Archive for December, 2021

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

December 11, 2021

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/
ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/
இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்—

ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை
நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீ ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி-கைங்கர்யங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால்
பல தெய்வீகத் தன்மைகள்-ஒற்றுமைகள்புலப்படுகின்றன –

1.ஸ்ரீ ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,ஸ்ரீ பெரிய திருமலைநம்பிகள்’ஸ்ரீ இளையாழ்வார்’ என்று பெயரிட்டார்.
ஸ்ரீ மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்’ஸ்ரீஅழகியமணவாளன்’என்று பெயரிட்டார்.

2.ஸ்ரீ இளையாழ்வார்,தம் ஸ்ரீ வைணவ வாழ்க்கை நெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இருப்பதை உணர்ந்து துறவறம் மேற்கொண்டார்.
ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று’ஸ்ரீ எதிராஜர்’ ஆனார்.
ஸ்ரீ அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால் துறவறம் மேற் கொண்டார்.
தம் ஆசார்யர் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,ஸ்ரீ சடகோப யதி யிடம், ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.’ஸ்ரீ சடகோப முனி’ ஆனார்.

3.ஸ்ரீ ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரால் ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஸ்ரீ மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான “ஸ்ரீ உடையவர்”(அனைத்து லீலா விபூதிகளையும்,நித்ய விபூதியையும் உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அழைத்தார்.
ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான” அழகியமணவாளன்”என்னும் திருநாமத்தால் அழைத்தார்,
ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகியமணவாளன்;ஆனாலும்,துறவுபூண்டபின்’சடகோபமுனி’எனனும் பெயர்பெற்றார்.
ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்).

5.ஸ்ரீ உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
அந்த சேரன்மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).
ஸ்ரீ மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
ஸ்ரீ மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ஸ்ரீ ராமானுஜரிடம்சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ திருவேங்கடவர்
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ஸ்ரீ ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்).
ஸ்ரீ திருவேங்கடவர் ஸ்ரீ திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.
ஸ்ரீ திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில் “ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்”என்று
ஸ்ரீ அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.
ஆசார்யருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம், யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்” என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார்.
இங்கும் ‘ஸ்ரீ யதீந்தரப்ரவணர்’ என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக் கொண்டாடுகிறார்.
ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான ஸ்ரீ சேஷ பீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.

7.ஸ்ரீ ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்”வேதார்த்த ஸங்க்ரஹம்” என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றி அருளினார்.ஸ்ரீ மாமுனிகள்,
ஸ்ரீ திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார். தம் சீடர் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க
அவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களே,
“கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா”என்று தொடங்கும் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக”ஸ்ரீபாஷ்யம்” முதலான கிரந்தங்களை இயற்றினார்.
ஸ்ரீ மாமுனிகள்(ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ஸ்ரீ ராமானுஜர்,தம் மானசீக ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க, ஸ்ரீ திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார்
(ஸ்ரீ திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்).
ஸ்ரீ மாமுனிகள் தம் ஆசார்யர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப ஸ்ரீ திருவாய்மொழி ஈடு காலட்சேபம்செய்வதையே
(ஸ்ரீ நம்பெருமாளுக்கும் கூட) முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.ஸ்ரீ பெரிய கோவில் ஜீயர், என்று,ஸ்ரீ பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்
ஸ்ரீ ராமானுஜரைச் சரணடைந்து அவர் சீடரானார். ஸ்ரீ பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீ உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்”ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதி” அருளித் தந்தார்.

ஸ்ரீ பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீ மாமுனிகளைச் சரணடைந்து,
ஆசார்யராக ஏற்றுக்கொண்டார் -ஸ்ரீ மாமுனிகள் மீது”மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாடினார்.

11.ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் ‘சிம்மாசனாதிபதிகள்’ ஆக்கினார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை ‘அஷ்டதிக்கஜங்கள்’ ஆக்கினார்.

12.ஸ்ரீ ராமானுஜரும்,ஸ்ரீ மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரம பதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே –ஸ்ரீ அப்புள்ளார் அருளிச் செய்த ஸ்ரீசம்பிரதாய சந்திரிகை1–

13.ஸ்ரீ ராமானுஜர் பெரும்பாலும் ‘ஸ்ரீ திருப்பாவை’யை அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ மாமுனிகள் இருவருமே ‘ஸ்ரீ த்வய மந்த்ரம்’அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பர்.

14.ஸ்ரீ ராமானுஜர்,ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகருக்கு,நூறு தடா அக்கார வடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு
ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஸ்ரீ ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து “நம் அண்ணாவோ”என்று விழித்தார்.
ஸ்ரீ ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் ‘ஸ்ரீ கோவில் அண்ணன்–ஸ்ரீ கோதாக்ரஜர்’என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ஸ்ரீ மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.
நீராட்டு உற்சவம் சேவிக்க முடியவில்லையே,என்று ஏங்கிய ஸ்ரீமாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-தை முதல் நாள்-நீராட்டு
சேவை சாதித்தார் ஸ்ரீ கோதை நாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல்நாள் நடைபெறுகிறது.

15.ஸ்ரீ ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல் வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.
ஸ்ரீ மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ஸ்ரீ ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்த பொழுது,
அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் “தான் உகந்த திருமேனி”.
மற்றொன்று ஸ்ரீ திருநாராயணபுரத்தில்(ஸ்ரீ மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள “தமர் உகந்த திருமேனி”

ஸ்ரீ மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.
தம் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலுக்கு இணங்க,ஸ்ரீ மாமுனிகள் தாம் உபயோகித்த
ஸ்ரீ ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீ சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.
இன்னொரு திருமேனியை ஸ்ரீ நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.
(முதல் அஷ்டதிக்கஜமும்,ஸ்ரீ வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ஸ்ரீ ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்த புறச்சமய வாதிகளையும்,
குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும் ஸ்ரீமந்நாராயணின் விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.
74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால், இந்து மத சம்பிரதாயங்களும்,ஸ்ரீ கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டது.அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு ஸ்ரீ மாமுனிகள் அவதரித்தார்.
அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும் பல வித்வான்களையும்
சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின.
அவர்கள் மூலம் ஸ்ரீ வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.
ஸ்ரீ மாமுனிகளால் ஸ்ரீ உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ஸ்ரீ ராமானுஜர் மனத்திலும், ஸ்ரீ மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:

ஸ்ரீ அமுதனார், ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியில்
“இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து இருப்பிடம்”என்று
ஸ்ரீ பரவாசுதேவரானாலும்,ஸ்ரீ திருவேங்கடவரானாலும்,ஸ்ரீ அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங்களுடனே வந்து,
ஸ்ரீ ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
“ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!”
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக் கணம் புரந்து,களித்தருளும் ஸ்ரீ வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

———–

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்-திருமதி பிரேமா நந்தகுமார்

சங்கரர் திறந்த வழி அறிவு சார்ந்தது என்றாலும் பெருவாரியான மக்களால் அதை அடைய முடியாமல் போனது.
இதற்கு முக்கியமானக் காரணம் சாதீயம் பற்றிய வரைமுறைகள்தான்.
அவ்வழியில் சாதாரணமானவர்களுக்கு மிகச் சிறிய இடம்தான் ஒதுக்கப்படுகிறது.
அதில் வடமொழியை மாத்திரமே உபயோகிப்பதால், அதுவும் ஒரு தடையாக இருக்கிறது.
ராமானுஜரது தத்துவமோ அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருக்கிறது.
ஆன்மிக ஆற்றல் முன்பு சாதித் தடைகள் விடுபட்டுப் போகின்றன.
அன்றாடப் பேச்சுமொழியை உபயோகித்து மக்களை வேதநெறிக்கு அழைத்து வருகிறது.
ராமானுஜர் (1017-1137) நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார்.
நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார்.

அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை.
பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார்.
அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.

ராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு.
தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது.
ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும்
எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர்.
இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா?
ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல.
தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார்.
ஓர் எடுத்துக்காட்டு.
காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பார்ப்பனரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா
தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.

சுவாமிகள் எழுதும்போது, சங்கரர் மாபெரும் அறிஞர்.
ஆனால் அவருக்கு ராமானுஜர் போல விசாலமான இதயம் இருந்ததா என்பது கேள்விக்குறி.
ஸ்ரீ ராமானுஜரின் இதயம் இன்னம் பெரியது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வருந்தினார். அவர்களுக்கு உதவ முனைந்தார்.
இறைவனை உருவம் மூலம் வழிபடுவதால் மனநிறைவு பெறும் மக்களுக்காகப் புது வழிபாட்டு முறைகளை ராமானுஜர் தோற்றுவித்தார்.
அதேசமயம், பிராமணனிலிருந்து பறையர் வரை இறைவனை அடையக் கூடிய உயர்ந்த வழிகளையும் முன்வைத்தார்.
இதுவே ராமானுஜரின் சாதனை. அவரது சாதனை வட இந்தியாவில் பரவியது.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ராமானுஜர், பக்தர்களில் தலையானவர், சைதன்ய மகாபிரபு.

அமெரிக்காவில் இருந்தபோது சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தை ஊன்றிப் படித்தார்.
பிரம்ம சூத்திரங்களுக்கு வடமொழியில் இயற்றப்பட்டிருக்கும் இந்த அற்புதமான உரையை அவருக்கு அளசிங்கப் பெருமாள் அனுப்பிவைத்தார்.
அதில் மனம் ஒன்றிய சுவாமிகள், இந்த உரைக்கு ஆங்கில ஆக்கம் செய்யப்படவேண்டுமென்று விரும்பினார்.
அதன்படியே பேராசிரியர் ரங்காச்சாரியாரும் திரு. வரதராஜ அய்யங்காரும் மொழிபெயர்த்துச் சுவாமிகள் கட்டளைப்படி
அளசிங்கப்பெருமாள் நடத்திவந்த ‘பிரும்மவாதின்’ பத்திரிகை வெளியீடாக 1899-இல் அது வெளிவந்தது. அற்புதமான வெளியீடு.
இன்றுகூட இந்நூலின் பைண்டிங் உறுதியாக இருக்கிறது.
என் தந்தையார் பழைய புத்தகக்கடையில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதை வாங்கி இருக்கிறார்.
என்னுடைய பிறந்த வீட்டுச் சீர் என்றே சொல்லலாம்.

ஸ்ரீ ராமானுஜரிடம் சுவாமிகளுக்கு இருந்த ஈடுபாடு பற்றி நன்கறிந்தவர் ராமநாதபுரம் அரசர்,
ராஜா முத்துவிஜய பாஸ்கரசாமி சேதுபதி அவர்கள். அவர் இந்த வெளியீட்டிற்கு நிதியுதவி செய்துள்ளார்.
திலகர் நடத்திவந்த தி மராட்டா பத்திரிகை தனது மார்ச் 11, 1900 இதழில் இதற்கு நல்லதொரு விமரிசனம் வெளியிட்டது.
முதன் முதலாக ராமானுஜரது ஸ்ரீபாஷ்ய உரையை ஆங்கிலத்தில் வெளியிடச் செய்து,
விசிஷ்டாத்வைதத் தத்துவம் பற்றி மேலை நாடுகளில் ஆய்வு செய்யும் பேரறிஞர்களுக்கு உதவி செய்தவர்
சுவாமிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

சிருஷ்டியை வேதாந்த பரமாகப் பார்க்கும்போது, சுவாமிகள் ஒரு அத்துவைதி.
அதேசமயம் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும், கீதைக்கும் (இவை மூன்றும் பிரஸ்தான த்ரயம் எனப்படுபவை)
இருந்த பல வடமொழி உரைகளைப் படித்து, ஆழமாகச் சிந்தித்தார்.
அவர் ராமனுஜரைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தைக்கூடப் புரிந்து கொள்ளும்படி எழுதுவார்:
ராமானுஜர், இறைவனுக்கு சைதன்ய நிலை உண்டு என்கிறார்.
முழு அத்துவைதிகள் இறைவனுக்கு எப்படிப்பட்ட நிலையும் இல்லை என்கிறார்கள்.
சத் (உள்ளது)திற்கு, நாமறியும் வகையிலே பொருளேதுமில்லை என்பர்.
ராமானுஜரோ இறைவன் சைதன்னிய அறிவே வடிவானவன்,
வேறுபாடுகள் அற்ற இச் சைதன்னியம், வேறுபடுத்தப்படும்போது உலகமாக ஆகிறது.

குமாரில பட்டர், ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் என்று அனைத்துச் சனாதன தர்மச் சான்றோர்கள்
சனாதன தர்மத்தைக் காப்பாற்றியதுமன்றி, இப்பழமையான தர்மம் புது சிகரங்களை எட்ட வழிகளும் வகுத்தனர்.
சரித்திரப் பிரக்ஞை நிறைந்த சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் நெறி ஏன் வேகமாக நாடெங்கும் பரவியது என்று சிந்தித்திருக்கிறார்.

கண்ணையும், மனத்தையும் கவரும் தெய்வ வழிபாடுகள் ஒரு காரணமே.
திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உத்சவம், தேருக்கு வடம் பிடித்தல் முதலியவை அனைவரையும் ஈர்த்தன.
மேலும், பெருமாள் கோவில் என்றால், பொங்கல் போன்ற பிரசாதங்களும் ஒரு கவர்ச்சியான மகிழ்ச்சியே.
அனைத்திற்கும் மேலான ஒன்றும் இருந்தது என்கிறார் சுவாமிகள்.
சுவாமி விவேகானந்தரின் சரிதத்தைப் படிக்கும்போது அவருக்கு வடமொழி சுலோகங்களைச் சொல்வது பிடிக்கும் என்று தெரிகிறது.
பல வடமொழி சுலோகங்கள் இயற்றி இருக்கிறார். அவர் வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தார்.
பாணினியின் இலக்கணத்தை முழுமையாகக் கற்றவர். வடமொழியில் கடிதங்கள் எழுதுவார்.

ஆயினும், அவர் தம்புராவை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தால், அதிகமாக வங்க மொழியில் உள்ள
சியாமா சங்கீதம், பிரம்மோ சங்கீதம் பாடல்களையும் ரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழிப் பாடல்களையும் பாடுவதில் இன்பம் கண்டார்.
அவ்வப்பொழுது வங்கமொழிப் பாடல்கள் பகவான் ராமகிருஷ்ணரைச் சமாதி நிலைக்கு ஏற்றிட, அவர் நடனமாடுவார்.
உடன் மற்றவர்களும் ஆடுவார்கள். சுவாமிகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்.
ஆதிசங்கரர் தமது எழுத்து, சொற்பொழிவு, துதிகள் அனைத்திற்கும் வடமொழியையே கையாண்டார்.
மக்களின் பேச்சு மொழியான மலையாளம், தமிழ் போன்றவற்றை உபயோகிக்கவில்லை.
ஸ்ரீ ராமானுஜரோ தடங்கலின்றி ஆழ்வார்களது திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களைத் தமது பொழிவுகளில் உபயோகித்தார்.

அவரது முந்தைய ஆசாரியர்கள் தொடங்கி வைத்த திருவாய்மொழி -திருமொழி திருநாட்களை மீண்டும் விஸ்தரித்து
அனைத்துக் கோவில்களிலும் நடத்தியதால், மக்களிடம் ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய ஆர்வம் பொங்கி எழுந்தது.
வடமொழி வேதம்; தமிழ் மறை. ஆன்மிகத்தின் சிகரங்களை எட்டிய நாட்டின் வளமான பண்பாட்டினை
இவ்விரண்டு வற்றா ஜீவ நதிகளும் வளர்த்தன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபடவில்லை.
இணைந்த நதிகள். தமிழ்மறை – வடமொழி வேதத்திலிருந்து மலர்ந்தவை.

வடமொழி வல்லுனராக, ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமானுஜர், திருவரங்கத்து வீதிகளில் பிக்ஷை எடுக்கப் போகும்போது
ஆண்டாளது திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அனுசந்தித்தவாறு சென்றதால், அவரை திருப்பாவை ஜீயர் என்று மக்கள் அழைத்தார்கள்.
இப்படிப் பழகுமொழியினைச் சமயத்துடனும் ஆன்மிகத்துடனும் இணைத்ததே ஸ்ரீ ராமானுஜரது மிகச்சிறந்த கொடை என்று சுவாமிகள் நினைத்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனைத் தோற்றுவித்தபோது, சுவாமிகள் மக்களுக்கு ஜாதிப் பாகுபாடு பற்றிய
ஒரு சிறந்த செய்தியைத் தெரிவிக்க எண்ணினார்.
1898-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்று ஐம்பது பிராமணரல்லாத ஆண்களுக்குப் பூணூல் போட்டு,
காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். இது மிகத் துணிச்சலான செயல்.
இன்றிலிருந்து நீங்கள் மறைகளை ஓதலாம் என்று கூறி, அவர்களது தலைமேல் ஸ்ரீ பாஷ்யப் பிரதியை வைத்து ஆசீர்வதித்தார்.
அன்று அவர்களுக்கு ராமானுஜரது சரித்திரத்தை அவர் சொல்லியிருக்கலாம்.
தீண்டத்தகாதவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு, நீங்களும் கோவிலுள் சென்று வணங்கலாம் என்ற
உடையவரது மாண்பினை விளக்கியிருக்கலாம். அரங்கனைப் பற்றிப் பாடிய திருப்பாணாழ்வார் குறித்தும் பேசியிருக்கலாம்.

சுவாமிகள் தமது சொற்பொழிவுகளில் அநேகமுறை ஸ்ரீ ராமானுஜரது சரித்திரத்தை எடுத்துக்காட்டுகிறார்.
அவர் அடிக்கடி உடையவர் பற்றிப் பேசியதால், வங்க மக்களுக்கு இவ்வாச்சாரியர் மேல் மிகுந்த பிடிப்பு உண்டாயிற்று.
அவர்கள் விருப்பத்திற்கிணங்க, சென்னையில் பல ஆண்டுகள் வசித்த சுவாமி இராமகிருஷ்ணானந்தர்
ஸ்ரீ ராமானுஜரின் சரிதத்தை விவரமாக எழுதி வெளியிட்டார்.
இந்த நூல் தற்சமயம் வங்க இலக்கியத்தின் ஒரு பொற்சுடராகக் கருதப்படுகிறது.

———-

ஸ்ரீ எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்:

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடும் நாள்
மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானில் உயர்த்திடும் நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள்
கந்தமலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடும் நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப்பரன் அவதாரம் செய்திடும் நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனும் நாளே

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே
எப்புவியும் சீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் என உதித்தோன் வாழியே
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தோன் வாழியே
மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.

————-

வாழி பரகாலன் -தனியனிலே எம்பெருமானார் பரகாலனுக்கு உண்டே

வாழ -வாழியே -வாழி -மூன்று விதமும் மா முனிகளுக்கு மட்டுமே
அடியார்கள் வாழ
வாழி திருவாய் மொழிப்பிள்ளை
செய்ய தாமரை வாழியே இத்யாதி
திரு நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுதும் வாழியே இவருக்கு மட்டுமே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் கீதையின் சாரம்

December 11, 2021

ஸ்ரீ பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது.
இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும்,
குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு
ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்த நூலாக உள்ளது.
இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து,
ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன.
முதல் பகுதியில் (1 முதல் 6 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுயமுயற்சி குறித்து விளக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் (7 முதல் 12 வரை உள்ள அத்தியாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அனுக்கிரகம் குறித்து விளக்கப்படுகிறது.
மூன்றாம் பகுதியில் (13 முதல் 18 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவ-ஈஸ்வர ஐக்கியம் (சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்),
ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது

1 1 அருச்சுன விசாத யோகம்
2 2 சாங்கிய யோகம்
2.1 அருச்சுனனின் சரணாகதி
2.2 ஞான யோகத்தின் அறிமுகம்
2.3 கர்ம யோகம்
2.4 ஞானியின் இலக்கணங்கள்
3 3 கர்ம யோகம்
3.1 கர்ம யோகம்
3.2 உலக வாழ்க்கை
3.3 காமத் தியாகம்
4 4 ஞானகர்ம சந்நியாச யோகம்
4.1 அவதார தத்துவம்
4.2 ஞானகர்ம சந்நியாசம்
4.3 சில சாதனைகள்
5 5 கர்ம சந்நியாச யோகம்
5.1 இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டாத்துயம்)
5.2 வித்வத் சந்நியாசம்
5.3 ஞான சாதனைகள்
5.4 ஞானத்தின் பலன்கள்
6 6 ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம்
6.1 தியானம்
6.2 யோகப் பிரஷ்டன்
7 7 ஞான விஞ்ஞான யோகம்
7.1 ஈஸ்வர தத்துவம்
7.2 பக்தி / பக்தன்
7.3 பக்தியின் மேன்மை
8 8 அட்சர பிரம்ம யோகம்
8.1 அருச்சுனனின் கேள்வியும் பகவானின் பதிலும்
8.2 மரண காலத்தில் பகவானை எவ்வாறு நினைப்பது
8.3 மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்)
9 9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
9.1 ஈஸ்வரத் தத்துவம்
9.2 பக்தி
10 10 விபூதி யோகம்
10.1 ஈஸ்வர தத்துவம்
10.2 பக்தி
10.3 ஈஸ்வர விபூதி (மகிமைகள், பெருமைகள்)
11 11 விஸ்வரூப தரிசன யோகம்
11.1 அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்
11.2 சஞ்சயன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
11.3 அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
11.4 அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்
12 12 பக்தி யோகம்
12.1 பக்தி யோகத்தின் ஐந்து நிலைகள்
12.1.1 பக்தி யோகத்தின் பலன்கள்
12.2 பரா பக்தனின் இலக்கணம்
13 13 சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம்
13.1 சேத்திரம்
13.2 சேத்திரக்ஞன்
13.3 புருஷன்
13.4 பிரகிருதி
13.5 ஞானம் அடைய வழிகள்
13.6 நேயம்
14 14 குணத்திரய விபாக யோகம்
14.1 முக்குணங்களின் இலக்கணம்
14.2 முக்குணங்களால் பந்தப்படுதல்
14.3 லிங்கம் (அடையாளம்)
14.4 பலன்கள்
14.5 வழி (கதி)
14.5.1 முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம்
15 15 புருசோத்தம யோகம்
15.1 சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை
15.2 பிரம்மமே அனைத்துமாக உள்ளார்
15.3 பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்
16 16 தெய்வ அசுர சம்பத் விபாக யோகம்
16.1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
16.2 அசுர சம்பத் (தீய குணங்கள்)
17 17 சிரத்தாத்திரய விபாக யோகம்
17.1 சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள்
17.2 ஓம் தத் ஸத்
18 18 மோட்ச சந்நியாச யோகம்
18.1 சந்நியாசம்
18.2 வர்ணாசிரம தர்ம கடமைகள்
18.3 கர்ம யோக சாரம்
18.4 பக்தி யோக சாரம்
18.5 ஞான யோக சாரம்
18.6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்)
18.7 முடிவுரை

———

1 அருச்சுன விசாத யோகம்

46 சுலோகங்களைக் கொண்டுள்ளது. அருச்சுனன் தன் உறவினர்கள் மற்றும் குருமார்களுக்கு எதிராக
போர் செய்வது குறித்தான தனது துயரத்தை (விசாதம்) பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் எடுத்துரைத்தலே இவ்வத்தியாயத்தின் சாரம்.

குருச்சேத்திரப் போர்களத்தில் தங்கள் பாண்டவர் படையை எதிர்த்து நிற்கும் கௌரவர்களின் படையை பார்க்க விரும்பிய அருச்சுனன்,
தனது தேரோட்டியும் நண்பனுமான ஸ்ரீகிருஷ்ணரிடம், தனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்துமாறு கூறுகிறான்.

அருச்சுனன், எதிரணியில் நிற்கும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டனார் பீஷ்மர், போர்க்கலையை கற்றுக்கொடுத்த
தனது குருவான துரோணர் ஆகியவர்களை கண்டு, போரில் இவர்களது மரணத்தை நினைத்து மனம் கலங்கி செயலற்று நின்றான்.

தன்னால் இவர்களை போரில் கொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், போரில் எதிராளிகளை அழித்து
நாட்டை திரும்ப அடைவதை விட துறவு மேற்கொள்வதே மேல் என்றும், போரில் சத்திரிய வீரர்கள் கொல்லப்படுவதால்
சத்திரிய குலதர்மம் சீர் குலைந்து வர்ணக் கலப்பு உண்டாகிவிடும் என்றும், எனவே கௌரவர்கள் என்னைக் கொன்றாலும்
அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகிவிடும் என்றும் கூறி கவலையாலும், துயரத்தாலும் தனது கையில் இருந்த
காண்டீபம் எனும் வில்லை எறிந்து விட்டு, செய்வதறியாது அருச்சுனன் தேர்த் தட்டில் அமர்ந்து விட்டான்.

———–

2 சாங்கிய யோகம்

சாங்கிய யோகம் எனில் பகவத் கீதையில் ஞான யோகம் என்று பொருள். 72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை
அருச்சுனனின் சரணாகதி, ஞான யோகத்தின் அறிமுகம், கர்ம யோகம், மற்றும்
சிதப்பிரக்ஞனின் (ஞானியின்) இலக்கணங்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அருச்சுனனின் சரணாகதி

உங்கள் சீடனாகிய என்னை, மனத்துயரம் மற்றும் மனக்குழப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று கூறி அருச்சுனன்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை ஒப்படைக்கிறான் (சரணாகதி அடைகிறான்).
அதன் பின் பகவான் அருச்சுனனுக்கு குருவாக மாறி ஆத்ம உபதேசம் செய்ய முடிவு செய்கிறார்.

ஞான யோகத்தின் அறிமுகம்

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை.
ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றி அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள்.
ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு
மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்றும் ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.

பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியவர்களின் ஆத்மா அழிவது பற்றிய கவலையா?
அல்லது அவர்களின் அனாத்மா எனும் உடல் அழிவது பற்றிய கவலையா?
ஆத்மாவைப் பற்றிய கவலை எனில், இந்த ஆத்மா எதனாலும் அழியக்கூடியது அல்ல என்று புரிந்து கொள்.
ஆனால் இந்த அனாத்மா எனும் உடல் ஒரு காலத்தில் உறுதியாக அழியக்கூடியது என்று புரிந்து கொள்.
உடலானது ஆத்மாவிற்கு சட்டையைப் போல், எனவே தீரன் (ஞானி) இது குறித்து கவலைப்படுவதில்லை என
பகவான் அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகம்

கர்ம யோக வாழ்க்கை முறையில் எதிர்மறை பலன் இல்லை. மன ஒருமுகப்பாட்டுடன் கடமைகளைச் செய்பவன் இலக்கை அடைகிறான்.
பலன் கருதி செய்யும் கர்மங்களை (செயல்கள்) செய்பவர்களை பகவான் இடித்துரைக்கிறார்.
கர்மத்தை நிந்தனை செய்து கர்ம யோகத்தை பகவான் புகழ்கிறார்.

கர்ம யோகத்தால் உனக்கு செயல்கள் (கர்மத்தை) செய்வதில் மட்டுமே தகுதி உண்டு.
ஆனால் அச்செயல்கள் மூலம் கிடைக்கும் பலனில் நீ உரிமை கொண்டாட முடியாது.
எனவே செயல் செய்வதிலிருந்து விலகி விடாதே. சமத்துவ நோக்குடன் கடமை ஆற்ற வேண்டும்.
பந்தப்படுத்தும் செயல்களை, பந்தப்படுத்தாதவாறு செய்ய வேண்டும்.
கர்ம யோகத்தின்படி கடமையைச் செய்பவனுக்கு மனத்தூய்மை கிட்டும்.

கர்ம யோக வாழ்வின் மூலம் மனமானது மோகம் எனும் மனக்குழப்பத்தை நீக்கி
(விவேகம்), வைராக்கியம், மனத்தூய்மை எனும் பலன்களை அடைவாய். எப்போது அறிவு ஆத்மாவில் நிலை நிற்குமோ
அப்போது ஞான யோகம் உண்டாயிற்று என அறிந்து கொள் என்று கிருஷ்ணர் அருச்சுனக்கு அருள்கிறார்.

ஞானியின் இலக்கணங்கள்

கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன், அதன் பின் ஞான யோகத்தை பயின்று
ஞானத்தில் நிலை பெற்றவனை பகவான் இங்கு சிதப்பிரக்ஞன் (ஞான நிஷ்டன்) என்று ஞானியைச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.

எவன் தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனோ அவன் (Happy with Himself) சிதப்பிரக்ஞன் அல்லது ஞானி ஆவான்.
தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே சிதப்பிரக்ஞன் எனும் ஞானி ஆவான்.
வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, தவம்
போன்ற நற்குணங்கள் பெற்றவனையே ஞானி என்பர்.

ஞானிக்கு பகலாக இருப்பது அஞ்ஞானிகளுக்கு இருளாகும். அஞ்ஞானிகளின் பகலாக இருப்பது ஞானிக்கு இருளாகும்.
மரண காலத்திற்குள் இந்த ஞானத்தை ஒருவன் அடைந்து விட்டால் அவனின் உடல் அழிந்த பின்பு
பிரம்ம நிர்வானம் எனும் விதேக முக்தி அடைகிறான். விதேக முக்தி அடைந்த ஞானிக்கு மறுபிறப்பு இல்லை.

3 கர்ம யோகம்

இவ்வத்தியாயம் 43 சுலோகங்கள் கொண்டது. மனிதன் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துரைக்கிறது.
முன்பு ஞான யோகம் உயர்ந்தது கூறினீர்கள், ஆனால் தற்போது என்னை ஏன் கர்மம் (செயல்) எனும் போரில்
ஈடுபடத் தூண்டுகிறீர்கள் என அருச்சுனன் கேட்க, அதற்கு கண்ணன்
கர்ம யோகத்தின் சிறப்புகளை 1 கர்ம யோகம், 2 உலக வாழ்க்கை மற்றும் 3 காமத்தியாகம் (பற்று விடல்) எனும்
மூன்று தலைப்புக்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

கர்ம யோகம்

விருப்பு – வெறுப்பு இல்லாமல் ஒருவன் கடமை ஆற்ற வேண்டும்.
அவ்வாறு ஆற்றிய கடமையிலிருந்து பலனை எதிர்பார்த்து கொண்டு இருக்கக்கூடாது.
ஒருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், அந்த விருப்பமான ஆசையை அனுபவிக்கும் போது,
அதை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு, மற்றவர்களுடன் அந்த பிரசாதத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் ஆசையில் மூழ்கி விட மாட்டார்கள். உழைப்பு இல்லாது வரும் இன்பங்களை ஒருவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
(இலவசமாக கிட்டும் இன்பம் / பொருட்களை புறக்கணிக்க வேண்டும்).

உலக வாழ்க்கை

ஜனகர், அசுவபதி போன்ற ராஜரிஷிகள் உலக நன்மைக்காக சமூக வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் வாழ்ந்தார்கள்.
எனவே உலக நன்மைக்காக நீயும் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும். பகவான் தன்னையே எடுத்துக்காட்டாக கூறுகிறார்.
எனக்கு எதுவும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இருப்பினும் நான் கர்ம யோகம் எனும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகிறேன்.
மேலும் மேலானவர்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ, அதையே மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.
எனவே உலக நன்மைக்காகவாவது கர்ம யோகத்தில் ஒருவன் ஈடுபடவேண்டும்.

காமத் தியாகம்

தியாகம் எனில் விட்டுவிடுதல் என்று பொருள். எனவே ஒருவன் காமத்தை (ஆசையை) தியாகம் செய்துவிட வேண்டும்
(பேராசையை விட்டுவிட வேண்டும்). மனிதனின் பகைவன் அவன் மனதிலே உள்ளதன்றி வெளியே இல்லை.
நமது பகைவன் நம் மனதில் உள்ள காமமே (பற்று / ஆசை). எனவே ஆசையின் இருப்பிடத்தை அறிந்தால் நமக்கு பாதி வெற்றி கிட்டிவிடும்.

ஐம்புலன்கள், மனம், புத்தி, அகங்காரம் இவற்றிக்கு மேலானது ஆத்மா. இந்த ஆத்மாவை மறைக்கும் இவைகளை வென்று,
ஆசையை அழித்து விடவேண்டும். பேராசை, வெறுப்பு போன்ற காரணத்தினால் பாவம் செய்கிறான்.
எனவே பாவம் செய்வதிலிருந்து விடுபட வேண்டுமானால், காமத்தை (பற்று-பேராசை) தியாகம் (விட்டு விடுதல்) செய்து விடவேண்டும்ம்.
கர்ம யோக சாதனை மூலம் காமத்தை வெல்ல முடியும். காமத்தின் பிறப்பிடங்களான ஐம்புலன்கள்,
மனம்,அகங்காரம் மற்றும் புத்தியை நம் கட்டுக்குள் வைத்திருந்தால் மனத்தூய்மை அடையலாம்.

4 ஞான கர்ம சந்நியாச யோகம்

அத்தியாயத்தில் உள்ள 42 சுலோகங்களை, இறைவனின் அவதார தத்துவம், ஞான கர்ம சந்நியாசம்
(ஞானம் பெற மேற்கொள்ளப்படும் சந்நியாசம்), சில சாதனைகள் எனும் மூன்று தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அவதார தத்துவம்

பகவத் கீதையில் இவ்விடத்தில் மட்டுமே அவதார தத்துவம் தெளிவாக விளக்கப்படுகிறது.
அனைத்து சீவராசிகளின் இப்பிறப்பிற்கு, அவர்கள்/அவைகள் முற்பிறப்பில் செய்த கர்மவினைகள் (பாவ-புண்ணியம்) அடிப்படையே காரணம்.
ஆனால் பகவான் இவ்வுலகில் பிறப்பு எடுப்பதற்கு பாவ – புண்ணியம் காரணம் இல்லை.
கர்மவினை இன்றி பகவான் பிறவி எடுப்பது அவதாரம் ஆகும். சீவராசிகள் கர்மவினைக்கு ஏற்ப பிறப்பு எடுப்பார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் நோக்கம், பல்வேறு காலகட்டத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே ஆகும்.

ஞான கர்ம சந்நியாசம்

எவன் செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்கிறானோ அவன் மனிதர்களில் ஞானி ஆவான்.
(செயல்படுகின்றது போல் தோண்றும் கோள்களிலும், சீவராசிகளிலும் செயலின்மையும், செயல்படாமல் இருப்பதாகத் தோன்றும்
ஆத்மாவில் செயலையும் ஞானி ஒருவனே காண்கிறான்).
எனவே ஞானத்தினால் ஒருவன், தான் எப்போதும் செயல் செய்பவன் அல்ல என்று புரிந்து கொள்பவன்
ஸூத்தராத்மா (மாபெரும் ஞானி) ஆவான் என்கிறார் பகவான்.

சில சாதனைகள்

ஒரு மனிதன் செய்ய வேண்டிய சாதனைகளில், விவேகம், வைராக்கியம், புலனடக்கம், மனவடக்கம், தவம், யக்ஞம்,
வேதாந்த சாத்திரங்களை கேட்டல், பிராணயாமம் செய்தல், சத்துவ உணவை நியமத்துடன் உண்பதுடன்
ஞான யக்ஞம் செய்வது அனைத்திலும் சிறந்தது.
மேலும் குருவின் மூலம் சாத்திரங்களை கேட்டு ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிரத்தையை (இடைவிடாத முயற்சி, நம்பிக்கை) மனதில் வளர்த்து கொள்வதால் ஞானத்தை அடைவது எளிது.

5 கர்ம சந்நியாச யோகம்

29 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை, இரண்டு விதமான வாழ்க்கை முறைகள், வித்வத் சந்நியாசம்,
ஞான சாதனைகள், ஞானத்தின் பலன்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பிரித்து பகவான் அருச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.

இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டாத்துயம்)

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய இல்லறம் மற்றும் துறவறம் எனும் இரண்டு விதமான வாழ்க்கை முறை குறித்து விளக்குகிறார் பகவான்.
இல்லற தர்மத்தை ஒருவன் நன்கு கடைப்பிடித்தால் கர்ம யோகியாவான். கர்ம யோகம் நன்கு செய்தால் மனத்தூய்மை அடைந்து
ஞான யோகத்திற்கு தகுதி பெறுகிறான். அதே போல் ஒருவன் துறவற தர்மத்தை நன்கு மேற்கொண்டால் ஞான யோகி ஆவான்.

வித்வத் சந்நியாசம்

இல்லறத்தில் ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் (துறவறம்) மேற்கொள்வது விவிதிஷா சந்நியாசம் என்பர்.
வேதாந்த ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் மேற்கொள்வதை வித்வத் சந்நியாசம் என்பர்.
வித்வத் சந்நியாசி உலகத்தை எவ்வாறு எவ்வாறு காண்பான் எனில் அனைத்து சீவர்களில் சம நோக்குடன் ஆத்மாவை பார்ப்பான்.
ஈசா வாஸ்ய இதம் சர்வம் எனும் அடிப்படையில், அனைத்து சீவர்களிடம் இறைவனை காண்பான்.

ஞான சாதனைகள்

விவேகம், வைராக்கியம், முமுச்த்துவம் (இறைவனை அறிந்து கொள்ளும் ஆர்வம்) ஆகியவைகளே
ஞானத்தை அடையும் சாதனைகள் ஆகும்.

ஞானத்தின் பலன்கள்

ஞானத்தில் சாதனை அடைந்த ஞானி சீவ முக்தி எனும் மனநிறைவு பெறுகிறான்.
பின் தன் சட உடலை விட்டு நீங்கிய பின் (இறந்த பின்) மறு பிறப்பு இல்லாமை எனும் விதேக முக்தி அடைகிறான்.

6 ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம்

47 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை தியானம், யோகப் பிரஷ்டன் எனும்
இரண்டு தலைப்பின் கீழ் வகுத்து வழங்குகிறார் பகவான்.

தியானம்

பகவான் தியானத்தை ஆறு பிரிவுகளில் விளக்குகிறார்.

1. பகிரங்க சாதனை :- தியான நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் நமது உணவு, உறக்கம், பழக்க வழக்கங்களில்
கட்டுப்பாட்டுடன் சமமாக இருக்க வேண்டும். இவைகளே தியானத்தை ஒழுங்கு படுத்தும்.

2. அந்தரங்க சாதனை :- தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவைகளான தூய்மையும் அமைதியுமான இடம்,
நல்ல ஆசனம் மற்றும் பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

3. தியானத்தின் வகைகள் :-
1. ஞானம் அடைவதற்கு முன்பு மனதை ஒருமுகப்படுத்தும் தியானம்
2. ஞானம் அடைந்த பின்பு நிதித்யாசனம் செய்ய வேண்டும்.

4. தியானத்தின் நன்மைகள் :- தியானத்தினால் மன அமைதி, மன ஒருமுகப்பாடு, ஈஸ்வரனை அடையத் தகுதி
மற்றும் தியானத்தினால் பெற்ற ஞானத்தை நம்மில் நிலைபடுத்த இயலும்.

5. தியானத்தின் போது வரும் தடைகள் :- மனம் அலைபாய்தல் (விட்சேபம்) மற்றும் உறக்கம் (லயம்).

6. தடைகள் நீங்க வழிகள் :- வைராக்கியத்துடன் செய்யும் தியானத்தால் மேற்படி தடைகள் நீங்கும்.
மேலும் வேதாந்த சாத்திரங்கள் கேட்டல், படித்தல், சான்றோர்களின் கூட்டு (சத் சங்கம்) முதலியவைகளால்
மனதை வெளிவிசயங்களிலிருந்து நீக்கி, நம்மிடமே வைத்துக் கொள்ள முடியும்.
மனத்தூய்மை கிடைக்கும் கர்ம யோகத்தை செய்து பழகிய பின்பு அதனை நீக்கி உபாசனா யோகம் எனும் தியானம் செய்ய வேண்டும்.

யோகப் பிரஷ்டன்

பஞ்ச பூதங்களில் தன்னையே பார்ப்பவன் மற்றும் தன்னில் பஞ்ச பூதங்களை பார்ப்பவனே யோகப் பிரஷ்டன் ஆவான்.
இந்த யோகப்பிரஷ்ட நிலையில் நழுவியவன் (யோகப்பிரஷ்டகம்) இறப்பிற்குப்பின், மறுபிறவியில் அவன் மனக்கட்டுப்பாடு, புலனடக்கம்
ஆகிய நற்பண்புகளுடன் பிறப்பான். முற்பிறவியில் செய்த முயற்சிகள் வீண் போகாமல் மேல் நிலைக்கு உயர்வான்.

7 ஞான விஞ்ஞான யோகம்

முப்பது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை பகவான் 1. ஈஸ்வர தத்துவம் 2. பக்தி/பக்தன் 3. பக்தியின் மேன்மை
எனும் மூன்று தலைப்புக்களில் அருச்சுனனுக்கு எடுத்துரைக்கிறார்.

ஈஸ்வர தத்துவம்

நாம் அனுபவிக்கும் இந்த உலகை பராபிரகிருதி எனும் இறைத் தத்துவமாகவும், அபராபிரகிருதி எனும்
சடமான தத்துவமாகவும் பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். இந்த உடல், உலகை அறியும் சடப்பொருளாக உள்ளது.
இந்த சட தத்துவமும் (அபராபிரகிருதி), இறைத்தத்துவமும் (பராபிரகிருதி) நானே என அறிமுகப்படுத்துகிறார் பகவான்.
பராபிரகிருதி என்பது மேலான, நிலையான, சத்தியமான இறைத்தத்துவம் ஆகும்.
அபராபிரகிருதி என்பது கீழான நிலையற்ற சடதத்துவம் ஆகும். சடதத்துவம் மாயையின் வசத்திற்குட்பட்டது.
மேலும் இது நிலையற்றதும் அழியக்கூடியதும் ஆகும் (மித்யா).
இந்த மாயை பகவானின் வெளிப்பாடே என்று ஈஸ்வர தத்துவத்தை கண்ணன் விளக்குகிறார்.

பக்தி / பக்தன்

பகவான் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார்.
மேலும் செம்மையான மனம் இல்லாதவர்கள் பகவானை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார்.
பகவானை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார்.
1. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.
2. ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.
3. பகவானையே அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள்.
4. பகவானை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன்.
இந்த ஞானி பக்தனே அனைத்து பக்த்ர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.

பக்தியின் மேன்மை

பகவானின் மாயையை யாராலும் வெல்ல முடியாது. பகவானை சரணாகதி அடைந்து பக்தி செலுத்துபவன்
மாயையை (அறியாமையை) கடக்க பகவான் அருள் புரிகிறார்.
எவரேவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ அவரவர்களின் கோரிக்கையை பகவான் நிறைவேற்றுகிறார்.
பகவானுக்கு எந்த பக்தனிடத்திலும் விருப்பு – வெறுப்பு இல்லை. மேலும் பகவானை அறிவது எளிதல்ல.
பகவான் அனைத்தையும் அறிபவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது.
சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்புகளுடன் உள்ளான்.
இது சீவர்களின் இயற்கை குணமாகும். பிறகு எவர்கள் இந்த விருப்பு – வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு,
அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம், அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள்
என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் எனும் (வீடுபேறு) அடைகிறார்கள்.

8 அட்சர பிரம்ம யோகம்

இருபத்தி எட்டு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை மூன்று தலைப்புகளில் விளக்கப்படுகிறது.
1. அருச்சுனனின் கேள்வியும், பகவானின் பதிலும்
2. மரண காலத்தில் பகவானை நினைத்தல்
3. மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்).

அருச்சுனனின் கேள்வியும் பகவானின் பதிலும்

அழியாத பொருள் (வஸ்து) எது? என்ற அருச்சுனனின் கேள்விக்கு பகவான், அழியாத பொருள் பிரம்மம் ஒன்றே என பதில் அளிக்கிறார்.
பிரம்மத்தின் தன்மையான ஜீவாத்மாவை அத்யாத்மம் என்பர். மேலும் தோன்றுவது, அழிவது என்ற தன்மையுடன் கூடியவை அனைத்தும் அதிபூதம் ஆகும்.
படைக்கும் தொழில் செய்யும் நான்முக பிரம்மாவை அதிதைவம் ஆவார்.
சீவர்களில் பிரம்ம சைதன்யம் எனப்படும் ஞானமாக நானே அந்தர்யாமி உருவில் அதியக்ஞம் ஆக இருக்கிறேன்.

மரண காலத்தில் பகவானை எவ்வாறு நினைப்பது

மரண காலத்திற்கு முன்பும், மரண காலத்திலும் தொடர்ந்து பகவானை நினைத்து தியானிப்பவனுக்கு,
அதன்படி அந்த சீவனுக்கு மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே பகவான் நாமத்தை என்றும் நினைத்துக் கொண்டே இறப்பவன் பகவானை அடைகிறான்.

ஒருவன் வாழ்க்கை முழுவதும் எதை நினைத்துக் கொண்டு இருந்தானோ, அதையே மரணகாலத்திலும் நினைப்பான்.
எனவே உடல்நிலை நன்கு இருக்கும் போது, எல்லா காலத்திலும் பகவான் நாமத்தை
தியானித்துப் பழகியவன்தான் மரணகாலத்திலும் பகவானை நினைப்பான்.

கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும்,
தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து
மறுபிறப்பில்லா பேற்றை அடைகிறான். எனவே பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை.
எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பகவானின் இருப்பிடம்.

மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்)

எந்த காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல்கின்ற யோகியர் மீண்டும் பிறவியிலா பெரு வாழ்வையும்,
மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையையும் (மறுபிறப்பு எனும் நிலையும்)
அடைகிறார்கள் என்பது குறித்து பகவான் விளக்குகிறார்.
மரணத்திற்கு ஒன்று உத்தராயணம், மற்றது தட்சிணாயனம் எனும் இரண்டு வழிகள் உள்ளது.
உத்தராயன காலத்தில் இறப்பவர்கள் சுக்கில கதியில் (வழியில்) பிரம்மலோகத்திற்கும் (மறுபிறவி இல்லா நிலை),
தட்சிணாயன காலத்தில் இறப்பவர்கள் கிருஷ்ண கதியில் சொர்க்க லோகத்திற்கும் (மீண்டும் பிறவி எடுப்பது) செல்வார்கள்.

9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

முப்பத்தி நாலு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாத்தில் இரண்டு முக்கிய கருத்துக்களை பகவான் விளக்குகிறார்.
1 ஈஸ்வரத் தத்துவம். 2 பக்தி. இந்த தத்துவம் அனைத்து அறிவைக் காட்டிலும் மேலான அறிவு என்றும்,
அனைத்து இரகசியங்களில் மேலான இரகசியம் என்றும் பகவான் கூறுகிறார்.

ஈஸ்வரத் தத்துவம்

அபரா பிரகிருதி எனும் பிரபஞ்சம் (மாயை), பரா பிரகிருதி எனும் ஈஸ்வரனை சார்ந்து உள்ளது.
ஆனால் பரா பிரகிருதியான ஈஸ்வரன் மாயையை (அபரா பிரகிருதி) சார்ந்து இல்லாதவன்.
அபரா பிரகிருதி எனும் இந்த பிரபஞ்சம் பொய்த் தோற்றம் கொண்டது.
இந்த பிரபஞ்சம் மற்றும் சீவர்கள் இருப்பது போல் தோற்றமளித்தாலும், அழியும் தன்மை கொண்டதுவே.
இந்த மாயையான பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரனே காரணம். ஈசுவரன் எதனுடனும் தொடர்பு அற்ற தன்மையுடயவன்.
ஈஸ்வரன் எந்த செயலையும் செய்வதில்லை, செயலின் விளைவுகளையும் அனுபவிப்பது இல்லை.
(ஈஸ்வரன் அகர்த்தா / அபோக்தா). எனவே ஈசுவரன் உதாசீனன் ஆக உள்ளார்.

பக்தி

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “ அநன்ய பக்தி “ ஆகும்.
இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார்.
மேலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துவது பக்குப்படாத பக்தி என்று இடித்துரைக்கிறார் பகவான்.

எவரெவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ, அவரவர் கோரிக்கைகயை பகவான் நிறைவேற்றுகிறார்.
பகவானுக்கு எந்த பக்தர்களிடம் விருப்பு – வெறுப்பு இல்லை. பகவானை அறிந்து கொள்வது அரிது.
பகவான் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது.

இயற்கையாக சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்பு உணர்வுகளுடன் இருப்பதால்,
அச்சீவர்கள் பகவானை அறிது கடினம். பிறகு எவர்கள் அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் என்ற
தத்துவங்களை அறிகிறார்களோ அவர்களே இருமைகளிருந்து விடுபட்டு
பகவானிடம் பக்தி செலுத்தி வீடுபேறு எனும் விதேக முக்தி அடைகிறார்கள்.

எனவே சீவர்கள் பகவானையே மனதில் கொண்டு வழிபட்டு, பகவானுக்காவே அனைத்து நற்செயலகளையும் செய்ய வேண்டும்.

10 விபூதி யோகம்

நாற்பத்தி இரண்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் ஈஸ்வர தத்துவம், பக்தி, ஈஸ்வரனின் விபூதி (மகிமை, பெருமை) விளக்குகிறது.

ஈஸ்வர தத்துவம்

ஈஸ்வர தத்துவத்தை பகவான் அத்தியாயம் 10, 13, 14 மற்றும் 15-இல் விளக்கியுள்ளார்.

பக்தி

பக்தி குறித்து பகவான் 12வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளதை காண்க.

ஈஸ்வர விபூதி (மகிமைகள், பெருமைகள்)

சீவராசிகள் மற்றும் பிரபஞ்ச படைப்பிற்கு பகவானே காரணமாகவும் காரியமாகவும் உள்ளார்.
(எவ்வாறு பானைக்கு களிமண் உபாதான காரணமோ அவ்வாறே பகவானின் உடல் இந்த பிரபஞ்சமாகவும், சீவராசிகளாகவும் வெளிப்பட்டுள்ளது).
மேலும் பகவான் தான் சிறப்பாக எதுவாக உள்ளார் என்று தனது பெருமைகளை கீழ்கண்டவாறு உரைக்கிறார்.

அதிதியின் மகன்கள் பன்னிருவர்களில் விஷ்ணுவாகவும்
ஒளிர்பவைகளில் சூரியனாகவும்
49-வாயு தேவர்களில் தேஜஸ் ஆகவும்
நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனாகவும்
வேதங்களில் சாம வேதமாகவும்
தேவர்களில் இந்திரனாகவும்
பொறிபுலன்களில் மனமாகவும்
உயிரினங்களுள் உணர்வாக – ஞான சக்தியாகவும்
11- ருத்திரர்களில் பரமசிவனாகவும்
யட்ச – இராட்சசர்களுல் செல்வத்திற்கு தலைவனான் குபேரனாகவும்
அஷ்டவசுக்களில், அக்னியாகவும்
சிகரமுடைய மலைகளுல் சுமேரு மலையாகவும்
புரோகிதர்களில் பிரகஸ்பதியாகவும்
படைத்தலைவர்களில் ஸ்கந்தனாகவும்
நீர்நிலைகளுல் கடலாகவும்
மகரிஷிகளுல் பிருகு மகரிஷியாகவும்
சொற்களுல் ஒரெழுத்தான ஓங்காரமாகவும்
வேள்விகள் அனைத்துள்ளும் ஜெபமாகிய யக்ஞமாகவும்
அசையாப் பொருட்களுல் இமயமலையாகவும்
மரங்களுல் அரசமரமாகவும்
தேவரிஷிகளில் நாரதர் ஆகவும்
கந்தர்வர்களில் சித்ரரதன் ஆகவும்
சித்தர்களுல் கபிலர் ஆகவும்
குதிரைகளுல் அமுதத்துடன் தோண்றிய உச்சைச்சிரவம் ஆகவும்
யாணைகளுல் ஐராவதம் ஆகவும்
மனிதர்களுல் அரசன் ஆகவும்
போர்க்கருவிகளுல் வஜ்ராயுதம்ஆகவும்
பசுக்களுல் காமதேனு ஆகவும்
சாத்திர முறையில் மகப்பேற்றுக்கு காரணமான மன்மதன் ஆகவும்
சர்பப்ங்களுல் சர்ப்பராஜனான வாசுகியாகவும்
நாகங்களுல் ஆதிசேஷன் ஆகவும்
நீர் வாழ்வனவற்றிற்கும் நீர் தேவதைகளுக்கும் தலைவனான வருணன் ஆகவும்
பித்ரு தேவதைகளுல் அர்யமா என்ற பித்ரு தேவதையாகவும்
அடக்கி ஆள்பவர்களுல் யமன் ஆகவும்
தைத்தியர்களுல் பிரகலாதன் ஆகவும்
காலம் கணிப்பவர்களுல் காலமாகவும்
விலங்குகளில் சிங்கமாகவும்
பறவைகளுல் கருடனாகவும்
தூய்மைப்படுத்துபவர்களுல் காற்றாகவும்
ஆயுதம் தாங்கியவர்களுல் இராமன் ஆகவும்
மீன் இனங்களுல் முதலையாகவும்
ஆறுகளுல் பாகீரதியாகவும்
படைப்புகளின் துவக்கமாகவும், முடிவாகவும், நடுவாகவும்
வித்தைகளுல் பிரம்ம வித்தை எனும் ஆத்ம வித்தையாகவும்
தர்க்கம் செய்பவர்களுடைய தத்துவத்தை தீர்மானிப்பவனாகவும்
எழுத்துக்களுல் அகாரமாகவும்
தொகைகளுல் உம்மைத் தொகை ஆகவும்
காலங்களுக்கெல்லாம் காலமாகவும்
அனைத்துப் புறங்களிலும் முகங்கள் கொண்ட விராட் விஸ்வரூபனாகவும்
அனைத்தையும் காத்து பேணுபவனாகவும்
எல்லாவற்றையும் அழிக்கின்ற மரண தேவனாகவும்
இனி படைக்கப்படுபவைகளுக்கும் காரணமாகவும்
மாதர்களுல் கீர்த்தி தேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், வாக் தேவியாகவும், ஸ்ம்ருதி தேவியாகவும், மேதா தேவியாகவும்,
த்ருதி தேவியாகவும், சமா தேவியாகவும்
கானம் செய்யத் தக்க வேதப் பகுதிகளுல் பிருகத் சாமம் எனும் சாம வேதப் பகுதியாகவும்
சந்தங்களுல் காயத்ரீ சந்தமாகவும்
மாதங்களுல் மார்கழி மாதமாகவும்
பருவங்கள் ஆறினுள் வசந்த காலமாகவும்
வஞ்சகர்களுல் அவர்களது சூதாட்டமாகவும்
திறமை படைத்தவர்களுடைய திறமையாகவும்
வெற்றி கொள்பவரது வெற்றியாகவும்
தீர்மானம் செய்யும் சக்தி உள்ளவர்களின் தீர்மானமாகவும்
சாத்வீக குணம் படைத்வர்களிடம் சத்துவ குணமாகவும்
யாதவர்களில் வாசுதேவனாகவும்
பாண்டவர்களுல் அருச்சுனன்ஆகவும்
முனிவர்களுல் வேத வியாசர் ஆகவும்
கவிஞர்களுல் சுக்ராச்சாரியர் ஆகவும்
அடக்குபவர்களுல் அடக்கும் சக்தியாகவும்
வெற்றி பெற விரும்புபவர்களின் நியாய உணர்வாகவும்
மறைத்து வைக்கப்பட வேண்டியவற்றைக் காப்பாற்றும் மௌனமாகவும்
ஞானிகளுடைய தத்துவ ஞானமாகவும் இருக்கிறேன்
எல்லா உயிரினங்கள் தோண்றுவதற்கு எது விதையோ அதுவும் நானாகவும்
எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தி படைத்ததோ, அந்த அந்த பொருட்கள் எல்லாம்
என்னுடைய ஒளியின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று அறிந்து கொள்.
இந்த அனைத்துலகையும் எனது யோக சக்தியின் ஒர் அம்சத்தினால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

11 விஸ்வரூப தரிசன யோகம்
பகவான் அருச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் காண்பித்தல்

இவ்வத்தியாம் 55 சுலோகங்கள் கொண்டுள்ளது. விசுவரூப தரிசன யோகம் நான்கு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.
1 அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்.
2 சஞ்சயன் விஸ்வரூப தர்சனம் செய்தல்.
3 அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்.
4 அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்.

அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்

பகவானாகிய நீங்கள் (ஸ்ரீகிருஷ்ணர்) அனைத்துமாக உள்ளதாக விபூதி யோகத்தில் கூறினீர்கள்.
அனைத்துப் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகளாக, நீங்களாகவே உள்ள உங்களது விஸ்வரூப காட்சியை எனக்கு காட்ட வேண்டும்
என அருச்சுனன் பகவானிடம் வேண்டினான். பகவானும், எனது விஸ்வரூபத்தை உனது ஊனக்கண்ணால் பார்க்க இயலாது,
அதனால் நான் உனக்கு அருளும் ஞானக்கண் மூலம் எனது விஸ்வரூபத்தை பார் எனக் கூறி
அருச்சுனனின் மனதில் உள்ள விருப்பு – வெறுப்புக்களை நீக்கி ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்குகிறார்.

சஞ்சயன் விஸ்வரூப தரிசனம் செய்தல்

குருச்சேத்திரப் போர்க்களக் காட்சிகளை அத்தினாபுரம் அரண்மனையில் இருந்தவாறே கண்டு அதை
திருதராட்டிரனுக்கு எடுத்துச் சொல்ல வியாச முனிவர் சஞ்சயனுக்கு ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்கியமையால்,
சஞ்சயன் பகவானின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு அதை திருதராட்டிரனுக்கு விளக்கிக் கூறினார்.

அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
அருச்சுனனுக்கு கிருஷ்ணர் தனது விராட் விஸ்வரூபத்தை காட்டல்
ஆயிரக்கணக்கான சூரிய ஒளியால் மின்னும் பகவானின் ஆயிரக்கணக்கான முகங்கள், கண்கள்,
ஆயிரக்கணக்கான ஆயுதங்களுடன் கூடிய கைகளைக் கொண்ட விராட் விஸ்வரூபத்தை தரிசனம் செய்த அருச்சுனன்,
பகவானின் பெருமைகளை பலவாறு பேசி வர்ணிக்கிறான்.

அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்

பகவானின் விஸ்வரூபக்காட்சியை கண்ட அருச்சுனனுக்கு மனதில் மூன்று விதமான உணர்வுகள் ஏற்பட்டது.
1 ஆச்சரியம் (பார்காததைப் பார்த்தல்).
2 ஞானம் இல்லாமையால் பயம் எனும் உணர்வு அருச்சுனனுக்கு ஏற்பட்டது. விஸ்வரூப காட்சியில் பகவானின் செயல்களைப் பார்த்து
அருச்சுனன் திகில் அடைகிறான். பகவானின் அழிவுத் தத்துவத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமையும் பயத்திற்கு காரணம் ஆயிற்று. பகவானின் விராட் விஸ்வரூப தர்சனத்தை தன்னில் வேறாக பிரித்துப் பார்த்ததால் அருச்சுனனுக்கு இந்த பயம் உண்டாயிற்று.
3 பயந்த அருச்சுனன் பகவானிடம் மீண்டும் பழைய நிலைக்கே காட்சி அளிக்க வேண்டுகிறான்.
பகவானும் விராட் விஸ்வரூப காட்சியிலிருந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணராக அருச்சுனனுக்கு காட்சி அளிக்கிறார்.
பகவான் அருச்சுனனைப் பார்த்து பயப்படாதே என்று கூறிய பின்பு அருச்சுனனுக்கு பகவான் மீது பக்தி ஏற்படுகிறது.
மேலும் அருச்சுனன், பகவானிடம் நான் உங்களை ஒரு நண்பனைப் போல் பேசி அவமதித்து விட்டேன்.
அதனால் என்னை மன்னித்தருள வேண்டுகிறான் அருச்சுனன். பகவானிடம் இடைவிடாத பக்தி செலுத்துதல்
மற்றும் யாரிடமும் பகைமை பாராட்டாமை போன்ற நற்குணங்கள் உள்ளவர்களே இது போன்ற விஸ்வரூப காட்சியை காண இயலும்,
மற்றவர்களால் இக்காட்சியை எளிதில் பார்க்க இயலாது என்று பகவான் அருச்சுனனுக்கு அருளினார்.

12 பக்தி யோகம்

இருபது சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை இரண்டு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.
1 பக்தியின் ஐந்து நிலைகள் மற்றும் பக்தி யோகத்தின் பலன்கள்.
2 பரா பக்தனின் இலக்கணம்.

பக்தி யோகத்தின் ஐந்து நிலைகள்
மாயை நீக்கிய பிரம்ம தத்துவத்தை புரிந்து கொண்டு பகவானை தியானிப்பது நிர்குண பக்தியாகும் (அருவ வழிபாடு).
அனைத்து பிரபஞ்சத்தை ஈஸ்வரனாகவே கருதி பகவான் மீது பக்தி செலுத்துவது விராட் பக்தியாகும் (இயற்கையை வழிபடுதல்).
தனக்கு பிரியமான உருவமுள்ள தெய்வத்தை தியானிப்பது, இஷ்ட தேவதா பக்தியாகும் (உருவ வழிபாடு).
கர்ம யோகத்தை செய்து கொண்டே ஈஸ்வரனிடம் பக்தி செலுத்துவது.
சில பக்தர்களின் மனது ஆசையால் நிரம்பியுள்ளதால், எல்லா செயல்களையும் பகவானின் பிரசாதம் என்ற
உணர்வுடன் போகங்களை அனுபவித்துக் கொண்டே பகவானிடம் பக்தி செலுத்துதல்.

பக்தி யோகத்தின் பலன்கள்
இறைவன் மீது நம்பிக்கையுடன் கூடிய தளராத பக்தி செலுத்துவதால், ஒரு சீவன் வாழம் பொழுதே
சீவ முக்தியும் (மன அமைதி & மனநிறைவு), சீவனின் உடல் அழிந்த பின்
விதேக முக்தி எனும் மறுபிறவி இல்லாமை எனும் பேரின்பம் கிடைக்கிறது.
சீவாத்மா, பரமாத்மாவுடன் கலப்பதே பக்தி யோகத்தின் பலனாகும்.

பர பக்தனின் இலக்கணம்
முதல் நிலையில் உள்ள நிர்குண பிரம்மத்தை உணர்ந்தவர்களே பர (மேலான) பக்தர்கள்.
வேதாந்த சாத்திரங்கள் துணையுடன் குருவின் மூலம் பிரம்மத்தை உணர்ந்த ஞானியே பகவானின் பரபக்தன் ஆவான்.
பரபக்தன் எவர்களையும் வெறுக்காதவன், என்றும் சமத்துவ குணத்துடன் விளங்குபவன். அவனே எனது பிரியமான பக்தன் ஆவான்.

13 ஷேத்ரம் ஷேத்ரக்ஞன் விபாக யோகம்

34 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை 1 ஷேத்திரம் (உலகம், உடல்கள்), 2 ஷேத்திரக்ஞன் (பகவான்),
3 புருஷன், 4 பிரகிருதி, 5 ஞானம், 6 நேயம் எனும் ஆறு தலைப்புகளில் விவரிக்கப்படுகிறது.

ஷேத்திரம்
விளைநிலத்திற்கும், பூமிக்கும் சேத்திரம் என்பர். பகவான் அகிலப் பிரபஞ்சத்தையே ஷேத்திரம் என்று கூறுகிறார்.
மனித சட உடலையும் பகவான் சேத்திரம் என்று கூறுகிறார்.

ஷேத்திரக்ஞன்
இந்த உடலை சேத்திரம் என்று அறிபவன் சேத்திரக்ஞன் ஆவார்.
ஷேத்திரக்ஞன் ஆகிய நான், ஈஸ்வரன் என அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை ஈஸ்வரனாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மா அனைத்து உடலுக்குள் இருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சேத்திரக்ஞனை நான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேத்திரக்ஞன் அனைத்து உயிரினங்களில் சாட்சியாக அறிமுகப்படுத்துகிறார் பகவான்.
இதுவே அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் ஆகும். ஷேத்திரத்தையும் ஷேத்திரக்ஞனையும் ஐக்கியப்படுத்துகிறார்
(சீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஐக்கியப்படுத்துகிறார்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

புருஷன்
ஷேத்திரக்ஞன் மற்றும் ஆத்மா ஆகிய சொற்கள் ”புருஷன்” என்பதைக் குறிக்கிறது.
அனைத்தும் ஒரே பொருளைத் தரும் சொல். புருஷன் இந்த உடலில் இருப்பதால், உடல் சுக – துக்கங்களை அனுபவிக்கிறது.

பிரகிருதி
பிரகிருதி எனும் சொல் மாயையைக் குறிக்கிறது. காரணப் பிரபஞ்சம் இவ்வுலகம், காரியமான பிரபஞ்சம் மாயை;
மாயையிலிருந்து வெளிப்பட்ட இந்த பிரபஞ்சமே பிரகிருதி எனப்படும்.

ஞானம் அடைய வழிகள்
ஞானம் என்பது சாதாரனமாக மனதில் தோன்றும் அறிவைக் குறிக்கும்.
ஞானத்தை அடைய இருபது சாதனைகள் செய்ய வேண்டும் என பகவான் அருள்கிறார்:
1 தற்பெருமையின்மை
2 தன்னிடமில்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை
3 எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்
4 சுக-சுக்கங்களை பொறுத்துக் கொள்ளுதல்
5 மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை
6 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பெரியோர்களுக்குப் சேவை செய்தல்
7 உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்
8 உள்ளத்தின் உறுதி
9 மனம் மற்றும் ஐம்புலன்களோடு கூடிய உடலை கட்டுப்படுத்துதல்
10 இவ்வுலக இன்பங்களில் பற்று அற்ற தன்மை
11 அகங்காரம் இல்லாமை
12 பிறப்பு – இறப்பு, மூப்பு, நோய் இவைகளை சிந்தித்தல்
13 மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை)
14 வேண்டியன – வேண்டாதனவாற்றை அடையும் போதும் எப்போதும் சமபாவனையுடன் இருத்தல்
15 யோகத்தின் மூலம் பிறழாத பக்தி
16 தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு
17 உலகியலில் ஈடுபாடு கொண்டவர்களிடம் விலகி இருத்தல்
18 அத்யாத்ம ஞானத்தில் என்றும் நிலைத்து நிற்றல்
19 தத்துவஞானப் பொருளான பரமாத்மாவையே தியானம் செய்தலே ஞானம் என்றும்
20 எது அதனில் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் எனும் அறியாமை என்று தெரிந்து கொள்வதே ஞானத்தை அடையும் வழிகளாகும்.

நேயம்
நேயம் எனில் நம்மால் அறியப்படுவது எனப் பொருள்.
எது அறிவதற்கு தகுதி உடைய விஷயம் எனில் பிரம்மம் ஒன்றே.

14 குணத்திரய விபாக யோகம்

27 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி விளக்கப்பட்டு,
பின் மாயையின் சத்துவம், ராஜசம் மற்றும் தாமசம் எனும் முக்குணங்களை விளக்குகிறார்.
மேலும் முக்குணங்களை கடந்த குணாதீதனின் இலக்கணத்தையும் உரைக்கிறார்.
முக்குணங்களைப் பற்றிய ஐந்து கருத்துக்களை கீழ்கண்டவாறு பகவான் விளக்குகிறார்.

முக்குணங்களின் இலக்கணம்
சத்வகுண இலக்கணம்:-
நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்),
துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை,
கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை),
தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

சத்துவ குணப் பலன்கள்:-
சத்துவ குணத்திலிருந்து தர்மச் செயல்கள்; தன் செயல்களை அனைத்தும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது;
பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும்,
நிவிருத்தி (முக்தி) மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.

இராட்சத குண இலக்கணம்,
ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர்,
தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம்,
தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் இராட்சத குணமாகும்.

இராட்சத குணப் பலன்கள்:-
இராட்சத குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம்,
கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

தாமச குண இலக்கணம்:-
காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம்,
கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல்
மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

தாமச குணப் பலன்கள்:-
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது.
தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில்
விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

முக்குணங்களால் பந்தப்படுதல்
சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச குணங்கள் மனிதர்களை எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

லிங்கம் (அடையாளம்)
முக்குணத்தை எவ்வாறு அடையாளம் (லிங்கம்) காண்பது என்று பகவான் விளக்குகிறார்.

பலன்கள்
தாமச குணம் சோம்பல் மற்றும் மயக்கத்தையும்,
இராட்சத குணம் கோபத்தையும் மற்றும் துக்கத்தையும்,
சத்துவ குணம் அறிவு மற்றும் ஆனந்தத்தையும் வழங்கும்.

வழி (கதி)
இம் முக்குணங்கள் கொண்டவர்கள் இறந்த பின் மறு பிறவியில், தாமச குணம் உடையவர்கள் மூடர்களிடத்திலும்,
இராட்சத குணம் உடையவர்கள் செயல் திறன் மிக்கவரிடத்திலும்,
சத்துவ குணம் உடையவர்கள் ஞானம் அறிந்தவர்களிடம் பிறக்கிறார்கள்.

முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம்
தாமசம், ராஜசம் மற்றும் சத்வம் எனும் முக்குணங்களைக் கடந்தவனே குணாதீதன் {ஞானி}ஆவான்.
குணாதீதன் அறிவு ஒளியாக, அனைத்துப் பொருட்களில் சமத்துவ நோக்குடன், வெறும் சாட்சியாக மட்டும் விளங்குவான்.

15 புருசோத்தம யோகம்

இருபது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் பகவான் அருள்கிறார்.
1 சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை.
2 பிரம்மமே அனைத்துமாக இருத்தல்.
3 பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்.

சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை
உபநிடதங்களில் வாழ்க்கைத் துயரத்தினை வர்ணித்துள்ளது. பிரம்மத்திலிருந்து தோண்றிய பிரபஞ்சம்
எப்போதும் காணப்படுவது போல் தோண்றினாலும், அது ஒரு காலத்தில் அழியக்கூடியேதே (மித்யா).
ஒருவனுக்கு உண்மையாக தெரியக்கூடிய பொருள், பொதுவான உண்மை அல்ல. துயரம் காலத்திற்குட்பட்டது.
பிரம்மம் மேலானது. துயரம் / சம்சாரம் எனும் மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதில்லை.
ஆனால் அந்த கண்ணுக்கு தெரியாத வேர்களே மரத்தினை காக்கிறது.
அதுபோல் கண்ணுக்கு தெரியாத பிரம்மம் சாதாரணமான கண்களுக்கு தெரிவதில்லை.
சம்சாரம் எனும் துயரமான மரத்தை வெட்ட வைராக்கியம், பற்றின்மை எனும் கோடாரியால் மட்டுமே வெட்ட இயலும்.
அவ்வாறு செய்தால்தான் முக்தி எனும் மோட்சம் கிடைக்கும். பக்தி யோகம் எனும் சாதனையால்
பிரம்மத் தியானம் செய்து வீடுபேறு அடையவேண்டும்.

பிரம்மமே அனைத்துமாக உள்ளார்
சீவனின் தன்மை விளக்கப்படுகிறது. பிரம்மம் சீவ வடிவாகவும், சூரிய – சந்திரர்களின் ஒளியாகவும் உள்ளது.
வயிற்றில் அக்னியாக இருந்து உணவை ஜீரணிக்கும் சக்தியாகவும் பிரம்மம் உள்ளது.

பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்
புருசோத்தமன் எனில் எல்லோரையும்விட மேலானவர் என்று பொருள். உத்தமபுருஷனே புருசோத்தமன்.
புருஷனை சர, அட்சர புருஷன் என்று பிரித்து பகவான் விளக்குகிறார்.
சர புருஷன் எனில் அழிகின்ற பிரபஞ்சத்தைக் குறிக்கும்.
அட்சர புருசன் எனில் இங்கு மாயையைக் குறிக்கும்.
உத்தமபுருஷன் எனில் பிரம்மத்தைக் குறிக்கும்.

16 தெய்வ அசுர சம்பத் விபாக யோகம்

இருபத்தி நாலு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில்,
1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்).
2 அசுர சம்பத் (தீய குணங்கள்) எனும் இரு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.

தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
1 மனம், மொழி, மெய் இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் செய்யாமை.
2 மனமறிந்த உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தல்.
3 செயல்களை செய்யும் போது, இது நான் செய்கிறேன் எனும் இறுமாப்பின்மை,
4 கோபமின்மை,
5 மனதை அலைபாயாமல் நமது கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாக இருத்தல்,
6 பிறறை பழியாமை, குறை கூறாமை
7 புலன் நுகர்பொருட்களில் பற்றின்மை,
8 உயிரினங்களிடம் பரிவு,
9 பொலிவு,
10 பொறுமை,
11 மனஉறுதி,
12 புறத்தூய்மை,
13 பகைமை பாராட்டாமை மற்றும்
14 கர்வம் கொள்ளாமை போன்ற
இந்த நற்குணங்கள் அனைத்தும் தெய்வீக குணங்கள் (சம்பத்துக்கள்) என்று பகவான் கூறுகிறார்.

அசுர சம்பத் (தீய குணங்கள்)
பேராசை எனும் காமம், கோபம், பகட்டுத்தனம், ஆடம்பரம், தற்பெருமை, இறுமாப்பு, வெறுப்புணர்வு போன்ற
தீய குணங்கள் படைத்தவர்களே அசுர குணம் (சம்பத்) உடையவர்கள்.
இவர்கள் காமம், கோபம், பேராசை எனும் நரகத்தின் மூன்று வாயில் வழியாகச் செல்வார்கள்.
எனவே செய்யத்தக்கச் செயல்கள், செய்யத் தகாத செயல்கள் என்று எவைகள் சாத்திரங்கள் கூறியுள்ளதோ
அதன்படி நமது செயல்கள் அமைய வேண்டும்.

17 சிரத்தாத்திரய விபாக யோகம்

இருபத்தி எட்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் மூன்று சிரத்தைகளை (நம்பிக்கைகள்) இரண்டு தலைப்புகளில் விளக்கப்படுகிறது.
1 சிரத்தையின் பண்புகள் விளக்கப்படுகிறது.
2 ஓம் தத் சத் என்பதன் பொருள் விளக்கப்படுகிறது.

சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள்
மனிதர்களுக்குள் முக்குணங்களுடன் கூடிய சிரத்தைகள் (நம்பிக்கைகள்) உண்டு.
அவை சத்துவ குண சிரத்தை, ரஜோகுண சிரத்தை மற்றும் தாமசகுண சிரத்தை ஆகும்.
எந்த மனிதன் எந்த சிரத்தையுடன் கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே.
சத்வ குணத்துடன் கூடிய சிரத்தையே இறைவன் விரும்புவார்.

சத்துவ குணம் நிறைந்த மக்கள் தேவர்களையும்,
ரஜோ குணமுடையவர்கள் யட்சர் மற்றும் அரக்கர்களையும்,
தமோ குணமுடையவர்கள் பூதப் பிரேதங்களை வழிபடுகிறார்கள்.

எந்த மனிதர்கள் சாத்திர விதிமுறைகளை மீறி, கொடிய தவம் செய்கிறார்களோ, ஆடம்பரம், அகங்காரம் இவற்றோடு
பேராசை, விருப்பம், மற்றும் உடல் வலிமை – இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ,
மனிதர்களையும், இறைவனையும் துன்புறுத்துகிறார்களோ, அவர்களை அசுரப் பண்புடையவர்கள் ஆவர்.

முக்குணங்களுடன் கூடியஉணவு, யாகம், யக்ஞம், தவம், தானம் ஆகியவற்றில்
சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தை எனும் முக்குணங்கள் மூலம் செய்யப்படுகிறது.
இவற்றில் சத்துவ சிரத்தையுடன் செய்யப்படும் செயல்களே இறைவனை மகிழ்விக்கும்.
சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தையுடன் உடல், வாக்கு, மனம் மூலம் செய்யப்படும்
தவத்தில் இறைவனுக்கு சத்துவ சிரத்தையுடன் கூடிய தவமே சிறந்தது.

ஓம் தத் ஸத்

ஓம் தத் ஸத் என்று மூன்று விதமாக சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய குணங்களை குறிக்கும்.
ஓம் என்பது ஈஸ்வரனை குறிக்கும். தத் என்பதும் இறைவனை குறிக்கும். ஸத் என்பதும் இறைவனை குறிக்கும்,
அத்துடன் நல்லது என்பதையும் குறிக்கும்.
ஒரு செயலை செய்யத் துவங்கும் போது ஓம் தத் சத் என்று மனதில் கூறி தொடங்க வேண்டும்.
நம்பிக்கையின்றி பகவானுக்காக செய்யப்படும் நற்செயல்களான யாகம், யக்ஞம், ஜெபம், தவம், தானம்
ஆகியவைகள் அஸத் (சடத்தன்மை) ஆகும்.
எனவே நம்பிக்கை இன்றி செய்யும் அச்செயல்கள் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்காதவைகளே ஆகும்.

18 மோட்ச சந்நியாச யோகம்

72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை கீழ்கண்ட ஆறு தலைப்பின் கீழ் விளக்கப்படுகிறது.
1 சந்நியாசம், சந்நியாசத்தின் பலன்கள்,
2 முக்குணங்களுடன் கூடிய தியாகம், தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம்,
கருமத்தின் தன்மைகள், கர்த்தா(செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம்
3 கர்ம யோக சாரம், வர்ணாசிரம தர்மங்கள்
4 பக்தி யோக சாரம்,
5 ஆத்ம ஞானம் அடையும் வழிகள்,
6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்),
7 முடிவுரை.

சந்நியாசம்
வாழ்கையில் வெறுப்பு அடையாது, மனநிறைவுடன் மேற்கொள்வதே சந்நியாசம் எனும் துறவறம் ஆகும்.
கர்மங்களினால் வரும் புண்ணியத்தை துறப்பது கர்மபல சந்நியாசம் என்பர்.
இவ்வாறு புண்ணியத்தை துறப்பதால் நமக்கு விவேகம், வைராக்கியம் மற்றும் முமுச்த்துவம் எனும்
பிரம்மத்தைப் பற்றிய அறிவுத் தேடலில் ஆர்வம் பிறக்கும்.

மேலும் வேதாந்தங்களை கேட்கும் ஆர்வம் மனதில் வரும். இதன் பயனாக ஆத்மாவாகிய
”நான்” எந்த செயலை செய்வதில்லை என்ற ஞானம் (அறிவு) ஏற்படுகிறது.
இதனால் “நான் செயல் செய்கிறேன்” என்ற எண்ணம் துறக்கப்படுகிறது. இதற்கு கர்த்துருத்துவ சந்நியாசம் என்பர்.
இதனால் ”நான்” எனும் ஆத்மா எந்த செயலை செய்பவனும் அல்ல என்றும்
செயலின் பயனை அனுபவிப்பவனும் அல்ல என்ற அறிவு மனதில் பிறக்கிறது.

வர்ணாசிரம தர்ம கடமைகள்
சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்களின் அடிப்படையில்
அனைத்து சீவர்களும் வர்ணாசிரம தர்மத்தின்படி பிரிக்கப்படுகின்றனர்.

கர்ம யோக சாரம்
நமது செயல்கள் அனைத்தும் பகவானை முன்னிட்டு செய்வதே கர்ம யோகமாகும்.
நமது செயல்கள் பகவானுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல் வேண்டும்.
வேள்வி, தானம், தவம் எனும் செயல்களை துறக்கக்கூடாது.

ஆனால் விலக்கப்பட்ட செயல்களையும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களையும் துறக்க வேண்டும்.
ஆனால் சாத்திரங்கள் விதித்த செயல்களை செய்யாமல் இருப்பது தகாது.
எனவே அறியாமையால் அச்செயல்களை செய்யாமல் இருப்பது தாமசத் தியாகம் ஆகும்.
(இங்கு தியாகம் எனில் விட்டு விடுதல் என்று பொருள்)
துன்பம் வரும் எனக்கருதி, செய்ய வேண்டிய செயலை, செய்யாமல் இருப்பது ராஜசத் தியாகம் ஆகும்.
பற்றையும் பயனை கருதாமல் செய்யும் செயலே சாத்வீகமான தியாகம் ஆகும்.
இதே போன்று முக்குணங்களுடன் கூடிய தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம்,
கருமத்தின் தன்மைகள், கர்த்தா (செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் ஆகியவைகளைப் பற்றி பகவான் விளக்குகிறார்.

செயலின் பயனைத் துறக்காதவர்களுக்கு செயலினால் வரும் பாவ – புண்ணியம் மேலும் இரண்டும் கலந்த மூன்றுவிதமான
பயன் இறந்தபின் உறுதியாக கிடைக்கிறது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் கிட்டாது.
எனவே கர்ம பலனை துறந்தவனுக்கு மறு பிறவி இல்லை.

பக்தி யோக சாரம்
பகவானின் அருளினால் மட்டுமே ஒருவன் மோட்சத்தை அடையமுடியும். ஒருவன் அகங்காரத்துடன் செயல்பட்டால் அழிந்துவிடுவான்.
பக்தி நம் மனதை பக்குவப்படுத்தும். ஒருவன் மற்ற சாதனைகளை (தர்மங்களை) கைவிட்டாலும்,
முடிவின் இலக்கை அடைய பகவான் மீது செலுத்தும் பக்தி அவசியமானது.

ஞான யோக சாரம்
சுத்தமான புத்தியுடன் மற்று உறுதியுடன் தன் மனதை அடக்கி, ஐம்புல விஷயங்களிலிருந்து மனதை நீக்கி,
விருப்பு வெறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
தனிமையில் சிறிதளவே உண்டு, நாக்கையும், மனதையும் அடக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் ஈடுபட்டு,
வைராக்கியத்தை மேற்கொண்டு; அகங்காரம், உடல் பலம், ஆணவம், ஆசை, வெறுப்பு, பற்று ஆகிய
தீய குணங்களை விட்டொழித்து, மமகாரமற்று தன்னில் மனநிறைவைப் பெற்றவனே பிரம்ம நிலைக்கு உயர தகுதி பெறுகிறான்.
பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகிவிடுகிறான்; அவன் எதற்கும் வருந்துவதில்லை; ஆசைப்படுவதில்லை;
எல்லா உயிரிடத்திலும் சமநோக்குடன் இருப்பான்; அவன் பகவானிடம் அதிகமான பக்தியையும் பெறுகிறான்.

நிதித்யாசனம் (ஆத்ம தியானம்)
ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களை துறந்து, தனிமையில் ஆத்மாவை தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும்.

ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ – புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து,
பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவான்.

முடிவுரை

இந்த அரிய உபதேசத்தை தவம் உடையவர்களுக்கு மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன்,
இந்த கீதா சாத்திரத்தை கேட்டவர்களும், படித்தவர்களும் வீடுபேறு அடைய புண்ணியம் செய்தவர்களாகி விடுகின்றனர்
என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

இறுதியாக பகவானின் உபதேசத்தின் மூலம் அருச்சுனன் தன் மனக் கலக்கம் நீங்கியது என்று கூறி,
பகவான் கிருஷ்ணரின் ஆணையை நிறைவேற்றுவதாக கூறினான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

————–

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 315-390-திரு நாமங்கள்–

December 10, 2021

(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)

————

315. க்ரோதக்னே நமஹ (Krodhaghne namaha)

ஆயிரம் தோள்கள்கொண்ட அரசனான கார்த்தவீரியார்ஜுனன், மாகிஷ்மதி என்ற பகுதியை ஆண்டுவந்தான்.
அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வேளையில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் உள்ள
காமதேனு பசுவைக் கண்டான். அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கார்த்தவீரியார்ஜுனன்,
தனது ஆட்களை அனுப்பி, காமதேனுவைப் பலவந்தமாக இழுத்து வரச் செய்தான்.
காமதேனுவை அடித்துத் துன்புறுத்தி அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள் அரசனின் ஆட்கள்.

இதைக் கண்டு கோபம்கொண்டு எழுந்த பரசுராமர், கையில் கோடாரியை ஏந்தியபடி கார்த்தவீரியார்ஜுனனோடு போர்புரிந்து,
அவனது ஆயிரம் தோள்களையும் துண்டித்தார். அவரைப் பழிவாங்க நினைத்த கார்த்தவீரியார்ஜுனனின் மகன்கள்,
பரசுராமர் இல்லாத நேரத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று,
அவரது தலையைக் கொய்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

வீடு வந்த பரசுராமர், நடந்தவற்றை அறிந்து, வெகுண்டு, அறவழி தவறி நடக்கும் அனைத்து அரசர்களையும்
அழிப்பது எனத் தீர்மானித்தார். கையில் கோடாரியை ஏந்தியபடி இருபத்தோரு தலைமுறை மன்னர்களை மொத்தமாக அழித்து விட்டார்.
உலகை ஆண்ட அனைத்து மன்னர்களையும் வென்றுவிட்டதற்கு அடையாளமாக,
பெரிய அசுவமேத வேள்வியை நடத்தினார் பரசுராமர். அந்த வேள்வியை நடத்தி வைப்பதற்குக் காசியபர்
உள்ளிட்ட பெரிய முனிவர்களை எல்லாம் வரவேற்றார். மிகச்சிறப்பான முறையிலும்
பிரம்மாண்டமாகவும் வேள்விக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

அசுவமேத வேள்விக்குரிய குதிரையை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் படி ஆட்களை அனுப்பினார் பரசுராமர்.
“அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உலகில் மீதம் இருந்தால், இந்தக் குதிரையைக் கைப்பற்றி
என்னுடன் போர் புரிய வாருங்கள்! அல்லது, நீங்கள் இங்கு வந்து என்னிடம் சரண் அடைந்து,
உங்களது அரசை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்!” என்று
எச்சரிக்கை விடுத்தார் பரசுராமர்.

எந்த அரசரும் பரசுராமரை எதிர்க்கத் துணியாத நிலையில், உலகம் அனைத்தும் பரசுராமரின்
கட்டுப்பாட்டுக்குள்ளே வந்து விட்டது. காசியபர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் நல்ல முறையில்
பரசுராமரின் அசுவமேத வேள்வியை நிறைவு செய்து கொடுத்தார்கள்.வேள்வி நிறைவடைந்தவாறே,
காசியபர், பரசுராமரைப் பார்த்து, “பரசுராமரே! இனியாவது உங்களது கோபம் தணிய வேண்டும்!
உலகுக்கு நன்மைகள் நடக்க நீங்கள் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

பரசுராமர், “காசியபரே! அரசகுலத்தை அழிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
ஆனால் வேதம் வல்ல முனிவரான என் தந்தையைக் கார்த்தவீரியார்ஜுன மன்னனின் மகன்கள் கொன்றார்கள்.
அவர்கள் மட்டுமின்றி, பூமியை ஆண்டு வந்த மேலும் பல மன்னர்களும் முனிவர்களை அவமதித்தார்கள்.
அறநெறியை மறந்தார்கள். கொடுங்கோலாட்சி புரிந்தார்கள். அவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தனை காலம் கையில் மழு ஏந்தி அந்த மன்னர்களுக்கு மரண தண்டனை கொடுத்தேன்.
இனி உலகில் அமைதி நிலவட்டும்!” என்று சொன்னார்.

அதன்பின், அசுவமேத வேள்வியை நடத்தித் தந்த காசியப முனிவரிடம் அனைத்து உலகின்
ராஜ்ஜியத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார் பரசுராமர்.
“நீங்களும் மற்ற முனிவர்களும் சேர்ந்து பூமியில் சுபிட்சம் நிலவச் செய்யுங்கள்!” என்றார் பரசுராமர்.

“தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். தாங்களும் கோபம் தணிந்தவராய், சாந்தம் அடைய வேண்டும்!” என்று
காசியபர் பிரார்த்திக்கவே, தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார் பரசுராமர்.
‘க்ரோத:’ என்றால் கோபம் என்று பொருள். ‘க்ரோதஹா’ என்றால் கோபம் தணியப்பெற்றவர் என்று பொருள்.

காசியப முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கோபம் தணியப் பெற்றவராகப் பரசுராமர் திகழ்ந்தபடியால்,
‘க்ரோதஹா’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 315-வது திருநாமம்.

“க்ரோதக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கோபம் அனைத்தும் விரைவில் தணிந்து,
மனதில் சாந்தி நிலவும்படி திருமால் அருள்புரிவார்.

————-

316. க்ரோத க்ருதே நமஹ (Krodhakruthe namaha)

அரங்கத்தை அடைந்து அரங்கனைப் பணிந்தார் வேதாந்த தேசிகன் என்ற மகான்.
அப்போது தேசிகனின் மனத்திலே ஒரு காட்சியைக் காட்டினான் திருவரங்கன்.
திருவரங்கம் என்ற திருத்தலமே ஒரு நாடக அரங்கம். அந்த அரங்கத்தில் நடிக்கும் கதாநாயகன் அரங்கநாதப் பெருமாள்.
கதாநாயகி ஸ்ரீரங்கநாயகித் தாயார். அரங்கனும் ரங்கநாயகித் தாயாரும் பத்து விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று
அந்த அரங்கத்திலே நடித்துக் காட்டுகிறார்கள்.
அரங்கன் ஏற்று நடித்த அந்தப் பத்து கதாப்பாத்திரங்களே நாம் பிரசித்தமாகப் போற்றும் தசாவதாரங்கள் ஆகும்.

இக்காட்சியை மனக்கண்ணால் கண்ட தேசிகனுக்கு, அந்த அவதாரங்களை எல்லாம் துதிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது.
அதனால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு ஸ்லோகம் வீதம் பத்து ஸ்லோகங்கள் பாடி தசாவதாரத்தையும் துதித்தார் தேசிகன்.
தசாவதார ஸ்தோத்ரம் என்று அத்துதி அழைக்கப்படுகிறது. அதைக் கேட்டு மகிழ்ந்த அரங்கன்,
“வேதாந்த தேசிகரே! பத்துப் பாடல்களால் என் பத்து அவதாரங்களைத் துதித்தீர்கள்!
இப்போது அவற்றைத் தொகுத்து ஒரே பாடலில் என் பத்து அவதாரங்களையும் பாடுவீராக!” என்றான்.
அரங்கனின் ஆணையை ஏற்று அவனருளால் ஒரு ஸ்லோகத்தை இயற்றினார் வேதாந்த தேசிகன்:

“இச்சாமீன! விஹாரகச்சப! மஹா போத்ரின்! யத்ருச்சாஹரே!
ரக்ஷாவாமன! ரோஷராம! கருணாகாகுத்ஸ்த! ஹோலாஹலின்!
க்ரீடாவல்லவ! கல்கவாஹனதசாகல்கின்! இதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புனந்தி புவனம் புண்யௌக பண்யாபணா:”
பத்து அவதாரங்களிலும் இறைவனிடம் எந்தெந்த குணங்கள் பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டனவோ,
அந்த குணங்களையே அந்தந்த அவதாரங்களுக்கு அடைமொழிகள் ஆக்கி இதில் தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சா மீன – உன் விருப்பத்தால் மீனாய் அவதரித்த பிரானே!
விஹார தச்சப – விளையாடல் புரிவதற்காக ஆமை ஆனவனே!
மஹா போத்ரின் – மாபெரும் வடிவம் கொண்ட பன்றியாய்த் தோன்றியவனே!
யத்ருச்சா ஹரே – எதிர்பாராத நேரத்தில் சடக்கெனத் தோன்றிய நரசிம்மனே!
ரக்ஷா வாமன – உலகை எல்லாம் காப்பதற்காக வாமனமூர்த்தி ஆனவனே!
ரோஷ ராம – ரோஷம் எனப்படும் கோபம் கொப்பளிக்க, பரசுராமனாகக் கையில் மழுவுடன் தோன்றியவனே!
கருணா காகுத்ஸ்த – கருணையே வடிவெடுத்த ஸ்ரீராமனே!
ஹேலா ஹலின் – கலப்பையை வைத்து விளையாடிய பலராமனே!
க்ரீடா வல்லவ – லீலைகள் செய்வதற்
காகவே அவதரித்த கண்ணனே!
கல்கவாஹன தசா கல்கின் – வெண்குதிரை யில் ஏறி பவனி வரப்போகிற கல்கியே!

“இப்படிப் பத்து அவதாரங்களின் பெயர்களையும் தினந்தோறும் வாயாரச் சொல்லி, புண்ணியத்தைச்
சம்பாதித்துக் கொண்ட மனிதர்களாலே இந்த உலகம் தூய்மை அடைகிறது!” என்று ஸ்லோகத்தை முடித்தார் தேசிகன்.

அரங்கனும் மனம் மகிழ்ந்து தன் திருவருளைப் பொழிந்தான்.இத்துதியில் ஒவ்வொரு அவதாரத்திலும்
இறைவன் காட்டிய பிரதானமான குணங்களைப் பட்டியலிடும் தேசிகன்,
பரசுராம அவதாரத்தில் ரோஷம் எனும் கோபமே பிரதானமான குணமாக இருந்ததாகக் காட்டியுள்ளார்.

கோபம் என்பது தீய குணம் அல்லவா? அதைப் போய் முக்கியக் குணமாகக் கொண்டாடலாமா? என்ற கேள்வி எழலாம்.
அதற்கு விடை யாதெனில், தீய சக்திகள் மீது இறைவனுக்கு வரும் கோபம் தீய குணம் அல்ல.
அறநெறி தவறி, தீய வழியில் ஆட்சிபுரிந்த அரசர்களை அழித்துப் பூமியில் நன்னெறியை நிலைநாட்டும் பொருட்டுப்
பரசுராமர் கோபம்கொண்டதால், அக்கோபமும் கூடப் பூமிக்கு நன்மையையே செய்தது.‘க்ரோத’: என்றால் கோபம்.

‘க்ருத்’ என்றால் செயல் செய்பவர். நன்னெறி தவறிய மன்னர்கள் மீது கோபம் (க்ரோத) கொண்டு,
அவர்களை அழிப்பதாகிய செயலைப் புரிந்த (க்ருத்) பரசுராமர் ‘க்ரோதக்ருத்’ என்றழைக்கப்படுகிறார்.
‘க்ரோதக்ருத்’ என்றால் கோபத்தைக் காட்டியவர் அல்லது கோபத்துடன் செயல்புரிந்தவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 316-வது திருநாமம்.
“க்ரோதக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களின் வாழ்வில் வரும் துயரங்கள் மீது
திருமால் கோபம் கொண்டு, அவற்றைப் போக்கி அருள்வார்.

—————

317. கர்த்ரே நமஹ (Karthre namaha)
(திருநாமங்கள் 317 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன்.
அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
அது ராவணனின் கூடாரத்தையே மூழ்கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று
திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான்.
அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

ஆயிரம் தோள் படைத்த அந்த மனிதன்தான் கார்த்த வீரியார்ஜுனன்.
நர்மதையில் வெள்ளம் வரக் காரணமானவனும் அவனே. தனது மனைவிகளோடு நர்மதையில் நீராட வந்த அவன்,
தனது ஆயிரம் கைகளையும் நதியின் குறுக்கே விரித்தான். அதனால் நதியின் நீரோட்டம் தடைப்பட்டு விட்டது.
தன் மனைவிகளோடு ஆனந்தமாக நீராடி முடித்தபின், நீரோட்டத்தை அடைத்து வைத்திருந்த ஆயிரம் கைகளையும் அங்கிருந்து எடுத்தான்.
அடுத்த நொடியே மடைதிறந்த வெள்ளமாக ஆற்றுநீர் பெருகி வந்து கரையில் இருந்த ராவணனின் கூடாரத்தை அழித்துவிட்டது.

இதை உணர்ந்துகொண்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கார்த்தவீரியார்ஜுனன் மீது பாய்ந்தான்.
இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையிலே ராவணனை எளிதில் வீழ்த்திய கார்த்த வீரியார்ஜுனன்,
அவனை ஒரு கயிற்றால் கட்டித் தன் நகருக்குள் அழைத்து வந்து, “மக்களே! இந்தப் பத்துத்தலைப் பூச்சியைப் பாருங்கள்!”
என்று ராவணனை ஏளனம் செய்தான். இதிலிருந்து கார்த்த வீரியார்ஜுனன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை நாம் அறியலாம்.

ராவணனையே எளிதில் வெல்லக் கூடிய இத்தகைய பலம் பொருந்திய கார்த்த வீரியார்ஜுனன்,
ஒருமுறை காட்டில் வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின் ஆசிரமத்துக்கு வந்தான்.
அவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் காமதேனு எனும் பசுவின் துணையோடு விருந்தளித்தார் ஜமதக்னி முனிவர்.
இதைக் கண்ட கார்த்த வீரியார்ஜுனனுக்கு அந்தக் காமதேனுவின் மீது ஆசை வந்து விட்டது.
அதை அபகரிக்கப் பார்த்தான். காமதேனுவின் திருமேனியில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள்
தோன்றிக் கார்த்தவீரியார்ஜுனனின் சேனையைத் துவம்சம் செய்தார்கள்.

ஆனால் கார்த்தவீரியார்ஜுனன், தன் வலிமையைப் பயன்படுத்திப் பலவந்தமாகக் காமதேனுவை அபகரித்துச் சென்றான்.
வனம் சென்றிருந்த பரசுராமர், ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, காமதேனுவைக் காணவில்லை.
நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கேட்டறிந்த பரசுராமர், கையில் மழு எனப்படும் கோடாரியை ஏந்திக்கொண்டு
ஆயிரம் தோள்படைத்த கார்த்த வீரியார்ஜுனனை எதிர்த்துப் போரிடச் சென்றார்.

பரசுராமர் தன்னைத் தாக்க வருவதை அறிந்துகொண்டான் கார்த்த வீரியார்ஜுனன்.
முனிவரை எதிர்த்துப் போரிடு வது மன்னனான தனக்கு இழுக்கு என்று கருதிய அவன்,
தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் பரசுராமரை எதிர்த்துப் போர் புரியச் சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் துவம்சம் செய்தார் பரசுராமர்.தன்கீழ் உள்ள சிற்றரசர்களை எல்லாம் இழந்த
கார்த்தவீரியார்ஜுனன், கர்வத்தால் மார்தட்டிக்கொண்டு, பெருத்த ஆரவாரத்துடன், தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு
வந்து பரசுராமரைத் தாக்க முயன்றான். ஆனால் அவன் செலுத்திய பாணங்கள் பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் பரசுராமரோ, அவனது மலைபோன்ற ஆயிரம் கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தி,
அவனை வதம் செய்தார். இதைத் திருமங்கை ஆழ்வார்,
“தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்!”என்று பாடுகிறார்.
அதன்பின் தனது காமதேனுவை மீண்டும் ஆசிரமத்துக்கு மீட்டு வந்தார்.
‘கர்த்தா’ என்றால் (இவ்விடத்தில்) வெட்டிச் சாய்ப்பவர் என்று பொருள்.
யாராலும் வெல்ல முடியாதவன் என்றுபுகழப்பட்டவனும், ஆயிரம் தோள்கள் கொண்டவனுமான
கார்த்த வீரியார்ஜுனனையே அனாயாசமாக வெட்டிச் சாய்த்தபடியால், பரசுராமர் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 317-வது திருநாமம்.
“கர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
வாழ்வில் ஏற்படும் தடங்கல்களை எல்லாம் திருமால் வெட்டிச் சாய்ப்பார்.

———————

318. விச்வபாஹவே நமஹ (Vishwabaahave namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள மங்கை நாடு எனப்படும் குறுநிலத்துக்கு மன்னரான மங்கை மன்னர்,
திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற தேவலோகப் பெண்ணைக் கண்டார்.
அவள் அழகிலே மையல்கொண்டு, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தார்.
குமுதவல்லியோ, “தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்திருக்கும் திருமால் அடியவரையே
நான் மணந்துகொள்வேன்! என்னை மணந்துகொள்ள விரும்பினால் நீங்களும்
அத்தகைய வைணவ அடையாளத்தோடு வாருங்கள்!” என்றாள்.

தோள்களில் சங்கு சக்கரப்பொறியை முறைப்படி குரு மூலமாகப் பெறவேண்டும்.
ஆனால் அப்போது இருந்த குருமார்கள் யாரும் மங்கை மன்னருக்கு இச்சடங்கைச் செய்ய முன்வரவில்லை.
வேறு புகலற்றவர்களுக்கு இறைவன்தானே புகலிடம்? அதனால், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும் நிவாசப் பெருமாளிடம் வந்தார் மங்கை மன்னர்.
“என் தோள்களில் சங்கு சக்கரப்பொறிகளை ஒத்தி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய நிவாசன், தன் கரங்களில் பிடித்திருக்கும் சங்கு சக்கரங்களை
அப்படியே மங்கை மன்னரின் தோள்களில் ஒத்தி, அவருக்குத் திருமால் அடியார் என்ற அங்கீகாரத்தைத் தந்தார்.
குமுதவல்லியின் நிபந்தனையை நிறைவேற்றியதால், அவளை வெற்றிகரமாக மணந்துகொண்டார் மங்கை மன்னர்.

அதன்பின், குமுதவல்லி இட்ட கட்டளைப்படி தினசரி ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம்
செய்து வந்த மங்கை மன்னர், திருமாலிடமே நேரடியாக எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்று,
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ‘திருமங்கை ஆழ்வா’ராக விளங்கினார் என்பது நாம் அறிந்த வரலாறாகும்.
திருமாலிடம் மந்திர உபதேசம் பெற்று ஆழ்வாராக ஆனபின், ஆடல்மா எனும் குதிரையில் குமுதவல்லியோடு
நாச்சியார்கோவில் திருத்தலத்துக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார்.
தனக்கு முதன்முதலில் வைணவ முத்திரைகளைத் தோளில் தந்த அந்தப் பெருமாளைப் பார்த்து,
அப்பெருமானின் பரசுராம அவதாரத்தை நினைவு கூர்ந்து,

“முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னர் உடல்துணிய
தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே!”என்ற பாடலைப் பாடினார்.
“பரசுராம முனிவராக அவதாரம் செய்து, கையில் மழு ஏந்தி, இருபத்தொரு தலைமுறை மன்னர்
களைத் தொலைத்தவன் நீயே!” என்று நாச்சியார்கோவில் நிவாசப்பெருமாளைப் பார்த்துச் சொன்னார் திருமங்கை ஆழ்வார்.
“திடீரெனப் பரசுராம அவதாரத்தைக் குறிப்பிடக் காரணம் யாதோ?” என வினவினார் ஸ்ரீநிவாசன்.

திருமங்கை ஆழ்வார், “பரசுராம அவதாரத்தில் நீ உன் கைகளால் எத்தனையோ மன்னர்களை அழித்தாய்.
ஆனால் உன் சுயநலத்துக்காக அதை நீ செய்யவில்லை. அறநெறி தவறி நடந்த அந்த மன்னர்களை அழித்து
உலகுக்கு நன்மையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நீ அவர்களை அழித்தாய்.
எனவே அந்த அவதாரத்தில் உனது வலிமையான கைகளை நீ உனக்கென்று பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உலக நன்மைக்காகப் பயன்படுத்தினாய்.அதுபோலத் தான் இங்கே ஸ்ரீநிவாசனாகக் கோவில்கொண்ட நிலையிலும்,
உன் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களாகிய ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தி,
என் தோள்களிலே சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்து, என்னை ஒரு பக்தனாக ஆக்கிவிட்டாய்!இறைவா!
பரசுராம அவதாரத்தில் உன் கரங்களை உலகின் நன்மைக்குப் பயன்படுத்தியது போல்,
இங்கே உன் ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தினாய் அல்லவா?
அதனால்தான் பரசுராமனாகவே உன்னை அநுபவித்துப் பாடினேன்!” என்றார்.
புன்னகை பூத்து அதை ஆமோதித்தார் ஸ்ரீ நிவாசப் பெருமாள்.

‘விச்வம்’ என்றால் உலகம். ‘விச்வஸ்மை’ என்றால் உலகுக்காக. ‘பாஹு:’ என்றால் கரம்.
‘விச்வஸ்மை + பாஹு: = விச்வபாஹு:’. உலகின் நன்மைக்காகவே கரத்தை உடையவனுக்கு ‘விச்வபாஹு:’ என்று பெயர்.
பரசுராமர், தனது திருக்கரங்களை உலகின் நன்மைக்கென்றே அர்ப்பணித்துப் பயன்படுத்திய படியால், ‘விச்வபாஹு:’ –
‘உலகுக்காகவே கரங்களை வைத்திருப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வபாஹு:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 318-வது திருநாமம்.
“விச்வபாஹவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவரையும் திருமால் கைகொடுத்துக் காப்பாற்றுவார்.

——————

319. மஹீதராய நமஹ (Maheedharaaya namaha)

அடியேன் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்த போது, எங்களின் கண்மருத்துவப் பேராசிரியர்
ஒருமுறை அடியேனிடம் ஒரு கேள்வி கேட்டார். “சுவிட்சர்லாண்டில் மத்திய ஐரோப்பிய அணு ஆராய்ச்சியின்
தலைமையகம் உள்ளது. அங்கே அணுத்துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, அவை
உருவாவதையும் அழிவதையும் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். அணுத்துகள்கள் பற்றிய இந்த ஆராய்ச்சியின் மூலமாக
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிய முயல்கிறார்கள்.
இத்தகைய அணுத்துகள் ஆராய்ச்சியகத்தின் வாசலில் யாருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” என்று அடியேனிடம் கேட்டார்.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓப்பன்ஹைமர், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளில் யாராவது ஒருவரின் சிலை வைக்கப்பட்டிருக்கலாம்!”
என்று அடியேன் சொன்னேன். ஆனால் பேராசிரியர், “இல்லை! இல்லை! அங்கே சிதம்பரம் நடராஜப் பெருமானின் சிலை
ஆறு அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது!” என்றார். ஒரு நிமிடம் அசந்து போனேன்.
“நடராஜர் சிலைக்கும் அணுத்துகள் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு?” என்று அடியேன் கேட்டேன்.

பேராசிரியர், “அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரிட்ஜாஃப் கேப்ரா (Fritjof Capra) என்ற விஞ்ஞானி,
‘த டாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதன் பதினொன்றாம் பக்கத்தில் சிதம்பரம் நடராஜருக்கும் அணுத்துகள் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார்:

நடராஜரின் வலக்கையில் உடுக்கை இருப்பதைக் காணலாம். அந்த உடுக்கையில் இருந்து எழும் ஒலி
அணுத்துகள்களின் படைப்பைக் குறிக்கிறது. அவரது இடக்கையில் நெருப்பு இருப்பதைக் காணலாம்.
அது அணுத்துகள்களின் அழிவைக் குறிக்கிறது. சுவிட்சர்லாண்டு ஆராய்ச்சியின்படி, எவ்வளவு அணுத்துகள்கள் உருவாகின்றனவோ,
அதே சம அளவில்தான் அணுத்துகள்கள் அழிகின்றன என்று கண்டார்கள். அதை உணர்த்தும் விதமாகவே,
நடராஜரின் வலக்கையில் உள்ள உடுக்கையும், இடக்கையில் உள்ள நெருப்பும் சம அளவில் இருப்பதைக் காணலாம்.

இந்த அணுத்துகள்களின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நடுவே நடைபெறும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமானது,
சீராக நடைபெறுகிறது அல்லவா? சீராக நடைபெறும் பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜரின் சீரான நடனமாக
வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.அணுத்துகள் விஞ்ஞானத்தைப் பாமரனும் புரிந்துகொள்வதற்கு
நமது முன்னோர்கள் தந்த வடிவமே நடராஜரின் உருவமாகும்!
சிதம்பரத்தில் நடராஜருக்கு எதிரே கோவிந்தராஜப் பெருமாள் சயனித்திருக்கிறார் அல்லவா?
அந்தத் திருமால் இந்த உலகைப் படைத்து, அதைச் சீராக நடத்திச் செல்லும் பாங்கை
அவருக்கு எதிரே நடனமாக ஆடிக் காட்டுகிறார் சிவபெருமான்!” என்று விளக்கினார்.

“ஆம்! நடனம் எப்படிச் சீராக இருக்குமோ, அவ்வாறே இந்த உலகின் இயக்கமும் சீராகவே உள்ளது.
ஒரு நாள் என்றால் இருபத்து நான்கு மணிநேரம், ஒரு வருடம் என்றால் முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்கள்
என அனைத்தும் ஒரு ‘ரிதமோடு’ (rhythm) இயங்குகிறது.
திருமால் இந்த உலகை ‘ரிதமோடு’ இயக்குவதைத்தான் ‘ரிதம்’ கொண்ட நடனமாக நடராஜர் ஆடுகிறாரோ?” என்று அடியேன் கூறினேன்.

இப்படி இந்த உலகத்தைச் சீராக நடத்திச் செல்லும் திருமால், உலகில் தருமத்துக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும்,
அப்போதெல்லாம் தானே வந்து பூமியிலே அவதரித்துத் தீயசக்திகளை அழித்து, தருமத்தை நிலைநாட்டி,
இவ்வுலகம் தொடர்ந்து அறவழியில் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், கார்த்த வீரியார்ஜுனன் உள்ளிட்ட பற்பல மன்னர்கள்
அறநெறி தவறி உலகுக்குக் கேடு விளைவித்துக்கொண்டிருந்தார்கள்.
அதனால் பூமிதேவி அவர்களின் பாரம் தாங்க முடியாமல் திண்டாடினாள்.
அந்நிலையில், பரசுராமராக அவதரித்த திருமால், கையில் மழு ஏந்தி, அந்தத் தீய மன்னர்களை அழித்து,
பூமி தேவியின் பாரத்தைப் போக்கி, உலகை நன்னெறியில் நிலைநிறுத்தினார்.

‘மஹீ’ என்றால் பூமி. ‘தர:’ என்றால் நிலைநிறுத்துபவர் அல்லது தாங்குபவர்.
பூமிக்குப் பாரமாக இருக்கும் தீயவர்களைப் போக்கி, பூமியை நன்னெறியில் நிலைநிறுத்தித் தாங்கியபடியால்,
பரசுராமருக்கு ‘மஹீதர:’ என்று திருப்பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 319-வது திருநாமம்.
“மஹீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
நல்ல நிலைக்கு உயர்ந்து நிலைநிற்கத் திருமால் துணைபுரிவார்.

————-

320. அச்யுதாய நமஹ (Achyuthaaya namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்னும் புண்ணியபூமியைப் பராந்தகன் என்ற குறுநில மன்னர் ஆண்டுவந்தார்.
அவரை வீழ்த்தித் திருநாங்கூர்ப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி,
சோழனும் பாண்டியனும் இணைந்து படையெடுத்து வந்தார்கள்.
இருபெரும் மன்னர்களை எதிர்த்துப் போர் புரியும் அளவுக்குப் பராந்தகனிடம் படைபலம் இல்லை.
என்ன செய்வதென்று மன்னர் சிந்தித்திருக்க, அவரது கனவில் திருநாங்கூரில் கோவில் கொண்டிருக்கும்
திருமணிக் கூடம் வரதராஜப் பெருமாள் தோன்றினார்.

“பராந்தகா! தில்லை மூவாயிரம் என்று சிதம்பரம் வாழ் அந்தணர்களைக் கொண்டாடுவது போல்,
நாங்கூர் நாலாயிரம் என்று நாங்கூர் வேதியர்களைக் கொண்டாடுவதுண்டு.
அந்த நாலாயிரம் வேதியர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்றார்.
“வேதம் ஓதுவதாகிய தம் தொழிலை மறந்து அந்தணர்கள் போர்புரிவது பாபம் இல்லையா?” என்று
திருமாலிடம் கேட்டார் பராந்தக மன்னர். அதற்குத் திருமால், “ஆபத்துக் காலத்தில் பாபமில்லை.
முன்னொரு சமயம் உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் அறநெறியை மறந்து தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்து,
நல்லோர்களைத் துன்புறுத்தினார்கள்.
மக்கள் நலத்தைப் பேண வேண்டும் என்பதை மறந்து கொடுங்கோல் ஆட்சிபுரிந்தார்கள்.
அப்போது ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கையில் கோடாரி ஏந்தி இருபத்தொரு தலைமுறை
மன்னர்களை அழித்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா? முனிவரின் மகனாக, அந்தணராக இருந்தபோதும்,
கையில் ஆயுதம் ஏந்திப் போர்புரிந்த பரசுராமருக்கு ஏன் எந்தவிதப் பாபமும் ஏற்படவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “இறைவா! நீயே பரசுராமராக அவதாரம் செய்தாய். நீ பாப புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவன்!
நீ தேவனாகவோ, மனிதனாகவோ எந்த அவதாரம் எடுத்தாலும், உன் மேன்மை குன்றாமல் திகழ்பவன் நீ!
எனவே உனது அவதாரமான பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை!” என்று விடையளித்தார்.
அப்போது திருமால், “பராந்தகா! பாப-புண்ணியங்கள் என்னைப் பாதிக்காது என்பது உண்மையே.
ஆனால் ராமனாகவோ, கண்ணனாகவோ நானே நேரடியாகப் பூமியில் வந்து அவதாரம் செய்தது போல் பரசுராம அவதாரம் செய்யவில்லை.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் மேல் எனது சக்தியைச் செலுத்தி, குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி அவரை நான்
ஏவினேன். எனவே பரசுராம அவதாரம் முழு அவதாரம் இல்லை, ஆவேச அவதாரம் ஆகும். எனினும் எனது சக்தியின்
ஆவேசம் அவரிடம் இருந்ததால், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தபோதும், பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை.

தன் நிலையிலிருந்து நழுவாமல், வீழாமல் அவர் திகழ்ந்தார். அதுபோல் இந்த நாங்கூரில் வாழும் வேதியர்களுக்குள்
என் சக்தியை நான் செலுத்துகிறேன். ஆபத்துக் காலத்தில் போர்புரிவதால் அவர்களுக்குப் பாபமும் நேராது!
அதே நேரத்தில் என் அருளால் அவர்கள் உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தார்.

திருமாலின் ஆணைப்படி நாலாயிரம் வேதியர்கள் திருநாங்கூர் மன்னருக்காகப் போரிட்டு, சோழ-பாண்டியர்களை
வீழ்த்திய வரலாற்றைத் திருமங்கை ஆழ்வார்,“ஒண்திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத் தானே”என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி என்ன என்றால், திருமால் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதால்,
தன் நிலையில் இருந்து என்றும் வீழ்வதில்லை. இந்திரன் போன்ற தேவர்கள் கர்மவினைகளுக்கு வசப்பட்டவர்கள்.
எனவே அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து வீழ்வதற்கு வாய்ப்புண்டு.
ஆனால் திருமால் பூமியில் வந்து அவதாரம் செய்தாலும் கூட,
மேன்மை குன்றாமல், தன்நிலையில் இருந்து நழுவி விழாதவராகவே திகழ்கிறார்.

அவர் நேரடியாகப் பரசுராமராக அவதாரம் செய்யாவிடிலும், ஜமதக்னி முனிவரின் மகன்மேல்
தனது சக்தியைச் செலுத்தியபடியால், அந்தப் பரசுராமரும் என்றுமே தன் நிலையிலிருந்து வீழாதவராகத் திகழ்ந்தார்.
‘ச்யவன’ என்றால் நழுவி விழுதல் என்று பொருள். ‘ச்யுத:’ என்றால் நழுவி விழுபவர் என்று பொருள்.
‘அச்யுத:’ என்றால் நழுவி விழாதவர் என்று பொருள். பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.

ஆனாலும் அவருக்குள் திருமாலின் ஆவேசம் இருந்ததாலும், உலகின் நன்மையைக் கருதியே
அவர் இச்செயலைச் செய்ததாலும், இத்தனை உயிர்களை அழித்த பாபம் அவருக்கு வரவில்லை.
அவர் தன்நிலையிலிருந்து நழுவி விழாமல் திகழ்ந்தார்.
எனவே அவர் ‘அச்யுத:’ – ‘என்றும் நழுவி விழாதவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 320-வது திருநாமம்.
“அச்யுதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் உயர்நிலையில் இருந்து
என்றுமே நழுவி விழாமல் இருக்கத் திருமால் அருள்புரிவார்.

—————-

321. ப்ரதிதாய நமஹ (Prathithaaya namaha)

அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து
நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால்.
அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார்.
பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.

எனவே தான் பரசுராம அவதாரத்தை ஆவேச அவதாரம் என்று சொல்வார்கள். அதாவது,
ராமன், கண்ணன் போன்ற அவதாரங்களில் வைகுண்டத்திலிருந்து நேரே இறைவன் பூமிக்கு இறங்கி வருவது போன்றதல்ல பரசுராம அவதாரம்.
திருமால் ஒரு ஜீவாத்மாவைத் தேர்ந்தெடுத்து அவர்மீது தனது சக்தியைச் செலுத்தியதே பரசுராம அவதாரம் ஆகும்.

அந்தப் பரசுராமர், தீய சக்திகளை அழிப்பதற்காகத் தனக்கு ஒரு சிறப்பான ஆயுதம் வேண்டும் என்று கருதினார்.
சிவபெருமானிடம் இருந்தே ஒரு நல்ல ஆயுதத்தை நாம் பெற்றுக் கொள்வோம் என்று எண்ணிய பரசுராமர்,
சிவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார்.
மழை, வெயில், பனி, காற்று என எதையுமே பொருட்படுத்தாமல், பல ஆண்டுகள் உணவு, உறக்கம் இன்றித் தவம் புரிந்த
பரசுராமரின் உறுதியைக் கண்டு வியந்தார் சிவபெருமான்.
அப்போது பார்வதி தேவி சிவனிடம், “மிகச் சிறந்த ஆயுதத்தை வேண்டியே பரசுராமன் தவம் புரிந்து வருகிறான்.
நாம் இருவரும் மழு கோடாரி எனும் ஆயுதம் ஏந்தி இருக்கிறோமே! அதைப் போலவே ஒரு மழுவை இவனுக்கும் தந்து விடலாமே!” என்றாள்.
அதை ஏற்ற சிவபெருமான், பரசுராமருக்குக் காட்சி தந்து, மழு எனும் ஆயுதத்தை அவரது தவத்துக்குப் பரிசாக அளித்தார்.

வடமொழியில் மழுவுக்குப் பரசு என்று பெயர். பரசுவைக் கையில் ஏந்தியிருப்பதால், அவர் பரசுராமர் என்ற பெயரைப் பெற்றார்.
சிவபெருமானே பரசுராமருக்குக் குருவாக இருந்து அந்த மழுவைப் பயன்படுத்துவது எப்படி என்பதை உபதேசித்தார்.
அதன்பின், பரசுராமர் சிவபெருமானைப் பார்த்து, “குருவே! தாங்களே கருணை கூர்ந்து எனக்கு இந்த ஆயுதப் பயிற்சி
வழங்கியமைக்குத் தலையல்லால் கைம்மாறிலேன். தாங்கள் எனக்கு மற்றொரு அருளும் புரிய வேண்டும்!” என்றார்.
என்னவென்று சிவன் கேட்க, “என் வலிமையையும் திறமையையும் சோதித்துப் பார்க்கும் விதமாகத்
தாங்களே என்னுடன் போரிட வேண்டும்!” என்று கோரினார் பரசுராமர். சிவனும் அதை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து பரசுராமருக்கும் சிவனுக்கும் நடந்த போரிலே, பரசுராமர் சிறப்பாகப் போர் புரிந்தார்.
தனது மழுவால் சிவனின் நெற்றியிலே தாக்கி விட்டார்.
ஆனால் அதற்காகக் கோபம் கொள்ளாமல், தனது சீடன் சிறப்பாகப் போர் புரிந்ததை எண்ணிப் பூரித்தார் சிவன்.
அப்போது வானில் தோன்றிய திருமால், “பரசுராமா! உன்னை யாராலும் வெல்ல முடியாது!
சிவபெருமானே உனக்குப் பயிற்சி அளித்திருப்பதால் உன்னை வெல்ல யாருமில்லை!” என்று பரசுராமரை வாழ்த்தினார்.
பரசுராமரும் கையில் மழுவேந்தித் தீய சக்திகளான மன்னர்களை அழித்தார்.

பல நூறாண்டுகள் கழித்து, ராமனாக அவதரித்த திருமால், சீதையை மணம் புரிந்து கொண்டு
மிதிலையில் இருந்து அயோத்தி நோக்கித் திரும்புகையில், அவரை வழிமறித்த பரசுராமர், தனது வில்லைக் காட்டி,
அதில் ராமனால் நாண் ஏற்ற முடியுமா என்று சவால் விட்டார். ஆனால் அனாயாசமாக அந்த வில்லை வாங்கிய ராமன்,
அதில் நாண் ஏற்றிக் காட்டிப் பரசுராமரை வீழ்த்தி விட்டான்.

ராமன் திருமாலின் அவதாரமே என அப்போது உணர்ந்துகொண்ட பரசுராமர், “திருமாலே! முன்பு சிவனை நான் போரில்
வென்ற போது என்னை யாராலும் வெல்ல முடியாது என்றீர்கள்!
இப்போது நீங்கள் என்னை வென்றுவிட்டீர்களே!” என்று கேட்டார். அப்போது அருகிலிருந்த வசிஷ்டர்,
“பரசுராமரே! நீங்கள் திருமாலின் ஆவேச அவதாரம். ராமபிரான் திருமாலின் முழு அவதாரம்.
முழு அவதாரத்தின் எதிரே ஆவேச அவதாரம் எடுபடாது.
உங்களை உள்ளிருந்து இயக்குபவனையே நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அது சாத்தியமில்லை.
அது உங்களை நீங்களே வீழ்த்திக் கொள்வதற்குச் சமம்.
மற்றபடி உலகில் உள்ள யாராலும் உங்களை வெல்லவே முடியாது என்பது உண்மையே.

திருமால் ஏற்கனவே சொன்னபடி, வெல்ல முடியாதவர் என்ற புகழோடு தான் நீங்கள் திகழ்வீர்கள்!” என்றார்.
‘ப்ரதித:’ என்றால் புகழ்பெற்றவர் என்று பொருள்.
இதற்கு முந்தைய திருநாமமான அச்யுத: (320) என்பதற்குத் தன்நிலையில் இருந்து வீழாதவர் என்று பொருள்.
அச்யுதன் (வீழாதவர்) என்று உலகெங்கிலும் புகழ்பெற்றவராகப் பரசுராமர் திகழ்வதால்
(இன்றளவும் பரசுராமர் சிரஞ்சீவியாக இருந்து வருகிறார்)
அவர் ‘ப்ரதித:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 321-வது திருநாமம்.
‘அச்யுத:’ (320-வீழாதவர்) ப்ரதித: (321-புகழ்பெற்றவர்) என அடுத்தடுத்துத் திருநாமங்கள் வருவதாலே,
அவற்றை இணைத்து வீழாதவர் எனப் புகழ்பெற்றவர் என்று உரையாசிரியர்கள் விளக்கியுள்ளார்கள்.

“ப்ரதிதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திக்கு நிறை
புகழாளர்களாகத் திகழும்படித் திருமால் அருள் புரிவார்.

——————-

322. ப்ராணாய நமஹ: (Praanaaya namaha)
(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)
நாம் கடந்த சில திருநாமங்களின் விளக்கத்தில் பார்த்து வந்தது போல், அறநெறி தவறி ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களை
அழிப்பதற்காகத் தோன்றிய பரசுராமர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.
அதன்பின், கச்யபர் உள்ளிட்ட முனிவர்களை வரவழைத்துப் பெரும் வேள்வியைச் செய்த பரசுராமர்,
மன்னர்களை வீழ்த்தித் தான் பெற்ற அனைத்து நிலங்களையும் அந்த முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டார்.

“இனி நீங்கள் எங்கே செல்வீர்கள்?” என்று முனிவர்கள் கேட்க,
“நான் எனக்கென்று புதிய நிலத்தை உருவாக்கப் போகிறேன்!” என்று சொன்னார் பரசுராமர்.
பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பரசுராமர், தன் கையில் ஏந்திய மழு எனும் ஆயுதத்தைக் கடலின் மீது வீசினார்.
உடனே, கடல் பல மைல் தூரம் பின் வாங்கிக் கொண்டு பெரும் நிலத்தைப் பரசுராமருக்கு வழங்கியது.

கடல் பின்வாங்கித் தனக்குச் சமர்ப்பித்த அப்பகுதியைப் பரசுராம க்ஷேத்திரம் என்று நிர்மாணித்தார் பரசுராமர்.
இன்றைய பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவா மாநிலத்திலிருந்து
கேரள மாநிலம் வரை பரசுராமரின் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது.
“கலியுகத்தின் முடிவில் திருமால் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து தீய சக்திகளை அழிப்பார்!
அவர் அவதரித்து வரும் வரை நான் காத்திருந்து, அவரது செயல்பாடுகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்!” என்று
முனிவர்களிடம் சொல்லி விட்டு அந்தப் பரசுராம க்ஷேத்திரத்தில் தங்கினார் பரசுராமர்.

தினமும் பொழுது விடியும் போது அங்கிருந்து புறப்பட்டு இமய மலைக்குச் செல்வார் பரசுராமர்.
பகல் முழுதும் இமய மலையில் தவம் புரிந்து விட்டு, சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் பரசுராம க்ஷேத்திரத்தை வந்து அடைவார்.
இவ்வாறு பரசுராமர் அங்கே எழுந்தருளியிருந்த நிலையில், ஒரு சமயம் மேற்குக் கடலில் ஆழிப் பேரலையும் புயலும் உண்டானது.
பரசுராம க்ஷேத்திரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் கடல் சீற்றத்தால் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பரசுராமரை அடி பணிந்து, கடல் சீற்றத்திலிருந்து தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தார்கள்.
“என்னையே நம்பி என் பகுதியில் வாழும் உங்களை வாழ வைக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் அஞ்சாமல் சென்று வாருங்கள்!” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் பரசுராமர்.
கடல் அலைகள் பொங்கி நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தனது மழுவைக் கடல்மீது ஏவினார் பரசுராமர்.
அந்த மழுவுக்குக் கட்டுப்பட்டுக் கடல் மீண்டும் தனது பழைய எல்லைக்குள் சென்று அடங்கியது.
ஆனால் உப்பு கலந்த கடல்நீர் ஊருக்குள் வந்தபடியால், அந்த நிலத்தில் பயிர்கள் ஏதும் விளையவில்லை.

மீண்டும் பரசுராமரின் உதவியை மக்கள் நாடினார்கள். நிலத்தில் உள்ள உப்பை நீக்கி விட்டால், விளைச்சல் நன்றாக ஏற்படும்
என்று கூறிய பரசுராமர், நாக லோகத்தில் வாழும் பாம்புகளை அழைத்தார்.
பரசுராம க்ஷேத்திரம் முழுவதும் உள்ள உப்பினை நீக்குமாறு அப்பாம்புகளை ஏவினார்.
பாம்புகள் தங்கள் விஷத்தினாலே நிலத்திலுள்ள உப்பைச் சராசரி அளவுக்குச் சமன் செய்தன.
அதன்பின் அந்த மண்ணில் நல்ல விளைச்சலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள் பரசுராமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.
“கடல் சீற்றத்திலிருந்தும் எங்களைக் காத்து, இங்கே பயிர்விளைச்சல் ஏற்படுவதற்கும் உதவிய உங்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு வாழ்வு அளித்தவரே நீங்கள்தான்!” என்று பரசுராமரைத் துதித்தார்கள்.

அப்போது பரசுராமர், “எனது பகுதியில் என்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் என்றுமே அஞ்ச வேண்டாம்!” என்று அவர்களுக்கு அபயம் தந்து அனுப்பி வைத்தார்.
‘ப்ராணன்’ என்று உயிர்வாயுவுக்குப் (oxygen) பெயர்.
உயிர்வாயு எப்படி நம் சுவாசத்துக்குப் பயன்பட்டு நம்மை வாழ வைக்கிறதோ, அதுபோல் தன்னை அண்டி வரும் மக்கள்
அனைவரையும் வாழ்விப்பவராகப் பரசுராமர் திகழ்வதால், அவர் ‘ப்ராண:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ப்ராண:’ என்றால் மூச்சுக்காற்று போல் இருந்து வாழ்விப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 322-வது திருநாமம்.

சுவாசம், மூச்சுக்குழாய் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் மருந்து உட்கொள்ளும் வேளையில்
“ப்ராணாய நமஹ:” என்று இத்திருநாமத்தைச் சொல்லி வந்தால், மருந்து விரைவில் வேலை செய்து,
நோய் குணமடைவதற்குத் திருமால் அருள்புரிவார்.

—————–

323. ப்ராணதாய நமஹ: (Praanaadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

சாந்தோக்கிய உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது, அசுரர்களின் கை ஓங்கத் தொடங்கியது.
தாங்கள் வெற்றிபெற நல்வழி காட்டுமாறு தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதியிடம் வேண்டினார்கள்.
“ஓம்காரம் தான் நீங்கள் வெற்றி பெறுவதற்கான ஆயுதம். ஓம்காரமாகிய பிரணவத்தை உங்கள் உடலில் உள்ள
ஒவ்வொரு அங்கமாக எண்ணித் தியானம் செய்யுங்கள்!” என்று கூறினார் பிருகஸ்பதி.

முதலில் தேவர்கள் தங்கள் மூக்கையே ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள். அசுரர்கள் பாபத்தையே ஆயுதமாகப்
பயன்படுத்தி மூக்கைத் தாக்கி விட்டார்கள்.
அதன் விளைவாகவே இன்றளவும் நமது மூக்கு நல்ல வாசனை, துர்நாற்றம் ஆகிய இரண்டையுமே நுகர்ந்து வருகிறது.
அதன்பின் தங்கள் நாவை ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள் தேவர்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, நம் நாவானது இன்றளவும் உண்மை, பொய் இரண்டையும் பேசிவருகிறது.

அதைத் தொடர்ந்து தங்கள் காதை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, அதன் விளைவாக நம் காது இன்றளவும் நல்ல செய்தி, தீயசெய்தி
இரண்டையுமே கேட்டுவருகிறது.அதன்பின் கண்ணை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் அசுரர்கள் பாபத்தைக் கொண்டு தாக்கினார்கள்.
எனவே நமது கண்கள் இன்றளவும் காணத் தக்கவை, காணத் தகாதவை ஆகிய இரண்டையும் கண்டுவருகின்றன.

தங்கள் மனத்தையே ஓம்காரமாக எண்ணி தேவர்கள் தியானம் செய்தார்கள்.
அந்த மனத்தையும் அசுரர்கள் பாபத்தால் தாக்கி விட்டார்கள்.
அதனால் தான் நல்ல எண்ணம், தீய எண்ணம் இரண்டுமே மனத்தில் உருவாகின்றன.
இறுதியாகத் தங்கள் மூச்சுக் காற்றாகிய பிராணனையே பிரணவமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அந்த மூச்சுக் காற்றை அசுரர்கள் தாக்க முற்பட்ட போது, அத்தனை அசுரர்களும் பாறைமேல் எறியப்பட்ட களிமண் போல்
தூள் தூளாகி அழிந்து போனார்கள்.

வெற்றி பெற்ற தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதிக்கு நன்றி தெரிவித்து விட்டு,
“குருவே! மூக்கு, நாக்கு, காது, கண், மனம் போன்ற அங்கங்களாக ஓம்காரத்தைத் தியானித்த போது,
அசுரர்கள் எங்களைத் தாக்கி விட்டார்கள். ஆனால் மூச்சுக் காற்றை ஓம்காரமாக எண்ணித் தியானித்த போது
அவர்கள் அழிந்து போனார்களே! என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அப்போது பிருகஸ்பதி, “தேவர்களே! மூச்சுக் காற்று என்பது வெறும் பிராண வாயு மட்டுமல்ல.
உயிர் அளிக்கும் இறைவனான திருமால் மூச்சுக் காற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு
அதை உள்ளிருந்து இயக்கி நம்மைச் சுவாசிக்க வைக்கிறார்.
திருமால்தான் அந்த உயிர்மூச்சின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் சுவாசத்தையும், உடல் வலிமையையும், சக்தியையும் கொடுத்து வருகிறார்.
இறைவன் தந்ததும், இறைவனுக்கு உடலாக இருப்பதுமான அந்த மூச்சுக் காற்றைத் தாக்கியவர்கள்
அழிவைச் சந்திப்பதில் வியப்பில்லையே!” என்று பதில் அளித்தார்.

மேலும், “தேவர்களே! முன்பு நீங்கள் பாற்கடலைக் கடைந்தீர்களே! அதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
துர்வாசரின் சாபத்தால் சக்தி இழந்து நின்ற உங்களுக்குச் சக்தி கொடுத்தவர் திருமால்.
பாற்கடல் கடைகையில் மந்தர மலையைத் தன் முதுகில் சுமந்த படி கூர்ம மூர்த்தியாக (ஆமை வடிவில்) தோன்றிய திருமால்,
உங்களுக்கு நல்ல மூச்சுக் காற்றையும், உடல் வலிமையையும் சக்தியையும் தந்து நீங்கள் பாற்கடல் கடைவதற்கு அருள்புரிந்தார்.
அதனால் தான் அந்தக் கூர்ம மூர்த்தியைக் குறித்த மந்திரத்தில் ‘அனந்த பல சக்தயே’
(எல்லை இல்லாத வலிமையும் சக்தியும் கொண்டவர்) என்று சொல்லி அப்பெருமானை வணங்குகிறார்கள்!” என்று விளக்கினார் பிருகஸ்பதி.

இவ்வாறு கூர்மாவதாரத்தில், தேவர்களுக்கு மூச்சுக்காற்றும், வலிமையும், சக்தியும் தந்து அருள்புரிந்தபடியால்,
கூர்ம மூர்த்திக்கு ‘ப்ராணத:’என்று திருநாமம். ‘ப்ராண:’ என்றால் மூச்சுக் காற்று. ‘த’என்றால் கொடுப்பவர்.
‘ப்ராணத:’என்றால் மூச்சுக்காற்றைக் கொடுப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 323-வது திருநாமம்.

காற்று மாசுபட்டு அசுத்தமாகி வரும் இச்சூழலில், சுவாசம் தொடர்பான நோய்களும் அதிகரித்து வரும் நிலையில்,
நாம் அனைவரும் இணைந்து “ப்ராணதாய நமஹ:” என்று சொல்லிக் கூர்ம மூர்த்தியை வழிபட்டால்,
நம் சுவாசத்துக்கு ஏற்ற நல்ல மூச்சுக் காற்றும், அதனடியாக நல்ல ஆரோக்கியமும் சக்தியும் நமக்குக் கிட்டும்படி அப்பெருமான் அருள்புரிவார்.

—————-

324. வாஸவாநுஜாய நமஹ: (Vaasavaanujaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
ஒருமுறை துர்வாச முனிவர் மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை இந்திரனுக்குப் பரிசாக வழங்கினார்.
ஆனால் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன், அதைத் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைத்தான்.
அந்த யானை செய்வதறியாது, அம்மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலடியில் போட்டு மிதித்து விட்டது.
இதனால் கோபம் அடைந்து துர்வாசர், “தேவேந்திரா! நீ உனது அனைத்துச் செல்வங்களையும் இழப்பாய்!” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

இந்தச் சாபத்தின் விளைவாக, அடுத்து நடந்த தேவ-அசுரப் போரில் தேவர்கள் அசுரர்களிடம் தோல்வி அடைந்தார்கள்.
மீண்டும் அசுரர்களை வீழ்த்தி, இழந்த தேவலோக சாம்ராஜ்ஜியத்தைப் பெற என்ன வழி என்று அறியாமல் தவித்த தேவர்கள்,
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைச் சரண் அடைந்து அவரது உதவியை நாடினார்கள்.

திருமால் தேவர்களைப் பார்த்து, “நீங்கள் அசுரர்களை வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நல்ல வலிமை வேண்டும்.
எனவே பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமுதத்தை எடுத்து நீங்கள் பருகினால், நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் பெறலாம்.
அதன்பின் நீங்கள் அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தால் வெற்றி உங்களுக்கே!” என்று கூறினார்.
“வலிமை இழந்து நிற்கும் எங்களால் எப்படிப் பாற்கடலைக் கடையமுடியும்?” என்று தேவர்கள் வினவியபோது,
“நீங்கள் அசுரர்களுக்கும் அமுதத்தில் பங்கு தருவ தாகச் சொல்லி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முடிவில் அமுதம் அவர்களுக்குக் கிடைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று ராஜ தந்திர ரீதியில் ஆலோசனை வழங்கினார் திருமால்.
அதன்படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தயாரானார்கள்.
அவ்வளவு பெரிய கடலைக் கடைவதற்குப் பெரிய மத்து வேண்டுமே என்று அனைவரும் சிந்தித்த நேரத்தில்,
கருட வாகனத்தில் மந்தரமலை எனும் மலையையே மத்தாகக் கொண்டு வந்து தந்தார் திருமால்.
அதில் கயிறாகச் சுற்ற வாசுகி என்னும் பாம்பைப் பயன்படுத்துமாறு திருமால் ஆலோசனை வழங்கினார்.

மந்திரத்தை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.
ஆனால் மந்தரமலை பாற்கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அதை யாராவது நிலைநிறுத்தினால் தான் மேற்கொண்டு கடைய இயலும்.
என்ன செய்வதென்று தெரியாமல், இந்திரன் தேவகுருவான பிருகஸ்பதியின் உதவியை நாடினான்.

“இந்த மலையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், பாற்கடலுக்கு அடியில் யாரேனும் ஒருவர் சென்று இந்த மலையைத் தாங்க வேண்டும்.
அது நம் போன்றவர்களுக்கு இயலாத காரியம். திருமால் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும்!” என்றார் பிருகஸ்பதி.
“ஏற்கனவே பற்பல உதவிகளை அவர் செய்துவரும் நிலையில், மலையைத் தாங்க வேண்டும் என்றும்
அவரிடமே போய்க் கேட்பது முறையா?” என்று இந்திரன் கேட்டான்.

அதற்குப் பிருகஸ்பதி, “திருமாலிடம் ஒரு பண்பு உண்டு. நீயே கதி என்று அவரது திருவடிகளை ஒருவன் பிடித்துக் கொண்டு விட்டால்,
அந்த பக்தனுக்காக எதையும் செய்வார் திருமால். அவரைச் சரண் அடை! அவர் காப்பார்!” என்றார் பிருகஸ்பதி.
இந்திரனும் திருமாலைச் சரண் அடையவே, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்தார் திருமால்.

ஆமை வடிவில் வந்த திருமால் இந்திரனைப் பார்த்து, “இந்திரா! நீ மேலே இருந்து பாற்கடலைக் கடைவாயாக!
நான் உனது தம்பியின் ஸ்தானத்தில், பாற்கடலின் அடிக்குச் சென்று என் ஓட்டில் மலையைத் தாங்கிக் கொள்கிறேன்!”
என்று சொல்லி விட்டுப் பாற்கடலின் அடியாழத்துக்குச் சென்று, தன் முதுகில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்தார்.
பாற்கடல் கடைந்து முடிக்கும் வரையில் மலையைத் தாங்கிக் கொண்டே இருந்தார்.
பின் அமுதைப் பெற்று தேவர்களும் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றை உற்று நோக்குகையில், இந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தான் என்ற ஒரே காரணத்துக்காக,
அவனைத் தனக்கு அண்ணனாக ஆக்கி, தான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு,
ஆமை வடிவுடன் பாற்கடலின் அடிக்கே சென்று, கடைந்து முடிக்கும் வரை மலையைத் தாங்கி
இவ்வளவு உதவிகளைத் திருமால் செய்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறதல்லவா?

இந்த குணத்தை விளக்குவது தான் ‘வாஸவாநுஜ:’ என்ற ஸஹஸ்ரநாமத்தின் 324-வது திருநாமம்.
‘வாஸவ:’ என்று இந்திரனுக்குப் பெயர்.
‘அநுஜ:’ என்றால் தம்பி. தன்னைச் சரணடைந்த இந்திரனைக் காப்பதற்காக அவனுக்குத் தம்பியாக,
கூர்ம மூர்த்தியாகத் திருமால் அவதரித்த படியால், அவர் ‘வாஸவாநுஜ:’ (வாஸவ: + அநுஜ:) என்றழைக்கப்படுகிறார்.
‘வாஸவாநுஜ:’ என்றால் இந்திரனின் தம்பி என்று பொருள்.

“வாஸவாநுஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் நேரும் அனைத்துத்
தடங்கல்களையும் திருமால் போக்கி, அவர்களுக்கு வேண்டியதை அருளிக் காப்பார்.

———-

325. அபாம் நிதயே நமஹ (Apaam Nidhaye namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம்
விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உ வே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
ஒருமுறை கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம் ஒரு சீடர், “சுவாமி! நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நம்மை இறைவன் தாங்குகிறான் என்றும் சொல்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று கேட்டார்.

கருணாகராச்சாரியார் சுவாமிகள், “இதைப் புரிந்துகொள்வதில் உனக்கென்ன கஷ்டம்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சீடர், “இல்லை சுவாமி! வெளியே இருக்கும் பொருள் தானே உள்ளே இருக்கும் பொருளைத் தாங்க முடியும்?
ஒரு பெட்டிக்குள் நகையை வைத்தால், பெட்டி தானே நகையைத் தாங்குகிறது?
ஒரு பைக்குள்ளே புத்தகத்தை வைத்தால், பைதானே புத்தகத்தைத் தாங்குகிறது?
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றால், நாம் இறைவனைத் தாங்குகிறோம் என்றுதானே அர்த்தம்?
இறைவன் நம்மைத் தாங்குவதாக எப்படிக் கொள்ள முடியும்? அல்லது, இறைவன் தான் நம்மைத் தாங்குகிறான் என்றால்,
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பது பொருந்தாதே!” என்று கேட்டார்.

தமக்கே உரிய புன்னகையோடு அதற்கு விடை அளிக்கத் தொடங்கினார் கருணாகராச்சாரியார் சுவாமிகள். சீடரைப் பார்த்து,
“உனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டார். “ஓட்டுவேனே!” என்றார் சீடர்.
“மிதிவண்டி ஓட்டும் போது, ஓட்டுநர் மிதிவண்டியைத் தாங்குகிறாரா
அல்லது மிதிவண்டி ஓட்டுநரைத் தாங்குகிறதா?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
“மிதிவண்டிதான் ஓட்டுநரைத் தாங்குகிறது!” என்று சொல்லப் போன சீடர் சற்றே யோசித்தார்.
“ஓட்டுநர் சமநிலையில் இல்லாவிட்டால் மிதிவண்டி விழுந்து விடுவதைப் பார்க்கிறோம்.
மிதிவண்டி எந்த நிலையில் இருந்தாலும், ஓட்டுநர் நினைத்தால் கால் ஊன்றி மிதிவண்டியைத் தாங்கிப் பிடித்து விடலாம்!” என
இவற்றை எல்லாம் சிந்தித்த சீடர், “ஓட்டுநர்தான் மிதிவண்டியைத் தாங்குகிறார்!” என்றார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமிகள், “மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஓட்டுநர் மேலே இருப்பதாகவும்,
அவரைத் தாங்கும் ஆதாரமாக மிதிவண்டி கீழே இருப்பதாகவும் நமக்குத் தோன்றினாலும்,
உண்மையில் மேலே இருக்கும் ஓட்டுநர் தானே கீழே உள்ள மிதிவண்டியையும் சேர்த்துத் தாங்குகிறார்?
அது போலத் தான் நமக்குள்ளே இருக்கும் இறைவன் ஓட்டுநரைப் போல. நாம் மிதிவண்டியைப் போல.
மேலோட்டமாகப் பார்த்தால், மிதிவண்டியான நாம் ஓட்டுநரான இறைவனைத் தாங்குவது போலத் தோன்றும்.
உண்மையில், ஓட்டுநரான இறைவன்தான் மிதிவண்டியான நம்மைச் சமநிலையில் வைத்து அழைத்துச் செல்கிறான்.

இதற்குச் சிறந்த உதாரணம்தான் திருமால் எடுத்த கூர்மாவதாரம்.
ஆமை வடிவில் பாற்கடலின் உள்ளே இருந்துகொண்டு மந்தர மலையைத் திருமால் முதுகில் தாங்கினார் அல்லவா?
ஆமையான பெருமாளைக் கடல் தாங்கியதா? அல்லது அந்தப் பெருமாள் கடலைத் தாங்கினாரா?
பொதுவாக, கடலில் உள்ள ஆமைகளைக் கடல்தான் தாங்கி இருக்கும்.
ஆனால், இங்கோ அந்தக் கடலையே ஆமை வடிவில் உள்ள கூர்ம மூர்த்தி தான் தாங்கி நிலைநிறுத்தி வைத்திருந்தார்!” என்று விளக்கினார்.

தண்ணீருக்கு வடமொழியில் ‘அப்’ என்று பெயர்.
‘நிதி:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
தண்ணீர் நிறைந்த கடலை (திருப்பாற்கடலை) ஆமை வடிவில் உள்ளிருந்து தாங்கியபடியால், கூர்ம மூர்த்திக்கு ‘அபாம் நிதி:’ என்று பெயர்.
‘அபாம் நிதி:’ என்றால் கடலுக்கு ஆதாரமாக இருந்து தாங்கியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 325-வது திருநாமம்.
“அபாம் நிதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை என்றும்
திருமால் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

————

326. அதிஷ்டானாய நமஹ (Adhishtaanaaya namaha)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற வடமொழிக் கவிச்சக்கரவர்த்தி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்,
தன் தந்தை வாங்கியிருந்த கடன்களை எல்லாம் அவரது ஒரே மகன் என்ற முறையில் தானே அடைத்துவிட்டார்.
அதன் விளைவாக, வீடு, நிலங்கள், சொத்து அனைத்தையும் விற்றுவிட்ட படியால், மிகுந்த வறுமையில் அவர் குடும்பம் வாடிவந்தது.
வேத பாடசாலையில் காவிய பாடம் போதிப்பது, சில சொற்பொழிவுகள் ஆற்றுவது என
இப்படி வரக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டு பெரிய குடும்பத்தைப் பார்த்து வந்தார் அவர்.

இந்நிலையில் ஒருநாள் ஸ்ரீநிதி சுவாமிகள் தனது வேட்டியைத் துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வேட்டி கிழிந்த நிலையில் இருப்பதைக் கண்டார். “புதிய வேட்டி வாங்குவதற்குப் பொருள் வேண்டுமே!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளாவது நமக்குக் கிடைக்கும்படி
இறைவன் அருள்புரிய மாட்டானோ?” என்ற ஏக்கத்துடன் அப்படியே அமர்ந்தார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

அப்போது பக்கத்து வீட்டு வானொலியில் ஒரு செய்தி கேட்டது.
“இந்த ஆண்டு திருப்பதி உண்டியலில் அளவு கடந்த காணிக்கை குவிந்துள்ளது!” என்பதே அந்தச் செய்தி.
அதைக் கேட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒருநொடி மனதால் திருமலையப்பனை நினைத்து,
“மலையப்பா! உன் உண்டியலில் செல்வம் நிறைந்து வழிகிறது. உன் பக்தன் நான் வேட்டிகூட கிடைக்காமல் வாடுகிறேனே!” என்று சொன்னார்.

அப்படி அவர் சொன்னதுதான் தாமதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு ஒரு கடிதம் வந்தது.
“பத்து நாட்கள் திருமலையில் வந்து நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.
அதற்குச் சம்மானமாக நாங்கள் ரூ.600 உங்களுக்கு வழங்க உள்ளோம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது.
அதைப் படித்தவுடன் ஸ்ரீநிதி சுவாமிகள் திருமலையப்பனின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.
“இறைவா! உன் உண்டியலில் பணம் வழிகிறது, உன் பக்தன் துன்பப்படுகிறேன் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்.

ஆனால் நீயோ எனக்கு எப்பேர்ப்பட்ட உதவியைச் செய்திருக்கிறாய்?” என்று பரவசத்துடன் கூறிய அவர்,
பத்து நாட்கள் திருப்பதிக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். திருமலையில் பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் போது,
பொன்னால் ஆன ஆனந்த நிலைய விமானத்தில் திகழும் வேங்கடேசனைப் பார்த்தார்.
(இந்தப் பொன்மயமான விமான வேங்கடேசப் பெருமாளை நாமும் திருமலை பிரதக்ஷிணம் வரும்போது தரிசிக்கலாம்.)
அந்தப் பெருமாளைக் குறித்து ஒரு ஸ்லோகம் இயற்றினார்.

“கார்த்தஸ்வராஸ்தி ஜனதேதி தயாரஸார்த்ர:
த்ரஷ்டும் ததச்ச பரிரக்ஷிதும் ஏஷ நாத:
கார்த்தஸ்வராக்ருதி: உபேத்ய விமான பூமிம்
ஸ்ரீஸ்வாமி தீர்த்த திசி தத்த முகோ விபாதி”

“அன்று ஒரு குளக்கரையில், கஜேந்திரன் என்ற யானை ஆபத்து என்று உன்னை அழைத்தது.
அதன் அழுகுரலைக் கேட்டு உடனே ஓடிப் போய் நீ அதைக் காப்பாற்றினாய்.
அது போல் இங்குள்ள சுவாமி புஷ்கரிணி குளக்கரையில் யாரேனும் ஆபத்து என்று அழுகுரல் கொடுத்தால்,
உடனே ஓடிப்போய் அவர்களையும் காப்பாற்றத் தயாராகப் பொன்மயமான வடிவுடன் விமான வேங்கடேசனாகக் காட்சி தருகிறாய் போலும்!

எனது அழுகுரலையும் அதனால்தான் உடனே கேட்டு எனக்கு இத்தகைய அருளைப் புரிந்திருக்கிறாய்!”
பத்து நாள் சொற்பொழிவு முடிந்தவாறே, திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ரூ.600 சம்மானமும்,
புதிய வேஷ்டியும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது.
திருமலையப்பனின் கருணையை எண்ணி உருகி வீடு திரும்பினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

வீடு திரும்பிய பின், தனது மனைவியிடம் நடந்தவற்றைச் சொன்ன ஸ்ரீநிதி சுவாமிகள்,
“நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, ‘இது என் குடும்பம் அல்ல, ஸ்ரீமந்நாராயணனின் குடும்பம்!
அவன் குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்!’ என்று? இப்போது அவன் நிரூபித்துவிட்டான்!
கூர்மாவதாரம் செய்த போது, எப்படி தேவர்கள் சுமக்க வேண்டிய பாரமான மந்தரமலை என்னும் மத்தை அவன் சுமந்து,
தேவர்களுக்கு அமுதைப் பெற்றுக் கொடுத்தானோ, அதுபோல் பக்தர்களின் பாரத்தையும் அவன் சுமந்து கொண்டு
பக்தர்களுக்கு அருள் அமுதைச் சுரந்து காக்கிறான்!” என்று சொல்லி, திருமலையப்பன் அருளிய சம்மானத்தைக் காட்டினார்.

‘அதிஷ்டானம்’ என்றால் தாங்கி நிற்பவர் என்று பொருள்.
கூர்ம அவதாரத்தில் மந்தர மலையாகிய மத்தைத் தன் முதுகில் தாங்கி நின்றதால், கூர்ம மூர்த்திக்கு ‘அதிஷ்டானம்’ என்று பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 326-வது திருநாமம்.
“அதிஷ்டானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாரத்தைத் திருமால் சுமந்து
அவர்கள் பாரமின்றி மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவார்.

————-

327. அப்ரமத்தாய நமஹ (Apramathaaya namaha)

“என்ன இந்திரா! வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறாயா?” என்று ஒரு குரல்.
அசுரர்களை வென்ற மகிழ்ச்சியில் தேவர்களுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருந்த இந்திரன் திரும்பிப் பார்த்தான்.
தேவ லோகத்துக்கு வந்த அகஸ்திய முனிவரின் குரல் தான் அது என்று புரிந்து கொண்ட இந்திரன்,
“வாரும் அகஸ்தியரே! அமுதத்தைப் பருகியதால் நாங்கள் அசுரர்களை வீழ்த்தி விட்டோம்!” என்று பதில் சொன்னான்.
அதைக் கேட்ட அகஸ்தியர், “இந்திரா! எந்த அமுதத்தால் நீ வெற்றி பெற்றாய்?” என்று கேட்டார்.

“பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து எடுக்கப்பட்ட அமுதைப் பருகினோம். அதனால் வென்றோம்!” என்றான் இந்திரன்.
“இல்லை இந்திரா! பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புச்சாறான அமுதால் நீங்கள் வெல்லவில்லை!
பாற்கடலை உங்களுக்காக கடைந்து கொடுத்தாரே ஆராவமுதமான திருமால்!
அந்தத் திருமால் என்னும் ஆராவமுதால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்றார்.
“எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இந்திரன்.

“இந்திரா! நீங்கள் துர்வாசரின் சாபத்தால் அசுரர்களிடம் தோற்று வலிமையிழந்து நின்றீர்கள்.
நீங்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால், பாற்கடலைக் கடைய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தவர் திருமால்.
அந்தப் பாற்கடலை நீங்கள் மட்டும் தனியாகக் கடைய முடியாது என்பதால் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்
என்று ராஜதந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தவர் திருமால்.
மந்தர மலையாகிய மத்தைக் கருட வாகனத்தில் கொண்டு வந்து பாற்கடலின் மத்தியில் நிலைநிறுத்தியவர் திருமால்.
அந்த மத்து அழுந்திய போது, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்து அதைத் தன் முதுகில் தாங்கிப் பிடித்து,
நீங்கள் பாற்கடல் கடைய உறுதுணையாக இருந்தவர் திருமால்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து களைப்படைந்து இருந்த நிலையில், உங்களுக்கெல்லாம் உள்ளிருந்து
சக்தியைக் கொடுத்துக் கடைய வைத்தவர் திருமால். சில காலம் கழித்து நீங்கள் கடைய முடியாமல் தவித்த போது,
பாற்கடலைக் கடைந்து கொடுத்தவர் அதே திருமால். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வந்த போது,
அதைப் பரமசிவனிடம் வழங்கி உலகைக் காக்குமாறு ஆலோசனை தந்தவர் திருமால்.
தன்வந்தரியாக அவதாரம் செய்து அமுதக் கலசத்தைக் கையில் ஏந்தி வந்தவர் திருமால்.

அது அசுரர்களுக்குக் கிடைக்காதபடி மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, தேவர்களான உங்களுக்கு மட்டும்
அமுதைப் பெற்றுக் கொடுத்தவர் திருமால். நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களை நன்கு கடாட்சிக்கும்படித்
தன் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியிடம் சொன்னவர் திருமால்.

சற்று யோசித்துப் பாருங்கள்! உங்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எப்படி எல்லாம் கவனத்துடன்
திருமால் செயல் பட்டிருக்கிறார்! ஆலோசனை, ராஜதந்திரம், மத்தைக் கொண்டு வருதல், மத்தைச் சுமத்தல், சக்தி கொடுத்தல்,
விஷத்தை முறித்தல், அமுதைக் கொணர்தல், அசுரர்களை மயக்குதல், வெற்றியை அருளுதல் என ஒவ்வொரு நிலையிலும்,
உங்களை விட அவர்தான் அதிகக் கவனம் செலுத்தி உங்களை இந்த நிலையில் இன்று வைத்திருக்கிறார்.
இப்படித் திருமகளோடு இணைந்து திருமால் புரிந்த அருளால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றார் அகஸ்தியர்.

“அடடா! நாம் அமுதைக் குடித்த மகிழ்ச்சியிலும், வெற்றி பெற்ற பெருமிதத்திலும், நம்மைக் கவனித்துக் கவனித்துக்
காத்த திருமாலை மறந்துவிட்டோமே!” என்று கருதிய தேவர்கள், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,
கும்பகோணம் ஸ்ரீசார்ங்க பாணிப் பெருமாள் திருக்கோவில் கருவறையை அடைந்து,
“த்ரிம்சத் த்ரிகோடி வஸு ருத்ர திவாகராதி
தேவாதி தேவகண ஸந்தத ஸேவ்யமானம்
அம்போஜ ஸம்பவ சதுர்முக கீயமானம்
வந்தே சயானம் இஹ போகினி சார்ங்கபாணிம்”
என்று சார்ங்கபாணிப் பெருமாளின் தியான ஸ்லோகம் சொல்வது போல், அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் சூழ்ந்திருந்து
அப்பெருமாளை வழிபட்டு, அமுதைப் பெற்றுத் தந்த ஆராவமுதுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
இப்படித் தேவர்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் கூர்ம மூர்த்தி எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்து,
எவ்வளவு கவனமாகக் காத்திருக்கிறார் என்பதை இவ்வரலாற்றின் மூலம் அறிய முடிகிறதல்லவா?
‘ப்ரமத்த:’ என்றால் கவனம் இல்லாதவர் என்று பொருள்.
‘அப்ரமத்த:’ என்றால் கவனம் மிக்கவர் என்று பொருள்.
மிகவும் கவனத்துடன் அடியார்களைக் காப்பதால், கூர்ம மூர்த்திக்கு ‘அப்ரமத்த:’ என்று பெயர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 327-வது திருநாமம்.

“அப்ரமத்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கவனக் குறைவு நீங்கி, அவர்கள் தங்கள் தொழில்
களில் நல்ல கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும்படித் திருமால் அருள் புரிவார்.

——————–

328. ப்ரதிஷ்டிதாய நமஹ (Prathishtithaaya namaha)

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் முகாம் இட்டிருந்த சமயம்.
காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள்கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.
ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால் தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது!”
என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர்.
மறுநாள் அந்த பக்தர் பூ கொண்டு வந்த போது அவரை அழைத்த பெரியவர்,
“நீ காவிரிக்கு அக்கரையில் இருந்துதானே பூ கொண்டு வருகிறாய்? வரும் வழியில் காவிரி நதியைக் கடந்து வருகிறாய் அல்லவா?
ஒரு புண்ணிய நதியைக் கடந்தால், அந்த நதியில் இறங்கி ஆசமனம் பண்ணிவிட்டுத் தான் கடக்க வேண்டும்.
அல்லது நதியில் ஒரு காசு போட வேண்டும். இவற்றில் எதையாவது நீ செய்தாயா?” என்று கேட்டார்.
அந்த பக்தர், “ஓ! எனக்குத் தெரியாத சாஸ்திரா? தினமும் நான் காவிரியில் ஆசமனம் செய்து விட்டுத்தான்
காவிரியைக் கடந்து வருகிறேன்!” என்று பதில் அளித்தார்.
பெரியவர், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆசமனம் செய்யும் போது, பூவைக் கையில் வைத்துக் கொண்டே செய்ய முடியாதே!
எச்சில் பட்டுவிடுமே! பூக்களை என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“பூக்களைப் படித்துறையில் வைத்துவிட்டு ஆசமனம் செய்வேன்!” என்று சொன்னார் பக்தர்.

“மனிதர்களின் கால் படும் தரையில் இறைவனின் பூவை வைக்கலாமா?” என்று கேட்டார் பெரியவர்.
“நான் படியை ஊதிச் சுத்தம் செய்து விட்டு அதன்பின் தான் பூவை வைப்பேன்!” என்றார் பக்தர்.
“அப்படியானால் இது எச்சில் பூ! இதைப் பூஜைக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி, பூக்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.

கர்வத்துடன் வந்த பக்தரின் முகம் வாடியதைக் கண்ட பெரியவர்,“இதோ பார்! காவிரி என்பது புண்ணிய நதி!
புண்ணிய நதியின் படித்துறை தூய்மையானது. எனவே அங்கு பூவை வைத்தாலும் தோஷம் இல்லை.
நீ வாயால் ஊதிப் படித்துறையைச் சுத்தம் செய்வதாக எண்ணுவது தான் தவறு!” என்று விளக்கம் அளித்தார்.
கர்வம் நீங்கிய அந்த பக்தர் வேறு பூக்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த அளவில், அதைப் பெற்றுக்கொண்ட காஞ்சி பெரியவர்,
அவரிடம் ஒரு கதை சொன்னார்.

“ஓர் ஊரில் ஒரு பாடகர் பெருமாள் கோவிலில் இனிய பாடல்கள் பாடி வந்தார். தன்னைப் போல் பாடுவதற்கு
உலகில் வேறு யாரும் இல்லை என்ற கர்வம் அவரிடம் இருந்தது. அவர் மெய்ம்மறந்து பெருமாளைப் பற்றிப் பாடும் போது,
சில நேரங்களில் பெருமாள் நாட்டியமே ஆடுவார். இந்நிலையில் ஒருநாள் அந்தப் பாடகர் பெருமாளிடம்,
‘எனக்கு முக்தி கொடு!’ என்று வேண்டினார்.
அதற்குப் பெருமாள், ‘நீ ஆணவத்தை விட்டுவிட்டு என்னிடம் சரணாகதி செய்தால் தான் முக்தி அளிப்பேன்.
இத்தனை ஆணவத்தோடு இருப்பவனுக்கு முக்தி தரமாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.
‘நான் இத்தனை நாள் உனக்காகப் பாடினேனே!’ என்றார் பாடகர்.
‘அதற்குத்தான் நான் நடனம் ஆடிக் காட்டிவிட்டேனே! அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் சரியாகிவிட்டது!’ என்று
பதில் சொல்லி விட்டார் பெருமாள்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? நாம் புதிதாகப் பூக்கள் கொடுத்தோ, பாட்டு பாடியோ,
பூஜை செய்தோ இறைவனுக்குப் பெருமை உண்டாக வேண்டிய தேவையே இல்லை.
இறைவன் என்றென்றும் எல்லையில்லாத மேன்மையோடுதான் இருக்கிறார்.
பக்தர்களான நமது கடமை இறைவனுக்குத் தொண்டாற்றுதல் என்பதால் நாம் தொண்டுகள் புரிகிறோமே ஒழிய,
இவற்றால் அவருக்குப் புதிய பெருமைகள் வரப்போவதில்லை. இறைவனின் கூர்மாவதார வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

மந்தர மலையையே தன் முதுகில் கூர்ம மூர்த்தி தாங்கினாரே! அந்தக் கூர்ம மூர்த்தியை யார் தாங்கினார்கள்?
இன்னொருவர் அவரைத் தாங்க வேண்டிய தேவை இல்லாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருக்கிறார் திருமால்! இதைப் புரிந்துகொள்!”
என்று அறிவுரை கூறி அந்த பக்தரை அனுப்பி வைத்தார்.
மந்தர மலையைத் தாங்கிய கூர்ம மூர்த்தி, தன்னைத் தாங்க இன்னொருவர் தேவைப்படாதபடி,
தன்னில் தானே நிலைபெற்றிருந்த படியால்,
‘ப்ரதிஷ்டித:’ என்றழைக்கப்படுகிறார்.

‘ப்ரதிஷ்டித:’ என்றால் நிலைநிற்பவர் என்று பொருள்.
இங்கே ‘ப்ரதிஷ்டித:’ என்பதற்குத் தன்நிறைவுடன் தன்னில் தானே நிலைநிற்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 328-வது திருநாமம்.
“ப்ரதிஷ்டிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வாதாரம்
சிறந்து விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

329. ஸ்கந்தாய நமஹ (Skandhaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும்
பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர்
நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச் சென்றார்.

அதே சமயம், அந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் அறநூல்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேதாந்த தேசிகன் என்ற வைணவ குரு, ராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிய
விளக்க உரைகளின் தொகுப்பான சுருதப் பிரகாசிகையைப் பாதுகாத்து எடுத்துக்கொண்டு
காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணித்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள
சத்தியா காலம் என்னும் ஊரை அடைந்தார்.

சத்தியா காலத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வழிபட்டுக் கொண்டு அங்கேயே சில காலம் தங்கி இருந்தார் தேசிகன்.
தினந்தோறும் சத்தியாகாலத்தில் காவிரிக்கரையில் நின்றபடி பழைய நிலை திரும்பாதா என்று ஏங்கித் திருவரங்கம் நோக்கிப் பார்ப்பாராம் தேசிகன்.
அதன் அடையாளமாகவே இன்றும் சத்தியாகாலம் கோயிலில் வேதாந்த தேசிகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
(மற்ற எல்லாக் கோயில்களிலும் தேசிகன் அமர்ந்த நிலையில் தான் இருப்பார்.)

இந்நிலையில், ஒருநாள் சத்தியா காலம் காவிரிக்கரையில் உள்ள ஞான அசுவத்தம் என்னும் அரச மரத்தடியில் அமர்ந்தார் தேசிகன்.
திருவரங்கத்தில் உள்ள பீதியெல்லாம் விலகி, சுபிட்சம் பெருக வேண்டும் என்று அரங்கனைப் பிரார்த்தித்து,
அபீதி ஸ்தவம் என்ற துதியை இயற்றினார் தேசிகன். அதில்,
“ஸகைடப தமோரவி: மதுபராக ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகிரி தாரண: த்ருடித காலநேமி த்ரும:
கிம் அத்ர பஹுனா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய:
த்ரிவிக்ரம பவத் க்ரம: க்ஷிபது மங்க்ஷு ரங்க த்விஷ:”

“கைடபன் என்ற அசுரன் உண்டாக்கிய இருளைச் சூரியனாய் வந்து போக்கினாய். பெருங்காற்றான ஹயக்ரீவனாக வந்து
மது என்ற அசுரனைத் தூசு போல் பறக்கச் செய்தாய். இரணியன் என்னும் மலையை நரசிங்கனாக வந்து இரண்டாகப் பிளந்தாய்.
காலநேமி என்ற அசுரனைச் செடியைக் கிள்ளி எறிவது போல் வீழ்த்தினாய். இவ்வளவு ஏன்?
பிறவிப் பெருங்கடலையே ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடிக்க வல்லவன் நீ! உலகளந்த உத்தமனே!
திருவரங்கத்தைப் பிடித்துள்ள தீய சக்திகளை நீதான் போக்கி, அபயம் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.

அன்று இரவு தேசிகனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒருவர் தோன்றி,
“நான் உங்களுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன்!” என்று சொன்னார். ஆனால் தேசிகன் அக்கனவைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலை காவிரியில் இருந்து ஓர் ஆமை தேசிகனைத் துரத்திக் கொண்டே வந்தது. தேசிகன் அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார்.

அடுத்த நாள் இரவு அவரது கனவில் திருமால் தோன்றினார். தேசிகனைப் பார்த்து,
“உனக்குத் தொண்டு செய்ய ஒரு தொண்டனை நான்தான் ஆமை வடிவில் அனுப்பி வைத்தேன்.
அவனை அசனமாக்கி அந்தக் கூர்மாசனத்தின் மேல் நீ அமர்வாயாக! ஏன் ஆமை வடிவில் அவனை அனுப்பினேன் தெரியுமா?
முன்பு அசுரர்களிடம் தேவர்கள் தோற்று, அசுர ராஜ்ஜியம் தலைதூக்கிய நிலையில், நான் ஆமையாக அவதாரம் செய்து,
பாற்கடலைக் கடைய வைத்து தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து, அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தேன் அல்லவா?
அதுபோல் படையெடுத்து வந்த அந்நிய சக்திகளை விரட்டி, திருவரங்கத்தில் நல்ல நிலைமை திரும்புவதற்கும் நான் அருள்புரிவேன்!
அதன் நினைவாகவே ஆமை வடிவில் இத்தொண்டனை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளேன்!” என்று கூறினார்.

திருமாலின் கூற்றால் மனம் உவந்த தேசிகன், அடுத்த நாள் காலை காவிரிக் கரையில் உள்ள அரச மரத்தடிக்குச் சென்றார்.
அங்கே ஆமை வடிவில் ஒரு கல் பீடம் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து வந்த தேசிகன், தனது அநுஷ்டானங்களை
அதில் அமர்ந்தபடி செய்யத் தொடங்கினார்.
கூர்ம மூர்த்தியின் திருவருளால், திருவரங்கத்தில் இருந்த தீயசக்திகள் அனைத்தும் விலகி நல்ல நிலைமை திரும்பியது.
சத்தியா காலத்தில் இன்றளவும் தேசிகன் சந்நதியில் அந்தக் கூர்மாசனம் இருப்பதைக் காணலாம்.

‘ஸ்கந்தயதி’ என்ற சொல்லுக்கு வடமொழியில் வற்றச்செய்தல், காய்ந்துபோகும்படிச் செய்தல், அழித்தல் போன்ற பொருள்கள் சொல்வதுண்டு.
அதன் அடிப்படையில், இவ்விடத்தில் ‘ஸ்கந்த:’ என்பதற்கு அழிப்பவன் என்று பொருள்.
திருவரங்கத்தைத் தாக்கித் துன்புறுத்திவந்த படைகளைப் போக்கி, அடியார்களுக்கு நன்மை அளித்தாற்போல்,
அசுர சக்திகளை அழித்து நல்லோர்களுக்கு நன்மை அளிப்பதால் கூர்ம மூர்த்தி ‘ஸ்கந்த:’ என்று அழைக்கப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 329-வது திருநாமம்.

“ஸ்கந்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
வாழ்வில் ஏற்படும் எல்லாத் தடங்கல்களும் அழியும் படிக் கூர்மமூர்த்தி அருள்புரிவார்.

—————————————-

330. ஸ்கந்ததராய நமஹ

(Skandhadharaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
அவர்களுள் சூரபத்மன், சிவனின் புதல்வனைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான்.
அவனால் மிகவும் துன்புற்ற தேவர்கள், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள்.

தேவர்களைக் காக்க விழைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின.
அந்த ஆறு தீப்பொறி களையும் அக்னிதேவன் கொண்டு போய்க் கங்கையில் சேர்த்தார்.
கங்கையில் இருந்து சரவணப் பொய்கையைச் சென்றடைந்த அந்த ஆறு பொறிகளும் அங்கிருந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். பின் பார்வதிதேவி அறுவரையும் ஆசையோடு தழுவ,
அவை இணைந்து ஒரே குழந்தையாக, ஆறுமுகனான முருகனாக உருவெடுத்தன.

அனைத்துத் தேவர்களும் முருகனிடம் வந்து சூரபத்மனை வதம் செய்து தருமாறு வேண்டினார்கள்.
அப்போது முருகன், “சூரபத்மனை வதைக்க வேண்டுமென்றால், அதற்குச் சிறப்பான ஆயுதம் ஒன்று நமக்குத் தேவை.
முன்பு தேவர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் தானே கூர்மாவதாரம் செய்து, நமக்கு உறுதுணையாக இருந்து,
அருள்புரிந்து, அமுதம் கிடைக்கும்படிச் செய்தார்! ஆகையால், இப்போது சூரபத்மனை வீழ்த்துவதற்குரிய
ஆயுதத்தைக் கூர்மாவதாரம் செய்த திருமாலிடமே கேட்டுப் பெறுகிறேன்!” என்றார் முருகன்.

இவ்வாறு சொல்லிவிட்டுத் திருவேங்கட மலையில் உள்ள குமாரதாரிகா என்ற பொய்கையின் கரையில் தவம் புரிந்தார் முருகன்.
அவருக்குத் திருமலையப்பன் காட்சி தந்து, சூரபத்மனை வெல்வதற்குரிய ஆயுதமான வேலை அளித்தார்.
இவ் வரலாறு வடமொழியில் உள்ள ஸ்கந்த புராணத்தின் இரண்டாம் கண்டம், முதல் அத்தியாயம்,
அறுபத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

“குமாரதாரிகா நாம ஸரஸீ லோக-பாவனீ யத்ர ஆஸ்தே பார்வதீஸூனு: கார்த்திகேய: அக்னி-ஸம்பவ:
தேவஸேனா-ஸமாயுக்த: ஸ்ரீநிவாஸ-அர்ச்சக: அமலே”
திருமால் கொடுத்த வேலைத் தன் தாயான பார்வதி தேவியின் கையில் கொடுத்து வாங்கிச் சென்று போரிட வேண்டும் என்று
கருதிய முருகப் பெருமான், தை மாதம் பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவியிடம் வேலைக் கொடுத்து,
அவள் கையால் அதைப் பெற்றுக்கொண்டு, தேவர்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

கடலுக்கு நடுவிலுள்ள சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை அடைந்த முருகன், முதலில் தாரகாசுரனையும் சிங்கமுகனையும் அழித்தார்.
அதன்பின் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போரிட்டார். மாமர வடிவம் கொண்டு சூரபத்மன் தப்பிக்கப் பார்த்த நிலையில்,
தனது வேலால் அம்மரத்தை இரண்டாகப் பிளந்தார் முருகன். அதில் ஒரு பாதியைத் தன் வாகனமான மயிலாகவும்,
மற்றொரு பாதியைத் தன் கொடிச்சின்னமான சேவலாகவும் ஆக்கினார்.
இவ்வாறு முருகன் சூரபத்மனை வதைத்த நாளையே கந்த சஷ்டி என்று முருக பக்தர்கள்
வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முருகன் சூரபத்மனை வீழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்த வேலைத் தந்து, தேவர்களின் படைத்தளபதியாகத் திகழ்ந்து
அவர் வெற்றி பெறுவதற்கு அருள்புரிந்ததால் திருமால் ‘ஸ்கந்ததர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்கந்த:’ என்பது முருகனைக் குறிக்கும். ‘தர:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
முருகனின் தாய்மாமனான திருமால், கூர்ம மூர்த்தியாக இருந்து அகில உலகையும் தாங்குவதோடு மட்டும் இல்லாமல்,
தன் மருமகனான முருகனுக்குச் சக்தி கொடுத்து அவரை ஆசையோடு தாங்குகிறார் என்பதை இது காட்டுகிறது.
(திருமாலைப் பார்வதியின் சகோதரராகக் குறிப்பிடுவதால், முருகனுக்குத் தாய்மாமன் ஆகிறார்.)

பகவத் கீதை பத்தாம் அத்தியாயம் இருபத்து நான்காம் ஸ்லோகத்தில் கண்ணனே இதைத் தெரிவிக்கிறான் –
ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த: – “தேவர்களின் படைத்தளபதியான ஸ்கந்தனை நான் உள்ளிருந்து தாங்குகிறேன்!” என்பது இதன் பொருள்.
ஆகவே ‘ஸ்கந்ததர:’ என்றால் தன் மருமகனான முருகனை ஆசையோடு உள்ளிருந்து தாங்குபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 330-வது திருநாமம். வடமொழி விளக்க வுரையில் பராசர பட்டரும் –
ஷடானன விதாரணாத் – ஆறுமுகனைத் தாங்குபவர் என்றே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
“ஸ்கந்ததராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் வெற்றி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

331. துர்யாய நமஹ (Dhuryaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டின் பின் பகுதி. ஆர்க்காடு பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஆங்கிலேயப் படைத்தளபதி
ராபர்ட் கிளைவ், குதிரைகளோடும் படைவீரர்களோடும் ஆயுதங்களோடும் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.
அன்று இரவு அத்தனை பேரும் தங்குவதற்குக் காஞ்சிபுரத்தில் இடம் கிடைக்குமா என்று பார்த்தார்கள்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலைக் கண்ட ராபர்ட் கிளைவ்,
“இன்று இரவு இந்தப் பெரிய கட்டிடத்தில் எல்லோரும் தங்கிக் கொள்ளலாம்!” என்று கூறினார்.
அப்போது கோயிலில் கைங்கரியம் செய்து வந்தவர்கள், “இது இறைவனுடைய கோயில்! இங்கே இப்படிப் போர்புரிய வந்த
சேனைகளைத் தங்க வைப்பது முறையல்ல! மேலும் புனிதமான இந்த இடத்தில் மலஜலங்களைக் கழிப்பது போன்றவை செய்யக்கூடாது!”
என்று பணிவுடன் ராபர்ட் கிளைவிடம் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அத்தனை சேனையையும் அங்கேயே தங்க வைத்தார் ராபர்ட் கிளைவ்.

ஆனால் அடுத்த நாள் காலை அந்தச் சேனையிலிருந்த வீரர்களாலும், குதிரைகளாலும் மலமோ ஜலமோ கழிக்க முடியவில்லை.
ராபர்ட் கிளைவ் உட்பட அத்தனை பேரும் வயிற்று வலியால் துடிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது தனது தவறை உணர்ந்த ராபர்ட் கிளைவ், அத்தி வரதப்பெருமான் முன்னே நின்று,
“உன் பெருமை தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன்! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்துவிட்டு,
தனது சேனைகளைக் கோயிலுக்கு வெளியே கொண்டு சென்றார்.

அதன்பின் ஆர்க்காட்டுக்குச் சென்று போர்புரிந்த ராபர்ட் கிளைவ் பெரும் வெற்றியைப் பெற்றார்.
அந்த வெற்றி ராபர்ட் கிளைவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அத்தி வரதர் செய்த அருளே தனது வெற்றிக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
மீண்டும் அத்தி வரதரைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, காஞ்சிபுரத்துக்கு வந்தார் ராபர்ட் கிளைவ்.
அன்று வைகாசி விசாகம். வரதராஜப் பெருமாளுக்குக் கருட சேவை வைபவம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது ராபர்ட் கிளைவின் மனத்திரையில் விசேஷ காட்சியைக் காட்டினார் வரதராஜப் பெருமாள்.

அக்காட்சியைக் கண்ட ராபர்ட் கிளைவ், “ஆஹா! என்ன விந்தை? இறைவா! கருடன் வாகனமாக இருந்து உன்னைத் தாங்கினாலும்,
அவருக்குள்ளும் நீயே இருந்து உன்னைத் தாங்கும் சக்தியைத் தந்திருக்கிறாய்! ஸ்ரீபாதம் தாங்கிகள் கருட வாகனத்தைச் சுமந்து நின்றாலும்,
உண்மையில் அவர்களையும் நீயே உள்ளிருந்து தாங்குகிறாய்! ஏன்? ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக இருந்துகொண்டு,
மொத்த உலகங்களையும் உன் முதுகில் நீயே தாங்குகிறாய்!
இப்போது நீ காட்டிய காட்சியால் இந்த உண்மையை நான் கண்டு கொண்டேன்!” என்று கூறினார்.

மேலும், “வரதா! நான் இவ்வூருக்கு வரும் முன் நானே பெரிய தலைவன் என்ற கருவத்துடன் வந்தேன்.
ஆனால் இப்போது திரும்பச் செல்லும் போது நீயே எல்லோருக்கும் தலைவன் என்ற புரிதலுடன் செல்கிறேன்.
தலைவன் என்ற பெயரில் எனக்குக் கீழே உள்ளவர்களை நான் என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திவந்தேன்.
ஆனால் உண்மையான தலைவனான நீயோ உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் தாங்கிப் பிடித்துக் காக்கிறாய்.
ஆர்க்காட்டில் இருந்து நாங்கள் கொண்டு வந்த பல ஆபரணங்களுள் முக்கியமானதான இந்த மகர கண்டியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!”
என்று கூறிச் சமர்ப்பித்தார் ராபர்ட் கிளைவ். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் கருட சேவையின் போது
இந்த மகர கண்டியை அணிந்தபடி வரதராஜப் பெருமாள் காட்சி தருகிறார்.

அப்போது வரதராஜனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர் ராபர்ட் கிளைவைப் பார்த்து,
“ஓர் உண்மையான தலைவனின் இலக்கணம் என்னவென்றால், தனது தொண்டர்களைத் தாங்கிப் பிடித்துக் காப்பதே ஆகும்!
அந்த வகையில் இந்த உலகுக்கெல்லாம் தலைவராய்த் திகழும் பெருமாள், பூமிக்குக் கீழே ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக
இருந்துகொண்டு அனைவரையும் தன் முதுகில் தாங்கி வருகிறார்!
அதை உமக்கு உணர்த்தவே இப்படி ஒரு லீலையைப் பெருமாள் புரிந்துள்ளார்!” என்று கூறினார்.

‘துர்ய:’ என்றால் தாங்கிப் பிடித்துக் காக்கும் தலைவர் என்று பொருள்.
உலகங்கள் அனைத்தையும் ஆதிசேஷன் பாதாளத்தில் இருந்து காப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆனால் அந்த ஆதிசேஷனுக்கும் கீழே இருந்துகொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து அனைத்து உலகங்களையும்
கூர்ம மூர்த்திதான் தாங்கிவருகிறார். இதன் அடையாளமாகவே அனைத்துத் திருக்கோயில்களிலும் உள்ள சேஷ வாகனத்தின் கீழே
கூர்மமூர்த்தி இருப்பதைக் காணலாம்.
இப்படி அனைத்து உலகங்களையும் கூர்மமூர்த்தி தன் முதுகில் தாங்கிப் பிடித்துக் காப்பதால் அவருக்கு ‘துர்ய:’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 331-வது திருநாமம்.
“துர்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

—————

332. வரதாய நமஹ (Varadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)“
இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று ஒருவர் வேதாந்த தேசிகனிடம் கேட்டார்.
அதற்கு தேசிகன், “வேதம்தான் ஆதாரம். வேதங்களைக் கொண்டுதான் இறைவனை அறிய முடியும்!
ஆனால் நீ அந்த வேதங்களை ஏற்கும் அளவு பக்குவம் பெறவில்லை! உனக்குப் புரியும் படி ஆதாரம் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“ம்ம் சொல்லுங்கள்!” என்றார் அந்த நபர்.

தேசிகன், “பூமி, கடல், சூரியன் ஆகிய மூன்றும் இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்களாகத் திகழ்கின்றன!” என்று கூறினார்.
“இவை எப்படி இறைவன் இருப்பதற்கு ஆதாரமாகும்?” என்று கேட்டார் அந்த நபர்.
அதற்கு, “பூமி சூரியனைச் சுற்றிச் சுழன்று வருகிறதே! அது எப்படிச் சரியாக முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்களில்
ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது? அந்த எண்ணிக்கை என்றுமே மாறுவதில்லையே! அதற்கு என்ன காரணம்?
இந்தச் சுழற்சி சீராக இயங்குகின்றது என்றாலே, அதைச் சீராக நடத்திச்செல்லும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று தானே பொருள்?
பூமியில் விதை போட்டால் முளைக்கிறதே, அதை முளைக்கச் செய்வது யார்? உள்ளிருந்து இயக்கும் இறைவன்தானே?

அடுத்து கடலுக்கு வருவோம். கடல் அலைகள் கரையில் வந்து வந்து மோதினாலும் மீண்டும் கடலுக்குள்ளேயே செல்கின்றனவே!
அவற்றைச் சீராக இயக்குவது யார்? ஆழிப்பேரலை உள்ளிட்ட அசாதாரண சூழல் வந்தாலே ஒழிய கடல்நீர் நிலத்துக்குள் வராமல் இருக்கிறதே!
அதைச் சீராக இயக்கும் இறைவன் ஒருவன் இல்லாவிட்டால் இது சாத்தியமா?
சூரியன் ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமிக்கிறதே! அதை இயக்குவது யார்?
எனவே சீராக இயங்குகின்ற பூமி, கடல், சூரியன் இவற்றைக்கொண்டே இறைவன் உள்ளான் என்பது ஒருவாறு யூகிக்கலாமே!” என்றார் தேசிகன்.

“இறைவன் இவற்றை எப்படி இயக்குகிறார்?” என்று அந்த நபர் கேட்டார்.
அதற்கு தேசிகன், “இவற்றுக்கெல்லாம் அதிபதிகளாக இந்திரன், வருணன், வாயு, சூரியதேவன், சந்திரன், ருத்ரன் போன்ற
தேவர்களைத் திருமால் நியமித்திருக்கிறார். அவர்களுக்குத் திருமாலே உள்ளிருந்து சக்தியைக் கொடுத்து
அந்தந்த பொருள்களை அவர்கள் இயக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் இறைவனைக் காண விளக்கேற்றிய பொய்கையாழ்வார்,
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக”
என்று பூமியை அகலாக்கி, கடல்நீரை நெய்யாக்கி, சூரியனைத் தீபமாக்கினார்.
பூமி, கடல், சூரியன் ஆகியவை இறைவன் உள்ளான் என்று காட்டும் விளக்காக உள்ளன.

அது மட்டுமில்லை, இவற்றை இயக்கும் தேவர்கள் எப்போது திருமாலிடம் வரம் வேண்டி வந்தாலும்,
அப்போதெல்லாம் அவர்களுக்கு அந்தந்த வரங்களை அருளி, வலிமையையும் தந்து, அந்த தேவர்கள் மூலம் உலகின் இயக்கம்
சீராக நடக்கும்படிச் செய்கிறார்.ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலிமை இழந்து நின்ற போது,
திருமால் ஆமை வடிவுடன் கூர்மாவதாரம் எடுத்து, மந்தரமலையை முதுகில் சுமந்து, பாற்கடலைக் கடைய வைத்து,
தேவர்களுக்கு அமுதத்தைப் பெற்றுக் கொடுத்து, அதன்மூலம் அவர்கள் வலிமை பெறும்படிச் செய்தார்!” என்று விளக்கினார்.

கேள்வி கேட்டவருக்கு மெல்ல மெல்ல இறைவனிடமும் வேதங்களிடமும் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிற்று.
வேதங்கள் மற்றும் குருவின் துணையோடு இறைவனை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கினார்.
‘வர:’ என்பது வரங்களைக் குறிக்கிறது. ‘த:’ என்றால் அருள்பவர்.
தேவர்கள் வரம் வேண்டும் என்று பிரார்த்திக்கும் போதெல்லாம் அவர்கள் வேண்டும் அந்தந்த வரங்களைத் தந்தருள்வதால்,
கூர்ம மூர்த்தி ‘வரத:’ (வர: + த: = வரத:) என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 332-வது திருநாமம்.
“வரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல வரங்களைத் திருமால் தந்தருள்வார்.

———–

——–

341. சூராய நமஹ: (Shooraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள்.
“இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன!
அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பதும்,
ஆட்டம் போடுவதும் கொஞ்சம் கூட நன்றாக இல்லை!” என்று கண்ணனைக் குறை சொல்லி
ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத் தம்பதியர்.

ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது.
அதனால் தன் மனைவியை அழைத்து, “இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன்.
பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின் மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான்.
அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே!
நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும்!” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
மனைவியும் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

அரை மணிநேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
“யார் அது?” என்று உள்ளிருந்து இந்தப் பெண் கேட்க, “நான் தான் வந்திருக்கிறேன்!” என்று
அவளது கணவரின் குரலில் பதில் வந்தது.
“ஆஹா! நம் கணவர் தான் திரும்ப வந்துவிட்டார்!” என்று எண்ணி அந்தப் பெண் கதவைத் திறந்தவாறே,
அவளது கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“சீக்கிரம் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டு விடுவோம்! கண்ணன் வரும் நேரம்!” என்று சொல்லிக் கொண்டே
வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுவிட்டார் அவளது கணவர்.

அதன்பின் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டினுள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று அப்பெண் கேட்க,
“நான்தான் வந்திருக்கிறேன்!” என்று மீண்டும் அவளது கணவரின் குரலிலேயே பதில் வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் தன்னுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள்.
ஊஞ்சலில் இருந்த கணவர், “இது கண்ணனின் வேலையாக இருக்கும்!
கதவைத் திறக்க வைப்பதற்காக என் குரலிலேயே பேசுகிறான்!” என்றார்.

“இப்போது என்ன செய்வது?” என்று மனைவி கேட்க, அருகிலிருந்து ஒரு முறத்தை எடுத்துக் கொடுத்த கணவர்,
“நீ கதவைத் திறந்து விட்டு வெளியே நிற்கும் கண்ணனை இந்த முறத்தால் அடித்துத் துரத்திவிடு!” என்றார்.
அவளும் கையில் முறத்தோடு போய்க் கதவைத் திறந்தாள்.
வெளியே அவளது கணவனைப் போன்ற உருவத்தோடேயே ஒருவர் நிற்பதைக் கண்டாள்.
கண்ணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என எண்ணி, வெளியே நிற்பவரை முறத்தால் அடித்தாள்.
வெளியே நின்றவரோ, “உன் கணவனான என்னை ஏன் அம்மா அடிக்கிறாய்?” என்று கதறினார்.
அவளோ, “நீ மாறு வேடத்தில் வந்தவன் என்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லி மேலும் அடித்தாள்.

“இங்கே பார்!” என்றொரு குரல் வீட்டின் உள்ளிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.
ஊஞ்சலிலே கையில் சங்கு சக்கரங் களைத் தாங்கியபடி கண்ணன் அமர்ந்திருந்தான்.
“அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவன் தான் கண்ணனா?
என்னிடம் அடி வாங்கியவர் உண்மையிலேயே என் கணவரா!” என்று உணர்ந்து திகைத்துப் போனாள் அப்பெண்.

அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்கும் அருள்புரியத் தான் இத்தகைய லீலையைச் செய்தேன்!” என்று சொல்லி,
இருவரையும் அழைத்து, அவர்களுக்கு இம்மை மறுமை அனைத்துக்குமான நலன்களையும் அருளினான்.
அன்று முதல் அந்தத் தம்பதியர் தீவிர கிருஷ்ண பக்தர்களாக மாறி விட்டார்கள்.
இப்படித் தன்னை வெறுக்கும் மனிதர்களிடம் தனது அழகு, குணங்கள், லீலைகள் ஆகியவற்றைக் காட்டி,
அவர்களையும் பக்தர்களாக மாற்றி, வென்று எடுப்பவராகத் திருமால் திகழ்வதால்
அவர் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.

“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா”என்று இவ்வாற்றலை ஆண்டாளும் பாடி இருக்கிறாள்.
நமது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்,
“ஒருவரை வீழ்த்துவது சுலபம், வெல்வதே கடினம்!” என்று கூறுவார்.
அதாவது,
தன்னை வெறுப்பவரைப் போரில் வீழ்த்துவது மிக எளிது,
ஆனால் அந்த எதிரிகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களைப் பக்தர்களாக்கி வென்றெடுப்பதே அரிது.
ஆனால் திருமாலோ அனாயாசமாக எல்லோரையும் வென்றெடுத்து விடுவதால் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சூர:’ என்றால் அனைவரையும் வெல்வதற்குரிய சாமர்த்தியம் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 341-வது திருநாமம்.
“சூராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
அனைவரின் மனங்களையும் வெல்லும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

————

342. சௌரயே நமஹ: (Shouraye namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பற்பல லீலைகள் புரிந்து அடியார்களுக்கு அருள் புரிவதற்காகவும்,
பூமிக்குப் பாரமாக உள்ள தீயவர்களை அழிப்பதற்காகவும்,
நல்லறத்தைப் பூமியில் நிலைநாட்டுவதற்காகவும் கண்ணனாகப் பூமியில் அவதரிக்கத் தீர்மானித்தார் திருமால்.
அப்போது மகாலட்சுமி திருமாலிடம், “கடந்த ராமாவதாரத்தில் தசரதரைத் தந்தையாகத் தேர்வு செய்தீர்கள்.
இந்த அவதாரத்தில் யாரைத் தந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள்.

அப்போது திருமால், “சூரர் எனப்படும் வசுதேவரை இந்த அவதாரத்தில் எனக்குத் தந்தையாகத் தேர்வு செய்துள்ளேன்!” என்றார்.
“என்ன காரணத்துக்காக அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள் மகாலட்சுமி.
அதற்குத் திருமால், “இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வசுதேவர் யது குலத்தைச் சேர்ந்தவர்,
அதாவது யது மகாராஜாவின் வம்சத்தில் தோன்றியவர்.
அக்காலத்தில் யது மகாராஜா மிகச்சிறந்த தானப் பிரபுவாகத் திகழ்ந்தார் என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றார் திருமால்.

அதற்கு மகாலட்சுமி, “ஆம் சுவாமி! தினந்தோறும் யதுவிடம் தானம் வாங்குவதற்குக் கூட்டம் கூட்டமாக
மக்கள் வந்து அவரது மாளிகை வாசலில் நின்றிருப்பார்கள்.
அந்தக் கூட்டத்தில் நிற்கும் மக்களுள் முதல் மனிதருக்குரியது தானம் செய்தாலே,
அந்த தானம் பெற்ற நபர் மீதமுள்ள அத்தனை பேருக்கும் தானம் செய்யும் அளவுக்குப் பணக்காரராக ஆகிவிடுவார்.
யதுவிடம் தானம் பெற்ற ஒருவன், அதன்பின் தானம் வேண்டும் என்று இன்னொருவரை
நாடிச் செல்ல வேண்டிய நிலையே இருக்காது.
அந்த அளவுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யது!” என்றாள்.

திருமால், “ஆம். சரியாகச் சொன்னாய். முன்பு ராமாவதாரத்தில் நான் ரகு குலத்தில் ஏன் அவதாரம் செய்தேன்?
ரகு மகாராஜா மிகச்சிறந்த தானப்பிரபுவாக இருந்தார், வறியவருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தார் என்பதனால்
தானே ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகனாகத் தோன்றினேன்?
அதே போல் இம்முறை யதுவின் தானத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரது குலத்தில் தோன்றிய
வசுதேவரின் மகனாக அவதரிக்கப் போகிறேன்!” என்று கூறினார்.

“தானம் செய்பவர்கள் உங்கள் விசேஷ அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க உள்ளீர்கள் போலும்!”
என்று சொல்லி புன்னகைத்த மகாலட்சுமி, “இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டாள்.
அதற்குத் திருமால், “முன்னொரு சமயம் சுதபஸ்-பிருச்னி என்ற தம்பதியர் என்னைக் குறித்துத்
தவம் செய்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா?” என்று மகாலட்சுமியிடம் கேட்டார்.
“ஆம் சுவாமி, அறிவேனே! அவர்களின் தவத்துக்கு உகந்து அவர்களுக்குக் காட்சி அளித்த நீங்கள்,
மூன்று முறை அவர்களின் மகனாகப் பிறக்கப் போவதாக அவ்விருவருக்கும் வரம் அளித்திருந்தீர்களே!” என்று சொன்னாள் மகாலட்சுமி.

“ஆம் தேவி! முதலில் சுதபஸ்-பிருச்னிக்கு மகனாக பிருச்னிகர்ப்பன் என்ற பெயரோடு நான் அவதாரம் செய்தேன்.
அடுத்த பிறவியில் அவர்களே கச்யப முனிவராகவும், அதிதி தேவியாகவும் பிறந்தார்கள்.
அப்போது அவர்களின் மகனான வாமன மூர்த்தியாக நான் அவதாரம் செய்தேன்.
இப்போது அந்த சுதபஸ் தான் சூரர் என்று பெயர்பெற்ற வசுதேவராகவும், பிருச்னி தான் தேவகியாகவும் பூமியில் பிறந்துள்ளார்கள்.

எனவே இப்போது அவர்களின் மகனாக, மூன்றாவது முறையாக, நான் அவதாரம் செய்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தை
முழுமையாக நிறைவேற்றப் போகிறேன்!” என்று கூறினார்.
உடனே மகாலட்சுமி, “சுவாமி! நீங்கள் அவதரிக்கும் போதெல்லாம் நானும் உடன் வருவது வழக்கம் அல்லவா?
நீங்கள் பிருச்னிகர்ப்பராகவும், வாமன மூர்த்தியாகவும் அவதரித்த சமயத்தில், உங்கள் திருமார்பிலேயே நான் இருந்தேன்.
இப்போது நீங்கள் மதுராவில் வசுதேவர் மகனாக அவதாரம் செய்ய உள்ளீர்கள்.
நான் விதர்ப்ப நாட்டில் பீஷ்மகன் மகள் ருக்மிணியாகப் பிறக்கிறேன். பூமியில் சந்திப்போம்!” என்று
சொல்லித் திருமாலை வழியனுப்பி வைத்தாள்.

இவ்வாறு வசுதேவரின் குலமுன்னோரான யதுவைக் கௌரவிக்கும் விதமாகவும்,
வசுதேவர்-தேவகி செய்த தவத்துக்கு முழுமையான பலன் அளிப்பதற்காகவும் வசுதேவர் மகன் கண்ணனாகத் திருமால் அவதரித்தார்.
வசுதேவருக்கு ‘சூர:’ என்று பெயர். சூரரின் மகனாக அவதரித்ததால், திருமால் ‘சௌரி:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சௌரி:’ என்றால் சூரரின் மகன். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 342-வது திருநாமம்.
“சௌரயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு நல்ல சந்ததி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

——————-

343. ஜனேச்வராய நமஹ:
(Janeshwaraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கோபாலார்ய மகா தேசிகன் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
வேதாந்த தேசிகரின் மறு அவதாரமாகவே போற்றப்பட்ட அவரைத் ‘திருக்குடந்தை தேசிகன்’ என்று அன்பர்கள் அழைப்பது வழக்கம்.
இல்லறத்தில் வாழ்ந்த திருக் குடந்தை தேசிகனை மூன்று சந்நியாசிகள் அடி பணிந்து அவருக்குச் சீடர்களாய் ஆனார்கள்.

இத்தகைய பெருமைகள் இருந்த போதும், துளியும் கர்வமோ அகங்காரமோ இல்லாமல், பணிவே வடிவெடுத்தவராய்த் திகழ்ந்தார்.
இதைக் கண்ட சில பண்டிதர்கள் திருக்குடந்தை தேசிகனிடம்,
“சுவாமி! பொதுவாக இல்லறத்தில் இருப்பவர்கள் துறவியரை வணங்கிப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் மூன்று துறவிகள் உங்களை வந்து அடிபணிந்து உங்களுக்குச் சீடர்களாய் ஆகி இருப்பது வியப்பைத் தருகிறது.
அதைக் காட்டிலும் அதிக வியப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், மூன்று துறவிகள் உமக்குச் சீடராக இருக்கும் நிலையிலும்,
நீங்கள் மிகுந்த பணிவோடு, அகங்காரமே இல்லாமல் இருக்கிறீர்களே! அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்குத் திருக்குடந்தை தேசிகன், “அடியேனுக்கு எப்போதெல்லாம் ஆணவம் வருவது போலத் தோன்றினாலும்,
குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளின் கிரீடத்தை நினைத்துக் கொள்வேன்.
உடனே எனது ஆணவம் எல்லாம் பறந்துபோய், மனத்திலே பணிவு குடிகொண்டுவிடும்!” என்று பதில் அளித்தார்.
அது எப்படி என்று பண்டிதர்கள் கேட்க, திருக்குடந்தை தேசிகன்,

“நானா ரத்ன ப்ரதித மஹிமா ஸ்ரீ மதாபீட நத்த:
ஸர்வேசத்வ ப்ரகடன சணோ நிர்மித: அதுல்ய ஹேம்னா
மால்யோந்நீத ஸ்திர பரிமளோ வைதிகாக்யே விமானே
வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட:”-என்ற ஸ்லோகத்தால் அதற்கு விடை சொன்னார்.

“நம் குடந்தை ஆராவமுதப் பெருமானின் கிரீடம் எப்படிப்பட்டது தெரியுமா?
நானா ரத்ன ப்ரதித மஹிமா – வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம் போன்ற
ரத்தினங்கள் பதிக்கப் பெற்றது.

ஸ்ரீ மத் ஆபீட நத்த: – அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.
நிர்மித: அதுல்ய ஹேம்னா – ஒப்பற்ற தங்கத்தாலே செய்யப்பட்டது.
மால்யோந்நீத ஸ்திர பரிமள: – பூ வைத்தாலும் வைக்காமல் போனாலும், எப்போதும் மணம் கமழக் கூடியது.
வைதிகாக்யே விமானே வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட: – வைதிக விமானத்தின் கீழே
கோவில் கொண்டிருக்கும் அப் பெருமானின் கிரீடம் என் மனத்திலும் இருக்கிறது.

ஸர்வேசத்வ ப்ரகடன சண: – அந்த இறைவனின் ஒப்பற்ற ஆளுமைக்கு அடையாளமே அந்தக் கிரீடம்.
சாதாரணமாகத் தொப்பி அணிந்திருக்கும் ஒருவர், சயனிக்கச் சென்றால் தொப்பியைக் கழற்றி வைப்பது வழக்கம் அல்லவா?
ஆனால் இங்கே குடந்தையில் ஆராவமுதப் பெருமாள், சயனிக்கும் போது கூட கிரீடத்தை அகற்றாமல் சயனித்துள்ளாரே!
இது எதை உணர்த்துகிறது?

அவரே மிகவும் உயர்ந்தவர்! கிரீடத்தை அகற்றி இன்னொருவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை!
அதனால்தான் சயனிக்கும் வேளையிலும் கிரீடத்தைத் தலையில் அவர் அணிந்துகொண்டே இருக்கிறார்!
இவ்வாறு அவரது ஆளுமைக்கு அடையாளமாக இருக்கும் அந்தக் கிரீடத்தை நினைத்த மாத்திரத்தில்,
அவர் எவ்வளவு உயர்ந்தவர், நாம் எவ்வளவு தாழ்ந்தவர் என்பது மனதில் நன்கு பதிந்து விடும்.
அதை நினைக்க நினைக்க மனதில் அகங்காரமே எழாது!” என்பதே திருக்குடந்தை தேசிகன் தந்த விளக்கம்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்னவென்றால், எப்போதும் ஒளிர்கின்ற ஆளுமையோடு கூடியவர் திருமால்,
அதன் அடையாளமாகத் தலையில் கிரீடத்துடன் திகழ்கிறார். உலகில் பொதுவாக நாம் ஆளுமை என்று சொல்லும்
நபர்களின் ஆளுமைகளை எல்லாம் திருமாலின் ஆளுமை மூழ்கடித்துவிடுகிறது.

‘ஐச்வர்யம்’ என்றால் ஆளுமை. ‘ஈச்வர:’ என்றால் ஆளுமை மிக்கவர், அல்லது ஆள்பவர்.
‘ஜன’ என்பது உலகிலுள்ள அனைத்து மக்களையும் குறிக்கும்.
உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஒப்பற்ற ஆளுமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘ஜனேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஜனேச்வர:’ என்றால் அனைவரையும் ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 343-வது திருநாமம்.
“ஜனேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் வாழ்வில்
நல்ல நிர்வாகத் திறனும் ஆளுமையும் பணிவும் ஒருங்கே பெற்றுத் திகழத் திருமால் அருள் புரிவார்.

—————-

344. அநுகூலாய நமஹ:(Anukoolaaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் தளர்நடை நடக்கத் தொடங்கிய பின்,
திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விடுவது அவன் வழக்கம். யசோதை எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.
சிறிது நேரம் கழித்து, உடலெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு எங்கிருந்தோ வருவான்.

மேலும், ஒரு நொடிப்பொழுது கூட ஓர் இடத்தில் நிற்க மாட்டான் கண்ணன்.
திடீரென மாட்டுத் தொழுவத்தில் புகுந்து தொந்தரவு செய்வான். அங்கே போய் அவனைப் பிடிக்க முயன்றால்,
கன்றுக் குட்டிகள் கட்டப்பட்ட தொழுவத்துக்கு ஓடி விடுவான்.
அப்புறம் எப்படியோ அவனைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மீண்டும் மாயமாகிவிடுவான்.

பசு மற்றும் கன்றுகளின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடுவான்.
இப்படித் துருதுரு என்று விளையாடும் கண்ணனை யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணனிடம், “நான் உன்னைப் பார்ப்பதா? வீட்டு வேலையைப் பார்ப்பதா? சிறிது நேரம் கூட ஓரிடத்தில் இருக்க மாட்டாயா?”
என்றெல்லாம் அறிவுறுத்திப் பார்த்தாள் யசோதை. ஆனாலும் கண்ணன் அதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஒருநாள் கண்ணன் அதிகமாக விஷமம் செய்யவே, யசோதை பிரம்பினால் அவனை அடிக்கப் போனாள்.
ஆனால் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்குமோ என்று அஞ்சிய யசோதை, பிரம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு,
தாம்புக் கயிற்றை எடுத்து அடிக்கப் போனாள். ஆனால் கண்ணனோ, பயந்தவன் போல் நடிக்கத் தொடங்கினான்.
அவன் உண்ட வெண்ணெய் தோய்ந்த கைகளால் யசோதையைத் தொழுதான்.
மை தீட்டிய கண்களில் இருந்து மை கரைந்து வரும்படி கண்ணீர் விட்டு அழுதான்.
அச்சத்துடன் யசோதையை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். பயத்தில் குழந்தை கண்ணனின் உதடுகள் துடித்தன.
மேனி நடுங்கியது.
பார்த்த யசோதை, “குழந்தாய்! உன்னைப் போய் அடிப்பேனா?” என்று சொல்லி அவனைத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த நொடியே, அங்கிருந்து மாயமான கண்ணன், மேலும் லீலைகள் புரியச் சென்று விட்டான்.
இவனை ஓரிடமாகக் கட்டிப்போட வேண்டும் என்று கருதிய யசோதை, இரண்டு கயிறுகளை எடுத்தாள்.
ஒரு கயிற்றை ஓர் உரலைச் சுற்றி மூன்று சுற்றுகள் சுற்றி, அதை ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
மறுபுறம் இன்னொரு கயிற்றைக் கண்ணனின் இடுப்பைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி அதையும் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
இரண்டு கயிறுகளையும் இழுத்துப் பார்த்த போது அவற்றுக்கு இடையே இரண்டு அங்குலம் இடைவெளி இருந்தது.

வேறு சில கயிறுகளைக் கொண்டு வந்து இவற்றோடு சேர்த்துக் கட்டிவிட்டுப் பார்த்தாள் யசோதை.
உரலும் நகரவில்லை, கண்ணனும் நகரவில்லை, ஆனாலும் இரண்டு அங்குலம் இடைவெளி மட்டும் அப்படியே இருக்கிறது.
வியர்த்து விறுவிறுத்துப் போன யசோதை, “கண்ணா! உன் தாயான எனக்கு உன்னைக் கட்டும் உரிமைகூட இல்லையா?” என்று கேட்டாள்.
அவளது அன்புக்கு மனம் இரங்கினான் கண்ணன்.
அதனால் அடுத்த கயிற்றை அவள் கொண்டு வந்த சேர்த்து முடிச்சு போட்ட போது, இரண்டு கயிறுகளும் இணைந்துவிட்டன.

கண்ணனை உரலோடு கட்டிவிட்டாள் யசோதை.
இப்படிக் கண்ணனைக் கட்டிய யசோதை, அவனைப் பார்த்து,
“யதி சக்னோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித!” (விஷ்ணு புராணம் 5-6-15)

“ஓரிடத்தில் நிற்க மாட்டேன் என்று விஷமம் செய்தாயே! முடிந்தால் இதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்!” என்று
சொல்லி விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள். தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே உரலோடு கட்டுண்டு கிடந்தான் கண்ணன்.
இறைவனுக்கு எத்தனையோ மேன்மைகள் இருந்தாலும், அவன் தன் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடத்தில் எளியவனாக இருக்கிறான்.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே”–என்று இப் பண்பை நம்மாழ்வார் பாடுகிறார்.
ஆக, மிகவும் உயர்ந்தவராக இருக்கும் திருமால், அத்தன்மைகளை மறைத்துக் கொண்டு,
தன் பக்தர்களிடத்தில் இனியவராக, எளியவராக, அவர்களுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பதால்,
அவர் ‘அநுகூல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘அநுகூல:’ என்றால் இனியவர், எளியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 344-வது திருநாமம்.“அநுகூலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
அனைவரிடத்திலும் திருமால் இனியவராக, எளியவராக இருந்து அருள் புரிவார்.

————-

345. சதாவர்த்தாய நமஹ (Shatha-Aavarthaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை – பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி?
அதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் தெரிவிக்கிறார்:
“அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும்
செய்எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே!”

திருமாலின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால், துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப் பாடலின் சாரமாகும்.
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –
துக்கம் என்பது சிறிதும் இல்லாத எல்லையற்ற ஆனந்தத்துடன் வைகுண்டத்தில் திகழ்கிறார் திருமால்.
அவரது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை, அதில் துக்கத்தின் கலப்பும் இல்லை.

எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் –
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் தனியாகப் பார்த்தாலும் அழகு நன்கு வெளிப்படுகிறது,
திருமேனியை மொத்தமாகப் பார்த்தாலும் அழகு திகழ்கிறது. அந்த அழகின் ஒளியானது வைகுண்ட லோகம் முழுவதும்
பரவி வெள்ளம் போலே பெருக்கெடுத்து ஓடுகிறது.

அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
தாமரை மலரின் வாசனையே ஒரு வடிவம் கொண்டது போல் திகழ்கின்ற மகாலட்சுமியுடன் ஆனந்தமாக இணைந்து
களித்து மேலும் மகிழ்பவர். அதாவது, தனக்கே உரித்தான இயற்கையான பரமானந்தம் அளவிறந்து இருக்க,
அதற்கும் மேலான பரமானந்தமாக மகாலட்சுமியுடன் சிருங்காரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்கிறார் திருமால்.

எல்லையில் ஞானத்தன் –
மகாலட்சுமியோடு இப்படி உறவாடுவதற்குத் தேவையான பேரறிவைக் கொண்டவர் திருமால்.
அவரது ஞானத்துக்கு எல்லையே இல்லை.

ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் –
அந்த ஞானத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்ய வல்லவர் திருமால். அதாவது,
மனிதர்களான நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தியே செய்ய முடியும்.
ஆனால் இந்த உலகை இயக்குதல் உட்பட அனைத்தையும் திருமால் தனது எண்ணத்தாலேயே செய்து முடித்து விடுகிறார்.

எல்லையில் மாயனை –
எல்லையில்லாத வியக்கத்தக்க செய்கைகளைக் கொண்டவர் திருமால்.

கண்ணனை –
அந்த லீலைகளை நமக்குச் செய்து காட்டும் பொருட்டுக் கண்ணனாக வந்து அவர் எளிமையுடன் அவதரித்தார்.

தாள் பற்றி –
அந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கியதால்

யான் ஓர் துக்கம் இலனே – எனக்கு வாழ்வில் ஒரு சிறிய துக்கம் கூட இல்லை, நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்கார ரசம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி, லீலைகள், எளிமை
உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்கச் சிந்திக்க, நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று
இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.
இவ்வாறு நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்க வல்ல எண்ணற்ற மேன்மைகளைத் திருமால் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.
பெரிய வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்து வைத்தால், அதில் அலைகள் சுழித்துச் சுழித்துப் பெருகும் அல்லவா?
அதுபோலத் தான் திருமாலின் எல்லையற்ற மேன்மைகளும் பெரு வெள்ளத்தில் எழும் அலைகள் போல் சுழித்துச் சுழித்துப் பெருகுகின்றன.

‘ஆவர்த்த:’ என்றால் சுழல் என்று பொருள். ‘சத’ என்றால் நூறு.
நூற்றுக் கணக்கான சுழல்களாய்ச் சுழித்துச் சுழித்துப் பெருகும் மேன்மைகளை உடையவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘சதாவர்த்த:’ (சத + ஆவர்த்த: = சதாவர்த்த:) என்றழைக்கப்படுகிறார்.
‘சதாவர்த்த:’ என்றால் நூற்றுக்கணக்கான சுழற்சிகளை உடையவர், அதாவது
சுழித்துப் பெருகும் நூற்றுக்கணக்கான மேன்மைகளைக் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 345-வது திருநாமம்.
“ஸதாவர்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் இன்பச் சுழல்கள் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————–

346. பத்மினே நமஹ (Padhmine namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
தமிழகத்தில் வாழ்ந்த ஒரு கணவனும் மனைவியும் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றார்கள்.
சுற்றுலா வந்த இடத்தில் மனைவிக்குக் குருவாயூரப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தன் விருப்பத்தைக் கணவனிடம் தெரிவித்தாள் அப்பெண்.
ஆனால் கணவனோ, “ஆனந்தமாகச் சுற்றுலா வந்த வேளையில், கோவில், பூஜை, வழிபாடு
இவற்றைச் செய்ய எனக்கு மனமில்லை!” என்று மறுத்தார். ஆனாலும் மனைவி கட்டாயப் படுத்தியதால்
குருவாயூர் கோவிலுக்கு வந்தார்.

கோவிலுக்கு வந்த போதும், “சுற்றுலாவுக்காக ஆசையாக வந்த என்னை இப்படிக் கோவிலில் கொண்டு வந்து
வரிசையில் நிறுத்தி விட்டாயே!” என்று மனைவியைப் பார்த்துப் புலம்பிக் கொண்டே இருந்தார்.
மனைவியோ, “கண்கண்ட தெய்வமாய் இருக்கும் குருவாயூரப்பனைத் தரிசிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?
அதை உணராமல் இப்படிப் பேசுகிறாரே!” என்று மனதுக்குள் வருந்தினாள்.
“குருவாயூரப்பா! நீயே நல்வழி காட்டு!” என்று வேண்டிக் கொண்டே குருவாயூரப்பன் சந்நிதியை நோக்கிச் சென்றாள்.

வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தவாறே, குருவாயூரப்பனுக்கு முன்னே வந்து அந்த தம்பதியர் நின்றார்கள்.
இறைபக்தி நிறைந்த அப்பெண் குருவாயூரப்பனின் அழகில் ஈடுபட்டு வணங்கியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் கோவிலுக்கு வருவதற்கே விருப்பம் இல்லாமல் இருந்த அவளது கணவர் குருவாயூரப்பனின்
வடிவழகைக் கண்ட மாத்திரத்தில், மனதுக்குள் இனம் புரியாத ஓர் ஆனந்தத்தை அநுபவித்தார்.

காயாம்பூவைப் போன்ற அழகிய ஓர் ஒளி. அதன் நடுவிலே ஒரு குழந்தையின் வடிவம்.
அதில் பேரின்பத்தின் சுவை ததும்புகிறது. சுருண்ட தலைமுடி பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியில் விழ,
இரு விழிகளும் அருட்கடலாய்ப் பொங்கி வந்து மனதைக் குளிர்விக்க,
இரு கன்னங்களும் இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல ஒளிவீச,
மெல்லிய புன்னகை சிவந்த உதடுகளுக்கு மேலும் அழகூட்டக் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தரும்
குருவாயூரப்பனின் அழகு அந்த நபரின் மனதை முழுமையாகக் கொள்ளை கொண்டு விட்டது.

உடனே, “இறைவா! நான் விருப்பமே இல்லாமல் தான் இந்தக் கோவிலுக்கு வந்தேன்.
ஆனால் இப்போது உன்னைத் தரிசித்தவாறே எனது எண்ணம் மாறி விட்டது. உன்னைத் தரிசித்ததால் தான்
நான் பிறவிப் பயனையே பெற்றவன் ஆனேன். உன்னைக் காணாத கண் கண் அல்ல!” என்று மனம் விட்டுக் கூறினார்.
சந்நிதியில் இருந்து வெளியே வந்ததும் அந்தப் பெண் தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அது தான் குருவாயூரப்பனின் மகிமை.
விருப்பமே இல்லாமல் கோவிலுக்கு வந்த உங்கள் மனதையும் ஈர்த்து விட்டான் பாருங்கள்!” என்றாள்.
“ஆமாம்! இனி ஒவ்வொரு வருடமும் ஒருமுறையாவது இந்தக் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனைத் தரிசித்தே தீருவேன்!”
என்று அங்கேயே உறுதி பூண்டார் அவளது கணவர்.

பக்தியே இல்லாமல் கோவிலுக்கு வந்தவர் குருவாயூரப்பனைத் தரிசித்தவுடன் பெரும் பக்தராகி விட்டாரே!
அது எப்படிச் சாத்தியம்? வேறொன்றுமில்லை. குருவாயூரப்பன் தன் அழகினால் அவரது மனதை நன்கு கட்டிப் போட்டு விட்டான்.
இறைவனின் அழகு, குணங்கள் ஆகியவற்றை நாம் நன்றாக அநுபவிக்கத் தொடங்கி விட்டால்,
நம் மனம் மற்ற அற்ப விஷயங்களில் இருந்து விலகி, முழுமையாக இறை விஷயத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது. அதுதான் இங்கே நடந்தது.

இக்கருத்தை ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் குருவாயூரப்பனைக் குறித்து எழுதிய
மணிமங்கல ஸ்தவத்தில் அழகாகப் பாடியுள்ளார்:
“நாலஸ்ய மூலம் சரணாங்குலிப்யாம் பத்மம் ப்ரஸூனம் கர பங்கஜேன க்ருண்ஹன்
க்ருஹீதம் ஹ்ருதயாம்புஜம் நு மதீயம் ஆவேதயஸீதி மன்யே”
“குருவாயூரப்பா! உன் வலது கீழ்க் கரத்தில் நீ ஏன் தாமரை ஏந்தி இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உன்னிடம் வரும் அடியார்களின் உள்ளமாகிய தாமரையை உன் கரத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுகிறாய்.
நீ பிடித்துக் கொண்டவாறே அவர்களின் உள்ளத் தாமரை உன்னிடமேயே நிலைபெற்று விடுகிறது.
அதன் பின் அவர்களின் மனம் மற்ற விஷயங்களை நாடுவதில்லை.

அடியார்களின் உள்ளத் தாமரையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை உணர்த்தவே
கையில் தாமரையை ஏந்தியபடி நீ காட்சி தருகிறாய்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

‘பத்மம்’ என்றால் தாமரை. ‘பத்மீ’ என்றால் தாமரையை ஏந்தி இருப்பவன்.
அடியார்களின் உள்ளங்களாகிய தாமரையைக் கவர்பவன் என்பதற்கு அடையாளமாகத்
தாமரையைத் திருக்கையில் ஏந்தி இருப்பதால், திருமால் ‘பத்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 346-வது திருநாமம்.
“பத்மினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களைத் திருமால் கவர்ந்து செல்வார்.

————-

347. பத்ம நிபேக்ஷணாய நமஹ (Padhma Nibhekshanaaya namaha)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவஹீந்திரபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்து
ஐம்பது ஸ்லோகங்கள் அடங்கிய தேவநாயக பஞ்சாசத் என்ற துதியை இயற்றினார் வேதாந்த தேசிகன்.
அதில் 16-வது ஸ்லோகம் முதல் 45-வது ஸ்லோகம் வரை உள்ள முப்பது ஸ்லோகங்களாலே
தெய்வநாயகப் பெருமாளின் திருமுடியிலிருந்து திருவடி வரை உள்ள ஒவ்வொரு அவயவத்தையும்
ஆழ்ந்து அநுபவித்து வர்ணித்துள்ளார் தேசிகன்.
அதில் 24 மற்றும் 25-வது ஸ்லோகங்களில் தெய்வநாயகப் பெருமாளின் கண்ணழகை
இரண்டு உவமைகளைக் கொண்டு வர்ணிக்கிறார் தேசிகன்.

“ஆலக்ஷ்ய ஸத்த்வம் அதிவேல தயோத்தரங்கம்
அப்யர்த்தினாம் அபிமத ப்ரதிபாதனார்ஹம்
ஸ்நிக்தாயதம் ப்ரதிம சாலி ஸுபர்வ நாத
துக்தாம்புதே: அநுகரோதி விலோசனம் தே” என்ற 24-வது ஸ்லோகத்தில்,
பாற்கடலோடு திருமாலின் கண்களை ஒப்பிடுகிறார் தேசிகன்.

திருப்பாற்கடல் தெய்வநாயகனின் திருக்கண்கள் எப்போதும் அலைகள் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன
கருணை அலை அலையாகக் கரை புரண்டு ஓடி வருகின்றது
ஐராவதம், காமதேனு, சந்திரன், அமுதம் என அவரவர் விரும்பிய பொருட்களை எல்லாம் தந்தது
அடியார்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் அக்கண்கள் அருளி விடுகிறது அகன்று இருக்கிறது
அடியார்களுக்கு நிறைய அருள்புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினாலே அகன்று விரிந்து காதுவரை நீண்டுள்ளது
பார்ப்பதற்கு அழகாக உள்ளதுபார்ப்பதற்கு அழகாக உள்ளது கடல்பிராணிகளுக்கு (சத்த்வம்) இருப்பிடமாகிறது
சத்துவ குணத்துக்கு (சத்த்வம்) இருப்பிடமாக உள்ளது அடுத்தபடியாக,

“விச்வ அபிரக்ஷண விஹார க்ருத க்ஷணை: தே
வைமானிக அதிப விடம்பித முக்த பத்மை:
ஆமோத வாஹிபி: அநாமய வாக்ய கர்ப்பை:
ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை: அபாங்கை:”–என்ற 25-வது ஸ்லோகத்தில்,
உலகைக் காக்க வல்ல திருமாலின் அருட்பார்வை மலர்கின்ற தாமரைப் பூவை ஒத்திருக்கின்றது என்று ஒப்பிடுகிறார் தேசிகன்.

மலரும் தாமரை தெய்வநாயகனின் அருட் பார்வை.ஆமோதம் (நறுமணம்) நிறைந்திருக்கிறது
ஆமோதம் (மகிழ்ச்சி) நிறைந்திருக்கிறது.
நம்மிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நம்மைப் பார்த்து நலமா என்று விசாரித்து,
நம்முடன் அக்கண்கள் பேசுகின்றன.தேனைப் பொழிகிறது அமுத மயமான அருளைப் பொழிகிறது.
அதில் நனைந்தால் வெப்பம் தணிந்து உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுகிறது
அதில் நனைந்தால், பிறவிப் பிணியிலுள்ள வெப்பங்கள் விலகி, ஆத்மாவுக்குக் குளிர்ச்சி உண்டாகிறது.

‘பத்ம’ என்றால் தாமரை. ‘நிப’ என்றால் போன்ற. ‘ஈக்ஷண’ என்றால் பார்வை.
‘பத்மநிபேக்ஷண:’ என்றால் தாமரை மலர்வது போன்ற பார்வையை உடையவர் என்று பொருள்.
தாமரை மொட்டு எப்படி அழகாக, நளினமாக, மென்மையாக, குளிர்ச்சியோடு மகிழ்ச்சியும் அளித்தபடி மலருமோ,
அதுபோல் இறைவன் கண்ணை மூடித் திறப்பது என்பதும் அழகாக, நளினமாக, மென்மையாக இருக்கும்;
நமது துயரங்களை எல்லாம் போக்கி மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.

அதனால் தான் திருமால் ‘பத்மநிபேக்ஷண: –
தாமரை மலர்வது போன்ற திருக்கண் பார்வையை உடையவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 347-வது திருநாமம்.
“பத்மநிபேக்ஷணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால்
தன் திருக்கண்களால் கடாட்சித்துக் குளிர்விப்பார்.

—————-

348. பத்மநாபாய நமஹ (Padhmanaabhaaya namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருமங்கை ஆழ்வாருக்குத் திருமாலிடம் இருக்கும் காதல் உச்சத்தைத் தொட்ட அளவிலே,
பரகால நாயகி என்னும் பெண் தன்மையை அடைந்தார் திருமங்கை ஆழ்வார்.
அந்தப் பரகால நாயகி அவ்வப்போது தலைவனாகிய திருமாலைச் சந்தித்து அவனோடு உறவாடுகிறாள்.
இக் காதலைப் பற்றிக் கேள்விப்படுகிறாள் நாயகியின் தாய். “பெண்ணே! இது நம் குடும்ப மானத்துக்கு ஏற்ற செயல் அல்ல!
நீ இப்படி ரகசியமாகக் காதல் கொள்வது நம் கௌரவத்துக்கே இழுக்கு!” என்று சொல்லித்
தலைவனைச் சந்திக்க விடாமல் பரகால நாயகியைத் தடுத்து விடுகிறாள் தாய்.

பரகால நாயகி தன்னைச் சந்திக்க வராதபடியால், அவளுக்கு என்ன ஆயிற்று என்று
அறிய விரும்புகிறார் தலைவனாகிய திருமால். பரகால நாயகி ஊருக்கு வெளியே உள்ள பூந்தோப்பில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள் என்ற செய்தியைத் திருமால் கேள்விப் படுகிறார்.
வேட்டைக்காரனாக வடிவம் பூண்டு, இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்பும் முதுகிலே அம்பறாத் தூணியும்
தாங்கியபடி அந்தப் பூந்தோப்புக்குள் நுழைகிறார்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள்.
அதன்பின் தலைவனாகிய திருமால், “என் ஊரான திருவரங்கத்துக்குப் போகிறேன்!” என்று
சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அதன்பின் அவளது தோழி வந்து தலைவியைச் சந்தித்து,
“தலைவன் வந்தானா? அவன் எப்படி இருந்தான்? அவனைப் பற்றி எனக்குச் சொல்!” என்று கேட்கிறாள்.
அதற்குப் பரகால நாயகி விடையளிக்கிறாள்:

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர்க் குழை இருபாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய்க்கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!”

“தோழியே! கரிய, வாசம் மிக்க, அலகலகாய் இருக்கும் குழல் கற்றைகள் பின்னே அலைந்திட,
இரு காதுகளிலும் மகரக் குண்டலங்கள் அசைந்திட, தெய்வத் தன்மை மனிதத் தன்மை இரண்டும் தோற்றிட,
கையில் வில் ஏந்திக் கொண்டு தலைவன் என் முன்னே வந்து நின்றார்.
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் தாமரையை ஒத்திருக்கும்.
அவரது திருக்கரங்கள், திருவாய், திருக்கண்கள், திருவடிகள் அனைத்துமே தாமரை போன்றவை.

கைவண்ணம் தாமரை- முதலில் தாமரை போன்ற கரங்களால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வாய்க் கமலம் போலும் – தாமரை போன்ற திருவாயினாலே இன்மொழிகள் பேசினார்.
கண் இணையும் அரவிந்தம் – தாமரை போன்ற திருக்கண்களாலேயே பேசித் தனது காதலை என்னிடம் தெரிவித்தார்.
அடியும் அஃதே – அந்தக் கண்ணழகுக்குத் தோற்ற நான் அவரது தாமரை போன்ற திருவடிகளில் விழுந்து
அவற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.

இத்தகைய இறைவன் என் முன்னே வந்து நின்று உறவாடியவாறே, அவரது பெருமையை எண்ணி அஞ்சி
நான் சற்றே விலகி நின்று விட்டேன்!” என்று நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள் பரகால நாயகி.
இத்தகைய அற்புதமான அகத்துறை பக்திப் பாசுரத்தில் வரும்
“கை வண்ணம் தாமரை, வாய்க்கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே” என்ற தொடரில்,
தாமரை, கமலம், அரவிந்தம் அனைத்துமே தாமரை மலரைக் குறிக்கும் வார்த்தைகளே. அதாவது,
திருமாலின் ஒவ்வொரு அங்கமுமே தாமரை போலே இருக்கிறது என்பதே இதன் கருத்தாகும். தாமரையில் நாம் காணக்
கூடிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் மேலும் சிறப்பாக இறைவனின் அங்கங்களில்
உள்ளன என்பது தாத்பரியம்.

அந்த வகையில், திருமாலின் உந்தியும் (கொப்பூழும்) தாமரை போலவே இருக்கிறது.
அதாவது தாமரைக்கே உரிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் ஆகிய அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறது.
தாமரை போன்ற உந்தியை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறார்.
‘பத்ம’ என்றால் தாமரை, ‘நாபீ’ என்றால் உந்தி, ‘பத்மநாப:’ என்றால் தாமரை போன்ற உந்தியை உடையவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 348-வது திருநாமம்.

(முக்கியக் குறிப்பு: 48-வது மற்றும் 198-வது திருநாமங்களாகவும் இதே ‘பத்மநாப:’ என்ற திருநாமம் வருகிறது.
அவ்விரு இடங்களிலும், உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தவர்,
உந்தியிலே தாமரையை உடையவர் என்ற ரீதியில் பொருள் உரைக்கப்பட்டது.
இங்கே 348-வது திருநாமமாக வரும் ‘பத்மநாப:’ என்பது பரவாசுதேவனைக் குறிப்பதால்,
அதற்குப் பொருத்தமாகத் தாமரை போன்ற உந்தியை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளார்கள்)“
பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவை இல்லாமல்
அளவான, ஆரோக்கியமான உடல் அமைப்புடன் திகழத் திருமால் அருள் புரிவார்.

————–

366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

திருவிண்ணகரம் எனப்படும் உப்பிலியப்பன் கோவில் 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்றாகும்.
அங்கே தவம் புரிந்த மார்க்கண்டேய முனிவருக்கு மகளாகப் பூமிதேவி அவதரித்தாள்.
திருமால் அந்தத் திருத்தலத்தில் வந்து அவதரித்துப் பூமிதேவியை மணந்து கொண்டார்.
அப்போது இளம்பெண்ணாக இருந்த பூமிதேவிக்கு உணவில் சரியான அளவு உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது
என்று மார்க்கண்டேயர் சொன்னதால், “இனி இத்தலத்தில் உப்பில்லாத பண்டங்களையே நான் அமுது செய்வேன்!” என்று
சபதம் செய்தார் திருமால். அதனால் உப்பிலியப்பன் (உப்பில்லாத பண்டங்களை அமுது செய்யும் பெருமாள்) என்றே பெயர் பெற்றார்.

அந்த உப்பிலியப்பனுக்கு நிவாசன் என்று மற்றொரு பெயரும் உண்டு. திருமாலுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி என
இரு முக்கிய தேவிகள் உண்டு. அவர்களுள் பூதேவியைத் தானே உப்பிலியப்பன் மணந்து கொண்டிருக்கிறார்?
அப்படியானால் அவர் பூநிவாசன் என்று தானே அழைக்கப்பட வேண்டும்? ஏன் ஸ்ரீ நிவாசன் என்று அழைக்கப்படுகிறார்?
அதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளதாக ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் ஸ்ரீ வசுமதி சதகம் என்ற நூலில் தெரிவிக்கிறார்.

சீதா கல்யாணத்தின் போது, சீதைக்கு அலங்காரம் செய்த பெண்கள் அத்தனை பேரும் சீதையின் அழகைக் கண்டு
மயங்கியதாகக் கம்பன் பாடுகிறான்.
இன்னொரு பெண்ணின் அழகு என்பது ஓரளவுக்கு உட்பட்டு இருந்தால் தான், மற்ற பெண்கள் பொறாமைப் பட வாய்ப்புண்டு.
ஆனால் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகாலட்சுமியின் அழகைப் பார்த்தவாறே, அந்த பெண்களுக்குப் பொறாமை வரவில்லையாம்.
மாறாக மயக்கம் தான் ஏற்பட்டதாம். இதோ கம்பனின் பாடல்:

“கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் சொல் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தஞ்சொற்கள் குழறித் தந்தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்பதொன்றே அன்றோ”

வண்டுகள் மலர்களில் இருந்து தேனைப் பருகுவது போல், அலங்காரம் செய்ய வந்த பெண்கள்
சீதை என்னும் மலரில் உள்ள அழகென்னும் தேனைப் பருகத் தொடங்கினார்கள்.
இப்படிப் பெண்களும் மயங்குவது சாத்தியமா என்றால், கம்பன் அதற்கும் பதில் சொல்கிறான்.
ஆணோ பெண்ணோ உடல்தான் வேறு, மனம் என்பது எல்லோர்க்கும் ஒன்று தானே!
இந்த அழகைப் பார்த்தால் எம்மனமும் மயங்கத்தான் செய்யும் என்கிறான்.
இது உயர்ந்த கலைக் கண்ணோட்டத்தோடு கண்டு ரசிக்க வேண்டிய கவிநயம் பொருந்திய பாடலாகும்.

அதுபோலத் தான் உப்பிலியப்பன் கோவிலில் அவதரித்த பூமிதேவியும் பேரழகியாகத் திகழ்கிறாள்.
அவளது அழகைக் கண்டு மகாலட்சுமியே மயங்கினாளாம்.
தனது சகோதரியான பூதேவியை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ தேவி (மகாலட்சுமி) விரும்பினாள்.
அதற்கு என்ன வழி என்று சிந்தித்தாள் ஸ்ரீ தேவி. உப்பிலியப்பனின் திருமார்பில் ஸ்ரீ தேவி அமர்ந்து கொண்டால்,
உப்பிலியப்பன் எப்போது பூதேவியை அணைத்துக் கொண்டாலும், மார்பிலுள்ள ஸ்ரீ தேவியும் அப்படியே
அவரோடு சேர்ந்து பூதேவியை அணைத்துக் கொள்ளலாம் அல்லவா?
அதனால் ஸ்ரீ தேவி உப்பிலியப்பனின் திருமார்பில் அமர்ந்தாள்.
இப்படி ஸ்ரீ தேவியைத் திருமார்பில் கொண்டதால், ஸ்ரீ நிவாசன் என்று உப்பிலியப்பன் பெயர் பெற்றார்.
இக் கருத்தைச் சொல்லும் விதமாக வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் அருளிய சிருங்கார ரசம் நிறைந்த ஸ்லோகம்:

“மாத: ந கேவலம் அஸௌ உரஸி த்வதீயே
பேஜே ரதிம் கடின பீட குசாபிராமே
ஏஷா ரமாபி ரமணோரஸி வாஸம் ஏதி
தத் தாத்ருச த்வத் உரஸ: பரிரம்பணேச்சு:”

(இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்கும் இந்த தெய்வீக சிருங்காரச் சுவையை நம் உலகியல் சிருங்காரத்தோடு
பொருத்திப் பார்ப்பது தவறாகும். நம் மனதைத் தூய்மையாக்கி, பக்தியை வளர்த்து,
உலகியல் பற்றுகளைப் போக்கவல்ல சிருங்காரம் இது.)
உப்பிலியப்பன் உற்சவ மூர்த்தியின் திருமார்பில் பொன்நிறம் கொண்ட ஸ்ரீ தேவி வந்து அமர்ந்த படியால்,
அவளது பொன்நிற ஒளியின் பிரதிபலிப்பு பட்டு, அதனால் பொன்போல் சிவந்தார் உற்சவர்.
பொதுவாகத் திருமால் கருநீல வண்ணம் கொண்டவர் தான். ஆனால் அன்னையின் ஒளியின் பிரதிபலிப்புப் பட்டுப்
பொன்போல் மிளிரத் தொடங்கினார்.
அதனால் தான் உப்பிலியப்பன் கோவில் உற்சவர் ‘பொன்னப்பன்’ என்றே பெயர் பெற்றார்.

நம்மாழ்வாரும்,

“பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்”–என்று பாடுகிறார்.

இவ்வாறு திருமார்பில் உள்ள மகாலட்சுமியின் பொன் நிற ஒளிபட்டு, பொன் போல் சிவந்து விளங்குவதால்,
‘ரோஹித:’ என்று திருமால் அழைக்கப் படுகிறார். ‘ரோஹித:’ என்றால் சிவந்திருப்பவர் என்று பொருள்.
இக்காலத்தில் ரோஹித் என்று சூட்டப்படும் பெயர்களெல்லாம் இதன் திரிபே ஆகும்.
‘ரோஹித:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 366-வது திருநாமம்.
“ரோஹிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பொன் போன்ற மனத்துடன்
பொன் மனச் செம்மல்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

367. மார்காய நமஹ (Margaaya namaha)
1971-ம் வருடம். அடியேனின் குருவான டாக்டர் ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி பொறியியல் படிப்பு முடித்திருந்த சமயம்.
மத்திய அரசில் பொறியாளர் பதவிக்கான தேர்வு அப்போது நடைபெற்றது. அந்தத் தேர்வை எழுதிய ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார்.அப்போது பாரத தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்து விட்டது.
அதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது.
தேர்வு முடிவு வராமல் மத்திய அரசு வேலை கிடைப்பது தாமதம் ஆக,
குடும்பத்தின் வறுமைச் சூழல் மேலும் மோசமாகிக் கொண்டே போனது.

இன்றைய சட்டீஸ்கார் மாநிலத்தில் உள்ள பிலாயில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய
நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார். ஆனால் அவர் குடுமி வைத்துக் கொண்டு
திருமண் அணிந்திருப்பதைக் காரணம் காட்டிய அந்த நிறுவனத்தினர், அவற்றை அகற்றி விட்டு வந்தால்
பணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினர். பெரியோர்களின் வழக்கத்தை மீறிப் பணியில் சேர்வதை விரும்பாமல்
அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

சென்னைக்குத் திரும்பும் வழியில் ஐதராபாத்துக்கு அருகில் உள்ள சிலுக்கூர் விஸா
ஸ்ரீ பாலாஜி கோவிலுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.
அப்போது அங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்கு முன்னே நின்ற ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
“இறைவா! எனது எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டது! என் தந்தையின் ஆணைப்படி குடுமியும் திருமண்ணும் தரித்தால்
எனக்கு வேலை கிடைக்காதா? நீ தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்!” என்று வேண்டி,
கதறி அழுது அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது அவரைத் தேற்றிய அர்ச்சகர், “பெருமாளுக்கு ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்.
எல்லாம் சரியாகி விடும்!” என்று சொல்லி, அப்போதே ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனையைச் செய்தார்.
அதன்பின் கோவிலிலேயே அமர்ந்து ஸ்ரீ மத் பாகவத புராண பாராயணமும் செய்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

பாராயணம் முடிந்தபின் அர்ச்சகர், “கருணாகரா! கவலைப் படாதே! அடியார்களால் பலவிதமான பலன்களுக்காகப்
பெருமாள் நாடப்படுகிறார். அந்தந்தப் பலன்களை அவரவர்க்குத் தரவும் செய்கிறார்.
திரௌபதி புடவை கேட்டாள், கண்ணன் கொடுத்தான். பாண்டவர்கள் ராஜ்ஜியம் கேட்டார்கள், கண்ணன் கொடுத்தான்.
விபீஷணன் கைங்கர்யத்தைக் கேட்டான், ராமன் கொடுத்தான். காகாசுரன் உயிர்பிச்சை கேட்டான், ராமன் கொடுத்தான்.
பிரகலாதன் பக்தியைக் கேட்டான், நரசிம்மன் கொடுத்தான். இந்திரன் தேவலோகப் பதவியைக் கேட்டான், வாமனன் கொடுத்தான்.
நீயும் நாடினால், உனக்குத் தேவையான வேலையை அவன் கொடுக்க மாட்டானா?” என்று சொல்லித் தேற்றினார்.

அதனால் மனவலிமை பெற்ற கருணாகராச்சாரியார் மறுநாள் காலை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்
நடந்த ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். விஸா ஸ்ரீ பாலாஜியின் அருளால் அங்கே அவருக்கு வேலை கிடைத்து விட்டது.
வேலை கிடைத்ததோடு மட்டுமின்றி, ஐதராபாத்திலேயே தங்கி, மாலை வேளைகளில் விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்குத்
தொண்டு செய்யும் பாக்கியத்தையும் அப்பெருமாள் அருளிவிட்டார்.

இவை மட்டுமா? விரைவில் போர் முடிந்தது. நிலுவையில் இருந்த மத்திய அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
அதே ஐதராபாத்தில் ஜியோலஜிக்கல் ஸர்வே ஆஃப் இந்தியாவில் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகளுக்கு
மத்திய அரசுப் பொறியாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் ஐதராபாத்தில் தங்கி இருந்து
தனக்குப் பேரருள் புரிந்த விஸா ஸ்ரீ பாலாஜிக்குப் பல கைங்கர்யங்கள் செய்து வந்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

இப்படி அடியார்கள் என்ன வரத்தை வேண்டி வந்தாலும், அவற்றைக் குறைவில்லாமல் அருளி விடுகிறார் திருமால்.
தாங்கள் வேண்டும் வரங்களைப் பெறுவதற்காக அடியார்களால் நாடப்படுவதால் திருமால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் நாடப்படுபவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 367-வது திருநாமம்.
“மார்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நாடிய பொருள்கள் கைகூடும்.

———————

368. ஹேதவே நமஹ (Hethave namaha)

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார்.
காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு
ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.
ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன். நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு
உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி,
உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை.
ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!” என்றார்.

“நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது.
எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும்.
நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள்.
எனவே நான் தோல்வி அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும்
நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!” என்று விடையளித்தார்.

வாதம் தொடங்கியது. மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம்
பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது. யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு
யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர். பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில்,
யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை.
“நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.
மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார். அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே,
யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார்.
“சுவாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு
எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார்.

அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது.
நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன்.
ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின்
அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!” என்று கூறினார்.
அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன்.
அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர். இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன்.
காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம்.
ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!” என்று கூறினார்.

தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி,
அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,
எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து,
‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.

அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.
ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம். ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம்.
அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.
“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும்
குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள் புரிவார்.

————-

369. தாமோதராய நமஹ (Dhaamodharaaya namaha)

ஸ்ரீ மத் அகோபில மடத்தின் 42-வது பீடாதிபதியான ஸ்ரீ மத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரிடம் வந்த ஒரு சீடர்,
“ஆழ்வார் ஏன் தவறாகப் பாடி விட்டார்?” என்று கேட்டார். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் அழகிய சிங்கர்.
“ஆம்! நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் முதல் பத்து, மூன்றாம் பதிகத்தின் முதல் பாடல்,

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

இப்பாடலில் கண்ணன் உரவிடை உரலோடு ஆப்புண்டான் என்று ஆழ்வார் பாடி இருக்கிறார்.
உரம் என்றால் மார்பு. யசோதை கண்ணனின் மார்பில் கயிற்றைச் சுற்றி உரலோடு கட்டிப் போட்டதாகத் தானே இதற்குப் பொருள் வரும்?
ஆனால் உண்மையில் யசோதை கண்ணனின் இடுப்பில் தானே கயிற்றைச் சுற்றினாள்? ஏன் ஆழ்வார் தவறாகப் பாடினார்?” என்று கேட்டார் சீடர்.

“தெரியவில்லை! பார்த்துத் தான் சொல்ல வேண்டும்!” என்று பதில் அளித்தார் அழகிய சிங்கர்.
அந்தச் சீடரும் மடத்திலிருந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது அந்தச் சீடரின் நண்பர் ஒருவர், “நீங்கள் குருவிடம் கேள்வி கேட்ட முறை சரியில்லை.

அதனால் தான் அவர் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஆசாரியர்களிடம் நாம் ஐயங்களை விண்ணப்பிக்கும் போது பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் அல்லவா?
திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் எங்காவது தவறாகப் பாடுவாரா?
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்பதாலேயே அதைத் தவறு எனலாமா?
நீங்கள் கேட்ட கேள்வியைச் சற்றே பணிவோடு குருவிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்.

சீடர் மீண்டும் அழகிய சிங்கரிடம் வந்து, அவரை விழுந்து நமஸ்கரித்து,
“சுவாமி! அடியேனை மன்னித்தருள வேண்டும். உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதன் காரணம்
அடியேனின் சிற்றறிவுக்குப் புரியவில்லை. தேவரீர் கருணையோடு விளக்கம் கூறி அருள வேண்டும்!” என்று கோரினார்.
அப்போது இஞ்சிமேட்டு அழகிய சிங்கர், “யசோதை கண்ணனின் இடுப்பில் தான் கயிற்றைச் சுற்றி அவனை உரலோடு கட்டினாள்.
ஆனால் உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. உதரம் என்றால் வயிறு. உதரவிடை என்பது இடைக்குறையாக உரவிடை என்று பாடலின் அமைப்புக்காக மாறி இருக்கிறது.

2. உரம் என்றே வைத்துக் கொண்டால், மார்போடு கட்டுண்டான் என்று பொருள்படும். அதிலும் ஒரு ரகசியம் உள்ளது.
திருமால் பக்தர்களுக்குக் கட்டுப்படும் போது, தான் மட்டும் தனியாகக் கட்டுப்படுவதில்லை.
தன் மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுப் படுகிறான்.
கண்ணனின் திருமார்பில் எப்போதும் இருக்கிறாள் அல்லவா மகாலட்சுமி?
யசோதை கண்ணனைக் கட்டிய போது மகாலட்சுமி என்ன செய்து கொண்டிருந்தாள்?
அவளும் கண்ணனோடு சேர்ந்து அந்த உரலுடன் கட்டுண்டு கிடந்தாள்.

இப்படிப் பெருமாளும் தாயாரும் இணைந்து பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நமக்கு உணர்த்தவே,
உரவிடை ஆப்புண்டு – மார்புடன் கட்டுண்டான் – மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுண்டான் என்று
ஆழ்வார் பாடியுள்ளார்!” என விளக்கினார்.இந்த விளக்கத்தைக் கேட்டவாறே, பரவசம் அடைந்த அந்த சீடர்,
கண்ணனின் கருணையையும் குருவின் ஞானத்தையும் எண்ணி வியந்து, அழகிய சிங்கரின் திருவடிகளில் விழுந்து
ஆசி பெற்றுக் கொண்டு, அறிவுரை சொன்ன நண்பருக்கும் நன்றி தெரிவித்து விட்டு மடத்தில் இருந்து புறப்பட்டார்.

தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு.
வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் ‘தாமோதரன்’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 369-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“தாமோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்கும் கண்ணன் கட்டுப்படுவான்.

————

————-

378. ஸ்ரீ கர்ப்பாய நமஹ (Shreegarbhaaya namaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
ராம பாணத்தால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்த வாலி, பாணத்தில் இருந்த ராம நாமத்தைக் கண்டு,
தன்னைத் தாக்கியவன் ராமன் என உணர்ந்தான்.
தன் எதிரே ராமனைக் கண்ட வாலி, பலவாறாக ராமனை ஏசினான்.
ராமனின் செய்கையைக் குறித்துப் பல கேள்விகளும் கேட்டான்.
அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே நின்ற ராமன், வாலியைப் பேச விட்டுவிட்டு,
பின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து நியாயத்தை எடுத்துச் சொன்னான்.

ராமனை நிந்தித்த போது வாலியின் கூற்றாகக் கம்பர் ஒரு பாடல் அமைத்துள்ளார்:
“கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ?
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை!”
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! –

சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு மிக்க வடிவம் கொண்ட ராமா!
கோவியல் தருமம் – அரச நீதி என்பது
உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் சூரிய குலத்தில் பிறந்த
எல்லோருக்கும் உடைமை அன்றோ? – பரம்பரை சொத்து அல்லவா?
அந்த தர்மத்தை நீ மறந்து என்னைத் தாக்கி இருக்கிறாய் என்றால், இது சீதையின் பிரிவினால்
நீ குழம்பிப் போய் செய்த காரியம் போல் தெரிகிறது.
ஆவியை – உயிரான சீதையைப் பிரிந்து வெற்று உடல் போல் நீ ஆகிவிட்டாய்.
சனகன் பெற்ற அன்னத்தை – தண்ணீர், பாலைப் பிரித்து அறியும் அன்னம் போன்ற சீதையை இழந்ததால்
தர்மம், அதர்மத்தைப் பிரித்து அறியத் தெரியாமல் என்னைத் தாக்கிவிட்டாய்.
அமிழ்தின் வந்த தேவியை – பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய மகாலட்சுமி என்னும் அமுதை இழந்தபடியால், நீ நஞ்சாக மாறிவிட்டாய்.
பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – அவளைப் பிரிந்த திகைப்பில் மனம் குழம்பி நீ செய்த செயல் இது.
சீதை உன்னோடு இருந்திருந்தால், இச்செயலை அனுமதித்திருக்க மாட்டாள்.

இவ்வாறு வாலி பேசவே, ராமன் தலை குனிந்தானாம். அவமானத்தாலா? நிச்சயமாக இல்லை!
ஆனால் ராமன் தலைகுனிந்து விட்டு மீண்டும் நிமிர்ந்தவாறே, வாலி தனது தவறை உணர்ந்து,
“ராமா! என்னை மன்னித்தருள வேண்டும்! நான் என் தம்பியின் மனைவியை அபகரித்தது என் தவறு!
அதற்கான தண்டனையை நீ எனக்குச் சரியாகத்தான் வழங்கி இருக்கிறாய்!” என்றான்.
அதெப்படி ராமன் குனிந்து நிமிர்ந்தவுடன் வாலியின் மனம் மாறும்?

ராமன் அவமானத்தால் தலைகுனியவில்லை.
“சீதையைப் பிரிந்ததால் குழம்பிப் போய் என்னைத் தாக்கினாய்!” என்று வாலி சொன்னான் அல்லவா?
“சீதை எங்கும் போகவில்லை! இதோ என் மார்பில் இருக்கிறாள் பார்!” என்று வாலிக்குக் காட்டவே
ராமன் தலை குனிந்து தனது திருமார்பைப் பார்த்தான். திருமகளும் திருமாலும் என்றும் பிரிவதே இல்லை.
சீதை ராமனைப் பிரிந்து இருப்பதெல்லாம் அவதாரத்தில் அவர்கள் செய்யும் நாடகமே என உணர்ந்தான் வாலி.

மேலும், திருமார்பில் திருமகள் இருக்கும் போது ராமன் தன்னைத் தாக்கி இருக்கிறான் என்றால்
அது நூற்றுக்கு நூறு சரியான செயலே என்றும் உணர்ந்தான் வாலி.
ஏனெனில் தவறான செயலைத் திருமால் செய்ய முற்பட்டால் திருமகள் தடுத்திருப்பாளே!
அதனால்தான் தன் தவறை உணர்ந்து ராமனிடம் மன்னிப்பும் கோரினான்.

இச்சம்பவத்தில் இருந்து, திருமகள் திருமாலை என்றுமே விட்டுப் பிரிவதில்லை என்று அறிய முடிகிறதல்லவா?
எப்போதும் மகாலட்சுமியைத் தனது திருமார்பில் கொண்டு, தனது செய்கைகளால் அவளை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார் திருமால்.
இப்படி மகாலட்சுமியைத் திருமார்பில் வைத்துக் காப்பதால் திருமால் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்ரீ ’ என்றால் மகாலட்சுமி. ‘கர்ப்ப:’ என்றால் கருவிலுள்ள குழந்தை.
மகாலட்சுமியைத் திருமார்பில் தாங்கிக் கருவில் உள்ள குழந்தையைத் தாய் காப்பது போல் அவளைத் திருமால் காப்பதால்,
அவர் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 378-வது திருநாமம்.

“ஸ்ரீ கர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இல்லங்களில் என்றென்றும்
லட்சுமி கடாட்சம் நிறையும்படித் திருமாலும் திருமகளும் அருள் புரிவார்கள்.

—————-

379. பரமேச்வராய நமஹ (Parameshvaraaya namaha)
திருக்கோவில்களில் திருமால் ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வதை நாம் கண்டிருப்போம்.
அதன் தாத்பரியம் என்ன என்பதைத் திருவரங்கக் கலம்பகம் எனும் நூலில் பிள்ளைப் பெருமாள் சுவாமி தெரிவிக்கிறார்:

“உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும்
ஊசல் ஆடுவது அடியேன் ஒழியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கிக்
கருணை எனும் ஊஞ்சலில் திருமாலுக்கு

அருகிலே திருமகள் வந்து அமர்கிறாளாம்.
திருமகளிடம் திருமால், “தேவி! நீதான் என்னை இப்போது வழி நடத்த வேண்டும்.
மனிதர்களின் மனமாகிய ஊஞ்சலில் அவர்களுக்கு அருள்புரியவே நாம் இப்போது அமர்ந்திருக்கிறோம்.
ஆனால் இவர்களின் தவறுகளைப் பார்த்துத் தண்டிப்பதா? அல்லது கருணையால் இவர்களை
மன்னித்து ஏற்பதா? என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

அதற்குத் திருமகள், “சுவாமி! உலகில் தவறு செய்யாதவர் என்று எவருமே இலர்.
தவறு செய்யாதவர்க்கு மட்டுமே அருள்புரிவது என்று நீங்கள் முடிவெடுத்தால், யாருக்குமே அருள்புரிய முடியாது.
எல்லாரையும் தண்டிப்பது என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது!” என்கிறாள்.
திருமாலோ, “அப்படியானால் எல்லாரையும் மன்னித்து விட்டுவிட்டால் அது முறையாகுமோ?” என்று கேட்கிறார்.

திருமகள், “அப்படிச் செய்ய வேண்டாம்! எல்லோரும் தவறு செய்வார்கள்.
ஆனால் அவர்களுள் யாரெல்லாம் தவறை உணர்ந்து நீங்களே கதி என்று சரணாகதி செய்கிறார்களோ,
அவர்களிடம் கருணையைக் காட்டுங்கள். தண்டிக்காதீர்கள்.
மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்து வருபவர்களைத் தண்டித்துத் திருத்தி நல்வழிப்படுத்துங்கள்!” என்கிறாள்.
இதுவே சரியான யோசனை என்று சொல்லி, மனம் திருந்திச் சரணடையும் அடியார்களிடம் கருணையைக் காட்டுவது
என்று முடிவெடுக்கிறார் திருமால்.
நம் உள்ளங்களாகிய ஊஞ்சலில் இப்படி மகாலட்சுமியோடு சேர்ந்து அமர்ந்து நம்மைக் காத்தருள்கிறார்.

இதை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வசுமதி சதகத்தில்,
“ஸ்ரீ மான் தண்டதர: ஸ்வயம் ஜகத் இதம் ப்ராய அபராதை: யுதம்
சிக்ஷ்யம் வா அத நு ரக்ஷ்யம் இதி அதிதராம் ஆரூட டோலோ ஹரி:
அந்த்யம் ஸாது ததோ விசார்ய பவதீம் அஸ்மின் ஸ்தலே ஜாக்ரதீம்
அங்கீக்ருத்ய ததோசிதாம் ப்ரணயினீம் நித்யம் க்ஷமாம் க்ரீடதி”–என்று வர்ணிக்கிறார்.

உலகை எல்லாம் ஆளும் திருமாலின் காக்கும் தொழில், மகாலட்சுமியின் ஆலோசனையைப் பெறுவதால் தான்
முழுமை பெறுகிறது என்பதை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா?
திருமாலின் ஆளுமையும் திருமகளின் அருளும் இணைந்திருப்பதால்தான் உலக நிர்வாகம் சரியாக நடைபெறுகிறது.

முன்சொன்ன திருநாமத்தின் விளக்கப்படி, ஸ்ரீ கர்ப்பனாக மகாலட்சுமியுடன் கூடி இருந்து இவ்வுலகை ஆண்டு நிர்வகிப்பதால்,
திருமால் ‘பரமேச்வர:’ என்று அழைக்கப் படுகிறார். ‘பரமேச்வர:’ என்றால் உலகை ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 379-வது திருநாமம்.
“பரமேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பிறவியெனும் ஊஞ்சலிலிருந்து திருமால் காத்தருள்வார்.

——————-

380. கரணாய நமஹ (Karanaaya namaha)

ராம தூதனாக இலங்கைக்குள் நுழைந்த அனுமன், அங்கே பற்பல இடங்களில் சீதையைத் தேடினார்.
சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு, அரக்கர்களின் வீடுகள் தோறும் சென்று சீதை இருக்கிறாளா என்று பார்த்தார்.
தேவலோகப் பெண்கள் போல் இனிமையாகப் பாடும் பல பெண்களைப் பார்த்தார்.
ராவணன் சேனையைச் சேர்ந்த பல ஏவலாட்கள் ராஜவீதியில் செல்வதைப் பார்த்தார்.

ஒற்றைக் கண்ணுடையோர், ஒற்றைக் காதுடையோர், கோணிய முகமுடையோர், வித்தியாசமான அவயவங்கள் உடையோர்,
பலவித நிறமுடையோர் இப்படிப் பலரையும் கண்டார். ராவணனின் யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட்படை
உள்ளிட்டவற்றைக் கண்டார். எத்தனையோ பெண்களைப் பார்த்தபோதும், அனுமனால் சீதையை மட்டும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

பிரகஸ்தன், கும்பகர்ணன், மகோதரன், விரூபாட்சன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன்,
சுகன், சாரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி உள்ளிட்டோரின் மாளிகைகளுக்குள் எல்லாம் சென்று தேடிப் பார்த்தார் அனுமன்.
பின் ராவணனின் அரண்மனையை அடைந்து அங்கும் தேடினார்.
அங்கிருந்து புஷ்பக விமானத்தின் உள்ளே சென்று அந்த விமானம் முழுவதும் தேடிப் பார்த்தார்.

ராவணனது அந்தப்புரத்தில் பித்ரு தேவதைகளின் பெண்கள், தைத்திய வனிதைகள், கந்தருவ சுந்தரிகள்,
ராட்சச கன்னிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் சீதை இருப்பதாகத் தெரியவில்லை.
அதன்பின், அங்கே மேலான மஞ்சத்தில் மிகவும் பேரழகி யான ஒரு பெண் துயில்கொண்டிருப்பதை அனுமன் கண்டார்.
அவள் ராவணனின் பட்டத்து அரசி மண்டோதரி.
அவளைச் சீதை என்றே எண்ணிய அனுமன் தோள்களைத் தட்டி வாலுக்கு முத்தமிட்டுக் கூத்தாடத் தொடங்கினார்.
ஆனால் வெகு விரைவிலேயே, “அடடா! என்னே என் மதி மயக்கம்! பெருமாளைப் பிரிந்த பிராட்டி
இப்படி நிம்மதியாகப் பஞ்சு மெத்தையில் உறங்குவாளோ? இவள் நிச்சயமாகச் சீதையாக இருக்கவே முடியாது!” என்று தீர்மானித்தார் அனுமன்.

இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சீதை கிடைக்காத நிலையில், அனுமன் சிந்திக்கத் தொடங்கினார்.
“ஒருவேளை ராவணன் கடத்தி வந்தபோது கடலில் அன்னை விழுந்துவிட்டாளோ?
அல்லது வழியில் வேறெங்காவது கீழே விழுந்தாளோ? ராவணன் வேறு ஊரில் அடைத்து வைத்துள்ளானோ?
ராவணன் அவளைக் கொன்று தின்றுவிட்டானோ? அல்லது அன்னையே தன் உயிரை மாய்த்துக்கொண்டாளோ?
சீதையைக் காணாமல் நான் எப்படி வானரர்களின் முகத்தில் போய் விழிப்பேன்?” என்று சிந்தித்தார் அனுமன்.

அப்போது தான் அவர் மனதில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது. “அடடா! நான் பெரும் தவறு செய்துவிட்டேன்.
சீதா தேவியை ‘நான் தேடுகிறேன், நான் கண்டுபிடிக்கப் போகிறேன்’ என்ற எண்ணத்துடன் இவ்வளவு நேரம் தேடினேன்.
அதனால்தான் அன்னையின் தரிசனம் கிட்டவில்லை.
சீதா ராமர்களே! நீங்கள் அருள்புரிந்து எனக்குத் தேவியின் தரிசனத்தை அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்து
இந்த ஸ்லோகத்தைச் சொன்னார்:

“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய நமோஸ்து தேவ்யை ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய:”
(இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், காணாமல் போன பொருள் உடனே
கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.)

சீதா ராமர்களிடம் அனுமன் பிரார்த்தித்தவாறே, அவர் கண்ணெதிரே அசோகவனம் தெரிந்தது.
அதன் உள்ளே நுழைந்தார். அங்குள்ள ஒரு சிம்சுபா மரத்தின் மேலே அமர்ந்து நாற்புறமும் பார்த்தார்.
அதே அசோக வனத்தில், அரக்கிகளால் சூழப்பட்டு, மெலிந்த நிலையில், அழுக்கு படிந்த ஆடையோடு
எழுந்தருளியிருந்த சீதா தேவியைத் தரிசித்தார். தனது காரியத்தில் வெற்றி அடைந்தார் அனுமன்.

“வீடினது அன்று அறன் யானும் வீகலேன்
தேடினன் கண்டனன் தேவீயே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்”00என்று கொண்டாடத் தொடங்கினார்.
தன் முயற்சியால் சீதையைத் தேடுவதாக அனுமன் எண்ணிய வரையில் அவரால் சீதையைக் காண முடியவில்லை.
“சீதா ராமர்களே! உங்கள் அருளால் காட்டுங்கள்!” என்று அனுமன் பிரார்த்தித்தவாறே உடனே சீதை கிடைத்து விட்டாள்.
இதிலிருந்து நாம் அறியும் செய்தி என்னவென்றால், இறைவனை அடைவதற்கு மற்ற விஷயங்கள் எதுவுமே சாதனமாகாது.
இறைவனை அடைய இறைவனே சாதனம் ஆவான். அதாவது, அவனது அருளால் மட்டுமே அவனை அடைய முடியும்.
அவன் அருளைத் தவிர அவனை அடைய வேறு வழி இல்லை.

‘கரணம்’ என்றால் சாதனம் என்று பொருள்.
தன்னை அடையத் தானே சாதனமாக இருக்கும் திருமால் ‘கரணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 380-வது திருநாமம்.
“கரணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேற்கொள்ளும் முயற்சிகளில்
பெருவெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

381. காரணாய நமஹ (Kaaranaaya namaha)

விபீஷணன் வந்து ராமனிடம் சரணாகதி செய்த போது, அவனை அங்கீகரிக்கும் முகமாக ராமன் சொன்ன ஸ்லோகம்:

“ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”
இதன் பொருள்: “ஒரே ஒரு முறை சரணம் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் என்னை வந்து பணிந்து விட்டால்,
அனைத்து உயிர்களிடம் இருந்தும் அவனைக் காப்பாற்றி அருள வேண்டும் என்பதை எனது விரதமாக நான் கொண்டிருக்கிறேன்!”
இந்த ஸ்லோகமே ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் என்று அழைக்கப்படுகிறது.
“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று கீதையில் வருவது ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் ஆகும்.
இந்த ஸ்ரீ ராம சரம ஸ்லோகத்தைக் குறிப்பிட்டு நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அருளிய பாசுரம்:

“முல்லைப் பிராட்டி! நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய்! உன் அடைக்கலம்!
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே!”

‘குமரனார் சொல்’ என்று ராமனின் சரம ஸ்லோகத்தை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
அடியேனின் குருவான டாக்டர். ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் எங்களுக்கு
நாச்சியார் திருமொழி விளக்கவுரையில் இப்பாசுரத்தை உபதேசித்தார்.
அப்போது ஒரு மாணவர் குருவான கருணாகராச்சாரியார் சுவாமியிடம் ஓர் ஐயத்தை விண்ணப்பித்தார்.
“குமரனார் சொல் என்று ராமனின் சரம ஸ்லோகத்தை ஆண்டாள் குறிப்பிடுவதாகச் சொல்கிறோம்.
ஆனால் ‘கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்’ என்று இருக்கிறதே! அதற்கென்ன பொருள்?” என்பதே அந்த மாணவரின் ஐயம்.

அதற்குக் குருநாதர், “கொல்லை அரக்கி என்பவள் சூர்ப்பணகை.
அவளது மூக்கை அரிந்த குமரனார் என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்!” என்று பொருளுரைத்தார்.

உடனே மற்றொரு மாணவர், “சுவாமி! லட்சுமணன்தானே சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அறுத்தான்?
அப்படியானால் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் லட்சுமணன் தானே?” என்று கேட்டார்.
வேறொரு மாணவரோ, “அப்படிப் பொருள் கொண்டால் பாடலின் மொத்த பொருள் ஒட்டாமல் போய்விடுமே!
‘குமரனார் சொல்’ என்று அந்தக் குமரனார் ஒரு சரம ஸ்லோகம் சொன்னதாக ஆண்டாள் பாடி இருக்கிறாள்.
லட்சுமணன் அப்படி எந்த சரம ஸ்லோகமும் சொன்னதாகத் தெரியவில்லையே! அதனால் குமரனார் என்பது ராமன்தான்!” என்றார்.

அடுத்த மாணவர், “இல்லை! இல்லை! ராமன் எப்போது சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தார்?” என்று கேட்டார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமி, “வால்மீகி பகவானே ராமாயணத்தில் தெளிவாக லட்சுமணனை
‘ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘லட்சுமணன் ராமனின் வலக் கரமாக விளங்குகிறான்’ என்பது இதன் பொருள்.
ஒருவரின் வலக்கரம் ஒரு காரியத்தைச் செய்தால் அதை அவரே செய்ததாகத் தானே நாம் சொல்வோம்?
ஒருவர் வலக்கையால் கவிதை எழுதினால், வலக்கை கவிதை எழுதியது என்றா சொல்வோம்?
அவரே எழுதியதாகத் தானே சொல்கிறோம்?
அதுபோல் ராமனின் வலக்கையான லட்சுமணன் செய்த செயலை ராமனே செய்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.
அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நெருங்கிய தொண்டர்களாக இருப்ப வரை,
‘தலைவரின் வலக்கை’ (Right Hand) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது!” என்று விடையளித்தார்.

மேலும், “இது லட்சுமணன் ஒருவனுக்கு மட்டுமில்லை. நாம் ஒவ்வொருவருமே நாராயணனுக்கு உடலாக இருக்கிறோம்.
நாம் செயல் செய்வதற்குரிய கருவிகளையும், அதற்குத் தேவையான சக்தியையும் ஞானத்தையும் தந்து
நாம் செயல்படக் காரணமாக இருப்பவன் நாராயணனே என்பதை நாம் உணரவேண்டும்!
அதனால் தான் எல்லாம் அவன் செயல் எனச் சொல்கிறோம்!” என்று விளக்கினார்.

‘காரணம்’ என்றால் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
நாம் செய்யும் செயல்களுக்குத் தேவையான கருவிகள், சக்தி, அறிவு அனைத்தையும் தந்து,
நாம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கும் திருமால் ‘காரணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 381-வது திருநாமம்.
“காரணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நல்ல வழியில்
திருமால் வழிநடத்திச் சென்று நல்ல வெற்றிகளை அருள்வார்.

———–

——–

386. வ்யவஸாயாய நமஹ (Vyavasaayaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)
உத்தானபாதன் என்ற அரசனுக்கு இரு மனைவிகள். மூத்தவள் சுநீதி, இளையவள் சுருசி.
சுநீதியின் மகன் துருவன், சுருசியின் மகன் உத்தமன்.
உத்தானபாதன் தனது இரண்டாவது மனைவியான சுருசியிடமும் அவளது மகனான உத்தமனிடமுமே அதிக அன்பு செலுத்தி வந்தான்.
ஒருநாள் தந்தையின் மடியில் அமர விரும்பி, துருவன் சென்றபோது, மாற்றாந்தாயான சுருசி அவனைத் தடுத்தாள்.
“நீ காட்டுக்குப் போய் தவம் புரிந்து என் மகனாக வந்து பிறந்தாலே ஒழிய
இவர் மடியில் அமர உனக்குத் தகுதி கிடையாது!” என்று சொல்லி விட்டாள்.

அழுதுகொண்டே தனது தாய் சுநீதியிடம் வந்தான் துருவன். நடந்தவற்றை அறிந்துகொண்ட சுநீதி, நிதானமாக,
“மகனே வருந்தாதே! சித்தி நல்ல விஷயம் தான் கூறி இருக்கிறாள். நீ திருமாலைக் குறித்துத் தவம் புரி.
அதன்பின் இந்தத் தந்தையின் மடி என்ன? அதைவிடப் பெரிய ஸ்தானத்தையே உனக்குத் திருமால் அருள்வார்!” என்றாள்.
துருவனும் தவம்புரிவதற்காக வனம் சென்றான். நாரதரின் திருவருளால் திருமாலைத் தியானிக்கும் முறையையும்
அவரைக் குறித்த மந்திரத்தையும் அறிந்து கொண்டான். அதன்பின் கடுந்தவம்புரிந்து அதன் பலனாகத் திருமாலைத் தரிசித்தான் துருவன்.

அப்போது துருவனிடம் திருமால், “குழந்தாய்! உன் பக்திக்குப் பரிசாக முக்தி அளிக்க உள்ளேன்.
ஆனால் அதற்கு முன்பு நீ உனது நகரத்துக்குத் திரும்பச் சென்று முடிசூட்டிக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
அதன்பின் வானில் உயர்ந்து நிற்கும் ஒரு பதவியை அடைவாய். உன்னை உலகமே அண்ணாந்து பார்த்துக் கொண்டாடும்.
அதன்பின் என்னை வந்தடைவாயாக!” என்றார்.

“அது என்ன பதவி?” என்று கேட்டான் துருவன். அப்போது திருமால், துருவனுக்குத் தான் வழங்க உள்ள பதவியின் சீர்மை பற்றி விளக்கினார்.
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் திருமால் துருவனிடம் சொல்வதாக வரும் ஸ்லோகங்கள் இவை:

“நான்யை: அதிஷ்டிதம் பத்ர யத் ப்ராஜிஷ்ணு: த்ருவ க்ஷிதி:
யத்ர க்ருஹ ருக்ஷ தாராணாம் ஜ்யோதிஷாம் சக்ரம் ஆஹிதம்”
“‘துருவ’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான (துருவ) பதவியை உனக்கு அளிக்க உள்ளேன்.
இதுவரை யாரும் அந்தப் பதவியை அடைந்ததில்லை. நவகிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள்
அதனுடன் சேர்த்து உறுதியாகக் கட்டப் பட்டுள்ளன. நானே அந்த துருவப் பதவியில் ஆதார மையமாக இருந்து
கிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தையும் தாங்கி வருகிறேன். இப்போது அந்த ஸ்தானத்தை எனது பக்தனான உனக்கு அருள்கிறேன்.”

“மேட்யாம் கோ சக்ரவத் ஸ்தாஸ்னு: பரஸ்தாத் கல்ப வாஸினாம்
தர்மோக்னி: கச்யப: சுக்ரோ முனயோயே வனௌகஸ:
சரந்தி தக்ஷிணீ க்ருத்ய ப்ரமந்தோ யத் ஸதாரகா:”
“தூணில் கட்டப்பட்ட மாடுகளைப் போல், தர்ம தேவதையும், நட்சத்திரங்களும், அக்னி தேவனும்,
ஏழு பெரும் முனிவர்களும் அந்த துருவ ஸ்தானத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய ஆதார மையமான பதவியில் நீ இனி வீற்றிருப்பாயாக.”

திருமால் அருளியபடி நகருக்குத் திரும்பிய துருவன் முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டு விட்டு,
அதன்பின் துருவ பதவியை அலங்கரித்து, இன்றளவும் உலகமே வியந்து அண்ணாந்து பார்க்கும் படி
ஓங்கி உயர்ந்து விளங்கிக்கொண்டிருக்கிறான். அனைத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் கோள்களும்
அந்த துருவ ஸ்தானத்தையே தமக்கு ஆதார மையமாகக் கொண்டு, அதனோடு கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

இத்தகைய ஸ்தானத்தைத் தனது அருளால் துருவனுக்குத் திருமால் அருளினார்.
எனினும் இயற்கையில் அந்த துருவ ஸ்தானத்தில் துருவ மூர்த்தியாகத் திருமாலே இருக்கிறார்.
அவரிடம் தான் மொத்தப் பிரபஞ்சமும் கட்டப்பட்டு அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கிவருகிறது.
அவரின் கருணையால் துருவன் என்ற சிறுவன் அப்பதவியைப் பெற்றான்.
ஆக, மொத்தப் பிரபஞ்சமும் தன்னிடம் கட்டப்பட்டிருக்கப் பெற்ற ஆதார மையமான திருமால் ‘வ்யவஸாய:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘வ்யவஸாய:’ என்றால் ஆதார மையம் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 386-வது திருநாமம்.
“வ்யவஸாயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலே ஆதார மையமாக இருந்து
அவர்களை நல்வழியில் வழிநடத்திச் செல்வார்.

—————

387. வ்யவஸ்தானாய நமஹ (Vyavasthaanaaya namaha)
அசோக வனத்தில் அரக்கிகள் மத்தியில் ராமனைப் பிரிந்து துயருற்று இருக்கும் சீதையைக் கண்ட அநுமனின் நெஞ்சில்
அலைமோதிய எண்ணங்களை வால்மீகி பகவான் சுந்தர காண்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

“மான்யா குருவிநீதஸ்ய லக்ஷ்மணஸ்ய குருப்ரியா
யதி ஸீதாபி துக்கார்த்தா காலோ ஹி துரதிக்ரம:”

“அன்னை மகாலட்சுமியின் வடிவமான இந்த சீதா தேவியே இப்படித் துயரப்படுகிறாள் என்றால்,
காலம் யாராலும் வெல்ல முடியாதது என்பது மெய்யாகிவிட்டதே. உலகையே காக்கும் ராமன், லக்ஷ்மணன் ஆகிய இருவரும்
உடன் இருந்த போதும், இவள் அபகரிக்கப்பட்டிருக்கிறாள் என்றால், நிச்சயமாக தெய்வத்தை விடக் காலத்துக்கு
வலிமை அதிகமாக இருக்குமோ!” என்று கருதி இவ்வாறு கூறுகிறார் அனுமன்.
(மனிதர்களுக்குத் தொடர்ச்சியான கஷ்டங்கள் வந்தால், ‘நேரம் சரியில்லை’, ‘இது நமக்குக் கஷ்ட காலம்’ என்று
காலத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிப் புலம்புவதை நாம் பார்த்திருப்போம்.)

ஒன்பது வித இலக்கண நூல்களைக் கசடறக் கற்ற மகா பண்டிதரான அநுமன் தான் கூறிய இவ்வார்த்தையைப் பற்றி
மீண்டும் யோசித்துப் பார்த்தார். “திவ்ய தம்பதியான திருமாலும் திருமகளும் கூடக் காலத்தின் வசத்துக்கு உட்பட்டவர்கள்
என்று நாம் கருதி விட்டோமே! ஆனால் வேதாந்தங்களும் வேதாந்திகளும் தெளிவாக, இறைவனும் இறைவியும் காலத்துக்கு அப்பாற்
பட்டவர்கள் என்று கூறுகிறார்களே!” என்று யோசித்தார் அநுமன்.

மேலும், “வெறும் கால வேறுபாட்டாலேயே துன்பமோ இன்பமோ வந்துவிடும் என்றால், நாம் செய்யும் நற்செயல்களுக்குப்
பயனே இல்லாமல் போய்விடும். நமது முன்வினைகளுக்கு (பாப – புண்ணியங்களுக்கு) ஏற்றபடி தான்
காலம் துன்பமோ இன்பமோ ஏற்படுத்துமே ஒழிய, காலம் தானாகவே அவற்றை உண்டாக்காது!” என்றும் உணர்ந்தார் அநுமன்.
“முன் வினைகளால் துன்பம் நேர்கிறது என்றாலும், திருமாலும் திருமகளும் முன்வினைகளுக்கு (பாப புண்ணியங்களுக்கு)
அப்பாற்பட்டவர்களாகவே உள்ளார்கள். அப்படியிருக்க, சீதைக்கோ ராமனுக்கோ எப்படித் துயரம் ஏற்படும்?
உண்மையில் அவர்களுக்குத் துக்கம் என்பதே கிடையாது. உலகைக் காக்க மனித வடிவம் எடுத்து வரும்போது,
மற்றவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் அல்லர் என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காக,
துன்பத்தால் நலிவது போலவும், இன்பத்தால் மகிழ்வது போலவும் நாடக நடிகர்கள் போல் அபிநயம் செய்கிறார்கள்.

அந்த அபிநயத்தால் நானும் மயங்கி விட்டேன். அதனால் தான் சீதையின் துன்பத்தைக் கண்டு அதைக்
காலத்தின் கோலம் என்று கூறி விட்டேன். திருமாலும் திருமகளும் காலத்துக்கோ இன்ப-துன்பங்களுக்கோ உட்பட்டவர்கள் அல்லர்.
காலத்தைத் தங்கள் வசத்தில் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்!” என்று சமாதானம் சொல்லிக் கொண்டு தெளிந்தாராம்
அநுமன்.

எனவே அவதார நிலையில் காலத்துக்கு வசப்பட்டவன் போல் இறைவன் தன்னைக் காட்டிக் கொள்வது வெறும் நடிப்பேயாகும்.
உலகைப் படைத்தல், அழித்தல் உள்ளிட்ட செயல்களைக் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் இறைவன் செய்வதால்,
அந்த விஷயத்தில் காலத்துக்குக் கட்டுப்படுகிறாரா இறைவன் என்ற கேள்வி எழலாம். இல்லை! நிச்சயமாக இல்லை!
உலகைப் படைக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும், அழிக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும் கூட
ஒரு விளையாட்டாகவே இறைவன் செய்கிறானே ஒழிய, இறைவன் என்றுமே காலத்தின் வசத்தில் இருப்பவன் அல்லன்.
காலம் தான் அவனது கட்டுப்பாட்டில் உள்ளது.

“யதாயத்தம் ஜகச்சக்ரம் காலசக்ரம் ச சாச்வதம்
பாது வ: தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண:”

என்று தேசிகன் கூறுவதற்கேற்ப, காலச் சக்கரத்தைத் தனது கட்டுப்பாட்டில் திருமால் வைத்திருக்கிறார்.
நிமிடம், முகூர்த்தம், பகல், இரவு, வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்ட
காலத் தத்துவத்துக்கு ஆதாரமாக இருப்பவர் திருமால்.காலத்துக்கு அப்பாற்பட்டவரான திருமாலின் அருளைப் பெற்றதால் தான்
துருவனின் புகழ் காலம் கடந்து இன்றளவும் உலகில் நிலைபெற்றிருக்கிறது.
துருவ நட்சத்திரமாக அவன் காலாகாலத்துக்கும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறான்.

காலத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதால், திருமால் ‘வ்யவஸ்தான:’ என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 387-வது திருநாமம்.
“வ்யவஸ்தானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் பொன்நாளாய் அமையத் திருமால் அருள்புரிவார்.

—————-

388. ஸம்ஸ்தானாய நமஹ (Samsthaanaaya namaha)

அடியேனுடைய குருவான டாக்டர் ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் மதுரையில் பிரபல பொறியியல் கல்லூரியில்
இயந்திரப் பொறியியல் பயின்று வந்த சமயத்தில், அவரது நண்பர் ஒருவர் அதே கல்லூரியில் கட்டடப் பொறியியல் பயின்று வந்தார்.
அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் இது. தனியுரிமை கருதி அவருக்குத் திரு.ராமு என்று நாம் பெயர் வைத்துக் கொள்வோம்.
ராமு மிகச்சிறந்த அறிவாளி, உழைப்பாளி. 1960களில் பொறியியல் கல்லூரியில் இடம்பெறுவது என்பது சாமானியமான விஷயமே அல்ல.
ஆனால் ராமுவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. “எனக்கு அறிவு இருக்கிறது, நான் உழைக்கிறேன், எனக்கு நல்லது நடக்கிறது.

இதற்குமேல் கடவுள் என்ற மூன்றாவது நபர் எதற்கு?” என்று அடிக்கடி அவர் கேட்பாராம்.
ஒருமுறை கருணாகராச்சாரியாரிடம் ராமு, “எத்தனையோ பேர் ஆபத்தில் தவிக்கிறார்கள்.
உங்கள் கடவுள் ஏன் வந்து காப்பதில்லை?” என்று கேட்டார்.

அதற்குக் கருணாகராச்சாரியார்,
“இறைவனின் நாமத்தை வாயாரச் சொல்லி அழைத்தால் நிச்சயம் இறைவன் வந்து காப்பான்.
ஒருவன் மரத்தில் இருந்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த திருமாலும் திருமகளும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அவன் அம்மா என்று கத்திக்கொண்டு விழுந்தால் மகாலட்சுமி காக்க வேண்டும் என்றும்,
அப்பா என்று கத்திக் கொண்டு விழுந்தால் திருமால் காக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.
ஆனால் அவனோ ஐயோ என்று சொல்லிக் கொண்டு விழுந்தான். இப்படி நாம் இறைவனை அழைக்காமல் இருந்து விட்டு,
இறைவனைக் குறை சொல்லலாமா?” என்று கேட்டார்.

ஆனாலும் ராமு இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “உனக்கும் எனக்கும் ஆபத்து வரும் போது
இறைவன் காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம்!” என்று சொல்லி விட்டார்.

ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் சென்னை ரயில் நிலையத்தில் கருணாகராச்சாரியார் சுவாமிகள் ராமுவைச் சந்திக்க நேர்ந்தது.
ராமு தலைக்கு மொட்டை அடித்திருந்தார். கருணாகராச்சாரியார் ராமுவிடம் சென்று விசாரித்த போது,
“கருணாகரா! நீ சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் எனக்குப் பின்னால் தான் புரிந்தது. நான் இப்போது மாறிவிட்டேன்!” என்றார்.
“என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார். அப்போது ராமு இடைப்பட்ட காலத்தில் தனக்கு நிகழ்ந்தவற்றைச் சொன்னார்.

“கருணாகரா! நான் கட்டடப் பொறியியல் கற்றுத் தேர்ந்த பின், பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டி வந்தேன்.
அவற்றுள் ஒரு கட்டடத்தின் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், மூன்றாவது மாடிக்கு மேல் நின்றுகொண்டு,
கட்டட மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டே பின்நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தேன்.
தவறி விழுந்து விட்டேன். அந்த ஒரு நொடியில் என் உயிரே போய் விட்டது என எண்ணிய நான்,
‘மதுரா!’ என்று உரத்த குரலில் அழைத்தேன். என் மனைவியின் பெயர் மதுரா. அதை எண்ணித் தான் அழைத்தேன்.

ஆனால் கருணாகரா! அப்போது மணல் லாரி ஒன்று அவ்வழியே வந்தது. சரியாக அந்த லாரியில் உள்ள மணல் மேல் விழுந்தேன்.
ஒரு காயம் கூட இல்லாமல் தப்பித்தேன். இதில் வியப்பு என்னவென்றால், அந்த லாரியின் முகப்பில் ‘மதுரா லாரி சர்வீஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த லாரி ஓட்டுநர் வட இந்தியர். அவரது பெயர் என்ன என்று பின்னர் விசாரித்த போது, ‘மதுராநாத்’ என்று சொன்னார்.

எங்கள் மதுரையில் கோவில் கொண்டுள்ள மதுரவல்லித் தாயாரான மகாலட்சுமியும்,
அந்த மதுரவல்லிக்கு நாதனான கூடல் அழகருமே வந்து காப்பாற்றினார்களோ என்று தான் எண்ணத் தோன்றியது.
ஐயோ என்று கத்தியபடி மரத்தில் இருந்து விழுந்தவன் பற்றி நீ சொன்ன கதை தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

நாம் எத்தனை தான் முயற்சிகள் எடுத்தாலும், எவ்வளவுதான் கவனமாகச் செயல்பட்டாலும், நமக்கும் அப்பாற்பட்டு
உலகில் பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் கைகூடி முழு வெற்றி பெறுவதற்கு
இறையருள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை என உணர்ந்தேன்.
அதனால்தான் நான் அடுத்து கட்டவுள்ள கட்டிடத்தின் பணிகள் நன்றாக நிறைவடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்!” என்று சொன்னார் ராமு.

கருணாகராச்சாரியார், “அடியேன் அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். அழைத்தால் நிச்சயம் வருவான் இறைவன்.
மேலும், எல்லோரும் இறைவனிடம் வந்து தான் தீர வேண்டும். அவன் தான் அனைவருக்கும் முடிவான புகலிடம்.
எந்த முயற்சிகளுமே செய்யாமல் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அடியேன் சொல்லவில்லை.
ஆனால், நம் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் கைகூடி வருவதற்கு இறையருள் தேவை.
அலுவலகத்தில் எழுத்தரிடம் காரியம் ஆகவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் போகிறோம்.
அவரிடமும் ஆகவில்லை என்றால் மேலாளரிடம் போகிறோம். யாரிடமும் ஆகவில்லை என்றால் அனைவருக்கும்
மேல் அதிகாரியாக இருக்கின்ற இறைவனின் உதவியையே நாடியாக வேண்டும். அவன் அன்றி ஓரணுவும் அசையாது!” என்றார்.

மேலும், “பொறியாளர்கள் கூட்டம் போட்டால், அதற்குப் பொறியாளர்கள் தான் வருவார்கள்.
மருத்துவர்கள் கூட்டம் போட்டால், அதற்கு மருத்துவர்கள்தான் வருவார்கள்.
வக்கீல்கள் கூட்டம் போட்டால், அதற்கு வக்கீல்கள் தான் வருவார்கள்.
ஆனால் இறைவனைப் பற்றிப் பேசும் போது, அதைக் கேட்க இவர்கள் எல்லோரும் வருவார்கள்.
ஏனெனில் அவனே அனைவருக்கும் இறுதிப் புகலிடம்!” என்றும் கூறினார் கருணாகராச்சாரியார்.

சிறுவனான துருவன், தனக்கு வேறு புகலே இல்லாத நிலையில் திருமாலே தனக்குப் புகல் என உணர்ந்து
அவர் திருவடிகளைப் பற்றினான். இன்றளவும் துருவ பதவியில் நிலைத்திருக்கிறான் அல்லவா?
இப்படி எல்லோருக்கும் இறுதிப் புகலிடமாக இருப்பதால், திருமால் “ஸம்ஸ்தான:” என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 388-வது திருநாமம்.
நாமும் தினமும் “ஸம்ஸ்தானாய நம:” என்று சொல்லி வந்தால், திருமால் நமக்கு எல்லா விதங்களிலும் அடைக்கலம் தந்தருள்வார்.

—————-

389. ஸ்தானதாய நமஹ (Sthaanadhaaya namaha)

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியையும், அதன் அனைத்து விளக்கவுரைகளையும்
மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தார் மணவாள மாமுனிகள்.
திருவரங்கத்தில் சிறப்பான முறையில் அதைக் காலட்சேபமாகச் சீடர்களுக்கு உபதேசமும் செய்து வந்தார் அவர்.
‘விசதவாக் சிகாமணி’ என்று போற்றப்பட்டார்.உறவினர்கள் வீட்டில் நடக்கும் ஜனன மரணச் செய்திகளால் ஏற்படும் தீட்டு
அவரது காலட்சேபங்களுக்கு இடையூறாக இருந்ததால், அனைத்து உறவுகளையும் துறந்து துறவறம் மேற்கொண்ட மகான் அவர்.
திருவாய்மொழியை விளக்கும் கைங்கரியம் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்தையும்
துறந்த துறவியாகிறார் என்றால் ஆழ்வார்களின் அமுதத் தமிழில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும்?

இந்நிலையில், அவரது வாக்கு சாதுரியத்தையும், திருவாய்மொழியில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானத்தையும் கண்டு வியந்த அரங்கன்,
மணவாள மாமுனிகளின் பெருமையை உலகுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.அதனால் அரங்கன்,
“நாளை முதல் பெரிய திருமண்டபத்தில் நான் கேட்டு மகிழும்படி மணவாள மாமுனிகள் வந்து திருவாய்மொழியின்
விளக்கவுரையான ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் நூலைக் காலட்சேபமாகக் கூற வேண்டும்!” என்று நியமித்து அருளினார்.

திருமாலின் ஆணையைச் சிரம் மேல் கொண்டு ஏற்றார் மணவாள மாமுனிகள்.
தனது அனைத்து உற்சவங்களையும் ஒத்தி வைத்தார் அரங்கன். தன்னுடைய ஆதிசேஷ சிம்மாசனத்தை மணவாள மாமுனிகளுக்கு அளித்தார்.
ஆசனத்தின் மேல் மாமுனிகளை அமர்த்தி, அதற்குக் கீழே சீடனாக அரங்கன் நின்று கொண்டார்.
ஒரு வருட காலத்துக்கு இப்படி மணவாள மாமுனிகள் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கான விளக்கவுரையை முழுமையாக வழங்க,
“இது கங்கை வெள்ளமோ? கங்கையில் புனிதமாய காவிரி வெள்ளமோ?” என்று வியந்தபடி அடியார்கள் அதைக் கேட்க,
அரங்கனும் ஸ்ரீதேவி பூதேவியோடும், கருடன், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் உள்ளிட்ட பரிவாரங்களோடும் ஆனந்தமாக அதை அனுபவித்து அருளினார்.

ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று விளக்கவுரையை மாமுனிகள் நிறைவு செய்தார்.
அப்போது சிந்தித்த அரங்கன், “ராமனாகவும் கண்ணனாகவும் நான் அவதாரம் செய்தபோது கூட
வசிஷ்டர், சாந்தீபனி போன்ற குருமார்கள் கிடைத்தார்கள். ஆனால் அந்த முனிவர்கள் யாருக்குமே
இந்த மணவாள மாமுனிகளுக்கு இருக்கும் பெருமை இல்லை.
அதனால் இவருக்கு மிக உயர்ந்த ஒரு ஸ்தானத்தை வழங்க வேண்டும்!” என்று கருதினார்.

அதனால் அரங்கநாயகம் என்று பெயர் கொண்ட ஐந்து வயது அர்ச்சகச் சிறுவனாக அரங்கனே வடிவம் பூண்டு அவ்விடத்துக்கு வந்தார்.
மாமுனிகள் முன்னே அச்சிறுவன் கைகூப்பி நின்று,
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம்”
என்ற ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்.

அதுவே மாமுனிகளின் தனியனாக (வணக்கப் பாடலாக) ஆனது.இன்றளவும் மாமுனிகள் அரங்கனின் குரு என்றே போற்றப்படுகிறார்.
இன்றளவும் கோவில்களில் மணவாள மாமுனிகள் அரங்கன் அவருக்கு அளித்த ஆதிசேஷ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
ஆக, தமிழ் வேதத்துக்குத் தொண்டாற்றிய மாமுனிகளுக்கு இத்தகைய உயர்ந்த ஸ்தானத்தை அருளினார் அரங்கன்.
அவ்வாறே இளம் வயதில் கடுந்தவம் புரிந்த துருவனுக்குத் துருவப் பதவி என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை அருளினார் திருமால்.
அவரது திருவடிகளில் யார் சரணாகதி செய்தாலும், அவர்களுக்கு வைகுண்டப் பதவி என்ற உயர்ந்த ஸ்தானத்தையே அருளுகிறார்.

இதை,
“சரணம் ஆகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”
என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

‘த:’ என்றால் கொடுப்பவர். ‘ஸ்தான-த:’ என்றால் ஸ்தானத்தைக் கொடுப்பவர்.
தன் அடியார்களுக்கு உயர்ந்த ஸ்தானங்களை அருளுவதால், திருமால் ‘ஸ்தானத:’என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 389வது திருநாமம்.
“ஸ்தானதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கும் உயர்ந்த ஸ்தானத்தைத் திருமால் அருள்வார்.

————–

390. த்ருவாய நமஹ: (Dhruvaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)
ஓர் ஊரில் ஒரு வேதியர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவனாகவும்,
திருமாலிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவனாகவும் திகழ்ந்தான். தன் தாய் தந்தையர்களுக்கும் சிறந்த முறையில் பணிவிடைகள் செய்து வந்தான்.
தனது கடமைகளையும் சிறப்பாக ஆற்றிவந்தான்.அவனுக்கு வாலிப வயது வந்த சமயம் அரச குமாரனோடு அவனுக்கு நட்பு ஏற்பட்டது.
அந்த அரச குமாரன் மிக்க அழகோடும் கட்டமைந்த உடலோடும் திகழ்ந்தான்.
அரசர்களுக்குரிய போகங்களை எல்லாம் நன்றாக அனுபவித்து வந்தான்.

அந்த அரச குமாரனின் செல்வங்களை எல்லாம் வேதியர் மகன் பார்த்தான்.
“அடுத்த பிறவியில் நாமும் ஓர் அரச குமாரனாகப் பிறந்தால், நமக்கும் இத்தகைய செல்வங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்குமே!”
என்று நினைத்துத் திருமாலை வழிபட்டான்.அவன்தான் மறுபிறவியில் உத்தானபாதன் என்ற மன்னனின் மகனான துருவனாக வந்து பிறந்தான்.
இவ் வரலாறு விஷ்ணு புராணம் முதல் அம்சம் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால் தான் துருவன் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தபோது, அவனுக்குக் காட்சி தந்த திருமால் நேரடியாக
அவனுக்குத் துருவ பதவியோ முக்தியோ அளிக்காமல், முதலில் நகரத்துக்குத் திரும்பிச் சென்று
அரண்மனையில் வாழ்ந்து ஆட்சி செய்யும்படி நியமித்தார். முன்பிறவியில் அவன் விரும்பிய ராஜ போக வாழ்க்கையை முதலில் அவனுக்கு அருளிவிட்டார் திருமால்.முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சீரரசு ஆண்டு செங்கோல் செலுத்திய துருவன்,
பின்னர் துருவ பதவியை அடைந்து அதன்பின் வைகுண்டமும் பெற்றான் என்கிறது பாகவத புராணம்.

பூமியை ஆட்சி செய்துவிட்டு, துருவ பதவிக்குப் புறப்படும் வேளையில் தனது மகனுக்கு முடிசூட்டி விட்டு,
பத்ரிநாத்துக்குச் சென்றான் துருவன். அங்கே புனித நீரில் நீராடி தியானத்தில் ஆழ்ந்தான்.
அப்போது ஆகாயத்தில் இருந்து ஒரு விமானம் கீழே இறங்கி வந்தது. நந்தன், சுனந்தன் என்ற இரண்டு விஷ்ணு தூதர்கள் வந்தார்கள்.
“மிக உயர்ந்த துருவ பதவிக்கு உங்களை அழைத்துச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்!” என்று
அவர்கள் துருவனை அடிபணிந்து கூறினார்கள். விமானத்தில் துருவன் ஏறப் போன நேரத்தில், யமன் எதிரே வந்து நின்று,
தன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே யமன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறி அமர்ந்தான் துருவன்.

விமானம் மேல்நோக்கிப் புறப்பட்டது. துருவன் பயணிக்கும் விமானத்துக்கு முன்பு மற்றொரு விமானம் மேல்நோக்கிப் பறந்து
கொண்டிருப்பதை நந்தனும் சுனந்தனும் துருவனுக்குக் காட்டினார்கள்.
“அதோ பாருங்கள்! அந்த விமானத்தில் உங்கள் தாய் சுநீதி துருவ பதவிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்!” என்றார்கள்.
துருவன் இவ்வளவு தூரம் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தமைக்கு அவனது தாய் கொடுத்த ஊக்கமே காரணம் அல்லவா?
பக்திபுரிபவர்களை விட பக்தி புரிவதற்கு ஊக்குவிப்பவர்கள் இறையருளை விரைவில் பெற்றுவிடுவார் களாம்!
அதற்குச் சான்றாக, தவம் புரிந்த துருவனுக்கு முன், அவனைத் தவம் புரியத் தூண்டிய தாய் சுநீதி துருவ பதவிக்கு முதலில் சென்றாள்.

“இதி உத்தானபத: புத்ரோ த்ருவ:க்ருஷ்ணபராயண:
அபூத் த்ரயாணாம் லோகானாம் சூடாமணி: இவாமல:”–என்று பாகவத புராணத்தில் சுகமுனிவர் தெரிவிக்கிறார்.
மூவுலகங்களின் தலைக்கு மேல் உள்ள சிரோமணி போல் அந்த துருவ பதவியைத் துருவன் அலங்கரித்தான் என்பது இதன் பொருள்.
‘த்ருவ:’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான பதவியைத் துருவனுக்கு அளித்த திருமால்,
எப்போதுமே நிலையானவராக, உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்கிறார்.
மேலும், உலகெங்கும் வியாபித்து அனைத்து உலகங்களும் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.
அதனால் திருமாலுக்கு ‘த்ருவ:’ என்று திருநாமம்.
துருவராக நிலைமாறாமல் இருப்பவரால் தானே துருவ பதவியை அருள முடியும்?

‘த்ருவ:’ என்றால் நிலையாக நிற்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 390-வது திருநாமம்.
“த்ருவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் மிக உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சேனாபதி முனிவர் -ஸ்ரீ சேனை முதலியார் ஜீயர் -அருளிச் செய்த ஸ்ரீ மணவாள மா முனிகள் மாலை —

December 9, 2021

ஸ்ரீ .மு ,இராகவ ஐயங்கார் -இயற்றியது என்பார்கள்
ராமநாதபுரம் ஸமஸ்தான புலவரான முத்துஸ்வாமி ஐயங்கார் திருக்குமாரர்
26-ஜுலை -1878-பிறந்தவர் -2 feb 1960 காலமானார் –
நூற்று எட்டு திருப்பதி அகவல் என்ற நூலையும் அருளியவர்

ஸ்ரீ சேனாபதி முனிவர் -ஸ்ரீ சேனை முதலியார் ஜீயர் -அருளிச் செய்த மணவாள மா முனிகள் நூற்றந்தாதி —
https://tidley.com/2015/05/07/

மா முனிகள் நூற்றந்தாதி இவர் திருத்தகப்பனார் இயற்றியதாகவும்
மா முனிகள் மாலை இவர் இயற்றியதாகவும் சொல்வார்கள்
இவர்கள் வான மா மலை சிஷ்யர்கள் –

முனிவன் பரம் புவிக்கின்றாகச் செய்த தாமோதரனே
முனிவன் பரன் என்று உணர்ந்த எங்கள் மூர்த்தி வனாசல மா
முனிவன் பரவித் தொழு மணவாள முனித் தெய்வமே
முனிவன் பரகத்திலாதாய் நின் தாள் என் முடி யனவே –17- பாசுரத்தில் இவரே வெளியிடுகிறார்

இராமநாதபுரம் சதாவதானம் முத்துஸ்வாமி ஐயங்கார் என்கிற அனந்தாழ்வான் இயற்றிய மணவாள மாமுனி நூற்றந்தாதி.

காப்பு-
நம்மாழ்வார்-
மன்னு புகழ்க் கோயின் மணவாள மாமுனிவன்
றன்னடிமீ தந்தாதி சாத்தவே — யின்னமுதின்
செந்தமிழால் வேதச் செழும் பொருளை மாநிலத்தே
தந்தருண் மாறன்றாள் சரண்.

எம்பெருமானார்
தாடொடர்பு நின் பாற் றழுவாத வர்க்கிலை நம்
வீடடைத லென்று விளம்பவரி — நீடணையாய்
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தா
னென்றா னமக்கே திடர்.

பூமா திலங்கு மணிமார் பரங்கர் புகழ்ந்திடத்தென்
பாமாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந்தருளுஞ்
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாந்
தேமா நிழலுண் டடைவார் விடாய்கெடச் செய்திடுமே–1-

செய்யனந் தாமரை போதுற் றுறங்குந் திருவரங்கத்
தையனந் தாதருண் மந்திர முண்டஃ தன்றிவெண்மை
மெய்யனந் தாழ்வான் மணவாள மாமுனி மென்கழலுண்
டுய்யனந் தாபமறத் தொலைத் தின்ப முறுவதற்கே–2-

உறுபொரு ளின்பமுந் தாயுமெய்த் தந்தையு மொண்குருவு
நறுமல ரிந்திரை நாதனு மற்றுமிந் நானிலத்தோர்
சிறுமையை நீக்குமி ராமா நுசனெனச் சிந்தைசெயுந்
திறமையன் கோயின் மணவாள மாமுனித் தேசிகனே –3-

தேசிகர் தங்க ளடிப்போ துளத்திடைச் சேர்த்தியவர்
பேசிய நூல்வழிச் சேர்திரு வாய்மொழிப் பிள்ளையன்பால்
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென்கழலை
நேசியு நீணிலத் தீரும துட்டுயர் நீங்கிடுமே–4-

நீங்கின தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ்மாறன் வேதச் செழுந்தமிழ்க
டாங்கின மன்னுயிர் கண்மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகிவந் துற்றபின்பே –5-

—————-

சென்றால் குடை மாற்குச் சிங்காதனம் இருந்தால்
நின்றால் மரவடியாம் நீள் அரவின் –மன் தான்
மணவாள மா முலையார் மையல் அறுத்து ஆண்டான்
மணவாள மா முனியாய் வந்து

அரவின் மன் -ஆதி சேஷன்
மண வாள மா முலையார்–மணம் தங்கிய சக்ரவாகம் போன்ற பெரிய முலைகளை யுடையவர்

———-

காப்பு
தாள் கொண்டு தமிழ்த் தொடை சூட்டு என்று என் நா உளம் சார்ந்தனன் கண்
வாள் கொண்ட மோகம் மின்னார் விரக அனல் மாற்ற அருள் நீர்க்
கோள் கொண்டலாம் திருவேங்கட நாதர் குரு வந்து என்னை
ஆள் கொண்ட சீலன் மணவாள மா முனிக்கு அன்பு செய்தே

என்னை ஆள் கொண்ட சீலனான மா முனிகளுக்கு அன்பு செய்து அவன் திருவடிகளுக்கு ஒள்ளிய
தமிழ் மாலையைச் சூட்டு என்று திருவேங்கட நாத குரு எனது நாவிலும் உள்ளத்திலும் சார்ந்தனன்

———-

பூந்தாமம் பெய் குழல் மார்பனைப் பாடும் புத்தேள் மலர்த்
தாணாம் தாம் அங்கு எய்த அருள் எதிக்கோன் கழல் நண்ணி அளி
மோந்து ஆம் தாமம் புனை மணவாள முனித் தெய்வமே
மாந்தாமம் கா எனும் மெய்ஞ்ஞானம் தந்து எம்மை வாழ்விப்பையே –1-

தாமம் -மாலை
புத்தேள் -நித்ய ஸூரிகள்
நாம் தாம் அங்கு எய்த என்க
எதிக்கோன் -யதிராஜர்
கழல் -திருவடிகள்
மோந்து ஆம் அம் தாமம் என்க
புனைதல் -அணிதல்
மாத் தாமம் -என்பது எதுகை நோக்கி மாந்தாமம் -தாமம் -பரமபதம் –

————

காதுலவும் கடைக்கண்ணார் மயர் அவிர் காமரு
சீரா துல துங்க வெதீந்த்ர பிரவண நல்லாரியரும்
மூதுலகும் புகழ் சீர் மணவாள முனித் தெய்வமே
யோதுலம் என்ற வன் நெஞ்சுடையேற்கு உய்யும் உண்மை ஒன்றே –2-

துல துங்கன் -துலா மாதத்தில் திரு அவதரித்த பரிசுத்தன்
ஆதூல துங்கன் என்றும் கொண்டு -ஆதூலர் -பிஷுகர் – -துறவறம் கொண்டவர்
வன் நெஞ்சுடையேற்கு உய்யும் உண்மை ஒன்று ஒது
உலம்-திரண்ட கல்

——————

தொக்கி யங்காரி னதிர் குருகூரன் சொற் சொல்பவர்க்கு
நக்கி யங்கார் வினை எல்லா முருக்கி விண் நல்கும் எனும்
முக்கியம் காட்டினை நீ மணவாள முனித் தெய்வமே
புக்கியங் காவகை நீள் இருள் ஞாலத்துப் புக்கு உறைந்தே –3-

இயம் -வாத்யம்
நக்கி யங்கார் வினை–நக்கி அங்கு ஆர் வினை என்க
முருக்கி -அழித்து

———–

திகந்தருந் தாவிப் பிடிக்க ஒட்டாது உயர் சேண் விசும்பின்
சுகந்தருந் தாவில் இன் கீர்த்திக் கண் நாவில் சொலிச் செவியான்
முகந்தருந்தா நிற்பரே மணவாள முனித் தெய்வமே
யுகந்தருந் தாய் தந்தை நீயே என்று உள்ளத்து உணர்ந்தவரே — 4-

திகந்தர் -திக்கின் அந்தத்தில் உள்ளவர்
தாவில் -குற்றம் இல்லாத
முகந்து -மொண்டு
உகந்து -ஸந்தோஷித்து
நாவால் சொல்லிச் செவியால் முகந்து அருந்தா நிற்பர் என்க –

———–

ஆக்கந்தரம் சொரி கல்லால் இடர் படும் அன்று கையான்
மேக்கந்தரம் தெரியா வகை தாங்கும் வெற் போனமர் விண்
மோக்கந் தரும் வள்ளலே மணவாள முனித் தெய்வமே
நீக்கந் தரித்த நெற் போல்வேனை –நின்றுமின்றே –5-

ஆ கந்தரம் சொரி கல்லால் இடர்ப்படும் அன்று என்க
ஆ -பசுக்கள்
கந்தரம் -மேகம்
மேக்கு அந்தரம் -மேல் உள்ள ஆகாயம்
வெற்பு -மலை
நீக்கந் தரித்த நெற் –பதர்
போல்வேனை —-மூலத்தில் இல்லை –

————

தேகாந்த காலத் தடியேன மன் கைச்சிக் காதளித்தல்
வாகாந் தகாது பராமுக நீ செய்தன் மா மடவார்
மோகாந்த காரத்துள்ளேன் மணவாள முனித் தெய்வமே
ஓ காந்தா கா என்று அழைக்க அறியேன் விரைந்தோடி வந்தே –6-

அளித்தல் வாகாம் பராமுகம் செய்தல் தகாது என்க
காந்தன் -தலைவன் –

————-

பரம்பிற்குள் வாழ்க்கையை நச்சி யிப் பாதகன் பண்புடை நூல்
வரம்பிற் பிழைத்தனன் என்றே நமன் தமர் வந்து பற்றி
முரம்பிற் கொடு நெறிக்கே மணவாள முனித் தெய்வமே
கரம்பிற் படக்கட்டி யீர்ப்பார் என் செய்வன் எற் காத்தருளே –7-

பிழைத்தனன் -தவறினேன்
முரம்பு -கல் மேடு
கரம் பிற்படக் கட்டி யீர்ப்பார் -என்க
ஈர்த்தல் -இழுத்தல் –

————-

மலைக்குமைத் தானருட் கேய்ந்த நின் சீர் வழுத்தேன் பிறர் எச்
சிலை குறித்தே செலு நாய் போல் பொருட்க்கும் ஒண் சேயிழையார்
முலைக்கும் இச்சித்து உழன்றேன் மணவாள முனித் தெய்வமே
நிலைக்கும் இப்புன்மை யினேன் பால் என்னாம் நின் குறிப்பே –8-

——–

ஓங்கு இற்குள் வாழு மடவார் சுதர் தமர் ஒண் புவியின்
பாங்கிற் குலாவிய சித்தம் வைத்தே பொன் படைத்து அணுகா
மூங்கிற் குழாம் அனையார் மணவாள முனித் தெய்வமே
தாங்கிற்கு மாறுளரே உன் பொன் தாமரைத் தாள் தொழவே –9-

ஓங்கு இற்குள்-ஓங்குகின்ற வீட்டினிற்குள்
சுதர் -பிள்ளைகள்
தமர் -உறவினர்
தாங்கிற்கு மாறு-தாங்க கிற்குமாறு –

———-

அன்று இலை யார் பங்கயர் தரு மெய் சுமந்து அம்புவிமேல்
இன்றிலை யார் நகையார் தமை நச்சி யந் நீசர் தங்கண்
முன்றிலையா வகலேன் மணவாள முனித் தெய்வமே
நன்று இலை யாயினேன் யான் உய்யுமாறு மெய்ஞ்ஞான நல்கே –10-

இலையார் பங் கயர்-இலை பொருந்திய தாமரையில் உள்ள பிரமதேவர்
இலை யார் நகையார் -வெற்றிலை தின்ற பற்களை யுடையார்
நச்சி -விரும்பி
முன்றிலை யாவகலேன்-முன்றில் ஐயா அகலேன் -என்க
இலை யாயினேன் -இல்லை யாயினேன் –

————–

திரள் நந்து அணிந்த தாமோதரன் அன்பரைச் சேர் சனன
மரணம் தவிர்த்து அருள் மால் பரன் அன்று எனும் வன் குறும்பா
முரண் நந்த வென்றவனே மணவாள முனித் தெய்வமே
அரணம் தமர்க்கு உளதோ யுன் பதாம் புயம் அன்றி மற்றே–11-

திரள் நந்து-திரட்சியை யுடைய சங்கம்
தாமோதரனாகிய மால் என்க
முரண் நந்த -செருக்கு அழிய
அரணம்-புகலிடம்
தமர்க்கு -அடியார்களுக்கு –

————

வான் தடி யாதிப்படை கொண்டு அவுணர் முன் வாக் அரய
வேன்று அடியே முதலாம் போர் செயும் எம்பிரான் முனம் மண்
மூன்றடி தான் இரந்தோன் மணவாள முனித் தெய்வமே
தோன்று அடி ஈறிலன் என்றவரா நின்னைச் சூழ்பவரே –12-

வான் தடி -பெரிய கதாயுதம்
சூழ்தல் -தியானித்தல்
ஆதி சேஷன் அவதாரமாதலின் வாக் அரவ -என்று விளித்தார் என்க –

———-

விதுக் குறைந்தே ஒல்க ஒள் ஒளி வீசு நின் மெய்ந்நினைந்து
மதுக் குறுந் தாரை ஒழிக்கிடுந்தே மலர் வாரியிட்டு
முதுக்குறைந்தோர் பணி தண் மணவாள முனித் தெய்வமே
யொதுக் குறங்காது எனை நின்று அடும் பாவ முருக்கெடவே –13-

விது-சந்திரன்
ஒல்க-தளர
முதுக்குறைந்தோர்-ஞானிகள்
அடும் பாவம் உருக்கெட ஒதுக்கு என்க
அடுதல் -வருத்தல் –

————-

கனை வாரி மண்ணுய்யும் நின் அவதாரம் கமழ் நறும் பூ
நனைவார் துழாய் அணி மா மார்பினன் நளிர் பூம் படுக்கை
முனை வாள் எயிற்று அரவா மணவாள முனித் தெய்வமே
யனை வார மெய்த்தந்தை எல்லாம் எனக்கு உன் அடித் துணையே – 14-

கனை வாரி-ஒலி கடல்
திரு மார்பினனது குளிர்ந்த அழகிய படுக்கையாகிய கூரிய பல்லினையுடைய
ஆதி சேஷன் ஆகிய அரவு நின் அவதாரம் -என்க
அனை -தாய்
வாரம் -அன்பு –

————

ஏசப் படு நுகர் புன் மாக்கள் என்னவும் ஏதமுற
வாசப் படு தாமரை நாளங்கால் சுற்றுவார் எனவும்
ஒசப் படு தனன்றோ மணவாள முனித் தெய்வமே
பேசப் படு கடன் மண் மீதில் யானிற் பிழைத்து நின்றே –15-

ஏசப் படு நுகர் புன் மாக்கள்–யாவரும் தம்மை ஏசும்படி மதுவைப் பானம் செய்கின்ற புல்லிய மாக்கள்
படு -கள்
மாக்கள் -ஐ யறிவுடைய விலங்கு போல்வார் -கள்ளுண்டு அறிவு கெடுத்தலின் இவ்வாறு கூறினார்
படு தாமரை -தாமரையில் ஓர் விதம்
நாளம் -தண்டு –

————-

மைத் தடப் பார்வை மடவார் குற்றேவன் மதித்தவர் கொங்
கைத் தடப் பார வரை மேவும் ஐவர் களித்தறுவர்
மொய்த் தடப் பாதகனாய் மணவாள முனித் தெய்வமே
பைத்தட பாந்தள் அரசே எய்த்தேன் விழி பார்த்து அருளே –16-

கொங்கைத் தடம் ஆகிய வரை என்க
வரை -மலை
ஐவர் -என்றது ஐம் புலன்களை
அறுவர் -என்பது காமம் முதலிய பகைகளை
மொய்த்து அட -நெருங்கி வருத்த
பை -படம்
பாந்தள் -பாம்பு
எய்த்தேன் -இளைத்தேன் –

—————-

முனிவன் பரம் புவிக்கின்றாகச் செய்த தாமோதரனே
முனிவன் பரன் என்று உணர்ந்த எங்கள் மூர்த்தி வனாசல மா
முனிவன் பரவித் தொழு மணவாள முனித் தெய்வமே
முனிவன் பரகத்திலாதாய் நின் தாள் என் முடி யனவே –17-

வன் பரம் புவிக்கு இன்று ஆக முன்னிச் செய்த தாமோதரனே முன் இவன் என்க
பரம் -பாரம்
இன்றாக -இல்லையாக
முனி- ஸ்ருதி
வனாசல மா முனிவன் -வான மா மலை ஜீயர்
பரவி -புகழ்ந்து
முனிவன் பரகத்திலாதாய் –முனிவு அன்பர் அகத்து இல்லாதாய் -என்க –

————-

சசலத்தினும் ஒள்ளிதா ஞானர்க்கும் தமியேனுக்கும் ஓங்கு
சசலத்தினுக்கும் அணுவுக்கும் வாசி யுண்டாமது போல்
முசலத்து எழும் தளிர் போல் மணவாள முனித் தெய்வமே
குசலர்க்கு இனிய பிரானே என் அன்பு உன் குரை கழற்கே –18-

முசலம் -உலக்கை
குசலர்-அறிவுடையோர்
ஞானிகளான பெரியோர்க்கும் அஞ்ஞானியான சிறியேனுக்கும் எவ்வளவு வாசி உண்டோ
அவ்வளவு வாசி உண்டு –
நான் நின் பால் வைத்த அன்புக்கும் நீ என்பால் வைத்த அன்பிற்கும் என்கிறார் என்க
தன் பால் அன்பு தோன்றுதலை முசலிடத்தில் தளிர் தோன்றுதல் போலும் என்று வியக்கிறார் என்க –

———-

உட்கான தேவு ஒரு நீ வந்து வாழ்வுற்று உறைதலினால்
இட் கா நமன்றமர்க் கஞ்சே னவர்கள் செலுத்தும் வெய்ய
முட் கானமும் படரேன் மணவாள முனித் தெய்வமே
கட் கான் உறு மலர் போலு நின் தூய கழற்கு அன்பனே –19-

உட்கு ஆன-மனதிற்கு ஏற்ற
நமன் தமர்க்கு உட்கான என்று இயைப்பினும் அமையும்
உட்கு -அச்சம்
திண் கால் -வழிய கால்
முள் கானம் -முள் நிறைந்த காடு
படரேன் -சொல்லேன்
கள் கால் மலர் -மதுவைச் சொரியும் மலர் –

————–

நீர்த் தீ என்றே நினைத்து எல்லா வினைக்கு நின் பேர் இதனைக்
கீர்த்தி என்றும் தனி நாவே என்றாலது கேட்கிலை சின்
மூர்த்தீ என் கண் மணியே மணவாள முனித் தெய்வமே
பேர்த்தீ என்றேய்க்கு நின் பொற்றாள் அம் ஞான விப்பேர் இருளே –20-

நல்வினையை வளர்க்க நீரும் தீ வினையை அழிக்கத் தீயும் போலும் என நினைந்து என்க
என்றும் கீர்த்தீ -எப்பொழுதும் புகழ்ந்து சொல்
சின் மூர்த்தீ -ஞான வடிவே
அஞ்ஞானப் பேர் இருளைப் பேர்த்து என்றேய்க்கும் பொன் தாளை ஈ -என்க
என்று -ஸூரியன்
எய்த்தல் -ஒத்தல் –

————–

கழைக் கேழ் வரி சிலை மாரனையே கல் கடும் கான்
உழைக்கேத மற்றுண நீக்கி மெய் வாட்டியும் ஓங்கு வரை
முழைக்கே புகுந்து மென்னா மணவாள முனித் தெய்வமே
பிழைக் கேடராய் யுன் அடிக்கு ஆட்படாது உழல் பேதையரே –21-

கழை -கரும்பு
கல் கடும் கான் உழை-கல் நிரம்பிய கொடிய காட்டிடம்
கேதம் -துன்பம்
வரை முழை–மலைக்குகை –

————

சகடியை நெஞ்சர் சிலர் நின்னை விட்டு அவர்த் தாழ்வது என் பூ
மகள் திரம் ஒன்றத் தரும் செல்வ மாலுண்ட மண் மிசைப்புன்
முகடியும் தான்றருமோ மணவாள முனித் தெய்வமே
யகடில் புன்றேவர் தருவர் கொனீ நல்கு மவ்விசும்பே –22–

சகடு-சகடக்கால்
பூ மகள் நிலை நிற்கத் தரும் செல்வம் என்க
முகடி -மூ தேவி
அவர்த் தாழ்வது -புன்றே வரைத் தாழ்வது

———-

செழு மணி வாயில் திறல் மன்னர் மற்றது தீர்ந்து கைந்நெ
கிழு மண்ணினார்களுமாதல் கண்டு ஓங்கு கிளர் வேலை நல்கு
முழு மணியே யமுதே மணவாள முனித் தெய்வமே
தொழு மணி தாக விண் நல்குதம் என்று எம்மைத் தொண்டு கொள்ளே –23-

திறல் மன்னர் -படை முதலிய வலியை யுடைய மன்னர்
கைந் நெகிழு மண்ணினார்களுமாதல் கண்டு -கை நழுவிய மண் பானையை யுடையவர்களாதல் கண்டோம் –
சிதைகிய பானையர் -என்றார் ஆழ்வாரும்
மண்ணினார் –மண் பாண்டத்தை யுடையோர்
கை விட்டு நீங்கிய மண்ணினார் பூமியை யுடையவர்கள் ஆதலும் கண்டோம் என்றுமாம்
வேலை -சமுத்திரம்
அணிதாக-சமீபமாக –

————–

நாக் குற்றம் தீர வுன் பேர் வாழ்த்தும் கண்கள் நயக்கும் நின் மெய்
நோக்குற்று உள நினையே எண்ணும் மோந்திடு நின் கழல் பூ
மூக்குற் பவப்பகையே மணவாள முனித் தெய்வமே
தாக்குற்க மாமிவை வெவ்வினையாம் இந்தனத் தொகைக்கே –24-

நா பேர் வாழ்த்தும் –கண்கள் மெய் நயக்கும் -உளம் நினையே எண்ணும் –மூக்கு கழல் பூ மோந்திடும்
பிறவி வேர் அறுப்பவனாகலின் -உற் பவப்பகையே-என்றார்
இவை-என்றது -மேல் கூறிய வாழ்த்துதல் முதலிய நல் செயல்கள்
வினையாகிய இந்தனத் தொகைக்கு இவை உற்கம்
இந்தனத் தொகை-விறகுக் கட்டை
உற்கம் -கடைக் கொள்ளி

———

தக மண்டலத்துள் நின் தாமரைத் தாள்களும் தண்ணரையில்
அக மண்ட அணி கொள் செந்தானையும் எய்யு நளிர் மதி சேர்
முக மண்டலமும் முற்றும் மணவாள முனித் தெய்வமே
நக மண்ட இப் பெரும் பேறு பெற்றேன் எனக்கு ஆர் நிகரே –25–

தக மண்டலத்துள்-தக மண் தலத்துள் என்க –
நக -விளங்க
தானை -ஆடை
அக மண்ட-அகம் அண்ட -மனத்தில் நெருங்கி இருக்க

———

காட்டு அட நீ அஞ்சல் என்று எனக்கு உன் கழல் கண்டு இரிய
நீ அடலேர் என்று அவர்க்கு எனைக் கொள் நிலை யாவணம் பாய்
மோட்டு அடல் மேதியின் மேல் மணவாள முனித் தெய்வமே
தோட்டட மால் வரை போல் கூற்று இவர்ந்து என் முன் சூழ் பொழுதே –26-

அட நீ அஞ்சல் என்று எனக்கு உன் கழலைக் காட்டு
கண்டு இரிய
அட நீ நீ அடலேர் என்று அவர்க்கு –உன் கழலைக் கண்டு -விலகும் படி நீட்டு
என்னை நிலை அடிமை கொள்
யாவணம்–முறிச் சீட்டு
மோட்டு அடல் மேதி-பெரிய வலிய எருமைக் கடா
மால் வரை போலும் தடம் தோள் கூற்று-என்க
கூற்று -யமன்
மேதியின் மேல் இவர்ந்து -என்க
இவர்தல் -ஏறுதல் –

———–

புதற்குள் நச்சுற்ற அமுது அங்கு உகுப்பது போல் நல் தமிழைக்
குதற்கு ணர்ச்சிப் பிழையோர்க்கு ஓதி யான் குண மூன்று உண் முழு
முதல் குணத்து உத்தமனே மணவாள முனித் தெய்வமே
மதற் குணத்தக்க எம் காமத்து ஆழ் துயர் மாற்றுவையே –27-

புதற்குள் நச்சுற்ற –நச்சுற்ற புதற்குள்
நச்சு -விஷ ஜந்துக்கள்
குதற்க உணர்ச்சி -என்பதில் அகரம் தொகுத்தல்
முதல் குணம் -ஸத்வ குணம்
மதன் -அஞ்ஞானம் -மன்மதனுமாம் -விருப்பம் பொருந்திய அமுதை என்றலும் அமையும் –

————

தொழில் ஊற்றம் தான் மிக வேதம் சொல் மாலைத் தொழும் தொழன்மின்
இழி நூல் தந்து ஆளாய் எனும் சடகோபன் இசைத் திருவாய்
மொழி நூற்றந்தாதி சொலு மணவாள முனித் தெய்வமே
அழி நூல் அம் தாவள நேரிடைக் கொங்கையர் அன்பு எனக்கே –28-

தொழில் ஊற்றம் தான் மிக-ஆளாகி – வேதம் சொல் மாலைத் தொழும்
இழிந்த நூல்களைச் செய்து ஆளாகிப் பிறரைத் தொழன்மின் என்று அருளிய சடகோபன்
நூல் நேரிடை தந்தாவளம் நேர் கொங்கை
தந்தாவளம் -யானை
கொங்கையர் அன்பை அழி எனக் கூட்டுக –

———

திருத்தி மயக்கி வெம் மா ப்ரபஞ்சச் சேற்றில் அழுத்தி
செருக்கி உருத் தெரியாதவாறு செய்வினை நாமம் அற
முருக்கி எனைப் புரந்தாய் மணவாள முனித் தெய்வமே
யுருக்கி யுளத்தை யழல் மெழுகாக்கிக் கொள் உள் உறைந்தே –29-

வினை நாமம் அற -வினையின் நாமமே இல்லாமல் -வினையின் அச்சமும் இல்லாமல் என்றுமாம்
நருக்கி-என்றும் பாடம்

————

பூத்தோய் நினது கழலிணைக்கே அன்பு பூண்டு இறைஞ்சி
நாத் தோல்வி இன்றிப் புகழ்கிலன் ஆயினும் நல்லறிவின்
மூத்தோ அருள் பெரியோய் மணவாள முனித் தெய்வமே
காத்தோர் பொழுதும் விடாது எனை யாளக் கடன் உனக்கே –30-

ஒரு பொழுதும் விடாது காத்து -என்க
நாவுக்கு வெற்றி புகழ்தல் என்பார் நாத் தோல்வி இன்றிப் புகழ்கிலன் என்கிறார் –

————-

கற்றார் பரவும் இராமானுசனை என் கண் மணியை
நல் தாது சேர் மலர் தூய்ப் பணியும் தொறும் நாளும் அன்பு
முற்றா யுளத்தமுதே மணவாள முனித் தெய்வமே
சிற்றாள் உனக்கு அரங்கேசன் முன்னாய் நின்ற சீர்மை நன்றே –31-

தாது – மகரந்தம்
தூய் –தூவி
அன்பு முற்று ஆ உளம் -அன்பு முற்றுதலை அடைகிற மனம்
முன்னாய் நின்ற -முன்னர் ஆகி நின்ற

———-

அட்டதிக் கயம் போல் எண்மர் ஆரியர் அன்பின் மிக்கார்
இட்ட முற்று ஏத்தும் நின் தாள் பரவாது உழலும் எம்மை மண் மேல்
முட்ட ஒட்டாது அளித்தாய் மணவாள முனித் தெய்வமே
சிட்டருக்கு என் கடன் றுட்டரைச் சீர்ப்பிக்கும் சீர் அன்றியே –32-

கயம் -யானை
வானமா மலை ஜீயர் -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -திருமலை எம்பெருமானார் ஜீயர் -கோயில் கந்தாடை அண்ணன்
பிரதிவாதி பயங்கர அண்ணன் -எறும்பு அப்பா -அப்பிள்ளார் -அப்பிள்ளை
சீர்ப்பித்தல் -சீர் உடையவராகச் செய்தல் –

————

இழிந்த ஆசை நீருள எய்த்தார் பிறர் யாம் படித்தேறி நின்று எய்ப்பு
ஒழிந்தாறின மெய் யுபதேச ரத்ன ஒண் தொடை நூல்
மொழிந்தாய் எமக்கு எளியாய் மணவாள முனித் தெய்வமே
வழிந்தாய் மலர் நறையீரிக்கு நின் கழல் வங்கம் விட்டே –33-

எய்ப்பு ஒழிந்து -இளைப்பு ஒழிந்து
யுபதேச ரத்ன ஒண் தொடை நூல் -ஒள்ளிய பிரபந்தம்
ஆய் மலர் நறை வழிந்து ஈரிக்கும் நின் கழல் என்க
நறை -தேன்
வங்கம் விட்டு -தோணியைச் செலுத்தி
ஸுலப்ய குண சீலரான மணவாள மா முனியின் திருவடிகளை வணங்காதார்
பிறவிக்கு வித்தாகிய ஆசைப் பெரும் கடலைக் கடத்தல் அரிது என்பதாம் –

———-

கடை யுகம் இந்தக் கலி யுகம் நான்குளும் காட்சி பெற்றா
ளுடை யுரமே மிக்கு உனை மறவார் சொலும் உண்மை தப்பி
முடை யுடறாங்கி நின்றேன் மணவாள முனித் தெய்வமே
மிடையும் வெந்தீவினை உள் நின்றும் என்னை வெளிப்படுத்தே –34-

உரம் -ஞானம்
முடை -துர்க்கந்தம்
மிடைதல் -நெருங்குதல் –

————

கேளார் எனில் உன்னடியார்க்கு அடிமை செய் கீழ்மையர்க்கே
ஆளாய் யுழல்பவர் அல்லார் எவர் எனில் அன்பு அவர் பால்
மூளார் என நினையார் மணவாள முனித் தெய்வமே
வாளா கழிகின்றனர் உலகோர் இவை மாறு செய்தே –35-

கேள் -உறவினர்
கீழ்மையர் -கீழ் படிதலை யுடையோர்
அல்லார் -கேள் அல்லார் –
வாளா -வீணே –

————-

கனியேன் யுனக்கு அன்பு யுன் தொண்டர் குழாமும் கலந்து இறைஞ்சேன்
நனி யேதமிக்கு உழல் புன் மனத்தேன் உன்னை நம்பி நின்றேன்
முனியேல் அடியனை நீ மணவாள முனித் தெய்வமே
தனியேன் உன் பொன்னருள் அன்றி மற்றோர் பெரும் சார்பிலனே –36-

நனி ஏதம் மிக்கு -மிகவும் குற்றம் மிகுந்து
சார்பு -புகலிடம் –

—————

சுத்தோ தகம் என்னும் வான் கங்கையோ சுடர் மா மதியோ
வொத்தோத ஞாலத் துறவு விட்டோர் மனத்து ஒள் ஒளியோ
முத்தோ அறிகின்றிலேன் மணவாள முனித் தெய்வமே
சித்தோர் உருக்கொண்டு அவதரித்தாய் நின் திரு உடம்பே -37-

உதகம் -நீர்
வான் கங்கை -ஆகாய கங்கை
சித்து -அறிவு –

—————–

பாட மறைப்பொருள் எல்லாம் இவர்க்கு எனப் பார் வியக்கும்
வேட மமைத்தவர் கோ யுனையே பற்றும் மெய்த்தவர்க்கோ
மூட மனத்தவர் கோ மணவாள முனித் தெய்வமே
பீட மலர்த் திரு வாழ் மார்பன் நல்கும் பெரு விசும்பே –38-

உன்னைப் பற்றுதலே மெய்த்தவமாவது
அத்தவம் உடையார்க்கு அல்லது ஏனைக் கைத்தவம் உடையார்க்குத்
திருமால் விசும்பு நல்குமோ என்கிறார் என்க –

———

என்ன துர்க்கந்தம் இது என்ன அருவருப்பிட யுடற்குள்
மன்ன வைத்தாறு பகையாகும் வன் கொடு வல்லி யங்கள்
முன்ன யுய்த்தாய் என் செய்கேன் மணவாள முனித் தெய்வமே
நின் அருளுக்கு என்று இலக்காகிக் கொள்வாய் என் கண் நேசம் வைத்தே –39-

மன்ன -பொருந்த
வல்லி யங்கள்-புலிகள் –

————

அறையோத மாக்கடல் சூழ் புவியோர் உன் அடி தொடரார்
வறையோடு நேர் சிரத் தார் மாலை வாழ்த்தி வள்ளான் முறையோ
முறையோ என்று ஓலமிட்டு என் மணவாள முனித் தெய்வமே
பறையோதை யேனுமீது என் என்பது உண்டு இறைப் பான்மையுமே –40-

அறைதல்-ஒலித்தல்
என் -என்ன பயன்
ஓதை –ஓசை

—————–

கந்தார் களிற்று மருப்பு ஓசித்தோன் கழலாம் வகுளப்
பைந்தாம நல் சரணம் எதிராசன் பதாம் புயத்தின்
முந்தாதாரம் வைத்துளாய் மணவாள முனித் தெய்வமே
சிந்தாகுலம் தவிர்த்து இங்கு எனை ஆளச் சிந்தை செய்யே –41-

கந்து -கட்டுத்தறி
மருப்பு ஓசித்தோன் -கொம்பை முறித்தோன்
வகுளப் பைந் தாமன் -பசிய மகிழம்பூ மாலையை யுடையோன் -நம்மாழ்வார்
ஆதரம் -அன்பு
ஆகுலம் -துன்பம்

—————–

தக்கோர் எலாம் கண்டு இகழ மெய்த் தூ நெறி சற்றும் இன்றி
மைக்கோல வாள் விழி மின்னார்க்கு ஆளாகி மயங்குகின்றேன்
முக்கோல் அணி கரத்தாய் மணவாள முனித் தெய்வமே
யக்கோர வல் வினை தீர்த்து என்னை யுன் அன்பர்க்கு ஆட்படுத்தே–42-

முக்கோல் -த்ரிதண்டம்
கோரம் -கொடுமை

————–

ஒத்தரு ணன் கதிர் போற்பரி சித்துல குற்றிடினும்
சுத்தரு னன் புனக் கானவர் சன்மத் தொடர் அறுத்த
முத்தரு மங்கவரே மணவாள முனித் தெய்வமே
எத்தரு மங்களும் பாவங்களும் அவர்க்கு என் செய்வதே –43-

———–

வாதாதை வோருறு மெய் ஒழித்து ஆட் கொள்ள வந்து நல்ல
நாதா தயா நிதி என்று உனைப் போற்ற நமர்கட்க்கு எல்லாம்
மூ தாத்தையே எந்தையே மணவாள முனித் தெய்வமே
போதாதையா யுன் அருட்க்கு என்னை இங்குப் புகுத்தியதே –44-

சப்த தாதுக்களோடும் கூடிய ஐவோர் உறும் மெய் ஒழித்து ஆட் கொள்ள வா
வந்து நாதா தயா நிதியே என்று உன்னைப் போற்ற நல்ல நாவினைத் தா -என்க
போதாது ஐயா எனக் கண்ணழிக்க –

———

சேயான் அவனியி லாகப் பெறும் சிந்தை மகிழ்
வாயானவ முறுங்கன்றுக்கு இரங்குவ தன்ன தன்மை
மோயானவா வெண்ணிலா மணவாள முனித் தெய்வமே
நீ யான வாவிச் சென்மக் கடலை நீக்குதற்கே –45–

சேய் –குழந்தை
அவனி –பூமி
மோய் -தாய் –

——–

நாற் கரைப் பேருதவிப் புவித் தோன்றி நசிக்கும் இந்தத்
தோற் கரைக் கூறை வயிற்றூண் இவை முதல் சூழ்ந்து நச்சி
மூற் கரைப்பாடும் எனை மணவாள முனித் தெய்வமே
மேற் கரைப்பார் யுன்னை அன்றி மற்றி யாருய்த்து மெய்ந்நெறிக்கே –46-

உததி -ஸமுத்ரம்
தோற்கு -தோலுக்கு
கூறை -துணி
நல் வழிச் செலுத்திக் கரை சேர்ப்பார் உன்னை அன்றி வேறு யார் உளர் -என்க –

———

பாங்கு ஐயன் பேர் அருள் தாய் நீ என்று எண்ணி யுன் பாதத்து ஒண் பூத்
தூம் அம் கை அன்பாளர்க்கு ஆட்பட்டி லேற்குத் தொலைந்தது நாண்
மூங்கையன் காண் அருள்வாய் மணவாள முனித் தெய்வமே
வாங்கு ஐ யன் கான மன்றன் பால் படாது என்னை வல் விரைந்தே –47–

பாங்கு ஐயன் -உரிமை யுடைய பிதா
பூத் தூம் அம் கை அன்பாளர்–மலரைத் தூவுகின்ற கையினை யுடைய அன்பர்கள்
மூங்கையன் –ஊமையன்
ஐ -சிலேட்டுமம்
சிலேட்டுமம் கட்டி இழுக்க -அதனால் வாய் பேச முடியாத மூங்கையனாகக் கிடைக்கும் என்னை
நமன் பால் படாது வல் விரைந்து காத்து அருள்வாய் என்க –

———–

நாரிக்கு அளி செறித்தோன் ஏவினால் செற நைந்து புலச்
சேரிகளினும் கொடிய மின்னார் முலை சேர்ந்து ஐவர் வெம் மூரிக்
களிறுகள் போல் மணவாள முனித் தெய்வமே
கூரிக் களி யடைந்தார் அஞ்சினேன் என்னைக் கூவிக் கொள்ளே –48-

நாரிக்கு அளி செறித்தோன்-மன்மதன்
நாரி -வில் நாண்
அளி -வண்டு
ஏவினால் -அம்பினால்
செற-கொல்ல
களி -கள்ளினும்
மூரி களிறுகள் – வன்மை பொருந்திய யானைகள் –

————-

கண்டகத்தான் கண்டு நாவார வாழ்த்திக் கமழ் நறும் பூக்
கொண்டாகத்தால் வரும் ஜன்மம் மாறக் குறித்து உனது
முண்டகத் தாள்களில் தூய மணவாள முனித் தெய்வமே
தொண்டகத்தாகி எஞ்ஞான்று அடியேன் உன்னைச் சூழ்வதுவே –49-

கண்டகத்தான் கண்டு –கண் தகக் கண்டு
நாவார வாழ்த்துதல் செய்து
பாவத்தால் வருகிற இழி பிறப்புகள் ஒழியக் கருதி
உனது தாமரையை ஒத்த திருவடிகளில் கமழ்கின்ற நறிய பூக்களைக் கொண்டு அர்ச்சித்துத்
தொண்டக் குலத்தினேன் ஆகி அடியேன் நின்னை வணங்குவது என்று கொலோ என்க –

————

சூழ் குயவன் சக்கரம் போல் வரும் சன்ம சூறைக்குள்ளாய்
மாழ் குயர் வல்வினை எல்லாமொழியு நம் வாரிய ருண்
மூழ் குயவா எனக்கூய் மணவாள முனித் தெய்வமே
கேழ் குயமொன்று மின்னார் மையன் மாற்றிக் கிளர்விப்பையே –50-

சூறை -சுழல் காற்று
மாழ்கல் -மயங்கல்
அருள் மாரியிலே மூழ்கு – உய்ய வா -எனக் கூவி என்க
வாரி -வெள்ளம்
கேழ் குயம் -ஒளி தங்கிய முலை

———–

விழிப் பிள்ளை மான் மருட்டால் விலை கொள்ளு மின்னார் கணகக்
கிழிப் பிள்ளையார் முலைக்கு இச்சையனேனும் கிளர் திருவாய்
மொழிப் பிள்ளை சேவடியா மணவாள முனித் தெய்வமே
பழிப் பிள்ளை சொல்லும் கொளல் போல் கொள்வாய் என் புன் பாச் சொல்லுமே –51-

பிள்ளை மான் மருட்டால் –என்க
மருட்டல் -மயக்கல்
நகக் கிழிப் பிள்ளையார் முலை-நகத்தினுடைய வடுவாகிய பிளத்தலினை பொருந்தலுடைய முலை

————-

வானம் முதலைக்கு அருள் சுடர் ஆழி வல்லோன் மகிழக்
கானம் வுதவு மறைத்தமிழ் பாடிக் கனிந்த செவ்வாய்
மோன முதலைத் தொழு மணவாள முனித் தெய்வமே
தேன் அமுதம் என நின் சீர் என்னுள் நின்று தித்திக்குமே –52-

முதலைக்கு வானம் தந்து -கஜேந்த்ரனைக் காத்து அருளிய ஆழி வல்லோன் என்க
மோன முதல்-என்றது நம்மாழ்வாரை
மல ஜலம் இன்றித் திருப்புளி ஆழ்வாரின் கீழ் மௌனமாய் எழுந்து அருளி இருந்த ஞானவே மூர்த்தி யாதலின் இவ்வாறு கூறினார்
மோனம் என்பது ஞான வரம்பு
தேன் அமுதம் -தேன் கலந்த பால் -தேனும் அமுதமுமாம் –

————-

தூசு அனம் செம் பொன் முதலாய நச்சு வெம் தொல் வினையின்
பாசனம் ஜன்மம் இது என்ன எண்ணேண் செயும் பல் பிழையும்
மோசனம் செய்து அருள்வாய் மணவாள முனித் தெய்வமே
சேதனம் செய் வளர் சீர் அரங்கேசற்குத் தேசிகனே –53-

தூசு -ஆடை
அனம் -சோறு
பாசனம் -மட்கலம்
தொல் வினையின் பாசன் நம் ஜன்மம் இது என்ன எண்ணேண் என்றும் பிரித்து உரைத்தலுலாம்
மோசனம் செய்தல் -தீர்த்தல்
தேசு அன்னம் -ஒளியை யுடைய அன்னம்
செய் -வயல் –

—————-

காலம் என்பார் விபரீ தானு கூலங்கள் காண்பது இந்த்ர
சாலம் என்பார் பாரினில் வாழ்வு என்பர் நின் அவதாரத்தை மான்
மூலம் என்பாய லெனு மணவாள முனித் தெய்வமே
கோலம் என்பார் உடல் சேர்ந்து இங்கு வாழுகை கொடிது எனக்கே –54–

இந்திர சாலம் என் பார் -இந்த்ரஜாலம் என்று சொல்லத்தக்க பூமி
பாயல் -பாய்

————

கன்மத்து அகப்பட்டு உயிர் யாவு நோவன கண்டு அறிந்தும்
வன்மத்தன் ஒத்து கருணை செய்யான் அளை வாரி யுண்டு
முன் மத்து அடிக்கு உவந்தோன் மணவாள முனித் தெய்வமே
யுன்மத்த சித்தன் எனை நீ வந்து ஆண்டு கொள் உற்று உணர்ந்தே –55-

அளை-தயிர்
வன்மத்தன் -கேட்ட செய்கையை யுடையவன்
மத்து அடிக்கு உவந்தான் என்க
உன்மத்த சித்தம் -மயக்கமுற்ற மனம் –

——————-

அப்புரி நாகம் விடல் போல் உயிர் மெய் அகல்வது எனச்
செப்புரியோர் மொழி கேட்டு உய்ந்திடாச் சிறியேற்கு அருளாய்
முப்புரி நூல் அணி தோள் மணவாள முனித் தெய்வமே
யெப்புரியோ நின் புரியாம் விண் அன்றி இருப்பிடமே –55-

புரி விடல் -தோல் விரித்தல்
செப்ப உரியோர் என்க
முப்புரி -பூணூல்
புரி –ஊர்

—————

கற்றிலன் நின் புகழ் நீ வந்து என்னுள் கலவாமையினால்
வெற்றில் அன்பற்ற என் பொல்லா அழுக்குடன் மெய் உணர்வின்
முற்றில் அன்றோ உய்வன் யான் மணவாள முனித் தெய்வமே
பற்றிலன்றே மனம் வைத்தேற்கு உண்டோ தொல் பர கதியோ –57–

அன்பு அற்ற என் அழுக்கு உடல் வெறிய இல் என்க
வெற்றில் -பாழ் வீடு –

————

இதவா சகமு மொழியார் இடை படு மேல் வையினும்
உதவாதவர் என்ன மெய்த்தவரோ என்னுள்ளத்து இன்
அமுத வாரியின் பெருக்கே மணவாள முனித் தெய்வமே
மத வாதவர்க்கு அரி ஏறே மெய்த்தேவன் அம் மாதவனே –58-

இடைபடும் எல்லை -துன்பப்படும் காலம்
இன் அமுத வாரியின் பெருக்கே -என்க
மத வாதியர்-புற மத வாதியர்
அரி -ஸிம்ஹம் –

————-

துகில் கமரேசனும் மோகிக்கவே செய்து சூழ்ந்து உடுப்பார்
அகில் கமழ் வாசப் புகை யூட்டுவார் குழற்கு அக்குழலோ
முகில் கமஞ்சூல் அனையார் மணவாள முனித் தெய்வமே
புகில் கமர் வாய்ப் பொன் புணர்வோர் அவர் மையல் போக்கு எனக்கே –59-

துகில் -ஆடை
அமரேசன் -இந்த்ரன்
குழற்கு அகில் புகை யூட்டுவார் -அக்குழல் நிறைந்த சூலினை யுடைய முகில் போல்வார் என்க
பொன் புணர்வோர் -பொன்னின் பொருட்டுப் புணர்தல் செய்வோர் –

—————

வடிக்கணினார் மயலால் வரச் சேர்ந்து மயங்கி உன் தாள்
பொடிக்கு அணி வாழ்வதில் புன் சிரத்தேன் எதி பூபதி தாள்
முடிக்கு அணியாகக் கொண்டாய் மணவாள முனித் தெய்வமே
செடிக்கு அணியார் வெம் பிறவியைத் தீர்த்து என்னைச் சேமிப்பையே –60-

செடி -துர்க்கந்தம் –பாவமுமாம்
சேமித்தல் -காத்தல் –

——————

நூல் இயல் பால் தெளிந்து அன்பரை வாழ்விக்கும் நுண் உணர்வின்
வாலியராம் நம் ஸ்ரீ சயிலேசர் மலர்க்கழல் பொன்
மோலிய தாஞ்சிரத்தாய் மணவாள முனித் தெய்வமே
சேலியல் வாரிப் புவி நீ யுதித்த பின் சீர் பெற்றதே –61-

வாலியர் -தூய்மையை யுடையோர்
மோலி -கிரீடம் –

————-

சூழ் கிரணத்து அருணாம் புயம் போலு நின்று உய்ய நல் தாள்
வீழ் கிலராய் இங்கு வாழ்வோர் சிலர் விரஜா நதி போய்
மூழ்கினும் பேறு இலராய் மணவாள முனித் தெய்வமே
யாழ் கிணற்றில் உட்பட்டு அமிழ்வோர் இக் கேவலத்து ஆழ்வார்களே –62-

அருணாம் புயம் -செந்தாமரை
அருணம் -மிக சிகப்பு
வீழ்தல் -ஆசைப்படுதல் -வீழ்ந்து வணங்குதல் என்றுமாம் –

—————

சுட்டித் தவ முயன்று உன் அருளால் மது சூதனற்கு ஆட்
பட்டித் தரைக்குள் உற்றோர் வானம் ஏறப் படரில் சென்னி
மொட்டித் தகையினராய் மணவாள முனித் தெய்வமே
கிட்டித் தமிற் கொண்டு உபசரிப்பார் சுரர் கேண்மை யுற்றே –63–

சென்னி மொட்டித்த கையினர்–முடி மேல் கூப்பிய கையினை யுடையார் –
சுரர் -நித்ய ஸூரிகள்
கேண்மை -நட்பு –

———-

பிடி யுடை வாள் பல கைகையராய் முறை பேணி முறைப்
படி யுடை வார் மனந்தீ மெழுகாகி யுன் பத்தர்கட்கே
முடி யுடை வானவர் தா மணவாள முனித் தெய்வமே
மடி யுடை வாச மலர் முதலீந்து வணங்கி நின்றே –64-

பலகை -கேடகம்
முறைப்படி பேணி மனம் தீ மெழுகாகி யுடைவார் என்க
மடி யுடை -பரிசுத்தமான வஸ்திரம் –

—————

ஞாலத்து அவம் செய் மத வாதியரை நடுக்குறு முக்
கோலத்து அரி சமயத்தினோர்க்கு அனுகூல துலா
மூலத்து அவதரித்தாய் மணவாள முனித் தெய்வமே
யேலத் தவமிலி யானேனை நீ வந்து எடுத்து அருளே –65-

அவம் செய்தல் – பயன் அற்றனவற்றைச் செய்தல்
நடுக்கம் உறச் செய்கின்ற முக்கோல் அத்த -என்க
அரி சமயம் -விஷ்ணு மதம்
துலா மூலம் -ஐப்பசி மாசத்து மூல நக்ஷத்ரம் –

———–

இக்காலந் நாளை விடையோனை வென்றோன் எய்யும் ஈர்க்கணை
களோடு ஓக்க காலமாம் என வந்தே அடப்படும் தூர்த்தன் என்னை
முக்காலமும் தெரி சீர் மணவாள முனித் தெய்வமே
யக்காலன் என் செய்வனோ அறியேன் வந்து அருள் புரியே –66-

இங்கு -கரும்பு வில்
விடையோன் -வ்ருஷப வாகனத்தை யுடையோன் -உருத்திரன்
மலர்க்கணை யாதலின் -ஈர்க்கணை -என்றார்
ஆலம் -விஷம்
தூர்த்தன் -விட புருஷன்
காலன் -இயமன் –

————-

மா தூரமாயினும் வந்து நம் பால் இங்கு வா எனக் கூய்
மீதூர வாவுற்று எளியோனை யான் வியன் கூரம் என்னும்
மூதூரானைத் தொழும் சீர் மணவாள முனித் தெய்வமே
நீ தூர என் சனனச் சாகரத்தை நிலை அழித்தே –67-

மா தூரம் -மிக்க தூரம்
மீது ஊர் அலர உற்று என்க
அவா -ஆசை
வியன் -பெருமை
மூது ஊர் -பழமையான ஊர்
சனனமாகிற சமுத்ரத்தைத் தூர் என்க
தூர என்று அகர ஈற்று வியங்கோளாகக் கோடலுமாம் –

————

வேள் துவள என்று மெய்ஞ்ஞானக் கோயிலுள் மேவு நின்னை
நீடு வளம் ஒன்றக் கண்டோர் இதயத்து நேசம் என்னும்
ஊடு வளர்கின்றது மணவாள முனித் தெய்வமே
கூடு வளகத்து அன்பர்க் காண் நன் மாதருட் கூர்ப்பு ஒக்குமே –68–

வேள் துவள வென்று -என்க
வேள் -மன்மதன்
துவளல் -தளர்த்தல்
நேசம் என்னும் மூடு வளர்கின்றது உவளகத்திடத்தே அன்பரைக் காண்கின்ற
கற்புடை மாதரது உள் கூர்ப்பினை ஒக்கும் என்க
உவளகம்-அந்தப்புரம்
உள் கூர்ப்பு -சந்தோஷ மிகுதி
கற்புடை மகளிர் -நல் மாதர் –

பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையில் பொருள் வயினில் பரிந்து போன
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும்
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் -கம்பநாட்டாழ்வார் –

———————-

மிக்குற்ற நின்னன்றி யார் அருள்வார் அற்பர் வேறுளர்
உமி குற்ற என் அரும் கை வருத்தம் அன்றி விண்ணுள் உரும்
உக்குற்றது ஒப்ப என்பான் மணவாள முனித் தெய்வமே
முக்குற்றம் இங்கு ஒழி நின் முன் பின்னோர் என் முகம் கொள்ளவே –69-

உமியைக் குத்தக் கை வருத்தத்தை அன்றி வேறு என்ன தரும் என்க
உருமு -இடி
உருமு உக்கு உற்றது ஒப்ப என்று பிரிக்க
முக்குற்றம் -காமம் வெகுளி மயக்கங்கள்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் கெடக் கெடும் நோய் என்பதால் முக்குற்றம் இங்கு ஒழி என்கிறார் –

——————-

குருகூரும் அணி அரங்கமும் நாளும் குலாவி மகிழ்ந்து
ஒரு கூரு மன் மகிழக் கோன் எதிக்கோனை யுளத்துள் வைத்தாய்
முருகூரும் மலர்த்தொடை மணவாள முனித் தெய்வமே
இரு கூர் உமரோடும் வந்து அகலாது என் இதயத்துள்ளே –70-

மகிழக் கோன்-வகுளாபரணர்
முருகு -வாசனை -தேனுமாம்

———-

வடு அற்கு அமைவிக்கும் கொங்கையர் பால் மனம் வைத்த என் மேல்
அடு வற்கட கோடைத்தீ பகனேர் நமன் ஆட்கள் உய்க்கும்
முடுவற் கணம் எற்று முன் மணவாள முனித் தெய்வமே
யடுவற்க மா நுமரர் சூழ நீ விரைந்து அஞ்சல் என்றே –71-

வடு -நகக்குறி முதலிய
அல் -இரவு
வற்கட கோடைத் தீ பகலில் என்க
முடுவல் கணம் -செந்நாய்க் கூட்டம்
எற்றல் –பிடுங்கிக் கொல்லுதல்
வற்கமாம் நுமர் என்னைச் சூழ நீ அஞ்சல் என்று விரைந்து அடு என்க
வற்கம் –வர்க்கம் -கூட்டம்
நுமர் -நும்மவரான அடியார்கள்
வற்கடம் -வறட்சி

—————-

மக்க நக்கு எல் உமிழ் ஒள் எயிற்று ஏழையர் வாய்த்த தமர்
தொக்கு அண்ணக் குப்பம் கவிழ் புனல் போல் உளம் சோர்வர் அயன்
முக்கண் நக்கன் தமர் தா மணவாள முனித் தெய்வமே
எக்கணக்கும் தவிர் நின்றமர் தாம் அவ் வியல்பிலரே –72-

நக்கு -சிரித்து
எல் -காந்தி
எயிற்று -தந்தம்
மக்கள் முதலியோர் தொக்கு அண்ண-என்க
அவ்வியல்வு -அவ்வாறு உளம் சோரும் தன்மை –

—————

பெற்ற யுந்திக் கமலன் சீரனும் நனி பேணி என்றும்
கற்றவும் கற்கின்றவும் கற்பவும் நின் கழல் புகழே
முற்றவும் தொண்டு உனக்கி யான் மணவாள முனித் தெய்வமே
கொற்ற வும்பற் குல நேர் இதரர்க்கோர் வெங்கோளரியே –73-

உம்பல் குலம் –யானைக் கூட்டம்
இதரர் -ஸ்ரீ வைஷ்ணவர் அல்லாத பிற மதஸ்தர்
கோளரி -ஸிம்ஹம் –

————–

அட்டைக் கரணைக் கரவுக்குக் கால் கொடு என்று ஆர்த்து அடித்து
நெட்டைக் கரிய நமன் தமர் ஈர்த்து நெறி களிற் கான்
முட்டைக்கவும் துரப்பார் மணவாள முனித் தெய்வமே
ஓட்டைக் கருதி உடன் வந்து அன்று ஆண்டு கொள் உற்று எனையே –74-

ஒட்டு -சம்பந்தம்
கான் முட்டைக்கவும் துரப்பார்-கால் முள் தைக்கவும் துரப்பர் -செலுத்துவர் –

—————

நா தைக்கு மாறு ஒண் சடகோபன் ஓதிய நல் தமிழ் பா
ஒத்தைக் குறித்து உரையேன் பணியேன் யுன்னை உள்ளுணர்வின்
மோத்தைக்கு நேர் சிறியேன் மணவாள முனித் தெய்வமே
சீத்தைக் குழாத்துடல் காத்து இங்கு வாழ்க்கை சிறந்ததன்றே –75-

நாவில் தைக்குமாறு ஒள்ளிய சடகோபன் ஓதி அருளிய நல்ல
தமிழ் பாக்களாகிய திருவாய் மொழி என்னும் வேதத்தை -என்க
ஒத்து -வேதம்
மோத்தை -வெள்ளாட்டுக் கடா
சீத்தை -பதனழிவு –

————-

ஆள் தார மைந்தர் பொன் பூமியில் நேசம் வையார் அனல் நீர்
கோள் தாரகைக் குலத்தால் வரும் நோய் யுள் கொளார் மனத்தின்
மூடார் அஞ்ஞான இருள் மணவாள முனித் தெய்வமே
நீள் ஆரணத் தமிழ் அந்தாதி பாடு நினக்கு அன்பரே -76-

————-

அகம் போத நீங்கி அஞ்ஞானத்தின் மாதரை யாசித் தையா
சுகம் போர் செய்வதற்குள்ளா யன்னார்கள் சுகம் வடவா
முகம் போலென எண்ணிலேன் மணவாள முனித் தெய்வமே
யிகம் போதும் யான் பட்ட நோவு எனக்கு ஈய் உன் இணை அடியே –77–

ஐ ஆசுகம் -மன்மதன் பஞ்ச பாணங்கள் -அவை
வனசம் சூதம் அசோகு முல்லை நீலம் -என்பன
வடவா முகம் -வடவா முக அக்னி –

———-

செம்மையினில் நுங்களைச் செவ்வே திருத்தி ரட்சிப்பன் என்றே
யம்மையினும் தயவு ஆதாரம் கூர்ந்து அளித்து ஆண்டு எமக்கே
மும்மையினும் துணையா மணவாள முனித் தெய்வமே
எம்மை இனும் கை விடாதே இனி ஓம்பி விண் ஏற்றிக் கொள்ளே –78-

——-

ததி ஓதனம் அஞ்சுவைப் பால் அன்னம் உண்ண விச்சாதுரனா
யதி யோக வாழ்வு பெற எண்ணினேன் அலதா ஆன்ற கற்பின்
முதியோர் தொழும் திருவே மணவாள முனித் தெய்வமே
கதியோ பெற எண்ணிலேன் இனிச் செய்வது என் கட்டுரையே —-79-

ததி ஓதனம்-தயிர்ச்சோறு
இச்சாதுரன் -மிக்க ஆசையை யுடையோன்
ஆன்ற கற்பின் முதியோர் -மிக்க கல்வியுடைய பெரியோர்
ஆன்ற -அமைந்த மாட்சிமைப்பட்ட என்றுமாம் –

————–

நீ சாம மேனியன் அங்கு அவன் நீ இந்நிலை யன்பர் கைத்
தேச அமலகக் கனி நிகர் தேசிக சென்ம வெந்நோய்
மூசாமல் இங்கு எனை ஆள் மணவாள முனித் தெய்வமே
பேசாமல் வா என்று சொல்வார் எவர் இப்பெரு நிலத்தே –80-

நீ அவனாகவும் அவன் நீயாகவும் பேதமற உற்ற நிலை அடியார்களுக்கு
கரதலாகமலகம் போல் நன்கு உணரக் கிடந்தது என்கிறார்
ஜன்மமாகிய கொடிய நோய் மொய்த்துக் கொள்ளாமல் என்க
மூசல் -மொய்த்தல் –

————-

மடங்காது ஞான மிலா யடியோம் இங்கு வாழ்தலினால்
அடங்காது வார் குழை மா மாதவனுக்குத் தரணி மேல்
முடங்காது லீலை கண்டாய் மணவாள முனித் தெய்வமே
திடம் காதுகாதராம் இவர் எம்மை என்று எம்மைச் சீறலையே –81–

மடங்காது ஞானம் –மடம் காது ஞானம் -அஞ்ஞானத்தைக் கெடுத்து ஒழிப்பதற்காகக்
காரணமாகிய மெய்யறிவு
முடங்காது -சுருங்காது
லீலை -விளையாட்டு
மாதவனுக்கு லீலை முடங்காது என்பது திடம்
ஆகலின்
இவர் துரரகதாரம் என்றும் எம்மைச் சீறாது கா என்கிறார்
துராகதர்-தீமை புரிவோர் –

———

பெரும் தேறலாரு மலர்க்கூந்தன் மேகம் பிணை விழி சொன்
மருந்தேர் இளம் கொங்கை கோங்கரும் பா மடவார் முறுவன்
முருந்தே என வியந்தேன் மணவாள முனித் தெய்வமே
இருந்தேன் புதிய விருந்தாய்ப் பிணிக்கும் யமனுக்குமே –82-

மடவார்களது கூந்தல் விழி சொல் கொங்கை முறுவல் ஆகியவற்றை முறையே
மேகமே பிணையே மருந்தே கோங்கரும்பே முகுந்தே என
வியந்தேனாய்ப் பிணிக்கும் யமனுக்கு புதிய விருந்தாய் இருந்தேன் என்க
தேறல் -தேன்
முறுவல் -தந்தம்
பிணை -மான்
மருந்து -தேவாம்ருதம்
முருந்து -இறகில் அடியில் குருத்து –

————

கிளரியங் கார் கடல் போல் ஆர்த்து எழும் குருகேசன் சொல்லால்
விளரியங் காக்கும் தமிழ்ப் பாவினினின் மிக்க வேட்க்கையர் நின்
முளரியந் தாள் தொழுவார் மணவாள முனித் தெய்வமே
யுளரிய பா நிற –டுற் சிலரே இவ்வுலகத்துள்ளே —

கிளர்தல் -நிறைதல்
விளரி அங்கு ஆக்கும் தமிழ்ப்பா என்க
விளரி -நெஞ்சால் பிறக்கும் இசை
வேட்க்கையர் -ஆசை யுடையோர்
முளரி அம் தாள் -தாமரைப் பூவை ஒத்த அழகிய திருவடிகள் –

—————–

வேட்டினை யாநிற்பன் மின்னார் கலவியை மீட்டு எனை உயிர்
நாட்டினை யான் கொல் இன்னான் என்று உன் அன்பர் நயக்கு நெறி
மூட்டினை யாகில் உய்வேன் மணவாள முனித் தெய்வமே
வாட்டி நையா வுறு நோய் மருந்தாலுடன் மாறும் அன்றே –84-

மின்னார் கலவியை வேட்டு இளையா நிற்பன் -என்க
வேட்டல் -ஆசை கூர்தல்
இளைதல் -மனம் இரங்கல்
இவன் தானோ முன்னம் இந்த நாட்டில் மின்னார் கலவையால் இளையா நின்ற இன்னான் என்று சொல்லுமாறு
என்னைத் திருத்தி உன் அன்பர்கள் விரும்பிச் செல்லும் நெறியில் சேர்ப்பாயாயின் யான் உய்வேன் என்க –

——————

தளைப்பா ரவன் இறை யாஞ் சனனங்களில் ஆழ்ந்து அழுந்தி
இளைப்பா ரவராக் கடல் புவியோர் செயலீ தற்று விண்
முளைப்பா ரவர் உன் தமர் மணவாள முனித் தெய்வமே
யுளைப்பார வேழ் பரியோன் முதலங்காரியோ –85-

———–

ஈப் பருந்தோரி முதலிவையே செறிந்து ஈர்த்து உண்ணு மூ
னாப்பரும் பாவையர் மெய்யென்று மோவாது அருவருப்பார்
மோப்பருன் பாத மலர் மணவாள முனித் தெய்வமே
தூப்பருந் தாள் மலரோற்கும் எய்தா இன்பம் துய்ப்பவரே –86-

ஈயும் பருந்தும் நரியும் கூட இழுத்து உண்கின்ற மாமிசக்கட்டே பெறுவதற்கு அரியர் என்று
கொண்டாடப்படுகின்ற பாவைமாரது சரீரம் என்று தெளிந்து அவரது மெய்யை மோவாது அருவருத்து
உனது திவ்ய பரிமளம் கமழ்கின்ற திருவடித் தாமரையையே நோக்கும் அவரே
தூய பெரிய தண்டினை யுடைய தாமரை மலரானாகிய பிரமனுக்கும் கிட்டாத
இன்பத்தை அனுபவிக்குமவர் ஆவார் என்க —

————

கடமா கராம் பற்று நாண் மூலமே எனக்காத்து அருள் செய்
திடமா கராம் புயத்தாழிப் பிரான் பதம் சேண் வளர் தேன்
முடமா களிச்சித்தல் போல் மணவாள முனித் தெய்வமே
இடமாக்க மேவலில் என்று இச்சித்தேன் எய்தல் எவ்வணமே–87-

கடமா -மதத்தினுடைய யானை
காரம் -முதலை
வலிய பெரிய தாமரைத் திருக்கை இடத்தே திருவாழி ஆழ்வானை உடைய பிரானது பதத்தை
இடம் பொருள் ஏவல் இல் என்று இவற்றையே இச்சித்த யான்
உயரமான கொம்பின் இடத்தே வளர்கின்ற தேனை முடவன் இச்சித்தால் போலே இச்சித்தேன்
அப்பிரான் இடம் எனக்கு கிடைப்பது எப்படி என்க –

————–

பத்திக் குறிப்பு சிறிதும் இல்லேன் நின் பொற் பாதம் அல்லால்
எத்திக்கும் சென்றும் உழன்றும் புகல் காண்கிலேன் என் அப்பனே
முத்திக்கு வித்து எனும் சீர் மணவாள முனித் தெய்வமே
தித்திக்கு நேர் மொழி யாரால் கெட்டேன் என் செயல் இதுவே –88–

பாதம் அல்லால் புகல் இடம் காண்கிலேன் என்க
தித்திக்கின்ற இக்கு -கரும்பு -நேர் மொழியார் என்க
தித்திக்கின்ற நேரிய மொழியார் என்னலுமாம் –

——————–

தொண்டு உன் கழற்கு அவர்தாமாய்ப் பொதுவறச் சூழ்ந்து அதற்கே
மண்டும் பெரு விருப்புற்றோர் நினது அருள் வாரி மொண்டு
மொண்டு உண்டு கொண்டு உழல்வார் மணவாள முனித் தெய்வமே
கண்டு உய்ந்திட எண்ணி நாயேனும் அங்கு அது காமிப்பனே –89-

அருள் வாரியை மொண்டு மொண்டு உண்டு கொண்டு உழல்வார் என்க
காமித்தல் -இச்சித்தல் –

————–

போது உந்தியான் அருள் நின் அவதாரப் புணர்ச்சி என்று எண்ணி
ஓதும் த்யானம் உறும் பெரியோர் உன் கருணை அலை
மோது உந்தியால் நனைவார் மணவாள முனித் தெய்வமே
தீது உந்தி யான் அவமே படிந்தேன் பவத் தீ நதிக்கே –90-

போது உந்தியான் -பத்ம நாபன்
உந்தியால் -நதியால்
தீது உந்தி -தீயவற்றை எற்றி
பெரியோர் தீது உந்தி உந்தியால் நனைவார் என்க
இனி தீது உந்தி யான் அவமே படிந்தேன் என்றலும் ஓன்று
உந்துதல் -ஏறுதல் –

————-

ஓவா மருங்கில் குவிதர வேய்ங்குழல் ஊதி நின்ற
தேவாம் அரும் பெறல் நா வீறன் பொற் பாத சேகரனே
மூவா மருந்தனை யாய் மணவாள முனித் தெய்வமே
நாவா மருண்டு மறவாது உன் நாமங்கள் சொல்லிடவே –91-

ஒன்றோடு ஓன்று சேர்தல் இன்றிப் பிரிந்து மேயும் பசுக்கள் எல்லாம் பக்கத்திலே வந்து குவியும்படி
புல்லாங்குழலூதி நின்ற தேவனாகிய கண்ணபிரானது அவதாரமாகிய நா வீறானாகிய நம்மாழ்வாரது
அழகிய திருவடிகளை திரு முடியில் உடையவராய்
மூவாத மருந்து போல்வாய் -மணவாள மா முனியாகிய கண் கண்டா தெய்வமே
உனது திரு நாமங்களை சொல்லிட என் நா மருண்டும் மறவாது என்க –

————–

சொற் போது கொண்டு உன் இணைத்தாள் பரவித் தொழுது உய்ந்திடா
மற் போது மென்று புல்லோர் கடை போயலே மந்திரங்கி
முற்போது செய்வினையான் மணவாள முனித் தெய்வமே
நிற்போதும் வேலை கருவில் திருவற்ற நீர்மை அன்றே –92-

சொல் போது -சொல்லாகிய போது -மலரும் பருவத்து அரும்பு
அலமந்து -மனம் கலங்கி -உய்ந்திடாமல் அலமந்து இரங்கி –
முற்போது பூர்வ ஜென்மம் –

————

அனமேய நீர்த்தடம் சூழ் பெரும் பூதூர் அதிபதிக்கு உன்
மனம் மேவும் கோயில் என நல்கி வாழும் உனக்கும் எனக்கும்
முனமே உண்டான தொடர்பே மணவாள முனித் தெய்வமே
இனமேதும் நீ என்னைக் காவாது இருக்கும் இயல்பு உரையே –93-

————

மட்டாட்சி செய் குழலோர் மங்கை தன் வயத்தால் படைக்கப்
பட்டாட் குளத்து இச்சை யுற்றே மயங்கினன் பார்க்கில் முழு
முட்டாட் கமலனன் தான் மணவாள முனித் தெய்வமே
நட்டாட் கொண்டு என்னைப் புரந்து கொள் ஐவரை நாசம் செய்தே –94-

மட்டு -தேன்
முள் தாள் -முள்ளோடு கூடிய தாள்
முட்டாளாகிய கமலம் என்றும் -என்ற பொருளும் சிலேடை வகையால் காட்டப்பட்டது
பரமனே தன்னாலே படைக்கப்பட்ட புத்ரியின் முறையில் உள்ள பெண் ஒருத்தி உடன் மயங்கினான் என்றால்
நான் மயங்கி கெட்டப் போவதில் வியப்பு என்ன என்கிறார்
ஆகவே நீ ஐவரை நாசம் செய்து என்னை மீட்டு ஆட்கொண்டு ரக்ஷித்து அருள வேண்டும் என்று இரக்கிறார் –

———-

வாழலன் தேசிகர் தங்கள் சிகாமணி நீ யுறையும்
சூழலன் பால் வலம் செய்து ஏழையேன் அகர்ச்சூழ்ந்து உழல் புன்
மோழலன்றோ அடியேன் மணவாள முனித் தெய்வமே
காழலன் தான் முன் ஏனமாய் விணோர்க்கு உளம் கைக்கனியே — 95-

நீ உறையும் சூழலை அன்பால் வலம் செய்து ஏழையேன் வாழலன் -என்க
மோழல்-பன்றி
நீ தான் முன்னம் கலப்பையைக் கையில் கொண்ட பலராமனாக திரு அவதரித்து அருளினாய்
என்பது விண்ணோர் கையில் இலங்கு நெல்லிக்கனி போல் நன்கு விளங்கிற்று என்க –

—————

இடும்பைப் பொதிக்கோ ரவுடதஞ் சேர்த்து இந்த ஞாலத்தர் முன்
விடும் பைப் பொதி வசன பூஷணத்தை விரித்து உரைத்த
முடும்பைக்கு இறை அருள் சேர் மணவாள முனித் தெய்வமே
நெடும் பைத்த மால் அரங்கன் சேடனாய் என்னுள் நீங்கலையே -96-

இடும்பை -துன்பம்
பைப் பொதியாகிய ஸ்ரீ வசன பூஷணம் என்க
முடும்பைக்கு இறை -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
நெடிய பசுமை நிற மேகம் போன்ற அரங்கேசனைத் தாங்குகின்ற சேடனாக நீ என்னுள் நீங்கலை -என்றுமாம்
சேடன் ஏவல் செய்வோன் தோழன்
அரங்கனாகவும் சேடனாகவும் என்னுள் நீங்கவில்லை என்னுமாம்
அரங்கனைச் சேடனாகக் கொண்டு என்னுள் நீங்கவில்லை என்றுமாம் –

————-

சனியே எனத் தொடர் கன்ம வெம் பாசம் தடுக்க நின்று
அவனி யேறி எய்த்து இளைத்தேனை வந்து ஆட் கொள் வர வர
முனியே பொற் கோயில் உறை மணவாள முனித் தெய்வமே
துனி ஏதிலார் நகைக்கும் படி யான் புன்மை சூழ்ந்தனனே –97–

அவனி ஏறி எய்த்து இளைத்தேனை வந்து ஆட் கொள் என்க
துனி -அச்சம் -கோபமுமாம்
ஏதிலார் -பகைவர் –

————

சுருக்கலன் ஐவரைத் துன் மதியேன் யுன் தொல் அருள் முன்
கருக் கலவாது ஒழிந்தேன் ஆதலால் கமழ் வாசமில் புன்
முருக்கலர் போன்றனன் யான் மணவாள முனித் தெய்வமே
பெருக்கலர் நீங்க என்னுள்ளத்து இன்பப் பெரு வெள்ளமே -98–

ஐவரைச் சுருக்கலன்
அருளை முன்னே கரு விடத்தே கலவாது ஒழித்தேன்
ஆதலால் மணம் இல்லாத முருக்கம் பூவை ஒத்தேன்
அலர் நீங்க என்னுள்ளத்து இன்பப்பெரு வெள்ளத்தை பெருக்கு என்க
அலர் -பலர் அறிந்து பழி தூற்றல் -துன்பமுமாம் –

———–

கயங்குவை மூடவற்றோ நீர் மிகினும் நின் கண்ணருளைத்
தயங்குவை வேல் விழியார் விரகான அலஞ் சாடவற்றோ
முயங்கு வையேல் என்னை மணவாள முனித் தெய்வமே
நயங்குவையா யுண்டெனக் காதலால் இது நன்கு அருளே –99-

கயம் -குளம்
கு -பூமி
வற்றோ -வல்லதோ
நின் திருக்கண்ணின் அருள் பிரவாஹத்தை வேல் விழியார் விரகு அனலம் சாடவற்றோ
கை வேல் -கூரிய வேல்
அனலம்-அக்னி
முயங்கல் -தழுவல்
நயம் குவையாய் உண்டு என்க
குவை -குவியல் கூட்டம் –

——-

கூர் பாலை மூள் கனலாக்கும் பெய் மேகக் குளிர் புனலைச்
சார் பாலையோ கெடுப்பார் சிறியோர் கடக்கோர் யுறை
மோர் பாலை வேறு செயு மணவாள முனித் தெய்வமே
யோர் பாலை வோர்கள் எனை வேறு செய்வர் உனைப் பிரித்தே –100-

வெம்மை மிக்க பாலை நிலம் தன் பால் பெய்யும் மேகத்தின் குளிர்ந்த நீரையும் மூண்டு எரியும் அனலாகச் செய்து விடும்
ஸஹ வாஸ தோஷத்தால் சிறியோர் தக்கோரையும் ஐயோ கெடுத்து விடுவார்
பிரை குத்து மோர் பாலை வேறு செய்யும்
இவை போல் ஐம் பொறிகளாகிற தீயோர்கள் என்னை நின்னின்றும் பிரித்து என்னைத் தனியே இருக்கச் செய்கின்றார்கள் என்க
ஓர் பால் -ஒரு பக்கத்திலே -ஆராய்ச்சியால் என்றுமாம்

————–

தூண்ட ளிர்ப் பூந்தருவாமோ நின்னன்றிச் சொலும் இதரர்
பூண்டளிக் கோலம் புனைந்து எனைக் காக்கப் போதுவரோ
மூண்டு அளித்து ஆட் கொண்டு நீ மணவாள முனித் தெய்வமே
காண்டு அளித்து தூர விடாது அடியேனைக் கைக் கொண்டிடவே –101-

தள்ளித் தூர விடாது காண் என்க –

————–

எப்பது பாத தொகை யாண்டு உரைத்து எண்ணினும் எண்ணரும்
சீரில் அப்பதுமக் கழலோன் எதிக்கோன் மகிழ் ஆர்த்தி ஒண் பா
முப்பது முப்பது சொல் மணவாள முனித் தெய்வமே
செப்பது மற்று என உளம் தேறி யுன் கழல் சேர் வண்ணமே –102-

பது மம் -கோடா கோடி
சீலப் பதுமக் கழலோன் எதிக்கோன் என்க
ஆர்த்தி -குறை
அது உளம் தேறி உன் கழல் சேர் வண்ணம் செப்பு -என்க –

———–

கதிரந் தமி யடியேன் உள நிற் கருதிப் பணிதல்
சதிரந் தமிர் துத்துவம் விரும்பாத வஞ்சார்த்து மறை
முதிர்ந் தமிழ் உரை தேர் மணவாள முனித் தெய்வமே
வெதிரந் தமியை வுறுந் தன்னுள் வாழ் வெந்தழல் சுடவே –103-

கதிரம் -கருங்காலி
மிர்த உத்துவம் விரும்பு ஆதவம் எனப்பிரித்து நாசத்தைச் செய்வதும்
ஊர்த்துவம் முகம் நோக்கிச் செல்வதுமான நெருப்பு என உரைக்க
முதிர்ந் தமிழ்–முதிர் அம் தமிழ் -முதிர்ந்த அழகிய தமிழ்
வெதிர் அந்தம் இயை வுறும் -மூங்கில் முடிவினைப் பொருந்துதல் உறும்
மூங்கில் தன்னுள் தோன்றும் நெருப்பினால் அழிதல் போலே என் மனமாகிய கருங்காலி
நின்னைப் பணிதலாகிய நெருப்பினால் அழியும் என்கிறார் என்க
மிர்துத்துவம் -என்று கொள்ளலுமாம் –

——————

நாப்பற்ற கிற்கிலை நின் புகழோது நயம் வினையி
னாப்பற்ற நோக்கிக் கெடுப்பான் நினைந்து அடர்கின்றன நோய்
மூப்பற்ற திண் புகழோய் மணவாள முனித் தெய்வமே
காப்பாற்ற விர்ககும் கதிர் போலும் நின் பொற் கழல் எனக்கே –104-

நின் புகழ் ஓதும் நயத்தினை நா பற்ற கிற்கிலை
வினையின் ஆப்பினை நோய் அற்றம் நீக்கிக் கெடுப்பான் நினைத்து அடர்கின்றன என்க
ஆப்பு -ஆக்கை -சரீரம்
அற்றம்-சமயம்
கெடுப்பான் -கெடுக்க
அல் தவிர்க்கும் கதிர் போலும் நின் பொற் கழல் எனக்குக் காப்பு என்க
அல் -இருள் –

—————

பாத்துக்கு அலங்கரிக்கும் பூந்துகில் கற்பரை புகழ்ந்து
நாத் துக்கம் உற்றது சொல்ல ஒண்ணாது நரைத்து உடல் வீண்
மூத்துக் கழிந்தது அருள் மணவாள முனித் தெய்வமே
சேத்துக் கமலம் புரை நின் பொற் தாள் துதி செய்திடவே –105-

பாத்து -சோறு
சேத்து -சிவந்து
பொற் தாள் துதி செய்திட அருள் என்க –

——————-

மென் பண் இசைக்கும் சடகோபர் சொல் தமிழ் மெய்ப்பொருள் ஓர்ந்
தன் பணி நற்றுளவோர்க்கே செய்து உய்கின்ற அந்நெறி நீ
முன் பணி வைத்ததன்றோ மணவாள முனித் தெய்வமே
வன் பணி கட் கர சின் மூர்த்தியே நல் வைணவர்க்கே –106-

நல்ல திருத்துழாய் மாலையை அணிகின்ற திருமாலுக்கே அன்பு செய்து உய்கின்ற
அந்த ஸ்ரீ வைஷ்ணவ நெறி நீ முன் பண்ணி வைத்தது என்க
பணி -பாம்பு –

——————

செயல் வரனே வலன்றித் தவிர் மாதரில் சீர்த்து உடலம் நயந்து
து யல் வர நாளும் உன் தொண்டர்கள் ஏவல் செய் சூழ்ச்சி யுள
முயல் வரம் ஈந்து அருள்வாய் மணவாள முனித் தெய்வமே
பெயல் வர ஒண் பயிர்க்கு ஒத்து எம்மை ஆளும் பெரும் தகையே –107-

வரன் -நாயகன்
பெயல் -மழை
பயிர்க்குப் பெயல் வர வினை ஒத்து எம்மை ஆளும் பெரும் தகையே -என்க —

———-

திரு மணவா வுற்றணிவான் இப்பாரைத் திருத்த எண்ணி
வரு மணவாள முனி வாழி வாழி சொல் வாணன் என்னும்
பெரு மண வாய்மை பெற்ற ஒண் தமிழ் என் நெஞ்சுள் பெய்து அருள் மெய்க்
குரு மண வாழ் திருவேங்கட நாத குரு என்றுமே –108-

திருமண் –திருமண் காப்பு
அவா வுற்று -விருப்பமுற்று
திருவேங்கட நாத குரு என்றும் வாழி என்க –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சேனாபதி முனிவர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–99-108–

December 9, 2021

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –

விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் விண்ணனூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .

————-

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –

தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது ஸூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு எம்பெருமானார்
தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –

நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —என்கிறார்
இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று-

அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை
இங்கு அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது

———–

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் -பாவனர் -என்னும்
பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று –நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பலகால் எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார்

அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும்-

————

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –

ஞானம் கொடுக்கும் ஆசார்யன் நிரந்தர உறவு . ஆத்ம ஹிதமளிக்கும் ஆசார்யன் தந்தை போன்றவர்
இந்த உறவைக் குறிப்பிட்டு அமுதனார் எம் அய்யன் என்று அழைத்துப் பெருமைப் படுகிறார்.
கண் கருதிடும் காண-கண் காண எண்ணாமல், கண் கருதிடும் காண-
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4-

———

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்
தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக்கீர்திகள் -எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம்-அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள்
பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது அமுதனார் கருத்து .

அடியாருக்கு ஆபத்து வரும்கால் ஓடி வந்து காப்பதும், உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நிற்பதும்,
அடியாருக்கு தீங்கிழைத்தால் சொல்லொணா சினம் கொள்வதும்… இப்படி வளர்ந்த வெம் கோபம் –
கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .-மடங்கலானதும் ஒரு கீர்த்தி
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறைவுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன

—————-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ –
என்று எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார்
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்

தனக்கு புருஷார்த்தம் எம்பெருமானாரின் திருமேனி அழகே என்று அறிவிக்கிறார் அமுதனார்.
இராமானுசரின் மெய்யில் பிறங்கிய சீரை தான் கணண்ணை விட விரும்புவர் என்று தெரிவிக்கிறார் அமுதனார்
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து

———-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்-
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் –
எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று

————-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் அமுதனாருடைய திரு உள்ளத்தை
மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி – அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் என்பது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –என்றபடி
வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து
இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை – மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –

கையில் கணி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் என்று 104m பாசுரத்தில் ,
கண்ணன் கையில் கனிஎ ன்ன கிடைத்தாலும் வேண்டாம்-இராமனுசர் மெய்யில் பிறங்கிய சீரே வேண்டும் என்று உறுதி பூண்டார் அமுதனார்.
செழுந்திரைப் பாற்கடல் என்னும் அடுத்த பாசுரத்தில் இராமானுசர் அடியார் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம் இடம் என்றார்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு
எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது

ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை – இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்-அவன் உகந்த ஈச்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –

இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன

———–

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து

புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –

ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –

அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .

————

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –
ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார்

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .

இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக
வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–89-98–

December 9, 2021

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் .

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் -இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே

பெரி யாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும்
என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1- – என்று அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது –

———–

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல்
மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார் .

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய்
அவ் வனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து -எனை ஆள –என்கிறார்

நினைத்தலும் புனைதலும் எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய
வேண்டியதாகவும் அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக
அவரே நினைக்க தக்கவர் ஆகிறார்

புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது .
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின்
அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .
இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன

——–

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார்
கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன
நற் பொருளாக மாற்றப் பட்டது –
நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து –
அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார்
வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10-

மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் –

அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

—————

தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் –
பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் –
நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு -மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது
என்று அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -பெரிய திருவந்தாதி – 56-
என் கண்ணுள்ளும் -உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-
தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -திருவாய் மொழி -1 9-5 – – என்னும் நம் ஆழ்வார் அனுபவம்
அமுதனாருக்கு-எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது –
திருமாலே கட்டுரையே -திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து .

—————

அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் -அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .
உருவி -என்றமையால் -அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது -அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது –
மறைத்துக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது –
அருள் என்னும் ஒள் வாள் -என்க .

நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .
திரு மங்கை மன்னன் பெரிய திரு மொழியில் – 6-2 – 4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9 10- –
ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .

அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .
அமுதனார்க்கோ அங்கன் அன்றி எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது –
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

————–

எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–
நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

ஆச்சர்யணைக்கு கைங்கர்யம் பண்ணும் ருசி விளைவிப்பது செலவும் தகவும் தரும் என்னும் பதம்
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சி என்று ஆழ்வார் தாமும் எம்பெருமனிடமே கேட்டது போல் ,
இங்கு எம்பெருமானார் தாமே அளிப்பதாகக் இந்த பாசுரம்

ஸ்ரீ மான் ஆகிய எம்பெருமானார் நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
பகவானைப் பற்றிய நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
நம் ஆழ்வாரைப் பற்றிய மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள்
மீண்டும் தலை தூக்க வழி இல்லை .ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் அமுதனாரும்-

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும்
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –அவருடைய கல்யாண குணங்களையே
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று -அவைகள் வலுவிலே என் மடியில்
கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

—————-

இவர் இவ் உலகத்தவர் அல்லர் -சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய ஸூரிகளில் ஒருவர் –
வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் என்று
தீர்மானித்து அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –-இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
ஸூர்யனுக்கும் கிழக்குத் திசையில் உதிக்கும் போது அத்திசைக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லையோ –
அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லை என்றது ஆயிற்று
மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் –-என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுமே
கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று-
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர் களை எல்லாம் உய்வித்து அருளுவதே –

————

நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார்
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து-

————

அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன
ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
மொழியைக் கடக்கும் என்று ஓரிரு இடங்களில் ஆங்கங்கே கவி பட முடிந்தது அவ்வளவே
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார்-

———-

எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது –
தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

December 9, 2021

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

December 9, 2021

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–59-68–

December 9, 2021

இக் கலி காலத்தில்–எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே –
என்று எவரும் நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் என்னும் குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்
துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது-

உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான்
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை –

——–

ஸ்வாமியின் ஞான வைபவத்தை அறிவித்த பின்பு –பக்தி வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்
உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்-

எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார்
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –

மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-
வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான்
பொருந்தும் பதி -எனவே
பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க-

நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது-

பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது –

————-

ஸ்வாமியுடைய குண வைபவம் இருக்குபடியை அருளிச் செய்கிறார் –

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –
அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார்

நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்-புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று-

————

கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று –
அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம்
பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம்
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – –
இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் –
அடிகளில் விழுந்து கெஞ்சிப் பல் இளித்தாலும் அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி–

———–

அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று
விளக்க பட்டு உள்ளமையும் கவனிக்க தக்கது –

ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க
படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –

————

புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து இராமானுச முனி யாகிய யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –

பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே
மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை

இராமானுச முனி யாகிற வேழம் -முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
முனிவர் .. வேழம் என்று இரு பண்புகளும் கொண்ட இராமானுசன் என்றபடி இரு பெயரேட்டுப் பண்புத் தொகை.
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க –

இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ்
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து –

அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26-
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார்
மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து –
திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து-அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-
வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார்

———-

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த
நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –

தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது என்றபடி .
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5-
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது-
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .

———-

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது -கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான்
அந்தோ அருளானான மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன் பக்தர்களை .
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்-
எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார்-

எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று

———–

எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே நம் இந்திரியங்களைக் கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து
இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –திருவாய் மொழி –1 4-9 –
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர்
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க

———-

இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய
குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

தக்க ஐவர் தமக்காய்-
அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – –
என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார்-

மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை-

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–49-58–

December 9, 2021

எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார்
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு கூறப்பட்டது .-

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

பூம் கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல்
திருவரங்கத்தில் தாமரை மலர்கள் தேன் சொரியும்–
வயல்கள் தண்ணீரினால் அல்ல—இந்த தாமரை மலர்கள் தேனினால் செழிப்பாகும் .
அது போல், இராமானுசரும் பெரிய பெருமாள் திருவடியை தனக்குத் தாரகமாகக் கொண்டு தரிக்கிறார்.

கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக் கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –

உதித்து ஆனது செம்மை அற நெறி –
ஸூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-

இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-

————

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார்

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன-

திருமங்கை ஆழ்வாரும் தானே , நின்ற மாமருது இற்றிற்று-என்றும்
வானவர் கை தொழும் இணைத் தமரையடி என்றும் கலியன் கண்ணனின் திருவடியால் இருவர வீழ்ந்தது அருளிச் செய்தார்.
எம்பெருமானாரின் இணையடியோ பலரை அஞ்சும்படி பண்ணியது .

பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-
எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

————

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார் அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – – ஈடு
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது –
நம் ஆழ்வாரும் -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –

———–

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளிச் செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –புன்மையினேன் -என்கிறார்.

புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-
என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –

ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-மாயப் பற்று அறுத்து –தீர்ந்து
தன் பால் மனம் வைக்கத் திருத்தி-தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்து வைத்தார் .

————-

சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் –

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் –
இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது
தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும்
நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்

பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே –
அவ் வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின் பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின
பரனது எனும் நற் பொருள்-பிரதான பிரதி தந்த்ராரத்தம்

—————

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது

————–

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்-

தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார் -அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி செய்யவே
வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் –

பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று –
நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே எல்லாருக்கும்
அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் –

அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் –

———–

எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் –

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க

வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு
உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார்

தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்

————-

இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் –

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் –
அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்-

சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் –

பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது-

————

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார்
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –

ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று
சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகாசித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார்

நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது
ஜீவான்மக்களுள் பேதமும் –பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்-உணர்த்தப் படுகின்றன
அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்

சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-என்பது உணரத் தக்கது .

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பிரனோடு ஒன்று-உடலை ; மெய் என்கிறார் அமுதனார்.
உலகம் மாயை என்று இதை மெய் என்று சொல்லிட்டு இந்த உடலின் மாயையை உணர்த்துகிறார்
‘அஸ்மாத் சரீராத் சமுத்தாய ‘ இந்த் உடலினின்று விடுபட்டதாக கொள்ளாமல் ,
இந்த உடல் மாயை என்று உணருவதே இவர்கள் புருஷார்த்தம் சரி,
உடல் மாயை என்ற உன்னத நிலையை அடைந்த பின் இந்த ஆத்மா தன்னை பிரமனோடு ஒன்றாக உணர்கிறது
ப்ர்ஹமவித் பிரஹ்மைவ பவதி -ப்ர்ஹமத்தை உணர்பவன் ப்ர்ஹமம் ஆகிறான் .

அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .