மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-
பதவுரை
| மின் உடை இலங்கை |
– |
அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய |
| அரண் |
– |
கோட்டைகளையெல்லாம் |
| காய்ந்த |
– |
சீறியழித்த |
| மாயவனே |
– |
ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே |
| நம்பி |
– |
ஸகலருணபரிபூரணனே! |
| நின் அருள் சூடுவார் |
– |
உனது கிருபையை அநுபவிப்பவர்களான |
| மின் இடை மடவார்கள் முன்பு |
– |
மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில் |
| நான் அது அஞ்சுவன் |
– |
நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை) |
| உன்னுடையகண்டாயம் நான் அறிவன் |
– |
உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன் |
| இனி அது கொண்டு செய்வது என் |
– |
உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது? |
| என்னுடைய பந்தும் கழலும் தந்து |
– |
எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு |
| போகு |
– |
உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர் |
***- (மின்னிடைமடவார்கள்) இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது.
பந்து கழல்கள் எம்பெருமான் கையில் இருக்கக் காரணமென்னென்னில், இதற்கு முன்னே இவளும் தானுமாக லீலைகள் செய்துகொண்டிருந்தார்கள். அப்படியிருக்கையில் திடீரென்று பிரிந்து போனான், போனவன் சிறிதுகாலம் கழித்து மீண்டு வந்துநின்றான்.
அப்போது நாயகிக்கு ப்ரணயரோஷம் தலையெடுத்திருந்ததனால் பேசாதே கிடந்தாள்.
எப்படியாவது இவளைப் பேச்சு செய்யவேணுமென்று கருதிய அவன் பல விலாஸ சேஷ்டிதங்கள் செய்து பார்த்தும் ஒன்றும் அவற்றிலேயே அளவுகடந்த அபிநிவேசம் காட்டினான்,
பந்தே! நாயகிதான் பேசாவிட்டாலும் நீயாவது என்னோடு பேசுவாயன்றோ, கழலே! நாயகியின் கழல் எனக்குக் கிடைக்காவிட்டாலும் நீயாவது கிடைத்தாயன்றோ? என்றிப்படிப் பலவுஞ் சொல்லித் தன்னுடைய வியாமோஹாதிசயத்தை வெளிக்காட்டத் தொடங்கினான்,
அப்போது நாயகி பேசாதிருக்க முடியாமல் பேசத் தொடங்கி இங்ஙனே கூறுகின்றாளென்க.
பராங்குச நாயகியை நோக்கி “மின்னல்போலே இதொரு நுண்ணிய இடையழகு இருந்தபடி என்!“ என்று வருணித்துப் பேசினாள் பெருமான்,
இதுகாறும் நம்மை மதியாதே இதர ஸ்த்ரீகளுடன் கலந்து போந்தவிவர் இப்போது இங்கே வந்து நம்மை வருணிப்பது நன்றாயிருக்கிறது! என்று சீறி, மின்னிடை மடவார் நானல்லேன், நின்னருள் சூடும் மின்னிடை மடவார் வேறேயுண்டு என்கிறாள்.
முன்பு நான் அதஞ்சுவன் – நீ இங்கே வந்து செய்கின்ற பிரணய விலாஸ சேஷ்டிதங்கள் உன்னுடைய மின்னிடை மடவார்கட்குத் தெரிந்தால் அவர்கள் உன்னை மாத்திரம் தண்டியாதே என்னையும் சேர்த்துத் தண்டிப்பர்களே யென்று அஞ்சுகின்ற னென்றவாறு. மற்றும் பலவாறு கருத்துக்கூறலாம்.
மன்னுடை யிலங்கை அரண் காய்ந்த மாயவனே! – இங்கு ‘மாயவனே!‘ என்பது உயிரான விளி. * உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்துப் பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்ற பேது * என்று பெண்பிறந்தார் சொல்லும்படி ஸீதாபிராட்டிக்காக நீ செய்த செயலும் – இப்படி ஒரு செயல்செய்து பெண்களுக்குக் காரியம் செய்பவன்போலு ப்ரஸித்தி ஸம்பாதித்துப் பெண்களை வலையிலகப்படுத்திக்கொண்டு துடிக்க விடுவதற்காகச் செய்த செயலே யாதலால் அதுவும் மாயமே யென்றவாறு.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறாவிடில் நமக்கு மேலுள்ளதெல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று செய்தாயத்தனையன்றோ, அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்டவழியன்றோ.“
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவேன் – சுண்டாயமாவது ஸ்வார்த்த பரத்வம். நீ செய்கிற காரியமெல்லாம் உன்னுடைய க்ருத்ரிமமான எண்ணங்களுக்கு இணங்கியவையே யல்லது ருஜுவான எண்ணத்தோடு நீ ஒரு காரியமும் செய்பவனல்லை யென்பதை நான் அறிவேன் என்றபடி.
நான் அறிந்தாலென்ன? அறியாவிடில் என்ன? இனி உனக்கும் எனக்கும் ஏதேனுமொரு தொடர்பு வைத்துக்கொள்வதாக இருந்தாலன்றோ இந்த விசாரம் – என்னுங்கருத்துத் தோன்ற இனி அது கொண்டு செய்வதென்? என்கிறாள்.
ஆகில் நான் போகிறேனென்று பந்துகழல்களோடு போகப்புறப்பட்டான், போனால் போகிறானென்று இருக்கவல்லளோ இவள்?
* ஆகிலும் கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே * என்கிறவளாகையாலே விடமாட்டாதே மீண்டும் வார்த்தைக்கு இடம் வைக்கிறாள் என்னுடைய பந்துங்கழலும் தந்து போகுநம்பீ என்று. – இவை உன்னுடையவை எப்படி? என்னுடையவையே யென்று அவன் பிணக்குச்செய்ய இடம் தந்தபடி.
————
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-
பதவுரை
| நம் போகும |
– |
பிரானே! அப்பால்போ |
| உன் |
– |
உன்னுடைய |
| தாமரை புரை கண் இணையும் |
– |
தாமரைபோன்ற கண்களிரண்டும் |
| செம் வாய் முறுவலும் |
– |
சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும் |
| ஆகுலங்கள் செய்ய |
– |
வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே |
| அழிதற்கே |
– |
அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே |
| நோற்றோமே |
– |
இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள் |
| நின் அருள் சூடுவார் |
– |
உனது அருளை அநுபவிக்கப் பிறந்த |
| தோகை மா மாயிலார்கள் |
– |
தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள் |
| ஓசை செவி வைத்து எழ |
– |
(வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக |
| ஆகள் போக விட்டு |
– |
பசுக்களை மேய்க்கப் போகவிட்டு |
| போய் இருந்து |
– |
அங்கேறப் போயிருந்து |
| குழல் ஊது |
– |
புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட. |
***- (போகுநம்பீ) கீழ்ப்பாட்டில் ‘போகுநம்பீ என்று சொல்லியிருக்க, மறுபடியும் ‘போகுநம்பி‘ என்கிறவிதற்கு ஒரு ப்ரஸக்திவேணுமே.
போகு என்னச் செய்தேயும் அவன் போகாதே சில பிணக்குச் செய்து அணுகி வந்தான், நங்காய்! என்னுடைய பந்தும் கழலும் என்றாயே, நீயோ ஸ்த்ரீயாயிரா நின்றாய், உனக்கு ஸ்வாதந்திரியமில்லை, உனக்கென்று தனியே ஒரு பொருளில்லை, இந்தப் பந்தையும் கழலையும் நீ ஏதேனும் காசு கொடுத்து வாங்கிற்றுண்டோ? என்னுடையவைகளை உன்னுடையவைகளாக நீ சொல்லுவது வழக்கோ? என்று சில பேசிக் கொண்டு புன்முறுவல் செய்து கொண்டு அணுகிவந்தானாக, இங்ஙனே கண்ணழகையும் முறுவலழகைலது உன்னை யநுபவிக்கப் பிறந்தோமல்லோங்காண் என்றபடி.
இப்படி பராங்குசநாயகி சொன்னவாறே அவன் மேன்மேலும் சில விலாஸ சேஷ்டிதங்களைச் செய்யப்புக, இவற்றுக்கு நாம் முகங்கொடுப்போமல்லோம் என்று முகத்தை மாறவைத்தாள்,
அப்போது பின்புறத்து அளகபாரங்களைக் கண்டு கண்ணபிரான் “மயில்தோகைபோலே புல்லாங்குழலோசையாலே இவளை வசப்படுத்க் கொள்வோமென்று பார்த்து வேணுகானம் பண்ணத்தொடங்கினான்,
அதன்மேல் பின்னடிகள் கூறுகின்றாள், அப்பா! நானன்று கூந்தலழகி, உன் திருவருளுக்குப் பாத்ர பூதைகளான கூந்தழகிகள் திருவாய்ப்பாட்டியிலே பலருண்டுகாண், அங்கே சென்று பசுக்களை மேயவிட்டுக் கொண்டு இந்த வேணு கானத்தை அங்கே செய்வாயாகில் அவர்கள் திருவுள்ள முகப்பர்கள், அங்கே சென்று ஊதுகிடாய் என்றாளாயிற்று.
—————
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-
பதவுரை
| நம்பி |
– |
பிரானே! |
| போய் இருந்து |
– |
எங்களைவிட்டு அப்பால் போயிருந்து |
| நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை |
– |
உனது வஞ்சகங்களை அறியாதவர்களான சிலர் பக்கலிலே உன் மெய்போலும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரு |
| நின் செய்ய வாய் இரு கனியும் |
– |
உனது சிவந்த அதரமாகிற சிறந்த கனிபும் |
| கண்களும் |
– |
திருக்கண்களும் |
| இந்நாள் விபரீதம் |
– |
இப்போது முன்போல் அல்லகிடாய் (இதற்குமேல் முகத்தை மாற வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள்) |
| மா இரு கடலை கடைந்த பெருமானாலே |
– |
அகாதமாய் விசாலமான கடலைக் கடைந்தவனான இப்பெரியோன் பக்கலிலே |
| இத்திரு அருள் பெறுவார் |
– |
இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான |
| வேய் இரு தட தோளினார் |
– |
வேய்போன்று பருத்து நெடிய தோள்படைத்தவர்கள் |
| யவர் கொல் |
– |
யாவரோ |
***- (போயிருந்து) கீழ்ப்பாட்டில் “ஆகள் போக விட்டுக் குழலூதுபோயிருந்தே“ என்ற பராங்குசநாயகியை நோக்கிக்
கண்ணபிரான் ‘நங்காள்! நான் எங்கேயோ போயிருந்து குழுலூதுவானேன்? காதலிகள் உள்ளவிடத்தேயன்றோ குழலூதத் தகுவது, என் காதலுக்கு முக்கியமான கொள்கலமாகிய நீ யிருந்த இவ்விடத்தேயன்றோ நான் குழலூத வேண்டுவது‘ என்று சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு நெருங்கி வர,
“போயிருந்து நின் புள்ளுவமறியாதவர்க்கு உரைநம்பீ!“ என்கிறாள். உன் பொய்யிலே பழகின என் பக்கலிலே உன் பொய் விலை செல்லாது கிடாய், உன் பொய் அறியாதவர்களின் கோஷ்டியிலே போயிருந்து இத்தகைய வஞ்சக வார்த்தைகளைச் சொல்லிக் காணாய் என்றபடி.
அது கேட்ட கண்ண பிரான் ‘நங்காய்! உன்வாயமுதம் பருக என் செய்யவாய் துடிக்கிறபடி கண்டாயே, வாயமுதம் பருகக் கிடையாதொழியிலும் கண்களாரளவும் நின்று காணவாவது பெறலாமோ என்று என் கண்கள் துடிக்கிறபடி கண்டாயே‘ என்றான்,
அங்ஙனம் சொல்லவே அவனது செய்யவாயையும் செந்தாமரைக் கண்களையும் உற்று நோக்கினாள பராங்குசநாயகி. அவை பரம விலக்ஷணங்களாயிருந்தன. கீழ்நாட்களில் காணாத அழகு காணக்கிடைத்தது.
அதுநோக்கி “நின் செய்யவாய் இருங்கனியும் கண்களும் விபரீதமிந்நாள்“ என்கிறாள்.
விபரீதம் என்பதற்கு !மாறுபட்டுவிட்டன‘. என்றும் பொருளாகலாம். ‘விலக்ஷணமாயிருக்கின்றன‘ என்றும் பொருளாகலாம். விலக்ஷணமாயிருக்கின்றன வென்றது – பரமபோக்யமாயிருக்கினறன என்றபடி.
ஊடலிலே இங்ஙனே சொல்லத் தகுதியில்லையாயினும் வடிவழகு பரவசப்படுத்திப் பேசுவித்தபடி.
ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக் கண்களினுடையவும் திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருத மதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.
முன்னிரண்டடிகள் எம்பெருமானை நோக்கி வ்யக்தமாகச் சொன்ன பாசுரமென்றும்
பின்னிரண்ட்டிகள் அப்படி வெளிப்படாகச் சொல்லுகை யன்றிக்கே ஹ்ருதயத்தினுள்ளே நினைத்துக் கொண்ட பாசுரமென்றும் கொள்ளத் தகும்.
இங்ஙனேயான வாயழகும் கண்ணழகும் பொலிந்த இப்பெருமானுடைய பரிபூர்ணாநுபவம் நமக்குக் கிடைக்க வில்லையே, இது கிடைக்கப் பெறும் புண்ணியவதிகள் யாவரோ! என்று உள்ளுக்குள்ளே விஸ்மயப்படுகின்றபடி.
மாயிருங்கடலைக் கடைந்த பொருமானாலே என்றது – பெரிய பிராட்டியாரைப் பெறுதற்கு இவன் கடல் கடைதலாகிற மிகப் பெரிய காரியம் செய்தானாமே, அவளும் ஒரு பாக்யவதியே என்ற கருத்தினாலாம்.
———————-
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-
பதவுரை
| ஏழ் உலகும் உண்டு |
– |
ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து |
| ஆலின் நீள் இலை |
– |
ஆலமரத்தின் இளந்தளிரிலே |
| அன்று நீ கிடந்தாய் |
– |
முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ |
| உன் மாயங்கள் |
– |
உனது மாயச்செயல்களை |
| மேலே வானவரும் அறியார் |
– |
மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள், |
| இனி எம் பரமே |
– |
அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ, |
| வேலின் நேர் தட கண்ணினார் |
– |
வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள் |
| விளையாடு |
– |
விளையாடுமிடமான |
| சூழலை |
– |
விலாஸ ஸ்தானங்களை |
| சூழவே நின்று |
– |
பற்றிக்கொண்டிருந்து |
| காலி மேய்க்க வல்லாய் |
– |
பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே! |
| எம்மை நீ சுழறேல் |
– |
இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா. |
*** கீழ்ப் பாட்டில் “நின்செய்யவாயிருங் கனியுங் கண்களும் விபரீதமிந்நாள்“ என்றதைக் கேட்ட
கண்ண பிரான் ‘விபரீதமானது என்னிடம் யாதென்றும் இருக்கில்லாது, நான் செய்வது எதுவும் ருஜுவாக இருக்குமே யல்லது விபரீத மென்னும்படியாக என்னிடம் ஒன்றுமிருக்க ப்ரஸக்தியில்லை, விபரீதமோ மாயமோ எல்லாம் உங்களிடத்தே யல்லது என்னிடம் ஒன்றுமில்லை, என்றான்,
அதற்குக் கூறுகின்றாள் – “ஆலினீளிலை யேழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய், உன் மாயங்கள் மேலே வானவருமறியார் இனியெம்பரமே?“ என்று, உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள் ஏக தேசத்தில் வைத்து ஓர் ஆலந்தளிரிலே துயில்கொள்பவனல்லையே நீ,
* பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் – ஆலன்று, வேலைநீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ, சூலைசூழ்குன்றெடுத்தாய் சொல்லு * (முதல் திருவந்தாதி) என்று மாஞனிகளும் அதிசயிக்கும்படியான இந்த மாயத்தை மேலையோரான வானவர்களும் அறியகில்லாதாராயிருக்க, நாங்களோ அறிகிற்போம்? உன் மாயத்தை நீயே அறிய வேண்டுமத்தனை என்றபடி.
அதுகேட்ட கண்ணபிரான் ‘நங்காய்! நான் இங்கே தாமதித்து வந்தேன் என்ற வித்தனையே காரணமாகவன்றோ நீ இங்ஙனே மிறுக்குச்செய்வது. நான் தாய் தந்தையரக்குப் பரதங்திரனல்லேனோ? அவர்கள் என் கையிலே கோலைக்கொடுத்துப் பசு மேய்த்துவா என்றால் நான் அங்ஙனமே சென்று மேய்த்து வரவேண்டாவோ? அதனால் சிறிது தாமதித்தால் அதற்காக இவ்வளவு சீறலாகுமோ?“ என்று அநுநயமாகச் சில வார்த்தைகள் சொல்ல.
“வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்!“ என்கிறாள் – பசு மேய்ப்பத்தென்று ஒரு வியாஜம் வைத்துக்கொண்டு, உனக்கு விருப்பமான கண்ணழிகிகள் விளையாடுமிடங்களிலேயே திரிவது அன்றோ உன்பணி, இந்தச் சூது நாங்களறியோமோ? என்கிறாள்.
இவள் இங்ஙனே சொன்னவாறே ‘இவள் நம்முடைய செய்தியை உள்ளபடி யுணர்ந்து வெளியிட்டுவிட்டாளே!‘ என்கிற வருத்தத்தினால், அர்த்தமில்லாதபடி சில வார்த்தைகளை மிகைத்துச் சொல்ல ஆரம்பித்தான் கண்ணன்,
அதற்கு ‘எம்மைநீ கழறேலே‘ என்கிறாள். நீ மேலிட்டு வார்த்தை சொல்லுமிடம் இது வன்று, வேலினேர்தடங்கண்ணினார் விளையாட்டு சூழலிலே செனெறு சொல்லாய் என்றபடி.
———
கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-
பதவுரை
| நம்பீ கழறேல் |
– |
பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா! |
| உன் கைதவம் |
– |
உனது கபடங்களை |
| மண்ணும் விண்ணும் நன்கு அறியும் |
– |
உபய விபூதியும் நன்றாக அறியும் |
| நிழறு |
– |
இஷ்டப்படி நடத்தப்பெறுகிற |
| திண் சக்கரம் தொல்படையாய் |
– |
திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே! |
| உனக்கு நான் ஒன்று உணர்த்துவன் |
– |
உனக்கு நான் ஒருவிஷயம் அறிவிக்கக் கேளாய், |
| நின் அருள் சூடுவார் |
– |
உனது க்ருபைக்குப்பாத்திர பூதைகளான |
| மழறு தேன்மொழியார்கள் |
– |
மழலைத் தேன்மொழியார்களான மாதர்கள் |
| மனம் வாடி நிற்க |
– |
நெஞ்சுகொதித்து நிற்கும்படியாக |
| எம் குழறு பூவை யொடும் |
– |
அநக்ஷர ரஸமாகப்போசுவின்ற எமது பூவைப் பறவையோடும் |
| கிளியோடும் |
– |
கிளியோடும் |
| குழகேல் |
– |
லீலாரஸம் கொண்டாட வேண்டா நீ. |
***- (கழறேல்நம்பி) கீழே ‘எம்மைநீ கழறேலே‘ என்று மறுத்துக் கூறினவளவிலும்,
கண்ணபிரான், ‘நங்காய்! பொய் என்பதைக் கனவிலுமறியாத வென்னை நீ பச்சைப் பசும் பொய்யனாக எண்ணி இப்படி திரஸ்கரித்துத் தள்ளுவது தகுதியன்று, மத்யஸ்தர்களை வைத்துக்கொண்டு நான் மெய்யனோ பொய்யனோ வென்பதை நிர்ணயிக்கவேண்டுமத்தனை‘ என்று சொல்லிக் கொண்டு மீண்டும் மேலிட்டு வார்த்தை சொல்ல,
“கழறேல் நம்பீ! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும்“ என்கிறாள்.
நிர்யணம் பெறாத விஷயத்திற்கன்றோ மத்யஸ்தர்களை வைத்துக் கொண்டு ஸாக்ஷிகளை விசாரித்துக்கொண்டும் தடுமாறவேண்டுவது,
உன்னுடைய ஸங்கதி உபயவிபூதியிலும் ப்ரஸித்தமன்றோ?
(கைதவமாவது – மாயச்செயல், இது வடசொல்) நீ லஞ்சகம் செய்வது இம்மண்ணுலகில் மாத்தரமேயோ? விண்ணுலகிலும் ப்ரஸித்தமன்றோ அது.
“சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தராநிற்கவேயங்கு, ஒர்மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்போந்து இமிலேற்று வன்கூன்கோட்டிடையாடினைகூத்து அடலாயர்தம் கொம்பினுக்கோ“ என்கிற திருவிருத்தப் பாசுரத்தின் பொருள் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
உன் க்ருத்ரிமத்தை உபய விபூதியும் நன்கறியும் என்றவாறே, கண்ணபிரான் “அந்தோ! இங்ஙனே அலர்தூற்றிவிடுவது ஒரு வார்த்தையோ? விவேகியான வொருவனை ஸாக்ஷியிட்டு மூதலிக்கவேண்டாவோ?“ என்று கூற,
அப்படியோ? ஸாக்ஷிகளுக்குக் குறையுண்டோ? ஸாக்ஷிகளை நாங்கள் தேடவேண்டுமோ? என் கையிலேயே ஸாக்ஷி விளங்காநின்றானே, ஆயுத மெடேனென்று ஆயுதமெடுத்தும், பகலை இரவாக்கியும் இங்ஙனோயாக நீ செய்த க்ருத்ரிமங்களுக்கு உடன்பட்டிருந்த திருவாழியாழ்வான் உன்கையிலேயே உள்ளானன்றோ? அவனைக் கேட்கலாமே யென்கிறாள் – திண்சக்கரநிழறு தொல்படையாய் என்கிறாள்.
இவள் இப்படிச் சொன்னவாறே ‘அந்தோ! இவள், நாம் வாயைத் திறந்து மறுமாற்றம் சொல்ல இடமில்லாதபடியாக இப்படி ஸாக்ஷியிட்டுவிட்டாளே, இனி நாம் என்செய்வது! என்று கவிழ்ந்துநின்றான் கண்ணபிரான்.
அந்த தீன தசையைக் கண்டு ‘பிரானே! கவிழ்தலையிட்டிருக்கவேண்டா, நீ எம்மையே அடி பணிந்தாயாகில் நீ மறுமாற்றம் சொல்லிப் பிழைக்க வேண்டிய வகைகளை நாமே உனக்குச் சொல்லித் தருகிறோம் வா என்றார்கள்.
ஸர்வஜ்ஞரான நமக்கும் இவர்கள் ஒன்று உணர்த்துவதாகச் சொல்லாநின்றார்களே!, இது என்ன அழகானபேச்சு! என்று உள்குழைந்த கண்ணபிரான் அந்தப் பேச்சின் இனிமையை எடுத்துரைத்துப் புகழத் தொடங்கினான் –
“உங்களுடைய மொழி ஸாமான்யமாக இல்லையே, தேன்போலே இனிதாயிருக்கின்றதே!“ என்றான்,
அதற்குச் சொல்லுகிறார்கள் – அப்பா! தேன்மொழியார் நாங்கள் அல்லோம், நின்னருள் சூடும் தேன்மொழியார்கள் வேறேயுளர், எம்மை அவர்களாக ப்ரமிக்கிறாய் போலும், அந்தப்பரம் வேண்டாகாண் என்றார்கள் என்று சொல்லிவிட்டுத் தலைமறைய நின்றார்கள்,
இவனோடு இந்த ஸம்பாஷணை தானும் பாதகம் என்று எண்ணி நின்றார்கள்,
அவ்வளவிலே அங்கே சில பூவைகளும் கிளிகளுமிருந்தன, அவற்றோடே லீலா ரஸம் கொண்டாட ஆரம்பித்தான் கண்ணபிரான்,
அதுகண்டு “நின்ருள் சூடுவார்மனம்வாடி நிற்க எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே“ என்கிறார்கள்.
நீ இங்கே வந்தது தெரிந்தாலே உன் காதலிமார்கள் வருந்துவார்கள், அதற்குமேலே எம்முடைய ஸம்பந்தம் பெற்ற வஸ்துக்களிலே நீ அபிநிவேசம் காட்டுகிறாயென்கிற இதுவும் தெரிந்தால் அவர்களுடைய வருத்தத்திற்கு அளவேயிராது. ஆகவே அவர்கள் மனம்வாடும்படியாக நீ இங்ஙனம் குழகவேண்டா என்றார்களாயிற்று.
பூவை என்று புஷ்ப விசேஷத்திற்கும் பக்ஷி விசேஷத்திற்கும் பெயர்,
“பூவைப்பூவண்ணா“ “பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற“ என்னுமிடங்களில் புஷ்ப விசேஷப் பொருளில் பிரயோகமும்,
“நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய்“ “பூவை பைங்கிளிகள்“ “பூவைகள்காள்குயில்காள் மயில்காள்“ என்னுமிடங்களில் பக்ஷி விசேஷப் பொருளில் பிரயோகமும் காணத் தக்கன.
—————
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-
பதவுரை
| நம்பீ |
– |
பிரானே! |
| குழகி |
– |
லீலாரஸம் கொண்டாடி |
| எங்கள் குழமணன் கொண்டு |
– |
எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு |
| கோயின்மை செய்து |
– |
கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால் |
| கன்மம் ஒன்று இல்லை |
– |
உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது |
| யாம் பழகி இருப்போம் |
– |
நாங்கள் வெகுநாளாகவே உம்மோடு பழகி உமது யோக்யதைகளைத் தெரிந்துகொண்டிருக்கின்றோம். |
| இத் திரு அருள்கள் பரமே |
– |
உம்முடைய ஆசைப்பெருக்கான காரியங்களுக்கு. நாங்கள் இலக்காகப் போருமோ (இவை எங்களால் தாங்க முடியா) |
| இ உலகு மூன்றுக்கும் அழிகியார் |
– |
இம்மூவுலகத்தினுள்ளும் அழகிற்சிறந்தவர்களாயும் |
| தேவிமை தருவார் |
– |
உமக்குத் தேவிகளாயிருக்கத் தகுந்தவர்களாயுமுள்ள மாதர்கள் |
| பலர் உளர் |
– |
பலருண்டு, |
| கழகம் ஏறேல் |
– |
எங்கள் திரளிலே பலாத்காரமாகப் புகவேண்டா |
| கன்மம் |
– |
இப்படிப்பட்ட செய்கையனது |
| உனக்கும் இளைது |
– |
உன்மனத்தால் பார்த்தாலும் பால்ய லௌல்யமாகத் தோற்றக்கூடியதே. |
***- (குழகியெங்கள்) கீழ் “எம்குழறுபூவையொடும் கிளியோடும் குழகேலே“ என்றார்கள்.
அந்தப் பூவைகளும் கிளிகளும் உயிருள்ளவையாகையாலே ‘நாம் நமது தலைவிகளின் கருத்துக்கு இணங்க வர்த்திக்க வேணும்‘ என்று தெரிந்து கொண்டு கண்ணபிரான் கையின் பிடிகொடாமே அப்பால் சென்றுவிட்டன,
அசேதனங்களான சில லீலோபகரணங்கள் அங்குக் கீழே விழுந்துகிடந்தன, அவற்றைக் கண்ணபிரான் எடுத்துக்கொண்டு சில விலாஸ சேஷ்டிதங்களைச் செய்ய ஆரம்பித்தான்,
அதற்குமேலே வார்த்தைகள் பெருகிச்சென்றன,
“கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி” “பந்துபறித்துத் துகில்பற்றிக்கீறிப் படிறன்படிறுசெய்யும்“ என்னும்படியான கேட்பாரற்ற செய்கைகளைச் செய்யவும் தொடங்கினான்,
அதுகண்டு “குழகியெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்ம்மொன்றல்லை“ என்கிறார்கள்.
கோயின்மை – கோ-இன்மை, அரசனில்லாமை என்று சப்தார்த்தம், அராஜகமான செய்கை என்பது கருத்து.
கன்ம்மொன்றில்லை – இதனால் உனக்கு யாதொரு லாபமும் இல்லை என்றபடி.
நீ எவ்வளவு குறும்புகள் செய்தாலும் இது உனக்கு நிறக்கேடாகுமத்தனையல்லது நாங்கள் வசப்பட்டு வருவோமென்கிற ஆசைக்கு இடமில்லை என்றவாறு.
“கன்மமொன்றில்லை“ என்றவாறே ‘நங்காய்! இப்படியும் வெட்டிதாக வார்த்தை சொல்லலாமோ? நான் உன்னுடைய சரக்கன்றோ, உன்னை விட்டால் எனக்குக் கதியுண்டோ? உன்னையேயன்றோ இரவும் பகலும் நான் சிந்தித்துக்கொண்டிருப்பது‘ என்றிங்ஙனே அநுநயித்து வார்த்தைசொல்ல
“பழகி யாருமிப்போம்“ என்கிறார்கள். அப்பா! உன்னுடைய பச்சைப் பசும் பொய்யுரைகளை நாங்கள் இன்று புதிதாகக் கேட்கிறோமல்லோம் கிடாய், உன் பொய்யுரைகளிலே யன்றோ நாங்கள் பழகியிருப்பது என்றபடி.
இங்ஙனம் சொல்லக்கேட்ட கண்ணபிரான் ‘என்னுடைய பொய்யுரைகளிலும் குறும்புச்செயல்களிலும் நீங்கள் பழகினவர்கள்தானே, சிலர் ஒன்றிலே பழகிவிட்டால் அது இல்லாமல் ஒரு நொடிப்பொழுதும் இருக்க முடியாதன்றோ, என்னுடைய குறும்புகளிலேயே பழகினவுங்களுக்கு என் குறும்புகள் இன்றியமையாதனவன்றோ, பரமபோக்யமாகவன்றோ இவை உங்களுக்கு இருக்கும்‘ என்று சொல்லிக்கொண்டே மிகைத்து அல்லல்படுத்த ஆரம்பித்தான்.
அதற்கு “பரமே யித்திருவருள்கள்“ என்கிறார்கள். அவனுடைய குறும்பான செயல்களையே இங்குத் திருவருள்கள் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.
மேலே பத்தாம் பத்தில் “என்கொலம்மான் திருவருள்கள்!“ என்கிறாராழ்வார். அங்கு எம்பெருமானுடைய ஒரு வியாமோ ஹத்தையே திருவருளென்ற சொல் காட்டுகின்றது.
அதுபோலவே இங்கும் அவனுடைய வ்யாமோஹ பரீவாஹமான தூர்த்த க்ருத்யங்களையே திருவருள்களென்கிறது.
பரமே இத்திருவருள்கள்! – உன்னுடைய இப்படிப்பட்ட குறும்புகளை எம்மால் பொறுக்கப்போமோ? என்றபடி. என்னும் வடசொல் பரமெனத்திரிந்தது.
எங்களால் பொறுக்கப்போமோ? என்றவாறே ‘பின்னே யாரால் பொறுக்கப்போகும்‘ என்றான் கண்ணபிரான்.
அதற்கு உத்தரமாக “அழகியாரிவ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்“ என்கிறார்கள். த்ரிலோக ஸுந்தரிகளென்று பேர்பெற்று உனக்கேற்கும் தேவிமார்கள் பலருண்டுகாண், உனக்கு ஏற்காத குரூபிகளான நாங்கள் எதற்கு? என்றபடி.
“தக்கார் பலர் தேவிமார்சாலவுடையீர்“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.
“உனக்கேற்ற அழகிய தேவிமார்கள் பலருண்டு” என்றவாறே கண்ணபிரான் “எனக்கு ஏற்ற தேவிகள் அழகிகள் நீங்கள் தவிர வேறில்லை, உங்கள்கையில் ஆணையிட்டுத் தருகிறேன் காண்மின்“ என்று சொல்லிக்கொண்டே உள்ளே புகத்தொடங்கினான்,
அதுகண்டு “கழகமேறேல் நம்பீ“ என்கிறார்கள். நீ எத்தனை பேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது, மேல் விழுந்து தீண்டாதே கொள் என்றவாறு. கழகம். – கோஷ்டி.
இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் – “இவ்விடத்தே பட்டர் அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு, ஸமஸ்த கல்யாணகுணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய் ஸர்வாதிகனாய் ஸர்வ நியந்தாவா யிருக்கிற ஸர்வேச்வரன் நாலிடைப் பெண்களிருந்தவிடத்தே புக்கல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய, அவர்கள் நீ இங்குப் புகுராதே கொள் என்ன, விலங்கிட்டாப்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றானென்கிற ஸௌசீல்யம் தங்களையுமிவர்களையுமொழிய ஆரறிந்து கொண்டாட வ்யாஸாதிகள் எழுதியிட்டுவைத்துப் போனார்களோ? என்றருளிச்செய்வர்,
ஸர்வ நியந்தாவானவன் சிலர்க்கு நியமிக்கலாம்படி எளியனானான் என்றால் இது மெய்யென்று கைக் கொள்ளுவாரைக் கிடையாதிறே. சாஸ்த்ரங்களெல்லாம் ஈசேசிதவ்ய விபாகம் பண்ணி ஒருங்க விடாநின்ற, அத்தலை யித்தலையாகச் செல்லுகிறதிறே இது.“
இவர்கள் ‘கழகமேறேல்நம்பீ“ என்றால் அதுகேட்டு அப்படியே வர்த்திப்பானோ அவன்?
இவர்கள்தாம் உள்ளூறச் சொல்லுகிறவார்த்தையுமன்றே இது, அவன் மேன்மேலும் உட்புகவேணும், தீம்புசெய்யவேணும் என்றன்றோ இவர்களும் உள்ளே எண்ணிருப்பது.
அவன் இஃதறிவானாகையாலே பிடிவாதமாகச் சில செய்யப்புகுந்தான்,
அதுநோக்கி “உனக்குமிளைதே கன்மமே“ என்கிறார்கள். அப்பா! நீ செய்கிற இவ்வநீதியான செயல் நீசத்தனமானது என்று நாங்கள் சொல்லுகிறவளவேயோ? நீயே ஆலோசித்துப் பார்த்தல் இது மிகவும் நீசத்தனமென்னுமிடம் உன் மனத்துக்கும் தெரியுமே என்றபடி.
————-
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-
பதவுரை
| கடல் ஞாலம் உண்டிட்ட |
– |
கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட |
| நின்மலா |
– |
விமலனே! |
| நெடியாய் |
– |
பெரியோனே! |
| எங்கள் கையில் பாவை பறிப்பது |
– |
எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது |
| கன்மம் அன்று |
– |
செய்யத்தகுந்த காரியமன்று |
| உனக்கேலும் பிழை பிழையே |
– |
இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்) |
| எம்மை |
– |
எங்களை நோக்கி |
| வன்ம்மே சொல்லி |
– |
மருமமான வார்த்தைகளைச் சொல்லி |
| விளையாடுதி |
– |
விளையாடுகின்றாய் |
| என் ஐம்மார் |
– |
எங்களுடைய ஸஹோதரர்கள் |
| அது கேட்டில் |
– |
இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில் |
| தன்மம் பாவம் என்னார் |
– |
நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள் |
| ஒரு நான்று தடி பிணக்கே |
– |
ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும். |
***- (கன்மமன்று கீழே “உனக்குமிளைதே கன்மமே“ என்னக் கேட்ட
கண்ணபிரான் “என்மேல் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பாகில் நீங்கள் சுகமாக இருங்கள், நான் போய் வருகிறேன், என்னுடைய வஸ்துக்களை நான் எடுத்துக் கொண்டு போகிறேன்‘ என்று சொல்லிக்கொண்டே கீழே கிடந்த லீலோபரணங்களை யெடுக்கப் பார்த்தான்,
உடனே ஆய்ச்சிகள் அவற்றைத் தங்கள் கையிலே யெடுத்துக்கொண்டார்கள், அவனை எளிதில் போகவொட்டுவார்களோ இவர்கள்தாம்,
மேன்மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்க வேணுமென்றே இவர்களும் நினைத்திருக்கையாலே இந்த அற்பவஸ்துக்களைக்கொண்டுபோனால் போகட்டும் என்றிராமே ‘எங்கள் வஸ்துவை நீ எப்படியெடுத்துக்கொண்டு போவாய்? என்று சிலுகிட்டு அவற்றைத் தாங்களே வாரியெடுத்துக்கொண்டார்கள்,
‘இது நமக்குப் பெருநன்மையேயாயிற்று“ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்யாயிற்று‘ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்தார்களே! என்று உகந்து அவர்கள் கைமேலே கையைவிட்டு அவற்றைப் பறிக்கப் புகுந்தான்,
அப்போது “கன்மமன்று எங்கள் கையில் பாவைபறிப்பது“ என்கிறார்கள்.
‘கன்மமன்று‘ என்றதற்கு இவர்கள் நினைத்தது ஒருபொருள், அவன் கொண்டது வேறொருபொருள் ‘எங்கள் கையிலுள்ள பாவையைப்பறிப்பது நீ செய்யத்தகுந்த காரியமன்று‘ என்கிற பொருளையிட்டு இவர்கள் கன்மமன்று என்கிறார்கள்.
இது உன்னால் செய்ய முடியும்படியான காரியமன்று என்று இவர்கள் சொல்லுவதாக அவன் கொண்டு, ‘எனக்கு அசக்யமானது மொன்றுண்டோ? என்னை ஆரென்று நினைத்திகோள்?
* பாலகனென்று பரிபவஞ்செய்யேல், பண்டொருநாள் ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவனிவன் * என்று என்தாய் பலகாலும் சொல்லுமே, கேட்டறியீர்களோ? கடல்ஞாலமுண்டிட்ட எனக்கு அஸாத்யமானது மொன்றுண்டோ? என்றான்.
பிரானே! உனக்கு அஸாத்யமானதொன்று இருப்பதாக நாங்கள் நெஞ்சிலும் நினைத்திலோமே, அப்படி நாங்கள் சொல்லவுமில்லையே, கடல்ஞால முண்டிட்டவனும் நீயே, நின்மலனும் நீயே, நெடியானும் நீயே, இதில் எமக்கு ஸ்ந்தேஹம்‘ இல்லைகாண், இப்படிப்பட்ட தீமைகளைச்செய்வது உனக்குப் பிழை எனகிறோமத்தனை என்றார்கள்.
நின்மலனான எனக்குமா இது பிழையாகும்? என்றான்,
உனக்கேலும் பிழைவிழையே என்கிறார்கள்.
இவர்கள் இங்ஙனே சொன்னவாறே மேலே ஒன்றும் உத்தரமுரைக்கமாட்டாமல் காதோடே சில சொல்லுவதாக வந்து, சிறுபயல்கள் செவியிலே வந்து ‘காகா குர்!‘ என்னுமாபோலே ஏதோ மருமமான வார்த்தைகளை வலிதாகச் சொன்னான்,
அதனால், வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி என்றார்கள்.
அதற்கு, ‘நான் தப்பாக என்ன சொல்லிவிட்டேன்‘ என்று, தான் அவர்களுடைய காதிலே சொன்ன குறும்பு வார்த்தையை உரக்கச் சொல்லவேணுமென்று வாயெடுத்தான்,
உடனே அவனுடைய வாயைப் புதைத்து “அதுகேட்கில் என்னைமார் தன்மபாவ மென்னார்“ என்றார்கள்.
அந்தக் குறும்பு வார்த்தையைத் தங்கள் வாயாலே அநுவதிக்கக் கூசி ‘அது‘ என்கிறார்கள்.
தொண்டாடிப் பொடியாழ்வார் திருமாலையில்“பேதைபாலகன் அதாகும்“ என்றாற்போல.
கண்ணா! அந்த அஸப்யமான வார்த்தையை எங்கள் செவியிலே சொன்னதுபோதும், அதை நீ உரக்கச்சொல்லி, அது எங்கள் உறவினருடைய காதிலே விழுமாகில், பிறகு அவர்கள் பாவமென்றும் புண்ணியமென்றும் பாரார்கள் – என்றார்கள்
பாப புண்யங்களுக்கு அஞ்சாமல என்ன செய்துவிடுவார்கள்? என்றான் கண்ணன்,
ஒருநாளன்றுதடிபிணக்கே – அது நாங்களறிவோமோ? ஆளுக்கொரு தடி. யெடுத்துக்கொண்டு வந்து தகர்ப்பர்கள் கிடாய், குத்தும் பூசலுமாயன்றோ தலைக் கட்டும் என்றபடி.
————
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-
பதவுரை
| யாவையும் யாவரும் |
– |
அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும் |
| பிணக்கி |
– |
ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே) |
| பிழையாமல் |
– |
ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி |
| பேதித்தும் |
– |
தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும் |
| பேதி யாதது |
– |
அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான |
| ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம் |
– |
அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும் |
| கதிர்ஞானம் |
– |
ஸங்கல்பருபஜ்ஞானத்தையும் |
| மூர்த்தியையும் |
– |
வடிவாகைவுடையவனே |
| எம் தோழிமார் |
– |
எமது தோழிமார்கள் |
| எம்மை இணக்கி |
– |
எங்களை இசைவித்து |
| விளையாட போதுமின் என்ன |
– |
விளையாட வாருங்கோள் என்றழைக்க |
| போந்தோமை |
– |
(நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை) |
| நீ உணக்கி வளைத்தால் |
– |
நீ நெருக்கித் தகைந்தால் |
| உகவாதவர் என் சொல்லார் |
– |
வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள். |
***- (பிணக்கியாவையும்) கீழ் ‘ஒருநான்று தடிபிணக்கே‘ என்றதைக் கேட்ட
கண்ணபிரான் ‘நங்கைமீர்களா! என்னைத் தடிகொண்டா அடிக்கப்போகிறீர்கள்? பரமஸந்தோஷம்! அப்படிப்பட்ட ஆண்புலிகளைத்தான் நானும் தேடிக்கொண்டு கிடக்கிறேன், தடிபிணக்குக்காரர்கள் எத்தனைவர் வருகிறார்களோ வரட்டும், எனக்கோ தடியும் வேண்டாம் தாம்பும் வேண்டாம், ‘மல்லரைமாட்டிய தேவாதிதேவன்நான்‘ என்பதை இன்று காட்டிவிடுகிறேனா இல்லையா பாருங்கள்,
அப்படியா ஸமாசாரம்! என்னை யாரென்று நினைத்தீர்கள்? இடையர்கையில் உதைபட்டுப்போகிறவன் நானென்று பார்த்தீர்களோ? அதையுந்தான் ஒருகை பார்த்துவிடுவோமே, என் சரக்கறியாதாரக்கு என் சரக்கை இன்று காட்டியே தீருகிறேன் பாருங்கள்‘ என்று, பெரிய ஆவேசங்கொண்டவன்போலப் படபடத்துப் பேசிநின்றான்,
அது கண்ட ஆய்ச்சிகள், பிரானே! உன் சரக்கை நாங்கள் அறியாதவர்களாகிலன்றோ இத்தனை ஆரவாரம் நீ செய்யவேண்டும், நீ அறிவிப்பதற்கு முன்னமே எல்லாம் நாங்களே அறிவோங்காண், என்றார்கள்,
அதுகேட்ட கண்ணபிரான் ‘நீங்களறிந்தவாற்றைச் சொல்லிக்காட்டுங்கள் பார்ப்போம்‘ என்றான்,
உன்னுடைய மூலகந்தமே பிடித்து நாங்கள் அறிவோங்காண் என்று பீடிகை யிட்டுக் கொண்டு அதைச் சொல்லிக்காட்டுகிறார்கள் –
ப்ரஸித்தமான பகவத் சக்தி விசேஷித்தை வெளியிடுவன. ஸம்ஹார மையத்திலே ஸகல சேதநாசேதநங்களையும் நாம ரூப விபாக ரஹிதமாம்படி கலசி, ஸ்ருஷ்டி ஸமயத்திலே ஒருவர் கருமம் ஒருவர்க்குத் தட்டாதபடி. பிரித்து ஸ்ருஷ்டித்தும் தனக்கொரு தோஷமின்றிக்கே யிராநின்ற ஸர்வஜ்ஞமூர்த்தி நீ என்று நாங்கள் அறிவோம் என்று காட்டினபடி.
உபநிஷத்து ஓதினபடி ஸங்கல்ப மாத்ரத்தாலே ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளை நிர்வஹிக்கவல்ல பரமசக்தன் என்றவாறு.
பிரளயத்திற்குப் பிறகு மீண்டும் ஸ்ருஷ்டிக்கிற காலத்தில் ஸகல ப்ராணிகளுடையவும் கருமங்களை அப்படியப்படியே நினைப்பில் கொண்டிருந்து இறைம் மாறுபாடின்றிக்கே அவரவர்களுடைய கருமங்களின்படியே கரணகளேபர ப்ரதானம்பண்ணி ஸ்ருஷ்டிக்கிறபடியை * பிழையாமல் * என்பது காட்டுகிறது.
அந்த ஸ்ருஷ்டியானது பலவகைப்பட்டது என்பதைக் காட்டுகிறது * பேதித்தும் * என்பது.
அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்னிடத்தில் தட்டாதபடியைக் காட்டுகிறது * பேதி யாததோர் * என்பது.
“கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர்ஞானமூர்த்தியினாய்“ என்ற விளியைக் காதாரக்கேட்ட
கண்ணப்பிரான் கோவியர்காள்! என் பெருமையை நீங்கள் இங்ஙனம் உள்ளபடி தெரிந்து கொண்டிருந்தும் * ஒருநான்று தடிபிணக்கே * என்று கூசாமல் எங்ஙனம் கூறினீர்கள்? உங்களுடைய அறிவுக்கும் சொல்லுக்கும் ஒரு சேர்த்தியில்லையே! ஏன் இப்படிச் சொன்னீர்கள்? என்றான்.
அதற்கு உத்தரமாம் பின்னடிகள்.
(இணக்கி யித்யாதி) உன்னுடைய ஸர்வஜ்ஞத்வம் ஸர்வ சக்தித்வம் முதலிய குணங்கள் எங்களுக்குத் தெரிந்திருந்த போதிலும், நாங்கள் விளையாட்டுச் சிறுமிகளன்றோ? எங்கள் பக்கலிலே நீ முறை தவறிப் பரிமாறினால் நாங்கள் ‘ஒருநாளன்று தடியிணக்கே“ என்றால் இதில் என்ன குற்றம்? நீ பராத்பரனாயிருந்துவைத்து உன்னுடைய பரத்வத்திற்குத் தகுதியற்ற காரியங்களைச் செய்தால் விளையாட்டாக நாங்கள் சொன்னவார்த்தை பிசகோ? என்றார்கள்.
அதற்குக் கண்ணன் நீங்கள் உங்களுக்கு அஸாதாரணமான விடங்களிலே யிருந்து விளையாடலாகாதோ? எனக்கும் உரித்தான இடத்திலே நீங்கள் வந்தது ஏன்? என்றான்.
பிரானே! நாங்களாக வரவில்லை, இங்கே வரமாட்டோமென்றே நாங்கள் சொல்லிக் கிடந்தோம். ஆனாலும், எம் தோழிமார் சிலர் பலவாறு நிர்ப்பந்தப்படுத்தவே நாங்கள் இணங்கிவரவேண்டியதாயிற்று, அவர்களும் விளையாட வாருங்கோள் என்றழைக்கவே நாங்கள் விளையாட வந்தோமத்தனை, உன்னுடைய விளையாட்டுவேறு, எங்களுடைய விளையாட்டு. உன் விளையாட்டு வைதிகம், எம் விளையாட்டு லௌகிகம், உனக்கும் எமக்கும் என்னசேர்த்தியுண்டு? என் காரியத்தை நீ பாராய், எம் காரியத்தை நாங்கள் பார்க்கிறோம் – என்று சொல்லிப் பராமுகங்காட்ட ஆரம்பித்தார்கள் கோபிமார்கள்.
அதற்குமேல் கண்ணபிரான் வளைக்கத் தொடங்கினான், வழிமடக்குவதும், குறுக்கே படுத்துக்கொள்வதுமான செயல்களைச் செய்தான்,
அதுநோக்கி ‘உணக்கீநீ வளைத்தால் என்சொல்லாருகவாதவே‘ என்கிறார்கள். இதுதான் ரஸமே வடிவெடுத்த பேச்சு.
உன்னை உகங்திருக்குமெங்களுக்கு இவ்வளைப்பு பரமபோக்யமே, இதற்கு எங்கள் உள்ளம் மெய்யே குழைகின்றதுகாண். உகவாத பாவிகள் இதைக்கண்டால் * அதுகண்டிவ்வூர் ஒன்று புணர்கின்றதே * என்னுமாபோலே எதையேனும் தொடுப்பார்கள் என்றுதான் அஞ்சுகிறோம் என்றவாறு.
———-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
பதவுரை
| உகவையால் |
– |
அந்தரங்கப்ரீதியாலே |
| நெஞ்சம் உள் உருகி |
– |
நெஞ்சு உள்ளேயுருகி |
| உன் தாமரை தடம் கண்விழிகளின் வலை அகப்படுப்பான் |
– |
உன்னுடைய தடந்தாமரைக் கண்ணோக்கமாகிற வலினுள்ளே நாங்கள் அகப்படும்படி பண்ணுவதற்காக |
| உன் திருஅடி யால்அழித்தாய் |
– |
உன் திருவடியாலுதைத்து நொறுக்கித் தள்ளினாய் |
| எங்கள் சிற்றிலும் |
– |
நாங்கள் இழைக்கின்ற சிற்றிலையும் |
| யாம் அடு சிறு சோலும் கண்டு |
– |
நாங்கள் சமைக்கிற சிறு சோற்றையுங்கண்டு |
| நின் முகம் ஒளி திகழ |
– |
உன்னுடைய திருமுகமண்டலம் நன்கு பிரகாசிக்கும்படியாக |
| முறுவல் செய்து நின்றிலே |
– |
சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்த வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் திருவடியாலும் அழித்தாய். |
| தகவு செய்திலே |
– |
இரக்கமான காரியம் செய்தாயல்லை |
***- (உகவையால் நெஞ்சம்) கீழ்ப்பாட்டில் * உணக்கி நீவளைத்தால் * என்றபடியே அவள் வளைப்பிட்டுக்கிடக்கச் செய்தேயும் இவர்கள் அந்யபரதை பாவிக்கவேண்டி அவனை யொரு பொருளாகமதியாதே தோழிமாரோடுகூடச் சிற்றிலிழைத்துச் சிறு சோறு அட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
இவன்றான் இவர்களுடைய கடாக்ஷமல்லது தனக்கு வேறொரு தாரகமில்லையென்று துணிந்திருப்பானொருவனாகையாலே எப்படியாவது இவர்கள் தன்னைக் கடாக்ஷிக்கும்படி செய்துகொள்ளவேண்டுமென்று நினைத்து, அவர்கள் இழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறு சோற்றையும் தன்னுடைய திருவடிகளாலே உதைத்தொழித்தான்,
அவனது திருவுள்ளக் கருத்தையறிந்த இவர்கள் அவனுடைய திருமுகத்தைப்பார்த்துப் பேசுகின்றார்கள்,
உன்பக்கலுள்ள ப்ரேம விசேஷத்தாலே நாங்கள் நெஞ்சு உருகி உன் தாமரைத் தடங்கண் விழிகளாகிற வலையிலே அகப்படுகைக்காக எங்கள் சிற்றிலையும் யாம் அடுகின்ற சிறு சோற்றையும் உன் திருவடியால் அழித்தருளினாய்,
நாங்கள் விளையாடுகிறபடியைக் கண்ணாரக் கண்டு கொண்டு மகிழ்ந்து நிற்கையன்றோ உனக்கு அழகு, அந்தோ! அது செய்யமாட்டிற்றிலையே, கல்படைத்த ப்ரயோஜனம் பெற்றாயே யல்லது கண்படைத்த ப்ரயோஜனம் பெற்றாயல்லையே,
கண்ணுடையாரில் நீ தலைவனாயிருந்து வைத்து இங்ஙனே கண்ணற்ற காரியம் செய்யவடுக்குமோ? என்கிறார்கள்.
சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் சிறுமிகளின் பணிகளாம். நாச்சியார் திருமொழியில் * நாமமாயிரமேத்தநின்ற * என்ற பதிகத்திலே இது விசதமாகக் காணத்தக்கது.
மண் விளையாட்டுக்களிற் சேர்ந்தவை இவை. இவர்கள் சிற்றிலிழைப்பதாகவும் சிறுசோறு சமைப்பதாகவும் சொல்லுவதன் கருத்து. பகவத் விஷயத்திற் கண் செலுத்தாதே உலகவியற்கைகளிலே கண்ணோட்டமா யிருந்தமையைக் கூறினபடி.
பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தால் ஒருநாழிகை ஸம்ச்லேஷமும் ஒன்பதுநாழிகை விச்லேஷமுமாய் வருந்த வேண்டியிருக்கையாலே, அந்த ஈடுபாடும்வேண்டா, இந்த வருத்தமும் வேண்டா, உண்டுடுத்துத் திரிவாரோடே கூடிக்களித்துக் கிடப்போம் என்று அந்ய பரராயிருக்கப் பார்த்தாலும் எம்பெருமானுடைய திருவடியழகு வலியப் பிடித்திழுத்துத் தன்னிடத்தே யீடுபடுத்திக்கொண்டு அந்த அத்யவஸாயத்தைக் குலைக்கின்றதென்பது இதற்கு உள்ளுறை பொருள்.
ஊடல் தீர்ந்து கண்ணபிரானோடே கூடல்நேரவேண்டிய சமயம் அணித்தாய் விட்டபடியால் அதற்குத் தகுந்தபடி பாசுரம் அமைகின்றது.
“அழித்தாய் உன் திரு வடியால்“ என்பதற்கு – எங்களுடைய சிற்றிலை யழித்தாய் என்பதே முக்கியமான பொருளன்று, உன்னுடனே கூடோம் என்கிற எம்முடைய அத்யவஸாயத்தை யழித்தாய் என்பதே முக்கியமான பொருள்.
நம்மை அகப்படுத்திக்கொள்வதற்கு இரண்டு வலைகள் உண்டு,
* மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டு * என்று தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த வலை ஒன்று,
* உன்தாமரைத் தடங்கண்விழிகளின்வலை * என்று இங்கே அருளிச்செய்யப்படுகிற வலை மற்றொன்று.
இங்கே அகவலை என்றதனால், இது அந்தரங்க வலையென்றும் அது பஹிரங்கவலையென்றும் அறியத்தக்கது.
———
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-
பதவுரை
| நின்று இலக்கு முடியினாய் |
– |
நிலைநின்று விளங்குகிற திருவபிஷேகத்தை யுடையவனே! |
| இருபத்தோல் கால் |
– |
இருபத்தொரு தலைமுறை |
| அரசுகைளை கட்ட |
– |
அரசர்களை வேர்ப்பறியாகப் பறித்த |
| வென்றி நீள் மழுவா |
– |
ஜயசீலனான பெரிய மழுப்படையை யுடையவனே! |
| முன் வியல் ஞாலம் படைத்தாய் |
– |
முன்பு விஸ்தீர்ணமான ஜகத்தைப் படைத்தவனே! |
| இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய |
– |
இப்போது இவ்விடைகுலத்தை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக அவதரித்த |
| கரு மாணிக்கம் சுடர் |
– |
கருமாணிக்கம் போன்ற திருநிறத்தை யுடையவனே! |
| ஆய்ச்சியாம் |
– |
இடைக்சிகளான நாங்கள் |
| என்றும் |
– |
எந்நாளும் |
| நின் தன்னால் நலிவே படுவோம் |
– |
உன்னால் ஹிம்ஸைப்படுகிறவர்களே யன்றி ஸுகப்படுகிறவர்களல்லோம். |
***- (நின்றிலங்கு) ப்ரணயரோஷமென்பது நெடும்போது பெருகிச் செல்லமாட்டாது, அப்படி நெடுகிச் செல்லுவது ரஸிகர்களுடைய படியுமன்று. ஊடலானது கூடலிலே மூட்டியல்லது நிற்காதாகையினால் இனிக் கூடல் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது.
பிரானே! நீதான் வெற்றிக்கொண்டாய், நாங்கள் தோற்றோம் என்று முடிக்கிறார்கள்.
இங்கே இட்டு அவதாரிகை காண்மின், – “காலால் அழித்தது சிற்றிலையன்றே, இவர்கள் நெஞ்சில் மறத்தையேயிறே அந்த மறம் போனவாறே மேல்நோக்கிப் பாதாதிகேசமாகப் பார்த்தார்கள். தங்களை ஜயிக்கையாலுண்டான ஹர்ஷம் வடிவிலே தோற்றும்படி நின்றான், அவ்வடிவில் பிறந்த வேறுபாட்டைச் சொல்லுகிறார்கள்.
திருவபிஷேகமணிந்து நிற்பது ஜயஸூசக மாகையாலே தங்களை ஜயித்துவிட்டானென்பதைக் காட்டிக்கொண்டு நின்றிலங்குமுடியினாய் என்கிறார்கள்.
பிரானே! இத்ற்கு முன்னே நீ திருவபிஷேகமணிந்தது வெறும் தலைச்சுமையேகான், எமது மறத்தைப் போக்கி எங்களை வெற்றிக்கொண்ட இன்று அணிவதுதான் ஏற்றது என்று சொல்லிக்காட்டுகிறபடி.
(இருபத்தோர்கால் இத்யாதி) கொழுத்துத் திரிந்து கொடுமை இயற்றிவந்த க்ஷத்ரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ்செய்வதற்காக நாராயணமூர்த்தி பரசுராமாவதாரம் செய்திருந்தனர்.
(ஜமத்க்நி முனிவர்க்குக் கார்த்தவீர்யார்ஜுநனும் அவனது குமாரர்களும் ஜமதக்ரியின் ஆச்ரமத்தில் இளைப்பாறப் புகுந்தகாலத்து, அங்கே அம்முனிவனது ஹோம தேநுவானது வேண்டின வஸ்துக்களையெல்லாம் யதேஷ்டமாக அளித்துக் கொண்டிருப்பதைக்கண்ட இவர்கள் அப்பசுவைக் கொள்ளைகொள்ள விரும்பி அதனைக் கவர்ந்து அம்முனிவனையும் கொன்றிட்டார்கள்.
அதனால் அப்பரசுராமன் அந்த கார்த்தவீர்யார்ஜுன்னையும் அவனது குமாரர்களையுங்கொன்று அதனாலேயே க்ஷத்ரியவம்சம் முழுபதன்மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது அழித்திட்டனன் என்பது வரலாறு.
இதனை இங்கு எடுத்துரைத்தானது – மிடுக்கரான ராஜாக்களை வென்றவுனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரியபணியோ என்று குறிப்பிட்டபடி.
வியன் ஞாலமுன்படைத்தாய் என்றதும் ஸ அபிப்ராயம், பிரளயத்திலே உருமாய்ந்து கிடந்த பூமியை உண்டாக்கினால் போலே யன்றோ ப்ரண ரோக்ஷத்தாலே யழிந்த எங்களை யுண்டாக்கினபடி என்கை.
ப்ரளயங்கொண்ட பூமியை எடுத்தாப்போலேயன்றோ விரஹப்ரளயங்கொண்ட வெங்களை யெடுத்தபடி என்றுமாம்.
பழைய புராணங்களைச் சொல்லுவானேன்? எங்களை * அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண் * என்னும்படியாக ஸகுடும்பமாய் உஜ்ஜீவனப்படுத்துவதற்காகவேயன்றோ நீ ஒருத்திமகனாய்ப்பிறந்து ஒரிரவில் ஒருத்திமகனாய் ஒளித்து வளர்வது என்கிறார்கள் மூன்றாமடியால்.
உன்னைப்பிரிந்து நாங்கள் பட்டபாடு உனக்குத் தெரியாதுகாண் என்பது ஈற்றடியின் கருத்து.
நாங்கள் பெண்பிறந்தது ஒரு நாளும் சுகப்படுவதற்கன்று, எந்நாளும் துக்கப்படுவதற்கே யென்று நிகமனம் செய்திருக்கிற விதனால் இப்போது ஸம்ச்லேஷ ருசி தலைகாட்டினமை விளங்கும்.
உன்னோடு கூடுவது மறுபடியும் பிரிந்து துக்கப்படுவதற்கே யாதலால் அந்த துக்கத்தை ஸஹித்துக்கொண்டு இப்போது கூடுகிறோமென்றபடி.
———-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-
பதவுரை
| அன்று |
– |
பண்டொருகாலத்தில் |
| வெண்ணெய் வார்த்தையுள் |
– |
வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே |
| ஆய்ச்சி ஆகிய அன்னையால் |
– |
இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே |
| அழு கூத்தன் |
– |
அழுகையாகிற கூத்தைச் செய்தவனான |
| அப்பன் தன்னை |
– |
ஸ்வாமியைக் குறித்து |
| குரு கூர் சடகோபன் |
– |
ஆழ்வார் |
| ஏத்திய |
– |
ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த |
| தமிழ் மாலை ஆயரத்துள் |
– |
தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில் |
| இவையும் ஓர் பத்து |
– |
இப்பத்துப் பாசுரங்களை |
| இசையொடும் இசையோடு கூட | ||
| நா தன்னால் நவில உரைப்பார்க்கு |
– |
நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு |
| நல்குரவு இல்லை |
– |
பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம். |
***- (ஆய்ச்சியாகிய) இப்பதிகம் கற்றார்க்குப் பலனுரைத்துத் தலைக்கட்டுகிறது.
‘எங்கள் கோஷ்டியிலே நீ சேரவரவேண்டா‘ என்று சொல்லிக் கதவடைத்தபோது கண்ணனுக்கு உண்டான துக்கமானது * மத்துறுகடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு உரலினோடிணைந்திருந்து எங்கினபடிக்கு ஒக்கும் என்று காட்டுதற்காக ‘ஆய்ச்சியாகியவன்னையாலன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழுகூத்தவப்பன்தன்னை‘ என்று விசேஷித்தது அன்று யசோதைப்பிராட்டி அழப்பண்ணினதும் அதி ஸ்நேஹ கார்யம், இன்று காதலிகள் அழப்பண்ணினதும் அதிப்ரணய கார்யம் என்க.
வெண்ணெய் களவுகண்டதற்காகக் கட்டியடிக்க அழுதான் என்னாமல் வெண்ணெய் வார்த்தையுள் அழுதானென்று மூலம்மைந்திருக்கிற ஸ்வாரஸ்யத்தை நோக்கி ஈட்டிலே அருளிச்செய்கிறபடி பாரீர் –“ஊரிலே வெண்ணெய்களவு போயிற்று என்றார்கள், அவ்வளவிளே நாமிறே இதுக்கிலக்கு என்று அழப்புக்கான். மடம் மெழுகுவார் ஆர்? என்ன, அச்ரோத்ரியன் என்றார்கள், இப் பரப்பெல்லாம் என்னாலே மெழுகப்போமோ என்றான், அதுபோலே.
ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டவளவிலே இவ்வளவு பெரிய சத்திரத்தை யார் மெழுகுவது? என்று வார்த்தை யுண்டாயிற்று, எவனோவொரு விதவா புத்ரன் மெழுகுகிறான் என்று பொதுவிலே ஒருவன் சொன்னான்,
அந்தத் திரளிலே மெய்யாகவே ஒரு விதவாபுத்திரன் இருந்து அவன் காதிலே இந்த வார்த்தை விழுந்தது, ஐயோ! இவ்வளவு பரப்பு என்னாலே மெழுகப்போமோ? என்று அவன் அழுதானாம்.
அதனாலே தன்னுடைய அவத்யத்தைத் தானே வெளியிட்டுக்கொண்டானாயிற்று.
அதுபோலே வெண்ணெய் களவு ப்ரஸங்கமாத்ரத்தில் அழுத கண்ணனும் தன்னுடைய களவைத் தானே வெளியிட்டுக் கொண்டானென்கை.
குருகூர்ச்சடகோனேத்திய என்ற விசேஷணம் ஆயிரத்துக்குமாகலாம். இப்பத்துக்குமாகலாம்.
இப்பதிகம் ஊடிப்பேசினதே யன்றி எத்தியதன்றே என்று நினைக்க வேண்டா, ஏத்துவில் இதுவும் ஒரு ப்ரகார பேதமேயென்க.
பக்தியானது ப்ரணயமாகமாறி ப்ரணயத்தின் பரீவாஹ ரூபமாகவன்றோ இது நிகழ்ந்தது.
இப் பதிகத்தை உரைக்குமவர்கட்கு நல்குரவு இல்லை – தாரித்ரியமில்லை, சோறுகூறைளெல்லாம் ஸம்ருத்தியாகக் கிடைக்குமென்கிறதன்று, * உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற இவர் திருவாக்கினாலே “நல்குரவுஇல்லை“ யென்றால் பகவதநுபவத்தில் குறைபாடு உண்டாகாது என்பதன்றோ பொருளாகக் கடவது.
————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply