*** ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார்.
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-
பதவுரை
| ஆய்ச்சியரோடு |
– |
கோபிமார்களோடு |
| குரவை கோத்ததும் |
– |
ராஸக்ரீடை செய்த தென்ன |
| குன்றம் ஒன்று ஏந்தியதும் |
– |
கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன, |
| உரவு நீர் பொய்கை |
– |
முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில் |
| நாகம் காய்ந்ததும் |
– |
காளியநாகத்தை முனிந்ததென்ன |
| உட்பட |
– |
ஆகிய இவை முதலாக |
| மற்றும் பல |
– |
மற்றும் பலவகைப்பட்டவையான |
| அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி |
– |
நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி |
| நல் இரவ்வும் பகலும் தவர்கிலம் |
– |
வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம். |
| நமக்கு என்ன குறை |
– |
இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு. |
தமிழில் குரவைக்கூத்தென்பதே வடமொழியில் ராஸக்ரீடை எனப்படும்.
••• அங்கநாமங்கநாமந்தரே மாதவ, மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்கநா * என்கிறபடியே ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகப் பல வடிவு படைத்து நின்று கைகோத்தாடல்.
இங்கு முதன்முதலாகக் குரவைக் கூத்தைப் பற்றிப் பேசுவானேன்? என்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர் – “* மின்னிடை மடவாரிலுண்டான தம்முடைய ப்ரணய ரோஷத்தைப் போக்கித் தம்மைச் சேரவிட்டுக் கொண்டபடி, திருக்குரவையில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாப் போலேயிருக்கையாலே அதுமுன்னாகப் பேசுகிறார். தாம் அநுஸந்திக்கிலிறே ஓரடைவாக இழிவது, அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறார். திருக்குரவையிற் பெண்ளோடுண்டான கல்வியை யாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது. பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களெல்லாரோடுங் கலந்த ப்ரீதி யுண்டாயிற்று இவரொருவரோடே கலந்த ப்ரீதி.“
குன்றமொன்றேந்தியது – குரவைக் கூத்திலே ஸௌலப்ய ஸௌசீல்யங்களைக் காட்டினான், பரத்வமுள்ளவிடத்தில் ஸௌலப்யமே பெருவிலை பெறுமாகையாலே அந்தப் பரத்வத்தைக் காட்டினது கோவர்த்தநோத்தரணத்தில்.
ஸம்வத்ஸரத்திற்கு ஒருமுறை இடையரெல்லாருங்கூடித் தனக்கிடுகிற மஹாபூஜையைக் கண்ணன் விலக்கி * அட்டுக்குவி சோற்றுப்பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறுமடங்கத் தானே அழுதுசெய்தா னென்கிற சீற்றத்தினால் இந்திரன் ஏழுநாள் ஓயாமழை பெய்விக்க அப்போது * குன்றமொன்றெடுத்தேந்தி நின்று மாமழைகாத்தருளினன் கண்ண பெருமானென்று ப்ரஸித்தம்.
உரவுநீர்ப் பொய்கை நாகங்காய்ந்தது – யமுனையின் ஒரு துறையிலே யிருந்து கொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்கினியினால் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடும் வாஸஞ்செய்து கொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிக் கொண்டிருந்தது.
ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை யோட்டிக் கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத அவ்வழியே போகத் தொடங்க, மற்ற இடைப் பிள்ளைகள் அழைத்து ‘கண்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் அனர்த்தம் விளையும், காளிய நாகத்திற்கு நாங்கள் அஞ்சுகின்றோம்” என்ன,
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங்கொண்டு சென்று அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ள தொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து, கொடிய அந்நாகத்தின் படங்களின் மேலேறித் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷை இட்டருள வேண்டுமென்று தான்னை வணங்கிப் பிரார்த்தித்த நாகக் கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற் சென்று வாழும்படி விட்டருளின் வரலாறு காண்க.
அரவிற்பள்ளிப்பிரான்தன் –••• ஏஷநாராயண, ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந, நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் * என்கிறபடியே திருப்பாற்கடலில் அடவிற்பள்ளி துயின்றவனாயிருந்து அப் பள்ளியை விட்டு மதுரையிலே திருவவதாரஞ் செய்தருளின கண்ணபிரானுடைய என்றபடி.
மாயவினைகள் – அற்புத சேஷ்டிதங்கள்.
“தவிர்கிலன் என்ன குறை வெனக்கே“ தவிர்கிலம் என்னகுறை நமக்கே“ என்பன பாடபேதங்கள்.
—————-
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-
பதவுரை
| கேயம் தீம் குழல் ஊதிற்றும் |
– |
சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன. |
| நிரை மேய்த்ததும் |
– |
பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன |
| கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும் |
– |
கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும் |
| மற்றும் பல |
– |
மற்றும் பலவுமான |
| மாயம் கோலம் பிரான்தன் செய்கை |
– |
திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை |
| நினைத்து |
– |
சிந்த்னைசெய்து |
| மனம் குழைந்து |
– |
நெஞ்சு நீர்ப்பண்டமாக |
| கேயத்தோடு எனக்கு கழிந்த போது |
– |
அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின் |
| எவ்வுலகம் நிகர் |
– |
உபயவிபூதியும் ஒவ்வாது. |
***- (கேயத்தீங்குழல்) கண்ணபிரானுடைய வேணுகானத்தின் சிறப்பு பெரியாழ்வார் திருமொழியில் * நாவலம் பெரியதீவினில்வாழும் * என்கிற திருமொழியிலே பத்துப் பாசுரங்களினால் பரக்கப் பேசப்பட்டது.
அவற்றின் பொருளையெல்லாம் சுருக்கி பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவ உத்தர சதகத்தில் ஒரு ச்லோகத்தினால் அருளிச்செய்தார், •••• இத்யாதி.
அதில் •••• த்வம் தேஷு அந்யதமாம்ப்பூவித பவத்வேணுக்வணோந்மாதநே * என்கிற ஈற்றடி பரம ரஸம்.
வேணு கானத்தைக் கேட்டு விகாரப் பட்டவர்களில் கண்ண பிரான் தானும் ஒருவனானான் என்கிறது.
•••• என்கிற வடசொல் கேய மெனத் திரிந்தது. தீம் – இனிமை.
நிரைமேய்த்தும் – பரமபதத்திலே நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் ஓலக்கம் கொடுத்துக் கொண்டு பராத்பரனாக விளங்கும் பெருமான் அவ்விருப்பிலே விருப்பற்றவனாய், பூலோகத்திலே வந்து பிறக்க வேணுமென்றும்
அதிலும் * அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் * என்கிறபடியே அறியாதர்க்குள்ளே அறிவு கேட்டுக்கு எல்லை நிலமான இடைச்சாதியிலே வந்து தோன்ற வேணுமென்றும் திருவுள்ளம் பற்றி வந்து சேர்ந்து சாதியின் மெய்ப்பாட்டுக்காகத் தானே மாடுகளையுங் கன்றுகளையும் மேய்த்தவிது என்ன நீர்மை! என்று உருகுகிறபடி.
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவை * என்கிறார் இவ்வாழ்வார் தாமே மேலே.
இதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம்,
(1) திவத்திலும் என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பரமபதத்திலிருப்பைக் காட்டிலும் பசுக்கூட்டங்களை மேய்ப்பது தன்னையே உகக்கின்றாய், (2) ஏழாம் வேற்றுமையாகக் கொண்டு, பரமபதத்திலிருக்கச் செய்தேயும் பசுநிரை மேய்ப்பதையே உகக்கின்றாய்,
(அதாவது) அவதார ஸமாப்தியாகித் தன்னடிச் சோதிக் எழுந்தருளியான பின்பும் அங்கும் பசுக்களை மேய்க்கிற வாஸநையே அனுவர்த்தித்து “டீயோ! டீயோ!“ என்றே வாய் வெருவிக் கொண்டிருக்கிறபடி.
பின்னை தோள்கள் மணந்தது – கும்பனென்றும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்துகொள்ளக் கருதி, அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழுதிருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்துகொண்ட வரலாறு அறிக.
* ஒருத்திமகனாய்ப்பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் ஒளித்துவளர்ந்த கண்ணபிரானுக்கு இரண்டு குலத்திலும் இரண்டு திவ்ய மஹிஷிகள் பிரதானர்களாக வாய்ந்தனர், இடைக்குலத்திற்கு நப்பின்னைப்பிராட்டியும், யதுகுலத்திற்கு ருக்மிணிப்பிராட்டியும்.
இவ்வர்த்தத்தைக் கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹுஸ்தவத்தில் அழகாக அருளிச்செய்தபடி –•••• பாரீர். ஹேஸுந்தரைகதரஜந்மநி க்ருஷ்ணபாவே த்வே மாதரௌ ச பிதரௌ ச ருகே அபித் வே, ஏக்க்ஷணாதநுக்ருஹீதவத, பலம் தே நீலா குலேநஸத்ருசீ கில ருக்மிணீ ச.
மாயக்கோலப்பிரான – மாயா என்கிற வடசொல் மாயமெனத் திரிந்தது. மாயா – ஸங்கல்ப ஜ்ஞானம், ஆச்சரியம், க்ருத்ரிமம் எனப் பலபொருள்படும். கருமத்தாலன்றிக்கே தன்னுடைய ஸங்கல்பத்தாலே ஏற்றுக்கொண்ட திவ்யமங்கள விக்ரஹத்தையுடைய பெருமான் என்றபடி.
அவனது திவ்ய சேஷ்டிதங்களைச் சிந்தனைசெய்து நெஞ்சு நீர்ப்பண்டமாகி பக்தி மயமாக எனக்குக் காலம் கழிவதுபோல மற்று ஆர்க்கேனுமுண்டோ? என்கிறார்.
விபூதியில் மாத்திரமன்று, அந்த விபூதியிலும் இல்லை என்கைக்காக “எவ்வுலகம் நிகரே“ என்கிறார்.
ஏன்? திருநாட்டிலுள்ளார்க்கு இடையறாத அநுபவமில்லையோ வென்னில், இல்லையென்பதில்லை, அங்குப் பரத்வகுணாநுபவம் செல்லுமே யல்லது நீர்மைக்கு நிலமன்றே.
————–
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-
பதவுரை
| நிகர் இல் மல்லரை செற்றதும் |
– |
(மிடுக்கில்) ஒப்பில்லாத மல்லர்களை முடிந்த்தென்ன |
| நிரை மேய்த்ததம் |
– |
ப்சுக்களை மேய்த்ததென்ன |
| நீள் நெடு கை |
– |
உயர்ந்த நெடி துதிக்கையை யுடையதாய் |
| சிகரம் மா |
– |
மலைசிகரம்போன்று (பெரிதான |
| களிறு |
– |
(கஞ்சனது) யானையை |
| அட்டதும் |
– |
கொன்றொழித்ததென்ன (இவை போல்வனவும் பிறவும்) |
| புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை |
– |
மிகவும் ஜ்வலிக்கின்ற ஒளியுருவனான கண்ணபிரானுடைய செயல்களை |
| நினைந்து புலம்பி |
– |
நினைத்தும் வாய்விட்டுக் கதறியும் |
| என்றும் நுகர |
– |
நித்தியமும் அநுபவிக்கும் படியாக |
| வைகல் வைக பெற்றேன் |
– |
காலம் மிகவும் நீளும்படிபெற்றேன், |
| இனி |
– |
இப்படியானபின்பு |
| எனக்கு என் நோவது |
– |
எனக்கு க்லேசப்படவேண்டுவதுண்டோ, |
***- (நிகரில்மல்லரை) கண்ணபிரான் மல்லர்களைச் செற்றது இரண்டு பிரகணங்களில் கம்ஸன் தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீ புத்திரன் திருவாய்ப்பாடியில் ஒளித்து வளர்தலயறிந்து கோவங்கொண்டு எவ்வகையினாலாவது கண்ணனைக் கொல்ல நிச்சயித்து அசுரவர்க்கங்கள் பலவற்றையும் பூதனை முதலிய வேஷங்களுடன் திருவாய்ப்பாட்டிக்குச் செல்ல ஏவியும் வைத்து கண்ணனையும் பழுதுபட்டவனாக, பிறகு வில்விழா (தநுர்யாகம்) என்கிற வியாஜம் வைத்து பிரார்த்தனைக்கிணங்க ஸ்ரீ க்ருஷ்ண பலராமர்களிருவரும் புறப்பட்டு மதுரையிற் புகுந்து வீதிவாயில் வழியில் மதயானையை முடித்து உள்ளே கம்ஸ ஸபையிற் செல்லுகையில் அவர்களை எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகர் என்னும் மல்வாயில் வழியில் மதயானையைமுடித்து உள்ளே கம்ஸ ஸபையிற் செல்லுகையில் அவர்களை எதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணுரன் முஷ்டிகர் என்னும் மல்லர்கள் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும் போர் செய்ய, அவர்களை மற்போரினாலேயே கொன்று வென்றிட்ட வரலாறு ஒன்று.
(2) கண்ணபிரான் பாண்டவர்கட்குத் தூதனாய்த் தன்னிடம் வரப்போகிறா னென்பதையறிந்த துரியோதனன் எவ்வகையினாலேனும் க்ருஷ்ணனை முடித்துவிடுவதே கருமமன்று துணிந்து ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற் பிளப்புகளால் மேலே மூடி அதன்மேலே சிறந்த ரத்நாஸன மொன்றை அமைத்து அவ்வாஸனத்தின் மீது கண்ணபிரானை வீற்றிருக்கச் சொல்ல, கண்ணன் அங்ஙனமே அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில மல்லர்கள் எதிர்த்துவர, பெருமான் மிகப் பெரிதாக விச்வரூப மெடுத்து எதிர்த்து அந்த மல்லர்களை மடிவித்தானென்ற வரலாறு மற்றொன்று.
ஸ்ரீகாஞ்சீபுரியில் “திருப்பாடகம்” என்று ப்ரஸித்தமான பாணடவதூதர் வந்நிதியில் இவ்விதிஹாஸத்துக்குத் தகுதியாக மிகப்பெரிய திருக்கோலங்கொண்டு எழுந்தருளியிருக்கின்றமை அறியத்தக்கது. (பாடகம் – பாடு அகம், பாடு – பெருமை, அதுதோன்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க.
நீள்நெடுங்கைச் சிகரமாகளிறட்டது – கம்ஸனது அரண்மனைவாயிற் புகும்போது மல்லவதத்திற்கு முன்னே செய்த்து குவலயாபீடவதம். * வார்கடாவருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள் திண்பாகனுயிர்செகுத்து * என்ற பாசுரம் நோக்குக.
புகர்கொள் சோதிப்பிரான் – மல்லர்களை மடித்து மதயானையை முடித்தபின்பு வடிவிற்புகர் எழுந்தபடி.
அப்போதைய அழகிய நிலைமை மதுரையிற் பெண்கள் அனுபவித்துப்பேசினார்கள் •••• ஸக்ய பச்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம், கஜயுத்தக்ருதாயாஸ ஸ்வேதாம்புகணிகாசிதம். * என்று அவ்வூர்ப்பெண்கள் ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்ட வார்த்தை காணீர்.
என்றும் நுகர வைகல் வைகப்பெற்றேன் – இப்படிப்பட்ட சேஷ்டிதங்களை நாடோறும் புஜித்துக்கொண்டு காலம் கழியப்பெற்றேன், (அல்லது) அநுபவிக்கைக்குப் போரும்படி காலமானது நெடுகப்பெற்றேன் என்னவுமாம்.
———–
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-
பதவுரை
| ஆய்ச்சி நோவ |
– |
யசோதைப்பிராட்டியானவள் திருமேனியில் நோவுண்டாகும்படி (அல்லது, பக்தர்களின் மனம் துடிக்கும்படி) |
| உரலோடு ஆர்க்க |
– |
உரலோடு சேர்த்துப் பிணைக்க |
| வஞ்சம் பெண்ணை சாவ |
– |
வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன |
| பால் உண்டதும் |
– |
அவளது முலைப்பாலை உண்டதென்ன |
| ஊர் சகடம் இறசாடியதும் |
– |
(அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட) |
| தேவக் கோலம் பிரான் தன் செய்கை |
– |
அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை |
| நினைந்து |
– |
அநுசந்தித்து |
| மனம் குழைந்து |
– |
நெஞ்சு நெகிழ்ந்து |
| மேவ |
– |
பொருந்தும்படி |
| காலங்கள் கூடினேன் |
– |
காலங்கள் பலிக்கப்பெற்றேன் |
| எனக்கு |
– |
இங்ஙகனே பாக்கியம் பெற்ற எனக்கு இனிவேண்டுவது என் |
| இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ? | ||
***- (நோவ வாய்ச்சி) இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகு காணும். நோவ வென்கிறார் காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே!
யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது ஏங்கி யிருந்தபடியைச் சொல்லுகிறது.
* அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும் * என்னும்படியான யசோதைப் பிராட்டியானவள் கண்ணபிரானுடைய திருமேனியிலே நோவு உண்டாகும்படி ஒரு காரியஞ் செய்ய ப்ரஸிக்தியில்லையாயிருக்க, இங்கு நோவ என்றது – இச்செயலை அநுஸந்திப்பவர்களின் உள்ளம் நோவ என்றபடி.
ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் – ப்ரேம்ணாத தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருங் ந தே சரிதம் ஆர்யஜநாஸ் ஸஹந்தே என்றருளிச்செய்தது இங்கு அநுஸந்தேயம்.
உரலோடார்க்க இரங்கிற்றும் – கண்ணனை உரலோடு கட்டுவதனாலே அவனுக்கு ஸந்தேஷமா ஸங்கடமா? என்பது ஒரு ஆராய்ச்சி. ஸந்தோஷமே தவிர ஸங்கடமில்லை யென்று ஆசாரியர்களின் நிர்வாஹம்.
பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும்போது ஒரு ஸ்வாமி வந்து “அடியேனுக்கு ஒருரு திருவிருத்தம் பொருளருளிச் செய்யவேணும்“ என்று ப்ராத்திக்க
“நம்பெருமாளைப் பிரிந்த துயரத்தினால் எனக்கொன்றும் சொல்லப்போகிறதில்லை, நஞ்சீயா பக்கலிலே கேட்டுக்கொள்ளும்“ என்று சொல்லி நஞ்சீயர்க்கு நியமிக்க, சீ
யரும் பொருளருளிச்செய்து வருகையில் (86) * அடைக்கலத்தோங்கு கமலத்து என்ற பாசுரத்தில் “வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானை“ என்றவிடத்திலே “புடைக்க நஞ்சீயர் பொருளுரைக்க,
பட்டர் அதுகேட்டு, ‘ஜீயா! அலந்தானை என்ற பாடத்திற் காட்டிலும் ‘அலர்ந்தானை‘ என்ற பாடம் ஆழ்வார் திருவுள்ளத்திற்கு மிகப்பொருந்தும் போலே இன்று தோன்றுகின்றது‘ என்றருளிச்செய்தாராம். (இதன் விவரணம்).
கண்ணபிரான் வெண்ணெய்களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துகின்றாளென்று வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டுதுண்டாக அறுத்து வைக்திட்டு பின்னே களவு செய்யப்புகுவான்,
அவள் இவனை ஒரு கையிலே பிடித்துக்கொண்டு கயிறுதேட, அவை துண்டுதுண்டாக இருப்பதுகண்டு அவற்றை ஒன்றோடொன்று முடினுடம்புக்கு எட்டம் போராதபடியான அக் கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்ட முடியாதபடி ஆச்ரிதபாரதந்திரியம் முதலிய சீலங்களை வெளியிடுதற்கென்றே பரத்நிலையைத் தவிர்ந்து மநு ஷ்யஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான்
உரலோடு கட்டுண்டு அடியுண்டிருக்கை முதலான இவ்வகைகளால்தான் அக்குணங்களை விளங்கச் செய்துகொள்ள வேணுமென்று கொண்டு ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கியமைத்துக்கொண்டு “கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்“ என்னும்படியாவான்,
இங்ஙனே நம்முடைய ஸௌலப்ய குணங்கள் விளங்கப்பெற்றோமே! அவதார ப்ரயோஜனம் நன்கு நிறைவேறப் பெற்றதன்றோ என்று முகமலர்ச்சியடைந்திடுவன் என்பது ஆசாரியர்கள் கண்டறிந்த கருத்து.
உண்மை இங்ஙனேயிருக்க “உரலோடார்க்க இரங்கிற்றும்“ என்றது ஏன்? என்னில்,
* மச்சொடு மாளிகையேறி மரதர்கள் தம்மிடம்புக்குக் கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்பு துகிலவைகீறி நிச்சலுந்தீமைகள் செய்து திரிவதையேபோது போக்காக் கொண்ட தான் மேன்மேலும் துருதுருக்கையாய் ஓடித்திரித்தலைந்து தீம்புகள் செய்வதற்கு அவகாசமில்லாதபடி சற்றுப் போது கட்டுண்டிருக்க வேண்டியதாயிற்றே! என்கிற ஸங்கடமே யல்லது வேறில்லை யென்க.
வஞ்சப்பெண்ணைச் சாவப்பாலுண்டது – கண்ணனைக் கொல்லுமாறு கம்ஸனால் ஏவப்பட்ட அசுர்வர்க்கங்களில் ஒருத்தியான பூதனை நல்ல பெண்ணுவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி இறக்கும்படி செய்தமை யறிக.
ஊர்சகடமிறச்சாடியது – நந்தகோபர் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தி யசோதை யமுனை நீராடப் போயிருந்தகாலத்து, கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் வந்து ஆவேசித்து மேல்விழுந்து கொல்ல முயன்றதை பறித்த கண்ணன் பாலுக்கு அழுகிற பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்து அச்சகடத்தைச் சின்னபின்னமாக்கினமை யறிக.
ஊர்சகடம் – வினைத்தொகை ஊர்கின்ற சகடமென்க. “மலைபோலோடுஞ் சகடத்தை“ என்றார் திருமங்கை யாழ்வார்.
இத்தகைய சேஷ்டிதங்களை அநுஷந்தித்து அகவாய் உடைகுலைப்பட்டு அந்நய ப்ரயோஜநனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன், இதனால் நான் அவாப்த ஸமஸ்த காமனானேன் என்றராயிற்று.
—————
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-
பதவுரை
| தேவர் இரக்க |
– |
தேவதைகள் பிரார்த்திக்க |
| வேண்டி |
– |
திருவுள்ளமுவந்து |
| வந்து பிறந்ததும் |
– |
நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன |
| அன்று |
– |
அப்போதே |
| அன்னை |
– |
பெற்றதாயான தேவகி |
| பூண்டு |
– |
(கஞ்சன்பக்கல் பயத்தினால்) எடுத்தணைத்துக் கொண்டு |
| புலம்ப |
– |
இங்கேயிருந்தால் என்ன அபாயம் விளையுமோவென்று கதறி யழுதவளவிலே |
| ஓர் ஆய் குலம் புக்கலும் |
– |
இடைச்சேரியிலே பிரவேசித்ததென்ன |
| காண்டல் இன்றி வளர்ந்து |
– |
விரோதிகளுக்குக் காணுதலில்லாதபடி மறைவாக வளர்ந்து |
| கஞ்சனை துஞ்சவஞ்சம் செய்ததும் |
– |
கம்ஸன் முடியும்படியாக அவன் திறத்திலே வஞ்சனைசெய்த்தென்ன ஆகிய இச்செயல்களை |
| ஈண்டு |
– |
இப்போது (அல்லது) இவ்விடத்தே |
| நான் அலற்ற பெற்றேன் |
– |
நான் வாய்விட்டு உத்கோஷிக்கப்பெற்றேன், |
| எனக்கு என்ன இகல் உளது |
– |
இனி எனக்கு என்ன குறையுண்டு? |
***- (வேண்டித்தேவர்) தேவர் இரக்க வந்து பிறந்தது, வேண்டி வந்து பிறந்தது என்று இரண்டாக யோஜித்துக்கொள்வது. தங்களுக்குப் பகைவரான அசுரர்களை வந்து முடிக்க வேணுமென்று தேவர்கள் பிரார்த்திபவர்களாதலால் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காக வந்து பிறந்தமை “தேவர் இரக்க“ என்பதனால் பெறப்படும்.
பரமபதத்தில் இருந்து கொண்டே ஸங்கல்ப மாத்திரத்தினாலாவது திருவாழியாழ்வானை யிட்டாவது துஷ்டர்களைத் தொலைத்திட முடியுமாதலால் அதற்காக பகவான் வந்து பிறக்க வேண்டிய அவசியமில்லை,
தன் வடிவழகு, பேச்சினிமை முதலியவற்றைக்காட்டி ஸாதுக்களை வாழ்விக்க வேண்டிய வந்து பிறந்தனனாதலால் அல்வர்த்தகம் வேண்டி என்பதனால் காட்டப்பட்டது. வேண்டி – தான் விரும்பி என்றபடி.
கீதையில் ••••பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம், தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே. * என்பது எம்பெருமானுடைய திருமுகப்பாசுரம்.
சிஷ்டர்களை ரக்ஷிப்பதற்கும் துஷ்டர்களை சிக்ஷிப்பதற்கும் அறநெறியை நிலை நாட்டுவதற்கும் அடிக்கடி அவதாரங்கள் செய்து போருவேன் என்றருளிச்செய்து வைத்தான் –
இதில் பகவதவதாரத்திற்கு மூன்று பிரயோஜனங்கள் சொல்லப்பட்டுள்ளன, (சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்ரஹம் தர்மஸ்தாபனம் என்பன.) இவை மூன்றும் உண்மையில் ஒர பிரயோஜனமாகத் தலைக்கட்டக் கூடியதாம். எங்ஙனேயென்னில்,
பரித்ராணாய ஸாதூநாம் என்று முதலிலே சொல்லப்பட்ட சிஷ்ட ஜந ரக்ஷணமாவது அவர்களின் விரோதிகளைப் போக்கி அவர்களுக்கு அபிமதமான தர்ம ஸ்தாபனத்தைச் செய்துவைப்பதேயாம்.
ஆகையாலே பரித்ராணாய ஸாதூநாம் என்றதற்கே மற்றவை யிரண்டும் விவரண ரூபம் என்று கொள்ளத் தகும்.
இப்படிப்பட்ட சிஷ்டிபரிபாலனம் செய்யவேண்டில், ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் அவலீலையாக நடத்தவல்ல எம்பெருமான் கர்ம வச்யரைப்போலே வந்து பிறக்கவேணுமோ?
இருப்பிடத்திலிருந்து கொண்டே “சிஷ்டர்கள் வாழவேணும், வந்து பிறக்கவேணுமோ? இருப்பிடத்திலிருந்து கொண்டே ‘சிஷ்டர்கள் வாழவேணும், துஷ்டர்கள் மாளவேணும்‘ என்று ஸத்ய ஸங்கல்பனான தான் ஸங்கல்பித்து விட்டால் உத்தேச்யம் எளிதாக நிறைவேறிவிடுமன்றோ?
*•• எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * என்றும் சொல்லுகிறபடியே பலபல யோனி வாழ்வார்தாமே கீழே (3-1-9) * மழுங்காத வைநுதிய சக்கரநல்வலத்தையாய், தொழுங்காதல்களறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருலகில், முணர்த்தியருளினார்.
அதாவது ஸங்கல்பமாத்தரத்தினால் எம்பெருமான் சிஷ்டபரிபாலனம் செய்யுமளவில் அடியார்கட்கும் திருப்தி பிறவாத, எம்பெருமானுக்கும் த்ருப்தி பிறவாது.
ஏனெனில், துஷ்டர்கள் மடிய வேணும், தர்ம மார்க்கம் தழைக்கவேணும் என்பது மாத்திரமே அடியார்களின் அபேக்ஷிதமன்று,
* கூராராழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால் வாராய் * உரையாய் ஒருமாற்றமெந்தாய்! * என்றும் கதறுகின்ற அடியார்களின் அபேக்ஷிதம் ஸங்கல்பத்தினால் தலைக்கட்டக்கூடியதோ?
ஆண்களையும் பெண்ணுடையுடுத்தச் செய்யவல்ல வடிவழமலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த கானமர் வேழமானது “நாராயணா ஓ! மணிவண்ணா நாகணையாய்! வாராய் என்னாரிடரைநீக்காய்‘ என்று கதறினது – முதலையின் வாயிற் ஆழ்வார் அருளிச் செய்தபடி பாரீர்.
அந்த கஜேந்திராழ்வான் தானும் *••••• நாஹம் கலேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுஸூதந, கரஸ்தகமலாந்யேவ பாதயோரார்பிதும் தவ. * என்றானென்று புராண ப்ரஸித்தம்.
மிகவருந்திப் பறித்த இப்பூவை எம்பெருமானுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெறுகின்றிலோமே! என்ற இடரன்றோ கஜேந்திராழ்வானுக்கு உண்டாயது. இது ஸங்கல்பத்தினால் நீக்கக்கூடிய இடரன்றே.
இனி எம்பெருமானுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தாலும் நேரே யெழுந்தருளி முகங்காட்டி ரக்ஷித்தாலல்லது த்ருப்திபெறாத ஸ்வபாவமாயிராநின்றது.
மிக்க பெருஞ்சபைநடுவே துச்சாஸநனால் பரிபவிக்கப்பட்ட த்ரௌபதி * கோவிந்த புண்டரீகாக்ஷ! ரக்ஷ மாம் சரணாகதாம் * என்று கூவினவுடனே புடவை சுரக்குமாறு அருள்செய்து
அவளுடைய அபேக்ஷிதத்தைத் தலைக்காட்டியிருக்கச் செய்தேயும் “அந்தோ! முகங்காட்டி மகிழ்விக்கப் பெற்றிலோமே! அவளுக்கு நம்முடைய திருநாமம் காரியம் செய்த்தேயன்றி நாம் நேரே வந்து நின்று ஈரக்கையாலே தடவிக்கொடுத்து உதவிசெய்யப் பெற்றிலோமே! என்று திருவுள்ளம் புண்பட்டு
தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும் போதும் * நாதிஸ்வஸ்தமநாய்யௌ * என்னும்படியாக இதுவொரு பெரிய மனக்குறையாகவே யிருந்ததன்றோ.
ஆகவிப்படி ஆச்ரிதர்களின் த்ருப்திக்காகவும் தன்னுடைய த்ருப்பதிக்காகவும் அவதாரம் செய்யவேண்டுவது எம்பெருமானுக்கு அவசியமாயிற்று.
இதில் பகவானுடைய ஸ்வாத்ம த்ருப்தியே முக்கியமானது. அது தோன்றவே வேண்டி என்று இங்கே முந்துற அருளிச்செய்யப்பட்ட தென்க.
‘வீங்கிருள்வாய்‘ என்றது நடுநிலைத் தீபகமாய் முன்னும் அந்வயிக்கும், பின்னும் அந்வயிக்கும்.
வீங்கிருள்வாய்வந்து பிறந்ததும், (அல்லது) வீங்கிருள்வாய் ஆய்க்குலம் புக்கலும், என்றாகவுமாம்.
அன்று அன்னை பூண்டு புலம்ப – துராத்மாவான கம்ஸன் காணில் செய்வதென்? என்று ஸ்ரீ ஸூக்தி
“பிறந்தவன்றே தேவகியார், முன்பே ஆறு பிள்ளைகளை இழக்கையாலும் புத்ர வாத்ஸல்யத்தாலும் கம்ஸ பயத்தாலும் திருவடிகளைக் கட்டிக் கொண்டு கதற.“
காண்டல் இன்றி வளர்ந்து – கம்ஸனும் அவன் நலிவதற்காக நாடோறும் அனுப்பின பாதக வர்க்கமும் கர்ணாதபடி வளர்ந்து என்கை.
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்த்து – கஞ்சன் ஒரு வஞ்சனை எண்ணி யிருந்தான், (அதாவது) வில்விழா என்கிற வியாஜத்தினாலே வரவழைத்து யானையினாலும் மல்லர்களாலும் மடிவித்து ‘ஐயோ! என் மருமகன் மாண்டு நினைவை அவனோடே போக்கினானாயிற்று.
இப்படிப்பட்ட சரித்திரங்க ளெல்லாவற்றையும் இப்போது அலற்றப் பெற்ற வெனக்கு இனியொரு துக்கமுண்டோ?
இகல் – துக்கம் , விரோதம், குறை.
——————-
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-
பதவுரை
| இகல் கொள் புள்ளை பிளந்ததும் |
– |
விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன |
| இமில் ஏறுக்ள் செற்றதுவும் |
– |
பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன |
| உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும் |
– |
உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன |
| உட்பட மற்றும் |
– |
இவை முதலாக மற்றும் பலவான |
| அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே |
– |
பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே |
| பகல் இரா பரவ பெற்றேன் |
– |
பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன் |
| எனக்கு என்ன மனம் பரிப்பு |
– |
இன எனக்கென்ன மனத்துயரமுளது |
***- (இகல்கொள்புள்ளை) கம்ஸனால ஏவப்பட்ட ஓர் அஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில் கண்ணன் அவனது வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக்கிழித்திட்டனன் என்ற வரலாறுகாண்க.
இந்த வரலாற்றை யாதவாப்யுதய காவ்யத்தில் வருணிக்கின்ற வேதாந்தவாசிரியன் ••• ஸபக்ஷகைலாஸநிபஸ்ய கோபா, பகஸ்ப பக்ஷாந் அபிதோப்பந்து, வநே த்தந்யாநபி கோரவ்ருத்தீந க்ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவ கேதுமாலா * என்றார்
அந்த பகாசுரன் வந்தது இறகு முளைத்த கைலாஸமலையே ஊர்ந்துவருவது போன்றிருந்ததாம், அங்கு எங்கும் கட்டி வைத்தார்களாம், இனி யாரேனும் கண்ணனுக்குத் தீங்கு செய்யவந்தால் அவர்களுக்கும் இதுவே கதி என்று காட்டுதற்காக என்கை.
இமிலேறுகள் செற்றது – வில்லை வளைத்தவர்களுக்கே ஸீதாபிராட்டியை விவாஹம்செய்து கொடுப்பது என்று சுல்கம் வைத்திருந்ததுபோல, யாவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளை வலியடக்கினவர்களுக்கே நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்வித்துக்கொடுப்பதென்று நிபந்தனை வைத்திருந்ததனால் கண்ணபிரான் அங்ஙனமே செய்து பின்னை தோள் புணர்ந்தானென்பது வரலாறு.
குருந்தொசித்தது – யமுனைக்கரையில் கண்ணன் மலர் கொய்தற்பொருட்டு விரும்பி யேறுவதொரு பூத்த குருந்த மரமுண்டு, கம்ஸனால் ஏவப்பட்ட அசுரர்களில் ஒருவன் அந்த மரத்தில்வந்து பிரவேசித்து கண்ணன் தன்மீது வந்து ஏறும்போது தான் முறிந்து வீழ்ந்து அவனை வீழ்த்திக் கொல்லக்கருதி யிருந்தபோது மாயவனான கண்ணபிரான் அம் மரத்தைக் கைகளாற் பிடித்துக் தன் வலிமை கொண்டு முறித்து அழித்தன்னென்பது வரலாறு.
கண்ணபிரானுடைய சரித்திரங்களை மாத்திரமே அநுபவிப்பதாகக் கொண்ட இத் திருவாய்மொழியில் இப்பாசுரத்தில் * அகல்கொள் வையமளந்தமாயன் * என்றும், மேலே எட்டாம் பாட்டில் * மாணியாய்நிலங்கொண்டமாயன் * என்றும் வேறு அவதார சரித்திரத்தையுங் கூறினது குறையன்று,
“இகல்கொள்புள்ளைப்பிளந்தது“ “இமிலேறுகள்செற்றது“ “குருந்தொசித்தது“ என்றவைபோலே “அகல்கொள் வையமளந்ததும்“ என்று இதனையும் ஒரு சரித்திரமாகக் கூறி அநுபவித்தமை காட்டப்பட வில்லையே –எம்பெருமானுக்கு விசேஷணமொன்று இட்டதத்தனையே.
——————–
***அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச் செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார்.
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
பதவுரை
| தான் |
– |
பரஞ்சோதியுருவனானதான் |
| அழுக்கு மானிடசாதியில் |
– |
ஹேயமான மநுஷ்யஜாதியிலே |
| மனப் பரிப்போடு பிறந்து |
– |
ஸம்ஸாரிகள் விஷயமாகத் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்து |
| தனக்கு வேண்டு உரு கொண்டு |
– |
தனக்கு இஷ்டமான விக்ரஹங்களைப் பரிக்கரஹித்து |
| தான் தன சீற்றத்தினை முடிக்கும் |
– |
தன்னுடைய சீற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளுமவனான |
| புனம் சூழாய் மாலை முடி மார்பன் என் அப்பன் தன் மாயங்களே |
– |
செவ்வித்துழாய் மாலையைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையனான எம்பெருமானது ஆச்சரிய சேஷ்டிதங்களையே |
| நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு |
– |
அநுஸந்திக்கும் நெஞ்சு படைத்த வெனக்கு |
| இனி நின் நிலத்து நிகர் ஆர் |
– |
இனி இப்பெருநிலத்தில் ஒப்பாவார் ஆர்? (ஆருமில்லை.) |
கீழ்ப்பாசுரங்களிலும் மேற்பாசுரங்களிலும் சிலசில சேஷ்டிதங்களை விசேஷித்து எடுத்துரைத்து அநுபவிப்பதாக அருளிச்செய்யுமிவர் இப்பாட்டில் அங்ஙனம் ஒரு சரித்திரத்தை யெடுத்துரைக்கை யன்றிக்கே ஸமுதாய ரூபேண அருளிச்செய்கிறார்.
இப்பாட்டில் “தான் தன சீற்றத்தினை முடிக்கும்“ என்பது உயிரான வாசகம்.
தண்ணளியே வடிவெடுத்த எம்பெருமாலுக்கும், சீற்றமுண்டோ வென்னில்,
சௌர்ய வீர்ய பராக்ரமங்களென்கிற குணங்களையும் உடையவனாக ப்ரஸித்தி பெற்றிருக்கின்ற பகவானுக்கு எங்ஙனே சீற்றமில்லாமலிருக்கமுடியும்? சீற்றமுண்டானாலல்லது அக்குணங்கள் வீறுபெற வழியில்லையே.
காருண்யமும் சீற்றமும் விஷயபேதத்தாலே வ்யவஸ்தைபெறும்.
பக்த விரோதிகள் திறத்திலே சீற்றமுண்டாகிலும் அவர்கள்மீது சிறிதும் சீற்றங்கொள்ளான், பக்தர்களிடத்திலே அபராதப்படுவார் மீது சீற்றமே வடிவெடுத்தவனாயிருப்பன்.
ஸ்ரீவசநபூஷணத்தில் “ஈச்வரன் அவதரித்துப்பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்“ என்றுள்ள ஸ்ரீஸூக்தி ப்ரஸித்தம்.
அங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி – “பாகவதாபசாரம் பண்ணினால் ஈச்வரன் அஸஹமாநனாய் உசிததண்டம்பண்ணு மென்னுமத்தை ஆப்த வசநத்தாலே அருளிச்செய்கிறார் (ஈச்வரன்) என்று தொடங்கி அதாவது, ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன், தன்னை அழிய மாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூப அதி மாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹலாதன் அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்ததமரான நஞ்சீயர் அருளிச்செய்வரென்கை“.
இத்தால், எம்பெருமான் வந்து பிறந்தது முக்கியமாக ஆச்ரித விரோதிகளைத் தன்கையாலே தானே சித்ரவதம்பண்ணித் தனது சீற்றத்தை ஒருவாறு ஆற்றிக்கொள்ளவேணுமென்று கருதியே என்று தெளிவாகின்றது.
நஞ்சீயர் இங்ஙனே அருளிச்செய்த்தற்கு மூலம் இப்பாகரமே யென்னலாம்.
மனப்பரிப்போடு என்றது, பக்தர்கள்படும் கஷ்டங்களைப் பொறுத்தருக்க மாட்டாமையாகிற தயாளுத்வத்தினால் என்றபடி.
அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து என்றவிடத்து ஈடு, – “நாட்டாரை அழுக்குடம்பு கழிக்கும் தான் கிடீர் அழுக்கு மானிடசாதியிலே வந்து பிறந்தான் பிறக்கைக்குக் கர்மம் பண்ணி வைத்தவருங்கூட அருவருக்கும் ஜன்மத்திலே கிடீர் அகர்ம வசனான தான் பிறந்தது, இதுக்கடி காருண்யமிறே.“
தனக்கு வேண்டுருக்கொண்டு – எந்த எந்த காரியத்திற்கு எந்த எந்த உருவம் கொளவேணுமோ அத் தகுதியை நோக்கி மத்ஸ்ய கூர்ம வராஹ மநுஷ்யாதி யோநிகளிலே வடிவெடுக்கிறபடியைச் சொல்லுகிறது.
மஹர்ஷிகளும். உலகத்தில் நம்போல்வார் பிறப்பதற்கு ஹேது கருமமாயிருக்கும், எம்பெருமானுடைய பிறப்புக்கு ஹேது அதுவன்று, இப்படி அவதரிப்போம் என்கிற ஸ்வேச்சையொழிய வேறு ஹேதுவில்லை.
ஸம்பசவாமி ஆத்மமாயயா * என்று தானே அருளிச்செய்தான். இங்கு ஆத்ம மாயயா என்றது ஆத்மேச்சயா என்றபடி.
“மாயா வயுநம் ஜ்ஞாநம்“ என்று வைதிக நிகண்டு வாகையாலே மாயா சப்தம் ஜ்ஞாந வாசியாய் இச்சாரூபமான ஞானத்தைச் சொல்லுகிறதென்று ஆசாரியர்கள் வியாக்கியானம்பண்ணி யருளினார்கள்.
தான் தன சீற்றத்தினைமுடிக்கும் – இங்கே ஈடு – ஆச்ரித விரோதி போக்கினானாயிருக்கை யன்றிக்கே தன் சினம் தீர்ந்தானாயிருக்கை. -மாதாவானவள் ப்ரஜையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாபோலே
புனத்துழாய்முடிமாலைமார்பன் – இங்ஙனே ஆச்ரித விரோதிகளை முடித்துத் தன் சினம் தீர்ந்த பின்பே எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையும் நல் தரிக்குமாயிற்று. உள் வெதுப்போடே யிருக்குங்காலத்தில் புஷ்ப சந்தநாதி போக்ய வஸ்துக்களிலே நெஞ்சு செல்லமாட்டாதன்றோ.
—————
***- (நீணலத்தொடு) இப்பாட்டில் வாணனாயிரந் தோள் துணித்த சரித்திரமொன்றே அநுபவிக்கப்படுகிறது.
நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
பதவுரை
| நீள் நிலத்தொடுவான் வியப்ப |
– |
மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக |
| நிறைபெறும் போர்கள் செய்து |
– |
நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி |
| வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல |
– |
பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான |
| மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே |
– |
பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே |
| காணும் நெஞ்சு உடையேன் எனக்கு |
– |
ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு |
| இனி என்ன கலக்கம் உண்டே |
– |
இனி ஒருவகையான கலக்கமுமில்லை. |
பலி சக்ரவர்த்தியின் ஸந்த்தியிற் பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள் ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்த்தாக கனாக்கண்டாள். அதைத் தன் உயிர்த்தோழியான சித்திரலேகை யென்பவளிடம்தெரிவித்தாள். ஆனால் அவன் இன்னானென்று அறிந்திலர்.
அத்தோழியானவள் உலகத்திலுள் ஸுந்தர புருஷர்கள் யாவரையும் அறிந்திருப்பதோடு ஒவ்வொரு உருவத்தையும் அப்படியே எழுதிக்காட்டவும் வல்லமை பெற்றிருந்ததனால் அங்ஙனம் பல வுருவங்களையும் எழுதிக்காட்டி இவனா? இவனா? என்று உஷையைக் கேட்டுவகையில்,! கடைசியாக அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருத்தனென்று நிஷ்கர்ஷிக்கப்பட்டது.
பின்பு உஷை அவனைப் பெறுதற்கு உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினார் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டு வந்து அந்தப்புரத்திலேவிட, உஷை அவனோடு போகங்களை யநுபவித்துவந்தாள்.
இச்செய்தியைக் காவலாளராலறிந்த அவளது தந்தையான பாணன் தன் அநுமதியின்றிக்கே இப்படி நடந்து விட்டதே என்கிற சீற்றத்தினால் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருந்தான்.
இப்படியிருக்கையில் த்வாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தார்கள். பின்பு நாரதமுனிவனால் நடந்த வரலாறு சொல்லப்பெற்று ஸ்ரீகிருஷ்ணபகவான் பெரிய திருவடியை நினைத்தருளினான். அவனும் உடனே வந்து நின்றான்.
கண்ணன் அக் கருடாழ்வானது தோளின்மேல் ஏறி கொண்டு பலராமன் முதலானாரோடுகூட பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே அப்பட்டணத்தின் ஸமீபத்தில் காவல்காத்துக் கொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர,
அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபிரானால் ஏவப்பெட்டதொ ஜ்வரதேவதை மூறு கால்களும் மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தையுண்டாக்க அதன் சக்தியினாலே அதனைத் துரத்தியாயிற்று.
பின்பு சிவபிரானது அநுசரர்களாய் வாணனது கோட்டையைச் சூழ்ந்துக்கொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து பாணாஸுரனோடு போர்செய்யத் தொடங்கியாயிற்று.
அப்போது அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரம்மணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்தமான் ஒன்றுஞ் செய்யாட்டாமல் கொட்டாவிவிட்டுக்ண்டு சோர்வடைந்திருந்தான். மாயிரஞ் சூரியர்க்குச் சமானமான தனது சக்ராயுதத்தை யெடுத்துப் பிரயோகித்து அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்த,
அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன்பின் மீண்டு த்வாரகைக்கு எழுந்தருளலாயிற்று என்ற வரலாறு உணர்க
——————
***வைதிகன் பிள்ளைகள் மீட்டுக்கொடுத்த தென்பது கண்ணபிரானுடைய சரிதைகளில் ஒன்று அதனை இப்பாட்டில் அநுபவிக்கிறார்.
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-
பதவுரை
| ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் கலக்க |
– |
ஏழுகடல்களும் ஏழுமலைகளும் ஏழுலகங்களாமெல்லாம் கலங்கும் படியாக |
| கழய கடாய் |
– |
அண்ட கடாஹத்துகு அப்பாலே போம்படி யாக நடத்தி |
| தேர் கொடு |
– |
தேரைக்கொண்டு |
| உலக்க சென்ற மாயமும் |
– |
முடியச்சென்ற ஆச்சரியமும் |
| உட்பட மற்றும் பல |
– |
இதுமுதலாக மற்றும் சேஷ்டிதங்களையும் (பேசி) |
| வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைமால் வண்ணனை |
– |
உபணஹஸ்தங்களிலும் திருவாழி திருச்சங்கையுடையனாய் நீலவண்ணனான எம்பெருமானை |
| மலக்கும் நா உடையேற்கு |
– |
ஸ்வாதீனப் படுத்திக்கொள்ளும்படியான நாவிறுபடைத்த எனக்கு |
| இ மண்ணின் மிசைமாறு உளதோ |
– |
இவ்வுலகின் எதிருண்டோ, |
ஒரு பிராமணுனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுங்கூட முகத்தில் விழிக்கபெறாதபடி இன்ன விடத்திலே போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது போய் விடுகையாலே நான்காம் பிள்ளையை ஸ்த்ரீ ப்ரஸவிக்கப் போகிறவளவிலே அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து ‘இந்த ஒரு பிள்ளையையாயினும் தேவரீர் பாதுகாத்துத் தந்தருளவேண்டும்‘ என்று ப்ரார்த்தித்தான்.
அதற்குக் கண்ணபிரான் அப்படியே செய்கிறேனென்று அநுமதி செய்தபின்பு, ஒரு யாகத்திலே தீக்ஷிதனாயிருந்ததனாலே எழுந்தருளக்கூடாத்துபற்றி அர்ஜுநன் ‘நான் போய் ரக்ஷிக்கிறேன்‘ என்று ப்ரதிஜ்ஞைபண்ணி, பிராமணனையுங் கூட்டிக் கொண்டுபோய் ப்ரஸவ க்ருஹத்தைச் சுற்றும் காற்றுகூட ப்ரவேசிக்க வொண்ணாதபடி சரக்கூடங்கட்டிக் காத்துக்கொண்டு நின்றான்.
பிறந்த பிள்ளையும் வழக்கப்படியே பிறந்தவுடனே காண்வொண்ணாது போய்விட்டது. அதனால் மிக்க சோகமடைந்த பிராமணன் வந்து அர்ஜுநனை மறித்து, க்ஷத்ரியாதமா! உன்னாலேயன்றோ என் பிள்ளை போம்படியாயிற்று, க்ருஷ்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ தடுத்தாய்‘ என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானருகே இழுத்துக்கொண்டு வந்தான்.
கண்ணன் அதுகண்டு புன்சிரிப்புக்கொண்டு ‘அவனைவிடு, உனக்குப் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகிறேன்‘ என்றருளிச்செய்து, பிராமணனையும் அர்ஜுநனையும் தன்னுடன்கொண்டு தேரிலேறி, அர்ஜுநனைத் தேர் செலுத்தச் சொல்லி, அத்தேருக்கு வெளியே நெடுந்தூரமளவுங் கொண்டுபோய், அங்கு ஓரிடத்திலே தேருடனே இவர்களை நிறுத்தி, தன்னிலமான தோஜோரூப்மான பரமபத்திலே தானே போய்ப்புக்கு,
அங்கு நாச்சிமார் தங்கள் ஸ்வாதந்திரியம் காட்டுகைக்காகவும் கண்ணபிரானது திவ்ய ஸௌந்தரியத்தைக் கண்டு களிக்கைக்காகவும் அழைப்பித்து வைத்த அந்தப் பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும் பூர்வரூபத்தி ஒன்றுங் குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.
இப்பாசுரத்தில் முதலடிக்குப் பலவகையாகப் பொருள் கூறுவர்.
கண்ணனது திருத்தேர்சென்ற காலத்தில் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகங்களும் அதிர்ந்தபடியைச் சொன்னவாறு.
நம்மாழ்வார்க்குப் பராங்குசன் என்று திருநாமம். பரசமயத்தவர்களாகிற மதயானைகட்டு அங்குசம் போன்றிருந்தது பற்றிப் பராங்குசனென்று திருநாம்மாயிற்றென்று சொல்லுவதுண்டாகிலும், பரனான எம்பெருமானுக்கே அங்குசா யிருந்தவர் என்கிற பொருளே சுவைமிக்கதாகும்.
இப்பாசுரத்தின் பின்னடிகளில் இது ஸ்பஷ்டமாகும்.
“வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடைமால் வண்ணனை மலக்குநாவுடையேன்‘ என்று செருக்குமிகுத்துக் கூறுகின்ற ஆழ்வார் தமது பராங்குசத் திருநாமத்தை விவரித்தபடியே போகலாம்.
—————–
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-
பதவுரை
| மண் மிசை பெருபாரம் நீங்க |
– |
பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக |
| ஓர் பாரதம்மா பெருபோர் பண்ணி |
– |
மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி |
| மாயங்கள் செய்து |
– |
ஆச்சரியச் செயல்களைச் செய்து |
| சேனையை பாழ்பட நூற்றிட்டு |
– |
எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து |
| போய் |
– |
இவ்விடம்பிட்டுப் புற பிட்டு |
| விண் மிசை தன தாமமே புக மேவிய |
– |
பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின. |
| சோதி தன் தாள் |
– |
பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை |
| நான் நண்ணி வணங்கப்பெற்றேன் |
– |
நான் கிட்டி வணங்கப் பெற்றேன். |
| எனக்கு பிறர் நாயகர் ஆர் |
– |
எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை) |
***- (மண்மிசை) பூமிதேவிக்குத் தன்மீது ஸஜ்ஜனங்கள் எத்தனை கோடிக்கணக்காக இருந்தாலும் அவர்களைச் சுமப்பது இலவம்பஞ்சைச் சுமப்பதுபோல வருத்தமற்றிருக்கும். ஒரு துஷ்டனுண்டாகிலும் இரும்புமூட்டையைத் தாங்குவதுபோல மிகவருத்தமாம்.
ஆகவே த்வாபரயுகத்தில் இப்பூமியின்கண் பிறந்திருந்த கம்ஸன் சிசுபாலன் முதலிய அஸுரர்களின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல் பூமிப்பிராட்டி கோரூபத்தைத் தரித்து மேருமலையினுச்சியிலுள்ள தேவர்களின் ஸபையை யடைந்து, அச்சபைநடுவில் வீற்றிருக்கும் நான்முகனை வேணுமென வேண்டிக்கொள்ள,
அதற்கு நான்முகன் சிறிதுகாலம் ஆலோசித்து ‘இது நம்மாலாகாது, ஸர்வஜ்ஞனாய் ஜர்வசக்தனாய் ஸர்வலோ பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு அறிவித்து அவர்மூலமாக இக்காரியத்தை நிறைவேற்றிக்கவேணும்‘ எனக்கருதி
அந்தப் பூமி தேவியையும் மற்றுமுள்ள தேவர்களையுங் கூட்டிக்கொண்டு போய்ப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரமனைத் தொழுது துதித்தனன்.
பின்பு திருமால் அருள்புரிந்த சிந்தைகொண்டு அவர்கட்குக் காட்சிதந்து யோக க்ஷேமங்களை விசாரித்து அவர்கள் வந்த வரலாற்றை உணர்ந்தருளி ‘ஓ தேவர்களே! உங்கள் கருத்தை அறிந்து கொண்டேன், உங்கள் குறையைத் தீர்க்கிறேன், நீங்கள் போகலாம் என்று சோதிவாய்திறந்தருளிச்செய்ய,
அவர்கள் பரமனாந்தத்துடன் விடைபெற்றுப் போக, அவர்கட்கு அபயமளித்தவண்ணமாகவே வந்து அவதரித்து, பாரதயுத்தத்திற்குத் துணைபுரிகிற வியாஜத்தாலே பூபாரங்களையெல்லாம் தொலைத்திட்டுத் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளினவளவும் இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டதாயிற்று.
மாயங்கள் செய்து – (இங்கே ஈடு.) “பகலை இரவாக்குவது, ஆயுதமெடேன் என்று ஆயுதமெடுப்பது, எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக்கொடுப்பதானவை தொடக்கமானவற்றைச் செய்து“ மூன்றாமடிக்குச் சார்பாக க்ருத்வா பரராவதரணம் ப்ருதிவ்யா, ப்ருதுலோசந, மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத, ஸ்வம் ஸ்தாந முத்தமம். என்ற மஹாபாரத ச்லோகம் அநுஸந்திக்கத்தகும்.
*விண்மிசைத் தனதாம்மே புக மேவியசோதி என்றவிடத்து நட்டில் ஓர் ஐதீஹ்யம் காட்டப்பட்டுளது.
அதாவது – நம்பெருமான் ஸந்நிதியில் ஒரு ப்ரஹ்மோத்ஸவம் நடந்து முடிந்தவன்று ஆண்டானும் எம்பாரும் சந்தித்து ‘அஹங்கார மமகார தூஷிதராயிருப்பார் பத்துக் கோடிபேர் நடுவே அதிஸுகுமரமான திருமேனியைக் காணப்பெற்றோமே! என்று சொல்லி ஒருவரை யொருவர் தொண்டனிட்டுத் தழுவிக்கொண்டார்களாம். அதை நஞ்சீயர் கண்டிருந்து வெளியிட்டருளினார்.
—————
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-
பதவுரை
| முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய் |
– |
எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி |
| முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து |
– |
அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி. |
| அவை ஆய் |
– |
அவை தானேயாய் |
| அவை அல்லனும் |
– |
அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான |
| கேசவன் |
– |
எம்பெருமானுடை |
| அடி இணை மிசை |
– |
உபயபாதங்கள் விஷயமாக |
| குருகூர் சடகோபன் சொன்ன |
– |
ஆழ்வார் அருளிச்செய்த |
| தூய ஆயிரத்து |
– |
பரிசுத்தமான ஆயிரத்துள்ளே |
| துவள் இன்றி பக்தர் ஆவர் |
– |
அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள். |
***- (நாயகன்) கண்ணபிரானுடைய திவ்யசேஷ்டிதங்களைப் பேசின இத்திருவாய்மொழி காங்கேய ஸம்பவாதி அஸந்தேயம்.
(அதன் கருத்து) வால்மீகிபகவான் ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி, கங்கையின் உற்பத்தி ஸுப்ரஹ்மணியனுடைய உற்பத்தி, புஷ்பகவர்ணநம் முதலான கதைகளைப் பரக்கப் பேசினதால் அஸத் கீர்த்தனம்பண்ணி வாக்கில் அசுத்தி படைத்தான்,
வேதவ்யாஸபகவானும் * நாராயணகதாமிமாம்* என்று நாராயணன் கதையைச் சொல்வதாக விழிந்து, ஸம்பவபர்வத்திலே பீஷ்மர் முதலான பற்பலருடை உத்பத்தி ப்ரகாரங்களை விரிவாகப் பேசுகையாலும், பூசல்பட்டோலை (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்க நின்று வருணித்த படியாலும் அஸத்கீர்த்தனத்திலே மிகவும் பரந்து வாக்கை அசுத்தமாக்கிக் கொண்டு,
பிறகு அஸத்கீர்தம காந்தார பரிவர்த்தநபாம்ஸுலாம், சம் சௌரி கதாலாபகங்கயைவ புநீமஹே * என்று, அப்படி அசுத்தமான வாக்கை பகவத்கதா கீர்த்தநமாகிற கங்கையினாலே சுத்தமாக்குகிறேனென்று தானே சொல்லி சுத்தி பண்ணினான்.
ஆகவிப்படி தொடங்கினபடிக்குச் சேராமே அஸத்கீர்த்தனத்தைப்பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி,
ஆழ்வார் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் * திருமாலவன்கவி * என்று திருமால் விஷயமான கவியென்று வாயோலையிட்டபடியே இதர விஷயஸம்பந்தமுள்ள ஒரு சொல்லும் ஊடு கலசாதபடி சொற்களைத் தெரிந்தெடுத்து விஷயத்திற்குத் தகுதியான சொற்களாலே சொல்லப்பட்டதாய் ஸர்வேச்வரனுக்கு வாய்த்ததான இத்திருவாய்மொழியாயிரமானது
வேதங்களில் புருஷஸூக்தம் போலவும், தர்மசாஸ்த்ரங்களில் மநுஸ்ம்ருதி போலவும், மஹாபாரத்தில் கீதைபோலவும், புராணங்களில் ஸ்ரீவிஷ்ணுபுரானம் போலவும் திவ்யப்ரபந்தங்களுள் ஸாரமாயிருக்குமென்றபடி.
ஆகவே, தூய என்றது பகவத்விஷயமொன்று தவிர வேறு ஒரு விஷயமும் ஊடு கலசரமைபற்றிய பரிசுத்தியைப் புஷகலமாகவுடைய என்றபடி.
துவளின்றியேபத்தராவர் – இங்கெ ஈடு “துவளாவது குற்றம், அதாவது அவதாரந்தரங்களிற் போகாதே க்ருஷ்ண வ்ருத்தாந்தத்திலே கால் தாழ்வர்“ என்பதாம். தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கம் பெரிய கோயிலல்லது வேறொரு திருப்பதி யறியாமே யிருந்த்து போல க்ருஷ்ணாவதார மல்லது மற்றொன்றறியாத பரமைகாந்திகளாவர் என்றதாயிற்று.
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply