்தை நோக்கி * ஸாம்ராஜ்ய யோகாத் * என்றருளிச் செய்திருக்கையாலே முடியென்பதற்குத் திருவபிஷேகமென்று பொருள் கொண்டமை தெரிகின்றது.
நீலமணிகளழுத்தின கிரீடமென்கிற பொருளும் பொருந்தும்.
—————–
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-
பதவுரை
| நீர் திரை மேல் உலவி |
– |
நீரலைகளின் மேலே உலாவி |
| இரை தேரும் |
– |
உணவுப்பொருள்களை ஆராய்கின்ற |
| புதா இனங்காள் |
– |
பெருநாரைக்கூட்டங்களே! |
| வினையாட்டியேன் நான் |
– |
பாவியான நான் |
| பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன் |
– |
(உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் |
| (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்) | ||
| கார் திரள் மா முகில் போல் |
– |
கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான |
| கண்ணன் விண்ணவர் கோனை கண்டு |
– |
கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு |
| வார்த்தைகள் கொண்டு |
– |
அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு |
| அருளிவந்து இருந்து |
– |
என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு |
| அருளி வந்து இருந்து |
– |
என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து |
| வைகல் உரையீர் |
– |
(இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள் |
***- (பேர்த்துமற்றோர்) புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள்.
பயிர்கள் உலராநிற்க மேகங்கள் வீணாகக் கடலிலே வர்ஷிக்குமா போலே, தன்னுடைய கடாக்ஷமொழிய வேறொரு கதியின்றியே நான் தளர்ந்து உலர்ந்துகிடக்க,
ஆனந்த மஹார்ணவத்திலே நித்ய நிமக்நராயிருக்கின்ற நித்ய ஸூரிகளுக்கே தன்னை யநுபவிக்கக் கொடுத்துக்கொண்டு அங்கேயேயிருப்பது தகுதியோவென்று ஸ்ரீ வைகுண்டநாதனிடத்தில் விண்ணப்பஞ் செய்து,
பின்னை அவள் அருளிச் செய்யுமது கேட்டுவந்து அதை எனக்கு அநவரதம் சொல்லிக்கொண்டிருந்து என்னை ஆச்வஸிப்பிக்க வேணுமென்கிறாள்.
“கார்த்திரள் மாமுகில்போல் விண்ணவர்கோனை“ என்கிற சொற் சேர்த்தியழகை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்கிறார் –
“விடாய்த்தாரிருக்க மீனுக்குத் தண்ணீர் வார்த்திருக்கிறவனை.“ என்று.
வர்ஷிக்க வேண்டிய இடத்தை உபேக்ஷித்து வர்ஷிக்க வேண்டாத விடங்களிலே வர்ஷிப்பது மேகத்தின் இயல்வாகக் காணுமதொன்றாகையாலே ப்ரக்ருதத்தில் இது பொருத்தமான கருத்தாகும்.
மேகம் வர்ஷிக்க மறுத்தாலும் வாபீகூப தடாகங்களில் நின்று நீரைப்பாய்ச்சிப் பயிர்களுக்குப் பாங்கு செய்வதுண்டே,
அப்படி நீதானும் முகரந்தரத்தாலே உய்யலாகாதோ வென்ன, பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியென் நானொன்றிலேன் என்கிறாள்.
“விழிக்குங் கண்ணிலேன் நின்கண்மற்றல்லால் வேறொருவரோடென் மனம் பற்றாது“ என்கிறாளாயிற்று.
நீர்த்திரைமேலுலவி யிரைதெரும் – எங்களைப் பரமபதத்திற்குப் போகச்சொல்லுகிறாயே ஆவரண ஜலம் விரஜை முதலானவற்றைக் கடந்து செல்லவேண்டுமே, இது ஸாத்யமோ! என்று நீங்கள் இறாய்க்கவேண்டா,
நிலத்திலே உலாவுமாபோலே நீரிலே உலாவுமவர்களன்றோ நீங்கள் என்றபடி.
இரைதேரும் புதாவினங்காள்! நான் உபவாஸத்தாலே மெலிந்துகிடக்க, நீங்கள் இரைதேடுவது தகுதியோ?
என்னை யுண்பித்தன்றோ நீங்களுண்ண வேணும் என்பது கருத்து.
இப்படிச் சொன்னவாறே அவை “நாங்கள் செய்யவேண்டுவதை நியமிக்கலாகாதோ“ வென்ன, பின்னடிகளில் நியமிக்கிறாள்.
வார்த்தைகள் கொண்டருளி என்று பொதுப்படச் சொல்லயிருக்கையாலே, அநுகூலமான வார்த்தையோ பிரதிகூலமான வார்த்தையோ எதுவாயிலும் அமையும், அவ்விடத்திலிருந்து கிடைத்த வார்த்தையாக இருக்கவேண்டுமத்தனையே என்பது காட்டிற்றாகும்.
வருகிறேன் என்றோ, வரமாட்டேன் என்றோ “இனி அவளுக்கும் நமக்கும் பணியில்லை“ என்றோ, வரமாட்டேன் என்றோ “இனி அவளுக்கும் நமக்கும் பணியில்லை“ என்றோ அவன் சொல்லும் வார்த்தை எதுவாகிலுமாம்,
அந்த வார்த்தையை நீங்க்ள பரமகிருபாயடு கேட்டுக்கொண்டு வந்து எப்போதும் என்னருகிலேயேயிருந்து அதைப் பன்னிப் பன்னிச் சொல்லிக்கொண்டிருப்பதே எனக்கு அபேக்ஷிதம் என்றாளாயிற்று.
அங்கிருந்து வருகிற வார்த்தை அநுகூலமாயிருக்குமாகில் இன்பமேயாகும், பிரதிகூலமாயிருக்குமாகில் அதைக் கேட்டுக்கொண்டிருக்கலாகுமோ? என்று சங்கிக்கவேணடா, ததீயத்வாகாரத்தாலே எதுவும் உத்தேச்யமே.
அன்றிக்கே, “வார்த்தைகள்“ என்பதற்கு அபயப்ரதான வார்த்தைகள் என்றே பொருள் கொள்ளவுமாம்.
————-
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-
பதவுரை
| வந்து இருந்து |
– |
(ஏற்கனவே என் கண்னெதிரில் வந்திருந்து) |
| உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் |
– |
உங்களுடைய அழகிய சேவல்களும் (அவற்றுக்கு இனிய) நீங்களும் ஆக எல்லாம் |
| அந்தரம் ஒன்றும் இன்றி |
– |
இடையீறு ஒன்றுமில்லாமல் |
| அலர்மேல் அசையும் |
– |
பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற |
| அன்னங்காள் |
– |
அன்னப்பறவைகளே! |
| என் திருமார்வற்கு |
– |
லஷ்மீபதியான எமபெருமானுக்கு |
| என்னை |
– |
என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து |
| இவள் இன்ன ஆறு காண்மின் என்று |
– |
“இப்பராங்குசநாயகி இவ்வண்ணமானாள் காணும்“ என்று |
| மந்திரத்து |
– |
அவளும் அவனுமான தனி யிடத்திலே |
| ஒன்று உணர்த்தி |
– |
ஒரு பேச்சு அறிவித்து |
| மறு மாற்றங்கள் உரையீர் |
– |
அதற்கு அவன் சொல்லும் மறு மொழிகளை என்னிடத்தே வந்து சொல்லுங்கோள். |
***- (வந்திருந்தும்முடைய) மஹாகோஷ்டியிலே எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில் திருவுள்ளம் அந்யபரமாயிருக்குமாதலால் அப்போது சொல்லாதே, திருவோலக்கத்தில் நின்று மெழுந்து திவ்யாந்தபுரத்திலே யெழுந்தருளினால்
அங்கே பிராட்டியுடைய திவ்யஸந்நிதானத்திலே திருவுள்ளத்திற்படும்படி என் திறம் விண்ணப்பஞ்செய்து அவனுரைக்கும் மறுமாற்றாங்கொண்டு என்னருகே வந்திருந்து சொல்லவேணுமென்று அன்னங்களைக்குறித்து வேண்டுகிறாள்.
முந்துறமுன்னம் வந்திருந்து என்பது ஆனந்தமாகச் சொல்லுகிற வார்த்தை. “தூது போவார் எங்கே கிடப்பார்“ என்று நான் தேடவேண்டாதே என் ஆர்த்தியைப் பரிஹரிக்க நீங்களே முற்கோலி வந்திருக்கிறீர்களே!
ராஜ்யதாரங்களையிழந்து ஸுக்ரீவ மஹாராஜர் விஷண்ணராயிருந்தவிடத்தே வந்து பெருமாள் முகங்காட்டினாப்போலேயிருந்தது உங்களுடைய மஹோபகாரம் என்று உகந்து சொல்லுகிறபடி.
“உம்முடைய மணிச்சேவல்“ என்று சொன்னவிதில் தன்னுடைய மணிச்சேவலை வ்யா வர்த்திக்கன்றதென்று நம்பிள்ளை காட்டியருளுகிறார்.
“தன்னுடைய மணிச்சேவல் கடக்க விருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயிறே யிருக்கிறது“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
சேவல் என்று பொதுவாக நாயகனைச் சொன்னபடி. எல்லாம் – மற்றும் குடும்பங்களுமெல்லாம் என்றபடி.
“என் திருமார்வற்கு என்னை“ என்ற சொற்சேர்த்தியால் திவ்ய தம்பதிகளிருவருமான சேர்த்தியிலே தான் அடிமை செய்ய ஆசைப்பட்டிருக்கிறமை விளங்கும்.
இன்னவாறு இவள் காண்மினென்று – நான் இருக்கும்படியை உங்களுடைய உடம்பிலே ஏறிட்டுக் காட்டவேணுமென்கிறாள் போலும்.
மந்திரத்து என்றது மந்த்ராலோசனை செய்யுமிடமான ஏகாந்த ஸ்தலத்திலே என்றபடி.
பெரிய ஸதஸ்ஸில் சொல்லவேண்டா, விரோதிகள் பலருமிருக்கவுங்கூடும்,
பிராட்டியின் சொல்லை ஜீவிக்கும்மிடமான அந்தரங்க ஸ்தலத்திலே என்றபடியாய், ஒன்று என்று அதில் நடுப்பதமான உகாரத்தைச் சொன்னபடியாய், அதிற் சொல்லுகிற அநந்யார்ஹத்தை விண்ணப்பஞ் செய்யுங்கோள் என்பதாகவும் அருளிச் செய்வர்கள்.
மறுமாற்றம் என்னாமல் “மறு மாற்றங்கள்“ என்றதனால், திருமார்விலிருக்கும் திரு சொல்லுகிற மாற்றமும் திருமார்வன் சொல்லுகிற மாற்றமும் ஆக இவருடைய மறுமொழிகளும் கேட்க ஆசைப்பட்டமை தோன்றும்.
—————
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11-
பதவுரை
| மாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன் |
– |
பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் |
| மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு |
– |
சொற்களை ஆராய்ந்தெடுத்து |
| மது சூதபிரான் அடி மேல் |
– |
எம்பெருமான் திருவடி விஷயமாக |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| தோற்றங்கள் ஆயிரத்துள் |
– |
ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள் |
| ஊற்றின கண் நுண் மணல்போல் |
– |
ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல் |
| நீர் ஆய் உருகா நிற்பர் |
– |
நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள் |
***- (மாற்றங்களாய்ந்து கொண்டு) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்கும் பாசுரமிது,
இதில் விலக்ஷணமானதொரு பலன் கூறப்படுகிறது.
“ஊற்றின்கண் நுண் மணல்போல் உருகாநிற்பர் நீராயே“ என்பது இங்குக் காணும் பயனுரை. இதுவொரு பலனோவென்று சங்கிக்கவேண்டா,
கல்நெஞ்சராயிராமே ஈரநெஞ்சினராயிருந்து உருகப்பெருவதென்பது ஒரு விலக்ஷணமான பலனன்றோ, ஆகவே இதுவும் பலச்ருதியேயாகும்.
“மாற்றங்களாய்ந்துகொண்டு சொன்ன ஆயிரம்“ என்றதை முக்கியமாக கொண்டு ஆசார்ய ஹ்ருதயத்ல் ஒரு சூர்ணிகை அருளிச் செய்கிறார் – (“ராமாயணம் நாராயண கதை யென்று தொடங்கி“ இத்யாதி)
இதன் கருத்தாவது – வால்மீகி முனிவர் ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி கங்கையின் உற்பத்தி, ஸுப்ரஹ்மண்யனுடைய உற்பத்தி, புஷ்பகவர்ணநம் முதலானகதைகளைப் பரக்கப் பேசுவதால் அஸத்கீர்த்தநம் பண்ணி வாக்கில் அசுத்தி படைத்தார்.
வேதவ்யாஸர் “நாராயண கதை“ என்பதாகத் தொடங்கி ஸம்பவபர் வத்திலே பீஷ்மர் முதலான பற்பலருடைய உற்பத்திப்காரங்களை விரிவாகப் பேசுகையாலும், “பூசல் பட்டாலை“ (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்க நின்று மொழியாகிற கங்கையாலே சுத்தமாக்குகிறேனென்று சொல்லிச் சுத்தி பண்ணிக்கொண்டார்.
ஆகவிப்படி, தொடங்கின படிக்குச் சேராமே அஸத் கீர்த்தனத்தைப் பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி “திருமாலவன் கவியாது கற்றேன்“ என்று திருமால் விஷயமான கவியென்று அடியில் வாயோலையிட்டபடியே“
மாற்றங்களாய்ந்து- கலசாதபடி. சொற்களைத் தெரிந்தெடுத்துச் சொல்லப்பட்டதான நம்மாழ்வார்ருளிச் செயலானது தேங்களில் புருஷஸூக்தம் போலவும், தர்மசாஸ்த்ரங்களில் மநுஸ்ம்ருதி போலவும், மஹாபாரதத்தில் கீதை போலவும், புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் போலவும் திவ்யப்ரபந்தங்களுக்குள்ளே ஸாரமாயிருக்குமென்கை.
தோற்றங்களாயிரம் – தோற்றமாவது ப்ராதுர்ப்பாவம். பகவானுடைய ப்ராதுர்ப்பாவம் போலவே திருவாய்மொழியினுடைய ப்ராதுர்ப்பாவமுமென்பர்.
அவன் மத்ஸ்யகூர்மாதிரூபேண தசாவதாரம் பண்ணினான், திருவாய்மொழியும் பத்துப்பத்தாக அவதாரம் பண்ணிற்று.
இதைப்பற்றின. விசேஷார்த்தங்களை ஆசார்ய ஹ்ருதயத்தில் “சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும்“ இத்யாதி சூர்ணையிலே காண்க.
———————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply