Archive for April, 2022

ஸ்ரீ திரு மாலை-37–தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாம் இப்படி கதறா நிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?
ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ?
‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க
இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!
இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்.

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –

பதவுரை

தெளிவு இலா கலங்கல் நீர் சூழ்–(ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப் பெற்ற
திரு அரங்கத்துள் –கோயிலிலே
ஓங்கும் –விஞ்சி யிருக்கிற
ஒளி உளார் தாமே அன்றே–தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
தந்தையும் தாயும் ஆவார் –(நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
என் திறத்து–(அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
எளியது ஓர் அருளும் அன்றே–ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமே யன்றே?
எம்பிரானார்–எனக்கு உபகாரகரான அவர்
நம் பையல் அளியன் என்னார்–“நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
அம்ம ஓ கொடிய ஆறே–கொடுமையா யிராநின்ற தீ!

விளக்க உரை

காவேரிக்குத் தெளிவில்லாமை-
மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் –
“துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் .
அதன் கருத்து-
பாற்கடல் தகப்பனார்;
பொன்னி என்ற நான் தாய் ;
ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்;
பெரிய பெருமாள் மணவாளன்;

இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக
நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல,
சாமரம், கருப்பூரம், சந்தந வ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை
அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.

திருவரங்கத்துள் ஓங்குமொளியுளார் என்றது –
பரமபதம் முதலிய இடங்கில் எழுந்தருளியிருக்கு மிருப்பைக் காட்டிலும்
கோயிலிலே எழுந்தருளியிருக்கு மிருப்பிலே உள்ள அதிசயம் தோற்ற.

விபீஷணாதிகிளை ரக்ஷித்தாற்போலே வில்லும் கோலுமெடுத்து ரக்ஷிக்க வேண்டியதில்லை;
குளிர ஒருகால் நோக்கியருளினால் என்தாபம் தீரும் என்ற கருத்துப்பட அருளிச்செய்கிறார்
எளியதோரருளுமன்றே என்திறத்து என்று.

எம்பெருமான் சோதிவாய்திறந்து
‘ ஆழ்வீர்’ என்றழைக்க வேணுமென்று இவர் ஆசைப்படுகின்றாரில்லை,
‘அடே பையா’ என்று ஒரு இன்சொல் சொல்லக்கேட்க விரும்புகின்றாரித்தனை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-36-மழைக்கன்று வரை முன் ஏந்தும்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அன்று–(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக் காலத்திலே
முன்–(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
மழைக்கு–மழையைத் தடுப்பதற்காக
வரை ஏந்தும் மைந்தனே–கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
மதுர ஆறே–இனிய ஆறு போல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
உழைக் கன்று போல நோக்கம் உடையவர்–மான் குட்டியின் விழி போன்ற விழியை யுடைய மாதர்களின்
வலையுள்–(அந்த நோக்காகிற) வலையினுள்ளே
பட்டு–அகப்பட்டு
உழைக்கின்றேற்கு என்னை–துடிக்கிற என்னை
நோக்கா தொழிவதே–கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
ஆதி மூர்த்தி–முழுமுதற் கடவுளே!
அரங்கமா நகருளானே!-;
உன்னை அன்றே -தேவரீரை நோக்கி யன்றோ
அழைக்கின்றேன் –நான் கூப்பிடா நின்றேன்.

விளக்க உரை

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரை புரண்டு பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்து வருத்தப் படுத்தின காலத்தில்
கோவர்த்தந கிரியைக் கொற்றக் குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ;
அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் என்ன குணம் கண்டுபிடித்தாய்?
அவ்விடையருடைய கோஷ்டியிலாவது
பசுக்களின் திரளிலாவது
அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப் பொருள் தோன்ற
மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.

மதுர ஆறே! –
ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்த போதிலும் உன்னை விட முடியவில்லையே! என்பது கருத்து.

ஆறானது ஏரி, குளம் முதலியவை போலே ஒரிடத்திலேயே இராமல்
நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல்
எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம் போய் ஸேவை ஸாதித் தருள்கின்ற ஸௌலப்யமும்
இந்த முற்றுவமையால் தோற்று மென்க.

“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே
எம்பெருமான்
“ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க,

ஆதிமூர்த்தி என்கிறார் –
இவ்வுலகம் உரு மாய்ந்து கிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல்
இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவஸ்ய கர்த்தவ்யமன்றோ என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-35–தாவி அன்று உலகம் எல்லாம்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –

பதவுரை

அன்று–அக் காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
உலகம் எல்லாம் தாவி–எல்லா உலகங்களையும் கடந்து
தலை விளாக் கொண்ட எந்தாய்–(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
செங்கண்மாலே–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
ஆவியே –(எனது உயிர் தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்ச ப்ராண வாயுவானவனே!
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்–(என்னை நல் வழியிற் செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
பாவியேன்–பாவியாகி யான்
சிக்கென–உறுதியாக (எப்போதும் விடாமல்)
உன்னை அல்லால் சேவியேன்–உன்னைத் தவிர (மற்றையோரை) வணங்க மாட்டேன்;
(உன்னையல்லாது வேறொருவரை)
பாவியேன்–நினைக்கவும் மாட்டேன்
பாவியேனே–நான் பாவியனேயாவேன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,
“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க
ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது
அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி
அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று
தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமை கொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை
இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய;

அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச் செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,
“பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக் கூறி,
எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை
நினைத்தலும்
தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-34-உள்ளத்தே உறையும் மாலை-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

பதவுரை

உள்ளத்தே உறையும் மாலை–நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை
கள்ளத்தேன் நானும்–கள்ளனாகிய அடியேனும்
தொண்டு ஆய்–(உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்
தொண்டுக்கே கோலம் பூண்டு–அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து
(இருந்த போதிலும்)
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்–சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும்
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா-சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத
உடன் இருந்து அறிதி என்று–நீ கூடவே யிருந்து அறிகின்றாய் என்று
(நான் உணர்ந்து)
நான்-நான்
என் உள்ளே–எனக்குள்ளே
வெள்கிப்போய்–மிகவும் வெட்கப் பட்டு
விலவு அற சிரித்திட்டேன்–விலாப் பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன்.

தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப்போய் என்னுள்ளே
நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்.

விளக்க உரை

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கி யிருக்கிற உன்னைச்
சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவு இல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன்
உனக்கு அடிமைசெய்பவன்போலத் தோன்றி
“இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக
“தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி
கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்த போதிலும்
“இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே இருந்து
கொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே
‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து
எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். –

ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும்.

விலவறச் சிரித்திட்டேன் என்றது – எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –

பதவுரை

மெய்எல்லாம்–மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
போகவிட்டு–நீக்கி விட்டு
விரி குழலாரில் பட்டு–விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
பொய் எல்லாம்–எல்லா விதமான பொய்களையும்
பொதிந்து கொண்ட–நிறைத்துக் கொண்டிருக்கிற
போழ்க்கனேன்–க்ருத்ரிமனான அடியேன்
ஐயனே–ஸ்வாமின்!!
அரங்கனே!-;
உன் அருள் என்னும் ஆசை தன்னால்–தேவரீருடைய க்ருபையிலே யுண்டான ஆசையினாலே
வந்து நின்றேன்-;
(நான் எப்படிப்பட்டவனென்றால்)
பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன் –மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
வந்து நின்றேன்–(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்து நின்றேன்.

விளக்க உரை

தம்முடைய தாழ்வுகளை வாயாறச் சொல்லி கதறி தேவரீர் உடைய கருணை
யொன்றைய எதிர்பார்திருப்பவ னடியேன் என்கிறார்.

மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப் பெற்ற
உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற் போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்;
அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை;
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன்.
ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற
விச்வாஸமொன்று மாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால்
அக்கருணையிலுள்ள நசையாலே,
வெட்கமும்
அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.

போழ்க்கன் – முறை கேடன், வழிதப்பினவன்.
‘போட்கன்’ என்றலுமுண்டு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி
“ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர் என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க;
என்னுடைய மூர்க்கத்தனத்தாலே வந்து நின்றேன் காண் என்கிறார்.

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே

பதவுரை

வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி–வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்து
கொண்டிராநின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற
திருஅரங்கம் தன்னுள்–ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளாநின்ற)
கார்திரள் அனைய மேனி கண்ணனே–மேகஸமூஹத்தை ஒத்த திருமேனியையுடைய பெருமானே!
உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறியமாட்டா–உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறியமாட்டாதவனாய்
மனிசரில்–மனிதர்களுக்குள்
துரிசன் ஆய–கள்ளனாய்,
மூர்க்கனேன்–பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன்
வந்து நின்றேன்–(வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்;
மூர்க்கனேன் மூர்க்கனேன் –என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி.

விளக்க உரை

வண்டுகள் பலவகைப்பட்ட மலர்களிற் பெருகும் தேனைப் பருகுவதற்காகப் பேராரவாரம் செய்துகொண்டு
அலையாநிற்கப்பெற்ற சோலைகள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில் காளமேகங்களெல்லாம்கூடி
இங்ஙனே ஒரு உருவெடுத்துக்கிடக்கின்றனகொல் என்று சங்கிக்கும்படியாகப் பரமபோக்யமாய்ப்
பள்ளிகொண்டருளாநின்ற பெருமானே!
தேவரீரை ஸாக்ஷாத்கரிக்கப் பெறும் உபாயம் இன்னதென்று அறியமாட்டாதவர்களில் பெருங்கள்ளனாகிய அடியேன்
என் நிலைமையை நினைத்துப்பார்த்தால் தேவர் திருமுன்பே வந்து நிற்கைக்கு யோக்யதையே இல்லை;
ஆயிருக்கச்செய்தேயும் யுக்தாயுக்தம் ஆராயமாட்டாத மூர்க்கனாகையாலே லஜ்ஜாபயங்களற்று வந்து நின்றேனென்கை.

அவனைக் காணும் மார்க்கங்களாவன :-
கர்மயோகம்,
ஜ்ஞாநயோகம்,
பக்தியோகம்,
அவதாரஹஸ்யஜ்ஞானம்,
புருஷோத்தமவித்யை,
புண்யக்ஷேத்ரவாஸம்,
திருநாமஸங்கீர்த்தனம் முதலிய உபாயங்கள்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!–;
தவத்துளார் தம்மில் அல்லேன் –தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
தனம் படைத்தாரில் அல்லேன்–(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
என்றன் உற்றவர்க்கு–என்னைச் சேர்ந்தவர்களுக்கு
உவர்த்த நீர் போல–உப்புத் தண்ணீர் போல
ஒன்றும் அல்லேன்–ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
துவர்த்த செவ்வாயினார்க்கே–பழுப்பேறின அதரத்தையுடைய மாதர்கட்கும்
துவக்கு அற–ஸம்பந்தம் அற்றுப் போம்படி
துரிசன் ஆனேன்–கள்ளனாயினேன்
(இப்படிப்பட்ட எனக்கு)
பிறவி அவத்தமே தந்தாய்–ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்

விளக்க உரை

தவமாவது – சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்;
முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம் புரிவர்கள்;
புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்;
நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார்
‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால்.
“பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி – கூ- 1-3) என்றபடி
கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற
கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார்.
உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி
கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :-
(தவத்துளார் இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக
நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை:
கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை;
அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.

கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில்
“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும்
நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை:

பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்;

சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர்.

இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு.

இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்:
இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும்
என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார்.
அவத்தம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-30 -மனத்திலோர் தூய்மை இல்லை–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

“குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே
தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும்,
ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க;
நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே
என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை!
எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார்.

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே

பதவுரை

புனம் துழாய் மாலையானே–தந்நிலத்திலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே!
பொன்னி சூழ் திரு அரங்கா-காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே!
என்னை ஆள் உடைய கோவே-அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே!
மனத்தில்–(என்) மநஸ்ஸிலே
ஓர் தூய்மை இல்லை–தெளிவு கொஞ்சமும் இல்லை;
வாயில் ஓர் இன் சொல் இல்லை–வாயிலே ஒரு நற்சொல்லும் கிடையாது;
வாளா–நிஷ்காரணமாக
சினத்தினால்–கோபத்தாலே
செற்றம் நோக்கி–பகைமை தோற்றப் பார்த்து
தீ விளி விளிவன்–மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;
எனக்கு–இப்படிப்பட்ட துர்க்குணங்கள் நிறைந்த எனக்கு
இனி கதி என் சொல்லாய் –இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும்.

விளக்க உரை

மனத்தில் ஓர் தூய்மை இல்லை —
காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும்
பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்த ஸூத்தி ஏற்படும்,
அப்படியுமில்லை யென்கை.

நெஞ்சு பூர்ணமாகக் கெட்டுப்போயிருந்தாலும் வாயில் நாலு நல்ல சொற்கள் வந்தாலாவது நாலுபேர் பார்த்து
‘இவன் நல்லவன்’ என்று சொல்லக்கூடும், இப்படியுமில்லை;
தப்பிப் போயும் ஒரு நல்லவார்த்தை வாயில் வருவதில்லை.
ஒருவன் நல்லாடை யுடுத்து நால்வர்க்கு நல்லனாகத் திரிந்தானாகில்
அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்கமாட்டாமல் நிஷ்காரணமாக
நான் அவர்களைப் பழித்துக்கூறும் சொற்களுக்கு எல்லையேயில்லை.

இப்படி தமது தீமைகளைப் பரக்க உரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்;
இப்படிப்பட்ட உம்மை நான் என்செய்யவல்லேன்.
உம்முடைய கருமபலனை நீர் அநுபவிக்கக்கடவீர்!” என்று உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய,

அதற்கு உத்தரமாகப்
“புனத்துழாய் மாலை யானே” என்கிறார்;
நம்முடைய குறைகளைப் பார்த்து அகலவொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக்
கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத்தோற்றத் தனிமாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;

நாங்கள் கருமபலனை அனுபவிப்பதற்கு
நீர் தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பானேன்? என்கை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-29 -ஊரிலேன் காணி இல்லை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து
விசாரமற்றிருப்பதற்கு
இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது.

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –

பதவுரை

பாரில்–இந்தப் பூமியிலே
ஊர் இலேன்–தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
காணி இல்லை–(திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
உறவு இல்லை–பந்துக்களுமில்லை;
மற்று ஒருவர் இல்லை–தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
நின் பாதம் மூலம்–தேவரீருடைய திருவடிகளையும்
பற்றிலேன்–(தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி–மிகச் சிறந்தவனே!
கார் ஒளி வண்ணனே–மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
கண்ணனே–ஸ்ரீ க்ருஷ்ணனே!
கதறுகின்றேன்–(வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
அம்மா–ஸ்வாமிந்!
அரங்கமா நகருளானே!-;
களை கண் ஆர் உளர்–(உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!

விளக்க உரை

ஊரிலேன் –
வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில்
முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!

காணி யில்லை.–
திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால்
அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும்
அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.

இவையொன்றுமில்லையாகிலும்
திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும்
அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு;
அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

ஆனபின்பு ஒரு வழியிலும் உன்னைப்பெற உபாயமில்லாமையாலே “ நின்பாத மூலம் பற்றிலேன்” என்கிறார்.

இப்படி ஒரு கைம்முதலுமில்லாதவனென்ற காரணத்தினால் என்னை நீ விடலாகாது;
கெட்டுப்போன உடைமையைப் பெறுவதற்கு உடையவன் முயற்சி செய்யுமாபோலே
கெட்டுப் போன அடியேனைப் பெறுவதற்கு நீர் முயலவேண்டும்படியான இங்கொழிக்க வொழியாத உறவு
இருப்பதை நோக்கவேணுமென்கிறார்,
பரமமூர்த்தி என்று தொடங்கி.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-28-உம்பரால் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 1, 2022

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார்–தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத
தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்
ஆனைக்காகி–கஜேந்திராழ்வானுக்காக
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி–சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு
வந்தார் –(மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.
(இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)
நம்பரம் ஆயது உண்டே–(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பழுவுண்டோ?
நாய்களோம் சிறுமை ஓரா –நாய்போல் நிஷ்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான
எம்பிராற்கு–எம்பெருமானுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யப் பெறாமல் (இருக்கிற நான்)
என் செய்வான் தோன்றினேன்–எதுக்காக பிறந்தேன்!

விளக்க உரை

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான்
“நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே
அரை குலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடி வந்தவனன்றோ எம்பெருமான்;
இப்படி ஆஸ்ரித ஸுலபனாய் ஆஸ்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல்
நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ?
ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரம நிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்;
இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;
‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக
ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி
பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

“செம்புலாலுண்டு வாழும்” என்று
முதலைக்கு இட்ட அடைமொழியின் கருத்து என்னென்னில்;
“திர்யக்ஷு நைவஹி விபக்ஷதயோபசார:” (அதிமாநுஷஸ்தவம்) என்றபடி
எதிரியாக நினைக்கவும் தகாத ஒரு ஹீநஜந்துவை எதிரியாக்கி அதன்மேல் கோபங்கொண்டது
ஆஸ்ரித பக்ஷபாதத்தலான்றோ என்னுங் கருத்து வெளிவரும்.

நம்பரம் –
பழுவு என்னும் பொருளதான பர: என்ற வடசொல் பரமெனத் திரிந்தது.
“ந்யஸ்ய த்வத் பாதபத்மே வரத நிஜபரம் நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மீ” என்று அநுஸந்திப்பது
அறிவுடையார் செயலாதலால் நமக்குப் பரமான தொன்றுமில்லையென்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.