ஸ்ரீ திருவாய் மொழி -6-3–நல்குரவும் செல்வும்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

***-ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேர விட்டுக் கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காண நின்றே னென்கிறார்.

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

பதவுரை

நல்குரவும் செல்வும்

–

தாரித்ரியமும் ஐச்சரியமுமாய்
நரகும் சுவர்க்கமும் ஆய்

–

நரகமும் ஸ்வர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும்

–

எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய்
விடமும் அமுதமும் ஆய்

–

விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி)
பல்வகையும் பரந்த பெருமான்

–

பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய்
என்னை ஆள்வானை

–

என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை
செல்வம் மல்கு குடி

–

செல்வம் நிரம்பிய ஸந்நிதியான
திரு விண்ணகர்

–

திருவிண்ணகரிலே
கண்டேன்

–

காணப்பெற்றேன்.

நல்குரவு – ஏழைமை, அதற்கு எதிரானது ஐச்வரியம், இவையிரண்டுமா யிருக்கையாவது – இவை யிரண்டையும் அவரவர்களுக்கு உண்டுபண்ணவல்லவனாயிருக்கை.

குசேல முனிவனை தரித்ரனாக்கினதும் தானே, செல்வனாக்கினதும் தானே, பின்னையும் தரித்ரனாக்கியதும் தானே.

நரகும் சுவர்க்கமுமாய் – துக்கமே வடிவெடுத்த நரகத்திலே தள்ளுவதும் தானே, சுகமே வடிவெடுத்த சுவர்க்கத்திலே நிறுவுவதும் தானே.

வெல்பகையும் நட்பும் –த்வேஷத்தை விளைப்பதும் தானே, ஸ்நேகத்தை விளைப்பதும் தானே.

தன் பக்கலில் த்வேஷமுடையவர்களை ஸ்நேஹிகளாக்கிக்கொள்ளவும் வல்லன், ஸ்நேஹமுடையவர்களை த்வேஷிகளாக்கிக் கொள்ளவும் வல்லன் என்றுமாம்.

மஹா த்வேஷியாயிருந்த கண்டாகர்ணனை ஸ்நேஹியாக்கிக் கொண்டான், மஹாஸ்நேஹியாயிருந்த மாலிகனை த்வேஷியாக்கிக்கொண்டான்,

சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் * என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க.

வெல்பகை – ‘ஸமாதானத்தாலே மீளுமதன்றியிலே வென்றே விடவேண்டும் பகை‘ என்பது ஈடு.

விடமும் அமுதமுமாய் – அரனுக்கு விஷமளித்தவனும் தானே, அமரர்க்கு அமுதமளித்தவனும் தானே.

அமரர்தமமுதே அசுரர்கள் நஞ்சே! * என்கிறபடியே சிலர்க்கு அமிருதமாயும் சிலர்க்கு விஷமாயுமிருப்பவன் என்றுமாம்.

ஆகவிப்படி பல்வகையும் பரந்த பெருமானென்று அவனுடைய விபூதி விஸ்தாரத்தைச் சொல்லிற்றாயிற்று.

அவனுடைய விபூதி விஸ்தாரத்தைச் சொல்லிற்றாயிற்று.

திருமழிசைப்பிரான் நான்முகன் திருவந்தாதியில் * யாவராய் நிற்கின்றதெல்லாம் நெடுமாலென்று ஓராதார் கற்கின்றதெல்லாம் கடை * என்றார்.

* ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் * என்றபடி எதையும் பகவத் விபூதியாகவே நினைப்பார்க்கு தாரித்ரியமென்று ஒரு தாழ்வும் ஐச்வரியமென்று ஒரு மேன்மையும், நரகமென்று ஒரு துக்கமும் சுவர்க்கமென்று ஒரு சுகமும் தோன்றாதபடி எல்லாம் ஒரு நிகராகவே தோற்றுமென்பது இதனால் அறிவிக்கப்பட்டதாகும்.

திருவிண்ணகர் – சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதுள் திருக்குடந்தை யருகிலுள்ள உப்பிலியப்பன் ஸந்நிதி.

புராண ப்ரக்ரியையின்படி உப்பிலியப்பன் என்பர்,

ஆழ்வாரருளிச் செயலின்படி ஒப்பிலியப்பன் என்ன வேணும்.

* தன்னொப்பாரில்லப்பன் * என்று இப்பதிகம் தன்னிலேயே ஒன்பதாம் பாட்டிற் காண்க.

* ஒருவரையும் நின்னொப்பாரொப்பிலா வென்னப்பா * என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.

———-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

 

பதவுரை

கண்ட இன்பம் துன்பம்

–

உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும்
கலக்கங்களும் தேற்றமும் ஆய்

–

கலக்கமும் தெளிவுமாய்
தண்டமும் தண்மையும்

–

நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய்
தழலும் நிழலும் ஆய்

–

வெப்பமும் தட்பமுமாய்
கண்கொள்தற்கு அரிய பெருமான்

–

ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய்
என்னை ஆள்வான்

–

என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய
ஊர்

–

திவ்யதேசம் எதுவென்றால்,
தெண் திரை புனல் சூழ்

–

தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த
திரு விண்ணகர்

–

திருவிண்ணகரென்கிற
நல் நகர்

–

அழகிய நகரமாகும்.

***- (கண்டவின்பம்) * ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை!

வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.

—————

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

———

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

——–

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

பதவுரை

கைதவம் செம்மை

–

கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய்

–

கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய்

–

மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை

–

யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய்

–

நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு
செய்த திண் மதின் சூழ்

–

வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகர்

–

திருவிண்ணகரிலே
சேர்ந்த பிரான்

–

வர்த்திக்கிற ஸர்வேச்வரன்
பெய்த காவு கண்டீர்

–

ஆக்கின சோலையன்றோ
பெரும் தேவு உடை மூ உலகு

–

பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும்.

***- (கைதவம் செம்மை) சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்.

‘பெருந்தேவுடை மூவுலகும் அவன் பெய்த காவு‘ என்றது ப்ரஹ்மா முதல் பிபீலிகை யளவாகவுள்ள ஸமஸ்த ப்ராணி வர்க்கமும் அவனுடைய ரக்ஷ்ய கோடி என்கை.

கைதவமாவது வக்ரத்வம். செம்மையாவது ருஜுவாயிருத்தல். சிலரிடத்தில் கோணல் தவிர வேறுகிடையாது, சிலரிடத்தில் செம்மை தவிர வேறுகிடையாது, இவை யிரண்டும் அவனிட்ட வழக்கு. கைதவமும் செம்மையுமாகிற இரண்டும் எம்பெருமானிடத்திலேயே உண்டு என்றும் கொள்ளலாம்.

கண்ணன் அயல் வீட்டிலே புகுந்து வெண்ணெய்த் தாழியிலே கையிட்டவாறே •••    அம்மா! ஒரு கன்றுகுட்டி சிதறி ஓடிப்போயிற்று, அது இங்கே இருக்கிறதோ வென்று தேடுவதற்காகக் கையிட்டேன்“ என்றுரைப்பது போன்றவை கைதவம்.

பஞ்சவடியிலே சூர்பணகைவந்து நீர் ஆர்? ராக்ஷஸ பூயிஷ்டமான இந்த இடத்திற்கு நீர் வந்த்தேன்? என்றபோது   ••••  (இராமன் செம்மையான புத்தியை யுடையவனாதாலால் எல்லாம் உள்ளபடியே உரைக்கத் தொடங்கினான்) என்னும்படியாக அமைந்தது செம்மை.

கருமை வெளுமையுமாய் – கண்ணனாய்ப் பிறந்து கரிய கோலத் திருவுருவமாய்க் காட்சித் தருவன்,

நம்பிமூத்தபிரானாய்ப்பிறந்து “முன்னம்பெற்ற வளைவண்ண நம்மாமேனி“ என்னும்படி வெளுத்த திருக்கோலமாய் ஸேவை ஸாதிப்பன்.

இங்கே “முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னைத் தொடர்ந்த்தோர் கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவது“ என்ற பெரியாழ்வார் திருமொழியை நினைப்பது.

மெய் பொய் – ஸத்யேந லோகாந் ஜயதி. * என்னும்படியாக ஸத்யம் வீறுபெறுதற்கு ஒரு அவதாரமும் “பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை“ “பொய்யாவுன்னைப்புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன்“ என்னும்படி அஸத்யம் வீறுபெறுதற்கு ஒரு அவதாரமும். * பொய்யர்க்கே பொய்யனாகும் – மெய்யர்க்கே மெய்யனாகும் * என்றதுமுன்டே.

இளமை முதுமை – “பேதைக்குழவி“ என்னும்படான இளம்பிராயமாயிருக்கச் செய்தேயும் “எந்தை தந்தைதந்த தந்தைதந்தை தந்தைதந்தைக்கும் முந்தை“ என்னும்படியாக புராண புருஷத்வத்திலும் குறையில்லை.

புதுமை பழமையும் – மிகப்பழைய அநுபவமாயிருக்கச்செய்தேயும் “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதோறும் அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே“ என்னும் படியாக அப்போதப்போது புதுமைக்கும் குறையில்லாதிருக்குமே.

————

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

 

பதவுரை

மூ உலகங்களும் ஆய்

–

(ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும்
அல்லன் ஆய்

–

(அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய்
உகப்பு ஆய் முனிவு ஆய

–

ராகத்வேஷங்களாயும்
பூவில் வாழ் மகள் ஆய்

–

ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும்
தௌவை ஆய்

–

மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும்
புகழ் ஆய் பழி ஆய்

–

கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்  இருந்துகொண்டு
தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்

–

தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான்
பாவியேன் மனத்தே

–

பாவியான என்னுடைய மனத்திலே
உறைகின்ற

–

நித்யவாஸம்பண்ணுகின்ற
பரம் சுடர்

–

பரஞ்சோதியாவன்.

***- (மூவுலகங்களுமாய்) படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது.

உகப்பாய் முனிவாய் – ஒரு வஸ்துவை ஒருவர் உகந்திருப்பதும், அதுதன்னையே மற்றொருவர் வெறுத்திருப்பதுமான உகப்பும் முனிவும் அவனிட்டவழக்கு ஒருவனுக்கு ஒன்றில் ஒருகால் உகப்பும் அவனுக்கே அதுதன்னிலேயே மற்றொரு கால் வெறுப்புமாதலால் அவையு மிங்குக் கொள்ளலாம்.

பூவில்வாழ்மகளாய்த் தௌவையாய் – லக்ஷ்மீகடாக்ஷம் பெறுவானொருத்தன், மூதேவிபிடித்துத் திரிவானொருத்தன், இவை யிரண்டும் அவனதீனம். *

நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர்ருள்தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவாகன்னும்நிற்கச் சேட்டைதம்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே, * என்கிற திருமாலையின்படியே சிலர் திருமாலைத்தொழுது உய்வதும் சிலர் தேவதாந்தர பஜனம்பண்ணி அநர்த்தப்பட்டுப் போவதும் அவனிட்ட மாயை என்றவாறு.

புகழாய் பழியாய் – * தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று * (குறள்) என்னும்படியான உலகம்நிறைந்த புகழோடு விளங்குதலும் பலவகைப்பட்ட அபகீர்த்திகளுக்குக் கொள்கலமாயிருத்தலும் அவனதீனம்.

பக்தர்களால் புகழப்பெறுவதும் சிசுபாலாதிகளால் * கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ்சாதியுமாகப்பெற்றான் பற்றியுரலிடையாப்புமுண்டான் * என்றிப்புடைகளிலே பழிக்கப் பெறுவதுமான தன்மைகளைச் சொல்லிற்றாகவுமாம்.

ஆகவிப்படி விருத்த விபூதி யுக்தனாப்கொண்டு திருவிண்ணகரிலே திகழும் பெருமான் அந்தத் திருவிண்ணகரைப்போலே என் மனத்தையும் ஆதரித்து இங்கே உறைந்து இத்தால் புகர்பெற்று நிற்பவன் கிடிகோள் என்கிறார்.

கீழ் * மின்னிடை மடவாரில் எம்பெருமானைக் கதவடைத்துத் தள்ளித் திரஸ்கரித்த பாவத்தை நினைத்துப் பாவியேன் என்கிறார்.

இங்கே ஈடு “நித்ய ஸூரிகள் தன் பக்கலிலே வந்து மெல்லிய அத்தைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து மேல் விழா நிற்கக் கிடீர் நான் அல்லேனென்றது.“

————-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

 

பதவுரை

பரம் சுடர் உடம்பு ஆய்

–

அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும்
அழுக்கு பதித்த உடம்பு ஆய்

–

ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும்
கரந்தும் தோன்றியும் நின்றும்

–

மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும்
கைதவங்கள் செய்தும்

–

வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ)
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்

–

தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய
வரம் கொள் பாதம் அல்லால்

–

சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர
யாவர்க்கும் வன் சரண் இல்லை

–

யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை.

***- (பரஞ்சுடர்) எம்பெருமானுக்கு இரண்டு வகையான சரீரங்களுண்டு அப்ராக்ருதமாய் சுத்த ஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹம் ஒன்று, – ஜகத் ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்கு சரீரமாகையாலேஇந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று.

கரந்தும் தோன்றியும் – * இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் * என்றும்,

* கண் காண நிற்கில் ஆணை யிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றதபடி நின்று * என்றும் (பிள்ளைலோகாசாரயர்) அருளிச்செய்கிறபடியே மறைந்திருப்பதும்,

* காணவாராயென்றென்ற்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி ராம க்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்வதும் விவக்ஷிதம்.

நின்றும் –நூறாண்டு பதினோராயிரமாண்டு நின்றும்.

கைதவம் – வடசொல், க்ருத்ரிமம்  என்றபடி.

“அவதரித்து நிற்கச் செய்தே தன்படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும் ஆச்ரிதர்க்குத் தோற்றும்படி பண்ணியும்“ என்பது ஈடு.

இப்படிப்பட்டவன், பிரமன் தேவர்கள் தலைபடைத்த ப்ரயோஜனம் பெற்றோம் என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே உறைகின்றான், அவனுடைய திருவடிகளல்லது புகலில்லை.

வரங்கொள் பாதம் – அவரவர்கள் தம்தமக்கு வேண்டிய வரங்களை இரந்து பெற்றுக் கொள்ளும்படியான திருவடிகள்.

வரம் என்கிற வடசொல் ச்ரேஷ்டம் என்கிற பொருளையுமுடைத்தாதலால் “ச்ரேஷ்டத் தன்மையைக் கொண்டிருக்கிற“ என்னவுமாம்.

யாவர்க்கும் என்றவிடத்து “எத்தனையேனும் கிழாய்கிழாயர்க்கும்“ என்பது ஈடு, கிழம்கிழமாயுள்ளவர்களுக்கும் – பெருப்பெருத்தவர்களுக்கும் என்றபடி.

வன் சரணே – “பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாயிருக்கும்“ என்ற முமுக்ஷுப்படி ஸ்ரீஸூக்தி அநுஸந்தேயம்.

———–

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

 

பதவுரை

சுரர்க்கு வன் சரண் ஆய்

–

தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய்
அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்

–

அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய்
உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்

–

உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு)
தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்

–

தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான்
என்சரண்

–

எனக்கு சரண்யன்
என் கண்ணன்

–

எனக்கு விதேயன்
என்னை ஆளுடை என் அப்பன்

–

என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன்.

***- (வன்சரண்) தேவர்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் ஓடி வந்து திருவடிகளிலே விழ * முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று கப்பந்தவிர்க்கும் கலியே * என்கிறபடியே அவர்களுக்காகத் தன்னை அம்புக்கிலக்காக்கி அவர்களைக் காப்பாற்றும் வலிய ரக்ஷ்கன்,

இப்படிப்பட்டவன் அஸுரராக்ஷஸ கோஷ்டியில் வந்தாலோ அவர்களுக்குக் கொடிய யமனாயிருப்பன்.

ப்ரஸித்தனாயிருக்கிற எம்பெருமான் தேவர்களுக்கு வன் சரணாயும்  அசுரர்களுக்கு வெங்கூற்றமாயும் இருந்தால் அவனுக்கு இது குறையாகாதோ? என்னில், ஆகாது.

தேவர்களுக்கு நன்மை செய்யவேணும், அசுரர்களுக்குத் தீமைசெய்யவேணும் என்று எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு ஆக்ரஹமில்லை,

ஒருங்கே எல்லார்க்கும் நன்மை செய்யவேணுமென்பதே அவனுடைய திருவுள்ளம்.

எல்லாரும் உபயோகங்கொள்ளக் கல்லின ஏரியிலே கழுத்தலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து சாவார் போலவும், விளக்கிலே விட்டில்கள் தாமேவந்து விழுந்து மடிந்து போமாபோலவும் எம்பெருமானிடத்திலும் அவரவர்களே வந்து விழுந்து மடிந்தால் இது இவனது குற்றமாகுமோ?

தன்சரண்நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் – * காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லை உன்பரதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன் * (பெரியாழ்வார் திருமொழி) என்று தன் திருவடிகளிலே வந்து சேர்வார்க்கு ஸகல தாபங்களும் தீரும்படி நிழல்கொடுத்தும்,

அக்நிஜ்வாலையை விழுங்கி விடாய் கெடநினைக்குமாபோலவும் ஆடுகிற பாம்பின் நிழலிலே யொதுங்கி ஸுகிக்க நினைக்குமாபோலவும் விஷயாந்தரங்களின் சாயையிலே யொதுங்கி மகிழ நினைப்பார்க்குத் தாபத்தை வளர்த்தும்

இப்படிப்பட்ட தன்மையை யுடையவன் தென் திசைக்குத் திலதமான திருவிண்ணகரிலே திகழாநின்றான்,

அவனே யெனக்கு ஸர்வர்த்மநா புகல் என்றாராயிற்று.

———-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

பதவுரை

எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய்

–

எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய்

–

பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு
மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன்

–

ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன்
தன் ஒப்பார் இல் அப்பன்

–

தன்னோடொத்தார் இல்லாத மஹான்!
தன தான் நிழல் தந்தனன்

–

(எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன்.

***- (என்னப்பனெனக்காய்)  ••••    என்றார்கள் மஹர்ஷிகள்.  எம்பெருமானாகிறன் வ்ருக்ஷத்தின் நிழலானது மிகவும் அநுகூலமானது, நரகம் தவிர்ப்பது, அதுவே அடையத்தக்கது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து,

அப்படிப்பட்ட நிழலைத் தாமாக அடையத் தக்கது என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

அப்படிப்பட்ட நிழலைத் தாமாக அடையப் பார்க்க வேண்டாதே எம்பெருமான் தானே தனது நிர்ஹேதுக கிருபையினால் (தன் திருவடி நிழலைத்) தமக்குக் கொடுத்தருளின மஹோபகாரத்தைப் பேசி மகிழ்கிறார்.

திருவடி நிழலைக் கொடுப்பதாவது திருவடிகளின் கீழேயிருந்து அத்தாணிச் சேவகஞ்செய்து ஆனந்திக்கும்படி செய்தருள்வதேயாம். •• என்கிற ஸுதர்சந சதக ஸூக்தியும் இங்கு நினைக்கத்தகும்.

உலகத்தில் பிதாவாயிருப்பவன் தாயாயிருக்க முடியாது, தாயாயிருப்பவள் தோழியாயிருக்க முடியாது, இப்படிப்பட்ட விருத்த தர்மங்களெல்லாம் எம்பெருமான் திறந்தே குடிகொண்டிருக்கின்ற வென்கிறார் முதலடியில்.

இகுளாய் என்கிறவிடத்தில் இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி, – “(இருளாய்) தோழியாய். இது தமிழர் நிர்வாஹம். நம்முடையவர்கள், செவிலித் தாய் என்று நிர்வஹிப்பர்கள், தாய்க்குத் தோழியா யிருக்குமிறே செவிலித்தாய், அத்தைச் சொல்லுகிறது.“ என்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி

(“இருளாய்) இகுளை யென்று தோழிக்குப் பேராய் அத்தைக் குறைத்து இகுளென்று கிடக்கிறது.“ என்று.

(பொன்னப்பன் இத்யாதி) உலகத்தில் பொன்னால் ஒருவிதமான உபயோகம், முத்தால் மற்றொரு விதமான உபயோகம் என்றிப்படி அவ்வோ வஸ்துக்களின் தன்மைக்கு ஏற்ப உபயோக ப்ரகாரங்கள் வெவ்வேறுபட்டிருக்கும்.

அங்ஙனன்றிக்கே ஸகலவிதமான உப்யோகங்களும் எம்பெருமானாலே உண்டென்கிறது இங்கு.

* முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை * முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே * என்றார் திருமங்கையாழ்வாரும்

மணி – ரத்னம், பொன், முத்து என்கிற விசேஷ சப்தங்களினிடையே யிருக்கின்ற இந்த ஸாமாந்ய சப்தமும் ஒரு விசேஷத்திலே பர்யவஸித்து நிற்கும்.

தன்னொப்பாரில்லப்பன் – இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய திருநாமம் இது. ‘ஒப்பிலியப்பன்‘ என்கிற திருநாமத்தையே ‘தன்னொப்பாரில்லப்பன்‘ என்று அருளிச்செய்தபடி.

திருவாய்மொழிக்கு முந்தியே இவ்வெம்பெருமானுக்கு ஒப்பிலியப்பனென்று திருநாமமிருந்ததா? அல்லது, திருவாய்மொழியில் இங்ஙனே அருளிச்செய்தது கொண்டு ஒப்பிலியப்பனென்று பெருமாளுக்குத் திருநாமம் வழங்கிவந்தார்களா? என்று சிலர் விமர்சிப்பதுண்டு.

இரண்டுபடியும் பொருந்ததக்கதே.

ஸ்தல புராணத்தின்படி உப்பிலியப்பன் என வழங்குவர்.

இத்தலத் தெம்பெருமான் பிரமசாரி வேடம்பூண்டு திருமணம் புரிவதற்குப் பெண் கேட்கப் போன விடத்தில் பெண்ணின் தாய் தந்தையர் “எமது பெண்ணுக்கு உப்பு சேர்த்துத் தளிகை பண்ணுகிற விதமே தெரியாதே, இவளை மணம் புரிந்து நீர் எங்ஙனம் இல்லறம் நிகழ்த்துவீர்?“ என்ன,

அப்படியாகில் எனக்கு உப்பில்லாத தளிகையே பரம போக்யமாகும் என்று சொல்லி, அப்பெண்ணை மணம்புரிந்து வந்ததாகவும், அதனால் உப்பிலியப்பன் என்று திருநாமம் பெற்றதாகவும்,

அந்தப் புராண வரலாற்றை அடியொற்றியே இற்றைக்கும் இத்தலத்தில் உப்பில்லாத தளிகைகளே நிவேதனமாகின்ற தென்பதாகவும் கூறுப.

———–

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

 

பதவுரை

நிழல் வெய்யில்

–

நிழலாயும் வெய்யிலாயும்
சிறுமை பெருமை

–

அணுத்வமாயும் விபுத்வமாயும்
குறுமை நெடுமையும் ஆய்

–

ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய

–

ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும்
அவை அல்லனும் ஆய்

–

அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு
மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்

–

மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய
கழல்கள் அன்றி

–

திருவடிகள்தவிர
மற்று ஓர் களைகண் இலம்

–

வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம்
காண்மின்கள்

–

இதை ஸத்யமென்று கொள்ளுங்கள்

***- (நிழல் வெய்யில்) “பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து“ என்கிற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படி ஒவ்வொரு நூறுபாசுரங்களினுள்ளும் ஒவ்வொரு பதிகம் உபதேசபரமா யிருக்குமாதலால் இந்த ஆறாம்பத்துக்கு இத்திருவாய்மொழியே உபதேசபரமாகக் கொள்ளத்தக்கது.

இது உபதேச ரூபமென்பது மற்ற பாசுரங்களில் வ்யக்தமாகக் காணாமல் இப்பாசுரத்தில் வ்யக்தமாகக் காண்கிறது.

“மற்றோர் களைகணிலம் காண்மின்களே“ என்றது காண்க.

பன்னீராயிரப்படியிலும் இப்பாட்டின் உரையவதாரிகையில் “உபதேசித்து முடிக்கிறார்“ என்றருளிச் செய்திருப்பதுங் குறிக்கொள்க.

தாபசாந்தியைத் தருமதான நிழலும் தாபகரமான வெய்யிலும், சிறுமைக்கு எல்லையான அணுத்வமும் பெருமைக்கு எல்லையான மஹதத்வமும், மத்யம் பரிமாணங்களிலுண்டான ஹ்ரஸ்வத்வ தீர்க்கத்வங்களும், ஜங்கம ஸ்தாவரங்களான மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய், இப்படி ஸர்வ சரீரியாகா நிற்கச்செய்தே அவற்றினுடைய ஸ்வபாவத்தை உடையனல்லாதவனுமாய்க் கொண்டு, வண்டுகள் தென்னாதெனாவென்று முரலப்பெற்ற திருவிண்ணகரிலே உறைகின்ற பெருமானது திருவடிகளை யொழிய வேறொரு சாணமுடையோ மல்லோம் நாம், இதை நீங்களும் நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்றாராயிற்று.

———–

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

 

பதவுரை

உலகீர்

–

உலகத்திலுள்வர்களே!
கரண்மின்கள் என்று

–

இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று)
கண் முகப்பே நிமிர்ந்த

–

கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த
தான் இணையன் தன்னை

–

உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன

–

நம்மாழ்வார் அருளிச் செய்த
ஆணை ஆயிரத்து

–

பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும்
திரு விண்ணகர் பத்தும் வல்லார்

–

திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள்
விண்ணோர்க்கு

–

நிர்யஸூரிகளுக்கு
கோணை இன்றி மிறுக்கு இல்லாமல்
என்றும் குரவர்கள் ஆவர்

–

எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள்.

***- (காண்மின்கள்) இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.

இப் பதிகமானது * காண்மின்களாலகீரென்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குறித்து அருளிச்செய்ததாகத் தகும்,

ஏனெனில், மாவலியை வடிவழகாலும் பேச்சில் இனிமையாலும் மயக்கினதுபோல இருக்கும் மயக்கித் தன் காரியத்தை ஸாதித்துக் கொண்டதனால்.

ஆணையாயிரம் – ••••  ஸ்ம்ஸ்க்ருத வேதமானது எப்படி பகவதாஜ்ஞாரூபமமோ அப்படியே இத் தமிழ்வேதமும் என்க.

விண்ணோர்க்கு என்றும் குரவர்களாவர் – இத் திருவாய்மொழியை ஓதுமவர்கள் நித்ய ஸூரிகளுக்குக் குரவர்களாகையாவது என்னென்னில், – * பாவியேனைப் பல நீ காட்டிப்படுப்பாயோ என்னும்படியான இருள்தருமாஞலத்தில் இருந்துகொண்டே இவர்கள் இப்படி பகவத் குணாநுபவம் பண்ணப் பெறுகின்றார்களே! இதுவன்றோ ஆச்சரியம்! நாம் * நலமந்தமில்லை தோர்நாட்டிலே யிருந்துக்கொண்டு குணுநுபவம் பண்ணுவதில் என்ன விசேஷம்? நம்மிற்காட்டில் இவர்களேயன்றோ சீரியர்கள்! என்று கொண்டாடப்பெறுதலாம்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஸம்ஸாரத்தே யிருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே! என்று (நித்ய ஸூரிகள்) கொண்டாடியிருப்பர்கள்.“

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading