Archive for April, 2021

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-4–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 28, 2021

வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்-2-4-1-

பதவுரை

வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.

விளக்க உரை

கண்ணபிரான் * தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம்
அவ் வெண்ணெய் பட்டு மொச்சை நாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன் மேல் புழுதியும் படியும,
இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவு தின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம்,
இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராட வழைக்கின்றனளென்க,
விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க,
‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.
புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர்,
சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.

—————–

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்–2-4-2-

பதவுரை

நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பேன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ச்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆடவேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –

விளக்க உரை

கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும்,
ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும்,
அக் கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால்
அவை காண முடியாதபடி ஓடிப்போய் விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே?
என்பது முதலிரண்டடிகளின் கருத்து.
‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும்,
இது ஒருவகை எதிர்மறை இலக்கணை,
ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம்.
(மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட
ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.

—————-

பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சன மாட நீ வாராய்–2-4-3-

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –

விளக்க உரை

‘உனக்கு முலை கொடுத்த பேய்ச்சி பட்ட பாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபட வேண்டி வரப் போகிறதே
என்று அஞ்சி ஓட வேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல்
உனக்கு நான் முலை தந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள்.
நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.
கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித் தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.

———————-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்–2-4-4-

பதவுரை

கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –

விளக்க உரை

உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள்.
உனது அழகு கெடாதபடி நீ நீராட வேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.

————-

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய்–2-4-5-

பதவுரை

நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –

விளக்க உரை

‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில்
வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி.
“ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி.
புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

—————

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடலோத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்–2-4-6-

பதவுரை

எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டிவிட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

விளக்க உரை

அகத்திலுள்ளார் எல்லாரும் அந்ய பரரம்படியாக முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன
எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி –
தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி,
ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி.
கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை
மாறி விழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.

—————

கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம் பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீ வாராய்–2-4-7-

பதவுரை

எம்பிரானே-!

கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-

விளக்க உரை

(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி
இவன் மேல் பழி தூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன் மேல்
பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.

———————

கன்றினை வாலோலை கட்டிக் கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந் தோடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன் திறத் தேனல்லன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள்
நின்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்–2-4-8-

பதவுரை

கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை-(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோதான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய்

விளக்க உரை

கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,
’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம்,
[நன் இத்யாதி,] ‘அத்தைச் செய்தான் இத்தைச் செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது,
உன்னுடைய தன்மையை நினைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.

———————

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சன மாட நீ வாராய்–2-4-9-

பதவுரை

பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –

விளக்க உரை

நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப்
புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும்
‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும்,
நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பது போல
நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். …

————–

கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே–2-4-10-

பதவுரை

கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார்மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர்மலி–அழகு நறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.

விளக்க உரை

‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.

——-

அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 28, 2021

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1-

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

விளக்க உரை

கண்ணபிரானே! உன்னை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரான் உன் தகப்பனாரும் ‘பசுக்களின் பின்னே போய் வருகிறேன்;
வருகிறவரையில் நீ பிள்ளையைக் காப்பாற்றிக் கொண்டிரு’ என்று சொல்லிச் சென்று இன்னும் வரவில்லை.
கம்ஸனோ உன்மேல் கறுக்கொண்டிருப்பதனால் எந்த ஸமயத்தில் யாரை அனுப்புவனோ என்ன செய்வனோ ஒன்றுந் தெரியவில்லை;
உபாயமறிந்து காப்பாற்றவல்ல வேறொருவரும் இங்கில்லை; நீயோ பயமறியாமல் எங்குந் திரிகின்றாய்;
பல பிள்ளைகளுடன் நான் திரிந்து கொண்டிருந்தால் என்னை யாரறிவாரென்று நீ நினைக்கவேண்டா;

(கடல் வண்ணா!) உன் வடிவழகே உன்னைக்கோட் சொல்லிக்கொடுக்குமே.
மேலும் பிள்ளைகளோடே விளையாடுமிடங்களில் திரிகின்றாய்; இப்படியெல்லாம் ஓடிப்போகாமல் கிட்டவா;
உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாடிப் பெண்டுகளெல்லாரும் வந்திருக்கிறார்கள்;
நான் அவர்கட்குக் கொடுக்க வெற்றிலை பாக்கு எல்லாம் ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் – என்று சொல்லி யழைக்கிறாள் யசோதை –
‘போய்’ என்பதை மிகுதிக்கு வாசகமாகக் கொண்டு ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்திலே மிகவும் கோபமுடையவனாய்
“கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்” என்கிறபடியே நீ பிறந்தவன்று தொடங்கித் தமது வேலாயுதத்தைக் கூர்மையாகத்
தீட்டிக்கொண்டு நீ படுக்குந் தொட்டிற்கீழே ஓரெறும்பு ஊர்ந்தாலும் சிங்கத்தின்மேற் சீறுமாபோலே சீறி
உன்னைக் காப்பாற்றுவதில் மிகவும் ச்ரத்தையையுடையனான என்றும் பொருளாம்.
திரிதி – முன்னிலை யொருமை வினைமுற்று. அடை – இலை = வெற்றிலை; காய் – பாக்கு.

—————-

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2-

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் – இப்பாட்டில்.
காது குத்தி நூல் திரியை இட்டுக் காது பெருக்கிய பின்பு காதணிகளையிடுதல் இயல்பு.
அழகும் = உம் – இசை நிறை.
“கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு – கர்ண பூஷணம்.

—————–

வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3-

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.

விளக்க உரை

நீ இப்போது திரியையிட்டுக் கொண்டால் பின்பு பொற் கடிப்பு மாத்திரமல்ல மிகச் சிறந்த மகா குண்டலங்களையும் அணியலாம்;
காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்;
நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள்.
வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியை யிடுவேன்’ என்றாள்.

—————–

வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4-

பதவுரை

இ கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

விளக்க உரை

கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வாராமையாலே மற்றை யிடைப்பிள்ளைகள் காது பெருக்கிக் காதணிகளை
யணிந்திருப்பதைக் காட்டி அப் பிள்ளைகளைக் கொண்டாடிச் சொல்லி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக்
காது பெருக்கிக் கொள்ள வேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை யணிந்தால் நானுனக்கு
நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்;
அப்பா! உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சியழைக்கிறாள்.
வணம் – ‘வண்ணம்’ என்பதின் தொகுத்தல். வயிரக்கடிப்பு – வஜ்ரகுண்டலம்.
கோபாலர் + பிள்ளைகள் = கோபாலபிள்ளைகள்; “சில விகாரமா முயர்திணை”.
சுணம் – “சுணங்கு” என்பதன் விகாரமென்பர்; முலைமேல் தோன்றும் நிறவேறுபாடு; பசலைநிறம்.
சோத்தம் – ஸ்தோத்ரம் என்ற வடசொற் சிதைவு என்னலாம்;
இதற்கு – “அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச்
சொல்லுவதற்கு சப்தவிசேஷம்” என்பது பெரிய ஜீயருரை.

———————

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5-

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

விளக்க உரை

கண்ணபிரான் ‘நேற்று நீ என்னை அழைக்கையில் நான் வர, அப்போது வந்ததைக் குணமாகக் கொள்ளாமல்
என்னை அடித்தவளன்றோ நீ’ என்ன; யசோதை நீ பெண்களுடன் தனியிடத்திலே குரவையாடி வந்தால்
அதை நான் எப்படி குணமாகக் கொள்ளக்கூடு மென்கிறாளென்க.
பேர்த்தும் – புநி! புநி!; இது சிறிது இது சிறிது என்றுசொல்லி யசோதை கொடுக்கும் அப்பங்களைக் கண்ணன் தள்ளிவிடவும்
பின்னும் அவன் விரும்பும்படி பெரிய பெரிய அப்பங்களைக் கொடுப்பேனென்று கருத்து.
குரவைக் கூத்தாவது – ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி நின்று கைகோத்தாடல்;
இதைத் தான் ராஸக்ரீடை என்பது என்பர் – ஸம்ப்ரதாயிக ஆர்யவ்ருத்தர்.

சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க்காப்பியத்தில் ஆய்ச்சியர் குரவையும் என்றவிடத்து அடியார்க்கு நல்லாருரையில்,
“குரவை யென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலு மெய்தவுரைக்கு மியல்பிற்றென்ப எனவும் துரவை யென்ப”
தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்தந்நிலை கொட்பநன் றாடலாகும் எனவுஞ் சொன்னாராகலின்
இதுவும் ஆய்ச்சியரிடத்து நிகழ்தலான் ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற் பெற்ற பெயர் என்று உரைத்தவாறு காண்க.
“குரவையென்பது கைகோத்தாடல்” என்று ஸாமாந்யமாகச் சொன்னான் ஒரு தமிழன்.

————–

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6-

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விளக்க உரை

காதில் கடிப்பிட வேணுமென்று யசோதை அழைத்துக் கொண்டிருக்கவும் கண்ணன் வராதிருந்தது மல்லாமல்
மண்ணையும் தின்றானாக அதற்காக அவள் கோபங்கொண்டு அவனை யடிக்க அப்போது அவன் தனது வாயைத் திறந்து கொண்டு
ஆகாயமுழுதும் தொனி பரவும்படி அழ அது கண்டு யசோதை ‘இவன் எவ்வளவு மண் தின்றிருப்பன்’ என்பதை
வாயிலுள்ள மண் சுவட்டைக் கொண்டு தெரிந்து கொள்வோமென்று அவன் வாயை விரும்பிப் பார்க்கையில்
அவன் வாயினுள்ளே உலகங்களை யெல்லாம் முன் போலக் கண்டு
‘இவனை நமது மகனென்றெண்ணி அடித்தோமே! இவன் ஸர்வேச்வரனன்றோ’ என்று அஞ்சி யிருக்க கண்ணன் தன்னை யசோதை
இப்படி வேறாக எண்ணினதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளை யென்றே கொண்டு தழுவும்படி ஸமீபித்து நிற்க
அப்போது அவள் காதில் கடிப்பை யிடும்படி முயல, கண்ணன் அது கண்டு அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாயிருக்கிறது நோகும்;
ஆதலால் அது எனக்கு வேண்டா என்று மறுக்க யசோதை ‘உன் காதில் புண் ஒன்றுமில்லை ஆறிவிட்டது;
இந்தக் குண்டலத்தை இடும் போது உன் காது சற்று மறியும்; அதை மாத்திரம் பொறுத்துக் கொள்ள வேணும்’ என்று சொல்ல
கண்ணன் அதற்கு இசைந்து நிற்க யசோதை அவனைப் பலபடியாகக் கொண்டாடக் கடிப்பிடும் போது உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக
முலை யுண்ண வேணுமென்று விரும்புகின்றாள்.
நோக்கி – நோக்க : எச்சத்திரிபு.
அஞ்சி – ‘இவனை நம் மகனென்றெண்ணி யடித்தோமே; இவன்றானிப் போது நாராயணனாயிரா நின்றானே’ என்று அஞ்சினளென்க.
‘மது’ என்ற அஸுரனைக் கொன்றவன். “என்றிருந்தேன்” என்பது மொருபாடம்.
ஆகாசம் சப்த குணகமாதலால் “விண்ணெல்லாம் கேட்க” என்றது.

————————

முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7-

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

விளக்க உரை

கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலை யுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலை யுண்ணத் தொடங்க
அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து
‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச் சென்று
காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்து விட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்து கொண்டு
காதில் கடிப்பை இடப் போகையில் அவன் இசையாமலிருக்க யசோதை யானவள் ‘அப்பா! உன் மேல் ஒரு குற்றமுமில்லை;
தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது
என்னுடைய குற்றமே காண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.

—————

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8-

பதவுரை
(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே” என்று
நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது – நீ சொன்னதை நான் கேட்கவில்லை யென்று என் மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ?
என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற
யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண் தின்றதாகப் பழியை
யேறிட்டு என்மேல் அன்புடையாள் போல என்னைப் பிடித்துக் கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து
அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லி யடித்து அவ்வளவோடு நில்லாமல்
‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன
யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போது போகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே!
உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன
கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லை யென்று உறுதியாக
ஒரு வார்த்தை சொல்’ என்ன
யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள்.
சொல்லவும் வேண்டா – நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய் கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு.

—————-

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9-

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

விளக்க உரை

கண்ணன் யசோதையை நோக்கி ‘உன் பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவளன்றோ?’ என்ன;
யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்ததுண்டோ?’ என்ன
கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினானென்று யாரோ சொல்ல அதை உண்மையென்று நம்பி என் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு போய் என்னை எல்லாரும் பார்த்துப் பரிஹஸிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்து நிற்க
யசோதை ‘நீ இப்படியெல்லாம் நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தால் உன் காதுகள் தூர்ந்துவிடுமே;
தவிரவும் உன் பக்கல் அன்பினால் உன்னை விட்டுப் போக மாட்டாமல் நிற்கிற இந்தப் பெண்கள்
‘சொணைக் காது கூழைக் காது’ என்று சொல்லி உன்னை ஏகாதபடி உன் காதைப் பெருக்க இத்திரியை யணிந்துகொள்ள வேணும்’
என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள்.
சொல்லுவார் என்றது – கொள்ளத்தகாத பேச்சையுடையவர் என்ற கருத்தைக் காட்டும்.
தொடுப்பு – (ஒருவரையும் கேளாமல்) தொடுதல் ; எனவே களவாம்: ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்.
கிடாய் – முன்னிலையசைச் சொல்.

———–

காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10-

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

விளக்க உரை

நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப் போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம்.
தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும் போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும்,
அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று
அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க.
காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.

—————–

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11-

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

விளக்க உரை

‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண் கலவியைச் சொல்லுகிறதென்க.
கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய
உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே
எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும்.
பண்ணைக் கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி.

—————-

வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12-

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

————-

வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13-

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இடவிரும்பி
திருமாலை–ச்ரிய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச்சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்.

விளக்க உரை

வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி,
அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும்
அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது.

சொற்றொடர் நிலைச் செய்யுள் பொருட் தொடர் நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை.
“செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டி யலங்காரத்தும்.
அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம்,
திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று,

——————-

அடி வரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-2–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 27, 2021

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு வுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே–2-2-1-

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலையுண்பாய்.

விளக்க உரை

(அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும்
சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான
திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க.
அம்ம முண்ண என்றது – கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும்.
சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத் தரும்.
இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் – ஆதலால் என்பதன் சிதைவு;
இனி ஆல் ஓ – இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம்.
வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க.
வனப்புமுலை என்கிறவிது – வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்;
வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற
நிகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.

——

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலை யுணாயே–2-2-2-

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

விளக்க உரை

இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம்.
கதம் – கோபம். குழந்தைகள் மூக்குறிஞ்சி முலை யுண்ணுதல் – இயல்பு.

———————

தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நன் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உந் திறத்தரல்லர் உன்னை நானொன் றுரப்ப மாட்டேன்
நந்தகோப னணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே–2-2-3-

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவையெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

விளக்க உரை

கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட போனால் எல்லாப் பிள்ளைகளையும் போல விராமல்
அப்பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவனாதலால் அழுதுகொண்ட வீட்டுக்குச் செல்லும் அப்பிள்ளைகளைக் கண்ட
தாய்மார்கள் மனம் பொறாமல் நொந்து அப்பிள்ளைகளைக் கண்ணுங் கண்ணீரும் அழைத்துக் கொண்டுவந்து காட்டி
இவன்மேலே பழி சொல்லிப் பிணங்கினால் இவன் அதனால் சற்றும் இளைப்புக் கொள்ளாமல்
அதையே த்ருப்தியாகக் கொண்டு ஸந்தோஷிப்பனென்பதைக் காட்டுகிறார் – முதலிரண்டடியால்
(வாசுதேவா) பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ! யென்கிறார். உன் + தந்தையார் = உந்தையார்; மரூஉ மொழி.

—————-

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்தள வன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே–2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப்படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

விளக்க உரை

(அஞ்சினேன் இத்யாதி) “பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையினருமை” என்றபடி உன்னைப் பெற்ற தாயான
எனக்குத் தான் உன் அருமை தெரியுமாதலால் மற்றை இடையர் திரளின் அச்சமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் நான்
‘உனக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ!’ என்று கொண்டுள்ள அச்சத்திற்கு ஒப்பாகாது என்றபடி.
காண் – முன்னிலையசை; தேற்றப் பொருள் தரும். ஆல் – தேற்றம்; ஓ – இரக்கம். பஞ்சி – பஞ்சு; கடைப்போலி.

————-

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக் கணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை யுணாயே–2-2-5-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனாயிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப்படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப்பாடிக்கு
அணி விளக்கே–மங்களதீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

விளக்க உரை

தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’
என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு
அணுக வொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டு பிடித்துக் கொன்று விட வேணும்’ என்று
உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக் கொண்டு
நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்! அவன் அவர்களைக் கொண்டு நீ துணை யற்றுத் திரியும் போது பார்த்து
உனக்குத் தெரியாமலே தப்ப முடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது;
என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள்.
(அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத் திருவாய்ப்பாடி யடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள்.
சோர்வு – தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும். கருமம் -அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.

—————

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6-

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

விளக்க உரை

(என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோக விலக்ஷ்ணனாயுள்ள இப் பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே!
அவள் தான் பூர்வ ஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ! என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று
யசோதை கண்ணனை தன்வசப் படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி.
ஹ்ருஷீகேசன் – (ரூப குணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

—————–

பெண்டிர் வாழ்வார் நன்னொப்பாரைப் பெறுது மென்னு மாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நன்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

விளக்க உரை

முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும்
பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க.
அவற்றில் வேண்டினபடி ஆகிறது. இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள்.
பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி. பெறுதும் – தன்மைப் பன்மை வினை முற்று. ஆஸா – வடசொல்.
கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

——————-

இருமலை போலெதிர்ந்த மல்லர் இரு வரங்கம் எரி செய்தாய் உன்
திருமலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குலேறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–2-2-8-

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தியிருந்து
உணாய்–உண்பாயாக.

விளக்க உரை

திருமலிந்து திகழுமார்வு = திரு – பிராட்டி என்றுமாம். தேக்க – தேங்க என்பதன் விகாரம்.
ஒரு முலையை வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு முலையின் காம்பைக் கையால் நெருடிக் கொண்டு பால் மிகுதியினால்
மூச்சுத் தணக்க மாறிமாறி முலை யுண்ணுதல் – குழந்தைகளினியல்பு;
“ஒரு கையாலொரு முலை முகம் நெருடா – வாயிலே முலை யிருக்க” என்ற பெருமாள் திருமொழியுங் காண்க.
இது – தன்மை நவிற்சி (ஸ்வபாவோக்தி).

—————

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கமரர்க் கமுதளித்த அமரர் கோவே முலையுணாயே–2-2-9-

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

விளக்க உரை

புழுதி யளையாமல் முலை யுண்ண வாராய் என்கிறாள். செந்தாமரை போன்ற திரு முகத்திலே வியர்வைத் துளிகள்
அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார். முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

————

ஓட வோடக் கிங்கிணிகள் ஒலிக்கு மோசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன்
ஆடி யாடி யசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி
ஓடி யோடிப் போய் விடாதே உத்தமா நீ முலையுணாயே–2-2-10-

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடைவிடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக்கொண்டே
ஓடிஓடிபோய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

விளக்க உரை

கண்ணபிரான் நிடந்து வரும்போது திருவடிச் சதங்கைகளின் ஓசை தானே பாட்டாயிருக்குமென்க.
(பற்பநாபனென்றிருந்தேன்) “கொப்பூழிலெழு கமலப்பூவழகர்” என்றபடி வேறொரு ஆபரணமும் வேண்டாமல்
திருநாபீ கமலமே ஆபரணமாம்படி யிருப்பானொருவனன்றோ இவன்! இவனுக்கு வேறொரு பாட்டும் கூத்தும் வேணுமோ?
சதங்கையோசையும் நடையழகுமே பாட்டும் ஆட்டமுமாய் அமைந்த ஆச்சரியம் என்னே! என்று வியப்புக் கொண்டிருந்தேன் என்க.

இனி – இவன் அழிந்து கிடந்த வுலகத்தை நாபீகமலத்தில் உண்டாக்கின வனன்றோ ஆகையால் நம்முடைய
ஸத்தையையுந் தருகைக்காக வருகிறானென்றிருந்தேன் என்றும் விசேஷார்த்தம் கூறுவர்.

————

வாரணிந்த கொங்கை யாய்ச்சி மாதவா உண் ணென்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே–2-2-11-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

விளக்க உரை

வாரணிந்த கொங்கை யாய்ச்சி – ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் ­மூடிக் கொண்டு போவது போல
கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க.
மாற்றம் (ஆகிய) பாடல் எனத் தொடரும். குவளை – ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே;
“குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது – வடமொழி நிகண்டு.
வாசம் – ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு. ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது.

——-

அடிவரவு – அரவணை வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணி போய்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-1–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 27, 2021

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-

பதவுரை

மெச்ச–(அனைவரும்) கொண்டாடும்படி
ஊது–ஊதுகின்ற
சங்கம்–பாஞ்சஜந்யத்தை
மிடத்தான்–இடக்கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்–நல்ல வேய்ங்குழலை
ஊதி–ஊதுபவனும்
பொய் சூதில்–க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற–(தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை–பொறுமைசாலிகளான
மன்னர்க்கு–பாண்டவர்கட்கு
ஆய்–(தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து
(துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)
பத்து ஊர்–பத்து ஊரையும்
பெறாது–அடைய முடியாமல்
அன்று–அக் காலத்திலே
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்த–அணி வகுத்துச் செய்து
அ தூதன்–அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்–அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே–அம்மா!
அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவர் துர்யோதநாதிகள் என்ற இருவரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துர்யோதநாதியரிடந் தூதராகச் சென்று
‘பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டாம்; ராஜ்யத்தில் இருவருக்கும் பாகமுண்டு;
ஆதலால் ஸமபாகமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்;
அதற்கு ஸம்மதியில்லாவிடில் தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்;
அதுவும் அநஷ்டமாகில் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஓரூரையாவது கொடுங்கள்’ என்று பலபடி அருளிச் செய்ய
அந்தச் சொல்லுக்குச் சிறிதும் ஸம்மதியாமல் ‘பராகமமிருந்தாலர் போர்செய்து ஜயித்துக் கொள்ளட்டும்;
இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்றிப்படி திக்காரமாக மறுத்துச்சொல்லவே
தான் பாண்டவ பக்ஷபாதியாயிருந்து எதிரிகளைத் தோற்பித்தனனென்க.

மெச்ச – ஊது = மெச்சூது; தொகுத்தல் விகாரம். கண்ணன் பசுநிரை மேய்க்கும்போது திருச்சங்கையும் வேய்ங்குழலையும்
கொண்டிருப்பனாதலால் அவனை ‘மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி’ என்றார்:
“ஆநிரையினம் மீளக்குறித்த சங்கம்”
“கேயத்தீங்குழலூதிற்றும் நிரைமேய்த்ததும்” என்பன காண்க.
ஊதி – ஊதுமவன்; பெயர்சொல்; வினையெச்சமன்று; ஊது – பகுதி இ – கருத்தாப்பொருள் விகுதி.
ஆகவே ‘ஊதிப்பொய்ச்சூதில்’ என இரட்டியாது ‘ஊதிபொய்ச்சூதில்’ என இயல்பாம்.
“கழல் சூடி கைந்நின்ற வேற்கைக்கலரியன்” என்ற விடத்திற்போல துர்யோதநன் தான் புதிதாய் மண்டபங்கட்டி
அதைக் காண்பதற் கென்றொரு வ்யாஜமிட்டுப் பாண்டவர்களைத் தனது ஹஸ்திநாபுரிக்கு வரவழைத்துத் தந்த்ரமாகச்
சகுநியைக் கொண்டு சூதாடுவிக்க அச்சூதில் தர்மபத்ரன் ராஜ்யததையும் தம்பியரையும் மனைவியையும்
தன்னையுந் தோற்றானாதலால் பாண்டவர் பொய்ச்சூதில் தோற்ற மன்னராயினர்.
இவர்கள் தமக்குள் பொறுமையை மாத்திரம் சூதில் தோற்றிலராதலால் பொறையுடை மன்னருமாயினர். –

பூச்சி காட்டுதலையே அப்பூச்சி காட்டுதலென்று வழங்குதலுமுண்டெனக் கொள்ளினுமாம்.
அப்பூச்சி காட்டுகையாவது – கண்ணை இறுத்துவது மயிரால் முகத்தை மறைத்துக்காட்டுவது முதலாகச் செய்ய பயங்கரமான பாலசேஷ்டைகள்.
அம்மனே – அச்சத்தினாற் சொல்லும் சொல்லு

இந்தப் பாசுரத்தினீற்றடியைக் குறித்து ஓர் ஐதிஹ்யம்:-
இப்பாசுரத்தை நம்பெருமாள் ஸந்நிதியில் உடையவர் கோஷ்டியிலே ‘உய்ந்தபிள்ளை’ என்பாரொரு அரையர் அபி நயிக்குமளவில்
‘அத் தூதன்’ என்னும்போது ஸ்ரீகிருஷ்ணனையும் ‘அப்பூச்சி’ என்னும்போது கண் இமையை மடக்கிக் கொண்டு
வருவதையுங் காட்டி அபிநயிக்க உடையவர் பின்னே எழுந்தருளியிருந்த எம்பார்
தம் திருக்கைகளைத் திருத் தோள்களோடு சேர்த்துக் காட்ட அரையரும் தாம்முன் அபிநயித்ததைவிட்டு எம்பார் காட்டியதுபோலவே
எம்பெருமான் திருத்தோள்களில் சங்குசக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அபிநயிக்க
உடையவர் மிகவுமுகந்து ‘கோவிந்தப் பெருமாள்’ (எம்பார்) இருந்தீரோ? என்றாராம்:

இதனால் ஏற்படுவதாவது – தூதனாய்த் தான் ஸௌலப்யத்தை வெளியிட்டு ‘நம்மிலே ஒருவன்’என்று இவ்வுலகத்தவர்
கொள்ளும்படி யிருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் ஈச்வரத்வ சின்னங்களைக் காட்டுகிறானென்பது.
இது ஈற்றடிக்கு உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசம்).

——————-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-2-

பதவுரை

மலை புரை–மலையை ஒத்த
தோள்–தோள்களை யுடைய
மன்னவர்–அரசர்களான
மாரதரும்–மஹா ரதரும்
மற்றும் பலரும்–மற்றும் பலவகை அரசர்களும்
குலைய–அழியவும்
நூற்றுவரும்–(துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு–மரணமடைந்து
அழிய–உருவமழிந்து போகவும்
பார்த்தன்–அர்ஜுனனுடைய
சிலை–(காண்டீவமென்னும்) வில்
வளைய–வளையவும்
திண் தேர் மேல்–(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
முன் நின்ற–(ஸாரதியாய்) முன்புறத்தில் நின்ற
செம் கண்–(வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை–(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

பருத்த வடிவத்திலும் ஒருவராலும் சலிப்பிக்க முடியாதபடி உறுதியாயிருத்தலிலும் தோளுக்கு மலை உவமை யென்க.
தேர்வீரர் – அதிரதர் மஹாரதர் ஸமரதர் அர்த்தாதர் என நால்வகைப்படுவராதலால் ‘மாரதரும் மற்றும்’ என்றார்.
(அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின் மேலிருந்து தமது ரத கஜ துரக பதாதிகளுக் கழிவு வாராமல் காத்துக் கொண்டு
பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் – அதிரதம் என்றும
கீழ்ச் சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் – மஹாரதர் என்றும்
ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்க வல்லவர் – ஸமரதர் என்றும்
அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் – அர்த்தரதர் என்றுஞ் சொல்லப்படுபவர். )
‘மன்னவரும்’ என்ற விடத்திலுள்ள உம்மை ‘பலர்’ என்பதோடு கூட்டப்பட்டது. மாரதர் – வடசொல் திரிபு.
பார்த்தன் – வடசொல்; (குந்தி) என்பவளுடைய மகன்.
அலவலை – அர்த்தத்தின் உயர்த்தியையும் கேட்பவனுடைய தாழ்வையும் பாராமல் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லுமவன்;
வரம்பு கடந்து பேசுபவன். இப்படியெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் செய்தது – த்ரௌபதியின் விரித்த கூந்தலை முடிக்கும் பொருட்டாம்.

——————–

காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்-2-1-3-

பதவுரை

காயும்–(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்–மடுவின் ஜலத்திலே
புக்கு–புகுந்து (கலக்கி)
(அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி–(அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்–அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்–கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க–(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து–குதித்து
ஆடி-கூத்தாடி
(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
வேயின் குழல் ஊதி–மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)
வித்தகன் ஆய் நின்ற–விஸ்மயரீயனாயிருந்த
ஆயன்–கண்ணபிரான்

வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

தீய பணம் = படம். விஷமிருத்தற்கு உரிய இடமாதலாலும் கோபத்தைத் தெரிவித்தலாலும்.

———–

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-4-

பதவுரை

இருட்டில்–இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த–(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்–(அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை–அவிவேகிகளான
வல்–(தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்–இடையர்களின்
(கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை–மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து–போக்கினவனாயும்
வல் கஞ்சன்–கொடிய கம்ஸன்
மாள–மாண்டு போம்படி
புரட்டி–(அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அ நாள்–(நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்–எங்களுடைய
பூ பட்டு–அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட–வாரிக் கொண்டு போன
அரட்டன்–தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

‘பிள்ளை பிறப்பது எப்போது!’ என்று உருவின கத்தி உருவியபடி கம்ஸன் நிற்கையாலே அவனுடைய
கண்ணிற்படாதபடி யிருக்கவேணுமென்று நள்ளிருளிலே தேவகீ புத்ரனாய்த் தோன்றி அப்போதே ஸ்ரீவஸூதேவரை எடுத்துப் போம்படி
கட்டளையிட்டுத் தேவகி தன்னைப் பிரியும் பிரிவால் கதறத் தான் திருவாய்ப்பாடியிற் புகுந்து வளர்ந்தருளின வரலாறு அறிக.
(ஆயர் மருட்டைத் தவிர்ப்பித்து) கம்ஸன் பூதநாதிகள் மூலமாகக் கண்ணனை நலிய நிலைத்திரா நன்றானென்றறிந்த இடையர்கள்
தாங்களே கம்ஸனைக் கொல்வார் போலச் சில மருட்டு வார்த்தைகளைச் சொல்ல
‘நீங்களல்லாரும் வேணுமோ? நானே செய்வேன்’ என்று சொல்லித் தன் பேச்சாலே அவர்கள்
அந்த மருட்டு வார்த்தைகளைச் சொல்லாதபடி தவிர்ப்பித்து என்பது பொருள்.
மருட்டு – மருளை யுடையது; அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினையாலணையும் பெயர்;
‘இருள்’ ‘மருள்’ என்ற பெயர்ச் சொற்களின் மேல் டு என்ற விகுதி ஏறப் பெற்றது;
“துறுடுக்குற்றியலுகரவீற்ற ஒன்றன் படர்க்கை டுக்குறிப்பினாகும்” என்பது – நின்னூல்.
பூ + பட்டு = பூம்பட்டு “பூப்பெயர் முன்னின மன்மையுந்தோன்றும்” என்ற சிறப்பு விதி அறிக.

—————

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-5-

பதவுரை

சேபூண்ட–எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு–சகடம்
(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
சிதறி–உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு–நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி–களவு செய்து
ஆப்பூண்டு–(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி–நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்–(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க –துடிக்க துடிக்க
சோப்பூண்டு–அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு
(அதனோடு நல்லாமல்)
அன்று–அக்காலத்தில்
ஆப்பூண்டாள்–(எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்

விளக்க உரை

சாடு – ‘சகடம்’ என்ற வடசொல்லின் சிதைவு. ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு –
‘என் மகன் மேல் வீண் பழி விளைத்திடேல்மின்; களவு கண்டதுண்டாகில் கையும் பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’ என்று
சொல்லிய தாயான தன்முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கொண்டியோடே கண்டுபிடித்துக் கொணர அதுகண்ட யசோதை
‘நான் பிள்ளை பெற்று வளர்க்கிறது மிகவு மழகியதாயிருந்தது! ‘ என்று சொல்லித் தன்னைத் தானே மோதிக்கொண்டு
அவர்கள் முன்றே தன் வயிற்றெரிச்சலெல்லாந் தோன்றும் படி அடிக்க அடியுண்டு என்றபடி.
ஆப்பூண்டு சோப்பூண்டு ஆப்பூண்டான் – ‘ஆப்பூண்டு’ ‘சோப்புண்டு’ ஆப்பூண்டான் என்பவற்றின் நீட்டல் விகாரம்.

——————-

செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-6-

பதவுரை

செப்பு–ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை–இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய
தேவகி நங்கைக்கு–தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி–நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்–ஆய்ப்பாடியிலுள்ளவர்களா கிய நாங்கள்
வைத்த–சேமித்து வைத்த
துப்பமும்–நெய்யையும்
பாலும்–பாலையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கிய–உட்கொண்ட
அப்பன்–ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

செப்பு – முலைகளுக்கு நிறத்திலும் வடிவிலும் உவமை.
சொப்படத் தோன்றி – ஸர்வேச்வரத்வசின்னங்களோடு தோன்றி
தொறு – பசு பாடி – இடம்; எனவே பசுக்கூட்டங்கள் நிரம்பிய ‘கோகுலம்’ என்று ப்ரஸித்தி பெற்ற திருவாய்ப்பாடியாயிற்று.
சில ஆய்ச்சிமார் எங்களுடைய இறுகின நெய்யையும் காய்ந்த பாலையும் தோய்ந்த தயிரையும்
கண்ணன் உண்ணப் பெற்றோமே! என்றீடுபட்டு ‘அப்பன்’ என்றனரென்க.

———————–

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-7-

பதவுரை

(இந்தப் பிள்ளையை யசோதை)
தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
(அல்லது)
தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்–(கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை–யசோதையினுடைய
இளஞ்சிங்கம்–சிங்கக்குட்டி போன்றவனும்
கொத்து ஆர் கருங்குழல்–பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி–இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
அத்தன்–ஸ்வாமியான இவன்

வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

யசோதைப் பிராட்டி ப்ரஸவிக்குங் காலத்திலே அருகிலிருந்தவர்கள்
‘இவன் தத்தபுத்ரஸ்வீகாரம் செய்யவில்லை; ஆனால் இவள் பிள்ளை பெறுகிற போது இவளைப் பேணிப் பார்த்திருந்த
நாங்கள் அப்போதாக அயர்ந்து தூங்கிவிட்டபடியால் பிள்ளை பெற்றதையுங் கண்டிலோம்; என்று –
யசோதையும் அப்போது மோஹித்துக் கிடந்து உணர்ந்த பின்னறே இவனைக் கண்டது-
உணர்ந்தபின்பு இவள் ‘நான் பெற்றேன்’ என்று சொல்லக் கேட்டோம்’ என்று சொல்லும்படியாக ஸ்ரீக்ருஷ்ணன் தோன்றினனாதலால்
தத்துக்கொண்டாள் கொலோ, தானே பெற்றாள் கொலோ என்றனர்;
அன்றியும்
இக்கண்ணபிரானுடைய லோக விலக்ஷணமாய் அதிமாநுஷமான குண சேஷ்டிதங்களைக் கண்டவர் இப்பிரானை இவள் பிள்ளை
யென்று சொல்ல முடியாதபடியும் யசோதை தானும் “இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி! உன்னை என் மகனே யென்பர் நின்றார்”
என்று சொல்லும் படியும் ஸ்ரீக்ருஷ்ணனிருப்பதும் இவ்வாறு கூறுதற்குக் காரணமாகும்.
பிறர்க்கு அடங்காமையும் செருக்கும் பற்றி கண்ணனுக்குச் சிங்கக்குட்டி உவமை ;
தாய்க்கு அடங்காதவன் ஊர்க்கு அடங்கானாதலால் ‘அசோதையிளஞ்சிங்கம் கோபாலகோளரி’ என்றார்.
தத்து – வடசொற்சிதைவு. கொல் – இடைச்சொல்; ஐயப்பொருளது.
கோபாலர் + கோளரி = இடையுரி வடசொலினியம்பிய கொளாதவும்-
யாவர்க்கு நெறியே என்ற புறனடைச் சூத்திரமறிக. (‘சில விகாரமாமுயர்திணை’ என்பதும் விதியாம்.)
அரி- மிடுக்கு; முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

————–

கொங்கை வன் கூனி சொற் கொண்டு
குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற் கருளிவன் கானடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-8-

பதவுரை

கொங்கை–(முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்–பலிஷ்டமான
கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்–சொல்லை
கொண்டு–அங்கீகரித்து
எங்கும்–எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்–இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்–யானைகளையும்
பரியும்–(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
பரதற்கு–பரதாழ்வானுக்கு
அருளி–கொடுத்துவிடல்
வல் கான் அடை–கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்–அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்

விளக்க உரை

ஒற்றுமை நயத்தால் ராம க்ருஷ்ணரிருவரையும் ஒருவராகவே கொண்டு ஆழ்வார் இங்ஙனருளிச் செய்கின்றனரென்க.
கொங்கை – கூனுக்கு அடைமொழி; வல் – கூனிக்கு அடைமொழி.
பெருமாளுடைய வந: யாத்ரைக்கு மூல காரணம் கூனியானமை பற்றிக் ‘கூனி சொற்கொண்டு’ என்றார்.
குவலயத்துங்கக்கரி – வடசொற்றொடர். இராச்சியம் – வட சொல் திரிபு. (அங்கண்ணன்) கண் – தயையாகவுமாம்;
பட்டாபிஷேகத்துக்காகக் கட்டின காப்போடே காட்டுக்குப் போகச் சொன்ன போதும் முகங்கருகாமல் மலர்ந்து முடி தவிர்ந்து
சடை புனைந்து நாட்டை விட்டுக் காட்டுக்குப்
போன பெருமாளுடைய மஹாகுணத்தை வியந்து அவனது தயையை அழகியதாகக் கொண்டாடுகிறபடி.

—————

பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்-2-1-9-

பதவுரை

பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை–முதலையின்
வாய்–வாயிலே
பட்ட–அகப்பட்ட
களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன–என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
அங்கு–அப்போதே
உதவ–(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து–பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்–(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த–போக்கின
அதகன்–(ஆச்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து – அப்பூச்சி காட்டுகின்றான்-.

விளக்க உரை

பதகம் – ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற)
பாபத்தை யுடையவனென்று பொருளாம்.
உறுதுயர் – ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று.
உறு – மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல். களிறு – யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் – பிடி).
களி – மதக்களிப்பு; அதனையுடையது – களிறு எனக் காரணக் குறி; று – பெயர் விகுதி;
ஒன்றன் பால் விகுதி யெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால்.
அதகன் – ஹதகன்; ஆச்ரித விரோதியை ஹதம் பண்ணுமவன்.

————

வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10-

பதவுரை

வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை–லங்கையானது
மலங்க–பாழாம்படி
சரம் துரந்த–அம்பைச் செலுத்திய
வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–பரக்க கூறிய
சொல் ஆர்ந்த–சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்–அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்
போய்–(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்–நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.

விளக்க உரை

சொல்லார்ந்த பாடலிவை பத்தும் = இத்திருமொழியில் அர்த்தத்தைக் கவனிக்க வேணுமென்கிற கஷ்டமும் வேண்டா;
சொல்லே பரம போக்யம் என்று கருத்து.
இச் செய்யுள் வெண்டளையால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாதலால் “விட்டுசித்தன் விரித்தன” என்று
பாடமானால் தளைக்குப் பொருந்தும்.

——–

அடிவரவு:- மெச்சு மலை காயும் இருட்டு சேப்பூண்ட செப்பு தத்துக் கொங்கை பதகம் வல்லாள் அரவணை.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-9–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 27, 2021

வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்–1-9-1-

பதவுரை

என் குட்டன்–என் பிள்ளை
வட்டு நிடுவே–(இரண்டு நீலரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற–வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு–இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்-நுனியில்
முளைக்கின்ற–உண்டாகின்ற
முத்தே போல்–முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன–சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
(அம்மாணிக்க மொட்டு)
துளிர்க்க துளிர்க்க–பல தரம் துளியா நிற்க
வந்து–ஓடி வந்து
என்னை-என்னுடைய
புறம்–முதுகை
புல்குவான்–கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம்புல்குவான்

விளக்க உரை

‘வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு’ என்றது – கண்ணபிரானது குறியை யென்க.
நிறத்தாலும் ஆகாரத்தாலும் உவமை. ‘முளைக்கின்ற முத்து’ என்றது – அதில் நன்று வெளிவருகிற சிறுநீரை.
உபமேயத்தைச் சொல்லாது உபமாநத்தை மாத்திரம் சொல்லி அதனால் உபமேயத்தைப் பெறவைத்தது –
இடக்கரை அடக்க வேணுமென்ற கருத்தினாற்போலுமென்ப.
சிறுநீர்த் துளிகள் இற்று இற்று மீண்டும் வருதலால் ‘சொட்டுச் சொட்டெனத் துளிக்கத் துளிக்க’ என்றார்.
என்னை – உருபு மயக்கம். புல்குவான் – அணைத்துக் கொண்டபடியைச் சொல்லுகிறது;
இனி ‘அணைத்துக் கொள்வானாக’ என்று விரும்பினதாகவுங் கொள்ளலாம்.

——————

கிங்கிணி கட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத் தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்-1-9-2-

பதவுரை

என் கண்ணன்–என் கண்ணபிரான்
கிண்கிணி–அரைச் சதங்கையை
கட்டி–கட்டிக் கொண்டும்
கிறி–சிறுப் பவள வடத்தை
கையினிலே–கையிலே
கட்டி–கட்டிக் கொண்டும்
கங்கணம்–தோள் வளையை
இட்டு–(தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்–திருக் கழுத்திலே
தொடர்–சங்கிலியை
கட்டி–அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே–(இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து–அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;–எம்பிரான் என்னை புறம் புல்குவான் -.

விளக்க உரை

கங்கணம் – வடசொல். திருவாபரணங்களைச் சொல்லும் ப்ரகரணமாதலால் சொல்லப்படாதொழிந்த
திருவாபரணங்களையுங் கூட்டித் ‘தம் கணம்’ என்றது. கணம் -வடசொல் திரிபு.
தன் கணத்தாலே என்று பாடங்கொண்டு தன்னுடைய கண்ணால் (என்னைக் கடாக்ஷித்துக் கொண்டு) எனினுமமையும்;
இப் பொருளில் ‘கண்’ என்பது – மூன்றாம் வேற்றுமை யுருபை ஏற்கும் போது அத்துச் சாரியை பெற்று வந்ததென வேண்டும்.

———-

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்களேறு என் புறம் புல்குவான்–1-9-3-

பதவுரை

கத்தக் கதித்து கிடந்த–மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்–மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து–(தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொருந்திக் கொண்டு–மனம் பொருந்தி யிருக்க
உண்ணாது–அநுபவியாமல்
மண்–பூமியை
ஆள்வான்–(தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்–(தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட–(தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய–திருவவதரித்த
அத்தன்–ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆயர்கள் ஏறு–இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.

விளக்க உரை

கத்தக் கதித்து – “பக்கப் பருத்து” “தக்கத் தடித்து” என்பனபோன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல்.
ஏறு – ஆகுபெயரால் செருக்கு, நடை, காம்பீர்யம் முதலிய குணங்களால் காளை போன்ற இள வீரனைக் குறிக்கும்.

———

நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-4-

பதவுரை

நாந்தகம்–நந்தகம் என்னும் வாளை
ஏந்திய–கையிலணிந்துள்ள
நம்பி–பெரியோனே!
சரண்–(நீ எனக்கு) ரக்ஷகன்
என்று–என்று சொல்லி
தாழ்ந்த–(தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி–அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்-இப் பூமியிலே
வேந்தர்கள்–(எதிரிகளான) ராஜாக்கள்
உட்க–அஞ்சிக் கலங்கும்படி
விசயன்-அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்–அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்–(ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;
உம்பர்–நித்ய ஸூரிகளுக்கு
கோன்–நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்-.

விளக்க உரை

நாந்தகம் = ‘நந்தகம்‘ என்ற வடசொல் நீண்டுகிடக்கிறது. நம்பி. உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பெயர்;
“நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண் பெயராகுமென்ப” என்பது நன்னூல்.
சரண். ‘சரணம்’ என்ற வடசொற் சிதைவு. தனஞ்சயன் – அர்ஜுநனுக்கு மறு பெயர்.
இது தர்மபுத்ரன் ராஜ ஸுயயாகம் செய்யக் கோலின போது பல ராஜாக்களையும் வென்று மிக்க பொருளைக் கொணர்ந்ததனாலும்
வெற்றியையே செல்வமாக வுடையவனென்ற காரணத்தாலும் வந்த பெயராம். தரணி – பரணி . உட்க (நெஞ்சு) உளுக்கும்படியாக;
மணித் தேர்- மணிகளமைத்துச் சமைத்த தேரென்றுமாம். உம்பர் – மேலுலகு; அங்குள்ளார்க்கு ஆகுபெயர்.

—————

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண் பல செய்த கருந்தழைக் காவின் கீழ்
பண்பல பாடிப்பல்லாண் டிசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான்–1-9-5-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்–வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி–(அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி–விளையாடி
பல கண் செய்த–பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை–பெரிய குடையாகிற
காவின் கீழ்–சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி–(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப–மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்–பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்-;
வாமனன் என்னை புறம் புல்குவான்-.

விளக்க உரை

பத்திரம் – வடசொல்; இலை என்பது பொருள்; வெண்கலத்தாலே இலை வடிவமாகச் செய்து குழந்தையினரையிற் கட்டுதல்
முற்காலத்தில் ப்ராஹ்மணர்களின் வழக்கம் போலும்.
அங்ஙனமே வாமநாவதாரம் செய்த ஸ்ரீவிஷ்ணு தன் திருவரையிலணிந்து கொண்டனனென்க;
இனி முதலடியால் கண்ணபிரானது பால்ய தசையில் லீலை வகையைச் சொல்லிற்றாகவுமாம்.
“கண்பலபெய்து” என்று பாடமாகில் கருந்தழை – பீலிப்பிச்சத்தினுடைய பல கண் – பல கண்களையும் பெய்து – தலையில் அணிந்து கொண்டு
காவின் கீழ் விளையாடி – சோலை நிழலிலே விளையாடியென்று உரைக்க வேண்டும்.
பீலித்தழையைத் தலையிலே கட்டுகை ஜாதிக்கு உரிய செய்கையாம். மண் என்ற சொல் ஆகுபெயரால் பூமியைக் காட்டும்;
அச்சொல் இங்கு உலகம் என்ற பொதுப் பொருளைத் தந்தது.

—————

சத்திர மேந்தித் தனி யொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான்–1-9-6-

பதவுரை

உத்தர வேதியில் நின்ற–உத்தர வேதியிலிருந்த
ஒருவனை–(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்–குடையை
ஏந்தி–(கையில்) பிடித்துக் கொண்டு
தனி–ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்–ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் (போய்)
கத்திரியர்–(அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண–பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்–உலகம் முழுவதையும்
கொண்ட–(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்–விலக்ஷணமான
ஆகாரன்–வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;
பார்–பூமியை
அளந்தான்–(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.

விளக்க உரை

சத்திரம் – வடசொல் திரிபு.
உத்தரவேதி – ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக பசுவைக் கட்டுகின்ற யூப ஸ்தம்பத்தை காட்டி யன் வேதிகை;
இச்சொல் இங்கு யாக பூமியைக் காட்டுமென்க.
சத்திரியர் -க்ஷத்திரியர் என்ற வடசொற்ரிபு. (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் –

————-

பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறார விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்–1-9-7-

பதவுரை

பொத்த உரலை–(அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து–தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி–அவ் வுரவின் மேலேறி
தடாவினில்–மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்–மதுரமான பாலையும்
வெண்ணெயும்–வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்–வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய–மிகுதியாக விழுங்கின
அத்தன்-தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்–(இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.

விளக்க உரை

திருவாய்ப்பாடியிலுள்ளார் தந்தம் தயிர் நெய் பால்களைக் கண்ணனுக் கெட்டாதபடி உயர உறிகளின் மேலே
சேமித்து வைக்க அது கண்டு கண்ணபிரான் ஒரு பொத்தவுரலைத் தேடிக்கண்டுபிடித்து உருட்டிக் கொண்டு வந்து
தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு அதன் மேலேறி உறியை யெட்டி அதிலுள்ளவற்றை விழுங்குவனாம்
(பொத்தவுரலை) நல்வ வுரலானால் அதை நடுவே யாரேனும் சிலர் கார்யார்த்தமாகத் தேடிவந்த
தன்னைப் பிடித்துக் கொள்ளக் கூடுமென்று பொத்த வுரலைத்தேடிப் பிடித்தானென்பது விசேஷார்த்தம்.
பொத்தவுரல் – ‘பொத்தலுரல்’ என்பதன் மரூஉ. வென்னலாம்; – பொத்தல் என்பதில் ஈற்று மெய் கெட்டு தென்றலுமொன்று.

——————–

மூத்தவை காண முது மணற் குன்றேறி
கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்–1-9-8-

பதவுரை

மூத்தவை–வயசு சென்ற இடைச் சனங்கள்
காண–காணும் படியாக
முது மணல் குன்று ஏறி–நெடுநாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறியிருந்து
வாய்த்த–தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும்படி கிட்டின
மறையோர்–ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க–தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்–தேவர்கள்
ஏத்த–ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி–வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து–ஸந்தோஷித்து
கூத்து ஆடி–கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம்புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம்புல்குமான்-.

விளக்க உரை

கண்ணபிரான் எல்லாருங் காணும்படியாக மிகவுமுயர்ந்ததொரு மணற்குன்றின் மேலேறி நின்று தான் விரும்பின
பெண்களின் பேரைச் சொல்லுதலும் தன்மேல் கோபங்கொண்டிருக்கும் பெண்களின் காலைக் கையைப் பிடித்துக் கொண்டு
பொறுப்பித்தலும் முதலான ஒலியின் குறிப்புகள் தன்னோடு பழகும் பெண்களுணரும்படி புல்லாங்குழலூதியும்
நிலவறைகளிற் கிடக்கும் பெண்களும் அவ்விடத்தை விட்டோடிவந்து காண்கையாலே மிகவும் மனமுகந்து கூத்தாடியும் நிற்க
அவனுடைய சேஷ்டிதரஸத்தை அனுபவித்து ரிஷிகளும் தேவர்களும் வணங்கித்துதிக்க இப்படிக் கூத்தாடின அழகோடே
அப் பிரான் வந்து என்னைப் புறம் புல்க வேணுமென்பது – கருத்து.

மூத்தவை – பலவின்பால் வினையாலனையும் பெயர்; மூத்த அவை எனறு பிரித்து பெயரெச்சத்து ஈற்று அகரம்
தொக்கதென்றால் வயசு முதிர்ந்துள்ள கூட்டமென்று பொருளாம்.
அவை = ‘ஸஹா’ என்ற வடசொல் ‘சபை’ எனத்திரிந்து அது ‘சவை’ என்றாய் சவை அவை ஆயிற்றென்ப.
‘வாய்ந்த மறையோர்’ என்ற தொடர் – (எதுகைக்கேற்ப) வாய்த்த மறையோர் என விகாரப்பட்டதென்றால் கண்ணன் யாவருங் காண
முதுமணற்குன்றேறிக் குழலாலிசைபாடிக் கூத்து உவந்தாட மூத்த அவை – மூத்த ஸபையாய்த் திரண்ட இடையர்கள்
இமையவர் – கண் இமையாதவர்களாயிருந்து ஏத்த – துதிக்கவும் வாய்த்த மறையோர் (நிலவறை ) பொருந்திய
மறைதலையுடைய பெண்கள் (குழலோசை வழியே கிட்டிக் கண்ணன் கூத்தாடுவதைக் கண்டு அவனது திருவடியின்
ஸௌகுமார்யத்தை நினைத்து அக்கூத்தை நிறுத்துவதற்காக) வணங்கவும் இப்படிக் கூத்தாடின செவ்வியோடே வந்து
என்னைப் புறம்புல்கவேணுமென்று பொருள் பணிக்க; அப்போது ஆடி – ஆட; எச்சத்திரிபு.

—————-

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவதென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9-

பதவுரை

இந்திரன் காலினில்–இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு–கற்பகச் சோலையை
கருதிய–(தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு–தனக்கு ப்ரியையான ஸத்யபாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது–இப்பொழுதே
ஈவன்–கொணர்ந்து தருவேன்
என்று–என்று சொல்லி
நிலா திகழ்–நிலா விளங்குகின்ற
முற்றத்துள்–அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து–இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை–தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம்புல்குவான்-;
உம்பர் கோன்–(அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம்புல்குவான்-.

விளக்க உரை

கண்ணபிரான் ஸத்யபாமையின் உகப்புக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத வ்ருக்ஷத்தைக் கொணர்ந்து
த்வாரகையில் நாட்டினமை ப்ரஸித்தம்.
இந்திரன் காவு – கந்தருவரும் மந்தாரம் பாரிஜாதம் ஸந்தானம் கல்ப வ்ருக்ஷம் ஹரிசந்தனம் எனத் தேவலோகத்து மரங்கள் ஐந்து;
அவ்வைந்தையும் கல்ப வ்ருக்ஷமென்று ஸாதாரணமாக வழங்குதலுமுண்டு; இங்கு பாரிஜாதத்தைக் கற்பகமென்றார்.
இம்மரங்களில் ஒவ்வொன்றுமே பெருஞ்சோலையாகத் தழைத்திருக்குமாதலால் ‘கற்பகக்காவு’ எனப்பட்டது.
ஒரு மரத்தையே காவு என்று கூறியதற்கு ஏற்ப ‘நிற்பன செய்து’ என்று பன்மையாகக் கூறினர் போலும்.
ஐந்து மரங்களையும் கொணர்ந்தா னென்பாருமுளர். ஈவன் = ஈ பகுதி; அன் – தன்மை யொருமை விகுதி; வ் – எதிர்கால இடைநிலை.

————-

ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10-

பதவுரை

வேய்–மூங்கில் போன்ற
தடந்–பெரிய
தோளி–தோள்களை யுடையனான
ஆய்ச்சி–யசோதை யானவன்
ஆழிப் பிரான்–சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று–அக் காலத்திலே
புறம் புல்கிய–புறம் புல்குவதைக் கூறிய
சொல்–சொல்லை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
மகிழ்ந்து–(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த–(உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்–தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்-ஓத வல்லவர்கள்
வாய்த்த–(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை–நல்ல புத்திரர்களை
பெற்று–அடைந்து
மகிழ்வர்–ஆநந்திப்பர்கள்.

விளக்க உரை

‘ஈந்த’ என்ன வேண்டியது – செய்யுளின்பம் நோக்கி ஈத்த என்று கிடக்கிறது.
நன் மக்கள் – சிஷ்யர்களென்றுமாம்.
இப்பத்து – ஒன்பது திருமொழிகளிலேயே நூறு பாசுரங்களாய் விட்ட படியால்
இவ்வொன்பது திருமொழியிலேயே முடிந்ததென்க.

——

அடிவரவு – வட்டு கிண்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி மெச்சூது.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-8–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 27, 2021

பொன்னியல் கிண் கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற் போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோ–1-8-1-

பதவுரை

பொன் இயல்–பொன்னாற்செய்த
கிண்கிணி–அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி–சுட்டியையும்
புறம்–(அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி–அணிந்து
தன்–சதங்கைக்கு
இயல்–பொருந்திய
இசை–சப்தமானது
சலன் சலன் என்றிட–சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்–மின்னலோடு பொருந்திய
மேகம்–மேகமானது
விரைந்து–வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்–எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா–என் இடையிலிருக்க (விரும்பி) ஓடிவந்து
அச்சோ அச்சோ–(என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்–எங்களுடைய தலைவனே!
வாரா–வந்து
அச்சோ அச்சோ

விளக்க உரை

மிகவும் ஒளிவீசுகின்ற ஆபரணங்களை அணிந்து கொண்டுள்ள கண்ணன் ஓடி வருவது – மின்னலைக் கொண்டுள்ள மேகம்
விரைந்து ஓடிவருவதை ஒக்கும். உபமேயத்தில் சலன்சலனென்றிட என்றதனால் உபமானத்தில் சிறிய இடிகளிடித்தலைக் கொள்க.
குழந்தைகள் தாய்மாரிடுப்பில் ஏறுவதற்காக ஓடிவந்து அத்தாய்மார்களைத் தழுவி அணைத்துக் கொள்ளும் இயல்பைப் பிரார்த்திக்கிறபடி.
அச்சோ என்பது முற்காலத்திலே குழந்தையை அணைத்துக்கொள் என்று வேண்டுதற்கு ஏற்ற குறிப்புச்சொல்லாக விருந்ததெனக் கொள்ளத்தகும்.
இனி அச்சோ என்பது அதிசயத்தைக் குறிப்பதோரிடைச் சொல்லெனக்கொண்டு கண்ணன் தன்னை அணைத்துக் கொள்ளுதலை
நினைக்கும் போது தோன்றும் பரமாநந்தத்தில் மூழ்கி நெஞ்சுருகிச் சொல்லிடிந்து வாய்விட்டுச் சொல்லமாட்டாமல்
அவ்வாச்சர்யத்தை ஒரு தரத்துக்கிருதரம் அச்சோ அச்சோ என்கிறாள் என்னவுமாம்.
எனவே இது இங்கு அணைத்துக்கொள் என்ற பொருளை ஸந்தர்ப்பத்தால் குறிப்பிக்கின்றதென்று
ஒட்டம் + தார = ஒட்டார விகாரப் புணர்ச்சி. ஒட்டரா வாரா – செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்.

————

செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ–1-8-2-

பதவுரை

செங்கமலம்–செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்–தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்–வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து–(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்–பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப–மொய்த்துக் கொள்ளும்படி
வந்து–ஓடி வந்து
சங்கு–ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்–ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்–நந்தகத்தையும்
தண்டு–கௌமோதகியையும்
சக்கரம்–ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய–(பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே–அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ
வந்து–ஓடிவந்து
ஆர தழுவா–திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ

விளக்க உரை

ஓடி விளையாடும் போது வாரின கூந்தலும் கலைந்துவிடுமாதலால் அங்ஙனங்கலைந்து தொங்கும்
கறுத்த மயிர்கள் செந்நிறமான வாயிற்படிதல் – செந்தாமரைப்பூவில் கருவண்டுகள் மொய்த்துக்கிடத்தலை ஒத்திருக்கு மென்க.
பங்கி – ஆண்மயிர் “பங்கியே பிறமயிர்க்கும் பகருமாண் மயிர்க்கும் பேராம்” என்ற நிகண்டு காண்க.
தழுவா = கீழ்பாட்டில் ‘வாரா’ என்றது போலக் கொள்க.
இப்பாட்டில் இரண்டாமடியில் தளை தட்டா நின்றது; இவ்வாறே பாடங்காண்கிறது.

————-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ வச்சோ–1-8-3-

பதவுரை

பஞ்சவர்–பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து
நஞ்சு–விஷத்தை
உமிழ்–கக்குகின்ற
நாகம்–(கானிய) ஸர்ப்பம்
கிடந்த–இருந்த
நல் பொய்கை–கொடிய மடுவிலே
புக்கு–புகுந்து
அஞ்சு–(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்–(அப்பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து
(நடமாடி அக்காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள்செய்த–(அப்பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்–இடையர்களுக்கு
பெருமானே–தலைவனானவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

காளியனை அடக்கியது முன்னும் பாரதம்கை செய்தது அதற்குப் பின்னும் நடந்ததாயினும் அம்முறையைக் கருதாமல்
இங்ஙனமருளிச் செய்தாரென்க. ‘கைசெய்து’ என்றவிடத்து கை – தமிழ் உபஸர்க்கமென்பர்.
நல் பொய்கை – எதிர்மறையிலக்கணை (விபரீதலக்ஷணை) அஞ்ச – காளியன் அஞ்சும்படி எனினுமொக்கும்.

————————

நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறி அவளும் திரு வுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்று
ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெருமான் வாரா அச்சோ வச்சோ–1-8-4-

பதவுரை

நாறிய–‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்–சந்தனத்தை
நமக்கு–எங்களுக்கு
இறை–கொஞ்சம்
நல்கு என்ன–கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்–அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி–மனம் தெளிந்து
திரு உடம்பில்–(உனது) திருமேனியிலே
பூச–சாத்த
ஊறிய–வெகுநாளாயிருக்கிற
கூனினை–(அவளுடைய) கூனை
உள்ளே–(அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க–அடங்கும்படி
அன்று–அக் காலத்திலே
ஏற–நிமிர்த்து
உருவினாய்–உருவினவனே!
அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.

விளக்க உரை

அக்ரூரன் கம்ஸனது கட்டளையினாலே கண்ணபிரானை மதுரைக்கழைக்க கண்ணன் கம்ஸனைக் கொல்ல நினைத்துப்
பலராமனுடன் புறப்பட்டு மதுரையிற் புகுந்து நடுவழியில் ஒரு துஷ்ட வண்ணானைக் கொன்று அவனிடமிருந்த
சிறந்த ஆடைகளை யெடுத்துச் சாத்திக்கொண்டு ராஜவீதியில் எழுந்தருளுகிற வளவிலே சந்தநத்தைக் கையிலேந்தி வருகிற
கூனி யொருத்தியைக் கண்டு ‘அம்மே! நமக்கும் நம் அண்ணர்க்கும் பூசலராம்படி சந்தகம் கொடுக்க வல்லையோ?’ என்று கேட்க
அவளும் கண்ணபிரான் திருக்கண்களால் மனமிழுப்புண்டு மறுக்கமாட்டாமல்
‘வெண்ணெயிலே பழகிய இவர்கள் சந்தநத்தின் வாசி அறிவார்களோ’ என்று மட்டமான சந்தநங்களைக் காட்ட
அவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு குறை சொல்லிக் கழித்து ‘அண்ணருடம்புக்கும் நம்முடம்புக்கும் ஏற்ற வெகுநேர்த்தியான
வாஸனையுடைய சந்தநத்தில் சிறிது தாம் என்று விரும்பிச்சொல்ல அவளும் இவன் சந்தநத்தின் வாசியறிந்தபடியையும்
விரும்பின சீர்மையையும் வடிவழகையும் கண்டு மகிழ்ந்து
‘கம்ஸனுக்குக் கொண்டு போகிற இதை இவர்களுக்குத் தந்தால் தண்டனை நேருமே’ என்றும் அஞ்சாமல் உள்ளந்தேறி
உத்தமமான சந்தனத்தை யெடுத்து ‘இதைத் திருவுள்ளம்பற்றுங்கள்’ என்று ஆதரத்தோடு ஸமர்ப்பிக்க
அப்பூச்சைத் திருமேனியிலணிந்து கொண்ட கண்ணபிரான் இவள் ‘அநந்யப்பிரயோஜகமாய்க் கிஞ்சித்தரித்தாள்’ என்று உகந்து
அவள் முதுகில் வேர்விழுந்ததோ வென்னும்படி உறைத்துக் கிடந்த கூனை நிமிர்த்துவிடக் கடவோமென்று திருவுள்ளம்பற்றி
நடுவிரலும் அதற்கு முன்விரலும் கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையிற் பிடித்துத்
தன் திருவடிகளினால் அவள் கால்களை அமுக்கியிழுத்துத் தூக்கிக் கூன் சரீரத்துக்குள் அங்கி விடும்படி
கோணல் நிமிர்த்தி அவளை மகளிரிற் சிறந்த உருவினளாக்கினனென்ற வரலாறு காண்க.

———————

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழியங் கையனே அச்சோ வச்சோ–1-8-5-

பதவுரை

கழல்–வீரக் கழலை யணிந்த
மன்னர்–ராஜாக்கள்
சூழ–தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர்போல்–ஸூரியன்போல
விளங்கி–ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)
எழல் உற்று–(முதலில்) எழுந்திருந்து
மீண்டு–மறுபடியும்
இருந்து–(தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை–உன்னை
நோக்கும்–(பொய்யாஸநமிடுதல் முதலியவற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது கழலை உடை–மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை–துர்யோதநினை (திருவுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
அழல விழித்தானே–உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;
ஆழி–திருவாழி யாழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவதூதனாய் துர்யோதநனிடமெழுந்தருள அக்கண்ணன் வருகையை அறிந்த துர்யோதநன்
‘கண்ணன் வரும்போது ஒருவரும் எழுந்து மரியாதை செய்யலாகாது’ என்று உறுதியாய் நயமித்துத் தானும் ஸபையிலே
உறுதியுடனிருக்க கண்ணபிரான் அங்கேற எழுந்தருளின வளவிலே ஸபையிலிருந்த அரசர்கள் அனைவரும்
ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் சோதியைக் கண்டு பரவசராயெழுந்திருந்துவிட துர்யோதநன் தானும் துடை நடுங்கி எழுந்திருந்துவிட்டு
உடனே கறுக்கொண்டு தானெழுந்தது தெரியாதபடியிருக்க கண்ணன் தனக்காக இட்டிருந்த க்ருத்ரிமாஸநத்திலே உட்காரும் போது
அவ்வாஸநம் நெறுநெறென முறிய அப்போது பேருரு எடுத்துக்கொண்டு துர்யோதநனை உறுத்துப்பார்த்தனனென்க.

இந்த ஸந்நிவேசந்தோற்ற எழுந்தருளியிருக்குமிடம் பெருமாள்கோயிலில் ‘திருப்பாடகம்’ என்னுந் திவ்விய தேசம்.
பாடு அகம் = பாடு – பெருமை; (“பாடிடம் பெருமையோசை” என்பது நிகண்டு. ) அது தோற்ற எழுந்தருளி யிருக்குமிடம் – பாடகம்;
“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதே யிடவதற்குப் பெரியமாமேனி அண்ட
மூடுருவப் பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன்” என்றதையுணர்க.
கழல் – வீரக்குறியாகக் காலில் பூணுவதோ ராபரணம்.
சுழலை = ‘சூழலை’ என்பதன் குறுக்கல் (மூன்றாம் வேற்றுமை) சூழல் – ஆலோசித்தல் சூழ் – பகுதி;
அல் – தொழிற்பெயர் விகுதி.
‘சுழலை’ என்று மொரு தனிச்சொல் உண்டென்க;
‘சுழலையில் நன்றுய்துங்கொலோ’ என்ற நாச்சியார் திருமொழி காண்க.

—————

போரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான்
தேரொக்க வூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ ஆயர்கள் போரேறே அச்சோ வச்சோ–1-8-6-

பதவுரை

இ பூமி–இந்தப் பூமியினுடைய
பொறை–பாரத்தை
தீர்ப்பான்–தீர்ப்பதற்காக
போர்–யுத்தத்தை
ஒக்க–(துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி–செய்து
செழு–செழுமைதாங்கிய
தார்–மாலையை யுடைய
விசயற்கு ஆய்–அர்ஜுநனுக்காக
தேர்–(அவனுடைய) தேரை
ஒக்க–(எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்–பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்–மேகத்தோடு ஒத்த
மேனி–திருமேனியில்
கரும்பெருங் கண்ணனே–கரியவாகிப் புடைபரந்து கண்களையுடையவனே!
வந்து–ஓடிவந்து
ஆர–நின்றாக
தழுவா–தழுவிக்கொண்டு
அச்சோ அச்சோ-;
ஆயர்கள்–இடையர்களுக்கு (அடங்கி நற்கின்ற)
போர் ஏறே–போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

துர்யோதனாதிகளுக்குப் பதினொரு அக்ஷௌஹிணிகேனையும் பாண்டவர்களுக்கு ஏழு அக்ஷௌஹிணி சேனையுமாயிருக்கவும்
இவ்விருதிற்டதாரும் போர்செய்யும்போது இருவரும் சரிசமமாகவே யுத்தஞ் செய்பவர்களாகவே நிற்குமாறு செய்தனன் கண்ணபிரானென்க.
பகைவர்களோடு போர்புரியும் போது தும்பைப்பூமாலையும் வெற்றிகொண்டபோது வாகைப்பூமாலையும்
வீரர் சூடுவரெனக் கூறுதல் தமிழர் வழக்கமாதலால் இவ்விரு பூமாலையையும் அவ்வப்போது
அர்ஜுநன் அணிவனென்பதைத் தெரிவிக்க பொதுவாகச் ‘செழுந்தார்விசயன்’ என்றார்.
விசயன் – அர்ஜுனனுக்கு ‘விஜயன்’ என்று வடமொழி நாமம்.

——–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ வச்சோ சங்க மிடத்தானே அச்சோ வச்சோ–1-8-7-

பதவுரை

மிக்க பெரும்புகழ்–(ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி–மஹாபலி (செய்த)
வேள்வியில்–யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே)
இது-‘நீ கொடுக்கிற விது
தக்கது அன்று–தகுதியானதன்று’
என்று–என்று முறையிட்டு
தானம்–பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய–தடுத்த
சுக்கிரன்–சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை–ஒரு கண்ணை
துரும்பால்–(உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய–கலக்கின
சக்கரம் கையனே–சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
சங்கம்-பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே–இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

சுக்கிரன் – மஹாபலியின் ஆசார்யன். வாமநமூர்த்தியின் வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து
மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்நித்தவளவிலே சுக்ராசார்யன் எம்பெருமானது வடிவையும் வந்தவகையையும் பேச்சையும்
ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன் தேவகார்யம் செய்யும்பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போகவந்தான்;
ஆகையால் நீ இவனுக்கொன்றும் தரத்தகாது’ என்று தாநத்தைத் தடுக்க அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து
தத்தம் செய்யப்புக ஜலபாத்ரத்தின் (திருக்காவிரி) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்து கொண்டு நீர் விழவொட்டாமல் தடுக்க
ஸ்ரீவிஷ்ணு த்வாரம் சோதிப்பவன்போல தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
அவன் கண்ணைக் குத்திக் கலக்க அவனும் கண்கெட்டு அங்குநின்றும் வெளிப்பட பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப்பெற்றனென்க.
‘துரும்பாற் கிளறிய சக்கரம்’ என்றதனால் “கருதுமிடம் பெருது – கைந்நின்ற சக்கரத்தன்” என்கிறபடியே
திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையையுடைய திருச்சக்கரமே
பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்ரன் கண்ணைக் கலக்கிற்றென்பது பெறப்படும்.

——————-

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–1-8-8-

பதவுரை

(வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
இது–(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது
என் மாயம்–என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்–என் தகப்பன்
அறிந்திலன்–(நீ செய்யும் இந்தமாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு–நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்–அளப்பாயாக
என்ன–என்று சொல்ல
மன்னு–(இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை–(அந்த) நமுசி யென்பவனை
வானில்–ஆகாசத்திலே
சுழற்றிய–சுழலச் செய்த
மின்னு முடியனே–விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
வேங்கடம்–திருமலையிலே
வாணனே–வாழுமவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

நமுசி திரிவிக்கிரமனோடு வெகு நாழிகை வழக்காடி எம்பெருமான் சொன்ன ஸமாதாநங்களைக் கேளாமல்
தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருக்க எம்பெருமான் வளர்ந்த திருவடியினால்
அவனை ஆகாசத்திலே கொண்டு போய் சுழன்று விழும்படி செய்த வரலாறு காண்.
சுழற்றிய என்ற பெயரெச்சம் முடியனைக் கொண்டு முடியும்.

—————-

கண்ட கடலும் மலையும் உலகேழும்
முண்டத்துக் காற்றா முகில் வண்ணா ஓ ஒ வென்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ–1-8-9-

பதவுரை

கண்ட–கண்ணாற்கண்ட
கடலும்–ஸமுத்ரங்களும்
மலையும்–மலைகளும்
உலகு ஏழும்–கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு–(என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா–போதாவாம்;
முகில் வண்ணா–மேக வண்ணனே!
ஓஒ!–ஓஒ! (ஹாஹா!)
என்று–என்று கூப்பிட்டு
இண்டை-நெருங்கின
சடை முடி–ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்–சிவன்
இரக்கொள்ள–பிச்சை யெடுக்க
மண்டை–(அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே–(மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ-;
மார்வில்–திரு மார்பிலே
மறுவனே–ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

மஹாப்ரயாஸங்கள் பட்டும் நிறைக்கமுடியாத ப்ரஹ்மகபாலத்தின் தன்மையைக் காட்டிற்று -முதலிரண்டடி.
ஓஒ – ஓ என்னும் இரக்கக் குறிப்பிடைச் சொல் அளபெடுத்து வந்தது.
இனி கண்ட கடலிலும் மலைகளிலும் உலகேழிலும் (திரிந்தும்) முண்டத்துக்கு ஆற்றா என்றுமாம்.
உண்டத்துக்கு ஆற்றா என்றெடுத்து (எங்கே திரிந்தும் மிக வருந்தியும்) கபாலத்திற்கு வேண்டிய உணவை யிடுதற்கு
முடியாமல் ஈசன் முகில் வண்ணா ஓஒ என்று இரக்கொள்ள என்றும் உரைக்கலாம்.

முண்டத்துக்கு என்ற பாடத்தில் மூன்றாஞ் சீரோடு உண்டத்துக்கு என்ற பாடத்தில் இறுதிச் சீரோடும் மோனைத் தொடர் காண்க.
இரக்கொள்ள = இர – முதனிலைத் தொழிற்பெயர்.

————————

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னிவ் வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்ன மதானானே அச்சோ வச்சோ அரு மறை தந்தானே அச்சோ வச்சோ-1-8-10-

பதவுரை

மன்னிய–நித்ய ஸித்தமான
நால் மறை–சதுர் வேதங்களும்
முற்றும்–முழுவதும்
மறைந்திட–மறைந்து விட (அதனால்)
அன்னிய–நெருங்கிய
பேர் இருள்–பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து–பரவி
உலகை–லோகங்களை
மூட–மறைத்துக் கொள்ள
பின்–பின்பு
உலகினில்–இந்த லோகங்களில்
பேர் இருள்–(அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க–நீங்கும்படி
என்று–அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே–ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே–(அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ-.

விளக்க உரை

முன் ஒரு கல்பத்தின் அந்தத்தில் சதுர்முகன் துயிலுகையில் அவன் முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன்
உலாவிக் கொண்டிருந்த நான்கு வேதங்களையும் மஹாபலிஷ்டனாய் அருந்தவங்கள் செய்து பெருவரங்கள் பெற்ற
சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு ப்ரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல அதனையுணர்ந்து திருமால்
ஒரு பெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங் கடலினுட் புக்கு அவ்வஸுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று
அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து ஸாரத்தையும் அஸாரத்தையும் பிரிக்குந் தன்மையுள்ள
ஹம்ஸமாய்த் தோன்றிப் பிரமனுக்கு உபதேசித்த வரலாறு காண்க.

நான்மறைகளாவது – ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன; இவை வேதவ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின்
பெயர்களாதலால் அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.
அன்னம் – ஹம்ஸம் என்பதன் விகாரம்.
அருமறைதந்தானே என்ற பாடத்தில் தளைதட்டுதலால் ஆர்மறை தந்தானே என்று பாடமோதுவது ஒக்குமென்பர்:
ஆர் = அருமை என்ற பண்புப்பெயர் ஈறுபோய் ஆதிநீண்டு இடையுகரமுங்கெட்டு ஆர் என நிற்கும். (ஈறுபோதல். . . ஆதிநீளல் இத்யாதி. )

—————-

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன
மச்சணி மாடப் புதுவை கோன் பட்டன் சொல்
நச்சலும் பாடுவார் நீள் விசும்பாள்வரே–1-8-11-

பதவுரை

நச்சுவார் முன்–(தன்னை) விரும்பிப்ப பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்–வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை–நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி–இடைக் குலத்தவளான யசோதை
(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி)
அச்சோ வருக என்று உரைத்தன–‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி–பல நிலைகளால் அழகிய
மாடம்–மாளிகைகளை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்–பாடுபவர்கள்
நிச்சலும்–எப்போதும்
நீள் விசும்பு–பரமாகாசமாகிற பரமபதத்திற்கு
ஆள்வர்–நிர்வாஹகராவர்.

விளக்க உரை

முன்பு யசோதைப் பிராட்டிக்குக் கண்ணெதிரே நின்று கண்ணபிரான் எப்படி ஸேவை தந்தருளினனோ
அப்படியே இப்போது தமக்கும் ப்ரயக்ஷமாக ஸேவை தந்தருளினதுபற்றி “நச்சுவார் முன்றிகும் நாராயணன்” என்றார்.

—–

அடிவரவு:- பொன் செங்கமலம் பஞ்சவர் ஊறிய கழல் போர் மிக்க என்னிது கண் துன்னிய நிச்சு வட்டு.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-7–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 27, 2021

தொடர் சங்கிலி கை சலார் பிலாரென்னத் தூங்கு பொன் மணி யொலிப்ப
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல்
உடங்கூடிக் கிண் கிணி யாரவாரிப்ப உடை மணி பறை கறங்க
தடந்தா ளிணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இளநடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

விளக்க உரை

கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும்,
இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும்
நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்;
யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு
நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும்,
பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும்,
மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம். சலார்பிலார்-ஒலிக்குறிப்பு.
மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக;
கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம். வாரணம்- வடசொல்.
உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச் சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலே சேர்ந்து இழுப்புண்டு
வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம்.
இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று. சார்ங்கபாணி-வடசொற்றொடர்.
தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.

—————-

செக்க ரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல
நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர் வெண் பல் முளையிலக
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ–1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

விளக்க உரை

புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்கவேணுமென்று இதனால் பிரார்த்திக்கிறபடி, கண்ணபிரானது மிகவுஞ் சிவந்த
வாயாகிய மேட்டிடத்தில் வெளுத்த பல்லின் முளைகள் பிரகாசிப்பதானது –
செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த வெள்ளிய சிறு பிறைபோல இருக்குமென்க.
‘நக்க‘ என்றது வாய்க்கு விசேஷணம். “வெண்பல் முளையிலகத் தளர்நடை நடவானோ” என்று அந்வயம்.
‘சந்திரன் எங்கே இருக்கிறான்‘ என்றால், ‘அந்த மரக்கிளைக்கு மேலிருக்கிறான்‘ என்று உலகவழக்கிற் காட்ட
வேண்டி யிருப்பதனால், ‘நுனிக் கொம்பில் தோன்றுஞ் சிறு பிறை முளை‘ என்றார்.
சிறுபிறை முளை யென்றது மூன்றாம் பிறையை யென்பர்.
மா மணி – நீலாத்நம், மா – கறுப்புக்கும் பெயர்.

————

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
மின்னில் பொலிந்த தோர் கார் முகில் போலக் கழுத்திணில் காறை யொடும்
தன்னில் பொலிந்த இருடீ கேசன் தளர்நடை நடவானோ–1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திருவரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

*** – மின் + கொடி மின்னுக்கொடி. “மின் பின் பன் கன் தொழிற்பெயரனைய” எனச் சிறப்புவிதிகாண்க.
பரிவேடம் – ‘பரிவேஷம்‘ என்ற வடசொற்றிரிபு. சந்த்ரனைச் சுற்றிச் சில காலங்களிற் காணப்படும் ரேகை.
இது ஊர்கோள் எனவும் படும்.
பொற் பின்னலும் அதைச்சேர்ந்து விளங்குகின்ற அரசிலைப்பணியும் இவ்விரண்டையுஞ் சூழ்ந்துகொண்டு விளங்குகின்ற
பீதகச் சிற்றாடையும் முறையே, மின்னற் கொடியையும் அதைச் சார்ந்து விளங்கும் களங்கமற்ற சந்திரனையும்
இவ்விரண்டையுஞ் சூழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கோளையும் போலுமென்க. இல்பொருளுவமை:
அரசிலைப் பணிக்கு வெண் திங்களை உவமையாகச் சொன்னதனால், அவ் வாபரணம் வெள்ளியினாற் செய்யப்பட்டதென விளங்கும்.
கருநிறக் கழுத்திற் பொற்காறை விளங்குவது – காள மேகத்திற் செந்நிற மின்னற் கொடி விளங்குவது போலும்.

—————————–

கன்னற் குடம் திறந் தாலொத் தூறிக் கண கண சிரித்து வந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர் நடை நடவானோ–1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரியபிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் ஏற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

விளக்க உரை

தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து
எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து.
கண கண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு.
இவன் நடக்கிற நடை யழகு கண்டே சத்ருக்கள் சாக வேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

——————

முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல்
பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும்
தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடுமொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலை யீன்ற குட்டியோடுவதையும்,
கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.
காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.
நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக் காட்டிற்று.
அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால்,
அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.
மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்

————

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ–1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால்
அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து.
“கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும்,
காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம். இலச்சினை – லஷணம்.
கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான்.
இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும். தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

—————-

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடங்கொண்ட செவ் வாயூறி யூறி இற்றிற்று வீழ நின்று
கடுஞ்சேக் கழுத்தின் மணிக் குரல் போல் உடை மணி கண கணென
தடந்தாளினை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ–1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப்பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலிபோலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

விளக்க உரை

(தடந்தாளித்யாதி முதற்பாட்டிற்போல் பொருள் காண்க.)
மலர்ந்த தாமரைப்பூவில் நின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவதுபோலத் தனது வாயில் நின்றும்
இடைவிடாமல் ஜலம் பெருகவும், எருது நடந்து போம்போது அதன் கழுத்திற்கட்டிய மணி கணகணவென்று சப்திப்பது போலத்
திருவரையில் சாத்திய மணி சப்திக்கவும் தளர்நடை நடந்து வரவேணுமென்கை.

——————–

பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்க ளுலகினில் பெய்தறியாத மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ–1-7-8-

பதவுரை

கரு–கருநிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திருவரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

விளக்க உரை

கரு நிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும் போது
முன் பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும் பள்ளமுமான
இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி. அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம்.
பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று.
பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம். அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு –
பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம். பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு.
குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.

———-

வெண் புழுதி மேல் பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின்
கருங்கன்றுபோல் தெண் புழுதி யாடித் திரிவிக் கிரமன்
சிறு புகர் படவியர்த்து ஒண் போதலர் கமலச் சிறுக் காலுரைத்து
ஒன்றும் நோவாமே தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ–1-7-9-

பதவுரை

திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே போகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி–தெளிவான புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக் கொண்டு
புஷ்ப மெத்தையின் மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார்.
கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால்,
‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார்.
உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு. வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.

————-

திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும் புடை பெயர
பெருநீர்த் திரை யெழு கங்கை யிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ–1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய
கேசவன்–கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திருமுகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்–துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

நெற்றியில் தொங்குகின்ற சுட்டி அசையவும், குறியில் நின்றும் மூத்திரநீர் துளிதுளியாகச் சிந்தவும்
தளர்நடை நடந்து வரவேணு மென்கை. கருநிறத்தனான கண்ணனது திருநெற்றியி லசைந்துகொண்டு விளங்குஞ் சுட்டிக்கு,
கருநிறமான கடலின் நடுவில் அசைந்துகொண்டு தோன்றும் சந்த்ர ப்ரதிபிம்பம் ஏற்ற உவமையாம்.
சண்ணம்-ஆண்குறி–

————

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே–1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர்நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

விளக்க உரை

‘தாயர்’ எனப் பன்மையாகக் கூறியது-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
எனத் தாய்மார் ஐவராதலாலும், சிறுதாய் முதலியோரும் தாய்மாரே யாவராதலாலுமாம்.
தொட்டிற் பருவத்திலேயே பூதனை சகடாஸூரன் முதலியோர்களை முடித்ததனால், கண்ணபிரான் மெல்ல அடியிட்டு
நடக்கத் தொடங்கிய போதே ‘இனி, இவனால் நமக்கு என்ன தீங்கு நேரிடுமோ!’ என்று கம்ஸாதிகள் நடுங்கி
ஒடுங்கினராதலால் ‘ஒன்னார் தளர’ என்றாரென்க. ஒன்னார்-ஒன்றார்; (தம்மோடு மனம்) பொருந்தாதவர்; எனவே, பகைவராவர்.
பெரியாழ்வார் பிறந்தகுடி—வேயர்குடி எனப்படும்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-6–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 26, 2021

மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1-

பதவுரை

ஆணிப் பொன்னால் செய்த–மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்–(வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி–பொன் மணிக் கோவையை
உடை-உடைய
மருங்கின் மேல்–இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப–ஒலி செய்யவும்
பவளம்–பவழம் போன்ற
வாய்–வாயிலே
முத்து–முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கவும்
பண்டு–முற்காலத்திலேயே
காணி–பூமியை
கொண்ட–(புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்–திருக் கைகளாலே
பேணி–விரும்பி
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு–கரு நிறமான
குழல்–கூந்தலை யுடைய
குட்டனே–பிள்ளாய்!
சப்பாணி–சப்பாணி கொட்டியருள வேணும்.

விளக்க உரை

அரைச் சதங்கைகள் தொனிக்கவும் வாயிலே முத்துப் போன்ற பற்கள் விளங்கவும்
திருக்கைகளாலே சப்பாணி கொட்ட வேணுமென்கிறார்
பிறருடைய காரியம் செய்வதேயன்றோ உன் கைகளுக்குத் தொழில் என்பார் ‘பண்டு காணிகொண்ட கைகளால்’ என்றார்.

———–

பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல் நின்றிழிந்து உங்க ளாயர் தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி–1-6-2-

பதவுரை

பொன்–ஸ்வர்ண மயமான
அரை நாணொடு–அரை நாணோடு கூட
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
தன் அரை–தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட–அசைந்து ஒலிக்கவும்
தனி–ஒப்பற்ற
சுட்டி–சுட்டியானது
தாழ்ந்து–(திருநெற்றியில்) தொங்கி
ஆட–அசையவும்
என் அரை மேல் நின்று–என்னுடைய மடியிலிருந்து
இழிந்து–இறங்கிப் போய்
உங்கள்–உன்னுடைய (பிதாவான)
ஆயர் தம் மன்–இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய
அரை மேல்–மடியிலிருந்து
சப்பாணி கொட்டாய்-;
மாயவனே–அற்புதமான செயல்களை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-;

விளக்க உரை

கண்ணபிரான் தன் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் தகப்பனார் மடியிலிருந்து
சப்பாணி கொட்டுவதைப் பார்த்தால் அவனடைய ஸர்வாங்க ஸௌந்தர்யங்களையும் கண்ணாரக் கண்டு
உகக்கலாமென்பது பற்றி இங்ஙனம் வேண்டின படி.
உங்கள் – ஒருமையிற்பன்மை எண் வழுவமைதி
மன் – பெருமை யுடையவனுக்கு ஆகு பெயர்.

————–

பன் மணி முத்து இன் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன் இலங்கு பொற் றோட்டின் மேல்
நின் மணி வாய் முத் திலங்க நின்னம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி–1-6-3-

பதவுரை

என்–என்னுடைய
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்–பலவகைப் பட்ட
மணி–சதகங்களையும்
முத்து–முத்துக்களையும்
இன் பவளம்–இனிய பவழத்தையும்
பதித்த–அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன–அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு–விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்–பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து–உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்–உன் தாயினுடைய
அம்மணி மேல்–இடையிலிருந்து
சப்பாணி கொட்டாய்-;
ஆழி–திருவாழி மோதிரத்தை
அம் கையனே–அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;

விளக்க உரை

கீழிற்பாட்டில் பிரார்த்தித்தபடி நந்தகோபர் மடியிலிருந்து கொண்டு சப்பாணி கொட்டின கண்ணனைத் தன்
மடியிலேயே வர விரும்பி யசோதைப் பிராட்டி அழைக்கிறாள்.
அம்மைதன் – தன்மையிற் படர்க்கை.
அன்றி அம்மை என்பதைப் படர்க்கையாகவே கொண்டு நந்தகோபருடைய மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக்
காண்பதிலுங்காட்டில் கண்ணனைப் பிள்ளையாகப் பெறும் பாக்கியத்தையுடைய தாயின் மடியிலிருந்து
சப்பாணி கொட்டுவதைக் காண்கை நமக்கு மிகவும் உகப்பாயிருக்கையாலே ஆழ்வார் அத்தை அபேக்ஷிக்கிறாராகவுமாம்.
பதித்த + அன்ன = பதித்தன்ன: பெயரெச்சத்தின் அகரவீறு தொகுத்தல்;
பதித்து அன்ன என்றும் பிரிக்கலாம்.
ஆழி – ஸ்ரீஸுதர்சநாழ்வானுமாம்

————–

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ சந்திரா வா வென்று
நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4-

பதவுரை

வான்–ஆகாசத்திலே
நிலா–விளங்குகின்ற
அம்புலி–அம்புலியே!
சந்திரா–சந்திரனே!
தூ–வெண்மையான
நிலா–நிலாவையுடைய
முற்றத்தே–முற்றத்திலே
போந்து–வந்து
நீ–நீ
விளையாட–(நான்) விளையாடும்படி
வா–வருவாயாக
என்று–என்று (சந்திரனை அழைத்து)
நிலா–நின்று கொண்டு
நின்–உன்னை
புகழாநின்ற–புகழ்கின்ற
ஆயர் தம்–இடையர்களுடைய
கோ-தலைவராகிய நந்த கோபர்
நிலாவ–மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.

விளக்க உரை

நீ முற்றத்திலே நின்றுகொண்டு சப்பாணி கொட்ட வேணுமென்கிறாள்.
சந்திரனே! நான் விளையாடும்படி நீ சற்று இப்படி வருவாயாக என்று அழைத்துக் கொண்டே முற்றத்தில்
நீ நின்று கொண்டு நந்தகோபானும் மனம் மகிழுமாறு சப்பாணி கொட்டு என்றவாறு.

நின்புகழாநின்ற – உன் சேஷ்டைகளைக் கண்டு மனமகிழ்ந்து உன்னைக் கொண்டாடுகின்ற இடையர்.
‘நிலா’ என்ற சொல் மூன்றனுள்
முதலது – பெயர்ச் சொல்;
இரண்டாவது – வினைத் தொகை;
மூன்றாவது – ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினை யெச்சம்;
‘நில்லா’ என்பதன் தொகுத்தல். நிலாவுதல் – விளங்குதல்

———–

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5-

பதவுரை

புட்டியில்–திருவரையிற் படிந்த
சேறும்–சேற்றையும்
புழுதியும்–புழுதி மண்ணையும்
கொண்டு வந்து–கொணர்ந்து வந்து
அட்டி–(என் மேல்) இட்டு
அமுக்கி–உறைக்கப் பூசி
அகம் புக்கு–வீட்டினில் புகுந்து
அறியாமே–(எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்–சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்–மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்–வெண்ணெயையும்
உண்–உண்ணுகின்ற
பட்டி கன்றே–பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா–ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-.

விளக்க உரை

கண்ணன் புழுதியில் விளையாடும்போது, உடம்பில் வியர்வை நீருண்டாக, அவ்வேர்வை நீரால் நனைந்து
புழுதிபடிந்த இடம் சேறாகவும் நனையாதவிடம் புழுதிமண்ணாகவும் இருக்கும்.
அப்படியே வந்து தன் மேலணைந்தால் அந்தச் சேறும் புழுதியும் தன்மேலும் படிந்து விடுமாதலால் ‘அட்டி அமுக்கி’ எனப்பட்டது.
பட்டிக்கன்றே – பட்டி தின்று திரியும் கன்றுபோலே நெய் பால் தயிர்களைக் களவினால் தின்று திரிவதையே
பொழுது போக்காக வுடையவனே! என்றவாறாம்.

———–

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6-

பதவுரை

தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்–பேச்சை
தாரித்து கொள்ளாது–(மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து–யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்–(போர்க்களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்–ராஜ்யத்தை
ஆள–(தாமே) அரசாளுவதற்கு
பாரித்த–முயற்சி செய்த
மன்னர்–அரசர்களுமாகிய
நூற்றுவர்–நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட–மாண்டு போகும்படி
அன்று–(பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே
பஞ்சவர்க்கு–பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த–(பார்த்தஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்–திருக்கைகளாலே
சப்பாணி-;
தேவகி சிங்கமே–தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக்குட்டி போன்றவனே!
சப்பாணி-.

விளக்க உரை

“தந்தை சொல் கொள்ளாது” என்றது – தந்தையாகிய உன்னுடைய சொல்லைக் கேளாமல் என்று பொருள்படுதலால் முன்னிலைப்படர்க்கை.
எல்லாவுலகத்துக்கும் தந்தையாகையாலே தங்களுக்கும் தந்தையாகிய நீ பாண்டவர் துரியாதநாதியர் என்ற இருவகுப்பினரையும்
ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம் தூது சென்று பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டா;
ராஜ்யத்தில் இருவர்க்கும் பகுதியுண்டாகையால் ராஜ்யத்தை சமபாகமாகப் பிரித்து ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்;
அதற்கு ஸம்மதமில்லையாயின் தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்;
‘அதற்குமிஷ்டமில்லாதிருந்தால் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஓரூரையாவது கொடுங்கள்’ என்று பலபடியாக அருளிச் செய்ய
அந்தச் சொல்லுக்குச் சிறிதும் இசையாமல் ‘பராக்ரமிருந்தால் போர்செய்து ஜயித்துக் கொள்ளட்டும் ; இந்தப்பூமி வீரர்க்கே உரியது’
என்று இப்படி அஹங்காரங்கொண்டு மறுத்துச் சொல்லி போர் செய்து பாண்டவர்களை யழித்துத் தாங்களே பூமண்டலத்தை எல்லாம்
ஆளுவதாக நினைத்துத் துரியோதநாதியர் போர்க்களத்தில் ஸேனையைத் திரட்டிக்கொண்டு வர உன்னையல்லாது
வேறொன்றைத் துணையாகக் கொள்ளாத பாண்டவர்கள் வெற்றிபெற வேணுமென்று நினைத்த நீ ‘ஆயுதம் எடுக்கக்கூடாது’
என்று துரியோதனன் உன்னை வேண்டிக் கொண்டதனாலே அர்ஜுந ஸாரதியாய் நின்று எதிரிகளடங்கலும் தேர்க் காலிலே
நெரிந்து போம்படி தேரை நடத்தினாய்; அப்படி தேரை நடத்தின கைகளாலே சப்பாணி கொட்டவேணும் என்றாளாயிற்று.

தரித்து என்பது “தாரித்து” என நீட்டல் விகாரம் பெற்றுக்கிடக்கிறது. நூற்றுவர் பஞ்சவர் – தொகைக்குறிப்பு. உய்த்து – உய்க்க; எச்சத்திரிபு.

—————

பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை
இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7-

பதவுரை

பரந்திட்டு நின்ற–(எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள
படு கடல்–ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட–(வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்–கையின் மேலே
எறி திரை–வீசுகின்ற அலைகளினால்
மோத–மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற–(முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்–அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க–கலங்கி விடும்படி
சரம்–அம்புகளை
தொட்ட–தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;
சார்ங்கம் வில்–ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை
கையனே–(அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;

விளக்க உரை

சக்ரவர்த்தித் திருமகன் வாநர ஸேனைகளுடன் புறப்பட்டுப் போய்க் கடற்கரையை அடைந்து ‘லங்கைக்குப் போக வழிவிட வேணும்’
என்று கடலரசனாகிய வருணனை வேண்டி, அங்கு தர்ப்பசயகத்தில் படுத்து ப்ராயோபவேசமாகப் பலநாள் கிடக்கவும்
வருண தேவன் பெருமாள் பெருமையை இறையேனுமறியாமல் தன்னைச் சரணம் புகுந்த அவன் கைமேல் அலைமோதும்படி
அநாதரித்திருக்க பெருமாள் சீறி அக்கடலை வற்றுவிப்பதற்காக ஆக்நேயாஸ்த்ரத்தைத் தனது அம்பொன்றிலே தொடுத்துவிடத் தொடங்கவே
ஸமுத்ரராஜன் கொதிப்படைந்து அஞ்சியோடிவந்து பெருமாளைச் சரணமடைந்து கடல் வடிவமான தன் மேல்
அணைகட்டும்படி ஒடுங்கி நின்றனனென்ற வரலாறு இங்கு உணரத்தக்கது.
‘பரந்திட்டு’ ‘இரந்திட்டு’ ‘கரந்திட்டு’ என்ற மூன்றிடங்களிலும் இடு – துணைவினை.
படு -(சதகம் முதலியவை) உண்டாகின்ற என்றுமாம். எறிதிரை – வினைத்தொகை. கடலை – ஐகாரம் – அசை;
இனி உருபு மயக்கமாகக் கொண்டு கடல் மேல் என்றுரைத்து ‘கடலைச் சுரந்தொட்ட’ என்று இயைப்பினுமாம்.
‘கடல் கலங்க’ என்றிருந்தால் தளை தட்டுமென்க.

———————

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8-

பதவுரை

குரை–கோக்ஷியா நின்ற
கடல் தன்னை–ஸமுத்ரத்தை
நெருக்கி–(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு–குரங்குகளினுடைய
இனத்தாலே–கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி–ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்–பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை–லங்கையிலுள்ள
அரக்கர்–ராக்ஷஸர்களெல்லாம்
அலிய–அழிந்து போம்படி
அடு கணையாலே–கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய–நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;
நேமி–திருவாழி ஆழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.

விளக்க உரை

வாநரப்படைகளைத் துணைகொண்டு கடலில் ஸேதுகட்டின கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறாள்.
குரங்கு + இனம் = குரக்கினம்; வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர் வன்றொடராயிற்று;
“மென்றொடர் மொழியுட் சில வேற்றுமையில் தம்மினவன்றொடர்” என்னுஞ் சூத்திரவிதி அறிக.
குரை கடல் – வினைத்தொகை. நீர் – கடலுக்கு ஆகுபெயர். அரக்கர் – ‘ரக்ஷ: ’ என்ற வடசொல் திரிபு.

—————————

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய்
உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9-

பதவுரை

அளந்திட்ட–(தானே) அளந்து கட்டின
தூணை–கம்பத்தை
அவன்–அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட-புடைக்க
ஆங்கே–(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வான் உகிர்–கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உருஆய்–நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு–வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
(ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
உளம்–(அவ்விரணியனது) மநஸ்ஸு
தொட்டு–பரிசோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்–அவ்விரணியனுடைய
ஒளி–ஒளி பொருந்திய
மார்பு அகலம்–மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட–(நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி
பேய்– பூதனையின்
முலை–முலையை
உண்டானே–உண்டவனே!
சப்பாணி-;

விளக்க உரை

அளந்திட்ட தூணாவது – முன்பே நரசிங்க­மூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி
தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது. தூண் – ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம்.
அவன் தட்ட – கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்று வொண்ணாதபடி
தானே அழன்று புடைக்கவென்கை. உளம் – உள்ளம் என்பதன் தொகுத்தல்.
ஒண் மார்பென்ற – நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே
பொன் மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படி யாயிற்றென்ற கருத்தைக் காட்டும்.
மார்பு அகலம் – அகலமான மார்பு என்றுமாம்.

—————————–

அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10-

பதவுரை
(துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அமரர்கள்–தேவர்கள்
அடைந்திட்டு–(உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை–ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு–நெருங்கி
மந்தரம்–மந்தர பர்வதத்தை
மத்து ஆக–(கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி–நேராக நிறுத்தி
வாசுகி–வாசுகியென்னும் பாம்பாகிய
வன்வடம்–வலிய கயிற்றை
(அந்த மந்தரமலையாகிற மத்திலே)
கயிறு ஆக சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட–கடைந்த
கைகளால் சப்பாணி-;
கார்முகில் வண்ணனே–காளமேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;

விளக்க உரை

அடைந்திட்டு – அடைந்திட; எச்சத்திரிபு. எம்பெருமான் தேவர்களையும் அஸுரர்களையும் முதலிற் கடையும்படி விட்டு,
பின்பு அவர்கள் இளைத்துநிற்க தான் இரண்டு ரூபத்தை யெடுத்துக்கொண்டு தேவர்கள் பக்கத்திலும் அஸுரர்கள் பக்கத்திலும் போய்
அவர்களுக்கு ஸஹாயமாக நின்று அமுதம் தோன்றுமளவும் கடைந்தனனென அறிக.
மிடைந்திட்டு – மிடைந்திட்டு (செருக்கி) எனப் பிறவினைப் பொருள் கொள்க; எதுகை நோக்கி வந்த வழுவமைதி.
மந்தரம், வாசுகி – வடசொற்கள்.

————

ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை
நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11-

பதவுரை

ஆள் கொள்ள–(அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய–திருவவதரித்த
ஆயர் தம் கோவினை–இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்–ஆசையினால்
நாள்–எந்நாளிலும்
கமழ்–மணம் வீசுகின்ற
பூ–புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்–சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்–சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்–இஷ்டத்தோடு
சொல்லுவார்–ஓதுகிறவர்களுடைய
வினை–பாபங்கள்
போம்–அழிந்து போம்.

விளக்க உரை

இவ்விருள் தருமா ஞாலத்திலுள்ள சேதனர்களைத் திருத்தியடிமை கொள்வதற்காகத் திருவவதரித்த கண்ணபிரானை
நோக்கிச் சப்பாணி கொட்டுமாறு சொன்ன இப் பாசுரங்கள் பத்தையும் அன்புடன் ஓத வல்லவர்கள் தீதிலராவர்.
மூன்றாமடியில் ‘வேட்கையால்’ என்று ஓதுவார்கள்.

——–

அடிவரவு – மணி பொன் பன் துயிலா புட்டி தாரித்து பரந்து குரக்கினம் அளந்திட்ட ஆட்கொள்ளத் தொடர்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-5–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

April 26, 2021

உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா ஊழிதோறூழி பல ஆலினிலையதன் மேல்
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமமெ னக் கருதிச் செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக
ஐய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-1-

பதவுரை

உய்ய–(ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்து
(பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை)
உண்ட–உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா–அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு–பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்–ஆலிலையின் மேல்
பைய–மெள்ள
உயோகு துயில் கொண்ட– யோகநித்திரை செய்தருளின
பரம் பரனே–பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்–தாமரை மலர் போன்று
நீள்–நீண்டிருக்கின்ற
நயனம்–திருக் கண்களையும்
அஞ்சனம்–மை போன்ற
மேனியனே ஐய–திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்–செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான
நின் அகலம்–உன் திரு மார்வானது
(இந்நிர்த்தனத்தால் அசையாமல்)
சேமம் என கருதி–ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி–ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்–திரு மகரக் குழைகளோடு கூடின
காது–திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக–மிகவும் விளங்கும்படி
எனக்கு–எனக்காக
ஒரு கால்–ஒரு விசை
செங்கீரை ஆடுக–செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்–இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே–போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!! –

விளக்க உரை

மஹாப்ரளப் பெருங்கடலானது இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் முடித்தபின்பு இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம்
மூ­லப்பிரக்ருதியில் அழுந்திக் கிடக்க அப்போது எம்பெருமான் ‘நித்யஸூரிகளைப் போல நிம்மை அநுபவித்து
நித்ய கைங்கரியஞ் செய்துகொண்டு வாழவேண்டிய இவ்வுயிர்கள் கைகால் முதலிய உறுப்புகள் ஒன்றுமின்றி
இறகொடிந்த பக்ஷிபோல் கிடக்கின்றனவே!’ என்று வியாகுலப்பட்டுக் கருணை கொண்டு
கைகால் உடம்பு முதலியவற்றைக் கொடுத்துத் தன்னை யடையுமாறு சாஸ்த்ரங்களையங் கொடுத்தருளினன் என்பது அறியத்தக்கது.
அவாந்தர ப்ரளயத்தில் உலகங்கள் அழியாதபடி அவற்றையுண்டு வயிற்றில் வைத்துப் பாதுகாப்பதனால் உண்ட மணிவயிறா! என்றார்.
உலகங்களை எல்லாம் ரக்ஷிப்பதற்கான உபாயத்தைச் சிந்தனை செய்துகொண்டு உறங்குவான்போல் இருக்குமிருப்பு ‘யோகநித்ரை’ எனப்படும்.
அதுவே இங்கு உயோகுதுயில் எனப்பட்டது. யோகம் என்னும் வடசொல் உயோகு எனத் திரிந்தது.
‘பராத்பர:’ என்னும் வடசொல் தொடர் பரம்பரன் என வந்தது; உயர்ந்தவர்களான தேவதைகளிற் காட்டிலும் மிக உயர்ந்தவன் என்றபடி.

செங்கீரை ஆடும்போது திருமார்வில் உறையும் பிராட்டிக்கு அசைதல் உண்டாகாதபநா ஸாவதாநினாய் ஆடவேணும் என்பாள்
செய்யவள் நின்னகலஞ் சேமமெனக்கருதி என்கிறாள்.
ஸாக்ஷாத் திருமகள் கொழுநனே கண்ணபிரானாக வந்து பிறந்திருக்கின்றமை நின்கு வெளியிடப்பட்டதென்க.
சேமம் – க்ஷேமமென்னும் வடசொல் விகாரம்.
மகரக்காது என்றவிடத்து மகரமென்னுஞ் சொல் அதன்வடிவத்தை உடைய குண்டலத்திற்கு ஆகுபெயர்.

—————–

கோளரி யின்னுருவங் கொண்டு அவுணனுடலம் குருதி குழம்பி யெழக் கூருகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டு வர
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-2-

பதவுரை

கோன்–வலிமையை யுடைய
அரியின்–(நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு–வேஷங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
உடலம்–சரீரத்தில்
குருதி–ரத்தமானது
குழம்பி எழ–குழம்பிக் கிளரும்படியாகவும்
அவன்-அவ்வஸுரனானவன்
மீள–மறுபடியும்
மகனை–தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி–ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்–கூர்மையான நகங்களாலே
குடைவாய்–(அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை–மேன்மை பொருந்திய
அமரர் பதி–தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா–மிகவும் கோபித்துவா (அதனால்)
காளம்–கறுத்த
நில்–சிறந்த
மேகம் அவை–மேகங்களானவை
கல்லொடு–கல்லோடு கூடின
கார் பொழிய–வர்ஷத்தைச் சொரிய
கருதி–(‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை–(அந்த) கோவர்த்தநகிரியை
குடையா–குடையாகக்கொண்டு
காலிகள்–பசுக்களை
காப்பவனே–ரக்ஷித்தருளினவனே!
ஆன–(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு. . . . . ஆடுக-.

விளக்க உரை

“எங்குமுளன்” என்றுசொன்ன ப்ரஹ்லாதனுடைய சொல்லை யதார்த்தமாக்கும் பொருட்டுத் தூணில் நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி
இரணியன் உடலைப் பிளந்தொழித்தவனே! பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த இந்திரன் பங்கமடையும்படி
கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்து ஆய்ப்பாடியைக் காத்தருளினவனே! எனக்கொருகால் செங்கீரையாடியருள்.

­மூன்றாமடியில் “கால்பொழிய” “கார்பொழிய” என்பன பாடபேதங்கள். முந்தினபாடத்தில் “காலொடு கல்பொழிய” என்று அந்வயித்து
“காற்றோடு கூடிக் கல்மழையைச் சொரிய” என்றுரைக்க. நன்மேகமென்றது எஜமானன் சொற்படி நிடக்கும் நின்மையைக் கருதியென்க.

—————-

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாபியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை யானவனே தரணி தல முழுதும் தாரகை யின்னுலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-3-

பதவுரை

நம்முடை–எங்களுக்கு
நாயகனே–நாதனானவனே!
நால் மறையின்–நாலு வேதங்களுடைய
பொருளே–பொருளாயிருப்பவனே!
நாபியுள்–திருநாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்–நல்ல தாமரைமலரிற் பிறந்த
நான்முகனுக்கு–பிரமனுக்கு
ஒருகால்–அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே–தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்–பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்–நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி–திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்–அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம–பூர்ணமாம்படி
வளர்ந்தவனே–த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்–குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்–ஏழு ரிஷபங்களும்
விரவிய–(உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்–ஸமயத்திலே
வென்று–(அவற்றை) ஜயித்து
வருமவனே–வந்தவனே!
அம்ம–ஸ்வாமியானவனே!
எனக்கு . . . ஆடுக.

விளக்க உரை

கர்மகாண்டம் என்றும் ப்ரஹ்மகாண்டம் என்றும் பகுக்கப்பட்டுள்ள வேதராசியில் முந்தின பகுதியில் பலப்பல கருமங்கள்
மாத்திரமே சொல்லப்பட்டு பரப்ரஹ்மஸ்வரூபம் சிறிதும் சொல்லப்படாதிருந்தாலும் வைதிக கருமங்கள் யாவும்
எம்பெருமானையே ஆராதிப்பனவாதலால் அப்படிப்பட்ட கருமங்களைச் சொல்லுகிற பூர்வகாண்டமும்
பரம்பரையாய்ப் பரப்ரஹ்ம ப்ரதிபாதநத்திலேயே முடிவடைகின்றன வென்பது ஆன்றோர்களின் ஸித்தாந்தமாதலால்
நான்மறையின் பொருளே! என்றார்.

மதுகைடபர்கள் நான்முகனிடத்திலிருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு போனபோது
அப்பிரமன் வேதங்களை யிழந்ததற்காக ‘கண்ணிழந்தேன் பொருளிழந்தேன்’ என்று கதறிக் கதறி யழ
அவ்வேதங்களை எம்பெருமான் மீட்டுக்கொணர்ந்து கொடுத்துத் துயர் தீர்த்ததனால்
“நான்முகனுக் கொருகால் தம்மனையானவனே!” என்றார்.

——————-

வானவர் தாம் மகிழ வன் சகடமுருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே
தேனுகனும் முரனும் திண் திறல் வெந் நரகன் என்பவர் தாம் மடியச் செருவதரச் செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-4-

பதவுரை

வானவர் தாம்–தேவர்கள்
மகிழ– மகிழும்படியாகவும்
வல் சகடம்–வலியுள்ள சகடாஸுரன்
உருள–உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும்
வஞ்சம்-வஞ்சனையை உடையளான
பேயின்–பூதனையினுடைய
முலை–முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு–விஷத்தை
அமுது உண்டவனே–அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
கானகம்–காட்டிலுள்ளதான
வல்–வலிமை பொருந்திய
விளவின்–விளாமரத்தினுடைய
காய்–காய்களானவை
உதிர–உதிரும்படி
கருதி–திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு–கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்–(விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்–கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே–என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்–தேனுகாஸுரனும்
முரனும்–முராஸுரனும்
திண் திறல்–திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்–கொடுமை யுடையனான
நரகன்–நரகாஸுரனும்
என்பவர் தாம்–என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய–மாளும்படியாக
செரு–யுத்தத்திலே
அதிர–மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்–எழுந்தருளுமவனான
ஆனை–ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு . . . ஆடுக-.

விளக்க உரை

“நஞ்சமதுண்டவனே “என்றும் பாடமுண்டு; முலையில் தடவிக்கிடந்த அந்தக் கொடிய விஷத்தை உண்டவனே! என்று பொருளாம்.
(கானகமித்யாதி). ) விளாமரமாய் நின்ற ஒரஸு ( கபித்தாஸுர)ன் மீது கன்றாயிருந்த ஒரஸுர ((வத்ஸாஸுர)னை விட்டெறிந்து
இரண்டையும் சேர முடித்தருளினான் என்க. கன்றே! இளமையைச் சொன்னபடி;
உவப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று; தினைவழுவமைதி. –
தேனுகன் – கழுதையான வடிவைக் கொண்டு காட்டுக்குள்ளே கண்ணனை நலிவதாக வந்தவன்.
கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடுமேய்த்துக் கொண்டு பழங்கள் அழகாக மிகுதியாய்ப் பழுத்து
வாசனை வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி உதிர்த்துக்கொண்டு வருகையில்
அவ்வனத்துக்குள் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் கோப­மூண்டு
ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்கால் இரண்டையும் பற்றி
அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனனென்பதாம்.

முரனையும் நிரகனையும் மடிவித்த விவரம்-:

எம்பெருமான் வராஹாவதாரம் செய்து பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்த பொழுது எம்பெருமானுடைய ஸ்பர்சத்தால்
பூமிதேவிக்குக் குமாரனாய்ப் பிறந்தவனும் அஸமயத்தில் சேர்ந்து பெறப்பட்டதனால் அஸுரத்தன்மை பூண்டவனுமான
நரகனென்பவன் ப்ராக்ஜோதிஷமென்னும் பட்டணத்திலிருந்து கொண்டு ஸகல ப்ராணிகளையும் நலிந்து
தேவஸித்த கந்தர்வாதிகளுடைய கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பற்பலரைப் பலாத்காரமாய்
அபஹரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக் கருதித் தன்மாளிகையிற் சிறை வைத்து
வருணனது குடையையும் மந்தாகிரிசிகரமான ரத்நபர்வதத்தையும் தேவர்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையும்
கவர்ந்து போனதுமன்றி இந்திரனுடைய ஐராவத யானையையும் அடித்துக் கொண்டுபோகச் சமயம் பார்த்திருக்க,
அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட இந்திரனது வேண்டுகோளால் கண்ணபிரான் கருடனை வரவழைத்து பூமிதேவியின் அம்சமான
ஸத்யபாமையுடனே தான் கருடன்மேலேறி அந்நகரத்தையடைந்து சக்ராயுதத்தை ப்ரயோகித்து அவன் மந்திரியான முரன் முதலிய
பல அஸுரர்களையும் இறுதியில் அந்த நரகாஸுரனையும் அறுத்துத்தள்ளி அழித்து, அவன் பல திசைகளிலிருந்து கொண்டுவந்து
சிறைப்படுத்தியிருந்த பதினாறாயிரத்தொரு கன்னிகைகளையும் த்வாரகையிற் கொண்டு சேர்த்து மணஞ்செய்து கொண்டனனென்பதாம்.
ஆனை – முற்றுவமை; அண்மைவிளி.

——–

மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தினிள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்தணியார் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-5-

பதவுரை

வார் குழல்–நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்–நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே
வைத்தன–சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து–மத்தாலே
அளவும்–அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்–தயிரையும்
நெய்–நெய்யையும்
களவால்–திருட்டு வழியாலே
வாரி–கைகளால் அள்ளி
விழுங்கி–வயிறார உண்டு
உன்னிய–உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய்
ஒருங்கு–ஒருபடிப்பட
ஒத்த–மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்–இரட்டை மருதமரமாய்க் கொண்டு
வந்தவரை–வந்துநின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்–துடைகளாலும் கைகளாலும்
உந்திய–இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்–வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த–அப்பனே!
முத்து–திருமுத்துக்கள் தோன்றும்படி
இன்–இனிதான
இள முறுவல்–மந்தஹாஸமானது
முற்ற–பூர்ணமாக
வருவதன் முன்–வெளிவருவதற்கு முன்னே
முன்னம் முகத்து–முன் முகத்திலே
அணி ஆர்–அழகு மிகப் பெற்று
மொய்–நெருங்கி யிரா நின்ற
குழல்கள்–திருக் குழல்களானவை
அலைய–தாழ்ந்து அசையும்படி
எனக்கு . . . . ஆடுக-.

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் சேர்த்துவைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவுவழியில் வாரி உட்கொண்டதற்காக
யசோதையினால் ஓருரலோடே பிணித்துக் கட்டப்பட்டு அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து சென்ற கண்ணபிரான்
இரட்டை மருதமரங்களினிடையே போனபோது அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்து அவற்றில் ஆவேசித்திருந்த அசுரர்களும்
உருமாய்ந்தொழிந்தனர் என்பது முன்னடிகளில் அநுஸந்திக்கப்பட்ட கதை.
நிளகூபரன் மணிக்ரீவர் என்னும் குபேர புத்திரரிருவர் முன்பொரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்திரீகளுடனே ஆடையில்லாமல்
ஜலக்ரிடை செய்து கொண்டிருக்கையில் நாரதமுனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு
ஆடையெடுத்து உடுத்து நீங்க இந்த மைந்தர் மாத்திரம் மதுபான மயக்கத்தால் வஸ்திரமில்லாமலேயிருக்க
நாரதர் கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க
உடனே அவர்கள் வணங்கி வேண்டிக்கொண்டதற்கு இரங்கி நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களருகில்
வருஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம் பெற்று மீள்வீர் என்று சாபவிடை கூறிப்போயினர்.
இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில் கம்ஸனால் ஏவப்பட்ட இரண்டு அசுரர்களும்
ஆவேசித்திருந்தனரென்பதும் சில புராணங்களில் உள்ளது.
“ஒருங்கொத்த விணைமருத முன்னியவந்தவரை” என்று இவ்விடத்திலும்
பொய்ம்மாயமருதான அசுரரை என்றுமேல் ­மூன்றாம்பத்திலும் இவ்வாழ்வாரருளிச் செய்வனவுங் காண்க.

ஊரு, காம் – வடசொற்கள்.

பருவம் ஏறினால் புன்சிரிப்பு முற்றிப் பெருஞ்சிரிப்பாக மாறிவிடுமாதலால் “முத்தினிளமுறுவல் முற்ற வருவதன்முன்” என்றார்.
‘பற்கள்’ என்றாவது முத்துப் போன்ற பற்கள் என்றாவது சொல்ல வேண்டுமிடத்து முத்து என்றே இங்குச் சொல்லியிருப்பது – உவமையாகு பெயர்.

———–

காய மலர் நிறவா கரு முகில் போலுருவா கானக மா மடுவில் காளிய னுச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே
ஆய மறிந்து பொரு வான் எதிர் வந்த மல்லை அந்தர மின்றி யழித் தாடிய தாளிணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-6-

பதவுரை

காய மலர்–காயாம் பூப் போன்ற
நிறவா–நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்–காள மேகம் போன்ற
உருவா–ரூபத்தை யுடையவனே
கானகம்–காட்டில்
மா மடுவில்–பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்–காளிய நாகத்தினுடைய
உச்சியிலே–தலையின் மீது
தூய–மனோஹரமான
நடம்–நர்த்தநத்தை
பயிலும்–செய்தருளின
சுந்தர–அழகையுடையவனே!
என் சிறுவா–எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்–உன்னதமாய்
மதம்–மதத்தை யுடைத்தான
கரியின்–குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு–தந்தங்களை
பறித்தவனே–முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து–(மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து
பொருவான்–யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த–எதிர்த்து வந்த
மல்லை–மல்லர்களை
அந்தரம் இன்றி–(உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து–த்வம்ஸம்செய்து
ஆடிய–(இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தான் இணையாய்–திருவடிகளை யுடையவனே!
ஆய–ஆயனே!
எனக்கு. . . ஆடுக-.

விளக்க உரை

காளியனுச்சியில் நடம்பயின்றதும் மதக்கரியின் கொம்பு பறித்ததும் மல்லர்களை அழித்ததும் செங்கீரையாடும் பருவத்திற்கு
வெகுநாள் கழித்தபின் நடந்த செய்திகள் ஆகையாலே இந்தச் செய்திகளை யெடுத்துச் சொல்லி யசோதைப் பிராட்டி
“ஆடுக செங்கீரை” என்று பிரார்த்தித் திருக்கமாட்டாளே;
“அன்னநடை மடவாளசோதை யுகந்தபரிசு ஆனபுகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ்” என்கிற இவ்வாழ்வார்
அந்தச் செயல்களையும் கூட்டிக்கொண்டு எப்படி அருளிச்செய்கிறாரென்று சிலர் சங்கிப்பர்; கேண்மின்;
இவ்வாழ்வார் எம்பெருமானருளாலே மயர்வற மதிகலமருளப் பெற்றவராகையாலே இவர்க்கு அப்பெருமானுடைய
ஸ்வரூப ரூபகுண சேஷ்டிதங்களெல்லாம் ஒருசேர ப்ரகாசிப்பதனாலே எதிர்காலத்தில் நடக்கும் செய்கைகளையும்
மற்றை அவதாரங்களின் செய்கைகளையும் பரத்வம் முதலியவற்றின் தன்மைகளையும் அர்ச்சாவதாரங்களில் தோன்றுகிற
குணசேஷ்டிகளையும் சேர்த்துக் கூறுகின்றாரென்றுணர்க.
இந்த ஸமாதானம் இப்பாட்டுக்கு மாத்திரமல்ல; கீழும் மேலுமுள்ள பல பாட்டுக்களுக்குமாம்.

­மூன்றாமடியில் ஆயம் – வேலைத்திறம். அந்தரமின்றி என்பதற்கு – மல்ல யுத்தம் செய்யும் போது ஓருடலுக்கும் மற்றோருடலுக்கும்
இடைவெளியில்லாமல் நெருங்கிப் பொருது என்றும் உனக்கொரு அபாயமின்றிப் பொருது என்றும் உரைக்கலாம்.
“காயாமலர்” என்பது காயமலரென்று குறுக்க விகாரம் பெற்றது.

———-

துப்புடை யயார்கள் தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-7-

பதவுரை

துப்பு உடை–நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்–இடையர்களுடைய
சொல்–வார்த்தையை
வழுவாது–தப்பாமல்
ஒரு கால்–ஒரு காலத்திலே
தூய–அழகியதாய்
கரு–கறுத்திரா நின்றுள்ள
குழல்–கூந்தலையுடையளாய்,
நல் தோகை–நல்ல தோகையையுடைய
மயில் அனைய–மயில்போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா–நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்–(கொடுமையில்) நன்றான
விடைஏழ்–ரிஷபங்களேழும்
அவிய–முடியும்படியாக
நல்ல திறல் உடைய–நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே–அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே!
தன்–தன்னுடைய
மிகு சோதி–நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே
புக–செல்லும்படியாக
தனி-தனியே
ஒரு-ஒப்பற்ற
தேர்–தேரை
கடலி–கடத்தி
தப்பின–கை தப்பிப்போன
பிள்ளைகளை–வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய–தாயோடு கூட்டின
என் அப்ப-என் அப்பனே!
எனக்கு. . . . ஆடுக-.

விளக்க உரை

ஸீதா விவாஹத்திற்கு வில்முறியைப் பந்தயமாக வைத்திருந்தது போல நப்பின்னை திருமணத்திற்கு
எருதுமுறியைப் பந்தயமாக வைத்திருந்ததும் அப்படியே அவ்வெருதுகள் ஏழையும் வலியடக்கிக் கண்ணபிரான்
அவளை மணந்து கொண்டதும் ப்ரஸித்தம். எருதுகளினுடைய முரட்டுத்தனத்தையும் கண்ணபிரானுடைய
திருமேனியின் மென்மையையும் நோக்காமல் எருதுகளோடே போர் செய்ய வேணுமென்று விதித்த இடையர்களின்
நெஞ்சுரத்தை நினைத்துத் துப்புடையாயர்கள் என்றார்.
இனி “துப்புடைய” என்ற இவ்விசேஷணத்தை இரண்டாமடியின் முடிவிலுள்ள நாதனுமானவனே! என்றதோடு அக்வயித்து
(எருதேழையும் வலியடக்கவல்ல) ஸாமர்த்தியமுடைய கண்ணபிரானே! என்பதாகவும் பொருள் கொள்வர்.
மிகக் கொடிய ரிஷபங்களை ‘நல்விடை’ என்றது கடுவிடமுடைய பாம்பை ‘நல்ல பாம்பு’ என்பது போல.

மூன்றாமடியிற் குறித்த வைதிகன் பிள்ளைகளை உடலொடுங்கொண்டு கொடுத்த கதை வருமாறு :-

ஒரு ப்ராஹ்மணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுமுட்பட முகத்தில்
விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்திலே போயிற்றாறென்று தெரியாமல் காணவொண்ணாது போய்விடுகையாலே
நான்காம்பிள்ளையை ஸ்த்ரீ ப்ரஸவிக்கப் போகின்ற வளவிலே அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து இந்த
ஒரு பிள்ளையையாயினும் தேவரீர் பாதுகாத்துத் தந்தருளவேண்டும் என்று ப்ரார்த்திக்க கண்ணன் அப்படியே செய்கிறேன்
என்று அநுமதி செய்தபின்பு ஒரு யாகத்தில் தீக்ஷிதனாயுள்ள கண்ணபிரான் எழுந்தருளக் கூடாதென்பது பற்றி
அர்ஜுனன் நான் போய் ரக்ஷிக்கிறேன் என்று ப்ரதிஜ்ஞை செய்து ப்ராஹ்மணனையும் கூட்டிக்கொண்டு போய்
ப்ரஸவக்ருஹத்தைச் சுற்றும் காற்று முட்பட ப்ரவேசிக்கவொண்ணாதபடி சாக்கூடங்கட்டிக் காத்துக் கொண்டு நிற்கையில்
பிறந்தபிள்ளையும் வழக்கப்படி பிறந்தவளவிற் காணவொண்ணாது போய்விடவே ப்ராஹ்மணன் வந்து அர்ஜுனனை மறித்து
க்ஷத்ரியாதமா! உன்னாலன்றோ என்பிள்ளை போம்படியாயிற்று; கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ கெடுத்தாய்
என்று நிந்தித்துக் கண்ணன் பக்கலிலே இழுத்துக்கொண்டு வர கண்ணபிரான்கண்டு புன்சிரிப்புக் கொண்டு அவனை விடு;
உமக்குப் பிள்ளையை நான் கொணர்ந்து தருகிறேன் என்றருளிச் செய்து ப்ராஹ்மணனையும் அர்ஜுனனையும்
தன்னுடன் கொண்டு தேரிலேறி அர்ஜுனனைத் தேர் செலுத்தச் சொல்லி அத்தேர்க்கு இவர்கட்கும் திவ்யரஸத்தியைத்
தன் ஸங்கல்பத்தால் கல்பித்து இவ்வண்டத்துக்கு வெளியே நெடுந்தூரமளவும் கொண்டுபோய் அங்கு ஓரிடத்தில் தேருடனே
இவர்களை நிறுத்தி தேஜோ ரூபமான பரமபதத்திலே – தன் நிலமாகையாலே தானே போய்ப்புக்கு அங்கு
நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்தர்யங் காட்டுகைக்காவும் கண்ணபிரானுடைய பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும்
பூர்வரூபத்தில் ஒன்றுங்குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினனென்ற வரலாறு அறிக.
தப்பின பிள்ளைகளைத் தாயொடு கூட்டிய என்று இயையும். தனிமிகு சோதிபுக என்ற பாடத்தை மறுக்க.

——–

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத் தமுதே
என் னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே-1-5-8-

பதவுரை

மன்னு–(ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்–திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்–திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்–மதிலாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு–திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே–அதிபதியானவனே!
கண்ணபுரத்து–திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் அவலம்–என் துன்பங்களை
களைவாய்–நீக்குபவனே!
உன்னை–(மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்–இடுப்பிலே
கொண்டு–எடுத்துக் கொண்டு
தம் இல்–தங்கள் அகங்களிலே
மருவி–சேர்ந்து
உன்னொடு–உன்னோடு
தங்கள்–தங்களுடைய
கருத்து ஆயின செய்து–நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்–மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்-இளம்பெண்களும்
மகிழ–(இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும்
கண்டவர்–(மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்–கண்களானவை
குளிர–குளிரும்படியாகவும்
கற்றவர்–(கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர–பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும்
பெற்ற–உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு–என் விஷயத்திலே
அருளி–கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமியானவளே!
ஆடுக ஆடுக-.

பிரானே! நீ எப்படி செங்கீரையாட வேணுமென்றால் உன்னை இடுப்பிலெடுத்துக் கொண்டு தங்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று
தங்களிஷ்டப்படி உன்னை யனுபவித்து வருகின்ற இளம் பெண்களும் மனமகிழும்படி ஆடவேணும்;
ஸாமாந்யமாகப் பார்க்கிறவர்கள் எல்லாருடையவும் கண்கள் குளிரும்படி ஆடவேணும்;
கவி தொடுக்கக் கற்றவர்கள் பிள்ளைக் கவிகள் பாடிக்கொண்டு வரும்படி ஆடவேணும்.

அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக
அவதரித்தனனென்பதை மூன்றாமடியில் வெளியிடுகின்றனரென்க.
திவ்யதேசங்களில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குணம் விளங்கும்; திருமாலிருஞ்சோலையில் ராஜாதி ராஜனாயிருக்கும்
தன்மை விளங்குதல் பற்றி “சோலைமலைக்கு அரசே” என்றார்;
திருக்கண்ணபுரத்தில் பரமயோக்யனாயிருக்குந் தன்மை விளக்குதல்பற்றி “கண்ணபுரத்து அமுதே” என்றார்.
‘அபலம்’ என்னும் வடசொல் அவலமெனத் திரிந்தது.

——

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக
நீல நிறத்தழகா ரைம்படையின் நடுவே நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-9-

பதவுரை

மறை–வேதத்தினுடைய
ஏலும்–தகுதியான
பொருளே–அர்த்தமானவனே!
பாலொடு–பாலோடே கூட
நெய்–நெய்யும்
தயிர்–தயிரும்
ஒண் சாந்தொடு–அழகிய சந்தநமும்
செண்பகமும்–செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்–தாமரைப் பூவும்
நல்ல–உத்தமமான
கருப்பூரமும்–பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர–கலந்து பரிமளிக்க
கோலம்–அழகிய
நறு பவளம்–நற் பவளம் போல்
செம்–அழகியதாய்
துவர்–சிவந்திருக்கிற
வாயின் இடை–திருவதரத்தினுள்ளே
கோமளம்–இளையதான
வெள்ளி முளை போல்–வெள்ளி முளை போலே
சில பல்–சில திரு முத்துக்கள்
இலக–விளங்க
நீலம் நிறத்து–நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்–அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே–பஞ்சாயுதத்தின் நடுவே
நின்–உன்னுடைய
கனி–கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்–அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ–இற்றிற்று விழ
ஆடுக-.

விளக்க உரை

கண்ணபிரான் நெய் பால் தயிர் முதலியவற்றைப் பலகாலும் அமுது செய்வதாலும், சந்தனம் செண்பகம் முதலியவற்றைப்
பலகாலும் திருமேனியிலே சாத்திக்கொள்வதனாலும் செங்கீரையாடும்போது அவைகள் நல்ல பரிமளம் கமழ நிற்கும்.
அப்படிச் செங்கீரை யாடுகையில் வாயைத் திறந்து சிறிது சிரிக்கும் போது
“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்” என்றபடி இயற்கையாகவே தாமரைப்பூ பச்சைக் கற்பூரங்களின்
நறுமணமுடைய திருப்பவளத்தின் பரிமளமும் வீசும்; வாயினுள்ளே வௌவியரும்புகள் போன்ற சிலபற்கள் பிரகாசிக்கும்;
திருமார்விலணிந்த ஆபரணங்களின் மேல் வாயிலூறுகிற அம்ருத ஜலம் இற்றிற்று விழும்.
இப்படிப்பட்ட நிலைமைகளுடனே செங்கீரை யாடவேணு மென்றதாயிற்று.

—————-

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோல் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக ஆடுகவே–1-5-10-

பதவுரை

எங்கள் குடிக்கு–எங்கள் வம்சத்துக்கு
அரசே–ராஜாவானவனே!
செம் கமலம்–செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்–திருவடிகளில்
சிறு இதழ் போல்–(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்–திரு விரல்களில்
சேர் திகழ்–சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்–திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்–சதங்கைகளும்
அரையில் தங்கிய–அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்–பொன் அரை நாணும்
(பொன்) தாள–பொன்னால் செய்த காம்பையுடைய
நல்–நல்லதான
மாதுளையின் பூவொடு–மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்–(நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்–திருக்கை மோதிரங்களும்
சிறியும்–(மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்–மங்களாவஹமான
ஐம்படையும்–பஞ்சாயுதமும்
தோள் வளையும்–திருத் தோள் வளைகளும்
குழையும்–காதணிகளும்
மகரமும்–மகர குண்டலங்களும்
வாளிகளும்–(திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்–திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து–அமைந்து
இலக–விளங்கும்படி
ஆடுக. . . ஆடுக. –.

விளக்க உரை

கண்ணபிரான் திருமேனியிலணிந்துள்ள திவ்யாபரணங்களை வாயாரப் பேசி அனுபவிக்கிறார்.
செங்கீரையாடும் போது ஆபரணங்கள் எல்லாம் அசையுமாதலால் இவ்வாறு அருளிச் செய்தனர்.
செந்தாமரைப் பூவில் சிறிய இதழ்கள் தோன்றுவது போல் திருவடிகளில் சிறு விரல்கள் தோன்றுகின்றன என்பது
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் என்றதன் கருத்து.
கிண்கிணி – அரைச் சதங்கை யுமாகலாம் –பாதச் சலங்கை யுமாகலாம்.

————–

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையு மானவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகுமுடையாய் ஆடுக வாடுக வென்று
அன்ன நடை மடவாள் அசோதை யுகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்ட னுரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பமது எய்துவரே-1-5-11-

பதவுரை

அன்னமும்–ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்–மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்–நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்–வாமந ரூபியாயும்
ஆமையும்–கூர்ம ரூபியாயும்
ஆனவனே–அவதரித்தவனே!
ஆயர்கள்–இடையர்களுக்கு
நாயகனே–தலைவனானவனே!
என் அவலம்–என் துன்பத்தை
களைவாய்–நீக்கினவனே!
செங்கீரை ஆடுக–செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று–பலகாலுமாடவேணும் என்று
அன்னம் நடை–ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்–நற்குணமுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
உகந்த–உகந்த சொல்லப் பட்ட
பரிசு–ப்ரகாரத்தை
ஆன-பொருந்திய
புகழ்–புகழை யுடையரான
புதுவை பட்டன்–பெரியாழ்வார்
உரைத்த–அருளிச் செய்த
இன் இசை–இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்–தமிழ்த் தொடைகளான
இ பத்து–இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
உலகில்–இந்த லோகத்தில்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்–கீர்த்தியையும்
மிகு இன்பமது–மிக்க இன்பத்தையும்
எய்துவர்–பெறுவார்கள்.

விளக்க உரை

(அன்னமும்) பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களைக் கொள்ளைகொண்டு கடலில் மூழ்கி மறைந்து உலகமெங்கும்
பேரிருளை மூட்டி நலிந்த மது கைடபர்களைக் கடலினுள்ளுக்குக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்தது
ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்த வரலாறு அறிக.

(மீனுருவம்) பிரமதேவன் முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக் கொண்டிருந்த நான்கு வேதங்ஙகளையும்
சோமுகனென்ற அசுரன் கவர்ந்துகொண்டு பிரளய வெள்ளத்தினுள் மறைந்து செல்ல அதனை உணர்ந்து திருமால்
ஒரு பெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுள் புக்கு அவ்வசுரனைத் தேடிப்பிடித்துக் கொன்று முன்பு
அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளினனென்ற வரலாறு காண்க.

(ஆளரியும்) ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளால் நலிந்த ஹிரண்யனை முடிக்க நரஸிம்ஹரூபியாய் அவதரித்த கதை ப்ரஸித்தம்.

(குறளும்) மஹாபலியின் மிடுக்கைக் குலைப்பதற்காக வாமந வேஷம்பூண்டு யஜ்ஞவாடத்தேறச் சென்ற வரலாறும் பிரசித்தம்.

(ஆமையுமானவனே) முன்னொரு காலத்தில் இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற்குச் சென்று
திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை பிரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள் மகிழ்ச்சியோடு
அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு ப்ரஹ்ம லோகவழியாய் மீண்டுவருகையில் துர்வாஸமஹாமுனி எதிர்ப்பட்டு
அவளை வணங்கித் துதிக்க அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டான்;
அதன் பெருமையை உணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து
அப்பொழுது அங்கு வெகுஉல்லாசமாக ஐராவத யானையின்மேற் பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு
அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக்கொடுக்க அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின் மேல்
வைத்தவளவில் அம்மத விலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்தது. காலால் மிதித்துத் துவைத்தது;
அது கண்டு முனிவரன் கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச் செருக்குற்ற நினது ஐச்வர்யங்களெல்லாம்
கடலில் ஒளிந்துவிடக் கடவன” என்று சபிக்க உடனே தேவர் செல்வம் யாவும் ஒழிந்தன;
ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர்; பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணடைந்து
அப்பிரான் அபயமளித்துக் கட்டளை இட்டபடி அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாகக் கட்டி
வாசுகியென்னும் மஹாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்;
அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர்
ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில்
அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனனென்பது வரலாறு.

மிக்கின்பம் = தொகுத்தல் விகாரமெனக் கொண்டு மிக்க + இன்பம் என்றும் பிரிக்கலாம்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமை–ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் —

April 26, 2021

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஷன:
வாஸுதேவாய, தந்வந்தராய,  அம்ருதகலஸ ஹஸ்தாய, சகல பய வினாஷாய,
சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே, 
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப, 
ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.

———

கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற
ஐந்து திருநாமங்கள் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில்
நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின் தலைப்பு.
திருமலை ஏறும் போது பக்தர்கள் பொதுவாக உச்சரிக்கும் திருநாமம் கோவிந்தா, கோவிந்தா.
திருப்பாவை என்ற திவ்யப்ரபந்ததில் ஆண்டாள் பெருமானின் பல திரு நாமங்களை சொல்லி இருக்கிறார்.
இருபத்தி ஏழு, இருபத்திஎட்டு மற்றும் இருபத்திஒன்பது பாடல்களில் ஆண்டாள், கோவிந்த என்ற திருநாமத்தினை மூன்று முறை, கூறுகிறார்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறவைகள் பின் சென்று …… குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் சிறு காலை….. அன்று காண் கோவிந்தா

பாஞ்சாலி உதவி என்று கண்ணனிடம் சரணாகதி அடையும் போது உபயோகித்த திருநாமம் கோவிந்தா.
“திரௌபதிக்கு, ஆபத்திலே புடவை சுரந்தது கோவிந்த நாமமிறே”..

ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று.
அதில் கோவிந்தா என்பது, விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களில் ஒரு முறையும்,
அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று முதலில் ஒரு முறையும் சொல்லவேண்டி வரும்.
இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் ‘கோவிந்தா‘ ஒரு முறை வருவதால்,
இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்று மட்டுமே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.

ஆன்மிக சொற்பொழிவுகளிலும் தெய்வபஜனை போதும் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா‘
என்று சொல்வது மிக பிரசித்திபெற்ற ஒன்றே.
ஆதி சங்கரர் என்ற மதாச்சாரியாரின் புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த ஸ்தோத்திரம் பஜ கோவிந்தம் என்பது.
இதில் ஆண்டவன் பெயராக ‘கோவிந்த’நாமம் எடுத்தாளப்பட்டது.
சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததாலும், கோவிந்த நாமத்தின் பெருமை தான் அப்படி எடுக்க செய்தது என்று சொல்வதுண்டு.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 189 (கோவிந்தோ கோவிதாம் பதி) மற்றும் 543 (மகா வராஹா, கோவிந்தக) நாமங்களாக வருகின்றன.
கோவிந்த நாமத்தின் பல மகத்துவங்களில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் கோவிந்தா என்ற நாமம்
திருமாலின் தசாவதாரங்களையும் குறிக்க வல்லது.

கோவிந்தாவில் வரும், கோ என்ற சப்தத்திற்கு வடமொழியில் பற்பல பொருள்கள் உண்டு.
வாக்கு
உயிர்கள் (கோ), காப்பாற்றுபவன் (விந்தன்)
பசு மாடு, கன்றுகுட்டிகள்
பூமி
மோட்ஷம் அளிப்பவர்
நீர்
அஸ்திரம் அல்லது ஆயுதம்
பர்வதம் அல்லது மலை
துதிக்கும் அல்லது துதிக்கப்படுவர்
புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன்
வேதமோதுவதால் அடையக்கூடியவர்
கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள்.
மச்ச அவதாரத்தில் நீரில் இருந்து வேதங்களை காப்பாற்றியதால் கோவிந்தா என்று அந்த அவதாரத்தை குறிப்பிடலாம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.
கூர்ம அவதாரத்தில் மந்திர மலையை தாங்கியபடி பாற்கடலில் பள்ளி கொண்டதால் கோவிந்தா என்று கூறலாம்.

திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
நீரில் இருந்து பூமியை காப்பாற்றியதால் அந்த அவதாரத்தையும் கோவிந்தா என்றே அழைக்கலாம்.

பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். பிரஹலாதனுக்கு மோட்ஷம் அளித்தார்.
அதே போல் சகல தேவதைகளும் நரசிம்ஹருக்கு கோபம் தணிய ஸ்தோத்திரம் செய்தார்கள் அல்லது துதித்தார்கள்.
ஆகவே அந்த அவதாரமும் கோவிந்தா எனக் கொள்ளலாம்.

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம்.
தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
பூமியை அளந்ததால் கோவிந்தா என்பர்.

தந்தை வாக்கை சிரமேல் கொண்டு செயல் பட்ட பரசுராம அவதாரத்தையும் கோவிந்தா என்றே கூறலாம்.

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும்,
விச்வாமிதிரரிடம் இருந்து ஐநூறுக்கும் மேலான ஆயுதங்களைப் பெற்றதாலும்,
அகத்திய முனிவரிடம் இருந்து பற்பல அஸ்திரங்களை பெற்றதால் ஸ்ரீ ராமனையும் கோவிந்தா என்றே கொள்ளலாம்.

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள்.
பலராமரின் ஆயுதம் கலப்பை – அதனை கொண்டு பூமியை தோண்டுவதால் பலராமரும் கோவிந்தரே.

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.
மாடு கன்றுகளுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ணரை கோவிந்தா என்றே கூப்பிடுவோம்.
கோவர்த்தன மலையை தாங்கி பசுக்களையும் மக்களையும் காப்பாற்றியதால் கோவிந்தன் ஆகிறார்.

கலி யுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு
செல்ல வருவார் என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை.
முக்திக்கு அழைத்து செல்வதாலும், பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவதாலும் கல்கி அவதாரமும் கோவிந்தனே.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்டது. அதாவது பூவுலகில் மனிதப் பிறவியாய்
அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும்
இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர்
மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால்
செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள்.
மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து
பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள்.
செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள்.
இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள்.
கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது.
அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம்.

—————–

ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் –

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்–இடைவெளியற்றது (அனாகாசம்)-இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில் ஓடிவிளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்–மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்–உருவமின்றியும்-உலகே உருவாகவும் திகழ்வோன்.

ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்–தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை வணங்குவீர்.

———–

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா³-தாட³ந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதி³த-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்த³ஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்ப⁴ம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என யசோதை அடிக்க வருகையில் குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில் லோகாலோக பர்வதங்களுடன் கூடிய பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன். உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும் பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய, அஸ்தமன பர்வதங்கள் உண்டு.
அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால், அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன.
பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல்,
அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது – உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி
தன்னொளியால் தானே பிரகாசிப்பவன் (லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே அதனிடம்
கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன.
கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை–நிலவு நட்சத்திரங்கள் இல்லை –இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம் அவன் ஒளிர்கையில் அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே இவையனைத்தும் ஒளிர்கின்றன–– கட உபநிஷதம் 2.5.9

——–

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ-ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||-3-

அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் –புவியின் பாரத்தை அழிப்பவன்–பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்) –வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)-உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த –மனவெளியில் தோன்றுபவன்–தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் (சைவம்) –தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.

அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை.
தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன். ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும்
அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில் சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும்.
இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம் (யோக3ஶ்சித்தவ்ருத்தி நிரோத4:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம்.
இப்படி அனைத்து எண்ண அலைகளும் அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும்
என்பதே பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு.
அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு-
வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது.
வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய பிறகு
சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி வேறேதும் இல்லை
என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை. ‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது.
அத்தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

——

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–4-

கோபாலன்–விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன் –கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி–கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும் –கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்–மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன் அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

கோ3 என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.

கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.

கோவிந்தன் – வேதவாக்குகளால் அறியப்படுவன். வேதவாக்குகளை அருளியவன். வராகாவதாரத்தில் பூமியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன். இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்),
ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும்
மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ3-தீ4-கோ3சர-தூ3ரம் என்பதில் முதல் கோ3 புலன்களையும், அடுத்து வரும் கோ3சர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

——-

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன். –வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமையற்றவன். –பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன். –அறியவொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன். -சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன். விழிப்பு, உறக்கம்,
கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும் தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.

பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.

சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.

மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன்.
ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம்.
ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச்சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய
முழுமையான அறிதலே (ஞானம்). “பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும், தன்னில் நிலைக்க வேண்டும்”
(ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை–ஆத்மாவை ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல-அந்த ஆத்மா மேதமையால் அல்ல -கேள்வியின் மிகுதியாலும் அல்ல.-அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான். -அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா.– முண்டக உபநிஷதம்

—————-

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்-ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன். [வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்) அறிவின் அகத்துள் இருப்பவன்-உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும், அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது.
இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன.
நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம்.
அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம்.
‘நிர்தூ4த-த்3வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று
இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது வேதாந்தத்தில்
முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும்.
ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள்.
உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே.
பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல.
உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை ஆதாரமாகக் கொண்டு
பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான்.
பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று.
பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும்
ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?
(விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்: நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது,
அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது,
அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி: என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்: நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான்,
எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான்,
எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ,
அவனை அறிவது எங்ஙனம்? அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

—————-

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

காந்தன் –காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்-முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர் –காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்-மீளமீள அழகுநடனம் புரிபவன்
காலமானவன்-காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன் –அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன் –காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.

காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக, சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின்
சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது.
இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reality) என்று கொண்டால்,
பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது.
இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற
உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல,
மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது. இதன் பொருள் கயிறு, பாம்பு என
இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல. உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல,
பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது. அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார்.
பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான உருவங்களும் பெயர்களும்
கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன.
அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட சிருஷ்டியின் இயக்கம்
இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம் இவையனைத்தும் வேறுவேறாக அல்லாமல்
பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம். காலம் (காலமானவன்),
காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்), கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்),
கால-த்ரய-க3தி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்) ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும் ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது.
நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்
(வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோ3ஷக்4னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின்
நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது.
அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

——–

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–8-

பிருந்தாவன நிலத்தில் தேவர்களின் கூட்டங்களும் –பிருந்தா முதலான கோபியரும் வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின் அமுதத்தால் மகிழ்விப்பவன். –சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின் கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.

பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.

மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

—–

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும் அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும் பரமானந்த அமுதமான அந்த கோவிந்தனை அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது. தோத்திரங்களின் வழக்கமான
பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது
ஆத்மஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய அக்ஞானத்தில் பிறப்பவை.
எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால், பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி. ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும்
பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்? பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல
என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள். கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும் உண்டு
என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.-பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுலநாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச்சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .