ஸ்ரீ திருவாய் மொழி -6-7–உண்ணுஞ் சோறு– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

 

பதவுரை

உண்ணும் சோறு

–

உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்

–

குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்

–

தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே

–

(எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி

–

கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்

–

இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்

–

பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்

–

சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்

–

அப்பெருமானுடைய
ஊர்

–

திவ்யதேசத்தை
வினவி

–

விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்

–

சேர்ந்தவிடம்
திருக்கோளூரே

–

திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்

–

இதில் ஸந்தேஹமில்லை

***- படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது.

ஆசர்யஹ்ருதயத்தில் ரிஷிகளிற்காட்டில் ஆழ்வார்க்கு நெடுவாசியருளிச் செய்யுமிடத்து

“அவர்களுக்குக் காயோ டென்னுமிவையே தாரகாதிகள், இவர்க்கு எல்லாங் கண்ணனிறே“ என்றருளிச்செய்துள்ள சூர்ணை இங்கு அநுஸந்தேயம்.

ரிஷிகளானவர்களுக்கு * காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து * என்றும்

* வீழ்கனியு மூழிலையு மென்னுமிவையே நுகர்நது * என்றும் சொல்லுகிறபடியே பலமூல பத்ரவாயு தோயங்களே தாரக போக்ஷக போக்யங்களா யிருக்கும்,

* க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம் * என்னும்படியான இவ்வாழ்வார்க்கோ வென்னில் தாரகாதிகள் அவையன்று

* உண்ணுரு சோறு பருகும் சீர் தின்னும் வெற்றிலையுமான வெல்லாம் எம்பெருமானேயாம் என்கை.

“சோறும் நீரும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்“ என்றால் போதுமே,

உண்ணுஞ்சோறு என்றும், பருகும் நீர் என்றும், தின்னும் வெற்றிலை யென்றும் அடைமொழி கொடுத்துப்பேசவேணுமோ?

சோறாகில் அது உண்ணக்கடவதுதானே, நீராகில் அது பருகக் கடவது தானே வெற்றிலையாகில் அது தின்னக் கடவதுதானே,

உண்ணும் பருகும் தின்னும் என்கிற இவ்வடை மொழிகள் வியர்த்தமேயன்றோ என்று நினைக்கவேண்டா.

வயிறு நிறைய உண்டவனுக்குப் பரமான்னம் கிடைத்தாலும் அது உண்ணுஞ் சோறாகாது,

கங்கைக் கரையிலே திரியும்வனுக்குக் கிணற்றுநீர் பருகுநீராகாது,

அவ்வவற்றுக்கு அபேக்ஷை சில மையங்களிலும் அநபேக்ஷைக சில ஸமயங்களிலும் இருப்பது உலகவியல்பாதலால்,

பெரும் பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணுஞ் சோறு, பெருவிடாயனுக்குக் கிடைத்த நீர்தான் பருகுநீர் என்று கொள்ள வேணும்.

பெரும் பசியனுக்குச் சோற்றிலும் விடாய்த்தவனுக்கு நீரிலும் எப்படிப்ட்ட அபிநிவேசமோ எப்படிப்பட்ட அவிநிவேசம் ஆழ்வார்க்கு பகவத்விஷயத்தில் என்றதாயிற்று.

எல்லாம் கண்ணன் – * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப * என்று கீதாசார்யன் இழவோடே பேசினான்

(அதாவது) எல்லாம் கண்ணன்“ என்றிருக்கிற மஹாத்மா கிடைப்பது மிகவும் அரிது என்கை.

அவ்விழவுதீர வகுளாபரண மஹாத்மா வந்து தோன்றினாராயிற்று.

கண்ணனெம்பெருமா னென்றென்றே கண்கள் நீர்கள்மல்கி – எனக்கு ஸகலவிதமான தாரகபோஷக போக்யங்களும் கண்ணனெம்பெருமானே‘ என்று பலகால் சொல்லிக்கொண்டு நீர்மல்கு கண்ணினராயிருப்பதே ஆழ்வாருடைய இயல்பாம்.

இப்படிப்பட்ட பராங்குசநாயகிமான திருக்கோளூர் எங்கிருக்கிறது? எத்தனைதூரம் போரும்?“ என்று கேட்டுக் கொண்டே திருக்கோளூர்க்கே சென்று புகுந்திருப்பாள், வேறு எங்கும் போயிருக்க ப்ரஸக்தியில்லை, இது திண்ணம் என்கிறாள் திருத்தாயார்.

புகுமூர் என்றவிடத்து ஈடு – “காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமா போலே ஸம்ஸாரமாகிற பாலைநிலத்தில் காட்டுத்தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் “புகுமூர் என்கையாலே புக்கார் போகுமூர் அன்றென்கை.“

எம்பெருமானார் திவ்ய தேசயாத்திரையாக எழுந்தருளுகையில் திருக்கோளூர்க்கு எழுந்தருளாநின்றார்,

அப்போது அங்கு நின்றும் வெளியேறுகின்றாளொரு அம்மையாரைப் பார்த்து ‘எங்கு நின்றும் புறம்பட்டபடி? என்று கேட்க,

அவள் ‘திருக்கோளூரில் நின்றும்‘ என்று சொல்லப் அதுகேட்டு எம்பெருமானார்

“அவ்வூரில் புக்க பெண்களும் வெளியே போகக் கடவராயிருகப்பர்களோ?“ என்றாராம். புகுமூர் என்ற சந்தையின் சுவடையறிந்து அருளிச்செய்தபடி.

திருக்கோளூர் – பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்று, திருக்குருகூர் முதலாய நவதிருப்பதிகளுள் ஒன்று. ஸ்ரீமதுர கவிகளின் திரு வவதார ஸ்தலம் இதுவே.

—————-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பதவுரை

பூவைகளே

–

பூவைப் பறவைகளே!
ஊரும் நாடும் உலகமும்

–

தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம்
தன்னைபோல்

–

தன்னைப்போலவே
அவனுடைய

–

எம்பெருமானுடைய
பேரும் தார்களுமே பிதற்ற

–

திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான)
கொடியேன் கொடி

–

பாவியேனுடைய மகள்
வான் கற்பு இடறி

–

சிறந்த ஸ்த்ரீத்வமர்யாதையைக்கடந்து
நல் வளம் சேர் பழனம்

–

விலக்ஷணமான வனம் பொருந்திய நீர்நிலைகளையுடைத்தான்
திருக்கோளூர்க்கே சேரும்

–

திருக்கோளூரிலேயே சென்று சேர்ந்திருப்பன்,
போரும் கொல்

–

(உங்களைநினைத்தாகிலும்) திரும்பிவருவாளோ
உரையீர்

–

சொல்லுங்கள்.

***- (ஊரும் நாடும்) பாராங்குச நாயகியின் லீலோபகரணங்களுள் ஒன்றான பூவையென்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் கேட்கிறார்

என் பக்கலில் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத்தாவது என்மகள் இங்கு மீண்டு வரக்கூடுமோ? சொல்லுங்கள் என்கிறாள்.

பூவைப்பறவை விடையளிக்க மாட்டாத அஃறிணையென்ற்றிந்தும் மதிகலங்கிக்கேட்கிறபடி.

ஆழ்வாருடைய நித்யக்ரமத்தைச் சொல்லுவன முன்னடிகள்.

தான்பிறந்த வூரிலுள்ளாரும் அவ்வூருக்குத் தலையான நாட்டிலுள்ளாரும், கீம்பஹுநா? இவ்வுலகத்திலுள் ரெல்லாருமே தன்னைப்போல் எம்பெருமானுடைய திருநாமங்களையும் லக்ஷணங்களையும் இடையறாது சொல்லிக்கொண்டிருக்கும்படி செய்து போருமவள் என்மகள் என்கிறாள்.

இப்போது இது சொல்லுகைக்கு ப்ரஸக்தி யென்?

திருக்கோளூரிலே போனவள் திரும்பி வருவளோ? என்று கேட்கிற திருத்தாயார், இங்கிருக்கிற நாளில் இவள் செய்து கொண்டிருக்கும்படியைச் சொல்லுவானேன்? என்னில்,

தானிருந்த தேசத்தை விட்டு வேறோரிடம் போவது போலேயாக்குகையாலே அது இங்கே குறையற்றிருக்க எதுக்குப் போனாள்? என்னைக்காக

இங்கே ஈடு, “இவ்விருப்பில் என்ன குறை யுண்டு? இங்கே ஒரு குறை யுண்டாய் அங்கே அது தீரப் போனாளோ?

இங்கே * போதயந்த? பரஸ்பரம் பண்ணுகைக்கு ஆளல்லாமே ஒரு தேச விசேஷம் தேடிப் போனாளோ?

ஆறாயிரப்படியில் – “திருநாமங்களையும் திவ்ய சிஹ்நங்களையுமே சொல்லிக் கூப்பிடும்படியாகக் கூப்பிடுகிறவிவள்“ என்று அருளிச்செய்திருக்கக் காண்கையாலும்,

இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் “சொல்லும்படி பண்ணி“ என்று அருளிச்செய்திருக்கங் காண்கையாலும்

“பிதற்ற“ என்னும் செயவெனெச்சத்திற்கு “பிதற்றும்படி பண்ணி வைத்து“ என்கிற வரையில் அர்த்தம் கொள்ளவேணும்.

கற்புவானிடறி – வான் கற்பு இடறி என்று மொழிமாற்றுப் பொருள் கொள்வது.

திவ்யமான தன்னுடைய ஸ்த்ரீத்வ மர்யாதையை அதிக்ரமித்துச் சென்று என்றபடி.

நல்வளஞ் சேர்பழனத் திருக்கோளூர்க்கே சேரும் கொடியேன்கொடி போருங்கொல் உரையீர் – சென்று சேர்ந்த விடமான திருக்கோளூரானது நீர்வளமும் நிலவளமும் மற்றுமுள்ள வளங்களும் பொருந்திய தாகையாலே என்மகள் அங்கேயே ஈடுபட்டுக்கொண்டு கிடப்பாளோ?

அன்றி உங்களை நினைத்தாகிலும் இங்கே வந்து சேருவளோ? என்று கேட்டாளாயிற்று.

ஊரும் நாடுமுலகமும் என்றதற்கு ஸ்வாபதேசார்த்தமாவது,

ஊரார் என்பது ஆத்ம ப்ராப்திகாமரான கேவலரை,

நாட்டாரென்பது புத்ரபச்வந்நாதி ரூப இஹலோக ஐச்வர்ய காமரை,

உலகர் என்பது ஸ்வர்க்காதி பரலோக ஐச்வர்ய காமரான ஸ்வதந்த்ர்ரை.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “ஊரார் நாட்டாருலகர் கேவலைச்வர்யகாம் ஸ்வதந்த்ரர்“ என்ற சூர்ணை இங்கே அநுஸந்தேயம்.

——————

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

 

பதவுரை

பூவை

–

பூவைகளென்ன
பை கிளிகள்

–

பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து

–

பந்துகளென்ன
தூதை

–

சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள்

–

பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும்

–

இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்
திருமால் திரு நாமங்களே

–

பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி
கூவி

–

அத்திருநமங்களைச் சொல்லியழைத்து
எழும்

–

உஜ்ஜீவிப்பவளான
என் பாவை

–

எனது பெண்பிள்ளை யானவள்
இனி

–

இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும்.
தண் பழனம் திரு கோளுர்க்கே போய்

–

குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய்
கோவை வாய் துடிப்ப

–

கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக
மழை கண்ணொடு

–

நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று
என் செய்யும் கொலோ

–

என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க)

***- (பூவைபைங்கிளிகள்) ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.

முன்னடிகளுக்குப் பொருள் கொள்ளுதலில் சிறிது அவதானம் வேண்டும்.

பூவை பைங்கிளிகள் முதலானவையும் எம்பெருமானுடைய திருநாமங்களை கூவி யெழும்படியாகச் செய்த என்மகள் – என்று சிலர்க்குப் பொருள் தோன்றக்கூடும்,

இது ஆபாதப்ரதீதி யாமத்தனை, பந்து தூதை முதலான அசேதநப் பொருள்களையும் கூடச் சேர்த்திருக்கையாலே அவற்றுக்கு வாக்வ்யவஹாரப்ரஸக்தி யில்லாமையாலே அப்பொருள் பொருந்தாது.

பூவைபைங்கிளிகள் பந்து முதலான லீலோப கரணங்களைக் கண்டால் வரும் லீலாரஸமும் தனக்கு எம்பெருமானைக் காணுமதுவேயாயிருக்கும் என்மகள் என்பதே பொருத்தமான பொருள்

நாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கிடீர் போனாள்.

இங்கிருந்த நாள் மற்றொன்று தாரகமாய் அங்கே போய் அவனாலே தரிக்கப்பபோனாளோ?

பூவை தொடக்கமான லீலோ காரணங்களால் பிறக்கும் ஹர்ஷமெல்லாம் ச்ரிய. பதியென்கிற திருநாமத்தைச் சொல்லி அந்தாலேயிற உண்டாகா நின்றது.“

(என்பாவைபோயினி இத்யாதி.) இங்கு நின்றும் இவள் போக வேணுமா?

இங்கே இவளுடைய ஹர்ஷத்துக்கு ஏதேனுங் குறையுண்டோ? என்ன நினைத்துப் போனாளோ அறியலேன்.

போனாளாகையாலே இனிச் செய்யலாவதொன்றில்லை, போனவிடத்திலாவது இவள் குறையற நன்கு அநுபவிக்க வேணுமே.

ஒரு பேச்சுப்பேச வாயெடுத்தவாறே வாய்விட்டு பேசமாட்டாமே உதடு நெளிக்குமே, கண்ணநீர் வெள்ளமிட்டு பெருகுமே,

இப்படி என்ன பாட்டுபடுகிறாளோ வென்று தடுமாறுகிறாள் தாய்.

————-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

பதவுரை

இள மான்

–

இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே

–

செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க

–

மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே

–

புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள்

–

வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு
அயல் சேரி உள்ளாகும்

–

அயல் சேரியிலுள்ள பெண்களும்
கொல்லை என்பர் கொலோ

–

இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது)
குணம் மிக்கனள் என்பர் கொலோ

–

விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ!
எல்லை

–

என்னாகுமோ!

***- (கொல்லை யென்பர்கொலோ) என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய்.

“பேறுதப்பாதென்று துணிந்திருப்பதே கடமை என்று திண்ணிய அத்யவஸாய முடையார் “இவள் இங்ஙனே படி கடந்து செல்லுகையாவதென்?“ என்று வெறுக்கக்கூடும்,

“பேற்றுக்கு த்வரிக்கவும் வேணும்“  என்று மவர்கள் வெறுக்கக் கூடும் “பேற்றுக்கு த்வரிக்கவும் வேணும்“ என்றிருக்கு மவர்கள் உகக்கக்கூடும். இரண்டு ஸ்வரூப மென்று காட்டுகிறபடி.

கொல்லை யென்பர் கொலோ – கொல்லை யென்று வரம்பில்லாததுக்குப் பெயர் –

“இவள் வாசற்கடந்து புறப்படக் கடவதல்லாத மரியாதை குலைந்தாள், நிஷித்தாநுஷ்டாநம் பண்ணினாள், வரம்பழிந்த செயல் செய்தாள்“ என்று நிந்திப்பர்களோ வென்கை.

குணம்மிக்கன ளென்பர். கொலோ?

“குணாதிக விஷயத்திலே ஈடுபட்டவளாகையாலே அதற்குத் தக்கப்படி நன்று செய்தாள்“ என்று இவளது குணத்தைச் சொல்லிக் கொண்டாடுவர்களோ?

இப்படி சங்கிக்க ப்ரஸக்தியென்? என்ன, சில்லைவாய் பெண்டுகள் அயற் சேசியுள்ளாருமெல்லே! என்கிறாள்.

ஸ்த்ரீகளின்வாய் வெறுமணிராது, ஓட்டை வாயைக்கொண்டு ஓயாமல் வம்பளப்பதே அவர்களுடைய பணியாயிருக்கும்,

அவ்வளவுமன்றிக்கே பகையாளருமுண்டு, பகைமிக்கால் சொல்லுஞ் சொல்லுக்கொரு வரம்புண்டோ? என்கை.

அயற் சேரியுள்ளாரும் என்றதற்கு ஸ்வாபதேசார்த்தம் ஆசார்யஹ்ருதய்தில் “நாலயலார் அயற்சேரியார் உபாயசதுஷ்டயாந்தர்யாமித்வபரர்“ என்கிற சூர்ணையில் அருளிச் செய்ததாம்

(அர்ச்சாவதாராதிகளில் ஊற்றமற்று தேவதாந்தர்யாமித்வத்திலே ஊன்றி யிருக்குமவர்களே)

அதாவது, அவன் கடைத்தலையிருந்து வாழாதே குளக்கைரையிலே போது போக்கி திரியுமவர்களை அயற்சேரிய ரென்கிறதென்க.

“கொல்லை யென்பர்கொலோ குணம்மிக்கன ளென்பர் கொலோ“ என்கிற சங்கை இப்போது எதற்காக வென்ன, பின்னடிகளால் அதற்கு ப்ரஸக்தி சொல்லுகிறது.

“இளமாள் சென்றாள்“ என்ன வேண்டியிருக்க “இளமான் செல்லமேவினளே“ என்னவாமோ?

செல்ல விரும்பினாளென்று பொருள் படுகிறதேயன்றிச் சென்றாளென்று பொருள்படவில்லையே யென்னில்,

செல்லுகைக்கு முன்னம் இச்சை யிருந்து தீரவேண்டு மாதலால் அந்த இச்சையைச் சொன்னது தத் கார்யமான போக்கைச் சொன்னபடியேயாம்

—————

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

பதவுரை

ஏன் சிறு தேவி

–

வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி

–

பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து

–

மிகவும் இளைத்து
விளையாடல் உறாள்

–

(தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய்

–

இங்கு நின்றும் போய்
தன் திருமால் திருக்கோளூரில்

–

தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் ஸ்ரீ

–

பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும்
தடமும்

–

தடாகங்களை
அவன் கோயிலும்

–

அவனது திவ்ய ஸந்நிதியையும்
கண்டு

–

பார்த்து
ஆவி உள் குளிர

–

நெஞ்சு குளிரும்படியாக
இன்று எங்ஙனே உகக்கும் கொல்

–

இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!)

***- (மேவிநைந்து நைந்து) திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.

இவள் விளையாட்டுப் பருவத்திலிருக்கச் செய்தேயும் தோழிகளோடே விளையாடவென்று போனால் விளையாட்டிலே அந்வயிக்க மாட்டாள்,

அப்போதும் எம்பெருமானை யனுபவிக்க வேணுமென்கிற ஆசையே விஞ்சி அது தன்மனோரதப்படி ஸித்தியாமையாலே நைந்து கிடப்பள்.

* அறியாக் காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து * என்கிறபடியே அப்படி இளலமயே தொடங்கி பகவத் விஷயத்தி லீடுபட்டிருந்தவிவள்  இப்போது திருக்கோளூர்க்குச் சென்றாளாயிற்று.

அதுதான் ஸாமாந்யமான ஸ்தலமோ? பூஞ்சோலைகளும் தடாகங்களும் மதிளும் மாடமாளிகையும் மண்டபங்களுமாகிற ஸன்னிவேசங்கள் ஆச்சரியமான காட்சியைத் தருமே. அவற்றையெல்லாம் இவள் காணும்போது ஆவியுள் குளிர உகக்குமழகு அத்விதீயமாயிருக்குமே, அவ்வழகு காணக் கொடுத்து வைப்பார் ஆரோ? அந்த பாக்கியம் எனக்கு இல்லையாயிற்றே! என்று தளர்கின்றாள் தாய்.

“அவன் கோயிலுங்கண்டு“ என்றவிடத்து ஈட்டில் ஒரு ஐதிஹ்யம், – “பிள்ளை திருநறையூர்ரையரும் பட்டருமாக உள்ளே ப்ரதக்ஷிணம் பண்ணா நிற்க, இட்டவடிமாறி யிடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து ஆழ்ந்து கொடுபோகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன். என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.“

“ஆவியுள்குளிர“ என்கிற சந்தையை மேலெழுந்த வாரியாகச் சொல்லிவிடாமல் “உள்குளிர“ என்றுஆழ்ந்து ஊற்றத்தோடு உறைப்பாக அநுஸந்திக்க வேணுமென்று ஆசாரியர்கள் சிக்ஷிப்பர்கள்.

—————-

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6-

பதவுரை

எனக்கு

–

தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு
இன்று

–

இப்போது
உதவாது அகன்ற

–

உசாத்துணையாக இராதே கைகழித்துபோன
இள மான்

–

இளமான்போன்ற என்மகள்
போய்

–

வருந்தி வழிநடந்து போய்
தென்திசை திலதம் அனையை

–

தெற்குத் திசைக்கு அலங்காரமான
திருக்கோளூர்க்கே சென்று

–

திருக்கோளூரிலே பிரவேசித்து
இனி

–

அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய
திருக்கண்ணும் செம்வாயும் கண்டு

–

திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு
நெடு கண்கள் பனிமல்க

–

தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே)
நின்று நின்று நையும்

–

ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள்.

***- (இன்றைக்கு) கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு.

இப்படியிப்படி உகப்பள் என்கிறாள் திருத்தாய்.

என்னோடு கூடவிருந்து எனக்கு உசாத்துனையாயிருந்து என்னைத் தரிப்பிக்க வேண்டியவிவள் இந்நிலையிலே என்னைத் தனியாக விட்டுக் கைகழிந்தாளே யென்று நோகின்றாள் முதலடியில்.

ஈடு –“பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கன்றோ, தன்னைப் பிரிந்த இத்தனிமைக்கும் இத்தசைக்கும் மேற்பட்ட எனக்கு ஒசாபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாதொழிவதே!“

என்னையும் உடன் கூட்டிக்கொண்டு போனால் நான் வரமாட்டேனென்பேனோ? அவளை பகவத்விஷயத்திலே அவகாஹிக்கும்படி செய்தவள் நானேயன்றோ. தனக்குக் கூட்டான வென்னை அயலாக நினைத்து என்னைவிட்டுத் தனியே அகன்று போகவேணுமோ? என்கிற கருத்து முதலடியில் தொனிக்கும்.

தென்திசைத் திலதமனைய திருக்கோளூர்க்கே சென்று முற்காலத்தில் தென்திசையானது மிலேச்சபூமி யென்று ஆர்யர்கள் இகழ்ந்த்தாயிருக்குமாம், அத்திசைதானே திருக்கோளூர் முலான திவ்யதேசங்கள் தோன்றப் பெறுகையாலே பரமபவித்திரமாயிற்றாம்.

இங்கே ஈடு – “தெற்குத்திக்கு என்று கொண்டு ஆரியர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியிறே, இங்ஙனேயிருக்கச் செய்தே ஓர் ஆபரணந்தானே எல்லாவாபரணங்களுக்கும் நிறங்கொடுக்க வற்றாமாப்போலே திருக்கோளூருண்டாகையாலே திக்காக ச்லாக்யமானபடி. தக்ஷிணா திக் க்ருதாயேக சரண்யா புண்யகர்மணா * என்னுமாபோலே“.

“தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நெடுங்கண்கள் பனிமல்கவே நின்று நின்று நையும்“ – தன் மகள் அங்கே யிருக்கும்படி இதுவாயிற்று. *

பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப்புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார். * (திருவிருத்தம்) என்று தானே பேசும்படி தன்னை விசேஷித்து விஷயீகரித்த திருக்கண்களை முந்துற முன்னம் நோக்குவள்,

அபிமத ஜநதர்சநாநந்த வேகத்தாலே அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து விம்மி வெளிவிழுகின்ற அவ்யக்த மதுர மந்த ஹாஸ விலாஸம் பொங்குமிடமான செவ்வாயைப் பிறகு காண்பாள்,

ஆக இரண்டு திவ்யாவயவங்களையுங்கண்டு, மஹா பிரவாஹத்திலே இளகின கரைபோலே உடை குலைப்பட்டு நைந்து கொண்டிருப்பள், இதுவன்றோ, அவளிருக்கும்படி, அது காணப் பெற்றிலேனே! என்றாளாயிற்று.

—————-

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

பதவுரை

மல்கு நீர் கண்ணொடு

–

(என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும்
மையல் உற்ற மனத்தனள் ஆய்

–

வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும்
நல் அல்லும் பகலும்

–

நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது)
நெடு மால் என்று அழைத்து

–

ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து,
இனி

–

இப்போது
ஒல்கி ஒல்கி நடந்து

–

ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து
ஒசிந்து போய்

–

தளர்ந்து சென்று செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
எங்ஙனே புகும்கொல்

–

எப்படி போய்ச் சேர்ந்திருப்பளோ?

***- (மல்கு நீர்க்கண்ணொடு) தன்மகள் திருக்கோளூரெம்பெருமானுடைய திருக்கண்ணும் செவ்வாயுங்கண்டு கண்ணீர் பெருகநிற்பவள் என்று கீழ்ப்பாட்டில் ஊஹித்துப்பேசின திருத்தாயார், அவள் திருக்கோளூரளவும் சென்று சேர்ந்தாளாகிலன்றோ அங்ஙனே யிருப்பது, இவள்தான் அத்தனை தூரம் வழிநடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு நடக்கக்கூடியதை இப்போது சிந்திக்க இடமேது? என்கிறாள்.

மல்கு நீர்க்கண்ணொடு மையலுற்ற மனத்தனளாய் – வழிநடந்து போகைக்கு இரண்டு ஸாதனங்கள் வேண்டும், கண் நன்றாகத் தெரியவேணும், மனம் தெளிவுற்றிருக்கவேணும், இவ்விரண்டும் ஒழுங்காக இல்லையே என்மகளுக்கு, கண்களோ நீர்மல்கிக் கிடக்கின்றன, மனமோ மையலுற்றுக் கிடக்கிறது. ஆகவே இவள் வழி நடந்து உத்தேச்யமான இடத்திலே சென்று சேருகைக்கு ப்ரஸக்திதானே யில்லையேயென்று காட்டினபடி.

அல்லும் நண்பகலும் நெடுமாலேன்றழைத்து – “என்னையிப்படி பிச்சேறப்பண்ணின ஸர்வேச்வரனே! என்று இரவும் பகலும் கூப்பிடுகைக்கு ஸ்வ்ஸ்தானத்தில் ஏதேனும் விரோதமுண்டோ? இங்கிருந்தே கூப்பிடலாமே, எதற்காகப் புறப்பட்டுப் போனாளோ“ என்கிறாள்.

(செல்வம்மல்கி யித்யாதி) தானிருந்த விடத்திலே * பொலிந்து நின்ற பிரானாகையாலே நின்ற வழகு காணலாமத்தனை போக்கி, கிடந்த்தோர் கிடக்கை காண விரகில்லை, அக்கிடையழகைத் திருக்கோளூரிலே சென்று காணலாமென்று ஆசைப்பட்டுப் போனாள் போலும்,

நன்றே, ஒல்கி யொல்கி ஒசிந்து நடந்து எங்ஙனெ புகுங்கொல்? –ஒடுங்கி யொடுங்கித் துவண்டு நடந்து போமிவள் அவ்வூர் சென்று சேர ஸம்பாவனையில்லையே! என்னாய் முடிந்திருக்குமோ வென்கிறாள்.

—————

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

பதவுரை

ஒசிந்த ஒண் மலராள் கொழுநான்

–

துவண்ட திருமேனியையுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் வர்த்திக்கிற
திருக்கோளூர்க்கே

–

திருக்கோளூரையே நோக்கி கசிந்த நெஞ்சினன் ஆய்
ஈரநெஞ்சை யுடையளாய்க் கொண்டு
எம்மை நீத்த

–

எங்களை விட்டுப் பிரிந்து சென்ற
எம் காரிகை

–

அழகியாளான என் பெண் பிள்ளை,
ஒசிந்த நுண் இடைமேல்

–

ஏற்கனவே துவண்ட மெல்லிய இடுப்பின்மீது
கையை வைத்து

–

(இளப்பினால்) கையை வைத்துக் கொண்டு
நொந்த நொந்து

–

மேன்மேலும் நோவு பெற்று
கசிந்த நெஞ்சினள் ஆய்

–

ஈரமான மனத்தையுடையவளாய்
கண்ண நீர் துளும்ப

–

கண்ணீர் பெருகும்படி
செல்லும் கொல்

–

(அவ்வூர்) சென்று சேர்ந்திருக்ககூடுமோ?

***- (ஒசிந்தநுண்ணிடை) என் மகள்தான் எம்பெருமானை விரும்பிச் செய்றாளோ அவன் பெரியபிராட்டியார்க்கு வல்லபன் என்னுமிடம் இவள் அறியாள்போலும்,

“அவள் பக்கலிலே வியாமோஹங் கொண்டிருக்குமிவன் நம்மை லக்ஷியம் பண்ணுவனோ?“ என்று இப்பெண்பிள்ளை நினைக்க வேண்டியிருக்க அங்ஙனம் நினையாமல் அப்பெரிய பிராட்டியாருடைய புருஷகாரபலத்தாலே நமக்கொரு குறையிராது என்று நினைத்தோ, அவ்விருவருமான சேர்த்தியழகைச் சேவிப்போமென்று நினைத்தோ திருக்கோளூர்க்கேசெல்லப் புறப்பட்டாள்,

இவள் அத்தனைதூரம் வழிநடந்துசெல்ல வல்லளோ? எங்ஙனே சென்று சேர்ந்திருப்பவள் என்கிறாள் திருத்தாய்.

வழி நடக்கும்போது சிறிதும் சிரமமின்றியே நடந்து செல்பவர்கள் கையை வீசிக்கொண்டு போவார்கள்,

அப்படியல்லாமல் கிராமத்தினால் இளைத்துப் போமவர்கள் இடுப்பின்மீது கையை ஊன்ற வைத்துக்கொண்டு சிரமம் ஸ்புஷ்டமாகத் தெரியுமபடி செல்வர்கள்.

இஃது உலகிற்காணும் இயற்கையாதலால், தன்மகளுடைய மேனிமெலிவை அநுஸந்தித்த திருத்தாயார் அவள் மிகவும் சிரமத்தோடுதான் செல்ல நேருமென்பதை ஊஹித்து முதலடி கூறுகின்றாள்.

சிரமத்தை ஸஹித்துக்கொண்டு ஒருபடி நடந்துசென்றாலும், நெஞ்சு ஸ்வாதீனமாய், கண் நிராபாதமாயிருந்த்தாகில் குறையில்லை,நெஞ்சும் கசிந்து கண்ணும் நீர்துளும்ப நிற்குமிவள் எங்ஙனே வழிதெரிந்து போகவல்லள் என்கிறாள் இரண்டாமடியால்.

இப்பெண்பிள்ளை, தானும் நானுமாக இருந்த சேர்த்தியைத் தவிர்த்து, பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் காணவேண்டியெ போலுமேன்கிறாள் பின்னடிகளால் – காரிகை அழகுடைய பெண்.

———————

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

பதவுரை

நேர் இழை

–

நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில்

–

பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று

–

“இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள்

–

ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க

–

இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்
இனி

–

இப்போது
போய்

–

வெளியேறிச் சென்று
சேரி பல் பழி தூய் இரைப்ப

–

சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக
திருக்கோளூர்க்கே நடந்தாள்

–

திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,
எம்மை ஒன்றும் நினைத்திலன்

–

எங்களை ஒரு பொருளாக மதித்திலன்

***- (காரியம் நல்லனகள்) திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.

உலகத்தவர்கள் ஏதேனும் நல்ல பொருள்களைக் கண்டால் “இது நம்முடைய குட்டிக்கு ஏற்றிருக்கும், இது நம்முடைய குழந்தைக்கு ஒத்திருக்கும்“ என்று சொல்லக் காண்பர்கள்,

பராங்குச நாயகியோவென்னில், அங்ஙனன்றிக்கே எந்த நல்லபொருளைக்கண்டாலும், “இது எம்பெருமானுக்குத் தகுந்திருக்கும், இது என் கண்ணனுக்கு ஏற்றிருக்கும்“ என்றே சொல்லுவது வழக்கமாம்.

அங்ஙனம் சொல்லுமிடத்து நெஞ்சு நெகிழந்திருக்குமிருப்பு வெகு ஆச்சரியமாயிருக்கும்.

அசோகவனத்திலே பிராட்டியைக்கண்ட திருவடி சொல்லுகிறான் –

••••  பலம் வா புஷ்பம் வா யத்வாந்யத் ஸ்த்ரீமநோஹரம் பஹுசோ ஹா ப்ரியேத்யேவம் ச்வஸந்த்வாமபிபாஷதே * என்கிறான்.

பழமோ பூவோ மற்றும் எது காணப் பெற்றாலும் நம் பிராட்டிக்கு ஆகுமென்றே பெருமாள் காண்பதுபோல, நம்பெருமாளுக்காரு மென்றே இப் பிராட்டி காண்கிறபடி.

“இதெல்லாங் கிடக்க“ என்றதற்குப் பலபடியாகக் கருத்துக்கொள்ளலாம்.

* உண்ணுக்கு சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணனென்று பேசிக்கொண்டு கண்கள் நீர்மல்க இங்கே யிருக்கலாகாதோ?

ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போலாக்கிக்கொண்டு இங்கே யிருந்தாலாகாதோ? இங்கிருக்குமிருப்பிலே என்ன குறை? இவையெல்லாம் விட்டு அங்கேபோகவேணுமோ?

போனாலென்ன? இங்கிருந்து செய்கிற பகவதநுபவத்தை அங்குச் சென்று செய்தாளாகில் என்ன கெடுதி? என்று ப்ரஸதாவமாக, சேரிபல்பழிதூயிரைப்ப என்கிறாள்.

இவ்வுலகில் பிறந்து வைத்துப் பழிக்கு அஞ்சவேண்டாவோ? பலர் பலவகையாகவன்றோ பழிதூற்றுவர்கள்

* தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் * என்றுசொல்லி இருந்த விடத்திலே யிருந்த பிராட்டியைப் போலே அதற்கு அவகாசம் கொடுத்துக்கொண்டு எதற்குப்போனாளென்கிறாள்.

* மனக்குற்றமாந்தர் பழிக்கில் புகழ் * என்று அமுதனால் அருளிச் செய்தபடியே பிறர் பழிதூற்றுவதே ஸத்துக்களுக்குப் பரமபூஷணமாதலால் தாயின் உள்ளத்திலுள்ளே உகப்பேயுள்ளது.

நேரிழை நடந்தாள் – இழை என்று ஆபரணத்திற்குப் பெயர்,

நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள் மெல்லிய அடிகளைக்கொண்டு நடந்தாளே!

பட்டர் ஸ்ரீ குணரதந கோசத்தில் •••   நேதுர்நித்யஸஹாயிந் * என்கிற ச்லோகத்தில் ஜாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வாதந்த்ர்யமத்யங்குசம் * என்று வயிறெரிந்து பேசினாப்போலே இவளும் பேசுகிறபடி –

தன்மகளின் ஸௌகுமார்யத்தை அநுஸந்தித்திருக்கும் திருத்தாயார் “ஐயோ! நடந்தாளே!“ என்கிறாள்.

நடந்து செல்லுகிறபோது முன்னும் பின்னும் ஆபரணஸந்நிவேச ஸௌந்தர்யாதிசயத்தைத் தான் காணப்பெறாத இழவும் தொனிக்கும்.

“நடந்தா“ என்கிற சொல் ஸம்பிரதாயத்தில் “எழுந்தருளினான்“ என்பதற்குப் பர்யாயமாக வழங்கும்.

ஆனது பற்றியே ஈட்டிலருளிச் செய்வது பாரீர், “(நடந்தாள்) தன் பெண் பிள்ளையேயாகிலும் திருக்கோளூர் போகவென்று நாலடி யிட்ட விவளை இங்ஙனல்லது சொல்லவெண்ணாதிறே. தன்மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள்தான்!. வயிற்றில் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ப்ரத்யாஸந்நர் உத்தேச்யராமத்தனை.“

இவ்விடத்தில் ஓர் ஐதிஹ்யமும் ஈட்டிலுள்ளது, – “ஒரு நாள் நம்பிள்ளையை ஜீயர் கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி “தன் சிஷ்யனைத் தான் கொண்டாடா நின்றான்“ என்றிராதே கிடிகோள், * கணபுரங் கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்றெண்ணப் பெறுவரேயென்று பண்டு சொன்னாருமுண்டுகிடிகோள் என்றருளிச் செய்தார்.“

————

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

பதவுரை

தெய்வங்கள்

–

தெய்வங்களே!
நினைக்கிலேன்

–

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான்

–

பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய்

–

இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய

–

ஸர்வலோக ஸ்வாமியான
அரவிந்த லோசனனை

–

செந்தாமரைக் கண்ணனை
தினை தனையும் விடாள்

–

சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு
அவன் சேர் திருக்கோளூர்க்கே

–

அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே
செல்ல வைத்தனள்

–

சடக்கெனச் சென்றாள்,
மனைக்கு வான் பழியும் நினையான்

–

தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள்.

***- (நினைக்கிலேன்) அன்பர்களின் பிரிவுகாலம் * த்ருடி யுகாயதே * ஒரு பகலாயிரமூழியாலோ * பலபல வூழிகளாயிடும் * என்கிறயபடியே ஒரு கணப்பொழுதும் ஒருகல்பமாகத் தோன்றுமாதலால், தன் மகள் தன்னைப் பிரிந்துபோய்ப் பலகாலம் ஆய்விட்டதாக நினைத்து,

அந்தோ! திருக்கோளூர்க்குப் போனவள் போய் ஸேவித்துவிட்டு மீண்டு வரலாகாதோ? அவ்விடத்திலேயே மண்டி விட்டாளே!

அங்குறையும் அரவிந்தலோசன்னை ஒருக்ஷணகாலமும் விட்டுப் பிரியாதே அவ்விடத்து அநுபவமே யாத்திரியாக ஆய்விட்டாளே!

இக்குடிக்கு வரும் பெரும்பழியை நினையாதே கிடக்கிறாளே! என்று அலமருகின்றாள் தாய்.

தெய்வங்காள் நினைக்கிலேன் – தன்னருகிலுள்ளாரைப் பார்த்துச் சொல்லுகையன்றிக்கே ஆகாசத்தை நோக்கித் தெய்வங்களைப் பார்த்துச் சொல்லுகிறாள்.

இவ்வுலகிலுள்ளாரைப் போலே தேவதைகள் பழி சொல்லமாட்டாதவர்களாதலால் அவர்களோடே உறவு கொண்டாடுகிறாள்.

நினைக்கிலேன் என்றால் எதை நினைக்கிலேனென்கிறாளென்று கேள்விவரும். என்னெஞ்சில் எதுவுமே தோன்றவில்லை, ஹ்ருதயம் சூந்யமாய் விட்டது என்றவாறு.

என்மகளின்படி என்னால் சிந்திக்கப்போகிறதில்லை யென்கிறாளென்னவுமாம்.

நெடுங்கணிளமான் – அரவிந்த லோசனனையும் ஒரு மூலையில் அடக்கலாம்படி பரப்புடைத்தான கண்ணையுடையவளன்றோ இவள். இவளிருக்குமிடத்தைத் தேடி அவன் ஓடிவரவேண்டியிருக்க அவனைத்தேடி இவள் செல்வது என்னே! என்பது உட்கருத்து

“அனைதுலகுமுடைய அரவிந்தலோசனனை“ என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி “இவ்வளவே கிடீர் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது, ஓர் உபய விபூதிமாத்ரங் கிடீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது. அவன் தன்னையும் தோற்பிக்குங் கண்ணிறே இவளது – அவன் தானும் தன் விபூதியுமிவள்கண்ணிலே ஒரு மூலையிலே யடங்கும்படியாயிருக்கை.“

தினைத்தனையும் – க்ஷணகாலமும் என்றபடி. தினை என்கிற தானியம் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் என்றவாறு.

—————-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

பதவுரை

வைத்த மா நிதி ஆம்

–

சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற
மது சூதனையே அலற்றி

–

எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த
பத்து நூற்றுள்

–

ஆயிரத்தினுள்ளே
இப் பத்து

–

இத்திருவாய்மொழியை
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து

–

அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து
உரைப்பார்

–

உரைக்க வல்லவர்கள்
திகழ்

–

நித்யமாக விளங்குகின்ற
பொன் உலகு ஆள்வார்

–

பரமபதத்தை ஆளப் பெறுவர்கள்.

***- (வைத்தமா நிதி) இப்பத்தும் கற்பார் யாவரோ அவரிட்ட வழிக்காயிருக்கும் திருநாம என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.

திருக்கோளூரெம்பெருமானுக்கு வைத்தமாநிதிப்பெருமாளென்று திருநாமம். புதைத்து வைக்கப்படும் பொருள் நிதி யெனப்படும்.

*  தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப்படுவன். நிலத்தினுள் புதைத்துவைத்து ஆளவேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி, எம்பெருமானாகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைத்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது, எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்.

எம்பெருமானையுடையவர்களுமப்படியே, * கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே * என்கிறபடியே காண்பதற்கு முன்பும் உறக்கமில்லை, கண்டாலும் உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும், எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே கிடைப்பன்.

நிதியுடையவன் மார்பு நெறிப்பன், எம்பெருமானைக் கைக்கொண்டவர்களும் * எனக்காரும் நிகரில்லையே * மாறுளதோ விம்மண்ணின் மிசையே * இல்லையெனக் கெதிரில்லை யெனக் கெதிரில்லையெனக் கெதிரே * என்று செருக்கிப்பேசுவார்கள்.

நிதிபடைத்தவனை உலகமெல்லாம் அநுவர்த்திக்கும், எம்பெருமானைக் கைக்கொண்டவனையும் அப்படியே. * மைத்ரேய, பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய சக இத்யாதிகள் காண்க.

நிதியையிழந்தவன் கதறிக்கதறியழுவன், எம்பெருமானை யிழந்தவனுமபைபடியே.

ஸ்ரீராமபிரானாகிற வைத்தமாநிதியை யிழந்த பரதாழ்வான் ஸபையிற் புரண்டு கதறியழுதரனன்றோ.

* வில்லாப ஸபரமத்யே. என்றது காண்க

* பழுதே பலபகலும் போயினவென்று கதறியழுவார்கள்.

* இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே

* எழில்கொள் நின்திருக்கண்ணினைநோக்கந் தன்னையு மிழந்தேனிழந்தேனே

* உன்னைக் காண்பான் நானலப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் * என்றிப்படியெல்லாம் கதறியழுவார்கள்.

*••• ஏகஸ்மிந்நப்யதக்ராந்தே முஹூர்த்தே த்யானவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம்

* எம்பெருமானுடைய சிந்தனையை யிழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும், கள்வர் ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறியழக்கூடுமோ அப்படி கதறியழ வேணுமென்பர் அறிவுடையார். இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க.

நிதியுள்ளதென்று அறிந்தவாறே அங்கு விநோதிகள் பலரும்  சேருவார்கள், அப்படியே இந்த வைத்தமாநிதிக்கும் விரோதிகள் உண்டாக, அவர்களைத் தானே தொலைத்துத் தன்னைக் காத்துத் தரும்படி சொல்லுகிறது மது சூதனை என்றவிது. இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அலற்றிச் சொன்ன ஆயிரத்துள் இத்திருவாய்மொழியை, திருக்கோளூர்க்கே ப்ரவணமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு சொல்லுவார் திருநாட்டை ஸ்வாதீனமாக ஆளப்பெறுவர் என்றதாயிற்று.

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading